சிவ – சக்தி தர்சனம்; சிவலிங்கங்களும் சக்தி ஸ்துதியும்

மாதா-பிதா-குரு என்பதில் குரு தர்சனம் ஆனதும் மாதா-பிதாக்களை பார்க்க ஆசைப்பட்டார். சிஷ்யராக அடங்கியிருந்த மாதரி, குழந்தையாக அடங்கியிருக்க ஆசைப்பட்டார். யார் மாதா? யார் பிதா? “மாதா ச பார்வதீ தேவீ; பிதா தேவோ மஹேச்வர:” என்று அவரே சொல்லியிருக்கிறார்.1 அவர்கள் சேர்ந்து பண்ணின அவதாரந்தான் அவரே என்றாலும் குழந்தையாக பக்தி பண்ண ஆசைப்பட்டார். இதுவரை நம்மெல்லாரையும் போலக் கோவில்களுக்குப் போய் அர்ச்சா மூர்த்திகளை (விக்ரஹ வடிவங்களை) தர்சித்தவர் — நாம் அர்ச்சையைத் தான் பார்க்கிறோமென்றால், அவர் அதிலேயே அந்தந்த ஸவாமியை நேராகப் பார்த்திருப்பார். அப்படிப் பார்த்தவர் — இப்போது பார்வதீ பரமேச்வராள் ஸாக்ஷாத்தாக எழுந்தருளியிருக்கும் கைலாஸத்துக்குப் போனார். யோக பலத்தால் போனார் என்று இருக்கிறது.

கைலாஸத்தில் ஈச்வரனையும் அம்பாளையும் தர்சனம் பண்ணி, பக்தி பண்ணி ஆனந்தப்பட்டார். ஒன்றே இப்படி ஈச்வரன்-அம்பாள் என்று இரண்டாகி, அப்புறம் நம்முடைய பகவத்பாதாள் என்று மூன்றாகி ஒன்றையொன்று பார்த்து ஆனந்தப்பட்டுக் கொண்டது!

அவர் தர்சனம் பண்ணினது அவர் ஆனந்தமடைந்ததோடு முடிந்துபோகக் கூடாது, இதிலிருந்து லோகத்திற்கெல்லாம் எந்நாளும் ஆனந்தமாக ஒன்று நடக்கவேண்டுமென்று பார்வதீ-பரமேச்வரர்கள் நினைத்தார்கள். வந்த குழந்தைக்கு ஒரு ‘ப்ரஸண்ட்’ கொடுக்கிற மாதிரி கொடுத்து அதிலேயே லோகத்துக்குப் பரமாநுக்ரஹத்தைச் சேர்த்து அனுப்பி விட்டார்கள்.

ஸ்வாமி ஆசார்யாளுக்கு ஐந்து ஸ்படிக லிங்கங்களைக் கொடுத்தார். இந்த விஷயம் இதிஹாஸ-புராணங்களை (முறையே) சேர்ந்த ‘சிவ ரஹஸ்யம்’, ‘மார்க்கண்டேய ஸம்ஹிதை’ ஆகிய இரண்டிலும் இருக்கிறது. சிவ ரஹஸ்யத்தில் இது காசியில் நடந்ததாகச் சொல்லியிருந்தாலும், அவை கைலாஸ லிங்கங்கள் என்றே இருக்கிறது2. இரண்டிலுமே பஞ்ச லிங்கங்கள் என்று ஒற்றுமையாகச் சொல்லியிருப்பதை கவனிக்கவேண்டும். ஒன்றில் ஐந்து என்று சொல்லி இன்னொன்றில் நாலு என்றோ ஆறு என்றோ இல்லை! இதைவிட கவனிக்கவேண்டியது, இரண்டிலுமே அந்த ஐந்து லிங்கங்களும் ஒரே பெயர்களைச் சொல்லியிருப்பது! யோகலிங்கம், போகலிங்கம், வரலிங்கம், முக்திலிங்கம், மோக்ஷலிங்கம் என்று அதே ஐந்து பேர் சொல்லியிருக்கிறது.

