ஆலோசித்து அறிய வேண்டியவை

அதனாலே, கொஞ்சம் உங்களையே ஆலோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இப்போது வாழ்க்கையில் உங்களுக்கு நிம்மதியாயிருக்கிறதா? ஏதோ அப்பப்போ கொஞ்சம் ஸந்தோஷம், த்ருப்தி ஏற்பட்டாலும், ஒன்று மாற்றி ஒன்று ஏதோ இழுபறிச் சக்திகளிடம் மாட்டிக் கொண்டு சாந்தியில்லாமல் ச்ரமப்பட்டுக் கொண்டே இருக்கும்படிதானே இருக்கிறது? ‘ஆஹா’ என்று, ‘அக்கடா’ என்று, ‘நமக்குக் கவலையே இல்லை, பயமே வராது, துக்கமே வராது’ என்றெல்லாம் சொல்லும்படியான உறுதிப்படுத்திய சாந்தியாயிருக்கிறதா? இல்லையோல்லியோ?

இல்லை என்றுதான் பதில் சொல்வீர்கள்.

ஸரி, எதனால் இத்தனை சலனம், பறப்பு? இழுபறி, ச்ரமம் எதனால்?

இதை யோசித்தீர்களானால், யாராலும் க்ஷணம்கூடச் சும்மா இருக்காமல் ஏதாவது கார்யம் செய்துகொண்டே இருக்கத் தோன்றுவதாயும், இந்தக் கார்யங்களினால்தான் சாந்தியைக் குலைக்கிற எல்லாம் வந்து சேருவதாயும் தெரியம். கார்யமேயில்லாவிட்டால்தான் சாந்தி என்பது இரண்டும் இரண்டும் நாலு என்கிற மாதிரி எவருக்கும் தெரியும்.

‘எதற்காகக் கார்யம்? என்பது அடுத்த கேள்வி. இதை யோசித்துப் பாருங்கள். பார்த்தால் பலவிதமான ஆசைகளில் எதுவோ ஒன்றின் பூர்த்தியை முன்னிட்டுத்தான் ஒவ்வொரு கார்யமும் என்று புரியும்.

கோபத்தினாலோ மோஹத்தினாலே வேறெந்த உணர்ச்சியினாலோ செய்கிற ஸகல கார்யங்களுங்கூட, அந்த உணர்ச்சிகளுக்கெல்லாம் அடியிலே மூலமாகப் பதுங்கியிருக்கிற ஒரு ஆசையினாலேதான் என்று கொஞ்சம் தீர்க்கமாக ஆலோசித்துப் பார்த்தால் புரிந்துவிடும்.

ஸரி, கார்யத்தை நிறுத்திவிடலாமா என்று பார்த்தீர்களானால், அது லேசில் ஸாத்யமில்லை என்பது தெரியும். ப்ரக்ருதி (நேச்சர்) ஒருத்தனை ஏதாவது கார்யத்தில் ஏவிக்கொண்டேதானிருக்கிறது என்று தெரியும்.

அதனாலேதான், சாஸ்த்ரம் இந்த ஸ்டேஜில் என்ன சொல்கிறென்றால், ‘கார்யம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டுச் செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஸ்வந்த ஆசைக்காகச் செய்வது என்றில்லலாமம் உலக நலனுக்காக கார்யங்களைப் பண்ண ஆரம்பியுங்கள்’ என்கிறது. உலகத்தில் பலதரப்பட்ட கார்யங்கள் நடக்கவேண்டியிருப்பதால், அவற்றை அழகாக ‘ஸ்வதர்ம்ம’ என்று பிரித்து ஒவ்வொருவருக்கும் பாரம்பர்யமாக ஒன்றைக்கொடுத்திருக்கிறது.

அந்தப்படி பண்ண ஆரம்பியுங்கள்.

அப்புறம் தெரியம், ஸொந்த ஆசைக்கு இடம் கொடுக்காமல்தான் இருக்கத்தான் கர்மாநுஷ்டானம் ஸஹாயம் செய்கிறதே தவிர, அந்த ஆசை எழும்பாமல் அழிந்து போவதற்கு நேராகப் போராடி ஜயித்துத் தரவில்லை என்று. ஸ்வதர்ம கார்யங்களானவை ஸ்வய ஆசைகள் படருவதற்கு அவகாசம் தராமல் ‘டைவர்ட்’தான் செய்கின்றனவே தவிர, அவற்றை அப்படியே அழித்துவிடுவதற்குப் பயன்படுவதில்லை என்று தெரியும்.

இந்த விஷயத்திலே ஸஹாயம் செய்யத்தான் சாஸ்த்ரங்க்ள் பக்தியைச் சொல்லியிருப்பது. ஆசை உண்டாவதற்கு உற்பத்தி ஸ்தானம் மனஸ். அதை இந்தரியங்களிலிருந்து ஈச்வரன்கிட்டே திருப்பினால்தான் நேராக ஸ்வய ஆசைகளை நிறுத்தமுடியும். ஆனாலும் முதலில் ஸ்தூல தேஹத்தில்தான் ஜனங்களுக்குத் ‘தான்’ என்ற எண்ணம் அதிகமிருப்பதால், தேஹத்தைக் கொண்டு செய்யும் கார்யத்தைத் தூய்மைப்படுத்தித் தருவதற்கே முதலில் முக்யம் கொடுத்து, அப்புறம் தான் ஸூக்ஷ்மமான மனஸை deal பண்ணுவதற்குப் பிராதான்யம் கொடுத்திருக்கிறது. இப்படி ரெண்டாவது கட்டத்திலே மனஸிலிருந்து ஆசைகளை எல்லாம் நீக்கி ஈச்வர பக்தி பண்ணிவந்தாலே ஸம்ஸார இழுபறி பெருமளவுக்குக் குறைந்து, பரிசுத்தமான ஆனந்தமும் சாந்தியும் ஒரு கணிசமான அளவுக்கு உண்டாகிவிடும்.

ஆனாலும்கூட அதற்கும் மேலே ஆலோசனை பண்ணிப் பார்த்தீர்களானால் இப்போதும் கூடப் பூர்ண அமைதியில்லை. சாச்வதமான சாந்தியில்லை என்று தெரியும். பக்தி பண்ணும் போதும் அதிலேயே எத்தனையோ தாபங்கள் இருப்பது தெரியும். ஈச்வரன் என்று ஒருத்தனைப் பக்தி பண்ணுகிறோமே, அவனை உள்ளுக்குள்ளே ஊறி அநுபவிக்கவில்லை என்று தெரியும். அவனுடைய நிஜமான தன்மை என்ன என்று பக்தியிலே தெரியவில்லை, நாம் எதை அவன் தன்னை என்று நினைத்தாலும் அப்படி மட்டும் வந்துதான் அவன் தன்னைக் காட்டிக் கொள்கிறாறென்று தெரியும். அதோடுகூட, இந்த பதியில் அவனுடைய உள் தன்மை என்னவென்று தெரியாதது போலவே நம்முடைய உள்தன்மை – நிஜ ஸ்வபாவம் – என்னவென்பதும் தெரிந்துவிடவில்லை என்று தெரியும். பக்தி பண்ணும் மனஸோடு நாம் முடிந்து விடவில்லை என்பது தன்னை மறந்து பக்தி ஆவேசத்தில் கிடக்கிற ஸமயங்களில் தெரிந்தாலும், அப்போதும் மனஸுக்கு மேலான அந்த நாம் என்ன என்பது அநுபவ பூர்வமாகத் தெரியவில்லை என்றே இருக்கும்.

