ஆசார்யாள் அளிக்கும் ஆசார்ய லக்ஷணம்

“விவேக சூடாமணி” யில் ஆசார்யாளைப் பற்றி வர்ணிக்கும்போது ‘ஆசார்யாள்’ என்றாலே இவர்தான் என்றாகிவிட்ட நம்முடைய பகவத் பாதாள்,

தீர்ணா: ஸ்வயம் பீம – பவார்ணவம் ஜநாந்
அஹேதுநா – (அ)ந்யாநபி தாரயந்த:

என்கிறார். (குரு) ஸ்வயமாக இந்த பயங்கரமான ஸம்ஸார ஸாகரத்தைத் தாண்டியவராயிருக்க வேண்டும். ‘பீம பவார்ணவம்’ என்றால் பயங்கரமான ஸம்ஸார ஸாகரம். குருவாக இருப்பவர்கள் அதை, ‘தீர்ணா:’ – தாண்டியிருப்பவர்கள். இப்படி இருந்து கொண்டு, ‘அந்யாந் அபி’ – மற்றவர்களையும், ‘தாரயந்த:’ – தாண்டுவிப்பவர்களாக… இருக்கிறார்கள். ‘இருக்கிறார்கள்’ என்று (ஆசார்யாள்) மொட்டையாகச் சொல்லி நிறுத்தியிருக்கவில்லை. குருமார்கள் என்ன மாதிரி இதைச் செய்கிறார்களென்பதை ச்லோகத்தின் முன் பாதியில் ரொம்பவும் அழகாகச் சொல்லியிருக்கிறார். நான் சொன்னது பின் பாதி. முன் பாதி:

சாந்தா மஹாந்தோ நிவஸந்தி ஸந்தோ
வஸந்தவல் – லோகஹிதம் சரந்த:

சொல்லழகோடு பொருளழகும் கூடிய வாக்கு. குருவுக்கு அநேக அடைமொழிகள் கொடுத்திருக்கிறார். ‘சாந்தா:” — பரம சாந்தர்கள்; ‘மஹாந்த:’ — மஹான்களாக இருப்பவர்கள்; ‘ஸந்த:’ — ஸாதுக்கள். அப்புறம் வருகிறதுதான் ரொம்பவும் அழகானது; ஆசாரியாளின் பக்குவமான கவியுள்ளத்தைக் காட்டுவது. ‘வஸந்த வல்லோகஹிதம் சரந்த:’ – ‘வஸந்த வத்’: வஸந்த காலத்தைப் போல; ‘லோகஹிதம்’: உலக நலனை; ‘சரந்த:’ : ஆற்றுகிறவர்கள்.

வஸந்த காலம் வந்ததென்றால் லோகமெல்லாம் பச்சுப் பச்சென்றாகி விடுகிறது. அதுவரைக்கும் பனியில் உலகம் நடுங்கிக்கொண்டிருந்தது. இலையுதிர் காலம் என்று மரத்தையெல்லாம் வழித்துவிட்டு, பார்த்தாலே என்னவோ மாதிரி இருந்தது. வஸந்த காலம் வந்ததோ இல்லையோ கிளு கிளு கிளு என்று எங்கே பார்த்தாலும் துளிர்விட்டு விடுகிறது. நடுக்கும் குளிர் போய், கொளுத்தும் வெய்யிலாகவுமில்லாமல் சீதோஷ்ணம் ஹிதமாக ஆகிறது. ஒரே மல்லிப் பூவும், மாம்பழமுமாக வாஸனை தூக்குகிறது.

ஆனாலும் வஸந்தம் என்று ஒன்று கண்ணுக்குத் தெரிகிறதோ? இல்லை. தன்னை அடையாளங்கூடக் காட்டிக் கொள்ளாமல், அப்படியொரு அஹங்கார லேசமேயில்லாமல், இத்தனை நல்லதைப் பண்ணி விடுகிறது!

குருவும் இப்படித்தான். அஹங்கார லேசமும் இல்லாதவர். ஆனால் அடையாளம் காட்டிக்கொள்கிறாரே என்றால், அதுவும் நம்முடைய நிமித்தமாகத்தான். நமக்கு ஈச்வரனை அடையாளம் தெரியவில்லையே என்று தவித்துக் கொண்டிருக்கும்போது அவனே நம் பொருட்டுத் தன்னுடைய அடையாளமாக அனுப்பி வைப்பவர்தான் குரு என்பவராயிருக்க, அவர் அடையாளம் காட்டிக் கொள்கிறாரே என்று கேட்டால் அர்த்தமில்லை. ஆனால் ‘நானாக்கும் பண்ணுகிறேன்’ என்று பெருமைப்படுவதற்காக அவர் தம்மைத் தெரிவித்துக்கொள்ளவில்லை. நமக்கு அடையாளம் தேவை என்பதற்காகவே காட்டுகிறார். அவர் வாஸ்தவத்தில் அடையாளமில்லாத ப்ரஹ்மவஸ்து. ‘நிர்லிங்கம்’ என்பார்கள், அது. ‘லிங்கம்’ என்றால் அடையாளம்.

குருதான் இப்படிப் பண்ணுகிறாரென்று அடையாளம் தெரியாமலேயும் அநேக நல்லதுகள் நமக்கு அவை பாட்டுக்கு நடக்கிறாற்போலவே நடப்பதுண்டு. சட்டென்று ஒருநாள், ‘இது எப்படி நடந்தது? இதனாலா? அதனாலா? அப்படித்தான் தோன்றிற்று. ஆனால் இது, அது எல்லாம் எப்படி இவ்வளவு சீராகச் சேர்ந்து நமக்கு ஸாதகமாகக் கார்யத்தை நடத்தித் கொடுத்தது? அதெல்லாமில்லை. குரு க்ருபைதான் ஸூக்ஷ்மமாக இப்படி எல்லாவற்றையும் சேர்த்து வைத்திருக்கிறது’ என்று மனஸுக்குப் பளிச்சென்று தெரியும்.

வஸந்தத்துக்கும் குருவுக்கும் இவை எல்லாவற்றையும் விடச் சிறப்பான ஒற்றுமையை, — (ஆசார்யாளின்) ச்லோகத்தில் சொல்லியிருப்பதை — இதுவரை நான் சொல்லவில்லை. அது சின்ன வார்த்தை, நாலு எழுத்தில், போட்டு அதை ஆசார்யாள் சொல்லியிருக்கிறார்.

‘அஹேதுநா’ என்பதுதான் அந்த வார்த்தை. “தீர்ணா ஸ்வயம் பீம பவார்ணம் ஜநாந் அஹேதுநா– (அ)ந்யாநபி தாரயந்த:” என்று போட்டிருக்கிறார்.

‘அஹேதுநா’ என்றால், ‘காரணமில்லாமல்’. காரணமே இல்லாமல் வஸந்த காலத்தைப்போல் குரு அருள் பண்ணிக்கொண்டு லோகத்தில் இருந்து வருகிறார். ‘நிவஸந்தி’ — இருக்கிறார்கள், வஸித்து வருகிறார்கள். ஆசார்ய புருஷர்கள் சாந்தர்களாக, மஹான்களாக, ஸாதுக்களாக, பயங்கரமான பவஸாகரத்தைத் தாண்டியவர்களாக, தாங்கள் தாண்டியதோடு பிறரையும் தாண்டுவிப்பவர்களாக, வஸந்த காலத்தைப் போல் ஒரு காரணமும் இல்லாமல் (‘அஹேதுநா’) உலக நலனைச் செய்துகொண்டு இருக்கிறார்கள் என்று ச்லோகம் சொல்கிறது.

இப்படி அவர்கள் அநுக்ரஹிப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. எதற்காக அநுக்ரஹக்கிணும்? ராப் பகல் உபதேசம் பண்ணணும்? ஊர் ஜனங்களைக் கட்டிக்கொண்டு மாரடிக்கணும்? ஊர் ஊராகச் சுற்றணும்? நமக்கு இப்படி ஒரு அநுக்ரஹம் பெற என்ன யோக்யதை? இல்லாவிட்டால் நம்மகிட்டே ஏதாவது அவர் கடன்பட்டிருக்கிறாரா, அநுக்ரஹம் பண்ணியாகணுமென்று? இதெல்லாம் போக, அவருக்கு இதனாலே ஏதாவது லாபமுண்டா? லாபமில்லாததோடு இல்லை. ஆத்மாராமராக விச்ராந்தியாக உட்கார்ந்திருக்கக் கூடியவர் நம்முடைய உழப்பறிசல்களை அல்லவா இழுத்துப்போட்டுக் கொண்டிருக்கிறார்?

ஆக, நம்முடைய angle-லிலிருந்து பார்த்தாலும் ஸரி, அவருடைய angle-லிலிருந்து பார்த்தாலும் ஸரி, இப்படி குரு என்று ஒருவர் ஸதா ஸர்வதா அநுக்ரஹம் பண்ணிக் கொண்டிருப்பதற்குக் காரணமேயில்லை. “அஹேதுநா” தான் அவர் இப்படிச் செய்கிறார்.

நம்மை கடைத்தேற்றி அவருக்கு ஒன்றுமே ஆக வேண்டியதில்லை. நமக்கு அந்த யோக்யதை இல்லவேயில்லை. ஆனால் யோக்யதையையும் உண்டாக்கி அப்புறம் கடைத்தேற்றியும் தீர்வது என்று அவர் அசராமல் பாடுபடுகிறார்.

‘வஸந்தவத்’ (வஸந்தத்தைப் போல) என்று போட்டதன் அழகு, பொருத்தம் இந்த ‘அஹேதுநா’வில் தான் விளக்கம் பெறுகிறது.

பனியில் ஜனங்களெல்லாம் நடுங்கிக்கொண்டு, பயிர் பச்சை எல்லாம் கருகிக்கொண்டிருந்த ஸமயத்தில் லோகத்தையே தளிரும் இலையும் பூவும் பழமுமாக நானா வர்ணாலங்காரம் செய்து, பரம ஹிதமான சீதோஷணத்தைக் கொடுத்துக்கொண்டு வஸந்தம், வஸந்தம் என்று ஒன்று வருகிறதே, அதற்கு என்ன காரணம் சொல்ல முடியும்? ஒரு காரணமும் தெரியவில்லை. “அஹேதுநா“.

நம்மால் வஸந்தத்துக்கு ஏதாவது ப்ரதி ப்ரயோஜனம் உண்டோ? அப்படியே நாம் அதற்கு ஏதோ செய்ய முடியுமானால்கூட, அது தன்னை அடையாளமே காட்டிக்கொள்ளாமல் அல்லவா நல்லது பண்ணிக் கொண்டிருக்கிறது? ஆகையால் அதை நாம் எப்படிப் பிடித்து நாம் செய்யக்கூடிய ப்ரதியைச் செய்வது?

