வித்யாஸமான முத்தொழில்கள்

நிஜமான தாத்பர்யம் என்ன?

குருவானவர் ப்ரஹ்ம – விஷ்ணு – மஹேச்வரர்கள் செய்யும் ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹாரத்தையே தாமும் அச்சடித்தமாதிரி செய்யவில்லை. இந்த ஜன்மாவைக் கொடுப்பது, லோக வாழ்க்கையில் காப்பாற்றுவது, அப்புறம் அதை முடித்து வைப்பது என்ற கார்யங்களை அவர் பண்ணவில்லை. அவற்றைச் செய்யத்தான் அந்த மும்மூர்த்திகள் இருக்கிறார்களே!

அதனால் அவரை மும்மூர்த்திகளாகச் சொல்லும்போது அவர்கள் பண்ணும் முத்தொழிலைப் போலவே இவரும் என்னவோ செய்கிறாரென்றுதான் தாத்பர்யமே தவிர, அவற்றையே என்றல்ல.

இவர் மூன்று கார்யங்கள் செய்கிறார். அவை த்ரிமூர்த்திகள் செய்யும் முத்தொழில் மாதிரியே இருக்கின்றன. அதனால் இவரை அவர்களாகவே சொல்லியிருக்கிறது. உபமாலங்காரமாக, அதாவது, உவமையணியாக, சொல்லியிருக்கிறது.

‘கண்ணே, மணியே!’ என்று குழந்தையைச் சொன்னால் அது நிஜமாகவே கண், மணி என்றா அர்த்தம்? கண் என்பது எப்படி நமக்கு இன்றியமையாததாக இருக்கிறதோ, மிகவும் ப்ரியமான அங்கமாக இருக்கிறதோ, ஜாக்ரதையாக இமையால் மூடிக் காப்பாற்ற வேண்டியதாக இருக்கிறதோ அப்படியே, நமக்குக் குழந்தை இன்றியமையாததாக, ப்ரியமாக, கவனமாக ஸவரக்ஷணை பண்ண வேண்டியதாயிருப்பதாலேயே கண் என்றும், அந்தக் கண்ணிலும் கருவான பாகமாக இருக்கப்பட்ட மணி என்றும் (‘கண்ணே, கருமணியே!’ என்றுகூடச் சொல்வதுண்டு) சீராட்டுவது. ‘மணி’ என்றால் நமக்கு மிகவும் அலங்காரமாக உள்ள நவரத்ன மணி என்றும் வைத்துக்கொள்ளலாம். ‘முத்தே, மாணிக்கமே!’ என்றுகூட நவமணிகளின் பெயரிலும் சீராட்டிச் சொல்லுகிறோமே!

“மழபாடியுள் மாணிக்கமே!”

என்று பகவானையே கொஞ்சுகிறார்கள்.

இதெல்லாம் உவமித்துச் சொல்வது. ஒரு வஸ்துவை எடுத்துக் கொள்கிறோம். அது உபமேயம். அதற்கு இன்னொன்றை ஒப்புக் காட்டுகிறோம். இது உபமானம். ஏதோ சில அம்சங்களில் அதுவும் இதுவும் ஒன்றாயிருக்கிறது. அதனால் உபமேயத்துக்கு உபமானம் காட்டுகிறோம். சில அம்சங்களில்தான் ஒப்பே தவிர முழுக்க அல்ல. அப்போது (முழுக்க ஒப்பிருந்தால்) உபமான, உபமேயம் என்று பிரித்துச் சொல்வதற்கேயில்லாமல் ஒன்றாக அல்லவா ஆகிவிடும்? ஒன்றைப் போல இன்றொன்று இருப்பதுதான் உவமை. அசல் அதுவாகவே இருந்துவிட்டால் உபமாலங்காரம் பிறக்க முடியாது. சந்திரனைச் சந்திரனுக்கே உவமை காட்ட முடியுமா? உபமான – உபமேயங்கள் முற்றிலும் ஒன்றே இல்லை என்றாலும் அவற்றுக்குள் சில அம்சங்களில் ஒற்றுமை இருக்கும். இப்படிச் சொல்லும்போதே, சிலதில் இருக்காது என்றும் ஆகிவிடுகிறது. ‘சந்த்ரவதனம்’ – சந்த்ரனைப் போன்ற முகம் – என்னும்போது முகத்தில் ‘சந்திரனைப் போன்ற காந்தி, பரிசுத்தம், குளுகுளுப்பு, மனஸைக் கவர்கிற வசீகரம் ஆகியவை இருப்பதாக அர்த்தம். இந்த அம்சங்களில்தான் ஒற்றுமை. மற்றதில் இல்லை. சந்திரனுக்கு மநுஷ முகத்திள்ளதுபோல கண், காது, மூக்கு இல்லை. முகம் ஆகாசத்தில் மிதப்பதில்லை; அது பதினைந்து நாளுக்கு ஒரு முறை தேய்வது, வளர்வது என்பதும் கிடையாது.

இம்மாதிரிதான் குருவை த்ரிமூர்த்திகளாகச் சொல்லும் போது ஏதோ சிலவற்றில் ஒற்றுமை, மற்றதில் வேற்றுமை என்று இருக்க வேண்டும்.

இன்னொரு ச்லோகம், நம் மத ஸ்ம்ப்ரதாயங்கள் எல்லாவற்றுக்கும் மூல புருஷராகவுள்ள வ்யாஸாசார்யாளை பற்றியது, ஞாபகம் வருகிறது. அதிலே வ்யாஸருக்கும் த்ரிமூர்த்திகளுக்கும் ஒற்றுமை இல்லாத ஒவ்வொரு அம்சத்தைச் சொல்லியே வேடிக்கை செய்திருக்கிறது. “இவர் ப்ரஹ்மா என்றால் நாலு மூஞ்சி இல்லையே! அசதுர்வதநோ ப்ரஹ்மா! விஷ்ணு என்றால் இரண்டு கைதானே இருக்கு? நாலு இல்லையே! த்விபாஹுரபரோ ஹரி:! சிவன் என்றால் நெற்றிக்கண் எங்கே போச்சு? அபால லோசந: சம்பு:‘ என்று அந்த ச்லோகம்.

அசதுர்வதநோ ப்ரஹ்மா
த்விபாஹுரபரோ ஹரி:
அபால லோசந: சம்பு:
பகவாந் பாதராயண:

பாதராயணர் என்பது வேத வ்யாஸரின் இன்னொரு பேர். ‘பதரி’ என்ற இலந்தை மரத்தடியை இருப்பிடமாக (‘அயன’மாக)க் கொண்டு, அதாவது பதரி விருக்ஷத்திற்கு அடியில் உட்கார்ந்துகொண்டு நெடுங்காலம் தபஸ் செய்தவராதலால் ‘பாதராயணர்’ என்று பெயர்.

ப்ரஹ்ம – விஷ்ணு – மஹேச்வரர்களாக குருவை உபமாலங்காரத்தில் சொல்லியிருக்கிறதென்றால் அவர்களுக்கும் குருவுக்கும் ஒற்றுமையும் இருக்க வேண்டும், வேற்றுமையும் இருக்க வேண்டும்.

முத்தொழில் செய்பவர்களென்பதால் அவர்களை நாம் நமஸ்காரம் பண்ணுவதற்கில்லை என்று பார்த்தோமல்லவா? அந்த அம்சத்தில் வேற்றுமை இருந்துவிட்டால் ஸரியாய்ப் போய்விடும். ச்லோகம் கோளாறில்லை. தாறுமாறாகச் சொல்லவில்லை என்றாகிவிடும்.

அப்படியிருக்கிறதா, பார்க்கலாம்.

மும்மூர்த்திகள் பேரை வரிசையாக (ச்லோகத்தில்) சொல்லியிருப்பதால் இவரும் முத்தொழில் போலவே செய்கிறாரென்று தெரிகிறது. அதையே செய்யவில்லை. அதுபோல (செய்கிறார்).

ஏதோ ஒரு விதத்தில் இவர் ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹாரம் செய்பவராக இருக்கிறார். எந்த விதத்தில்?

யோசித்துப் பார்த்தால் புரிகிறது:

இவர் நமக்கு ஞான லோகத்தில், அத்யாத்ம லோகத்தில் புதுப் பிறவி கொடுக்கிறார். நமக்கு அறிவுக் கண்ணைத் திறந்து வைத்து, நம்முடைய மனப்பான்மையை மாற்றி அது வேறொன்றாக ரூபம் கொள்ளும்படிச் செய்கிறார். மாற்றுவது, வேறு ரூபம் தருவது என்றால் ஸ்ருஷ்டிப்பது, புது ஜன்மா தருவது என்றுதான் அர்த்தம். குருவானவர் நமக்கு ஞானப் பிறவி தருவதால், நமக்குள் ஞானம் பிறக்கும்படிச் செய்வதால், ஸ்ருஷ்டிகர்த்தாவான ப்ரஹ்மாவாகிறார்!

அப்புறம் ஸ்திதி – பரிபாலனம். எப்படிப் பரிபாலிக்கிறார்? ஞான வாழ்க்கையில் நாம் அத்யாத்ம ஸம்பத்துக்களைப் பெறும்படிச் செய்து பரிபாலிக்கிறார். தேஹ போஷணைக்காக மஹாவிஷ்ணு செல்வம், ஆரோக்யம் முதலானவற்றை கொடுத்து ரக்ஷிப்பதுபோல ஆத்மாவின் போஷணைக்காக உபதேசம், புஸ்தகங்கள், ஸாதனாமார்க்கம் முதலானவற்றைக் கொடுத்து ரக்ஷிக்கிறார். தம்முடைய வாழ்க்கையையே நம் பொருட்டாக த்யாகம் செய்துவிட்டு — நிம்மதியாகத் தாம்பாட்டுக்கு ஸமாதி நிலையில் ஸுகித்துக் கொண்டிருக்காமல், நம்மிடம் முட்டிக்கொண்டு — நம்மைக் கரையேற்றத் தம்மாலானதெல்லாம் செய்கிறார். இஹ லோகத்திலுங்கூட நம்முடைய கஷ்டங்களைத் தீர்த்து வைத்துப் பரிபாலிக்கிறார். ஸெளகிகத்திலும்கூட நாம் எப்படியெப்படி இருந்தால் நல்லதோ, ஆத்மாபிவ்ருத்திக்கு உதவியாக இருக்குமோ அப்படி இருப்பதற்குச் சொல்லிக் கொடுக்கிறார். ஆனாலும் ஆத்யாத்மிகமான ஞானப் பரிபாலிப்பே அவர் முக்யமாகச் செய்வது. இதனால் பரிபாலன கர்த்தாவான விஷ்ணுவாக இருக்கிறார்.

ஸம்ஹாரம்?

இவர் பரம ஸாத்விகரல்லவா? எப்படி ஸம்ஹாரம் பண்ணுவார்? ருத்ரன், ருத்ரதாண்டவம், ரௌத்ராகாரம் என்றாலே பயமாக அல்லவா இருக்கிறது? இவரோ தயை, அருள் நிரம்பியவரல்லவா? ருத்ரனாக இவரை எப்படிச் சொல்வது? அந்தப் பேரைச் சொல்லி பயமுறுத்த வேண்டாமென்றுதானோ என்னவோ, (ச்லோகத்தில்) ‘ருத்ர’னென்று சொல்லாமல் “குருர் தேவோ மஹேச்வர:” என்று சொல்லியிருந்தாலும் அதனால் குறிப்பிடும் கார்யம் ஸம்ஹாரமாகத் தான் இருக்க வேண்டும். ஸ்ருஷ்டி – ஸ்திதிகளுக்கான ப்ரஹ்ம – விஷ்ணுக்களைச் சொன்னதன் தொடர்ச்சியாக மஹேச்வரனைச் சொல்லியிருப்பதால் வேறுவிதத்தில் அர்த்தம் பண்ணிக்கொள்ள முடியாது.

“உபமாலங்காரத்தில் ஒற்றுமை இல்லாத அம்சங்களும் இருக்கும் என்றீர்களே, அந்த ரீதியில் மஹேச்வரனுக்கும் குருவுக்கும் ஸம்ஹார கார்யத்தில் ஒற்றுமையில்லாமல், வேறு எதிலேயாவது இருக்குமோ என்னவோ?” என்று கேட்டீர்களானால்,….

அப்படி இருக்க முடியாது.

தொடர்ச்சியாக ப்ரஹ்மா, விஷ்ணு, மஹேச்வரன் என்று சொல்லிக்கொண்டு போகும்போது முதலிரண்டு பேர் செய்யும் ஸ்ருஷ்டி- ஸ்திதிகளை குரு இன்னொரு தினுஸில் பண்ணுவதாகக் காட்டுகிறபோது மூன்றாவதாக ஸம்ஹாரம் தான் வரவேண்டும். அதுதான் யுக்தம்.

அப்படியானால் ப்ரஹ்மாவாக இருந்து நமக்கு ஞானம் பிறக்கச் செய்து, அந்த ஞானத்தை விஷ்ணுவாக இருந்து வளர்த்துக் கொடுத்துவிட்டு, அப்புறம் [சிரித்துக்கொண்டே] அந்த ஞானத்தை ருத்ரனாக ஹதம் பண்ணிவிடுவாரா?

இல்லை. ஞானம் அடைய முடியாதபடி நம்மை அநேகக் கெட்ட சக்திகள் ஓயாமல் இழுக்கின்றனவே, இதுகளுடன்தான் பொறுமையாகப் போராடி ஹதம் பண்ணுகிறார், ஸம்ஹாரம் பண்ணுகிறார். பயிரை வளர்ப்பதைப்போலவே, அந்தப் பயிர் வளர்வதற்காகவே, களையை அகற்றவேண்டியது மிகவும் அவசியமல்லவா? அப்படித்தான் நமக்கு ஞானத்தை போதிப்பதைப்போல நம்முடைய கனத்த அஞ்ஞானத்தை அகற்றுவதும் முக்யம். ஞானபோதனையைவிட இதுதான் கடினமான கார்யம். சாண் ஏறினால் முழம் சறுக்குகிற வழுக்கு மரத்தில் நம்மை இஞ்ச், இஞ்சாக மேலே ஏற்றிக்கொண்டு போகிற ச்ரம ஸாத்யமான காரியம். கெட்டதுதான் நம்மை அப்படியே கவிந்து மூடிக்கொண்டிருக்கிறது. ஏதோ துளி நல்லது முணுக்கு முணுக்கு என்று தலைநீட்ட ஆரம்பித்தால் உடனே கெட்டது இன்னம் கனாந்தகாரமாக வந்து அழுத்தி அதை அணைக்கப் பார்க்கிறது. இந்த அஞ்ஞான தமஸை, அறியாமை இருளைத்தான் குருவானவர் ருத்ரமூர்த்தியாக இருந்து ஸம்ஹாரம் செய்கிறார். ‘குரு’ என்ற வார்த்தையின் Definition (லக்ஷணை) ஒன்றே அப்படித்தான் சொல்கிறது ‘கு’ என்றால் இருட்டு; ‘ரு’ என்பது அழிப்பதைக் குறிப்பது. இருட்டை அழிப்பவன் ‘குரு’.

இப்படி குருவினால் ஞானத்தில் புனர்ஜன்மம், அதில் பரிபாலிப்பு, அதற்கு எதிராக, தடையாக இருப்பவற்றின் அழிவு ஆகிய மூன்று கார்யங்கள் நடக்கின்றன. அதாவது ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹாரம் நடக்கிறது. ஆகையால் குருமூர்த்தியே த்ரிமூர்த்தியாகிறார்!

வித்யாஸம் என்னவென்றால், ப்ரஹ்மா ஸ்ருஷ்டித்து, விஷ்ணு ரக்ஷிக்கும் அதே சரீரத்தைத்தான் ருத்ரன் ஸம்ஹாரம் செய்வது. ஆனால் இங்கேயோ குரு ஸ்ருஷ்டிப்பதும், ரக்ஷித்துக் கொடுப்பதும், ஞானத்தை. ஆனால் அழிப்பது ஞானத்தையல்ல. அரும்பாடு பட்டு அவரே படைத்துக் காத்ததை எங்கேயாவது அவரே அழிப்பாரா? த்ரிமூர்த்திகளில் ஆஸாமி வேறாகப் போனதால் வேறே ஒருத்தர் படைத்து, வேறே ஒருத்தர் காப்பாற்றியதை ருத்ரமூர்த்தி அழிக்கிறார். இங்கே மூன்றையும் செய்வது ஒரே ஆஸாமியல்லவா? அதனால் படைத்துக் காப்பது ஞானமாகவும், அழிப்பது அஞ்ஞானமாகவும் இருக்கிறது.

அவர் படைத்துக் காக்கிற ஞானம் நம் சரீரம் மாதிரி ஒருகாலத்தில் அழிவுபடுவதல்ல. அது அம்ருதமானது, அமரமானது. அதை யாராலும் அழிக்கமுடியாது.

இப்படியாக, உலக வாழ்வில் ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன் என்று மூன்று தெய்வங்கள் செய்வதையும் சேர்த்து வைத்து ஞான வாழ்வில் குரு ஒருவரே செய்கிறார். நினைத்துப் பார்த்தால் விசித்ரமாயிருக்கிறது! அழிவதும், சாச்வத ஸெளக்யத்தைத் தரவே முடியாததுமான லோக வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கப் பெரிசாக மூன்று தெய்வங்கள் வேண்டியிருக்கிறது! அழிவற்றதும், சாச்வத ஸுகமளிப்பதுமான ஞான வாழ்க்கையையோ மநுஷ்ய ரூபத்தில் தெரிகிற ஒரு குரு பண்ணிவிடுகிறார்! ‘அவர்கள் (த்ரிமூர்த்திகள்) கோடாநுகோடி ஜீவன்களுக்குச் செய்ய வேண்டியிருக்கிறது, இவரோ (குருவோ) ஒரு ஸெலக்ட் – க்ரூப்புக்குத்தானே செய்கிறார்?’ என்று ஸமாதானம் சொல்லலாம்.

ஆக, குரு எப்படி த்ரிமூர்த்திகளாயிருக்கிறாரென்று பார்த்தோம். த்ரிமூர்த்திகளும் சேர்ந்து ஒருத்தரான ஒரு ஸ்வாமி தத்தாத்ரேயர் என்று பார்த்தோமே, அவர் மாதிரி தான் எல்லா குருக்களுமே இருக்கிறார்கள்!

த்ரிமூர்த்திகள் சரீரத்தை ஸ்ருஷ்டித்து, பரிபாலித்து, ஸம்ஹரிப்பது போல சிஷ்யனுக்குள் ஞானத்தை ஸ்ருஷ்டித்து, பரிபாலித்து, அஞ்ஞானத்தை ஸம்ஹரிப்பதனால் உபமாலங்காரப்படி, ஒற்றுமை யம்சத்தைக்கொண்டு குருவை ப்ரஹ்மா, விஷ்ணு, மஹேச்வரன் என்று சொல்லியிருக்கிறது.

ப்ரம்மாவுக்கு மட்டும் ஏன் விலக்கு ?

ஒன்றைச் சொல்லப் புகுந்தால் இன்னொன்று அகப்படுகிறது! ப்ரம்மாவுக்குக் கோவில் இல்லாமலிருப்பதற்கு இப்போது இன்னொரு காரணம் கிடைக்கிறது.

