மாருதி மஹிமை

‘குரங்கு புத்தி’ என்றே சொல்வது வழக்கம். எது ஒன்றிலும் சித்தம் க்ஷணகாலங்கூட நிற்காமல் ஸதா ஸர்வதா ஒன்று மாற்றியொன்றாகப் பாய்ந்துகொண்டே இருப்பதற்குப் பேர் போனது குரங்கு. துளிக்கூட கட்டுப்பாடே இல்லாமலிருப்பதற்கு உதாரணம் அதுதான். இதனால்தான் மநுஷ்யர்களான நம் சித்தமும் எதிலும் கட்டுப்பட்டு நிற்காமல் சாஞ்சல்ய மயமாக இருக்கிறபோது ‘குரங்கு புத்தி’ என்கிறோம்.

ஹ்ருதய – கபிம் அத்யந்த சபலம்

என்று ஆசார்யாளே சொல்கிறார்1. “பரமேச்வரா! ரொம்ப ரொம்பச் சபலமான இந்த என்னுடைய மனக்குரங்கை பக்திக்கயிற்றாலே கட்டி உன் கையிலே பிடித்துக் கொண்டு குரங்காட்டி வித்தை பண்ணிப் பிழைத்துப் போ! வெறுமனே கபாலத்தை வைத்துக்கொண்டு பிச்சை கேட்பதைவிட இப்படி ஒரு வித்தை, கித்தை செய்து காட்டினாயானால், உனக்கும் நல்ல வரும்படி வருகிற பிழைப்புக் கிடைக்கும், நானும் பிழைத்துப்போவேன்” என்று பரமச்வரனிடம் அவர் வேடிக்கையாக ப்ரார்த்திக்கும்போது, ‘ஹ்ருதய கபி’ அதாவது ‘மனக்குரங்கு’, என்ற வார்த்தையை போட்டிருக்கிறார்.

வெள்ளைக்காரர்களும் ‘monkey mind’ என்கிறார்கள்.

கட்டுப்பாடேயில்லாமல் ஸதா ஸர்வகாலமும் சரீரத்தாலோ, மனஸாலோ, அல்லது இரண்டினாலுமோ அலையாக அலைந்து கொண்டேயிருப்பதற்குக் குரங்குதான் ரூபகம்.

ஒரு பசு இருக்கிறது, யானை இருக்கிறது – இவை மாம்ஸம் சாப்பிடுவதேயில்லை, சாக உணவுதான் தின்கின்றன என்றால் அதிலே ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ‘பசித்தாலும் புல் தின்னாது’ என்கிற ஒரு புலி சாக பக்ஷிணியாக மாறினால் அதுதான் ஆச்சரியம்!

ஆஞ்சநேய ஸ்வாமியின் ஆச்சரியமான பெருமை இதில்தான் இருக்கிறது. சாஞ்சல்யத்துக்கே (சஞ்சலத்தன்மைக்கே) பேர்போன கபியாக அவர் இருந்தபோதிலும், அதோடு மஹா பலிஷ்டராக இருந்தபோதிலும், மனஸைக் கொஞ்சங்கூடச் சஞ்சலம், சபலம் என்பதேயில்லாமல் அடக்கி, புலன்களையெல்லாம் அடக்கி, இந்த்ரிய நிக்ரஹம் பண்ணி, சரீரத்தையும் ராமசந்த்ரமூர்த்தியின் தொண்டுக்கே என்று அடக்கி அடிபணிந்து அவர் இருந்ததுதான் அவருடைய மஹிமை.

இதிலே இன்னொரு ஆச்சரியம், அவர் மனஸை அடக்கினார், பூர்ணமாக இந்த்ரியக் கட்டுப்பாட்டோடே இருந்தாரென்றால், எல்லாக் கார்யத்தையும் விட்டுவிட்டு எங்கேயோ குஹையிலே மூக்கைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விடவில்லை. ஜன ஸமூஹ ஸம்பந்தமில்லாமல், கார்ய ப்ரபஞ்சத்தில் பட்டுக்கொள்ளாமல் எங்கேயோ ஒதுங்கி மூக்கைப் பிடித்துக்கொண்டு உட்காருபவர்கள் இந்த்ரியம், சித்தம் ஆகியவற்றை ஓடாமல் அடக்கிப்போட்டு விடலாம். ஆஞ்சநேயர் அப்படி இல்லை. ‘அஸாத்ய ஸாகதர்’ என்கிற அளவுக்குக் கார்ய ப்ரபஞ்சத்திலே செய்திருக்கிறார். ஸமுத்ரத்தையே தாண்டுவது, ஒருமலையையே2 தூக்கிக் கொண்டு வருவது, ஒரு பெரிய வனத்தை3 அப்படியே நிர்மூலம் பண்ணுவது, ஒரு பெரிய பட்டணத்தையே4 தஹனம் பண்ணுவது – என்றிப்படிச் செய்தவர் அவர்.

மனஸ் கொஞ்சங்கூடச் சலிக்காதவர், ஸ்ரீ ராமனின் பாதாரவிந்தத்தை விட்டு இந்தண்டை, அந்தண்டை துளிக்கூட ஆடாமல் ஓடாமல் மனஸை நிறுத்தியிருந்தவர். ஆனால் உடம்பால் அவரைப்போல ஓடி ஆடித் தொண்டு செய்த இன்னொருத்தர் இல்லை. ராம த்யானத்திலே அசையாத மனஸு; ராம கார்யத்திலே ‘இதைவிட வேகமில்லை’ என்னும்படியாக ஓடியாடுகிற உடம்பு!

ரொம்ப வேகமாக ஓடுவது எது?

‘வாயுவேகம், மனோவேகம்’ என்பார்கள்.

காற்றுதான் ஸ்தூலத்திலே பஹுவேகமாகச் செல்வது, ஸூக்ஷ்மத்திலே மனஸின் ஓட்டத்துக்கு மிஞ்சி எதுவுமில்லை.

“காற்று மாதிரி இந்த மனஸு கிடந்து பறக்கிறதே! காற்றைப் பிடித்து வைத்து அடக்க முடியாத மாதிரியே அல்லவா இந்த மனஸையும் கட்டுப்படுத்தி வைக்க முடியுவில்லை?” என்று அர்ஜுனன் முறையிடுகிறான்:

சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண… வாயோரிவ ஸுதுஷ்கரம் (கீதை 6-34)

பகவானும் ஆடாமல் அசையாமல் நிறுத்தப்பட்ட யோகியின் மனஸைக் கொஞ்சங்கூடக் காற்றேயில்லாத இடத்தில் ‘ஸ்டெடி’யாக ஜ்வலிக்கிற தீபத்தோடு உவமித்துத்தான் சொல்லியிருக்கிறார்:

யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா… (கீதை 6-19)

‘நிவாதம்’ என்றால் ‘காற்று இல்லாமல்’ என்று அர்த்தம். வாதம் என்றால் காற்று. வாதம், வாயு இரண்டும் ஒன்றுதான். ‘வாயுப் பிடிப்பு’ என்றும் ‘வாத ரோகம்’ என்றும் ஒன்றையேதானே சொல்கிறோம்?

ஆஞ்சநேய ஸ்வாமி யார்?

சஞ்சலத்துக்கே பேர்போன கபி இனத்தில் பிறந்த அவர் ஸதாகாலமும் சஞ்சலித்துக்கொண்டேயிருக்கும் வாயுவுக்குப் புத்ரர்! வாயுகுமாரர். ‘வாதாத்மஜர்’ என்றும் சொல்வார்கள். ‘வாத’ என்றாலும் வாயுதானே? ‘ஆத்மஜன்’ என்றால் புத்ரன். வாத – ஆத்மஜன் என்றால் வாயு புத்ரன்.

வாதாத்மஜம் வாநர – யூத – முக்யம்
ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி

‘யூதம்’ என்றால் கூட்டம்; ஸேனை. வானரப்படையில் முக்யஸ்தர் இவரே ஆனடிபயால் ‘வாநர – யூத முக்யர்’.

இது ச்லோகத்தின் பின் பாதி. முன் பாதி என்ன? அதிலே என்ன சொல்லியிருக்கிறது?

வாயுவேகம், மனோவேகம் என்று இரண்டு சொன்னேனே, அந்த இரண்டு வேகமும் படைத்தவர் இவர் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் மனஸ், இந்த்ரியங்கள் ஆகியவற்றின் சலனத்தில் அல்ல. சரீரத்தாலே செய்கிற கார்யத்தில் தான் வாயுவேக, மனோவேகக்காரராக இருக்கிறவர்.

மநோ – ஜவம் மாருத – துல்ய – வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்

“மநோ – ஜவம்’ – மனஸைப் போன்ற வேகம் கொண்டவர். ‘ஜவம்’ என்றால் வேகம்.

