சிக்ஷா சாஸ்திரத்தின் மற்ற சிறப்புகள்

வேத சப்தத்தை மாற்றக்கூடாது, ஸ்வரத்தை மாற்றக் கூடாது என்றாலும், சாகா பேதத்தை உத்தேசித்துச் சப்தத்தைக் கொஞ்சம் கொஞ்சம் மாற்றவும் சிக்ஷா விதிகள் உள்ளன என்று இதுவரை சொன்னேன். இதே போல், ஸ்வரத்திலும் ஸ்வல்ப மாறுதலை அநுமதித்திருக்கிறது. மற்ற வேதங்களின் ‘ஆ’காரம் ‘ஏ’ காரம் போன்ற சப்தங்களைச் சில இடங்களில் ரிக்வேதிகள் மேலும் நீட்டி அழுத்தி ‘ஆ–ஆ’, ‘ஏ–ஏ’ என்று சொல்லுகிறார்கள். சில சாகைகளில் ‘ம்’ என்று வருவது. வேறு சிலவற்றில் ‘க்ம்’ (gm) என்று வரும். இதை ‘அநுஸ்வாரம்’ என்பார்கள். இதுவும் அக்ஷர பேதத்தைவிட அழுத்தத்திலுள்ள பேதத்தால் — அதாவது ஸ்வர பேதத்தால் — ஏற்படுவதே எனலாம்.

வேத அத்யயனத்தில் ஸம்ஹிதா, பதம், க்ரமம் என்று பல இருப்பதாக முன்னே சொன்னேனல்லவா? இப்படி ஸம்ஹிதா பாடத்தை பதம், க்ரமம் முதலான மற்ற அத்யயன முறைகளில் மாற்றிக் கொடுப்பதற்கும், சிக்ஷா சாஸ்திரத்தைச் சேர்ந்த ப்ராதிசாக்யங்கள்தான் உதவி புரிகின்றன.

ஏதோ சப்தந்தானே என்று அலட்சியம் பண்ணுவதிற்கில்லை. சப்தத்தில்தான் அத்தனையும் இருக்கிறது. அதனால் சிக்ஷா சாஸ்திரம் வேத புருஷனுக்கு மூச்சு விடுகிற நாஸியாகிறது. வேத சப்தத்திலிருந்து வந்ததுதான் ஸம்ஸ்கிருதத்தின் ஐம்பது அக்ஷரங்கள். “ஜ்ஞ” என்ற எழுத்தைத் தனியாகக் கொண்டால் ஐம்பத்தியொன்று அக்ஷரங்கள். அவற்றுக்கு ‘மாத்ருகா’ என்று பெயர். இதற்குப் பல அர்த்தம் சொல்லலாம். முக்கியமாக, ‘மாத்ரு’, ‘மாதா’ என்றால் ஜகன்மாதாவாக இருக்கப்பட்ட அம்பாள், அந்தப் பராசக்தியின் ஸ்வரூபமே இந்த 51 அக்ஷரங்கள். பராசக்தியால்தான் ஸகலப் பிரபஞ்சங்களும் உண்டாயின என்றும் சொல்லி, சப்தத்தால்தான் ஜகத்ஸ்ருஷ்டி உண்டாயிற்று என்பதாகவும் சொன்னால், அந்த அம்பாள் 51 அக்ஷர ஸ்வரூபிணியாகத்தானே இருக்க வேண்டும்? சாக்த தந்திரங்களில் இந்த 51 அக்ஷரங்களுமே அம்பாளுடைய தேகத்தின் அவயங்கள் என்றும், எந்த அக்ஷரத்துக்கு எந்த அவயவம் என்றும் சொல்லியிருக்கிறது. நம் தேசத்தில் அந்த அவயவ சம்பந்தமுள்ள க்ஷேத்ரங்கள்தான் 51 சக்தி பீடங்களாக ஆகியிருக்கின்றன.

வேத புருஷனுக்கு நாசி என்ற ஒரு அங்கமாக சிக்ஷா சாஸ்திரம் சொல்லப்படுவது அதற்குப் பெருமை என்றால், அதிலே விளக்கப்படுகிற அக்ஷரங்கள் சேர்ந்தே அம்பாளின் பூர்ண ஸ்வரூபம் என்று சொல்வது அதற்கு மேலும் பெருமை தருவதாக இருக்கிறது.

மாதப் பெயர்கள்

மார்கசீர்ஷி என்பது மார்கழி என்றானதாகச் சொன்னதில், பாஷா வித்யாஸங்கள் நன்றாகத் தெரிந்தன அல்லவா? தமிழில், அநேகமாக ஒவ்வொரு மாஸப் பெயரிலுமே, அந்த பாஷையின் தனி லக்ஷணப்படி மூலமான ஸம்ஸ்கிருதப் பேர் எப்படி மாறுகிறதென்று தெரிகிறது.

பெரும்பாலும் ஒரு மாஸத்தில் பௌர்ணமியன்று எந்த நக்ஷத்திரமோ அதுவே அந்த மாஸத்தின் பெயராக இருக்கும். அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும் விழாவாகவும் இருக்கும். அநேகமாக சித்ரா நக்ஷத்தரத்தன்றுதான் சித்திரை மாஸத்தில் பௌர்ணமி வரும். சித்ரா பூர்ணிமை ஒரு விசேஷ நாளாக இருக்கிறது. தமிழில் சித்திரை என்ற மாஸப் பெயர் மூலத்துக்கு மாறாமலே இருக்கிறது. விசாக சம்பந்தமுள்ளது வைசாகம். விசாக நக்ஷத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி ஏற்படுகிற மாஸம்தான் வைகாசி. மதுரை மருதையாவது போல், ஸம்ஸ்க்ருத வைசாகி தமிழில் வைகாசியாகிறது. (பெங்காலில் பைஷாகி என்பார்கள்) வைகாசி விசாகமும் உத்ஸவ நாளாக இருக்கிறது. நம்மாழ்வார் திருநக்ஷத்ரம் அன்றுதான். இப்போது, புத்த பூர்ணிமா என்பதாக அதற்கு விசேஷம் கொடுத்திருக்கிறார்கள்.

அநுஷ நக்ஷத்ர ஸம்பந்தமுள்ளது ஆநுஷீ. அந்த நக்ஷத்ரத்தில் பௌர்ணமி ஏற்படுகிற ஆநுஷீமாஸம், தமிழில் ஆனி ஆகிறது. ஷகாரம் தமிழில் உதிர்ந்துவிடுகிறது.

ஆஷாடத்தில் பூர்வ ஆஷாடம், உத்தர ஆஷாடம் என்று இரண்டு. பூர்வம் — முன்; உத்தரம் — பின். ‘பூர்வாஷாட’த்தில் ‘ர்வ’ கூட்டெழுத்துச் சிதைந்தும், ‘ஷா’ உதிர்ந்தும், தமிழில் ‘பூராடம்’ என்கிறோம். இப்படியே உத்தராஷாடத்தை ‘உத்திராடம்’ என்கிறோம். இந்த ஆஷாடங்களில் ஒன்றில் பௌர்ணமி ஸம்பவிப்பதால், ‘ஆஷாடீ’ எனப்படுவதுதான், நம்முடைய ‘ஆடி’ மாஸம்.

ச்ராவணம் என்பது ச்ரவண நக்ஷத்ரத்தைக் குறித்தது. முதலில் உள்ள ‘ச்ர’ தமிழில் அப்படியே drop-ஆகி, ‘வண’த்தை ‘ஓணம்’ என்கிறோம். அது மஹாவிஷ்ணுவின் நக்ஷத்ரமாதலால், ‘திரு’ என்ற மரியாதைச் சொல்லைச் சேர்த்துத் திருவோணம் என்கிறோம். (இவ்வாறே ‘ஆர்த்ரா’ என்ற சிவபெருமானின் நக்ஷத்ரத்தை ஆதிரை என்றாக்கி, அதற்கும் ‘திரு’ சேர்த்துத் ‘திருவாதிரை’ என்கிறோம். திரு அச்வினி, திருப் பரணி என்றெல்லாம் சொல்வதில்லை. கார்த்திகை மாஸ தீப உத்ஸவத்தை மட்டும் திருக்கார்த்திகை என்றாலும், மற்ற சமயங்களில் திரு போடாமல் கார்த்திகை என்றே சொல்கிறோம். ஹரி-ஹரபேதம் பார்க்காத தமிழ் மரபு அவ்விருவர் நக்ஷத்ரத்துக்கு மட்டும் எப்போதும் ‘திரு’ போட்டு மரியாதை தருகிறது. இந்த விஷயம் இருக்கட்டும்.) அநேகமாகப் பௌர்ணமி ச்ரவணத்திலேயே வருவதான ‘ச்ராவணி’ தான், ஸம்ஸ்கிருதத்துக்கே உரிய சகார, ரகாரக் கூட்டெழுத்து drop ஆகி, ஆவணியாகிறது.

இப்படி ஏகப்பட்ட எழுத்துக்கள் தமிழில் உதிர்வதற்கு ‘ஸிம்ஹளம்’ என்பது ‘ஈழம்’ என்றானது ஒரு திருஷ்டாந்தம். ஸ வரிசையும் ச வரிசையும் தமிழில் அ வரிசையாய்விடும்.

‘ஸீஸம்’ என்பதுதான் ‘ஈயம்’ என்றாயிருக்கிறது. ‘ஸஹஸ்ரம்’ என்பது கன்னடத்தில் ‘ஸாஸிரம்’ என்றாயிருக்கிறதென்றால், அந்த ‘ஸாஸிரம்’ தமிழில் ‘ஆயிரம்’ என்று ஸகாரங்களை உதிர்த்துவிட்டு உருவாயிருக்கிறது.

‘ஆயிர’த்தைச் சொன்னதால் மற்ற எண்களைப் பற்றியும் சொல்லிவிடுகிறேன். ஒன்று, இரண்டு, மூன்று முதலியன ஏக, த்வி, த்ரி முதலான ஸம்ஸ்கிருத வார்த்தைகளின் தொடர்பில்லாதவையாகவே உள்ளன. பஞ்ச-அஞ்சு; அஷ்ட-எட்டு என்பன மட்டும் ஸம்பந்தமிருக்கிறாற்போல் தோன்றுகிறது. இங்கிலீஷ் two, three என்பவை ஸம்ஸ்கிருத த்வி,த்ரி ஸம்பந்தமுடையவைதான். Sexta, hepta, octa, nona, deca என்பதாக ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து சம்பந்தத்தைச் சொல்லும் வார்த்தைகள் ஷஷ்ட, அஷ்ட, நவ, தச என்ற ஸம்ஸ்கிருத மூலத்திலிருந்தே வந்திருப்பது ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. ஆனால் முதல் எண்ணான one என்பது ‘ஏக’ என்பதன் ஸம்பந்தமே இல்லாமல், தமிழ் ‘ஒன்று’ என்பதன் முதல் இரண்டு எழுத்துக்களாக இருப்பது ஆச்சரியமாயிருக்கிறது. தெலுங்கிலோ தமிழ் ஒன்று-வின் ‘ஒ’ வும், ஸம்ஸ்கிருத ‘ஏக’வின் ‘க’வும் சேர்ந்து ‘ஒகடி’ என்றிருக்கிறது. இதெயெல்லாம் பார்க்கும்போது இனத்தில் எல்லாம் ஒன்று என்பதுபோல், திராவிட-ஸம்ஸ்கிருத பாஷைகளுக்குங்கூடப் பொதுவான ஒரே மூலபாஷை இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

ஸிம்ஹளத்தில் ‘ஸிம்ஹ’ என்பதில் ஸ, ஹ இரண்டும் drop-ஆகி ‘இம்ளம்’, ‘ஈளம்’ என்றாகி, ‘ள’ வும் ‘ழ’ வாகி ‘ஈழம்’ என்று ஏற்பட்டிருக்கிறது.

ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு. பூர்வ ப்ரோஷ்டபதம்தான் தமிழில் பூரட்டாதி என்றாயிற்று. ‘அஷ்ட’ என்பது ‘அட்ட’ என்றாவது தெரிந்ததுதானே? உத்தர ப்ரோஷ்டபதம் உத்திரட்டாதி ஆயிற்று. இந்த நக்ஷத்ரங்கள் ஒன்றிலோ, அதை ஒட்டியோ பௌர்ணமி ஏற்படுகிற ப்ரோஷ்டபதீ என்பதே புரட்டாசி என்று எப்படியெப்படியோ திரிந்து விட்டது.

ஆச்வயுஜம், அச்வினி என்பதை அச்வதி என்கிறோம். அதிலே பௌர்ணமி வருகிற ‘ ஆச்வயுஜீ ‘ அல்லது ‘ஆச்வினீ ‘ தான், நம் ‘ ஐப்பசி ‘.

கிருத்திகாவுக்கு adjective-ஆன கார்த்திகம்தான் கார்த்திகை என்று ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. முக்காலே மூன்று வாசி திருக்கார்த்திகை தீபோத்ஸவம் பௌர்ணமியாகத்தானே இருக்கிறது? மார்கசீர்ஷி மார்கழியாவதில்தான் ஆரம்பித்தேன். அம்மாதப் பௌர்ணமி திருவாதிரைப் பண்டிகையாகத் தடபுடல் படுகிறது. புஷ்யம்தான் தமிழில் பூசம். (இந்தப் ‘பூச’ சப்தம் பழகிப் பழகியே புனர்வஸுவையும் புனர்பூசம் என்கிறோம். அது புனர்வஸுவேயன்றி புனர் புஷ்யம் இல்லை!) புஷ்ய ஸம்பந்தமானது பௌஷ்யம். புஷ்யத்துக்குத் திஷ்யம் என்றும் பெயர். பூர்ணிமை திஷ்யத்திலே வரும் மாஸம் ‘தைஷ்யம்’. அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய்த் தமிழில் ‘தை’ மட்டும் நிற்கிறது.

மாசி மகம் பௌர்ணமியில்தான் வருகிறது. மாகமாஸம் என்று மகநக்ஷத்ரத்தை வைத்துப் பெயரிட்டது, தமிழில் மாசி என்றாகியிருக்கிறது. ககாரம் சகாரமாகி, மாகி என்பது மாசி என்றாயிருக்கிறது. வைகாசி, புரட்டாசி, ஐப்பசி என்று ‘சி’ யில் முடிந்தாற்போலவே, இங்கேயும் சி யில் முடித்து, மாசி என்று சொல்கிறோம்.

பூர்வ பல்குனம், உத்தர பல்குனம் என்ற இரண்டு நக்ஷத்ரங்கள் உண்டு. இரண்டிலும் நாம் முக்யமான பெயரான பல்குனம் என்பதைத் தள்ளிவிட்டு, ‘பூர்வ’த்தை ‘பூரம்’ என்றும், ‘உத்தர’த்தை உத்தர நக்ஷத்திரம் என்றுமே சொல்கிறோம். ஆனால், இந்த நக்ஷத்ரங்களில் ஒன்றில் பௌர்ணமி ஏற்படுகிற மாஸத்தை மட்டும் “பல்குன” என்ற சப்த ஸம்பந்தமுள்ள “பங்குனி” என்ற பெயரால் குறிக்கிறோம். அந்தப் பௌர்ணமியில்தான் பங்குனி உத்தரம் என்று திருக்கல்யாண உத்ஸவம் செய்கிறோம்.

இப்படிப் பன்னிரண்டு மாஸப் பெயர்களைப் பார்த்தாலே, ஸம்ஸ்கிருதத்திலுள்ள எந்தெந்த ஒலிகள் தமிழில் எப்படியெப்படி மாறும் என்பது தெரிந்துவிடும்.

வேத உச்சரிப்பால் பிரதேச மொழி விசேஷமா ? பிரதேச மொழியை வைத்து வேத உச்சரிப்பா ?

வேதத்தில் எந்த எழுத்து எந்தப் பிரதேசத்தில் சிறப்பாக இருந்திருக்கிறதோ, அதே எழுத்துத்தான் அந்தந்தப் பிரதேசத்துப் பாஷையிலும், அவர்களுடைய பேச்சிலும் சிறப்பாக இருந்திருக்கிறது என்று தெரிவிப்பதற்காக இவ்வளவும் சொன்னேன். இதிலிருந்தே எல்லாத் தேசங்களிலும் வேதம் இருந்ததும் தெரிகிறது. நமக்கு நன்றாகத் தெரிகிற தமிழ் தேசத்தில் வேதம் இல்லாமல் இருந்த காலமே இல்லை என்றும் தெரிகிறது.

