பொன்மழை பொழிவித்தது; லௌகிகத்திலேயே ஆத்மிகமும்

அந்த மாதிரி ஒரு நாள் காலம்பற – அன்றைக்கு த்வாதசி என்று சொல்வார்கள் – ஒரு வீட்டுக்குப்போய், முறைப்படி, “பவதி! பிக்ஷாம் தேஹி!” என்று கேட்டார்.

அது பரம தாரித்ரிய தசையிலிருந்த ஒரு ப்ராம்மணனின் வீடு. அவனுக்கு அநுக்ரஹம் பண்ணவே பால ப்ரஹ்மசாரி அங்கே போனார் போலிருக்கிறது! பிக்ஷை என்று சாக்காகப் போய், பெரிய அநுக்ரஹ பிக்ஷை போடுவதற்காக!

மலையாளத்தில் எல்லாரும் ஸுபிக்ஷமாயிருந்தார்கள். ‘அத்ருதி’க்குள்ளேயே குடித்தனத்துக்கு வேண்டிய ஆஹார ஸாமான்கள் கிடைத்துவிடும் என்றெல்லாம் சொன்னால்கூட, கர்மா என்று ஒன்று இருக்கோல்லியோ? அப்படியிருந்தால் கல்பக வ்ருக்ஷத்திற்குக் கீழேயே இருந்தால்கூட தரித்ரம்தான் பிடுங்கித் தின்னும்! ஜன்மாந்தர கர்மாவினால் இந்த ப்ராம்மணன் ரொம்பவும் ஏழ்மை நிலையிலிருந்தான். வீட்டுக்கு அத்ருதி இருந்ததேயொழிய அதற்குள் மரமா, செடியா எதுவும் பயிராகாமல் பொட்டலாயிருந்தது!

உஞ்சவ்ருத்திக்கு (வீடு வீடாக அரிசி தானத்துக்கு) அந்த ப்ராம்மணன் போவான். ஸாதாரணமாக உஞ்சவ்ருத்தி ப்ராம்மணன் வந்தால் போடாமலிருக்க மாட்டார்கள். ஆனாலும் கர்மா ப்ரதிகூலமாக இருந்தால் எங்கேயும் பழி வாங்காமல் விடாது – இவன் போகிற வேளை அஸந்தர்பமாயிருந்து காலிப் பாத்ரமாகவே திரும்ப வேண்டி வரும். எப்படியோ அந்த தம்பதி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்து வந்தார்கள்.

ஆசார்யாள் பிக்ஷைக்குப் போயிருந்த அன்றைக்கு வீட்டுக்கார ப்ராம்மணன் வீட்டிலில்லை. அவனுடைய ஸம்ஸாரம் மட்டுமே இருந்தாள்.

பிக்ஷை போடுவதற்கு அந்த வீட்டில் எதுவுமில்லை. ஆசார்யாளைப் பார்த்த மாத்திரத்தில், “அடடா, எப்படிப்பட்ட தேஜஸ்வியான ப்ரஹ்மசாரி! இவருக்கு பிக்ஷை போட்டால் ஸகல புண்யமும் உண்டாகும்!” என்று நினைத்தாள். ஆனால் போடத்தான் மணி அரிசி இல்லை. அவள் நல்ல உள்ளம் படைத்தவள். ‘இருக்கிறவர்களை’ விட ‘இல்லாதவர்’களுக்கே கொடுக்கிற எண்ணம் இருப்பதுண்டு. இவளுக்கு அப்படி இருந்தது. ‘அபர ஸூர்யனாக நிற்கிற குழந்தைக்குக் கொடுக்கிறதற்கு இல்லையே! இப்படியரு தெய்வக் குழந்தை நம் ஆத்து வாசலில் வந்து நிற்கிறபோது ‘இல்லை போ!’ன்னு சொல்லுவாளா?’ என்று மிகவும் வேதனைப் பட்டாள். என்னவாவது கிடைக்குமா என்று தேடித் தேடிப் பார்த்தாள்.

ஒரு புரையில் அழுகிப்போன நெல்லிக்காய் ஒன்று அகப்பட்டது. அந்தப் ப்ராம்மணன் பரம ஸாது. தோப்பில், கீப்பில் உதிர்ந்து கிடக்கிறதுகளில்கூட நல்லதாக உள்ளதை எடுத்தால், “ஏண்டா, எடுத்தே?” என்று யார் சண்டைக்கு வருவார்களோ என்று இந்த அழுகலைப் பொறுக்கிக் கொண்டு வந்து வைத்திருந்தான். அதுவும் அவளுக்குத் தெரியாது. இப்போது தேடியதில் அகப்பட்டது. த்வாதசியன்று போஜனத்தில் நெல்லி அவச்யம் சேர்க்கவேண்டும். அதற்காக அவன் ‘சேமித்து’ வைத்திருந்த நெல்லி!

