குருவின் ‘முயற்சி’ உத்தரணத்தைக் குறிப்பதே

ஒன்றிலிருந்து ஒன்று அபிப்ராயங்கள் சுவடு விட்டுப் போய்க்கொண்டிருப்பதில், இப்போது ‘ப்ரச்நோத்தர ரத்ந மாலிகா’ வைக் கிளறிப் பார்த்ததில், இதுவரை நாம் பார்த்த துரிதோத்தரண ஸமாசாரமாகவும் இன்னொரு விஷயம் வந்திருக்கிறது. (சிரித்து) உள்ளேயிருந்து இன்னொரு விஷயத்தைப் பிடித்து இழுத்து வெளியே கொண்டுவந்து “உத்தரணம்” பண்ணியிருக்கிறது!

இதில் (‘ப்ரச்நோத்தர ரத்ந மாலிகை’யில்) ஆரம்பம், ‘எது ஏற்கத்தக்கது?’ என்பதுதான். அதாவது எதை ஆதாரமாக எடுத்துக்கொண்டு அதன்மேல் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும் என்ற கேள்விதான்: கிம் உபாதேயம் ?

பதில், “குருவசனம்.”

அப்புறம், “குரு யார்?” என்று கேள்வி: கோ குரு: ?

பதில் கொஞ்சம் நீளமாகவே வருகிறது: “அதிகத – தத்த்வ:, சிஷ்யஹிதாயோத்யத: ஸததம்.

“அதிகத தத்த்வ:” என்றால் தத்வார்த்தங்களைக் கற்றுணர்ந்தவர், அவற்றில் அநுபவம் பெற்றவர் என்று அர்த்தம்.

அப்புறம்தான் நம் ஸமாசாரம் – துரிதோத்தரணம் – வருகிறது: “ஸததம்” – ஸதா காலமும்; “சிஷ்ய ஹிதாய” – சீடர்களின் நலனுக்காக; “உத்யத:” – முயன்று கொண்டிருப்பவர், முனைந்து வேலை செய்து கொண்டிருப்பவர். முன்பே சொன்ன விஷயந்தான் – குரு என்றால் தாம் கற்றறிந்து அநுபவித்தவராக இருப்பதோடு, மற்றவர்களுக்கும் அந்த அறிவையும் அநுபவத்தையும் ஊட்டி அவர்களுக்குப் பரமஹிதத்தைச் செய்பவராக இருக்கவேண்டும். இந்தப் பணியிலேயே அவர் ஸததமும் முனைந்து முயற்சி பண்ணிக் கொண்டிருக்க வேண்டும். “உத்யத:” என்பதற்கு அதுதான் அர்த்தம் – கவனமாக, வலுவாக முயற்சி பண்ணுவது.

(“கநகதாரா ஸ்தவ” த்தில்) ‘துரிதோத்தரண’ த்தைச் சொல்கிறபோதும், “உத்யத” என்ற இந்த வார்த்தையையே போட்டிருக்கிறார்: “துரிதோத்தரணோத்யதாநி“, அதாவது, “துரித உத்தரண உத்யதாநி.”

நமஸ்காரம் என்ற க்ரியை செய்யும் பல காரியங்களில், (துரிதம் என்கிற) பாபங்களை (உத்தரணம் என்பதாக) உள்ளேயிருந்து பிடுங்கி எடுப்பதில் முனைப்பாக முயற்சி பண்ணுவதே முடிவாக வருவது என்று காட்டியிருக்கிறார். இங்கே மட்டுந்தான் ‘ச்ரமப்பட்டு முயலுவது’ என்று பொருள்படும் “உத்யத” போட்டிருக்கிறார். மற்ற காரியங்களை நமஸ்காரம் ச்ரமப்பட்டு முயற்சி செய்து ஸாதிக்கவில்லை. ஸுலபமாக, அநாயாஸமாக ஸாதித்துவிடுகிறது. நமஸ்காரங்கள் (‘வந்தநாநி’) என்று பன்மையில் சொல்லும் ஆசார்யாள் முதலில் அவற்றை “ஸம்பத்கராணி” என்கிறார். “ஸம்பத்துக்களை உண்டாக்குபவை” என்று ‘ஈஸி’ வேலையாகச் சொல்லிவிடுகிறார். ‘முயன்று’ உண்டாக்குவதாகச் சொல்லவில்லை. இதேபோல, அடுத்தபடி, “ஸகலேந்த்ரிய நந்தநாநி” – “எல்லாப் புலன்களுக்கும் இன்பமாக, இன்பம் தருவனவாக, இருப்பவை” என்னும் போதும் ‘பாடுபட்டு முயன்று’ என்று சொல்லவில்லை. அதற்கப்புறம், “ஸாம்ராஜ்ய தாந நிரதாநி”: பெரிய ராஜ்யத்தையே வழங்க வல்லனவாக இருப்பவை. “நிரத” என்றால் ஸந்தோஷமாக ஒரு கார்யத்தில் ஈடுபட்டிருப்பது. ச்ரமப்பட்டு முயன்று செய்வதல்ல. ‘அதற்கு’ ஆப்போஸிட். பக்தனை ராஜாவாகவே தூக்கி வைப்பதுகூட நமஸ்காரத்தின் சக்தியில் ஸந்தோஷமாகச் செய்யும் அநாயாஸமான கார்யமாகவே இருக்கிறது.

இப்படி இஹலோக விஷயங்களை ஈஸியாக முடித்த பிறகுதான் கடைசியில் வருகிறது, பரலோகத்துக்கான துரிதோத்தரணம். இங்கே மட்டுந்தான் “உத்யதாநி” என்று போட்டிருக்கிறார். ஒருத்தனுக்குள்ளே ஜன்மாந்தரமாகப் போய்ச் சொருகிக்கொண்டிருக்கும் பாபத்தையெல்லாம் நெம்பி இழுத்துப் போடுவது என்பது நமஸ்கார க்ரியையின் மஹாசக்திக்கும் ஈஸியாக இருந்துவிடவில்லை என்று காட்டியிருக்கிறார்.

அதன் சக்தியைக் குறைத்து நினைப்பதற்காக இப்படி “உத்யதாநி” என்று போடவில்லை. நாம் எத்தனை பாபத்தை, துஷ்கர்மத்தைப் பண்ணி அவற்றின் வாஸனை நமக்குள் ஆழமாக வேரோட விட்டிருக்கிறோம் என்று புரிந்து கொள்வதற்காகவே இப்படிச் சொல்லியிருக்கிறார்.

இங்கே (‘ப்ரச்நோத்தர ரத்நமாலிகா’வில்) சிஷ்யனின் ஹிதத்துக்காக பாடுபட்டு முயற்சி பண்ணுபவர் (“உத்யத:”) குரு என்கிறார்.

‘ஹிதம்’ என்பது என்ன? சீடனின் நலம். அந்த ‘நலம்’ என்ன? அவனுடைய கர்மாவை நிவ்ருத்தி பண்ணுவதுதான். ஸம்ஸார நிவ்ருத்திக்கு இதைத் தவிர வேறு வழியே இல்லை.குருவை ஒரு சீடன் எந்த முடிவான லக்ஷ்யத்திற்காக அடைகிறானோ அந்த நித்யானந்தத்தை அவன் ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டால்தான் பெறமுடியும். தன்னுடைய கர்மாவிலிருந்து அவன் விடுபட்டால்தான் ஸம்ஸாரத்திலிருந்து விடுபடமுடியும்.

கர்ம நிவ்ருத்தி என்பதுதான் பாப நிவ்ருத்தி, அதாவது துரிதோத்தரணம்.

நமஸ்கார சக்தியானது முனைந்து முயன்று துரிதோத்தரணம் செய்வதாகச் சொன்ன அதே ஆசார்யாள், சிஷ்ய ஹிதத்துக்கு ஸதாகாலமும் குரு முனைப்பாக முயன்றபடியிருக்கிறார் என்று சொல்லும்போது, இந்த குரு செய்வதும் துரிதோத்தரணம்தான் என்று ஆகிறது.

நாம் செய்யும் நமஸ்காரம் அவருக்குள்ளே உள்ள அநுக்ரஹ சக்தியைத் தூண்டி, அது நமக்குள்ளே போய்ச் சொருகிக் கொண்டுள்ள பாபங்களையெல்லாம் தோண்டியிழுத்து வெளியில் தள்ளும்படிச் செய்கிறது.

