ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – மாற்றுக் கருத்து (கி.பி. 788-820)

மாற்றுக் கருத்து (கி.பி. 788-820) : ஆனால் இது ஒன்று தான் ஆசார்யாள் காலத்தைப்பற்றிய முடிவு என்றில்லாமல் இன்னும் பலவிதமான அபிப்ராயங்கள் இருந்து வருகின்றன. ‘ஓரியன்டலிஸ்ட்’கள் என்பதாகக் கீழ்த்திசை நாட்டு விஷயங்களை ஆராய்ச்சி பண்ணும் மேல்நாட்டுக்காரர்கள் ஆசார்யாள் கி.பி. 788-ல் பிறந்து, 32 வருஷம் ஜீவித்து, கி.பி. 820-ல் ஸித்தியானாரென்று முடிவு செய்திருக்கிறார்கள். அந்த அபிப்ராயம் தான் ஸரியென்றே நம்மவர்களிலும் படிப்பாளிகளாகவுள்ளவர்களில் பெரும்பாலார் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சரித்ர புஸ்தகங்களிலெல்லாம் Sankara’s Age என்றால் 788-820 A.D. என்றே போட்டு, அப்படித்தான் எல்லாரும் படித்து நம்பி வருகிறார்கள்.

கி.மு. 509-477 என்று நான் சொன்னதற்கும் கி.பி. 788-820 என்று சொல்வதற்கும் நடுவே சுமார் 1300 வருஷ இடைவெளி இருக்கிறது.

நம்முடைய தேசத்திலேயே ஆசார்யாளின் அவதார காலத்தைத் குறிப்பதாக இன்னொரு ச்லோகம் வழங்கி வந்திருக்கிறது. அதன்படி கி.பி. 788 என்றே ஆகும். வெள்ளைக்காரர்களும் இதைத்தான் அஸ்திவாரமாக வைத்துக்கொண்டு, அதற்கு மேலே தங்களுடைய ரிஸர்ச் முடிவுகளாகவும் அநேகம் சொல்லி, கி.பி. 788-820 தான் என்று தீர்மானமாக முடித்திருக்கிறார்கள்.

இந்த ச்லோகத்தில் “நிதிநாகேபவஹ்ந்யப்தே” என்று கலியில் எத்தனாம் வருஷமென்பதைச் சொல்லியிருக்கிறது1. “நிதி-நாக-இப-வஹ்நி-அப்தே.” நவநிதிகளாதலால், நிதி-9 நாக: வாஸுகி, தக்ஷன் முதலாக அஷ்ட நாகங்கள். நாகம் என்றால் யானை என்றும் அர்த்தமுண்டு. அஷ்ட திக் கஜங்கள் என்பதாக அதுவும் எட்டுதான். அதனால் இங்கே ‘நாக’ என்பது 8. ‘இப’ என்றாலும் யானை தான். ஆகையால் அதுவும் 8. ‘வஹ்நி’ என்றால் அக்னி, அது 3. ஆகையால் இந்த சொற்றொடர் 9883 என்ற எண்ணிக்கையைத் தருகிறது. தலைகீழாக்க 3889. கலியில் 3889 என்றால் கிறிஸ்து சகாப்தப்படி 3889 மைனஸ் 3102. அதாவது கி.பி. 787.

ஆசார்யாள் அவதாரம் கி.பி. 788 என்று நம்பிக்கை இருப்பதைச் சொன்னேன். இந்த ச்லோகத்தை வைத்துத் தான் அந்த நம்பிக்கை.

788 என்றேன். 787 என்று ஒரு வருஷம் ஏன் குறைச்சலாக வருகிறதென்றால்…

இங்கிலீஷ் வருஷம் ஜனவரியிலும், இந்திய வருஷம் சாந்த்ரமானமானால் மார்ச் மத்தியிலிருந்து ஏப்ரல் மத்திக்குள்ளும், ஸெளரமானமானால் ஏப்ரல் மத்தியையொட்டியுமே பிறப்பவை. அதாவது எந்த ‘மாஸ’மானாலும் ஒரு இந்திய வருஷத்திலேயே இரண்டு இங்கிலீஷ் வருஷங்களின் பகுதிகள் வந்துவிடும். நம்முடைய தநுர்மாஸம் பாதி வரையில் ஒரு இங்கிலீஷ் வருஷம், அப்புறம் பங்குனி முடிய இன்னொரு இங்கிலீஷ் வருஷம் என்று இருக்கிறது. அதனால் ஒவ்வொரு இந்திய வருஷத்துக்கும் ‘…’ to ‘…’ என்று அடுத்தடுத்த இரண்டு இங்கிலீஷ் வருஷங்களைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. நடக்கும் நம்முடைய சுபக்ருத் வருஷத்தை 1962 to 1963 என்கிறோம்2. இம்மாதிரி கலி 3889 என்பதும் இங்கிலீஷ் வருஷம் கி.பி. 787 to 788-ஆக இருந்திருக்க வேண்டும்.

