ஞானியாயின் ஸமத்வம் வேறு; ஸமூஹ ஸமத்வம் வேறு

இதை வைத்துக்கொண்டு தற்காலத்து ஸமத்வச் சீர்திருத்தவாதிகள் விபரீதமாக அர்த்தம் பண்ணுகிறார்கள். அதாவது ஆசார்யாள் வர்ணாச்ரம பேதங்களை ஒழிக்கச் சொல்லிவிட்டார், ஜாதி வித்யாஸமெல்லாம் பார்க்கவே கூடாது என்று காட்டிவிட்டார் என்று சொல்கிறார்கள். அப்படி ஆசார்யாள் சொல்லவேயில்லை என்பது அவருடைய பாஷ்யங்களைப் பார்க்கிற எவருக்கும் தெரியும். ஆனாலும் பாஷ்யங்களைப் பார்த்து, ‘ட்ரான்ஸ்லேட்’ பண்ணி, லெக்சர் பண்ணி, டாக்டர் பட்டம் வாங்கினவர்களும்கூட வேண்டுமென்றே தங்கள் நவீனக் கொள்கைக்கு ஸாதகமாக இருக்கிறது என்பதால் இப்படி வளைத்துத் திரித்துப் பேசுகிறார்கள். இவர்களுக்கு வர்ணாச்ரம தர்மம் பிடிக்கவில்லையென்றால் அதற்குத் தாங்களும் தங்களைச் சேர்ந்தவர்களும் என்னென்ன காரணம் சொல்லமுடியுமோ (அவற்றைச்) சொல்வதுதான் முறையே தவிர ஆசார்யாளைப் பிடித்து வளைத்து அவர் சொல்லாததை அவர் வாயில் திணிப்பது கொஞ்சங்கூட ந்யாயமில்லை. ஆனாலும் நாம் நம் பெரியவர்களையெல்லாம் மறந்துபோய்விடவில்லையாக்கும், நம்முடைய ‘ஸ்பிரிசுவல் ஹெரிடே’ஜை (ஆத்மிக பாரம்பர்யத்தை) ரொம்ப மதிக்கிறோமாக்கும் என்று காட்டுவதாக அப்பப்போ விழாக்கள் ஸெமினார்கள் நடத்துவதில் தலைவர்கள் என்கப்பட்டவர்கள் இந்த ஸம்பவத்தைச் சொல்லி, ஆசார்யாள் இக்காலத்தில் ‘ஈக்வாலிடி’ என்று சொல்வதைத்தான் ஸ்தாபித்திருக்கிறாரென்று ‘ட்ரிப்யூட்’ கொடுக்க (புகழஞ்சலி சொலுத்த)த் தவறுவதில்லை. நம்முடைய கொள்கையை அவர் சொல்வதாக ஆக்கி ட்ரிப்யூட் கொடுப்பதென்றால் அது நமக்கே ட்ரிப்யூட் கொடுத்துக்கொள்வதுதான்!

வாஸ்தவத்தில் ஆசார்யாளும் மற்ற பூர்விக சாஸ்த்ரகாரர்களும், ரிஷிகளும் சொன்ன ஸமத்வம் என்ன? ஸகல ஜீவர்களிடமும் கொஞ்சங்கூட ஏற்றத்தாழ்வேயில்லாத அன்பாகிய மனோபாவ ஸமத்வத்தைத்தான் அவர்கள் சொன்னார்கள். கார்யங்களை வைத்து, இவரிவருக்கு இன்னின்ன என்று ஸமூஹ வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொடுக்கும் வர்ணாச்ரமங்களையெல்லாம் அழித்து ஒன்றாக்குவதுதான் ஸமத்வம் என்று நினைத்துக்கொண்டிருப்பதை அல்ல. பல ஜாதிக்காரர்கள் அவரவருக்குமென்று பல தொழில்களைப் பண்ணுவதில் ஸமத்வம் இல்லை என்று நினைப்பதே தப்பு. அந்தந்தத் தொழிலுக்கு ஏற்றபடி ஆஹாரம் முதலானவை இருக்கும். வித்யாஸமாயிருக்கிறதே என்று எல்லாவற்றையும் கலந்தால் எந்தத் தொழிலும் ஸரியாக நடக்காது. ஜ்வரக்காரனுக்கு வெந்நீர் வேண்டும். குடல் புண்காரனுக்கு ஜில்லென்று ஜலம் வேண்டும். பூஜைக்கு மடி ஜலம் தனியாயிருக்கும். ‘பருப்பு வேகணும்’ என்று சமையலுக்கு மாத்ரம் எங்கேயாவது போய் ஜலம் கொண்டுவந்து கொஞ்சம் வைத்திருப்பார்கள். குளிப்பதற்கு துணிகள் துவைப்பதற்கெல்லாம் வேறே ஜலம் இருக்கும். அந்த துவைத்த ஜலத்தைக்கூடச் சுருணையை அலசலாம் என்று சேர்த்து வைத்திருப்பார்கள். இதெல்லாமே அவச்யமான கார்யந்தான். ஸமத்வம், உசத்தி, தாழ்த்தி என்ற வார்த்தைகளுக்கே இங்கே இடமில்லை. ஆனால் இப்படிச் சொல்லி எல்லா ஜலத்தையும் கலந்து ஒன்றாக்கிவிட்டால் அத்தனை கார்யங்களும்தானே கெட்டுப்போகும்?

