ஸம வாய்ப்பு விஷயம்

குணம், மனப்பான்மை வைத்துத் தொழில் என்பது வெறும் புரளி என்கிற மாதிரியே தான் equality of opportunity [எல்லோருக்கும் ஸமமான வாய்ப்பு] இருக்க வேண்டும் என்பதும். இது நடைமுறை சாத்தியமே இல்லை. திருஷ்டாந்தமாக மெடிகல் ஸீட், எஞ்சினியரிங் ஸீட் இவ்வளவு தான் என்று நிர்ணயம் பண்ணிவிடுகிறார்கள். இதெல்லாவற்றையும்விட மிகக் குறைவாகத்தான் அடாமிக் ஸயின்ஸ் [அணு விஞ்ஞானம்] மற்றும் அநேக புதுப்புது specialised subject-களில் அட்மிஷனை நிர்ணயிக்கிறார்கள். இவற்றுக்கு ஒரே மாதிரி தகுதியுள்ள புத்திஸாலிகள் போட்டியிடும் போதே அவர்களின் அநேகரை ஸெல‌க்ட் பண்ணாமல், மற்றவர்களைத்தான் பண்ணுகிறார்கள். அப்படிப் பண்ணுவதுதான் நடைமுறை ஸாத்யம். பெரிய அதிகாரப் பதவிக்குப் பரீக்ஷை வைக்கிற போதும் இப்படியேதான் ஒரே க்வாலிஃபிகேஷன் உள்ளவர்களிலேயே பலரை நிறுத்தும்படியாகிறது. வைத்யம் பண்ணவும், புது விஞ்ஞான விஷயங்களில் ஆராய்ச்சி பண்ணித் தெரிந்து கொள்ளவும் ஆசைப்படுகிற எல்லோருக்கும் அதாவது அதற்கான நல்ல தகுதி பெற்ற எல்லோருக்கும் சான்ஸ் கொடுக்கத்தான் வேண்டும் என்று வாதம் பண்ணினால் அது சரியாயிருக்குமா? இந்த தேசத்துக்கு இத்தனை டாக்டர் இருந்தால் போதும், ஸ்பெஷலிஸ்ட் இருந்தால் போதும், ஸயன்டிஸ்ட்களும் அதிகாரிகளும் இவ்வளவு போதும் என்பதால் ஒரு அளவோடு நிறுத்திக் கொண்டு, தகுதியுள்ள மற்ற எல்லாரையும் தள்ளும்படியாகிறது என்பதை எல்லாருமே ஒப்புக் கொண்டு பேசாமலிருக்கிறோம். இதே போலத்தான் தேவ சக்திகளை லோகத்துக்கு அநுகூலம் பண்ணித்தர ஜனங்களில் இத்தனை சதவிகிதம் மட்டும் கர்மாநுஷ்டானம் பண்ணினால் போதும்; பாரம்பரியமாக வந்திருக்கிற இவர்கள் போதும், இதற்கு மேல் அவசியமில்லை, அப்படி செய்தால் மற்றவர்கள் செய்ய வேண்டிய காரியங்கள் கெட்டுப் போகும் என்று வர்ண விபாகம் பண்ணி வைத்திருக்கிறது. ஃப்ரெஞ்ச் ரெவல்யூஷன் [பிரான்சுப் புரட்சி] கொண்டு வந்துவிட்ட அநேக அபேதவாதங்களை சாஸ்திர விஷயத்தில் பொருத்த வேண்டுமென்று, யோசிக்காமல் கோஷம் போடுகிறோம் – அவை நம் லௌகிக லெவலிலேயே ஸாத்யமில்லை என்பதைப் பார்த்தும் புரிந்து கொள்ளாமலே!

ஒரு பெரிய தப்பபிப்பிராயம்

இப்போது ஏற்பட்டிருக்கிற ஒரு பெரிய தப்பபிப்பிராயம் என்னவென்றால் சாஸ்திரோக்தமான வர்ணாஸ்ரம தர்மத்தில் பிராமணனுக்குத்தான் ஸெளகர்யம் ஜாஸ்தி, வருமானம் ஜாஸ்தி, சிர‌மம் குறைவு என்ற எண்ணம். இது சுத்தப் பிசகு.

நம் சாஸ்திரம் பண்ணிக் கொடுத்துள்ள ஏற்பாட்டில் பிராமணன் சரீரத்தால் உழைத்த உழைப்பு ஒரு குடியானவனின் உழைப்புக்குக் குறைச்சலானது அல்ல. பிராமணனின் கர்மாநுஷ்டானங்களைப் பற்றித் தெரியாததால் அவன் மற்றவர்களை பிழியப் பிழிய வேலை வாங்கிவிட்டு, தான் ஹாயாக உட்கார்ந்து சாப்பிட்டான் என்று இந்தக் காலத்தில் தவறாக நினைக்கிறார்கள். பிராமணனானவன் காலம்பர [காலை] நாலு மணிக்கே முழித்துக் கொண்டு, மழை நாளானாலும், பனி நாளானாலும் பச்சைத் தண்ணீரில் ஸ்நானம் செய்ய வேண்டும். அதிலிருந்து அவனுக்கு ஓயாத‌ கர்மாநுஷ்டானம்தான். ஸந்தி, பிரம்மயக்ஞம், ஒள‌பாஸனம், தேவபூஜை, வைச்வதேவம், இது தவிர இருபத்தியொரு யஜ்ஞ‌ங்களில் ஏதாவது ஒன்று என்றிப்படி சக்கையாக உழைத்தாக வேண்டும். ஹோம ஜ்வாலையிலும், புகையிலும் நாலுநாள் உட்கார்ந்து பார்த்தால் தெரியும், எத்தனை சிரமம் என்பது. இவனுக்கு எத்தனை வ்ரதாநுஷ்டானங்கள்? உபவாஸம் என்று எத்தனை நாள் வயிற்றைக் காயக் காயப் போட்டாக வேண்டும்? எத்தனை ஸ்நானம்?

இந்த சிரமங்கள் மற்ற ஜாதியினருக்கு இல்லை. ஒரு குடியானவன் விடிந்தெழுந்ததும் வயறு நிறைய ஜில்லென்று பழையது சாப்பிடுகிற மாதிரிச் செய்ய பிராமணனுக்கு ‘ரைட்’ கிடையாது. தன் ‘ரைட்’டுக்காகவும் ஸெளகர்யத்துக்காகவும் பிராம்மணன் தர்ம சாஸ்திரங்களை எழுதி வைத்துக்கொள்ளவேயில்லை. அப்படி இருந்தால் இத்தனை கடுமையான விதிகளை, rigorous discipline -களைத் தனக்கே போட்டுக் கொண்டிருப்பானா? அவன் போஜனம் பண்ணுகிற போது பகல் 1 மணி 2 மணி ஆகிவிடும். (சிராத்தம், யாக தினங்களில் 3 மணி 4 மணி ஆகும்) குடியானவன் இர‌ண்டாந்தரங்கூடச் சாப்பிட்டு விட்டு வயலோரத்தில் ஏதாவது ஒரு மரத்தடியில் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்கிற சமயத்தில் தான் பிராம்மணனுக்கு முதல் சாப்பாடே! அதுவும் எப்படிப்பட்ட சாப்பாடு? அந்தக் குடியானவன் சாப்பிடுகிற மாதிரி மிகவும் எளிமையானதுதான். குடியானவன் தேக புஷ்டி தருகிற பழையது சாப்பிடலாம். இவன் புது அன்னம்தான் சாப்பிட வேண்டும் என்பது தவிர அதிக வித்தியாசம் இருக்கக் கூடாது. குடியானவன் குடிசைக்கும் பிராம்மணன் குடிசைக்கும் வித்தியாசம் கிடையாது. இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி நூல் துணிதான். குடியானவனாவது நாளைக்கு என்று நாலு காசு மீத்து வைத்துக் கொள்ளலாம். பிராம்மணன் அப்படி வைத்துக் கொள்ளக் கூடாது. பிற்பாடு கொடுக்கலாம் என்று இப்போது கடன் வாங்கி கொஞ்சம் தாட்பூட் செலவு பண்ணக்கூட பிராம்மணனுக்கு ‘ரைட்’ கிடையாது.

