விவாஹத்தில் எளிமை

சாஸ்திரம் விதிக்கிற வயஸை மீறுவதற்குச் சட்டம் காரணம் என்றால், சட்டம் போட்டிருக்கிற ‘லிமிட்’டையும் மீறி 25 வயசு, 30 வயசுக்குக்கூடப் பெண்கள் கல்யாணமாகாமல் நிற்பதற்குக் காரணம் விவாஹத்தை பண சம்பந்தமான விஷயமாக்கியிருப்பதுதான். இப்போது கல்யாணத்தில் நடக்கிற ஆடம்பரங்களும் வரதக்ஷிணை வாங்குவதும் சீர் செனத்தி கேட்பதும் சாஸ்திர ஸம்மதமானதல்ல. செலவழிப்பதற்கு பெண் வீட்டுக்காரன் என்று ஒருத்தன் ஏற்பட்டிருக்கிறான் என்பதால் அவனிடம் ஒட்டக் கறக்க வேண்டும் என்பதற்காகவே பிள்ளைக்கு “ஸூட் வாங்கித் தா; பூட்ஸ் வாங்கித் தா; ரிஸ்ட் வாட்ச் வாங்கித் தா” என்று பறிமுதல் மாதிரிப் பண்ணி, இந்த அலங்காரங்களோடு ஜானவாஸ ஊர்வலம் என்று ரொம்பவும் அத்யாவசியமான அம்சம் மாதிரி விவாஹத்துக்கு முதல் தினம் பண்ணுகிறார்களே, இது சாஸ்திரத்தில் அடியோடு இல்லாத விஷயம். இதற்கு ஒரு மந்திரமும் கிடையாது.

பழைய நாளில் அதிபால்யத்தில் குழந்தைகளை உத்ஸாஹப்படுத்த வேண்டும், ஹோமப் புகையில் கஷ்டப்படுகிறதுகளே! என்று விளையாடல், நலுங்கு, ஊர்வலம் என்றெல்லாம் வைத்தார்கள், அவ்வளவு தான்.

“கன்யாம் கனக ஸம்பந்நாம்” என்று சாஸ்திரத்தில் சொல்லியிருப்பதால், தங்கமானது லக்ஷ்மி பிரஸாதத்தை உண்டாக்குவது என்பதால், தங்கத்திலே திருமாங்கல்யம் மட்டும் பண்ணினால் போதும். மற்ற நகைகள், வைரத் தோடு முதலியன வேண்டாம். பட்டும் வேண்டாம். நூலில் கூறைப் புடவை வாங்கினால் போதும். ஆந்திர தேசத்தில் இப்படித்தான் செய்கிறார்கள். எல்லாவற்றையும் விட வரதக்ஷிணை தொலைய வேண்டும். ஊர் கூட்டி சாப்பாடு, பாட்டு, சதிர், பந்தல் என்று விரயம் பண்ணுவது போகவேண்டும்.

நாம் இப்போதே செய்ய வேண்டியது

அது ஆகிற போது ஆகட்டும். நாம் உடனே பண்ண வேண்டியது என்ன? அவர்கள் 14 வயசு, 16 வயசு, 18 வயசு என்று ஏதோ ஒரு வரம்பு வைத்திருந்தால், அந்த வரம்பு தாண்டின உடனேயாவது கல்யாணத்தைப் பண்ணி விடுவதற்கு முன் கூட்டியே வரன் பார்த்து மற்ற ஏற்பாடுகளையெல்லாம் பண்ணி வைத்துக் கொள்ள வேண்டும்.

எவ்வளவுக்கெவ்வளவு குறைந்த வயசில் கல்யாணம் பண்ண இடமிருக்கிறதோ அவ்வளவு குறைந்த வயசில் பண்ணி விட வேண்டும். பெண்கள் நீண்ட காலம் மனோவிகாரப்பட்டுக் கொண்டிருக்கும்படி விட்டால் அது நமக்கு பாபம் என்கிற பய உணர்ச்சியோடு இந்த விஷயத்தில் இனியாவது காரியம் செய்யவேண்டும். தானே தட்டிப் போனால் வேறு விஷயம். புருஷ யத்தனம் இல்லாமலிருந்தால் அது பெரிய தப்பு.

அப்படியே எவ்வளவுக்கெவ்வளவு குறைந்த செலவில் பண்ண வேண்டுமோ அப்படிப் பண்ண வேண்டும்.

ஏன் பாலிய விவாஹம்?

விவாஹம் என்ற ஸம்ஸ்காரத்துக்குப் பல உத்தேசங்கள் உண்டு. அதிலே முக்யமான ஒன்று, ஸ்திரீகளுக்குச் சித்த பரிசுத்தி ஏற்படப் பதி என்ற ஒரு பிடிப்பை ஏற்படுத்தித் தருவது. அதைப் பிடித்துக் கொண்டே அவர்கள் கடைத்தேறி விடுவார்கள். குருவிடம் பிரம்மசாரி சிஷ்யன் சரணாகதி பண்ணிப் பாப நிவிருத்தியடைந்து சுத்த மனஸோடு இருக்கிற மாதிரி இந்தக் கன்னிகையும் இவனிடம் இருக்க வேண்டும்.

நம்முடைய கர்மா, ஜன்மா எல்லாவற்றுக்கும் காரணம் மனஸின் சேஷ்டைதான். இந்த மனஸை வைத்துக் கொண்டு அதனுடைய இச்சைகளைப் பூர்த்தி பண்ணப் பாடுபடுவதில் தான் பாபங்கள் ஸம்பவிக்கின்றன; ஜன்மாக்கள் ஏற்படுகின்றன. மனஸை நிறுத்திவிட்டால் கர்மா இல்லை, ஜன்மா இல்லை, மோக்ஷம்தான். மனஸை நிறுத்துவது மஹாசிரமமான காரியம். அஷ்ட மஹாஸித்திகளைக் கூட அடைந்து விடலாம்; சிந்தையை அடக்கிச் சும்மா இருப்பதுதான் முடியாத காரியம் என்று [தாயுமானவர்] பாட்டுக்கூட இருக்கிறது. மனஸை நிறுத்த முடியாவிட்டாலும், அதைச் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக ஆடும்படி விடாமல் இன்னோரிடத்தில் அர்ப்பணம் பண்ணி விட்டால், அப்போது ‘தனக்காகப் பண்ணிக் கொள்வது’ என்பதால் ஏற்படும் பாபமும் ஜன்மமும் இல்லாமல் போகும். இன்னொருத்தர் ஆட்டி வைக்கிறபடி அவரிடம் மனஸை ஸமர்ப்பித்து விட்டோமானால் நமக்கு கர்த்தா என்கிற பொறுப்பில்லை. அதனால் ஏற்படும் பாப புண்யமும் ஜன்மாவில் இல்லை. “என் செயலாவது யாது ஒன்றுமில்லை” என்று ஈச்வரனிடத்தில் இப்படித்தான் மனஸை அர்ப்பிக்கச் சொல்கிறார்கள். ஆனால் அதைச் செய்பவர் கோடியில் ஒருத்தர்தான். இதையே ஒரு பெண்ணுக்குப் பதியை ஈச்வரனாகக் காட்டியிருக்கிற நம் தர்மத்தில் ஏராளமான ஸ்திரீகள் ஸுலபமாகச் செய்து கடைத்தேறியிருக்கிறார்கள். புருஷனை ஈச்வரனாக நினைப்பது கணவனே கண் கண்ட தெய்வம் என்ற கொள்கை, கல்லானாலும் கணவன் என்ற அடக்க ஸ்வபாவம், பாதிவ்ரத்யம் (கற்பு) , ஸெளமங்கலியம் (சுமங்கலித் தன்மை) , ஸுமங்கலியாகவே செத்துப் போக வேண்டும் என்ற தீவிர‌மான‌ பிரார்த்தனை ஆகிய இவைகள் அநாதி காலமாக நம் தேசத்து ஸ்திரீதர்மமாக, நம் தேசத்துப்பெண்களின் உத்தம ஜீவனத்துக்கு உயிர் நிலையாக இருந்து வந்திருக்கின்றது.

எந்தத் தேசத்திலும் உத்தம ஸ்திரீகள் இருந்திருப்பார்கள்தான். எந்த மதத்திலும் உயர்ந்த குணசாலினிகள் தோன்றியிருப்பார்கள். என்றாலும் மேலே சொன்ன விஷயங்கள் நம் தேசத்தின், நம் மதத்தின் நம் கல்ச்சரின் ஜீவாதாரமான ஒரு அம்சமாக இருப்பது போல் மற்ற இடங்களிலே சொல்ல முடியாது. ‘நாகரிகம்’ என்று சொல்லி கொண்டு இதை மாற்ற நினைப்பது நம்முடைய மஹோன்னதமான பண்பாட்டுக்கே ஆதாரமாக இருக்கப்பட்ட ஒரு ஆணிவேரை வெட்டி விடுகிற மாதிரியாகும்.

காதல் கீதல் என்று சித்த விகாரம் ஏற்படாமல், சரீர நினைப்பும் காமமும் வருகிறதற்கு முந்தியே ஒருத்தனை பர்த்தாவாக அடைந்தால்தான் குழந்தை உள்ளத்தில் உண்டாகிற பணிவினால் அங்கே உண்மையான சரணாகதி செய்து, “இவனே நமக்கு குரு; இவனே நமக்கு ஈச்வரன்” என்று இருக்க முடியும்.

ஆந்திர தேசத்திலும் மஹாராஷ்டிரத்திலும் இன்றைக்கும் ஸ்திரீகளுக்கு விரதங்கள் அதிகம். அவற்றில் ஒன்று கன்னிகைகள் பரமேச்வரனையே பதியாக நினைத்துப் பூஜிப்பது. பிறகு ஒருத்தன் பதியாக வருகிறான். அவனையே பரமேச்வரனாகப் பூஜிப்பது, இப்போது பத்னியாகிவிட்ட அந்த கன்னிகைக்கு விரதமாக ஆகிறது. பரமேச்வரனைப் பதியாகப் பூஜித்து, முடிவில் எவன் பதியாக வந்தாலும் அவனே பரமேச்வரன் என்று பாவித்துவிட வேண்டியது.

கேள்வி கேட்காமல், நம்பிக்கையின் பேரில்தான், அதாவது பால்யத்தில்தான் ஒருத்தனைப் பரமேச்வரனாக நினைக்க முடியும். விவரம் தெரியாத போது வந்த இந்த நம்பிக்கை மனஸில் ஊறி ஊறி, நம் ஸ்வாபாவிகமான ஸ்திரீதர்மத்தினால் மனஸில் உறுதிப்பட்டு விடுவதால், விவரம் தெரிந்த பின்னும் பதியே பரமேச்வரன் என்ற பக்தி நிலைத்து நின்றுவிடும். அவனிடத்திலேயே தன் மனஸை அர்ப்பணம் பண்ணித் தனக்கென்று மான அவமானம் எதுவும் இல்லாமல் ஒருத்தி இருந்துவிட்டால் அவளுடைய அஹம்பாவம் கரைந்து போய்விடுகிறது. அதுதான் ஜனன நிவிருத்தி, அது தான் மோக்ஷம். பக்தி, ஞானம், தபஸ், பூஜை, யக்ஞம், யோகம் என்ற எல்லாம் இந்த அஹங்கார நாசத்தைத்தான் உத்தேசமாகக் கொண்டிருக்கின்றன. இது ஒரு ஸ்திரீக்குப் பதிபக்தியால் ஸுலபமாக, இயற்கையாக ஸித்தித்து விடுகிறது.

