‘சங்கர விஜய’ங்களும் ஆசார்யாள் குறித்த மற்ற நூல்களும் – (சிதம்பரமும் ஆசார்யாளும்)

(சிதம்பர ஸமாசாரம் கொஞ்சம் சொல்லவேண்டும்.

ஆசார்யாளுக்கும் சிதம்பரத்திற்கும் ஸூக்ஷ்மமாக ஒரு ஸம்பந்தம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. அவர் பரமேச்வரனிடமிருந்து பெற்ற ஐந்து ஸ்படிக லிங்கங்களில் ஒன்றை ச்ருங்கேரியிலும், இன்னொன்றை இங்கேயும் (காஞ்சி ஸ்ரீமடத்திலும்) ஸ்தாபித்தது போல பாக்கி மூன்றை மூன்று ப்ரஸித்த க்ஷேத்ரங்களில் ப்ரதிஷ்டை செய்திருக்கிறார். அந்த மூன்றில் இரண்டு ஹிமாசலத்திலேயே உள்ள கேதாரிநாதமும், நேபாளத்திலுள்ள நீலகண்ட க்ஷேத்ரமுமாகும். மற்றது எதுவென்றால் சிதம்பரம்தான். தாம் ஸித்தி அடைகிற பர்யந்தம் தம்மிடமே ஆசார்யாள் வைத்துக்கொண்டிருந்த லிங்கத்தை அந்த ஸமயம் நெருங்கும்போது ஸுரேச்வராசார்யாளிடம் கொடுத்து சிதம்பரத்தில் ப்ரதிஷ்டை பண்ணச் சொன்னாரென்று ஆனந்தகிரீயத்தில் இருக்கிறது.

சிதம்பரம் பரம வேதாந்த தாத்பர்யங்களைக் குறிக்கும் க்ஷேத்ரம். (சிதம்பரம் என்ற) அந்தப் பேரே வேதாந்தமானது. “ஞான ஆகாசம்” என்று அர்த்தம். ஸாதாரணமாக க்ஷேத்ரப் பெயர்கள் புராணக் கதைகளைக் குறிப்பதாக இருப்பதே வழக்கம். காளஹஸ்தி, அருணாசலம், ஜம்புகேச்வரம்-கஜாரண்யம்-திருவானைக்கா என்ற பெயர்கள் அந்தந்த ஸ்தல புராண ஸம்பந்தமுள்ளவைதான். ‘சிதம்பரம்’ என்ற பெயர் மாத்திரம் வேதாந்தமாக இருக்கிறது. வ்யாக்ரபுரம்-புலியூர் என்று புராண ஸம்பந்தமுள்ளதாக அதற்கு ஒரு பெயர் இருந்தாலும் சிதம்பரம் என்பதுதானே ப்ரஸித்தமாயிருக்கிறது? “திருச்சிற்றம்பலம்” என்று திருமுறைகளை ஆரம்பிக்கிறார்கள்- அதுவும் வேதாந்தப் பேர்தான். ‘தஹராகாசம்’ என்று நம் ஹ்ருதய குஹையில் ஆத்ம ஸ்தானமாக இருப்பதைத்தான் ‘சிறு அம்பலம்’ என்பது. ஸ்வரூப நடராஜா பஞ்ச க்ருத்யம் செய்வதற்குப் பக்கத்திலேயே அரூபமாக, நிஷ்க்ரியமாக உள்ள ஆகாசத்தை ‘ரஹஸ்யம்’ என்று அங்கே வைத்திருக்கிறது. ஆகாச க்ஷேத்ரமென்றால் ether என்ற ஸூக்ஷ்ம பூதத்தைக் குறிப்பது மட்டுமில்லை; ஆத்ம தத்வத்தையேதான் ஆகாசம் என்பது. யோக – வேதாந்த ப்ரகரணமான ‘யோகதாராவளி’யில் ஆசார்யாள் ஸ்ரீசைலத்தைக் குறிப்பிட்டிருப்பதற்கு விசேஷமுண்டு என்பது போலவே, ‘விவேக சூடாமணி’யில் அவர் ‘சிதம்பரம்’ என்ற வார்த்தையைக் குறிப்பிட்டிருக்கிறார். புஸ்தகத்தின் கடைசி பாகத்தில் ஜீவன் முக்தனை வர்ணிக்கும்போது, வாஸ்தவத்தில் அவன் நிலைபெற்றிருப்பது ஞான ஆகாசத்திலேயே ஆனதால், வெளிப்பார்வைக்கு எப்படி வேண்டுமானாலும் கூத்தடிப்பான், பைத்தியம் மாதிரி இருப்பான், பச்சைக் குழந்தையாட்டம் இருப்பான், பிசாசு மாதிரிகூட இருப்பான், எல்லாவற்றையும் அவிழ்த்துப் போட்டுவிட்டுத் திரிவான், இல்லாவிட்டால் மான்தோல், புலித்தோல் எதை வேண்டுமானாலும் போட்டுக்கொண்டிருப்பான் என்று சொல்கிறார். அப்போது அவனை ‘ஞானாகாசத்தில் நிலைபெற்றவன்’ என்பதற்கு “சிதம்பரஸ்த:” என்றே போட்டிருக்கிறார்1.

ஆசார்யாள் பிறந்த மலையாள தேசத்திற்கு ஒட்டினாற் போல கொங்கு நாட்டில் பேரூர் என்ற நடராஜ க்ஷேத்ரம் இருக்கிறது. ஆசார்யாள் அவதாரத்திற்காக மாதா பிதாக்கள் பஜனம் இருந்த திருச்சூரும் திருச்சிவப்”பேரூர்”தானே? பேரூருக்கு ஆதி சிதம்பரம் என்றும் பெயரிருக்கிறது!

அம்பலம் என்று ஸந்நிதிகளைச் சொல்கிற வழக்கம் மலையாளத்தில்தான் இருக்கிறது. சிற்றம்பலம், பொன்னம்பலம், வெள்ளியம்பலம் என்றெல்லாம் நடராஜ ஸந்நிதியைத்தான் தமிழ் தேசத்தில் சொல்கிறோம். இந்த அம்பலத்தின் விமானமும் தமிழ்நாட்டில் இதர ஸந்நிதிகளிலுள்ள கோபுர பாணியில் இல்லாமல் மலையாளக் கூரை கட்டுமான பாணியிலேயே இருக்கிறது. சிதம்பரத்து தீக்ஷிதர்கள் குடுமியைப் பின்பக்கம் முடியாமல் நம்பூதிரிகளைப்போல் முன்பக்கம் முடிகிறார்கள். நம்பூதிரிகள் நேர் உச்சியில் ஊர்த்வ சிகையாக முடிந்தால், இவர்கள் இன்னம் முன்பக்கம் கொஞ்சம் பக்கவாட்டாகப் பூர்வ சிகையாக முடிகிறார்கள். ஆகக்கூடி, பின்னால் முடித்துக்கொள்ளாத ஒற்றுமை இருக்கிறது.)

தீக்ஷிதர்களுக்கு மலையாள ஸம்பந்தம் விசேஷமாக இருந்ததைக் காட்டுகிற மாதிரி பெரிய புராணத்தில் ஒரு விஷயம் வருகிறது. கூற்றுவ நாயனார் என்று ஒருத்தர். அவர் ஒரு குறுநில மன்னர்; சோழ தேசத்திலிருந்த களந்தை என்ற ஊரில் இருந்து கொண்டு சுற்றுப்பட்ட சின்ன ப்ரதேசத்தை ஆண்டு கொண்டிருந்தவர்; சோழ ராஜாவுக்குக் கப்பம் கட்டிக்கொண்டிருந்தவர். அவர் பஞ்சாக்ஷர ஜப பலத்தினால் ராஜ்யம் ராஜ்யமாக ஜெயித்து சோழ ராஜாவையுங்கூட முடிவாக ஜெயித்து விட்டார்.

சோழ ராஜாக்களுக்கு நடராஜா குல தெய்வம். தீக்ஷிதர்கள் அவர்களுக்குச் சிதம்பரத்தில் பட்டாபிஷேகம் பண்ணி முடி சூட்டுவார்கள். உறையூர், தஞ்சாவூர் மாதிரியான தங்களுடைய தலை நகரங்களிலும் சோழ ராஜாக்கள் பட்டாபிஷேகம் பண்ணிக் கொண்டாலும் அது ‘அஃபீஷியல்’ மட்டுந்தான். ‘ஸோஷல்’ என்றும் சொல்லலாம்.  தெய்வ ஸம்பந்தமான ஸமயச் சடங்காக ‘ஸாக்ரமென்டல்’ என்கிறபடி நடக்கும் பட்டாபிஷேகம் சிதம்பரத்தில் தீக்ஷிதர்கள் பண்ணி வைக்கிறதுதான். அப்போது சூட்டுகிற கிரீடமும் அந்த ஒரு ‘அக்கேஷ’னுக்கு மட்டுந்தான். மற்ற சமயங்களில் அது தீக்ஷிதர்களின் ‘கஸ்டடி’யிலேயே சிதம்பரம் கோவிலில் இருக்கும்.

கூற்றுவ நாயனார் சோழ தேசம் பூராவையும் ஜெயித்துவிட்டு தீக்ஷிதர்களிடம் போய்த் தனக்கு முடி சூட்டும்படிக் கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்கள், ‘சோழ வம்சத்தில் வந்தவர்களைத் தவிர நாங்கள் யாருக்கும் முடிசூட்ட மாட்டோம்’ என்று சொல்லிவிட்டார்கள். ராஜாவோடு அபிப்ராய பேதமாகப் போன பிறகு அந்த ராஜ்யத்தில் வஸிக்கிறது உசிதமில்லை என்றும் அவர்கள் நினைத்தார்கள். அதனால், கிரீடத்தைக் கோவிலிலிருந்து அப்புறப்படுத்தக்கூடாது என்பதால் அதற்கு ‘கஸ்டோடிய’னாக ஒரு தீக்ஷிதரை மட்டும் வைத்துவிட்டு, மற்றவர்கள் ஊரை விட்டுப் புறப்பட முடிவு செய்தார்கள்… ஒரே ஒரு தீக்ஷிதர் விலை மதிப்பில்லாத கிரீடத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்தாலும் ஒரு ராஜா அவரை பலாத்காரம் பண்ணி முடிசூட்டுப் பெறாமல் அடங்கியிருப்பான் என்ற உத்தமமான பண்பாடும் இங்கே தெரிகிறது….

சோழ ராஜ்யத்தை விட்டு தீக்ஷிதர்கள் எங்கே போனார்கள் என்று பெரிய புராணத்தில் சொல்கிறபோது, அவர்கள் சேரனுடைய மலையாள தேசத்துக்குப் போய்விட்டார்கள் என்று இருக்கிறது (“சேரலன்றன் மலைநாடணைய நண்ணுவார்” — கூற்றுவ நாயனார் புராணம், 4). பாண்டிய தேசத்துக்குப் போகாமல் அதைவிட எவ்வளவோ தூரம் தள்ளியிருந்த மலையாளத்துக்குப் போனதாக இருக்கிறதைப் பார்க்கும்போது தீக்ஷிதர்களுக்கு அந்த ப்ரதேச ஸம்பந்தம் ஜாஸ்தி என்பதாலேயே இப்படியோ என்று தோன்றுகிறது.

அப்புறம் அந்த நாயனார் நடராஜாவிடம், ‘உன் குஞ்சித பாதத்தைத்தான் நீ என் முடியில் சூட்டணும்!’ என்று ப்ரார்த்தித்துக் கொண்டதாகவும், ஸ்வாமியும் ஸ்வப்னத்தில் தோன்றி அப்படியே செய்ததாகவும் இருக்கிறது. பிற்காலத்தில் ராஜராஜனும் ‘சிவபாதசேகரன்’ என்று இதே தாத்பர்யத்தில்தான் தன்னைச் சொல்லிக்கொண்டான்.

ஆசார்யாள் சிதம்பரத்தில் பிறந்ததாகச் சொல்லியுள்ள பாடத்தில் அவருடைய தகப்பனார் பெயர் விச்வஜித், தாயார் பெயர் விசிஷ்டா என்று எல்லாமே வித்யாஸமாயிருக்கிறது! ‘என்ன இப்படியிருக்கே?’ என்று ஆராய்ந்து கொண்டு போனால் அபிநவ சங்கரர் என்று சொன்னேனே, கி.பி. 788-ம் காலத்தவர் என்று, அவருக்கு இதெல்லாம் பொருந்தியிருக்கிறது! அவர் சிதம்பரத்தில்தான் அவதரித்திருக்கிறார். அப்பா பேர் விச்வஜித், அம்மா விசிஷ்டா2. இரண்டு பேருக்கும் மாறாட்டம் ஏற்பட்டுப் பாடம் மாறியிருக்கிறதென்று புரிகிறது.

