ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – அவதார தின, ஸித்தி தின ச்லோகங்களில் கி.மு. 6-5 நூற்றாண்டுகள்

ஆசார்யாள் அவதாரம் கி.மு. 509-ல் என்று சொன்னேன். “பலே ஸ்வஸ்மிந் ஸ்வாயுஷ்யம்பி சரசராப்தே (அ) பி கலேர்-விலில்யே” என்ற (‘புண்ய ச்லோக மஞ்ஜரி’) ச்லோகத்தைக் காட்டி, ‘கலியில் 2625-ம் வருஷம், தம்முடைய முப்பத்திரண்டாம் வயதில் ஆசார்யாள் ஸித்தியானதாக இதற்கு அர்த்தம். கலி கி.மு. 3102-ல் பிறந்ததால் கலியில் 2625 என்றால் கி.மு. 477. அப்போது 32 வயஸு என்றால் அவதாரம் கி.மு. 509 என்றாகிறது’ என்றேன்.

ஸித்தியான வருஷத்தைக்கொண்டு அதோடு 32 கூட்டித்தான் அவதார காலத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றில்லை. அவதார தினத்தையே நேராகச் சொல்வதாக இன்னொரு ச்லோகம் இருக்கிறது. ஸித்தி ச்லோகத்தை quote பண்ணும் (‘ஸுஷமா’ என்கின்ற) புஸ்தகத்திலேயே இதையும் quote பண்ணியிருக்கிறது. தற்போது முழுசாகக் கிடைக்காததும், ஆனாலும் ரொம்பப் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவதுமான “ப்ராசீன சங்கர விஜய” த்திலுள்ள ச்லோகம் இது என்று தெரிகிறது.

திஷ்யே ப்ரயாத்யநல-சேவதி-பாண-நேத்ரே
யோ நந்தநே திநமணாமவுதகத்வபாஜி |
ராதே(அ)திதேருடுநி நிர்கதம்-அஸ்த்ர-லக்நே

(‘அஸ்த்ர லக்நம்’ ஸரிதானா என்பதற்கு அப்புறம் வருகிறேன்.)

(அ)ப்யாஹுதவாந் சிவகுருஸ்-ஸ ச சங்கரேதி ||

கடைசிப் பாதத்தில், ‘இன்ன தினத்தில் பிறந்த குழந்தைக்கு சிவகுரு சங்கரன் என்று பேர் வைத்தார்’ என்ற விஷயம் சொல்லியிருக்கிறது. அதற்கு முந்திய பாதத்தில் ‘ராதே’ என்றால் ‘வைசாக மாஸத்தில் ‘என்று அர்த்தம். ‘அதிதேருடு’, அதாவது, ‘அதிதே : உடு’ என்றால் அதிதி என்ற தேவதையின் நக்ஷத்ரமான புனர்வஸு. வால்மீகியும் ராமாவதாரம் புனர்வஸுவில் நிகழ்ந்ததை ‘நக்ஷத்ரே அதிதி தைவத்யே’ என்றே சொல்லியிருக்கிறார். அஸ்த்ர-லக்னம் என்றால் தநுர் லக்னம். ‘இது ஸரியான பாடமில்லை; ‘அங்க லக்னம்’ என்பதே ஸரி’ என்று சொல்வதுண்டு. ஏனென்றால் வைசாக மாஸத்தில் தநுர் லக்னம் ராத்ரி வேளையில் தான் வரும். ஆசார்யாளோ நடு மத்யானம் பிறந்தவர். அப்போது மேஷம்-ரிஷபம்-மிதுனம்-கடகம் என்று நாலாவதாக வரும் கடக லக்னமாகவே இருக்கும். அதுதான் அங்க-லக்னம் என்கிறார்கள்.

அங்கம் என்பது நான்கைக் குறிக்கும்.

‘கடபயாதி’ ஒருவிதமான ஸங்கேத எண்ணிக்கை என்றால், இன்னொரு விதமான ஸங்கேதக் கணக்கும் உண்டு. அதாவது ஒவ்வொரு எண்ணிலும் சிறப்பாக என்ன வஸ்து இருக்கிறதோ அதையே எண்ணுக்குப் பதில் சொல்லி விடுவது. கண்கள் இரட்டைதானே? அதனால் ‘நேத்ரம்’, ‘நயனம்’ என்று சொல்லிவிட்டால் 2 என்று அர்த்தம். ‘முத்தீ’ என்று சங்ககாலத் தமிழிலேயே சொல்லப்படும் மூன்று விதமான அக்னிகளை ப்ராம்மணன் உபாஸிக்க வேண்டும். ஆகையால் அக்னியின் பெயரைச் சொன்னால் 3. ஆறு ருதுக்கள் இருப்பதால் ‘ருது’ என்றால் 6. ஸப்த ரிஷிகள் இருப்பதால் ‘ரிஷி’ என்றால் 7. இம்மாதிரி சதுர் வேதங்கள் இருப்பதால் ‘வேதம்’ என்றால் 4. ரதம்-கஜம்-துரகம்-பதாதி என்று ஸைன்யத்தின் நாலு அங்கங்கள் இருப்பதால் அங்கம் என்றாலும் 4. ‘அங்க லக்னம்’ நாலாவதான கடகம்.

ச்லோகத்தின் இரண்டாம் பாதத்தில், நந்தன வருஷத்தில், தினமணியான ஸூர்யன் உதங்-முகம் எனப்படும் வடக்காக உத்தராயணத்தில் உள்ளபோது அவதாரம் என்ற விஷயம் சொல்லியிருக்கிறது.

முதல் பாதத்தில் கலியில் இத்தனாம் வருஷம் என்பது வருகிறது. ‘திஷ்யே’ என்று ஆரம்பிப்பதற்குக் ‘கலியுகத்தில்’ என்று அர்த்தம். ‘திஷ்யம்’ என்பதற்குக் கலி என்று ஒரு அர்த்தம்.

“திஷ்யே ப்ரயாதி அநல-சேவதி-பாண நேத்ரே” — ‘திஷ்யே ப்ரயாதி’ என்றால் ‘கலியுகம் முன்னேறிக்கொண்டு போகும்போது’.

‘அநல-சேவதி-பாண நேத்ர’ என்பதுதான் சற்றுமுன் நான் சொன்ன ஸங்கேதக் கணக்குப்படி எத்தனாம் வருஷம் என்று தெரிவிப்பது. ‘அநல’ என்றால் அக்னி. ‘அக்னி’ என்றால் 3 என்று தெரிந்து கொண்டீர்களல்லவா? ‘சேவதி’ என்றால் திதி. நவநிதிகள் உண்டாதலால் சேவதி என்பது 9. பாணம் என்றால் 5. பஞ்ச பாணம் என்று மன்மதன் ஐந்து பாணம் தானே வைத்திருக்கிறான்? ‘நேத்ர’ என்பது 2 என்று சொன்னேன். அதனால் ‘அநல-சேவதி-பாண நேத்ர’ என்பது 3-9-5-2 : 3952. கடபயாதி ஸங்கியையில் ‘அங்கானாம் வாமதோ கதி:’ என்றாற்போலவே இங்கேயும் தலைகீழாகத் திருப்பிப் போடணும். அப்படிப் போட்டால் 2593. கலியில் 2593-ம் வருஷம். கலி பிறந்தது கி.மு. 3102. அப்படியானால் கலி 2593 என்பது 3102 மைனஸ் 2593. அதாவது கி.மு. 509.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s