பண்டிதருலகில் மீமாம்ஸையின் மதிப்பு

வேத அர்த்த நிர்ணயத்தில் மீமாம்ஸை செய்கிற பெரிய உபகாரத்தினால் அதனுடைய கர்மாக் கொள்கையை ஆக்ஷேபிப்பவர் உள்பட எல்லாப் பண்டிதர்களும், வித்வான்களும் இந்த சாஸ்திரத்தை அப்யஸித்தும், தாங்களே இதில் புதுப் புஸ்தகங்கள் எழுதியும் வந்திருக்கிறார்கள். தேர்ந்த வேதாந்தியான மன்னார்குடி ராஜு சாஸ்திரிகள் (பெயரைச் சொல்லாமல் ‘மன்னார்குடிப் பெரியவாள்’ என்றே அவரைச் சொல்வது வழக்கம்), திருவிசநல்லூர் வேங்கடஸுப்பா சாஸ்திரிகள், அதே ஊரைச் சேர்ந்த நீலமேக சாஸ்திரிகள், ராயம்பேட்டை கிருஷ்ணமாச்சாரியார், கிருஷ்ண தாதாசாரியார், மண்டகுளத்தூர் சின்னஸ்வாமி சாஸ்திரிகள் முதலான பண்டித சிம்மங்கள் மீமாம்ஸையில் நிரம்ப ஈடுபாடு காட்டியிருக்கிறார்கள். இதிலே ஒரு வேடிக்கை! வேங்கடஸுப்பா சாஸ்திரிகளுக்கும் நீலமேக சாஸ்திரிகளுக்கும் குருவாக இருந்த திருவிசநல்லூர் ராமஸுப்பா சாஸ்திரிகள் யாக கர்மாக்களை பலமாகக் கண்டனம் பண்ணியவர்*. மீமாம்ஸகர்களுக்கு முக்யமான ச்ரௌத கர்மாவை இவர் ஆக்ஷேபித்த போதிலும், ‘தியரி’யில் மீமாம்ஸா சாஸ்திரத்தின் உயர்வைப் பார்த்து அதை நன்றாக அப்பியாஸம் பண்ணி மீமாம்ஸையில் ஒரு ‘அதாரிடி’யாக இருந்தார்.

மயிலாப்பூரிலுள்ள ஸம்ஸ்கிருத காலேஜ் ஏற்பட்ட பிறகு இதில் பிரின்ஸிபல்களாகவும், வாத்தியார்களாகவும் இருந்திருக்கிற பல பேர் நல்ல மீமாம்ஸா பண்டிதர்களாக இருந்து வந்து கொண்டிருப்பதால் இந்த சாஸ்திரம் தற்போது விருத்தியாகி வருகிறது.


* “பசுமாரக மர்த்தனம்” என்று யாகத்தைக் கண்டித்தே இவர் ஒரு நூல் எழுதியிருக்கிறார்.

வேதாந்த மதங்களும் மீமாம்ஸையும்

வேதகர்மாக்களை யெல்லாம் அங்கீகரிக்கிறது என்ற அளவில் அத்வைதம் மீமாம்ஸையை ஆதரிக்கிறது என்பதோடுகூட, மீமாம்ஸையில் பாட்ட மதத்தினர் சொல்கிற அதே ஆறு பிரமாணங்களைத்தான் அத்வைதத்திலும் ஒப்புக் கொண்டிருக்கிறோம்.

ஸ்ரீ சங்கரரின் அத்வைதம், ஸ்ரீ ராமாநுஜரின் விசிஷ்டாத்வைதம், ஸ்ரீ மத்வரின் த்வைதம் மூன்றுமே வேதாந்த மதங்கள்தான். அத்வைதத்தைப் போலவே இந்த மற்ற இரண்டு ஸித்தாந்திகளும் வைதிக கர்மாநுஷ்டானங்களை விடக்கூடாது என்பவர்கள்தான். ஆதலால் பொதுவாக வேதாந்த மதங்கள் எல்லாவற்றுக்கும் இந்த அம்சத்திலே மீமாம்ஸை ஸம்மதமானதுதான்.

பிரமாணங்களில் மீமாம்ஸை சொல்கிற ஆறையும் அத்வைதிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். விசிஷ்டாத்வைதிகள் இந்த ஆறில் ‘பிரத்யக்ஷம்’, ‘அநுமானம்’, ‘சப்தம்’ (வேதம்) என்ற மூன்று பிரமாணங்களை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படியானாலும் இவை மீமாம்ஸகர்கள் சொன்ன ஆறிலே இருக்கிற மூன்றுதான். இந்தப் பிரமாண ஸமாசாரத்தை ‘நியாயம்’ என்று அடுத்த உபாங்கத்தைப் பற்றிச் சொல்லும்போது கொஞ்சம் விரிவாகச் சொல்கிறேன்.

மொத்தத்தில், மீமாம்ஸையை அடியோடு நிராகரணம் பண்ணாமல் அதை வைத்துக்கொண்டு அப்புறமே அதைக் கடந்து மேலே பக்தியில் த்வைதம், விசிஷ்டாத்வைதம் என்றும், பிறகு ஞானத்தில் அத்வைதம் என்றும் போவதற்கு நமக்கு முக்யமாக இருக்கப்பட்ட மூன்று வேதாந்த மதாசாரியர்களும் வழி பண்ணியிருக்கிறார்கள்.

கர்மாவே எல்லாம் என்பதால் மீமாம்ஸையைக் கர்ம மார்க்கம் என்பார்கள். ஆனால் கர்ம-பக்தி-ஞான மார்க்கங்கள் என்று நாம் வேதாந்த மதத்தில் சொல்கிற அர்த்தத்தில் இது கர்ம மார்க்கமில்லை. வேதாந்த மதத்தில் கர்மாவை கர்மாவுக்காகவே பண்ணி, அதுவே முடிந்த முடிவு என்று வைக்கவில்லை. கர்ம பலனை நினைக்காமல், நிஷ்காம்ய கர்மம் என்பதாக அந்தப் பலனை ஈச்வரார்ப்பணம் செய்ய வேண்டும் என்பதே வேதாந்தப்படி கர்ம மார்க்கம், அல்லது கர்ம யோகம். முக்யமாக கீதையில் பகவான் இதைத்தான் சொல்லியிருக்கிறார். மீமாம்ஸகர்களின் கர்ம மார்க்கத்திலோ ஈச்வர பக்தியே இல்லை. ஆனால் இந்த கர்மாக்களே லோகக்ஷேமம், சமூகத்தின் ஒழுங்கான வாழ்க்கை ஆகியவற்றைத் தருவதோடு அவற்றைப் பண்ணுகிற ஜீவனுக்கும் சித்த சுத்தியைத் தந்து அவனை பக்தியிலும் ஞானத்திலும் ஏற்றி விடுகிறது என்பதால், மீமாம்ஸை எதை ஸாத்யமாக ( goal -ஆக, லக்ஷ்யமாக) சொல்லிற்றோ அதே கர்மாக்களை ஸாதனமாக ( means -ஆக) வேதாந்தத்தில் ஆக்கிக் கொடுத்திருக்கிறது.

சங்கரர் தரும் பதில்

நம்முடைய ஆசாரியாள் இதற்கு என்ன பதில் சொல்கிறார்?

சப்தம் (வேதம்) ஒன்றைச் சொன்னால் அது காரியத்தில் பிரயோஜனம் ஆகவேண்டும் என்று மட்டுமில்லாமல், அந்தக் காரியமும் பிரயோஜனமாய் இருக்கிறது என்பதால்தான் மீமாம்ஸகர்கள் அங்கீகரிக்கிறார்கள். ஆகவே காரியத்தால் ஏற்படும் பிரயோஜனந்தான் சப்த தாத்பரியமேயன்றிக் காரியமே லக்ஷ்யம் இல்லை என்றாகிறது. காரியம் இல்லாமல் இருப்பதே ஒரு பெரிய பிரயோஜனமாக இருந்தால் அப்பொழுது அந்தக் காரியமற்ற நிலையைச் சொல்லும் ஞான காண்ட சப்தத்தை அங்கீகரிக்கலாமல்லவா? அதாவது வேலை இல்லாதிருப்பதே பிரயோஜனமானால் அதுவும் சப்தத்தினுடைய தாத்பரியந்தான். சப்தத்தினுடைய தாத்பரியம் ஒரு பிரயோஜனமே யன்றி வேலை அல்ல. “ஸுராபானம் (மதுபானம்) பண்ணக்கூடாது” என்று வேதத்தில் சொல்லி இருக்கிறது. அதைக் கேட்டவுடன் என்ன காரியம் செய்வது? ஒன்றும் செய்வதற்கில்லை. அப்படியானால் அந்த சப்தத்துக்குத் தாத்பரியம் இல்லையா? கள்ளுக் குடித்துக் கெட்டுப் போகாமல் இருப்பதுதான் அதற்குத் தாத்பரியம். இப்படி ஒன்று செய்யாமல் இருப்பதை ‘அபாவம்’ என்பார்கள். நிஷேதங்களுக்கு எல்லாம் அபாவம்தான் தாத்பரியம். இம்மாதிரி ‘இதைச் செய்யாதே’ என்று வேதம் பல காரியங்களிலிருந்து நம்மை விலக்குவதையும் மீமாம்ஸகர்களே ஒப்புக் கொள்கிறார்கள். வேதத்தில் நிஷேதம் என்று விலக்கப்பட்ட காரியங்களைச் செய்யாமலே இருக்கிறார்கள். இப்படி சில காரியம் செய்யாமல் இருப்பது பிரயோஜனமாக இருக்க முடியுமானால் எந்தக் காரியமும் இல்லாமல் பிரம்மமாக இருப்பது பெரிய பிரயோஜனமாக இருக்க முடியும் என்பதை எப்படி ஆக்ஷேப்பிக்கலாம்? காரியம் ஒன்றுமே இல்லாத பரம பிரயோஜனமாக ஆத்ம ஸாக்ஷாத்காரம் இருப்பதனால் வேதாந்த சப்தங்களும் மிகவும் உபயோகம் உள்ளவையே. அவற்றை அர்த்தவாதம் என்று தள்ளக்கூடாது.

ஸர்வம் கர்மாகிலம் பார்த்த ஞானே பரிஸமாப்யதே

என்று பகவான் கீதையில் சொல்லி இருக்கிறார். “எல்லாக் கர்மாக்களும் போய்க் கடைசியில் ஞானத்தில்தான் நன்றாக ஸமாப்தி ஆகின்றன” என்கிறார். எல்லாக் கர்மாவும் பரமேச்வரனிடம் விநியோகம் ஆகவேண்டும். காரியமே இல்லாமல் இருப்பதுதான் பரம ப்ரயோஜனம், அதுதான் பிரம்மானந்தம். அதனால் ஜன்மமே இல்லாமல் போய்விடும். வேதத்திற்குப் பரமதாத்பரியம் அதுதான். கர்மகாண்டம் எல்லாம் ஞானகாண்டத்தில் போய் அன்வயிக்க வேண்டும். அப்பொழுதுதான் அதற்குப் பிரயோஜனம் உண்டு.

இந்தக் கருத்தைத்தான் ஸ்ரீ சங்கராசாரியர்கள் மண்டனமிச்ரர், குமாரில பட்டர் ஆகியோரிடம் எடுத்துச் சொல்லி அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படியாகச் செய்தார். சுருக்கமாக, “கர்மத்திலும் சித்தத்தை சுத்தி செய்வதற்கான கொஞ்சம் பிரயோஜனம் இருக்கிறது என்பதாலேயே வேதமானது கர்ம காண்டத்தில் காரியத்தைச் சொல்கிறது. இப்படிக் காரியம் பண்ணினால் என்ன பிரயோஜனமோ அதைக் காட்டிலும் கோடி கோடி பிரயோஜனம் காரியம் இல்லாதிருப்பதால் ஏற்படுமானால் அதுவே வேதத்தின் நிறைந்த தாத்பரியம் ஆகும். இதுதான் ஞான காண்டத்தின் அபிப்ராயம். அதனால் கர்மாவைப் பற்றிச் சொல்கிற பாகங்களெல்லாம் சித்தமலத்தைப் போக்கி ஈச்வரனிடத்தில் கொண்டு சேர்க்க ஆரம்ப ஸ்திதியில் உதவுகின்றன என்பதாலேயே தாத்பரியம் உடையவனாக இருக்கின்றன. வறட்டுக் கர்மாவினால் மட்டும் பிரயோஜனமில்லை. கர்மா நின்று போய் பரமாத்ம ஸ்வரூபமாகவே இருக்கும் நிலையே பரமப் பிரயோஜனம். அதை அடைவிக்கும் ஸந்நியாஸ ஆச்ரமத்தின் பெருமையை வேதம் முடிவு பாகத்தில் சொல்லுகிறது. அதையே முடிவான தாத்பர்யமாக அங்கீகரிக்க அடைய வேண்டும்” என்று ஸ்ரீ ஆசார்யாள் சொல்லித்தான் மண்டனமிச்ரருக்கு ஸந்நியாஸம் கொடுத்தார்.

