“ஒழியணும்” மறைந்து “வளரணும்” வளரட்டும்!

ஆகையால் ‘ஒழியணும்’ என்ற கோஷம் உள்ள மட்டும் ஒன்றும் வாஸ்தவத்தில் சரியாகாது. தமிழ்ப் பண்பாட்டையும், திருவள்ளுவர் முதலானவர்கள் அன்பையும் அருளையுமே போற்றிச் சொன்னதையும் ஒரு பக்கம் ஓயாமல் சொல்லிக் கொண்டே, இப்படி ‘ஒழிக’ கோஷம் போடுவதும், தெருவெல்லாம் எழுதி வைப்பதும் நம் தமிழ் தேசத்துக்குக் கொஞ்சம் கூட ஏற்றதல்லவே என்று என் மனஸுக்கு ரொம்பவும் கிலேசமாக இருக்கிறது. ‘ஒழியணும்’ என்பதை விட்டு ‘வளரணும்’ என்று ஆரம்பித்தோமானால் அத்தனை பேதமும், த்வேஷமும், சண்டையும் போய்விடும். ‘ஜாதி ஒழியணும்’ என்பதற்குப் பதில் இனிமேல் பழையபடி ‘பக்தி வளரணும்’; ‘கோயில் வளரணும்’ என்று ஆரம்பித்து அதற்கானதை ஸகல ஜனங்களும் சேர்ந்து பண்ணினால் ஆதி காலத்திலிருந்து இந்த தேசத்தை ஒரு குடும்பமாகப் பின்னி வைத்து வந்திருக்கிற ஈச்வர பக்தி இப்போதும் நம்மை ஒன்றாக்கிக் காப்பாற்றும். பக்தி வந்து விட்டால், ஜாதி த்வேஷம் போயே போய்விடும். இத்தனை காலமாக இப்படித்தான் இருந்தது. ஜாதி இருந்தது. ஆனால் அதனால் த்வேஷம் இல்லாமலே இருந்தது. ‘ஜாதியில் தப்பில்லை; அதனால் த்வேஷமிருப்பதுதான் தப்பு’ என்பதைப் புரிந்து கொள்ளாமல், எலி இருக்கிறது என்பதற்காக வீட்டையே கொளுத்தினமாதிரி இப்போது ஜாதியையே எடுத்துவிட வேண்டும் என்று ஆரம்பித்ததில் பழைய நல்ல தொழில் பிரிவினையும், திருப்தியும், சாந்தமும், அடக்கமும், ஸமூஹ ஸெளஜன்யமும் பாழானது தவிர, த்வேஷம் நன்றாகக் கப்பும் கிளையுமாக வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இப்போதாவது விழித்துக் கொண்டு ‘அழியணும்’ என்கிற எண்ணத்தை விட்டுவிட்டு, ‘பக்தி வளரணும்’, ‘சகலரும் ஒன்று சேர்ந்து பண்ணுகிற சமூகத் தொண்டுகள் வளரணும்’ என்று முயற்சி செய்ய ஆரம்பித்தால், ஜாதி த்வேஷம் என்பதை ignore [அலக்ஷ்யம்] பண்ணினதாகிவிடும். அதை ரொம்பவும் லக்ஷ்யம் பண்ணி, எதிர்ப்புச் சண்டை போட்டால்தான் அதுவும் பதிலுக்குப் பதில் ஜாஸ்தி வீரியம் அடைகிறது! இப்படிச் செய்யாமல் மற்ற நல்ல விஷயங்களிலேயே கவனத்தைச் செலுத்தி அதை ignore செய்தோமானால், தானே இருந்த இடம் தெரியாமல் போய்விடும். ‘மருந்து சாப்பிடுகிறபோது குரங்கை நினைத்துக் கொள்ளாதே’ என்றால் தப்பாமல் அந்தக் குரங்கு நினைவுதான் ஒவ்வொரு தரமும் மருந்தை எடுக்கிற போது வரும் என்கிற மாதிரி, “ஜாதி ஜாதி என்று த்வேஷம் கூடாது” என்று சொல்கிற போதே ஜாதியினால் உயர்வு தாழ்வு உணர்ச்சியையும் ஞாபகப்படுத்திக் கொண்டேதான் போகிறோம்!

அதனால் ஸகல ஜாதியாரும் சேர்ந்து கோயில் திருப்பணி, அல்லது தூர்ந்த ஏரியில் மண் வாருவது என்கிற மாதிரியான பெரிய காரியங்களை எடுத்துக் கொண்டு, ஓயாமல் பொதுத் தொண்டுகளில் ஈடுபட்டிருந்தால் தன்னால் அன்பும் ஸமூஹ ஸெளஜன்யமும் ஏற்பட்டுவிடும். இப்போது காரியம் இல்லாமிருப்பதால்தான் எதையாவது நினைத்துக் கொண்டிருக்கத் தோன்றுகிறது. இதிலிருந்துதான் விதண்டாவாதம், வம்பு, தும்பு, ‘ஒழிக’ சண்டை எல்லாம் உண்டாகின்றன. ‘ஒரு சண்டை பூசல்’ என்று கிளப்பி விட்டால்தான் ஸ்வாரஸ்யமாயிருக்கிறது. கிளர்ச்சி ஆர்ப்பாட்டம், புரட்சி என்று கிளப்பிவிட்டால்தான் தங்களைச் சுற்றி ‘ஜே’ போடப் பத்துப் பேர் சேர்கிறார்கள் என்பதால் இம்மாதிரி செய்கிறார்கள். இதற்கெல்லாம் பொழுதேயில்லாதபடி காரியங்களில் ஈடுபட்டிருந்தால் எல்லாம் சரியாகி சாந்தமாகிவிடும். தொண்டைத் தண்ணீர் வற்ற ‘ஒழிக’ கூச்சல் போட்டுக் கொண்டு, கால் வலிக்க ஊர்வலம் வருவதற்குப் பதில் இந்த man-power-ஐ [மனித சக்தியை] ஏதாவது ஆக்கரீதியான திசையில் திருப்பி விட்டால் எத்தனையோ வளர்ச்சி ஏற்படும். எல்லாவற்றையும் விடப் பெரிய வளர்ச்சி ஸமஸ்த ஜனங்களிடையும் உண்டாகிற அன்புதான். அநுஷ்டானங்கள் பண்ணுவது, கோவிலுக்குப் போவது, உபந்நியாஸத்துக்குப் போவது. லீவு நாளானால் ஸகல ஜாதியாரும் சேர்ந்து நாள் முழுக்க தெய்வப்பணி, ஸமூஹப் பணி செய்வது என்று ‘டைட்’டாக டைம் டேபிள் போட்டுக் கொண்டு பண்ண ஆரம்பித்துவிட்டால் இந்த ‘ஒழிக’, ‘வீழ்க’ வுக்கெல்லாம் அவகாசமேயில்லாமல் எல்லாரும் வளர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

ஜாதியில் உயர்வு-தாழ்வு நிச்சயமாக இல்லை. மகான்கள் – அப்பர், நம்மாழ்வார், சேக்கிழார், நந்தனார், கண்ணப்பர் மாதிரியானவர்கள் – எந்த ஜாதியிலும்தான் தோன்றியிருக்கிறார்கள். ஆசார்யாளே கண்ணப்பரை [‘சிவானந்த லஹரி’] யில் ஸ்தோத்திரம் பண்ணியிருக்கிறார். எவனொருவனும் தான் இன்னொருவனைக் காட்டிலும் உசந்தவன் என்று நினைக்கிறதே பாபம் என்று சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. மஹான்களும் இப்படித்தான் நமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள். “நாயினும் கடையேன்”, ‘நாயடியேன்’ என்றெல்லாந்தான் அவர்கள் தங்களைச் சொல்லிக் கொள்கிறார்கள். இந்த மனப்பான்மை சுதந்திர யுகத்தில் போய்விட்டதுதான் கோளாறு. பழைய அடக்க மனோபாவம் நமக்கு வரவேண்டும். வந்து விட்டால் காரியத்தில் ஜாதி இருக்குமே தவிர, மனஸில் எள்ளளவும் பேதம் இராது. வாழ்க்கை முறையிலும் பொருளாதார ரீதியிலும் பேதம் இல்லாமல் எல்லாரும் எளிமையாக இருந்து விட்டால் கொஞ்சம் கூடப் பொறாமை, வயிற்றெரிச்சல் இருப்பதற்கு இடமில்லாமல் போகும்.

அந்த மாதிரி நிலையை உடனே ஏற்படுத்துவதற்கான தைரியமும், தியாக புத்தியும் நமக்கு இருந்தாலும் இல்லா விட்டாலும், அப்படிப்பட்ட ஒரு ideal- ஐயாவது [லக்ஷ்ய நிலையையாவது] நாம் புரிந்து கொண்டால், கொஞ்சம் கொஞ்சமாக வழி திறக்க இடமுண்டாகும். இதற்குப் பராசக்தி அநுக்ரஹம் செய்ய வேண்டும்.

