ஒன்றே பலவாக

ஒரே பரமாத்மாதான் பல தேவதா மூர்த்திகளாகியிருக்கிறார். ஒவ்வொருத்தனுக்கு ஒவ்வொரு மூர்த்தியிடம் அலாதிப் பிடிமானம் உண்டாகிறது. அவனவனுக்கும் அந்தப் பிடிப்பையே உறுதிப்படுத்திக் கொடுப்பதற்காகப் பரமாத்மா தம் ஸ்வரூபத்தில் ஒன்றை இன்னொன்றிடம் ஒரு சமயத்தில் குறைத்துக் கொள்கிறார். தஞ்சாவூர் சீமையிலேயே எடுத்துக் கொண்டால்: திருக்கண்டியூரில் பரமசிவனை மஹாவிஷ்ணுவுக்கு முன்னால் குறைத்துக் காட்டுகிறார். பிரம்ம சிரஸைக் கிள்ளியதால் பரமேச்வரனுக்கு ஏற்பட்ட சாபத்துக்கு அவர் மஹாவிஷ்ணுவிடம் சாபவிமோசனம் பெறுகிறார். அடுத்தாற்போல் திருவீழிமிழலையில் அந்த மஹாவிஷ்ணு பரமசிவனுக்கு முன்னால் குறைந்தாற் போல் இருக்கிறார். அங்கே விஷ்ணு சிவனுக்குப் பூஜை பண்ணுகிறார். ஒவ்வொரு கமலமாக சிவ ஸஹஸ்ர நாமம் சொல்லி அர்ச்சனை செய்கிறார். கடைசியில் ஒரு கமலம் குறைகிறது. உடனே புண்டரீகாக்ஷனான (தாமரைக் கண்ணனான) பெருமாள் தம் கண் ஒன்றையே பறித்து அர்ச்சனை செய்கிறார். ஈச்வரன் பிரஸன்னமாகி அவருக்குச் சக்கரம் வழங்குகிறார். இங்கே ‘நேத்ரார்ப்பணேச்வரர்’ என்றே ஈச்வரனுக்குப் பெயர். கண்டியூரில் பெருமாளுக்கு ‘ஹர சாப விமோசனர்’ என்று பெயர். கண்டியூர் கதையைக் கேட்கிறபோது பெருமாள் மஹாபாபத்தையும் சாபத்தையும் போக்குகிற பரம கருணாமூர்த்தி என்ற பாவத்தை, ஸாரத்தைத்தான் நாம் கிரஹிக்க வேண்டும். அப்படியே திருவீழிமிழலைப் புராணத்தில், தன் கண்ணைக்கூடத் தயங்காமல் கொடுக்கிறதுதான் பக்தி என்னும் ஸாரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். எவரைவிட எவர் உசத்தி அல்லது தாழ்த்தி என்று பார்ப்பதை முக்யமாய் நினைக்கக் கூடாது.

முன்பெல்லாம் லாந்தர் விளக்குகள்தாம் இருந்து வந்தன. அதில் நாலு பக்கம் கண்ணாடி போட்டதும் உண்டு; முப்பட்டை மாதிரி மூன்று பக்கம் கண்ணாடி போட்டது மாதிரியும் உண்டு. நாம் இந்த முப்பட்டை லாந்தரைப் பார்ப்போம். கண்ணாடிக்குள்ளே விளக்கு ஏற்றி வைத்திருக்கும். அதன் ஒளி மூன்று பக்கத்தாலும் கண்ணாடி வழியாக வெளியே வரும். சில சமயங்களில் அலங்காரமாக, இந்தக் கண்ணாடி ஒவ்வொன்றுக்கும் ஒரு வர்ணம் பூசியிருப்பார்கள். உள்ளேயிருக்கிற ஒரே ஒளி அந்தந்தப் பக்கத்துக் கண்ணாடி வழியாக வருகிறபோது அததன் வர்ணமாக தெரியும். சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்ற மூன்று காரியங்களை ஒரே பரமாத்மா பண்ணுகிறது. ஒரே சைதன்யம் [அறிவொளி] தான் மூன்றுக்கும் காரணம். அந்த சைதன்யம் முப்பட்டை லாந்தருக்குள் இருக்கிற விளக்கு மாதிரி.

மூன்று பட்டையில் ஒன்றுக்கு சிவப்புக் கலர் பூசியிருக்கிறது. அதுதான் ச்ருஷ்டி. ஸ்பெக்டராஸ்கோப்பில் சுத்த வெளிச்சத்திலிருந்து சிவப்பைப் பிரித்தால், பாக்கி ஆறு கலர்களும்கூட பிரிந்துவிடும். ஒன்று பலவாக ஆகிற சிருஷ்டி இதுதான். அதனால்தான் சிருஷ்டிகர்த்தாவான பிரம்மாவைச் சிவப்பு நிறமாகச் சொல்வது. முப்பட்டைக் கண்ணாடியில் இன்னொன்று நீலம். ஸயன்ஸ்படி நிற மாலையின் கடைசியில் உள்ள ‘வயலெட்’ அதுதான். ஆரம்பம் சிவப்பு (infra-red), முடிவு வயலெட் (ultra-violet). சிருஷ்டிக்கப்பட்ட லோகத்தையெல்லாம் பரிபாலித்துக் கொண்டிருக்கும்போதே, ‘இந்த லோகம் என்பது தன்னில் தானே நிறைந்த பூர்ண சத்தியம் இல்லை; இது பரமாத்மாவின் வேஷம்தான்; அவருடைய லீலைதான்’ என்று ஞானத்தினால் காட்டிக் கொண்டிருக்கிறவர் மஹாவிஷ்ணு. அந்த ஞான அக்னியில் லோகமெல்லாம் கரியாகிறது. ஒரு வஸ்து அடியோடு நீற்றுப் போய்விடாமல் தன் ரூபத்தோடேயே, ஆனால் வர்ணத்தை இழந்து, கரிக்கட்டையாக நிற்கிற நிலை இது! லோகம் என்று ஒன்று இருக்கவும் இருக்கிறது; ஆனால் அதன் தனி குணம் – மாயை – எரிந்து, கரிந்து அதுவும் விஷ்ணு மயமே என்று தெரிகிறது: ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்! கரியான், நீலமேனியான் என்றெல்லாம் விஷ்ணுவைச் சொல்கிறோம். நீலம், கறுப்பு, வயலெட் எல்லாம் கிட்டக் கிட்ட இருக்கிற வர்ணங்கள். பரமாத்மா முத்தொழிலுக்காக ஒரு முப்பட்டை லாந்தர் மாதிரி இருக்கிறபோது நீலப்பட்டை வழியாக உள்ளேயிருக்கிற ஒளி வருகிறபோது அதை விஷ்ணு என்கிறோம்.

முப்பட்டை லாந்தரில் மூன்றாவது பக்கம் கண்ணாடிக்குக் கலர் பூசாமல் உள்ளபடியே விட்டிருக்கிறது. ஞானத்தில் எல்லாம் எரிகிறபோது முதலில் கரிக்கட்டையாக ஆயிற்று. அந்தக் கரியையும் எரித்தால் எல்லாம் சாம்பலாகி விடுகிறது. ரூபம் என்பதே இல்லாமல் நீற்றுப் பொடியாகி விடுகிறது. இப்போது நிறமும் மாறிக் கறுப்பு அத்தனையும் வெள்ளை வெளேர் என்று ஆகிவிடுகிறது. வெளுப்பு சுத்த வெளிச்சத்துக்கு ரொம்பக் கிட்டின வர்ணம். அந்த வெளிச்சத்திலிருந்து வந்த எல்லாக் கலர்களும் – அதாவது பரமாத்மாவிடமிருந்து உண்டான சகல பிரபஞ்ச வியாபாரங்களும் – அடியோடு அடிபட்டு நீற்றுப் போய், அந்தப் பரமாத்மா மட்டுமே மிஞ்சி நிற்கிற நிலை இது. நிற்பது – நீறு. எல்லாம் போனாலும் நிலைத்து நிற்கிற நிலை இது. ‘மஹா பஸ்மம்’ என்கிற பரமேச்வரன் அதுதான். ஸம்ஹாரம் என்கிற பேரில் எல்லாவற்றையும் அழிக்கிற போது அது கொடூரமான காரியமாகத் தோன்றினாலும், அழிப்போடு நிற்காமல், ஆதாரமான சத்தியத்தில் சேர்க்கிற பரம காருண்யமான தொழிலைத்தான் சிவபெருமான் செய்கிறார். விஷ்ணு, லீலையோடு சேர்த்துச் சேர்த்து ஞானத்தைத் தந்தபோது, நானா தினுசான (ஸர்வம்) லோகம் (ஜகத்) என்பது ஒரு கரிக்கட்டை மாதிரி பார்வைக்குத் தெரிந்தது. அதனால்தான் ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்‘ என்றது. இப்போது லீலை எல்லாம் முடிந்து ஸம்ஹாரம் என்ற பரம ஞான நிலை வந்திருக்கிறபோது ஸர்வமும் இல்லை, ஜகத்தும் இல்லை. அதனால்தான் ‘சிவமயம்’ என்று மட்டும் சொல்கிறோம்.

ஒரே விளக்குத்தான் – பிரம்ம சைதன்யம். அதுவே சிவப்புப்பட்டை வழியாகத் தெரியும்போது பிரம்மா எனப்படுகிறது; நீலப்பட்டை வழியாகப் பார்க்கிறபோது அதுவே விஷ்ணு; வர்ணம் பூசாத ட்ரான்ஸ்பாரன்ட் வெளுப்புக் கண்ணாடி மூலம் பார்த்தால் அதுவே சிவன்.

“ஓருருவே மூவுருவாய்” என்றுதான் நம் பெரியவர்கள் பாடி வைத்திருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட ஃபிலாஸபியைத்தான் சொல்ல வேண்டும், ஒரு சித்தாந்தத்தைத்தான் நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணங்கள் இல்லாமல் திறந்த மனஸோடு, விசாலமான பார்வையோடு தங்களுக்குத் தோன்றிய சத்தியங்களையே சொல்லிக் கொண்டு போன மகாகவிகள் எல்லோரும் ஒரே வஸ்துதான் மும்மூர்த்திகளாக, முப்பத்து முக்கோடி தேவதைகளாக ஆகியிருக்கிறதென்று சொல்லியிருக்கிறார்கள். பாணன் “ஸர்க- ஸ்திதி-நாச ஹேதவே” (ஸர்கம் என்றால் ஸ்ருஷ்டி) என்று ஒரே வஸ்துவை மூன்று தொழிலுக்காக மூன்றானதாகச் சொல்கிறான். காளிதாஸனும் ஸ்பஷ்டமாக, ” ஏக ஏவ மூர்த்தி: பிபிதே த்ரிதாஸா” – ஒன்றுதான் பரமாத்மா; அது முத்தொழிலுக்காக மூன்றாகப் பிரிந்தது என்கிறான்.

“பதினெண் புராணங்கள்” என்பனவற்றில் சைவமானவைதான் பிரமாணமுடையவை, வைஷ்ணவமானவை தான் பிரமாணமுடையவை என்று கட்சி கட்டினால், கட்சி தான் நிற்குமே ஒழிய, சண்டைதான் மிஞ்சுமே தவிர, தெளிவு உண்டாகாது; சாந்தி பிறக்காது. ‘ஒன்று ஸத்; அதைத்தான் ஞானிகள் பல பேரில் சொல்கிறார்கள்’ என்கிற வேத வாக்கியத்துக்கு அதிகமாக நமக்கு பிரமாணம் இல்லை.

ஆகையால் சைவ வைஷ்ணவ பேதபாவங்கள் இல்லாமல், எல்லோரும் அன்போடு கூடி சகல தெய்வங்களையும் பற்றிய விருத்தாந்தங்களை சிரவணம் செய்து சிரேயஸை அடைய வேண்டும்.

திருவிசநல்லூர் அய்யாவாள் என்று ஒரு மஹான் இருந்தார். ஸ்ரீதர வேங்கடேச்வரர் என்பது அவர் பெயர். ஆனால் அவர் இருந்த ஊரை மட்டும் சொல்லி, பேரைச் சொல்லாமல் ‘திருவிசநல்லூர் அய்யாவாள்’ என்றே ஸகல ஐனங்களும் மரியாதையோடு குறிப்பிடுவார்கள். சுமார் முந்நூறு வருஷங்களுக்கு முன் இருந்தவர். பகவந்நாம போதேந்திராளின் மூத்த ‘கான்டெம்பரரி’ [சமகாலத்தவர்] . போதேந்திராள் விசேஷமாக ராம நாமாவையும், கோவிந்த நாமாவையும் பிரசாரம் செய்து வந்தார். அதே சமயத்தில் அய்யாவாள் சிவ நாமாவின் மகிமையைப் பரப்பி வந்தார். இரண்டு பேருக்குமே சைவ வைஷ்ணவ பேதம் கிடையாது. அதனால் இருவருமே சேர்ந்துகூடத் திருவிசநல்லூரில் நாம ஸித்தாந்தத்தைப் பிரசாரம் செய்திருக்கிறார்கள். அவர்களுக்குள் பரஸ்பரம் அன்பும் மரியாதையும் இருந்தன. கலிகாலத்தில் கைகண்ட மருந்து எனப்படும் நாமத்தின் பிரபாவத்தை இரண்டு பேருமே நிலைநாட்டினார்கள். பஜனை சம்பிரதாயத்தில் இவர்களைத்தான் முக்கியமான ஆசார்யர்களாக ஸ்தோத்திரம் செய்து விட்டு அப்புறம் மற்ற தெய்வபரமான நாமாவளிகள் சொல்வது வழக்கம். முதலில் போதேந்திராளைப் பற்றியும், அப்புறம் அய்யாவாளைப் பற்றியும், குருவந்தனம் சொல்லிவிட்டுத்தான் பஜனை செய்வார்கள்.

அய்யாவாள் ஒரு சிராத்த தினத்தன்று பஞ்சமனுக்கு போஜனம் பண்ணி வைத்தார் என்பதற்குப் பிராயச்சித்தமாக அவர் கங்கா ஸ்நானம் செய்து வரவேண்டும் என்று நாட்டாண்மைக்காரர்கள் தீர்ப்பு பண்ண, அவர் தம் வீட்டுக் கிணற்றிலேயே கங்கையைப் பொங்கவைத்தார் என்ற விஷயம் அநேகமாக எல்லாருக்கும் தெரிந்திருக்கும். இப்படி கங்கை வந்தது ஒரு கார்த்திகை அமாவாஸையில். இப்போதும் அந்தப் புண்ய தினத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் திருவிசநல்லூர் அந்தக் கிணற்று ஜலத்தில் ஸ்நானம் செய்தால் கங்கா ஸ்நான பலன் கிடைக்கும் என்று நம்பிச் செய்து வருகிறார்கள்.

