கோவிந்தரின் சிறப்பு

ஸந்நியாஸியான கோவிந்த பகவத்பாதாள் பரிவ்ராஜகராக ஸஞ்சாரம் பண்ணிக்கொண்டிருப்பதும் அவ்வப்போது அப்படியே நிஷ்டைவில் போய் ஒரே இடத்தில் தம்மை மறந்து உட்கார்ந்துகொண்டிருப்பதுமாக இருந்தார்.

அவர் என்ன புஸ்தகங்கள் செய்தாரென்று நிச்சயமாகத் தெரியவில்லை. ஆசார்யாள் செய்ததாக வழங்கிவரும் ‘யோக தாராவளி’யும் ‘அத்வைதாநுபூதி’யும் கோவிந்த பகவத்பாதர் இயற்றயவை என்று ஒரு அபிப்ராயமிருக்கிறது. இப்படியரு அபிப்ராயமிருப்பதால், ஆசார்யாளே அவற்றைச் செய்திருந்தாலும் அதற்கு முக்யமாக கோவிந்த பகவத்பாதரிடமிருந்தே இன்ஸ்பிரேஷன் கிடைத்திருக்க வேண்டுமென்று சொல்லலாம். ‘யோக தாராவளி’யில் அஷ்டாங்க யோகம் முதலான யோக சாஸ்த்ர நுட்பங்களைச் சொல்லி அந்த வழியில் போய் அத்வைதாநுபூதியான ஸமாதியில் தோய்ந்து அப்படியே பட்ட கட்டை மாதிரி பூர்ண ஸ்திதியில் ப்ரகாசித்துக்கொண்டிருப்பதைச் சொல்லியிருக்கிறது. யோக ஸூத்ரம் செய்த பதஞ்ஜலிதான் கோவிந்த பகவத்பாதர் என்பது இங்கே நினைவுக்கு வருகிறது. “அத்வைதாநுபூதி” முழு ஞானம். யோகம் என்று ஒரு ஸாதனை, அதைப் பண்ணுவது என்று ஒரு கார்யம் ஆகியவைகூட இல்லாமல், ஸ்வயம்ஸித்தமாக எப்பவுமே தன்னில் தானாக இருக்கும் ஆத்மாவை அப்படியே அநுபவித்துக் கொண்டிருப்பதை “அத்வைதாநுபூதி”யில் பரம ஞான மார்க்க முறையில் சொல்லியிருக்கிறது. இந்த இரண்டு ப்ரகரணங்களுக்கும் கோவிந்த பகவத்பாதரின் ஸம்பந்தம் உண்டென்றாலே அவர் உத்தமமான யோகீச்வரராகவும், அநுபவ ஞானியாகவும் இருந்திருக்கிறாரென்று புரிந்துகொள்ளலாம்.

கல்வியறிவும், அநுபூதியும் பெற்றவர்களில் சிலபேர் நன்றாக எழுதிவைப்பார்கள். சிலபேருக்கு எழுத வராது. ஆனாலும் தங்களுடைய அநுபவ சக்தியால் அதே அநுபவத்தைப் பெறக்கூடிய உத்தம சிஷ்யர்களை உண்டாக்கி, அவர்கள் மூலம் ஸித்தாந்தத்தை ப்ரசாரப்படுத்துவதில் இவர்களுக்கு விசேஷத் திறமை இருக்கலாம்.

கோவிந்த பகவத்பாதாளை இந்த கோஷ்டியில் சொல்லலாம். அவர் முதலில் மஹாபாஷ்யத்தைக் கரைத்துக் குடித்தார். அந்த சாஸ்த்ரத்தை ப்ரசாரம் பண்ண அவரை விட்டால் வேறு யாருமில்லையென்றே கௌடர் உபதேசம் செய்ததாகப் பார்த்தோம். அவருக்கப்புறம் மஹாபாஷ்யம் லோகத்தில் நன்றாக ப்ரசாரமாகியிருப்பதும், அநேக வ்யாகரண புஸ்தகங்கள் தோன்றியிருப்பதும் ப்ரத்யக்ஷத்தில் தெரிகிறது. ஆனால் அவரே வ்யாகரண புஸ்தகம் எதுவும் எழுதிவைத்து விட்டுப் போயிருக்கவில்லை. அப்படியிருந்தும் அந்த சாஸ்த்ரம் ப்ரசாரமாகும்படிப் பண்ணியிருக்கிறாரென்றால், அப்போது அவர் நல்ல சிஷ்யர்களை உண்டுபண்ணி அவர்கள் வழியாகவே இப்படி நடக்கச் செய்ததாகத்தானே இருக்கவேண்டும்?