“மாருத – துல்ய வேகம்” – காற்றுக்கு ஸமமான வேகமுடையவர். ‘மாருதம்’ என்றாலும் காற்றுதான். ‘மந்த மாருதம்’ என்கிறோமல்லவா? மாருதத்தின் புத்ரர் என்பதால்தான் அவருக்கு ‘மாருதி’ என்று பெயர். ‘வீர மாருதி கம்பீர மாருதி’ என்று (பஜனையில்) பாடுவார்கள்.

ஓயாமல் சலிக்கிற மனஸைப் போல ‘மநோஜவர்’; அப்படியே, ஓயாமல் சலித்துக்கொண்டிருக்கிற வாயுவைப் போல ‘மாருத – துல்ய – வேகர்’; அவரே வாயுவின் பிள்ளைதான் – ‘வாதாத்மஜர்’; சஞ்சல ஸ்வபாவத்துக்கே பேர் போன கபிகுல முக்யஸ்தராக இருப்பவர் வேறே – ‘வாநர – யூத – முக்யர்!’

இப்படியெல்லாம் இருக்கிறவருடைய ஆச்சரியமான மஹிமை என்ன என்றால், இவரையே ச்லோகம்,

ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்

என்று ஸ்தோத்ரிக்கும்படியாகவும் இருக்கிறார்!

புலன்களை வென்றவர் இவர்: “ஜிதேந்த்ரியர்” – ஜித இந்த்ரியர்: ஜயிக்கப்பட்ட இந்த்ரியத்தை உடையவர். மனஸ்தான் அத்தனை இந்த்ரிய கார்யத்துக்கும் மூலம். ஆகையால் அதை ஜயிப்பவர்தான் ஜிதேந்த்ரியர். மஹா சஞ்சலம் வாய்ந்த மனஸை ஜயித்த ஜிதேந்த்ரியர் இவர்.

அதனாலேதான் புத்திமான்களுக்கெல்லாம் உச்சியிலுள்ள ‘புத்திமதாம் வரிஷ்ட’ராகியிருக்கிறார். மனஸை நல்லதிலேயே ‘ஸ்டெடி’யாக நிறுத்தி வைப்பதுதான் புத்தி. ஆகையினாலே ஜிதேந்த்ரியாக மனோ நிக்ரஹம் செய்துள்ள ஆஞ்சநேய ஸ்வாமி “புத்திமதாம் வரிஷ்ட”ராயிருக்கிறார்.

‘புத்திமான்’ என்று சொன்னாலே உசத்திதான். அதை விட உசத்தி ‘புத்திமதாம் வர’ என்று சொல்லியிருந்தால். அப்படிச் சொல்லியிருந்தால் ‘புத்திமான்களில் சிறந்தவர்’ என்று அர்த்தம் கொடுக்கும். அதையும்விட உசத்தி, ‘புத்தி மதாம் வரீய’ என்று சொல்லியிருந்தால். சிறப்புப் பொருந்தியவர்களிலேயே ஒருத்தரை மற்றவேராடு ஒப்பிட்டு, ‘கம்பேரடிவ்’ – ஆக அவர் மற்றவரைவிட உயர்வு பொருந்தியவராக இருக்கும்போது ‘வரீய’ என்பார்கள். ஆனால், ஆஞ்சநேயரை இப்படிச் சொன்னால்கூடப் போதாது! இதையும் விட உசத்தியாக, “இதற்கு மேலே உசத்தியில்லை, இவரோடுகூட ‘கம்பேரிஸ’னுக்கும் இடமில்லை, இவர்தான் புத்திக்கு ‘ஸூபர்லேடிவ்’, புத்திமான்கள் அத்தனை பேருக்கும் உச்சத்தில் இவரைத் தான் வைக்கணும்” என்றே (ச்லோகத்தில்) “புத்திமாதம் வரிஷ்ட” என்று சொல்லியிருக்கிறது. “வரிஷ்ட” தான் சிறப்பின் உச்சஸ்தானம். அதற்கு மேலேயும் இல்லை, ஸமதையும் இல்லை, அதற்கு அடுத்தபடியாக ‘கம்பேர்’ பண்ணக்கூட இன்னொன்று இல்லை.

ஞானிகளில்கூட இப்படி ப்ரஹ்மவித், ப்ரஹ்மவித்வரன், ப்ரஹ்மவித்வரீயன், ப்ரஹ்மவித்வரிஷ்டன்’ என்று உயர்த்திக் கொண்டே போவதுண்டு. மாருதி புத்திமதாம் வரிஷ்டர்.

ஆனால் இந்த இந்த்ரிய ஜயம், புத்திச் சிறப்பு எல்லாவற்றையும் விடப் பெரிய அவருடைய பெருமை என்னவென்றால் அவர் ராமதாஸனாக இருந்து, “பகவானுக்கு இவரைப் போலப் பணி புரிந்தவரில்லை” என்று அக்ர ஸ்தானம் (முதலிடம்) பெற்றிருக்கிறாரே, அதுதான். புத்திமான்களைப் போலவே பக்திமான்களுக்கு வரிஷ்டராயிருக்கிறாரே, அதுதான், தேஹ சக்தியோடு, புத்தி நுட்பத்தையும் ரொம்பவும் காட்டிச் செய்ய வேண்டிய பணி தூது போவது. அந்த தூதுப் பணியை ரொம்பவும் சிறப்பாகச் செய்து, ஸாக்ஷாத் ஸீதா – ராமர்களுக்கே துக்கத்தைப் போக்கிப் பெரிய நம்பிக்கையையும் உத்ஸாஹத்தையும் ஊட்டினாரே, அதற்காகத்தான் முக்யமாக அவரைத் தலை வணங்கிப் பணியவேண்டும். “ஸ்ரீ ராமதூதம் சிரஸா நமாமி” என்று பாதத்தில் விழுந்து நமஸ்காரம் பண்ணவேண்டும்.

மநோஜவம் மாருத – துல்ய – வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
வாதாத்மஜம் வாநர – யூத – முக்யம்
ஸ்ரீ ராமதூதம் சிரஸா நமாமி ||

மங்களம்


1சிவானந்த லஹரி-20

2மலை – ஸஞ்சீவி பர்வதம்.

3வனம் – அசோகவனம்

4பட்டணம் – லங்காபுரி.

விகாரமும் ஏற்றம் பெறுகிறது!

புஷ்ப தந்தர் “சிவ மஹிம்ந ஸ்தோத்ர”த்திலே ஒரு இடத்தில்*, “விகாரோ அபி ச்லாக்ய:” – “விகாரமானதுங்கூட ச்லாகிக்கக் கூடியதாகிறது” என்று சொல்கிறார். விஷத்தைப் பரமேச்வரன் பானம் பண்ணி, அது அவருடைய வெள்ளைவெளேரென்ற சங்குக் கழுத்தில் நீலமணி மாதிரி ப்ரகாசிப்பதைப் பார்த்து, “விகாரமானதுகூட ச்லாகிக்கக் கூடியதாகிறது” என்கிறார். அப்படித்தான் இந்தப் பெரியவர்களுக்கு உண்டான அஹங்காரங்கூட முடிவில் அவர்களுடைய உட்சிறப்பை வெளிப்படுத்தி, மெச்சுதலுக்கு உரியதாகிறது. “விகாரோபி ச்லாக்ய:”


* ச்லோகம் 14

நீலகண்டரும் மஹாதேவரும்*

நீலகண்ட தீக்ஷிதர் பல விதத்தில் பெரியவர். குடிப்பெருமையை எடுத்துக்கொண்டால் பரமேச்ரவனின் அம்ச பூதரான அப்பைய தீக்ஷிதரின் தம்பிக்குப் பேரர். படிப்பு, அநுஷ்டானம் எல்லவாற்றிலும் சிறந்தவர். மஹாவித்வான். நல்ல பக்தர். பதவியிலும் பெரியவர். மஹால், மஹால் என்று மதுரையிலே சொல்கிற மஹாலையும், மீநாக்ஷி கோயில் புது மண்டபத்தையும் கட்டிய திருமலை நாயகருக்கு மந்த்ரியாக, அவருக்கு வலது கை மாதிரி விளங்கியவர். குணஸம்பத்தும் நிரம்பப் பெற்றவர். இப்படிப்பட்டவரும் ஒரு ஸமயம் தன் ஸ்தானம், யோக்யதை, குலம் முதலியவற்றினாலே உயர்வு மனப்பான்மை அடைந்து விட்டதாக இருக்கிறது.

தீக்ஷிதரின் காலத்தில் — அதாவது 16-ம் நூற்றாண்டின் பின்பாதி, 17-ம் நூற்றாண்டின் முன் பாதியில் — தஞ்சாவூர் ஜில்லா பழமார்நேரி க்ராமத்தில் மஹாதேவ சாஸ்த்ரி என்ற மஹா பண்டிதர் இருந்தார். பாண்டித்யம் குறைவில்லாமலிருந்தும் தீக்ஷிதரைப் போல இவருக்கு எல்லா ஜனங்களிடையேயும் ப்ரக்யாதி இல்லை. பண்டிதருலகுக்கு இவருடைய பெருமை தெரியும்.

