பல்லவரும் சைவ-வைணவமும் : வைகுண்டப் பெருமாள் கோயில்

மோக்ஷம் என்பதை சைவர்கள் கைலாஸம் என்பார்கள். வைஷ்ணவர்கள் வைகுண்டம் என்பார்கள். காஞ்சீபுரத்தில் கைலாஸநாதர் கோயிலும் இருக்கிறது: வைகுண்டப் பெருமாள் கோயிலும் இருக்கிறது! இரண்டுமே சிற்ப விசேஷம் படைத்தவையாகவும் இருக்கின்றன. காஞ்சீபுரத்தை ராஜதானியாகக் கொண்டிருந்த பல்லவ ராஜாக்கள் நல்ல வைதிகப் பற்றுள்ளவர்கள். முறையான வைதிகம் என்றால் அது சிவ பக்தி, விஷ்ணு பக்தி இரண்டிற்கும் ஒரே மாதிரி இடம் கொடுப்பதாகவே இருக்கும். பல்லவ ராஜாக்கள் தங்களை சிவ பக்தர்களான ‘பரம மாஹேச்வரர்’ களாகவும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், விஷ்ணு பக்தர்களான ‘பரம பாகவதர்’ களாகவும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதோடு த்ரிமூர்த்திகளில் இன்னொருவரான ப்ரஹ்மாவையும் விடாமல் ‘பரம ப்ரஹ்மண்யர்’ கள் என்றுகூடத் தங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆரம்பகாலக் கோயில்களை எழுப்பியபோது ப்ரஹ்மாவுக்கும் இடம் கொடுத்தார்கள். ஆனால் அது நம்முடைய வழிபாட்டு மரபிலே சேராமல் மங்கி மறைந்து போய்விட்டது. ‘ப்ரஹ்மண்யர் ‘என்பது ஸுப்ரஹ்மண்ய பக்தரைக் குறிப்பது என்றும் அபிப்ராயம் உண்டு. பல்லவர் கோயில் திருப்பணிகளில் பார்வதீ பரமேச்வரர்களுடன் பால ஸுப்ரஹ்மண்யரும் சேர்ந்திருப்பதான ஸோமாஸ்கந்த மூர்த்தம் சிலா (கல்) வடிவிலேயே லிங்கத்தின் பின்னால் மூலஸ்தானத்தில் பொறிக்கப்பட்டிருப்பதிலிருந்து அவர்களுடைய முருகபக்தி தெரிகிறது. ஆதிப் பல்லவ ராஜா ஒருத்தனின் பெயரே ஸ்கந்த சிஷ்யன் என்பதாகும். ஸிம்ஹ விஷ்ணு, நரஸிம்ஹன் என்று விஷ்ணுப் பெயர்கள்; பரமேச்வர வர்மா, நந்திவர்மா என்று சிவ ஸம்பந்தமான பெயர்கள் – இப்படி அந்த ராஜ வம்சத்தில் இரண்டு விதமாகவும் பார்க்கிறோம். சைவம் வைஷ்ணவம் இரண்டையும் ஸமமாக மதிக்கும் சுத்த வைதிகமாகப் பல்லவர்கள் இருந்துகொண்டிருந்தார்கள். நடுவாந்தரத்தில் மஹேந்த்ர வர்மா ஜைனனாகப் போனாலும், அப்புறம் அப்பர் ஸ்வாமிகளின் மஹிமையினால் வைதிகத்திற்கே திரும்பினான். சைவ – வைஷ்ணவ ஸமரஸம் கொண்டவர்களானாலும் இஷ்ட மூர்த்தி என்று வரும்போது பல்லவ ராஜாக்களில் சிலருக்கு அது சிவனாகவும், சிலருக்கு விஷ்ணுவாகவும் இருந்திருக்கிறது.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் கோச் செங்கட்சோழன், புகழ்ச்சோழன் என்ற சோழ ராஜாக்களும், நெடுமாறன் என்ற பாண்டியராஜாவும், சேரமான் பெருமாள் என்ற சேர ராஜாவும் இடம் கொண்டிருப்பது தெரிந்திருக்கலாம். நெடுமாறனின் பத்தினியான பாண்டியராணி மங்கையர்க்கரசியும் ஒரு நாயனார். ஐயடிகள் காடவர்கோன் என்றும் ஒரு ராஜா அறுபத்து மூவரில் ஒருவராக இருந்திருக்கிறார். பன்னிரு சைவத் திருமுறைகளில், பதினொன்றாவதான திருமுறையில் ‘திருவெண்பா’ என்பதைப் பாடியிருப்பவர் அவர்தான். கோவில் கோவிலாகப் போய் வெண்பாப் பாடிக்கொண்டிருந்த அந்த சைவ ராஜாவைப் பல்லவ வம்சத்தைச் சேர்ந்தவரென்றே சேக்கிழார் (பெரிய புராணத்தில்) சொல்லியிருக்கிறார். அதாவது சேர – சோழ – பாண்டிய ராஜாக்களில் நாயன்மார் இருந்ததுபோலவே பல்லவ ராஜாக்களிலும் ஒரு நாயனார் இருந்திருக்கிறார்.