ஸங்கீதத்தில் கேளவிப்பட்டிருக்கிறேன். சில வித்வான்களுக்கு ‘தியரி’, ஆராய்ச்சி என்றெல்லாம் விசேஷமாகத் தெரிந்திருப்பதில்லை;ஆனால் ஸங்கீத சாஸ்த்ர ஆராய்ச்சிக் காரர்களைவிட இவர்களே அநேக சிஷ்யர்களை நல்ல வித்வான்களாக ரூபம் பண்ணியிருக்கிறார்கள்-என்று. இது எல்லாத் துறைக்கும் பொருந்துவதுதான். அறிவுச் ச்கதிக்கு மேல் ஸ்வாநுபூதிச் சக்தி என்பதையே இது காட்டுகிறது. ஒரு மநுஷ ஜீவனிடம் எப்படிப் பழகித் தட்டிக் கொட்டி அதை ரூபம் பண்ணுவது என்பதிலுள்ள திறமையையும் காட்டுகிறது.

கற்றுக் கொடுப்பது, ஸத்சிஷ்யர்களை உருவாக்குவது என்பது ஒரு தனியான கலை. அறிவு, அநுபவம், எழுத்து ஸாமர்த்யம் முதலியவற்றைப் பெற்ற பல பேருக்குக்கூட இப்படி உயிரோடுள்ள ஒரு ஜீவனை சிஷ்யனாக்கிக்கொண்டு அவனை அறிவாளியாகவும் அநுபவியாகவும் ரூபமாக்குவதற்கு முடியாமலிருக்கும்.

உசந்த சிஷ்யர்களை ரூபம் பண்ணும் திறமை கோவிந்த பகவத்பாதருக்கு விசேஷமாயிருந்திருக்கிறது.

அதனால்தான் அவருடைய மஹா பெரிய சிறப்பாக நம் ஆசார்யாளே அவரைத்தான் குருவாக வரித்து அவரிடமே சிஷ்யராகி உபதேசம் பெறவேண்டுமென்று இருந்திருக்கிறது.

ஆசார்யாளை அவர் ‘ரூபம் பண்ண’ வேண்டியிருந்திருக்காதுதான். குரு என்று ஒருத்தர் பாடுபட்டும், அநுக்ரஹ சக்தியைச் செலவழித்துந்தானா புதுசாக அவரை அறிவாளியாகவோ, அநுபூதிமானாகவோ ஆக்க வேண்டும்? ஆனாலுங்கூடப் பரமேச்வரனே அவதாரம் பண்ணி மநுஷ்யர் மாதிரி ஒருத்தரை குரு என்று பணிந்து உபதேசம் வாங்கிக் கொள்ளும்போது அது இவர்தானென்று தேர்ந்தெடுத்தாரென்றால் அப்படிப்பட்டவர் மஹா அநபவி, அறிவாளி சிஷ்யர்களை உருவாக்கவதில் அலாதித் திறமை பெற்றவர் என்று லோகத்துக்குக் காட்டுவதாகவே அர்த்தம்.

ஜகத்குரு என்று ஜகத்தே கொண்டாடும் ஆசார்யாள் சிஷ்ய பாவத்தோடு இருந்துகொண்டு குரு பரம்பரையை விநயமாக ஸ்தோத்ரிப்பது வழக்கம். குரு மஹிமையைத் தெரிவிப்பதற்கே ‘குர்வஷ்டகம்’என்று ஸ்தோத்ரம் செய்திருக்கிறார். அவர் (இயற்றியுள்ள ஞான நூல்களில் முன்னமேயுள்ள நூல்களின் பாஷ்யமாக இன்றி) ஸொந்தமாகச் செய்துள்ள ‘ப்ரகரண க்ரந்த’ங்களில் சூடாமணியாக இருப்பது “விவேக சூடாமணி”. அதன் ஆரம்பத்தில் ‘மங்களாசரணம்’என்பதாக கோவிந்த பகவத் பாதாளை ஸ்தோத்ரம் செய்திருக்கிறார். அதிலிருந்து அவருடைய (கோவிந்தருடைய) பெருமையைத் தெரிந்துகொள்ளலாம்.

ச்லோகத்தைச் சொல்கிறேன்:

ஸர்வ-வேதாந்த-ஸித்தாந்த-கோசரம் தம்-அகோசரம் |

கோவிந்தம் பரமாநந்தம் ஸத்குரும் ப்ரணதோஸ்ம்யஹம் ||

‘ஸத்குரும் கோவிந்தம் அஹம் ப்ரணதோஸ்மி’-ஸத்குருவான கோவிந்தரை நான் நமஸ்காரம் செய்கிறேன்.

