தெய்வ பேதம் நீக்கியது; ‘பஞ்சாயதன’ மூர்த்திகள்

இன்னொன்று விசேஷமாக அவர் பண்ணியது: எத்தனையோ மஹான்கள், மஹாபக்தர்கள் இஷ்ட தெய்வம் என்று ஏதாவது ஒன்றைத்தான் ஸ்தோத்ரித்திருப்பார்கள்; அதன் உபாஸனையைத்தான் பரப்பியிருப்பார்கள். நம்முடைய ஆசார்யாள்தான் அத்தனை தெய்வங்களையும் ஸ்தோத்ரித்து, அத்தனை தெய்வங்களின் வழிபாட்டுக்கும் ‘ப்ரபஞ்ச ஸார தந்த்ரம்’ என்ற நூலில் வழிமுறைகளை விளக்கினார். அந்த ஞானிதான் இப்படியெல்லாம் பக்திக்கும் புது எழுச்சியைத் தந்தவர். குறிப்பாக ஈச்வரன், அம்பாள், விஷ்ணு, ஸூர்யன், விக்நேச்வரர், ஸுப்ரஹ்மண்யர் என்று ஆறு தெய்வங்களின் வழிபாட்டை ப்ரகாசப்படுத்தி நிலை நிறுத்தி ஷண்மத ஸ்தாபனாசார்யாள் என்று பெயர் பெற்றார்.

தம்முடைய வழியையே முழுக்க அநுஸரிப்பவர்களான ஸ்மார்த்தர்கள் என்பவர்கள் தெய்வ பேதம் பாராட்டாத ஸமரஸ பாவனை பெற்றவர்களாக இருக்கவேண்டுமென்று நினைத்தார். நினைத்து ஈச்வரன், அம்பாள், விஷ்ணு, விக்நேச்வரர், ஸூர்யன் ஆகிய ஐந்து ஸ்வாமிகளையுமே ‘பஞ்சாயதனம்’ என்பதாக வைத்து அவர்கள் பூஜிக்க வேண்டுமென்று விதித்தார். ‘மார்க்கண்டேய ஸம்ஹிதை’யிலேயே இவ்விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது.1

இந்த ஐந்தில் எந்த ஒரு ஸ்வாமி இஷ்ட தெய்வமோ அதை நடுவில் வைத்து மற்ற நாலை நாலு மூலைகளில் வைக்க வேண்டும். எது மத்தியிலிருந்தால் எதெது எந்த மூலையில் என்பதற்கு விதி உண்டு. இப்படி எந்த ஸ்வாமியையும் வைக்கலாமாயினும் தம்முடைய மடங்களில் சந்த்ரமௌளீச்வரன் என்ற ஈச்வரனை நடுவில் வைத்துப் பூஜை நடக்கச் செய்திருக்கிறார். அம்பாள் த்ரிபுரஸுந்தரியை மூலையாக இல்லாமல், பக்கமாக ‘ஸம ப்ரதான்யம்’ கொடுத்து வைத்து இங்கே பூஜை.

தெய்வ பேதம் பார்க்காதவர் குறிப்பாக ஈச்வரனை ஏன் நடுவில் வைத்தார்? எனக்கு ஒன்று தோன்றுகிறது. இந்த ஐந்து ஸ்வாமிக்கும் கண், காது, மூக்கு வைத்து நாம் பிம்பம் அடிக்கணும் என்றில்லாமல் இயற்கையில் கிடைக்கும் ஐந்து வகைக் கல்லுகளையே விசேஷ மூர்த்திகளாகச் சொல்லியிருக்கிறது. இவற்றில் விஷ்ணு மூர்த்தமான ஸாளக்ராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் கிடைப்பது. அம்பாள் மூர்த்தமான ஸ்வர்ண ரேகா சிலா, அதாவது தங்க ‘ரேக்’ ஓடும் கல்லு, தெலுங்கு தேசத்தில் மைக்கா சுரங்கங்கள் இருக்கும் கூடூர் பகுதிகளில் ஸ்வர்ணமுகி (பொன் முகலி) ஆற்றங்கரையில் கிடைப்பது. பிள்ளையார் மூர்த்தமான சோண பத்ரம் என்ற சிவப்புக் கல் ஸோன் நதியில் கிடைப்பது. ‘துங்கபத்ரா’ மாதிரி ஸோனுக்குப் பேரே ‘சோணபத்ரா’தான். அது பாட்னாவுக்குப் இருபது மைல் மேற்கே கங்கையில் கலக்கிறது. அதன் கரையிலுள்ள கோயில்கார் என்ற க்ஷேத்ரத்திற்குப் போயிருந்தபோது2 நானே ஆற்றில் நிறைய சோணபத்ரம் எடுத்திருக்கிறேன். ஸூர்ய மூர்த்தம்தான் ஸ்படிகம். தஞ்சாவூர் கலெக்டர் ஆபிஸ் உள்ள வல்லத்தில் யாரும் வெட்டாமல் இயற்கையாக அமைந்துள்ள ஏரியில் இந்த ஸ்படிகம் கிடைக்கிறது.

ஐந்தில் பாக்கி எது என்றால் ஈச்வர மூர்த்தியான பாணம் என்னும் இயற்கையான லிங்கம். அது எங்கே கிடைக்கிறதென்றால் நர்மதையில். அந்த நர்மதைதான் தேச மத்தியில் ஓடுகிறது. அதாவது, லோகத்துக்கே ஹ்ருதயமாகவுள்ள பாரத தேசத்தின் நடு மையத்தில் ஈச்வரன்தான் தாமே இயற்கையாக எழுந்தருளியிருக்கிறார்! அதனால், லோகம் முழுவதன் க்ஷேமத்துக்காகவும் மடத்தில் பூஜை நட்க்கும்போது மத்ய மூர்த்தியாக ஈச்வரன்தான் இருக்க வேண்டுமென்று ஆசார்யாள் வைத்திருப்பார் போலிருக்கிறது!

ஆனால் நம்முடைய சந்த்ரமௌளீச்வரர் பாண லிங்கமில்லை; ஸ்படிகலிங்கம். ஏன் அப்படி என்று அப்புறம் கதை சொல்கிறேன்.

நாம் இந்தப் பஞ்சாயதன சிலாக்களை (கற்களைப்) பூஜையில் வைத்துவிட்டோமானால் நேபாளத்திலிருந்து தஞ்சாவூர் வரை, தேசம் முழுவதையும் நம்மகத்துக்குள் ஒன்று சேர்த்து வைத்துவிட்ட மாதிரி!

தேச மத்தியில் குடிகொண்ட பரமேச்வரன் இந்த தேசம் முழுவதிலுமே நாலு திசைகளிலுமாக ஸோமநாத். ஸ்ரீசைலம், உஜ்ஜயினி, ஓம்கார் மந்தாதா (இது நர்மதா தீரத்திலேயே இருப்பது) , பரலி, நாகேசம், காசி, பீமசங்கரம், ராமேச்வரம் (தமிழ் நாட்டுத் தெற்கோரத்தில் இருப்பது) , த்ரயம்பக் (நாஸிக் கிட்டே) , கேதார்நாத், குஸ்ருணேச்வர் (எல்லோரா) என்ற பன்னிரண்டு மஹாக்ஷேத்ரங்களில் ஜ்யோதிர் லிங்கமாக வ்யாபித்திருக்கிறான். ஆசார்யாள் அத்தனை இடத்துக்கும்போய், ஒவ்வொரு லிங்கத்திற்கும் ஒரு ச்லோகமாக “த்வாதச லிங்க ஸ்தோத்ரம்” என்று அநுக்ரஹித்திருக்கிறார்.

மொத்தத்தில் ஸகல ஜனங்களையும் பக்தியினால் ‘அரன் குடி மக்களாக்கி’ ஆசார்யாள் ஒன்று சேர்த்தார்.

ஆனந்தகிரீயத்தில் அவர் ஒவ்வொரு எதிர் ஸித்தாந்தியாக ஜயித்து வைதிக மதத்திற்குத் திருப்பினதைச் சொல்லும்போது பல இடங்களில் அவர்களை ‘சுத்தாத்வைதி’ (சுத்த அத்வைதி) களாக்கினாரென்று மட்டும் சொல்லாமல் (பஞ்சாயதன வழிபாடு செய்யும்) “பஞ்ச பூஜா பராயணர்”களாக்கினாரென்றும் இருக்கிறது.

அதோடு ‘நித்யகர்ம ஸக்தர்’களாக்கினார், ‘ஸ்மார்த்த ச்ரௌத – ஸகல கர்ம சீலர்’களாக ஆக்கினார் — அதாவது ச்ருதி-ஸ்ம்ருதிகளிலுள்ள ஸகல கர்மாநுஷ்டானமும் செய்ய வைத்தாரென்றும் இருக்கிறது. இப்படி கர்மா-பக்திகளின் மூலம் எல்லாரையும் ஞானத்துக்கு மெள்ள ஏற்றினார்.

ஸ்வதர்மபடிக் கர்மா செய்வது, ப்ளஸ் பூஜை செய்வது என்று இரண்டு வைத்தது மட்டுமில்லை. ஸ்வதர்ம கர்மாவையே பூஜையாக ஈச்வரார்ப்பணம் பண்ணு என்றும் சொல்லியிருக்கிறார். ‘ஸோபான பஞ்சக’த்தில், “கர்ம ஸ்வநுஷ்டீயதாம்” என்று சொல்லி உடனேயே, “தேந” – “அந்தக் கர்மாநுஷ்டானத்தாலேயே“, “ஈசஸ்ய விதீயதாம் அபசிதி:”- “ஈச்வரனுக்குப் பூஜை பண்ணப்பட்டதாகட்டும்” என்கிறார். இதுதான் அவனே பல தாதா என்று பல த்யாகம் பண்ணும் நிஷ்காம்ய கர்ம யோகம். இப்படிக் கர்ம மார்க்கிகளையும் ஆசார்யாள் பண்ண வைத்தார். அதிலிருந்துதான் எந்தக் கர்மா ஆரம்பத்திலும் “பரமேச்வர ப்ரீத்யர்த்தம்” என்றும், முடிவில் “ஜனார்தன:ப்ரீயதாம்” என்றும் சொல்வதாக ஏற்பட்டது. ஈச்வர ப்ரீதிக்கு ஆரம்பித்து, ஜனார்தன ப்ரீதிக்கு முடிப்பதில் சிவ – விஷ்ணு அத்வைதமும்!


1 72-வது கண்டம், 7-வது பரிஸ்பந்தம், 27-வது ச்லோகம் (“….பஞ்சாயதநார்ச்சநனம் ப்ர்கர்த்தவ்யம்”)

2 1935 ஏப்ரல் மாதத்தில்.

உக்ர தெய்வங்களை சாந்தமாக்கியது

க்ரூரத்தை விட்டு சாந்தமாகும்படி ஜனங்களைப் பண்ணினார் என்பது மாத்ரமில்லை; தெய்வங்களையுமே உக்ர பாவத்தை விட்டு ஸெளம்யமாக இருக்கப் பண்ணினார். அந்தக் காலத்தில் என்ன ஆயிருந்ததென்றால்: அங்கங்கே ஸாந்நித்யமாகியிருந்த தெய்வ சக்திகளில் சிலதே, ‘இப்படி ஜனஙகள் அநாதிகாலமாக இருந்து வந்திருக்கும் தர்ம வழிகளை விட்டுவிட்டுக் கண்ணை மூடிக்கொண்டு தப்பில் போக ஆரம்பித்துவிட்டார்களே!’ என்று கோபம் கொண்டிருந்தன. தப்புக்குத் தண்டிக்கவும் வேண்டியதுதானே? அதனால் சில மஹா க்ஷேத்ரங்களில்கூட, அன்புக்கே உருவமான தாய்த் தெய்வமான அம்பாள் மூர்த்தங்களே கூட, உக்ர கலைகளோடு இருக்க ஆரம்பித்தன. அப்போது க்ரூரமான உபாஸனாக்காரர்கள் அந்த ஆலயங்களைக் கைப்பற்றி தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வந்தார்கள்.

இங்கேயெல்லாம் அந்த பூஞ்சை ப்ராம்மண ஆண்டி போனார். அவருடய மஹிமை தெரியவேண்டும் என்றே தான் ஒரு வேளை அந்தத் தெய்வங்கள் உக்ரம் மாதிரி இருந்துகொண்டிருந்தனவோ என்னவோ? அவரானால், ‘தன் மஹிமை என்றும் எதுவும் தெரியவேண்டாம்! மந்த்ர சாஸ்த்ர மஹிமை லோகத்துக்குத் தெரியட்டும்’ என்று நினைத்து, அந்த இடங்களிலெல்லாம் மந்த்ர பூர்வமாக யந்த்ர ப்ரதிஷ்டை செய்து உக்ர கலைகளை சமனம் பண்ணி, அந்த மூர்த்திகளை ஸெளம்யமாக்கி விடுவார்! இப்படி அநேக இடங்களில் பண்ணியிருக்கிறார்.

காஞ்சிபுரத்தில் காமாக்ஷியே உக்ரம் மாதிரி இருந்த போது அவளுக்கு எதிரே ஸ்ரீசக்ரம் ஸ்தாபித்து அவளை ஸெளம்ய மூர்த்தியாக்கி இருக்கிறார். அவளுக்குப் பக்கத்துணையாக எட்டு காளிகள் எட்டு திசைகயிலும் போய் பலி வாங்குவார்கள். அந்த எட்டுப் பேரையும் அந்த ஸ்ரீயந்திரத்தின் எல்லைச் சுற்றிலேயே அடக்கிப் போட்டார்! அதனால் இன்றைக்கும் பரப்ரஹ்ம சக்தி என்று சொல்லப்படும் ஸாக்ஷாத் காமாக்ஷியின் உத்ஸவ மூர்த்தி புறப்பாடு செய்யும் போது ஆசார்யாள் ஸந்நிதிக்கு முன்னால் ஒரு நிமிஷம் நின்று அவரிடம் ‘பெர்மிஷன்’ வாங்கிக் கொண்டுதான் வெளியே போவது!

ஜம்புகேச்வரத்தில் (திருவானைக்காலில்) அகிலாண்டேச்வரியின் உக்ர கலைகளை சக்ர ரூபமான தாடங்கங்களில் அடக்கி அவளுக்கே கர்ண பூஷணமாகச் சார்த்தி அலங்காரம் செய்துவிட்டார்.

கொல்லூரில் மூகாம்பிகை, அஸ்ஸாமில் காமாக்யா என்றிப்படிப் பல கதைகள் இருக்கின்றன. காமாக்யா விஷயமாக ஜனங்களின் மனஸு நுட்பம் தெரிந்து என்ன செய்தாரென்றால்: ‘காட்டு வாஸிகளாக, மலை வாஸிகளாக இருக்கிற இவர்களுக்கு ஒரே ஸெளம்யமாக ஆராதனையைச் சொன்னால் ஏற்காது. இவளை அடியோடு விட்டுவிட்டு வேறே பிம்பம் வைத்துக்கொண்டு பழைய க்ரூர உபாஸனையையே தொடருவார்கள்’ என்று நினைத்தார். அதோடுகூட லோகமென்றால் நல்லதோடு கெட்டதும் சேர்ந்து இருக்கும்தானே? அப்படி உக்ர சக்திகளும் உண்டுதான். அவற்றையும் கொஞ்சம் ப்ரீதிப் படுத்த வேண்டியதுதான் என்று நினைத்தார். அதனால் ரொம்பவும் க்ரூரமாகவும், அப்பட்ட வாமாசாரமாகவும் இருந்த உபாஸனையை அங்கே ஓரளவு அப்படி இருந்துவிட்டுப் போகட்டும் என்று தணித்துக் கொடுத்தார்.

மெட்றாஸ் திருவொற்றியூரில்கூட த்ரிபுரஸுந்தரியாக (வடிவுடையம்மனாக) அம்பாளை ஸெளம்யமாக்கியது ஆசார்யாள்தான். இங்கே உக்ர சக்தியைக் கிணற்றில் அடக்கினார். வருஷத்தில் ஒரு நாள் அதற்கும் பூஜை பண்ணும்படி ஏற்பாடு செய்தார். (வட்டப்பாறையம்மன் ஸந்நிதி அதுதான்.)

ஆசார்யாள் எல்லா ஆலயங்களுக்கும் க்ஷேத்ராடனம் செய்தவர்தான் என்றாலும் இம்மாதிரி அவருடைய விசேஷ ஸம்பந்தமுள்ள ஸந்நிதிகளில் ‘வைதிக’ பூஜையே நடக்கும். அதாவது, வேதத்திற்கு விரோதமில்லாவிட்டாலும் வேதத்தில் சொல்லாததாக அநேகம் உள்ள ‘ஆகம’ பூஜையாயில்லாமல், வேத அடிப்படை பூர்ணமாக உள்ளதான பூஜை முறை நடக்கும். பூஜகர்களும் ஆதி சைவர்கள் (குருக்கள்) முதலான ஆகம தீக்ஷைக்காரர்களாக இல்லாமல் வைதிக தீக்ஷை பெற்ற ஸ்மார்த்த ப்ராம்மணர்களாக இருப்பார்கள்.

