ப்ரத்யக்ஷ நிரூபணம்

ஒரு கொட்டகையில் மேற்கூரையிலுள்ள துவாரம் வழியாக வரும் சூரிய கிரணம் ஓரிடத்தில் படுகிறது. அதே கிரணம் அடுத்த மாஸம் எங்கே படும் என்று கேட்டால் நமக்குத் தெரியாது. ஜ்யோதிஷ சாஸ்திரத்தில் சொல்லியுள்ள கணனங்களைச் செய்தால் தெரியும். பழைய காலத்தில் ஒரு முத்தைத் தொங்கவிட்டு, இன்ன காலத்தில் இன்ன இடத்தில் அதனுடைய நிழல் விழும் என்று ஸரியாகக் கோடு போட்டுக் காண்பித்தால், அப்படி காண்பித்தவர்களுக்கு அரசர்கள் உயர்ந்த சம்மானங்களைச் செய்து வந்தனர். மற்ற சாஸ்திரங்களிலெல்லாம் வாக்கியார்த்தம் செய்து வாதத்தில் ஜயித்தே சம்மானம் பெறுவார்கள். ஜ்யோதிஷ சாஸ்திரத்திலோ பிரத்யக்ஷமாகக் காட்டி சம்மானம் பெறவேண்டும். அதில் ஏமாற்ற முடியாது. அதற்கு சூரிய சந்திரர்களே சாக்ஷி.

ப்ரத்யக்ஷம் ஜ்யோதிஷம் சாஸ்த்ரம்

 

மூடநம்பிக்கையல்ல; ஆதார பூர்வமான உண்மைகளே !

“ஹிந்து சாஸ்திரங்களில் ஒரே நான்ஸென்ஸாக விஷயங்கள் இருக்கின்றன. பூமிக்கு வடக்கே மேரு சிகரம் இருக்கிறதாம். அங்கே உள்ள தேவர்களுக்கு நம்முடைய ஒரு வருஷம் ஒரு நாளாகி விடுகிறதாம். அந்த மேருவை ஸூர்யன் சுற்றுகிறானாம். உப்பு ஸமுத்திரம் மட்டுமில்லாமல் இக்ஷு (கருப்பஞ்சாற்று) ஸமுத்ரம், க்ஷீர ஸமுத்ரம் (பாற்கடல்) என்று ஏழு விதமான ஸமுத்ரங்கள் இருக்கின்றனவாம். ஐந்து கண்டங்களாகவே பிரிந்துள்ள உலகத்தை ஏழு தீவு கொண்டது (‘ஸப்த த்வீபா’) என்று வேறு சொல்கிறார்கள். எல்லாம் ஒரே பேத்தல்” என்று பரிஹாஸம் பண்ணுகிறார்கள்.

இருக்கட்டும். இந்த ஸமுத்ரம் ஏன் இத்தனை உப்புக் கரிக்க வேண்டும்? யார் அதிலே இவ்வளவு உப்பைக் கொட்டினது? இதே மாதிரி தித்திப்பு, பாலின் சுவை முதலி உள்ள கடல்களும் ஏன் இருந்திருக்க முடியாது?

சரி, ஸப்த த்வீபா என்றும் ஸப்த ஸாகரம் என்றும் சொல்வது தப்பு என்கிறார்களே, இவற்றைச் சொல்கிற சாஸ்திரத்தில் பூமியின் பொஸிஷனைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறது? ‘பூமியின் வடகோடியிலே மேரு இருக்கிறது. அதற்கு நேர் எதிரே த்ருவ நக்ஷத்திரம் இருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறது.

வடகோடிதான் North pole (வட துருவம்) என்று வைத்துக் கொள்ளலாம். இப்போது த்ருவ (துருவ) நக்ஷத்ரம் இதற்கு நேரேயா இருக்கிறது என்று பார்த்தால், அப்படியில்லை. Pole -க்கு ‘த்ருவம்’ என்ற பெயரே அந்த நக்ஷத்திரத்தின் பெயரை வைத்துத்தான். ஆனாலும் இப்போது அதற்கு நேரே ‘போல்’ இல்லை. “ஆதியில் நேரேதான் இருந்தது. அப்புறம் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டுப் பூமி கொஞ்சம் சாய்ந்து விட்டது” என்று நவீன ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். நேரே சுற்றும் பம்பரமாக த்ருவ நக்ஷத்ரத்தை நேரே நோக்கிய நிலையில் பூமி சுற்றிய காலத்தைச் சொல்கிற சாஸ்திரம் அப்போது இருந்த ஏழு தீவுகளையும் ஏழு கடல்களையும் சொல்கிறது. பம்பரம் சுற்றுவதில் கோணல் ஏற்பட்ட போது, ஸப்த சமுத்ரங்களும் கலந்து உப்பாகிவிட்டது என்கிறேன். அந்த வெள்ளத்தில் ஸ்பத த்வீபங்கள் ஐந்து கண்டங்களாக மாறிவிட்டன என்கிறேன்.

நம்முடைய வட துருவத்தின் மேலே ஒரு ஸ்தானம் இருக்கிறது என்றால், அதுதான் ஸ்வர்க்கம் இருக்கிற மேரு. இந்த பூலோகம் ஒரு எலுமிச்சம் பழம் என்று வைத்துக் கொண்டால் அதன் உச்சியில் உள்ள புள்ளி மேரு சிகரம். அந்த உச்சிக்கு எந்தப்பக்கமும் தெற்குதான். உச்சியான அந்த பாயின்டிலிருந்து கிழக்கேயோ, மேற்கேயோ, வடக்கேயோ, எங்கே போவது? எங்கேயும் போகமுடியாது. கீழே தெற்கில் இறங்குகிறது தவிர வேறு திசையே இல்லை. எலுமிச்சம் பழத்தின் உச்சியில் ஒரு பாயிண்டை வைத்துப் பார்த்தால் இது தெரியும். பூமியில் உள்ள எல்லாத் தேசங்களுக்கும் (வர்ஷங்களுக்கும்) வடக்கு மேருதான். ஸர்வேஷாமபி வர்ஷாணாம் மேரு: உத்தரத ஸ்தித: என்றதன் அர்த்தம் இதுதான்.

துருவத்திலே எப்படியிருக்கிறது? அங்கே ஆறுமாஸம் முழுவதும் பகலாகவும், ஆறு மாஸம் முழுவதும் இரவாகவும் இருக்கிறது. இதை ஆரம்ப கிளாஸிலேயே படித்திருக்கிறோமே! ஒரு பகலும் ஒரு இரவும் சேர்ந்தது ஒரு நாள் என்கிறபடி, ஆறுமாஸம் பகலாகவும் ஆறு மாஸம் இரவாகவும் உள்ள துருவத்திற்கு நம்முடைய ஒரு வருஷம் ஒரு நாளாகிறது. இதைத்தான் தேவர்களுடைய ஒரு தினம் நமக்கு ஒரு வருஷம் என்பது.

பூமி சுற்றும்போது அதன் பக்கவாட்டிலுள்ள ஸகல பாகங்களும் சுற்றினாலும், உச்சிப் பாயின்டும், இதே மாதிரி அடியில் தென்துருவத்தில் உள்ள பாயின்டும் சுற்ற முடியாது. சுற்ற முடியாத அளவுக்குச் சின்னதுதானே பாயின்ட்? சுற்றுவதினாலேதான் மற்றப் பகுதிகளில் சூரிய சந்திரனோடு தினந்தினமும் பல கோணங்களில் சம்பந்தப்பட்டு ஓரிடத்தில் பதினெட்டு மணி வெய்யில் அடிக்கிறது; ஆறு மணி அளவே ராத்திரியாயிருக்கிறது. அதற்கு நேர் எதிரே ஓரிடத்தில் ஆறே மணி வெய்யிலாகவும் பதினெட்டு மணி ராத்திரியாகவும் இருக்கிறது. இரவு பகலில் பூமியின் பல பாகங்களுக்கிடையில் ஏகப்பட்ட கால வித்யாஸம் இருக்கிறது. சில நாட்களில் மட்டுமே சூரியன் நேர்கிழக்காக உதிக்கிறான்; தலைக்கு நேரே ஒரு டிகிரிக்கூடத் தப்பாமல் வருகிறான்; மற்ற நாட்களில் வடகிழக்கிலிருந்து தென்கிழக்கு வரையில் பல கோணங்களில் (angle -களில்) சூரியோதயம் ஏற்படுகிறது. வட துருவத்தில இப்படியில்லை. அங்கே ஆறு மாஸம் பகலிலிருந்து ஆறு மாஸம் இரவுக்குப் போய், மறுபடி அதிலிருந்து ஆறு மாஸம் பகலுக்கு வரும் போது சூரிய கதியைப் பார்த்தால், அந்த இடமானது சூரியனைச் சுற்றாமல், சூரியன்தான் அந்த இடத்தைச் சுற்றி வருகிறான் என்றே தோன்றும். மேரு ஸூரியனைப் பிரதக்ஷிணம் பண்ணுகிறான் என்பது இதைத்தான்.

வடதுருவத்தில் ஸூரிய வெளிச்சமுள்ள ஆறு மாஸங்களை உத்தராயணம் என்றும், அங்கே இரவாகித் தென்துருவத்தில் வெளிச்சமிருக்கிற ஆறு மாஸங்களை தக்ஷிணாயனம் என்றும் சொல்கிறோம்.

வடதுருவத்துக்கு ஸுமேரு என்றும், தென் துருவத்துக்குக் குமேரு என்றும் பெயர். (ஸுமேரியா தேசம்கூட ‘ஸுமேரு’விலிருந்து வந்ததுதான். அங்கே வேதத்தில் வரும் தேவதைகளின் வழிபாடு இருந்தது என்று சொல்கிறார்கள்.) வடக்கே தேவர்கள் இருப்பது போல் தெற்கே பித்ரு லோகமும் நரகமும் இருக்கின்றன. தேவதைகளையோ, பித்ருக்களான ஆவிகளையோ, நரகவாஸிகளையோ பார்ப்பதற்கு யோக சக்தியினால் திவ்ய திருஷ்டி பெறவேண்டும். நமக்கு அந்த த்ருஷ்டி இல்லாததால் அப்படிப்பட்ட லோகங்களும் இல்லை, ஜீவர்களும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. ருஷ்யாவில் பிறந்து, அமெரிக்காவில் வஸித்துவிட்டு, இந்தியாவில் வந்து ‘தியாஸாஃபிகல் ஸொஸைடி’ ஆரம்பித்த ப்ளாவட்ஸ்கி முதலானவர்கள் ஆவி உலக, தேவதா லோக விஷயங்களைத்தான் முக்யமாகச் சொல்லியிருக்கிறார்கள். இது மட்டுமில்லை. இக்கால ஸயன்டிஸ்ட்களில் ரொம்பவும் முக்யமாக நினைக்கப்படுகிற ஆலிவர் லாட்ஜ் என்கிறவர் கூட, பிற்காலத்தில் ஸயன்ஸைவிட முக்யமாக இந்த ஆவிகள், தேவதைகள் இவற்றின் ஆராய்ச்சியிலேயே இறங்கி, ‘இவை எல்லாம் நிச்சயமாக இருக்கின்றன; இவைகளைக் கொண்டு மனிதன் அநுகூலங்களை அடையலாம்’ என்று புஸ்தகங்கள் எழுதியிருக்கிறார். ஜ்யோதிஷம் முதலான சாஸ்திரங்கள் ஒருபுறம் அஸ்ட்ரானமி மாதிரியான ஸயன்ஸ்களைச் சொல்லிவிட்டு உடனே spiritualism-க்கும் போகிறதே என்று கேட்டால், இவை இரண்டுக்கும் விரோதமில்லை என்று சொல்வது போல ஒரு பெரிய விஞ்ஞானியே ஸமீபத்தில் இப்படிப் பண்ணியிருக்கிறார்.