கர்ம காண்டத்திலேயே வேதம் சில கர்மாக்களைப் பாபம் என்று சொல்லித் தள்ளுகிறது. ஆனால் இந்தப் பாபம் பண்ணுவதால் ஏதோ இன்பம், லாபம் இருக்கிறது என்று தான் ஒருத்தன் அதைப் பண்ணுகிறான். இதைப் பண்ணாதவனுக்கு அந்த இன்பம் இல்லை. ஆனாலும் வேதம் “பண்ணாதே!” என்கிறது. ஏன்? பாபம் இப்போதைக்கு இன்பத்தை, திருப்தியைத் தந்தாலும் அப்புறம் இதைவிடப் பெரிதான ஆனந்தத்தை நமக்குச் சேர விடாமல் தடுத்து விடும். அதனால் “பண்ணாதே!” என்று தடுக்கிறது. இந்தத் தடையை ஒப்புக் கொண்டு மீமாம்ஸகர்களும் அதன்படியே பாப கர்மாக்களை யெல்லாம் விட்டுவிடுகிறார்கள். இவர்கள் பண்ணுகிற வைதிக அனுஷ்டானங்களான ஸத்கர்மாவின் பலனாகவும் இவர்களுக்கு ஒரு லாபம், ஆனந்தம் கிடைக்கிறது. இக வாழ்க்கையிலே ஸெளக்கியம் ஏற்படுகிறது. பித்ரு லோகம், தேவலோகம் முதலியன கிடைக்கின்றன. ஆனால் இவை மட்டும் சாச்வதமான ஸெளக்கியமா என்றால் இல்லை. புண்ய கர்ம பலன் தீர்ந்தவுடன் இந்த ஸெளக்கியங்களும் தீர்ந்து போகும். தேவ லோகத்துக்குப் போனாலும் புண்ணியம் தீர்ந்தவுடன் பூலோகத்தில் வந்து விழ வேண்டியதுதான். “க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விசந்தி” என்று சொல்லியிருக்கிறது [கீதை:IX.21]. தீராத ஸெளக்கியம், மாறாத நிறைந்த ஆனந்தம் என்பது உண்டென்றால் அது பரமாத்ம தத்வத்தில் அதோடு அதாகவே கரைந்து, எந்தக் காரியமும் இல்லாமல் கிடைக்கிற ஞானியொருவன் அநுபவிக்கிற நிலைதான். ரொம்பவும் அல்பமான, ரொம்பவும் குறுகிய காலத்துக்கு மட்டுமேயான இன்பத்தைத் தருகிற பாப கர்மாக்களை விட்டுவிட்டு அதைவிட உயர்ந்ததான ஸத்கர்மாவுக்குப் போகவேண்டும். அதாவது வைதிக கர்மாநுஷ்டானங்களை குறைவேயில்லாமல் செய்ய வேண்டும். ஆனால் இதனாலும் நிறைந்த நிறைவான ஆனந்தத்தை சம்பாதித்துக் கொள்ள முடியவில்லை என்றால் என்ன பிரயோஜனம்? ‘கர்மாநுஷ்டான பலனும் சாச்வத ஸெளக்கியமாக இல்லையே! அதனால் இதைப் பண்ணாமலே இருந்து விடலாமா? நேரே அந்த சாச்வத ஸெளக்கியத்துக்கே போய்விடலாமா?’ என்றால் அதுவும் நம்மால் முடியவில்லை. ஞானம் வருவது ஸுலபத்தில் ஸாத்தியமா? அதற்கு முதலில் சித்தம் சுத்தமாக வேண்டும். கர்மாதான் சித்தத்தை அலை பாயாமல் ஒரு ஒழுங்குப்படுத்திக் கட்டுகிறது. அதனால் கர்மாநுஷ்டானம் பண்ணவேண்டும். அப்படிப் பண்ணும்போது அது தருகிற ஸ்வர்க்க லோகம் முதலான இன்பங்களை உத்தேசிக்காமல், அதாவது பலனில் பற்றின்றி நிஷ்காம்யமாகப் பண்ணிவிட்டால், சித்தத்திலுள்ள மலங்கள் நீங்குகின்றன. இந்தக் கர்மாவுக்கு என்றே சொல்லியிருக்கிற பலன்கள் வேண்டாம் என்று பலதாதாவான ஈச்வரனிடமே அவற்றை அர்ப்பணம் செய்து விட்டால், அவன் இவைகளை விடப் பெரிய பலனான சித்த சுத்தியை அநுக்கிரஹிப்பான். அப்புறம் ஞானவிசாரம் பண்ண மனசு பக்குவமாகும். அதனாலே காரியமில்லாமல் தானாக இருக்கிற தனிப்பெரும் ஆனந்தத்தை அடையலாம்.

மீமாம்ஸைக் கொள்கைகள்

மீமாம்ஸா மதத்துக் கொள்கை என்னவென்று இன்னம் கொஞ்சம் சொல்கிறேன். “ஸ்வாமி இருக்கிறாரா, இல்லையா?” என்ற கவலை வேண்டாம். இருந்தால் இருக்கட்டும், இல்லாவிட்டால் போகட்டும். நாம் பண்ண வேண்டியது வேதத்தில் சொன்னபடி கர்மாநுஷ்டானம் செய்து வருவதுதான். அந்தக் கர்மாவே பலன் தரும். காரியம் பண்ணினால் பலன் இல்லையா? நடுவில் ஸ்வாமி யென்றொருவர் எதற்கு? காரியமே பலனைத் தருகிறது. நம்மகத்துத் தோட்டத்தில் இருக்கிற வாழை இலையைப் பறித்து வருவதற்குக் கறிகாய்காரனுக்குப் பணம் கொடுக்க வேண்டுமா என்ன? இப்படித்தான் நம் கர்மாவே தருகிற பலனுக்கு ஈச்வரன் என்ற எவனுக்கோ ‘க்ரெடிட்’ கொடுப்பது என்பார்கள். க்ருஷி (உழவு) பண்ணுகிறோம். அதனால் நெல் விளைகிறது. அது மாதிரி வேதம் நமக்குத் தெரியாததைச் சொல்கிறபடி காரியம் பண்ணினால் பலனுண்டு. காரியத்துக்குப் பலன் தர ஸ்வாமி வேண்டுமென்கிற அவசியமில்லை. ஜகத்தை ஸ்வாமி உண்டு பண்ணியிருக்க வேண்டுமே யென்றால், ‘ஸ்வாமி உண்டு பண்ணுவானேன்? இப்பொழுது இருப்பது போலவே ஜகத் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறது. திடீரென்று உண்டானதாக ஏன் ஒப்புக் கொள்ள வேண்டும்?’ என்பார்கள்.

ந கதாசித் அநீத்ருசம் ஜகத் |

இந்த ஜகத் எப்பொழுதும் இப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது. இப்படி இல்லாமல் எப்பொழுதும் இருந்ததில்லை. காரியம் பண்ணு, அதுவே பலன் கொடுக்கும். என்ஜினைச் சுற்றினால் மோட்டார் ஓடுகிற மாதிரி.

புத்திக்கு அகப்படாததை வேதம் சொல்லுகிறது. அதன்படி கர்மா பண்ணினால் பலன் உண்டாகிறது. அநாதியாக சப்தம் இருக்கிறது. அதுதான் வேதம். காலமும் ஆகாசமும் போல எப்பொழுதும் வேதமும் இருக்கிறது. நம்முடைய புத்திக்கு எட்டாததைச் சொல்ல வேதம் இருக்கிறது.

கெட்டது பண்ணினால் கெட்ட பலனும் நல்லது பண்ணினால் நல்ல பலனும் உண்டாகின்றன. காரியம் பலன் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. அந்தப் பலனை அநுபவித்துக் கொண்டு சுற்றிக்கொண்டேயிருக்கிறோம். இதற்கு ஸ்வாமி வேண்டாம். வேதம் சொன்ன வேலையைச் செய்யாமல் நாம் இருக்கக்கூடாது. அப்படியிருப்பது பாபம். அதனால் நமக்கு நரகம் கிடைக்கும்.

‘கர்மாவை நிறுத்தினால் பாபம் உண்டாகும். நித்தியமென்றும், நைமித்திகமென்றும், காம்யமென்றும் கர்மாக்கள் மூன்று விதமிருக்கின்றன. நித்திய கர்மாக்கள் எப்பொழுதும் பண்ணவேண்டியவை. ஒரு நிமித்தத்தில் பண்ணுவது நைமித்திகம். கிரஹணம் வருகிறது. அப்பொழுது ஸ்நானம், தர்ப்பணம் முதலியவை செய்யவேண்டும். யாராவது பெரியவர் நம் வீட்டிற்கு வந்தால், அவருக்கு உபசாரம் முதலியவை செய்ய வேண்டும். இவைகளெல்லாம் நைமித்திகம். ஒரு ஸந்தர்ப்பம் நேரும்போது பண்ணுவது நைமித்திகம். நித்திய-நைமித்திகங்களை எல்லோரும் அவசியம் பண்ணவேண்டும். மூன்றாவதான காம்யம் என்பது ஒரு பிரயோஜனத்தை இச்சித்துப் பண்ணவது. மழை வேண்டுமென்ற ஆசை இருக்கிறது; வருண ஜபம் பண்ணுகிறோம். பிள்ளை வேண்டுமென்ற ஆசை இருக்கிறது; புத்ர காமேஷ்டி செய்கிறோம். ஆயுளை உத்தேசித்து ஆயுஷ்ய ஹோமம் பண்ணுகிறோம். இவை காம்யம். இவைகளை ஒருவன் பண்ணித்தானாக வேண்டுமென்ற அவசியமில்லை.

இது மீமாம்ஸகர்கள் மதம். அவர்கள் சொல்லும் யுக்திகள் வேறு இருக்கின்றன.

நித்ய கர்மாவுக்கு லக்ஷணம் சொல்லியிருக்கிறார்கள். கர்மாக்கள் அகரணே ப்ரத்யவாய ஜனகம், கரணே (அ)ப்யுதயம் என்று இரண்டு வகை. செய்யாவிட்டால் உபத்திரவத்தைத் தருவது ஒன்று. செய்தால் ஸந்தோஷத்தைத் தருவது இன்னொன்று. ‘அகரணே’ என்றால் ‘செய்யாவிட்டால்’; ‘பிரத்யவாயம்’ என்றால் ‘உபத்திரவம்’. ‘கரணே’ என்பது ‘செய்தால்’; ‘அப்யுதயம்’ என்பது ஸந்தோஷத்திற்குக் காரணமான பலன். நல்ல கிருஹம், தனம், புத்திரர், கீர்த்தி, அறிவு இவைகளெல்லாம் அப்யுதயம் என்பதில் சேர்ந்தவை. வேதாந்தத்தில் ‘நி:ச்ரேயஸம்’ என்று ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது. எந்த ஸந்தோஷம் பெரிய ஸந்தோஷமோ அந்த பேரானந்தமாக மோக்ஷம்தான் நி:ச்ரேயஸம். சின்ன சந்தோஷத்துக்குக் காரணமானது “அப்யுதயம்”. இதைப்பற்றித்தான் மீமாம்ஸை சொல்லும். வேதாந்தத்தில் கூறப்பட்ட நி:ச்ரேயஸமான பெரிய ஸந்தோஷம், பேரானந்தம் பற்றி மீமாம்ஸை சொல்லாது. அது சொல்லும் ஸ்வர்கவாஸமும் அப்யுதயத்தைச் சேர்ந்ததுதான்.

வேலை என்றால் அதற்குக் கணக்குண்டு. தகுந்த பலனும் உண்டு. இது கர்ம மார்க்கம். செய்தால் நல்ல ஸந்தோஷம் உண்டாவது ஒரு வகை. செய்யாமற் போனால் உபத்திரவம் உண்டாவது ஒரு வகை.

நித்ய கர்மாவைச் செய்யாவிட்டால் உபத்திரவம் உண்டாகும்.

ஸந்தியாவந்தனம் பண்ணு என்றால், இக்காலத்தில், “செய்யமாட்டேன். அந்தப் பலன் எனக்கு வேண்டாம்” என்று சொல்லுகிறார்கள். அவர்களுக்கு மீமாம்ஸையால் ஸுலபமாகப் பதில் சொல்லிவிடலாம். ஸந்தியாவந்தனம் என்பது பலனுக்காகப் பண்ணும் காம்யமான (optional) கர்மா இல்லை; அதைப் பண்ணாமற் போனால் உபத்திரவம் உண்டாகும் என்று மீமாம்ஸை சொல்கிறது!