ஆசாரங்களைக் காப்பதில் ரொம்பவும் தீவ்ரமானவர்கள் நம்பூதிரிமார்களே ஆதலால் சில இடங்களில் அவர்களையே பரம்பரைப் பூஜகர்களாக ஆசார்யாள் நியமித்து இன்றைக்கும் அப்படியே நடந்து வருகிறது. திருவொற்றியூரிலேயே நம்பூதிரி உண்டு. ஹிமய மலையில் பதரி நாராயணர் ஆலயத்தில் ‘ராவல்’ என்று ராஜ மரியாதையுடன் நடத்தப்படும் பூஜகரும் நம்பூதிரிதான்.

உக்ர சமனத்துக்காகத்தான் என்றில்லாமல், பொதுவாகவே மங்கிக் கிடந்த ஸாந்நித்யம் புது சக்தியுடன் ப்ரகாசிப்பதற்காக அநேக க்ஷேத்ரங்களில் யந்த்ர ஸ்தாபனம் செய்திருக்கிறார்.

குருவாயூரப்பன் ஆலயம் உள்பட பல க்ஷேத்ரங்களில் பூஜா க்ரமம் முழுக்கவே ஆசார்யாள் வகுத்துக் கொடுத்த முறையில்தான் நடக்கிறது.

அதிசயம் சாதித்த அமோக திக்விஜயம் : ஆன்மிய ஐக்கியமும் தேசிய ஐக்கியமும்

இப்படிப்பட்ட சிஷ்யர்கள் ஆறாயிரம் பேரோடு ஆசார்யாள் தேசம் முழுதும் திக்விஜயம் செய்தார். திக்விஜயம் என்றால் அதுதான் திக்விஜயம்! ஞானராஜா பரதகண்டத்தின் 56 தேசங்களிலேயும் பரமதங்கள் அத்தனையையும் ஜயித்து ஸநாதன வேத தர்மத்துக்கும், அதில் குறிப்பாக அத்வைதத்துக்கும் வெற்றிக்கொடி நாட்டிய திக்விஜயம்! எவரையும் சாக அடிக்காமல், அமரமாக ஆக்குகிற வாதச் சண்டையினாலேயே தேசத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலுமுள்ள பர ஸமயவாதிகளை ஜயித்த ஆசார்யாளைப் போல ஜயசாலி லோக சரித்ரத்திலேயே இல்லை! அதனால்தான் “ஜய ஜய சங்கர” என்றே கோஷிப்பதாக, அதுவே அவருக்கு மந்த்ரம் மாதிரியாக இருப்பது.

வாதச் சண்டை என்றுகூடப் போடாமல் தர்சன மாத்திரத்திலேயே பெரும்பாலானவரை ஆகர்ஷித்து வேத வழியில் செலுத்தினார்.

லக்ஷ்யம் ஜீவாத்மாவைப் பரமாத்மாவுடன் ஐக்கியப்படுத்துவது. அது உடனே நடக்கிற கார்யமில்லை. ஸம்ஸ்கார நிவ்ருத்தி, வாஸனாக்ஷயம் ஏற்பட எவ்வளவோ காலம் பிடிக்கும். உடனே நடக்காவிட்டாலும் அதற்கானதை உடனே ஆரம்பித்து விட வேண்டும். தள்ளிப் போடப் போட அழுக்கு தடித்துக் கொண்டே போகும். அப்படி நல்லதை ஆரம்பிக்கும்படி அத்தனை கோடிப் பேரையும் ஆசார்யாள் திருப்பிவிட்டார்!

இது அவதார லக்ஷ்யத்தைப் பற்றிய விஷயம். லக்ஷ்யம் ஜீவ-ப்ரஹ்ம ஐக்யம். அப்படிப் பண்ணும்போதே என்ன ஆயிற்று என்றால், தேசத்தின் ஜனஸமூஹம் அத்தனையும் ‘ஆட்டோமாடிக்’காக ஐக்யமாகிவிட்டது! வேறே வேறே மதம், ஸித்தாந்தம், உபாஸனை என்று 72 இருந்ததென்றால் ஜனங்களும் 72 பிரிவாகப் பிளந்து போயிருந்தார்கள் என்றுதான் அர்த்தம். அத்தனை பேருக்கும் ஒரே வழி என்று ஸநாதன தர்மத்திற்கு ஆசார்யாள் திருப்பிவிட்டவுடன் பிளவெல்லாம் ஒட்டிக் கொண்டு ஜனஸமூஹம் முழுக்க ஒன்று சேர்ந்து விட்டது! ‘ஒருமைப்பாடு’, ‘ஒருமைப்பாடு’ என்று இப்போது ஸதா கேட்கிறோமே, (கேட்டதுதான் மிச்சமாயிருக்கிறது!) அதை நிஜமாக ஸாதித்துக் கொடுத்தவர் ஆசார்யாள்தான். தனி மநுஷ்யர், ஆண்டி இப்படிப் பண்ணினார் — ராஜ ஸஹாயம் எதுவுமில்லாமல் பண்ணினார் — என்று தற்கால சரித்ராசிரியர்கள், மற்ற ஸ்காலர்கள்கூட ஆச்சர்யப்பட்டுப் புகழ்கிறார்கள். புத்தரிடமே அதிக அபிமானமுள்ள நேரு மாதிரியானவர்கள்கூட புத்தி பலத்தினாலேயே ஒரு பூஞ்சை ப்ராம்மண ஸந்நியாஸி எனா ஸாதனை ஸாதித்துவிட்டாரென்று சொல்லி, National Integrator (தேச ஒருமைப்பாட்டுச் சிற்பி) என்று வாயார ஸ்தோத்ரம் செய்கிறார்கள். நேரு சொல்கிறபோது,1 “ராஜாக்கள், ராஜவம்சங்கள், சக்ரவர்த்திகளும் செய்ததைவிட இந்த தக்ஷிண தேசத்து பிள்ளையாண்டான் ஒருவரே இந்த தேச வாழ்க்கைக்கு நிறையப் பண்ணிவிட்டார்! இதில் என்ன பெரிய ஆச்சர்யமாயிருக்கிறதென்றால் அவர் உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் புத்தி ரீதியாகவே போயுங்கூட ஏதோ ப்ராம்மணர்களை, பண்டிதர்களைத்தான் கவர்ந்தாரென்றில்லாமல் ஸாமான்யப் பொது ஜனங்களையும் ஆகர்ஷித்திருப்பதுதான்” என்கிறார்.

இப்படி அவர் சொல்கிறதில் முழு உண்மையும் இல்லை. புத்தர் மாதிரி ப்ரேமை இல்லாமல் புத்தி வழியிலேயே போயும் ஸர்வஜனங்களையும் ஆசார்யாள் எப்படி வசீகரித்தாரென்று ஆச்சர்யப்படுகிற மாதிரி இருக்கிறது. ஃபிலாஸஃபி என்கிறபோது உணர்ச்சிக்கு இடமே கொடுக்காமல் ச்ருதி-யுக்தி-அநுபவம் என்றேதான் அவர் போனது வாஸ்தவம். ஆனால் பொது ஜனங்களுக்கு அப்படிப்பட்ட அத்வைதத்தை அவர் விதிக்கவில்லை. கோயிலைக் காட்டி, ஸ்வாமியைக் காட்டி, வழிபாட்டு முறைகளை ப்ரேமை நிறைந்ததாக ஆக்கிக்கொடுத்து — அதாவது பக்தியினால்தான் — ஒன்று பண்ணினார். இங்கே உணர்ச்சிக்கு நிறைய இடம் கொடுத்தே பண்ணினார். அவருடைய பக்தி ஸ்தோத்ரங்களை பார்த்தால் தெரியும்.

அதோடு அவரே பரம ப்ரேம மூர்த்தியாக இருந்ததாலேயே அத்தனை ஜனங்களும் சரணத்தில் வந்து விழுந்தார்கள். “கருணாலயம்” என்றே அவரைச் சொல்வது. ‘வறட்டு வேதாந்தி’ என்று அவரை நினைத்தால் அடியோடு தப்பு. ப்ரேமையில் நனைந்து ஊறியவராகவே இருந்தார். அவருடைய சரித்ர புஸ்தகங்கள், நேர் சிஷ்யர்களின் வாக்கு ஆகியவற்றைப் பார்த்தால் தெரியும்.

நேருவே இதைப் புரிந்துகொண்ட மாதிரியும் இன்னொரு புஸ்தகத்தில்2 சொல்கிறார். புத்தி வாதம் மட்டும் பண்ணிய ஃபிலாஸஃபராக அவரை முடித்துவிடாமல், “தத்வவாதி, அநுபவி (mystic என்பது), கவி எல்லாமாயிருந்தவர். இதெல்லாவற்றோடும் உலகத்தோடு ஒட்டாமல் எங்கேயோ நிற்காமல் நடைமுறையில் எப்படிச் சீர் பண்ணுவது என்று காச்ய ரூபத்திலேயே ஸ்தாபன ரீதியில் ஆர்கனைஸ் பண்ணிக் காட்டியதில் சதுரராக இருந்தவர்” என்று அங்கே சொல்கிறார்.

மடங்கள் என்று வைத்து மதத்தை சாச்வதமாகக் காப்பாற்ற அவர் ஏற்பாடு செய்ததைத்தான் ஆர்கனைஸிங் ஸாமர்த்தியம் என்கிறார். ஆசார்யாளுக்கு முன்பு ஹிந்து மதத்தில் அப்படியில்லை. தனி மநுஷ்யர்களின் தபோசக்தியிலேயே மதம் வ்ருத்தியானதுதான்3.

நேருவைச் சொல்வதற்கு காரணம் அவரை நிச்சயம் எங்கள் மாதிரி வைதிகக் குடுக்கை என்றோ, ஆசார்யாள்தான் ஸகலமும் என்று முடிவாக வைத்துவிட்டவர் என்றோ சொல்லமுடியாது என்பதுதான்.

வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், ஸமூஹ சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது. எல்லாரும் ஈசன் குழந்தைகள் என்ற பக்தியினால்தான் ஒன்று சேர்க்க முடியும்.அதற்கும் மேலே, எல்லாரும் ஈசனே என்னும் ஞானம். இவற்றினால்தான் ஆசார்யாள் ஐக்யப்படுத்தியது. அந்த ஞானத்துக்கும் பக்திக்கும் அவரே ரூபமாயிருந்ததால்தான் அத்தனை சக்தியோடு பண்ணமுடிந்தது.

பக்தி, ஞானம் என்றால் ஜன ஸமூஹத்துக்குப் போதுமா? கார்யங்களைப் பண்ணி ஜீவ யாத்ரை நடத்துவதுதானே அவர்களுக்கு முக்யம்? இங்கே வர்ணாச்ரம வழு இல்லாமலே நடக்கும்படியாக ஆசார்யாள் செய்தார்.

அவர் பண்ணியது, இப்போது ஒன்றுமே பண்ண முடியாமல் அவர் பெயரை வைத்துக்கொண்டு புகழ்மாலையும் பாராட்டு விழாவும் பெறுவது இரண்டையும் நினைத்துப் பார்த்தால் மலைக்கும் மடுவுக்குமாக இருக்கிறது.

இப்போது, கூட 6000 சிஷ்யர்கள் இல்லை. மடத்தைச் சேர்ந்தவர்கள்தான் இருக்கிறார்கள். ஆனாலும் எந்த ஊரில் நன்றாக பிக்ஷை நடக்கும் என்று பார்த்தே போவதாயிருக்கிறது! ‘ஏதோ ஒரு சக்தி நடத்துகிறது; தர்மத்தைச் சொல்லிக்கொண்டு போ என்று எது இப்படி உட்கார்த்தி வைத்திருக்கிறதோ அதுவே எங்கே நம் கார்யத்துக்குத் தேவையிருக்கிறதோ அங்கே போனாலும் நடத்திக் கொடுக்கும்; அதனால் நம் தேவைக்கு யார் கொண்டுவந்து கொட்டுவார்கள் என்று பார்த்துக்கொண்டு போக வேண்டாம்’ என்ற ஞானம் எப்போதாவது கொஞ்சம் வருவதோடு ஸரி! இப்படி லாப-நஷ்டக் கணக்குப் போட்டுக்கொண்டா ஆசார்யாள் ஒரு இடம் பாக்கியில்லாமல் தேசம் பூரா போனார்? ஒரு தரத்துக்கு மூன்று தரம் போனார்?

பாராட்டு விழா ப்ரஸங்கிகளும், பத்திரிகையாளர்களும், “க்ருத யுகத்தையே கொண்டு வந்துவிட்டாராக்கும், அதுவாக்கும், இதுவாக்கும்” என்று சொன்னாலும், வாஸ்தவத்தில் நாளுக்கு நாள் தர்மங்களைப் பறிகொடுத்துக் கொண்டுதான் வந்திருக்கிறது, ஐம்பது, நாற்பது, முப்பது வருஷம் முன்னாலிருந்த ஆசாரங்கள்கூட இப்போது பூதக்கண்ணாடி வைத்துத் தேடும்படி இருக்கிறது! நம் பிழைப்பு நடந்தால் போதுமென்று, “சிகை இல்லையா, ஸரி,” “மடிசார் இல்லையா அதுவும் ஸரி!”, “ஸூட் போட்டுக்கொண்டு வந்தாலும் பரவாயில்லை — இன்னம் நாமே போட்டுக்கலையோன்னோ?” என்று எல்லாரிடமும் நல்ல பெயர் வாங்கிகொண்டு, broad-minded, catholic என்றெல்லாம் நிறையப் புகழ் மாலைகள் போட்டுக்கொண்டு — இப்படியா அவர் இருந்தார்? தாமும் சாஸ்த்ர விதி எதையும் விடாமல், அதோடு மாத்ரமில்லாமல், அசாஸ்திரீயமாகப் போயிருந்த அத்தனை ஜன ஸமூஹத்தையும் விதி ப்ரகாரமே பண்ணும்படி செய்திருக்கிறார். எங்கே பிக்ஷை நடக்கும், எங்கே ஏமாந்து போய் நம்மைப் பூஜை பண்ணுவார்கள் என்று பார்த்து போகாமல், எங்கெங்கே சாஸ்த்ரத்துக்கு விரோதமானவர்கள் பலமாக இருந்தார்களோ, தம்மைப் பரம சத்ருவாக நினைத்து பலி கொடுக்கவும் ஆபிசாரம் பண்ணவுங்கூடத் தயாரானவர்கள் இருந்தார்களோ, அங்கேயெல்லாமே தேடித் தேடி ஒரு மலை, காடு விடாமல் காலால் நடந்துபோய், சத்ருக்களையெல்லாம் மித்ரர்களாக்கி, பக்தர்களாக்கி, சிஷ்யர்களாக்கி நம்முடைய மதத்தைப் பூர்ணமாக சாஸ்திரப்படி இந்த பரதகண்டம் முழுதிலும் நிலைநாட்டியிருக்கிறார். தத்-த்வாரா(அதன் வழியாகவே) ஜன ஸமூஹம் முழுதையும் ஒரு குடும்பமாக்கி தேசிய ஐக்யத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

வாதமும், ஞான ப்ரசாரமும் அறிவாளிகள் என்கப்பட்டவர்களுக்கு. ஆனால் வித்வத் ஸமூஹம் ஒன்றை ஒப்புக் கொண்டால் எல்லாருமே அதை ஏற்றுக்கொண்டு விடுவார்கள் என்கிற ரீதியில், தேசத்தின் ஒவ்வொரு சீமையிலும் வித்வான்களையெல்லாம் ஆசார்யாள் தம்முடைய வழி என்ற ஸநாதன வழிக்குக் கொண்டு வந்ததால் மற்ற ஜனங்களும் அவரையே குருவாகக் கொண்டார்கள். ஆனால், இப்படி ‘இன்டைர்க்டாக’ மட்டும் அவருடைய பொதுஜனப் பணி முடிந்துவிடவில்லை. பொதுமக்களை அவரே நேராக எப்படி நல்லதில் திருப்பினார் என்றால் கோயில்கள், பூஜை, ஸ்தோத்ரம் முதலியவற்றால்தான். க்ரூரமான உபாசனைகள் – க்ரூரமாக இன்னொரு உயிரை பலி தருவது மட்டுமில்லை; தன்னையே சுட்டு வருத்திக் கொண்டு முத்தரை போட்டுக்கொள்வது போன்றவையுந்தான் – இன்னதிரி வழிகளை ஜனங்கள் கைவிடப் பண்ணி அன்போடு வழிபாடுகள் நடக்கச் செய்தார்.


1 நேருஜியின் “Glimpses of World History”

2 “Discovery of India”

3 இவ்விஷயமாக ஸ்ரீ சரணர்களின் ஸாரமிக்க கருத்துகளை “தெய்வத்தின் குரல்” – நான்காம் பகுதியில், “குருகுலம்; கடிகா ஸ்தானம்” என்ற உரையில் “ஸ்தாபனம்: ‘அவச்யத் தீமை’க்கு ஆசார்யாள் பணி” என்ற பிரிவில் பார்க்கவும்.

