வரப் பிரதானம்

ஸ்வாமி ஒரு ராத்ரி சிவகுருவின் ஸ்வப்னத்தில் தோன்றினார். “புத்ர வரம் தருகிறேன்!” என்று சொல்லிவிட்டு, அவருடைய மனஸ் பக்குவத்தைப் பரீக்ஷை பார்ப்பதற்காக வரத்தில் இவருக்கும் choice தருவதாகக் கண்டிஷன் போட்டுக் கொடுத்தார். “உனக்கு நூறு பிள்ளை வேண்டுமா? ஒரே பிள்ளை வேண்டுமா? நூறு பிள்ளைகளானால் அவர்கள் தீர்க்காயுஸுடன் இருப்பார்கள். ஒரே பிள்ளையானால் அல்ப காலத்தில் ஆயுஸ் முடிந்துபோகும். இன்னொன்று: அந்த நூறு பிள்ளைகள் புத்தியில்லாத மண்டுக்களாக இருப்பார்கள். ஒரே பிள்ளையாயிருந்தாலோ மஹா புத்திமானாக, ஸர்வஜ்ஞனாகவே, இருப்பான். எப்படி வேண்டும்?” என்று கேட்டார்.

தீர்க்காயுஷ்மான்களாக நூறு பிள்ளைகளா, அல்பாயுஸ்காரரான ஒரு பிள்ளையா என்று மாத்திரம் கேட்டிருந்தால் எதைச் ‘சூஸ்’ பண்ணுவதென்ற குழப்பமே இருக்காது. ஒரே பிள்ளை, அதற்கும் அல்பாயுஸ் என்றிருந்தால் யார்தான் ‘சூஸ்’ பண்ணுவார்கள்? ஸ்வாமியோ அதோடு முடிக்காமல், நூறானால் முட்டாள்கள், ஒன்றானாலோ மஹாமேதை என்றும் கண்டிஷன் போட்டுப் பரீக்ஷை வைத்துவிட்டார்!

சிவகுரு உடனே, “என் பத்னியின் விருப்பத்தையும் தெரிந்துகொண்டு, கலந்தாலோசித்துச் சொல்கிறேன்” என்றார்.

இதிலிருந்து அந்தக் காலத்தில் ஸ்த்ரீகளுக்குப் புருஷர்கள் கொடுத்திருந்த ஸ்தானத்தைப் புரிந்துகொள்ளலாம்.

அந்த அம்மாளை எழுப்பி அவர் விஷயத்தைச் சொன்னார். அவள், “எனக்கும் அப்படியே ஸ்வப்னம் வந்தது. நீங்கள் எழுந்த பிறகு கேட்டுச் சொல்வதாகச் சொல்லிவிட்டேன்” என்றாள்.

இரண்டு பேரும் கலந்தாலோசித்தார்கள். ஸ்வாமியே ப்ரஸன்னமாகி, வரம் கொடுத்து, தங்கள் அபிப்ராயப்படியே செய்வதாகச் சொன்னாரென்பதில் இரண்டு பேருக்கும் ரொம்ப அடக்கம் உண்டாகி விட்டது. ‘அவர் மனஸ் எப்படியோ அப்படிப் பண்ணட்டும் என்றில்லாமல் பிள்ளை வேணும் என்று கேட்டதே தப்போ என்னவோ? அது போதாதென்று இப்போது எப்படிப்பட்ட பிள்ளை என்று வேறு நாம் முடிவு பண்ணி அந்தப்படி அவர் செய்யணுமென்றால் இன்னும் தப்பாக அல்லவா தோன்றுகிறது?’ என்று நினைத்தார்கள்.

“இப்படியெல்லாம் கேட்டு எங்களை சோதனை பண்ணக் கூடாது. ஸ்வாமிக்கு எப்படி அபிப்ராயமோ அப்படியே செய்யணும்” என்று சொல்லி நமஸ்காரம் பண்ணினார்கள்.

அவதரிக்க வேண்டுமென்று ஸ்வாமி திவ்ய ஸங்கல்பம் செய்துவிட்டபின் இவர்களுடைய choice என்று ஒன்று எப்படி அதற்கு மாறாக ஏற்படமுடியும்? ஆனாலும் எல்லாம் மாநுஷமாக நடக்கிறாற்போலவே நடத்திக்காட்ட வேண்டும் என்று ஸ்வாமி நாடகமாடுவதில் இப்படி விளையாடினார். ஸதிபதி ஒற்றுமை எப்படி, பக்தி உள்ளத்தின் தன்மை எப்படி என்றெல்லாமும் உலகத்துக்குத் தெரிவிக்க இப்படி வரப்ஸாதத்திலேயே ‘கண்டிஷன்’, ‘சாய்ஸ்’ என்று வைத்து விளையாடினார்.

அவர் இஷ்டப்படி என்று இவர்கள் விட்டவுடன் ஸந்தோஷமடைந்து, “ஒரே புத்ரனை அநுக்ரஹிக்கிறேன். நானே அப்படி அவதாரம் செய்கிறேன். ஆனால் எட்டு வயஸுதான் இருப்பேன்” என்று சொல்லி ஸ்வாமி மறைந்து விட்டார்.

தராசில் ஒரு தட்டில் நூறு பிள்ளை, மறு தட்டில் ஒரு பிள்ளை என்றால் நூறுக்குத்தான் எடை ஜாஸ்தி. ஆனால் அது பௌதிகத்தில்தான். அதைவிட புத்தியின் எடைக்குத்தான் முக்யம். அப்படிப் பார்த்தால் நூறு பிள்ளைகளும் புததி பலத்தில் நூறு ஸைபர்தான். ஸைபரில் ஒன்றானால் என்ன, நூறானால் என்ன? ஒரு பிள்ளையோ ஸர்வஜ்ஞன் என்பதால் புத்தியில் ‘இன்ஃபினிடி’! எடை போடவே முடியாத அத்தனை புத்தி பலம்! இப்படி ஸைபர் ஒரு தட்டு, இன்ஃபினிடி (அனந்தம்) எதிர்த்தட்டு என்றால் கொஞ்சங் கூட ஸரியாயில்லையே என்றுதான், வயஸில் எடை கட்டும் போது, 100 பிள்ளை × 100 வருஷம் என்பதற்கு எதிராக ஒரே பிள்ளை × எட்டே வயஸு என்றும் ஸ்வாமி வைத்தார்!

புத்ர ப்ராப்தி, அதிலும் ஸ்வாமியே அப்படி வரப் போகிறார் — என்பதில் அந்த தம்பதி ஸந்தோஷப்பட்டுக் கொண்டு, ஆயுஸ் விஷயமாக விசாரப்படாமல், ‘அப்புறம் எப்படிச் செய்கிறாரோ, செய்யட்டும்’ என்று தேற்றிக் கொண்டார்கள். பஜனத்தைப் பூர்த்தி பண்ணிக் காலடிக்குத் திரும்பினார்கள்.

பஜனத்தை சுபமாக முடிக்க ஸமாராதனை பண்ணுவது வழக்கம். அப்படிப் பண்ணினார்கள். ப்ராம்மண சேஷத்தை ஆர்யாம்பாள் புஜிக்கும்போது ஐச்வரமான தேஜஸ் அவளுடைய வயிற்றில் புகுந்தது.

அது கர்ப்பமாக ஆகி ஆசார்யாளின் அவதாரம் ஏற்பட்டது.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s