நாம் ஒருவருக்கொருவர் பழகிக் கொள்கிறதுபோல மநுஷ்யர்கள் தேவர்களோடு பழகி வந்த புராதன காலத்தில் ஏற்பட்டவை நம் சாஸ்திரங்கள். நம்முடைய [கர்மாக்களைத் தொடங்கு முன் செய்ய வேண்டிய] ஸங்கல்பத்தைப் பார்த்தாலே இது தெரிகிறது. இந்த ஸங்கல்பமானது எத்தனையோ யுகாந்தரங்களுக்கு முன், கோடிக்கு அப்புறம் எத்தனையோ ஸைஃபர்கள் போட வேண்டிய அத்தனை காலத்துக்கு முன், ஸ்ருஷ்டி ஏற்பட்டதிலிருந்து இன்று வரைக்கும் காலத்தை நிர்ணயம் பண்ணித் தருகிறது. யுகத்தின் ஆரம்பத்தில் க்ரஹங்கள் எப்படியிருந்தன என்பது கூட ஜ்யோதிஷக் கணக்கால் தெரிகிறது. அப்போது எல்லா க்ரஹங்களும் ஒரே வரிசையில் இருந்தனவாம்.

சில கணக்குகள் இப்போது வித்யாஸப் படுகின்றன, பிரத்யக்ஷத்தில் பார்க்கிற சில நிலவரங்கள் சாஸ்திரத்துக்கு மாறாக இருக்கின்றன என்றால், உடனே ‘சாஸ்திரம் புளுகு மூட்டை’ என்று ஆரம்பித்துவிடக்கூடாது. எல்லா க்ரஹங்களும் நேராக இருந்த புராதன காலம், துருவ நக்ஷத்ரத்துக்கு சரியாக நேரே பூமியின் துருவம் இருந்த ரொம்பப் பழைய காலம் — இவற்றிலிருந்தே சாஸ்திரங்கள் இருந்திருக்கின்றன. அதற்குப் பின், பல யுகங்களில் Nature-ல் (இயற்கையில்) மகத்தான மாறுதல் ஏற்பட்டு, பூமி மலையாகவும், மலை ஸமுத்ரமாகவும், ஸமுத்திரம் பாலைவனமாகவும் இப்படியெல்லாம் ஆகியிருக்கிறது. இந்த விவரங்களை ஜியாலஜிஸ்ட்கள் சொல்கிறார்கள். அதோடுகூட வானமண்டலத்தில் கிரஹ ஸஞ்சாரங்களிலும் மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதாக அஸ்ட்ரானமிக்காரர்கள் சொல்கிறார்கள். இதனாலெல்லாந்தான் சாஸ்திரத்தில் என்றைக்கோ சொன்னதற்கு வித்யாஸமாகவும் சிலவற்றை இன்றைக்கு பார்க்கிறோம்.

ஜ்யோதிஷத்தில் கணக்குப் பண்ணி சிருஷ்டி எப்போது ஆரம்பித்தது என்று சொல்கிறார்களோ, அதுவே நவீன ஆராய்ச்சியால் அநுமானிக்கிற சிருஷ்டி காலத்துக்குக் கிட்டத் தட்ட சரியாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

கலியுகத்துக்கு 4,32,000 வருஷங்கள். த்வாபரயுகத்துக்கு இதைப்போல இரண்டு மடங்கான 8,64,000 வருஷம். த்ரேதாயுகத்துக்கு மூன்று மடங்கான 12,96,000 வருஷம். க்ருதயுகத்துக்கு நாலு மடங்கான 17,28,000 வருஷம். நாலு யுகங்களும் சேர்ந்த ‘சதுர்யுகம்’ அல்லது ‘மகாயுகம்’ என்பதற்கு 43,20,000 வருஷம். இப்படி ஆயிரம் மஹா யுகங்கள் சேர்ந்தால், அதுதான் பிரம்மாவின் ஒரு பகல் வேளை. அதுவே கல்பம் என்பது. அது 14 மநுக்களின் ஆட்சிக்காலம். ‘மநு’வின் ஆட்சிக்காலம்தான் ‘மன்வந்த்ரம்’ என்பது. நாம் பல ராஜாக்களையும் குடியரசுகளையும் வைத்துக் கொண்டிருந்தாலும், லோகம் பூராவுக்கும் மேலாதிக்கம் உள்ளவராக பகவான் மநு என்பவரையே வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட மநுக்கள் பதினாலு பேர், மநுஷ்ய இன ஸ்ருஷ்டியிலிருந்து அது முடிகிறவரை ஆட்சி நடத்துகிறார்கள். மநுவிலிருந்து தோன்றுவதால்தான் நமக்கு மநுஷ்யர், மநுஜர் முதலான பேர்கள் இருக்கின்றன. Man என்பதும் மநுவிலிருந்து வந்ததுதான். இப்போது ச்வேத வராஹ கல்பம் என்ற பிரம்மாவின் பகல் வேளையில் ஏழாமவரான வைவஸ்த மநுவின் காலத்திலே, இத்தனாம் ஆண்டில் நாம் இருக்கிறோம் என்று ஸங்கல்பத்தில் சொல்லப்படுகிறது. இதிலிருந்து கணக்கு பண்ணி முதலாமவரான ஸ்வாயம்புவ மநு எப்போது தோன்றியிருப்பார், அதாவது இந்த கல்பத்தில் ஸ்ருஷ்டி எப்போது ஆரம்பித்திருக்கும் என்று பார்த்தால், அந்தக் காலக் கணக்கும் மநுஷ்ய இனம் (Human Species) எப்போது தோன்றிற்று என்று ஸயன்ஸில் சொல்லுகிறார்களோ அதுவும் ரொம்பக் கிட்டத்தில் இருக்கிறது என்கிறார்கள்.

‘மன்’ என்றால் ‘நினைப்பது’. நினைக்கிற காரியத்தைச் செய்கிற அங்கம்தான் மனஸ். அதை வைத்தே மநுவுக்கு இப்படிப் பெயர் ஏற்பட்டது. சிந்தனா சக்தி வாய்ந்த மனிதகுலத்துக்கு முதல்வராக அவர் இருக்கிறார். Man is a thinking animal என்று சொல்வதற்கேற்ப, நினைக்கத் தெரிந்ததே இவனுடைய சிறப்பு என்பதால்தான், மநுவிடமிருந்து வந்தவர்களுக்கும் மநுஷ்யர் என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது.

பதினாலு மநுக்களின் ஆயுட்காலமும் சேர்ந்த ஆயிரம் சதுர்யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு பகல் என்றால் அதற்கு 432,00,00,000 (432 கோடி) வருஷம்; அதே அளவு வருஷம் ஒரு ராத்திரி. அதாவது 864 கோடி வருஷம் பிரம்மாவுக்கு ஒரு முழு நாள். அதுவே கல்பம் என்பதுமுண்டு. அதிலே பகலில்தான் ஸ்ருஷ்டி நடப்பது. ராத்திரியில் ஸ்ருஷ்டி அடங்கிப் போன ப்ரளயம். இப்படி 365 நாட்கள் ஒரு பிரம்ம ஸம்வத்ஸரம் (வருஷம், ஆண்டு) . இதைப் போல் நூறு வருஷங்கள் அவருடைய ஆயுஸ். இந்த பிரபஞ்சத்தின் ஆயுஸும் அதுவே. அவரது ஆயுள் முடிகிற போது ஸகல லோகங்களும் இல்லாமல் போய்விடும். அதுதான் ‘ஆத்யந்திக பிரளயம்’ என்பது. அப்புறம் ஒரு பிரம்மா- ஆயுட்காலம் ஸ்ருஷ்டியே இல்லாமல், பிரம்மம் மட்டும் பிரபஞ்சமில்லாமல், தான் மாத்திரமாக இருக்கும். அப்புறம் மறுபடி இன்னொரு பிரம்மாவைக் கொண்டு சிருஷ்டியை ஆரம்பிக்கும். ஆஞ்சநேயர்தான் அடுத்த பிரம்மாவாக வரப்போகிறார் என்று சொல்வார்கள்.

‘ஆத்யந்திக ப்ரளயம்’ என்றால் சாச்வதமான ப்ரளயம் என்று அர்த்தம். ‘அத்யந்தம்’ என்ற வார்த்தையிலிருந்து ‘ஆத்யந்திக’ என்பது உண்டாயிருக்கிறது. ‘ப்ரளயம்’ என்றால் ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு, உணர்ச்சியில்லாமல் லயித்திருப்பது. ஆத்யந்திக ப்ரளயத்தில் இந்த லயம் என்பது பரமாத்மாவோடேயே சாச்வதமாக ஐக்யமாகி விடுவதாகி விடுகிறது. ஸ்ருஷ்டி கர்த்தாவான ப்ரம்மா நூறு வயஸு பூர்த்தியாகிப் பரமாத்மாவோடு ஐக்யமாகிறபோது, அவர் உண்டாக்கிய ஸ்ருஷ்டியும் சேர்ந்து ஐக்யமாகிவிடுகிறது. அப்புறம் புது ப்ரம்மா புது ஸ்ருஷ்டி ஆரம்பிக்கும் போதும் இந்த ஜீவர்கள் அதில் மறுபடி பிறப்பதில்லை. அதனால் இதை ‘மஹா ப்ரளயம்’ என்றும் சொல்வது.

வேறே இரண்டு ப்ரளயங்களும் உண்டு. ஒவ்வொரு சதுர்யுக முடிவிலும் ஏற்படுவது ஒன்று. இதை வெறுமே ‘ப்ரளயம்’ என்பார்கள். ஆயிரம் சதுர்யுகத்திற்கொரு தரம் பிரம்மாவின் ஒவ்வொரு பகலின் முடிவிலும் ஏற்படும் கல்ப ப்ரளயம் இன்னொன்று. அவருடைய ஒவ்வொரு இராக்காலமும் முடிகிறவரை இது நீடித்து, அடுத்த பகல் உதிக்கும் போது முடிந்துவிடும். இரண்டு பகல்களுக்கு நடுவேயுள்ள ‘இன்டர்வெல்’ லில் இது நடப்பதால் இதற்கு ‘அவாந்தர ப்ரளயம்’ என்றும் பெயர். சதுர்யுக முடிவான ப்ரளயத்தில் அடங்கின ஜீவர்கள் அடுத்த சதுர்யுக ஸைக்கிள் ஆரம்பிக்கும் போது மறுபடி பிறக்கத்தான் செய்வார்கள். ‘அவாந்தர ப்ரளயம்’ அல்லது ‘கல்ப ப்ரளயம்’ என்பதில் அடங்கியவர்களும் அடுத்த கல்பத்தில் பிறக்கத்தான் செய்வார்கள்.