இப்படி பாவித்து சரணாகதி பண்ணின நளாயினி, அநஸூயை, ஸாக்ஷாத் மஹாலக்ஷ்மியான ஸீதாதேவி, ஸதி என்ற பெயர் பெற்ற தாக்ஷாயிணியான பராசக்தி, ஸாவித்ரி, கண்ணகி, திருவள்ளுவரின் பத்தினி வாஸுகி முதலானவர்களைத்தான் நம் தேசத்தில் தெய்வங்களுக்கும் மேலாக வைத்திருக்கிறது. அவர்களை நினைத்தாலே நமக்கு வேறெதிலும் உண்டாகாத பெருமைப் புளகாங்கிதம் உண்டாகிறது- நமஸ்காரம் பண்ணுகிறோம். ஏன் இப்படி இருக்க வேண்டும் என்றால் சொல்லத் தெரியாது! “பதியே ஈச்வரன் என்பது பேத்தல்; ஸூபர்ஸ்டிஷன்; பெண்களை அடக்கி, நசுக்கி வைக்கிற கொடுமை” என்று எத்தனை ஆக்ஷேபித்தாலும், இப்படி இருப்பதுதான் இந்த தேசாசாரம். பாரத தேசம் என்றால் இங்கே ஹிமோத்கிரியும் கங்கையும் இருக்கிறதோ இல்லையோ? ஏன் இருக்க வேண்டும் என்றால் என்ன சொல்வது? அப்படித்தான் நம் தேசத்துக் கற்பரசிகளின் சரணாகதி வாழ்க்கையும். ஆல்ப்ஸ் மலையை ஐரோப்பியர்கள் நினைக்கிற மாதிரிதானா நாம் கைலாஸத்தை நினைக்கிறோம்? மிஸிஸிபியை அமெரிக்காக்காரன் நினைக்கிற மாதிரி தானா நாம் கங்கையை நினைக்கிறோம்? அதற்கெல்லாம் மேலாக இவற்றிலே தெய்விகத்தை அநுபவிக்கிறோம் அல்லவா? அப்படியேதான் அவர்களுக்கு ஒரு குடும்ப ஏற்பாடாக மட்டும் உள்ள தாம்பத்தியத்தில் நம் சாஸ்திரங்கள் ஒரு பெண்ணுக்கு ஆத்மாவையே சுத்தப்படுத்தித் தருகிற பரம ஸாதனமான சரணாகதியைப் பிசைந்து வைத்திருக்கிறது. சமூக ரீதியில் பெண்களுக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு இதற்குக் காரணமான பால்ய விவாஹத்தை மாற்றுவதனால் அவர்களுடைய ஆத்மாபிவிருத்திக்கு பெரிய ஹானியை உண்டாக்குகிறோம். சின்ன ஸெளகரியத்தை ஏற்படுத்திக் கொடுத்து மஹா பெரிய பிரயோஜனத்தை நஷ்டப்படுத்துகிறோம்.

பால்ய விவாஹம் பௌதிகமாகக் கெடுதல் என்பது வெறும் பேச்சு. குழந்தையாகக் கல்யாணம் பண்ணிக் கொண்டாலும் அப்புறம் அவள் சரீர ரீதியில் பக்குவமான பிறகுதான் தாம்பத்தியம் பண்ண அழைத்துக் கொள்ளப்படுவாள். அதுவும் தவிர தர்ச பூர்ணம் (அமாவாஸ்யை, பௌர்ணமி) போன்ற அநேக தினங்களில் பிரம்மசரிய நியமம் சொல்லியிருப்பதால் சரீரம், சித்தம் இரண்டுமே புஷ்டியோடு இருக்கும். இப்போதுதான் இந்தக் கட்டுப்பாடுகள் போய், சித்தவிகாரம், தேக பலஹீனம் இரண்டும் அதிகமாகி நரம்பு ஸம்பந்தமான டாக்டர்கள் நன்றாக விருத்தியாகும்படி ஆகியிருக்கிறது!

பால்ய விவாஹத்தினால் பால்ய விதவைகள் என்ற கொடூரமான களங்கம் ஏற்பட்டு ஹிந்து மதத்தையே மாசுபடுத்திவிட்டது என்பதுகூட மிகையான வாதம்தான் (exaggeration) பால்ய விதவைகள் இருக்க வேண்டுமானால் அவர்களுடைய கணவன்மார்கள் உயிரோடு இருந்தால் பதினைந்து வயசிலிருந்து இருபத்தைந்து வயசுக்குள் இருப்பார்கள். நான் கேட்டறிந்த மட்டில் இந்த 15-25 வயசு age-group-ல் சாவு ஏற்படுவது ரொம்பவும் குறைச்சல்தான். எனவே பால்ய விதவைகள் சொல்பமாகவே இருந்திருப்பார்கள். இல்லவே இல்லை என்று நான் சொல்லவில்லை. ஒரு குழந்தை வைதவ்யம் அடைந்தது என்றால்கூட மனஸுக்கு வேதனையாகத் தான் இருக்கிறது. ஆனால் மொத்த பலனை பார்க்கும்போது இதற்கெல்லாம் விட்டுக் கொடுக்க வேண்டியதுதான்.

இப்போது பெண்ணுக்கு இருபது வயசுக்கு மேல் கல்யாணம் செய்து கொடுக்கிறபோதும் விதி இருந்தால் உடனே வைதவ்யம் வரத்தான் செய்கிறது. ஒரு ரயில் ஆக்ஸிடென்ட், ப்ளேன் ஆக்ஸிடென்ட் என்கிறபோது கல்யாணமாகி ஒன்று, இரண்டு மாஸங்களிலேயே ஜீவனை இழந்தவர்களும் அதில் பலர் இருப்பதைப் பார்த்து ரொம்பவும் கஷ்டப்படுகிறோம், வைதவ்யத்தைத் தடுப்பதற்காக பால்ய விவாஹத்தைத் தடுத்து விடலாம் என்றால், பிற்பாடு வயசு வந்தபின் கல்யாணமானவுடனே வைதவ்யம் வராமல் ‘காரன்டி’ தர நமக்குச் சக்தியில்லையே!

நம் தேசாசாரப்படி ஸ்திரீகள் பதியை ஈச்வரனாக பாவித்து அதன் மூலமாக மஹா பெரிய பலனான ஜன்ம நிவிருத்தியை அடைய வேண்டுமானால் சாஸ்திரத்தில் சொல்லியிருப்பதுதான் வழி. அதை விட்டுவிட்டு, “பெண்கள் நிறையப் படிக்கிறார்கள்; உத்யோகம் பார்க்கிறார்கள்; தங்கள் மனசுப்படி கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்கள்; இதெல்லாம் நம்முடைய progress (முன்னேற்றம்)” என்று சொல்பவர்கள் சொன்னாலும், எனக்கென்னவோ இந்தப் பெண்கள் இப்படிப் பலர் கண்ணில் பட்டுக்கொண்டு, சித்த விகாரங்களுக்கு ரொம்பவும் ஆளாகிற சூழ்நிலையிலே மாட்டிக் கொண்டிருக்கிறார்களே என்றுதான் ஓயாத கவலையாக, பயமாகக் கூட, இருக்கிறது.

‘கட்டுப்பெட்டிகளாக இருந்து கொண்டு இப்படி பெண்களை கட்டுப்பாடு பண்ணி, பால்ய விவாஹம், பால்ய வைதவ்யம் போன்ற கொடூரங்களுக்கு ஆளாக்குகிறார்களே’ என்று சீர்திருத்தக்காரர்கள் கோபித்துக் கொண்டு, பெண்களுடைய சமூக உரிமை போகிறது என்று அழுதால், எனக்கோ, ‘இவர்கள் சீர்திருத்தம் என்கிற பெயரில் நம் பெண்களின் மகத்தான குலதனமான கற்புக்கு ஹானி உண்டாகும்படியான ஹேதுக்களை ஏற்படுத்துகிறார்களே’ என்று அதைவிடக் கோபம் வருகிறது; அழுகை வருகிறது. ‘ஸ்திரீகள் கெட்டுப் போனால் குலக்ஷயம்தான்; லோகமே போய் விடும்; எல்லாரும் நரகத்துக்குப் போகவேண்டியதுதான்: ‘ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ண ஸங்கர:| ஸங்கரோ நரகாயைவ* என்று அர்ஜுன‌னுக்கு அழுகை வ‌ந்த‌ மாதிரி வருகிற‌து.

இக்காலப் பெண்களும் இதற்கு ஸம்மதித்திருக்கிறார்களே, பெற்றவர்களும் அங்கீகரித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே என்பதுதான் மனஸைச் சுடுகிறது.

எல்லா ப்ராக்ரெஸ்ஸையும் எல்லா அட்வான்ஸையும் விட நம் பெண் குழந்தைகள் கெட்டுப் போய்விடக் கூடாதே என்பதுதான் எனக்குப் பெரியதாக, அதே கவலையாக, இருக்கிறது. படிப்பதாலும் உத்யோகம் பார்ப்பதாலும் அப்படியொன்றும் நம் பெண்கள் சித்தம் கெட்டு விடவில்லை என்று எனக்கு ஆறுதல் சொல்கிறார்கள். எனக்கும் அந்த நம்பிக்கை போகவில்லை. ஆனாலும் இப்படி கண்டபடி திரிகிறார்களே, கெட்டுப் போக நிறைய சான்ஸ் இருக்கிறதே, கெடுப்பதற்கு என்றே ஸினிமாவும் நாவலும் பத்திரிகைகளும் இருக்கிறதே என்று பயப்படுகிறேன். அவ்வப்போது கன்னாபின்னா என்று நடந்து விடுகிற சங்கதிகளும் வருகின்றன. தப்பு நடந்து பிறகு அதை என்ன பண்ணி மாற்றுகிறது? இப்படி ஒன்று, இரண்டு கேஸ்கள் கூட நடக்க இந்த தேசத்தில் விடலாமா? என்று மனஸு கொதிக்கிறது. தாயார்-தகப்பனார்களுக்குத் தங்கள் பெண்களைப் பற்றி இருக்க வேண்டிய கவலை, பயம் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து நான்தான் படுகிறேன் போலிருக்கிறது! எல்லாரும் கெட்டுப் போக வேண்டாம். ஆனாலும் ஒரு பால்ய விதவை உண்டானால்கூட களங்கம் என்று சீர்திருத்தக்காரர் சொன்னால், ஒரே ஒரு பெண் கெட்டுப் போனால்கூட அதைவிட ஆயிரம் மடங்கு களங்கம் என்று நான் பயப்படுகிறேன்.

வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை
நீதி மன்னர் நெறியினர்க்கோர் மழை
மாதர் கற்புடை மங்கையர்க்கோர் மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே.

என்று சொல்லியிருக்கிறது. இதிலே ‘நீதி மன்னர் நெறி’ என் ஜூரிஸ்டிக்ஷனில் [அதிகார எல்லைக்குள்] இல்லாத விஷயம். அதனால் அதைப் பற்றி நான் கவலையோ, ஸந்தோஷமோ படுவதற்குப் பொறுப்பாளி இல்லை. ஆனால் வேதியரை வேதம் ஓதப் பண்ணுவதும், மாதர்களை கற்பு நெறி தவறக்கூடிய ‘சான்ஸ்’ களுக்குக் காட்டிக் கொடுக்காமல், காமம் புகுமுன்பே பதியை ஈச்வரனாக பாவிக்கக் கொடுத்து, அப்புறம் அவன் ஒருத்தனையன்றி மனஸ் கொஞ்சங் கூடச் சலிக்காத பாதிவ்ரயத்யத்தை ஏற்படுத்தித் தருவதும் என் பொறுப்புதான். இந்த இரண்டுக்கும் என்னாலானதைச் செய்ய வேண்டும் என்றுதான் ஓயாமல் நினைத்துக் கொண்டு எதையாவது திட்டங்களைப் போட்டுக் கொண்டிருக்கிறேன். Goal ரொம்பவும் எட்டத்தில்தான் இருக்கிறது. என் பிரயத்தனத்தைவிட ஜாஸ்தி வேகத்தோடு அது விலகி விலகிப் போய்க் கொண்டேயிருக்கிறது. அதற்காக இந்த ரேஸில் நான் ஓய்ந்து விடக்கூடாது. அல்லது இப்போது வந்திருக்கிற நாகரிகப் போக்குகள் தான் சரி என்று ‘ஆமாம் பூசாரி’ யாகத் தலையாட்டி விடவும் கூடாது. ‘போனது போனது தான்; சீர் செய்து சாத்தியப்படாது. இப்போது ஏற்பட்டிருக்கிற கலிப் பிரவாஹத்தைத் தடுத்து மாற்றுவது நடக்காத காரியம்’ என்று விட்டு விடுவதற்காக என்னை இங்கே [பீடத்தில்] உட்கார்த்தி வைத்திருக்கவில்லை. அநாதி காலமாக இந்த தேசத்தில் உயர்ந்த நிலையில் இருந்து வந்திருப்பதும், இரண்டாயிரம் வருஷமாக இந்த மடம் பரிபாலித்து வந்திருப்பதுமான வேத அபிவிருத்தியையும் ஸ்திரீதர்மங்களையும் என் காலத்தில் நான் வாயை மூடிக்கொண்டு வாரிக்கொடுத்துவிட்டு ‘ஜகத்குரு’ பட்டம் சூட்டிக்கொண்டு, ஸாக்ஷாத் பகவத்பாதாளின் பெயரை வைத்துக் கொண்டிருந்தால் அதைவிடப் பெரிய தோஷம் இல்லை. பகவான் [கீதையில்] சொன்ன மாதிரி ஜயாபஜயம் அவன் கையில் இருக்கிறது என்று விட்டுவிட்டு, நான் பாட்டுக்கு முன் வைத்த காலைப் பின் வைக்காமல், என் பிரயத்தனத்தை விடாமல் பண்ணிக் கொண்டேதான் போக வேண்டும். ரிஸல்ட் என்னுடைய ‘ஸின்ஸரிடி’யையும், அந்தரங்க சுத்தத்தையும், தபஸையும் பொறுத்து அமையும். கணிசமான பலன் இதுவரைக்கும் ஏற்படவில்லை என்றால் என் ஸின்ஸிரிடி போதவில்லை, என் மனஸ் சுத்தமாகவில்லை, என் தபஸ் குறைச்சல் என்றுதான் அர்த்தம். லோகம் என்னை எத்தனை ஸ்தோத்திரம் பண்ணினாலும் எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது.