ஸர்வரோக நிவாரணி

ஜாதிமுறையினால் பிரிந்திருந்ததால் முன்னே தேசத்தில் ஒருத்தருக்கொருத்தர் விரோதமாக இருக்கவே இல்லை. இப்போது தான் ஸ்டேட்டுக்கு ஸ்டேட் [மாநிலத்துக்கு மாநிலம]) குத்துப்பழி வெட்டுப் பழியாக எல்லைத் தகராறு, ஆற்று ஜலப் பங்கீட்டுத் தகராறு எல்லாம் ஏற்பட்டிருக்கின்றன. முன்னே காசி யாத்ரீகனுக்காக இங்கே செட்டிப் பிள்ளைகள் சத்திரம் கட்டி வைத்துச் சாப்பாடு போட்டார்கள். இங்கிருந்து காசிக்கும் பத்ரிநாத்துக்கும் போகிறவனுக்காக ஸேட்ஜி தரம்சாலா [தர்மசாலை] வைத்திருந்தான். அதாவது ஈச்வர பக்தியால் எல்லாரும் ஒன்று சேர்ந்து இருந்தார்கள். இப்போது அதுபோய் பாலிடிக்ஸ், புத்தி வாதம் ஆகியன அதிகமாகி விட்டதால்தான் எல்லாமே கோளாறாகி இருக்கிறது.

அதனால் கடைசியில் எல்லாவற்றுக்கும் மருந்தாக, ஸர்வரோக நிவாரணியாக, தேசத்தில் பக்தி வளரவேண்டும் என்றுதான் பிரார்த்தனை பண்ணவேண்டும்.

“ஜாதி ஒழியணும், ஜாதி ஒழியணும்” என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பதால், இன்னும் ஜாஸ்தி துவேஷம்தான் உண்டாகிக் கொண்டிருக்கிறது. முப்பது, நாற்பது வருஷமாக இந்தப் பிரசாரம் பண்ணி வந்தாலும்* ஒரு எலக்ஷன் என்று வருகிறபோது இப்போது பார்த்தாலும் ஜாதிதான் முன்னால் நின்று, ஒரு கம்யூனிட்டிக்காரன் இன்னொருவனை அடிப்பது, கத்தியால் குத்துவது என்கிற அளவுக்குப் போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இது பிராம்மண- அப்பிராம்மண ஜாதித்வேஷம் இல்லை. பிராம்மணனை நல்ல வேளையாக பாலிடிக்ஸிலிருந்து ரொம்ப தூரத்துக்கு வெளியே தள்ளியிருக்கிறது. இவனாக விலகாவிட்டாலும் மற்றவர்களாவது இப்படிக் கழுத்தைப் பிடித்துத் தள்ளியிருக்கிறார்களே என்று கொஞ்சம் ஆறுதலாயிருக்கிறது. அதனால் இப்போது நடக்கிற சண்டை மற்ற ஜாதிகளுக்குள்ளேயே தான்! தெலுங்கு தேசத்தில் கம்மாவுக்கும் ரெட்டிக்கும் சண்டை; கன்னட தேசத்தில் லிங்காயத்துக்கும் இன்னொரு ஜாதிக்கும் சண்டை என்கிற மாதிரி சாஸ்திரங்களில் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத விபரீத ஜாதிச் சண்டைகளையெல்லாம் ‘ஈக்வாலிடி’ முழக்கம் ரொம்ப ஜாஸ்தியாகவுள்ள இப்போதுதான் பார்க்கிறோம். இங்கே (தமிழ்நாட்டில்) ஒரு ஜில்லாவில் படையாட்சி, இன்னொன்றில் கௌண்டர், இன்னொன்றில் தேவர், முக்குலத்தார், இன்னொன்றில் செங்குந்தர் என்று இப்படி ஒவ்வொரு ஜாதிக்காரர்களையே பார்த்து அபேட்சகராக நிறுத்துகிறார்கள். Candidate [வேட்பாளர்] களுக்கிடையே அரசியல் கொள்கையையெல்லாம் விட்டுவிட்டு, இந்த ஜாதி அடிப்படையிலேயே போட்டா போட்டி நடப்பதைப் பார்க்கிறோம்.


* 1965 ல் கூறிய‌து.

நான் சொல்வதன் நோக்கம்

கைத் தொழில்கள் போய் ஆலைத் தொழில்களும், ஸமூஹம் சின்ன சின்னதாக வாழ்ந்த கிராம வாழ்க்கை போய் நகர வாழ்க்கையும் உண்டாகி, தேவைகளும் தொழில்களும் கணக்கில்லாமல் பெருகி, வாழ்முறையே சன்ன பின்னலாக ஆகிவிட்ட இப்பொழுது பழையபடி பாரம்பரியத் தொழிலையே ஏற்படுத்துவதென்பது அஸாத்யமாகத் தான் தோன்றுகிறது. க்ஷத்ரியர்கள்தான் மிலிடரியில் இருக்கலாம், வைசியர்தான் வியாபாரம் பண்ணலாம், நாலாம் வர்ணத்தார் தொழிலாளிகளாக உழைப்பது தவிர வேறே செய்யக்கூடாது என்றால் இப்போது நடக்கிற காரியமா? அப்படி நடத்தப் பண்ணுகிறது முடியக் கூடியதா? இந்தப் பிரத்யக்ஷ நிலைமை எனக்குத் தெரியாமலில்லை. பின்னே ஏன் வர்ண தர்மத்தை இப்படி நீட்டி முழக்கி ஸ்தோத்ரம் பண்ணுகிறேன் என்றால் இரண்டு காரணமுண்டு:

ஒன்று – இப்போது நாம் எப்படியிருந்தாலும் சரி, பழைய வழிக்கு நாம் போகவே முடியாவிட்டாலும் சரி, “அந்த வழி ரொம்ப தப்பானது; அது சில vested interest -களால் (சுயநல கும்பல்களால்) தங்கள் ஸெளகரியத்துக்காகவே பக்ஷபாதமாக உண்டாக்கப்பட்ட அநீதியான முறை” என்று இப்போது எல்லாரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்களே, இப்படிச் சொல்வது சரியே இல்லை என்று உணர்த்துவது. அவனவனும் சித்த சுத்தி பெறவும், ஸமூஹம் கட்டுக்கோப்புடன் க்ஷேமத்தை அடையவும், கலாசாரம் வளரவும் தர்மத்தைப் போல் ஸஹாயமான ஸாதனம் எதுவுமில்லை என்று புரிந்து கொள்ள வைப்பது ஒரு காரணம்.