ஒருத்தருக்குக் கோவிலெடுத்துக் கும்பிடவேண்டுமென்றால் ஒன்று, அவர் ஸகல சக்த பரமாத்மாவாக இருக்க வேண்டும். அல்லது அவர் அதிகாரம் பெற்றிருக்கும் விஷயம் நமக்கு வேண்டியதாக இருக்க வேண்டும். செல்வம் தருவது (லக்ஷ்மி), அறிவு தருவது [ஸரஸ்வதி], விக்னத்தை போக்குவது (பிள்ளையார்), ஆரோக்யம் தருவது (தன்வந்தரி; ஸூரியபகவானும்தான்), அல்லது நவக்ரஹங்கள் மாதிரி நமது ஜாதக பீடைகளைப் போக்குவது, ஐயனார் மாரியம்மன் மாதிரி துஷ்ட சக்திகளையும் நோய்நொடிகளையும் போக்குவது – என்றிப்படி ஒருவர் அதிகாரம் பெற்றுள்ள விஷயம் நாம் வேண்டிப் பெறக்கூடிய ஒன்றை அருளுவதாக இருக்க வேண்டும். ஸ்ருஷ்டியதிகாரத்தில் இப்படியன்றுமில்லை என்று முன்னேயே பார்த்தோம். இல்லாவிட்டால் (ஆலய வழிபாட்டுக்குரிய ஒரு மூர்த்தி) ஒரு பெரிய அடியாராகவோ, ஆசாரியராகவோவாவது இருக்கவேண்டும். ப்ரஹ்மாவானால் இதில் எந்தத் கணக்கிலும் சேர்வதாகத் தெரியவில்லையோல்லியோ?

அதனால்தான் நவக்ரஹங்கள், ஆழ்வார் — நாயன்மார், மாரியம்மன் — இருளன் — வீரன் ஆகியவர்களுக்குக்கூடக் கோவில் இருந்தும் மும்மூர்த்தியில் ஒருவரும், சதுர்முகங்களால் சதுர்வேதங்களை ஸதா ஓதிக் கொண்டிருப்பவருமான ஒரு பெரிய தெய்வத்திற்கு மட்டும் கோவில் இல்லை. பாவமாகத்தான் இருக்கிறது!

பரமாத்மாவாகவே தம்மை அவர் தெரிந்துகொள்ளவில்லை, அல்லது தெரிந்து கொண்டாலும் அப்படிக் காட்டிக் கொள்வதில்லை என்பதால் அவருக்குப் பூஜையில்லை; அதோடு ஒரு வீரன், இருளன் மாதிரியான க்ஷுத்ரதேவதை கொஞ்சங்கூடப் பரமாத்ம பாவமே இல்லாததாயிருந்தாலும், அதனாலும் நமக்கு அநுகூலமாக ஒரு கெட்டதை நிவ்ருத்தி செய்யமுடிகிறபோது, ஸ்ருஷ்டிகர்த்தா என்பவர் மட்டும் அப்படி எதுவும் செய்யமுடியாததால் அவருக்குப் பூஜை இல்லை என்று சொன்னால் ஒரு கேள்வி கேட்கலாம். “எந்தவிதமான அநுக்ரஹ சக்தியுமில்லாத ஒரு மாதா, பிதா, பதி போன்றவர்களைப் பூஜித்தால் கூட, அவர்களுக்கு ஸ்வயமாக அருள் சக்தியோ ஞானமோ கொஞ்சமும் இல்லாவிட்டாலும்கூட, அவர்களுக்குள்ளேயும் பரமாத்மா உட்கார்ந்திருப்பதால், பூஜிக்கிற நமக்கு அவர்கள் மூலமாக அந்தப் பரமாத்மாவே அநுக்ரஹித்துவிடும் என்று சொல்லியிருக்கிறதல்லவா? நீங்களே கூடச் சொல்லியிருக்கிறீர்களே! ‘நம்முடைய பக்தியும், சரணாகதியும்தான் முக்யம். அது யாரைக் குறித்து என்பது முக்யமில்லை. யாரைக் குறித்ததானாலும் நம்முடைய பக்தி சுத்தமானதாக இருந்தால் ஸர்வாந்தர்யாமியான பரமாத்மா நமக்கு அநுக்ரஹம் பண்ணிவிடுவார்’ என்று சொல்லியிருக்கிறீர்களே! அப்படியிருக்கும்போது, ஒரு க்ஷுத்ர தேவதையையோ, ஸாதாரண மநுஷப் பிறவிகளான ஒரு அப்பா — அம்மாவையோ கூட வழிபட்டுப் பரமாத்மாவின் அநுக்ரஹத்தைப் பெறமுடியும் என்னும்போது, ப்ரஹ்மா ஒருத்தரை மாத்திரம் இந்தக் கணக்கிலும் சேர்க்காமல் ஏன் ஒதுக்கி வைக்கணும்? அவர் என்ன பாவம் பண்ணினார்?” என்று கேட்கலாம்.

பாவமே பண்ணவில்லை. அவருக்கு ஒரு தனிஸ்தானம் கொடுத்து உசத்தித்தான் வைத்திருக்கிறது. ஸர்வ சக்த பரமாத்மா என்று வைக்காவிட்டாலும், அதற்கு அடுத்த படியில் அவருக்குத்தான் புராண, சாஸ்த்ரங்களில் இடம் கொடுத்திருக்கிறது. ஸூர்யன், சந்த்ரன் முதலான நவக்ரஹங்களும் தேவராஜாவான இந்த்ரனும் கூட அவர் காலிலே நிறைய விழுந்திருப்பதாகப் பார்க்கிறோம். ஈச்வரகோடியைச் சேர்ந்த மூர்த்தியாக ப்ரஹ்மா இல்லாவிட்டாலும் அப்படிப்பட்ட மூர்த்திகளிடம் ஏனைய தேவதைகளைவிட நெருங்கிப் பழகுபவர். அதனால் ஏனைய தேவர்கள் ஸுலபத்தில் தாங்களாகப் பிடிக்க முடியாத சிவன், விஷ்ணு, அம்பாள் முதலியவர்களிடம் இவர் அவர்களை அழைத்துக்கொண்டு போய் ‘ரெகமன்ட்’பண்ணுவார். அதனால்தான் அவர்கள் இவர் காலில் வந்து விழுவது. தகப்பனார், ஈச்வர கோடியைச் சேர்ந்தவர் – அப்படிப்பட்ட விஷ்ணுவே அஸல் மநுஷன் மாதிரி வேஷம் போடுவது என்று தீர்மானித்துக் கொண்டு ராமாவதாரம் பண்ணிய காலத்தில் (ராவணவதமாகி, ஸீதை அக்னி ப்ரவேசம் செய்யும் கட்டத்தில்), “நீ வெறும் மநுஷ்யனா? ஸாக்ஷாத் நாராயணனல்லவா நீ? இந்த ஸீதை மஹாலக்ஷ்மியல்லவா?” என்று ஆகாசத்திலே வந்து ஞாபகப்படுத்தியது ப்ரஹ்மாதான். அவருக்கு எவ்வளவு சக்தி என்பதற்கு, இன்றைக்கும் ஒரு விஷயத்தைத் தலை தூக்க விடாமல் முடித்துப்போடும்போது “ப்ரஹ்மாஸ்திரம் போட்டாச்சு” என்று சொல்வதே அத்தாட்சி.

இப்படியிருந்தாலும் ஒரு ‘பெக்யூலியர் பொஸிஷ’னில் (தமக்கே உரிய ஒரு விசித்ரமான நிலையில்) அவர் இருப்பதால் தான் அவருக்கு மட்டும் கோயில் இல்லாமல் வைக்கும்படி ஆகியிருப்பதாகத் தோன்றுகிறது.

அவர் ஏதோ பாவம் பண்ணினார், ‘பெக்யூலியர் பொஸிஷ’னில் இருக்கிறார் என்று சொல்வதைவிட, நாம் தான் ஏதோ பாவம் பண்ணி, நம்முடைய மனஸின் ஸ்வபாவம் ஒரு ‘பெக்யூலியர் பொஸிஷ’னில் இருப்பதால் நம்மால் அவரைக் கோவிலில் வைத்து வழிபட முடியவில்லை என்று சொல்லத் தோன்றுகிறது.

பரமாத்மா எவருக்குள்ளேயும் இருந்துகொண்டு, அந்த ஒருவரிடம் நாம் பக்தி பண்ணினால் அநுக்ரஹித்து விடுவாரென்றபடி ப்ரஹ்மாவுக்குள்ளேயும் இருந்துகொண்டு பண்ணத்தான் செய்வார். அதில் ஸந்தேஹமேயில்லை. ஆனால், கஷ்டம் என்னவென்றால் நம்மால் ப்ரஹ்மாவை பக்தி பண்ண முடியாமலிருப்பது தான்! நாம் மட்டும் ப்ரஹ்மாவை வழிபட்டு விட்டோமோ, நிச்சயமாக அவர் மூலமும் ஸர்வாந்தர்யாமியான பரமாத்வினால் நமக்கு வேண்டியது அநுக்ரஹிக்கப்பட்டுவிடும். ஆனால் அப்படி வழிபடவிடாமல் நம் மனஸின் இயற்கை செய்கிறது. நம் மனஸினால் சிவன், விஷ்ணு, தேவி, முருகன் போன்றவர்களைப் பரமாத்மாவே என்று வழிபட முடிவதுபோல இவரைச் செய்ய முடியவில்லை. எதனாலோ இவரை அப்படி முழுதற்தெய்வமாக வழிபடும் நடைமுறை இல்லாமலே இருந்திருப்பதால் இவருக்குப் பரமாத்ம ஸ்தானம் கொடுத்துப் பார்ப்பதற்கு நம் மனஸினால் முடியவில்லை. ஆசார்யாள் ஷண்மதம் என்று ஸ்தாபித்த காலத்திலேயே அவற்றில் விஷ்ணுமதம், சிவமதம் ஆகியவற்றோடு ப்ரஹ்ம மதம் என்று ஸ்தாபிக்கக் காணோமே! (ஷண்மதங்களில் ஒன்றாக) ஸூர்ய மதத்தைக்கூட அவர் ஸ்தாபித்திருந்தும் த்ரிமூர்த்திகளில் ஒருவரான இவர் பெயரில் ஒன்று ஸ்தாபிக்கத்தானே இல்லை? இப்படி நெடுங்காலமாக இருந்து வந்திருப்பதால் இப்போது நம்மாலும் இவரை முழுமுதலாக பாவிக்க முடியவில்லை.

ஒரு குறிப்பிட்ட அதிகாரம் மாத்திரம் கொண்ட தேவதையைக்கூட நாம் வழிபட ஆரம்பித்துவிட்டால், அப்புறம் அதனிடமே ப்ரியம் உண்டாகி, அதுவே நம் இஷ்ட தேவதையாகிவிட, அதன் பிற்பாடு அதுவே நம்மைப் பொறுத்தமட்டில் நமக்கு ஸகலவித அநுக்ரஹமும் செய்யுமென்ற அநன்ய பக்தி ஏற்பட்டு அதை முழுமுதலாகப் பூஜிக்க முடிகிறது. ஆனால் இவர் விஷயமாகவோ, முதலுக்கே மோசமாக, ‘ஜன்மா தருவது’ என்பதான இவரது அதிகாரமே நமக்கு இஷ்டமில்லாத விஷயமாகிவிடுவதால், இவரை வழிபடவேண்டுமென்ற எண்ணம் ஆரம்பத்திலேயே நமக்குத் தோன்றுவதில்லை.

யாராயிருந்தாலும் அவர்மூலம் பரமாத்மா அருள்வார் என்றாலும், நாம் பல காரணங்களுக்காக ப்ரியப்பட்டு வழிபடக் கூடியவர்களாக இன்னும் எத்தனையோ தேவதைகள் இருக்கும்போது, அப்படி நம் ப்ரியத்தை விசேஷமாக ஸம்பாதிக்க முடியாத ஒருவரிடம் — அவர் தாமே பரமாத்ம நிலையிலிருந்துகொண்டு அநுக்ரஹிப்பாரென்று நமக்குத் தோன்றாதபோதிலும், அவரிடம் நமக்காக இயற்கையில் ஒரு விசேஷபக்தியும் சுரக்காமலிருந்தபோதிலும், அப்படிப்பட்ட ஒருவரிடம் — போய் இவர் மூலமும்தான் பரமாத்மா அநுக்ரஹிக்கட்டுமே என்று வழிபடுவதென்றால் அது ரொம்ப செயற்கையாகவும், வலிந்து மேற்கொண்ட ஜீவனில்லாத கார்யமாகவும்தான் இருக்கும். அதனால் அப்படிப் பண்ண நம்மில் எவருக்கும் தோன்றுவதில்லை.

ஏதாவது ஒரு காரணத்துக்காக முதலில் ஒருவரிடம் இஷ்டப்பட்டுப் போய்விட்டால் அப்புறம்தான் அவரிடம் பக்தியைப் பெருக்கிக்கொண்டு போகமுடிகிறது. முதலுக்கே மோசமென்றால் ஒன்றும் பண்ணிக்கொள்ளுவதற்கில்லை.

மனஸின் ஸ்வபாவத்தில் இன்னொன்று: அப்பா, அம்மா, குரு இன்னும் யாரோ மஹான், இந்த நாளில் ‘தலைவர், ‘தலைவர்’ எனப்படுகிறவர் — இப்படி ஒருத்தர் ப்ரத்யக்ஷமாகத் தெரிகிறபோது, நமக்கு அவரிடம் ஏற்படுகிற பிடிமானத்தினால் அவரையே பரமாத்மாவைப்போல பக்தி பண்ணி சரணாகதி செய்யத்தோன்றுகிறது. ப்ரயக்ஷமாகத் தெரியாத ஒரு தேவதையிடம், அது பரமாத்மாதான் என்று நமக்காகத் தோன்றாதபோது, இப்படி ஒரு குருவிடமோ, தலைவரிடமோ, பெற்றோர் போன்றவரிடமோ நாம் பரமாத்ம பாவத்தை ஏற்றிவைத்துப் பார்க்கிறமாதிரிப் பண்ணமுடிவதில்லை. ‘ஏற்றி வைத்து’ என்பதுகூட ஸரியில்லை. அப்படிச் சொன்னால் புத்தி பூர்வமாகச் செய்வதாகத் தோன்றுகிறது. ஆனால் இப்படி புத்தி வேலையில்லாமல், நமக்கு ஒரு தலைவரிடம் ரொம்பவும் ப்ரியம், அல்லது குருவிடம் மரியாதை, வேறே ஒருவரிடம் ஒரே ‘அட்டாச்மென்ட்’ என்றால் உடனே தன்னால் ‘இவர்தான் நமக்கு ஸகலமும்; இவருக்கே நம் வாழ்க்கை அர்ப்பணம்’ என்ற தீர்மானம் ஏற்பட்டுவிடுகிறது.

‘எந்த மூர்த்தியின் மூலமும் பரமாத்மாவே அநுக்ரஹிக்க முடியும்’ என்று புத்தி பூர்வமாக நமக்குத் தெரிந்தாலுங்கூட, மனஸுக்குப் பிடிமானமில்லாத ஒரு மூர்த்தியிடம் இப்படி ஒரு காரணத்தை ஏற்றிவைத்து பக்தி பண்ணுவதென்பது நம் மனஸின் ஸ்வபாவத்துக்கு ஒத்து வரவில்லை.

இப்போது, ஒரு கோவிலில் ப்ரம்மாவுக்கும் ஸந்நிதி இருப்பதாக வைத்துக்கொண்டு பார்ப்போம்.

(கோவிலில் ஸந்நிதிகள் கொண்டுள்ள) சிவலிங்கம், அம்பாள், பெருமாள், தாயார் ஆகியவர்கள். ஸர்வ சக்தர்கள் என்று தெரிகிறது. அதனால் மனஸார நமஸ்காரம் பண்ணமுடிகிறது.

நவக்ரஹங்கள், அடியார்கள் முதலானவர்கள் – அப்படியில்லை என்று தெரிகிறது. ஆனாலும் நமக்குப் பிடித்தமானதை அநுக்ரஹிக்கக்கூடிய சக்தி உள்ளவர்கள் என்றும் தெரிகிறது. ஆகையால் நமஸ்காரம் பண்ணுகிறோம்.

ஸர்வ சக்தி பொருந்திய மூர்த்தி, அல்லது ஏதோ ஒரு விதமான சக்தி மட்டும் பொருந்திய மூர்த்தி என்று இரண்டு விதமாகத்தான் நம்மால் — அதாவது average பக்தர்களால் — ஒன்றிடம் பக்தி வைக்க முடிகிறது. ஸர்வ சக்தி இல்லாத மூர்த்தியின் மூலமும் ஸர்வ சக்தி வாய்ந்த பரமாத்மா அநுக்ரஹம் பண்ண முடியும் என்ற எண்ணத்தோடு இதை அதுவாகப் பார்ப்பது நமக்கு அவ்வளவாக முடிவதில்லை. சண்டிகேச்வரரையோ விஷ்வக்ஸேனரையோ ‘மூலமான பரமாத்மா இவர்மூலம் அருள் செய்யட்டும்’ என்று நினைத்து நம்மால் வேண்டிக்கொள்ள முடிகிறதா? ஸர்வ சக்தி, கிஞ்சித் (சிறிதளவு) சக்தி என்று தெளிவாக இரண்டு பிரித்துக் கொண்டு விடுகிறோம்.

இதற்கு வித்யாஸமாக ஒரே ஒரு இடத்தில் மட்டும் செய்கிறோம். ஆசார்ய புருஷர்களின் பிம்பங்களைப் பார்த்தால், ‘நம்மைப் பொறுத்தமட்டில் நமக்கு ஈச்வர கோடியாகவே இருந்து அநுக்ரஹிக்கக் கூடியவர்கள்; பரமாத்மா பல ரூபங்களில் குறிப்பாக இப்படி நம்மிடம் ஸுலபத்தில் வருவான்’ என்று தெரிகிறது. அவர்களை நமஸ்கரிக்கிறோம்.

அதாவது, ப்ரம்மகோடி என்று தெளிவாக ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள், அப்படியில்லை என்று தெளிவாக ஒரு பிரிவினர், நம்மைப் பொறுத்தமட்டில் அப்படியிருக்கிறவர்கள் என்று ஒரு பிரிவினர் – இருப்பதாகப் பார்க்கிறோம். இப்படி மூன்று பிரிவுகள் செய்து நமஸ்கரிக்கிறோம்.

ப்ரஹ்மாவின் ஸந்நிதி இருக்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் ப்ரம்மகோடியில் இல்லை. அதோடு த்ரிமூர்த்திகளில் ஒருவரான ஸ்ருஷ்டி கர்த்தாவாக அவரை நினைப்பதே நம் மனஸில் வேரோடிப் போயிருக்கிறது. புராண காலங்களில் அவரை முதலில் பிடித்து அவர் மூலமாக ஈச்வர கோடிகளைப் பிடிக்கலாம் என்ற அபிப்ராயம் இருந்திருந்தாலும், அப்புறம் பஹுகாலமாக, லோகத்தில் கலிபாதை ஜாஸ்தியாகி அதனால் ஜன்மா என்பதே ரொம்ப வெறுத்துக்கொள்ளவேண்டி ஆனதினாலோ, அல்லது வேறே காரணத்தினாலோ ப்ரஹ்மாவிடம் பக்தி குறைந்து, எனவே அவரைக் கொண்டு ஈச்வர கோடியைப் பிடிப்பதென்பது மறைந்துபோயிருப்பது வாஸ்தவம். ஆகையால் அவரையே முழுமுதலாக நினைக்க முடியாததோடு, அவர் மூலம் முழுமுதலிடம் போகலாமென்ற அபிப்ராயமும் நமக்கு இல்லை. ஆசாரிய புருஷர்களைப் போல நம்மைப் பொறுத்தமட்டில் முழுமுதல் தெய்வமே இவராக இருந்து அநுக்ரஹிக்கும் என்று நினைக்கவும் தோன்றவில்லை; அதற்கு விசேஷமாக basis (அடிப்படை) இல்லை.