தமிழ் என்பதிலேயே ழ் என்று உட்கார்ந்து கொண்டு, நம் பாஷைக்கு பெருமையைத் தருகிற ழ காரம் வேதத்தின் தலவகார சப்தப் பிரகாரம் உண்டானதுதான்.

இப்படிச் சொல்வது சரியா? அல்லது தமிழிலே ழ இருக்கிறதாலும், வடக்கே பாஷைகளில் ஜ இருக்கிறதாலுந்தான், அந்தந்த பிரதேசங்களிலுள்ளவர்கள் வேதத்திலும் இப்படிப்பட்ட சப்தங்களாக மாற்றிக் கொள்ளலாம் என்று பண்ணிக் கொண்டார்கள் என்றால் சரியாயிருக்குமா? ஏற்கெனவே பிரதேச மொழிகளில் இருந்ததைத்தான் பிற்பாடு வேதத்திலும் எடுத்துக்கொள்ள இடம் தந்திருப்பார்களோ? அதையே தான் தலைகீழாக மாற்றி, வேதத்திலிருந்த ழ சப்தம்தான் தமிழுக்கு முக்யமாக ஆயிற்று, அதன் ஜ வடக்கத்திக்காரர்களுக்கு முக்யமாக ஆயிற்று, ப வங்காளிக்கு விசேஷமாக ஆயிற்று என்று சொல்கிறேனா? இதிலே எது சரி?

வேத சிக்ஷை விதிதான் பிரதேச பாஷைகளிலும் முக்கியமான ஒலியாக வந்தது என்பதுதான் சரி. ஏனென்றால் பிராதிசாக்ய விதி ஒரு பிரதேசத்துக்கு மட்டும் ஏற்பட்டதல்ல; அந்த சாகை அநுஷ்டானத்திலுள்ள ஸகலப் பிரதேசத்துக்கும் ஏற்பட்டது. தமிழ் நாட்டில் மட்டுமில்லாமல், எங்கேயாவது காஷ்மீரிலோ, காமரூபத்திலோ (அஸ்ஸாம்) ஒரு தலவகார சாகா அத்யாயி (அத்யயனம் செய்பவன்) இருந்தாலும், அவன் மற்றவர்கள் ட வும் ள வும் சொல்கிற மந்திரங்களில் ழ வைத்தான் சொல்லுவான். ஒரு பிரதேசத்துக்கு என்றில்லாமல், அதாவது தெலுங்கன் மட்டுமில்லாமல் கிருஷ்ண யஜுஸில் அத்யயனம் பண்ணுகிறவன் எந்த பாஷைக்காரனாக இருந்தாலும், அவன் குஜராத்தில் இருந்தாலும், மஹாராஷ்டிரத்தில் இருந்தாலும், வேறே எங்கே இருந்தாலும் ட தான் சொல்ல வேண்டும். இப்படியே கன்னடஸ்தன் மட்டுமின்றி ரிக்வேதியாக இருக்கப்பட்ட எவனுமே ‘ ள ‘ காரம் தான் சொல்ல வேண்டும். குறிப்பிட்ட பிரதேசத்துக்கு என்றில்லாமல் பொதுவாக எழுதி வைக்கப்பட்ட பிராதிசாக்யத்தில் இப்படித்தான் சப்த ரூபத்தை நிர்ணயம் பண்ணிக்கொடுத்திருக்கிறது. ஆகவே, ஒரு சாகை எங்கே அதிகமாக அநுஷ்டிக்கப்படுகிறதோ அங்குள்ள பிரதேச பாஷையிலும் இந்த அக்ஷர விசேஷம் நாளடைவில் உண்டாகி விடுகிறதென்றே ஆகிறது.

பெரும்பாலும், ம்ருக சீர்ஷ நக்ஷத்திரம் பௌர்ணமியன்று வருகிற ஒரு மாஸத்துக்கு ‘மார்கசீர்ஷி’ என்று பேர் வைக்கப்பட்டது. அதைத்தான் நாம் ‘மார்கழி’ என்கிறோம். ‘ஷி’ என்பது ‘ டி’ யாகி, ‘டி’ என்பது ‘ழி’ ஆகிவிட்டது. முதலில் ஷ என்பது ட ஆனது, தமிழ் மொழிப் பண்பின்படியாகும். ‘புருஷன்’ என்பதை தமிழில் ‘புருடன்’ என்போம். ‘நஹுஷன்’ என்பதை ‘நகுடன்’ என்றே கவிதையில் எழுதியிருக்கும். கம்பர் விபீஷணனை ‘வீடணன்’ என்றுதான் சொல்கிறார். சரி, அதனால் ‘மார்கசீர்ஷி’ என்பது ‘மார்கசீர்டி’ யாகி நடுவிலே உள்ள சீர் உதிர்ந்து போனாலும், மார்கடி என்றுதானே நிற்க வேண்டும்? ஏன் ‘ழ’ காரம் வந்து, ‘மார்கழி’ ஆயிற்று என்றால், இதுதான் தமிழ் நாட்டில் பிராசீனமாயிருந்த தலவகார சாகையின் சிறப்பினால் ஏற்பட்ட விளைவு.

இந்த சாகைக்காரன் ‘ழ’ சொல்கிற இடத்திலே, க்ருஷ்ண யஜுர்வேதிகள் ‘ட’ சொல்வார்கள் அல்லவா? இந்தப் பழக்கம் அவர்களை அறியாமலே அவர்களுக்கு இன்னமும் விட்டுப்போகவில்லை. எப்படிச் சொல்கிறேன் என்றால், தெலுங்கு தேச வைஷ்ணவர்கள் நம்முடைய தமிழ் திவ்யபிரபந்தங்களைச் சொல்லி கோவிலில் பகவானுக்கு அர்ப்பணம் பண்ணுகிறார்கள். திருப்பதியில் வேங்கடரமண ஸ்வாமிக்கு இப்படித் ‘திருப்பாவை’ அர்ப்பணம் பண்ணப்படுகிறது. அதன் எடுத்த எடுப்பில் “மார்கழித் திங்கள்” என்று வருகிறதல்லவா? ‘ழி’ என்பது தெலுங்கர்களின் வாயில் வராது. அதனால் ‘மார்களி’ என்றோ ‘மார்கலி’ என்றோ சொல்லலாமல்லவா? ஆனால் இப்படியும் சொல்வதில்லை. ‘மார்கடி திங்கள்’ என்று ட காரம் போட்டே சொல்கிறார்கள். தமிழ் நாட்டிலுள்ள ஸாமத்தைத் தாங்கள் யஜுஸில் சொல்லும்போது ழ என்பது ‘ட’ ஆவது அவர்களுக்கே தெரியாமல் ரத்தத்தில் ஊறி வந்திருக்கிறது. அதனால் தான் ‘ மார்கழி ‘யை ‘ மார்கடி ‘ என்கிறார்கள்.

வேத சப்தமும் பிரதேச மொழிச் சிறப்பும்

இந்திய பாஷைகள் பலவற்றிலே இருக்கப்பட்ட தனிப்பட்ட விசேஷங்களையெல்லாம் அங்கங்கே இருக்கிற வேதாத்யயன அக்ஷர வித்யாஸங்களோடு இணைத்துப் பார்க்கிறபோது, ஒவ்வொரு பாஷைக்கும் உள்ள தனிப் பண்புகளுக்கும், இதனால் அவைகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள வித்யாஸங்களுக்கும் அந்தந்தப் பிரதேசத்திலுள்ள வேத சப்தங்களே காரணம் என்ற பெரிய விஷயம் தெரிகிறது. இப்படி நான் ஃபைலாலாஜிகலாகப் பண்ணின சில ஆராய்ச்சிகளைச் சொல்கிறேன்:

ட (d’a) – ர-ல-ள-ழ என்று ஐந்து சப்தங்களும் ஒன்றுக்கொன்று கிட்டத்தில் இருக்கிறவை. ஒரு குழந்தையிடம் போய், “ரயில் என்று சொல்லு, ராமன் என்று சொல்லு” என்றால் அது “டயில்”, “டாமன்” என்கிறது. ‘ர’ வும் ‘ட’வும் கிட்டத்தில் இருப்பதாலேயே இப்படிச் சொல்கிறது. ‘சிவராத்ரி’ என்பதைப் பல பேர் ‘சிவலாத்ரி’ என்கிறார்கள். ‘துளிப்போ‘ என்பதற்குத் ‘துளிப்போ‘ என்கிறோம். இங்கே ‘ல’வும் ‘ர’வும் ஒரே மாதிரியான சப்தங்கள் என்று தெரிகிறது. மேலே ‘ர’ வும் ‘ட’வும் மாறுவதைச் சொன்னேன். அதனால் ‘ல’வும் ‘ட’வாக மாறலாம் என்று ஏற்படுகிறது. அதனால் ‘ல’ வும் ‘ள’ வும் ரொம்ப நெருங்கினவை. அநேகமாக நாம் ‘லளிதம்,’ ‘நளினம்,’ ‘சீதம்’ என்று சொல்கிறதை, ஸம்ஸ்கிருத புஸ்தகங்களில் ‘லலிதம்’, ‘நலினம்,’ ‘சீதம்’ என்றுதான் போட்டிருக்கும்; அத்தனை நெருங்கினவை. ‘ள’வும் ‘ழ’ வும் ரொம்ப ஆப்தம் என்பதைச் சொல்லவே வேண்டாம். தமிழுக்கே ஏற்பட்ட மதுரையிலே இருக்கிறவர்கள் ‘வாழைப் பழம்’ என்பதை ‘வாளைப் பளம்’ என்றுதானே சொல்கிறார்கள்? தமிழுக்கே பிரத்யேகமானது என்று நினைக்கிற ‘ழ’வை மாற்றிச் சொல்கிறார்கள்?

இப்போது நான் ஒரு புது விஷயம் சொன்னேன், தமிழில் மாத்திரம் இருப்பதாக நினைக்கப்படும் இந்த ‘ழ’ வேதத்திலும் இருக்கிறது என்று. ஸாமவேதத்தில் ஜைமினி சாகை என்று ஒன்று இருக்கிறது. அதைத் தலவகார சாகை என்றும் சொல்வார்கள். மற்ற வேதங்களில் மற்ற சாகைகளில் ‘ட’ அல்லது ‘ள’ வாக இருப்பதை, தலவகார சாகையில் ‘ழ’ மாதிரிதான் ஒலிக்க வேண்டும். முறைப்படி தலவகார சாகையில் அத்யயனம் பண்ணினவர்கள் இப்படித்தான் ‘ழ’ காரமாகச் சொல்கிறார்கள். அதைப் பூர்ணமான ‘ழ’ என்று வேண்டுமானால் சொல்ல முடியாமல் இருக்கலாம். ஆனால் உள்ளூர (அந்தர்பாவமாக) அது ‘ழ’ சப்தந்தான் என்பதில் ஸந்தேஹமில்லை.

ரிக்வேதத்திலேயே கூட இப்படி ‘ழ’காரம் சில இடங்களில் ஒலிக்கிறதுண்டு. ஸாதாரணமாக ‘ட’வும் ‘ள’வும் ஒன்றுக்கொன்று மாறிவரும் என்றபடி, யஜுர் வேதத்தில் ‘ட’காரம் வருமிடங்களில், ரிக் வேதத்தில் ‘ள’ காரம் வருவதுண்டு. வேதத்தில் முதல் மந்திரத்தில் முதல் வார்த்தை ‘அக்னிமீடே’ என்பது. ‘அக்னிமீடே’ என்பது இப்போது அநுஷ்டானத்திலே மெஜாரிட்டியாக இருக்கிற யஜுர்வேதப் பாடம்தான். ரிக்வேதத்தில், இது ‘அக்னிமீளே’ என்றுதான் இருக்கிறது. இங்கே ‘ளே’ என்பதை ‘ழே’ மாதிரிச் சொல்ல வேண்டும். யஜுர்வேதத்திலே வருவதும், ரொம்பப் பிரஸித்தியோடு இருப்பதுமான ஸ்ரீ ருத்ரத்தில், ‘மீடுஷ்டமாய’ என்று ஒரு இடத்தில் வருகிறது. இந்த வார்த்தை ரிக்வேதத்திலும் உண்டு. அங்கே “மீடு”வில் வரும் ‘டு’ என்பது ‘ள’ காரமாக இல்லாமல், ‘ழ’ காரம் அந்தர்பாவமாகத் தொனிக்கிற சப்தமாகவே இருக்கிறது.

பொதுவாக, ரிக் வேதத்தில் ‘ள’வாக இருப்பது, யஜுர் வேதத்தில் ‘ட’வாகவும், தலவகார ஸாமவேதத்தில் ‘ழ’வாகவும் இருப்பதாகச் சொல்லலாம். இப்போது இந்த ஒவ்வொரு வேதமும் நிறைய அநுஷ்டானத்திலுள்ள பிரதேசங்களை எடுத்துக் கொண்டு, அந்தப் பிரதேச பாஷைகளின் விசேஷத்தைப் பார்க்கலாம்.

‘வேதம் ஆரியர்களைச் சேர்ந்தது; திராவிடம் அதற்கு வித்யாஸமானது’ என்று இக்காலத்தில் கிளப்பி விட்டிருப்பதால், திராவிடத்திலுள்ள மூன்று பிரதேசங்களையே எடுத்துக் கொள்ளலாம். அதாவது, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று பாஷைகளை எடுத்துக் கொள்ளலாம்.

தமிழிலே ‘ழ’காரம் விசேஷம். தெலுங்கிலே ‘ட’ (da) சப்தத்தின் பிரயோகம் விசேஷமாக வருகிறது. கன்னடத்தில் ‘ள’ என்ற சப்தம் அதிகமாக இருக்கிறது. கன்னடத்தில் ‘ள’ என்ற சப்தம் அதிகமாக இருக்கிறது. தமிழிலே ‘ழ’ வரும் இடங்களில், தெலுங்கிலே ‘ட’வும் கன்னடத்தில் ‘ள’ வும் வருகின்றன. உதாரணமாக, ‘ப்ரவாளம்’ என்று ஒரு ஸம்ஸ்கிருத வார்த்தை இருக்கிறது. ‘பவம்’ என்று தமிழில் சொல்வது அதுதான். இதையே தெலுங்கிலே சொல்லும்போது ‘பகடாலு’ என்கிறார்கள். கன்னடத்தில் ‘ஹவ‘ என்று சொல்கிறார்கள்.

‘ப்ரவாளம்’ என்பதுதான் ‘பவழ’மாயிருக்கிறது; ‘பகடாலு’ ஆகியிருக்கிறது. ஸம்ஸ்கிருத வார்த்தை தமிழில் மாறியதைவிடத் தெலுங்கில் ஜாஸ்தி மாறி, ‘ப்ரவாளத்’தில் வரும் ‘வ’வும் ‘க’ என்று வித்யாஸப்பட்டிருக்கிறது. அது தெலுங்கு மொழிப்பண்பு (genius of the language) . இதே போல, ‘ப்ரவாள’ என்பது கன்னட ‘ஹவள’மாகிற போது, முதல் எழுத்தே ரொம்பவும் மாறுகிறது. ‘ப்ர’ என்பது தமிழிலும், தெலுங்கிலும் ‘ப’ ஆனது சின்ன மாறுதல்தான். கன்னடத்திலோ ‘ஹ’ என்றே மாறிவிட்டது. ஆனால் இதுதான் கன்னடத்தின் பிரத்யேக மொழிப் பண்பு. மற்ற பாஷைகளில் ‘ப’ வாக இருப்பது அதிலே ‘ஹ’ வாக விடும். ‘பம்பா’ (ஸரஸ்) என்பது ‘ஹம்பா’ என்றாகி, ‘ஹம்பி’ (Humpi ruins) என்றாகியிருக்கிறது. நாம் ‘பால்’ என்பதை கன்னடத்தில் ‘ஹாலு’ என்கிறார்கள். நாம் ‘புகழ்’ என்றால் கன்னடத்தில் ‘ஹொகளு’ என்பார்கள். இங்கெல்லாம் ‘ப’ என்பது ‘ஹ’ வாகிறது போலத்தான், ‘ப்ரவாள’மும் ‘ஹவள’மாகிறது’.

