ஸம்ஸ்காரம்

மேலே ஸம்ஸ்காரம் என்ற வார்த்தையைச் சொன்னேன். ஆனால் அதற்குச் சொன்ன அர்த்தம் தர்க்க சாஸ்திரப்படியானது. Impression on memory (ஒரு விஷயம் மூளைக்குள் பதிந்திருப்பது) என்பது இந்த இடத்தில் அர்த்தம் என்று சொன்னேன்.

பொதுவாக ஸம்ஸ்காரம் என்றால் இப்படி அர்த்தம் செய்ய மாட்டார்கள். ‘ஸம்-நன்றாக; காரம் ஆக்குவது:’ “ஒன்றை நன்றாக ஆக்குவதே ஸம்ஸ்காரம்” என்பதுதான் பொதுவான அர்த்தம்.

இம்மாதிரி ஒரு ஜீவனைப் பரமாத்மாவிடம் சேர்க்கிற அளவுக்கு நன்றாக சுத்தப்படுத்துகிற ஸம்ஸ்காரங்களையே தர்ம சாஸ்திரங்கள் நமக்கு விசேஷமாகச் சொல்கின்றன.

கல்ப ஸூத்ரங்களில் சொன்னதை அநுஸரித்து ஒரு ஜீவன் இந்த ஜீவ யாத்திரையில் (ஒரு ஜன்மாவில்) செய்ய வேண்டிய நாற்பது ஸம்ஸ்காரங்களை விரிவாக தர்ம சாஸ்திரங்களிலிருந்தே அறிகிறோம்.

நாற்பது ஸம்ஸ்காரங்கள் என்னென்ன என்று கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

ச்ருதி- ஸ்மிருதி; ச்ரௌதம்-ஸ்மார்த்தம்

ச்ருதி-ஸ்ம்ருதிகளுக்கிடையே பேதம் கற்பிப்பது தப்பு. ச்ருதி-ஸ்ம்ருதி-புராணம் மூன்றும் ஒரே tradition (மரபு) தான். “ச்ருதி-ஸ்ம்ருதி-புராணானாம் ஆலயம்” என்று பகவத் பாதாளைச் சொல்கிறோம். இவை ஒன்றுக்கொன்று வித்யாஸமானவையாக யிருந்தால் எப்படி ஒருத்தரிடமே மூன்றும் சேர்ந்திருக்கும்?

ஆசாரியாளின் வழியை அநுஸரிப்பவர்களுக்கு ஸ்மார்த்தர்கள் என்பது பெயர். ‘ஸ்மார்த்தர்’ என்றால் ‘ஸ்மிருதிகளைப் பின்பற்றுகிறவர்’ என்பதே அர்த்தம். வேதத்தை நிலை நாட்டவே ஆசார்யாள் அவதரித்தார் என்று சொல்லிவிட்டு, அவரது வழியில் போகிறவர்களை ஸ்மார்த்தர் என்றால் வேதமும் ஸ்மிருதியும் ஒன்று என்று தானே ஆகிறது?

இப்போது, வேதத்திலே வ்யக்தமாக [வெளிப்படையாக]ச் சொல்லாமல் ஸ்மிருதிகளில் சொல்லியுள்ள அநுஷ்டானங்களை ஸ்மார்த்த கர்மா என்றும், வேதமான ச்ருதியிலேயே வ்யக்தமாகச் சொன்ன அநுஷ்டானங்களை ச்ரௌத கர்மா என்றும் சொல்கிறோம். இதனால் ச்ரௌதத்தைவிட ஸ்மார்த்தம் கீழானது என்று நினைத்து விடவே கூடாது. கிருஹஸ்தனுக்கு மிகவும் முக்யமான ஒளபாஸனம், வீட்டிலே இவன் செய்ய வேண்டிய அதி முக்யமான (domestic) க்ருஹ்ய கர்மாக்கள், வைதிக கர்மாக்களில் ரொம்பவும் அவசியமானதான பித்ரு சிராத்தம் இவையும், பாக யக்ஞங்கள் என்ற ஏழு வேள்விகளும் ஸ்மார்த்த கர்மாக்கள்தான். இவற்றிலெல்லாம் வேத மந்திரங்களேதான் பிரயோஜனமாகின்றன. ஆகையால் ச்ருதியின் உள்பாவத்தை நன்றாகப் புரிந்து கொண்டேதான் இவற்றை ஸ்மிருதிகாரர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

ஆகையால் ச்ருதியை விட ஸ்மிருதி கீழானது, ஸ்மிருதியை விடப் புராணம் கீழானது என்றெல்லாம் நினைக்காமல் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, integrated -ஆக நினைக்க வேண்டும்.

வேத தர்மங்களைப் புராணம் கதையாகச் சொல்கிறது. வேத தர்மங்களையும் கர்மங்களையும் ஸ்ம்ருதியானவை கதையில்லாத உபதேசங்களாக, விதிகளாகத் தருகின்றன‌. கர்மாக்களின் வழிமுறைகளையும் தருகின்றன.

வேதம் முனிவர்களுக்கு intuition -ல் (உள்ளுணர்வில்) பளீரென்று தெரிந்தது. அதை அவர்கள் செய்யவில்லை. வெறுமே கண்டு கொண்டார்கள். இங்கே அவர்களுடைய மூளைக்கு வேலையே இல்லை.

ச்ருதிம் பச்யந்தி முனய:

“வேதத்தை முனிவர்கள் வெறுமே கண்டு கொண்டார்கள்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படிக் கண்டெடுத்ததில் தங்கள் மூளையைச் செலுத்தி, ஜனங்களுக்கு தர்மங்களையும் கர்மங்களையும் பாகுபடுத்தி, வகை தொகையாக தரவேண்டும் என்ற எண்ணத்தில் நினைவு படுத்திக் கொண்டு கோத்துக் கொடுத்ததே ஸ்மிருதி. ஸ்மிருதி என்றால் நினைவு என்று முன்பே சொன்னேனல்லவா?

வேதம் தோன்றியது தானாக உண்டான அநுபவம். அதிலிருந்து ரிஷிகள் நினைவால் உண்டாக்கியது தர்ம சாஸ்திரம் எனப்படும் ஸ்மிருதிகள்.

“ஸம்ஸ்கார ஜன்யம் ஞானம் ஸ்ம்ருதி:” என்று, நியாய சாஸ்திரத்தில் ஸ்மிருதிக்கு லக்ஷணம் சொல்லியிருக்கிறது. ஸம்ஸ்காரத்திலிருந்து பிறக்கும் அறிவே ஸ்ம்ருதி என்று அர்த்தம்.

இந்த இடத்தில் ‘ஸம்ஸ்காரம்’ என்பதற்கு ‘அதீந்திரியம்’ என்றும் இன்னொரு பேர் சொல்லியிருக்கிறது. இது என்ன?

காசிக்குப் போய் நேரிலே அந்த க்ஷேத்ரத்தைப் பார்த்தோம். நேரிலே பார்த்தது அநுபவம். ஊருக்குத் திரும்பி வந்து ரொம்ப நாள் கழித்துக் கோயிலுக்குப் போகிற போது, இந்த உள்ளூர்க் கோயிலிலும் ‘காசி விஸ்வநாதர் ஸந்நிதி’ என்று இருப்பதற்குப் போகிறோம். உடனே காசியிலே நாம் அநுபவித்த விச்வநாத தரிசனம் ஞாபகம் வருகிறது. நடுவே பல நாள் இந்த நினைவு இல்லை. அநேகம் பேரைப் பார்க்கிறோம். பிறகு நினைப்பதில்லை. மறுபடி பார்த்தால் மட்டும், ‘ஒஹோ, முன்னே பார்த்திருக்கிறோமே! என்று பழைய ஞாபகம் வருகிறது. இடையிலே நினைவு இல்லை. அப்படி இடையில் இருக்கிற நிலைதான் ஸம்ஸ்காரம் அல்லது அதீந்திரியம் என்பது. அதிலே அநுபவத்தின் impression [பதிவு] உள்ளூர இருக்கிறது. இந்த ‘இம்ப்ரெஷன்’ அப்புறம் ‘எக்ஸ்ப்ரெஷ’னாக வெளிப்படுவதுதான் ஸ்மிருதி (நினைவு) . ஆக அநுபவம், அந்த அநுபவித்தில் ஏற்பட்ட உள் இம்ப்ரெஷனான ஸம்ஸ்காரம் என்ற இரண்டையும் கொண்டே ஸ்மிருதி என்ற நினைவு உண்டாகிறது.

அநுபவமான வேதம் நினைவான ஸ்மிருதியாக, தர்ம சாஸ்திரமாக வந்திருக்கிறது. வேத மூலம் இல்லை என்றால் ஸ்மிருதி என்ற பேரே தப்பு. இந்த ஸ்மிருதிக்கு எது ஆதாரமான அநுபவம் என்றால் வேதம்தானே? அப்படியொரு ஆதாரமில்லாவிட்டால் “நினைவுக் குறிப்பு” என்று பொருள்படும்படிப் பேர் வைத்திருப்பார்களோ? ஏற்கெனவே ஆதாரமில்லாமல் புதிதாகத் தோன்றுவதை ஞாபகக் குறிப்பு என்று யாராவது சொல்வார்களா?