அப்புறம், கோவிலில் ஆழ்வார், நாயன்மார் போன்ற பக்தர்களைப் பார்க்கும்போது அவர்களுடைய பக்தியின் உயர்வுக்காக அவர்களை நமஸ்கரிக்கத் தோன்றுகிறது. ப்ரஹ்மாவுக்கும் இப்படி பக்தர் என்று விசேஷமாகச் சிறப்பிக்கப்படும் அடியார் கோஷ்டியிலும் சேரவில்லை!

மற்ற கிஞ்சித்-சக்தி மூர்த்திகளை (ஸ்வல்ப சக்தி படைத்த தேவதைகளை) அவரவருக்குள்ள சக்திக்காக நமஸ்கரிப்பது போல இவருக்கும் பண்ணிவிட்டுப் போகலாமேயென்றால், இவருடைய சக்தி என்ன? ஸ்ருஷ்டி செய்வது. அதாவது நமக்கு ஜன்மாவைத் தந்து, “தலையெழுத்து, கர்மம்” என்று தலையில் அடித்துக்கொள்கிறோமே, அதை – பழைய ஸ்டாக்கிலிருந்து இந்த ஜன்மாவில் அநுபவிக்கவேண்டியது இவ்வளவு என்பதை – எழுதி விடுவது. அதோடு அவர் வேலை முடிந்தது. அதற்கப்புறம் அவர் நமக்குச் செய்வது, செய்யக்கூடியது எதுவுமேயில்லை. ஒவ்வொரு சாஸ்த்ரத்திலும், ஸயன்ஸிலும் “விதிகள்” என்று பலவற்றைச் சொல்கிறோம். அவை மாற்றமுடியாத நியதிகள் தானே? ரூல்கள்தானே? மாற்றமுடியாததாக நம் தலையில் “விதியை” எழுதும் ப்ரம்மாவுக்கே “விதி” என்று பேர் இருப்பதால் அவரும் ஸ்வதந்திரமாக நமக்கு எந்த அநுக்ரஹமும் செய்யமுடியாத ஒரு ரூல் மாதிரிதானிருப்பதாக தோன்றுகிறது. ஆகையினால் அவரிடம் பக்தி பொங்கிக்கொண்டு வரும்படி எதுவுமே நமக்கு இல்லை.

கிஞ்சித் சக்தியுள்ளவரானாலும் நம்மைக் காட்டிலும் எவ்வளவோ பெரிய சக்தர்தானே, அதற்காக ஒரு நமஸ்காரம் பண்ணிவிடலாமே என்றால், இங்கேதான் அவர் மற்ற எல்லாருக்கும் (எல்லா தேவர்களுக்கும்) வித்யாஸமாக, ‘பெக்யூலிய’ராக இருக்கிறார்.

அது என்ன?

இவரொருவர் மாத்திரம் ஈச்வர கோடியாக இல்லாமலே, அப்படியிருக்கும் சிவ – விஷ்ணுக்களுக்கு ஸமதை மாதிரியும் த்ரிமூர்த்திகளில் இருக்கிறார்! சிவம் என்கிற பேரில் ஸர்வ சக்தராக இருப்பவர் கிஞ்சித் சக்தரான ஸம்ஹார ருத்ர மூர்த்தியாகவும், அதே போல, ஸர்வ சக்தி வாய்ந்த விஷ்ணு அந்தப் பேரிலேயே கிஞ்சித் சக்தரான பரிபாலன மூர்த்தியாகவும் இருக்கிறபோது, ஸர்வ ஸக்தராக நாம் தெரிந்துகொள்ளாத ப்ரஹ்மாவும் ஸ்ருஷ்டி கர்த்தாவாக அவர்களோடு மூன்றாமவராக அவர்களோடு ஸம ஸ்தானம் பெற்றவராகக் காணப்படுகிறார்.

ப்ரம்மாவை ஸ்ருஷ்டிப்பதற்கு அதிகமாக எந்த சக்தியும் பெற்றவராகவோ, நமக்காகப் பரமாத்விடம் ரெகமென்ட் செய்யக் கூடியவராகவோ பார்க்கிற பார்வை நமக்கில்லை. பரமாத்மாவின் கட்டளைப்படி, நம் கர்மப்படி ஜன்மா தருபவர் என்பதோடு அவரை முடித்துவிடுகிறோம். அதே ஸமயத்தில் விஷ்ணு, சிவன் ஆகியவர்கள் விஷயத்தில் எப்படியிருக்கிறது? விஷ்ணு என்று நினைத்த மாத்திரத்தில் ஸாக்ஷாத் பரமாத்மா, ஸர்வசக்தி வாய்ந்தவரென்றுதான் தோன்றுகிறதேயொழிய, பரமாத்மாவின் அதிகாரிகளில் ஒருவராக நம்முடைய கர்மாப்படி ஜீவயாத்திரையில் கணக்குத் தீர்க்கும் பரிபாலகர் என்று சின்னதாகவா நினைக்கிறோம்? அப்படியே, சிவன் என்றால் பரம்பொருள், எல்லாம் வல்லவர். எல்லாமும் தரவல்லவரென்றுதான் தோன்றுகிறதேயொழிய சாவைத் தருபவரென்றா தோன்றுகிறது? இப்படித் தோன்றினால் அவருடைய கோவிலுக்குப் போகவே மாட்டோம்!

த்ரிமூர்த்திகளில் பரிபாலனமும், ஸம்ஹாரமும் செய்பவர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் ஸகலமும் செய்யவல்லவர்கள் என்பதையே நினைப்பூட்டும் சிவன், விஷ்ணு என்பவர்களோடு, த்ரிமூர்த்திகளில் ஸ்ருஷ்டிப்பவராக மட்டுமே நம்மால் நினைக்க முடியும் ப்ரஹ்மாவைக் சேர்த்தால் நம்முடைய average மனநிலையில் குழறுபடியாகிறது. இவர் எங்கே அவர்களுக்கு நடுவிலே போய் ஸமதையாய் நின்றார் என்று தோன்றுகிறது. இப்போது தோன்றுகிறதோ இல்லையோ, ஸ்தூலமாக அவருக்கும் கோவிலில் முக்யமான இடம் கொடுத்திருந்தால் அவரைப் பார்க்கிறபோது ஆண்டவனாகவோ, அடியாராகவோ, ஆசார்யராகவோ எப்படியும் வைத்துப் பார்க்க முடியாத அவரைப் பற்றி இப்படி வேறு, ‘ஈச்வர கோடிகளோடு இவர் எப்படி ஸமதை?’ என்ற கேள்வியும் வரும் — வரலாம் — என்றுதான் அவருக்குக் கோவில்லாமல் வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது. இப்படியும் ஒரு காரணம் இருக்கலாமோ என்று தோன்றியதைச் சொன்னேன்.

நம்மால் முழு முதல் தெய்வமாக மதிக்கப்படும் சிவ – விஷ்ணுக்களுக்கு ஸமதை மாதிரி இவர் எப்படி இருக்கலாம் என்று கேள்வி வந்துவிட்டதால், அப்புறம் நம்மைவிட அவர் எப்படியும் பெரிய சக்திமான்தானே என்ற அளவில் அவரிடம் மரியாதை பாராட்டுவதில்கூட ஒரு ‘ரிஸர்வேஷன்’ வந்துவிடும். இதற்கு இடமே கொடுக்கவேண்டாமென்று தான் அவருக்குக் கோவிலில் இடமில்லை என்று வைத்திருப்பார்கள் போலிருக்கிறது என்று தோன்றியதைச் சொன்னேன்.

இதர தேவதைகள் அநேகரைவிட ப்ரஹ்மா குறைந்து போய்விடவில்லைதான். ஆனால் நாம் அவரிடம் நிறைந்த பக்தி செலுத்த முடியாதவர்களாக இருக்கிறோமே! கோவில் என்று ஒன்று அவருக்குக் கட்டி வைத்துவிட்டால் ஜனங்களுக்குப் போகத் தோன்றும். அதற்காகத்தானே கோவில் கட்டுவதே? ஆனால் போய் அவரை தர்சனம் செய்தால் அவரிடம் பொங்கிக்கொண்டு ப்ரேமை, பக்தி வருவதாக இருக்காது. (யாருக்காவது ப்ரஹ்மாவிடம் பக்தி என்று கேள்விப்படுகிறோமோ?) விசேஷமாக பக்தி வராவிட்டால் போகிறது; சித்ரகுப்தன் மாதிரியானவர்களிடம் மட்டும் பெரிசாக பக்தி வந்துவிடுகிறதா என்ன — என்றால் அங்கேயெல்லாம் கேள்வியும் வருவதில்லையோல்லியோ? அதனால் நம்மைவிட நிச்சயம் பெரியவரென்று ஒரு நமஸ்காரம் செய்துவிட முடிகிறது. இவரிடம் மட்டும் கேள்வி, சிவ – விஷ்ணுக்களோடு இவருக்கு எப்படி ஸமஸ்தானம் என்று. அவர் அப்படி ஸம ஸ்தானம் கொண்டாடாமலே இருக்கலாம். அவரைக் குற்றம் சொல்லவேண்டாம். ஆனால் ‘ப்ரம்மா – விஷ்ணு – சிவன் என்று த்ரிமூர்த்திகள்’ என்று கேட்டுக் கேட்டு நமக்கு அப்படிப்பட்ட அபிப்ராயம் ஆழமாக ஏற்பட்டிருக்கிறதே! அதனால் கேள்வி புறப்படத்தான் செய்யும். கேள்வி இருக்கிற இடத்தில் பக்தி எப்படி இருக்கும்? விசேஷ பக்தி என்றில்லை, ஸாதாரணமான ஒரு மரியாதை உணர்ச்சிகூட எப்படி இருக்கும்? அப்போது பண்ணும் நமஸ்காரம் எப்படி genuine – ஆக இருக்கும்? பண்ணுகிற அநேக தகிடுதத்தங்களுக்குப் பரிஹாரம் தேடிக் கொள்வதற்குத்தான் கோவில். கோவிலுக்குப் போயே மனப்பூர்வமாயில்லாமல் ஒப்புக்கு நமஸ்காரம் செய்வதென்றால் அது ரொம்பவும் தோஷம் தானே? இப்படி வேண்டாம் என்றுதான் ப்ரஹ்மாவுக்குக் கோவிலில்லாமல் விட்டிருக்கலாம். அவருடைய குறைபாடில்லை, காரணம். நம் குறைபாடுதான் (காரணம்). அவருடைய சக்தி இப்படி என்று நம்மால் கணித்துக் கொள்ளமுடியாமல், நாம் பக்தி வைக்கக்கூடிய மூன்று பிரிவில் எதிலும் அவரை வைக்கமுடியாமல், ‘கிஞ்சித் சக்தர் என்ற பிரிவில் வைக்கலாமே!’ என்றால், ‘பின்னே பூர்ண சக்தர்களோடு ஸமம் மாதிரி இருக்கிறாரே!’ என்று கேள்வி கேட்டுக்கொண்டு நாம் இருப்பதால், பொய் நமஸ்காரம் பண்ணும் தோஷம் நமக்குச் சேர்ந்துவிட வேண்டாமென்ற கருணையிலேயே அவருக்குக் கோவில் இல்லாமல் வைத்திருக்கிறார்கள். இப்படியும் ஒரு காரணம் தோன்றுகிறது.

முழுமுதலாக விளங்கும் மூர்த்திகள்

இங்கே விஷ்ணு, ருத்ரர் ஆகிய இரண்டு பேருக்கும் ப்ரஹ்மாவுக்கும் ஒரு வித்யாஸம் சொல்வதுண்டு. விஷ்ணுவும் ருத்ரமூர்த்தியும் வெளிக்கார்யம் எப்படி வைத்துக் கொண்டிருந்தாலும் — ஒரு ஆய்ச்சியிடம் அடிவாங்கிக் கொண்டு, ஒரு பிட்டு வாணிச்சிக்குக் கூலிவேலை செய்துகொண்டு இருக்கிறபோதுகூட — உள்ளூரப் பரமாத்மாவோடு ஒன்றுபட்டு ஸதாகாலமும் அந்த ஸர்வசக்தனாகவும், சக்தி விலாஸமெல்லாமும்கூட அடிபட்டுப்போன நிர்குண ப்ரஹ்ம வஸ்துவாகவும் தங்களைத் தெரிந்து கொண்டிருப்பவர்கள். அம்பாள், ஸாக்ஷாத் பராசக்தி, அவளும் இப்படித்தான். மஹாலக்ஷ்மி மஹாவிஷ்ணுவோடு கொஞ்சம்கூடப் பிரியாத பாவத்தில் கரைந்திருந்து தத்-த்வாரா (அதனடியாக) பரமாத்ம ஸ்வரூபத்தில் ஒன்று பட்டிருப்பவள். வைஷ்ணவர்கள் (அவளுடைய) ஸ்தானத்தை நன்றாக உயர்த்தி, அநுக்ரஹிக்குமாறு மஹாவிஷ்ணுவைத் தூண்டிவிடும் சக்தியே அவள்தான் என்பார்கள். ‘தாயார், தாயார்’ என்று நம் மனஸை உருக்கும்படியாக இப்படி அபிப்ராயம் சொல்வார்கள். நம்முடைய ஆசார்யாளும் மஹாலக்ஷ்மியை ஸ்துதிக்கும்போது அவளையே ‘கீர்தேவதை’, அதாவது ஸரஸ்வதி என்றும், ‘சசிசேகரவல்லபா’ அதாவது சந்த்ரமௌளீச்வரனின் சக்தியான அம்பாள் என்றும் சொல்லியிருக்கிறார்.*

பிள்ளையார், முருகன் ஆகியவர்களும் இப்படியேதான் (முறையே) விக்னஹர்த்தா, தேவஸேநாதிபதி என்று மட்டும் முடிந்து போகாமல் முழுமுதலாக நின்று கொண்டு அநுக்ரஹிக்க கூடியவர்கள். ஆஞ்ஜநேய மூர்த்தியும் ராம தாஸனாக இருந்து கொண்டே ஸர்வ சக்தராகப் பூஜிக்கப்படும் ஸ்தானத்தைப் பெற்றிருக்கிறார். ப்ரஹ்மாவை இந்த லிஸ்டில் சேர்க்கவில்லை. ஏராளமான சாஸ்திரங்களை அலசிப் பார்த்து அப்பைய தீக்ஷிதர் அபிப்ராயம் பண்ணும்போது விஷ்ணுவையும், சிவனையும், அம்பாளையும் ‘ஈச்வரகோடி’ என்ற பூர்ண ப்ரஹ்ம சக்தியாகச் சொல்லியிருப்பதுபோல் ப்ரஹ்மாவைச் சொல்லவில்லை. பேரிலே ‘ப்ரஹ்மா’ என்பது ‘ப்ரஹ்மம்’ என்கிறமாதிரி இருந்தாலும், ஸாரத்திலே அப்படிப் பூர்ணமாக இல்லை. சித்தே முந்திதானே பார்த்தோம். தனக்குச் சிரஞ்ஜீவித்வம் வேண்டும் என்று யாராவது வரம் கேட்டால் ப்ரஹ்மாவே, ‘எனக்கு அப்படிக் கொடுக்க அதிகாரமில்லை, சக்தியில்லை’ என்று சொல்லிவிடுவாரென்று?


* ‘கநகதாராஸ்தவம்’ – 10.

முத்தொழில் புரிபவர் என்பதற்காக வழிபாடில்லை

ச்லோகத்தில் ப்ரஹ்மா, விஷ்ணு, மஹேச்வரன் என்று மூன்று பேரை வரிசையாகச் சொல்லிவிட்டு, அப்புறம் பரப்ரம்மம் என்பதால் அந்த மூன்று பேரை ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார மூர்த்திகளாகவே காட்டியிருக்கிறது என்பது வெளிப்படை. இத்தனை நாழி அதைப் பற்றித்தான் விசாரித்தோம்.

தேவர்களெல்லாம் எந்தக் கஷ்டமானாலும் ப்ரம்மாவிடம்தான் முதலில் முறையிடுவார்கள், அஸுரர்களிலும் பல பேர் தபஸ் பண்ணி அவரிடமிருந்து வரம் பெற்றிருக்கிறார்கள் – என்னும்போது அவர்கள் அவரை ஸ்ருஷ்டி கர்த்தா என்று மட்டும் வைத்து அவரிடம் போய்ப் பிரார்த்திக்கவில்லை. தெய்வசக்தி என்று பொதுவாகச் சொல்கிறோமே, அந்த சக்தி நிரம்பிய ஒருவர் என்றுதான் அவரிடம் இவர்கள் போயிருக்கிறார்கள். தங்களுக்கு ஏதேதோ ஸெளக்யங்களை, போக போக்யங்களை அவர் கொடுக்க வேண்டும்; பிரார்த்திப்பது தேவர்களானால், அஸுரர்கள் அழிந்து போக அவர் அருள்புரியவேண்டும்; அல்லது பிரார்த்திப்பது அஸுரர்களானால், தேவர்களை அழிக்க அவர் பலம் தரவேண்டும் என்றுதான் அவரிடம் போயிருக்கிறார்கள். இதில் ஸெளக்யம் போகபோக்யம் கொடுப்பதென்பது பரிபாலனத்தைச் சேர்ந்தது. அது த்ரிமூர்த்திகளில் விஷ்ணுவின் கார்யம். அஸுரர்கள் அழிவது, அல்லது தேவர்கள் அழிவது என்றால் அதுவோ ருத்ரனின் கார்யம். இவற்றுக்காகத்தான் அவர்கள் ப்ரம்மாவிடம் போயிருக்கிறார்கள். ஸ்ருஷ்டி கர்த்தாவாக அவர் செய்யக்கூடிய எதையோ கேட்டுக்கொண்டுதான் அவர்கள் அவரிடம் போனார்களென்றில்லை.

தனக்கு சிரஞ்சீவித்வம் வேண்டுமென்று பல அஸுரர்கள் அவரிடம் ப்ரார்த்திக்க அவரோ, ‘அப்படி அன்-கண்டிஷனலாக வரம் தர எனக்குச் சக்தியில்லையப்பா! மரணம் வராமலிருக்க ஏதாவது கண்டிஷன் வேணுமானால் போட்டுக்கேளு; தருகிறேன்’ என்று சொல்வதாகப் பல புராணங்களில் பார்க்கிறோம். இதிலிருந்து அவர், ‘வெறும் ஸ்ருஷ்டி கர்த்தா இல்லை. எதையும் செய்யவல்லவர்’ என்ற நம்பிக்கையிலேயே வரம் கேட்பவர்கள் அவரிடம் போயிருக்கிறார்களென்றும், ஆனால் அவரோ தாம் ஸர்வசக்தி படைத்தவரல்ல என்றே தம்மைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறாரெனறும் ஆகிறது.

யாராவது சிலபேர் அவரிடம், ‘இப்படியிப்படி அடுத்த ஜன்மா கொடுங்கள் என்று வரம் கேட்டிருக்கலாம், அல்லது பிள்ளைவரம் கேட்டிருக்கலாம். இவர்கள் வேண்டுமானால் ஒருவேளை அவர் ஸ்ருஷ்டி கர்த்தா என்பதாக மட்டுமே அவரை இம்மாதிரி கேட்டிருக்கலாமோ என்னவோ? ஆனால் இதே வரத்தை இதர தெய்வங்களிடமும் – சிவன், விஷ்ணு, அம்பாள், ஸுப்ரம்மண்யர் போன்றவர்களிடமும் – பல பேர் கேட்டிருக்கிறார்கள். ஆகையால் பிறப்பு ஸம்பந்தமான வரமானால் படைப்புக்கே ஏற்பட்ட ப்ரம்மாவிடம்தான் போகவேண்டுமென்று பொதுக் கருத்து இல்லை என்றே ஏற்படுகிறது. இதையே இன்னொரு தினுஸில் திரும்பிப் பார்த்தால் படைப்புக் கடவுள் என்ற முறையில்தான் ப்ரம்மாவிடம் போய் ஒன்றை வேண்டிக்கொண்டார்களென்று இல்லை என்று தெரிகிறது.