‘ஸத்குரும் என்பதற்குப் பதில் ‘மத்குரும்’என்று பாடமுண்டு. ‘மத்குரு’ என்றால் ‘என்னுடைய குரு’. ஆசார்யாள் தம்முடைய குரு என்று ஸொந்தம் பாராட்டி இப்படிச் சொல்வதாக வைத்துக்கொள்வதே ‘ஸத்குரும்’என்பதைவிட அழகாக இருக்கிறது.

அந்த குரு எப்படிப்பட்டவர்?

‘பரமானந்தம்’-லோக ஆனந்தங்கள் எல்லாம் கீழானவை. உசந்த ஆனந்தம் ப்ரம்மானந்தம்தான். அது தான் பரமானந்தம். அதன் உருவமாகவே இவர் இருக்கிறார்.

இன்னம் என்னவாக இருக்கிறார்?

என்னவென்று இன்னவென்று அவரை வரையறைப்படுத்தி வர்ணிக்க முடியாது. அவர் நம்மால் எட்டிப் பிடிக்க முடியாதவர்-‘அகோசரம்’.

வாஸ்தவத்தில் இப்படி எட்டவொண்ணாதவராக இருந்தாலும் கருணையால் நமக்கு எட்டக்கூடியவராகவும் ஆகிறார். எப்படி? வேதாந்தம், ஸித்தாந்தம் என்றெல்லாம் ஆத்ம சாஸ்த்ரங்களையும், ஸாதனா மார்கங்களையும் கொடுத்து அவற்றின் மூலம் தம்மை எட்டிப் பிடிக்கும்படிச் செய்திருக்கிறார். அதைச் சொல்லித்தான் ஆரம்பித்திருக்கிறது: ‘ஸர்வ வேதாந்த ஸித்தாந்த கோசரம்’.

ஒரு மநுஷ்ய குருவை ஸ்துதிப்பதாக இல்லாமல் பரமாத்மாவையே ஸ்துதிப்பதாக ச்லோக வாசகம் இருக்கிறது.

ஸரியான பாவம் இருந்தால் ‘மநுஷ்ய’ குரு என்றே ஒன்று கிடையாது! பரமாத்மாதான் அந்த ரூபத்தில் வந்திருக்கிறான் என்பதுதான் சாஸ்த்ரம். ஆனால் நடைமுறையில் அதில் ஸந்தேஹம் வரலாம். ‘நாம் ஏற்றி வைத்துப் பரமாத்மாவாக பாவிப்பது இருக்கட்டும். அவருக்கு அந்தப் பரமாத்மாநுபவம் நிஜமாக இருக்கிறதா?’ என்று ஸந்தேஹம் வரலாம். ஆனால் ஆசார்யாளைப் போன்ற ஒருவர் இப்படிச் சொல்லியிருக்கிறாரென்றால் அப்போது அந்த குரு நிஜமாகவே அப்படி இருந்துதானிருக்க வேண்டும்…….

கோவிந்த பகவத்பாதர் பதரிகாச்ரமத்தில் இருக்கும் போது வ்யாஸாசார்யாளின் தர்சனம் அவருக்குக் கிடைத்தது.

அவதாரமாக வரபோகிறவருக்கு கோவிந்த பகவத்பாதர்தான் குருவாயிருக்க வேண்டுமென்ற திவ்ய ஸங்கல்பத்தை அவருக்குத் தெரிவிக்க இது ஸமயமாயிற்று. வருங்காலத்துக்கெல்லாம் ப்ரஹ்ம வித்யை போவதற்கு அங்குரார்ப்பணமான பெரிய விஷயத்தைப் பற்றிய அறிவிப்பு அல்லவா? அதனால் சுகாசார்யாள் கௌடபாதாசார்யாள் ஆகியவர்களும் அங்கே கூடியிருந்தார்கள்.

வ்யாஸர் கோவிந்த பகவத்பாதருக்கு ஈச்வர நிர்மிதமாக ஏற்பட்டிருந்த பெரிய கார்யத்தைக் கொடுத்தார்.

“நம்முடைய (ப்ரஹ்ம) ஸூத்ரத்துக்கு ஸரியாக அர்த்தம் பண்ணி அத்வைத வேதாந்தத்தை லோகத்தில் ஸ்தாபிப்பதற்காகப் பரமேச்வரனே அவதாரம் பண்ணப் போகிறான். ஸந்நியாஸியாயிருந்து துர்மதங்களைக் கண்டித்து வைதிக தர்மத்தை நிலைநாட்டப் போகிறான். லோக ஸம்ப்ரதாயத்தையொட்டி அந்த அவதார புருஷருக்கு ஒருத்தர் ஆச்ரமம் கொடுத்து உபதேசம் பண்ணவேண்டும். இந்தப் பெரிய கார்யம் உனக்குத்தானே ஸங்கல்பிக்கப்பட்டிருக்கிறது.”