இதைவிட முக்கியமான இன்னொரு காரணம்; இப்போது க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர ஜாதிகளின் தொழில் முறை மாறிக் கலந்தாங்கட்டியாக ஆகியிருந்தாலுங்கூட, எப்படியோ ஒரு தினுசில் ராஜ்ய பரிபாலனம் – ராணுவ காரியம், பண்ட உற்பத்தி – வியாபாரம், தொழிலாளர் செய்ய வேண்டிய ஊழியங்கள் ஆகியவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. முன் மாதிரிச் சீராயில்லாமல் போட்டியும் பொறாமையும் போராட்டமுமாக இருந்தாலும் இந்த மூன்று வர்ணங்களின் காரியங்கள் வர்ணதர்மம் சிதைந்த பின்னும் ஒரு விதத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தேசத்தின் practical necessity-யாக (நடைமுறைத் தேவைகளாக) அன்றாட வாழ்வுக்கும் ராஜாங்கம் நடத்துவதற்கும் இந்தக் காரியங்கள் நடந்தே ஆகவேண்டியிருப்பதால், கோணாமாணா என்றாவது நடந்து விடுகின்றன. ஆனால் இவற்றுக்கெல்லாம் பூர்த்தியை உண்டாக்குவதான பிராம்மண வர்ணத்தின் காரியம் மட்டும் அடியோடு எடுபட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. ஸகல காரியங்களுக்கும் ஆதாரமாக இருக்கிற தர்மங்களை எடுத்துச் சொல்லியும் வாழ்ந்து காட்டியும் பிரசாரப்படுத்துவது, வேதங்களைக் கொண்டு தேவ சக்திகளை லோகக்ஷேமார்த்தமாக அநுக்கிரஹம் பண்ணவைப்பது, தங்களுடைய எளிய தியாக வாழ்க்கையால் பிறருக்கும் உயரந்த லட்சியங்களை ஏற்படுத்துவது, ஸமூஹத்தின் ஆத்மிக அபிவிருத்தியை உண்டாக்குவது, கலைகளை வளர்ப்பது – என்பதான பிராம்மண தர்மம் போயே போய்விடுகிற ஸ்திதியில் இருக்கிறோம். இது ஸூக்ஷ்மமானதால், practical necessity என்று எவருக்கும் தெரியவில்லை. மற்ற மூன்று வர்ணங்களின் தொழில் நடக்காவிட்டால் நமக்கு வாழ்க்கை நடத்துவதற்கே முடியாது என்பதுபோல இது தோன்றவில்லை. ஆனால் வாஸ்தவத்தில் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்து அது நிறைவான வாழ்க்கையாவதற்கு வழி செய்வது இதுதான். இதை விட்டு விட்டு மற்றவற்றில் மட்டும் கவனம் வைக்கிறோம். அவற்றில் உயர்வை அடைந்தால் prosperity, prosperity (ஸுபிக்ஷம்) என்று பூரித்துப் போகிறோம். ஆனால் ஆத்மாபிவிருத்தியும், கலாசார உயர்வுமில்லாமல் லௌகிகமாக மட்டும் உயர்ந்து என்ன பிரயோஜனம்? இந்த உயர்வு உயர்வே இல்லை என்று அமெரிக்கர்களுக்கு இப்போது ஞானம் வந்திருக்கிற மாதிரி நமக்கும் ஒரு நாள் வரத்தான் செய்யும். அதனால், மற்ற ஜாதிக் குழப்பங்கள் எப்படியானாலும், தேசத்தின் ஆத்மாவைக் காப்பாற்றிக் கொடுக்க பிராம்மண ஜாதி ஒன்று மட்டுமாவது, ஒழுங்காக ஸகல ஜனங்களுக்கும் வழிகாட்டிகளாக இருந்து கொண்டு, எளிமையாக, தியாகமாக வாழ்ந்து கொண்டு, வைதிக கர்மாக்களைச் செய்து லோகத்தின் லௌகிக-ஆத்மிக க்ஷேமங்களை உண்டு பண்ணிக் கொண்டு இருக்கும்படியாக செய்யவேண்டும். இந்த ஒரு ஜாதியை நேர்படுத்திவிட்டாலே மற்ற ஜாதிகளில் ஏற்பட்டிருக்கிற குழப்பங்களும் தீர ஆரம்பித்துவிடும். எந்த தேசத்திலும் இல்லாமல் தர்ம ரக்ஷணத்துக்கென்றே, ஆத்மாபிவிருத்திக்கென்றே யுகாந்தரமாக ஒரு ஜாதி உட்கார்ந்திருந்த இந்த தேசத்தில் அது எடுபட்டுப் போய் ஸகலருக்கும் க்ஷீணம் உண்டாக விடக்கூடாது என்று, இந்த ஒரு ஜாதியை உயிர்பித்துக் கொடுப்பதற்காகத்தான் இவ்வளவும் முக்யமாகச் சொல்கிறேன். தங்களுக்கு உசத்தி கொண்டாடிக் கொண்டு, ஸெளகர்யங்களை ஏற்படுத்திக் கொண்டு, ஹாய்யாக இருக்கிறதல்ல நான் சொல்கிற பிராம்மண ஜாதி, ஸமூஹ க்ஷேமத்துக்காக அநுஷ்டானங்களை நாள் பூரா பண்ணிக் கொண்டு, எல்லாரிடமும் நிறைந்த அன்போடு, பரம எளிமையாக இருக்க வேண்டியதே இந்த ஜாதி. இதை குல தர்மப்படி இருக்கப் பண்ணிவிட்டால் நம் ஸமூஹமே தர்ம வழியில் திரும்பிப் பிழைத்துப் போய்விடும் என்கிற உத்தேசத்தில் தான் இத்தனையும் சொல்வது.

மரியாதைக் குறைவல்ல; அஹம்பாவ நீக்கமே!

“அது சரி, ஆனால் ‘ஸ்வய மரியாதை என்ன ஆவது?’ என்று சோஷலிசம் சொல்கிற சீர்திருத்தக்காரர்கள் கேட்டால் அவர்கள் தங்கள் கொள்கைக்கு தாங்களே ஆக்ஷேபம் தெரிவிப்பதாகத்தான் ஆகிறது. இவர்கள் என்ன சொல்கிறார்கள்? Dignity of Labour (உழைப்பின் கௌரவம்) என்று நிறையப் பேசுகிறார்கள். ஒரு வேலை கூடத் தாழ்த்தியில்லை என்கிறார்கள். காந்தி கக்கூஸைக் கூடத் தாமே கழுவுவது என்று வைத்துக் கொண்டிருந்தார். ராஜகோபாலாச்சாரி பிரதம [முதன்] மந்திரியாக இருந்தபோதுகூடத் தாமே துணி தோய்த்துக் கொண்டார். இந்த டிக்னிடி ஆஃப் லேபரை காட்டுவதற்காகத்தான் வருஷத்தில் ஒரு நாள் மேயர் மாதிரியானவர்களே துடைப்பக் கட்டையை வைத்துக் கொண்டு தெருவைப் பெருக்குகிறார்கள். இதைப் பேப்பரில் ஃபோட்டோ பிடித்துப் போடுகிறார்கள். ஆகையால் சரீரத்தால் உழைத்துச் செய்கிற தொழில் ஸ்வயமரியாதைக்குக் குறைச்சல் என்று இவர்களே இன்னொரு பக்கத்தில் சொன்னால் அது ஒன்றுக்கொன்று முரண்தான்.

என்னைக் கேட்டால் ‘status’, ‘ஸ்வயமரியாதை’ என்றெல்லாம் சொல்வதைவிட, அஹங்காரம் என்ற வார்த்தையைச் சொல்லிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். பிராம்மணனுக்கும் க்ஷத்ரியனுக்கும் வைசியனுக்கும் ஏற்படக்கூடிய அஹங்காரம் மற்றவனுக்கு ஏற்படவில்லை என்கிற angle -ல் [கோணத்தில்] இதைப் பார்த்தால், வியாஸர் சொன்னமாதிரி நாமும் “சூத்ர: ஸாது” என்றுதான் முடிவு கட்டுவோம். இப்போது அபேதவாதத் தலைவர்கள் சொல்கிற மாதிரிதான் சாஸ்திரங்களிலும் எல்லா விதமான காரியங்களும் உசந்தவை என்று ஸமமாகச் சொல்லியிருக்கிறது. இவர்கள் லௌகிக (material) மட்டத்தில் மட்டும் இருந்துகொண்டு சொல்வதையே சாஸ்திரத்தில் ஆத்மாபிவிருத்திக்கு உரியதாக (spiritual -ஆக) ச் சொல்லி அதிலே பக்தியையும் கலந்து கொடுத்திருக்கிறது. அதாவது, ‘லோக க்ஷேமத்துக்காகப் பல தினுஸான காரியங்கள் நடக்க வேண்டியிருப்பதால் அவற்றுக்குள் உயர்த்தி-தாழ்த்தி என்பதே இல்லை. அவரவரும் தங்களுக்கு லபித்த தொழிலை ஈச்வரார்ப்பணமாகச் செய்தால் சித்த சுத்தி பெறலாம்’ என்கிறது. ஈச்வரார்ப்பணம் என்கிற போது பக்தி வந்துவிடுகிறது. சித்த சுத்தி என்பது ஆத்ம ஞானத்தில் கொண்டு சேர்க்கிறது.

ஆகவே ‘டிக்னிடி ஆஃப் லேபர்’ என்று பார்த்தாலும் சரி, சித்த சுத்திக்காக ஈச்வரார்ப்பணம் பண்ணப்படவேண்டியதே கர்மா என்று பார்த்தாலும் சரி – இரண்டு விதத்திலும் ‘ஸ்வயமரியாதை’ என்கிற வார்த்தை அடிபட்டுப் போய் விடுகிறது. அஹம்பாவமில்லாமல் செய்தால் ‘நமக்கு இந்த ஆசாரம் இருக்கிறதே, அல்லது இல்லையே’, ‘இந்த அநுஷ்டானம் இருக்கிறதே, அல்லது இல்லையே’ என்ற குறைகள், கோபதாபங்கள் உண்டாகாது. இந்தத் தொழிலுக்கு இந்த ஆசாரம், இந்த ஆஹாரம்தான் சரி என்று ஒப்புக் கொள்ளத் தோன்றும். பிராம்மணன் க்ஷத்ரியனையும் வைசியனையும் போல ஸெளக்கியங்களை அநுபவித்தால் மந்திர சக்தியே இராது. ஒரு தொழிலாளி பிராம்மணனைப் போல உபவாஸம் இருந்தால் அவனால் உடலுழைப்புப் பண்ணவே முடியாது.