இதேபோல விஷ்ணுவையும், சிவனையும் பலபேர் உபாஸித்து இஹ – பர ஸெளக்யங்களில் அத்தனையையும், பரம ஞானத்தையும், மோக்ஷத்தையும்கூடப் பெற்றிருக்கிறார்கள் என்னும் போது அவர்கள் அந்த இரண்டு பேரையும் பரிபாலன கர்த்தா, ஸம்ஹாரகர்த்தா என்று மாத்திரம் வைத்து ஆராதிக்கவில்லை என்று தெரிகிறது. இவர்களை வேண்டிக்கொண்டு, தபஸ் முதலானது பண்ணியே பலர் புத்ரவரம் பெற்றிருக்கிறார்கள். ‘ராஜா இருந்தான்; அவனுக்கு எல்லா ஸெளக்யங்களும் இருந்தன; ஆனால் பிள்ளை இல்லையே என்ற பெரிய குறை மட்டும் இருந்தது; இல்லாவிட்டால், யாரோ ஒரு ரிஷி இருந்தார்; அவருக்கு மனதில் எவ்வளவோ சாந்தி இருந்தும் பித்ரு ருணம் (மூதாதையரின் கடன்) தீர்க்கப் பிள்ளையில்லையே என்பது விசாரமாயிருந்தது; அந்த ராஜா, அல்லது ரிஷி விஷ்ணுவை, அல்லது சிவனைக் குறித்துத் தபஸ் பண்ணினார்; விஷ்ணுவோ சிவனோ ப்ரஸன்னமாகிப் புத்ர வரம் கொடுத்தார்’ என்று அநேகம் கதைகள் பார்க்கிறோம். இங்கேயெல்லாம் ப்ரஹ்மாவுக்குரிய ஸ்ருஷ்டியை இந்த இரண்டு பேர் செய்திருப்பதாக ஆகிறது. அதோடு, தேவர்கள் பிரார்த்தித்தார்கள். ரிஷிகள் பிரார்த்தித்தார்கள் என்று மஹாவிஷ்ணு அவதாரத்துக்கு மேல் அவதாரமாக எடுத்து ஹிரண்யன், ராவணன், கம்ஸன் என்று பல பேரை ஸம்ஹாரம் பண்ணியிருக்கிறார். சிஷ்ட பரிபாலனம் என்று அவர் பண்ணுவதே பூர்வ குணங்களில் முக்யமாக துஷ்ட நிக்ரஹமாகத்தான் இருந்திருக்கிறது. சிவனைப் பார்த்தால் அவர் எத்தனையோ பக்தர்களுக்கு ஆயுராரோக்யம், ஐச்வர்யம் என்று வாரி வழங்கியிருக்கிறார். ஸ்தல புராணங்களைப் பார்த்தால் தெரியும். ராஜாக்கள் கட்டிய அநேக சிவாலயங்கள் இருக்கின்றன அல்லவா? ஒரு ராஜாவின் கொடூரமான நோயை ஈச்வரன் ஸொஸ்தம் செய்தான். ஒரு ராஜா ராஜ்யத்தை இழந்து காட்டில் வஸித்தபோது அவன் இந்த லிங்கத்தைப் பூஜித்துத் தான் ஈச்வரன் அவனுக்கு அந்த ராஜ்யத்தை மீட்டுக் கொடுத்தான், அதற்காகவே அவர்கள் இந்த ஆலயத்திருப்பணி செய்தார்கள் என்று (ஸ்தல புராணங்களில்) இருக்கும்.

(இவற்றிலிருந்து) என்ன தெரிகிறதென்றால், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரிடமிருந்து பல பேர் பலவிதமான வரங்கள் பெற்றிருக்கிறார்களென்றால் அவர்கள் அந்த மூவரையும் எல்லாம் செய்யக்கூடிய தெய்வ சக்தி நிரம்பியவர்கள் என்றுதான் பூஜித்திருக்கிறார்களேயொழிய, இவர் ஸ்ருஷ்டி மட்டும் செய்பவர், இவர் ஸ்திதிக்கு மட்டும் அதிகாரி, இவர் ஸம்ஹாரம் மட்டும் செய்பவர் என்று நினைத்து அவர்கள் ஆராதிக்கவில்லை.

ஆனால் இந்த (குருர் – ப்ரஹ்மா) ச்லோகம் போகும் ரீதியிலிருந்தோ ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹார கர்த்தாக்களாக இவர்கள் இருப்பதற்காகவே, அல்லது அந்த அதிகாரத்தில் மாத்திரம் அவர்களை வைத்தே, அவர்களுடைய உருவமாயுள்ள குருவுக்குப் பூஜை செய்யவேண்டும், நமஸ்கரிக்க வேண்டும் என்று சொல்வதாகத் தெரிகிறது. ‘இவர்தான் ப்ரஹ்மா, இவர்தான் விஷ்ணு, இவர்தான் மஹேச்வரன்’ என்று சொல்லி, ‘இவருக்கு நமஸ்காரம் – குரவே நம:‘ என்று முடித்தால், ‘அந்த மூன்று கார்யங்களைப் பண்ணுவதற்காகவே அவர்களுக்கு செய்யவேண்டிய நமஸ்காரத்தை இவருக்குச் செய்’ என்பதாகத்தானே அர்த்தம் கொடுக்கிறது? நமஸ்காரம் என்றால் உபாஸனை என்று அர்த்தம். ஒருவரை பக்தியோடு உபாஸித்து ப்ரார்த்திப்பதற்கு நமஸ்காரத்தை அடையாளமாகச் சொல்லியிருக்கிறதென்று அர்த்தம்.

இங்கேதான், வேடிக்கையோ, வம்போ, வாதமோ, எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள், வருகிறது.

ஸ்ருஷ்டிக்குத்தான் சாமி, ஸ்திதிக்குத்தான் சாமி, ஸம்ஹாரத்துக்குத்தான் சாமி என்று ஒருவரை வைத்துவிடும்போது அவரை பக்தி பண்ணி உபாஸிக்கவேண்டியதே இல்லை! நமக்கு ஸந்தோஷகரமான ஒன்றை ஒரு ஸ்வாமி செய்திருக்கிறார், செய்கிறார், அல்லது செய்வார் என்கிறபோது தான் அவரிடம் பக்தி உண்டாகி உபாஸிப்போம். ப்ரம்மா நம்மைப் படைத்தாரே என்று நாம் ஸந்தோஷமா படமுடியும்? அவரிடம் சண்டை வேண்டுமானால் பிடிக்கலாம் என்றுதான் தோன்றும். படைப்பதற்கு மேல் அவர் ஒன்றும் செய்யமுடியாது – அதாவது, ஸ்ருஷ்டிகர்த்தா என்றே அவரை வைக்கிறபோது. இனிமேல் நம்முடைய இந்த வாழ்க்கையில் அவர் செய்யக்கூடியது எதுவுமில்லை. இவரிடம் எதற்கு பக்தி வைக்கணும்? அதற்கு அடையாளமாக நமஸ்காரம் பண்ணணும்? ஆனதினால் ‘குருதான் ப்ரஹ்மா, ஆகவே குரவே நம:’ என்று முடிச்சுப் போட்டால் எடுபடாது. [சிரித்து] நாங்கள் நவீன கால ப்ரஜைகள். ‘லாஜிக’லாக ஸரியாக வந்தால்தான் ஒப்புக் கொள்வோம்! ஆகையால் குரு ப்ரஹ்மாவாக இருப்பதற்காக அவருக்கு நமஸ்காரம் பண்ண முடியாது!

“குருர் – விஷ்ணு:” — விஷ்ணு ஸமாசாரத்திற்கு அப்புறம் வருகிறன்.

“குருர் – தேவோ மஹேச்வர: — தஸ்மை ஸ்ரீ குரவே நம:” என்றால், இது ப்ரம்மா விஷயத்தை விடவும் ஒப்புக் கொள்ளவே முடியாது! ருத்ர மூர்த்தி சூலத்தைக் தூக்கிக் கொண்டு வந்து ஹதாஹதம் பண்ணுபவர். வேறே ஒன்றும் அவருக்குத் தெரியாது. அவருக்குத் தெரியுமோ தெரியாதோ, ச்லோகத்தில் அவரை ஸம்ஹார க்ருத்யத்துக்கு மட்டும் உரியவராகக் காட்டிக்கொடுக்கும்போது அப்படித்தான் வைத்திருக்கிறது. நம்மை ஸம்ஹாரம் செய்கிறவரிடம் பக்தியா உண்டாகும்? “ஸ்வாமி, என்னை ஸம்ஹாரம் பண்ணுங்கோ!” என்று வேண்டிக்கொள்ள யாராவது தயாராயிருப்பார்களா? ஜன்மா எடுத்து விட்டோமே என்று எத்தனைதான் வருத்தப்படுபவர்களாக இருந்தாலும், அதற்காக ப்ரம்மாவிடம் என்னதான் ‘கர்ர் புர்ர்’ என்று இருந்தாலும், அதே ஸமயத்தில் ஸம்ஹாரமாவதற்கு நாம் யாராவது ரெடியாக இருக்கிறோமா என்ன? நாம் பெரிய திட்டாக, வயிறெரிந்து சொல்வதே ஒருத்தர் சாகணும் என்று சபிப்பதுதான். இப்படிப்பட்ட சாபத்தைக் காரியமாகவே நடத்தி விடுகிறவனை அநுக்ரஹ மூர்த்தியாகக் கொண்டு எங்கேயாவது நமஸ்கரிக்க முடியுமா?

இன்னொன்றும் கவனிக்க வேண்டும். சிவன் — மஹேச்வரன், ருத்ரன், எதுவோ ஒரு பேர்; ஸம்ஹாரகர்த்தா என்பதுதான் பாயின்ட் — சிவன் ஸம்ஹாரம் செய்கிறார் என்னும்போது அவர் சாச்வதமாக ஜன்ம நிவ்ருத்தி கொடுக்கிறார் என்று அர்த்தமாகாது. முன்னேயே சொன்னேன்: ப்ரக்ருதி நியதியில் ஒரு சரீரம் ஜீர்ணமாகி மரணம் ஏற்பட்டாலும், கர்மாவைத் தீர்த்துக் கொள்வதற்காக இன்னொரு சரீரம் எடுத்துதான் ஆகணும். ருத்ரன் இந்த ஜன்மாவில் எடுத்த சரீரத்தைத்தான் நிவ்ருத்தி பண்ணுகிறானே தவிர, ஜன்மாவையே, கர்மாவையே நிவ்ருத்தி பண்ணிவிடவில்லை. நமக்குப் பிடிக்கிறதோ, பிடிக்க வில்லையோ, ஒரேடியாக ஜன்ம நிவிருத்தி ‘கம்பல்ஸரி’ யாக கொடுக்கிறானென்றாலாவது, ‘அப்பா! ஜனன – மரண சக்கரத்திலிருந்து தப்பணும் என்று என் அஞ்ஞானத்தில் எனக்காகத் தெரியாவிட்டாலும், நீ பிடிவாதமாக என்னை விடுவிக்கிறாயே!’ என்று அவனை பக்தியோடு நமஸ்கரிக்கலாம். இது அப்படியும் இல்லை.

ப்ரளயத்தின்போது அவன் நம்மை ஸம்ஹரித்துத் தன்னிடம் லயப்படுத்திக்கொண்டு, அடுத்த ஸ்ருஷ்டிவரை, அதாவது நீண்டகாலம், ஓய்வு தரத்தான் செய்கிறான். ஆனாலுங்கூட ப்ரளயத்தை நினைத்து பயப்படத்தான் நம்முடைய அஞ்ஞான நிலையில் தோன்றுகிறதே தவிர, அதற்காக வேண்டிக்கொண்டு அவனை நமஸ்காரம் பண்ணணுமென்று நிச்சயமாகத் தோன்றவில்லை.

நெஞ்சில் கை வைத்துக்கொண்டு சொன்னால், நாமிருக்கும் ஸ்திதியில் நம்மில் யாரும் சாவை விரும்பவில்லை. எனவே சாவைக் கொடுப்பவனாகவே ஒரு மூர்த்தி இருப்பதற்காக அவனை நாம் உபாஸிக்க வேண்டியதில்லை. ஆனபடியால், “குருர் – தேவோ மஹேச்வர: தஸ்மை ஸ்ரீ குரவே நம :” என்றால் [சிரித்து] அடியோடு தப்பு!

“குருர் – விஷ்ணு:” இங்கேதான் (இப்படிச் சொல்கிற போதுதான்) மேல் பார்வையில், பக்தியுடன் நமஸ்காரம் செய்யலாம் மாதிரித் தோன்றுகிறது. விஷ்ணுதான் நம்மைப் பரிபாலிப்பவர், காப்பாற்றுபவர் என்பதால் அவர் செய்கிற ரக்ஷணைக் கார்யம் ரொம்ப நல்லதாக, நம் மனஸுக்கு ரொம்பப் பிடித்ததாக இருக்கிறது. ஆகையால் அவரை உபாஸிக்க வேண்டியதுதான். குருவானவர் விஷ்ணுவாக இருப்பாரானால், “குருர் விஷ்ணு: தஸ்மை ஸ்ரீ குரவே நம:” என்று அவருக்கு நிறைய நமஸ்காரம் பண்ணவேண்டியது தான் என்று தோன்றுகிறது. மேலோடு பார்க்கும் போது இப்படித் தோன்றுகிறது.

கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் அபிப்ராயம் மாறிப் போகிறது! விஷ்ணு பரிபாலனமூர்த்தி என்று பேர் வைத்துக் கொண்டிருப்பதிருக்கட்டும். நடைமுறையில், நம் வாழ்க்கையில், அப்படி ஆஹா என்று நாம் ஸந்தோஷப்படும்படி அவர் பரிபாலிப்பதாகத் தெரிகிறதோ? ‘அவர் காப்பாற்றுகிறார், நமக்கென்ன குறை?’ என்று யாருக்காவது அவர் செய்ததற்காகவும், செய்கிறதற்காகவும் நன்றியோடு நமஸ்காரம் செய்யவேண்டுமென்று தோன்றுகிறதோ? ‘இவர்தானே பரிபாலன மூர்த்தி என்கிறார்கள்? அதனால் இனிமேலாவது இன்ன இன்ன ஸெளக்யங்களைக் கொடுக்கட்டும்’ என்று இனிமேல் அவர் செய்யவேண்டியதற்காகத்தான் அவரை நமஸ்கரிப்போமேயொழிய இதுவரை செய்ததற்காகவோ, இப்போது செய்கிறதற்காகவோ மனம் நிறைந்து பண்ண மாட்டோம்! எல்லோருமே இப்படித்தான் இருக்கிறோம் என்று சொல்வதற்கில்லை – அப்படி நான் சொல்லியிருந்தால் ஸரியில்லை. ஆனால் மிகவும் பெரும்பாலானவர்கள் அப்படித் தான் இருக்கிறோம். ‘எப்படியெல்லாம் நமக்கு அநுக்ரஹம் பண்ணியிருக்கிறான்?’ என்று நிறைந்து இருக்கிறவர்கள் ரொம்பக் குறைச்சல். ‘நம்மை இப்படி வெச்சிருக்கானே, அதைக் கொடுக்கலையே, இதைக் கொடுக்கலையே!’ என்று மூக்கால் அழுகிறவர்கள்தான் மெஜாரிட்டி. 51% மெஜாரிட்டி இல்லை, 90-99% மெஜாரிட்டி! இப்போது நன்றாக வைத்திருக்கிறானென்று த்ருப்தியாயிருப்பவர்களில்கூட ரொம்பப் பேர் நாளைக்கும் அவனாக நன்றாக வைப்பான் என்று த்ருப்தியாக இருந்துவிடமாட்டார்கள். எதிர்காலத் தேவைகள், குறைபாடுகள் எதையாவது வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள். இப்போது இங்கே மஹாவிஷ்ணு வந்து நின்று கொண்டு எல்லோரும் தங்களுக்கு என்னவாவது வேணுமானால் பெடிஷன் கொடுக்கலாம் என்று சொன்னால் நம்மில் ஒவ்வொருத்தரும் ஒரு பெரிய லிஸ்ட் வைத்திருப்போம்!

என்ன அர்த்தம்? பரிபாலன மூர்த்தி என்று பேர் வைத்துக்கொண்டிருந்தாலும் அவர் அந்தக் கார்யத்தை ஸரியாகப் பண்ணாததாகத்தான் நமக்கு உள்ளூர அபிப்ராயம் என்றே அர்த்தம்!

வாஸ்தவத்தில் அவர் பண்ணாமலில்லை. ப்ரம்மாவுக்குச் சொன்னதேதான் இவருக்கும். “நாம் கட்டிக்கொண்ட கர்ம மூட்டைக்காகத்தான் ப்ரஹ்மா நமக்கு ஜன்மா தருகிறாரே தவிர, அவராக நம்மைக் கஷ்டப்படுத்த வேண்டுமென்று அப்படிச் செய்யவில்லை. ஆனதினாலே, ‘ஏனையா, ஜன்மா கொடுத்தீர்?’ என்று அவரிடம் சண்டைக்குப் போவது விவேகமில்லை” என்று சொன்னேனல்லவா? அப்படியேதான் நமக்கு life -ல் இன்ன இன்னதான் மஹாவிஷ்ணு கொடுத்திருக்கிறார், இன்னதெல்லாம் கொடுக்கவில்லை, கொடுத்ததைவிட கொடுக்காததுதான் ரொம்ப ஜாஸ்தி — என்றால், இதற்குக் காரணம் நம் கர்மாவுக்கு இதுதான் நமக்கு ப்ராப்தி என்பதுதான். அவர் ஏதோ வேண்டுமென்றே கஷ்டப்படுத்துகிறார், கிராக்கி பண்ணுகிறாரென்று அர்த்தமேயில்லை. கர்மாவைப் பார்க்கிறார். அதை வைத்து இவ்வளவுதான் கொடுக்கணுமென்று கணக்குப் போட்டுக் கொடுக்கிறார்; அவரிஷ்டப்படி, மனம் போனபடி இல்லை. விவேகமுள்ளவர்கள் இப்படியே எடுத்துக் கொள்வார்கள்.

ஆனால் நாம் அவிவேகிகள்தானே? விவேகம் வந்தவர்களாயிருந்தால் நமக்கு எதற்கு குரு? அது வருவதற்குத்தானே குரு என்று ஒருத்தர்கிட்டே போய் நிற்கிறோம்? இந்த நிலையில் விவேகிகளுக்கானதை நமக்குச் சொல்வதில் அர்த்தமில்லை. இப்படியிருக்கிறபோது, மஹாவிஷ்ணுவின் ரக்ஷிப்பு போதவில்லை, அவர் ஸரியாகப் பண்ணவில்லை என்று நமக்கு இருக்கிறபோது அவரை நமஸ்கரிப்பது, பக்தியோடு உபாஸிப்பது என்றால் எப்படி?