ஸமூஹ வாழ்க்கையில் ஸமத்வத்திற்கு வேறே என்ன நியாயம் சொன்னாலும் சொல்லட்டும். ஆனால் இதனால் தான் ஒற்றுமை ஏற்படும் என்று முதலிடம் கொடுத்துச் சொல்கிறார்களே, அது புரளிதான். மற்ற தேசங்களிலெல்லாம் வர்ண வியவஸ்தை இல்லைதானே? ஆனால் அங்கேயெல்லாம் ஒற்றுமைதான் நிலவுகிறதா? எத்தனை சண்டையும் கலகமும் உண்டோ அத்தனையுந்தான் நடக்கின்றன. நம் தேசத்திலேயே இந்தக் கொள்கை கொண்ட எல்லாரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்களா என்று அவர்களுக்கே தெரியும். தேசத்திலும் இந்த கோஷம் வந்த பிற்பாடு ஏற்பட்டிருக்கும் சண்டையும் போட்டியும் முன்னே ஒரு போதும் இருந்ததில்லை.

“அதெல்லாம் ஸரி, ஆனால் இப்போது கார்யத்தை வைத்துத்தான் ஜாதிகளைப் பிரிந்திருக்கிறதா?” என்று கேட்டால் இப்போது அப்படியில்லைதான். எல்லாரும் ஒரே லௌகிக லக்ஷ்யங்கள், லௌகிக ஸெளக்யங்கள், லௌகிகப் போட்டிகள் என்று இறங்கி விட்டதால், முன்னே ஆத்ம லக்ஷ்யத்தையும் ஆத்ம ச்ரேயஸையும் முக்யமாக வைத்து அதற்கு அநுகுணமாகவே Individual life (தனியார் வாழ்க்கை) , social order (ஸமூஹ ஒழுங்குமுறை) இரண்டையும் போட்டியில்லாத பாரம்பர்ய க்ரமத்தில் வைத்துச் செய்திருந்த வர்ணாச்ரம விபாகங்களை உடைத்துக் கார்யங்களை ஒன்று கலந்திருக்கிறோம். இதற்காக ஆதியில் அவர்கள் அப்படிப் பண்ணியதே தப்பு என்றால் எப்படி? அல்லது அவர்கள் பண்ணவேயில்லை, பண்ணியிருந்தால் ரொம்ப பக்ஷபாதிகள் என்றால் எப்படி?