எல்லாம் போய்விட்டது என்றால் நான் இதைக்கூடச் சொல்ல வேண்டாம்; ஒரு யத்தனமும் பண்ணவேண்டாம், மடத்தைக் கலைத்து விடலாம். ஆனால், போய்விட வில்லை. ஒரு சின்ன பொறி அளவுக்காவது இருக்கிறது. அதுகூட இல்லையானால் நான் இத்தனை சொல்வதைக் கேட்டுக் கொண்டு நீங்கள் இவ்வளவு பேர் உட்கார்ந்து கொண்டேயிருக்க மாட்டீர்கள். நான் சொல்கிறபடி நீங்கள் செய்வதோ, செய்யாததோ ஒரு பக்கம் இருக்கட்டும். என்னை இவ்வளவு தூரம் சொல்லவாவது விட்டு எதிர்த்து கோஷம் போடாமல், பொறுமையோடு கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களோ இல்லையோ? அதனால்தான் ஒரு பொறியாவது இருப்பதாக நம்பிக்கொண்டு, அதை எப்படியாவது விலா வெடிக்கிற மட்டும் ஊதி ஊதிக் கொஞ்சம் ஜ்வாலை வரும்படிச் செய்ய முடியுமா என்று முயன்று கொண்டிருக்கிறேன். ஜனங்களின் புதுப்போக்குப்படியே நானும் போவது என்றால் அது பகவத்பாதாளுக்குப் பண்ணுகிற துரோகந்தான்.

மனஸிலிருப்பதைக் கொட்டித் தீர்த்தால்தானே நல்லது? பரஸ்பரம் நீங்கள் என்னிடம் பக்தி செய்வதும், நான் ஆசீர்வாதம் செய்வதும் இருக்கட்டும். அது இருந்து கொண்டேதான் இருக்கும். ஆனாலும் இந்த மடம் எதற்காக ஏற்பட்டது என்று சொல்லி, அந்த வழியில் உங்களைப் போகப் பண்ணாமல், உங்கள் பணத்தை மட்டும் நான் வாங்கிக் கொண்டால் அது பிடுங்கியடித்துத் தின்கிற காரியந்தான் என்பதால் மனஸை விட்டுச் சொன்னேன்.

வேத ரக்ஷணத்துக்காகப் பண்ணின முயற்சிகளில், போட்ட திட்டங்களில், பராசக்தியின் அநுக்கிரஹத்தால் ஓர‌ள‌வு நல்ல பலன் ஏற்பட்டிருக்கிறது. வீட்டுக்கு வீடு அத்யயனம் இருக்கும்படி பண்ண முடியாவிட்டாலும், அடுத்த தலைமுறைக்கு அத்யயனம் என்ற ஒன்றே இல்லாமல் போய் விடுமோ என்ற நிலைமை மாறி, இப்போது அநேக வித்யார்த்திகள் தேசம் முழுதும் பல பாடசாலைகளில் அத்யயனம், வேத பாஷ்யம் எல்லாம் படித்துப் பாஸ் செய்து வருகிறார்கள்.

இந்தக் கன்யா விவாஹந்தான் சட்டமாகவே வந்து கையை ரொம்பவும் கட்டிப் போட்டுவிட்டது. அரசாங்கச் சட்டத்துக்கு அடங்கித்தான் ஆகவேண்டும். ஒரு பெண்ணுக்கு மனோபாவ விகாரம் இல்லாத காலத்திலேயே ‘இதுதான் தெய்வம்’ என்று நினைக்கும்படியாக ஒரு புருஷனின் கையில் பிடித்துக் கொடுத்து, அந்தப் பழக்கம் ஊறிய பிறகு அதாவது விகாரம் உண்டாகிற காலத்தில் தன் சரீரத்தை அர்ப்பணம் செய்து கொள்ளும்படிச் செய்யவேண்டும் என்கிற தர்ம சாஸ்திரத்தின் நிரந்தரமான சட்டத்துக்கு விரோதமாகத்தான் அரசாங்கச் சட்டம் இருக்கிறது என்றாலும்கூட சட்ட மறுப்பு பண்ணு என்று சொல்வது சரியில்லைதான். அதனால் எறும்பு ஊறக் கல் தேயும் என்கிற மாதிரி நாம் விடாமல் எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருந்து அவர்களுடைய மனஸ் மாறுகிறதா என்று பார்க்க வேண்டியதுதான்.


* கீதை 1.41-2.

எட்டு வித விவாஹங்கள்

மநுஸ்மிருதி உட்பட்ட தர்ம சாஸ்திரங்களில் எட்டு விதமான விவாஹங்கள் சொல்லியிருக்கிறது.

ப்ரஹ்மோ-தைவ-ஸ்ததைவார்ஷ:
ப்ராஜாபத்ய-ஸ்ததாஸுர:|
காந்தர்வோ ராக்ஷஸச்சைவ
பைசாசாஷ்டம: ஸ்ம்ருத:
– (ம‌நுஸ்மிருதி III.21)

அதாவது பிராம்மம், தைவம், ஆர்ஷம், பிராஜாபத்தியம், ஆஸுரம், காந்தர்வம், ராக்ஷஸம், பைசாசம் என்று கல்யாணத்தில் எட்டு தினுசு.

‘பிராம்மம்’ என்பது குருகுலவாஸம் முடித்து வந்த உத்தம பிரம்மசாரிக்காக அவனுடைய மாதா-பிதாக்கள் ஒரு நல்ல குலத்துப் பெண்ணின் மாதா பிதாக்களிடம் வந்து கன்யாதானம் பண்ணித் தரச்சொல்லிக் கேட்டுக்கொள்வது. பிள்ளைக்குப் பெண் வீட்டார் வரதக்ஷிணை தருவது, பெண்ணுக்குப் பிள்ளை வீட்டார் பரிசம் தருவது என்று இரண்டும் இதில் இல்லை. வியாபாரக் கொடுக்கல் வாங்கலாக இல்லாமல் இரண்டு குலங்கள் அபிவிருத்தியாக வேண்டும் என்ற உயர்ந்த லக்ஷ்யம் ஒன்றிலேயே பண்ணப்படுவது பிராம்ம விவாஹம். தர்ம சாஸ்திரங்கள் எட்டு வித விவாஹங்களில் இதைத்தான் மிகவும் சிரேஷ்டமாகச் சொல்லியிருக்கின்றன.

‘தைவம்’ என்பது ஒரு யாகத்திலேயே அதைப் பண்ணுகிற ரித்விக்குக்குப் பெண்ணைக் கல்யாணம் செய்து தருவது1 . உரிய காலத்தில் பெண்ணைத் தேடி வரன் வராததால், பெண் வீட்டுக்காரர்கள் அவனைத் தேடிப் போய் யாகசாலையிலே மாப்பிள்ளை பிடிப்பதென்பது, பிராம்ம விவாஹத்தை விடத் தாழ்த்தி என்பதே அபிப்ராயம். பெண்ணைப் பிள்ளை வீட்டுக்காரன் தேடிவருவதுதான் சிலாக்கியமான விவாஹம் என்பதாக ஸ்திரீகுலத்தை சாஸ்திரம் உயர்த்தி வைத்திருக்கிறது.

மூன்றாவதான ஆர்ஷ விவாஹம் என்பது ரிஷி ஸம்பந்தமானது என்று பொருள் படுவது; சியவன ரிஷிக்கு ஸுகன்யாவைக் கல்யாணம் செய்து கொடுத்த மாதிரி இருக்கும் என்று ‘ஆர்ஷ’ என்றே வார்த்தையைப் பார்த்தால் தோன்றுகிறது. ஆனால் தர்ம சாஸ்திரப்படி, வரனிடமிருந்து இரண்டு பசுக்களை வாங்கிக்கொண்டு பெண்ணை பதிலுக்குத் தருவது ‘ஆர்ஷம்’ என்று தெரிகிறது2 . ஆர்ஷம் என்றால் ரிஷிக்குக் கொடுப்பது என்று அர்த்தம் செய்துகொண்டால், இதுவும் உரிய காலத்தில் பிராம்ம விவாஹம் ஆகாத கன்னிகையை ஒரு வயசான ரிஷிக்காவது சுசுருக்ஷை செய்யும் பொருட்டுப் பத்தினியாக கொடுப்பது என்று ஆகும். வரனிடமிருந்து கோ வாங்கிக் கொண்டு கல்யாணம் செய்வது என்கிற போதும், அவனிடம் விசேஷமான சீலங்கள் இல்லாததால்தான் பசுவைக் கொடுத்துப் பெண் கேட்கிறான் என்றும், இந்தப் பெண் வீட்டுக்காரனுக்கும் பிராம்ம விவாஹப்படியான நல்ல ஸம்பந்தம் கிடைக்காததால்தான் திரவியத்தை வாங்கிக் கொண்டு பிரதியாகப் பெண்ணைக் கொடுக்கிறான் என்றும் ஏற்படுகிறது. உத்தமமான விவாஹத்தில் பண சம்பந்தமே, பிஸினஸ் அம்சமே கூடாது என்பது சாஸ்திர தாத்பரியம்.

நாலாவது பிராஜாபத்தியம். பிராஜாபத்தியம் பிஸினஸ் கொடுக்கல் வாங்கலாக இல்லாமல் ஒரு பிரம்மச்சாரிக்கு கன்யாதானம் பண்ணித் தருகிற விவாஹ முறைதான். ஆனால், பிராஜாபத்தியம் என்கிற பெயரில் பிரஜையை உண்டு பண்ணுவது என்ற நோக்கம் அவஸரமாகத் தெரிவதால், தன் குமாரி சீக்கிரமே ரிதுவாகிவிட இருக்கிறாள் என்பதால் அவளுக்குக் கல்யாணம் பண்ணித்தர அவளுடைய தகப்பனார் அவஸரப்பட்டு வரனைத் தேடிக் கொண்டு தாமே போகிறார் என்று ஏற்படுகிறது. அதாவது, பிராம்மம் மாதிரி இல்லாமல் இங்கே பெண் வீட்டுக்காரர்களே பிள்ளையைத் தேடிக்கொண்டு போய்க் கல்யாணம் செய்து தருகிறார்கள். இது இரண்டாம் பக்ஷந்தான். கிருஹலக்ஷ்மியாக இருக்க வேண்டியவனை வரனின் கிருஹத்தார் தேடிவந்து, கேட்டுப் பண்ணிக் கொள்கிற பிராம்மம்தான் இதைவிட உசத்தி.

‘ஆஸுரம்’ என்றால் ‘அஸுரத்தனமான’ அர்த்தம். ஒரு பெண்ணுக்குப் பொருத்தமில்லாத (மாட்ச் ஆகாத) ஒரு வரனானவன் நிறையப் பணத்தை அவளுடைய தகப்பனாருக்கோ பந்துக்களுக்கோ கொடுத்து, அவர்களை அதனால் வசப்படுத்திக் கட்டாயப்படுத்தி அவளைக் கொடுக்கும்படிப் பண்ணுவதுதான் ஆஸுரம்3 . ஆர்ஷப்படி கோவைக் கொடுத்துப் பெண் வாங்கினவன் வலுக்கட்டாயப் படுத்துபவனில்லை. ஆஸுரக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறவனைப் போல் அவனைப் பணமோ, அதிகாரமோ கொழுத்தவன் என்றும் சொல்ல முடியாது. ஆஸுரம் (அசுர சம்பந்தமானது) என்ற வார்த்தையே ஆர்ஷம் (ரிஷி சம்பந்தமானது) என்ற வார்த்தைக்கு விரோதமாகத்தானே இருக்கிறது? அநேக பணக்காரர்கள் இரண்டாந்தாரம் கல்யாணம் செய்து கொண்டது ஆஸுரம்தான்.

