மண்டனரின் பண்டித நகரம்

மண்டனமிச்ரரைப் பார்ப்பதற்காக ஆசார்யாள் மாஹிஷ்மதீ நகரத்திற்கு வந்தார். ‘ஐயோ, இந்தக் கர்ம மார்க்கக்காரர்கள் நித்யமான ஆனந்தம் என்ன என்பதில் புத்தியைச் செலுத்தாமல் அநித்யமான ஆனந்தத்தையே தரும் கர்மாவைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்களே! மோக்ஷமார்க்கத்தில் சேராமல் திருப்பித் திருப்பி ஜன்மா எடுக்கிறார்களே! (வாதச்) சண்டை போட்டாவது இவர்களை நல்ல வழிக்குத் திருப்பணும்’ என்ற கருணையிலேயே ஆசார்யாள் அலையாய் அலைந்தது. கருணையினாலேயே சண்டை!

ஊருக்குப் வெளியிலே ஆற்றங்கரையில் ஸ்த்ரீகள் தீர்த்தம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். “மண்டனமிச்ரரின் க்ருஹம் எங்கே இருக்கிறது?” என்று ஆசார்யாள் அவர்களைக் கேட்டார்.

அந்த ஊர் முழுவதையும் எப்படி மண்டன மிச்ரர் பண்டித லோகமாக்கியிருந்தார், மீமாம்ஸை, ந்யாயம் முதலான சாஸ்த்ர விஷயங்கள் பாமரப் பெண்டுகளுக்கும், இன்னும் கிளி மாதிரியான பக்ஷிகளுக்குங்கூட அற்றுபடி ஆகிற விதத்தில் எப்படி ப்ரசாரம் பண்ணியிருந்தார் என்பதை ‘சங்கர விஜய’ங்கள் இந்த இடத்தில் நயமாகச் சொல்கின்றன.

வழி கேட்ட ஆசார்யாளிடம் அந்தப் பெண்கள் ச்லோக ரூபமாகவே பதில் சொன்னார்களாம். சாஸ்த்ரக் கொள்கைகளில் பலவற்றை ஒவ்வொன்றாக அந்த ச்லோகங்களில் முதல் பாதத்தில் சொல்லி, மற்ற மூன்று பாதங்களில் ஒரே போல, “எந்த வீட்டு வாசலில் உள்ள கூண்டுகளிலிருந்து பெண் கிளிகள் இந்தக் கொள்கைகளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றனவோ, அதுதான் மண்டனமிச்ரரின் வீடு” என்று முடித்தார்கள். முதல் பாதத்தில் ஏதாவது ஒரு ஸித்தாந்தத்தின் பெயர் வரும். அப்புறம் மூன்று பாதங்களில் பொதுவாக,

சுகாங்கநா யத்ர கிரம் வதந்தி
த்வாரே து நீடாந்தர ஸந்நிருத்தா:
அவேஹி தம் மண்டநமிச்ர தாம 1

என்று வரும்.

‘சுகாங்கனா’ என்றால் பெண் கிளி. (ஆசார்யாளிடம் இச் ஸ்லோகங்களைச்) சொல்பவர்களும் பெண்கள்; அவர்கள் மண்டனமிச்ரனின் வாசல் குறட்டில் சாஸ்த்ர விசாரம் செய்வதாகச் சொல்கிறவையும் பெண் கிளிகள். புருஷர்கள் அளவுக்கு ஸ்த்ரீகள் வித்யாப்யாஸம் பண்ணாத காலமானதால் அந்த ஊரின் பாண்டித்ய விசேஷம் தெரிவதற்காக இப்படிச் சொல்லியிருக்கிறது!

ப்ரமாணங்களைப் பற்றிய ரொம்பவும் சிக்கலான விஷயங்களைக்கூட அந்தக் கிளிகள் வாதம் பண்ணிக்கொண்டிருக்கும் என்று அந்த ஸ்த்ரீகள் சொன்னதாக ‘மாதவீய சங்கர விஜய’த்தில் வருகிறது:

ஸ்வத: ப்ரமாணம் பரத: ப்ரமாணம்
கீராங்கநா யத்ர ச ஸங்கிரந்தே |
த்வாரஸ்த நீடாந்தர ஸந்நிருத்தா
ஜாநீஹி தந்-மண்டந பண்டிதௌக: ||

(பின் மூன்று பாதங்களைப் பார்த்தால் ‘ஆனந்த கிரீய’த்தை ‘மாதவீயம்’ எவ்வளவு நெருக்கமாக அநுஸரிக்கிறதென்பது தெரியும்.)

இது ப்ரமாணம், இது ப்ரமாணமில்லை என்று நிர்ணயிப்பது ப்ராமாண்ய வாதம் என்பது. ஸ்வத: ப்ரமாணம், பரத:ப்ரமாணம் என்று இரண்டு. ஒரு வஸ்துவை அது இன்னது என்று தெரிந்துகொள்கிறபோதே ‘ஸரியாகத் தெரிந்கொண்டுவிட்டோம்’ என்றும் தெரிந்துகொள்கிறோம்; சில ஸமயங்களில், ‘இல்லை, தப்பாகத் தெரிந்து கொண்டிருக்கிறோம்’ என்றும் தெரிந்துகொள்கிறோம்- உதாரணமாக, தகர டப்பா மேல் பளீரென்று வெய்யில் விழுந்து பார்க்கும்போது அது பளபளப்பதில் வெள்ளிப் பாத்ரமாகத் தெரிந்தாலும், ‘இல்லை, நம்மாத்துத் தகர டப்பாவை அலம்பி வெயிலில் வைத்திருப்பதுதானே?’ என்றும் தெரிந்துகொள்கிறோம். வெள்ளியாக அது மினுக்குவதாக அறிவுக்குத் தெரிந்தாலும், தெரிகிறபோதே இந்த அறிவு ப்ரமாணமில்லை, அப்ராமணந்தான் என்றும் தெரிகிறது! இப்படியே ஒரு வெள்ளிப் பாத்ரத்தையே வெள்ளியாக உள்ளபடித் தெரிந்து கொள்ளும்போது, அல்லது தகர டப்பாவைத் தகரம் என்றே ஸரியாகத் தெரிந்துகொள்ளும்போது நமக்குத் தெரிவது ப்ரமாணம் தான் என்றும் தெரிகிறது. இப்படி ஒன்று தெரியும்போதே அது நிஜமான (ப்ரமாணமான) அல்லது பொய்யான (அப்ரமாணமான) ஞானம் என்றும் தெரிகிறதே, இது நம் அறிவிலிருந்தே – ‘ஸப்ஜெக்டி’வாக, ‘ஸ்வதா’வாக-ஏற்படுவதா, அதாவது ஸ்வத: ப்ரமாணமா, அல்லது வெளி வஸ்துவிலிந்து – ‘ஆப்ஜெக்டி’வாக,’ பரத’ஸாக – ஏற்படுகிறதா, அதாவது பரத: ப்ரமாணமா என்பது பற்றி ந்யாயம், மீமாம்ஸை முதலான தர்சனங்களில் வித்யாஸமாக அபிப்ராயங்கள் உள்ளன. ந்யாய சாஸ்த்ரத்தின்படி ப்ரமாண ஞானம், அப்ராமாண ஞானம் இரண்டுமே பரத: ப்ரமாணம்தான், மீமாம்ஸகர்களோ ‘நாம் தெரிந்து கொள்வது ஸரியானது என்கிற ப்ரமாண ஞானமும் நம் அறிவிலிருந்தே உண்டாவதுதான்; அதாவது ஸ்வத: ப்ரமாணம்தான். ஆனால் நாம் தப்பாகத் தெரிந்துகொள்கிறோம் என்கிற அப்ரமாண ஞானம் வெளி வஸ்துவைப் பொறுத்தே ஏற்படுவது அதாவது பரத: ப்ரமாணம்’ என்பார்கள்.2

இம்மாதிரி ஸமாசாரங்களை மண்டனமிச்ரருடைய அகத்துக் கிளிகள்கூட டிஸ்கஸ் பண்ணிக்கொண்டிருக்குமாம்.

இந்த அடையாளத்தை வைத்துக்கொண்டு ஆசார்யாள் அந்த வீட்டைத் தேடிக்கொண்டு போய்க் கண்டுபிடித்தார்.


1 ‘ஆனந்தகிரீயம்’ 56-வது ப்ரகரணம்.

2 இவ்விஷயம் மேலும் விளக்கமாக “தெய்வத்தின் குரல்” — இரண்டாம் பகுதியில் “ந்யாயம்: யுக்தி சாஸ்திரம்” என்ற உரையில் ‘சில கதைகளும் வாதங்களும்‘ என்ற பிரிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

குமாரிலபட்டர் கதை; கர்மமும் ஞானமும்

தேசம் முழுதும் ஆசார்யாள் திக்விஜயம் செய்ய வேண்டுமென்று வ்யாஸர் சொல்லியிருந்தாரல்லவா? அதன்படி ஆசார்யாள் காசியிலிருந்து புறப்பட்டார்.

முதலில் அவர் போனது குமாரிலபட்டர் இருந்த ஊருக்கு. நிவ்ருத்தி மார்க்க ப்ரவர்த்தகர் நேரெதிரான ப்ரவர்த்தி மார்க்க ப்ரவர்த்தகரைப் பார்க்கப் போனார்! அந்த ஊர் ப்ரயாகை. ருத்ரபுரம் என்று ‘ஆனந்தகிரீயம்’ சொல்கிறது1. ஊர் எதுவானாலும் ஆசார்யாளுக்கும் குமாரிலபட்டருக்கும் நடந்த ஸந்திப்பு விவரம், பட்டரின் பூர்வகதை ஆகியவற்றை எல்லாப் புஸ்தகங்களிலும் ஒரே விதமாகத்தான் சொல்லியிருக்கிறது.

மீமாம்ஸகர்களில் முதலிடம் வஹித்த பட்டர் அத்வைத வேதாந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படிப் பண்ணிவிட்டால் தம்முடைய அவதார கார்யத்திற்குப் பெரிய பலமாகும் என்றே ஆசார்யாள் அவரிடம்போனார். அவஸர அவஸரமாகப் போனார். ஏனென்றால் அப்போது பட்டர் ஒரு ப்ராயச்சித்த கர்மாவைப் பண்ணித் தம்முடைய உயிரைக் கொஞ்சங் கொஞ்சமாகப் போக்கிக் கொண்டிருந்தார். ப்ராணன் அடங்கியே விடுவதற்குள் அவரை ஸந்தித்துவிட வேண்டுமென்றுதான் ஆசார்யாள் ஓடினார்.

எதற்குப் ப்ராயச்சித்தம், என்ன ப்ராயச்சித்தம் என்ற கதை பார்க்கலாம்.2

குமாரஸ்வாமியின் அவதாரந்தான் குமாரிலபட்டரென்று ஞாபகமிருக்கலாம். அவருடைய அவதாரம் ஏற்பட்டபோது பௌத்தர்களின் ஆதிக்யம் அதிகமாயிருந்தது. அவர்கள் வேதாத்யயனம், யாக யஜ்ஞங்கள், வர்ணாச்ரம விபாகங்கள் எதுவும் இல்லாமலிருந்துகொண்டு ஜனங்களையும் அப்படியே நாஸ்திகமாகப் பண்ணிக்கொண்டு வந்தார்கள். இந்த நிலைமையை மாற்றுவதற்கே குமாரிலபட்டரின் அவதாரம் உண்டானது. இப்போது நான் சொன்ன விஷயமெல்லாம் கர்ம மார்க்கத்தில் பௌத்தம் ஏற்படுத்திய ஹானியாகும். இப்படியே ஈச்வரன், ஈச்வர பக்தி என்பவை இல்லாமல் பக்தி மார்க்கத்துக்கும் அது ஹானி செய்து வந்தது. எல்லாம் ஒரு பாழ்வெளியாகப் போய் முடிவதுதான் மோக்ஷமென்று சொல்லி, ப்ரஹ்ம ஸ்வரூபமாக ஆகிவிடுவதற்கு வழி சொல்லும் ஞான மார்கத்துக்கும் ஹானி இழைத்து வந்தது. இவற்றில் பக்தி, ஞான ஸமாசாரங்களை விட்டுவிட்டு வைதிகமான கர்ம மார்க்கத்தை மட்டும் நிலைப்படுத்தத்தான் குமாரஸ்வாமி குமாரிலராக வந்தது. அவதாரம் மநுஷ்ய ரீதியிலேயே நிறையப் பண்ணுவதுதானே வழக்கம்? அதனால் பௌத்தத்தைக் கண்டிக்க அவர் நினைத்தபோது, முதலில் அந்த மதக் கொள்கைகள் எல்லாம் என்னவென்று மநுஷ்ய ரீதியிலேயே நன்றாகப் படித்தறிய வேண்டுமென்று எண்ணினார்.

ஒன்றைக் கண்டனம் பண்ணுவதற்குமுன் அந்த விஷயம் என்ன, எதனால் அதைச் சேர்ந்தவர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்பதையெல்லாம் தீர்க்கமாகத் தெரிந்து கொள்ள வேண்டியதே முறை. இப்பொழுதுள்ள புதுக் கொள்கைக்கு மாறுதலாக ஒன்றை தர்ம சாஸ்த்ரம் சொல்கிறதென்றால் உடனே அது தப்பு என்று கண்டனம் செய்யப் புறப்படுகிறார்களே, இது ஸரியில்லை. சாஸ்த்ரம் ஏன் ஏற்பட்டது, அது ஏன் அப்படிச் சொல்கிறது, அதற்கு என்ன ப்ரயோஜனம் சொல்கிறது, அந்த ப்ரயோஜனத்தைப் பூர்விகர்கள் அடைந்தார்களா, இல்லையா, அப்படி அடைந்திருந்தால் இப்போது நமக்கு அது வேண்டாமா, வேண்டாமென்றால் ஏன் வேண்டாம், வேண்டுமென்றால் அப்போதும் நாம் ‘புதுக் கொள்கைதான்’ என்று பிடித்துக்கொண்டிருக்கலாமா என்பதையெல்லாம் ஆலோசித்துப் பார்த்தே முடிவெடுக்க வேண்டும். ஆனால் இந்தக் காலத்தில் “உங்கள் சாஸ்த்ரம் சுத்த நான்ஸென்ஸ். அதில் ஆராய்ந்து பார்க்க ஒன்றுமில்லை. எங்கள் கொள்கைதான் கொள்கை” என்று ஒரேயடியாகத் தள்ளிவிடுகிறார்கள்.

குமாரிலபட்டர் மாற்றுக் கட்சியையும் பூர்ணமாகத் தெரிந்துகொண்ட பிறகே கண்டிக்கப் போகணுமென்ற கருத்தை உடையவர். ஆனால் பௌத்தர்களோ வைதிகாசாரங்களோடு உள்ள ப்ராம்மணமனுக்குத் தங்கள் சாஸ்த்ரங்களைச் சொல்ல மாட்டார்கள். இந்த ஏறுமாறான ஸந்தர்பத்தில் என்ன பண்ணலாமென்று அவர் யோசித்து, ‘ஸரி, வைதிகாசாரத்தை விட்டுவிட்டு, பௌத்தத்தில் உண்மையான பற்றுதல்கொண்டே அந்த சாஸ்த்ரத்தைக் கற்றுக்கொள்கிற மாதிரி வேஷம் போட வேண்டியதுதான். வேறே வழியில்லை’ என்று நினைத்தார். பௌத்தர் வேஷம் போட்டுக்கொண்டு ஒரு பெரிய விஹாரத்திலிருந்த அவர்களுடைய வித்யாசாலையில் சேர்ந்தார். அது ஏழு மாடிகள் கொண்ட பெரிய விஹாரம்.

குமாரிலபட்டர் அத்யாவச்யமான கர்மாநுஷ்டானங்களை மட்டும் ரஹஸ்யமாகப் பண்ணிக்கொண்டு பௌத்த குருமார்களிடம் படித்து எல்லாம் தெரிந்துகொண்டார்.

அவர்கள் ஒரேயடியாக வேதத்தை தூஷித்து ஆர்க்யூ பண்ணும்போது — “வேத வேள்வியை நிந்தனை செய்துழல்” என்று ஞானஸம்பந்தர் சொன்னதுபோலச் செய்யும்போது — இவருக்கு துக்கம் துக்கமாக வரும். ‘வலிய வந்து, பொய் வேஷம் போட்டுக்கொண்டு, இப்படி நமக்கு உயிராயுள்ள வேதத்தின் தூஷணையைக் கேட்டுக் கொள்கிறோமே?’ என்று அழுகை வரும். அடக்கிப் பார்ப்பார். சில ஸமயம் அடங்காமல் கண்ணில் ஜலம் வந்துவிடும். பிக்ஷூக்கள் இதை கவனித்தார்கள். ‘இவன் வைதிகப் பார்ப்பானாயிருப்பானோ? என்று ஸந்தேஹித்திதார்கள். “ஏன் அழுகிறீர்?” என்று கேட்பார்கள். இவர், “ஆஹா! எத்தனை புத்திசாலித்தனமாகக் கண்டனம் பண்ணியிருக்கிறது! அதுதான் ஆனந்த பாஷ்பம் வருகிறது!” என்று ஸமாளிப்பார்.

எத்தனை நாள் ஒளிக்க முடியும்? அவர்கள் இவருடைய நடவடிக்கைகளைக் கூர்மையாகக் கண்காணித்து உண்மையைத் தெரிந்துகொண்டு விட்டார்கள். ‘கெடுத்தானே பார்ப்பான்! இவன் விரட்டிவிட வேண்டியதுதான். எங்கே விரட்டுவது? இவன் கொஞ்சமாகத் தெரிந்துகொண்டிருந்தால் இந்த விஹாரத்திலிருந்து வெளியுலகத்துக்கு விரட்டி விட்டால் போதும். இவனோ பூர்ணமாகத் தெரிந்துகொண்டு விட்டான். அதனால் வெளியுலகத்துக்குப் போய்ப் பூர்ணமாகக் கண்டன ப்ரசாரம் பண்ண ஆரம்பிப்பான். ஆகையால் இவனை உலகத்தைவிட்டே விரட்ட வேண்டும்’ என்று தீர்மானித்தார்கள் – “அஹிம்ஸா பரமோ தர்ம:” என்று உபதேசித்தவர்கள்!

உப்பரிகையிலிருந்து வேடிக்கை பார்க்கலாமென்று சொல்லி ஹிதவஞ்சனையாக அவரை ஏழாவது மாடிக்குக் கூட்டிக் கொண்டுபோய் அங்கேயிருந்து கிழே தள்ளிவிட்டார்கள்.

அவர் கீழே விழுந்தார்.

அந்த ஆபத்திலும் வேதம் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு “வேதம் ப்ரமாணமாக இருந்தால் எனக்கு எந்த ஹானியும் ஏற்படாமல் உயிருடன் இருப்பேனாக!” என்று சபதம் பண்ணிக்கொண்டே விழுந்தார்!

பதந் பதந் ஸௌத–தலாந்யரோருஹம்
யதி ப்ரமாணம் ச்ருதயோ பவந்தி |
ஜீவேயம் அஸ்மிந் பதிதஸ்-ஸமஸ்தலே
மஜ்ஜீவநேந ச்ருதிமாநதா கதி: || “3

அத்தனை நம்பிக்கையோடு அவர் விழுந்ததற்கேற்க அவருக்கு ப்ராணஹானி ஏற்படவில்லை! எலும்பு கிலும்பு முறியக்கூட இல்லை! கண்ணில் மட்டும் ஒரு கல் குத்திவிட்டது.

‘இதுகூட எப்படி நேரலாம்? வேதத்தின் சக்திக்கு இந்த அளவுகூட ஒரு ஊனம் ஏற்படலாமா?’ என்றே அவர் கோபித்துக் கொண்டாராம்!

அப்போது ஒரு அசரீரி வாக்கு உண்டாயிற்று. “வேதம் ப்ரமாணமாக இருந்தால் — ‘யதி ப்ரமாணம்’ — என்றீரே! ‘இருந்தால்’ என்பதில் உமக்கு அதன் ப்ராமாண்யத்தில் கொஞ்சம் ஸந்தேஹம் இருந்ததாகத்தானே தொக்கி நிற்கிறது? அதனால்தான் இந்தச் சின்ன ஊனம்!” என்று அது சொல்லிற்று.

அப்புறம் குமாரிலபட்டர் க்ருஹத்துக்குத் திரும்பினார். பௌத்தத்தை அலசி அலசிக் கண்டனம் பண்ணிப் (பூர்வ) மீமாம்ஸை என்கிற கர்ம மார்க்கத்தை மறுபடி நன்றாக அநுஷ்டானத்துக்குக் கொண்டு வந்தார். தேசத்தில் மறுபடி வைதிக ஆசார, அநுஷ்டானங்கள் வ்ருத்தியாயின. அநேக வருஷங்கள் ஆகி அவர் நல்ல வ்ருத்தராகி விட்டார்.

