விவாஹத்தின் உத்தேசங்கள்

பிரம்மசரிய ஆச்ரமத்தில் வேதங்களை ஒருவன் கிரஹித்து விடுகிறான். அப்புறம் ‘தியரி’யை ‘ப்ராக்டிகல்’ ஆக்க வேண்டும். வேதத்தில் சொன்ன கர்மாக்களை, யஜ்ஞங்களைப் பண்ணவேண்டும். அதற்கு தன்னோடு பிரிக்க முடியாத சொத்தாக ஒரு துணையைச் சேர்த்துக் கொள்ளவேண்டும். இவனுடைய வீட்டில் சமையல் முதலான காரியங்கள் நடப்பதற்கும், இவனுடைய இந்திரிய சுகத்தைப் பூர்த்தி பண்ணுவதற்காகவும் மட்டும் ஏற்பட்டவள் அல்ல பத்தினி என்பவள். தர்ம பத்தினி, யஜ்ஞ பத்தினி என்று அவளுக்குப் பெயர். இவன் செய்யும் தர்மத்தைக் கூட இருந்து உத்ஸாஹப் படுத்தி நடத்த வேண்டியவள் அவள், யஜ்ஞத்தில் இவன் கூட நிற்க வேண்டியவள். இப்படியாக தேவ சக்திகளை லோகத்துக்கு அநுகூலம் பண்ணித் தருகிற கர்மாக்களுக்கு அவள் பக்கபலமாயிருக்கிறாள்.

இவனுக்கு சமையல்காரியாக, இவனுக்கு சரீர ஸெளக்கியம் கொடுக்கிறவளாக இருக்கிறபோதுங்கூட அதிலேயே லோக க்ஷேமத்தைச் செய்கிறவள் அவள். எப்படியென்றால் : இவன் வீட்டுச் சமையல் இவனுக்கு மட்டுமில்லை. ‘ஆதித்யம்’, ‘வைச்வதேவம்’ என்பதாக தினமும் அதிதிக்கும், தீனர்களுக்கும், பிராணிகளுக்கும் கிருஹஸ்தன் அன்னம் போட வேண்டும். அதற்கும்தான் அவள் சமைப்பது. இவளுக்குப் பிரஜை உண்டாவதும் தம்பதியுடைய ஸெளக்கியத்தினால் ஏற்பட்டதென்பதோடு முடிந்துவிடுவதில்லை. வேத தர்மம் என்றைக்கும் லோகத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, வேத தர்மத்தை அநுஷ்டிப்பதற்கே இவள் பிரஜைகளைப் பெற்றுத் தரவேண்டும். புத்ரோத்பத்தியைக் கூட இப்படி எதிர்கால தர்ம வாழ்வை உத்தேசித்த ஸம்ஸ்காரமாகப் பண்ணுவதை வேறெந்த மதத்திலும் பார்க்க முடியாது.

இப்படியாக ஐஹிக [இஹலோக] சம்பந்தம் மட்டுமின்றி ஆத்ம சம்பந்தமும், லோக க்ஷேம உத்தேசமும் கொண்டதாக இருக்கிறது நம் மதத்தில் பதி-பத்னி உறவு. மற்ற மதங்களிலும் சர்ச் மாதிரியான இடத்தில் தெய்வ ஸாக்ஷியாகத்தான் விவாஹம் நடக்கிறதென்றாலும் அதற்கு இத்தனை உயர்ந்த லட்சியங்கள் கொடுக்கப்படவில்லை. புருஷனை மேலும் ஸம்ஸ்காரங்களில் செலுத்தி சுத்தப் படுத்தவோ, ஸ்திரீயைப் பதிவிரதத்தினால் பூர்ணத்வமே அடையப் பண்ணவோ அந்த விவாஹங்களில் இடமில்லை. மற்ற தேச விவாஹங்கள் ஒரு குடும்ப அல்லது சமூக ஒப்பந்தம் (contract) மாதிரித்தான். இங்கே அது ஆத்ம பந்தம். பந்தப்பட்டிருக்கிற ஆத்மாவை விடுவிப்பதற்காகவே ஏற்பட்ட பந்தம். அதனால்தான் இங்கே அது ஆத்ம பந்தம். அதனால்தான் இங்கே divorce (விவாஹரத்து) என்பதற்கு இடமேயில்லாமலிருக்கிறது. அந்த எண்ணம் வந்துவிட்டாலே நமக்குப் பாபம்.

இத்தனை உத்தமமான விவாஹ ஸம்ஸ்காரத்தின் முக்யமான மூன்று உத்தேசங்கள் : ஒன்று, வேதத்தைப் படித்து முடித்து வந்த ஒருத்தனின் குடும்பம் நடக்க வழி செய்து கொடுத்து, அவன் வேத தர்மங்களை அநுஷ்டிப்பதற்குத் துணை சேர்த்துக் கொடுப்பது. இரண்டு, நல்ல ஸம்ஸ்காரமுடையவர்களுக்கே உத்தமப் பிரஜைகள் பிறப்பார்களாதலால், ஸ்திரீ புருஷர்கள்  உத்தம தம்பதிகளாக இருந்து, உன்னதமான வேத தர்மத்துக்கு எதிர்கால வாரிசுகளை உற்பத்தி செய்து தருமாறு பண்ணுவது; அதாவது வரப்போகிற காலத்தில் லோகத்தில் உயர்ந்த மனோபாவமுள்ள ஜனங்கள் இருக்கும்படியாக ஏற்பாடு செய்வது. மூன்றாவது ஸ்திரீகள் கடைத்தேறப் பெரிய பிடிப்பாக ஒன்றை உண்டாக்கிக் கொடுப்பது. பரிபக்குவமடையாத நிலையில்தான் புருஷன் யக்ஞாதி அநுஷ்டானங்களைப் பண்ணுவது. அவன் அப்படிச் செய்வதற்குத் துணையாக வருகிற பத்தினியோ தன்னுடைய பாதிவிரத்யத்தாலேயே அவனையும்விடப் பரிபக்குவம் அடைந்து விடும்படி நம்முடைய வைதிக தர்மம் பண்ணிவிடுகிறது! இந்த மூன்றோடு, அல்லது மூன்றுக்குப் பிறகு நாலாவதாக வருவதுதான் தம்பதியின் இந்திரிய ஸெளக்கியம் என்பது.

முக்கியமான மூன்றும் எடுபட்டுப் போய் நாலாவது மட்டுமே முழுக்கப் பிரதானமாகிவிட்ட இன்றைய கால ஸ்திதியிலிருப்பவர்கள் நான் சொன்ன சாஸ்திரோக்தமான அந்த உத்தேசங்களைப் புரிந்து கொண்டால் நாம் நல்லதற்கு மாறுவதற்கு வழி பிறக்கும். அப்படிப் புரிந்து கொள்வதற்கு சந்திரமௌலீச்வரர் அநுக்ரஹம் செய்யவேண்டும்.

பாணிக்ரஹணம் (மணமகன் மணமகளுடைய கையைப் பிடித்தல்) , மாங்கல்ய தாரணம், ஸப்த பதீ என்று புது தம்பதி ஏழடி எடுத்துவைப்பது இவை விவாஹத்தில் பிரதானமான அம்சங்கள். மாங்கல்ய தாரணம் வேதத்திலேயே உண்டா, இல்லையா என்று பெரிய சர்ச்சைகள் செய்வதுண்டு. இது அவசியமில்லாத சர்ச்சை. எத்தனையோ ஆயிரம் காலமாக இருந்து வந்திருக்கிற மாங்கல்ய தாரணம் அவசியம் செய்ய வேண்டியதே!

சிக்கனத்துக்கு மூன்று உபாயம்

பண சம்பந்தத்தால் சாஸ்திரோக்த வாழ்க்கையே கெட்டுப் போய்விட்டது. சாஸ்திரோக்தமாக மாறுவதற்கு நாம் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றில்லாமல் பண்ணிக் கொண்டு விட்டால் போதும்.

எனக்கு மூன்று விதத்தில் செலவைக் குறைக்கலாம் என்று தோன்றுகிறது (1) எல்லோரும் — நல்ல பணக்கார வீட்டு ஸ்திரீகளுள்பட — பட்டு முதலான பகட்டுத் துணிகளைவிட்டு கடைசித்தரமான வஸ்திரந்தான் வாங்குவது என்று வைத்துக் கொள்ள வேண்டும். (2) காப்பிக்குத் தலைமுழுகிவிட்டு காலையில் கோதுமைக் கஞ்சிதான் சாப்பிடுகிறதென்று வைத்துக் கொள்ளவேண்டும். அல்லது மோர் சாப்பிடலாம். காப்பி சாப்பிடுவது என்ற ஒரு பழக்கத்தைப் பண்ணிவிட்டதால் Substitute (அதை மாற்ற ஏதாவது ஒன்று) வேண்டுமல்லவா? தக்ரம் (மோர்) அமிருதமென்று வைத்திய சாஸ்திரம் சொல்கிறது. இப்படிச் செய்வதனால் அநேக குடும்பங்களில் செலவில் நூற்றுக்கு அறுபது பங்கு குறைந்துவிடும் என்று தோன்றுகிறது. ‘அரிசி எவ்வளவு ரூபாய்க்கு வாங்குகிறோம்? பால், காப்பிக் கொட்டை எவ்வளவு வாங்குகிறோம்?’ என்று கணக்கு பார்த்தால் பால், காப்பிக்கொட்டைக்குத்தான் அதிக செலவு. (3) விவாஹத்துக்காகப் பணத்தைக் கொண்டு வா என்று வரதக்ஷிணை வாங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இப்படிப் பண்ணினால் டம்பம் போவது ஒன்று; நல்ல ஆரோக்கியமும் மனஸின் அபிவிருத்தியும் ஏற்படுவது இன்னொன்று; மூன்றாவதாக சாஸ்திரோக்தமான வாழ்க்கையையும் வழக்கங்களையும் நிலை நிற்கும்படிப் பண்ணுவது.

விவாஹத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்ததில் இத்தனை கதையும் வந்து சேர்ந்து விட்டது. இன்னொரு கதை விட்டுப் போச்சு. அதையும் சொல்கிறேன். புருஷப் பிரஜைகளைவிட பெண் பிரஜைகள் அதிகமாக இருப்பதற்கு ஒரு காரணம் சொன்னேன். மெய்வருந்தி உழைக்காமல் உட்கார்ந்து வேலை செய்வது காரணம் என்றேன். இன்னொன்று தோன்றுகிறது. அதையும் சொல்கிறேன். எனக்குத் தோன்றுவது மட்டுமல்ல, சாஸ்திரத்திலேயே சொல்லியிருப்பதுதான். அதாவது ஒளபாஸனாதிகளைப் பண்ணிக் கொண்டு ஆசார சீலனாகப் புருஷன் இருந்தால் அவன் ஆரோக்கியமாகவும் நல்ல மனவிருத்தியோடும் இருப்பதோடு ஆண் சந்ததி உண்டாகும்.

