சில்ப சாஸ்திரம்

ஆலய நிர்மாணம் என்றவுடனேயே சில்ப சாஸ்திரமும் வந்துவிடுகிறது. லோகமே ப்ரமிக்கும் சில்பங்கள் எண்ணி முடியாமல் கொட்டிக் கிடக்கிற தேசம் இது. சித்த விகாரத்தை உண்டுபண்ணுவதற்கில்லாமல், சித்தத்தை சுத்தம் செய்வதற்காக தெய்வ ஸம்பந்தமாக்கப்பட்ட சில்பங்கள். Cultural heritage (பண்பாட்டுப் பிதுரார்ஜிதம்) என்று இவற்றைப் புகழ்ந்துவிட்டால் போதாது. சில்பிகளுக்கும் ஸ்தபதிகளுக்கும் ஊக்க உத்ஸாகங்களைத் தந்து கௌரவப்படுத்தி, அவர்களிடம் பலபேர் போய் கற்றுக் கொள்ளத் தூண்டுதல் தரவேண்டும். இதைத் தெரிவிக்கவே ஆகம ஸதஸில் இவர்களையும் வரவழைத்து முக்யத்வம் தருகிறோம். நாங்கள் ஆரம்பித்தபின் ஈச்வரனும் கண்ணைத் திறந்து பார்த்ததில் (நாங்கள் ஆரம்பித்ததும் அவனுடைய அநுக்ரஹ பலத்தில்தான்!) நிறைய ஜீர்ணோத்தாரணப் பணிகள் நடந்து, புதுப்புதுக் கோவில்களும் தினம்தினம் உண்டாகிக் கொண்டிருப்பதால் சில்ப சாஸ்திரத்துக்கும், அது தெரிந்த சில்பிகளுக்கும், சில்ப சாஸ்திர போதனைக்கும் கொஞ்சம் நல்ல தசை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதற்கும் கவர்ன்மென்டில் பள்ளிக்கூடம், பயிற்சிசாலை வைத்திருக்கிறார்கள். நல்லவேளையாக இந்த சாஸ்திரம் ஆதியிலேயே ப்ராமணர்களால் கற்பிக்கப்பட்டு, தற்பித்துச் செய்யப்பட்ட வேறு ஒரு ஜாதியாரிடம் குலத்தொழில் முறையாகப் போய்விட்டதால் இதிலே இப்போது அதிகமாக சாஸ்திர விரோதமான அநாசாரங்களைக் கலக்க இடமில்லை. ஒரு தூணில் வேலைப்பாடு செய்வது, ஒரு மூர்த்தி அடிப்பது என்றால் நாள்கணக்கில், ஒவ்வொரு நாளும் மணிக்கணக்காக உழைத்தால்தானே முடியும்? இதில் ப்ராமணன் உட்கார்ந்தால் அவன் ஸகலருடைய க்ஷேமத்துக்காகவும் பண்ணவேண்டிய யக்ஞ கர்மாநுஷ்டானங்கள் என்ன ஆவது? அதனால்தான், வ்யாகரணம், தர்க்கம், மீமாம்ஸை முதலானதுபோல் தினமும் கொஞ்ச நேரம் வாயால் சொல்லிக் காதால் கேட்டு மனஸில் நிறுத்திக்கொள்வதாக இல்லாமல், நாள்பூரா உடம்பால் செய்யவேண்டிய கார்யத்திலேயே தன்னுடைய நோக்கத்தையும் ப்ரயோஜனத்தையும் உடையதான சில்ப சாஸ்திரத்தைத் தனியாய் ஒரு வகுப்புக்கு விடவேண்டியதாயிற்று.

இப்படியேதான் வைத்யம் முதலானவற்றையும் பிராமணனானவன் ‘தியரி’யை மட்டும் போதித்துக் குலத் தொழிலாக இன்னொரு வகுப்பாருக்குத் தந்தது. அதைப் பெற்றுக்கொண்டவர்களுக்கும் அதனால் ஜீவனோபாயம் கிடைத்தது. இது ஒன்றே தொழில் என்பதால் அவர்கள் நல்ல ஒருமுனைப்பாட்டோடு அதிலே ஈடுபட்டு, சிறந்த செய்நேர்த்தியைப் பெற்றார்கள். அநுபவ மெருகு ஏற ஏற ‘தியரி’ என்று தெரியாமலேகூட தங்கள் பிள்ளைகளுக்கும், சிஷ்யப் பிள்ளைகளுக்கும் ஒரு பழக்க ஸாமர்த்யத்தாலேயே சில்பம் போன்ற கலைகளைச் சொல்லிக்கொடுக்க முடிந்தது.

ஆனால் தெரியவேண்டிய அளவுக்குத் ‘தியரி’யும் தெரிந்துகொண்டு, எப்படி சாஸ்திர விரோதம் கொஞ்சமும் இல்லாமல் மூர்த்திகளைப் பண்ணவேண்டும், எப்படி மண்டபம் விமானம் முதலானவை எழுப்பவேண்டும் என்பதற்கெல்லாம் சில்ப சாஸ்திரங்களை ஒப்பிக்கிற ஞானமும் இவர்களுக்கு இருந்தது. (இப்போதும் இருந்துவருகிறது.) தெரியாத விஷயத்தில் ஸந்தேஹம் வருகிற விஷயத்தில் மாத்திரம் ப்ராமண குருவைக் கேட்டுக்கொண்டால் போதும் என்ற அளவுக்கு விச்வகர்ம வகுப்பு எனப்படும் இவர்களே இந்தக் கலையில் வித்யாப்யாஸம் தர வல்லவர்களாகிவிட்டார்கள்.