இதைப் பற்றி நன்றாக ஆலோசனை பண்ணும்போது, ஆசை போவது மட்டும் ஸம்ஸாரப் போராட்டம் தீர்வதற்குப் போதாது என்பது தெரியும். பக்தி பண்ணும் மனஸுக்கும் குறை, தாபம், கஷ்டம் இருப்பது தெரிவதால் மனஸும் போனால்தான் யுத்தம் நிற்கும்; சாச்வதமான சாந்தி உண்டாக்கும் எனறு தெரியும். ஞான நூல்களை ச்ரத்தையோடு அப்போது பயின்றால், ஏகமான ஆத்மாவைப் பற்றியும், அதுவே ஈச்வரனாகவும் ஜீவனாகவும் ஆகியிருபப்தைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். தற்போது மனஸின் மேல் மட்டத்தில் தெரிந்துகொள்வது போலில்லாமல், அப்போது பரிசுத்தி பெற்றுவிட்ட அந்த மனஸின் உள்ளேயே ஆழமாகப் பதியும்படியாக வேதாந்த ஞான உண்மைகளைத் தெரிந்துகொள்ளலாம்.

இப்படியெல்லாம் புரிந்துகொண்டால்,

வெய்யிலில், வெள்ளத்தில் மாட்டிக்கொண்டால் ஒதுக்கிடம் வேண்டிக் கதவைத் தட்டுவதுபோல, strong -ஆன will – ஓடு way -யைத் தேடி, ஓடி, மோக்ஷ வாசல் கதவைத் தட்டுவதில் தீவிரம் பிறக்கும்.

அது ஏற்படுவதற்காகத்தான் ஆத்ம த்யானம் சிறிது முதலிலிருந்தே செய்யச் சொல்வது.

ஆத்மாவை த்யானிக்கவும் முடியாததுதான். த்யானம் உள்பட எதற்குமே விஷயமாகாமல் தனித்து நிற்பது ஆத்மா. ஆனால், அதை நம் மனஸுக்குக் கொஞ்சம் புரிய வைப்பதுபோல்க் கொஞ்சம் நினைக்க முடிகிறதோல்லியோ? ‘ஒரு பாதிப்பும் இல்லாமல், அலையெழாத மஹா ஸமுத்ரம் போல அகண்டமாகக் கிடக்கும் பரம சாந்தநிலை’ என்கிற மாதிரி வர்ணித்துப் பார்க்கும்போதே, ஸம்ஸாரப் போராட்டத்தின் பாதிப்பு நம்மைத் தொடாமல், நாம் ஆத்ம ஆகாசமாய் ஆனந்தமாயிருப்பது போன்ற ஓர் எண்ணம் ஏற்படுகிறதோல்லியோ? வெறும் பாவனை, ப்ரமை என்று வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்! எதுவானாலும் நமக்கு ஆறுதலைத் தந்து நம்மைச் சற்று சும்மாயிருக்கச் செய்கிற எண்ணமாக இது இருக்கிறவரையில் உசத்திதான். இந்த்ரியத்தாலும் மனஸாலும் கெடுதல் பண்ணிக்கொண்டேயிருக்கும் நம்மைக் கெடுதல் மாத்திரமின்றி நல்லது கூடப் பணணாமல் உட்கார்த்தி வைக்க வசதி செய்துதரும். இப்படிப்பட்ட எண்ணத்தில் சிறிது நேரமாவது தோய்ந்திருப்பதுதான் ஆத்ம த்யானம் என்பது. இப்படி ஏதோ ஒரு பாவனையில் ஆரம்பித்தாலே, பாவனை வலுத்து முதிர்ந்து தீவிரமாகும்போது வாஸ்தவ நிலை தன்னைத்தானே தெரியப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கும்.

ஆக, ஜனங்கள் தாங்கள் ஒரு போராட்டத்திலே மாட்டிக்கொண்டிருக்கிறோம் என்று நன்றாக உணர்ந்து, போரிலே மாட்டிக்கொண்டவர்கள் அமைதி பிறக்காதா என்று எப்படி ஆர்வமாயிருப்பார்களோ அப்படி அமைதியை வேண்டினால், நிச்சயமாக ஆத்ம த்யானம் செய்ய்ம்பொழுது கிடைக்கும். அதிலே நன்றாக மனம் வைத்தபின் வழியும் பிறக்கும்.

மாயா ஸ்வரூபிணியாக இருந்து, தானே இத்தனை நாமாகவும் ஆகிப் போராட்டத்துக்கு ஆளாகி, அதே ஸமயம் அந்தப் போராட்டத்திலிருந்து விலகியிருந்து அதைப் பார்த்து லீலா விநோதம் கொள்கிறவளாயுமுள்ள அம்பாள் தன்னுடைய ஞான ஸ்வரூபத்தைக்கொண்டு, அதற்குள்ளேயே நம் எல்லோரையும் அடக்கிக்கொண்டு, நமக்குப் போர் தீர்ந்த பெரிய அமைதியை அளிப்பதற்கு ப்ரார்த்திப்போம். இதற்கு அவள் ஸங்கல்பிக்க வேண்டும், பெரிய மனஸ் பண்ணவேண்டும். அவளுக்கு Will -ம் Way -ம் ஒன்றுதான். (ஸங்கல்பமும், அதன் நிறைவேற்றத்துக்கான வழியும் ஒன்றுதான்.) அப்படிச் சொன்னால்கூடப் போதாது. அவளுடைய will -ஏ way -யின் முடிவான Goal –ம்கூடத்தான்! (ஸங்கல்பமே மார்க்க முடிவான லக்ஷ்ய ஸித்தியுமாகும்.) ஆனாலும், அவள் தன் ஸங்கல்ப மாத்ரத்தாலேயே எல்லாம் பண்ணாமல், நம்மையும் கருவி மாத்ரமாக்கி, நாமும் ஏதோ ப்ரயாஸைகள், ப்ரயத்னங்கள் செய்வதுபோலக் காட்டிக் காட்டியே பலன் தருவதாக லீலை செய்பவள், ஆனதால், ஆத்மானந்தத்துக்கான ஸாதனை மார்க்கத்தில் நாம் ப்ரவேசிப்பதற்கும், அப்புறம் விடாமல் ப்ரயாணத்தைத் தொடர்வதற்கும் நமக்கெல்லாம் உத்ஸாஹத்தை அருளுமாறு அவளிடம் ப்ரார்த்திக்கிறேன். முடிவிலே, ஞான வாசலைத் திறந்துவிட்டு அவளுடைய ஸத்ய நிலையிலே நாம் இரண்டறக் கரைந்து, எல்லாப் போராட்டமும் தீர்ந்து சாந்தானந்தமாக ஆவதற்கு அவளையே எல்லாரும் ப்ரார்த்தனை செய்துகொள்வோம். அந்த அம்மா நமக்கு ஊட்ட வேண்டிய பால், போட வேண்டிய பிக்ஷை இதுதான்.

ஞான வைராக்ய ஸித்த்யர்த்தம்
பிக்ஷாம் தேஹி ச பார்வதி ||*


* ஆதிசங்கரரின் ‘அன்னபூர்ணா ஸ்தோத்ரம்’.

ஆத்ம சிந்தனை அனைவர்க்கும் அவசியம்

ஞான வாசல் கதவு திறந்து உண்மையைக் காண்பது மநுஷ்ய ப்ராணி ஒன்றுக்குத்தான் உரியது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ப்ராணி வர்க்கங்களில் மநுஷ்யன் ஒருத்தன்தான் தன்னையே பரப்ஹம்மாகத் தெரிந்துகொள்கிற ஞானத்துக்கு முயல முடியுமென்பதால்தான் ‘அரிது அரிது மானுடராய்ப் பிறத்தலரிது’ என்று சொன்னது. இதையேதான் ஆசார்யாளும் ‘விவேக சூடாமணி’யில் ‘ஜந்தூநாம் நரஜந்ம துர்லபம்’ என்றார்.

இதனால், மநுஷ்ய ஜன்மா எடுத்த எல்லாரும் சற்றேனும் ஆத்ம விசாரம் செய்து ஞானத்தை அடைவதற்கு ப்ரயத்னம் பண்ணவேண்டும்.

