சுவடிகள், நூலகங்கள்

முன்னெல்லாம் வீட்டுக்கு வீடு நிறைய ஓலைச்சுவடிகள் இருக்கும். இதிஹாஸ புராணங்களும் ஸ்தல புராணங்களும் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் அவற்றில் இருக்கும். சுவடி பழுதாக ஆரம்பித்தால் மறுபடி புது ஓலைகளில் அவற்றை எழுத்தாணியால் ‘காப்பி’ பண்ணுவார்கள். பழுதான சுவடிகளை ஒரு பக்கம் சேர்த்து வைப்பார்கள். இப்படிச் சேர்ந்ததை எல்லாம் ‘பதினெட்டாம் பேர்’ அன்றைக்குக் காவேரியிலோ வேறு புண்ய தீர்த்தங்களிலோ யதோக்தமாகக் கொண்டு போய்ப் போட்டு விடுவார்கள்.

ஆடிமாதம் பதினெட்டாம் தேதி காவேரிக்கு விசேஷ தினம். அச்சமயத்தில் காவேரியில் புது வெள்ளம் வரும். ‘பதினெட்டாம் பெருக்கு’ என்பதைத்தான் ‘பதினெட்டாம் பேர்’ என்று சொல்கிறோம்.

கை ஒடிய இப்படி எழுத்தாணியால் ஓலை நறுக்குகளில் எழுதி எழுதி, எழுதினதைக் காப்பி பண்ணி நம் முன்னோர் நம் தாத்தா காலம் வரைக்கும் கொண்டுவந்து கொடுத்ததைப் பிற்பாடு காப்பி எடுக்காமலே காவேரியில் போட்டு விட்டு அதற்கும் சேர்ந்து “ஸ்நானம்” பண்ணிவிட்டார்கள். இதனால் இப்போதே அநேக புராணங்கள் மறுபடி நமக்குக் கிடைக்குமா என்ற ரீதியில் நஷ்டமாகி விட்டன. புராணங்கள் மட்டுமில்லை. இதர சாஸ்திரச் சுவடிகளும்தான்! சேகரிக்க முடிந்த சுவடிகளையெல்லாம் எத்தனையோ சிரமப்பட்டு அலைந்து திரிந்து சேகரித்து சில லைப்ரரிகளில் சேர்த்து வைத்திருக்கிறது. தஞ்சாவூர் ஸரஸ்வதி மஹால் லைப்ரரி, மெட்றாஸில் ஓரியன்டல் மானுஸ்க்ரிப்ட்ஸ் லைப்ரரி, அடையாறு லைப்ரரி, இவற்றில் இப்படி நிறையச் சுவடிகளைச் சேர்த்து வைத்திருக்கிறது. அடையாற்றிலே தியாஸாஃபிகல் ஸொஸைடிகாரர்கள் இதிலே செய்திருக்கிற பணி ரொம்பவும் உயர்ந்தது.

தஞ்சாவூர் ஸரஸ்வதி மஹாலிலும் இப்படியே சரபோஜி முதலான ராஜாக்கள் அரும்பாடுபட்டு ஏட்டுச் சுவடிகளைச் சேகரித்து வைத்தார்கள்.

ஏடு என்றால் நடுவிலே நரம்பும் அதற்கு இரண்டு பக்கம் இலையுமாக இருக்கிறதில் ஒரு பக்கம் என்று அர்த்தம். வாழையிலையை இப்படிக் குறுக்காகப் பிளந்து ஒவ்வொரு பாதியையும் ஏடு என்கிறோம். பனை மட்டையில் இருக்கிறதை இப்படியே நடு நரம்பை எடுத்து விட்டு ஒவ்வொரு பக்கத்தையும் எடுத்து ஏடு என்பதுதான் ஏட்டுச்சுவடி. அது தான் நீண்ட நாளானாலும் பழுத்துப் போகாத, பழுதாகாத nature-ன் paper (இயற்கையின் காகிதம்..!) அதில் எழுத்தாணியை வைத்துக் கொண்டு செதுக்கி எழுத வேண்டும். ஞானசம்பந்தரின் தேவார ஏடு வைகையை எதிர்த்துக் கொண்டு கரையேறிய இடம் இன்றைக்கும் பாண்டிய நாட்டில் திருவேடகம் (திரு ஏடு அகம்) என்ற ஸ்தலமாக விளங்குகிறது. அங்கே ஈச்வரனுக்குப் ‘பத்ரிகா பரமேச்வரர்’ என்று பெயர். இப்போது ‘பேப்பர்’ என்றால் காகிதம் என்பது ஒரு அர்த்தம்; “மாகஸின்” (ஸஞ்சிகை) என்றும் அர்த்தம். “மாகஸின்” என்பதை “பத்திரிகை” என்கிறோம். நேச்சரின் பேப்பரான இயற்கை பத்திரிகை கரையேறின ஊரில் ஸ்வாமியே ‘பத்திரிகா பரமேச்வரன்’ என்று ஜர்னலிஸ்ட் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்! ‘பத்ரம்’, ‘பத்ரிக’ என்றாலும் இலை என்றே அர்த்தம். இலையிலிருந்து வந்தது தானே ஏடு? அதனால் ஏட்டுக்குப் பத்திரிகை என்று பெயர். இது தான் அந்த நாள் காகிதமாக இருந்ததால் கடிதாசும் இதிலேதான் எழுதுவார்கள். அதனால் கடிதாசுக்குப் ‘பத்ரம்’ என்றே பேர் வந்து விட்டது. இதெல்லாம் இருக்கட்டும்.

ஸரஸ்வதி மஹாலைப் பற்றிச் சொன்னேன். இதைப் பற்றி ஸ்வாரஸ்யமான ஒரு விஷயம் நினைவு வருகிறது.

பழைய காலத்தில் வெளிதேசத்திலிருந்து படையெடுக்கிறவர்கள் ஒரு தேசத்திற்கு விளைவிக்கிற மிகப் பெரிய ஹானி, அந்த தேசத்தின் லைப்ரரியைக் கொளுத்தி விடுவதுதான் என்று வைத்துக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் ஒரு தேசத்தின் பொருளாதாரத்துக்கு கஜானா எப்படியோ அப்படி அதன் அறிவுக்குக் கஜானாவாக இருந்தது இந்த லைப்ரரிதான். கலாசார கஜானா என்று சொல்லலாம். இப்போது போல் அப்போது பிரன்டிங் பிரஸ் இல்லாததால் பல பிரதிகள் கிடையாது. சில நூல்களில் ஒரே பிரதிதான் இருக்கும். இப்படிப்பட்ட சுவடிகள் கொண்ட லைப்ரரியைக் கொளுத்தி விட்டால் அது அந்த தேசத்தின் கஜானாவைக் கொள்ளையடிப்பதற்கு மேலே, அந்த தேசத்தின் பெண்களை மானபங்கபடுத்துவதற்கு மேலே என்று இதர தேசத்தார் நினைத்தார்கள். எதிரி தேசத்து அறிவுச் செல்வங்களான புஸ்தகங்களைக் கொளுத்துவது, அவர்களுடைய கோயில்களை இடிப்பது, அந்த தேசத்து ஸ்திரீகளை மானபங்கப்படுத்துவது முதலானவற்றுக்கு நம்முடைய ராஜநீதி சாஸ்திரங்களில் இடமே கிடையாது என்பதைப் பெருமையோடு சொல்லிக் கொள்ளவேண்டும். ஜைனம் போன்ற ஒரு எதிராளி மதத்தைச் சேர்ந்த அமரஸிம்ஹன் மாதிரியானவர்கள் ஹிந்து சமயாசாரியர்களிடம் வாதத்தில் தோற்றவுடன் தாங்களாகவே தங்கள் சுவடிகளை நெருப்பிலே போட்டாலும் நம் ஆசாரியாளைப் போன்றவர்கள், “கூடாது, கூடாது! எந்த தத்வத்தைச் சேர்ந்ததானாலும் சரி; ஒரு புஸ்தகத்தை இல்லாமல் பண்ணக்கூடாது” என்று எதிராளியின் கையைப் பிடித்துத் தடுத்திருக்கிறார்கள்.

இதர தேசத்தவர்களுக்கோ பண்பாட்டில் சிறந்த இன்னொரு ராஜ்யத்தைப் பிடிக்கிறபோது அங்கேயுள்ள லைப்ரரியை கொளுத்துவது பெரிய சொக்கப்பானை போன்ற உத்ஸாஹ விளையாட்டு! ‘அறிவுச் செல்வம் எல்லாருக்கும் பொது; எதிரியுடைய ஊரைச் சேர்ந்ததானாலும் அதை நாமும் எடுத்துக் கொண்டு பயனடையலாம்’ என்ற விவேகமில்லாமல், தங்களைவிட அறிவாளிகளாக உள்ள சத்ருக்களின் புஸ்தகங்களை பஸ்மம் பண்ணி அவர்களை வயிறெரியச் செய்ய வேண்டும் என்று நினைத்து இப்படிப்பட்ட பெரிய அக்ரமத்தைச் செய்தார்கள். இப்படித்தான் ஈஜிப்டில் [எகிப்தில்] அலெக்ஸான்ட்ரியா என்ற இடத்தில் அலெக்ஸான்டர் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட அநேகத் துறைகளில் உயர்ந்த புஸ்தகங்களைக் கொண்ட லைப்ரரியையும்; டர்க்கியில் (துருக்கியில்) இஸ்டான்புல் என்று இப்போது சொல்லப்படுகிற கான்ஸ்டான்டிநோபிளில் கிரேக்கர்கள், ரோமானியர்கள் ஆகியவர்கள் பல காலமாகப் பேணி வளர்த்த லைப்ரரியையும் பதினைந்து – பதினாறாம் நூற்றாண்டில் துருக்கர்கள் படை எடுத்தபோது இருந்த இடம் தெரியாமல் கொளுத்திவிட்டார்கள். பழைய சங்க நூல்களை ஸமுத்திரம் கொண்டு போய்விட்டது என்கிற மாதிரி இயற்கை உத்பாதமாக இல்லாமல், சத்துருக்களின் பண்பாட்டுக் குறைவால் அந்த தேசங்களில் பழைய அறிவு நூல்களில் பல வீணாகி விட்டன.

இங்கே நம் தக்ஷிண தேசத்திலும் கர்நாடிக் நவாப் முதலியவர்கள் கை ஓங்கித் தமிழ்நாடு முழுவதிலும் துருக்க சைன்யம் பரவினபோது தஞ்சாவூர் ஸரஸ்வதி மஹாலுக்கு ஆபத்து வந்துவிட்டது. அதைக் கொளுத்திவிட்டால் தஞ்சாவூர் பெரிய கோவிலை இடிப்பதற்கு ஸமானம் என்று ரொம்ப ஆவலாக சத்ருக்கள் வந்தார்கள். அப்போது டபீர் பந்த் என்ற மஹாராஷ்டிர பிராம்மணர் தஞ்சாவூர் ராஜாவுக்கு (சிவாஜி வம்சத்தவருக்கு) மந்திரியாக இருந்தார். அவருக்கு ஸமயோசிதமாக ஒரு யுக்தி தோன்றிற்று. லைப்ரரியைக் கொளுத்த வேண்டும் என்று வந்தவர்களிடம், “இதிலே எங்கள் ஹிந்து புஸ்தகங்கள் மட்டும் இல்லை. குரான் பிரதிகளும் வைத்திருக்கிறோம்” என்றார். உடனே, வந்தவர்கள் “குரான் இருக்கிறதா? அப்படியானால் கொளுத்த மாட்டோம்” என்று நமஸ்காரம் பண்ணிவிட்டுப் போய்விட்டார்கள்.

அப்புறம் இங்கிலீஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் எல்லோரும் வந்தார்கள். அவர்களுக்கு எதிலும் ஆராய்ச்சி புத்தி ஜாஸ்தி. இன்னொரு தேசத்து விஷயமானாலும் கொளுத்துவது என்று இல்லாமல், அதனால் தாங்கள் பிரயோஜனம் அடைய முடியுமா என்று பார்ப்பார்கள். ஜெர்மன் தேசத்தவர்களும் கலாசார ஆராய்ச்சி , மொழி ஆராய்ச்சிக்காக வந்து நம் நாட்டுச் சுவடிகளை எல்லாம் தேடித் தேடிப் பார்த்தார்கள். இதனால் நமக்கே பல புது சாஸ்திரங்களை இந்த அந்நிய தேசத்தவர்கள்தான் தேடிப் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அதற்காக நாம் நன்றி தெரிவிக்கவேண்டும். குறிப்பாக மெக்கென்ஸி என்பவர் ஸர்வேயர்-ஜெனரலாக இருந்தபோது ஊர் ஊராகப் போய் கிடைக்கக்கூடிய ஸகல ஏட்டுச்சுவடிகளையும் கலெக்ட் பண்ணி, அப்போது இதற்காக சர்க்காரின் டிபார்மென்ட் இல்லாவிட்டாலுங்கூட, அங்கங்கே படிக்கத் தெரிந்தவர்களைக் கொண்டு படிக்கப் பண்ணி, எல்லாவற்றையும் ரிகார்டாக preserve பண்ணி வைத்ததைச் சொல்ல வேண்டும். மெக்கென்ஸியின் ஆள் கும்பகோணத்தில் நம் மடத்துக்குக்கூட வந்து விவரங்கள் சேகரித்துக் கொண்டு போயிருக்கிறான்.

ஸரஸ்வதி மஹால் முதலிய இடங்களில் இருந்த ஸயன்ஸ், குறிப்பாக தநுர்வேதம், ஸம்பந்தமான நம் பழைய சுவடிகளை மேல் நாட்டுக்காரர்கள் எடுத்துக் கொண்டே போய்விட்டார்கள் என்று சொல்கிறார்கள். இப்படி எடுத்துக் கொண்டு போய்தான் ஹிட்லர் சில தினுஸான குண்டுகள், ப்ளேன்கள் முதலியன செய்தான் என்கிறார்கள்.

இருந்தாலும் இன்னமும் போஜராஜாவின் ‘ஸமாராங்கண ஸூத்ரம்’ போன்ற நம்மிடமே உள்ள சுவடிகளிலிருந்து மந்திர பூர்வமான அஸ்திரங்கள் மட்டுமின்றி, scientific [விஞ்ஞான பூர்வமான] ஆயுதங்களான சஸ்திரங்களும் நம் தேசத்தில் நீண்ட காலத்துக்கு முன்பே இருந்திருப்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. வராஹமிஹிரரின் ‘ப்ருஹத் ஸம்ஹிதை’ மாதிரியான ‘டைஜஸ்டுகள்’ நம் நாட்டின் அநேகத் துறை சாஸ்திரங்களையும் ஸயன்ஸ்களையும் சேர்த்துக் கொடுத்திருக்கின்றன.

