அத்வைதம் உள்ளிட்ட மதங்களின் ஸாராம்சம்

அத்வைதம் என்ன, மற்ற ஸித்தாந்தங்கள் என்ன என்று அப்பப்போ சொல்லிக்கொண்டு வந்தேன். “ஸம்-அப்” மாதிரி சுருக்கமாகச் சொன்னால்:

‘கண்ணாலே பார்த்து அநுபவிக்கிற ஜகத்துக்கு மேலாக எதுவும் கிடையாது; எதுவும் தெரிந்துகொள்ள முடியாது. உயிரோடு இருந்துகொண்டிருக்கும்வரை நீ பாட்டுக்கு ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் இந்த்ரிய ஸெளக்யங்களை அநுபவித்துக் கொண்டிரு. சாவோடு உயிரும் ‘க்ளோஸ்’. ஆத்மா புனர் ஜன்மா, ஸ்வர்க்கம், மோக்ஷம் என்பதெல்லாம் புரளி’ என்கிற சார்வாகம்தான் Agnosticism என்றும் Materialism என்றும் சொல்வது.

‘மெடீரியல்’, ‘ஸ்பிரிசுவல்’ என்கிற எல்லாமே ஆதாரமில்லாத கல்பனை ஓட்டந்தான். வாஸ்தவத்தில் எல்லாம் சூன்யந்தான்’ என்கிறது பௌத்தம் — அதில் நாலு பிரிவு இருந்தாலும் முடிவில் எல்லாம் இந்த சூன்யத்தில் சேர்ப்பதுதான். அதைச் சொல்கிற பௌத்தம் — Nihilism.

ஜைனர்களும் அரை பௌத்தர்கள்தான் – ‘அர்த்த வைநாசிகர்’ என்றே ஆசார்யாள் அவர்களைச் சொல்லியிருக்கிறார். எப்படியென்றால், பௌத்தர்கள், ‘எதுவும் இல்லை, இல்லை’ என்றால். இவர்கள் ‘இருக்கவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்’ என்பதால். எதையும் தீர்மானிக்க முடியாது என்று அவர்கள் சொல்வது Scepticism. சரீரத்தை ஒரேயடியாகத் துன்புறுத்திக் கொணடுதான் ஆத்மாவிலிருந்து கர்மாவை ஒட்டப் பிழிந்தெடுத்துத் தள்ள முடியுமென்று அவர்கள் சொல்வது Stoicism.

ஆத்ம விஷயமாகப் போகாமல் ஈச்வர பக்தியும் இல்லாமல், வேத கர்மாவைப் பண்ணியே ஸ்வர்கலோக ஸந்தோஷத்தை அடையச் சொல்லும் மீமாம்ஸையை [சிரித்து] “வைதிகமான Materialism” என்று சொல்லலாமோ என்னவோ?

உயிரை எந்த குண – கர்மக் கலப்புமில்லாமல் தனியாகப் பிரித்துக் காட்டும் ஸாங்க்ய – யோக சாஸ்த்ரங்கள் Non-dualism என்று சொல்லப்படும் அத்வைதம் மாதிரி இருந்தாலும் இப்படி அநேக உயிர்கள் தனித்தனியாய் இருப்பதாகச் சொல்வதில் Dualism (த்வைதம்) – ஆகவும் வேடிக்கையாக இருக்கிறது!

தர்க்க சாஸ்த்ர அறிவாராய்ச்சியாகவே உள்ள ந்யாய-வைசேஷிகங்களை Intellectualism என்று சொல்லலாமோ என்னவோ?

இந்த எல்லா ஸித்தாந்தங்களுமே அறிவு வழியிலானவை தான். சார்வாகர்களும் புத்தியால் விசாரித்துத்தான் ஆத்மா இல்லை, ஸ்வாமி இல்லை, சாஸ்த்ரம் இல்லை என்கிறார்கள். இப்போதும் ‘பகுத்தறிவுவாதிகள்’ என்றே சொல்லிக் கொள்கிறார்களல்லவா?