நான் இந்த ப-ஹ வித்தியாஸத்தைச் சொல்ல வரவில்லை. ‘ப்ரவாள’த்தின் ‘ள’, தமிழில் ‘ழ’ வாகவும், தெலுங்கில் ‘ட’ வாகவும், கன்னடத்தில் மூலமான ‘ள’ ரூபத்திலேயே இருப்பதையுந்தான் சுட்டிக்காட்ட வந்தேன்.

இந்த வார்த்தை மட்டும் இல்லாமல், அதாவது ஸம்ஸ்கிருத ‘ரூட்’டிலிருந்து வந்த ப்ரவாளம் போன்ற வார்த்தைகளில் மட்டும் இன்றி, திராவிட பாஷைகளில் மட்டுமே இருக்கிற வார்த்தைகளிலும் கூடத் தமிழில் ‘ழ’ வரும் இடத்தில் தெலுங்கில் ‘ட’ வும் கன்னடத்தில் ‘ள’ வும்தான் வருகிறது. மேலே சொன்ன “புகழ்” என்பதே இதற்கு ஒரு உதாரணம். ‘புகழ்’ என்ற வார்த்தை ஸம்ஸ்கிருத தாதுவிலிருந்து வந்ததல்ல. அது ஒரு திராவிட பாஷைச் சொல்தான்….

ஆரியர், திராவிடர் என்று இரு இனமாகப் பிரிந்திருக்காவிட்டாலும், ஒரே இனத்துக்காரர்கள் ஸம்ஸ்கிருதத் தொடர்புடைய பாஷைகளாகவும், திராவிட பாஷைகளாகவும் பிரிந்திருக்கிறார்கள் என்றுதான் இப்போது ஆராய்ச்சி உள்ள நிலையிலிருந்து தெரிகிறது. இன்னும் நன்றாக ஆராய்ச்சி பண்ணினால் இந்தப் பாஷா வித்யாஸமும் கூட இல்லாமல், எல்லாம் ஒரே மூலபாஷையிலிருந்து (Parent Stock-லிருந்து) வந்ததுதான் என்றுகூட ஏற்பட்டுவிடலாம். சில மொழி ஆராய்ச்சிக்காரர்கள் (linguists) இப்படித் தமிழ் – ஸம்ஸ்கிருத பாஷைகளின் ஐக்கியத்தைக் கூட ஆராய்ச்சி செய்வதாகத் தெரிகிறது. மிக மிக ஆதிகாலத்துக்குப் போனால் அப்படியிருக்கலாம். ஆனால் அதற்குப் பின் ஆயிரக்கணக்கான வருஷங்களாக, திராவிட பாஷைகள் வேறு ரூபமாக மாறிக்கொண்டுதான் வந்திருக்கின்றன. இந்த நிலையை ஏற்றுக்கொண்டு, இப்போதைக்கு திராவிட பாஷைகளைத் தனியாகப் பிரித்தே தான் இங்கே பேசுகிறேன்.

‘புகழ்’ என்ற தமிழ் வார்த்தை கன்னடத்தில் ‘ஹொகளு‘ என்றும், தெலுங்கில் ‘பொகடு‘ என்றும் இருக்கிறது. இதிலிருந்தும் தமிழ் ‘ழ’ காரம் தெலுங்கில் ‘ட’காரமாகவும், கன்னடத்தில் ‘ள’ காரமாகவும் இருப்பதாகத் தெரிகிறது.

இப்படித் தமிழுக்கு ‘ழ’வும், தெலுங்குக்கு ‘ட’வும் கன்னடத்துக்கு ‘ள’வும் விசேஷமாக இருப்பதற்கு ஏதாவது காரணம் இருக்குமோ என்று ஆலோசித்துப் பார்த்த போது, அந்தந்தப் பிரதேசத்திலுள்ள வேத சாகையின் அத்யயனத்திலுள்ள அக்ஷர வித்யாஸம்தான் இதற்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

மஹாராஷ்டிரம், கர்நாடகம் உள்பட மேற்குப் பிரதேசத்தில் எந்த வேதம் நிறைய அநுஷ்டானத்தில் இருக்கிறது என்று பார்த்தால், ரிக் வேதமாகத்தான் இருக்கிறது. நாஸிக்கிலிருந்து கன்யாகுமரிவரை மேற்குக்கரைப் பிரதேசத்தில் பார்த்தால், ரிக்வேதம்தான் அதிகம். அதனால்தான், அந்தப் பிரதேசத்தில் வழங்குகிற கன்னட பாஷையில் ‘ள’ முக்கியமாக இருக்கிறது. வேத ‘ள’ வே திராவிட பாஷையாக நினைக்கப்படும் பிரதேச மொழியான கன்னடத்திலும் விசேஷ சப்தமாக வந்துவிட்டது!

விசாகப்பட்டினத்திலிருந்து மெட்றாஸுக்கு வடக்கு வரை கிழக்கு ஸமுத்திரக் கரையையும், அதை ஒட்டிய உள்நாட்டையும் எடுத்துக் கொண்டு, அதாவது ஆந்திர தேசத்தைப் பார்த்தால், அங்கே நூற்றுக்குத் தொண்ணூற்றெட்டுப் பேர்கள் யஜுர்வேதிகள்தான்; பாக்கி இரண்டு சதவிகிதம் ரிக்வேதிகள். தெலுங்கு தேசத்தில் ஸாமவேதிகள் இல்லை என்றே சொல்லி விடலாம். இந்தப் பிரதேசத்தில் யஜுர் வேதம் முக்கியமாயிருப்பதால், அத்யயனத்திலே ரிக்வேதத்தில் வரும் ‘ள’ இங்கே ‘ட’வாகத்தானே ஓதப்படும்? இதை வைத்தே, இங்கே regional language (பிரதேச பாஷை) ஆக உள்ள தெலுங்கிலும், மற்ற பாஷைகளின் ‘ள’ என்பது ‘ட’வாகி விடுகிறது!

தமிழ் தேசத்தை எடுத்துக் கொண்டால், பிற்காலத்தில் இங்கேயும் யஜுர்வேதிகள்தான் அதிகமாகி விட்டார்கள். ஆனாலும், தெலுங்கு தேசத்தில் உள்ள அளவுக்கு இருக்கமாட்டார்கள். தமிழ் நாட்டில் நூற்றுக்கு எண்பது பேர் யஜுர்வேதிகள் என்று சொல்லலாம். பாக்கியில், 15% ஸாமவேதம் இருக்கும்; 5% ரிக்வேதம் இருக்கும்.

இப்போது இப்படி இருந்தாலும், முற்காலங்களில் தமிழ் தேசத்தில் ஸாமவேதம் இன்னம் நிறைய இருந்திருக்கிறது என்பதற்கான சான்றுகள் இருக்கின்றன. ஸாம வேதத்திலிருந்த ஆயிரம் சாகையைச் சேர்ந்தவர்களும் தமிழ் நாட்டில் இருந்திருக்கிறார்கள் என்று ஊகிக்க முடிகிறது. “ஆயிரம் சாகை உடையான்” என்பதாகத் தேவாரத்திலேயே சில இடங்களில் ஈச்வரனை ஸ்தோத்திரம் செய்திருக்கிறது.

இந்த ஆயிரம் சாகைகளில், தற்போதுள்ள ஸாம வேதிகளில் ‘கௌதுமம்’ என்ற சாகையைச் சேர்ந்தவர்களே அதிகமாயிருந்தாலும், பூர்வத்தில் ‘ஜைமினி சாகை’ அல்லது ‘தலவகாரம்’ எனப்படுவதைச் சேர்ந்த ஸாம வேதிகள் நிறைய இருந்திருக்கிறார்கள். ‘சோழியர்’கள் என்பதாகச் சோழ தேசத்துக்கே சிறப்பித்துப் பேசப்படுபவர்களில் இன்றைக்கும் ஸாமவேதிகளாக இருப்பவர்கள் தலவகார சாகையினராகத் தான் இருக்கிறார்கள். பாண்டிய நாட்டின் கோடியில், திருநெல்வேலியில் உள்ள சோழியர்களைப் பார்த்தால் கூட தலவகார சாகைகாரர்களான ஸாமவேதிகளாக இருக்கிறார்கள். ஆதியில் சோழ தேசத்தில் மட்டுமின்றி பாண்டிய தேசத்திலும் ஸாமவேதம் நிறைய இருந்திருக்கவேண்டும் என்று இதிலிருந்து தெரிகிறது.

“சோழியர்” என்றால், ரொம்பவும் பூர்வத்திலிருந்தே தமிழ் நாட்டுக்காரர்களாக இருந்த பிராம்மணர்கள் என்று அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம். அவர்கள் தமிழ் நாட்டின் ஆதிவாசிகளான பிராம்மணர்கள். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், தமிழ் நாட்டு பிராம்மணர்களில் “வடமர்” என்றும் ஒரு பிரிவு இருக்கிறது. ‘வடமாள்’, ‘வடமா’ என்கிறோம். “என்ன வடைமாவா, தோசை மாவா?” என்று கேலிகூடப் பண்ணுகிறோம். இது “வடமர்” என்பதே. தமிழ் நாட்டில் ஆதியிலிருந்து வஸித்துவந்த சோழியர்களைத் தவிர பிற்பாடு வடக்கேயிருந்து, குறிப்பாக நர்மதா நதிப் பிரதேசத்திலிருந்து, தமிழ் நாட்டுக்கு வந்து குடியேறிய பிராம்மணர்களதான் இந்த வடமர்கள். பெயரே அவர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்று காட்டுகிறது.

ஆனால், இப்போது சிலர் நினைக்கிற மாதிரி, “அத்தனை பிராம்மணர்களுமே வடக்கேயிருந்து இங்கே வந்தவர்கள்தான்; தமிழ் தேசத்தில் ஆதியில் பிராம்மணர்களே இல்லை” என்பது தப்பான அபிப்ராயம் என்பதற்கும், “வடமர்” என்ற வார்த்தையே proof-ஆக இருக்கிறது. எல்லா பிராம்மணர்களுமே வடதேசத்தைச் சார்ந்தவர்கள்தான் என்றால், தமிழ் நாட்டில் உள்ள அத்தனை பிராம்மணர்களுக்குமே “வடமர்” என்ற பெயர் ஏற்பட்டிருக்கும். அப்படியில்லாமல், தமிழ் நாட்டு பிராம்மணர்களில் ஒரு பிரிவுக்கு மட்டுமே “வடமர்” என்று பெயர் இருப்பதாலேயே, பாக்கியுள்ள பிராம்மணர்கள் ஆதியிலிருந்து தமிழ்நாட்டையே சேர்ந்தவர் என்றுதானே அர்த்தமாகும்? அந்த ஆதித் தமிழ் பிராம்மணர்கள் தான் ‘சோழியர்கள்’ எனப்பட்டவர்கள்.

“வடமர்”கள் நர்மதா தீரத்திலிருந்து வந்தவர்கள் என்பதற்கு ஒரு ஆதாரம் இருக்கிறது. வடமர்கள் மட்டும் இன்றைக்கும் ஸந்தியாவந்தனத்தில்,

நர்மதாயை நம: ப்ராத: நர்மதாயை நமோ நிசி|
நமோஸ்து நர்மதே துப்யம் பாஹி மாம் விஷ ஸர்ப்பத:||

என்பதாக, நர்மதைக்குக் காலையிலும் நிசியிலும் வந்தனம் சொல்லி, தங்களை ஸர்ப்ப பயத்திலிருந்து ரக்ஷிக்கும்படி வேண்டிக் கொள்கிறார்கள்.

தெற்கேயே இருந்த சோழியர்களில், சோமாசி மாற நாயனார் என்று அறுபத்து மூவரில் ஒருவராகக் கூட ஒரு பெரியவர் இருந்திருக்கிறார். ‘சோமாசி’ என்றால் பக்ஷணம் இல்லை. “சோம யாஜி” – ஸோம யாகம் பண்ணுகிறவர் – என்பதே “சோமாசி” என்றாயிற்று. ஸ்ரீ ராமாநுஜாசாரியாரின் தகப்பனாரும் ஸோம யாகம் பண்ணினவர். கேசவ ஸோமயாஜி என்று அவருக்குப் பெயர். ஸாம வேதந்தான் ஸோம யாகங்களுக்கு விசேஷமானது.

தமிழ்நாட்டிலே முக்யமாகச் சோழியர்கள் ஆதியில் இருந்தார்கள் என்றால், இங்கே தலவகார ஸாமமும் வெகுவாக அநுஷ்டானத்தில் இருந்திருக்க வேண்டும் என்றே அர்த்தம். இங்கே சோழ, பாண்டிய தேசங்களைப் பற்றிச் சொன்னேன். பல்லவ தேசம், சேரநாடு இவற்றின் பிராம்மணர்களைப் பற்றிச் சொல்லவில்லையே என்று தோன்றலாம். ரொம்பவும் பூர்வத்தில் பல்லவ ராஜ்யமே இல்லை. சேர-சோழ-பாண்டியர்கள் என்பவர்கள்தான் மூவேந்தர்கள். பிற்காலப் பல்லவ ராஜ்யமும், ஆதியில் சோழ ராஜ்யத்தில் அடங்கியிருந்ததுதான். அதனால் அங்கிருந்த பூர்விகப் பிராம்மணர்களும் சோழியர்கள்தான். ‘வடமர்கள்’ என்று வடக்கேயிருந்து வந்தவர்களில் பலர், தமிழ் நாட்டின் வடபகுதியான பல்லவ ராஜ்யத்திலேயே தங்கிவிட்டார்கள். இவர்களுக்கு ‘ஒளத்தர வடமர்’ என்று பிற்பாடு பெயர் உண்டாயிற்று. தமிழ் நாட்டுக்கு வடக்கேயிருந்து வந்தபின், தமிழ்நாட்டுக்குள் அதன் “உத்தர” பாகத்தில் (வடக்குப் பகுதியில் ) தங்கி விட்டதால் “ஒளத்தர” என்று அடைமொழி ஏற்பட்டது. வடமர்களிலும் ஸாமவேதிகள் சிலர் உண்டு. ஆனால் இவர்கள் ஜைமினீயம் எனப்படும் தலவகார சாகையைச் சேர்ந்தவர்களல்லர். அதிக அநுஷ்டானத்திலுள்ள கௌதும சாகையைச் சேர்ந்தவர்களே. தமிழ்மொழியும் இலக்கியமும் முறையாக ரூபம் பெற்று வந்த பழைய காலத்துக்கு வடமர்களின் வருகை ரொம்பவும் பிற்பட்டது. ஆதலால் அவர்களுடைய அத்யயன முறை நாம் எடுத்துக் கொண்ட விஷயத்துக்குச் சம்பந்தமில்லாதது. தமிழ் பாஷை நன்றாக ரூபம் பெற்று, சங்க இலக்கியங்கள் தோன்றிய பின்பே வந்த பல்லவர் ஸமாசாரம் நம் ‘ஸப்ஜெட்டு’க்கு அவசியமில்லாத விஷயந்தான்.

சேர நாட்டு ஸமாசாரத்தைப் பார்க்கலாம். தற்போது கேரளமாகி விட்ட சேர நாட்டிலே மலையாள பாஷை வழங்குகிறது. தமிழ்-தெலுங்கு-கன்னடத்தைச் சொன்ன போது மலையாளத்தைச் சேர்க்காமல் விட்டதற்குக் காரணம், இந்த பாஷையும் பல்லவர்களைப்போல, வடமர்களைப் போல, பிற்காலத்து ஸமாசாரம் என்பதேயாகும். சுமார் ஆயிரம் வருஷத்துக்கு முந்தி வரையில், கேரளநாடு தமிழ்நாட்டின் பாகமான சேரநாடாகவும், அங்கிருந்த பாஷை தமிழாகவும்தான் இருந்தது. பிறகுதான் தமிழிலிருந்தே மலையாளம் தோன்றியது. தமிழ் ‘ழ’ தெலுங்கில் ‘ட’ வாகவும், கன்னடத்தில் ‘ள’ வாகவும் வித்தியாசப்பட்டு இருந்தாலும், மலையாளத்தில் ‘ழ’ வாகவேதான் தங்கிவிட்டது. நாம் ‘புழை’ என்பதை மலையாளத்தில் ‘புழா’ என்றே சொல்கிறார்கள். நாம் ‘ஆலப்புழை’, ‘அம்பலப்புழை’ என்றால் அவர்கள் ‘ஆலப்புழா’, ‘அம்பலப்புழா’ என்பார்கள். இத்தனைக் கொஞ்சம்தான் வித்தியாசம்.