ஆக, சாஸ்த்ராபிப்ராயத்தையேதான் சொன்ன ஆசார்யாள் நம்முடைய கார்யலோகத்தில் ‘ஈக்வாலிடி’ என்று நினைத்து இப்போது சொல்கிற எதையோ சொல்லவில்லை. நடுவில் சிதிலமாயிருந்த வர்ணாச்ரம தர்மத்தை அவர்தான் மறுபடி ஜீர்ணோத்தாரணம் பண்ணினார். இப்படி நான் சொல்வது இங்கேயே யாருக்காவது பிடிக்காமல் ஏமாற்றமாக, வருத்தமாக, கோபமாக இருக்குமானாலுங்கூட — ‘ஐயோ! அப்படியானால் அவரை புத்தர், ஜினர் காந்தியோடெல்லாம் சேர்த்துச் சொல்ல முடியுமா என்று துக்கமாக இருக்குமானுங்கூட — நிஜத்தை எப்படிச் சொல்லாமலிருப்பது? நடுவில் பௌத்தத்தால் வர்ண வ்யவஸ்தைகள் தப்பியிருந்தாலும் பிற்பாடு மறுபடி உறுதியாக ஏற்பட்டே ஹிந்து நாகரிகம் பலம் பெற்றது என்பதிலிருந்து சரித்ரம் அறிந்தவர்களுக்கும் இதுதான் நிஜம் என்பது தெரியும். ஆசார்ய பாஷ்யங்களைப் படித்தவர்களோ திரும்பத் திரும்ப அவர் வர்ணாச்ரம ரக்ஷணையை முக்யமாகச் சொல்லியிருப்பதிலிருந்து — வெளியில் அவர்கள் என்ன லெக்சர் பண்ணினாலும், புஸ்தகம் எழுதினாலும் — இதுதான் ஆசார்யாளின் நிஜமான அபிப்ராயம் என்று உள்ளூரத் தெரிந்துகொண்டேயிருப்பார்கள்.

ஆசார்யாள் வாஸ்தவத்தில் என்ன சொல்கிறார், அதற்கு என்ன காரணம் காட்டுகிறார் என்று கேட்டுப் அதைப் பின்பற்றுவதுதான் ஆசார்ய பக்தி. அவர் சொல்வது நம்மளவில் புரியாவிட்டால், பிடிக்காவிட்டால் அவரைத் திட்டுவதுகூடப் பரவாயில்லை. அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. அவர் சொல்வதில் ‘கன்விக்ஷன்’ ஏற்படாவிட்டால் நம் மனஸுக்குப் பொய்யில்லாமல் திட்டினால் கூடப் பரவாயில்லை என்பேன். ஆனால் அவர் நம்முடைய அபிப்ராயங்களைத்தான் பின்பற்றுகிறாரென்று எப்படியாவது திரித்துக் காட்டி அவருக்கு பக்தி பண்ணுவது போலக் காட்டுவதுதான் எல்லாவற்றையும்விடப் பெரிய அபசாரமாக எனக்குத் தோன்றுகிறது. அவர் சொன்னது பிடிக்கவில்லை என்றால் அது உன் அபிப்ராய ஸ்வதந்த்ரம். ஆனால் அவரையே சொல்லாததைச் சொன்னவராகக் காட்டினால், நாம் வேஷம் போடுவது போதாதென்று அவருக்கும் வேஷம் போடுகிற பெரிய தோஷமல்லவா வரும்? அவருடைய அபிப்ராய ஸ்வதந்திரத்தைப் பறித்ததாக அல்லவா ஆகும்? நம்முடைய நாகரிகக் கொள்கையை அவர் சொல்கிறாரென்று அவருக்கு வேஷம் போட்டுக் காட்டினால்தான் நாம் மரியாதை செய்யமுடியுமென்றால் அது அவருக்கும் அவ மரியாதை, நமக்கும் அவமரியாதைதான்! நாம் சொல்கிற புரட்சிக் கொள்கையை அவர் சொன்னாலே அவரிடம் பக்தி என்றால் உண்மையில் அது நம்மிடமே பக்திதான், நம் கொள்கையிடமே பக்திதான். அவரைத் தப்பாகக் காட்டினால்தான் புத்தர், காந்தி மாதிரி மாஸ் அப்பீல் – பாபுலாரிடி இருக்குமென்றால் அது அவருக்கு வேண்டவே வேண்டாம். எங்கள் மாதிரி நாலு obscurantist-கள் (சீர்திருத்தத்தை எதிர்க்கும் முரட்டுப் பழமைவாதிகள்) பூஜை பண்ணிக் கொண்டிருந்தாலே போதும்!