ஒரு சின்ன விஷயம் ஒருத்தர் சொன்னார். ‘சாஸ்திரத்தில் பிராம்மணன் வெள்ளை வஸ்திரமும், க்ஷத்ரியன் சிவப்பு வஸ்திரமும், வைச்யன் மஞ்சள் வஸ்திரமும், நாலாம் வர்ணத்தவன் நீல வஸ்திரமும் உடுத்த வேண்டும் என்றிருக்கிறது. முதலில் இதெல்லாங்கூட மட்டம் தட்டுகிற அபிப்ராயமே எனக்குத் தெரிந்தது. அப்புறம்தான் எனக்கு அதிலுள்ள நியாயம் புரிந்தது’ என்றார். நான்கூட அப்போது இதைப் பற்றி நினைத்துப் பார்த்ததில்லை. ஆகையால், “இதிலே என்ன நியாயமிருக்கிறது? என்று கேட்டேன். “வெள்ளை வஸ்திரமாயிருந்தால் கொஞ்சம் ஏதாவது கறை பட்டாலும் தெரிந்துவிடும். பிராம்மணன் யஞ்ஞாதிகள் பண்ணுகிறபோது எந்த திரவியத்தையும் சிந்தாமல், வீணாக்காமல் ஜாக்கிரதையாக செலவழிக்காவிட்டால் அவனுடைய வஸ்திரமே காட்டிக் கொடுத்து விடும். பிறரை உபத்ரவித்துப் பணம் வாங்கக் கூடாத அவனுக்கு இந்த ஜாக்கிரதையும் சிக்கனமும் வேண்டும் என்றே வெள்ளை வஸ்திரம். க்ஷத்ரியன் யுத்தம் செய்கிறவன்; ரத்தம் சிந்துகிறவன். சிந்தப் பண்ணுகிறவன். இது தவிர்க்க முடியாதது. ஆனால் துணியைப் பாழாக்கிப் பயமுறுத்துகிற மாதிரி இது தெரியக் கூடாது என்றே சிவப்பு வஸ்திரமாக வைத்திருக்கிறது. வைசியர்கள் மண்டியில் பல ஸாமான்களை கையாண்டாலும் மஞ்சள்தான் சட்டென்று துணியில் ஒட்டிக் கொண்டு குபீரென்று தெரிவது. அவர்களுக்கான பசு ரக்ஷணையைப் பார்த்தாலும் மாட்டுக்கு நிறைய மஞ்சள் பூச வேண்டியிருக்கிறது. இந்த மஞ்சள் ஒட்டிக் கொண்டு தெரியாமலிருக்கத்தான் மஞ்சள் கலரிலேயே வஸ்திரம். நிலத்தில் புழுதியில் வேலை செய்கிறவர்களுக்கு நீல வஸ்திரமானால்தான் அழுக்கு தெரியாது. இந்தக் காலத்தில் கூட ஃபாக்டரிகளில் தொழிலாளர்களுக்கு நீல யூனிஃபாரம் தான் கொடுத்திருக்கிறார்கள். எனவே அந்த ஜாதிக்கு நீலம் வைத்ததும் நியாயம்தான்” என்றார். யோசித்துப் பார்த்தால் இப்படி ஒவ்வொரு வித்யாஸத்திலும் நியாயம் தெரியும். அவரவருக்கு ஸெளக்கியமானதை உத்தேசித்து சாஸ்திரம்; “சாஸ்த்ராய ச; ஸுகாய ச” என்பதன் அர்த்தம் புரியும். இப்படி பலவற்றில் அர்த்தம் புரிவதாலேயே புரியாதவற்றிலும் உள்ளூர அர்த்தம் இருக்கவேண்டுமென்று தெரியும்.

“ஒருத்தன் செய்தால் தர்மமாக, புண்ணியமாக இருப்பதே இன்னொருத்தன் பண்ணினால் பாபமாக ஆகிறது என்று சொல்வதெப்படி?” என்று இப்போது புத்திசாலிகளும் புரிந்து கொள்ளாமல் கேட்கிறோம். முன்னாளில் பாமர ஜனங்களும், இப்படிக் காரியங்களை மாற்றிக் கொண்டால் ஸமூஹத்துக்காக மொத்தத்தில் நடக்க வேண்டியவை எல்லாம் ஏறுமாறாவதால் இது அதர்மந்தான், பாபந்தான் என்று புரிந்து கொண்டு சாஸ்திரப்படியே செய்து வந்தார்கள். ஈச்வர ஸந்நிதானம், உத்ஸவம், பொதுத்தொண்டு தவிர பாக்கி விஷயங்களில் ரொம்பக் கலந்து கொண்டால் ஆஹாரம் முதலான எல்லா விஷயங்களிலுமே மாறிப் போகத் தோன்றும். ஒவ்வொரு ஆசாரமும் அந்த ஜாதியின் தொழிலுக்கு உதவுவதால், இப்படி ஒரேடியாக கலப்பது முடிவில் ஸமூஹ நன்மைக்கான தொழில் முறையையே கெடுக்கும் என்று அறிந்திருந்தார்கள். அதிலே ஒரு நிறைவு, ஸெளக்கியம் இல்லாமலா இத்தனை மெஜாரிட்டி ஜனங்கள் ஆயிரம் பதினாயிரம் வருஷங்கள் ஆக்ஷேபமில்லாமல் அநுஸரித்தார்கள்? பிற்பாடும் தன்னால் இங்கே இந்த வாதங்கள் வந்திருக்காது. வெள்ளைக்காரன் வந்தது, அதனால் பிராம்மணர்களுக்கு ராஜமானியங்கள் போனது, அதே சமயம் அவர்களுக்கு வெள்ளைக்கார ஆட்சியில் உத்யோகங்கள் கிடைத்தது, மெஷின்களும் நகர வாழ்க்கையும் ஏற்பட்டுக் கைத்தொழிலும் கிராம வாழ்க்கையும் நசிந்தது, இதனால் மற்றவர்கள் தொழிலுக்குக் கஷ்டப்படும்போது இவர்கள் மட்டும் நகத்தில் அழுக்குப்படாமல் சம்பாதித்தது, இதனால் ஏற்பட்ட போட்டி – இப்படி சாதுர்வர்ண [நான்கு வர்ண] ஏற்பாட்டின் அஸ்திவாரத்தில் ஆட்டம் கொடுத்திருக்கிற சமயத்தில் வெள்ளைக்காரன் புதிய ஸமத்வக் கொள்கைகளையும், ரேஸ் தியரி [இனக் கொள்கை] யையும் கொண்டு வந்து விட்டதால் தான் சாஸ்திர நம்பிக்கையுள்ள பொது ஜனங்களின் மனசு மாறிவிட்டது. ஈச்வராநுக்ரஹத்தில் அது பழையபடி மாறினால், பிராமணனிலிருந்து பஞ்சமன் வரை ஒவ்வொருத்தனும் செய்கிற காரியம் அவனவனுக்குச் சித்த சுத்திக்கான ஸாதனம்; அதே சமயத்தில் ஒவ்வொருவன் செய்வதும் லோக க்ஷேமத்தை உத்தேசித்துத்தான் என்று புரிந்துவிடும். இதையெல்லாம் அலசி ஆலோசனை பண்ணிப்பார்த்தால், நம்முடைய மதத்தில் மட்டும் இருக்கிற வர்ண தர்மத்தைப் பற்றி, நமக்குக் குறைவும் அவமானமும் ஏற்படுவதாகவும் ஆரம்பத்தில் சொன்னேனே, அது அப்படியே மாறி, இந்த ஏற்பாட்டில் பெருமையும் இதை வகுத்துக் கொடுத்தவர்களிடம் மரியாதையும் உண்டாகும்.