பழமார்நேரிக்குப் பக்கத்தில் ஐராவதேச்வரர் கோயில் இருக்கிறது. அங்கே அலங்காரேச்வரி என்று அம்பாள் இருக்கிறாள். அந்த அம்பாளைத்தான் மஹாதேவ சாஸ்த்ரி நல்ல பக்தியோடு வழிபட்டுக் கொண்டிருந்தார். ப்ரார்த்தனை அப்யாஸத்தில் அவர் நன்றாக ஊறிப் போய் நாளாவட்டத்தில் அவருக்கு அலங்காரேச்வரியின் உத்தரவுகள் கிடைக்க ஆரம்பித்தன.

புத்ர ஸந்ததி இல்லை என்ற குறை அவருக்கு இருந்தது. இதற்காக ப்ரார்த்தித்த போது மதுரைக்குப் போய் அங்கே பராசக்தியின் பரிபூர்ண சைதன்ய விலாஸத்தோடு விளங்கும் மீநாக்ஷியம்மனை ஆராதனை செய்யும்படி அவருக்கு உத்தரவாயிற்று.

அப்படியே மதுரைக்குப் போனார். மீநாம்பிகையைப் பார்த்ததும் அவளிடம் ஆழ ஈடுபட்டு ஆராதித்துவர ஆரம்பித்துவிட்டார்.

தீக்ஷிதர் ஏற்கெனவே அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். இப்போது அவர் மதுரை வந்திருப்பது தெரிந்தது. அவரை ஸந்திப்பதற்கு ஆசைப்பட்டார். ஆனாலும்…

மஹாபெரியவர்களானாலும் பதவி, ஸ்தானம் என்பவை எவரையும் எப்போதேனுமாவது கொஞ்சம் “அசக்கி” விடும். ஆனதால் தீக்ஷிதருக்கு, மந்த்ரி பதவியிலிருந்த தாம் தம்முடைய அந்தஸ்துக்குக் குறைவில்லாமலே சாஸ்த்ரிகளைப் பார்க்கணுமென்ற எண்ணம் ஏற்பட்டது. மஹாதேவ சாஸ்த்ரிகளே பேட்டிக்குக் கேட்டு அனுப்புவாரா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் சாஸ்திரிகளுக்கா, மீநாக்ஷியை தர்சனம் பண்ணினதிலிருந்து அவளுடைய ஆராதனையைத் தவிர எந்தச் சிந்தனையுமில்லை. ‘அவாளைப் பார்ப்போமா, இவளைப் பார்ப்போமா?’ என்ற ஆசை கொஞ்சமுமில்லை.

எல்லாம் அறிந்த அம்பாளே — அவள் ஸகல வித்யா ஸ்வரூபிணியானதால் — இந்த இரண்டு மஹாவித்வத்-குழந்தைகளும் ஸந்திப்பதற்கு ஸங்கல்பம் பண்ணினாள். இதனால், வித்வத்தோடு விநயமும் இருந்தாலே ஒருவருக்கு அழகு என்று தீக்ஷிதரும், அவர் மூலமாக லோகமும் தெரிந்துகொள்ளப் பண்ணணுமென்று நினைத்து, ஸம்பவங்களை உருவாக்கினாள்.

ஒருநாள் வீதியிலே தீக்ஷிதர் மந்த்ரி ஜபர்தஸ்துக்குரிய மரியாதைகளோடு பல்லக்கில் போய்க்கொண்டிருந்தார்.

மஹாதேவ சாஸ்த்ரிகள் பாட்டுக்கு அதே ஸமயத்தில் அம்பாளை தர்சனம் பண்ணிவிட்டு, அவளுடைய சரணார விந்தத்தை த்யானம் செய்தபடி அந்த வழியாகத் தம்முடைய ஜாகைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். பல்லக்கை அவர் கவனிக்கவில்லை.

வீதியிலே அத்தனைபேரும் மந்த்ரியை மரியாதை பண்ணிக்கொண்டிருக்கும்போது, அசட்டுப் பிச்சு மாதிரி இப்படி ஒரு ப்ராமணன் அலட்சியமாக குறுக்கே போவதைப் பார்த்தார் தீக்ஷிதர். ‘அசட்டுப் பிச்சு மாதிரி இருந்துகொண்டு இத்தனை அஹங்காரம் வேறேயா?’ என்று தப்பாக நினைத்துவிட்டார்.

அதனால் அதட்டலாக, தம்முடைய பரிவார ஜனங்களைப் பார்த்து, “தொங்கல் காதோடு குறுக்கே வரும் இந்தப் பேர்வழி யார்? இவருக்கு ‘அர்த்த சந்த்ர’ உபசாரம் பண்ணி அனுப்பி வையுங்கள்” என்றார்.

மஹா பாண்டித்யமும், ரஸஞானமுமுள்ளவரானதால் கோபத்தில் உத்தரவு போடும் போதுகூடச் சமத்கார பாஷையில் “அர்த்த சந்த்ர உபசாரம்” என்று சொன்னார். “கல்தா” கொடுப்பதுதான் அர்த்த சந்த்ர உபசாரம் என்பது! கல்தா கொடுக்கிறபோது கையை அர்த்த சந்த்ரனைப் போல அரைவட்டமாக வைத்துக் கொண்டுதானே ஒருத்தர் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவது? அதனால் இப்படிப் பெயர்!

ஆயாந்த-மத்வந்-யதி-தீர்க-கர்ணம் புதம் மஹாதேவ ஸுநாமதேயம் |
விலோக்ய மந்த்ரீ மகி ஸார்வ பௌம: ஸ்ரீநீலகண்ட: சிபிகாதிரூட: ||
நிஷ்காஸயைநம் த்வதி-தீர்க-கர்ணம் க்ருத்வார்த-சந்த்ரம் த்ருதமித்யுவாச |
சாஸ்த்ரீ ததாகர்ண்ய ஜரித்-யுவாச தம் தீக்ஷிதம் ஞாந லாவட்ய மூடம் ||

அத்வநி – வழியில்; அதி தீர்க கர்ணம் – தீர்க்கமான தொங்கல் காதுடன்; ஆயாந்தம் – வருகிற; புதம் – அறிவாளியான; மஹாதேவ ஸுநாமதேயம் – மஹாதேவ சாஸ்திரி என்ற நல்ல பெயருள்ளவரை; மகி ஸார்வபௌம: – தீக்ஷிதேந்த்ரரும்; மந்த்ரீ – மந்த்ரியும்; சிபிகாதிரூட – சிவிகையில் வீற்றிருந்தவருமான; ஸ்ரீநீலகண்ட, ஸ்ரீநீலகண்ட தீக்ஷிதர், விலோக்ய – பார்த்து; அதி தீர்க கர்ணம் – தொங்கல் காதுக்காரரான; ஏதம் – இவரை; த்ருதம் – உடனே; க்ருத்வா அர்த சந்த்ரம் – ‘அர்த்த சந்த்ர மரியாதை’ செய்து; நிஷ்காஸய – விரட்டுங்கள்; இத்யுவாச – என்று சொன்னார்.

ச்லோகத்தில் முதல் மூன்று வரியில் வரும் இந்தக் கதையைத்தான் இதுவரை சொன்னேன்.

நாலாம் வரியில் என்ன சொல்லியிருக்கிறதென்றால், இப்படி தீக்ஷிதர் சொன்னதைக் கேட்டதும் சாஸ்த்ரிகளும் உடனே பளிச்சென்று பதில் கொடுத்தார். “மகி ஸார்வ பௌமர்”, “மந்த்ரி” என்று பெயர் பெற்றிருந்த தீக்ஷிதர் லவலேச ஞானத்தினாலே ஊதிப்போயிருந்த கற்றறி மூடர்தான் என்று மஹாதேவ சாஸ்த்ரி சுடச்சுட பதில் சொன்னதாக அந்த வரியில் இருக்கிறது.

தத் – அதை (தீக்ஷிதர் சொன்னதை) , ஆகர்ணய் – கேட்டு, சாஸ்த்ரீ – மஹாதேவ சாஸ்த்ரிகள், ஜ்ஞாநலவாட்ய மூடம் – லவலேச ஞானத்தாலே வீங்கிப் போன அறியாதாராகிய, தம் தீக்ஷிதம் – அந்த தீக்ஷிதரிடம், ஜரித்யுவாச – ஜடிதியில் பதில் சொன்னார்.

என்ன பதில்?