பண்ணினால் பலன் என்பது நியாயம். பண்ணாவிட்டால் உபத்திரவம் என்பது என்ன நியாயம்? ஸந்தியாவந்தனம் பண்ணாவிட்டால் தோஷம் என்கிறார்கள். பண்ணினால் ஐச்வரியம் வரும் என்று சொல்லமாட்டார்கள். செய்யாவிட்டால் உபத்திரவம் என்னும் வகையிற் சேர்ந்தது அது.

கோவிலில் அர்ச்சனை, அபிஷேகம், அன்னதானம் முதலியவை பண்ணினால் விசேஷ பலன் உண்டு என்று சொல்லுகிறார்கள். அவை “கரணே அப்யுதயம்” என்னும் வகையைச் சேர்ந்தவை. இது நியாயமாகப் படுகிறது.

“அகரணே ப்ரத்யவாயம்” என்பது நியாயமா? லோகத்தில் அதற்கு திருஷ்டாந்தம் உண்டா?

உண்டு.

நாம் பிச்சைக்காரனுக்கு அரிசி போடுகிறோம். ஏதாவது ஸொஸைட்டிக்கு நன்கொடை கேட்டால் நூறு, இருநூறு ரூபாய் கொடுக்கிறோம். பரோபகாரம் பண்ணினால் புண்ணியம் உண்டென்று பண்ணுகிறோம். சில சமயங்களில் உபகாரம் பண்ண வேண்டாமென்று தோன்றுகிறது. புண்ணியம் வேண்டாமென்று நினைக்கிறோம். அப்பொழுது முடியாது என்று சொல்லி விடுகிறோம். கடமையைச் செய்ய வேண்டியதுதான்; அதற்குமேல் தானம், தர்மம் இவை போன்றவைகளைச் செய்ய முடியாவிட்டால் பெரிய தோஷம் என்று சொல்ல முடியாதுதான்;

ஒருவனிடம் நாம் 500 ரூபாய் கைமாற்று வாங்கி இருந்தோம். அதைத் திருப்பித் தராமல் அவனிடம், “உனக்கு 500 ரூபாய் கொடுக்கிற புண்ணியம் எனக்கு வேண்டாம்” என்றால் அவன் விடுவானா? ‘நான் புண்ணியத்திற்கு வரவில்லை. கொடுத்ததைக் கேட்கத்தான் வந்தேன்.’ என்று சொல்லுவான். கேஸ் போட்டு, நமக்கு அதிகப்படி தண்டனையும் வாங்கி் வைப்பான். இது “அகரணே ப்ரத்யவாய ஜனக”த்தைச் சேர்ந்தது.

அதைப் போலத்தான் ஸந்தியாவந்தனமும். ஸந்தியாவந்தனம் பண்ணமாட்டேன் என்பது வாங்கின கடனைத் திருப்பித் தர முடியாது என்கிறதைப் போல.

தமிழில் ஸந்தியாவந்தனத்தைக் காலைக் கடன், மாலைக் கடன் என்றே சொல்வார்கள். அந்தப் பெயர்கள் மிகவும் அழகாய் இருக்கின்றன.

‘கடன் வாங்கின திருஷ்டாந்தம் சொன்னால் போதாது. யார் எங்கே கடன் வாங்கினார்கள்? ஸந்தியாவந்தனம் யாரிடம் கடன் வாங்கப்பட்டது?’ என்று சிலர் கேட்கலாம்.

வேதத்தில் “தைத்திரீய ஸம்ஹிதை” (Vl-3) யில் “பிராம்மணன் பிறக்கும் பொழுதே மூன்று கடனோடு பிறந்திருக்கிறான். ரிஷிருணம், தேவருணம், பிதிர்ருணம் என்று மூன்று கடன்கள் உண்டு” என்று சொல்லியிருக்கிறது. “வேதம் ஓதுவதால் ரிஷிக்கடனும், யாகமும் பூஜையும் ஸந்தியாவந்தனாதி உபாஸனைகளும் பண்ணுவதால் தேவர்கடனும், தர்ப்பணம் சிராத்தம் இவற்றால் பிதிர்கடனும் தீர்கின்றன” என்கிறது. கடன் வாங்கினது நமக்குத் தெரியாது. தெரியாததை வேதம் சொல்லியிருக்கிறது. அதைக் கொண்டு நாம் யுக்தி பண்ணிப் பார்க்க வேண்டும். நம்பிக்கையுள்ளவர்களுக்கு அதை அநுஸரித்த யுக்தி தோன்றும். இல்லாதவர்களுக்கு விபரீத யுக்தி தோன்றும்.

இரண்டு ஸஹோதரர்கள் இருக்கிறார்கள். ஒருவன் மாஜிஸ்டிரேட் உத்தியோகம் பார்க்கிறான். மற்றவன் வைதிகன். முதல்வனுக்குக் கச்சேரி (court)க்குப் போகிற கடன் ஏற்பட்டிருக்கிறது. அவன் கச்சேரிக்குப் போகாமல், “இரண்டாமவன் போகவில்லையே; நான் மட்டும் எதற்காகப் போகவேண்டும்?” என்றால், “நீதான் மனுப்போட்டாய்; வேலை செய்யும்படி உத்தரவு போட்டோம்; நீ வருவதாக ஒப்புக் கொண்டாய். ஆகையால், நீதான் வரவேண்டும்” என்று அதிகாரிகள் சொல்லுவார்கள். அதைப் போல நல்ல கதி வரவேண்டுமென்று நாம் முன் ஜன்மத்தில் செய்த ஸத்காரியம் என்பதான மனுப் போட்டிருக்கிறோம். அதற்கேற்றபடி கர்மாக்களைச் செய்ய வேண்டுமென்று உத்தரவாய் இந்த [நிகழ்] ஜன்மா லபித்திருக்கிறது. உத்தரவு பண்ணியவர் ஒருவர் கண்ணுக்குத் தெரியாமலே ஸர்வ ஸாஷியாக இருக்கிறார். இது வேதாந்தியின் மதம். எந்த வேலைக்காக ‘மனு’ப்போட்டோமோ அதுவே நமக்குப் பலனைத் தருகிறது என்பது மீமாம்ஸகர்கள் மதம். கர்ம பலன் தானே நடக்கும் (Automatic) என்பது இவர்களுடைய மதம்.

ஆகக்கூடி, இரண்டு அபிப்ராயங்களின் படியும் கர்மாவுக்கேற்ற ஜன்மம் நமக்கு வந்திருக்கிறது. இதற்கேற்ற கர்மாக்களை நாம் செய்ய வேண்டும். செய்யாவிட்டால் உபத்திரவம் உண்டாகும். எங்கெங்கே பிறந்தோமோ அதற்கேற்பக் கர்மாக்களைச் செய்ய வேண்டும். லோகத்தில் ஆசார அநுஷ்டானங்கள் முறையாக இருக்க வேண்டும். வேதார்த்தங்களைத் தான் தெரிந்து கொண்டு, மற்றவர்கள் துக்கப்பட்டால் சாந்தப்படுத்திக் கொண்டு, அவர்களுடைய தொழில்களைப் போதித்துக் கொண்டு இருக்கவேண்டியது பிராம்மணன் கடமை. இம்மாதிரியே ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்கு ஏற்பட்ட கர்மாக்களைச் செய்ய வேண்டும். வாணியன் எண்ணைய் ஆட்டித்தர வேண்டும். சக்கிலியன் செருப்புத் தைத்துத் தரவேண்டும். பிராம்மணன் கண்டவற்றைத் தின்னாமல் தேஹம், மனஸ், ஆத்மா என்பவைகளில் பரிசுத்தனாக இருந்துகொண்டு பரமாத்மத் தியானம் பண்ணிக்கொண்டு இருக்கவேண்டும். மற்றவர்களையும் தியானம் பண்ணிக்கொண்டு இருக்கும்படிச் சொல்லவேண்டும். அதற்குத்தான் அவரவருக்கும் மானியம் ஏற்பட்டிருந்தது. பழைய காலத்தில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவனுடைய தொழிலைச் செய்வதற்காக மானியம் கொடுத்திருந்தார்கள். அந்தத் தொழிலை நிறுத்திவிட்டால் லௌகிகத்திலும் உபத்திரவம் உண்டாகும். அவனுடைய மானியத்தை பிடுங்கி மற்றொருவனுக்குக் கொடுத்து விடுவார்கள். இந்தக் காலத்தில் அந்த நிலத்துக்கு வரி போட்டு விடுவார்கள். ஆகவே சாஸ்திரப்படி அவரவருக்கான கர்மாக்களைப் பண்ணாதவர்களுக்குப் பாபம் உண்டாவதோடு லௌகிக ஸெளகர்யங்களும் இல்லாமற் போய்விடும். அந்தக் கர்மாவைச் செய்வதனால்தான் மரியாதை உண்டாயிற்று. எதற்காக, எப்படி நம்முடைய ஜன்மம் ஏற்பட்டதோ அதை அப்படியே பண்ணாமல் இருப்பதனால்தான் இப்போது நம்முடைய தேசத்தில் இந்த மாதிரி கஷ்டமான நிலைமை ஏற்பட்டுவிட்டது. அந்த அந்தத் தொழிலைச் செய்து கொண்டு வந்தால், அதனால் மற்றவர்களுக்கும் லௌகிக ஸெளகர்யங்கள் ஏற்படும். அந்த நிலை மாறிவிட்டதனால்தான் இப்பொழுது தரித்திர நிலை வந்துவிட்டது.

“அகரணே ப்ரத்யவாய ஜனக”மாகிய நித்ய கர்மாக்கள் ஸந்தியாவந்தனம் முதலியவை. நித்ய கர்மாவைப் பண்ணாவிட்டால் பாபம் உண்டாகிறது. பண்ணினால் பாபம் இல்லாமையாகிய ஒரு லாபம் உண்டாகிறது. அதற்குமேல், க்ஷேமம் உண்டாகிறது. கடனைத் தவணைப்பிரகாரம் கொடுத்தால் கடன் போய்விடுகிறதாகிய ஒரு லாபமும், அதற்குமேல் “நாணயமானவன்” என்ற நல்ல பெயரும் உண்டாகும். அந்த நாணயத்தால் வியாபார விருத்தி ஏற்படுகிறது. அதுபோல நித்திய கர்மாவினால் பாபம் இல்லாமற்போவது ஒன்று; சிரேயஸ் உண்டாவது இரண்டு; ஆக இரண்டு லாபங்கள் உண்டாகின்றன.

‘அகரணே ப்ரத்யவாய ஜநகம், கரணே அப்யுதயம்’ என்னும் இந்த இரண்டும் நமக்கும் (வேதாந்திக்களுக்கும்) உண்டு. நாமும் இவைகளை ஒத்துக் கொள்கிறோம்.

இந்த மாதிரி உள்ள கர்மாக்களை எப்பொழுதும் பண்ணிக்கொண்டிருக்க வேண்டும். அக்னிஹோத்ராதி ச்ரௌத கர்மாக்களையும், ஒளபாஸனம் முதலான ஸ்மார்த்த கர்மாக்களையும் தவறாமல் செய்துவர வேண்டும்.

“ஜீவனோடிருக்கிற வரையில் அக்னி ஹோத்திரம் செய்ய வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. அதைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்து கொண்டிருப்பதே போதும்” என்பது மீமாம்ஸகர் மதம். ஆனால் ஸந்நியாஸாசிரமத்தில் அக்னி ஹோத்ரம் முதலான கர்மாக்கள் இல்லை. இப்படிக் கர்மாக்களை விட்டால் அது பெரிய தோஷம் என்பார்கள். புத்தி பூர்வமாகக் கர்மாக்களை விட்டுவிட்டு ஸந்நியாஸம் வாங்கிக் கொள்வது அவர்களுக்குக் கிறிஸ்துவனாகவோ துருக்கனாகவோ ஆவதைப் போன்றது. உபநிஷத் “கர்மாவைச் செய்து கொண்டு நூறு வருஷம் இருக்க வேண்டும்” என்கிறது (ஈசாவாஸ்யோபநிஷத் : 2-வது மந்திரம்.) தைத்திரீய ப்ராஹ்மணம், “அக்னிஹோத்ர நெருப்பை அணைத்தால் வீரஹத்தி தோஷம் வருகிறது” என்று சொல்லுகிறது.

“கெட்ட கர்மாவைச் செய்தால் பாபம் என்பது போல நித்ய கர்மாவை விட்டாலும் பாபம். ஸந்நியாஸி என்பவன் கர்ம ப்ரஷ்டன். ஆகையால், அவனைப் பார்த்தாலும் பாபம்; பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும்” என்பது மீமாம்ஸகர்கள் மதம், “பாபியைப் பார்த்தாலும், பேசினாலும், தொட்டாலும், அவனோடு சேர்ந்து பங்க்தி போஜனம் பண்ணினாலும் நமக்குப் பாபம் ஒட்டிக்கொள்ளும். அதுபோல ஸந்நியாஸியைப் பார்க்கவும் கூடாது” என்பது மண்டனமிச்ரர் முதலானவர்களின் அபிப்பிராயம்.