நாலாம் வர்ணத்தின் அநுகூல நிலை

நாலாவது வர்ணத்தவரின் தர்மம் மற்ற எல்லா விதமான சரீர உழைப்பையும் பண்ணுவது. மற்றவர்களுக்கு உள்ள status (அந்தஸ்து) , சௌகரியம் இவர்களுக்கு இல்லை என்று தோன்றும். ஆனால் இவர்களுக்கு ஆசாரக் கட்டுப்பாடுகளை ரொம்பக் குறைத்து ஸ்வதந்திரமாக விட்டிருப்பதையும் கவனிக்க வேண்டும். இவர்கள் மற்ற எல்லாரைக் காட்டிலும் திருப்தியாக, பகவானுக்குக் கிட்டத்தில் இருந்து வந்தார்கள். “கலியுகம் மட்டம் இல்லை; நாலாவது வர்ணத்தவர்கள் மட்டம் இல்லை. கலிதான் ரொம்பவும் உசத்தி; நாலாவது வர்ணத்தவர்கள்தான் ரொம்ப உசந்தவர்கள் – “கலி: ஸாது சூத்ர: ஸாது” என்று ஸாட்சாத் வியாஸாசாரியர்களே சொல்லியிருக்கிறார். ஏன்? மற்ற மூன்று யுகங்களிலும் தியானம், தபஸ், பூஜை என்று ரொம்பவும் கஷ்டப்பட்டாலே அடைய முடிகிற பகவானை நாம ஸங்கீர்த்தனத்தாலேயே கலியில் எளிதில் அடைந்து விடலாம். அதனால் “கலி:ஸாது” என்கிறார். பிராம்மணன், க்ஷத்ரியன், வைச்யன் என்ற மற்ற மூன்று வர்ணத்தவர்களுக்கும் கர்வம் உண்டாக இடம் இருக்கிறது. தங்களைப் பற்றி அவர்களுக்கு இப்படி ஒரு அஹங்காரம் உண்டாகிவிட்டதானால் அப்புறம் ஆத்மா கிடைக்கிற வழியேயில்லை. ‘நமக்கு புத்தி வன்மை இருக்கிறது’ என்று பிராம்மணனும், ‘நமக்கு அதிகார சக்தி இருக்கிறது’ என்று க்ஷத்ரியனும், ‘நமக்கு பண பலம் இருக்கிறது’ என்று வைசியனும் அஹங்காரப் பட்டுக் கொண்டு தப்பாக போவதற்கு இடமிருக்கிறது. நாலாவது வர்ணத்தவனுக்கு இப்படி இல்லை. அடக்க குணத்துக்கு இடமாக இருக்கிறவன் அவன். “அடக்கம் அமரருள் உய்க்கும்” என்று வள்ளுவர் கூடச் சொல்கிறார் அல்லவா? அதனால் அவன் ஸ்வாமிக்குக் கிட்டேயே இருக்கிறான். அஹங்காரம் வந்துவிடக் கூடாது, அதை அழித்து ஜீவனை பகவத் பிரஸாதத்துக்கு உரியவனாகப் பண்ண வேண்டுமென்பதற்காகத்தான் மற்ற மூன்று வர்ணத்தாருக்கு வேதத்திலும் வேத காரியங்களிலும் மூன்று grade -களில் அதிகாரம் கொடுத்திருக்கிறது. அந்த வைதிக கர்மாநுஷ்டானங்களைப் பண்ணுவதானால் அதற்கு நிரம்ப ஆசாரங்கள், ஸ்நான-பான-ஆஹார நியமாதிகள் உண்டு. இந்த நியமம் என்ற பத்தியம் இருந்தால்தான் வேத மந்திரம் என்ற மருந்து வேலை செய்யும். ஆசாரம் தப்பினால் அபசாரம். அது பெரிய பாபம். அதற்காகக் கஷ்டம் அநுபவித்தாக வேண்டும். அதனால் எப்போதும் அவர்கள் கண்குத்திப் பாம்பாக ஆசாரங்களை அநுஷ்டித்தாக வேண்டும். நாலாவது வர்ணத்தவனுக்கு இப்படி இல்லை. அவனுக்கு நியமங்கள் ரொம்பவும் குறைச்சல்தான். அவன் செய்கிற உழைப்பே அவனுக்கு சித்த சுத்தி, அதுவே அவனுக்கு வேத கர்மாநுஷ்டானம், ஸ்வாமி எல்லாமும்! இப்படி அவனுக்கு எளிதில் ஸித்தி ஏற்படுகிறது. இதனால்தான் “சூத்ர:ஸாது” என்று வியாஸரே இரண்டு கைகளையும் உயரத் தூக்கிக் கொண்டு சபதம் பண்ணினார்.

அவனுக்கு வயிறு ரொம்ப ஆகாரம் கிடைக்காவிட்டால், அவனுக்கு மான‌த்தை ரக்ஷிக்கத் துணி கிடைக்காவிட்டால், அவனுக்கு மழை வெயிலிலிருந்து காப்பாக ஒரு குடிசை இல்லாவிட்டால் அது சமூஹத்துக்கு பாபம்; ராஜாங்கத்துக்கு பாபம். இந்த வசதிகளைப் பண்ணித்தர வேண்டும். இதே வசதிகளை – இவற்றுக்குத் துளிக்கூட அதிகமில்லாமல்தான் – பிராம்மணர்களும் பெற்றிருந்தார்கள் என்று முன்னே சொன்னதை திருப்பிச் சொல்கிறேன். அதாவது பொருளாதார லெவலில் பக்ஷபாதம் செய்ததாகச் சொல்லவே கூடாது என்பதற்காகச் சொல்கிறேன்.

அனைத்தும் அனைவர் பொருட்டுமே!

பிராம்மணன் கொடுக்கும் வைச்வதேவத்தில் பஞ்சமனுக்கும் வீட்டு வாசலில் பலி போட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. வேதத்தில் சொன்ன ஸகல கர்மமும் “லோகா: ஸமஸ்தா: ஸுகினோ பவந்து” (உலகிலுள்ள உயிர்க்குலம் முழுவதும் இன்பம் அடைய வேண்டும்) என்ற லட்சியத்துக்காக ஏற்பட்டதுதான். வேத சப்தமும் யஜ்ஞமும் எல்லார் நலனுக்காகவும்தான்.

ஒரு க்ஷத்ரியன் அரசாள்வது, போர் செய்வது, police [காவல் பணி] செய்வது எல்லாம் ஸமஸ்த ஜனங்களின் நன்மையின் பொருட்டேயாகும்.

வைச்யன் வியாபாரம் பண்ணி லாபத்தை எல்லாம் தனக்கே மூட்டை கட்டிக் கொள்கிறான் என்று நாம் நினைத்தால் தப்பு. அவனும் பெரிய சமூக சேவை செய்கிறான்.

வைச்யர்கள் செய்யவேண்டிய தருமத்தை பகவான் கீதையில் ஒரு ச்லோகத்தில் சொல்லியிருக்கிறார்: ‘க்ருஷி கெளரக்ஷ வாணிஜ்யம் வைச்யம் கர்ம ஸ்வபாவஜம்’ என்று [கீதை XVIII.44]. வைசியர்களுக்கு இங்கே முக்கியமாக மூன்று காரியங்கள் சொல்லியிருக்கிறது. ‘கிருஷி’ என்றால் பூமியை வைத்துக் கொண்டு உழுது சாகுபடி செய்து ஜனங்களுக்கு உபயோகப்படுத்த வேண்டியது. அடுத்தது பசுவை ஸம்ரக்ஷிக்க வேண்டியது. மூன்றாவது, வியாபாரத்தினால் ஜனங்களுக்கு உபகாரம் செய்யவேண்டியது. அதாவது விவசாயத்தை விருத்தி செய்து அதனால் மற்ற ஜீவராசிகளுக்கு உபகாரம் செய்யவேண்டியது ஒரு வைசிய தர்மம். பசுவை நன்றாக ஸம்ரக்ஷணை செய்து அதன் கன்றுக்குக் கண்டு பாக்கியுள்ள பாலை யஜ்ஞங்களுக்கும் ஜனங்களுக்கும் உபயோகப் படுத்த வேண்டும். அவ்வளவு புஷ்டியாகப் பசுவை ஸம்ரக்ஷிப்பது இன்னொரு முக்கிய தர்மம். வியாபாரமானது வைச்யர்களுக்கு மூன்றாவது முக்கியமான தர்மம். அதாவது வெகு தூரமான தேசங்களில் விளையும் கோதுமை, பெருங்காயம், குங்குமப்பூ போன்ற ஸாமான்களை ஓர் இடத்தில் சேகரித்து ஜனங்களுக்கு விற்று உபகாரம் செய்வதே ஒரு தர்மம். ஒரு மனிதனுக்கு லட்சக்கணக்கான பணம் இருந்தும் பயிர் முதலியவை இல்லாத பாலைவனத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தால், இந்த பணத்தைக் கொண்டு மாத்திரம் அவன் ஜீவிக்க முடியுமா? அதே மாதிரி நெல் ஏராளமாக விளையும் தேசத்தில் நெல்லை மாத்திரம் வைத்துக் கொண்டு மற்றவை இல்லாமல் ஜீவிக்க முடியுமா? ஆகையால் வியாபாரம் என்பது பல இடங்களில் கிடைக்கும் ஸாமான்களை ஓர் இடத்தில் சேகரித்து ஜனங்களுக்குக் கிடைக்கப் பண்ணும் பெரிய உபகாரம் என்று தெரிகிறது. இது வைசியருக்கு முக்கிய தர்மமாக ஏற்பட்டிருக்கிறது. வைசியர்கள் தமக்கு வியாபாரம் வேண்டாமென்றிருப்பது பாபம். அதே மாதிரி ஒரு பிராம்மணன் கர்மாநுஷ்டானத்தை விட்டுவிட்டுக் கண்ட தொழிலைப் பண்ணிக் கொண்டு பணம் ஸம்பாதித்தால் அதுவும் பாபம். வியாபாரத்தை அவரவர்கள் லாபத்தை உத்தேசித்துச் செய்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது. ஏனென்றால் ஒரு ஸமயம் ஒரு வாரம் ஹர்த்தால் ஏற்பட்டுக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் அப்பொழுது ஒரு ஸாமானும் கிடைக்காமல் ஜனங்கள் படும் சிரமம் சொல்லி முடியாது. ஆகையால் வியாபாரம் பொது பிரயோஜனத்தை உத்தேசித்த‌தே தவிர சொந்த பிரயோஜனத்தை மட்டும் உத்தேசித்ததல்ல. வைசியர்கள் வியாபாரத்தைத் தங்கள் லாபத்துக்காகச் செய்கிறோமென்று எண்ணாமல் ஸமூஹ நலனுக்காக பகவானால் ஏற்படுத்தப்பட்ட காரியத்தைச் செய்கிறோமென்று நினைத்து செய்ய வேண்டும்.