‘தெருவோடு, தான்பாட்டுக்கு தேவி சிந்தனையோடு போகிற ஒரு அப்பாவியைக் கழுத்தைப் பிடித்துத்தள்ளு என்கிறவர் எப்படிப்பட்டவராயிருப்பார்? படாடோபத்தைப் பார்த்தால் பெரிய பதவிக்காரரென்று தெரிகிறது. ‘அர்த்தசந்த்ர உபசாரம்’ என்கிறதிலிருந்து படிப்பும் இருப்பது தெரிகிறது. ஆனால் அது வெறும் படிப்பாயில்லாமல் நிஜமான கல்வியாயிருந்தால் இத்தனை டம்பமும் இறுமாப்பும் இருக்குமா? இந்தப் பாண்டிய தேசத்தில் தற்போது நிஜமான ஸத்வித்வான்கள் இல்லாத குறையினாலேதான் இந்த அரைகுறை ஆஸாமி பெரிசாக சோபித்துக்கொண்டு ‘தாட்பூட்’ பண்ணமுடிகிறது’ என்று மஹாதேவ சாஸ்த்ரி நினைத்தார். தம்முடைய இந்தக் கருத்தைக் கவிநயத்தோடு சொல்லாமல் சொல்லி, தீக்ஷிதரைத் தலை குனியவைத்துப் பாடம் பெறும்படிச் செய்யவேண்டும் என்று நினைத்தார். பளீரென்று ச்லோக ரூபத்திலே பதில் கொடுத்தார்.

“ஸூர்யன் அஸ்தமித்தாச்சு. இன்னும் சந்த்ரனும் உதிக்கவில்லை. நக்ஷத்திரங்கள் சிலதுதான் ஏதோ கொஞ்சம் முணுக் முணுக்கென்று தெரிகிற ஸமயம். இப்படி ஒரே இருட்டாக இருக்கிறபோது மின்மினிப் பூச்சி படாடோபமாக ஜ்வலித்துக் காட்டுவதில் ஒன்றும் ஆச்சர்யமில்லையே!” – இவ்வளவுதான் சாஸ்த்ரிகள் சொன்னார்.

ஸூர்யே ப்ரநஷ்டே சசிநிஹ்யத்ருஷ்டே தாராஸு மந்த-த்யுதிஷு ப்ரகாசம் |
மஹாந்தகாரே (அ)திவிராஜிதே ஹி கத்யோதகோப்-யல்ப-ருசிர்-ந சித்ரம் ||

ஸூர்யே ப்ரநஷ்டே – ஸூர்யன் மறைந்து, சசிநி ஹி அத்ருஷ்டே – சந்த்ரன் பார்வைக்கு வராமல், தாராஸு – நக்ஷத்திரங்கள், மந்த த்யுதிஷு ப்ரகாசம் – ஒளிமங்கி இருக்கிற, மஹாந்தகாரே – நல்ல கும்மிருட்டின்போது, கத்யோதக; அபி – மின்மினிப் பூச்சிகூட (‘க’ என்றால் ஆகாசம், ‘த்யோதகம்’ என்றால் ஒளியுள்ளது. வானத்தில் ஒளியைப் பரப்பிக் கொண்டு போவதால் மின்மினிப் பூச்சிக்கு இப்படிப் பெயர்) , அல்ப ருசி – தன்னுடைய ஸ்வல்ப ப்ரகாசத்தாலேயே, விராஜதே – பெரிசாக ஜொலிப்புக் காட்டுகிறது, (இதிலே) ந சித்ரம் – ஆச்சர்யமில்லை.

இப்படி அவர் ஜாடையாகச் சொன்னதே தீக்ஷிதருக்குப் போதுமானதாக இருந்தது. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்களல்லவா? அநேக விதத்திலே மேன்மை பெற்றிருந்த தீக்ஷிதர் உடனே அம்பாளை த்யானித்துப் பார்த்ததில் அவருக்கு எல்லாம் தெரிந்துவிட்டது. தாம் எந்த மஹா பண்டிதரைப் பார்க்க ஆசைப்பட்டோமோ, அவரையேதான் ‘தொங்கல் காதர்’ என்று எடுத்தெறிந்து பேசி விட்டோம், அவர் உபாஸிக்கிற அலங்காரேச்வரிதான் அவரை இங்கே தம்முடைய இஷ்டமூர்த்தியாக உள்ள மீநாக்ஷியிடம் அனுப்பியருக்கிறாள் — என்று தெரிந்து விட்டது.

பெரியவர்களாகப்பட்டவர்கள் தாங்கள் செய்த தப்பை மனஸ் விட்டு ஒப்புக்கொள்வதிலும் பெரியவர்களாக இருப்பார்கள். உடனே தீக்ஷிதர் பல்லக்கிலிருந்து குதித்து நேரே மஹாதேவ சாஸ்த்ரியிடம் போய், அவருக்கு சாஸ்த்ரோக்தமாக ரொம்பவும் மரியாதைகள் பண்ணி “அலங்காரி அனுப்பிவைத்துத்தானே மீநாக்ஷியை தர்சிக்க வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

இவர் இப்படிக் கேட்டதிலேயே சாஸ்த்ரிகளுக்கும் இவருடைய பெருமை தெரிந்தது.

அம்பாளுடைய வித்வத்-குழந்தைகள் இரண்டும் அவள் ஆசைப்படியே ஒற்றுமையாய்ச் சேர்ந்துவிட்டன!

நிசம்ய தத்-துஷ்ட-மநா மகி ச தஸ்மை ஸபர்யாம் விதிவத் சகார |
பவாந் அலங்கார்யபி – சோதித ஸந் மீநாம்பிகாம் ஸேவிதும் ஆஜகாம ||

மகீச – தீக்ஷிதரும்; தத் – அதை (சாஸ்த்ரி சுடச்சுடச் சொன்ன பதிலை); நிசம்ய -கேட்டு, து(tu)ஷ்ட மநா:- ஸந்தோஷமுற்ற மனத்தவராக…

நமக்காயிருந்தால், ‘மந்த்ரியாயும் வித்வானாயுமுள்ள நம்மை நடுவீதியிலே எவனோ ஒருத்தன் வெறும் மின்மினிப் பகட்டுக்காரன் என்று சொல்வதா?’ என்று பற்றிக்கொண்டு வரும். உத்தம குணமுள்ள தீக்ஷிதரின் மனஸோ, இப்படி அவர் தமக்குப் பாடம் புகட்டியதில் ஸந்தோஷமே அடைந்தது. பவபூதியின் ஓலையில் அம்பாள் தேனைச் சுண்டிவிட்டு தன்னைத் தோற்கப் பண்ணினதையே காளிதாஸன் “மே ஸெளபாக்யம்” என்ற பாடினாற்போலத்தான்!

(தீக்ஷிதர் சாஸ்த்ரிகளின் சூடான பதிலைக் கேட்டு ஸந்தோஷம் அடைந்தவராக) தஸ்மை – அவருக்கு, ஸபர்யாம் – மரியாதைகளை, விதிவத் – விதிப்படி, சகார – செய்தார். பவாந் – தாங்கள், அலங்காரி அபிசோதித: ஸந் – அலங்காரியால் தூண்டப்பட்டவராகி, மீநாம்பிகாம் – மீநாம்பிகையை, ஸேவிதும் – ஸேவிப்பதற்கு, ஆஜகாம – வந்திருக்கிறீர்கள். இல்லையா? (என்று கேட்டார்) .

தாம் ராஜாவின் வலது கையாக, அல்லது ராஜாவும்கூட தம்முடைய வார்த்தைப்படி நடக்கிறவனாக, எந்தப் பட்டணத்தில் பெரிய கௌரவம் பெற்றிருந்தாரோ, அங்கேயே நட்ட நடுவீதியில் சற்றுமுன்தான் தம்மால் வெகு அலக்ஷியமாகப் பரிஹாஸம் செய்யப்பட்ட ஒரு ஊர்பேர் தெரியாதவரிடம், அவர் தம்மை பதிலுக்கு ஒரே போடு போட்டபோது, அடக்கத்தோடு போய் ஸத்காரம் செய்து தீக்ஷிதர் குசலம் விசாரித்திருக்கிறார்!

இப்படியாக, பெரிய அறிஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் அஹங்காரம் ஏறுவதுகூட முடிவிலே அவர்களை மேலும் உசத்தி, நமக்கும் பாடம் புகட்டுவதாகவே அமைகிறது.


* இப்பகுதியில் “குருகுலம்; கடிகாஸ்தானம்” என்ற உரையில் “அரைகுறை ஞானத்துக்கே ஆதரவு” என்ற பிரிவில் குறிப்பிடப்பட்டதன் விரிவு.

வில்லிப்புத்தூராரும் அருணகிரிநாதரும்

கவிதைப் புலமைச் செருக்கில் ரொம்பவும் உக்ரமாகப் போனதை வில்லிப்புத்தூரார் கதையில் கேள்விப்படுகிறோம். புலவர்களையெல்லாம் வாதுக்குக் கூப்பிட்டு, அதிலே தோற்றுப் போனவர்களின் காதையே அவர் மிகவும் க்ரூரமாக அறுப்பது வழக்கம் என்று சொல்கிறார்கள். அருணகிரிநாதர்தான் அவரைக் ‘கந்தரந்தாதி’ பாடி ஜயித்தார். ஜயித்ததற்காக, அவர் மற்றவர்களைப் பண்ணின மாதிரி இவர் அவரைப் பண்ணாமல், அவருக்கு அடக்கம் வரும்படியாகவே உபதேசம் பண்ணி, விட்டுவிட்டார். அதனால்தான் ‘கருணைக்கு அருணகிரி’ என்று சொல்வது.