இன்னும் இரு சிஷ்ய ரத்தினங்கள்: ஸர்வஜ்ஞாத்மரும் ப்ருத்வீதவரும்

நாலு முக்யமான சிஷ்யர்கள் என்று ப்ரஸித்தமாகச் சொன்னாலும் இன்னம் சில மஹான்களும் ஆசார்ய சிஷ்யர்களில் ‘சிஷ்ய ரத்னம்’ என்னும்படி இருக்கிறார்கள். அவர்களில் இரண்டு பேரைப் பற்றிச் சொல்கிறேன். இரண்டு பேரும் — ஸுரேச்வராசார்யாள் மாதிரியே — முதலில் ஆசார்யாளிடம் (வாதச்) சண்டை போட்டுத் தோற்றுப் போய் அப்புறம் பரம சிஷ்யர்களாக ஆனவர்கள். ஒருத்தர் ஆசார்யாளைவிட வயஸில் ரொம்பப் பெரியவர். ப்ருத்வீதவர் என்று பெயர். ப்ருத்வீதரர் என்றும் சொல்லியிருக்கிறது. மற்றவர் ஆசார்யாளைவிட ரொம்பச் சின்னவர்; குழந்தை. அவர் பெயர் ஸர்வஜ்ஞாத்மர்.

ஆசார்யாள் கடைசி காலத்தில் காஞ்சிபுரத்தில் ஸர்வஜ்ஞபீடம் ஏறப்போனபோது அவரோடு பல பேர் வாதம் பண்ணப் போனார்கள். அவர்களில் தாம்ரபர்ணி தீரத்திலிருந்து போனவர்களும் இருந்தார்கள். அவர்களில் இந்த ஏழு வயஸுக் குழந்தை, அதன் தகப்பனார் ஆகியவர்களும் இருந்தார்கள். அப்போது குழந்தைக்குப் பேர் மஹாதேவன். இதற்கு முந்தியே தகப்பனார் தீவ்ர மீமாம்ஸகராக இருந்து கொண்டு ஜைன-பௌத்த மதங்களைக் கண்டனம் பண்ணியபோது இந்தக் குழந்தையும் அவர்களிடம் வாதம் பண்ணி அசர அடித்திருந்தது! இப்போதும் ஆசார்யாளின் உத்தர மீமாம்ஸைக்கு (வேதாந்தத்திற்கு) முன்னே தகப்பனார் உள்பட மற்ற எல்லாரும் தங்களுடைய பூர்வ மீமாம்ஸையால் பதில் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போன அப்புறமும் இந்தக் குழந்தை மட்டும் விடாமல் நாலு நாள் வாதம் பண்ணிற்று! கடைசியில் தோற்றுத்தான் போயிற்று. ஆசார்யாள் ஸர்வஜ்ஞ பீடம் ஏறினார்.

ஆதியிலே குழந்தையாசார்யாளைப் பார்த்தவுடன் கோவிந்த பகவத் பாதருக்கு ப்ரேமை பொங்கிக்கொண்டு வந்தது போல இப்போது அந்தத்தில் ஆசார்யாளுக்கே இந்தக் குழந்தையிடம் வந்தது.

குழந்தைக்கும் ‘தோற்றுப் போனோமே!’ என்று இல்லாமல், ‘ஸத்யம் தெரிந்ததே!’ என்று ஸந்தோஷமாக இருந்தது. ‘தெரிவித்தாரே!’ என்று ஆசார்யாளிடம் பக்தி, ப்ரைமையோடு கூடிய பக்தி, உண்டாயிற்று. சின்ன வயஸில், “ஸந்நியாஸம் தாருங்கள்:” என்று ஆசார்யாளைப் ப்ரார்த்தித்துக் கொண்டது. ஆசார்யாள் பூர்ண அநுக்ரஹத்தோடு அப்படியே கொடுத்தார்.

அப்புறம் குழந்தைக்கு ஸர்வஜ்ஞாத்மர் என்று பேர் ஏற்பட்டது. ஆசார்யாள் ஸர்வஜ்ஞர், அவருக்கு ரொம்ப ஆத்மார்த்தமான சிஷ்யர் என்று தெரிவிக்கும் பெயர்!

ஆசார்யாள் சரீர யாத்ரை முடித்து ப்ரஹ்மீபாவம் அடைவதற்கு முன் ஸுரேச்வராசார்யாளின் மேல் பார்வையின் கீழ் குழந்தை ஸர்வவஜ்ஞாத்மரைத்தான் இந்த (காஞ்சி) மடத்தின் ஸ்வாமிகளாக நியமனம் பண்ணினார். அதனால் ஸுரேச்வரரைத் தம்முடைய குருவாக அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். குருவின் பெயரைச் சொல்வது மரியாதையல்ல என்பதால் ஸுரேச்வரர் என்பதை அதே அர்த்தம் கொடுக்கும் ‘தேவேச்வரர்’ என்று சொல்லியிருப்பார்.

ஆசார்யாளுடைய சாரீரக பாஷ்யத்தை ஆதாரமாகக் கொண்டு ஸர்வஜ்ஞாத்மர் “ஸம்க்ஷேப சாரீரகம்” என்று புஸ்தகம் எழுதினார். ‘ஸம்க்ஷேபம்’ என்றால் சுருக்கம். ‘சுருக்கம்’ என்றாலும் இதில் ஆயிரம் ச்லோகத்துக்கு மேலே இருக்கிறது…. ஆமாம், ச்லோகங்கள் – ச்லோக ரூபத்தில் அத்வைதப் புஸ்தகம் எழுதினவர்கள் ரொம்பக் குறைச்சல். ஆசார்யாளுக்குப் பிற்காலத்தில் அப்படி எழுதியவர்களில் முக்யமான இரண்டு பேர் ஸர்வஜ்ஞாத்மரும், வித்யாரண்ய ஸ்வாமிகளும்தான்.

“பஞ்ச ப்ரக்ரியா” என்று அவர் இன்னொரு அத்வைத நூலும் செய்திருக்கிறார். எந்த ஸித்தாந்தத்திலும் ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் உண்டு என்று ஏற்றுக் கொள்வதுதானே ஆசார்யாள் வழி? அந்த வழியில் இவர் மீமாம்ஸைப் புஸ்தகமும் ஒன்று சின்னதாக எழுதியிருக்கிறார்.1

வ்யாஸ பூஜையில் விசேஷ ஸ்தானம் கொடுத்துப் பூஜிக்கப்படுபவர்களில் ஸர்வஜ்ஞாத்மர் ஒருவர். ஐந்து ஐந்து ஆசார்யர்களாக ஆறு ‘பஞ்சக’ங்களுக்கு அந்தப் பூஜையில் வழிபாடு நடத்தப்படுகிறது. அவற்றில் ‘த்ரவிடாசார்ய பஞ்சகம்’ என்பதில் ‘ஸம்க்ஷேப சாரீரகாசார்யர்’ என்று பெயர் கொடுத்து அவரைச் சேர்த்திருக்கிறது. ‘ஸர்வஜ்ஞாத்ம முனி‘ என்று அவரை மரியாதை கொடுத்துச் சொல்வது வழக்கம்.

ப்ருத்வீதவாசார்யாள் என்பவர் ஆசார்யாளுக்கு மூத்தவர். ஆசார்யாளுக்கு முந்தியும் பலர் ஸூத்ரபாஷ்யம் எழுதி அவை வ்யாஸருடைய வேதாந்தமான அபிப்ராயத்துக்கு மாறாக இருந்ததாலேயே அப்புறம் ஸரியான பாஷ்யம் நம் ஆசார்யாள் செய்ததாகப் பார்த்தோமல்லவா? இந்த பாஷ்யங்களில் ஒன்று, அதாவது வேதாந்தத்தை அநுஸரிக்காதது, ப்ருத்வீதவர் பண்ணியதாகும். ‘ப்ருத்வீதரர், அபிநவ குப்தர் முதலான 99 பேர்களின் பாஷ்யங்களை ஆசார்யாள் சின்னபின்னம் பண்ணி லோகத்தில் இல்லாத படி ஆகிவிட்டார்’ என்று ‘தத்வ சந்த்ரிகா’ என்ற புஸ்தகத்தில் இருக்கிறது.2 அபிநவகுப்தர் தந்த்ர சாஸ்த்ரம், அலங்கார சாஸ்த்ரம் இரண்டிலும் மிகுந்த க்யாதி பெற்றவர். அவர் பேருக்கும் முந்தி, இவரைச் சொல்லி, ‘ப்ருத்விதரர் அபிநவ குப்தர் முதலான’ என்பதால் ப்ருத்வீதவாசார்யாளுடைய உசந்த ஸ்தானம் தெரிகிறது.

தம் பாஷ்யம் போனபின் அவர் ஆசார்யாளிடம் சரணாகதி பண்ணி சிஷ்யராயிருக்கிறாரென்று தெரிகிறது.

நூறு வருஷம் முந்தி ஒளஃப்ரெஷ்ட் (Aufrecht) என்று ஒரு வெள்ளைக்காரர் நம்முடைய பழைய ஏட்டுச் சுவடிகளுக்குக் ‘காடலாக்’குகள் தயாரித்திருக்கிறார். அவற்றில் ஒன்று ஜெர்மனியில் லைப்ஸிக் யூனிவர்ஸிடியின் லைப்ரரியில் இருக்கிறது. இன்னொன்று இங்க்லாண்டில் ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்ஸிடிலுள்ள ப்ரஸித்தமான போட்லியன் லைப்ரரியில் இருக்கிறது. லைப்ஸிக் காடலாகில் “குரு பாதாதி நமஸ்காரம்” என்ற சுவடியைப் பற்றிச் சொல்லும்போது ஆசார்யாளின் சிஷ்யர்களான தோடகர், அநுபூதி ஸ்வரூபாசார்யார் ஆகியவர்களுடன், ப்ருத்வீதராசார்யார் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறது.

ஆக்ஸ்ஃபோர்ட் ‘காடலாகி’லிருந்து நாம் அவர் செய்த முக்யமான கார்யமென்ன என்ற தெரிந்து கொள்கிறோம். ப்ருத்வீதவர் (அல்லது, தரர்) எழுதியதாகப் புஸ்தகம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் எழுதிய சாரீரக பாஷ்யத்தை ஆசார்யாள் நிராகரணம் பண்ணின பிறகு அவர் ஒன்றும் எழுதவில்லை போலிருக்கிறது. ஆனாலும் அவரால் ஆசார்யாளின் மஹத்தான கார்யம் ஒன்று நடந்திருக்கிறது. அதை இந்தக் ‘காடலாகி’லிருந்து தெரிந்து கொள்கிறோம். அதில் ‘த்வாதச மஹா வாக்ய விவரணம்’ என்ற ஏட்டுச் சுவடியைப் பற்றி விவரம் தரும்போது இந்த விஷயம் தெரிகிறது. அந்தப் புஸ்தகம் வைகுண்டபுரி என்பவர் எழுதியது. என்ன சொல்லியிருக்கிறாரென்றால்….

நம்முடைய வேதாந்த ஸம்ப்ரதாய ஸந்நியாஸிகள் தேசம் முழுதும் பரவியிருந்ததால் வகை தொகை பண்ணிப் பத்துப் பிரிவாக்கி வைத்து ஒரு ஒழுங்கில் நிர்வாஹம் செய்ய வேண்டுமென்று ஆசார்யாள் நினைத்தார். இதுவே ‘தசநாமி’ ஸந்நியாஸிகள் என்று சொல்வது. ‘தஸ்நாமி’, ‘தஸ்நாமி’ என்று வடக்கே சொல்கிறார்கள். ஒவ்வொரு பிரிவின் பெயரையும் அந்தப் பிரிவைச் சேர்ந்த ஸாது தன் பெயரோடு சேர்த்துப் போட்டுக் கொள்வார். ‘தீர்த்த’, ‘ஆச்ரம’, ‘வன’, ‘அரண்ய’, ‘கிரி’, ‘பர்வத’, ‘ஸாகர’, ‘ஸரஸ்வதி’, ‘பாரதி’, ‘புரி’ என்று பத்து இந்தப் பத்துப் பிரிவு ஸந்நியாஸிகளும் ப்ருத்வீதரரின் சிஷ்யர்கள்:” ப்ருத்வீதராசார்ய: தஸ்யாபி சிஷ்யா தச” என்று வைகுண்டபுரி சொல்கிறார்.

இதற்கு என்ன அர்த்தம்? ஆசார்யாள் ஒழுங்குமுறை பண்ணிய தசநாமி ஸந்நியாஸிகள் அவ்வளவு பிரிவினரும் ப்ருத்வீதவருக்கு சிஷ்யர்களென்றால் என்ன அர்த்தம்? ஸந்நியாஸிகளைப் பல பிரிவுகளாக ஒழுங்கு பண்ணி வைத்தால் நல்லது என்று ஆசார்யாள் நினைத்த உத்தேசத்தைச் செய்து காட்டியவர். இவர் என்று அர்த்தம்! தேசம் முழுதிலும் இப்டி அந்த ஸந்நியாஸிகளைப் பிரித்து ஸித்தாந்தம், ஸாதானை எல்லாம் ஒன்றேதான் ஆனாலும் வெளி அடையாளங்களில் வித்யாஸங்கள் வைத்துப் பிரித்து — தண்டத்தில் துணியை எப்படி முடிந்திருக்கிறது என்பதைப் பார்த்தேகூட இவர் இன்ன பிரிவு என்று கண்டுபிடிக்கும்படி வைத்து — ஆர்கனைஸ் செய்தவர் ப்ருத்வீதராசார்யாள்தான் என்று அர்த்தம். இதில் வெள்ளை வேஷ்டிக்காரர்கள்கூட உண்டு. ஒரே ஆண்டிக் கூட்டம் என்றால் சேர்த்து வைத்து நிர்வஹிக்க முடியாமல் போய்விடும். ஆகையினால் ஒரு ஒழுங்கு முறையில் பிரித்து அதை சுத்தமாக இருக்கும்படி ரக்ஷித்து இப்படிச் செய்தது.

பெரிய கார்யம். இன்றளவும் தழைத்து வந்திருக்கும் படியாக அதை ஸாதித்தவரென்றால் ரொம்பவும் நிர்வாஹத் திறமையுள்ளவரென்று அர்த்தம் மற்றவர்கள் எழுத்துத் திறமையால் அத்வைதத்துக்குத் தொண்டு செய்தார்களென்றால் இவர் ‘ஆர்கனைஸேஷன் ஸைடி’ல் இப்படி மஹத்தான தொண்டு செய்து நம்முடைய நமஸ்காரத்துக்குப் பாத்ரராயிருக்கிறார்.

ஆசார்யாள் எந்த மடத்தில் எந்த சிஷ்யரை வைத்தரென்பதுபற்றி இரண்டு மூன்று நம்பிக்கைகள் இருப்பதில் ஒன்றின்படி ப்ருத்வீதவர் ச்ருங்கேரியில் பீடாதிபதிகளாக இருந்திருக்கிறார். ஜெர்மனி யூனிவர்ஸிடியிலுள்ள ‘காடலாக்’ சொன்னேனே, அதில் “ச்ருங்கேரி ப்ருத்வீதராசார்ய” என்றே இருக்கிறது.

‘ப்ருத்வீதர பாரதி’ என்று அவர் பெயர் குறிப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். தசநாமிகளில் ‘பாரதி’ என்பது ச்ருங்கேரியில் ஸ்வாமிகளாக வருபவர்களுக்கு உரியது. ‘தீர்த்த’ ஸம்ப்ரதாயஸ்தர்களும் அங்கே ஸ்வாமிகளாக வருவதுண்டு. இப்போது இருப்பவர் தீர்த்தர்3. தசநமாங்களும் அந்த மடத்துக்கு உண்டு என்கிறார்கள். ப்ருத்வீதவரின் சிஷ்யர்களாக தசநாமிகள் எல்லாரையும் சொல்லியிருப்பதாகப் பார்த்தோம்.


1 “ப்ரமாண லக்ஷணம்” எனும் நூல்.

2 உமாமஹேச்வர சாஸ்த்ரி என்பவர் எழுதியது.

3 தற்போது ‘மஹாஸந்நிதானம்’ எனப்படும் மூத்த ஸ்வாமிகளாக விளங்கும் ஸ்ரீஅபிநவ தீர்த்த ஸ்வாமிகள் இளைய பட்டம் நியமிக்குமுன் 1963-ல், கூறியது.

தோடகர் : தாஸ்ய பக்தியின் திருவுருவம்

ஹஸ்தாமலகர் ஒரே அத்வைத அநுபவத்திலிருந்தவர் என்றால் நாலு முக்ய சிஷ்யர்களில் பாக்கியிருக்கிறவர் இதற்கு முழு வித்யாஸமாயிருந்தவர்.