சாஸ்திரங்கள், மற்ற வித்யையகள், நம்முடைய மருத்துவம், விஞ்ஞானம் எல்லவாற்றுக்கும் பழைய சுவடிகள் இருக்கின்றன. புராணங்களும் இவற்றில் இருக்கின்றன. இவைகளில் ஸ்தல புராணங்கள் மற்றவற்றை விடவும் ரொம்ப நஷ்டப்பட்டிருக்கின்றன. எஞ்சியதை நாம் காப்பாற்ற வேண்டும். தேடித் தேடிப் புதுசாகக் கிடைப்பதைச் சேகரம் செய்ய வேண்டும்.

*    *    *

வேதம் சொல்லும் பரமாத்ம தத்வத்தையும் தர்மங்களையும் நன்னெறிகளையும் ஒழுக்கங்களையும் ஸகல ஜனங்களுக்கும் விளக்கிச் சொல்லி ரஸிக்கும்படியான கதைகளைச் சொல்லி அவர்கள் அவற்றைப் பற்றியொழுகும்படிச் செய்திருப்பது புராணத்தின் சக்தியினால்தான். ஹ்ருதயத்தைத் தொடும் விதத்தில் உபதேசம் பண்ணுபவை அவை. நம்முடைய ஜனங்களின் தொன்றுதொட்டு வந்த நற்பண்புகளுக்கு முதுகெலும்பு புராணம்தான். ஆகையால் இப்போது அதனிடம் நமக்கு இருக்கும் அசட்டை மனப்பான்மையை மாற்றிக் கொண்டு, அதை ஒரு செல்வமாகக் காப்பாற்றுவோம். பல புராணங்களையும் ஒன்று சேர்த்து ஒப்பிட்டு ஆராய்ச்சிகள் செய்வோம்; இதனால் நாம் பயனடைந்து லோகத்துக்கும் பயனைத் தருவோம்.

காத்துத்தருவது நம் கடமை

கோயில்களும் அவற்றில் நடக்கிற உத்ஸவாதிகளுந்தான் நம் மதத்துக்கு ஆயிரம் பதினாயிரம் காலமாக எத்தனையோ எதிர்ப்புக்கள் வந்தபோதிலும் முட்டுக் கொடுத்து அவற்றைத் தாக்குப் பிடிக்கச் சக்தி தந்து வந்திருக்கின்றன. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு கதை உண்டு. ஒவ்வொரு உத்ஸவத்துக்கும் ஒரு ஐதிஹ்யம் (ஐதீகம்) உண்டு. இவை எல்லாம் புராண வாயிலாகவே நமக்குக் கிடைத்திருக்கின்றன. இந்த பெரிய மூலதனத்தை அலக்ஷ்யம் செய்வது ஜனங்களின் மத உணர்ச்சிக்கே பெரிய தீங்கு உண்டாக்கிவிடும்.

பிரின்டிங் பிரெஸ் (அச்சுக்கூடம்) இல்லாத பூர்வகாலங்களிலும் ஓலைச் சுவடிகளாவே கண்ணெனக் காக்கப்பட்டு வழிவழியாக வந்துள்ள புராணங்களை இத்தனை புஸ்தகங்கள் அச்சுப் போட்டுக் கொண்டிருக்கிற இந்த நாளில் (அதில் பெரும்பாலானது ஆத்ம சிரேயஸுக்கு ஹானி செய்வதாகத் தான் இருக்கிறது) நாம் ஒரு பிரசாரமுமில்லாமல் மங்கும்படிச் செய்துவிட்டால் வருங்காலத்து ஜனங்களுக்கு நல்ல விஷயங்களில் ஈடுபடுத்தும் ஒரு பெரிய தூண்டுகோல் இல்லாமல் போய்விடும். இவற்றை எதிர்காலத்துக்கு ரக்ஷித்துத் தர வேண்டியது நம் கடமை.

ஸ்தலபுராணங்களின் சிறப்பு

என் அபிப்பிராயம், அநேக சரித்திர உண்மைகளைத் தெரிந்து கொள்ளவும், local culture, local custom [பிரதேச பண்பாடு, பிரதேச வழக்குகள்] முதலியவற்றைத் தெரிந்து கொள்ளவும் இந்த ஸ்தல புராணங்கள்தான் ரொம்பவும் உதவும் என்பது. இவற்றை நன்றாக ஒன்றோடொன்று சேர்த்து ஆராய்ச்சி பண்ணிப் பார்த்தால், பதினெட்டு மஹாபுராணங்களை விடவும் உபபுராணங்களை விடவும், இதிஹாஸங்களை விடவும் நம்முடைய சரித்திரம், பண்பாடு முதலியவற்றை அறிய இவை உதவும் என்று தோன்றுகிறது. இவை ஒன்றுக்கொன்று விஷயங்களை ஸப்ளிமென்ட் செய்து கொண்டு (கூட்டிக் கொண்டு) போவது மட்டுமின்றி மஹாபுராணக் கதைகளிலுங்கூட விட்டுப் போனதைப் பூர்த்தி பண்ணுகின்றன. ‘ஹிஸ்டரி’ (சரித்திரம்) சரியானபடி தெரிய ஸ்தல ஐதிஹ்யங்களும் புராணங்களும் நிரம்ப உதவும்.

உதாரணமாக, இப்போது படிப்பாளிகளில் பலருக்கு அத்வைதியான பகவத்பாதாள் அநேக க்ஷேத்ரங்களுக்குப் போய் ஆலய பூஜா க்ரமங்களை சரிப்படுத்திக் கொடுத்தார் என்று சொன்னால் நம்பிக்கைப் பட மாட்டேன் என்கிறது. ‘அவர் ஞான மார்க்கத்தைத்தான் சிலாகித்துச் சொன்னார். அதனால் இந்த பக்தி வழிபாடுகள், ஆலய ஆகம ஸமாசாரங்கள் ஆகியவற்றில் அவர் பிரவேசித்திருக்க மாட்டார்’ என்கிறார்கள். ஆனால் அவர் புதுக் களை ஊட்டினதாக க்ஷேத்ர ஐதிஹ்யங்களின்படி சொல்லப்படும் ஸ்தலங்களை (ஒன்றுக்கொன்று ஆயிரம், இரண்டாயிரம் மைல் தள்ளியிருப்பவைகளை) போய்ப் பார்த்தால் அவற்றுக்கு ஆசார்யாளின் ஸம்பந்தமிருப்பது அழுத்தமாகத் தெரிகிறது. வடக்கே ஹிமாசலத்துக்கு நடுவில் உள்ள பத்ரிநாத்துக்குப் போனால் அங்கே ‘ராவல்’ என்று பூஜை பண்ணுகிறவர் கேரளத்து நம்பூதிரியாக இருக்கிறார்! இங்கே இந்த சென்ன பட்டணத்திலேயே திருவொற்றியூரில் திரிபுரஸுந்தரி அம்மனுக்குப் பூஜை பண்ணுவது யார் என்று பார்த்தால் இதுவும் ஒரு நம்பூதிரி பிராம்மணர்தான்! ஆசார்யாள் நம்பூதிரிப் பிராமணர்தான் என்றும் அவர் புதிதாக ஜீவ களையூட்டிய பல ஸ்தலங்களில் நம்பூதிரிகளையே பூஜகர்களாக வைத்தார் என்றும் கர்ண பரம்பரையாகச் சொல்லி வருவதற்கு இப்படி பிரத்யக்ஷ ஸாக்ஷியம் இருக்கிறது.

தர்மோபதேசத்திலும் இந்த ஸ்தல புராணங்கள் மஹா புராணங்களுக்குப் பின்தங்கி விடவில்லை. சின்ன சின்ன தர்ம நுணுக்கங்கள் நமக்குக் கிடைத்துள்ள ஆயிரக் கணக்கான ஸ்தல புராணங்களில்தான் பளிச்சென்று போதிக்கப்பட்டிருக்கின்றன.

இப்போது படிப்பாளிகளில் மத நம்பிக்கை உள்ளவர்களுங்கூட ஸ்தல புராணம் என்பதை ரொம்பவும் மட்டம் தட்டினாலும், தமிழ் தேசத்தில் ஸமீப காலம் வரையில் அதற்குப் பண்டிதர்களிடையே நிரம்ப கௌரவம் இருந்திருக்கிறது. அதனால்தான் அநேக ரிஷிகளின் பெயரிலுள்ள புராணங்களைப் பின்பற்றித் தமிழிலும் மஹா பண்டிதர்களாக, பெரியவர்களாக இருந்த அநேகர் ஸ்தல புராணங்களை இயற்றியிருக்கிறார்கள். ஸ்தலபுராணம், மான்மியம், கலம்பகம், உலா என்றெல்லாம் அநேக க்ஷேத்ரங்களின் மகிமையைச் சொல்கிற சிறந்த தமிழ் நூல்கள் இருக்கின்றன. (மஹிமை வாய்ந்தது ‘மாஹாத்மியம்’. அதைத் தமிழில் ‘மான்மியம்’ என்பார்கள்.) சங்ககாலம், தேவார-திவ்யப்பிரபந்த காலம், கம்பர்-ஒட்டக்கூத்தர் முதலானவர்களின் காவிய காலம் என்றெல்லாம் தமிழிலக்கியத்தைக் காலவாரியாகப் பாகுபடுத்தும்போது 16-ம் நூற்றாண்டைத் தலபுராண காலம் என்றே புலவர்கள் சொல்கிறார்கள். பதிநாலாம் நூற்றாண்டிலேயே உமாபதி சிவாசாரியார் எழுதிய சிதம்பர மாகாத்மியமான ‘கோயிற்புராணம்’தான் முன்னோடி என்கிறார்கள். கமலை ஞானப் பிரகாசரையும் சைவ எல்லப்ப நாவலரையும் முக்யமான புராணகர்த்தாக்களாகச் சொல்கிறார்கள். கந்தபுராணம் எழுதிய கச்சியப்ப சிவாசாரியார், திருவிளையாடற் புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர், சைவ சமயாச்சாரியார்களின் ஒரு முக்யஸ்தரான உமாபதி சிவாசாரியார், சிவப்பிரகாச ஸ்வாமிகள், இரட்டைப் புலவர்கள், அந்தகக் கவி வீரராகவ முதலியார், கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர், திரிகூட ராசப்பக் கவிராயர் முதலான, நிரம்ப யோக்யதை வாய்ந்தவர்களெல்லாம் ஸ்தல புராணம் செய்திருப்பதிலிருந்து அதற்கு இருந்த பெருமை தெரிகிறது. உ.வே. ஸ்வாமிநாதய்யருடைய குருவான மஹாவித்வான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை ஸமீபத்தில் அநேக க்ஷேத்ரங்களுக்கு ஸ்தல புராணம் எழுதிக் கொடுத்திருக்கிறார். இதனால் தமிழின் சமயத்துறையிலும், இலக்கியத் துறையிலும் ‘தலபுராணம்’ என்பதற்குத் தனிச்சிறப்பு உண்டு என்று தெரிகிறது.

பெரிய சம்ஸ்கிருத சாஸ்திர பண்டிதரான கருங்குளம் கிருஷ்ண சாஸ்திரிகள் தமிழில் ‘வேதாரண்ய மாஹாத்மியம்’ எழுதியிருக்கிறார்.

ஸ்தல புராணம் பிரசாரம் ஆவதற்குத் தமிழ் தேசத்தில் ராஜாங்கமே ஆதரவு தந்து, உத்ஸாஹப்படுத்தியிருக்கிறது. 450 வருஷத்துக்கு முந்தி தஞ்சாவூரில் நாயக ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டதற்குக் காரணமாக இருந்த மந்திரி கோவிந்த தீக்ஷிதரின் விருப்பப்படியே, ஸம்ஸ்கிருதத்திலிருந்த பஞ்சநத (திருவையாறு) க்ஷேத்ர புராணத்தைத் தாம் தமிழில் பண்ணினதாக மொழி பெயர்ப்பாசிரியர் சொல்லியிருக்கிறார்.*


* மலிபுனல் சோழநாடு தஞ்சையிற்
காத்திடும் அரசர் மதியமைச்சன் ஒலி மறை தேர்
கோவிந்த தீட்சத ராயன் திரு வாக்குடமையாலே..
புராண வடமொழி தமிழால் புகலலுற்றேன்

பல வரலாறுகளிடை தொடர்பு

ஒரு ஸ்தல புராணத்தில் இருக்கிற ஸம்பவத்தை ஸம்பந்தப் படுத்தி இன்னொன்றில் வருகிறது. இப்படிப் பல புராணங்களுக்கிடையே ஒரே கதையை தொடர்பு படுத்திச் சொல்லியிருக்கிறது; Inter-connected ஆகச் சொல்லியிருக்கிறது. எல்லாவற்றையும் சேர்த்துப் படித்தால்தான் முழுக்கதையும் தெரிகிறது. இம்மாதிரி ஒரு ஸ்தல புராணத்தில் விட்ட இடத்தில் இன்னொன்று தொடங்குவதாக அநேகம் இருப்பதே ஸ்தல புராணங்கள் பொய்யில்லை என்பதற்கு ஒரு சான்றாக இருக்கிறது.

ஸ்தல புராணங்களுக்குள்ளே மட்டுமில்லாமல் 18 மஹாபுராணங்கள், உபபுராணங்கள் இவற்றில் பல அம்சங்களைக் கூட ஸ்தல புராணங்கள்தான் பூர்த்தி செய்கின்றன என்பதைப் பார்க்கும்போது இவற்றின் authenticity [நிஜத்தன்மை]யைப் பற்றி மேலும் உறுதியாகிறது.

உதாரணமாக: அம்பாளும் ஈச்வரனும் கைலாஸத்தில் சொக்கட்டான் ஆடினார்களாம். “நான்தான் ஜெயித்தேன்”, “நான்தான் ஜெயித்தேன்” என்று இரண்டு பேரும் அபிப்பிராய பேதமாகச் சொன்னார்களாம். பல தினுஸாக லோகத்துக்கு தர்மங்களை எடுத்துக் காட்டுவதற்காக ஸ்வாமியும் அம்பாளும் இப்படியெல்லாம் கூத்தடிப்பார்கள். அப்படித்தான் இப்போது அவர்களுக்குள்ளே கலகம் வந்து விட்டது. காசு வைத்து இந்த மாதிரிப் பந்தயம் ஆடினால் எவரும் ஒழுங்கு தப்பிப் போகும்படிதான் ஆகும் என்று காட்டுகிற மாதிரி, சொக்கட்டான் ஆட்டத்தின் முடிவில் கலகம் வந்ததாக ஆட்டம் போட்டார்கள்.