குரு அடையாளம் காட்டிக்கொள்கிறார் என்று சொல்லி, அதற்குக் காரணம் பார்த்தோம். அதே மாதிரி இங்கேயும், ‘வஸந்தத்துக்கு நாம் எதுவுமே (ப்ரதி) செய்யாத மாதிரி, செய்யமுடியாத மாதிரி குரு விஷயத்தில் இல்லையே! நம்மாலான சிறு சுச்ரூஷை, சின்னத் தொண்டு செய்யத் தானே செய்கிறோம்? த்ரவ்ய ரூபத்தில்கூடக் காணிக்கை கொடுக்கிறோமே? குரு சுச்ரூஷை, குரு தக்ஷிணை ரொம்பவும் முக்யமென்று சாஸ்த்ரத்திலும் நிறையச் சொல்லியிருக்கிறதே!’ என்று கேட்கலாம். அவர் அடையாளம் காட்டிக் கொள்வதற்குச் சொன்ன காரணத்தைத்தான் இங்கேயும் மறுபடி சொல்லவேண்டியிருக்கிறது. அதாவது, நம் பொருட்டாகத்தான் அவர் சுச்ரூஷை, தக்ஷிணை ஆகியவற்றை ஏற்றுக்கொள்வது. இதனாலே நமக்கு ஏற்படும் த்ருப்தி, நமக்குக் கிடைக்கும் புண்யபலன் ஆகியவற்றை உத்தேசித்துத்தான் அவர் இவற்றை ஏற்றுக்கொள்கிறாரேயன்றி, அவராக இவற்றை ப்ரதியாக எதிர்பார்த்தோ, இவற்றை நாம் செய்யவேண்டும் என்பதற்காகவோ நமக்கு உபதேசம் முதலிய அநுக்ரஹங்களைச் செய்யவில்லை.

காரணமின்றி வஸந்தம் லோகஹிதம் செய்வதுபோல குருவும் செய்கிறார்.

தன்னையறியாமல் ஒரு கருணை அவரிடம் சுரக்கிறது. ஈச்வரன் அப்படி அவரை சுரப்பிக்கச் செய்திருக்கிறான். அதனால் ‘லோகம் நன்றாயிருக்கட்டும்’ என்ற எண்ணம் அவருக்கு ஸதா காலமும் மனப்பூர்வமாக ஏற்பட்டு, ஹிதத்தைச் செய்து கொண்டிருக்கிறார். இதிலே முடிவாக அவர் செய்வது, ‘பீம பவார்ணவம் ஜநாந்…தாரயந்த:‘ என்றபடி மக்களை பவக்கடலிலிருந்து கடத்துவிப்பது. அதை இவரால் எப்படிச் செய்யமுடிகிறதென்றால் இவர் தம்மளவில் அப்படிக் கடந்தவர், அதனால்தான். ‘ஸ்வயம் தீர்ண:‘ — தாம் கடந்தவர், அந்த பலத்தினாலேயே ‘அந்யான்‘ — பிறரை, ‘தாரயந்த:‘ — கடத்துவிப்பவர்.

‘உபதேச ஸாஹஸ்ரீ’ என்பதாக ஆயிரம் உபதேச மொழிகள் கொண்ட ஒரு நூல் ஆசார்யாள் அநுக்ரஹித்திருக்கிறார்…ஆசார்யாள் என்றால் உடனே நூற்றுக்குத் தொண்ணூறு பேர் ‘பஜ கோவிந்தம்’ என்று நினைத்துக் கொள்வார்கள். அடுத்தபடியாக ‘ஸெளந்தர்ய லஹரி’ ப்ரஸித்தமாயிருக்கிறது. ‘விவேக சூடாமணி’ என்ற பேர் காதில் விழுந்தால் நூற்றிலே ஐம்பது பேர் ஆசார்யாளை நினைத்துக் கொள்ளலாம். (நூற்றில்) பத்து பேருக்குத்தான் ‘உபதேச ஸாஹஸ்ரீ’ பற்றி தெரிந்திருக்கக்கூடும். அது உயர்ந்த தத்வங்களையும் அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவருவது எப்படி என்பதையும் சொல்கிற நூல். அதில் முன்பாகம் ப்ரோஸ், பின்பாகம் பொயட்ரி. இந்தப் புஸ்தகத்திலும் ஆரம்பத்திலேயே ஆசார்யாள் இதே கடைத்தேற்றும் விஷயத்தை குருவின் காரியமாகச் சொல்லியிருக்கிறார்:

வித்யாஸந்ததிச்ச ப்ராண்யநுக்ரஹாய பவதி நௌரிவ நதீம் திதீர்ஷோ:

ஸம்ப்ரதாய வித்யையைப் பரம்பரை க்ரமத்தில் உபதேசிப்பதானது ஆற்றைக் கடக்க விரும்புகிறவனுக்குப் படகு உதவுகிற மாதிரி ஜீவ ஸமூஹத்துக்கு உதவுகிறது. அநுக்ரஹிக்கிறது என்று அர்த்தம்.

‘நதீம் திதீர்ஷோ:’ – நதியைக் கடக்க விரும்புபவனுக்கு: ‘நௌரிவ’ – படகு போல, ‘நௌ’ என்றாலும் ‘நௌகா’ என்றாலும் படகு என்று அர்த்தம். ‘நௌ’ தான் தமிழ் ‘நாவாய்’. (கிறிஸ்துவ வேதத்திலே, ப்ரளயத்தில் பகவானருளால் நாவாயில் வைத்து ரக்ஷிக்கப்பட்டவனுக்கே நோவா (Noah) என்று பேர் சொல்லியிருக்கிறது! அதுவும் நம் வைவஸ்வத மநுவின் கதைதான்!)

ஸம்ஸாரப் பெருக்கில் படகு ஓட்டுபவர் குரு. ‘கர்ணதாரன்’ என்றால் படகுக்காரன். குருவுக்கும் அதே பெயர் சொல்வதுண்டு.

ஸம்ஸாரத்தைத் தானும் தாண்டி பிறரையும் தாண்டுவிக்கிறவர் என்பதையே வேறே விதமாகச் சொன்னால், தானும் ப்ரம்மமாக ஆகிப் பிறரையும் அப்படி ஆக்குகிறவர். அவர் ப்ரம்மமாயிருப்பதுதான் “குருஸ் – ஸாக்ஷாத் பரம் – ப்ரஹ்ம”

தாம் அப்படி ஆகாமல் வாய்வேதாந்தம் பேசுபவரில்லை. அவரும் நன்றாக விரிவாக வேதாந்தம் பேசத் தெரிந்தவர் தான். தன் ஸித்தாந்தத்துக்கு ஆதரவாக நன்றாக ‘ஆர்க்யூ’ செய்யும் ‘பாஸிடிவ்’ ஆன ‘ஊஹ’ சக்தி, மாற்று ஸித்தாந்தத்தை நிராகரிப்பதிலும் அப்படியே வன்மையாக எதிர்வாதம் செய்யும் ‘அபோஹ’ சக்தி – இவை இரண்டையும் சேர்த்து ‘ஊஹாபோஹம்’ என்று சொல்வார்கள். குரு இந்த இரு சக்திகளும் பெற்றவர். இதையும் ஆசார்யாள் சொல்லிவிட்டு,* இன்னம் அநேக லக்ஷணங்களையும் சொல்லி விட்டு, இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அவரை “ப்ரஹ்மவித், ப்ரஹ்மணி ஸ்தித:” என்கிறார். ‘ப்ரஹ்மவித்’ என்றால் ப்ரம்மத்தை அறிந்தவர். இப்படிச் சொன்னால்கூட அறிவு மட்டத்தில் மட்டும் intellectual – ஆக ப்ரொஃபஸர், டாக்டர் மாதிரித் தெரிந்து கொண்டதோடு ஸரியோ என்ற ஸந்தேஹம் வந்துவிடப் போகிறதே என்றுதான், உடனே ‘ப்ரஹ்மணி ஸ்தித:’ என்றும் போட்டிருக்கிறார். ‘ப்ரஹ்மத்திலேயே நிலைத்து நிற்கிறவர்’ என்று அர்த்தம். அதாவது ப்ரஹ்மமாகவே ஆனவர்.

ஆகையால் “குருஸ் ஸாக்ஷாத் பரம்ப்ரஹ்ம” என்றால் அது ஸரிதான். தஸ்மை ஸ்ரீகுரவே நம: என்னும்போது தான் மறுபடி கேள்வி வருகிறது.


* “உபதேச ஸாஹஸ்ரீ” : முதல் அத்யாயம் – 5

கரை ஏறியவர், ஏற்றுவிப்பவர்

ஸம்ஸார ஸாகரத்தைத் தாமும் தாண்டி பிறரையும் தாண்டுவிக்கிறவர்தான் குரு என்பதே லக்ஷணம் (definition). தாமே ஸாகரத்தில் முழுகுகிறவரானால் இன்னொருத்தரை எப்படி அக்கரை சேர்க்கமுடியும்?

தான் கரையேறாமலே “அத்வைதா” என்று பெரிசாக லெக்சர் பண்ணிப் புஸ்தகம் போடுகிறவர் ப்ரொஃபஸர், டாக்டர் பட்டம் வாங்குகிறவரேயன்றி குரு இல்லை.

தான் கரை சேர்ந்துவிட்டு அப்படியே ஆத்மாராமராக ஒதுங்கியிருந்து விடுபவர் — அவரும், மஹான், ப்ரஹ்ம ஞானி என்று எந்தப் பெயர் வாங்கினாலும் குரு இல்லை. (இதனால் அவரைக் குறைவுபடுத்திச் சொல்வதாக அர்த்தம் இல்லை. யதார்த்தத்தைச் சொன்னேன்.)

தானும் கரை சேர்ந்து, பிறரையும் சேர்ப்பிக்கிற ப்ரஹ்ம ஞானிதான் குரு.

கரை சேர்வது, ஸம்ஸார ஸாகரத்தைக் தாண்டுவது என்பது ப்ரஹ்ம ஞான ஸித்தி தவிர வேறெதுவுமில்லை.

ஆசார்யாள் குறிப்பாக இதைத்தான் குருவின் லக்ஷணமாகச் சொல்வார்: தானும் கரையேறி, பிறரையும் ஏற்றுவது.

பரப் பிரம்மமாக

இன்னம் (ச்லோகத்தில்) ஒரு பாதம் அர்த்தம் சொல்லப்படாமலிருக்கிறது. அது என்ன?

குருஸ் – ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம

நிஜமான குருவைப் பற்றித்தான் பேச்சு என்றால் இதுவும் வாஸ்தவமாகத்தான் இருக்கவேண்டும். ‘அவர் எப்படி ப்ரஹ்மா, விஷ்ணு, மஹேச்வரன்?’ என்று கேள்வி கேட்டு அதற்கு பதில் சொல்லவேண்டியிருந்த மாதிரியில்லை இது; அவரே பரப்ரஹ்மம் என்பது.

நம்மை அவர் முடிவாக ஒரு லக்ஷ்யத்தில் சேர்க்கிறார், (அது) ஆத்ம ஸ்வாராஜ்யம், ஞான ஜ்யோதிஸ் என்றெல்லாம் சொன்னதற்கு அர்த்தம் அவர் நம்மையே பரப்ரஹ்மமாக்குகிறார் என்பதுதான். அதாவது, ‘பரப்ரஹ்மம் தானப்பா நீயாக வேஷம் போட்டுக்கொண்டிருக்கிறது’ என்று நமக்குப் புரியவைத்து, அந்த வேஷத்தைக் கலைத்து அதுவாகவே இருக்கும்படிப் பண்ணுகிறார். தாமே இப்படி ஆனவராயிருந்தாலொழிய நம்மை எப்படி இந்த மாதிரி ஆக்கமுடியும்? ஆகையினால்,

குருஸ் – ஸாக்ஷாத் பரம் – ப்ரஹ்ம

என்பதில் துளிக்கூட ஸந்தேஹமில்லை.