ஆனந்தகிரிக்கும் அலாதியாக ஒரு சிதம்பரப் பற்றுதல் இருந்ததாகத் தெரிகிறது. (ஆனந்தகிரீய) புஸ்தகத்தின் எல்லாப் பாடங்களிலுமே குழந்தை சங்கரர் வளர்ந்ததைச் சொல்லும்போது “ஸாக்ஷாத் சிதம்பரேச இவ விராஜமாந: — ஸாக்ஷாத் நடராஜாவைப்போலவே ப்ரகாசித்தவர்” — என்று சொல்லியிருக்கிறது.3

ஆசார்யாள் கோவிந்த பகவத்பாதரை ஸந்தித்து உபதேசம் பெற்றது சிதம்பரமென்றே ஆனந்கிரீயத்தின் எல்லாப் பாடங்களிலும் இருக்கிறது4. ஆசார்யாள் பற்றிய இதர புஸ்தகங்களில் அந்த இடம் நர்மதா தீரம், பதரி, காசி என்றெல்லாம் வித்யாஸமாகச் சொல்லப்பட்டிருந்தாலும் பரவலான ஐதிஹ்யம் நர்மதா தீரம் என்றே இருப்பதை கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

அந்த உபதேசத்தின்போது வெளிலோகத்திற்குத் தெரியாவிட்டாலும் உள்ளூரச் சிதம்பர ஸம்பந்தம் இருந்ததாக வைத்துக்கொள்ளலாம். எப்படியென்றால்…. கோவிந்த பகவத்பாதர் யார்? பதஞ்ஜலி அவதாரம்தான். பதஞ்ஜலி சிதம்பரத்தோடு இணைபிரியாமல் சேர்ந்தவர். (ஆசார்யாளின்) குரு இப்படியென்றால் பரமகுருவான கௌடபாதரும் சிதம்பரத்தில்தான் பதஞ்ஜலியிடம் அவர் பதஞ்ஜலி ரூபத்திலிருந்தபோதே வ்யாகரண உபதேசம் பெற்றவர். ஆசார்யாளோ தத்வரீதியில் எப்போதும் ‘சிதம்பரஸ்தர்.’ அதனால் அவரை ஞானாகாசத்திலேயே வைத்து குரு உபதேசித்ததை “சிதம்பரத்தில் உபதேசித்தார்” என்று எழுதிவிட்டார் என்கலாம்!)

காசியில் தீண்டாதானின் ரூபத்தில் விச்வநாதரே வந்து ஆசார்யாளைப் பரீக்ஷித்தது, தாயாரின் மரண ஸமயத்தில் ஆசார்யாள் அவள்கிட்டே போய் விச்ராந்தி பண்ணிப் புண்ய லோகம் அனுப்பியது முதலான வ்ருத்தாந்தங்கள் ஆனந்தகிரீயத்தில் இல்லாவிட்டாலும், மற்ற புஸ்தகங்களில் இருப்பதாலும், லோக வழக்கிலும் ப்ரஸித்தமாயிருப்பதாலும் அவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஆசார்யாள் ஷண்மத ஸ்தாபனம் பண்ணியதை விளக்கமாகச் சொல்கிற புஸ்தகம் ஆனந்தகிரீயம்தான். ஆனாலும் பொது அபிப்ராயத்தில் ஷண்மதம் என்றால் சிவன், அம்பாள் விஷ்ணு, பிள்ளையார், ஸுப்ரஹ்மண்யர், ஸூர்யன் ஆகிய ஆறு பேரைக் குறித்த உபாஸனை என்று இருந்தாலும் இதில் ஸுப்ரஹ்மண்ய மதமான கௌமாரத்துக்கு பதில் காபாலிகத்தைச் சொல்லியிருக்கிறது5. இதே சரித்ரத்தில் முன்னாடி ஆசார்யாள் நிராகரணம் செய்த 72 மதங்களில் பலவற்றை ஒவ்வொரு ப்ரகரணத்தில் ஒவ்வொன்றாகக் கொடுக்கும்போது காபாலிகத்தை அவர் கண்டனம் செய்த கதையும் இருக்கிறது6. ஆனால் பிற்பாடு அவர் ஐந்து சிஷ்யர்களைக் கொண்டு சைவம்-சாக்தம்-வைஷ்ணவம்-காணபத்யம்-ஸெளரம் ஆகியவற்றை ஸ்தாபித்த அப்புறம் காபாலிகரான வடுகநாதர் என்பவர் அவரிடம் வந்து தம்முடைய மதத்தையும் பரப்ப அவர் அநுக்ரஹிக்கணும் என்று கேட்டுக்கொண்டதாகவும், பூர்வ பக்ஷமாக — அதாவது, எதிர்க் கட்சியும் என்னவென்று கொஞ்சம் தெரிந்தால் நல்லதுதானே என்கிற ரீதியிலும் வைதிகாசாரங்களை அநுஸரிப்பதற்கில்லாமல் ப்ரஷ்டர்களாகப் போனவர்களை உத்தேசித்தும் அவர், “ஸரி, உன் மதத்தையும் கொஞ்சம் ப்ரசாரம் பண்ணி விட்டுப்போ!” என்று உத்தரவு கொடுத்ததாகவும் வருகிறது. அவர் (வடுகநாதர்) அப்படியே பண்ணிவிட்டு மறுபடி காஞ்சீபுரத்துக்கு வந்து, மற்ற ஐந்து மதங்களை ப்ரசாரம் பண்ணிவிட்டு அங்கே திரும்பி வந்திருந்த மற்ற ஐந்து சிஷ்யர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தாரென்று வருகிறது.

ஜன ஸமூஹத்தில் உள்ள ஐதிஹ்யமோ கௌமாரம் உட்பட்ட ஷண்மதங்களை ஆசார்யாள் ஸ்தாபித்தாரென்பதாகத்தான் இருக்கிறது. அந்த ஐதிஹ்யம் இருக்கட்டும். தர்ம சாஸ்த்ர நிபந்தன க்ரந்தம் என்பதாக ப்ராமாண்யம் பெற்றுள்ள ‘பராசர மாதவீயம்’என்ற நூலிலும்,

சைவம் ச, வைஷ்ணவம், சாக்தம், ஸெளரம் வைநாயகம் ததா |
ஸ்காந்தம் ச பக்தி – மார்கஸ்ய தர்சநாநி ஷடேவ ஹி ||

என்று முருக உபாஸனையான கௌமாரத்தையே ‘ஸ்காந்தம்’ என்று ஆறாவது மதமாகச் சொல்லியிருக்கிறது.

சாஸ்த்ர ப்ரகாரமே எல்லாம் பண்ணின ஆசார்யாள் கௌமாரத்தை விட்டிருப்பாரா?

ஆனந்தகிரீயத்திலேயே ஆரம்ப ப்ரகரணமொன்றில்7 ஆசார்யாள் அனந்தசயன க்ஷேத்ரத்திலிருந்து குமாரஸ்வாமி ஆவிர்பவித்த ஸ்தலமான ஸுப்ரஹ்மண்யம் என்ற க்ஷேத்ரத்திற்குப் போனார் (உடுப்பி கிட்டே கூகே ஸுப்ரஹ்மண்ய ஸ்தல என்று சொல்லப்படும் க்ஷேத்ரமாயிருக்கலாம்; அங்கே குமாரதாரை என்ற நதியில் ஸ்நானம் பண்ணிவிட்டு, ஸர்ப்ப ரூபத்திலிருக்கும் ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியை பக்தியோடு வழிபட்டாரென்று வருகிறது8. (நான் சொன்ன ஸுப்ரஹ்மண்ய ஸ்தலத்தில் ஸ்வாமி ஸர்ப்ப ரூபத்தில் தானிருக்கிறார். கர்நாடக-ஆந்த்ர தேசங்களில் அப்படித் தான் வழக்கம்.) தவிரவும் ஆசார்யாளின் ஸ்தோத்ரங்களில் ஸுப்ரஸித்தமாக இருக்கிற ஒன்று ‘ஸுப்ரஹ்மண்ய புஜங்கம்’. பரம பக்தியும் கவித்வமும் லளிதமாகச் சேர்ந்து பாராயண க்ரந்தமாக அது இருக்கிறது. திருச்செந்தூர் முருகன்மேல் பாடியது. ஆசார்யாளும் நரலீலையாக அவதார விளையாட்டு விளையாடியதில், க்ரூர ஸ்வபாவம் படைத்த ஒரு எதிர் ஸித்தாந்தி அவருக்கு ஆபிசாரம் (செய்வினை) பண்ணியதை ஏற்றுக்கொண்டு சரீர உபாதைப்பட்டபோது திருச்செந்தூருக்கு வந்து ஸ்வாமியை ஆராதித்து, அந்த க்ஷேத்ரத்திற்கே உரியதான பன்னீரிலை விபூதியினால் ரோக நிவ்ருத்தி பெற்றார் என்று அங்கே ஸ்தல மாஹாத்ம்யம் சொல்கிறார்கள். பன்னீரிலையில் வைத்து அங்கே விபூதி தருவதை ஆசார்யாளே ‘பத்ரபூதி ‘என்று சொல்லி, அதை இட்டுக்கணுமென்றுகூட இல்லாமல் பார்த்த மாத்திரத்திலேயே மஹா ரோகங்களும் ஆவி சேஷ்டைகளும் கூடப் பிசுபிசுவென்று தேய்ந்து போய்விடுமென்று ‘புஜங்க’த்தில் சொல்லியிருக்கிறார் :

அபஸ்மார-குஷ்ட-க்ஷயார்ச-ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதி-ரோகா மஹாந்த : | 
பிசாசாச்ச ஸர்வே பவத்-பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே || 9

ஸம்ஸ்க்ருதத்தில் ஸுப்ரமண்யரைப் பற்றிய ஸ்தோத்ரம் என்றாலே முதலில் நிற்பது ஆசார்யாளின் புஜங்கம்தான்.

இதையெல்லாம் கவனிக்கும்போது அவர் ஷண்மதங்களில் ஒன்றாக கௌமாரத்தையே ஸ்தாபித்து, ‘அடிஷன’லாகக் காபாலிகத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுத்திருக்கலாமென்று தோன்றுகிறது.

இப்படியெல்லாம் தீர ஆலோசித்து, பூர்வகாலத்திலும் பிற்காலத்திலும் தோன்றிய பொதுப்படையான நூல்களில் சொல்லியிருப்பவை, எல்லா நூல்களிலுமே பொதுவாகச் சொல்லியிருப்பவை, ஜனங்களிடம் பரவலாகவும் ஆழமாகவுமுள்ள ஐதிஹ்யங்கள் ஆகியவற்றை இசைத்துப் பார்த்துச் சேர்க்கவேண்டியதைச் சேர்த்து, எடுக்கவேண்டியதை எடுத்து விட்டு ‘ஆனந்த கிரீய’த்திலும் ‘வ்யாஸா சலீய’த்திலும் சுத்த பாடங்களை ஒருவாறு நிர்ணயம் பண்ணி, இரண்டுக்குள்ளேயே ஒன்றில் சொல்லி ஒன்றில் விட்டதை ஒன்று சேர்த்து விட்டோமானால் ப்ராமாண்யமுள்ள ஆசார்ய சரித்ரம் கிடைத்துவிடும் எனலாம்.10

ப்ரமாணமுள்ள சரித்ரம் என்று ஒருவாறு நிர்ணயம் செய்ததற்கு விரோதமில்லாத வரையில் அதிகப்படியான எல்லாக் கதைகளையும், ஐதிஹ்யங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

புத்தியால் ஆலோசித்தால் மட்டும் போதாது. பக்தியும், விநயமும் — ஒன்று இருந்தாலே மற்றது வந்துவிடும்-ரொம்ப அவச்யம். ‘நம் அபிமானம்’ ‘நம் அபிப்ராயம்’ என்று வீம்பாகப் பிடித்துக்கொள்ளாமல், ‘ஸத்யம் தெரியணும்’ என்ற ப்ரார்த்தனையோடு ஆராய்ந்து பார்த்தால் நம் புத்தியைப் பொறுத்து, பக்தியைப் பொறுத்துத் தெரிகிற மட்டும் தெரியும்.

பக்தியோடு எல்லா சரித்ரங்களையுமே படித்துக் கதை வழியாக ஆசார்ய ஸ்மரணம் பண்ணி அவருடைய அநுக்ரஹத்தை அடையவேண்டியது. நமக்கு முக்யம் அந்த அநுக்ரஹந்தான்.


1 திகம்பரோ வாபி ச ஸாம்பரோ வா
த்வகம்பரோ வாபி சிதம்பரஸ்த: |
உந்மத்தவத்வாபி ச பாலவத்-வா
பிசாசவத்-வாபி சரத்யவந்யாம் ||

2 “ஜகத்குரு ரத்னமாலா ஸ்தவத்”தின் 61-வது ச்லோகத்திற்கு “ஸுஷமா” வ்யாக்யானத்தில் காணப்படும் வாக்பதிபட்டரின் “சங்கரேந்த்ர விலாஸ” மேற்கோள் இவ்விஷயத்தைத் தெளிவுற விளக்குகிறது.

3 ‘ஆனந்தகிரீய சங்கரவிஜயம்’ — மூன்றாவது ப்ரகரணம்.

4 ‘ஆனந்தகிரீய சங்கரவிஜயம்’ — மூன்றாவது ப்ரகரணம்.

5 72-வது ப்ரகரணம்.