பிராசீனமான ஆசாரம் உடையவர்களுக்கு துர்பலம் இல்லை; வியாதி இல்லை. பிராசீன ஆசாரத்தை இப்பொழுது கொஞ்சமாவது அநுஷ்டித்து வருகிறவர்கள் ஸ்திரீகள்தாம். அதனால் அவர்களிடம் உண்டாகிற பிரஜைகளிலும் அதிகமாகப் பெண்களே இருக்கிறார்கள். புருஷர்களும் அதிகமாகப் பிராசீன ஆசாரத்தை வைத்துக் கொண்டிருந்தால் இப்போதைவிட ஆண் ஸந்ததி அதிகமாக உண்டாகும். இரண்டும் ஸமவிகிதமாகும். ஸ்தல தரிசனம், தீர்த்த ஸ்நானம், பூஜை முதலியவைகளைப் புருஷர்கள் பண்ணி வந்தார்கள். இப்பொழுது அவர்களுக்கும் சேர்த்து ஸ்திரீகள் பண்ணுகிறார்கள்! புருஷர்கள் ஆசாரத்தை விட்டதனால் புருஷப் பிரஜைகள் குறைவாக ஆகிவிட்டார்கள். ஆகவே பாக்கி எதற்காக இல்லாவிட்டாலும் குடும்ப வாழ்க்கை எகனாமிகலாக நன்றாக இருக்க வேண்டுமென்பதற்காவது புருஷர்கள் ஆசார அநுஷ்டானங்களை வைத்துக் கொள்ள வேண்டும். தாரித்திரிய நிவர்த்திக்கும் வரசுல்க [வரதக்ஷிணை] நிவர்த்திக்கும் ஆசார அநுஷ்டானந்தான் வழி.

கூட்டங்கூடி, சீர்திருத்தம் என்று சொல்லிக் கொண்டு யோஜிக்காமல் கையெழுத்துப் போடுகிறார்கள். அந்த மாதிரிக் காரியங்களெல்லாம் தற்கால சாந்தியானவையே. பரிகாரம் நிரந்தரமாக இருப்பதற்கு இதுதான் மருந்து.

உற்றமும் சுற்றமும் செய்ய வேண்டியது

ஆகையால் இந்த வைதிக ஸம்ஸ்காரங்களில் செலவை எப்படியும் குறைத்தாக வேண்டும். இதில் பந்து மித்ரர்கள் செய்யக்கூடிய ஒரு உபகாரமும் உண்டு. அதாவது, கல்யாணம், உபநயனம் என்று அழைப்பு வந்தால் நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் போகத்தான் வேண்டும் என்பதில்லை. பிரயாணத்துக்குச் செலவிட்டு ரயில்காரனும், பஸ்காரனும் வாங்கி கொள்வதில் என்ன பிரயோஜனம்? அதையெல்லாம் சேர்த்து வைத்துக் கல்யாணம் பண்ணிகிறவனுக்கு ரொக்கமாக அனுப்பிவிட வேண்டும். இதனால் விருந்துச் சாப்பாடு என்று ஒரு செலவு குறைவது ஒரு பக்கம்; அவசியமான செலவும் சீரும் செய்ய கல்யாணம் பண்ணிகிறவனுக்கு வரவினம் வலுப்பது இன்னொரு பக்கம்!

செலவில் சாஸ்திரோக்தம்

வயசு விஷயத்தில் சாஸ்திரோக்தமாகப் பண்ணுவதற்கு முன்னால் பண விஷயத்தில் சாஸ்திரோக்தமாகப் பண்ணுவதற்காவது இப்போதே ஆரம்பித்து விடவேண்டும். முன்னேயே சொன்னாற் போல் சாஸ்திரப்படி விவாஹம் என்பது பணத்தைப் பற்றிய விஷயமில்லை.

வேறொன்றும் சாஸ்திரோக்தமாகப் பண்ண நமக்கு மனஸோ, தைரியமோ இல்லாவிட்டாலும் கலியாணத்தை economic problem -ஆகப் பண்ணாமல் இது ஒன்றையாவது சாஸ்திரப்படி வெகு சிக்கனமாக நடத்தப் பார்க்கலாம்.

விவாஹம் என்பது ஸந்தியாவந்தனம் மாதிரியான செலவில்லாத ஒரு வைதிக கர்மாதான். இதில் நூதன தம்பதிக்கு [புது மணமக்களுக்கு] புது வஸ்திரம் – நூலே போதும் – தங்கத்தில் லேசாக திருமாங்கலியம், ரொம்பவும் நெருங்கின பந்துக்களை மட்டும் அழைத்துச் சாப்பாடு போடுவது, முஹூர்த்த சமயத்தில் ஒரு மங்கள வாத்திய சப்தம் கேட்கப் பண்ணி அதற்காக ஏதோ கொடுப்பது, வாத்தியார் தக்ஷிணை ஆகியவற்றை மட்டுமே செய்தாலே போதும். இது பூர்ணமாக சாஸ்திர சம்மதமானதுதான். இப்படிப் பண்ண ஒரு குமாஸ்தாவுக்கும் முடியாமல் போகாது.

பணம் கொழித்தவர்களுங்கூட தடபுடல் பண்ணாமல் இப்படிச் சிக்கனமாகவே பண்ணவேண்டும். ஏனென்றால் அவர்கள் பண்ணுகிற டாம்பிகம் மற்றவர்களுக்கு ஒரு கெட்ட precedent [முன்மாதிரி] ஆகிவிடுகிறது! ஆகையால் கச்சேரி, ஃபீஸ்ட் என்று தாங்கள் செலவிடக் கூடிய இந்தப் பணத்தைக் கொண்டு வசதியில்லாத ஒரு ஏழைப் பெண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும். இப்படிப் பண்ணினால் தண்டச் செலவாகப் போகக்கூடியதை தர்மக் கரென்ஸியாக மாற்றிக் கொண்டதாகும். ஒவ்வொரு பணக்காரரும் தம் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணுகிறபோதே அதில் செலவைக் கட்டுப்படுத்தி இன்னொரு ஏழைப் பெண் கண்ணைக் கசக்காமல் வழி திறந்து விடலாம். ‘மாஸ்’ உபநயனம் மாதிரியே பல பேருக்கு ஒரு பொது இடத்தில் பொதுச் செலவில் கல்யாணங்கள் நடத்த ஏற்பாடு செய்யலாம். இதனால் அவரவருக்கும் செலவு நிரம்பக் குறையும்.

இப்போதெல்லாம் கல்யாண மண்டபங்களின் வாடகையே பாதிச் செலவை விழுங்கி விடுகிறது என்கிறார்கள். எத்தனை சின்ன கல்யாணமானாலும் இக்கால பிளாட் குடித்தனத்தில் வீட்டிலேயே பண்ண முடியாதுதான். அதனால் தர்மிஷ்டர்கள் ஒன்று சேர்ந்து வசதியில்லாதவர்களுக்காக அங்கங்கே சின்ன சின்ன கல்யாண மண்டபங்கள் கட்டித்தர வேண்டும்.

கல்யாணம் என்றாலே வெட்கப்பட்டுக்கொண்டு ஓடின பெண்கள், அப்புறம் [கல்யாணம்] ஆகுமா ஆகுமா என்று வாய்விட்டுக் கதறுகிற பரிதாப நிலை ஏற்பட்டு, இப்போது நிலைமை முற்றி கல்யாணமே இல்லாமல் உத்தியோக புருஷியாக ஸ்வயேச்சையாக இருக்கலாமென்று ஏற்பட்டிருக்கிறது. இதனால் நம் பண்பாட்டின் ஜீவநாடியான ஸ்திரீதர்மம் வீணாகி வருகிறது. நடக்கக் கூடாததெல்லாம் ஒவ்வோரிடத்தில் நடந்து விடுகிறது.

இதிலே வயிற்றெரிச்சல் என்னவென்றால், இந்தத் தப்புக்களைத் திருத்தல் வேண்டும் என்ற வேகம் யாருக்கும் வராதது மட்டுமில்லை; ‘ஸைகாலஜி’, அது இது என்று சொல்லிக் கொண்டு இந்தத் தப்புக்களையே விஸ்தாரம் பண்ணி, அவற்றுக்கு ஸமாதானமும் சொல்லி, கதைகள் எழுதி, ஸினிமாக்கள் எடுத்து, இதனாலேயே இதை நன்றாக அபிவிருத்தியும் பண்ணிக்கொண்டு வருகிறார்கள்! கேட்டால் (கேட்பதற்கே ஆளில்லை!) ‘எழுத்து ஸ்வதந்திரம், கல்பனை ஸ்வதந்திரம், கலா ஸ்வதந்திரம்’ என்பார்கள். சாஸ்திரத்தைத் தவிர எல்லாவற்றுக்கும் குடியரசு யுகத்தில் ஸ்வதந்திரம் ஏற்பட்டிருக்கிறது!

விவாஹம் சாஸ்திரப்படிப் பொருளாதார விஷயமில்லை என்பதில் ஆரம்பித்தேன்.

‘எல்லாம் ஸரி! ஆனால் சாஸ்திரத்தில் நாலு நாள் கல்யாணம் சொல்லியிருக்கிறதே! நாலு நாள் விருந்துச் சாப்பாடு, சத்திர வாடகை என்றால் செலவாகுமே!’ என்கலாம்.

நாலு நாள் கல்யாணத்தைப் பற்றிச் சொல்கிறேன்: சாஸ்திரத்தில் தாரித்திரியம் உண்டாக்குவதற்காக கர்மாநுஷ்டானங்கள் சொல்லப்படவில்லை. விவாஹம் பண்ணுகிறது ஒரு நாள்தான். அப்புறம் மூன்று நாள் மாப்பிள்ளை தன் சொந்த வீட்டில் பிரம்மசரிய தீக்ஷையோடு இருக்கவேண்டும். அந்தக் காலத்தில் மேளம் வேண்டாம். நலுங்கு வேண்டாம். மாற்ற விரும்புகிறவர்கள் இப்படி மாற்றலாம். இதுதான் வாஸ்தவமான சீர்திருத்தம் (reform). பிள்ளையகத்துக்காரர் இதைச் செய்யலாம். “ஒருநாள் கல்யாணம் உங்கள் அகத்தில் செய்வேன். பாக்கி மூன்று நாள் எங்கள் அகத்தில் செலவில்லாமல் பண்ணுவேன்” என்று சொல்லிவிடலாம். கல்யாணம் ஆன மறுநாள் கிருஹஸ்தன் ஒளபாஸனாக்னியைத் தன் வீட்டிற்குக் கொண்டு வர வேண்டும். அப்படி ஒளபாஸன குண்டத்தை எடுத்துக் கொண்டு வரும் போதும், வண்டியில் வைக்கும் போதும், நுகத்தடியில் மாடுகளைப் பூட்டும்போதும், வழியில் வைக்கும் போதும், மறுபடியும் வண்டியில் வைக்கும்போதும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் இருக்கின்றன. இப்பொழுது மந்திரோக்தமாகவே மோட்டாரிலோ, ரயிலிலிலோ வைத்துக் கொண்டு வரலாம். அதனால் ஒரு தோஷமும் இல்லை. அந்த நாளில் பக்கத்து ஊர்களிலேயே சம்பந்தம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அதனால் ஒளபாஸன குண்டத்தை கொண்டு போவது ஸெளகரியமாக இருந்தது. அல்லது நாலு நாள் கலியாணத்தை இன்னொரு விதம் பண்ணலாம். இப்பொழுது கலியாணம் நடத்துகிற இடத்திலேயே பிள்ளையகம் என்று ஒன்று வைத்துக் கொள்கிறோமே, அங்கேயோ, வாடகை அதிகமானால் யாராவது உறவினர் வீட்டிலோ மூன்று நாளும் பண்ணவேண்டியதைப் பண்ணலாம். யாரையும் சாப்பிடச் சொல்லவேண்டாம். ஸம்பந்திக்குக்கூடச் சாப்பாடு போட வேண்டாம். உபாத்தியாயருக்கு மட்டும் ஸம்பாவனை பண்ணினால் போதும். ஒரு நாளில் எல்லாவற்றையும் முடித்துவிடுவது சாஸ்திர சம்மதம் இல்லை.