மஹாபாரதத்தில், யக்ஷ ப்ரச்னத்தில், பிராம்மணன் எத்தனை எளிமையாக இருந்தான். அவன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.

பஞ்சமே (அ)ஹனி ஷனி ஷஷ்டே வா சாகம் பசதி ஸ்வேக்ருஹே|

அந்ருணீச (அ)ப்ரவாஸீ ச ஸ வாரிசர மோததே||

ஒரு நாளில் பகல் பொழுதை எட்டுப் பங்காக்கினால், அதில் ஐந்தாவது அல்லது ஆறாவது பங்கில்தான் பிராம்மணன் கர்மாநுஷ்டானம் எல்லாம் முடித்துச் சாப்பிடுவான். அதன்முன், நாஸ்தா, கீஸ்தா எதுவும் கூடாது. இதுதான் “பஞ்சமே அஹனி ஷஷ்டே வா”. அந்த வேளையில்கூட என்ன சாப்பாடு? சர்க்கரைப் பொங்கலும் பாதாம்கீருமா? அல்லது தேஹ புஷ்டி தரும் மாம்ஸாதிகளா? இல்லை. “சாகம் பசதி” என்றால் ஏதோ ஒரு கீரையைப் பிடுங்கி வேக வைத்துத் தின்ன வேண்டும் என்று அர்த்தம். ஏதோ ஒரு முள்ளிக் கீரையோ, பசலைக் கீரையோ, பொன்னாங்கண்ணியோ ஆற்றங்கரையில் யாருக்கும் சொந்தமில்லாமல் முளைத்திருப்பதை மட்டும் சமைத்துச் சாப்பிட வேண்டும். பிராம்மணன் நதி தீரத்தில் வசிக்க வேண்டும் என்று வைத்ததற்கு காரணமே அப்போது தான் அவன் அடிக்கடி ஸ்நானம் செய்ய முடியும் என்பது ஒன்று. இன்னொரு காரணம் அங்கே தான் பணம் காசே வைத்துக் கொள்ளக் கூடாத இவன், விலை கொடுக்காமலோ, யாசிக்காமலோ நாலு கீரையைப் பிடுங்கி வேக வைத்து ஜீவனை ரக்ஷித்துப் கொள்ளலாம் என்பது. “யார் இந்தப் பார்ப்பான், பிடுங்கித் தின்ன வந்தான்?” என்று யாரும் அதட்ட முடியாதபடி வாழ வேண்டும் என்று அர்த்தம். கடன் வாங்கக் கூடாது, கடன் வாங்கலாமென்றால் போக்யங்கள், லக்ஷரிகளில் மனஸ்போகும். அதற்கு இடமே கொடுக்கக்கூடாது. இதுதான் “அந்ருணீ” என்றது. தரித்திரமும், அபரிக்ரஹமும் (அத்யாவசியத் தேவைக்கு அதிகமாக ஒரு புல்லைக்கூட வைத்துக் கொள்ளாமலிருப்பதும்) தான் பிராம்மண லக்ஷணமானதால், கடனும் வாங்கக்கூடாது என்று இருக்கிறது.

இப்போது சர்க்காரிலிருந்து ஆரம்பித்து பெரிய பெரிய தொழிலதிபர்கள் உள்பட எல்லோருக்கும் கடன்தான். சாஸ்திரம் சொன்னபடி, கடன் இல்லாமலும், பிறகு ஏவுதலுக்கு ஸலாம் போடாமலும் தன் தர்மத்தைச் செய்து கொண்டு இப்போது யாராவது இருக்கிறார்களா என்றால் அது நரிக்குறவர்கள்தான் என்று தோன்றுகிறது.

கடைசியில் சொன்ன “அப்ரவாஸம்” என்பதற்குத் தன் ஊரைவிட்டுப் போகக்கூடாது என்று அர்த்தம். மானமோ, அவமானமோ, கஷ்டமோ, நஷ்டமோ நமக்கேற்பட்ட தர்மத்தைச் செய்துகொண்டு ஊரோடு கிடக்க வேண்டும். இப்போது இங்கிலாந்தில் ஸெட்டில் ஆகிறோம், அமெரிக்காவில் ஸெட்டில் ஆகிறோம் என்று வெறும் பணத்துக்காக ஆசாரங்களை விட்டுப் பறந்து கொண்டு, இதைப் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கின்றோமே! இதை சாஸ்திரத்தில் ரொம்பவும் நிஷித்தமாக [இழுக்காக] ச் சொல்லியிருக்கிறது.

இந்த மாதிரி எல்லா ஜாதியாரும் நன்றாக உழைப்பது, எல்லா ஜாதியாரும் பரம எளிமையாக வாழ்வது என்று ஏற்பட்டு விட்டால் ஜாதி-த்வேஷமும், ஜாதிகள் போய்விட வேண்டும் என்ற பேச்சும் வரவே வராது. இப்போது ஒரு ஜாதிக்கு ஜாஸ்தி பணம்-ஸெளகரியமும், இன்னொன்றுக்கு தரித்திரம்-உழைப்பும் வரும்படியாக ஜாதிமுறை அமைக்கப்பட்டிருக்கிறது என்ற நினைப்பு ஏற்பட்டிருப்பதால்தான் இந்தச் `சீர்திருத்தம்’ எனப்படுகிற அபிப்பிராயங்கள் வந்திருக்கின்றன.

எளிமையும் உழைப்பும்தான் திருப்தி தருவது. சித்த சுத்தி தருவது. ஆயிரம் பதினாராயிரம் வருஷங்களாக நம் தேசத்தில் இப்படித்தான் நடந்து வந்திருக்கிறது. வர்ணாச்ரமத்தைச் சொன்ன சாஸ்திரங்கள் இவற்றையும் வலியுறுத்தியிருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

குணம் அல்லது மனோபாவம் என்பதை வைத்து இக்காலத்திலும் தொழிலைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று சொன்னேன். இப்போது பணம், வசதி இவற்றை மட்டும் பார்த்து வேலை தேடுவதில்தான் அத்தனை கஷ்டமும் ஏற்பட்டிருக்கிறது. எல்லோரும் எல்லா வேலைக்கும் வந்து விழுந்து போட்டியும், பொறாமையும் வேலையில்லாத் திண்டாட்டமுமாக ஆகியிருப்பதற்கு இதுதான் காரணம்.

ஆதியில் பிறப்பினால் தொழிலை நிர்மித்துக் கொடுத்தபோது, அதிலேயே தன்னால் ஒவ்வொருவருக்கும் ஒரு aptitude, அதை சுலபத்தில் கற்றுக் கொண்டு செய்கிற திறமை எல்லாம் ஏற்பட்ட மாதிரி இப்போது இல்லை. பிதுரார்ஜிதச் சொத்துப்போல அப்போது பெருமிதத்தோடு, பிடிமானத்தோடு ஒவ்வொருவனும் தன் தொழிலை எடுத்துக் கொண்டதனால் அதில் நல்ல செய்நேர்த்தி இருந்தது. இப்போது inefficiency [திறமையின்மை] யைத்தான் எல்லாத் துறைகளிலும் பார்க்கிறோம்.