கூடுதலாக, அவற்றைப் பிற்பாடு ஆசார்யாள் எங்கெங்கே ப்ரதிஷ்டை பண்ணினாரென்ற விவரம் ‘மார்க்கண்டேய ஸம்ஹிதை’யில் கொடுத்திருக்கிறது: யோகலிங்கம் இந்த (காஞ்சி) மடத்தில்; போகலிங்கம் ச்ருங்கேரி மடத்தில்; வரலிங்கம் நேபாளத்தில் நீலகண்ட க்ஷேத்ரத்தில்; முக்தி லிங்கம் கேதாரிநாத்தில்; மோக்ஷலிங்கம் சிதம்பரத்தில்.

அது ஸ்படிக லிங்கமாக இருந்ததில் ரொம்ப அர்த்தமுண்டு.

ஸ்ரீருத்ர ப்ரச்னம்தான் வைதிகமான சிவ ஸூக்தங்களில் முக்யமாக இருப்பது. அதில் த்யான ச்லோகத்தில் என்ன சொல்லியிருக்கிறதென்றால்:

ஆபா தாள-நப : ஸ்தலாந்த-புவந-ப்ரஹ்மாண்ட மாவிஸ்புரஜ்-
ஜ்யோதி: ஸ்பாடிக-லிங்க-மௌளி விலஸத் பூர்ணேந்து வாந்தாம்ருதை: |
அஸ்தோகாப்லுத-மேக-மீச-மநிசம் ருத்ராநுவாகாஞ்-ஜபந்
த்யாயேதீப்ஸித ஸித்தயே (அ)த்ருத-பதம் விப்ரோ (அ)பிஷிஞ்சேச்-சிவம்
||

வேத மந்த்ர பூர்வமான பூஜை பண்ணுவதற்குரியவனான ஒரு விப்ரன் பூஜையினால் இஷ்ட ஸித்தி அடைய வேண்டுமானால் இந்த ருத்ர ப்ரசனம் என்ற அநுவாகத்தை (வேதத்தின் ‘ஸெக்ஷ்’னை) ஒரே ஓட்டமாக ஓடாமல் (‘அத்ருத பதம்’ என்பதற்கு அதுதான் அர்த்தம்) சொல்ல வேண்டிய முறையில் ஜபம் செய்தபடி சிவனுக்கு அபிஷேகம் பண்ணணும் என்பது ச்லோகத்தின் கடைசியில் சொன்ன விஷயம். சிவனுக்கான பிம்பம் அநேகமாக லிங்கமாகத்தான் இருக்கும். அது ஸ்படிக லிங்கமோ, பாணலிங்கமோ, ஸுவர்ண லிங்கமோ, ரஸலிங்கமோ, மரகத லிங்கமோ எதுவாயிருந்தாலும் ‘ருத்ரம்’ ஜபித்தபடி அபிஷேகிக்கணும், வேறே நடராஜா மாதிரி மூர்த்தியாக இருந்தாலும் இதே விதிதான். இது (ச்லோகக்) கடைசியில் சொன்ன விஷயம். “ஏகம் ஈசம் அநிசம்” என்று ஏக வஸ்துவான ஈச்வரனை ருத்ர ஜப த்யானத்தோடு ஸதா அபிஷேகிக்கணும் என்று சொல்லியிருக்கிறது.