அடுத்ததான காந்தர்வ விவாஹம் என்றவுடன் சகுந்தலைக்கும் துஷ்யந்தனுக்கும் நடந்தது என்று உங்களுக்கு நினைவு வரும். இந்தக் காலத்தில் ‘ஒஹோ’ என்று கொண்டாடும் காதல் கல்யாணம் இதுதான்.

‘ராக்ஷஸம்’ பெண் வீட்டுக்காரர்களோடு யுத்தம் செய்து ஜயித்துப் பெண்ணை எடுத்து கொண்டு போய்க் கலியாணம் பண்ணிக் கொள்வது. கிருஷ்ண பரமாத்மா ருக்மணியை இப்படித்தான் விவாஹம் செய்து கொண்டார்.

கடைசி, எட்டாவது தினுசு விவாஹம், பைசாசம், அசுரத்தனமானது, ராக்ஷஸத்தனமானது, இவற்றுக்கெல்லாம் முடிவிலே பிசாசுத்தனமான பைசாசத்தைச் சொல்லியிருக்கிறது. ஆஸுரத்தில் பெண்ணின் ஸம்மதத்தை எதிர்பார்க்காவிட்டாலும், அவளுடைய மநுஷ்யர்களுக்காவது பணத்தைக் கொடுத்தான். ராக்ஷஸத்தில் அவளுடைய மநுஷ்யர்களை ஹிம்ஸித்த போதிலும் அவளுடைய இஷ்டத்தை மீறிக் கல்யாணம் செய்து கொள்ளமாட்டான். ருக்மிணி கிருஷ்ணரிடம் ஆசை வைத்துத் தானே இருந்தாள்? பைசாசத்திலோ பெண்ணுடைய இஷ்டத்தையும் பார்ப்பதில்லை. அவளுடைய பெற்றோர்களுக்கும் திரவியம் தருவதில்லை. பெண் வீட்டுக்காரர்களைப் பகைத்துக் கொண்டு, கல்யாணப் பெண்ணையும் பலவந்தப்படுத்தி விவாஹம் பண்ணிக் கொள்வதைத்தான் பைசாசம் என்று வைத்திருக்கிறது.

ஒரு பக்கம் பைசாசம், இன்னொரு பக்கம் பிராம்மம். பிராம்மம் என்பது தைவத்தைவிட உயர்ந்தது. ஆனாலும் லோகத்தில் எல்லாருக்கும் ஒரே மாதிரி வியவஸ்தை செய்துவிடக்கூடாது. இதை உணர்ந்து அதிகாரி பேதம் சொல்லியிருப்பதுதான் நம் சாஸ்திரத்தின் பெருமை. இதை உணராத இக்காலத்திய அபேத வாதங்களால்தான் எல்லா அனர்த்தங்களும் வந்திருக்கின்றன.

காட்டுக் கட்டைகளாக, கடூரமான பழக்க வழக்கங்களோடு உள்ள வனவாஸிகளும் இருக்கிறார்கள். உள்ளூர அவர்களிடம் நாகரிகவாஸிகளைவிட உயர் பண்புகள் இருக்கும். இவர்களாலும் சமூகத்துக்கு அநேகப் பிரயோஜனம் இருக்கும். ஆனால் இவர்களுக்குள் எப்போதும் தங்களுக்குள்ளே சண்டை சச்சரவு, family feud நிறைய இருப்பதுண்டு. இம்மாதிரி சந்தர்ப்பங்களில் இவர்களுக்கு ராக்ஷஸ, பைசாச விவாஹங்களைக் கூட அநுமதித்தாக வேண்டியிருக்கிறது. விவாஹத்துக்கு பிற்பாடு தன்னால் சண்டையெல்லாம் போய் ஸெளஜன்யமாகி விடுவார்கள். இதே மாதிரி சரீர புஷ்டி, பௌதிகமான ஸந்தோஷங்கள் முதலியவற்றை விசேஷமாகக் கொண்ட க்ஷத்ரியர் போன்றவர்களுக்கு காந்தர்வமும் அநுமதிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்கள் தாங்களாகவே விவரமறிந்து புருஷனைத் தேடி மாலையிடுகிற ‘ஸ்வயம்வர’ உரிமையைக் கூடப் பெற்றிருக்கிறார்கள்.

இதனால்தான் வேதத்தை அடியொற்றிய Hindu Law -ஆன தர்மசாஸ்திரங்களில் எட்டு விதமான விவாஹங்களையும் அநுமதித்திருக்கிறது. மந்திர பூர்வமாக விவாஹம் செய்து கொள்வதற்கு இந்த எட்டு விதமான வதூவரர்களுக்கும் ‘ரைட்’ கொடுத்திருக்கிறது.

இவற்றிலே பிராம்ம விவாஹம் தான் சிரேஷ்டமானது. அது பெண்ணானவள் ரிதுவாவதற்கு முன்பே செய்யப்பட வேண்டியது. “ப்ரதானம் ப்ராக் ரிதோ:” என்று தர்ம ஸூத்திரத்திலேயே இருக்கிறது. பையனின் உபநயன ஸ்தானத்தில் பெண்ணுக்கு ஏழாவது வயசில் (கர்ப்பத்தைக் கூட்டி எட்டாவது வயசில்) செய்ய வேண்டிய விவாஹம் அது.

துரதிருஷ்டவசமாகச் சில பெண்களுக்குப் பிள்ளையாகத் தேடி வந்து செய்துகொள்ளும் பிராம்ம விவாஹம் நடக்காதபோது வயசு ஏறிவிடுகிறது. பிறகு தைவமாகவோ, ஆர்ஷமாகவோ, பிராஜாபத்யமாகவோ நடக்கிறது. இவை மட்டுமே பிராம்மணருக்கு ஏற்பட்டவை. இதரர்களுக்கு இவற்றோடு வேறு விதமான கல்யாணங்களும் – வயசு வந்த பெண்ணே ஸ்வயம்வரமாகத் தேர்ந்தடுப்பது, அல்லது காந்தர்வமாகச் செய்து கொள்வது உள்பட – அநுமதிக்கப் பட்டிருக்கிறன்றன.

கல்யாண மந்திரங்களில் பல எட்டு வகையாரையும் உத்தேசித்தவை. அவை எல்லாருக்கும் பொதுவாக இருக்கப்பட்டவை. அதாவது ரிதுமதியான பெண்ணை விவாஹம் செய்து கொடுப்பதற்கும் உரியனவான மந்திரங்கள் விவாஹ பிரயோகத்தில் வருகின்றன.

இம் மாதிரி அனைவருக்கும் பொதுவாக இருக்கிற மந்திரங்களில்தான் முன்னே சொன்ன இரண்டும் இருக்கின்றன. ஸோமன், கந்தர்வன், அக்னி ஆகியோரின் ஆதீனத்திலிருந்து தன்னை வந்தடைந்த ரிதுமதியான வதூவைப் பற்றி வரன் சொல்கிற அந்த மந்திரங்கள், பிராம்மமாக மட்டுமின்றி மற்ற எல்லா விதமான விவாஹங்களையும் உத்தேசித்துச் சொல்லப்பட்டவையே ஆகும்.

அதையே பால்ய விவாஹம் செய்துகொள்ளும் வரனும் சொல்கிறான். இப்போது குழந்தையாயிருப்பவளை இவன் பாணிக்கிரஹணம் செய்து கொண்டாலும், பிற்பாடு அவள் யுவதியாக ஆன பிறகுதானே இவன் தாம்பத்தியம் நடத்தப் போகிறான்? அப்போது ஸோமன்-கந்தர்வன்-அக்னி ஆகிய மூவரின் ஆதிக்கத்திலிருந்தும் தனக்குக் கொடுக்கப்பட்டவளாகதானே அவளை இவன் அடையப் போகிறான்? அதனால் அப்போது சொல்ல வேண்டிய மந்திரத்தை முன்கூட்டியே (in advance) இப்போது விவாஹத்தில் சொல்லி விடுகிறான்.

நாம் இக்காலத்தில் பிள்ளை பிறந்தவுடன் செய்ய வேண்டிய ஜாதகர்மா, நாம கர்மா, சௌளம் முதலியவற்றை யெல்லாம் சேர்த்து வைத்து அவனுடைய விவாஹத்துக்கு முன் இருபது, இருபத்தி இரண்டு வயசில் பூணூல் போடும் போது காலம் தள்ளிச் சொல்லுகிறோமல்லவா? இப்படிப் பின்னால் காலம் தள்ளுவதற்குப் பதில், முன்பாகவே (அட்வான்ஸாகவே) பிராம்ம விவாஹக்காரன் இந்த மந்திரங்களைச் சொல்லி விடுகிறான்.

இதற்கு ஒரு example (உதாரணம்) சொல்கிறேன். பிரம்மச்சாரி செய்கிற ஸமிதாதானத்தில் தனக்கு நல்ல பிரஜை ஏற்படவேண்டும் என்பதும் அநேக வேண்டுதல்களில் ஒன்றாக வருகிறது. இதைப் பார்த்து நம் சீர்திருத்தக்காரர்கள், “பிரம்மச்சாரியாக இருக்கும்போதே தகப்பனாராகிவிட்டு அப்புறம்தான் விவாஹம் பண்ணிக் கொண்டு கிருஹஸ்தனாக வேண்டும் என்பதே வேதத்தின் அபிப்ராயம்” என்று சொன்னால் எத்தனை அஸம்பாவிதமாக இருக்கும்? பிற்பாடு என்றைக்கோ உண்டாக வேண்டியதற்கு இப்போதே ஒரு பிரம்மச்சாரி பிராத்தனை பண்ணுகிறான் என்பதுதானே சரியான அர்த்தம்? அப்படித்தான் விவாஹ விஷயமாகச் சீர்த்திருத்தக்காரர் காட்டும் வேத வாக்கியமும்.

இந்த மந்திரங்கள் பெண்ணுக்கு வயசு வந்த பின் நடக்கிற மற்ற விதக் கல்யாணங்களிலோ விவாஹ ஸந்தர்ப்பத்திலேயோ யதார்த்தமாகச் சொல்வதற்குப் பொருத்தமாக இருக்கின்றன.

இதுதான் ரைட் ஆனரபிள் சாஸ்திரி கட்சிக்கு நாம் சொல்கிற பதில். பெண்ணுக்கு வயசு வந்த பின்னும் செய்யப்படும் சில வகைக் கல்யாணங்களை அங்கீகரித்து மேற்படி மந்திரங்கள் விவாஹத்தில் சேர்க்கப்பட்டிருப்பதால், எல்லா விவாஹமும் வயசு வந்த பின்தான் செய்ய வேண்டும் என்று அர்த்தம் ஆகாது என்று சொல்கிறோம்.

விவாஹங்களில் மிக உத்தமமானதாக சாஸ்திரங்களில் சொல்லப்படும் ‘பிராம்மம்’ என்பதன்படி, கல்யாணப் பெண் ரிதுவாகாதவளே என்பதற்கு அழுத்தமான சான்றாகவும் விவாஹச் சடங்கின் கடைசியில் ஒரு வேத மந்திரமே இருக்கிறது4.

வஸ்திரம் கட்டிக் கொள்ளத் தெரிந்த பின் ரிதுவாகும் வரையுள்ள இடைக்காலத்தில் ஒரு பெண் குழந்தை கந்தர்வனின் ஆதிக்கத்தில் இருக்கிறாள் என்று சொன்னேனல்லவா? அந்த கந்தர்வனின் பெயர் விச்வாவஸு. இந்த விச்வாவஸுவைப் பார்த்து கல்யாணப் பிள்ளை சொல்கிற மந்திரம் தான் நான் இங்கே குறிப்பிடுவது. “ஏ விச்வாவஸுவே! உன்னை நமஸ்காரம் பண்ணுகிறேன். நீ இந்தப் பெண்ணை விட்டு எழுந்திருந்து போ. வேறொரு பெண் குழந்தையிடம் போய்ச் சேரு. இவளுக்கு நான் பதியாகி விட்டேன் அல்லவா? அதனால் என்னிடம் இவளைக் கொடுத்து விட்டு நீ, தகப்பனாரின் வீட்டில் இருப்பவளும் விவாஹம் ஆகாதவளுமான இன்னொரு பெண்ணைச் சென்றடைவாயாக” என்று இங்கே கல்யாணப்பிள்ளை வேண்டிக் கொள்கிறான்.