அதிக ஸெளகர்யம் கூடாது

இப்போது ஆசைப்படுகிறபடி எல்லோருக்கும் ரொம்ப வசதி, ஸெளகர்யம் பண்ணித்தருவது என்பது முடிவே இல்லாமல் துராசைகளைப் பெருக்கி விடுகிற ஏற்பாடுதான். எல்லோருக்கும் கார், பங்களா, ரேடியோ, டெலிபோன் இருக்கிற அமெரிக்காவில் ஜனங்கள் திருப்தியடைந்து விட்டார்களோ? இல்லை. அங்கேதான் நம்மைவிட ஜாஸ்தி அதிருப்தி; அதனால் ஜாஸ்தி கொலை அல்லது தற்கொலை, மயக்க மருந்து சாப்பிட்டுவிட்டுத் தன்னை மறந்து கிடப்பது என்று இருக்கிறது. எல்லோருக்கும் கார் என்றாலும், இன்றைக்கு இருக்கிற கார் நாளைக்கு இல்லை. புதுப்புது மாடல்கள் இன்னும் ஜாஸ்தி ஸெளகர்யங்களோடு வந்தபடி இருக்கின்றன. எனவே இப்போது சேர்த்துள்ள டாலர் போதவில்லை. அந்தப் புது மாடலுக்காக இன்னும் ஸம்பாதிக்க வேண்டும். அப்புறம் அதைவிட விலை ஜாஸ்தியாக, இன்னும் ஜாஸ்தி ஸெளகர்யங்களோடு இன்னோரு மாடல் வரும். அப்புறம் வீட்டுக்கு வீடே பறப்பதற்கு `ப்ளேன்’கூட வந்தாலும் வரும். இப்படியேதான் முதலில் வெறும் குடிசை; அப்புறம் ஓடு போட்டது; அப்புறம் சிமென்ட் சுவர், ஒட்டுக்கட்டிடம்; அதற்கப்புறம் சிமென்டிலேயே நைஸ் ரகங்கள்; சாணி போட்டு மெழுகின தரை காரையாகி, ஸிமென்டாகி, அப்புறம் ‘மொஸைய்க்’, அதைவிட இன்னம் வழுவழுப்பான ரகம் என்று மாறிக்கொண்டேயிருக்கிறது. இதற்கு முடிவே கிடையாது. துணியை எடுத்துக் கொண்டாலும் நாளுக்கு நாள் புதுப்புது தினுசுகள். எல்லாவற்றையும் வாங்கியாக வேண்டும். இப்போது இருப்பதே ஸெளகர்யமாக இருந்தாலும் நம்முடைய புத்தி சாதுர்யத்தால் இதைவிட ஸெளகர்யமான சாதனங்களைக் கண்டுபிடித்துக் கொண்டேபோய், எப்போதும் நாம் இருப்பது அசௌகரியம்தான் என்று ஆக்கிக்கொண்டு, அதைவிட சௌகரியத்திற்காக தவித்தபடி இருப்போம். திருப்தியோ, நிம்மதியோ இல்லாமல் மேலே மேலே ஸம்பாதனம் பண்ணிக் கொண்டேதான் போவோம். நெருப்பிலே பெட்ரோலை விட்டு அணைத்து விடலாம் என்று நினைக்கிற மாதிரிதான், புதுப்புது சாதனங்களைக் கண்டுபிடித்து ஆசையைப் பூர்த்தி செய்து கொண்டு விடலாம் என்று நினைப்பது.

இது நம் பூர்விகர்களான மஹரிஷிகளுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் மநுஷ்யனின் அத்யாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுவதற்கு அதிகமாக‌ போகவே கூடாது என்று வைத்தார்கள். ஸமீப‌ காலத்தில் காந்தி இதையேதான் வற்புறுத்திச் சொல்லிக் கொண்டிருந்தார்.

எல்லாரையும் ஒரு மாதிரி டாம்பீக வாழ்க்கைக்கு ஆசைப்பட வைப்பது என்ற–இந்த நூற்றாண்டில் “முன்னேற்றம்” எனப்படுகின்ற–முயற்சிகள் இருக்கிற வரையில், தனியாக எவனுக்கும் திருப்தி இராது; சமூக ரீதியிலும் போட்டி, பொறாமை, வயிற்றெரிச்சல் போகவே போகாது. வர்ணாச்ரம தர்மப்படி எகனாமிகல் லெவலில் [பொருளாதாரத்தில்] பிராமணனும் மற்றவனும் ஸமம்தான். ஜாதி வித்தியாசமின்றி அத்தனை பேருக்கும் ஒரே மாதிரியான எளிய வாழ்க்கையைத்தான் சொல்லியிருக்கிறது. இப்படி எளிமையில் ஸமமாக இருப்பதுதான் ஸாத்யமுமாகும். இந்த நிலையில் தனி ஜீவனும் திருப்தி அடைகிறான். ஆத்ம க்ஷேமம் அடைகிறான். ஸமூஹ‌த்திலும் ஒருத்தனைப் பார்த்து இன்னொருவ‌னுக்கு வயிற்றெரிச்சல் உண்டாக‌ இட‌ம் இல்லாமல் போகிறது.

பணமும் வசதியும் எந்தத் தொழில்காரருக்கும் அதிகம் இருக்கக் கூடாது. இவற்றைவிட முக்கியமானது இவை எவற்றை உத்தேசித்து ஏற்பட்டனவோ, ஆனால் இவற்றாலேயே எதை நேராகப் பெற முடியவில்லையோ, அந்த ஆத்ம திருப்திதான், மன நிறைவுதான் மனிதனுக்கு வேண்டியது. திருப்தனாக இருந்தால்தான் ஆனந்தமாக பகவத் தியானம் பண்ண முடியும். அப்படிப் பட்ட மனசில்தான் பரம சத்தியமான வஸ்து எதுவோ அது தெரியும். அதனால்தான் நம் சாஸ்திரப்படி ரொம்பவும் எளிய வாழ்க்கையையே விதித்திருக்கிறது. ஓர‌ள‌வுக்கு மேல் ஸெளகர்யங்கள் அதிகமாகி விட்டால் அப்புறம் இந்திரிய சுகத்துக்கு மேலான விஷயங்களுக்குப் போகவே முடியாது. அதே மாதிரி, உழைப்பு இல்லாமல், சிரமமே படாமல் சுக ஜீவியாக இருந்தாலும் புத்தி கண்டதை நினைத்துக் கெட்டுதான் போகும். ஆகையினால் ஆத்மிகமாக உயர வேண்டுமானால் அஸெளகர்யமும், சிரமமும் கடும் உழைப்பும் வேணத்தான் வேண்டும். எந்த நிலைமையையும் ஸெளக்கியமாக பாவிக்கிற மனப்பான்மை அப்போதுதானே வரும்?

குணப்படித் தொழில் தேர்வு நடைமுறையில் இல்லை

“சரி, வேதமும் கிருஷ்ண பரமாத்மாவும் ஜாதி தர்மத்தைச் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும். அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது பக்ஷபாதமாகத்தான் இருக்கிறது. அவரவர், குணப்படி, மனோபாவப்படி தொழிலைத் தேர்ந்தெடுத்து நடத்துவதற்குத்தான் வசதி செய்து தரவேண்டுமே தவிர, ஜாதிப்படி செய்ய வேண்டும் என்று வைக்கக்கூடாது. இந்த வித்தியாஸத்தைத் தொலைத்துவிட வேண்டும்” என்று சொல்லலாம்.

இருக்கட்டும். இந்த குணம், மனோபாவம் என்பதற்கும் நவீன ‘ஸெட்-அப்’ பில் ஒருத்தர் எடுத்துக் கொள்ளும் தொழிலுக்கு என்ன சம்பந்தம்? நன்றாக யோசித்துப் பார்த்தால் இது இந்த காலத்தில் வேண்டுமென்றே மிகைப்படுத்திச் சொல்கிற விஷயமாகத்தான் இருக்கிறது. இந்தக் காலத்தில் எல்லோருக்கும் ரொம்ப ஸ்வதந்திரம் வேண்டியிருக்கிறது. எல்லோருக்கும் தாங்கள் பெரியவர்கள் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் தங்கள் தங்கள் மனோபாவத்தை மதிக்க வேண்டும் என்கிறார்கள். அது ஸமூகத்திற்கு உதவுகிற நல்ல மனோபாவமா, கெட்டதனால் நல்லதாக்கிக் கொள்ளவேண்டுமே, அதற்காக ஓரிடத்தில் ஸ்வதந்திரத்தை விட்டுக் கொடுத்துக் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே என்பதை எல்லாம் நினைக்காமல் எல்லோரும் எல்லாவற்றுக்கும் ஸ்வதந்திரம் கேட்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

மனோபாவம் அல்லது குணத்துக்கும் தற்காலத்தில் ஒருத்தன் விரும்பும் வேலைக்கும் எந்த அளவுக்கு ஸம்பந்தம் இருக்கிறது என்று பார்த்தால் நூற்றுக்கு தொண்ணூறு சம்பந்தமேயில்லை! ரொம்பக் கொஞ்சம் பேர் விஷயத்தில்தான் குணத்துக்கும் தொழிலுக்குமிடையே சம்பந்தமிருக்கும். ரொம்பவும் வைராக்ய குணமுள்ளவன் எந்த வேலையிலும் ஒட்டாமலிருப்பான். துருதுருவென்று ப்ளான் போட்டு யோஜனை பண்ணுகிற ஸ்வபாவமுள்ளவனுக்கு மெஷின் மாதிரி வேலை செய்வதான தொழில்கள் பிடிக்காமலிருக்கும். ஆர்மிக்கு [தரைப்படைக்கு] த்தான் போவது, நேவிக்கு [கடற்படைக்கு] த்தான் போவது என்று சில பேருக்கு ஒரே ஆர்வம் இருக்கும். இன்னும் சிலபேர் கழுத்தைப் பிடித்துத் தள்ளினாலும் ஸைதன்யத்தில் சேருவதில்லை என்று இருப்பார்கள். எழுதுவது, பாடுவது, சித்திரம் போடுவது என்கிறவற்றில் ஆசை உள்ளவர்கள் வேறு எந்த வேலையிலும் பிடிமானம் வைக்க மாட்டார்கள்.