இதற்குமுன் சிவ ஸ்வரூபத்தை எப்படி த்யானிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. பாதாளத்திலிருந்து ஆகாசம் வரை வ்யாபித்துக் கொண்டு, ப்ரம்மாண்டங்களையெல்லாம் ப்ரகாசப்படுத்திக் கொண்டிருக்கும் ஜ்யோதிஸ்ஸாக ஸ்வாமி இருக்கிறார். ஜ்யோதிர் லிங்கமாக இருக்கிறார். அது ஸ்படிக லிங்கமாக இருக்கிறது: ஸ்பாடிக லிங்க ! ” ஸ்படிகத்தாலானது ‘ஸ்பாடிகம்’. இப்படியரு மஹா பெரிய ஸ்படிக லிங்கமாக ஸ்வாமியை பாவித்துக்கொள். அதன் சிரஸில் பூர்ண சந்திரன் ப்ரகாசிக்கிறது- “மௌளி விலஸத் பூர்ணேந்து.” மான், மழு, ஜடை எல்லாமுள்ள ஸகள (உருவ) பிம்பத்தின் சிரஸில் மூன்றாம் பிறைதான் இருக்கிறதென்றால் ஸ்படிக மயமான இந்த ஸகள-நிஷ்கள (அருவுருவ) லிங்கத்தின் உச்சியில் பூர்ணசந்திரனே இருக்கிறது! அதனால்தான் குறிப்பாக ஆசார்யாள் ப்ரதிஷ்டை பண்ணியுள்ள இந்த லிங்கங்களுக்கு சந்த்ரமௌளீச்வரன் என்று பேர் இருக்கிறது. அந்தப் பூர்ண சந்த்ரனுக்குள்ளேயிருந்து அம்ருதம் பெருகுகிறது: “வாந்தாம்ருதை:”. அம்ருதம் “அஸ்தோக”மாகப் பெருகுகிறது – அதாவது நிறைய, தாரை தாரையாய்ப் பெருகுகிறது. மூன்றாம் பிறையானால் ஏதோ கொஞ்சம் அம்ருதம் தான் பெருகும். இது பூர்ண சந்த்ரனானதால் ஒரே தாரையாகப் பிரவஹிக்கிறது. தன் சிரஸிலுள்ள சந்த்ரனிலிருந்தே பெருகும் அம்ருத தாரையில் ஸ்வாமி அப்படியே முழுகியிருக்கிறார்-“ஆப்லுதம்”என்றால் முழுக்கப்பட்டு, அபிஷேகம் பண்ணப்பட்டு என்று அர்த்தம். அவர் நீயும் துளி ஜலம் விட்டு அபிஷேகம் பண்ணினால் ஆனந்தமடைகிறார்!

ஸ்படிகமாக இல்லாத லிங்கமாக, அல்லது வேறே ஸகள மூர்த்தியாயிருந்தால்கூட ருத்ர ஜபத்தோடு அபிஷேகம் பண்ணும்போது ஸ்வாமியை ஸ்படிக லிங்கமாகத்தான் த்யானிக்க வேண்டும் என்று இருப்பதால்தான் பரமேச்வரன் ஐந்து ல்படிக லிங்கங்களை ஆசார்யாளிடம் கொடுத்தார்.

ஸகளத்தைவிட ஸகள நிஷ்களம் அத்வைதத்திற்குக் கிட்டே. அதிலும் ஆதி அந்தமில்லாத லிங்கம் இன்னம் கிட்டே. அந்த லிங்கம் ஸ்படிகமாக இருந்துவிட்டால் ரொம்ப ரொம்பக் கிட்டே. அத்வைதம் பரமதத்வமாகச் சொல்வது நிர்குண ப்ரஹ்மம்.

ஸ்படிகம் ஒரு கலரிலும் வராமல் transparent-ஆக (ஒளி ஊடுருவும்படி) இருந்து கொண்டு நிர்குண தத்வத்துக்கே ரூபகமாயிருக்கிறது. ஸ்ப்டிகம் பரப்ரஹ்மம் மாதிரி நிஷ்களங்கமானது, நிர்மலமானது, சுப்ரமானது. எந்தக் கலர் புஷ்பத்தால் அர்ச்சித்தாலும் உள்ளே அந்த ‘டால்’ அடித்து, அந்தக் கலர் மாதிரியே ஸ்படிக லிங்கம் தோன்றும். மாயை ஆரோபிக்கும் அத்தனை ரூபங்களுக்கும், குணங்களுக்கும் நிர்குண ப்ரஹ்மம் இடம் கொடுத்து, அது அதுவாகவும் தோன்றுவது போலத்தானே இது?