“போயும் போயும் இதையா தெய்வக் குழந்தைக்குப் போடுவது?” என்று மனஸு குமுறி வேதனைப்பட்டாள். ஆனாலும் “பவதி பிக்ஷாம் தேஹி!” கேட்டுவிட்ட ப்ரஹ்மசாரியை வெறுமே அனுப்பப்படாதே என்பதால் வாசலுக்குப் போனாள். அங்கே மஹா தேஜஸ்வியாக நிற்கிற பால சங்கரரைப் பார்த்துச் சொல்லி முடியாத வெட்கத்தோடும் அழுகையோடும் திரும்ப உள்ளே வந்தாள். வந்த பிறகு, ஐயோ, தெய்வக் குழந்தைக்கு ஒன்றும் போடாமலிருப்பதா?” என்று நினைத்து வாசலுக்குப் போனாள். இப்படி வாசலுக்கும் உள்ளுக்குமாகத் தவித்துத் தடமாடி விட்டு, கடைசியில், ‘அழுகலோ, மட்டமோ? நம்மிடம் இருப்பதைத் தானே நாம் கொடுக்க முடியும்?’ என்று ஒரு மாதிரி மனஸைத் தேற்றிக்கொண்டு அழுகல் நெல்லிக்கனியை ஆசார்யாளுக்குப் போட்டாள். தாரை தாரையாகக் கண்ணால் ஜலத்தைக் கொட்டிக் கொண்டு போட்டாள்.

பொருளில் தரித்ரமாயிருந்தாலும் அவளுடைய மனஸு எத்தனை பெரியது, அது ஆகாசம் மாதிரி விரித்து அதிலிருந்து தன்னிடம் எத்தனை அன்பு பொங்குகிறது என்பதை ஆசார்யாள் கண்டுகொண்டார். அவர் மனசு அவளுக்காக உருகிற்று.

உடனே அவளுக்காக மஹாலக்ஷ்மியை ப்ரார்த்தித்து ஸ்தோத்ரம் பாடினார். அதுதான் “கனக தாரா ஸ்தவம்” என்பது. அந்தப் பேர் ஏற்பட்டதற்குக் காரணம் பின்னால் தெரியும்.

ஆசார்யாளின் வாக்கிலிருந்து வந்த முதல் ஸ்துதி இதுதான்.

அந்த ப்ராம்மண குடும்பத்தின் தாரித்யத்தைப் போக்கி, ஸம்பத்தை அநுக்ரஹிப்பதற்காக லக்ஷ்மியை ஸ்துதித்தார்.

ஆகாசத்திலிருந்து அசரீரி வாக்குக் கேட்டது. “இந்த தம்பதி பூர்வ ஜன்மத்தில் பாவம் செய்தவர்கள். அதற்கு தண்டனைதான் தாரித்ரியம். பாவம் தொலைகிற காலம் வருகிற வரையில் இவர்களுக்கு ஸம்பத்தைத் தருவதற்கில்லை” என்று லக்ஷ்மி அசரீரியாகச் சொன்னாள்.

உடனே ஆசார்யாள், “இவர்கள் இப்போதிருப்பதைவிட ஜாஸ்தியாக வேண்டுமானாலும் ஜன்ம ஜன்மாந்தரங்களாகப் பாவம் பண்ணியிருக்கட்டும்! அப்படியிருந்தால் கூட, இத்தனை அன்போடு அகத்திலிருந்த ஒரே பக்ஷ்யமான நெல்லிக்கனியை இவள் எனக்குப் போட்டிருக்கிறாளே, இந்த அன்பும் த்யாகமும் எத்தனை புண்யமானவை? சாப்பாட்டுக்கே இல்லாதவள் எனக்கு பிக்ஷை போட்ட பலன் எத்தனை பாபத்தையும் சாப்பிட்டுவிடுமே! அதோடு, எத்தனை கர்மாவானாலும் நான் ப்ரார்த்தித்ததால் போய்விடாதா?” என்று கேட்டார்.

“அம்மா மஹாலக்ஷ்மி! இவளுக்கு இருக்கிற மாதிரி உனக்கும் அன்பு நிறைய உண்டாச்சே! அதனால், ரொம்பக் கண்டிப்போடு ந்யாயம் மட்டும் வழங்காமல், அன்பைக் காட்டி அநுக்ரஹம் பண்ணு!” என்று ப்ரார்த்தித்தார். “இவர்களுடைய துஷ்கர்மம் கடும் கோடைக்கால வெய்யிலாக ஸம்பத்து ப்ராப்தியை வற்றடிப்பதாகவே இருக்கட்டும். ஆனால் எந்தக் கோடையையும் தணிவிக்கக்கூடியதாக ஒரு பெரிய காற்று மழைமேகத்தைக் கொண்டு வந்து விடலாமோ இல்லியோ? (மலையாளத்தில் ‘எடவப் பாதி’ என்பதாக வைகாசி மாஸ மத்தியில் நல்ல வெய்யில் நாளிலேயே தென்மேற்கிலிருந்து காற்றடித்து நல்ல மேகங்களைக் கொண்டு வந்து மான்ஸூன் கொட்ட ஆரம்பித்து விடும்!) இவர்களுடைய துஷ்கர்ம வெய்யிலைப் போக்க உன்னிடமுள்ள தயை என்ற காற்றினல் ஸம்பத்து மேகத்தை அடித்துக்கொண்டு வந்து கொட்டிவிடேன்!…. உன்னுடைய கடாக்ஷமாகிய கார்மேகத்தை தயை என்ற காற்றினால இவர்கள் பக்கம் திருப்பிவிட்டுப் பொருள் என்ற மழையைப் பொழியேன்!” என்று சொன்னார்.