இப்போது நான் சொன்ன இத்தனை பேரும்-அதாவது தங்கள் இயற்கை மனோபாவப்படிதான் தொழில் பண்ணுவது என்று இருக்கிற அத்தனை பேரும்- மொத்தமுள்ள ஜன சமூகத்தில் கால்வாசிகூட இருக்கமாட்டார்கள். பத்து பெர்ஸென்ட் (சதவிகிதம்) கூட இருக்க மாட்டார்கள்.

இங்கே என்னை ஒரு மடத்துக்குள் உட்கார்த்தி வைத்திருக்கிறது என்றாலும் என்னிடம் எல்லா தினுசு ஜனங்களும் வந்து அவரவர் பிரார்த்தனையை, ஆசையைச் சொல்லிவிட்டுத்தானே போகிறார்கள்? இதிலிருந்து எனக்கு தெரிவது, விசேஷமாக ஒருத்தனும் தொழிலைக் குணத்தோடு சம்பந்தப்படுத்தவில்லை என்பதுதான். ஒரு அப்பாக்காரர் வருகிறார். “பையனுக்கு எஞ்சினியர் காலேஜிலும் மனுப்போட்டிருக்கிறது. பி.காமும் போட்டிருக்கிறது. எஞ்சினியரிங் கிடைக்காவிட்டால் பி.காம் சேர்த்தாக வேண்டும். எஞ்சினியரிங்கே கிடைத்துவிட்டால் சிலாக்கியம். அநுக்ரஹ‌ம் பண்ணவேண்டும்” என்கிறார். பி.காம் படித்தால் படிக்கிற ‘ஆடிட்’ வேலைக்கும், எஞ்சினியரிங் படித்து சர்வே, கிர்வே பண்ணுவதற்கும் கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கிறதோ? ஆனால் இந்தப் பையன் இந்த இரண்டுக்கும் தயாராக இருக்கிறான். இன்னொரு பையன் வருகிறான். “இன்ட‌ர்மீடியட் ரொம்ப ‘ஹை’ யாகப் பாஸ் பண்ணிவிட்டேன். மெடிகல் காலேஜில் சேரலாமா, எம்.ஏ. படித்துவிட்டு ஐ.ஏ.எஸ். எழுதலாமா என்று தெரியவில்லை” என்கிறான். வைத்தியத் தொழிலுக்கும் கலெக்டர் வேலைக்கும் என்ன சம்பந்தம்? குணத்தை வைத்து தொழில் என்றால் மெடிக்கல் காலேஜுக்குப் போகிறவன் எப்படி எம்.ஏ. ஐப் பற்றி நினைப்பான்?

ஒருத்தர் வக்கீலாக இருக்கிறார். அல்லது இண்டஸ்ட்ரி [தொழிற்சாலை] வைத்திருக்கிறார். அப்புறம் ஏதோ ஒரு கட்சியில் சேர்ந்து மந்திரியாகி விடுகிறார். மந்திரியாகி இருக்கிறவர்களில் வக்கீலாக இருந்தவர், அதிகாரியாக இருந்தவர், ப்ரொஃபஸராக இருந்தவர், டாக்டராக இருந்தவர் என்று பல தொழில்களில் இருந்தவர்களைப் பார்க்கிறோம். மந்திரித் தொழிலுக்கு எந்த குணங்கள் இருக்க வேண்டுமோ அது எப்படி இந்தத் தொழில்களுக்கும் வேண்டும் என்று சொல்ல முடியும்?

இப்படி பெரிய லெவலில்தான் என்று இல்லை. “ஸினிமாக் கொட்டகையில் டிக்கட் கொடுத்துக் கொண்டிருந்தேன். இப்போது மிலிட்டரியில் சேர்ந்திருக்கிறேன், ஆசீர்வாதம் வேண்டும்” என்று ஒருத்தன் வருகிறான். ஹோட்டல் சர்வராக இருந்து பெட்டிக்கடை வைத்திருக்கிறேன்” என்று இன்னொருத்தன் வருகிறான். இந்த இரண்டு தினுஸான வேலைகளுக்கு என்ன சமபந்தம்?

இன்னொன்று கூடச் சொல்லலாம். இப்போது ராஜாங்கமும் அபேத வாத‌த்தை [ஸோஷலிஸத்தை] முக்கியமாகச் சொல்வதாகத்தான் ஆகிவிட்டது. அவனுக்கும் ஸ்வபாவப்படியும், படிப்பு முதலான தகுதிப்படியும்தான் வேலை தரவேண்டுமேயன்றி ஜாதிப்படி இல்லை என்பதும்தான் சர்க்காரின் கருத்தும். ஆனால் இவர்களே பெரிய உத்தியோகத்திற்காகப் பரீக்ஷை வைக்கிறபோது, ஒரு பரீக்ஷையை எழுதினவர்களில்தான் சில பேரை ஐ.ஏ.எஸ் என்று செலக்ட் செய்கிறார்கள். சில பேரை போலிசுக்கு அனுப்பி விடுகிறார்கள். கலெக்டர் வேலைக்கும், போலீஸ் ஸூப்பிரன்டு வேலைக்கும் மனோபாவ ரீதியில் பார்த்தால் என்ன சம்பந்தம்? டெக்னிகல் ஸப்ஜெட்டாக இல்லாத வரையில் ஒரு டிப்பார்ட்மென்ட்காரர்களை சம்பந்தமே இல்லாத வேறே டிபார்ட்மென்ட்களுக்கு மாற்றுகிறார்கள்.

குணம், மனோபாவம் என்று பார்த்தால் அவற்றுக்கு ஆதரவாகச் சொல்ல இங்கெல்லாம் ஒன்றுமெயில்லை.

ஆகவே பெரும்பாலும் ஜனங்கள் தங்கள் குணத்தைப் பார்த்து அதற்கு அநுஸரணையான தொழிலாக ஒன்றை எடுத்துக் கொள்ளவே இல்லை. தங்களுக்கு பிடித்த தொழில் கிடைக்காவிட்டாலும், கிடைத்த தொழிலுக்கு எப்படியோ ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்கிறார்கள்.

பொதுவாக எதிலே ஜாஸ்தி பணம் கிடைக்குமோ, அஸெள‌கர்யம் குறைவோ, அந்தத் தொழிலுக்குத்தான் எல்லோரும் ஆசைப்பட்டு போட்டி போடுகிறார்களே யொழிய, குணம், மனோபாவம், அது இது என்பதெல்லாம் அநேகமாகப் புரளிதான். ஜாஸ்தி வருமானமும் குறைச்சல் சிரமமும் உள்ள தொழிலுக்குப் போவேன் என்பதே ஸ்வதர்மம் என்றால் பரிஹாஸத்துக்கு இடமல்லவா?