விவாஹத்துக்கு ஸம்வத்ஸர தீக்ஷை, அதாவது விவாஹமாகி ஒரு வருஷம் பிரம்மசரிய நியமம்; பிறகே சாந்தி கல்யாணம் – என்கிற நிலைமை பிற்பாடு மாறி, நாலு நாலாவது இப்படி நியமத்தோடு இருப்பதாக ஏற்பட்டது. கழுதை கட்டெறும்பாகத் தேய்ந்து அப்புறம் கட்டெறும்பும் இல்லை என்று இப்போது நடப்பதுபோல் ஒரே நாளோடு தீர்த்து விடக்கூடாது. மூன்று நாள் ஒளபாஸனம் நிச்சயம் செய்ய வேண்டும்.

தெலுங்கர்கள் கல்யாணத்தில் வதூ-வரர்கள் [மணமக்கள்] வெள்ளை நூல் வஸ்திரத்தை மஞ்சளில் நனைத்துக் கட்டிக் கொள்ளுகிறார்கள். அது சிக்கனமாக இருக்கிறது. எத்தனை தனிகரானாலும் அதைத்தான் கட்டிக் கொள்ள வேண்டுமென்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். உத்தர தேசத்திலும் ஸாதாரணமாக ஸாமான்ய வஸ்திரங்களைத்தான் பெண்கள் கட்டிக் கொள்ளுகிறார்கள். இங்கே நாமும் அப்படிச் செய்ய ஆரம்பிக்கலாம்.

பிரவேச ஹோமம் என்று விவாஹ காலத்தில் ஒன்று செய்வதுண்டு. இது வரன் தன் வீட்டில் பிரவேசிப்பதற்குப் பண்ணுவது. விவாஹாக்கினியை எடுத்துக் கொண்டுபோய் ஒளபாஸன ஹோமத்தைத் தன்னுடைய வீட்டில் அவன் பண்ண வேண்டும். அங்கே பண்ணுவதற்குத்தான் ஒளபாஸனம் என்று பெயர். ஸெளகர்யத்தை உத்தேசித்தும் சாஸ்திர சம்மதமாகவும் நான் முன்னே சொன்னபடி பிள்ளையகத்தார் வந்து தங்கும் ஜாகையிலே செய்யலாம். கோவிலுக்குப் போய் ஒரு-நாள்-கல்யாணம் பண்ணிவிட்டு வந்து விடுவது என்பது தப்பான காரியம். பார்ட்டி, ரேஸ் என்று செலவழிக்கிற பணக்காரர்களும் நாலு நாள் ஒரு சாஸ்திரோக்த சடங்கு செய்யப் பிடிக்காததாலே இப்போதெல்லாம் கோயிலில் போய் தாலிகட்டி ஒரு வேளையோடு முடிக்கிறார்கள். பணக்காரர்கள் அப்படிச் செய்ய ஆரம்பித்தால் ஏழைகளும் பின்பற்றிக் கெட்டுப்போவார்கள். நான் சொல்வதை அநுஸரித்தால் நாலு நாள் பண்ணுவதில் செலவு இல்லை.

பெண் ரிதுமதியான பின் விவாஹம், அதுவும் ஒரு நாள் கலியாணம், மறுநாளே அவளை [புக்கத்துக்கு] அழைத்துப் போவது என்பதில் ஏற்பட்டிருக்கிற இன்னொரு விபரீதந்தான் விவாஹத்தன்றே சாந்தி கல்யாணம் பண்ணுவது.

விவாஹமானவன் திரிராத்திர தீக்ஷையோடு இருக்க வேண்டுமென்பது அத்யாவசியம். அதாவது மூன்று நாட்களும் பூர்ண பிரம்மசரிய நியமத்தை அநுஷ்டிக்க வேண்டும். பிரம்மசரியம் எட்டு விதம். எப்போதுமே பிரம்மசரியம் இருக்க முடியாதவனும் சிற்சில தினங்களில் அந்த நியமத்துடன் இருக்கும்படியாக இந்த எட்டு விதிக்கப்பட்டிருக்கின்றன. அதமபக்ஷமாக, கல்யாணமான முதல் மூன்று தினங்கள் இப்படி இருக்க வேண்டும். இதுவும் போய், அன்றே நிஷேகம் என்பது மஹாதோஷம்.

மறுபடி மறுபடி சம்பந்திகளைக் கூப்பிடுவது, சாப்பாடுக்குச் செலவழிப்பது, மேளத்துக்குச் செலவழிப்பது என்றில்லாமல் ஒன்றாக பண்ணிவிடலாமே என்று இப்படிப் பட்ட தோஷத்தைச் செய்கிறார்கள். சாஸ்திரத்தில் இல்லாத தடபுடல்களைக் கொண்டு வந்து விட்டு, அப்புறம் இவைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகப் பெண்ணின் கல்யாணம் வரையில் [அவளுடைய ஸஹோதரனான] பிள்ளையின் பூணூலை ஒத்திப் போடுவது, கல்யாணத்தன்றே ஸாந்தி கல்யாணத்தையும் [மந்திரோக்தமாகக் கூட இல்லாமல்] பண்ணிவிடுவது என்றெல்லாம் முறை கெட்டுச் செய்து வருகிறோம்.

எடுத்துச் சொல்லிப் பயனுண்டா?

மிளகாய்க்கு நெய்விட்டுக் காரத்தை சமனம் பண்ணுகிறாற்போல் பிரகிருதி வேகங்களுக்கு விவாஹாதி ஸம்ஸ்காரங்களால் சமனம் உண்டாக்கப்படுகிறது. மிளகாயே இல்லாமல் இல்லை. அது இருக்கிறது. ஆனால் அதன் காரம் குடலை எரிக்காதபடி நெய் விட்டிருக்கிறது. லௌகிகமான, சரீர சம்பந்தமான ஸெளக்யம் கிருஹஸ்தாச்ரமத்தில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது கொழுந்து விட்டெரியாமல் ஏகப்பட்ட ஸம்ஸ்காரங்களால் புருஷனை ஓர் அளவில் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஸ்திரீக்கோ பாதிவ்ரத்யத்தோடு [கற்போடு] கூடின கிருஹரக்ஷணை என்ற ஒன்றே இத்தனை ஸம்ஸ்காரத்துக்கும் ஸமமாயிருக்கிறது. இது நமக்கு மனஸில் பட்டுவிட்டால் போதும். நாம் இந்த தேசத்தில் ஆத்ம சிரேயோ லக்ஷியம் எந்த நாளும் வீணாகி விடக் கூடாது என்று ஹ்ருதய சுத்தத்தோடு நினைத்து பகவானைப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டு, அருள் துணையை நம்பி, எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருந்தால் என்றைக்காவது ஒரு நாள் வழி பிறக்கும். இப்போது போகிற போக்கிலே முடிவான ஒரு நிலையில் போய் முட்டிக் கொண்டு கடைசியில் இது அத்தனையும் அனர்த்தம்தான் என்று என்றைக்காவது ஜனங்கள் விழித்துக் கொள்கிறபோது, மீள்கிற வழி எது என்று தெரிவதற்காக நாம் சாஸ்திரத்திலுள்ளதைச் சொல்லிக் கொண்டேதான் இருக்க வேண்டும்.

‘வர்ணாச்ரமம், பால்ய விவாஹம் முதலானதுகளைப் பற்றிச் சொல்லி என்ன பிரயோஜனம்? அநேகமாக இவற்றில் முக்காலே மூணுவீசம் போயே போய்விட்டதே! பல விஷயங்களில் ராஜாங்கச் சட்டமே சாஸ்திரத்துக்கு மாறாக வந்துவிட்டதே!’ என்று கேட்கலாம். வாஸ்தவம்தான். அநேக விஷயங்களில் சட்டமே வந்து கையைக் கட்டித்தான் போடுகிறது.

Secular State என்று நம் ராஜாங்கத்துக்குப் பேர் சொல்கிறார்கள். ‘மதச்சார்பில்லாதது’ என்று இதற்கு அர்த்தம் சொல்கிறார்கள். அதாவது ஸமூஹ (social) விஷயங்களில் ஸர்க்கார் தலையிடலாமே தவிர, மத (religious) விஷயங்களில் தலையிடக் கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால் நம்முடைய மதத்திலே இப்படி மதம்-சமூகம் -வீடு-தனி மனுஷ்யன் என்று தனித்தனியாகப் பிரிக்காமல், எல்லாவற்றையும் சேர்த்துப் பின்னி integrate பண்ணி [ஒருங்கிணைத்து] அல்லவா வைத்திருக்கிறது? அதனால் சமூக விஷயம் என்று ஸர்க்கார் போடுகிற சட்டமும் மதத்தையே அல்லவா பாதிக்கிறது? இதை ஒப்புக்கொள்ளாமல் ‘இன்னின்ன விஷயங்களோடு மதம் முடிந்துவிடுகிறது; மற்றதெல்லாம் ராஜாங்கம் ஸம்பந்தப்பட்ட ஸமூஹ விஷயம்’ என்கிறார்கள்.

சரி, எல்லா மதத்திலுமே சில அம்சங்களிலாவது ஸமூஹ ஸமாசாரங்களும் வந்து விடுகிறதே, அவற்றின் விஷயத்திலும் இந்தக் கொள்கையைக் கடைபிடிக்கிறார்களா என்று பார்த்தால் — இங்கே தான் ரொம்ப வேதனையாயிருக்கிறது. ‘ஸெக்யூலர் ஸ்டேட்’டில் எல்லா மதமும் ஸமம் என்று சொன்னாலும், சிறுபான்மை மதஸ்தர்கள் social reform சட்டங்களை ஆக்ஷேபித்து, “இது எங்கள் மதத்தில் சொன்னதற்கு விரோதமாயிருக்கிறது. இது குரானுக்கு விரோதம்; கிறிஸ்துவக் கோட்பாட்டுக்கு முரணானது” என்று சொன்னால் உடனே அந்த மதஸ்தர்கள் விஷயத்தில் இந்தச் சட்டங்களுக்கு விலக்கு தந்துவிடுகிறார்கள். இம்மாதிரிச் சிறுபான்மை மதஸ்தருக்கு மட்டும் குடும்பக்கட்டுப்பாடு போன்ற ஒன்றில் விலக்குத் தந்தால் எதிர்காலத்தில் அவர்களே பெரும்பான்மையாகி விடவும் இடமேற்படுகிறது. ஆனால் ‘ஸெக்யூலர் ஸ்டேட்’ டாக இருந்தும் ஹிந்து மத விஷயமாக மட்டும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தீர்மானம் ஏற்பட்டிருக்கிறது. ‘மைனாரிட்டி ரிலிஜன்’காரர்கள் போல் நம்மிலே ஒரு சூடு பிறந்து ஆட்சேபிக்கிறவர்களே இல்லை. அப்படியே நாலு, பேர் எதிர்ப்புத் தெரிவித்தாலும், பிற்போக்குக்காரர்கள், பத்தாம் பசலிகள் (obscurantist) என்று அவர்களுக்குப் பெயர் கொடுத்துவிட்டுச் சட்டத்தைக் கொண்டு வந்துவிடுகிறார்கள்.