ஏழை ப்ராம்மண ஸ்த்ரீக்காக அவர் லக்ஷ்மியிடம் முறையிட்டதற்கு “கனகதாரா ஸ்தவ”த்திலேயே internal evidence இருக்கிறது:

தத்யாத் தயாநுபவநோ த்ரவிணாம்புதாராம்
அஸ்மிந் அகிஞ்சந விஹங்க சிசௌ விஷண்ணே |
துஷ்கர்ம கர்மம் அபநீய சிராய தூரம்
நாராயண–ப்ரணயிநீ நயநாம்புவாஹ : ||1

பெருமாளிடம் நிறைந்த ப்ரேமையை வைத்திருக்கும் தாயாரானதால் “நாராயண ப்ரணயினீ !” என்று கூப்பிட்டுச் சொல்கிறார். கூப்பிடுவது நாலாம் வரியில். எடுத்தவுடன் “தத்யாத்” – “கொடுத்து விடட்டும்!” என்று அவளுடைய அருட்காற்று அடித்து மழையாக ஸம்பத்துத் தர வேண்டியதைப் பளிச்சென்று தெரிவித்து விடுகிறார்.

“தயாநுபவனோ” – தயையாகிய காற்றோடு கூடிய; “நயனாம்புவாஹ:” – நேத்ரமாகிய மேகம். அதாவது கடாக்ஷம். லக்ஷ்மீ கடாக்ஷம் ஏற்பட்டுவிட்டால் அமோகமாக ஸம்பத்துப் பொழிந்து விடும். கர்மா பாதகமாயிருக்கும்போது அந்தக் கடாக்ஷம் எந்தப் பக்கமோ பார்த்துக் கொண்டிருக்கும். கருவிழி, மை இட்டுக் கொண்டிருப்பது இரண்டும் சேர்ந்து கறுப்பிலேயே பளபளவென்று ஜ்வலிப்பது அந்தக் கடாக்ஷம். அதனால் கார்மேகமாகச் சொல்வது வழக்கம். அந்த மேகம் எந்தப் பக்கமோ இருக்கிறது – ரொம்ப தூரத்தில். அதனாலென்ன? எங்கேயோ அந்தமான் தாண்டியிருக்கிற மழைமேகத்தை மான்ஸுன் காற்று நம் ஊருக்கு அடித்துக் கொண்டு வருகிறதா, இல்லையா? அப்படியொரு பெரிய காற்றாகத் தாயாருடைய தயை இருக்கிறதே! தயைக் காற்று கடாக்ஷமேகத்தை அடித்துக் கொண்டுவந்து இந்த துஷ்கர்மக்காரர்களிடமுந்தான் கொட்டட்டுமே! இம்மாதிரி தகுதி இல்லாதவர்களுக்கும் நல்லது செய்யத்தானே தயை, தயை என்று ஒன்று அவளிடம் இருக்கிறது? தகுதியுள்ளவர்களுக்குத் தகுதிக்காகவே செய்துவிட வேண்டியதுதான். ‘தயை’ காட்ட வேண்டியதில்லை. லௌகிகத்திலுங்கூட தகுதிப்படி நமக்குக் கிடைக்கவேண்டியதைக் கேட்கும் போது ‘தயவு காட்டுங்கள்!’ என்று சொல்வதில்லையே! ‘அவன் தயவு இவனுக்கு வேண்டியிருக்கிறது’ என்றால் இவனுடைய தகுதியைப் பார்க்காமலே அவன் உபகாரம் பண்ணுவானென்று அர்த்தம். வெய்யிலில் வறண்டு போன பூமிக்கு “தகுதி” என்ன இருக்கிறதென்று பார்த்தா மான்ஸூன் காற்று அங்கே மேகத்தைக் கொண்டுவந்து சேர்க்கிறது?

“தயைக் காற்றோடுகூடி உன் கடாக்ஷ மேகமானது த்ரவிணாம்பு தாராம் தத்யாத். ‘த்ரவிணம்’ என்றால் செல்வம். ‘அம்புதாரா’: ‘அம்பு’, ‘அப்பு’ இரண்டும் ஒன்றுதான் – ஜலம் என்று அர்த்தம். “அம்புதாரா” – ஜலம் தாரையாக வர்ஷிப்பது, அதாவது மழை. “உன் கடாக்ஷமேகம் கருணைக் காற்றினால் கொண்டுவரப்பட்டுப் பொருள் தாரையை வர்ஷிக்கட்டும்!”