ஸமீப காலம் வரையில் நல்ல ஸதாசாரத்துடன் குடுமி, கச்ச வேஷ்டியுடன்தான் இவர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். இப்போதைய அவநிலையிலும்கூட இவர்களில் ரொம்பப்பேர் இப்படி இருக்கிறதைப் பாராட்டிச் சொல்ல வேண்டும். இவர்களுக்குப் பூணூல் உண்டு. சைவபோஜனம் தான் பண்ணுவார்கள். ஸம்ஸ்க்ருத த்வேஷமும் ப்ரம்மத்வேஷமும் இல்லாமல் சில்ப சாஸ்திர ப்ரகாரம் தொழிலைப் பண்ணுவார்கள். அதை நன்றாகப் படித்து விளக்கம் சொல்லும் ஞானமுள்ளவர்களும் இவர்களில் உண்டு. இப்போது “ஸமதர்மம்” என்று எதுவோ ஒன்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அந்த ஐடியாலஜிப்படி சில்பத்துக்கு கவர்ன்மென்ட் ஸ்கூல் அல்லது காலேஜ் என்றால் இதுவெல்லாம் நஷ்டமாக நேரும்தானே என்றால், “ஆமாம்” என்றுதான் வருத்தத்தோடு பதில்சொல்ல வேண்டியதாகிறது. “பின்னே, ‘இதில் அநாசாரம் அதிகமாக வராது’ என்றீர்களே!” என்றால், அதிகமாக வராது என்றேனேயொழிய வரவே வராது என்று சொல்லவில்லையே! காரணம், வேத சாஸ்திராப்யாஸத்துக்கு உள்ளது போல் அவ்வளவு கடுமையான நெறிகள் இதைக் கற்றுக் கொள்வோருக்கு இல்லை. நெறி கடுமையாய் இருக்க இருக்கத்தான், தோஷம் ஏற்படவும் அதிக சான்ஸ் உண்டு. மேலும் ஆசாரத்திலே கொஞ்சம் முன்னே பின்னே இருப்பவர்கள் சிற்பக்கலை கற்றுக்கொண்டு மூர்த்திகள் அடித்துக் கோயில்கள் கட்டினாலும்கூட அந்தக் கோவில்களுக்குக் கும்பாபிஷேகம் பண்ணி, மூர்த்திகளை பிரதிஷ்டை செய்யும்போது ஸகல அநாசாரங்களும் மந்த்ர பூர்வமாக நிவ்ருத்தி செய்யப்படுவதால், நடுவில் ஏற்பட்ட தோஷங்களும் போய்விடுவதாக த்ருப்திப் படலாம்.

வாஸ்து சாஸ்திரம்

ஆகமத்தில் கோயில் கட்டுவது பற்றி வந்தாலும், கோயிலை ஊரிலே எங்கே அமைப்பது, அந்த ஊரையே எப்படி அமைப்பது, அதில் வீடுகளை எப்படி அமைப்பது, அந்த வீடு ஒவ்வொன்றையும் எப்படி அமைப்பது என்பதையெல்லாம் சொல்ல ப்ராசீனமாக வாஸ்து சாஸ்திரம் என்று ஒன்று தனியாக இருக்கிறது. காற்றும் வெளிச்சமும் இருக்கிற விதத்தில், குடிதண்ணீர் கிடைக்கும் விதத்தில், கழிவு நீர் ஓடுகிற விதத்தில் வீட்டையும் ஊரையும் நிர்மாணம் செய்தால் மட்டும் போதாது. இதை மட்டுமேதான் இன்று கவனிக்கிறார்கள் – அல்லது கவனிப்பதாகப் பேர். இவற்றையும் சொல்லி, இதைவிட முக்யமாக, எப்படி நிர்மாணித்தால் உத்தமமான திவ்ய சக்திகளின் ரேடியேஷன் ஊருக்கும் வீட்டுக்கும் கிடைக்குமோ, எப்படி நிர்மாணம் பண்ணும்போதுதான் நம் கர்மாநுஷ்டானங்களுக்கு ஸெளகர்யமாயிருக்குமோ அப்படிச் செய்வதற்கு வாஸ்து சாஸ்திரம் வழி கூறுகிறது. கூடம், தாழ்வாரம், முற்றம் முதலியவை கூடாது என்று ரூம் ரூமாகக் கட்டினால் ஔபாஸனப் புகை எப்படி வெளியே போகும்? அநுஷ்டானத்துக்கு ஏற்றதாக வீட்டு அமைப்பு இருக்கவேண்டுமானால் வாஸ்து சாஸ்திரப்படிதான் செய்யவேண்டும்.