சலுகை இல்லை

தர்ம சாஸ்திரங்களை பிராம்மணர்களின் ஸ்வய நலத்துக்காகவே எழுதி வைத்துக் கொண்டார்கள் என்று சொல்வது எவ்வளவு தப்பு என்பது அந்த ஜாதிக்கே மிகக் கடுமையான‌ நியமமும், ரொம்ப எளிமையான வாழ்க்கையும் விதிக்கப்பட்டிருப்பதிலிருந்து தெளிவாவது மட்டுமில்லை; தர்ம சாஸ்திரங்களின் நிஷ்பக்ஷபாதத்துக்கு இன்னொன்றும் இதைவிடப் பெரிய சான்றாக இருக்கிறது. ஸகல கலைகளையும், வித்யைகளையும் பிராம்மணன் கற்றாலும் பிறருக்குத்தான் அவற்றை போதிக்கலாமே தவிர, வைதிகாநுஷ்டானங்களைப் போல கஷ்டமாயில்லாததும், அதிகப் பண லாபம் தருவதுமான அந்தக் கலைகளில் ஏதொன்றையும் தானே தொழிலாக நடத்தக் கூடாது என்று கட்டிப் போட்டிருப்பதைத்தான் சொல்கிறேன்.

இப்போது எல்லாரும் எல்லாவற்றிலும் ஸமம், முக்யமாக நீதிக்கு முன் அனைவரும் ஸமம் என்றெல்லாம் நிறைய கோஷம் போட்டாலும், சட்டசபை, பார்லிமென்ட், கோர்ட் என்று எதை எடுத்தாலும் அததைச் சேர்ந்தவர்கள் தங்களை மற்ற பொது ஜனங்களோடு ஸமமாக வைக்கக் கூடாது என்று privileges (சலுகையான உரிமைகள்) எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களை யாராவது ஏதாவது [கண்டனமாகச்] சொன்னால் contempt charge [அவமதிப்புக் குற்றம்] என்று கொண்டு வந்துவிடுகிறார்கள். இப்படி நான் சொல்வதைக் கூட contempt என்று கொண்டு வரக்கூடும். இதே மாதிரி தங்களுக்கு அலவன்ஸ் வேண்டும், ரயில் பாஸ் வேண்டும் என்றெல்லாம் மற்றவர்களுக்கில்லாத சலுகைகளைத்தான் ஜனநாயக அபேதவாதிகளும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதற்கெல்லாம் மாறாகத் தங்களையே வறுத்தெடுத்துக் கொண்டு கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டவர்கள்தான் தர்ம சாஸ்திரங்களை ரக்ஷித்த ஜாதிக்காரர்கள். வேறொருத்தனால் இவர்களுக்கு அநாசாரம் வந்தால்கூட அவனுக்குத் தண்டனை இல்லை; தாங்கள்தான் ஸ்நானம் பண்ணி பட்டினி கிடக்க வேண்டும் என்ற அளவுக்குத் தங்களையே கஷ்டப்படுத்திக் கொண்டதைத்தான் சாஸ்திரங்களில் பார்க்கிறோம்.

பிராம்மணனுக்குப் பதினெட்டு வித்தைகளும் தெரிய வேண்டும். லோகத்திற்கு வேண்டியவைகளெல்லாம் தெரிய வேண்டும். ஸங்கீத வித்தையான காந்தர்வ வேதம் தெரிய வேண்டும். கிருஷி சாஸ்திரம் [உழவு] தெரிய வேண்டும். அது ஜ்யோதிஷத்தில் ஸம்ஹிதை என்னும் பிரிவில் வந்து விடும். வீடு கட்டத் தெரிய வேண்டும். இப்படி எல்லாத் தொழில்களையும் தெரிந்து கொண்டு அந்த அந்த வித்தைகளுக்கும் ஏற்ற ஜாதியினருக்கு அந்த அந்த வித்தையைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவனே அவற்றில் ஒரு விருத்தியிலும் [தொழிலிலும்] நுழையக் கூடாது. வேத அத்தியயனம்தான் பண்ண வேண்டும். வேறே தொழில் நடத்தி அதிக லாபம் ஸம்பாதிக்க வரக்கூடாது.

தநுர்வேதம் விச்வாமித்ரருக்குத் தெரியும். விச்வாமித்ரர் யாகம் பண்ணினார். அதை ஸுபாஹு, மாரீசன் என்னும் ராக்ஷஸர்கள் வந்து கெடுக்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது அவர், “எனக்குத்தான் தநுர்வேதம் தெரியுமே! நானே இவர்கள் பேரில் அஸ்திரங்களைப் போடுகிறேன்” என்று எண்ணிப் போடவில்லை. ராம லக்ஷ்மணர்களைக் கூட்டிக் கொண்டு வந்தே அந்த ராக்ஷஸர்களை தொலைக்கச் சொன்னார். வழியிலே இவரேதான் அவர்களுக்கு அஸ்திர-சஸ்திர வித்தை உபதேசித்தார்!

ஆகையால் பிராம்மணன் வேத அத்யயனத்தை மாத்திரம் ஜாக்கிரதையாக ரக்ஷித்து வர வேண்டும். ஆனால் மற்ற எல்லாவற்றையும் அவன் தெரிந்து கொள்ள வேண்டும். ‘கத்தி சுற்றத் தெரியுமா?’ என்றால் ‘தெரியும்’ என்று சொல்ல வேண்டும். ‘சிகித்ஸை முறை தெரியுமா?’ என்றால் ‘தெரியும்’ என்று சொல்ல வேண்டும். ‘சித்திரம் எழுதுவாயா?’ என்றால் ‘எழுதுவேன்’ என்று சொல்ல வேண்டும். வர்ணாச்ரம தர்மத்துக்குத் தக்கபடி அந்த அந்தத் தொழிலாளியைச் சிஷ்யனாக்கிக் கொண்டு அந்த‌ அந்த வித்யையைச் சொல்லிக் கொடுத்து அவன் தரும் குரு தக்ஷிணையைக் கொண்டு ஜீவிக்க வேண்டும். குரு தக்ஷிணை கொஞ்சமாக இருந்தாலும் திருப்தி அடைய வேண்டும்.

அப்படி எங்கேயானும் ஓரிரண்டு இடங்களில் ஒரு ஜாதிக் காரனுக்கு தனிச் சலுகை கொடுத்திருக்கிறது என்று தோன்றும்படியிருந்தாலும் அதற்கு நியாயமான காரணம் இருக்கும். டிக்கட் கொடுக்கும் இடத்தில் டிக்கெட் கொடுப்பவனை மட்டும் தனி ரூமில் வைத்து, மற்றவர்கள் வெளியிலிருந்து வாங்கிக் கொள்வது ஸமத்வமாகாது என்று எல்லாரும் உள்ளே புகுந்துவிட்டால் டிக்கெட் கொடுப்பவன் என்ன செய்வான்? மற்றவர்களுக்குந்தான் ஒழுங்காக டிக்கெட் கிடைக்குமா? ஒவ்வொருவருக்கும் தங்கள் தங்கள் கடமைகளைச் செய்யச் சில சௌகரியங்கள் இருக்க வேண்டும். ஒரு பொது குடும்பத்தில் ஒருவருக்கு வியாதி உண்டானால் அவருக்குச் சில ஸெளகரியங்கள் செய்து கொடுக்கிறோம். மற்றவருக்கும் அப்படி வேண்டுமென்பது நியாயமா? எல்லாருக்கும் பொதுவான தர்மங்களும் நம் மதத்தில் நிறைய இருக்கின்றன. கடமையைச் செய்வதற்குச் சில ஸெளகரியங்கள் வேண்டுமல்லவா? வாஸ்தவத்தில் அவை ஸெளகரியங்களல்ல; சலுகையுமல்ல. அவர்களுக்குள்ள அந்த விசேஷ தர்மம் ஸமூஹத்துக்குப் பயன்படுவதற்கே வேண்டியவைதாம் இந்த சில வசதிகள். இதை எல்லாரும் அங்கீகாரம் செய்ய வேண்டும். ஏனென்றால் அவர்கள் செய்வது தங்களுக்காக மட்டுமல்ல; எல்லோருக்கும் ஸெளக்யம் உண்டாவதற்காகவே அவர்கள் தங்கள் விசேஷ தர்மங்களை அநுஷ்டிக்கிறார்கள்.