“வேதத்தில்தானே ஞான காண்டத்தில் ஸந்நியாஸம், ப்ரஹ்மம், மோக்ஷம், ஞானம் என்பவைகள் சொல்லப்பட்டிருக்கின்றன? அவைகளைச் சொல்லுவதும் வேதம்தானே? அப்படி இருக்க நீங்கள் அவைகளை வைகிறீர்களே?” என்று கேட்டால், அவர்கள் என்ன பதில் சொல்லுகிறார்கள் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

“ஞானம், ப்ரஹ்மம் என்பவை உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன என்பது உண்மைதான். வேதம் என்பது என்ன? வேதம் சப்தம், அதாவது வார்த்தை. அது எதற்கு ஏற்பட்டது? தெரியாததைச் சொல்ல ஏற்பட்டது. அது சப்த ப்ரமாணம். கண்ணுக்கும் ஊகத்திற்கும் அகப்படாததைத் தெரிவிப்பது சப்த ப்ரமாணம். அது உபயோகமில்லாத ஒன்றைச் சொல்ல ஏற்பட்டதல்ல. எல்லா வார்த்தைகளுக்கும் இரண்டு வகைப் பிரயோஜனம் உண்டு. அதைச் செய், அல்லது அதைச் செய்யாதே என்பதுதான் சப்தத்தினுடைய பிரயோஜனம்.

“ப்ரவ்ருத்திர்வா நிவ்ருத்திர்வா நித்யேன க்ருதகேன வா|
பும்ஸாம் யேநோபதிச்யேத தத் சாஸ்த்ரம் அபிதீயதே||

“நமக்குக் காரியம் இல்லாமல் ஏதாவது வஸ்துவை மாத்திரம் சொல்லும் சப்தங்கள் வீண் வம்பைச் சேர்ந்தவை. அவை பிரயோஜனமில்லாதவை. காக்கா பறக்கிறது என்று ஒருவன் சொல்லுகிறான். அதைக் கேட்பதனால் என்ன பிரயோஜனம் உண்டாகிறது? காக்கா கருப்பு என்கிறான். அதனால் என்ன பிரயோஜனம்? நாளைக்கு ராத்திரி இங்கே உபந்நியாஸம் நடக்கும் என்றால் அதற்கு ஓர் அபிப்ராயம் உண்டு. எல்லாரும் வரவேண்டுமென்பது அதற்கு அர்த்தம். இது பிரவிருத்திப் பிரயோஜனம். கும்பகோணத்தில் நாளைக்கு உபந்நியாஸம் என்றால் இது வீண் வம்பு. இங்கிருந்து யார் போகப் போகிறார்கள்? பிரயோஜனம் இல்லாமல் எந்த வார்த்தையும் இருக்கக்கூடாது; ஒன்றிலே ஈடுபட வைக்கும் பிரவிருத்திப் பிரயோஜனமாவது, அதிலிருந்து விலக்கும் நிவிருத்திப் பிரயோஜனமாவது இருக்கவேண்டும். பஞ்ச மஹா பாதகங்களைச் சொல்லி, ‘இவற்றைப் பண்ணாதே’ என்று வேதம் சொன்னால் இது நிவிருத்திப் பிரயோஜனம். அந்தப் பாப காரியத்திலிருந்து விடுபடுவதே பயன். இந்த இரண்டுமில்லாத மற்றவை வெறுங்கதை. வேதம் இரண்டு பாகம். இன்னின்ன செய்ய வேண்டும் என்ற விதிகளையும், இன்னின்ன செய்யலாகாது என்ற நிஷேதங்களையும் சொல்லுவது ஒரு பாகம். அதுதான் கர்ம காண்டம். மற்றொரு பாகம், ஞான காண்டம் என்பது, வெறுமே கதை சொல்லும். கதைக்கு சொந்தமாகப் பிரயோஜனம் இல்லை. இந்த வேதக் கதைகள் விதியோடு சேர்ந்தால்தான் அர்த்தமாவது” என்று மீமாம்ஸகர்கள் சொல்வார்கள்.

தாதுபுஷ்டி லேஹ்யத்தைப் பற்றி ஒரு விளம்பரம் போட்டிருக்கிறது. சிங்கத்தோடு ஒரு மநுஷ்யன் குஸ்தி போடுவதுபோல அந்த விளம்பரத்தில் படம் போட்டிருக்கிறது. இந்தப் படத்தை எதற்காகப் போடுகிறான்? ‘எல்லோரும் ஏமாந்து பணத்தைக் கொடுத்து அதை வாங்குங்கள்’ என்பது தாத்பர்யம். அந்தப் படம் மாதிரி வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற கதைகளுக்கு விதிதான் பிரயோஜனம். இந்தக் கதையானது “அர்த்த வாதம்” எனப்படும். பல இடங்களில் நற்சாக்ஷிப் பத்திரம் (certificate) வாங்கியிருப்பதை ஒரு டாக்டர் மருந்து விளம்பரத்தில் ஏன் போடுகிறான்? இவன் மருந்தை எல்லாரும் வாங்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்கிறான். இம்மாதிரியான அர்த்தவாதங்களில் நிஜத்தோடு பொய் கலந்திருப்பதுமுண்டு. பொய்யை குணார்த்தவாதம் என்று சொல்லுவார்கள். (அநுவாதம் என்று ஒன்று சொல்லப்படும். தெரிந்ததையே அநுஸரித்துச் சொல்வது அது. நெருப்பு சுடும் என்பது தெரிந்தது. அதை மறுபடியும் சொல்லுவது அநுவாதம். மருந்தில் இன்ன இன்ன ஓஷதி இருக்கிறது என்று சொல்லுவது பூதார்த்தவாதம்.) குணார்த்தவாதம் என்பது பொய்க்கதையாவது சொல்லி விதிக்குப் பிரயோஜனப்படுத்துவது. கள் குடிக்காதே என்று சொல்லுவது விதி. கள் குடிப்பவன் உடனே தொலைந்தானென்று கதை எழுதினால் அது அர்த்தவாதம். கள் குடிக்கக்கூடாது என்பதுதான் தாத்பர்யம். கள் குடித்தால் மயக்கம் வருமென்பது அநுவாதம். ஆகக்கூடி, அர்த்தவாதமான கதைகள் எல்லாம் நம்மை விதிபூர்வமான ஒரு காரியத்தில் சேர்க்க வேண்டும்.

வேதத்தில் ஒரு யக்ஞத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. தக்ஷிணையாக ஸுவர்ணம் கொடு; வெள்ளி கொடுக்காதே என்று அங்கே சொல்லப்பட்டிருக்கிறது. யாகங்களில் வெள்ளி கொடுக்கக் கூடாதென்று தைத்திரீய ஸம்ஹிதையில் சொல்லியிருக்கிறது. இந்த இடத்தில் ஒரு நீளமான கதையைச் சொல்லி வெள்ளியைக் கொடுக்காதே என்று சொல்லுகிறது. நிஷேதத்தைக் காட்ட இந்தக் கதை சொல்லப்படுகிறது. (இன்னசெய்யவேண்டும் என்று நிர்ணயிப்பது விதி; இன்ன செய்யக்கூடாது என்பது நிஷேதம்). இந்த மாதிரியான அர்த்தவாதங்களுக்கு நேராக அதன் சப்தத்தில் பிரயோஜனமில்லை.

இந்த விஷயத்தைக் கொண்டுதான் மீமாம்ஸகர்கள் முன்சொன்ன ஞானகாண்ட ஆக்ஷேபணைக்குப் பதில் சொல்லுகிறார்கள்.

“பிரம்ம ஸ்வரூபத்தைப் பற்றித்தான் உபநிஷத் சொல்லுகிறது. அங்கே காரியத்தைச் சொல்லுகிறதேயில்லை. பிரம்மாநுபவம் என்பது காரியமே இல்லாத நிலை என்றே சொல்கிறது. வேதம் எப்பொழுது பிரமாணமாகும்? காரியத்தைச் சொன்னால்தான் வேதம் பிரமாணமாகும். இல்லாவிட்டால் வெறும் கதை சொல்கிறதற்கு ஸமானந்தான்; அர்த்தவாதந்தான். சும்மாயிருக்கிற ப்ரம்மத்தைப் பற்றிய உபநிஷத் அர்த்தவாதந்தான். உள்ள வஸ்துவைப் பற்றி இந்த பாகம் சொல்லுகிறது. நாம் தெரிந்து கொள்ள வேண்டியது உள்ள வஸ்துவா? செய்ய வேண்டிய காரியமா? ‘பிரம்மம்’ இருக்கிறது; ஆத்மா என்பதும் அதாகவே இருக்கிறது’ என்ற மாதிரி உள்ளதைச் சொல்வதில் நமக்கு எந்த காரியத்தையும் வேதம் கொடுக்கவில்லையே! யாகம், யக்ஞம் முதலியவைகளை நாம் செய்ய வேண்டும். இது மாதிரி நாம் நடத்த வேண்டிய காரியத்தைச் சொல்லத்தான் வேதம் வேண்டும். அதற்குத்தான் சப்தம் (வேதம்) ஏற்பட்டது. இருப்பதை அறிய சப்தம் வேண்டாம். இருப்பது எப்பொழுதாவது தன்னால் தெரியும். தெரியாவிட்டாலும் போகட்டும். ஆகையால் வெறுமே வஸ்துவைச் சொல்லும் வேத பாகம் அர்த்தவாதம். ஆகையினால் உபநிஷத் பிரமாணம் இல்லை. பின் எதற்காக அது இருக்கிறது? யக்ஞம் செய்பவனை உயர்த்திச் சொல்வதற்கு அது இருக்கிறது. கர்மாவுக்கு அபேக்ஷிதனான ஜீவனை ஸ்தோத்திரம் பண்ணி, அவன் கர்மாவை அதிகம் பண்ண வைப்பதற்காகத் தான் அப்படிச் சொல்லுகிறது. ஜீவனே பிரம்மம் என்று உபநிஷத் சொல்லுவது, கர்மாநுஷ்டானம் செய்பவனுக்கு ரொம்பவும் ஏற்றம் கொடுத்து ஸ்தோத்திரம் பண்ணுவது தான். எதற்கு இப்படி மிகையாக ஸ்தோத்திரம் செய்திருக்கிறது என்றால், எல்லாரையும் அந்தக் கர்மாநுஷ்டானங்களில் ஈடுபடுமாறு உத்ஸாஹப் படுத்துவதற்குத்தான். தாது புஷ்டி லேஹ்யம் சாப்பிட்டவன் சிங்கத்தோடு ஒரு நாளும் குஸ்தி போட முடியாது என்கிற மாதிரி இந்த ஜீவனும் பிரம்ம ஸ்தானத்தை அடைய முடியாது. உபநிஷத்து அப்படிப்பட்ட வெறும் கதைதான். “பிரம்மம், ஞானம், மோக்ஷம், ஈச்வரன் என்ற இந்தப் பேச்சே நமக்கு வேண்டாம். கர்மாவே நமக்கு எல்லாம். கர்மா செய்யாமல் இருப்பது தப்பு. ஸந்நியாஸியாவது தப்பு.” இதுதான் மீமாம்ஸகர்களின் அபிப்பிராயம்.

அர்த்த நிர்ணயம் எப்படி ?

வேதத்தின் வாக்கியம் ஒன்று இருக்கிறது; அத்தியாயம் ஒன்று இருக்கிறது. அதிலே என்ன அபிப்ராயம் சொல்லி இருக்கிறது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? எந்தத் தீர்மானத்தை வலியுறுத்த அது ஏற்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் என்ன செய்வது?

வேதத்தை அர்த்தம் செய்வதற்குச் சில விதிகள் இருக்கின்றன. அவற்றை மீமாம்ஸா சாஸ்திரம் சொல்கிறது. வேதம் என்கிற சட்டத்திற்கு ‘லா ஆஃப் இண்டர்ப்ரடேஷன்’ மீமாம்ஸைதான். சர்க்காரில் அநேகச் சட்டங்களைப் பண்ணும்போது, அவற்றின் அர்த்தத்தைப் பற்றியே சந்தேகம், குழறுபடி உண்டாகும். அப்போது அந்த சட்டத்தை வியாக்யானம் பண்ண இன்னொரு சட்டம் வகுப்பார்கள். அதுதான் Law of Interpretation. வேதத்துக்கு இப்படியிருப்பது மீமாம்ஸை. அதில் வேதத்தை அர்த்தம் செய்து கொள்ளச் சில வழிகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

உபக்ரம-உபஸம்ஹாரம், அப்யாஸம், அபூர்வதா, பலம், அர்த்தவாதம், உபபத்தி என்று ஆறு வழிகளைக் காட்டி இவற்றால் வேதமந்திரங்களின் உத்தேசத்தைத் தெரிந்து கொள்ளலாம் என்று மீமாம்ஸை சொல்கிறது.