ஸம்பத், ஸாம்ராஜ்யாதிகளுக்காக லக்ஷ்மியிடம் போக வேண்டுமென்றும், பாப நிவாரணத்துக்கு குருவிடம் போக வேண்டுமென்றும் நடைமுறையில் ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஆசார்யாள் மஹாலக்ஷ்மியிடம் பிரார்த்தித்ததையே நாம் கொஞ்சம் மாற்றி குருவிடம் பிரார்த்திக்கக் கடமைப் பட்டிருக்கிறோம். “எங்களுடைய துரிதங்களை உத்தரணம் செய்வதற்காக அயராமல் பாடுபடும் தங்களுக்குச் செய்யும் நமஸ்காரமே எங்களைவிட்டு என்றும் நீங்காத நிதியாக இருக்கவேண்டும்” என்று ப்ரார்த்தித்து, திரும்பத் திரும்ப நமஸ்காரம் பண்ணிக்கொண்டு, அவருடைய அநுக்ரஹமான கனகதாரையைப் பெற்று ஆனந்தமாக, பஞ்சு மாதிரி லேசாக, ஆகிவிடவேண்டும்.

ஆசார்யாள் “மாதா!” என்று கூப்பிட்டுச் சொன்னதையே, “குரோ!” என்று மாற்றிக்கொண்டு, “எங்களுக்கு வேறே எதுவும் வேண்டாம்! உங்களை நமஸ்காரம் பண்ணுவது என்பது மட்டும் எங்களுடைய ஸொந்த ஸொத்தாக ஆகிவிடவேண்டும். வேறே எந்த உடைமையும் வேண்டாம். வந்தன ப்ரக்ரியை எங்களை விடாமல் இருக்க வேண்டும். அவ்வளவுதான். சரீரத்தை கீழே கிடத்தி, ஹ்ருதயத்தைத் தங்கள் சரணாரவிந்தங்களில் அர்ப்பணித்து நாங்கள் செய்கிற இந்த நமஸ்காரத்தால் பெறுகிற அநுக்ரஹத்துக்கு மேலே ஸொத்து, உடைமை எதுவுமில்லை” என்று ப்ரார்த்தித்து, அப்படியே நிறைந்து இருந்துவிட வேண்டும்.

தஸ்மை ஸ்ரீ குரவே நம:

குரு வந்தனை – நிந்தனை : அம்ருதம் – விஷம்

கேள்வியும் பதிலுமாக அநேக விஷயங்களை “ப்ரச்னோத்தர ரத்ந மாலிகா” என்ற நூலில் ஆசார்யாள் உபதேசித்துக்கொண்டு வருகையில் “எது விஷம்?” என்று ஒரு கேள்வி. “கிம் விஷம்?”

அவதீரணா குருஷு

என்று அதற்கு பதில் கொடுத்திருக்கிறார். குருவிடத்தில் அவமரியாதை காட்டுவதுதான் விஷம் என்று அர்த்தம். “அவதீரணா” என்றால் அவமரியாதை.

இதையே திருப்பி வைத்தால் மரியாதை பண்ணுவது, அதாவது மனஸார நினைத்து நமஸ்காரம் பண்ணுவதுதான் நமக்கு அம்ருதம்.

(‘ப்ரச்நோத்தர ரத்நமாலிகா’ ச்லோகங்களைச் சொல்லிப் பார்த்துக் கொண்டு) ‘விஷம் என்ன?’ என்ற மாதிரியே, ‘அம்ருதம் என்ன?’ என்றும் கொஞ்சம் தள்ளிக் கேள்வி வருகிறது. ஆனால், ‘அம்ருதம் என்ன?’ என்று பொதுவாகக் கேட்காமல் ‘காதுக்கு அம்ருதம் என்ன?‘ என்று கேட்கிறார். ‘கர்ணாம்ருதம்’ என்கிறோமே, அப்படி.

பாதும் கர்ணாஞ்ஜலிபி: கிம் அம்ருதம்?

“கர்ணாஞ்ஜலிபி:” – காது மடல்களால்; “பாதும்” – குடிப்பதற்கு; “கிம் அம்ருதம்” – எது அம்ருதம்?

காது மடல் குவிந்து ஒரு தொன்னை மாதிரிதானே இருக்கிறது? தொன்னையால் பாயஸம் சாப்பிடுவது போல இந்தக் காது மடலில் எந்த அம்ருதத்தை ரொப்பிக்கொண்டு உள்ளே ஹ்ருதயத்துக்கு அனுப்பி வைக்கணும்?

இப்படிக் கேட்டுவிட்டு பதிலாக “ஸதுபதேச:“. என்கிறார். குரு அளிக்கும் நல்ல உபதேசம்தான் அப்படிப்பட்ட அம்ருதம் என்கிறார்.

எது அம்ருதம் என்று பொதுவாகக் கேட்காமல் காதுக்கு எது அம்ருதம் என்று குறிப்பிட்டுச் சொன்னதில் நமக்கு ஆதரவாக ஒரு விஷயம் கிடைக்கிறது. என்ன பார்த்தோம்? குரு நிந்தைதான் விஷம் என்று பார்த்தோம். அப்படியானால் அதன் ஆப்போஸிட்டான குரு வந்தனம்தான் விஷத்துக்கு ஆப்போஸிட்டான அம்ருதம் என்று முடிவு பண்ணினோம். ஆசார்யாளும் அப்படியேதான் முடிவு பண்ணி விட்டிருக்கிறார். “நிந்தனை விஷமென்றால் வந்தனைதான் அம்ருதம்; இது குழந்தைக்குக்கூடத் தெரிந்துவிடும்; ஆகையால் இவற்றில் ஒன்றை – விஷத்தை – சொன்னதே போதும். ‘அம்ருதம் எது?’ என்று இன்னொரு கேள்விபோட்டு பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம்” என்று தீர்மானம் செய்திருக்கிறார். அப்புறம் குருவின் உபதேசத்தைப்பற்றிச் சொல்ல வேண்டும் என்று நினைத்து, எந்தக் கேள்வியை எழுப்பி, அதற்கு பதிலாக “ஸதுபதேசம்” என்று சொல்லலாமென்று யோசித்திருக்கிறார். அப்போதுதான் “காதுக்கு எது அம்ருதம்?” என்று கேள்வி போடுவோமென்று முடிவு செய்திருக்கிறார்.

கர்ணாம்ருதம் (காதுக்கான அம்ருதம்) என்று சொல்லாமல் ‘கர்ணாஞ்ஜலியால் குடிக்கும் அம்ருதம்’ என்று போட்டிருப்பதிலும் அர்த்தபுஷ்டி இருக்கிறது. கர்ணாஞ்ஜலி என்றால் காது மடல். இங்கே அஞ்ஜலி என்றால் மடல். கூம்பியிருக்கும் புஷ்பம் விரிவதை ‘மடலவிழ்வது’ என்கிறோம். கன்னத்தோடு மடித்துவைத்தால் கூம்பினாற்போலிருப்பது காதுமடல். அதை அவிழ்த்து, இப்போது நமக்கிருக்கிறது போல விட்டுவிட்டால் மடல் மலர்ந்து சப்தங்களை வாங்கிக் கொள்கிறது. அதனால்தான் கர்ணாஞ்ஜலி என்பது. அஞ்ஜலி என்று சொன்னால் பொது அர்த்தம் நமஸ்காரந்தானே? புஷ்பம் கூம்பிக் குவிந்த மாதிரி மனஸு குவிந்து பக்தி செய்யும்போது அதற்கு அடையாளமாகக் கைகுவித்து – “கைகூப்பி” என்றே வழக்கில் சொல்கிறபடி – நமஸ்காரம் செய்கிறோம். அப்போது கையின் ‘ஷேப்’ கூம்பின புஷ்பம் மாதிரியிருக்கிறது.

‘அம்ருதம் என்றால் அது குரு வந்தனந்தான்; விஷம் குருநிந்தை என்றால் வேறு விதமாக இருக்கமுடியாது. அதனால்தான் ‘காதுக்கு அம்ருதம்’ என்று பாகுபடுத்திச் சொல்கிறார்’ என்று பார்த்தோம். அதையும் இன்னம் நயமாகக்கொண்டு போய்க் கர்ண அஞ்ஜலிக்கு அம்ருதம் என்று சொல்லியிருப்பதில், ‘அஞ்ஜலி’ என்ற வார்த்தையையும் போட்டு நமஸ்காரம்தான் அம்ருதம் என்பதை நன்றாகவே உறுதிப்படுத்திவிட்டார் என்று தோன்றுகிறது. ‘நமஸ்காரமாகிய அஞ்ஜலியே பொதுவாக உயிருக்கு அம்ருதம். கர்ணாஞ்ஜலிக்கு அம்ருதமாயிருப்பது குரு அருளுகின்ற ஸதுபதேசம்’ என்று ஆசார்யாள் காட்டியிருப்பதாகத் தெரிந்துகொள்கிறோம்.

