லேசாக்கி அருள்வாராக!

இடையூற்று நீக்கத்திற்காக ஸகல தேவர்களாலும் வணங்கப்படுபவர்; தேவர்களில் உச்சாணியிலிருக்கிறவர்கள் தங்களுக்குள்ளேயே வணங்கிக் கொண்டாலும் பிணங்கிக் கொண்டாலுங்கூட அவர்களுடைய காமனைகளையும் (விருப்பங்களையும்) தாமாக நிறைவேற்றி வைப்பவர் – இப்பேர்ப்பட்ட மஹிமைகள் கொண்ட விக்நேச்வரரை நாமும் பக்தியுடன் வணங்கி விக்நேச்வர ப்ரஸாதத்தால் தடைகள் யாவும் விலகி ஆனந்தமாக இருப்போம்!

பெரிய தடை நம் மனஸேதான். ஏதாவது காமம், கவலை, – ‘இது அப்படியாகணும்’, ‘அது அப்படியாகணும்’, ‘அப்படி ஆகுமோ ஆகாதோ?’, ‘எப்படி ஆயிடுமோ?’ என்று பல தினுஸான எண்ணங்களின் பாரத்தில் நெரிபடுவது – என்று நம் மனஸையே நம்முடைய வாழ்க்கைப் பிரயாணம் ஆனந்தப் பாதையில் போகமுடியாதபடி பெரிய தடையாக குறுக்கே போட்டுக்கொண்டிருக்கிறோம். விக்நேச்வரரை உபாஸித்து உபாஸித்து அவருடைய ப்ரஸாதத்தினால் அவர் மாதிரியே நாமும் குழந்தைகளாகி ஒரு காமமில்லை, கவலையில்லை, போனதையும் வருவதையும் குறித்த மனோபாரம் இல்லவே இல்லை என்றாகி, – அப்பப்போ ஒரு ஸந்தோஷமா? அதை குழந்தை மாதிரி நன்றாகச் சிரித்து அநுபவித்துக் கொண்டு – அதே மாதிரி, அப்பப்போ ஒரு துக்கம் வந்தாலும் அந்த நிமிஷம் மட்டும் அழுதுவிட்டு, ஆனால் அப்புறம் நினைத்து நினைத்து அழாமல் – இப்படி சிரிப்பு, அழுகை இரண்டும் இருந்தாலும் சிரித்து விளையாடுவதுதான் ஜாஸ்தியாக ஒரு குழந்தை இருப்பதுபோலவே இருந்துவிட்டோமானால் நம்மைவிட பாக்யசாலியில்லை. முக்யமாக, ‘சென்று போனது இப்படியாச்சே; வரப்போவது இப்படியிருக்கணுமே’ என்று ஓயாமல் நம்மை பிய்த்துப் பிடுங்கும் சிந்தனைச் சுமை குழந்தைக்கு இல்லாததுதான் அதனுடைய ஆனந்தத்தின் ரஹஸ்யம். குழந்தை ஸ்வாமி கனமான யானை ரூபத்திலிருந்தாலும் இந்த விசாரத் சுமையில்லாமல் பரம லேசாக இருப்பவர். ‘நெட்டிப் பிள்ளையார்’ என்று அவரை லேசாகப் பண்ணுகிறோமல்லவா? நம்மையும் அவர் அப்படிப் பண்ண ப்ரார்த்திப்போம்.

கவலை, குறை மட்டுந்தான் பாரம் என்றில்லை. தன்னைப்பற்றிய பெருமையும்கூடப் பெரிய பாரம்தான். இன்னும் சொல்லப்போனால் இதுதான் பெரிய பாரம். கவலைப்படுவது துக்க பாரம். தான் என்ற பெருமை அஹங்கார பாரம். துக்கத்தைப் போக்கிக்கொண்டு அதன் பாரம் தீரணும் என்ற எண்ணமாவது இருக்கிறது. அஹங்காரமோ பாரம் என்றே தெரியாததால் இதுதான் பெரிய ஆபத்து. இது குறைத்துக்கொள்ள வேண்டியது என்பதையே நாம் உணராததால் பாரத்தைப் பெருக்கிக் கொண்டே போகிறோம். ‘நாம் இப்படியிப்படிப் பண்ணினோமாக்கும், இதையிதை ஸாதித்தோமாக்கும்’ என்று பெருமைப்படுவது அஹங்கார பாரம்தான். விசேஷமாக எதுவும் செய்யாவிட்டாலும்கூட, “நான் அதைப் பண்ணினேன், இதைப் பண்ணினேன்” என்று வார்த்தையிலாவது சொல்லிக்கொள்ளத் தோன்றுகிறது. யாராவது ஏதாவது ஸரியில்லாமல் பண்ணிவிட்டால், “நானாயிருந்தா என்ன பண்ணியிருப்பேன் தெரியுமா, ஸார்?” என்று கேட்கத் தோன்றுகிறது. வாஸ்தவத்தில் நாம் பண்ணியிருந்தால் இன்னும் மோசமாயிருக்கும்! இப்படிக் கர்த்தாவாகக் கொண்டாடிக்கொள்ளும் பெருமையினால் நாமே நம் கழுத்தில் கல்லை கட்டிக் கொள்கிறோமென்பதுதான் உண்மை. கர்த்ருத்வம் மாதிரி பாரம் எதுவும் கிடையாது என்று பாரமார்த்திகமாகக் கொஞ்சம் போனால்கூடத் தெரிந்துவிடும்.

தேவர்களெல்லோராலும் தொழப்பட்டு, அவர்களுடைய விக்னங்களையும் போக்கும் பெரிய கார்யத்தைச் செய்யும் பிள்ளையார் எப்படியிருக்கிறார்? கொஞ்சமாவது பெருமை கொண்டாடிக்கொள்கிறாரா? அவர் பாட்டுக்கு குழந்தையாகவே அப்பா சிரஸிலுள்ள பிறையைப் பிடித்திழுத்து விளையாடிக்கொண்டிருக்கிறார். அதைத் தாமரைத் தண்டு என்று நினைத்துக்கொள்ளும் அறியாக் குழந்தையாகத் தன்னைக் காட்டிக்கொண்டு விளையாடுகிறார். மனோபேதமாயிருந்த சிவ – சக்திகளையே தாம் ஒன்று சேர்த்து வைத்தும், ‘எவ்வளவு பெரிய ஸாதனை செய்து விட்டேன்?’ என்று மார்தட்டிக் கொள்ளாமல், தாம் செய்த ஸாதனை தமக்கே தெரியாத மாதிரி பால லீலையில் ஈடுபட்டிருக்கிறார். ரூபத்தில் யானையாயிருந்தாலும் உள்ளப்பாங்கில் அந்தத் தாமரை நூல் மாதிரி லேசாகவே அவர் இருப்பதால் தான் எக்காலமும் குழந்தையாகக் குதூஹலித்துக் கொண்டிருக்கிறார்.

அந்தக் குழந்தை ஸ்வாமி நம் எல்லோரையும் குழந்தை பக்தர்களாக்கி ஆனந்த லோகத்தில் எப்போதும் லேசாக மிதந்துகொண்டிருக்கச் செய்வாராக!

ஸர்வ அர்த்தங்களையும் அருளுவதில் அவர் சதுரர் என்று ஒரு பெரியவரும், நாம் சிந்திக்கும் அர்த்தங்களை அவர் அருளவேண்டும் என்று இன்னொரு பெரியவரும் ஸ்தோத்ரம் செய்திருப்பதைப் பார்த்தோம். அப்படிப்பட்ட அவர் நமக்கு முக்யமாக மனஸை லேசாக்கி சாந்தியளித்து ரக்ஷிக்கட்டும்!

