கர்த்தாவின் அஹம்பாவம் நீங்கவே நல்லதிலும் கெடுதல்

‘நாம் தான் கார்யம் பண்ணி ஸாதிக்கிறோம்; அதனால் லோகத்தையே புரட்டி நல்லதாக்கி விடலாம்’ என்ற எண்ணம் கார்ய லோகத்தில் ஏற்படத்தானே செய்கிறது? அது ஒரு ‘ஈகோ’ (அஹங்கார எண்ணம்) தானே? அது முற்றிவிடாமல் ஒரு போடு போடவேண்டுமென்பதற்குத் தான் இந்த லோகத்தையெல்லாம் பண்ணியிருக்கும் பராசக்தி, எந்த நல்லதானாலும் அதிலேயும் கெடுதலாக ஏதாவது அம்சம் வந்து சேரும்படியாக வைத்திருக்கிறது போலிருக்கிறது. இப்படி இல்லாவிட்டால் “நாம் எவ்வளவெல்லாம் நல்லதாக சாதித்துவிட்டோம்!” என்ற ‘ஈகோ’ கர்த்தா என்கிறவனுக்கு ஏற்படத்தான் செய்யும். அந்த ஸ்திதியில் எத்தனைதான் ஃபிலாஸஃபி சொன்னாலும்,-‘நல்லது, நல்லது என்கிற எல்லாமும் ‘ரிலேடிவ்’தான். ஏனென்றால் நல்லது கெட்டது என்பவை நடக்கிற த்வைத ப்ரபஞ்சமே ரிலேடிவ்தானே?’ என்று எத்தனை ஃபிலாஸஃபி சொல்லி, அது ஸரிதான் என்று மூளைக்குப் பட்டிருந்தாலுங் கூட, சும்மாயிருக்க முடியாது. வெற்றிகண்ட ஜோர், நாமாக்கும் ஸாதித்தோம் என்ற பெருமை, சும்மா இருக்க விடாது. அதற்காகத்தான் தோல்வியையும் எடுத்துக் காட்டுவது-உபகாரம், உபகாரம் என்று பண்ணுவதிலும் அபகாரம் சேரத்தான் செய்கிறது என்று காட்டுவது.