பல ஸித்தாந்த ஒப்புவுமை

இதிலே ஒன்றுமட்டும் கொஞ்சம் புதிதாக அபிவ்ருத்தி செய்துகொள்ள வேண்டும். ‘கம்பேரடிவ் ஸ்டடீஸ்’ என்பதாக யூனிவர்ஸிடிகளில் ஒரு ஃபிலாஸபி ஸிஸ்டத்தை மட்டுமில்லாமல் பலவற்றைப் படித்து ஒன்றுக்கொன்று எப்படி மாறுபட்டுப் போகிறது, எப்படி எத்தனையோ இடங்களில் அவை ஒப்புதலாகவும் போகின்றன என்று அறாய்கிறார்கள். இது ச்லாகிக்கவேண்டிய ஆராய்ச்சி. ஸம்ப்ரதாய முறையிலும் இதர ஸம்ப்ரதாய அபிப்ராயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டித்தான் இருக்கிறது. ஏனென்றால் எந்த ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த எந்த சாஸ்திரத்தை எடுத்தாலும் அதிலே மற்றவர்களின் கொள்கைகளைச் சொல்லி அவற்றைக் கண்டித்துத்தான் ஸ்வபக்ஷத்தை (தன் கட்சியை) நிர்த்தாரணம் செய்திருக்கும். பூர்வபக்ஷத்தில் (எதிராளியின் கட்சியில்) ஆரம்பித்து அவர்கள் கருத்தை டெவலப் செய்தபின்தான் ஸ்வபக்ஷத்தை நாட்டவேண்டுமென்பதே நம் சாஸ்திரக்காரகர்கள், முக்யமாக பகவத்பாதாள், கைக்கொண்ட முறை. ஆனால் தற்போது ஸம்ப்ரதாயப்படிப் படிப்பவர்கள், ஏற்கனவே சாஸ்திரக்காரர்கள் மற்ற ஸித்தாந்தங்களில் என்ன Quote செய்கிறார்களோ அதற்கு மேல் தாங்களாக அந்த சாஸ்திரங்களைப் பார்ப்பதில்லை. அவற்றை இன்னமும் ஊன்றிப் பார்க்கவேண்டும். பிற ஸித்தாந்தங்களை இன்னம் நன்றாக அறிய வேண்டும். கொஞ்சங்கூட ஸொந்த அபிப்ராயங்களினாலும் அபிமானங்களினாலும் prejudice ஆகாமல் ஸத்ய தத்வத்தை அறிவதற்கு இது உதவும். அவரவருடைய பக்வ ஸ்திதியைப் பொறுத்துத்தான் அறிவு வாதமும்கூட ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு முடிவைக் காட்டும், அறிவால் ஒரு விதமான முடிவுக்கு வந்தாலுங்கூட அவரவருக்கும் இதற்கு ஸம்பந்தமில்லாமல்கூட எது மனஸுக்குள்ளே நன்றாகத் தைக்கிறதோ அதைத்தான் ஒருத்தர் பின்பற்றுவார், கடைசியில் பார்த்தால் ஆத்மஸத்யம் என்பது அறிவு வாதங்களுக்கு அப்பாற்பட்டது – என்பதெல்லாம் நிஜந்தான். ஆனாலுங்கூட சாஸ்திரப் படிப்பு என்று ஒன்றை மேற்கொள்கிறபோது அதில் நல்ல தேர்ச்சியை ஸம்பாதித்துக் கொள்வதற்கு நான் சொன்னபடி அவரவரும் தங்களுக்குப் பிடித்த ஸம்ப்ரதாயத்தைத் “தரோ”வாகத் தெரிந்து கொள்வதோடு, மற்றவற்றையும் அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் ஒரளவு நன்றாகவே தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் முடிவாக ஒப்புக்கொள்ள முடியாத ஸித்தாந்தங்களிலும் அறிவிலே பெரியவர்களாக வந்திருப்பவர்களின் பெருமையைத் தெரிந்துகொள்ள முடியும். “நம்முடையதுதான் அப்படியே உசத்தி, மற்றது ஒன்றும் இல்லாதது” என்ற குறுகல் பார்வை அறிவுலகத்தில் கூடாதாகையால் சொல்கிறேன்.

பழைய முறையில் அமைக்கிற கலாசாலைகளில், நல்ல இங்கிலீஷ் ஞானமுள்ள சிலர் நம் தேச ஃபிலாஸஃபிகளை மட்டுமில்லாமல், மற்ற தேச ஃபிலாஸஃபிகளையும்கூட இப்படிச் சேர்த்துப் படித்து ஆராய்ச்சி செய்து, புஸ்தகம் போட்டு, அவற்றின் ஸாரத்தையாவது இக் கலாசாலை வித்யார்த்திகளுக்கு தெரிவிக்கும்படியும் செய்யலாம்.

வேத பாஷ்யம், வேதாங்கம், வேதாந்தம்

எத்தனை வித்யைகள் இருந்தாலும் முடிவாக ப்ரஹ்ம வித்யையில்தான் சேர்க்க வேண்டும். பகவான், “நான் வேதத்தில் ஸாமம், மலைகளில் மேரு, மரங்களில் அரசமரம், மிருகங்களில் சிங்கம், பக்ஷிகளில் கருடன். மாதங்களில் மார்கழி” என்றெல்லாம் கீதையின் விபூதியோகத்தில் சொல்லிக்கொண்டு போகும்போது, “வித்யைகளில் நான் ஆத்ம வித்யையான ப்ரஹ்ம வித்யை” என்று சொல்லியிருக்கிறார்.

அத்யாத்ம வித்யா வித்யாநாம்“.

மடம் ஏற்பட்டிருப்பதும் முடிவாக அதற்குத்தான். அதனால் வேத அத்யயனம் மட்டுமில்லாமல், அதன் அர்த்தத்தை அறிவதான வேத பாஷ்யம், அதற்கு அவயவமாகச் சேர்ந்து வரும் வேதாங்கங்கள், முடிவான ஆத்மவித்யையேயான உபநிஷத்துக்கள் (அதாவது வேதாந்தம்) ஆகியவற்றின் ப்ரசாரத்திலேயே மடம் குறிப்பாக அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறது. இன்னமும் நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது செய்திருப்பது போதவே போதாது.