பக்தி மதங்களைப் பார்த்தால், ஸித்தாந்தம் என்றும் வரும்போது அறிவு ரீதியில்தான் கோட்பாடுகளைச் சொல்ல வேண்டும் என்று இருப்பதால் அவையும் சில ‘Ism’-களாக — Dualism என்னும் த்வைதம், Qualified Non-dualism எனப்படும் விசிஷ்டாத்வைதம் என்றெல்லாம் இருந்தாலும் — அவற்றுக்கெல்லாம் தாய்ச் சரக்கு என்ன, அவற்றின் ஸாதனா க்ரமத்தில் உயிர் நிலையாயிருப்பது எது என்று பார்த்தால் பக்திதான். அதாதவது அன்பு. மற்றதெல்லாம் அறிவு, இதுகள் அன்பு. மற்றவற்றில் emotion-கு (உணர்ச்சிக்கு) இடமில்லை. இது Emotion. பகவானை feel பண்ணப் போவது. Love.

ஆசார்யாளின் அத்வைதத்தை என்னவென்று சொல்வது? அது ஒரு ‘Ism’-த்திலும் வராதது! வர முடியாதது! Non-dualism என்பதுகூட முழு உண்மையைச் சொல்லவில்லைதான்! “அத்வைதம்” என்ற வார்த்தையுங் கூடத்தான்! அதைத்தானே அப்படியே ‘Non-dualism’ என்று மொழி பெயர்த்திருக்கிறது? நாம ரஹிதமான ப்ரஹ்மத்தைச் சொல்லும் தத்வமும் நாம ரஹிதமானது தான்! பரமாத்மா வேறே ஜீவாத்மா வேறே என்று “த்வைத”மாக நினைப்பது ஸரியில்லை என்பதற்காக ‘அ-த்வைதம்’ என்பதே தவிர, அது என்னவாக இருக்கிறதோ அதை வைத்துப் பெயர் கொடுக்க முடியவில்லை! பரிபூர்ண தத்வம் அதுதான். பரிபூர்ணத்தை, ஜீவனே ஸச்-சித்-ஆனந்த பரிபூர்ணமாவதைச் சொல்வது அது.

“Absolutism” என்று (அத்வைதத்தைச்) சொல்லலாம் என்று ஒருத்தர் சொன்னார். எதையும் சார்ந்து இல்லாமல் தனக்குத்தானே பூர்ணமாக இருக்கும் ஸத்யத்தை அது சொல்வதால் இப்படிப் பேர் கொடுக்கலாம் என்றார். ஆனால் அதுகூட எனக்கு ஸரியாய்ப் படவில்லை. இது எதையும் சார்ந்து நிற்காத ஸத்ய பூர்ணமாயிருப்பது மட்டுமில்லை. பாக்கி நமக்குத் தெரிகிற அத்தனை அஸத்ய, அபூர்ணங்களும் இதைச் சார்ந்து இருப்பதாலேயே அவை இருக்கிற மாதிரி நமக்குத் தெரிகின்றன! இம்மாதிரி, ஸகலமும் தன்னைச் சார்ந்திருக்கும்படியாக அது உள்ளே அடக்கிக் கொண்டிருப்பதை — ‘Relative’ என்பதற்கெல்லாமும் இந்தத் தத்வமே ஆதாரம் என்பதை — Absolutism என்பது காட்டாதல்லவா?