பூலோகம், புவர் லோகம், ஸுவர் லோகம், மஹர் லோகம், ஜன லோகம், தபோ லோகம், ஸத்ய லோகம் என்று ஏழு. இவற்றுக்குள்தான் மநுஷ்யர்கள், தேவர்கள் முதலான ஸகல இனங்களும் இருக்கின்றன. இவற்றில் பூலோகம், புவர்லோகம், ஸுவர் லோகம் இவை மூன்றும் ஒரு group-ஆக இருக்கின்றன. ‘பூர்ப்புவஸ்ஸுவ:’ என்று இவற்றைத்தான் அடிக்கடி கர்மாக்களில் குறிப்பிடுகிறோம். மற்ற நாலு லோகங்களும் இவற்றைவிட உயர்ந்தவை. பிரம்மா ஒவ்வொரு இரவிலும் தூங்கும்போது அவாந்தர ப்ரளயம் ஏற்படுகிறதல்லவா? அப்போது இந்த முதல் மூன்று லோகங்கள் மட்டும் பிரளயத்தில் அழிந்துவிடும். அவரது ஆயுஸ் முடிவான மஹாப் பிரளயத்திலோ மற்ற லோகங்களும் அழிந்துவிடும்.

ஸூர்யனுடைய உஷ்ணம் நமக்குத் தெரியாத அளவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வருகிறது என்று நவீன ஸயன்ஸில் கண்டு பிடித்திருக்கிறார்கள். ஸூர்ய உஷ்ணம் இல்லாவிட்டால் லோக வாழ்க்கை ஸாத்யமே இல்லை. ஆஹாரத்திலிருந்து ஆரம்பித்து லோக வாழ்வுக்கு வேண்டிய மழை, பருவக்காற்று எல்லாவற்றுக்கும் ஸூர்ய உஷ்ணந்தான் ஆதாரம் என்கிறார்கள். அதனால் இப்படி ஸூர்ய உஷ்ணம் குறைந்து கொண்டே போவதால், எத்தனையோ கோடி வருஷங்களுக்கு அப்புறம் நம் லோகமே இல்லாமற்போக வேண்டியதுதான் என்று ஒரு கணக்குக் கொடுத்திருக்கிறார்கள். சாஸ்திரப்படி பிரம்மாவின் அடுத்த அவாந்தரப் பிரளயம் எப்போது வரவேண்டுமோ, அதுவும் ஸயன்டிஸ்டுகள் கொடுக்கிற காலக் கெடுவும் சற்றேறக்குறைய ஒத்திருக்கின்றன.

ஸங்கல்பத்தில் சொல்கிறபடி இப்போது பிரம்மாவுக்குப் பாதிக்கு மேல் ஆயுஸ் தீர்ந்துவிட்டது. நமக்கு வாரத்தில் ஏழு நாள் பெயர்கள் மாதிரி ஏழு கல்பப் பெயர்கள் பிரம்மாவின் விஷயமாகச் சொல்கிறார்கள். அதில் இப்போது நாலாவதான ச்வேத வராஹ கல்பத்தில் பாதிக்குமேல் வந்து விட்டோம். பிரம்மாவுக்கு இன்றைக்கு இத்தனை வயசு, இத்தனை மாஸம், தேதி, அதில் இன்ன யாமம், அப்புறம் நாம் இன்ன கல்பத்தில், இன்ன மன்வந்தரத்தில், இன்ன சதுர்யுகத்தில், இன்ன யுகத்தில், இன்ன சகாப்தத்தில், ப்ரபவ முதலான அறுபது வருஷங்களில் நம் மநுஷ்யப் பஞ்சாங்கத்தின்படி இன்ன வருஷம், மாஸம், தேதியில், லக்னத்தில் இருக்கிறோம் என்கிற வரையில் எல்லாவற்றையும் ஸங்கல்பத்தில் சொல்கிறோம்.

இந்தக் கணக்குப்படி பிரம்மா எப்போது தோன்றியிருப்பார் என்று பார்த்தால், அதுவும், பிரபஞ்சம் எப்போது தோன்றியிருக்கும் என்று ஸயன்ஸில் போட்டிருக்கிற கணக்கும், ஏறக்குறைய ஸரியாக இருக்கின்றன என்கிறார்கள்.

பிரம்மாவின் வயஸைச் சொல்வதில் ஒரு வேடிக்கை. ‘பரார்த்த-த்வய-ஜீவி’ என்று பிரம்மாவைச் சொல்கிறார்கள். அதாவது இரண்டு பரார்த்தங்கள் உயிர் வாழ்கிறவர் என்று அர்த்தம். பரார்த்தம் என்றால் ‘பர’ என்கிற எண்ணிக்கையில் பாதி (அர்த்தம்) என்று அர்த்தம். அதாவது ‘பரார்த்த-த்வய -ஜீவி’ என்றால் ‘இரண்டு × அரைப் பர ஆயுஸ்காரர்’ என்று அர்த்தம். ‘இரண்டு × அரைப் பர’ என்றால் ஒரு ‘பர’ தானே? அதனால் ‘பரார்த்த த்வயம்’ என்காமல் ‘பர’ என்றே சொல்லி விட்டால் போதும். ஆனாலும் பிரம்மா இப்போது பாதிப் ‘பர’வைத் தாண்டி 51-வது வயதில் இருப்பதால், ‘பர’வில் பாதியை முக்யமாக நினைத்து, ‘பரார்த்த’த்தையே குறிப்பிடுகிறோம்.

ஆயிரம் சதுர்யுகம் கொண்டதான பிரம்மாவின் ஒரு பகலுக்குள் 14 மநுக்களின் ஆட்சி நடப்பதால் ஒரு மந்வந்தரத்திற்கு 71 சதுர்யுகங்கள். இந்த வைவஸ்தவ மன்வந்தரத்தில் இப்போது நடப்பது 28-வது சதுர்யுகம். அதில் இது கலியுகம். நாம் பண்ணும் ஸங்கல்பத்தில் இவ்வளவும் இருக்கின்றன! திதி,லக்கினம் வரையில் சொல்வதுண்டு. இவ்வளவும் காலக் கணக்கு.

தேசக் கணக்கு வேறு அந்த ஸங்கல்பத்தில் இருக்கிறது. பிரம்மாண்டம் முழுதையும் வர்ணித்து, அதிலே நாம் இருக்கிற ஊர் வரையில் கொண்டு வந்துவிடுகிறது. நாம் கடிதங்களில் ஊரையும் தேதியையும் எழுதுவது போல ஸங்கல்பத்தில் தேசத்தையும் காலத்தையும் சொல்லிக் கொள்கிறோம். இவ்வளவு அருமையான கணக்குகள் ஜ்யோதிஷ சாஸ்திரத்தினால் அறியப்படுகின்றன.

புராதன நூல்களில் நவீனக் கண்டுபிடிப்புக்கள்

வராஹமிஹிரர் “ப்ருஹத் ஸம்ஹிதை’ என்று ஒரு கிரந்தம் எழுதியிருக்கிறார் என்றேனல்லவா? அதில் இல்லாத விஞ்ஞானக் கண்டுபிடிப்பு இல்லை.

வெறும் ஆகாசத்தில் இந்தக் கிரஹங்களெல்லாம் இருக்கின்றனவே. விழாமல் எப்படி நிற்கின்றன? இதற்குக் காரணத்தை நியூடன் என்பவர்தாம் கண்டுபிடித்தார் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். மிகப் பழைய காலத்தில் உண்டான சூரிய சித்தாந்தத்தின் ஆரம்பத்தில் இருக்கிற ச்லோகமே, பூமி விழாமல் இருப்பதற்கு ஆகர்ஷண சக்தி காரணம் என்று சொல்லுகிறது. நம் பகவத்பாதாளின் உபநிஷத் பாஷ்யத்திலும் பூமிக்கு ஆகர்ஷண சக்தி இருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு வஸ்துவை நாம் மேலே வீசி எறிந்தால் அது மறுபடியும் கீழே வந்து விழுகிறது. அப்படி விழுவது அதனுடைய ஸ்வபாவகுணம் அல்ல. அது பூமியில் விழுவதற்குக் காரணம் பூமியின் ஆகர்ஷண சக்தியே. ஆகர்ஷண சக்தி யென்றால் இழுக்கும் சக்தி என்பது அர்த்தம். பிராணன் மேலே போகும்; அபானன் அதைக் கீழே இழுக்கிறது. ஆகவே, கீழே இழுக்கிற சக்திக்கு அபானசக்தி என்று பெயர். ஸ்ரீ ஆசார்யரவர்கள் பிருதிவிக்கு அபானசக்தி, அதாவது ஆகர்ஷண சக்தி, இருக்கிறதென்று சொல்லியிருக்கிறார்கள். ப்ரச்நோபநிஷத்தில் (III.8.) “ப்ருதிவியின் தேவதையே மநுஷ்ய சரீரத்தில் அபானனை இயக்குகிறது” என்று வருகிறது. அதன் பாஷ்யத்தில் ஆசார்யாள், மேலே போட்ட பொருளை பூமி ஆகர்ஷிக்கிற மாதிரி, மேலே போகிற பிராணனை அபானம் கீழே இழுப்பதைப் பற்றிச் சொல்கிறார். இதனால் உபநிஷத்திலேயே Law of Gravitation பேசப்படுவதாக ஆகிறது. இவைகளைப் போன்ற பல அருமையான விஷயங்கள் நம்முடைய சாஸ்திரங்களில் இருக்கின்றன. நமக்கு இவைகள் தெரியாததனால் தேசாந்திரத்தில் உள்ளவர்கள் நமக்கு எவ்வளவோ காலம் பிற்பட்டு எழுதியவைகளுக்கு அளவில்லாத கௌரவத்தைக் கொடுக்கிறோம்.

இப்பொழுது எவ்வளவு விதமான கணக்குகள் லோகத்தில் இருக்கின்றனவோ அவ்வளவு கணக்குகளும் எவ்வளவோ வருஷங்களுக்கு முன்பே உண்டான நம்முடைய ஜ்யோதிஷ சாஸ்திரங்களில் இருக்கின்றன.

[ஸ்ருஷ்டி தொடக்கமான] கல்பாரம்பத்தில் எல்லாக் கிரஹங்களும் ஒரே நேராக இருந்தன. அப்புறம் காலம் ஆக ஆக அவை கொஞ்சங் கொஞ்சமாக மாறிக் கொண்டே வருகின்றன. மற்றொரு கல்பாரம்பத்தில் மறுபடியும் நேராக வந்துவிடும்.

நாம் செய்யும் கர்மாக்களில் முதலில் சொல்லும் ஸங்கல்பத்தில் பிரபஞ்ச வர்ணனை, கால அளவை என்றெல்லாம் சொல்லப்படுகிற அவ்வளவும் ஜ்யோதிஷ விஷயந்தான்.

பூ ஆகர்ஷணம் மட்டுமில்லை, பூமி சுற்றுவதையும்கூட ஆர்யபடர், வராஹமிஹிரர் முதலானவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ‘பூமிதான் நம் பிரபஞ்சத்துக்கு மத்தியாக நின்ற இடத்தில் நின்று கொண்டிருக்கிறது. ஸூர்யனே அதைச் சுற்றி வருகிறான். அதனால்தான் இரவு பகல் உண்டாயிருக்கின்றன’ என்றே மேல் நாட்டுக்காரர்கள் பதினாறாம் நூற்றாண்டுவரை நினைத்து வந்தார்கள். இதற்குக் கொஞ்சம் மாறாக யாராவது ஆராய்ச்சி பண்ணிச் சொன்னால், அவரை மதகுருமார்கள் stake என்ற கம்பத்தில் கட்டி நெருப்பை வைத்துக் கொளுத்தினார்கள்! ஆனால் ரொம்பவும் பூர்வ காலத்திலேயே நமக்கு இந்த விஷயங்கள் தெரிந்திருந்தன.