நமஸ்காரத்திற்கு உரியவராக

ஆனால் அந்த மூன்று பேரை அந்த மூன்று கார்யத்துக்காக நமஸ்காரம் பண்ணமுடியாமலிருக்க, இவருக்கு (குருவுக்கு) நமஸ்காரம் — தஸ்மை ஸ்ரீகுரவே நம: என்று சொல்லியிருக்கிறது. இங்கேதான் உபமாலங்காரம் என்றால் அதில் ஒற்றுமை அம்சத்தோடு வேற்றுமை அம்சமும் இருக்கத்தான் செய்யுமென்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

அந்த மூன்று பேருக்கு ஏன் நமஸ்காரம் பண்ணமுடியவில்லை?

ஒருவரை நமஸ்காரம் பண்ணுவது எப்போது? ஒன்று, அவர்கள் இதுவரை பண்ணியது நமக்கு ஸந்துஷ்டி, த்ருப்தி அளித்தால் அதற்காக நன்றி பாராட்டி, அதன் அடையாளமாக நமஸ்கரிப்போம். அல்லது நாம் வேண்டிக்கொண்டு அதன்மேல் அவர் இனிமேல் நமக்கு ஸந்தோஷமான, பிடித்தமான ஒன்றைச் செய்வாரென்றால், நமஸ்கரித்துப் பிரார்த்தனை பண்ணிக்கொள்வோம்.

ப்ரஹ்மா நம்மை ஸ்ருஷ்டித்ததிலோ, விஷ்ணு நம்மைப் பரிபாலிக்கிற விதத்திலோ, மஹேச்வரன் நம்மை ஸம்ஹரிக்கப் போவதிலோ நமக்கு ஸந்தோஷமில்லை. நம்முடைய ஸ்ருஷ்டி, இதுவரை நடந்த ‘பரிபாலிப்பு’ எனப்படுவது ஆகிய சென்றகால, நிகழ்கால விஷயங்களுக்கு நம்மால் ப்ரஹ்ம விஷ்ணுக்களிடம் நன்றி பாராட்டி நமஸ்காரம் செய்யமுடியவில்லை. இனிமேலே அவர்கள் நமஸ்காரம் பெறும் விதத்தில் ஏதாவது செய்வார்களா என்றால் — வருங்காலத்தில், இந்த ஜன்மாவில் ப்ரஹ்மா நம்மைக் குறித்து எதுவும் செய்வதற்கில்லை. ஸ்ருஷ்டித்ததோடு அவர் கார்யம் முடிந்துவிட்டது. ஸரி, அடுத்த ஜன்மா நல்லதாகத் தரச்சொல்லி வேண்டிக்கொள்ளலாமா என்றால், அதிலும் அவருக்கு ஸொந்த அதிகராம் எதுவுமில்லை. நம் கர்மாவைப் பொறுத்துப் பரமாத்மாவின் சட்டப்படி எப்படிப்பட்ட ஜன்மா வாய்க்கவேண்டுமோ அதைத்தான் அவர் தரமுடியும். ஆகையால் எதிர்காலத்தை உத்தேசித்தும் நாம் அவரை நமஸ்காரம் பண்ணுவதற்கில்லை. இதுவேதான் விஷ்ணுவுக்கும். நாம் கேட்டுக்கொள்வதற்காக அவர் இனிமேல் நல்ல ஸம்ரக்ஷணை கொடுக்கமுடியாது; கர்மாப்படி தான் பண்ணுவார்.

மஹேச்வரனுடைய தொழிலான ஸம்ஹாரம் இனிமேலே நடக்கவேண்டியதுதான்; இதுவரை அவர் செய்ததாக எதுவுமில்லை. முன் ஜன்மங்களில் ஸம்ஹாரம் பண்ணினாரே என்றால், அந்த ஜன்மங்களைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. அதனால் அப்போது பண்ணின ஸம்ஹாரத்துக்காக இப்போது அவரை நாம் ‘தாங்க்’ பண்ணி நமஸ்கரிப்பதற்கில்லை. இனிமேலே இந்த ஜன்மாவில் அவர் ஸம்ஹரிக்கப் போகிறார் என்பதிலும் நாம் ஸந்தோஷப்பட்டு நமஸ்காரம் செய்வதற்கில்லை. அல்லது, “ஸம்ஹாரம் பண்ணாதேள், ஸ்வாமீ!” என்று வேண்டுமானால் நமஸ்காரம் செய்து கேட்டுக்கொள்ளலாமா என்றால், அதற்கும் பலனிருக்காது. கர்மாவைப் பார்த்து அவர் ஆயுஸை முடிக்கிறபடி முடித்துத்தான் வைப்பார்.

இப்படியாக இவர்கள் பண்ணியது, பண்ணுவது, பண்ணப்போவது ஆகிய எதிலும் நமக்குப் பிடித்தமானதைச் செய்யவில்லை என்பதால்தான் நமஸ்காரம் செய்யத் தோன்றவில்லை.

ஆனால், குரு பண்ணியது, பண்ணுவது, பண்ணப்போவது எப்படி இருக்கின்றன?

அஞ்ஞானிகளாக ஸம்ஸாரத்தில் மாட்டிக்கொண்டு திண்டாடிக் கொண்டிருந்த நமக்கும் கொஞ்சங்கொஞ்சமாவது ஆத்ம சாந்தி என்றால் என்னவென்று தெரிவதற்கு வழி திறந்துவிட்டாரே, அந்த வழியிலே நம் கையைப் பிடித்துக்கொண்டு அடி அடியாக நடத்தி வைக்கிறாரே — இப்படி அவர் செய்த, செய்கிற அநுக்ரஹத்திற்காக அவருக்கு நாம் எத்தனை நன்றி தெரிவித்தால்தான் போதாது? எத்தனை நமஸ்காரந்தான் பண்ணக்கூடாது?

இனிமேல் செய்யப்போகிறது? — அது இதுவரை செய்ததையெல்லாம்விட மஹா பெரிசு. இதுவரை ஏதோ ஒரு சின்ன இடுக்கு வழியாக வரும் ஒன்றிரண்டு ரச்மிதான் ஆத்ம ஸ்வராஜ்யம் என்ற ஜ்யோதிலோகத்திலிருந்து நாம் அநுபவித்திருப்பது. இனிமேலே — அது எந்தக் காலத்தில் வேண்டுமானாலும் இருக்கட்டும் — முடிவாக என்றோ ஒரு காலத்தில் இவரால்தான் நாம் ஜ்யோதி லோகத்திலேயே ப்ரவேசித்து, இன்னும் அதற்கு மேலே, அந்த ஜ்யோதிஸ்ஸாகவே ஆகிவிடப் போகிறோம். அப்படி நம்மைப் பண்ணுவிக்கிற வரையில் அவர் ஓயமாட்டார். இந்த ஜன்மாவிலேயே நாம் அந்த லக்ஷ்யத்தை அடையாவிட்டாலும் பரவாயில்லை. நாம் எத்தனை ஜன்மா எடுத்தாலும் அவர் கூடவே வந்து நம்மை முடிவாக அதில் சேர்க்காமல் விடமாட்டார்.

நிஜமான குரு என்றால் நிஜமான சிஷ்யனுக்கு இந்த நித்யானந்த ப்ராப்தியை உண்டாக்கும்வரையில் விடவேமாட்டார் — ஜன்ம ஜன்மாந்தரமானாலும் ஸரி.

நிஜமான குருவைப் பற்றித்தான் பேச்சு. அப்படியில்லாதவரைப்பற்றி எதற்கு நம் நேரத்தை வீணாக்கிக் கொண்டு, தொண்டைத் தண்ணியை வற்ற அடித்துக் கொண்டு ச்ரமப்படணும்?

ஆனபடியால், பண்ணின, பண்ணுகிற, பண்ணப்போகிற எல்லாவற்றாலும் நமக்கு ஸந்தோஷத்தைக் கொடுப்பவராக, நம்முடைய நன்றிக்கு மிகவும் பாத்திரராக இருக்கும் குருவுக்கு நாம் எத்தனை நமஸ்காரமும் — ‘அனந்த கோடி நமஸ்காரம்’ என்று சொல்வதுண்டு, அப்படி — செய்யலாம் தான், செய்யவேண்டியதுதான்.

“குருர்–ப்ரஹ்மா குருர்–விஷ்ணு: குருர்–தேவோ மஹேச்வர:” என்று சொல்லி “தஸ்மை ஸ்ரீ குரவே நம:” என்று முடித்ததில் ஒன்றும் தப்பாக, பொருத்தமில்லாததாக இல்லை.

ப்ரஹ்ம–விஷ்ணு–ருத்ரர்கள் நம்முடைய கர்மாப்படி மட்டுமே பலன் தருகிறவர்கள்… (ஒன்றை மறந்துவிடப்படாது — இங்கே நாம் விஷ்ணுவையும், சிவனையும் பொதுவாக முழு முதற்தெய்வமாகப் பார்ப்பது போலப் பார்க்காமல், ஸ்திதி — ஸம்ஹார கர்த்தாக்களாக மாத்திரந்தான் பார்க்கிறோம். அப்போது நம் கர்மாப்படிப் பண்ணுவதற்கதிமாக அவர்கள் எதுவும் செய்யமாட்டார்கள்.) குருவோ நாம் கர்மாவைக் கழிப்பதற்கு ஸஹாயம் செய்கிறார். கர்மா அது பாட்டுக்கு அதன் பலனைத் தந்து கொண்டிருந்தாலும் அது நம்மை பாதிக்காதபடி பக்தி, ஞானக் கவசம் போட்டு நமக்கு அடிபடாதபடிக் காப்பாற்றி விடுகிறார். கர்மாவின் வீர்யமே குறைவதற்கும் அவர் அநுக்ரஹிக்க முடியும். அவரே நம் கர்மாவை வாங்கிக் கொண்டுகூட நம்முடைய சுமையைக் குறைக்கமுடியும்.

இப்படி வித்யாஸமிருக்கிறது — த்ரிமூர்த்திகள் கர்மாப்படி நடத்துவிக்கிறார்கள்; குருமூர்த்தி கர்மாவிலிருந்து கடத்துவிக்கிறார். ஆகையால் நம்முடைய நமஸ்காரங்களுக்கெல்லாம் உரியவராக இருக்கிறார். அதனால், “குருர் – ப்ரஹ்மா குருர் – விஷ்ணு: குருர் – தேவோ மஹேச்வர: தஸ்மை ஸ்ரீ குரவே நம:” என்பது ரொம்பவும் ஸரிதான்.

வித்யாஸமான முத்தொழில்கள்

நிஜமான தாத்பர்யம் என்ன?