அப்புறம், இது Intellectual-ஆ, Emotional-ஆ? அல்லது மீமாம்ஸை மாதிரி Action-ஆ? ஞான மார்க்கம் என்பது புத்தி வாதம் என்று வைத்துத்தான் ‘Way of knowledge’ என்கிறார்கள். ஆனால் இந்த ஞானம் மூளையால் ஆராய்கிற Intellect – ஸமாசாரம் இல்லவேயில்லை. சாஸ்த்ரமாகப் படிக்கிற கட்டத்தில்தான் அப்படியிருப்பதே தவிர, படித்ததை உள்ளே உருட்டிக்கொள்ளும் போது கிடைக்கிற ஸெளக்யம், சாந்தி, ஆனந்தம் மூளை விஷயமே இல்லை. அப்படியானால் அது உணர்ச்சியா? ப்ரஹ்மத்தை feel பண்ணுவதா? ஆனந்தாநுபவம் ஒரு emotion-ஆ? அப்படியும் இல்லவே இல்லை! இதெல்லாம் மனஸின் அநுபவம். அத்வைதத்தில் மனஸே போயாகிவிடும்! மூளையும் போயாகிவிடும்! அப்படியும் ஸத்யத்தை அறிவது, ஆனந்திப்பது என்றால் அதற்கு என்ன வார்த்தைகளைப் போடுவது? இது Action இல்லை என்று தீர்மானமாகச் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் யோசித்துப் பார்த்தால், ‘ஆசார்யாள் மாதிரியான பரமாத்வைதிகள் ஒரே கார்யமயமாக இருந்திருக்கிறார்களே! அதனால் இது Action-கும் இடம் கொடுக்கிறதே!’ என்று, ஒன்றும் சொல்லத் தெரியாமலிருக்கிறது! நல்லதுமில்லை, கெட்டதுமில்லை என்று சும்மாவாகி விடுவதுதான் லக்ஷ்யமென்றாலும், லக்ஷ்ய ஸித்தியை அடைந்தவர்கள் சும்மாயிருப்பதாக நமக்குத் தெரியாமல் அபாரமாக அநுக்ரஹ கார்யத்தைப் பண்ணுகிறார்களே! இந்தத் தூங்காத தூக்கத்துக்கு என்ன பேர் வைக்க! வார்த்தையால் சொல்ல முடியாத பேர் கொடுக்க முடியாத தத்வத்தை அத்வைதம் என்கிறோம்!

ஒரு ஸித்தாந்தம் ‘அறிவு’ (Knowledge); ஒரு ஸித்தாந்தம் ‘அன்பு’ (Love, Devotion); இன்னொன்று கர்மா (Action) என்றிப்படிச் சொல்லும்போது அத்வைதம் என்னவென்று பார்த்தால் ‘சாந்தி’ (Peace) என்று சொல்லலாம் போலிருக்கிறது. ஆனால் நாம் நினைக்கிற சாந்தியாகவும் அது இல்லை! நமக்குத் தெரிந்த சாந்தி, எல்லாம் அடங்கிப்போன அமைதி. இதுவும் மஹா பெரிய அமைதிதானென்றாலும் அத்தனை அறிவும், அத்தனை அன்பும், கார்யங்களும் இதற்குள்ளேயே சக்தியோடிருக்கின்றன.ஆசார்யாள் அப்படித்தானே ஸர்வஜ்ஞராக, ஸர்வ பூத தயாகரராக, ஓயாமல் பணிசெய்துகொண்டு இருந்தார்? அதை என்ன பெயர் கொடுத்துச் சொல்வது?

ஜகத் ஒன்றே ஸத்யம், ப்ரம்மம் அஸத்யம் என்பது சார்வாகம். ஜகத்தும் அஸத்யம், ப்ரம்மமும் அஸத்யம் என்பது பௌத்தம். ஜகத்தும் ஸத்யம், ப்ரம்மமும் ஸத்யம் என்பது ந்யாயம். ஸாங்க்யம், ‘ஜகத் அஸத்யம். ஏனென்றால் அது பொய்யான ப்ரக்ருதியின் சேஷ்டிதம்தான். ப்ரம்மம் (‘புருஷன்’ என்ற பெயரில் சொல்வது) தான் ஸத்யம்’ என்னும்.