இப்படி ஞான மயமாயிருப்பது குளு குளு என்று சந்த்ரிகையின் அம்ருதத்தில் குளிர்ந்திருப்பது காருண்யத்தைக் காட்டுவதாக இருக்கிறது.

பஞ்ச பூதம், பஞ்ச ப்ராணன் என்று இருப்பதுபோல் பஞ்ச லிங்கம் ஸ்வாமி ஆசார்யாளுக்குக் கொடுத்தார். பஞ்ச க்ருத்யம் செய்பவர்! பஞ்ச முகம் உள்ளவர்!

அறிகிறவன்-அறியப்படும் அறியப்படும் வஸ்து-அறிவு என்ற மூன்றும் ஒன்று என்பது அத்வைதம். ‘த்ரிபுடி’ என்று இந்த மூன்றைச் சொல்வது. அப்படியொரு த்ரிபுடியாக இங்கே கொடுத்தவர் – சிவன்; வாங்கிக்கொண்டவர் – சிவன்! கொடுக்கப்பட்ட வஸ்துவும் சிவன்!

இங்கே ஆசார்யாளையே ஸ்படிக சந்த்ரமௌளீச்வரராக சொல்லியிருக்கும் ஒரு ச்லோகம் ஞாபகம் வருகிறது. ‘மாதவீய சங்கர விஜய’த்தில் ஆசார்யாளின் அவதார ஸர்க்கத்தில் வரும் ச்லோகம் :

மூர்தநி ஹிமகர சிஹ்நம் நிடிலே நயநாங்க-மம்ஸயோ: சூலம் |
வபுஷி ஸ்படிக – ஸவர்ணம் ப்ராஜ்ஞாஸ்தம் மேநிரே சம்பும் ||
2

குழந்தை சங்கரரைப் பார்க்க வந்த ஞானிகளுக்கு சிவச் சின்னங்கள் அதனிடம் தெரிந்ததாம்! வடு மாதிரி, மச்சம் மாதிரித் தெரிந்தது என்பார்கள். “மூர்தநி ஹிமகர சிந்ஹம்” — சிரஸில் சந்த்ரனின் சின்னம்! அதுதான் சந்த்ரமௌளி! நெற்றியில் மூன்றாவது கண் மாதிரி அடையாளம் — “நிடிலே நயநாங்கம்”. தோளில் சூலக் குறி — “அம்ஸயோ: சூலம்.” தேஹமெல்லாம் ஸ்படிகமாக மின்னுகிறது : ” வபுஷி ஸ்படிக – ஸவர்ணம்3 “. இப்படித் தோன்றிய குழந்தையை சம்பு என்றே அந்த ஞானிகள் தெரிந்து கொண்டார்கள் – “ப்ராஜ்ஞாஸ் தம் மேநிரே சம்பும்…”

பிதாவான மஹேச்வரன் பஞ்சலிங்க அநுக்ரஹம் பண்ணினபோது மாதா பார்வதி சும்மாயிருப்பாளா? அவள் ஒரு ஸ்தோத்ரச் சுவடியை ஆசார்யாளுக்குக் கொடுத்தாள். அதுதான் தேவீ ஸ்துதிகளில் முதல் ஸ்தானம் வஹிப்பதான “ஸெளந்தர்ய ஸஹரி”. மார்க்கண்டேய ஸம்ஹிதையில் அதை “ஸெளந்தர்ய ஸாரம்” என்று சொல்லியிருக்கிறது. “பூத்யை” – அதாவது லோகத்திற்கு க்ஷேமம் உண்டாக்குவதற்காக – அதை ஆசார்யாளுக்கு அநுக்ரஹம் பண்ணினாளென்று இருக்கிறது.