ஆனால், “சாக அடியுங்கோ, ஸ்வாமி!” என்று சிவனிடம் வேண்டிக்கொள்வதற்கு மனஸு வராது என்ற மாதிரியில்லாமல், “நன்னா ரக்ஷியுங்கோ, ஸ்வாமீ!” என்று விஷ்ணுவிடம் ப்ரார்த்தித்துக்கொள்ள இடமிருக்கிறதே — இதுவரை அவர் ரக்ஷித்து வருவது நமக்கு த்ருப்தியில்லையென்றாலுங்கூட இனிமேலாவது நன்றாகச் செய்யும்படியாக அவரிடம் ப்ரார்த்தித்துக்கொள்ள இடமிருக்கிறதே — அதனால் (அவர் இனி பண்ண வேண்டியதற்காக) நமஸ்காரம் செய்யலாமே என்றால்……ரக்ஷணத்துக்குத்தான் அவர் இருக்கிறார், அந்த உத்யோகத்தை அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்படியிருக்கும்போது நாம்போய் அவரிடம் ‘நன்னா ரக்ஷியுங்கோ!’ என்றால், அவர் ட்யூட்டியை செய்யாததாக நாம் குத்திக் காட்டுகிற மாதிரி ஆகாதோ? இப்படிக் கேட்டால் அவர் கோபித்துக்கொண்டு, “நீ சொல்லிக்கொடுத்துதான் நான் தெரிஞ்சுக்கணுமோ?” என்று செய்வதையும் குறைத்துக் கொண்டுவிட்டால் என்ன ஆவது? இருந்தாலும், குத்திக்காட்டிக் குற்றம் சொல்கிறாற் போலில்லாமல் விநயமாக இம்மாதிரி விண்ணப்பம் பண்ணிக்கொள்ளலாமோ என்று பார்த்தால்…….

ஸரி, நமஸ்காரம் செய்து அவரிடம் விண்ணப்பித்துக் கொள்கிறோம். அவர் என்ன சொல்வார்? யோசித்துப் பார்த்தால் அவர் என்ன சொல்வாரென்று ஊஹிக்க முடியும். “நானாக எதுவும் பண்ணுகிறதற்கில்லை. நாங்கள் மூன்று பேருமே எங்கள் இஷ்டப்படி எதுவும் பண்ணவில்லை. எங்களுக்கு அந்த அதிகாரம் கிடையாது. ஸர்வ சக்தனான ஒரு பரமாத்மா கொடுத்திருக்கும் வேலையை, எல்லை போட்டுக் கொடுத்திருக்கும் வேலையையே, நாங்கள் செய்கிறோம். உங்கள் கர்மாவைக் கொண்டே இன்ன மாதிரிப் பிறப்பைக் கொடுப்பது என்று ப்ரம்மா வைத்துக் கொண்டிருக்கிறார். இந்தப் பிறவியில், அதாவது பிறவி ஒவ்வொன்றிலும், உங்கள் கர்ம மூட்டையில் ஏதோ ஒரு அளவு நீங்கள் அநுபவிக்க வேண்டுமென்று பரமாத்மா நிர்ணயம் செய்திருக்கிறார். அந்த அளவு பார்த்தே உங்களுக்கு ஒவ்வொரு ஜன்மாவிலும் நான் ரக்ஷிப்புக் கொடுக்கிறேன். நிறைய ஸுக்ருதம் இருந்தால் — அது நீங்களே செய்ததுதான் — நிறைய ரக்ஷிப்புத் தருகிறேன். குறைவாக இருந்தால் குறைவாகத் தருகிறேன். நீங்கள் எத்தனை ரூபாய் வைத்திருக்கிறீர்களோ அதற்கான சரக்குத் தருகிறேன். கள்ள நோட்டு நீட்டினால் தண்டனை தருகிறேன். இப்படி பரமாத்மாவின் நிர்ணயப்படி ஒரு ஜன்மாவுக்கான அளவை நீங்கள் அநுபவித்தானவுடன் ருத்ரமூர்த்தி வியாதி, வக்கை என்று எதையோ அனுப்பி ஆயுஸை முடித்துவிடுகிறார். ஆகக்கூடி, இனிமேலே உங்களுக்கு நல்ல ரக்ஷிப்புக் கிடைக்கணுமென்றால் அதற்கு விசை உங்கள் கிட்டேயேதான் இருக்கிறது. ஸத்கர்மா நிறையப் பண்ண ஆரம்பியுங்கள். அப்போது நல்ல ரக்ஷிப்பு கொடுக்கும்படியாக என்னைப் பரமாத்மா வைப்பார். ஆனால் அதுவுங்கூட நீங்கள் ஆசைப்படுகிற மாதிரி இன்றைக்கு ஸத்கர்மா செய்தால் நாளைக்கே அதன் ஸெளக்ய பலன் கிடைத்துவிடுமென்று நான் ‘காரன்டி’ பண்ணத் தயாரில்லை. என்றைக்கோ, எந்த ஜன்மத்திலோதான் பலன் என்று பரமாத்மா தீர்மானம் செய்துவிட்டால் நீங்கள் என்னிடம் சண்டைக்கு வந்து ப்ரயோஜனமில்லை” என்று இப்படித்தான் மஹாவிஷ்ணு சொல்வார்.

இங்கே நன்றாக ‘க்ளிய’ராகிவிட்டது. இவரையும் நமஸ்காரம் பண்ண வேண்டியதில்லை என்று. இவரை, அவரை மூன்று பேரையுந்தான்! நடுவாந்தரத்திலே ஒன்று சொன்னாரோ இல்லையோ, ‘உங்களுடைய ரூபாய் எவ்வளவோ அதற்கேற்ற சரக்குத்தான்’ என்று. அதில் எல்லாம் முடிந்துபோய் விடுகிறது. ரூபாய்க்கு ஸரியாக சரக்கு தரும் வியாபாரியை யாராவது நமஸ்காரம் பண்ணுகிறோமா? [சிரிக்கிறார்.]

நாம் பண்ணுவதை வைத்து இப்படியிப்படிப் பலன் என்று முடிவெடுப்பவன் எவனோ ஒருத்தன். இந்த மூன்று பேரும் இல்லை. பரமாத்மா என்கிறவன். ஸர்வ சக்தனாக இருக்கிறவன். அவன் எடுத்த முடிவை இவர்களைக்கொண்டு அமல்படுத்துகிறான். இவர்கள் அவனிடமிருந்து பெற்ற ஸ்ருஷ்டி சக்தி, பரிபாலன சக்தி, ஸம்ஹார சக்தி ஆகியவற்றைக்கொண்டு தங்கள் ட்யூட்டியைச் செய்கிறார்கள். ட்யூட்டி செய்கிற ஆபீஸர்களிடம் நாம் போய் “இந்த ப்ரகாரம் பண்ணுங்கோ, அந்த ப்ரகாரம் பண்ணுங்கோ” என்று கேட்டு என்ன ப்ரயோஜனம்? ஒரு பக்கம் இது நமக்குப் பயன் தராத வியர்த்தமான காரியமென்பதோடு, இன்னொரு பக்கம் ஆபீஸர்களிடம் போய்த் தப்பான சலுகை கேட்டு லஞ்சம் கொடுக்கிற மாதிரியும் ஆகிறது. ஏற்கெனவே பலதினுஸாக (கர்மா) பண்ணிவிட்டுப் பரமாத்மாவிடம் மாட்டிக்கொண்டு முழிப்பது போதாதென்று, “என் தீர்ப்பை மாற்றச்சொல்லி என் சிப்பந்திகளுக்கே லஞ்சம் கொடுக்கப் பார்க்கிறாயா?” என்று வேறே… [பயப்படுவது போல] வேண்டாண்டாப்பா, நமக்கு இந்த த்ரிமூர்த்தி நமஸ்காரம்! இவர்களுக்கு நமஸ்காரம் (பண்ணுவது) என்ற அபிப்ராயத்துக்கே ஒரு நமஸ்காரம்!* [சிரிக்கிறார்.]

ஆக ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரர்களுக்கு, அவர்களாக ஏதோ செய்யக்கூடியவர்கள் என்னும்போதுதான், புராணாதிகளில் பல பேர் செய்திருப்பதுபோல நாமும் நமஸ்காரம் செய்து உபாஸிக்க இடமிருக்கிறதே தவிர, அவர்களுக்கு மேலே ஒரு பரமாத்மா ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்று திட்டவட்டமாக அதிகார எல்லை போட்டுக் கொடுத்து அவர்கள் அதன்படியே ஆபீஸ் பண்ணுகிறார்களென்று வைத்துப் பார்க்கும்போது இடமில்லை. இவர்களுக்கு நமஸ்காரமென்றால் அது மேலதிகாரியான பரமாத்மாவுக்கு அபசாரம் என்றாகி, அவன் அதற்காகவும் வேறு வைத்துத் தீட்டுவதாகத்தான் ஆகும்.

‘இந்த மூன்று பேர் இப்படி மூன்று ஆபீஸ் பண்ணுவது மட்டுமில்லை, இதற்கான சக்தியைப் பரமாத்மாவிடமிருந்து பெற்றிருப்பது மட்டுமில்லை, இவர்களுக்குள்ளே உட்கார்ந்திருக்கும் பரமாத்மாவுடன் இவர்கள் அப்படியே ஒன்றிப்போய் அவனாகவே இருந்துகொண்டு ஸர்வசக்தனான அவனைப்போல எதையும் செய்யக்கூடியவர்கள்; கர்மாவை மன்னித்தும் மீறியும்கூடப் பரமாத்மா பண்ணுவதுபோல, அல்லது கர்மாப்படியே நடப்பதை நாம் அழாமல், மூஞ்சியைச் சுளிக்காமல் சாந்தமாக ஏற்றுக்கொள்ளும் பக்வத்தை அவன் தருவதுபோல இவர்களும் தந்துவிடுவார்கள்’ என்று வைத்துக்கொள்ளும்போதுதான் இவர்களை நமஸ்கரித்து உபாஸிப்பதற்கு இடமிருக்கிறது.

எந்த தெய்வத்தையுமே இப்படி முழுமுதற் தெய்வத்தின் ஒரு தோற்றமாகக்கொண்டு, ஆனாலும், ‘குறிப்பாக இந்தத் தோற்றத்தில் இது இந்தக் காரியத்துக்கு அதிகாரம் வஹிக்கிறது. ஆனால் நாம் பூர்ணமாகச் மனஸை இதனிடம் கரைத்து வேண்டிக்கொண்டால் அதுவும் மனஸு கரைந்து, தான் பரமாத்மாவிலே கரைந்து, அந்த பரமாத்மாவினாலேயே நமக்கு நடக்கக் கூடிய எதையும் ஸாதித்துத் தந்துவிடும்’ என்று உபாஸனை செய்வதுதான் முறை.


* ‘திக்குக்கு ஒரு நமஸ்காரம்’ என்று ஒரு விஷயத்திற்கு முடிவாக முற்றுப்புள்ளி வைக்கும் அர்த்தத்தில் சொல்கிறார்.

குரு பக்திக்கு ஈசன் செய்யும் அருள்

சிஷ்யன் எப்படி நினைத்தாலும், கடைத்தேறணுமென்று நினைத்தாலும் ஸரி, அதைப் பற்றித் தான் கவலைப்படுவதில்லை என்று வைத்துவிட்டாலும் ஸரி – இவனுக்கும் பரம ஞானம், கதி மோக்ஷம் கிடைத்தே தீரும். இவன் ஈச்வரனை நினைக்காவிட்டாலும், ஈச்வரன் இவன் பராபக்தியுடன் தாஸ்யம் செய்கிற குருவுக்குள் இருப்பதால், இவனுடைய பக்தியை வாங்கிக்கொண்டு – எல்லா நமஸ்காரமும் ஒரு கேசவனைத்தான் சென்றடைகிறது என்றபடி வாங்கிக் கொண்டு – இவனுக்குப் பரமாநுக்ரஹம் பண்ணி விடுவான். அவனுக்குத் தன்னை ஈச்வரனென்று பெயர் கொடுத்து, ஸ்தானம் கொடுத்து பக்தி பண்ணினால்தான் அநுக்ரஹிப்பது என்ற எண்ணம் கிடையாது. எவராயிருந்தாலும், எவரிடமாயிருந்தாலும் கொஞ்சங்கூடத் தன்னலமே கருதாமல் பூர்ணமான ப்ரேமையை வைத்து, ஆத்மார்ப்பணம் பண்ணி ஸேவை செய்தால் அது தனக்கே செய்யும் பூஜை என்று ஏற்றுக்கொண்டு க்ருபை செய்துவிடுவான்.

அவனையேகூட த்ரிலோக நாதன் என்று தெரிந்துகொள்ளாமல், அதனால் கை கட்டி வாய் புதைத்துப் பூஜை பண்ணாமல், ‘நம்மைச் சேர்ந்த, நம்மைப் போன்ற ஒரு ஆள்’ என்றே நினைத்து, ஆனாலும் தன்னலம் கலக்காமல் பூர்ண ப்ரேமையோடு ஸ்வாதீனமாகக் கலந்து பழகினாலும் மோக்ஷ பர்யந்தம் அநுக்ரஹம் புரிந்து விடுவான். கோபிகா ஸ்தீரீகள் வ்ருத்தாந்தத்தில் இப்படித்தான் பார்க்கிறோம். பக்தியின் உச்சஸ்தானம் எங்கே என்றால் அவர்களிடம்தான் என்று நாரதாதிகளும் சொல்லி நமஸ்காரம் பண்ணியிருக்கிறார்கள். க்ருஷ்ண பரமாத்மாவே அப்படித்தான் கொண்டாடியிருக்கிறான். அவர்களுக்கு அவன் பரமாத்மா என்ற ஸமாசாரமே தெரியாது. பரமாத்மா என்ற ஒன்றைப் பற்றியே அவர்கள் கேள்விப்பட்டதில்லை. ஜார சோரன் – ஸ்த்ரீகளின் ஹ்ருதயத்தை ப்ரேமையில் தவிக்க வைப்பவன் – திருடன், என்றுதான் அவனைத் தெரியும். ஆனாலும் அவனிடமே ப்ரேமை என்று ஸர்வஸங்க பரித்யாகம் பண்ணினார்கள். அந்த வார்த்தைகூட அவர்களுக்குத் தெரியாது! ஆனாலும் பண்ணினார்கள்! பகவான் அதையே மதித்து அவர்களை கோலோகம் என்கிற தன்னுடைய நித்யாநந்த விஹார பூமியிலே தன்னுடைய மஹிஷிகளாக்கிப் பெரிய உயர்வு கொடுத்தான்.

இந்தவிதமாக, குருவையே ஸகலமுமாக நினைத்து பக்தி பண்ணிவந்தால், ஞானம், கதிமோக்ஷம் என்று ஒருவன் தவித்து வேண்டிக்கொள்ளாவிட்டாலும் ஈச்வரனே அவற்றை அநுக்ரஹம் செய்துவிடுவான். இவனுடைய கர்மாவையும் பார்த்து ஈச்வரன் செய்வது என்கிறபோது, சோதனைகள் வைக்கும்போது ‘டிலே’பண்ணிக்கொண்டே போகும் போது, குருவின் ஸஹாயம் இதையெல்லாம் ஸமாளிப்பதற்குப் பெரிய பக்கபலமாக இவனுக்கு உதவும். அதாவது குருவின் மனஸ் என்பது ஈச்வரனுக்கு வேறே மாதிரியாக கொஞ்சமோ நிறையவோ இருக்கிறதில் – அவனுடைய விளையாட்டிலே பரம அத்வைதாநுபூதிமான்களாக இருக்கப்பட்டவர்களுக்குக்கூடக் கருணா நிமித்தமாகவே கொஞ்சம் பேதமாகத் தங்களுடைய தனி மனஸு மாதிரி ஒன்று இருப்பதுண்டு. அநுபூதியிலே ரொம்ப மேலே போகாத குருக்களுக்கு இன்னம் ஜாஸ்தியாகவே த்வைத பாவம் இருக்கும். இப்படிக் கொஞ்சமாகவோ, நிறையவேயோ இருக்கிறதில் – குருவானவர்கள் சிஷ்யனின் கர்மாவுக்காக சோதனை, டிலே என்று ஈச்வரன் ரொம்பவும் செய்து விடாமல், அவனுடைய behalf -ல் தாங்களும் ஈச்வரனிடம் பிரார்த்திப்பார்கள். தங்களுடைய தபோ சக்தியையும் அதற்காகக் கொடுப்பார்கள். தங்களிடமே கூட சிஷ்யனின் கர்மாவை transfer செய்து கொண்டும் உபகரிப்பார்கள். ஈச்வரனிடம் நேராகப் பேசிப் பழகக் கூடியவர்களானால் அவனிடம் சிஷ்யனுக்காக மன்றாடுவதிலிருந்து மிரட்டுவது வரை எல்லாம் செய்வார்கள். முன்னேயே கதைகள் சொன்னேன்.

குருபக்தியின் அநுகூலங்கள்

ஸரி; ஆனால், வாஸ்தவத்திலேயே தோஷமில்லாமல், கொஞ்சங்கூட குணஹீனமில்லாமல், பரிபூர்ண சக்தி மயமாக ஒரு ஈச்வரன் இருக்கும்போது, அவனையே நேராக பக்தி பண்ணாமல், இந்த அம்சங்களிலெல்லாம் நம்மைவிட எவ்வளவு உசந்தவரானாலும் அவனைப்போல முழுக்க perfect என்று சொல்ல முடியாத ஒருவரை perfect – தான் என்று நம் பாவனையால் பூர்த்தி பண்ணுவித்து பக்தி செலுத்துவானேன் – என்று கேட்டால்…

ஈச்வர பக்தியைவிட குரு பக்தியில் இருக்கிற அட்வான்டேஜைச் சொல்கிறேன். முன்பே சொன்னேன். இன்னம் கொஞ்சம் சேர்த்துச் சொல்கிறேன். ஈச்வரன் கண்ணுக்குத் தெரியவில்லை. இவரோ தெரிகிறார். இவரோடு கலந்து பழகமுடிகிறது. நமக்கான நல்லது, பொல்லாததுகளை ஈச்வரன் வாய்விட்டுச் சொல்வதில்லை. இவர் கர்ம ச்ரத்தையாக எடுத்துச் சொல்லி முட்டிக் கொள்கிறார். நாமும் இவரிடம் ‘இப்படிச் செய்யலாமா, அப்படிச் செய்யலாமா?’ என்று நன்றாக வழிகேட்டுப் பெறமுடிகிறது. ஈச்வரனிடமிருந்து அப்படிப் பெற்றுக்கொள்கிற அளவுக்கு நமக்குத் தீவிர பக்தி ச்ரத்தை இருக்கிறதா?

அப்புறம், ஈச்வரன் என்றால் எங்கேயோ எட்டாத நிலையிலிருப்பதாலேயே, ஒரு பக்கம் அவனோடு நாம் கலந்து பழக முடியாது என்பதோடு, இன்னொரு பக்கம், கண்ணுக்கு – வாக்கு, மனஸு எல்லாவற்றுக்குமேதான் – எட்டாத நிலையிருக்கிற அவன் நாம் செய்வதையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கிறான்; அதனால் தண்டிக்க வேண்டியதற்கு தண்டிப்பான், அநுக்ரஹிக்க வேண்டியதற்கு அநுக்ரஹிப்பான் என்ற எண்ணமும் நமக்கு இல்லை. அவனுடைய பார்வையிலேயே இருக்கிறோமென்று தெரியாததால்தான் துணிந்து மனம் போனபடி எதுவும் பண்ணுகிறோம். தப்பு பண்ணினால் தண்டனை என்ற பயமில்லாமல் பண்ணுகிறோம். அப்படியே, நல்லதுசெய்வதென்றால் எந்த நல்லதானாலும் அதற்கு நாம் தேஹத்தாலோ த்ரவியத்தாலோ ஏதாவது விதத்தில் கொஞ்சமாவது ஸாக்ரிஃபைஸ் செய்யாமல் முடியாது; இப்படி ஸாக்ரிஃபைஸ் பண்ணுவானேனென்று இருந்துவிடுகிறோம். ‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்று பழமொழி இருக்கிறது. கொல்வது மட்டுமில்லை, நல்லது பண்ணுவதென்றாலும் அரசன் உடனே பொன், பொருள், ராவ்பஹதூர் – திவான் பஹதூர் – ஸர் வரைக்கும் பட்டம் கொடுக்கிறதுபோல தெய்வம் உடனே கொடுப்பதாகத் தெரியவில்லை. நம் புண்ய – பாப கர்மங்களின் நல்ல – கெட்ட பலன்கள் எத்தனையோ ஜன்மாந்தரங்களில் கோத்து வாங்கிக்கொண்டு போகும்படியாகத்தான் ஈச்வர தர்பார் நடக்கிறது. இப்படி எப்பவோ பண்ணியதற்கு எப்பவோ பலன் என்பதால், நாம் இப்படிப் பண்ணியதற்குத்தான் இது பலன் என்றே நமக்குத் தெரியாமல் போய்த் தப்பு பண்ணுவதிலும் குளிர்விட்டுப் போகிறது; நல்லது பண்ணுவதற்கும் உத்ஸாஹமில்லாமல் போகிறது.

