கோவிந்த – ஹர நாமச் சிறப்பு

“கோவிந்த” என்கிற நாமம் ரொம்பவும் விசேஷமானது. ஈச்வர நாமாக்களுக்குள் ‘ஹர’ என்பதற்கும், விஷ்ணுவின் நாமாக்களுக்குள் ‘கோவிந்த’ என்பதற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு.

ஸத்ஸங்கத்துக்காக, ஸத்விஷயத்துக்காகப் பல பேர் கூடினாலும், மநுஷ்ய ஸ்வபாவத்தில், கொஞ்ச நேரம் போனதும் கூட்டத்தில் பலர் பல விஷயங்களைச் சளசளவென்று பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் பேச்சை நிறுத்தி பகவானிடம் மனஸைத் திருப்புவதற்கு என்ன செய்கிறோம்? யாராவது ஒருத்தர் “நம: பார்வதீ பதயே” என்கிறார். உடனே, பேசிக்கொண்டிருந்த எல்லாரும் “ஹர ஹர மஹாதேவ” என்கிறார்கள். அதற்கப்புறம் ஒரு பஜனையோ உபந்யாஸமோ ஆரம்பிக்கிறது. இப்படிப் பல பேருடைய மனஸை ஈச்வரனிடம் லகான் போட்ட மாதிரி இழுக்கிற சக்தி ஹரநாமத்துக்கு இருக்கிறது! அரன் நாமமே சூழ்க, வையகமும் துயர் தீர்கவே என்று ஞானஸம்பந்தக் குழந்தை வாழ்த்திய விசேஷத்திலேயே இப்படி ஹரன் நாமத்துக்குச் சிறப்பு ஏற்பட்டிருக்கிறது!

“நம: பார்வதீ பதயே” மாதிரியே இன்னொன்றும் ஒரு கூட்டத்தின் மனஸை பகவத் பரமாகத் திருப்பி விடுவதற்காக கோஷிக்கப்படுகிறது. அதுதான் “ஸர்வத்ர கோவிந்த நாம ஸங்கீர்த்தனம்” என்பது. இப்படி ஒருத்தர் சொன்னவுடன் கூட்டம் முழுவதும் “கோவிந்தா கோவிந்தா” என்கிறது. “பஜகோவிந்தம்” என்று நம்முடைய ஆசார்யாள் குழந்தையாயிருந்தபோதே சொன்னதன் மஹிமை!

“அண்ணாமலைக்கு அரோஹரா” என்று லக்ஷோபலக்ஷம் பக்தர்கள் சேர்ந்தபொழுது கோஷிக்கிறோம். காவடி எடுக்கிறபோது ஸுப்ரமண்ய ஸ்வாமிக்கும் ’அரோஹரா’ போடுகிறோம், அரநாமமே சூழ்கிறது, இப்படியே நித்ய உத்ஸவமாக இருக்கிற திருப்பதியில் லக்ஷோபலக்ஷம் ஜனங்களும் ‘கோவிந்தா’ போட்டுக்கொண்டே தான் மலையேறுகிறார்கள்.

இரண்டு தெய்வக் குழந்தைகளின் வாக் விசேஷம்!*

ஹர நாமத்தைவிட கோவிந்த நாமாவுக்கு ஜாஸ்தி விசேஷம் தோன்றுகிறது. ஒருத்தர் ‘பார்வதீ பதி’யைச் சொன்ன பிறகுதான் மற்றவர்கள் ‘ஹர ஹர’ என்கிறார்கள், ஆனாலும் கோவிந்த நாம விஷயமாகவோ, முதலில் சொல்கிற ஒருத்தரும் ‘ஸர்வத்ர கோவிந்த நாம ஸங்கீர்த்தனம்’ என்று இந்தப் பெயரையேதான் கோஷிக்கிறார், மற்றவர்களும் அதே நாமாவைத் திருப்புகிறார்கள்.