‘ஸநாதன தர்ம ஸம்ஸ்தாபனத்தில் நாம் ஆரம்ப கட்டமாகச் செய்யவேண்டியதெல்லாம் செய்தாயிற்று. அப்பாக்காரர் அவதாரம் பண்ணி பாக்கி செய்ய வேண்டியதை ஆரம்பித்து விட்டார். நாம் திவ்ய லோகத்துக்குத் திரும்பிவிட வேண்டியதுதான்’ என்று எண்ணினார்.

‘தம்முடைய தேஹ பரித்யாகத்திலும் லோகத்திற்கு சாஸ்த்ராபிமானம் ஏற்படும்படியாக ஒன்று பண்ணிக்காட்ட வேண்டும். ஜீவிப்பதற்கு மட்டுமில்லாமல் சாவதற்கும்கூட சாஸ்த்ரப்படிதான் செய்யணுமென்று காட்டவேண்டும்’ என்று நினைத்தார்.

சாஸ்த்ரப்படித் தாம் கடுமையான ஒரு ப்ராயச்சித்தம் பண்ணிக்கொள்ள வேண்டியவர் என்று அவர் அபிப்ராயப்பட்டார். என்ன அப்படி பெரிய தப்புப் பண்ணினார், அதற்காக ப்ராயச்சித்தம் என்றால்… ‘ஒரே ஒரு எழுத்து சொல்லிக் கொடுத்தாலும் அவர் நமக்கு குரு. குருவுக்கு த்ரோஹம் பண்ணுவதை சாஸ்த்ரம் மஹா பாபம் என்கிறது. புத்த பிக்ஷுக்களோ நமக்கு அவர்களுடைய மத விஷயம் முழுவதும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். நாமானால் பொய் வேஷம் போட்டுக் கற்றுக் கொண்டோம்! அப்புறம் அவர்கள் சொல்லிக்கொடுத்ததையெல்லாம் கண்டனம் பண்ணி அவர்களுக்கு மனவேதனை கொடுத்திருக்கிறோம். இப்படி குரு த்ரோஹியாகிவிட்டோம். கர்மாநுஷ்டானத்தை ஸ்தாபிக்க வந்த நாமே இதற்கான ப்ராயச்சித்த கர்மாவைப் பண்ணாமலிருக்கலாமா?’ என்று நினைத்து, இதற்கு என்ன ப்ராயச்சித்தம் சொல்லியிருக்கிறதென்று தர்ம சாஸ்த்ரங்களைப் பார்த்தார்.

‘இவர் ஸொந்த ஆதாயத்துக்காக வேஷம் போடவில்லை. லோகத்துக்கு ஸத்யம் தெரியவேண்டுமென்றே அப்படிப் பண்ணினார். சிஷ்யனுக்கு குருபக்தி மாதிரியே, குருவுக்கு சிஷ்ய ரக்ஷணம் பெரிய தர்மம். அவர்களானால் இவரை ஏமாற்றி ப்ராணஹானி பண்ணவே யத்தனித்தார்கள். இப்படிப்பட்டவர்களின் விஷயத்திலே குரு த்ரோஹம் என்பது ஸரியாகுமா?’ என்று நமக்குத் தோன்றலாம்! ஆனால் பெரியவர்களோ பிறத்தியார் செய்த பெரிய தப்புக்களையும் மறந்துவிட்டுத் தாங்கள் செய்த சின்னத் தப்புக்களைத்தான் பெரிசாக நினைப்பார்கள். அதனால் நிஜமாக இல்லாத போலி குரு த்ரோஹத்திற்கும் தம்மைத் தாமே சாஸ்த்ர ப்ரகாரம் தண்டித்துக்கொள்ளத்தான் வேண்டுமென்று அவர் நினைத்தார்.

ப்ராயச்சித்தத்துக்காகப் புஸ்தகம் பார்த்தார். அதில் ரொம்பவும் கஷ்டமான முறையில் மரணத்தை ஏற்பதே குரு த்ரோஹத்திற்கு ப்ராயச்சித்தம் என்பது போட்டிருந்தது. ‘அப்படியா? ஸரி, சரீரத்தை அணு அணுவாகப் பொசுக்கிக்கொண்டு உயிரை விடுவோம்;’ என்று உடனே முடிவு பண்ணிவிட்டார். நாமானால் அந்தப் புஸ்தகத்தை நெருப்பில் போட்டிருப்போம்! அவரோ, ‘நல்ல வேளை! குரு த்ரோஹத்திற்கு ப்ராயச்சித்தமே இல்லை என்று சொல்லாமல் இப்படியொன்று சொல்லியிருக்கே!’ என்று ஸந்தோஷமே பட்டார்.

உமியை நிறையக் கொட்டிக்கொண்டு அது சிறுகச் சிறுகக் கருகும்படி எரித்துக்கொண்டு அதற்குள்ளே அவர் இறங்கிவிட்டார். அணு அணுவாக எரிந்து சாவதற்கு இதுவே வழி என்று இப்படிப் பண்ணினார். ‘துஷாக்னி ப்ரவேசம் செய்தார்’ என்று சொல்லியிருக்கிறது. துஷம் என்றால் உமி.

உமிக் காந்தல் அக்னியில் அவர் இறங்கிவிட்டாரென்று ஆசார்யாள் கேள்விப்பட்டதால்தான், ‘எந்த நிமிஷம் என்ன ஆகுமோ? நாம் சுருக்க (விரைவில்) போய் அவரை வேதாந்தம் சொல்லும் ஞானமார்க்கத்தை ஏற்கும்படிச் செய்ய வேண்டுமே!’ என்று பதறிக்கொண்டு வந்து சேர்ந்தார். ப்ராயச்சித்தம் முடிந்தபின் ஆஸாமியையே பார்ப்பதற்கில்லையே என்பதால் நாலு நாளில் ஓடோடி வந்து சேர்ந்தார்.

அக்னியில் வெந்து கொண்டிருந்த குமாரிலபட்டருக்கு ஆசார்யாளின் தர்சனமே குளிர்ச்சியாக இருந்தது. அதுவும் போதாதென்று ஆசார்யாள் உபதேசமாக அவர் மேலே ஞானாம்ருதத்தையும் வர்ஷித்தார்.

உபதேச ஸாரம் என்னவென்றால்: வேதத்தில் சொன்னபடியே கர்மாநுஷ்டானம் அவச்யம் செய்யத்தான் வேண்டும். ஆனால் அது சித்தப் பரிசுத்தி ஏற்பட்டு ஞானவிசாரத்திற்குப் பக்வமாதற்குத்தானே தவிர, குமாரிலபட்டர் முதலான மீமாம்ஸகர்கள் சொல்கிறபடி அதுவே முடிவான ஸாதனம் என்று அல்ல. கர்மாநுஷ்டானத்தால் அடையும் ஸ்வர்கம் முதலான இன்பப் பலன் எதுவும் சாச்வதமில்லை. ஆத்மாவை அறிந்து ஆத்மாவாகவே, ப்ரஹ்மமாகவே நிற்பதுதான் சாச்வதமான மோக்ஷம். அதுதான் ஸத்ய ஸத்யமான ஸ்திதி.

“ஜீவனை ‘இன்ன இன்ன செய்’ என்று கார்யத்தில் ஏவும் கர்ம காண்டமே வேதத்தின் பரம தாத்பர்யம். வெறுமே ஒரு கார்யமுமில்லாததாக சும்மா இருக்கும் ஆத்மாவைப் பற்றிச் சொல்லியிருக்கும் ஞான காண்டத்தில் நாம் எடுத்துக்கொள்வதற்கு எதுவுமில்லை. ஏன் பின்னே இப்படி ஒரு காண்டம் இருக்கவேண்டுமென்றால், கர்த்தாவை அவனேதான் ஸ்வாமி என்று தூக்கிவைத்து ஸ்துதித்தால்தான் அவனுக்கு உத்ஸாஹம் ஏற்படும் என்றுதான் இருக்கிறது. இதற்கு ‘அர்த்தவாதம்’ என்று பெயர். ஆனால் இதுவே பரமதாத்பர்யமாகாது” என்று மீமாம்ஸா மதம் சொல்லும். இதற்கு ஆசார்யாள் என்ன சொன்னாரென்றால்: கார்யத்தைச் சொல்வதாலேயே, சொல்கிறபோதே, வேதத்தை அங்கீகரிக்கிறோம் என்று மீமாம்ஸகர்கள் சொன்னாலும் உண்மையில் அந்தக் கார்யத்தால் ஏற்படும் ப்ரயோஜனமான ஆனந்த ப்ராப்திக்காகத்தான் அங்கீகரிக்கிறார்களே தவிர கார்யத்திற்காகவே அல்ல. ‘இன்ன இன்ன செய்’ என்று கார்யங்களில் ஏவும் ”விதகிள்” கர்ம காண்டத்தில் இருப்பது போலவே ‘இன்ன இன்ன செய்யாதே’ என்று கார்யத்திலிருந்து விலக்குவதாகவுள்ள “நிஷேத”ங்களும்தான் இருக்கின்றன. கார்யமில்லாததைச் சொல்லும் இவற்றையும் மீமாம்ஸகர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறார்கள். ஏனென்றால் ஆனந்த ப்ராப்தி என்ற ப்ரயோஜனத்தை அடையவேண்டுமென்றால் இந்த நிஷித்த கர்மாக்களை (நிஷேதமாக உள்ள கர்மாக்களை) நாம் செய்யாமல் இருந்தால்தான் முடியும் என்பதால் இப்படி. கர்ம காண்டத்திலேயே சில கார்யங்களை விடச் சொல்லியிருப்பது. அதன் ப்ரயோஜனத்தை உத்தேசித்து ஏற்கத்தக்கதாகிறது என்றால் ஞான காண்டத்தில் ஸகல கார்யங்களையுமே விட்டுவிட்டுச் சும்மா இருப்பதுதான் பரம ப்ரயோஜனம் என்று இருப்பதை எப்படி வெறும் அர்த்தவாதம் என்று தள்ளலாம்? கர்மாவின் ப்ரயோஜனம் என்ன, ஞானத்தின் ப்ரயோஜனம் என்ன என்று சீர்தூக்கிப் பார்த்துத்தானே முடிவு செய்யவேண்டும்? கர்மாவினால் அடையும் ஆனந்த ப்ராப்தி சாச்வதமே அல்ல. ஞானத்தினால் அடையும் ஆனந்த ப்ராப்தியோ–ஆத்மானந்தம், ப்ரஹ்மானந்தம் என்பதோ–சாச்வதமாக இருப்பது. அப்போது அதைத் தானே எடுத்துக்கொள்ள வேண்டும்? ஆகையால் கர்மாக்களையும் பண்ணவேண்டியவரை பண்ணத்தான் வேண்டுமென்றாலும், அவை தரும் சிறிய சிறய ஆனந்தங்களுக்காக இல்லாமல் இந்த ஆனந்த பலனை த்யாகம் பண்ணிவிடவேண்டும். அப்படிப் பண்ணினாலே பேரானந்தமான ஆத்ம லக்ஷ்யத்தில் சேர்க்கிற ஞானமார்க்கத்தில் ப்ரவேசிப்பதற்கான சித்த சுத்தி ஏற்படும்.

மீமாம்ஸையில் கர்மா என்பது அதுவே பலனைத் தருகிறது என்று சொல்லி, ஸ்வாமி வேண்டாமென்று தள்ளுவதும் அடியோடு ஸரியில்லை. பெரிய ப்ரபஞ்ச நிர்வாஹத்தைப் பார்த்தாலும், ஒரு புழுவிலிருந்து ஆரம்பித்து ஸகல ஜீவர்களுக்கும் இருக்கும் குணாதிசயங்களைப் பார்த்தாலும், அந்த ஜட ப்ரபஞ்சத்தை இந்த ஜீவ லோகத்தோடு கோடி தினுஸில் முடிச்சுப் போட்டு ஜீவ யாத்ரை நடப்பதைப் பார்த்தாலும் இதையெல்லாம் நடத்துவிக்கிற ஒரு பேரறிவு இருந்தே தீர வேண்டும், அதுதான் இன்ன கார்யத்திற்கு இன்ன பலன் என்று திட்டம் பண்ணி நடத்துகிறது என்று ஒப்புக்கொள்ள வேண்டியே ஏற்படும். அந்தப் பேரறிவைத்தான் ஸ்வாமி என்பது. சித்த சுத்திக்காகவே கார்யமே தவிர இந்தக் கார்யத்தினாலேயே கிடைக்கும் பலனுக்காக இல்லை என்னும்போது, ‘அப்பா, இந்தப் பலனை உன் பாதத்தில் அர்பபணம் பண்ணிவிட்டேன். எனக்கு சித்த சுத்தியைத் தா’ என்று அவனிடம்தான் பலத்யாகம் பண்ண வேண்டும்.

‘அவன் அத்வைதமான ஞானத்தை அநுக்ரஹிக்கும் வரையில் அவனிடம் அன்போடு பக்தி பண்ணிக்கொண்டு இப்படிக் கர்மபல த்யாகம் செய்து வரவேண்டும். அப்புறம் அவனாகவே ஆகிவிடலாம். பக்தி என்கிற இந்த அன்புக்கும் மீமாம்ஸையில் இடமே இல்லாமலிருப்பது ஒரு பெரிய குறை. இந்த அன்பின் அம்சமாக லோகத்திலுள்ள பல தினுஸான நல்ல அன்புகள் எதற்கும் அதில் இடமில்லை. ஒரு ஜீவன் என்றால் அவன் உடம்பால் செய்யும் கார்யம், மனஸால் செய்யும் அன்பு, மனஸும் கழண்டு (கழன்று) போய் அப்படியே ஆத்மாவாக உள்ள சாந்தி நிலை என்று எல்லாமும் சேரும்படி, ஒன்றுக்கொன்று கைக்கொடுத்துப் போகும்படி வழி சொன்னால்தானே integrated personallty (ஒழுங்கு சேர்ந்த ஜீவ பூர்ணம்) உருவாக முடியும்? மனஸின் அன்பும் இல்லை, ஆத்மாவின் சாந்தியும் இல்லை, வறட்டு வறட்டு என்று உடம்பால் கார்யம் பண்ணிக்கொண்டிருந்தால் போதும் என்றால் எப்படி ஒரு ஜீவனுக்கு நிறைவு கிடைக்கும்?

‘கர்மம், பக்தி இரண்டையும் கலந்து ஈச்வரனுக்காகப் பண்ணவேண்டியதையெல்லாம் பண்ணவேண்டும். அவனுடைய ஸ்வரூபமாகவே லோகத்தையெல்லாம் பார்த்து அதற்கானதையெல்லாமும் பண்ணவேண்டும். கடைசியில் இதெல்லாமும், ‘அவனுக்கானது, அவர்களுக்கானது’ என்பதைவிட ‘நமக்கேயானதுதான்’ என்கிற மாதிரி நமக்கே ஞான நிஷ்டைக்கு ஏறுவதற்கான யோக்யதை ஸித்திக்கும், அப்போது எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு, கார்யமெல்லாம் போச்சு, மனசும் போச்சு என்று அப்படியே ஆத்மாவாக இருந்துகொண்டிருப்பதற்கான ஸாதனைகளை ஆரம்பிக்க வேண்டும். ஸாதனை பண்ணி முடிவில் அப்படி ஆகிவிடவேண்டும். அப்போதுதான் ஜன்மா இல்லை, ஸம்ஸார பந்தமில்லை என்று சாச்வதமாக விடுதலை பெற முடியும். ஏனென்றால் ஜன்மம், பந்தம் எல்லாம சரீரமும், மனஸும் உள்ளவரைதானே ஸாத்தியம்? ரூபமுமில்லை, எண்ணமுமில்லை என்றால் எதற்குக் கர்மா, கர்ம பலன் ஆகியவற்றைக் கொடுத்து ஜன்மா உண்டாக்கி, ஸம்ஸாரத்தில் பந்தப்படுத்த முடியும்? அந்த சாச்வத சாந்தம் வேண்டாம், ஸதா கார்யங்களில் தான் சிக்கிக்கொண்டு ஏதாவது சஞ்சலப்பட்டுக் கொண்டிருப்பது என்றால் ஸரியா?

மா தே ஸங்கோஸ்த்வகர்மணி — கார்யம் செய்யாமலிருப்பதில் உனக்குப் பற்று வேண்டாம்; அதாவது கார்யம் பண்ணிக் கொண்டேயிரு” என்று பகவான் சொல்லவில்லையா என்றால் இது ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஸாதகனுக்கே சொன்னது. இத்தனை காலமாக, ஜன்ம ஜன்மாவாக இந்த்ரிய போகங்களுக்காக இவன் ஓயாமல் கார்யம் பண்ணிக்கொண்டே இருந்தவன். தீடீரென்று நிறுத்து என்றால் எப்படி முடியும்?” கார்யத்தை விட்டுவிட்டு ஞானியாக ஸந்நியாஸியாக இப்பவே நான் ஆகி விடுவேன் என்று நினைத்தாலும் உன்னால் அப்படி முடியாது; அதற்கான சக்தி உனக்கு இல்லை; ந ஹி (தேஹப்ருதா) சக்யம் — தேஹாபிமானமுள்ள மட்டும் கார்யத்தை விடச் சக்தி இருக்காது: ‘ந ஹி தேஹப்ருதா சக்யம் த்யக்தும் கர்மாண்யசேஷத:’

இந்த ஸ்டேஜிலேயே விடுவேனென்றால், உடம்பு கார்யம் பண்ணாவிட்டாலும் மனஸ் பழக்கப்பட்ட அந்த இந்த்ரிய போகக் கார்யங்களைப் பண்ணிப் பார்த்துக் கொண்டேதானிருக்குமேயழிய, அடங்கி ப்ரசாந்தமாயிருக்காது. வெளியில் கார்யத்தை நிறுத்தின ஞானி மாதிரி இருந்து கொண்டு மனஸுக்குள்ளே இந்த்ரிய விஷயமானவற்றையே நினைத்துக்கொண்டிருப்பவன் மூடாத்மாதானே? மித்யாசாரன் என்கிற ‘ஹிபாக்ரிட்’ தானே?

கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மனஸா ஸ்மரந் |
இந்த்ரியார்த்தாந் விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே ||’

அதனாலே, அப்பா அர்ஜுனா, இப்போது உன் நிலைமையிலே நீ ஏதோ ஒரு மோஹத்தில் (மதி மயக்கத்தில்) கார்யத்தை விடுவேன் என்றாலும் உன் இயற்கை குணம் உன்னைக் கட்டியிழுத்து, உன் வசமில்லாமலே உன்னைக் கார்யத்தில்தான் தள்ளும்:

ஸ்வபாவஜேந கௌந்தேய நிபத்த: ஸ்வேந கர்மணா |
கர்த்தும் நேச்சஸி யந்-மோஹாத் கரிஷ்யஸ்-யவ சோ (அ)பி தத் ||’

அதனால்தான் உன்னை இப்போது கார்யத்தை விட வேண்டாமென்றது. ஆனால் இப்படியே இஷ்டப்படிப் பண்ணாமல் சாஸ்த்ரப்படிப் பண்ணு என்கிறேன். என்னென்ன பண்ணனும், என்னென்ன பண்ணப்படாது என்று வரையறை செய்து கொள்கிறதற்கு சாஸ்திரம் சொல்கிறதே ‘அதாரிடி’. தஸ்மாத் சாஸ்திரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதௌ (கீதை XVI. 24). பற்றோடு பண்ணுவதை விட்டு, பற்றை விட்டு பகவதர்ப்பணம் பண்ணு என்கிறேன்:’ தத் குருஷ்வ மதர்ப்பணம் ‘. இப்படிப் பண்ணிக்கொண்டே போனாயானால் தாமரை இலைத்தண்ணீர் மாதிரிப் பாவம் உன்னைத் தொடமலிருக்கும் நிலை வரும்: ‘லிப்யதே ந ஸ பாபேந பத்ம-பத்ரமிவாம்பஸா.‘ இப்படி அவனவனுக்கும் சாஸ்த்ரோக்தமாக வாய்த்த கர்மாவை நிஷ்காம்யமாகப் பண்ணிப் பலனை ஈச்வரனுக்கு அர்ப்பித்தானானால் அப்புறம் அவனுக்கு ஞான யோகத்தில் பிரவேசிக்கின்ற யோக்யதா ஸித்தி ஏற்படும்: ஸ்வகர்மணா தம் அப்யர்ச்ச ஸித்திம் விந்ததி மாநவ:| இது சின்ன ஸித்தி. இதற்கும் அப்புறம், கார்யத்தை விட்டுவிட்டு ஞான விசாரமே பண்ணிக்கொண்டு போகும்போதே சாச்வத மோக்ஷமான மஹா ஸித்தி – “ஸித்திம் பரமாம்” என்பது – கிடைக்கும். ‘நைஷ்கர்ம்ய ஸித்திம் பரமாம் ஸந்ந்யாஸே நாதிகச்சதி |’ ஒரு கார்யமுமில்லாத நிலையே அந்தப் பரம ஸித்தி. அதை ஒருவன் ஸந்நியாஸியாக ஆகி அடைகிறான்,” என்கிறார். ஆக கார்யம் பண்ணாமல் மனஸை அடக்கி சாந்தமாக இருக்க மநுஷ்யர்களுக்கும் பக்வம் போதாததால் தான் சாஸ்த்ரோக்தமான ஸகல கார்யமும் பண்ணி அந்தப் பக்வத்தைப் பெறும்படி பகவான் சொன்னாரே தவிர அதுவே தான் முடிவு என்று சொல்லவேயில்லை. ஸாதனா மார்க்கத்தில் ஏற விரும்புகிறவனுக்கே கார்யம் உபயமாகிறது; அவனே ஏறிவிட்ட பிறகு ‘சமம்’ என்பதாகக் கார்யங்களை ஒழித்துவிட்ட நிலைதான் மோக்ஷோபாயமாகிறது என்று ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறார்:

ஆருருக்ஷோர்-முநேர்-யோகம் கர்ம காரணம் உச்சயதே | 
யோகாரூடஸ்ய தஸ்யைவ சம: காரணம் உச்யதே ||’.