பொருளைப் பொன் என்றே சொல்வது வழக்கம். ‘பொன்னும் பொருளும்’ என்றே சேர்த்துச் சொல்கிறோம். ரூபாயே gold standard – படிதானே (பொன்னின் கையிருப்பை வைத்துத்தானே) இருந்திருக்கிறது? ‘த்ரவிணம்’ என்றால் பொதுவாக ‘பொருள்’ என்பதோடு ‘பொன்’ என்றும் அர்த்தம் உண்டு. ஸ்வர்ணம், ஹேமம், ஹிரண்யம், கனகம் என்பவை போல த்ரவிணம் என்றும் தங்கத்துக்கு ஒரு பேர். “த்ரவிண (அம்பு)தாரா” என்று இங்கே ஆசார்யாள் வாக்கில் வந்திருப்பதுதான் ஸ்தோத்ரத்தின் பேரில் “கனகதாரா” என்று இருக்கிறது!

“உன் கடாக்ஷமேகம் அருட்காற்றோடு கூடி வந்து த்ரவிணதாரையைப் பொழியட்டும்!” என்றால் யாருக்கு? ஸ்தோத்ரம் பண்ணும் பால சங்கரருக்கா? அவருக்கு எதற்கு? பெரிய செல்வக் குடும்பத்தில் வந்தவரல்லவா அவர்? அதுவுமன்னியில் ப்ரஹ்மசரியாக குருகுலவாஸம் பண்ணிக் கொண்டிருப்பவர் பணமே வைத்துக்கொள்ளப்படாதே!

அவருக்கில்லை. வேறே யாருக்கு? அதைச் சொல்கிறார்: “அஸ்மின் அகிஞ்சன விஹங்க சிசௌ விஷண்ணே“. அப்படியென்றால், ‘மனஸ் சோர்ந்து வாடிப் போயிருக்கிற இந்த ஏழையான பறவைக் குஞ்சுக்கு’ என்று அர்த்தம்.

மநுஷ்யர்களுக்கு என்றே சொல்லவில்லை! பக்ஷிக்கு, அதிலும் வளராமல் குஞ்சாகவுள்ள பக்ஷிக்கு என்கிறார்! ‘விஷண்ணே’ – வாடிச் சோர்ந்துபோன; ‘அஸ்மின்’ — இந்த (கிட்டத்தில் இருக்கும் ப்ராம்மண ஸ்த்ரீயைக் காட்டிச் சொல்வதால் ‘இந்த’ என்கிறார்) ; ‘அகிஞ்சன’ – கொஞ்சங் கூட உடைமை இல்லாத. ‘கிஞ்சன’, ‘கிஞ்சித்’ என்றால் ‘கொஞ்சம்போற’. ‘கிஞ்சன’தான் ‘கொஞ்ச’மாச்சோ என்னவோ? ‘அகிஞ்சன’ என்றால் அந்தக் கொஞ்சங்கூட இல்லாத முழு தரித்ரமாக என்று அர்த்தம். ‘விஹங்கம்’ என்றால் பக்ஷி, ‘விஹங்க சிசு’ என்றால் குஞ்சாக உள்ள பக்ஷி. ‘விஹங்க சிசௌ’: பக்ஷிக் குஞ்சினிடத்தில். “பக்ஷிக் குஞ்சினிடத்தில் உன் கடாக்ஷ மேகத்தால் பொருள் மழையைக் கொட்டுவாயாக.”

ப்ராஹ்மண பத்னியை உத்தேசித்துத்தான் சொல்கிறாரென்பது ஸ்பஷ்டம். ஆனால் ஏன் அப்படிச் சொல்லாமல் பக்ஷிக் குஞ்சு என்றார்?

அந்தச் சின்ன வயஸிலேயே அவருக்கு இருந்த கவி உணர்ச்சியால்தான் அப்படிச் சொன்னார்! ஆசார்யாளின் க்ரந்தங்களைப் பார்க்கப் பார்க்க நமக்கு ஆச்சர்யமாயிருக்கும் – எத்தனை விஷயம் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கும் மஹாபுத்திமானாக அவர் இருந்திருக்கிறாரென்று மட்டுமில்லை; கவி என்ற ரீதியிலேயே எப்படியெல்லாம் வார்த்தைகளைக் கோத்திருக்கிறார், எப்படி அலங்காரங்களை (உபமானம் முதலான அணிகளை)க் கையாண்டிருக்கிறார், வார்த்தை விநோதங்கள் என்னவெல்லாம் பண்ணியிருக்கிறார், கவிகள் தங்களுக்குள் ஒரு ‘ட்ரெடிஷ’னாக – மரபாக – பின்பற்றும் கருத்துக்களையெல்லாம் தாமும் எப்படிப் பின்பற்றியிருக்கிறாரென்று ஆச்சர்யமாயிருக்கும். நிர்குண ப்ரஹ்மம் என்று கல்பனா ரஹிதமாக, வெட்ட வெளியாயிருப்பதைப் பிடித்துக் கொண்டிருந்தாலும் நூதன கல்பனைகளைத் தம்முடைய நூல்களில் கொட்டிக் கவி திலகமாக இருந்திருக்கிறார்!