“தக்ஷிணத்தின் கோடியில் கேரள தேசத்தில் அவதாரம் ஏற்படப் போகிறது. அவதாரக்காரர் பால்யத்திலேயே உபதேசம் வேண்டி அங்கிருந்து புறப்பட்டு வருவார். நாமானால் இங்கே வட கோடியில் ஹிமாசலத்தில் இருக்கிறோம். இத்தனாந்தூரம் அவர் நடந்து வரும்படி விடக்கூடாது. (காரணம்:) அவதாரம் என்பது ஒன்று; குழந்தை என்பது இன்னொன்று; அதோடுகூட சிஷ்யன் குருவைத் தேடிப் போகிற மாதிரியே குருவும் ஸச்சிஷ்யனைத் தேடிப் போகவேண்டும். அதனால் பாதிதூரம் அவர் வருவதாகவும் பாதி தூரம் நீ போவதாகவும் இருக்கட்டும். இங்கேயிருந்து தேச மத்திக்குப் போ.”

“நர்மதா தீரம் உனக்கு ஏற்கெனவே பழக்கப்பட்ட இடம்தானே? அங்கேபோய், நீ மஹாபாஷ்ய உபதேசம் பெற்றுக்கொண்ட அரச மரத்தடியிலேயே காத்துக் கொண்டிரு. அங்கேயுள்ள குஹையில் ஆத்மாநுஸந்தானம் பண்ணிக்கொண்டு உட்கார்ந்திரு. உரிய காலத்தில் அவர் வந்து சேரும்போது ஆச்ரமம் கொடுத்து உபதேசம் பண்ணு” என்று வ்யாஸர் சொன்னார்.

‘ரவுன்ட் டேபிள் கான்ஃபரன்ஸ்’ என்று உலகத் தலைவர்கள் கூடி ரிஸொல்யூஷன் பாஸ் பண்ணுகிற மாதிரி (தீர்மானம் நிறைவேற்றுவது போல்) வ்யாஸர், சுகர், கௌடபாதர், கோவிந்த பகவத்பாதர் ஆகிய நாலு பெரிய மஹான்கள் கூடிய மஹாநாட்டில் இப்படி ரிஸொல்யூஷன் பாஸ் ஆயிற்று!

கோவிந்த பகவத்பாதர் நர்மதை நதிக்கரைக்குப் போய்ச் சேர்ந்தார். பூர்வாச்ரமத்தில் எந்த மரத்துக்கு மேலே சிஷ்யராக இருந்துகொண்டு வ்யாகரண உபதேசம் கேட்டாரோ, அதே மரத்தின் அடியில் ஒரு குகையில், தாம் ப்ரஹ்ம வித்யோபதேசம் செய்வதற்கான சிஷ்யரை எதிர் பார்த்து உட்கார்ந்துகொண்டு, அப்படியே நிஷ்டையில் ஆழ்ந்துவிட்டார்.

மஹாவிஷ்ணு ஹ்ருதய கமலத்தில் நடராஜ தர்சனம் கண்டதில் உண்டான அவரது சரீர கனத்தை ஆதிசேஷனால் தாங்கமுடியவில்லை என்பதில் ஆரம்பித்து, சிதம்பரத்தில் நடந்த பாடம், கௌடபாதர் – கோவிந்த பகவத்பாதர் சரித்ரங்கள் ஆகிய எல்லாம் ‘பதஞ்ஜலி சரித’த்தில் விரிவாகச் சொல்லியிருக்கிறது. அந்த இரண்டு பேரையும் பரம குருவாகவும் குருவாகவும் பெற்ற ஆசார்யாளின் சரித்ரம் கடைசியான அதன் எட்டாம் ஸர்க்கத்தில் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவருடைய சரித்ரம்தான் விஸ்தாரமாக ‘சங்கர விஜயம்’ என்றே உள்ள புஸ்தகங்களில் சொல்லியிருக்கிறதே என்பதால், பூர்வாசார்யர்கள் சரித்ரத்தை மட்டும் விரித்தும், இதைச் சுருக்கியும் (ராமபத்ர தீக்ஷிதர்) எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது.

ராமபத்ர தீக்ஷிதரே வையாகரணியாக (வ்யாகரணத்தில் தேர்ச்சி பெற்றவராக) இருந்ததால் மஹாபாஷ்யம் செய்யப்பட்டு ப்ரசாரமானதை ஒரு காவ்யமாக எழுத வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கமாயிருந்தது. மஹாபாஷ்ய கர்த்தாவின் பெயரில்தானே புஸ்தகமே ‘பதஞ்ஜலி சரிதம்’ எனப்படுகிறது? எனவே அதில் ‘சங்கர விஜய’த்தை விஸ்தாரமாகச் சேர்க்க இடமில்லை. ஆனாலும் புண்ய சரித்ரத்தைச் சொல்லாமல் விடப்படாது என்று, சுருக்கமாக இருந்தாலும் தம்முடைய ஆசார்ய பக்தியைக் கொட்டி எழுதிவிட்டார்.