கம்பரும் அவ்வையும்

கம்பருக்கும் இப்படிக் கொஞ்சம் ‘தான்’ ஜாஸ்தியான போது, தமிழ் நாட்டைப் பொறுத்தமட்டில் ஸரஸ்வதி அவதாரம் எனத்தக்க அவ்வை அவருடைய ‘தானை’ இறக்கினதாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

தண்டுக்கு நன்னாலு இலையாக முளைக்கிற ஆரைக்கீரையைக் கம்பர் பார்த்தாராம். அதன் பேரைச் சொல்லமல் புதிர் போட்டு அவ்வைக் கண்டு பிடிக்கிறாளா என்று பார்க்க நினைத்தாராம். ‘ஒரு காலில் நாலிலைப் பந்தலடீ‘ என்று அவளை ‘அடீ’ போட்டுச் சொல்லி விட்டாராம். தனக்கு அவர் டெஸ்ட் வைத்ததே தப்பு, அதிலும் ‘அடீ’ போட்டது மஹா தப்பு என்று அந்தப் பாட்டிக்கு கோபமான கோபம் வந்து, ‘எட்டேகா லட்சணமே!‘ என்று ஆரம்பித்து கம்பருக்கு ஒரே ‘அர்ச்சனை’யாய்ப் பண்ணி ‘ஆரை அடா சொன்னாய் அது?’ என்று முடித்தாளாம். ‘அடீ என்று ஆரை அடா சொன்னாய்?’ என்று பதிலுக்கு ‘டா’ போட்டுப் பழி வாங்கினது மட்டுமல்லாமல், ஆரைக் கீரையையும் தான் புரிந்து கொண்டதை ‘ஆரை, அதாவது, யாரை அடா’ என்று கேட்டதன் மூலம் தெரிவித்து விட்டாளாம்! இப்படிக் கதை.

‘எட்டே கால் லட்சணம்’ என்ன, எப்படி? தெரியுமோல்லியோ?1

அப்புறம் அந்தக் கம்பர் எத்தனை அடக்கமாக ஆனார் என்பதற்கு அவருடைய ராமாயணத்தைப் பார்த்தால் போதும். ராமர் உள்பட அவர் அவதரித்த ரகு வம்சத்தின் கதையைத் தான் பாட முயல்வது பெரிய ஸமுத்ரத்திலே குட்டிப் படகை இறக்குகிறது போல என்று காளிதாஸன் சொன்னானென்றால், கம்பரோ ராம சரித்ரத்தை தாம் பாட நினைப்பது க்ஷீரஸாகரத்தை ஒரு பூனை நக்கி நக்கிக் குடித்தே தீர்த்துவிட நினைப்பதுபோலத்தான் என்று சொல்லியருக்கிறார்.2 அவ்வளவு அடக்கம் வந்தவிட்டது!

ஸரி, அந்த அவ்வையாருக்கும் ‘தான்’ முற்றிவிடப்படாதே! அதை இறக்கின கதையும் கேட்டிருப்பீர்கள்.

ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிதான் அப்படி இறக்கியவர். அவள் போகிற வழியில் மாட்டுக்காரப் பையனாக வந்து ஒரு நாவல் மரத்தின் மேலே உட்கார்ந்து கொண்டிருந்தார் முருகன். ‘பாட்டீ! சுட்ட பழம் வேணுமா? சுடாத பழம் வேணுமா? எதைப் பறிச்சுப் போடட்டும்?’ என்று கேட்டார்.

மஹாமேதையான அவ்வைக்கே பழம் எப்படிச் சுடுமென்று புரியவில்லை. இருந்தாலும் சூடாக இருக்கிற பழத்தைக் கேட்பானேன் என்று சுடாத பழம் கேட்டாள்.

ஸுப்ரஹ்மண்யர் நன்றாகக் கனிந்த பழமாய்ப் பார்த்துப் பறித்துப் போட்டார்.

உள்ளே கொஞ்சம் ‘கொள கொள’ ஆகியிருந்ததால் அது பூமியிலே நன்றாய்ப் பதிந்து மண் ஒட்டிக்கொண்டது.

அவ்வை மண்போக அதை ஊதினாள்.

ஸ்வாமி கலகலவென்று சிரித்து, “பாட்டீ! பழம் சுட்டதால்தானே ஊதறே?” என்று கேட்டார்.

அவ்வைக்கு ஆச்சயரிமாகவும் வெட்கமாகவும் ஆகி விட்டது. ‘ஆனானப்பட்ட கம்பர் மாதிரியானவர்களை ஒரு கை பார்த்த நாம் ஒரு மாட்டுக்காரப் பையனிடமல்லவா தோற்றுப் போய்விட்டோம்? நல்ல வஜ்ரம் பாய்ந்த கருங்காலி மரத்தைக்கூட ஒரே போடாகப் போட்ட கோடாலி, ஒரு வாழை மரத்தை வெட்டமுடியாமல் ஆனமாதிரி அல்லவா இருக்கிறது!

‘கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி
இருங்கதலித் தண்டுக்கு நாணும்’

என்று நினைத்து அதிலிருந்தே பாடம் பெற்று, இனிமேலே அடங்கயிருக்கவேண்டுமென்று தீர்மானித்தாள். கனியாத தன்னைக் கனிவித்துக் கொள்ளவே இது பாடமென்று எடுத்துக்கொண்டாள்.

உடனேயே ஸுப்ரஹ்மண்யர் நிஜமான ரூபத்தை எடுத்துக்கொண்டு அவளுக்கு நிரம்ப அநுக்ரஹம் செய்து, எதெது கொடியது, எதெது இனியது, எதெது பெரியது, எதெது அரியது, என்று ஒவ்வொன்றைப் பற்றியும் அவளைப் பாடவைத்துக் கேட்டுப் பாராட்டினார்.


1 ‘அ’ என்பது எட்டுக்கும், ‘வ’ என்பது காலுக்கும் இலக்கமாகும், எனவே ‘எட்டேகால்’ என்பது ‘அவ’. “அவலக்ஷணமே!” என்பதையே அவ்வை ‘எட்டேகா லக்ஷணமே!” எனக் குறிப்பிட்டாள்.

2 கம்பராமாயணம் : பாயிரம், நான்காம் பாடல்

காளிதாஸனும் அம்பிகையும்

காளிதாஸன், பவபூதி, தண்டி இந்த மூன்று பேரில் யார் உசத்தி, அவர்களை எப்படி rank பண்ணுவது என்று வாதப் பரீக்ஷைகள் மூலம் முடிவுகட்ட முடியவில்லை. அதனால் போஜன் எல்லாரையும் அம்பாள் ஸந்நிதானத்துக்கு அழைத்துக்கொண்டு போனான்.

அம்பாள் அசரீரியாக முடிவு சொன்னாள்.

“கவிர் – தண்டி கவிர் – தண்டி
பவபூதிஸ்து பண்டித: |”

“தண்டியைக் கவி என்று சொல்லவேண்டும். ஒரு தரத்துக்கு இரண்டு தரமாக நிச்சயப்படுத்தி அப்படிச் சொல்லலாம். பவபூதியோ என்றால் பண்டிதர் என்க வேண்டும்” – என்று அர்த்தம் கொடுக்கும்படியாகச் சொன்னாள்.

பாண்டித்யம் அதிகமென்றால் அநேக விஷயங்களைப் பற்றிய அறிவு, பாஷையின் இலக்கணத்தில் நல்ல ஞானம் இருப்பது என்று அர்த்தம். ஆனால் இலக்கணம் வேறே, இலக்கியம் வேறே! கவிக்கு ரொம்பவும் விஷயம் தெரிந்து , பாஷா சாஸ்த்ர ஞானம் நிறைய இருக்கணுமென்ற அவச்யமில்லை. ஹ்ருதயத்தாலே எதிலோ, ஒன்றிலே, சின்ன விஷயமானாலும் அதிலே, அப்படியே ஊறி ரஸத்தை அநுபவித்து, அதைப் பெரிய grammar இல்லாவிட்டாலும் மதுரமான லலிதமான வாக்கிலே மற்றவர் ஹ்ருதயத்திலும் புகும் விதத்தில் நயமாக நகாஸ் செய்து சொல்கிறவன்தான் கவி. பாண்டித்யம், கவித்வம் இரண்டும் ஸமமாகச் சேர்ந்திருந்தால் விசேஷம். ஆனாலும் அவை பொதுவாகக் ‘கவி’ என்கப்பட்வர்களில் வெவ்வேறு ‘ப்ரபோர்ஷனி’ல் (விகிதத்தில்) தான் சேர்ந்திருப்பதைப் பார்க்கிறோம். சிலதைத்தான் poetic என்னும்படியாகவும், சிலதை Scholarly என்னும்படியாகவும் இருக்கிறது.