குரு எப்படி இருக்கிறார்? நாம் தப்புப் பண்ணினால் உடனேயே எடுத்துச் சொல்லிக் கண்டிக்கிறார். நமக்கு உறைக்கும்படிக் கரித்துக்கூடக் கொட்டுகிறார். நாம் ஒரு தப்புப் பண்ணக்கூடிய நிலைமை ஏற்படும்போது, “இது குருவின் காதுக்குப் போய்விட்டால் என்ன ஆவது?” என்ற பயம் ஏற்பட்டு நம்மைக் கட்டிப்போடும். அவர் ஆத்மசக்தி நிறைந்த குருவாயிருந்தால் நாம் எங்கே என்ன தப்புப் பண்ணினாலும் அவர் தாமாகவே தெரிந்துகொண்டு விடுவார். அவ்வளவு சக்தியில்லாவிட்டாலும், அல்லது சக்தி இருந்தும் அதை வெளியில் காட்டாதவராக இருந்தாலும் – மநுஷ்ய விளையாட்டு விளையாடுவதில் பல குருக்கள் இப்படித் (தெரிந்தும் தெரியாத மாதிரி) இருப்பது முண்டு, இப்படி இருந்தாலும் – வேறே யாராவது சொல்லி நம் தப்பு அவருக்குத் தெரிந்துவிட்டால் அப்புறம் நம் கதி என்ன என்ற பயம் இருந்து கொண்டேயிருக்கும். அது நம்மைத் தப்பிலிருந்து தடுக்கும்.

இதேபோல நாம் ஒரு நல்லது பண்ணினாலும் குரு அதை உடனே தாமாகவேயோ, இன்னொருத்தர் சொல்லியோ தெரிந்துகொண்டு – அல்லது இது நாம் பண்ணிய நல்லதல்லவா? அதனால் நாமே எப்படியாவது அது அவர் காதில் விழுகிற மாதிரி செய்துவிடுவோம்! இப்படி ஏதோ ஒரு விதத்தில் அவர் தெரிந்துகொண்டு – நம்மை மெச்சி, விசேஷமாக ஆசீர்வாதம் அநுக்ரஹம் பண்ணி, மேலும் மேலும் உத்ஸாஹப்படுத்துவார். ஒரேயடியாக மெச்சினால் நமக்கு மண்டைக் கனம் ஏற்படுமென்பதால், ‘தப்புக்காக சிஷ்யனை வெளிப்படக் கண்டிக்கிறதுபோல, அவன் செய்யும் நல்லதற்காக வெளிப்பட ச்லாகிக்கக் கூடாது’ என்று வைத்துக் கொண்டிருக்கும் குருகூட ஸூக்ஷ்மமாக, ஆனாலும் சிஷ்யனுடைய மனஸுக்கு நிச்சயமாகத் தெரிகிறவிதத்தில், ஏதோ ஒரு மாதிரி தம்முடைய ஸந்தோஷத்தைக் காட்டி, அதற்காக ஒரு அநுக்ரஹம் செய்யத்தான் செய்வார்.

நாம் கடைத்தேற வேண்டுமானால் அதற்கு நம்முடைய பாப கர்மாக்களைக் குறைத்துக் கொண்டு, புண்ய கர்மாக்களைக் பெருக்கிக் கொண்டாலொழிய எப்படி ஸாத்யமாகும்? இதில் புண்ணிய கர்மாவைப் பெருக்கிக் கொள்வதற்கு ‘இன்ஸென்டிவ்’ (போனஸ் மாதிரி நம்மை உத்ஸாஹப்படுத்துவது), பாப கர்மாவைச் செய்தால் ‘டிஸ் இன்ஸென்டிவ்’ இரண்டுமே நமக்கு உடனுக்குடன் குருவின் தீர்ப்பில் தெரிவதுபோல ஈச்வரனின் தீர்ப்பில் தெரிவதில்லை.

இதற்கும் மேலே, நம்முடைய பாப சித்தத்தைக்கூட குரு என்ற ஒருவர் இருக்கும்போது அவரே, நாமாக சுத்தி செய்து கொள்வதைவிடச் சிறப்பாக நமக்காக சுத்தி செய்துதருகிறார். பாபத்தில் கொஞ்சத்தைத் தாமே கூட வாங்கிக் கொண்டு தீர்த்து வைக்கிறார். நம்மைவிடக் கெட்டியாக நமக்காக ப்ரார்த்திக்கிறார். நமக்காக ஈச்வரனிடம் முறையிடுகிறார், வாதிக்கிறார், ஸ்வாதீனமாக உத்தரவு போடுகிறார், சண்டைகூடப் பிடிக்கிறார் – என்றெல்லாம் சொன்னேன்.

இதனாலெல்லாம்தான் ஈச்வரனைக் காட்டிலும் அபூர்ணமான குருவாக இருந்தாலுங்கூட அவரையே பூர்ண ஈச்வரன் என்று வழிபடச் சொல்லி “குரு வாத்” (Guru-vad) என்றே (வட இந்தியாவில்) உயரக் கொண்டு வைத்திருப்பது.

இப்படி அன்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் குருவிடமே வைத்து விட்டவர்களுக்குத் தெரியும். பகவத் ஸ்மரணையை விடவும் குரு ஸ்மரணையிலேயே அதிக சாந்தி என்று.

அதெப்படி (பகவத் ஸ்மரணையைவிட குரு ஸ்மரைணயில் அதிக சாந்தி) இருக்க முடியுமென்றால்,

நம் பிரார்த்தனையை பகவான் கேட்கிறானா, நாம் பண்ணும் நல்லது கெட்டதுகளை அவன் பார்க்கிறானா என்றே நிச்சயமாகத் தெரியாதபோது, ‘நமக்கு அவன் விமோசனம் அளிப்பான்’ என்ற உறுதியில் உண்டாகிற சாந்தி, நிம்மதி எப்படி ஏற்படமுடியும்? ‘அநுக்ரஹிப்பானா, அநுக்ரஹிப்பானா?’என்று வெதுக்கு, வெதுக்கென்று மனஸ் அடித்துக் கொள்வதாயிருக்குமே தவிர ‘நமக்கென்ன பயம்? அவன் பார்த்துக் கொள்கிறான்’ என்ற த்ருட உறுதி, அதனாலே விச்ராந்தி, சாந்தி எப்படி ஏற்படும்? அப்பப்போ ஏற்பட்டாலும் ஸந்தேஹத்தில், அழுகையில், பயத்தில் அது அடித்துக் கொண்டு போய்விடுகிறது.

குரு சுச்ரூஷைக்கு என்றே தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் பயம், ஸந்தேஹம், அழுகை இல்லாமல் அவர்கள் பாட்டுக்கு நிம்மதியாக, “அவர் பார்த்துக்கொள்கிறார்” என்று இருப்பார்கள்.

பகவத் ஸ்மரணை என்னும்போது, அந்த பகவான் ஸமஸ்த ப்ராணிகளுக்கும் ஆனவர். எண்ணி முடியாத அத்தனைகோடி ஜந்துக்களில் நம்மைக் குறிப்பாகக் கவனித்து அவர் செய்வாரா, செய்வாரா என்றிருக்கிறது. அவர் பட்டுக்கொள்ளாமல் எங்கேயோ இம்பெர்ஸனலாக உட்கார்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. குருவோ நமக்கென்றே ஏற்பட்டிருப்பவராகத் தெரிகிறார். நம்மைக் கடைத்தேற்றவே இவர் கங்கணம் கட்டி கொண்டிருக்கிறார். உலகம் முழுதையும் கவனித்துக் கொள்கிற பெரிய ஆபீஸ் இவருக்கு இல்லாமல், தாம் நல்வழிப் படுத்தக் கூடியவர்களையே தம்மிடம் சேர்த்துக் கொள்பவராக இருப்பதால் அப்படிச் சேர்ந்த நம்மிடம் ‘பெர்ஸனல் அடென்ஷன்’ காட்டுபவராக இருக்கிறார். இவர் நமக்கு ரொம்பப் பெர்ஸனல்! நம் கஷ்டங்களிலெல்லாம் கலந்து கொள்கிறவராக இருக்கிறார். நம்மை கவனிப்பாரோ மாட்டாரோ என்றில்லாமல், “நமக்குன்னே ஏற்பட்டவர்” என்று உறவு கொள்கிறோம்.

ஈச்வரன் பண்ணுவதெல்லாம் நம்முடைய ஞானமில்லாத பார்வையில் ஏதோ யந்த்ர கதியில் இயற்கை பண்ணுகிறாற்போலவே தெரிகிறது; அவன் கர்த்தா என்று தெரியவில்லை. நமக்கு ஞானம் வருகிற வரையில், அவன் அநுக்ரஹம் செய்கிறபோதுகூட, யத்ருச்சையாக (தற்செயலாக) நடந்திருக்குமோ, என்னவோ என்று ஸந்தேஹமாக இருக்கிறது. ‘பெர்ஸனல் டச்’ குரு செய்வதில்தான் பிரகாசித்துக் கொண்டு தெரிகிறது; அதனால் நமக்குத் தெம்பும், விச்ராந்தியும் தருகிறது.

அத்தனை தினுஸான பக்ஷணம் பணியாரங்களும் கொட்டிக் கிடக்கிறது, ஆனால் ஆள் யாருமில்லை, நாமே எடுத்துத் தின்கிறோம் என்றால் எப்படி இருக்கிறது? ஏதோ கொஞ்சம் கூழ்தான் என்றாலுங்கூட ஒரு தாயார்க்காரி, “அப்பா கொழந்தே, சாப்பிடு” என்று தன் கையால் கொடுக்கிறாள் என்னும்போது அது எப்படி இருக்கிறது? இந்த ‘பெர்ஸனல் டச்’ சுக்கு இருக்கிற ஆனந்தம், பஞ்ச பக்ஷ்ய ஆஹாரத்தில் கிடைக்குமா? அதையும் யாரோ பண்ணித் தான் இருக்கிறார்கள். நாம் சாப்பிட வேண்டுமென்றே கொட்டிவைத்தும் இருக்கிறார்கள். ஆனால் பண்ணினவர் தெரியாவிட்டால் பண்டத்தின் ரஸாநுபவம் ரொம்பக் குறைந்துவிடுகிறது. ஈச்வராநுக்ரஹத்துக்கும், குரு அநுக்ரஹத்துக்கும் இதுதான் வித்யாஸம்.

ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகளைப் போல, இன்னம் பல மஹான்களைப் போல அவனுடைய அநுக்ரஹத்தை அவனே ஸாக்ஷாத்தாகச் செய்வதாகக் கண்டு கொண்டு பெறுகிற வரையில், எத்தனை அருள் கிடைத்தாலும் கொஞ்சம் ஸந்தேஹம், கேள்வி புறப்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.

இன்னொன்று வேறே! நல்லது கெட்டது எல்லாமே அவனிடமிருந்துதான் என்கிறார்கள். மாயையை ஏவி விட்டு இத்தனை கஷ்டங்களை உண்டாக்குவதும் அவனுடைய விளையாட்டுத்தான் என்கிறார்கள். பராசக்தி ஞானியைக்கூட பலவந்தமாகப் பிடித்திழுத்து மோஹத்திலே தள்ளுகிறதுண்டு என்று பயமுறுத்துகிறார்கள்1. ஈச்வர ஸங்கல்பம் நமக்குத் தெரியவே தெரியாது; புரியவே புரியாது என்று முடித்து விடுகிறார்கள். ‘குடைராட்டினத்தில் பொம்மைகளை வைத்து இஷ்டப்படி சுற்றுகிற மாதிரி ஈச்வரன் ஸர்வ ப்ராணிகளையும் மாயையில் வைத்து ஆட்டுகிறான்’ என்று பகவானே சொல்கிறான்2. ஆனதினாலே, அவனை ஸ்மரிக்கும் போது, ‘நம்மகிட்ட எப்படி விளையாடுவானோ? கரைதான் சேர்ப்பானோ? இன்னும் நன்னாதான் அமுக்குவானோ?’ என்றும் பயம் ஏற்பட இடமிருக்கிறது.

குரு இப்படியில்லை. ஈச்வரன் ஞானம் மாயை இரண்டுமாக இருக்கிறாற்போல அல்ல, குரு. ஞானத்துக்கு மாத்திரமே அவர் இருக்கிறார். மாயையைப் போக்கி ஞானத்தைத் தரவே ஏற்பட்டதுதான் அவருடைய ஆபீஸ். கெடுதலானதற்கும் ஆச்ரயமாயிருப்பவர், மாயையை ஏவி விட்டுக் கஷ்டங்களையும் கொடுத்து வேடிக்கை பார்ப்பவர் – என்று அவரைப் பற்றிச் சொல்லவே முடியாது. நமக்குக் கெடுதாலானவற்றை நீக்கி, நம்முடைய கஷ்டங்களைப் போக்கி, மாயையிலிருந்து நம்மை இழுத்துப் போடவே வந்துள்ள அவரைப் பற்றி ஸந்தேஹம், பயம் தோன்ற இடமேயில்லை.

இதனாலெல்லாந்தான் பகவத்ஸ்மரணையைக் காட்டிலும் குரு ஸ்மரணை அதிக சாந்தி என்பது.

ஸ்மரித்து, த்யானித்துப் பார்த்தவர்களுக்குத் தெரியும். ஒருவரை ஸ்மரிப்பது, த்யானிப்பது என்றால் என்ன? அவருடைய ரூபத்தை, கார்யத்தை, குணத்தை நினைத்துப் பார்த்துப் பார்த்து மனஸை அப்படியே அவரிடம் கரைந்து நிற்கும்படியாகச் செய்வது. கார்யமென்று எடுத்துக் கொண்டுதான் இத்தனை நாழி சொன்னேன். ஈச்வரனின் கார்யம் எதுவும், ‘இது அவனுடையதுதான்’ என்று நமக்குத் தீர்மானமாகத் தெரியாததாகவே இருக்கிறது. நமக்கும் அவனுக்கும் நேர் ‘டச்’ இல்லை. வேறு பக்தர்களுக்கு அவன் செய்த அநுக்ரஹ கார்யங்களையே நினைக்கும்படிதானிருக்கிறது. அது நம் மனஸை நிரப்பிவிட்டால் விசேஷம்தான். த்ரௌபதிமான ஸம்ரக்ஷணம், குசேலாநுக்ரஹம், கஜேந்த்ர மோக்ஷம் – இப்படி எத்தனையோ, எல்லா தெய்வங்களைப் பற்றிய புராணங்களிலும் இப்படி அநேக அநுக்ரஹங்கள், இன்னம் பலவிதமான லீலா கார்யங்கள்… ராஸ லீலை, ஈச்வரனானால் ஆனந்த நடனம் என்றிப்படி; ஞானோபதேசம்: க்ருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்குப் பண்ணியது, தக்ஷிணாமூர்த்தி ஸநகாதிகளுக்குப் பண்ணியது – என்றிப்படி பலவிதமான கார்யங்கள் இருக்கின்றன. ஆனால் நம்முடைய அரைவேக்காட்டு நிலையில் அவற்றில் நம்மால் எவ்வளவு தூரம் முழுக முடிகிறது? வேறே யார் யாருக்கோ அவன் பண்ணியதில் நம்மால் எவ்வளவுக்கு மன நிறைவு பெற முடிகிறது? ‘அவர் எங்கே, நம்ப எங்கே? அதெல்லாம் நமக்குக் கிடைக்குமா?’ என்று குறைந்துகொண்டு வருத்தப்படுவதாகக்கூட ஆகலாம். ஆனால் குரு ஸ்மரணை என்று நினைத்துப் பார்த்தால் நமக்கே அவர் நேராக எத்தனை செய்திருக்கிறாரென்று – நாம் மட்டும் நன்றியறிவு மறக்காதவர்களாக இருந்தால் – அநேகம் அகப்படாமல் போகாது. நாம் யோக்யதை மீறி ஆசைப்படுவதில் அநேகம் அவர் பூர்த்தி செய்யாமலும் இருக்கலாம். ஆனால் நம் ஸ்திதி என்ன என்கிற நினைப்பு இருந்து, நன்றியறிவும் இருந்துவிட்டால் நமக்கு அவர் செய்து வருவதே அதிகப்படி என்று தெரியும். நாம் சீர்ப்பட வேண்டுமென்று எவ்வளவு முட்டிக் கொள்கிறார்? அது தவிர, எத்தனை வைராக்யம் சொன்னாலும் இந்த மநுஷ ரீதியில் ஒரு வாஞ்சை, வாத்ஸல்யம் என்று நம் நிலையில் ஆலம்பனம் வேண்டியிருக்கிறதே, இதையும்கூட எவ்வளவு நன்றாகப் பூர்த்தி செய்கிறார்? நம்முடைய யோக க்ஷேமங்களை எவ்வளவு அக்கறையாகக் கேட்டுக் கொள்கிறார்? நாம் மறந்து போயிருக்கும்போதுகூட, (அவரிடம்) போயிருந்தவர்களிடம் நம்மைப்பற்றி விசாரித்து ப்ரஸாதம் கொடுத்தனுப்பியிருக்கிறாரே! ‘வெயில்லே போகாதேடா! பட்டினியாப் போகாதேடா!’ என்று எத்தனை ப்ரியமாகச் சொன்னார்! – என்று இப்படி நம்மைப் பற்றியதாகவே குரு செய்திருக்கும் அநேக கார்யங்களைப்பற்றி ஸ்மரித்து ஆனந்தமாக நிறைந்திருக்க முடிகிறது.