காலடியில் ஆற்றில் பாலசங்கரரின் காலை முதலை பிடித்ததில் இந்தக் கதையை ஆரம்பித்திருக்கிறது. “அத்ராந்தரே ஸரிதி நக்ர க்ருஹீத பாத:” என்று ஆரம்பம். ‘ஸரிதி’- ஆற்றில், ‘நக்ர’-முதலை (யால்) ; ‘க்ருஹீத பாத:-பிடிக்கப்பட்ட பாதம்…

அப்புறம் ஆசார்யாள் குருவைத் தேடிப்போய் உபதேசம் பெற்றது. காசிக்குப் போனது. பாஷ்யம் பண்ணியது, திக்விஜயம் பண்ணியது முதலியவற்றைச் சொல்லி ஸம்க்ஷேபமாக (சுருக்கமாக) ஒரு கடைசி ச்லோகத்துடன் முடித்திருக்கிறது :

கோவிந்த தேசிகம் உபாஸ்ய சிராய பக்த்யா
தஸ்மிந் ஸ்திதே நிஜ மஹிம்நி விதேஹ முக்த்யா |
அத்வைத பாஷ்யம் உபகல்ப்ய திசோ விஜித்ய
காஞ்சீபுரே ஸ்திதிம் அவாப ஸ சங்கரார்ய : ||

‘சங்கராசார்ய’ என்பதை ‘சங்கரார்ய’ என்று சொல்லி முடித்திருக்கிறது. மீட்டரை உத்தேசித்து இப்படி (‘ஆசார்ய’ என்பதை ‘ஆர்ய’ என்று) சொல்லியிருப்பதும் நல்ல அர்த்தம் கொடுக்கிறது. ‘ஆர்யர்’ என்றால் உயர்ந்தவர், உத்தமமானவர். அதுதான் ‘ஐயர்’ என்றானது. சங்கரர் என்ற உயர்ந்த புருஷர் ‘சங்கரார்யர்’. அவர் கோவிந்த குருவை வெகுகாலம் பக்தியுடன் உபாஸித்து வந்தார், அதாவது குரு சுச்ரூஷை செய்துவந்தார்: “கோவிந்த தேசிகம் உபாஸ்ய சிராய பக்த்யா”. ஆசார்யாள் பல வருஷங்கள் கோவிந்த பகவத்பாதருடன் இருந்ததாகச் சொல்வதற்கில்லை. எட்டு வயஸில் ஸந்நியாஸியான அவர் பதினாறு வயஸுக்குள் காசிக்குப் போய்த் தம்முடைய பாஷ்யங்கள் எல்லாவற்றையும் எழுதிவிட்டார். ஆகையால் நர்மதைக் கரையில் அவர் குருவுடன் அதிக வருஷங்கள் இருந்திருக்க முடியாது. ஆனாலும் அவர் செய்த இடை விடாத சுச்ரூஷையே பல வருஷம் பணிவிடை செய்வதற்கு ஸமமாக இருந்ததால் ‘சிராய’ என்று போட்டிருக்கிறது.

லோகத்துக்கு வழிகாட்டியாக ஆசார்யாள் சிஷ்யராகி கோவிந்த தேசிகரிடம் உபதேசம் பெற்றுக்கொண்டார். தொடர்ந்தும் லோகத்துக்கு வழிகாட்டியாக குரு சுச்ரூஷை பண்ணினார்.

‘வந்தக் கார்யம் ஆச்சு! வ்யாஸாசார்யாள் பொறுப்புக் கொடுத்த பெரிய கார்யத்தை நல்லபடி முடித்தாயிற்று. இனிமேல் சரீர த்யாகம் பண்ணிப் பரமாத்மாவோடேயே கலந்துவிட வேண்டியதுதான்’ என்று கோவிந்த பகவத்பாதர் நினைத்தார். ப்ரஹ்ம ஞானம் பெற்றபின் சரீரத்திலிருக்கும்போதே முக்தராகத்தான் இருந்தார். அதற்கு ஜீவன் முக்தி என்று பெயர். அப்புறம் சரீரமும் போய்விடும். அதற்கு விதேஹ முக்தி என்று பெயர். ஜீவிக்கும்போதே ப்ரம்மாநுபவமான மோக்ஷத்திலிருப்பது ஜீவன் முக்தி. ஜீவனம் முடிந்து தேஹம் போனபின் ஏற்படுவது விதேஹ முக்தி.