குருவானவர் ப்ரஹ்ம – விஷ்ணு – மஹேச்வரர்கள் செய்யும் ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹாரத்தையே தாமும் அச்சடித்தமாதிரி செய்யவில்லை. இந்த ஜன்மாவைக் கொடுப்பது, லோக வாழ்க்கையில் காப்பாற்றுவது, அப்புறம் அதை முடித்து வைப்பது என்ற கார்யங்களை அவர் பண்ணவில்லை. அவற்றைச் செய்யத்தான் அந்த மும்மூர்த்திகள் இருக்கிறார்களே!

அதனால் அவரை மும்மூர்த்திகளாகச் சொல்லும்போது அவர்கள் பண்ணும் முத்தொழிலைப் போலவே இவரும் என்னவோ செய்கிறாரென்றுதான் தாத்பர்யமே தவிர, அவற்றையே என்றல்ல.

இவர் மூன்று கார்யங்கள் செய்கிறார். அவை த்ரிமூர்த்திகள் செய்யும் முத்தொழில் மாதிரியே இருக்கின்றன. அதனால் இவரை அவர்களாகவே சொல்லியிருக்கிறது. உபமாலங்காரமாக, அதாவது, உவமையணியாக, சொல்லியிருக்கிறது.

‘கண்ணே, மணியே!’ என்று குழந்தையைச் சொன்னால் அது நிஜமாகவே கண், மணி என்றா அர்த்தம்? கண் என்பது எப்படி நமக்கு இன்றியமையாததாக இருக்கிறதோ, மிகவும் ப்ரியமான அங்கமாக இருக்கிறதோ, ஜாக்ரதையாக இமையால் மூடிக் காப்பாற்ற வேண்டியதாக இருக்கிறதோ அப்படியே, நமக்குக் குழந்தை இன்றியமையாததாக, ப்ரியமாக, கவனமாக ஸவரக்ஷணை பண்ண வேண்டியதாயிருப்பதாலேயே கண் என்றும், அந்தக் கண்ணிலும் கருவான பாகமாக இருக்கப்பட்ட மணி என்றும் (‘கண்ணே, கருமணியே!’ என்றுகூடச் சொல்வதுண்டு) சீராட்டுவது. ‘மணி’ என்றால் நமக்கு மிகவும் அலங்காரமாக உள்ள நவரத்ன மணி என்றும் வைத்துக்கொள்ளலாம். ‘முத்தே, மாணிக்கமே!’ என்றுகூட நவமணிகளின் பெயரிலும் சீராட்டிச் சொல்லுகிறோமே!

“மழபாடியுள் மாணிக்கமே!”

என்று பகவானையே கொஞ்சுகிறார்கள்.

இதெல்லாம் உவமித்துச் சொல்வது. ஒரு வஸ்துவை எடுத்துக் கொள்கிறோம். அது உபமேயம். அதற்கு இன்னொன்றை ஒப்புக் காட்டுகிறோம். இது உபமானம். ஏதோ சில அம்சங்களில் அதுவும் இதுவும் ஒன்றாயிருக்கிறது. அதனால் உபமேயத்துக்கு உபமானம் காட்டுகிறோம். சில அம்சங்களில்தான் ஒப்பே தவிர முழுக்க அல்ல. அப்போது (முழுக்க ஒப்பிருந்தால்) உபமான, உபமேயம் என்று பிரித்துச் சொல்வதற்கேயில்லாமல் ஒன்றாக அல்லவா ஆகிவிடும்? ஒன்றைப் போல இன்றொன்று இருப்பதுதான் உவமை. அசல் அதுவாகவே இருந்துவிட்டால் உபமாலங்காரம் பிறக்க முடியாது. சந்திரனைச் சந்திரனுக்கே உவமை காட்ட முடியுமா? உபமான – உபமேயங்கள் முற்றிலும் ஒன்றே இல்லை என்றாலும் அவற்றுக்குள் சில அம்சங்களில் ஒற்றுமை இருக்கும். இப்படிச் சொல்லும்போதே, சிலதில் இருக்காது என்றும் ஆகிவிடுகிறது. ‘சந்த்ரவதனம்’ – சந்த்ரனைப் போன்ற முகம் – என்னும்போது முகத்தில் ‘சந்திரனைப் போன்ற காந்தி, பரிசுத்தம், குளுகுளுப்பு, மனஸைக் கவர்கிற வசீகரம் ஆகியவை இருப்பதாக அர்த்தம். இந்த அம்சங்களில்தான் ஒற்றுமை. மற்றதில் இல்லை. சந்திரனுக்கு மநுஷ முகத்திள்ளதுபோல கண், காது, மூக்கு இல்லை. முகம் ஆகாசத்தில் மிதப்பதில்லை; அது பதினைந்து நாளுக்கு ஒரு முறை தேய்வது, வளர்வது என்பதும் கிடையாது.

இம்மாதிரிதான் குருவை த்ரிமூர்த்திகளாகச் சொல்லும் போது ஏதோ சிலவற்றில் ஒற்றுமை, மற்றதில் வேற்றுமை என்று இருக்க வேண்டும்.

இன்னொரு ச்லோகம், நம் மத ஸ்ம்ப்ரதாயங்கள் எல்லாவற்றுக்கும் மூல புருஷராகவுள்ள வ்யாஸாசார்யாளை பற்றியது, ஞாபகம் வருகிறது. அதிலே வ்யாஸருக்கும் த்ரிமூர்த்திகளுக்கும் ஒற்றுமை இல்லாத ஒவ்வொரு அம்சத்தைச் சொல்லியே வேடிக்கை செய்திருக்கிறது. “இவர் ப்ரஹ்மா என்றால் நாலு மூஞ்சி இல்லையே! அசதுர்வதநோ ப்ரஹ்மா! விஷ்ணு என்றால் இரண்டு கைதானே இருக்கு? நாலு இல்லையே! த்விபாஹுரபரோ ஹரி:! சிவன் என்றால் நெற்றிக்கண் எங்கே போச்சு? அபால லோசந: சம்பு:‘ என்று அந்த ச்லோகம்.

அசதுர்வதநோ ப்ரஹ்மா
த்விபாஹுரபரோ ஹரி:
அபால லோசந: சம்பு:
பகவாந் பாதராயண:

பாதராயணர் என்பது வேத வ்யாஸரின் இன்னொரு பேர். ‘பதரி’ என்ற இலந்தை மரத்தடியை இருப்பிடமாக (‘அயன’மாக)க் கொண்டு, அதாவது பதரி விருக்ஷத்திற்கு அடியில் உட்கார்ந்துகொண்டு நெடுங்காலம் தபஸ் செய்தவராதலால் ‘பாதராயணர்’ என்று பெயர்.

ப்ரஹ்ம – விஷ்ணு – மஹேச்வரர்களாக குருவை உபமாலங்காரத்தில் சொல்லியிருக்கிறதென்றால் அவர்களுக்கும் குருவுக்கும் ஒற்றுமையும் இருக்க வேண்டும், வேற்றுமையும் இருக்க வேண்டும்.

முத்தொழில் செய்பவர்களென்பதால் அவர்களை நாம் நமஸ்காரம் பண்ணுவதற்கில்லை என்று பார்த்தோமல்லவா? அந்த அம்சத்தில் வேற்றுமை இருந்துவிட்டால் ஸரியாய்ப் போய்விடும். ச்லோகம் கோளாறில்லை. தாறுமாறாகச் சொல்லவில்லை என்றாகிவிடும்.

அப்படியிருக்கிறதா, பார்க்கலாம்.

மும்மூர்த்திகள் பேரை வரிசையாக (ச்லோகத்தில்) சொல்லியிருப்பதால் இவரும் முத்தொழில் போலவே செய்கிறாரென்று தெரிகிறது. அதையே செய்யவில்லை. அதுபோல (செய்கிறார்).

ஏதோ ஒரு விதத்தில் இவர் ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹாரம் செய்பவராக இருக்கிறார். எந்த விதத்தில்?

யோசித்துப் பார்த்தால் புரிகிறது:

இவர் நமக்கு ஞான லோகத்தில், அத்யாத்ம லோகத்தில் புதுப் பிறவி கொடுக்கிறார். நமக்கு அறிவுக் கண்ணைத் திறந்து வைத்து, நம்முடைய மனப்பான்மையை மாற்றி அது வேறொன்றாக ரூபம் கொள்ளும்படிச் செய்கிறார். மாற்றுவது, வேறு ரூபம் தருவது என்றால் ஸ்ருஷ்டிப்பது, புது ஜன்மா தருவது என்றுதான் அர்த்தம். குருவானவர் நமக்கு ஞானப் பிறவி தருவதால், நமக்குள் ஞானம் பிறக்கும்படிச் செய்வதால், ஸ்ருஷ்டிகர்த்தாவான ப்ரஹ்மாவாகிறார்!

அப்புறம் ஸ்திதி – பரிபாலனம். எப்படிப் பரிபாலிக்கிறார்? ஞான வாழ்க்கையில் நாம் அத்யாத்ம ஸம்பத்துக்களைப் பெறும்படிச் செய்து பரிபாலிக்கிறார். தேஹ போஷணைக்காக மஹாவிஷ்ணு செல்வம், ஆரோக்யம் முதலானவற்றை கொடுத்து ரக்ஷிப்பதுபோல ஆத்மாவின் போஷணைக்காக உபதேசம், புஸ்தகங்கள், ஸாதனாமார்க்கம் முதலானவற்றைக் கொடுத்து ரக்ஷிக்கிறார். தம்முடைய வாழ்க்கையையே நம் பொருட்டாக த்யாகம் செய்துவிட்டு — நிம்மதியாகத் தாம்பாட்டுக்கு ஸமாதி நிலையில் ஸுகித்துக் கொண்டிருக்காமல், நம்மிடம் முட்டிக்கொண்டு — நம்மைக் கரையேற்றத் தம்மாலானதெல்லாம் செய்கிறார். இஹ லோகத்திலுங்கூட நம்முடைய கஷ்டங்களைத் தீர்த்து வைத்துப் பரிபாலிக்கிறார். ஸெளகிகத்திலும்கூட நாம் எப்படியெப்படி இருந்தால் நல்லதோ, ஆத்மாபிவ்ருத்திக்கு உதவியாக இருக்குமோ அப்படி இருப்பதற்குச் சொல்லிக் கொடுக்கிறார். ஆனாலும் ஆத்யாத்மிகமான ஞானப் பரிபாலிப்பே அவர் முக்யமாகச் செய்வது. இதனால் பரிபாலன கர்த்தாவான விஷ்ணுவாக இருக்கிறார்.

ஸம்ஹாரம்?