நேராக ச்ருதியிலேயே சொன்ன ச்ரௌதம் ஸந்தேஹத்துக்கு இடமில்லாமல் நமக்கு 100% பிரமாணம் என்பதில் யாருக்கும் இரண்டாவது அபிப்பிராயமில்லை. அதற்காக அப்படி நேராக ச்ருதியில் இல்லாமல் ஸ்மிருதியிலேயே உள்ள ஸ்மார்த்தம் இரண்டாம் பக்ஷப் பிரமாணம் என்று அர்த்தமில்லை. ச்ரௌதத்துக்கு ஆக்ஷேபமாக, மாறாக ஸ்மார்த்தம் பேசாது. ச்ரௌதத்துக்கு அதிகமாகவே சிலதை அது சொல்கிறது. இவையும் நமக்குப் பூர்ணப் பிரமாணமே. ஏனென்றால் ச்ருதியின் inner spirit -ஐ (உள் பாவத்தை) ப் புரிந்து கொண்டே இவற்றை ஸ்மிருதி சொல்கிறது. மஹாபுராணங்களிலும், இதிஹாஸங்களிலும் விட்டுப் போனதையும் ஸ்தல புராணங்கள் எடுத்துச் சொல்லி இட்டு நிரப்புகிற மாதிரி, ச்ரௌதத்தில் விட்டுப் போனதையே ஸ்மார்த்தத்தில் சொல்லியிருக்கிறது. ஆகையால் ‘ச்ருதி பிரமாணம்’, ‘ஸ்மிருதி பிரமாணம்’ என்ற இரண்டு வார்த்தைகள் அடிபடுவதைப் பார்த்து, இவற்றுக்கிடையில் வித்யாஸமோ, ஏற்றத் தாழ்வோ கற்பிக்கக் கூடாது.

வேதமே ஸ்மிருதிகளுக்கு அடிப்படை

பெரிய ஆதாரம் மஹாகவியின் வாக்குத்தான். நம்முடைய மத ஸ்தாபகர்கள் யாவரும் – சங்கரர், ராமாநுஜர், மத்வர் எல்லாரும் – தர்ம சாஸ்திரங்கள் வேதத்தை அநுஸரிப்பவையே என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இது நமக்குப் பெரிய ஆதாரம் என்று சொல்லமுடியாது. இந்த மதாசாரியர்களுக்கெல்லாம் கொள்கைப் பிடிமானம் உண்டு. ஸம்பிரதாயத்தை ரக்ஷிக்க வேண்டும் என்ற லக்ஷ்யம் உண்டு. அதனால் இவர்கள் மரபை மீறிப் பேசமாட்டார்கள். ஆனால் கவி விஷயம் இப்படியில்லை. அவனுக்கு ஒரு கொள்கையையும் நிலை நாட்டுகிற பிடிமானம், பிடிவாதம் இராது. கொள்கைச் சார்பில்லாமலே தனக்கு ஸத்யமாகப் படுவதையெல்லாம் சொல்லிக்கொண்டு போகிறவன் அவன்.

இப்படிப்பட்ட மஹாகவிகளில் முக்கியமான காளிதாஸன் ‘ரகுவம்ச’த்தில் ஓரிடத்தில் ஸ்மிருதிகளைப் பற்றிச் சொல்கிறான்.

ராமனுக்குத் தகப்பனார் தசரதர். தசரதருடைய தகப்பனார் அஜன். அஜனுடைய தகப்பனார் ரகு. அதனால்தான் ரகுராமன் என்ற பெயரே – கொள்ளுத்தாத்தாவின் பெயரே- ராமனுக்கு வந்தது. ‘தாசரதி’ என்று தகப்பனாரின் பெயரை இரண்டோர் இடங்களில்தான் சொல்லியிருக்கும். பொதுவாகத் தாத்தாவின் பெயரைத்தான் பேரனுக்கு வைப்பது. ஆனால் தாத்தா பேரான அஜன் என்பது ராமனுக்குக் கிடையாது. கொள்ளுத் தாத்தாவின் பேரேதான் இவருக்கு அதிகம். அவ்வளவு கீர்த்தியாக, பேரும் புகழுமாக ரகு வாழ்ந்து கொண்டிருந்தார். ராகவன் என்றாலும் ரகு குலத்தோன்றல் என்றே அர்த்தம்.

ரகுவின் தகப்பனாருக்கு திலீபன் என்று பெயர். திலீபனுக்கு வெகுநாள் பிள்ளையே இல்லாமல் இருந்தது. திலீபனுடைய குலகுரு வஸிஷ்டர். வஸிஷ்டரிடத்தில் திலீபன் போய், “ஸ்வாமி, எனக்குக் குழந்தையே இல்லை. என் வம்சம் விளங்க நீங்கள்தான் அநுக்கிரகம் செய்ய வேண்டும்” என்று பிரார்த்தனை செய்துகொண்டார்.

வஸிஷ்டர் வீட்டில் ஒரு பசு மாடு இருந்தது. அது காமதேனுவின் பெண். நந்தினி என்று பெயர். அந்த நந்தினியை திலீபனிடத்தில் கொடுத்து, “இதைக் குளிப்பாட்டி, மேய்த்து, மிகவும் சிரத்தையுடன் பூஜித்து வளர்த்துக் கொண்டிரு. உனக்குப் பிள்ளை பிறக்கும்” என்று வஸிஷ்டர் அநுக்கிரஹம் செய்தாராம்.

ராஜாவைப் பார்த்து இப்படி மாடு மேய்க்கச் சொன்னார் என்றால் அவன் எத்தனை விநயமாக இருந்திருக்கவேண்டும்?

அன்றைய தினத்திலிருந்து திலீப மஹாராஜாவும் ஒரு மாட்டுக்காரனைப் போலவே தினமும் அந்த நந்தினியைக் காட்டுக்கு ஓட்டிக்கொண்டு போவது, மேய்ப்பது, குளிப்பாட்டுவது, இப்படி மிகவும் பக்தி சிரத்தையுடன் ரக்ஷித்துக் கொண்டிருந்தாராம். காட்டுக்கு மாட்டை ஓட்டிக் கொண்டு மேய்க்கப் போகிறபோது, துஷ்ட ஜந்துக்களால் மாட்டுக்கு ஆபத்து வராமல் இருக்க ஒரு தனுசு, ஒரு பாணம் மாத்திரம் எடுத்துக் கொண்டு மாட்டின் பின்னாலேயே போவாராம். அதைச் சொரிந்து கொடுக்கிறது, அதை மேய்க்கிறது, அது நின்றால் இவரும் நிற்கிறது, அது படுத்துக்கொண்டால் இவரும் படுத்துக்கொள்வது, அது நடந்தால் இவரும் நடக்கிறது – இப்படி அதன் பின்னாலேயே இவர் போய்க் கொண்டிருந்தார். ஒரு நிழல் எப்படி இருக்குமோ – நாம் உட்கார்ந்தால் நிழலும் உட்காருகிறது, நின்றால் நிற்கிறது, ஓடினால் ஓடுகிறது – அப்படி,

சாயேவ தாம் பூபதிரந்வகச்சத்|

நிழல்போல் அந்த அரசர் நந்தினி என்ற பசுமாட்டை ரக்ஷித்து வந்தார் என்று காளிதாஸன் சொல்கிறான்.

இப்படி தினமும் வீட்டிலிருந்து திலீபன் மாட்டை மேய்க்க ஓட்டிக்கொண்டு போகிற காலத்தில் திலீபனுடைய மனைவி ஸுதக்ஷிணையும் கொஞ்ச தூரம் பின்னாடியே நடந்து போய் வழியனுப்பிவிட்டு அப்புறம் திரும்பி வருவது வழக்கம். வெகு நியமமாக வீட்டில் இருந்துகொண்டு பர்த்தாவை அனுப்பி வைப்பது, சாயந்திரம் காட்டிலிருந்து அவர் பசுமாட்டோடு எப்போது திரும்பி வருவார் என்று பார்த்துக் கொண்டிருப்பது – இப்படி ஸுதக்ஷிணையும் பதிக்கு சுசுரூஷை செய்து கொண்டிருந்தாள். இவர் நந்தினியை நிழல் போல் பின்பற்றினார் என்றால் இவரை ஸுதக்ஷிணை நிழல் மாதிரி அநுஸரித்தாள்.

பதிவ்ரதா தர்மத்தை ஜனகரே ஸீதா கல்யாணத்தின் போது இப்படித்தான் சொன்னார். ராமனைப் பார்த்து “என் குழந்தை ஸீதை உன்னை நிழல் போலத் தொடர்ந்து வருவாளப்பா! சாயேவ அநுகதா” என்றார். இப்படி வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது. வால்மீகி சொன்ன ராமனுடைய சரித்திரத்தைக் காளிதாஸனும் சொல்ல வந்தான். ராமனுக்கு பின்னாடி வந்த லவ குசர்களைப் பற்றியும் சொல்கிறான். ராமனுக்கு முந்தி ரகுவம்சம் இருக்கிறதே- ராமனுடைய முன்னோர்கள்- அவர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறான். இப்படி ராமாயணம் சொல்ல வந்தவன், அந்த உத்தமமான வம்சத்தில் முன்னும் பின்னும் உள்ள சந்ததிகளைப் பற்றியும் சொல்லி, ராமனுக்கு யாருடைய பெயர் வந்ததோ அந்த மகா கீர்த்தி வாய்ந்த ராமனுடைய கொள்ளுத் தாத்தா பெயரையே “ரகுவம்சம்” என்று அந்த மஹாகாவியத்துக்கு வைத்தான். உத்தமமான வம்சத்தைப் பற்றி சொன்னாலே நாக்கு பவித்திரமாகும் என்பது போல் சொல்லியிருக்கிறான்.

இதிலே, ஸுதக்ஷிணை மாடு மேய்க்கப் போகும் திலீபனைத் தொடர்ந்து போகிறதைச் சொல்கிறபோதுதான் ரிஷிகள் எல்லாரும் ஸ்மிருதிகளை எப்படி பண்ணினார்கள் என்பதைச் சொல்கிறான். இதைச் சொல்ல வேண்டும் என்று கொள்கை கட்டிக் கொண்டு சொல்லவில்லை. இதற்காகச் சொல்கிற மாதிரியும் வலிந்து சொல்லவில்லை. என்னவோ அவனுடைய திறந்த மனஸில் பளிச்சென்று பட்டு, அதை அப்படியே சொல்லிவிட்டான் என்று தோன்றுகிற ரீதியிலே ஸ்மிருதிகளைப்பற்றிச் சொல்கிறான். என்ன சொல்கிறான்?