அப்படி அவர் லோகவாழ்க்கையை முடித்து, சரீரத்தை விட்டு விதேஹ முக்தியடைந்தார். தன்னுடைய நிஜ ஸ்வரூபமான ப்ரஹ்மம் என்பதன் மஹிமையில் நிலைத்து விட்டார்! “தஸ்மின் ஸ்திதே நிஜ மஹிம்னி விதேஹ முக்த்யா.”

இப்படி அவர் நிர்யாணமடைந்த பிறகே ஆசார்யாள் குருவாகப் பணி ஆரம்பித்தாற்போல மேலே ச்லோகத்தில் இருக்கிறது. ஆனால் இன்னொரு விதமான வ்ருத்தாந்தமும் இருக்கிறது. அதன்படி, ஆசார்யாள் ஜகதாசார்யாளாக திக்விஜயம் செய்து, கைலாஸம் போய் ஈச்வரனிடமிருந்து பஞ்ச லிங்கங்களைப் பெற்று, பதரி, கேதாரம் முதலிய இடங்கள் வழியாகத் திரும்பும்போது கௌடபாதரையும் கோவிந்த பகவத்பாதரையும் தர்சனம் பண்ணி, ‘தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம்’ சொல்லி அடிக்கு அடி நமஸ்காரம் செய்தார் என்று தெரிகிறது.

‘பதஞ்ஜலி சரித’ப்படி கோவிந்தரின் விதேஹமுக்திக்கு அப்புறம்தான் ஆசார்யாள் நிஜமாகவே ஆசார்யராகப் பணி ஆரம்பித்தது. “தஸ்மின் ஸ்திதே நிஜ மஹிம்னி விதேஹ முக்த்யா” — ‘கோவிந்தர் விதேஹ முக்தியடைந்து நிஜ (ஆத்ம) மஹிமையில் நிலைத்தபின்’ — பின் ஆசார்யாள் என்ன செய்தாரென்று பின்பாதி ச்லோகத்தில் ‘கன்டென்ஸ்’ பண்ணிச் சொல்லிக் கதையை முடித்திருக்கிறது.

என்ன செய்தாரென்றால், அத்வைதபரமான பாஷ்யங்களையெல்லாம் அழகாக இயற்றினார். “அத்வைத பாஷ்யம் உபகல்ப்ய.”

அந்த ஸித்தாந்தத்தை வெற்றிகரமாகப் பரப்புவதற்காக தேசம் பூராவும் ஸஞ்சாரம் செய்தார். திக்விஜயம் செய்தார்: “திசோ விஜித்ய” — திசைகளை ஜயித்தார். அதாவது நாலு திசையிலும் இருந்த மாற்று ஸித்தாந்தக்காரர்களை வாதத்தால் ஜயித்தார். ஸர்வ ஜனங்களின் ஹ்ருதயத்தையும் அன்பினால் ஜயித்தார்.

இப்படி ஜயித்து — ‘விஜித்ய’ — முடிவாக “காஞ்சீபுரே ஸ்திதிம் அவாப”: காஞ்சியில் ஸ்திரவாஸம் வைத்துக் கொண்டுவிட்டார்.

‘ஸ்திதி’ என்றால் முடிந்துபோவது என்றும் அர்த்தம் உண்டு-கடைசி காலத்தில் ஆசார்யாள் காஞ்சியில் வஸித்து விட்டு அங்கேயே அவதார வாழ்க்கையின் முடிவை அடைந்தார் என்று அர்த்தம்.

‘குருரத்னமாலா’விலுள்ள கோவிந்த பகவத்பாத ஸ்துதியில் அவருடைய பூர்வாவதாரங்கள் அவ்வளவையும் அடுக்கிக்கொண்டு போயிருக்கிறது:

ஹரிதல்ப – ஹராங்க்ரிநூபுர – க்ஷ்மாதர –
ஸெளமித்ரி – பலாத்ரிபுத்ர லக்ஷ்மா |
ஜயதாத் – உபரேவம் – ஆத்ததாமா
ஜய கோவிந்த முநி: ஸ சந்த்ரநாமா ||