அய்யாவாள், ஸீதா கல்யாணத்துக்கு முன்னால் ஸ்ரீராம சந்திர மூர்த்தி சிவதநுஸை ஒடித்த விஷயத்தை ஓர் இடத்தில் சொல்லியிருக்கிறார். அங்கே “ஸ்வகர ப்ரதிபாடித ஸ்வசாப:” என்கிறார். அதாவது, தன் கையாலேயே தன் வில்லை ஒடித்துக் கொண்டார் என்கிறார். ‘சிவதநுஸ் ஏற்கெனவே நாராயணனால் விரிசல் ஆக்கப்பட்டது. அப்புறம் நாராயணன் ஸ்ரீராமனாக வந்து அதை நன்றாக ஒடித்தே போட்டு விட்டார்’ என்பதாக இந்த தநுர்பங்க சமாசாரத்தை வைத்து ஈச்வரனைத் தாழ்த்தி பேசுவது நீண்ட காலமாக வந்த ஒரு வாதம். ஆனால் ஸமரஸமாக பார்த்த அய்யாவாளுக்கோ, சிவ விஷ்ணு பேதமே தெரியவில்லை. ‘சிவனேதான் விஷ்ணு; விஷ்ணுவேதான் ராமன். ஆகையினால் ராமனும் சிவனும் ஒன்றுதான். சிவதநுஸ் என்றால் அதுவேதான் ராம தநுஸும்! தன் கையால் தன் வில்லையே முறித்துப் போட்டார்! அவருடைய லீலைக்கு இதெல்லாம் வேண்டியிருக்கிறது! என்று எழுதிவிட்டார்.

தெய்வங்களுள் பேதம் ஏன் ?

ஒவ்வொரு ஸ்வாமியையும் குறித்ததாக ஒவ்வொரு புராணம் இருப்பதால் சில ஸந்தேஹங்கள் வருகின்றன. சைவமான புராணங்களில், ‘சிவன் தான் பரமாத்ம தத்வம்; சிவன்தான் ஸ்ருஷ்டி-ஸ்திதி-ஸம்ஹாரம் எல்லாவற்றுக்கும் அதிகாரி. இவர் சொல்படி இவருக்கு அடங்கித்தான் விஷ்ணு பரிபாலனம் பண்ணுகிறார். அவர் [விஷ்ணு] வெறும் போகி, மாயையில் அகப்பட்டுக் கிடப்பவர். சிவன்தான் யோகி, சிவன்தான் ஞானஸ்வரூபி’ என்றெல்லாம் சொல்லியிருக்கும். ‘சிவனுக்கு விஷ்ணு அடங்கினவர். சிவனை விஷ்ணு பூஜை பண்ணுகிறார். சிவனுக்கு அடங்காமல் சில சமயத்தில் அவர் சிவனை எதிர்த்தபோது தோற்றுப் போய் மானபங்கப்பட்டிருக்கிறார்’ என்றெல்லாம் சொல்லி, இது ஒவ்வொன்றுக்கும் திருஷ்டாந்தமாக அநேக கதைகளைச் சொல்லியிருக்கும். வைஷ்ணவமான புராணங்களைப் பார்த்தாலோ இதை அப்படியே தலைகீழாகத் திருப்பி வைத்து, அதற்கும் ஆதரவாக ஏகப்பட்ட விருத்தாந்தங்களைக் காட்டியிருக்கும். “பேய் பிசாசுகளைக் கட்டிக்கொண்டு சுடுகாட்டில் உட்கார்ந்திருக்கிற சிவனா ஒரு ஸ்வாமி? சக்கரவர்த்தியான வைகுண்டநாதனின் தாஸர்தான் அவர்” என்று அவற்றில் சொல்லியிருக்கும்.

சிவன் விஷ்ணு என்ற இரண்டு தெய்வங்களுக்குள் மட்டும் என்றில்லை. ஒவ்வொரு புராணத்திலும் ஏதோ ஒரு தெய்வத்தை – அது ஸுப்ரமண்யராயிருக்கலாம், பிள்ளையாராக இருக்கலாம், அல்லது சூரியனாக இருக்கலாம். ஏதோ ஒன்றை – முழுமுதற் கடவுளாகச் சொல்லி மற்ற எல்லா தெய்வங்களையும் மட்டம் தட்டி, அவை இந்த ஒரு மூர்த்தியைத்தான் பூஜை பண்ணுகின்றன, அப்படிப் பண்ணாமல் அஹம்பாவப்பட்டபோது இதனிடம் தோற்றுப் போய் மானபங்கப்பட்டிருக்கின்றன என்று கதைகளிருக்கும்.

இதைப் பார்த்தால், ‘என்ன இப்படி ஒன்றுக்கொன்று வித்தியாஸமாய் இருக்கிறதே! இதில் எது நிஜம், எது பொய்? எல்லாம் நிஜமாக இருக்கமுடியாது. சிவன் விஷ்ணுவைப் பூஜை பண்ணினார் என்றால் விஷ்ணு சிவனை பூஜை பண்ணுவது அயுக்தம். இப்படி நடக்காது. திரிமூர்த்திகளுக்கு மேல் அம்பாள் இருக்கிறாள் என்றால் அவளே பரமேச்வரனிடம் பதிவிரதையாக அடங்கிக் கிடக்கிறாளென்பது தப்பு. அதனால் எல்லாப் புராணமும் நிஜமாய் இருக்கமுடியாது. எது நிஜம்? எது பொய்? ஒரு வேளை எல்லாமே பொய்தானா? அப்படித்தான் இருக்கும் போலிருக்கிறதே! என்று ஸந்தேஹங்கள் தோன்றுகின்றன.

தர்க்க ரீதியாகப் பார்த்தால் எல்லாம் நிஜமாக இருக்க முடியாதென்று தோன்றினாலும், எல்லாமே நிஜம்தான். ஒரு சமயத்தில் தோற்றுப்போன ஸ்வாமியே இன்னொரு சமயம் ஜெயிக்கிறது. ஒரு சமயம் பூஜை பண்ணின ஸ்வாமியே இன்னொரு சமயம் பூஜை பண்ணப்படும் ஸ்வாமியாகிறது.

இது எப்படி? எதற்காக இப்படி இருக்க வேண்டும்?

ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய சகலத்தையும் செய்கிற பரமாத்மா ஒன்றேதான் இருக்கிறது. அதுவேதான் இத்தனை தெய்வங்களாகவும் ஆகியிருக்கிறது. எதற்காக? இந்த லோக வியாபாரம் ருசியாக இருக்கவேண்டும் என்பதற்காக எல்லா ஜனங்களையும் ஒரே அச்சாகப் படைக்காமல் பலதரப்பட்ட மனோபாவ வித்தியாஸங்களுடையவர்களாகத் தானே பரமாத்மா சிருஷ்டித்திருக்கிறார்? இந்த ஒவ்வொரு மனோபாவத்துக்கும் பிடித்த மாதிரி பரமாத்மாவும் ஒவ்வொரு ரூபத்தை எடுத்துக் கொண்டால்தான் அவரவரும் தங்களுக்குப் பிடித்ததை இஷ்ட தேவதையாய்க் கொண்டு உபாஸித்து நல்ல கதியைப் பெற முடியும். அதற்காகத்தான் ஒரே பரமாத்மா பல தெய்வரூபங்களை எடுத்துக் கொள்கிறது.

ஒவ்வொருவருக்கும் தங்கள் இஷ்ட மூர்த்தியிடமே அசையாத நம்பிக்கை ஏற்படவேண்டுமல்லவா? “இதுதான் பரமாத்ம ஸ்வரூபம், பரப்பிரம்ம ஸ்வரூபம். இதற்கு மேல் ஒரு சக்தியில்லை”- என்ற உறுதியை அவர்களுக்கு ஊட்ட வேண்டுமல்லவா? அதற்காகத்தான் ஒவ்வொரு ரூபத்திலும் மற்ற ரூபங்களையெல்லாம்விடப் பெரியதாகத் தன்னைக் காட்டிக் கொண்டிருக்கிறது. மற்ற ரூபங்கள் தன்னை பூஜை பண்ணினதாகவும் தன்னிடம் தோற்றுப் போனதாகவும் காட்டியிருக்கிறது.

இப்படிச் சொன்னதாலேயே ஒவ்வொரு தெய்வமும் மற்ற தெய்வங்களைப் பூஜித்ததுமுண்டு, மற்ற தெய்வங்களால் பூஜிக்கப்பட்டதுமுண்டு; மற்ற தெய்வங்களிடம் தோற்றதுமுண்டு, மற்ற தெய்வங்களால் தோற்கப் பண்ணினதுமுண்டு என்று ஆகிறதல்லவா?

இவற்றிலே சைவமான புராணங்களில் சிவனின் உயர்வை மட்டுமே காட்டுகிற விஷயங்களாகத் தொகுத்துக் கொடுத்திருக்கும்; வைஷ்ணவமான புராணங்களில் விஷ்ணுவின் உத்கர்ஷத்தை [மேன்மையை] சொல்கிற ஸம்பவங்களை மட்டுமே சேர்த்துத் தந்திருக்கும். இப்படியே அம்பாள், ஸுப்ரமண்யர் முதலிய மற்ற தேவதைகளைப் பற்றிய ஒவ்வொரு புராணத்திலும் அது ஒன்றே முழுமுதல் தெய்வம் என்னும்படியான விருத்தாந்தங்களை மட்டும் கொடுத்திருக்கும்.

ஆக, உத்தேசம் மற்றவற்றை மட்டம் தட்டுவதில்லை. எது ஒருத்தனுக்கு உபாஸ்யமோ அதனிடமே இவன் அனன்ய பக்தி செலுத்தும்படி பண்ணவேண்டும் என்பதே உத்தேசம். அன்னியமாக இன்னொன்றிடம் பக்தி சிதறாமல் இருப்பதுதான் ‘அனன்யம்’ என்பது. இந்த தெய்வத்தை உயர்த்திக் காட்டி இதன் உபாஸகனை உயர்த்துவதுதான் லக்ஷ்யமேயன்றி, மற்றவற்றை நிந்திப்பது அல்ல. இதை ‘நஹி நிந்தா நியாயம்’ என்பார்கள்.

எல்லாம் ஒரே பரமாத்மாவின் பல ரூபங்கள் என்று பார்க்கிறவர்களுக்கு அனன்ய பக்தி என்பதற்கு அவசியமே இல்லை. ஏனென்றால் ஒரு தெய்வத்துக்கு இன்னொன்று அன்னியம் என்று அவர்கள் நினைத்தால்தானே ஒன்றைவிட்டு இன்னொன்றிடம் திரும்புவதைப் பற்றிய பேச்சே வருகிறது? எல்லாம் ஒன்றின் வேஷமே என்று புரிந்து கொண்டுவிட்டால் அப்போது எல்லாப் புராணங்களும் ஒரே பரமாத்மாவின் லீலா வினோதம்தான்; அந்த ஒன்றேதான் தன்னை வெவ்வேறு மனோபாவக்காரர்கள் அநுபவிக்கும்படியாக வெவ்வேறு தெய்வம்போல் ஆக்கிக் கொண்டு இத்தனை கூத்தும் அடிக்கிறது என்று புரிந்து கொண்டு, ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றுகிற எல்லாக் கதைகளையும் ரஸிக்கவும் பக்தி செலுத்தவும் முடிகிறது.

பாணாஸுரன் கதையிலே சிவன் கிருஷ்ணனிடம் தோற்றுப் போகிறாரா? திருவண்ணாமலைக் கதையிலே விஷ்ணு சிவனுடைய அடியைக் காணமுடியாமல் தோற்றுப் போகிறாரா? இரண்டும் ஸத்யந்தான். கிருஷ்ண பக்தர்களை அவர்தான் பரமாத்மா என்று நம்பப் பண்ணுவதற்காக ஈச்வரன் தயங்காமல் கிருஷ்ணனிடம் தோற்றுப் போகக் கூடியவர்தான். சைவர்களுக்கு ஈச்வரனிடம் பிடிப்பை உறுதியாக்க வேண்டும் என்பதற்காக விஷ்ணு தம்மையே குறைத்துக் கொண்டு ஈச்வரனிடம் தோற்கக் கூடியவர்தான். நாம் ஜயித்தவர் – தோற்றவர் என்று வித்யாஸமாக நினைத்தாலும் அவர்களுக்குத் தாங்கள் வேறு இல்லை, ஒருவரேதான் என்று தெரியுமல்லவா? தன்னையே ஜயித்துக் கொள்வதாவது? தன்னிடம் தோற்றுப் போவதாவது? அதனால் இதெல்லாம் விளையாட்டுத்தான்! இப்படி ஒரே பரமாத்மா பல ரூபம் எடுத்துக்கொண்டு லீலை செய்கிறது.

இன்னொரு காரணமும் உண்டு. ஜனங்களுக்கு வழி காட்டியாக இருப்பதுதான் அது. லோகத்தில் பக்தி விருத்தியாக வேண்டும். இதற்காக பகவானே வழி காட்டவேண்டும். அதற்காகத்தான் சில கதைகளில் சில க்ஷேத்ரங்களில் விஷ்ணுவே பக்தனாக இருந்து கொண்டு ஈச்வரனுக்குப் பூஜை செய்கிறார்; வேறு சில கதைகளில், க்ஷேத்ரங்களில் சிவன் விஷ்ணுவுக்குப் பூஜை பண்ணுகிறார்.

மற்ற தெய்வங்களும் இப்படியே. பொதுவாக சைவம், வைஷ்ணவம் என்றே நாம் பெரிய பிரிவுகளாகப் பிரிந்திருப்பதால் ஈச்வரன், விஷ்ணு என்ற இரண்டையே அதிகம் சொல்கிறேன்.

லோகத்தில் பாதிவ்ரத்யம் [கற்பு நெறி] இருக்கவேண்டும். அதனால் அம்பாளே பதிவிரதைகளுக்கெல்லாம் வழி காட்ட வேண்டும். அப்போது, தான் பராசக்தியாக இருந்தாலும் பதிக்கு அடங்கி ஒடுங்கினவளாகத்தானே இருக்க வேண்டும்?

ஆக, புராணங்களிலே ஒன்றுக்கொன்று வித்தியாஸமாக, இந்த ஸ்வாமிதான் உசத்தி என்றும், அந்த ஸ்வாமிதான் உசத்தி என்றும் காட்டும்படியான கதைகள் வருவது அந்தந்தக் குறிப்பிட்ட சமயத்தில் ஒன்றிடமே இதுதான் பரமாத்மா என்று நாம் ஆழமாக ஈடுபட்டு நிற்பதற்காகச் சொன்னது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். ஒன்றைத் தாழ்த்தியது போல் சொன்னது உண்மையில் அதை நிந்திப்பதற்காக இல்லை; இன்னொன்றை இதுவே ஸகலமும் என்று கெட்டியாகப் பிடித்துக் கொள்ளச் செய்வதுதான் உத்தேசம்.

இதிஹாஸங்களின் பெருமை

புராணங்களை வேதத்துக்கு உபாங்கமாகச் சொன்னால், இதிஹாஸங்களையோ வேதத்துக்கு ஸமானமாகவே உயர்த்திச் சொல்லியிருக்கிறது. பாரதத்தை ‘பஞ்சமோ வேத:’- ஐந்தாவது வேதம் – என்று சொல்லியிருக்கிறது. ராமாயணத்தைப் பற்றி “வேதத்தால் அறியத்தக்க பரமபுருஷன் தசரதனின் குழந்தையாக அவதாரம் பண்ணியவுடன் அந்த வேதமும் வால்மீகியின் குழந்தையாக அவதாரம் பண்ணிவிட்டது” என்று சொல்லியிருக்கிறது.

வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே|
வேத: ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மனா||

(ப்ரசேதஸின் பிள்ளையானதால் வால்மீகிக்குப் ப்ராசேதஸ் என்று பெயர்.)

ராமாயண- பாரதக் கதைகள் நம் தேச ஜனங்களின் ரத்தத்திலேயே ஊறிப்போனவை.

இந்த இதிஹாஸ படனம் குறைந்து போய்விட்ட இந்த நாற்பது, ஐம்பது வருஷத்துக்கு முன்புவரை* பாமர ஜனங்கள் உள்பட எல்லோருமே வெளி தேசத்தார் வியக்கும்படியான நல்லொழுக்கங்களோடு யோக்யமாக இருந்து வந்தார்கள் என்றால் அதற்கு முதல் காரணம் ராமாயணமும் பாரதமும்தான். பாரதப் பிரவசனம் விடாமல் ஒவ்வொரு ஊர்க் கோயிலிலும் நடக்க வேண்டும் என்பதற்காகத் தமிழ் ராஜாக்கள் மானியம் கொடுத்து வந்திருக்கிறார்கள். நாற்பது, ஐம்பது வருஷத்துக்கு முந்தி வரையில் பூசாரி உடுக்கடித்துக் கொண்டு பாரதம் பாடுவதை கேட்கத்தான் கிராம ஜனங்கள் கூட்டம் கூட்டமாகப் போவார்கள். அதுதான் அவர்களுக்கு ஸினிமா, டிராமா எல்லாம். ஆனால் இந்த ஸினிமா டிராமாக்களினால் ஒழுக்கத்துக்கு ஏற்பட்டிருக்கிற ஹானிகள் இல்லாமல், பாரதக் கதை கேட்டுக் கேட்டே அவர்கள் ஸத்யத்துக்கு பயந்து கபடு, சூது இல்லாமல் நல்ல வாழ்க்கை நெறியில் போனார்கள். பாரதத்துக்கு இந்தத் தமிழ் தேசத்திலிருக்கிற மதிப்பு, கிராம தேவதை ஆலயத்தை, “திரௌபதை அம்மன் கோயில்” என்று சொல்வதிலிருந்து தெரிகிறது.

ஒவ்வொரு பெரிய புராணத்தையும் எடுத்துக் கொண்டால் அதிலே தனித்தனிக் கதையாக அநேகம் இருக்கும். ஒவ்வொரு கதையும் ஒரு குறிப்பிட்ட தர்மத்தை வலியுறுத்துவதாக இருக்கும். இதிஹாஸத்திலோ ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஒரே கதையாக இருக்கும். நடுவே வேறு பல உபாக்யானங்கள் வந்தாலும்கூட அவையும் பிரதானமான ஒரு கதையைச் சுற்றியே இருக்கும். புராணத்தில் ஒவ்வொரு கதை ஒவ்வொரு தர்மத்தைச் சொல்கிறது என்றால் இதிஹாஸத்தின் மையமான கதையில் ஸகல தர்மங்களும் நடத்திக் காட்டப்பட்டிருக்கும். உதாரணமாக, தனிக்கதைகளான ஹரிச்சந்திர உபாக்யானம் ஸத்யம் என்ற ஒரு தர்மத்தை மட்டும் சொல்கிறது; சிரவணன் கதை பித்ரு பக்தியை மட்டும் சொல்கிறது; நளாயினி கதை கற்பை மட்டும் சொல்கிறது; ரந்திதேவன் கதை பரம தியாகத்தை, கருணையை மாத்திரம் சொல்கிறது. ஆனால் ராமர், பஞ்ச பாண்டவர்கள் இவர்களுடைய வாழ்க்கையைச் சுற்றி அமைந்த இதிஹாஸங்களில் இவர்கள் ஸகல தர்மங்களையும் நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.


* இதிஹாச, புராண உபந்நியாஸங்கள் வெகுவாகப் பெருகியிருப்பினும் இவை நகரப் புறங்களிலேயே நடப்பதால் பெருவாரியான கிராம மக்கள் இவற்றால் பயன் பெறாததை ஸ்ரீ ஸ்வாமிகள் கருத்தில் கொண்டு 1962-ல் கூறியது.

“இதிஹாஸம்” – “புராணம்” : பெயர் விவரம்

ராமாயணமும் மஹாபாரதமுந்தான் நம் தேசத்தில் பாமர-பண்டித பேதமின்றி எல்லோருக்கும் இரண்டு கண்கள் போல இருந்து கொண்டு யுகாந்தரமாக நல்ல வழியைக் காட்டி வந்திருக்கின்றன. இந்த இரண்டையும் புராணங்களோடு சேர்க்காமல், தனி ஸ்தானம் கொடுத்து ‘இதிஹாஸ’ங்கள் என்று வைத்திருக்கிறது.

‘புரா’ என்றால் ‘பூர்வத்தில்’ என்று அர்த்தம். பூர்வத்தில் நடந்ததைச் சொல்பவை புராணங்கள். அவற்றில் எதிர்கால prediction-ம் வருகிறது.

பூர்வத்தில் நடந்த கதையைச் சொல்வது என்று மட்டுமில்லாமல், புராணம் என்பதே பூர்வ காலத்தில் எழுதப்பட்டது என்றும் அர்த்தம் செய்து கொள்ளலாம். பொயட்ரி, டிராமா முதலான பூர்வகால இலக்கிய ஸ்ருஷ்டிகளுக்குப் பிறகு ஸமீபத்தில் ப்ரோஸிலேயே கதையை எழுதுவது என்று ஒரு இலக்கிய ரூபம் உண்டாயிற்று. அதற்கு Novel என்றே பெயர் வைத்தார்கள். “நாவல்” என்றால் புதியது என்று அர்த்தம். அந்தக் காலத்தில் இந்த ரூபம் பொயட்ரியைப் போலவும், டிராமாவைப் போலவும் இல்லாமல் புதிதாக வந்ததால் ‘நாவல்’ என்றே பெயர் வைத்தார்கள். இந்த ரூபம் நம் நாட்டிலே வந்த போதும் ‘நாவல்’ என்பதை மொழி பெயர்த்து ‘நவீனம்’ என்றார்கள். நவீனம் புதியது என்றால் புராணம் பழையது. இந்தப் பெயரே புராணங்களின் தொன்மையைக் காட்டுகிறது.

புராணம் என்று இருந்தால் அது சொல்ல வேண்டிய விஷயங்கள் ஐந்து இருக்கின்றன என்று பஞ்ச லக்ஷணம் கொடுத்திருக்கிறது. அவை: ஒன்று, ஸர்க்கம் (ஆதியில் நடந்த சிருஷ்டி). இரண்டு, ப்ரதி ஸர்க்கம் (அப்புறம் அந்த ஸ்ருஷ்டி யுகங்கள் தோறும் கவடு விட்டுக் கொண்டு பரவியது.) மூன்று, வம்சம் (பிரம்ம புத்ரர்களிலிருந்து ஆரம்பித்து ஜீவகுலம் எப்படி தலைமுறை தலைமுறையாக வந்தது என்ற விஷயம்.) நான்கு, மன்வந்தரம் (ஆயிரம் சதுர்யுகங்களில் லோகம் பூராவுக்கும் மநுஷ்யகுல முன்னோர்களாக இருக்கப்பட்ட பதினாலு மனுக்களின் காலத்தைப் பற்றிய விஷயங்கள்.) ஐந்தாவது, வம்சாநுசரிதம் (தேசத்தைப் பரிபாலித்த ராஜாக்களின் வம்சாவளி; ஸூர்ய வம்சம், சந்திர வம்சம் என்பது போன்ற dynasty -களின் விவரம்) . இன்னம், பூகோள வர்ணனை, ககோள வர்ணனை என்பதாக லோகங்களைப் பற்றி விரிவாக வர்ணிக்க வேண்டும். இங்கே புராணம் என்பது ஹிஸ்டரியாக மட்டுமின்றி ஜாகரஃபியாகவும் ஆகிறது.

‘இதிஹாஸம்’ என்பது இதி-ஹ-ஆஸம். ‘இதி-ஹ-ஆஸம் என்றால் இப்படி நடந்தது என்று அர்த்தம். ‘இதி ஆஸம்’ என்றாலே ‘இப்படி நடந்தது’ என்றாலும், நடுவிலே ஒரு ‘ஹ’ போட்டிருக்கிறது. ‘ஹ’வுக்கு ‘நிச்சயமாக’, ‘வாஸ்தவமாக’, ‘ஸத்தியமாக’ என்று அழுத்தம் கொடுக்கிற அர்த்தமுண்டு. கொஞ்சங்கூடப் பொய் கலக்காமல் உள்ளது உள்ளபடியே எழுதினது ‘இதிஹாஸம்’. அது எழுதப்பட்ட காலத்திலேயே நடந்தது. ராமர் இருந்த போதே வால்மீகி ராமாயணத்தை எழுதினார். பஞ்ச பாண்டவர்கள் இருந்த போதே வியாசாரியாள் கூட இருந்து பாரதத்தில் வரும் ஸம்பவங்களை எல்லாம் நேரில் பார்த்தவர்.

‘புராணம்’ என்ற பெயர்ப்படி அவர் பழைய விஷயத்தை சொன்ன போதும், தீர்க்க திருஷ்டியால் உள்ளது உள்ளபடிப் பார்த்துத்தான் எழுதியிருப்பார். என்றாலும் அதைக் கேட்ட மற்றவர்களுக்கு – அவர் காலத்தவர்களுக்கு – அந்த விஷயங்கள் தெரியாது. மஹாபாரதம், ராமாயணம் ஆகியவை இப்படி இல்லை. அவை முதலில் பிரசாரமானபோது லோகத்தில் இருந்தவர்களுக்கே அவற்றிலுள்ள அநேக பாத்திரங்களையும், ஸம்பவங்களையும் தெரியும். அதனால்தான் இவற்றில் நிஜம்தானா என்று நாம் ஸம்சயிப்பதற்கு இடமே இல்லை என்பதைக் காட்ட ‘இதி-ஹ-ஆஸம்’ என்று ‘ஹ’ போட்டு உறுதிப்படுத்தியிருக்கிறது.

“இதி-ஹ-ஆஸம்’ என்றால் ‘இப்படி(யிருக்க வேண்டுமென்று) அவர்கள் (பெரியோர்) சொல்கிறார்கள்’ என்றும் அர்த்தம் செய்து கொள்ளலாம்.

நேரே நடப்பதை வைத்துக் சொல்லாமல், இப்படியிருந்தது என்று ஒரு நம்பிக்கையின் மேல் எடுத்துக் கொள்வதே ‘ஐதிஹ்யம்’. ‘ஐதீகம்’ என்று தமிழில் அதைத்தான் சொல்கிறோம். அதாவது மரபு அல்லது tradition -க்கு இப்படிப் பேர். இப்போது நாம் நேரில் பார்க்கிற ஒன்றைக் கொண்டு இதை ஏற்படுத்தவில்லை. நமக்கு நீண்ட காலத்துக்கு முன்னாலிருந்து அநுஸரிக்கப்பட்டதா, சரி, நாமும் பின்பற்றவேண்டும் என்று இருப்பதே ஐதீகம். ‘இதி’ என்ற வேர்ச் சொல்லிலிருந்தே ‘ஐதிஹ்யம்’ வந்திருக்கிறது. ‘இப்படிப் (பெரியோர்) சொன்னது’ என்பதற்காகவே நாம் பின்பற்ற வேண்டியது ஐதிஹ்யம். நாம் நேரில் பார்ப்பது ‘இது’; இன்னொருத்தர் சொன்னால் ‘இப்படி’!

உப புராணங்களும் பிற புராணங்களும்

பதினெட்டு புராணங்களைத் தவிர பதினெட்டு உப-புராணங்களும் இருக்கின்றன. ‘விநாயக புராணம்’, ‘கல்கி புராணம்’ முதலியவை உப-புராணங்களில் தான் இருக்கின்றன. முக்யமாகப் பதினெட்டு உப-புராணம் என்று சொன்னாலும் மேலும் அநேகம் இருக்கின்றன.

மாஸங்களின் மகிமைகளை சொல்கிற துலா (ஐப்பசி) புராணம், மாக (மாசி) புராணம், வைசாக (வைகாசி) புராணம் என்றெல்லாம் இருப்பவை பதினெட்டு புராணங்களிலும் உப-புராணங்களிலும் அடங்கியிருக்கிற சில பகுதிகளே.

ஸ்தல புராணங்கள் என்று ஒவ்வொரு க்ஷேத்திரத்துக்கும் இருக்கிறது. இவற்றிலும் பல முன்னே சொன்ன புராணங்களுக்குள்ளேயே இருப்பவைதான். தனியாக இருப்பவையும் அநேகம்.

இப்படியே காவேரி, கங்கை முதலான தீர்த்தங்களின் மாஹாத்மியங்களும் புராணங்களின் பாகமாகவும், தனியாகவும் இருக்கின்றன. துலா புராணத்தில் முக்யமாகக் காவேரி மகிமைதான் வருகிறது. துலா மாஸத்தில் காவேரி ஸ்நானம் விசேஷமானது.

பகவானைப் பற்றிய புராணங்களைத் தவிர பக்தர்களைப் பற்றியேயான புராணங்களும் இருக்கின்றன. ‘பெரிய புராணம்’ என்ற திருத்தொண்டர் புராணம் சிவனடியார்களான 63 நாயன்மார்களின் கதைகளைச் சொல்வது. இதுவே ஸம்ஸ்கிருதத்தில் ‘உபமன்யு பக்தி விலாஸம்’ என்ற பெயரில் இருக்கிறது. பண்டரீபுரத்திலுள்ள பாண்டுரங்கனிடம் விசேஷமாக ஈடுபட்டிருந்த துகாராம், நாமதேவர் முதலானவர்களின் சரித்திரத்தைச் சொல்வதாக “பக்த விஜயம்” என்ற நூல் இருக்கிறது. வட தேசத்து பக்தர்களைப் பற்றி நாபா தாஸ் என்பவர் “பக்த மாலா” என்று எழுதியிருக்கிறார்.

வியாஸர் தந்த செல்வம்

வேதத்தில் இருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பதற்காக, வேதங்களை வகுத்துக் கொடுத்த அதே வேதவியாஸர் பதினெட்டுப் புராணங்களை உபகரித்தார். பதினென் புராணங்களை அஷ்டாதச புராணம் என்பார்கள்.