ஸுதக்ஷிணை மாட்டின் பின்னால் கொஞ்ச தூரம் எப்படிப் போனாள் என்று வருணிக்கிறான். நந்தினி முன்னாடி போகிறது. இவள் வேறு எங்கும் பார்க்காது, அந்த அடிச் சுவட்டின் வழியிலேயே நடந்தாள் என்று சொல்ல வருகிறான். நந்தினி நடக்கும்போது அதன் குளம்புகள் படுகிற இடத்தில் கொஞ்சம் தூசி கிளம்புகிறது. இப்படி கிளம்பும்படியான பவித்ரமான தூசி இருக்கிறதே, அந்தத் தூசியைப் பார்த்துக் கொண்டு, அந்தச் சுவட்டை அநுஸரித்து ஸுதக்ஷிணை கொஞ்சம் தூரம் நடந்தாள் என்று காளிதாஸன் சொல்கிறான்.

மற்ற கவிகளைக் காட்டிலும் காளிதாஸன் வெகு அழகாக உபமானம் சொல்வான். அதுதான் அவனிடத்திலுள்ள விசேஷம். ஒவ்வோரு கவிக்கு ஒவ்வோர் அம்சத்தில் விசேஷம். “உபமா காளிதாஸஸ்ய”- உவமைக்குக் காளிதாஸன். அப்படி உபமானத்தோடு ஸுதக்ஷிணை நந்தினிக்குப் பின் நடந்து போகிறதைச் சொல்கிற போதுதான் வேதத்தை ஸ்மிருதி பின் தொடர்வது உவமையாக வருகிறது:

தஸ்யா: குரந்யாஸ பவித்ர பாம்ஸும்

அபாம்ஸுலாநாம் துரி கீர்த்தநீயா|

மார்கம் மநுஷ்யேச்வர தர்மபத்நீ

ச்ருதேரிவார்த்தம் ஸ்ம்ருதிரந்வகச்சத்||

‘பாம்ஸு’ என்றால் தூசி. நந்தினி குளம்பு வைக்கிற இடத்தில் தூசி கிளம்புகிறது. ‘குர’ என்று குளம்புக்குப் பெயர். ‘குரந்யாஸ’- குளம்பு வைத்ததினாலே; ‘பவித்ர பாம்ஸும்’-கிளம்புகிற பவித்திரமான தூசியைப் பார்த்துக் கொண்டு போனாள்.

பசுவின் பாத தூசி மிக விசேஷமானது. அது எந்த இடத்தையும் பரிசுத்தம் செய்துவிடும். ஸாதாரணப் பசுவின் தூசியே பவித்ரம் என்றால், காமதேனு புத்திரியான நந்தினியின் பாத தூசி எத்தனை உயர்ந்ததாயிருக்கும்? அதற்குப் பாத்திரமான ஸுதக்ஷிணையோ இயல்பாகவே பரம பவித்ரமான தூசிபடியாத சரித்திரத்தை உடையவள்!

அபாம்ஸுலாநாம் துரி கீர்த்தநீயா

‘அபாம்ஸு’ ஒரு தூசி இல்லாதவள்! யாதொரு பழியோ களங்கமோ இல்லாத ஜன்மம். அப்பேர்ப்பட்ட உத்தமமான ஸுதக்ஷிணை, நந்தினியின் குளம்பு படுவதனாலே எழும்புகிற பவித்திரமான தூசியை அநுஸரித்து, சுத்தமான மார்க்கத்தை அநுஸரித்து காலடி எடுத்து வைத்து நடந்தாள். அது எப்படியிருந்தது என்றால் வேதத்தினுடைய (ச்ருதிகளுடைய) அர்த்தத்தை அநுஸரித்து மஹரிஷிகள் செய்திருக்கும்படியான ஸ்மிருதிகள் எப்படிச் சென்றிருக்கின்றனவோ அப்படியிருந்தது என்கிறான் காளிதாஸன்.

ச்ருதேரிவார்த்தம் ஸ்ம்ருதிரந்வகச்சத் |

‘அந்வகச்சத்’ – பின்தொடர்ந்தாள். இங்கே பசுமாட்டுக்கு உபமானம் வேதம்-ச்ருதி. அதனுடைய குளம்படிதான் அர்த்தம். வேத அர்த்தத்தையே ஸ்மிருதி பின் தொடர்கிற மாதிரி பசு மாட்டின் அடியை ஸுதக்ஷிணை பின்பற்றினாள். ஸுதக்ஷிணை முழுக்க அப்படியே பசு மாட்டோடு போகாது கொஞ்ச தூரம்தான் போனாள். அதுபோல் வேதத்தில் இருப்பதை எல்லாம் ஸ்மிருதிகள் சொல்லவில்லை. அவை நினைவுக் குறிப்புகள்தான். ஆனால் வேதத்தின் அடியும் பொருளும் தப்பாமல், அதில் இருப்பதையே ஸ்மிருதிகள் சொல்லியிருக்கின்றன. வேதத்திலிருக்கிற அத்தனை ஆயிரம் மந்திரங்களையும் ஸ்மிருதி சொல்லவில்லை. அவற்றை பிரியோஜனப் படுத்துகிற வழியையே சொல்கிறது. அதாவது வேதம் போகிற வழியில் அதை கொஞ்ச தூரம் அநுஸரிக்கிறது.

“பரிசுத்த அந்தஃகரணத்தையுடைய ஸுதக்ஷிணை பதியைப் பின்பற்றி நந்தினியின் குர‌தூளி எழும்பும் ப‌வித்திர‌ மார்க்க‌த்திலிருந்து சிறிதேனும் வ‌ழுவாம‌ல் போனாள்” என்று சொன்ன‌ காளிதாஸ‌ன் இத‌ற்கு ஒரு ந‌ல்ல‌ உவ‌மை சொல்ல‌ வேண்டும் என்று நினைத்த‌வுட‌ன் த‌ன் ம‌ன‌ஸில் ப‌ளீரென்று எழுந்த‌ உவ‌மையாக‌, “வேத‌ அர்த்த‌த்திலிருந்து கொஞ்ச‌ங்கூட‌ வ‌ழுவாம‌ல் ஸ்மிருதி அதைப் பின்ப‌ற்றிப் போவ‌து போல‌ப் போனாள்” என்கிறான்.

எப்பொழுதும் உபமானமானது உபமேயத்தைவிட உயர்ந்ததாக இருக்கும். சந்திரன் மாதிரி, தாமரைப்பூ மாதிரி ஒருத்தர் முகம் இருந்தது என்று சொன்னால் வாஸ்தவத்தில் உபமானமான சந்திரனும், தாமரைப்பூவும் உபமேயமான முகத்தைவிட உயர்ந்ததாகத்தான் இருக்கும். அந்தப்படி, இங்கு பர்த்தாவான திலீபனைப் பசுவின் சுவட்டால் பின்பற்றிய பரம பவித்ரையான ஸுதக்ஷிணை என்ற உபமேயத்துக்கு உபமானமாகச் சொல்லப்பட்ட ஸ்ம்ருதியானது ச்ருதியை இன்னம் ரொம்ப க்ளோஸாக பின்பற்றுகிறது என்று ஆகிறது. உவமை சொல்வதில் அதிச்ரேஷ்டனான காளிதாஸன் இந்த உபமானத்தைச் சொன்னான் என்பதைவிட, ஸ்மிருதிகள் முழுக்கவும் ச்ருதிகளை அநுஸரித்தவையே என்பதற்கு ஆதாரம் வேண்டியதில்லை.

ஸ்மிருதிகள் சுதந்திர நூல்கள் அல்ல

ஸ்மிருதிகள் என்கிற தர்மசாஸ்திரங்களை மரியாதை உணர்ச்சியுடன் பார்க்கிற பலரிடத்தில்கூட அவற்றைப் பற்றி ஒரு தப்பான அபிப்பிராயம் இருக்கிறது. அதாவது ஸ்மிருதிகளைப் பண்ணினவர்களே சுதந்திரமாக இந்த தர்மங்களை, விதிகளை வகுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். ஸ்மிருதிகாரர்களை [ஸ்மிருதிகளை எழுதியவர்களை] law-givers என்று சொல்கிறார்கள். அதாவது அவர்களாகவே தங்கள் அபிப்பிராயப்படி இவற்றை சட்டம் (law) என்று போட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். சட்ட நிபுணர்கள் பலர் ஒன்று சேர்ந்து நம் தேசத்தில் இப்படியிப்படி இருக்க வேண்டும் என்று ‘கான்ஸ்டிட்யூஷன்’ [அரசியல் நிர்ணய சாஸனம்] செய்திருக்கிறார்களே, அது போலத்தான் தர்ம சாஸ்திரங்களையும் எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். ஸ்மிருதிகள் சுதந்திரமாகவே அபிப்பிராயம் சொல்பவை என்று நினைக்கிறார்கள்.

இப்படி நினைப்பதால் இன்னொன்றும் இதைத் தொடர்ந்து தோன்றுகிறது. இப்போது கான்ஸ்டிட்யூஷன் நாம் நடைமுறையில் செய்ய விரும்புகிற சில காரியங்களுக்கு இடம் கொடுக்காமலிருக்கிற போது, நமக்கு ஸாதகமாக அதைத் திருத்திவிடுவது (amend பண்ணுவது) என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா? இதே மாதிரி, பழைய சட்டங்களான தர்ம சாஸ்திரங்களையும் நம்முடைய இக்காலக் கொள்கைக்கு ஏற்றபடி மாற்றி விட்டால் என்ன என்று கேட்கிறார்கள்.