“ஸகல கர்மமும் ஞானத்தில் போய் அடங்கித்தான் பூர்த்தியடைகிறது: ஸர்வம் கர்மாகிலம் பார்த்த ஞாநே பரிஸமாப்யதே. ஞானிக்குக் கார்யம் கிடையவே கிடையாது: தஸ்ய கார்யம் ந வித்யதே” என்று தீர்மானமாக முத்தாய்ப்பு வைத்துச் சொல்லிவிட்டார்.4

கீதை கர்மயோகத்தை நிறையச் சொல்லியிருக்கிறதென்பதால் அதையே முடிவாகச் சொல்லியிருக்கிறதென்று அர்த்தமில்லை என்று ஆசார்யாள் தம்முடைய பாஷ்யத்தில் நன்றாகத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இதேபோல, ஆசார்யாளின் மதத்திற்கு ஆதாரமான உபநிஷத்துக்களிலும்கூட எங்கேயாவது கர்ம மார்க்கத்தை வலியுறுத்திச் சொல்லியிருந்தால் அதுவேதான் பரம தாத்பர்யம் என்று நினைத்துவிடக்கூடாது என்றும் ஆசார்யாள் விளக்கி வைத்திருக்கிறார். ‘ஈசாவாஸ்ய (உபநிஷ)’த்தில் மநுஷன் நூறு வயஸும் வைதிக கர்மா பண்ணிகொண்டிருக்கட்டும் என்று ஆரம்பத்தில் மந்த்ரம் இருக்கிறது. ஆனால் இங்கே ‘ஜிஜீவிஷேத்’ என்று போட்டு, ‘லோக வாழ்க்கை வாழ ஆசைப்படுபவன் இப்படிப் பண்ணட்டும்’ என்றே இருக்கிறது. அதாவது நிவ்ருத்தி மார்க்கத்தில் போகாமல் ப்ரவருத்தியில் போகிறவனுக்கே இந்த உபதேசம். ‘இஷ்டப்படிப் பண்ணாதே! சாஸ்தரப்படி ஸகலமும் பண்ணு’ என்று அவனுக்குச் சொல்கிறது. இது ஆசார்யாளுக்கும் பூர்ண ஸம்மதம்தான். அடுத்த மந்த்ரத்திலேயே ஆத்மாவைத் தெரிந்துகொள்ளாதவன், அதாவது ஞான மார்க்கத்தில் போகாதவன் ஆத்மஹத்தி (தற்கொலை)யே செய்து கொண்டவன்தான் என்றும் வருகிறது. அப்புறம் ஒரே அத்வைதமாக ஆத்ம லக்ஷணத்தைச் சொல்லியிருக்கிறது. ஆகையால் வேதத்தில் கர்மாவைச் சொல்லியிருப்பது ஞானத்துக்குப் போவதற்குப் பூர்வாங்கமாகத்தான்.

இப்படியெல்லாம் ஆசார்யாள் குமாரிலபட்டருக்குத் தத்வங்களை எடுத்துச்சொல்லி உபதேசித்தார். ஒரேயடியாகக் கர்மா என்றே இருந்தவரின் மரண ஸமயத்தில் வந்து அவர் கர்மாவே தொடவே முடியாத சாந்தத்தில் சேரும்படியாக இப்படி உபதேசித்தார். அந்த சாந்தத்தின் அவதாரம்தான் ஆசார்யாள். அவதாரத்திலே அவர் கார்யமயமாகத்தான் ஸதாவும் தெரிந்து கொண்டிருந்தாலும் அப்போதும் அந்தரங்கத்தில் ஒன்றும் செய்யாத சாந்த தத்வமாகத்தான் இருந்து கொண்டிருந்தார். நிறையச் சொன்னேன், — எவ்வளவுதான் சொன்னாலும், செய்தாலும் ஒன்றும் செய்யாமல் சும்மாயிருப்பதுதான் முடிவு. அதைத தெரிவிப்பதுதான் பெரிய உபகாரம் என்பதற்காகத்தான் அவர் அவதாரம் எடுத்திருந்தது.

ஆசார்யாள் அன்போடு கூட உபதேசிக்க உபதேசிக்க, கர்ம மார்க்கத்தையே முடிந்த முடிவாகப் பிடித்துக்கொண்டிருப்பது உபயோகமில்லை என்று குமாரிலபட்டருக்குப் புரிந்தது. ஈச்வர பக்தியில் போய் ஞானம் பெற்று ஆத்மாவைத் தெரிந்து கொண்டாலன்றி சாச்வதமான சாந்தி ஸெளக்யங்கள் இல்லை என்று புரிந்து கொண்டார்.

ஆசார்ய தர்சனமும், உபதேசமும் உமிக்காந்தல் அக்னியின் தஹிப்பை அடியோடு போக்கிவிட்டன. அப்பபர் ஸ்வாமிகளைச் சுண்ணாம்புக் களவாயில் போட்ட போதும் அவர் சிவ ஸ்மரணையிலேயே ஈடுபட்டிருந்ததால் ” ஈசன் எந்தை இணையடி நிழலில் ” தாம் ஜில்லென்று இன்பமாக இருந்ததாகப் பாடிய மாதிரிதான் குமாரிலபட்டருக்கும் இருந்தது. காளவாயில் வேகிறதைவிடவும் நீடித்த சித்ரவதையாகத் துஷாக்னியில் அணு அணுவாகப் பொசுங்குவதும் துன்பமாக இல்லை. “எந்தை இணையடி” என்று அப்பர் சொன்ன பகவத்பாதம்தானே சங்கர பகவத்பாதாள்?

குமாரிலபட்டர் ஆசார்யாளிடம் மனஸ் உருகி, “தங்கள் தர்சனத்தாலும் தத்வோபதேசத்தாலும் க்ருதார்த்தனானேன். தங்கள் ஸித்தாந்தத்தை ஏற்றுக்கொள்கிறேன். தங்களுக்கே தெரியும், ஞானத்தை ஏன் அப்படிக் கண்டனம் பண்ணினேன் என்று. பௌத்தத்துக்கு நேர்மாறாகச் சொன்னாலே எடுபடுமென்றுதான் நிவ்ருத்தியை இப்படி ஆக்ஷேபித்து, அவர்கள் சீர்குலைத்திருந்த ப்ரவ்ருத்தி கர்மாக்களை நிலை நிறுத்த முழு மூச்சோடு பாடுபட்டேன். கடைசியாக ப்ராயசித்த கர்மா பண்ணிக்கொள்ளும்போது பலனாகப் பலதாதாவான ஈச்வரனே எதிரிலே ஸத்கதி தர வந்துவிட்டீர்கள்! தங்கள் வழியைக் கண்டித்தவனுக்கும் அதன் லக்ஷ்யத்தை அநுக்ரஹிக்க ஓடோடி வந்திருக்கிறீர்கள்! அந்த்ய காலத்தில் ஸ்மரிக்காதவனையும் கடைத்தேற்ற வந்திருக்கிறீர்கள்!”

“தங்களுடைய அத்வைத வேதாந்தத்தை லோகம் பூரா தெரிந்து கொண்டு கடைத்தேறணும், எனக்கு அப்படி ப்ரசாரம் பண்ணும் பாக்யமில்லை; இன்னம் சிறிது நேரத்தில் உயிர் பிரிகிற ஸ்திதியிலிருக்கிறேன். தாங்கள் ஒன்று பண்ணணும்: என்னைக் காட்டிலும் தீவ்ர மீமாம்ஸகர் ஒருவர் இருக்கிறார். மண்டனமிச்ரர் என்று பேர். மாஹிஷ்மதி நகரத்தில் இருக்கிறார்…(மண்டன மிச்ரர் இருந்தது ஹஸ்தினாபுரத்தை அடுத்துள்ள வித்யாலயம் என்ற ஊர் என்றும் அபிப்ராயம் இருக்கிறது. மாஹிஷ்மதி எது என்பது பற்றியே மூன்று நாலு அபிப்ராயங்கள் இருக்கின்றன. மண்டனமிச்ரர் குமாரிலபட்டரின் சிஷ்யர், சிஷ்யராயிருந்ததோடு மச்சினரும் என்றெல்லாமும் அபிப்ராயங்கள் இருக்கின்றன. இதெல்லாம் எப்படியிருந்தாலும், குமாரிலபட்டர் விஷயமாகச் சொன்னதுபோல, மண்டனமிச்ரருடைய பூர்வகதை, ஆசார்யாளை அவர் ஸந்தித்தபோது நடந்த விஷயங்கள், அப்புறம் நடந்த கதை ஆகியவற்றை எல்லாப் புஸ்தகங்களும் அநேகமாக ஒரே மாதிரிதான் சொல்லியிருக்கின்றன. அவரைப் பற்றி ஆசார்யாளிடம் குமாரிலபட்டர் தொடர்ந்து சொன்னார்:)

“அவர் (மண்டன மிச்ரர்) நிரம்பச் செல்வமும் செல்வாக்கும் படைத்தவராயிருப்பதால் அந்தச் சீமை முழுக்க மீமாம்ஸா சாஸ்த்ரத்தை நன்றாகப் பரப்பியிருக்கிறார். பெரிய அநுஷ்டாதா. ஸோமயாகங்கள் உள்பட ஸதாகாலமும் பெரிசாக ஏதாவது கர்மாநுஷ்டானம் பண்ணிக் கொண்டிருப்பவர். அவரைத் தாங்கள் நிவ்ருத்தி மார்க்கத்திற்குத் திருப்பி விட்டீர்களானால், ரொம்பப் பேர் திரும்பிவிடுவார்கள். இது தாங்கள் அவச்யம் பண்ண வேண்டியது” என்று கேட்டுக்கொண்டார்.

அப்படியே செய்வதாக ஆசார்யாள் சொன்னார்.

குமாரிலபட்டர் உமிக் காந்தல் அக்னியில் தேஹ விநியோகம் ஆகும்வரையில் ஆசார்யாள் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தார். ஆஞ்ஜநேயரின் வாலில் வைத்த நெருப்பு ஸீதையின் அநுக்ரஹத்தால் அவருக்குக் கொஞ்சங்கூடச் சுடாத மாதிரி, ஆசார்யாளின் ஸாந்நித்யத்தில் துஷாக்னி குமாரிலபட்டருக்குக் குளிர்ச்சியாகவே இருந்தது. சரீரம் மாத்ரம் ஜீர்ணமாயிற்று. அக்னி ஸ்வரூபமும், பரமேச்வரனின் நேத்ராக்னியிருந்து உண்டானவருமான ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியின் அவதாரம் அக்னி முகமாகவே பூர்த்தியாயிற்று!

தர்ம சாஸ்த்ரப்படி நடக்கவேண்டுமென்றே குமாரிலபட்டர் பரித்யாகம் பண்ணினார். இப்படிப்பட்டவர்கள் போட்டு வைத்த அஸ்திவாரம் நம் மதத்துக்கு இருக்கிறது. ஆகையால், தற்போது எத்தனை கோளாறு இருந்தாலும் சாஸ்த்ராநுஷ்டானம் மறைந்தே போய்விடாது என்ற நம்பிக்கையோடு இருக்கலாம். மஹான்களுடைய ப்ராண த்யாகம் வீண்போகாது.


1 ஆசார்யாளின் ஸமகாலத்தியதாகக் கருதப்படும் ‘ப்ருஹத் சங்கர விஜய’த்தின் சிதிலமான ஒரு பகுதியை அடிப்படயாகக் கொண்டு டி.ஸ். நாராயண சாஸ்திரி எழுதியுள்ள ‘The Age of Sankara’ நூலில் இவ்வூர் ‘ருத்தபுரம்’ எனக் கூறப்பட்டுள்ளது. அது ப்ரயாகையைச்சேர்ந்த புறநகராக இருக்கலாம் என் சாஸ்ரியார் கூறுகிறார்.

2 குமாரிலபட்டரின் வரலாறு. அவரது பூர்வ மீமாம்சக் கொள்கை, அதற்கு ஆசார்யாளுடைய அத்வைத ஸித்தாந்தந்தின் ஆக்ஷேபணை ஆகியன குறித்து “தெய்வத்தின் குரல்” — முதற் பகுதியில் “முருகனின் வடநாட்டு அவதாரம்” என்ற உரையும், இரண்டாம் பகுதியில், “மீமாம்சை: கர்ம மார்க்கம்” என்ற உரையும் பார்த்துப் பல விவரங்கள் இட்டு நிரப்பிக் கொள்ளலாம்.

3 ‘வ்யாஸாசலிய சங்கர விஜயம்’ V.29.

4 இப் பாராவில் குறிப்பிடப் பெறும் கீதை ச்லோகங்கள் முறையே வருமாறு: II.47; XVIII.11; III.6; XVIII.60; IX.27; V.10; XVIII.49; VI.3; IV.33; III.17; XVI.24.

விச்வநாதர் விளையாடல்!

உடனே தீண்டாதான் மறைந்து விச்வநாதராக தர்சனம் தந்தான்! ஆசார்யாளைப் பரிசோதித்து, அவர் தம்மளவில் ஞானியானாலும் உலக ஆசாரங்களைப் பின்பற்ற வேண்டியவர்களுக்காகத் தாமும் அப்படியே செய்வார், உலகத்திற்கு மேலே போனவர்களின் விஷயத்திலோ தம்முடைய குருத்வத்தை மறந்து சிஷ்ய பாவத்தில் அடங்கி நிற்பார் என்று காட்டவே ஸ்வாமி பஞ்சமனாக வேஷம் போட்டுக்கொண்டு வந்து விளையாடினது! ஒருவர் தாமே தம் மஹிமையைச் சொல்லிக்கொண்டால், மஹிமைக்குப் பதில் அஹங்காரி என்ற குறைவுதான் உண்டாகும். ஆசார்யாள் அப்படிச் சொல்லிக்கொள்ளமாட்டார். அதனால், லோகம் தானாக அவர் மஹிமையைத் தெரிந்து கொள்ளும்படியாக இப்படி ஸ்வாமி நாடகமாடினார்.

ஆசார்யாள் தமக்கு மூலமான பரமேச்வரன் ப்ரஸன்னமானதும் நமஸ்காரம், ஸ்தோத்ரம் எல்லாம் செய்தார். ஸ்வாமி நிரம்ப அநுக்ரஹம் பண்ணிவிட்டு மறைந்து போனார்.

ஞானியாயின் ஸமத்வம் வேறு; ஸமூஹ ஸமத்வம் வேறு

இதை வைத்துக்கொண்டு தற்காலத்து ஸமத்வச் சீர்திருத்தவாதிகள் விபரீதமாக அர்த்தம் பண்ணுகிறார்கள். அதாவது ஆசார்யாள் வர்ணாச்ரம பேதங்களை ஒழிக்கச் சொல்லிவிட்டார், ஜாதி வித்யாஸமெல்லாம் பார்க்கவே கூடாது என்று காட்டிவிட்டார் என்று சொல்கிறார்கள். அப்படி ஆசார்யாள் சொல்லவேயில்லை என்பது அவருடைய பாஷ்யங்களைப் பார்க்கிற எவருக்கும் தெரியும். ஆனாலும் பாஷ்யங்களைப் பார்த்து, ‘ட்ரான்ஸ்லேட்’ பண்ணி, லெக்சர் பண்ணி, டாக்டர் பட்டம் வாங்கினவர்களும்கூட வேண்டுமென்றே தங்கள் நவீனக் கொள்கைக்கு ஸாதகமாக இருக்கிறது என்பதால் இப்படி வளைத்துத் திரித்துப் பேசுகிறார்கள். இவர்களுக்கு வர்ணாச்ரம தர்மம் பிடிக்கவில்லையென்றால் அதற்குத் தாங்களும் தங்களைச் சேர்ந்தவர்களும் என்னென்ன காரணம் சொல்லமுடியுமோ (அவற்றைச்) சொல்வதுதான் முறையே தவிர ஆசார்யாளைப் பிடித்து வளைத்து அவர் சொல்லாததை அவர் வாயில் திணிப்பது கொஞ்சங்கூட ந்யாயமில்லை. ஆனாலும் நாம் நம் பெரியவர்களையெல்லாம் மறந்துபோய்விடவில்லையாக்கும், நம்முடைய ‘ஸ்பிரிசுவல் ஹெரிடே’ஜை (ஆத்மிக பாரம்பர்யத்தை) ரொம்ப மதிக்கிறோமாக்கும் என்று காட்டுவதாக அப்பப்போ விழாக்கள் ஸெமினார்கள் நடத்துவதில் தலைவர்கள் என்கப்பட்டவர்கள் இந்த ஸம்பவத்தைச் சொல்லி, ஆசார்யாள் இக்காலத்தில் ‘ஈக்வாலிடி’ என்று சொல்வதைத்தான் ஸ்தாபித்திருக்கிறாரென்று ‘ட்ரிப்யூட்’ கொடுக்க (புகழஞ்சலி சொலுத்த)த் தவறுவதில்லை. நம்முடைய கொள்கையை அவர் சொல்வதாக ஆக்கி ட்ரிப்யூட் கொடுப்பதென்றால் அது நமக்கே ட்ரிப்யூட் கொடுத்துக்கொள்வதுதான்!

வாஸ்தவத்தில் ஆசார்யாளும் மற்ற பூர்விக சாஸ்த்ரகாரர்களும், ரிஷிகளும் சொன்ன ஸமத்வம் என்ன? ஸகல ஜீவர்களிடமும் கொஞ்சங்கூட ஏற்றத்தாழ்வேயில்லாத அன்பாகிய மனோபாவ ஸமத்வத்தைத்தான் அவர்கள் சொன்னார்கள். கார்யங்களை வைத்து, இவரிவருக்கு இன்னின்ன என்று ஸமூஹ வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொடுக்கும் வர்ணாச்ரமங்களையெல்லாம் அழித்து ஒன்றாக்குவதுதான் ஸமத்வம் என்று நினைத்துக்கொண்டிருப்பதை அல்ல. பல ஜாதிக்காரர்கள் அவரவருக்குமென்று பல தொழில்களைப் பண்ணுவதில் ஸமத்வம் இல்லை என்று நினைப்பதே தப்பு. அந்தந்தத் தொழிலுக்கு ஏற்றபடி ஆஹாரம் முதலானவை இருக்கும். வித்யாஸமாயிருக்கிறதே என்று எல்லாவற்றையும் கலந்தால் எந்தத் தொழிலும் ஸரியாக நடக்காது. ஜ்வரக்காரனுக்கு வெந்நீர் வேண்டும். குடல் புண்காரனுக்கு ஜில்லென்று ஜலம் வேண்டும். பூஜைக்கு மடி ஜலம் தனியாயிருக்கும். ‘பருப்பு வேகணும்’ என்று சமையலுக்கு மாத்ரம் எங்கேயாவது போய் ஜலம் கொண்டுவந்து கொஞ்சம் வைத்திருப்பார்கள். குளிப்பதற்கு துணிகள் துவைப்பதற்கெல்லாம் வேறே ஜலம் இருக்கும். அந்த துவைத்த ஜலத்தைக்கூடச் சுருணையை அலசலாம் என்று சேர்த்து வைத்திருப்பார்கள். இதெல்லாமே அவச்யமான கார்யந்தான். ஸமத்வம், உசத்தி, தாழ்த்தி என்ற வார்த்தைகளுக்கே இங்கே இடமில்லை. ஆனால் இப்படிச் சொல்லி எல்லா ஜலத்தையும் கலந்து ஒன்றாக்கிவிட்டால் அத்தனை கார்யங்களும்தானே கெட்டுப்போகும்?

ஸமூஹ வாழ்க்கையில் ஸமத்வத்திற்கு வேறே என்ன நியாயம் சொன்னாலும் சொல்லட்டும். ஆனால் இதனால் தான் ஒற்றுமை ஏற்படும் என்று முதலிடம் கொடுத்துச் சொல்கிறார்களே, அது புரளிதான். மற்ற தேசங்களிலெல்லாம் வர்ண வியவஸ்தை இல்லைதானே? ஆனால் அங்கேயெல்லாம் ஒற்றுமைதான் நிலவுகிறதா? எத்தனை சண்டையும் கலகமும் உண்டோ அத்தனையுந்தான் நடக்கின்றன. நம் தேசத்திலேயே இந்தக் கொள்கை கொண்ட எல்லாரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்களா என்று அவர்களுக்கே தெரியும். தேசத்திலும் இந்த கோஷம் வந்த பிற்பாடு ஏற்பட்டிருக்கும் சண்டையும் போட்டியும் முன்னே ஒரு போதும் இருந்ததில்லை.

