அரைகுறை ஞானத்துக்கே ஆதரவு

வாஸ்தவ நிலை எப்படி இருக்கிறதென்று பார்த்தால் வ்யஸனம்தான் மிஞ்சுகிறது. வர வர வர வித்யையின் தரம் குறைந்துகொண்டே வருகிறது. ஒவ்வொரு சாஸ்திரமாக மறைந்துகொண்டே வருகிறது. எத்தனையோ கலைகள் இருந்த இடம் தெரியாமல் போய்க்கொண்டிருக்கின்றன. ஒரே இருட்டிலே சின்ன மின்மினிப் பூச்சி வெளிச்சம்கூடப் பெரிசாகத் தெரிகிறாற்போல, குருபீடங்களிலே ஸ்வல்பவித்வத்தோடு ஒருத்தர் இருந்துவிட்டால்கூட அவரை சிஷ்யலோகம் “ஸர்வஜ்ஞர்” என்று புகழ்ந்து அவரும் தாம் அதற்குமேல் தெரிந்துகொள்ள வேண்டாமென்று நினைக்கிற அளவுக்குக் கொண்டு விட்டுவிடுகிறது.

மின்மினிப் பூச்சியைச் சொல்லும்போது ஒரு கதை நினைவு வருகிறது. கதை என்றால் நிஜமாகவே நடந்த கதை. நீலகண்ட தீக்ஷிதரும், பழமார்நேரி மஹாதேவ சாஸ்த்ரிகள் என்பவரும் ஸம்பந்தப்பட்ட கதை. நீலகண்ட தீக்ஷிதர் மதுரையில் புகழ்வாய்ந்ததாக உள்ள திருமலை நாயகர் மஹாலையும் புது மண்டபத்தையும் கட்டிய நாயக மன்னருக்கு மந்த்ரியாக இருந்தவர். மஹாபக்தர். இவற்றோடு மஹாவித்வானுமாவார். பழமார்நேரி சாஸ்த்ரிகள் இவர் மாதிரி ப்ரஸித்தி பெறாதவர். ஆனாலும் தீக்ஷிதரும் அவரிடம் எப்படித் தோற்றுப் போனமாதிரி ஆனார் என்று அந்தக் கதை தெரிவிக்கிறது. ஞானசூன்ய உலகத்திலே எப்படி மின்மினிப் பூச்சி மாதிரி துளிப்போல ஞானத்தைப் பகட்டாகக் காட்டிக்கொள்பவர்கள் தங்களை ப்ரமாதப் படுத்திக்கொள்ள முடிகிறது என்று மஹாதேவ சாஸ்திரி இடித்துக் காட்டி ச்லோகம் இயற்றிச் சொன்னதில்தான் தீக்ஷிதருக்கு அவரிடம் ரொம்பவும் மரியாதை ஏற்பட்டது என்று கதை*.