வியாஸரைத்தான் நான் முதல் ‘ஜர்னலிஸ்ட்’ [பத்திரிகை எழுத்தாளர்], இன்றைய ஜர்னலிஸ்ட்களுக்கெல்லாம் ‘ஐடிய’ லாக [முன்னுதாரணமாக] இருப்பவர் என்று நினைக்கிற வழக்கம். கதை, சரித்திரம், பூகோளம், தத்வம், தர்மம், கலைகள் எல்லாவற்றையும் புத்திமான்களுக்கு மட்டுமில்லாமல் பாமர ஜனங்களுக்கும் ஸ்வாரஸ்யமாகத் தருவதற்கே அவர் புராணங்களை எழுதிப் பெரிய செல்வமாகக் கொடுத்திருக்கிறார். இதைத்தானே ஜர்னலிஸ்ட்களும் செய்கிறார்கள்? ஆனால் இவர்கள் பெரும்பாலும் ஸ்வாரஸ்யம், ஜன ரஞ்ஜகம் என்பதோடு நிறுத்திக் கொண்டு விடுகிறார்கள். வியாஸர் பாமர ஜனங்களையும் தர்மத்தில் கொண்டு சேர்க்கவே, பரமாத்மாவிடம் கொண்டுபோய் விடுவதற்கே ஸ்வாரஸ்யத்தை ஸாதனமாக வைத்துக் கொண்டார். அந்த ஸ்வாரஸ்யத்தையே ‘கோல்’ (லக்ஷ்யம்) என்று வைத்துக் கொண்டால் பத்திரிகைகள் தர்ம விருத்தமான (தர்மத்துக்கு முரணான) விஷயங்களையும் பிரசாரம் செய்யும்படி ஆகிறது. வியாஸரை முன்னோடியாக வைத்துக் கொண்டால் பத்திரிகைக்காரர்களின் எழுத்து சுத்தமாகி விடும். லோகத்துக்கு ஒரு பெரிய நல்லது பிறக்கும்.

நாலு லக்ஷம் கிரந்தங்களில் வியாஸர் இந்த 18 புராணங்களை எழுதியிருக்கிறார். ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்கொண்ட ச்லோகம். இந்த நாலு லக்ஷத்தில் கால்வாசியை, அதாவது ஒரு லக்ஷம் கிரந்தத்தை ‘ஸ்காந்த புராண’மே எடுத்துக் கொண்டு விடுகிறது. உலகத்தின் மிகப் பெரிய புஸ்தகம் அதுவாகத்தான் இருக்கும். மீதி 17 புராணங்களுமாக மூன்று லக்ஷம் கிரந்தம். இது தவிர லக்ஷம் கிரந்தம் கொண்ட மஹாபாரதத்தையும் வியாஸர் உபகரித்திருக்கிறார். (‘புராணம்’ என்கிற பதினெட்டில் சேராமல் ‘இதிஹாஸம்’ என்று இருப்பவை பாரதமும், ராமாயணமும்.)

ஒவ்வொரு தேவதா மூர்த்தியைப் பற்றியும் ஒவ்வொரு புராணம் சொல்லும். சைவமானவை, வைஷ்ணவமானவை, சாக்தமானவை என்றிப்படிப் பல தேவதைகளைக் குறித்துப் புராணங்கள் இருக்கின்றன.

பிரம்ம புராணம் (பிராம்மம்) , பத்ம புராணம் (பாத்மம்) , விஷ்ணு புராணம் (வைஷ்ணவம்) , சிவ புராணம் (சைவம்) , பாகவதம், நாரத புராணம் (நாரதீயம்) , மார்க்கண்டேய புராணம், அக்னி புராணம் (ஆக்னேயம்) , பவிஷ்ய புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், லிங்க புராணம், வராஹ புராணம் (வாராஹம்) , ஸ்காந்த மஹா புராணம், வாமன புராணம், கூர்ம புராணம் (கௌர்மம்), மத்ஸ்ய புராணம் (மாத்ஸ்யம்) , கருட புராணம் (காருடம்), பிரம்மாண்ட புராணம் என்பவை பதினெட்டுப் புராணங்கள்.

இந்தப் பதினெட்டில் பத்து சிவபரமானது என்று சொல்கிறார்கள்.

இப்போது நமக்குப் பிரஸித்தமாகத் தெரிகிற அநேக விருத்தாந்தங்கள் இவற்றிலேதான் வருகின்றன. சரித்திரம், கதை, தத்துவம் எல்லாம் இவற்றிலே இருக்கின்றன.

விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் ஆசார்யாள் விஷ்ணு புராணத்திலிருந்து நிறைய மேற்கோள் காட்டுகிறார். வியாஸ மஹரிஷியின் பிதாவான பராசரர் பண்ணின புராணம் அது. ஸ்ரீ ராமாநுஜரின் ஸித்தாந்தத்தில் விஷ்ணு புராணம் ஒரு முக்யமான அதாரிடி [ஆதாரநூல்] .

ஸ்ரீ ராமநுஜருக்கு முந்தி விசிஷ்டாத்வைதத்தின் மூல புருஷர்களில் ஒருவராக இருந்தவர் ஆளவந்தார். அவரிடம் ராமாநுஜர் போய்ச் சேருவதற்குள்ளேயே அவருடைய உயிர் பிரிந்துவிட்டது. ராமாநுஜரிடம் முக்யமாக மூன்று காரியங்களை ஒப்புவிக்க வேண்டுமென்று ஆளவந்தார் நினைத்தார். அதனால் பிராணன் வெளியே போன பிறகும் அவருடைய சரீரத்தில் மூன்று விரல்கள் மடங்கி இருந்தனவாம். ஒவ்வொரு விரலும் இன்ன ஆக்ஞையைத் தெரிவிக்கிறது என்று புரிந்து கொண்டு ராமாநுஜர் சொன்னவுடன், உயிரில்லாத அந்த உடம்பின் மடங்கின விரல்கள் ஒவ்வொன்றாக நிமிர்ந்தனவாம்! அந்த மூன்று ஆக்ஞைகளில் ஒன்று, பிரம்ம ஸூத்ரத்திற்கு விசிஷ்டாத்வைதப்படி பாஷ்யம் எழுதவேண்டும் என்பது. இரண்டாவது, திருவாய்மொழிக்கு வியாக்யானம் எழுதப் பண்ண வேண்டும் என்பது. மூன்றாவதாக வியாஸர், பராசரர் ஆகிய இருவரின் கீர்த்தியும் உலகில் இருக்கும்படியாகப் பண்ணுவது. விஷ்ணு புராண கர்த்தா என்பதால் இப்படிப் பராசரருக்கு ஏற்றம் கொடுக்கப்பட்டது. இதை மனஸில் வைத்துக் கொண்டுதான் ராமாநுஜர் தம்முடைய முக்கியமான சிஷ்யரான கூரத்தாழ்வாரின் இரண்டு பிள்ளைகளுக்கும் பராசர பட்டர், வேத வியாஸ பட்டர் என்று பெயர் வைத்தார். பராசர பட்டர் பிற்காலத்தில் வைஷ்ணவ ஆசாரியர்களில் முக்யமான ஒருவரானார்.

‘விஷ்ணு புராணம்’ பண்ணியவர் பராசரர் என்றாலும், பதினெட்டுப் புராணங்களையும் நாம் பார்க்கிற ரூபத்தில் ஸரிபண்ணி எழுதிக் கொடுத்தது வியாஸர்தான். வேதங்களை அவர்தான் விபாகம் பண்ணினார் [வகுத்துக் கொடுத்தார்] என்ற விஷயத்தை முன்பே சொல்லியிருக்கிறேன். வேதத்திலுள்ள விதிகளை எல்லோருக்கும் நன்றாக மனஸிலே ஆழமாகப் பதியச் செய்வதற்காக அவரே புராணங்களையும் அநுக்ரஹித்தார்.

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. வேதத்தை அத்யயனம் பண்ணும் அதிகாரம் சிலருக்குத்தான் இருக்கிறது. மற்றவர்களுக்கு இல்லை. அதனால் அப்படிப்பட்ட பொது ஜனங்களுக்கு வேத தத்வார்த்தங்கள் தெரிய வேண்டும் என்றே புராணங்களை வியாஸர் எழுதினார் என்பதே அந்தக் காரணம்.

விஷ்ணு புராணத்தை வியாஸரின் தகப்பனார் மூல ரூபத்தில் சொன்னார் என்றால், பாகவதத்தை வியாஸரின் புத்திரரான சுகாசாரியார் பரீக்ஷித்துக்கு உபதேசிக்கிறார்.

பதினெட்டுப் புராணங்களில் “பாகவதம்” என்று சொல்லப்படுவது, கிருஷ்ண பரமாத்மாவின் சரித்திரத்தை முக்யமாக வைத்து மற்ற அவதாரங்களின் கதைகளையும் சொல்கிற விஷ்ணு பாகவதமா, அல்லது அம்பாளின் லீலைகளைச் சொல்கிற தேவீ பாகவதமா என்று இரண்டு விதமான அபிப்பிராயங்கள் உண்டு. நமக்கு இரண்டும் வேண்டும். ‘விஷ்ணு பாகவதம்’, ‘தேவீ பாகவதம்’ இரண்டும் உத்தமமான கிரந்தங்களாக இருக்கின்றன. சைதன்யர், நிம்பார்க்கர், வல்லபாசாரியார் போன்றவர்களின் ஸித்தாந்தங்களில் விஷ்ணு பாகவதம் வேதத்துக்கு ஸமதையான அந்தஸ்துப் பெற்றிருக்கிறது. அதே சமயத்தில் அவர்களை ஆட்சேபிக்கிற அத்வைதிகளும் அதைத் தலைக்கு மேல் கொண்டாடுகிறார்கள்.

சிவபுராணம் வேறே, ஸ்காந்த புராணம் வேறே. ஸ்காந்தத்தில் முக்கால்வாசி சிவனைப் பற்றிய கதைகள், தத்வங்கள் தான். ஆனாலும் ஸ்கந்தனான முருகனைப் பற்றிய விருத்தாந்தம் இதிலே வருவதால் இதற்கு ‘ஸ்காந்தம்’ என்று பெயர் வந்தது. இதிலே ஸுப்ரமண்யரின் விஷயமாக இருப்பதையே முக்யமாக வைத்துக் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார் தமிழிலே ‘கந்த புராணம்’ என்று எழுதியிருக்கிறார்.

மார்க்கண்டேய புராணத்தில் தான் ‘துர்கா ஸப்த சதீ’ என்கிற துர்க்காம்பாளின் விருத்தாந்தம் வருகிறது. [‘தேவீ மாஹாத்மியம்’ என்பதும் அதுவே.] ‘சண்டீ ஹோமம்’ — சத, சண்டி, ஸஹஸ்ர சண்டி — என்று பண்ணுவெதல்லாம் இதில் இருக்கிற எழுநூறு மந்திரங்களைக் கொண்டுதான். இதிலே ஒவ்வொரு ச்லோகமும் ஒரு மந்திரமாக மதிக்கப் படுவதால் அதைச் சொல்லி ஹோமம் செய்யப்படுகிறது.

பவிஷ்யம் என்றால் எதிர்காலம் (future) என்று அர்த்தம். ‘பவிஷ்ய புராண’த்தில் இப்போது நாம் பார்க்கிற கலியின் கிருத்ரிமம் உள்பட அநேக விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

மௌரியர்கள் போன்ற பழைய ராஜாக்களை மட்டுமின்றி, வெள்ளைக்காரர்கள் இங்கே வந்தது உள்படப் புராணத்தில் இருக்கிறதென்றால், இக்காலத்தவர்கள் “இதெல்லாம் வியாஸர் கலியுக ஆரம்பித்தில் எழுதினதே இல்லை. ஸமீபத்தில்தான் யாரோ எழுதி அவர் பேரைப் போட்டு விட்டார்கள்” என்கிறார்கள். இடைச் செருகல் எங்கேயாவது கொஞ்சம் இருக்கச் செய்யலாம்தான். அதற்காக ஒரேயடியாக “எல்லாம் புதுசுதான்” என்று தள்ளிவிட முடியாது. யோகசக்தி வாய்ந்தவர்கள் எந்தக் காலத்தையும் காண முடியும்; இருந்த இடத்திலே இருந்து கொண்டே எந்தத் தேசத்தில் நடப்பதையும் சொல்லி முடியும். இம்மாதிரியான சக்தி பெற்ற மஹாபுருஷர்களின் பெயரில் யார் வேண்டுமானாலும் கிரந்தம் பண்ணிப் பிரசாரப் படுத்துவது என்பது ஸுலபமான காரியமில்லை.

கருட புராணத்தில் பித்ருலோகம், பித்ரு காரியம் முதலியவற்றைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறது. அதனால் சிராத்த கர்மாவில் இந்தப் புராணத்தைப் படிக்கிற வழக்கம் இருக்கிறது.

பிரம்மாண்ட புராணத்தில்தான் “லலிதோபாக்யானம்” [லலிதாம்பிகையின் சரிதம்], லலிதா ஸஹஸ்ரநாமம் முதலானவை வருகின்றன. பதினெட்டு புராணங்களையும் சொல்லி முடிக்கிறபோது ராஜராஜேச்வரி பட்டாபிஷேகம் வரும் இந்த புராணத்தோடுதான் பூர்த்தி பண்ணுவதாக ஸம்பிரதாயம் இருக்கிறது என்பதைப் பற்றி தேவீ உபாஸகர்கள் பெருமைப் பட்டுக் கொள்வார்கள்.

இப்போது ஒவ்வொரு ஸ்வாமிக்கும் நாம் சொல்லும் அஷ்டோத்தரம், ஸஹஸ்ரநாமம், கவசம் முதலானவைகள் பெரும்பாலும் புராணங்களில் வருகிறவைதான். விஷ்ணு ஸஹஸ்ரநாமம், சிவ ஸஹஸ்ரநாமம் இரண்டுமே மஹாபாரதத்தில் வருபவை.

அநேக ஸ்தோத்திரங்களும் இவற்றிலிருந்தே நமக்குக் கிடைக்கின்றன. “ஆதித்ய ஹ்ருதயம்” ஸ்ரீமத் ராமாயணத்தில் வருவது. “ப்ரதோஷ ஸ்தோத்ரம்” ஸ்காந்தத்தில் வருகிறது. இப்படி அநேகம்.

கற்பனையேயானாலும் கருத்துள்ளதே !

புராணங்களில் வெறும் கற்பனையும் எங்காவது இருக்கலாம்தான். பிற்காலத்தவர்கள் இடைச் செருகலாக (Interpolation என்பதாக) சிலதை நுழைத்து விட்டும் இருக்கலாம். ஆனால் எது வெறும் கற்பனை, எது இடைச் செருகல், எது மூல ரூபம் என்று யார் நிர்ணயிப்பது? அவரவரும் தங்களுக்கு இடைச் செருகலாகத் தோன்றுவதை நீக்கி விடுவது என்று ஆரம்பித்ததால் அத்தனை கதைகளும் போய் விடும். மூலக் கதையென்றே ஒன்று நிற்காது. அதனால் சில தப்புக்கள், கோளாறுகள் இருப்பதாகத் தோன்றினாலுங்கூட இன்றைக்கு நம் கைக்கு எந்த ரூபத்தில் புராணங்கள் வந்திருக்கின்றனவோ அதை அப்படியே வைத்து ரக்ஷிக்கத்தான் வேண்டும்.