குணத்தைக் கொண்டு காரியத்தை தேர்ந்தெடுத்துக் கொள்வது என்று நவீனர்கள் சொல்வது வெற்றுச் சவுடாலாகத்தான் நிற்கிறது. நம்முடைய பூர்விகர்கள் கச்சிதம் பண்ணிக் கொடுத்திருக்கும் ஏற்பாட்டிலோ கார்யமே ஒருத்தனுக்கு இயற்கையாகவும் பாரம்பரியமாகவும் உண்டான குணத்தை அவனுடைய ஆத்மாபிவிருத்திக்கும், வெளிலோகத்தின் க்ஷேமத்திற்கும் ஏற்றபடி ஒரு ஒழுங்கில் ரூபப்படுத்திற்று. காயத்ரி அநுஷ்டானம், கத்தியைச் சுழற்றுவது [சுற்றுவது], Knack [நுணுக்கம்] தெரிந்து வியாபாரம் பேசுவது, மெய்வருந்த உழைப்பது என்ற நாலு விதமான கார்யங்களே அததற்கான ப்ரஜையின் குணத்தை அந்தந்த துறையில் நன்றாகப் பிரகாசித்துத் தன்னையும் சுத்தி செய்து கொண்டு, ஸமுதாயத்தின் ஒட்டுமொத்த க்ஷேமத்திற்கும் உதவும்படியாக ரூபப்படுத்தியது. காயத்ரி அநுஷ்டானக்காரனும் எப்படி மெய்யை வருத்திக் கொண்டானென்று அப்புறம் சொல்கிறேன்.

பிறப்பாலேயே குணமும் தொழிலும்

இந்த ஜாதி தர்மமேதான் உள்ளூர அவரவருக்குப் பாரம்பரியமாக ஏற்பட்ட குணமாகவும் இருக்குமாதலால் குணத்தால் சதுர்வர்ணம் பிரிவதாக பகவான் சொன்னதும், பிறப்பால் இப்படி ஜாதியாகப் பிரிவதும் ஒன்றேதான், ஒன்றுக்கொன்று முரணானதல்ல. தியரி, ப்ராக்டீஸ் என்று வெவ்வேறு விஷயங்களைச் சொல்கின்ற தோஷம் பரமாத்மாவுக்கு ஏற்படவில்லை.

பரசுராமர், த்ரோணாசாரியார் இவர்கள் பிராம்மணராயினும் க்ஷத்ரிய குணத்தோடு இருந்தார்களே; தர்ம புத்ரர் க்ஷத்ரியராயினும் பிராம்மண குணத்தோடு இருந்தாரே; விச்வாமித்ரர் புஜபல பராக்ரமத்தோடும் ராஜஸ குணத்தோடும் இருந்துவிட்டே அப்புறம் பிரம்மரிஷி ஆனாரே என்றால் இதெல்லாம் கோடியில் ஒன்றாக இருந்த exceptionகள் (விதிவிலக்கு) தான். எந்த ரூலானாலும் எக்ஸப்ஷன் உண்டோ இல்லையோ? பொதுவாக வெளிப்பட வேறு குணம் தெரிந்த போது கூட உள்ளூரப் பிறப்பாலான ஜாதித் தொழிலுக்கேற்ற குணந்தான் இருக்கும் என்ற அபிப்ராயத்திலேயே பகவான் காரியம் பண்ணினதாகத்தான் தெரிகிறது.

அதெப்படி பிறப்பே குணத்தைத் தொழிலுக்கேற்றதாக அமைத்துக் கொடுத்த‌து என்றால், Individuality-யுடன் [தனித்தன்மையுடன்] heredity[பாரம்பரியம்] என்பதும் சேர்ந்தேதான் ஒரு மனுஷனை உருவாக்குகிறது என்று இக்கால ஸைக்காலஜியும் சொல்கிறதல்லவா? ஒருத்தனின் குணம் உருவாகும் முன்பே அவன் தலைமுறை தத்வமாக வந்த ஒரு தொழிலின் சூழ்நிலையிலேயே வளர்ந்து தானாகவும், கற்றுக் கொடுத்துத் தெரிந்து கொண்டும் அந்தத் தொழிலை எடுத்துக் கொண்டதால் குணமே தொழிலை அநுஸரித்து ஏற்பட்டது. ‘நமக்கு என்று ஏற்பட்ட தொழில் இது’ என்று அவரவரும் துராசையோ, போட்டியோ இல்லாமல் நிம்மதியாகப் பிரிந்திருந்து தொழில்களைச் செய்து கொண்டு மொத்த ஸமூஹம் ஒற்றுமையாக இருந்த காலத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிறந்து, அதிபால்யத்திலேயே அந்தத் தொழிலைப் பார்த்து அதிலே ஒரு பற்று, aptitude உண்டானதால், பிறப்புப்படி செய்வது குணப்படி செய்வதாகவும் ஆயிற்று. இப்போது சீர்திருத்தவாதிகள் என்ன சொன்னாலும், பழைய ஏற்பாட்டில்தான் திறமை, குணம் இவையும் தொழிலோடு அநுஸரணையாகக் கலந்து இருந்தன. ஒருத்தன் தன் குணத்துக்கு அநுஸரணையாகத் தொழிலைச் செய்தான் என்றால் அது பழைய தர்மப்படி செய்த போதுதான் இருந்தது என்பேன். இப்போது இதைத் தலைகீழாக மாற்றித் திரித்துப் பேசுகிறார்கள்.

இப்போது மனோதத்துவத்தை ரொம்பவும் ஆராய்ச்சி செய்கிறவர்கள்கூட என்ன சொல்கிறார்கள்? ஒருத்தனின் குணத்தை, திறமையை, மனோபாவத்தை நிர்ணயம் பண்ணுவதில் heredity-க்கும் [பாரம்பரியத்துக்கும்] அவன் இருக்கிற environment-க்கும் [அதாவது] சுற்று வட்டாரத்துக்கும் மிகுந்த முக்யத்துவம் இருக்கிறது என்கிறார்கள். பழைய நாளில் பாரம்பரியப்படிதான் அப்பன், பாட்டன், முப்பாட்டன் தொழிலை ஒவ்வொருவனும் பண்ணினான். இரண்டாவதாக, ஒவ்வொரு தொழில்காரரும் ஒரே கிராமத்தில், அக்ரஹாரம், பண்டாரவாடை, சேரி, சேணியர்தெரு, கம்மாளர் தெரு என்று, தனித்தனியாக, ஒவ்வொரு சமூகமாக வசித்தபோது என்வைரன்மென்டும் [சுற்றுச் சூழ்நிலையும்] ஸாதகமாக இருந்தது. இந்த இரண்டு அம்சங்களும் அழுத்தமான விதத்தில் ஒருத்தனுடைய குணத்தை அவனுடைய பரம்பரைத் தொழிலுக்கு மிகவும் ஏற்றதாகச் செய்து வந்தன.

இந்த விஷயத்தை நான் சொல்வதைக் காட்டிலும் காந்தி சொன்னதை எடுத்துக் காட்டினால் சீர்திருத்தக்காரர்கள் ஒத்துக் கொள்வீர்கள். காந்தி இப்படி சொல்கிறார்.

“கீதையானது குணத்தையும் கர்மாவையும் பொறுத்தே ஒருத்தனின் வர்ணம் (ஜாதி) அமைகிறது என்று தான் சொல்கிறது. (அதாவது பரம்பரையால், பிறப்பால் அமைகிறது என்று சொல்லவில்லை) ஆனால் குணமும் கர்மாவும் பிறப்பின் மூலம் பாரம்பரியமாகப் பெறப்படுகிறவையே”1

ஆகையால் கிருஷ்ண பரமாத்மா கொள்கை ஒன்று, காரியம் வேறொன்று என்று முரணாகப் பண்ணவில்லை யென்பது சீர்திருத்தவாதிகள் எல்லோரும் தலைவராக ஒப்புக்கொள்ளும் காந்தியின் வார்த்தையாலேயே உறுதியாகிறது. நவீனக் கொள்கைக்காரர்கள் தங்கள் இழுப்புக்கு வேத சாஸ்திரங்களையும் கிருஷ்ண பரமாத்மாவையும் இழுத்து வளைக்கக்கூடாது.