வெறும் அரட்டை ஆஸாமிகளும் மின்மினி அறிவினாலேயே ப்ரகாசிக்கிற இருட்டுச் சூழ்நிலையில்தான் இப்போது இருக்கிறோம். இந்த மின்மினி ஒளியை மங்கச்செய்யும் நக்ஷத்ரக் கூட்டங்களின் ப்ரகாசம், நக்ஷத்ரங்களின் ஒளியையும் மழுங்கப் பண்ணும் சந்த்ரோதயம், அந்த சந்த்ரனும் இருக்கிற இடம் தெரியாமல் அமுங்கிப்போகும் ஸூர்யோதயம் என்னும்படியாக மேலும் மேலும் நாட்டில் வித்யா ப்ரகாசம் ஓங்கும்படியாகச் செய்யவேண்டும். இப்போது பூர்ண யோக்யதை உள்ள வித்வான்கள், சாஸ்திரஜ்ஞர்கள், பழைய கலைகள் தெரிந்தவர்கள். ஆயுர்வேத வைத்யர்கள், சில்பிகள், ரதகாரர்கள், பரத சாஸ்திர நிபுணர்கள் என்று ஏதோ கொஞ்சமாவது இல்லாமல் போகவில்லை. ஆனாலும் அரட்டைக்குத்தான் மதிப்புத் தருவது. தடபுடாவுக்குத் தான் மரியாதை செய்வது என்று லோகம் இருப்பதில், – கட்சியபிமானம் ஜாதியபிமானம் முதலியன இதிலும் தலைதூக்கியிருப்பதில் – ஸாதுக்களாக அடங்கியிருந்து கொண்டிருக்கிற, நிஜமான யோக்யதையுள்ள இந்தச் சில வித்வான்களுக்கு ஆதரவு கிடைப்பது ச்ரமமாயிருக்கிறது. சவடால்காரர்கள் ஆர்ப்பாட்டமாகத் தங்களுடைய அரைகுறை ஞானத்தில் வேதாந்த சாஸ்திரம் வரையில் நம்முடைய வித்யைகளைப் பற்றி எழுதுவது இன்று ஜகத் ப்ரஸித்தி பெறுகிறது. நல்ல ஞானமுள்ள விஷயஜ்ர்கள் ரொம்பவும் பரிச்ரமப்பட்டு ஆராய்ச்சி செய்து எடுத்துச் சொல்கிற விஷயங்களை ப்ரசாரம் செய்வதற்கு, ப்ரசுரம் செய்வதற்கு எவரும் முன்வருவதில்லை. இன்றைய நிலையில் தடபுடல்தான் வேண்டும், பூர்ண யோக்யதை அவச்யமில்லாத விஷயம் என்கிறதுபோல ஆகிக்கொண்டு வருகிறது. இதற்குக் காரணம், பொதுவாக வித்யா ஞானத்தின், சாஸ்திர அறிவின் லெவல் ரொம்பவும் இறங்கியிருப்பதுதான். மேற்கத்தியப் படிப்பிலே தேர்ந்தவர்கள் தற்போது நிறைய இருந்தாலும் ஸ்வதேச வித்யைகளில் பரிச்சயம் ஜனங்களுக்கு இல்லாததால்தான், இதிலே வாஸ்தவமான ஞானத்தை எடைபோட முடியாமல், படாடோபமான அரைகுறை ஞானத்தை ஆதரிப்பதாக இருக்கிறது. இது ஸரியே இல்லை.

ஆதரிப்பவர்கள் இல்லாவிட்டால் நல்ல வித்வத் உள்ளவர்களுக்கு மனஸு தளர்ந்து போய் அவர்கள் தங்கள் வித்வத்தைத் தங்களுடைய ஸந்ததிக்கோ, சிஷ்யர்களுக்கோ கற்றுக்கொடுக்காமலே போய்விடுவார்கள். நமக்கு வித்யைகள் நஷ்டமாகிப்போகும். இப்படித்தான் தற்போதே நேர்ந்திருக்கிறது. இது மேலும் இப்படியே போய்க்கொண்டிருப்பதற்கு விடப்படாது என்பதற்காகத்தான் இவ்வளவு சொல்வதும்.


* ஸ்ரீசரணர்கள் சுவைப்படக் கூறிய இக்கதையின் விரிவை இதே பகுதியில் “கவிஞர், அறிஞரின் தற்பெருமை” என்ற உரையின் “நீலகண்டரும் மஹாதேவரும்” என்ற பிரிவில் காண்க.

வாழ்க்கை முறையும் வயதும் தடையாகா

“இத்தனை நாள் ஏதாவதொரு தினுஸிலேயே வாழ்க்கை நடத்திவிட்டோம். இப்போது திடீரென்று ஏதாவது சாஸ்திராப்யாஸம் செய்வது, கலையைக் கற்பது என்றால் எப்படி முடியும்? அதற்கு ஒரு வயஸ் இல்லையா? ஐந்தில் வளையாதது (ஐம்பதில் வளையாது) என்று பழமொழி இல்லையா?” என்று கேட்கலாம். அததற்கான வயஸில்தான் அததுவும் ஸுலபமாக வரும் என்பதும், வித்யாப்யாஸத்துக்கு ஏற்ற ஒரு பருவம் உண்டு என்பதும் வாஸ்தவந்தான். ஆனாலும், ‘இந்த தேசத்திலே பிறந்துவிட்டு இதன் ஏராளமான சாஸ்திரங்களில் ஒன்றுகூடத் தெரியாமலிருக்கிறோமே!’ என்ற feeling இருந்தால் எந்த வயஸிலும் வித்யை வரும். ஆர்வமே இளவயஸின் துடிப்பையும், க்ராஹ்ய சக்தியையும் (கல்வியைக் க்ரஹித்துக் கொள்ளும் சக்தியையும்) உண்டாக்கிவிடும்.