களபம்

பிள்ளையாருடைய பெயரில் எதுவுமே ச்லோகத்தில் இல்லை. ‘களபம்’ என்றுதான் வருகிறது. “கலயது கலபோ” என்று அழகான மோனையாக வருகிறது. (கலபம், களபம் என்று இருவிதமாகவும் ஸம்ஸ்க்ருதத்தில் வரும். ல-ள வித்யாஸம் அந்த பாஷையில் பார்ப்பதில்லை.) ‘களபம்’ என்றால் யானைக்குட்டி. ‘குட்டி யானை’ என்று சொன்னால் அதைவிடச் செல்லமாகயிருக்கிறது. வேடிக்கையாகவே பெரிய காரியங்களையும் ஸாதித்தது தெரியாமல் ஸாதித்துக் கொடுத்துவிட்டு, நாம் செல்லம் கொடுத்துக் கொஞ்சும் ஒரு விளையாட்டு ஜீவனாக இருக்க ப்ரியப்படுபவரை ‘கணேசர்’, ‘விக்நேச்வரர்’ என்ற மாதிரிப் பெரிய பெயர்களால் தெய்வமாகக் காட்டாமல், குட்டியானை என்று சொன்னாலே ஸந்தோஷப் படுவாரென்றுதான் ‘களபம்’ என்று போட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

அவ்வையார் “அகவ”லை

சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு

என்று ஆரம்பிக்கிறாள். ஆனால் இங்கே ‘களபம்’ என்பது யானைக் குட்டியில்லை. யானைக்குட்டி ஸ்வாமியின் பாதத்தில் குங்குமப்பூ, பச்சைக் கர்ப்பூரம் முதலியவற்றோடு சேர்ந்து அரைத்த சந்தனம் பூசியிருக்கிறது. கலவை என்றும் கலவைச் சந்தனம் என்றும் சொல்கிற அந்த கந்தோபசாரத்தைத்தான் களபம் என்றும் சொல்வது. இங்கே (“அகவ”லில்) அதுதான் அர்த்தம். பெரிய யோக மூர்த்தியாக, அத்வைத ஞான மூர்த்தியாகப் பிள்ளையாரை ஸ்துதித்து அவ்வை பண்ணியது இந்த அகவல். அதனால் இதிலே ‘பால லீலாபிராமனாக’ விளையாட்டு பண்ணும் குட்டியானையாக அவரைச் சொல்ல முடியவில்லை. (“அகவல்” அறிந்தவர்களிடம் சிறிது உரையாடி விட்டு) “அற்புதம் நின்ற கற்பகக் களிறு“, “வித்தக விநாயக” என்று அவரை உயர்ந்த ஸ்தானம் கொடுத்துத்தான் அவ்வை கூப்பிடுகிறாள். யோக சாஸ்த்ர ரஹஸ்யங்களைச் சொல்ல வந்த நூலில் அவரை அப்படிக் காட்டுவதுதான் ஒளசித்யம் (உசிதமானது) . ஆனாலும் குட்டியானையாக அவர் விளையாடிக்கொண்டிருப்பதையும் கொஞ்சம் கோடியாவது காட்டாமல் விடக்கூடாது என்று அவளுக்கு இருந்திருக்கும் போலிருக்கிறது! என்ன யோக சாஸ்த்ரம் எழுதினாலும் அவள் குழந்தைகளுக்கேயான பாட்டிக் கவியல்லவா? குழந்தைகளுக்கு மிகவும் ப்ரியமான யானைக்குட்டியை மறைமுகமாகவாவது சொல்லாமல் விடக்கூடாது என்றே, “புரிஞ்சுக்கிறவா புரிஞ்சுக்கட்டும்” என்று, எடுத்தவுடனேயே “சீதக் களப” என்று போட்டுவிட்டாள் என்று தோன்றுகிறது.

“அந்த” ச்லோகத்திற்கு “இந்த” ச்லோகத்தின் அத்தாட்சி

அம்பாள் தம்மோடு சேரவேண்டும் என்று ஸ்வாமி விரும்பினார். அவளுக்கு நமஸ்காரம் பண்ணினார். நமஸ்காரம் அவளுக்கு; ஆனால் அவர் விருப்பத்தை நிறைவேற்றியதோ விக்நேச்வரர்! நான் “ந்யாயேந்து சேகர” ச்லோகம் சொல்லி, ‘இந்து சேகர’ ஸம்பந்தத்துக்காகவே “ஸீதா ராவண ஸம்வாத” ச்லோகம் சொல்லப் போக, இதிலேயும் அதில் பார்த்த விஷயத்துக்கு அத்தாட்சி வந்து விடுகிறது! இப்படித்தான் பல நல்ல, ரஸமான ஸமாசாரங்களை எடுத்துப்போட்டுக்கொண்டு கொஞ்சம் அலசினால் எதிர்பார்க்காத புதையல்கள் அகப்படுகின்றன! இப்போது அகப்படும் புதையல், அந்த ச்லோகத்தின் தீர்மானத்திற்கு இந்த ச்லோகத்தில் கிடைக்கும் அத்தாட்சி அல்லது கன்ஃபர்மேஷன். எந்த தேவதையை நாம் ஆராதித்தாலும், அந்த தேவதையும் தன்னுடைய அநுக்ரஹ கார்யத்துக்கு இடையூறு ஏற்படாமலிருப்பதற்காக விக்நேச்வரரிடம்தான் போய்ப் பிரார்த்தித்துக்கொண்டு நிற்குமாதலால், நாம் நேராக அவரொருவரையே எந்த அபீஷ்டம் நிறைவேறுவதற்கும் ஆராதித்துவிட்டால் போதும் என்று அந்த ச்லோகத்தில் பார்த்தோம். இப்போது இங்கே, இந்த ச்லோகத்தில், கவி அந்த உத்தேசத்தில் இதை இயற்றாத போதிலும், என்ன பார்க்கிறோமென்றால் – அம்பாளோடு ஒற்றுமையாய்ப் போகவேண்டுமென்று ஈச்வரன் அவளை ஆராதிக்கிறார். காலிலே விழுவதைவிட என்ன ஆராதனை வேண்டும்? இப்படி அவர் ஆராதனை பண்ணியும் அவள் ஒன்றும் பண்ணவில்லை. கோபமாகவே இருக்கிறாள். அவளுக்கும் உள்ளூர ஒற்றுமையாக வேண்டுமென்றுதான் ஆசை. ஆனாலும் பிகுவை விட்டுக் கொடுப்பதா என்று ஒன்றும் புரியாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். கடைசியில் விக்நேச்வரர் அவர்களை விளையாட்டாக ஒன்று சேர்த்து விடுகிறார். அதாவது இவருக்கு ஆராதனை பண்ணாமல் அம்பாளைத்தான் ஈச்வரன் ஆராதித்தபோதும்கூட அவள் அந்த ஆராதனா பலனைத் தராமல் இவர்தான் தந்திருக்கிறார்! அதே மாதிரி, ஈச்வரனை ஆராதனை பண்ணாமல் அதற்கு நேர்மாறாக அவள் கோபமாயிருந்தாலும் அவளுக்கு உள்ளூர ஆசை எப்படியாவது அவர் தன்னைச் சேர்த்துக்கொண்டு விடவேண்டுமென்பதுதான். ஈச்வரனிடம் சேரணும், ஈச்வரன் நம்மைச் சேர்த்துக் கொள்ளணும் என்று ஆசைப்படுவது ஆராதனையில்லாமல் வேறே என்ன? வெளியில் கோபம், அவமரியாதை என்று அவள் காட்டினாலும் உள்ளே ப்ரியம், ஆராதனைதான் நிறைந்திருக்கிறது. அப்போது ஈச்வரனும் தாமாக அவளுடைய ஆராதனா பலனைக் கொடுத்துச் சேர்த்துக் கொள்ளவில்லை. விக்நேச்வரர்தான் அவர்களைச் சேர்த்து வைத்து அவர்களுடைய மனோபீஷ்டம் நிறைவேறுமாறு செய்து ஆராதனா பலனைக் கொடுத்திருக்கிறார். இதனால் இவரே எந்தப் பலனும் தர வல்லவர், இவரொருத்தரை நாம் ஆராதித்தாலே போதும் என்று கன்ஃபர்ம் ஆகிவிடுகிறதல்லவா?

மநுஷ்யர்களான நாம் தேவர்களிடம் பெறக்கூடிய அபீஷ்ட பூர்த்திகளுக்காக விக்நேச்வரரைப் பிடித்துவிட்டால் போதும் என்று அந்த ச்லோகம் காட்டிட்டென்றால், இந்த ச்லோகமோ இன்னம் மேலேபோய், தேவர்களுக்குள் உச்சியில் இருக்கப்பட்ட பரமேச்வர தம்பதியுமே தங்களுக்குள்ளே ஒரு விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதுகூட இவருடைய ஸஹாயத்தால் முடிகிறது என்று காட்டுகிறது. குழந்தை விளையாட்டாக அவர் அந்தப் பெரிய கார்யத்தைப் பண்ணிவிடுகிறார்! ஸஹாயம் பண்ணவேண்டும் என்று தாம் உத்தேசித்ததாகக் கூடக் காட்டிக்கொள்ளாமல், ‘இவர் என்னமோ விளையாடினார்! அப்பா அம்மா ஒன்று சேர்ந்து விட்டார்கள்’ என்று நினைக்கும் விதத்தில் பண்ணிவிடுகிறார்!

இவர் நாம் மனஸில் நினைக்கும் எல்லா அபீஷ்டங்களையும் ஸகல புருஷார்த்தங்களையும் (“சிந்திதார்த்தம்” என்பது இவற்றைத்தான்) நிச்சயமாக நிறைவேற்றித் தரும். அநுக்ரஹ மூர்த்தியாகத்தானே இருப்பார்? இப்படி அவர் அருளட்டும் என்று கவி முடிக்கிறார்.