ஆசார்யாள் சொன்னதென்ன? “பாவாத்வைதம் ஸதா குர்யாத் க்ரியாத்வைதம் ந கர்ஹிசித்: பாவனையில் அத்வைதமாக, எல்லாம் ஒன்று என்று அநுபவிக்க ஸதாகாலமும் பழக்கிக் கொள்ளு; ஆனால் ஒருபோதும் கார்யத்தில் பார்க்க வேண்டிய வித்யாஸங்களைப் பார்க்காமலிருக்காதே!” என்றார். ஆனால், இப்படி பாவனையில் அத்வைதம் பழகிக் கொண்டே போனால் ஒரு நிலையில் கார்யத்தில்கூட வித்யாஸம் தெரியாமல் போகும். பட்டு வஸ்த்ரத்தால் காலைத் துடைத்துக்கொண்டு வீசி எறித்துவிட்டு அழுக்குக் கந்தலைக் கட்டிக்கொள்ளத் தோன்றும்! இப்படி அநேகம் தோன்றும். அந்த நிலையில் கட்டுப்படுத்தாமல் அப்படியெல்லாமும் கார்யத்திலேயே பண்ணிவிட்டுப் போகலாம். அன்னத்தை உடம்பில் தேய்த்துக் கொள்ளலாம், அமேத்யத்தை தின்னலாம்; கழுதையை நமஸ்காரம் பண்ணலாம், ராஜாவை உதைக்கலாம். மனஸில்தான் அத்வைதம், லோகத்தில் இல்லை என்பது போய்விட்ட அப்போது “அத்வைதம் த்ரிஷுலோகேஷு” — மூன்று லோகத்திலுள்ள ஸகல ஸமாசாரங்களைக் குறித்தும் கார்யத்திலேயே வேண்டுமானாலும் அத்வைதம் பார்க்கலாம். ஆனால் இதற்கும் ஒரே ஒரு விதி விலக்கு, “அத்தனை விஷயத்திலும் அத்வைதமாயிருந்தாயானாலும், குரு என்று இருக்கிறாரே, அவரிடம் மட்டும் அத்வைதம் கூடாது — கார்யத்தில் மட்டுமில்லை, பாவத்தில்கூடக் கூடாது! நாத்வைதம் (ந அத்வைதம்) குருணா ஸஹ“.

அத்வைதம் த்ரிஷுலோகேஷு நாத்வைதம் குருணா ஸஹ.
(ஆசார்யாளின் “தத்-த்வோபதேசம்” என்ற நூலின் இறுதியில் வருவது)

குருவும் தானும் ஒன்று என்று நினைக்கப்படாது. ஈச்வரனும் தானும்கூட ஒன்று என்று நினைக்கலாம்! நினைக்கலாம் என்ன? முடிவிலே அப்படித்தான் நினைக்க வேண்டும். ஞானம் வந்துவிட்டு ஈச்வரன்கிட்டேயும் அத்வைதம்தான். ஆனாலும் ‘நாம் நினைப்பது, நாம் செய்வது’ என்று துளி ஒட்டிக்கொண்டிருக்கிறவரைகூட ‘நானும் குருவும் ஒண்ணு’ என்று நினைக்கக்கூடாது. [அடுத்து வரும் வாக்யங்களை விடாமல் சிரித்தவாறே மொழிகிறார்கள்1:] வேணும்ம்ம்னு அத்தனை பொய்யையும்தான் குருவிடம் வெச்சுக்கணும்! ‘பேதம் த்வைதமாச்சே, த்வைதம் பொய்யாச்சே’ — ன்னா, அத்தனை பொய்யையும்தான் குரு கிட்டே வெச்சுக்கணும்! அப்படித்தான் அம்பாள் ஆசை! அப்படித்தான் அவள் ‘ஆர்டர்’ போட்டிருக்கா! அவ யாரு? ப்ரம்ம வித்யா ஸ்வரூபிணி, ஞானாம்பாள்-ன்னும் சொல்றோம்; மாயை, மஹா மாயை-ன்னும் சொல்றமோல்லியோ? அதனாலே பேதம், பொய் எல்லாமும் அவள் பண்ணினதுதானே? அதிலேயும் அழகா, மதுரமா ப்ரேமை, தாஸ்யம் (தாஸ பாவம்), கைங்கர்யம், சரணாகதி-ன்னெல்லாம் வெச்சிருக்காளோல்லியோ? ‘என்னை அபேதமா ப்ரம்ம வித்யைன்னு தெரிஞ்சுக்கப் பண்றாரே, குரு-ன்னுட்டு — அவர் கிட்டேயே இந்த பேதத்தையெல்லாம் காட்டு! ஸத்யத்தைச் சொல்றவர்கிட்டே அத்தனை பொய்யும் பண்ணு! அவர் ‘டீச்’ பண்ற அத்வைதத்தையெல்லாம், அவரொருத்தர் விஷயமா மட்டும் மூட்டை கட்டி வெச்சுட்டு, ‘ஸ்வாமிகளே! நீங்க வேறே, நான் வேறேதான்! நீங்க மஹா ஸமுத்ரம், நான் அணுவிலேயும் அணு! நீங்க ஆண்டான், நான் அடிமை’ன்னு இரு. தாஸ்யம் பண்ணு, ஸேவை பண்ணு, சரணாகதி பண்ணு’ன்னு ஆஜ்ஞை பண்ணியிருக்கா! இந்த ஒரு இடத்தில் த்வைதம்தான்னு வெச்சுண்டு, ப்ரேமையினாலே, பணிவிடையினாலே அநுக்ரஹத்தை அப்படியே பொங்கிண்டு வரும்படிப் பண்ணிட்டா பாக்கி ஸமஸ்த ப்ரபஞ்சத்திலேயும் அத்வைத பாவம் கெட்டியா ஸ்திரமாயிடும்…

அப்படியிருந்தவர்தான் அந்த நாலாவது சிஷ்யர். தோடகர் என்று பேர். பேர் என்றால் அப்பா – அம்மா வைத்ததில்லை; ஒரு காரணத்தினால் ஏற்பட்டது. ஆனந்தகிரி என்று அவருக்கு முதல் பேர்.

ஆசார்யாளுக்கு ஸதாகாலமும் பார்த்துப் கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருப்பார். ரொம்ப ஸாது. பார்த்தால் அசடு என்று தோன்றும். ஆசார்யாள் சிஷ்யர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பார். ஆறாயிரம் சிஷ்யர்கள் அவரை எப்பவும் சூழ்ந்து கொண்டிருப்பார்களென்று சொல்லியிருக்கிறது. எல்லாரும் புத்திசாலிகள். பாடத்தை ரஸித்துக் கேட்டுக்கொண்டு, நடுவே நடுவே ஸந்தேஹமெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டு, ‘ஆஹா, ஆஹா!’ என்று கொண்டாடிக் கொண்டிருப்பார்கள். இவர் மட்டும் வாயை மூடிக் கொண்டிருப்பார். ‘ஒண்ணும் புரிஞ்சுக்கத் தெரியாத அசடு’ என்று மற்றவர்கள் நினைத்தார்கள்.

ஒருநாள் அவர் பாடத்துக்கு வர நாழியாயிற்று. ஆசார்யாள் அவருக்காகக் காத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். மற்ற சிஷ்யர்கள், ‘இவருக்காக ஏன் wait பண்ணனும். அவர் வந்தாலும் ஒண்ணு, வராட்டாலும் ஒண்ணுதானே?’ என்று சொல்லிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

‘அப்படியா ஸமாசாரம்?’ என்று ஆசார்யாள் நினைத்தார். ‘நம்மை ஆசார்யன் என்று வந்தடைந்த குழந்தைகளுக்கு வித்யா கர்வம், ‘நாம ஒசத்தி இன்னொருத்தன் மக்கு’ என்று எண்ணங்கள் வரப்படாதே’ என்று கருணையோடு நினைத்தார். இதைவிட ஒரு விசேஷமான ஒரு கருணை மக்கு என்று மற்றவர்கள் நினைத்த சிஷ்யரின் மேலே அவருக்கு உண்டாயிற்று.

அதே ஸமயம் சிஷ்யர் குதித்துக்கொண்டு, ஆனந்த நர்த்தனம் பண்ணிக்கொண்டு, ஆசார்யாளின் மேலே ஒரு அத்புதமான ஸ்தோத்ரத்தை கானம் பண்ணிக்கொண்டு அங்கே வந்தார்! புதுசாக அவரே, அப்பத்தான், மெய் மறந்த நிலையில் பண்ணின ஸ்துதி. தன்னாலே தாளம் போட வைக்கும் ‘தோடகம்’ என்ற வ்ருத்தத்தில் அமைந்த ஸ்துதி. அந்த வ்ருத்தத்தில் கவனும் பண்ணுவது கஷ்டம். ஸ்தோத்ரத்தில் வார்த்தைகள், கருத்துக்கள் எல்லாமே வித்வான்களும் ஆச்சர்யப்படும் படியாக வந்து விழுந்திருந்தன. மக்கு என்று நினைத்தவர்களெல்லாம் ‘இப்படியும் உண்டா?’ என்று கொண்டாடும்படியாக ச்லோகம் ச்லோகமாக எட்டு, ஸரியாகத் தாளம் போட்டுக்கொண்டு, குதித்துக்கொண்டு அவர் சொன்னார்.

அதற்குத் “தோடகாஷ்டகம்” என்று பெயர்.

பண்ணியவருக்குத் “தோடகாசார்யாள்” என்றே பெயர் ஏற்பட்டுவிட்டது!

அதில் ஒரு ச்லோகம் சொல்கிறேன். பெரியவா வாக்கைச் சொல்வதைவிட நான் என்ன சொல்லக் கிடக்கிறது? ஏதோ எனக்குத் தெரிகிற பக்தி ஸமாசாரம் எல்லாருக்கும்தான் தரணும். ஞானந்தான் தனியாய் அநுபவிப்பது. அது வருகிறபோது பார்த்துக்கொள்ளலாம்! பக்தி எல்லாருக்கும் கொடுத்து, சேர்ந்து அநுபவிப்பது – பக்ஷணத்தைப் பிறத்தியாரோடு சேர்ந்து சாப்பிடுகிற மாதிரி! மற்றவர்களோடு கலந்து அநுபவித்தில் எந்த ‘ரிக்ரியேஷ’னும் (பொழுது போக்குக் கலையும்) உள்ளே தேனாக இருக்கிற ஊற்றைத் தராது. பக்தி ஸ்துதிதான் தரும். ‘தோடகாஷ்டகம்’ அப்படி ஒன்று அதில் ஒரு ச்லோகம்,

ஜகதீம் அவிதம் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹா மஹஸச் சலத: |
அஹிமாம்சு-ரிவாத்ர விபாஸி குரோ
பவ சங்கர தேசிக மே சரணம் ||

‘மஹா மஹஸ்’ என்றால் பெரிய ஜ்யோதி. இப்படி ஒரு ‘அருட் பெரும் ஜோதி’ இருக்கிறது. ஜனங்களையெல்லாம் ரக்ஷிப்பதற்காக (‘ஜகதீம் அவிதும்’), ஜனங்கள் தப்பு வழியில் போகாமல் நேரே போகப் பண்ணுவதற்காக, இப்படியான அருள் ஜோதிகள் மநுஷ்ய உருவம் எடுத்துக் கொண்டு (‘கலித ஆக்ருதய:’) பல மஹான்களாக ஸஞ்சாரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ‘சலத: ‘என்பதில் ச (cha) இல்லை. இப்படிச் சொன்னால் ‘விசரந்தி’ என்று சொன்ன ஸஞ்சாரத்தையே ரிபீட் பண்ணுவதாகிவிடும். அதைவிட ஆழமான அர்த்தம் கொடுக்கும்படியாக, இரண்டாவது ‘ச’ (chha) போட்டுச் சொல்லியிருக்கிறார். ‘ஏமாற்றுவது’, ‘வேஷம் போடுவது’ என்று அர்த்தம்! ‘ஜனங்களை ரக்ஷிப்பதற்காக மஹான்கள் ஏமாற்று வித்தை பண்ணுகிறார்கள்’ என்று சொல்லியிருக்கிறது!’ ஆழமாவது அர்த்தமாவது? விபரீதமாயல்லவா இருக்கு? என்றால்… இதுதான் கருணையுடைய மாயம், ஏமாற்று ஜாலம் என்று ஸ்வாதீனமாகச் சொல்வது. உண்மையில் அவர்கள் நம் மாதிரி மநுஷ்யர்களா? இல்லையே! அருள் ஜோதிதானே? மநுஷர் வேஷம் போடுவது ஏமாற்றுதானே? லோகத்தில் அவர்களுக்கு வாஸ்தவத்தில் ஏதாவது ஸம்பந்தமுண்டா? இப்படி க்ஷேத்ர யாத்ரை தீர்த்த யாத்ரை பண்ணி அவர்கள் அடையவேண்டிய பலன் ஏதாவது உண்டா? இருந்தாலும் இதெல்லாம் பண்ணுகிறாகளென்றால் [சிரித்து] fraud-தானே? அதனால்தான் ‘chha’ போட்டு “சலத:”!

இப்படி அநேக நக்ஷத்ரங்கள், க்ரஹங்கள் மாதிரியான ஜ்யோதிஸ்கள் மஹான்கள் என்று ஸஞ்சாரம் பண்ணி வருகிறார்கள். நக்ஷத்ரங்கள், க்ரஹங்கள் இருந்தால் அவற்றின் ப்ரகாசத்தையெல்லாம் சேர்த்து வைத்து ஸூர்யன் என்றும் ஒன்று இருக்கிறது. அந்த ஸூர்யன் உதித்தாச்சு என்றால் மற்ற க்ரஹ, நக்ஷத்ர ப்ரகாசமெல்லாம் மறைந்து போய்விடுகிறது! ” இப்படி அருள் ஜ்யோதிகளுக்குள்ளே, அறிவு ஜ்யோதிகளுக்குள்ளே நீங்கள்தான் ஸூர்யனாக இதோ எதிரே ப்ரகாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்!” என்று ஆசார்யாளைப் பார்த்துச் சொல்கிறார்.

அஹிமாம்சு: இவ அத்ர விபாஸி குரோ !

‘ஹிமாம்சு’ என்றால் குளிர்ந்த கிரணமுடைய சந்திரன். ‘அஹிமாம்சு’ என்றால் அதற்கு மாறுதலான ஸூர்யன்.

க்ரஹங்கள், நக்ஷத்ரங்கள், ஸூர்யன் எல்லாமே ஸஞ்சாரம் பண்ணியபடிதான் இருக்கின்றன. ‘ஸ்டேஷனரி’ நிலையானவை) என்று சொல்கிறவை உள்பட அத்தனை galaxy-களும் நகர்ந்தபடியேதான் இருக்கின்றன என்று கண்டு பிடித்துச் சொல்லியிருக்கிறார்கள். அப்படி இந்த மஹான்களாகிய மஹஸ்ஸுகளும் (ஜ்யோதிகளும்) லோகத்துக்கு ஞான ப்ரகாசத்தைக் கொடுத்தபடி ஸஞ்சாரம் பண்ணியபடியிருக்கிறார்கள் என்கிறார்.

இன்னொன்று தோன்றுகிறது. அகஸ்த்ய நக்ஷத்ரம் உதித்தால் கலங்கிய ஜலாசயங்கள் (நீர் நிலைகள்) எல்லாம் தெளிந்துவிடும். ஆசார்ய ஸூர்யன் உதித்ததில் கலங்கின அறிவுகளெல்லாம் தெளிந்து விட்டன!

கடைசி ச்லோகத்தில் என்ன சொல்கிறாரென்றால், “அசடாட்டம் இருந்த நானா இப்படிப் பாடுகிறேன் என்றால், நிஜமாக நானா பாடுகிறேன்? எனக்கு என்ன தெரியும்? நீங்கள் ஆய கலைகள் அறுபத்து நாலும் தெரிந்த ஸர்வஜ்ஞர் என்றால், எனக்கோ ஒரு கலையும் தெரியாது; ‘விதிதா ந மயா விசதைக கலா‘. “விசதைக கலா”: ‘விசத’மாக என்றால் ‘தெள்ளத் தெளிய’. எத்தனை வித்வானானாலும் அறிவினால் மாத்ரம் ஒரு தத்வத்தையோ, வேறே விஷயத்தையோ பிரிந்து நின்று தெரிந்து கொள்ளும் வரையில ‘தெள்ளத் தெளிய தெரிந்து கொண்டேன்’ என்று சொல்லமுடியாது.