இதுவரை ஏதாவதொரு வாழ்க்கை முறையில் போய் விட்டோமென்றால் அது ந்யாயமாக நாம் போயிருக்கப்படாத “ஏதாவதொரு” முறைதான். ஆகையால், “எந்த ஒரு முறை”யில்தான் நாம் போயிருக்க வேண்டுமோ அதிலே இனியாவது போவது என்ற உறுதியும் ஆர்வமும் இருந்தால் ஈஸியாக அப்படி மாற்றிக்கொள்ளலாம்.

ஐம்பதில் வளையுமா என்று கேட்பதையே ‘சாலஞ்ஜா’க எடுத்துக்கொண்டு, ‘ஓ வளையும்’ என்று காட்ட முயல வேண்டும். உரிய வயஸிலே ஒன்றைக் கோட்டை விட்டவர்கள் இப்படி ‘சாலன்ஜ்’ பண்ணி ஜயித்துக் காட்டவேதான் அந்தப் பழமொழி ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்க வேண்டும். ப்ரத்யக்ஷத்திலேயே இப்படிப் பலர் இருந்திருக்கிறார்கள்.

த்ருஷ்டாந்தமாக ஸமீப காலத்தில் ப்ரொஃபஸர் ஸுந்தரராமையர் என்பவர் இருந்தார். (அவர்) ஐம்பது வயஸுக்கு மேல்தான் சாஸ்திரம் படித்தார். அப்புறம் (கும்பகோணத்தில் ஸ்ரீமட ஸம்பந்தமுள்ளதாக உள்ள) அத்வைத ஸபை மாதிரியான பெரிய வித்வத் ஸதஸ்களில் கூட, இவற்றிலேயே பழம் தின்று கொட்டை போட்ட பெரிய பண்டிதர்களுக்கும் புரிபடாத தத்வ நுட்பங்களை அவர்களே ஆச்சர்யப்படும்படியாக எடுத்து விளக்கியிருக்கிறார். ஆகவே புதிய இளைஞர் தலைமுறையில் சிஷ்ய பரம்பரை உருவாக்குவதோடு, வயதானவர்களும் இது முதல் நம் சாஸ்திரங்களிலோ கலைகளிலோ, ஏதாவது ஒன்று அப்யாஸம் செய்து அதன் வழியாய் ப்ரஹ்ம வித்யைக்குப் போகும் பாக்யத்தைப் பெற முயலவேண்டும்.

அனைவரும் வித்வானாயிருந்த காலம்

பழைய காலத்தைச் சேர்ந்த க்ராம மஹாஸபைகளின் சாஸனங்கள் இருக்கின்றன அல்லவா? அவற்றிலே ஒரு க்ராமத்தைச் சொல்லும்போது “அசேஷ வித்வத் ஜனங்கள்” அல்லது “அசேஷ வித்வத் மஹாஜனங்கள்” என்று குறிப்பிட்டிருக்கும். நம்முடைய மடத்து ஸ்ரீமுகங்களிலும் இந்த சொற்றொடர் இருக்கிறது. “சேஷம்” என்றால் “மீதி” என்று தெரிந்திருக்கும். “அசேஷ” என்றால் “மீதியில்லாமல்” என்று அர்த்தம். ஒரு க்ராமத்திலே உள்ள பொதுமக்களில் மிச்சம் மீதி இல்லாமல் அனைவரும் வித்வான்களாக இருந்தார்களென்பதையே “அசேஷ வித்வத் ஜனங்கள்” என்பது தெரிவிக்கிறது. அக்காலத்தில் ஸகலருக்கும் வித்வத் — அதாவது ஏதாவதொரு வித்யையில் பாண்டித்யம் — இருந்தது என்பதை இது தெரிவிக்கிறது. இதை அப்படியொன்றும் மிகைப்படுத்திச் சொன்னதாகக் கொள்வதற்கில்லை. ஏனென்றால் ப்ராமண இதரர்கள் பள்ளிக்கூடம் போகாவிட்டாலும் தங்கள் தங்கள் தொழிலில், அதற்கான வித்யையில், வித்வான்களாகவே இருந்தார்கள். ப்ராமணர்களை எடுத்துக்கொண்டால் இரண்டு வேதம், இரண்டு சாஸ்திரத்துக்குக் குறையாமல் வ்யுத்பத்தி (சிறப்பான தேர்ச்சி) உள்ளவர்களாக ஒவ்வொரு க்ராமத்திலும் பலபேர் இருந்திருப்பதாகத் தெரிகிறது. அதற்கேற்றாற்போல் அக் காலத்தில் குரு பீடங்களிலும் நம்முடைய ஆசார்யாள், வித்யாரண்யாள் போன்ற பண்டித ஸிம்ஹங்கள் இருந்திருக்கிறார்கள். இந்தக் காலத்தில் பண்டிதர் என்று இருப்பவரையே, “வேதத்தில் ஒரு பதம் புரியவில்லை, அர்த்தம் சொல்லுங்கள்” என்று கேட்டால், “பாஷ்யத்தைப் பார்த்துக்கொண்டு வந்து பதில் சொல்கிறேன்” என்கிறார்! காலத்துக்கேற்ப குரு பீடத்தில் நான் இருக்கிறேன்.