பூமிதான் ஸூர்யனைச் சுற்றுகிறது, ஸூர்யன் பூமியைச் சுற்றுவதில்லை என்பதற்கு, ஆர்யபடர் ரொம்ப அழகாக ஒரு பேர் கொடுத்திருக்கிறார். அதற்கு ‘லாகவ – கௌரவ நியாயம்’ என்று பேர். லகு என்றால் லேசானது, சின்னது என்று அர்த்தம். ‘லகு’வைக் குறிப்பது ‘லாகவம்’. ‘லேசாக’, ‘லைட்’டாக ஒன்றை எடுத்துக் கொண்டு செய்வதைத்தான் ‘கை லாகவம்’, ‘ஹஸ்த லாகவம்’ என்கிறோம். லகுவுக்கு ஆப்போஸிட் (எதிர்ப்பதம்) குரு. கனமானது, பெரியது எதுவோ அதுவே குரு. மஹாகனம் பொருந்தியவர், கனவான், பெரியவர்கள் எனப்படுகிறவரே குரு. அவர்தான் ஆசாரியர். ஆசாரியர் குரு என்றால், அப்போது சிஷ்யன்தான் லகு. குருவான ஆசாரியரைத்தானே லகுவான சிஷ்யன் பிரதக்ஷிணம் பண்ணுகிறான்? அதாவது சுற்றிச் சுற்றி வருகிறான்? ஆசாரியர் சிஷ்ய பிரதக்ஷிணம் பண்ணுவாரா? மாட்டார். நம் பிரபஞ்சத்தில் (solar system -லே) பெரியது, குருவானது ஸூர்யன் தான்; லகு பூமி. குருவைத்தான் லகு பிரதக்ஷிணம் செய்யும் என்பதே ‘லாகவ-கௌரவ நியாயம்’! இதன்படி பூமிதான் ஸூர்யனைச் சுற்ற வேண்டும். இப்படிப் பிரபஞ்சத்தை குரு – சிஷ்ய கிரமமாக பார்த்து சாஸ்திரமாகவும் ஸயன்ஸாகவும் ஆர்யபடர் சொல்லியிருக்கிறார்.

இப்போது நாம் எந்த மதஸ்தர்கள் விஞ்ஞான சாஸ்திரம் வளர முடியாதபடி விஞ்ஞானிகளை ‘ஹெரிடிக்’ என்று சொல்லிக் கொளுத்தினார்களோ, அதே மதஸ்தர்களோடு சேர்ந்துகொண்டு, “இந்தியாவில் ஸயன்ஸ் வளராததற்கு காரணம் ஹிந்து மதம்தான். பரலோகம், பரலோகம் என்று சொல்லிக்கொண்டு ஹிந்து மதம் இந்த லோகத்து விஷயங்களையெல்லாம் அலக்ஷ்யம் செய்துவிட்டது” என்று குற்றம் சொல்கிறோம்! வாஸ்தவத்தில் அத்தனை ஸயன்ஸுகளும் நம் சாஸ்திரங்களிலே இருக்கின்றன.

ஸூர்யன் இருந்தபடிதான் இருக்கிறது; பூமிதான் அதைச் சுற்றி வருகிறது; பூமி சுற்றுவதால்தான் ஸூர்யன் உதிப்பதாகவும் அஸ்தமிப்பதாகவும் தோன்றுகிறதேயன்றி வாஸ்தவத்தில் ஸூர்யன் பூமியின் கிழக்கே தினம் தினம் உதித்து அப்புறம் மேற்கே நகர்ந்துகொண்டேபோய் அஸ்தமிக்கவில்லை என்ற விஷயம் ரிக்வேதத்திலுள்ள ஐதரேய பிராம்மணத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. “ஸூர்யன் உதிப்பதும் இல்லை; அஸ்தமிப்பதும் இல்லை” என்று அதிலே தெளிவாகச் சொல்லியிருக்கிறது

பூமி சுற்றுகிற விஷயம் வித்வான்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்த விஷயம் என்பதற்குத் திருமலை நாயகரிடம் மந்திரியாக இருந்த நீலகண்ட தீக்ஷிதரின், “சிவோத்கர்ஷ மஞ்ஜரி”யில் ஆதாரம் இருக்கிறது. ‘பூமிர் ப்ராமயதி’ என்றே இதில் கடைசி சுலோகம் ஆரம்பிக்கிறது. அந்த ச்லோகத்திலிருந்து, நீலகண்ட தீக்ஷிதருக்குப் பெரிய பாட்டனாரான அப்பய தீக்ஷிதருக்கும் பூமி சுற்றும் விஷயம் தெரியும் என்பது தெரிகிறது. [அந்த] ச்லோகத்தில் என்ன சொல்லியிருக்கிறது?

ஈச்வரனுக்கு அஷ்டமூர்த்தி என்பது ஒரு பெயர். பூமி, ஜலம், வாயு, அக்னி, ஆகாசம், ஸூர்யன், சந்திரன் (யாகம் செய்கிறவனான) யஜமானன் ஆகிய இந்த எட்டும் ஈச்வரனுடைய மூர்த்திகள். இவற்றிலே யஜமானன் ஒருத்தனுக்கு மட்டும் ப்ரமணம் (சுற்றுதல்) இல்லை. பாக்கி ஏழும் ப்ரமணம் உடையவையே என்று அப்பய தீஷிதர் சொல்லியிருக்கிறார். அப்படி அவர் சொல்லியிருக்கிறார் என்பதை அவருடைய தம்பி பேரரான நீலகண்ட தீக்ஷிதர் இந்த ச்லோகத்தில் எடுத்துக்காட்டியிருக்கிறார்.

காற்று நின்ற இடத்தில் நிற்காமல் சுற்றுவதும், நெருப்பும் கொஞ்சம்கூட ஸ்டெடியாக இல்லாமல் அசைந்து ஆடுவதும், ஜலமும் இப்படியே ஒரு இடமாக இருக்க முடியாமல் ஓடுவதும் நம் கண்ணுக்கே தெரிவதுதான். ஆகாசத்தைப் பார்க்கும் போது ஸூர்ய – சந்திரர்கள் சுற்றுவது தெரிகிறது. ஆகாசத்திலேதான் ஸகல ஸப்தங்களும் இருக்கின்றன. சலனம்தான் சப்தமூலம் என்பதால் அந்த ஆகாசமும் ப்ரமணமுடையது என்று தெரிகிறது. ஆனால் பூமியைப் பார்த்தால் அது, போட்டது போட்டபடி இருக்கிற மாதிரித்தானே தெரிகிறது? இப்படித் தெரிந்தாலும், அதுவும் சுற்றுகிற ஏழில் ஒன்று என்றே அப்பைய தீக்ஷிதர் கருதியிருக்கிறார். “பூமிர் ப்ராமயதி” என்று ச்லோகம் ஆரம்பிப்பது பூமியின் சுழற்சியைத் தான் சொல்கிறது.

பூமியின் ஆகர்ஷணம், சுற்றுவது முதலியன இருக்கட்டும். பூமியின் ரூபத்தையே பார்க்கலாம். வெள்ளைக்காரர்கள் என்ன சொல்கிறார்கள்? ‘பூமி தட்டையாகத் தோசைக்கல் மாதிரி இருக்கிறது என்றுதான் பழங்காலத்தில் நினைத்தார்கள். அது தட்டையாக இல்லை, பந்து மாதிரி உருண்டையாக இருக்கிறது என்று நாங்கள்தான் ஸமீப நூற்றாண்டுகளில் கண்டுபிடித்தோம்’ என்கிறார்கள். ஸரி, ‘ஜாகரஃபி’க்குப் பேர் என்ன சொல்கிறோம்? ‘பூகோள சாஸ்திரம்’ என்கிறோம். ‘பூசாஸ்திரம்’ என்று சொன்னாலே போதும். ஆனாலும் பூமியானது கோளமாக, அதாவது உருண்டையாக இருப்பது நமக்கு ஆதிகாலத்திலிருந்தே தெரியும் என்று தெரிவிப்பதாகத்தான் ‘பூகோளம்‘ என்று சொல்லியிருக்கிறது.

Universe எனப்படும் ஸகல நக்ஷத்ர லோகங்களும் உட்பட்ட பிரபஞ்சத்தை ‘ப்ரம்மாண்டம்’ என்கிறோம். ‘பிரம்மனால் படைக்கப்பட்ட அண்டம்’ இது. அண்டம் என்றால் என்ன தெரியுமா? கோழி முட்டை. கோழி முட்டை திட்டமான உருண்டையாக இருப்பதல்ல. ஒரு உருண்டையின் ஓரங்களைத் தட்டிவிட்ட மாதிரி நீளவட்டத்தில் கனபரிமாணம் உள்ளதாக முட்டை இருக்கிறது. நவீன விஞ்ஞானத்திலும் Universe என்பது உருண்டையாக (spherical) இல்லை; முட்டை மாதிரி oval வடிவத்தில் கனபரிமாணமுள்ளதாக elliptical -ஆகவே இருக்கிறது என்கிறார்கள்.

இந்தப் பிரபஞ்சம் முழுக்க நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது என்ற மாடர்ன் அஸ்ட்ரானமியில் சொல்கிறார்களென்றால் வேதகாலத்திலிருந்து நாம் இதற்குத் தந்திருக்கிற பேரே இந்த உண்மையைத்தான் சொல்கிறது. ‘ஜகத்’, ‘ஜகத்’ என்றே நாம் சொல்கிறோம். ‘ஜகத்’ என்றால் நின்ற இடத்தில் நிற்காமல் போய்க்கொண்டேயிருப்பது என்றுதான் அர்த்தம் .

பூமி சுற்றுகிறது என்ற வாதத்தை ஆக்ஷேபித்தவர்களும் நம்மவர்களில் சிலர் இருந்துதான் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சாராருடைய அபிப்பிராயத்தைச் சொல்கிறேன்: பூமியின் சுற்றளவு (circumference) சுமார் இருபத்தையாயிரம் மைல். அதனால் ஒரு நாளில் (24 மணிகளில்) பூமி ஒரு தடவை தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது என்றால், அது மணிக்கு ஆயிரம் மைல் சுற்றுகிறது என்று அர்த்தம். அப்படியென்றால், ஒரு நிமிஷத்தில் அது பதினாறு அல்லது பதினேழு மைல் சுற்றுகிறது. அதாவது, பூமி சுற்றிக் கொண்டேயிருப்பதால் இந்த நிமிஷத்தில் இந்த மயிலாப்பூர் இருக்கிற இடத்தில், அடுத்த நிமிஷம் இங்கேயிருந்து பதினேழு மைலில் இருக்கிற ஒரு ஊரோ, சமுத்ரமோ வந்தாக வேண்டும். இந்த நிமிஷத்திலே இந்த மயிலாப்பூரில் உட்கார்ந்து கொண்டிருக்கிற காக்காய் உட்கார்ந்த இடத்தைவிட்டு எழும்பி ஆகாசத்தில் நேரே போகிறது. அடுத்த நிமிஷம் அது கீழே வருகிறது. முன்னே எங்கே உட்கார்ந்திருந்ததோ அதே மயிலாப்பூர் மரத்தில் அல்லது மாடியில் வந்து உட்காருகிறது. பூமி சுற்றுவது நிஜமானால் இது எப்படி ஸாத்தியமாக இருக்க முடியும்? அது மேலே எழும்பின ஒரு நிமிஷத்தில் கீழே இருக்கிற பூமி சுற்றுகிற சுற்றில் மயிலாப்பூர் இருக்கிற இடம் நகர்ந்து பதினேழு மைலுக்கு அந்தண்டை உள்ள இடமல்லவா இங்கே வந்திருக்க வேண்டும்? – இப்படிக் கேட்கிறார் பூப்ரமண ஸித்தாந்தத்தை ஆக்ஷேபிக்கிறவர்.