மூவுலக குரு

மஹாலக்ஷ்மியை “த்ரிபுவநைக குரோஸ் தருணி” என்று இந்த ஸ்தோத்ரத்தில் ஓரிடத்தில்* அவர் சொல்லியிருக்கிறார். “மூவுலக குருவின் ப்ரிய பத்னி” என்று அர்த்தம். குரு என்றால் ஆசார்யர், தகப்பனார் என்று இரண்டு அர்த்தம். இவளைத் தாயார், தாயார் என்கிறதற்கேற்ப மஹாவிஷ்ணுவைத் தகப்பனாராகக் கருதி ‘குரு’ என்று சொல்லியிருக்கலாம். த்ரிபுவனங்களுக்கும் இவர்கள் தாய்தந்தையர் என்ற அர்த்தத்தில் சொன்னதாகக் கொள்ளலாம். ஆனால் தாயார் ஸந்நிதி, அம்மன் ஸந்நிதி என்று லக்ஷ்மி, பார்வதி ஸந்நிதிகளைச் சொல்வதுபோலப் பெருமாள், ஈச்வரன் ஸந்நிதிகளைத் தகப்பனார் ஸந்நிதி, அப்பன் ஸந்நிதி என்று சொல்லும் வழக்கம் அதிகமில்லை. மலையாளத்தில் மட்டுந்தான் குருவாயூரப்பன், வைக்கத்தப்பன், ஐயப்பன் என்பது.

ஆகையால் லோக குரு, ஜகத்குரு என்பதுபோல ‘த்ரிபுவந குரு’ என்ற மஹா ஆசார்யனாக மஹாவிஷ்ணுவைக் கருதியே அவனுடைய பத்னியை ‘த்ரிபுவந குரோஸ் தருணி’ என்று சொன்னதாகக் கொள்வதும் ஸரியாயிருக்கும். பகவான் க்ருஷணனாகவும் நம்முடைய பகவத் பாதர்களாகவும் அவதரித்த காலங்களில் நர சரீரத்தில் அவதாரம் செய்ததால் இந்த நரலோகத்துக்கே குருவாயிருந்து “லோக குரு” என்று பெயர் வாங்கினான். நாராயணனாக திவ்ய சரீரத்திலிருக்கும்போது நரர், ஸுரர், அஸுரர் ஆகிய எல்லோருக்கும் பல்வேறு ஸந்தர்பங்களில் உபதேசம் செய்து த்ரிலோக குருவாக இருந்திருக்கிறார். அவருடைய பத்னி லக்ஷ்மி. அவளுக்கு ஸதா கால நமஸ்காரமென்றால், பதியை நீக்கிப் பண்ணமுடியாது. “தம்பதியா நில்லுங்கோ, நமஸ்காரம் பண்றேன்” என்று சொல்வதுதான் சாஸ்த்ர வழக்கு. அதனால் த்ரிலோக குருவுக்கும் எப்பவும் நம் நமஸ்காரம் இருக்கணும்.

த்ரிலோக அதிபதியான பரமேச்வரனாகவும் லோகமெல்லாம் அடிபட்டுப்போன நிலையிலுள்ள பரப்ரம்மாகவும் நமக்கு இருப்பவர் நம்முடைய குருவேதான். த்ரிலோக குரு என்று வேறே எவரையோ தேடிப்போக வேண்டாம். இவர் ஒரு புது மாதிரியான த்ரிமூர்த்தியாகவும், ஒரு புது பரப்ரஹ்மமாகவும் இருப்பதால் நமது பரம நன்றி நமஸ்காரங்களுக்கு உரியவராகவும் அவற்றால் எட்ட முடிபவராகவும் இருக்கிறார். ஆனபடியால்,

நமஸ்தே நமஸ்தே நமஸ்தே நமோஸ்து

என்று அநேக ஸ்தோத்ரங்களில் வருவதுபோல அவருக்கு வந்தனம் செய்துகொண்டிருப்போம்!

துரிதோத்தரணம் பண்ணுவதொன்றையே கார்யமாகக் கொண்டுள்ள அவருக்குரித்தான நமஸ்காரமே நமக்கு மிகப் பெரிய செல்வமாக நம்முடன், நம் உள்ளுக்குள், இருந்து ரக்ஷித்துக் கொண்டிருக்கட்டும்.


* 10 -வது ச்லோகம்.

“ஏவ” எதில் சேர வேண்டும்?

“மாமேவ கலயந்து” — “வந்தநாநி மாம் ஏவ கலயந்து” “நமஸ்காரக் கார்யம் என்னை வந்தடையட்டும்.”

“மாம் கலயந்து” என்றாலே “என்னை வந்தடையட்டும்” என்று அர்த்தம் ஏற்பட்டுவிடும். “மாம் ஏவ கலயந்து” என்று “ஏவ” சேர்த்துச் சொன்னால், “என்னையே வந்தடையட்டும்”, “என்னொருவனையே வந்தடையட்டும்,” “என்னை மட்டுமே வந்தடையட்டும்” என்று அர்த்தமாகும். அதாவது நமஸ்காரம் வேறே யாரையும் போய்ச் சேராமல் ச்லோக கர்த்தாவுக்கு மட்டுமே கிடைக்கவேண்டுமென்று ஆகும். ஆசார்யாள் பிறருக்காகவே, ‘பிறர்க்குரியாளர்’ என்னும்படியாகவே வாழ்ந்தவர். மஹான்களாக, ஆசார்யர்களாக இருக்கிறவர்களைப் பற்றி, ‘ஒரு ப்ரதிபலனும் எதிர்பாராமல் வஸந்தகாலம் மாதிரி லோகஹிதம் செய்பவர்கள்’ என்று சொன்ன அவரே அப்படி இருந்தவர்தான். அப்படிப்பட்டவர் எங்கேயாவது நமஸ்கார க்ரியையானது வேறே எவருக்குமில்லாமல் தம் ஒருவருக்கே சேரணுமென்று monopolise (ஏக போக்கியம்) பண்ணிக்கொள்ள நினைப்பாரா? ஆனாலும் போதுமான யோசனை இல்லாமல் இப்படிச் சில பேர் அர்த்தம் பண்ணிக்கொண்டிருப்பதோடு, அதுவும் போதாமல் கடைசியில் “கலயந்து நாந்யே” என்று இருப்பதையும் “(கலயந்து) நாந்யம்” என்று பாடபேதம் பண்ணி தப்புக்கு மேலும் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்! “நாந்யே (ந அந்யே)” என்று நாம் வைத்துக்கொண்ட பாடப்படி, “எனக்கு வேண்டியதெல்லாம் நமஸ்கார க்ரியை தான். வேறே எதுவுமில்லை” என்று அர்த்தம். “நாந்யம் (ந அந்யம்)” என்றாலோ, “என்னையே நமஸ்கார க்ரியை சேரணும். வேறே எவரையுமில்லை” என்று ஆகிவிடும்! தனக்கு மட்டுமே என்று selfish – ஆகச் சொன்னதை இன்னும் வலியுறுத்தி, “ஆமாம், வேறே யாருக்குமில்லை” என்று சொன்னதாகி விடும்! ஆசார்யாள் எங்கேயாவது அப்படிச் சொல்லியிருப்பாரா?

‘நாந்யே’ வா, ‘நாந்ய’ மா, என்று சில பேர் யோசித்து, “இந்த வம்பே வேண்டாம். ‘நாந்யே’ யும் வேண்டாம், ‘நாந்ய’ மும் வேண்டாம். ‘மாந்யே’ என்று போட்டு முடித்து விடலாம் என்று நினைத்து,

மாமேவ மாதரநிசம் கலயந்து மாந்யே

என்று வைத்துக்கொண்டு விடுகிறார்கள். ‘மாந்யே!’ என்பது லக்ஷ்மியைக் கூப்பிடும் ஸம்போதனம் (விளி வேற்றுமை). ‘மதிப்புக்குகந்தவளே!’ என்று அர்த்தம். ‘லோகமாந்ய திலகர்’ என்கிற மாதிரி ‘மாந்யே’.