இதிலேதான் தண்டியிடம் பாண்டியத்தைவிடக் கவிதாரஸம் அதிகம் என்றும், பவபூதியிடம் கவிதா ரஸத்தை விட அறிவின் கனம் அதிகம் என்றும் பொருள் ஏற்படும்படியாக அம்பாள் ரத்னச் சுருக்கமாகத் தீர்ப்புக் கொடுத்தாள். காளிதாஸனைப் பற்றி இதில் எதுவும் இல்லை.

‘அப்படியானால், தன்னை அவள் கவிஞன் என்றும் வைக்காமல், அறிஞன் என்றும் வைக்காமல் அடியோடு கழித்துக் கட்டிவிட்டாளா?’ என்று அவனுக்குப் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.

அப்போதுதான், கவித்வ சக்தியான சிந்தனைக்கும் வாக்குக்குமே எவள்தான் மூலமோ, எவளால்தான் காளிதாஸன் ஆளானதோ அவளையே தூக்கி எறிந்து ஒரு வார்த்தை சொல்லிவிட்டான். நம்மைத் தூக்கிவாரிப் போடுகிறமாதிரி வார்த்தை சொல்லிவிட்டான்.

“அப்படின்னா நான் யார்டீ….?” என்று திட்டி ஒரு வார்த்தை போட்டுவிட்டான். “கோ (அ) ஹம்….” என்று ஸம்ஸ்க்ருதத்திலே கோபமாகக் கேட்டுவிட்டான்.

அவன் அவஸரப்பட்டுவிட்டான்! தண்டியையும், பவபூதியையும் பற்றிச் சொன்னதோடு அம்பாளுடைய ‘ஜட்ஜ்மெண்ட்’ முடிந்துவிடவில்லை. அதைத் தொடர்ந்து காளிதாஸனைப் பற்றியும் அவள் சொல்வதற்குத்தான் இருந்தாள். ஆனால் ஒருத்தர் கவிஞர், இன்னொருத்தர் அறிஞர் என்று அவள் சொன்னவிட்டு, இனிமேலே சொல்ல எதுவுமில்லை என்று காளிதாஸன் அவஸரப்பட்டுவிட்டான். பரதேவதையை துச்சமாக வார்த்தை சொல்லிவிட்டான்.

அதற்காக அவள் கோபம் கொள்ளவேயில்லை.

நம் குழந்தையை நாம் ஏதோ அலக்ஷ்யப்படுத்திவிடுகிறோம், ரொம்பவும் கார்யமாயிருந்ததில், அது சொல்ல வந்ததைக் காதில் போட்டுக் கொள்ளாமலிருந்து விடுகிறோம். அதனாலே அது கோபித்துக்கொண்டுபோய் உம்மென்று உட்கார்ந்து விடுகிறது. அந்தக் குழந்தைக்காக அடுப்பிலே பக்ஷணம் பண்ணிக்கொண்டிருந்ததால்தான் நாம் அது சொல்ல வந்ததை கவனிக்காதது. பக்ஷணம் பண்ணியானதும் எடுத்துக்கொண்டுபோய், “உர்உர்” என்று உட்கார்ந்திருக்கிற குழந்தைக்கு கொடுக்கிறோம். “வேண்டாம், போ!” என்று வாரி நாம் மூஞ்சியிலேயே அடிக்கிறது. அதனிடம் நமக்குக் கோபமா வருகிறது?” ராஜாப் பயலே! உனக்கு இத்தனை ரோஷமா? உன்னைக் கவனிக்காத இந்த அசட்டு அம்மாவை நன்னா அடி!” என்று குனிந்துகாட்டத்தானே தோன்றுகிறது?

அம்பாளுக்கும் அவளுடைய குழந்தையான காளிதாஸன் சீறியதில் கோபமே வரவில்லை; பெருமைதான் பட்டாள்!

“நான் யாருடீ?…..” என்று அவன் கேட்டதற்கு பதிலாக,

த்வமேவாஹம், த்வமேவாஹம்,
த்வமேவாஹம் ந ஸம்சய:

என்றாள்.

“நீ நானேதான், நீ நானேதான், நீ நானேதான். இதில் ஸந்தேஹமில்லை” என்று ஒரு தரத்துக்கு மூன்று தரமாக ஸந்தேஹத்துக்கிடமில்லாமல் சொல்லிவிட்டாள்.

“நீ நானேதான்”, அல்லது, “நீயேதான் நான்” என்று சொல்லவேண்டும். (த்வம் ஏவ – நீயேதான், அஹம் – நான்)

குறுக்கே சீறிக்கொண்டு இவன் கேட்டிருக்காவிட்டால் அவளாக என்ன சொல்லியிருப்பாளோ? ‘ஒரு கவி நிஜமான கவி, இன்னொரு கவி அறிஞர்’ என்று சொன்ன அப்புறம், இவன் (காளிதாஸன்) இரண்டும் பூர்ணமாகச் சேர்ந்த பண்டித கவி’ என்கிற மாதிரி ஏதாவது ‘ட்ரிப்யூட்’ (பாராட்டு) கொடுப்பதோடு நிறுத்திக் கொண்டிருப்பாளோ என்னவோ? அவன் கோபத்தில் இடைமறித்ததாலேயே அவனைத் “தானே” என்று உச்சிக் கோடிக்கு உசத்திச் சொல்லிவிட்டாள்!

பண்டிதர்களுடைய அறிவெல்லாம் அடங்கிய ஞானம் அவள்தான். ஜ்ஞாநதா, ஜ்ஞாநவிக்ரஹா (ஞானமளிப்பவள், ஞானவடிவினள்) என்று ஸஹஸ்ர நாமத்தில் சொல்லியிருக்கிறது. கவிதா ரஸத்துக்கும் அவள்தான் மூலம். தைத்திரீயத்தில் பரமாத்ம தத்வமாகச் சொன்ன ரஸம் அவள்தான். ரஸஜ்ஞா, ரஸசேவதி : அதாவது, ரஸமறிந்த ரஸிகை, ரஸம் நிரம்பிய களஞ்சியம் – என்று ஸஹஸ்ரநாமம் சொல்கிறது. இப்படி இரண்டும் சேர்ந்திருப்பதில் தனக்கு ஸமம், தானே கூட, யாரென்றால் காளிதாஸன்தான் என்றாளாம்!

‘தான் இப்படிப் பாராட்டிச் சொன்னதில், ஏதோ ஒரு ஸமயம் தற்பெருமை என்றில்லாமல் எப்போது பார்த்தாலும் மண்டைக்கனம் பிடித்தவனாகச் காளிதாஸன் ஆகிவிட்டால் என்ன ப்ணணுவது? அப்படி ஆகிவிடக் கூடாது ‘ என்பதால் இன்னொரு ஸந்தர்ப்பதிலே அம்பாள் அவனை ஒரு இறக்கு இறக்கவும் செய்தாள்.

இப்போது பவபூதிக்கும் காளிதாஸனுக்கும் மட்டும்தான் போட்டி. இந்த ஸமயம் தராசிலே இரண்டு பேர் கவிதையையும் எதிரெதிர்த் தட்டுக்களில் வைத்து அம்பாள் ஆலயத்தில் எடைபோட்டுப் பார்க்கத் தீர்மானமாயிற்று. ஏதோ ஒரு விஷயமாக போஜன் இரண்டு பேரையும் கவி பண்ணச் சொன்னதில்தான் எது உசத்தி என்று அவனாலும் ஸதஸாலும் சீர்தூக்கிச் சொல்லத் தெரியாமல் அம்பாள் சித்தத்துக்கு விட்டது. போஜனே ஒரே அளவான ஓலை நறுக்குகளில் இரண்டு பேர் கவிதையும் எழுதி எதிரெதிர்த் தட்டுகக்ளில் வைத்தான்.

அம்பாள் தர்ம ந்யாயமாகக் கவிதைகளின் தரத்தில் சித்தத்தைச் செலுத்தியதில் பவபூதியின் தட்டு மேலாகவும், காளிதாஸனுடைய தட்டு கீழாகவும் போக ஆரம்பித்தது. அதாவது காளிதாஸனுக்கே வெறறி சேர இருந்தது.

உடனே அம்பாள், கவிதைகளை மட்டும் ந்யாயமாகச் சீர்தூக்கிக் காட்டிவிட்டால், கவிகளை அந்யாயமாகச் சீர் கெட்டுப்போகப் பண்ணுவதாகிவிடுமென்று நினைத்தாள். ‘இப்போதும் காளிதாஸனே ஜயித்தால் அப்புறம் ரொம்பவும் மண்டைக்கனம் ஏறி வீணாய்விடுவான். அதேபோல, ரொம்பவும் ‘சரக்கு’ உள்ள பவபூதியும் ஏற்கெனவே கொஞ்சம் மறைமுக இறக்கலாக ‘பண்டித’ப் பேர் வாங்கினது போதொதென்று, இப்போது நேராகக் காளிதாஸனுக்குத் தோற்றுப் போனால் மனஸ் உடைந்து சீர்குலையும்படி ஆகும். இரண்டு குழந்தைகளையுமே இப்படி ஆக விடப்படாது’ என்று நினைத்தாள். க்ஷணகாலம்தான். அல்லது அதைவிடவுங் குறைவு. அம்பாளானதால் அதற்குள் இப்படி நினைத்து, தராசுத் தட்டுகள் ஏறி இறங்குவதை மாற்றுவதற்கும் அந்த க்ஷணத்துக்குள்ளேயே ஒரு வழியை நிச்சயம் செய்துகொண்டாள்.