தன்னுடைய உடைமையையெல்லாம் பந்தயம் வைத்துத் தோற்றுப்போன ஸ்வாமிக்குக் கோபம் வந்து அம்பாளை, “நீ பூலோகத்தில் போய்ப் பசுவாகத் திரிந்து கொண்டிரு” என்று சாபம் கொடுத்து விட்டார். அவர் பசுபதி. வெறித்துத் திரிந்து கொண்டிருக்கிற இந்திரியங்களான பசுக்களை அடக்கி வைக்கிற பதி அவர். அஹங்காரம் பிடித்த ஜீவனுக்கு இந்த அநுக்ரஹத்தைப் பண்ணமாட்டார் என்று காட்டுவதற்காக ஸாக்ஷாத் பராசக்தியைப் போக்கிடமில்லாத பசுவாகத் திரிந்து கொண்டிருக்கும்படி ஆக்ஞை பண்ணி விட்டார்! மஹாசக்தியாக இருக்கப்பட்ட அம்பாளும், உடனே தன் தப்பை உணர்ந்து, அவருக்கு அடங்கிய பதிவிரதையாக – இந்தக் கற்பு நெறி உலகத்துக்குத் தெரிவதற்காக – ஒரு சாதாரணப் பசு மாடாக ஆகி பூலோகத்துக்கு வந்து திரிய ஆரம்பித்து விட்டாள்.

கோமாதா, குஹஜன்மபூ:” – என்று அம்பாளுக்கு ஸஹஸ்ரநாமாவில் பேர் சொல்லியிருக்கிறது. இப்படி கோமாதாவாக பூலோகத்துக்கு வந்து விட்டாள்.

மஹாவிஷ்ணு அவளுடைய அண்ணா அல்லவா? அந்தப் பாசம் அவருக்கு! மாப்பிள்ளை (ஈச்வரன்) அவளை விரட்டி விட்டார் என்றதும், ‘அவர் பசுபதியாக இருந்து ரக்ஷிக்காவிட்டால் போகட்டும்; தங்கையை நாம் ரக்ஷித்துப் பாதுகாப்பில் வைத்துக் கொள்வோம்’ என்று நினைத்து மஹாவிஷ்ணு மாட்டிடையனாக ஆகித் தானும் அம்பாளோடு வந்துவிட்டார். இடையனாகி பூலோகத்தில் அலைய வேண்டும் என்று இவருக்கு ஒரு சாபமும் இல்லை. ஆனாலும் ஸஹோதர வாத்ஸல்ய தர்மத்தைக் காட்டுவதற்காகத் தங்கையோடு கூடத் தாமும் வந்து விட்டார். இந்த அநுபவத்திலே ஏற்பட்ட ருசியினால்தான் கிருஷ்ணாவதார காலத்திலேயும் மாடு மேய்த்து ஸந்தோஷப் பட்டார். கோபாலன் என்றே பேர் வாங்கினார். ‘கோபாலன்’ என்றாலும் ‘பசுபதி’ என்றாலும் ஒரே அர்த்தம்தான். இந்தப் பெயர்களை ஆலோசித்துப் பார்த்தாலே சைவ-வைஷ்ணவ பேதம் போய்விடும். அது இருக்கட்டும்.

அண்ணாவும் தங்கையும் இப்படிக் கோனாராகவும், கோவாகவும் வந்த ஊர்தான் திரு அழுந்தூர். “தேரழுந்தூர்” என்று சொல்வது அதுதான். கம்பருடைய ஊர் அதுவே. ‘கம்பர்மேடு’ என்று இப்போதும் அங்கே இருக்கிறது. அங்கே [திருமங்கை] ஆழ்வார் மங்களாசாஸனம் பண்ணின கோயில் இருக்கிறது. பெருமாள் கோபால மூர்த்தியாகவே கர்ப்பக்ருஹத்தில் பசுவோடு கூட இருக்கிறார். பசுவுக்கு ஸகாவாக வந்ததால் அவருக்கு ‘கோஸகன்’ என்று பேர். கோஸக க்ஷேத்ரம் என்றே தேரழுந்தூருக்குப் பேர் இருக்கிறது. ‘கோ-ஸகர்’ என்பதை ‘ஆமருவியப்பன்’ என்று தமிழில் சொல்கிறோம். ‘ஆ’ என்றால் பசு.

அந்த ஊரில் வேதபுரீச்வரர் என்ற பெயரில் சிவனுக்கு கோயில் இருக்கிறது. ஓர் ஊர் என்று இருந்தால் ஒரு கோடியில் சிவன் கோயிலும் இன்னொரு கோடியில் பெருமாள் கோயிலும் இருக்கவேண்டும் என்பது பழைய கால சாஸ்திரப்படியான town-planning.

தேரழுந்தூரில் உள்ள பெருமாள் கோயிலுக்கு ஆழ்வார் பாடல் இருக்கிறதென்றால், ஈச்வரன் கோயிலுக்கு [ஞான சம்பந்தரின்] தேவாரம் இருக்கிறது.

ஆழ்வார்கள் பாடிய ஸ்தலங்களை ‘மங்களாசாஸனம் பெற்றவை’ என்பார்கள். தேவாரம் உள்ள க்ஷேத்ரத்தைப் ‘பாடல் பெற்ற ஸ்தலம்’ என்பார்கள். அநேக க்ஷேத்திரங்களுக்கு இந்த இரண்டு பெருமைகளும் இருக்கிறது. தேரழுந்தூருக்கும் இருக்கிறது.

பசுவாக வந்த அம்பாளை மஹாவிஷ்ணு புல் மேல் மேயவிட்ட இடங்கள் தேரழுந்தூருக்கு பக்கத்திலேயே பில்லூர் (‘புல்’ என்பதைத் தஞ்சாவூர் ஜில்லாக்காரர்கள் ‘பில்’ என்றுதான் சொல்லுவார்கள்), மேக்கிரி மங்கலம் என்ற பெயர்களில் இருக்கின்றன. ஆன் ஆங்கூர் என்பதும் இன்னொரு பக்கத்துக்குக் கிராமம். அதுவும் பசு திரிந்ததற்கு அடையாளமாகப் பேர் வைத்துக் கொண்டிருக்கிறது! (ஆன்-பசு).

பசு புல் மேயும். கோனார் மேய விட்டுக் கூடப் போய் பாதுகாப்பார். அம்பாளும், மஹாவிஷ்ணுவும் ஈச்வர ஆராதனை பண்ண வேண்டுமல்லவா? அதற்காகத்தான் கோஸக க்ஷேத்திரத்தில் பெருமாள் வேதபுரீச்வரரைப் பிரதிஷ்டை பண்ணினார். (வேதபுரீச்வரர் கோயில், ஆமருவியப்பன் கோயில் இரண்டும் ஒரே மானேஜ்மென்டில்தான் இருக்கிறது.)

வேதத்துக்கு கோ ரொம்பவும் அவசியம். யாகத்துக்கு வேண்டிய நெய், பால் முதலானவற்றைத் தரும் கோ, யாகத்தைப் பண்ணி வைக்கும் பிராம்மணர்கள் இருவரும் வேத மதம் விளங்குவதற்குக் குறிப்பாக இருக்க வேண்டும். ‘கோ-ப்ராஹ்மணேப்யோ சுபமஸ்து நித்யம்’ என்றும் ‘வாழ்க அந்தணர் வானிவர் ஆனினம்’ என்றும் இதனால்தான் சொல்லியிருக்கிறது.

அம்பாள் ‘கோ’ வாக வந்த இடத்தில், அவளைப் அப்படிச் சபித்தவர் வேதபுரீச்வரராக வந்தார். அந்த ஊரில் ஸமீப காலம் வரை வேத சாஸ்திர வ்யுத்பன்னர்கள் [விற்பன்னர்கள்] நிறைய இருந்திருக்கிறார்கள். “அழுந்தை மறையோர்” என்று அவர்களை சம்பந்தர் தேவாரத்தில் திரும்பத் திரும்பப் போற்றியிருக்கிறார்.

இந்த ஊர்ப் பெருமாளையே ஆழ்வார் ரொம்பவும் வேத சம்பந்தமுள்ளவனாக, “சந்தோகா! பௌழியா! தைத்திரியா! சாமவேதியனே! நெடுமாலே!” என்று கூப்பிடுகிறார்.

ஒரு நாள் மேய்ச்சலின் போது பசுவின் குளம்பு இடித்து பூமிக்குள்ளிருந்து ஒரு கல் வந்தது. பார்த்தால் சிவலிங்கமாய் இருந்தது. இப்படிப் பெரிய சிவ அபராதம் பண்ணி விட்டதால் பசு மிரண்டு ஒடியது. மஹாவிஷ்ணு அதை சமாதானப் படுத்தி அழைத்து வந்தார். அந்த இடத்துக்கு “திருக்குளம்பியம்” என்று பெயர் இருக்கிறது.

இதையெல்லாம் பார்த்த மஹாவிஷ்ணுவுக்கு ரொம்பவும் வேதனை உண்டாயிற்று. ஏதோ ஒரு விளையாட்டில் தன் ஸஹோதரி அஹங்காரப்பட்டதற்காக இத்தனை விபரீதங்கள் வந்து விட்டதே என்று ரொம்பவும் வருத்தப்பட்டார்.

ஸுந்தரேச்வரருக்கு மீனாக்ஷியை மஹாவிஷ்ணுதான் தாரை வார்த்துக் கொடுத்தார். அந்த மாதிரி இங்கேயும் தங்கையை எப்படியாவது ஈச்வரன் மறுபடியும் சேர்த்துக் கொள்ளும்படியாக பண்ணவேண்டும் என்று மஹாவிஷ்ணு பிரார்த்தனையும் பூஜையும் பண்ணிக் கொண்டிருந்தார்.

ஈச்வரன் மனஸுக்கு, திருப்தி உண்டாயிற்று. மஹாவிஷ்ணுவிடம், “நீ இப்படியே அவளை (பசுவாக இருக்கிற அம்பாளை) மேய்த்துக் கொண்டே போய்க் காவேரியில் ஸ்நானம் பண்ணுவித்து எழுப்பு. பழைய ரூபம் வரும். அப்புறம் நானே வந்து எப்போது கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்பதைச் சொல்கிறேன்” என்றார்.

அவர் சொன்னப் பிரகாரமே கோஸகர் பசுவைக் காவேரி ஸ்நானம் பண்ணுவித்து, திரும்ப அது அங்கிருந்து போய் அடைந்த ஊரைத்தான் இப்போது ‘திருவாவடுதுறை’ என்கிறோம். ‘ஆ-அடு-துறை’ தான் அது. எந்தக் காவேரித் துறையிலே ஆ (பசு) நீராடிக் கிட்டே போய்ச் சேர்ந்தோ (‘ஆ-அடு’ என்பதில் வரும் ‘அடுதலு’க்குக் கிட்டே போய்ச் சேருதல் என்று அர்த்தம்) அந்த ஊர் என்று அர்த்தம். (திருமூலர் ‘திருமந்திரம்’ செய்ததால் பெருமை படைத்த ஊர் இந்தத் திருவாவடுதுறைதான். ஊர்ப் பேருக்குப் பொருத்தமாகத் திருமூலரும் செத்துப் போன ஒரு இடையனின் உடம்புக்குள்ளே பரகாயப் பிரவேசம் பண்ணியிருக்கிறார்!)

அங்கே ஈச்வரன் வாக்குப்படியே அம்பாளுக்குப் பசுரூபம் மறைந்து ஸ்வய ரூபம் வந்தது. ஈச்வரனும் பிரத்யக்ஷமானார். ஆனால் இன்னும் கொஞ்சம் ஆட்டம் போட நினைத்தார். பக்கத்திலே குற்றாலம் என்ற ஊரில் (இது திருநெல்வேலி குற்றாலமில்லை. அருவி விழுகிறதே அந்த ஊர் இல்லை. இது தஞ்சாவூர் ஜில்லாவில் மாயவரத்துக்குப் பக்கத்தில் இருப்பது. ‘திருத்துருத்தி’ என்பது இதற்குப் பழைய பெயர். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் தேவாரம் பாடியுள்ள 44 க்ஷேத்ரங்களில் அது ஒன்று.) அந்த ஊரிலே அம்பாளைப் பெண்ணாக வளர்க்க வேண்டும் என்று ஒரு ரிஷி தபஸ் பண்ணிக் கொண்டிருந்தார். ‘அம்பாள் பூலோகத்துக்கு வந்ததுதான் வந்தாள். ரிஷியுடைய இஷ்டத்தை பூர்த்தி செய்வதற்காகவும் இந்த சந்தர்ப்பத்தையே ‘யூடிலைஸ்’ பண்ணிக் கொண்டு விடலாமே!’ என்று ஈச்வரன் நினைத்தார். இல்லாவிட்டால் அவளை மறுபடி ஒரு தடவை அல்லவா பூலோகத்துக்கு அனுப்ப வேண்டிவரும்?’

அதனால் ஈச்வரன் அம்பாளிடம், “நீ போய் திருத்துருத்தியில் அந்த ரிஷியின் பெண்ணாகக் கொஞ்ச காலம் இருந்து வா. அப்புறம் நான் வந்து கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன்” என்றார்.

அம்பாளும் அப்படியே செய்தாள்.

அப்புறம் ஸ்வாமி அங்கே பிரஸன்னமானார். கோஸக க்ஷேத்ரத்தில் வாக்குக் கொடுத்தவரே இங்கே வந்தார் என்பதற்கு ஒரு உட்சான்றாக இங்கேயும் ஸ்வாமிக்குப் பேர் வேதேச்வரர் என்று இருக்கிறது.

அந்த ரிஷியும், இந்தக் கல்யாணத்துக்காகவே காத்துக் கொண்டிருந்த மஹாவிஷ்ணுவும் ஈச்வரனை எதிர்கொண்டு அழைத்த ஊருக்கு ‘எதிர்கொள்பாடி’ எனறு பேர் ஏற்பட்டுவிட்டது.

கல்யாணத்துக்கு முன்னால் ‘வ்ரதம்’ என்று பண்ணுகிற ஹோமத்தை ஈச்வரன் பக்கத்தில் ஒரு ஊரில் செய்தார். அதனால் அதற்கு ‘வேள்விக் குடி’ என்றே பேர் உண்டாயிற்று.

அப்புறம் எங்கே அவர் அம்பாளைக் கல்யாணப் பெண்ணாகப் பார்த்து பாலிகை தெளித்தாரோ அந்த ஊர் ‘குறுமுளைப்பாலி’ என்று வழங்கி வருகிறது.

அப்போது இரண்டு மூன்று கிராமங்களையே அடைத்துப் பெரிதாக கல்யாணப் பந்தல் போட்டார்களாம். அதற்கு நடுமத்யமாக இருக்கிற ஊருக்கு ‘திருமணஞ்சேரி’ என்றே பெயர் இருக்கிறது. அங்கேதான் ஸாக்ஷாத் பார்வதி-பரமேச்வரர்களுக்குத் திருக்கல்யாணம் பண்ணி வைத்து மஹாவிஷ்ணு மனங்குளிர்ந்தார்.