6 23-வது ப்ரகரணம்.

7 11-வது ப்ரகரணம்

8 ஸ்நாத்வா குமாரதாராயாம் நத்யாம் சிஷ்ய-ஸமந்வித: |
பக்த்யா ஸம்பூஜயாமாஸ ஷண்முகம் சேஷ ரூபிணம் ||

9 ச்லோகம் 25

10 அச்சிட்ட நூல்களாக உருப்பெறுமுன் சுவடிகளில் எழுதப்பட்டும் காலப்போக்கில் ஒரு சுவடிக் கட்டு சிதிலமாகும்போது இன்னொன்றில் ப்ரதி செய்யப்பட்டே ஸ்ரீ சங்கர சரிதங்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

‘ஆனந்த கிரீய’த்தில் முந்தைய, பிந்தையப் பொது நூல்களுக்கு மிகவும் இசைவுள்ளதாகக் காசியில் ராம தாரக மடத்திலுள்ள கையெழுத்துப் ப்ரதிதான் தற்போது கிடைத்துள்ள ப்ரதிகளுள் மிகவும் பழையதாகத் தெரிகிறது. சாலிவாஹன சகம் 1737 (கி.பி. 1815)-இல் எழுதப்பட்டதாக அதிலேயே கண்டுள்ளது. அப்பாடத்தையே மிகப் பெரும்பாலும் ஒத்துள்ள வேறிரு கைப் பிரதிகள் காஞ்சி ஸ்ரீமட நூலகத்திலும், சென்னை மானுஸ்க்ரிப்ட் லைப்ரரியிலும் உள்ளன. இவற்றை இணைத்தும், மைஸூர் ஓரியண்டல் ரிஸர்ச் இன்டிட்யூட்டிலுள்ள நான்கு கைப் பிரதிகளுடன் ஒப்பு நோக்கியும் முக்ய பாடமாகக் கொடுத்து ஓர் ஆனந்தகிரீயப் பதிப்பை டாக்டர் என்.வீழிநாதன் அளித்திருக்கிறார். இவற்றுக்கு மாறாக உள்ள பல பாடபேதங்களையும் அடிக்குறிப்புக்களில் கொடுத்துள்ளார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் Center of Advanced Study in Philosophy-இன் பிரசுரமாக நூல் 1971-இல் வெளியாயிற்று.

‘வியாஸாசலீய சங்கர விஜயம்’ சென்னை மானுஸ்க்ரிப்ட் லைப்ரரியின் பதிப்பாக 1954-இல் வெளியாயிற்று. டாக்டர் டி.சந்திரசேகரன் பல பாட பேதங்களை ஒப்பு நோக்கி உருவாக்கியது. இந்நூலின் கடைசி ஸர்க்கத்தில் விடுபட்டுப்போய், ஆனால் ‘(ஜகத்)குரு ரத்னமாலா (ஸ்தவ)’த்தின் ‘ஸுஷமா’ வ்யாக்யானத்தில் காணப்படுவதான ஐந்து மேற்கோள் ச்லோகங்கள் முன்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ஆசார்யாள் காசியில் வஸிக்கையில் அவரை விச்வநாதப் பெருமான் தீண்டாதான் உருவில் வந்து பரீக்ஷித்ததைக் கூறும் ‘குரு ரத்ன மாலா’வின் 20-வது ச்லோகத்துக்கு ‘ஸுஷமா’ அளிக்கும் விரிவுரையில் இதே கட்டத்தைக் கூறும் வ்யாஸாசலீய மேற்கோளாக 27 ச்லோகங்கள் காணப்படுகின்றன. இவை அச்சிட்ட நூலில் விடுபட்டுள்ளன. எனவே அச்சிட்ட நூலோடு ‘ஸுஷமா’வில் காணும் கூடுதலான மேற்கோள்களையும் சேர்த்துக் கொண்டால் வ்யாஸாசலீயத்தின் முழு வடிவம் தெரியக்கூடும்.

ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – பௌத்த-ஜைன நூல்களின் அத்தாட்சி

ஹிந்து மதப் புஸ்தகங்களில் சொல்லியிருப்பதை ஊர்ஜிதப்படுத்துவதாக பௌத்த – ஜைனர்களின் பழைய புஸ்தகங்களிலும் இருந்து விட்டால் அதற்கு ‘வால்யூ’ அதிகம்; நிச்சயமாக அந்த ஸமாசாரம் நிலை நாட்டப்பட்டுவிடுகிறது என்றே சொல்லலாம்.

ஆசார்யாள் கி.மு. 509-477 என்பதற்கு அந்த இரண்டு மதஸ்தர்களின் நூல்களிலும் ஆதாரமிருக்கிறதாகக் காட்டியிருக்கிறார்கள்.

‘நேபாள ராஜவம்சாவளி’ என்பது பௌத்தர்களிடமிருந்து கிடைத்திருப்பது. அதில் ஆசார்யாள் நேபாளத்துக்கு வந்ததாகவும் அப்போது வ்ருஷதேவ வர்மா என்பவன் ராஜாவாயிருந்ததாகவும் சொல்லியிருக்கிறது. இந்த வ்ருஷ தேவ வர்மாவின் காலத்தை ஸரியாகக் கலி 2600 (அதாவது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு) என்றே அதில் கொடுத்திருக்கிறது.

ஜைனப் புஸ்தகத்துக்கு வருகிறேன். மஹாவீரரின் சரித்ரத்தைப் பற்றி “ஜின விஜயம்” என்று புஸ்தகம் இருக்கிறது. காளிதாஸன் கால விஷயத்தின்போது குறிப்பிட்ட கோலாப்பூர் சாஸ்த்ரி அந்தப் புஸ்தகத்தை ஆராய்ந்து பார்த்தே பல தேதிகளை நிர்ணயம் பண்ணியிருக்கிறார். அதில் குமாரிலபட்டர், ஸுதன்வா, ஆசார்யாள் முதலியவர்களைச் சொல்லியிருக்கிறது. ஜைனப் புஸ்தகமானதால் திட்டியே சொல்லியிருக்கிறது! நிச்சயமாக அவர்களைப் புராதன கால புருஷர்களாகக் காட்ட வேண்டுமென்ற உத்தேசம் அந்தப் புஸ்தகாரருக்கு இருந்திருக்காது. ஆனாலும் அவர் காட்டுகிற தேதிகள் நாம் சொல்லும் கி.மு. பீரியடாகவே இருக்கிறதென்றால் அது நிஜம்தான் என்று ‘ப்ரூவ்’ ஆவதாகக் கொள்ளலாமல்லவா?

குமாரில பட்டர் பிறந்த நாளை ‘ஜின விஜய’த்தில் “ரிஷி-வாரஸ்-ததா-பூர்ணே மர்த்யாக்ஷௌ வாம-மேளநாத்” என்று ஸங்கேத ஸங்கியையையில் சொல்லியிருக்கிறது. ‘ஸப்தரிஷி’கள் என்பதால் ‘ரிஷி’ என்பது 7. ‘வார’மும் ஏழு நாட்களைக் குறிப்பதால் 7. ‘பூர்ணம்’ என்பது முழு வட்டமாக உள்ள ‘ஸைபர்’. ‘மர்த்யாக்ஷௌ’ என்றால் மநுஷர்களுக்கு உள்ள கண்களின் எண்ணிக்கையான 2. (தேவர்களுக்கு முக்கண், பன்னிரண்டு கண், ஆயிரம் கண் என்பது வரைகூடப் போவதால் ‘மநுஷக்கண்: மர்த்ய-அக்ஷம்’ என்று 2-ஐச் சொல்வது.) நான் சொன்ன நம்பர்களைச் சேர்த்துப் பார்த்தால் 7702. ‘வாமமேளனம்’ என்பது ‘திருப்பிப் போடுவது’. அப்படிப் போட்டால் 2077. ஜைனர்கள் ஒரு யுதிஷ்டிர சகத்தைப் பின்பற்றுவதாகவும், அது கலி 468-ல் ஆரம்பிப்பதாகவும் சொன்னேனல்லவா? இது ஜைனப் புஸ்தகம்தானே? அதனால் அந்த சகாப்தத்தின் 2077-ம் வருஷம்தான் குமாரிலபட்டர் ஜனனமாக இங்கே சொல்லியிருப்பது, அதாவது கலியின் 2545. இது கி.மு 557 ஆகிறது. ஆசார்யாள் கி.மு. 509 என்கிறோம். அப்படியானால் குமாரிலபட்டர் அவரைவிட 48 வயஸு பெரியவர் என்றாகிறது. ஆசார்யாள் யௌவனத்தில் குமாரிலரை ஸந்தித்தபோது அவர் வ்ருத்தராக இருந்தாரென்பதற்கு இது பொருத்தமாக இருக்கிறது. ஆசார்யாள் தம்முடைய பதினைந்தாம் வயஸில் அவரை ஸந்தித்தார் என்றுங்கூட அந்தப் புஸ்தகத்திலேயே இருக்கிறது! பதினாறு முடிந்தவுடன் ஸந்தித்ததை ஒரு வருஷம்தான் குறைத்துச் சொல்லியிருக்கிறது.

பச்சாத் பஞ்சதசே வர்ஷே சங்கரஸ்யாகதே ஸதி |
பட்டாசார்ய-குமாரஸ்ய தர்சநம் க்ருதவான் சிவ : ||

ஆசார்யாளைத் திட்டும் புஸ்தகத்திலும் “சிவ:” என்று அவருடைய அவதாரத்வத்தைச் சொல்லியிருப்பது விசேஷம்!

ஆசார்யாளின் ஸித்தி தினத்தையும் அதில் சொல்லியிருக்கிறது:

ரிஷிர்-பாணஸ்-ததா-பூமிர்-மர்த்யாக்ஷௌ வாம-மேளநாத் |
ஏகத்வேந லபேதாங்கஸ்-தாம்ராக்ஷஸ்-தத்ர வத்ஸர : ||

ரிஷி-7; பாணம்- (பஞ்சபாணம் என்பதால்) 5; பூமி- (ஒரு பூமி தானே உண்டு? அதனால்) 1 ; மர்த்யாக்ஷம் (மநுஷக்கண்) 2. அதாவது 7512. மாற்றிப் போட்டால் 2517. ஜைன யுதிஷ்டிர சகம் 2157. அதாவது கல்யப்தம் 2625. இதுதான் நாமும் சொல்லும் ஸித்தி காலம்! கி.மு. கணக்கில் 477.

ப்ரபவாதி வருஷங்களில் அதைத் “தாம்ராக்ஷம்” என்று குறிப்பிட்டிருக்கிறது. தாமிரம் ரக்த வர்ணமானது. அதனால் இது ரக்தாக்ஷி வருஷமென்றாகிறது. நாமும் அப்படித் தான் சொல்கிறோம்! ‘நந்தன’வில் பிறந்தவர் 32 வயஸில் விதேஹ முக்தி என்றால் அது ‘ரக்தாக்ஷி’யாய்த்தான் இருக்க வேண்டும்.

இப்படி, எல்லாம் ஒன்றுக்கொன்று ஸரியாகப் பொருந்தியிருக்கிறது.

ஆக, ஆசார்யாள் கி.மு. 509-ல் அவதரித்து 477-ல் ப்ரஹ்மீபாவம் அடைந்தாரென்று அவருடைய மடங்களில் சொல்வதற்கு ஹிந்து-ஜைன-பௌத்த புஸ்தகங்கள் பலவற்றின் ப்ரமாணம் இருக்கிறது. கர்ண பரம்பரையாகவும் தலைமுறை தலைமுறையாக இப்படி நம்பிக்கை தொடர்ந்து வந்திருக்கிறது. கி.பி. 788-820 என்றோ, வேறே விதமாகவோ சொல்கிற எந்தக் காலக் கணக்குக்கும் இத்தனை ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை1.


1 பம்பாயிலுள்ள வேதவ்யாச இதிஹாச ஸம்சோதன மந்திரத்தினர் ஓர் அறிஞர் குழுவினைக் கொண்டு “Study of Indian History and Culture” என்பதாக இந்திய சரித்திரத்தையும் கலாச்சாரத்தையும் ஆராய்ந்து பதினெட்டுப் பகுதிகள் கொண்ட நூல் வெளியிட்டு வருகின்றனர். அவர்களது கால நிர்ணயப்படி புத்தரின் காலம் கி.மு. 1885–1805. சந்த்ரகுப்த மௌர்யனின் ஆட்சி தொடங்கியது கி.மு. 1534. ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதரின் காலம் இங்கே கூறப்பட்டுள்ள கி.மு. 509-477 தான்.

ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – ஹாலன் – பூர்ணவர்மன் : பல ஆதாரங்களின் சான்றுகள்

கர்ண பரம்பரையாக வந்த நம்பிக்கை, மடங்களின் ஆதாரம் என்பவை தவிர இன்னும் சிலதும் (ஆசார்யாள் காலம் கி.மு. 6-5 நூற்றாண்டே என்பதற்கு ஆதரவாக இருப்பதைச்) சொல்கிறேன்.