ராஜஸிம்ஹன் என்ற இரண்டாவது நரஸிம்ஹன் பெரிய சிவ பக்தனாக இருந்தான். சைவாகமங்களில் அவன் நல்ல அப்யாஸம் பெற்றவன். ‘சிவ பாத சேகரன்’ என்று ராஜ ராஜ சோழனுக்குப் பட்டம் இருந்ததென்றால் அவனுக்கு முன்னூறு வருஷம் முந்தியே ராஜ ஸிம்ஹப் பல்லவனுக்கு ‘சிவ சூடாமணி’ என்ற பட்டம் இருந்திருக்கிறது. இவன் தான் முதல் முதலாகப் பாறைக் கல்களைக் கட்டிடமாக அடுக்கிக் கோயில் கட்டினவன். அவனுக்கு முன் காலத்தில் மலைகளையும், குன்றுகளையும், பெரிய ராக்ஷஸப் பாறைகளையும் அப்படியே போட்டுக் குடைந்துதான் ஆதி பல்லவர்கள் கோயில் எழுப்பினார்களேயொழிய, கல்லின் மேல் கல் அடுக்கிக் கட்டிடமாகக் கட்டவில்லை. ராஜஸிம்ஹப் பல்லவன் கட்டின அந்தக் கோவில்தான் கைலாஸநாதர் ஆலயம். ஒரே சிற்ப மயமாகப் பொரித்துக் கொட்டிக் கட்டிய கோவில் அது. ஏகப்பட்ட சிற்பம் என்றாலும் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து வெகு நுணுக்கமாகப் பண்ணியிருக்கும். கலா ரஸிகர்கள் காஞ்சீபுரக் கோவில்களுக்குள்ளேயே, ஏன், தமிழ்நாட்டுக் கோவில்களுக்குள்ளேயே அதற்குத்தான் ‘ஃபர்ஸ்ட் ப்ரைஸ்’ கொடுக்கிறார்கள்! அதிலுள்ள சிற்பங்களெல்லாம் புராண ஸம்பந்தமானவை. பெரும்பாலும் சிவ லீலைகள் தானென்றாலும் மஹாவிஷ்ணுவைக் குறித்ததாகவும் சில இருக்கின்றன.

அதற்கடுத்தபடியாக நிறையச் சிற்பம் கொண்டதுதான் வைகுண்டப் பெருமாள் கோவில். அதற்குப் பழைய பெயர் – ஆழ்வார் பாசுரத்தில் வருகிற பெயர், “பரமேச்சுர விண்ணகரம்” என்பது. “விண்ணகரம்” என்றால் விண்ணாட்டு நகரம் இல்லை! ‘விஷ்ணுக்ருஹம்’ தான் ‘விண்ணகரம்’ ஆகிவிட்டது. ஸிம்ஹ விஷ்ணுவின் பெயரை மஹாபலிபுரத்தில் ‘சிம்ம விண்ண போத்ராதி ராஜன்’ என்றே செதுக்கியிருப்பதிலிருந்து ‘விஷ்ணுக்ருஹம்’ தான் ‘விண்ணகர’ மாகியிருக்கிறதென்று புரிந்துகொள்ளலாம்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s