அகில பாரத க்ஷேத்ராடனம்

கொஞ்ச நாழி இப்படி ஒரு அகத்துக் குழந்தையாக இருந்துவிட்டு ஆசார்யாள் மறுபடியும் உலகத்தின் குழந்தையாகப் புறப்பட்டு விட்டார். ராமேச்வரத்திலிருந்து கைலாஸம்வரை ஒரு க்ஷேத்ரம் விடாமல் போனார். இப்படி அங்கங்கே அனந்தமாக விவரங்கள் இருக்கின்றன. மறைந்து போன விவரங்களும் அனந்தம் இருக்கும். சிலது சொல்கிறேன். த்வாதச லிங்க க்ஷேத்ரங்களுக்குப் போனதை முன்னேயே சொல்லிற்று.1

அனந்த சயனம் என்ற திருவனந்தபுரத்தில் வீரவைஷ்ணவர்களை ஸமரஸப்படுத்தி அத்வைதிகளாக்கினார்.

(பழைய) மைஸூர் ராஜ்யத்தில் ஒரு விஷ்ணு க்ஷேத்ரம். சிவ ஸ்வரூபமாக இருந்த ஆசார்யாளைக் கோவிலுக்குள்ளேயே விட முடியாதென்று பட்டர்கள் ஆக்ஷேபித்தார்கள். “ஒரு தரம் உள்ளேபோய் ஸ்வாமி தர்சனம் பண்ணி விட்டு வந்து அப்புறம் சண்டை போடுங்கள்” என்று ஆசார்யாள் கேட்டுக் கொண்டார். அவர்கள் அப்படியே போய்ப் பார்த்தபோது மூர்த்தியின் வலது பக்கம் சிவனாக மாறியிருந்தது! அவர்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ஆசார்யாளை மரியாதை பண்ணி உள்ளே அழைத்துக் கொண்டு போனார்கள். ‘ஹரிஹர்’ என்றே அன்றிலிருந்து அந்த ஊருக்குப் பேர் இருக்கிறது.

மதுரையில் மீனாக்ஷி – ஸுந்தரேச்வராளை தர்சனம் பண்ணிக்கொண்டு, அம்பாளுக்குப் பஞ்ச ரத்ன ஸ்தோத்ரம் அர்ப்பணித்தார். வித்வத் ஸமூஹம் நிறைய இருந்த அந்த ஊரில் எல்லாரையும் அத்வைதத்தை ஏற்கும்படிப் பண்ணினார்.

திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோவிலுக்கு ஆசார்ய ஸம்பந்தம் இருப்பதற்கு சாஸன ப்ரமாணமே இருக்கிறது! அங்கே ஸுகந்த குந்தளாம்பாள் ஸந்நிதிச் சுவரில் ‘ஸெளந்தர்ய லஹரி’யின் பூர்வ பாகமான ‘ஆனந்த லஹரி’ ச்லோகங்கள் நாற்பத்தியொன்றும் கல்வெட்டாகப் பொறித்திருக்கிறது. ‘ஆசார்யாளேதான் பொறிக்கச் செய்தார். அப்புறம் ஜம்புகேச்வரம் போய் அகிலாண்டேச்வரிக்குத் தாடங்க ப்ரதிஷ்டை பண்ணி சாந்தமூர்த்தியாக்கிய பிறகு அங்கே பாக்கி 59 ச்லோகமும் பண்ணி நூறாக்கி முடித்தார்’ என்று ஐதிஹ்யம் இருக்கிறது… ஸெளந்தர்ய லஹரிக் கதை அப்புறம் சொல்கிறேன். அது ஆசார்யாளின் கைலாஸ யாத்ரையில் வருவது. காலவாரியாகச் சொல்லாமல் முன் பின்னாகச் சொல்லிக்கொண்டு போகிறேன்.