இதற்கு பொழுது கிடைக்கவில்லை என்று சொல்வது கொஞ்சங்கூட ஸரியில்லை. ‘ரொம்பவும் தாற்காலிகமான ஸந்தோஷங்களை உத்தேசித்தே செய்கின்ற ஸகல கார்யங்களையும் பண்ணப் பொழுது இருக்கிறது. எது சாச்வதமான ஆனந்தமோ, ஸெளக்யமோ அதற்கு ப்ரயத்னம் பண்ணப் பொழுது இல்லை’ என்று சொன்னால் நம்மைப்போல அசடு இல்லை என்றுதான் அர்த்தம்.

மாயை, இயற்கை, nature, மனஸ் என்று தினுஸு தினுஸாக இத்தனையை வைத்து பகவான் லீலை செய்கிறது எதற்காக? இவற்றைக் கொண்டு செய்கிற கார்யங்களைக் கொண்டே இவற்றுக்கு அப்பாற்பட்ட ஸதாநந்தத்துக்கு நாம் வழி தேடிக் கொள்கிறோமோ என்று பரீக்ஷை பார்க்கிறதற்காகத்தான். ஆகையால் கர்மா கழிகிற வரையிலே இந்த லோகத்திலே நாம் கடமைகளை, கர்மாக்களை அநுஷ்டானம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டியதுதான். இதிலே தாம்பத்யம், சாப்பிடுகிறது, பொழுதுபோக்குகளை ரஸிக்கிறது எல்லாங்கூட அடக்கந்தான். வரம்பு மீறாமலிருக்கிறவறை எதுவுமே அந்ததந்த வயஸுக்கட்டம், வாழ்க்கை நிலைகளில் தள்ளுபடியில்லை. எல்லாம் நாம் பக்வமாதவற்குப் படிப்படியாக உதவி செய்கிறவைதான்.

ஆனால் இதுகளோடேயே நின்று விட்டு ஆத்ம சிந்தனைக்குப் பொழுதே இல்லை என்றால் – நாம் எத்தனை பீ.ஏ., எம்.ஏ., படித்திருந்தாலும், டாக்டர் பட்டம் வாங்கியிருந்தாலும் – அசடு என்றுதான் அர்த்தம். ஸம்பாதிப்பது, படிப்பது, குடும்ப வாழ்க்கை நடத்துவது முதலான எல்லாவற்றுக்கும் ‘டயம்’ இருக்கிறது, நிறைந்த நிறைவைத் தரமுடியாத இதற்கெல்லாம் நிறைவைத் தருகிற ஞானத்துக்கு முயற்சி பண்ண ‘டயம்’ இல்லை என்பது, ‘குப்பை செத்தையை எல்லாம் சேர்த்து மூட்டி எரிப்பதற்கு ‘டயம்’ இருந்தது, ஆனால் குளிர் காய ‘டயம்’ இல்லை’ என்கிற மாதிரிதான்! ‘வேலை செய்யப் பொழுதிருந்தது, கூலி வாங்கப் பொழுதில்லை’ என்று சொல்வது போலத்தான் மற்ற ஸகல கார்யத்துக்கும் முடிவு, லக்ஷ்யம் ஆத்மாவில் கொண்டு சேர்ப்பதுதான். அப்படிப்பட்ட ஆத்மாவைப் பற்றி பாவனையாகவாவது த்யானம் செய்வது, அஞ்சு பத்து நிமிஷமாவது இப்படி த்யானம் செய்வது என்று வைத்துக் கொள்ளாவிட்டால் நாம் செய்யும் அத்தனை கார்யமும் தங்களையே முடிவாக்கிக்கொண்டு த்வைதத்தின் அசாந்திகளையே கொடுத்துக்கொண்டிருக்குமேயொழிய ஆத்மாவுக்கு ஏற்றிவிடாது. அந்த முக்கியமான கார்யத்தைக் கொஞ்சம் ‘ட்ரை’ பண்ணிப் பார்ப்பதற்கு ‘டயம்’ இல்லை. இல்லாவிட்டால் மனஸ் பக்வப்பட்டு வரவில்லை என்று சொல்வதெல்லாம் நொண்டி ஸால்ஜாப்புகள்தான். முயற்சி பண்ணி பண்ணித்தான் மனஸைப் பக்வப்படுத்த வேண்டுமே தவிர, பக்வமில்லை என்பதால் முயற்சி பண்ணுவதற்கில்லை என்பது தலைகீழ் வாதம்.

ஸங்கல்ப பலம் இல்லாததால் தான் இப்படி வாதிப்பது நம்மைப் பற்றியே நமக்குத் தன்னம்பிக்கையோ, ஈச்வராநுக்ரஹத்தில் நம்பிக்கையோ இல்லாததால்தான் சாக்குச் சொல்லத் தோன்றுகிறது.

Where there is a will there is a way: மனமிருந்தால் வழியுண்டு. பொய்யான மனஸைப் போக்கிக்கொண்டு மெய்யான ஆத்ம ஸ்வரூபமாவதற்கு முயற்சி பண்ண வேண்டுமென்று மனமிருந்தால் ஞான வாசல் திறக்க நிச்சயம் வழி உண்டு.

Will -ஸங்கல்ப உறுதி – ஏற்படாததற்கு என்ன காரணம்? வழி திறந்து ஞான பூமிக்குப் போகணும் என்பதன் அவச்யம் நமக்குத் தெரியாமலிருப்பதுதான். பெரிய மழையிலே, அல்லது கொளுத்துகிற வெயிலிலே நட்ட நடுத் தெருவிலே மாட்டிக் கொண்டோமானால் எந்த வீட்டிலாவது வாசல் கதவு திறந்திருக்காதா என்று எத்தனை தவிப்போடு தேடுவோம்? எங்கேயாவது உள்ளே போய் ஒதுங்கியாக வேண்டுமென்று அப்போது தீவ்ரமாக எண்ணம், அதாவது ஸங்கல்பம் இருப்பதால், மூடியுள்ள ஏதாவதொரு கதவை இடித்தாவது திறக்கப் பண்ணி வழி ஏற்படுத்திக் கொள்கிறோம். இம்மாதிரி ஆத்மாவுக்குள்ளே போய் ஸ்வஸ்தமாக ஸம்ஸார வெய்யில், அல்லது ஸம்ஸார ப்ரளயம் பாதிக்காமல் இடம் தேடிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணமில்லாததால்தான் விமாசனத்துக்கான ப்ரயாஸை பண்ணாமலே இருக்கிறோம்.

இப்படியிருப்பவர்களுக்கு ஸம்ஸாரத்திலிருக்கிற கஷ்டத்தை, பொய்யை எடுத்துக்காட்டி, விடுதலைக்கான ஆர்வத்தை ஸங்கல்பத்தை ஏற்படுத்தி, அப்புறம் மார்க்கத்தையும் சொல்லிக் கொடுப்பதற்குத்தான் மடாலயங்கள் இருக்கின்றன. உங்களை இவ் விஷயமாகச் சிந்தனையைத் திருப்பச் செய்வதுதான் எங்கள் மாதிரியானவர்களின் கடமை.

நல்லதற்கும் மேலே செல்க!

நல்லது, தர்மமானது என்கிற தேவ கணங்களைவிட்டு வைத்தால் இவையும் ஆத்மாவுக்கு அந்யமான மனஸின் பாற்பட்டவையேயாகையால், இவற்றாலும் தொந்தரவு வரக்கூடும் என்ற நினைவு எப்போதும் நமக்கு இருந்து நம்மை ஜாக்ரதைப்படுத்த வேண்டும்.