அதனால் மலையாள பாஷையை விட்டுவிட்டு, அந்தச் சீமையில் ஆதியிலிருந்தே இருந்து வந்திருக்கிற வேதத்தைப் பார்ப்போம். நம்பூதிரிகள் எனப்படும் மலையாள பிராம்மணர்கள்தான் நீண்ட நெடுங்காலமாக ரொம்பவும் சாஸ்திரோக்தப்படி வேத அத்யயனம் செய்து வருகிறார்கள். இவர்களில் [ரிக்,யஜுஸ், ஸாமம் என்கிற] த்ரிவேதிகளும் இருக்கிறார்கள். குறிப்பாக, ஸாமவேதிகளில் தலவகார சாகையைப் பின்பற்றும் நம்பூதிரிகள் இருக்கிறார்கள். ‘பாஞ்சான்மனை’ என்று நல்ல வைதிகமான ஒரு நம்பூத்ரி பரம்பரை இருக்கிறது. அவர்கள் எல்லாரும் தலவகார சாகையினரே. தமிழ்நாட்டு ஸாமவேதிகளில் தற்போது கௌதும சாகையினர் அதிகமாகி விட்டபோதிலும், மலையாளத்தில் ஸாமவேதிகள் தலவகார சாகையினராகவே இப்போதும் இருக்கிறார்கள்.

பரம்பரையாக தலவகாரம் ஓதிவருகிற நம்பூதிரிகள் மற்றை சாகைகளில் ‘ட’ அல்லது ‘ள’வாக வருவதை ‘ழ’ காரமாகவே உச்சரிக்கிறார்கள். அதாவது தமிழ்நாட்டில் அத்யயனம் செய்வதுபோலவே தான் அங்கேயே இருக்கிறது. ஆதியில் அதுவும் தமிழ்நாடாகத்தானே இருந்திருக்கிறது?

மலையாளத்திலும், தமிழ்நாட்டிலும் உள்ள தலவகார ஸாமச் சுவடிகளில் எல்லாம் ‘ழ’ என்றே இந்த இடங்களில் எழுதியும் இருக்கிறது. சுவடியில் மட்டுமின்றி, அச்சுப்போட்ட பிரதிகளிலும் இப்படியே இருக்கிறது.

இப்படியாக, வேறெந்தப் பகுதியிலும் இல்லாத அளவுக்குத் தமிழ் தேசத்திலேயே தொன்று தொட்டுத் தலவகார ஸாமஸாகை இருந்து வந்திருக்கிறது; வேறெந்தப் பகுதியிலும் இல்லாத ‘ழ’ உச்சரிப்பும் அதோடு வேத அத்யயனத்திலே வந்திருக்கிறது!

சங்க நூல்களின் உரையாசிரியர்களுள் முக்யமானவரான நச்சினார்க்கினியர் தொல்காப்பியத்துக்கு எழுதிய உரையில் ‘தைத்திரீயம், பௌடிகம், தலவகாரம், ஸாமம்’ என்று நாலு வேதங்கள் இருந்ததாகச் சொல்லியிருக்கிறார்1. இவர் சாகைகளையே வேதம் என்று தவறுதலாகச் சொன்னாலும்கூட, இதிலிருந்தே ஆதியில் தமிழ்நாட்டில் தலவகாரம் என்பதே ஒரு முழு வேதம் மாதிரியான ஸ்தானத்தைப் பெற்றிருந்தது என்றும் தெரியவருகிறது அல்லவா? தைத்திரீயம் என்பது கிருஷ்ணயஜுர் வேதத்தைச் சேர்ந்த தைத்திரீய சாகை. பௌடியம் என்பது ‘பௌஷ்யம்’ எனப்படும். ரிக் வேதத்தில் ஸாங்காயன சாகையைச் சேர்ந்த கௌஷீதகீ ப்ராம்மணத்துக்குத்தான் பௌஷ்யம் என்றும் பெயர். இங்கே ‘பௌடியம்’ என்று இவர் சொல்வது ஆழ்வார் வாக்கிலே ‘பௌழியா’ என்று வருவதிலிருந்தும் ‘ட’வுக்கும் ‘ழ’வுக்கும் உள்ள தொடர்பு தெரிகிறது.

ஆக இப்படி வேத சாகைகளில் உள்ள உச்சாரண பேதத்தை வைத்தே, அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள பாஷைகளில் தனித் தன்மையுள்ள எழுத்து உண்டாயிருக்கிறது.

திராவிட தேசத்தை மட்டும் வைத்து நான் இப்படி சொன்னதை, இப்போது ஆல் இண்டியா லெவலிலும் [அகில இந்திய ரீதியிலும்] இண்டர்-நேஷனல் லெவலிலும் [சர்வதேச ரீதியிலும்] சொல்லப் போகிறேன்.

இப்போது வட இந்தியாவை எடுத்துக் கொண்டால், அங்கே ‘ய’ வரவேண்டிய இடங்களில் ‘ஜ’வையும், ‘வ’ வரவேண்டிய இடங்களில் ‘ப’ (ba)வையும் உபயோகப்படுத்துவது அவர்களுடைய வழக்கமாயிருக்கிறது. பேச்சு மொழியில் (colloquial -ஆக) மட்டுமின்றி அவர்களுடைய பாஷைகளில் இலக்கிய மொழியிலும் கூட (literary)யாகவே இப்படி ஏற்பட்டிருக்கிறது. அதிலும் ‘வ’வை ‘ப’வாக்குவது வங்காளத்திலும், ‘ய’வை ‘ஜ’ வாக்குவது உத்தரபிரதேசம், பஞ்சாப், இன்னம் வடக்கான இடங்களிலும் மிகவும் அதிகமாகக் காண்கிறது.

வங்காளத்தில் ‘வ-பயோரபேதம்’, அதாவது ‘வ’வுக்கும் ‘ப’ (ba) வுக்கும் பேதமில்லை என்பதை ஒரேயடியாகப் பின்பற்றுகிறார்கள். தமிழிலும், ‘பீஷ்மர்’ என்பதை ‘வீட்டுமர்’ என்றும், ‘பீமன்’ என்பதை ‘வீமன்’ என்றும் ‘ப’வை ‘வ’ ஆக்குகிறோம். ஆனால் ஒரேயடியாக மாற்றுவதில்லை. வங்காளிகளோ ‘வ’வை எல்லா இடங்களிலுமே ‘ப’வாக்குகிறார்கள். ங்காளமே பெங்கால் ஆகிறது.

வங்கவாஸி என்பதை பங்கபாஸி என்று சொல்லுவார்கள். இப்படிச் சொல்வது பிழை என்பதை அவர்களே அறிந்து கொண்டார்கள். வங்காள தேசத்தில் இந்தத் தப்பை திருத்த ஒரு பரிஷத் ஏற்படுத்தினார்கள். “வங்க பரிஷத்” என்பது அதன் பெயர். இனிமேல் பதிப்பிக்கும் புஸ்தகங்களிலெல்லாம், பகாரம் உள்ள இடங்களில் வகாரமாகத் திருத்தவேண்டுமென்று நினைத்து, அப்படியே செய்து வந்தார்கள். அப்படிச் செய்ததில் ஸ்வபாவமாக பகாரம் இருக்க வேண்டிய இடத்திலும் வகாரமாக மாற்றிவிட்டார்கள்! ‘பந்து’ வென்பதைக் கூட ‘வந்து’ வென்று மாற்றி விட்டார்கள்! ‘வங்கபந்து’ என்ற சரியான ரூபத்தை இதற்கு முன் அவர்கள் ‘பங்கபந்து’ என்று தப்பாக சொன்னார்கள் என்றால், இப்போதும் ‘வங்க வந்து’ என்று வேறு விதத்தில் தப்பாகச் சொல்ல ஆரம்பித்து விட்டார்களாம்!

வடக்கே மற்ற மாகாணங்களிலும் ஒரளவுக்கு இப்படி ‘வ’வுக்கு பதில் ‘ப’ சொல்கிறார்கள். ‘பிஹார்’ என்பதே ‘விஹார்’தான். புத்த விஹாரங்கள் நிறைய இருந்த பிரதேசம் அதுவே. ராஷ்பிஹாரி என்கிறார்களே அது ராஸவிஹாரி என்பதுதான். அவர்கள் வகாரத்தைப் பகாரமாக மாற்றி உச்சரிப்பதற்கு காரணம் என்ன? பிராதிசாக்கியத்தில் அந்தச் சீமையில் உள்ள ஒரு குறிப்பிட்ட சாகையில் இப்படிச் சொல்ல வேண்டும் என்று இருக்கிறது. அந்த விதியை வேதத்துக்கு மட்டுமின்றி, பேசுவது எழுதுவது எல்லாவற்றிற்கும் உபயோகப் படுத்திக் கொண்டார்கள். இதனால் வேதத்தில் சொன்ன சிக்ஷா விதிகள் இந்தத் தேசம் முழுவதும் ஒரு காலத்தில் சிரத்தையாக அநுஷ்டிக்கப்பட்டு வந்ததென்று தெரிகிறது.

தேசம் பூராவிலுமே யஜுர் வேதம்தான் மெஜாரிட்டியாகப் பரவியிருக்கிறது என்று முன்பே சொன்னேன். இந்த யஜுஸில் கிருஷ்ண யஜுஸ், சுக்ல யஜுஸ் என்று இரண்டு இருப்பதாகவும் சொல்லியிருக்கிறேன் அல்லவா? இவற்றில் தக்ஷிணத்தில் அதிகம் பிரசாரத்திலிருப்பது கிருஷ்ண யஜுஸ்; உத்தர தேசத்தில் விசேஷமாக அநுஷ்டானத்திலிருப்பது சுக்ல யஜுஸ்.

சுக்ல யஜுஸின் பல சாகைகளில் ஒன்று மாத்யந்தின சாகை என்பது. அதுதான் வடக்கே சிறப்பாக பின்பற்றப்படுகிறது. இதன் பிராதிசாக்யத்தில் ‘ய’ வுக்கு பதில் ‘ஜ’ வரலாம் என்று இருக்கிறது; ‘ஷ’ வுக்குப் பதில் ‘க’ வரலாம் என்றும் இருக்கிறது. இதனால்தான் நாம் ‘புருஷ ஸுக்தத்தில் “யத் புருஷேண ஹவிஷா” என்று சொல்வதை ஒரு ஹிந்துஸ்தானிக்காரன் “ஜத் புருஷேண ஹவிகா” என்கிறான். அவன் அப்படிச் சொல்வதைக் கேட்டால் நமக்கு சிரிப்பு வருகிறது. வேதத்தைத் தப்பாகச் சொல்கிறான் என்ற கோபங்கூட வருகிறது. நாம்தான் வேத சப்தங்களின் purity -ஐ காப்பாற்றி வருகிறோம் என்று நினைக்கிறோம். ஆனால் வாஸ்தவத்தில் அவன் சொல்வதற்கு சிக்ஷா சாஸ்திரத்தின் அங்கீகாரமேயிருக்கிறது.

ஏற்கெனவே நான் சொன்னபடி, மிக நெருங்கிய தொடர்புள்ள சப்தங்கள்தான் இப்படி ஒன்றுக்கொன்று மாற்ற அநுமதிக்கப்படுகின்றன. ‘ஜ’வும் ‘ய’வும் கிட்டிய பந்துக்கள் என்பது தமிழைப் பார்த்தாலும் தெரிகிறது. ஜாவா என்று சொல்கிற ஜாவகத் தீவை தமிழ் நூல்களில் யாவகம் என்றே சொல்லியிருக்கும். ஸாதாரணமாக, ஒரு வார்த்தையின் முதல் எழுத்தாக வருகிற ‘ஜ’வை ‘ச’ என்பதே தமிழ் வழக்கமாயிருந்தாலும், வார்த்தைக்கு நடுவே ‘ஜ’ வந்தால் அதை ‘ய’ என்றே ஆக்கி வருகிறோம். ‘அஜன்’, ‘பங்கஜம்’ என்பனவற்றை ‘அயன்’, ‘பங்கயம்’ என்கிறோம். ‘ஷ’ என்பது ‘ச’ வில் ஒரு வகைதான். ‘ஷ’வும் ‘க’வும் பரஸ்பரம் மாறும் என்பதால், ‘ச’ வும் ‘க’வும் அப்படி மாறலாம் என்றே தெரிகிறது. இதற்கேற்றாற்போல் நாம் ‘கை’ என்பதை தெலுங்கில் ‘செய்’ என்கிறார்கள். (சை என்கிற ஒலிதான் இது.) செய்வது (காரியம் பண்ணுவது) முக்கியமாகக் கையின் தொழில்தான். அதனால் ‘கை’ என்பதைவிட தெலுங்கிலே உள்ள செய் என்பதுதான் அதன் காரியத்தைத் தெரிவிக்கிற செய் (பண்ணு) என்ற ‘ரூட்’க்குப் பொருத்தமாயிருக்கிறது. ஸம்ஸ்கிருதத்திலும் இப்படித்தானே ‘கர’ என்றால் செய்வது என்கிற அர்த்தமும், கை என்ற அர்த்தமும் இருக்கிறது? சங்கரர் – நல்லதைச் செய்கிறவர். ‘கரோமி’ என்றால் ‘செய்கிறேன்’. கைக்கும் ‘கர’ என்றே வார்த்தையிருக்கிறது. ஆதலால் தமிழிலும் முதலில் ‘செய்’யாக இருந்தது தான் அப்புறம் ‘கை’ ஆயிற்றோ என்னவோ? இப்போது தமிழில் ‘செய்’ என்பது verb -ஆக மட்டுமே இருக்கிறது. அந்த ‘ச’ என்பது ‘க’வாக மாறி ‘கை’ உண்டாயிருக்கிறது. இன்னொரு விஷயம்: ஷ-வும் க்ஷ‌-வும் ரொம்பவும் கிட்டின ஒலிகள். க்ஷ என்பது க-வாக மாறுவது ரொம்ப ஸஹஜம். அக்ஷம்-அக்கம், தக்ஷிணம்-தக்காணம், க்ஷணம்-கணம் என்று பல திருஷ்டாந்தங்கள் சொல்லலாம். ஆதலால் ஷ-வும் க-வாக மாற நியாயமுண்டு.

தமிழிலே ப (ba) என்பது வ ஆகிறதென்றால், வடதேசத்து பாஷைகளில் வ என்பது ப ஆகிறது என்றேனல்லவா?அவ்விதமே, தமிழில் ஜ என்பது ய ஆகிறது, ஷ என்பது க ஆகிறது என்றால், எதிர்வெட்டாக வடக்கிலே ய என்பது ஜ-வாகவும், ஷ என்பது க-வாகவும் ஆகிறது. அது அவர்களுடைய அநுஷ்டானத்திலுள்ள வேத சாகையின் சிக்ஷா விதிப்படி ஏற்பட்டதாகும். இதனால்தான் யத் புருஷேண ஹவிஷா-வை ஜத் புருஷேண ஹவிகா என்கிறான்.