ஸ்ரீரங்கத்தில் கண்டனம் பண்ணிக்கொண்டு வந்த வைஷ்ணவர்களுக்கு உபதேசம் பண்ணி சாந்தப்படுத்தி ஸ்வாமி தர்சனம் செய்து கொண்டார். அங்கே நிறைய பக்தர்கள்கூடி பூலோக வைகுண்டமென்று ஸந்தோஷப்படும்படியாக ‘ஜனாகர்ஷண யந்த்ரம்’ ஸ்தாபித்தார்.

திருவிடைமருதூருக்கு ஆசார்யாள் வந்ததை ‘ஆனந்த கிரீய’த்தில் ரொம்பவும் முன்னாடி சொல்லியிருக்கிறது. சோழ தேசத்தின் அத்தனை சிவாலயங்களுக்கும் மத்யலிங்கமாக இருப்பவர் அந்த க்ஷேத்ரத்தின் “மஹாலிங்கம்” தான்.

வைஷ்ணவர்கள்தான் ஆசார்யாளை விரோதித்தார்கள் என்று நினைத்துவிடக்கூடாது. அவர் எந்த தெய்வத்தையுமே ‘அது ஒன்றுதான் பரதெய்வம்’ என்று சொல்லாமல் அத்வைதமாக ஸமரஸ பாவத்துடன் சொல்லி வந்ததால் தீவிர சைவர், தீவிர சாக்தர் முதலிய எல்லோருமே அவரிடம் சண்டைக்குத்தான் வந்தார்கள்! அதனால் மத்யார்ஜுனத்திலும் அவருக்கு எதிர்ப்பு ஏற்பட்டது.

‘அவதாரமான நம்மையே கத்த விட்டுவிட்டு மூலப் பரமசிவன் நல்ல பெயர் வாங்கிக்கொண்டு போகிறாரே!’ என்று ஆசார்யாள் நினைத்தார். அவர் நினைத்தாரோ இல்லையோ நான் நினைக்கிறேன்! ஆகையால் மஹாலிங்க மூர்த்தியிடம், ‘நீதான் இவர்களுக்கு ஸத்யம் தெரியும்படியாக பதில் சொல்லணும்!’ என்றார்.

உடனே என்ன ஆச்சு என்றால், லிங்கத்திலிருந்தே “ஸத்யம் அத்வைதம்!” என்று வாக்கு உண்டாயிற்று! அதோடு கூடவே, கையைத் தூக்கி சபதம் பண்ணுவதாக லிங்கத்துக்குள்ளிலிருந்து வலது கையும் வெளியே வந்து தூக்கி நின்றது!

அத்தனை பேரும் ஆனந்தப்பட்டுக்கொண்டு வேதாந்த மதத்தில் சேர்ந்தார்கள்.

மாயவரத்துக்கும் ஆசார்யாள் போயிருக்கணும் என்பதற்கு ‘சிவாநந்த லஹரி’யில் குறிப்பு இருப்பதாகச் சொல்லலாம். அதில் ‘நீலகண்ட’ப் பேர் ஈச்வரன், மயில் இருவருக்கும் இருக்கிறதை வைத்து ஈச்வரனே ஒரு மயிலாக நர்த்தனம் பண்ணியதாக ஒரு ச்லோகம் இருக்கிறது1. அதிலே பெண் மயிலான ‘மயூரி’யாக அம்பாளைச் சொல்லியிருக்கிறது. அம்பாள் மயிலாக வந்த இடம்தான் மாயூரம் அல்லது கௌரீ மாயூரம் என்னும் மாயவரம். திரு மயிலாடுதுறை என்று தமிழ்ப் பேர்.

மெட்றாஸ் மயிலாப்பூரிலும் அம்பாள் மயிலாகப் பூஜை பண்ணியிருக்கிறாள். திருவொற்றியூர் போன ஆசார்யாள் அங்கேயும் தான் போயிருப்பார்.