என்னிடமே பல பேர் கேட்டிருக்கிறார்கள், “காலத்தை அநுஸரித்து சாஸ்திரத்தை ஏன் மாற்றக் கூடாது?” என்று. “ஸர்க்கார் சட்டங்களை மாற்றவில்லையா?” என்று ஆதாரம் காட்டுகிறார்கள். என்னையே ரொம்ப ஸ்தோத்திரம் பண்ணி, “ஸ்மிருதிகளை பண்ணின ரிஷிகள் மாதிரிதான் இந்தக் காலத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். அதனால் நீங்கள் மனசு வைத்தால் சாஸ்திரங்களை இந்தக் காலத்துக்குத் தகுந்தாற் போல் மாற்றி விடலாம்” என்கிறார்கள். “நாங்கள் ஆசைப் படுகிற மாதிரி நீங்கள் சாஸ்திரத்தை மாற்றித் தாருங்கள்” என்பதையே இப்படி கௌரவமாகச் சொல்கிறார்கள்!

ஸ்மிருதிகள் அந்தந்த ஸ்மிருதிகர்த்தாவின் சொந்த அபிப்பிராயம்தான் என்றால் இவர்கள் நினைப்பதிலும் கேட்பதிலும் தப்பு இல்லை.

ஆனால் ரொம்பப் பேருக்கு – தர்ம சாஸ்திரங்களிடம் மதிப்புணர்ச்சி உள்ளவர்களுக்குக்கூட- என்ன தெரியவில்லையென்றால், இந்த ஸ்மிருதிகள் அவற்றைச் செய்தவர்களின் சொந்த அபிப்பிராயமே இல்லை. ஏற்கெனவே வேதங்களில் சொல்லியிருந்தவற்றையேதான் அவர்கள் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். வேத வாக்கை ஒருகாலும் எந்த சந்தர்ப்பத்திலும் மாற்றக் கூடாதாகையால், இந்த தர்ம சாஸ்திர விதிகளையும் மாற்றுவதற்கே இல்லைதான்.

சாஸ்திரப்படியே நீங்கள் நடக்கும்படிப் பண்ண எனக்கு சக்தியோ, யோக்யதையோ இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் அதை மாற்றுவது நிச்சயமாக என் காரியமில்லை. என்னை இங்கே [மடத்தில்] உட்கார்த்தி வைத்திருப்பது வேத தர்மங்களை ஜனங்கள் பரிபாலனம் பண்ணும்படியாகச் செய்வதற்குத்தான். ஆசார்யாள் ஆக்ஞை அது தான். அதனால் இந்தக் காலத்தின் ஸெளகரியத்துக்கு, புதுக் கொள்கைக்கும் போக்குகளுக்கும் ஸாதகமாக சாஸ்திரத்தை மாற்றிக் கொடுப்பதற்கு எனக்கு authority (அதிகாரம்) இல்லை.

ரிஷிகளாக இந்த ஸ்மிருதிகளை எழுதி வைத்திருக்கிறார்கள் என்றால் அதை நாம் அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதே இல்லை. வேண்டாம் என்றால் தூக்கி எறிந்து விடலாம். இவர்கள் வேதத்தில் இல்லாததை எல்லாம் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள், ஏதோ தாங்களாகவே உத்தேசித்து இப்படி இப்படி இருந்தால்தான் நல்லது என்று வரையறுத்து வைத்திருக்கிறார்கள் என்றால் அவை நமக்கு வேண்டியதில்லை. அப்படிப் பார்த்தால் அநேகம் பேர் தங்களுக்குத் தோன்றியதை எழுதி வைத்திருக்கிறார்கள்; நமக்குத் தோன்றுவதையும் நாமே எழுதி வைத்துக்கொண்டு விடலாமே!

உண்மையில் ஸ்மிருதிகள் வேத வாக்கியங்களையே அநுஸரித்துச் சொல்லியிருப்பதனால்தான் இந்த ஸ்மிருதிகளை நாம் இன்றைக்கும் என்றைக்கும் ஆதாரமாக வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

“சரி, அப்படியென்றால் வேதத்தில் இருப்பதையேதான் இவர்கள் பிரமாணமாகச் சொல்லியிருக்கிறார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?”

சின்னங்கள்

நாம் இந்த மதத்தைச் சேர்ந்தவன் என்றால் அதற்கு சில வெளி அடையாளங்கள், சின்னங்கள் உண்டு.

‘ஸ்கௌட்’ (சாரணர்)களுக்குத் தனி உடுப்பு இல்லையா? ஆர்மி [தரைப்படை] , நேவி [கப்பற்படை] ஒவ்வொன்றில் இருப்பவருக்கும் வேறு வேறு வெளி அடையாளங்கள் இருக்கின்றன. போலீஸிலேயே பல பிரிவுகளுக்குப் பல தினுஸாக இருக்கின்றன. இவர்கள் டிரெஸ்ஸையும், பாட்ஜ் முதலானவற்றையும் மாற்றிக் கொள்வதால் இவர்கள் செய்கிற காரியம் ஒன்றும் மாறிவிடாது. இருந்தாலும் அப்படி மாற்றிக் கொள்ளக் கூடாது என்று கட்டாயமாக விதி இருக்கிறது. போலீஸ்காரன் தொப்பியை நேவிக்காரன் வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படியே இவன் தொப்பியை அவன் வைத்துக் கொள்ளக்கூடாது. எதிலும் கட்டுப்பாடு, ஒழுங்கு (discipline, orderliness) இருக்க வேண்டும்.

இந்த டிஸிப்ளின், ஆர்டர் மதத்துக்கும் வேண்டுமல்லவா? அதனால்தான் பல வேறு ஜாதிக்காரர்கள், வெவ்வேறு ஆசிரமக்காரர்கள் ஆகிய ஒவ்வொருத்தருக்கும் வித்தியாஸமான சின்னங்களை, காரியங்களைக் கொடுத்திருக்கிறது. ‘இப்படி வேஷ்டி கட்டிக் கொள்ளு, இப்படி புடவை கட்டிக் கொள்ளு, இந்த மாதிரி நெற்றிக்கு இட்டுக் கொள்ளு என்றெல்லாம் ரூல்களை தர்ம சாஸ்திரம் சொல்கிறது.

இது வெறும் சமூகக் கட்டுப்பாட்டுக்காக மட்டும் சொன்னதல்ல. இவை ஒவ்வொன்றிலும் ஜீவனைப் பரிசுத்தி பண்ணுகிற சூக்ஷ்மமான அம்சமும் உண்டு.

கச்சேரியில் ஸேவகனாயிருப்பவனுக்கு டவாலி உண்டு. அதிகாரிக்கு அது கிடையாது. ஏன் இப்படி என்று நாம் கேட்பதில்லை. ஆனால் சாஸ்திரத்தில் அவரவர் தொழிலுக்கும் குலாசாரத்துக்கும் ஏற்றதாக வேறு வேறு அடையாளங்களைச் சொன்னால் மட்டும் ஆக்ஷேபிக்கிறோம். ஸமத்வம் (equality) என்று சத்தம் போடுகிறோம். ஸமஸ்த ஜன‌ ஸமூகத்தின் க்ஷேமத்துக்காகவும் காரியத்தில் பலவாகப் பிரிந்திருந்த போதிலும், ஹ்ருதயத்தில் ஒன்றாக சேர்ந்திருந்த நம்முடைய சமுதாய அமைப்பில் ஆசார அநுஷ்டானங்களையும், அடையாளங்களையும் பிரித்துக் கொடுத்தது அவரவரது குண-கர்மாக்களுக்கு அநுகூலம் பண்ணுவதற்குத்தான் என்பதை மறந்து, இதிலே வாஸ்தவத்தில் இல்லாத உயர்வு தாழ்வுகளைக் கல்பித்துக் கொண்டு சண்டை போடுகிறோம்.

இப்போது கடைசியில் ஒருத்தருக்கும் ஒரு மதச் சின்னமும் இல்லை என்று ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.

பாக்கி அடையாளங்களை வெட்கப்படாமல் போட்டுக்கொள்கிறோம். ஆத்மாவுக்கு நல்லது செய்கிற மதச் சின்னங்களை போட்டுக் கொள்ள மட்டும் வெட்கப்படுகிறோம். “எல்லாம் ஸூபர்ஸ்டிஷன்” என்கிறோம். சீர்திருத்தம் என்று ஆரம்பிக்கிறோம். இப்படிச் சொல்லிக் கொண்டே, சீர்திருத்தக்காரர்கள் என்று அடையாளம் தெரிவதற்காக ஒரு குல்லா போட்டுக் கொள்கிறோம்; அல்லது ஏதோ ஒரு கலரில் ச‌ட்டை, துண்டு போட்டுக் கொள்கிறோம். இவற்றுக்கு தெய்வத்துக்கும் மேலான முக்யத்தைத் தருகிறோம்!