கார்ய லோகத்தில் இப்போது நாம் சொல்லும் அபேத வாதத்தை ஆசார்யாளும் சொல்லவில்லை, க்ருஷ்ணரும் சொல்லவில்லை, எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை. மனஸில் அபேத அன்புதான் அவர்கள் சொன்னது. இங்கேயோ ஆசார்யாள் மனஸையும் கழற்றி எறிந்துவிட்ட ஞானியைப் பற்றிச் சொல்லி அந்த ஞானிகள் விஷயமாகத்தான் ‘அவனுக்கு ஸர்வமும் ஸமம். ஆகையால் அங்கே லோக சாஸ்திர வழக்குகள் இல்லை’ என்கிறார். இது வேதமே சொல்வதுதான் : ‘ஞானம் வந்துவிட்டால் அப்புறம் ஜாதி, படிப்பு, பெரியவர் – சின்னவர் என்ற எந்த பேதமுமில்லை. அங்கே வேதமே வேதமில்லை, பஞ்சமன் பஞ்சமனில்லை; தபஸ்வி, தபஸ்வியில்லை’ என்றெல்லாம் சொல்கிறது1. ஒன்றையும் தின்ன வேண்டுமென்ற அபேக்ஷையில்லாத நிலையில் எதை வேண்டுமானாலும் தின்னலாம், ஒன்றையும் தொடவேண்டுமென்ற அபேக்ஷையில்லாதபோது எதை வேண்டுமானாலும் தொடலாம் என்று சாஸ்த்ரம் சொல்கிறது. அந்த நிலை எங்கே? நாமுள்ள யதார்த்த லோகம் எங்கே? அதிலே ஆசார்யாள் சொன்னதை இதற்குப் பொருத்திக் காட்டுவது அபசாரம்.

கீதையில் வித்யா விநய ஸம்பன்னனான ப்ராம்மணனிடமும் நாயைத் தின்னும் புலையனிடமும் ஞானிக்கு ஸமமான பார்வை இருக்கிறது, அவன் ஸமதர்சியாக ஸாக்ஷிமாத்திரத்தில் இருக்கிறான் என்றுதான் சொல்லியிருக்கிறதே தவிர, கார்யத்தில் ஒன்றாகப் பண்ணுவதைச் சொல்லவேயில்லை. “நீ க்ஷத்ரியன், உன் கார்யம் சண்டை போடுவது தான்” என்றுதானே எவருக்கு மேலே ஞானி இல்லையோ அந்த க்ருஷ்ணர் அர்ஜுனனை ஏவினார்?

ஆசார்யாள் அத்வைத ஸ்வரூபம். அத்வைத சாஸ்த்ரத்தை பூர்ண ரூபம் பண்ணி ஸ்தாபித்தவர் அவர் தான். ஆனால் த்வைத லோகத்தில் மாட்டிக்கொண்டு இதிலிருந்து அதற்குப் போகவேண்டியிருப்பவர்களான நாம் எவ்வளவு தூரம், தொலை தூரம், த்வைத வித்யாஸங்களை அநுஸரித்து அநுஸரித்தே கார்யலோகத்தில் போய்த் தான் பக்குவப்பட வேண்டியிருக்கிறது என்பதை நன்றாகத் தெரிந்து வைத்துக்கொண்டு, ஜாக்ரதையாகப் பார்த்து வழி போட்டுக் கொடுத்திருக்கிறார். இக்காலத்திலோ அத்வைதாநுபவம் என்னவென்றே தெரியாதவர்கள் கார்ய லோகத்தில் அதைக் கொண்டுவிட்டு ஆத்மார்த்தமான சாஸ்த்ர விஷயங்களில் இஷ்டப்படிப் பண்ணி, போதாக் குறைக்குத் தாங்கள் செய்வதற்கு ஆசார்யாள் தலையிலேயே பழியைப் போட்டு ‘ட்ரிப்யூட்’ கொடுக்கிறார்கள்!

முன்பின் ஸம்பந்தமில்லாமலும், ஒருத்தருடைய அல்லது ஒரு சாஸ்த்திரனுடைய முழு அபிப்ராயமும் தெரியமாலும் நடுவிலே எங்கேயாவது இக்காலப் புரட்சி ஸித்தாந்தங்களுக்கு அநுகூலமாகத் துளி தெரிந்துவிட்டால், “ஹா ஹூ! இன்னாரே சொல்லிவிட்டார், இன்ன சாஸ்த்ரமே சொல்லிவிட்டது. எங்கள் அபிப்ராயந்தான் ஸரி” என்று ப்ரசாரம் பண்ணுவது தற்காலத்தில் ஜாஸ்தியாகி வருகிறது. ரொம்பவும் வருத்தப்படவேண்டிய விஷயம். ஒன்றை ஆக்ஷேபிப்பதுகூடத் தப்பில்லை, இந்த மாதிரித் திரித்துச் சொல்வதுதான் பெரிய தப்பு…

