கோவிந்த நாமத்துக்கு இன்னொரு விசேஷமும் இருக்கிறது. முன்பு மஹாவிஷ்ணுவுக்கு ப்ரீதியான நாமாக்கள் என்று பன்னிரண்டைச் சொன்னேன் அல்லவா! அவற்றில் ‘கோவிந்த’ என்பது ஒன்றாக வருகிறது. இது தவிர மூன்றே மூன்று நாமாக்கள் மஹாவிஷ்ணுவுக்கு ரொம்பவும் விசேஷமானவை என்று எடுத்திருக்கிறார்கள். இந்த மூன்று நாமாக்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆசமனம் பண்ணிவிட்டு, அப்புறம் அந்தப் பன்னிரண்டு நாமாக்களைச் சொல்லிக் கன்னம், கண், மூக்கு, காது, புஜம், ஹ்ருதயம், சிரஸ் முதலியவைகளைத் தொட்டால் தேஹசுத்தி உண்டாகிறது. எந்தக் கர்மாவானாலும் முதலில இப்படிச் செய்து சரீரத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும். மூன்று முறை ஆசமனம் செய்கிறபோது சொல்கிற நாமாக்கள், “அச்யுத. அனந்த. கோவிந்த” என்கிறவையே.
இப்படியாக, விசேஷமான பன்னிரண்டு நாமாக்கள், அதனிலும் விசேஷமான மூன்று நாமாக்கள் இரண்டிலும் வருகிற ஒரே ஒரு நாமம் ‘கோவிந்த’ என்பதுதான்.
கேசவ – நாராயண – மாதவ – கோவிந்த – விஷ்ணு – மதுஸூதன – த்ரிவிக்ரம – வாமன – ஸ்ரீதர – ஹ்ருஷீகேச – பத்மநாப – தாமோதர.
அச்யுத – அனந்த – கோவிந்த.
மூன்றிலே ஒரு நாமாவாக இருக்கப்பட்ட ‘கோவிந்த’ என்பதை ‘பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம்’ என்று மூன்று தரம் ஆசார்யாள் சொல்லிச் சொல்லி ஸந்தோஷப்பட்டிருக்கிறார். ஒன்றை ஸத்யப்ரமாணமாகச் சொல்ல வேண்டுமானால் மூன்று தரம் திருப்பிச் சொல்வார்கள்.
இப்படி ஆசார்யாள் சொன்னது மட்டுமில்லாமல், ஆண்டாளும் மூன்று இடங்களில் கோவிந்த நாமாவை ப்ராயோகித்திருக்கிறாள், அவளுடைய ‘திருப்பாவை’யிலே. ‘திருப்பாவை’யின் கடைசியான முப்பதாவது பாட்டு அதற்கு பலச்ருதி. அதை விட்டுவிட்டால் அதற்கு முந்திய மூன்று பாட்டுக்களிலும் ‘கோவிந்தா!’ என்றே பகவானைக் கூப்பிட்டிருக்கிறாள். இருபத்தேழாவது பாட்டில் ‘கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!’ என்கிறார். இருபத்தெட்டாவதில்தான் ‘குறைவொன்றுமில்லாத கோவிந்தா’ என்பது. இருபத்தொன்பதாவது பாட்டில் ‘இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!’ என்கிறாள்.