World War-ல் (உலக யுத்ததில்) Allies (நேசநாடுகள்) என்று ப்ரிட்டன், அமெரிக்கா, ப்ரான்ஸ், அப்புறம் ரஷ்யா முதலானவை ஒருபக்கமும், ஹிட்லர் (ஜெர்மனி), முஸோலினி (இத்தாலி), ஜப்பான் ஆகியவை (அச்சு நாடுகள்) என்று இன்னொரு பக்கமாகச் சண்டை போட்ட போது, இருப்பதற்குள் நேசநாடகள்தான் நல்லவை, ஓரளவு தேவசக்தியோடு கூடியவை என்று தோன்றிற்று. ஹிட்லர், முஸோலினியும், ஜப்பான்காரர்களும் பண்ணினவை அஸுரத்தனமாகத் தெரிந்தன. நல்லவேளையாக நேச நாடுகள் ஜயித்தன. ஆனால் அப்புறம் என்ன ஆச்சு? அவர்களிலேயே இரண்டுபிரிவாகப் பிளந்து போயிருக்கிறார்கள். ஒருத்தரையொருத்தர் எதிர்த்துக்கொள்கிறார்கள். அஸல் யுத்தத்தைவிட மோசமாக ஸதாவும் கிலியிலும் அவநம்பிக்கையிலும் உலகத்தைத் தவிக்கும்படியாகக் ‘கோல்ட்வார்’ நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவ்வளவு தூரம் போகவேண்டாம். இங்கே நம்ம ஸமாசரத்தை எடுத்துக்கொண்டால், நம்முடைய உசந்த நாகரிகத்தைக் கெடுத்துக்கொண்டிருந்த வெள்ளைக்காரர்களை எதிர்த்து ஸ்வதந்த்ரப் போராட்டம் ஆரம்பித்து நடத்தியபோது, அந்தப் போராட்டத்தை நடத்திய தலைவர்களின் தன்மை, அவர்களுடைய கொள்கை முதலியவ்றைப் பார்க்கும்போபது மொத்தத்தில் நல்லதான – அதாவது தேவர்களின் படையான – அம்சங்களே நம்முடைய தரப்பாக இருக்கிறதென்றும், வெள்ளைக்கார ஆட்சி எத்தனை நல்ல வேஷம் போட்டாலும் அஸுரக் கட்சியைப் போலத்தானென்றும் தோன்றியது. அப்புறம், அவர்களைப் போகப் பண்ணிவிட்டு, ஸ்வதந்த்ர நாடாக நாம் இருக்கும்போது என்ன பார்க்கிறோம்? ஸ்வதந்த்ரப் போராட்டத்தை ஜயித்துக்கொடுத்த, நல்லதாகத் தெரிந்த கோஷ்டியிலேயே இரண்டு, மூன்று, நாலு என்று பிரிவுகள் ஏற்பட்டு ஒருத்தரையொருத்தர் அஸுரர்களாக வர்ணித்துக்கொண்டு ஆயுதமில்லாவிட்டாலும் வாய்ச்சண்டை போட்டுக்கொண்டிருப்பதைதான் பார்க்கிறோம். இதிலே யாரைக் கூடிய மட்டும் தேவஸக்திகளோடு சேர்த்துச் சொல்லலாம் என்றே ஸரியாகத் தெரியாமல் ஜனங்களுக்குள் அபிப்ராய பேதங்கள் ஏற்பட்டுப் பிரிந்து பிரிந்து நிற்கிறார்கள்.

எதற்குச் சொல்ல வந்தேனென்றால், எந்த நல்லதும் அப்படியே சாச்வதமாயிருந்துவிடாமல் அதிலும் கெடுதல்கள் வரத்தான் செய்கின்றன. ஆகையினால் நல்லது என்று ஒன்றைப் பிடித்த பிடியாக வைத்திருக்க வேண்டுமென்ற ஆசையும் இல்லாமல், ஆனாலும் இப்போது நம்மைப் பிடித்த பிடியாகப் பிடித்தாட்டுகிற கெட்டதைப் போக்கிக்கொள்ள நல்லவற்றைத்தான் நாம் பின்பற்ற வேண்டுமென்று புரிந்துகொண்டு ஸின்ஸியராகக் கர்மாநுஷ்டானம், பக்தியுபாஸனை செய்துகொண்டே போகவேண்டும். கர்ம யோகம், அப்புறம் பக்தி யோகம் என்று சொல்லி முடிவிலே பகவான் நிலை நாட்டின அந்த ஸாங்க்ய (ஞான) யோகத்தையே, அவர் கர்மயோகத்தைச் சொல்வதற்கு முன்னாலும் அஸ்திவாரம் போலப் போட்டுக்கொடுத்ததை மறக்காமல் நாம் ஆரம்பத்திலிருந்தே சிறிதேனும் ஆத்ம த்யானம் வைத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் தேவர்களுக் கிடையிலேயே அல்லது தேவர்களாலேயே சண்டை என்பதற்கும் இடமேற்படுவதற் கில்லாமல், சண்டைக்கு ஆஸ்பதமாக ஜீவபாவத்துடன் இருக்கிற ஆஸாமியே எடுபட்டுப்போய் ஆத்மா மட்டும் இருப்பதான, சண்டை யறியாத சாச்வதமான சாந்த நிலைக்கு என்றைக்காவது ஒரு நாள், இந்த ஜன்மாவில் இல்லாவிட்டாலும் எந்த ஜன்மாவிலாவது ஒரு நாள்போய்ச் சேர கொஞ்சங் கொஞ்சமாக வழி திறந்துவிடும்.

இன்றிலிருந்து தொடங்குக!

நீங்கள் எல்லாரும் அர்ஜுனர்கள்தான். அவன் மாதிரி விஷாத யோகத்தில் (மனம் குழம்பி) இருப்பவர்கள்தான். அதனால் அவனைப் போலவே பகவான் சொன்ன யோகங்களில் நீங்களும் போய், கீதையின் கடைசியில்* அவன் ஸந்தோஷமாக மனம் ரொம்பி, “என் புத்தி மயக்கம் போச்சு. ஸந்தேகம் தீர்ந்தது. உன் க்ருபையினாலே சரியான ப்ரஜ்ஞை உண்டாகிவிட்டது” என்று சொன்ன நிலையை அடையவேண்டுமென்று க்ருஷ்ண பரமாத்மாவிடம் ப்ரார்த்தனை செய்துகொள்கிறேன்.

இன்றிலிருந்து அஸுர வ்ருத்திகளை ஜயிப்பதற்காக தெய்விகமான வ்ருத்திகளை நன்றாகத் திரட்டிக்கொண்டு நிறையக் கர்மாநுஷ்டானம் செய்யவும், பரம எளிமையோடு பரமேச்வரனிடம் பக்தி செலுத்தவும் ஆரம்பியுங்கள். தெய்விகமானது உள்பட எந்த வ்ருத்தியும் இல்லாத, சித்தமே இல்லாத சித்ஸ்வரூப ஆத்மாதான் முடிவு என்பதை மறக்காமல் இருங்கள். இப்போது எத்தனை அழுக்குப் போர்வைகளால் அந்த ஆத்மாவை மூடி மறைத்திருந்தாலும் அதுவாகத்தான் எப்போதும், இப்போதும்கூட நாம் இருக்கிறோம் என்ற பாவனையில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருங்கள். அப்போதப்போது கார்யங்களுக்கு இடையிலே கார்யமில்லாத மஹா பெரிய சாந்தமாய் விரிந்து விசாலமாயிருக்கிற அந்த நம்முடைய சத்யமான ஸ்வபாவத்தைக் கொஞ்சம் நினைத்துக்கொள்ளப் பாருங்கள். அதுதான் கார்யத்திலே நாம் ஈடுபட்டுல்லபோது நம்முடைய மனஸினால் ஏற்படக்கூடிய சொந்தப் பற்றுக்களைப் போக்கி, கர்ம பாக்கி ஜாஸ்தியாகாமல் குறைப்பதற்கு உதவி செய்யும்.