வரனானவன் விவாஹத்தின் போது கல்யாணப் பெண்ணை விட்டுப் போகுமாறு கந்தர்வ பூஜை பண்ணி அந்த கந்தர்வனிடம் பிரார்த்திக்கிறான் என்பதிலிருந்து அவள் இன்னம் அக்னியின் ஆதிக்கத்தின் கீழே வரவில்லை, கந்தர்வனின் ஆதிக்கத்தில் இருக்கிறாள், அதாவது வயசுக்கு வரவில்லை என்றுதானே தீர்மானமாக முடிவாகிறது?

“எல்லாம் சரி. ஆனால் மநுஸ்மிருதியிலிருந்து சீர்திருத்தக்காரர்கள் quote செய்தார்களே! ரிதுவாகி மூன்று வருஷம் வரனை எதிர்பார்த்துவிட்டு, அப்புறம் ஒரு பெண் தானே புருஷனைத் தேடிக் கொள்ளலாம் என்று அந்த ச்லோகம் சொல்கிறதே! அதற்கென்ன ஸமாதானம்?”

ஸமாதானம் இருக்கிறது. “வயசுக்கு வருமுன் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிட வேண்டும்” (ப்ரதானம் ப்ராக்ரிதோ:) என்பதே தர்மசாஸ்திரத்தின் பொது விதி. அந்த விதி தப்பிப் போகிற கேஸ்களில் என்ன செய்வது? ஒரு பெண்ணை வரனாகத் தேடி வராவிட்டால் அவளுடைய பிதாவோ, பிராதாவோதான் பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணித் தரவேண்டும். ஆனால் இப்படிச் செய்யாமல் அவர்கள் பாட்டுக்கு பொறுப்பில்லாமலிருந்தால்? அல்லது ஒரு பெண் நாதியில்லாமல், கார்டியன் இல்லாமல் இருந்தால்? அப்படிப்பட்டவளைப் பற்றித்தான் ரிதுவானதற்கு மூன்று வருஷத்திற்கு பின் தானே புருஷனைத் தேடலாம் என்று மநுஸ்மிருதியில் சொல்லியிருக்கிறது. அதாவது, நாதியே இல்லாதவளுங்கூட, வயசுக்கு வந்தபின் உடனே தானாக புருஷனுக்காகப் புறப்படாமல், யாராவது பந்து மித்ரர்களோ, அண்டை அசலாரோ, அபிமானமுள்ளவர்களோ தனக்காக மாப்பிள்ளை தேட மாட்டார்களா என்று பொறுத்திருந்து பார்த்துவிட்டு, அப்புறம்தான் தானாகவே தேடலாம் என்று சொல்லியிருக்கிறது.

Context [ஸந்தர்ப்பம்] -ஐப் பார்க்காமலும், முன்னுக்குப் பின் வருவதை comparitive -ஆக [ஒப்பிட்டு]ப் பார்க்காமலும் சாஸ்திர வசனங்களையும் வேத மந்திரங்களையும் துண்டாக எடுத்து வைத்துக்கொண்டு பார்ப்பதால்தான் சீர்திருத்தக்காரர்கள் ஆசாரசீலர்களாக உள்ளவர்களின் வழக்கத்திலிருப்பதற்கு மாறானதையே சாஸ்திரோக்தமானது என்று வாதிக்கும்படி ஆகியிருக்கிறது.

சாக்ராயண உஷஸ்தி என்ற ரிஷிக்கு பால்ய (ரிதுவாகாத) மனைவியிருந்ததாக உபநிஷத்திலேயே [சாந்தோக்யம் 1.10.1] இருக்கிறது. இம்மாதிரி விஷயங்களை ஆர அமர சரியாகப் பார்க்காமல் சீர்த்திருத்தக்காரர்கள் பதட்டப்பட்டுப் பேசி விடுகிறார்கள்.

இருந்தாலும் முன்பெல்லாம் சீர்திருத்த வாதங்களுக்கு எதிர் வாதம் செய்ய ஜனங்களுக்குத் தெரியாவிட்டாலுங்கூட, “இதுவரை பெரியவர்கள் எப்படிப் பண்ணி வந்திருக்கிறார்களோ அப்படியே போவோம்; புதிதாக ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்ற அபிப்ராயம் இருந்தது. அதனால்தான் ஸ்ரீநிவாஸ சாஸ்திரி இந்த கல்யாண வயசு reform விஷயமாக இரண்டு முறை கவுன்சிலில் மசோதா கொண்டு வந்தும் அது நிறைவேறவில்லை. அப்புறம் தான் ஸார்தா என்பவர், இப்போது நாம் “சாரதா சட்டம்” என்று ஒரு அம்மாள் போட்ட சட்டம் மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிற இந்த சட்டத்தைக் கொண்டு வந்தார். அதற்குக்கூட சரிக்குச் சமன் ஆதரவாக 50%, எதிர்தரப்பில் 50% என்றுதான் வோட் விழுந்தது. அந்த ஸந்தர்ப்பத்தில் பிரிட்டிஷ் ஸர்க்காரானது, “காங்கிரஸ் கேட்கிற ஸ்வயராஜ்யத்தைத்தான் நாம் தரவில்லை; அவர்களுக்குத் திருப்தியாக, மதத்தைக் கெடுப்பதற்காவது ஸஹாயம் செய்யலாம்” என்று நினைத்து நாமினேட்டட் மெம்பரை வைத்து இந்த மசோதாவுக்கு ஆதரவாக வோட் பண்ணச்சொல்லி, விவாஹ வயதை உயர்த்தியேயாக வேண்டும் என்பதைச் சட்டமாகச் செய்து விட்டார்கள். அதாவது public opinion (பொது ஜன அபிப்ராயம்) -ஐ மீறி கவர்மென்ட் பலத்தினாலே அந்த மசோதா ‘பாஸ்’ ஆயிற்று.

இப்போது நிலைமை ரொம்பவும் மாறிவிட்டது பழைய பழக்கங்களில் பக்தி விச்வாஸம் போய்விட்டது. பிரிட்டிஷ் ராஜ்யத்தில் சாரதாச் சட்டம் அமுலானவுடன், அவர்கள் கொடுத்திருந்த மஹாமஹோபாத்யாய டைட்டிலை “வேண்டாம்” என்று துறந்த பண்டிதர்கள் உண்டு. வங்காளத்திலிருந்த பஞ்சாணன தர்க்க ரத்ன பட்டாசார்யரும், திருவிசநல்லூரிலிருந்து காசிக்குப் போய் ஸெட்டில் ஆகிவிட்ட லக்ஷ்மண சாஸ்திரி (தமிழ்நாட்டு பிராம்மணர் என்று தெரிவதற்காக ‘லக்ஷ்மண சாஸ்திரி திராவிட்’ என்றே பெயர் வைத்துக் கொண்டவர்) என்பவரும் இப்படிப்பட்ட தியாகத்தைச் செய்தார்கள். இப்போது நம் ஸ்வதந்திர இந்தியாவில் ராஜாங்கத்தால் சாஸ்திர விஷயங்களில் செய்யப்படும் மாறுதல்களைப் பார்த்து இப்படிக் குமுறி எழுகிற உணர்ச்சி யாருக்கு இருக்கிறது?

நம் குழந்தைகளுக்கு சாஸ்திர தாத்பரியங்களை முழுக்கவும் நன்றாகச் சேர்த்துப் பிடித்துப் பார்த்துச் சொல்ல வேண்டும். இங்கே ஒன்றும், அங்கே ஒன்றும் பார்த்தால் conflicting -ஆக [முரணாக] த்தான் இருக்கும். ‘வேதத்தில் love marriage தான் சொல்லியிருக்கிறது’ என்கிற அளவுக்கு அரை குறை ரிஸர்ச் கொண்டு விட்டு விடுகிறது! சாஸ்திரங்களைப் பூராவாகப் பார்க்கவேண்டும். ஒன்றை எடுத்துக் கொள்ளும்போது அது சொல்லப்பட்ட ஸந்தர்ப்பத்தைப் பார்க்க வேண்டும்; அதற்கு முன்னும் பின்னும், மற்றும் இதே விஷயமாக இதர இடங்களிலும் என்ன சொல்லியிருக்கிறது என்றெல்லாம் தீர்க்கமாகப் பார்த்து, விசாரித்தே, முடிவு சொல்ல வேண்டும்.

பிராம்ம விவாஹம் எல்லா ஜாதியாருக்கும் உண்டு. ஆனால் பிராம்மணர் தவிர மற்ற ஜாதியாருக்கு வேறு விதமான விவாஹமும் உண்டு. அதாவது ரிதுமதி விவாஹமும் அநுமதிக்கப்பட்டிருக்கிறது. சரீர ஸம்பந்தமான ஸெளக்கியங்களுக்கு முக்கியத்வம் தருவதானால் மற்ற விவாஹங்களும் செய்யலாம். ஆத்மாபிவிருத்திக்கு பிராம்ம விவாஹமே எடுத்தது.


1 ய‌ஜ்ஞ‌ஸ்ய‌ ரித்விஜே தைவ‌: (யாஜ்ஞ‌வ‌ல்கிய‌ ஸ்மிருதி I.59)

2 ஆகாயார்ஷ‌ஸ்து கோத்வ‌ய‌ம் (யாஜ்ஞ‌வ‌ல்கிய‌ ஸ்மிருதி I.59)

3 ஆஸுரோ த்ர‌விணாதானாத் (யாஜ்ஞ‌வ‌ல்கிய‌ ஸ்மிருதி I.61)

4 உதீர்ஷ்வாத‌ : ப‌திவ‌தீ ஹ்யேஷா விச்வாவ‌ஸூம் ந‌ம‌ஸா கீர்பிரீடே|
அந்யாம் இச்ச‌ பித்ருஷ‌தாம் வ்ய‌க்தாம் ஸ‌ தே பாகோ ஜ‌நுஷா த‌ஸ்ய‌ வித்தி||
உதீர்ஷ்வாதோ விச்வாவ‌ஸோ ந‌ம‌ஸேடாம‌ஹே த்வா|
அந்யாம் இச்ச‌ ப்ர‌ப‌ர்வ்ய‌ம் ஸ‌ம்ஜாயாம் ப‌த்யா ஸ்ருஜ|
-(ரிக் X.85.21-22)

விவாஹ வயது குறித்த விவாதம்

‘பால்ய விவாஹம் கூடாது; பெண்கள் ரிதுவான பின்தான் கல்யாணம் பண்ணவேண்டும்’ என்று இந்த நூற்றாண்டு ஆரம்பத்திலேயே நம் மதஸ்தர்களில் ரொம்பவும் செல்வாக்காக இருந்தவர்கள் வாதம் செய்து மகாநாடுகள் நடத்தி resolutions [தீர்மானங்கள்] போட்டிருக்கிறார்கள். இவர்கள் வேதத்தில் நம்பிக்கையில்லாதவர்கள் அல்ல. மாறாக தாங்கள் சொல்வதுதான் வேத ஸம்மதமான விவாஹம், பால்ய விவாஹம் என்பது வேத ஸம்மதமானதில்லை என்று இவர்கள் சொன்னார்கள்.

எம். ரங்காச்சாரியார், சிவஸ்வாமி அய்யர், ஸுந்தரமய்யர், கிருஷ்ணஸ்வாமி அய்யர் மாதிரியான பெரிய புள்ளிகள் இவர்களில் இருந்தார்கள். அப்புறம் ரைட் ஆனரபிள் [வி.எஸ். ஸ்ரீநிவாஸ] சாஸ்திரி இந்த விஷயத்தில் விசேஷமாக வாதம் பண்ணினார்.