அதிலே ஏதாவது கட்டுக்கதை இருந்தாலும் இருந்து விட்டு போகட்டும். அது நம் மனஸை பகவானிடம் கொண்டு போய் விட்டு சாந்தப்படுத்துகிறதோ இல்லையோ? கடைக்கு ஒரு பண்டம் வாங்கப் போகிறோம். நல்ல சரக்காகக் கிடைக்கிறது. நம் உத்தேசம் பூர்த்தியாகிவிட்டது என்று ஸந்தோஷப்படுவதா, அல்லது கடையில் இன்ன குறை இருந்தது, கடைக்காரனிடம் இன்ன தோஷம் இருந்தது என்று சொல்லி அதிருப்தி படுவதா? பூகோள – ககோள [வான் இயல்] வர்ணனைகள், மன்வந்த்ரம் முதலான கால வர்ணனைகள் எங்கேயாவது தப்பிப் போனால்தான் போகட்டுமே! இதெல்லாம் தெரிந்து கொள்ளத்தான் ஜாகரஃபியும் அஸ்ட்ரானமியும் ஹிஸ்டரியும் இருக்கிறதே! ஜாகரஃபியிலும் ஹிஸ்டரியிலும் அஸ்ட்ரானமியிலும் கொடுக்க முடியாத பரமாத்ம தத்வத்தை, பக்தியை, தர்மத்தைச் சொல்கிற லக்ஷ்யத்தைப் புராணம் பூர்த்தி பண்ணுகிறதோ இல்லையோ?

‘த்ரேதாயுகம் என்று அத்தனை லக்ஷம் வருஷம் முன்னாடி ராமர் இருந்திருக்க முடியாது. அப்போது ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிற நாகரிக வாழ்வு ஏற்பட்டே இராது’ என்கிறது போலப் பல வாதங்கள் செய்கிறார்கள். இதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. இருந்தாலும் ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன்: ராமர் த்ரேதாயுகத்தில் இல்லாமலே இருந்திருக்கட்டும். இப்படியே அதற்கு முந்தி க்ருதயுகத்தில் நடந்ததாக சொல்லப்படும் கதைகள் அவ்வளவு பூர்வ காலத்தில் நடந்திருக்காமலே இருக்கட்டும். எல்லாம் ஒரு ஏழாயிரம் எட்டாயிரம் வருஷத்துக்குள் நடந்தது என்றே வைத்துக் கொள்ளலாம். அதனால் ஸ்ரீ ராம சரித்திரமோ, மற்ற கதைகளோ மதிப்பிலே குறைந்து விடுமா? அவற்றால் நாம் பெறுகிற படிப்பினை கெட்டுப் போய் விடுமா?

புராணத்தில் சொல்லியுள்ள கதைகளின் காலம் தப்பு என்பது போலவே, இந்த புராணங்கள் ஏற்பட்ட காலத்தைப் பற்றியே சொல்வதெல்லாமும் தப்பு என்கிறார்கள்.

ஐயாயிரம் வருஷத்துக்கு முந்திக் கலியுக ஆரம்பத்தில் வியாஸர் புராணங்களைக் கொடுத்தார் என்பது சாஸ்திரங்களில் சொல்லியுள்ள விஷயம். அவருக்கு முன்பே புராணம் உண்டு. சாந்தோக்ய உபநிஷத்தில் நாரதர் தாம் அத்தியயனம் பண்ணின வித்தைகளின் பேரைச் சொல்லும்போது அவைகளில் ஒன்றாகப் புராணத்தை குறிப்பிடுகிறார். அதனால் வேத- உபநிஷத காலத்திலேயே புராணம் இருந்ததாகத் தெரிகிறது. பிற்கால ஜனங்களின் குறைந்த சக்திக்கு ஏற்ற மாதிரி, ஏற்கெனவே இருந்த வேதங்களை வியாஸர் பல சாகைகளாகப் பிரித்துக் கொடுத்தது போலவே இந்தப் புராணங்களையும் தாமே விரிவாக எழுதிக் கொடுத்திருக்கிறார் போலிருக்கிறது.

ஆனால் இங்கிலீஷ் படிப்பாளிகள் புராணங்கள் அவ்வளவு பழையவை இல்லை என்கிறார்கள். இருந்து விட்டுப் போகட்டுமே! [சென்னை டவுனில் உள்ள] கந்த ஸ்வாமி கோயிலில் ஜே ஜே என்று கூட்டம் சேருகிறது, நல்ல ஸாந்நித்தியம் இருக்கிறது, அங்கே நல்ல பக்தி ஏற்படுகிறது, ஸந்நிதானம் நம் துக்கத்தைப் போக்கி அருள் சுரக்கிறது என்றால் அதுதான் கோவிலின் பிரயோஜனம். இதிலே திருப்திப் படாமல், ‘இந்தக் கோவில் எப்போது கட்டியது? அருணகிரிநாதர் காலத்தில் இது இருந்ததா? அவர் திருப்புகழ் பாடியிருக்கிறாரா?’ என்று கேட்டுக் கொண்டு போவதில் என்ன அர்த்தம்? இம்மாதிரியானதுதான் புராண காலத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளும்! நம் மன அழுக்கை, சித்த மலத்தைப் போக்குவதுதான் புராணங்களின் லக்ஷ்யம் என்பதை நினைவில் வைத்து, பயபக்தியோடு படித்தால் இப்போது எழுகிற அநேக ஆக்ஷேபங்களுக்கு இடமிராது.

ஆராய்ச்சி, கீராய்ச்சி, research என்று சொல்லிவிட்டால் உடனே நாம் நம்பிவிடுவது என்பதுதான் எல்லாவற்றையும் விடப் பெரிய ஸூபர்ஸ்டிஷனாக (மூட நம்பிக்கையாக) இருக்கிறது! இப்போதையை ஆராய்ச்சிகளிலும் நிறையப் பொத்தல்கள், குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. இது ஸரியாக இருந்து, புராணம் கற்பனையாக இருக்கிற இடத்திலுங்கூட, ‘நல்லதைச் செய்தவன் வாழ்ந்தான்; தப்பைச் செய்தவன் கெட்டான்; இப்படிக் கெட்டவர்களையும் அநேக ஸந்தர்ப்பங்களில் பகவான் கை தூக்கிவிட்டிருக்கிறான்’ என்பதைப் புராணம் நம் மனஸில் அழுத்தமாகப் பதிப்பிக்கிறதால் அதன் உத்தேசம் பூர்த்தியாயிற்று என்றுதான் அர்த்தம்.

நவீன மனப்பான்மைக்காரர்கள் மட்டுமின்றி சாஸ்திரஜ்ஞர்கள், சிஷ்டர்கள் கூடப் புராணத்தை இரண்டாம் பக்ஷமாக நினைத்து வருவதாக எதனாலோ ஏற்பட்டுவிட்டது. மற்ற சாஸ்திரங்களில் வாக்யார்த்தம், உபந்நியாஸம் பண்ணுகிறவர்களைவிடப் புராணப் பிரவசனம் செய்யும் பௌராணிகர்கள் தாழ்த்தி என்ற அபிப்ராயமும் இருக்கிறது. ஆனால் மஹாமஹோபாத்யாய பட்டம் பெற்ற மஹா பண்டிதர்களான யக்ஞஸ்வாமி சாஸ்திரிகள், காபே ராமசந்திராச்சார் முதலியவர்கள் புராணப் பிரவசனம் நிறைய பண்ணி வந்திருக்கிறார்கள். இப்போது ஸ்ரீவத்ஸ ஸோமதேவ சர்மா பதினெண் புராணங்களைக் கண்டுபிடித்துத் தமிழில் (சுருக்கியாவது) அச்சுப் போடுவதே காரியமாக இருக்கிறார். *


* ஸ்ரீ ஸோமதேவ சர்மா அமரராவதற்கு முன் கூறியது.

புராணங்கள் பொய்யா, உருவகமா ?

புராணத்தை நம்ப முடியாது என்று சொல்லி அதற்குக் காரணம், ‘அதிலே இப்பொழுது நாம் பார்க்கிற யதார்த்த நிலவரங்களுக்கு வேறான விஷயங்கள் இருக்கின்றன’ என்கிறார்கள். தேவர்கள் வந்தார்கள், போனார்கள், வரம் கொடுத்தார்கள் என்றால் அதெல்லாம் இந்தக் காலத்தில் நடக்காததால், புரளி என்று தோன்றுகிறது. பெண்ணைக் கல்லாகச் சபித்தார்கள், கல்லைப் பெண்ணாகும்படி வரம் கொடுத்தார்கள், சூரியன் உதிக்காமல் நிறுத்தி வைத்தார்கள் என்றெல்லாம் பார்த்தால் — இதெல்லாம் நம் சக்தியில் இல்லாத காரியங்களாக இருப்பதால் ‘வெறும் புரட்டு’ என்று நினைக்கத் தோன்றுகிறது.

இந்தக் காலத்தில் முடியவில்லை, இந்தக் காலத்தில் நடக்கவில்லை என்பதற்காக எந்தக் காலத்திலும் நடக்கவில்லை, நடக்கமுடியாது என்று எப்படிச் சொல்லலாம்? வேத மந்திர சக்தியும், உயர்ந்த தபஸும், யோகாநுஷ்டானமும் பூர்வத்தில் நிறைய இருந்தன என்பதற்கு எந்தப் பழைய புஸ்தகத்தைப் பார்த்தாலும் நிறைய ஆதாரம் இருக்கிறது. இவை இருந்த மட்டும் தேவசக்திகளெல்லாம் இந்த லோகத்தினராலேயே ஸுலபமாக கிரஹிக்கும்படி இருந்திருக்கின்றன. வெளிச்சம் இருந்தால் கூடவே நிழலும் இருக்கும் என்கிற ரீதிப்படி தேவசக்திகளைப் போலவே அஸுர ராக்ஷஸ சக்திகளும் ஸ்தூலமாகத் தெரிகற மாதிரி லோகத்தில் இருந்திருக்கிறார்கள். இப்போதும் தேவாஸுர யுத்தம் முதலானவை மநுஷ்யனின் கண்ணுக்குத் தெரியாமல் (நல்லது கெட்டதுகளின் மோதலாக) நடந்துகொண்டேதான் இருக்கிறது. அந்தக் காலத்தவர்களுக்கு இந்த நல்ல சக்திகளையும் கெட்ட சக்திகளையும் தபோ சக்தியால் கண்கொண்டு பார்க்க முடிந்தது. எல்லா விதமான light waveகளும் sound waveகளும் [ஒளி, ஒலி அலைகளும்] மநுஷ்யக் கண்ணின் லென்ஸுக்கு அகப்பட்டு விடாது என்று விஞ்ஞானிகளே சொல்கிறார்கள். அதில் சில விஞ்ஞானிகள் இன்னும் ஒருபடி மேலே போய் occult என்கிற இயற்கைக்கு அதீதமான மர்ம சக்திகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து, ‘தேவதைகள் இருக்கின்றன; நல்ல தேவதைகள், துர்த்தேவதைகள் எல்லாம் இருக்கின்றன’ என்றுகூட எழுதி வைத்திருக்கிறார்கள்.

இப்போதும் அநேக யோகிகள், ஸித்த புருஷர்கள் இருக்கிறார்கள். ஐஸில் கிடந்தாலும் நெருப்பில் கிடந்தாலும் அது அவர்களுடைய சரீரத்தை பாதிப்பதில்லை. மழையை வரப்பண்ணுகிறார்கள்; பெய்கிற மழையை நிறுத்தவும் செய்கிறார்கள். இப்படிப் பலர் அதீந்திரியமான சக்தியோடு இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நமக்குத்தான் எதிலும் நம்பிக்கையில்லை. எல்லாவற்றிலும் ஸம்சயம்! பூர்வ காலத்தில் இப்படிப்பட்ட விசேஷ சக்திகளை இன்றைவிட ஏராளமானவர்கள் பெற்றிருந்தபடியால்தான் புராணங்களைப் பார்த்தால் ஏகப்பட்ட ‘மிராகிள்’களை சொல்வதாக இருக்கிறது.

மிராகிள் வந்தால் ஹிஸ்டரி இல்லை என்று ஒதுக்கி விடுகிறார்கள். கூன் பாண்டியனுக்குப் பஞ்சாக்ஷர பஸ்மாவின் மகிமையால் ஞானஸம்பந்தர் வெப்பு நோயை நீக்கினார், கூனை நீக்கி ‘நின்றசீர் நெடுமாறன்’ ஆக்கினார் என்றால் அதை ஹிஸ்டரியாகச் சேர்ப்பதற்கில்லை என்கிறார்கள். மஹேந்திரப் பல்லவன் அப்பர் ஸ்வாமிகளை கல்லிலே கட்டி கடில நதியில் போட்டும் அது மிதந்ததைப் பார்த்துத்தான் ஜைனமதத்தை விட்டு வைதிகத்திற்கு மாறினான் என்றால் அதை ஹிஸ்டரியாக எடுத்துக் கொள்ள முடியாது என்கிறார்கள். ஆனாலும் இப்படியொரு பல்லவ ராஜாவும், பாண்டிய ராஜாவும் நாற்பது ஐம்பது வருஷங்களுக்குள் ஜைனமதத்தை விட்டு சைவத்துக்கு வந்திருக்க வேண்டுமென்பது மட்டும் மற்ற circumstantial evidence (ஸந்தர்ப்ப ஸாக்ஷியம்) எல்லாவற்றையும் பார்த்தால் உறுதியாகத் தெரிகிறது. ஆறு ஏழாம் நூற்றாண்டுகளில், தமிழ்நாட்டில் சமண மதம் வெகுவாக நலிவடைந்து வைதிக மதம் (குறிப்பாக சைவம்) பிரகாசமாக ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறது என்று சரித்திர நிபுணர்களே ஒப்புக்கொள்ளும்படித் தெரிகிறது. இப்படி ஒரு பெரிய மாறுதல் நடக்க வேண்டுமானால், இரண்டு பெரிய ராஜாக்கள் தங்கள் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமானால் அதற்குக் காரணமாக அப்பர் ஸ்வாமிகளின் கதையிலும் ஞானஸம்பந்தர் கதையிலும் வருகிற மாதிரியான அற்புதங்கள் நடந்திருக்கக்கூடும்தான் என்பதை எப்படி ஆக்ஷேபிக்கலாம்? இந்த விஷயங்களை அந்த ராஜாக்கள் கல்வெட்டிலோ செப்பேட்டிலோ எழுதி வைக்கவில்லை என்பதால் அவை நடக்கவில்லையென்று சொல்லி விடலாமா?

ராமாநுஜாசாரியார் கன்னட தேசத்தை ஆண்டு கொண்டிருந்த ஜைனனான பிட்டி தேவன் என்ற ஹொய்ஸள வம்ச ராஜாவுடைய பெண்ணுக்குப் பிடித்திருந்த பேயை ஓட்டினதாலேயே அவன் ஜைனத்தை விட்டு வைஷ்ணவனானான் என்று குரு பரம்பரைக் கதையிலிருந்து சொல்கிறார்கள். சரித்திரக்காரர்கள், ‘பேய் ஓட்டுகிற ஸமாசாரத்தையெல்லாம் எடுத்துக் கொள்ள மாட்டோம்’ என்கிறார்கள். ஆனாலும் ராமாநுஜர் ஜீவித்த பதினொன்றாம் நூற்றாண்டில் கன்னட ராஜ்யத்தில் ஜைனம் மங்கி வைஷ்ணவ வழிபாடு, கோவில் முதலியன அதிகமானதையும், பிட்டி தேவனே பிற்பாடு விஷ்ணுவர்த்தன தேவன் என்று பெயர் பெற்றதையும் சரித்திரத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இது குரு பரம்பரைக் கதையில் சொன்னதன் விளைவாகவே இருக்கலாம் என்பதை எப்படி ஆக்ஷேபிக்க முடியும்?