அதனால் — ஒரு விதத்தில் self-interest (ஸ்வயநல அக்கறை) என்று வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள் — குரு பீடங்கள் நல்ல நிலைமையில் ஸகல சாஸ்த்ரங்களிலும் நல்ல ஞானத்துடன் விளங்கவேண்டுமென்பதற்காகவாவது ஸகல ஜனங்களும் நல்ல வித்வத் உள்ளவர்களாக ஆகவேண்டுமென்கிறேன். முன்னேயே சொன்னாற்போல, சிஷ்யர்களின் தரத்தைப் பொறுத்துத்தான் குரு உருவாகிறார். சிறந்த அறிவாளிகளாக சிஷ்யர் கூட்டம் இருந்துவிட்டால் அதற்குத் தகுந்தாற்போல் குருவும் தம் நிலையை உயர்த்திக் கொள்ளவேண்டுமென்று நிர்பந்தமாகவாவது ஏற்பட்டுவிடுகிறது. அவர்கள் ஒன்றைக் கேட்டு இவர் முழிக்கப்படாதல்லவா? அதனால்! ஆனபடியால் குரு பீடங்களிலுள்ள குருமார்கள் நன்றாக சாஸ்திரார்த்தம் அறிந்தவர்களாய் இருக்கவேண்டுமென்றால் பொறுப்பு சிஷ்யர்களதுதான்.

வேதாந்த விஷயத்திலும் இப்படியே

யோக சாஸ்திரம் பற்றி நான் சொன்ன ஒரு அம்சம் வேதாந்தத்துக்கும் பொருந்துவதுதான். எப்படி ஒரு யோகியை நாம் குருவாக உட்கார்த்திவைத்து, சிஷ்யன் பிடித்துக்கொடுக்க முடியாதோ அப்படியேதான் வேதாந்தத்தை அப்யஸித்து ஸித்தி பெற்ற ஞானி விஷயமும். பக்திச்சார்புள்ள வேதாந்த ஸம்ப்ரதாயமானால் அதிலே ஸித்திபெற்ற பரம பக்தரையும் இப்படி நாம் குருகுலத்தில் கொண்டுவர முடியாது. இங்கேயும் அறிவு ரீதியில் வேதாந்த சாஸ்திர ஞானம் தரத்தான் நாம் குருகுலம் வைக்கவேண்டியதே தவிர, அதை அங்கேயே அநுபவமாகப் பண்ணித் தருவதற்கு அல்ல. பூர்வகால வித்யாப்யாஸத்திலும் இப்படித்தான் வேதாந்த சிக்ஷை நடந்ததென்று சொன்னேனல்லவா? தற்போது வித்யாசாலையில் கற்றதைக் கொண்டு வித்யார்த்தி பிற்பாடு ஒரு உத்தமமான ஞானகுருவை, அல்லது பக்த ச்ரேஷ்டரை, அல்லது யோகீச்வரரை அடைந்து ஸாதனைக்குப் போய்க்கொள்வான். ஆனால் அறிவு ரீதியில் சாஸ்திரங்களைக் கற்றுக் கொள்ளும்போதுகூட அதை குணத்தோடும் ஆசாரத்தோடும் ஸம்பந்தப்படுத்தாமல் இப்போது விட்டிருப்பதுபோல் இருக்கக்கூடாது. நல்ல ஒழுக்கக் கட்டுப்பாட்டுடனும், பக்தி விச்வாஸம் முதலான பண்புகளுடன் கற்றுக்கொண்டால்தான் மாணவன் நன்றாக உருவாவான், கல்வியும் பிற்காலத்தில் கொஞ்சங்கூட தப்பு வழியில் ப்ரயோஜனமாகாமல் நல்லதற்கே ஆகும் என்பதைத் தான் திரும்பத் திரும்பச் சொல்லி வந்திருக்கிறேன்.