இப்போது நான் சொன்ன இந்தக் கதையில் அஹம்பாவம் கூடாது, சூதாட்டம் கூடாது, பதியின் வாக்குக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், ஸஹோதர வாத்ஸல்ய பரிபாலனம் முதலான அநேக தர்மங்கள் வெளியாவதால் ஸ்தல புராணங்களை உபயோகமில்லாதவை என்று ஒதுக்குவது எவ்வளவு தப்பு என்று தெரிகிறது. அது மட்டுமில்லை. நான் கதை சொன்னதும் இதை நினைத்து இல்லை. இந்த ஒரு கதைக்குள்ளே துண்டு துண்டாக ஒரு ஏழெட்டு ஸ்தல புராணங்கள் சேர்ந்திருக்கின்றன. ஒன்றுவிட்ட இடத்தில் இன்னொன்று ஆரம்பிக்கிறது. எல்லாம் சேர்ந்தால்தான் கதை பூர்ண ரூபம் பெறுகிறது.

தேரழுந்தூர், பில்லூர், ஆனாங்கூர், திருக்குளம்பியம், திருவாவடுதுறை, குற்றாலம், எதிர்கொள்பாடி, வேள்விக்குடி, குறுமுளைப்பாலி, திருமணஞ்சேரி என்று இத்தனை ஊர்களைப் பற்றிய ஸ்தல புராணங்கள் ஒன்று சேர்ந்து ஒரே கதையை உருவாக்கியிருப்பதால் அந்தக் கதை நிஜந்தான் என்று ஆகிறது. அநேகமாக அந்த ஸ்தலங்களின் பேரிலேயே ‘எவிடென்ஸ்’ இருக்கிறது.

இதைவிடத் தஞ்சாவூர் ஜில்லாக்காரர்களுக்கு அதிகம் தெரிந்த ஒரு கதை கும்பகோணத்தையும் அதன் சுற்றுப்பட்ட க்ஷேத்ரங்களையும் இணைக்கிறது:

பிரளயத்தின் போது பிரம்மா அடுத்த சிருஷ்டிக்கான பீஜங்களை அமிருதத்தில் வேத சப்தங்களோடு சேர்த்து ஒரு மண் கும்பத்தில் (குடத்தில்) போட்டு அதற்கு யதோக்தமாக மாவிலை, தேங்காய் வைத்துப் பூணூல் போட்டு மேரு உச்சியில் வைத்துவிட்டார். பிரளய வெள்ளத்தில் அது மிதந்து வந்தபோது பரமேச்வரன் மறுபடி சிருஷ்டியை ஆரம்பித்து வைக்கவேண்டுமென்று நினைத்தார். அப்போது கும்பத்தின் மேலே வைத்திருந்த தேங்காய் புயலின் ஆட்டத்திலே சரிந்து விழுந்து விட்டது. உடனே பிரளய வெள்ளத்திலிருந்து அந்தப் பிரதேசம் வெளியிலே வந்துவிட்டது. தேங்காய் விழுந்த இடத்திற்குக் கிட்டேதான் பிற்பாடு அமிருதம் மஹாமகக் குளமாகப் பெருகிற்று. இப்போதும் அங்கே ஸ்வாமிக்கு நாரிகேளேச்வரர் என்று பெயர் இருக்கிறது. (நாரிகேளம் என்றால் தேங்காய்.) அவர் மேற்குப் பார்க்க இருப்பதால் ‘அபிமுகேச்வரர்’ என்கிறார்கள். அப்புறம் மாவிலை விழுந்தது. அந்த இடமும் பிரளயத்தை மீறிக் கொண்டு பூப்பிரதேசமாக வெளியில் வந்தது. கும்பகோணத்திற்கு வடமேற்கே நாலு மைலில் உள்ள ‘திருப்புறம்பயம்தான்’ அது. ‘பயம்’ என்றால் ‘பயஸ்’ – ஜலம், அதாவது பிரளயம்; ‘புறம்’ – புறம்பாக இருப்பது. பிரளயத்துக்குப் புறம்பாக அதை மீறி இருப்பது திருப்புறம்பயம். அப்புறம் பூணூலும் இப்படியே விழுந்தது. அது மஹாமகக்குளத்தின் கிட்டே ஒரு இடம். அங்கேயுள்ள கோவிலில் ஸ்வாமி பெயர் ‘ஸூத்ரநாதர்’ என்றே இருக்கிறது. ஸூத்ரம் என்றால் பூணூல். ‘உபவீதம்’ என்றாலும் பூணூல். அதனால் ‘உபவீதேச்வரர்’ என்றும் சொல்வதுண்டு. அங்கே கௌதம மஹரிஷி பூஜை செய்ததால் ‘கௌதமேச்வரர்’ என்றே அதிகம் வழங்குகிறது.

இந்த கும்பத்துக்கு வாயைத் தவிர மூக்கும் இருந்தது, கிண்டி, கமண்டலு முதலியவற்றுக்கு இருப்பது போல! நான் வைத்துக் கொண்டிருக்கிற கடத்துக்குக் கூட மேல் பக்கம் வாய் இருப்பதோடு, பக்கவாட்டில் மூக்கும் இருக்கிறதல்லவா? கடம் அல்லது குடத்தை உள்ளே நிரப்புவதற்கு வாய் வழியாக ஜலம் விடவேண்டும். அதிலிருந்து ஜலத்தை வெளியில் விடவேண்டுமானால் மூக்கு வழியாகத்தான் விடவேண்டும். இம்மாதிரி சாஸ்திரோக்தமான குடமாகவே அந்த அமிருத கடமும் இருந்திருக்கிறது. பரமேச்வரன் பார்த்தார் – கும்பம் தானாகக் கவிழ்ந்து சிருஷ்டி பீஜமும் அமிருதமும் வெளியில் வராததால் தாம் பாணத்தினால் அடித்துக் கும்பத்தை உடைத்து அவற்றை வெளிப்படுத்தி விடுவது என்று தீர்மானம் பண்ணினார். உடனே பாணத்தையும் போட்டார். பாணபுரி என்ற ‘பாணத்துறை’யான அந்த இடத்தைத்தான் இப்போது ‘வாணாதுறை’ என்கிறார்கள். அங்கே ஸ்வாமிக்குப் பேர் பாணபுரீச்வரர். குடத்தின் வாய் சிதறி விழுந்த இடம் (குடவாசல்) என்று பெயர் பெற்றது. ஆனால் சாஸ்திரோக்தமாக மூக்கு வழியாக அமிருதம் வெளி வரவேண்டும் என்று ஸ்வாமி நினைத்ததால் மூக்கு உடைந்து அமிருதம் வெளிவந்த க்ஷேத்திரமே மற்ற க்ஷேத்திரங்களைவிடப் பெருமை உடையதான ‘கும்பகோணம்’ ஆயிற்று. ‘கோணம்’ என்றால் மூக்கு. கும்பத்தின் கோணம் விழுந்து இடம் ‘கும்பகோணம்’. ‘குடமூக்கு’ என்பதே அதற்குத் தேவாரத்தில் உள்ள பெயர். அங்கே லிங்கமாக அந்த மண் கலயமே வைக்கப்பட்டு விட்டது. இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. கவசம் போட்டுத்தான் அதற்கு அபிஷேகம் நடக்கிறது. ‘கும்பேச்வரர்’ என்று பெயர். அமிருதம் விழுந்த இடம்தான் மஹாமகக் குளம்.

இது அமிருதம் வெளிவந்த க்ஷேத்ரம் என்பதற்குப் பொருத்தமாக இங்கேயுள்ள சார்ங்கபாணிப் பெருமாளை “ஆரா அமுதன்” என்றே ஆழ்வார்கள் பாடியிருக்கிறார்கள்! வைஷ்ணவர்கள் கும்பகோணத்தைக் குடந்தை என்பார்கள்.

இப்படிப் பல க்ஷேத்ரங்கள் inter-connected ஆக இருந்து கொண்டு ஸ்தல புராணங்கள் நிஜந்தான் என்று உறுதிப்படுத்துகின்றன. திருவழுந்தூர், கும்பகோணம் குறித்த பல க்ஷேத்திரங்கள் ஒன்றுக்கொன்று கிட்டக் கிட்ட இருப்பவை. இவை ஒரு நாலைந்து மைல் ரேடியஸுக்குள் அகப்பட்டு விடும்.

இதைவிட விஸ்தாரமான ஸ்கேலில் தூர தூர இருக்கிற க்ஷேத்திரங்களின் பரஸ்பர ஸம்பந்தத்தைச் சொன்னால், ஸ்தல புராணங்கள் கட்டுக்கதை இல்லை என்று இன்னும் திடமாகத் தெரியும். சொல்கிறேன்.

ராமேச்வரம், வேதாரண்யம், பட்டீச்வரம் என்ற மூன்று க்ஷேத்ரங்கள் மேலே சொன்னவை மாதிரிக் கிட்டே கிட்டே இருப்பவை அல்ல. ராமேச்வரம் ராமநாதபுரம் ஜில்லாவில் தெற்கு ஸமுத்ரகோடியில் இருக்கிறது. வேதாரண்யம் தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு கோடியில் ஸமுத்ரகரையில், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் இருக்கிறது. அதே ஜில்லாவில், ஆனால் அதற்கு ரொம்பவும் தள்ளி கும்பகோணத்துக்குப் பக்கத்தில் பட்டீச்வரம் இருக்கிறது. இப்படி ஒன்றுக் கொன்று தூரத்தில் உள்ள ஸ்தலங்களில் ஒரே வரலாறு சரடு மாதிரி இழையோடுகிறது என்றால் அதைப் பொய்யென்று சொல்ல முடியாதுதானே?

இந்த மூன்று ஊர்களிலும் ஈச்வரன் கோயிலில் ‘ராமலிங்கம்’ என்ற பெயரில் லிங்கம் இருக்கிறது. மூன்றும் மஹா க்ஷேத்ரங்கள். ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியின் ஸம்பந்தமுள்ள க்ஷேத்திரங்கள் என்ற மகிமை அவற்றுக்கு இருக்கின்றன. அதோடுகூட இந்த மூன்று இடங்களிலும் நாராயணாவதாரமான ஸ்ரீராமன் லிங்கப் பிரதிஷ்டை பண்ணியிருக்கிரார் என்பதால் சைவ வைஷ்ணவ ஒற்றுமைக்கும் இவை பலம் கொடுப்பதாக இருக்கின்றன. இதல்லாமல் மற்ற விசேஷங்களும் கொண்ட க்ஷேத்ரங்களாக இவை இருக்கின்றன.

பாரத தேசத்தின் நாலு கோடிகளில் உள்ள நாலு முக்ய க்ஷேத்திரங்களான “சார்-தாம்” எனப்படும் சதுர் தாமங்களில் (வாஸ ஸ்தானங்களில்) ராமேச்வரம்தான் தக்ஷிணத்துக்குரிய பெரிய க்ஷேத்ரமாக இருக்கிறது. வடக்கே பத்ரிநாதம், மேற்கே ஸோமநாதம், கிழக்கே [புரி] ஜகந்நாதம், தெற்கே ராமநாதம் என்பவையே சார்தாம். வேதாரண்யம் சுதந்திரப் போராட்டத்தின் போது உப்பு ஸத்தியாக்ரஹம் நடந்த ஊர். ‘திருமறைக்காடு’ என்பதாக மூவர் தேவாரமும் பெற்ற ஸ்தலமாக அது இருக்கிறது. இங்கே வேதங்கள் ஈச்வரனைப் பூஜித்து திருக்காப்பு செய்த கதவைத் திறக்கும்படியாக அப்பர் ஸ்வாமிகள் பதிகம் பாடினார். திருஞான ஸம்பந்தர் பாடல்பாடி மறுபடி மூடும்படிச் செய்தார். பட்டீச்வரம் என்பது காமதேனுவின் நாலு பெண்களில் ஒன்றான பட்டி பூஜித்த க்ஷேத்ரம். மேலே திருஆவடுதுறையில் சொன்னது போல, பசு பூஜித்த க்ஷேத்ரங்கள் அநேகம் உள்ளன. திருஆமாத்தூர் என்று பண்ருட்டியருகே அப்பரோடு ஸம்பந்தமுள்ள ஸ்தலம் இருக்கிறது. அங்கேயும் பசு பூஜித்திருக்கறது. அப்படிப்பட்ட ஒரு ஊர் பட்டீச்வரம். ஞான ஸம்பந்தமூர்த்தி – குழந்தை – நல்ல வெயிலில் ஈச்வர நாமாவைச் சொல்லிக் கொண்டு ஆடிப்பாடிக் கொண்டு வருவதைப் பார்த்து ஈச்வரனே மனமுருகி பூதங்களைக் கொண்டு ஸுப்ரமண்ய அவதாரமான அந்தப் பிள்ளைக்கு ஊர் பூராவும் முத்துப் பந்தல் போட்டு வெயில் தெரியாமல் வரவழைத்துக் கொண்டு க்ஷேத்திரம் பட்டீச்வரம். நானூறு, நானூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னால் தஞ்சாவூரிலிருந்து ஆண்டு வந்த நாயக ராஜாக்களுக்கு மந்திரியாக இருந்த மஹான் கோவிந்த தீக்ஷிதருக்கு இந்த ஊரில் ஒரு தனியான வசீகரம் இருந்தது. இந்தக் கோயிலுக்கு அவர் விசேஷமாகத் திருப்பணிகள் செய்திருக்கிறார். அம்பாள் ஸந்நதியில் அவருக்கும் அவருடைய பத்தினிக்கும் பிம்பங்கள் இருக்கின்றன.

ராமலிங்க ஸம்பந்தத்துக்காக இந்த மூன்று க்ஷேத்ரங்களைப் பற்றிச் சொல்ல வந்தேன்.

அகஸ்தியர் திருக்கல்யாணக் காட்சி கண்ட இடம் என்று ஒரே ஸம்பவத்தையே பல க்ஷேத்ரங்களில் சொல்வது மாதிரி இல்லை, இந்த மூன்று ஸ்தலங்களில் உள்ள ராமலிங்கப் பிரதிஷ்டை. ஒவ்வொரு பிரதிஷ்டைக்கும் வெவ்வேறு காரணம் இருக்கிறது.

ராவணனைக் கொன்றதால் ராமருக்கு மூன்று தோஷங்கள் ஏற்பட்டன. முதலாவது, ராவணன் விச்ரவஸ் என்ற மஹரிஷியின் பிள்ளையானதால் பிராம்மணன் என்பது. அவனை ஸம்ஹாரம் செய்ததால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டாயிற்று. சிவலிங்கப் பிரதிஷ்டை பண்ணி இந்த தோஷத்தை அவர் போக்கிக் கொண்ட இடந்தான் ராமேச்வரம்.