இதற்கு மேற்படி ஸித்தாந்திகள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று நான் பார்க்கவில்லை. ஆனால் நவீன விஞ்ஞானம் படித்தவர்களைக் கேட்டபோது, “பூமியைச் சுற்றி சுமார் 200 மைலுக்கு atmosphere என்ற காற்று மண்டலம் இருக்கிறது; அதற்கப்புறமும் உறைகள் மாதிரிச் சில மண்டலங்கள் இருக்கின்றன; இவையும் பூமியோடு கூடவே சுற்றி வருகின்றன” என்று விளக்குகிறார்கள். நான் இப்போது சொன்னதில் கொஞ்சம் பிசகு இருந்தாலும் இருக்கலாம். அதெப்படியானாலும், பூமி மட்டுமன்றி அதன் அட்மாஸ்ஃபியரும் அதோடுகூட சுற்றுகிறது என்பதில் சந்தேகமில்லை.

Arabic Numeral என்று சொல்கிற 1,2,3,4 இலக்கங்களுக்கு இந்தியாதான் மூலமான தாய்வீடு என்று, இப்போது மேல் நாட்டினர் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஸைஃபர் என்பதே இந்தியாவிலிருந்து வந்ததுதான் என்று மேல்நாட்டு அறிஞர்கள் சொல்கிறார்கள். இது தெரிய வந்ததால்தான் கணித சாஸ்திரம் பூரண ரூபம் பெற முடிந்தது என்கிறார்கள்.

ஸைஃபர் வந்தது மட்டுமில்லை, எந்த இலக்கத்தை ஸைஃபரால் வகுத்தாலும் infinity (அனந்தம்) வருகிறது என்ற சூக்ஷ்மமான கணித உண்மையையும் பாஸ்கராசாரியார் சொல்லி அதைப் பரமாத்ம தத்வத்தோடு சேர்த்துத் தம் கணித சாஸ்திரத்தின் மங்கள ச்லோகமாகக் கூறுகிறார்.

வகுக்கும் எண் (divisor) சின்னதாக ஆக ஆக ஈவு (quotient) பெரிதாகும் அல்லவா? பதினாறை எட்டால் வகுத்தால் (அதாவது வகுக்கும் எண் எட்டாக இருந்தால்) ஈவு 2; வகுக்கும் எண் நாலானால் ஈவு 4; இரண்டானால் ஈவு 8 ஆகிறது. ஸைஃபராலேயே வகுத்து விட்டால்? அப்போது ஈவானது எண்ணிக்கையாலேயே குறிப்பிட முடியாத அனந்தமாகிவிடுகிறது; infinity ஆகி விடுகிறது. வகுபடும் எண் எதுவானாலும் சரி, அதை வகுக்கிற எண் ஸைஃபரானால் ஈவு அனந்தம். இதற்கு கஹரம் என்று பாஸ்கராச்சாரியர் பேர் கொடுத்திருக்கிறார். ‘கம்’ (Kham) என்றால் ஸைஃபர்; ‘ஹரம்’ என்றால் வகுத்தல், ‘இப்படி அனந்தமாக இருக்கிற பரமாத்மாவை நமஸ்கரிக்கிறேன்’ என்று தம்முடைய கணித சாஸ்திரத்தில் அவர் சொல்கிறார்.

சகுனம், நிமித்தம்

ஜ்யோதிஷ சாஸ்திரத்தில், “ஸம்ஹிதா ஸ்கந்தம்” என்று ஒரு பிரிவு இருக்கிறது என்றேனல்லவா? ஜலம் எங்கே ஓடுகிறது? பூமிக்குள் நதி under-current ஆக எங்கெங்கே போகிறது? உள்ளே ஜலம் இருப்பதற்கு மேலே என்ன என்ன அடையாளம் இருக்கும்?- என்பவைகளைப் போன்ற பல விஷயங்கள் அதில் சொல்லப்பட்டிருக்கின்றன. வாசனைத் திரவியங்கள் செய்யும் விதம், வீடு கட்டும் அளவு, சகுன சாஸ்திரம், நிமித்த சாஸ்திரம் முதலிய எல்லாம் இந்த ஸம்ஹிதையில் சொல்லப்படும்.

சகுனம் வேறு, நிமித்தம் வேறு. நிமித்தம் என்பதுதான் வரப்போவதை ஏதோ ஒரு தினுஸில் அடையாளம் காட்டுவதற்குப் பொதுப் பெயர். அதில் ஒரு வகையே சகுனம். சகுனம் என்பதற்கு ‘பக்ஷி’ என்பது அர்த்தம். பக்ஷிகளால் ஏற்படும் நிமித்தங்களுக்குத்தான் சகுனம் என்று பெயர். உலகத்தில் ஒன்றுக்கொன்று ஸம்பந்தமில்லாத வஸ்து ஒன்றும் இல்லை. நடக்கும் காரியங்களும் அப்படியே. ஸரியான கணக்குத் தெரிந்தால் எல்லாம் தெரிந்து கொள்ளலாம். உலகத்தில் நடப்பவை எல்லாம் ஒரே ஒருவருடைய ஆக்ஞையால்தான் நடக்கின்றன; ஒரே கணக்காக நடக்கின்றன. அதனால் ஒரு காரியத்தைக் கொண்டு மற்ற எல்லாவற்றையும் கண்டு பிடிக்கலாம். கை ரேகை, ஆரூடம், க்ரஹநிலை முதலிய எல்லாம் ஒன்றுக்கொன்று ஸம்பந்தம் உடையனவாகவே இருக்கின்றன. எல்லாம் நிஜம்தான். இவற்றில் ஒன்றே நிமித்தம். அதில் ஒரு அங்கமே சகுனம்.

ஒரு பக்ஷி வலமிருந்து இடம்போனால் இன்ன பலன்; இன்ன பக்ஷி கத்தினால் இன்ன விளைவு ஏற்படும் என்று சகுன சாஸ்திரம் கூறும்.

‘நிமித்தம்’ என்பதிலேயே, நாம் ‘சகுனம் பார்ப்பது’ என்று சொல்வதிலுள்ள மற்ற எல்லாம் வரும். Omen என்று பொதுவாகச் சொல்வது நிமித்தம்தான். [கீதை ஆரம்பத்தில்] ” நிமித்தானி ச பச்யாமி விபரீதானி கேசவ” என்று யுத்தம் ஆரம்பிக்குமுன் அர்ஜுனன் பகவானிடம் சொல்கிறான். ‘கெட்ட சகுனங்களைப் பார்க்கிறேன்’ என்று நாம் சொல்வதைத்தான், ‘விபரீதமான நிமித்தங்களைப் பார்க்கிறேன்’ என்கிறான். அவன் ‘நிமித்தம்’ என்பதுதான் சரி. நாம் சகுனம் என்பதே நல்லது அல்லது கெட்டதற்குச் சூசகமான பொதுப்பெயர் என்று நினைப்பது தப்பு. இந்த சூசகங்களில் பக்ஷிகளால் விளைவது மட்டுமே சகுனம். ஒரு பூனை குறுக்கே போனால் அது நிமித்தம். கருடன் குறுக்கே போனால் அது சகுனம்.

பிற்பாடு பகவானும் அர்ஜுனனிடம் ‘நிமித்த’த்தைப் பற்றிச் சொல்கிறார். “நிமித்த மாத்ரம் பவ ஸவ்யஸாசின்” [XI.33.] “சத்ருக்களை வதைப்பதாவது, அதனால் பாவம் வருமே!” என்று அழுத அர்ஜுனனிடம், “இந்த யுத்தத்தில் இவர்களை வதைப்பதாக நான் ஏற்கெனவே ஸங்கல்பம் பண்ணியாகிவிட்டது. அதனால் இவர்கள் இப்போதே செத்துப்போனவர்கள்தான். இவர்களைக் கொல்பவன் நான் தான். நீ வெறும் கருவி மாத்திரமாக இரு” என்று பகவான் சொல்கிறபோது, ‘நிமித்த மாத்ரம் பவ’ என்கிறார்.

அதனால் நிமித்தம் என்பது அதுவே பலனை உண்டாக்குவதில்லை; இன்னொன்று நிச்சயம் பண்ணிவிட்ட பலனை இது வெளிப்படத் தெரிவிக்கிறது என்றே ஆகிறது. இதே போல, நம்முடைய பூர்வகர்ம பலனைத்தான் நிமித்தங்கள் யாவும் தெரிவிக்கின்றன.

சுருக்கமாகச் சொன்னால், மூன்று ஸ்கந்தங்களில் பொதுவாக கணிதத்தையும் கிரஹகதிகளையும் சொல்லுவது ‘ஸித்தாந்தம்’. தனித்தனியாக மனிதனுடைய ஸுகதுக்க பலனைச் சொல்லுவது ‘ஹோரை’ அல்லது ஜாதகம். ‘ஹோரா’விலிருந்துதான் ஜாதகமே ‘ஹாரஸ்கோப்’ எனப்படுகிறது. மிச்சம் உள்ளவை எல்லாம் ‘ஸம்ஹிதை’.

கிரஹங்களும் மனித வாழ்வும்

பிரபஞ்சத்தில் நவக்ரஹங்களின் ஸ்திதிகளைப் போலவே மனிதர்களுடைய ஸ்திதியும் மாறிக்கொண்டே வருகிறது. கஷ்டம், சௌக்கியம், துக்கம், ஸந்தோஷம், உன்னத பதவி, தாழ்ந்த பதவி என்று இப்படி எல்லோருடைய ஸ்திதியும் மாறி வருகிறது. இப்படி மாறிக் கொண்டே இருப்பவன் மனிதன் மட்டும் அல்லன். ஸ்தாபனங்களுக்கும் அப்படியே. தேசங்களுக்கும் உயர்ந்த காலம், தாழ்ந்த காலம் என்று வருகிறது.

லோகத்தில் நடக்கும் ஸுகதுக்கங்களுக்கும் கிரஹங்களுக்கும் ஸம்பந்தம் உண்டென்று கண்டு மஹரிஷிகள் இன்ன இன்ன மாதிரி கிரஹங்கள் இருந்தால் இன்ன இன்ன பலன் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு காரியம் ஆரம்பித்தால், அதன் ஆரம்பகால கிரஹரீதிகளைக் கொண்டு, மேலே நடக்கும் ஸுகதுக்கப் பலன்களைச் சொல்லும் பாகத்திற்கு “ஹோரா ஸ்கந்தம்” என்று பெயர். ஜனன காலத்தை ஆரம்பமாக வைத்துக் கொண்டு ஜாதகம் கணித்து வாழ்நாள் முழுவதற்கும் சுகதுக்க பலன்களைச் சொல்லிவிடலாம்.

சுகதுக்க பலன்களுக்குக் காரணம் பலவிதமாகச் சொல்லப்படுகிறது. இது பலபேர் ஒரே வியாதிக்கு வெவ்வேறு காரணம் சொல்கிற மாதிரிதான். வைத்தியர்கள் தாது வித்யாசத்தால் இந்த வியாதி உண்டாயிற்றென்று சொல்கிறார்கள். மந்திரவாதி தெய்வக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லுகிறான். ஜ்யோதிஷன் கிரஹ கதியால் அது வந்தது என்கிறான். தர்ம சாஸ்திரமோ பூர்வ கர்ம பலன் என்று சொல்லுகிறது! உணர்ச்சி மாறுதல்களாலேயே தேக ஸ்திதியும் மாறிவிடுகிறது என்று மனோ தத்துவ நிபுணர்கள் சொல்லுகிறார்கள்! இப்படி ஒன்றுக்கே பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. உண்மையில், கிரஹ கதியால் வருகிறதா? தாதுக்களால் வருகிறதா? மனத்தின் சலனத்தால் வருகிறதா? மற்றவைகளால் வருகிறதா?