ஒரு கேள்வி கேட்கலாம். “இங்கே இப்படிச் சில பேர் ‘மாந்யே’ என்றும், நீங்கள் ‘நாந்யே’ என்றும் வைத்துக் கொண்டு சமாளித்தாலும், ‘மாமேவ’ என்பது அப்படியே தானே இருக்கிறது? ‘எனக்கு மட்டுமே’ என்றுதானே அதற்கு அர்த்தம்? இதற்கு என்ன, ஸ்வாமிகளே, ஸமாதானம் சொல்லப்போகிறீர்கள்?” என்று கேட்கலாம்.

சொல்கிறேன்.

எந்த பாஷையாயிருந்தாலும் ச்லோகம், செய்யுள், பொயட்ரி என்று இருக்கும்போது வார்த்தைகள் முன்னே பின்னே வரலாம். அதனால்தான் ‘பொயட்ரி’ யை ‘ப்ரோஸ் ஆர்டர்’ பண்ணுவது என்று இருக்கிறது. இப்படி முன்னே பின்னே வார்த்தைகளை மாற்றிப் போடுகிற ஸ்வாதந்த்ரியம் ஸம்ஸ்க்ருதத்தில் ரொம்ப ஜாஸ்தி. அந்த பாஷையில் ப்ரோஸிலேயே வார்த்தைகளை ஸஹஜமாக இடம் மாற்றிப் போடுவதுண்டு. பொயட்ரியிலோ கேட்கவே வேண்டாம். ‘மீட்ட’ரை உத்தேசித்தும், ஒலி நயத்தை உத்தேசித்தும் வார்த்தைகளை எப்படியெல்லாமோ இடம் மாற்றிப் போடுவதுண்டு.

இந்த வகையில் ‘ஏவ’ என்பது ‘மாம்’ என்பதை ஒட்டியிருந்து ‘மாமேவ’ என்று வந்தாலும், அர்த்தத்தில் அது ‘மாம்’ என்பதைத் தழுவி “என்னையே” என்று பொருள் கொடுப்பதாக வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. முந்தின வரியில் ‘வந்தநாநி’ என்று வருகிறதல்லவா? அதையே இந்த ‘ஏவ’ தழுவுகிறதென்று அர்த்தம் செய்து கொண்டுவிட்டால் எல்லாம் ஸரியாகிவிடும். அதாவது வார்த்தைகளை அடுக்கியுள்ள முறையில் ‘மாம் ஏவ’ என்று இருந்தாலும், அர்த்தத்தைப் பார்க்கும்போது இந்த ‘ஏவ’ என்பதை ‘வந்தாநாநி’ என்பதோடு ஒட்டிவைத்து ‘வந்தநாநி ஏவ’ என்று பொருள் கொள்ள வேண்டும். அப்போது, “அம்மா! நீ பலவிதமான ஸம்பத்துக்களைத் தருபவளானாலும் எனக்கு அவற்றில் வேறெதுவும் வேண்டாம் (நாந்யே); வந்தனங்கள் மாத்திரமே வேண்டும். நமஸ்காரஸ்ரீ மட்டுமே என்னை வந்தடைய வேண்டும்” என்று அர்த்தமாகிவிடும். “வந்தநாநி…மாம் ஏவ கலயந்து” என்று ச்லோகத்தில் இருந்தாலும் அதை “வந்தநாநி ஏவ மாம் கலயந்து” என்று வைத்துக்கொண்டு அர்த்தம் பண்ணிக்கணும். அப்போது, “வந்தன க்ரியை என்னை மாத்திரம் வந்தடையட்டும்” என்ற அபிப்ராயம் அப்படியே மாறி, “வந்தன க்ரியை மாத்திரம் என்னை வந்தடையட்டும்” என்றாகிவிடும்! மஹாலக்ஷ்மி, தாயார் வேறே எந்த அநுக்ரஹமும் செய்யவேண்டாம்; அவளை நமஸ்கரிக்கிற எண்ணமொன்றை மாத்திரம் அநுக்ரஹிக்க வேண்டும் என்றாகும்.

“கலயந்து” என்றால் ‘வந்தடையட்டும்’ என்று சொன்னேன். இது ஒன்றுதான் அதற்கு அர்த்தமென்றில்லை. ‘கல்’ என்பது அதற்கு தாது. அதற்கு அநேக அர்த்தங்கள். இதன்படி “கலயந்து” என்பது “வந்து சேரட்டும்” என்று ஸாதாரணமாகச் சொல்வதிலிருந்து “ஆட்கொள்ளட்டும்” என்று பரவச பாவமாக உசத்திச் சொல்லும்வரை அர்த்தம் கொடுக்கும். வந்தனக்ரியை தம்மை அப்படியே கெட்டியாகப் பிடித்துக் கொள்ளட்டும் என்று சொல்லவே ஆசார்யாள் “(வந்தநாநி மாம்) கலயந்து” என்று பதப்ரயோகம் செய்திருக்கிறார்.

ஆசார்யாள் தமக்காக இன்றி நமக்காக வேண்டிக் கொள்வதுதான் இது. எப்படி வேண்டிக்கொள்ள வேண்டும் என்று நமக்குச் சொல்லிக் கொடுப்பதுதான் இது. “நான் மறக்கினும் சொல்லு நா நமச்சிவாயவே” என்ற மாதிரி, “வந்தனம் என்ற ப்ரக்ரியையை நான் விட்டாலும், அது என்னை விடாமல் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும்” என்று நமக்கு வழிகாட்டவே ஆசார்யாள் ப்ரார்த்தனை பண்ணிக் கொண்டிருக்கிறார்.

மறுமைப் பயன் கோரி

நமஸ்கார பலனாக முதலில் சொன்ன ஸம்பத்து, ஸகல இந்த்ரிய ஆனந்தங்கள், ஸாம்ராஜ்யாதிகாரம் என்ற மூன்றில் எதையுமே தாம் ஏற்க முடியாமலிருக்கும்போது, இவற்றைத் தர வல்லதான நமஸ்கார க்ரியை தமக்கு வேண்டுமென்றால் ஸரியாயில்லையே! அதனால்தான் தாமும் விரும்புவதற்குரிய பலனாக வேறே என்ன சேர்க்கலாமென்று யோசித்து – ரொம்ப யோசிக்கவில்லை; க்ஷணம் அல்லது அதற்கும் குறைச்சலாக யோசித்து – “துரிதோத்தரணம் செய்வதாகவும் நமஸ்கார க்ரியை இருக்கிறதே! ஆகையால் இந்தப் பலனை நாமும் வேண்டிக்கொள்வதாக (ச்லோகத்தை) மேற்கொண்டு கவனம் பண்ணி முடித்துவிடலாம்” என்றுமுடிவு பண்ணி அப்படியே செய்துவிட்டார். வாஸ்தவத்தில் துரித லேசமும் அண்ட முடியாத பவித்ர புருஷர் நம் ஆசார்யாள். ஆனாலும் நமக்காக, நமக்கு ப்ரார்த்திக்கக் கற்றுக்கொடுக்கிறபோது, நம் நிலையில் தன்மையும் நிறுத்திக்கொண்டு, தமக்கும் துரித நிவ்ருத்தி தேவையாயிருப்பது போலச் சொல்லி, அதை அளிக்க வல்லதான நமஸ்கார ஸ்ரீயை மஹாலக்ஷ்மியிடம் வேண்டிக் கொண்டு ச்லோகத்தைப் பூர்த்தி பண்ணிவிட்டார்.

ஸம்பத்து ஸர்வேந்திரிய ஆனந்தம், ராஜ்யாதிகாரம் ஆகியவை இம்மையின்பங்களாகவே இருக்க, இந்த பாபோத்தரணம்தான் மறுமைக்கு உதவுவதாக இருப்பது. இது ஒன்றுதான் பாரமார்த்திக ப்ரயோஜனம் உடையது. இந்த ‘டிஸ்டிங்க்ஷனை’த் தெளிவு படுத்தும் விதத்தில் முதல் மூன்றை ‘வந்தநாநி’ என்பதற்கு முன்னாடி போட்டு, அப்புறம், தனியாகப் பிரித்து, ‘வந்தநாநி’ என்பதற்குப் பின்னாடி “துரிதோத்தரணோத்யதாநி” என்று போட்டு ச்லோகத்தை அமைத்திருக்கிறது.