கிருஷ்ணர் “நான் சொல்கிறேன்; நீ கேள்” என்று அடித்துப் பேசுகிறவர்தான். ஆனால் அவரே ஜனங்கள் எப்படி காரியம் பண்ணவேண்டும் என்கிறபோது “நான் இப்படிச் சொல்கிறேன் என்று சொல்லாமல் சாஸ்திரம் எப்படிச் சொல்கிறதோ அதுவே பிரமாணம்” என்று அழுத்திச் சொல்லியிருக்கிறார். அவர் காலத்திலிருந்த சாஸ்திரப்படி ஜாதிகள் பிறப்புப்படிதான் பிரிந்திருந்தன என்பது பாரத, பாகவத, விஷ்ணு புராணாதிகளிலிருந்து நிச்சயமாகத் தெரிகிறது. பிறப்பால் ஜாதி என்கிற சாஸ்திரங்களே கிருஷ்ணர் காலத்துக்குப் பிறகுதான் வந்தது என்றுகூட இக்கால ‘ரிஸர்ச்’காரர்கள் சொல்லக்கூடுமாதலால் இவ்விஷயத்தைச் சொல்கிறேன். கிருஷ்ண பரமாத்மாவின் காலத்தில் வர்ணாச்ரம விபாகங்களைச் சொல்கிற சாஸ்திரங்கள்தான் தர்மப் பிரமாணமாக இருந்தன என்று பாரத, பாகவத, விஷ்ணு புராணாதி க்ரந்தங்கள் ஸந்தேஹத்துக்கு இடமில்லாமல் சொல்கின்றன. இவ்வாறாக பிறப்பின்படியே வர்ணவிபாகம் செய்யும் சாஸ்திரங்கள் அநுஷ்டிக்கப்பட்ட காலத்தில்தான் பகவான் ஸ்ப‌ஷ்டமாக,

ய: சாஸ்த்ர விதிம் உத்ஸ்ருஜ்ய வர்ததே காமகாரத:|
ந ஸ ஸித்திம் அவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம் ||

தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதெள‌ |
ஜ்ஞாத்வா சாஸ்த்ர விதாநோக்தம் கர்ம கர்த்துமிஹார்ஹஸி ||

“எவன் சாஸ்திர விதியை மீறி சொந்த ஆசைகளின் வசப்பட்டு தொழிலை எடுத்துக் கொள்கிறானோ அவனுக்கு ஸித்தியில்லை, ஸுகமில்லை, கதி மோக்ஷமும் இல்லை. எந்தத் தொழில் செய்யலாம். எது கூடாது என்று வரையறுத்துக் கொள்வதற்கு சாஸ்திரம்தான் பிரமாணம். இப்படி சாஸ்திரோக்தமான வழியை உணர்ந்து அதன்படி தொழில் செய்வதற்கு உரியவனாகவே இருக்கிறாய்” என்று சொல்லியிருக்கிறார்2. இதனால் அவர் பிறப்புப்படி ஜாதி என்பதைத்தான் நிர்த்தாரணம் பண்ணுகிறார் [வலியுறுத்தி நிலைநாட்டுகிறார்] என்பதில் லவலேசமும் ஸந்தேஹமேயில்லை.


1“The Gita does talk of Varna being according to Guna and Karma but Guna and Karma are inherited by birth”

2கீதை XVI.23-24.

வேதம், கீதை இவற்றின் கருத்து

வேதத்திலேயே பிறப்பால் ஜாதி என்பதில்லை என்கிற வாதத்தை முதலில் பார்த்து விடலாம். மூலம் வேதமாச்சே! அதனால் இவ்விஷயத்தை முதலில் தெளிவாக்கிக் கொண்டுவிட வேண்டும். இப்படி வாதம் பண்ணுவது, ப்ரெள‌டா விவாஹந்தான் [பெண்கள் வயதுக்கு வந்த பிறகு விவாஹம் செய்வதுதான்] வேத ஸம்மதமானது என்று வாதத்தைப் பற்றி சொன்னேனே, அதே மாதிரியானது. அதாவது, Context – ம் Continuity- ம் [சந்தர்ப்பத்தையும், தொடர்ச்சியையும்] பார்க்காமல் ஏதோ ஒரு பாகத்தை மட்டும் பார்த்து, அதுவே பொது விதி என்று விபரீதமாக அர்த்தம் பண்ணிக் கொள்வதைச் சேர்ந்ததுதான் இது.

பிறப்பைக் குறித்தே ஜாதி, குணத்தைக் குறித்தல்ல என்பதற்கு அழுத்தமாக ஒரு Proof (நிரூபணம்) சொல்கிறேன். மூன்று வயசில் செய்கிற செள‌ளம் (குடுமி வைத்தல்) , ஐந்து அல்லது ஏழாம் வயதில் பண்ணுகின்ற உபநயனம் முதலானதுகளே ஜாதியைப் பார்த்து அதன்படி பண்ணுகிற ஸம்ஸ்காரங்கள்தான். இப்படி அதி பால்யத்திலேயே வெவ்வேறு ஜாதிகளுக்கான ஸம்ஸ்காரங்களில் வித்தியாசமிருப்பதால், குணத்தைப் பார்த்தே ஒருத்தனின் தொழில் நிர்ணயிக்கப்படுவதுதான் மூலசாஸ்திரங்களின் நோக்கம் என்பது அடியோடு அடிபட்டுப் போகிறது. அத்தனை சின்ன வயசுக்குள் ஒருத்தனின் குணத்தை நிர்ணயம் பண்ண முடியுமா?

கீதை விஷயத்தைப் பார்க்கலாம். “ஸமதர்சனம்” (எல்லாவற்றையும் சமமாகப் பார்ப்பது) என்று கீதையில் (V.18) சொல்லியிருப்பது வாஸ்தவம். இதனால் ஜாதி வித்யாசமில்லை என்று அர்த்தம் பண்ணுவது அனர்த்தம்தான். கிருஷ்ண பரமாத்மா எந்த நிலையில் இந்த ஸமத்துவம் வருகிறது என்கிறார்? அந்த Context ஐப் பார்க்கவேண்டும். ஸகல கார்யங்களும், லோக ஸ்ருஷ்டியும், ஈஸ்வரன் ஸ்ருஷ்டிகர்த்தா என்பதுங்கூட அடிபட்டுப் போய் ஆத்ம நிஷ்டனாக இருக்கிற ஞானியின் நிலையே அது என்கிறார். கர்மாவைவிட்டு ஸந்நியாசியாகி ஒருவன் முடிவான நிலைக்குப் போகிறபோது அவனுக்கு எல்லாம் சமமாகி விடுகிறது என்றார். வேத உபநிஷதங்களும் இதையே சொல்கிறது. உச்சியான அந்த நிலையில்தான் ஸமம். காரிய லோகத்தில் இல்லை. காரியம் பண்ணுகிற நமக்கும் அல்ல. ஸம தர்சனம், ஸம சித்தம், ஸம புத்தி என்றிப்படி யோகியின் பார்வையில்தான் பகவான் சமத்துவத்தை சொன்னாரேயன்றி, அவனால் பார்க்கப்படுகின்ற இந்த லோகத்தில் ஸம காரியத்வம் என்று அவர் தப்பித் தவறிக்கூடச் சொன்னதில்லை.

“ஜாதி வித்யாஸமே இல்லை என்று பகவான் சொல்லவில்லை. ஆனால் பிறப்பின்படி இன்றி, குணத்தின்படி கர்மாவைப் பிரித்துத் தரும் சதுர்வர்ணத்தைத் தாம் ஸ்ருஷ்டித்ததாகத்தான் சொல்கிறார். ‘சாதுர்வர்ண்யம் மயாஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச‌:’ என்றே சொல்லியிருக்கிறார்”1 என்கிறார்கள்.