ஆரம்பமும் முடிவும் ஒரே விஷயமாக இருந்தால் அதுதான் உத்தேசம். இது இரண்டுக்கும் நடுவில் ஆயிரம் ஸமாசாரம் சொல்லியிருந்தாலும் இந்த ஆயிரம் ஸமாசாரமும் அந்த ஒரே உத்தேசத்தைத் தீர்மானிக்கத்தான் வந்திருக்கின்றன என்று ஸந்தேஹம் இல்லாமல் சொல்லிவிடலாம். இதற்குத் தான் ‘உபக்ரம-உபஸம்ஹாரம்’ என்று பெயர். ‘உபக்ரமம்’ என்றால் தொடக்கம்; ‘உபஸம்ஹாரம்’ என்றால் முடிவு.

ஒரு உபந்நியாசத்திலோ ஒரு கட்டுரையிலோ ஒரே விஷயத்தைத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தால், அப்படிச் சொல்லப்படுகிற விஷயத்தைத் தீர்மானம் பண்ணுவதற்காகத்தான் அந்த உபந்நியாசம், அல்லது கட்டுரை என்று தீர்மானித்து விடலாம். பிரசங்கம் எதைப்பற்றி என்று தெரியாது; இன்விடேஷனைப் பார்க்கவில்லை; நோட்டீஸ் போடவில்லை. ஆரம்பித்துப் பதினைந்து நிமிஷம் கழித்துத்தான் நாம் வந்தோம். அந்தப் பிரஸங்கத்தின் நடுவில் பிரஸங்கி அநேக ஸமாசாரங்களைச் சொல்கிறார். ஆனாலும் எது திருப்பித் திருப்பிச் சொல்லப்படுகிறதோ அதுதான் அந்தப் பிரஸங்கத்தின் தீர்மானம் என்று முடிவு செய்யலாம். ஒன்றை அடிக்கடி திருப்பித் திருப்பிச் சொல்வது, அல்லது செய்வதுதான் ‘அப்யாஸம்’. ஏதாவது ஒன்றை மனனம் பண்ண வேண்டுமானால் திருப்பித் திருப்பி உருப்போடுகிறோம். திருப்பித் திருப்பி தண்டால் முதலியன போடுகிறார்கள்; அது தேகாப்பியாஸம். அப்படி ஒரு விஷயத்தைத் தீர்மானம் பண்ணுவதற்கு உபயோகப்படுவது ‘அப்யாஸம்’. திருப்பித் திருப்பிச் சொல்லப்படும் விஷயந்தான் அதன் முடிவான தீர்மானம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொன்று ‘அபூர்வதா’. ஒரு பிரஸங்கத் தொடர் முந்தாநாள் கேட்டிருக்கிறோம்; நேற்று கேட்டோம்; இன்றும் கேட்கிறோம். நேற்று, நேற்றுக்கு முந்தினநாள் சொன்ன விஷயங்களை இன்றைக்கும் சொல்லலாம். இருந்தாலும் இதுவரைக்கும் சொல்லாத சமாசாரம் இன்றைக்கு ஏதாவது சொன்னால் அதுதான் இன்றைய பேச்சின் முக்கியமான உத்தேசம். இதுவரைக்கும் சொல்லாத ஒன்றை இன்றைக்கு அதிகப்படியாகச் சொன்னால் அதிகப்படியாகச் சொல்கிற புது விஷயந்தான் இன்றைய பிரசங்கத்தின் விஷயம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். நடுவில் என்ன என்ன சமாசாரங்கள் சொன்னாலும் அவை எல்லாம் இந்த ஒன்றுக்கு அநுகுணமானவையே. இப்படி ஒரு விஷயத்தைத் தீர்மானம் பண்ணுவது ‘அபூர்வதா’- புதிதாகச் சொல்லப்படும் விஷயம். பூர்வத்தில் வராதது அபூர்வதா.

இப்படியேதான் ஒரு புஸ்தகத்தில் அநேக விஷயங்கள் சொல்லியிருந்தாலும் எதற்குப் பலன் சொல்லியிருக்கிறதோ, ‘இப்படிச் செய்தால் இன்ன பலன் தரும்’ என்று சொல்லியிருக்கிறதோ அதுதான் அந்த புஸ்தகத்தின் தீர்மானம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இதற்குத்தான் ‘பலம்’ என்று பெயர்.

அநேக சமாசாரங்களைச் சொல்லிக் கொண்டு வருகிறோம். நடுவில் ஒரு கதை சொல்லி ஒன்றைப் பற்றி ஸ்தோத்திரம் பண்ணுகிறோம். எதைப்பற்றி ஸ்தோத்திரம் பண்ணுகிறோமோ அந்த விஷயந்தான் பிரதானம். அதைச் சொல்வதற்காகத்தான் கதை யெல்லாம் சொன்னது என்று புரிந்து கொண்டு விடலாம். கதைகளை ஆதாரமாகச் சொல்லி ஒன்றை ஸ்தோத்திரம் பண்ணுவதற்கு ‘அர்த்த வாதம்’ என்று பெயர். இதன் மூலமும் தீர்மானத்தைக் கண்டுபிடித்து விடலாம்.

ஒன்றைச் சொல்லி அதற்குக் காரண நிரூபணம், பொருத்தம் முதலியவை விளக்கப்பட்டிருந்தால் அந்த விஷயந்தான் முக்கியமான உத்தேசம். இந்த முறைக்கு ‘உபபத்தி’ என்று பெயர்.

உபக்ரமோபஸம்ஹாரௌ அப்யாஸோ (அ)பூர்வதா பலம் |
அர்த்தவாதோபபத்தீ ச லிங்கம் தாத்பர்ய நிர்ணயே ||

என்று இந்த ஆறு விதமான லிங்கங்களினால் ஒன்றைத் தீர்மானம் செய்து கொள்ளலாம் என்று மீமாம்ஸா சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. இவற்றுக்கு தாத்பர்ய லிங்கம் என்று பெயர்.

சம்ஸ்கிருதத்தில் ‘லிங்கம்’ என்றால் அடையாளம் என்பது பொருள். ஆரம்பமும் முடிவும் சொல்லமுடியாத பரமாத்ம தத்துவத்துக்கும், நீள உருண்டையாக இருக்கிற பிரபஞ்சத்துக்கும் அடையாளமாக இருப்பதுதான் கோவில்களில் உள்ள லிங்கம். லிங்கத்தைக் குறி என்றும் சொல்லலாம். குறிப்பு என்றும் சொல்வது உண்டு. ஒரு உபந்நியாஸமோ, ஒரு புஸ்தகமோ எந்த தீர்மானத்தைச் சொல்கிறது, எந்த முடிவை வற்புறுத்துகிறது என்பதை இந்த ஆறுவிதமான குறிப்புகளை வைத்துக் கொண்டே நாம் தீர்மானம் பண்ணிவிடலாம்.

வேதத்தில் சொல்லப்பட்ட ஒரு வாக்கியமோ ஒரு அத்தியாயமோ எந்த விஷயத்தை தீர்மானிக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க இந்த ஆறு தாத்பர்ய லிங்கங்களைக் கொண்டே, ஆறு விதமான குறிப்புகளைக்கொண்டே தீர்மானம் செய்து கொள் என்று சொல்கிறது மீமாம்ஸா நியாயம்.

மீமாம்ஸையும் ஆதிசங்கரரும்

பௌத்தத்தில் ஈச்வரனைச் சொல்லவில்லை என்பதற்காக உதயனர் முதலிய நையாயிகர் அதைக் கண்டித்தது ஆசாரியாளுக்கு ஸம்மதமானதே. அதே போல, வைதிக கர்மாநுஷ்டானங்கள் பௌத்தத்தில் இல்லை என்பதனால் அதைக் குமாரிலர் போன்ற மீமாம்ஸகர்கள் கண்டனம் பண்ணியதும் அவருக்கு ஸம்மதந்தான். ஏனென்றால் மீமாம்ஸகர்கள் முக்யமாகக் கொண்டிருந்த கர்மாநுஷ்டானங்கள் சித்த சுத்திக்கும், ஸமூக ஒழுங்குக்கும் அவசியம் வேண்டியனவே என்பது தான் நம் ஆசாரியாளின் அபிப்பிராயமாகும். ஆனாலும் ‘ஈச்வரன் என்ற பல தாதா வேண்டாம்; கர்மாவினால் சுத்தியானபின் ஞானத்துக்குப் போகவேண்டாம்; கர்மாவை விட்டுவிட்ட ஸந்நியாஸம் தப்பானது’ என்ற கொள்கைகளை மீமாம்ஸகர்கள் பின்பற்றியதனால் அவர்களையும் ஆசாரியாள் கண்டனம் பண்ணினார்.

மீமாம்ஸகர்களில் குமாரிலபட்டர், மண்டன மிச்ரர் இருவரும் முக்கியமானவர்கள். இவர்களில் குமாரிலபட்டரின் அந்திம காலத்தில் ஆசார்யாள் அவரை வாதத்தில் ஜயித்தார்1. இன்னொருவரான மண்டனமிச்ரரை ஜயித்து அவரைத் தனது நாலு பிரதான சிஷ்யர்களில் ஒருவரான ஸுரேச்வராசாரியராக ஆக்கினார்.

வேத மதத்துக்குள்ள பதினாலு ஆதாரங்களில் ஒன்றான மீமாம்ஸையை ஆசார்யாள் கண்டித்தார் என்றால், அது அடியோடு தப்பு என்று நிராகரணம் பண்ணினார் என்று அர்த்தமில்லை. ‘மீமாம்ஸையில் சொன்ன கர்மாக்களைப் பண்ணியாகத்தான் வேண்டும். ஆனால் மீமாம்ஸகர் போல் ஈச்வர பக்தியில்லாமல் பண்ணக் கூடாது. அந்த கர்மாவே தருகிற ஸ்வர்காதி பலன்களை ஈச்வரனுக்கு அர்ப்பணம் பண்ணிவிட்டு, இந்த கர்மபல தியாகத்தினாலே சித்த சுத்தியை ஸம்பாதித்துக் கொள்ள வேண்டும். பலதாதா ஈச்வரன் என்று உணர்ந்தால்தான் சின்னதான, ஸ்வர்க்கம் முதலான பலன்களை விட்டு ஈச்வரன் தருகிற பெரிய பலனான சித்த சுத்திக்குப் போக முடியும்’ என்பதே ஆசாரியாளின் உபதேசம். மீமாம்ஸகர்களின் கர்மாநுஷ்டானம் முழுக்கவும் ஆசாரியாளுக்கு ஸம்மதமானதுதான். ஆனாலும் கர்மாவுக்காகவே கர்மா (end in itself) என்று நினைத்து அவர்கள் அதற்கு மேல் போகாமல் – பலதாதாவான ஈச்வரனிடம் பக்தி, அதற்கப்புறம் அந்த ஈச்வரனேதான் நாமாகி இருப்பதை அநுபவத்தில் அறிகிற ஞானம் ஆகிய இவற்றுக்குப் போகாமல் – நின்றுவிட்டது தப்பு என்று உபதேசம் பண்ணினார். கர்மாவை அவர் ஆக்ஷேபிக்கவே இல்லை என்பதால்தான் தமது சரீரத்தை விடுவதற்குமுன் கடைசியாக உபதேசித்த “ஸோபான பஞ்சக”த்தை

வேதோ நித்யம் அதீயதாம்
ததுதிதம் கர்மஸ்வநுஷ்டீயதாம்

என்று ஆரம்பித்தார். “தினமும் வேத அத்யயனம் பண்ணுங்கள். அதிலே சொல்லியுள்ளபடி கர்மாக்களை நன்றாக அநுஷ்டானம் பண்ணுங்கள்” என்று அர்த்தம்.

ஆனால் இப்படி கர்மாவுடனே நின்றுவிடக் கூடாது. அதை ஈச்வரார்ப்பணம் பண்ணவேண்டும். இதனால் சித்த சுத்தியை உண்டாக்கிக் கொண்டு அப்புறம் ஞானோபதேசம் வாங்கிக் கொள்ளவேண்டும். அப்புறம் கர்மாவை எல்லாம் நிறுத்திவிட்டு ஸந்நியாஸியாகி அந்த உபதேசத்தையே தியானம் பண்ணி, விசாரம் பண்ணி, சொந்த அநுபவமாக்கிக் கொள்ள வேண்டும். இப்படி படிப்படியாகக் கொண்டு போகிறார்.

ஈச்வரனிடத்தில் கொண்டுவிடவே, ஏற்பட்ட வேதத்தின் கர்ம காண்டத்தை, அப்படிப் பண்ணவிடாமல் வெறும் கர்மாவோடேயே நிறுத்தி, சாச்வத ஆனந்தமான அத்வைத மோக்ஷத்தில் சேர்ப்பதற்கு வழி பண்ணித் தருவதற்குப் பதில், புண்ய கர்மா செலவழிகிற வரையில் மாத்திரம் வெறும் போகபூமியான ஸ்வர்க்கத்தில் சேர்ப்பதோடு நின்றுவிடுகிறார்களே என்பதற்காகத்தான் மீமாம்ஸகர்களை ஆசார்யாள் கண்டனம் பண்ணினார்.