இப்படி நம் தேசத்துடையதாக வந்துள்ள ஸகல கலைகளுக்கும் சாஸ்திரங்களுக்கும் நம் தேச முறைப்படியே தொடர்ந்து வித்யாப்யாஸம் நடக்க நாமெல்லாரும் முனைந்து ஏற்பாடுகள் செய்யவேண்டும். முடிந்தமட்டும் குருகுல அம்சங்கள் இருக்கும்படியாக இந்த வித்யாப்யாஸத்தை அமைக்கவேண்டும். அப்போதுதான் ஆசாரமும் குணமும் வித்யையோடு கைகோத்துக் கொண்டு போகும். ஆசாரம், குணம் இல்லாவிட்டால் வேதமே வேதமில்லை என்று வசனம் ஓதுவதைவிட (அதாவது கற்பதைவிட) ஒழுக்கம்தான் ப்ராமணனுக்கு முக்யம் என்று வள்ளுவரே தீர்ப்புச் சொல்லியிருக்கிறாரே!*


* மூன்றாம் பகுதியில் “ஆசார விஷயங்கள்” என்ற உரையில், “ஆசாரங்களின் பாகுபாடு; குறள் தீர்ப்பு” என்ற உட்பிரிவு பார்க்க.

‘தியரி’ மட்டும், ப்ராக்டிஸ்’ இல்லை

நான் ரஸவாத சாஸ்திரம் பற்றிச் சொன்னதைக்கூட இப்படித்தான் எடுத்துக்கொண்டு நடத்தவேண்டும். இல்லாவிட்டால் அதைப் படிக்கிற பலர் பித்தளையை தங்கமாக்குகிறேன் என்று புறப்பட்டு அநேக பித்தலாட்டங்களுக்கு இடம் கொடுத்துப்போகும். (‘பித்தலாட்டம்’ என்ற வார்த்தையே ரஸவாத ஏமாற்றில் உண்டானதுதான். ‘பித்தல’வும் ‘ஹாடக’மும் சேர்ந்து ‘பித்தலாட்டம்’. பித்தலம் தான் பித்தளை. ஹாடகம் என்றால் தங்கம்.) “இதுவும் ஸாத்யம், இதற்கு பாஸிபிலிடி இருக்கிறது” என்று அறிவு மட்டத்தில் இம்மாதிரி சாஸ்திரங்களைப் போதித்து, ஈச்வரனின் பெரிய வரப்ரஸாதமான மநுஷ்ய அறிவின் ஆற்றல்களைத் தெரிந்துகொள்ளப் பண்ணுவதோடு நிறுத்த வேண்டுமே தவிர, இந்த வித்யாசாலைகளில் ப்ராக்டிகல் க்ளாஸ் என்று வைக்கக்கூடாது. சாஸ்திரம் நிஜம்தான் என்று காட்டுவதற்காகக் கொஞ்சம் டெமான்ஸ்ட்ரேஷன் வேண்டுமானால் குரு செய்து காட்டலாம். ஆகக்கூடி ஜாக்ரதையுடன் கையாளவேண்டிய விஷயம். அதற்காக, ‘அழிந்துபோகட்டும்’ என்று விடக்கூடாத வித்யை.

யோக சாஸ்திரம்

யோக சாஸ்திரத்தை விட்டுவிட்டேனே! “யோக சாஸ்திரம்” என்று மாத்ரம் சொன்னால் பதஞ்ஜலி செய்துள்ள அஷ்டாங்க யோகம் என்றுதான் பொதுவில் அர்த்தமாகும். அதன் கிளைகளாகவும், டெவலப்மெண்ட்களாகவும் அதில் வராததாகவும் இன்னும் அநேக யோகங்களும் இருக்கின்றன. குண்டலிநீ யோகம், ஹட யோகம், க்ரியா யோகம் என்று எத்தனையோ இருக்கின்றன.