புராணங்களை ஒன்று சேர்த்துப் பார்ப்பதில் நமக்குத் தெரியும் ‘ஜீனியாலஜி’ ப்படி (ராஜ வம்சங்களின்படி) கி.மு. 1500லிருந்து கி.மு. 1200 வரை (ஸுமாராகத்தான் சொல்கிறேன்) மௌர்யர்கள் ஆண்டபின் கி.மு. 900 வரை சுங்கர்களும், அப்புறம் சுமார் நூறு வருஷம் காண்வர்களும் ஆட்சி நடத்தி முடித்து, கி.மு. எட்டாம் நூற்றாண்டு ஆரம்பத்திலிருந்து ஐநூறு வருஷங்கள் “ஆந்த்ரர்”கள் என்று சொல்லப்படும் சாதவாஹனர்கள் ஆண்டிருக்கிறார்கள். ‘டெக்கானி’ல் (தக்காணத்தில்) தான் சாதவாஹனர் ஆட்சி ஏற்பட்டாலும் அது வடக்கேயும் பரவியிருந்ததால் அவர்களையே விசேஷித்து மகதாதிபதிகளாகவும் சொல்லியிருக்கிறது. ஆசார்யாள் காலம் கி.மு. ஆறாம்-ஐந்தாம் நூற்றாண்டு என்றால், அப்போது இந்த ஆந்தர வம்சத்தின் ஆட்சியே நடந்திருக்கவேண்டும்.

“குரு ரத்னமாலா”விலிருந்து இப்படியே கன்ஃபர்ம் ஆகிறது. காசியில் விச்வநாதர் தீண்டாதானாக வந்தபின் ஆசார்யாள் குமாரிலபட்டரைப் பார்க்க ப்ரயாகைக்குப் புறப்பட்டதைப் சொல்லுமிடத்தில், “ஹால ராஜனால் ஆதரிக்கப்பட்டவராக இருந்தபோதிலும் அவர் காசியை விட்டுப் புறப்பட்டார்” என்று வருகிறது1. ஹாலன் என்று சாதவாஹன (ஆந்த்ர) ராஜா இருந்ததைப் புராணப் பண்டிதர்கள், ஓரியன்டலிஸ்ட்கள் இருவருமே ஒப்புக்கொள்கிறார்கள். ஓரியன்டலிஸ்ட்களே அவனை கி.பி. முதல் நூற்றாண்டுகாரனாகச் சொல்லியிருப்பது கவனிக்க வேண்டிய விஷயம். அவனுக்குக் காசி வரை ஆதிக்யம் இருந்திருக்கக்கூடியதே என்றும் தெரிகிறது. தம் காலத்தில் ஸார்வபௌமன் இல்லை என்று ஆசார்யாள் சொல்லியுள்ள படி இந்த ஹாலனும் தேசம் பூராவும் பரவிய ராஜ்யத்தை ஆளாவிட்டாலும், கோதாவரி – கங்கை நதிகளுக்கு இடைப்பட்ட பெரிய பகுதியை ஆண்டிருக்கக்கூடும். அதனால் காசி அவன் ராஜ்யத்தில் இருந்திருப்பது ஸாத்யமே. ராஜா என்பதைவிடக் கவி என்று அவனுக்கு ப்ரஸித்தி உண்டு. ப்ராக்ருத பாஷையில் யதார்த்த வாழ்க்கையை இயற்கையாக வர்ணித்து இக்கால ‘ஸமூஹக் கதைகள்’ என்பவற்றைப் போல ஏழு சதகம் கொண்ட புஸ்தகம் எழுதியிருக்கிறான்.

கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து ஐநூறு வருஷம் ஆண்ட ஒரு வம்சத்தைச் சேர்ந்தவன் என்பதைவிடத் திட்டமாக நம்முடைய புராணாதிகளிலிருந்து இவனுடைய காலத்தைச் சொல்லமுடியுமா என்றால், முடியும். அப்படியொரு ஆராய்ச்சி செய்து (கே.ஜி.) நடேச சாஸ்த்ரி “ஜிஜ்ஞாஸா” ஸஞ்சிகையில் எழுதியிருக்கிறார். கலியுக ஆரம்பத்திலிருந்து மகதத்தை ஆண்டவர்களில் ஹாலன் 74-வது ராஜா என்று அவருடைய ஆராய்ச்சியிலிருந்து தெரிகிறது. ப்ருஹத்ரதனின் வழியாக ஏற்பட்ட பார்ஹத்ரத வம்சத்தில் ஆரம்பித்துக் கலியில் மகதத்தை ஆண்ட வம்சங்கள் ஒவ்வொன்றிலும் வந்த ராஜாக்கள், அவர்களுடைய ஆட்சிக் காலங்கள் ஆகியவற்றைப் புராணம் முதலியவற்றிலிருந்து நிர்ணயிக்கும்போது, 74-வது ராஜாவாக ஆந்த்ர வம்சத்து ராஜா ஒருவன் இருந்தானென்பது ஸரியாகவே இருக்கிறது என்கிறார்கள். ஆசார்யாளின் காலமான கலி வருஷம் 2600 வாக்கில் இவன் இருந்திருப்பதாகச் சொல்வதும் பொருத்தமாக இருக்கிறது2. எப்படியென்றால், சராசரியில் ஒரு ராஜா 35 வருஷ அளவுக்குப் பட்டத்திலிருந்தால் 74 × 35 என்பது 2600-க்கு ஸரியாகத்தானிருக்கும். சராசரி 35 வருஷமென்பது யதார்த்தமானதே என்று சொல்கிறார்கள். ஆனால் ஆசார்யாள் இவன் காலத்திலிருந்தாரென்பது நன்றாக ஒப்புக்கொள்ளும்படி இருக்கிறது.

இவ்வளவுக்கும் மேல், எதிர்பார்க்காததாக இன்னொரு ‘டிஸ்கவரி’யும் செய்திருக்கிறார்கள். என்னவென்றால் ‘வாயு புராண’த்தில் “தத: ஸம்வத்ஸரம் பூர்ணோ ஹாலோ ராஜா பவிஷ்யதி என்று வருகிறதாம். “அப்புறம் பூர்ணன் என்கிற ஹாலன் ராஜா ஆவான்” என்று அர்த்தம். அதாவது ஹாலனுக்கே பூர்ணன் என்று ஒரு பேர் இருந்திருப்பதாகத் தெரிகிறது. ப்ராம்மணர்கள் ‘சர்மன்’ போட்டுக்கொள்வது போல, ஸகல க்ஷத்ரியர்களும் தங்கள் பேரோடு ‘வர்மன்’ என்று சேர்த்துக் கொள்வார்கள். தக்ஷிணத்திலேயே பல்லவர்களில் மஹேந்த்ரவர்மன் பாண்டியர்களில் ஜடாவர்மன் என்றெல்லாம் பார்க்கிறோமல்லவா? அப்படி ‘பூர்ணன்’ என்ற பேருக்கு ‘வர்மன்’ சேர்ந்தால்? பூர்ண வர்மன்.

‘பூர்ணவர்மனுக்கு முன்னால் மலடிமகன் ஆண்டான்’ எனற ஆசார்யாள் ஸூத்ர பாஷ்யத்தில் சொல்லியிருப்பதை வைத்து, “அவன் யார்? அவனா இவனா?” என்று நவீனவழி ஆராய்ச்சிக்காரர்கள் தோண்டித் துருவியதாகப் பார்த்தோமல்லவா? “அந்த எவனுமே இல்லை. நம்முடைய பழைய புஸ்தகங்களில் சொல்லியிருக்கும் ஆந்த்ர ராஜனான ஹாலன் தான் அந்தப் பூர்ணவர்மன். எங்கள் கணக்குப்படி இவனும் கி.மு. 500; ஆசார்யாளும் அதே ‘பீரியட்’. ஒன்றுக்கொன்று கச்சிதமாக ஒத்துப் போகிறது” என்று ஒரு ‘டிஸ்கவரி’ நம்முடைய வழி வழி வந்த அபிப்ராயங்களை அநுஸரிப்பவர்கள் செய்திருக்கிறார்கள்.


1 ச்லோகம் 21.

2 கலியுகத்தில் முதலில் பார்ஹத்ரத வம்சத்தில் 22 மன்னர்கள். 23-லிருந்து 27 அடங்க ஐவர் ப்ரத்யோத வம்சம். 28-லிருந்து 37 அடங்கப் பதின்மர் சிகநாக வம்சம். 38-39 ஆகிய இருவர் நந்த வம்சம். 40-லிருந்து 51 அடங்கப் பன்னிருவர் மௌர்யர்கள், 52-லிருந்து 61 அடங்கப் பதின்மர் சுங்கர்கள். 62-லிருந்து 65 அடங்க நால்வர் காண்வ வம்சம். 66-லிருந்து 97 அடங்க முப்பத்திருவர் ஆந்திரர் என்படும் சாதவாஹனர். 74-வது மன்னன் ஆந்த்ர வம்சமென்றே ஆகிறது.

ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – முக்ய ஆதாரம் : சங்கர மடங்களிடையே ஒரே கருத்து

ஆசார்யாளின் காலம் கி.மு. 500-ஐ ஒட்டியது என்பதற்கு ஒரு முக்யமான ஆதாரம் இந்த (காஞ்சி) மடம், த்வாரகை மடம், புரி மடம் ஆகிய ஆசார்யாளின் மூன்று ஸ்தாபனங்களிலும் அந்தப் ‘பீரிய’டையே சொல்வதுதான்.

அறிஞர் என்று வெள்ளைக்காரர்களிடமும் பெயர் வாங்கிய ஸர் ஸுப்ரஹ்மன்ய ஐயர் ரொம்ப வருஷம் முந்தி “தியாஸஃபிஸ்ட்” பத்திரிகையில் த்வாரகா மட ரிகார்டுகளை முக்யமாகக் காட்டியே, ஆசார்யாள் கி.மு. 6-5 நூற்றாண்டுதான் என்று எழுதியிருந்தார். அன்னி பெஸன்ட் உள்பட தியாஸாஃபிகல் ஸொஸைடியினர் எல்லாரும் அந்தக் காலத்தையே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். த்வாரகா மடத்துக்காரர்கள் தங்களுக்கு ஆதரவாக, இந்த்ரனின் அம்சம் என்று சொன்னேனே, அந்த ஸுதன்வா என்ற ராஜா நம்முடைய ஆசார்யாளுக்கு ‘அட்ரஸ்’ பண்ணியதாக ஒரு தாம்ர பத்ர சாஸனம் (செப்பேடு) கூடத் தங்களிடம் இருப்பதாகச் சொல்லி அதன் வாசகத்தை முன்னே சொன்ன “விமர்சா” புஸ்தகத்தில் ‘பப்ளிஷ்’ பண்ணியிருந்தார்கள்1.

புரி ஜகந்நாதத்தில் ஆசார்யாள் ஸ்தாபித்த கோவர்தன மடத்தினரும் அவர் காலம் கி.மு. 6-5 நூற்றாண்டு என்றே சொல்கிறார்கள். அவர்கள் இன்று வரை2 140-க்கு மேல் வரிசையாகத் தங்கள் மடத்து ஸ்வாமிகளின் லிஸ்ட் வைத்திருக்கிறார்கள்.

அங்கே ஏன் காஞ்சியிலும் த்வாரகையிலும் இருப்பதைப் போலக் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு ஸ்வாமிகளைச் சொல்லியிருக்கிறது என்று கேள்வி வரும். காரணம் இது தான்: மற்ற மடங்களில் பால ப்ரஹ்மசாரிகளே பீடாதிபத்யம் பெற்றுவிடுவதாக இருக்க புரி மடத்தில் மத்யம வயஸுக்கு மேற்பட்டவர்கள்தான் ஸ்வாமிகளாகிறார்கள். அதனால் அவர்கள் பட்டத்தில் இருக்கும் ‘பீரியட்’ மற்ற மடங்களில் இருப்பதைவிட சராசரியில் ரொம்பவும் குறைவாக இருக்கிறது. இதனாலேயே அங்கே குரு பரம்பரை எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

பத்ரிநாதத்தில் ஆசார்யாள் ஸ்தாபித்த மடத்திற்கு ஜ்யோதிர் மடம் என்று பேர். அந்த மடத்தினர் “மடாநுசாஸனம்” என்பதாக (1946-ல்) ஒரு ப்ரசுரம் வெளியிட்டிருக்கிறார்கள். அதிலும் ஆசார்யாள் அவதாரம் கி.மு. 509 என்றே கண்டிருக்கிறது.

தக்ஷிணத்தில் ஒன்று (காஞ்சி) , கிழக்கு ஸமுத்ர எல்லையில் ஒன்று (புரி ஜகந்நாதம்) , மேற்கு ஸமுத்ர எல்லையில் ஒன்று (த்வாரகை) , வடக்கே ஹிமாசல எல்லையில் ஒன்று (பத்ரிநாதம்) என்று ஒன்றுக்கொன்று ஸுமார் ஆயிரம் மைல் தள்ளியுள்ள நான்கு சங்கர மடங்களிலும் அவர்களது மூல புருஷரின் காலம் கிறிஸ்து சகாப்தத்திற்கு ஐந்நூறு வருஷம் முன்னால் என்று ஏகோபித்துச் சொல்லி இருப்பதைக் கவனிக்க வேண்டும். ‘நம்முடைய ஆசார்ய பீடங்கள் ஒருமுகமாகச் சொல்வது நம்பகமில்லாதது. ஓரியண்டலிஸ்ட்களின் ரிஸர்ச்தான் ஸத்ய ப்ரமாணமானது என்று சொல்லலாமா?’ என்று அவரவரும் ஆலோசித்துப் பார்க்க வேண்டியது.