அஸுரர்களை அழிக்க முயற்சி செய்யும்போதே தேவர்களும் பிற்பாடுபோகவேண்டியவர்கள் என்பதை மறக்காமல் இருங்கள். வாழ்க்கைப் போராட்டத்தை புத்திசாலித்தனமாக நடத்துங்கள். “மாம் அநுஸ்மர” என்று சொன்ன பகவானையே நினைத்துக்கொண்டு சண்டை செய்தால் அவனிடம் மட்டுமே பற்று இருக்குமே தவிர, தேவர்களிடம் பற்று ஏற்பட்டுவிடாமலிருக்கும்; அப்புறம் அவர்களையும் அவனுடைய அருள் கொண்டு போகப் பண்ணிவிடலாம். இன்னும் இதற்கும் மேலே அந்த பகவனிடமும்கூட அவனுடைய இந்த ஸகுண ஸ்வரூபத்தில் பற்று வைத்துப் பிடித்துக்கொள்ளாமல் அத்விதீயமான நிர்குண நிஜ ரூபத்திலே போய் ஒன்றுபட்டு விடுவதற்கு ஸாதனை செய்யவேண்டும். அதற்கு ஒரு சின்ன அங்குரார்ப்பணமாகத்தான் இப்போதிலிருந்தே ஆத்ம த்யானம் சற்று வைத்துக் கொள்ளச் சொன்னது.


* கீதை 18.73

கீதை போடும் அத்வைத அஸ்திவாரம்

ஞானத்தையும் விட்டுவிடாமல் நிறையக் கொட்டி உபதேசித்தார். அதனால்தான் அதை “பிரஸ்தான த்ரய”த்தில் (ஆதார ப்ரமாணமான மூன்று நூல்களில்) ஒன்று என்றே வைத்து ஆசார்யாள் பெரிதாக பாஷ்யம் பண்ணியது.

ஆரம்பத்திலிருந்தே ஆத்மாவில் ஒரு பிடிப்பு ஏற்படுத்தித் தரவேண்டுமென்றுதான் கீதையில் அர்ஜுனனுக்கு என்றே முக்யமாக ஏற்பட்ட கர்ம யோகத்தை உபதேசம் செய்வதற்கு முந்தியே பரம அத்வைதமாகவும் ஞானமாகவும் பகவான் ஆரம்பித்துருக்கிறார்.

கீதோபதேசம் ஆரம்பிப்பது அதன் இரண்டாம் அத்யாயம் பதினோராம் ச்லோகத்தில். அதற்கு முந்தி இருப்பதெல்லாம் முகவுரை மாதிரிதான்; எந்த ‘ஸெட்டிங்’கில் கீதை பிறந்தது என்று background-ஐ வர்ணிப்பதுதான். உபதேசம் ஆரம்பிக்கும் முதல் ச்லோகத்திலேயே பகவான், “இருக்கிறவர் செத்தவர் என்று யாரைப் பற்றியும் ஞானிகள் கவலைப்படுவதில்லை” என்று சொல்லி, மேலே தொடர்ந்து, “ஏனென்றால் யாருமே எப்போதுமே இல்லாமலிருப்பதென்பதே கிடையாது. நாசமில்லாத நித்ய வஸ்துவாயுள்ள ஆத்மாதான் எல்லாரும். அதற்கு உடம்பு என்று என்னவோ ஒன்று ஏற்பட்டிருக்கிறது. சாவதும் இந்த உடம்புதான்” என்று பரமாத்வைதமாகவே பேசுகிறார். இப்படி ஒரு இருபது ச்லோகத்தில் படபடவென்று ஞானமயமாகக் கொட்டித் தீர்த்த அப்புறந்தான், ஸ்வதர்ம கர்மாநுஷ்டானம் என்பதாக அர்ஜுனனுக்கு ஏற்பட்ட வழிக்கே வருகிறார். “உன்னுடைய ஸ்வதர்மத்தை வைத்துப் பார்த்தாலும் நீ யுத்தத்திலிருந்து வாபஸ் வாங்கிக் கொள்ளக்கூடாது. க்ஷத்ரியனாகப் பிறந்தவனுக்கு தர்ம யுத்தத்தைவிட ச்ரேயஸான கார்யம் என்ன இருக்கிறது?” என்பதாக* ப்ரஹ்மத்திலிருந்து கர்மத்துக்கு வருகிறார்.

பூர்வ-உத்தர மீமாம்ஸைகளில் ஒன்றுக்கப்புறம் மற்றது தர்மத்திலிருந்து ப்ரஹ்மத்துக்கு அழைத்துப்போவதாகச் சொன்னேன். ப்ரஹ்மத்தைப் பற்றிய சிந்தனையை ஊட்டாமலே தர்மத்தை மட்டும் பூர்வமீமாம்ஸை சொன்னதால்தான் அதை வேதாந்தம் கண்டிக்க வேண்டியிருந்தது. அந்தத் தப்பு நடக்காமல்தான் கர்மமார்கத்திலே ஸ்வதர்மாநுஷ்டானம் பண்ணுவதற்கு அர்ஜுனனை ‘இனிஷியேட்’ செய்வதற்கு முந்தியே ப்ரஹ்ம அஸ்திவாரத்தை பகவான் போட்டுக் கொடுத்துவிடுகிறார்.

ஸ்வதர்ம கர்மா என்கிற யோகம்தான் அர்ஜுனனுக்கு அவர் குறிப்பாக உபதேசிக்க நினைத்தது. ஆனாலும் அதற்கு முந்தியே ‘ஸாங்க்யம்’ என்று அவர் சொல்வதான ஞானத்தின் கொள்கைகள் அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டுமென்று பகவான் நினைத்து அவற்றில் தொடங்கினார். அவற்றைச் சொல்லி முடித்தபின்,

   “ஏஷா தே(அ)பிஹிதா ஸாங்க்யே
   புத்திர்-யோகே த்விமாம் ச்ருணு”        (2.39)

-“ஞான யோகத்தின் விஷயமான அறிவைச் சொல்லியாயிற்று; இப்போது கர்ம யோக விஷயமானதைக் கேள்” என்று ஆரம்பிக்கிறார்.

அப்புறமும் அந்த அத்யாயம் முழுக்கக் கர்மயோகத்தின் முடிவு முக்குணங்களுக்கும் மேலே போவது, எல்லா த்வந்தங்களையும் இல்லாமல் செய்துகொள்வது (அதாவது அத்வைதமாவது) என்றெல்லாம்தான் காட்டிக்கொண்டே போய் பரமஞானியான ஸ்தித ப்ரஜ்ஞனின் லக்ஷணங்களை விரிவாக எடுத்துச்சொல்வதோடு முடிக்கிறார்.

தர்மமே தெரியாமல் உறவுப் பாசம்தான் ப்ரேம தர்மம் என்றும், தர்மத்துக்காகக்கூடப் போரிடாமலிருப்பதுதான் அஹிம்ஸா தர்மம் என்றும் குழம்பிக் கிடந்த அர்ஜுனனுக்கு, தர்மத்துக்கும் மேம்பட்ட ப்ரஹ்ம நிலைக்குப் போய்க் கொஞ்சங்கூடக் குழப்பம் கலக்கமில்லாமல், அசையாத பூர்ண ஸமுத்ரம் மாதிரி உள்ள ஸ்தித ப்ரஜ்ஞனைப் பற்றி வர்ணனை கொடுத்து முடிக்கிறார்.