(எதிலும் உள்ள கெடுதலை விஸ்தாரம் செய்து சொல்வது) பெஸ்ஸிமிஸமும் இல்லை; அன்போ தயையோ இல்லாமல், ஒருத்தருக்கும் ஒரு நல்லதும் பண்ணவேண்டாம் என்று சொல்வதுமில்லை. கார்யங்களை(ப் பண்ணும்படி) சொல்லும்போதே, அதிலுள்ள கோளாறுகளையும் சொல்லி, மார் தட்டிக் கொள்வதற்கில்லாமல் எந்த நல்ல கார்யத்திலும் கொஞ்சம் கரியைப் பூசுவதாக ஏதாவது இருக்கத் தான் செய்யும் என்று ஞாபகப்படுத்திக் கொண்டேயிருந்தால்தான், கார்யத்தையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு அடைகிற முடிவான நிலையில் போய்ச் சேருவதற்குச் சித்தம் கொஞ்சத்தில் கொஞ்சமாவது ஆசைப்படும். இல்லாவிட்டால் எத்தனை ஃபிலாஸஃபி கேட்டாலும், கார்யம் கார்யம் என்று அதிகப்ரஸங்கித்தனம் பண்ணிக்கொண்டு, இந்த த்வைத ப்ரபஞ்சத்திலேயே சுற்றிச் சுற்றி வருவதாகத் தான் ஆகும். தோல்விகளையும் ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தால்தான், எப்போதாவது ஒரு நாள் மனஸ் காரியமில்லாமல் நிற்பதற்குக் கொஞ்சம் பக்குவப்படும்போதுகூட, அதே ஸேவை, கீவை என்று அதிகப்பரஸங்கித்தனம் பண்ணி மறுபடி த்வைதத்திற்கே இழுத்துக்கொண்டு வராமல், ‘நாம் யார் ஸேவைகூட செய்ய? ஸேவை என்று போகிறோம். அது என்னவாக முடியுமோ? எவனோ ஒரு ஈச்வரன் இன்னாருக்கு இன்னபடி என்று லோகத்தை நடத்திக்கொண்டு போகிறான். நம் ஸேவை தேவையானால் அவனே எப்படியோ ஸந்தர்பங்களை அதற்கேற்றபடித் தட்டிக் கொட்டி ரூபம் பண்ணி நம்மை ஸேவை செய்ய வைத்துவிட்டுப் போகிறான். தஸ்ய கார்யம் ந வித்யதே என்று சொன்ன பகவான், ‘அப்படிப்பட்ட ஞானி கார்யம் செய்தாலும், செய்யாவிட்டாலும் அவனுக்கு அவற்றால் ஒரு பலனும் இல்லை’ என்று சொல்லிவிட்டு, உடனேயே ஆனாலும், ‘லோக ஸங்க்ரஹத்துக்காக (உலக க்ஷேமம் உண்டாவதற்காக) ஜனகர் போன்ற ஞானிகளும் கார்யம் பண்ணியிருக்கிறார்கள்’ என்று சொல்கிறபடி,* நம்மையும் அவனே கார்யம் பண்ணவைத்தால் பண்ணிவிட்டுப் போகிறது. அங்கே நாம் கார்யம் பண்ணுவதாகத் தெரிந்துகொள்ளாமல், உள்ளே சும்மாயிருந்துகொண்டே, வெளியிலே அவன் ஆட்டி வைக்கிறபடி பண்ணிக்கொண்டிருப்போம். ஆகையால் ‘நாமாக்கும் பண்ணுகிறோம்’ என்ற ஈகோ-கர்த்தா (அ)ஹங்காரம் என்பது-வராமலே பண்ணிக்கொண்டிருப்போம். மற்றபடி நாமாக ஒன்றும் ப்ளான் போட்டு லோக ஸங்க்ரஹம் உள்பட எதற்கும் கார்யம் செய்ய வேண்டியதில்லை. அவனுடைய ப்ளான்படிதான் நடக்கும் என்கிறபோது, அவன் ‘இன்ஸ்பயர்’ பண்ணமால் நாம் என்ன முந்திரிக்கொட்டை மாதிரி லோக ஸங்க்ரஹம் தான் பண்ண முடியும்? நாமாக எத்தனை நல்ல ப்ளான் போட்டாலும், அது வெளிப்பார்வைக்கு ஸேவை, த்யாகம் என்றெல்லாம் எத்தனை உசத்தியாகத் தெரிந்தாலும் அதில் ‘ஈகோ’ இல்லாமல் போகாது. ‘ஈகோ’ போகாமலோ மோக்ஷம் என்பது நாளுமில்லை’ என்று விவேகமாயிருப்போம்.