‘சிவாநந்த லஹரி’ ஸ்ரீ சைலத்தில் செய்திருப்பாராயிருக்கும். அங்கே கோபுர வாசல் கதவிலேயே ஆசார்யாள் பிம்பம் பொறித்திருக்கிறது. ‘யோக தாராவளி’யில் ஆசைப்பட்டாற்போலவே ஸ்ரீசைலத்தை ஒட்டியிருக்கும் ஹாடகேச்வரம் என்ற இடத்தில் அருவியும் ஆலமரமுமாக உள்ள ஒரு ஏகாந்தமான இடத்தில் ஆசார்யாள் அடித்த சிலையாக நிஷ்டையில் சில காலம் இருந்திருக்கிறார்.

கண்ணப்பரை பக்தர்களுக்கெல்லாம் சிரோபூஷணமாயிருப்பவர்- “பக்தாவதம்ஸாயதே!” – என்று சொன்ன ஆசார்யாள்2 காளஹஸ்தியும்தான் போயிருப்பார். அதோடு அது அம்பாள் ஞானாம்பாளாக உள்ள க்ஷேத்ரமல்லவா? போகாமலிருப்பாரா?

திருப்பதியில் பெருமாளை தர்சனம் பண்ணி, அந்தக் கோவிலில் பக்தாள் காணிக்கைகளைக் கொண்டுவந்து கொட்டும்படியாக ‘தனாகர்ஷண யந்த்ரம்’ ஸ்தாபிததார். ‘பாண்டுரங்காஷ்டகம்’, ‘ஜகந்நாதாஷ்டகம்’ இரண்டும் அவர் மஹாராஷ்ட்ராவிலுள்ள பண்டரீபுரத்துக்கும் ஒரிஸ்ஸாவிலுள்ள புரிக்கும் போனதற்குச் சான்று, புரியில் ஒரு முக்ய மடமே ஸ்தாபித்திருக்கிறார்.

இன்னொன்று த்வாரகையில் ஸ்தாபித்ததும் தெரிந்து கொண்டோம். “அச்யுதாஷ்டகம்”, “கோவிந்தாஷ்டகம்” என்று க்ருஷ்ண ஸ்துதிகள் அநேகம் ஆசார்யாள் பண்ணியது த்வாரகை, மதுரா, ப்ருந்தாவனம் ஆகிய இடங்களில் அவர் க்ஷேத்ராடனம் பண்ணின போது இருக்கலாம். இப்படியே அயோத்தியில் “”ராம புஜங்கம்”” பாடியிருக்கலாம்..

சிவ ஸ்தோத்ரங்களில் பல காசியில் பண்ணியதாயிருக்கும் ‘அன்னபூர்ணா ஸதோத்ரம்’ அங்கேதான் பண்ணியது என்று சொல்லாமலே தெரியும். க்ஷேத்ர, தீர்த்தங்களைப் பற்றியும் ‘காசீ பஞ்கம்’, ‘கங்காஷ்டகம்’, ‘மணிகர்ணிகாஷ்டகம்’ என்றெல்லாம் ஸ்தோத்ரித்திருக்கிறார். யமுனை பற்றியும் அஷ்டகம் பாடியிருக்கிறார். நர்மதா தீரத்தில்தான் ஆச்ரமம் வாங்கிக்கொண்டார்? அதைப் பற்றியும் அஷ்டகம் பாடியிருக்கிறார்.

ஸகல க்ஷேத்ரங்களுக்கும் போய் காஷ்மீரத்தில் மஹா பண்டிதர்களுடன் வாதம் பண்ணி ஜயித்தார். அங்கே சாரதா பீடத்தில் ஏறினார் என்று நம்பிக்கை இருக்கிறது. அங்கே மஹா பண்டிதையாக இருந்த ஒரு யுவதியை மெச்சித் தலையில் சூட்டிக்கொள்ள ‘டர்பன்’ மாதிரியான ‘தரங்கம்’ என்ற ஒரு சிரோபூஷணம் கொடுத்தாராம். இப்போதும் அங்கே அதை விசேஷ ஆபரணமாகச் சொல்லிச் சூட்டிக் கொள்கிறார்களாம்.