ஆசார்யாள் என்ன சொன்னார்? ப்ரம்மம்தான் ஸத்யம். ஜகத் மித்யை. அதாவது ஸத்யமில்லை. அப்படியென்றால், அடியோடு அஸத்யமா என்றால் அதுவுமில்லை. ஸத்யமான ப்ரம்மம் தெரியும் ஞானம் வருகிறவரை ஸத்யம் மாதிரி பொய்யாய்ப் போய் விடுவது. ‘போய்விடுவது’ என்று முடித்தும் விடுகிறதற்கில்லை. ஞானியும் பொய் ஜகத்தைப் பார்க்கிற மாதிரி பார்ப்பான். எப்படிப் பார்ப்பானென்றால் ஜகத்தே ஸத்யமான ப்ரம்மம்தான் என்று ஸமமாகப் பார்ப்பான். ‘ப்ரம்மமே ஸத்யம் – ஜகத் மித்யா’ என்பது மாத்ரமில்லை; ‘ப்ரம்மமே ஸத்யம் – ஜகத்தும் அந்த ப்ரம்ம ஸத்யமே’ என்று அப்போது ஆகிவிடும்!

பௌத்தம், மீமாம்ஸை ஆகியவற்றில் ஸகுண ப்ரம்மம் என்ற ஈச்வரன், நிர்குண ப்ரம்ம தத்வம் இரண்டுமில்லை. ஸாங்கியத்தில் ஸகுண ப்ரம்மமில்லை. யோகம், ந்யாய வைசேஷிகம் முதலியவற்றில் இரண்டும் இருந்தாலும் ஒன்றோடொன்றும், ஜகத்தோடும், ஜீவனோடும் ஸம்பந்தம் தெளிவாகச் சொல்லவில்லை. பக்தி மதங்களிலோ ஸகுண ப்ரம்மம்தான் உண்டு; நிர்குணம் கிடையாது.

அத்வைதத்தில் இரண்டும் இருக்கிறது. ஜட ப்ரக்ருதியான மாயை ஜகத்தை உண்டாக்குகிறது என்றால் அது ப்ரம்மத்தை ஆதாரமாகக் கொண்டுதான் என்று சொல்கிறது. அதாவது, ‘நிர்குண ப்ரம்மமே மாயையைக் கைக்கொண்டு அதாவது, ஸகுண ப்ரம்மமாகித் தன்னையே ஜகத்தாகக் காட்டிக்கொள்கிறது. ஜட ப்ரபஞ்சமாக மட்டுமின்றி ஜீவ ப்ரபஞ்சமாகவும் காட்டிக்கொளகிறது’ என்பதாக நாலையும் — நிர்குண ப்ரம்மம், ஸகுண ப்ரம்மம், ஜீவாத்மா, ஜகத் என்ற நாலையும் — ஒன்று சேர்த்துக் கொடுக்கிறது!

ஜகத் ஸ்ருஷ்டியைப்பற்றி மீமாம்ஸகர்கள் ‘ஸ்ருஷ்டி என்று எவனோ ஈச்வரன் எப்பவோ பண்ணினதாக ஏன் சொல்லணும்? இப்போது மாதிரி எப்போதுமே ஜகத் தானாகவே எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. அதில் கர்மாப்படி தானே பலன் விளைகிறது’ என்பார்கள். ‘உயிரில்லாத இயற்கை என்ற சக்தியால் ஜகத் தோன்றி நடந்துகொண்டிருக்கிறது; ஸ்வாமியுமில்லை, பூதமுமில்லை, கர்மாவுமில்லை, பலனுமில்லை’ என்பது சார்வாகம். ‘ஸத்யமான ஜகத் அணுமயமானது. அணுக்களை இப்படிப் பல தினுஸில் சேர்த்து முன்னே இல்லாத புது வஸ்துக்களை உண்டுபண்ணி வைப்பவனே ஈச்வரன்’ என்று ந்யாய வைசேஷிகங்கள் சொல்லும். இதற்கு ‘ஆரம்ப வாதம்’ என்று பேர். ஸாங்க்ய-யோகங்களிலோ ஸ்ருஷ்டிக்கு ஈச்வர ஸம்பந்தம் கிடையாது. முன்னேயில்லாமலிருந்தது புதுசாக ஸ்ருஷ்டியானதாகவும் அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். (மாயை, இயற்கை என்று சொல்லப்படும்) ப்ரக்ருதியேதான் ஜகத்தாக மாறியிருக்கிறது என்று அவர்கள் சொல்வார்கள். இதற்குப் ‘பரிணாமவாதம்’ என்று பேர்.