ஒரு திருத்தம்: ‘துரித உத்தரணம்’

புஸ்தகத்திலே – அச்சில் வந்திருக்கும் எடிஷன்களில் நான் பார்த்த பலவற்றிலே – தப்பாக இருக்கிறது. “துரிதாஹரணோத்யதாநி” என்று போட்டிருக்கிறது. ஸரியான பாடம், “துரிதோத்தரணோத்யதாநி” என்பதே. திருத்திக் கொள்ளவேண்டும்.

‘துரிதம்’ என்றால் பாபம்.

இப்போது தப்பாக ஸங்கீதத்திலே ‘துரித காலம்’ என்று சொல்கிறார்கள்! வேகமாகப் பாடுவதை அப்படிச் சொல்கிறார்கள்! விளம்பமாகப் பாடினால்தான் புண்யம், வேகமாகப் பாடினால் பாபம் என்று அர்த்தமில்லை! ‘த்ருதம்’ (Drutam) என்றால் ‘வேகமாக’ என்று அர்த்தம். அதைத்தான் ‘துரிதம்’ (Duritam) என்று ‘பாப’ மாக மாற்றிவிட்டாற் போலிருக்கிறது! ஒரே வேகமாக அடித்துத் தள்ளிக்கொண்டு பாடினால் பாவம் எல்லாம் போய், ‘ஐயோ பாவமே!’ என்ற மாதிரிதான் ஆகிவிடும்! ‘த்வரிதம்’ (Tvaritam) என்றும் ஒரு வார்த்தை இருக்கிறது. அதற்கும் ‘வேகமாக’ என்றே அர்த்தம். அதுவும் இப்படித் திரிந்திருக்கலாம்.

துரிதம் என்றால் பாபம். எந்தக் கர்மாவுக்கும் ஸங்கல்பம் செய்துகொள்ளும்போது “துரித – க்ஷய – த்வாரா பரமேச்வர ப்ரீத்யர்த்தம்” என்கிறோம். ஈச்வரனை ப்ரீதி செய்வதே நம்முடைய லக்ஷ்யம். நாம் பண்ணிய பாவம் ஈச்வரப்ரீதி கிடைக்கவொட்டாமல் தடுக்கிறது. பாபம் நசித்தாலே, துரிதம் க்ஷயமானாலே, அதன் வழியாக — (அதாவது) துரிதக்ஷயத்வாரா — ஈச்வர ப்ரீதியை ஸம்பாதிக்க முடியும்.

‘துரிதாஹரணோத்யதாநி’ என்பது ‘துரித ஆஹரண உத்யதாநி’ என்று பிரியும். ஹரணம், ஆஹரணம் என்ற இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான். போக்குவது என்று இங்கே அர்த்தம். ‘உத்யதாநி’ என்றால் ‘முனைந்திருப்பவை.’ ‘துரிதஹாரணோத்யதாநி’ என்றால் ‘பாபத்தைப் போக்குவதில் முனைந்திருப்பவை’. மஹாலக்ஷ்மிக்குச் செய்யும் நமஸ்காரங்கள் நம்முடைய பாபங்களைப் போக்கடிப்பதில் முனைந்து செயல்படுகின்றன என்று அர்த்தம். (இது) ஸரியாகத்தானே இருக்கிறது என்று தோன்றும்.

ஆனால் ஹரணம், ஆஹரணம் இரண்டுக்கும் ஒரே அர்த்தம் இலக்கணப்படி இருந்தாலும், டிக்ஷ்னரியில் அப்படிப் போட்டிருந்தாலும், வழக்கில் ‘ஹரணம்’ என்றாலே ‘போக்குவது’ என்றும் ‘ஆஹரணம்’ என்றால் ‘கொண்டு வந்து சேர்ப்பது’ என்றும்தான் வைத்துக்கொண்டிருக்கிறோம். ‘ஹரண’த்துக்கு வலிவூட்டுவதற்காக, மேலும் எதிரிடை அர்த்தம் தரும் ‘அப’ சேர்த்து ‘அபஹரணம்’ (‘ஸீதாபஹரணம்’) என்று சொல்வதும் வழக்கமாயிருக்கிறது. ‘ஆஹரணம்’ என்று முதலில் சேர்க்கிற ‘ஆ’ இப்படி எதிரிடையாக ‘போக்குவது’ என்ற அர்த்தம் கொடுக்காமல், இன்னும் வலுவாகச் ‘சேர்த்துவைப்பது’ என்றே பொருள் கொடுக்கும். ஆனாலும் ‘ஆஹரணம்’ என்றால் போக்குவது என்றும் அர்த்தமிருப்பதால் அப்படிப் போட்டிருக்கவே முடியாது என்று ஸாதிப்பதற்கில்லை.

பின்னே ஏன் தப்புப் பாடம், திருத்திக் கொள்ள வேண்டுமென்று சொன்னேனென்றால் “துரிதோத்தரணோத்யதாநி” என்னும்போதுதான் இதைவிட சிறப்பான, பொருத்தமான பொருள் கிடைக்கிறது.

‘துரித உத்தரண உத்யதாநி’ என்பது (இதன்) பதப் பிரிவினை. ‘ஆஹரண’ என்பதற்குப் பதில் ‘உத்தரண’ (uddharana).

‘உத்தரணம்’ என்பது ‘உத்தாரணம்’ என்றும் நீளும். இதற்குக் குறிப்பாக என்ன அர்த்தமென்றால் பிடுங்கி எறிவது. ‘பிடுங்குவது’ என்றால், எதுவோ ஒன்று உள்ளே புதைந்து போயிருக்கிறது, அதைத்தான் பிடுங்கவேண்டியிருக்கிறது என்று உள்ளர்த்தம் கொடுக்கிறது. தரைமட்டத்தில் இருப்பதைப் ‘பிடுங்க’ வேண்டியதில்லை. அப்படியே எடுத்துப் போட்டால் போதும். புதைந்திருக்கும்போது, அதாவது ஆழ உள்ளே போய் மாட்டிக்கொண்டிருக்கும் போதுதான் பிடுங்குவதற்கு அவசியம் ஏற்படுகிறது. (க்ருஷ்ணர்) கோவர்த்தனோத்தரணம் பண்ணினார் என்கிறோம். அதன் முழு அர்த்தம் புரியாமலே, பூமி மட்டத்துக்கு ஸமனாயிருந்த மலையடிவாரத்தில் கையை விட்டுத் தூக்கிவிட்டாரென்று நினைத்து, இதையே அத்புதமாகக் கொண்டாடுகிறோம். அவரானால் இன்னம் பெரிய அத்புதமாக, பூமிக்குக் கீழேயும் ஆழமாகக் கையைவிட்டு மலையை ஆட்டிப் பிடுங்கி வெளியே தூக்கி “உத்தரண” மாகச் செய்திருக்கிறார் — அநாயாஸமாக ஒரு நாய்க்குடையைப் பிடுங்குகிற மாதிரி!

ஆலயத் திருப்பணியை ‘ஜீர்ணோத்தாரணம்’ என்கிறோம். அர்த்தம் தெரியாமலே சொல்கிறோம். ‘ஜீர்ணம்’ என்றால் கிலமானது, இடிந்து போனது என்று அர்த்தம். கோவில் முழுதுமோ, அல்லது அதில் பல இடங்களோ இடிந்துபோன போது என்ன செய்யவேண்டியிருக்கிறது? மேலெழ எதையோ வாரிக் கொட்டிவிட்டால் போதுமா? அல்லது ஒரே போடாகப்போட்டு உள்வரை நொறுக்கித் தள்ளி விட்டால் ஸரியாயிருக்குமா? இப்படியெல்லாமும் கொஞ்சம் செய்யவேண்டியிருக்கும். ஆனால் இதைவிடக் கஷ்டமாக ஒன்று நிறையப் பண்ணும்படியிருக்கும். மேலே இடிந்தும், அதோடு அடிவாரமும் கலகலத்துப் போயும் இருக்கும் பல இடங்களில்கூட உள்ளே கிண்டு கிண்டாகக் கற்கள் இருக்கும். இவற்றை அப்படியே வாரிக் கொட்டவும் முடியாது; நொறுக்கித் தள்ளவும் முடியாது. உள்ளேயிருந்து பிடித்து இழுத்து இழுத்தே அதாவது பிடுங்கியே வெளியேற்ற வேண்டியிருக்கும். கோபுரத்தில், ப்ராகாரத்தில் மரம், செடிகள் வேர்விட்டு முளைத்திருந்தால் இப்படி உள்ளே விட்டுக் குடைந்தே பிடுங்கிப் போடவேண்டும். உள்ளே ஆழமாகக் சொருகிக் கொண்டிருக்கும் கல், மரம், செடி முதலியவற்றை இழுத்துப் பிடுங்கித் தள்ளுவதுதான் ஜீர்ணோத்தாரணம். முள்ளைப் பிடுங்கி எடுத்துப் போடுவதைக் ‘கண்டகோத்தரணம்’ என்று சொல்வார்கள்.