எனக்கு ஆசை, இப்போது பாடசாலைகள் என்பதாக வேத அத்யயனத்துக்கு என்று ஏற்பட்டிருக்கும் எல்லாவற்றிலுமாவது வேதம் ஸம்பந்தப்பட்ட மற்ற வித்யைகளையும் சாஸ்திரங்களையும் சொல்லிக்கொடுத்து ப்ரசாரம் செய்ய வேண்டும் என்பது. இப்படி மேலும் அநேக பாடசாலைகளும் புதிதாக வைக்க வேண்டும்.

சென்ற சில தலைமுறைகளில் வேதவித்யை முழுதுமே மங்கிக்கொண்டு வந்திருப்பதில் ரொம்பவும் மங்கிப் போய் விட்ட ஒரு பிரிவு உண்டு. அதாவது வேதத்தில் அத்யயனம் சொல்லிவைக்கவாவது (வேத ஸம்ஹிதைகளின் டெக்ஸ்ட்டை மாத்திரம் உருப்போட்டு மனப்பாடம் பண்ணிவைக்கவாவது) ஏதோ சில பாடசாலைகள் இருக்கின்றன; ஆனால் அவற்றின் அர்த்தத்தைச் சொல்லிக்கொடுக்கும் பாடசாலைகள் மிகமிக அபூர்வமாகிவிட்டன. கனபாடிகளிலேயே பலருக்குக்கூட வேதத்தைச் சொல்லத்தான் தெரிகிறதே ஒழிய, அதற்கு அர்த்தம் சொல்லத் தெரியாமலிருக்கிறது. இதற்காகத்தான் வேதம் படித்தபின் வேதபாஷ்யமும் படித்துப் பரீக்ஷை கொடுக்க ஏற்பாடுகள் செய்துவருகிறது. இதில் எல்லாருடைய ஒத்துழைப்பும் தேவை.

இது நேராக வேதத்தைப் பற்றியது. வேத அங்கங்களையும் மறுபடி நல்ல ப்ரசாரத்துக்குக் கொண்டுவர முயல வேண்டும். குறிப்பாக வேதாங்கங்களில் வ்யாகரணம், வேதாங்க ஜ்யோதிஷத்தின் வளர்ச்சியாகப் பிற்பாடு அபிவிருத்தி கண்ட வான சாஸ்திர, கணித சாஸ்திரங்கள் ஆகியவற்றை இப்படி ப்ரகாசப்படுத்தவேண்டும்.

வேத உபாங்கங்களான நாலில் மீமாம்ஸை என்பதில் உத்தரபாகமாக “வேதாந்தம்” என்பது வந்துவிடுகிறது. சங்கர மதம், ராமாநுஜ மதம், மத்வ மதம் எல்லாமே வேதாந்தத்தின்கீழ் வருபவைதான். இந்த மடத்தைப் பொருத்தமட்டில் அத்வைத வேதாந்தத்தைப் போஷிப்பது முக்ய கார்யமாக இருப்பதால் அதற்கென்று ஸதஸ்கள் நடத்துகிறோம். சென்ற நூற்றாண்டுக் கடைசியிலிருந்தே அத்வைத ஸபா என்பது மடத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஸம்ப்ரதாயத்துக்கான புஸ்தகங்கள் போடுவதற்கும் ஆதரவு தருகிறோம். இப்படியே ராமாநுஜ, மத்வ மடத்தினர் விசிஷ்டாத்வைத, த்வைத வேதாந்தங்களை ரக்ஷித்து ப்ரசாரம் செய்துவருகிறார்கள். (நான் உண்மையைச் சொல்லவேண்டுமானால் ஸ்மார்த்தர்களுக்கு அத்வைத ஸம்பரதாயத்திலும் அதையொட்டியுள்ள ஸமயாசாரத்திலும் இருப்பதைவிட மாத்வ, வைஷ்ணவர்களுக்கு அவர்களுடையதில் பிடிமானம் மிகவும் அதிகம்.)

வேதாந்தம் – ஸித்தாந்தம் என்று பிரித்துச் சொல்வது வழக்கமானாலும் சைவஸித்தாந்தமும் வைதிக மதமாக, வேதாந்த அடிப்படையின் மேல் உருவானதுதான். அதை ஆதீனகர்த்தர்கள் போஷித்து வருகிறார்கள். இன்னம் இப்படியே சைதன்யர், நிம்பார்க்கர், வல்லபர் முதலானவர்களின் ஸம்பரதாயங்களும் அவற்றின் மடாலயங்களால் ரக்ஷிக்கப்பட்டு வருகின்றன.

யூனிவர்ஸிடிகளில் “ஃபிலாஸஃபி” என்று இருப்பது முக்கியமாக வேதாந்த ஸம்ப்ரதாயங்களைப் பற்றியதுதான். லோகம் முழுதிலுமே, ஸமய ஆசரணையைவிட தத்வ விசாரம் முக்யமுள்ளதால் வேதாந்தம்தான் நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருகின்றது. வேதாந்த ஸம்ப்ரதாயங்களிலுங்கூட ‘தீயிஸம்’ (தெய்வக் கொள்கை, வழிபாட்டு முறை) முதலியவை இல்லாத சுத்த தத்வ விசாரமாயுள்ள அத்வைதந்தான் அகில உலக ரீதியில் ப்ரஸித்தமாயிருக்கிறது. இப்படி வேதாந்தம் என்றாலே அத்வைதம்தான் என்று நினைக்கப்படுகிறதே என்று மற்ற ஸம்ப்ரதாயக்காரர்கள் வருத்தம், கோபங்கூட படுகிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். யூனிவர்ஸிடிகளின் புண்யத்தில் மற்ற சாஸ்திரங்களைவிட வேதாந்தம் சற்று ஜீவசக்தியோடு இருக்கிறது என்று சொல்ல வந்தேன்.