சரி, ஆனால் எத்தனை வயசுக்கு மேல் இப்படி குணத்தை அறிந்து அதை அநுசரித்து அதற்கான வித்யையைப் பயின்று அதற்கப்புறம் தொழிலை அப்பியாசம் பண்ணுவது? முக்கியமாக பிராம்மணனின் தொழிலை எடுத்துக் கொண்டால், இவன் ஏழெட்டு வயஸுக்குள் குருகுலத்தில் சேர்ந்தால்தானே அப்புறம் பன்னிரண்டு வருஷங்களில் தன் தொழிலுக்கான‌வற்றைப் படித்துவிட்டுப் பிறகு அவற்றில் தானே அநுஷ்டானம் பண்ண வேண்டியதைப் பண்ணவும், பிறருக்குப் போதிக்கவேண்டியதை போதிக்கவும் முடியும்? குணம் form ஆன பிறகு (ஓர் அமைப்பில் உருவான பிறகு) தான் தொழிலை நிர்ணயிப்பது என்றால், கற்க வேண்டிய இள வயசு முழுதும் பலபேர் தொழிலை தெரிந்து கொள்ளாமல் வீணாவதாகவும், அப்புறம் சோம்பேறியாக ஒரு தொழிலுக்குப் போகப் பிடிக்காமல் இருப்பதாகவுமே ஆகும். அப்படியே கற்றுக் கொண்டு தொழிலுக்குப் போகும் போதும் ஸமூகத்திற்கு அவனால் கிடைக்கிற பிரயோஜனத்தில் வெகுவான காலம் நஷ்டமாயிருக்கும். க்ஷணகாலம் கூட வீணாக்காமல் ஒழுங்காக, விதிப்படி கர்மா பண்ணிக்கொண்டே இருக்க வேண்டும் என்று திருப்பி திருப்பிச் சொல்லும் பகவான் இதை ஆதரித்துப் பேசியிருப்பாரா?

“அப்படியானால் அவர் ‘தியரி’யில் [கொள்கையளவில்] குணப்படித் தொழில் என்றாலும், ‘ப்ராக்டிஸில்’ [நடைமுறையில்] பிறப்பால் தொழில் என்பதைத்தான் ஆதரித்தாரா?” என்றால், பாலிடீஷியன்கள் [அரசியல்வாதிகள்] போல பகவான் கொள்கை ஒன்று, காரியம் இன்னொன்று என்று இருப்பவர் அல்ல.

சரி, அவருடைய வாழ்க்கையில் நாம் என்ன பார்க்கிறோம். “நான் யுத்தம் பண்ண மாட்டேன். பந்து மித்ரர்களின் ரத்தத்தைத் சிந்தி ஸாம்ராஜ்யாபிஷேகம் பண்ணிக் கொள்வதைவிட, ஆண்டிப் பரதேசியாக பிக்ஷை எடுத்துச் சாப்பிடுவது எத்தனையோ மேல்” என்று சொல்லிக்கொண்டு தேர்த்தட்டில் உட்கார்ந்து ஸத்யாக்ரஹம் பண்ணி விட்ட அர்ஜுனனிடம் அவர் சொன்னார் “நீ க்ஷத்ரிய ஜாதியில் பிறந்தவன். யுத்தம் பண்ணுவதுதான் உன் ஸ்வதர்மம். எடு வில்லை போடு சண்டையை” என்றுதான் அவனை விடப் பிடிவாதம் பிடித்து அவனை யுத்தம் பண்ண வைத்தார்.

இங்கேயாவது ஒரு மாதிரி ஸமாதானம் சொல்லலாம். “அர்ஜுன‌ன் மஹாரதன், மஹாவீரன். ஆனதால் அவனுக்கு பந்து மித்திரர்களைக் கொல்ல‌ வேண்டியிருக்கிறதே என்ற பாசத்தால் Momentary -ஆக [தற்காலிகமாக] த்தான் யுத்தத்தில் வெறுப்பு உண்டாயிற்று. உள்ளூர அவனுடைய குணம், மனோபாவம், தன்னுடைய வீரத்தைக் காட்டுவதில்தான் இருந்தது. அதனால்தான் பகவான் யுத்தத்திலேயே தூண்டிவிட்டார். ஆனபடியால் அவர் ஸ்வதர்மம் என்று சொன்னது ஜாதி தர்மம் என்று ஆகாது. அவனுடைய சொந்த குணத்தை, இயற்கையான மனோபாவத்தைத்தான் ஸ்வதர்மம் என்று சொல்லி, அவனுக்கு எடுத்துக் காட்டினார்” — என்று சுற்றி வளைத்து அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.

அப்படியானால் தர்மபுத்ரர் விஷயம் என்ன? சண்டையே கூடாது. ஸமாதானமாகவே போய்விட வேண்டும் என்றுதானே அவர் ஆரம்ப காலத்திலிருந்து இருந்து வந்திருக்கிறார்? தங்கள் ஐந்து பேருக்கும் ஐந்து வீடு கொடுத்து விட்டால் கூடப் போதும், ராஜ்ஜியத்தில் பாதி தர வேண்டும் என்று இல்லை என்கிற அளவுக்கு ஒரேயடியாக இறங்கிவந்து விட்டார் அல்லவா அவர்? அவரையும் அவருக்காக தூது போன பகவானே யுத்தத்தில்தானே இழுத்து விட்டார்? இதற்கு முந்தியும் தர்மபுத்திரரை எல்லா சிற்றரசர்களையும் வென்று, ஸார்வபெள‌மராகும்படி பண்ணி, அவருடைய ராஜஸூய யாகத்தை பகவான்தானே முன் நின்று நடத்தி வைத்தார்? தர்மபுத்ரர் இதற்கெல்லாமா ஆசைப்பட்டவர்? அவருடைய குணம், மனோபாவம் ஆகியன கொஞ்சங்கூட இந்த யுத்தம், ஸார்வபெள‌மப் பதவி இவற்றுக்கு ஆசைப்படாததுதானே? அவரையும் பரமாத்மா க்ஷத்ரிய தர்மத்தைத்தான் அநுஷ்டிக்கப் பண்ணினார் என்றால், அவர் ஸ்வதர்மம் என்கிற போது அவரவர் ஜாதி தர்மத்தைத்தான் சொன்னார் என்று அர்த்தமாகும். பிராம்ம‌ணராகப் பிறந்ததும் க்ஷத்ரிய தர்மப்படி யுத்தத்தில் இறங்கிய த்ரோணாச்சாரியார் மாதிரியானவர்கள் பெரியவர்கள் என்பதால் பகவானாக அவர்களை நிந்திக்க மாட்டாராயினும், பீமஸேனன் போன்றவர்கள் அவர்களை ஜாதி தர்மம் விட்டதற்காகப் குத்திக் காட்டிப் பேசிய போதெல்லாம் பகவான் ஆக்ஷேபித்ததில்லை. அதனால் பிறப்பால் ஏற்படுகின்ற ஜாதி தர்மமே அவர் சொன்ன ஸ்வதர்மம் என்று உறுதியாகிறது. “அப்படியானால் ஏன் குண கர்ம விபாகச: என்றார்?” என்றால்–


1கீதை IV.13

நவீனர்களின் கருத்து*

நம் மதத்தில் பிராம்மணர், க்ஷத்ரியர், வைச்யர், சூத்ரர் என்று நான்கு வர்ணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த ‘வர்ண’ங்களை நாம் ‘ஜாதி’ என்கிறோம்.

வாஸ்தவத்தில் ஜாதி வேறே, வர்ணம் வேறே. வர்ணங்கள் மேலே சொன்ன நாலுதான். இதற்குள்ளேயே ஒவ்வொன்றிலும் பல ஜாதிகள் இருக்கின்றன. ப்ராமண வர்ணத்திலேயே ஐயர், ஐயங்கார், ராவ் என்று பல ஜாதிகள் இருக்கின்றன. நாலாம் வர்ணம் ஒன்றிலேயே முதலியார், பிள்ளை, ரெட்டி, நாயக்கர், நாயுடு, கவுண்டர், படையாட்சி என்கிற மாதிரி எத்தனையோ ஜாதிகள் இருக்கின்றன.

இருந்தாலும் பொது வழக்கில் வர்ணம் என்று சொல்லாமல் ஜாதி என்றே சொல்லுவதால், நானும் இந்த இரண்டிற்கும் வித்யாஸம் பார்க்காமல் வர்ணத்தையும் ஜாதி என்றே சொல்லிக்கொண்டு போகிறேன்.