கி.மு. 44 என்று கர்நாடக தேசத்திலுள்ள அபிப்ராயம் கூட கி.பி. 788-ஐவிட கி.மு. 509க்குத்தான் கிட்டத்தில் இருப்பது. அப்படியிருக்கும்போது அதற்கும் (கி.மு. 44க்கும்) எண்ணூறு வருஷம் தள்ளி வெள்ளைக்காரர்கள் நிர்ணயம் பண்ணியதுதான் ஸரி என்று ஒரே தீர்மானமான முடிவு கட்டி விடலாமா?

இந்த மடங்களில் ஒன்றிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கும் நான் இதற்கு மேலே சொல்வது அழகாகாது. இவ்வளவு சொன்னதுகூட ஜாஸ்தியோ என்றால், மடம்-நீங்கள்-மடத்துச் சிஷ்யர்கள், எல்லாம் ஒரே குடும்பம்தான் என்ற பாத்யதையால் சொன்னேன்!


1 ‘விமர்சா’ வெளியானது 1872-ல், புரி மடத்தின் “க்ரந்த மாலா”வில் நான்காவது வெளியிடான “யதி தண்டைச்வர்ய விதானம்” என்ற நூலிலும் ஸ்ரீ சங்கராவதாரம் கி.மு. 509-ல் என்றே கூறப்பட்டுள்ளது.

2 1963

ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – த்வாரகா ஸ்ரீமடத்தின் சான்று

இந்த (காஞ்சி) மடத்து குரு பரம்பரை இருக்கட்டும். த்வாரகையில் ஆசார்யாள் ஸ்தாபித்த மடம் இருக்கிறதல்லவா? அதன் குரு பரம்பரையிலும் இப்படியே கிட்டத்தட்ட ஆதி ஆசாரியாள் காலத்தைச் சொல்லியிருக்கிறது. அங்கே இருந்த ஸ்வாமிகளில் முதலில் சிலருக்கு யுதிஷ்டிர சகாப்தப்படி வருஷங்கள் சொல்லியிருக்கிறது. (கி.மு. 3138ல் ஆரம்பிக்கும் ‘நம்முடைய’ யுதிஷ்டிர சகம்; ஜைன பௌத்தர்களுடையதல்ல.) இப்படி ஆரம்பத்தில் சில பட்டங்களுக்குச் சொன்ன பிறகு மற்றவர்களுக்கு (கி.மு. 57-ல் தொடங்கிய) விக்ரம சகப்படி வருஷம் தந்திருக்கிறது. அந்த லிஸ்டின்படி ஆசார்யாள் ஸித்தியானதாகச் சொல்லியிருக்கும் காலம் கிட்டத்தட்ட நாம் சொல்வதாகவே இருக்கிறது. அதே கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுதான். ஆனால் சில வருஷங்கள் முந்தியிருக்கிறது. 2500 வருஷ ஸமாசாரத்தில் சில வருஷம் முந்தி-பிந்தி என்பது பெரிய விஷயமேயில்லை. அதுவும் தவிர போன நூற்றாண்டில் அங்கே பீடாதிபதிகளாக இருந்த ஒருவரே ‘விமர்சா’ என்ற புஸ்தகத்தில் நாம் சொல்கிற கி.மு. 509-ஐயே அங்கீகரித்தும் எழுதியிருக்கிறார்.

இங்கே (காஞ்சி ஸ்ரீமடத்தில்) இதுவரை 68 ஸ்வாமிகள் இருந்திருக்கிறோமென்றால் அங்கே (த்வாரகை ஸ்ரீமடத்தில்) தற்போது (1963) இருப்பவர் 79-வது ஸ்வாமிகள் என்று வரிசையாக குரு பரம்பரை வைத்திருக்கிறார்கள். முதல் ஸ்வாமிகளிலிருந்து ஒவ்வொருவரும் இத்தனாம் வருஷத்திலிருந்து இத்தனாம் வருஷம்வரை பட்டத்தில் இருந்திருக்கிறார்களென்றும், நம் மடத்தைப் போலவே, கணக்கு வைத்திருக்கிறார்கள். இங்கே ஆரம்பத்தில் ஏழு ஸ்வாமிகள் அறுபது வருஷத்துக்கு அதிகமாகப் பட்டத்திலிருந்து கிறிஸ்து சகாப்த ஆரம்பத்துக்கு வருகிறோமென்றால், அங்கே அதற்குள் பதினோரு ஸ்வாமிகள் வந்துவிடுகிறார்கள்! அவர்களில் இரண்டு பேர்தான் அறுபது வருஷத்துக்குமேல் பட்டத்திலிருந்திருக்கிறார்கள்!

இப்படியிருக்கும்போது, ‘அறுபது அறுபது வருஷம் வெட்டிவிடலாம்’ என்றால் எப்படி ஸரியாகும்?

ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – மேற்படி கருத்துக்கு மாற்றுக் கருத்து

இதை அப்படியே ஏற்றுக்கொண்டுவிடுவதற்கில்லை. ரொம்பவும் பால்யத்திலேயே பட்டத்துக்கு வந்து, அந்த ஆதி காலத்தில் நல்ல யோக நியமங்களோடு வாழ்ந்தவர்கள் புருஷாயுஸ் என்கிற 120 வருஷம் ஜீவித்திருந்தால்கூட அதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை. அதனால் 80-90-100 வருஷம் என்பது மிகைப்படுத்தினதாக இருக்க வேண்டியதில்லை. நிஜமாகவே இருக்கும். நானே “போவேனா பார்!” என்று 55 வருஷமாக ஸ்வாமிகளாக உட்கார்ந்திருக்கவில்லையா1? ஆனபடியால் அந்தப் பூர்வாசார்யார்களின் பீடாதிபத்ய காலத்தில் கத்திரிக்கோல் போடத் தேவையில்லை!


1 1963-ல் கூறியது. தற்போது (1989) நம் பாக்யவசமாக ஸ்ரீசரணர்களது பீடாதிபத்யத்தின் 83-வது ஆண்டில் இருக்கிறோம். தொடக்க கால ஆசார்யர்களும் இதே போல நெடுங்காலம் பட்டம் வகித்திருக்கலாம் அல்லவா?

ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – கி.மு. முதல் நூற்றாண்டு என்னும் கருத்து

‘ஆசார்யாள் காலம் கி.பி. 788-820 இல்லை; கி.மு. 509-477ம் இல்லை. கி.மு. 44-12 தான்’ என்றும் ஒரு அபிப்ராயமிருக்கிறது. கன்னட தேசத்தில் இந்த அபிப்ராயம் இருந்து வந்திருக்கிறது. அதாவது நாம் சொல்வதைவிட 460-470 வருஷத்துக்குப் பிற்பாடு அவர்கள் ஆசார்யாளின் காலத்தைச் சொல்கிறார்கள்.

இந்த 460-470 வருஷ வித்யாஸத்திற்கு டி.எஸ். நாராயண சாஸ்த்ரி1 போன்றவர்கள் ஒரு காரணம் காட்டுகிறார்கள். அதாவது: ஜைனர்களும் பௌத்தர்களும் யுதிஷ்டிர சகம் என்று ஒன்றைப் பின்பற்றுகிறார்கள். இது கலியுகம் ஆரம்பித்து 468 வருஷத்துக்குப் பிறகு ஆரம்பிப்பது. யுதிஷ்டிரர் என்பது பாண்டவர்களில் மூத்தவரான தர்மபுத்ரர்தான். க்ருஷ்ணர் பரமபத ஆரோஹணம் செய்ததைக் கேள்விப்பட்டு உடனே அவரும் ‘மஹாப்ரஸ்தானம்’ என்பதாக ஜீவயாத்ரையை முடித்து ஸ்வர்க்கத்துக்குப் புறப்பட்டுவிட்டார். க்ருஷ்ணரின் பரமபத ஆரோஹணத்திலிருந்துதான் கலி பிறந்தது. அப்போது யுதிஷ்டிரர் 36 வருஷம் ஆட்சி நடத்தியிருந்தார். ஆகையால் நாம், அதாவது ஹிந்துக்கள், கலிக்கு 36 வருஷம் முன்னால் (கி.மு. 3138-ல்) யுதிஷ்டிர சகாப்தம் ஆரம்பிப்பதாகக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஜைன, பௌத்தர்கள் கலி ஆரம்பித்தபின் 468 வருஷத்திற்கு அப்புறமே தங்களுடைய யுதிஷ்டிர சகாப்தத்தை ஆரம்பிக்கிறார்கள். ‘யூனிஃபார்மா’க அவர்களுடைய புஸ்தகங்களில் அப்படித்தான் இருக்கிறது.

ஜைனமதம் ஆதியிலிருந்தே கன்னடதேசத்தில் வேர்பிடித்திருக்கிறது. மௌர்ய சந்த்ரகுப்தனே கடைசி நாளில் ஜைன பிக்ஷுவாகி ச்ரவண பௌகொளாவுக்கு வந்துதான் ப்ரயோபவேசம் பண்ணி (உண்ணா நோன்பிருந்து) உயிரை விட்டானென்று சொல்வதுண்டு. அதனால் அங்கே ஜைனர்கள் பின்பற்றும் யுதிஷ்டிர சகம் பிறரிடமும் வழக்குக்கு வந்தது என்றும், அதனால் கலியில் 2600 வருஷம் என்று ஆசார்யாள் காலத்தைச் சொல்லிருப்பதை ஜைன யுதிஷ்டிர சக 2600 என்று அவர்கள் நினைத்துக்கொண்டு 460-470 வருஷம் தள்ளிக்கொண்டுவந்து விட்டிருக்கலாம் என்றும் அவர் (நாராயண சாஸ்த்ரி) சொல்கிறார்.

‘கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்ற அத்தனை முன்னேயும் போகவேண்டாம். கி.பி. எட்டாம் நூற்றாண்டு என்று அத்தனை பின்னுக்கும் தள்ளவேண்டாம்; [சிரித்து] ‘காம்ப்ரமை’ஸாக இந்த கி.மு. முதல் நூற்றாண்டை வைத்துக்கொண்டு விடலாமே’ என்று சிலர் சொல்கிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் ஒரு காரணம்: நம்முடைய மடத்தின் ஆரம்ப காலத்து ஏழெட்டு ஸ்வாமிகள் 80-90-100 வருஷங்களுக்கு பீடத்திலிருந்ததாக நம்முடைய குரு பரம்பரையில் இருக்கிறது. ‘புண்ய ச்லோக மஞ்ஜரி’யில் அப்படித்தான் தேதிகள் கொடுத்திருக்கிறது. ‘இது ரொம்ப ஜாஸ்தியாகத் தெரிகிறது. ப்ராசீனத்வம் (தொன்மை) கொடுக்க வேண்டுமென்றே, வாஸ்தவத்தில் 20-30-40 வருஷம் பட்டத்திலிருக்கக்கூடியவர்களுக்கு ஒரு அறுபது வருஷ ஸைகிள் கூட்டிச் சொன்னதாகத் தோன்றுகிறது. நிஜமாக அவர்கள் ஸித்தியான ப்ரபவாதி வருஷப் பெயர், மாஸம், பக்ஷம், திதி ஆகியவற்றை மாற்றாமலே புண்ய ச்லோகங்களில் வைத்துக்கொண்டு, அவர்களுடைய பதவிக் காலத்தை ஸரியாக அறுபது, அறுபது வருஷம் சேர்த்துச் சொல்லியிருக்கலாம். தலா அறுபது வருஷமாக அந்த ஏழெட்டுப் பேருக்குக் குறைத்து விட்டோமானால் ஸரியாகிவிடும். அப்போது ஆசார்யாள் அவதாரம் கி.மு. 44 என்பதும் ஸரியாக வந்துவிடும்’ என்று சொல்கிறார்கள்.


1 “The Age of Sankara” என்ற நூலில்.

ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – நவீன ஆராய்ச்சியாளரிடமே ஒரு மாற்றுக் கருத்து

கி.பி. 788 என்பது ஸரியாயிருக்காது என்று நவீன கால ரிஸர்ச்காரர்களிலேயே சில பேர் சொல்லி அதற்கு ஒரு காரணம் காட்டுகிறார்கள்:

ஸூத்ர பாஷ்யத்தில் இரண்டு இடங்களில் ஆசார்யாள் சில ஊர்களின் பெயர்களை உதாரணமாகக் குறிப்பிடும்போது பாடலிபுத்ரத்தைச் சொல்லியிருக்கிறார்.