அத்வைதம் என்ன சொல்கிறதென்றால்: நிஜமாக ஸ்ருஷ்டி என்று ஒன்று பண்ணப்படவில்லைதான் அணுவும் ஸத்யமில்லை. அணுக்களைச் சேர்த்து ஸத்யமான ஜகத் என்பதும் இல்லை. ப்ரக்ருதியின் பரிணாமம் என்பதும் ஸரியில்லை. அப்படியானால் பரிணமித்தபின் மூல வஸ்து இல்லாமல் போய்விடுவதுபோல் ஸ்ருஷ்டிக்கப்புறம் ப்ரக்ருதியே போய் விட்டதாகிவிடும்! ஆக உண்டாவதுமில்லை, மாறுவதுமில்லை. பின்னே என்னவென்றால், ஒன்றே இன்னொன்று மாதிரித் தோன்றுவதுதான்! பழுதை பாம்பு மாதிரி இருட்டில் தோன்றுகிறது. அப்படி ப்ரம்மமே ஜகத் மாதிரி மாயையில் தோன்றுகிறது. (இன்னொரு விதத்தில் சொன்னால் நிர்குண ப்ரம்மமே மாயையோடுகூடி ஸகுண ப்ரம்மமாகித் தன்னையே ஜகத் மாதிரித் தோன்றும்படிச் செய்து கொள்கிறது.) பழுதையிலிருந்து பாம்பு ஸ்ருஷ்டிக்கப்படவில்லையா? பழுதை நிஜமாகவே பாம்பாகப் பரிணாமம் அடைந்தும் விடவில்லையல்லவா? அப்படித்தான் ஜகத், ஸ்ருஷ்டியாகவோ பரிணாமமாகவோ இல்லாமல் தோற்ற மாத்ரமாக இருப்பது. விளக்கைக் கொண்டு வந்தால் இருட்டு போய், பழுதையைப் பாம்பாகப் பார்த்த ப்ராந்தி மறைந்து பழுதையே தெரிவதுபோல், ஞான ப்ரகாசத்தில் மாயையிருட்டு போய், முன்னே ஜகத்தாகத் தெரிந்ததே ப்ரம்மமாகத் தெரிய ஆரம்பித்து விடும்.

ஸ்ருஷ்டி, பரிணாமம் முதலான எதுவுமாக இல்லாமல் ஒன்றே இன்னொன்று மாதிரி தோன்றுவதுதான் ஜகத் என்பதற்கு “விவர்த்த வாதம்” என்று பெயர்.

ஆசார்யாள் கொடுத்துள்ள விசேஷமான கொள்கைகளாக மூன்றைச் சொல்வார்கள். ஒன்று விவர்த்த வாதம். இன்னொன்று ‘அத்யாஸம்’ என்பது. அஸலாக ஸ்ருஷ்டி என்று ஒன்றில்லை, பரிணாமமும் இல்லை, பௌத்தர்கள் சொல்வதுபோல ஸத்ய ஆதாரமேயில்லாத பொய்த் தொடர் ஓட்டமுமில்லை. ஸத்யமான ப்ரம்மத்தின் மேலேயே, பழுதையில் பாம்புபோல, மாயை ஏற்றி வைத்திருக்கும் தோற்றமே இந்த ஜகத் என்பதுதான் ‘அத்யாஸம்’. கலரேயில்லாத ஸ்படிக லிங்கத்தின்மேலே பின்னாலிருக்கும் செம்பருத்திப் பூவின் சிவப்பை ஏற்றிவைத்து அது சிவப்பாகத் தெரிவது அத்யாஸம் — Super-imposition என்கிறார்கள். ஆசார்யாள் அநுக்ரஹித்த மூன்றாவது விசேஷ தத்வம், “ஸத்யம்-அஸத்யம் என்று இரண்டு இருப்பது மட்டுமில்லை. அஞ்ஞான தசையில் ஸத்யம் மாதிரியிருந்து ஞான நிலையில் அஸத்யமாகிவிடும் ஒன்றும் உண்டு. அதற்கு ப்ரதிபாஸிகம் என்று பேர்” என்பதாகும்.