இங்கிலீஷ் படிப்புப் படித்து விட்டதால், ஸயன்ஸில் நிரூபிக்க முடியாததெல்லாம் புரளியென்று சொல்லிப் புராணங்களைத் தள்ளுவது கொஞ்சங்கூட சரியான மனப்பான்மையாகாது.

இப்போதுங்கூட அங்கங்கே பத்துப் பன்னிரண்டு அடி நீளமுள்ள மனித எலும்புக் கூடுகள், புராண வர்ணனைப்படியான — தற்போது இல்லாத — பெரிய பெரிய மிருகங்களின் எலும்புக் கூடுகள் அகப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இதைப் பார்த்தால் பனை மர, தென்னை மர உயரமுள்ள ராக்ஷஸர்கள், சிங்கம் மாதிரியான உடம்பும் யானை மாதிரியான தும்பிக்கையும் கொண்ட யாளி போன்ற மிருகங்கள் பூர்வத்தில் இருந்திருக்கக் கூடுமென்றே ஏற்படுகிறது. காலெலும்பு மாத்திரம் பதினாறு அடி நீளமுள்ள ஒரு மநுஷ்ய எலும்புக்கூடு, யானையைப் போல பத்து மடங்குகள் உள்ள ஒரு மிருகத்தின் எலும்புக்கூடு முதலானதுகளை ஐஸ்பெர்க்கில் ஆர்க்டிக் ரீஜனில் பனிக்கட்டிக்குள்ளிருந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். இதைப் பெரிய archaeological find (புதைபொருள் கண்டுபிடிப்பு) என்று கூத்தாடினார்கள். ஆர்க்கியாலஜியோடு, ஜியாலஜி (பூ-இயல்)யையும் சேர்த்து, இவை இத்தனை லட்சம் வருஷத்திற்கு முன் இருந்தவை என்கிறார்கள். இதோடு ‘மைதாலஜி’ (புராண இயல்) யையும் சேர்த்தால் நம்முடைய பழைய கதைகள் நிஜந்தான் என்றாகிவிடும்.

ஒரு காலத்தில் பனை மர உயர ஆள், இப்போது ஆறடி உயர ஆசாமி, வேறொரு காலத்தில் அங்குஷ்டப் பிரமாண (கட்டை விரல் அளவேயான) ஆள் என்றிப்படி கால வித்யாஸத்தில் பல தினுசாக ஆகிறது. ஜீவராசிகள், படைப்பினங்களும் மாறுகின்றன. இந்த வித்யாஸங்களையும் புராணங்கள் சொல்லுகின்றன.

“வானரர்கள் என்று குரங்கு மநுஷ்யர்களாம்! மிருகத்தின் உடம்பும் மநுஷ்ய முகமுமாம்! இரண்டு தலை, பத்துத் தலைக்காரர்களாம்! எல்லாம் வெறும் பொய்” என்று புராணங்களைப் பார்த்துச் சொல்லுகிறார்கள். அல்லது இப்படித் திட்டாதவர்களும், “இதெல்லாம் ஒவ்வொரு symbol (தத்வ ரூபகம்). தத்துவங்களைத்தான் பாத்திரங்களைக் கொண்டு விளக்கியிருக்கிறது; allegorical representation” என்கிறார்கள்.

கதாத்வாரா [கதை மூலமாக] தத்வமும் போதிக்கப் படுவது வாஸ்தவம்தான். அதற்காகக் கதையைப் பொய்யென்று சொல்ல முடியாது. இப்போது கூட எப்போதேனும் நியூஸ் பேப்பரில் பார்க்கிறோம் — இரண்டு தலையும் நாலு கையுமாக ஒரு குழந்தைப் பிறந்தது; மிருகத்திலும் சேராமல் மநுஷ்ய இனத்திலும் சேராமல் நடுவாந்தரமாக ஒரு விசித்திரக் குழந்தை பிறந்தது – என்றிப்படி! Freak என்று இதைச் சொல்கிறார்கள். தப்பவே முடியாத இயற்கையும் கொஞ்சம் தப்பிப் போவதைத்தான் freak என்கிறார்கள். இப்பொழுது freak ஆகச் சொல்லப்படுவதே பூர்வகாலங்களில் ஒரு உத்தேசத்தோடு இப்போதை விட அதிகமாகவும் ஸ்ருஷ்டிக்கப் பட்டிருக்கலாம். இக் காலத்தில் நமக்கிருப்பதைவிட அதிகமாக அவர்களுக்கு இயற்கைக்கு அதீதமான சக்திகள் இருந்ததால் இயற்கையிலும் இப்படிப்பட்ட அதிசயப் பிறப்புக்கள் அதிகம் நேர்ந்திருக்கலாம். அதனால் ‘இப்போதுள்ள நமக்குத் தெரிவதுதான் ஸகலமும், இதற்கு வித்தியாசமாக எதுவும் இருந்திருக்க முடியாது’ என்று நாம் ஆக்ஷேபிப்பதற்கே இல்லை.

நமக்குத் தெரியாதது, தெரிய முடியாதது எல்லாவற்றுக்கும் பொய்யென்று பெயர் வைத்து விடுவது நியாயமில்லை. புராணத்திலே நம்பமுடியாதது என்று நாம் தள்ளிவிடுகிற ஒன்றே அவ்வப்போது நம் காலத்தில் நடந்துவிடுகிறது. பூர்வ ஜன்மத்தைச் சொல்வது முதலான அதிசயங்கள் இப்போதும் நியூஸ் பேப்பர்களில் வந்து கொண்டேதான் இருக்கின்றன. அதுவும் ஸமீப காலமாக இம்மாதிரி அதிசயச் செய்திகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. ஒன்று சொல்கிறேன்:

புராணத்தில், ‘காச்யபருக்கு கத்ரு என்று ஒரு பத்தினி இருந்தாள். அவளுக்குப் பாம்புகள் குழந்தையாகப் பிறந்தன’ என்று பார்த்தால் உடனே இதெல்லாம் ஒரே அஸம்பாவிதம் என்று தள்ளிவிடுகிறோம். ஆனால் போன வருஷம் (1958) பேப்பரிலேயே [செய்தித்தாள்] வந்ததை ரொம்பப் பேர் பார்த்திருப்பீர்கள். ஒரு மார்வாடிப் பெண்ணுக்கு பாம்பு பிறந்தது என்று அந்த ‘ந்யூஸ்’ இருந்தது. அதைப் பார்த்த போது தான் எனக்கே இந்த மாதிரி இன்னொரு விஷயம் உறுதிப்பட்டது .

நான் ஸ்வாமிகளாக ஆகிறதற்கு முந்தி ஒரு குடும்பத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வீட்டில் பிறந்த பெண்களும் ஸரி, அந்த வீட்டுப் பிள்ளைகளுக்கு வாழ்க்கைப்படுகிற பெண்களும் ஸரி, தாழம்பூ வைத்துக் கொள்ள மாட்டார்கள். பின்னாளில் நான் ஸ்வாமிகளான அப்புறம் அவர்களிடம் ஏனென்று கேட்டபோது அவர்கள் ஒரு கதை சொன்னார்கள். கதையென்றால் இட்டுக் கட்டினது இல்லை.

“பத்துப் பதினைந்து தலைமுறைகளுக்கு முன்னாடி எங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு பாம்பு குழந்தையாகப் பிறந்து விட்டது. இதை வெளியில் சொல்லிக் கொள்ள வெட்கம். ஆனாலும் வீட்டோடு வளர்த்து வந்தார்கள். பாம்புக்குப் பால் போட்டி (புகட்டி) குழந்தை மாதிரியே வளர்த்தார்கள். அதுவும் யாருக்கும் ஹிம்ஸை பண்ணாமல் தன்பாட்டுக்கு வீட்டோடு விளையாடிக் கொண்டிருந்ததாம். இந்த விசித்திரக் குழந்தையை எங்கேயும் எடுத்துக் கொண்டு போக முடியவில்லை, விட்டு விட்டும் போக முடியவில்லையென்பதால் அம்மாக்காரி ரொம்ப அவசியமானால் ஒழிய எங்கேயும் வெளியே போகவே மாட்டாள். ‘கல்லானாலும் கணவன்’ என்கிற மாதிரி ‘பாம்பானாலும் குழந்தை’ தானே? அந்த வாத்ஸல்யம்! எங்கேயும் போக மாட்டாளாம். ஆனால் ரொம்பவும் நெருங்கின பந்துக்களின் கல்யாணமொன்று வந்தபோது அவளால் போகாமல் இருக்க முடியவில்லை.

“அப்போது வீட்டில் ஒரு வயசான கிழவி இருந்தாள். (அவள் பாம்புக் குழந்தையின் பாட்டியா என்பது தெரியவில்லை. அந்தக் காலத்தில் தூர பந்துக்களில்கூட நாதியற்றவர்களை வைத்துப் பராமரிக்கிற நல்ல பழக்கம் இருந்து வந்தது. இப்போதுதான் தாயார் தகப்பனாரோடேயே சேர்ந்தில்லாமல் தனிக்குடித்தனம் போகவேண்டுமென்று நவீன நாகரிகத்தில் பறக்கிறார்கள். முன்னெல்லாம் அவிபக்த குடும்பம்தான் (joint family). அதிலே யாராவது ஒரு அத்தை பாட்டி, ஒன்று விட்ட சின்ன தாத்தா என்று வைத்துக் கொண்டு ரக்ஷிப்பார்கள். இந்த கதை நடந்த அகத்தில் ஒரு கிழவி இருந்தாள்.) அவளுக்குக் கண் தெரியாது.

“அந்தக் கிழவியின் பாதுகாப்பில் பாம்புக் குழந்தையை விட்டுவிட்டு அதன் தாயார் தவிர்க்க முடியாத நிலைமையில் வெளியூருக்குப் போனாள்.

“பாம்புக்கு விசேஷமாக என்ன செய்ய வேண்டும்? குளிப்பாட்ட வேண்டுமா? தலை வார வேண்டுமா? சட்டை போட வேண்டுமா? இல்லாவிட்டால், தூக்கி வைத்துக் கொள்ள வேண்டுமா? இதெல்லாம் இல்லை. வேளைக்கு அதற்குப் பால் விட்டால் மட்டும் போதும். அதனால் அம்மாக்காரி அந்தக் கிழவியிடம், “காய்ச்சின பாலை, கை நிதானத்திலேயே கல்லுரலைத் தடவிப் பார்த்து அதன் குழியிலே விட்டு வைத்து விடுங்கள். நேரத்தில் குழந்தை (பாம்பு) வந்து அதைக் குடித்து விடும்” என்று சொல்லிவிட்டு ஊருக்குப் போனாள். அந்தப் பாம்பை இப்படிப் பழக்கியிருந்திருப்பாள் போலிருக்கிறது.

“கிழவி அப்படியே செய்தாள். பாம்பும் தாயார் சொன்னபடியே வந்து குடித்துவிட்டுப் போயிற்று. அப்புறம் ஒரு வேளை நாழி தப்பிப் போயிற்று. கிழவி அசந்து போய் விட்டாளோ என்னவோ? கல்லுரலில் பார்த்த பாம்புக்குப் பாலில்லை. அது ரொம்ப ஸாது. கொஞ்ச நேரம் காத்துப் பார்த்தது. அப்புறம் அதுவும் அசந்துபோய் அந்தக் கல்லுரல் குழியிலேயே சுருட்டிக் கொண்டு படுத்துக்கொண்டு விட்டது.

கிழவி அதற்கப்புறந்தான், கொதிக்க கொதிக்கப் பாலைக் காய்ச்சி எடுத்துக் கொண்டு கல்லுரலுக்கு வந்தாள். அதிலே பாம்புக்குட்டி படுத்துக் கொண்டிருப்பது அவளுக்குத் தெரியவில்லை; வழக்கம்போலவே கொதிக்க கொதிக்க இருந்த பாலை அப்படியே ஒரு நிதானத்தில் குழிக்குள்ளே விட்டு விட்டாள்.

“பாம்பின் மேலேயேதான் விட்டுவிட்டாள். பாவம்! அந்தக் குட்டி பாம்பு அப்படியே… செத்துப்போய் விட்டது.” *

அங்கே ஊருக்குப் போயிருந்த அம்மாக்காரிக்கு ஸொப்பனமாச்சு. ஸொப்பனத்திலே அந்தப் பாம்புக்குட்டி வந்து, ‘நான் செத்துப் போய் விட்டேன். நீ போய் என்னை எடுத்து தாழங் காட்டிலே தஹனம் பண்ணிவிடு. இனிமேல் உங்கள் அகத்தில் பிறக்கிற பெண்களும், வாழ்க்கைப் படுகிற பெண்களும் தாழம்பூ வைத்துக் கொள்ள வேண்டாம்” என்று சொல்லிற்று. (தாழம் புதர்தான் பாம்புக்கு ரொம்ப ப்ரீதி.)

“அதிலிருந்து எங்கள் குடும்பத்தில் யாரும் தாழம்பூ வைத்துக் கொள்வதில்லை” என்று அந்த அகத்துப் பெண்கள் சொன்னார்கள்.

இந்தக் கதையைப் பற்றி எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது, இப்படிக்கூட நடந்திருக்குமா என்று.

நான் ஸ்வாமிகளாகிவிட்ட பிற்பாடு, அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் என்னைப் பார்க்க வந்ததற்கு முக்யமாக ஒரு காரணம் இருந்தது. அது பாம்பு பூர்விகத்தைச் சொல்வது இல்லை. அவர்கள் குடும்பத்தில் ஒரு பழைய செப்பேடு இருந்தது. எனக்கு இதில் ‘இன்டரஸ்ட்’ உண்டு என்பதால் அதைக் கொண்டு வந்து காண்பித்தார்கள்.

அது கிருஷ்ண தேவராயருக்குப் பிறகு ஆட்சி பண்ணிய அச்சுத தேவராயர் காலத்து தாம்ர சாஸனம் (செப்பேடு) . அதில் எழுதியிருந்ததிலிருந்து, பிராமணன் ஒருத்தன் வேறே 108 பிராமணர்களுக்கு தானம் கொடுத்த விவரம் தெரிந்தது. ராஜாவுக்காகவே இந்த ஒரு பிராமணன் இப்படி 108 பேருக்கு தானம் பண்ணியிருக்கிறான்.