பஞ்சலிங்கம் கொடுத்தது, அவற்றின் பெயர்கள், அவற்றை ஆசார்யாள் எங்கெங்கே வைத்தார் என்பதையெல்லாம் ‘மார்க்கண்டேய ஸம்ஹிதை’க்கு முழுக்க இசைவாகச் சொல்லும் ‘ஆனந்தகிரீய சங்கர விஜய’த்தில் அம்பாள் கொடுத்த புஸ்தகத்தை ‘அம்பிகா ஸ்தவ ஸாரம்’ என்று குறிப்பிட்டிருக்கிறது.4 தேவீ பரமான ஸ்துதிகளுக்கெல்லாம் இதுவே ஸாரமாயிருப்பது என்று அர்த்தம். “ஜகதநுக்ரஹாய” கொடுத்தாளென்று இருக்கிறது. ஜகத்குருவுக்குப் பண்ணும் அநுக்ரஹம் ஜகத்துக்கே அநுக்ரஹம்தானே?

‘ஸெளந்தர்ய லஹரி’ என்றால் அழகின் அலைகள். அம்பாள் அழகு ஸமுத்ரமாயிருக்கிறாள். அதை ஸ்தோத்ரம் வாக்கு ரூபத்தில் காட்டிவிடுகிறது. அப்போது ஒவ்வொரு ச்லோகமும் ஒரு அலைமாதிரி.

அம்பாளுக்குப் பல ரூப பேதங்கள் இருப்பதில் இது ‘ஸுந்தரி’ என்பவளைப் பற்றியது. அவள் தசமஹா வித்யா என்று பத்தில் ஸுந்தரி வித்யாவுக்கு தேவதையாக இருப்பவள். ‘ஸ்ரீவித்யா’ என்பது அதைத்தான்.

த்ரிபுரஸுந்தரி என்பது அந்த ஸுந்தரிதான். மூன்று லோகத்திலேயும் சிறந்த அழகி த்ரிபுரஸுந்தரி. ஸ்தூல-ஸூக்ஷ்ம-காரணம் என்ற முப்புரங்களுக்குள்ளே ஞானமாகவும் காருண்யமாகவும் இருக்கும் ப்ரஹ்ம தத்வம்தான் இப்படி அழகு ஸ்வரூபமான தாயாக ஆகி த்ரிபுர ஸுந்தரி என்ற பெயரில் விளங்குவது. ‘லலிதாம்பாள்’ என்று சொல்வது அவளைத் தான்.

சந்த்ரமௌலீச்வர லிங்கத்தின் சக்தியாக ஸ்ரீசக்ர ரூபத்தில் பூஜை பண்ணுவது த்ரிபுரஸுந்தரிக்குத்தான். ஏனென்றால் அவர் மாதிரியே அவளுக்கும் பூர்ண சந்த்ர ஸம்பந்தம் நிறைய உண்டு. அவருடைய சிரஸில் பூர்ண சந்த்ரன் இருக்கிறதென்றால் இவள் வாஸம் பண்ணுவதே பூர்ண சந்த்ர மத்தியில்தான்! “சந்த்ர மண்டல மத்யகா” என்று ஸஹஸ்ரநாமத்தில் சொல்லியிருக்கிறது. அவளுக்கு விசேஷமான திதியும் பூர்ணிமை! ஸாதனாந்தத்தில் (ஸாதனை) முடிவில் அவளே நம்முடைய சிரஸ் உச்சியில் பூர்ண சந்த்ரனாக அம்ருதத்தைக் கொட்டுவாள்.

திவ்ய தம்பதி ஜிலுஜிலுவென்று அழகாக அம்ருத கிரணங்களைக் கொட்டிக் கொண்டிருக்கும் சந்த்ர ஸம்பந்தத்துடன் லோகத்தின் தாபத்தையெல்லாம் போக்கி ஆனந்தம் கொடுப்பதற்காகச் சந்த்ரமௌளியாகவும் த்ரிபுரஸுந்தரியாகவும் இருக்கிறார்கள். அவள் சிரஸிலும் சந்த்ர கலை உண்டு. “சாரு சந்த்ர கலாதரா” என்று ஸஹஸ்ரநாமத்தில் வருகிறது. ‘மஹாத்ரிபுரஸுந்தரி’, ‘சந்த்ர மண்டல மத்யகா’, ‘சாரு சந்த்ரகலாதாரா’ என்ற நாமாக்கள் கிட்டக் கிட்டவே வந்துவிடுகின்றன.