கர்மாக்களை விஸ்தாரம் பண்ணி அது பற்றின வேத சட்டங்களை வியாக்கியானம் செய்கிறதில் மீமாம்ஸா சாஸ்திரம் சொல்கிற அவ்வளவும் ஏற்க வேண்டியதுதான். ஏனென்றால் வேத சப்தத்தை விசாரிக்கிற போது அந்த சாஸ்திரம் இந்த சப்தப் பிரமாணத்துக்கு அப்படியே surrender (சரணாகதி) பண்ணி, அதனாலேயே அதனுடைய அர்த்தத்தை உள்ளபடி தெரிந்து கொண்டு நிர்ணயம் பண்ணி விடுகிறது. எனக்கு மீமாம்ஸையைப் பற்றி ஒன்று வேடிக்கையாகத் தோன்றுகிறது. மீமாம்ஸா சாஸ்திரம் கண்ணுக்குத் தெரிகிற ஒரு ஸ்வாமியிடம் ‘ஸரன்டர்’ செய்து, அதனாலே அவனுடைய ஸ்வரூபத்தைத் தெரிந்து கொள்ள பிரயத்னம் செய்யவில்லைதான். அதனால் என்ன? வேதம்தான் பெரிய ஸ்வாமி. வேத சப்தம் கண்ணுக்குத் தெரிகிற ஸ்வாமியாக இல்லாவிட்டாலும் காதுக்குக் கேட்கிற ஸவாமியாக இருக்கிறது. அந்த சப்தம் சொல்கிற கர்மாக்களை எதிர்க் கேள்வி கேட்காமல் பண்ணுவோம். இங்கே ஒரே ‘ஸரன்டர்’தான். இப்படி ‘ஸரன்டர்’ பண்ணி வேத வாக்கியங்களின் தாத்பரியத்தை நிர்ணயம் பண்ணுவோம்’ என்று மீமாம்ஸகர்கள் இருந்திருக்கிறார்கள். அதனால் கண்ணுக்குத் தெரிகிற ஸ்வாமியை அவர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், காதுக்குக் கேட்கிற வேத ஸ்வாமியின் ஸ்வரூபத்தை (அர்த்தத்தை) நன்றாகத் தெரிந்து கொண்டு சொல்லிவிட்டார்கள் என்று நான் நினைப்பதுண்டு.


1 ‘தெய்வத்தின் குரல்’ முதற்பகுதியில் “முருகனின் வடநாட்டு அவதாரம்” என்ற உரை பார்க்க

ஸாங்கியம்

ஸாங்கியத்தில் எதிலேயும் பட்டுக் கொள்ளாததான – ஆனால் எல்லாவற்றுக்கும் ஆதாரமான – ஆத்மாவைப் ‘புருஷன்’ என்றும், எல்லாவற்றையும் நடத்தி வைக்கிற சக்தியான மாயையை ‘ப்ரக்ருதி’ என்றும் சொல்லியிருக்கிறது. ப்ரக்ருதி உள்படப் பிரபஞ்சம் என்பது 24 தத்வங்களில் அடங்கியிருக்கிறது என்று ஸாங்கியம் சொல்கிறது. பிரகிருதி என்பது முதல் தத்வம். அதற்கு ‘ப்ரதானம்’ என்றும் ஒரு பேர். அதிலிருந்து மஹத் என்ற இரண்டாவது தத்வம் வருகிறது. மநுஷ்யனின் புத்தி மாதிரிப் பிரிகிருதியின் புத்திதான் மஹத். ‘மஹத்’திலிருந்து மூன்றாவது தத்வமாக ‘அஹங்காரம்’ உண்டாகிறது. தான் என்று தனியாக ஒன்று இருக்கிறது என்ற உணர்ச்சி (ego) தான் அஹங்காரம். அஹங்காரம் இரண்டாகப் பிரிகிறது. ஒரு பக்கம் சைதன்யமுள்ள [உயிரும் அறிவும் உள்ள] ஜீவனாகி அவனுடைய மனஸாகவும் ஐந்து ஞானேந்திரியங்களாகவும், ஐந்து கர்மேந்திரியங்களாகவும் ஆகிறது. இன்னொரு பக்கம் ஜடப் பிரபஞ்சத்திலே ஐந்து தன்மாத்ரைகளாகவும், ஐந்து மஹா பூதங்களாகவும் ஆகிறது. ஜீவனின் ஞானேந்திரியங்கள் என்பவை வெளியில் உள்ள வஸ்துக்களைப் பற்றி இவனுக்கு அறிவிக்கிற ஐந்து உறுப்புக்கள். வெளியில் உள்ளதைப் பார்க்கிற கண், முகர்கிற மூக்கு, ருசிக்கிற வாய், கேட்கிற காது, தொடுகிற சர்மம் என்கிற ஐந்தும் ஞானேந்திரியம். ஜீவனே நேராகக் காரியம் செய்ய உதவுபவை கர்மேந்திரியங்கள். இங்கேயும் வாய் இருக்கிறது. வெளியிலே உள்ள ருசியை ஜீவனுக்கு அறிவிக்க உபயோகப்பட்ட ஞானேந்திரியமான வாய் பேசுவது என்ற கர்மாவை செய்வதால் கர்மேந்திரியமாகவும் இருக்கிறது. பல காரியங்களைச் செய்ய உதவும் கை ஒரு கர்மேந்திரியம். நடக்கிற கால், மலஜல விஸர்ஜனம் செய்கிற அவயவம், ஜனனேந்திரியம் ஆகியன மற்ற மூன்று கர்மேந்திரியங்கள். ஞானேந்திரியங்களுக்கு ஆசிரயமாக சப்தம் (காது) , ஸ்பரிசம் (சர்மம்) , ரூபம் (கண்) , ரஸம் அல்லது சுவை (வாய்) , கந்தம் என்ற வாஸனை (மூக்கு) என்ற ஐந்து சூக்ஷ்மமாக இருக்கின்றன அல்லவா? இந்த ஐந்துமே தன்மாத்ரைகள். இந்த தத்வங்கள் ஜடமாக விரிந்திருக்கும் ஆகாசம் (சப்தம்) , வாயு (ஸ்பரிசம்) , அக்னி (ரூபம்) , ஜலம் (ரஸம்) , பிருத்வி (கந்தம்) என்பவை ஐந்து மஹாபூதங்கள். இப்படியாக பிரகிருதி, மஹத், அஹங்காரம், மனம், ஐந்து ஞானேந்திரியம், ஐந்து கர்மேந்திரியம், பஞ்ச தன்மாத்திரைகள், பஞ்ச மஹாபூதங்கள் என்று மொத்தம் 24 இருக்கின்றன.1

இந்த இருபத்து நாலையும் அத்வைத வேதாந்தமும் ஒப்புக் கொள்கிறது. ஆனால் ஈச்வரன் என்கிற ஒருவன் (ஸகுண ப்ரம்மம்) தான் நிர்குணமான புருஷனையும் (ஆத்மாவையும்) பிரகிருதியையும் (மாயையையும்) சேர்த்து வைக்கிறவன் என்பதை அத்வைதம் சொல்கிறதே ஒழிய ஸாங்கியம் ஈச்வரனைப் பற்றிச் சொல்லவில்லை.

அத்வைதம் முதலிய எல்லா வேதாந்த ஸம்பிரதாயங்களும் ஒப்புக் கொள்ளும் ஸத்வ-ரஜோ-தமோ குணங்களை ஸாங்கியம் சொல்கிறது. தெளிந்த சாந்தமான உயர்ந்த நிலை ஸத்வம். ஒரே வேகமும் சலனமுமாக இருக்கும் நிலை ராஜஸம் (ரஜோகுணம்) . சோம்பல், தூக்கம், ஜடத்தன்மை ஆகியன தாமஸம் (தமோ குணம்) . கீதையில் “குணத்ரய விபாக யோக”த்தில் இவற்றைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறது. “முக்குணங்களையும் கடந்த ஆத்மாவிலேயே நிலையாக நில்லு” (நிஸ்த்ரைகுண்யோ பவ) என்று கீதை ஆரம்பத்திலேயே பகவான் சொல்கிறார் (II.45). ஸாங்கியத்திலும் முக்குணங்களின் ஏற்றத்தாழ்வால்தான் எல்லா அனர்த்தங்களும் உண்டாவதாகவும், இவற்றை ஸமமாக்கி நிறுத்திவிடவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறது. ஆனால் கீதாதி சாஸ்திரங்களைப் போல இப்படிப் பண்ணிக் கொள்வதற்கு ஈஸ்வர ஆராதனை, சரணாகதி, ஞானவிசாரம் மாதிரியான எதையும் அது சொல்லவில்லை.

புருஷனுக்குத்தான் ஜீவசைதன்யம் இருக்கிறது. பிரகருதி ஜடந்தான். அதனால் பிரகிருதி தானாக எதுவும் பண்ண முடியாது. அது 24 தத்வங்களாகப் பரிணமிப்பது சைதன்ய புருஷனின் ஸாந்நியத்தால்தான் என்றும், ஆனாலும் புருஷன் பிரகிருதி ஸம்பந்தமேயில்லாத கேவல ஞானஸ்வரூபி என்றும் ஒன்றுக்கொன்று முரணாகச் சொல்கிறது ஸாங்கியம்.

‘கேவலம்’ என்றால் பிறக் கலப்பு இல்லாமல் தன்னந்தனியாக, ஸ்வச்சமாக இருப்பது என்று அர்த்தம். இதற்கு அட்ஜெக்டிவ்தான் ‘கைவல்யம்’ என்பது. ‘கைவல்யம்’ என்பதே ஸாங்கியத்தில் மோக்ஷம் என்பதற்குக் கொடுத்துள்ள பெயர். ஜீவனானவன் இருபத்து நாலு தத்வங்களையும் தள்ளிவிட்டு, ஜடத்திலிருந்து விடுபட்டு, சைதன்யமான புருஷனின் தனித்த ஸ்வச்ச நிலைமையில் இருப்பதே கைவல்யம். (தமிழில் எப்படியோ “கேவலம்” என்றால் மட்டமானது, தாழ்வானது என்ற அர்த்தம் ஏற்பட்டு விட்டது) .

இப்படிப் புருஷன் என்கிற ஆத்மாவிலேயே நிலைத்து, மற்ற எல்லாவற்றையும் மாயை என்று தள்ளவிடுவதுதான் அத்வைதத்தின் லக்ஷயமும் ஆகும். ஆனால் அதற்கு ஆசார்யாள் கர்மா, உபாஸனை, (பக்தி) , அப்புறம் ஞான விசாரம் என்று வழிபோட்டுக் கொடுத்த மாதிரி ஸாங்கியத்தில் இல்லை. தள்ள வேண்டியதான 24 தத்வங்களின் விசாரம்தான் அதில் அதிகமிருக்கிறது.

இன்னொரு குறை. புருஷன் (ஆத்மா) காரியமில்லாத கேவல ஞானம், பிரகிருதி காரியமுள்ள ஆனால் ஞானமில்லாத, ஜீவசைதன்யமில்லாத ஜடம் என்று ஒரேடியாகப் பிரித்துவிட்டு, இந்த ஜடம் எப்படி மற்ற தத்வங்களாகப் பரிணமிக்க முடியும் என்பதற்குச் சரியாகக் காரணம் சொல்ல முடியாமல், ஜீவ சைதன்யமுள்ள புருஷனின் சாந்நியத்தால் மட்டுமே இது நடக்கிறது என்று ஸாங்கியத்தில் சொல்லியிருப்பது திருப்தியாக இல்லை. “காரியமேயில்லாதது புருஷன் என்று சொல்லிவிட்டு அதன் ஆதாரத்தில்தான் பிரகிருதி காரியம் செய்கிறது என்று சொல்கிறீர்களே! இது எப்படி?” என்று கேட்டால் ஸாங்கியர்கள், “ஒரு காந்தம் ஒரு இடத்தில் இருப்பதாலேயே இரும்புத் துண்டுகள் ஆடி அசையவில்லையா? காந்தம் அவற்றை அசைக்க வேண்டும் என்று உத்தேசிக்கிறதா என்ன? அது பாட்டுக்கு இருக்கிறது. அப்படி இருப்பதாலேயே இரும்புத் துண்டுகள் அசைகின்றன. இப்படித்தான் புருஷன் தன் பாட்டுக்கு இருந்தாலே போதும். அதன் சைதன்ய விசேஷத்தால் பிரக்ருதி ஆடுகிறது. புருஷனும் பிரகிருதியும் முடவனைப் பொட்டையன் தூக்கிக் கொண்டு போகிற மாதிரிச் சேர்ந்து காரியம் பண்ணுகின்றன. முடவனால் நடக்க முடியாது. குருடனால் பார்க்க முடியாது. அதனால் குருடன் தோள்மேல் ஏறிக்கொண்டு முடவன் வழிசொல்ல, அதன்படி குருடன் நடக்கலாம். இப்படித்தான் காரியம் பண்ண முடியாத, ஆனால் ஞான மயமான புருஷனைத் தூக்கிக் கொண்டு காரியம் செய்கிற, ஆனால் ஞான மயனான புருஷனைத்தூக்கிக் கொண்டு காரியம் செய்கிற, ஆனால் ஞானமில்லாத ஜடப் பிரகிருதி பிரபஞ்ச வியாபாரத்தைப் பண்ணுகிறது” என்கிறார்கள். இது ஏதோ கதையாக, உவமையாக நன்றாயிருக்கிறதே தவிர, அத்வைதத்தில் காரியமற்ற நிர்குணப் பிரம்மமே காரியமுள்ள ஸகுண ஈச்வரனாகவும் இருந்துகொண்டு மாயாசக்தியால் பிரபஞ்சத்தை நடத்துகிற மாதிரித் தோன்றுகிறது என்று பொருத்தமாகச் சொல்வது போல இல்லை.