அது ஏன், எதற்காக என்று சொல்கிறேன். பிராமணன் ஸதாஸர்வகாலமும் வேத அத்தியயனமும், கர்மாநுஷ்டானமும் பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டுமென்பதால் அவன் உத்தியோகத்தில் போய் ஸம்பாதிக்கக் கூடாது. ஆனால் அவன் குடும்பம் நடக்கவேண்டுமே! அவன் பெரிய பெரிய யக்ஞங்களும் பண்ண வேண்டுமே! இவற்றுக்காக அவன் தானம் வாங்கலாம் என்று சாஸ்திரம் அநுமதித்தது. ராஜாக்களும் மற்றப் பிரபுக்களும் இப்படியே அவர்களுக்குக் கொடுத்து ஆதரித்து வந்திருக்கிறார்கள். ஆனால் தானம் வாங்குகிற ‘ரைட்’ இருக்கிறது என்பதற்காக, இந்தக் காலத்தில் சிலர் தப்பாக நினைப்பது போல, பிராமணர்கள் மற்றவர்களைச் சுரண்டவில்லை. ரொம்பவும் மானஸ்தர்களாக இருந்து கொண்டு அவசியமானால்தான், அதுவும் தங்களுக்கு வேண்டிய அளவுக்கே, தானத்தை அங்கீகரித்தார்கள். ஒரு ராஜாவின் பரம்பரை உத்தமமானதாக இருந்தால்தான், அவன் நல்ல க்ஷத்ரியனாக இருந்தால்தான் அவனுடைய மான்யத்தை ஏற்றுக்கொள்வார்கள். இவர்கள் பிடுங்கித் தின்பதால் ராஜாக்கள் கஷ்டப்படாமல், ‘நாம் கொடுப்பதை வாங்கிக்கொள்ள மாட்டேன் என்கிறார்களே! ஸத்பாத்திரத்துக்கு தானம் செய்கிற புண்ணியம் நமக்குக் கிடைக்காமல் போகிறதே! என்றுதான் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். இம்மாதிரி ஸந்தர்ப்பங்களில் ராஜாக்களும் பிரபுக்களும் ஒரு யுக்தி பண்ணியிருக்கிறார்கள். அதாவது, தீன தசையில் உள்ள ஒரு பிராமணனை ‘மசிய’ வைத்து அவனுக்கு ஏகப் பட்டதாக தானம் செய்துவிடுவார்கள். ஆனால் அது முழுவதும் அவன் ஒருத்தனை உத்தேசித்தேயில்லை. அவன் வழியாக மற்ற பிராம்மணர்களுக்கும் தானம் பண்ணி விடவேண்டுமென்பதே உத்தேசம். அதாவது இந்த ஒரு பிராம்மணன் ‘பேருக்கு’ அவ்வளவு தானத்தையும் வாங்கிக் கொள்வதுபோல வாங்கிக் கொண்டு, அதில் கொஞ்சத்தை மட்டும் தனக்கே தனக்கென்று வைத்துக்கொண்டு, பாக்கியையெல்லாம் மற்ற பிராமணர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். அந்த மற்ற பிராமணர்கள் இன்னொரு பிராமணன் கொடுப்பதையே வாங்கிக் கொள்வதால் அவர்களுக்கு ‘ப்ரதிக்ரஹ தோஷம்’ (‘ஏற்பது இகழ்ச்சி’ என்ற குறை) ஏற்படாது. எனவே மற்ற பிராம்மணர்கள் இவன் செய்கிற தானத்தை ஏற்பார்கள். பிரபுவின் உத்தேசம் இப்படியாக நிறைவேறிவிடும்.

இப்படித் தந்திரம் பண்ணினது நடுவிலே வருகிற அந்த ஒரு பிராம்மணனுக்கு தோஷமாகாதா? பிரபு நல்ல எண்ணத்தில் எப்படியாவாது வேதவித்துக்களை ஆதரிக்க வேண்டுமென்று இப்படி யுக்தி செய்வதில் தப்பில்லைதான். ஆனால் இப்படி ஒரு தந்திரத்துக்கு உடன்பட்ட பிராமணனுக்கு பாபமில்லையா என்றால், இல்லை. எப்படியென்றால், பிரபு கொடுத்த தானம் சட்டப்படி இவனுடைய சொத்தாகத் தான் ஆகிறது. இவன் பேரிலேதான் அவன் தத்தம் செய்திருக்கிறான். அதனால் அப்புறம் இவன் அதற்கு உரிமை கொண்டாடாமல் அதிலே முக்கால்வாசிக்கு மேல் மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டுத் தான் ஸ்வல்ப பாகமே வைத்துக் கொள்வதால் இவனுக்கும் தோஷம் போய்விடுகிறது.

ராஜப் பிரதிக்ரஹமே தோஷமானது — அரசனிடமிருந்து வாங்குவதே தப்பு- என்றுதான் தியாகையர் மாதிரியானவர்கள், சரபோஜி போன்றவர்கள் “கொடுத்தே தீருவேன்” என்று வலுக்கட்டாயப் படுத்தினால்கூட அதை உதறித்தள்ளிவிட்டு, “நிதி சால ஸுகமா?” (பணமா சௌக்கியம் தருவது?) என்று சீறியிருக்கிறார்கள்.

நாட்டுக்கோட்டை செட்டிப்பிள்ளைகள் (நகரத்தார்) அநேக சத்திரங்களைக் கட்டினபோது, பிராம்மணர்கள் அவற்றில் போய் சாப்பாட்டுக்கு உட்காருவதற்குத் தயங்கிய போது, இதே போலத்தான் ஒரு பிராம்மணனைத் தேடிப் பிடித்து அவன் பேரில் சத்திரத்தின் கட்டளைகளை எழுதி, அவன் மற்றவர்களுக்குப் போடுகிற மாதிரிப் பண்ணியிருக்கிறார்கள்.

நான் மேலே சொன்ன செப்பேட்டில் இப்படித்தான் ஒரு பிராம்மணன், ராயரிடமிருந்து வடார்க்காட்டிலுள்ள மாம்பாக்கம் என்ற கிராமத்தை பூதானம் வாங்கிக் கொண்டு அதை 108 பிராம்மணர்களுக்கு விநியோகம் செய்திருக்கிறான். அந்த 108 பிராமணர்களுடைய பேரையும் சொல்லி, அவர்கள் இன்ன வேத சாஸ்திரம் படித்தவர்கள், அவர்களுக்கு இத்தனை நிலம் கொடுக்கப்படுகிறது என்ற விவரங்கள் அந்த ஸாஸனத்தில் எழுதியிருந்தது.

அப்படி நூற்றெட்டுப் பேரை உத்தேசித்து கிராம தானம் வாங்கிக் கொண்ட பிராமணர் பாம்புக் குழந்தைக் குடும்பத்தில் வந்தவர்தான். அவரிடமிருந்து தானம் பெற்ற மற்றவர்களின் வம்சம் எதுவும் இப்பொழுது தெரியவில்லை. இவர்கள் குடும்பத்தில் மட்டும் இந்தச் செப்பேடு தலைமுறை தலைமுறையாக வந்திருக்கிறது.

இதிலே குறிப்பிட்டு சொல்லவேண்டியது, செப்பேட்டில் சொல்லியிருக்கிற மூதாதையின் பெயர் ‘நாகேச்வரன்’ என்று இருப்பதுதான். இப்போது இந்தத் தலைமுறையில் இதை என்னிடம் கொண்டு வந்த குடும்பத் தலைவர் பெயரும் நாகேச்வரன். விசாரித்துப் பார்த்ததில் அவர்கள் குடும்பத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் நாகேச்வரன் என்ற பெயரை வைத்துக் கொண்டு வருகிறார்களென்று தெரிந்தது.

உடனே ஊகிக்க முடிந்தது — பாம்புக் குழந்தையின் ஸம்பந்தத்தால்தான் இந்த ‘நாகப்’ பெயர் ஏற்பட்டிருக்கிறதென்று. அதோடுகூட அச்சுத தேவராயர் காலத்திலேயே அவர்கள் சொன்ன கதைக்கு ஆதாரம் இருக்கும்படியாக இந்தப் பெயர் இருந்திருப்பதும் தெரிந்தது.

‘இப்படியும் இருக்குமா?’ என்று நான் முன்பு நினைத்ததற்கு இது பதில் சொல்கிறாற்போல் இருந்தது. அப்புறம் போன வருஷம் ஒரு பெண்ணுக்குப் பாம்பு பிறந்த ந்யூஸைப் பார்த்தபின் இதைப் பற்றி ஸந்தேஹப்பட வேண்டாம் என்று மேலும் உறுதியாயிற்று.

உங்களுக்கு புராண நம்பிக்கைப் போதவில்லை என்று நான் கண்டிப்பது தப்புத்தான். எனக்கே ந்யூஸ் பேப்பரில் வருவது நிஜம் என்று தோன்றின மாதிரி, ஐதிஹ்யமாக ஒரு குடும்பத்தில் சொன்னதில் நம்பிக்கை போதாமல் ந்யூஸைக் கொண்டுதானே ஐதிஹ்யத்தை confirm செய்து கொள்ள வேண்டியிருந்தது?

இதுதான் இப்போது நாம் இருக்கிற ஸ்திதி: பேப்பரில் வந்து விட்டால் எத்தனை நம்பத் தகாததானாலும் பொய் என்று தோன்றவில்லை. ஆனால் புராணம் என்றாலே கட்டுக் கதை என்று அலக்ஷ்யம். “அவர்களுக்கு வேலையில்லை. ஏடு இருந்தது, எழுத்தாணி இருந்தது, கதை கதையாகக் கட்டி வைத்து விட்டார்கள். இதில் சிலதில் கெட்டிக்காரத்தனமாவது இருக்கிறது. பாக்கியெல்லாம் அபத்தம்” என்று நினைக்கிறோம்.


* ஸ்ரீ பெரியவர்கள் அற்புத நாடகச் சுவையோடு இக்கதையைச் சொல்லி வருகையில் இவ்விடத்தில் பலர் ‘த்ஸொ’, ‘த்ஸொ’, என்று விசன ஒலிகளை எழுப்ப, பெரியவர்கள், ‘இதுதான் காவ்ய ரஸம் என்பது! எங்கேயோ எப்போதோ, யாருக்கோ நடந்தது — அல்லது நடந்ததாக இட்டுக்கட்டிச் சொல்வது — நம் மனஸை உருக்கிவிடுகிறது. துக்கமாயிருந்தாலுங்கூட, தினமும் நாம் நிஜத்தில் படுகிற துக்கங்கள் மாதிரி இல்லாமல், இதிலே அலாதியாக ஒரு ரஸ மும் இருக்கிறது’ என்றார்கள்.

புராணமும், சரித்திரமும்

நம் தேசத்தில் History (சரித்திரம்) இல்லை என்று ஒரு குறை சொல்லப்படுகிறது. புராணம் சரித்திரந்தான். ஆனாலும் இக்காலப் படிப்பாளிகள் கிறிஸ்துவுக்குப் பிற்பாடு ஒரு இரண்டாயிரம் வருஷத்துக்குள் நடந்தது தவிர மற்ற எதையும் – புராணங்களில் சொல்லியிருப்பவைகளை ஹிஸ்டரியாக மதிப்பதில்லை. புராணங்களில் ஏதோ கொஞ்சம் உண்மை இருக்கலாம் என்று தங்கள் ஆராய்ச்சியில் தெரிவதாகச் சொல்லிக் கொண்டு, தங்களுக்குப் பிடித்த ஆரிய திராவிட பிரிவினைக் கொள்கை மாதிரியான பொய் விஷயங்களுக்கு மட்டும் புராணங்களில் ஆதாரம் இருப்பதாகக் காட்டிவிட்டு, பாக்கி அதில் வருகிற அற்புதமான விஷயங்கள் (miracles), அதீந்திரியமான விஷயங்கள் (supernatural) எல்லாம் கட்டுக் கதை, புளுகு மூட்டை என்று தள்ளி விடுகிறார்கள். புலன்களுக்கு அகப்படுகிற விஷயங்களுக்கு அப்பாற்பட்டதாக எதுவும் யதார்த்தத்தில் நடந்திருக்க முடியாது என்கிற தீர்மானத்தில் இவர்கள் இருப்பதால், ‘மிஸ்டரி’ [மர்மமான அதிசயங்கள்] நிறைய வருகிற புராணங்களை ‘ஹிஸ்டரி’ இல்லை என்று ஒதுக்கி விடுகிறார்கள்.

இப்போது தாங்கள் எழுதி வைத்திருக்கிற சரித்திரத்தை எல்லோரும் படிக்க வேண்டும் என்று ஸ்கூலிலேயே பாடமாக வைத்துவிட்டுப் புராணத்தைக் கழித்துக் கட்டுவது குழந்தைகளுக்கு நல்லது செய்வதாகாது. புராணங்கள் குழந்தைகளுடைய உள்ளத்தை நல்ல நெறிகளில் சேர்ப்பது போலச் சரித்திரத்தில் எதுவும் இல்லை.

சரித்திரம் படிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. படிக்கத்தான் வேண்டும். புராணங்களும் சரித்திரம்தான். அதனால் அவற்றையும் படிக்க வேண்டும் என்கிறேன்.

ஏன் சரித்திரம் படிக்க வேண்டும் என்பதற்குச் சொல்கிற அநேக காரணங்களில் ஒன்று – “History repeats itself” என்பது. சரித்திரம் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி நடக்கிறது என்கிறார்கள். அதனால் பூர்வத்தில் எப்படி நடந்தது என்று தெரிந்து கொண்டால் அதிலிருந்து இனி எப்படி நடக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். பூர்வத்தில் நடந்ததிலிருந்து எதிர்காலத்துக்குப் படிப்பினைப் பெறலாம். இப்படியிப்படிச் சூழ்நிலை உருவாகிக் கொண்டு போனால் யுத்தம் ஏற்படும், ஜனங்களின் வாழ்வு கெட்டுப் போகும், ஒரு பெரிய நாகரிகமே விழுந்து விடும் என்பது சரித்திரத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. இதனால் அதே மாதிரியான சூழ்நிலைகள் இப்போது உருவானால் அவற்றை முதலிலேயே உஷாராக இருந்து தடுத்துவிட வசதியாக இருக்கும். இது சரித்திரத்தின் ஒரு பிரயோஜனம் என்கிறார்கள்.

கல்பத்துக்குக் கல்பம் ஒரே மாதிரியாக ஸம்பவங்கள் நடக்கின்றன; ஒவ்வொரு கல்பத்திலும் ராமாயணம், பாரதம், பாகவதம், தசாவதாரம் மற்றும் எல்லாப் புராணங்களும் நடக்கின்றன என்று நம் சாஸ்திரங்களில் சொல்லியிருப்பதைத்தான் History repeats itself என்று கொஞ்சம் மாறுதலான அபிப்பிராயத்தோடு சொல்லுகிறார்கள்.