* கீதை 2.31

முதலிலிருந்தே மூன்று மார்க்கமும்

இப்படி முதலிலிருந்தே கர்மா, பக்தி, ஞானம் மூன்றும் கலந்து வரணும் – வெவ்வேறு ‘ப்ரபோர்ஷ’னில் தானென்றாலும் ஒன்றுமட்டும் என்றில்லாமல் மூன்றும் சேர்ந்து வரணும் – என்பதை கீதையில் பகவான் ஸ்பஷ்டமாக்கிக் கொடுத்திருக்கிறார். அதனால்தான் இந்த மூன்று யோகங்களையும் சொன்னார்.

“யுத்யஸ்வ!” – “உம்! போடுடா சண்டை!” என்று அர்ஜுனனை நன்றாகக் கார்யத்தில் உசுப்பிக் கிளப்பினார். “நான் ஞானியாகப் போகிறேனே! யுத்ம் எதற்கு?” என்றவனை, “அதெல்லாம் கூடாது. “யுத்யஸ்வ விகத ஜ்வர:” என்றார்.1

“விகத ஜ்வர” என்றால் என்ன? “ஜ்வரமில்லாதவனாக” என்று அர்த்தம். “அர்ஜுனனுக்கு ஜ்வரமா அடிச்சுது?” என்றால், ஆமாம், தன் மனுஷ்யாளைக் கொல்வதா என்ற பாசஜ்வரம் அடித்தது. மனஸ் அவனுக்குக் கொதியாகக் கொதித்தது. அது ஜ்வரம்தான்! இந்த பந்துத்வ ஆசையினால், தர்மத்துக்காகப் பண்ணவேண்டிய யுத்தத்தைப் பண்ணப்படாது என்று நினைத்தான். இப்படி ஆசாபாசம் மனஸிலே இருக்கும்போதே, தர்மத்துக்கும் மேற்பட்ட ஞானத்திலே தனக்கு ரொம்ப ஈடுபாடு ஏற்பட்டுவிட்டார்போல, “ராஜ்யாதிகாரத்தில் என்ன இருக்கு? நான் ஸந்நியாசியாகிப் பிச்சை வாங்கிச் சாப்பிடறேன்” என்று வேதாந்தமெல்லாம் சொன்னான்.

பாச ஆசையில் சிக்கியிருந்த இவனை ஸரி செய்யவேண்டியதே பகவானின் கார்யமாயிருந்தது. ஆனபடியால் இவனுக்கு ஆரம்ப உபாயமான கர்ம மார்க்கத்தையே சொல்ல வேண்டியிருந்தது. அதனால்தான் அர்ஜுனன் என்கிற அந்தத் தனி மநுஷ்யனுக்கான வழி நிஷ்காம்ய கர்மா என்பதால் அதையே ரொம்பவும் சிலாகித்து, விஸ்தாரம் பண்ணி ஸ்வாமி உபதேசம் செய்தார். கீதை குறிப்பாக அர்ஜுனனை முன்னே வைத்துச் செய்த உபதேசமானதால் அவனுக்கானதை, அவன் மாதிரியானவர்களுக்கானதை அழுத்தம் கொடுத்துச் சொன்னார். இதைத் தப்பாகப் புரிந்துகொண்டுதான் அதாவது இதுதான் அத்தனை பேருக்குமே பகவான் சொன்ன முக்யமான வழி என்று தப்பர்த்தம் செய்துகொண்டுதான் இப்போது பெருந்தலைகளாக இருப்பவர்களிலிருந்து ஆரம்பித்து பல பேர்கள், “கீதையின் தாத்பர்யம் கர்மயோகம்தான், ஞானயோகம் இல்லை” என்கிறார்கள்.

ரஜோகுண ப்ரதானனான மஹாவீரன் அர்ஜுனனை மெஜாரிட்டியினரான ஸாதாரண ஜனங்களின் ‘ரெப்ரஸென்டடிவ்’ -ஆக வைத்தே பகவான் கர்மாவை உபதேசித்தார், பெரிய ஸாதகனாக வைத்தல்ல. கர்மா பண்ணுவது, ஆனாலும் மனஸின் கொதிப்பு முதலான ஸொந்த உணர்ச்சி க்ருத்ரிமங்கள் இல்லாமல் பண்ணுவதுதான் அவனுக்கான வழி என்பதாக உபதேசித்தார்.

ஆனால் வெறும் வரட்டு கர்மாவாயில்லாமல் பக்தி சேர்ந்தால்தான் கர்மயோகத்தைச் செவ்வனே செய்து பூர்த்தி பண்ணமுடியுமென்பதால், “சண்டை போடு” என்று முதலில் சொன்னதற்கு அப்புறம் ஒரு qualifying clause சேர்த்து,

“மாம் அநுஸ்மர யுத்ய ச”2

என்றார். “வெறுமனே சண்டை போடாதே! என்னை நினைச்சுக்கோ – மாம் அநுஸ்மர! வெளி ஸ்மரணை யுத்தத்தில் இருந்தாலும், அதற்குத் துணையாக உள்ளே இருக்கிற அநுஸ்மரணை என்னிடம் இருக்கட்டும். அப்படி பக்தியைத் துணை சேர்த்துண்டு சண்டை போடு! அதாவது தேவாஸுர யுத்தத்திலே அஸுர சக்திகளை எதிர்த்து ஸத்கர்ம, ஸத்குணங்களின் படையைக்கொண்டு ஸத்பக்தியின் துணையில் சண்டை போடு” என்று சொல்லியிருக்கிறார்.

கர்ம யோகத்துக்கே அதிகாரியாயுள்ள அர்ஜுனன் (அதாவது அவனால் ரெப்ரஸென்ட் பண்ணப்படும் பொதுவான ஸமூஹம்) அதிக பக்ஷமாக முயற்சி பண்ணக்கூடியது பக்தியிலே சரணாகதி செய்வதுதானே ஒழிய, ஞானத்திலே ப்ரஹ்ம நிர்வாணம் அடைவதல்ல. அதனால்தான் முடிக்கும்போது பகவான் “தர்மத்தையெல்லாம் விட்டு என்னிடம் சரணாகதி செய்” என்றது. “கர்ம மார்க்கமான ஸ்வதர்மத்தில் விசேஷமாக தூண்டிவிக்கப்படுகின்ற அவன் அதையே goal-ஆக நினைக்கும்படியாக முடிக்கப்படாது. அதற்காக ‘ப்ரஹ்மமாக, ஆத்மாவாக இரு’ என்று முடித்தாலும் அவனுக்கு எட்டாது. அதனாலே, ‘இந்த ஸ்வதர்மத்தோடு எல்லாம் முடிந்து விடவில்லை. அப்புறம் நீ இதைப்பற்றிய எண்ணத்தையும் விடவேண்டும். இதையே ஆசைப் பிடிப்போடு பிடித்துக்கொண்டு நின்றுவிடப்படாது. தர்மா தர்மங்கள் அடிபட்டுப் போன ஞானத்தில் நீயாகப் போய் நிற்க இப்போது பக்வப்படவில்லை. நீ என்ன, யாருமே தாங்களாக அதை ஸாதித்துக்கொள்ள முடியாது. நான்தான் அதை ஸாதித்துத் தர வேண்டியவன். முதலிலிருந்தே ஞான மார்க்கத்தைக் லக்ஷ்யமாகக் கொண்டவனுக்கு என்னைக் காட்டிக் கொல்லாமலேகூட நான் இப்படி ஸாதித்துத் தருவதுண்டு. ஆனால் உன் விஷயம் வேறு. அதனால் உனக்குச் சொல்கிறேன்: தர்மாதர்மங்களை நினைக்காமல் நானே கதி என்று என் காலில் விழுந்துவிட்டால் போதும் என்று வைத்துக்கொள். இப்போதைக்கு அதுதான் லக்ஷ்யம் என்று வைத்துக்கொள். அப்புறம் எது தான் இறுதியான, சாச்வதமான லக்ஷ்யமோ அதை நான் கவனித்துக் கொள்கிறேன்” – என்று இத்தனை அபிப்ராயங்களை அடக்கி சரணாகதியைச் சொல்லி கீதையை முடித்துவிட்டார்.