“‘ஸெளந்தர்ய லஹரி’ ஆசார்யாளே பண்ணியது என்று தான் ப்ரஸித்தமாயிருக்கிறது. ஏற்கெனவே அது கைலாஸத்திலிருந்து, அம்பாள் கொடுத்தாள் என்றால் ஆசார்யாள் அதைப் பண்ணவில்லையா? ப்ரசாரம் மட்டும் தான் பண்ணினாரா?” என்று கேட்டால் இதற்கு ஒகு கதை பதில் சொல்கிறது. இந்தக் கதை சங்கர விஜயம் எதிலும் இல்லாவிட்டாலும் கர்ணபரம்பரையாக வந்திருக்கிறது. சிஷ்டர்களும் மதிப்புக் கொடுத்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். என்ன கதை என்றால்…

“மூன்று காலமும் பில்வார்ச்சனை பண்ணி லோக க்ஷேமத்தை உண்டாக்கு” என்று சொல்லி ஸ்வாமி பஞ்சலிங்கங்களைக் கொடுத்தார். அம்பாளும் லோகக்ஷேமத்திற்காக ப்ரசாரம் பண்ணச் சொல்லி ஸ்தோத்ரச் சுவடியைக் கொடுத்தாள். ஆசார்யாள் அவர்களை நமஸ்காரம் பண்ணிவிட்டுத் திரும்பினார்.

கைலாஸத்தின் வாசலிலிருந்த நந்திகேச்வரருக்கு மஹா மந்த்ர சாஸ்த்ரமாக இருந்த அந்த ஸ்தோத்ரம் கைலாஸத்தை விட்டுப் போவதா என்று இருந்தது. அவர் அப்பப்போ ரொம்பவும் ரோஷமாகக் கார்யம் பண்ணிவிடுவார். அதனால் யார் என்ன என்று பார்க்காமல் ஆசார்யாளின் கையிலிருந்த சுவடியைப் பறித்தார். எல்லா ஓலையும் அவர் கைக்குப் போகவில்லை. ஒரு பாகம் ஆசார்யாள் கையிலேயே இருந்தது. மொத்தம் இருந்த நூறு ச்லோகத்தில் பின் 59 நந்திகேச்வரர் கைக்குப் போயிற்று. ஆரம்ப பாகமான 41 ஸ்லோகத்தை ஆசார்யாள் இறுக்கப் பிடித்துக்கொண்டு சட்டென்று வெளியேறி விட்டார்!

பெரிய பாகம் நஷ்டமாகவிட்டதே என்று அவர் துக்கப்பட்டார். அப்போது அம்பாள் அசரீரி வாக்கில், “எல்லாம் என் லீலைதான். அந்த 59-ம் நீயே பூர்த்தி பண்ணிவிடு. உன் வாக்காலேயே ஸ்தோத்ரம் கேட்கணும்; அது கைலாஸ ஸொத்தான ஸ்தோத்ரத்தோடேயே, அதற்கு ஸமதையாகச் சேர்ந்து ப்ரகாசிக்கணும் என்றுதான் இப்படி நடக்கப் பண்ணினேன்” என்றாள்.

ஆசார்யாள் ரொம்பவும் ஸந்தோஷத்துடன் அப்படியே 41-ஐ நூறாக்கிப் பூர்த்தி பண்ணிவிட்டு, “என் வாக்கா? உன்னுடையதேயானே வாக்கால்தான் உனக்கென்றே இந்த ஸ்தோத்ரம் ஏற்பட்டது – த்வதீயாபிர் – வாக்பிஸ் – தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம்” என்று பரம விநயத்தோடு முடித்து அவளுக்கு அர்ப்பணம் பண்ணினார்.

இப்படிக் கதை இருக்கிறது.