‘சந்த்ரநாமா’-அதுதான் பூர்வாச்ரமப் பேர். ‘ஜய கோவிந்தமுநி’ — அது உத்தராச்ரம (பிற்கால ஆச்ரம)ப் பேர். ‘ஜய’ என்பது இங்கே பேரோடேயே சேர்ந்திருப்பது. ‘ஜயராமன்’ என்பது போல ‘ஜய கோவிந்தர்’ என்பதையே அவருடைய பெயராகச் சொல்லியிருக்கிறது. ‘இப்படி ஏன் சொல்லணும்? “வெல்க, வெல்க” என்று போற்றி கூறும் அர்த்தத்தில் ‘ஜய’ என்பதைத் தனி வினைச் சொல்லாகப் பிரித்து, “கோவிந்த முனியே, வெல்க!” என்று ஏன் சொல்லக்கூடாது?’ என்றால், ச்லோகத்தின் பின்பாதி ஆரம்பத்திலேயே ஒரு “போற்றி” சொல்லியாகிவிட்டது. “ஜயதாத்” என்று பின்பாதி ஆரம்பிப்பதற்கு “வெல்க” என்றுதான் அர்த்தம். ஆகையால் மறுபடி ‘ஜய கோவிந்த முனி’ என்று வரும்போது அதையே அவருடைய முழுப் பெயராக எடுத்துக்கொள்வதுதான் ஸரியானது. ஜய ராமன், ஜயலக்ஷ்மி — வடக்கே ஜெய்கிஷன் (ஜயக்ருஷ்ணன்), ஜெய் ஷங்கர் (ஜய சங்கரன்) என்றெல்லாம் கூடப் பேர் வைத்துக் கொள்கிறார்கள்- இவை மாதிரி ஜயகோவிந்தர் என்றே பேரைச் சொல்லியிருக்கிறது.

ஒருவர் உயிரோடிருக்கும்போது அவருக்கு ஜய கோஷம் செய்தால் அவர் கார்யமெல்லாம் வெற்றிகரமாகட்டும் என்று அர்த்தம். “ஜேய், ஜேய்” என்று இப்படிப் பல பேருக்கு கோஷம் போடுகிறோம். மறைந்து போனவர்களுக்குப் ‘ஜேய்’ போட்டால் என்ன அர்த்தம்? யசஃகாயம் (புகழுடம்பு) என்று சொல்வதில் அந்த ஆத்மா இருந்து கொண்டு ஆசீர்வாத கார்யத்தை வெற்றியோடு பண்ணிக் கொண்டிருக்கட்டும், உயிரோடிருந்தபோது பண்ணியவற்றுக்கே ஸூக்ஷ்மமாக இப்போதும் சக்தியைக் கொடுத்து அந்த லக்ஷ்யங்களில் தொடர்ந்து வெற்றி காணட்டும் என்று அர்த்தம்.

வெற்றியைத் குறிப்பது மட்டுமின்றி ஜய சப்தமே மிகவும் மங்களமானது. ‘கடபயாதி ஸங்கியை’ என்பதன்படி* ஜ-ய என்ற எழுத்துக்கள் 18 என்ற எண்ணிக்கையைக் குறிக்கும். 18 விசேஷமான மங்கள சக்தி வாய்ந்த எண்.

இதனாலெல்லாம்தான் ‘ஜய’ என்று ஒருத்தர் பேரோடேயே சேர்ப்பது.

மநுஷக் குழந்தை மாதிரி இருந்த ஆசார்யாளை ஸந்நியாஸியாக்கி, நிஜமான ஆசார்யாளாக ஆக்கியவரின் பேருக்கு ‘ஜய’ சேர்க்காவிட்டால் யாருக்குத்தான் சேர்ப்பது? [சிரித்து] சிஷ்யர் ‘ஜய ஜய சங்கர’ராக இருந்தால் குரு ‘ஜய கோவிந்த’ராகவாவது இருக்க வேண்டாமா?

ஜய கோவிந்த முநி: ஸ சந்த்ரநாமா

‘ஜய கோவிந்தமுனி’யாக ஆவதற்கு முன் அவர் சந்த்ர நாமா’க்காரராக இருந்தார். அதுவும் இதே பிறவியில்தான்.

அதற்கு முந்தி?

ஆதிசேஷனாயிருந்தார். இதைத்தான் ‘ஹரிதல்ப’, ‘ஹராங்க்ரிநூபுர’, ‘க்ஷ்மாத்ர’ என்று அவர் செய்யும் மூன்று விதக் கார்யங்களால் தெரிவித்திருக்கிறது. ஆதிசேஷன் விஷ்ணுவுக்குப் படுக்கையல்லவா? அதுதான் ‘ஹரிதல்பம்’. அவரே சிவன் நர்த்தனம் பண்ணும்போது அவருடைய பாதத்தில் சிலம்பாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்றேனல்லவா? அதுதான் ‘ஹராங்க்ரி நூபுரம்’. அவர் செய்யும் இன்னொரு பெரிய கார்யம் இந்த பூமி முழுதையும் தம்முடைய ஆயிரம் சிரஸினால் தாங்கிக் கொண்டிருப்பது. ‘க்ஷ்மா-தர’ என்று இதைத்தான் சொல்லியிருக்கிறது. பூமாதேவி எல்லாவற்றையும் பொறுமையுடன் தாங்கிக் கொள்கிறாளென்றால் அவளையும் ஆதிசேஷன் தாங்கிக் கொண்டிருக்கிறார். ‘க்ஷ்மா’என்றால் பூமி. அதிலிருந்துதான் க்ஷமா (பொறுமை) என்பது வந்தது. ‘பொறுமைக்கு பூமாதேவி’. தன்னை வெட்டுகிறவர்களையும் தாங்குகிறது பூமி. க்ஷ்மாவையும் தாங்குவதால் ஆதிசேஷன் ‘க்ஷ்மாதரர்’.