“சிவாநந்தலஹரி”யில்2 ஸர்வஜ்ஞரான ஆசார்யாளே ஈச்வரனை “ஸர்வஜ்ஞ!” என்று கூப்பிட்டு, “எனக்கென்ன தெரியும்? ஸ்ம்ருதி தெரியுமா? ஷட்சாஸ்த்ரம் தெரியுமா? வைத்யம் கிய்த்யம், சகுண சாஸ்த்ரம் எதுவாவது தெரியுமா? பொயட்ரி தெரியுமா? பாட்டு, கீட்டு தெரியுமா? புராணம், மந்த்ர சாஸ்த்ரம் முதலான உசந்த ஸமாசாரம், டான்ஸ், விகடம் முதலான பொழுதுபோக்கு ஸமாசாரம் — எதுவுமே தெரியாமல் மாடு மாதிரி (‘பசு’ என்று சொல்லிக் கொள்கிறார்) இருக்கிறேன். நான் பசுவானாலும், நீதான் ‘பசுபதி’ என்று பேர் வைத்துக் கொண்டிருப்பதால் கருணை காட்டி யாகணும்” என்று சொல்லியிருக்கிறார். [சிரித்து] இது “சலத:” என்று சொன்ன ஏமாற்றுதானே?

தோடகர், “எனக்கு எதுவும் தெரியாது. அறிவினால் தங்களுக்கு ப்ரீதி செய்ய லாயக்கில்லாதவன். த்ரவயத்தால் தங்களுக்கும் சிஷ்யர்களுக்கும் செய்யவும் சக்தியே இல்லாதவன். செல்லாக் காசு இல்லாதவன்: ‘ந ச கிஞ்சந காஞ்சநம் அஸ்தி குரோ!’ ஆனாலும் தங்களிடம் தன்னியல்பாகப் பெருகும் க்ருபையே என்னை ரக்ஷித்து வருகிறது. அதை எல்லாமும் உடனுக்குடன் (‘த்ருதமேவ’) அளித்து வரணும் : “த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்” என்று முடித்தார்.

ஒவ்வொரு ஸ்லோகத்தையும், “பவ சங்கர தேசிக மே சரணம்” என்று முடித்து அப்படியே ஆசார்ய சரணங்களில் சரணாகதி பண்ணிக்கொண்டு விழுந்துவிட்டார்.

ஆசார்ய சரணாகதி பண்ணிவிட்டோமானால் போதும். அப்புறம், எங்கே போய் முடியணுமோ, நிறையணுமோ அங்கே கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு அவர் பொறுப்பு.

[மிகுந்த நெகிழ்ச்சியுடன்] அந்த ஒருத்தர் என்றைக்கோ நர்த்தனம் பண்ணிக்கொண்டு, சரணாகதி செய்து தாரையாக அழுதது இன்றைக்கும் நம் எல்லாரையும் தொட்டு, உயர்வு தருகிறது. இது ஆனந்த தாரை!

அன்றைக்குக் கூட இருந்த ஆறாயிரம் பேர் கண்ணிலும் தாரை தாரையாய் வராமலிருக்குமா? ஆனால் அது ஆனந்த தாரை மட்டுமல்ல. பச்சாத்தாபமும் சேர்ந்து கண்ணீரை வருவிக்கிறது. ‘இவரைப் போய் மக்கு ப்ளாஸ்திரி என்று அபசாரமாக நினைத்தோமோ!’ என்று நமஸ்காரம் பண்ணுகிறார்கள். ஆசார்யாளையும் பண்ணுகிறார்கள். தோடகரையும் பண்ணுகிறார்கள். சில பேர் குரு எதிரில் சிஷ்யர் சரணத்தில் விழக்கூடாதென்று ஆசார்யாள் சரணத்திலேயே விழுந்து தாரை தாரையாக ஜலம் விடுகிறார்கள். கண்ணீர்த் துளிகளாலேயே அர்ச்சனை!

தோடகாசார்யாள் பெருமை லோகத்துக்கெல்லாம் இப்படித் தெரிந்தது.

“ச்ருதி ஸார ஸமுத்தரணம்” என்று தோடகாசார்யாள் செய்ததாக ஒரு அத்வைத புஸ்தகம் இருக்கிறது. அவருக்கு ஏற்பட்ட பேருக்கு ஏற்றாற்போல் அதுவும் தோடக வ்ருத்தத்திலேயே இருக்கிறது.

தேசத்தின் வடக்கெல்லையில் பதரிநாதத்தில் ஆசார்யாள் ஸ்தாபித்த ஜ்யோதிர் மடத்தில் தோடகாசார்யாளையே முதல் பீடாதிபதிகளாக நியமித்தார்.


1 அவர்கள் சுவைத்துக் கூறியதன் சாயல் ஓரளவுக்கேனும் தெரியவேண்டுமென்று அவர்களது பேச்சு மொழியிலேயே கொடுத்துள்ளது.

2 “ஸ்ம்ருதௌ சாஸ்த்ரே” என்று தொடங்கும் ஐந்தாவது ச்லோகம்”

மௌனஞானி ஹஸ்தாமலகர்

முக்ய சிஷ்யர்களில் இன்னொருவர் ஹஸ்தாமலகர்…

ஆசார்யாளை ஸ்மரிக்கும்போது அவருடைய சிஷ்யர்களையும் ஸ்மரித்து நமஸ்காரம் பண்ணுவது விசேஷம் – பகவத் பக்தியோடு, ‘அடியார்க்கடியேன்’ என்று அவனுடைய பக்தர்களையும் பக்தி பண்ணும் ரீதியில்.

இன்னொரு விதத்தில் பார்த்தால் ஆசார்யாள் – சிஷ்யாள் என்று இவர்களைப் பிரித்துச் சொல்லலாமா? அவரேதானே இவர்களும்? “மஹாவிஷ்ணுவுடைய நாலு புஜம் மாதிரி எனக்கு நாலு சிஷ்யர்களை வைத்துக்கொண்டு அவதாரம் பண்ணுவேன்” என்று ஈச்வரனே இவர்களைத் தன் அங்கங்களாகச் சொன்னானல்லவா? பிரித்துச் சொன்னால் அபசாரமோ என்று தோன்றுகிறது. ஆனாலும் குரு-சிஷ்ய பாவம் என்பதன் அழகு, உயர்வு எல்லாம் தெரியும்படி த்வைத விளையாட்டு நடந்ததால் தனித்தனியாக ஒவ்வொரு சிஷ்யர் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். நாம் மனஸில் த்யானிப்பதற்கு த்வைதக் கல்பனைகள் வேண்டித்தானே இருக்கிறது?…

தேச ஸஞ்சாரத்தில் ஆசார்யாள் மேற்கு ஸமுத்ரத்துக்குப் பக்கத்தில் ஸ்ரீபலி என்னும் ஊருக்குப் போயிருந்தார்.

அங்கே ஒரு ப்ராம்மணன் பிள்ளையை அழைத்துக் கொண்டுவந்தான். பிள்ளை நன்றாக வளர்ந்திருந்தான். ஆனால் ஒன்றும் தெரியவில்லை. பார்க்கத் தெரியவில்லை. கேட்கத் தெரியவில்லை. பேசத் தெரியவில்லை. “ப்ரம்மமா இருக்கு, நீங்கதான் ஸரி பண்ணணும்” என்று ஆசார்யாளிடம் தகப்பனார்க்காரன் வேண்டிக்கொண்டான்.

எதுவும் தெரிந்து கொள்ளாமல் ஜடமாயிருப்பதை, லோக வசனப்படி, “ப்ரம்மாக” என்றான்! பையனைப் பார்த்த ஆசார்யாளுக்கோ வாஸ்தவமாகவே அவன் ப்ரம்மமாகத்தானிருந்த ஞானி என்று தெரிந்துவிட்டது!

பெரிய வேடிக்கை என்னவென்றால் பெரிய ஞானி, பெரிய அஞ்ஞானி இரண்டு பேருக்கும் வித்யாஸமே தெரியாது. அஞ்ஞானியில் இரண்டு தினுஸு. ஒன்று, மூளை வேலை செய்யாத முழு அசடு, பைத்தியம், அதிலேயும் இரண்டு தினுஸு! போட்டது போட்டபடி ப்ரமித்துக் கொண்டு ஒரே ஸாதுவாயிருப்பது ஒன்று. ஒரே கூச்சல், அடி, உதை என்று வெறிக் கூத்தாயிருப்பது ஒன்று. இரண்டும் மூளை ஸரியாக வேலை செய்யாத அஞ்ஞானி. இன்னொன்று, மூளை ஸரியாக வேலை செய்கிற மாதிரி மற்ற கார்யமெல்லாமிருந்தாலும் பரம நாஸ்திகமாக இருக்கும் அஞ்ஞானி! இந்த மூன்றுவித அஞ்ஞானிகள் மாதிரியும் ஞானி இருப்பான்! திருவண்ணாமலையில் சேஷாத்ரி ஸ்வாமிகள் என்று இருந்தார். பக்தியோடு கிட்ட வருகிறவர்களின் மேலே கல்லைத் தூக்கிப் போடுவார்! அதுவே அநுக்ரஹமாகி விடும்! ‘நல்லது நல்லதாயில்லை; பொல்லாதது பொல்லாததாயில்லை; சாஸ்த்ரமில்லை, ஸம்ப்ரதாயமில்லை’ என்று நாஸ்திகன் எப்படியிருக்கிறானோ அப்படியே ஞானியும் இருப்பான்!

வித்யாஸம் என்னவென்றால் அசடு, பைத்தியம் உள்ளே ஒன்று, ஜடமாக உணர்ச்சியில்லாமலிருக்கும்; அல்லது காரணமேயில்லாமல் கொதித்துக் கொந்தளித்துக் கொண்டிருக்கும். ஞானியோ உள்ளே ஒரே சாந்தி, ஸெளக்யமென்று ஆனந்தமாயிருப்பான்! நாஸ்திகன் நாம் தப்பிப் போய் அவனுக்கு ஒரு சின்ன ஹிம்ஸை பண்ணிவிட்டாலும் பதிலுக்கு நூறு பண்ணுவான். எதுவுமே பண்ணாவிட்டால் கூட ஸத்துக்களை ஹிம்ஸிப்பான். ஞானி சூடு போட்டாலும் சிரித்துக்கொண்டு, உள்ளூர ஆசீர்வாதம் பண்ணிக்கொண்டு இருப்பான்! ஹிம்ஸையிலும் ஆனந்தம்! எல்லாவற்றையும் அறிந்துகொண்டு அசடு மாதிரி, நாஸ்திகன் மாதிரி இருப்பவன் அவன்.

இப்படிக் கட்டையாட்டம் இருந்த பிள்ளையை உன்மாதம் என்று வைத்து ஆசார்யாளிடம் அந்த ப்ராம்மணன் அழைத்துக்கொண்டு வந்தான். பையனைப் பார்த்ததும் அவருக்கு, ‘நம்ம பின்னோட இழுத்துண்டு போறதுக்காக வந்து சேர்த்திருக்கிற வஸ்து’ என்று தெரிந்தது!

“யாருப்பா? எந்த ஊருப்பா?” என்று பேச்சுக் கொடுத்துப் பார்த்தார்.

வருஷக் கணக்காக வாய் திறக்காமலிருந்த பையன் ‘டாண்’ என்று, “எல்லாம் ஒண்ணா இருக்கச்சே ‘யாரு, எவா?’ன்னா என்ன அர்த்தம்? எல்லாம் ஸொப்பனமாயிருக்கச்சே, ஸொப்பனத்துக்குள்ளே அந்த ஊர், இந்த ஊர்-னு பேர் வெச்சா, முழிச்சுண்ட அப்புறம் எந்த ஊரைச் சொல்லிக்கிறது?” என்று கேட்டான்.

ச்லோக ரூபமாக, “நான் மநுஷ்யனில்லை, தேவனில்லை, யக்ஷனில்லை, நாலு ஜாதியில் எதுவுமில்லை, நாலு ஆச்ரமிகளில் யாருமில்லை; நான் ‘நிஜபோதரூபம்‘ – அதாவது ஆத்ம ஞான ஸ்வரூபம்” என்றிப்படி பதில் சொன்னதாக இருக்கிறது. ‘ஹஸ்தாமலக ஸ்தோத்ரம்’ என்று பேர்.

பிள்ளை பேசுகிற ஸந்தோஷத்தில் தகப்பனார் அகத்துக்கு அழைத்துக்கொண்டு போனான். அங்கே போனால் அந்தப் பிள்ளை பழையபடியே ஆகிவிட்டது.

ஆசார்யாளிடம் மறுபடிக் கூட்டிக்கொண்டு வந்தான். அவர்கிட்டேயானால் அவரைவிட ஞானமாகப் பேசுகிறது!

பிள்ளை நேராக இருந்தால் போதும் என்கிற எண்ணத்தில் தகப்பனார், “இது எங்க பிள்ளை இல்லை, உங்க பிள்ளைதான்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

அப்படியே ஆசார்யாள் தன்னுடைய சிஷ்ய பரிவாரத்தில் அந்தப் பிள்ளையைச் சேர்த்துக்கொண்டு ‘ஹஸ்தாமலகர்’ என்று பேர் வைத்தார்.

ஹஸ்தாமலகம் என்பது ‘உள்ளங்கை நெல்லிக்கனி’ என்பதுதான்! அப்படியென்றால் என்ன? கத்திரிக்காய், மாங்காய் இப்படி எதை எடுத்து உள்ளங்கையில் வைத்துக் கொண்டு பார்த்தாலும் அதன் அடிப் பக்கத்தில் நிறையப் பங்கு கையில் ஒட்டிக் கொண்டிருக்கும். அதனாலே அந்தக் காய்களில் கால், அரைக்கால் பாகம் கண்ணுக்குத் தெரியாது. நெல்லிக்காய்தான் கையில் ஒட்டிக்கொள்கிற பாகம் ரொம்ப ரொம்பக் குறைச்சல். அதனாலே நன்றாக முழு ரூபமும் தெரியும். பூமியில் விழுந்து கிடக்கும்போதுகூட அப்படித்தான். சுத்தமாக ரவுண்டாக அதுதான் இருப்பதால் இப்படி!

எலுமிச்சங்காய், விளாங்காய் முதலானதுகூட ரவுண்டாயிருந்தாலும் ‘வெய்ட்’ இருப்பதால் கையிலே அழுத்தி ஒரு பாகம் மறைந்துதான் போகும். எடுப்பாக முழு ரூபமும் தெரியும்படி இருப்பது நெல்லிதான். ஆகவே தெளிவாக முழுக்கத் தெரியும் ஸமாசாரத்தை ‘ஹஸ்தாமலகம்’ என்பது. அப்படி பெர்ஃபெக்டாக இவர் ஆத்ம ஸ்வரூபத்தைத் தெரிந்துகொண்டு, ஆசார்யாள் கேட்டவுடன் பளிச்சென்று சொல்லிவிட்டதால் ஹஸ்தாமலகர் என்று பேர்.

அவர் சொன்ன ச்லோகங்களுக்கு ஆசார்யாளே பாஷ்யம் எழுதினார். ‘ஹஸ்தாமலகீயம்’ என்று பேர்.

புரி ஜகந்நாத மடத்தில் ஹஸ்தாமலகரை முதல் ஸ்வாமிகளாக ஆசார்யாள் வைத்ததாக நம்பப்படுகிறது. த்வாரகை என்றும் இன்னொரு நம்பிக்கை.

பத்மபாதரின் ‘பஞ்சபாதிகை’

மற்ற ப்ரதான சிஷ்யர்களில் பத்மபாதர் கதை முன்னேயே கேட்டீர்கள். அவர் சாரீரக பாஷ்யத்துக்கு வ்யாக்யானம் எழுதினார். அதில் கொஞ்சம் பாகம் ஆசார்யாளுக்கு வாசித்தும் காட்டினார். அப்புறம் அவருக்கு தீர்த்தாடனத்தில் ரொம்ப ஆர்வம் ஏற்பட்டதால் ராமேச்வரத்துக்குப் புறப்பட்டார். ‘ரிவைஸ்’ பண்ணலாமென்று தம்முடைய புஸ்தகச் சுவடியையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

போகிற வழியில் ஜம்புகேச்வரத்தில் அவருடைய மாமா அகம் இருந்தது. அங்கே புஸ்தகத்தை வைத்துவிட்டு திரும்பி வரும்போது எடுத்துக் கொள்ளலாமென்று ராமேச்வரம் போனார்.

இவர் இல்லாதபோது மாமாக்காரர் படித்துப் பார்த்தார். அவர் கர்ம மார்க்க அபிமானி. ‘இந்தப் புஸ்தகம் நம் ஸித்தாந்தத்தை அழித்துவிடும் போலிருக்கே!’ என்று நினைத்தார். ‘ஸரி, புஸ்தகத்தை நாம் அழித்துவிட்டால் போச்சு! மறுபடி எழுதுவானானால் பார்த்துக் கொள்வோம்!’ என்று நினைத்தார்.1

அவருக்கு இரண்டு வீடு இருந்தது. ஒன்று கிலமாயிருந்தது. அதிலிருந்த ஸாமான்களையெல்லாம் இன்னொரு வீட்டில் சேர்த்தார். இந்தப் புஸ்தகத்தை மட்டும் அங்கே வைத்து வீட்டுக்கே நெருப்பு வைத்துவிட்டார்!

பத்மபாதர் ராமேச்வரத்திலிருந்து வந்தார்.