ஆனால் இதிலும்கூட ஆசார அநுஷ்டானத்துக்கு இடமேயில்லாமலும், ரிஸர்ச் என்ற பெயரில் பூர்விகர்களின் அபிப்ராயத்துக்கும் நம்பிக்கைக்கும் மாறான அநேக அபிப்ராயங்களைச் சொல்வதாகவும், திறந்த மனஸோடு ஸயின்டிஃபிக்காக ஆராய்வதாகச் சொன்னாலும், இந்த ரிஸர்ச்காரர்களிலும் சிலர் biased -ஆகத்தான் தங்கள் தியரிகளை உருவாக்குவதாகவும் இருப்பதால் யூனிவர்ஸிடிகள் செய்கிற வேதாந்த ப்ரசாரத்தில் பூர்ண த்ருப்திப்படுவதற்கில்லாமலிருக்கிறது.

அத்வைதத்திலும்கூட pure metaphysics -ஐ (சுத்த தத்வத்தை) மற்ற தேசத்துக்காரர்கள் மெச்சி, தங்களால் முடிந்தவரை அப்யஸித்துப் பார்க்கட்டும். இதிலே ஜன்மாந்தர விசேஷமுள்ள அபூர்வமான சிலர் வேண்டுமானால் ஸித்தியும் பெறக்கூடும். ஏனென்றால், ஏதோ ஜன்மாந்தர விசேஷந்தானே அந்த விதேசிகளை இதிலே இழுத்திருக்கிறது? ஆனால் நம்மவரைப் பொறுத்தமட்டில் வைதிக ஆசாரமில்லாமல், கர்மாநுஷ்டானமில்லாமல் ‘அத்வைதா’, ‘அத்வைதா’ என்று ரிஸர்ச்சாகவும், லெக்சராகவும், புஸ்தகமெழுதுவதாகவும் எத்தனைதான் பண்ணினாலும் வாஸ்தவத்தில் அந்த அநுபவத்தின் கிட்டேயே போகாமல் அறிவுமட்டத்தில் அலசியதாக மாத்திரந்தான் விஷயம் முடியும். அத்வைதத்தை ஸ்தாபித்த ஆசார்யாள் கர்மாநுஷ்டானத்தாலும், ஈச்வரோபாஸனையாலும் (இன்ன மூர்த்திதான் என்று மற்ற ஸம்ப்ரதாயஸ்தர்களைப் போல ஒன்றை மட்டும் கொள்ளாமல், எல்லாவற்றுக்கும் மூலமான பரமாத்மாவை ஏதோ ஒரு ரூபத்தில் செய்கிற உபாஸனையாலும்) தான் ஒருத்தன் சுத்தியாகி தத்வ விசாரத்துக்கு வரவேண்டும் என்று தீர்மானமாக விதித்திருக்கிறார். இவற்றுக்கு யூனிவர்ஸிடிப் படிப்பில் எங்கே இடம்? ஆனபடியால் வேதாந்த சாஸ்திரங்களிலும் ஸம்ப்ரதாய வித்வான்களை ஆதரித்து, அவர்களிடமிருந்து ஸம்ப்ரதாய பூர்வமாக சிஷ்யர்கள் சிக்ஷை பெற ஏற்பாடு செய்யவேண்டும்.

அவர்கள் தியாகமும் நமது தியாகமும்

இப்படிப்பட்ட த்யாகத்துக்கு நாம் செய்யக் கூடியது எதுவுமில்லை. நாம் ஏதாவது செய்துவிட்டால், அதாவது குரு சிஷ்யர்கள் நாம் செய்கிற உபகாரம் எதையோ ஏற்றுக் கொண்டுவிட்டால் அப்புறம் அவர்கள் எப்படி த்யாகிகளாக முடியும்? ஆகவே இப்படிப்பட்ட ஐடியலை நானோ நீங்களோ சொல்லிச் சொல்லி ஒரு ஊக்கம் உண்டாக்குவதைத் தவிர இதில் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை.

அடுத்தப்படியாகத்தான் நான் சொன்ன ‘ஸ்கீம்’கள், அதாவது மூலதனம் வைத்து ஸம்பாவனை, ஸ்காலர்ஷிப் முதலானதுகள் கொடுத்து போஷிப்பது. இங்கேதான் நாம் ஏதோ கொஞ்சம் த்யாகம் செய்ய இடமேற்படுகிறது. த்ரவ்ய ரூபத்தில் (பொருளுருவில்) த்யாகம், நம்முடைய நேரத்தை த்யாகம் செய்து இதைப் பற்றிச் சிந்திப்பது, கார்ய ரூப த்யாகம் ஆகியவை கொஞ்சமாவது செய்து, வேதம் மங்கிப் போகாமல் ரக்ஷித்து, ஈச்வராநுக்ரஹத்தைப் பெறுவதற்கான ‘ஸ்கீம்’கள்.

பிக்ஷாசார்யம் ஒரு பையனுக்கு அளிக்கிற பணிவையும், அந்தப் பணிவின் வழியாய் அவனுக்கு ஏற்படும் மற்ற பண்புகளையும் நான் ரொம்பவும் முக்யமாய் நினைப்பதால், இந்த ஸ்கீம்களிலேயே ‘நியமாத்யயனத் திட்டம்’ (பண்டைய ப்ரம்மசர்ய, பிக்ஷாசர்ய நியமங்களோடு மாணவன் கல்வி கற்கிற திட்டம்) என்பது போலவும் சிலது வைத்து, இவ்வழியில் படிக்கிறவனுக்கு அதிகப்படி ஸம்பாவனைகள் செய்கிறோம்.