இப்போது ராம ராவண யுத்தத்தை ஆரிய திராவிடச் சண்டை என்று சில பேர் சொல்வது அடியோடு தப்பு என்பதற்கு இதைவிட வேறு proof (சான்று) வேண்டாம். ராமாயணத்தைப் பொய் என்று தள்ளினால் ராம ராவண யுத்தத்தையும் அடியோடு தள்ளத்தான் வேண்டும். இந்த யுத்தத்திற்கு மட்டும் historical basis [சரித்திர அடிப்படை] இருக்கிறது என்று சொல்லக் கூடாது. ராமாயணம் நிஜம் என்று ஒப்புக் கொண்டால் அதிலே ராவணனைப் பற்றி திரும்பத்திரும்ப ரிஷிபுத்ரன், வேதாத்யயனம் பண்ணினவன், ஸாமகானம் செய்தே பரமேச்வரனை திருப்திப்படுத்திக் கைலாஸத்துக்கு அடியிலிருந்து மீண்டவன் என்றெல்லாம் சொல்லியிருப்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ‘எங்களுக்குப் பிடித்ததை மட்டும் ஒப்புக் கொள்வோம். பாக்கியெல்லாம் கட்டுக்கதை’ என்றால் அது முறையான வாதத்தில் சேராது.

ராமாயண புஸ்தகத்தில் எழுதி வைத்தது இருக்கட்டும். பிரத்யக்ஷமாகத் தெரிகற மாதிரி இந்த லோகத்திலேயே மிகப்பெரிய பிரகாரங்களோடு ராமேச்வரத்தில் கோவில் இருக்கிறது. சரித்திரக்காரர்களே ஒப்புக் கொள்கிறபடி ஆயிரக்கணக்கான வருஷங்களாக அங்கே ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காகப் பிரதிஷ்டை செய்த லிங்கம் என்று ராமநாத ஸ்வாமியைச் சொல்லி தேசம் பூராவும் வழிபட்டு வந்திருக்கிறது. இதனால் ராவணன் பிராம்மணன் என்ற நம்பிக்கைக்கு மாறாகத் தமிழ் நாட்டில் பூர்விகர்கள் நினைத்ததேயில்லை என்று தெரிகிறது.

ராவணன் பிராம்மணன் என்பது மட்டுமில்லை. அவன் மஹாவீரன். லோகங்களெல்லாம் கிடுகிடுவென்று நடுங்கும் படியாகப் பண்ணினவன். கார்த்தவீர்யார்ஜுனனையும் வாலியையும் தவிரத் தான் சண்டை போட்ட அத்தனை பேரையும் ஜயித்தவன். இப்படிப்பட்டவனைக் கொன்றதால் வீரஹத்தி தோஷமும் ஸ்ரீராமனுக்கு உண்டாயிற்று. இந்த தோஷத்துக்குப் பிராயசித்தமாகத்தான் ராமர் வேதாரண்யத்தில் ராமலிங்கப் பிரதிஷ்டை செய்தார்.

பிராம்மணன், வீரன் என்பது தவிர ராவணனுக்கென்று வேறு பெருமைகளும் உண்டு. அவன் நல்ல சிவபக்தன். வீணை வாசித்துப் பாடுவதில் நிபுணன். இம்மாதிரி நல்ல அம்சங்களை ‘சாயை’ என்பார்கள். ‘சாயை’ என்றால் ஒளி, நிழல் என்று இரண்டு அர்த்தமும் உண்டு. ‘மரகத சாயே’ என்று மீனாக்ஷியைச் சொல்கிற போது ‘மரகதம் போன்ற ஒளி உடையவளே’ என்று அர்த்தம். ஒளி என்பது பெருமை வாய்ந்த குணங்களையெல்லாம் குறிப்பிடும். சாயை (பெருமை) உடைய ராவணனை வதம் செய்ததால் ராமருக்கு சாயாஹத்தி என்ற மூன்றாவது தோஷம் உண்டாயிற்று. இது தீருவதற்காகத்தான் அவர் பட்டீச்வரத்தில் ராமலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜை பண்ணினார்.

சாஸ்திரப்படி பார்த்தால் ராவணனை ஸம்ஹரித்த மநுஷ்யருக்கு பிரம்மஹத்தி, வீரஹத்தி, சாயாஹத்தி என்ற மூன்று தோஷங்கள் ஏற்பட்டுத்தான் இருக்கவேண்டும். பதித பாவனான ராமசந்திரமூர்த்திக்கு வாஸ்தவத்தில் தோஷமே ஏற்பட முடியாதுதான். எவன் பெயரை ஸ்மரித்தாலே ஸமஸ்த மஹா பாபங்களும் ஒடிப் போகுமோ அப்படிப்பட்ட தாரக நாமனான ராமன் தனக்கே பிராயச்சித்தம் பண்ணிக் கொள்ள வேண்டியதே இல்லைதான். ஆனாலும் அவர் இந்த பூலோகத்தில் ‘ஐடியல்’ மநுஷ்யராக வாழ்ந்து காட்டவேண்டும் என்றுதான் நரவேஷம் போட்டுக் கொண்டு வந்திருந்தார். ஒவ்வொரு சின்ன காரியத்துக்குங்கூட சாஸ்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று பார்த்துப் பார்த்தே அந்தப் பிரகாரம் பண்ணினார். சாஸ்திர தர்மங்களைத் துளிக்கூட வழு இல்லாமல் பண்ணிக் காட்டுவதில் ராமரை மிஞ்சி இன்னொருத்தர் கிடையாது. ராமாயணத்தில் எங்கே பார்த்தாலும் இந்த குணாதிசயத்தைப் பார்க்கிறோம். தம்மை ஸாதாரண மநுஷ்யராகவே வைத்துக் கொண்டு, மநுஷ்யர்களுக்கு சாஸ்திரத்தில் என்னென்ன தர்மங்கள், விதிகள், பிராயச்சித்தங்கள் சொல்லியிருக்கின்றனவோ அவற்றையெல்லாம் விடாமல் செய்தார். ஆகவே ஒவ்வொரு அல்ப காரியத்துக்குங்கூட சாஸ்திரத்தைப் பார்த்து அதன்படி பண்ணின ராமன் இந்த மூன்று பெரிய தோஷங்களுக்கு மட்டும் பிராயச்சித்தம் பண்ணிக் கொள்ளாமல் இருந்திருப்பாரா? அப்படிச் சொல்வது கொஞ்சங்கூடப் பொருத்தமில்லை. அதனால் வால்மீகி ராமாயணத்தில் இது என்னவோ விட்டுப் போய்விட்டது என்றுதான் ஆகிறது. அதிலே விட்டுப் போன குறையைத்தான் ராமேச்வரம், வேதாரண்யம், பட்டீச்வரம் ஆகிய ஊர்களுக்கான ஸ்தல புராணங்கள் பூர்த்தி செய்கின்றன.

‘இது ராமாயணத்தில் இல்லை; அதனால் ஏதோ அத்தைப்பாட்டிக் கதை’ என்று நினைப்பது தப்பு. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் குணத்தை நன்றாக ஆழ்ந்து அநுபவித்துப் பார்த்தால் அவர் இந்த மூன்று பிராயச்சித்தங்களைப் பண்ணிக்கொண்டுத்தான் இருப்பார்; அப்படிப் பண்ணினால்தான் அவர் ராமர். ஆகையால் ஏதோ காரணத்தால் ராமாயணத்தில் விட்டுப்போன இந்த விஷயத்தைச் சொல்கிற ஸ்தல புராணங்கள்தான் அவருடைய மனோபாவத்துக்கும், சரித்திரத்துக்கும் (conduct-கும்) பூர்த்தியைத் தருகின்றன என்ற தெளிவு உண்டாகிறது. லோகத்தையெல்லாம் ஹிம்ஸித்து வந்தவனும், ஜகன்மாதாவான ஸீதையையே கெட்ட எண்ணத்தோடு மாறு வேஷத்தில் வந்து நீசமாகத் திருடிக்கொண்டு போனவனுமான ஒருத்தனை ஸம்ஹாரம் பண்ணி, அதனால் ஸமஸ்த ஜீவராசிகளும் ஸந்தோஷம் அடைந்து அவரைக் கொண்டாடும் சமயத்தில், அப்படிப்பட்ட சத்ருவிடத்தில் இருந்த மூன்று பெருமைகளை நினைத்து அவனைக் கொன்றதற்காக தம் மீதே மூன்று தோஷங்களை சுமத்திக் கொண்டு பிராயசித்தம் பண்ணிக் கொண்டதாக ஸ்ரீ ராமனைச் சொல்வதுதான் அவருடைய உத்தம ஸ்வபாவத்தையே ஒரு தூக்குத் தூக்கிப் பிரகாசிக்கப் பண்ணுவதாக இருக்கிறது. லிங்கப்பிரதிஷ்டை பண்ணினது ஹரி-ஹர அபேதத்துக்கு ஒத்தாசை செய்கிறது.

இந்த மூன்று ஸ்தல புராணங்களுக்குள் ஒன்றுக்கொன்று முரண்பாடு (contradiction), ஒன்றில் சொன்னதையே இன்னொன்றில் திருப்பிச் சொல்வது (duplicate பண்ணுவது) என்பதெல்லாம் இல்லை. ராமேச்வர புராணத்தில் பிரம்மஹத்தி நீங்கினதை மட்டுமே சொல்லியிருக்கிறது. மற்ற இரண்டு தோஷங்கள் அங்கே போனதாகச் சொல்லவில்லை. அங்கேயிருந்து அப்படியே ஸமுத்திரக் கரை ஒரமாகவே வடக்காகப் போயிருப்பார் போலேயிருக்கிறது. அங்கே வேதாரண்யத்தில் வீரஹத்தி போக லிங்கப் ப்ரதிஷ்டை செய்திருக்கிறார். வேதாரண்ய ஸ்தல புராணத்திலும் வீரஹத்தி மட்டும் நிவிருத்தியானதைத்தான் சொல்லியிருக்கிறது. இங்கேயும் பிரம்மஹத்தி போனதாகச் சொல்லியிருந்தால் தப்பு என்கலாம். அப்படியில்லை. அப்புறம் உள்நாட்டுப்பக்கமாக (interior-க்கு)ப் போய் பட்டீச்வரத்தில் மூன்றாவது ராமலிங்கத்தைப் ப்ரதிஷ்டை செய்து சாயாஹத்தியை நிவ்ருத்தி செய்து கொண்டிருக்க வேண்டும். பட்டீச்வரம் ஸ்தல புராணத்திலும் இந்த ஒரு தோஷத்தைத்தான் சொல்லியிருக்கிறது.

அதாவது இந்த மூன்று க்ஷேத்ரங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு தோஷத்தையே – அதுவும் மற்றதில் விட்டுப்போன ஒன்றையே- சொல்லி அதற்கு concrete evidence-ஆக [கண்ணுக்குத் தெரியும் சாட்சியாக] ஒவ்வொரு கோவிலிலும் ‘ராமலிங்கம்’ என்று பேருள்ள ஒரு லிங்கத்தைக் காட்டியிருக்கிறது. ஒரே நிஜமான கதையின் இழைதான் மூன்று ஸ்தல புராணங்கள் வழியாகவும் போய்ப் பூர்த்தியாகிறது. இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று சுமார் நூறு, நூற்றைம்பது மைல் தள்ளியுள்ள ஊர்கள். ரயிலும் ப்ளேனும் இல்லாத காலத்தில் அது ஆயிரம், ஆயிரத்தைந்நூறு மைலுக்கு ஸமானம். ஆகவே இவ்வளவு தள்ளியுள்ள ஊர்களுக்கிடையே ஒரே கதையின் விவரங்கள் பொருத்தமாக அமைந்திருக்கின்றன என்றால் ஸ்தல புராணங்கள் நிஜம்தான் என்றுதானே ஏற்படுகிறது?

நவீன ஆராய்ச்சிக்காரர்கள், சாஸ்திரக்ஞர்கள் இருவருக்குமே விசித்ரமாகத் தோன்றினாலும் சரி, என் அபிப்ராயம் ஒன்றைச் சொல்கிறேன். வால்மீகி ராமாயணத்தை ‘அதாரிடி’யாக எடுத்துக் கொள்கிற அளவுக்கு ஸ்தல புராணங்களை எடுத்துக் கொள்ள முடியாது என்று பொதுவாக ஒரு அபிப்ராயம் வந்துவிட்டாலும், வால்மீகி ராமாயணம், மற்றும் பாரதம், தற்போது authentic (அதிகார பூர்வமானது) என்று நினைக்கப்படுகிற விஷ்ணு புராணம், பாகவதம் முதலியவற்றை விடக்கூட ஸ்தல புராணங்கள்தான் நிஜத்தைச் சொல்வதில் பெரிய ‘அதாரிடி’ என்று நான் இம்மாதிரி அநேக திருஷ்டாந்தங்களிலிருந்து முடிவுக்கு வந்திருக்கிறேன்.

முதலில் தஞ்சாவூர் ஜில்லாவில் கும்பகோணத்திலும், மாயவரம் தாலுக்காவுக்குள்ளே திருவழுந்தூரைச் சுற்றியுள்ள ஏழெட்டு ஸ்தலங்களிலும் புராணத்து details [விவரங்கள்] tally ஆவதை [ஒன்றுக்கொன்று பொருந்துவதை] சொன்னேன். அப்புறம் ராமநாதபுரம், தஞ்சாவூர் இரண்டு ஜில்லாக்களில் உள்ள மூன்று க்ஷேத்திர ஸமாசாரங்கள் ஒத்து வருவதாகச் சொன்னேன். இப்போது இன்னும் பெரியதாக ஆல்-இண்டியா-ஸ்கேலில் ஒன்று சொல்கிறேன்.

‘காவேரி புராண’த்தில் இரண்டு விதமான பாடங்கள் உண்டு. அதிலே ஒன்று ஸ்ரீரங்கத்திலுள்ள காவேரித் துறையான அம்மா மண்டபத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. துலா மாஸம் எனப்படும் ஐப்பசியில் காவேரி ஸ்நானம் மஹா விசேஷமாகும் என்று இதில் சொல்லியிருக்கிறது. இதிலே முக்கியமான கதாபாத்திரம் தர்மவர்மா என்ற சோழ ராஜா. இவன் நிசுளபுரியிலிருந்து கொண்டு ஆட்சி செய்தான் என்று சொல்லியிருக்கிறது. நிசுளம், நிசோளம், சோளம், சோளி என்ற ஸம்ஸ்கிருத வார்த்தைகளுக்கு ‘உடம்போடு போட்டுக் கொள்கிற உறை மாதிரியான உடுப்பு’ என்று அர்த்தம். “உறையூர்” எனப்படுவதே ஸம்ஸ்கிருதத்தில் “நிசுளபுரி”யாக இருக்கிறது! இதைத் தலைநகரமாகக் கொண்ட ராஜ்யத்துக்கும் சோள தேசம் (சோழ தேசம்) என்றே பெயராக இருக்கிறது! சோளப் பயிருக்கு என்ன விசேஷம்? “சோளக் கொண்டை” என்று, நன்றாக உறை தைத்துப் போட்டுக் கொண்ட மாதிரி இந்த தானியம் ஒன்றுதான் தானிய மணிகளைச் சுற்றிச் சோளி போட்டுக்கொண்டு வளர்கிறது! சோளி போட்டுக் கொண்டிருக்கிற தானியம் சோளம்! இந்த மொழி ஆராய்ச்சி இருக்கட்டும்.