இவர் பரம ஸாத்விகரல்லவா? எப்படி ஸம்ஹாரம் பண்ணுவார்? ருத்ரன், ருத்ரதாண்டவம், ரௌத்ராகாரம் என்றாலே பயமாக அல்லவா இருக்கிறது? இவரோ தயை, அருள் நிரம்பியவரல்லவா? ருத்ரனாக இவரை எப்படிச் சொல்வது? அந்தப் பேரைச் சொல்லி பயமுறுத்த வேண்டாமென்றுதானோ என்னவோ, (ச்லோகத்தில்) ‘ருத்ர’னென்று சொல்லாமல் “குருர் தேவோ மஹேச்வர:” என்று சொல்லியிருந்தாலும் அதனால் குறிப்பிடும் கார்யம் ஸம்ஹாரமாகத் தான் இருக்க வேண்டும். ஸ்ருஷ்டி – ஸ்திதிகளுக்கான ப்ரஹ்ம – விஷ்ணுக்களைச் சொன்னதன் தொடர்ச்சியாக மஹேச்வரனைச் சொல்லியிருப்பதால் வேறுவிதத்தில் அர்த்தம் பண்ணிக்கொள்ள முடியாது.

“உபமாலங்காரத்தில் ஒற்றுமை இல்லாத அம்சங்களும் இருக்கும் என்றீர்களே, அந்த ரீதியில் மஹேச்வரனுக்கும் குருவுக்கும் ஸம்ஹார கார்யத்தில் ஒற்றுமையில்லாமல், வேறு எதிலேயாவது இருக்குமோ என்னவோ?” என்று கேட்டீர்களானால்,….

அப்படி இருக்க முடியாது.

தொடர்ச்சியாக ப்ரஹ்மா, விஷ்ணு, மஹேச்வரன் என்று சொல்லிக்கொண்டு போகும்போது முதலிரண்டு பேர் செய்யும் ஸ்ருஷ்டி- ஸ்திதிகளை குரு இன்னொரு தினுஸில் பண்ணுவதாகக் காட்டுகிறபோது மூன்றாவதாக ஸம்ஹாரம் தான் வரவேண்டும். அதுதான் யுக்தம்.

அப்படியானால் ப்ரஹ்மாவாக இருந்து நமக்கு ஞானம் பிறக்கச் செய்து, அந்த ஞானத்தை விஷ்ணுவாக இருந்து வளர்த்துக் கொடுத்துவிட்டு, அப்புறம் [சிரித்துக்கொண்டே] அந்த ஞானத்தை ருத்ரனாக ஹதம் பண்ணிவிடுவாரா?

இல்லை. ஞானம் அடைய முடியாதபடி நம்மை அநேகக் கெட்ட சக்திகள் ஓயாமல் இழுக்கின்றனவே, இதுகளுடன்தான் பொறுமையாகப் போராடி ஹதம் பண்ணுகிறார், ஸம்ஹாரம் பண்ணுகிறார். பயிரை வளர்ப்பதைப்போலவே, அந்தப் பயிர் வளர்வதற்காகவே, களையை அகற்றவேண்டியது மிகவும் அவசியமல்லவா? அப்படித்தான் நமக்கு ஞானத்தை போதிப்பதைப்போல நம்முடைய கனத்த அஞ்ஞானத்தை அகற்றுவதும் முக்யம். ஞானபோதனையைவிட இதுதான் கடினமான கார்யம். சாண் ஏறினால் முழம் சறுக்குகிற வழுக்கு மரத்தில் நம்மை இஞ்ச், இஞ்சாக மேலே ஏற்றிக்கொண்டு போகிற ச்ரம ஸாத்யமான காரியம். கெட்டதுதான் நம்மை அப்படியே கவிந்து மூடிக்கொண்டிருக்கிறது. ஏதோ துளி நல்லது முணுக்கு முணுக்கு என்று தலைநீட்ட ஆரம்பித்தால் உடனே கெட்டது இன்னம் கனாந்தகாரமாக வந்து அழுத்தி அதை அணைக்கப் பார்க்கிறது. இந்த அஞ்ஞான தமஸை, அறியாமை இருளைத்தான் குருவானவர் ருத்ரமூர்த்தியாக இருந்து ஸம்ஹாரம் செய்கிறார். ‘குரு’ என்ற வார்த்தையின் Definition (லக்ஷணை) ஒன்றே அப்படித்தான் சொல்கிறது ‘கு’ என்றால் இருட்டு; ‘ரு’ என்பது அழிப்பதைக் குறிப்பது. இருட்டை அழிப்பவன் ‘குரு’.

இப்படி குருவினால் ஞானத்தில் புனர்ஜன்மம், அதில் பரிபாலிப்பு, அதற்கு எதிராக, தடையாக இருப்பவற்றின் அழிவு ஆகிய மூன்று கார்யங்கள் நடக்கின்றன. அதாவது ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹாரம் நடக்கிறது. ஆகையால் குருமூர்த்தியே த்ரிமூர்த்தியாகிறார்!

வித்யாஸம் என்னவென்றால், ப்ரஹ்மா ஸ்ருஷ்டித்து, விஷ்ணு ரக்ஷிக்கும் அதே சரீரத்தைத்தான் ருத்ரன் ஸம்ஹாரம் செய்வது. ஆனால் இங்கேயோ குரு ஸ்ருஷ்டிப்பதும், ரக்ஷித்துக் கொடுப்பதும், ஞானத்தை. ஆனால் அழிப்பது ஞானத்தையல்ல. அரும்பாடு பட்டு அவரே படைத்துக் காத்ததை எங்கேயாவது அவரே அழிப்பாரா? த்ரிமூர்த்திகளில் ஆஸாமி வேறாகப் போனதால் வேறே ஒருத்தர் படைத்து, வேறே ஒருத்தர் காப்பாற்றியதை ருத்ரமூர்த்தி அழிக்கிறார். இங்கே மூன்றையும் செய்வது ஒரே ஆஸாமியல்லவா? அதனால் படைத்துக் காப்பது ஞானமாகவும், அழிப்பது அஞ்ஞானமாகவும் இருக்கிறது.

அவர் படைத்துக் காக்கிற ஞானம் நம் சரீரம் மாதிரி ஒருகாலத்தில் அழிவுபடுவதல்ல. அது அம்ருதமானது, அமரமானது. அதை யாராலும் அழிக்கமுடியாது.

இப்படியாக, உலக வாழ்வில் ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன் என்று மூன்று தெய்வங்கள் செய்வதையும் சேர்த்து வைத்து ஞான வாழ்வில் குரு ஒருவரே செய்கிறார். நினைத்துப் பார்த்தால் விசித்ரமாயிருக்கிறது! அழிவதும், சாச்வத ஸெளக்யத்தைத் தரவே முடியாததுமான லோக வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கப் பெரிசாக மூன்று தெய்வங்கள் வேண்டியிருக்கிறது! அழிவற்றதும், சாச்வத ஸுகமளிப்பதுமான ஞான வாழ்க்கையையோ மநுஷ்ய ரூபத்தில் தெரிகிற ஒரு குரு பண்ணிவிடுகிறார்! ‘அவர்கள் (த்ரிமூர்த்திகள்) கோடாநுகோடி ஜீவன்களுக்குச் செய்ய வேண்டியிருக்கிறது, இவரோ (குருவோ) ஒரு ஸெலக்ட் – க்ரூப்புக்குத்தானே செய்கிறார்?’ என்று ஸமாதானம் சொல்லலாம்.

ஆக, குரு எப்படி த்ரிமூர்த்திகளாயிருக்கிறாரென்று பார்த்தோம். த்ரிமூர்த்திகளும் சேர்ந்து ஒருத்தரான ஒரு ஸ்வாமி தத்தாத்ரேயர் என்று பார்த்தோமே, அவர் மாதிரி தான் எல்லா குருக்களுமே இருக்கிறார்கள்!

த்ரிமூர்த்திகள் சரீரத்தை ஸ்ருஷ்டித்து, பரிபாலித்து, ஸம்ஹரிப்பது போல சிஷ்யனுக்குள் ஞானத்தை ஸ்ருஷ்டித்து, பரிபாலித்து, அஞ்ஞானத்தை ஸம்ஹரிப்பதனால் உபமாலங்காரப்படி, ஒற்றுமை யம்சத்தைக்கொண்டு குருவை ப்ரஹ்மா, விஷ்ணு, மஹேச்வரன் என்று சொல்லியிருக்கிறது.

நமஸ்கரிப்பதற்குக் காரணமில்லை !

இதுவரையில் சொன்னதிலிருந்து என்ன ஏற்பட்டது என்றால், ‘குருதான் ப்ரஹ்மா, விஷ்ணு, மஹேச்வரன். ஆனதினாலே அவருக்கு நமஸ்காரம் பண்ணணும், தஸ்மை ஸ்ரீ குரவே நம:‘ என்றால் அது தப்பு என்று ஆயிற்று! [சிரிக்கிறார்.] குருவுக்கு நமஸ்காரம் பண்ணு என்று சொல்லி அதற்கு வேறே என்ன காரணம் சொன்னாலும் ஸரி; ஆனால் ப்ரஹ்ம – விஷ்ணு – மஹேச்வரர்களாக இருக்கிறாரென்றால், அந்த மூன்று பேருக்குமே இப்படி ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹார மூர்த்திகளா இருக்கும் அவஸ்தையில் (நிலையில்) நமஸ்காரம் பண்ணுவதற்கில்லையாதலால், இவருக்கும் கிடையாது, [சிரித்து] கிடையவே கிடையாது!

குரு : ஸாக்ஷாத் பர ப்ரஹ்ம; தஸ்மை ஸ்ரீ குரவே நம:

‘குருதான் பரப்பிரம்மம், அதனால் அவருக்கு நமஸ்காரம்’ என்றால் அது ஸரியா, அதுவாவது ஸரியா?

ஊஹூம், அதுவும் ஸரியில்லை.

“ஏன் ஸரியில்லை?”

பரப்ரஹ்மம் மனஸ், வாக்கு எல்லாம் கடந்தது. அதை நீ புரிந்து கொண்டு நமஸ்காரம் பண்ணவும் முடியாது. பண்ணினாலும் நிர்குணமாக, நிஷ்க்ரியமாக (குணங்கள், செயல்கள் ஏதுமற்றதாக) இருக்கிற அது உன் நமஸ்காரத்தை வாங்கிக்கொள்ளாது. ஒன்றுமே பண்ணாமல், பண்ணத்தெரியாமல் கிடக்கிற ஸ்திதியைத்தான் ‘பரப்ரஹ்மம் ஜகந்நாதம்’ என்கிறோம். அதனிடம் போய் நமஸ்காரம் பண்ணி என்ன ப்ரயோஜனம்? பரப்ரஹ்மத்தை நீ புரிந்துகொள்ளும்போது நீயே அதுவாகிவிடுவாயாகையால் அப்போதும் நமஸ்காரத்துக்கு இடமில்லை. நீ உனக்கேயா நமஸ்காரம் பண்ணிக்கொள்வது?

ஆரம்ப ச்லோகமாக சிஷ்யனுக்குச் சொல்லிக் கொடுக்கிற குரு வந்தனமே இப்படித் தப்பும் தாறுமாக இருக்கிறது! குட்டிக்கொள்ளும்போதே பிடரியில் குட்டிக்கொள்வதுபோல ஒரே கோளாறாக இருக்கிறது! [நெடுநேரம் சிரிக்கிறார்.]