“அதெல்லாம் ஸரி, ஆனால் இப்போது கார்யத்தை வைத்துத்தான் ஜாதிகளைப் பிரிந்திருக்கிறதா?” என்று கேட்டால் இப்போது அப்படியில்லைதான். எல்லாரும் ஒரே லௌகிக லக்ஷ்யங்கள், லௌகிக ஸெளக்யங்கள், லௌகிகப் போட்டிகள் என்று இறங்கி விட்டதால், முன்னே ஆத்ம லக்ஷ்யத்தையும் ஆத்ம ச்ரேயஸையும் முக்யமாக வைத்து அதற்கு அநுகுணமாகவே Individual life (தனியார் வாழ்க்கை) , social order (ஸமூஹ ஒழுங்குமுறை) இரண்டையும் போட்டியில்லாத பாரம்பர்ய க்ரமத்தில் வைத்துச் செய்திருந்த வர்ணாச்ரம விபாகங்களை உடைத்துக் கார்யங்களை ஒன்று கலந்திருக்கிறோம். இதற்காக ஆதியில் அவர்கள் அப்படிப் பண்ணியதே தப்பு என்றால் எப்படி? அல்லது அவர்கள் பண்ணவேயில்லை, பண்ணியிருந்தால் ரொம்ப பக்ஷபாதிகள் என்றால் எப்படி?

ஆக, சாஸ்த்ராபிப்ராயத்தையேதான் சொன்ன ஆசார்யாள் நம்முடைய கார்யலோகத்தில் ‘ஈக்வாலிடி’ என்று நினைத்து இப்போது சொல்கிற எதையோ சொல்லவில்லை. நடுவில் சிதிலமாயிருந்த வர்ணாச்ரம தர்மத்தை அவர்தான் மறுபடி ஜீர்ணோத்தாரணம் பண்ணினார். இப்படி நான் சொல்வது இங்கேயே யாருக்காவது பிடிக்காமல் ஏமாற்றமாக, வருத்தமாக, கோபமாக இருக்குமானாலுங்கூட — ‘ஐயோ! அப்படியானால் அவரை புத்தர், ஜினர் காந்தியோடெல்லாம் சேர்த்துச் சொல்ல முடியுமா என்று துக்கமாக இருக்குமானுங்கூட — நிஜத்தை எப்படிச் சொல்லாமலிருப்பது? நடுவில் பௌத்தத்தால் வர்ண வ்யவஸ்தைகள் தப்பியிருந்தாலும் பிற்பாடு மறுபடி உறுதியாக ஏற்பட்டே ஹிந்து நாகரிகம் பலம் பெற்றது என்பதிலிருந்து சரித்ரம் அறிந்தவர்களுக்கும் இதுதான் நிஜம் என்பது தெரியும். ஆசார்ய பாஷ்யங்களைப் படித்தவர்களோ திரும்பத் திரும்ப அவர் வர்ணாச்ரம ரக்ஷணையை முக்யமாகச் சொல்லியிருப்பதிலிருந்து — வெளியில் அவர்கள் என்ன லெக்சர் பண்ணினாலும், புஸ்தகம் எழுதினாலும் — இதுதான் ஆசார்யாளின் நிஜமான அபிப்ராயம் என்று உள்ளூரத் தெரிந்துகொண்டேயிருப்பார்கள்.

ஆசார்யாள் வாஸ்தவத்தில் என்ன சொல்கிறார், அதற்கு என்ன காரணம் காட்டுகிறார் என்று கேட்டுப் அதைப் பின்பற்றுவதுதான் ஆசார்ய பக்தி. அவர் சொல்வது நம்மளவில் புரியாவிட்டால், பிடிக்காவிட்டால் அவரைத் திட்டுவதுகூடப் பரவாயில்லை. அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. அவர் சொல்வதில் ‘கன்விக்ஷன்’ ஏற்படாவிட்டால் நம் மனஸுக்குப் பொய்யில்லாமல் திட்டினால் கூடப் பரவாயில்லை என்பேன். ஆனால் அவர் நம்முடைய அபிப்ராயங்களைத்தான் பின்பற்றுகிறாரென்று எப்படியாவது திரித்துக் காட்டி அவருக்கு பக்தி பண்ணுவது போலக் காட்டுவதுதான் எல்லாவற்றையும்விடப் பெரிய அபசாரமாக எனக்குத் தோன்றுகிறது. அவர் சொன்னது பிடிக்கவில்லை என்றால் அது உன் அபிப்ராய ஸ்வதந்த்ரம். ஆனால் அவரையே சொல்லாததைச் சொன்னவராகக் காட்டினால், நாம் வேஷம் போடுவது போதாதென்று அவருக்கும் வேஷம் போடுகிற பெரிய தோஷமல்லவா வரும்? அவருடைய அபிப்ராய ஸ்வதந்திரத்தைப் பறித்ததாக அல்லவா ஆகும்? நம்முடைய நாகரிகக் கொள்கையை அவர் சொல்கிறாரென்று அவருக்கு வேஷம் போட்டுக் காட்டினால்தான் நாம் மரியாதை செய்யமுடியுமென்றால் அது அவருக்கும் அவ மரியாதை, நமக்கும் அவமரியாதைதான்! நாம் சொல்கிற புரட்சிக் கொள்கையை அவர் சொன்னாலே அவரிடம் பக்தி என்றால் உண்மையில் அது நம்மிடமே பக்திதான், நம் கொள்கையிடமே பக்திதான். அவரைத் தப்பாகக் காட்டினால்தான் புத்தர், காந்தி மாதிரி மாஸ் அப்பீல் – பாபுலாரிடி இருக்குமென்றால் அது அவருக்கு வேண்டவே வேண்டாம். எங்கள் மாதிரி நாலு obscurantist-கள் (சீர்திருத்தத்தை எதிர்க்கும் முரட்டுப் பழமைவாதிகள்) பூஜை பண்ணிக் கொண்டிருந்தாலே போதும்!

கார்ய லோகத்தில் இப்போது நாம் சொல்லும் அபேத வாதத்தை ஆசார்யாளும் சொல்லவில்லை, க்ருஷ்ணரும் சொல்லவில்லை, எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை. மனஸில் அபேத அன்புதான் அவர்கள் சொன்னது. இங்கேயோ ஆசார்யாள் மனஸையும் கழற்றி எறிந்துவிட்ட ஞானியைப் பற்றிச் சொல்லி அந்த ஞானிகள் விஷயமாகத்தான் ‘அவனுக்கு ஸர்வமும் ஸமம். ஆகையால் அங்கே லோக சாஸ்திர வழக்குகள் இல்லை’ என்கிறார். இது வேதமே சொல்வதுதான் : ‘ஞானம் வந்துவிட்டால் அப்புறம் ஜாதி, படிப்பு, பெரியவர் – சின்னவர் என்ற எந்த பேதமுமில்லை. அங்கே வேதமே வேதமில்லை, பஞ்சமன் பஞ்சமனில்லை; தபஸ்வி, தபஸ்வியில்லை’ என்றெல்லாம் சொல்கிறது1. ஒன்றையும் தின்ன வேண்டுமென்ற அபேக்ஷையில்லாத நிலையில் எதை வேண்டுமானாலும் தின்னலாம், ஒன்றையும் தொடவேண்டுமென்ற அபேக்ஷையில்லாதபோது எதை வேண்டுமானாலும் தொடலாம் என்று சாஸ்த்ரம் சொல்கிறது. அந்த நிலை எங்கே? நாமுள்ள யதார்த்த லோகம் எங்கே? அதிலே ஆசார்யாள் சொன்னதை இதற்குப் பொருத்திக் காட்டுவது அபசாரம்.

கீதையில் வித்யா விநய ஸம்பன்னனான ப்ராம்மணனிடமும் நாயைத் தின்னும் புலையனிடமும் ஞானிக்கு ஸமமான பார்வை இருக்கிறது, அவன் ஸமதர்சியாக ஸாக்ஷிமாத்திரத்தில் இருக்கிறான் என்றுதான் சொல்லியிருக்கிறதே தவிர, கார்யத்தில் ஒன்றாகப் பண்ணுவதைச் சொல்லவேயில்லை. “நீ க்ஷத்ரியன், உன் கார்யம் சண்டை போடுவது தான்” என்றுதானே எவருக்கு மேலே ஞானி இல்லையோ அந்த க்ருஷ்ணர் அர்ஜுனனை ஏவினார்?

ஆசார்யாள் அத்வைத ஸ்வரூபம். அத்வைத சாஸ்த்ரத்தை பூர்ண ரூபம் பண்ணி ஸ்தாபித்தவர் அவர் தான். ஆனால் த்வைத லோகத்தில் மாட்டிக்கொண்டு இதிலிருந்து அதற்குப் போகவேண்டியிருப்பவர்களான நாம் எவ்வளவு தூரம், தொலை தூரம், த்வைத வித்யாஸங்களை அநுஸரித்து அநுஸரித்தே கார்யலோகத்தில் போய்த் தான் பக்குவப்பட வேண்டியிருக்கிறது என்பதை நன்றாகத் தெரிந்து வைத்துக்கொண்டு, ஜாக்ரதையாகப் பார்த்து வழி போட்டுக் கொடுத்திருக்கிறார். இக்காலத்திலோ அத்வைதாநுபவம் என்னவென்றே தெரியாதவர்கள் கார்ய லோகத்தில் அதைக் கொண்டுவிட்டு ஆத்மார்த்தமான சாஸ்த்ர விஷயங்களில் இஷ்டப்படிப் பண்ணி, போதாக் குறைக்குத் தாங்கள் செய்வதற்கு ஆசார்யாள் தலையிலேயே பழியைப் போட்டு ‘ட்ரிப்யூட்’ கொடுக்கிறார்கள்!

முன்பின் ஸம்பந்தமில்லாமலும், ஒருத்தருடைய அல்லது ஒரு சாஸ்த்திரனுடைய முழு அபிப்ராயமும் தெரியமாலும் நடுவிலே எங்கேயாவது இக்காலப் புரட்சி ஸித்தாந்தங்களுக்கு அநுகூலமாகத் துளி தெரிந்துவிட்டால், “ஹா ஹூ! இன்னாரே சொல்லிவிட்டார், இன்ன சாஸ்த்ரமே சொல்லிவிட்டது. எங்கள் அபிப்ராயந்தான் ஸரி” என்று ப்ரசாரம் பண்ணுவது தற்காலத்தில் ஜாஸ்தியாகி வருகிறது. ரொம்பவும் வருத்தப்படவேண்டிய விஷயம். ஒன்றை ஆக்ஷேபிப்பதுகூடத் தப்பில்லை, இந்த மாதிரித் திரித்துச் சொல்வதுதான் பெரிய தப்பு…

அந்தப் பஞ்சமன் ஆக்ஷேபம் பண்ணும் ஸாதாரண ஆளாகத் தெரிந்திருந்தால் ஆசார்யாள் தர்க்க ரீதியிலும் தர்மசாஸ்த்ர ப்ரகாரமும் பதில் சொல்லி ஸுலபமாக அவனை ஸரிப்பண்ணியிருப்பார். அவன், “இரண்டு தேஹமும் ஒரே மாதிரி உண்டானதுதானே? தேஹத்துக்குள்ளே இருக்கும் வஸ்துவைப் பார்த்தாலோ இரண்டும் அஸலே ஒன்றுதானே?” என்று கேட்டதற்கு அவர், “வாஸ்தவம் தானப்பா! ஆனால் அந்த உள் வஸ்து உனக்குத் தெரிகிறதா? தெரியவில்லையோல்லியோ? ஏன் தெரியவில்லை? ஸம்ஸ்கார தோஷத்தால். இப்படி ஒவ்வொருவருக்கும் ஸம்ஸ்கார தோஷங்கள் இருப்பதால்தான் — எல்லாருக்கும் ஒரே மாதிரி, ஒரே அளவு தோஷமாக இல்லாமல் வித்யாஸம் வித்யாஸமாக இருப்பதால்தான் — அதை அநுஸரித்தே அவரவருக்கும் ஜன்மா ஏற்படுகிறது. அந்த ஜன்மாவிலேயாவது அவர்கள் போக்கிக் கொள்வதற்கான கார்யங்களைப் பண்ணட்டும்; அப்படிப் பண்ணும்போதே ஸமூஹத்திற்கு தேவைப்படும் வித்யாஸமான எல்லாக் கார்யங்களும் அவர்களால் நிறைவேற்றப்பட்டதாகவும் ஆகட்டும், என்றுதான் சாஸ்த்ரங்கள் வர்ணாச்ரம தர்மங்களைக் கொடுத்திருக்கிறது.

அதன் அநுஷ்டானத்தில் பல பிரிவினர் பல வேறு ஆசாரங்களைப் பின்பற்றினால்தான் அவரவருக்கும் க்ஷேமம் விளைகிறது. ஆகையினால் அவர்கள் கலந்துவிடக்கூடாது. மனஸின் அன்பில்தான் கலக்கணுமே தவிர வாழ்க்கையில் கலந்துவிடக்கூடாது. எல்லாம் ஒரே மாதிரி சரீரமென்றாலுங்கூட ஒவ்வொரு சரீரத்திற்கும் அதன் ஸம்ஸ்காரத்தைப் பொருத்து ஒருவிதமான ஸூக்ஷ்மமான சக்தியோட்டம் இருப்பதால், ஸமூஹ நலனுக்காக மந்த்ர ரக்ஷணை பண்ணவேண்டிய தேஹத்திலிருந்து மற்ற தேஹம் விலகியிருக்க வேண்டியிருக்கிறது. தேஹம், ஸமூஹம், ஸம்ஸ்காரம் என்பதெல்லாமே அடிபட்டுப் போய்விட்ட நிலையில்தான் நீ சொல்வது ஸரிவரும்” என்று பதில் கொடுத்திருப்பார்.

இவன் ஸாதாரண ஆளாக இல்லாமல், எல்லாம் அடிப்பட்டுப்போன நிலைக்காரனாகத் தெரிந்ததால் கொஞ்சங்கூட வாதம் பண்ணாமல் அடக்கத்துடன் அவனை குருவாகச் சொல்லி நமஸ்கரித்தார். நாமும் அப்படிப்பட்டவர்களை அவர் மாதிரியே நமஸ்கரிக்கத் தயாராயிருக்க வேண்டும். அப்போதுதான் ஆசார்ய பக்தர்களாக, ஆசார்ய சிஷ்யர்களாக இருக்கிறோமென்று அர்த்தம்.


1 ப்ருஹதாராண்யகோபநிஷத் IV. 3.22

“ஞானியாயின் தீண்டாதானும் என் குருவே!”

ஒரு நாள் ஆசார்யாள் கங்கா ஸ்நானத்திற்குப் பரிவாரத்தோடு போய்க்கொண்டிருந்தார். வழியிலே ஒரு பஞ்சமன் (தீண்டாதான்) வேண்டுமென்று அவர் பக்கத்தில் வந்தான்.

“தள்ளிப் போ, தள்ளிப் போ!” என்றார் ஆசார்யாள்.

உடனே அவன் சில கேள்வி கேட்க ஆரம்பித்தான்:

அந்நமயாத் அந்நமயம் அதவா சைதந்யமேவ சைதந்யாத் |
த்விஜவர தூரீகர்தும் வாஞ்சஸி கிம் ப்ரூஹி கச்ச கச்சேதி ||1

“த்விஜவர” என்று ஆசார்யாளைக் கூப்பிட்டுக் கேட்கிறான். “த்விஜவர” என்றால் ப்ராம்மண ச்ரேஷ்டர். “ஏ பெரிய ஐயரே!” என்று கூப்பிட்டிருப்பான். அதைத்தான் த்விஜவர என்று போட்டிருக்கிறது. “ஹீன ஜன்மா என்று ஒருத்தரை எட்டிப் போகச் சொல்லும் ஏ பெரிய ஐயரே! ‘போ, போ’ என்று எதையோ போகச் சொல்றயே, எதுகிட்டேயிருந்து எதை எட்டிப் போகச் சொல்றே? சோத்தைத் தின்னு எலும்பும் மாம்ஸமுமா மல மூத்ராதிகளோடு வளர்கிறதே, தேஹம் என்று ஒரு கூடு, அந்தக் கூட்டில் ஒண்ணு இன்னொண்ணின் கிட்டே வரப்படாது என்று உன் அபிப்ராயமா?

அந்நமயாத் அந்நமயம்

“இல்லாவிட்டால்; ‘அதவா’: என்றால் இல்லாவிட்டால். இந்த இரண்டு தேஹக் கூட்டுக்குள் உயிர், உயிர் என்று ஒன்று இருக்கே! அதிலே ஏதோ இரண்டு இருக்கிற மாதிரி பிராமணனின் உயிர் கிட்டே பஞ்சமனின் உயிர் வரப்படாது என்ற அபிப்ராயத்தில் ‘போ, போ’ என்கிறாயா?”

அந்த உயிரைத்தான் ஆத்மா என்பது. ஞான மயமான சைதன்யம் என்பதும் அதுதான்.

சைதந்யமேவ சைதந்யாத்

அகண்டமாக ஏக சைதன்யம் ஒன்றுதான் இருக்கிறது. அதையே பல தேஹங்களுக்குள்ளும் பல உயிர்கள் என்று கண்டம் கண்டமாகப் பார்க்கிறோம். இதுதான் ஸர்வ வேதாந்தமும், அத்வைதமும். அதைச் சொல்லித்தான் அந்தத் தீண்டாதான் கேட்கிறான். ‘இருப்பது ஏக சைதன்யம் தானானதால், இந்த தேஹத்திலுள்ள சைதன்யம் வேறே, அந்த தேஹத்திலிருக்கிற சைதன்யம் வேறே என்று ஆசார்யாள் நினைத்து, பெரிய ஐயரின் தேஹத்துக் கிட்டே ஹீன ஜாதி எனப்படுபவனின் சைதன்யம் வரப்படாது என்று சொன்னால் அவர் அத்வைதியே இல்லை; வடிக்கட்டின த்வைதிதான்’.

“பெரிய ஐயரே, நீ சொல்ற பாடம் என்ன? வேதாந்தந்தானே? அதிலே இப்படித்தான் அநேக உடம்புக்குள்ளே இருப்பது அநேக ஆத்மா ஒண்ணுக்குக் கிட்டே இன்னொண்ணு வரப்படாது என்று இருக்கா?” என்று கேட்காமல் கேட்கிறான்.

இருப்பதே ஒரே ஆத்மாதான் என்பதால் ஒரு ஆத்மாவுக்குக் கிட்டே இன்னொரு ஆத்மா வரப்படாது என்பது அபத்தம். அவர் அப்படி ஆத்மாவைச் சொல்லவில்லை என்றால், ஆத்மா குடியிருப்பதற்குக் கூடாக இருக்கிற தேஹங்களில்தான் ஒன்று இன்னொன்றின் கிட்டே வரப்படாதென்று சொன்னார் என்றாகும். ஞான நிலையிலிருந்து பார்த்தால் இதுவும் ஸரியில்லைதான். ஏனென்றால் ஞானிக்கு எல்லா தேஹமுமே துச்சம்தான். ஒரே மாதிரி, தோற்றால் அடித்த சுவர்தான். ஒரே மாதிரி, துளி மேல் சதையைக் கீறிவிட்டாலும் பார்க்க ஸஹிக்காத ரக்த மாம்ஸாதிகளால் ஆனதுதான். ப்ராம்மண சரீரமானாலும், அந்த்யஜ சரீரமானாலும் எல்லாம் மல மூத்ர பாண்டம்தான். ஞானத்திற்கு வழியே சரீர ப்ரக்ஞையை ஒழிப்பதுதான். இப்படி நிக்ருஷ்டமாக இருக்கப்பட்ட சரீரங்களிலேயே ஒன்று இன்னொன்றின் கிட்டே வரப்படாது என்று ‘ஞான மார்க்க ப்ரவர்த்தகர்’ எனப்பட்டவர் சொன்னால் ஸரியாகுமா?

இந்த விஷயம் கீதையிலும் பகவான் சொல்லியிருக்கிறார். கல்வியறிவால் மட்டும் பண்டிதர் என்று பேர் வாங்காமல், ‘பண்டா’ எனப்படும் ப்ரஹ்ம ஞான ஸித்தியால் அப்படிப் பேர் வாங்கினவளைப் பற்றி அங்கே பகவான் சொல்கிறார்.