இதையும் ரொம்பப் பேர் ஸரியாய் புரிந்துகொள்ளவில்லை. அர்ஜுனனின் ‘நேச்சரை’ உத்தேசித்து அவனுக்கு உடனடி ஸாதனா மார்க்கமாகக் கர்மாவைச் சொன்னதால் அதுதான் உத்தம ஸாதகர்கள் உள்பட எல்லாருக்குமே முடிவான வழி என்று தப்பர்த்தம் செய்து கொண்டது போலவே, சரணாகதியைச் சொல்லி கீதையை முடிப்பதால் பக்திதான் அதற்குப் பரம தாத்பர்யமே தவிர ஞானமில்லை என்று இவர்கள் சொல்கிறார்கள். அர்ஜுனன் ‘ஸ்வதர்மத்தைத்தானே பகவான் இவ்வளவு விசேஷித்துச் சொல்கிறார்? அதனால் அதுவே போதுமாக்கும், அதோடேயே ஸாதனை பூர்த்தி அடைந்து விடுகிறதாக்கும்’ என்று நினைத்துவிடப்படாதே என்று பகவான் பார்த்தார். அத்வைத ஞானத்தைச் சொல்லி முடித்தாலும் அவனுக்கு அது எங்கேயோ எட்டா நிலையாயிருக்குமே என்றுதான், அதற்கு முந்தையபடியான சரணாகதியைச் சொல்லி முடித்தாரென்று புரிந்துகொள்வதே கீதையின் கருத்தை ஸரியாகப் புரிந்து கொள்வதாகும்.

“ஆனாலும் ஸத்ய ஸத்யமான தத்வத்தை அர்ஜுனனுக்குச் சொல்லாமலே விடப்படாது. ஸாதனையில் எந்த லெவலில் இருப்பவர்களானாலும் ஸரி, அவர்கள் ஆத்மா என்ற ஒன்றைப் பற்றி எதுவுமே தெரியாதவர்களாக இருக்கவிடப்படாது. ‘நாம் செய்கிற எல்லா ஸாதனையும் அடிப்பட்டுப் போகிற ஓர் உத்தம நிலை உண்டு. அங்கே ஸாதனை, ஸாதிக்க வேண்டியது என்பவையே இல்லாமல் ஸாத்ய வஸ்துவாக, ஸத்யப் பொருளாக, ‘ஸத்’தாக இருந்து கொண்டு மட்டும் இருப்போம். ‘யுத்யஸ்வ’ -வுக்கு இடமே இல்லாத அங்கே சேர்ந்தால்தான் ‘சாந்தி’ என்பதை எல்லோரும் கொஞ்சமாவது தெரிந்துகொண்டு, கொஞ்ச நேரமாவது அப்படி சாந்தமாக, சும்மா இருக்கவேண்டும். பாவனையாகவாவது அப்படி இருக்க முயற்சி பண்ணவேண்டும்” என்றெல்லாமும் பகவான் நினைத்ததால்தான் ஞானத்தையும் நிறையச் சொல்லி, ப்ரஹ்ம நிர்வாணம் என்கிற அத்வைத மோக்ஷத்தில் சேருவது வரையில் அதை விளக்கியிருக்கிறார்.

கடைசி அத்யாயத்திலும் கார்யமற்ற ஞான ஸந்நியாஸ யோகத்தைத்தான் நிறையச் சொன்னார். ‘லாஜிகலாக’ப் பார்த்தால் அதோடேயே முடித்திருக்க வேண்டுமென்று தோன்றும். முடிவான லக்ஷ்யத்தோடுதானே உபதேசத்தை முடிக்கவேண்டும்? ஆனாலும் பரம க்ருபையோடு சிஷ்யனின் லெவலை அநுதாபத்தோடு பார்த்து ‘லாஜிக’லாக இல்லாமல் ‘ஸைகலாஜிக’லாக முடித்திருக்கிறார். அர்ஜுனனை அதிகபக்ஷமாக அப்போது உயர்த்தக்கூடிய தத்வத்தைச் சொல்லி முடிப்பதுதான் அவனுக்கு ஆறுதலாக, உத்ஸாஹமாக, நம்பிக்கை ஊட்டுவதாக இருக்குமென்பதால் பக்தி – சரணாகதி என்று திருப்பி முடித்துவிட்டார்.

“ஸந்நியாஸம் ஏற்று ஞானியாகி அஹங்காரம், காமம், க்ரோதம் ஆகியவற்றிலிருந்து விமோசனம் பெற்று, ‘என்னுடையது’ என்னும் எண்ணம் அற்றுப்போய் சாந்த மயமாகிவிட்டவன் ப்ரஹ்மமாக ஆவதற்கு உரியவனாகிறான். அப்புறம் அவனுக்கு ஆத்மா பிரஸன்னமாகி, துக்கமோ சாந்தமோ ஏற்படமுடியாமல் ஸர்வபூத ஸமத்வ பாவனை உண்டாகி ப்ரஹ்ம பூதனாகிறான்” என்று முடிந்த நிலையை முடிவான (பதினெட்டாம்) அத்யாயத்தில் சொல்லிக்கொண்டு போகிறார். பகவான் அதோடேயே உபதேசத்தைப் பூர்த்தி பண்ணியிருக்கலாம். ஆனாலும் இப்படிச் சொன்னவுடன் ‘என்னடா இது? இப்படி முடித்தால் எங்கேயோ உச்சி மாடியில் ஏற்றிவிட்டு ஏணியை எடுத்துவிட்டர்போல இவன் (அர்ஜுனன்) ப்ரமித்துப் போய்விடப்போகிரானே!’ என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது. அதனால்தான் அவனுக்கு பக்தியோடு சொல்லி முடிப்போமென்று, “அந்த ப்ரஹ்ம பூதனுக்கு என்னிடம் உயர்ந்த பக்தி ஏற்படுகிறது” என்று ஆரம்பித்து, சரணாகதியிலே முடித்தாரென்று தோன்றுகிறது. இதற்கு முந்தி அவனுக்கு விச்வரூபம் காட்டி பயபக்தியை முதலில் உண்டுபண்ணி, அப்புறம் விஷ்ணு ரூபம் காட்டி ப்ரேம பக்தியும் உண்டாக்கியிருந்ததால், ப்ரபத்தி பண்ணுகிற நிலை வரைக்கும் அவனை உயர்தலாமென்று இப்படி முடித்ததாகத் தோன்றுகிறது.

ஆசார்யாள், முடிவில் ப்ரபத்தி என்று சொல்லப்படும் பராபக்தியே ஞானம்தான் என்கிறார்.

கர்மாவை அர்ஜுனனுக்கு விதித்துக் கார்யத்தில் ஏவும்போதே விச்வரூப தர்சனம் அளிக்கும் அளவுக்கு அவனை பக்தியிலும் பகவான் அழைத்துக்கொண்டு போனதால் அதற்குப் பொருத்தமாக சரணாகதியில் முடித்தார்.


1கீதை 3.30

2கீதை 8.7

சுமை தெரியாமலே கார்யம் செய்வது

அப்புறம் இவனுக்கு பாரம் தெரியாமலே ஈச்வரன் இவன் மூலமாக லோகக்ஷேமத்துக்காக அநேக கார்யங்களைச் செய்தாலும் செய்விக்கலாம். ஜனகர் ராஜ்ய “பாரம்” வஹித்ததுகூட இப்படித்தான். ஆனால் அவருக்கு அது பாரமாகவோ, தாம் அதை வஹிப்பதாகவோ எண்ணம் இருந்தே இருக்காது. ‘தூக்கத்தில் பால் குடிக்கிற குழந்தை’ என்று சொன்னாற்போல கார்யம் செய்வதாகத் தெரியாமலே செய்கிற உத்தம நிலை அது. இப்போது நமக்குக் கொஞ்சமும் எட்டாத நிலை. “தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவதெக்காலம்?” என்று பத்ரகிரியாரைப் போன்ற பரம வைராக்யசாலிகளே குறிப்பிடுவதான, கர்த்தா உணர்ச்சியில்லாமலே கார்யம் செய்வதான, அந்த நிலை நமக்கு ரொம்பவும் தள்ளி எக்காலத்திலோ ஏற்பட்டால்தான் உண்டு.