ரூபம் என்று ஸ்மரிக்கும்போது, ஈச்வரனை தெய்வத்தின் ஒரு குறிப்பிட்ட மூர்த்தியாக த்யானம் செய்யும்போது, அந்த மூர்த்தி பற்றி ஏற்கெனவே கொடுத்திருக்கிற வர்ணனைப்படி பண்ணிப் பார்க்கிறோம். அப்படியே மனஸ் போய் அந்த ரூபத்திலே ஒட்டிக்கொண்டு நின்றுவிட்டால் உசத்திதான். நமக்கு அப்படி முடிகிறதா? புராணங்களிலும், மந்த்ர சாஸ்த்ரங்களிலும் வர்ணனை என்று கொடுத்திருப்பதில் பாதாதிகேசம், கேசாதி பாதம் விஸ்தாரமாக அங்க அங்கமாக லக்ஷணங்களைச் சொல்லியிருக்கும். ‘பாதாதி கேசம்’ என்றால் காலிலிருந்து தலைவரையில். புருஷ ரூபத்தில் உள்ள தெய்வங்களை இப்படித்தான் வர்ணிப்பார்கள். பாதத்தில் ஆரம்பித்து வரிசையாக மேலே கணுக்கால், முழங்கால், இடுப்பு, மார்பு, கழுத்து, முகம், என்றுபோய் சிரஸின் வர்ணனையோடு முடிப்பார்கள். கேசாதி பாதம் என்ற முறையிலே ஸ்த்ரீ தெய்வங்களை வர்ணிப்பார்கள். இது சிரஸில் ஆரம்பித்து வரிசையாகக் கீழே நெற்றி, கண், மூக்கு, வாய், கழுத்து, இடுப்பு என்று பாதம் வரையில் வர்ணிப்பது. இப்படி எந்த தெய்வமானாலும், இத்தனை கை… நாலு, எட்டு பதினெட்டு என்று வகைகள்; ஒவ்வொரு கையிலும் இன்ன ஆயுதம்; இப்படியிப்படி அலங்காரம்: கங்கை, சந்த்ரன், பாம்பு, புலித்தோல் – பீதாம்பரம், வனமாலை, கௌஸ்துபம்; இன்ன வாஹனம் – ரிஷபம், ஸிம்ஹம், கருடன், மூஷிகம், மயில் என்று எதுவோ ஒன்று, என்பதாக நீள நெடுக details (விவரங்கள்) சொல்லியிருக்கும். ஒவ்வொரு ரூபத்தைப் பற்றியும் இப்படிப் பெரிய லிஸ்ட் வைத்துக்கொண்டு நாம் த்யானிக்கும்போது, ‘இன்னம் அந்த அம்சம் இருக்கே, இந்த அம்சம் இருக்கே!’ என்று மனஸு அலை பாய்ந்தபடியும் ஆகலாம். சாஸ்த்ரங்களில் என்ன சொல்லியிருக்கிறதென்றால் – க்ருஷ்ண பரமாத்மாவும் உத்தவ ஸ்வாமியிடம் அப்படித் தான் சொல்லியிருக்கிறார்3 – அங்க அங்கமாக முழு ரூபத்தையும் கொஞ்சம் ரஸித்துவிட்டு அப்புறம் புன்சிரிப்போடு விளங்குகிற முக மண்டலத்திலேயே ‘கான்ஸென்ட்ரேட்’ பண்ண வேண்டுமென்று சொல்லியிருக்கிறது. ஆனால் நாம் த்யானம் என்று உட்காரும் சித்தே (சிறிது) நாழியிலே அங்க அங்கமாக நின்று ரஸிக்கப் பொழுது இருக்குமா என்பதே ஸந்தேஹம். அப்புறம், மந்தஹாஸம் (புன்சிரிப்பு) அல்லது கருணா கடாக்ஷம் என்று ஒன்றிலேயே சித்தத்தை நிறுத்த முடியுமா என்பதும் அதைவிட ஸந்தேஹம். இத்தனை புஜங்கள், ஆயுதங்கள், அணிபணிகள் வாஹனம் என்றிருப்பதில் ஒன்றை நினைத்தால், ‘இன்னொண்ணை மறந்துட்டோமே!’ என்று சித்தம் நாலா திசையில் ஓடலாம். கங்கையை நினைக்கும்போது, சந்த்ரன் போச்சே என்று! நெற்றிக் கண்ணை நினைத்தால், நீலகண்டம் போச்சே என்று! மானை நினைத்தால் மழு போகிறது! சங்கத்தை நினைத்தால் சக்கரம் மறைந்து போகிறது! கௌஸ்துபத்தை நினைத்தால் ஸ்ரீவத்ஸம் மறைந்து போகிறது! கமலக்கண்ணை நினைத்தால் சிரித்த வாய் மறைகிறது! இந்த மாதிரி ஆவதால், நின்று, நிலைத்து, நிறைவுண்டாகும்படி ரூப த்யானம் பண்ண முடியாமல் ஆகலாம். சாஸ்த்ர ப்ரகாரமான இத்தனை வர்ணனை நமக்குத் தெரியாமலிருந்தாலே தேவலை போலிருக்கிறதே என்று நினைக்கும்படிகூட ஆகலாம்.

ஆனால் குரு என்று எடுத்துக்கொண்டு ரூப த்யானம் செய்ய ஆரம்பித்தால் நேரே பழகின ஸமாசாரமானதால் பூர்ணமாக ஒரு ஆகாரத்தில் (வடிவத்தில்) மனஸ் அப்படியே நின்றுவிடுகிறது. அம்மா, அப்பா, ஸ்நேஹிதர், ஆபீஸர் – நேரிலே பார்த்துப் பழகுகிற யாரானாலும் அவர்களை நினைக்கும்போது, தனித்தனியாகக் கண், மூக்கு என்றா நினைக்கிறோம்? ஆயுதம்- (சிரித்து) அம்மாவானால் கரண்டி, ஆபீஸரானால் ஃபௌண்டன் பேனா என்று இப்படியா சித்தத்தில் கொண்டுவந்து பார்க்கிறோம்? இப்படியெல்லாமில்லாமல் மொத்தமாக ஒரு ‘ஐடியா’ வாகத்தானே பார்க்கிறோம்?

இன்னம் சொல்லப்போனால், முழு ரூபத்தையும் ஒருமாதிரியாகப் பார்ப்பது மட்டுமில்லை, அவர்களுடைய கார்யம், அவர்களுடைய ஸ்வபாவம், மனப்பான்மை நம்மிடத்தில் அவர்களுடைய பாவம், அவர்களிடத்தில் நம்முடைய பாவம் என்று எல்லாமாகக் கலந்து ஒரு total effect ஏற்படும் விதத்திலேயே நமக்கு நேரிலே தெரிந்தவர்களைப் பற்றிய சிந்தனை ஏற்படுகிறது. இப்படித்தான் குருவை ஸ்மரிக்கிறோம். ரூபத்தில் பல அம்சங்களென்று ஒன்றுக்கொன்று மனஸ் பாயாதது மட்டுமில்லை; ரூபம், கார்யம், குணம் என்ற பிரிவுகூட இல்லை! Total ஆக ஒரு பாவம், ‘ரொம்ப பெர்ஸனல், ரொம்ப உறவு, நாம் கடைத்தேறுவதற்கென்றேயான கருணை’ என்று சித்தம் ஒன்றிலேயே போய் – சிதறியோடாமல் – குரு த்யானத்தில் ஆனந்தமாக நின்றுவிடுகிறது. தெய்வ மூர்த்திகளின் ரூபத்தை கர்ணாந்த விச்ராந்த நேத்ரம் (காதளவோடிய கண்கள்) , ஆஜாநுபாஹு என்றெல்லாம் வர்ணித்திருக்கிறது போல இல்லாமல் ஒரு குரு கண் நொள்ளையாக, கட்டை குட்டையாக, கரடுமுரடான சரீரமாக இருந்தால்கூட அந்த ரூபத்தை நினைத்தாலே ஒரு சாந்தி, ஒரு ஆனந்தம் ஏற்படுகிறது. அம்மா அழகாக இருக்கிறாளா, எம். ஏ. டிகிரி வாங்கியிருக்கிறாளா என்று பார்த்தா அவளிடம் ப்ரியமாயிருக்கிறோம்? அப்படி குருவிடமும் ஏற்படுகிறது. எத்தனை குரூபியாயிருந்தாலும் அம்மாவுக்குக் குழந்தையிடம் வாத்ஸல்யம் மாதிரி குருவுக்கு சிஷ்யனிடம் காருண்யம் பொங்குகிறது. அவள் உடம்புக்குப் பால் கொடுத்தால் இவர் ஞானப் பாலூட்டுகிறார். அவரை ஸுலபமாகச் சித்தத்தில் நிறுத்தி, ஸ்மரித்து, ஆனந்தப்பட முடிகிறது.

ஒன்றுதான் – பகவான், ஆசார்யன் வேறே வேறே இல்லை. ரொம்ப மேலே போய்விட்டால் சிஷ்யன்கூட வேறே இல்லை. ஆனால் அது இப்போது நாமிருக்கும் தசையில் வெறும் சவடால்தான். நன்றாகப் பக்குவப்பட்டவர்களுக்கே என்ன சொல்லியிருக்கிறதென்றால், “எல்லாவற்றிடமும் (அவை தன்னையின்றி வேறில்லை என்னும்) அத்வைத பாவனையை வைத்துக்கொள். ஆனாலும் இதற்கு ஒரு விலக்கு இருக்கிறது. குருவிடம் மட்டும், ‘அவர் பெரியவர், நான் சின்னவன்’ என்று த்வைதமாகவே பழகு. குருவோடு அத்வைதம் பாராட்டுவதென்று ஒருபோதும் வைத்துக் கொண்டுவிடாதே” என்றே உபதேசித்திருக்கிறது. அப்படியிருக்கும்போது நம் விஷயத்தைச் சொல்லவே வேண்டாம். நாம் குருவை வேறேயாகத்தான் பார்க்கமுடியும். அதில் தப்பில்லை. ஆனால் அவர் ஈச்வரனுக்கு வேறேயில்லை என்று பார்க்கப் பழகவேண்டும்.

ஈச்வரனும் குருவும் வேறு இல்லை. ஈச்வரனே தன்னைக் காட்டிக்கொடுக்கிற குரு ரூபத்தில் வருகிறான். இப்படி நம்பி ஒருவரை குருவாக வரித்துவிட்டால் பலன் நிச்சயம்.


1 “துர்க்கா ஸப்தசதீ” : 55 – 6

2 கீதை : XVIII – 61

3ஸ்ரீமத் பாகவதம் XI. 14 – 43

நம் அறிவை மீறிய மஹான்களின் போக்கு

மகான்களின் போக்கு, ஈச்வரனின் போக்கு நம்முடைய சின்ன புத்திக்குப் புரியாது. ஆகையால், நாம் இந்த புத்தியைக் கொண்டு முடிவு பண்ணி அபசாரத்துக்கு ஆளாகிவிடக்கூடாது. நம் புத்திக்கும் புரிகிற மாதிரி சிலவற்றுக்குக் கதை, புராணங்களில் பெரியவர்கள் காரணம் காட்டியிருக்கிறார்கள். அவற்றை நம்பி எடுத்துக் கொள்ளவேண்டும்.

ஸுந்தரமூர்த்தி பரவை, சங்கிலி ஆகியவர்களிடம் ப்ரேமையாயிருந்தாரென்பதால் சட்டென்று அவரைப் பற்றிக் கன்னாபின்னா என்று நினைத்துவிடக்கூடாது. அவர்கள் அன்ய ஜாதி, அதிலும் ஒருத்தி போகப்படாத தெருவை, வீட்டைச் சேர்ந்தவள், என்பதால் அவர்களையும் குறைவாக நினைத்துவிடக் கூடாது. பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் என்று அவர்களை நிரம்ப மரியாதை கொடுத்தே தொன்று தொட்டுச் சொல்லி வருவதிலிருந்து அவர்கள் எத்தனை உயர்ந்த சீலமும் பக்தியும் உள்ளவர்களாயிருந்திருக்க வேண்டுமென்று புரிந்துகொள்ளலாம் ‘அவர்கள் யார்? ஸுந்தரமூர்த்தி யார்? சாஸ்த்ரோக்தமாக அவர் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போனபோது வ்ருத்த வேதியராக வந்து ஓலையைக் காட்டி அவரைத் தன் அடிமை என்று ரூபித்து அவர் க்ருஹஸ்தாச்ரமம் போகாமல் தடுத்த ஈச்வரனே அப்புறம் அவரை இந்தப் பெண்களிடம் சேர்த்து வைப்பானேன்? அதற்காகப் போகப்படாத இடத்துக்குத் தானே தூது போவானேன்?’ என்பதற்கெல்லாம் ‘பெரிய புராண’ த்தின் ஆரம்பத்திலேயே பதிலிருக்கிறது.

ஸுந்தரமூர்த்தி பூலோகத்தில் பிறப்பதற்கு முன்பு கைலாஸத்தில் ஈச்வரனுக்கு நெருங்கிய பார்ஷதராக (கிங்கரராக) இருந்தவர். அப்போது பரவை நாச்சியாரும் சங்கிலி நாச்சியாரும் அம்பாளுக்கு ஸகிகளாக இருந்தனர். ஒரு நாள் அவர்கள் இரண்டு பேரையும் ஸுந்தரர் — அப்போது ஆலால ஸுந்தரர் என்று அவருக்குப் பெயர் — அவர்களை நந்தவனத்தில் பார்த்தார். பரஸ்பரம் அவர்களுக்குள் ப்ரேமை ஏற்பட்டுவிட்டது. கைலாஸத்தில் இந்த மாதிரி காதல், கீதல் என்று நடப்பது ரொம்பத் தப்பு என்றுதான் ஈச்வரன் அவர்களை பூலோகத்தில் பிறக்கும்படிச் சபித்து, அதிலேயே கருணையோடு அந்த ஜன்மாவில் அவர்கள் தங்கள் ஆசையையும் பூர்த்தி செய்துகொள்ளட்டும் என்று அநுக்ரஹம் பண்ணினான்.

இம்மாதிரி, நமக்கு விசித்ரமாக, ஒவ்வாததாகத் தோன்றுகிற பலவற்றுக்குக் காரணம் புராணங்களில் கொடுத்திருக்கிறது. நாம்தான் அவஸரப்பட்டு, ஒன்றையும் பார்க்காமல் ‘க்ரிடிஸைஸ்’ பண்ண ஆரம்பித்துவிடுகிறோம். சிலவற்றுக்குக் காரணம் சொல்லியிருப்பதிலிருந்தே, சொல்லாமல் விட்டவற்றுக்கும் ஏதாவது காரணம் இருக்க வேண்டுமென்று புரிந்துகொள்வதுதான் முறை.

பரவை, சங்கிலி விஷயமாக ஸுந்தரமூர்த்தியைப் பற்றிக் குறைத்து நினைப்பவர்கள் இன்னம் சில விஷயங்களையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். பத்னி என்று ஒரு கன்னிகைக்கு அவர் சாஸ்த்ரோக்தமாகத் தாலிகட்டி தாம்பத்தியம் ஆரம்பிக்கவிருந்த ஸமயத்தில்தான் ஈச்வரன் அவரை இழுத்தான். அவரும் உடனே அவனுக்கு “மீளா அடிமை” என்று சொல்லிக்கொண்டு குடும்ப வாழ்க்கையைத் துச்சமாகத் தள்ளிவிட்டு கோவில் கோவிலாகச் சுற்றப் புறப்பட்டுவிட்டார். அப்போது ஒரு ஊருக்கு அவர் போன போது அங்கேயிருந்த கோட்புலி நாயனார் என்ற பெரியவர் நல்ல குணவதிகளாகவும், ஸெளந்தர்யவதிகளாகவும் இருந்து தம்முடைய இரண்டு புத்ரிகளையும் ஸுந்தரமூர்த்திக்கு அர்ப்பணம் பண்ணி, “இவர்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். சிங்கடி, வனப்பகை என்ற அந்தப் பெண்களும் வந்து அவரை நமஸ்கரித்தார்கள். அப்போது ஸுந்தரர் பரம சுத்தமான மனஸோடு, “இவர்களை என் புத்ரிகளாக ஏற்றுக்கொள்கிறேன்” என்றே சொன்னார். இதற்கு அகச்சான்றாக அவ்வூரிலே பாடிய பதிகத்தில் தம்மை “சிங்கடியப்பன்” என்றே சொல்லிக்கொள்கிறார்1.

இன்னொரு angle-ல் (கோணத்தில்) சொல்கிறேன்: மஹான்களுடைய சரித்ரம், வாழ்க்கை வரலாறு என்பதில் வெளியிலே நடக்கிற ஸம்பவங்களைப் பார்க்கிறோம். அந்த ஸம்பவங்கள் அவர்கள் மனஸை எப்படித் தொட்டது, — தொட்டதா தொடாமலே இருந்ததா? — என்றும் பார்க்கிறோம். ஆனால் இதற்கெல்லாம் உள்ளே அவர்களுடைய ஹ்ருதய அந்தரங்கம் எப்படியிருந்தது என்று தெரிந்தால் தான் அவர்களுடைய உண்மையான பெருமை தெரியும். அது இந்த வெளிவாழ்க்கையில் தெரியாது. தெரிந்தாலும் கொஞ்சம் ஏதோ லேசாகத்தான் தெரியும். பின்னே அவர்களுடைய அந்தரங்கம், உயிர்நிலையான பண்பு, எதிலே தெரியுமென்றால் அவர்கள் தங்களுடைய அந்தராத்மாவிலிருந்து பொங்கி வருவதாக அருள் வேகத்தில் எழுதி வைத்திருக்கிறார்களே, அந்த நூல்களில் — பாடி வைத்திருக்கிறார்களே, அந்தப் — பாட்டுகளில் தான் தெரியும்.

ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுடைய வெளிவாழ்க்கை எப்படி வேணுமானால் இருக்கட்டும். அவருடைய உள் மனஸ், அந்தரங்கம் எப்படி இருந்தது என்றால் அதற்கு அவருடைய பாடல்களைத்தான் பார்க்கவேண்டும். இப்படியும் ஒரு உத்தமமான பக்தியா என்று நாம் குழைந்து போகிற மாதிரி அவர் தேவாரம் பாடியிருக்கிறார். எத்தனையோ நூற்றாண்டுகளாக, எத்தனையோ தலைமுறைகளை இப்படிக் குழைத்து வருகிறவர் பரம பக்த சிகாமணியாகத்தான் இருந்திருக்க வேண்டுமென்று நாம் புரிந்துகொள்ளாவிட்டால் நம்மை விட அசடு இல்லை என்றே அர்த்தம்.

“அன்னே ! உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே “

” அத்தா ! உனக்காளாய் …”

“… உனை நான் மறக்கினும் சொல்லு(ம்) நா நமச்சிவாயவே”2

என்று இப்படி அநேகம், நம்முடைய கருங்கல் மனஸையும் நெகிழச் செய்கிற மாதரி பாடி வைத்திருப்பவரைப் பற்றி அபசாரமாக நினைத்துவிடப்படாது.

ஈச்வரனையே ஏவினார், ஏசினார் என்றால் அதுவும் அவன் எவ்வளவு ஸெளலப்யன் என்று காட்டுவதற்குத்தான். அவனே தன்னை வழிபடுவதிலுள்ள பல மார்க்கங்களில் இவரை ஸகா மார்க்கத்தில் ஸ்நேஹிதனாகப் பழக வைத்ததால்தான் அவனிடம் உரிமையோடு சண்டைகூடப்போட்டார். ‘தம்பிரான் தோழர்‘ என்றே அவருக்கு ஒரு பேர். ஸாக்ஷாத் ஈச்வரனிடம் இப்படி வன்தொண்டராக இருந்த அவரேதானே அவனுடைய அடியார்களான அறுபத்து மூவருக்கும் தம்மை “அடியேன், அடியேன்” என்று ஒரே அடக்கமாகத் தெரிவித்துக்கொண்டு, நமஸ்காரம் பண்ணித் ‘திருத்தொண்டைத் தொகை’ பாடியிருக்கிறார்?


1 திருநாட்டியத்தான் குடிப் பதிகமான” பூணாணாவதோர்”

2முறையே “பொன்னார் மேனியனே”, “பித்தா பிறை சூடி”, “மற்று பற்று” என்ற பதிகங்களில் வருபவை.