‘ஸெக்யூலர் ஸ்டேட்’ என்றால் மதச் சார்பில்லாத ஸர்க்கார் என்றே அர்த்தம். மத விரோதமான என்று அர்த்தமில்லை. ஒரு மதம் மட்டுமின்றி எல்லா மதமுமே அபிவிருத்தியாவது ஸெக்யூலர் ஸ்டேட்டுக்கு ஸம்மதமானதுதான்’ என்றெல்லாம் பெரிசாகப் பிரஸங்கம் பண்ணுபவர்கள் பண்ணினாலும், பிரத்யக்ஷத்தில் ஹிந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களுக்கு விரோதமில்லாத காரியங்களைப் பண்ணுவதுதான் இங்கே ஸெக்யூலர் ஸ்டேட் என்று நடந்து வருகிறது! தர்க்காஸ்து நிலம் மாதிரி ஹிந்து மதம் இருந்து வருகிறது.

“இது தெரிந்தும் ஏன் ஸாத்தியமில்லாத சாஸ்திர விஷயங்களை நச்சு நச்சு என்று சொல்கிறாய்?” என்றால் —

இப்போது இப்படி இருந்தாலும் இன்னும் எப்படி எப்படி போகும் என்று சொல்ல முடியாது. ‘அமெரிக்காவில் டாலரே விளைகிறது; அங்கே ஜனங்களுக்கு ஒரு குறையும் இல்லை’ என்றுதானே போன தலைமுறையில் நினைத்தோம். ஆனால் இப்போது எப்படியிருக்கிறது? அந்த தேசத்து ஜனங்களுக்கு இருக்கிற குறை மாதிரி, சூன்ய உணர்ச்சி மாதிரி, வேறு யாருக்குமே இல்லை என்று தெரிய வருகிறது. டாலரினாலேயே இத்தனை குறையும் என்றும் தெரிகிறது! லௌகிக ஸெளக்யத்தின் உச்சாணிக்குப் போன பிறகுதான் அவர்கள் இதிலே ஆத்மாவை எப்படி சூன்யமாக்கிக் கொண்டு விட்டோம் என்று விழித்துக் கொண்டிருக்கிறார்கள். டாலரில் மிதந்ததால் எத்தனை குடி, கொள்ளை, கொலை, விபசாரம் முதலிய தப்புகளில் போய் விழுந்து விட்டோம் என்று உணர ஆரம்பித்திருக்கிறார்கள். கடைசியில் மனஸில் நிம்மதியில்லையே, சாந்தி இல்லையே என்று நம்முடைய யோகம், ஞான விசாரம், பஜனை முதலானவற்றுக்கு கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

இதிலிருந்து, இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு நல்லதாகவே தோன்றி வந்த ஒன்று, அப்புறம் தலைதெறிக்கப் போன பிறகு அனர்த்தமானது என்று தெளிவாகிறது; அப்போது ஜனங்கள் விமோசனத்துக்கு ஓடுகிறார்கள் என்று தெரிகிறதல்லவா? இப்படியே இந்த இரண்டு தலைமுறைகளாக நல்லது என்று நினைத்து, பெரும்பாலும் நல்ல எண்ணத்துடனேயே, நம் தேசத்தில் பண்ணப்பட்டிருக்கிற சாஸ்திரத்துக்கு முரணான விஷயங்களாலும் எத்தனை ஹானி ஏற்பட்டிருக்கிறது என்பதை இன்னொரு தலைமுறை உணரக்கூடும். இப்போதுகூட ஆங்காங்கே இந்த உணர்ச்சி கொஞ்சம் தலை தூக்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஆரம்பத்தில் நன்றாகியிருந்து குதிரைக்குட்டி மாதிரியாயிருந்து போகப் போக ஸ்வயரூபத்தை காட்டுகிற மாதிரிதான் சீர்திருத்தக் காரியங்கள் நடந்திருக்கின்றன என்று முடிவிலே முட்டிக்கொள்கிற ஸ்திதியில் தெரிய வரலாம். கீதையில் பகவான் இரண்டு வித ஸெளக்கியங்களைச் சொன்னார். ‘யதக்ரே விஷமிவ, பரிணாமே அம்ருதோபமம்’ என்பது ஒன்று. ஆரம்பத்தில் விஷம் போல இருந்துவிட்டு முடிவிலே எது அமிருதமாகிறதோ அதுதான் உயர்ந்த ஸாத்விக ஸெளக்யம். முதலில் ஆலஹாலம் வந்து விட்டுப் பிறகு அமிருதம் வந்தது இப்படித்தான். சாஸ்திரம், தனி மநுஷ்யன், குடும்பம், ஸமூஹம் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறதே என்று ஆரம்பத்தில் விஷம் மாதிரிக் கசந்தாலும், போகப் போக இதுதான் எல்லாக் கட்டுகளும் தெறித்துப் போகிற ஆத்ம ஸ்வதந்திரம் என்கிற பேரானந்தத்தைத் தருகிற அமிருதம் என்று தெரியும். இதிலே விஷம் தற்காலிகம்; அமிருதம் சாச்வதம். இன்னொரு ஸெளக்யம், ‘யதக்ரே அம்ருதோபமம், பரிணாமே விஷமிவ’ என்பது. முதலில் அமிருதமாகத் தித்தித்து விட்டுப் போகப்போக விஷமாகிவிடுவது. இங்கே அம்ருதம் தாற்காலிகம்; விஷம் சாச்வதம். அமெரிக்காவில் டாலர் இப்படித்தான் முதலில் அம்ருதமாயிருந்துவிட்டு இப்போது விஷமாகியிருப்பதை அவர்களே தெரிந்து கொண்டிருக்கிறார்கள். இப்படியே இங்கும் எதிர்காலத்தில் தனி மனித நிறைவு, ஸமூஹக் கட்டுக்கோப்பு இரண்டும் ஹானியடைந்து, சாஸ்திர விரோதமாகப் பண்ணினதெல்லாம் முதலில் அம்ருதமாயிருந்தாலும் பிறகு இப்படி விஷமாகி விட்டதே என்று புரிந்து கொண்டு அழுகிற காலம் வரக்கூடும். அப்போது அமிருதத்தைத் தேடுகிறவர்களுக்கு அது எங்கேயிருக்கிறது என்று தெரியவேண்டும் அல்லவா? இப்போது நாம் பண்ணுகிற மாறுதல்கள்தான் முற்றி அவர்களுக்கு விஷம் தலைக்கேறிய ஸ்திதி ஏற்படப் போகிறபடியால் இதை (அமிருதம் எங்கேயிருக்கிறது என்பதை) அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது நம் கடமை. அதற்காகத்தான், இப்போது நாமே இந்த சாஸ்திரோக்தமான ஸமாசாரங்கள் என்ற அமிருதத்தைக் குடிக்காவிட்டாலும், பின்தலைமுறைகளில் நம்மைவிட க்ஷீண தசைக்குப் போய் விஷம் தலைக்கேறி விமோசனம் தேடுகிறவர்கள் தேடும்போது அவர்களுக்கு உதவுவதற்காகவாவது இந்த ஸமாசாரங்களை (குழி தோண்டிப் புதைத்து விடாமல்) சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். இந்த தீபம் வருங்காலத்திலாவது வழிகாட்ட விடவேண்டும்.

இந்த எண்ணத்தில்தான், காரியத்தில் செய்ய முடியாமல் கையைக் கட்டிப் போட்டிருந்தாலும் இன்னம் வாயைக் கட்டவில்லையே என்பதால் சாஸ்திர விதிகளை ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

பெண்கள் உத்தியோகம் பார்ப்பது+

அப்புறம், கல்யாணமும் ஆகாமல் வெறுமே வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிற பெண், படித்து வேலைக்குப் போய் இரண்டு காசுதான் கொண்டு வரட்டுமே, கல்யாணச் செலவுக்கும் அது உதவுமே என்கிற எண்ணத்தில் பெண்களை உத்யோகத்துக்கு அனுப்புகிற வழக்கம் ஆரம்பித்தது. முதலில் வெட்கப்பட்டுக் கொண்டு, அவளே சம்பாதித்துக் கல்யாணம் பண்ணிக் கொள்ளும்படியாக விடுவது தகப்பனாருக்கு ரொம்ப அவமானம் என்ற உணர்ச்சியோடு வேலைக்கு அனுப்பினார்கள். நல்ல யௌவனத்தில் சித்த விகாரங்களைத் தூண்டி விடுகிற சூழ்நிலையில் இப்படிப் பெண்களை விடுகிறோமே என்று அப்போது கொஞ்சம் பயம், கவலை எல்லாமும் இருந்தது. ஆனாலும் போகப் போக என்ன ஆகியிருக்கிறது என்றால் ‘குளிர்’ விட்டு விட்டது. ஜனகர் மாதிரியான ராஜ ரிஷிகளே கன்யாப் பெண்ணைக் கல்யாணமாகாமல் வைத்துக் கொண்டிருப்பது வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிற மாதிரி என்று பயந்ததாகப் புராணங்களில் பார்க்கிறோம். அந்த விவஸ்தை இப்போது கெட்டுவிட்டது; கட்டுவிட்டுப் போச்சு! அவமானமாக முதலில் நினைத்தே இப்போது நாகரிக முன்னேற்றத்துக்கு அடையாளமாக ஆகிவிட்டிருக்கிறது. பெண்ணைப் பெற்றவர்கள் தங்கள் பொறுப்பு உறைக்காமல், கூச்சம், கவலை, பயம் எல்லாவற்றையும் விட்டுவிட்டுத் தங்கள் பெண் பெரிய உத்தியோகம் பார்க்கிறாள் என்று பெருமைப்படுகிற அளவுக்கு நம் தர்மம் ஹீன ஸ்திதி அடைந்திருக்கிறது. உத்யோகம் பார்க்கிற பெண்கள் என்னிடம் ப்ரமோஷன் ஆவதற்கு அநுக்கிரஹம் கேட்கிறதும், நானும் கண்டும் காணாத மாதிரி இருந்து கொண்டு எல்லோருக்கும் நல்ல சாமியாராகப் பெயர் வாங்கிக்கொள்வதாகவும் ஆகியிருக்கிறது!