அத்வைதத்துக்கும் ஸாங்கியத்துக்கும் இன்னொரு பெரிய வித்யாஸம், சுத்த ஞான ஸ்வரூபமான புருஷனைப் பற்றி ஸாங்கியம் சொன்ன போதிலும், இத்தனை ஜீவாத்மாக்களும் அந்த ஏக புருஷனே என்று அத்வைதமாகச் சொல்லாமல் அநேக புருஷர்கள் இருப்பதாகவே சொல்கிறது.

இப்படிச் சில குழறுபடிகள் இருந்தாலும் ஸாங்கியம் என்பது தத்துவங்களைக் கணக்கெடுத்துச் சொல்வதில் (‘ஸங்கியை என்றால் கணக்கெடுப்பது என்று அர்த்தம். ஜனஸங்கியை என்று ஸென்ஸஸ் எடுப்பதைச் சொல்கிறோமல்லவா? ‘ஸங்கியை’யிலிருந்து வந்ததுதான் ‘ஸாங்கியம்”) நமக்கு ஒரு ஆதார சாஸ்திரமாக இருக்கிறது.

கபில மஹரிஷி ஸாங்கிய மதத்துக்கு ஸூத்ரம் எழுதியிருக்கிறார். ஈச்வரகிருஷ்ணர் என்பவர் செய்த ஸாங்கிய காரிகையும், ஸாங்கிய ஸூத்ரத்துக்கு விஞ்ஞான பிக்ஷூ எழுதிய பாஷ்யமும் இந்த ஸித்தாந்தத்தின் முக்யமான நூல்களாகும்.2

கீதையில் பகவானே அநேக ஸாங்கிய கொள்கைகளைச் சொல்லியிருக்கிறார். ஆனால் ஸாங்கியம், யோகம் என்று இரண்டு மார்க்கங்கள் இருப்பதாக அவர் சொல்கிறபோது ஸாங்கியம் என்றால் வேதாந்தமான ஞான மார்க்கம் என்றே அர்த்தம். யோகம் என்பது கர்மயோகம்; ராஜயோகமல்ல.

ஸாங்கியத்தில் புருஷனைப் பிரகிருதியிலிருந்து பிரித்து உணரவேண்டும் என்று சொல்லி வெறுமனே விட்டு விட்ட இடத்தில் ஆரம்பித்து, எந்த மாதிரி உபாயத்தினால் என்ன ஸாதனைகளைப் பண்ணி எப்படி பிரிக்கிறது என்று ‘ப்ராக்டிக’லாக வழி சொல்லித் தருவதுதான் [ராஜ] யோக ஸாஸ்திரம். ஆனால் யோகத்திலே ஈச்வரனை ஒப்புக் கொண்டு ஈச்வர ஆராதனையையும் மனோநிக்ரஹத்துக்கு [மனம் அடங்குவதற்கு] வழியாகச் சொல்லியிருக்கிறது. சித்த ஓட்டத்தை நிறுத்துவதுதான் “யோகம்” என்ற பொதுப் பெயரில் வழங்குகிற பதஞ்ஜலி மஹர்ஷியின் ராஜயோகம். இப்போது Yoga, Yoga என்று மேல் நாடுகளில் அதுதான் கொடிகட்டிப் பறக்கிறது.

ஸாங்கியமும், யோகமும் சதுர்தச அல்லது அஷ்டாதச வித்தைகளில் சேராவிட்டாலும் அவையும் நம் சாஸ்திரங்களில் முக்கியமான இரண்டாக இருப்பதால் சொன்னேன்.

மீமாம்ஸையில் ஈச்வர பக்தி கிடையாதென்றாலும் அது வேதப் பிரமாணத்தை ஒப்புக்கொள்கிற மதம். அதே மாதிரி வேதத்தை ஒப்புக் கொண்டும், நிரீச்ரவாதம் பண்ணுவதாக ஸாங்கியம் இருக்கிறது.

பௌத்தம், அதைக் கண்டித்த நியாயம்- மீமாம்ஸை என்ற இரண்டு, மீமாம்ஸை மாதிரியே ஈச்வரனை ஒப்புக்கொள்ளாத போதிலும் சப்த (வேத) ப்ரமாணத்தை ஒப்புக் கொள்கிற ஸாங்கியம் – ஆகிய இந்த நாலிலிருந்தும் நம் ஆசார்யாள் எடுத்துக் கொள்ள வேண்டிய அம்சங்களை எடுத்துக் கொண்டு, கண்டிக்க வேண்டியதைக் கண்டித்துத் தள்ளிவிட்டு, இவை எல்லாவற்றுக்கும் இடம் கொடுப்பதும் இவை எல்லாம் உண்டாகக் காரணமானதுமான மூல வேதாந்தத்தையே ஸ்தாபித்தார். ஆசாரியாள் பௌத்தத்தில் முடிந்த முடிவாகச் சொன்ன உயர்ந்த ஞான நிலை, நிர்குணப் பிரம்மத்தின் ஸ்தானத்தில் ஸாங்கியத்தில் சொன்ன கேவலமான ஸ்வரூபமான புருஷன், மாயையின் ஸ்தானத்தில் அது சொல்கிற ப்ரக்ருதி, அதிலே சொல்லப்படும் 24 தத்வங்கள், மீமாம்ஸை சொல்லும் கர்மாநுஷ்டானம், நியாயத்திலே சொல்லப்பட்டுள்ள ஈச்வரன், அது சொல்லும் பிரமாணங்கள் இவற்றை யெல்லாமே ஒப்புக் கொண்டவர். ஆனால் இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அம்சத்தை மட்டுமே பிடித்துக் கொண்டு அதையே லக்ஷ்யமாக்கிவிட்டபோது அவற்றைக் கண்டித்து இந்த எல்லா அம்சங்களையும் சேர்த்து ஒழுங்கு படுத்திக் கொடுத்தார்.


1 இதற்கு அடுத்த உரையில் ‘பதார்த்தம்‘ என்ற பகுதியும் பார்க்க.

2 ஸாங்கிய காரிகைக்கு கௌடபாதரும் (ஆசார்யாளின் பரம குருவான கௌடபாதரேதான் இவர் என்றும் அல்லர் என்றும் இரண்டு கருத்துக்கள் உண்டு), ஆசார்யாளின் ஸூத்ர பாஷ்யத்திற்கு வியாக்யானம் எழுதிய வாசஸ்பதியும் எழுதிய விரிவுரைகள் ஸாங்கிய சாஸ்திரத்தில் முக்கியமாகக் கருதப்படும் வேறு இரு நூல்களாகும்.

சங்கரரும் இதர ஸித்தாந்தங்களும்

வைதிக காரியங்களை எல்லாம் விட்டு விட்டுத் தத்வம் என்ன என்று தியானம் பண்ணிக் கொண்டு உட்காருவதைத்தான் ஆசார்யாள் முடிந்த முடிவான நிலையில் சொன்னார். ஆனால் புத்தரைப்போல, ஆரம்ப தசையிலேயே எல்லாரும் வேதகர்மாவை விட்டுவிட வேண்டும் என்று சொல்லவில்லை. ஆரம்பத்தில் நிறையக் கர்மா பண்ணிப் பண்ணி, அதனால் சித்த சுத்தி அடைந்த அப்புறந்தான் அதைவிட்டு ஆத்ம விசாரம் பண்ணவேண்டும் என்றார். முதலில் மீமாம்ஸை சொல்கிற கர்மாவை ஒப்புக்கொண்டே கடைசியில் பௌத்தம் சொல்கிற கர்மாவை விட்ட நிலைக்குப் போகவேண்டும் என்றார்.

பௌத்தம், மீமாம்ஸை, ஸாங்கியம், நியாயம் எல்லாவற்றையும் ஒரு நிலையில் ஒப்புக்கொண்டு இன்னொரு நிலையில் ஆக்ஷேபித்தவர் நம் ஆசார்யர்கள். இவை ஒவ்வொரு அம்சத்தையே முடிந்த முடிவாகப் பிடித்துக் கொண்டிருந்தன என்றால் ஆசார்யாள் இந்த எல்லா அம்சங்களையும் சேர்த்து harmonise பண்ணி [இசைவித்து]க் கொடுத்தார்.

பௌத்தமும் பாரத ஸமுதாயமும்

என் அபிப்ராயப்படி ஒரு காலத்திலும் பௌத்த மதத்தை பூர்ணமாக அநுஷ்டித்தவர்கள் நம் தேசத்தில் ஏராளமாக இருந்துவிடவில்லை. இப்போது சில பேர் தியாஸாஃபிகல் ஸொஸைட்டியில் சேர்ந்திருக்கிறார்கள். ஆனாலும் ஹிந்துக்கள் மாதிரியேதான் பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள்; கல்யாணம் முதலானவற்றைப் பண்ணுகிறார்கள். ராமகிருஷ்ண பரமஹம்ஸாவின் பக்தர்களாகச் சிலர் இருக்கிறார்கள். இவர்களும் பெரும்பாலும் ஸம்பிரதாயமான ஆசாரங்களைத்தான் பின்பற்றி வருகிறார்கள். ஸ்ரீ ஸி. ராமாநுஜாசாரியார், இப்போது “அண்ணா” (ஸ்ரீ என். ஸுப்ரமண்ய அய்யர்) முதலானவர்கள் ராமகிருஷ்ணா மிஷனில் நெருங்கின ஸம்பந்தமுள்ளவர்களாயிருந்தாலும், ஸம்பிரதாயமான ஆசார அநுஷ்டானங்களை விடாதவர்கள்தான். இப்படியே பல பெரியவர்கள் தோன்றுகிறபோது அவர்களுடைய கருணை, ஞானம் முதலான குணங்களால் அநேகர் ஆகர்ஷிக்கப்படுகிறார்கள். இருந்தாலும் அவர்கள் பேரிலேயே ஏற்பட்டிருக்கிற ஸ்தாபனங்களில் ஸநாதன வைதிக ஆசாரங்களை கொஞ்சமோ நிறையவோ மாற்றியிருப்பதுபோல், இந்த பக்தர்கள் தங்கள் அகங்களில் செய்வதில்லை. பழைய ஆசாரங்களைத்தான் அநுஸரித்து வருகிறார்கள். காந்தி, காந்தீயம் என்று எல்லாரும் இவரையும் ஒரு மதஸ்தாபகர் மாதிரி ஆக்கி, ராம-கிருஷ்ணாதி அவதாரங்களைவிடக் கூட காந்தி தான் பெரியவர் என்றெல்லாம் சொன்னாலும், இவர்களிலும் பெரும்பாலோர் சொந்த வாழ்க்கையில் காந்தி சொன்ன மாதிரி விதவா விவாஹம், பஞ்சமர்களோடு [ஹரிஜனங்களோடு] தொட்டுக்கொண்டு இருப்பது என்ற விஷயங்களில் காந்தீயத்தைக் கடைப்பிடிக்காமல்தானே இருக்கிறார்கள்? சொந்த வாழ்க்கையில் தியாகம், ஸத்யம், பக்தி, தொண்டு முதலான நல்ல அம்சங்கள் காந்தியிடம் இருந்ததால் அவரிடம் எல்லாருக்கும் மதிப்புணர்ச்சி ஏற்பட்டதால் அவர் சொன்ன கொள்கைகள் எல்லாவற்றிலும் இவர்களுக்குப் பிடிப்பு ஏற்பட்டதாக ஆகவில்லை. இப்படித்தான் புத்தரைப் பற்றியும் அவருடைய தனி வாழ்க்கையின் ( personal life -ன்) உயர்வைப் பார்த்து, ‘ஒரு ராஜகுமாரர் நல்ல யௌவனத்தில், லோகத்தில் கஷ்டமில்லாமல் பண்ண வேண்டும் என்ற ஒரே எண்ணத்துக்காகப் பத்தினியையும், புத்ரனையும் விட்டுவிட்டு ஒடினாரே! என்ன வைராக்யம்? என்ன தியாகம்? எவ்வளவு கருணை?’ என்று அவரிடம் மதிப்பு வைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள். இதனால் அவர் சொன்ன பௌத்தக் கொள்கைகளை எல்லாம் அவர்கள் ஒத்துக்கொண்டு அநுசரிக்க ஆரம்பித்ததாக அர்த்தமில்லை. வைதிக அநுஷ்டானங்களை புத்தர் கண்டித்தார் என்பதற்காக பெரும்பாலோர் இவற்றை விட்டு விடவில்லை. வர்ண விபாகம் [ஜாதிப் பகுப்பு], மற்ற யக்ஞாதி கர்மாக்கள் இவற்றைப் பண்ணிக் கொண்டே புத்தரையும் அவருடைய personal qualities- காக [தனி மனித குணநலன்களுக்காக]க் கொண்டாடி வந்திருக்கிறார்கள். புத்தர் ஆசைப்பட்ட மாதிரி கூட்டம் கூட்டமாக எல்லாருமே புத்த பிக்ஷூக்களாகிவிடவில்லை. வைதிக ஸமயாசரங்களுடன் கிருஹஸ்தர்களாகவே இருந்து வந்தார்கள்.