சுயேச்சையும் கட்டுப்பாடும்

இங்கே ஒரு பொதுவான விஷயம் சொல்லவேண்டும். எவ்வளவுதான் அலசி அலசி விரிவாக எழுதினாலும் நூறாயிரம் சமாசாரங்கள் வந்து சேர்கிற மநுஷ்ய வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சமும் இப்படித்தான் என்று எழுதிவைத்து நிர்ணயம் பண்ண முடியாது. எழுத்திலே நிர்த்தாரணம் செய்வது சட்டம் மாதிரி நிர்ப்பந்தமாகத்தான் தோன்றும். நன்றாகக் கட்டுப்பாடு செய்கிற சட்ட விதிகள் வேண்டும்தான். நம் சாஸ்திரங்களில் இப்படி நிறைய இருக்கத்தான் செய்கின்றன. சுதந்திரம், ஜனநாயகம் என்று பெரிசாகச் சொல்வதெல்லாம் யதார்த்தத்தில் மனம் போனபடி நடப்பதாகவும், அசக்தமான‌ நல்லவர்களை பலிஷ்டரான முரடர்கள் ஸ்வயேச்சையாக அடக்கி ஒடுக்கிக் கஷ்டப்படுத்துவதாகவுமே இருப்பதைப் பார்க்கிறோம். ஆகையால், விதிகளைப் போட்டு ஜனங்களைக் கட்டுப்படுத்தத்தான் வேண்டும். ஆனாலும் இதிலும் ஒரு ‘லிமிட்’ வேண்டும். கட்டுப்பாடு பண்ணுவதற்கும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். இல்லாவிட்டால் மநுஷ்ய ஸ்வபாவப்படி, ஒரேயடியாகச் சட்டம் போட்டு நெரித்தால் உத்ஸாகமே போய்விடும். ரொம்பவும் கட்டுப்படுத்தினாலே ரொம்பவும் அறுத்துக் கொண்டு ஓடத் தோன்றும்.

இதனால் நம் சாஸ்திரங்களில் எல்லாவற்றையும் எழுதி வைத்து சட்டமாகத் திணிக்காமல், பல விஷயங்களில் பெரியவர்கள் பண்ணுகிறதைப் பார்த்தே மற்றவர்கள் மனமொப்பி, தாங்களாக, ஸ்வயேச்சையாக அதே மாதிரி செய்யும்படி விட்டிருக்கிறார்கள். என்னை நீங்கள் பெரியவன் என்று வைத்துக் கொண்டு விட்டால், என்னைப் பார்த்து நான் பண்ணுகிற மாதிரி நீங்களும் நெற்றிக்கு இட்டுக் கொள்ள வேண்டும், பூஜை பண்ண வேண்டும், பட்டினி கிடக்க வேண்டும் என்று ஸ்வயேச்சையாக ஆரம்பிக்கிறீர்கள் இல்லையா? இந்த மாதிரி சில விஷயங்களை personal example (இன்னொருத்தரின் வாழ்க்கை உதாரணம்) , tradition (மரபு) , தேச வழக்கம் (local custom), குடும்ப வழக்கம் இவற்றைப் பார்த்தே பண்ணும்படியாக விட்டால்தான் பாக்கிக்குச் சட்டம் போட்டு விதிகளாக எழுத்தில் எழுதி வைக்கிறபோது அவற்றை ஜனங்கள் சிரத்தையுடன் அநுஸரிக்க விரும்புவார்கள்.

வாழ்ந்து காட்டி பிறத்தியாரையும் அப்படிச் செய்ய வைப்பது ரொம்ப உசத்தி. அப்புறம் வாய் வார்த்தையாகப் பேசி, compulsion (நிர்பந்தம்) இல்லாமல் ஸ்வயேச்சையாக ஏற்கிற மாதிரி persuasion மூலம் பண்ண வைப்பது இரண்டாம் பக்ஷம். கடைசி பக்ஷம்தான் விதியாக எழுதி வைத்துக் கட்டாயப்படுத்துவது. ஸஹஸ்ரம் வத; ஏகம் மா லிக என்று வசனம் கூட உண்டு. ‘ஆயிரம் விஷயத்தை வாய் வார்த்தையாகச் சொல்; ஆனால் அதில் ஒன்றைக் கூட எழுதி வைத்து நிர்ப்பந்தம் பண்ணாதே’ என்பது இதற்குத் தாத்பரியம். இப்போது எடுத்ததற்கெல்லாம் written laws (எழுத்து மூலம் சட்டம்)! கையில் பேனா கிடைத்தவனெல்லாம் தன் அபிப்ராயத்தை எழுதி ‘பப்ளிஷ்’ பண்ணிவிடுகிறான்!

மநுஷ்யனுக்கு சுதந்திரமே தராமல் ஹிந்து தர்மசாஸ்திரங்கள் ஆயிரம் சட்டம் போடுகின்றன என்று இக்காலத்தவர் கண்டித்தாலும், அதிலே இந்த சுதந்திரத்தை மதித்துப் பல விஷயங்களை விட்டுத்தான் வைத்திருக்கிறது. ஜீவன் இஷ்டப்படி போய், தானும் கெட்டு லோகத்தையும் கெடுக்காமலிருக்க வேண்டுமானால் எல்லா விஷயத்திலுமே ஒரு நிர்ணயம் இருக்கத்தான் வேண்டும் என்று நம் சாஸ்திர கர்த்தாக்கள் கருதியிருக்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட நிர்ணயங்கள் எல்லாவற்றையும் ஜனங்கள் எழுத்து மூலம் சட்டமாக எடுத்துக் கொள்வதானால் ரொம்பவும் கட்டி வைக்கிற மாதிரி நினைப்பார்கள். ஆகையால், ‘சிலவற்றை மட்டுமே எழுதுவோம்; பாக்கியை அவர்களே சுதந்திரமாக சிஷ்டர்களைப் பார்த்தும், மரபைப் பார்த்தும், தேச குல ஆசாரத்தைப் பார்த்தும் அநுஷ்டிக்கட்டும்’ என்று விட்டிருக்கிறார்கள்.

‘சாஸ்திர விதி’ என்னும்போது தோன்றும் நிர்பந்த எண்ணம் பெரியோர் வழி, மரபு என்னும்போது தோன்றுவதில்லை. குல வழக்கம், ஊர் வழக்கம் முதலியவற்றை ஒரு சுய அபிமானத்தோடு ஏற்றுக்கொள்கிறோம்.

இவற்றைக் கடைசி தர்மசாஸ்திர நூலான வைத்யநாத தீக்ஷிதீயந்தான் பெரிய மனஸோடு ஒப்புக் கொண்டது என்றில்லை. பூர்வ கிரந்தங்களும் இதே அபிப்ராயத்தைக் கொண்டவைதான். பெரும்பாலாரால் பின்பற்றப்படுகிற – ‘அதாரிடி’ ஸ்தானம் பெற்ற – ஆபஸ்தம்ப ஸூத்திரத்திலேயே மஹரிஷி ஆபஸ்தம்பர் முடிவில், “நான் இந்த சாஸ்திரத்தில் எல்லா தர்மங்களையும் சொல்லிவிடவில்லை. மீதி எவ்வளவோ இருக்கின்றன. ஸ்திரீகளிடமிருந்தும், நாலாம் வர்ணத்தவரிடமிருந்துங்கூடக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியவை அநேகம் இருக்கின்றன. அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்” என்கிறார்.

இதிலிருந்து ‘ஸ்திரீகளைப் புருஷர்கள் அடக்கி வைத்தார்கள்; பிராமணரல்லாதாரை பிராமணர்கள் கீழே தள்ளியிருந்தார்கள்’ என்று குற்றம் சொல்வதெல்லாம் எவ்வளவு தப்பு எனத் தெரிகிறது. பெரிய தர்ம சாஸ்திர ஆதார நூலிலேயே ஸ்திரீ-சூத்ரர்களின் தார்மிக ஞானத்தை மதித்து, அதற்கு அதிகாரபூர்வமான ஸ்தானம் கொடுத்திருக்கிறது.

கல்யாணங்களில் ஆரத்தி எடுப்பது, பச்சை பூசுவது என்று அநேக விஷயங்கள் பெண்டுகள் சொன்னபடி செய்ய வேண்டும் என்றே ஆச்வலாயனர் முதலான பெரிய ‘ஒரிஜினல்’ ஸூத்ரகர்த்தாக்கள் சொல்லியிருக்கிறார்கள். பந்தற்கால் நடுவதற்கு மந்திரம் இருந்தாலும்கூட, அது விஷயமாகப் பந்தல் போடுகிற வேலைக்காரன் ஒரு ஐதிகம் சொன்னால் அதையும் கேட்கத்தான் வேண்டும்.

இப்படியெல்லாம் சாஸ்திரங்களில் ஒரே கெடுபிடிக் கட்டாயம் பண்ணாமல் எல்லாருக்கும் கொஞ்சம் ஜனநாயக சுதந்திரம் கொடுத்துத்தான் இருக்கிறது.

நாலாம் வர்ணமான சூத்திரர்களுக்கு உள்ள ஸம்ஸ்காரங்களையும் அநுஷ்டானங்களையும் தர்ம சாஸ்திரங்கள் சொல்லியிருக்கின்றன. அந்த ஜாதியை அலக்ஷ்யம் பண்ணவே இல்லை. தீஷிதீயத்தில் வர்ணாச்ரம காண்டத்திலும், ஆன்ஹிக காண்டத்திலும், சிராத்த காண்டத்திலும் இவை உள்ளன.

பொதுவாக, தர்ம சாஸ்திரங்களில் ஆசார காண்டம், வியவஹார காண்டம் என்று இரண்டு உண்டு. ஒழுக்கங்களை ஆசாரம் என்பார்கள். அவற்றை நடைமுறையிலான வெளிக்காரியங்களில் பின்பற்றுவதே வியவஹாரம்.

வைத்யநாத தீக்ஷிதீயம்

தமிழ்நாட்டில் தர்ம சாஸ்திரம் என்றால் வைத்யநாத தீக்ஷிதீயம்தான்.