இந்த ஆதிசேஷ ஸ்வரூபம்தான் கோவிந்த பகவத் பாதாளின் ஆதி ரூபம். ஆதி ரூபத்திற்கும் இந்த (கோவிந்த) ரூபத்திற்கும் நடுவே இன்னும் சில அவதார ரூபங்களும் அவருக்கு உண்டு. என்னென்ன?

ஸெளமித்ரி, பலாத்ரிபுத்ர — ஸெளமித்ரி, பல, அத்ரி புத்ர. ஸெளமித்ரி என்றால் ஸுமித்ரா புத்ரனான லக்ஷ்மணர். விஷ்ணு ராமராக வந்தபோது ஆதிசேஷன் லக்ஷ்மணராகக் கூட வந்தார்.

அரச மரத்தின் மேலே நாள் கணக்காக ஆஹாரமில்லாமல், தூக்கமில்லாமல் சந்த்ர சர்மா பாடம் கற்றுக்கொண்டாரே, அது எப்படி முடிந்தது என்பதற்கு இங்கே ஆன்ஸர் கிடைக்கிறது. லக்ஷ்மணராக இருந்தபோது இதை விட பஹுகாலம் — பதிநாலு வருஷம் — வனவாஸத்தின் போது அவர் ஆஹாரமும் நித்ரையும் இல்லாமல்தானே அண்ணாவுக்குப் பணிவிடை பண்ணிக்கொண்டு, காவல் காத்துக்கொண்டு இருந்திருக்கிறார்? அந்த எக்ஸ்பீரியன்ஸ் தான் இப்பவும் கைகொடுத்திருக்கிறது! இப்போது இப்படிப் பண்ணவே, அப்போது ‘ட்ரெய்னிங்’ நடந்திருக்கிறது!

ஸெளமித்ரியாக வந்தவரே அப்புறம் பலராமராக க்ருஷ்ணாவதாரத்தில் வந்தார். தம்பியாக இருந்தவர் அண்ணாவாக வந்து அண்ணாவின் பெயரையும் வைத்துக் கொண்டார், பலராமர் என்று. பல பத்ரர் என்றும் சொல்வதுண்டு. இங்கே “ஸெளமித்ரி பலாத்ரிபுத்ர” என்னுமிடத்தில் ‘பல’ என்பது பலராமரைத்தான். அவரும் சேஷாவதாரம்.

அப்புறம் ‘அத்ரி புத்ரர்’. அதுதான் ஆத்ரேயர் என்னும் பதஞ்ஜலி.

ஹரியின் படுக்கையாக, ஹரனின் பாதரஸமாக, பூமியை தரிப்பவராக, லக்ஷ்மணராக, பலராமராக, பதஞ்ஜலியாக வந்தவர்தான் சந்த்ர சர்மாவாகப் பிறந்து கோவிந்த முனியானவர். இப்போது அவர் நர்மதா தீரவாஸியாக ஆனார். அதைத்தான் “உபரேவம் ஆத்ததாமா” என்று சொல்லியிருக்கிறது. ‘தாமா’ என்றால் இருப்பிடம். ரேவா என்பது நர்மதைக்கு இன்னொரு பெயர். ‘உபரேவம்’ என்றால் ‘ரேவாவுக்குப் பக்கத்தில்’, அதாவது நர்மதா தீரத்தில். நர்மதா தீரத்தில் வாஸ ஸ்தானத்தை உடையவர்தான் ‘உபரேவமாத்த தாமா’. இத்தகைய பல ரூபங்களைக் கொண்டவர் விஜயம் பண்ணட்டும் — “ஜயதாத்” — அவருடைய பேரும் கீர்த்தியும் எப்போதும் வெற்றிகரமாக விளங்கிக் கொண்டிருக்கட்டும்! இப்படிச் ச்லோகம் சொல்கிறது.


* பிற்பாடு ‘கடபயாதி சங்க்யை’ என்றே வரும் பிரிவில் விளக்கம் காண்க.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s