“விபரீதமாக நடந்துவிட்டது!” என்று மாமாக்காரர் வேஷம் போட்டார்.

‘ஸுரேச்வராசார்யாளை ஸந்தேஹித்ததற்காக இது ஆசார்யாளே தந்த தண்டனை! நாம் மறுபடி எழுத வேண்டாம்!’ என்ற எண்ணத்தோடு பத்மபாதர் ஆசார்யாளிடம் திரும்பி வந்தார். விஷயம் சொன்னார்.

ஆசார்யாள், “முந்தி நீ முதல் அத்யாயம் நாலு பாதமும், இரண்டாம் அத்யாயம் முதல் பாதமும் வாசித்துக் காட்டினாயல்லவா? அதைத் திரும்பச் சொல்கிறேன். எழுதிக் கொண்டு ப்ரகாசப்படுத்து. அதாவது லோகத்துக்குக் கிடைக்கட்டும்” என்று அநுக்ரஹம் பண்ணினார்.

ஒரே தடவை எப்பவோ கேட்டதை அப்படியே கடகடவென்று ஒப்பித்தார்!

ஸூத்ர பாஷ்யத்தின் முதல் ஐந்து பாதங்களுக்கு வ்யாக்யானமாதலால் அந்தப் புஸ்தகத்துக்குப் “பஞ்ச பாதிகா” என்று பெயர்.

ஆனால் அதில் லோகத்தில் ப்ரசாரத்துக்கு வந்திருப்பது (ப்ரஹ்ம ஸூத்ரத்தின்) முதல் அத்யாயத்தின் முதல் பாதத்திலுள்ளப் பத்மபாதாசார்யாள் பண்ணியுள்ள வ்யாக்யானம்தான்.

தம்முடைய ப்ரதான மடங்களில் ஒன்றில் பத்மபாதரை ஆசார்யாள் முதல் பீடாதிபதியாக நியமித்தாரென்று நிச்சயமாகத் தெரிகிறது. எந்த மடம் என்பதில் மூன்று விதமான நம்பிக்கைகள் இருக்கின்றன. த்வாரகையிலுள்ள மடம் என்று பலர் சொல்கிறார்கள். புரி ஜகந்நாத மடம் என்ற அபிப்ராயமுள்ளவர்களும் இருக்கிறார்கள். ‘மார்க்கண்டேய ஸம்ஹிதை’யிலும் ‘ஆனந்தகிரீய’த்திலும் அவரை ச்ருங்கேரியின் முதல் ஆசார்யாளாகச் சொல்லியிருக்கிறது.


1 மறுபடி பத்மபாதர் அந்நூல் எழுதமுடியாதபடி அவரது ஞாபகசத்தியைக் குலைக்க அவருடைய மாமா விஷமிட்டதாக ‘சங்கர விஜய’ங்களில் காண்கிறோம்.

ஸுரேச்வரரின் தனித்தன்மையும் சிறப்பும்

மீமாம்ஸகர்களின் ப்ரான புருஷராயிருந்த மண்டனமிச்ரர் ஆசார்யாளின் சிஷ்யரானது, வேதாந்த மதத்தின் புனருத்தாரணத்துக்குப் பெரிய பலம் கொடுத்தது.

ஆனாலும், மநுஷ ஸ்வபாவம் எத்தனை பெரியவர்களையும் எப்படிக் கொஞ்சமாவது ஆட்டி வைத்து விடுகிறது என்று தெரிவிப்பதுபோல, ஆசார்யாளின் மற்ற சிஷ்யர்களே அவரை (ஸுரேச்வராசார்யாளை)க் கொஞ்சம் ஸந்தேஹக் கண்ணோடு பார்த்ததாக ‘சங்கர விஜய’ங்களில் இருக்கிறது. அவர் ஆசார்யாளின் சாரீரக பாஷ்யத்துக்கு* வார்த்திகம் எழுத ஆரம்பித்ததாகவும், அப்போது மற்ற சிஷ்யாள், ‘என்ன இருந்தாலும் இவர் ரொம்பவும் தீவ்ரமான பூர்வ மீமாம்ஸகராக இருந்தவர்தானே? வாதத்தில் தோற்றுப் போனதால் வழியில்லாமல் ஆசார்யாளிடம் சிஷ்யராகிவிட்டாலும், அந்தரங்க பூர்வமாக அத்வைத வேதாந்தத்தில் இவருக்கு ஈடுபாடு இருக்குமோ, இருக்காதோ? நம்மெல்லாம் மாதிரி ப்ரஹ்மசர்யத்திலிருந்தே ஸந்நியாஸத்திற்கு வராமல் பஹுகாலம் குடும்ப வாழ்க்கையிலிருந்த இவருக்குள் ஞான தத்வம் ஏறியிருக்குமா? அதனாலே honest-ஆக எழுதாமல், தன்னுடைய பழைய ஸித்தாந்தத்துக்கே இடம் கொடுக்கும்படி ஏதாவது ‘ட்விஸ்ட்’, ‘கிஸ்ட்’ பண்ணி எழுதிவிடப் போகிறாரே!’ என்று ஆசார்யாளிடம் சொன்னார்களாம். ஆசார்யாள் மனஸில் ஒன்றை நினைத்துக்கொண்டு, ஆனால், சும்மாயிருந்துவிட்டார். ஸுரேச்வராசார்யாள் காதுக்கே விஷயம் எட்டி அவர் ‘நாம் எழுத வேண்டாம்’ என்று இருந்துவிட்டார்.

அப்புறம் ஒருநாள் அவர் ஆசார்யாளிடம் வந்து, “தங்களுக்கு குருதக்ஷிணை தரணும், தரணும் என்று இருந்தது. தாங்களோ பணத்தைத் தொடாதவர், நானும் ஸொத்து ஸ்வதந்த்ரம் எல்லாம் விட்டவன். என்ன தருவது, தருவது என்று இருந்தது. அப்புறம் என்னவோ யோசித்து, ஏதோ ஒன்று கொண்டு வந்திருக்கிறேன். இதுதான்!” என்று சொல்லி ஒரு சுவடிக் கட்டை ஆசார்யாள் பாதத்தில் வைத்து நமஸ்காரம் பண்ணினார்.

அது “நைஷ்கர்ம்ய ஸித்தி” என்ற புஸ்தகம். பரம கர்மாநுஷ்டாதாவாக இருந்தவர், “எல்லாக் கார்யமும் போய் சும்மாயிருப்பதுதான் மஹாஸித்தி. அதுதான் மோக்ஷம். அதுதான் வேத வேதாந்த முடிவு” என்று விவரித்து எழுதியிருந்த புஸ்தகம்!

ஆசார்யாளின் மனஸில் நினைத்துதான் ஸுரேச்வரருக்குள் புகுந்து, மற்ற சிஷ்யர்கள் அவருடைய honesty-ஐத் தெரிந்துகொள்ளும்படியாக இப்படி எழுதப் பண்ணினது!

ஆனாலும் அவர் எடுத்தவுடனேயே தடை ஏற்பட்டதால் அப்புறமும் சாரீரக வார்த்திகம் எழுதவேயில்லை. ஆசார்யாளும், மற்ற சிஷ்யாளும் ஆசைப்பட்டதன் பேரில் (ஆசார்யாளின்) உபநிஷத் பாஷ்யங்களில் இரண்டிற்கு மாத்ரம் வார்த்திகம் எழுதினார். ஒன்று தக்ஷிணத்தில் பெருவாரியாக வழக்கிலுள்ள க்ருஷ்ண யஜுர் வேதத்தைச் சேர்ந்த தைத்திரீயம்; இன்னொன்று வடக்கே ரொம்ப அநுஷ்டானத்திலுள்ள சுக்ல யஜுர் வேதத்தைச் சேர்ந்த ப்ருஹதாரண்யகம். (ஆசார்யாளின்) தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரத்திற்கும் அவர் உரை எழுதியிருக்கிறார் – “மான ஸோல்லாஸம்” என்று பேர்.

ஸுரேச்வராசார்யாளை இந்த (காஞ்சி) மடம், ச்ருங்கேரி மடம், த்வாரகா மடம் ஆகிய மூன்றும் தங்கள் தங்கள் ஆசார்ய பரம்பரையில் சொல்லிக்கொள்கின்றன. நம் மடத்துச் சரித்ரத்தை ஆழ்ந்து பார்த்தால் ஸுரேச்வராசார்யாளுக்குப் பீடாதிபத்ய அந்தஸ்து இருந்தாலும், அவரோடு கூடவே ஸர்வஜ்ஞாத்மர் என்ற இளம் ப்ரம்மசாரி இளவரசுப் பட்டம் மாதிரி இருந்துகொண்டு சாஸ்த்ரீய கார்யங்கள் எல்லா பண்ணி வந்ததாகத் தெரியும். அதாவது ஸுரேச்வரரின் மேல் பார்வையில் ஸர்வஜ்ஞாத்மர் இருந்தாரென்று தெரியும். அவர் ஸித்தியடைந்தபிறகு ஸர்வஜ்ஞாத்மரே பீடாதிபதியாக முழுப் பொறுப்பும் எடுத்துக் கொண்டிருக்கிறார். இதை வைத்து ஆலோசித்துப் பார்த்தால், மூன்று மடங்களிலுமே இப்படி ஸுரேச்வரரை அத்யக்ஷகராக ஆசார்யாள் நியமித்து, அவருக்கு உட்பட்டு வயஸில் சின்ன இன்னொருவர் வைதிகாசாரங்கள் முக்யமாயுள்ள எல்லாக் காரியமும் பண்ணும்படி வைத்திருக்கலாமென்று தோன்றுகிறது. ‘ஸெக்யூலர் (உலகியல் விஷயமான) நிர்வாஹப் பொறுப்பு முழுக்க ஸுரேச்வரரிடம்; சாஸ்த்ரத்திற்கு மேலே போன கட்டத்தில் ஞானோபதேசமும் அவர் பண்ணுவது; சாஸ்த்ராசாரங்களின்படியான அநேக கார்யங்கள் இன்னொருவர் செய்வது — என்று வைத்திருக்கலாம். ஏனென்றால்…

வயஸில் பெரியவர், மஹா பண்டிதர், பூர்வ மீமாம்ஸகராகப் பெயரெடுத்தவர், செல்வத்தையும் செல்வாக்கையும் விட்டு ஸந்நியாஸியானவர் என்று ஒரு ஸுரேச்வரருக்குத் தனி கௌரவமிருந்தது. இன்னொரு பக்கம் க்ருஹஸ்தாச்ரமத்தில் இருந்துவிட்டல்லவா துரீயாச்ரமத்திற்கு வந்தவர் என்ற எண்ணமும் சிலபேருக்கு இருந்திருக்க இடமிருக்கிறது. ஆசார்யாள் தம்முடைய மடங்களின் கௌரவத்துக்கு பங்கமாகக் கொஞ்சம் ஸம்சயாஸ்பதமாகக் கூட எதுவும் எவரும் நினைக்க இடம் கொடுக்கப்படாது என்று நினைத்திருக்கலாம். ஸுரேச்வராசார்யாளின் விசேஷ கௌரவத்துக்குத் தக்கதாக அவருக்கு நியமனம் தர வேண்டுமென்றும் நினைத்திருக்கலாம். அதனால் இப்படி மூன்று பீடங்களில் அவரை அத்யக்ஷகராக வைத்து, அவருடைய மேற்பார்வையில், ப்ரம்மச்சர்யத்திலிருந்து துரீயாச்ரமம் போன இன்னொருவர் பீடாதிபத்தியம் வஹித்து சாஸ்த்ராசாரங்கள் ப்ரதானமாகவுள்ள கார்யங்களையெல்லாம் பண்ணும்படி ஏற்பாடு பண்ணியிருப்பாரென்று தோன்றுகிறது.

மடாதிபதி, குரு என்றெல்லாம் ஸந்நியாஸிக்கு பொறுப்பு ஏற்பட்டால் அதற்கேற்ற ஸெக்யூலர் கார்யம், சாஸ்த்ரோக்த கார்யம் ஆகியவையுந்தான் சேர்கின்றன. ஸாஸ்த்ரோக்தமாகச் சிலது பண்ணும் சரீரத்துக்கு க்ருஹஸ்தாச்ரம அநுபவங்கள் கொஞ்சமும் கிடையாது என்றால் அப்போது பொதுப் பார்வையில் அதற்குத் தனியான பரிசுத்தியும் கௌரவமும் தெரியத்தான் செய்யும்.

இந்த ஸந்நியாஸியை விடவும் ரொம்ப ஜாஸ்தி சாஸ்த்ரகர்மா–அக்னி கார்யங்கள் முழுக்க–க்ருஹஸ்தனுக்கே உண்டு. அவ்வளவையும் பூர்வாச்ரமத்தில் புஷ்களமாகப் பண்ணினவர் ஸுரேச்வராசார்யாள், அப்போது அவருக்கிருந்த பேரிலேயே காஞ்சீபுரத்தில் ‘மண்டனமிச்ர அக்ரஹாரம்’ என்று ஒரு வீதி இருக்கிறது. க்ருஹஸ்தர் வஸிக்கும் இடத்துக்கு ஸந்நியாஸியின் பேரை வைப்பதை விட, அந்த ஸந்நியாஸியே உசந்த கர்மாநுஷ்டாதாவாக இருந்தபோது அவருக்கிருந்த பேரை வைப்பதுதான் பொருத்தம் என்று இப்படி வைத்தாற்போலிருக்கிறது. ஆதியில் அவரிருந்த மாஹிஷ்மதீயிலிருந்தேதான் ஆசார்யாளோடு இருநூறு ப்ராம்மண குடும்பங்கள் காஞ்சீபுரம் வந்து அங்கே குடியேறியதாகச் சொல்வார்கள்.


* ப்ரஹ்ம ஸூத்ரத்துக்கு ‘சாரீரக மீமாம்ஸா’ என்றும் பெயராதலால் ஆசார்யாளின் ஸூத்ர பாஷ்யம் ‘சாரீரக பாஷ்யம்’ என்றும் கூறப்படும். சரீரத்திலிருந்து பிரித்து அதற்கு உட்பொருளான ஆத்மாவைச் சொல்வதால் ‘சாரீரகம்’.

ச்ருங்கேரிச் சிறப்பு

ரொம்ப தூரம் இப்படித் தெற்காக ஸஞ்சாரம் பண்ணி துங்கபத்ரா தீரத்தில் ச்ருங்கேரிக்கு வந்தார்கள். அங்கே நிறை கர்ப்பிணியாயிருந்த ஒரு தவளைக்கு வெயில் படாமல் ஒரு பாம்பு குடை பிடித்துக் கொண்டிருப்பதை ஆசார்யாள் பார்த்தார். ‘தவளையைக் கண்டால் நப்புக் கொட்டிக் கொண்டு பிடித்துத் தின்னுகிற பாம்பு இப்படி ப்ரியமாக ரக்ஷிக்கிறதே? த்வேஷம் தெரியாத இந்த ப்ரதேசத்தில் சாரதாம்பாள் கோவில் கொண்டால் எத்தனை நன்றாயிருக்கும்?’ என்று நினைத்தபடி ஆசார்யாள் நதிக்கரையில் போய்க் கொண்டிருந்தார்.

சட்டென்று ‘ஜல் ஜல்’லும் நின்றது. ‘என்ன ஆச்சு?’என்று திரும்பிப் பார்த்தார்.

என்ன ஆயிருந்ததென்றால் ஆற்றங்கரை மணலில் பாதம் புதைந்து, புதைந்து அவள் நடந்து வந்ததில்தான் சிலம்பு ஓசை பண்ணவில்லை!

இவர் திரும்பிப் பார்த்ததால் அவள் நின்றுவிட்டாள்.

‘எல்லாம் நல்லதற்கே! நாம் நினைத்ததற்கே அவளுடைய நிபந்தனையும் ஸாதகமாயிடுத்து!’ என்று ஆசார்யாள் ஸந்தோஷித்து அங்கேயே சாரதாம்பாளை பீடம் ப்ரதிஷ்டை பண்ணி அமர்த்திவிட்டார்.

அந்த இடம் அவருக்கு ரொம்பப் பிடித்துவிட்டதால் அங்கேயே மடம் ஸ்தாபித்து பஹுகாலம் வாஸம் பண்ணி அவளை உபாஸித்துக்கொண்டிருந்தார். புஸ்தகங்கள் எல்லாம் முதல் பதினாறு வயஸில் எழுதி முடித்த ஆசார்யாள், அப்புறம் இரண்டாம் பதினாறு வயஸில் தான் – பதினாறே வருஷத்தில்தான் – ஆஸேது ஹிமாசலம் மூன்று தரம் தேசம் முழுக்க ஸஞ்சாரம் செய்து, அநேக கார்யங்கள் பண்ணினது. இந்தக் குறைந்த காலத்துக்குள்ளேயே அவர் ‘மாக்ஸிமம்’ காலம் தங்கியிருந்தது ச்ருங்கேரியில்தான் என்று ‘சங்கர விஜய’ங்களிலிருந்து தெரிகிறது.