‘காவேரி புராண’த்தில் இன்னொரு பாடத்தில் மாயவரத்தில் இருக்கப்பட்ட காவேரித் துறையான துலா கட்டத்துக்கு முக்யத்வம் கொடுத்திருக்கிறது. இப்போது அதை லாகடம், லாகடம் என்று ஜனங்கள் சொல்கிறார்கள். இது துலா கட்டம் என்பதன் திரிபுதான். துலா ஸ்நானத்துக்கு வரும் யாத்திரிகளுக்கு வசதியாகக் கட்டப்பட்ட படித்துறைதான் துலா கட்டம் (லாகடம்) . மாயவரத்திலும் இன்னம் ஆறேழு காவேரிக் கரை க்ஷேத்ரங்களிலும் துலா கட்டங்கள் இருக்கின்றன. இவை அத்தனையும் அச்சடித்ததைப் போல் ஒரே ப்ளானில் கட்டப்பட்டிருக்கின்றன. துலாஸ்நான மகிமையைச் சொல்கிற இடத்தில், காவேரி புராணத்தில் ஒரு பாடத்தின்படி ஸ்ரீ ரங்கத்துக்கும் தர்மவர்மாவுக்கும் முக்யத்வம் தந்திருக்கிறதென்றால், இன்னொரு பாடத்தில் மாயவரத்துக்கும் அங்கே துலா ஸ்நானம் செய்து மோக்ஷம் அடைந்த ஒரு பிராம்மண தம்பதிக்கும் முக்யத்வம் தந்திருக்கிறது.

நாத சர்மா என்று அந்த பிராம்மணனுக்குப் பேர். அவருடைய பத்தினி அநவத்யை. விதிவத்தாக துலா மாஸம் தினந்தோறும் இவர்கள் மாயவரத்தில் காவேரி ஸ்நானம் செய்தே மோக்ஷம் அடைந்தார்கள் என்று சொல்லியிருக்கிறது.

இவர்கள் பல இடங்களுக்கு க்ஷேத்ராடனம் பண்ணினதாகச் சொல்லுமிடத்தில் கேதாரத்துக்கு (கேதாரிநாத்) போனார்கள், காசிக்குப் போனார்கள் என்று சொல்லியிருக்கிறது.

இது இங்கே மாயவரத்தில் மட்டுமே தெரிந்த கதை. காசி இங்கேயிருந்து ஆயிரம் மைலுக்கு அப்பால் இருக்கிறது. காசியில் கங்கையில் இருக்கிற பல கட்டங்களில் (‘காட்’ என்று சொல்வார்கள்) ‘கேதார் காட்’ என்று ஒன்று இருக்கிறது. அந்தக் கேதார்காட்டில் அதைக் குறித்த ஸ்தல புராணம் சொல்லப்படுகிறது. அதிலே நாததசர்மா-அநவத்யை என்ற பிராம்மண தம்பதி ஸ்நானம் செய்த இடம் அது என்று வருகிறது!

நாதசர்மா கதை நம்மூர்க்காரர்களுக்கே அதிகமாகத் தெரியாது. ராமர், கிருஷ்ணர், ஹரிச்சந்திரன், நளன் முதலியவர்களைப் போல தேசம் முழுவதும் தெரிந்தவரில்லை, அவர். அப்படிப்பட்ட ஒருவரைப்பற்றி இங்கே மாயவரத்தில் சொல்கிற புராணக் கதையும், ஆயிரம் மைல் தாண்டி காசியில் சொல்வதும் ‘டாலி’ ஆகிறது என்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாயிருக்கிறது!

ஸ்தல புராணங்களை நம்புவதற்கில்லை என்று சொல்வது எவ்வளவு தப்பு என்பதற்கு திருஷ்டாந்தமாகத்தான் இதைச் சொன்னேன்.

காசிக்கும் காஞ்சிக்கும் நடுவே ஆயிரம் மைலுக்கு மேல் இருக்கிறது. காசியில் அன்னபூர்ணி விசேஷம். காஞ்சீபுரத்திலும் ஜகன்மாதா 32 தர்மங்களைப் பண்ணும் போது அன்னதானம் பண்ணியிருக்கிறாள். காமாக்ஷி ஆலயத்தில் கர்ப்பகிருஹத்தின் நுழைவாசலுக்கு நேரே அன்னபூர்ணேச்வரிக்கு ஸந்நிதி இருக்கிறது! அதன் விமானத்தில் தக்ஷிணதேசத்தில் வேறே எங்கேயும் இல்லாத விதத்தில் ஆறு சிகரங்கள் இருக்கின்றன. ஏன் இப்படி இருக்கிறது என்பதற்குப் பதில் காசியில் கிடைக்கிறது! காசியில் அன்னபூரணி விமானத்தில் இதே மாதிரி ஆறு சிகரங்கள் இருக்கின்றன. அதன் அச்சாகத்தான் இங்கே ஆயிரம் மைல் தாண்டி காஞ்சியிலும் இப்படி இருக்கிறது! சின்ன விஷயங்களில்கூட இவ்விதம் தேசத்தின் வெவ்வேறு கோடிகளில் உள்ள ஸ்தலங்களில் ஒற்றுமையிருப்பதால் க்ஷேத்ர ஐதிஹ்யங்களை லேசாகத் தள்ளி விடுவதற்கில்லை என்று தெரிகிறதல்லவா?

ஸ்தல புராணங்களின் ஸத்தியத்வம்

வேதத்தில் என்ன சொல்லியிருந்தாலும் அது ஸத்தியம் என்று நம்ப வேண்டும் என்பது போல, சைவ – வைஷ்ணவங்களுக்குத் தமிழ் வேதமாக உள்ள தேவார-திவ்யப்ரபந்தங்களில் சொல்லியிருப்பதை நாம் உண்மையென்று ஒப்புக் கொள்ள வேண்டும். அநேக க்ஷேத்ரங்களில் பாடப்பெற்ற தேவாரங்களிலும் ஆழ்வார்களின் பாசுரங்களிலும் அந்தந்த ஸ்தல புராண விஷயங்கள் வருகின்றன. 1500 வருஷத்துக்கு முந்திய இந்த தேவார – திவ்யப்ரபந்தங்களிலேயே ஸ்தல புராணக் குறிப்புகள் இருப்பது அந்தப் புராணங்களின் பழமைக்குச் சான்றாக இருக்கிறது.

உதாரணமாக ஸ்ரீரங்கத்திலே பெருமாள் வேறு எந்த ஊரிலும் இல்லாத மாதிரி தெற்கே பார்த்துக் கொண்டிருக்கிறார். இதற்கு அந்த க்ஷேத்ர புராணத்தில் காரணம் சொல்லியிருக்கிறது. ஸ்ரீ ராமசந்திர மூர்த்திக்குப் பட்டாபிஷேகம் ஆனபிறகு விபீஷணன் லங்கைக்குத் திரும்பிப் போனபோது, ராமர் தாம் வழிபட்டு வந்த ரங்கநாத விக்ரஹத்தை அவனுக்கு கொடுத்தாரென்றும் அதுதான் ஒரு காரணத்தால் அவன் போகிறவழியில் உபயகாவேரிக்கு நடுவே ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டையாகி விட்டதென்றும், தன்னோடு லங்காபுரிக்கு எடுத்துப்போக முடியவில்லையே என்று துக்கப்பட்ட விபீஷணனைத் திருப்திப்படுத்தவே ஸ்ரீரங்கநாதர் தெற்கு நோக்கிப் படுத்திருக்கிறார் என்றும் ஸ்ரீரங்க ஸ்தல புராணத்தில் விரிவாகக் கதை சொல்லியிருக்கிறது. இந்த விஷயத்தை ஆழ்வார்கள் தங்கள் பாட்டில் சொல்கிறார்கள்.1

மஹாவிஷ்ணு தெற்கே பார்த்திருப்பதற்குப் புராணம் சொல்கிற காரணம் ஆழ்வார் காலத்திலேயே நிச்சயமாக இருந்திருக்கிறதென்றால் அந்தப் புராணம் அதற்கும் முந்தியதாகத்தானே இருக்க வேண்டும்?

காஞ்சீபுரத்தில் ஏகாம்பரநாதர் அம்பாளே பிடித்து வைத்துப் பூஜை பண்ணிய பிருத்வி [மண்ணாலான] லிங்கம்; ஸ்வாமி அவள் பூஜை பண்ணுகிறபோது பெரிய வெள்ளத்தைப் பிரவஹிக்கச் செய்தும் அவள் விடாமல் லிங்கத்தைக் கட்டிக்கொண்டாள்; அதிலிருந்து ஸ்வாமியே ஆவிர்பவித்தார் – என்று ஸ்தல புராணத்தில் இருப்பதைத் தேவாரமும் சொல்கிறது. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஏகம்பத்தில் பாடிய தேவாரத்தில் பாட்டுக்குப் பாட்டு அம்பாள் பூஜை பண்ணின மஹிமையைச் சொல்கிறார்.2

ஸ்ரீரங்கத்துக்குப் பக்கத்தில் இருக்கிற ஜம்புகேச்வரத்தில் (திருவானைக்காவில்) ஜம்பு மஹரிஷி என்பவர் ஜம்பு (நாவல்) விருக்ஷமாக ஆக, அதன் கீழேயே ஈச்வரன் வந்து கோயில் கொண்டார். அங்கே லிங்கத்துக்கு ஒரு சிலந்தி பந்தல் போட்டுப் பூஜித்தது. இந்த பந்தலை அறுத்துக் கொண்டு ஒரு யானை லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணிற்று. இதனால் சிலந்திக்கு ஆத்திரம் வந்து யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து கொண்டு அதன் மண்டைக்குள் போய் குடைந்தது. அப்போது யானை மண்டையை மோதிக் கொண்டு தானும் செத்து சிலந்தியையும் சாக அடித்து விட்டது. இந்த சிலந்தி தான் பிற்பாடு கோச்செங்கட் சோழனாக பிறந்து ஜம்புகேச்வர ஆலயத்தைக் கட்டிற்று. இந்தக் கதையை ஸ்தல புராணம் சொல்கிறது.

இத்தனைக்கும் தேவாரத்திலேயே reference இருக்கிறது. மூலஸ்தானத்தில் எப்போதும் காவேரி ஊற்று இருக்கும்படியான அற்புத ஸ்தலம் அது என்பதற்கு அப்பர் தேவாரம் ஒன்றில் பத்துப் பாட்டிலும் குறிப்பு இருக்கிறது.3

திருக்கழுக்குன்றத்தில் தினமும் மத்தியானம் பன்னிரண்டு மணிக்கு இரண்டு கழுகுகள் வந்து பண்டாரம் கொடுக்கிற சர்க்கரைப் பொங்கலைச் சாப்பிட்டு விட்டுப் போகிறதல்லவா? இது நூற்றாண்டுகளாக நடந்துவருகிறது என்று சொல்வதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறார்கள். இந்த ஊர் பேரே தேவார காலத்திலிருந்து “கழுக்குன்றம்” என்று இருக்கிறது. இதைவிடப் பெரிய ஆதாரம் என்ன வேண்டும்?

திருவிடைமருதூரில் தைப்பூச ஸ்நானம் விசேஷமானது என்று க்ஷேத்ர மாஹாத்மியத்தில் சொல்லியிருக்கிறது என்றால் இந்த விசேஷத்தை சுமார் 1300 வருஷங்களுக்கு முன்பு அப்பரும் சம்பந்தருமே பாடியிருக்கிறார்கள்.4

ஸ்ரீரங்கம், ஜம்புகேச்வரம், காஞ்சீபுரம், திருக்கழுக்குன்றம், திருவிடைமருதூர் போன்ற மஹாக்ஷேத்ரங்கள் புராதனமாக ப்ரஸித்தமானதால் அவற்றைப் பற்றிய புராண வழக்குகள் பழைய தமிழ் நூல்களில் வந்திருப்பதில் ஆச்சரியமில்லை என்று தோன்றலாம். சின்ன சின்ன க்ஷேத்ரங்களில் உள்ள சின்ன புராண ஐதிஹ்யங்களுக்குக் கூட பழைய தமிழ் மறைகளில் குறிப்பு இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

பிரஸித்தியடையாத சில க்ஷேத்ரங்களில் ரிஷிகளோ தேவர்களோ வண்டுகளாக இருந்து பூஜை பண்ணினதாக ஸ்தல புராணங்களில் இருக்கிறது. இப்போதும் அந்த ஊர்களில் சன்னதியிலேயே பெரிய தேனடைகள் இருந்து கொண்டிருக்கின்றன. நன்னிலத்தில் இப்படி இருக்கிறது. ‘மதுவனம்’ என்றே அதற்கு ஒரு பெயர் இருக்கிறது. (மது – தேன்) . திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்தில் சித்தாம்பூர் என்று சொல்கிற ஊர் இருக்கிறது. இதற்கு தேவாரத்தில் திருச்சிற்றேமம் என்று பெயர். இங்கேயும் ஸ்வாமி சன்னதியில் தேன்கூடு இருக்கிறது. ஸித்தர்கள் தேனீக்களாக வந்து பூஜிக்கிறார்கள் என்று ஐதிஹ்யம். இந்த தேனடைக்கும் தினந்ததோறும் பூஜை நடக்கிறது. வைஷ்ணவ திவ்ய தேசங்களில் திருக்கண்ண மங்கையில் தேனடையிருக்கிறது. இவற்றைப் பற்றி அந்தந்த ஊர் தேவார-திவ்யப்ரபந்தங்களிலும் reference இருக்கிறது.5

ஸ்தல புராண விஷயங்களை தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் முதலியவற்றில் குறிப்பிட்டிருப்பதால் அவற்றின் பழமை, பிராமாண்யம் (authenticity) இரண்டும் தெரிகின்றன.


1 குடதிசை முடியை வைத்துக்

குணதிசை பாதம் நீட்டி

வடதிசை பின்பு காட்டித்

தென்திசை யிலங்கை நோக்கி

கடல்நிறக் கடவுள் எந்தை

அரவணைத் துயிலுமாக் கண்டு

உடல் எனக்(கு) உருகுமாலோ?

என் செய்கேன் உலகத்தீரே!

(தொண்டரடிப்பொடி ஆழ்வார்)

 

2ஏலவார் குழலாள் உமைநங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற..

ஆற்றமில் புகழாள் உமைநங்கை ஆதரித்து வழிபடப்பெற்ற..