“ஸர்வார்த்தங்களையும் தருவதில் பிள்ளையார் சதுரர்” என்று “ந்யாயேந்து சேகர” ச்லோகம் சொன்னதற்குக் கன்ஃபர்மேஷனாகவே இந்த ச்லோகம் “நம்முடைய சிந்திதார்த்தங்களைப் பிள்ளையார் நிறைவேற்றி வைக்கட்டும்” என்கிறது!

விளையாட்டில் மறைந்த விரோதம்

பார்வதி ‘கடுகடு’ என்று உட்கார்ந்திருக்கும்போது பரமசிவன் போய் அவள் காலில் விழுகிறார். “ப்ரணத சிவ” – ப்ரணாமம், நமஸ்காரம் பண்ணுகிறாராம் சிவபெருமான்!

ஜடாபாரத்தை அம்பாள் பாதத்தில் தடாலென்று அவர் சாய்க்கிறபோது அதிலுள்ள பிறைச்சந்திரன் ‘குபுக்’ கென்று நன்றாக வெளிப்பட்டு ப்ரகாசிக்கிறது.

இங்கிருந்துதான் சந்த்ரமௌளி ஸமாசாரம் ஆரம்பிக்கிறது.

ஈச்வரன் அம்பாள் பாதத்தில் நமஸ்கரிக்கும் கோலத்தில் சந்த்ர கண்டம் (பிறைச்சந்திரன்) நன்றாகத் தெரிகிறது.

யானைக்குட்டி என்ன பண்ணுமென்றால் குளத்திலே, ஓடையிலே புகுந்து அமர்க்களம் செய்யும்போது அதிலிருக்கும் தாமரைத் தண்டுகளை முறித்து, உள்ளேயிருக்கும் நூலை ஆசையோடு தின்னும். வாழைத் தண்டைவிடக்கூட இன்னம் நூல்மயமாக இருப்பது தாமரைத் தண்டு. யானை அந்தத் தண்டை முறித்து முறுக்குகிறபோது உள்ளேயிருக்கும் அத்தனை நூலிழையும் கத்தையாக ஒன்று சேர்ந்து முறுக்கிக் கொண்டு வெள்ளை வெளேரென்று வரும். அதை யானைக் குட்டி ஆசை ஆசையாகத் தின்னும்.

இப்போது வெள்ளை வெளேரென்று ரேகா ப்ரமாணமாகத் தெரிகிற சந்திரனைப் பார்த்ததும் பாலகணேச யானை இது அந்த மாதிரியான தாமரை நூல் கத்தைதான் என்று நினைத்துக்கொண்டது. ‘இதென்ன, தாமரை நூல் கத்தையா?’ என்று அதற்குக் கேள்வி வந்துவிட்டது. “ஸ்புரத் – அமல – பிஸ – ஆசங்கயா”: ப்ரகாசிக்கின்ற – நிர்மலமான – தாமரைத்தண்டு (பிஸம் என்றால் தாமரை நூல்; தண்டு என்றும் சொல்லலாம்) -என்ற ஸந்தேஹத்தினால் (‘ஆசங்கா’ என்றால் கேள்வி, இது இப்படியிருக்குமோ என்னும் ஸந்தேஹம். ஸந்தேஹம் என்பதைவிட guess , ஊஹம் என்று சொல்லி விடலாம்.)

சந்த்ர கண்டத்தைப் பார்த்ததும் இது தாமரை நூல் கத்தை என்று பிள்ளையார் guess பண்ணினார்.

உடனே அதைப் பிடித்திழுக்க வேண்டுமென்று ஆசை ஏற்பட்டுவிட்டது : “ஆக்ரஷ்டுகாம :”

எதற்காக? தின்பதற்காகத்தான்.

நிஜமாகத்தான் இப்படி ஸந்தேஹம் வந்ததோ? விளையாட்டுக் குறும்பில், அப்பா அம்மாவைச் சேர்த்து வைக்கவேண்டுமென்றே அப்படி நடித்தாரோ? “பால லீலாபிராம:” – குழந்தை விளையாட்டில் குஷிப்படுகிறவர் என்று பின்னாடி (கவி) முடித்திருக்கிறாரே? இங்கேயும் ஒரு ‘லீலா லோலம்’ வேறு போட்டிருக்கிறார்!

பஜனைகளில் ‘லீலா லோலா’, ‘ராஸலீலா லோலா’ என்றெல்லாம் கேட்டிருப்பீர்கள். ஒன்றுக்கு ஆசைப்பட்டுக் கொண்டு ஆடுவதுதான் ‘லோலம்’. விளையாட்டு ப்ரியனாக விஹாரம் செய்பவன் லீலா லோலன்.

இங்கே நம் ச்லோகத்தில் ‘லீலாலோலம்’ என்று சொல்லியிருப்பது முழுப் பிள்ளையாரையும் இல்லை. முழுப் பிள்ளையாரையும் இல்லை என்றால் என்ன அர்த்தமென்றால், இங்கே குறிப்பாக அவருடைய தும்பிக்கை நுனிதான் விளையாட்டில் ப்ரியத்தோடு அசைந்தாடிக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறது. பின்னால் அவரையே, அதாவது முழுப் பிள்ளையாரையும் லீலாபிராமன் என்றவர் இங்கேயும் ‘லீலாலோலன்’ என்று சொன்னால் புனருக்தி தோஷம் (கூறியது கூறல் என்ற குற்றம்) ஏற்பட்டுவிடும். அதனால் இங்கே அவருடைய ஒரு அங்கமாக மட்டுமுள்ள தும்பிக்கை நுனிக்கும் தனியாக ஒரு விளையாட்டு ஆசை இருப்பதாக, ‘கராக்ரம் லீலாலோலம்’ என்கிறார். ‘கர அக்ரம்’: யானையின் கையாகிய துதிக்கையின் நுனி. தும்பிக்கையை ஆட்டி ஆட்டிக்கொண்டு அதன் நுனியால் எதை உறிஞ்சலாம், எதைத் துழாவலாம், முறுக்கலாம், உடைக்கலாமென்று அவர் போவதைப் பார்த்தால், அந்தத் தும்பிக்கைக்கே தனியாக ஒரு உயிர் இருந்து, அதுதான் விளையாட்டில் ஆடி அசைகிறது என்று நினைக்கும்படி இருக்கிறது!

வெள்ளை வெளேரென்று சந்திரன் தாமரை நூல் கத்தை மாதிரி இருக்கிறது. இரண்டும் குளிச்சியாக இருப்பவை. நிலாக் கிரணங்கள் தனித்தனித் தாமரை நூலிழைகள் மாதிரி இருக்கின்றன.

பராசக்தி குண்டலிநீயாக ஸூக்ஷ்ம ரூபத்தில் ஒரு தாமரை நூலிழைப் பரிமாணத்தில்தான் இருக்கிறாள். ‘பிஸதந்து தநீயஸி’ என்று (லலிதா) ஸஹஸ்ரநாமத்தில் இருக்கிறது.

தாமரை நூல் கத்தை, அல்லது தண்டு போல இருக்கும் சந்திரப் பிறையைக் கண்டதும் அதை இழுக்கப் பிள்ளையார் ஆசைப்பட்டாரல்லவா? உடனே விளையாட்டு விநோதமாக ஆடிக்கொண்டிருக்கும் துதிக்கை நுனியை நீட்டி… “ப்ரஸார்ய” என்றால் நீட்டி…எட்டியிருப்பதை இருந்த இடத்திலிருந்தே தொட்டிழுத்துக்கொள்ள வாகாக நீட்டுமாறு பிள்ளையாருக்குத் தும்பிக்கை இருப்பதால் அதை நீட்டி, அம்மா பாதத்தில் விழுந்துள்ள அப்பாவின் சிரஸிலுள்ள சந்திர கலையை இழுக்க முயற்சி பண்ணினார்.

யானைக்குட்டி, ப்ரிய புத்ரன், குறும்பாக விளையாடிக் கொண்டு தன் தலையில் இருக்கும் சந்திரனைத் தும்பிக்கையால் பிடித்திழுக்கிறது என்றால் அந்தப் பரமேச்வரத் தகப்பனாருக்குத் எத்தனை ஸந்தோஷமாக இருக்கும்? கல்பனையாக நினைத்துப் பார்த்தாலும் நமக்கே அந்தக் காட்சியில் ஆனந்தம் பொங்கிக் கொண்டு வரும்போது, நேராக தாமே அந்த விளையாட்டுக்கு ஆளானவருக்கு அதுவும் ஸொந்தப் பிதாவாகவும் இருப்பவருக்கு அப்படியே பூரித்துக்கொண்டு தானே ஸந்தோஷம் ஏற்பட்டிருக்கும்? சந்த்ரமௌளீச்வரன் என்று தனக்குப் பெரிய பெயர் கொடுத்துள்ள அந்த சிரோபூஷணத்தைப் பிள்ளை அபஹரிக்கப் பார்ப்பதே மகுடாபிஷேகம் செய்விக்கிற மாதிரி அவருக்குப் பேரானந்தத்தைக் கொடுத்தவிட்டது!