குப்தர்கள் செல்வாக்கிழந்து, அப்புறம் தானேச்வரம், கன்னௌசி ஆகிய தலைநகரங்களிலிருந்து கொண்டு ஆட்சி செய்த ப்ரபாகர வர்தனர், ஹர்ஷ வர்தனர் ஆகியவர்களின் நாளிலேயே பாடலிபுத்ரம் பெருமை இழந்துவிட்டது. ஹர்ஷனின் காலம் 600-650 (சுமாராக). அப்போது இங்கே வந்த ஹுவான்-த்ஸாங் பாடலிபுத்ரம் ஒரே Ruins-ஆக (இடிபாடுகளாக) இருப்பதாக எழுதியிருக்கிறார். அப்புறம் கி.பி. 750-வாக்கில் வெள்ளம் வந்து அந்த ஊரை நன்றாக அழித்து விட்டிருக்கிறது. நூற்றாண்டுகளுக்குப் பிற்பாடுதான் மறுபடி அது ஒரு மாதிரி எழும்பி, அப்புறம் பெரிசாகி, இப்போது ‘பாட்னா’வாக இருக்கிறது. ஆசார்யாள் காலம் என்னும் 788-820-ல் அந்த ஊரே இல்லை. தம்முடைய காலத்துக்கு 150-200 வருஷத்துக்கு முன்னாலிருந்தே பெருமைக் குன்றிப்போய், நாற்பது-ஐம்பது வருஷம் முந்திதான் வெள்ளம் அடித்துக்கொண்டு போய் விட்ட ஒரு ஊரையா, அது தற்காலத்திலும் இருந்த மாதிரி உதாரணம் காட்டியிருப்பார்? – என்று கேட்கிறார்கள்.

இதைவிட இன்னொரு முக்யமான பெரிய காரணமும் காட்டுகிறார்கள். எத்தனையோ நூற்றாண்டுகளாக இந்த தேசம் முழுதிலும் ஆசார்யாளின் பெரிய ஸாதனையாகச் சொல்வது அவர் பௌத்த மதத்தை நிராகரணம் செய்ததைத்தான். அவருக்குக் கொஞ்சம் முந்தி குமாரிலபட்டரும் கொஞ்சம் பிந்தி உதயனரும் நிறைய பௌத்த கண்டனம் பண்ணினார்களென்றாலும் ஆசார்யாளும் அந்தப் பணியை சக்திகரமாகச் செய்துதானிருக்கிறார். பாஷ்ய புஸ்தகங்களில் அதிகம் எழுதாவிட்டலும் ஊர் ஊராக வாதம் செய்யப்போனதும், ஊர் ஊராக நம்முடைய ஆலய வழிபாட்டுக்குப் புத்துயிர் கொடுத்தபோதும் அவர் பௌத்தத்தை வன்மையாக எதிர்த்தே அகற்றி இருக்கிறார். அவர் காலத்தில் பௌத்தம் ஜன ஸமூஹத்தைக் கலக்கும் அளவுக்கு வீர்யத்துடனிருந்த அவரே ஸூத்ர பாஷ்யத்தில் தெரிவித்திருக்கிறார்: வைநாசிகை: ஸர்வோ லோக ஆகுலீக்ரியதே1 -என்று வைநாசிகர்கள் என்பது பௌத்தர்களுக்கேதான் இன்னொரு பேர். அவர்கள் ஸர்வ லோகத்தையும் ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார். இதனால் அவருடைய காலத்தில் பௌத்தம் இங்கே ஒரு active force-ஆக இருந்தது என்று நிச்சயமாகிறது.

இதைக் கொண்டுதான் நவீன ஆராய்ச்சிக்காரர்களிலேயே ஒரு சிலர் கி.பி. 788 என்பது ஸரியில்லை என்று சொல்கிறார்கள். ஏனென்றால் அதற்கு முந்தியே இந்தியாவில் பௌத்தம் நன்றாகப் படுத்துப் போய்விட்டது. ஹர்ஷரின் காலத்தில்-788க்கு 150 வருஷம் முன் – வந்த ஹுவான்-த்ஸாங்கே பௌத்தம் க்ஷீணித்துப் போயிருப்பதைத் தெரிவித்திருக்கிறார். ஹர்ஷர் கொஞ்சம் புத்துயிரூட்டிப் பார்த்தார். ஆனால் அது ஜனஸமூஹம் முழுதையும் கவரவில்லை; பிக்ஷுக்கள், ஸமயவாதிகளை மட்டுமே கவர்ந்தது – சற்று முன்பே (இவ்விஷயம்) சொன்னேன். ஆசார்யாள் அவதாரம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு முடிவு என்றால், அப்போது வங்காளத்திலிருந்து வட இந்தியாவின் கணிசமான பகுதி அடங்கலாக ஆண்டு வந்த பால வம்ச ராஜாக்கள் பௌத்த மத அபிமான முள்ளவர்கள்தான். ஆனாலும் அவர்களும் தங்களளவில் அபிமானித்தார்களே ஒழிய, ‘லோகமெல்லாம் கலக்கப்படுகிறது’ என்று சொல்லும்படி இல்லை என்று நவீன ஹிஸ்டரிக்காரர்களே சொல்கிறார்கள். பௌத்தத்தில் அப்போது ரஹஸ்யமான தாந்த்ரிக உபாஸனைகளே ஜாஸ்தியாகிக் கொண்டு வந்து, அது இங்கே வேர் பிடிக்க முடியாமல் திபேத்துக்குப் போய்ச் சேர்ந்தது.

[சிரித்து] ‘சங்கர மடத்து சாமியார் என்னவோ ஸ்வபக்ஷமாக (தன் கட்சிக்கு ஆதரவாக)ப் பேசுகிறார்’ என்று நினைக்காமல் ஹிஸ்டரியில் ஸ்டான்டர்ட் புஸ்தகம் எதுவானாலும் எடுத்துப் பார்த்தால் தெரியும், ஆசார்யாளின் காலம் என்று அந்தப் புஸ்தகங்களில் சொல்லப்படும் காலத்துக்கு முந்தியே இந்தியாவில் பௌத்த மதம் “லோகத்தை கலக்குகிறது” எனத் தக்க force-ஆக (சக்தி வாய்ந்த அமைப்பாக) இல்லாமற்போய்விட்டதென்று.

நாலந்தா ஸர்வகலாசாலை போன்ற இடங்களிலும் சில பௌத்த மடாலயங்களிலும் மட்டுமே பிக்ஷுக்களிடமும், சில படிப்பாளிகளிடையிலும் அந்த மதம் இருந்து வந்தது. முஸ்லீம் படையெடுப்புவரைகூட அப்படித் தொடர்ந்து இருந்து வந்தது. ஜனஸமூஹத்தைப் போட்டுக் கலக்குவதாகவோ, ஆசார்யாள் போன்ற ஒருவர் அதை நிராகரணம் பண்ணியதுதான் அவருடைய மஹா பெரிய வெற்றிச் சாதனை கொண்டாடும் அளவுக்கோ அது நிச்சயமாக அந்தக் காலத்தில் சக்தியோடில்லை. ஆகையால் ஆசார்யாள் பௌத்தத்தோடு பெரிசாக யுத்தம் பண்ணினாரென்றால் அது shadow fight (நிழலுடன் சண்டை செய்வது) மாதிரிதானாகும்!

இந்தக் காரணம் சொல்லியே நவீன ஆராய்ச்சிக்காரர்களிலும் சில பேர் கி.பி. 788-829 என்பதை ஆக்ஷேபிக்கிறார்கள். அவர்களுடைய ஹிஸ்டரிப்படி, கி.பி. நாலாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் குப்த ஸாம்ராஜ்யம் தோன்றியபோதே நம் தேசத்தில் ஹிந்து மதம் பெரிய மறுமலர்ச்சி கண்டு பௌத்தம் க்ஷீணதசை அடைந்திருந்தது. ‘இதற்கு ஆசார்யாளே காரணமாயிருந்திருக்கலாம். அதனால் அவரை கி.பி. 800-லிருந்து ஐநூறு வருஷம் முற்காலத்திற்குக் கொண்டுபோக இடமிருப்பதாகத் தோன்றுகிறது என்று இவர்கள் சொல்கிறார்கள்.

“நாம் சொல்கிறபடி ஆசார்யாள் 2500 வருஷம் முந்தி என்றால் அவருக்குப் பிற்பாடும், ‘குப்தா ஏஜு’க்குப் பிறகுங்கூட அநேக பீரியட்களில் பௌத்தம் இந்த தேசத்தில் இருந்துதானே இருக்கிறது? எத்தனையோ விஹாரங்களும் சைத்யங்களும் கிறிஸ்து சகாப்தத்திலும் சில நூற்றாண்டுகள் வரையில் தோன்றியதாக அழுத்தமான சான்றுகள் இருக்கின்றனவே? அவர் பௌத்தத்தை அப்படியே 2500 வருஷம் முந்தியே வெளியேற்றிவிட்டாரென்றால் எப்படி?”

அப்போது அவர் அனுப்பியது வாஸ்தவம்தான். அவருடைய காலத்தில் 72 மாற்று மதங்களையும் அவர் இல்லாமல் பண்ணி ஜகதாசார்யாளாக விளங்கியது வாஸ்தவந்தான்.

ஆனாலும் இந்த தேசத்தில் எப்போதும் ரிலிஜன், ஃபிலாஸஃபி ஆகியவற்றில் ஸ்வதந்த்ரமாகச் சிந்தனை பண்ணுவதற்கும், அநுஷ்டானம் பண்ணுவதற்கும் தாராளமாக இடம் கொடுத்தே வந்திருக்கிறது. அதனால் ஆசார்யாளுக்கு அப்புறமும் அவ்வப்போது பௌத்தம், ஜைனம் முதலியவற்றில் சிந்தனையைச் செலுத்திப் புஸ்தகம் எழுதியவர்கள் தோன்றியிருக்கிறார்கள். அந்த மதங்கள் மறுபடி தலைகாட்டியிருக்கின்றன. பல ராஜாக்கள் அந்த மதங்களைத் தழுவியிருக்கிறார்கள். பெரிய பெரிய விஹாரங்களும் பள்ளிகளும் கட்டிக்கொடுத்திருக்கிறார்கள். ஆனாலுங்கூடப் பொது ஜனங்கள் எல்லாருடைய மதமாக பௌத்தமோ சமணமோ பிற்காலங்களில் இல்லவே இல்லை. அந்த மதங்களைச் சேர்ந்த பிக்ஷுக்கள், அபிமானித்த ராஜாக்கள், ‘யதா ராஜா ததா ப்ரஜா’ என்று பயந்துகொண்டு ராஜாக்களைப் போலவே பண்ணியே கொஞ்சம் ப்ரஜைகள், நிஜமான கன்விக்ஷனிலேயே அந்த மதங்களை ஏற்றுக்கொண்ட இன்னும் கொஞ்சம் பேர் — என்றெல்லாம் கூட்டிப் பார்த்தாலும்கூட மொத்த ஸமுதாயத்தில் ஒரு சின்னப் பங்குதான் ஆசார்யாளுக்குப் பிற்காலங்களில் அம்மதங்களை அநுஸரித்தது. இது நான் இட்டுக் கட்டிச் சொல்வதில்லை. முன்ஷி போன்றவர்கள் இப்போது ஹிஸ்டாரிகலாக ரிஸர்ச் செய்தே இப்படிச் சொல்வதுடன் வெள்ளைக்காரர்களிலேயே சில சரித்ராசிரியர்கள் ஸமீப காலமாக இதை ஒப்புக்கொண்டு எழுதி வருகிறார்கள்2.

ஆக, 2500 வருஷத்துக்கு உட்பட்ட பௌத்த சின்னங்கள் நம் தேசத்தில் இருந்திருப்பதால் ஆசார்யாளும் அதற்குள்தான் வந்திருக்க வேண்டுமென்பதில்லை. அவர் நாளில் அவர் நிராகரணம் பண்ணி, அப்புறம் சில நூற்றாண்டுகள் வைதிக ஹிந்து மதம் மாத்திரமே இங்கே இருந்துவிட்டு, அதற்கும் அப்புறம் அவ்வப்போது தலைதூக்கிய பௌத்தத்துக்கு அடையாளங்கள்தான் நாம் பார்ப்பது. பிற்காலங்களிலும் நம்முடைய மதபுருஷர்கள் பலர் பெரியவர்களாகத் தோன்றி அவைதிக மதங்களைக் களைந்திருக்கிறார்கள். க்ருஷ்ணர் தர்ம ஸம்ஸ்தாபனம் பண்ணியும் அப்புறம் மறுபடி அதர்மம் ஓங்கியபோது ஆசார்யாள் அவதரித்து ஸரிப்பண்ணவேண்டி வரவில்லையா? அப்படியே ஆசார்யாளுக்குச் சில நூற்றாண்டுகள் பிற்காலத்திலிருந்தும் ஏற்பட்டது. முடிவாக ஒரு மாதிரி கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பௌத்தம் நன்றாக க்ஷீணித்து, பிக்ஷு ஸங்கம், ஸர்வ கலாசாலைகள் ஆகியவற்றில் மட்டும் இருந்து வரும்படி ஆயிற்று. இதற்கும் நூற்றாண்டு தள்ளியே ஆசார்யாள் அவதாரம் செய்ததாக வெள்ளைக்காரர்கள் சொல்லி அவர்தான் ப்ரமாதமாக பௌத்தத்துடன் மோதி ஜயித்தாரென்றால் அது ஒன்றுக்கொன்று ஒவ்வவில்லை என்பதுதான் பாயின்ட்.