மற்ற மதங்களுக்கும் அத்வைதத்திற்குமுள்ள வித்யாஸங்களைச் சொன்னேன். வித்யாஸம் பார்க்காமல் அவற்றிலிருந்தும் ஆசார்யாள் அநேகம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மீமாம்ஸகர்களின் கர்மாவிலிருந்து ஆரம்பித்து பௌத்தத்தில் ஜகத்தை அப்படியே அடித்து போடுவதுவரை எல்லாவற்றுக்கும் ஆசார்யாள் இடம் கொடுத்திருக்கிறார். பக்திக்கு நன்றாகவே, நிறையவே இடம் வைத்திருக்கிறார். தத்வ ஆராய்ச்சியில் ந்யாய-வைசேஷிக-ஸாங்க்ய-யோகங்களில் என்னவெல்லாம் ப்ரயோஜனப்படுமா அவற்றை எடுத்துக் கொண்டிருக்கிறார். பாட்ட மீமாம்ஸகர்களின் ஆறு ப்ரமாணங்களையேதான்1 தாமும் கைக்கொண்டிருக்கிறார். ஸாங்க்யத்தைப் பற்றி கீதா பாஷ்யத்தில் ஒரு இடத்தில், “அந்த சாஸ்த்ரம் பரமார்த்தத்தில் நமக்கு வித்யாஸமாகப் போனாலும், த்ரிகுணங்களையும் அவற்றைக் கொண்டு போக்தாவாயிருக்கும் ஜீவனைப் பற்றியும் அது சொல்வது ப்ரமாணமேயாகும்” என்கிறார்.2

அவருடைய ‘யோகதாராவளி’ப்ரகரணத்தைப் பார்த்தால் அத்வைத லக்ஷ்யந்தானானாலும் அதற்கே பலவிதமான யோக ஸாதனைகளை எவ்வளவு deep-ஆக ப்ரயோஜனப்படுத்திக் கொள்கிறாரென்று தெரியும். தமிழிலேயேகூட யோக சாஸ்த்ரமாக ஒரு சின்ன உலா அவர் பெயரில் இருக்கிறது. “சங்கராசாரியார் உலா” என்ற அந்தப் புஸ்தகம் மெட்றாஸ் மானுஸ்க்ரிப்ட் லைப்ரரிகாரர்கள் அச்சுப் போட்டிருக்கிறார்கள்.

எம்மதமும் ஸம்மதம் என்பது ஆசார்ய ஸித்தாந்தத்திற்கே பொருந்தும். ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு நிலைவரை ஏற்றிவிடுவதற்கு ஸத்யங்கள் இருக்கின்றன. அப்படி ஏறிப்போனால் கடைசியில் அத்வைத சாஸ்த்ரம் சிகரத்துக்கே ஏற்றி வைத்துவிடும்!

அவரைப்போலத் தாம் கண்டனம் பண்ணிய ஸித்தாந்தங்களையே உபயமாகவும் எடுத்துக்கொண்ட எவருமில்லை!