788 என்று நம் தேசத்திலுள்ள ச்லோகப்படி எடுத்துக்கொண்டு அப்புறம் ஓரியண்டலிஸ்டுகளும், அவர்கள் சொல்வதையே வேதவாக்காக எடுத்துக்கொள்ளும் நம்மவர்களும் அதற்கு ஆதரவாக வேறு காரணங்கள் காட்டுகிறார்கள்.

‘இன்னின்னாருடைய பேர்கள் அல்லது இன்னின்னாருடைய கொள்கைகள் பற்றி ஆசார்யாளின் புஸ்தகங்களில் வருகிறது. அதனால் அவர்களுக்குப் பிற்பாடுதான் ஆசார்யாள் வந்திருக்கவேண்டும். அவர்களுடைய காலத்தைப் பார்க்கும்போது ஆசார்யாள் காலம் கி.மு. 509 – 477 – ஆக இருக்கவே முடியாது’ என்று அந்த ஆராய்ச்சிக்காரர்கள் சொல்கிறார்கள். இவற்றில் புத்தர் காலம் சாஸ்த்ரஜ்ஞர்கள் (ஆசார்யாளின் அவதாரமாகச்) சொல்லும் கி.மு. 509-க்கு ரொம்பக் கிட்டே வந்துவிடுகிறது. ரொம்பக் கிட்டே என்ன? ஸமகாலமே ஆகிவிடுகிறது. ‘புத்தர் காலம் ஏறக்குறைய கி.மு.560 லிருந்து 480 வரை. அவர் எண்பது வயஸு இருந்தவர்’ என்று இந்த ஆராய்ச்சிக்காரர்கள் முடிவு பண்ணி அப்படித் தான் ஹிஸ்டரிப் புஸ்தகங்களிலெல்லாம் ஏறியிருக்கிறது. அதாவது புத்தரின் ஐம்பதாவது வயஸில் ஆசார்யாள் பிறந்து ஏறக்குறைய அவர் நிர்யாணமாயிருக்கவேண்டும்! புத்தருக்குப் பிறகுதான், அதாவது, சாஸ்த்ரஜ்ஞர்கள் சொல்கிறபடியான சங்கரரின் காலத்துக்குப் பிறகுதான் புத்த மதம் அநேக ராஜாங்கங்களின் ஆதரவில் ப்ரசாரமாகி, இருநூறு முன்னூறு வருஷத்துக்கப்புறம் அசோக சக்கரவர்த்தியால் நாலா திசையிலும் பரப்பப்பட்டது. இப்படியிருக்கும்போது சங்கரர் காலத்திலேயே பௌத்தம் தலை சாய்ந்தது என்றால் எப்படி ஸரியாகும்? -என்று ஆக்ஷேபிக்கிறார்கள். பௌத்தமதம் நெடுங்காலம் பரவிய பிறகே குமாரில பட்டர் பிறந்து அதை நிறையக் கண்டனம் பண்ணி, அதற்கும் அப்புறம்தான் ஆசார்யாள் பாக்கியும் அதைக் கண்டித்தது என்று சாஸ்த்ரஜ்ஞர்களே ஏராளமான ஆதாரங்களைக் கொண்டு ஒப்புக்கொள்கிறார்கள். அப்படி ஒப்புக்கொண்டும் இப்படி புத்தருக்குக் காண்டெம்பரரியாக அவர்கள் ஆசார்யாளைச் சொல்வது ஒவ்வாமலிருக்கிறது என்கிறார்கள்.

குமாரிலபட்டரின் கடைசிக் காலத்தில் ஆசார்யாள் அவரை ஸந்தித்திருக்கிறார். அதைக் கதை என்று விட்டு விட்டாலும் மீமாம்ஸையில் ‘பாட்ட மதம்’ எனும் குமாரில பட்டரின் கொள்கைகளை ஆசார்யாள் நன்றாகத் தெரிந்து வைத்துக்கொண்டு பாஷ்யங்களில் கண்டித்திருக்கிறார். அதனால் இவர் அவருக்குக் ‘காண்டெம்பரரி’ அல்லது பிற்காலத்தவர். அந்தக் குமாரிலபட்டர் காளிதாஸனிலிருந்து மேற்கொள் காட்டியிருக்கிறார்.


1 நிதினாகபவஹ்ந்யப்தே விபவே மாஸி மாதவே |
சுக்ல திதௌ தசம்யாந்து சங்கரார்யோதய: ஸ்ம்ருத ||

2 இப்பகுதி 1963 சிவராத்ரியை அடுத்து ஒரு சம்பாஷணையில் கூறியது.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s