இதே மாற்றத்தை வடக்கிலே உள்ள எல்லா வார்த்தைகளுக்கும் ஏற்படுத்தி விடுகிறார்கள். ‘யமுனா’வை ‘ஜமுனா’வாக்கி விடுகிறார்கள். ‘யோகி’யை ‘ஜோகி’யாக்குகிறார்கள். ‘யுகயுக’ என்பதற்கு ‘ஜுகஜுக’ என்பார்கள். ‘யாத்ரா’ என்பது ‘ஜாத்ரா’ ஆகிறது. ஷ என்பது க-வாக மாறுவதில், ‘ரிஷி’ என்பதை ‘ரிகி’ என்கிறார்கள். க்ஷ-வும் ‘ஷ’வும் ரொம்ப ‘பந்து’க்கள் அல்லவா? நம்மிலேயே எத்தனை பேர் ‘லக்ஷ்மி’ என்பதற்கு ‘லஷ்மி’ என்று சொல்கிறோம், எழுதுகிறோம்? இதனால் வடக்கே ‘க்ஷ’வையும், ‘க’ ஆக்கி விடுகிறார்கள். ‘க்ஷீரம்’ என்பதைக் ‘கீர்’ என்கிறார்கள். தமிழிலும் இந்த வழக்கம் இருக்கிறது என்று காட்டினேன். ‘லக்ஷ்மி’ என்பதை ‘இலக்குமி’ என்கிறோம். இப்படி அநேகம் சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்போது இண்டர்-நேஷனல் லெவலுக்குப் போகலாம். கிறிஸ்துவ வேதமான பைபிள் பிறந்த பாலஸ்தீனம் – இஸ்ரேல் முதலான ஸெமிடிக் நாடுகளுக்குப் போகலாம். பைபிளின் ‘ஓல்ட் டெஸ்ட்மென்ட்’ முகமதியர்களின் குரானுக்கும் ஆதாரமாக இருக்கிறது. ஓல்ட் டெஸ்ட்மென்ட்டில் வந்தவர்கள் குரானிலும் வருவார்கள். ஆனாலும் அரேபியாவில் உச்சாரணம் மாறுகிறது. ‘ஜோஸஃப்’ என்பது ‘யூஸஃப்’ ஆகிறது; ‘ஜெஹோவோ’ என்பது ‘யெஹோவோ’ என்று வருகிறது. கிறிஸ்துவத்துக்கும் இஸ்லாத்துக்கும் இப்படி வித்தியாசம் என்பது மட்டுமில்லை. கிறிஸ்துவ தேசங்களுக்குள்ளேயே சில பாஷைகளில் ய-கரம் ஒலிக்கிறது: சிலவற்றில் ஜ-கரம் ஒலிக்கிறது. ஜேஸு — யேஸு (இயேசு) என்பதாக அந்த மதஸ்தாபகர் பேரே இரண்டு விதமாகவும் வருகிறது. கிரீஸ் பக்கம் போய்விட்டால் ‘ஜ’காரம் வந்துவிடுகிறது.

இதற்கெல்லாம் மூலம் வேதத்தில் இருக்கிறது என்றும் ஆராய்ச்சி பண்ணப்பட்டிருக்கிறது. ‘யஹ்வன்’ என்று வேதத்தில் சொல்லப்படும் தேவதைதான் ஜெஹோவா – (யெஹோவா) என்கிறார்கள். ‘த்யௌ-பிதார்’ (த்யாவா — ப்ருதவி என்பது) என்பதே ‘ஜூபிடர்’ ஆயிற்று என்கிறார்கள். ஸம்ஸ்கிருத வார்த்தை ஒன்றின் ஆரம்பத்தில் ஒற்றெழுத்து வந்தால், அது மற்ற பாஷைகளில் உதிர்ந்துவிடும். இம்மாதிரி ‘த்யௌபிதார்’ என்றால் ‘யௌபிதார்’தான். அது ‘ஜூபிடர்’ ஆயிற்று.

இப்படி மூல ரூபத்தில் யஹ்வன், (த்)யௌபிதார் என்று இருந்ததே அப்புறம் ‘ஜ’கார பேதம் அடைந்து ஜெஹோவா, ஜூபிடர் என்று ஆயிற்று என்றால் என்ன தோன்றுகிறது? ஆதியில் எங்கேயும், லோகம் பூராவும் வேதாநுஷ்டானம் இருந்தபோது, கிரீஸைச் சுற்றியிருந்த தேசங்களில் யஜுர் வேதத்தின் மாத்யந்தின சாகை அதிகம் பிரசாரத்திலிருந்து என்றுதானே ஊகிக்கமுடிகிறது?2


1“வேதம்” என்ற பேருரையில் “வேதமும் தமிழ்நாடும்” என்ற பிரிவின் பிற்பகுதியும் பார்க்க.

2தெய்வத்தின் குரல் முதற்பகுதியில் உள்ள “உலகம் பரவிய மதம்” என்ற உரையும் காண்க.

சில சிறிய வித்யாஸங்கள்

வேதத்தின் அக்ஷர சுத்தத்தைப் பற்றி இத்தனை சொன்னேன். நான் சொன்னதற்கு அநுஸரணையாகவே ஆஸேது ஹிமாசலம் [ராமேச்வரத்திலிருந்து இமயமலைவரை] அத்தனை இடங்களிலும், ஒருத்தருக்கொருத்தர் தொடர்பேயில்லாமல், புஸ்தகமுமில்லாமல், வாய்மொழியாகவே வேதத்தைப் பாடம் பண்ணி வந்துள்ள போதிலும் எல்லாப் பாடங்களும் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது சதவிகிதம் அக்ஷர வித்யாஸமில்லாமல் ஒன்றாகவே இருக்கிறது.

அப்படியானால், இந்த பாக்கி ஒரு சதவிகிதத்தில் வித்யாஸம் இருக்கிறதா என்றால் இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள ஒவ்வொரு சாகைக்கும் இடையில் இம்மாதிரித் துளித்துளி அக்ஷர வித்யாஸம் இருக்கத்தான் செய்கிறது.

இப்படி இருக்கலாமா? ஒரு அக்ஷரம் தப்பினால்கூட விபரீத பலனாகும் என்று சொல்லிவிட்டு, ஒரே மந்திரமானது வெவ்வேறே சாகைகளில் வெவ்வேறே பிரதேசங்களில் வரும்போது அதில் ஒரு பெர்ஸென்ட் அக்ஷர வித்யாஸம் ஏற்படுகிறது என்றால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே! மூலரூபம் ஒன்றுதான் என்றால், அதில் ஒரு பெர்ஸென்ட் வித்யாஸத்தோடு இன்னொன்று வந்தால் கூட, அது பலன் தராதுதானே? அல்லது விபரீத பலன்தானே தரும்?

இப்படிக் கேள்வி கேட்டால் பதில் இருக்கிறது. ஒரு மருந்துக்குப் பதில் இன்னொன்றை மாற்றிச் சாப்பிட்டால் விபரீதம் என்ற மாதிரி, அக்ஷரத்தை மாற்றினால் தப்புத்தான். ஆனால் மருந்தை மாற்றக்கூடாது என்பது வியாதிஸ்தனுக்குச் சொன்னதுதான். அவனாக மருந்தை மாற்றிவிடக்கூடாது. ஆனால் டாக்டர் மாற்றலாம் அல்லவா? ஒரே வியாதிக்குப் பல மருந்துகள் இருக்கின்றன. அப்போது இதைச் சாப்பிடலாம், அல்லது இன்னொன்றைச் சாப்பிடலாம் என்று டாக்டரே ‘பிரிஸ்க்ரைப்’ பண்ணினால் அதில் தப்பில்லை தானே? ஒரே வியாதி இரண்டு பேருக்கு வந்திருக்கிறபோது, அவர்களின் தேகவாகிலே இருக்கிற வித்யாஸத்தை அநுசரித்து, ஒரே மருந்திலேயே கொஞ்சம் கொஞ்சம் சரக்குகளை மாற்றி, டாக்டர் கொடுக்கலாம் அல்லவா?

இம்மாதிரிதான், ஒன்றுக்கொன்று விபரீதமான பலன் உண்டாக்குகிற அக்ஷரங்களாக இல்லாமல், ஒரே மாதிரியான பலனை உண்டாக்குகிற அக்ஷரங்களை ரிஷிகள் பல சாகைகளுக்கிடையிலே மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த சாகையை அத்யயனம் செய்ய அதிகாரிகளாக யார் பிறப்பார்களோ அவர்களுக்கு இந்த அக்ஷர மாற்றங்கள் க்ஷேமத்தை உண்டு பண்ணும் என்பதால் இப்படிச் செய்திருக்கிறார்கள். இவற்றைப் பற்றிய விதிகள் பிராதிசாக்யத்தில் தெளிவாகக் கூறப்படுகின்றன.

அக்ஷரங்களுக்குள்ளே மாறுபாடு என்றால் பெரிய வித்யாஸம் இல்லை. அக்ஷரங்கள் ஸம்பந்தாஸம்பந்தமில்லாமல் மாறிவிடாது. பெரும்பாலும் ஒரே மாதிரியாக ஒலிக்கிற சப்தங்களே ஒன்றுக்குப் பதில் இன்னொன்று வரும். அவ்வளவுதான். ரொம்பவும் கிட்டக் கிட்ட இருக்கிற அக்ஷரங்களில் ஒன்றுக்குப் பதில் இன்னொன்று வரும்.

உச்சரிப்பின் முக்யத்துவம்

அக்ஷர, ஸ்வர சுத்தம் மாறினால், ஒரு மந்திரத்தின் பலன் ஏற்படாது என்பதோடு மட்டுமின்றி விபரீத பலனே உண்டாகிவிடும் என்பதால், மந்திர அநுஸந்தானத்தில் பரம ஜாக்ரதையாக இருக்க வேண்டும். இதை வலியுறுத்திச் சொல்கிற கதையொன்று வேதத்திலேயே தைத்திரீயத்தில் வருகிறது. (தைத்திரீய ஸம்ஹிதை – II.4.12.)

த்வஷ்டா என்கிறவன் ஒரு காரணத்துக்காக, ‘இந்திரன் மேல் பழி தீர்த்துக் கொள்ளவேண்டும், அவனைக் கொல்லக் கூடிய பிள்ளையைப் பெறவேண்டும்’ என்று நினைத்து, ஒரு மந்திரம் சொல்லி ஹோமம் பண்ணுகிறான். “இந்த்ர சத்ருர் வர்தஸ்வ” என்று அந்த மந்திரத்தைச் சொல்லும் போது ‘இந்த்ர’ என்பதை ஏற்றல் இறக்கல் இல்லாமல் ஸமமாகவும், ‘சத்ரு’ என்பதில் ‘த்ரு’வைத் தூக்கியும் (உதாத்தமாகவும்) , ‘வர்தஸ்வ’ என்பதில் ‘ர்த’ வையும் இப்படியே தூக்கியும் சொல்லியிருக்கவேண்டும். அப்படிச் சொன்னால் த்வஷ்டாவின் பிள்ளை, ‘இந்திரனைக் கொல்லுபவனாக வளரட்டும்’ என்ற அர்த்தம் ஏற்படும். ஸ்வர சக்தியாலேயே அவன் அப்படி வளர்ந்து, இந்திரனை வதம் பண்ணியிருப்பான். ஆனால் த்வஷ்டா உச்சரிப்பிலே தப்புப் பண்ணிவிட்டான். அதாவது, ‘இந்த்ர’ என்பதில் ‘த்ர’வைத் தூக்கியும், ‘சத்ரு’ என்பதை ஸமமாகவும், ‘வர்தஸ்வ’ என்பதில் ‘ர்த’வை ஏற்றுவதற்குப் பதில் இறக்கி அநுதாத்தமாகவும் சொல்லிவிட்டான். இதனால் ‘இந்த்ரனை இவன் கொல்பவனாக வளரட்டும்’ என்பதற்குப் பதில், ‘இந்திரன் இவனை கொல்பவனாக வளரட்டும்’ என்று அர்த்தம் தலைகீழாக மாறிவிட்டது! வார்த்தைகளும் எழுத்துக்களும் மாறாவிட்டாலும்கூட, ஸ்வரங்களில் ஏற்பட்ட பிழையாலேயே த்வஷ்டா வேண்டியதற்கு நேர்மாறான பலன் உண்டாகிவிட்டது! இவனுடைய பிள்ளையை இந்திரன் வதம் பண்ணிவிட்டான்! த்வஷ்டாவின் பிள்ளையான விருத்திரன் இந்திரனால் கொல்லப்படுவதற்கு அவன் தகப்பனாரே இப்படிக் காரணபூதனாகி விட்டான்.

இதைச் சொல்லி, மந்திர உச்சாரணத்தில் நம்மை ஜாக்கிரதைப்படுத்தும் ச்லோகம் ஒன்று உண்டு:

மந்த்ரோ ஹீன: ஸ்வரதோ வர்ணதோ வா மித்யாப்ரயுக்தோ ந தமர்த்தமாஹ|
ஸ வாக் வஜ்ரோ யஜமானம் ஹினஸ்தி யதா இந்த்ரசத்ரு: ஸ்வரதோ (அ) பராதாத்||

இந்திரனுடைய வஜ்ராயுதத்துக்குப் பதில், த்வஷ்டா தப்பாகச் சொன்ன வாக்கே வஜ்ரமாகிக் கொன்றுவிட்டதாம்!

அக்ஷமாலை

ருத்ராக்ஷ மாலை என்றால் ருத்ரன் கண்ணிலிருந்து உண்டானதான ருத்ராக்ஷத்தை கோத்துச் செய்த மாலை என்று அர்த்தம். ‘அக்ஷம்’ என்றால் இங்கே ‘கண்’ என்று பொருள். ‘திருக்கண்மணி’ என்றே ருத்ராக்ஷத்துக்குத் தமிழில் பேர் உண்டு. அது ஸரி, வெறுமே அக்ஷமாலை, ஸ்படிக அக்ஷமாலை, என்றெல்லாம் சொன்னால் என்ன அர்த்தம்? இங்கே ‘அக்ஷம்’ என்றால் கண் என்று பொருள் கொண்டால் சரியில்லை. ஆகவே இங்கே அக்ஷம் என்றால் அ -விலிருந்து க்ஷ – வரையிலான அக்ஷரங்கள் என்று அர்த்தம் பன்ணிக்கொள்ள வேண்டும். ஸம்ஸ்கிருதத்துக்கான லிபியில் முதல் எழுத்து அ; கடைசி எழுத்து க்ஷ. இங்கிலீஷில் ஒரு விஷயத்தை அடியோடு நுனி சொல்வதற்கு “A to Z” என்கிற மாதிரி ஸம்ஸ்கிருதத்தில் “அ-காராதி க்ஷ-காராந்தம்” என்பார்கள். இப்படி உள்ள மொத்த எழுத்துக்கள் 50. அதனால் 50 மணி கொண்ட ஜபமாலைக்கு அக்ஷமாலை என்று பெயர். 51‍-வது மணியாக ஒரு பெரிய மணி இருக்கும். அதற்கு மேரு என்று பேர். மேருவைத் தாண்டாமல் ஸூரியன் திரும்பிவிடுவதாக ஐதிகம். அம்மாதிரியே, ஜபம் செய்கிறவர்கள் இந்த மேரு வந்ததும் திரும்பி உருட்டினால், ஒரு தரம் இப்படி முன்னும் பின்னுமாக ஜபித்து முடிக்க நூறு ஆவிருத்தி மந்திரமாகியிருக்கும்.

சுதேச-விதேச மொழிகளும், லிபிகளும்

இந்திய பாஷைகள் எல்லாவற்றுக்குமே ஒரு விசேஷம். அவற்றில் எழுதியிருப்பவை ஸ்பஷ்டமான சப்தங்களாகச் சொல்லப்பட வேண்டியவை. World என்று எழுதினாலும் சொல்லும்போது, முதலில் வருவதே ‘வே’யும் இல்லாமல், ‘வோ’வும் இல்லாமல் ஒரு அஸ்பஷ்ட (ஸ்பஷ்டமில்லாத) சப்தம்; அப்புறம் ‘r’ என்பதையும் அஸ்பஷ்டமாக மழுப்பிக் கொண்டு போக வேண்டியிருக்கிறது. இப்படி அநேக அஸ்பஷ்ட சப்தங்கள் அந்நிய பாஷைகளில் இருக்கின்றன. இவற்றை ‘அவ்யக்த சப்தம்’ என்பார்கள். நம் தேச மொழிகள் யாவும் ஸ்பஷ்டமான வ்யக்த சப்தங்களே கொண்டவை.