இவற்றில் ஒன்றும் பொய்யில்லை. எல்லாம் காரணங்களே. எல்லாம் ஒன்றின் அடையாளங்களே. நாம் தெரிந்து கொள்ளுவதற்காக இப்படிப் பலவகையிலும் காரணங்கள் ஏற்பட்டு ஒன்றாகக்கூடி அநுபவத்தைக் கொடுக்கின்றன. ஒவ்வொருவர் ஒவ்வொரு காரணத்தை எடுத்துக் கொள்கிறார்கள். மழை பெய்தால் ஈரம் உண்டாகிறது; ஈசல் உண்டாகிறது; தவளை கத்துகிறது. இவ்வளவும் மழை பெய்ததற்கு அடையாளங்கள். அதுபோல் நம் பூர்வ கர்மாவின் பலன் உண்டானதற்கு அநேக அடையாளங்கள் அமைகின்றன. ஒவ்வொன்றும் அதற்கு அடையாளந்தான். எல்லாவற்றிற்கும் ஸம்பந்தம் உண்டு. கர்மாவை அநுஸரித்து கிரஹகதி ஏற்படுகிறது, வியாதி ஏற்படுகிறது, மனசஞ்சலம் உண்டாகிறது, பிசாசாதிகளின் பீடை உண்டாகிறது. எல்லாம் ஒரு கர்மாவின் பலனாகவே உண்டாகின்றன. ஒவ்வொரு வழியிலும் தெரிந்து கொள்ளலாம். இவற்றில் க்ரஹரீதியாக உள்ள பலன்களைத் தெரிந்து கொள்ள கணக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது.

கிரஹமும், நக்ஷத்திரமும்

நக்ஷத்திரங்களுக்கும் க்ரஹங்களுக்கும் உள்ள வித்தியாஸம் என்ன? நம்முடைய ஸூர்யனைச் சுற்றி வருகிறவையே க்ரஹங்கள். ஸூர்ய மண்டலத்தைச் சேராதவை நக்ஷத்திரங்கள். நம்முடைய கண்ணுக்கு தெரிகிற அடையாளம் ஒன்று இருக்கிறது. வைரத்தை ஆட்டிக்கொண்டே இருந்தால் அது பளபளவென்று அசைந்து ஜ்வலித்துக் கொண்டே இருக்குமல்லவா? அதைப் போல நக்ஷத்திரங்கள் அசைவோடு ஜ்வலித்துக் கொண்டிருக்கும். கிரஹங்கள் அசையாமல் ஜ்வலிக்கும்.

சூரியனும் நக்ஷத்திரங்களுந்தான் ஸ்வயம் பிரகாசம் உடையவை. [அதாவது அவையே இயற்கையாகப் பிரகாசமுள்ளவை.] க்ரஹங்கள் இப்படிப்பட்ட இன்னொரு ஸ்வயம் பிரகாச வஸ்துவினால்தான் தாங்களும் பிரகாசிக்கின்றன. [அவற்றுக்கு இயற்கை ஒளி கிடையாது.] நக்ஷத்திரங்களில் பலவிதமான வர்ணங்களில் டால் அடிக்கும். பட்டை தீர்த்த வைரத்தில் நீலம், பச்சை, முதலிய நிறங்கள் ஜ்வலிப்பது போல அவை இருக்கும். க்ரஹங்களான குருவும் சுக்கிரனும் கொஞ்சம் பெரிய நக்ஷத்திரங்களைப் போல இருக்கும். ஆனால் அவற்றில் தளதளப்பு இராது. நக்ஷத்திரங்கள் தளதளவென்று இருக்கும். சூரியனும் அப்படித்தான் இருக்கும். சூரியனைக் கொஞ்சம் உற்று கவனிக்க ஆரம்பித்தால் சுற்றிலும் காணப்படுகின்ற பிசிர் போய்விடும். அப்புறம் கண்ணாடியில் தட்டையாகச் செய்யப்பட்ட ஒன்று ஜலத்தில் மிதப்பது போல் தளதளவென்று தோன்றும். அசைவு இருக்கும். சந்திரன் இந்த மாதிரி இருக்காது. ஸூர்யனுக்கு உள்ளே ஒளி அசைவு உள்ளது என்பதற்கு ஒரு நிரூபணம் சொல்கிறேன். கூரையில் ஒரு துவாரம் வழியாக ஸூர்ய வெளிச்சம் வருகிறது. நிலாவும் வருகிறது. ஸூர்யனின் வெயிலானதால்தான் இந்தக் கதிர் ஆடுகிறதைப் பார்க்கிறோம். சந்திர கிரணம் அசையாமலே இருக்கும். மற்ற க்ரஹங்களும் சந்திரன் மாதிரியே. நக்ஷத்திரம் சிறியதாக இருந்தாலும் ஒளியிலே அசைவு இருக்கும். நக்ஷத்திரம் பெரியதாக இருந்தால் VIBGYOR என்று சொல்லப்படும் ஏழு நிறங்கள் இந்த அசைவில் தோன்றும் – வைரத்திலிருந்து கலர்கள் கொட்டுகிற மாதிரியே!

சூரியனுக்கு ஸப்தாச்வன் என்பது ஒரு பெயர். அவனுடைய தேரில் ஏழு (ஸப்த) குதிரைகள் (அச்வங்கள்) உண்டு என்று அர்த்தம் சொல்வார்கள். ‘ஒரே அச்வந்தான், அதற்கு ஏழு பேர்கள் இருக்கின்றன’ என்று சொல்வதும் உண்டு. ‘அச்வம்’ என்பதற்கே ‘கிரணம்’ என்று அர்த்தம் உண்டு. சூரியனுக்கு ஏழு தினுஸான வர்ணங்களை வெளிவிடும் கிரணங்கள் இருக்கின்றன என்பதுதான் தாத்பர்யம். ஒரே கிரணந்தான் ஏழு தினுசாகப் பிரிந்து கலர்களாகிறது. விப்ஜியார் என்பதும் அதுதான். ஒரே கிரணத்திற்குத்தான் ஏழுபேர் என்று ஸ்பஷ்டமாக வேதத்தின் தைத்திரீய ஆரண்யகத்திலேயே இருக்கிறது: ஏகோ அச்வோ வஹதி ஸப்தநாமா. ஒரே வெண்மைதானே refraction என்ற ஒளிச்சிதறலில் ஏழு வர்ணமாகிறது?

நக்ஷத்திரமே ஸ்வயம் பிரகாசமுடையது. கிரஹமானது வேறு ஒன்றிடமிருந்து ஒளியைக் கடன் வாங்கிக் கொள்கிறது – சந்திரன் ஸூர்யனிடமிருந்து வாங்கிக் கொள்கிறது போல!

நக்ஷத்திர ஒளி அசைவதால்தான் “அது கண்ணைச் சிமிட்டுகிறது”; Twinkle twinkle little star” – என்பது. கிரஹங்கள் கண்ணைச் சிமிட்டின என்று யாராவது எழுதினால் தப்பு.

நக்ஷத்திரங்கள் கிழக்கே உதயமாகி மேற்கே அஸ்தமிக்கும். கிரஹங்களும் மேற்கே போகும். ஆனால் நித்தியம் கொஞ்சம் கிழக்கே நகர்ந்துகொண்டே போகும். கிழக்கே ஓடும் ரயிலுக்குள் ஒருத்தன் மேற்கே நடக்கிறதுபோல், ஏழு கிரஹங்களும் கிழக்கே நகர்ந்து கொண்டே போகும். இவற்றின் ஸ்திதிகளை ஜ்யோதிஷ சாஸ்திரம் சொல்லுகிறது.

புராதன கணித நூல்கள்

ஜ்யோதிஷத்தில் மூன்று ஸ்கந்தங்கள் இருக்கின்றன என்பதாக முன்பே சொன்னேன். மடத்தில் ஜ்யோதிஷம் தெரிந்த ஒரு சாஸ்திரிகள் இருந்தார். அவருக்கு ஒரு பட்டம் கொடுக்க யோசித்தோம். கடைசியில் ‘த்ரிஸ்கந்த பாஸ்கர’ என்னும் பட்டத்தைக் கொடுத்தோம். ஸ்கந்தம் என்றால் மரத்தின் அடிக்கட்டையில் இருந்து பிரிகிற பெரிய கிளைகளுக்குப் பெயர் ஜ்யோதிஷ சாஸ்திரத்தில் ஸித்தாந்த ஸ்கந்தம், ஹோரா ஸ்கந்தம், ஸம்ஹிதா ஸ்கந்தம் என்று மூன்று ஸ்கந்தங்கள் இருக்கின்றன.

அரித்மெடிக், ட்ரிகனாமெட்ரி, ஜியாமெட்ரி, அல்ஜிப்ரா என்று பலவிதமாக உள்ள கணிதங்களெல்லாம் ஸித்தாந்த ஸ்கந்தத்தில் அடங்கி இருக்கின்றன. மேற்கத்தியர்கள் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு அப்புறம் ‘டெவலப்’ செய்த Higher Mathematics -ன் விஷயங்கள் எல்லாம் புராதனமான நம் ஜ்யோதிஷத்தில் வந்து விடுகின்றன.

அரித்மெடிக் (Arithmetic) என்பது வியக்த கணிதம். எண்களைத் தெளிவாகக் கொடுத்துப் பலன் கேட்பது வியக்த கணிதம். சாதாரணக் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்பவைகள் வியக்த கணிதத்தைச் சார்ந்தவை. அவ்யக்தம் என்பது 1,2,3,4 போலத் தெரிந்த எண்ணிக்கையாக இராமல் A,X என்று வைத்துக் கொள்வது. அதைத்தான் அல்ஜீப்ரா என்று சொல்கிறார்கள். அவ்யக்தம் என்பதற்கு ‘வெளிப்படையாகத் தெரியாதது’ என்பது அர்த்தம். க்ஷேத்ர கணிதம் என்பதுதான் ‘ஜ்யாமெட்ரி’. ‘ஜ்யா’ என்றால் பூமி; ‘மிதி’ என்றால் ‘அளவை முறை’ என்று அர்த்தம். யாகவேதி, யக்ஞ குண்டம் இவை எப்படியிருக்க வேண்டும் என்று அளவைகளைச் சொல்வதற்காகவே முதலில் ஏற்பட்ட ஜ்யாமிதிதான் இங்கிலீஷ் ஜ்யாமெட்ரியாயிருக்கிறது. ‘ஜ்யாகரபி’யில் வருவதும் இதே ‘ஜ்யா’ தான். ஸமீகரணம் என்று ஒரு கணக்கு உண்டு. அது அவ்யக்தங்களைக் கொடுத்து வியக்தங்களைக் கண்டு பிடிப்பது. அவ்யக்தமான எண்ணிக்கைகளின் கூட்டங்களைத் தனியாகக் கொடுத்து அவைகளை சமமாக செய்யச் சொல்லுவது ஸமீகரணம். ஸமீகரணம் என்பதற்குச் சமமாகப் பண்ணுதல் என்பது அர்த்தம். அதைத்தான் equation என்கிறார்கள்.