நாம் ஜீர்ணோத்தாரணம் என்பதை Renovation என்பதற்கு நேர் வார்த்தையாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதாவது புதிசு பண்ணுவது, ‘புதுக்குவது’ என்கிறார்களே அது, என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையிலே பழசை இழுத்துப் பிடுங்கிப்போடுவது என்றே அர்த்தம்.

கலியிலும் அவதார புருஷர்கள் ஜகத்தை உத்தாரணம் செய்ய வருகிறார்களென்றால் என்ன அர்த்தம்? “ஜகதோத்தாரணா!” என்று தாஸர் ஏன் பாடுகிறார்? அதர்மச் சேற்றில் அழுந்திப் போயிருக்கும் ஜகத்தை அவர்கள் அடியில் கை கொடுத்துப் பிடுங்கி வெளியே இழுத்துக்கொண்டு வருவதால்தான்.

வெளியே இழுத்ததை எறியத்தான் வேண்டுமென்றில்லை. அதை நல்லபடியும் பண்ணலாம். அப்படித்தான் இவர்கள் உலகத்தை அதர்மத்திலிருந்து இழுத்துக்கொண்டு வந்த பின் அதற்கு நல்லது பண்ணுவது. அதர்மத்திலிருந்து விடுபடுத்துவதே நல்லதுதான்! கோவர்த்தனகிரியை இழுத்தெடுத்த பின் பகவான் எறிந்துவிடாமல் குடையாக அல்லவா உபயோகப்படுத்தினார்? அதற்குத்தானே அதைப் பிடுங்கியதே?

பிடுங்கி இழுத்து வெளியில் கொண்டு வருவதே உத்தரணம். அதற்கப்புறம் அதை எறிந்துவிடலாம். அழித்து விடலாம், அல்லது நன்றாக உருப்படுத்தலாம், உபயோகம் செய்து கொள்ளலாம். அந்தந்த Context – ஐ (ஸந்தர்பத்தை) வைத்து இவற்றில் எது என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளவேண்டும்.

நம் மனஸுக்குள்ளே ஆழமாக முள் செடி மாதிரி வேரோடித் தைத்திருக்கும் பாபத்தை அப்படியே பிடுங்கி எடுத்துப் போடுவதுதான் “துரிதோத்தரணம்.” உள்ளே தப்பான ஸாமான் சொருகிக் கொண்டிருந்தால் எப்படி சரீரத்துக்கு ஆபத்தோ, அப்படி நம்முடைய பாபங்கள் உள்ளே போய் சொருகிக்கொண்டிருப்பது உயிருக்குப் பெரிய ஆபத்து. அதை நன்றாகக் கல்லி எறிவது ‘துரிதோத்தரணம்’.

ஆகையினால், ‘போக்குவது’ என்று லேசாக அர்த்தம் தருகிற வார்த்தையான ‘ஆஹரணம்’ என்றில்லாமல், ஜன்ம ஜன்மாந்தரமாக நாம் பண்ணின பாபம் பெரிய முள்ளு மரமாக நமக்குள்ளே வேரோடியிருக்கிறதை பெரிய கடப்பாரை, அது, இதைப் போட்டு நெம்பிப் பிடுங்கி வெளியிலே இழுத்து அழித்துப் போடவேண்டுமென்று இத்தனை அர்த்தத்தை ரத்னச் சுருக்கமாகக் கொடுக்கும் ‘உத்தரணம்’ என்றிருப்பதுதான் பொருத்தம்.

நம்முடைய ஸகல பாபத்தையும் நிவ்ருத்தி செய்து வாழ்க்கைக்கு ஜீர்ணோத்தாரணம் செய்துவிட்டால் அப்புறம் ஒரே சுத்தந்தான்; அம்ருதத்தாலேயே கும்பாபிஷேகந்தான்! இதை நமஸ்காரமே ஸாதித்துக் கொடுத்து விடுகிறது என்று காட்டுகிறார். அதனால், “அந்த நமஸ்காரம் என்னை வந்தடையட்டும்” என்கிறார். “மாமேவ கலயந்து” — “என்னை வந்தடையட்டும்.”

நமஸ்காரம் அளிக்கும் பயன்கள்

‘எனக்கு உன் நமஸ்காரமே போதும்’ என்று சொல்லும் ஆசார்யாள், ” ‘அது தன்னாலேயே எனக்கு ஒரு நிறைவைத் தருகிறது; அதனால் அதுவே போதும்’ என்று சொல்வதுகூட அவ்வளவு அடக்கமாக இல்லை. ‘நான் ரொம்பப் பக்வியாக்கும் (பக்குவம் பெற்றுவிட்டவனாக்கும்)! மற்றவர்கள் தனம், தான்யம், ஆரோக்யம், ஸந்தானம் என்றிப்படிக் காம்யமாக எட்டுவித ஐச்வர்யங்களை அஷ்ட லக்ஷ்மியாயுள்ள உன்னிடம் ப்ரார்த்தித்து நமஸ்கரிக்கும்போது, நான் மாத்திரம் அதில் எதையும் பொருட்படுத்தாமல், நீ எதையோ கொடுத்து நான் கீழே நின்று வாங்கிக் கொள்கிறவனாக இல்லாமல், நானாகவே நமஸ்காரம் செய்து, நானாகவே அதில் நிறைந்து விடுகிறோனாக்கும் என்று சொல்கிற தோரணையில் இருக்கிறது” – என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது! அதனால் நமஸ்கார க்ரியையே ஒருவரை நிறைவித்து விடுவதாகச் சொல்லாமல் அது இன்னின்ன பிற பலன்களைத் தருகிறது, ‘ஆனபடியால் இத்தனை பலனைத் தரும் நமஸ்காரமே எனக்குப் போதும்’ என்கிறார். லக்ஷ்மிக்குச் செய்யும் நமஸ்காரம் இந்தப் பலன்களைத் தருகிறதென்று சொன்னால் லக்ஷ்மியே தருகிறாளென்றுதான் தாத்பர்யம். அதாவது அவள் கொடுத்தே இவர் வாங்கிக்கொள்கிறாரென்று அடக்கத்துடன் காட்டுகிறார். (அவை) என்னென்ன பலன்கள்?

“ஸம்பத்கராணி” — நிறைய ஸம்பத்தைக் கொடுக்கிறது.

“ஸகலேந்த்ரிய நந்தநாநி” — எல்லா இந்த்ரியங்களுக்கும் இனியவற்றை அளிக்கிறது. அதாவது ஸகல போக போக்யங்களையும் அளிக்கிறது.

“ஸாம்ராஜ்ய தான நிரதாநி” — பக்தர்களுக்குப் பெரிய ஸாம்ராஜ்யத்தையே வழங்கவேண்டுமென்று உத்ஸாஹத்தோடு ஈடுபட்டிருக்கிறது. “ராஜராஜேச்வரீ, ராஜ்யதாயிநீ“, அப்புறம் “ராஜபீட நிவேசித நிஜாச்ரிதா” (மெய்யடியார்களை அரியணையிலே ஏற்றுவிப்பவள்) என்றெல்லாம் “லலிதா ஸஹஸ்ரநாம” த்திலும் வருகிறது.

மற்ற காரணங்களோடு, லௌகிகமான பலன்களைச் சொன்னால்தான் ஜனங்களுக்கு நமஸ்காரம் செய்யத் தோன்றுமென்று ஆசார்யாளுக்குப் பட்டதால் இப்படியெல்லாம் சொல்ல ஆரம்பித்தார். இப்படி (ச்லோகத்தின்) முதல் பாதியில் சொல்லி முடித்து, இவ்விதமான பலன்களைத் தரும் நமஸ்காரங்கள் — த்வத் வந்தநாநி : உனக்குரிய நமஸ்காரங்கள் — என்று சொன்னவுடன் அவருக்கு ஒரு யோசனை வந்துவிட்டது.