ஹ்ருதயத்தில் அன்பும் ஒற்றுமையும் இருக்க வேண்டும். எல்லாம் ஒரே ஜாதி என்று சேருவதால் மட்டும் ஒற்றுமை வந்துவிடாது. ஒன்றாகக் கல்யாணம் பண்ணிக் கொண்டும், ஒரே ஜாதியாகக் கட்டிப் புரண்டு கொண்டும் இருக்கிற மேல் நாடுகளில் இருக்கிற பரஸ்பரப் போட்டியும் த்வேஷமும் கொஞ்சமா நஞ்சமா? நம்முடைய சாஸ்திர தர்மப்படி ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் காரியங்களைச் செய்து கொண்டு மற்றவர்களுடைய காரியங்களும் நடக்கும்படி செய்து மனஸில் ஒற்றுமையாகவே இருந்து வந்தார்கள். மாமனாரிடம் மருமகள் பேசுவதில்லை; மரியாதைக்காக அப்படி இருக்கிறாள்; அது த்வேஷம் ஆகுமா? நமக்கு ரொம்பவும் நெருங்கிய நம் ஜாதிக்காரரான ஒருவருக்கே ஏதாவது தீட்டு வந்துவிட்டால் நாம் அவர் தொட்டுச் சாப்பிடுவதில்லை. அவரைத் தொடுவதில்லை; அதனால் த்வேஷம் உண்டா? இந்த மாதிரி உள்ளவைகளை த்வேஷமென்று சொன்னால் அது நம் பார்வையில் உள்ள தோஷம்தான். நமக்குள்ள மனக் கலக்கத்தினால் நம்முடைய தர்மங்கள் தப்பாகத் தோன்றுகின்றன.

ஹிந்து மதத்தின் சிரஞ்சீவித்வம்

மற்ற மதங்களில் எல்லோருக்கும் பொதுவாக வைத்த தர்மங்களை, அறநெறிகளை நம் மதத்திலும் எல்லோருக்கும் விதித்ததோடு அவரவர் தொழிலைப் பொறுத்து அதற்குத் தனியான விசேஷ தர்மங்களை வைத்து ஒன்றோடொன்று கலந்துவிடாமல் ஸமூஹத்தைப் பிரித்து வைத்ததுதான் நம் நாகரிகத்தின் சிரஞ்சீவித் தன்மைக்கு உயிர்நிலை.

நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வந்திருக்கிறது. ஏதோ ஆதாரம் இருந்துதான் இந்த மதம் இவ்வளவு நாள் பிழைத்திருக்கிறது. எந்த மதமும் இவ்வளவு தீர்க்காயுஸோடு இருந்ததாகத் தெரியவில்லை. நம்முடைய மதத்தை நான் நம்முடைய கோயிலைப் போல நினைத்திருக்கிறேன். நம்முடைய கோயில்கள் மற்றவர்களுடைய சர்ச் அல்லது மசூதியைப் போல சுத்தமாக இல்லை. மற்ற மதஸ்தர்களுடைய கோயில்களோ வெள்ளையடித்து சுத்தமாக வைக்கப்பட்டிருக்கின்றன. நம்முடைய கோபுரங்களில் முளைத்திருக்கும் மரங்களுக்குக் கணக்கேயில்லை. அவ்வளவையும் தாங்கிக் கொண்டு நமது கோயில்கள் நிற்கின்றன. ஆனால் மற்ற மதத்தார்களின் கோயில்களில் இரண்டு மூன்று வருஷத்திற்கு ஒரு முறை ரிப்பேர் செய்யா விட்டால் தாங்காது. நம் கோயில்கள் அப்படியில்லை. அவை கருங்கல்லால் கட்டப்பட்டிருக்கின்றன. பல ஆயிரம் வருஷத்திற்கு முன்பாக நம்முடைய பெரியோர்கள் பலமாக அஸ்திவாரம் போட்டிருக்கிறார்கள். ஆகையால் தான் அவ்வப்போது ரிப்பேர் இல்லாமலே நம் கோயில்கள் நீடித்து நிற்கின்றன. நாம் கோயில்களில் பல ஆபாஸங்களைச் செய்கிறோம்; அபசாரங்கள் செய்கிறோம்; இவ்வளவுக்கும் ஈடு கொடுத்துக் கொண்டு நம்முடைய கோயில் நிற்கிறது. லோகத்திற்குள் மிகப் புராதனமான கோயில்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன என்று எல்லோரும் சொல்கிறார்கள். சீமையில் இருந்து நம்முடைய கோயில்களைப் படம் பிடிப்பதற்காகவென்றே பல பேர் வருகிறார்கள். நம்முடைய அலக்ஷ்யத்தால் அழிவதற்குரிய காரணங்கள் பல இருந்தும் அவை இப்படி நெடுங்காலமாக அழியாமல் நிற்கின்றன. அவற்றை இடித்து விடலாமென்றாலோ அதுவும் சிரமமாக இருக்கிறது. கட்டுவதற்கு எவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டுமோ அதைவிட இடிப்பதற்கும் படவேண்டும்!

நம்முடைய மதமும் இப்படித்தான் இருக்கிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று (மற்ற மதங்களில் இல்லாத ஏதோ ஒன்று) இதைத் தாங்கிக் கொண்டு நிற்கிறது. அதனால்தான் எவ்வளவோ வித்யாஸங்கள இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது.

அந்த ஏதோ ஒன்று வர்ணாச்ரம தர்மந்தான். மற்ற மதங்களில் எல்லாருக்கும் ஒரே தர்மம் இருக்கிறது. அதனால் தான் அவைகள் அதிகப் பெருமை அடைந்திருக்கின்றன என்று நாம் நினைக்கலாம். ஆனால் அவை ஒரு ஸமயம் ஒரே அடியாக ஏறி நிற்கும். ஒரு ஸமயம் இருந்த இடம் தெரியாமற் போனாலும் போய்விடும். ஒரு காலத்தில் புத்த மதம் இருந்த தேசத்தில் பிற்பாடு கிறிஸ்துவ மதமும், கிறிஸ்துவ மதம் இருந்த தேசத்தில் இஸ்லாமும், இஸ்லாம் இருந்த தேசத்தில் கிறிஸ்துவமுமாக இப்படிப் பல மாறுதல்கள் ஏற்பட்டிருப்பது சரித்திர பூர்வமான உண்மை. எகிப்து, கிரீஸ், சைனா முதலிய தேசங்களில் ரொம்பவும் பூர்வத்தில் இருந்து உயர்ந்த நாகரிகங்களை உண்டு பண்ணின மதங்கள் இப்போது இல்லவேயில்லை. இத்தனை மாறுதல்களையும் பார்த்துக் கொண்டு, வெளியிலிருந்தும் உள்ளேயிருந்துமே எண்ணி முடியாத தாக்குதல்களை தாங்கிக் கொண்டு நம் ஹிந்து மதம் மட்டும் “சாக மாட்டேன்” என்று இருந்து வருகிறது.

ஒரு பனைமரம் இருந்தது. அதன்மேல் ஓர் ஓணான் கொடி கிடுகிடுடென்று படர்ந்தது. சில மாதத்திற்குள் பனை மரத்திற்கு மேல் வளர்ந்து விட்டது. அப்பொழுது அந்த ஓணாண்கொடி, “இந்தச் சில மாதமாக இந்த பனைமரம் ஓர் அங்குலம் கூட உயரவில்லையே! இது உபயோகம் இல்லாதது” என்று சொல்லி சிரித்தது. பனைமரம் சொல்லிற்று: “நான் பிறந்து பதினாயிரம் ஒணான்கொடியைப் பார்த்திருக்கிறேன். நீ பதினாயிரத்து ஓராவது கொடி. ஒவ்வொரு கொடியும் இப்படித்தான் கேட்டது. எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை” என்று! இந்த மாதிரிதான் நம் மதமும் பிற மதங்களும் இருக்கின்றன.

நம் மதத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி வேறு விதமான தர்மங்கள் இருந்தாலும் இந்த தர்மாநுஷ்டாங்களில் ஸமமான பலன்தான் உண்டாகிறது.

பிற மதங்களில்

மற்ற மதங்களும் இப்படிப்பட்ட வித்யாஸங்களைப் பின்பற்றி வந்தால் நமக்கு இது குறையாகத் தோன்றாது. அவர்கள் நம்மை பரிஹஸித்து இந்த பேதத்தைக் குத்திக் காட்டுவதாலேயே நம்மவர்களுக்கும் இது தப்பாகத் தோன்ற ஆரம்பித்து விட்டது. ஆனால் நன்றாக ஆலோசித்துப் பார்த்தால் மற்ற எல்லா மதத்தையும்விட நம்முடைய மதமொன்றே ஆதிகாலத்திலிருந்து சிரஞ்சீவியாக இருந்து வருவதற்கும், நம்முடைய நாகரிகமே உலகத்தின் மற்ற நாகரிகங்களை விட மகோன்னதமாக இருந்து வருவதற்கும் காரணம் மற்ற மதங்களில் இல்லாத இந்த வர்ணதர்மம் தான் என்று தெரியும்1.