நல்ல சாஸ்திர பாண்டித்தியம் பெற்றிருந்தவர்களிலேயே வைஷ்ணவர்கள் காஞ்சிபுரத்திலும், ஸ்மார்த்தர்கள் திருவையாற்றிலும் இரண்டு ஸபைகள் நடத்தி, வேதப் பிரகாரம் பூர்வத்தில் விவாஹ வயசு உயர்வாகத்தான் இருந்தது, ரிதுமதி விவாஹந்தான் நடந்திருக்கிறது என்று அபிப்ராயம் சொன்னார்கள்.

அப்புறம் ஏன் இப்படி பால்ய விவாஹம் வந்தது என்பதற்கும் ஒரு காரணம் சொன்னார்கள். அதாவது: துருக்கர்கள் இந்த தேசத்துக்கு வந்த புதிதில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த கன்யாப் பெண்களைத் தூக்கிக் கொண்டு போய் பலாத்காரம் பண்ணுவது அதிகமாயிருந்ததாம். ஆனால் ஒருத்தன் ‘தொட்ட’தை (பொட்டுக் கட்டினதை) அவர்கள் பலாத்காரம் பண்ணமாட்டார்களாம். அதனாலேயே பெண்கள் குழந்தைகளாக இருக்கும்போதே கல்யாணம் பண்ணிவிடுகிற புது வழக்கத்தை ஆரம்பித்தார்களாம். இப்படி இந்தக் கல்யாணச் சீர்திருத்தக்காரர்கள் சொல்லி, ‘இப்போது நாம் மறுபடி வேதத்தில் இருந்த பிரகாரமே மாற்ற வேண்டும். Pre-puberty marriage [வயசு வரும் முன் கலியாணம்] என்ற அநாகரிகத்தைத் தொலைத்து விடவேண்டும்” என்று வாதம் செய்தார்கள்.

தாங்கள் சொல்வது வாஸ்தவத்தில் சாஸ்திரோக்தமானது என்பதற்கு ஆதரவாக இவர்கள் குறிப்பாக இரண்டு சான்றுகளை காட்டினார்கள். ஒன்று விவாஹ சடங்கிலேயே வருகிற சில வேத மந்திரங்கள். மற்றது நம்முடைய தர்ம சாஸ்திரங்களிலெல்லாம் மிகச் சிறந்ததாக கருதப்படும் மநுஸ்மிருதி.

விவாஹப் பிரயோக மந்திரமான வேத வாக்கியத்தில்1 என்ன சொல்லியிருக்கிறது?

இதைச் சொல்லுமுன் இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும்.

நம் ஒவ்வொரு தேகத்திலும் அங்கங்களுக்குள்ளே அவை ஒவ்வொன்றுக்கும் அதி தேவதையாக ஒரு தேவன் இருக்கிறான். கண்ணில் ஸூரியன், கையில் இந்திரன் என்றிப்படி நமக்குள் ஆத்யாத்மிகமாக தேவ சக்திகள் இருக்கின்றன. இது தவிர ஒவ்வொரு வயோவஸ்தையிலும் (வயசுக்கட்டத்திலும்) ஒவ்வொரு தேவதைக்கும் நம் மேல் ஆதிக்கம் இருக்கிறது. இவ்விதத்திலே ஒரு பெண்ணானவள் பிறந்ததிலிருந்து வஸ்திரம் கட்டிக் கொள்ளத் தெரிகிற வரையில் ‘ஸோமன்’ என்ற தேவதையின் ஆதீனத்தில் இருக்கிறாள். (புருஷர்கள் கட்டிக் கொள்ளும் வேஷ்டிக்கே ‘சோமன்’ என்று பேர் இருக்கிறது!) அதற்கப்புறம் ரிதுவாகும் வரையில் அவள் கந்தர்வனின் ஆதீனத்தில் இருக்கிறாள். வயசு வந்ததிலிருந்து மூன்று வருஷம் அக்னியின் ஆதிக்கத்தில் இருக்கிறாள். ஸோமன் என்றால் சந்திரன். ஸோமன் ஒரு பெண்ணை ஸ்வீகரித்துக் கொண்டிருக்கிற குழந்தைப் பிராயத்தில் அதனிடம் நிலா மாதிரியான குளிர்ச்சி இருக்கிறது. அப்புறம் கந்தர்வன் என்ற உல்லாஸ ஜீவியான, நல்ல ஸுந்தரமான தேவதையிடம் இருக்கிற சிறுமிக்கு லாவண்யம் விசேஷமாக இருக்கிறது. பிறகு அக்னியின் அதிகார காலம் உண்டான போது காமாக்னியை ஏற்படுத்தும் சக்தி உண்டாகிறது. மூன்று தேவதைகளுடைய அதிகாரத்துக்கு இப்படி லௌகிகமாக அர்த்தம் பண்ணுவதுண்டு. இது இருக்கட்டும்.

சீர்திருத்தக்காரர்கள் சான்று காட்டும் வேத மந்திரங்களின் அர்த்தம் என்ன? வரன் எனப்படும் கல்யாணப்பிள்ளை வதூ எனப்படும் கல்யாணப் பெண்ணைப் பார்த்து சொல்லும் இந்த வேத வாக்கியங்களுக்கு அர்த்தம் என்ன என்றால், “முதலில் ஸோமன் உன்னை அடைந்தான்; இரண்டாவதாக கந்தர்வன் அடைந்தான்; மூன்றாவதாக அக்னி உனக்கு அதிபதி ஆனான். மநுஷ்ய வர்க்கத்தைச் சேர்ந்த நான் நான்காமவனாக உன்னை ஆளுவதற்கு வந்திருக்கிறேன். உன்னை ஸோமன் கந்தர்வனிடம் கொடுத்தான்; கந்தர்வன் அக்னியிடம் கொடுத்தான்; அக்னி என்னிடம் இப்போது கொடுத்திருக்கிறான்” என்று அர்த்தம்.

விவாஹத்தின் போதே சொல்லப்படுகிற மந்திரத்தில் இப்படி வருவதால் கல்யாணப் பெண்ணானவள் ரிதுமதியாகி அக்னியின் ஆதினத்தில் மூன்று வருஷம் இருந்த பிறகுதான் அவளை ஒருத்தன் கல்யாணம் பண்ணிக் கொள்கிறான் என்றுதானே அர்த்தம் ஆகிறது?

இதைச் சொல்லித்தான் சீர்திருத்தக்காரர்கள், “நாங்கள் ஒன்றும் சாஸ்திர விரோதமான reform (சீர்திருத்தம்) கொண்டு வரவில்லை. ஆதியிலிருந்த சாஸ்திரத்துக்கு விரோதமாகத் துருக்க ராஜ்யத்தில் ஏற்பட்ட வழக்கத்தை மாற்றிப் பழையபடி சாஸ்திரோக்தமாகப் பண்ண வேண்டும் என்றுதான் சொல்கிறோம். வேத வாக்கியத்தைவிட பெரிய பிரமாணம் இருப்பதாக எந்த ஸநாதனியும் சொல்ல முடியாதே! அதைத்தான் நாங்கள் ‘அதாரிடி’யாகக் காட்டுகிறோம் என்று சொன்னார்கள்.

இதோடு மநுஸ்மிருதியிலிருந்து இவர்கள் ஒன்றை மேற்கோள் காட்டினார்கள்.

த்ரீணி வர்ஷாண்யுதீக்ஷேத குமாரீ ரிதுமதீ ஸதீ |
ஊர்த்வம் து காலாத் ஏதஸ்மாத் விந்தேத ஸத்ருசம் பதிம்||

இதற்கு அர்த்தம், “வயசுக்கு வந்த பெண் அதற்கப்புறம் மூன்று வருஷம் வரன் தேடி வருகிறானா என்று காத்திருந்து பார்க்கவேண்டும். வராவிட்டால் அதன்பின் அவளே பதியைத் தேடிக் கொள்ளலாம்” என்பது. இங்கே post-puberty marriage (ரிதுமதி ஆனபின்பே விவாஹம்) என்றுதானே தெரிகிறது? அது மட்டுமில்லை. “பெரியவர்கள் பார்த்துத்தான் பண்ணி வைக்க வேண்டும் என்றுகூட இல்லாமல் ஒரு பெண் தானே ஸ்வ‌யேச்சையாக‌ புருஷ‌னைத் தேடிக்கொள்கிற‌தை அநுமதிக்கிற அளவுக்கு அவ்வளவு ‘மாடர்னாக’ மநுதர்மம் இருக்கிறது. நடுவாந்திரத்தில் வந்த வைதிகக் குடுக்கைகளும், மடிஸஞ்சிகளுந்தான் எல்லாவற்றையும் மாற்றிக் காட்டுமிராண்டித்தனமாகச் செய்துவிட்டார்கள்” என்று சீர்திருத்தக்காரர்கள் சொன்னார்கள்.

“வேத மந்திரங்கள், தர்ம சாஸ்திர ச்லோகம் இவற்றின் அர்த்தத்தைப் பார்த்தால் அவர்கள் சொல்வது சரிதானே? இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள், ஸ்வாமிகளே!” என்று கேட்டால், பதில் சொல்கிறேன்.


1ஸோம‌: ப்ர‌த‌மோ விவிதே க‌ந்த‌ர்வோ விவித‌ உத்த‌ர‌:|
த்ருதியோ அக்னிஷ்டே ப‌தி: துரிய‌ஸ்தே மநுஷ்யஜா:||
ஸோமோ த‌த‌த் கந்தர்வாய கந்தர்வோ த‌த‌த் அக்ன‌யே|
ர‌யிம் ச‌ புத்ராம் சாதாத் அக்னிர் ம‌ஹ்ய‌ம் அதோ இமாம்||

[ரிக் X.85.40-41]

விவாஹ வயதும் சட்டமும்

உபநயனம் மாதிரிப் பெண்ணின் ஏழாவது வயசில் கல்யாணம் பண்ண வேண்டும்; அப்போதுதான் சரணாகதி புத்தி வரும் – என்று சொன்னால், ‘இது இந்த காலத்தில் ஸாத்தியமா? சட்ட விரோதமல்லவா?’ என்று கேட்பீர்கள்.

‘ராஜாங்கத்தின் சட்டத்தை மீறு’ என்று சொல்லக் கூடாதுதான். அப்படிச் சொல்லவில்லை. சட்ட மறுப்பு (civil disobedience) என்று இப்போது ஆட்சி நடத்துகிறவர்களே ஒரு காலத்தில் பண்ணிக் காட்டித்தான் இருக்கிறார்கள். ‘சட்டம் என்று யாரோ எழுதினதற்காக எங்கள் ஸ்வாதந்தரியத்தை விட மாட்டோம்’ என்று அப்போது சொன்னார்கள். அதே மாதிரி, “ஜெயிலில் போட்டாலும் பரவாயில்லை; பிராணன் போனாலும் பரவாயில்லை; ஆத்ம க்ஷேமத்துக்காக ஏற்பட்ட விவாஹ ஸம்ஸ்காரத்தை வெறும் லௌகிக விஷயமாக்கிச் சட்டம் பண்ணினால் ஏற்கமுடியாது” என்று கிளம்புகிற வேகம் நம் ஜனங்களுக்கு இல்லை. அப்படி இல்லையே என்பது மட்டும் நான் ‘சட்டத்தை மீற வேண்டாம்’ என்று சொல்வதற்குக் காரணமில்லை. ஒரு விஷயத்தில் மீறினால், மற்றவற்றிலும் மீறுகிற எண்ணம் உண்டாகி, கட்டுப்பாடே போய்விடும். அதனால்தான் [சட்டத்தை மீறும்படிச்] சொல்லவில்லை. ஆனாலும் சட்டத்தை மீறாமலே ராஜாங்கத்துக்கு சாஸ்திர அபிப்ராயத்தை விடாமல் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். ராஜாங்கத்துக்கு மட்டுமில்லை; ஜனங்களிலும் நூற்றுக்குத் தொண்ணூறு பேருக்கு மேல் சாஸ்திர அபிப்ராயத்தை விட்டு விட்டார்களே! அவர்களுக்கும் பாக்கியிருக்கிற ஸ்வல்ப சாஸ்திரக்ஞர்கள் எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். சட்டத்தை மீறாமலே, முன்னேற்றம் எத்தனை நிதானமாக ஏற்பட்டாலும் அதனால் மனம் தளராமல் நூறு வருஷம் ஆனாலும் ஆகட்டும்! இன்னம் அதிகமானாலும் ஆகட்டும்! உன்னதமான இந்த தேசாதாரம் மறுபடி பழக்கத்தில் வரப் பண்ணுவதற்கு நம்மாலானதை சாந்தமான வழியிலேயே செய்வோம் என்று செய்ய வேண்டும். பலனை பார்க்க நாம் [உயிரோடு] இருக்க வேண்டும் என்பதில்லை. ஆயிரம் வருஷத்துக்கு அப்புறம்தான் பலன் உண்டாகும் என்றாலும், அதற்கு இப்போதே நம்மாலான விதையைப் போட்டுவிட வேண்டும். யத்தனத்தை இப்போது ஆரம்பித்தால்தான், என்றைக்கோ ஒரு நாளாவது பலன் கிடைக்கும். பிரயத்தனமே இல்லாவிட்டால் என்றைக்கும் பலன் ஏற்பட முடியாதல்லவா? விதையே போடாவிட்டால் எப்படி மரம் உண்டாகும்?