நிறைய ஸம்பத், ஸகலேந்த்ரிய ஸந்துஷ்டி, பெரிய ராஜ்யாதிகாரம் ஆகியவற்றை மட்டும் சொல்லி நிறுத்தி விட்டால், எல்லாம் இஹலோக அநுக்ரஹங்களாகவே அல்லவா ஆகிவிடுகிறது? “இவற்றைத் தருவதான நமஸ்காரங்கள் என்னை வந்தடையட்டும்” என்று ஆசார்யாளால், ஸொந்த வாழ்க்கையில் கொஞ்சங்கூட உலகப்பற்றில்லாத ஆசார்யாளால் எப்படி ப்ரார்த்திக்க முடியும்? — இதைப்பற்றி ஆலோசித்துப் பார்த்தார்.

மஹாமதியான ஆசார்யாளுக்கு ஆலோசனை, யோசனை எல்லாம் க்ஷணமாத்ரம்தான். அல்லது அவ்வளவுகூட இல்லை. ச்லோகம் கவனம் பண்ணிக்கொண்டு போகிற போதே அடுத்த வார்த்தை போடுவதற்குள்ளே பதில் வந்துவிடும். நிறுத்தாமலே, தங்கு தடையில்லாமல் முழுக்கப் பூர்த்தி பண்ணிவிடுவார்.

இப்போது ஸம்பத்து முதலான பலன்களைச் சொல்லி இவற்றைத் தரும் நமஸ்காரங்கள் — ‘த்வத் வந்தநாநி’ என்று பின்பாதியை ஆரம்பித்தவுடன், “என்னடாது! எல்லாம் லௌகிகமாகவே சொல்லிவிட்டோமே!” என்று நினைத்த ஆசார்யாள், உடனேயே குறையை நிவர்த்தி செய்வதாக, அடுத்தாற்போல் “துரிதோத்தரணோத்யதாநி” என்று மின்னல் வெட்டுகிற வேகத்தில் போட்டுவிட்டார்! “வந்தநாநி” என்ற வார்த்தைக்கு முன்னால் லௌகிகமான பலன்களாக இரண்டு மூன்று சொன்னவர், அந்த வார்த்தைக்குப் பின்னால் ஆத்மார்த்தமாக “துரிதோத்தரணோத்யதாநி” என்று ஒரு பலனைச் சேர்த்துவிட்டார். கவிதைகளில் வசன நடைபோல இல்லாமல் முன்னே பின்னே வார்த்தைகளை மாற்றிப் போடலாம். அப்படிப் போடுவதே ஒரு அழகு. அதிலும் ஸம்ஸ்க்ருத பாஷையிலோ வார்த்தைகளை பல தினுஸிலே கோத்து வாங்கி விளையாடும் ஸ்வாதந்திரியம் ஜாஸ்தி. ஆகையால் ச்லோகரூபத்திற்குக் கொஞ்சங்கூட பங்கம் ஏற்படாமலே,

த்வத் வந்தநாநி துரிதோத்தரணோத்யதாநி

என்று போட்டுவிட்டார்.

“இன்ஸ்பிரேஷன்” என்று பொதுவாகச் சொல்லுவதன் உசந்த நிலையில், ஒரு திவ்ய ஆவேசத்தில்தான் ஆசார்யாள் போன்றவர்கள் கடகடவென்று கவிதையாகக் கொட்டியது. அதற்கு நடுவிலேயே கொஞ்சம் யோசனை, புத்தி பூர்வமான சிந்தனை செய்ததாக நம் பார்வையில் — அல்லது நம்முடைய ராஸிக்ய பாவனைக்குப் பிரீதி ஏற்படும் விதத்தில் — இப்படியெல்லாம் செய்வது.

அம்பா, மாதா: அம்மன், தாயார்

‘மாதா’, ‘அம்பா’ என்று இரண்டு வார்த்தைகள் எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் குழந்தை வாயில் ‘அம்பா’ என்றுதான் சட்டென்று வரும். ‘அம்மா’, ‘அம்பா’ இரண்டும் ஒன்றுதான். ‘மாதா’ என்பது இலக்கண ரீதியான வார்த்தை. தமிழில் ‘தாயார்’ என்கிற மாதிரி. அம்பா, அம்மா என்கிறபோது ரொம்ப எளிமை. மாதா, தாயார் என்கிறபோது ஒரு ஸ்தானம் கொடுத்து உயர்த்தி வைத்தாற் போல இருக்கிறது. பரமேச்வர பத்னியாக இருக்கப்பட்ட தேவியைப் பற்றிச் சொல்லும்போது ‘அம்மன்’, ‘அம்மன் ஸந்நிதி’ என்கிறோம். ‘அம்மன்’ என்னும்போது ‘அம்மா’ என்பதை விடவும் குழந்தை பாஷையில் சொல்கிற மாதிரியிருக்கிறது. அப்பா — அப்பன் மாதிரி அம்மா — அம்மன். ஸாதாரணமாக ஆண்பால் பெயர்கள்தான் ‘ன்’ னில் முடியும். குழந்தை பாஷைக்கு இலக்கணமில்லை. அதனால் ‘அம்மா’வும் ‘அம்மனா’கி விடுகிறது. பரமேச்வர பத்னியை அம்மன் என்கிறோம். பொது வழக்கிலேயே பரமேச்வர பத்னியை அம்பா, அம்பாள் என்று சொல்லுகிறோம். மஹாவிஷ்ணுவின் பத்னியைப் பற்றிச்சொல்லும்போதோ ‘தாயார்’, ‘தாயார் ஸந்நிதி’ என்கிறோம்.

(ஸம்ஸ்க்ருத அகராதியான) ‘அமர (கோச)’த்தில் பார்த்தாலும் இப்படியே இருக்கிறது. விஷ்ணு பத்னியைச் சொல்லும்போது, “இந்திரா, லோக மாதா” என்று குறிப்பிட்டுவிட்டு, சிவபத்னியைச் சொல்கிறபோது, “அபர்ணா பார்வதீ துர்கா ம்ருடாநீ சண்டிகா அம்பிகா” என்று, ‘அம்பா’ப் பேருக்கே அழகு பண்ணி ‘அம்பிகா’ என்று குறிப்பிட்டிருக்கிறது.

தனம் வேண்டுமென்றே லக்ஷ்மியிடம் போகிறோமாதலால், அவளை நிறைய தனம் படைத்த பெரிய சீமாட்டியாக பாவித்துத்தான் ‘தாயார்’ என்றும் ‘மாதா’ என்றும் மரியாதை செய்கிறோம் போலிருக்கிறது!

‘மாத: அநிசம் கலயந்து நாந்யே’ என்று மாதாவாக அவளைக் கூப்பிடுபவர், ‘ஸரோருஹாக்ஷி’ என்றும் ச்லோகத்தில் பெயர் கொடுத்திருக்கிறார். தாமரை போன்ற கண் படைத்தவள் என்று அர்த்தம். பகவானுக்கும் புண்டரீகாக்ஷன் என்று இதே அர்த்தத்தில் பெயரிருக்கிறது. ஸதிபதிகள் ஒற்றுமை.

நமஸ்காரமே செல்வம்: ஆசார்யாள் உணர்த்துவது

இந்த நமஸ்காரம் தான் நமக்கு மஹா பெரிய செல்வம். ஆசார்யாள் அப்படித்தான் சொல்லியிருக்கிறார்.

அவர் பால ப்ரம்மசாரியாக இருந்த காலத்தில் ஒரு ஏழை ப்ராம்மண ஸ்த்ரீக்கு இரங்கி லக்ஷ்மியிடம் ப்ரார்த்தித்துக் கொண்டு ‘கனகதாரா ஸ்தவம்’ பாடின கதை தெரிந்திருக்கலாம்.