வேதத்தின் ஆறாவது அங்கமாக இருக்கும் கல்ப சாஸ்திரத்துக்கு (இதைப் பற்றி பிறகு சொல்வேன்) வேதத்தின் ஐந்தாவது அங்கமான இந்த ஜ்யோதிஷத்தில் வரும் ஸித்தாந்த ஸ்கந்தத்தின் உதவி ரொம்பவும் தேவைப்படுகிறது. கல்ப சாஸ்திரத்தில் சுல்ப ஸூத்திரங்கள் என்று ஒரு பாகம் உண்டு. இந்த சுல்ப ஸூத்திரங்களில் யக்ஞங்களை பற்றிச் சொல்லும்போது யக்ஞம் செய்ய வேண்டிய சாலையில் யக்ஞவேதி எப்படி கட்ட வேண்டும் என்பன போன்றவற்றுக்கு அளவு முறைகளைத் திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறது. இந்த யக்ஞ பூமி அமைப்புகளுக்கு “சயனம்” என்று பெயர். கருடன் போன்ற ஆக்ருதியில் (வடிவத்தில்) ஒரு சயனம். இன்னம் இப்படிப் பல ஆக்ருதிகளில் சயனங்கள் அமைப்பதைப் பற்றி சொல்லும்போது, செங்கல் சூளை போடும் விதம், இத்தனை அளவுள்ள இத்தனை செங்கல்கள் அடுக்கினால் இந்த ஆகிருதியுள்ள சயனம் வரும் என்ற கணக்குகள் சுல்ப ஸூத்ரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. இதற்கு ஸித்தாந்த ஸ்கந்தத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொண்டால்தான் முடியும்.

ஆபஸ்தம்ப சுல்ப ஸூத்திரத்தில் ஒரு ஸமீகரணம் (equation) இருக்கிறது. அதை விடுவிக்க – ப்ரூவ் பண்ண – ஸமீபகாலம் வரையில் முடியாமலிருந்தது. வெள்ளைக்கார கணித விதிகளின் படி அதை ‘ஸால்வ்’ பண்ண முடியாமலிருந்ததால், அது தப்பு என்றுகூட நினைத்துவிட்டார்கள். அப்புறந்தான் மேலும் ஆராய்ச்சி செய்து பார்த்ததில், அந்த சுல்ப ஸூத்திர ஸமீகரணம் சரியானதே என்று தெரிந்து கொண்டிருக்கிறார்கள். இத்தனை நுட்பமான கணித ஞானம், இவ்வளவு காலம் தங்கள் கண்ணிலேயே மண்ணைத் தூவி வந்த அளவுக்கு ஸூக்ஷ்மமான ஞானம், ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முந்தியே இந்தியர்களுக்கு இருந்திருக்கிறதே என்று ஆச்சரியப்படுகிறார்கள். இதைப் போல இன்னம் கண்டுபிடிக்க வேண்டிய கணக்குகளுக்கு உரிய ஸூத்திரங்கள் எவ்வளவோ இருக்கின்றன. இந்த ஸமீகரணங்களும், அளவுகளும், ஸித்தாந்த ஸ்கந்தத்தின் உதவியால் நிரூபணம் செய்ய வேண்டியவையாகும்.

ரேகா கணிதம், குட்டகம், அங்கபாதம் என்றெல்லாம் பலவகைக் கணக்குகள் நம் சாஸ்திரத்தில் சொல்லப்படுகின்றன.

அவ்யக்த கணிதத்திற்கு பீஜ கணிதம் என்றும் ஒரு பெயர் உண்டு….

எண்ணூறு வருஷங்களுக்கு முன் பாஸ்கராசாரியார் என்று பெரிய கணித ஸித்தாந்தி ஒருவர் இருந்தார். நமக்கு என்னதான் கெட்டிக்காரத்தனம் இருந்தாலும், பகவத் ஸங்கல்பத்தை மாற்ற முடியாது என்பதற்கு திருஷ்டாந்தமாக அவர் வாழ்க்கையில் ஒன்று நடந்தது. அவருடைய பெண்ணுக்கு லீலாவதி என்று பெயர். ஜாதகப்படி அவளுக்கு ரொம்பவும் மாங்கல்ய தோஷம் இருப்பதை ஜ்யோதிஷப் புலியான பாஸ்கராசாரியார் அறிந்திருந்தார். ஆனாலும் தமது கெட்டிக்காரத்தனத்தினால் ஸகல க்ரஹங்களும் தீர்க்க ஸெளமங்கல்யத்தைத் தரும்படியான ஒரு லக்னத்தைக் கண்டுபிடித்து அதிலே புத்திரிக்கு விவாஹம் செய்து விட்டால் அவள் தீர்க்க ஸுமங்கலியாக இருக்கச் செய்து விடலாம் என்று நினைத்தார். அந்த மாதிரியான க்ரஹ சேர்க்கை உடைய ஒரு லக்னத்தில் லீலாவதிக்குக் கல்யாண முஹூர்த்தம் வைத்தும் விட்டார்.

அந்தக் காலத்தில் இப்போது போல் கடிகாரம் கிடையாது. வாஸ்தவத்தில் அக்காலத்தில் இருந்ததுதான் அசல் கடிகா. கடம், கடிகா, கடிகை என்பதெல்லாம் பானை மாதிரியான தீர்த்த பாத்திரத்தைக் குறிக்கும். இப்படிப்பட்ட ஜல பாத்திரமே பூர்வகாலத்திய கடிகா அல்லது கடிகாரம். அதிலே மேல்பாகம், கீழ்பாகம் என்று பிரிந்திருக்கும். மேல் பாகத்தில் விட்ட ஜலம் ஒரு துவாரம் வழியாக கீழ்பாகத்தில் துளித்துளியாக விழும். மருந்து பாட்டிலில் டோஸ் மார்க் பண்ணியிருக்கிற மாதிரி, கீழ் பாகத்தில் அளவுக்கோடுகள் போட்டிருக்கும். துளித் துளியாய் விழும் ஜலம் இன்ன கோடுவரை வந்தால் இத்தனை நாழிகை என்று கணக்குப் பண்ணிவிடுவார்கள். அதிலுள்ள டோஸ் மார்க் ஒருநாளில் அறுபதில் ஒரு பங்காகும். ‘நாழிகை’ என்று தமிழில் சொல்லப்படும் இந்தக் கால அளவுக்கு ஸம்ஸ்கிருதத்தில் ‘நாடிகா’ என்பதோடு ‘கடிகா’ என்றே இன்னொரு பெயர் உண்டு. அது 24 நிமிஷம் கொண்டது. Water -clock, Water glass என்று இங்கிலீஷிலும் சொல்வார்கள். ஜலம் சீதோஷ்ணத்தைப் பொறுத்து evaporate (ஆவி) ஆவதால், இதில் ஏதாவது கணக்குத் தப்பு வரும் என்று, ஜலத்துளிக்குப் பதில் ‘எவாபொரேட்’ ஆகாத மண் துகள் விழுகிற மாதிரிச் செய்யும் கடிகாரத்துக்கு hour – glass என்று பெயர்.

அந்நாள் வழக்கப்படி, லீலாவதி விளையாட்டுப் பெண்ணாக இருந்த சின்ன வயசிலேயே கல்யாணம் நிச்சயித்திருந்தது. அந்தக் குழந்தை மேலே சொன்ன மாதிரியான ஜல கடிகாரத்திடம் வந்து, குனிந்து பார்த்து ஏதோ சேஷ்டை பண்ணிற்று. அப்போது அதன் மூக்குத்தியிலிருந்து ஒரு சின்ன முத்து கடிகாரத்துக்குள் விழுந்து, மேல் பாகத்துக்கும் கீழ் பாகத்துக்கும் நடுவேயுள்ள துவாரத்தில் மாட்டிக் கொண்டு விட்டது.

இதனால் விழுகிற துளி சின்னதாகி விடும் அல்லவா? இப்படி, இருக்க வேண்டியதைவிடச் சின்னதான துளிகளாக விழுந்து முஹூர்த்த லக்னக் கோட்டுக்கு ஜலம் வந்தபோது, வாஸ்தவத்தில் அந்த சுபநேரம் தப்பி, அடுத்த லக்னம் வந்து விட்டது! அது கெட்ட லக்னம். அந்த லக்னத்தில் விவாஹமானதால் லீலாவதி ஜாதகப்படியே ரொம்பவும் பிஞ்சு வயஸில் பதியை இழந்து விட்டாள்!

முத்து விழுந்ததை அந்தக் குழந்தை உள்பட ஒருத்தரும் முதலில் கவனிக்காதலால் இத்தனை பெரிய விபரீதம் நடந்துவிட்டது. அப்புறம் விஷயம் தெரிய வந்தபோது விதியை யாரும் மாற்ற முடியாது என்று தெரிந்து கொண்டார்கள்.

கணித சாஸ்திர விஷயமாகப் பிற்காலத்தில் பாஸ்கராசாரியார் ஒரு கிரந்தம் செய்ய வேண்டுமென்று நினைத்தார். தமது புத்திரியின் பெயராகிய லீலாவதி என்னும் பெயரையே அந்த புஸ்தகத்துக்கு வைத்தார். சின்ன வயசிலேயே விதவையாகித் தம்மிடம் வந்துவிட்ட புத்திரி லீலாவதியை கணிதத்தில் பண்டிதை ஆக்கி, அவள் பெயரிலேயே தம் புஸ்தகத்தை எழுதினார். ஸாதாரணமாக ஒரு பரம்பரையில் பாட்டி, முப்பாட்டிகளின் பேரைக் குழந்தைக்கு வைத்து அவர்களுடைய நினைவை நீடிக்கச் செய்கிறார்களல்லவா? பாஸ்கராச்சாரியாரோ என்ன பண்ணினாரென்றால், குழந்தையே பெறாத தம்முடைய குழந்தை, கணித மாணாக்கப் பரம்பரை முழுதற்கும் ஒரு ஆதி பாட்டியாகச் சிரஞ்சீவித்வம் பெறும்படி தம்முடைய புஸ்தகத்திற்கே “லீலாவதி கணிதம்” என்று அவள் பேரை வைத்துவிட்டார்.

அதில் வியக்த கணிதம், பீஜ கணிதம் முதலிய பலவகைக் கணிதங்கள் இருக்கின்றன. “லீலாவதி கணக்கு”கள் கதை மாதிரியும், விடுகதை மாதிரியும், கவிதை மாதிரியும் சுவாரஸ்யமாக இருக்கும். கிரஹ ஸ்திதிகள், கிரஹங்களின் கதிகள் முதலியவற்றை நிர்ணயிப்பதற்கு உபயோகமாக “ஸித்தாந்த சிரோமணி” என்ற ஒரு கிரந்தத்தையும் பாஸ்கராசாரியார் எழுதியிருக்கிறார்.

“பிராசீனலேகமாலை” என்னும் பழைய சாஸனங்களின் தொகுப்பான புஸ்தகத்தில் உள்ள ஒரு சாஸனத்தால், பூர்வ காலத்தில் பாஸ்கராசாரியாருடைய கிரந்தங்களைப் பிரசாரப் படுத்துவதற்காக கூர்ஜர (குஜராத்) தேசத்தில் இருந்த சிங்கணன் என்னும் அரசன் மானியம் விட்டிருந்தானென்று தெரிய வருகிறது.

நவீன க்ஷேத்திர கணித கிரந்தமாகிய “யூக்ளிட்” புஸ்தகத்தில் நடுவில் உள்ள 7,8,9,10-ம் பாகங்களைக் காணவில்லை என்று சொல்லுகிறார்கள். ஸம்ஸ்கிருதத்தில் 12 புஸ்தகங்களும் அப்படியே இன்றைக்கும் இருக்கின்றன. நமக்கு ஒன்றும் தெரியவில்லை. ‘பல முறை கூட்டல் போடுவதுதான் பெருக்கல்; பலமுறை கழிப்பதுதான் வகுத்தல்’ என்பது போன்ற சின்னவிஷயங்கள்கூடத் தெரியாமலிருக்கிறோம்!