சீர்திருத்தக்காரர்கள், ‘ஸ்திரீகள் காலேஜில் படித்து உத்தியோகம் பண்ணுவது பெரிய முன்னேற்றம்; இதனால் முன்னே பண்ணின அநீதி போய்விட்டது’ என்கிறார்கள். முன்னே ஸ்திரீகளுக்கு அநீதி பண்ணவேயில்லை என்பது என் கட்சி. அப்படிப் பண்ணியிருந்தால், புருஷனுக்குத்தான் பண்ணியிருந்தது என்றுகூட வேடிக்கையாகச் சொல்வேன். ஏன்? ஒரு புருஷப் பிரஜையானவன் பிரம்மச்சரிய ஆசிரமம் முடித்ததிலிருந்தே கிருஹஸ்தாச்ரம தர்மங்களை மேற்கொண்டு ஒளபாஸனாதி ஸம்ஸ்காரங்களைப் பண்ணினால்தான் அவனுடைய ஜன்மா கடைத்தேறும். ஸ்திரீப் ப்ரஜைக்கோ புருஷன் பண்ணுகிற ஸம்ஸ்காரங்களுக்கெல்லாம் மேலாக அவனிடம் இவள் மனஸை அர்ப்பணம் பண்ணி பதிவிரதையாயிருப்பதே ஜன்மாவைக் கடைத்தேறச் செய்கிறது. இது பெண்களுக்கு இழைத்த அநீதி என்று சீர்திருத்தக்காரர்கள் சொன்னாலும், எனக்கோ புருஷனைவிட பெண்ணுக்குத் தான் ரொம்பவும் ஸாதகமாக நம் சாஸ்திரத்தில் பண்ணியிருக்கிறது என்று தோன்றுகிறது. ஏனென்றால் அநேக ஸம்ஸ்காரங்களையும், அப்புறம் சிரவண, மனன, நிதித்யாஸனாதிகளையும் பண்ணித்தான் ஒரு புருஷனுக்கு மனோநாசம் உண்டாகி ஆத்ம ஸாக்ஷாத்காரம் ஸித்திக்கிறது. அந்த ஸாதனையின் முடிவான மனோநாசம் ஒரு பதிவிரதைக்குப் பதியிடம் சரணாகதி பண்ணுவதாலேயே ரொம்ப சீக்கிரத்தில் ஈஸியாக ஏற்பட்டு விடுகிறது. பதியின் இஷ்டத்தை அநுஸரிப்பதால் இவளுக்குத் தன்னிஷ்டம், மானாவமானம் எல்லாம் போய் அஹங்காரம் கரைந்து, மனோநாசத்துக்கு ரொம்பவும் கிட்டே போய் விடுகிறாள். மனஸை எங்கேயோ பூர்ணமாக அர்ப்பணம் பண்ணி, சரணாகதி என்று இருந்துவிட்டால் அப்புறம் மனோநாசம் பக்கத்திலேயே தானே? இன்றைக்கு உத்தியோகம் பார்க்கிற பெண்கள் பெறுகிற ப்ரமோஷனுக்கெல்லாம் மேலான ப்ரமோஷன் இப்படி அவளை ஆத்மபரிசுத்தி பண்ணி உச்சத்துக்குத் தூக்குவதுதான். இப்படி பதியிடம் மனஸை அர்ப்பணம் பண்ணியே தான் மஹா பெரிய ரிஷிகளை விட அதிகமான சக்திகளை நம் தேசத்து பதிவிரதா ஸ்திரீகள் பெற்றிருக்கிறார்கள். அவள் பெய் என்றால் மழை பெய்கிறது என்று திருவள்ளுவர் சொல்கிறார். ஸூரியனை உதிக்காதே என்று அவள் சொன்னால் உதிப்பதில்லை! செத்த புருஷனை யமதர்ம ராஜாவிடமிருந்து அவளால் திரும்பவும் வாங்கிக் கொண்டு வர முடிகிறது. எந்த ரிஷிக்கும், தெய்வத்துக்குமே கூட கொடுக்காத உசந்த ஸ்தானத்தை இப்பேர்ப்பட்ட பதிவிரதைகளுக்குத்தான் நம் சாஸ்திரமும் சம்பிரதாயமும் தருகிறது. அவள் தெய்வங்களின் மேலேயே தண்ணியைத் தெளித்து தன் குழந்தைகளாக்கிக் கொண்டு விடுகிறாள் என்று புராணத்தில் பார்க்கிறோம். ஆகையால் பெண் எப்படியிருந்தால் நிஜமான உயர்வைப் பெறுவாளோ, அதைச் சொல்லி அப்படிப்பட்டவளைக் கோவில் எடுத்துக் கும்பிடுகிற நம் சாஸ்திரம் ஒரு நாளும் ஸ்திரீயை மட்டம் தட்டவில்லை. சீர்திருத்தவாதிகள்தான் அவளை அப்படி வளர முடியாதபடி மட்டப்படுத்துகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

ஆக விவாஹம் என்பது புருஷனை சுத்தப்படுத்துகிற அநேக ஸம்ஸ்காரங்களில் ஒன்று என்றால், ஸ்திரீயையோ அத்தனை ஸம்ஸ்காரங்களும் இல்லாமலே அவற்றின் முடிந்த பயனான பூர்ணத்துவத்தைப் பெறப் பண்ணுவதாகும். இப்பேர்ப்பட்ட ஸம்ஸ்காரத்தின் ஸாரத்தை விட்டுச் சக்கையாக ஒப்புக்கு ஏதோ இப்போது நடக்கிறது. விவாஹம் என்ற ஸம்ஸ்காரமும் கிருஹஸ்தாச்ரமும் லாவண்யம், வீர்யம், இந்திரிய ஸெளக்யம் இவற்றை மட்டும் குறித்த விஷயமல்ல என்பதையும், ஜன்மா கடைத்தேற வழியாகவே அது வகுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டால் சாஸ்திரம் சொல்லியிருப்பதே சரி என்ற அறிவு உண்டாகும்.

பெண்கள் உத்தியோகம் பார்ப்பதால் பொருளாதார ரீதியிலேயே உண்டாகியிருக்கிற ஒரு அனர்த்தத்தை யாரும் கவனித்ததாக தெரியவில்லை. Employment problem [வேலையின்மைப் பிரச்சனை] -ஐ தான் சொல்கிறேன். சில வருஷங்களுக்கு முந்தி ‘கலியாணமாகிற வரையில் பெண் வேலைப் பார்க்கட்டும்; இதனால் அவள் கல்யாணமாகவில்லையே என்பதை நினைத்து நினைத்து அழுது கொண்டு வீட்டோடு இருக்காமல் அவளுக்கு ஒரு போக்காக இருக்கும். அதோடுகூட, பணசம்பந்தமானதாகப் பண்ணப்பட்டுவிட்ட கல்யாணத்தில் வரதக்ஷிணை, மற்ற செலவுகளுக்கு அவளுடைய சம்பாத்தியத்திலிருந்தே மிச்சம் பிடித்துச் சேமிக்கலாம்’ என்ற எண்ணத்தில் ஒரு பெண்ணை விவாஹம் வரையில் வேலைக்கு விடுவதாகவும், அப்புறம் நிறுத்தி விடுவதாகவும் இருந்தது. புக்ககத்துக்காரர்களும் புருஷனும் அந்தப்பெண் கல்யாணத்துக்குப் பிறகு வேலைக்குப் போவதை நிஷித்தமாக [இழுக்காக] நினைத்தார்கள். ஆனால் வரவர இந்த பிராம்மண சமூகத்துக்கு இந்த ஒரு நூற்றாண்டாக ஏற்பட்டிருக்கிற பணத்தாசையில் இதுவும் மாறி, இப்போது கல்யாணமான பிற்பாடும் அவள் உத்தியோகத்திற்குப் போவது என்ற வழக்கம் வந்திருக்கிறது. இதனால் சிசு ரக்ஷணை [குழந்தை வளர்ப்பு] முதலான தாய்க் குலத்தின் உயர்ந்த கடமைகள் கெட்டுப்போய், வெள்ளைக்கார தேசங்கள் மாதிரி குடும்பம், பெற்றோர், குழந்தை என்பதெல்லாமே ஹ்ருதயபூர்வமாகக் கட்டுப்பட்டில்லாமல் பிஸினஸ் போல் ஆகியிருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். எகனாமிக் [பொருளாதார] ரீதியில் இதனால் உண்டாகியிருக்கிற கெடுதலைப் பார்க்கலாம். இப்போது வேலையில்லை, வேலையில்லை என்று லட்சக்கணக்கில் ஆண்கள் திண்டாடுகிறார்கள். அதே சமயம் இன்னொரு பக்கம் பல குடும்பங்களில் புருஷன் உத்தியோகம் பார்ப்பது மட்டும் இல்லாமல் ஸ்திரீயும் வேலைக்குப் போகிறாள். அவன் மட்டில் வேலைக்குப் போய் இவள் வீட்டிலிருந்தால் இவள் பார்க்கிற வேலை உத்யோகமில்லாத ஒரு ஆணுக்கு கிடைக்குமல்லவா? ஆனாலும் தன் பொண்டாட்டியைத் தன் சம்பாத்தியத்துக்குள்ளேயே கட்டும் செட்டுமாக வைத்துக் காப்பாற்றுவதுதான் கௌரவம் என்றில்லாமல் புருஷன் அவளையும் வேலைக்கு விட்டு அவளும்தான் காசு கொண்டு வரட்டுமே என்று இருக்கிறான். முதலில் தாயார் தகப்பனார் மானமில்லாமல் பெண்களை வேலைக்கு விடுகிறார்கள். அப்புறம் புருஷனும் அதையே பண்ணுகிறான். அந்த பெண்ணும் இதை ஒரு பெருமையாகவே நினைக்கிறது. ஆபீஸுக்குப் போய் உத்தியோக புருஷியாக இருந்த பிறகு வீட்டில் அடைபட்டுக் கிடக்கப் பிடிக்க மாட்டேன் என்கிறது. ஸ்வயமாக ஸம்பாதித்தால் புருஷன் தட்டிக் கேட்காமல் தன் இஷ்டப்படி செலவழித்துக் கொள்ளலாமே என்று இருக்கிறது.