வித்யா விநய ஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி |
சுநி சைவ ச்வபாகே ச பண்டிதா: ஸமதர்சிந: ||2

பண்டிதன் எனப்படும் ஞானியைப் பற்றி இங்கே பேச்சு: அவன் எல்லாவற்றையும் ஸமமாகப் பார்க்கும் ஸமதர்சி. எல்லாம் ஒரே ப்ரஹ்மம் என்று தெரிந்து கொண்டவன் வேறே எப்படிப் பார்க்கமுடியும்? ம்ருக ஜாதிகளை எடுத்துக்கொண்டால் நமக்கு, அதாவது அஞ்ஞானிகளுக்கு, பசு ரொம்ப உயர்ந்தது, கஜமும் ரொம்ப உயர்ந்தது என்று தோன்றுகிறது. நாய் என்றாலோ நிக்ருஷ்டமாக நினைக்கிறோம். அப்படியே மநுஷ்ய ஜாதிகளை எடுத்துக்கொண்டால் நல்ல படிப்பும் விநயமுள்ள ஒரு ப்ராம்மணனைப் பார்த்தால் உத்தமப் பிறவி என்று தோன்றுகிறது. அதுவே நாய் மாம்ஸத்தைத் தின்று கொண்டிருக்கும் ஒரு பஞ்சமனைப் பார்த்தால் தாழ்ந்தவன் என்று தோன்றுகிறது. இப்படி ம்ருகங்களில் எது எது உசத்தி – தாழ்த்தி, மநுஷ்யர்களில் எவனெவன் உசத்தி – தாழ்த்தி என்றிருப்பது மட்டுமில்லாமல், ம்ருக ஜாதி – மநுஷ்ய ஜாதி என்றே வேறே ரொம்ப வித்யாஸமாகத் தெரிகிறது. ஆறறிவு படைத்த மநுஷ்ய ஜாதியைவிட ம்ருக ஜாதி தாழ்ந்தது என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் ஸமதர்சியான ஞானிக்கோ இப்படி ம்ருக ஜாதி, மநுஷ்ய ஜாதி என்ற வித்யாஸப் பார்வையே இல்லை, இதுவே இல்லாதபோது ஒவ்வொரு ஜாதிக்குள்ளேயும் இது உசத்தி, இது தாழ்த்தி என்ற பாவனையும் இல்லை. இந்த விஷயத்தை பகவான் சொல்கிறார். வித்யா விநய ஸம்பன்னனான ப்ராம்மணனாகத்தான் இருக்கட்டும், அல்லது நாய் மாம்ஸம் தின்னும் (“ச்வபாகே”) தீண்டாதானாகத்தான் இருக்கட்டும், பசுவாக (“கவி”), யானையாக (“ஹஸ்திநி”), நாயாக (“சுநி”) இருந்தாலும் இருக்கட்டும் — எல்லாவற்றையும் ஞானி ஸமமாகவே பார்க்கிறான் என்கிறார்.

அந்த அத்வைதத்தைச் சொன்னவர், அதற்காகவே பாஷ்யங்கள் கட்டுக்கட்டாக எழுதித் தள்ளியவர். ஸதாவும் அதையே உபதேசம் செய்து கொண்டிருந்தவர், ‘அத்வைத ப்ரதிஷ்டாபனாசார்யார் என்றே’ பெயரெடுத்தவர் — இவரானால் இப்போது ஸம தர்சனமில்லாமல் பேத த்ருஷ்டியோடு தன்னைத் தீண்டத் தகாதவன் என்று வைத்து தூரப்போகச் சொல்கிறாரே, இது எப்படி என்றுதான் அவன் கேள்வி கேட்டான். அவன் ‘படே ஆஸாமி’யாக இருந்தான்! அதனால் இன்னமும் கேட்க ஆரம்பித்தான்.

ஸொந்தமான ரோஷத்தின் மீது, ‘நீ என்ன கொம்பு? நான் என்ன மட்டம்?’ என்று அவன் கேட்டிருந்தால் — இந்த நாளில் சீர்திருத்தவாதிகள் கேட்பது இப்படித்தான்; இம்மாதிரி அவன் கேட்டிருந்தால் — ஆசார்யாள் ‘இவன் யாரோ வம்புக்கு வந்திருக்கிறான். அதனால் சாஸ்த்ர அபிப்ராயங்களைச் சொன்னால் கேட்டுக்கொள்ள மாட்டான். இவனிடம் வியவஹாரம் பண்ணி ப்ரயோஜனமில்லை. அவன் ஒதுங்கிப் போகாவிட்டால் நாம்தான் ஒதுங்கிப்போக வேண்டும். இப்படி வாதம் செய்பவர்கள் அப்போதும் விடமாட்டார்கள். மேலே விழ வருவார்கள். அப்படிச் செய்தால் கங்கையில் இறங்கிவிடலாம்’ என்றே நினைத்திருப்பார். ‘ஆனால் இவனோ மான ரோஷாதிகளில், ஸ்வய கௌரவ ப்ரச்னையாகப் பேசாமல் தத்வார்த்தமாகப் பேசுகிறான். அதனால், இவன் வம்புக்கு வந்தவனாயில்லாமல் வம்பையெல்லாம் தொலைக்கவந்தவனாக இருக்கலாமென்று தோன்றுகிறது. ஆகையால் பலாத்காரம் பண்ணமாட்டான். இப்படிப்பட்ட ஒருவன் என்ன சொல்கிறான் என்று கேட்டுக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமை’ என்று பேசாமல் நின்று கேட்டுக்கொண்டிருந்தார், அவரே வித்யையோடு விநய ஸம்பன்னராகவும் இருந்ததால்!

அவன் மேலே கேட்டான் :

கிம் கங்காம்புநி பிம்பிதே (அ)ம்பரமணௌ சண்டாட-வாடீ-பய:
பூரே சாந்தரமஸ்தி காஞ்சந-கடீ-ம்ருத்-கும்பயோர் வாம்பரே |
ப்ரத்யக்-வஸ்துநி நிஸ்தரங்க-ஸஹஜாநந்தாவபோ தாம்புதௌ
விப்ரோ (அ)யம் ச்வபசோ (அ)யம்-இத்யபி மஹாந் கோ(அ)யம் விபேத-ப்ரம: ||1

“விப்ரோ (அ)யம், ச்வபசோ (அ)யம் இதி” – இவன் ப்ராம்மணன், இவன் பஞ்சமன் என்று – ப்ராஹ்மணே.. ச்வபாகே” என்று கீதையில் சொன்ன அதே ஸமாசாரம்தான். “இவன் ப்ராம்மணன், இவன் பஞ்சமன் என்கிற இந்தப் பெரிசான பேத ப்ரமை உமக்கு எப்படி ஐயா வந்தது?” இது கடைசி வரி. த்வைத மாயை, த்வைத மாயை என்று ஆசார்யாள் கண்டித்ததுதான் பேத ப்ரமை. “விபேத ப்ரம:” என்று ச்லோகத்தில் இருப்பது. “அது உமக்கே எப்படி ஐயா வந்தது?”

இதற்கு முந்திய வரிகளில் என்ன சொல்கிறான்? ஆசார்யாளுக்குப் பிற்காலத்தில் அத்வைதத்தில் ‘விவரண ப்ரஸ்தானம்’ என்றும் ‘பாமதி ப்ரஸ்தானம்’ என்றும் இரண்டு ஸ்கூல் (கொள்கைப் பிரிவு) ஏற்பட்டது. அத்வைத லக்ஷ்யத்தில் இரண்டிற்கும் வித்யாஸம் கிடையாது. ஸாதனா க்ரமத்திலும் ஒரே மாதிரிதான். ஆனாலும் சில கொள்கைகளில் வித்யாஸம். அவற்றிலே ஒன்று பரமாத்மா எப்படி ஜீவாத்மா மாதிரித் தோன்றுகிறது என்பதாகும். அவித்யை (மாயை) தான் இதற்குக் காரணம் என்று இரண்டு இரு ஸ்கூல்களும் ஒப்புக்கொண்டாலும் அதிலேயே ஒன்றுக்கொன்று வித்யாஸமாகச் சொல்கின்றன.

ஆசார்யாளுடைய ஸூத்ர பாஷ்யத்தின் முதல் ஐந்து பாதங்களுக்குப் பத்மபாதர் எழுதியுள்ள வ்யாக்யானத்திற்குப் ‘பஞ்சபாதிகா’ என்று பெயர். அந்தப் பஞ்சபாதிகாவுக்கு ப்ரகாசாத்மன் என்பவர் ‘பஞ்சபாதிகா விவரணம்’ என்பதாகப் பத்மபாதர் கருத்தை அநுஸரித்தே வ்யாக்யானம் எழுதியிருக்கிறார். அதன் கொள்கைகள் தான் ‘விவரண ப்ரஸ்தானம்’ என்பது. ஸூத்ர பாஷ்யத்திற்கே வாசஸ்பதி மிச்ரா என்ற பெரியவர் ‘பாமதீ’ என்று ஒரு வ்யாக்யானம் எழுதியிருக்கிறார். அதன் கொள்கைகளைத் தான் ‘பாமதீ ப்ரஸ்தானம்’ என்பது.

ஸ்வாமி எப்படி நாமாகத் தோன்றுகிறார் (பரமாத்மா எப்படி ஜீவாத்மாவாகத் தோன்றுகிறது) என்பதைப் பற்றி அந்த இரண்டு ப்ரஸ்தானங்களில் சொல்லியிருப்பதையுமே அந்தப் பஞசமன் ச்லோகத்தின் முதல் இரண்டு வரிகளில், வரிக்கு ஒன்றாகச் சொல்லியிருக்கிறான். (இவ்விஷயத்தில்) விவரண – ஸ்கூலின் அபிப்ராயத்திற்கு ‘அவச்சின்ன வாதம்’ அல்லது, ‘அவச்சேத வாதம்’ என்றும் பெயர்.

ப்ரதிபிம்ப வாதம் என்னவென்றால்: ஸூர்யன் ப்ரகாசித்துக் கொண்டிருக்கும்போது நாம் தண்ணீரில் கையைத் தோய்த்துத் தரையில் தெளித்தால் எத்தனையோ துளிகளாக விழுகிறது. அத்தனை துளிகளுக்குள்ளும் ஒரே ஸூர்யனின் ஒவ்வொரு ப்ரதிபிம்பம் தெரிகிறது. ஸூர்யன் மாதிரி பரமாத்மா. தண்ணீர் மாதிரி அவித்யா (மாயை). அந்த அவித்யையில் உண்டான வித வித ஜீவ அந்தஃகரணங்கள்தான் தண்ணீர்த் துளிகள். இந்த அந்தஃகரணத்துக்குள்ளும் பரமாத்ம ஸூர்யனே ப்ரதிபிம்பித்து ஒளி (உயிர்) கொடுக்கிறது.

‘அவச்சின்ன வாதம்’ என்ன? ‘அவச்சின்ன’ என்றால் ‘ஒன்றுக்கொன்று எல்லை கட்டிப் பிரித்தது’ என்று அர்த்தம். ஆகாசம் வெளியிலே எங்கும் பரவியிருக்கிறது. எல்லாவற்றிற்கும் அது இடம் கொடுப்பதால் ‘அவகாசஸ்து ஆகாசம்’ என்பார்கள். திறந்த வெளியான அந்த ஆகாசத்தில் அநேக காலிக் குடங்களை வைத்திருந்தால் குடங்களுக்குள்ளேயும் அதே ஆகாசம்தான் இருக்கிறது. ஆனால் வெளியில் தனியாகப் பெரிசாக ‘மஹாகாசம்’ என்று ஒன்றும், ஒவ்வொரு குடத்துக்குள்ளும் தனித்தனியாகச் சின்னச் சின்ன ‘கடாகாசங்கள்’ பலவும் இருக்கிறாற்போலத் தோன்றுகிறது. இப்படித்தான் ப்ரஹ்மம் என்ற ஒரே அகண்ட சைதன்யம் மஹாகாசமாயிருக்கிறது. அதில் அவித்யா என்ற குடம் பலவித ஜீவ அந்தஃகரணங்கள் என்ற பல ‘ஸைஸ்’களில் மஹாகாசத்தை எல்லை கட்டி ஒன்றுக்கொன்று பிரித்ததுபோல் அவச்சின்னமாகக் காட்டுகிறது என்று இந்த வாதம் சொல்கிறது. “ஸூர்யன் ப்ரதிபலித்து ஒவ்வொரு துளியிலும் ஒரு முழு ஸூர்யன் தெரிகிற மாதிரி என்று சொல்வது தப்பு. ப்ரம்மம் ப்ரதிபலிப்பது என்ற கார்யத்தைப் பண்ணாது. ஒவ்வொரு துளியிலும் முழு ஸூர்ய ப்ரதிபிம்பத்தைப்போல ஒவ்வொரு ஜீவனிலும் பூர்ண சைதன்யம் தெரிவதாகச் சொல்வதும் ஸரியில்லை. ப்ரதிபலிப்பு முதலிய எந்தக் காரியமும் பண்ணாமல் ஆகாசம் அது பாட்டுக்கு இருக்கிறபடி இருக்கும்போதே பல குடங்களுக்குள்ளேயும் சின்னச் சின்னதாகத் தெரிவதுபோல அகண்ட சைதன்ய ப்ரஹ்மமே ஜீவ அந்தஃகரணத்தில் கண்டம் கண்டம் மாதிரித் தெரிகிறது எனபதுதான் ஸரி” என்று அவச்சின்னவாதிகள் சொல்வார்கள்.

ஆகாசம் வெளியிலும், குடத்துக்குள்ளும் வ்யாபித்திருப்பதைச் சொல்வதுபோலவே இன்னொரு உபமானம் ஜலம் வ்யாபித்திருப்பதை வைத்தும் அவர்கள் சொல்வதுண்டு. கிணற்றில் குடத்தை முழுக வைத்து ஜலத்துக்குள்ளாகவே இழுத்துகொண்டு வருகிறோம். அப்போது கிணற்று ஜலமும் குடத்து ஜலமும் ஒன்றேதான். ஆனால் குடம் எல்லை கட்டிக் கிணற்று ஜலத்தை அவச்சின்னமாகப் பண்ணுவதால், இது வேறே ஜலம், தனியாக வருகிறது என்று தோன்றுகிறது. பெரிய குடமாயிருந்தால் உள்ளே ஜலம் அதிகமாகவும், சின்ன குடமாயிருந்தால் அதில் பிடிக்கும் ஜலம் குறைவாகவும் தெரிகிறது. அப்படியே ஒரே பரமாத்மா அந்தஃகரண வித்யாஸத்தைப் பொருத்து ஒவ்வொரு ஜீவனில் ஒவ்வொரு விதமாகத் தெரிகிறார்.

இந்தக் கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் ஆதரவாக மற்றதை ஆக்ஷேபித்துச் சொல்லும் வாதங்கள் நமக்கு அவச்யமில்லை. வாதம் என்னவானாலும் ப்ரதிபிம்பக் கட்சி, ‘துளித் துளி ஜலத்தை எல்லாம் அழித்துவிட்டால், ஒரே ஸூர்யனே நிற்பதுபோல மாயையால் உண்டான ஜீவாத்ம பாவத்தை (அந்தஃகரணம்தான் இந்த பாவத்தை உண்டாக்குவது; அதை)ப் போக்கிக்கொண்டால் பரமாத்மாவாகிவிடலாம்; அப்படி ஆகணுமென்கிறது. அவச்சின்னக் கட்சியும் குடத்தை உடைத்துவிட்டு மஹாகாசமாக, ஒரே நீர்ப்பரப்பாக ஆகிவிடவேண்டுமென்று இதே லக்ஷ்யத்தைத்தான் சொல்கிறது.

பஞ்சமன் இந்த இரண்டு வாதத்தையும் குறிப்பிட்டிருக்கிறான். முதலில் ப்ரதிபிம்ப வாதம்: “கிம் கங்காம்புநி பிம்பிதே அம்பரமணௌ சண்டாள வாடீ பய:…” “அம்பரமணி” என்பது ஆகாசத்தில் ஒரு வைரக்கல்லு மாதிரி ப்ரகாசிக்கும் ஸூர்யன். அது கங்கா ஜலத்திலும் (“கங்காம்புனி”) பிரதிபிம்பமிடுகிறது (“பிம்பிதே”): எங்கள் சேரிக் குட்டை ஜலத்திலும்தான் (“சண்டாள வாடீ பயம்”) ப்ரதிபிம்பிக்கிறது. இந்த இரண்டு ப்ரதிபிம்ங்களுக்குள்ளும் ஏதேனும் வித்யாஸமுண்டா? அப்புறம் அவச்சின்ன வாதம் பேசுகிறான்: ராஜா அரண்மனையில் தங்கக் குடத்தின் உள்ளேயும் (“காஞ்சன கட…அந்தரம்…”) ஆகாசம் (“அம்பரம்”) இருக்கிறது (“அஸ்தி”) . எங்கள் சேரி வீடுகளிலும் மண் பானை (“ம்ருத் கும்பம்”) வைத்திருக்கிறோம். அதற்குள்ளேயும் ஆகாசம் இருக்கிறது. தங்கக் குடத்திலே இருக்கிற ஆகாசத்திற்கும், பானையில் இருக்கிற ஆகாசத்திற்கும் வித்யாஸமுண்டா? ப்ராம்மண தேஹமோ, பஞ்சமன் தேஹமோ எதுவானாலும் அது ஒரு கடம். உள்ளே இருக்கிற ஆத்மாகாசத்தில் என்ன வித்யாஸம்? இரண்டு உடம்புகளும் இரண்டு அளவான ஜலத்துளிகள்; ஆனால் உள்ளே தெரியும் ப்ரதிபிம்பத்தின் மூலமான ஆத்ம ஸூர்யன் ஒன்றுதானே!

“பெரிய ஐயரே! த்விஜவரரே! ஏன் வெளியிலே தெரிகிற ஜலத்துளியையும், குடத்தையும் பார்த்து வித்யாஸங்கள் நினைக்கிறாய்? உள்ளுக்குள்ளே பார்த்தால் என்ன வஸ்து இருக்கிறது? (‘ப்ரயக் வஸ்து’ என்று ச்லோகத்தில் இருப்பது ‘உள்ளே உள்ள வஸ்து’ தான்.) தன்னில் தானே ஆனந்தித்துக் கொண்டிருக்கும் ஞான ஸமுத்ரம் ஒன்றுதானே உள்ளே இருக்கிறது? ‘ஸஹஜ ஆனந்த அவபோத அம்புதி’ தானே இருக்கிறது? அலையே இல்லாத ஸமுத்ரம் (‘நிஸ்தரங்கம்’)! ஏன் அலை இல்லை?

லோகத்திலே உள்ள ஸமுத்ரத்தைத் தவிர அதற்கு மேலே இடமிருக்கிறது. அதனால் அலை அடிக்க முடிகிறது. இந்த ஆனந்த ஸமுத்ரத்தைத் தவிர இடம் இல்லையே! இது இல்லாத இடமே இல்லையே! எப்படி அலை அடிக்க முடியும்? ஒரு பாத்திரத்தில் வழிய வழிய ஜலம் விட்டு இறுக்க மூடிவிட்டால் எப்படி அலை உண்டாக முடியும்? ஆத்மாவுக்கு உபமானமே இல்லை. ஸமுத்ரம் என்பதுகூட முழுக்கப் பொருத்தமான உபமானமில்லை. அதில் உப்பும் ஜலமும்தான் இருக்கின்றன. இதிலோ (ப்ரத்யக் வஸ்துவான ஆத்மாவிலோ) ஆனந்தமும் ஞானமும் அல்லவா இருக்கின்றன? ஆனந்தம், ஞானம் என்ற இரண்டு இல்லை. ஆனந்தமாகிய ஞானம், அல்லது ஞானமாகிய ஆனந்தமே நிறைந்தது இது. அதோடு இது இல்லாத இடமே இல்லை. இல்லாத இடமேயில்லை என்னும்படியாக உப்பு ஸமுத்ரம் எங்கேயும் நிறைந்திருக்கவில்லை. இப்போது இங்கே ஸமுத்ரம் இருக்கிறதா? அது இருக்குமிடத்திலுங்கூட ஒரு லெவலுக்கு மேலே இல்லை. பூமி மட்டத்தோடு ஸமுத்ர மட்டமும் முடிந்து அதற்கு மேலே திறந்த வெளியாகத் தானே இருக்கிறது? இருந்தாலும், இருப்பதற்குள் பெரிசு என்பதால் ஆனந்த ஞான ஸமுத்ரம் என்றேன். உள்ளே ஏகமான அது ஒன்றே இருக்க வெளியிலே பார்த்து பேதமாகப் பேசுகிறாய், ஐயரே! நீ சொல்லிக் கொடுக்கும் வேதாந்த பாடத்தில் இப்படித்தான் இருக்கிறாதா?” என்று கேட்டான்.