ஏதோ ஒரு தினுஸிலாவது “குருகுலவாஸம்” என்ற பெயரும், அதன் உசந்த லக்ஷ்யமும் ஒட்டிக் கொண்டிருக்கும் படியாக ஒரு இன்டிவிஜுவல் குருவுடனேயே பத்துப் பசங்கள் சேர்ந்து வாழும்படியாகத் திட்டங்களே போட்டு நடத்தி வருகிறோம். “றோம்” என்று உங்களிடமிருந்து பிரிந்து நாங்கள் யாரோ இருக்கிறாற்போலச் சொன்னது ஸரியில்லை. நீங்கள் எல்லாரும் நடத்தி வைக்கவேண்டிய உங்கள் திட்டம்தான் இவையெல்லாம். ரொம்பவும் ‘ஓஹோ’ என்று ஆதரவு கிடைக்காவிட்டாலும், வேதாப்யாஸம் வேர் பிடித்துக் கொள்ளும் என்று நம்பிக்கை தருகிற அளவுக்காவது ‘ரெஸ்பான்ஸ்’ கிடைத்திருக்கிறது. இதை ‘ஓஹோ’ என்றே செய்யவேண்டியது உங்கள் பொறுப்பு*. இதைவிட ஜன்மா எடுத்ததற்கு ப்ரயோஜனமாக நீங்கள் செய்யக்கூடிய தொண்டு இல்லை.

இப்போது அத்யயனம் செய்த ப்ராம்மணர்கள் எங்கேயோ சில இடங்களில்தான் இருக்கிறார்கள். அவர்களிடம், “யாருக்காவது நீங்கள் சொல்லிவைக்கக்கூடாதா?” என்றால், “யாருக்காவது என்றால் யார் வருகிறார்கள்? ‘தட்டு தூக்கினாலும் தூக்குவோம், இதற்கு வரமாட்டோம். இதில் கால் வயிற்றுக் கூழுக்குக்கூட வழியில்லை என்று நன்றாகத் தெரிந்துகொண்டுள்ள நீங்களே எங்களைக் கூப்பிடுகிறீர்களே!’ என்று கேட்கிறார்கள். இனிமேல் யாராவது வந்தால் சொல்லிக் கொடுப்பதற்கு எங்களுக்கே ஞாபகமிருக்குமா என்று ஸந்தேஹம்” என்று பதில் சொல்கிறார்கள்! இவர்கள் தங்கள் வித்யையை அபிவ்ருத்தி செய்துகொள்ள வசதி செய்து தராமல், வாஸ்தவமாகவே அடியோடு மறந்து போகவிட்டால் அதைக்காட்டிலும் நமக்கு அபகீர்த்தி இல்லை.


* இது தொடர்பாக, இரண்டாம் பகுதியில் “வேதம்” என்ற பேருரையில் கடைசி ஐந்து உட்பிரிவுகள் பார்க்க.

வாரச் சாப்பாடு

ஒவ்வொரு நாளும் பல க்ருஹங்களுக்குப் போய் பிக்ஷை கேட்பது என்றில்லாமல் “வாரம்” என்ற முறைப்படியாவது செய்யலாம். அதாவது, வித்யார்த்தி வாரத்திலுள்ள ஏழு நாட்களில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு அகத்தில் பிக்ஷை வாங்குவது என்று வைத்துக் கொள்ளலாம். அப்போது, போடுகிறவர்களுக்கு ‘தினந்தினம் வருகிறானே’ என்று இல்லாமலிருக்கும். ஆனால் குருவுக்கும் சேர்த்து வாங்க வேண்டுமென்று இருந்தால் அப்போது பல வீடுகளில் கொஞ்சம் கொஞ்சம் வாங்கினால்தான் முடியும். இதெல்லாம் அந்தந்த குருகுலம் உள்ள நிலைமை, ஊர்க்காரர் மனப்பான்மை, மற்ற ஸந்தர்ப்பங்களைப் பொறுத்து முடிவு பண்ணவேண்டிய விஷயம். மொத்தத்தில் பிக்ஷாசர்யமுள்ள குருகுலவாஸத்தை உயிர்ப்பிப்பது ரொம்பவும் ச்ரேஷ்டம்.

ஆதர்ச நிலையை அழியவிடலாகாது

‘இம்மாதிரியெல்லாம் இந்தக் காலத்தில் யாராவது கிடைப்பார்களா? இதென்ன கார்யத்துக்கு உதவாத பேச்சு?’ என்று நினைக்கலாம். அதற்காக உத்தமமான ஐடியல்களை வாயாலாவது சொல்லி, ஞாபகப்படுத்தக்கூட குருப்பட்டம் கட்டிக்கொண்டவன் தவறிவிடகூடாது என்பதால்தான் சொல்கிறேன். ஆதர்ச நிலை என்னவென்றே தெரியாமல் அழிந்துபோகவிடக்கூடாது. ‘யார் follow பண்ணுவார்கள்?’ என்று பார்க்காமல்தானே க்றிஸ்து, ‘ஒரு கன்னத்தில் அடித்தவனுக்கு இன்னொரு கன்னத்தையும் காட்டு’ என்றார்? சொடக்குப் போட்டால் சரக்கு உண்டாகிவிட வேண்டும் என்ற மனோபாவம் ஜனங்களுக்கு வலுத்து, தினம் ஒரு ‘மில்’ முளைத்துக்கொண்டும், ஜனங்கள் நாசூக்குக்கு மேல் நாசூக்கான சரக்குகளுக்குப் போய்க்கொண்டும் இருந்தபோது காந்தி, “அவரவர்களே ராட்டையில் நூற்றுக் கட்டிக்கொள்ளுங்கள்; கைக்குத்தல் அரிசி சாப்பிடுங்கள்” என்று சொல்லிக்கொண்டே இல்லையா?

நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று ஒன்றை விட்டுவிட்டால் அது நடக்காமலேதான் போகும். ‘லோகத்துக்கு இதனால் என்ன ப்ரயோஜனம்?’ என்கிற எண்ணமே இல்லாமல் எவரெஸ்டைப் பிடிக்க வேண்டுமென்று எத்தனையோ காலமாக எத்தனையோ ‘டீம்’கள் போய்ப் போய்த் தோற்றுத் தோற்றுதான் திரும்பினார்கள். ஆனாலும் ஸாத்தியமில்லை என்று விட்டுவிடாமல் முயற்சி பண்ணிக்கொண்டே இருந்ததால் கடைசியில் அதையும் பிடித்துவிட்டார்களோ இல்லையோ? ஆனபடியால், லோகத்துக்குப் பரம ப்ரயோஜனமான குருகுலக் கல்வி முறை ஏட்டுச் சுரைக்காய் என்று விட்டுவிடவே கூடாது.

பிக்ஷாசா்யம்

ரொம்பவும் உசந்த முறை, பண எண்ணமே இல்லாமல் நடக்கிற குருகுலக் கல்விதான். பரம த்யாகிகளாக, வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி வாழத் தயாராக, வித்யை ப்ரசாரம் ஆகவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் போதிக்கிறவர்கள் நடத்தும் குருகுலத்துக்கு எதுவும் ஈடாகாது. இப்படிப்பட்டவரின் அறிவு விசேஷத்துடன் மனஸ் விசேஷமும் சேர்வதால் அப்போதுதான் சிஷ்யர்களுக்கு மிகவும் உயர்ந்த வித்யாவிலாஸம் உண்டாகும். ஆனால், இவன் வயிற்றைக் கட்டிக்கொண்டாலும் சிஷ்யனாக இருக்கிற இள வயசுக்காரனின் வயிறு வாடப்படாதே! அத்யயனம் செய்த ப்ராமணன் என்றால் நிச்சயமாக அவனுக்கு மான்யமாக ஸொத்து இருக்கும் என்ற பழங்கால நிலை இப்போது இல்லையே! தனக்கே ‘ததிங்கிணதோம்’ போடுகிற வேத பண்டிதர் சிஷ்யனை வேறு எப்படிப் பராமரிப்பார்? இங்கேதான் சிஷ்யனின் பிஷாசா்யம் கைகொடுக்கிறது. அவன் பிக்ஷை எடுத்தே தன்னுடைய பாட்டைக் கவனித்துக் கொண்டுவிடவேண்டும். அதுமட்டுமில்லை. தனக்காக நாலு வீட்டுக்குப்போய் பிக்ஷை கேட்க வேண்டுமென்றால், வாத்யாருக்காக இன்னம் நாலு வீட்டுக்குப் போகவேண்டும். முன்னேயே சொன்னமாதிரி அவருக்குப் பக்வமான (சமைத்த) ஆஹாரம் பிக்ஷையாகக்கிடைக்கக் கூடாதாகையால், அவருக்கானதை அரிசி, பருப்பு, காய்கறி என்று வாங்கி வரவேண்டும்.

கல்வி அளிப்பது ஒன்றே நோக்கமாயிருக்கிற த்யாகி வாத்யாரைப்போல, கல்வி பெறுவது ஒன்றே நோக்கமாயிருக்கிற த்யாகி மாணவன்தான் இப்படி பிஷாசா்யம் செய்து குருகுலவாஸம் செய்வான்.

வேதவித்யை வளர

உதிரி உதிரியாக இப்படி அங்கங்கே சில பேர் சேர்ந்து செய்கிறது எடுபடாமல், சாச்வதமாய் நிற்காமல் உதிர்ந்து போய்விடக்கூடிய ஆபத்து இருக்கிறது. அதனால் எல்லார் உபகரிக்கக்கூடியதையும் ‘ஸென்ட்ரலைஸ்’ செய்து (மையப்படுத்தி) நிர்வாஹம் பண்ணவேண்டிய அவச்யம் உண்டாகிறது. இதற்காகத்தான் மடத்தின் ஆதரவிலேயே வேத ரக்ஷணத்துக்காகப் பலவித திட்டங்கள் போட்டு டிரஸ்ட்கள் வைத்திருக்கின்றன. வேதரக்ஷண நிதிக்காரர்களைக்* கேட்டால் விவரங்கள் தருவார்கள். அவற்றுக்கு த்ரவ்ய உபகாரம் செய்து வேத சாஸ்த்ர வித்யை வளர, அதுவும் ப்ராசீன முறையிலேயே வளரச் செய்வது உங்கள் கடமை. இந்த தேசத்தில் பிறந்துவிட்டீர்களோல்லியோ! பிடித்தாலும். பிடிக்காவிட்டாலும் இதன் சீதோஷ்ணாதிகளால் ஒரு ஸமயம் நடுங்கி விரைத்துக்கொண்டும் இன்னொரு ஸமயம் வியர்த்துக் கொட்டிக்கொண்டும் அவதிப்படுகிறீர்களோல்லியோ? அப்படி ஒரு அவதியாக நினைத்துக்கொண்டாவது இதையும் படுங்கள். என்னை குரு என்று சொன்னால் என் மிரட்டல் உருட்டலைக் கேட்டுத்தான் ஆகணும். (பெரிதாகச் சிரிக்கிறார்.)