‘என் ஸ்வய மோக்ஷம் எப்படிப் போனாலும் போகட்டும். எனக்கு மோக்ஷமே கிடைக்காமல் போனால்கூடப் போகட்டும். உலகத்துக்கு நல்லதாகத் தொண்டு செய்துகொண்டேயிருந்தேனானால் அதுவே போதும்’ என்று சொல்வதெல்லாங் கூட, நன்றாக ஆலோசித்துப் பார்த்தால், ஒரு தினுஸான ‘ஈகோ’ தான். மற்ற ஜனங்களுக்கு நீ நல்லது பண்ணி ஸம்ரக்ஷிப்பது இருக்கட்டும். உனக்கு ஈச்வரன் மனஸ் என்று ஒன்றைக் கொடுத்து அது உன்னை ஜீவாத்ம பாவத்தில் குறுக்கிக் கட்டிப்போடும்படியாக ஒரு பக்கம் மாயையில் வேடிக்கை பண்ணும்போதே, இன்னொரு பக்கம் அதிலிருந்து நீ விடுபட்டு அவனாகவே அவனுடைய நிர்குண ஸ்வரூபத்தில் ஒன்றுபடுவதற்கும் ஸாதனா மார்க்கம் கொடுத்திருக்கிறானோ இல்லையோ? அப்படியிருக்கும்போது, ‘நான் விடுபட மாட்டேன். ஜெயிலிலேயேதான் இருந்துகொண்டு ஜெயிலிலிருக்கிற மற்றவர்களுக்கு நல்லது பண்ணுவேன்’ என்றால் — அந்த ஜெயில் ஸூப்ரண்டு ஈச்வரன்தானே? அவனுக்கு அடங்கித்தானே நீ மற்ற கைதிகளுக்கு எந்த நல்லதும் பண்ண முடியும்? எப்படியானாலும் நீ பண்ணும் நல்லதும் இந்த ஜெயிலுக்குள்ளேயேதானே? இதிலிருந்து எவரையும் விடுவிப்பது நிச்சயமாக உன் கையில் இல்லை. அது அவன் கையில்தானிருக்கிறது. அதற்கு அவரவரே முயற்சி செய்தால்தான் அவன் பூட்டைத் திறந்துவிடுவான். நீ செய்யும் நல்லது, உபகாரம் எல்லாம் ஸம்ஸார பந்தம் என்ற விலங்கைப் போட்டுக்கொண்டிருக்கும் இந்த மாயாலோக ஜெயிலுக்குள்தான். இதற்குள்ளே பெறக்கூடிய சிறிய ஆனந்தங்களில் சிலவற்றை மற்றவர்களுக்கு உண்டாக்கியே தீருவேன் என்று வீம்புப் பிடித்துக்கொண்டு, நீயே ஜெயிலிலிருந்து விடுபட்டு சாச்வதமான பேரானந்தத்தை அடைய ஹேதுவான (காரியமற்ற) ஞான மார்க்கத்தில் போகக்கூடிய யோக்யதையை ஈச்வரன் தருகிறபோதுகூட, கர்மாவில்தான் போய்க்கொண்டிருப்பேனென்று பிடிவாதம் பிடித்தால் அது அஹம்பாவமாயுமிருக்கிறது, அசட்டுத்தனமாகவுமிருக்கிறது.

அவனுடைய அநுக்ரஹமிருந்தாலொழிய கார்யத்தை விட்டுவிட்டு ஞானத்தில் பிரவேசித்து மோக்ஷமடைவதற்கான யோக்யதை ஏற்படவே ஏற்படாது. எனவே இந்த யோக்யதை வேண்டாமென்று சொன்னால் ஈச்வராநுக்ரஹமே வேண்டாமென்று தள்ளுவதாகத்தான் அர்த்தம். தன் ஸொந்த விஷயத்தில் இப்படி ஈச்வரன் செய்கிற முடிவான பரமாநுக்ரஹம் வேண்டாமென்று சொல்லிவிட்டு, நம்மைவிட அவனுக்கு ஜாஸ்திப் பொறுப்பிருக்கிற அவனுடைய ஸ்ருஷ்டியான மற்றவர்களுக்குத்தான் தாற்காலிக நல்லதுகளைப் பண்ணுவேன் என்று புறப்பட்டால் இதற்கும் அவன் அநுக்ரஹம் இருந்தால்தானே முடியும்? ஈச்வராநுக்ரஹம் இல்லாமல் ஸேவை, கீவை எதுதான், எவர்தான் செய்ய முடியும்? அவனே, ‘இவன் ஸேவை பண்ணியது போதும்; இனிமேலே இவனுடைய ஸேவை இல்லாமலே லோக ரக்ஷணத்தில் வேறு கருவிகளைக் கொண்டு பண்ணிக்கொள்வோம்’ என்று இவனை ஞான நிஷ்டா யோக்யதையைப் பெறும் வாசலுக்கு அழைத்துக் கொண்டுபோகும்போது, அந்த பரமாநுக்ரஹம் வேண்டியதில்லை என்று புறக்கணிக்கிறவன், அப்புறம் தான் செய்ய நினைக்கிற ஸேவை நிறைவேறுவதற்கு அவனுடைய அநுக்ரஹத்தை எப்படிப் பெறமுடியும்? அதாதவது, இவன் தன்னுடைய மோக்ஷத்தையும் தானாகவே வேண்டுமென்று பறிகொடுத்துவிட்டு, தான் பண்ணும் ஸேவையும் நிறைவேறாமல் இரண்டுங்கெட்டானாக வீணாய்ப்போகும்படியாகவே ஆகும்.