வீட்டோடு இருந்தால் அடைபட்டுக் கிடப்பது என்று அர்த்தமேயில்லை. நம்முடைய சாஸ்திரங்கள், புராணங்கள் தாய் பாஷையிலும் ஸம்ஸ்கிருதத்திலும் இருப்பதற்குக் குறைவேயில்லை. அவற்றிலே ஒரு ருசியை ஏற்படுத்திக் கொண்டால் நாளெல்லாம் படித்தாலும் போதாமல் ஜன்மா முழுதும் படித்துக் கொண்டு ஸந்தோஷமாக இருக்கலாம். பல பெண்கள் ஸத்ஸங்கமாகச் சேர்ந்து ஒவ்வொரு வீட்டில் இவற்றைப் படிக்கலாம். கிளப் என்றோ ஸ்தாபனம் என்றோ போர்டு போட்டுக் கொண்டு காரியாலயம் மாதிரி இல்லாமல் வீடுகளிலேயே இதைச் செய்யவேண்டும். மெம்பர், பிரஸிடென்ட் மாதிரிப் பதவிகள் உண்டாகாமல், இவற்றுக்காகப் போட்டிச் சண்டைகள் இல்லாமல் இருக்க வேண்டுமென்பதால் [இப்படிச்] சொல்கிறேன். இதோடுகூட மடம், ஆலயம் முதலியவற்றுக்காக சுத்தமான மஞ்சள் குங்குமம் பண்ணிக் கொடுப்பது, முனை முறியாத அக்ஷதை பொறுக்கிக் கொடுப்பது போன்ற காரியங்களைச் செய்தால் பெரிய சமூகத் தொண்டாகவும் மதத் தொண்டாகவும் இருக்கும். ஸ்திரீத்வம் [பெண்மை] என்ற உயர்ந்த சரக்கு பறிபோகாமலே இப்படிப் பட்ட ஸத்காரியங்களைப் பண்ணி வந்தால் வீட்டோடு இருப்பது அடைபட்டிருப்பதாக இருக்காது. ஆத்ம ஸ்வதந்திரத்துக்கு வழியாக ஆனந்தமாகவே இருக்கும். ஸ்திரீத்வத்தையும் இழந்து கொண்டு துராசைகளைப் பெருக்கிக் கொண்டு உத்யோகத்திற்குப் போவதைவிட இதுதான் சிரேயஸ். ஸ்வாபாவிகமாகவும் [இயல்பாகவும்] பெண்களுக்கு எடுத்தது இதுவே. வீட்டில் அடைபட்டில்லை என்று ஆபீஸுக்குப் போவதால் எத்தனை தப்புக்களுக்கு இடம் கொடுத்துப் போகிறது? ‘பெண் விடுதலை’ என்று பெரியதாகச் சொன்னாலும் ஆபீஸில் எத்தனை பேருக்கு அடங்கிப் பதில் சொல்லும்படி இருக்கிறது? இப்படியிருப்பதில் வாழ்க்கையில்தான் நிம்மதி உண்டா? நிம்மதியாகச் சமைத்துப் போட்டுச் சாப்பிடுவது; குழந்தை குட்டிகளின் வாத்ஸல்யத்தை பூர்ணமாக அநுபவிப்பது என்பதெல்லாம் இந்த ‘விடுதலை’ யில் உண்டா?

சொல்லி என்ன பிரயோஜனம்? அவரவர்க்கும் ஸ்வயநலம் என்று அவரவரும் நினைத்துக் கொண்டிருக்கிற ஒன்று தான் முக்கியமாக இருக்கிறதே தவிர சமூகத்தில் பிறத்தியார் கஷ்டப்பட நாம் காரணமாய் இருக்கக் கூடாது என்ற நியாய உணர்ச்சி கொஞ்சங்கூட இல்லை. புருஷன் பெண்டாட்டி என்று சில குடும்பங்களில் இரட்டை சம்பாத்தியமும், வேறு சில குடும்பங்களிலோ இரண்டு பேரில் ஒருத்தருக்கும் உத்தியோகம் இல்லாமல் பரிதாபமாகவும் இருக்கிற நிலையில் கல்யாணமான பிறகாவது பெண்கள் வேலைக்குப் போவதை நிறுத்திக் கொண்டால், அத்யாவசியமாக வேலை பார்த்தே ஜீவிக்க வேண்டிய ஒரு புருஷனுக்கு அந்த வேலை கிடைத்து அந்தக் குடும்பம் உருப்படுமே என்ற பிரக்ஞை வரவேண்டும். பெண்களை சரி-சமம் பண்ணுகிறோம் என்கிறவர்களும் இந்த விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.

சரி நிகர் சமம் என்கிற வாதம் எதில் வரலாம், எதில் வரக்கூடாது என்ற வியவஸ்தையே இக்காலத்தில் தெரியவில்லை. ஒவ்வொன்றும் ஒரு விதமாக இருக்க வேண்டும். அப்படித்தான் பிரபஞ்ச வாழ்க்கை ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. ‘எல்லாம் ஒரே விதமாக ஆகவேண்டும்; அதுதான் சரி சமம்’ என்ற வாதமே அடியோடு தப்பு. அப்படி ஆக்கினால் இயற்கையான வாழ்க்கைமுறையே பாழாகிவிடும். ஒன்றொன்றும் இயற்கைப்படி, ஸமூஹத்தின் மொத்த வாழ்வுக்கு அநுகூலமாக எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருப்பது தான் அதற்கும் நிறைவு. அதிலேதான் அதற்கு நிஜமான ஸெளக்கியம் உண்டு. இந்த நிறைவை விட்டு விட்டு, செயற்கையாக ஸமத்வம் என்று ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு அதற்காக ஓடுவதில் individual ஆகவும் [தனி நபரளவிலும்] நிஜமான நிறைவு அவரவர்க்கு உண்டாவதில்லை; குடும்பம், ஸமூஹம் இவற்றின் வாழ்க்கையும் இதனால் கெட்டே போகிறது.

இயற்கைப்படி பெண்கள்தானே பிள்ளை பெற வேண்டும் என்று வைத்திருக்கிறது? நாம் எவ்வளவு ஸமத்வச் சண்டை போட்டாலும் அதை மாற்றமுடியாதல்லவா? பிள்ளையைப் பெற்றவளே அதை சவரக்ஷணை பண்ணுவது, அதற்காக கிருஹலக்ஷ்மியாக இருப்பது என்பதுதான் பெண்களுக்கு ஸ்வாபாவிக (natural) தர்மம். அதைப் பண்ணுவதால் அவர்களுக்கு ஒரு குறைவும் இல்லை. அதை விட்டதால் உயர்வும் இல்லை. அதனால் ஸமப்படுத்துகிற பேச்சுக்கு இங்கே அர்த்தமேயில்லை.

வாஸ்தவமான சீர்திருத்தம்

இத்தனை வயசுக்குக் கீழே பண்ணக் கூடாது என்று flooring (அதம பக்ஷ வரம்பு) வைத்த சட்டத்திலே இத்தனை வயசுக்கு மேலே போகக் கூடாது என்று ceiling -ம் [உச்ச வரம்பும்] வைத்திருக்கக் கூடாதா என்று நினைக்கும்படியாக இருக்கிறது!

இப்போது 25 வயசு, 30 வயசு என்று பெண்கள் கலியாணமாகாலிருப்பதற்குச் சட்டத்தைக் குறை சொல்வது துளிக்கூட நியாயமே இல்லை. நம்முடைய அசிரத்தைதான் இன்றைய கோளாறுகளுக்கெல்லாம் காரணம். பூணூல் போடுவதற்கு சாரதா சட்டம் இல்லையே! ஏன் முப்பது வயசுக்குக் கல்யாணத்தோடு சேர்த்து [பூணூல்] போடுகிறோம்? சாஸ்திர விஷயத்தில் நமக்கு அத்தனை அலக்ஷியம்!

இந்தப் பொதுவான அசிரத்தையோடு, கல்யாணம் பூணூல் முதலான காரியங்களைப் பெரிய தடபுடல் உத்ஸவமாகச் செய்வதற்குப் பணம் தயார் பண்ணிக் கொள்வது, எல்லாவற்றிலும் பெரிய தீமையாக கலியாணம் என்றால் ஒரு ஆயுஸுகால சேமிப்பும் போதாத அளவுக்கு வரதக்ஷிணைக்காகவும், சீர் செனத்திக்களுக்காகவும் செலவழிக்க வேண்டியிருப்பது ஆகியனவும் சேர்ந்து சாஸ்திரோக்தமான கால கெடுவின்படி இந்த ஸம்ஸ்காரங்களைப் பண்ணுவதற்கேயில்லை என்ற ஸ்திதிக்குக் கொண்டு விட்டிருக்கிறது*.

வேத சாஸ்திரங்களில் இவற்றுக்குப் பண ஸம்பந்தமே கூறப்படவில்லை. இது நாமாகப் பண்ணிக் கொண்ட அனர்த்தம். நான் மேலே சொன்ன எட்டுக் கல்யாணங்களில் எதிலுமே பெண்ணையும் கொடுத்துப் பணமும் கொடுப்பதாக இல்லை. ஆஸுர விவாகத்தில்கூட பெண் வீட்டுக்காரர்களுக்குத் தான் பணம் கொடுத்துப் பதிலுக்கு பெண் வாங்கிக் கொள்கிறான். அந்த வியாபாரமே அஸுரத்தனம் என்றால், “பெண்ணையும் கொடுத்துப் பணத்தையும் கொடு” என்று கேட்பது நம் தர்ம சாஸ்திரக்காரர்கள் கற்பனைகூடச் செய்து பார்க்காத ஒன்றுதான். ‘கன்யா சுல்கம்’ என்பதாக பெண்ணுக்குக் கொடுப்பதையாவது கொஞ்சம் சாஸ்திரத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறதே தவிர, பிள்ளை வீட்டாருக்கு வரத‌க்ஷிணை கொடுப்பதற்கு அதில் ஆதாரமேயில்லை. நிஜமான கல்யாணச் சீர்திருத்தம் வரத‌க்ஷிணை ஒழிப்புதான்.

அதைப் பண்ணாமல் வயசு விஷயத்துக்குச் சீர்திருத்தம் கொண்டு வந்ததில் நம்முடைய குடும்ப-சமூக வாழ்க்கை முறையே புரண்டு விட்டிருக்கிறது. பெண்கள் உத்யோகத்துக்குப் போவதைதான் சொல்கிறேன். வரதட்சிணைக்கும், சீருக்கும், ஆடம்பரக் கல்யாணத்துக்கும் வேண்டிய அளவு பணம் சேர்க்க முடியாதபோது, சாரதா சட்டம் ரொம்ப அநுகூலமாக வந்து கல்யாணத்துக்கு அவசரமில்லாமல் அவகாசம் தந்தது.


* “தெய்வத்தின் குரல் ‍முதற்பகுதியில்” உள்ள “வரதக்ஷிணை பிரச்சனை” என்ற உரை பார்க்கவும்.

மடத்தில் செய்துள்ள ஏற்பாடு

ஏழெட்டு வயசில் கல்யாணம் பண்ண முடியாவிட்டாலும், சட்டம் அநுமதிக்கிற வயசு வந்தவுடனேயாவது கல்யாணத்தைப் பண்ணிவிட வேண்டும் என்பதற்காக “கன்னிகாதான ட்ரஸ்ட்” என்று ஒன்றை ஆரம்பித்திருக்கிறோம்*.

ஏழையான பெண் குழந்தைகளுக்குப் பணம் இல்லாததால் கல்யாணம் நடக்கவில்லை என்று இருக்கக்கூடாது என்ற உத்தேசத்தோடு இந்த டிரஸ்டிலிருந்து வசதியில்லாதவர்களுக்குப் பரம சிக்கனமாகச் செலவுக்குப் பணம் கொடுத்துக் கல்யாணம் பண்ணி வைக்கிறோம். இதற்கு உபகாரம் பண்ணுவது பெரிய புண்ணியம். நம்முடைய தர்மத்துக்கு சேவை செய்கிற பாக்கியத்தை இது தரும்.