இவருக்கே இப்படியென்றால் அம்மாவுக்கு எப்படியிருந்திருக்கும்? குழந்தையின் விளையாட்டில் அப்பாவைவிட அவள்தான் அதிக ஸந்தோஷம் அடைவாள். அதுவும் இப்போது அப்பாக்காரர் இவள் காலிலே தழைந்து விழுந்து கிடக்கிறார். இவளானால் ‘உர்உர்’ என்றிருக்கிறாள். இந்த ஸமயத்தில் அவருக்கு மிக அழகான சிரோபூஷணமாக இருந்துகொண்டு சந்த்ரமௌளி, இந்து சேகரர் என்றெல்லாம் அவருக்கு லோக ப்ரக்யாதியை உண்டாக்கும் பிறையைக் குழந்தை, ப்ரிய வத்ஸன், இழுத்தால், “வேணும், வேணும், இவருக்கு நன்னா வேணும்! பிள்ளை கையிலே சந்திரனைக் கொள்ளை கொடுத்துவிட்டு நிற்கட்டும்!” என்று தானே தாங்கமுடியாத ஆனந்தம் ஏற்படும்?

பிள்ளை சேஷ்டையின் ஸந்தோஷத்தில் இரண்டு பேருக்குமே தங்கள் சண்டை ஸமாசாரம் மறந்துபோய் விட்டது! தான் உர்ரென்று மூஞ்சியைத் தூக்கிவைத்துக் கொண்டு சண்டைக்கு முஸ்தீபாக இருக்கவேண்டும் என்பது அம்பாளுக்கும், தான் அவளுடைய காலைப் பிடித்துக் கொண்டு மன்றாடியாவது மறுபடி ப்ரேமையை ஸம்பாதித்துக் கொள்ளவேண்டும் என்பது ஸ்வாமிக்கும் மறந்தே போய் விட்டது. குழந்தை விளையாட்டில் தங்கள் விரோதத்தை மறந்து சிரித்து விடுகிறார்கள். இருவரும் ஸந்தோஷப்பட்டுக் கொண்டு ஹ்ருதயம் ரொம்பி சிரித்துக்கொண்டு… “ஹ்ருத்ய ஸ்மிதாப்யாம்” என்பது ஹ்ருதய பூர்வமாக சிரிக்கிற பார்வதீ பரமேச்வரர்களைக் குறிப்பிடுவது… வாய் சிரிப்பது மட்டுமில்லை; இவள் போலியாய்க் கோபித்துக் கொண்டிருப்பது, அவர் போலியாய் இவளுக்கு அடிமை மாதிரி நமஸ்காரம் பண்ணுவது – போலில்லாமல், போலிச் சிரிப்பாய், பொய்ச் சிரிப்பாய் இல்லாமல் வாய்ச் சிரிப்பாய் மட்டுமில்லாமல், ஹ்ருதயமே மலர்ந்து, அந்த மலர்ச்சியில் வாயாலும் சிரிப்பவர்களாக அவர்கள் ஆகிவிடுகிறார்கள்.

தங்களுடைய ஊடல் மறந்து போய், இரண்டு பேருக்குமே குழந்தையை அப்படியே கட்டி அணைத்துக் கொள்ளவேண்டுமென்று ஆர்வம் பொத்துக்கொண்டு வருகிறது. “நான், நான்” என்று போட்டிபோட்டுக்கொண்டு இரண்டு பேரும் பால கணேசனை இறுக ஆலிங்கனம் செய்து கொள்கிறார்கள். “ஹ்ருத்ய ஸ்மிதாப்யாம் அஹமஹமிகயா ஆலிங்க்யமான: சிவாப்யாம்” – ஹ்ருதயம் ரொம்பிச் சிரித்துக்கொண்டு ‘நான்தான் நான்தான்’ என்று முண்டியடித்துக்கொண்டு… “அஹம் அஹமிகா” என்றால் நான் நானென்று ஒருத்தரோடொருத்தர் போட்டி போடுவது, அப்படிக் ‘குழந்தையை நான்தான் முதல்லே கட்டியணைச்சுப்பேன்’ என்று பார்வதீ பரமேச்வராள் போட்டி போட்டுக்கொண்டு ஆலிங்கனம் பண்ணிக் கொள்கிறார்கள்.

“சிவாப்யாம்”: அவர் சிவன். அவள் சிவா. அம்பாளுக்கு சிவா என்று பெயர். ஸர்வமங்களா என்று அர்த்தம். ‘சிவாப்யாம்’ என்றால் ‘சிவன் சிவா ஆகிய இருவராலும். ‘இருவராலும் விக்நேச்வரர் ஆலிங்கனம் செய்து கொள்ளப்படுகிறார்: “ஆலிங்க்யமான: சிவாப்யாம்”. குழந்தையை அணைத்துக் கொள்வதில் பெற்றோர் அடையும் ஆனந்தத்தைக் குறளில் கூடச் சொல்லியிருக்கிறது – மெய்தீண்டல் என்று சொல்லியிருக்கிறது.* ‘சாகுந்தல’த்தில் துஷ்யந்தன் சகுந்தலையைத் திரஸ்காரம் பண்ணிப் பல வருஷங்களுக்கு அப்புறம் கச்யபரின் ஆச்ரமத்தில் பரதனைத் தன் பிள்ளையென்று தெரிந்து கொள்ளாமலே பார்க்கிறான். பார்த்தமாத்திரத்தில் அவனைக் கட்டியணைத்துக் கொள்ளணும்போல அவனுக்கு ஒரு தாபம் உண்டாகிறது. இந்த இடத்தில் காளிதாஸனும் துஷ்யந்தன் வாயிலாகக் குழந்தையை மடியோடு அணைத்து வைத்துக்கொண்டு கொஞ்சுவதன் ஆனந்தத்தைச் சொல்லியிருக்கிறார். அப்புறம் அவன் வாஸ்தவமாகவே குழந்தையை மெய்தீண்டியதும் புல்லரித்துப் போகிறான் என்று கதை போகிறது. இதே போல பவபூதியும் “உத்தர ராம சரித”த்தில் லவகுசர்களை ராமர் இன்னாரென்றே தெரிந்து கொள்ளாமல் ஆலிங்கனம் செய்து கொண்டபோது எப்பேர்ப்பட்ட ஆனந்தமடைந்தாரென்று சொல்லியிருக்கிறார். அப்படியானால் அன்பே உருவான ஸாக்ஷாத் விக்நேச்வர மூர்த்தியைக் குழந்தையென்று பார்வதி பரமேச்வரர்கள் கட்டியணைத்தது எத்தனை பேரானந்தமாயிருந்திருக்கும்?

போட்டி போட்டுக்கொண்டு இரண்டு பேரும் குழந்தையை ஆலிங்கனம் பண்ணிக் கொள்கிறார்கள். குழந்தையையா பண்ணிக் கொள்கிறார்கள்? அவர்களே பண்ணிக்கொண்டு விடுகிறார்கள்! குழந்தை நடுவிலே இருக்கிறது. அதை இரண்டு பக்கமும் இரண்டு பேருமாக ஏக காலத்தில் அணைத்துக்கொள்கிறார்களென்றால், அந்த அவஸரத்தில் தங்களை அறியாமல் தாங்களே பரஸ்பரம் ஒருத்தர் முதுகில் இன்னொருத்தர் கைபோட்டுக்கொண்டு தானே விடுவார்கள்?

இந்த மாதிரி உத்தேசித்தோ உத்தேசிக்காமலோ, ஸ்வாமியுடைய திவ்ய ஸ்பரிசம் அம்பாளுக்கும், அம்பாளுடைய திவ்ய ஸ்பரிசம் ஸ்வாமிக்கும் ஒரு க்ஷணம் கிடைத்துவிட்டால்கூட, அப்புறம் அவர்களுக்குள் மனஸ் தாபம், ஒருத்தர் உர் உர்ரென்று உட்கார்ந்திருப்பது, இன்னொருத்தர் தவித்துக்கொண்டு காலில் விழுவது ஆகியவை நீடிக்கமுடியுமா? ஊடல் ஓட்டம் பிடித்து அவர்கள் இரண்டு பேரும் – ஸர்வலோகங்களுக்கும் தாய் தந்தையராக இருக்கப்பட்ட இரண்டு பேரும் – பரம ப்ரேமையில் ஒன்று சேர்ந்துவிட வேண்டியதுதானே?