இவை ரொம்பவும் ஜாக்ரதையாக, மிகவும் பக்வப்பட்டவர்களே அப்யஸிக்க வேண்டிய வித்யைகள். ஸாதாரணமாக, மனஸு கொஞ்சம் தெளிந்து சிறிது தெய்வ சிந்தனை செய்வதற்கும் த்யானிப்பதற்குங்கூட சில நிமிஷம் ப்ராணாயாமம் (மூச்சுடக்கல்) செய்யும்படி சாஸ்திரம் சொல்கிறது. இது யோகத்தின் அங்கம்தான். ஆனால் இதற்கும் மேலே இதில் தீவ்ரமாக ஈடுபடும்போது ஜாக்ரதை தேவை. முறைப்படிப் பண்ணாவிட்டால், அல்லது ஸாதகன் இருக்கிற ஸ்திதிக்கு ‘ஓவராகப் போய்விட்டால் மூளைக்கொதிப்பு, ஏன், மூளைக் கலக்கங்கூட உண்டாய்விடும், தேஹத்தையும் மனஸையும் ஆரோக்யமாகவும், சுத்தமாகவும் ஆக்கிக் கொள்ளவே ஏற்பட்ட அப்யாஸத்தால் இரண்டுக்கும் ஹானியே உண்டாய்விடும். ஸித்தி, கித்தி என்று போய் அதீத சக்திகளை ஸம்பாதித்துக் கொள்வது, அதைக் கொண்டு பெயர் – புகழ் எடுக்கப் பார்ப்பது, ஒருத்தரை வசியம் பண்ணுவது, வசியத்துக்கு மசியாவிட்டால் யோக சக்தியால் ஹிம்ஸிப்பது என்று ஒரு அனர்த்த பரம்பரைக்கே இடமளிப்பதாகவும் ஆகிவிடும் – யோக சாஸ்திர சிக்ஷை பக்வமான பாத்ரத்துக்குப் போய் சேராதபோது.

தேஹாரோக்யத்துக்கேயான அநேக யோகாஸனங்கள் இருக்கின்றன. இவற்றிலும் கொஞ்சம் ஜாக்ரதை தேவைதானென்றாலும் மற்ற யோக ஸாதனகைளைப் போல இதில் கஷ்டமோ, ஆபத்துக்கான ஹேதுவோ அவ்வளவு அதிகமாக இல்லை. சிலகாலமாக ஸ்கூல்களிலேயே இவற்றைச் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது. கையை காலை உடம்பை நுட்பமாக வளைத்துப் பண்ணவேண்டிய அப்யாஸத்தை அத்தனை குழந்தைகளுக்கும் கவனமாகச் சொல்லிக் கொடுப்பதற்குப் போதிய ஆசிரியர்கள் இருக்கவேண்டும். அதுவுமில்லாமல் யோகாஸனம் போடுவதற்கென்று ஒரு காலம் உண்டு. அப்போது வயிற்றிலே ஆஹாரம் இருக்கப்படாது என்று விதி. இவற்றை மீறினால் ஆரோக்யத்துக்குப் பதில் அநாரோக்யந்தான் வரும். ஆகையால் அதற்கான கட்டுதிட்டம் குலையாமல் கற்றுக் கொடுக்க முடியுமா என்று நிச்சயப்படுத்திக் கொண்டு ‘மாஸ் – ஸ்கேலி’ல் ஸ்கூல்களில் சொல்லிக் கொடுக்கலாம். நம்முடைய குழந்தைகள் நல்ல தேஹதிடத்துடனிருப்பதற்காக எப்படியும் யோகாஸனத்தை வ்ருத்தி செய்யத்தான் வேண்டும்.

இதைவிட மற்ற யோகஸாதனைகளின் விஷயத்தில் பலமடங்கு ஜாக்ரதை தேவை.