வரிகொள் வெள்வளையாள் உமைநங்கை மருவி ஏத்தி வழிபடப்பெற்ற..

கெண்டை யந்தடம் கண்ணுமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப்பெற்ற..

எல்லையில் புகழாள் உமைநங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற..

மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப்பெற்ற..

எண்ணில் தொல்புகழாள் உமைநங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற..

அந்தமில் புகழாள் உமைநங்கை ஆதரித்து வழிபடப்பெற்ற..

பரந்த தோல் புகழாள் உமைநங்கை பரவிஏத்தி வழிபடப்பெற்ற..

(வெள்ளம் வந்தபோது அம்பாள் லிங்கத்தைத் தழுவ, ஈஸ்வரன் ஆவிர்பவித்ததைக் குறிக்கும் பாடல்.)

எள்கல் இன்றி இமையவர் கோனை ஈசனை வழிபாடு செய்வாள் போல்

உள்ளத்துள்கி உகந்து (உ)மைநங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு

வெள்ளங்காட்டி வெருட்டிட வஞ்சி வெருவி ஓடித்தழுவ வெளிப் பட்ட

கள்ளக்கம்பனை எங்கள் பிரானைக் காணக்கண் அடியேன் பெற்றவாறே.

 

3சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழற் பந்தர் செய்து

உலந்தவன் இறந்தபோதே கோச்செங்க ணானுமாகக்

கலந்தநீர்க் காவிரிசூழ் சோணாட்டுச் சோழர்தங்கள்

குலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே (அப்பர்)

வெண்ணாவலின் மேவிய எம் அழகா (சம்பந்தர்)

[வெண்ணாவல் : ஜம்பு விருட்சம்]

“செழு நீர்த் திரளைச் சென்றாடினேனே” (அப்பர்)

[இச் சொற்றொடர் பத்துப் பாட்டுக்களிலும் வருகிறது]

 

4 பூசம் புகுந்தாடிப் பொலிந்தழகாய

ஈசன் உறைகின்ற இடைமரு(து) ஈதோ! (சம்பந்தர்)

வருந்திய மாதவத்தோர் வானோர் ஏனோர் வந்தீண்டிப்

பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த (சம்பந்தர்)

ஈசன் எம்பெருமான் இடைமருதினில் பூச நாம் புகுதும் புனலாடவே (அப்பர்)

 

5 தேனார் வண்டு பண் செயும் திருஆரும் சிற்றேமத்தான் (ஞானசம்பந்தர்)

களிவண்டறையும் பொழில் கண்ண மங்கை யுட் கண்டுகொண்டேனே. (திருமங்கையாழ்வார்)

ஸ்தல புராணங்கள்

புராணங்களை நம்புகிறவர்கள் கூட ‘ஸ்தல புராணங்கள்’ என்று ஊருக்கு ஊர் சின்னதாக இருக்கிறவற்றை நம்புவதற்கு யோஜிக்கிறார்கள். படிப்பாளிகள் எல்லாப் புராணமுமே பொய்யென்றால், ஸ்தல புராணம் வெறும் குப்பை என்று சொல்லும் அளவுக்குப் போய் விடுகிறார்கள். என்ன காரணம் என்றால் அநேக ஸ்தல புராணங்களில் ஒவ்வொன்றிலும், ‘இங்கேதான் இந்திரனுக்கு சாப விமோசனம் ஆயிற்று’, ‘இங்கேதான் அகஸ்தியர் பார்வதி-பரமேச்வராள் திருக்கல்யாணக் காட்சியைப் பார்த்தார்’ என்று இருக்கிறது. ‘இது எப்படி ஸாத்தியம்? அவரவரும் தங்கள் ஊரை உயர்த்திச் சொல்ல வேண்டுமென்பதற்காக இட்டுக் கட்டி வைத்திருக்கிறார்கள்’ என்று சொல்கிறார்கள்.

இதைப் பற்றி விஷயம் தெரிந்த ஆஸ்திகர்களைக் கேட்டால், ‘கல்பத்துக்குக் கல்பம் அதே கதைகள் திரும்பவும் நடக்கிறது. அதே கதை நடந்தாலும் ஒரே அச்சாக இல்லாமல் கொஞ்சம் கொஞ்சம் பேதமும் இருக்கும். ஒரு கல்பத்தில் ஒரு ஸ்தலத்தில் நடந்த கதை இன்னொரு கல்பத்தில் இன்னொரு ஸ்தலத்தில் நடக்கிறது. அதனால்தான் அநேக ஸ்தலங்களில் ஒரே புராணக் கதை நடந்ததாகச் சொல்லப்படுகிறது’ என்கிறார்கள்.

இதை ஒத்துக் கொள்ள முடியாதவர்களுங்கூட, ஒவ்வொரு ஊர்க்காரர்களுக்கும் புராணங்களில் வரும் புண்ணிய சம்பவங்கள் தங்கள் ஊரில் நடந்ததாக சொல்லிக் கொள்வதில் ஒரு பெருமை இருக்கிறதென்று நல்ல முறையில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். பாமர ஜனங்கள் தங்கள் ஊருக்கே ராமர் வந்தார், கிருஷ்ணன் வந்தார், மஹரிஷிகள் வந்தார்கள், அங்கே மஹா கொடூரமான பாவங்களுக்கு விமோசனம் கிடைத்தது என்ற நம்பிக்கையைப் பெற்றதால் அந்த கோவில்களுக்குப் போவதிலும் உத்ஸவங்கள் நடத்துவதிலும் உத்ஸாஹம் அடைந்து, நல்ல பக்தி சிரத்தைகளைப் பெற்றிருக்கிறார்களா, இல்லையா? இதைத்தான் நாம் கவனிக்க வேண்டும். ‘புத்திசாலி’களான நம்முடைய சந்தேகங்கள் இல்லாமல் அந்த எளிய ஜனங்கள் பெறும் நிறைவை ஏன் குலைக்க வேண்டும்? இந்த மாதிரி விஷயங்களில் உண்மை என்பதாக ஏதோ ஒரு யதார்த்தத்தை (fact) சொல்லி, அதனால் சாமான்ய ஜனங்கள் பெறும் திருப்தியைக் கெடுத்து அவர்களுக்கு புத்திக் கலக்கத்தை உண்டாக்கக் கூடாது. பகவானே கீதையில் சொல்கிறார்:

ந புத்திபேதம் ஜனயேத் அக்ஞானாம் கர்ம ஸங்கினாம்|

இப்படிச் சொல்வதால் ஸ்தல புராணங்கள் யதார்த்தமான சத்தியத்தைச் சொல்லவில்லை என்கிற கோஷ்டியோடு நான் சேர்ந்துவிட்டதாகவும், ஆனாலும் அதனால்கூடப் பொதுஜனங்களிடம் நல்ல விளைவை ஏற்படுத்த முடிகிறது என்பதற்காகத்தான் அவற்றை அங்கீகரிக்க வேண்டும் என்று சொல்வதாகவும் நினைத்துவிடக் கூடாது. பெரும்பாலான ஸ்தல புராணங்கள் உண்மையான விருத்தாந்தங்களைத்தான் சொல்கின்றன – என்பதே என் நம்பிக்கை. சிலது வேறு தினுஸாக இருக்கலாம். அப்படி இருந்தாலும் இருந்து விட்டுப் போகட்டும் என்றுதான் சொல்கிறேன். எல்லா ஸ்தலப் புராணமுமே பொய்யென்று நான் சொல்ல வரவில்லை.

உபந்யாஸமும் திரைப்படமும்

முன்னாளில் தாயார் விடிய நாலு நாழிகையிருக்கும் போதே எழுந்திருந்து வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் போதே – சாணி தெளிப்பது, கோலம் போடுவது, தயிர் சிலுப்புவது முதலான காரியங்களைச் செய்யும் போதே – புராணங்களில் வரும் புண்ணியமான கதைகளைப் பாட்டாகப் பாடிக்கொண்டிருப்பாள். குழந்தைகள் அதைக் கேட்டுக் கேட்டே புராணக் கதைகளைத் தெரிந்து கொண்டார்கள். தர்மங்களை ஜீவனுள்ள கதாபாத்திரங்களில் குழைத்துக் கொடுப்பதால் அவை இளம் உள்ளங்களில் ஆழப் பதிந்துவிடும். இதையே பிற்பாடு பௌராணிகர்கள் சொல்லக் கேட்டும், தாங்களே மூல நூலைப் படித்தும் விவரமாகத் தெரிந்து கொண்டார்கள். இதெல்லாம் முற்கால ஸம்பிரதாயங்கள்.

இப்போது இந்த நல்ல வழக்கங்கள் போய்விட்டன. ஸினிமாப் பாட்டு, பாலிடிக்ஸ், நாவல், பத்திரிக்கைகள் இவைதான் சின்ன வயஸிலிருந்தே எல்லாரையும் இழுக்கும்படியாக ஏற்பட்டிருக்கிறது. இப்போதும் ஸினிமா – டிராமாக்களில் புராணக் கதைகளையும் நடிப்பதால் அந்த அளவுக்குக் கொஞ்சம் புராண ஞானம் உண்டாகலாம். ஆனால் இது ஸரியான ஞானமாக இருக்குமா என்பது ஸந்தேஹம். புராணப் படத்தைப் பார்த்தாலுங்கூட நல்லதை விட அதிகமாகக் கெட்டதே வந்து சேரும்படி இருக்கலாம். ஏனென்றால் புராணக் கதையை ஸினிமாவாகவோ டிராமாவாகவோ ஆக்குகிறபோது அதை எத்தனைக்கெத்தனை ஜன ரஞ்ஜகமாகப் பண்ணலாம் என்றுதான் பார்ப்பார்கள். இதனால் காந்தா ஸம்மிதத்துக்கு நல்லதை வலியுறுத்துவதற்காகவே தரப்பட்ட சுதந்திரத்தைத் தப்பாகப் பிரயோஜனப்படுத்திக் கொண்டு மூலக் கதையை ரொம்ப சிதைத்து விடுகிற ஹேது அதிகமிருக்கிறது.

டிராமா, ஸினிமாவில் இன்னொரு கெடுதல், இவைகளைப் பார்க்கப் போகிறவர்கள் உத்தமமான கதாபாத்திரங்களின் குணங்களை கிரஹித்துக் கொள்வதற்குப் பதில் அந்த வேஷம் போட்டுக் கொள்ளும் நடிகருடைய குணங்களையே கிரஹித்துக் கொள்ளுவது!

நல்ல நடத்தையோடு கூடியவர்களாகவும், புராணம் சொல்கிற தத்வங்களில் ஈடுபாடு உள்ளவர்களாகவும், அதிலே வரும் உத்தம புருஷர்களின் குணங்களில் தோய்ந்தவர்களாகவும் இருக்கப்பட்ட பெரியவர்கள் செய்கிற புராணப் பிரவசனத்தைக் கேட்டால்தான் கேட்பவர்களுக்கும் அதிலுள்ள தர்மங்கள், அதில் வருபவர்களின் ஸத்குணங்கள் இவற்றை கிரஹித்துக் கொள்ள முடியும். பணம், புகழ் இவற்றையே நினைப்பவர்களாகவும், தாம் சொல்கிற விஷயங்களைத் தாமே அனுஷ்டானத்துக்கு எடுத்துக் கொள்ளாதவராகவும் இருக்கிற பௌராணிகர் பண்ணும் உபந்நியாஸமும் டிராமா, ஸினிமா போலத்தான். நல்ல பலனைத் தராது. சாஸ்திரத்தில் சொன்ன நாடக தர்மப்படி இருந்தால் டிராமாவும், சினிமாவும் கூட நல்லதைச் செய்யமுடியும். நிஜ வாழ்க்கையில் புருஷன் பெண்டாட்டியாக இருப்பவர்கள் தான் நாடகத்திலும் ஸதி-பதியாக வரலாம்; ச்ருங்காரக் காட்சியில் இப்படியிப்படியான கட்டுப்பாடுகள் வேண்டும் என்று நாடக சாஸ்திரத்தில் இருக்கிறது.

தினமுமே இப்பொழுதெல்லாம் பட்டணங்களில் நிறைய உபந்நியாஸங்கள் நடக்கின்றன. நியூஸ் பேப்பரில் ‘எங்கேஜ்மென்ட் கால’ த்தைப் பார்த்தால் எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது. நான்கூடக் கேள்விப்படாத மத விஷயங்கள், கதை, புராணங்களில் உபந்நியாஸங்கள் நடக்கின்றன. ஜனங்களும் கூட்டம் கூட்டமாக இவற்றுக்குப் போகிறார்கள். ரொம்பவும் நாகரிகமான வழியில் இருக்கப்பட்டவர்கள், படித்த யுவர்கள் யுவதிகள்கூட இவற்றுக்கு வருகிறார்கள் என்று தெரிகிறது. நடுவாந்தரத்தில் இருந்த நிலையோடு பார்க்கும்போது இதை ஒரு ‘ரினைஸான்ஸ்’ (மறுமலர்ச்சி) என்று கூடச் சொல்லத் தோன்றுகிறது.

ஆனால் இதிலே முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, பௌராணிகர்கள் எந்த அளவுக்கு ரஸாபாஸம் உண்டாக்காமல் கதை சொல்கிறார்கள் என்பதுதான். ஏதோ கொஞ்சம் பாலிடிக்ஸ், ஹாஸ்யம், உபகதைகள் வந்தால் பரவாயில்லைதான். ஆனால் இதுகளே கதையை, அதன் தத்வார்த்தத்தை அடித்துக் கொண்டு போகிற மாதிரி செய்து விட்டால் அது ரஸாபாஸம். பகவான் நினைவை உண்டாக்குவதுதான் ரஸம். அதையும் அந்தப் புராணத்தில் சொல்லியிருக்கிற பிரகாரம், அதை விட்டு ரொம்பவும் வெளியே ஓடிவிடாமல், மனஸில் பதிகிற மாதிரி சொல்ல வேண்டும். இதற்கு முக்கியமாக ஸ்வாநுபூதி இருக்க வேண்டும். கதை சொல்கிறவருக்கே ஆஸ்திக்யம், ஆசாரங்கள், தெய்வ பக்தி, தாம் சொல்கிறதில் மனமார்ந்த நம்பிக்கை எல்லாம் இருக்க வேண்டும். அவரே விஷயத்தில் (சப்ஜெக்டில்) தோய்ந்தவராக இருந்துவிட்டால், வேண்டாத கதைகள், பாலிடிக்ஸில் போவதற்கு அவருக்கே மனசு வராது. ஸினிமா, நாவலுக்குப் பதில் அதே மாதிரி இன்னொரு பொழுதுபோக்கைப்போலப் புராணப் பிரவசனமும் ஆகிவிட்டால் அதில் ஒரு பிரயோஜனமும் இல்லை.