அந்தப் பஞ்சமன் ஆக்ஷேபம் பண்ணும் ஸாதாரண ஆளாகத் தெரிந்திருந்தால் ஆசார்யாள் தர்க்க ரீதியிலும் தர்மசாஸ்த்ர ப்ரகாரமும் பதில் சொல்லி ஸுலபமாக அவனை ஸரிப்பண்ணியிருப்பார். அவன், “இரண்டு தேஹமும் ஒரே மாதிரி உண்டானதுதானே? தேஹத்துக்குள்ளே இருக்கும் வஸ்துவைப் பார்த்தாலோ இரண்டும் அஸலே ஒன்றுதானே?” என்று கேட்டதற்கு அவர், “வாஸ்தவம் தானப்பா! ஆனால் அந்த உள் வஸ்து உனக்குத் தெரிகிறதா? தெரியவில்லையோல்லியோ? ஏன் தெரியவில்லை? ஸம்ஸ்கார தோஷத்தால். இப்படி ஒவ்வொருவருக்கும் ஸம்ஸ்கார தோஷங்கள் இருப்பதால்தான் — எல்லாருக்கும் ஒரே மாதிரி, ஒரே அளவு தோஷமாக இல்லாமல் வித்யாஸம் வித்யாஸமாக இருப்பதால்தான் — அதை அநுஸரித்தே அவரவருக்கும் ஜன்மா ஏற்படுகிறது. அந்த ஜன்மாவிலேயாவது அவர்கள் போக்கிக் கொள்வதற்கான கார்யங்களைப் பண்ணட்டும்; அப்படிப் பண்ணும்போதே ஸமூஹத்திற்கு தேவைப்படும் வித்யாஸமான எல்லாக் கார்யங்களும் அவர்களால் நிறைவேற்றப்பட்டதாகவும் ஆகட்டும், என்றுதான் சாஸ்த்ரங்கள் வர்ணாச்ரம தர்மங்களைக் கொடுத்திருக்கிறது.

அதன் அநுஷ்டானத்தில் பல பிரிவினர் பல வேறு ஆசாரங்களைப் பின்பற்றினால்தான் அவரவருக்கும் க்ஷேமம் விளைகிறது. ஆகையினால் அவர்கள் கலந்துவிடக்கூடாது. மனஸின் அன்பில்தான் கலக்கணுமே தவிர வாழ்க்கையில் கலந்துவிடக்கூடாது. எல்லாம் ஒரே மாதிரி சரீரமென்றாலுங்கூட ஒவ்வொரு சரீரத்திற்கும் அதன் ஸம்ஸ்காரத்தைப் பொருத்து ஒருவிதமான ஸூக்ஷ்மமான சக்தியோட்டம் இருப்பதால், ஸமூஹ நலனுக்காக மந்த்ர ரக்ஷணை பண்ணவேண்டிய தேஹத்திலிருந்து மற்ற தேஹம் விலகியிருக்க வேண்டியிருக்கிறது. தேஹம், ஸமூஹம், ஸம்ஸ்காரம் என்பதெல்லாமே அடிபட்டுப் போய்விட்ட நிலையில்தான் நீ சொல்வது ஸரிவரும்” என்று பதில் கொடுத்திருப்பார்.

இவன் ஸாதாரண ஆளாக இல்லாமல், எல்லாம் அடிப்பட்டுப்போன நிலைக்காரனாகத் தெரிந்ததால் கொஞ்சங்கூட வாதம் பண்ணாமல் அடக்கத்துடன் அவனை குருவாகச் சொல்லி நமஸ்கரித்தார். நாமும் அப்படிப்பட்டவர்களை அவர் மாதிரியே நமஸ்கரிக்கத் தயாராயிருக்க வேண்டும். அப்போதுதான் ஆசார்ய பக்தர்களாக, ஆசார்ய சிஷ்யர்களாக இருக்கிறோமென்று அர்த்தம்.


1 ப்ருஹதாராண்யகோபநிஷத் IV. 3.22

If you see any errors in the text, please leave a comment