பாஸ்கராசாரியாருக்கு முன்பு, அதாவது இன்றைக்கு 1500 வருஷங்களுக்கு முன்பு வராஹமிஹிரர் என்று ஒருவர் இருந்தார். அவர் ‘ப்ருஹத் ஸம்ஹிதை’, ‘ப்ருஹத் ஜாதகம்’ முதலிய பல கிரந்தங்களைச் செய்திருக்கின்றார். ‘ப்ருஹத் ஸம்ஹிதை’ என்பது ஸகல சாஸ்திரங்களுக்கும் ஸயன்ஸுகளுக்கும் digest- ஆகும். இத்தனை ஸயன்ஸா நம் பூர்வீகர்களுக்குத் தெரிந்திருந்தது? என்று அதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். ‘ப்ருஹத் ஜாதக’த்தில் ஜ்யோதிஷ விஷயங்கள் யாவும் உள்ளன.

ஆரியபடர் என்பவர் ‘ஆரியபட ஸித்தாந்த’மென்று ஒரு புஸ்தகம் எழுதியிருக்கிறார். இவரும் 1500 வருஷத்துக்கு முன்பு இருந்தவரே. இப்பொழுது வழங்கி வரும் வாக்கிய கணிதமானது ‘ஆரியபட ஸித்தாந்த’த்தை அநுசரித்தது என்று சொல்லுவார்கள். வராஹமிஹிரரையும், ஆரியபடரையும் நம் கால mathematician களும் கொண்டாடுகிறார்கள்.

இவ்வளவு கணித சாஸ்திரங்களும் நக்ஷத்திரங்கள், ஒன்பது கிரஹங்கள் என்பவைகளின் கதியைப் பற்றியும் ஸ்திதியைப் பற்றியும் சொல்லுபவைகள். கிரஹங்கள் ஏழுதான். ராகு கேதுக்கள் நிழல். அதனால் அவைகளைச் சாயாக்கிரஹங்கள் என்று சொல்லுவார்கள். சூரியனுக்கும் சந்திரனுக்கும் நேர் விரோதமாக அவை ஓடும். அவைகளுக்குத் தனி கணனம் வேண்டாம். சூரிய சந்திரர்களுக்கான கணனத்தின் விபரீத (தலைகீழ்) கணனமே அவைகளுக்குரிய கணனமாகும்.

வான சாஸ்திரமும் ஜோஸ்யமும்

வான சாஸ்திரம் (Astronomy) என்பதாக கிரஹங்களின் நிலைமைகளை மட்டும் ஆராய்ச்சி பண்ணுவதோடு இன்றைய ஸயன்ஸ் நின்றுவிடுகிறது. அவை அந்த நிலைகளில் இருப்பது லோகத்தை எப்படிப் பாதிக்கிறது, நம்மை எப்படிப் பாதிக்கிறது, அவற்றை நமக்கு அநுகூலமாக்கிக் கொள்ள என்ன பண்ண வேண்டும் என்ற விஷயங்களை – அதாவது, “ஜோஸ்யம் பார்ப்பது” என்று நாம் சொல்கிற Astrology சமாசாரங்களையும் Astronomy யோடு சேர்த்துச் சொல்வது ஜ்யோதிஷ சாஸ்திரம்.

கிரஹங்கள், நக்ஷத்ரங்கள், திதி ஆகியன இப்படியிப்படி இருந்தால், அந்த சமயத்தில் செய்யும் கர்மாக்களுக்கு இப்படியாகப்பட்ட பலன்கள் உண்டாகின்றன என்பதைச் சொல்லவே ஜ்யோதிஷ சாஸ்திரம் ஏற்பட்டது. வைதிக கர்மாக்களைச் செய்வதற்குரிய அநுகூலமான காலங்களை நிர்ணயிப்பதற்காகவே வேதாங்கமான ஜ்யோதிஷம் ஏற்பட்டது. இதில் கிரஹ ஸஞ்சாரம் முதலானதுகளை கணக்குப் பண்ண வேண்டியிருந்ததால் கணிதமும் நிறையச் சேர்ந்துவிட்டது.

யாகம் பண்ணும் இடமான யக்ஞவேதி, சயனம் என்பதான யக்ஞபூமி அமைப்பு ஆகியவற்றுக்கு நிர்ணயமான அளவுகள் உண்டு. அந்த அளவுப்படி அமைத்து யக்ஞம் பண்ணினாலே பலன் உண்டு. அதனால் யக்ஞவேதிகளின் அளவுகளைத் தீர்மானமாகக் கணக்குப் பண்ணிக் கொடுக்க வேண்டியதாயிற்று. இந்த ரீதியிலும், வேதத்துக்குத் துணையங்கமாக கணிதம் அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கிறது.

கண் என்பது ஏன்?

நம்முடைய வைதிக மதத்திற்கு ஆதாரமாகிய பதிநான்கு வித்யாஸ்தானங்களுள் ஷடங்கங்களில் சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம் என்பவற்றைப் பற்றிச் சொன்னேன். அடுத்தது ஜ்யோதிஷம் (சோதிடம்) என்பது.

வேதபுருஷனுக்கு ஜ்யோதிஷம் நேத்திர ஸ்தானம், அதாவது கண்.

ஜ்யோதிஷ சாஸ்திரமானது மூன்று ஸ்கந்தங்கள் அடங்கியது. அதனால், அதற்கு “ஸ்கந்த த்ரயாத்மகம்” என்று பெயர்.

கர்க்கர், நாரதர், பராசரர் முதலிய பல ரிஷிகள் பல ஜ்யோதிஷ ஸம்ஹிதைகளைச் செய்திருக்கிறார்கள். ஸூரிய பகவான், அசுரத் தச்சனாகிய மயனுக்கு ஜ்யோதிஷ உபதேசம் பண்ணினதாக ஒரு கிரந்தம் இருக்கிறது. அதற்கு, “ஸூரிய ஸித்தாந்தம்” என்று பெயர். இப்படித் தேவர்களும் ரிஷிகளும் இயற்றிய பல ஜ்யோதிஷக் கிரந்தங்கள் உண்டு. மனிதர்கள் செய்த கிரந்தங்களும் இருக்கின்றன. வராஹமிஹிரர் என்பவர் பல கிரந்தங்களை எழுதியிருக்கிறார். ஆர்யபடர், பாஸ்கராசாரியார் முதலியவர்கள் பண்ணின கிரந்தங்கள் பல இருக்கின்றன. சமீப காலத்தில் சுந்தரேச்வர ச்ரௌதிகள் என்பவர் சித்தாந்த கௌஸ்துபம் என்ற ஜ்யோதிஷ க்ரந்தத்தைச் செய்திருக்கிறார்.*

ஜ்யோதிஷத்தை ஏன் வேத புருஷனுக்குக் கண்ணாகச் சொல்லியிருக்கிறது?

கண் இல்லாதவன் குருடன். கண் எதற்காக இருக்கிறது? பக்கத்திலுள்ள வஸ்துக்களைக் கையினால் தடவிப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். தூரத்திலுள்ளதன் ரூபம் தெரிய வேண்டுமானால், அப்பொழுது கண்ணினால் பார்த்தே தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இடத்திலே தூரத்தில் இருப்பதைத் தெரிந்துகொள்ள நம்முடைய கண் எப்படி உபயோகப்படுகிறதோ, அப்படிக் காலத்திலே தூரத்தில் (அதாவது பல வருஷங்களுக்கு முன்னால் அல்லது பல வருஷங்களுக்கு அப்புறம்) உள்ள க்ரஹ நிலைகளைத் தெரிந்து கொள்ள ஜ்யோதிஷ சாஸ்திரம்தான் உதவி புரிகிறது. இன்றைக்கு சூரியனும் சந்திரனும் மற்ற க்ரஹங்களும் எங்கே இருக்கின்றன என்பதைப் பிரத்யக்ஷத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். கண்ணில்லாவிட்டாலும் கையால் தடவியே கிட்டத்தில் உள்ளதன் ரூபத்தைத் தெரிந்து கொள்வதுபோல், ஜ்யோதிஷ சாஸ்திரம் தேவைப்படாமல் நம் கண்ணாலேயே பார்த்து, காலத்தில் கிட்டே, அதாவது நிகழ்காலத்தில் உள்ள கிரஹ நிலைமைகளை அறிந்து கொண்டுவிடலாம். ஆனால் 50 வருஷத்துக்கு முன்னால் அல்லது பின்னால் கிரஹங்கள் எங்கே இருக்கும் என்று தெரிய வேண்டுமானால் ஜ்யோதிஷ சாஸ்திரத்தைப் பார்த்தாலே தெரியும்!

கிட்டத்தில் உள்ளதைத் தடவிப் பார்த்து, அதன் உருவத்தை அறிகிறபோதுகூட அது பச்சையா, சிவப்பா, வேறு என்ன கலர் என்று தெரிந்து கொள்ள முடிவதில்லை. இதை அறியக் கண் வேண்டியிருக்கிறது. இதே போல, பிரத்யக்ஷத்தில் ஒரு கிரஹம் தெரிந்தால்கூட, அது அந்த நிலையில் இருப்பதால் ஏற்படுகிற பயன் என்ன, அது நம்மை எப்படிப் பாதிக்கிறது என்று நமக்குத் தெரியாது. இதை ஜ்யோதிஷந்தான் நமக்குத் தெரிவிக்கிறது.

ஆகவேதான், ஜ்யோதிஷத்தை வேத புருஷனுக்குக் கண் என்றார்கள். வைதிகக் காரியங்களைச் செய்வதற்கு, இன்னின்ன க்ரஹம் இன்னின்ன இடத்தில் இருக்க வேண்டும் என்ற விதி உண்டு. ‘நாள் பார்ப்பது’, ‘முஹூர்த்தம் வைப்பது’ என்றெல்லாம் க்ரஹ நிலைகளை ஒட்டித்தானே சடங்குகளைப் பண்ண வேண்டியிருக்கிறது? இதனால் ஜ்யோதிஷம் நேத்ர ஸ்தானத்தைப் பெறுகிறது.

ஜ்யோதிஷத்துக்கு ‘நயனம்’ என்று ஒரு பெயர் உண்டு. ‘நய’ என்றால் அழைத்துக் கொண்டு போவது (to lead). கண்ணில்லாதவனை இன்னொருவர்தானே அழைத்துக் கொண்டு போக வேண்டியிருக்கிறது? அதனால் கண்தான் அழைத்துப் போகிற லீடராக இருக்கிறது என்பது தெரிகிறது! வேத கர்மாக்களைப் பண்ணுவதற்கான காலத்தை நிர்ணயம் பண்ணி, நம்மை அந்தக் காரியத்துக்கு அழைத்துக் கொண்டு போகிற கண்ணாக இருப்பது ஜ்யோதிஷமே.


*வேத அங்க ஜ்யோதிஷம் என்றே ரிக், யஜுர் வேதங்களுக்கு இருப்பதில் இன்று கிடைத்திருப்பது விலக்க வேண்டிய முஹூர்த்தங்களை மட்டுமே கூறுகிறது. இதை விட விரிவானதாகக் கருதப்படும் ஆதர்வண ஜ்யோதிஷம் என்பது கிடைக்கவேயில்லை.