அவர் ப்ரார்த்தித்துக்கொண்டவுடன் லக்ஷ்மி வந்து கனக வர்ஷமாகப் பொழிந்துவிட்டாள். அது ஏழை ப்ராம்மணக் குடும்பத்துக்காக. ஆசார்யாள் அதில் ஒரு குன்றிமணிகூட எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் லக்ஷ்மிக்கு த்ருப்தியாக இருக்குமா, அவர் கேட்டுக்கொண்டாரே என்று வேறே யாருக்கோ வாரி வழங்கிவிட்டு, இத்தனை அழகான ஸ்துதி பண்ணின அவதாரக் குழந்தைக்கு எதுவும் கொடுக்காமல் போவதற்கு? ஆசார்யாளுக்கும், ‘வேறே யாருக்கோ தான் உன் அநுக்ரஹம் தேவைப்பட்டது; அதற்காக ப்ரார்த்தித்துக் கொண்டேன்; எனக்கு உன்னிடமிருந்து ஒன்றும் தேவையில்லை என்கிற மாதிரி இருந்துவிட்டால் அது மரியாதைக் குறைச்சல். அதனாலே நாம் சின்னவன் மாதிரி இருந்து மஹாலக்ஷ்மியிடம் நமக்காகவும் ஏதாவது கேட்டுக் கொள்ளவேண்டும்’ என்று தோன்றிற்று. ஆனால் அவருக்கு எந்த ஆசையும், எந்தத் தேவையும் வாஸ்தவத்தில் இல்லாததால் என்ன கேட்பது என்று தெரியவில்லை. அவளையே நமஸ்காரம் பண்ணி அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமென்று நினைத்து நமஸ்கரித்தார். உடனேயே, “அவளிடம் வேறென்ன செல்வத்தைக் கேட்கவேண்டும்? இப்படி நாம் சின்னவராக நின்றுகொண்டு ஒருத்தரிடம் ப்ரியத்தோடு, அடக்கத்தோடு, நன்றியோடு நமஸ்காரம் செய்யும்போது மனஸுக்கு எவ்வளவு நிறைவாக இருக்கிறது? அதனால் இந்த நமஸ்காரமேதான் பெரிய செல்வம். ‘இந்த நமஸ்காரச் செல்வத்தை எனக்குக் கொடு’ என்றே ப்ரார்த்தித்துக் கேட்டு வாங்கிக்கொள்வோம்” என்று தோன்றிற்று. அதையே ச்லோகமாகப் பாடிவிட்டார்.

ஸம்பத்கராணி ஸகலேந்த்ரிய நந்தநாநி
    ஸாம்ராஜ்ய தாந நிரதாநி ஸரோருஹாக்ஷி ।
த்வத் வந்தநாநி துரிதோத்தரணோத்யதாநி
    மாமேவ மாதரநிசம் கலயந்து நாந்யே ॥

“நாந்யே” — முடிவாக, முடிந்த முடிவாக இந்த வார்த்தையைப் போட்டிருக்கிறார். “Final word” என்றால் அப்புறம் வேறே தீர்மானமில்லை என்று அர்த்தம்! ‘நாந்யே’ ‘ந அந்யே’ என்றால், ‘வேறு எதுவும் இல்லை’, — அதாவது ‘வேறு எதுவும் வேண்டாம்’. “அம்மா, மஹாலக்ஷ்மி! உனக்குப் பண்ணும் நமஸ்காரமே செல்வநாயகியான நீ எனக்குக் கொடுக்கும் பெரிய செல்வம். அதைத் தவிர வேறே எதுவும் வேண்டாம்!”

‘த்வத் — வந்தநாநி’ — உனக்கான நமஸ்காரங்கள்; ‘மாமேவ’ — என்னை (‘மாமேவ’ ஸமாசாரத்திற்கு அப்புறம் வருகிறேன்); ‘அநிசம்’ — இடையறாமல்; ‘கலயந்து’ — வந்தடையட்டும். ‘ந அந்யே’ — வேறே எதுவுமில்லை.

‘எப்போது பார்த்தாலும் உன்னை வணங்கிக்கொண்டிருக்கும்படியான இந்த நமஸ்கார ஸ்ரீயைத் தவிர வேறு எதுவும் நான் உன்னிடம் ப்ரார்த்திக்கவில்லை’.

செல்வத்துட் செல்வம் அருட்செல்வம்1 ” என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். அருள் ஆண்டவன் செய்வது. ஆசார்யாள் சொல்லும் நமஸ்காரமோ நாம் செய்வது. நம்மைப் போன்றவர்கள் அவனுடைய அருட்செல்வத்தை வேண்டி நமஸ்காரம் செய்கிறோம். ஆசார்யாளோ நாம் நமஸ்கரித்து வேண்டி அதற்குப் பலனாக அப்புறம் அவன் அருளென்ற செல்வத்தைத் தரவேண்டுமென்று நினைக்கவில்லை. நாம் செய்கிற நமஸ்காரமே அவன் தரும் பெரிய செல்வம் என்று நினைத்து, இது தவிர “எதுவும் வேண்டேன்” என்கிறார்! “இது மட்டுமே என்னை அடையட்டும்”: “த்வத் – வந்தநாநி… மாமேவ மாதரநிசம் கலயந்து.”

‘மாத:’, ‘அநிசம்’ என்பவை சேர்ந்து ‘மாதரநிசம்’. “மாதா!” என்று லக்ஷ்மியைக் கூப்பிட்டு, ‘அநிசம்’ – எப்போதும், இடையறாமல் – நமஸ்கார லக்ஷ்மி தன்னிடம் தங்கியிருக்கட்டுமென்கிறார்.


1 “அருட் செல்வம் செல்வத்துட் செல்வம்” – குறள். 241

ப்ரம்மமாயினும் நமஸ்காரத்துக்குரியவரே!

த்ரிமூர்த்திகள் த்ரிமூர்த்திகளாக மட்டும் தங்கள் தொழில்களைக் குறுக்கிக் கொண்டுள்ளபோது அவர்களுக்கு நமஸ்காரம் பண்ண நமக்குக் காரணமில்லையென்றால், ப்ரஹ்மமோ குறுகலே இல்லாமல் ஒரே விரிவாக, ஒரே பெரிசாக இருந்தாலும் அது எதற்கும் — மனஸ், வாக்கு ஆகிய எதற்குமே — எட்டாமலிருப்பதால் நாம் நமஸ்காரம் பண்ணினாலும் அது அதை எட்டாது. ப்ரஹ்மம் நிஷ்க்ரியமாக ஒன்றுமே செய்யாமலிருக்கும்போது நம்முடைய நமஸ்காரத்தை மட்டும் ‘ரிஸீவ்’ பண்ணிக்கொள்ளுமா என்ன? ஆகையால் அதை நமஸ்கரிப்பதில் அர்த்தமில்லையென்று பார்த்தோம். த்ரிமூர்த்திகளை நமஸ்கரிக்கும் தேவை நமக்கில்லை; ப்ரஹ்மத்துக்கு நம் நமஸ்காரம் தேவையில்லை!

அப்போது, குரு ப்ரஹ்மமென்றால் அவரை ஏன் நமஸ்காரம் பண்ணணும்?

ஸரி, குரு ஒரு விதத்தில் த்ரிமூர்த்திகளாக இருந்தாலும் அவருக்கு நாம் நமஸ்காரம் பண்ணவும் நிறைய நியாயமிருக்கிறதென்று பார்த்தோமல்லவா? அதேபோல இங்கேயும் இருக்குமா?

ஆமாம். அப்படித்தான்.

எப்படியென்றால் — நிதர்சனமாகவேதான் தெரிகிறதே! குரு ப்ரஹ்மமானாலும் நமக்கு எட்டாமலா இருக்கிறார்? எந்தக் காரியமுமில்லை, எதையும் தெரிந்து கொள்வதில்லை, ஏற்றுக்கொள்ளுவதுமில்லை, தள்ளுவதுமில்லை என்றெல்லாம் நிஷ்க்ரியமாகவா அவர் இருக்கிறார்? எட்டாத அந்த நிஷ்க்ரியமேதானே நமக்கு எட்டியே ஆகவேண்டும் என்று இப்படி ரூபம் எடுத்துக்கொண்டு இந்த க்ரியாலோகத்தில் இத்தனை செய்கிறது?

அதனால் ப்ரஹ்மமாகவே இருக்கிற ப்ரஹ்மத்துக்கு நமஸ்காரம் வேண்டாம்தான் என்றாலும், குருவாக இருக்கிற ப்ரஹ்மத்துக்கு — ஸரியாகச் சொன்னால், அதே ப்ரஹ்மம் குருவாக வந்துள்ளபோது — அனந்த கோடி நமஸ்காரமும் பண்ணத்தான் வேண்டும். ப்ரஹ்மமாக இருப்பதோடு அப்படியே ஹாய்யாக இருந்துவிடமால் குருவாகி இப்படி நம்முடைய இத்தனை கோணாமாணாவையும் நேராக்க வேண்டும் என்று வந்திருக்கும் கருணைக்கு நமஸ்காரம் பண்ணிக்கொண்டேயிருக்க வேண்டும்.