அந்தத் தாய் தந்தையருக்கு நாம் எல்லாருமே குழந்தைகளென்றாலும் பிள்ளையார்தான் முதல் பிள்ளை, தலைச்சன், தலைப்பிள்ளை இரண்டு பேரும் உள்ளம் குளிர்ந்து ஒன்று சேர்ந்து உலகம் முழுதற்கும் ஆசீர்வாதம் செய்யும் படியாக அந்தப் பிள்ளையார் அவர்களைச் சண்டை தீர்த்து வைத்து ஸமாதானமாகப் போகும்படிப் பண்ணிவிடுகிறார். பால லீலா சேஷ்டிதமாகத் தகப்பனாரின் சிரஸிலுள்ள சந்த்ர கலையைப் பிடித்திழுத்து, நம் எல்லோருக்கும் லோக மாதா பிதாக்கள் அருள் கூறும்படியாக அவர்களை ஒன்று சேர்த்துவிடுகிறார்.

பார்வதீ பரமேச்வராள் இவரை அணைத்துக்கொள்ளப் போனதில் தாங்களே பரஸ்பரம் ஸ்பர்சித்துக்கொண்டு ஊடல் தீர்ந்ததை ச்லோகத்தில் உடைத்துச் சொல்லவில்லை. ஹ்ருதயமாரச் சிரித்துக்கொண்டு, போட்டிபோட்டுக் கொண்டு சிவ-பார்வதியரான இருவராலும் விநாயகர் ஆலிங்கனம் செய்து கொள்ளப்படுகிறாரென்று சொல்லி அப்படியே விட்டிருக்கிறது. ஆனால் “க்ரீடாருஷ்டா” என்று அம்பாளின் பொய்க் கோபத்தில் ஆரம்பித்து, சந்த்ர கண்ட சிரஸுக்காரர் அவள் காலில் விழுந்ததைச் சொன்னதால், அந்தக் கதையைப் பூர்த்தி பண்ணாமல் விட்டால் கவிக்கு தோஷம் ஏற்படும். விஷயமறிந்த கவி அப்படி விடவேமாட்டார். ரஸிகர்கள் பூர்த்தி செய்துகொள்ளும்படி ஸூசனை காட்டி, ‘குறிப்பாலுணர்த்தி’, விஷயத்தை விடும் நயமான யுக்தியை இங்கே கையாண்டு ஊடியவர்கள் கூடியதாகக் கதையை முடித்து வைக்கிறார்.

பரம மங்களமாக இப்படிப் பெற்றோரைச் சேர்த்து வைத்த விநாயக மூர்த்தி நாம் விரும்பிய எந்தப் புருஷார்த்தமானாலும் அதை நமக்குச் சேர்த்து வைக்கட்டும்: ந : சிந்திதார்த்தம் கலயது என்று கவி மங்களாசாஸனம் பண்ணுகிறார்.


* “மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம்” – குறள் 65

ஊடல் – கூடலின் தத்வார்த்தம்

‘அத்ரி – ஜா’ என்னும் ‘மலைமகள்’ இருக்கிறாளே, ஸாக்ஷாத் பார்வதி, அவளுக்கு பர்த்தாவிடத்தில் பொய்க்கோபம். ‘க்ரீடா ருஷ்டா’ என்று விளையாட்டுக் கோபக்காரியைச் சொல்லியிருக்கிறார் (கவி). இப்படி நாயகி ஊடல் செய்யும்போது நாயகன் அவள் காலிலேயே போய்விழுவதாகச் சொல்வது கவி மரபு. ‘கீத கோவிந்த’ த்தைப் பார்த்தால் க்ருஷ்ணன் ராதையின் காலில் போய் விழுந்தான் என்று இருக்கும். அருணகிரிநாதரில் (அவரது திருப்புகழில்) பார்த்தால் வள்ளிக்குறத்தியின் காலிலே போய் சிவசக்தி குமாரராக இருக்கப்பட்ட ஸுப்ரஹ்மண்யர் விழுந்தாரென்று இருக்கும்.

என்ன அர்த்தம்? ஜீவாத்மாதான் நாயகி. நாயகன், பரமாத்மா, ஜீவாத்மா எத்தனை பிணங்கிக்கொண்டு போனாலும் பரமாத்மா அதன் காலில் விழுந்து கெஞ்சிக் கூத்தாடியாவது தன்னுடன் சேரும்படிப் பண்ணும் என்பதே அர்த்தம். இரண்டு பேரையும் எப்பாடு பட்டாவது சேர்த்து வைக்கும் ஸகி என்று ஒருத்தி வருவாள். அவர்களிடையே தூது போவாள். ஜீவாத்ம – பரமாத்மாக்களைச் சேர்த்து வைக்கும் ஆசார்யர்தான் அந்த ஸகி. வெளியிலே பார்த்தால் ஏதோ காதல், விரஹம் என்று இருந்தாலும் உள்ளே இப்படிப் பாரமார்த்திகமாக இருக்கும்.

நம்முடைய ச்லோகத்தில் ஸகி செய்வதை ஒரு புது மாதிரியாக விளையாடிவிடுகிறார் இருவருக்கும் குழந்தையான விக்நேச்வரர்.

“மங்கள” ச்லோகம்

இந்தப் புஸ்தகத்தில் – “ஸீதா ராவண ஸம்வாத”த்தில் – கவி கணேச ஸ்துதி ஆரம்பத்தில் கூறியிருக்கிறார். அதில்தான் சந்த்ரமௌலி ஸம்பந்தமாக ஒரு கணேச லீலை வருகிறது. அது ப்ரணய கலஹத்தில் ஊடியிருந்த பார்வதீ பரமேச்வராளை ஒன்று சேர்த்து வைத்து, நம் மனஸில் பரம மங்களமான ஒரு உணர்ச்சியை உண்டாக்குகிறது. ‘மங்கள ச்லோகம்’ என்பது நிஜமாகவே ரொம்பவும் மங்களமாயிருக்கிறது. ஆனால் இந்த ச்லோகம் சித்ரகவியாக இல்லை. ஸ்வாபாவிகமான (இயற்கையான) கவிதா ரஸத்தோடு அமைந்திருக்கிறது.

க்ரீடாருஷ்டாத்ரிஜாங்க்ரி ப்ரணத – சிவ – சிரச் – சந்த்ரகண்டே கராக்ரம்

லீலாலோலம் ப்ரஸார்ய ஸ்புர தம லபிஸாசங்கயா (ஆ)க்ரஷ்டுகாம: |

உத்யத் ஹ்ருத்ய ஸ்மிதாப்யாம் அஹமஹமிகயா (ஆ)லிங்க்யமாந: சிவாப்யாம்

கச்சிந் – நச்சிந்திதார்த்தம் கலயது களபோ பால லீலாபிராம: ||

குட்டியானையான கணபதி குழந்தை விளையாட்டில் களிக்கிறது: “களபோ பாலலீலா அபிராம:”

அந்த ஆனந்தக் குழந்தை நாம் விரும்பி நினைக்கிற பொருளையெல்லாம் நமக்கு அருளட்டும் : “ந: சிந்தித அர்த்தம் கவயது.”

இது கடைசி வரி,

முதல் மூன்று வரிகளில் அது பண்ணும் விளையாட்டு போக்கிரித்தனம் என்று சொல்வதா, நிஷ்கபடமாக விளையாடுகிறது என்று சொல்வதா, என்று புரியாத விளையாட்டு எப்படியானாலும் ரஸித்து மகிழும்படியாக இருக்கிறது.

சித்ர கவிதை

மைஸூர் ராஜ்யத்தில் சாமராஜநகரில் ராம சாஸ்த்ரி என்று கவி இருந்தார். அவர் ராவணனுக்கும் ஸீதைக்கும் நடந்த ஸம்பாஷணை ரூபத்தில் ஒரு சின்ன காவ்யம் செய்திருக்கிறார். “ஸீதா – ராவண ஸம்வாதம்” என்று அதற்குப் பேர். பேரில் ‘ஸீதா’ என்று முதலில் சொல்லியிருந்தாலும் அவள் ஸம்பாஷிப்பது ரொம்பக் குறைவு. ராவணன்தான் நிறையப் பேசுவது. அதோடு ராவணன்தான் ஒவ்வொரு விஷயமாக எடுத்துக்கொண்டு முதலில் பேசுவான். அப்புறந் தான் ஸீதை அவன் சொன்னதை அப்படியே நிராகரித்து ரத்னச் சுருக்கமாக பதில் கொடுப்பாள். ஒவ்வொரு ச்லோகத்திலும் இப்படி முதல் மூன்று வரி ராவணனின் பேச்சாக, கூற்றாக இருக்கும். நாலாம் வரி மட்டுமே ஸீதை சொன்னதாக இருக்கும். ஆனாலும் தெய்விகமான பாத்ரங்களுக்கே அக்ரஸ்தானம் (முதலிடம்) தரவேண்டும் என்ற முறைப்படி அவள் பெயரை முதலில் வைத்து “ஸீதாராவண ஸம்வாதம்” என்று புஸ்தகத்துக்குத் தலைப்புக் கொடுத்திருக்கிறது. “ஸீதா ராவண ஸம்வாத ஜரீ” என்று ஒரு “ஜரீ” சேர்த்துச் சொல்வார்கள். ‘ஜரீ’ என்றால் அருவி. ச்லோகங்கள் அருவி போல – சொற்பொழிவு என்று சொல்கிறார்களே, அதுபோல – பெருகி வருவதால் காவ்யத்துக்கு ‘ஜரீ’ என்று அடைமொழி.