நான்கு ஜாதிகளுக்கும் (அதாவது வர்ணங்களுக்கும்) சாஸ்திரங்களில் வெவ்வேறு விதமான கர்மாக்களையும் ஆசாரங்களையும் விதித்திருக்கிறது. இதனால் ஒரே மதஸ்தரிடையிலேயே ஏகப்பட்ட வித்தியாஸங்கள் உள்ளன. ஒருவர் சமைத்ததை இன்னொருத்தர் சாப்பிடக்கூடாது. ஒருத்தரோடு ஒருத்தர் கல்யாணம் பண்ணிக் கொள்ளக்கூடாது. ஒருவர் செய்யும் காரியத்தை மற்றொருவர் செய்யக்கூடாது என்று இப்படி எவ்வளவோ வித்தியாசங்கள் இருக்கின்றன.

நாலு வர்ணம் என்று பெயரளவில்தான் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான பிரிவுகள் இருக்கின்றன. இன்னும் பல பிரிவுகள் உண்டாகிக் கொண்டே இருக்கின்றன. இப்படி, இந்த ஹிந்து மதமானது ஒரு விசித்ரமான மதமாக இருக்கிறது.

லோகம் முழுவதற்கும் பொதுவாக இருந்தது இந்த ஒரே மதம் என்று அவ்வளவு பெருமைப்படும் படியான நம் மதத்தில் இப்படி ஒன்றுக்கொன்று ஒரே வித்தியாசமாக இருப்பதைப் பார்த்தால் இந்தக் காலத்தவருக்கு ரொம்பச் சிறுமையாக, அவமானமாக இருக்கிறது. மற்ற மதங்களிலும் இதிதைச் செய்ய வேண்டும் என்ற விதிகளும், இதிதைச் செய்யக்கூடாது என்ற நிஷேதங்களும் உண்டு. ஆனால் அந்த மதங்களிலுள்ள எல்லாருக்கும் ஒரே விதமான விதிகள், ஒரே விதமான வில‌க்குகளே உண்டு. Ten Commandments [பத்துக் கட்டளைகள்] என்றால் அது கிறித்துவ மதத்தில் அத்தனை பேருக்கும் தான் பொது. சிலருக்கு அவை உண்டு, சிலருக்கு இல்லை என்று இல்லை. குரான் விதிகளும் இப்படியே. நமக்குள்ளேயோ ஒரே மதமாக இருந்தாலும் விதிகளும் நிஷேதங்களும் பல வகைகளாக இருக்கின்றன. ஒரு காரியத்தை ஒருவன் செய்தால் தர்மமாகிறது. அதையே வேறொருவன் செய்தால் அதர்மம் என்கிறோம். ஒருத்தன் பூணுல் போட்டுக் கொண்டு வேதம் சொன்னால் தர்மம், இன்னொருத்தன் இதைப் பண்ணினால் அதர்மம். வேதம் சொல்கிறவன் ஸ்நானம் பண்ணி வயிற்றைக் காயப்போடாவிட்டால் அதர்மம். மற்றவன் ஸ்நானம் பண்ணவேண்டுமென்றில்லை. உபவாஸமிருக்க வேண்டும் என்றில்லை. இப்படி ஏகப்பட்ட வித்தியாசங்களோடும் நம் மதம் உயிரோடிருப்பதை பார்த்தால் ஒன்று தோன்றுகிறது. ஒரு பெரியவர் ஒரு பெரிய ஆச்சரியத்தை சொல்லுகிறார். நாமெல்லாம் மரணமடைவது ஆச்சரியமில்லை. இந்த உடம்பில் ஒன்பது ஓட்டைகள் இருந்த போதிலும் அவற்றின் வழியாக உயிரானது வெளியே போகாமல் நிற்கிறதே. அதுதான் பெரிய ஆச்சரியம். என்று அவர் சொல்லுகிறார்.

நவத்வாரே சரீரே (அ)ஸ்மின் ஆயு: ஸ்ரவதி ஸந்ததம் |
ஜீவதீத்யத்புதம் தத்ர கச்சதீதி கிம் அத்புதம் ||

அதைப்போலப் பலவிதமான ஸந்தேஹங்களுக்கும் வித்தியாசங்களுக்கும் இடமான இந்த மதமானது எவ்வளவோ யுகங்களாக இன்னும் உயிருடன் இருக்கிறதே என்பதை நினைத்துதான் ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது!

வேதத்தை விட்டால் சிலருக்குப் பாபம், வேதம் சொன்னால் சிலருக்குப் பாபம் என்பதைப் போல இவ்வளவு வித்தியாசங்களும் பக்ஷபாதங்களும் ஏன் நம் மதத்தில் மட்டும் இருக்கின்றன என்று தோன்றுகின்றது. இந்த விஷயங்களையெல்லாம் நாம் சொல்லிக் கொள்வது அவமானமாக இருக்கிறதென்று நாம் நினைக்கிறோம். இவை தொலைந்தால் நல்லதென்று நாம் நினைக்கிறோம். இந்த வித்தியாசங்கள், பல நல்ல அம்சங்களுடைய நமது மதத்துக்குக் களங்கமாக‌ இருக்கின்றன என்று பலர் சொல்லுகிறார்கள். இப்படிப் பலபேருக்கு இந்த விஷயங்கள் மனதில் உறுத்திக்கொண்டே இருக்கின்றன. சில பேர் ஏதாவது தெரிந்து சமாதானப் படுத்திக் கொள்கின்றார்கள். சில பேர் சில ஸமயங்களில் இந்த மாதிரி வித்தியாசங்களைப் பார்த்து ஆத்திரமடைந்து நாஸ்திகர்களாகி, இவற்றை எடுத்துக் காட்டி உறுத்தி உறுத்தி சொல்கின்ற போது அப்படிப் போகாத நமக்கு மனஸ் ரொம்பவும் கஷ்டப்படுகிறது.

இம்மாதிரி ஸமயங்களில் உள்ளூர மதாபிமானம் உள்ளவர்கள், “இந்த வர்ண தர்மத்தை மட்டும் எடுத்துப் போட்டுவிட்டு, எல்லா ஜாதிகளையும் ஒன்றாக்கிவிட்டு, மற்ற மதஸ்தர்களைப் போலவே நாமும் ஆகிவிட்டால் நன்றாக ஆகிவிடும்” என்கிறார்கள். “வேதமோ, ஈச்வர ஆராதனமோ எல்லாவற்றையும் எல்லோருக்கும் ஒன்றாக்கி விடலாம்; வெவ்வேறு ஆசாரம், அநுஷ்டானம் என்பதே வேண்டாம்” என்கிறார்கள். இன்னும் கொஞ்சம் அதிகமாகப்போய் “நம்முடைய ரொம்பவும் ஆதிகாலத்திய பூர்விகர்கள் கொள்கையே இதுதான். ஜீவாத்மாவும் பரமாத்மாவுமே ஒன்று என்று சொன்ன நம் மூல புருஷர்கள் ஜீவர்களுக்குள்ளேயே இத்தனை பேதம் சொல்லியிருப்பார்களா? அவர்களும் ஸரி, கீதையில் கிருஷ்ண பரமாத்மாவும் ஸரி, ஜீவர்கள் தங்கள் தங்கள் குணத்துக்கு ஏற்றபடி தொழில்களை நாலுவர்ணமாகப் பிரித்துக்கொண்டு செய்வதைத்தான் சொன்னார்களே தவிர பிறப்புப்படி ஜாதித்தொழில் வருவதாகச் சொல்லவில்லை” என்றெல்லாம் சொல்லி நம் மதத்தில் களங்கம் என்று இவர்களுக்குத் தோன்றுகின்ற பாரம்பரியமான ஜாதிமுறையே மூலத்தில் நம் மதத்தில் இல்லாமல், பிற்பாடு சேர்ந்து விட்ட தப்பான விஷயந்தான் என்கிறார்கள்.

இதையெல்லாம் இப்போது கொஞ்சம் அலசி, ஆலோசித்துப் பார்ப்போம்.


* ஜாதி முறைகளை ஏற்படுத்தும் வர்ண தர்மம் குறித்த விரிவான விளக்கத்தை “தெய்வத்தின் குரல்” முதற் பகுதியில் “வைதிக மதம்” என்ற பிரிவிலுள்ள உரைகளில் காண்க. இவ்விரண்டாம் பகுதியிலும் இது தொடர்பான விவரங்கள் விரவி வந்துள்ளன.