மற்ற மதங்களில் ஜாதி தர்மம் என்று மூல நூல்களில் இல்லாவிட்டாலும், பிற்பாடு அவைகளிலும் ஒன்று சேர முடியாத பல பிரிவுகள் ஏற்பட்டுத்தான் இருக்கின்றன. இவர்கள் ஒருத்தருக்கொருத்தர் விவாஹ ஸம்பந்தம் செய்து கொள்ளாமல் தனித்தனி ஜாதி மாதிரிதான் இருக்கிறார்கள். இப்படி முஸ்லீம்களில் ஸியா, ஸுன்னி, அஹமதியா என்று பிரிந்திருக்கிறார்கள். அது தவிர இங்கே பட்டாணி, லப்பை என்று இருப்பவர்கள் கூட பரஸ்பர விவாஹ ஸம்பந்தம் செய்வதில்லை. கிறிஸ்துவர்களில் காதலிக், பிராடெஸ்டென்ட், கிரீக் சர்ச் என்ற பிரிவினர்களும் இப்படியே. ஆனாலும் Division of Labour [தொழில் பாகுபாடு] என்ற உன்னத தத்வத்தின் மீது ஒரு லெவலில் மட்டும் பிரிந்திருந்து இன்னொரு லெவலில் ஐக்கியமாயிருக்கிற நம் ஜாதி முறையை, இம்மாதிரியில்லாமலே பிரிந்திருக்கிற அவர்கள் நிந்தித்துப் பேசுகிறார்கள். அதற்கு பதில் சொல்லக்கூட நமக்குத் தெரியவில்லை.


1குறிப்பாக “தெய்வத்தின் குரல்” முதற்பகுதியில் உள்ள “காரியத்தில் பேதமும் மனோ பேதமும்“, “இங்கு மட்டும் இருப்பானேன்?” என்ற கட்டுரைக‌ளைப் பார்க்க‌வும்.

ஐக்கிய சக்தி

“சரி, இப்படி தனித்தனியாக ஜாதிகள் பிரிந்திருந்தால் மொத்த ஸமூஹத்தில் கட்டுக்கோப்பு எப்படியிருக்கும்?” என்றால் அது (ஸமூஹக் கட்டுக்கோப்பு) இருக்கத்தான் செய்தது. த்வேஷத்தில் பிரிந்திருக்கிற இன்றைவிட அன்றைக்குத்தான் ஸமூஹ ஐக்கியம் இருந்தது. எப்படியிருந்தது என்றால் அத்தனை பேருக்கும் இருந்த பொதுவான மத உணர்ச்சியாலும் சாஸ்திர நம்பிக்கையாலும்தான். ஊருக்கே பொதுவாக, ஊருக்கே மத்தியமாக இருந்த ஆலயத்தால்தான். அத்தனை ஜனங்களும் ஈச்வர ஸந்நிதானத்தில் அரன்குடி மக்களாக ஒன்று சேர்ந்திருந்தார்கள்; வழிபாடுகளில், உத்ஸவாதிகளில் அத்தனை ஜாதியாரும் கலந்து கொண்டார்கள்; அவரவரும் ஒவ்வொரு விதத்தில் கைங்கர்யம் செய்தார்கள்.

ஆசௌசம் [தீட்டு] ஏற்பட்டுவிட்ட ஒரு ச்ரௌதிகள் மேலே பட்டால்கூட ஸ்நானம் செய்தவர்களே ரதோத்ஸவத்தில் பஞ்சமர்களோடு தோளோடு தோள் இடித்துக் கொண்டு வடம் பிடித்து இழுத்தார்கள்; திரும்பி வீட்டுக்கு வந்ததும் ஸ்நானம் செய்யாமலே சாப்பிட்டார்கள். ஏனென்றால் சாஸ்திரத்தில் அப்படியிருக்கிறது. மனஸில் த்வேஷமில்லாமல் ஐக்யமாயிருந்து தொழிலில் மட்டும் பிரிந்திருந்த காலம் அது. அப்போது ஜாதி முறையால் ஐக்கியமில்லாதிருந்ததாகக் கதை கட்டினாலும், வேத சாஸ்திர நம்பிக்கையும் கோவிலும் அன்றைக்கு ஸமூஹத்தை நன்றாக ஐக்கியப்படுத்தியது. இப்போது ஐக்கியம், ஐக்கியம் என்று சொல்லிக்கொண்டே த்வேஷப் பிரசாரத்தால் ஜனங்களைப் பரஸ்பர சத்ருக்கள் மாதிரிப் பிரித்திருக்கிறது!

இதனால்தான் அநேகமாக இப்போது ‘வேதமும் வேண்டாம்; கோயிலும் வேண்டாம்’ என்பது ‘ஜாதி வேண்டாம்’ என்பதோடு சேர்ந்திருக்கிறது.

வேதம் வேண்டாம், கோயில் வேண்டாம் என்பதுதான் ரொம்பவும் உச்சநிலையில் வேதமே சொல்வது. ஞானம் வந்த நிலையில் வேதம் வேதமில்லை; தீண்டாதான்  தீண்டாதவனில்லை என்று உபநிஷத்தே சொல்கிறது. அப்படி நிஜமாகவே இல்லையாக்கிக் கொள்வதற்காகவே அப்படிப்பட்ட ஞானம் வருகிற வரையில் வேதம் வேண்டும், கோயில் வேண்டும், ஜாதி வேண்டும் என்கிறது. ஒரே அபேதமாகி விடுவதற்கே முதலில் இத்தனை பேதமும் வேண்டும் என்கிறது.

இந்த லோக வாழ்க்கையை விட்டு விடுதலைக்கு ஓயாமல் பிரயாஸைப்படுகிறவனுக்கு முடிந்த முடிவில் எல்லாம் ஒன்றாகி விடுவதை வேதத்தில் சொல்லியிருக்கிறது; கிருஷ்ண பரமாத்மாவும் சொல்லியிருக்கிறார். முடிந்த முடிவில் காரியமே இல்லை. “தஸ்ய கார்யம் ந வித்யதே” [கீதை III.17]

காரியம், தொழில் என்று ஏற்பட்டுவிட்ட இந்த நடைமுறை லோக வாழ்க்கை விஷயத்தில் அந்த அபேத தத்வத்தைச் சொல்லி, இதனால் எந்த பேதமும் காரியலோகத்தில் கூடாது என்பது தப்பான வாதம். காரிய லோகத்திலும் இந்த ஸமபாவனையானது நம் மனஸில் அன்பு என்கிற ரூபத்தில் ஸகல ஜாதியிடமும், ஸகல பிராணிகளிடமும் கொஞ்சங்கூட ஏற்றத் தாழ்வில்லாமல் ஸமமாக நிறைந்து நிரம்பி இருக்க வேண்டும் என்றுதான் சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதாவது அன்பிலேதான் அபேதம். காரியத்தில் அபேதம் இல்லை. ‘எல்லாம் ஒன்று என்கிற பாவனை, உள்ளுணர்ச்சி எப்போதும் இருக்க வேண்டும்; அதனால் ஏற்படுகிற நிறைந்த ப்ரேமை இருக்க வேண்டும். ஆனால் காரியத்தில் வித்யாஸம் பார்க்கத்தான் வேண்டும்’ என்பதே சாஸ்திரங்களில் சொல்லியிருப்பது.

பாவாத்வைதம் ஸதா குர்யாத்; க்ரியாத்வைதம் ந கர்ஹிசித் என்று சொல்லியிருக்கிறது. அதாவது ‘எல்லாம் ஒன்று என்ற அத்வைதம் பாவனையில் எப்போதும் இருக்க வேண்டும்; காரியத்தில் ஒருபோதும் அல்ல’ என்று அர்த்தம்.

லோக வாழ்க்கையில் இப்படி பேதப்படுத்தினால்தான் ஒழுங்கும், சீரான போக்கும் இருக்கும். அப்போதுதான் குழப்பமில்லாமல், மனக்கலக்கமில்லாமல் ஆத்ம சிந்தனையை வளர்த்துக் கொள்ள முடியும். லோக வாழ்க்கை பொய் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவே, இப்படி அதை ரொம்பவும் நிஜம் மாதிரி ஒழுங்குப்படுத்தித் தர வேண்டும் என்பதுதான் ஸநாதன தர்மத்தின் ஏற்பாடு.

அதிலே நாலு வர்ணம் என்று வைத்தது இன்னம் கவடுவிட்டுப் பிரிந்து கலந்து பல ஜாதிகளாயின. ஸப்த ஸ்வரங்களே பலவகையாகச் சேர்ந்து எழுபத்திரண்டு மேளகர்த்தா ராகங்களும், மற்ற கணக்கில்லாத ஜன்ய ராகங்களும் உண்டானது போல், நாலு வர்ணத்துக்கு ஆதாரமான தத்வமே மேலும் பல ஜாதிகளாகப் பிரித்துக் கொடுத்தது. இவ்வளவு பிரிவுகளையும் அவற்றுக்குரிய தர்மங்களையும் பற்றி ஸம்பிரதாயங்கள் ஏற்பட்டிருக்கின்றன.