மற்ற ஜாதிகள் பிராம்மணர்களைப் போல இத்தனை கிரிசை கெட்டுப் போகவில்லை. அந்த ஜாதிகளில் இத்தனை வரதக்ஷிணைக் கொடுமையோ, பெண்கள் இத்தனை பெருவாரியாகக் காலேஜ் படிப்பு, உத்யோகம் என்று போய் ஸ்வயேச்சையாகத் திரியும்படித் ‘தண்ணி தெளித்து’ விட்டிருக்கிற நிலைமையோ இல்லை. ஆதலால் ஏழைப் பிராம்மணப் பெண்களை உத்தேசித்தே இந்த டிரஸ்ட் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.

இந்த கன்னிகாதான டிரஸ்டுக்கும் சரி, வேதரக்ஷண நக்ஷத்திரக் காணிக்கைக்கும் சரி, பிராம்மணர்களைத் தவிர மற்றவர்களிடம் பணம் வாங்கக் கூடாது என்பது என் அபிப்ராயம். காரணம், இவன் பண்ணின தப்புக்கு மற்றவர்களை penalty [அபராதம்] செலுத்தும்படிப் பண்ணக்கூடாது என்பதுதான். வேதத்தை விட்டது இவன் பண்ணின பெரிய தப்பு. சட்டத்துக்கு உட்பட்டுகூட அதன்படியான மினிமம் வயசிலும் பெண்களுக்குக் கல்யாணம் பண்ணாமல் விட்டிருப்பது, அதே மாதிரி அல்லது அதைவிடப் பெரிய தப்பு. அதனால் இந்தத் தப்புக்களை நிவருத்தி பண்ணுவதற்காகச் செய்திருக்கிற ஏற்பாடுகளுக்கு இவனேதான் பணம் கொடுக்க வேண்டும். மற்றவர்களை உபத்ரவிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் இது இரண்டோடு மூன்றாவது தப்பாகும். பிராம்மணன்தான் இப்பொழுது எந்தத் தொழிலுக்கு வேண்டுமானாலும் போய் சம்பாதிக்கிறானே! வேண்டாத க்ளப்களுக்கும் கேளிக்கைகளுக்கும் யதேஷ்டமாகச் செலவழிக்கிறானே! அதனால் இவனேதான் இந்த இரண்டுக்கும் கொடுக்க வேண்டும் என்பது என் அபிப்ராயம்.

திருமாங்கல்யம், கூறைப்புடவை, மூஹூர்த்த வேஷ்டி இவை கொடுத்து வெகு சிக்கனமாகக் கல்யாணத்தை முடிப்பதற்கு கன்னிகாதான டிரஸ்டின் மூலம் திரவிய ஸஹாயம் செய்யப்படுகிறது.

வேதரக்ஷணத்துக்காகப் பண்ணிய ஏற்பாடுகளின் அளவுக்குக் கூட இந்தக் கன்யாதான ஏற்பாடு திருப்திகரமாகப் பிரச்சனையைத் தீர்க்கவில்லை. இதை ரொம்ப வருத்தத்தோடு சொல்கிறேன். கடப்பாரையை முழுங்கினவனுக்கு சுக்குக் கஷாயம் கொடுத்த மாதிரி, குட்டிச் சுவராகப் போன பிராம்மண சமூகத்துக்கு ஏதோ துளிதான் இதனால் பண்ண முடிந்திருக்கிறது. இப்போது கரை புரண்டு வந்திருக்கிற அதர்மப் பிரவாஹத்துக்கு அணை போட வேண்டும் என்ற எண்ணமே பெண்ணைப் பெற்றவர்களுக்கு இல்லாததால் ட்ரஸ்டை utilise செய்து கொள்ள [பயன்படுத்திக் கொள்ள] போதுமானவர்கள் வரவில்லை. காலத்தில் கல்யாணமாகவில்லையே என்ற கவலை பெண்ணைப் பெற்றவர்களுக்கு விட்டுப் போய், அவர்கள் பாட்டுக்குப் பெண்ணை சம்பாத்தியத்துக்கு விட்டுவிடலாம் என்று ஹாய்யாக நினைக்கிற பொழுது, நாங்கள் ‘டிரஸ்ட்’ வைத்து என்ன பண்ணுவது? இப்போது பெண்ணைப் பெற்றவர்கள் பிள்ளை தேடுவதற்குப் பதில் அவளுடைய உத்தியோகத்துக்குத்தான் ரெகமன்டேஷன் தேடுவதாக நம் தேசத்தில் துர்த்தசை ஏற்பட்டிருக்கிறது. மிஞ்சினால் வருஷத்தில் ஐம்பது கலியாணத்துக்கு உதவி செய்கிறோம். ஒரு வருஷத்தில் ஐயாயிரம் பெண்கள் வேலைக்குப் போகிறார்கள். அதைப் போலப் பத்து மடங்கு பெண்கள் உத்தியோகம் தேடி அலைகிறார்கள் என்றால் நாங்கள் சொல்கிற வயசில் கல்யாணம் பண்ணிக்கொள்ள 50 பேர்தான் கிடைக்கிறார்கள்! இந்த டிரஸ்ட் வைத்தது, ஏதோ என் duty-ல் நான் fail ஆகவில்லை என்று என்னை நானே ஸமாதானப் படுத்திக் கொள்ளத்தான் கொஞ்சம் பிரயோஜனப்படுகிறது!

சட்ட வரம்பு தாண்டினவுடனேயே கல்யாணம் பண்ணிக் கொடுக்கும்படியாகவாவது முன்னேற்பாடுகளைத் தயாராகச் செய்துவைத்துக் கொள்ளும்படி தாயார் தகப்பனார்மார்களுக்கு ஒரு மானம், வேகம், சுரணை பிறக்காதா என்பதால் இப்படி பச்சையாகச் சொல்கிறேன்.


* க‌ன்னிகாதான‌ ‘ட்ர‌ஸ்ட்’ முக‌வ‌ரி “ஸ்ரீ காஞ்சி காம‌கோடி ச‌ங்க‌ர‌ ம‌ட‌ம், காஞ்சீபுர‌ம்” என்ற‌ முக‌வ‌ரிக்கு எழுதித் தெரிந்து கொள்ள‌லாம்.

மணப்பிள்ளையின் கடமை

வரனாக இருக்கப்பட்ட பிள்ளைகளும் இதற்கு ஸஹாயம் செய்ய வேண்டும். சாதாரணமாக, மாதா பிதாக்களின் வார்த்தைக்குப் புத்திரர்கள் மாறு சொல்லவே கூடாதுதான். அப்படிச் சொல்லும்படி நான் புத்திரர்களுக்கு உபதேசம் செய்யக்கூடாதுதான். ஏற்கெனவே முன்னாளைப் போலப் பிள்ளைகள் அப்பா, அம்மாவுக்குக் கட்டுப்பட்டிராத இக்காலத்தில் நானும் அவர்களைக் கீழ்ப்படியாமல் இருப்பதில் ஊக்கக்கூடாதுதான். இதெல்லாம் எனக்குத் தெரிந்தாலும், விவாஹ விஷயத்தைப் பண ஸம்பந்தமுள்ளதாகப் பண்ணிப் பிராசீனமான நம் ஸ்திரீதர்மத்துக்கு உண்டாக்குகிற பெரிய ஹானியைப் பார்க்கிறபோது, இந்த ஒரு விஷயத்தில் மட்டும் பிள்ளைகள் எனக்கு ஆதரவாக அப்பா, அம்மாவிடம் வாதம் பண்ணி, “வரதக்ஷிணையும், சீரும் கேட்காவிட்டால்தான் கல்யாணம் செய்து கொள்வேன்” என்று ஸத்யாக்ரஹம் பண்ண வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது. நிஜமான ஸத்யாக்ரஹமாக இருக்கவேண்டும். பெற்றோர் கேட்கவில்லை என்பதற்காக பிள்ளை அவர்களை ஒதுக்கிவிட்டு கல்யாணம் பண்ணிக் கொண்டால் அது ஸத்யாக்ரஹம் இல்லை. ஸத்யாக்ரஹம் என்றால் அதிலே தியாகம் இருக்கவேண்டும். அதனால் ‘வரதக்ஷிணை இல்லாமல் கல்யாணம் பண்ணிக் கொள்ள மாட்டீர்களா? ஸரி, அப்படியானால் நான் கல்யாணமே பண்ணிக் கொள்ளாமல் பிரம்மசாரியாக இருந்து விடுகிறேன்’ என்று தியாகமாக எதிர்ப்பு செய்தால்தான் ஸத்யாக்ரஹம். இப்படி பண்ணினால் எந்தத் தாயார்-தகப்பனார் மனசும் மாறாமல் போகாது. இதுதான் இப்போது இளைஞர்கள் செய்ய வேண்டிய பெரிய சீர்திருத்தம். கலப்பு மணம், காதல் கல்யாணம் பண்ணிக் கொள்வது மாதிரியான சாஸ்திர விரோதமான காரியங்களைச் செய்து பெருமைப்படுவதற்கு பதில் சாஸ்திரோக்தமான இந்த வரதக்ஷிணையொழிப்புக்கு நம்முடைய இளைஞர்கள் உறுதியோடு சகாயம் செய்தால் இதுவே பெரிய சீர்திருத்தமாயிருக்கும்.

மாதா-பிதா-குரு என்று மூன்றை வேதமே சொல்லியிருக்கிறதோ இல்லையோ? அதனால் மாதா-பிதாவைத் தானாக ஒரு புத்திரன் எதிர்த்துக் கொள்ளக் கூடாது என்றாலும் இப்போது நான் – குரு என்று பேர் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறவன் – சொல்வதால் வரதக்ஷிணை விஷயத்தில் மட்டும் மாதா பிதாவின் அபிப்ராயம் சாஸ்திரப்படி இல்லாவிட்டால் பிள்ளைகள் அவர்கள் எதிர்த்து வாதம், ஸத்யாக்ரஹம் பண்ண வேண்டும்.

இது நம் யுவர்கள், கான்ஸர் மாதிரி நம் சமூகத்தில் புரையோடி அரிக்கிற ஒரு கொடுமையை அகற்றி நம் ஸமுதாய மறுமலர்ச்சிக்குச் செய்கிற மகத்தான தொண்டாக இருக்கும். நம் மதத்தின் மேன்மையில் உள்ள நம்பிக்கைக்காக மட்டும் இன்றி, மனிதாபிமானக் கடமையாகவும் இதை நம் இளைஞர்கள் செய்ய முன்வர வேண்டும்.