குழந்தையாய் அவர் அநுக்ரஹித்த இந்த முதல் ஸ்தோத்ரத்திலேயே இப்படிப் பல இருப்பதில், poetic tradition ஒன்றின்படியே பக்ஷிக் குஞ்சு என்று “விஹங்க சிசு” என்று, சொல்லியிருக்கிறார்.

நம்முடைய கவி மரபிலே சகோரம், சாதகம் என்று இரண்டு பக்ஷிகளைச் சொல்வார்கள். இப்போது நாம் லோகத்தில் பார்க்க முடியாத இரண்டு விசித்ரமான பக்ஷிகள்! ‘சகோரம்’ என்பது சந்த்ரிகையை (நிலவொளியை) மாத்ரமே ஆஹாரம் பண்ணும் பக்ஷி. வேறே எதுவும் சாப்பிடாது.

‘ஸெளந்தர்ய லஹரி’யில் அம்பாளின் மந்தஹாஸ காந்தியை வர்ணிக்கும்போது2 சகோரத்தைச் சொல்கிறார். ‘மதி வதனம்’ என்பது வழக்கமல்லவா? அம்பாளுடைய மதி வதனத்திலிருந்து சந்த்ரிகையாக அவளுடைய சிரிப்பொளி வீசுகிறது. அந்த சந்த்ரிகையை சகோர பக்ஷி பானம் பண்ணிற்று. சொல்லி முடியாத தித்திப்பாக இருந்தது. இப்படியிருந்தால் திகட்டிவிடுமல்லவா? தித்திப்பில் அதன் அலகு மரத்தே போய்விட்டதாம்! திகட்டாமலிருக்க அப்பப்போ ஒரு வாய் புளிக் கஞ்சி குடிக்கலாமே என்று பார்த்ததாம். ஆகாசத்திலே சந்த்ரனிலிருந்து நிலா அடித்துக் கொண்டிருந்தது. அதை அந்தச் சகோரம் ருசி பார்த்ததாம். அம்பாளுடைய முக சந்திரனிலிருந்து பெருகும் மந்தஸ்மித நிலாவின் தித்திப்பு ஏறிய அதன் அலகுக்கு ஆகாசத்துச் சந்த்ரனின் நிலா (அதற்குத் தேவைப்பட்ட) புளிக்கஞ்சி மாதிரியே இருந்ததாம்! மரத்துப்போன உணர்ச்சியும் போயிற்றாம்! அதற்கப்புறம் தான் சகோர பக்ஷி நிலாவைக் குடிப்பது என்று ஏற்பட்டது என்று விநோதக் கல்பனையாகப் பாடியிருக்கிறார்.

வாஸ்தவத்தில் சந்த்ரிகையில் அம்ருதமே நிறைந்திருக்கிறது. அந்த அம்ருதத்தையும் புளிக் கஞ்சியாக்கிவிடும் அப்பேர்ப்பட்ட மாதுர்யத்தோடு அம்பிகையின் மந்தஹாஸ காந்தி இருக்கிறது என்று அங்கே சொல்லியிருக்கிறார். “கரஞ்ஜிக தியா” — ‘கஞ்சி என்ற எண்ணத்தால்’ (நிலாவைச் சகோரம் குடிக்கலாயிற்று) என்கிறார். மலையாளத்தில்தான் கஞ்சி குடிப்பது ஸகல ஜாதியாருக்கும் வழக்கமாயிருக்கிறது. ‘மலையாளம் கஞ்சி’ என்றே இருக்கிறது.

‘ஸெளந்தர்ய லஹரி’ ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் ஜகதாசார்யாளாகக் கீர்த்தி பெற்ற பிறகு பண்ணினது. அதில் சகோரத்தைச் சொன்னவர் பால்யத்தில் மஹாலக்ஷ்மியைப் பாடினபோது சாதகத்தைச் சொல்லியிருக்கிறார். ‘விஹங்க சிசு’ என்பது சாதக பக்ஷியின் குஞ்சைத்தான்.