அநுஷ்டானத்தில் தப்பு மதங்கள் இருக்கப்படாதென்று அவர் அயராமல் பாடுபட்டாலும் அறிவாராய்ச்சிக்கு எல்லா மதப் புஸ்தகங்களும் இருக்கத்தான் வேண்டுமென்று நினைத்தார் என்பதற்குக் கதை சொல்லுவார்கள். ஜைனனான அமரஸிம்ஹன் அவரிடம் தோற்றுப்போனபின் தான் எழுதிய புஸ்தகங்களையெல்லாம் நெருப்பில் போட்டுக் கொண்டிருந்தானாம். இதை ஆசார்யாள் கோள்விப்பட்டதும், ‘அடாடா! சித்தனா சக்தியில் தோன்றுகிற எதுவுமே அறிவாளிகளுக்காக எக்காலமும் ரக்ஷிக்கப்பட்ட வேண்டியதாயிற்றே! இவன் ஏன் ஜைனப் புஸ்தகங்களைக் கொளுத்தணும்?’ என்று நினைத்தாராம்.

அவனைத் தடுப்பதற்காக ஓடினாராம். அதற்குள் அவன் ஒரு புஸ்தகம் தவிர பாக்கியெல்லாம் “ஸ்வாஹா” வாக்கிவிட்டானாம். கடைசியாகப் போட அவன் கையில் ஒரு புஸ்தகம் இருந்ததாம். ஆசார்யாள்தான் அவன் கையைப் பிடித்து, அதுவும் ‘ஸ்வாஹா’வாகாமல் ரக்ஷித்துக் கொடுத்தாராம். அதுதான் நிகண்டுவான ‘அமரகோச’மாம்!3

அவர் நிராகரணம் பண்ணின 72 மதங்களில் பலவற்றுக்கு ஒரு புஸ்தகமும் இப்போது இல்லை. அவர் கண்டனம் பண்ணின பூர்வகால ஸூத்ர பாஷ்யங்கள் ப்ருத்வீதவர் போன்றவர்கள் பண்ணினவை – நமக்குக் கிடைக்கவில்லை என்றால் அவர்தான் அழித்து விட்டாரென்று அர்த்தமில்லை. அந்தப் புஸ்தகங்களை எழுதினவர்கள், அல்லது அநுஸரித்தவர்களே ஆசார்யாளின் ஸத்ய ஸித்தாந்தம் வந்த பிற்பாடு அவை இருக்க வேண்டாமென்று அழித்து விட்டார்களென்றுதான் அர்த்தம்.

அத்வைதம் மற்ற ஸித்தாந்தங்களுக்கும் இடம் கொடுப்பதால்தான் பரமாத்வைதிகளான வித்யாரண்ய ஸ்வாமிகள், அப்பைய தீக்ஷிதர், வாசஸ்பதி மிச்ரர் போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் மாற்று ஸித்தாந்தக்காரர்களிலும், ஒரு ஸித்தாந்த முத்ரையும் குத்திக் கொள்ளாத பொதுக் கவிகளிலும்கூட மஹா அநுபவிகளாக இருந்தவர்கள் ஒரு உயர்ந்த நிலையில் அத்வைத ஸத்யங்களையே கொட்டியிருக்கிறார்கள்! புத்தி பூர்வமாக மற்ற ஸித்தாந்திகள் அவ்வளவு பேரும் ப்ரதான சத்ருவாகத் தாக்குவதும் அத்வைதம்தான்! அவர்களே அநுபவ பூர்வமாக உச்சாணிக்குப் போகும்போது தங்களை அறியாமலே ப்ரகடனம் பண்ணுவதும் அத்வைதந்தான்!

மத ஸித்தாந்திகள், கவிகள்தான் என்றில்லை. நவீன பௌதிக விஞ்ஞானிகளில்கூட ரொம்பப் பெரியவர்களாகவுள்ள ஐன்ஸ்டீன், ஸர் ஜேம்ஸ் ஜீன்ஸ் போன்றவர்கள் அத்வைத பாஷையில்தான் பேசுகிறார்கள்! பௌதிக தாதுக்களெல்லாம் ஒன்றுக்கொன்று பேதமான வேறு வேறு வஸ்துக்கள் என்ற விஞ்ஞானம் இப்போது பழசாகி விட்டது. புது ஸயன்ஸின்படி ஏகமான சக்தியொன்றின் விதவிதமான தோற்றம்தான் எல்லாமும்! இந்த பௌதிக ப்ரபஞ்சத்தில் எதுவும் தன்னில் தானாகவே ஸத்யமாக இல்லாமல் — absolute-ஆக இல்லாமல் — ஒன்றோடு ஒன்று சார்புப்படுத்திப் பார்க்கும்போது ஸத்யம் மாதிரி இருக்கும் relative reality உள்ளதுதான் என்று புது ஸயன்ஸ் சொல்வது ஆசார்யாளுடைய ப்ராதிபாஸிக ஸத்யக் கொள்கையின் ஒரு ரூபம் தான்!