தர்மசாஸ்திரமே பெரிய சட்டம் என்று ராஜாங்கத்தாருக்கும், பொதுஜனங்களுக்கும் புரியும்படியாக, ஹிதமான முறையில் (by persuasion) வற்புறுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.

விவாஹமே பெண்டிருக்கு உபநயனம்

இதற்குப் பிரம்மசரியம் ஒருத்தனைத் தயார் பண்ணுகிறது என்றால் பெண்ணின் கதி என்ன? அவளுக்கு உபநயனமோ, பிரம்மசரிய ஆச்ரமமோ இல்லையே! புருஷன் மனசு கட்டுப்பட்டிருக்கிற மாதிரி அவளையும் கட்டுப்பாட்டில் கொண்டு வராமல் இருக்கலாமா? சீர்திருக்காரர்கள் சொல்கிற மாதிரி ஸ்திரீகளுக்கு உபநயனமும் பிரம்மசரிய ஆச்ரமமும் இல்லாமல் அநீதிதான் இழைத்திருக்கிறதா என்றால் – இல்லை.

புருஷனுக்கு உபநயன-பிரம்மசரியங்களுக்கு அப்புறம் ஏற்படுகிற விவாஹ ஸம்ஸ்காரமேதான் ஒரு பெண்ணுக்கு உபநயன ஸ்தானத்தில் அமைகிறது. அந்தக் குழந்தை பிராயத்திலிருந்து இவளுக்கு வயது வந்து தாம்பத்தியம் ஆரம்பிக்கிற வரையில், குருவிடம் பிரம்மச்சாரி மனஸை அர்ப்பணம் பண்ணின மாதிரி இவள் பதியிடம் பண்ண வேண்டும்.

“ஸ்த்ரீணாம் உபநயன ஸ்தானே விவாஹம் மநுரப்ரவீத்” என்பது மநுஸ்மிருதி.

இதற்கு ஒரு வெளி அடையாளம் காட்டு என்றால் சட்டென்று, ‘உபநயனத்திலே ஒரு பையனுக்குப் பூணூல் போடுகிற மாதிரி விவாஹத்திலே பெண்ணுக்கு மங்கள ஸூத்திரம் கட்டப்படுகிறது’ என்று சொல்லிவிடலாம்.

உப-நயனம் என்றால் ‘கிட்டே அழைத்துப் போவது’, அதாவது ‘குருவினிடம் அழைத்துப் போய் குருகுல வாஸத்தில் பிரம்மசரியம் அநுஷ்டிக்கும்படிப் பண்ணுவது’ என்று அர்த்தம் சொன்னேன். ஸ்திரீகளுக்குப் பதியே குரு. அவனிடம் கொண்டு சேர்க்கிற விவாஹம்தான் அவளுக்கு உபநயனம்!

அதாவது சாஸ்திரப் பிரகாரம், ஒரு பிள்ளைக்கு உபநயனம் செய்கிற ஏழாவது வயசில் பெண்ணுக்கு விவாஹம் செய்துவிட வேண்டும். காமம் தெரிகிற முன்பே இவள் பதியை குருவாக வரித்துவிடும்படி செய்ய வேண்டும். காமம் தெரியாவிட்டால்தான் இப்படி குருவாக வரிக்கவும் முடியும்! குருவை ஒருத்தன் தெய்வமாகவே மதிக்க வேண்டும் என்பதும் சாஸ்திரம் அல்லவா? அப்படியே இந்தப் பெண் குழந்தை சின்ன வயசில் பதியை குரு-தெய்வமாக பாவித்து ஹ்ருதயத்தை அவனுக்கு ஸமர்ப்பணம் பண்ணிவிட வேண்டும். அந்த இள வயசில்தான் இது ஸாத்தியமும் ஆகும். பிற்பாடு புத்தியால் எதிர்க்கேள்வி கேட்பது, அஹம்பாவத் தடிப்பு எல்லாம் உண்டாகிவிடும்.

ஹ்ருதய-ஸமர்ப்பணம் — சரணாகதி — தான் ஜன்மாவைக் கடைத்தேற்றுகிற பெரிய ஸாதனம். கீதையின் சரம ச்லோகத்தில் சொன்ன இந்த சரணாகதியை தெய்வமோ, குருவோ, பதியோ, யாரிடமோ பண்ணிவிட்டால் போதும். அப்புறம் தனக்கென்று ஒன்றும் இல்லை. நாம் யாரிடம் சரணாகதி பண்ணினோமோ அவர்கள் மூலம் ஈச்வரன் அநுக்ரஹம் பண்ணிவிடுவான்.

இம்மாதிரியாகப் பிள்ளையாகப் பிறந்த ஒருத்தனை குருவிடம் சரணாகதி பண்ணும்படியாக உபநயனத்தையும், அவன் கல்யாணம் செய்துகொள்ளும் போது அந்தக் கல்யாணத்தையே பெண்ணாய்ப் பிறந்தவள் பதியிடம் சரணாகதி பண்ணும்படியாக விவாஹ ஸம்ஸ்காரத்தையும் ரிஷிகள் ஏற்பாடு செய்து தந்திருக்கிறார்கள்.

அதாவது, பெண்ணை மட்டும் மட்டம் தட்டி அவளைப் புருஷனுக்கு சரணாகதி பண்ணச் சொல்லவில்லை. அந்தப் புருஷனையும் விவாஹத்துக்கு முந்தியே குருவுக்கு சரணாகதி பண்ணச் சொல்லியிருக்கிறது. அவன் எந்த வயசில் இந்த சரணாகதியைச் செய்கிறானோ அந்த வயசில் இவள் அவனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு சரணாகதி பண்ணவேண்டும் என்பது சாஸ்திரத்தின் அபிப்ராயம்.

உசத்தி-தாழ்த்தி, உரிமை (right), ஸ்தானம் (position) முதலான விஷயங்களைவிட சித்த சுத்தியைப் பெரிதாக நினைத்தால் அப்போது சரணாகதிதான் முக்கியமாகிறது. அதற்கு வழியாகத்தான் புருஷனுக்கு உபநயனமும் பெண்ணுக்கு விவாஹமும் விதிக்கப்பட்டிருக்கின்றன என்று புரிந்து கொள்ள வேண்டும்.

குடும்பக் கட்டுப்பாடும் பெண் தொகைப் பெருக்கமும்

எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போது குடும்பக் கட்டுப்பாடு என்று அஸங்கியமாகப் பல காரியங்களை தண்டோரா போட்டுக் கொண்டு பண்ணுகிறார்களே, இதற்கு அவசியமே இல்லாமல், தன்னால் இயற்கையாகவே குழந்தைகள் பிறப்பது ரொம்பவும் மட்டுப்படும். முடிந்த மட்டில் சமைத்த ஆஹாரங்களுக்குப் பதில் பழங்களைச் சாப்பிடுவது, சாஸ்திரப்படி நிஷேதனமான [விலக்கப்பட்ட] நாட்களில் பிரம்மச்சரியத்தோடு இருப்பது என்பதாக தம்பதிகள் இருக்க ஆரம்பித்து விட்டால் ஆர்டிஃபீஷியலாக [செயற்கை முறைகளில்] குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டிய அவசியமே ஏற்படாது.

இங்கே இன்னொரு விஷயம் சொல்கிறேன். பொதுவாக பாபுலேஷனை குறைக்க வேண்டும் என்கிற அபிப்ராயத்தோடு இது ஸம்பந்தமில்லை என்று தோன்றினாலும் உண்மையில் ஸம்பந்தம் உள்ளதுதான். வரதக்ஷிணைப் பிரச்னைக்கு ‘ஸொல்யூஷன்’ [தீர்வு] தான் நான் சொல்ல வந்த விஷயம். வரதக்ஷிணைக்கும் பாபுலேஷனுக்கும் என்ன ஸம்பந்தம்? பாபுலேஷனில் பெண் பிரஜைகளின் விகிதாசாரம் ஜாஸ்தியானதால்தான் வரதக்ஷிணைப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார சாஸ்திரப்படி, குறைச்சலாக உள்ள சரக்குக்குத்தான் கிராக்கி ஜாஸ்தி. இதன்படி, பாபுலேஷனில் புருஷப் பிரஜைகள் குறைவாகி, பெண்கள் அதிகமாக ஆரம்பித்தபோதுதான், பெண்களுக்கு ஸம எண்ணிக்கையில் பிள்ளைகள் இல்லாததால் பெண்ணைப் பெற்றவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வரதக்ஷிணை கொடுக்கிற பழக்கம் ஏற்பட்டது. இது ஸமீபகால வழக்கந்தான். இது ஏற்பட்ட சந்தர்ப்பத்தை நான் ஆராய்ச்சி பண்ணிப் பார்த்ததில், வெள்ளைக்கார ஆட்சி ஏற்பட்டு பிராம்மணர்கள் குமாஸ்தாக்களாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வெறும் பேனாவால் உழுகிற sedantry வேலைகளை ஆரம்பித்த பின்தான் இந்த நிலை உண்டானதாகத் தெரிந்தது. அதாவது உடல் வருந்த இவன் யக்ஞ கர்மாநுஷ்டானம் பண்ணின காலம் போய் உட்கார்ந்து உத்தியோகம் பண்ண ஆரம்பித்த பின்தான் இவனுக்குப் புருஷ பிரஜைகளைவிட அதிகமாகப் பெண் குழந்தைகள் பிறக்க ஆரம்பித்தன. கடைசியில் அதன் விளைவாகப் பிள்ளைகளுக்கு கிராக்கி ஏற்பட்டு வரதக்ஷிணை என்கிற பெரிய களங்கம் உண்டாகி விட்டது. யஜ்ஞம் மட்டுமில்லாமல், ‘பூர்த்த தர்மம்’ என்ற பெயரில் முன் காலங்களில் பிராம்மணன் ஸோஷல் ஸர்வீஸ் செய்த போது வெட்டுவது, கொத்துவது, உழுவது முதலான காரியங்களிலும் மற்றவர்களோடு ஓரளவு பங்கு எடுத்துக் கொண்டு சரீர சிரமம் நிறையப்பட்ட வரையில் அவனுக்கு ஆண் பிரஜையே அதிகமாகப் பிறந்தது.

இப்படி நான் சொல்வதற்கு பலன் தருவதாக இன்னொன்றும் சொல்கிறேன். முன்பு பிராம்மணர்களிடம் மட்டுமிருந்த வரதக்ஷிணை வழக்கம் மெதுவாக இப்போது மற்ற சில ஜாதியார்களிடமும் ஏற்பட்டு வருகிறதல்லவா? இவர்கள் யார் என்று பார்த்தால், அநேகமாக இவர்களும் சரீர உழைப்பை விட்டுவிட்டு, உட்கார்ந்து வேலை பார்க்கிற முறைக்குத் திரும்பினவர்களாகவே இருக்கிறார்கள்.

ஆனபடியால் இப்போது ஆபீஸ்களில் வேலை செய்கிறவர்களும், லீவ் நாட்களிலாவது குளம் வெட்டுவது, ரோடு போடுவது, கோவிலுக்கு மதில் கட்டுவது முதலான ஸோஷல் சர்வீஸ்களை உடல் வருந்தப் பண்ணினால் ஆண் பிரஜைகள் அதிகம் பிறந்து, முடிவில் வரதக்ஷிணைப் பழக்கம் தொலையும் என்று நினைக்கிறேன். ஆனால் அது வேறு ஸப்ஜெக்ட்.

இந்திரிய ஸுகத்திலும் வியவஸ்தை வேண்டும் என்பதில் ஆரம்பித்தேன்.