குரு பரம்பரையில் ப்ரம்மா

இப்படிச் சொல்லும்போது, ஸ்ருஷ்டிகர்த்தாவாக இல்லாமல், ஆனால் குரு பரம்பரையில் ஒரு மூல புருஷராக ப்ரஹ்மா இருப்பது நினைவுக்கு வருகிறது. நாரதருக்கு நாம மந்த்ரம் உபதேசித்த பக்தி குருவாக இருக்கிற அவர் வேதாந்த (அதாவது ஞான மார்க்க) குருவாகவும் இருக்கிறார். குரு என்பதுதான் நாம் எடுத்துக்கொண்டுள்ள விஷயமாதலால் ப்ரஹ்மாவை குருவாகக் கொண்டு வருவதிலும் பொருத்தம் இருக்கிறது.

சங்கர பகவத் பாதாளைப் பின்பற்றுபவர்களான ஸ்மார்த்தர்களின் ப்ரஹ்ம வித்யா குரு பரம்பரையில் ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் மூன்று பேருமே இருக்கிறார்கள். ஆதி முதல் குரு பேசாமலே, வாயுபதேசம் செய்யாமலே, ஞானத்தைக் கொடுத்துவிடும் தக்ஷிணாமூர்த்தி. சிவ பெருமானின் பரம ஞான வடிவமான அவர்தான் ஆதி குரு. அப்புறம் ப்ரஹ்மா – விஷ்ணு – சிவன் மூவரும் ஒன்றுசேர்ந்த ரூபமாக மூன்று தலையோடு விளங்கும் தத்தாத்ரேயர். (அந்த ரூபத்திலே அவர் ஞான குருவாயிருந்தாலும், தனியாக அந்த மூன்று பேரைச் சொன்னால் ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹாரங்களைத்தான் குறிக்கிறது. இவ்விஷயம் இருக்கட்டும்.) தத்தாத்ரேயருக்கு அப்புறம்தான் நன்றாக வாய்விட்டே, க்ரமமாகவே, குரு சிஷ்யாளென்று உபதேசம் செய்வது ஏற்பட்டது. முதலில் அப்பா – பிள்ளைகளே இப்படி குரு – சிஷ்யாளாக ஐந்தாறு தலைமுறை போய், அப்புறம் கல்யாணமே பண்ணிக்கொள்ளாத சுகாசார்யாளிலிருந்து ஸந்நியாஸ குரு – ஸந்நியாஸ சிஷ்யர் என்று அந்த ப்ரஹ்ம வித்யா குரு பரம்பரை போகிறது*. இதிலே முதலாவது குரு மஹாவிஷ்ணு அப்புறம் அவர் பிள்ளையான ப்ரஹ்மா:

நாராயணம் பத்மபுவம்

நாராயணன் முதலில், அடுத்து பத்மபுவரான – தாமரைப் பூவில் தோன்றியவரான – ப்ரஹ்மா. ப்ரஹ்மா சிஷ்யராகப் பிதாவிடமிருந்து ப்ரஹ்ம வித்யையை உபதேசம் வாங்கிக்கொண்டு, அப்புறம் தாமும் ப்ரஹ்ம வித்யா குருக்களில் ஒருவராகித் தம்முடைய புத்ரரான வஸிஷ்டருக்கு அதை உபதேசம் பண்ணினார். நாரதர் ப்ரஹ்மாவுக்குப் பிள்ளை என்கிறாற்போல வஸிஷ்டரும் அவருடைய பிள்ளைதான். ப்ரஜாபதிகள் என்று பத்துப் பேர் ப்ரஹ்மாவின் புத்ரர்கள். வேதத்தில் ப்ரஜாபதி என்றால் ப்ரஹ்மா என்றாலும் வழக்கில் அவருடைய பத்துப் புத்ரர்களுக்கே அது பெயராக ஆயிற்று. அந்தப் பத்து ரிஷிகளில் நாரதர் மாதிரியே வஸிஷ்டரும் இன்னொருவர். அவருக்குப் பரமோபதேசமான அத்வைதத்தை ப்ரஹ்மா உபதேசம் பண்ணியிருக்கிறார். ஸ்ரீ வைஷ்ணவர்களின் குரு பரம்பரையில் முதலில் மஹாவிஷ்ணு, அப்புறம் மஹாலக்ஷ்மி. பெரிய பெருமாள், பெரிய பிராட்டி என்று அவர்களைச் சொல்வார்கள். அப்புறம் ப்ரஹ்மா இல்லை. சிவ ஸுதனான பிள்ளையார் சிவனுடைய பூதப்படைகளுக்கெல்லாம் தலைவரான கண – பதியாக இருக்கிறாரல்லவா? அப்படி விஷ்ணு கணங்களுக்கெல்லாம் பதியாக ஒருத்தர் இருக்கிறார். அவர் ப்ரஹ்மா இல்லை. அவர் பெயர் விஷ்வக்ஸேனர். ‘சேனை முதலியார்’ என்று சொல்வார்கள். அவர்தான் மஹாலக்ஷ்மிக்கு அடுத்ததாக வரும் ஸ்ரீ வைஷ்ணவ குரு. அவருக்கப்புறம் பூலோகத்திலேயே இருந்த நம்மாழ்வாரிலிருந்து அவர்களுடைய மநுஷ்ய ரூப குருக்கள்.

ஸ்மார்த்த ஸம்பிரதாயத்தில் மஹாவிஷ்ணுவுக்கு அப்புறம் ப்ரம்மா.

ஆகையால், ப்ரஹ்மாவுக்குக் கோவில், பூஜை என்று எதுவுமில்லாவிட்டாலும், வேதாந்தம் அப்யாஸம் செய்கிற ஸ்மார்த்தர்கள் குரு த்யானத்தில் ஆரம்பிக்கும்போது “நாராயணம் பத்மபுவம் வஸிஷ்டம்” என்று ச்லோகம் சொல்லி நமஸ்காரம் பண்ணும்போது (பத்மபுவரான) ப்ரஹ்மா நமஸ்காரம் வாங்கிக் கொண்டு விடுகிறார். இது கொஞ்சம் ஆறுதலாயிருக்கிறது.

இப்படியே வ்யாஸபூஜை என்பதாக ஆண்டுதோறும் ஸந்நியாஸிகள் குரு பரம்பரா பூஜை செய்யும்போது அதில் ஸரஸ்வதி, நாரதர் ஆகிய இரண்டு பேருக்கும் கூடப் பூஜை சொல்லியிருக்கிறது.

வேதாந்தம் படிப்பவர்கள், ஸந்நியாஸிகள் ஆகியவர்களுக்கு ப்ரஹ்மாவைப் பற்றி ஸென்டிமென்டலான ரிஸர்வேஷன்கள் இருக்காதாதலால் இங்கே அவர் ஸ்ருஷ்டி கர்த்தா என்பதற்காக இல்லாமல் குரு என்ற ஹோதாவில் நமஸ்காரம் பெற்றுவிடுகிறார். ஆனாலும் ஜனஸமூஹத்தில் இது விதிவிலக்கு மாதிரித்தானேயொழிய விதியாக இருப்பதல்ல.


* “தெய்வத்தின் குரல்” – இரண்டாம் பகுதி – “நம்மை நாமாக்குகிறவர்” என்ற உரையில் “குரு பரம்பரை” என்ற உட்பிரிவில் விவரம் காண்க.

ஸாவித்ரி, காயத்ரி, நாரதர் விஷயம்

ப்ரஹ்மாவுக்கு மூன்று பத்னிகள். ஸரஸ்வதி ஒருத்தி. காயத்ரி, ஸாவித்ரி என்று இன்னும் இரண்டு பேர். காயத்ரி மந்த்ரம் என்ற தலைசிறந்த மந்திரத்தின் வெளி ரூபமாக இருக்கப்பட்ட சந்தஸ் (மீட்டர்) தான் காயத்ரி. அதன் உள்ளுயிராக இருக்கிற ஜ்யோதி சக்திக்கே ஸாவித்ரி என்று பெயர். ஸகல வேதங்களுக்கும் ஸாரமாகவுள்ள மந்த்ரத்துடன் ஸம்பந்தப்பட்ட போதிலும் அந்த இரண்டு பேருக்கும் கோவில் இல்லை. காரணம் மேலே சொன்னதுதான். பதிக்கு இல்லாதது தங்களுக்கும் வேண்டியதில்லை என்று அவர்கள் வைத்துவிட்டதுதான் காரணம்.

இப்படிப் பார்த்துக்கொண்டு போகும்போது நாரதருக்குக் கோயிலில்லாததற்கும் காரணம் தெரிகிறது. விஷ்ணுவின் அடியார்கள், பாகவதோத்தமர்கள் என்று எடுத்தால் நாரதர் ‘டாப்’பில் நிற்கும் ஒருவர். பக்தி ஸூத்ரமே அவர் பண்ணியதுதான். கலிக்கு ஸங்கீர்த்தனம் தான் (ப்ரத்யேக மோக்ஷ மார்க்கம்) என்னும்போது, ஸதா ஸர்வ காலமும் வீணாகானத்தோடு பகவந் நாம கீர்த்தனம் பண்ணிக்கொண்டிருக்கும் அவருக்குத்தான் ஊருக்கு ஊர் கோவில் இருக்கணும். ஆனாலும் கோவிலே இல்லை என்றால் என்ன காரணம்? தகப்பனாரான ப்ரம்மாவுக்கும், மூன்று தாயார்களுக்கும் ஆலயம் இல்லாதபோது, பிள்ளை மட்டும் ஆலயத்தில் வஸிப்பாரா? மாதா பிதாக்களுக்கில்லாதது தமக்கும் வேண்டாம் என்ற ஸத்புத்ர தர்மத்தை அவர் பின்பற்றுகிறார்!

பொதுவாக இன்னொரு காரணம் தோன்றலாம்: தக்ஷ ப்ரஜாபதிக்கு அவரிடம் கோபம் வந்து, ‘நீ நின்ன இடத்திலே நிக்காம சுத்திண்டேயிரு’ என்று சபித்தான், அதனால்தான் அவர் ‘த்ரிலோக ஸஞ்சாரி’ என்னும்படியாக ஓடிக் கொண்டேயிருக்கிறார் என்று கதை உண்டு. சுற்றிக் கொண்டே இருப்பவரை — இருக்க வேண்டியவரை — ஆலயங்களில் ப்ரதிஷ்டை பண்ணி எப்படி உட்கார்த்தி வைப்பது?

குருவில் ஆரம்பித்து எங்கெங்கேயோ த்ரிலோக ஸஞ்சாரம் பண்ணிவிட்டு நாரதரில் வந்து நிற்பதும் பொருத்தந்தான்! அவர் தான் ஸங்கீர்த்தன குரு. த்யாகையர்வாளின் குரு. குருவாகவும் இருந்து கொண்டு, அதே சமயம், “கலி ஸந்தரணம்” – கலியைத் தாண்டுவது – என்று இந்த யுகத்துக்கு ஸ்பெஷலாக உள்ள மந்த்ரத்தை முதல் முதலாகப் பெற்றுக்கொண்ட சிஷ்யராகவும் அவர் இருக்கிறார். எல்லாரும், எக்காலமும், எங்கே வேண்டுமானாலும் சொல்லக்கூடிய அந்த மந்த்ரம்,

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ।
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே ॥

என்பதுதான். தகப்பனாரான ப்ரம்மாவிடமிருந்தே நாரதர் இந்த மந்த்ரத்தில் உபதேசம் பெற்றிருக்கிறார்.