நெடுங்காலப் பயிராகவும், எதிர்காலத்துக்கு உத்தரவாதமாயும், தார்மிகப் பாதுகாப்பாகவும் இருக்கிற விவாஹம் என்ற விஷயத்தில் பெரியவர்கள் பார்த்துப் பெண்ணை நிச்சயம் செய்கிறபடிதான் பிள்ளைகள் செய்யவேண்டும். ஆனால் அந்தப் பயிரையே பூச்சி அரிக்கிற மாதிரி வந்திருக்கிற வரதக்ஷிணை கொடுமைக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது. அப்பா, அம்மா சொற்படி கேட்பதோடு சமூகத்துக்குச் செய்ய வேண்டிய கடமையும் இருக்கிறதல்லவா? வரதக்ஷிணை கேட்டால் கல்யாணத்துக்குக் கண்டிப்பாக மறுத்துவிட வேண்டியது பிள்ளையின் கடமை. இது குடும்பத்துக்கு, மடத்துக்கு, சமூகத்துக்கு, பெண் குலத்துக்கு எல்லாவற்றுக்கும் செய்கிற தொண்டு. இப்படியாக இளைஞர்கள் எல்லாரும் சபதம் செய்து, அதை நிறைவேற்ற வேண்டும்.

தாய்க்குலத்தின் பெருமை

வைரத்திலும் பட்டிலும் நம் ஸ்திரீகளுக்கு எப்படியாவது மோஹம் போய்விட்டால் போதும், நம்முடைய குடும்ப வாழ்க்கையையும் சமூக வாழ்க்கையும் மட்டுமில்லாமல் ஸ்திரீதர்மமே பிழைத்துப் போய்விடும். ‘லக்ஷக்கணக்கான பட்டுப் பூச்சிகளைக் கொன்று அதிலிருந்து எடுக்கிற பட்டினால் நமக்கு ஒரு அலங்காரமா? சாப்பாட்டிலே நாம் சைவம் என்று சொல்லிக் கொண்டால் போதுமா? இத்தனை பட்டுப் பூச்சிகளின் கொலை பாவத்துக்கு ஆளாகிறோமே!’ என்கிற எண்ணம் பெண்களுக்கு வந்துவிட்டால் போதும். இதிலே இன்னொரு அம்சம், இதனால் வசதியில்லாதவர்களுக்கும் பட்டிலும், வைரத்திலும் ஆசையைத் தூண்டி விடுவது. பிள்ளை வீட்டுக்காரர்கள் “இத்தனை பட்டுப் புடவைகள் வாங்க வேண்டும், வைரத் தோடு போட வேண்டும்” என்றெல்லாம் நிர்ப்பந்தப்படுத்தி அநேகப் பெண்களை கல்யாணமாகாது நிறுத்தி வைக்கும்படி பண்ணுவது பாபம்.

கல்யாணத்தை economic problem [பொருளாதாரப் பிரச்சனை] -ஆகப் பண்ணியிருப்பது அக்கிரமம். “அக்கிரமம்” என்கிற வார்த்தையைத்தான் சொல்ல வேண்டும். அவரவரும் ஆணோடு பெண்ணோடு பிறந்தவர்கள்தானே? நமக்கும் பெண்கள் இருக்கிறார்கள். அப்படியிருக்க பிள்ளையகத்துக்காரன் என்று ஆனவுடன், “வரதக்ஷிணை கொண்டா, பாத்திரத்தைக் கொண்டா, நகையைக் கொண்டா, வைரம் போடு, பட்டு வாங்கு” என்று ஷைலக் மாதிரி கன்டிஷன் போட்டுப் பெண் குழந்தைகளை கல்யாணமாகாமல் கண்ணைக் கசக்கும்படியாகப் பண்ணுவதை மன்னிக்கிறதற்கேயில்லை. பெண்ணின் குணம், குலம் திருப்தியாயிருக்கிறதா? ‘நம் அகத்தை விளங்க வைக்க கிருஹலக்ஷ்மியாக இந்தக் குழந்தை வரவேண்டும்’ என்று ஸந்தோஷமாக நினைத்து, எந்த கண்டிஷனும் போடாமல், பணம் காசைப் பற்றி நினைக்காமல் கலியாணம் பண்ணிக்கொள்கிற நல்ல மனஸ் நம் ஜனங்களுக்கு வரவேண்டும்.

இதில் ஸ்திரீகளின் பங்கு விசேஷமானது. பெண்ணாக பிறந்தவர்களுக்குத்தான் தங்கள் மாதிரியானவர்களிடம் அபிமானமும் அநுதாபமும் இருக்க வேண்டும். தங்கள் பிள்ளைகளுக்குக் கல்யாணம் பண்ணுகிற ஸமயத்தில் பெண்டுகள் குறிப்பாக நான் சொன்ன விதத்தில் உயர்ந்த பண்போடு நடந்து கொள்ளவேண்டும். ‘அந்த அகத்தில் அப்படிச் சீர் செய்தார்களே; அந்த பிள்ளைக்கு அவ்வளவு செய்தார்களே; அந்த மாதிரி நம் பிள்ளைக்கு நடக்காவிட்டால் எப்படி? அது நமக்குக் குறைவு இல்லையா?’ என்ற மாதிரி அசட்டு எண்ணங்களை விட்டுவிட்டு, மற்றவர்கள் செய்த ஜம்பத்துக்கும் டாம்பீகத்துக்கும் நாம் இடம் கொடுக்காமல், இனிமேல் கல்யாணம் பண்ணப் போகிற மற்ற பிள்ளையகத்துக்காரர்களுக்கு நாமே வழிகாட்டியாக இருக்க வேண்டும். ‘இதுவரை மற்றவர் பண்ணின தப்பை, அக்ரமத்தை ஏன் நாம் follow பண்ண வேண்டும்? இனிமேலே மற்றவர்கள் நம்மை follow பண்ணும்படியாக இப்போது நாம் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தினால் இதுவேயல்லவா நமக்குப் பெருமை?’ இப்படிப்பட்ட உணர்ச்சி தாய்க்குலத்துக்கு உண்டாக வேண்டும்.

‘நம்மகத்துப் பெண்ணுக்கு நாம் வரதக்ஷிணை கொடுத்தோமே! நமக்கே நம் அப்பாவும் அந்த காலத்தில் வரதக்ஷிணை கொடுத்தாரே! அதனால் இப்போது நாமும் வாங்கினால் தப்பில்லை’ என்று தாங்களாக நியாயம் கற்பித்துக் கொண்டுவிடக் கூடாது. இந்தக் கெட்ட பழக்கம் – நம் தர்மத்தைச் சிதைக்கிற பழக்கம் எப்படியாவது நிற்க வேண்டும். இதற்காக யாராவது இப்போது தியாகியாக முதலடி எடுத்து வைத்துத்தான் ஆகவேண்டும். எதெதற்கோ தியாகம் என்று கிளம்புகிறார்களே! ஒரு ஊர் இந்த ஜில்லாவில் இல்லாமல் இன்னொரு ஜில்லாவுக்குப் போகிறது என்றால் அதற்காக நூறு பேர், ஆயிரம் பேர் மறியல் செய்து ஜெயிலுக்குப் போகிறார்கள்; எவனாவது ஒருத்தன் கெரஸினைத் தன் மேலே கொட்டிக் கொளுத்திக் கொண்டு, உயிரையே விடுகிறான்! நம்முடைய உயர்ந்த ஸ்த்ரீ தர்மத்தைக் காப்பாற்ற நாம் கொஞ்சம் பண நஷ்டம் படக் கூடாதா?

“ஸெளந்தர்யலஹரி சொல்கிறோம். அபிராமி அந்தாதி சொல்கிறோம்” என்று பல பெண்கள் என்னிடம் வந்து ஆசிர்வாதம் கேட்கிறார்கள். நல்ல காரியம்தான். ஆசீர்வாதம் பண்ணுகிறேன். ஆனால் இதையெல்லாம் விட அதிகமாக அம்பாளுடைய பிரீதியை சம்பாதித்துக் கொள்ள வேண்டுமானால் இவர்கள் வரதக்ஷிணை, வைரத் தோடு, சீர் ஸெனத்தி என்ற கண்டிஷன் இல்லாமல் நான் சொன்ன மாதிரிக் கலியாணங்களுக்கு மனப்பூர்வமாக சம்மதித்தால்தான் முடியும். தங்கள் மாதிரியான பெண்கள் வயசு வந்தும் கலியாணமாகாமல் நிற்பது, அதனால் மனோ விகாரப்படுவது, மானபங்கப்படுவது, அப்புறம் மான உணர்ச்சியும் மரத்துப் போய் விடுவது என்றிப்படி ஆகியிருக்கிற நிலைமையை மாற்றுவதற்கு இவர்களுக்கு மனசு இரங்கினால் இவர்களிடம் அம்பாளுக்கு மனசு தானாக இரங்கும்.

‘நாங்கள் கேட்காமல் பெண் வீட்டுக்காரர்களாகவே இத்தனை கொடுக்கிறோம் என்று ஸ்வயேச்சையாக வந்ததால் வாங்கிக் கொண்டோம்’ என்று சொல்வதுகூட தப்பு. ஏனென்றால் ஒருத்தர் பண்ணுவதிலிருந்து இன்னொருத்தர் என்று இது செயின் மாதிரிப் போய்க் கொண்டிருக்கிற வழக்கம். கட்டாயப்படுத்தாமலே ஒருத்தர் வரதக்ஷிணை கொடுத்தாலும் இதனால் அவர் தன் பிள்ளைக்கும் கலியாணம் பண்ணும்போதும் வரதக்ஷிணை எதிர்பார்க்கத்தான் செய்வார். அதனால் அவர்களாகவே கொடுத்தாலும்கூட, “வேண்டாம்” என்று சொல்லுகிற உயர்ந்த மனோபாவம் வரவேண்டும். பெண்வீட்டாருக்கு மிதமிஞ்சிப் பணம் இருந்தால் கூட, “எங்களுக்குப் பணம் தராதீர்கள்”. உங்கள் பெண்ணுக்கே ஸ்ரீ தனமாகப் போட்டு வையுங்கள்” என்று சொல்ல வேண்டும்.

பிள்ளை வீட்டுக்காரர்களின் செலவுக்கு — அதாவது பிள்ளையின் உறவுக்காரர்களுக்கு துணிமணி வாங்குகிறது; இவர்கள் கலியாணத்துக்குப் போகிற பிரயாணச் செலவு முதலானதுகளுக்கு — பெண் வீட்டுக்காரர் ‘அழ’ வேண்டும் என்பது துளிக்கூட நியாயமே இல்லை. நம் பிள்ளைக்குத்தானே கல்யாணம்? நாமே ஏன் அதற்கு செலவழிக்கக் கூடாது? எவனோ கொடுக்கிற பணத்தில் நாம் டிரஸ் வாங்கிக் கொள்வது அவமானம்தான். நமக்கு வக்கில்லை என்றுதான் அர்த்தம். இதையே ‘பிள்ளையகத்து ஸம்பந்தி’ என்று பெரிய பெயரில் தங்கள் ‘ரைட்’ மாதிரி மிரட்டி உருட்டிச் செய்து வருகிறோம்! வரதக்ஷிணை நாமாகக் கேட்டாலும் சரி, அவர்களாகக் கொடுத்தாலும் சரி. திருட்டுச் சொத்து மாதிரி என்ற பயம் வேண்டும். இது இரண்டு தரப்போடு நிற்காமல் vicious circle -ஆக [விஷ வட்டமாக] ஸமூஹத்தையே பாதிப்பதால் எப்படியாவது இதை ஸமாப்தி பண்ண வேண்டும்.