உடனே ஆசார்யாள், “தாங்கள் இப்பேர்ப்பட்டவரா? ப்ரஹ்மவித்தா? இப்படிப்பட்ட ஞானியாக இருக்கும் எவரும் எனக்கும் குரு ஸ்தானம். தங்களுடைய ஞான நிலையைத் தெரிந்து கொள்ளாததால் லோக ஆசாரங்களின்படிச் சொன்னேன். இப்போது தெரிந்து கொண்டேன். தாங்களை ஆசார்ய ஸ்தானத்தில் வைத்து நமஸ்காரம் பண்ணுகிறேன்” என்று சொல்லி அப்படியே நமஸ்காரம் செய்தார். ஐந்து ச்லோகம் சொல்லி நமஸ்காரம் செய்தார். அதற்கு ‘மநீஷா பஞ்சகம்’ என்று பேர். ‘மநீஷா’ என்றால் தீர்மானமான அபிப்ராயம், நிச்சயமான கொள்கை. “ஆத்ம ஞானியாயுள்ளவர் எந்த ஜாதி குலமானாலும் ஸரி, பஞ்சமனோ ப்ராம்மணனோ எவரானாலும் ஸரி, அவர் எனக்கு குரு. இதுவே என் மநீஷா. எனக்கு குரு என்பது மட்டுமில்லை. தேவேந்த்ரன்கூட அவருடைய பாதத்தில் விழவேண்டுமென்பது என் மநீஷா” என்றெல்லாம் அதில் சொல்வதால் ‘மநீஷா பஞ்சகம்’ என்று பெயர். அதன் முதல் ச்லோகம்:

ஜாக்ரத்-ஸ்வப்ந-ஸுஷுப்திஷு ஸ்புடதரா யா ஸம்வித் உஜ்ஜ்ரும்பதே
யா ப்ரஹ்மாதி-பிபீலிகாந்த-தநுஷு ப்ரோதா ஜகத்-ஸாக்ஷிணீ
|
ஸைவாஹம் ந ச த்ருச்யவஸ்த்விதி த்ருடப்ரஜ்ஞாபி யஸ்யாஸ்தி சேத்
சாண்டாளோஸ்து ஸ து த்விஜோஸ்து குருரித்யேஷா மநீஷா மம
||

ப்ரஹ்மா முதற்கொண்டு எறும்பு வரை பேதமேயில்லாமல் எல்லா தேஹத்துக்குள்ளிருந்தும் குறுக்கிழையாக கோத்து வாக்கிக்கொண்டு ஜகத்தையெல்லாம் ஸாக்ஷிமாத்ரமாகப் பார்ப்பது ஒரே சைதன்யம்தான். ‘பிபீலிகா’ என்றால் எறும்பு. எல்லா ஜீவன்களுக்கும் இந்த்ரியங்கள், மனஸ் எல்லாம் இருக்கின்றன. இவையெல்லாம் ஸ்வதாவாக ஜடமே. ஜீவனில் நெடுக்கிழையாக இவையெல்லாம் இருக்கின்றனவென்றால் இவற்றைச் சேர்த்துப்பிடித்துக் கோத்து வாங்கி இவற்றுக்கு உயிரைக் கொடுக்கும் குறுக்கிழையாயிருப்பது ஆத்ம சைதன்யமே ‘ப்ரோதா ஜகத்ஸாக்ஷிணீ’ என்பதில் ‘ப்ரோதா’ என்றால் குறுக்கிழை. ‘ஓத: ப்ரோதம்’ என்பார்கள் ஓதம் – நெடுக்கிழை; ப்ரோதம் – குறுக்கிழை. (பாவும் ஊடும் என்பவை.) இந்த்ரியங்கள், மனஸ் எல்லாம் கார்யத்தில் அகப்பட்டுக்கொண்டு தடமாடிக் கொண்டிருப்பவை. சைதன்யமோ, அதனால்தான் உயிர் ஏற்பட்டுக் கார்ய சக்தியும் உண்டாகிறது என்றாலுங்கூட, தான் என்னவோ கார்யத்தில் மாட்டிக்கொள்ளாமல், ஒன்றிலும் பட்டுக் கொள்ளாமல் ஸாக்ஷிமாத்ரமாகப் பார்த்துக் கொண்டு மட்டும் இருக்கிறது: “ஜகத்ஸாக்ஷிணி.” அடி உதைபட்டுக் கொள்கிறவன் வாதியும் ப்ரதிவாதியும்; பட்டுக்கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருப்பவன்தானே ஸாக்ஷி? ஸகல ஜீவ ஜந்துக்களிலும் ஒரே சைதன்யம் இருப்பது மட்டுமில்லை. ஒவ்வொரு ஜீவனுக்குமே எண்ணி முடியாத நிலைகள் இருக்கின்றன அல்லவா? இவை முக்யமாக மூன்றில் அடங்கிவிடும். ஜாக்ரத் என்னும் விழிப்பு நிலை, ஸ்வப்னம் என்னும் கனவு நிலை, ஸுஷுப்தி என்ற தூக்க நிலை. இந்த மூன்று நிலைகளிலும்கூட பேதமேயில்லாமல் அந்த ஒரே ஞானவஸ்துதான் ப்ரகாசித்துக் கொண்டிருக்கிறது. இதைச் சொல்லித்தான் ஆரம்பிக்கிறார்: ‘ஜாக்ரத்-ஸ்வப்ந ஸுஷுப்தி ஸ்புடதரா யா ஸம்வித் உஜ்ஜ்ரும் பதே .’

இப்படியுள்ள ஆத்மாதான் நிஜமான நாமான ‘ஸ்ப்ஜெக்ட்’. பாக்கியெல்லாம் — வெளி லோகம் மாத்ரமில்லை; நம் தேஹம், இந்த்ரியம், அந்தக்ஃகரணம் ஆகிய எல்லாமுங்கூட — ‘ஆப்ஜெக்ட்’ தான்; நாமில்லை. பார்க்கிற உள் வஸ்து ஆத்மாதான். பாக்கி யாவும் பார்க்கப்படுபவையான ஆத்மாவல்லாத வெளி வஸ்துக்கள்தான். “அவை ‘தான்’ இல்லை, ஆத்மாவே ‘தான்’ என்ற உறுதியான ‘ப்ரஜ்ஞை, ‘அநுபவ அறிவு, எவனுக்கு இருக்கிறதோ அப்படிப்பட்டவன் பஞ்சமனானாலும் ஸரி, ப்ராம்மணனானாலும் ஸரி, அவன் என் குருவே என்று நிச்சயமாக அபிப்ராயப்படுகிறேன் — ‘ஸைவாஹம் ‘: ஸாக்ஷிமாத்ரமாயுள்ள அந்த சைதன்யமே நான்; ‘ந ச த்ருச்ய வஸ்து இதி‘ : பார்க்கப்படும் கண், காது, மூக்கு, மனஸு, உலகம் முதலிய எதுவுமில்லை என்ற.., அதாவது ஏகப்பட்டதாக விஷயங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் அறிவது ஒரே அறிவு தானே? ‘தான் இந்த அறிகிற அறிவுதானேயொழிய, அறியப்படுகிற எதுவுமில்லை’ என்ற; ‘த்ருட ப்ரஜ்ஞாபி யஸ்யாஸ்தி சேத்‘ : அசைக்க முடியாத ஞானாநுபவம் எவனுக்கு இருந்தாலும்… யஸ்யாஸ்தி சேத் : அவன் எவனாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; ‘சாண்டாளோஸ்து‘ : தீண்டாதானாகத்தானிருக்கட்டும், ‘த்விஜோஸ்து‘: அல்லது ப்ராம்மணனாகத்தானிருக்கட்டும்… இந்த ஜாதி வித்யாஸம், மற்ற வித்யாஸம் எதுவும் அப்படிப்பட்ட ஞானியின் விஷயத்தில் இல்லை; ஆகையால் அவன் எவனாயிருந்தாலும்; ‘குருரிதி ஏஷா மநீஷா மம‘: நமக்கெல்லாம் குருவாக இருப்பவன் என்பது என் உறுதியான கொள்கை.”

“இது முதல் ச்லோகம். [சிரித்து] முழுக்கச் சொல்லப்போகிறேனாக்கும் என்று பயப்பட வேண்டாம்! கடைசி ச்லோகத்துக்கு வந்துவிடுகிறேன்:

யத்-ஸெளக்யாம்புதி-லேச-லேசத இமே சக்ராதயோ நிர்வ்ருதா
யச்சித்தே நிதராம் ப்ரசாந்த கலநே லப்த்வா முநிர்-நிர்வ்ருத: |
யஸ்மிந்-நித்ய-ஸுகாம்புதௌ கலித-தீர்-ப்ரஹ்வை ந ப்ரஹ்மவித்-
ய கச்சித்-ஸ ஸுரேந்த்ர-வந்தித-பதோ நூநம் மநீஷா மம ||

“ஆனந்தா(வபோதாம்)புதி” என்று பஞ்சமன் பெரிய ஸமுத்ரம் மாதிரியான ஆத்மானந்தத்தைச் சொன்னானே. அதையேதான் ஆசார்யாளும் இந்த ச்லோகத்தில் இரண்டு இடத்தில் ‘ஸெளக்யாம்புதி’ என்றும், ‘ஸுகாம்புதி’ என்றும் சொல்கிறார். சிஷ்யன் என்றால் குரு வசனத்தைத் திருப்பிச் சொல்லணும். ஜகதாசார்யாள் என்று நாம் சொல்கிறவர் எவனோ ஒரு பஞ்சமன் ஞானியாயிருக்கிறானென்று தெரிந்து கொண்டவுடன் அவனை குரு என்று சொல்லிவிட்டார் — மநீஷா, மநீஷா என்று திரும்பத் திரும்ப அடித்துச் சொல்லிவிட்டார். அவன் சொன்ன ஆனந்த ஸமுத்ரத்தையும் இங்கே இரண்டு தடவை சொல்லி விடுகிறார்!

நம்மைவிட ராஜாவுக்கு ஸந்தோஷாநுபவம் ஜாஸ்தி இருக்கும். ‘ராஜபோகம்’ என்று அதனால்தான் சொல்வது. நம்முடைய லோகத்து ராஜாக்களுடைய ஸந்தோஷத்தையெல்லாம்விட, இன்ப லோகமாகவே இருக்கப்பட்ட தேவ லோக ராஜாவான இந்த்ரனுக்கு அதிக ஸந்தோஷம் இருக்கும். (‘சக்ராதயோ’ என்பதில்) ‘சக்ரன்’ என்பது இந்த்ரனைத்தான். அவனுடைய அந்த மஹத்தான ஸந்தோஷநுபவமுங்கூட ஞானி அநுபவிக்கும் ஆத்மானந்த ஸமுத்ரத்தின் ஒரு வெகு சிறிய துளிதானாம். ‘லேசம்’ என்றால் துளி. ‘லேசு’ என்கிறோமே, அப்படி கனமேயில்லாத திவலை. ‘லேச லேச’ என்று திருப்பியிருப்பதற்குத் திவலையிலும் திவலையாக என்று அர்த்தம். ஞானியின் ஆனந்தம் ஸமுத்ரமென்றால் அதன் திவலையிலும் திவலையாயிருப்பது தான் இந்த்ரனின் ஆனந்தமுங்கூட..

(லலிதா) ஸஹஸ்ர நாமத்தில் அம்பாளைப் பரம வேதாந்தமாக ‘தத்-பத-லக்ஷ்யார்த்தா’, ‘சிதேக ரஸ ரூபிணி’2 என்று சொன்னவுடன், ப்ரம்மாதி தேவர்களின் ஆனந்தத்தையும் தன்னுடைய ஆத்மானந்தத்தில் லவலேசமாக்கி விடுபவள் என்று ஒரு பெயர் சொல்லியிருக்கிறது : “ஸ்வாத்மாநந்த – லவீபூத – ப்ரஹ்மாத்யாநந்த ஸந்ததி:” | உபநிஷத்திலும், “இந்த ஆனந்தத்தின் ஒரு மாத்திரையைக் கொண்டுதான் அத்தனை ஜீவ குலமும் ஜீவிக்கிறது” என்று இருக்கிறது.3

இந்த்ரனுக்கு அந்த ஆனந்தம் என்னவென்று தெரியாது. ஆனால் ஞானிக்குத் தெரியும். ஞானியை ‘முனி’ என்று (ச்லோகத்தின் இரண்டாம் வரியில்) சொல்லியிருக்கிறது. சித்தம் அப்படியே அடங்கி ப்ரசாந்தமாக உள்ள ஸ்திதியில் அவன் அந்தப் பேரானந்தத்தை ஸம்பாதித்துவிடுகிறான்: ‘யச் சித்தே நிதராம் ப்ரசாந்த கலநே லப்த்வா முநிர் – நிர்வ்ருத:’. நிர்வ்ருதி என்றால் ஆனந்த த்ருப்தி. முதலில் ‘சக்ராதயோ நிர்வ்ருதா:’ என்று இந்த்ராதியரின் ஆனந்த த்ருப்தியைச் சொல்லிவிட்டு இங்கே ஞானியின் ஆனந்த த்ருப்தியைச் சொல்கிறார். இந்த்ராதியர் ஆனந்தப்படுவது, புத்தியை வைத்துக்கொண்டு, புத்தியால் வெளி ஆனந்தங்களைத் தனதாக நினைத்துக்கொண்டு, ஸப்ஜெக்டைவிட்டு ஆப்ஜெக்டைப் பிடித்துக்கொண்டு என்னவோ திவலை ஆனந்தம்தான் அவர்கள் அடைகிறார்கள். இவன் (ஞானி) ஸமுத்ரமான ஆனந்தத்தை அடைவதோ புத்தியினால் அல்ல. இவனுடைய புத்தியும் இவனுக்கு வேறான ஆப்ஜெக்டாக அந்த ஸமுத்ரத்தில் நழுவி விழுந்து கரைந்தே போய்விட்டது — ‘கலித தீ‘ என்றால் அதுதான் அர்த்தம். நித்யாநந்த ஸமுத்ரத்தில் ஞானியின் புத்தி கரைந்து போயாச்சு: ‘யஸ்மிந் நித்ய ஸுகாம்புதௌ கலித தீ‘… புத்தியால் அறியும்போது, அது அறிகிற எல்லாம் அதற்கு வேறானவை. “புத்தி அழிந்து போனபின்தான் ப்ரஹ்மத்தை ‘அறிய’ முடியும், இப்படி ‘அறிந்தவனே’ ப்ரம்மவித்” என்று நாம் என்னவோ நமக்குப் புரிகிற பாஷையில் சொல்லிக் கொண்டிருந்தாலும், இங்கே அறியப்படும் வஸ்து, அறிகிற வஸ்து என்று இரண்டே இல்லையே! புத்தியால் அறியும்வரை ஸரி, புத்தி அறிகிறது, அது எவற்றை அறிகிறதோ அவை அறியப்படுகின்றன. இப்படி வித்யாஸமாய் இரண்டு இருக்கின்றன. அதுதான் த்வைதம். புத்தியே கரைந்து மறைந்து போய்விட்ட பிறகு? ப்ரஹ்மத்தை ‘அறிவது’ என்றால் எதைக்கொண்டு? புத்தியும் போனவிட்டு எஞ்சி நிற்கும் ஆத்மாவால் என்றால், ஆத்மாவும் ப்ரஹ்மமும் ஒன்றுதானே? அதற்கு ‘அறியப்பட வேண்டிய’ வேறாக ஒன்று கிடையவே கிடையாதே! ஆப்ஜெக்டே இல்லாத ஸப்ஜெக்ட் அல்லவா அது? ஆகையால், ஞானி அப்படியே ப்ரஹ்மானந்த ஸமுத்ரத்தில் முழுகி அதை ‘அறிகிறான்’ — ப்ரஹ்ம-வித் ஆகிறான் (ப்ரஹ்மத்தை அறிந்தவனாகிறான்) — என்று ஒளபசாரிகமாகச் சொன்னாலும், வாஸ்தவத்தில் அறிகிற இவன் வேறு, அறியப்படும் ப்ரஹ்மம் வேறு என்று இல்லாமல் இவன் ப்ரஹ்மமாகவே ஆகி விடுகிறான். ப்ரஹ்மவித் இல்லை; ப்ரஹ்மமே! “யஸ்மிந் நித்ய ஸுகாம்புதௌ கலித தீர்-ப்ரஹ்மைவ ந ப்ரஹ்மவித்“.

ஆசார்யாள் சொல்கிறார் : “இப்படிப்பட்ட ப்ரஹ்ம ஸ்வரூபன் எனக்கு குரு, உங்களுக்கு குரு என்பது மட்டுமில்லை. இவனுடைய ஆனந்தத்தின் லேச லேசத்தையே தெரிந்து கொண்ட இந்திரனும் இவன் காலில் வந்து சிஷ்யனாக விழத்தான் வேண்டும். இது என் தீர்மானமான அபிப்ராயம் — மநீஷா : “ய கச்சித் ஸுரேந்த்ர வந்தித பதோ நூநம் மநீஷா மம .” ‘மநீஷா‘ என்றாலே நிச்சயமான அபிப்ராயமென்று அர்த்தம். ‘நூநம்’ என்றாலும் நிச்சயம்தான், ‘நூநம் மநீஷா’ என்று போட்டுத் தம்முடைய முடிவைப் பாறங்கல் மாதிரி உறுதிப்படுத்திச் சொல்கிறார்!

அந்த முடிவு என்ன? ஞானிகளின் விஷயத்தில் ஜாதி, குலம், வயஸு அந்தஸ்து எதுவும் பார்க்காமல் குரு ஸ்தானத்தில் வைத்து மரியாதை பண்ணணும் என்பதே.


1 இச்சம்பவத் தொடர்பாக இனி நாம் காணவிருக்கும் ஆசார்யாளின் “மநீஷா பஞ்சக”த்தில் பூர்வாங்கமாகக் கூறப்படும் ச்லோகம்.

2 கீதை V. 18

3 ‘மநீஷா பஞ்சக’ப் பூர்வாங்கம்.

4 தத்-த்வமஸி முதலான வாக்யங்களில் ‘தத்’எனும் ‘அது’வாகிய பதத்திற்கு அர்த்தமான ப்ரஹ்மமாக இருப்பவள் ‘தத் பத லக்ஷ்யார்த்தா’. ஒன்றேயான சைதன்ய ரஸத்தின் வடிவினன் ‘சிதேக ரஸ ரூபிணி’.

5 ப்ரஹ்தாரண்யகம் IV – 3 – 32

வ்யாஸருடன் வாதமும், ஆயுள் நீடிப்பும்

லோகத்திலுள்ளவர்களுக்கெல்லாம் ஆசார்யாளுடைய ஸூத்ரபாஷ்யத்தின் பெருமையைத் தெரியப் பண்ண வேண்டுமென்று ஸூத்ரகர்த்தாவான வ்யாஸர் நினைத்தார். ரொம்ப ரொம்பச் சுருக்கமாக வார்த்தைகளை அடக்கி அவர் ஸூத்ரம் பண்ணிவிட்டதால், ‘அர்த்தம் பண்ணுகிறேன்’ என்று சொல்லி அவரவரும் இஷ்டப்படி இழுத்து, நீட்டி இல்லாத அர்த்தத்தையெல்லாம் சொல்லி வந்தார்கள். அப்போது ஆசார்யாள்தான் வ்யாஸாசார்யாளின் எண்ணம் என்னவோ அதையே பரிபூர்ணமாகப் புரிந்துகொண்டு தம்முடைய பாஷ்யத்தை எழுதியிருந்தார். அதனால் ப்ரீதியடைந்த வ்யாஸாசார்யாள், ‘இன்னும்கூட இவரை நன்றாகப் பரீக்ஷித்து முடிவில் இவர் செய்த பாஷ்யம்தான் நமக்கு ப்ரீதியானது என்று லோகம் புரிந்துகொள்ளச் செய்யணும்’ என்று நினைத்தார்.

வ்யாஸ ரூபத்திலேயே போனால் ரொம்பவும் விநயகுணம் படைத்த ஆசார்யாள் வாயைத் திறக்க மாட்டார். மேதா விலாஸத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு பக்திதான் பண்ணுவார் என்பதால் யாரோ ஒரு வயோதிக ப்ராம்மணர் மாதிரி ரூபமெடுத்துக் கொண்டு வந்தார்.

“ஸூத்ர பாஷ்யம் பண்ணி இருக்கிறீராமே, இதற்கென்ன அர்த்தம், அதற்கென்ன அர்த்தம்?” – என்று ஆசார்யாளைக் கேட்டுக்கொண்டு போனார். ஆசார்யாளும் தயங்காமல் பதில் சொல்லிக்கொண்டு போனார். இவர் என்ன அர்த்தம் சொன்னாலும் அவர் உள்ளூர ஸந்தோஷப்பட்டுக் கொண்டே, “அதெல்லாம் இல்லை இப்படித்தான் அர்த்தம்” என்று எதையாவது சொல்லி ஆக்ஷேபித்தார். அவர் சொல்வது பொருந்தாது என்று ஆசார்யாள் விஸ்தாரம் பண்ணி வாயை அடைப்பார். ஒரு விஷயமாக வாயை அடைத்தாலும் அவர் இன்னொன்றைப் பிடித்துக்கொள்வார். அப்புறம் விதண்டாவாதமாக எல்லாங்கூட பண்ண ஆரம்பித்தார்.

‘விதண்டாவாதம்‘ என்பது அவ்வளவு ஸரியில்லை. விதண்டை வேறே, வாதம் வேறே! – வாதம், ஜல்பம், விதண்டை என்று மூன்று. வாதம் என்பது நேர்மையாக, திறந்த மனஸோடு ஆர்க்யூ பண்ணுவது. ‘ஜல்பம்’ என்பது வீம்பாகத் தன் கட்சி என்று ஒன்றையே பிடித்துக்கொண்டிருப்பது. விதண்டை என்றால் எதையும் தர்க்கப்படி ரூபிக்காமல், தன் கட்சி என்று ஒன்றை ரூபிப்பதில்கூட அக்கறை காட்டாமல், எதிராளி என்ன சொன்னாலும் அது தப்பு என்று மட்டும் குதர்க்கமாகச் சண்டை போடுவது. ‘கொண்டி’ என்று சொல்வார்கள.