அவை உத்தமமான யோகிகளே ஸத்பாத்ரமான சிஷ்யர்களுக்குக் கற்பித்துப் பயிற்சி தரவேண்டியவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட யோகச்ரேஷ்டர்களை நானோ நீங்களோ போய், “இங்கே எங்கள் குருகுலத்தில் குருவாக வாருங்களேன்” என்று கூப்பிட்டு உட்கார்த்தி வைக்கமுடியுமா என்பது ஸந்தேஹந்தான். அவர்களுக்கு சிஷ்யர்களும் நாம் பிடித்துக் கொடுப்பது அவ்வளவாக ஸாத்யமில்லை. எங்கே, எப்படி, எவருக்கு சிக்ஷை தருவது என்று அவர்களே முடிவுபண்ணுவார்கள், அவர்களுடைய ஆத்மசக்தியாலே நடத்திக் கொள்ளவும் செய்வார்கள். இப்போதுங்கூட இப்படி அநேக யோகாச்ரமங்கள் இருக்கின்றன. கொஞ்சம் ஜாஸ்தியாகவே இருப்பதுதான் கவலையாயிருக்கிறது! “Yoga Yoga” என்ற பேச்சு கூடுதலாகவே இருக்கிறது. அதனால் எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், நான் சொன்ன ரீதியில் யோக அப்யாஸத்துக்காக (அதாவது அதை ப்ராக்டிஸ் செய்வதற்காக) இல்லாமல், அதன் ‘தியரி’யை மட்டும் அறிவதற்காக குருகுலம் வைக்கலாம் அப்போது, நிஜமாக ‘இதுதான் யோக சாஸ்திரக் கருத்து, அது சொல்லும் முறை’ என்று தெரிந்தவர்கள் உருவாவார்கள். இப்படி இவர்கள் உண்டாவதாலேயே, யோகம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் சொல்லி ஜனங்களைக் கவருகிறவர்களுக்கு ஒரு பயம் உண்டாக இடமேற்படும். உண்மையான யோகாச்ரமங்கள் மட்டுமே உண்டாகும்.

வைத்ய சாஸ்திரம்

இப்படியே ஆயுர்வேத வைத்யர்கள், நாட்டு வைத்யர்கள்,ஸித்த வைத்யர்கள் அங்கங்கே இருந்துகொண்டு அவர்களில் சிலபேர் நல்ல ப்ராபல்யத்தோடு இருப்பதால் இவற்றுக்கான சாஸ்திரங்கள் அவர்கள் பாடு என்று விட்டுவிடக்கூடாது. நம்முடைய இந்தப் புராதன வித்யைகளை நன்றாகக் காப்பாற்றி, கெட்டிப்படுத்தி, வளர்த்துக் கொடுப்பது நம் எல்லோருடைய பொறுப்புமாகும் என்ற உணர்வோடு புது சிஷ்யர்கள் பழைய படிப்பு முறையில் உருவாவதற்கான கார்யங்களைச் செய்யவேண்டும்.

இயற்கை விதிகளுக்குப் பிடிபடாத வித்யைகள்

நமக்குத் தெரிகிற natural forces-ஐ (இயற்கை சக்திகளை)க் கொண்டே ஏற்பட்ட சாஸ்திரங்களைத் தவிர நாம் அறிந்த natural laws-ல் (இயற்கை விதிகளில்) பிடிபடாத பல சாஸ்திரங்களும் இருந்திருக்கின்றன. அதெல்லாம் ‘ஹம்பக்’ என்று இப்போது ஒதுக்குகிறார்கள். அப்படிப் பண்ணாமல் அவற்றையும் படித்து, ப்ராக்டிகலாகப் பண்ணிப் பார்த்து, ‘ஹம்பக்’கா இல்லையா என்று ரூபிக்கவேண்டும். என் அபிப்ராயம், இந்த சாஸ்திரங்களை ப்ராக்டீஸ் செய்யும் மநுஷ்யர்களில் ஹம்பக்குகள் இருக்கலாமேயொழிய, சாஸ்திரமே ஹம்பக் இல்லை என்பதுதான். நாடி சாஸ்திரம், ப்ரச்னம் என்று கேட்கிறார்களே அந்த சாஸ்திரம், சாயாபுருஷ சாஸ்திரம் என்று நிழலை வைத்து முடிவுகள் செய்ய ஏற்பட்ட சாஸ்திரம் முதலானவை இப்படிப்பட்டனவே.

புது ஸயன்ஸ் நம் பழைய ஸயன்ஸை அடியோடு அடித்துக்கொண்டு போய்விட்டதுபோல் இல்லாமல், “unscientific” என்று தற்போது பரிஹஸிக்கிற, ஆனால் super-sciences ஆக (ஸயன்ஸுக்கு மேற்பட்டனவாக) இருக்கக்கூடிய இந்த நாடி சாஸ்திரம் முதலானவற்றைப் பாரம்பர்யமாக அறிந்து ப்ராக்டிஸ் செய்பவர்கள் ஏதோ சிலர் இன்றைக்கும் இருக்கிறார்கள். இவர்களையும் ஆதரித்து, இவர்களுக்கு சிஷ்யப் பிள்ளைகள் சேர்த்துக் கொடுத்து வித்யாரக்ஷணம் செய்யவேண்டும். ரஸவாத சாஸ்திரம், ஜ்யோதிஷம் ஆகியன ஸயன்ஸ், ஸயன்ஸில் வராதவை ஆகிய இரண்டும் கலந்தனவாக “ஸெமி-ஸயன்ஸ்” என்னும்படி இருக்கின்றன. இவற்றையும் இதுவரை சொன்னாற்போல் வ்ருத்தி பண்ணவேண்டும். தனியாகப் பல ஜோஸ்யர்கள் இப்போதும் நல்ல செல்வம் செல்வாக்கோடு இருப்பது வேறு விஷயம். நான் சொல்வது ஜ்யோதிஷ வித்யையின் ரக்ஷணம்.