ப்ரதி ச்லோகத்திலும் முதல் மூன்று வரியில் ராவணன் ஒன்று, தன்னைப் பற்றி ‘ஓஹோ ‘என்று உசத்தி ப்ரகடனம் பண்ணிக்கொள்வான்; அல்லது ராமரை மட்டந்தட்டி ஏதாவது சொல்வான்.

நாலாம் வரியில் ஸீதை அப்படியே நிராகரணம் செய்துவிடுவாள் என்றேனே, அவள் சொல்கிற அந்த வாக்யத்தில்தான் இந்தக் காவ்யத்தின் தனிச் சிறப்பே இருக்கிறது. கவியின் ஸாமர்த்யம் அந்த ஈற்றடியில் தான் இருக்கிறது.

ராவணன் ஒன்று சொல்ல, ஸீதைபாட்டுக்கு அதை ஆக்ஷேபித்து வேறே என்னவோ தன் வசனமாகச் சொல்லமாட்டாள். கவி இதை அந்த மாதிரி பண்ணவில்லை. பின்னே அவள் என்ன பண்ணுவாள், சொல்லுவாள்? ராவணனைப் பார்த்து, “நீ சொன்ன வார்த்தைகளிலிருந்தே ஒரு குறிப்பிட்ட எழுத்தை எடுத்துவிடு; அல்லது அவற்றோடு ஒரு குறிப்பிட்ட எழுத்தைச் சேர்த்துவிடு; இல்லாவிட்டால் ஒரு எழுத்துக்குப் பதில் இன்னொன்றைப் போட்டுக்கொள், இப்படிப் பார்த்தாயானால் அதுதான் என் பதில்” என்று சொல்லுவாள். இம்மாதிரிப் பண்ணிப் பார்த்தால் ராவணன் சொன்னதன் அர்த்தம் அப்படியே மாறிப்போய்விடும்! அவன் தன்னை உசத்திச் சொல்லிக்கொண்டது, ஸீதை ஏற்படுத்திய ஒரே எழுத்து வித்யாஸத்தினால், அப்படியே மாறிப்போய், அவன் எவ்வளவு நீசன் என்று காட்டுவதாக ஆகிவிடும்; அதே போல ராமரை அவன் மட்டந்தட்டிச் சொன்னதும் மாறி அவருடைய உயர்வைச் சொல்லும் புகழ்மொழியாகிவிடும்.*

உதாரணம் காட்டினால்தான் புரியும்: “எனக்கு ரொம்ப புத்தி ஜாஸ்தி” என்று ஒருத்தன் சொல்கிறான். இன்னொருத்தன், “ஜா-வுக்குப் பதில் ‘நா’ போட்டுக்கோ!” என்று கிண்டல் பண்ணுகிறான். என்ன ஆகும்? “புத்தி நாஸ்தி” என்றாகிவிடுமல்லவா? ஒரு எழுத்துக்குப் பதில் இன்னொன்றைப் போடுவதில் அர்த்தம் அடியோடு மாறிவிடுவதற்கு இது எடுத்துக்காட்டு.

‘ராம’ என்ற பெயரில் வரும் ரா-ம என்ற இரண்டு எழுத்துக்கள்தான் முறையே அஷ்டாக்ஷர, பஞ்சாக்ஷரங்களுக்கு ஜீவனான அக்ஷரங்கள் என்று காட்டுவதற்கு ஒன்று சொல்வார்கள். “அந்த இரண்டு மந்த்ரங்களிலிருந்து ரா-ம என்ற எழுத்துக்களை எடுத்துவிட்டுப் பாருங்கள். அர்த்தத்தின் ஜீவனே போயிருக்கும்” என்பார்கள். “ஓம் நமோ நாராயணாய” விலிருந்து ‘ரா’ வை எடுத்துவிட்டால், “ஓம் நமோ நாயணாய” தானே? ‘நாயணாய’ என்றால் ‘மார்க்கமில்லாதவனுக்கு’ என்று அர்த்தம். (“நாயநாய”என்பது தான் சரியான வார்த்தையானாலும் தமாஷில் கொஞ்சம் வித்யாஸமாக – ‘நா’ வுக்குப் பதில் ‘ணா’ – வரலாம்.) அஷ்டாக்ஷரத்தில், ‘நாராயணனுக்கு நமஸ்காரம்’ என்றிருப்பதே விபரீதமாக மாறி, ‘வழி தெரியாதவனுக்கு நமஸ்காரம்’ என்றாகிவிடும்! பஞ்சாக்ஷரத்தில் ‘ம’ வை எடுத்துவிட்டால் (‘நம: சிவாய’ என்பது) ‘நசிவாய’ என்றாகிவிடும். ‘சிவனுக்கு இல்லை’ என்ற விபரீத அர்த்தம் ஏற்பட்டுவிடும்! இவை ஒரு எழுத்தை எடுப்பதால் அர்த்தம் மாறுவதற்கு த்ருஷ்டாந்தம்.

ரங்கஸ்வாமி என்று ஒருத்தன். ‘ரங்கு’ என்று கூப்பிடுவது. “உன் பேருக்கு முன்னாடி ஒரு ‘கு’ சேர்த்துக்கோ” என்றால்? (சிரிக்கிறார்.) ஒரு எழுத்தைச் சேர்ப்பதால் அர்த்த விபரீதம்!

ஒரு எழுத்தை எடுத்துவிடுவது, omit பண்ணுவது, ச்யாவிதாக்ஷரம் எனப்படும். ஒரு எழுத்தைச் சேர்ப்பது, add பண்ணுவது அதி-தத்தாக்ஷரம், ஒரு எழுத்துக்குப் பதில் இன்னொன்று என்று substitute செய்வது ப்ரதி – தத்தாக்ஷரம் எனப்படும்.

இப்படி ரத்னச் சுருக்கமாக ஒரு மாறுதலைச் சொல்லியே ஸீதை, ராவணனைத் தானே தன் முகத்தில் கரி தீற்றிக்கொள்ளச் செய்வதாக “ஸீதா ராவண ஸம்வாத”த்தில் ஒவ்வொரு ச்லோகமும் இருக்கிறது. நான் காட்டிய உதாஹரணங்களில் ஒரே ஒரு வார்த்தையில் தான் மாறுதல் பண்ணினோம். ஆனால் அந்தப் புஸ்தகத்திலோ ஒவ்வொரு ச்லோகத்திலும் ஒரு எழுத்து எத்தனை தடவை வந்தாலும் அத்தனையிலும் அதை மாற்றி வார்த்தை ஜாலம் செய்திருக்கிறது. கஷ்டமான கார்யம். பாஷையில் விசேஷ command இருந்தால்தான் அப்படிச் செய்ய முடியும். இப்படி 50 ச்லோகம் செய்திருக்கிறார்.

நூறு பண்ணவேண்டும் என்று ஆரம்பித்தார்; ச்ரமப்பட்டு 50 பண்ணி, அதற்குமேல் முடியவில்லை என்று விட்டு விட்டார்; அப்புறம் அவருடைய சிஷ்யர் மேலும் 50 பண்ணி சதகமாகப் பூர்த்தி செய்தார் – என்று சொல்கிறார்கள்.

எழுத்துக்களில் விளையாட்டுப் பண்ணி எழுதும் இப்படிப்பட்ட ச்லோகங்களை ‘வர்ண சித்ரக்ருதி’ என்பார்கள். புத்திக்கு நிறைய வேலை வைத்து விநோதமாக, சிக்கலாக புதிராகப் பண்ணும் கவிதைகளுக்கு ‘சித்ர கவி’ என்று பெயர். சித்ரகவியிலேயே இரண்டு main division. வார்த்தை ஜாலமில்லாமல் அர்த்த ஜாலம் செய்து, ஆழ்ந்து யோசித்தாலே பொருள் புரியும்படி கவிதை செய்தால் அதற்கு ‘அர்த்த சித்ரம்’ என்று பெயர். இப்படியில்லாமல் சப்த ஜாலம் நிறைய இருக்கும்படி – பொருளணியாயின்றிச் சொல்லணியாகச் – செய்தால் அதற்கு ‘சப்த சித்ரம்’ என்று பெயர். பொருளணியில் ஸப்-டிவிஷன்தான் எழுத்தை மாற்றி விசித்ரம் செய்யும் ‘வர்ண சித்ரம்’.