அசோக சக்ரவர்த்தி தாம் பௌத்தராக இருந்து பௌத்தத்துக்காக எவ்வளவோ பண்ணியிருந்துங்கூட, ஸமூகத்தில் வைதிக தர்மங்களை மாற்றவில்லை. வர்ணாச்ரம தர்மத்தை அவரும் ரக்ஷித்தே வந்திருக்கிறார் என்று அவருடைய புகழ் பெற்ற ஸ்தம்பங்கள், Edicts -லிருந்து தெரிகிறது. புத்த பிக்ஷூக்களைத் தவிர கிருஹஸ்தர்கள் பெரும்பாலும் வேத வழியைத் தான் அநுசரித்திருக்கிறார்கள். ஈச்வரனைப் பற்றியும் தெய்வங்களைப் பற்றியும் புத்தர் சொல்லாவிட்டாலும், பெரிய புத்த பிக்ஷூக்கள் எழுதிய புஸ்தகங்களில்கூட ஆரம்பத்தில் ஸரஸ்வதி ஸ்துதி இருக்கிறது. தாரா, நீலதாரா மாதிரி அநேக தெய்வங்களை அவர்கள் வழிபட்டிருக்கிறார்கள். திபெத் பக்கங்களிலிருந்துதான் தேவதாராதனத்துக்கான ஏராளமான தந்த்ர நூல்கள் கிடைத்திருக்கின்றன. ஹர்ஷன், பில்ஹணன் முதலியவர்களுடைய ஸம்ஸ்கிருத கிரந்தங்களையும், இங்கே இளங்கோ முதலியவர்களின் காப்பியங்களையும் பார்த்தால் ஸமுதாயத்தில் பௌத்தர் செல்வாக்கோடு இருந்த காலங்களிலும் வைதிக ஆசாரங்களும், வர்ணாசிரம விதிகளும் வழுவாமலே அநுசரிக்கப்பட்டுத்தான் வந்தன என்று தெரிகிறது.

இப்போது இதற்கு மாறாகச் சீர்திருத்தக்காரர்களும் வியாஸர், ஆசார்யாள், ராமாநுஜர் ஆகியோரைப் புகழ்கிறார்கள். இப்போது நான் சொல்கிற அநேக ஆசாரங்களை ஏற்றுக்கொள்ளாத சீர்த்திருத்தக்காரர்கள்கூட என்னிடம் வருகிறார்கள் அல்லவா? என்னிடம் ஏதோ நல்லது இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பதால்தானே, நான் சொல்கிற கொள்கைகளை ஒப்புக் கொள்ளாவிட்டால்கூட ஒரு personal regard [மனிதர் என்ற தனிப்பட்ட முறையில் மரியாதை] காட்டுகிறார்கள்? இந்த மாதிரிதான் இந்த தேசத்தில் வைதிக சமயாசாரத்துக்கே கொஞ்சம் வித்யாஸமுள்ள கொள்கைகளை சொன்ன பெரியோர்களிடமும், ரொம்பவும் வித்யாஸப்பட்டு ஆக்ஷேபித்தே சண்டை போட்ட பெரியவர்களிடமுங்கூட, அவர்களுடைய சொந்த குணத்துக்காகவும் தூய்மையான வாழ்க்கைக்காகவும் எல்லோரும் மரியாதைச் செலுத்தி வந்திருக்கிறார்கள். ஆனாலும் மரத்திலே வஜ்ரம் பாய்ந்த மாதிரி நீண்ட நெடுங்காலமாக ஊறி உறைந்து உறுதிப்பட்டு விட்ட வைதிக ஸமய அநுஷ்டானங்களை விட்டு விடுகிற துணிச்சல் இந்தக் கடைசி ஒரு நூற்றாண்டு வரையில் நம் ஜனங்களுக்கு ஏற்படவில்லை. ஆகவே ஸகல ஜாதியினரும் அப்பன், பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து வந்திருக்கிற ஆசாரங்களைத்தான் விடாமல் தொடர்ந்து வந்திருக்கிறார்கள். புத்தர் ஸமாசாரமும் இப்படித்தான் என்பது என் அபிப்ராயம். இதனால் அவர் கொள்கைகளை உதயனர், குமாரிலர் முதலானவர்கள் கண்டனம் பண்ணினவுடன், புத்தருடைய கொள்கைகளை முழுக்க ஒப்புக் கொண்டிருந்த கொஞ்சம் பேரும்கூடச் சட்டென்று அதை விட்டுவிட்டு பழைய வைதிகமான வழிக்கே திரும்பி வந்திருக்கிறார்கள்.

பௌத்தத்தை வென்ற நியாமமும் மீமாம்ஸையும்

ஆசார்யாள் அவதாரம் பண்ணி புத்த மதத்தைக் கண்டனம் பண்ணினதால்தான் அது இந்த தேசத்தை விட்டே போயிற்று என்று பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது தப்பு. வேதத்தை ஆக்ஷேபித்த புத்த மதத்தை அவர் ஸ்வதந்திரமாகக் கண்டனம் செய்கிற இடங்கள், அவர் பாஷ்யங்களைப் பார்த்தால் மிகவும் சொல்பமாகவே இருக்கும். அதைவிட அநேக மடங்கு அதிகமாக நம் ஆசார்யாள், வேதத்தை அநுஸரித்த ஸாங்கியமதம், மீமாம்ஸக மதம் இவற்றைத்தான் கண்டித்திருக்கிறார். இவை இரண்டைச் சேர்ந்தவர்களும், ‘ஜகத்துக்கு கர்த்தா ஈச்வரன் அல்ல; அவன் பலதாதா அல்ல’ என்று சொல்கிறார்களே என்பதால், அவர்களுடைய தத்துவத்தைப் பற்றியே நிறைய விசாரித்து, ‘அப்படிச் சொல்வது தப்பு. வேத வாக்கியப்படி, பிரம்ம ஸூத்திரப்படி சொல்லியிருக்கிற லக்ஷணங்கள்தாம் உண்மையானவை’ என்று நிர்த்தாரணம் செய்தார். ‘ஈச்வரன் இல்லாமல் ஜகத் உண்டாகாது. நாம் செய்கிற கர்மாக்களே நமக்குப் பலனைக் கொடுக்கும் என்று சொல்ல முடியாது. ஈச்வரன்தான் பலனைக் கொடுக்கிறான். அவனுடைய சைதன்யந்தான், ஸங்கல்பந்தான் உலகத்தை சிருஷ்டித்து, அவரவர்களுடைய கர்மாக்களுக்கு ஏற்ற பலனைக் கொடுக்கிறது’ என்று ஸாங்கிய மதத்தையும் மீமாம்ஸக மதத்தையும் எதிர்த்து நிறைய எழுதியிருக்கிறார். புத்த மதத்தைக் கண்டனம் பண்ணி எழுதியிருக்கும்படியாகத் தோன்றும் சில இடங்களிலுங்கூட, ஸூத்ரம் அப்படி இருப்பதனால் அதற்கேற்றபடி பாஷ்யம் எழுதியிருக்கிறார். ஆசார்யாள் புத்தமதத்தைக் கண்டித்ததால் தான் புத்த மதம் இந்தத் தேசத்தைவிட்டே போயிற்று என்று சொல்வதற்கு அவர் பாஷ்யத்தில் ஆதாரம் இல்லை என்று சொல்ல வந்தேன்.

பின்னே புத்த மதம் நம் தேசத்தில் ஏன் இல்லாமல் போயிற்று? யாரோ கண்டனம் பண்ணித்தானே அது போயிருக்க வேண்டும்? அப்படி புத்த மதத்தை பலமாகக் கண்டித்தது யார்?

மீமாம்ஸகர்களும், தார்க்கிகர்களும்தான்.

தர்க்க சாஸ்திரத்தில் வல்லவர்கள் ‘தார்க்கிகர்’கள். பதினாலு வித்யைகளில் ‘மீமாம்ஸை’க்கு அடுத்ததாக வரும் ‘நியாய சாஸ்திர’த்தைச் சேர்ந்தே ‘தர்க்கம்’. நியாய சாஸ்திர வல்லுநர்களுக்கு ‘நையாயிகர்’ என்று பெயர். வியாகரணத்தில் வல்லவர்களுக்கு ‘வையாகரணி’ என்று பெயர். புராணத்தில் வல்லவர் ‘பௌராணிகர்’.

தார்க்கிகரான உதயனாசாரியர், மீமாம்ஸகரான குமாரில பட்டர் என்னும் இரண்டு பேருமே ஒவ்வொரு காரணத்திற்காக பௌத்த மதத்தை பலமாகக் கண்டித்திருக்கிறார்கள்.

ஈச்வரன் என்று ஒருத்தன் இல்லை என்று சொன்னதற்காக உதயனாசாரியார் புத்த மதத்தை பலமாகக் கண்டித்தார். மீமாம்ஸகர்களுக்கு வேதத்தில் சொல்லப்பட்ட கர்மாநுஷ்டானங்களே பிரதானம் என்று சொன்னேன். ‘ஈசுவரன் பலதாதா அல்ல’ என்று இவர்கள் சொன்னாலும், ‘நாம் செய்கிற கர்மாநுஷ்டானங்கள் பலனைத் தருகின்றன. வேத தர்ம சாஸ்திரங்களை எல்லாம் சிரத்தையுடன் அநுஷ்டிக்க வேண்டும்’ என்பவர்கள் அல்லவா? எனவே அநுஷ்டானம் ஒன்றுமே வேண்டாம் என்று புத்த மதத்தினர் சொன்னதற்காக, புத்த மதத்தை மீமாம்ஸகர்களும் பலமாகக் கண்டித்தார்கள். குமாரிலபட்டர் அதைக் கண்டித்துப் பல இடங்களில் நிறைய எழுதியிருக்கிறார். உதயனாசாரியர், குமாரில பட்டர் இவர்களால்தான் பௌத்தர்களுடைய கொள்கைகள் வித்வத் ஜனங்களுடைய மனஸில் பரவுவதற்கு இல்லாமல் நின்று போயின. பிறகுதான் நம் ஆசார்யாள் வந்தார்கள். பௌத்தத்தை ஏற்கெனவே உதயனரும் குமாரிலரும் கண்டித்து விட்டதால் அதை ஆசார்யாள் விசேஷமாக எடுத்துக் கொள்ள அவசியம் இருக்கவில்லை. இந்த உதயன-குமாரிலர்களின் ஸித்தாந்தங்களிலும் தப்புக்கள் இருக்கின்றன என்று எடுத்துக் காட்டி அவற்றைக் கண்டனம் செய்வதே ஆசாரியாளுக்கு முக்ய வேலையாயிற்று. ஆசாரியாள், ‘ஈச்வரன்தான் ஜகத்துக்கெல்லாம் கர்த்தா; அவன்தான் பலதாதா’ என்று நிர்த்தாரணம் பண்ணி வைத்தார்.

தப்பான விஷயங்களைக் கேட்டு உங்களுக்கு உண்மை தெரியாமல் போகக்கூடாது என்பதற்காக இதைச் சொன்னேன். குமாரிலபட்டர் ‘தர்க்கபாதம்’ என்னும் அத்தியாயத்தில் பௌத்தத்தை நிறையக் கண்டித்திருக்கிறார். உதயனாசாரியாரும் ‘பௌத்தாதிகாரம்’ என்று தம் நூலில் அவர்களைப் பற்றியே கண்டித்து எழுதியிருக்கிறார். புத்த மதம் இந்த தேசத்தில் நலிந்து போனதற்குக் காரணம் முக்யமாக இந்த இருவர்தான்; சங்கர பகவத்பாதாள் அல்ல. நாம் ஹிஸ்டரிப் புஸ்தகத்தில் படித்தது தப்பு .