பட்டணங்களில் உள்ளது போல சின்ன ஊர்களிலும் கிராமங்களிலும் இவ்வளவு உபந்நியாஸங்கள், பஜனைகள், ஆஸ்திக ஸங்கங்களைப் பார்க்க முடியவில்லை. ரொம்பவும் நாகரிகம் முற்றிய இடத்திலேயே, ‘ஆக்ஷ’னுக்கு ஸமமாக ‘ரியாக்ஷ’னும் இருக்கும் என்ற ‘நியூடன் Law’ப்படி அதற்கு மாற்றாக, இம்மாதிரி ஸத் விஷயங்களும் வளர்ந்து வருகின்றன. எல்லா இடத்திலும், கிராமங்களிலும்கூட, இப்படி நடக்க வேண்டும். எந்த இடமானாலும் ஏகாதசியன்று பக்திக்காகவும் தர்மத்துக்காகவும் என்றே புராண படனமும் (படிப்பதும்) சிரவணமும் (கேட்பதும்) நடக்க வேண்டும்.

நண்பனாகப் பேசுவது

ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டுமானால் அதை மூன்று தினுசுகளில் நடக்குமாறு பண்ணலாம். ராஜாங்கம் உத்தரவு போடுகிறது போலக் கட்டளை செய்வது ஒன்று. இதற்கு ‘ப்ரபு ஸம்மிதை’ என்று பெயர். பிரபுவான யஜமானன் வேலைக்காரனுக்கு ஆர்டர் பண்ணுவது போலச் சொல்வது பிரபு ஸம்மிதை. பண்ணா விட்டால் தண்டனை உண்டேயென்று, பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் பயத்தோடு கட்டளைப் பிரகாரம் காரியத்தைப் பண்ணியாக வேண்டும். இப்படி அதிகார ஸ்தானத்திலிருந்து கொண்டு உத்தரவாகப் போடாமல் ஒரு சினேகிதன் நம்மிடம் ஒரு காரியத்தைச் செய்யச் சொன்னாலும் செய்கிறோம். இங்கே பயம் இல்லை. அன்பாலேயே செய்கிறோம். நமக்கு நல்லதையே நினைக்கும் சிநேகிதன் அவன் என்ற நம்பிக்கை இருப்பதால் செய்கிறோம். இப்படி நம்மிடம் நல்ல மனஸ் உள்ள சிநேகிதனுக்கு ‘ஸுஹ்ருத்’ என்று பெயர். அதனால் நம் ஸகா மாதிரியான ஸ்தானத்திலிருந்து கொண்டு நம்மை நல்ல காரியத்தில் ஏவுவது “ஸுஹ்ருத் ஸம்ஹிதை”. இதை விடவும் சுலபமாகக் காரியத்தைச் சாதித்துத் தர வல்லது எது என்றால் பத்தினியின் பிரிய வசனம்தான். யஜமானனின் உத்தரவு பாரமாக இருக்கிறது என்றால், அதையே சிநேகிதன் சொல்லும்போது லகுவாகிறது. இதைவிடவும் லேசாகி விடும், அதையே பத்தினி சொல்கிறபோது. இது மாதிரி ரம்யமாக ஒன்றைச் சொல்லியே செய்யப் பண்ணுவது ‘காந்தா ஸம்மிதை’ எனப்படும். காந்தா என்றால் பத்தினி.

வேதம் பிரபு ஸம்மிதை, புராணங்கள் ஸுஹ்ருத் ஸம்மிதை, காவியங்கள் காந்தா ஸம்மிதை என்று சொல்வதுண்டு.

யத் வேதாத் ப்ரபு ஸம்மிதாத் அதிகதம் சப்த ப்ராமாணாத் சிரம்
யத் ச அர்த்த ப்ரவணாத் புராண வசனாதிஷ்டம் ஸுஹ்ருத் ஸம்மிதாத்|
காந்தா ஸம்மிதயா யயா ஸரஸதாம் ஆபாத்ய காவ்யச்ரியா
கர்தவ்யே குதுகீ புதோ விரசிதஸ் தஸ்யை ஸ்ப்ருஹாம் குர்மஹே||

(வித்யாநாதரின் “பிரதாபருத்ரீயம்”-ச்லோ.8)

“இப்படிச் செய். அப்படிச் செய்” என்று மட்டும் வேதம் சொல்கிறது. ஏன் என்று காரணம் சொல்லாது. காரணம் கேட்டாலே நாம் வேதத்தை அவமரியாதை பண்ணுகிறோம் என்று வேறு சொல்கிறார்கள்! புராணம் என்ன பண்ணுகிறது? “அப்பா, இப்படி செய்வதால் இந்த நன்மை உண்டாகிறது. வேறு தினுசில் செய்வதால் இம்மாதிரியான கெடுதல் உண்டாகிறது” – என்று கதை மூலம் காரணம் சொல்கிறது. காரணம் சொல்வது மட்டும் புராணத்தின் விசேஷமில்லை. அந்தக் காரணத்தை நமக்கு ஸ்வாரஸ்யமாக இருக்கிற கதைகளின் மூலமாகச் சொல்லி நாம் அதை விரும்பிக் கேட்கும்படி பண்ணுவதே புராணத்தின் விசேஷம். ‘ஹரிச்சந்திரன் இப்படித்தான் செய்தான். நளன் இப்படித்தான் செய்தான். இன்னும் இன்னின்ன பெரியவர்கள் இப்படியிப்படிச் செய்தார்கள். அதனால்தான் நடுவிலே அவர்களுக்கு எத்தனை கஷ்டங்கள், சோதனைகள் வந்தாலும், கடைசியில் பரம க்ஷேமமும், இன்றைக்கு நாமும் இன்னம் லோகம் உள்ளளவும் ஜனங்கள் அவர்களை மரியாதை பண்ணும்படியான சாச்வத கீர்த்தியும் உண்டாயிற்று. இதற்கு மாறாக ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு, ராவணன், துரியோதனன் போன்றவர்கள் செய்தார்கள். தாற்காலிமாக அவர்கள் பெரிய ஸ்தானத்தைப் பெற்று ஸந்தோஷம் அடைந்தாலும், கடைசியில் நாசமாகி, உலகம் உள்ளளவும் அபகீர்த்திக்கு ஆளாகியிருக்கிறார்கள்’ என்று எடுத்துக்காட்டி நம்மை நல்லவற்றில் தூண்டுகிறது; கெட்டவற்றிலிருந்து தடுக்கிறது. வாஸ்தவத்தில் நடந்த கதைகளைத்தான் புராணம் சொல்கிறது. ஸுஹ்ருத்தான சினேகிதனும் உண்மைக்கு மாறாகப் பேசாமலேதான், ஆனாலும் நம் மனஸ் ஏற்கிற விதத்தில் நல்லதைச் சொல்வான்.

காவியம் என்ன செய்கிறது? கவி என்ன செய்கிறான்? அவன் யதார்த்த உண்மையிலே தன் கற்பனையையும் நிறைய கூட்டிக் கொள்கிறான். கல்பனா சக்தியாலேயே கதைகளைக்கட்டி விடுகிறான். ஒன்றை மிகைபடச் சொல்கிறான், இன்னொன்றை குறைபடச் சொல்கிறான். வேறொரு விஷயத்தைத் திருப்பித் திருப்பிச் சொல்கிறான் (கூறியது கூறல்) . இதை எல்லாம் செய்வதற்கு அவனுக்கு ‘ரைட்’ கொடுத்திருக்கிறது. யதார்த்தத்துக்கு கண், காது, மூக்கு வைத்து ஜோடனை பண்ணி அனைவரும் ரசிக்கும்படியாகச் செய்வதே கவியின் காரியம். ஸுஹ்ருத் (நண்பன்) போல் உள்ளதை உள்ளபடி மட்டும் சொல்லாமல், புருஷன் நல்ல வழியில் போக வேண்டுமென்பதற்காகக் காந்தாவானவள் கூட்டியும், குறைத்தும், மாற்றியும் கூடப் பேசி அவனுக்கு ஹிதமாக இருக்கும்படியாக ‘நைஸ்’ பண்ணி விஷயங்களைச் சொல்லி அவனை சரி பண்ணுவாள் என்பது ஐதிஹ்யம். இந்தக் காந்தாவின் ஸ்தானத்தில் காவியமும், பிரபுவின் ஸ்தானத்தில் வேதமும், இரண்டிற்கும் நடுவான ஸுஹ்ருத்தின் ஸ்தானத்தில் புராணங்களும் இருந்து கொண்டு நமக்கு தர்மங்களைச் சொல்கின்றன.

புராணத்தை போதித்தவர்

இந்தப் புராணங்களை ஈச்வரனே தேவிக்குச் சொல்வதாக அல்லது விஷ்ணுவுக்குச் சொல்வதாக, அல்லது விஷ்ணுவோ ப்ரம்மாவோ நாரதருக்கோ அல்லது ஒரு ரிஷிக்கோ சொல்வதாக அவற்றில் சொல்லியிருக்கும். அப்படி தெய்வங்களே சொன்ன கதைகளை அப்புறம் ஒரு ரிஷிக்கோ ராஜாவுக்கோ இன்னொரு ரிஷி சொன்னார் என்று சொல்லிக் கொண்டு போய்க் கடைசியில் இவற்றை வியாஸர் ஸூதருக்கு உபதேசிக்க ஸூதர் நைமிசாரண்யத்திலுள்ள ரிஷிகளுக்குச் சொன்னார் என்று முடித்திருக்கும்.

நைமிசாரண்யத்து ரிஷிகள் அப்பிராம்மணரான ஸூதருக்கு உயர்ந்த ஆஸனமளித்து உட்கார வைத்து மரியாதை பண்ணி அவரிடமிருந்து புராண சிரவணம் பண்ணினார்கள். இதிலிருந்தே புராணங்களுக்குள் மதிப்புத் தெரிகறது. அதோடுகூட, பிறப்பைவிட அறிவுக்குத்தான் மதிப்புத் தந்தார்கள் என்றும் தெரிகிறது. உயர்ந்த விஷயத்தை எந்த ஜாதியார் சொன்னாலும் மரியாதையோடு கேட்டுக் கொண்டார்கள் என்று தெரிகிறது.

வழிகள் பல; குறிக்கோள் ஒன்றே

ஆழ்வார்கள் விஷ்ணுபரமாகப் பாடி வைத்திருக்கிறார்கள். நால்வர் சிவபரமாகப் பாடினார்கள். வேதத்தில் ஸகல தெய்வங்களையும் ஒரே மாதிரி ஸ்தோத்திரம் செய்திருக்கிறது. உபநிஷத்து என்று போனால், அங்கே தெய்வங்களைப் பற்றி அதிகம் பேச்சில்லாமல் எல்லாம் ஆத்ம தத்துவமாகச் சொல்லியிருக்கிறது. இங்கே திருவள்ளுவரை எடுத்துக் கொண்டால் அவர் தெய்வம், தத்வம் இவைகளைப் பற்றி வைதிக சம்பிரதாயப்படியே சொல்லியிருந்தாலும், அதை விட ரொம்ப அதிகமாக தர்மங்கள், நன்னெறிகள் (Morals, ethics) இவற்றையே சொல்கிறார். இன்னொரு பக்கம் திருமூலரைப் பார்த்தால் அங்கே ஸ்வாமி பக்தி என்பதை விடப் பிராணாயாமம், தியானம், தாரணை, ஸமாதி இத்யாதி யோக சமாச்சாரங்கள்தான் நிறைய வருகின்றன. ‘இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொன்றைச் சொன்னால் எதை எடுத்துக் கொள்வது?’ என்றால் எதை எடுத்துக் கொண்டாலும் தப்பில்லை. நாம் எடுத்துக் கொண்டதை நடுவிலே விடாமல், அதையே நம்பிக்கையோடு பிடித்துக் கொண்டு போய்க் கொண்டேயிருந்தால் முடிவில் எது பரமார்த்த சத்தியமோ அதையே அடைந்து விடுவோம். ஆரம்பத்தில் இவை வேறு வேறு வழிகளாகத் தோன்றினாலும், முடிவில் எல்லாம் கொண்டு சேர்க்கிற இடம் ஒன்றுதான்.

தேவர் குறளும் திருநான்மறை முடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை

திருவாசகமும் திருமூலர் சொல்லும்

ஒரு வாசகம் என்(று) உணர்

இதே மாதிரி ‘சிவமஹிம்ன ஸ்தோத்திர’த்திலும் சொல்லியிருக்கிறது. புஷ்ப தந்தர் என்ற மகான் – கந்தர்வராக இருந்து ஈச்வர சாபத்தால் பூமியில் விழுந்தவர் என்று சொல்வார்கள் – பரமேச்வரன் மகிமைகளைப் பற்றிச் சொல்கிற ஸ்தோத்திரம் அது. அதிலே ஒரு ச்லோகத்தில், ‘த்ரயீ (வேதம்), ஸாங்கியம் (தத்வ ஆராய்ச்சி), யோகம், பசுபதி மதம், வைஷ்ணவம் என்பதெல்லாம் அவரவரின் ருசி விசித்திரத்தைப் பொறுத்து ஒரே பரமாத்ம தத்வத்தில் கொண்டு சேர்க்க ஏற்பட்டவைதான் – எந்த நதியானாலும் ஒரே சமுத்திரத்தில் போய் விழுகிற மாதிரி! என்று சொல்லியிருக்கிறது.

இங்கிலீஷ்காரர்கள் இதே ஸமரஸ திருஷ்டியில்தான் ‘Jehovah, Jove or Lord’ என்கிறார்கள். பைபிள் தோன்றிய இஸ்ரேல் பிரதேசங்களில் இருந்த ஹீப்ரு, ஸெமிடிக் மத ஸ்வாமிதான் ஜெஹோவா. கிரீஸ் முதலான தேசங்களில் இருந்த ஹெல்லெனிக் மதத்தின் கடவுள் ‘ஜவ்’. ஜூபிடரின் இன்னொரு பெயர்தான் ஜவ். ‘லார்ட்’- பிரபு – என்பது பொதுவாக எல்லா மதத்திலும் ஈச்வரனுக்குச் சொல்கிற பேர். பேர் வேறாயிருந்தாலும் ஆசாமி ஒருத்தனேதான் என்று வெள்ளைக்கார தேசத்து அநுபவிகளும் சொல்லியிருக்கிறார்கள்.

புராணங்களைப் பணிவோடு, மரியாதையோடு, அதனால் பயனடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு படித்தால் குழப்பம் எதுவும் உண்டாகாது. நம்முடைய க்ஷேமத்துக்காகவே ஏற்பட்டவைதான் அவை என்ற நல்லறிவு பெறுவோம். கொஞ்சம் கூட்டிக் குறைத்துச் சொல்லியிருந்தாலும் அதுவுங்கூட நல்ல உத்தேசத்துடன்தான் என்று புரிந்து கொள்வோம்.