* ஒரு ச்லோகத்திலுள்ள ராவண வசனத்திலிருந்து ‘த’ என்ற எழுத்தை அது வருகிற இடங்களிலெல்லாம் எடுத்துவிட்டால் பொருள் முற்றிலும் மாறிவிடுவதற்கு உதாஹரணம், “தெய்வத்தின் குரல்” மூன்றாம் பகுதியில் ” கவி சாதுர்யம்” என்ற உரையில் “ஓர் எழுத்தை எடுப்பதில் அர்த்த வினோதம்” என்ற பிரிவில் விரிவாக காண்க.

பிறையுடன் விளையாடிய பிள்ளையார்

‘ந்யாயேந்து சேகர’ த்திலுள்ள மங்கள ச்லோகம் சொன்னேன். சொல்கிறபோது இந்து சேகர ஸம்பந்தமுள்ளதாகவே பிள்ளையாரின் விளையாட்டை வர்ணிக்கும் இன்னொரு ச்லோகம் ஞாபகம் வந்தது.

தத்வம், தர்க்கம் பார்த்ததற்கு மாற்றாக அந்த விளையாட்டையும் சொல்கிறேன்.

‘இந்து சேகரம்’ என்றால் சந்திரன் இடம் பெற்றுள்ள சிரஸ் என்று அர்த்தம். பரமேச்வரன்தான் இப்படி இந்து சேகரனா இருக்கிறானென்பது எல்லாருக்கும் தெரிந்தது. ஞானப்பாலுண்ட குழந்தை முதல் பாட்டிலேயே “தூவெண்மதி சூடி” என்று சொல்லியிருப்பது இதனால்தான். ஈச்வரன் ஜடாபாரத்திலே சூட்டிக் கொண்டிருக்கிற சந்திர கலையுடனேயே விக்நேச்வரக் குழந்தை பண்ணிய விளையாட்டைப் பற்றி ஒரு ச்லோகம் சொல்கிறேன். லோகத்துக்கெல்லாம் ஸந்தோஷம் கொடுக்கிற விளையாட்டு. ஸர்வ லோகத்துக்கும் தாய் தந்தையராக இருக்கப்பட்ட அம்பாளும் ஈச்வரனும் ப்ரியத்திலே ஒன்று கூடினால் அதைப் போல லோகத்துக்கு ஸந்தோஷம் எதுவுண்டு? அப்படிப்பட்ட ஸந்தோஷத்தை பாலக்ரீடையால் (குழந்தை விளையாட்டால்) கணபதி உண்டாக்கியதாக ச்லோகம்.

காவ்ய மரபிலே சில உண்டு. நாயகனும் நாயகியும் – தமிழில் தலைவன், தலைவி என்பவர்கள் – எப்போதும் ப்ரியமாயிருந்து ஆனந்தமாகக் காலத்தைப் போக்கிக் கொண்டிருந்தார்கள் என்றால் காவ்யத்தில் ரஸம் போத மாட்டேனென்கிறது. அவர்கள் நடுவிலே கொஞ்சம் பிரிந்து போனார்கள், அப்புறம் சேர்ந்தார்கள் என்றால் ரஸம் ஏற்படுகிறது. பிரிவதில் இரண்டு விதம். எவனோ ஒரு ராவணன் (நாயகியைத்) தூக்கிக் கொண்டு போகிறான், அல்லது ஒரு மாதவியிடம் மயங்கி (நாயகன்) பிரிந்து போகிறான் என்பது ஒரு விதம். இது மனஸுக்கு ரொம்பக் கஷ்டம் தருவதாக இருப்பது. இது சோகரஸம். பிரிந்திருக்கிறோமே என்ற சோகத்தில் நாயகனோ, நாயகியோ இரண்டு பேருமேயோ தாபப்படுவதற்கு ‘விப்ரலம்பம்’ என்று பெயர். இப்படி ஒரே சோகமாக இல்லாமல் விநோதமான ரஸக்கலவையாகப் பொய்க் கோப ரஸம், அதிலேயே கொஞ்சம் ஹாஸ்யரஸம், அங்கங்கே ஓரொரு இழை சோகரஸம், உள்ளுக்குள்ளே பார்த்தால் அதிலேயே ச்ருங்கார ரஸம் என்றிப்படி எல்லாம் சேர்ந்து நாயக – நாயகிகள் தங்களுக்குள்ளேயே சண்டைபோட்டுக்கொண்டு பிரிந்தாற்போலிருப்பதுமுண்டு. ‘ப்ரணய கலஹம்’ என்று இதைச் சொல்வார்கள். தமிழில் ஊடல் என்பார்கள்.

பொய்க் கோபத்தில் இப்படிப் பிரிந்து போன பிற்பாடு இரண்டு பேருக்கும் சேரணும் என்று தாபம் உண்டாகிவிடும். ஆனால் தங்களைக் குறைத்துக்கொண்டு, மானத்தை, கோபத்தை விட்டு ஸமாதானமாகப் போவதற்கும் மனஸ் இடம் கொடுக்காது. எப்படியாவது, ஏதாவது ஸந்தர்பம் ஏற்பட்டு ஒன்றுசேரும்படியாக ஆகாதா, ஆகாதா என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஸாமர்த்யசாலியான கவியாக இருந்தால் ரொம்பவும் அழகாக அப்படிப்பட்ட ஸந்தர்ப்பத்தை ஜோடித்து இரண்டு பேரையும் ஒன்றுசேர்த்து விடுவார். இதிலே ரஸிக ஜனங்களுக்கும் மிகுந்த திருப்தி உண்டாகும்.

இம்மாதிரிதான் பரமேச்வரனுக்கும் அம்பாளுக்குமே ஊடல் ஏற்பட்டிருந்த ஒரு ஸமயத்தில் சந்திரமௌளியான பிதாவின் தலையிலுள்ள பிறைச்சந்திரனோடு பிள்ளையார் லீலை பண்ணப்போக லோகத்தின் மாதா பிதாக்கள் கோபத்தை மறந்து ஒன்றுசேரும்படி ஆயிற்று என்று ச்லோகம் இருக்கிறது.

அந்த ச்லோகம் எந்தப் புஸ்தகத்திலிருக்கிறது என்பதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லணும்.

கண்டனத்திலும் கண்ணியம்

மன்னார்குடிப் பெரியவாள் நம்முடைய அத்வைத வித்யையைத் தர்க்க சாஸ்த்ர பூர்வமாக நிலைநாட்டப் புஸ்தகம் எழுதினபோது, ஆரம்பத்திலேயே ஒரு தர்க்க விதியை – தத்ஹேது ந்யாயத்தை – பக்தி ச்லோகத்தில் அழகாக நுழைய விட்டிருக்கிறார். தர்க்கம் மாதிரியான அறிவாராய்ச்சிகளும் தெய்வபக்திக்கு அடங்கியே போக வேண்டுமென்று காட்டுவதுபோல இருக்கிறது.