ச்ருங்கேரி மடத்துக்குத் தனி விசேஷம் என்னவென்றால்: மற்ற மடங்கள் ஆசார்யாள் உத்தேசித்து ஸ்தாபனம் பண்ணியவை. ‘சார்தாம்’ என்று பாரத தேசத்தின் நாலு கோடிகளில் நாலு புராதன க்ஷேத்ரங்கள் உண்டு – வடக்கே பதரிநாதம், மேற்கே த்வாரகாநாதம் (அல்லது ஸோமநாதம்), கிழக்கே ஜகந்நாதம் (புரி), தெற்கே ராம நாதம் (ராமேச்வரம்) என்று. இவற்றில் பத்ரி, த்வாரகா, புரி முதலியவற்றில் மூன்று ப்ரதான மடங்களை ஸ்தாபித்தார். தெற்கே மட்டும் ராமேச்வரத்தில் மடமில்லை. அதாவது தேசத்தில் ஐந்து ப்ரதான மடங்களும், இன்னும் அநேக சின்ன, சின்ன மடங்களுமாக ஆசார்யாள் ஸ்தாபித்ததாகத் தெரிவதில், ராமேச்வரத்தில் ப்ரதான மடம் எதுவும் அவர் அமைக்கவில்லை. சின்னதான மடம் அமைத்திருக்கலாம். பிற்காலத்தி துருக்கர்கள் முதலானவர்கள் ஹிந்து மத விஷயமாக ரொம்ப அக்ரமமாகத் தூள்பண்ணிக்கொண்டு போனபோது சின்ன மடங்களில் அநேகம் எடுபட்டே போய்விட்டதாக ஊஹிக்க முடிகிறது. ஆனால் ப்ரதான மடங்களுக்கும் பாதிப்பு இருந்தாலும் அவை எடுபட்டுப்போவது என்று இல்லாமல், வேற்று ஊருக்கு இடம் மாற்றப்பட்டு அங்கேயிருந்து நடந்து வந்திருக்கின்றன; அல்லது, ஒரு காலத்தில் மூடிப்போனாலும் பிற்பாடு மறுபடி புத்துயிர் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நம்முடைய (காஞ்சி) மடம் நவாபுகள் – இங்கிலீஷ்காரர்கள் – ப்ரெஞ்சுக்காரர்களின் ரகளையில் காஞ்சீபுரத்திலிருந்து முதலில் உடையார்பாளயதுக்கும், அப்புறம் கும்பகோணத்துக்கும் இடம் மாறிற்று. ‘ஜோஷி மட்’ என்று சொல்கிற (பதிரியிலுள்ள) இன்னொரு ப்ரதான மடமான ஜ்யோதிர் மடம் ஒரு காலத்தில் மூடப்பட்டு அப்புறம் புத்துயிர் பெற்றிருப்பதாக அந்த மடதுக்காரர்களே தெரிவித்திருக்கிறார்கள். ஆனபடியால் ராமேச்வரத்தில் ப்ரதான மடம் இருந்தால் அது இப்போது நமக்குத் தெரிந்த பல நூற்றாண்டுகளாக எடுபட்டுப் போயிருக்காது. அதனால்தான் துங்கபத்ரா தீரத்திலுள்ள ச்ருங்கேரியில் ஆசார்யாள் ஸ்தாபித்த மடமே தென் தேசத்துக்கான அவருடைய ப்ரதான மடம் என்று தீர்மானமாகிறது. ஆனாலும் மற்ற மடங்களை அவர் ‘ப்ளான்’ போட்டு ஏற்படுத்தின மாதிரி இது இல்லை. இவர் ‘ப்ளான்’ போட விடாமல், வித்யாதி தேவதையே ச்ருங்கேரியில் மடம் ஏற்படும்படியாகப் பண்ணிவிட்டாள்! அந்த மடத்துக்கெனத் குறிப்பாக ஏற்பட்ட க்ஷேத்ரம் ‘ராம க்ஷேத்ரம்’ என்று வைத்திருக்கிறார். அது ராமேச்வரம் என்றே நடைமுறையில் இருக்கிறது.

அப்புறம், காஞ்சீபுரம் லோகத்துக்கே நாபி என்ற மத்ய ஸ்தானமாக இருந்ததால் அங்கே மட ஸ்தாபானம் பண்ணினார். இவை முக்யமான மடங்கள். இன்னும் பலவும் ஸ்தாபித்தார். எல்லாம் அவர் உத்தேசப்படி. ச்ருங்கேரியில்தான் சாரதாம்பாள் தன் உத்தேசப்படி மடம் ஏற்படுத்திக் கொண்டது!

மண்டனர் – ஸரஸவாணி தம்பதியை வென்றது

ஒரே கார்யக்காரர் வீட்டுக்கு ஒரே சும்மா – நிலைக்காரர் போய்ச் சேர்ந்தார்! மண்டனமிச்ரர் குமரிலபட்டரைபோல மாற்றுக் கக்ஷிக்காரரை மதித்து வரவேற்கும் குணமுள்ளவராக இல்லை. வேத கர்மாக்களை விட்டுவிட்டு ‘ஞானம்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஸந்நியாஸிகள் என்றால் அவருக்குக் கட்டோடு பிடிக்காது. அவர்களைப் பார்த்தாலே பாபம் என்று நினைத்தார்! அந்த வீட்டுக்கு அழையா விருந்தாளியாக ஆசார்யாள் போய்ச் சேர்ந்தார், ‘எத்தனை விரோத பாவம் கொண்டவரானாலும் நாம் ஸத்ய தத்வத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்லாமலிருக்கப் படாது’ என்ற கருணையிலே!

அன்றைக்கு பார்த்து மண்டனமிச்ரர் வீட்டில் ச்ராத்தம்! இப்படியொரு பித்ரு கர்மாவில் ஸந்நியாஸியைப் பார்த்தால் இரட்டிப்பு பாபம் என்று அவர் நினைத்திருப்பார்!

‘ச்ராத்தம்’ என்றால் ‘ச்ரத்தையோடு செய்யப்படுவது’ என்று அர்த்தம். நிஜமாகவே அப்படி உள்ளே மண்டனமிச்ரர் பண்ணிக்கொண்டிருந்தார். அநாசார வாடை எதுவும் உள்ளே வரக்கூடாதென்று வாசற் கதவைச் சாத்தியிருந்தது.

ஆசார்யாள் எப்படியும் அவருக்கு அநுக்ரஹித்தே தீருவது என்று வந்திருந்தார். அதனால் ஒரு வேடிக்கையான விதத்தில் உள்ளே போய்விட்டாரென்று கர்ண பரம்பரையாகக் கதை இருக்கிறது.

அக்காலத்தில் சாணார்களுக்கு ஒரு வித்தை தெரியுமாம். தென்ன மரத்தின் அடிபாகத்தில் ஒரு மந்த்ரம் சொல்லி அடிப்பார்களாம். உடனே அது துவண்டு, வளைந்து, உச்சி பூமியைத் தொடுமாம். அந்த உச்சியிலே சாணான் ஏறிக்கொள்வான். அங்கே காய் பறிப்பதோ, கள் இறக்குவதோ தான் கார்யத்தைப் பண்ணிக்கொள்வான். அப்புறம் எந்தப் பக்கம் இறங்க நினைக்கிறானோ அப்படி அந்த மரம் திரும்பி, வளைந்து, உச்சியால் பூமியைத் தொடும்படி மந்த்ரம் போடுவானாம். மரம் அப்படியே பண்ணியவுடன் ஸுலபமாக இறங்கிவிடுவான்.

மண்டனமிச்ரரின் அகத்துக்கு வெளியில் ஒரு தென்ன மரம் இருப்பதை ஆசார்யாள் பார்த்தார். அந்தப் பக்கமாக ஒரு சாணான் போவதையும் பார்த்தார். அவனிடம் போய், “உன் வித்தையை எனக்குச் சொல்லிக் கொடு” என்று கேட்டுக் கொண்டார். வித்யா ஸ்வீகரணத்தில் பெரியவன்-சின்னவன் என்ற பேதம் கூடாது என்ற சாஸ்த்ரக் கருத்தை ஏற்றுக்கொள்ளும் எளிமை ஆசார்யாளுக்கு இருந்தது. அப்படித்தான் ஸர்வஜ்ஞரானார். அவனும் சொல்லிக் கொடுத்தான். அப்புறம் ஆசார்யாள் அந்த வித்தையால் தென்ன மரத்தை வளைத்து ஏறிக்கொண்டு, அது வீட்டு உள்பக்கம் திரும்பி, முற்றத்தில் தம்மை இறக்கி விடும்படிப் பண்ணினார்.

இது கர்ணபரம்பரைக் கதை. சங்கர விஜயங்களில் யோக சக்தியால் உள்ளே போனார் என்று இருக்கும்.

இவர் உள்ளே போனபோது ப்ராம்மணர்களை போஜனத்துக்கு அமர்த்துகிற கட்டம். அந்த ப்ராம்மணர்கள் யாரென்றால் மஹா பெரியவர்களான இரண்டு பேர். ஒருவர் மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் ஆதாரமான ஸூத்ரத்தைச் செய்த ஜைமினி மஹர்ஷி. மற்றவர் ஜைமினிக்கு ஸாமவேதம் உபதேசித்த குருவான ஸாக்ஷாத் வ்யாஸாசார்யாள். மண்டனமிச்ரரின் அநுஷ்டான ச்ரத்தையை மதித்து அவர்களே கண்ணுக்குத் தெரியும்படி ப்ராம்மணார்த்தத்துக்கு வந்திருந்தார்கள்.

ஸர்ப்பம் எதுவும் அண்ட முடியாமல் பரீக்ஷித்து எத்தனையோ பந்தோபஸ்துப் பண்ணிக் கொண்டிருந்தும் தக்ஷகன் என்கிற நாகராஜன் எலுமிச்சம் பழத்தில் ஒளிந்து கொண்டு அவனிடம் போனானல்லவா? அப்படி மண்டனமிச்ரர் மஹர்ஷிகளை வைத்துக்கொண்டு பந்தோபஸ்தாக பித்ரு கார்யம் பண்ணியும், அவர் கண்டாலே கரித்த இந்த ஸந்நியாஸி மூடின கதவை மீறி அவரிடம் போய்ச் சேர்ந்தார்! தக்ஷகன் விஷத்தைச் செலுத்தப் போனான். இவர் ஞானாம்ருதத்தைச் செலுத்துவதற்காகப் போனார்!

“இந்த சமயத்தில் திடீரென்று ஸந்நியாஸிப் பயல் வந்து குதித்திருக்கிறானே!” என்று மண்டனமிச்ரருக்கு மஹா கோபம் வந்தது. “எங்கேயிருந்து, முண்டி?” என்று சத்தம் போட்டார். முண்டி என்றால் மொட்டைத் தலைக்காரன். ஸௌள ஸம்ஸ்காரம் பண்ணி வைக்கிற குடுமியை ஸந்நியாஸி அறுத்துப் போடுவதால் மீமாம்ஸகர்கள் அவனை ‘முண்டி’ என்று கரித்துக் கொட்டுவார்கள்.

‘எங்கேயிருந்து வந்து தொலைஞ்சே?’ என்கிற அர்த்தத்தில் இவர், ‘எங்கேயிருந்து, முண்டி?’ என்று கேட்டார்.

ஆசார்யாள் வேண்டுமென்றே அதற்கு வேடிக்கையாக அர்த்தம் பண்ணிக்கொண்டு பதில் சொன்னார். சரீரத்தில் எங்கேயிருந்து ஆரம்பித்துக் கேச விஸர்ஜனம் என்று அவர் கேட்டதாக வைத்துக்கொண்டு, “கழுத்திலிருந்து முண்டி!” என்றார். ஸந்நியாஸிகள் கழுத்துக்குக் கீழ் முண்டனம் செய்துக்கொள்ளக் கூடாது.

இதேபோல மண்டனமிச்ரர் மேலே மேலே கேட்ட கேள்விகளுக்கும் ஆசார்யாள் வேறுவிதமாக அர்த்தம் பண்ணிக்கொண்ட மாதிரியே வேடிக்கையாக ‘டக் டக்’கென்று பதில் சொல்லிக்கொண்டு போனதாகப் புஸ்தகங்களிலிருக்கிறது. ச்ருதி வாக்யங்களைத் தாங்கள்தான் ஸரியாகப் புரிந்துகொண்டு எப்படி அர்த்தம் செய்ய வேண்டுமோ அப்படிப் பிரித்து, சேர்த்துப் பண்ணுவதாக மீமாம்ஸகர்களுக்குத் தற்பெருமை உண்டு. அப்படிப்பட்ட மீமாம்ஸகருடைய வார்த்தையிலேயே இரண்டு அர்த்தம் கண்டுபிடித்து ஆசார்யாள் பதில் சொல்லிக்கொண்டு போனார்!

மண்டனமிச்ரருக்கு அவமானமாகி, ஆத்திரம் தலைக்கேறியது. ஆனால் ச்ராத்த காலத்தில் ஏதும் அஸம்பாவிதம் நேராமல் ஜைமினியும் வ்யாஸரும் அவரை ஸமாதானப்படுத்தினார்கள். ஆசார்யாளின் பெருமை தெரிந்தவர்களானதால், “ஸந்நியாஸியை விஷ்ணு இலையில் அமர்த்துவது சாஸ்த்ர ஸம்மதமேயானது. ஆகையால் இவரை அப்படி உட்கார வைத்து பிக்ஷை பண்ணு. அதுதான் யுக்தம்” என்று சொன்னார்கள்.

ப்ராம்மணார்த்தக்காரர்கள் யாரானாலுமே அவர்கள் சொல்வதை மீறக்கூடாதென்று சாஸ்த்ரம். இவர்களோ மஹா பெரியவர்கள். என்ன பண்ணுவது? வேறே வழியில்லாமல் மண்டனமிச்ரர் வேண்டா வெறுப்பாக ஆசார்யாளுக்கு நமஸ்காரம் பண்ணி, ” பிக்ஷைக்கு உட்காரணும்” என்று கேட்டுக் கொண்டார்.

ஆசார்யாள், “நான் அன்ன பிக்ஷைக்கு வரவில்லை. வாத பிக்ஷைக்கு வந்திருக்கிறேன். குமாரிலபட்டர் சொல்லி வந்திருக்கிறேன்” என்றார்.

பட்டர் பேரைச் சொன்னதும் மண்டனமிச்ரரின் த்வேஷ பாவம் மாறிற்று. “முதலில் இந்த பிக்ஷையை ஏற்றுக் கொள்ளனும். அப்புறம் வாதம் செய்வோம்!” என்றார்.

நல்லபடியாக திவஸம் முடிந்தது. வ்யாஸரும் ஜைமினியும் வந்தபடியே போனார்கள்.

அப்புறம் ஆசார்யாளும் மண்டனமிச்ரரும் வாதம் செய்ய ஆரம்பித்தார்கள்.

தீர்ப்புச் சொல்ல, மத்யஸ்தமாக யாரை வைத்துக் கொண்டார்களென்றால், மண்டனமிச்ரரின் பத்னியான ஸரஸவாணியைத்தான்.

“யாரோ ஊர்ப் பெண்டுகளையும் கிளிகளையுங்கூட தேர்ந்த சாஸ்த்ர ஞானமுள்ளவர்களாக இவர் ஆக்கியிருக்கிறாரென்றால் இவருடைய ஸொந்தப் பத்னி மஹா பண்டிதையாகத்தானே இருக்க வேண்டும்?” என்பதால் ஆசார்யாள் அவளுடைய மத்யஸ்தத்துக்கு ஒப்புக்கொண்டிருப்பார் என்று சொல்லலாம். இது மாநுஷமாகச் சொல்வது. அவதாரம் என்று பார்த்தால் ஆசார்யாளுக்கு மண்டனமிச்ரர் ப்ரம்மாவே என்றும், ஸரஸவாணி வித்யாதி தேவதையான சாரதையே என்றும் தெரிந்திருக்க வேண்டும். ஸரஸ்வதியின் தீர்ப்புக்கு யார்தான் கட்டுப்பட மாட்டார்கள்?

ஸரஸவாணிக்கு ஒரு தர்மஸங்கடம். இரண்டு பேரில் ஒருத்தர் தோற்றுப் போனதாக அவர் தீர்ப்புக் கொடுக்க வேண்டிவரும். ‘பர்த்தாவை அப்படிச் சொல்வது முறையாயில்லை; ஒரு ஸந்நியாஸ ச்ரேஷ்டரைச் சொல்வதும் நன்றாயில்லையே!’ என்று பார்த்தாள். ‘நம் வாயால் ஒன்றும் சொல்லவேண்டாம்’ என்று நினைத்து ஒரு யுக்தி செய்தாள். இரண்டு பேருக்கும் புஷ்ப ஹாரங்களை அர்ப்பணம் பண்ணிப் போட்டுக்கொள்ளச் சொல்லி, “யாருடைய ஹாரம் வாடாமலே இருக்கிறதோ அவருக்கே ஜயம்” என்று சொன்னாள்.