இந்த ‘ஸ்கீம்’களின் பொதுவான நோக்கம், வாத்யார்கள் வயிற்றுப்பாட்டைப் பற்றி நிர்விசாரமாக இருக்கும்படி அவர்களுக்கு நன்றாக ஸம்பாவனை செய்வது. ‘நன்றாக’ என்றால் அவர்கள் கார் வைத்துக்கொண்டு பங்களா வாஸம் செய்ய வேண்டுமென்று அர்த்தமில்லை. ஆனாலும் அதற்காக சுஷ்கம் பண்ணக்கூடாது. இப்போது நிரந்தர அம்சமாகவே ஆகிவிட்ட ‘இன்ஃப்ளேஷ’னில், ப்யூன்கூட (அந்தப் பேரைச் சொன்னாலே கோபித்துக் கொள்வார்களோ, என்னவோ? எனக்கு வேறே பேர் தெரியவில்லை) நானூறு ஐநூறு என்று சம்பளம் வாங்குகிற காலத்தில் வேத பண்டிதர்கள் டாம்பீகமில்லாவிட்டாலும் கௌரவமாக வாழ்க்கை நடத்தும்படி ஸம்பாவனை பண்ணவேண்டும். இரண்டு மணி பாடிவிட்டுப் போகிறவரைக் கலைஞர் என்று கொண்டாடி ஐநூறு, ஆயிரம் கொடுக்கிறீர்களோ இல்லியோ?

சிஷ்யர்கள் இல்லாமல் வாத்யார் ஏது? ஆனதால், நமது வேதம், சாஸ்திரம், கலாசாரம் என்றால் அவற்றின் பக்கமே வர பயப்படும் இன்றைய ஹீனஸ்திதியில், இவற்றுக்கும் பசங்களை இழுக்கும்படியாக அவர்கள் படிக்க ஆரம்பிப்பதிலிருந்தே அவர்களுக்கு attractive-ஆன கணிசமான ஸ்டைபென்ட்கள் தரவேண்டும். படிப்பு முடிந்து போகிற போதும், ஆயுஸ் பூராவும் ஒரு கஞ்சி காய்ச்சிக் குடிப்பதற்காவது தேவைப்பட்ட ஒரு தொகையை அவன் பேரில் “ஃபிக்ஸ’டில் (Fixed Deposit – ல்) போட்டுவிட வேண்டும். மூலத்தை அவன் கையாண்டு ஆழும் பாழும் செய்ய இடம் தராமல், வட்டி மாத்திரமே அவனுக்குக் கிடைத்துவரும்படிச் செய்ய வேண்டும். இப்படியெல்லாம் இப்போதே கொஞ்சம் நடத்தி வருகிறோம். அவனுடைய காலத்துக்கு அப்புறமும் தொகை ட்ரஸ்டைச் சேர்வது என்றில்லாமல் அவன் தலைமுறைக்கு இந்த வட்டி சேருமாறு ஏற்பாடு பண்ணியிருக்கிறது. அப்போதுதான், இப்படி ஒரு பிதுரார்ஜிதம் கிடைப்பதில் வருங்காலத் தலைமுறைகளை மனஸ்ஸாக்ஷி கொஞ்சம் கிளறிவிட்டு, “நாமும் அப்பா, தாத்தா வழியிலேயே வித்யைக்கு வாழ்க்கையை அர்ப்பணம் பண்ணுவோம்” என்று நினைக்கப் பண்ணும். எதிர்காலத்திலும் வேத சாஸ்த்ரக் கல்வி அதற்குரிய முறையில் தொடர்ந்து நடக்கக் கொஞ்சமாவது இடமேற்படும்.


*வேதரக்ஷண நிதி ட்ரஸ்ட், “ச்ரேயஸ்”, 2, ஆறாவது மெயின் ரோடு, நங்கநல்லூர், சென்னை – 600 061.

அஹம் அடிபடவே குருகுலம்

இந்த அஹங்கார நாசத்துக்கு ரொம்பவும் உதவியாயிருப்பது குருகுலவாஸம்தான். “எங்கேயோ இருக்கிற ஈச்வரனிடம் பக்தி பண்ணி, எப்போதோ எழுதிவைத்த சாஸ்திர ஒழுக்கத்துக்குக் கட்டுப்பட்டு விநயமாகப் போ” என்றால் இவை உள்ளூற ஏறாமல் மேல்மட்டத்தோடு நிற்பதாகவும், எனவே ‘தான்’ போகாததாகவுமே இருக்கும். அதனால்தான் ப்ரத்யக்ஷமாக ஒரு பெரியவனை குரு என்று காட்டி, அவன் கிட்டே வஸிக்கும்படியாகக் கொண்டு விட்டு விநயத்தை வளர்க்கவேண்டுமென்பது. கண்ணுக்கு முன்னால் அந்த குரு செய்கிற சுத்தமான ஈச்வர பக்தியும், அவர் அநுஸரிக்கிற தர்ம கர்ம அநுஷ்டானங்களும் தன்னால் சிஷ்யனுக்குள் புகுந்துவிடும்.