இந்த பக்தி விசேஷத்தால்தான் அவர் மஹாபுத்திமானாக இருந்தும் கொஞ்சங்கூட அஹங்காரமோ, கர்வமோ இல்லாமலிருந்தார். இதைப்பற்றி முன்னேயே சொன்னதில் குறிப்பாக ஒன்றைச் சேர்த்துக் கொள்ளவேண்டும். அதாவது, ரொம்ப அறிவாளியாக இருந்து, ஏதோ ஒரு நூலுக்கு மறுப்பு நூலாக வாதப்ரதிவாதங்களை வீசி ஒருத்தர் எழுதுகிறாரென்றாலோ, அல்லது, வித்வத்ஸதஸில் மற்ற வித்வான்களோடு வாதம் நடத்துகிறாரென்றாலோ, அப்போது எதிராளிகளைத் தாக்குத்தாக்கு என்று தாக்குவதிலும் தங்களுடைய புத்தி வன்மையைக் காட்டுவதே இயற்கை. குத்தலாக – பரிஹாஸமாகவும், “பிச்சு வாங்குவது” என்றபடி நேராகவே கண்டித்தும் எழுதுவதில் அநேக வித்வான்களுக்கு ருசி ஏற்பட்டுவிடுகிறது. இந்த அம்சத்தில் இந்தப் பெரியவர் மாதிரி எவராவது அத்தனை ஸாத்விகமாகக் கண்டனம் தெரிவிக்கமுடியுமா என்றே இருக்கிறது. வாத ப்ரதிவாதங்கள் எதற்கு என்று அவர் எங்கேயோ ஒதுங்கியிருக்கவில்லை. ஸத்யமான தத்வங்களை நன்றாக ப்ரகடனம் பண்ணத்தான் வேண்டும் என்று, வித்வத் ஸதஸ்களில் கலந்துகொண்டு மாற்று அபிப்ராயக்காரர்களைத் தோற்றுப்போகப் பண்ணியவர் அவர், கண்டன க்ரந்தங்களும் எழுதினவர். ‘ந்யாயேந்து சேகர’மே அப்படியொன்றுதான். அப்பைய தீக்ஷிதரைப் போலவே அத்வைதம், சிவ பக்தி ஆகிய இரண்டையும் நிலைநாட்டி அவர் வாதம் செய்யவும், புஸ்தகங்கள் எழுதவும் வேண்டியிருந்தது. ‘ந்யாயேந்து சேகரம்’ அத்வைத விஷயமானது. ‘துர்ஜநோக்தி நிராஸம்’ என்று ஒரு புஸ்தகம் எழுதியிருக்கிறார். அது சிவஸம்பந்தமானது. அவர் காலத்திலிருந்த இன்னொரு பெரிய பண்டிதர்* – அவரும் ‘மஹாமஹோபாத்யாய’ பட்டம் வாங்கினவர் – ஸ்மார்த்தராகப் பிறந்த போதிலும் அத்வைதம், ஸந்நியாஸம், சிவபக்தி ஆகிய எல்லாவற்றையும் கண்டிப்பவராக இருந்தார். அவர் சிவாராதனையை ஒரே தூஷணையாக தூஷித்து எழுதினார். அப்போது பலர் நம்முடைய ‘பெரியவா’ ளிடம் விஜ்ஞாபித்துக்கொண்டதன் பேரிலேயே அவர் ‘துர்ஜநோக்தி நிராஸம்’ எழுதி, சைவத்துக்கு விரோதமான அபிப்ராயங்களைத் தகர்த்தெறிந்தார். அப்படியிருந்தும், அந்த எதிர்க் கட்சிக்காரப் பண்டிதர் ரொம்பவும் கடுமையாக சிவாராதனத்தைத் தாக்கிப் பலபேர் மனஸைப் புண்படுத்தியிருந்துங்கூட, இவரோ புத்திரீதியில் பாயிண்டுக்கு மேல் பாயிண்டாகக் கொடுத்துக்கொண்டே போய்தான் எதிர் வாதத்தை வென்றாரே தவிர தூஷணையாக த்வேஷமாக ஒரு வார்த்தைகூட எழுதவில்லை! புத்திமானாக இருந்தவர் கனிந்த பக்திமானாகவும் இருந்ததன் விசேஷம்! கண்டனத்திலும் கண்ணியம் தப்பாதவர் என்று பெரிய கீர்த்தி பெற்றார்.


* திருவிசைநல்லூரர் ராமஸுப்பா சாஸ்திரிகள்

விக்நேச்வரர் ரக்ஷிக்கட்டும் !

ஸர்வார்த்த ப்ரதிபாதநைக சதுரோ த்வைமாதுரோ அவ்யாத் ஸ ந:

என்று விக்நேச்வர ஸ்தோத்ரத்தின் மூலம் தத்ஹேது ந்யாயத்தை எடுத்துக்காட்டும் ‘ந்யாயேந்து சேகர’ ச்லோகம் முடிகிறது. ‘த்வைமாதுரோ அவ்யாத் ஸ ந:’ என்றால் ‘இரண்டு தாயார்களை உடையவரான விக்நேச்வரர் நம்மை ரக்ஷிக்கட்டும்’ என்று அர்த்தம்.

ச்லோகத்தின் முதல் மூன்று வரிகளில் அது விக்நேச்வரரைப் பற்றியது என்று பெயரைக் குறிப்பிட்டு வெளிப்படக் காட்டாமல், ‘மற்ற தேவதைகளில் ஒன்றைப் பூஜிக்க விரும்புகிறவர்கள்கூட அந்தப் பூஜைக்கு ஏற்படக்கூடிய இடையூற்றை நீக்கிக் கொள்வதற்காக எவருடைய திருவடித் தாமரைகளைப் பூஜிக்கவேண்டியது அவச்யம் என்று கருதுகிறார்களோ, இப்படிப்பட்ட பக்தர்களில் தத்ஹேது ந்யாயமும் தெரிந்தவராக உள்ளவர்கள் மற்ற தேவதா பூஜையே வேண்டாம் என்று எவரொருத்தரையே பர தெய்வமாகப் பூஜிப்பதோடு நிறுத்திக் கொள்கிறார்களோ’ என்று சொல்லிவிட்டு, ‘எவர்’ ‘எவர்’ என்று பெயரைச் சொல்லாமல் குறிப்பிட்ட அவரை நாலாம் வரியில் ‘அவர் இவர்தான், த்வைமாதுரராக இருக்கப்பட்ட விக்நேச்வரர் தான்’ என்று வெளிப்படப் பெயர் சொல்லி ‘இப்படியாகப்பட்டவர் நம்மை ரக்ஷிக்கட்டும் : அவ்யாத் ஸ ந :’ என்று முடித்திருக்கிறது. ‘யத் பாத பங்கேருஹ’: எவருடைய திருவடித் தாமரைகளை; ‘தேவம் யம் ஏகம் பரம்’ : எவரை ஏகம் பர தேவதையாக-என்று சொல்லி அப்புறம் ‘த்வைமாதுரோ ஸ: ந: அவ்யாத்’: த்வைமாதுரரான அவர் நம்மை ரக்ஷிப்பாராக’ என்று நன்றாக அடையாளம் புரியவைத்து முடித்திருக்கிறது.

அப்யந்யாமரமாரிரா தயிஷ தாம் யத்பாதபங்கேருஹ
த்வந்த்வாரா தநமந்தராய ஹதயே கார்யம் த்வவச்யம் விது: |
தத்தேதோரிதி நீ திவித்து பஜதே தேவம் யமேகம் பரம்
ஸர்வார்த்தப்ர திபா தநைகசதுரோ த்வைமாதுரோ (அ)வ்யாத்ஸ ந: ||

கதை சொல்வார்கள். ஒருவன் யாசகத்துக்காக நவாபின் அரண்மனைக்குப் போனானாம். “கொஞ்சம் காத்திரு. நவாப் நமாஸ் பண்ணப் போயிருக்கிறார்” என்று ஆட்கள் சொன்னார்களாம். “அப்படியா ஸமாசாரம்? நாம் வேண்டுமானதைக் கேட்டு வாங்கிக் கொள்ள நவாபிடம் வந்தால், அவரும் தமக்கு வேண்டுமானதற்காக அல்லாவிடம் பிரார்த்திக்கத்தான் வேண்டியிருக்கா? அப்படியானால் நம்மைப் போலவே யாசகராகவுள்ள இந்த நவாபிடம் கை நீட்டாமல் நாமும் நேராக அந்த அல்லாவிடமே வேண்டிக்கொள்ளலாமே!” என்று சொல்லிவிட்டு யாசகன் போய்விட்டானாம்.

ஏறக்குறைய இந்த மாதிரிதான், ‘ஏனைய தேவர்களும் தங்கள் கார்யம் நிர்விக்னமாக நடக்க வேண்டுமென்பதற்காக விக்நேச்வரரை நமஸ்காரம் பண்ணுகிறார்களென்னும் போது, நாம் ஒவ்வொரு கார்யத்துக்காக இவர்களில் ஒவ்வொரு தேவதையை வேண்டுவதைவிட இந்த எல்லாக் கார்யங்களுக்காகவும் விக்நேச்வரர் ஒருத்தரையே வழிபட்டு விடலாம்’ என்பது.

பிள்ளையாரை விஷயமாக எடுத்துக்கொண்டு அவருடைய பெருமையிலேயே மனஸைச் செலுத்தி நாமும் பெருமைப்படும்போது இப்படிச் சொன்னாலும், பொதுவாக நம் மனப்பான்மை ஒவ்வொரு விதமான பலனுக்கு அதற்கென்றே விசேஷமாக ஏற்பட்டுள்ள தேவதையைப் பிரார்த்திப்பதாகத்தான் இருக்கும். அதில் தப்பில்லை. அந்தப்படியே பண்ணலாம். அதோடு, இஷ்ட தேவதை என்று ஒவ்வொருத்தருக்கும் தனியான பிடிப்பு இருப்பதாக ஒன்று இருக்கும். குலதேவதை என்று வம்சாவளியாக ஒன்று இருக்கும். இந்த தேவதைகளை அவசியம் பூஜிக்கத்தான் வேண்டும். ஆனாலும் எந்த தேவதையின் பூஜையானாலும் முதலில் ‘சுக்லாம் பரதரம்’ குட்டிக் கொள்ளாமல் முடியாது! எந்த ஸ்வாமியிடம் எதற்காகப் போய் நிற்கவேண்டுமானாலும், அதற்கு முன்னாடி, அந்த ஸ்வாமியும் தான் க்ருதக்ருத்யராவதற்காக எந்த ஒரு ஸ்வாமியிடம்போய் நிற்க வேண்டியிருக்கிறதோ, அந்தப் பிள்ளையாரிடம் நாம் போய் நின்று பிரார்த்தித்து நமஸ்காரம் பண்ணித் தானாக வேண்டும்.