இன்னொன்று கூட : தீவிர வைஷ்ணவர்கள் ஹர நாமாவை கோஷிப்பார்கள் என்று சொல்வதற்கில்லை, ஆனால் கோவிந்த நாமாவை ஸகலருமே சொல்வார்கள், அதனால்தான் போலிருக்கிறது இதற்கு மட்டும் ‘ஸர்வத்ர‘ என்று, அதாவது எல்லா இடத்திலும், எல்லாக் காலத்திலும் என்று அடைமொழி கொடுத்திருக்கிறது. ‘ஸர்வத்ர கோவிந்த நாம ஸங்கீர்த்தனம்!’ அதனால், என்னை யாராவது ஹிந்து மதத்தில் ரொம்ப ரொம்ப விசேஷமான நாமா எது என்று கேட்டால் ‘கோவிந்தா’ தான் என்று சொல்வேன்.

ஸர்வலோக சக்ரவர்த்தியாக இருக்கப்பட்ட பகவான் பரம கருணையோடு பரம எளிமையோடு வந்து மாடு மேய்த்து, கோபர்களையும் (ஆயர்களையும்) கோபிகளையும் அத்யந்த ப்ரேமையோடு அநுக்ரஹித்த அவஸரத்திலேயே அவருக்கு கோவிந்த நாமா எற்பட்டது. இந்த நாமா ஏற்பட்ட வ்ருத்தாந்தத்தை பாகவதம் சொல்கிறது, “உத்த்ருதநக” ச்லோகத்தில் refer செய்த வ்ருத்தாந்தம்.

‘தான் மழை பெய்வதால்தானே லோகம் உயிர் வாழ்கிறது?’ என்ற கர்வம் இந்த்ரனுக்கு ஏற்பட்டது. அப்போது க்ருஷ்ணன் கோகுலத்தில் குழந்தையாக இருந்த ஸமயம். அவர் இந்த்ரனுக்கு புத்தி கற்பிக்க எண்ணினார், அதனால் கோபர்களிடம், அவர்கள் வழக்கமாகச் செய்யும் இந்த்ர பூஜையை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக கோவர்த்தன கிரிக்குப் பூஜை பண்ணச் சொன்னார், அதே போலச் செய்தவுடன் இந்த்ரனுக்கு ஒரே ஆத்திரமாக வந்தது. அந்த ஆத்திரத்திலே கோகுலத்தையே அடித்துக்கொண்டு போய் விடுகிறாற்போல் பெரிய மழையைக் கொட்ட ஆரம்பித்துவிட்டான், அந்த ஸமயத்தில்தான் பகவான் கிரிதர கோபாலனாக கோவர்த்தன மலையைத் தூக்கி, மழையைத்தடுத்து, தீன ஜனங்களையும் பசு முதலான ப்ராணிகளையம் ரக்ஷித்தார், பிறகு தேவேந்த்ரனே மழை பெய்ய முடியாமல் களைத்துப் போய் அவரிடம் வந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, ஸகல உயிர்களையும் (‘கோ’ என்பது பசுவை மட்டும் குறிக்காமல் எல்லா ஜீவராசிகளையும் குறிப்பதாகும் – பசு என்பதும் எல்லாப் ப்ராணியையும் குறிப்பது போல, இப்படி எல்லா உயிர்களையும்) ரக்ஷிப்பவர் அவர்தான் என்று அர்த்தம் தொனிக்கும்படியாக “கோவிந்த” என்று அவருக்குப் பட்டம் சூட்டி அபிஷேகமும் பண்ணிவைத்தான். அதனால் இந்த கட்டத்திற்கு கோவிந்த பட்டாபிஷேகம் என்றே பெயர். ‘கோ’க்களுக்கு ‘இந்த்ரன்’ கோவிந்தன், ‘விந்த’ என்றால் ஒன்றைத் தேடி, நாடிப்போய் அடைவது. பசுக்கள் இப்படி க்ருஷ்ணனிடமே உயிராயிருந்து அவரைத் தேடி அடைந்ததால் கோவிந்தன், ‘கோ’ என்பது பசுவை மட்டுமில்லாமல் பூமி, ஆகாசம், வாக்கு, இந்த்ரியங்கள் ஆகியவற்றையும் குறிப்பது, இவையெல்லலாம் தேடிப் போய் அடையும் லக்ஷ்யமான பரமாத்மா அவர் என்பதையும் கோவிந்த நாமம் தெரிவிக்கிறது.


* முதற் பகுதியில் “சிறுவர் இருவரின் சிறப்பு வாக்கு” என்ற உரையும் பார்க்க.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s