எழுத்துக்கும் உச்சரிப்புக்கும் பொதுவான ஒரே விதி இல்லாமல் பல விதமாக குழப்புகிறதும் அந்நிய பாஷைகளில்தான் மிகவும் அதிகமாகக் காண்கிறது. ஒரே ‘க’ சப்தத்துக்கு C, K, Q, என்று மூன்று எழுத்து இருப்பது போல் இந்திய பாஷைகளில் இராது. ‘ஃப’ சப்தம் ஒன்றுக்கே இங்கிலீஷில் f (fairy), ph (philosophy), gh (rough) என்று மூன்று விதமான ஸ்பெல்லிங் இருக்கிறது. C என்ற எழுத்தை ‘ஸி’ என்ற ஸகாரமாகச் சொன்னாலும், அந்த எழுத்தில் ஆரம்பிக்கிற பெரும்பாலான வார்த்தைகள் ‘க’-காரமாகவே இருக்கின்றன. ஸெல், ஸெலுலாய்ட், ஸினிமா மாதிரி ஏதோ சிலதில்தான் c-க்கு ஸகார சப்தம் இருக்கிறது. இன்னொரு பக்கத்திலோ அந்நிய பாஷைகளில் ஒரு எழுத்துக்கே வெவ்வேறு சப்தமும் இருக்கிறது. இன்னொரு பக்கத்திலோ அந்நிய பாஷைகளில் ஒரு எழுத்துக்கே வெவ்வேறு சப்தமும் இருக்கிறது. மேலே சொன்னபடி c என்பது க, ஸ இரண்டுக்கும் வருகிறது. Fat என்கிறபோது a என்பது ‘ஏ’ மாதிரி தொனிக்கிறது. Fast என்கிற போது அதே a என்பது ‘ஆ’ வாகத் தொனிக்கிறது. சில ஸ்பெல்லிங்குகளுக்கும் உச்சரிப்புக்கும் சம்பந்தமே இல்லை. Station, Nation முதலான வார்த்தைகளில் t-i-o-n என்று எழுதிவிட்டு, அதை ஸம்பந்தமேயில்லாமல் ‘ஷன்’ என்று படிக்க வேண்டியிருக்கிறது.

ரோமன் ஆல்ஃபபெட் என்கிற இங்கிலீஷ் முதலான பாஷைகளின் லிபியில் இருபத்தியாறே எழுத்துக்கள் இருப்பதால் முதலில் கற்றுக் கொள்ள ஸுலபமாக இருக்கிறது. நம் தேச பாஷா லிபிகளில் நிறைய எழுத்து இருப்பதால் முதலில் சிரமப்பட்டே தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இப்படி ஒரு வருஷம் கஷ்டப்பட்டு பால சிக்ஷை வாசித்து விட்டால், பிற்பாடு அந்த பாஷையிலுள்ள ஸகல புஸ்தகங்களையும் கிறுகிறுவென்று வாசித்து விடலாம். இங்கிலீஷிலோ எம்.ஏ. பாஸ் பண்ணின பிறகு கூட, அநேக வார்த்தைகளின் உச்சரிப்புக்கு டிக்ஷனரியில் போட்டிருக்கிற உச்சரிப்பு விளக்கத்தை பார்க்க வேண்டியிருக்கிறது.

இப்படி இந்திய பாஷைகளுக்கு இருக்கிற சிறப்பு இந்திய பாஷைகளுக்குள்ளும் ஸம்ஸ்கிருதத்துக்கு பரிபூரணமாக இருக்கிறது. இதனால் நம் தேசத்தை விட அந்நியமானது மட்டமானது என்றோ, நம் தேசத்திலேயே ஸம்ஸ்கிருதத்தை விட மற்றப் பாஷைகள் தாழ்த்தி என்றோ நான் சொல்லவில்லை. சில fact -களை (நடைமுறை உண்மைகளை) சொன்னேன். அவ்வளவுதான்!

சப்த ப்ரம்மாத்மகமாக இருக்கப்பட்ட பரமாத்மாவின் பரிபூர்ண ஸ்வரூபமாக ஸம்ஸ்கிருதம் இருக்கிறது என்று தெரிவதைச் சொன்னேன்.

எல்லா பாஷையும் எல்லாருக்கும் பொதுதான் என்ற மனப்பான்மை வரவேண்டும். அப்போது யாரையும் யாரும் மட்டம் தட்டத் தோன்றாது. பரஸ்பரம் அபிப்ராயப் பரிவர்த்தனைக்காக ஏற்பட்டதே பாஷை என்ற அடிப்படையான உண்மையை மறந்து விட்டதால்தான், இப்போது தாய் பாஷை ஒன்றிடமே வெறி மாதிரியான பற்றுதல், பிறபாஷைகளிடம் துவேஷம் எல்லாம் ஏற்பட்டிருக்கின்றன. மற்ற எல்லா விஷயங்களிலும் பரந்த மனப்பான்மை, இன்டர்நேஷனல் அவுட்லுக் (ஸர்வ தேச நோக்கு) என்று சொல்லி விட்டு இந்த பாஷை விஷயத்தில் மட்டும் இத்தனை குறுகின புத்தி வந்துவிட்டதைப் பார்க்கிறபோது பரிதாபமாக இருக்கிறது.

ஸம்ஸ்கிருத சப்தங்களை சிக்ஷா சாஸ்திரம் எப்படி ஸ்பஷ்டமாக நிர்ணயித்துக் கொடுத்திருக்கிறது என்பதில் ஆரம்பித்து, பெரிய பாரதமாக மொழி ஆராய்ச்சி சண்டைகளில் கொண்டு விட்டுவிட்டது!

எல்லா சப்தங்களும் உள்ள மொழி

மேலே சொன்னதிலிருந்து ஸம்ஸ்கிருதத்தில் f (எஃப்) சப்தம் உண்டு என்றாயிற்று. அந்த பாஷையில் இல்லாத சப்தம் எதுவும் கிடையாது. ‘ழ’ தமிழில்தான் இருக்கிறது என்றுதானே பொதுவில் நினைத்துக் கொண்டிருக்கிறோம்? ஸம்ஸ்கிருதத்துக்கு மூலமான வேத பாஷையிலும் ‘ழ’ இருக்கிறது! யஜுர்வேதத்தில் ‘ட’ வருகிற பல இடங்களில், தலவகார ஸாம வேதத்தில் ‘ழ’ மாதிரியே சொல்ல வேண்டும். சில இடங்களில் ரிக் வேதத்திலும் ‘ழ’ காரமாகத்தான் கொஞ்சம் மாற்றிச் சொல்ல வேண்டும். ரிக்வேதத்தின் முதல் ஸூக்தத்தின் முதல் வார்த்தையான “அக்னிமீளே” என்பதில் வருகிற ‘ளே’ என்பதையே இப்படி ‘ழ’ காரம் மாதிரி, ‘அக்னிமீழே’ என்றுதான் சொல்லவேண்டும். பூர்ண ‘ழ’ இல்லை; கிட்டத்தட்ட அம்மாதிரி இருக்கும் சப்தமாகச் சொல்ல வேண்டும்.

பிரெஞ்சு பாஷையிலும் ‘ழ’ வுக்கு ரொம்ப நெருக்கமான சப்தம் இருக்கிறது. ஆனால் பிரெஞ்சு, ஸம்ஸ்கிருதம் இரண்டு லிபியிலும் ‘ழ’ வுக்குத் தனி எழுத்து இல்லை. J,G என்ற எழுத்துக்களே பிரெஞ்சில் ‘ழ’வையும் குறிக்கிறது. ஸம்ஸ்கிருதத்தில் ‘ள’ என்ற எழுத்தே ‘ழ’ வையும் குறிக்கிறது.

சீன பாஷையிலும் ‘ழ’ மாதிரியான சப்தம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

[ஃ என்று] மூன்று புள்ளி வைத்துத் தமிழில் ஆய்தம் என்கிறோமே, அதுவும்கூட ஸம்ஸ்கிருதத்தில் உண்டு. பாணினியின் வியாகரண ஸூத்ரத்தில் “குப்வோஹ் கப் பௌச” என்று ஒரு ஸூத்ரம் இருக்கிறது. இதன்படி “ராம:” plus “கருணாகர:” என்கிற மாதிரி, ஒரு விஸர்க்கத்துக்கு அப்புறம் ‘க’- காரம் வந்தால், அந்த விஸர்க்கமானது முன்னே சொன்ன மாதிரி ‘ஹ’ சப்தத்தைக் கொடுக்காமல், “அஃது” என்பதில் வரும் ‘ஹ்’ மாதிரியான ஆய்த சப்தத்தையே கொடுக்கும்.

இதே ஆய்தமாகிற விஸர்க்கந்தான் ‘ப’ காரத்துக்கு முன்னால் f ஆகிறது.

ராம: plus கருணாகர: என்பது “ராமஃ கருணாகர:”. ராம: plus பண்டித: என்பது “ராம f பண்டித:”. இந்த ‘f’ சப்தத்துக்கு “உபத்மானீயம்” என்று பெயர். “த்மா” என்றால் ஊது குழலினால் அடுப்பை ஊதுகிற மாதிரிப் பண்ணுவது. அப்போது f சப்தம் தான் வரும்! இங்கிலீஷில் புல்லாங்குழலின் பெயரே “f” ல் தான் ஆரம்பிக்கிறது! Flute!

Fa-வைப்பற்றி இன்னொன்று சொல்ல வேண்டும். நாம் fa-வைப் பொதுவில் pa- ஆக்கி விடுகிறோம். இப்படித்தான் coffee- ஐ காப்பியாக்கிவிட்டோம் என்று நினைத்தால் அது தப்பு. ‘கபிசம்’ என்றால் ஸம்ஸ்கிருதத்தில் டார்க் ப்ரௌன் நிறம் என்று அர்த்தம். அதுதான் காப்பிப்பொடி நிறம். அதனால் நம் கபிசத்தைத்தான் வெள்ளைக்காரன் coffee ஆக்கிவிட்டான் என்று தோன்றுகிறது.

தமிழில் சொல்கிற குற்றியலுகரம் போன்ற சப்தம் ஸம்ஸ்கிருதத்திலும் ரு,லு இரண்டுக்கும் உண்டு. ரிக்வேதம், ருக்வேதம் என்ற இரண்டு தினுஸாக எழுதுவது வாஸ்தவத்தில் ‘ரி’ யும் இல்லை, ‘ரு’ வும் இல்லை. அது குற்றியலுகர சப்தம் மாதிரியானதுதான். ‘க்ருஷ்ணன்’ என்பதில் வருகிற ‘ரு’, ‘ரிஷி’ யில் வரும் ‘ரி’ இவையும், இ-க்கும் உ-க்கும் இடைப்பட்ட அதே சப்தம்தான். க்ருஷ்ணன் என்று தமிழில் ‘ரு’ போட்டு எழுதினாலும், இங்கிலீஷில் Krishna என்று ‘ரி’ போடுகிறோம். வடக்கத்திக்காரர்கள் சில பேர் Krushna என்று எழுதுகிறார்கள். தெலுங்கர்கள் “ஹ்ருதயம்” முதலான வார்த்தைகளில் வருகிற இந்த குற்றியலுகர ‘ரு’வைப் பூரண ‘ரு’வாகவே சொல்வதைக் கேட்க வேடிக்கையாக இருக்கும்!

ர-காரம், ல-காரம் இரண்டுக்கு மட்டும் ஸம்ஸ்கிருதத்தில் குற்றியலுகர ‘உ’ சேர்கிறது. ர-காரத்தில் உள்ள ரிக், ரிஷி மாதிரி , ல-காரத்தில் வார்த்தையின் முதல் எழுத்தாகக் குற்றியலுகர ‘லு’ தனியே வராது. லுப்தம், லுலிதம் முதலான வார்த்தைகளில் வருவது பூரண ‘லு’ தான். கூட்டெழுத்தில் மட்டுமே குற்றியலுகர ‘லு’ வரும். “க்லுப்தம்” மாதிரியான கூட்டெழுத்திலேயே அது வருகிறது.

இந்தக் குற்றியலுகர ரு, லு இரண்டையும் ஸம்ஸ்கிருதத்தில் ர-கர, ல-கர வரிசையில் சேர்க்காமல், உயிரெழுத்து வரிசையிலேயே, அ-ஆ-இ-ஈ-உ-ஊ-வுக்கு அப்புறம் ரு, லு என்று சேர்த்திருக்கிறது. இதற்கப்புறம் ஏ, ஐ, ஓ, ஒள, அம், அ: – என்று வரும்.

அ-ஆ; இ-ஈ; உ-ஊ என்று இரண்டிரண்டாக ஒரு குறிலும் ஒரு நெடிலும் இருக்கிற மாதிரி ஸம்ஸ்கிருதத்தில் எ-ஏ, என்று இரண்டு இல்லை. நெடிலான ஏ மட்டும்தான் இருக்கிறது. இப்படியே ஒ-ஓ என்று இரண்டில்லை. ஓ மட்டுமே இருக்கிறது. இது எனக்கு ரொம்பக் குறையாக இருந்தது. பராசக்தி ஸகல சப்த ஸ்வரூபமாக இருக்கப்பட்டவள் என்றால், தேவ பாஷையில் அத்தனை சப்தங்களும் இருக்க வேண்டாமா? மற்ற எல்லா சப்தங்களும் உள்ள ஸம்ஸ்கிருதத்தில் இந்தக் குறை மட்டும் இருக்கலாமா என்று வருத்தமாக இருந்தது. பாணினியின் வியாகரண ஸூத்ரத்துக்குப் பதஞ்சலி செய்துள்ள மஹாபாஷ்யத்தைப் பார்த்த பின் இந்தக் குறில் எ, ஒ சப்தங்களும் ஸம்ஸ்கிருதத்தில் உண்டு என்று தெரிந்து ரொம்ப ஆறுதலாக இருந்தது. ஸாமவேதத்தில் ஸாத்யமுக்ரி, ராணாயன என்ற இரண்டு சாகைகளைச் சேரந்தவர்கள் குறிலான எ, ஒ சப்தங்களை வேத அத்யயனத்தில் உபயோகிக்கிறார்கள் என்று அவர் சொல்லியிருக்கிறார்1.

இப்படியாக ஸம்ஸ்கிருதத்தில் ஸகல சப்தங்களும் இருக்கின்றன. இன்ன எழுத்துக்கு இன்ன சப்தம் என்றும் ரொம்பவும் திருத்தமாகப் பண்ணிக் கொடுத்திருக்கிற லிபியும் அதற்கு இருக்கிறது.


1சந்தோகானாம் ஸாத்யமுக்ரி
ராணாயனீயா: அர்ம் ஏகாரம்
அர்ம் ஓகாரம் ச அதீயதே

பல மொழிகளின் லிபிகள்

இன்ன ஒலிக்கு இது அடையாளம் [வரி வடிவம்] என்று காட்டுவதற்குத்தான் பல எழுத்துக்களைக் கொண்ட வெவ்வேறு லிபிகள் தோன்றியிருக்கின்றன. இங்கிலீஷ் முதலான பாஷைகளின் ‘ஆல்ஃபபெட்’டை ரோமன் லிபி (Roman Script) என்கிறோம். பிராம்மி என்ற ஒரு லிபி இருந்தது. அசோக சாஸனங்கள் அதில் எழுதியதுதான். அதிலிருந்தே இப்போது ஸம்ஸ்கிருதத்துக்கு வழங்குகிற க்ரந்த லிபியும், தேவநாகரி லிபியும், மற்றும் தமிழ் முதலான அநேக இந்திய லிபிகளும் உருவாயிருக்கின்றன.

பிராம்மி லிபியின் இரண்டு விதமான பிரிவுகளில் தக்ஷிணத்தில் வழங்கி வந்த பல்லவ-க்ரந்தம் என்பதிலிருந்து தான் திராவிட பாஷைகளின் லிபிகள் ஏற்பட்டுள்ளன.

எல்லா லிபிகளுக்குள்ளும் தெலுங்கு லிபிக்கு ஒரு விசேஷம் உண்டு. மற்ற லிபிகளிலெல்லாம் தக்ஷிணாவர்த்தமாக, அதாவது வலது பக்கம் சுழித்து எழுத்துக்கள் எழுதப்படுகின்றன. தெலுங்கில் மட்டும் வாமாவர்த்தமாக இடது பக்கம் சுழித்து எழுத்துக்கள் இருக்கின்றன. ஈச்வரனின் வாமபாகத்திலிருக்கிற பராசக்திக்கு வாமமார்க்கம் என்ற உபாஸனையும் உண்டு. இடது அவளுக்கு விசேமானதால் அவளுக்குரிய ஸ்ரீசக்ரத்தில் அக்ஷரங்களை ஆந்திர லிபியிலேயே எழுத வேண்டும் என்பதுண்டு. ஆந்திர பாஷை சிவப் பிரதானமானது என்பார்கள். ஏனென்றால் மற்ற எல்லா இடங்களிலும் மஹா விஷ்ணுவின் அஷ்டாக்ஷரத்துடனேயே அக்ஷராப்யாஸத்தை (படிப்புத் தொடக்கத்தை) ஆரம்பிக்கிறார்களென்றால், தெலுங்கு தேசத்தில் சிவ பஞ்சாக்ஷரத்துடன் தொடங்குகிறார்கள். ஆந்திர தேசமும் தெற்கே காளஹஸ்தி, மேற்கே ஸ்ரீ சைலம், வடக்கே கோடிலிங்க க்ஷேத்ரம் என்பதாக மூன்று சிவஸ்தலங்களுக்குள் – த்ரிலிங்கங்களுக்குள் – அடங்கியிருப்பதால்தான் அதற்கு தெலுங்கு தேசம் என்ற பெயரே உண்டாயிற்று. இதனால்தான் அப்பைய தீக்ஷிதர் தாம் ஆந்திரராகப் பிறக்கவில்லையே என்று குறைப்பட்டு ச்லோகம் செய்திருக்கிறார்.