ஆசார்யாளோடு நாள் கணக்கில் வ்யாஸர் வாதம், விதண்டை எல்லாம் பண்ணினார்.

இரண்டு மஹாமேதைகள் இப்படி பலத்த வாதம் பண்ணுவதைப் பார்த்து சிஷ்யர்கள், பண்டிதர்களெல்லாம் ஆச்சர்யப்பட்டார்கள். சிஷ்யர்களுக்கு அப்பப்போ அடித்துக் கொள்ளும், “யார்டா, இந்தக் கிழவர்? நம் குருநாதரையே ஜயித்து விடுவார் போலிருக்கே!” என்று. அப்புறம் இவர் (ஆசார்யாள்) டாண் டாணென்று பாயின்ட்களைக் கொடுக்கும்போது, “இந்தக் கிழம் என்னதான் பண்ணிப் பார்த்தாலும் ஆசார்யாளிடம் ஜம்பம் சாயுமா? மண்ணைக் கவ்வாமல் போகமுடியுமா?” என்று உத்ஸாஹம் அடைவார்கள்.

‘ஆசார்யாளுக்குச் சளைக்காமல் இப்படியரு மநுஷ்யர் வாதம் பண்ணுவதா? இவர் யாராயிருக்கும்?’ என்று பத்மபாதர் நினைத்துக் கொஞ்சம் ஞானத்ருஷ்டியினாலே பார்த்தார். ‘அட, வேத வ்யாஸ பகவானல்லவா வந்திருக்கிறார்!’ என்று தெரிந்து கொண்டுவிட்டார்.

‘ஸரிதான்! நம் குருநாதரோ பரமசிவன் – சங்கர: சங்கர: ஸாகக்ஷாத்! வந்திருக்கும் வேத வ்யாஸரோ மஹாவிஷ்ணுவே: வ்யாஸோ நாராயண ஸ்வயம்! இப்படி சிவ – விஷ்ணுக்களே வாத விளையாட்டுப் பண்ணுவதென்றால் அது எப்போது முடியுமோ, எப்படி முடியுமோ? இப்படி ஆகணும், அப்படி ஆகணும் என்றெல்லாம் சிஷ்யரான நாம் ஆசைப்பட்டால் ஆகிவிடுமா? இங்கே நாம் ஒண்ணும் பண்ணிக் கொள்வதற்கில்லை. நாம் ஏதாவது மத்யஸ்தம், கித்யஸ்தம் பண்ணி முடிகிற விஷயமா இது? அவர்கள் தெய்வங்கள். நாமோ அடிமை, கிங்கரர். சங்கர பகவானும் நாராயண பகவானுமே விவாதம் நடத்துவதாக ஏற்பட்டிருக்கும்போது கிங்கரனான நாம் என்ன செய்வது?

சங்கர: சங்கர: ஸாகக்ஷாத் வ்யாஸோ நாராயண: ஸ்வயம் |
தயோர்-விவாதே ஸம்ப்ராப்தே கிங்கர: கிங்கரோம்யஹம் ||1

‘கிங்கர: கிங்கரோம்யஹம்’ என்று வார்த்தையைத் திருப்பியிருப்பதில் ‘கிங்கரோம்யஹம்’ என்பதை ‘கிம் கரோமி அஹம்?’ என்று பிரித்துக் கொள்ளவேண்டும். ‘நான் என்ன செய்வேன்?’ என்று அர்த்தம்.

இப்படி ச்லோகமாகச் சொல்லி இரண்டு பேரையும் பத்மபாதர் நமஸ்கரித்தார்.

‘அப்படியா? ஸூத்ரகாரரான வ்யாஸாசார்யாளேயா வந்திருப்பது? ‘என்று ஆசார்யாளுக்கு ஒரே பக்தியும், ஸந்தோஷமும், அடக்கமும் வந்துவிட்டது. “வாஸ்தவமாக இந்த பாஷ்யம் தங்கள் ஹ்ருதயத்தை அநுஸரிப்பதாக இருந்தால் எல்லாருக்கும் தெரிகிற மாதிரி ஸ்வஸ்வரூபம் எடுத்துக்கணும்” என்று ப்ரார்த்தித்துக்கொண்டார்.

கிழப்ராம்மணர் உடனே வ்யாஸ ரூபத்தில் தர்சனம் கொடுத்தார், ஆசார்யாளுக்கு நிரம்ப அநுக்ரஹம் செய்து, “லோகத்தில் நேர்மையாகவும் கொண்டி வழியிலும் யாரார் என்னவெல்லாம் ஆக்ஷேபித்துக் சொல்லமுடியுமோ அதற்கு மேலே நாமே சொல்லி, அத்தனைக்கும் உன் பாஷ்யம் பதில் சொல்கிறது என்று காட்டவே இப்படி வந்தேன். இந்த பாஷ்யத்திற்கு என் பூர்ண அங்கீகாரம் உண்டு” என்றார்.

ஆசார்யாள் தாம் எழுதினதையெல்லாம் அவருடைய பாதத்தில் வைத்தார். “தங்களுடைய அங்கீகாரம் கிடைத்துவிட்டபின் நான் செய்ய எதுவுமில்லை. தங்கள் அநுக்ரஹத்தில் இவை ப்ரசாரமாகிவிடும். இப்போது எனக்கும் பதினாறு வயஸ் பூர்த்தியாகிறது. எட்டைப் பதினாறாக்கி அதுவும் முடிகிறது. யதாஸ்தானம் திரும்புவதற்கு அநுமதி தரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

“இல்லை, இல்லை அப்படிப் பண்ணப்படாது. புஸ்தகங்கள் எழுதிவிட்டாலும், சிஷ்யர்களால் அவை ப்ரசாரமாகி விடுமென்றாலும் அதுமட்டும் போதாது. புஸ்தகமும் சிஷ்யர்களும் பண்ண முடியாமல் உன்னால்தான் முடியும் என்பதாகச் சில கார்யங்கள் இருக்கின்றன. நீயே தேசம் பூராவும் போய் நேரில் வாதம் நடத்தினால்தான் வழிக்கு வரக்கூடியவர்களாக அநேக பண்டிதர்கள், ஸித்தாந்தக்காரர்கள் இருக்கிறார்கள். அதைவிட முக்யமாக உன் ஸ்வரூப தர்சனம் அவர்களுக்கும், ஸர்வ ஜனங்களுக்கும் கிடைக்க வேண்டாமா? புஸ்தகமும், ஸித்தாந்தமும், ப்ரசாரமும் வாத ப்ரதிவாதமும் இருக்கட்டும். அவை பண்ணுவதையெல்லாம்விடப் பெரிசாக உன் தர்சனமே பண்ணிவிடுமே! ஜனங்களையெல்லாம் ஸந்தோஷப்படுத்தி, சுத்தப்படுத்தி நல்ல வழிக்குக் கொண்டுவந்துவிடுமே! ஆனதினாலே, எட்டைப் பதினாறாக்கிக் கொண்ட நீ இன்னும் பதினாறு வருஷம் இருக்கவேண்டும். பரதக் கண்டம் முழுதிலும் திக்விஜயம் பண்ணி, உன்னைப்போல திக்விஜயம் செய்தவர் எவருமில்லை என்னும்படியாகப் பண்ணி தர்மோத்தரணத்தைப் பூர்த்தி செய்யவேண்டும்” என்று வ்யாஸர் சொன்னார்.

இவர் ‘சங்கர: ஸாக்ஷாத்’, அவர் ‘நாராயண ஸ்வயம்’ என்றாலுங்கூட அவதாரத்திலே மநுஷ்யர் மாதிரி அடங்கியிருக்கவேண்டும் என்று காட்டுவதற்காக வ்யாஸாசார்யாள் ப்ரம்மாவைக் கொண்டே ஆசார்யாளுக்கு இன்னும் பதினாறு வருஷம் ஆயுஸை நீடிக்க நினைத்தார். ப்ரம்மாதானே ஜன்மா தந்து, இத்தனை ஆயுஸ் என்று எழுதுபவர்?

ப்ரம்மாவும் அப்படியே அங்கே தோன்றினார்.

த்ரிமூர்த்திகளும் சேர்ந்து விட்டார்கள்!

முதலில் சிவனின் வரத்தால் ஆசார்யாள் எட்டு என்று ஆயுஸ் பெற்றுப் பதினாறாக்கிக் கொண்டார். இப்போது விஷ்ணு, ப்ரம்மா இருவரும் இன்னொரு பதினாறு கொடுத்தார்கள்.

“ஈச்வராவதாரத்திற்கு நான் என்ன ரூல் பண்ணுவது! இஷ்டப்படி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இருக்கலாம்” என்றும் ப்ரம்மா சொன்னார்.

அப்புறம் ப்ரம்மாவும் வ்யாஸரும் அந்தர்தானமானார்கள்.

ஆசார்யாளுடைய காசி வாஸத்தின்போது நாலு முக்யமான விஷயங்கள் நடந்தன. ஒன்று அவர் பாஷ்ய உபதேசம் பண்ணினது. இன்னொன்று, பத்மபாதர் அவரிடம் வந்து சிஷ்யராகி, ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு, அந்தப் பேர் பெற்றது. மூன்றாவது, வ்யாஸர் வந்து பரீக்ஷித்து பாஷ்யத்தைப் பரிபூர்ணமாக அங்கீகரித்து ஆசார்யாளுக்கு இன்னொரு பதினாறு வயஸு நீடிக்கவைத்தது. நாலாவது இப்போது சொல்லப் போகிறது:


1 ‘ஆனந்தகிரீய சங்கர விஜயம் — 52-வது ப்ரகரணம்.

தாமரை தாங்கிய தாளர்

இது பிற்காலத் கதை. பத்மபாதர் ஆசார்யாளிடம் வந்து கொஞ்ச நாளில் நடந்த இன்னொரு கதை சொல்கிறேன். ஏன் ‘பத்மபாதர்’ என்று பேர் வந்தது என்னும் கதை. மஹான்கள் பெயருக்குப் பின்னால் ‘பாதர்’ சேர்க்கிற மாதிரி, கௌடர் – கௌடபாதர் மாதிரி, பத்மர்-பத்மபாதர் இல்லை! பத்மபாதர் என்பதே முழுப் பெயர். காரணப் பெயர்

ஒரு நாள் அவர் கங்கையின் அக்கரையிலும் ஆசார்யாள் இக்கரையிலுமாக இருந்தார்கள். ஆசார்யாள் ஈர வஸ்த்ரத்துடனிருந்தார். பத்மபாதரிடம் காய்ந்த சுத்த வஸ்த்ரமிருந்தது.

சிஷ்யருடைய பக்தியை லோகத்திற்கு, மற்ற சிஷ்யர்களுக்கு ப்ரகடனம் பண்ணவேண்டுமென்று ஆசார்யாள் நினைத்தார். “வஸ்த்ரத்தை இங்கே கொண்டு வா!” என்று எதிர்க் கரையிலிருந்தவரிடம் சொன்னார்.

குரு ஆக்ஞை என்றால் தட்டாமல் உடனே பண்ணிவிட வேண்டும் என்ற ஸ்மரணைதான் பத்மபாதருக்கு! அதில், நடுவே கங்கை இருக்கிற ஸ்மரணையே போய்விட்டது! ஆளை முழுங்குகிற மாதிரி ஆழமாக நதி ஓடுவது தெரியாமல் ஸம பூமியில் நடப்பதுபோல அவர் ஆசார்யாள் இருந்த பக்கமாக ப்ரவாஹத்தின் மேலேயே நடக்க ஆரம்பித்தார்!

அப்போது என்ன ஆயிற்றென்றால், அவர் எங்கேயெல்லாம் அடிவைக்க இருந்தாரோ அங்கேயெல்லாம் கங்கா தேவி ஒரு தாமரையைப் புஷ்பித்துப் பாதத்தைத் தாங்கினாள். அதன் மேலாகவே அவர் எதிர்க்கரைக்கு வந்து குருநாதரிடம் வஸ்த்ரத்தைக் கொடுத்தார்.

பத்மங்களால் தாங்கப்பட்ட பாதத்தை உடையவரானதால் ‘பத்ம பாதர்’ என்று பேர் வந்தது.

மற்ற சிஷ்யர்களெல்லாம், “என்னமாக கங்கையைத் தாண்டி விட்டாய்!” என்று ஆச்சர்யப்பட்டார்களாம். அவரானால், “இது எனன ஆச்சயர்ம்? எந்த குருநாதரை ஸ்மரித்தால் ஸம்ஸார ஸாகரமே முழங்காலளவு ஆகிவிடுகிறதோ, அவரே ஆஜ்ஞை பண்ணும்போது இந்த கங்கை என்ன ப்ரமாதம்?” என்றாராம்.

பத்மபாதர் விஷ்ணு அம்சம். ந்ருஸிம்ஹ ஸாக்ஷாத்காரம் பெற்றவர். அதனால், விஷ்ணுவின் அம்சாவதாரமான வ்யாஸரை ஆசார்யாள் அடையாளம் கண்டு கொள்வதற்கு முந்தியே இவர் கண்டுவிட்டாரென்று ஒரு ஸம்பவம் உண்டு. அதுவும் காசியில் நடந்ததுதான்.

கொலையாளிக்கும் கருணை!

ரொம்பவும் முக்யமான ஒரு ஸமயத்தில் பத்மபாதருக்கு நரஸிம்ஹ மூர்த்தியின் ஆவிர்பாவம் ஏற்பட்ட கதையையும் கையோடு சொல்லி விடுகிறேன்: அவர் ஆசார்யாளின் சிஷ்யராகி ரொம்ப நாளானவிட்டு நடந்த ஸம்பவம்!

காபாலிகர்களின் தலைவன் ஒருவன் இருந்தான். சுடுகாட்டில் வாஸம் பண்ணுவது, நரபலி கொடுத்து மாம்ஸத்தையும் மஜ்ஜையையும் பச்சையாகத் தின்னுவது என்றிப்படி க்ரூரமாக ‘வாமாசார’ங்களை பின்பற்றி வந்த காபாலிகர்களின் தப்பையெல்லாம் ஆசார்யாள் எடுத்துச் சொல்லி ஸாத்விக வழிக்கு வரும்படி உபதேசம் பண்ணிக் கொண்டிருந்தார். அநேகம் காபாலிகர்கள் மனஸ் மாறினார்கள். சில பேர் மாறாமல் ஆசார்யாளிடம் ஒரேயடியாக த்வேஷம் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். இவன் அப்படி ஒருவன். இவனால் அவருக்கு எதிர்வாதம் எதுவும் பண்ணமுடியவில்லை. அவரை எப்படித் தொலைக்கலாம் என்று பார்த்துக்கொண்டிருந்தான். ‘ஒன்று பண்ணலாம். இவரோ மஹா கருணையுள்ளவர். அதனால் அவரிடமே போய் நம் இஷ்டத்தைச் சொல்லுவோம்’ என்று நினைத்து, அவர் தனியாய் இருந்த ஸமயத்தில் அவரிடம் போய் நமஸ்காரம் பண்ணினான்.

“இதுவரை நான் விதவிதமாக பலி கொடுத்தும் கபாலி ப்ரத்யக்ஷமாகவில்லை. ஸாம்ராஜ்ய பட்டாபிக்ஷேகமான ஒரு ராஜாவின் தலையையோ, அல்லது அஷ்ட மஹாஸித்தி பெற்ற ஒரு ஆத்மஞானியின் தலையையோ பலி கொடுத்தால் நிச்சயம் ப்ரத்யக்ஷமாவார். ராஜாவின் தலைக்கு நான் முயற்சி பண்ணினால் அவன் என் தலையை வாங்கிவிடுவான்! தாங்கள் மஹாஞானி, மஹா யோகஸித்தர். அதனால் என் மனோரதப் பூர்த்திக்காகக் கருணாமூர்த்தியான தங்களிடம் வந்தேன்” என்றான்.

இப்படிக்கூட ஒருத்தரிடம் தலையைக் கேட்பதுண்டா என்றால், ஆசார்யாள் அப்படிப்பட்டவராக இருந்திருக்கிறார்!

காபாலிகன் கேட்டதில் அவருக்கு ரொம்பவும் ஸந்தோஷம் உண்டாயிற்று: ‘அட, ஒன்றுக்கும் உதவாதது என்று நினைக்கிற இந்த மநுஷ சரீரங்கூடவா ஒருத்தனுக்கு ஈச்வர தர்சனமே கிடைப்பதற்கு உதவுகிறதாம்! மரம் பட்டுப்போனாலும் விறகாக உபயோகப்படுகிறது. மாட்டுக் கொம்பு ஈச்வர அபிஷேகத்துக்கே உபயோகமாகிறது. யானை தந்தமும் எத்தனையோ ப்ரயோஜனங்களைக் கொடுக்கிறது. மான் தோல், க்ரூரமான புலித் தோல்கூட, த்யானத்துக்கு ஆஸனமாகிறது. மநுஷ்ய சரீரம்தான் எதற்கும் ப்ரயோஜனப்படாதென்று நினைத்தால், இதை ஒருத்தன் கேட்டுப் பெற வருகிறானே!’ என்று ஸந்தோஷித்தார்.

“உன் ஆசைப்படியே ஆகமட்டுமப்பா! ஆனால் என் சிஷ்யர்களுக்கு விஷயம் தெரியப்படாது. அவர்கள் பொல்லாதவர்கள்! உனக்கு ஏதாவது கஷ்டம் உண்டாக்குவார்கள். ஆகையால் நான் தனியாக த்யானத்தில் இருக்கும் ஸமயத்தில் வந்து சிரஸை எடுத்துக்கொண்டு போ”என்றார்.

அப்படியே அப்புறம் அவன் அவர் தனியாய் த்யானத்திலிருந்தபோது வந்தான். கத்தியை உருவினான்.

எங்கேயிருந்தோ பத்மபாதர் அங்கே வந்து குதித்தார்!

“ஹா ஹா!” என்று பெரிதாகச் சத்தம் கேட்டது.

ஆசார்யாள் கண்ணைத் திறந்து பார்த்தார்.

காபாலிகன் உடம்பு கிழிபட்டு எதிரே ம்ருத சரீரமாக (உயிர் நீங்கிய உடலாக)க் கிடந்ததைப் பார்த்தார்!

பக்கத்திலிருந்த பத்மபாதரிடம், “என்ன ஆச்சு? இது யார் பண்ணிய கார்யம்?” என்று கேட்டார்.

அவர், “எனக்கு ஒண்ணும் தெரியலை. கங்கையில் இருந்தேன். அப்புறம் எனக்கு என்னவோ மாதிரி ஆச்சு. இப்பத்தான ஸ்வய ப்ரக்ஞை வந்திருக்கு” என்றார்.

ஆசார்யாள், “ஓஹோ, உனக்கு நரஸிம்ஹ மந்த்ரம் உபதேசமாயிருந்ததா?” என்று கேட்டார்.

“இருந்தது. ஆனால் ஒண்ணும் ப்ரயோஜனமில்லை. ஸ்வாமி என்னை ஏமாற்றிவிட்டு ஒரு வேடனுக்கு தர்சனம் தந்தார். என்னவோ சொன்னார், ‘அவச்யத்திலே வருவேன்’ என்று” – என்று சொல்லும்போதே பத்மபாதருக்குச் சட்டென்று தெளிவாயிற்று. “ஓ, சொன்னபடிதான் இப்போது பண்ணியிருக்கிறார்! அவர் ஆவேசித்துத்தான் இந்தக் கார்யம் நடந்திருக்கிறது. இதைவிட ஆபத்தில் ரக்ஷணம் காட்ட ஸமயமுண்டா?” என்று ஸந்தோஷித்து நரஸிம்ஹர், ஆசார்யாள் இரண்டு பேரையும் நமஸ்காரம் பண்ணினார்.

பத்மபாதரின் கதை; வேடனின் பெருமை

ஆசார்யாளின் ப்ரதான சிஷ்யர்களில் ஒருவராக இருக்கப்பட்ட பத்மபாதாசாரியாள் ஆசார்யாள் காசிவாஸம் செய்துகொண்டு இருந்தபோதே அவரிடம் சிஷ்யராக வந்து சேர்ந்தார். ஆசார்யாளுக்குப் பதினாறு வயஸ்கூடப் பூர்த்தியாகாத ஸமயம்.

பத்மபாதருக்கு பூர்வாச்ரமத்தில் ஸநந்தனர் என்று பேர். அவர் சோழ தேசத்தைச் சேர்ந்தவர். அவரைப் பற்றி ஒரு கதை சொல்கிறேன். தம் ஊரில் இருந்த காலத்தில் அவருக்கு ஒரு பெரியவர் நரஸிம்ஹ மந்த்ரோபதேசம் பண்ணினார். நன்றாக ஜபம் பண்ணி ஸித்தி பெற்று நரஸிம்ஹ மூர்த்தியை தரிக்கணுமென்று அவருக்கு ஆசை உண்டாயிற்று. அகத்திலிருந்து புறப்பட்டார். ஏகாந்தமாக ஒரு மலையின் உச்சியிலிருந்த காட்டுக்குப் போய் தபஸ் பண்ண உட்கார்ந்தார்.