சாதகத்தைப் பற்றி, என்ன விசித்ரமென்றால், அதற்குத் தொண்டையிலே த்வாரம் இருக்கும். இப்படியிருந்தால் எப்படி சாப்பிடுவது? அலகினால் எதைச் சாப்பிட்டாலும் அது தொண்டை ஓட்டை வழியாக வெளியில் வந்து விடுமல்லவா? நாம் கையை வளைத்து வாயில் ஆஹாரம் போட்டுக் கொள்கிறதுபோல அது அலகை வளைத்து ஓட்டைக்குள் ஆஹாரத்தைப் போட்டுக்கொள்ளவும் முடியாது. அதனால், இந்தப் பக்ஷிக்கு ஆஹாரம் என்னவென்றால் ஆகாசத்திலிருந்தே நேரே அந்தக் கண்ட த்வாரத்துக்குள்ளேயே விழுந்து வயிற்றுக்குள் போய்விடக் கூடிய மழைத் துளிதான். மழை இல்லாவிட்டால் அது பசியில் வாடவேண்டியதுதான். ‘மழைக்காக ஏங்கும் சாதகம் போல்’ என்று அதனால்தான் சொல்வது.

லக்ஷ்மி த்ரவிண தாரையை வர்ஷிக்கவேண்டும் என்று சொன்னவுடன் பால ஆசார்யாளின் கலியுள்ளத்துக்கு, ‘மழை தாரையைத் தவிர வேறே ஆஹாரமே இல்லாத சாதக பக்ஷி இருக்கிறதே! அதைத்தான் இவளுடைய த்ரவிண வர்ஷத்திற்காக ஏங்கி வாடிக்கொண்டிருக்கிற இந்த ப்ராஹ்மண குடும்பத்திற்கு ரூபமாகச் சொல்ல வேண்டும்’ என்று தோன்றி, அப்படியே பாடிவிட்டார். வாயால் சாப்பிடுவது கர்மாவை அநுபவிக்கிறமாதிரி, கர்மா ப்ரதிகூலமாயிருப்பதால், வாயால் முழுங்கினது தொண்டை ஓட்டையால் ஒழுகி விடுகிற மாதிரி, இவர்களுக்கு ஸம்பத்து சேராமல் நழுவிப் போய்விடும். கர்மாவைப் பார்க்காமல் அம்பாள் க்ருபை பண்ணும்போது, நேரே தொண்டை ஓட்டைக்குள்ளேயே ஆஹாரத்தைப் போட்டு உள்ளே விடுவதுபோல, ஸம்பத்து நழுவாமல் சேர்ந்துவிடும்.

பக்ஷி என்று மட்டும் சொல்லாமல் சிசுவான பக்ஷி என்று, குஞ்சு என்று சொன்னார். குழந்தைக்குத்தான் பசி தாங்கவே தாங்காது. பசித்தால் அது ‘வீல்’, ‘வீல்’ என்று கத்துகிற மாதிரி நாம் கத்துகிறோமோ? அதோடு, ஒரு சின்னக் குழந்தை கஷ்டப்படுகிறது என்றால் எந்தக் கல் மனஸும் இறங்கும். லக்ஷ்மியோ ‘தாயார்’ என்றே சொல்லப்படுபவள். அதனால் குழந்தை, விஹங்க சிசு என்று சொல்லிவிட்டால் அவள் நிச்சயம் மனஸுருகி அருளுவாளென்று அப்படிச் சொன்னார்.

குழந்தையாயிருந்த ஆசார்யாள் அந்த ப்ராஹ்மண ஸ்த்ரீயைக் குழந்தையாகப் பார்த்து அவள் behalf-ல் வேண்டினார். அவளுக்கு, அவளுடைய பதிக்கு (பதி, பத்னி என்று பேதமே இல்லாமல் பாப-புண்யங்கள் இரண்டு பேருக்கும் சேர்ந்துதான்) கர்மா கெட்டதாயிருப்பதால் அநுக்ரஹிப்பதற்கில்லையென்று லக்ஷ்மி சொன்னாளள்ளவா? அதனால் அவள் சார்பில் வாதாடினார் : ‘துஷ்கர்ம – கர்மம் சிராயதூரம் அபநீய நயநாம்புவாஹ: த்ரவிணாம்புதாராம் தத்யாத்’. “துஷ்க(ka)ர்ம-(gha)ர்மம்” – கெட்ட கர்மாவான கோடை காலம். கர்மம் என்றால் நல்ல வேனிற்காலம். “அப்படி இவர்களுடைய துஷ்கர்மம்தான் தரித்ரமாக வறுத்தெடுக்கிறது என்கிறாய்! அதனால் ஒன்றும் நிவர்த்தி கிடையாதா? கெட்ட கர்மாவின் ‘நேச்சர்’ கொளுத்தி எடுப்பது என்றால் உன்னுடைய கடாக்ஷத்தின் ‘நேச்சர்’ குளுகுளு என்று மழைமேகம் போல இருப்பதாயிற்றே! அது எங்கேயோ, இது எங்கேயோ இருக்கிறதென்பாயானால் அதை இங்கே அடித்துக் கொண்டு வரத்தான் தயை என்ற காற்று இருக்கிறதே! அந்த க்ருபா வேகத்தைவிட ஒன்று உண்டா? லோகம் தபிக்கும் போது கொட்டும் கோடை மழை மாதிரி, இந்தச் சாதகக் குஞ்சு தவிக்கிற இப்போது அருளைக் கொட்டு. சாதகக் குஞ்சு ஆஹாரத்துக்கு மட்டுமே தவிப்பது. இந்த தம்பதியோ பொருளில்லாமால் ஆஹாரம், வஸ்த்ரம், வீடு எல்லாவற்றுக்குமே தவிக்கிறார்கள். வீடு என்று பொக்கையும் போறையுமாக இடிந்து விழுகிற மாதிரி ஏதோ இருப்பது தான். இந்தக் குழந்தையை வறுத்தெடுக்கும் வெயிலான ஜன்மாந்தர பாபத்தை உன் குளிர்ந்த கடாக்ஷமானது, “அபநீய” — நிவர்த்தி பண்ணி, “சிராய” — எத்தனையோ காலமாகச் சுமந்து வந்த பாபத்தை எங்கே போச்சு என்று தெரியாமல் நிரந்தரமாக, “தூரம் அபநீய” — ரொம்ப தூரத்துக்கு விரட்டி, ‘த்ரவிணாம்புதாராம் தத்யாத்’ — த்ரவ்ய மழையைக் கொடுக்கட்டும்” என்றார்.