ஸரஸ்வதிக்கு ஆலயம் இல்லாததேன்?

ஒரு விஷயத்தை ஆலோசிப்பதில் இன்னொன்று அகப்படுகிறது என்று சொன்னதற்கு இன்னொரு த்ருஷ்டாந்தம். சிவன் — அம்பாள், மஹாவிஷ்ணு — மஹாலக்ஷ்மி என்று ஸதிபதிகளாக அவர்களின் உயர்வைச் சொல்லிக்கொண்டு போகும்போது, சட்டென்று ப்ரஹ்ம பத்னியான ஸரஸ்வதி விஷயத்தை விட்டு விட்டோமே என்று நினைவு வந்தது. ப்ரஹ்மா விஷயத்துக்குக் குறுக்கே அதைக் கொண்டு வராமல், எடுத்துக்கொண்ட விஷயத்தை நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்திவிட்டு அப்புறம் அதை எடுத்துக்கொள்ள நினைத்தேன்.

ஸரஸ்வதியைப் பற்றி எப்படி நினைக்கிறோம்? பூர்ண ப்ரம்ம சக்தி என்று நினைக்கிறோமோ இல்லையோ வித்யாதி தேவதை, கலைமடந்தை, அறிவுத் தெய்வமென்று அவளுக்கு ரொம்பவும் உன்னதமான ஸ்தானம் கொடுத்திருக்கிறோம். வெள்ளை வெளேரென்று வீணா புஸ்தகங்களோடு அவளை நினைத்தாலே சாந்தியாயிருக்கிறது. ஸரஸ்வதி பூஜை பண்ணுகிறோம். அவளைப் பற்றி ஸ்தோத்ரங்கள் — மஹான்கள் பண்ணியிருப்பது — கம்பர், ஒட்டக்கூத்தர், குமர குருபரர், பாரதியார் போன்றவர்கள் தமிழில் அழகாகப் பண்ணியிருக்கிறார்கள், அவற்றை — ஓதுகிறோம். (முத்துஸ்வாமி) தீக்ஷிதர் முதலானவர்கள் அவள் மீது செய்திருக்கும் கீர்த்தனங்கள் பாடுகிறோம். குழந்தையாக ஸ்கூல் போக ஆரம்பிக்கும்போதே அவள்மேல் ச்லோகங்கள் சொல்லி ப்ரியத்துடன் பக்தி பண்ண ஆரம்பித்துவிடுகிறோம்.

இத்தனை இருந்தாலும், இவ்வளவு ஆயிரம் கோவில் இருந்தும் ஸரஸ்வதிக்கு ஒன்றையும் காணோம்! தமிழ்நாடு பூராவிலும் தஞ்சாவூர் ஜில்லாவில் கூத்தனூர் என்ற ஒரு இடத்தில்தான் ஸரஸ்வதி ஆலயம் இருக்கிறது. அது ஒட்டக்கூத்தர் கட்டிய கோவில். (ஒட்டக்) கூத்தனுடைய ஊர்தான் கூத்தனூர். காமகோட்டத்தில் (காஞ்சி காமாக்ஷி ஆலயத்தில்) ஸரஸ்வதிக்கு ஸந்நிதி உண்டு. ஆனால் அதுகூட ப்ரஹ்ம பத்னியான ஸரஸ்வதி இல்லை என்றும், ராஜ ராஜேச்வரிக்கு மந்த்ரிணியாக இருக்கும் ராஜச்யாமளையான மஹா ஸரஸ்வதி என்றும் ஒரு வித்யாஸம் சொல்வதுண்டு. ஸரஸ்வதிக்கு பிம்பம், ஸந்நிதியுள்ள மற்ற கோவில்களிலும் அவை முக்யமான இடம் பெறாமல் ஏதோ ஒரு மூலையில்தான் இருக்கின்றன. மொத்தத்தில், ப்ரஹ்மா மாதிரியே ஸரஸ்வதிக்கும் கோவில் முக்யத்வம் இல்லை. ஆனால் ப்ரஹ்மாவிடம் ஜனங்களுக்கு விசேஷ பக்தி, மரியாதைகள் இல்லாததுபோல, ஸரஸ்வதிக்கு இல்லாமலில்லை. அவளை எல்லாரும் நிரம்பப் போற்றி பக்தி செய்கிறோம். படிக்க ஆரம்பிக்கும்போதே கல்வித் தெய்வம் என்று அவளை ஸ்துதிக்கக் கற்றுக்கொடுத்து விடுவதால், அது பசுமரத்தாணியாக மனஸில் பதிந்து என்றைக்கும் அவளிடம் பக்தி நீங்காமலே இருக்கிறது. ந்யூஸ்பேப்பர் பாஷையில் சொன்னால், அவள் ‘பாபுலர்’ தெய்வம்; ப்ரஹ்மா ‘அன்பாபுலர்’ தெய்வம்! அன்பாபுலர் தெய்வத்துக்குக் கோவிலில்லை என்றால் அது ந்யாயம். நல்ல பாபுலாரிடி இருக்கிற தெய்வத்துக்கும் ஏன் அப்படியே இருக்கவேண்டும்?

இங்கேதான் நம்முடைய தேசாசாரம் வருகிறது. பாதிவ்ரத்யம் என்பது நம் தேசாசாரத்தில் ஊறிப்போன விஷயம். பதிவ்ரதைகள் புருஷனுக்கு இல்லாத எதையும் தாங்கள் அநுபவிக்க மாட்டார்கள். ஸரஸ்வதி ப்ரஹ்மாவின் நாக்கிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கும் பதிவ்ரதை. அதாவது ப்ரஹ்மாவின் நாக்குதான் அவள் குடியிருக்கும் கோவில்! அவள் எப்படிப் பதிக்குக் கோவிலில்லாதபோது தான்மட்டும் கோவிலில் குடிகொள்வாள்? அதனால்தான் அவளுக்கும் அவர் மாதிரியே கோவில் இல்லை.

அகத்திலே நாம் கூப்பிட்டால் அவள் வருவாள். தாயாரல்லவா? அதனால் நம் குடும்பத்து மநுஷியாக வருவாள். நமக்கு அறிவு புகட்ட வேண்டிய ட்யூட்டியும் அவளுக்கு இருப்பதால் தனிப்பட்ட முறையில் அகத்துக்கு வருவாள்.

ஆனால் ஊர் உலகத்துக்குப் பொதுவாக அவளைப் பெருமைப்படுத்திக் கோவில் கட்டுவது என்றால், அப்போது பதியை விட்டு விட்டுத் தான் மட்டும் மஹிமை கொண்டாடிக் கொள்ள அவள் ஸம்மதிக்க மாட்டாள்! அவளுடைய அந்த உத்தம ஸ்த்ரீ குணத்தை மதித்துத்தான் அவளுக்கு ஆலயமில்லாமல் வைத்திருக்கிறது. சக்திகளை வழிபடுவதற்கென்றே நவராத்ரி என்று வைத்துப் பூஜை பண்ணும்போது துர்கா — லக்ஷ்மிகளுடன் அவளும் வந்து ஸரஸ்வதி பூஜை பெறுவாள். அதோடு ஸரி. பதியை நீக்கி பொது ஸ்தலத்தில் கோவில் என்று வைத்து ஊர் கூடி நித்ய பூஜை, உத்ஸவாதிகள் பண்ணுவதற்கு அவள் ஒப்புக்கொள்ள மாட்டாள்.

ப்ரம்மாவை உள்ளடக்கி த்ரிமூர்த்தியர் ஏற்பட்ட காரணம்

பூர்ண சக்தர்களான சிவ – விஷ்ணுக்களுடன் ப்ரஹ்மாவும் சேர்ந்து த்ரிமூர்த்திகள் என்று இருப்பதற்கு காரணமே வேறே. (அது) என்னவென்றால் ……..

பரப்ரஹ்மம் என்றும் பரமாத்மா என்றும் நாம் சொல்கிற ஏக வஸ்துவானது மாயையோடு கூடி லோகலீலை செய்வதற்கும், மாயையிலிருந்து ஜீவனை விடுவித்து ஞான மோக்ஷம் தருவதற்கும் தனித்தனி ரூபங்கள் எடுத்துக் கொள்வதென்று ஸங்கல்பம் பண்ணிற்று. ரூபமும் கார்யமுமில்லாமல் ஏக சைதன்யமாக இருக்கிற பரமாத்மா ரூபம் எடுத்துக்கொள்வது, கார்யம் செய்வது என்று வந்தால் உடனே பல தினுசாக விநோதங்கள் பண்ணிப் பார்க்க ஆரம்பித்துவிடுவார். அதன்படி இப்போது மாயா ஜகத்துக்காகவும் ஞான மோக்ஷத்திற்காகவும் ரூபங்கள் எடுப்பது என்று உத்தேசம் பண்ணும்போதே இந்த ஒவ்வொன்றுக்கும் புருஷ ரூபமாகவும், ஸ்திரீ ரூபமாகவும் இரண்டிரண்டு ரூபங்கள் இருக்க வேண்டுமென்றும் தீர்மானித்தார். அதன்படியே மஹாவிஷ்ணுவும் அம்பாளும் மாயலீலைக்கு தெய்வங்களாகத் தோன்றினார்கள். இருவர் கார்யமும் ஒன்றேதான். ரூபத்திலும் இரண்டு பேரும் நீலமேக ச்யாமளமானவர்கள். இப்படி ஒரே மாதிரி ரூபத்தோடும், குணத்தோடும் சேர்ந்து பிறந்ததால் அவர்கள் ஸஹோதர ஸஹோதரியாவார்கள். இதேபோலப் பரமசிவனும் ஸரஸ்வதியும் மாயையிலிருந்து விடுவிக்கும் ஞானத்துக்கு தெய்வமாக, சேர்ந்து தோன்றிய ஸஹோதர ஸஹோதரி ஆவார்கள். இரண்டு பேரும் வெள்ளை வெளேரென்று இருப்பவர்கள்.

இப்படித் தோன்றிய பிறகு பரமாத்மா ‘இந்த மாதிரி ஒரேயடியாகப் பிரிந்து மாயைக்கு ஒரு ஸஹோதர ஜோடி, ஞானத்திற்கு ஒரு ஸஹோதர ஜோடி என்று வைத்துவிட்டால் ஒரு ஜோடிக்கு இன்னொரு ஜோடி முழுக்க பேதம் என்ற மாதிரி ஆகிவிடும். அதோடு ஒன்று ஞானத்திற்கு மட்டும்தான், இன்னொன்று மாயைக்கு மட்டும்தான் என்றால் இரண்டுமே பூர்ண ப்ரஹ்ம சக்தி இல்லை என்றும் ஆகிவிடும். இப்படி ஆகாமல், இரண்டு ஜோடிக்குமே இந்தக் கார்யம்தான் முடியும் என்று குறுக்காமல் அவை பூர்ண சக்தியோடு இருக்கட்டும்; எந்த விதமான அநுக்ரஹத்தையும் பண்ணக்கூடியவையாக அவை இருக்கட்டும்; ஆனாலும் முக்யமாக ஒன்று மாயைக்கும் மற்றது ஞானத்திற்கும் தெய்வமாக இருக்கட்டும்’ என்று நினைத்தார்.