வாதம் ஆரம்பிக்கும்முன் இரண்டு பேரும் ஒரு நிபந்தனை செய்துகொண்டார்கள். ஆசார்யாள் ஜயித்தால் மண்டனமிச்ரர் க்ருஹஸ்தாச்ரமத்தையும், அக்னி ஹோத்ராதி அநுஷ்டானங்களையும் விட்டுவிட்டு ஸந்நியாஸம் வாங்கிக்கொள்ள வேண்டும்; மண்டனமிச்ரர் ஜயித்தால் ஆசார்யாள் ஸந்நியாஸத்தை விட்டுவிட்டு க்ருஹஸ்தராகிக் கர்மாநுஷ்டானமெல்லாம் பண்ணவேண்டும், என்று. சுத்த பரஹ்மசர்ய மூர்த்தியான ஆசார்யாள் ஒருநாளும் ஒப்புக்காகக் கூட ‘நான் க்ருஹஸ்தனாகிறேன்’ என்று சொல்லியிருக்க மாட்டார் என்பதால் இன்னொரு தினுஸாகவும் சொல்வதுண்டு. அதாவது, தாம் தோற்றுப்போனால் ‘மரணாந்த ப்ராயச்சித்தம்’ பண்ணிக்கொள்வதாகச் சொன்னார் என்பார்கள். ப்ராணன் போகும்வரை ஆஹாரத்தைத் தொடுவதில்லை, ஜல பானம் பண்ணுவதில்லை என்று உபவாஸமிருப்பதுதான் ‘மரணாந்த ப்ராயச்சித்தம்’. தம்முடைய ஸந்நியாஸ சரீரத்தைக் கொண்டு குடும்ப வாழ்க்கை வாழ்வதைவிட அதை த்யாகமே பண்ணத்தான் ஆசார்யாள் நினைப்பார் என்பதால் இப்படிச் சொல்வது.

வாதம் ஆரம்பித்தது. முன்னே வ்யாஸருக்கும் ஆசார்யாளுக்கும் நடந்தமாதிரி இதுவும் இரண்டு பண்டித பர்வதங்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் மோதிக் கொள்வதாயிருந்தது. இருபத்தியோரு நாள் இப்படி வாதம் நடந்தது.

கர்மா, பக்திகளால் முடிவாக ஞானத்தையே அடைய வேண்டுமென்று ஆசார்யாள் ச்ருதி, யுக்தி, அநுபவங்களால் நன்றாக எடுத்துக் காட்டினார். பக்தியின் அன்பு, அப்புறம் அன்பும் நிறைந்து அடங்கிப் போகிற அத்வைத ஞானத்தின் சாந்தம் இவற்றால்தான் ஜீவனுக்குப் பூரணத்வம், இதுவே வேதங்களின் பரம தாத்பர்யம் என்று காட்டினார். அந்த அன்புக்கும், சாந்திக்கும் இருப்பிடமாக உள்ளவரே ஸந்நியாஸி; அவன் கர்மத்தை விட்டவனென்பதால் நிந்திக்கத் தக்கவனல்ல என்று காட்டினார்.

‘அக்னிஹோத்ர அக்னியை அணைத்தவன் வீரஹத்தி தோஷத்திற்கு ஆளாகிறான்’ என்ற தைத்திரீய ப்ராஹ்மண வசனம் போலுள்ள வேத வாக்யங்களைக் கொண்டு கர்மாவை விட்ட ஸந்நியாஸியை தூஷிப்பது ஸரியேயில்லை. அந்த வாக்யங்களெல்லாம் ப்ரவிருத்திக்கே பக்குவமாயிருப்பவனை உத்தேசித்தவைதான். அப்படிப்பட்டவன் கர்மாவைவிட்டு இஷ்டப்படிக் கீழே போய் வீணாவதைத்தான் தடுத்திருக்கிறது. கர்மாவைவிட்டு மேலே நிவ்ருத்திக்குப் போகிறவனோ வெளி அக்னியைத் தன்னுடைய ஞானாக்னியில்தான் ஆரோபித்துக் கொண்டு (ப்ரதிஷ்டை செய்துகொண்டு) அதை மேலும் ஜ்வலிக்கச் செய்கிறானேயொழிய அணைத்து விடவில்லை. ஸம்ஸார வ்ருக்ஷத்தில் பழுத்த பழமாகிக் காம்பறுந்து விழும் கனியாக இருப்பவன் அவன். அரும்பும், பூவும், காயுமாக உள்ள மட்டும் ஸதா கார்யம் பண்ணிக் கொண்டு, ஜலத்தை உறிஞ்சிக்கொண்டு, ஸூர்ய ரச்மியை க்ரஹித்துக்கொண்டு, இதழ் இதழாக, கலர் கலராக ஆகிக் கொண்டு, ஸைஸிலும் தினந்தினம் பெரிசாகிக்கொண்டு, ருசியிலும் கசப்பு-துவர்ப்பு-புளிப்பு என்று ருசி மாறிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அப்பொழுது ஸம்ஸார வ்ருக்ஷத்திலிருந்து அறுக்கப் பார்த்தால் ஒரே அழுகையாய்த்தான் இருக்கும். காம்பிலிருந்து ஒரேயடியாக ஜலம் கொட்டும். ஆனால் அப்புறம் இப்படிக் கார்யம் பண்ணிப் பண்ணியே கசப்பு-துவர்ப்பு-புளிப்பெல்லாம் போய் ஒரே மதுரமாகிக் கனிந்துவிட்ட பிறகு பழத்தை யாராலும் வ்ருக்ஷத்தில் இருத்தி வைக்க முடியாது. துளிக்கூட ஜலம் சொட்டாமல் காம்பு இற்று அது அப்படியே விழுந்து விடும். நிவ்ருத்திதான்! அப்புறம் அதற்கு ஒரு கார்யமுமில்லை. அதுமாதிரி, ஞான பக்குவம் பெறும் வரையில் சாஸ்த்ர ப்ரகாரம் ஸதா கார்யம் பண்ணிக் கசப்பான, துவர்ப்பான, புளிப்பான அநுபவங்களையெல்லாம் நன்றாக அநுபவித்து, நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே போகவேண்டியதுதான். ஆனாலும் ப்ரேமையின் மாதுர்யத்தில் நிறைந்து எல்லாம் ஒன்றாகப் பார்க்கிற ஞானப் பழமான பின் ஸகல கார்யத்தையும் விடவேண்டியதேயாகும். உள்ளேயிருக்கிற அத்வைத ஞானமே வெளியில் ஸகல ப்ராணிகளையும் ஒன்றாகப் பார்த்து ஸமமாகப் பெருகும் ப்ரேமையாக ஆகிவிட, அப்படியே சும்மாயிருந்து கொண்டிருக்க வேண்டியதுதான். ‘எல்லா ப்ராணிக்கும் நான் அபய ஸ்தானமாக இருப்பேன்’ என்று ப்ரைக்ஷோச்சாரணம் பண்ணி ஸந்நியாஸியாகிறவன் இந்த அன்புக்கும் சாந்திக்குமே இருப்பிடம். அதற்கு ஏறுவதற்குத்தான் இத்தனை ஸ்வதர்ம கர்மாக்களும். இவ்விஷயங்களை ஆசார்யாள் எடுத்துச் சொன்னார்.

‘தம்முடைய ஸித்தாந்தம் ஸரியில்லை. ஆசார்யாள் சொல்வதுதான் ஸரி. ஜயம் அவருக்குத்தான்’ என்று மண்டனமிச்ரர் புரிந்துகொண்டார். தோற்றுப் போனதற்காக இல்லாமல் மனஸாரவே ஞான மார்க்கத்தை ஏற்றுக்கொண்டார்.

ஆனாலும் ஸரஸவாணியை மத்யஸ்தமாக வைத்துவிட்டதால் அவள் முடிவு சொல்ல விடுவதுதானே மரியாதை? அதனால் சும்மாயிருந்தார்.

அவளும் ஹாரத்தைப் போட்டு அது முடிவு சொல்லட்டும் என்றுதானே விட்டிருந்தாள்? இப்போது என்ன ஆயிற்றென்றால் மண்டனமிச்ரரின் ஹாரம் வாடிப் போயிற்று!

பதி ஸந்நியாஸியாகிறாரென்றால் ஒரு பத்னிக்கு எப்படியிருக்கும்?

அதனால், பத்னி என்பவள் பதியின் அங்கமே ஆகையால் தன்னையும் ஆசார்யாள் ஜயித்தாலே ஜயம் பெற்றதாகும் என்று சொன்னாள். இது நம் மநுஷ மட்டத்தில் தெரிகிற விஷயம். உள்ளே தாத்பர்யம் என்னவென்றால் ஆசார்யாள் ஸர்வஜ்ஞர்தான் என்பதை ஸாக்ஷாத் ஸரஸ்வதியுடனேயே அவர் வாதம் செய்து ஜயிப்பதன் மூலம் காட்ட வேண்டும் என்பதே! வஸிஷ்டர் வாயால் ப்ரம்மரிஷி என்பதுபோல் ஸரஸ்வதி வாயால் ஆசார்யாள் ஸர்வஜ்ஞர் என்று தீர்ப்புப் பெறுவதற்குத்தான் ஸரஸவாணியின் அவதாரமே ஏற்பட்டது.

மஹா பண்டிதையாக விளங்கிய ஸரஸவாணியுடனும் ஆசார்யாள் வாதம் செய்து ஜயித்தார்.

ஸரஸ்வதி தன்னுடைய ஸ்வய ரூபத்திலேயே வந்து பிற்பாடு ஆசார்யாள் ஸர்வஜ்ஞ பீடாரோஹணம் செய்தபோதுதான் வாதம் செய்து முடிவில் அவர் ஜயித்ததாக ப்ரகடனம் செய்தாள் என்றும் கதை இருக்கிறது.

பதி தோற்றுப் போய்விட்டார் என்று எப்படி ஒரு பத்னி சொல்ல முடியும்? இந்த இடத்தில் அறிவு தேவதையின் அவதாரமான ஸரஸவாணி எப்படி ஸமாளித்தாள் என்பது மனஸைத் தொடுகிற மாதிரி இருக்கிறது. நேரே சொல்லாமல் குறிப்பால் உணர்த்திச் சொன்னாள். என்ன செய்தாளென்றால் இரண்டு பேரையும் நமஸ்காரம் பண்ணி, “இரண்டுபேரும் பிக்ஷைக்கு வாருங்கள்” என்று சொன்னாள்.

க்ருஹஸ்தனை “போஜனத்திற்கு வாருங்கள்” என்றோ, அல்லது சாஸ்த்ரோக்தமாகச் சொல்வதானால் “வைச்வ தேவத்திற்கு வாருங்கள்” என்றோதான் சொல்லவேண்டும். ஸந்நியாஸிக்குத்தான் “பிக்ஷை” பண்ணுவது. இரண்டு பேரையும் “பிக்ஷைக்கு வாருங்கள்” என்று சொல்லி நமஸ்காரம் பண்ணியதிலேயே மண்டனமிச்ரர் தோற்றுப் போயாச்சு, அதனால் நிபந்தனைப்படி ஆசார்யாளிடம் ஸந்நியாஸம் வாங்கிக்கொள்ள வேண்டியதுதான் என்பதை ஸரஸவாணி நாஸூக்காகத் தெரிவித்துவிட்டாள்.

பர்த்தா ஸந்நியாஸியாகி வீட்டை விட்டுப் போகிறாரென்பது எந்தப் பத்னிக்கும் இருக்கக்கூடியதைவிட அவளுடைய மனஸுக்கு ரொம்ப க்லேசமான விஷயமாகத் தானிருந்தது. இவளுடைய புத்திக்கு ஈடு கொடுத்து ஸம்பாஷித்துக் கொண்டிருந்த மஹா பண்டிதர், அவர் ஸதாவும் பண்ணும் யாகாதிகளில் இவள்தான் யஜ்ஞ பத்னியாகச் சேர்ந்து சேர்ந்து எல்லாம் பண்ணியிருக்கிறாள் – அப்படிப்பட்டவர் பிரிந்து போகிறாரென்றால் எப்படியிருக்கும்? ஆனாலும் ஸத்யம்தான் பெரிசு என்று self interest-ஐ sacrifice பண்ணி (தன்னலனை த்யாகம் பண்ணி)த் தீர்ப்புக் கொடுத்தாள். “ஹாரந்தானே வாடித் தீர்ப்புப் பண்ணிற்று?” என்றால்,அந்த ஹாரத்தில்தான் இவள் தன்னுடைய சித்தத்தை ஆரோபணம் பண்ணியிருந்தாள் (உறைவித்திருந்தாள்.) இல்லாவிட்டால் எங்கேயாவது பூமாலை 21 நாள் வாடாமலிருக்குமா?

ஆசார்ய மஹிமை லோகத்தில் நன்றாகத் தெரியவேதான் அவள் தானும் வாதம் செய்து தோற்றுப்போனது. பல தேவர்கள் அப்போது அவதாரம் செய்திருந்தாலும் இவள் விஷயமாகத்தான் லோகத்திற்கே ஓரளவு நன்றாகத் தெரியும் – ஸரஸ்வதியவதாரம் என்று. ‘உபய பாரதி’ என்றே அவளை லோகம் கொண்டாடிக் கொண்டிருந்தது. அதனால் அப்பேர்பட்டவள் ஆசார்யாளின் வாதத்திற்கே ஜயம் என்று சொன்னால் அதற்கு மதிப்பு ஜாஸ்திதானே?

பர்த்தாவுக்கு ஸந்நியாஸம் கொடுக்க வருகிறவரை பத்னி அடித்து விரட்டத்தான் செய்வாள்! இவளானால் நமஸ்காரம் பண்ணி, பக்தியோடு பிக்ஷைக்கு கூப்பிட்டாள்!

நம் தேசத்தின் உத்தம ஸ்த்ரீகளில் ஸரஸவாணிக்கு ஒரு முக்யமான இடமுண்டு.

மண்டனமிச்ரர் ஆசார்யாளிடம் ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு சிஷ்யரானார். அதிலிருந்து அவருக்கு ஸுரேச்வரர் என்று பெயர் ஏற்பட்டது.

“பதி இல்லாமல் இங்கே என்ன வேலை?” என்று ஸரஸவாணி ஸரஸ்வதி ரூபத்தை எடுத்துக்கொண்டு ப்ரம்ம லோகத்துக்குப் புறப்பட்டாள்.

அப்பொழுது ஆசார்யாள், “நீ இப்படிப் போகப்படாது. உன் ஸாந்நித்யம் லோகத்துக்கு எக்காலமும் இருந்து நல்லறிவைக் கொடுத்துக் கொண்டிருக்கணும்” என்று சொல்லி வனதுர்கா மந்தரத்தால் அவளைக் கட்டினார்.

அவளே அன்புக்கும், ந்யாயத்துக்கும் கட்டுப்பட்டவள்தான். ஆனாலும் மந்த்ர மஹிமை தெரிவதற்காக இப்படியொரு நாடகம்! பல தினுஸில் லோகத்துக்குப் பல உண்மைகளைத் தெரிவிப்பதாகவே ஸீன், ஸீனாக நிறைய நடிப்பதுதான் அவதார நாடகம்!

1 அதற்கு ஸரஸ்வதி, “ஸரி, ஆனால் இந்த ஊரிலேயே நான் இருக்கணுமென்று ப்ரதிஷ்டை பண்ணிவிடாதீர்கள். நீங்கள் பாட்டுக்கு தேச ஸஞ்சாரம் பண்ணிக்கொண்டே போங்கள். நான் பின்னாலேயே வந்துகொண்டிருக்கிறேன். திரும்பிப் பார்க்கப்படாது. எங்கே பார்க்கும்படியாக ஏற்பட்டுவிடுமோ அங்கே நான் நித்யவாஸமாக இருந்து விடுகிறேன். அங்கே என்னை கோயில் கட்டி வைத்து, லோக க்ஷேமார்த்தமாக சாரதா பீடம் என்று ப்ரதிஷ்டை பண்ணிவிடுங்கள்” என்றாள். நாடகத்தில் இப்படி ஒரு ஸீன்!

ஆசார்யாள், ஸுரேச்வராசார்யாளோடு புறப்பட்டார். ஸரஸ்வதி பின்னாலேயே போய்க் கொண்டிருந்தாள். அவருடைய சிலம்பின் ‘ஜல் ஜல்’லிருந்து அவள் பின்னால் வருவதை ஆசார்யாள் தெரிந்துகொண்டு திரும்பிப் பார்க்காமலே போனார்.


1 அடுத்து வரும் கதாபாகத்தைச் சிரித்து மாறுதலாக ஸ்ரீசரணர்கள் பிறிதொரு சமயம் உபந்நியஸித்தபடி “தெய்வத்தின் குரல்” – இரண்டாம் பகுதியின் இறுதி உரையான “முதலுக்கு முதல்; முடிவுக்கு முடிவு” என்பதில் காணலாம்.