தாரித்ரிய நிவ்ருத்தி என்று லோக வாழ்க்கைக்கான ஸமாசாரத்தை வேண்டுகிறாற்போல வேண்டும்போதே கர்ம நிவ்ருத்தி, பாப நிவ்ருத்தி என்பதான ஆத்ம ஸம்பந்தமான வேண்டுதலையும் கலந்து கொடுத்துவிட்டார்!

பணம், படிப்பு, எல்லாம் அதற்குத்தான் (ஆத்ம விஷயமாகக் கொண்டு விடுவதற்குத்தான்). காமம் உள்பட எல்லாமே அதற்குத்தான் ஸ்ருஷ்டியில் வைத்திருக்கிறது. ஸ்ருஷ்டியில் யாரும் சிரஞ்ஜீவியாக இருக்கமுடியாது — பகவானே ரொம்ப அபூர்வமாக அப்படி வைத்த ரொம்பக் கொஞ்சம் பேரைத் தவிர, பாக்கிப் பேர் செத்துத்தான் போகணமென்று ஸ்ருஷ்டி நியதி. ஆனால் செத்துப் போகும் போது கர்மா பாக்கி தீர்ந்து nil balance-ஆக இருப்பதில்லையே! அப்படியிருந்தால்தானே ஸ்ருஷ்டியிலிருந்து விடுபட்டுப் பரமாத்மாவுடன் சேரலாம்! ஆனால் அப்படியில்லையே! இந்த மாதிரி இருக்கும்போது அந்த ஆவிக்கு இன்னொரு சான்ஸ், அதுவும் தப்பினால் அப்புறமும் பல சான்ஸ்கள் என்று ஜன்மா ஜன்மாவாகக் கொடுத்துத்தானே அவற்றிலாவது கர்மாவைக் கழித்துக்கொள்ள வாய்ப்புக்கள் தரவேண்டியிருக்கிறது? இப்படி ஒரு ஜீவன் ஜன்மாக்கள் எடுக்கணுமென்றால் அதற்காக ஒரு அப்பா, அம்மாவுக்குக் காமம் இருந்தால்தானே முடியும்? அதாவது, காமம் என்று வைத்திருப்பதும் இன்னொரு ஜீவன் கடைத்தேறச் ‘சான்ஸ்’ கொடுக்கும் நல்ல உத்தேசத்தில்தான் என்று தெரிகிறது. இப்படித்தான் பணத்தால், சாப்பாட்டால், வீட்டால், வைத்தியத்தால் சரீர ரக்ஷணை செய்துகொள்வதும், படிப்பால் அறிவு அபிவ்ருத்தி செய்துகொள்வதுங்கூட ஒவ்வொரு ஸ்டேஜ் வரை ஆத்ம விஷயமாகப் போவதற்கே உதவி செய்யத்தான். என்ன அளவில், எந்த, ஸ்டேஜ் வரையில் என்று தெரியாமல் நாம் ‘மிஸ்-யூஸ்’ பண்ணிக் கொள்வதில்தான் ஒரே அனர்த்தமாகிறது. “அர்த்தம் அனர்த்தம்” என்று ஆசார்யாளே “பஜ கோவிந்த”த்தில் இதைச் சொல்கிறார். அது “மூட மதி”க்கு ‘அட்ரஸ்’ பண்ணியது (“பஜ கோவிந்தம், மூட மதே”!) என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்! புத்திசாலியாயிருந்தால் லௌகிகம் என்று இருக்கிறவைகளைக் கொண்டே, அவற்றைத் தக்க அளவில் தக்க காலம் வரை ‘யூஸ்’ பண்ணிக்கொண்டே, ஆத்மிகத்துக்குப் போய்ச் சேரலாம்.