கொஞ்சம் பாஷாஞானம் இருந்தாலும் இதுபோன்ற தர்ம சாஸ்திரத்தைப் படித்துப் புரிந்துகொண்டு விடலாம். வேத அத்யயனம் பண்ணினால்கூட மந்திரத்துக்கு அர்த்தம் தெரியாத மாதிரி, இது கஷ்டம் இல்லை. வைத்யநாத தீக்ஷிதீயத்தைப் பெரியவர்கள் நன்றாகத் தமிழிலேயே மொழி பெயர்த்து அச்சுப் போட்டிருக்கிறார்கள்.

வைத்யநாத தீஷிதர் எழுதிய புஸ்தகமாதலால் இதற்கு இப்படிப் பெயர் சொல்கிறோம். அவர் இந்நூலுக்கு, வைத்த பெயர் “ஸ்ம்ருதி முக்தாபல நிபந்தன க்ரந்தம்” என்பது.

இந்தப் பரம உபகாரமான நூலை எழுதிய வைத்யநாத தீக்ஷிதரைப் பற்றி நமக்குக் கொஞ்சமே தெரிய வந்திருக்கிறது. இருநூறு வருஷங்களுக்கு முன்பு அவர் இருந்திருக்க வேண்டும். நாச்சியார் கோவிலுக்கு ஸமீபத்திலுள்ள கண்டிரமாணிக்கத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. எழுதியதோடு மட்டுமில்லாமல் அவரே ஸகல கர்மங்களையும், தர்மங்களையும் அநுஷ்டித்துக் காட்டினார்; பெரிய யாகங்கள் செய்தார் என்று அறிகிறோம்.

மேதாதிதி, விக்ஞானேச்வரர், ஹேமாத்ரி முதலியவர்களின் உயர்ந்த நிபந்தன கிரந்தங்களையும்விட வைத்யநாத தீக்ஷிதீயமே சிரேஷ்டமானதாகக் கருதப்படுகிறது. ஒரு விஷயங்கூட விட்டுப் போகாமல் இதில் வர்ண (ஜாதி) தர்மம், (பிரம்மசர்யம் முதலான) ஆச்ரம தர்மம், ஆசௌசம், சிராத்தம், பிராயச்சித்தம், ஸ்த்ரீ தர்மம், தாயபாகம், திரவிய சுத்தி முதலான ஸகலத்தையும் பூர்ணமாகச் சொல்லியிருக்கிறது.

தர்ம சாஸ்திரம் பூர்விகமான பிதுரார்ஜித சொத்தை எப்படி யாருக்கு விநியோகிக்க வேண்டும் என்பதைக்கூட வரையறுக்கிறது. Hindu Code Bill முதலானவை சுதந்திர இந்தியாவில் கொண்டுவரப்பட்டபோது சில பேர் சாஸ்திரப்படிதான் சொத்துரிமை தரவேண்டும் என்று வாதம் செய்தார்கள். இந்த விஷயந்தான் தாயபாகம் என்பது. (மருமக்கத்தாயம் என்றே மலையாளத்தில் மாமன்- மருமான் வழியாகச் சொத்து விநியோகமாவதைச் சொல்கிறார்களல்லவா? ‘தாயாதி’ என்ற பெயரும் ‘தாய’ த்திலிருந்து வந்ததே.)

நிபந்தன கிரந்தங்களில் தீக்ஷிதீயமே கடைசியில் வந்த தாகையால் முந்தைய எல்லா தர்ம சாஸ்திர நூல்களையும் அலசி, ஆராய்ந்து, எல்லா விஷயங்களையும் கொடுக்கிறது. இதற்கு முந்தி தோழப்பர் செய்த நிபந்தனந்தான் தக்ஷிணத்தில் ஓர‌ள‌வுக்கு நல்ல பிரசாரத்திலிருந்தது.

தீக்ஷிதீயம் தோன்றியதிலிருந்தே ஸ்மார்த்த வைஷ்ணவ பேதமில்லாமல் இருவரும் அதை ஆதாரமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ச்ருதியான வேதத்தையும், அதன் விளக்கமாய் பூர்வத்திலேயே தோன்றிய கல்ப ஸூத்ர, தர்ம ஸூத்ர, ச்ரௌத-க்ருஹ்ய ஸூத்ரங்களையும், ஸ்மிருதிகளையும் போல, பிற்பாடு தோன்றிய நிபந்தன கிரந்தங்களை எல்லாரும் ஏற்கும்படியான முறையில் எழுதுவது ஸுலபமல்ல. தீக்ஷிதர் பக்ஷபாதமே யில்லாமல் விசால மனஸோடு, நடு நிலைமையிலிருந்து கொண்டு மீமாம்ஸா சாஸ்திரத்தின் அர்த்த நிர்ணய முறையையே பின்பற்றிப் பூர்வ சாஸ்திரங்களைத் தொகுத்து, அவற்றில் பரஸ்பர விரோதமுள்ள பாகங்களில் முடிவாக ஒரு தீர்மானத்துக்கு வந்திருப்பதால்தான் தீக்ஷிதீயம் தென்தேசத்தில் பிரமாண நூலின் ஸ்தானத்தைப் பெற்றது. ஒன்றுக்கொன்று ஸ்மிருதிகள் முரணாயிருக்கும் சில இடங்களில், “அவரவர் இவற்றை தேசாசாரப்படி செய்து கொள்ளட்டும்; தங்கள் குல பூர்விகர்கள் எப்படிப் பண்ணினார்களோ அப்படிப் பண்ணட்டும்” என்று பெருந்தன்மையோடு சொல்லி விட்டு விடுவார்.

ஸ்மிருதிகளும், துணை நூல்களும்

மநு, பராசரர், யாக்ஞவல்கியர், கௌதமர், ஹாரீதர், யமன், விஷ்ணு, சங்கர், லிகிதர், பிருஹஸ்பதி, தக்ஷன், அங்கிரஸ், பிரசேதர், ஸம்வர்த்தர், அசனஸ், அத்ரி, ஆபஸ்தம்பர், சாதாதபர் என்றிப்படிப் பதினெட்டு மஹரிஷிகள் தங்களுடைய அதிமாநுஷ்ய சக்தியால் வேதங்களை முழுக்கத் தெரிந்து கொண்டு அதிலிருந்து தொகுத்து தர்ம சாஸ்திரங்களைத் தந்திருக்கிறார்கள். இவை மநு ஸ்மிருதி, பராசர ஸ்மிருதி, யாக்ஞவல்கிய ஸ்மிருதி என்று அவரவர் பெயரால் வழங்குகின்றன. இவற்றைப் பார்த்தால் போதும், வாழ்க்கையில் செய்யவேண்டிய ஸகல அநுஷ்டானங்களையும் தர்மங்களையும் தெரிந்து கொண்டு விடலாம்.

18 ஸ்மிருதிகளைத் தவிர, உப ஸ்மிருதிகள் என்று 18 துணை நூல்கள் இருக்கின்றன*.

ஸ்ரீமத் பகவத் கீதையையும் ஸ்மிருதிகளோடு சேர்த்துச் சொல்கிற வழக்கம் உண்டு. நேராக வேத மந்திரங்களாக உள்ள ‘ச்ருதி’யாக இல்லாமலும் நம் மதத்துக்கு ஆதாரமாயிருப்பதால் அதை ‘ஸ்மிருதி’ப் பிரமாணமாகச் சொல்கிறார்கள்.

இப்படி அநேகம் ஸ்மிருதிகள் இருப்பதால் இவற்றிலும் ஒன்றிலிருப்பது இன்னொன்றில் இல்லாமல் இருக்கலாம். சில சில காரியங்கள் ஒன்றுக்கொன்று வித்யாஸப்படலாம். அதனால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதில் இன்னமும் கொஞ்சம் ஸந்தேஹம் ஏற்படுகிறது. இந்த ஸந்தேகத்தையும் போக்குவதாக ‘தர்ம சாஸ்திர நிபந்தன’ங்கள் என்று சில புஸ்தகங்கள் இருக்கின்றன.

சில ஸ்மிருதிகள் ஒரு சில விஷயங்களோடு நின்று விடுகிறது; பூர்ண உபதேசம் செய்யவில்லை. வழக்கத்தில் தலைமுறை தலைமுறையாக வந்துவிட்ட விஷயங்கள் எல்லோருக்கும் தெரிந்தேயிருக்கும் என்று நினைத்துவிட்ட மாதிரி, சில ஸ்மிருதிகளில் ஸந்தியாவந்தனப் பிரயோகமே இல்லை; சிலவற்றில் சிராத்த விஷயமில்லை; தீட்டு-துடக்கு ஸமாசாரங்களைச் சொல்லும் ஆசௌசாதிகள் சிலதில் இல்லை. “இப்படி மூச்சுவிடு! இப்படிச் சாப்பிடு” என்று புஸ்தகத்தில் எழுதி வைத்தா சொல்லிக் கொடுக்க வேண்டும்? அந்த மாதிரிதான் இவையும் என்று அந்த ஸ்மிருதி கர்த்தாக்கள் நினைத்திருப்பார்களோ என்னவோ?

இம்மாதிரி எந்த விஷயத்தையுமே ‘தன்னால் தெரிந்திருக்கும்’ என்று நினைத்து விட்டுவிடாமல், ஸகலத்தையும் எழுதி வைத்திருப்பது நிபந்தன கிரந்தங்களில்தான். ஸ்மிருதிகளில் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பவைகளையும் இவையே வியவஸ்தை செய்து, இதிது இப்படியிப்படித்தான் என்று நிர்ணயம் செய்கின்றன. சில பெரியவர்கள் எல்லா ஸ்மிருதிகளையும் பார்த்து, ஒன்றோடொன்று பொருத்தி ஆராய்ச்சி செய்து, முடிவாக இன்னின்ன செய்யவேண்டும் என்று தீர்மானித்து, ஐயம் திரிபற இந்த நிபந்தனங்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.