ஆந்த்ரத்வம் ஆந்த்ரபாஷாசாப்-யாந்த்ர தேச ஸ்வஜன்மபூ:|
தத்ராபி யாஜுஷீ சாகா ந(அ)ல்பஸ்ய தபஸ: பலம்||

ஸாமவேதியாகப் பிறந்தவர் அப்பைய தீக்ஷிதர். “வேதங்களுக்குள் நான் ஸாமவேதம்” என்றே பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார். ஆனால் சிவ பக்த சிகாமணியான தீக்ஷிதர் சிவபஞ்சாக்ஷர மந்திரத்தைத் தனது மத்தியில் கொண்டதான யஜுர் வேதத்தில் (“யாஜுஷீ சாகா” என்று இதையே ச்லோகம் சொல்கிறது) பிறப்பதற்கும், தெலுங்கு தேசத்தில் பிறப்பதற்கும் தபஸ் செய்திருக்கவில்லையே என்று குறைப்பட்டிருக்கிறார்!

லிபி விஷயத்துக்கு வருகிறேன். இப்போதுள்ள இந்திய லிபிகள் எல்லாம் பிராம்மியிலிருந்து வந்தவைதான் என்றாலும் ஆதியிலிருந்த பிராம்மி லிபியைப் பார்த்தால் நமக்கு ஒன்றுமே புரியாது. அதனால் புரியாத விஷயத்தை “பிராம்மி லிபி” என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அப்புறம், அது திரிந்து பிரம்மா நம் நெற்றியிலே எழுதியிருக்கிற “பிரம்ம லிபி”யோடு ஒன்றாக்கப்பட்டுவிட்டது! இப்போது ஒன்றும் புரியாவிட்டால் “பிரம்ம லிபி” என்று நாம் சொல்வது “பிராம்மி லிபி” என்றுதான் இருக்க வேண்டும்.

கரோஷ்டி என்றும் ஒரு லிபி இருந்தது. கர-ஓஷ்டம் என்றால், ‘கழுதையின் உதடு’ என்று அர்த்தம். கழுதை உதடு துருத்திக் கொண்டு வருகிற மாதிரி அந்த லிபி எழுத்துக்களில் வளைசல்கள் பிதுங்கிக் கொண்டிருக்கும். பார்ஸி பாஷைக்கு அதுதான் லிபி.

ஐரோப்பாக் கண்டத்தின் எல்லா பாஷைகளுக்கும் ரோமன் லிபி ஒன்றேயிருப்பதுபோல் நமக்குப் பொது பிராம்மி. தற்போது அதிலிருந்து வந்த தேவநாகரியே வடக்கத்தி பாஷைகளின் லிபிகளில் நன்றாக தெரிகிறது.

ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு விதமான ஒலியைச் சொல்கிறது என்று நமக்குத் தெரியவில்லை. அதனால்தான் “தமிழில் ஏன் ‘ன’, ‘ந’ என்ற இரண்டு எழுத்துக்கள் ஒரே சப்தத்துக்கு இருக்கின்றன? வேறு எந்த பாஷையிலும் இப்படி இல்லையே!” என்று நினைக்கிறோம். வாஸ்தவத்தில் ‘ன’ சப்தத்துக்கும், ‘ந’ சப்தத்துக்குமிடையே சூக்ஷ்மமான வித்யாசம் உண்டு. ‘ந’ வில் நாக்கு முன்னம் பல்லின் உள்பக்கம் படும்; “ன” விலோ நாக்கு இன்னும் மேலேறி மேலண்ணத்தைத் தொடும். தெலுங்கிலேகூட ஒரே ‘ந’ தான். மற்ற பாஷைகளிலும் இப்படியே.

தமிழுக்கும் தெலுங்குக்கும் மட்டும் பொதுவாயிருப்பது ‘ர’, ‘ற’ என்ற இரண்டு வகை இருப்பது. ஒன்று இடையினம், மற்றது வல்லினம் என்று சொல்லுகிறோம். மற்ற பாஷைகளில் இப்படி இரண்டு இல்லை. இதிலும் தமிழுக்கும் தெலுங்குக்கும் ஒரு வித்யாஸம் உண்டு. தமிழில் வல்லின ‘ற’மட்டுமே ஒற்றோடு கூட ‘ற்ற’என்று சேர்ந்து வரும். ‘குற்றம்’, ‘சுற்றம்’, ‘மற்றும்’, சொற்றுணை’என்கிற மாதிரி வார்த்தைகளில் இப்படி வருகிறது. ஆனாலும் இங்கே எழுத்தைப் பார்த்து ஒலியை அப்படியே உச்சரிப்பதில்லை. ‘குட்றம்’, ‘சுட்றம்’, ‘மட்றும்’, ‘சொட்றுணை’என்கிற மாதிரி ‘ற’கர ஒற்றானது ‘ட’கர ஒற்றானது போலவே உச்சரிக்கிறோம். தெலுங்கில் இப்படி வராது. இதற்கு மாறாக, தெலுங்கிலே குதிரைக்கு என்ன சொல்கிறார்கள்? ‘குர்ரம்’ என்கிறார்கள். ‘ர்’ ஸவுண்டும், ‘ர’ ஸவுண்டும் கொஞ்சங்கூட மாறாமல் உள்ளபடியே சொல்கிறார்கள். தமிழில் இப்படி ‘ர்ர’ உள்ள வார்த்தையே கிடையாது.

தெலுங்கு பாஷையில் உள்ள வேறு சில விசேஷ சப்தங்கள்: சில இடங்களில் ‘ஜ’ என்பதை J சப்தமாக இல்லாமல் Z சப்தமாக சொல்கிறார்கள். ‘சால’ என்பதை ‘த்ஸால’ என்பதுபோல் சில இடங்களில், ‘ச’ வுக்கு ‘த்ஸ’ என்று, சொல்கிறார்கள். ஸம்ஸ்கிருதத்துக்கான தேவநாகரி, க்ரந்த லிபிகளில் 50 எழுத்து இருக்கிறதென்றால், தெலுங்கிலே ஜகாரத்திலும் சகாரத்திலும் ஒவ்வொன்று அதிகமிருக்கிற எழுத்துக்களைச் சேர்த்து 52 இருக்கின்றன. மஹாராஷ்ட்ர பாஷையிலும் இந்த ஸூக்ஷ்மமான இரண்டு சப்தங்களும் இருக்கின்றன. இரண்டாவது ‘த’ (tha) வை நாலாவது ‘த’ (dha) வாகவும் தெலுங்கர்கள் மாற்றிக் கொள்வதுண்டு. தியாகய்யர்வாள் பாட்டிலேயே இப்படிச் சில இடங்களில் இருக்கிறதென்று ஒருத்தர் சொன்னார்1.

ஒரு பாஷையில் உள்ளதை அப்படியே இன்னொரு பாஷையின் லிபியில் எழுதுகிற போது (transliterate பண்ணுகிற போது) இந்த விஷயங்களைத் தெரிந்து கொண்டு பண்ண வேண்டும். இப்படிப் பண்ணுகிறபோது ஸம்ஸ்கிருதத்தில் ‘ன’ இல்லாததால், ‘ஸத்யவான்’, ‘தர்மவான்’ என்கிற மாதிரி வார்த்தைகளைக் கூட ‘ஸத்யவாந்’, ‘தர்மவாந்’ என்றுதான் எழுத வேண்டும். ஆனாலும் தமிழில் இப்படிப்பட்ட வார்த்தைகள் இல்லாததால், நம் கண்ணுக்கு அது விசித்ரமாகப் படும்! உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்று Phonetic spelling ஆக எழுதினால் அது நாம் இப்போது எழுதுவதற்கு வித்யாஸமாகத்தான் இருக்கும். தெலுங்கிலே வருவதைக் ‘கன்னதல்லி’ என்று எழுதாமல், ‘கந்நதல்லி’ என்றுதான் எழுவேண்டும். அது அச்சிலே விநோதமாகத்தான் இருக்கும்.

உச்சரிப்புக்களை உள்ளபடி தெரிந்து கொண்டால் தமிழில் ன, ந என்ற இரண்டு எழுத்து ஏன் இருக்கிறது என்பது போல் நமக்குப் புரியாமலிருக்கிற பல விஷயங்கள் புரிந்து விடும். இங்கிலீஷில் கூட இப்படியே நமக்கு “ஒரே ‘வ’ காரத்துக்கு ஏன் V, W என்று இரண்டு எழுத்துக்கள்?” என்று தோன்றினாலும், இவற்றுக்கிடையே வித்யாஸம் உண்டு என்று ஒரு ப்ரொஃபஸர் சொன்னார். ‘V’ வருகிற இடத்தில் நம் பாஷைகளின் ‘வ’ மாதிரி கீழ் உதட்டை மடித்து, அதன் மேலே மேல் வரிசைப் பல் படவேண்டும்; ‘W’ வரும்போது பல்லே படாமல், உதட்டையே ரவுன்டாகக் குவித்துச் சொல்ல வேண்டும்; ஆகையால் இந்திய பாஷைகளில் வருகிற ‘ஸரஸ்வதி’, ‘ஈச்வரன்’ முதலான வார்த்தைகளை Sarasvati, Isvaran என்றுதான் எழுதவேண்டும் என்றார். இன்னொன்று கூட: இங்கிலீஷில் ‘ண’காரம் கிடையாது; ‘ன’ தான் உண்டு. ஆனபடியால் ‘and’, ‘band’ போன்ற வார்த்தைகளை ‘அண்ட்’, ‘பாண்ட்’, என்று எழுதாமல் ‘அன்ட்’, ‘பான்ட்’ என்றுதான் எழுதவேண்டும்.

ஸ்பெல்லிங்கைப் பார்த்தே ப்ரொனௌன்ஸியேஷன் [உச்சரிப்பு] சரியாகப் பண்ணுவது என்பது, மற்ற எந்த பாஷையையும் விட ஸம்ஸ்கிருதத்திலேயே பூர்ணமாகத் தப்பில்லாமல் இருக்கிறது. இங்கிலீஷில் ஒரே கோணாமாணா! ‘Legistlature wound up’ என்று ஸமீபத்தில் பேப்பரில் பார்த்தேன். Wound என்பதை ஏதோ நினைவில் ‘வூன்ட்’ என்று படித்ததில் அர்த்தமே புரியவில்லை. ‘வூன்ட்’ என்றால் காயம் அல்லவா? இங்கே ‘வெளன்ட்’ என்று அதே ஸ்பெல்லிங்கைப் படிக்க வேண்டியிருக்கிறது! ‘சுற்றுவது’ என்கிற அர்த்தமுள்ள wind-க்கு இது past participle. இங்கே ‘வௌன்ட்-அப்’ என்றால் ‘ஸமாப்தி பண்ணப்பட்டது’ என்று அர்த்தம். இந்த wind என்ற வார்த்தையை எடுத்துக் கொண்டாலும் ஸ்பெல்லிங் ஒன்றாகவே இருந்தாலும், அதைக் காற்று என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளும்போது ‘வின்ட்’ என்று சொல்ல வேண்டும்; ‘சுற்றுவது’ என்ற அர்த்தம் பண்ணும் போது ‘வைன்ட்’ என்று சொல்ல வேண்டும். இப்படி ஒரே குழப்பம்! B-U-T பட், C-U-T கட், என்று இருந்தாலும் P-U-T மட்டும் ‘பட்’ இல்லை, ‘புட்’ என்கிறான். வால்க், சால்க் என்று உச்சரிப்புகளைக் கொடுக்கும்படியான Walk, Chalk என்பவைகளை வாக், சாக் என்றே சொல்கிறான். கேட்டால், சில எழுத்துக்கள் ஸைலன்ட் ஆகிவிடுகின்றன என்கிறான்.

தமிழில் இப்படியில்லை என்றுதான் தோன்றும். ஆனாலும் ஸம்ஸ்கிருதம் முதலான பிற பாஷைச் சொற்கள் தமிழில் நிறையக் கலந்திருப்பதால் அவற்றைத் தமிழில் எழுதும்போது மற்ற பாஷைகளில் ஒரே அக்ஷரத்தில் உள்ள நாலுவிதமான சப்தங்களைக் குறிப்பிட நாலு எழுத்துக்கள் இருக்கிறபோது, தமிழிலோ நாலுக்கும் ஒரே எழுத்துத்தானே இருக்கிறது என்ற குறை தெரிகிறது. ‘கண்’ என்பதில் வருகிற ‘க’ வேறு; ‘முகம்’ என்பதில் வரும் ‘க’ வேறு. ‘முகம்’ என்பதில் kha என்று அழுத்திச் சொல்லவேண்டும். கங்கை என்பதில் வரும் ‘க’ வோ இன்னொரு தினுசு; ga சப்தமாக உள்ளது. இதையே இன்னம் அழுத்தி gha -காரமாக ‘டம்’ என்ற வார்த்தையில் சொல்ல வேண்டும். Ka, kha, ga, gha இவற்றுக்கு மற்ற இந்திய பாஷைகளில் நாலு எழுத்து இருக்கும்போது, தமிழில் ஒரே ‘க’ தான் நாலுக்கும் பொதுவாயிருக்கிருக்கிறது. பீமன் கையிலே வைத்திருக்கிற ‘கதை’ (gadai) , எழுத்தாளர்கள் எழுதுகிற கதை ( kathai ) இவற்றில் இரண்டு அக்ஷரங்களும் வித்யாஸமாயிருந்த போதிலும், தமிழில் ஒரே மாதிரித்தான் எழுத வேண்டியிருக்கிறது. தமிழில் t’a, d’a இரண்டுக்கும் ஒரே ‘ட’; ta, da இரண்டுக்கும் ஒரே ‘த’ என்று ஏற்பட்டிருப்பதில், ஸ்பெல்லிங்கை வைத்தே சரியாக உச்சரிக்க முடியாமல் இருக்கிறது. ‘தோ(do)ஷம்’ என்றால் குறை;’ தோ(to)ஷம்’ என்றால் மகிழ்ச்சி. (‘ஸந்தோஷம்’ இதிலிருந்து வந்தது தான்.) ஆனால் இப்படி நேர்மாறாக அர்த்தமுள்ள இரண்டு வார்த்தைகளையும், தமிழில் ஒரே எழுத்துக்களால்தான் எழுத வேண்டியிருக்கிறது! கூடிய மட்டும் லிபியைக் கொண்டே சரியாக உச்சரிக்க வேண்டும் என்பதால்தான் ஸ, ஹ, ஜ, ஷ, க்ஷ முதலான கிரந்த எழுத்துக்களைத் தமிழில் சேர்த்தது. ஆனால் இப்பொழுது, முன்னெல்லாம் கவிப்பண்பை உத்தேசித்து தமிழ்க் கவிதைகளில் மட்டும் செய்து வந்தது போல் வசன நடையிலும்கூட இந்த எழுத்துக்கள் கூடாது என்கிற ரீதியில் எழுதி வருவதால், குழப்பமாகிறது. ஸம்ஸ்கிருத வார்த்தைகளைத்தான் பூர்ணமாக ஒழித்துக் கட்ட முடியவில்லை என்பதால், அதற்கே விசேஷமான சப்தங்களுக்குரிய இந்த எழுத்துக்களையாவது ஒழித்து விடலாமா என்று ஆரம்பித்திருப்பதில் வார்த்தைகளைத் தப்புத் தப்பாகப் படிக்கும் படி ஆகியிருக்கிறது. ‘சாதகம்’ என்று எழுதினால் அது ‘ஸாதக’மாகவும் இருக்கலாம், ‘ஜாதக’மாகவும் இருக்கலாம் என்றால், அர்த்தம் குழம்பித்தானே போகும்? சிலது தவிர்க்க முடியாது. முன்னே சொன்ன மாதிரி க, ச, ட, த, ப முதலானவற்றில் நாலு தினுசான வித்தியாஸம் தெரிவிக்கத் தமிழில் ஆதியிலிருந்தே எழுத்து இல்லை. ஆனால் பிறகு சேர்த்தவைகளைக் கூட இப்போது ஏன் விடவேண்டும்? இதனால் தமிழுக்கு வெற்றியா? ஸம்ஸ்கிருதத்துக்குத் தோல்வியா? பாஷைகள் என்ன, ஒன்றுக்கொன்று சண்டையா போட்டுக்கொள்கின்றன? நாம் தப்புத் தப்பாக வார்த்தைகளைச் சொல்கிறோம் என்பது தவிர இப்படிப்பட்ட பாஷா த்வேஷக் காரியங்களால் ஒரு பலனும் இல்லை. இது இருக்கட்டும்.