நம் சாஸ்த்ரங்கள் எல்லாம் அப்படி வழிகாட்டுபவைதான். ஆசார்ய க்ரந்தங்கள் எல்லாமும் அப்படித்தான். பணம் கேட்டு லக்ஷ்மி ஸ்துதி பாடினாலும், வ்யாதி போகணுமென்று ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிக்கு “புஜங்கம்” பாடினாலும் ஆத்ம லக்ஷ்யத்தை அவர் மறக்கவே மாட்டார். அதற்காகவேதான் இவற்றைக் கேட்பது. அன்னம் போடும் அன்னபூர்ணேச்வரியிடம் “பிக்ஷாம் தேஹி!” என்று போய் நிற்கிறபோதும் “ஞான வைராக்ய ஸித்த்யர்த்தம்” என்றுதான் முடிப்பார்.

‘அகிஞ்சன’ என்று பணத்தில் ஏழ்மையைச் சொல்லும் போதும் ‘கர்ம-ர்மம்’ என்று அதையும் ஆத்ம ஸம்பந்தமான கர்மத்தோடு சேர்த்துக் காட்டி, ஏழ்மை நிவ்ருத்தி மாத்ரமல்ல வேண்டியது, கர்ம நிவ்ருத்தியும்தான் என்று புரியவைத்திருக்கிறார்.

இந்த ஸ்தோத்தரத்தில் ஒரு பாடப்படி 18 ஸ்லோகம், இன்னொன்றின்படி 20-21 ச்லோகம் என்று இருந்தாலும் இந்த ஒரு ஸ்லோகத்தில்தான் செல்வத்துக்கு அதிதேவதையான லக்ஷ்மியிடம் பொருட் செல்வம் வேண்டுவது. அடுத்த ஸ்லோகத்தில்3 வேண்டுமானால், “இஷ்டாம் புஷ்டிம் க்ருஷீஷ்ட மம” என்று தாம் விரும்பிக் கேட்கிற (தமக்காக அல்ல, அந்த ப்ராம்மண தம்பதியை முன்னிட்டுக் கேட்கிற) செழிப்பைத் தரட்டும் என்று சொல்லும்போதும் தனத்துக்கான ப்ரார்த்தனையை hint செய்திருப்பதாக வைத்துக்கொள்ளலாம். மற்றபடி ஸ்தோத்ரம் முழுக்கப் பெருமாளும் தாயாரும் எப்படிச் சேர்ந்து சேர்ந்து அநுக்ரஹ மூர்த்திகளாக இருக்கிறார்கள், (அவர் கார்மேகம் போல வ்யாபித்து இருக்கும்போது, மேகத்துக்கு நடுவில் மின்னுகிற மின்னலைப்போல் இவள் எப்படி அவருடைய வக்ஷஸ்தலத்தில் ஸ்வர்ண காந்தியுடன் ப்ரகாசிக்கிறாள்4 — என்பது போன்ற விஷயங்கள்), ஸர்வ சக்தியான பராசக்தியின் ஒரு ரூபமாகவே இருக்கப்பட்ட லக்ஷ்மி இன்னும் என்னென்ன மூர்த்திகளாக இருக்கிறாள், லக்ஷ்மீ ரூபத்தில் அவளுடைய வர்ணனை என்ன, பெருமை என்ன — என்றிப்படியான ஸமாசாரங்கள்தான் இருக்கின்றனவே தவிர திரவியத்திற்கான ப்ரார்த்தனை இல்லை.

இப்படி அநேக விஷயங்களை, கவிதை அழகுகளை, பக்தி பாவங்களைத் தெரிவித்து ச்லோகங்கள் சொல்லிக்கொணடு போகும்போது ஒரு ச்லோகத்தில்தான், எதற்காக ப்ரார்த்திக்க ஆரம்பித்தாரோ அந்த விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். ‘லோக மாதாவிடம் போய் ரொம்ப ஒன்றும் முறையிட வேண்டியதில்லை. துளிப்போறக் காட்டி விட்டாலே போதும்’ என்கிற ரீதியில் பாடியிருக்கிறார். அதிலேயே முறையீட்டை ஸாரமாக வடித்துக் கொடுத்து விட்டார்! ‘ரொம்ப தீனமாக, பக்ஷிக் குஞ்சு மாதிரி ஸ்வயமாக ஒன்றும் பண்ணிக்கொள்ளத் தெரியாமலிருக்கும் இந்த அம்பாளுக்கு அருள் மழையைக் கொட்டு’ என்று சொல்ல வந்ததையும்கூட, ‘அம்மாள்’ என்று சொல்லாமலே வ்யங்கியமாகத் தெரிவித்திருப்பது ரஸமானது.


1 எட்டாவது (சில பதிப்புகளின்படி ஒன்பதாவது) ச்லோகம்.

2 63-வது ச்லோகம்

3 “இஷ்டா விசிஷ்ட” எனத் தொடங்குவது.

4 காலாம்புதாலி லலிதோரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதி யா தடிதங்கநேவ (ஆறாவது ச்லோகம்)

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s