அழகுக்கு அழகு செய்பவளான பரதேவதை ஸர்வாலங்கார பூஷிதையாக இருப்பவள். அவள் தலையில் கேசத்தில் பின்னலின் உச்சியில் புஷ்பம் வைத்துக் கொண்டிருப்பது மட்டுமில்லை, காதின் மேலேயும் ஒரு புஷ்பத்தைச் செருகிக் கொண்டிருப்பாள். (லலிதா) ஸஹஸ்ரநாம வர்ணனையில் இப்படி இருக்கிறது. கேசத்தில் சம்பகம், அசோகம், புன்னாகம், ஸெளகந்திகம் ஆகிய புஷ்பங்களைச் சூட்டிக் கொண்டிருப்பவள் என்று முதலில் வருகிறது. சம்பகாசோக – புந்நாக – ஸெளகந்திக – லஸத் – கசா. அப்புறம் ரொம்பவும் மனஸைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் செவிப்பூவாகக் கதம்ப புஷ்பக் கொத்தை வைத்துக் கொண்டிருக்கிறவள் என்று வருகிறது: கதம்ப – மஞ்ஜரீ – க்லுப்த – கர்ணபூர – மநோஹரா.

நம் கதை நடந்தபோது இம் மாதிரி கல்ஹாரம் என்ற குவளை மலரை அம்பாள் காதின்மேல் அணிந்துகொண்டிருந்தாள்.

பவபூதியின் தட்டு மேலே கிளம்பியபோது, அந்தக் காதுப் பூவை ஸரிசெய்து கொள்கிறதுபோல் விரலாலே மெதுவாக அழுத்திக்கொண்டாள். அப்படிப் பண்ணுவதிலேயே ஸாமர்த்யமாக அந்தப் புஷ்பத்திலிருந்த தேன் சொட்டைச் சுண்டிவிட்டு அது போய் நேரே பவபூதியுடைய ஏட்டின் மேலே விழும்படிச் செய்துவிட்டாள்!

கவிதா “ரஸம்” என்று தேனை நினைத்துத்தான் சொல்கிறோம். மதுர ஸ்வரூபிணியான அம்பாளுடைய செவிப்பூவின் தேன்சொட்டு விழுந்த கனத்தில், பவபூதியுடைய கவிதையில் குறைந்த ரஸம் ‘மேக் – அப்’ ஆகிவிட்டது. சட்டென்று அவனுடைய கவிதை (தட்டு) கீழே இறங்கி, காளிதாஸன் கவிதை உயரே போயிற்று. கவிஞர்களை எடுத்துக்கொண்டாலோ இதற்கு நேர்மாறாக பவபூதிக்கு உயர்வு கிடைத்தது, காளிதாஸனை ஒரு இறக்கு இறக்கினதாக ஆயிற்று!

ஆனால் உடனேயே காளிதாஸனுக்கு அம்பாள் செய்த ‘ட்ரிக்’ புரிந்துவிட்டது. எப்படிப் புரிந்தது என்றால் அவளே, “நானேதான் நீ!” என்று சொல்லியிருந்தாளோ, இல்லையோ? அவள் வாக்கு பொய்க்குமா? அவளாகவே இருந்து அவளுடைய கார்யத்தைப் புரிந்துகொண்டுவிட்டாள்!

உடனே இதை ஆசுகவிதையாகப் பாடியும் விட்டான்.

ஆனால் முன்னே அவஸரப்பட்டுத் திட்டினானே, அப்படி திட்டியா பாடினான்? இல்லை. உண்மையில் ஸுபீரியராக இருந்த அவனுடைய கவிதையை அவள் மட்டப்படுத்தினதற்காக அவன் திட்டியிருந்தால்கூடத் தப்பு என்று சொல்ல முடியாது. ஆனால் இப்போது திட்டாமல், கொஞ்சங்கூடக் கோபப்படாமல், “அஹோ மே ஸெளபாக்யம்“, “ஆஹா என்னுடைய பரம பாக்யத்தை என்ன சொல்ல!” என்றே ஆரம்பித்து, அம்பாளுடைய காதணியான கல்ஹாரத்தின் தேனால் அவள் பவபூதியின் கவிதைக்கு கனம் கொடுத்ததைப் பாடினான்!1

நல்லறிவு உதித்ததாலேயே (அதுவும் அவள் க்ருபைதான்) மனஸ் மாறி இப்படிப் பாடினான். “நீயும் நானும் ஒன்று” என்றவள் இப்போது பக்ஷபாதமாகப் பண்ணினாளென்றால் ஏன்? அவளைத் தவிரத் தான் வேறில்லை என்று இல்லாமல் தனக்கு அஹங்காரம் தலை தூக்குகிறதே, அந்த கனத்தை இறக்கத்தான் பவபூதியின் பாடலுக்கு கனம் தந்தாள் என்று புரிந்துகொண்டான். அதனாலேயே இதைத் தன் பாக்யமாய் நினைத்துப் பாடினான்.

“அப்படியா விஷயம்?” என்று உடனே பவபூதி காளிதாஸனுக்கு நமஸ்காரம் செய்ய, காளிதாஸன் போஜனிடம் சொல்லி பவபூதிக்கு நூறு மத்தகஜங்களை ஸம்பாவனை செய்யச் செய்தானாம்!

போட்டியும் பொறாமையுமாய் இருந்த இரண்டு மஹா கவிகள் இப்படி ஒற்றுமையானதைத் தெரிந்து கொள்ள நம் மனஸுக்கு மிகவும் ஸந்தோஷமாயிருக்கிறது.

அப்புறம் காளிதாஸனுக்கு நல்ல அடக்கமுண்டாயிற்று. அவையடக்கமாக அவன் செய்துள்ள ச்லோகங்களைப் பார்த்தால் தெரியும். உதாரணமாக, “ரகுவம்ச”த்தின் ஆரம்பத்தில் இப்படி ஒரு காவ்ய முயற்சியில் தான் இறங்கியிருப்பது ஏதோ ஒரு சின்னப் படகைக் கொண்டு கடக்க முடியாத ஸமுத்ரத்தைக் கடக்கப் புறப்படுவது போலத்தான். ரகுவம்ச திலகனின் கதையை எழுதிய வால்மீகி போன்ற உயர்ந்த கவிகளே ஸாதிக்கக்கூடிய இந்தக் கார்யத்தில் தான் முயற்சி பண்ணுவது நல்ல நெட்டையானவனே பறிக்கக்கூடிய பழத்துக்கு ஒரு குள்ளன் கை நீட்டிப் பார்ப்பது போலத்தான் என்று விநயமாகச் சொல்கிறான்.2


1 அஹோ மே ஸெளபாக்கியம் மல ச பவபூதேச்ச பணிதம்
தடாயாம் ஆரோப்ய ப்ரதிபலதி தஸ்யாம் லகிமநி |
கிராம் தேவீ ஸத்ய: ச்ருதி-கலித-கல்ஹார-கலிகா
மாதூலீ-மாதுர்யம் க்ஷிபதி பரிபூர்த்யை பகவதீ ||

2 முதல் ஸர்கம் – ச்லோகம் 2, 3

தெய்வத் தீர்ப்புக் கோருவது

கவிகளுக்குள்ளே ரொம்ப போட்டி முற்றி, வாதத்தினாலே அவர்களில் எவருடைய ஸுபீரியாரிடியையும் நிச்சயிக்க முடியாமல் போனால், அப்போது ராஜா தெய்வத்தின் தீர்ப்புக்குத்தான் விஷயத்தை விட்டு விடுவான். எல்லாக் கவிகளையும் வித்வான்களையும் கோவிலுக்கு அழைத்துக்கொண்டு போவான். அங்கே பூ கட்டி வைத்து எடுத்துப் பார்ப்பார்கள். அல்லது போட்டிக் கவிகளின் கவிதைகளைக் கொண்ட சுவடிகளைத் தராசிலே நிறுத்திப் பார்ப்பார்கள். ஸாதாரணமாகப் பார்த்தால் அந்தச் சுவடிக் கட்டுகளில் எதில் ஜாஸ்தி கவிதைகள், அதாவது ஓலைகள் இருக்கிறதோ அதுதான் அதிக எடையாக இருக்கும். ஆனாலும் இப்படி தெய்வ ஸந்நிதானத்தில், தெய்வமே கதி என்று அவர்கள் அத்தனைப் பேரும் நம்பி, நாஸ்திக வாதமும் பரிஹாஸமுமில்லாமல் பூர்ணமாக நம்பி, நிறுத்துப் பார்த்தபோது, ஓலை ‘வெய்ட்டி’யில் ரொம்ப லேசாயிருந்தால்கூட, எது கவிதையிலே உசந்த தரமானதோ அதை வைத்த தட்டுதான் கீழே இறங்கும். துளியூண்டு திருக்குறளை சங்கப் பலகையில் வைத்ததும் பாக்கி அத்தனை சங்கப் புலவர்களும் பொற்றாமரைக் குளத்தில் விழுந்துவிட்டார்களல்லவா? அந்த மாதிரி! ஞானஸம்பந்தர் கதையிலே வருவதுபோல அனல்வாதம், புனல் வாதம் என்று நடத்தியும் திவ்ய சக்திகளின் முடிவுக்குப் போட்டியை விடுவதுண்டு*. அல்லது எல்லாருமாக ஸந்நிதிக்குப் போய் அப்படியே மௌனமாக ப்ரார்த்தித்து த்யானம் பண்ணுவார்கள். அர்ச்சகரின் மேல் ஆவசேம் ஏற்பட்டு ஈச்வர சித்தம் தெரியும். அல்லது அசரீரி கேட்கும்.