பிற பாஷைச் சொற்களாக இல்லாமல் தமிழிலேயே உள்ள சொற்களை எழுதுவதற்குத் தமிழ் லிபி ரொம்பவும் திட்ட வட்டமாகத்தான் இருக்கிறது. ஸம்ஸ்கிருதம், தெலுங்கு, கன்னட பாஷைகளில் க, ச, ட, த,ப, முதலியவற்றில் நாலுவித ஒலிகள் இருப்பது மாதிரி தமிழ் பாஷையில் கிடையாது. Kha, ga, gha முதலிய சப்தங்கள் இதர பாஷை வார்த்தைகளைத் தமிழில் எடுத்துக் கொள்ளும் போதுதான் வருகின்றன. ஆகையால் தமிழுக்கு என்றே ஏற்பட்ட சப்தங்களை எழுதத் தமிழ் லிபி போதுமானதாகத்தான் இருக்கிறது. இங்கிலீஷில் சொந்த பாஷை வார்த்தைகளையே எழுத்தைப் பார்த்துச் சரியாக உச்சரிக்க முடியாமலிருக்கிறதே, அந்த மாதிரித் தமிழில் இல்லை.

ஆனாலும், இங்கேயும் கூடத் தமிழ் லிபி பூர்ணமாகச் சரியாக இல்லை என்று நான் சொன்னால், உங்களுக்கு ஆச்சர்யமாயிருக்கும்! ஒப்புக் கொள்ளமாட்டீர்கள். ஆனால், நான் பிரத்யக்ஷத்தில் பார்த்த ஒன்றைச் சொன்னால் ஒப்புக் கொள்வீர்கள்.

வடக்கத்திக்காரன் ஒருத்தன் தமிழ் லிபியை (ஆல்ஃபபெட்டை) நன்றாகத் தெரிந்து கொண்டான். அதாவது ஒவ்வொரு எழுத்தையும் எழுத்தெழுத்தாகத் தெரிந்து கொண்டான். அப்புறம் அவனுக்கு வார்த்தை வார்த்தையாக எழுத்துக்களைச் சேர்த்துக் கற்றுக்கொடுப்பதற்கு ஆள் கிடைக்கவில்லை. தேவார திருவாசகங்களை மூல ரூபத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசையால்தான் அவன் இப்படித் தமிழ் கற்றுக்கொண்டது. ‘எழுத்துக்கள் தெரிந்து விட்டதல்லவா?’என்று, அவனே அதற்கப்புறம் தேவாரபுஸ்தகத்தை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு எழுத்தாகப் பார்த்துப் பாடம் பண்ண ஆரம்பித்தான். அவனுக்குத் தமிழ் பாஷா ஞானம் [மொழியறிவு] இல்லை. ஆனால் அர்த்தம் தெரியாவிட்டாலும் மஹான்களின் வாக்கைச் சொன்னாலே புண்ணியம் என்று இப்படிப் பாடம் பண்ணினான். அப்புறம் ஒருநாள் அவன் என்னிடம் வந்தான். “தேவாரம் சொல்கிறேன்”என்றான். எனக்கு ரொம்பவும் ஸந்தோஷமாயிற்று. சொல்லச் சொன்னேன்.

ஆனால், அவன் சொன்னது எனக்கு வேடிக்கையாயிருந்தது.

அவன் அப்பர் ஸ்வாமிகள் திருவையாற்றில் ஸர்வத்தையும் உமாமஹேச்வர ஸ்வரூபமாகப் பார்த்துப் பாடின பிரஸித்தி பெற்ற “மாதர் பிறைக் கண்ணியானை” என்ற பாடலைப் பாடினான். ஆனால் எப்படி பாடினான்?

எடுத்த எடுப்பிலேயே நாம் “மாதர்” என்பதை maadar என்கிறோம் என்றால் அவன் maatar என்று ஆரம்பித்தான்.

‘இதென்னடா, தர் புர்ரென்று ஆரம்பிக்கிறானே!’ என்று எனக்கு விசித்ரமாயிருந்தது.

அப்புறம் malaiyaan mahalod’u (மலையான் மகளொடு) என்பதில் makalot’u என்று ‘க’வையும் ‘ட’வையும் அழுத்தி பாடினான்.

‘மலையான் மகளொடு பாடி’ என்பதில், நாம் ‘paad’i ‘ என்பதை அவன் ‘paat’i’ என்று பாடினபோது, எனக்குச் சிரிப்பே வந்துவிட்டது.

இப்படியே போயிற்று. ‘புகுவார்’ நாம் சொல்கிற Puhuvaar -ஆக இல்லாமல் Pukuvaar – ஆக இருந்தது. ‘யாதும் சுவடு படாமல்’ (yaadum s’uvadu pad’aamal) என்பது yaatum chuvat’u pat’aamal என்று அவன் வாயில் மாறி ஸ்வரூபம் கொண்டதற்கப்புறம் என்னால் அடக்கவே முடியவில்லை.

வடக்கத்தியான் ஒருத்தன் நம் தமிழ் பாடலைக் கற்றுக் கொண்டு பாடுகிறானே என்ற சந்தோஷத்தில், அவனை உத்ஸாஹந்தான் படுத்தவேண்டும் என்று அது வரை பேசாமல் இருந்த நான், அதற்கப்புறம் பொறுக்க முடியாமல், அவனுடைய உச்சரிப்பில் இருந்த ஏராளமான கோளாறுகளை அவனுக்கு ஹிதமாக எடுத்துக் காட்டினேன்.

அதற்கு அவன், “நான் என்ன பண்ணலாம்? புஸ்தகத்தில் இப்படித்தானே எழுதியிருக்கிறது?” என்று காட்டினான்.

அவன் சொன்னது வாஸ்தவம்தான். புஸ்தகத்தில் எழுதியிருக்கிற லிபியின்படி பார்த்தால், அவன் சொன்ன விதம் சரிதான். புஸ்தகத்தை வைத்துக்கொண்டு எழுத்தெழுத்தாக நானும் நீங்களும் படித்தாலும் அவன் சொன்ன மாதிரியே தான் படிப்போம்.

ஆகவே தமிழிலும் அநேகம் சப்தங்களை எழுத்திலே மாற்றித்தான் எழுதுகிறோம் என்று தெரிந்தது. குறிப்பாக வார்த்தைகளுக்கு ஆரம்பத்தில் வராமல் நடுவிலும் முடிவிலும் வருகிற சப்தங்கள் எழுத்திலே வித்யாஸமாகத்தான் ஆகின்றன. ‘மஹளொடு’ என்று உச்சரிப்பதை ‘மகளொடு’ என்று எழுதுகிறோம். ‘அதற்காஹ’ என்று உச்சரிப்பில் சொன்னாலும் ‘அதற்காக’ என்றே எழுதுகிறோம். ஆரம்ப ‘க’ நடுவிலும் கடைசியிலும் ‘ஹ’ ஆகிறது. தமிழின் வார்த்தை ஆரம்பத்தில் ‘த’ வை ‘ta’ என்கிறோம்; பிறகு வந்தால் ‘da’ என்கிறோம். ‘தந்தை என்கிறபோது முதலில் ‘த’ என்பது ‘ta’ஸவுண்ட்; ‘தை’ என்பதோ ‘dai’ ஸவுண்டாயிருக்கிறது. இப்படியே ஆரம்பத்தில் வராமல் நடுவிலே வருகிற ‘ட’ ‘d’a’ தான்; ‘t’a’ இல்லை. கடவுள், இடம் என்பதில் எல்லாம் ‘d’a’ தானே சொல்கிறோம்?

இம்மாதிரி விஷயங்கள் தமிழ் இலக்கண நூல்களில் நன்றாக வரையறுத்துச் சொல்லியிருக்கிறது. ஸம்ஸ்கிருதத்தில் போலவே தமிழிலும் ‘தொல்காப்பியம்’, ‘நன்னூல்’ முதலான அநேகம் உயர்ந்த புஸ்தகங்களில் வார்த்தைகளின் ரூபம், சப்த ரூபம், அவற்றில் ஏற்படுகிற வித்யாஸம் முதலியவைகளைச் சொல்லித்தான் இருக்கிறது. இந்த எழுத்தின் பின் s’a என்பது cha ஆகும்; ka என்பது ha சப்தத்தைக் கொடுக்கும் என்றெல்லாம் விதி இருக்கிறது.

பொதுவாக, தமிழில் வார்த்தையின் முதலில் ‘க’ வரும் போது ka சப்தமாகவும், நடுவிலும் முடிவிலும் வரும்போது ha சப்தமாகவும் இருக்கிறது. ‘த’ என்பது வார்த்தை முதலில் ta-வாகவும், பிற்பாடு da-வாகவும்; இப்படியே ‘ப’ வும் முதலில் pa-வாகவும், பிற்பாடு ba-வாகவும் தொனிக்கிறது. (தமிழ் வார்த்தையின் நடுவிலோ, முடிவிலோ தனியாக ‘ப’ வருவதாகத் தெரியவில்லை. ‘அன்பு’, ‘அம்பு’, ‘இன்பம்’ என்பது போல் கூட்டுச் சப்தமாகத்தான் வருகிறது. ஜபம், சாபம், கபம், சுபம் என்கிறதுபோல, நடுவிலே தனி ‘ப’ வரும் வார்த்தைகள் ஸம்ஸ்கிருதத்திலிருந்து வந்தவைதான்.) ‘ச’ விலே ஒரு வேடிக்கை. க-ங-ச-ஞ-ட-ண-த-ந-ப-ம- என்கிற போது ka-nga- cha -ngya-t’a-na-ta-na-pa-ma என்று cha -காரமாகச் சொன்னாலும், தமிழில் க, த, ப முதலியன ஆரம்பத்தில் வரும்போது ka, ta, pa என்றே தொனிப்பது போல், ‘ச’ என்பது cha -வாகத் தொனிக்காமல் s’a என்றே தொனிக்கிறது. சட்டி, சிவப்பு என்பதை s’atti, s’ivappu என்றுதான் சொல்கிறோம். ஆனால் ஒற்றெழுத்தோடு சேரும்போது chcha சப்தம் வந்து விடுகிறது; s’s’a அல்ல – அச்சம், பச்சை, குச்சு என்பது போல! ‘சொல்’ என்கிறபோது s’ol என்கிறோம். அதையே பெயர்ச்சொல், வினைச்சொல் என்னும்போது peyarchchol, vinaichchol என்கிறோம். ஆனால், தமிழிலிருந்தே வந்த மலையாளத்தில், வார்த்தை ஆரம்பத்திலேயே ‘ச’ வுக்கு cha சப்தம் கொடுக்கிறார்கள். சிவப்பு என்பதை மலையாளிகள் chivappu என்றுதான் சொல்வார்கள். இன்னொரு பக்கத்தில், சில ஸமயங்களில் வார்த்தைக்கு நடுவே ‘ச்ச’ வரும்போது ch cha என்று சொல்லாமல் s’s’a என்றும் சொல்கிறார்கள். காவிச் சேரி, நெல்லிச்சேரி முதலான ஊர்ப் பெயர்களை நாம் (தமிழர்கள்) Kaavichcheri, Nellichcheri என்று தான் சொல்கிறோம். மலையாளத்திலே Kaavis’s’eri, Nellis’s’eri என்கிறார்கள். தெலுங்கிலே ‘ர்ர’ வருகிற மாதிரி, மலையாளத்தில் s’s’a இருக்கிறது. அச்சன், எழுத்தச்சன் என்னும்போது, நம்மாதிரி ch cha சப்தமாகவும் சொல்கிறார்கள்.

தமிழிலக்கண நூல்களைப் பார்த்தால், இந்த மொழியின் genius [பண்பு] படி, எந்தெந்த இடத்தில் எந்தெந்த சப்தம் எப்படியெப்படி ஆகும் என்பது விளக்கமாகத் தெரியும்.

ஆனாலும்கூட, லிபியைப் படிப்பதிலேயே உச்சரிப்பு கொஞ்சங்கூடத் தப்பாமலிருப்பது தமிழிலும் ஸாத்தியமில்லாமல்தான் இருக்கிறது.

ஸம்ஸ்கிருதத்தில்தான், இப்படிப்பட்ட மாறுபாடு இல்லை; இரண்டே இரண்டு விலக்கு தவிர, வேறெங்கும் இல்லை. அது பூர்ணமாக phonetic spelling- ஆகவே இருக்கிறது.

‘ஏது இரண்டு விலக்கு? முழுக்க முழுக்க ஸம்ஸ்கிருதம் உச்சரிப்புக்குச் சரியான எழுத்துக்களை உடையதல்லவா?’ என்றால் சொல்கிறேன்:

ஒன்று ‘ப’ (pa) வுக்கு முன்னால் ‘:’ என்ற விஸர்க்கம் வரும்போது ஏற்படுகிற சப்த மாறுதல். விஸர்க்கம் ஏறக்குறைய ‘ஹ’ சப்தத்தைத் தருவது. ‘ராம:’ என்பதை ‘ராமஹ’ என்று சொல்லவேண்டும். பூர்ணமான ‘ஹ’ வாக இன்றிக் கொஞ்சம் தாழ்த்திச் சொல்லவேண்டும். தமிழ் நாட்டில் பூர்ண ‘ஹ’ வாகவே சொல்கிறார்கள். குறைத்துச் சொல்கிற மற்றவர்களை கேலியாக நினைக்கிறார்கள். வாஸ்தவத்தில் சிக்ஷா விதிப்படி அவர்கள் சொல்வதுதான் சரி. இந்த விஸர்க்கம் ‘ப’வுக்கு முன்னாடி வரும்போது ‘ப’ என்பது ‘fa’ (ஃப) என்கிற ஸவுண்டைப் பெறுகிறது. லிபியை மட்டும் பார்த்து உள்ளபடி படித்தால் இங்கே தப்பாகிவிடும்.

இரண்டாவது மாறுதல்; ஸம்ஸ்கிருதத்தில் ஸுப்ரஹ்மண்யன், ப்ரஹ்மா, வஹ்நி என்று எழுதினாலும், படிக்கும்போது ஸுப்ரம்ஹண்யன், ப்ரம்ஹர், வன்ஹி என்றே உச்சரிக்க வேண்டியிருக்கிறது. சரி, ‘ஹ்’ சேர்ந்த கூட்டெழுத்துக்கள் எல்லாவற்றுக்குமே இது பொது விதியா என்று பார்த்தால், அப்படியும் இல்லை. ‘கஹ்வரம்’, ‘ ஜிஹ்வா’, ‘குஹ்யம்’, ‘தஹ்ரம்’, ‘ப்ரஹ்லாதன்’ முதலான வார்த்தைகளை உள்ளபடியே படிக்கிறோமே ஒழிய ‘கவ்ரம்’, ‘ஜிவ்ஹா‘, ‘குய்ம்’, ‘தர்ம்’, ‘ப்ரல்ஹாதன்’ என்று [மேலே சொன்ன ரீதியில்] மாற்றிப் படிக்கவில்லை.

இந்த இரண்டு தவிர, முற்றிலும் உச்சரிப்பும், லிபியும் ஸம்ஸ்கிருதத்தில் ஒன்றாகவே இருக்கின்றன.


1உதாரணமாக “கருணாஜலதே” என்ற நாதநாமக்ரியா திவ்ய நாம கீர்த்தனையில் “ஜலதே (dhe)”, “நிதே (dhe)” என்பவற்றுக்கு எதுகையாக “தாசரதே (the)” என்று வருகிறது.