ஸ்வார்த்தமாக (தன்னலம் பயப்பதாக)த் தனக்கு எதுவும் வேண்டமாக்கும். பரார்த்தமாக (பரநலம் பயப்பதாகவே) வாழவேண்டும் என்று என்னதான் ஒருவன் ஆசைப்பட்டாலும், ஈச்வரன் என்னவோ இவன் பரார்த்தமென்று நினைத்துப் பண்ணும் ஸேவையெல்லாம்கூட இவனுக்கு ஸ்வார்த்தமாகச் சித்த சுத்தி, ஞானநிஷ்டா யோக்யதா ஸித்தி ஆகியவற்றை உண்டாக்கும்படிதான் வைத்திருக்கிறான்! இவன் பரோபகாரம் என்று நினைத்துப் பண்ணுவது பிறருக்கு உபகாரமாக இல்லாமலே முடிந்தாலும் முடியக்கூடும். ஆனால் இப்படி ஒரு கர்மயோகம் பண்ணுவதால் இவனுக்குச் சித்த சுத்தி ஏற்பட்டே தீரும். ‘என் ஸ்ருஷ்டியை நான் கவனித்துக்கொள்கிறேன். உன்னை அதில் நடுவே கொஞ்சம் கருவியாக வைத்துக்கொள்கிறேனென்றால் அது உன்னை சுத்தப்படுத்தத்தானே தவிர, உன் மூலமாகத்தான் எனக்கு மற்றவர்களைப் பற்றிய கார்யம் நடக்கவேண்டும் என்பதால் அல்ல. ஆனபடியால், ‘ஸ்வய மோக்ஷம் வேண்டாம்; பரநல கார்யம்தான் பண்ணுவேன்’ என்றெல்லாம், உனக்கு அது ‘ஈகோ’வாகத் தெரியாவிட்டாலும், ஏதோ ஒரு அசட்டு ‘ஈகோ’வில் சொல்லிக்கொண்டு, இரண்டுமில்லாமல் பண்ணிக்கொள்ளாதே!’ என்றுதான் பகவான் சொல்வார்.

மற்றவர்களைப் பற்றி ஈச்வரனுக்கு இல்லாதது உனக்கென்ன? நேரே உனக்கென்று அவன் கொடுத்திருக்கும் மனஸை ஸரி பண்ணிக் கொள்ள மாட்டேன், அதை அவனிலேயே கரைத்துப் பூர்ணமாக்கமாட்டேன் என்று அலக்ஷ்யம் பண்ணிவிட்டு, மற்றவர்களுக்கு ஏதோ செய்கிறேன் என்று புறப்படுவது அதிகப்ரஸங்கித்தனமாகத் தானே இருக்கிறது? கார்யமில்லாமல் ஆத்ம விசாரம் செய்யப் பக்குவம் போதாமல், மனஸ் நாலாதிசையும் பாய்ந்து கொண்டிருக்கும் வரையில் ஸத்கார்யங்கள் பண்ண வேண்டியதுதான். அப்புறம் இந்தக் கர்மயோக பலனாக ஒரு காலத்தில் சித்தம் பக்வப்பட்டு ஆத்மவிசாரத்தில் அமைதியாக உட்கார்கிற யோக்யதை ஸித்திக்க ஆரம்பிக்கும். அப்போதும், ‘கர்மாதான் பண்ணி லோகத்துக்கு நல்லது செய்வேனாக்கும்’ என்று புறப்பட்டால் அது அதிக ப்ரஸங்கித்தனந்தான்.


* கீதை III.17-20

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s