காஞ்சியிலுள்ள “திவ்ய தேசங்கள்”

காஞ்சீபுரத்துப் பெருமாள் கோவில் என்று சொன்னால் இப்போது பிரதானமாகவுள்ள வரதராஜாவைத்தான் நினைக்கத் தோன்றுகிறதென்றாலும், வாஸ்தவத்தில் அந்த நகர எல்லைக்குள்ளேயே ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்த “திவ்யதேசங்க” ளாகப் பதினாலு விஷ்ணுவாலயங்கள் இருக்கின்றன1. சைவத்தில் “பாண்டிப் பதினான்கு” என்று தெற்கு ஜில்லாக்கள் அத்தனையிலுமாகப் “பாடல் பெற்ற ஸ்தல” ங்கள் பதினாலுதான் இருக்கின்றனவெனில்,2 வைஷ்ணவத்திலோ தொண்டை மண்டலத்தின் ராஜதானியான காஞ்சீபுரம் ஒன்றுக்குள்ளேயே பதினான்கு முக்யமான விஷ்ணு ஆலயங்கள் இருக்கின்றன! அவற்றில் ஸமீபகாலமாகச் சிற்பச் சிறப்பு, சரித்ர முக்யத்வம் ஆகியவற்றால் வைகுண்டப் பெருமாள் கோயில் அறிவாளிக்களுக்கிடையில் கொஞ்சம் ப்ரபலமாகி வருகிறது. அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்கிறேன்.


1திருக்கச்சி எனும் அத்தியூர் (இதுதான் வரதராஜராலயம்), அட்டபுயகரம், திருத்தண்கா (தூப்புல்), வேளுக்கை, பாட்கம், திருநீரகம், நிலாத்திங்கள் துண்டம், ஊரகம், திருவெஃகா திருக்காரகம், திருக்கார் வானம். திருக்கள்வனூர், திருப்பவளவண்ணம், பரமேச்சுர விண்ணகரம் ஆகியன.

2மதுரை, திருப்புனவாயில், குற்றாலம், திரு ஆப்பனூர், திருவேடகம், திருநெல்வேலி, ராமேஸ்வரம், திருவாடானை, திருப்பரங்குன்றம், திருச்சுழியல், திருப்பத்தூர், திருக்கானப்பேர் (காளையார் கோயில்), திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை), திருப்பூவணம் ஆகியன.

அநுபவ ஞானம்

‘பிரகாசிக்கும்’ என்றால் உள்ளர்த்தங்கள் மூளைக்குப் புரியும் என்று அர்த்தம் செய்துகொள்வதோடு முடித்து விடக்கூடாது. மூளைக்குப் புரியும்படியாக ரஹஸ்யார்த்தங்களை குருவே சொல்லிவிடுவார். பக்தியினால்தான் இந்த மூளைக் கார்யத்தைப் பண்ணிக்கொள்ளவேண்டும் என்றில்லை. பின்னே என்ன அர்த்தம் என்றால், உபதேசத்தின் ஸாரமாக எந்த அநுபவம் இருக்கிறதோ அது சிஷ்யனின் ஹ்ருதயத்தில் பிரகாசிக்கும். [சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டுத் தொடர்கிறார்கள்.]

நன்றாக யோசித்துப் பார்த்தால், ‘ரஹஸ்யார்த்தங்கள் நன்றாக ப்ரகாசிக்கும்’ என்று சொல்வதன் தாத்பர்யம் என்னவாக இருக்கமுடியும்? மறைவாகவோ, சுருக்கமாகவோ, வ்யங்கியமாகவோ (உள்ளுறை பொருளாகவோ), ரொம்பவும் சிக்கலான கருத்திலோ நடையிலோ சொல்லியிருக்கிற விஷயங்கள் பளிச்சென்று தெளிவாகிவிடும் என்பதுதான் தாத்பர்யமா? அப்படியும் வைத்துக் கொள்ளலாம். ஈச்வர க்ருபையில், குரு க்ருபையில் இஹ – பர நலம் எதுவுமே கிடைக்க முடியும் என்னும்போது, நம் மூளையும் நன்றாகச் சாணை தீட்டிய மாதிரி தீட்டப்பெற்று மேலே சொன்னது போல மறைபொருளை, சிக்கலான விஷயத்தை ஸ்பஷ்டமாகப் புரிந்துகொண்டு விடுகிற திறமையைப் பெறக் கூடும்தான். ஆனால் ஆலோசித்துப் பார்த்தால் இப்படி மூளையின் சாதிப்போடு விஷயத்தை முடித்துவிட்டால் அது பிரயோஜனமில்லை என்று தெரியும். அத்யாத்ம உபதேசம் எதற்கு இருக்கிறது? மூளையின் திருப்திக்காகவா? இல்லையே! மூளையின் த்ருப்தி அஹங்காரத்தில் சேர்ப்பதல்லவா? அத்யாத்ம உபதேசமோ அஹங்காரம் அழிவதற்காக அல்லவா? ஆகையினால், மூளை ரீதியான ப்ரகாசத்தில் எதையோ தெளிவு செய்வதென்று வைத்துக் கொண்டால் கூட, இதுவும் ஆத்மாவிலே கொண்டுவிட உதவி செய்வதாயிருக்க வேண்டும் என்பதுதான் தாத்பர்யமாக இருக்கவேண்டும். அதாவது உபதேச லக்ஷ்யமான ஆத்மாநுபவங்கள் என்னென்னவோ அவையெல்லாம் மூளை லெவலில் புரிந்து கொண்டதாக மட்டும் முடிந்துபோகாமல் பிரத்யக்ஷமாக சிஷ்யனுக்கே நேராக அநுபவத்தில் வர வேண்டும். ‘ஸ்வாநுபூதி’ என்பது இப்படி ஒருத்தர் நேராக தானே ஒன்றை அநுபவிப்பதுதான். மூளைக்கும் ஆதாரமாக ஒரு ஜீவ சைதன்யம் இருக்கிறதல்லவா? ஜீவனின் உயிர் என்று சொல்வது அதைத்தான். அந்த உயிரின் அநுபவமாகவே விஷயம் ஆகும்போதுதான் ஸ்வாநுபூதி ஏற்படுகிறது. அப்புறம் ஜீவ சைதன்யம், ப்ரஹ்ம சைதன்யம் என்கிற பேதம் போய், விஷயம் – அதை அநுபவிப்பவன் என்ற பேதமும் போய்விட்ட நிலை. சாச்வதமான ஸத்யமாக ஆகிவிடுகிற நிலை. அத்வைதிகள் சொல்லும் மோக்ஷம் அது தான்.

“ஸ்வாநுபூதி” என்பதை “அபரோக்ஷாநுபூதி” என்றும் சொல்வார்கள். அந்தப் பெயரிலேயே ஆசார்யாள் ஒரு க்ரந்தம் எழுதியிருக்கிறார்.

பரோக்ஷம், அபரோக்ஷம் என்று இரண்டு. பரோக்ஷம் என்பது நமக்குத் தெரியாமல் ஒளிந்து கொண்டிருப்பது, ரஹஸ்மாயிருப்பது. அபரோக்ஷம் அதற்கு ஆப்போஸிட் : நமக்கு நன்றாகத் தெரிவது. கேள்வியறிவு பரோக்ஷம், அநுபவ அறிவு அபரோக்ஷம். அநுபவத்துக்கு வராதவரையில் ஒன்றைப் பற்றிய அறிவு அதன் பிரயோஜனமான ஆனந்தத்தை நமக்குக் காட்டாமல் ரஹஸ்யமாக வைத்துக் கொண்டு இருக்கிறது என்று அர்த்தம்.

குற்றாலம் அருவியைப் பற்றிப் பக்கம் பக்கமாகப் படிக்கிறோம். போய்விட்டு வந்தவர்கள் அதைப் பற்றி மணிக்கணக்காக வர்ணித்துக் கேட்கிறோம். ஆனாலும் இதனாலெல்லாம் அநுபவ ஆனந்தம் நமக்குக் கொஞ்சமாவது ஏற்படுகிறதா? நாமே போய், மணிக்கணக்கெல்லாம் வேண்டாம், நாலு நிமிஷம் அஞ்சு நிமிஷம் அதன் கீழே நின்றுவிட்டால் அப்போதுதானே நிஜமாக அதைத் தெரிந்தகொண்ட ஆனந்தம் ஏற்படுகிறது?

ஆத்மாவுக்கான ஸமாசாரங்களை டன் டன்னாகப் புஸ்தகத்தில் பார்த்தும் படித்தும் நெட்டுருப் போட்டும், quote பண்ணியும் ப்ரயோஜனமில்லை. குருவே உபதேசம் பண்ணியுங்கூட, அது காதுக்குள்ளே, காது வழியாக மூளைக்குள்ளே போனாலுங்கூட, ப்ரயோஜனமில்லை. அதுவரை அது பரோக்ஷம்தான். ஆத்மாவிலேயே அது அநுபவமாகப் பேசணும். அப்போதுதான் அபரோக்ஷம்.

இதிலே கொஞ்சம் வேடிக்கை. குரு உபதேசம் மூளை லெவலில் மட்டும் ஏறுகிறபோது நமக்கு ரஹஸ்யமாக இருக்கிற மாதிரி தோன்றவில்லை. மூளைக்கு நன்றாக விஷயம் தெரியத்தான் தெரிகிறது. ஆனாலும் அது உயிரின் அநுபவமாக இல்லாததால் அதை பரோக்ஷ ஞானம் என்றே வைக்கவேண்டும். எப்போது அது உயிருக்கு உள்ளேயே போய் அநுபவமாகிறதோ அப்போதுதான் அதற்கு அபரோக்ஷ அநுபூதி என்ற பெயர் கொடுத்திருக்கறது. இதிலேதான், முரண் மாதிரி இருக்கும் வேடிக்கை! வெளிப்பட குரு வாக்கியம் நன்றாகத் தெரிந்து, மூளைக்கு அது எட்டும்போது, அதற்கு ‘ஒளித்து வைத்தது’, ‘ரஹஸ்யமானது’ என்று அர்த்தம் கொடுக்கும் ‘பரோக்ஷ’ ப் பட்டம் ஒட்டிக்கொண்டிருக்கிறது! பரமரஹஸ்யமாக இருக்கப்பட்ட உயிரின் உள்ளுக்குள்ளே அதுவே தோய்ந்து, உறைந்து போய், வெளிப்படத் தெரிகிற வாக்கு, மூளை எல்லாம் மறைந்து போனபோது தான் ‘அபரோக்ஷம்’ என்று, அதாவது நன்றாக, வெளிப்பட ப்ரகாசிப்பதாக, பட்டம் பெறுகிறது!

இது எப்படி ஸரி என்றால்,

பால் ருசியாக இருக்கிற வஸ்து என்று நமக்குத் தெரியும். வெல்லமும் ருசியான வஸ்து என்று தெரியும். அதனால், பாலையும் வெல்லத்தையும் போட்டு நன்றாக ஸாரம் திரண்டு வரும்படி இறுகக் காய்ச்சினால் அந்தத் திரட்டுப் பால் பஹு ருசியாகத்தான் இருந்தாக வேண்டும் என்று தெரிகிறது. அதாவது, மூளைக்குத் தெரிகிறது. இப்படி மூளையால் நிச்சயப்படுத்தித் தெரிந்து கொண்டுவிட்டாலும் அதனால் திரட்டுப் பாலில் உண்டாகிற ருசியநுபவம் கிடைத்துவிடுகிறதா? திரட்டுப் பாலின் பலனான அந்த இன்பத்தை அடைய என்ன பண்ணவேண்டும்? தின்று பார்க்கவேண்டும். வெளியிலே தெரிகிற திரட்டுப்பாலை உள்ளே தள்ளுகிறபோதுதான் அதைப் பற்றிய ஸரியான, நிஜமான அநுபவம் உண்டாகிறது. இங்கே வெளிப்பட இருந்த வஸ்து மறைந்துபோய் உள்ளுக்குள்ளே ரஹஸ்யமாக ஆன பிறகுதானே அதனால் என்ன பயனோ, அது எந்த லக்ஷ்யத்தை உத்தேசித்து செய்யப்பட்டதோ அது பூர்த்தியாகிறது? உள்ளுக்குள்ளே போனபின் அதன் ரூபம் மறைந்தாலும் அதன் பயன் அப்போதுதானே வெளிப்படுகிறது?

அதாவது ‘உள்’ ‘வெளி’ என்பதில் இரண்டு விதம் இருப்பதாகத் தெரிகிறது. ரூபத்தினால் வெளிப்பட ஒன்று இருக்கிறபோது அதனுடைய ஸாரமான பயன் பிரகாசிக்காமலிருக்கிறது. பிரகாசிக்காமலிருக்கிறது என்றால் ரஹஸ்யமாக ஒளிந்து கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். அதாவது வேதாந்த பரிபாஷைப்படி அது ‘பரோக்ஷ’ மாகத்தானிருக்கிறது. உள்ளே போய் அதன் ரூபம் மறைந்து விடுகிறபோது அதன் ஸாரமான பிரயோஜனம் பிரகாசித்து ‘அபரோக்ஷ’ மாகிறது.

ஒரு வஸ்து ஸ்தூலத்தில் தெரிந்துகொண்டிருந்தாலும் அதனால் கிடைக்கக் கூடிய ஸாரமான பிரயோஜனம் கிடைக்கவில்லை என்றால் அது இருந்தாலும் இல்லாத மாதிரிதான். அது ஸ்தூலமாகத் தெரியாவிட்டாலும் அதன் ப்ரயோஜனம் நன்றாக வெளிப்பட்டுத் தெரிகிறது என்றால் அப்போதுதான் அதற்குப் பொருள் உண்டு. வஸ்துவின் வெளிவேஷத்தைவிட அதன் உள் ஸாரம்தான் முக்யம் என்பதை ஒப்புக் கொண்டோமானால் – இதை யாரும் ஒப்புக்கொள்ளாமலிருக்க முடியாது – அந்த ஸாரம் வெளியாகாத நிலையே நிஜத்தில் பரோக்ஷம், ஸாரம் வெளியாகிப் பயன் தரும் போதே அபரோக்ஷம் என்று ஏற்பட்டுவிடும். அப்போது மூளை லெவலில் உபதேசம் நிற்கிறபோதுகூட அதன் ஸார அநுபவ இன்பம் கிட்டாததால் அது பரோக்ஷம்தான், உபதேசமும் போய், மூளையும் போய் தன்னையே மறந்த ஸமாதி நிலையில் உபதேச ஸாரம் வெளிப்பட்டு உயிரில் உறைவதுதான் அபரோக்ஷம் என்று ஏற்பட்டுவிடும். அபரோக்ஷம், பரோக்ஷம் என்பவற்றை மாற்றி முரணாக வேடிக்கை பண்ணவில்லை; வாஸ்தவத்தைத்தான் உள்ளபடி சொல்லியிருக்கிறது என்று தெரியும்.

அம்பாள் அருள்வாளாக!

நான் எத்தனை சொன்னாலும், அதில் கொஞ்சமாவது உங்கள் மனஸிலே பட அம்பாள்தான் அநுக்ரஹம் செய்யவேண்டும்.

ஸர்வஜ்ஞனான ஈச்வரனோடு கலந்திருக்கிற அம்பாள்தான் சோபைகளிலெல்லாம் பரம சோபையோடு ப்ரகாசிப்பதான வித்யையின் ஸ்வரூபம் என்று ஆசார்யாள் கேநோபநிஷத் பாஷ்யத்தில் சொல்கிறார். அவள்தான் நம் எல்லார் மனஸிலும் புகுந்து நம்முடைய புராதன வித்யைகளை ரக்ஷிப்பதில் நம்மைச் செலுத்தவேண்டும். வித்தம்தான் (பணம்தான்) குறி என்று நம்முடைய மனப்பான்மையை மாற்றி வித்யையே லக்ஷ்யம் என்ற ஈடுபாட்டை அவளுடைய அநுக்ரஹம்தான் உண்டாக்கித் தரவேண்டும். இதுவரை யுகாந்தரமாக வித்யா ப்ரகாசம் விளங்கி வந்த இந்த தேசத்தில் இருள் மூடுமாறு விடப்படாது. வித்யைதான் பெரிய ப்ரகாசம் என்று சொன்ன ஆசார்யாள், ‘உமா பரமேச்வரி மாத்ரம்தான் இப்படி வித்யையால் ஜ்வலித்துக்கொண்டு ஹைமவதி என்று பெயர் பெற்றாள் என்று இல்லை, எவன் வித்யையைப் பயின்று வித்வானாலும் அந்த வித்யையே அவனுக்கு ஒரு தேஜஸ் மெருகைக் கொடுத்துவிடும்’ என்று முடித்திருக்கிறார்.

“ஹைமவதி” என்று இந்த இடத்தில் உபநிஷத்திலே அம்பாளுக்குப் பெயர் சொல்லியிருப்பதற்கு இரண்டு விதமாக அர்த்தம் பண்ணலாம். ஒன்று, ‘ஹிமம்’ என்பது ‘பனி’ ஆதலால் பனி மலையான ‘ஹிமவா’னுக்குப் பிறந்த இவள் ‘ஹைமவதி’ என்பது. ‘ஹிம’த்தைக் குறித்தது ‘ஹைமம்’ – ‘சிவ‘த்தைக் குறித்தது ‘சைவம்’ என்கிறாற்போல. இங்கே ‘இ’காரம் ‘ஐ’காரமாகிறது. இதே மாதிரி ஸம்ஸ்க்ருத இலக்கணத்தில் ‘ஏ’காரமாக ஆரம்பிக்கும் வார்த்தையிலிருந்து உண்டாகிற derivative -களும் ‘ஐ’ஆகிவிடும். “ஏக”த்திலிருந்து “ஐக்யம்”, “கேகயன்” பெண் “கைகேயி”. இந்த ரூல்படி ‘ஹிமம்’ போலவே ‘ஹேமம்’ என்ற சொல்லின் அடியாகவும் ‘ஹைமவதி’ப் பெயர் ஏற்படும். ஹேமம் என்றால் தங்கம். தங்கமாக ஜ்வலிப்பவள் ஹைமவதி. ‘பஹுசோபை உள்ளவள்’ என்று உபநிஷத்தே இங்கு அம்பாளைக் குறிப்பதால் ஸ்வர்ண காந்தியாய் ஜ்வலிப்பவள் என்று பொருள் கொள்வதும் ரொம்பப் பொருத்தந்தான். ஆசார்யாள் இரண்டு அர்த்தங்களையும் ஒப்புக்கொண்டு, இந்த சோபைக்கு, ஜ்வலிப்புக்கு அவள் வித்யா ரூபிணியாயிருப்பதே காரணம் என்கிறார். அப்புறம் தம் வாக்ய பாஷ்யத்தை முடிக்கிற இடத்தில், “வித்யாவானாக (வித்வானாக) ஒருவன் இருந்தால், அவன் அங்கலக்ஷணப்படி குரூபியாயிருந்தாலும்கூட பஹுசோபையுடனே ப்ரகாசிக்கிறான் : விரூபோ (அ)பி வித்யாவாந் பஹு சோபதே” என்கிறார். ஸதாசாரத்தோடு படிப்பாளிகளாக இருக்கப்பட்டவர்களைப் பார்த்த மாத்திரத்தில், “முகத்திலேயே என்ன அறிவுக் களை, என்ன தேஜஸ்!” என்று சொல்ல முடிகிறது. அதேபோல், “மூஞ்சியைப் பார்த்தாலே சோதாக் களை” என்றும் சொல்கிறோம். முன்னே சொன்ன ஸைகிள் பெடல் உதாரணப்படி நம் பூர்விகர்களின் வித்யா ப்ரகாசத்தின் பலத்தில் இப்போதும் நம்மில் சிலர் முகத்திலாவது இந்தத் தேஜஸ் இருக்கிறது. ஸைகிள் நின்று போகாமல் அவள் க்ருபைதான் ஓட்டுவித்து, எல்லோர் முகத்திலும் சோபையை உண்டாக்கி, தேசம் முழுதிலும் அறிவொளி பரவச் செய்ய வேண்டும்.