இப்படி ஸகல மத ஸாரமாகவும், மதத்திற்கு விரோதமானது என்றே நினைக்கும் ஸயன்ஸுக்குங்கூட ஸாரமாகவும் உள்ள பூர்ண ஸித்தாந்தத்தை ஆசார்யாள் அநுக்ரஹித்திருக்கிறார்.

எல்லா இடத்திற்கும் திக்விஜயம் பண்ணி அந்த ஸித்தாந்தத்தை வர்ஷித்து சாந்தமும் ப்ரேமையும் ஆனந்தமும் எங்கேயும் எல்லாரிடமும் நிறைந்திருக்கும்படிப் பண்ணினார்.

ஆசார்யாள் என்றால் சாந்தம், ப்ரேமை, ஆனந்தம் என்றுதான் அர்த்தம். அந்த மூன்றையும் சேர்த்துத்தான் ‘சம்’ என்பது. சம்-கரர் செய்த ‘சம்’! “ஒற்றுமை” என்பது அதுதான். ஒன்றாகப் போய்விடுவது ஒற்றுமை என்றால் ஸ்வாமியோடு ஒன்றாய் விடுவது மட்டுமில்லை; அதே ஸ்வாமிதானே இத்தனையும் என்பதால் ஜீவ ஸமூஹம் முழுதோடும் ஒன்றாய் விடுவதும்தான். ஒருமைப்பாடு, ஒருமைப்பாடு என்று சொல்வதை இப்படி அத்வைத அடிப்படையால் நிஜமாக ஏற்படுத்தினார்.

எல்லோரும் ப்ரேமையில் சாந்தியில் ஒன்றாகப் போகவே ஆசார்யாள் அப்பப்போ அவர் விஷயமாக ஆராய்ச்சி என்று இறங்கி, எந்தக் காலத்தில் பிறந்தார், எங்கெங்கே போனார், என்னென்ன பண்ணினார், பண்ணினாரா, இல்லையா என்றெல்லாம் பார்ப்பதில் அபிப்ராய பேதங்கள் புறப்படுவதைப் பார்க்கும்போது, “ஆசார்யாள் ஸமாதானத்துக்கே வந்தார். ஆராய்ச்சி என்று எதையாவது கிளப்பி அவர் விஷயமாகவே சர்ச்சை, சண்டை என்று கிளப்பிவிட்டால் இதைவிட அபசாரம் இல்லை போலிருக்கே” என்றுகூடத் தோன்றுகிறது! தோன்றியதைச் சொல்லணுமாதலால் சொன்னேன்.

நாம் ஆராய்ச்சியால் கண்டு பிடிப்பதையெல்லாம்விட முக்யம் அவர் பெயரில் நாம் அத்தனை பேரும் ப்ரேமையில் ஒற்றுமையாயிருப்பதுதான்! அப்போதுதான் நாம் நிஜமான ஆசார்ய சிஷ்யர்கள்.


1 “தெய்வத்தின் குரல்” — இரண்டாம் பகுதி, ‘நியாயம்: யுக்தி சாஸ்திரம்’ என்ற உரையில் ‘பிரமாணங்கள்‘ எனும் பிரிவு பார்க்க.

2 XVIII. 19

3 இக்கதை மேலும் விவரமாக “தெய்வத்தின் குரல்” — முதற்பகுதியில் “ஸ்வாமி என்றால் குமாரஸ்வாமியே” என்ற உரையில் காணலாம்.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s