* முதற் பகுதியில் ‘முருகனின் தமிழ்நாட்டு அவதாரம்’ எனும் உரை பார்க்க.

அதுவும் ஓர் அழகு!

ஸ்வய மரியாதை என்பது கொஞ்சம் கவனக் குறைவாக இருந்துவிட்டால் தற்பெருமையாகி விடும். அப்படிப்பட்ட ஸமயங்களில் மற்றவர்களைத் தூக்கி எறிந்து ஆணவமாகவே கூடப் பேசிவிடுவதுண்டு. அதாவது, மற்றவரின் ஸ்வய மரியாதையை பங்கப்படுத்துவதுண்டு. நல்ல கவிஞர்களாக, அறிந்தவர்களாக உள்ளவர்களும் இப்படி ஒவ்வொரு ஸந்தர்ப்பத்தில் பண்ணியிருக்கிறார்கள். காளிதாஸன், கம்பன் ஆகியவர்களைப் பற்றியே இம்மாதிரியான கதைகளும் இருக்கின்றன. அதிலும் கதா ரஸம் இருப்பதால் சொல்கிறேன்.

இந்த விஷயங்களை ‘deep’ -ஆக எடுத்துக்கொண்டு அவர்களை எடை போட்டுவிடக்கூடாது. அவர்களுடைய உயர்ந்த குணங்களும் பண்புகளும் பெரிய ‘ரிஸர்வாயர்’ மாதிரித் தேங்கியிருந்ததென்றால், அதிலே மேல் பரப்பிலே எப்போதோ எழுந்திருந்து அப்புறம் அமுங்கிப் போய்விடுகிற அலைகள் மாதிரிதான் இவற்றை நினைக்கவேண்டும். இப்படி அலை கொஞ்சம் வீசுவதே ரிஸர்வாயருக்கு அழகு. நம்மிடம் தற்பெருமை அலையடித்தால் அது சொம்பு மாதிரி, டம்ளர் மாதிரி இருக்கிற ஜலத்தில் அலை அடிப்பதுபோன்ற விபரீதமாக ஆகும்!

தங்களுடைய மேதாவிலாஸத்தைக் ‘கான்ஷஸாக’த் தெரிந்துகொண்டிருந்த கவிகளும் அறிஞர்களும் இப்படி மற்ற கவிகளையோ, பண்டிதர்களையோ, ஆதரவாளர்களான ப்ரபுக்களையோ அலக்ஷ்யமாகப் பேசி, பாடியிருப்பதாக அநேகத் துணுக்குகள் இருக்கின்றன.

ஸாதாரணமாக போட்டி, பொறாமை இருப்பது தப்புதான். ரொம்பத் தப்புதான். ஆனாலும் வித்யை வளர வேண்டுமானால் அதற்கு இதுவும் உதவி பண்ணுகிறது, ஸ்பர்தயா வர்ததே வித்யா என்பார்கள். ரன்னிங் ரேஸில் கலந்துகொண்டவன் போட்டி தப்பு என்று பின்னாடி நின்று விட்டால் எப்படியிருக்கும்? ஒரு மாணவன் மற்றவர்கள் rank எடுக்கட்டுமென்று போட்டிபோடாமல் இருந்தால் ஸரியா?

பொறாமையில்லாமல் போட்டி இருப்பதுதான் உத்தமம். அதுதான் ஸரி. ஆனால் பெரிய பண்டிதர்கள், கவிகள் விஷயத்தில் இந்தப் பொறாமைகூட மிஞ்சிப் போகாதபோது அவர்களுடைய குணசித்ரத்துக்கு ஒரு ‘கான்ட்ராஸ்ட்’ (வேறுபாட்டு ருசி) தருவதாகவே அழகு செய்கிறது. மிஞ்சிப் போகும்போது அவர்களுக்கும் ஒரு குட்டு விழுந்து பாடம் பெற்று அடங்கியும் போயிருக்கிறார்கள்.

காளிதாஸன் யாரை எடுத்தெறிந்து பேசினானென்றால், தன்னுடைய ஸஹ கவிகளையோ ராஜாவையோ அல்ல, அதற்கும் மேலே அம்பாளை, ஸாக்ஷாத் பராசக்தியையே அப்படிப் பேசிவிட்டான்!

அவளுடைய உச்சிஷ்ட தாம்பூலம்தான் அவனுக்கு கவித்வ சக்தியைக் கொடுத்தது! “காளி – தாஸன்” என்பதாக அவளுடைய அடிமை என்றே பேர் வைத்துக் கொண்டிருந்தான். அம்பாள் ஸ்தோத்ரம் என்றவுடன் யாரும் கற்றுக் கொண்டு செல்லும் “ச்யாமளா தண்டகம்” அவன் வாக்கிலிருந்து வந்ததுதான்.

ஆனாலும் என்ன ஆயிற்று என்றால் :

“நம் பந்து”

குட்டி சாஸ்த்ரிகள் நமக்கெல்லாம் பந்துவைப் போல. எப்படியென்றால் அவர், அவருடைய பிதா நரஸிம்ஹ சாஸ்த்ரி, பாட்டனார் மாதவ சாஸ்த்ரி ஆகிய எல்லோரும் நம் ஸ்ரீ மடத்து வித்வான்களாக இருந்திருப்பவர்கள். வாஜபேயத்தில் ராஜா பிடிக்கும் குடை வேண்டாமன்று சொன்ன அவர் தமது கொடையாக நம் மடத்துக்கு அனுப்பி வைத்த அலங்காரக் குடைகள் நிறைய உண்டு!

ஸ்வாதந்த்ரியம், ஸ்வய மரியாதை இவற்றோடு பிறர் மரியாதையைப் பேணுவது, பிறர் நலனைப் பேணுவது, அன்பு ஆகிய சிறந்த குணப்பண்புகளைக் கொண்ட கவிகளில் “மஹா” பட்டம் பெற்ற இரண்டு பேர் கதையும் ‘குட்டி’ பட்டம் பெற்ற இரண்டு பேர் கதையும் கேட்டீர்கள். இன்னம் இப்படி அநேகம் பேர் உண்டு. த்யாகையார்வாள் சொன்னாற்போல, “அந்தரிகி வந்தனமு“.

மைஸூர் மன்னருக்கு மறுதலிப்பு

மைஸூரிலிருந்தபோதுதான் குட்டி சாஸ்த்ரி ஸோமயாகம் செய்து யஜ்வா ஆனது. இதையறிந்த உடையார், “வாஜபேய யாகம் செய்கிறவருக்கு ராஜாவே குடைபிடிக்க வேண்டுமென்று இருக்கிறது. எனக்கு அந்த பாக்யத்தைத் தருவதற்காக தாங்கள் ஒரு வாஜபேயம் பண்ணவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால் குட்டி சாஸ்த்ரிகள், “பாச்சாத்யார்கள் (மேல் நாட்டினர்) கையில் மாட்டிக்கொண்டு காலம் இருக்கிற இருப்பில் முறை தப்பாமல் யாகம் பண்ணுவது மிகவும் ச்ரமமாயிருக்கிறது. ப்ராமண தர்மத்ததுக்கு நான் இழைத்திருக்கக்கூடிய தவறுகளை நிவ்ருத்தி செய்துகொள்வதற்காகவே வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இந்த ஒரு யாகம் பண்ணினேன். வாஜபேயம் பண்ணப்போய் என்ன அபசாரத்தைச் செய்யும்படி ஆகுமோ என்று பயப்படுகிறேன். ஸமூஹத்தில் இதைப் புரிஞ்சுக்கணும்” என்று மறுத்துவிட்டார். மரியாதையாகவே ஆனாலும், தீர்மானமாக மறுத்துவிட்டார்.

ராஜாவின் வார்த்தைக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற பயமும் அவருக்கில்லை; வெண்கொற்றக்குடை வேந்தனே தமக்குக் குடை பிடிக்கத் தாம் அவப்ருத ஸ்நானத்துக்கு பவனி செல்லலாமே என்ற ஆசை, சபலமும் இல்லை.