ஸ்ரீநகரில் ‘சங்கராசார்ய கிரி’ என்றே ஒரு குன்று இருக்கிறது. தேசத்தின் வடக்கு உச்சியில் ஆசார்யாளுக்கு உச்ச ஸ்தானம் கொடுத்திருப்பதற்கு அடையாளம்.

பத்ரிநாத் என்னும் பதரிகாச்ரமத்துக்கு ஆசார்யாள் போனது ஒரு முக்யமான ஸம்பவம். ஜ்யோதிர் மடம் அங்கேதான் ஸ்தாபித்தார். பதரி நாராயண மூர்த்தியே அப்போது அலகநந்தா நதியில் புதைந்திருந்ததாகவும், ஸ்வாமி ஸ்வப்னத்தில் ஆசார்யாளுக்கு தெரிவித்தபடி அவர் தான் அதை எடுத்து வந்து ப்ரதிஷ்டை பண்ணினாரென்றும் ஐதிஹ்யம் இருக்கிறது. அங்கே சூடாக வெந்நீர் பொங்கும் ஒரு ஊற்று ‘தப்த குண்டம்’ என்று இருக்கிறது. அது ஸ்வாமியே ஆசார்ய பரிவாரத்தின் ஸ்நானத்திற்காக அநுக்ரஹித்தது என்று தெரிகிறது.

இதையெல்லாம்விட முக்யமானதாக ஆசார்யாள் நினைத்திருக்கக்கூடிய ஒன்றும் அங்கே நடந்தது. ஸர்வ ஜனங்களும் ஆசார்யாளின் சரணத்தில் விழுந்து ஜகத்குரு, ஜகத்குரு என்று கொண்டாடினாலும் அவருக்குத் தானும் சிஷ்யராக விழுந்து நமஸ்காரம் பண்ணணும், பண்ணணும் என்றுதான் இருந்தது. அந்த ஆசை பூர்த்தியாகும்படியாக பதரியில் ஆசார்யாளின் குருவும் பரம குருவுமான கோவிந்தபகவத்பாதரும், கௌடபாதரும் தர்சனம் கொடுத்தார்கள். அவரைத் தாங்கள் சிஷ்யர், ப்ரசிஷ்யர் என்று சொல்லிக் கொள்ளும்படியான பாக்யத்தைத் தங்களுக்குக் கொடுத்து, அவதார கார்யத்தை அமோகமாக நிறைவேற்றிக் கொண்டிருந்த ஆசார்யாளைப் பார்த்து அந்த இரண்டு பேரும் ரொம்ப ஸந்தோஷப்பட்டார்கள். ஆசார்யாள் “தக்ஷிணார்மூர்த்தி அஷ்டகம்” சொல்லி, அடிக்கு அடி அவர்களுடைய சரணங்களில் — திரு அடிகளில்! — நமஸ்கரித்தார். தக்ஷிணாமூர்த்தியிலிருந்தே வந்தவர் இப்படி பக்தி நாடகம் — நாடக பக்தியில்லை! — பண்ணினார்


1 காசி, ஸ்ரீசைலம், திருசெந்தூர், கொல்லூர் (மூகாம்பி), குருவாயூர், திருவொற்றியூர், காமாக்யா ஆகிய க்ஷேத்ரங்களுக்கு ஆசார்யாள் சென்றதும் முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது. கும்பகோண, சிதம்பர க்ஷேத்ரங்களுக்குள்ளே ஆசார்யத் தொடர்பும் முன்பே கூறப்பட்டுள்ளது.

2 ‘ஸந்த்யா கர்மதிநாத்யயோ’ எனத் தொடங்கும் 54-வது ச்லோகம்.

3 “சிவானந்த லஹரி” — 63

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s