பல தினுஸான வித்யாஸங்கள் காட்டி விளையாடுவதே அவர் வழக்கமல்லவா? அதன்படி இப்போதும் கொஞ்சம் பண்ணினாரென்று வைத்துக்கொள்ளலாம். அதாவது விஷ்ணு, அம்பாள், சிவன் ஆகிய மூன்று பேர் மட்டும் பூர்ண ப்ரஹ்ம சக்தியோடு ஸகலவித அநுக்ரஹங்களும் செய்யக் கூடியவர்களாக இருந்துகொண்டே முக்யமாக ஒவ்வொரு கார்யத்தைப் பண்ணுவதென்றும், ஸரஸ்வதி மோக்ஷத்துக்கான ஞானத்தை அளிப்பது மாத்திரமில்லாமல் எல்லாவிதமான கலைகளுக்கும் சாஸ்த்ரங்களுக்கும் தெய்வமாக இருக்கட்டுமென்றும் வைத்தார்.

இன்னொன்றும் நினைத்தார். ‘அண்ணா – தங்கை ஜோடிகள் என்று தனித்தனியாகப் பிரித்து வைத்து முடித்துவிடாமல், அந்த ஜோடிகளுக்கு ஒன்றோடொன்று உறவு ஏற்படுத்திவிட வேண்டும். இந்த தெய்வங்களையெல்லாம் ஒன்றுக்கொன்று உறவாக்கிவிட வேண்டும். அப்போதுதான் லோகத்தில் ஒரேயடியாக தெய்வ பேதம் பாராட்டாமல் ஸமரஸமாகப் பார்த்து எல்லாவற்றிடமும் பக்தி செலுத்தமுடியும்’ என்றும் நினைத்தார்.

உறவு எப்படி ஏற்படுத்துவது? கல்யாண ஸம்பந்தத்தால் தானே? ஆனால் இப்படிப் பண்ணுவதற்கு ஒரு தடங்கல் இருந்தது. ஒரு அண்ணா – தங்கை ஜோடி இன்னொரு அண்ணா – தங்கை ஜோடியோடு கல்யாண ஸம்பந்தம் செய்து கொள்வதென்றால் அப்போது பெண் கொடுத்துப் பெண் வாங்கியதாக ஆகிவிடும். இது சிலாக்யமானதல்ல.

இந்தச் சிக்கலை சமாளிப்பதற்கு வழியாக இன்னொரு ஸஹோதர ஜோடித் தெய்வங்களை உண்டாக்க வேண்டி வந்தது. மூன்று ஸஹோதர ஜோடிகள் இருந்தால் அப்போது தம்பதியாக ஜோடி சேர்க்கும்போது பெண் கொடுத்துப் பெண் வாங்கவேண்டிய நிர்ப்பந்தம் இருக்காது. 1 – 1, 2 – 2 என்று இரண்டே ஸஹோதர ஜோடிகளிருந்து, அவற்றுக்கிடையில் தம்பதி ஜோடி சேர்க்கணுமென்றால் அப்போது 1 – 2, 2 – 1 என்று பரஸ்பரப் பரிவர்த்தனை பண்ணிக்கொள்வது தவிர வேறே வழியேயில்லை. ஆனால் 1 – 1, 2 – 2, 3 – 3 என்று ஸஹோதர ஜோடிகளிருந்தால் அவற்றுக்கிடையில் 1 – 2, 2 – 3, 3 – 1 என்று தம்பதி ஜோடி சேர்த்துப் பரஸ்பரப் பரிவர்த்தனையைத் தவிர்த்து விடலாமல்லவா? அதாவது பெண் கொடுத்துப் பெண் வாங்கிக்கொள்வதைத் தவிர்த்துவிடலாமல்லவா?

இதை உத்தேசித்துத்தான் பரமாத்மா ப்ரஹ்மாவும் லக்ஷ்மியும் தோன்றும்படிப் பண்ணினதே. இவர்களும் ஒரு ஸஹோதர ஜோடி. இரண்டு பேரும் ஸ்வர்ண வர்ணம்; தாமரைப் பூவில் உட்கார்ந்திருப்பவர்கள்.

ப்ரஹ்மாவுக்கு லக்ஷ்மி அம்மா என்றுதான் கேள்விப்பட்டிருப்பீர்கள். நான் இப்போது புதுக்கதை சொல்கிறேன்! புதிசாக இருந்தாலும் ரொம்பவும் பழசான புராணக் கதைதான்.*

அப்புறம் இந்த மூன்று ஸஹோதர ஜோடிகளுக்குள் சிக்கலில்லாமல் விவாஹ ஸம்பந்தம் பண்ணிக்கொள்ள முடிந்தது. உங்களுக்கே தெரிந்த கதைதான் – ப்ரம்மா சிவ ஸஹோதரியான ஸரஸ்வதியையும், விஷ்ணு ப்ரம்மாவின் ஸஹோதரியான லக்ஷ்மியையும், சிவன் விஷ்ணு ஸஹோதரியான அம்பாளையும் கலியாணம் பண்ணிக்கொண்டார்கள். இதிலே யாரும் பெண் கொடுத்துப் பெண் வாங்கவில்லையல்லவா?

சிக்கலைத் தீர்ப்பதற்காகவே ப்ரம்மாவும் லக்ஷ்மியும் தோன்றியது இருக்கட்டும். தெய்வம் என்று தோன்றிய பிறகு அவர்களுக்கும் ஒரு கார்யத்தைக் கொடுத்துத்தானே ஆகவேண்டும்?

ஆனால் மாயா சக்தியினால் ஜகத்தை நடத்துவது, ஞான சக்தியினால் மோக்ஷம் அநுக்ரஹிப்பது என்ற இரண்டிலேயே ஸகல கார்யங்களும் அடங்கிவிடுகின்றன. ஆகையினால் இந்த இரண்டுக்குள்ளேயேதான் கொஞ்சம் பங்குபோட்டு ப்ரஹ்மாவுக்கும் லக்ஷ்மிக்கும் கொடுக்கவேண்டும். ஞானத்தையோ பங்கே போடமுடியாது. ஆகையால் மாயா ஜகத் வியாபாரத்தில்தான் சில அம்சங்களை இந்த இரண்டு பேருக்குக் கொடுக்கவேண்டும்.

இப்படி ஏற்பட்டதில்தான் விஷ்ணு தம்முடைய கார்யத்திலேயே ஸ்ருஷ்டி என்பதைப் பிரித்தாற்போலக் காட்டி அதை ப்ரஹ்மாவின் கார்யமாகக் கொடுத்தார். தாம் நடத்துகிற லோக பரிபாலனத்தில் ஜீவர்களுக்குச் செல்வம் கொடுக்கும் கார்யத்தை லக்ஷ்மிக்குத் தந்தார். தினுஸு தினுஸாக வித்யாஸம் செய்து விளையாடுகிற வழக்கப்படி இங்கேயும் லக்ஷ்மிக்கு லோக மாதா என்ற பெரிய ஸ்தானம் இருக்கும்படியான அநுக்ரஹ சக்திகளைக் கொடுத்தார். தம்முடைய கார்யத்தில் ஸ்ருஷ்டியம்சத்தை மாத்திரம் தமக்கு அடங்கித்தான் ப்ரஹ்மா நிர்வாஹம் செய்கிறாரென்று லோகத்துக்குத் தெரியும்படியாக, அந்த ஸ்ருஷ்டி கர்த்தாவையும் ஸ்ருஷ்டிக்கும் பிதாவாகத் தாம் ஸ்தானம் வஹித்துத் தம்முடைய நாபி கமலத்திலிருந்தே அவரைத் தோன்றுமாறு பண்ணினார்.

இப்போது புரிகிறதல்லவா, த்ரிமூர்த்திகள் என்ற ஏற்பாட்டில் பூர்ண ப்ரஹ்ம சக்தி பொருந்திய சிவ – விஷ்ணுக்களோடு நமக்கு அப்படித் தெரியாத ப்ரஹ்மாவும் எப்படி இடம் பெற்றார் என்று? மூன்றாவது ஜோடி ஸஹோதரர்கள் இருக்கவேண்டும் என்ற ‘நெஸஸிடி’ க்காகவே அவர் தோன்றியது. இந்த உபகாரம் செய்ததற்காக மற்ற இரண்டு பேரும் அவருக்கு ஸமஸ்தானம் கொடுத்த மாதிரித் தங்களோடு வைத்துக்கொண்டு த்ரிமூர்த்திகள் என்று இருக்கிறார்கள்.

அதனால்தான் அவருக்கு மற்ற தேவதைகளைவிட சிவ – விஷ்ணுக்களிடம் நெருக்கம் இருப்பது. அதோடுகூட அவருக்கு ஸகல வேத ஞானமும் இருக்கும்படியாகவும், அவர் ப்ரஹ்ம வித்யா குருக்களில் ஒருவராக இருக்கும்படியாகவும் பரமாத்மா சக்திகளைக் கொடுத்தார்.

இருந்தாலும் கடைசியில் அவருக்குக் கோவில் இல்லாமல் பண்ணி விளையாடிவிட்டார்!

‘பிரஜாபதி, ஹிரண்யகர்ப்பன், ப்ரஹ்மா என்றிப்படி வேத, உபநிஷத, புராணங்களில் போற்றப்படும் பெரியவருக்குப் பூஜை நடப்பதென்றால் அதற்குரிய கௌரவத்தோடு நடக்கவேண்டும். அதற்கில்லையென்றால் ஒப்புக்குக் ‘காமா சோமா’ என்று நடப்பதைவிட நடக்காமலேயிருப்பது நல்லது. இதனால் அவருக்கு ஒன்றும் நஷ்டமில்லை. தகப்பனார்காரர் அவரை நாபி கமலத்தில் வைத்துக் கொண்டு தாங்கு தாங்கென்று தாங்குகிறார். வாயிலேயோ ஜகத்தையெல்லாம் வாழ்விக்கும் வேதம் இருக்கிறது. அதனால், அவருக்காகவும் கோவில் வேண்டாம், இவர்கள் (ஜனங்கள்) மனோபாவத்தை உத்தேசித்தும் கோயில் வேண்டாம். இவர்களுடைய பி(ய்) க்கல் – பிடுங்கல் இல்லாமல் அந்த ஒரு ஸ்வாமியாவது நிம்மதியாக இருக்கட்டும்’ என்றே (பிரம்மாவுக்கு ஆலயமில்லாமல்) செய்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம்.


* உதாரணமாக, ‘தேவீ மாஹாத்மிய’ பாராயணத்தின் இறுதிப் பகுதியில் வரும் ‘ப்ராதாநிக ரஹஸ்யத்தில்’ விஷ்ணு – அம்பிகை, சிவன் – ஸரஸ்வதி, பிரம்மா – லக்ஷ்மி ஆகியோர் ஸஹோதர ஜோடிகளாகத் தோன்றியதாகவே உள்ளது.