இப்படி நம் தேசத்தில் ஒவ்வொரு பிரதேசத்தில் ஒவ்வொரு நிபந்தன கிரந்தத்தை அநுஸரிக்கிறார்கள். வடக்கே இருப்பவர்கள் காசிநாத உபாத்யாயர் எழுதிய நிபந்தனத்தைப் பின்பற்றுகிறார்கள். மேற்கே மஹாராஷ்டிரத்தில் ‘மிதாக்ஷரி’ என்ற நிபந்தனம் அநுஸரிக்கப்படுகிறது. அதற்குச் சட்டத்துக்கு ஸமதையான ஸ்தானம் இருப்பதாகக் கோர்ட்டுகளே அங்கீகரித்திருக்கின்றன. கமலாகர பட்டர் எழுதிய ‘நிர்ணய ஸிந்து’ என்ற நிபந்தனமும் அங்கு வழங்குகிறது. மஹாராஷ்ட்ரத்திலுள்ள பைதானில் மந்த்ரியாக இருந்த ஹேமாத்ரி என்பவர் எல்லா தர்ம சாஸ்திரங்களையும் சேர்த்து ஒரு பெரிய ‘டைஜஸ்’டாக ‘சதுர்வர்க்க சிந்தாமணி’ என்று எழுதியிருக்கிறார். இங்கே தக்ஷிணத்தில் நாம் வைத்யநாத தீக்ஷிதர் எழுதிய “வைத்யநாத தீக்ஷிதீயம்” என்ற புஸ்தகத்தைப் பின்பற்றிச் செய்கிறோம். கிருஹஸ்தர்களுக்கு இவை முக்யமாக இருக்கின்றன. ஸந்நியாஸிகள் தாங்கள் செய்ய வேண்டியது என்ன, செய்யக்கூடாதது என்ன என்பதை ‘விச்வேச்வர ஸம்ஹிதை’ என்ற நூலைப் பார்த்து தெரிந்து கொள்கிறார்கள்.


* உப ஸ்மிருதிகளைச் செய்த பதினெண்மர்: ஜாபாலி, நாசிகேதஸ், ஸ்கந்தர், லெளகாக்ஷி, காச்யபர், வியாசர், ஸநத்குமாரர், சந்தனு, ஜனகர், வியாக்ரர், காத்யாயனர், ஜாதூகர்ண்யர், கபிஞ்ஜலர், போதாயனர், காணாதர், விச்வாமித்ரர், பைடீனஸர், கோபிலர்.

புராண லக்ஷ்யத்துக்கு நடைமுறை வழி

புராண புருஷர்கள்தான் நமக்கு ideal (ஆதரிசமானவர்கள், வழிகாட்டிகள்) என்று தெரிகிறது. அவர்களுடைய கதைகளைப் படித்தால் அவர்களுடையது மாதிரியான உயர்ந்த குணங்களைப் பெற வேண்டுமென்ற ஆசை உண்டாகிறது. ஆனாலும் ஆசை உண்டாகிறதே தவிர, அந்த உத்தம குணங்களை சம்பாதித்துக் கொண்டு எந்த சந்தர்ப்பத்திலும் அவற்றிலிருந்து நழுவாமல் இருப்பதென்றால், இது அஸாத்தியமானதாக இருக்கிறது.

காரியம் ஏதாவது பண்ணிக்கொண்டேயிருப்பதுதான் மநுஷ்யனின் இயற்கையாக இருக்கிறது. க்ஷண காலம்கூட மனஸை நிறுத்திவிட்டு இருக்க முடியமாட்டேன் என்கிறது. பகவானும் கீதையில், “மநுஷ்யனானவன் ஒரு நொடியும் சும்மா இல்லாமல் காரியம் பண்ணிக் கொண்டேயிருக்கும் படியாகத்தான் பிரகிருதி (இயற்கை) அவனை ஏவிக்கொண்டிருக்கிறது. அதனால் அவன் இந்தக் காரியங்களைப் பண்ணுகிற சரியான வழியைத் தெரிந்துகொண்டு அப்படியே பண்ணி அதனால்தான் சித்தத்தை சுத்தி செய்து கொண்டு உத்தம குணங்களை ஸம்பாதித்துக் கொண்டு, அப்புறம் காரியங்களை விட்டு, குணங்களைக்கடந்து குணாதீதனாக, ஞானியாக, பிரம்மவித்தாக ஆக வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார்.

நம் மதத்தின்படி நடந்து கொண்டு, பாபங்களைப் போக்கிக் கொண்டு ஆத்மாவை சுத்தப்படுத்திக் கொண்டு சாச்வத ஸெளக்கியமான மோட்சத்தை அடைய வேண்டுமானால் நாம் என்னென்ன காரியங்கள் பண்ண வேண்டும்? பாபம் பண்ணியதால்தானே இந்த ஜன்மா வருகிறது? அதை அலம்பிக்கொள்ள வேண்டும். புதிதாகப் பாபம் பண்ணாமலிருக்கவேண்டும். நம் மனஸை, குணத்தைப் பாபத்தில் போகாதபடி உசத்திக் கொள்ள வேண்டும். இதற்குத்தான் மதம் இருக்கிறது. இப்படி நம் மதப்படி நாம் செய்ய வேண்டியதெல்லாம் என்னென்ன? இது நமக்குத் தெரியவில்லை.

பொதுவாக நாம் இப்போதிருக்கிற நிலைமையில் ஏதோ ராமாயணம், பாகவதம், புராணம் கொஞ்சம் தெரிகிறது. இதில் கதாபாத்திரங்கள் இன்னின்ன மத அநுஷ்டானங்களைச் செய்ததாக அங்கங்கே வருகிறது. ஆனால் அங்கங்கே வருகிறதே யொழிய‌, ஒரே இடத்தில் ஒரே சீராகக் கர்மாக்களை அமைத்துக் கொடுக்கவில்லை (codify பண்ணவில்லை). ஒவ்வொரு அநுஷ்டானத்தையும் எப்படிப் பண்ணுவது என்று procedure -ம் [செய்முறையும்] இந்தப் புராண இதிஹாஸங்களில் சொல்லப்படவில்லை. அதனால் நமக்கு அதைப் பார்த்து அதன்படிப் பண்ணுவது என்பது சரியாக வரவில்லை.

புராண இதிஹாஸங்கள் பக்தியைப் பிரதானமாகச் சொல்கின்றன. ஆனால் நாம் தினமும் அறுபது நாழியும் பக்தி பண்ணிக்கொண்டு, பூஜையும் தியானமும் பண்ணிக்கொண்டு, ஸ்தோத்திரம் சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா? முடியாதே! குடும்பத்துக்காக நாம் அநேக காரியங்கள் செய்ய வேண்டும். குளிப்பது, சாப்பிடுவது போன்றதைச் செய்யவேண்டும். இது போகவும் மிச்ச நாழி முழுதும் பூஜையிலேயே இருப்பது என்றால் முடியாது. அலுப்புத் தட்டிப் போகும். வேறு ஸத்கர்மாக்கள் நமக்கு வேண்டும். அவற்றை எங்கேயிருந்து தெரிந்து கொள்வது?

தர்ம சாஸ்திரங்களிலிருந்துதான்.

பதினாலு வித்யைகளில் புராணத்துக்கப்புறம் கடைசியாக வருவது இந்த தர்ம சாஸ்திரமே.

புராண புருஷர்கள் நமக்கு லக்ஷ்யத்தைக் காட்டுகிறார்கள். அந்த லக்ஷ்யத்தை அடைவதற்கு வழி என்ன என்றால் கர்மாநுஷ்டானத்தில் தான் ஆரம்பிக்க வேண்டும். இப்படி நாம் நடைமுறையில், practical -ஆகச் செய்ய வேண்டியதையெல்லாம் சொல்வது தர்ம சாஸ்திரம். நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று வேதத்தில் அங்கங்கே உதிரியாகச் சொல்லியிருக்கிறவற்றையெல்லாம் நன்றாக வகைப் படுத்தி விவரமாகச் சொல்கிற வேத உபாங்கம் இது.

குடும்பக் காரியம், சொந்தக் காரியம், குளிப்பது, சாப்பிடுவது முதற்கொண்டு எல்லாவற்றையும் ஒரு நிர்ணயப்படி, நியதிப்படி செய்யவேண்டும். வேத தர்மத்தில் மநுஷ்ய வாழ்வின் ஸகல அம்சங்களையும் ஆத்மாபிவிருத்திக்கு அநுகூலமாக ஆக்கி விதிகள் போட்டிருக்கிறது. இப்படிப் படுத்துக் கொண்டால் சிரேயஸ், இப்படி ட்ரெஸ் பண்ணிக்கொண்டால் அது ஆத்மாவுக்கு நல்லது, இப்படி வீடு கட்டினால்தான் அநுஷ்டானத்துக்கு ஸாதகமாக இருக்கும் என்பதாக வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் மதத்தோடு அது சம்பந்தப்படுத்தி விடுகிறது. லௌகிக வாழ்க்கை (secular life), மத வாழ்க்கை (religious life) என்று அது இரண்டாகப் பிரிக்கவில்லை. லௌகிகம் கூட மதத்தில் கொண்டு சேர்க்கும்படியாகவே வேத தர்மம் அமைந்திருக்கிறது. எந்தக் கர்மாவைப் பண்ணினாலும் அதை மந்திர பூர்வமாகச் செய்யும்படிப் பண்ணி ஆத்மாபிவிருத்திக்கு அங்கமாக ஆக்கிவிடுகிறது. லௌகிகத்தையும் ஆத்மிகத்தையும் சேர்த்துக் கொடுப்பது போலவே, தனி மநுஷ்யன் தன் சிரேயஸுக்காக ( individual salvation)காகப் பண்ண வேண்டியதிலேயே ஸமூக வாழ்க்கையின் ஒழுங்கும், லோக க்ஷேமமும் (general welfare -ம்) சேரும்படியாக இணைத்துக் கொடுத்திருக்கிறது.