ஒரு வேடன் வந்தான். ‘ஐயர் ஏன், பாவம், இங்கே வந்திருக்கிறார்?’ என்று நினைத்தான். அவரிடம் வந்து, “எங்கள் மாதிரி பலசாலியான வேடர்கள் இங்கே வேட்டையாடிப் பிழைப்போம். பூஞ்சை ப்ராம்ணன் உனக்கு இங்கே எதுவும் கிடைக்காமல் கஷ்டப்படுவாய். எதுக்கு வந்தே?” என்று கேட்டான்.

நரஸிம்ஹர், தபஸ் என்றெல்லாம் சொன்னால் அவனுக்கு புரியாதென்று அவர், “இடுப்புக்குக் கீழே மநுஷ்யன் மாதிரியும் மேலே சிங்கம் மாதிரியும் ஒரு ப்ராணி உண்டு. எனக்கு அது தேவைப்படுகிறது. இந்தக் காட்டில் அது இருக்கிறதென்று கேள்வி. அதற்காகத்தான் வந்தேன்” என்றார்.

“நிஜமாகச் சொல்லு ஐயரே, அப்படியொரு மிருகம் இங்கே இருக்கா? இந்தக் காட்டிலே நான் பார்க்காத இடமோ, எனக்குத் தெரியாத மிருகமோ ஒண்ணும் கிடையாது. வேடர்களிலேயே என்னைப்போல இன்னொருத்தன் கிடையாது. ஆனால் நீ சொன்ன மாதிரி மிருகம் என் கண்களில் பட்டதே இல்லை. நீ சொல்வது மட்டும் நிஜமென்பாயானால் அதை நான் பார்க்காமல் விடுவதில்லை. நானே அதைப் பிடித்துக்கொண்டு வந்து கொடுக்கிறேன. நீ கஷ்ப்பட வேண்டாம் ஆனால் நிஜமாகவே அப்படி உண்டா, சொல்லு” என்றான்.

காட்டு ஜனங்கள் முரடு, நாம் ரொம்ப ‘நைஸ்’ என்று தோன்றினாலும், அவர்களுடைய எளிமை, உழைப்பு, தைர்யம், ஒத்தாசைக் குணம் எதுவும் நமக்கு வராது; நம்முடைய பித்தலாட்டங்கள் அவர்களுக்கு வராது!

நரஸிம்ஹ மூர்த்தியை இவன் பிடித்து வந்து கொடுப்பதாகச் சொல்கிறானே என்று அவர் சிரித்தார்.

“ஏன் சிரிக்கிறாய்? வேடிக்கைக்குச் சொன்னாயா?” என்று அவன் கேட்டான்.

தம்மை ஏகாந்தமாக விட்டு அவன் நகர்ந்தால் போதுமென்று அவர், “நிஜமாக அது இங்கே இருக்கிறது. ஆனால் உன்னால் பார்க்கமுடியாது. உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ” என்றார்.

“அப்படியா சொன்னே? நாளைக்கு ஸாயங்காலத்துக்குள் அதை நான் பிடித்துக்கொண்டு வருகிறேனா, இல்லையா, பாரு! அது மட்டும் முடியாவிட்டால் இந்த உயிரை விட்டுவிடுவேன். இந்தக் காட்டுக்கே பெரிய வேடன் என்று இருந்து கொண்டு உன் மாதிரி ஐயர் கஷ்டம் பார்க்காமல் எங்கள் இடத்துக்கு வந்திருக்கும்போது உதவி பண்ண லாயக்கில்லையென்றால் நான் உசிரை வைத்துக் கொண்டு என்ன ப்ரயோஜனம்?” என்று உசந்த மனஸோடு சொன்னான்.

“ஸரி, உன்னால் முடியாது என்று நான் சொல்லும் போது, முடியும் என்று நீ புறப்பட்டால் நான் என்ன பண்ணுவது? உன் இஷ்டம்!” என்று அவர் சும்மாயிருந்து விட்டார்.

வேடன் நரஸிம்மத்தைத் தேடிக்கொண்டு புறப்பட்டான். அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட அரை மநுஷ – அரை சிங்க ரூபத்தை விடாமல் நினைவில் வைத்துக் கொண்டு காடு பூரா தேடுதேடு என்று தேடினான். ஆஹார நினைவே இல்லாமல், களைப்பு பார்க்கமால் ஒரே குறியாய்த் தேடினான். அன்றைக்கு முழுதும் போய் விட்டது. மிருகம் அகப்படவில்லை. அவனும் விடவில்லை. மறுநாளும் தேடினான். ஸாயங்கால வேளையும் வந்துவிட்டது.

‘ஸரி, ஐயரிடம் சொன்னதை நம்மால் செய்யமுடியவில்லை. அவர் பொய் சொல்லியிருக்கமாட்டார். நாம்தான் கையாலாகாதவனாகி விட்டோம். உயிரை விட்டுவிட வேண்டியதுதான்’ என்று தீர்மானம் பண்ணினான்.

அங்கே படர்ந்திருந்த கொடிகளை அறுத்தான்! தூக்குப் போட்டுக்கொள்வதற்காகக் கிளையில் கட்டினான்.

அந்த ஸமயத்தில் எதிரே ஒரு மிருகம் நின்றது.

நரஸிம்ஹ மூர்த்திதான் வந்துவிட்டார்! எத்தனை ஏகாக்ரமாக (ஒருமுனைப்பாட்டோடு) அவன் தன்னையே இரண்டு நாளாக ஸ்மரித்திருக்கிறான், ஸத்ய வாக்ய பரிபாலனத்திற்காக எப்படி ப்ராண த்யாகமும் பண்ணத் துணிந்துவிட்டான் என்பதில் ஸந்தோஷித்தே நரஸிம்ஹ ஸ்வாமி தர்சனம் கொடுத்தார்.

ஐயர் சொன்ன வர்ணனைப்படியே மிருகம் இருந்ததைப் பார்த்து அவனுக்கு ஒரே ஸந்தோஷமாயிற்று. “பாழும் மிருகமே! நீ அகப்படுவதற்கு இத்தனை பாடா படுத்தினாய்?” என்று சொல்லி, தூக்காகப் போட்ட கொடியை அவிழ்த்து அதனால் நரஸிம்ஹத்தைக் கட்டினான். ஸ்வாமியும் அவனுக்குக் கட்டுப்பட்டு நின்றார். “கட்டுப்பட்டு” என்றால் இரண்டு அர்த்தத்திலேயும்!

கரகரவென்று நரஸிம்மத்தை இழுத்துக்கொண்டு அவன் சோழ தேச ப்ராமணரிடம் வந்தான். “ஓய், பாரும்! இதுதானே நீர் சொன்ன மிருகம்? என்று கேட்டான்.

இவன் காட்டினானே தவிர, அவரால் பார்க்கமுடியவில்லை! அதாவது நரஸிம்ஹ ஸ்வாமி அவருக்குக் காட்சி கொடுக்கவில்லை!

அவனானால், “இந்தா, புடிச்சிக்கோ, உனக்காத்தான் கொண்டுவந்தேன். ஓட்டிக்கொண்டு சுகமாக ஊருக்குப் போ” என்றான்.

அவன் பொய் சொல்கிறானா, இல்லாவிட்டால் அவனுக்கு ப்ரமையா என்று அவர் நினைத்தார். அப்போது அவருக்குக் கேட்கும்படியாக ஸ்வாமி — சிங்கப்பிரான் — கர்ஜனை பண்ணினார்.

அவருக்கு துக்கம் துக்கமாக வந்தது. “ஹீனனான வேடனுக்குத் தெரிகிறாய், எனக்குத் தெரியமாட்டேன் என்கிறாயே!” என்று ஸ்வாமியிடம் நொந்து கொண்டார்.

அப்போது அசரீரி வாக்கு உண்டாயிற்று. “கோடி வருஷம் ஸ்வரூப த்யானம் பண்ணினாலே ஏற்படக்கூடிய சித்த ஐகாக்ரியம் (ஒருமுனைப்பாடு) இவனுக்கு ஒரே நாளில் உண்டாயிற்று. பசி, நித்ரை இல்லாமல், எங்கே சுற்றினாலும் ஒரே த்யானமாக, இப்படி ப்ராணனைப் பந்தயம் வைத்து ஸாதனை பண்ணினவராக எந்த ரிஷியிம் இல்லை. இந்த மஹா பக்தனின் ஸங்கம் உனக்கு ஏற்பட்டதால்தான், தர்சனம் கிடைக்கவிட்டாலும் கர்ஜனையும் இப்போது இந்த வாக்கும் கேட்கிற பாக்யமாவது கிடைத்தது. இதனாலேயே மந்த்ர ஸித்தியும் பெற்றுவிட்டாய். உனக்கு அவச்யமான காலத்தில் வந்து, ஆகவேண்டியதை அநுக்ரஹிப்பேன்” என்று பகவானின் வாக்கு சொல்லிற்று.

மூன்று மார்க்கங்களையும் ஸ்தாபித்தவர்

ஞானப் புஸ்தகங்களிலேயே கர்மாநுஷ்டானத்தில்தான் ஆரம்பித்து சாஸ்த்ரோக்தமாக வர்ணாச்ரம தர்மங்களின்படி எல்லாம் பண்ணிக்கொண்டு போகவேண்டும் என்று நிறையச் சொல்லியிருக்கிறார்.

தற்காலத்தில் ஸமத்வம் என்று சொல்லி வெறும் லௌகிக விஷயங்களை மட்டும் கவனித்து நாம் reform (சீர்திருத்தம்) என்று சொல்லி deform செய்வதுபோல (உருக்குலைப்பதுபோல) ஆசார்யாள் பண்ணவே இல்லை. இப்போது நாம் கார்யத்திலேயே எல்லாம் ஒன்று என்று ஆரம்பித்திருக்கிறோம். ஆனால் நம் மனஸிலே ஒற்றுமை பாவம், எல்லாம் ஒன்று என்று லவலேசமாவது இருக்கிறதா? இருந்தால் இத்தனை போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவு இருக்குமா? சாஸ்த்ரங்கள் என்ன சொல்கின்றன? அவற்றையே அநுஸரித்துப்போன ஆசார்யாள் என்ன சொன்னார்? “ஸம்ஸ்கார வித்யாஸத்தினால் ஸ்ருஷ்டியில் குண கர்மாக்கள் வித்யாஸமாகத்தான் இருக்கும். அந்த வித்யாஸத்தை ஸமம் பண்ண ஆரம்பித்தால் ஜ்வரக்காரனுக்கு விருந்துச் சாப்பாடு போடுகிற மாதிரியும், ஆரோக்யசாலிக்கு மருந்து கொடுக்கிற மாதிரியுந்தான் ஆகும். அதனால் எப்படி வித்யாஸப்படுத்தி அவரவரையும், மொத்தத்தில் ஸகலரையும் முன்னேற்ற வேண்டுமோ அப்படித்தான் கார்யங்களையும் அநுஷ்டானங்களையும் பிரித்துக் கொடுக்க வேண்டும். மனஸிலே ‘எல்லாம் ஒரே சைதன்யம்’ என்ற அத்வைத பாவமும் அதனால் ஏற்படும் ஏற்றத் தாழ்வில்லாத ப்ரேமையும் இருக்கவேண்டுமே தவிரக் ‘கார்யத்தில் ஒண்ணு’ என்று பண்ணக்கூடாது. ‘ பாவாத்வைதம் ஸதா குர்யாத் ; க்ரியாத்வைதம் ந கர்ஹிசித் — எப்போதும் மனோபாவத்தில் அத்வைதத்தை வளர்த்துக்கொள்; ஆனால் கார்யத்தில் ஒருபோதும் அத்வைதத்தைக்கொண்டு வராதே!’ கார்யமில்லாத நிலைக்குத்தான் அத்வைதம் என்றே பேர்’ என்பது தான் சாஸ்த்ரத்தைத் அநுஸரித்து ஆசார்யாள் செய்த உபதேசம். இப்போது நேர்மாறு! ‘பாவாத்வைதம்’ இல்லை, ‘க்ரியாத்வைத’த்துக்கே முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறோம்! க்ரியா லோகத்தில் வேத வழிப்படியான அநுஷ்டானந்தான் இருக்க வேண்டுமென்று ஆசார்யாள் வழிபோட்டுக் கொடுத்தார். அதாவது பழைய வழியை மறுபடிச் செப்பனிட்டுக் கொடுத்தார்.

இப்படி (ஞானம், பக்தி, கர்மா என்ற) மூன்று மார்க்கங்களையும் வைதிகமாக நிலைப்படுத்தியிருக்கிறார்.

பக்தி ஸ்தோத்ரமானாலும் ஞானத்தில், அத்வைதத்தில் கொஞ்சமாவது கொண்டு நிறுத்துவதாகவே இருக்கும். தெய்வங்களுக்குள் பேதமே இல்லாமல் சொல்வது, தெய்வம் என்றும் மநுஷ்யன் என்றுங்கூட பேதமில்லை என்று காட்டுவது — இப்படி இரண்டு விதமாக இருக்கும்.

அத்தனை தெய்வத்தையும் ஸ்துதித்துப் பாடினார். ஒவ்வொரு தெய்வத்தைச் சொல்லும் போதும் ‘இதுவே பரப்ரஹ்மம், பரதெய்வம், இதற்குமேல் ஒன்று எனக்குத் தெரியவில்லை’ — “ந ஜானே ந ஜானே” — என்றே சொல்வார். லக்ஷ்மியை அவளே ஸரஸ்வதி, பார்வதி என்று கொண்டாடிய மாதிரியே மற்ற தெய்வங்களையும் சொல்லியிருப்பார்.

பக்தி எப்படி த்வைதம் மாதிரி இருந்தாலும் அத்வைதமாக முடிகிறது என்று அநேக இடங்களில் காட்டியிருக்கிறார். ‘சிவாநந்தலஹரி’யில் பக்தி லக்ஷணத்தைப் பல விதமாகச் சொல்லி “ஸிந்து: ஸரித் வல்லபம்” — ஸமுத்ரத்தில் நதி கலந்து ஸமுத்ரமே ஆகிவிடுகிறாற்போல — என்று முடித்திருக்கிறார்1. ‘ஸெளந்தர்யலஹரி’யில் வேடிக்கையாகச் சொல்வார் : “பவாநி த்வம்” — “பவாநி, நீ (என்னைக் கடாக்ஷிப்பாயாக!) ” என்று பக்தன் ஆரம்பிக்கும் போதே, “பாவநி த்வம்” என்ற அந்த வார்த்தைகளுக்கு “நான் நீ ஆவேன்” என்றும் அர்த்தம் பண்ணலாமாதலால் அம்பாள் அப்படி அர்த்தம் பண்ணிக்கொண்டு பக்தனுக்கு அத்வைத ஸாயுஜ்யத்தைக் கொடுத்து விடுகிறாள் என்கிறார்2.

நிர்குண ப்ரஹ்மமேதான் ஸகுண மூர்த்தியாக வந்திருப்பது என்று தம்முடைய ஸ்தோத்ரங்களில் ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பார். “கோவிந்தாஷ்டகம்” என்று க்ருஷ்ணர் அடித்த கூத்தையெல்லாம் சின்ன ஸ்தோத்ரமாகக் கொடுத்திருக்கிறார். அதில் எல்லாக் கூத்தும் அடங்கிப்போன அத்வைத வஸ்துதான் இப்படி வந்தது என்றும் சேர்த்துச் சேர்த்துச் சொல்லிக்கொண்டு போயிருக்கிறார். ஆரம்பமே “ஸத்யம் ஞானம் அநந்தம் நித்யம்” என்று போட்டிருக்கிறார்!

ஆசார்யாள் ‘விஷ்ணு ஸஹஸ்ர நாம’த்திற்கு பாஷ்யம் செய்திருப்பதே ஸகுண – நிர்குணங்களையும் பக்தி – ஞானங்களையும் ஒன்றுபடுத்திக் காட்டுவதற்குத்தான் என்று சொல்லலாம்.

அத்வைதத்தையும் பக்தியையும் இணைத்து கொடுத்திருப்பதற்கு நீங்கள் அவ்வளவாகக் கேள்விப்பட்டிராத ஒரு ஸ்தோத்ரத்தில் த்ருஷ்டாந்தம் காட்டுகிறேன். “லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ பஞ்ச ரத்னம்” என்று அதற்குப் பெயர். ஆசார்யாள் நரஸிம்மர் விஷயமாகப் பண்ணியுள்ள “கராவலம்ப ஸ்தோத்ர”த்தின் அளவுக்கு இது ப்ரஸித்தியாக இல்லை. இதை ஆரம்பிக்கும்போதே ஆசார்யாள் சொல்கிறார்: கண்ணாடி இருக்கிறது. உள்ளே ப்ரதிபிம்பம் தெரிகிறது. பார்த்தால் நன்றாகவே இல்லை. திலகம் வைக்கணும் என்று தோன்றுகிறது. என்ன பண்ணணும்? கண்ணாடிக்கா பொட்டு வைப்பார்கள்? அது அழுக்காவதாகத் தான் ஆகுமே தவிர வேறே என்ன நடக்கும்? பின்னே என்ன பண்ணுவார்கள்? ப்ரதி பிம்பத்துக்கு மூலமான பிம்ப ஆஸாமிக்குத்தான் பொட்டு வைப்பார்கள். அப்படி இந்த ஜீவலோகம் பூராவும் ஏக சைதன்யம் மாயைக் கண்ணாடியில் காட்டுகிற தினுஸு தினுஸான ப்ரதி பிம்பங்கள்தான். நீயும் அப்படித்தான். உனக்கு ஏதாவது நல்லது பண்ணிக்கொள்ள வேண்டுமானால் அது பொட்டு இட்டு அலங்காரம் பண்ணிக் கொள்கிற மாதிரி. நேரே உனக்கே — அதாவது மாயையில் ப்ரதிபலித்து உண்டான உன் தேஹ, இந்த்ரியாதிகளுக்கே — நீ நல்லது என்று ஒன்றைப் பண்ணிக்கொண்டால் அது கண்ணாடியில் கறுப்புப் பூசி அழுக்குப் பண்ணும் கார்யம் தான். ‘மூல பிம்பம் சைதன்யம் என்றால் அதற்கு நான் பண்ணக் கூடியது என்ன இருக்கிறது? முதலில் அது என் மனஸுக்கே வரவில்லையே!’ என்கிறாயா? ஸரி, அதுவேதான் ரூபங்களோடு, குணங்களோடு இந்த லக்ஷ்மி நரஸிம்ஹ மூர்த்தியாகவந்திருக்கிறது. அவனுக்கு பஜனை பண்ணு, பூஜை பண்ணு, ஸதா ஸ்மரணம் பண்ணு! அதுதான் உனக்குப் பண்ணிக்கொள்ளும் அத்தனை நல்லதும் – திலக தாரணம் முதலான அத்தனை அலங்காரமும்’ என்று சொல்லியிருக்கிறார். இத்தனை நீட்டாமல் சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கிறார்.

இதில் எல்லைக் கோடியாகத்தான் ‘தக்ஷிணாமூர்த்தி அஷ்டக’த்தில் கூத்து, லீலை என்பதே இல்லாமல் ஒரே வேதாந்த தத்வங்களாகச் சொல்லி அந்த தத்வ ரூபகமாகவே, “ஸ்ரீகுரு மூர்த்தயே நம இதம் ஸ்ரீதக்ஷிணா மூர்த்தயே” என்று ச்லோகம்தோறும் முடித்திருக்கிறார்.

பக்தி, ஞானம் இரண்டையும் சேர்த்த உபதேசமாக ‘பஜ கோவிந்தம்’ என்று தேசம் பூரா பஜனை பண்ணிக்கொண்டு போயிருக்கிறார்.

ஜனங்கள் நல்லதை நல்லபடி எடுத்துச் சொன்னால் உடனே அந்த வழியை ஏற்றுக்கொண்டு விடுவார்கள். இப்படி அந்தக் காலத்தில் ஆசார்யாள் கர்ம – பக்தி – ஞானம் என்று வேத சாஸ்த்ர வழியை மறுபடி நன்றாக ரிப்பேர் பண்ணி நடுவிலே புறப்பட்ட மதாந்தரங்களான சந்து, பொந்து முள்ளு வழி எல்லாவற்றையும் விட்டுவிட்டு இதில் போக ஆரம்பித்தார்கள்.

ஆரம்பத்தில் ஆசார்யாள் ஸஞ்சாரம் பண்ணவில்லை. இந்த தேசத்தில் எத்தனை பாஷைக்காரர்கள், மதக்காரர்கள் ஜாதிக்காரர்கள் உண்டோ அத்தனை பேரும் கூடுகிற காசியில் இருந்துகொண்டே நானாதிசை சிஷ்யர்களின் மூலமும் ஒளபநிஷதமான (வேதாந்த) மதஸ்தாபனத்தைச் செய்ய ஆரம்பித்து விட்டார்.


1 61-வது ச்லோகம்

2 22-வது ச்லோகம். தேவியின் நாமமான பவானி என்பதையே வினைசொல்லாகக் கொண்டால் “நான் ஆவேன்” என்று பொருளாகும்.