கி.பி. எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டில் ஏதோ கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த பௌத்தத்தையும் களைந்து, அதோடு ஹிந்து மதம் என்று சொல்லிக்கொண்டே மறுபடிக் கிளைத்திருந்த பல அவைதிக வழிகளையும் அகற்றியவர்தான் அபிநவ சங்கரர்; அதோடு தூரக் கிழக்கு நாடுகள் முதலியவற்றிலும் நம் மதம் பரவச் செய்தவர் என்று தெரிந்துகொள்ள முடிகிறது.


1 II. 2.26

2 “தெய்வத்தின் குரல்” நான்காம் பகுதி, ‘குரு’ என்ற உரையில் ‘பௌத்தம் – சமணம்; தேசிய ரீதியில் என்றுமே ஊன்றவில்லை‘ என்ற பிரிவு பார்க்க.

ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – “அபிநவ சங்கரர்”

அவர்களுடைய ஆர்க்யுமென்டில் இன்னும் இரண்டு பாக்கி இருக்கின்றன. கம்போடியக் கல்வெட்டில் ஒரு ‘பகவத் சங்கர’ரின் காலில் அறிஞருலகம் முழுதும் தாமரையை வண்டுகள் மொய்ப்பதுபோலத் தங்களுடைய சிரஸுகளைத் தாழ்த்தியிருப்பதாகச் சொல்லியிருக்கிறதே, அது நம்முடைய ஆதி சங்கர பகவத்பாதாளைத் தவிர யாராயிருக்க முடியும்? “கல்வெட்டிலிருந்து அந்தக் காலம், கி.பி. எட்டாம் நூற்றாண்டின் முடிவு பாகத்திலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப பாகவம் வரை ஆசார்யாளின் காலம்’ என்பதற்கும் ஒத்துப்போகிறதே! என்ன சொல்கிறீர்கள்?” என்பது ஒரு ஆர்க்யுமென்ட். இன்னொன்று நம் ஊரிலேயே வழங்கும் ஸங்கேதக் கணக்கு ச்லோகம் – கலியில் 3889-ம் வருஷமான கி.பி. 788-ஐச் சொல்லும் “நிதிநாகேபவஹ்ந்யப்தே” ச்லோகம்.

இந்த இரண்டும் ஒன்றையே, ஒருவரையே குறித்ததாகத் தெரிவதால் இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதிலாகச் சொல்லி விடலாம்.

ஆசார்ய பீடங்களில் ஆதி பகவத்பாதாளுக்கு அப்புறமும் மஹாபெரியவர்களாக லோக ப்ரஸித்தியுடனிருந்த சில ஸ்வாமிகள் வந்திருக்கிறார்கள். இப்போது ஆசார்யாளின் க்ரந்தங்களாக, ஸ்தோத்ரங்களாக வழங்கி வருகிறவற்றில் சில இப்படிப்பட்டவர்களால் செய்யப்பட்டிருக்கலாம் என்றேன் அல்லவா? நமக்கு நல்ல சரித்ர ஆதாரங்களுடன் தெரிபவராக வித்யாரண்ய ஸ்வாமிகள் இருக்கிறார். பதிநாலாம் நூற்றாண்டில் அவதாரம் பண்ணிய அவர்தான் விஜயநகர ஸாம்ராஜ்யம் ஏற்படுவதற்கே காரணமாயிருந்தவர். அவர் அவதாரம் செய்திருக்காவிட்டால் தக்ஷிணதேசம் முழுவதையும் துருஷ்க மதம் கபளீகரம் பண்ணியிருக்கும். துருஷ்கர்களை அடக்கி ஹிந்து ஸாம்ராஜ்யம் ஏற்பட வழி வகுத்தார். ஹிந்து மதத்திலேயே அப்போது கர்நாடகம், அதையொட்டிய ஆந்த்ர ஸீமைப் பகுதிகள் ஆகியவற்றில் மத்வ மதமும் வீரசைவமும் அத்வைதத்தைக் கபளீகரம் பண்ணாமலும், அவர்தான் ரக்ஷித்துக் கொடுத்தார். ச்ருங்கேரி மடத்துக்கு ஒரு புது சோபையை உண்டாக்கித் தந்து இன்னும் அநேக மடங்களையும் அந்தப் பிரதேசத்தில் ஸ்தாபித்து நம் ஆசார்யாளின் ஸம்ப்ரதாயம் தழைத்தோங்கும்படிச் செய்தார். ‘பஞ்சதசீ’, ‘ஜீவன் முக்தி விவேகம்’, ‘வையாஸிக ந்யாயமாலை’ முதலான அநுபவ க்ரந்தங்களான உசந்த அத்வைத நூல்களை உபகரித்த அவரேதான் பூர்வாச்ரம ஸஹோதரருடன்கூட நாலு வேதங்களுக்கும் பாஷ்யம் ஏற்படவும் காரணமாயிருந்தவர். ஸாயண பாஷ்யம் என்று அதற்குப் பேர். அவரை ஆசார்யாளுக்குள்ளது போலவே ஸ்தோத்ரங்களும் பிருதாவளிகளும் சொல்லி அந்த மடங்களில் கொண்டாடுகிறார்கள்.

இம்மாதிரி இங்கே “அபிநவ சங்கரர்” என்றே ப்ரஸித்தி பெற்ற ஒருவர் இருந்திருக்கிறார்1. ‘அபிநவ’ என்றால் ‘மறு அவதாரம்’ என்று அர்த்தம். ஆதி ஆசார்யாளே இவராக மறுபடி வந்திருக்கிறார் என்று அவரை உலகம் கொண்டாடியிருக்கிறது. அதனால்தான் “தீர சங்கரேந்த்ர ஸரஸ்வதி” என்ற அவருடைய பெயர் மறைந்துபோய் “அபிநவ சங்கரர்” என்றே வழங்கலாயிற்று. ‘சங்கரேந்த்ர விலாஸம்’ என்பதும் ‘ஸத்குரு ஸந்தான பரிமாளம்’ என்பதும் அவருடைய சரித்ரத்தைச் சொல்லும் இரண்டு புஸ்தகங்கள்.

ஆசார்யாளுக்கு அப்புறம் சில நூற்றாண்டுகள் வைதிக மதம் மட்டும் கொடி கட்டிப் பறந்தாலும் அப்புறம் மறுபடி பௌத்தம் முதலிய மதங்களும், காபாலிகம் முதலான வாமசார மதங்களும் கிளம்பின. முன்மாதிரி இவை ஜன ஸமூஹத்தில் பெரிய செல்வாக்குப் பெறமுடியாதபடி ஆசார்யாள் போட்டுக் கொடுத்த அஸ்திவாரமே உறுதியாயிருந்தது. ஆனாலும் ராஜாக்களிலும், தத்வ வாதத்தில் ப்ரியமுள்ளவர்களிலும் சிலர் பௌத்தத்துக்கு ஆதரவு தந்ததால் அது கணிசமான following பெற்ற மாதிரித் தெரிந்தது. நாகரிகம் போதாதவர்களும், ‘ரஹஸ்ய அநுஷ்டானம்’ என்று பெத்தப் பெயர் கொடுக்கும் சில பேரும் வாமாசார மதங்களில் போனார்கள். ஆசார்யாளுக்கு 1300 வருஷத்துக்கப்புறம் அபிநவ சங்கரர் தோன்றி ஆசார்யாளை போலவே தேசம் பூராவும் ஸஞ்சாரம் பண்ணி, அந்த மற்ற மதங்களை நிராகரணம் செய்து ஸர்வஜ்ஞ பீடமும் ஏறியிருப்பதாக அவருடைய சரித்ரங்களிலிருந்து தெரிகிறது. அவர் அந்நிய தேசங்களுக்கும் போய் தர்மோத்தரணம் செய்தாரென்றும் சொல்லியிருக்கிறது. சைனாக்காரர்கள், துருஷ்கர்கள், பாஹ்லீகர்கள் (Balkh என்று ஆப்கானிஸ்தானில் உள்ள இடம்) முதலியவர்கள்கூட அவரைத் தங்கள் ஆசார்யராகப் பூஜித்தார்கள் – சீன – துருஷ்க – பாஹ்லிகாத்யைஸ் – ஸ்வபராசார்யதயா ஸ்துதம் என்று “குரு ரத்ந மாலா” சொல்கிறது. (ச்லோகம்-66)

இவரையும் ஆதிசங்கர பகவத் பாதரையும் ஒன்றாகவே நினைத்துத்தான் சில சங்கரவிஜய புஸ்தகங்களிலேயே மாறுபாடான விஷயங்களைச் சொல்லியிருக்கக்கூடும்.

ஆதி ஆசார்யாளின் அவதார காலத்தைச் சொல்வதாக நினைக்கப்படும் “நிதிநாக”ச்லோகமும் வாஸ்தவத்தில் இந்த அபிநவ சங்கரரின் அவதாரத்தைச் சொல்வதுதான் என்று பண்டிதர்கள் அபிப்ராயப்படுகிறார்கள்…

“ஸுஷமா” வ்யாக்யானத்தில்2 சங்கரேந்த்ர விலாஸத்திலிருந்து இவருடைய அவதார காலத்தை quote செய்திருக்கிறது. அதுவும் ஸங்கேத ஸங்கியையில்தான் இருக்கிறது.

“சேவதி-த்விப-திசா- (அ)நல வர்ஷே திஷ்ய” என்பது இங்கே கொடுத்துள்ள காலக் கணக்கு3. ‘சேவதி’ என்றால் நிதி. ‘நவநிதிகள்’ என்பதால் அது 9-ஐக் குறிக்கும். ‘த்லிபம்’-யானை. ‘அஷ்ட கஜங்கள்’ என்பதால் அது 8. ‘திசா’ என்றால் திசைதான். திசைகளும் 8 தானே? ‘அநல’-அக்னி. அது 3. அதனால் இந்த எண் 9883 என்றாகும். திருப்பிப் போட்டால் 3889. ‘திஷ்ய’ என்பது கலி. கலியில் 3889-ம் வருஷம். கி.பி. 787-788.

இப்போது ஹிஸ்டரி புஸ்தகங்களில் சொல்லும் கி.பி. 788 அபிநவ சங்கரரின் அவதார வருஷமே என்று ஏற்படுகிறது! இதே வருஷத்தைத்தான் “நிதிநாக”ச்லோகத்திலும் சொல்லியிருக்கிறது! அது ஆதி ஆசார்யாளின் அவதார காலமாக்கும் என்று நம்மிலேயே பலபேர் பல காலமாக நினைத்து வந்திருக்கிறார்கள்!

இதை அடிப்படையாக்ககொண்டே ஓரியன்டலிஸ்ட்கள் தங்களுடைய theory-ஐ build பண்ணியிருக்கிறார்கள்.

பக்கபலமான இன்னொரு பாயிண்டும் இருக்கிறது. “நிதிநாக”ச்லோகம், அபிநவ சங்கர சரித்ர ச்லோகம் இரண்டிலும் கல்யப்தம் (கலியில் இத்தனாம் வருஷம் என்று) சொல்லியிருப்பதோடு ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரத்தில் (ப்ரபவ முதலான அறுபது வருஷங்களில்) இன்ன வருஷம், மாஸம், திதி என்றும் சொல்லியிருக்கிறது. அதுவும் முழுக்க ஒன்றாகவே இருக்கிறது! விபவ வருஷம், வைசாக மாஸம், சுக்ல பக்ஷ தசமி என்றே இரண்டிலும் இருக்கிறது!

ஆதி ஆசார்யாள் ஜனனம் நந்தன வருஷம் என்று மற்ற ஆதாரங்களிலிருந்து தெரிகிறது. இங்கேயோ விபவ வருஷம் என்று இருக்கிறது. நாம் சொல்கிற கி.மு. 509 ஒரு நந்தன வருஷமாகவும், அவர்கள் சொல்லும் கி.பி. 788 ஒரு விபவ வருஷமாகவுமே இருக்கின்றனவென்றும் கணக்குப் போட்டுச் சொல்கிறார்கள்.

அதைவிட இன்னொன்று : தெய்விக புருஷர்கள் எந்த ப்ரபவாதி வருஷத்தில் பிறந்தார்கள் என்று பெருமாபாலும் தெரியவில்லை. ராமர் எந்த வருஷம்? க்ருஷ்ணர் எந்த வருஷம்? பண்டிதர்கள் வேணுமானால் மண்டையை உடைத்துக்கொண்டு கண்டு பிடிக்கலாமே தவிர லோகத்தில் ஜயந்தி என்று கொண்டாடும்போது வருஷத்தை யாரும் நினைப்பதில்லை. மாஸம், பக்ஷம், திதி ஆகியவற்றை வைத்தே ஒவ்வொரு வருஷமும் ஜயந்தி கொண்டாட வேண்டியிருப்பதால் இவைதான் முக்யமாகத் தெரிகின்றன. ராமர் சைத்ர மாஸ சுக்ல பக்ஷநவமி, க்ருஷ்ணர் ச்ராவண மாஸ க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி-என்றிப்படி. அதிலும் திதிக்குத்தான் ரொம்ப முக்யம், ரொம்ப ப்ரஸித்தி-ராம நவமி, கோகுலாஷ்டமி, விநாயக சதுர்த்தி, ஸ்கந்த ஷஷ்டி என்பதாக ஜயந்தியின் பேரிலேயே திதிதான் இருக்கிறது.