இப்போது நாம் தெரிந்து கொண்டிருக்கிற புராணங்களிலுள்ள பக்தி வேதத்திலே இருக்கிறது. ஆனால் அதோடுகூட ஏகப்பட்ட கர்மாவும் இருக்கிறது. பக்தியையே பூஜை என்ற கர்மாவாகப் பண்ணும்போது அதற்கும் நிறைய விதிகள் இருக்கின்றன. பூஜையோடு கூட அநேக யாகங்கள், சிராத்தம், தர்ப்பணம் எல்லாம் வேத தர்மத்துக்கு வெகு முக்யமாக இருக்கின்றன.

வேதத்தில் இத்தனையும் இருக்கின்றன. ஆனால் ஒரே இடத்தில் எல்லாவற்றையும் முறைப்படுத்தி (Codify -பண்ணி) கொடுத்திருக்கவில்லை. ஒவ்வொரு கர்மாவுக்கும் procedure விரித்துச் சொல்லி இருக்கவில்லை.

“வேதோ (அ) கிலோ தர்ம மூலம்” என்று மநு சொல்கிறபடி வேதந்தான் நாம் என்னென்ன செய்யவேண்டும் என்ற நெறிகளுக்கும் காரியங்களுக்கும் மூலமாக, வேராக, ஊற்றாக இருக்கிறது.

ஆத்ம க்ஷேமத்துக்காக நாம் என்ன செய்ய வேண்டுமோ அதிலேயே லோக க்ஷேமத்தையும் பயனாக ஏற்படுத்தித் தருவது வேதம். இந்த இரண்டும் ஏற்பட எது உதவுகிறதோ அதுதான் ‘தர்மம்’ என்பது. அந்த தர்ம மூலமாக வேதம் இருப்பது வாஸ்தவம்தான். வேதோ (அ)கிலோ தர்ம மூலம்.

ஆனால் வேதங்களைப் பார்த்தால் ஒரு கிரமமாக, திட்டவட்டமாக நாம் செய்ய வேண்டியவற்றுக்கு ‘லிஸ்ட்’ இல்லையே! இப்படி இப்படி செய்ய வேண்டுமென்ற விரிவான விளக்கமும் இல்லையே! அனந்தமான வேதத்தில் நமக்குக் கிடைத்திருப்பதே கொஞ்சந்தான். நமக்குக் கிடைத்திருக்கிற வேத வாக்கியங்களைப் பார்த்தாலும் அவற்றில் அநேகத்துக்கு அர்த்தங்கூட முழுக்கத் தெரிய மாட்டேன் என்கிறதே!

இப்படி இருக்கிற வேதங்களிலிருந்துதான் கல்பம் என்கிற ஆறாவது வேதாங்கத்தில் உள்ள தர்ம ஸூத்ரங்களும் க்ருஹ்ய ஸூத்ரங்களும் ச்ரெளத ஸூத்ரங்களும் ஒருத்தன் பண்ண வேண்டிய கர்மாக்களைத் திரட்டி ஒழுங்குபடுத்திக் கொடுத்திருக்கின்றன. ஆனால் இதுவும் சுருக்கமாகத்தான் இருக்கும். எல்லா அம்சங்களையும் ஒரே இடத்தில் சொல்வதாகவும் இராது. இவையும் விரிவான- guide ஆக இல்லை. இவற்றை சந்தேகத்துக்கு இடமில்லாமல் விரித்துச் சொல்கிறவைதான் தர்ம சாஸ்திரங்கள்.

தர்ம ஸூத்ர‌ங்கள் (ஆபஸ்தம்பர், கௌதமர் முதலானவர்கள் செய்தவை) சின்னச் சின்ன வாசகங்களாக ஸூத்ர‌ லக்ஷணப்படி இருக்கும். ஸூத்ர‌ம் என்றால் ரத்னச் சுருக்கமாகத்தான் இருக்க வேண்டும். தர்ம சாஸ்திரங்கள் என்கிற ஸ்மிருதிகள் (மநு, யாக்ஞவல்கியர், பராசரர் முதலானவர்கள் செய்தவை) ச்லோக ரூபத்தில் விரிவாக இருக்கும்.

ஆனால் எல்லாவற்றிற்கும் பொதுவான ஆதாரம் வேதந்தான். நாம் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு வேதத்தின் ஆக்ஞைகளைத்தான் மேற்கொண்டு, அதன்படி நடக்க வேண்டும். வேதக் கட்டளைகளை ஓர‌ள‌வுக்கு முறைப்படுத்திச் சொல்கிற கல்பத்தை நன்றாக அலசி விஸ்தாரம் பண்ணுவதே தர்ம சாஸ்திரம். யக்ஞ பூமி நிர்மாணம், க்ருஹ நிர்மாணம் போன்றவற்றையே கல்பம் அதிகம் சொல்கிறதென்றால் மநுஷ்யனுக்கு ஸகல விதத்திலுமான நடத்தைமுறையையும் (code of conduct) விவரமாகச் சொல்வது தர்ம சாஸ்திரம்.

“நான் இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் இந்தக் காரியத்தைச் செய்வது சரியா, தப்பா என்று வேதத்தில் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லையே! ‘அநந்தா வை வேதா:’ என்றபடி வேதம் அளவு கடந்ததாக அல்லவா இருக்கிறது? இவற்றில் பெரும்பாலானவை இப்போது மறைந்தே போய் விட்டன. அதனால் எங்கே இந்தக் காரியத்தை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லையே! இவை எல்லாவற்றையும் படித்தவர்கள் யாரும் இருப்பதாகவும் தெரியவில்லையே? என்ன செய்வது?” என்று கேள்வி.

ஸமுத்திரம் மாதிரி விரிந்து கிடக்கிற வேதங்களிலிருந்து நமக்கு வேண்டிய காரியங்களைப் பொறுக்கி எடுப்பது அஸாத்யம்தான்.

“இப்படி செய் என்று வேதத்தில் இதைப்பற்றிச் சொல்லியிருப்பது தெரிந்தால் வேத வாக்கியப்படியே செய்து விடுவேன். அது தெரியாதபோது என்ன செய்வது?”

இதற்கு மநு பதில் சொல்கிறார்: “சரி, அப்படியானால் ஒன்று சொல்கிறேன். அந்த வேதங்களை எல்லாம் நன்கு அறிந்திருந்த மஹரிஷிகள் ஸ்ம்ருதிகள் என்று செய்திருக்கிறார்கள். அதில் என்ன சொல்லியிருக்கிறது என்று பார்” என்கிறார். ஸ்ம்ருதி என்பதே தர்ம சாஸ்திரம்.

வேதோகிலோ தர்மமூலம்| தத்விதாம் ச ஸ்ம்ருதிசீலே|

“ஸ்ம்ருதி” என்றால் நினைவுக் குறிப்பு; விஸ்ம்ருதி என்றால் பைத்தியம். “வேதத்துக்கு ஸ்ம்ருதி இருக்கிறதே! அதாவது, நினைவுக் குறிப்பு (notes) இருக்கிறதே! வேதங்களையெல்லாம் நன்றாக உணர்ந்த மஹரிஷிகள் அவற்றிலுள்ள தர்மங்களையும், கர்மங்களையும் ஒரே இடத்தில் தொகுத்து முறைப்படுத்திக் குறிப்பாக எழுதி வைத்தவையே இவை. இந்த ஸ்மிருதிகளில் நமக்கு நன்றாக அர்த்தம் புரிகிற பாஷைகளில் எழுதப்பட்டவை. அவற்றைப் பார். நீ என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது, எப்படிச் செய்ய வேண்டும் என்பவையெல்லாம் அவற்றில் ஸவிஸ்தாரமாகச் சொல்லியிருக்கிறது” என்கிறார் மநு. “தர்ம சாஸ்திரம்” என்று சொல்வது இந்த ஸ்ம்ருதிகளைத்தான்.

வேதம் சொல்லும் காரியங்களை, அநுஷ்டானங்களை எப்படிப் பண்ண வேண்டும் என்று வேதாங்கங்களில் ஆறாவதாக உள்ள ‘கல்பம்’ சொல்கிறது. கல்பத்தில் அடங்கும் க்ருஹ்ய ஸூத்ர‌ங்களும், ச்ரௌத ஸூத்ர‌ங்களும், தர்ம ஸூத்ர‌ங்களும் வேள்வி முதலானவற்றின் செய்முறையைச் சொல்கின்றன. இதையே ஒரு ஜீவன் கருவாக மாதாவின் கர்ப்பத்தில் உருவாவதிலிருந்து, அது பிறந்து வளர்ந்து, கலியாணம் பண்ணிக்கொண்டு, குடும்பம் நடத்தி, கடைசியில் சிதையில் வைத்து தகனம் செய்யப்படும் வரையில் இப்படியிப்படிச் செய்ய வேண்டும் என்று அடியிலிருந்து நுனி வரையில் நுணுக்கமாகச் சொல்பவையே ஸ்ம்ருதிகள். தினந்தினமும் எழுந்திருந்ததிலிருந்து தூங்குகிற வரையில் ஒருத்தன் என்னென்ன செய்ய வேண்டும், எப்படி யெப்படிச் செய்ய வேண்டும் என்று அது routine போட்டுக் கொடுத்து விடுகிறது.

ஸ்மிருதியைப் பார்த்து விட்டால் போதும். நம் மதப்படி நாம் செய்ய வேண்டியதெல்லாம் என்ன என்பது பூர்ணமாகத் தெரிந்துவிடும்.