ஆனாலும் நடைமுறையில் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிற ஹிஸ்டரியைப் பார்த்து யாராவது எந்தப் படிப்பினையாவது பெறுகிறார்களா என்று பார்த்தால் அதுதான் இல்லை! செங்கிஸ்கான், தைமூர், கஜினி, மாலிக்காஃபூர் போலப் பலபேர் அவ்வப்போது தோன்றி தேசங்களைச் சூறையாடி ஹதாஹதம் செய்திருக்கிறார்கள் என்று சரித்திரத்திலிருந்து தெரிகிறது. தெரிந்து கொண்டதால் மட்டும் இப்படிப்பட்ட வெறிப் போக்குகளை நிறுத்த முடிந்திருக்கிறதா என்ன? இவர்கள் மாதிரியே ஒரு ஹிட்லரும் முஸோலினியும் வந்து மறுபடி ஹதாஹதம் செய்கிறார்கள். இன்னும் கிட்டத்தில் பிரத்தியக்ஷமாகவே பார்க்கிறோம் – ஒரு லஞ்சம், ‘கரப்ஷன்’, வேண்டியவர்களுக்குப் பட்சபாதம் காட்டுவது, வேலை கொடுப்பது என்றெல்லாம் ஒரு ராஜாங்கத்தார் பண்ணினால் அதற்கு ஜனங்களின் ஆதரவு போய்விடுகிறது என்று எலெக்ஷனில் தெரிகிறது. அப்புறம் வேறே சிலர் ராஜாங்கத்தை அமைக்கிறார்கள். ஆனால் படிப்பினை ஒன்றும் பெற்றதாகத் தெரியக் காணோம்! அதே தோஷங்களை இவர்களும் செய்ததாக ஏற்பட்டு, அடுத்த எலெக்ஷனில் அதே கதி இவர்களுக்கும் உண்டாகிறது. ஒரு குறுகிய காலத்துக்குள்ளேயே இப்படி ஏற்படுகிறது. ஆகையால் History repeats itself என்று தெரிந்து கொண்டு விடுவதால் மட்டும் அதிலிருந்து நல்ல பாடம் எதையும் படிக்க முடியவில்லை என்று தெரிகிறது. ‘ரிபீட்’ ஆகாமல் ஹிஸ்டரியை நிறுத்தும்படிச் செய்வதற்கு அதில் எதுவும் இல்லை.

தர்மத்தை நாம் ஏற்கும்படியாகச் சரித்திரத்தோடு குழைத்துக் கொடுத்தால்தான் அது நம்மை நல்வழிப்படுத்தித் தப்பான ஸமாசாரங்கள் ‘ரிபீட்’ ஆகாமல் செய்ய உபாயமாகும். புராணம் இதைத்தான் செய்கிறது.

சரித்திரத்தில் வெறுமே காலவாரியாக ராஜாக்களின் வரலாற்றைத்தான் தந்திருக்கிறது. இதிலே கொடுங்கோலர்கள் கெடுதல் அடைந்தார்களா, உத்தமமான ராஜாக்கள் உயர்ந்த கதியைப் பெற்றார்களா என்பதற்கு முக்யமில்லை. கர்ம நியதிப்படி ஈச்வரன் இவர்களுக்கு இப்படிப்பட்ட பாப புண்ய பலன்களைக் கொடுத்துத்தான் இருப்பார். ஆனால் அது இந்த ஜன்மாவிலேயே கொடுக்கப்படவேண்டும் என்பதில்லை அல்லவா? பின் ஜன்மாக்களில் இந்தப் பலன்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இதை விசாரிப்பது ஹிஸ்டரியின் காரியமில்லை. விசாரித்து அறிகிற சக்தியும் சரித்திரக்காரர்களுக்குக் கிடையாது. ஒரு கஜினியோ, ஹிட்லரோ இந்த பூமியில் வாழ்ந்தவரை கொடி கட்டித்தான் பறந்தார்கள் என்றாலும் உயிர்போனபின் அவர்களுக்கு நரக வாஸம் கிடைத்தது; அல்லது ரொம்பவும் நீசமான மறு ஜன்மா ஏற்பட்டது என்றால் இதையும் புராணம் விசாரித்துச் சொல்லும். புராண கர்த்தாக்களுக்கு அந்த சக்தி உண்டு; இதைச் சொல்கிற லக்ஷ்யமும் உண்டு. ஹிஸ்டரி நிபுணர்களுக்கு இந்த இரண்டும் இல்லை. அதனால்தான் ஹிஸ்டரியில் பார்க்கிறவர்களில் அநேகரின் ஜீவிதத்திலிருந்து பாப புண்யங்களைப் பற்றி நாம் படிப்பினை பெற முடிவதில்லை.

புராணமும் சரித்திரந்தான் என்றாலும் அது பாப-புண்யங்களில் ஜனங்களுக்கு பாடம் கற்பித்து அவர்களை தர்மத்தில் செலுத்தும்படியான வரலாறுகளை மட்டும் ‘ஸெலக்ட்’ பண்ணிக் கொடுக்கிறது. தர்மசாலிகளாக இருந்ததால் அந்த ஜன்மாவிலேயே உயர்வை அடைந்தவர்கள் யாரோ, தர்மத்தை விட்டதால் அந்தப் பிறவியிலேயே கெடுதலை அடைந்தவர்கள் யாரோ, அப்படிப்பட்டவர்களின் கதைகளையே புராணங்கள் பெரும்பாலும் ‘ஸெலக்ட்’ பண்ணி நமக்குக் கொடுக்கின்றன. இல்லாவிட்டால் அடுத்த ஜன்மாக்களைச் சொல்லி அதில் பாத்திரங்கள் பாப-புண்ய பலன்களை அடைந்ததைச் சொல்லும். பாப-புண்ய பலன்களில் நம்மைச் சேர்க்காத புராணக் கதை எதுவுமே கிடையாது. ஆகையால், “பழைய சரித்திரங்களைப் படிப்பதனால் அந்தப் பழைய அநுபவங்கள் இனிமேல் நடக்க வேண்டியதற்கு வழிகாட்டியாக இருக்கும். நல்லவர்களாக இருந்து நல்ல காரியங்களைச் செய்து நன்மையை அடைந்தவர்களுடைய சரித்திரங்களை நாம் படித்தால் நாமும் அப்படியிருக்க ஒரு தூண்டுகோலாக இருக்கும். கெட்டவர்களாக இருந்து உலக க்ஷேமத்துக்குக் கேடு பண்ணிக்கொண்டு முடிவில் தாங்களே அதைவிடக் கஷ்டம் அடைந்தவர்களுடைய கதைகளைப் படிப்பதால் நாம் அந்த வழியில் போகாமல் லகானை இழுத்த மாதிரி இருக்கும்” என்பதாகச் சரித்திரப் படிப்புக்குப் பிரயோஜனம் சொல்வதானால், இந்தப் பிரயோஜனத்தை வாஸ்தவத்தில் தற்கால ஹிஸ்டரியால் அடைய முடியவில்லை. புராணத்தில்தான் அடைய முடிகிறது.

‘நல்லது கெட்டவைகளைப் பற்றி நமக்கு ஒருவிதமான பாடமும் கற்பிக்காமல் வெறுமே காலவாரியாக பல ராஜாக்கள் ஆண்டதையும் சண்டை போட்டதையும் வளர்த்திச் சொல்லவேண்டியதில்லை. நாம் வாழ்க்கையில் எடுத்துத் கொள்ளும்படியான உபதேசம் இல்லாத சரித்திரம் நமக்கு வேண்டாம். ஆத்மலாபமான சரித்திரங்களையே சொல்வோம்’ என்ற அபிப்பிராயத்தோடு புராணங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

சந்திர வம்சம், சூரிய வம்சம் என்பது போலப் புராணங்களிலும் ராஜாக்களின் பரம்பரை முழுக்கச் சொல்லியிருக்கும். இவனுக்குப் பின் இவன் என்று பெரிய லிஸ்ட் கொடுத்திருக்கும். ஆனால் அவர்களில் நாம் நல்வழிப்படப் பிரயோஜனப்படாதவர்களின் கதையை ஒரு வரி, இரண்டு வரியில் சொல்லி முடித்திருக்கும்; அல்லது பேரை மட்டும் சொல்லி விட்டிருக்கும். நாம் படிப்பினை பெறும்படியானவர்களின் சரித்திரங்களையே விஸ்தாரமாகச் சொல்லியிருக்கும். உதாரணமாக த்ருவனின் [துருவனின்] அப்பாவான உத்தானபாதன், த்ருவனுக்கு அப்புறம் அரசாண்ட அவனுடைய பிள்ளை இவர்களைப் பற்றியும் பாகவத புராணத்தில் சொல்லியிருக்கிறது. ஆனால் ஏதோ இரண்டு வரி, நாலு வரிதான் இருக்கும். பக்தி, விடாமுயற்சி, மனவுறுதி முதலியவற்றுக்குப் பாடமாக உள்ள த்ருவ சரித்ரத்தை மட்டும் ஸவிஸ்தாரமாகச் சொல்லியிருக்கிறது.

புராணம் பொய்யென்று இங்கிலீஷ்காரர்கள் சொல்லி நம்முடைய தேசத்தின் ஹிஸ்டரியை எழுதினார்கள். அதிலே தங்களுக்குப் பிடித்த divide-and-rule [பிரித்து ஆளும்] கொள்கைகக்கு ஸாதகமான ரேஸ் தியரி முதலான அநேக விஷயங்களை ரொம்பவும் நடுநிலையிலிருந்து ஆராய்ச்சி பண்ணினது போலவே காட்டிச் சேர்த்துவிட்டார்கள். புராணம் பொய்யென்று இவர்கள் சொன்னார்கள் என்றால், இப்போது இவர்கள் எழுதிய சரித்திரத்திலும் பொய் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு உள்ளது உள்ளபடி இந்திய சரித்திரத்தை எழுதுவதற்கு (reconstruct செய்வதற்கு) முயற்சிகள் நடக்கின்றன. இப்படிச் செய்கிறவர்களுக்கும் அநேக கொள்கைகளில் வேண்டியது – வேண்டாததுகள் (prejudice -கள்) இருக்கலாம். அதனால் என்னதான் நடுநிலையிலிருந்து எழுதுவதாகச் சொன்னாலும், எவ்வளவு தூரத்துக்கு முழுக்க நிஜமான சரித்திரம் உருவாகும் என்று சொல்வதற்கில்லை.

பதினெட்டுப் புராணங்களை எழுதிய வியாஸாசாரியாள், அநேக ஸ்தல புராணங்களை எழுதிய பெரியவர்கள், பக்தர்களின் சரித்ரங்களை எழுதிய சேக்கிழார் முதலியவர்கள்தான் வாஸ்தவத்தில் விருப்பு வெறுப்பில்லாமல் எழுதினவர்கள்.

ஸாம்ராஜ்யங்கள், சண்டை, படையெடுப்புக்கள், ராஜவம்சங்கள் இவைதான் சரித்திரம் என்று நினைப்பது ஸரியில்லை. எல்லா விஷயங்களுக்கும் சரித்திரம் உண்டு. அரசியல் சரித்திரத்தை மட்டும் ஹிஸ்டரியில் பிரதானமாக வைத்து விட்டார்கள். தர்ம விஷயங்களைப் பிரதானமாக வைத்து அதற்கு ராஜவம்சத்தை மட்டுமின்றி மற்ற புண்ய புருஷர்கள், ரிஷிகள், ஸாமானிய ஜனங்கள் முதலியோரின் கதைகளையும், மற்ற எல்லா விஷயங்களின் சரித்திரத்தையும் துணையாக சேர்த்துத் தருவனவாகப் புராணங்களில் இருக்கின்றன. புராணங்களைப் பார்த்தால் அந்தக் கால அரசியல் மட்டுமின்றி cultural life (கலாச்சார வாழ்வு), அக்கால வித்தைகள், ஸயன்ஸ்கள் எல்லாவற்றையும் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது. அவற்றில் முக்யமாக சொல்லப்படுவதோ தர்மங்களும் ஆத்யாத்மிக க்ஷேமமுமாகும்.

வேதத்தின் பூதக் கண்ணாடி

புராணம் என்பது வேதத்துக்குப் பூதக் கண்ணாடி. சின்னஞ்சிறியதாக இருப்பதை பூதக்கண்ணாடி நன்றாகப் பெரிசுப் பண்ணி காட்டுகிறதல்லவா? இம்மாதிரி வேதத்தில் சுருக்கமாக, சின்ன சின்னதாகப் போட்டிருக்கிற தர்மவிதிகளை கதைகள் மூலம் பெரிசு பண்ணிக் காட்டுவது தான் புராணம்.

ஒன்றைச் சுருக்கமாகச் சொன்னால் அது மனஸில் ஆழப்பதியாமல் போய்விடலாம். அதையே சுவாரஸ்யமான கதையாக விஸ்தாரம் பண்ணிச் சொன்னால் நன்றாக மனஸில் பதியும்.

‘ஸத்யம் வத’ (உண்மையே பேசு) என்று மட்டும் வேதம் சொல்கிறது. அப்படிப் பேசுவதால் எத்தனை பெருமை ஏற்படுகிறது என்பதை ஹரிச்சந்திரன் கதை பல அத்யாயங்களில் விஸ்தாரமாகச் சொல்கிறது. ‘தர்மம் சர’ (அறத்தைப் பின்பற்று) என்று இரண்டு வார்த்தையில் வேதம் சொன்னதை நீள நெடுக மஹாபாரதத்தில் தர்ம புத்திரரின் கதையாகச் சொல்லியிருக்கிறது. ‘மாத்ரு தேவோ பவ’, ‘பித்ரு தேவோ பவ’ (அன்னை தந்தையை தெய்வமாகக்கொள்) என்ற வேத வாக்குக்கு ஸ்ரீராம சரித்ரம் பூதக்கண்ணாடியாய் இருக்கிறது. அடக்கம், பொறுமை, தயை, கற்பு முதலான அநேக தர்மங்களை வேதத்தில் – கட்டளையிட்டுள்ளவற்றை – புராண புருஷர்களும், புண்ய ஸ்திரீகளும் தங்களுடைய சரித்திரத்தின் மூலம் நன்றாகப் பிரகாசிக்கும்படிச் செய்திருக்கிறார்கள். அவற்றைப் படிப்பதாலும், கேட்பதாலும் இந்த தர்மங்களில் நமக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டாகிறது.

இவர்கள் எல்லாருக்கும் சோதனைகளும் கஷ்டங்களும் நிறைய வந்திருக்கின்றன. அநேக தப்பு தண்டாக்களைச் செய்கிற நம்மைவிட இந்த உத்தமமான புராண பாத்திரங்கள்தான் ஜாஸ்தி கஷ்டப்பட்டிருக்கிறார்கள். ரொம்பவும் பயங்கரமான சோதனைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆனாலும் இவர்களுடைய சரித்திரத்தைப் படிக்கும்போது, “தர்மங்களை அநுஸரிப்பதனால் கஷ்டந்தானே ஏற்படுகிறது? அதனால் அநுஸரிக்க வேண்டாமே!” என்று தோன்றுவதேயில்லை. அத்தனை கஷ்டத்திலும், சோதனையிலும் விட்டுக் கொடுக்காமல் அவர்கள் பாறாங்கல் மாதிரி தர்மத்திலேயே நிற்பதால் பெற்றிருந்த மனத் தெளிவுதான் நம் மனஸில் பதிகிறது. அதோடுகூட அந்த உத்தமர்கள் படும் கஷ்டங்களைக் கேட்கும்பொழுது நம் உள்ளம் உருகுவதாலேயே நம்முடைய அழுக்குகளையும் அலம்பிவிட்டாற்போல் இருக்கிறது. முடிவிலே அவர்களுக்கு ஏற்படுகிற பெரிய வெற்றியும் கீர்த்தியும் நமக்கு அந்த தர்மங்களில் கெட்டியான பிடிமானத்தை உண்டாக்கித் தருகின்றன.