ஆசிரியர்களையும் உண்டாக்க வேண்டும்

இன்னம் எத்தனையோ சாஸ்திரங்களிருக்கின்றன. இப்போதைய ஃபிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, ஜுவாலஜி, ஜியாலஜி, இன்ஜினீயரிங் முதலியவற்றுக்கு நம் தேசத்திலேயே மூல சாஸ்திரங்கள் இருக்கின்றன. வராஹமிஹிரரின் “ப்ருஹத்ஸம்ஹிதை”யையும், போஜராஜனின் ‘ஸமராங்கண ஸூத்ரதார’த்தையும் பார்த்தால் இவற்றைப்பற்றி அறியலாம். ஆனால் இவற்றில் மேல்நாட்டு ஸயன்ஸ்களே இங்கேயும் ப்ரசாரமானபின் நம் ஸ்வதேச விஞ்ஞான சாஸ்திரம் தெரிந்தவர்களே இல்லாமல் போய்விட்டார்கள். அதனால் இவற்றில் வாத்யார்கள் கிடைப்பதே ஸாத்யமில்லாததாகத் தோன்றுகிறது.

ஆனால் அறிவாளிகளாக, ஆராய்ச்சித் திறன் உள்ளவர்களாக இருப்பவர்கள் பழைய புஸ்தகங்களைப் பார்த்தும், மேலும் பல பழைய சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்தும் பழைய வழிமுறைகளையும் அறிய முடியும்.

அறிந்தவர்கள் அப்புறம் வாத்யாராகி சிஷ்யர்களைத் தயாரிக்கவேண்டும்.

இப்படியாகச் சில வித்யைகளை இன்று கற்றுக் கொள்ளச் சிஷ்யர்கள் மட்டுந்தான் இல்லை என்றில்லாமல், அவற்றைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களும் இல்லாமலிருக்கிறது. இப்படிப்பட்டவற்றில், நல்ல புத்தி வன்மை உள்ளவர்களுக்குப் பழைய நூல்களைத் தேடி எடுத்துக்கொடுத்து, அல்லது அவர்களே தேடிப் பெறுவதற்கு எல்லா வசதியும் செய்துகொடுத்து, அவற்றை அவர்கள் படித்து ஆராய்ந்து அறியச் செய்யவேண்டும். இப்படி ஆசிரியரை முதலில் ஸ்ருஷ்டி செய்துவிட்டு, அப்புறம் இவரிடம் மாணவர்கள் சேர்ந்து இவர் புதிதாகத் தெரிந்து கொண்ட பழைய வித்யையைக் கற்றுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்து தரவேண்டும்.

கிராமக் கலைகள்

வம்ச வாரியாகப் பூசாரி உடுக்கடித்து பாரதம் சொல்லிக்கொண்டு வருகிறானா? அப்படியானால் அதுவும் ஒரு கலை. அதுவும் ஒரு சாஸ்த்ரம். அது இந்தத் தலைமுறையோடு போகாமல் பிள்ளைக்கோ, இன்னொருத்தனுக்கோ அவன் சொல்லித் தருவதற்கு சாச்வதமாக திரவிய உதவி ஏற்பாடு பண்ணுங்கள் என்கிறேன். இப்படியே கரகம், பொம்மலாட்டம் எதுவானாலும் கோவில், தெய்வம், புராணம் ஸம்பந்தப்பட்டதாக இருக்கிற அந்த கிராமக்கலை (நம் தேசத்தில் கிராமக்கலை, நகரக்கலை எதுவானாலும் ஈச்வரனை மையமாகக் கொண்டதுதான்) நம் காலத்தோடு நசிக்காமல் அடுத்த தலைமுறைக்குப் போகும்படியாகச் செய்யுங்கள் என்று சொல்லிவருகிறேன்.