ஆசார்யாள் விஷயமாக, இன்றைக்கும் தேசம் பூராவிலும் அவருடைய ஜயந்தி வைசாக மாஸத்தில் சுக்ல பக்ஷ பஞ்சமியில்தான் கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு ச்லோகத்திலுமோ பஞ்சமியைச் சொல்லாமல் தசமியைச் சொல்லியிருக்கிறது. அதனால் அந்த தசமியை அவதார தினமாகக் கொண்டவரும் பஞ்சமியை அவதார தினமாகக் கொண்டவரும் வெவ்வேறான இரண்டு பேர் என்று வைத்துக்கொள்ள இடமேற்படுகிறது.

நடைமுறையில் திதிதான் ஒரு ஜயந்திக்கு முக்யமாயிருந்தது, ப்ரபவாதி வருஷத்தையோ, கலியில் எந்த வருஷம் என்றோ எவரும் நினைத்துப் பார்க்காமலிருக்க, இங்கேயோ திதியை விட்டு விட்டு கலியில் இன்ன வருஷம் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு 788-தான் என்று நிர்ணயம் பண்ணியிருப்பது கொஞ்சம் ஆச்சர்யமாயிருக்கிறது! திதி tally-யாவது அவச்யம்.

இந்தக் காரணங்களைக்கொண்டு கி.பி. 788 என்று ஓரியண்டலிஸ்ட்கள் நிர்ணயித்திருப்பது அபிநவ சங்கரரை ஆதி சங்கரராக நினைத்ததால்தான் என்று கி.மு. 509 என்று நம்புகிறவர்கள் அபிப்ராயப்படுகிறார்கள்.

பாதுகாஸித்தி பெற்று அந்நிய தேசங்களிலும் திக்விஜயம் செய்த அபிநவ சங்கரரையே கம்போடியாக் கல்வெட்டில் இந்த்ரவர்மன் தன்னுடைய குருவான சிவஸோமரின் குரு என்று சொல்கிறானென்றும் கருதுகிறார்கள்.

ஆசார்யாளின் ப்ரதான சிஷ்யர்களாக இருந்த நாலு பேரோடு ப்ருத்வீதவர், சித்ஸுகர், சித்விலாஸர், ஞானகந்தர், விஷ்ணுகுப்தர், அனந்தானந்தர், உதங்கர் (இவரேதான் தோடகர் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு), ஷண் மதங்களைப் ப்ரசாரம் பண்ணிய ஆறுபேர் என்றெல்லாமும் அநேகம் சிஷ்யர்களின் பேர்கள் ‘சங்கரவிஜய’ங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. சிவஸோமன் என்ற பெயர் எங்கேயும் காணோம். அந்நிய தேச ராஜாவின் குருவாயிருந்த ஒருத்தரின் பெயர் இப்படி விட்டுபோயிருக்குமா?

ஆராய்ச்சி என்று போகாமல் அநுக்ரஹம் என்று போகும்போது ‘ஆதி’ என்றும் ‘அபிநவம்’ என்றும் வித்யாஸப்படுத்தவே கூடாதுதான். ‘ஆதி’யினுடைய புது அவதாரமே இவர் என்பதால்தானே ‘அபிநவ’ என்பது? அதனால் இவருக்கு உண்டான ப்ரக்யாதி எல்லாம் அவரைச் சேர்ந்ததாகவே சொல்லிவிடலாம்4. ஈச்வராவதாரமாக முதலில் வந்த ஆதி ஆசார்யாளிடமே அனன்ய பக்தியாகப் பண்ணும்போது அவருக்கும் அபராவதாரமான (அவரே எடுத்த பிற்கால அவதாரமான) இன்னொருவரை அஸலே அவராக வைத்துவிடலாம். எல்லா ஸ்துதியும் அந்த ஆதி புருஷருக்கே என்று வைத்துப் பார்க்கும்போது சிவஸோமன் அவருடைய சிஷ்யரே என்றால் நேர் சிஷ்யரென்று அர்த்தம் பண்ணாமல் சிஷ்ய பரம்பரையில் வந்தவர் என்று வைத்து விடலாம். இப்போது நாம்கூட, ‘நாங்கள் ஆசார்யாள் சிஷ்யர்கள்’ என்று சொல்லிக்கொள்ளவில்லையா? அது மாதிரி நமக்கு 1200 முன்னாலிருந்த கம்போடிய ராஜகுருவை ஏன் சொல்லக் கூடாது? இதெல்லாம் பக்தி பாவத்தில். இப்போது நாம் பக்தியை மூட்டை கட்டி வைத்துவிட்டு கால நிர்ணயம் என்றல்லவா ஆராய்ச்சிச் சர்ச்சையில் இறங்கியிருக்கிறோம்? அதனால் அவர்-இவர் என்று வித்யாஸப்படுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது!


1 ஸ்ரீகாஞ்சி மடத்தின் முப்பத்தெட்டாவது பீடாதிபதிகளாக விளங்கியவர்.

2 61-வது ச்லோகம்.

3 முழு ச்லோகம் வருமாறு:
ஹாயநே(அ)த விபவே வ்ருஷமாஸே சுக்லபக்ஷ தசமீ திந மத்யே |
சேவதி த்விப திசாநலவர்ஷேதிஷ்ய ஏ நமதஸோஷ்ட விசிஷ்டா ||

4 இந்த ரீதியில்தான் போலும், ஆதி அச்சார்யாளைப் பற்றி ஸ்ரீசரணர்கள் குறிப்பிட்டுள்ள ஸந்தர்பங்கள் பலவற்றில் கம்போடியக் கல்வெட்டு ச்லோகத்தை அவருக்கான துதிபோலவே மொழிந்திருக்கிறார்கள்.

ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – பூர்ணவர்மன் விஷயம்

வெள்ளைக்காரர்கள் கால நிர்ணயம் பண்ணியிருப்பதற்குச் சொல்லும் அடுத்த பாயின்டைப் பார்க்கலாம். ஸூத்ர பாஷ்யத்தில் ஆசார்யாள் பூர்ணவர்மன் என்று ஒரு ராஜாவின் பெயரைச் சொல்லி, “அவனுக்கு முன்னால் ஒரு வந்த்யா புத்ரன் (மலடி மகன்) ஆண்டான் என்று சொல்வது எவ்வளவு அஸம்பாவிதம்” என்று சொல்வதைக் கொண்டு, ‘மகதத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆட்சி நடத்தியவன் ஒரு பூர்ணவர்மன்; அவனைத்தான் அவர் குறிப்பிடுகிறார்’ என்று காட்டுவதாகச் சொன்னேன்.

ஆனால் நிஜமாகவே இருந்த ராஜாவைத்தான் அவர் சொல்லியிருக்கவேண்டும் என்று அடித்துச் சொல்ல முடியுமா? முடியாது. ஜெனரலாக மநுஷ்யர்களைக் குறிப்பிடும்போது, ‘யாரோ ராமன் – கிருஷ்ணன் அல்லது சேஷன் – சுப்பன்’ என்று நாம் பேச்சிலே சொல்கிறோம். Tom, Dick and Harry என்று இங்கிலீஷில் சொல்கிறார்கள். இந்தப் பெயர்கள் வாஸ்தவத்தில் உள்ள எவரையும் குறிப்பிடுவன அல்ல. உதராணத்திற்கு ஏதோ பெயர் காட்டணும்; இந்தப் பேர்களைக் காட்டுகிறோம்! ஆசார்யாளே இப்படி பாஷ்யங்களில் தேவ தத்தன், யஜ்ஞ தத்தன் என்றெல்லாம் பெயர்கள் சொல்லியிருக்கிறார். அவர்கள் யார் என்று இது மட்டும் யாரும் ஆராய்ச்சி பண்ணிப் பார்க்கவில்லை! பொதுப் பேர்கள் என்றுதான் ஸரியாகப் புரிந்துகொண்டு, அதோடு விட்டிருக்கிறார்கள். அப்படி (பூர்ணவர்மனைச் சொல்லும்) இந்த இடத்திலும் இருக்கலாம். ஸத்தை அஸத்தோடு (உள்ளதை இல்லாததோடு) ஸம்பந்தப்படுத்த முடியாது, அப்படிச் செய்வது அஸம்பாவிதம் என்று காட்ட வருகிறார். அப்போது பூர்ணவர்மன் என்ற பெயரில் பொதுவாக ஒரு ராஜாவைக் குறிப்பிட்டு, அந்த யாரோ ஒரு ராஜாவுக்கு முன்னால் என்றைக்குமே இருக்கமுடியாத — அ-ஸத்தான — ஒரு மலடி மகன் இருந்தான் என்றால் பொருந்துமா என்று கேட்கிறார். ஆகையால் இவனுக்கு ‘ஸத்’தைக் குறிப்பதான பேர் வைத்தால் ரொம்பப் பொருத்தமாயிருக்குமல்லவா? அ-ஸத் என்பது சூன்யம். ஸத் அதற்கு நேரெதிர் என்றால் சூன்யத்துக்கு நேரெதிர் பூர்ணம்தானே? அதனால் ‘பூர்ணவர்மன்’ என்று போட்டிருப்பார் என்று சொல்லலாம்.

பூர்ணவர்மன் என்கிற மகதராஜா தீவிரமான பௌத்தனென்று ஹுவான் த்ஸாங் சொல்வதிலிருந்து தெரிகிறது. புத்த கயையில் போதி வ்ருக்ஷத்தை மறுபடி துளிர்க்கப் பண்ணியவன் என்று சொன்னேனல்லவா? வேதாந்தத்தை நிலை நாட்டிய ஆசார்யாள் ஒரு பௌத்த ராஜாவை ஸூத்ர பாஷ்யத்தில் குறிப்பிட வேண்டிய அவச்யமில்லை. பௌத்த நூல் எதிலாவது அவன் பெயர் சொல்லியிருக்கிறதென்றால் அர்த்தமுண்டு. அப்படியாவது அவன் நிகழ்காலத்திலிருந்த ஒரு பெரிய சக்ரவர்த்தியாயிருந்தாலும் குறிப்பிட்டிருக்கலாம். அதுவுமில்லை. அவனோ கி.பி. 650-ஐ ஒட்டி இருந்தவன். அதுவும் ஒரு சிற்றரசனாகவே இருந்தவன். ஆசார்யாளின் காலம் என்று அவர்கள் சொல்வதோ கி.பி. 800ஐ ஒட்டி. அதாவது அவனுக்கு 150 வருஷத்திற்கு அப்புறம். ஸூத்ர பாஷ்யம் படிக்கிறவர்கள் 150 வருஷம் முந்தி இருந்த ஒரு பௌத்தச் சிற்றரசனையா நினைவு வைத்துக்கொண்டிருப்பார்கள்? ஆசார்யாள் அவனை எதற்குக் குறிப்பாக நினைவு வைத்துக்கொண்டு குறிப்பிடணும்? [சிரித்து] சூன்யவாதியான பௌத்த ராஜாவுக்குப் பூர்ணவர்மன் என்று பேர் இருப்பதை வைத்து ஹாஸ்யம் வேண்டுமானால் பண்ணியிருக்கலாம்! ஆனால் இங்கே ஆசார்யாள் ஜாடைமாடையாகக் கூட அப்படியொன்றும் பண்ணாமல் factual-ஆகத்தான் சொல்லிக்கொண்டு போகிறார்.

ஒன்றும் யோசனை செய்யாமல் ‘ரிஸர்ச்’ என்று எதையாவது சொல்லிவிட்டால் கேட்பவர்களும் யோசனை செய்யாமல் ‘ஆமாம்’ போட்டுவிடுவதாக இருக்கிறது.

அதனால்தான் அவர்களும் தீர்க்காலோசனை பண்ணாமல் எதையும் கேட்கலாமென்று சில ஆர்க்யுமென்ட்கள் எழுப்பியிருக்கிறார்கள். இப்படியொன்று: ‘ஹுவான்-த்ஸாங் சங்கரர் என்ற பெயரையே சொல்லவில்லையே! இவர் எப்படி அவருக்கு முந்தி இருந்திருப்பார்?’ என்பது. ஹுவான்-த்ஸாங்குக்கு பௌத்த மதத்தில்தான் அபிமானம். அவர் உபநிஷத்துக்கள், ப்ரஹ்ம ஸூத்ரம், கீதை என்ற நம்முடைய ப்ரஸ்தான த்ரயங்களைக்கூடத்தான் குறிப்பிடவில்லை. ஆனால் இந்த ரிஸர்ச்காரர்களே அவையெல்லாம் அவருக்கு எத்தனையோ ஸெஞ்சுரி முற்பட்டவைதானென்று ஒப்புக் கொண்டிருக்கிறார்களா, இல்லையா?