ஆசார்யாள் பண்ணிய 59 ச்லோகங்களில்தான் அம்பாளின் ஸ்வரூப வர்ணனை, கேசாதி பாதம், அவளுடைய ஸெளந்தர்ய அலைகளாக வருகிறது. இதில் மூன்றாவது ச்லோகத்தில் (அதாவது முழு நூலின் 44-வது ச்லோகத்தில்) “ஸெளந்தர்ய லஹரீ” என்ற பதப்ரயோகமே பண்ணியுருமிருக்கிறார். அதனால், மொத்த நூலையும் அந்தப் பெயரில் சொன்னாலும் முதல் 41 ‘ஆனந்த லஹரி’ என்றும், பின் 59-மட்டுமே ஸெளந்தர்ய லஹரி என்றும் குறிப்பிடப்படுகின்றன. முதல் பாகத்தில் எட்டாவது ச்லோகத்தில் ‘ஆனந்த லஹரி’ என்று – “சிதாநந்த லஹரீம்” என்று வருகிறது.

கைலாஸத்தில் ஆசார்யாளுக்குக் கிடைத்த ஸ்தோத்ரத்திற்கு ‘மார்க்கண்டேய ஸம்ஹிதை’, ‘ஆனந்த கிரீயம்’, இரண்டிலுமே ‘ஸெளந்தர்ய லஹரி’ என்று பேர் சொல்லாமல் ‘ஸெளந்தர்ய ஸாரம்’ என்றும், ‘அம்பிகா ஸ்தவ ஸாரம்’ என்றும் சொல்லியிருப்பது கர்ண பரம்பரைக் கதையின் ப்ராமாண்யத்துக்கு பலம் சேர்ப்பதாகத் தோன்றுகிறது.

முதல் பாகம் ஸுந்தரியைப் பற்றிய மந்த்ர சாஸ்த்ர ஸாரம்.

பாக்கியை நந்திகேச்வரர் வழிப்பறி செய்தாரே என்று எனக்கு ரொம்ப ஸந்தோஷமாக இருக்கிறது! அவருக்கு ரொம்ப நன்றி தெரிவிக்கணும் போலிருக்கிறது! அதனால் தானே, அம்பாளின் ரூப லாவண்ய மஹிமையையும், ‘இதற்கு மேலே கவிதை இல்லை, பக்தி இல்லை’ என்னும்படியாக ஆசார்யாளின் மஹிமையையும் தெரிவிக்கிற பின் பாகம் உண்டாயிற்று?5

ஸ்வாமியின் ஆஜ்ஞைப்படியே ஆசார்யாள் நாலு லிங்கங்களை ச்ருங்கேரி, கேதாரம், நீலகண்டம், காஞ்சி ஆகிய க்ஷேத்ரங்களில் ப்ரதிஷ்டை செய்தார். நிர்வாணம் ஸமீபித்தபோது மோக்ஷலிங்கத்தைச் சிதம்பரத்தில் ப்ரதிஷ்டை செய்து வரும்படி ஸுரேவராசார்யாளிடம் கொடுத்தனுப்பினாரென்று ‘ஆனந்த கிரீய’த்தில் இருக்கிறது.


1 ‘அன்னபூர்ணா ஸ்தோத்ரம்’ கடைசி ச்லோகம்.

2 ‘சிவரஹஸ்யம்’: 9-வது அம்சம்; 16-வது அத்யாயம். மார்கண்டேய ஸம்ஹிதை ‘: 72-வது கண்டம், 7-வது பரிஸ்பந்தம்.

3 “மாதவீயம்” 2-வது ஸர்கம்: ச்லோகம்-90

4 “ஆனந்தகிரீயம்” 55-வது ப்ரகரணம்.

5 “ஸௌந்தர்ய லஹரி”யின் பல ச்லோகங்களுக்கு ஸ்ரீசரணர்களின் விளக்கம் வரவிருக்கும் நம் நூற்பகுதிகளில் ஒன்றில் வெளியாகும். (முதற்பகுதியில் அம்பிகை குறித்த உரைகளிலும் ஆங்காங்கே இவ்விளக்கம் கொடுத்திருக்கிறோம்.)

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s