தர்மத்துக்காகவே ஏற்பட்டது

தர்ம அர்த்த காம மோக்ஷம் என்று நான்கு புருஷார்த்தங்களைச் சொல்கிறோம். இதிலே முதலாவதான தர்மம் எப்போதுமே விட்டுப் போகக்கூடாது. அர்த்தம் (பணம்) சம்பாதிப்பதும் காம அநுபவமும் ஒரு காலத்தில் விட்டு விடுபவை. ஆனால் இவற்றை அநுபவிக்கும் காலத்திலும் தர்மத்திலிருந்து விலகக்கூடாது. சாஸ்திர தர்மங்களையும் விட்டு ஸந்நியாஸியாகிறபோதுகூட, ஒருத்தன் தர்மத்துக்கு அப்பாற்பட்டவனாகி விடுகிறானே தவிர, அதை ஆக்ஷேபிக்கிறவனாகவோ, அதர்மத்தைச் செய்கிறவனாகவோ ஆகிவிடவில்லை. ‘ஸந்நியாஸ தர்மம்‘ என்றுதானே அவன் பின்பற்ற வேண்டியவைகளையே சொல்கிறோம்?

பூர்வ மீமாம்ஸை என்ற கர்ம காண்டம், உத்தர மீமாம்ஸை என்ற ஞான காண்டம் முதலியவைகளைப் பற்றி முன்பே சொன்னேன். இவற்றில் பூர்வ மீமாம்ஸை ஸூத்ரம் “அதாதோ தர்ம ஜிக்ஞாஸா” என்று ஆரம்பிக்கும். “தர்மத்தைப் பற்றிய விசாரணை இனி ஆரம்பிக்கிறது” என்று அர்த்தம். உத்தர மீமாம்ஸா ஸூத்ரம் (பிரம்ம ஸூத்ரம்) ‘அதாதோ ப்ரஹ்ம ஜிக்ஞாஸா’ – அதாவது ‘பிரம்மத்தைப் பற்றிய விசாரணை இனி ஆரம்பிக்கிறது’ என்று முதல் ஸூத்ரத்தில் சொல்கிறது. பிரம்மத்தையே விசாரித்து தியானிக்கிற போது தர்மத்தைப் பற்றிய நினைவும் போய்விடுகிறது. கர்மம் உள்ள த்வைதமான லோகத்துக்குத்தான் தர்மம். அத்வைதமான ஞானத்தில் லோகமில்லாததால் தர்மத்தைப் பற்றிய விசாரணையில்லை. அதனால் அது தர்ம விருத்தமானது [தர்மத்துக்கு முரணானது] என்று அர்த்தமில்லை. அதற்கு மேலே போனது, அதற்கு அதீதமானது என்றே அர்த்தம். கீதையில் பகவான் ‘ஸர்வ தர்மான் பரித்யஜ்ய (எல்லா தர்மத்தையும் விட்டுவிட்டு) என்னையே சரணடை’ என்று சொல்கிறாரென்றால், ‘அதர்மக்காரனாக ஆகி என்னிடம் புகலடை’ என்பதாகவா அர்த்தம் பண்ணுவது? ‘தர்ம அதர்மங்களை பற்றின விசாரணையை விட்டுவிட்டு, அவற்றுக்கு மேலே எழும்பி, இரண்டுக்கும் மூலமான வஸ்துவிலேயே பிடிப்பை வைத்துக் கொள்’ என்றுதான் அர்த்தம். இது உள் அநுபவம். இந்த அநுபவத்தைப் பெற்ற ஞானிகள் வெளியிலே செய்கிற காரியங்கள், தானாகவே தர்ம மயமாகத்தான் இருக்கும். அதானால்தான் மஹாத்மாக்களாக உள்ள ஸந்நியாஸிகள் conscious – ஆக [புத்தி பூர்வமாக] தர்மத்தைப் பண்ண வேண்டும் என்று உத்தேசிக்கா விட்டாலும் அவர்கள் செய்வதெல்லாம் தர்மமாகவே இருப்பது.

மொத்தத்தில் தர்மம் என்பது ஒருவனை எப்போதுமே விடுகிறதில்லை. உயர்ந்த நிலையை அடைகிறபோது இவன் அதைப் பற்றிய எண்ணத்தை விட்டுவிட்டாலும், அது இவனை விடாமல் இவன் காரிய ரூபத்தில் செய்கிறதில் பிரகாசித்துக் கொண்டேதான் இருக்கும்.

தர்ம- அர்த்த-காம-மோக்ஷத்தில் அர்த்தம் (பொருள்) சம்பாதிப்பது தர்மப்படிதான் இருக்க வேண்டும். அப்படியே காமமும் தர்மத்தோடு சேர்ந்தே இருக்க வேண்டும். இதைத்தான் காளிதாஸன் ‘ரகுவம்ச’த்தில் திலீபனைக் கொண்டாடிச் சொல்கிறபோது, “அப்யர்த்த காமௌ தஸ்யாஸ்தாம் தர்ம ஏவ மநீஷிண:” என்கிறான். “நல்லறிவு பெற்ற அவனுடைய [திலீபனுடைய] அர்த்தம், காமம் இரண்டும்கூட தர்மமாகவே இருந்தன” என்று அர்த்தம்.

அர்த்த-காமங்களை இப்படி தர்மப்படி ஆண்டு அநுபவிக்கிறதே கிருஹஸ்தாச்ரமம் [இல்லறம்] . அதற்கு ஆரம்பம் தான் விவாஹம்.

பிரம்மசாரிக்கும் ஸந்நியாஸிக்கும் அர்த்த (பொருள்) ஸம்பாதனம், காம அநுபோகம் இரண்டும் இல்லை. அந்த இரண்டு ஆசிரமங்களுக்கு நடுவே பாலம் போடுகிற மாதிரி அமைந்துள்ள கிருஹஸ்தாச்ரமத்தில் இந்த இரண்டும் அநுமதிக்கப்பட்டிருக்கின்றன.

உயிர் வாழ்வதற்குப் பொருள் வேணத்தான் வேண்டும். கர்மாப்படி பல உயிர்கள் பிறப்பதற்குக் காமமும் வேணத்தான் வேண்டும். கர்மாவைத் தீர்த்துக் கொள்வதற்காகவே நாமும் அது தீருகிறவரை லோகத்தில் வாழத்தான் வேண்டும். இதே மாதிரி மற்றவர்களுக்கு ‘சான்ஸ்’ கொடுப்பதற்காக அவர்களுக்கு ஜன்மாவைத் தரவேண்டும் என்றால் பொருள் சேர்க்கவும் காமத்தை அநுபவிக்கும் வேண்டும்தானே? கர்மாவை விட்டு ஸந்நியாஸியானவர்களுக்கும் ஆஹாரம் வேண்டியிருப்பதால் அதைப் போடுவதற்கு கிருஹஸ்தன் இருந்துதானே ஆகவேண்டும்? ஆகவே எப்படிப் பார்த்தாலும் கிருஹஸ்தாச்ரமம் இருக்கத்தான் வேண்டும். லோகத்தில் எல்லாரும் ஸந்நியாஸியாவது நடக்காத காரியம். ஆகையால் இதிலே தர்மத்தோடு வாழ்ந்து, பிரம்மச்சாரிக்கும் ஸந்நியாஸிக்கும்கூட வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து தருகிற கிருஹஸ்தாச்ரமியைத்தான் சாஸ்திரங்கள் ரொம்பவும் சிறப்பித்து, ஸமூஹத்தின் back-bone என்று கொண்டாடுகின்றன.

பிரம்மச்சரிய ஆசிரமத்தில் படித்து முடித்து, விஷயங்களைத் தெரிந்து கொண்டு, நல்லறிவையும் நற்குணங்களையும் பெற்றபின் தர்மப்படி கர்மாநுஷ்டானம் பண்ணுவதற்காக விவாஹம் செய்து கொள்ள வேண்டும்.

விவாஹத்தை நாற்பது ஸம்ஸ்காரங்களில் ஒன்றாக வைத்திருக்கிறது – அதாவது ஜீவனைப் பரிசுத்தி பண்ணுகிற புண்ணிய கர்மாவாக வைத்திருக்கிறது.

இந்திரியத்தை நெறிப்படுத்தி ஒரே ஒருத்தர் விஷயமாகப் போகும்படி சீராக்கித் தருவது என்பதோடு, ஸகல தர்மங்களையும் நடத்துவதற்கும் ஒரு ஆச்ரமமாக அமைந்த கிருஹஸ்தாச்ரமத்துக்குப் பூர்வாங்கமே விவாஹம் – பிரம்மச்சர்யாச்ரமத்துக்கு உபநயனம் போல.

காம அநுபோகத்தோடு கூட மற்ற லோகக்ஷேமமான தர்மங்களை அநுஷ்டிப்பது என்பது மட்டுமில்லை. காமத்திலேயே தர்மத்தை அநுஷ்டிக்கும்படியாகவும் கிருஹஸ்தாச்ரமத்தை சாஸ்திரம் அமைத்திருக்கிறது. ‘தர்மம்’ என்பது எதையும் வரையறை மீறாமல் ஒழுங்குபடுத்துவதுதானே? இப்படி இந்திரிய வேகத்தைக் கட்டுப்படுத்தி தாம்பத்தியம் பண்ணுவதுதான் காமத்திலேயே தர்மத்தை அநுஷ்டிப்பதென்பது. இதனாலேயே படிப்படியாக இந்த வேகம் குறைந்து பக்குவம் உண்டாகிறது. அது பிற்பாடு. அதற்கு முதலில், பலாத்காரமில்லாமல், காமத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்படுத்துவது கிருஹஸ்தாச்ரமத்தில். இதற்கு முன்னால் பின்பற்றிய பிரம்மசரிய ஆசிரமத்தின் கடும் நியமங்கள் (strict disciplines) ஒருவனை இப்படிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றன. எப்போதும், வேளை போது கவனிக்காமல், பசு வேகத்தில் இவனை அடித்துக் கொண்டு போகாமல் அது காப்பாற்றுகிறது.

பசு வேகம் என்று சொன்னாலும் வாஸ்தவத்தில் பசுக்கள் — மிருகங்கள் — அதற்கான ஒரு பருவத்தில் மட்டும் தான் ஸங்கமம் பண்ணுகின்றன. கர்ப்பம் தரிக்கக்கூடிய ஒரு காலத்தில் மட்டுமே அவற்றுக்கு இந்த வேகம் உண்டாகிறது. ‘பசு வேகம்’, ‘பசு தர்மம்’ என்றெல்லாம் அவற்றை வைத்துப் பெயர் சொல்கிற மநுஷ்யன்தான் அவற்றைவிட மட்டமாக இருக்கிறான். இந்த உணர்ச்சி வேகம் ஏற்படுகிற ஆரம்ப காலத்திலேயே இதை மட்டுப்படுத்த பிரம்மசரியம் இருக்கிறது. அப்புறம் இவனுக்கு காமத்திலேயே தர்மத்தோடு ஒழுங்காக, வியவஸ்தைக்கு உட்பட்டு இருப்பதற்கு கிருஹஸ்தாச்ரமமும், அதற்கு ஆரம்பமாக விவாஹம் என்ற ஸம்ஸ்காரமும் ஏற்படுகின்றன.

அந்த வேகம் பல பேரிடம் போக விடாமல் ஒருத்தரிடமே போகப் பண்ணுகிற வியவஸ்தையை எல்லா மதங்களுமே விவாஹச் சடங்கினால் செய்திருக்கின்றன.

அதோடு, கூடுதலாக நம்முடைய மத சாஸ்திரம் செய்திருக்கிற வியவஸ்தை என்ன என்றால்: ஸ்திரீ ரிதுவான தினம் முதல் நாலு நாட்களில் ஸங்கமம் செய்யக்கூடாது. அப்புறம் பன்னிரண்டு தினங்கள் மட்டுமே செய்யலாம். அப்புறமும் அடுத்த முறை ரிதுவாகும் வரையில் கூடாது. நடுவே சொன்ன பன்னிரண்டு நாட்களிலும் அமாவாஸ்யை மாதிரியான சில திதிகள், சில நக்ஷத்ரம் முதலியவற்றில் கூடாது. இதையெல்லாம் தள்ளி மிச்ச நாட்களில்தான் கர்ப்பாதானம் செய்யலாம் என்று விதி. இதை அநுஸரித்தால் தம்பதிகளின் தேக-மனோ புஷ்டிகள் என்றைக்கும் குறையாது.