எல்லா ஞானிகளுமே இப்படி லோக க்ஷேம கார்யம் பண்ணும்படி ஈச்வரன் வைத்திருக்கிறானென்று இல்லை. லோகத்தின் கண்ணுக்கே தெரியாமல் எங்கேயோ மலையிலே குஹையிலே தன்னை மறந்து கண்மூடி நிர்விகல்ப ஸமாதியில் இருந்து கொண்டிருப்பவர்களாகவும் ஞானிகள் இருக்கலாம். இன்னம் சில ஞானிகள் லோகத்துக்கு ஞானோபதேசகர்களாக இருக்கும்படி இருக்கலாம். சில ஞானிகள் லோகஜனங்களைப் போல தர்மாசரணைகள் பண்ணிக்கொண்டு உத்தமமான குணங்களைக் காட்டுபவர்களாக நடைமுறை உலக ஜனங்களுக்குங்கூட ஐடியலாக கார்யம் பண்ணலாம்! அது கார்யம்தான், நடைமுறை உலகத்தைச் சேர்ந்ததுதான் என்றாலும் இந்தக் கார்யத்திலிருந்தும் உலகத்திலிருந்தும் விடுவித்து நிஷ்கர்மத்தில் நிஷ்ப்ரபஞ்சத்தில் சேர்க்க உதவுவதாகும் என்பதால்தான் இந்த ஞானிகளுக்கு ஈச்வரன் இப்படி வேஷம் தருவது. அவர்களைப் பார்த்து அப்படியே கர்மா, பக்திகளை ஆரம்பிப்பதுதான் நமக்கு வழி.

நாம் செய்ய வேண்டியதான இந்தக் கர்மாநுஷ்டான உபாஸனைகளிலேயே அதீதப் பிடிப்பு, அதாவது ஆசைப்பற்று ஏற்படுவதற்கு விடக்கூடாது. ஆசை வந்துவிட்டாலே அப்புறம் அனர்த்த பரம்பரைதான் என்பதால்தான் ஆரம்பித்திலிருந்தே, ‘இது அத்தனையும்கூட தவிர்க்க முடியாத மாயைதானே தவிர அஸல் ஸத்தியமில்லை; இவையும் இல்லாத ஆத்மாவே நம் லக்ஷ்யம்; அதை நேரே பிடிக்கமுடியவில்லை என்பதால்தான் இவற்றைக் கொண்டு பிடிக்கிற இடத்துக்குப் போக முயற்சி பண்ணவேண்டியதாயிருக்கிறது’ என்ற அத்வைதமான ஸ்மரணையைத் துளியாவது வைத்துக் கொள்ள வேண்டுமென்பது.

ஆத்ம தர்சனம் கிடைக்கணுமானால், அழுக்கடைந்ததும், ஆடிக்கொண்டேயிருப்பதுமான நம்முடைய சித்தம் சுத்தமாகவும், நிலையாய் நிற்பதாகவும் ஆகவேண்டும். அழுக்கு ஜலத்திலே, அலைகள் ஆடிக்கொண்டேயிருந்தால் அடியிலே இருப்பது தெரியாதல்லவா? அப்படித்தான் (இதுவும்). சித்த அழுக்குப் போக கர்மா; அதன் ஆட்டம் நிற்க பக்தி.

கர்மாவில் நிறைய ஆரம்பிக்கும்போதே பக்தியையும் கூடவே வ்ருத்திப் பண்ணிக்கொண்டு போகவேண்டும். ஸகல கர்மத்துக்கும் பலதாதாவான ஈச்வரனை நினைத்து அவன் பாதத்திலே கர்ம பலனை அர்ப்பணிப்பதாயிருந்தால் ஒழிய, நிஷ்காம்யம் என்று செய்யும் கர்மா எல்லாம் வரட்டு வரட்டு என்றே இருக்கும். அதனால் கொஞ்ச காலத்தில் அலுத்துவிடும். அவனிடம் பக்தி ப்ரேமைகளைக் கலந்துகொண்டாலே, வரட்டு மாவில் நெய்யைப் போட்டுப் பிசைந்தால் அதை நன்றாக நீட்டி நீட்டி ‘இட்டுக்கொண்டே’ போகிறது போல் கர்மாவை நன்றாக மணக்க மணக்க, நைஸ் பண்ணித் தொடர்ந்து செய்துகொண்டு போகமுடியும். ஈச்வர பக்தியும் த்வைதமாய் நின்றுவிட்டால் போதும் என்ற ஸாதனா-அஹங்காரம், ஸாதனா-அபிமானம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இதெல்லாவற்றுக்கும் ஸத்தியத்திலேயே லக்ஷ்யமிருக்கவேண்டும். அதற்கு ஆத்ம சிந்தனை தொடக்க காலத்திலிருந்தே கொஞ்சம் இருந்தால்தான் முடியும்.

கட்டவிழ்க்கும் கஷ்டங்கள்

இப்படி அஞ்சு பத்து நிமிஷம் இருந்துவிட்டு அப்புறம் ஒவ்வொரு பிடுங்கலாக நாம் மாட்டிக்கொள்கிறபோது அதற்காக வருத்தப்படவேண்டாம். மாயையினால் எக்கச்சக்கமாக ஏற்கெனவே போட்டுக்கொண்ட முடிச்செல்லாம் அவிழ்க்கப்படும் வரையில் பிடுங்கல் இருக்கத்தான் செய்யும் என்று ஸமாதானம் பண்ணிக்கொண்டு அத்தனை முடிச்சையும் ஒவ்வொன்றாக அவிழ்ப்பதற்காக எத்தனை தார்மிகமான கர்மா செய்யணுமோ, எவ்வளவு பூஜை புநஸ்காரம், ஜபம், க்ஷேத்ராடனம் செய்யணுமோ அவ்வளவும் செய்து கொண்டே போவோம். இதிலேயே எத்தனையோ இடைஞ்சல், கஷ்டம் வரத்தான் வரும். சொன்னேனே, வைகுண்ட ஏகாதசி, ஆர்த்ரா தர்சனம் என்று ஸ்ரீரங்கம், சிதம்பரத்துக்குப் போனால்கூட குளிரில் விரைத்து, கூட்டத்தில் மொத்துப்பட்டு அவஸ்தைப்படத்தான் வேண்டியிருக்கிறது என்று! மலை ஏறுவது, அங்க ப்ரதக்ஷிணம், இப்படி எத்தனையோ ச்ரமம் இருக்கத்தான் இருக்கும். பொதுப்பணி என்றாலும் ஒரு வெள்ளக் காட்டிலே, சேற்றிலே, சதுப்பிலே போய் ஆஹாரம் தண்ணி வேளைக்குக் கிடைக்காமல் எத்தனையோ அவஸ்தைப்படவேண்டித்தானிருக்கும். ஆனால் இவற்றைப் பண்ணாமல், ‘வெறுமே ஆத்மாவாய் உட்கார்ந்திருக்கிறேன்’ என்று அஞ்சு, பத்து நிமிஷத்துக்கு மேல் ‘ட்ரை’ பண்ணினால், ஒன்றும் முடியாமல் ஒரே கன்னாபின்னாவில் மனஸ் பிய்த்துக்கொண்டு போகிறதே! ‘ச்ரமப்படாமல் உடம்பை வைத்துக்கொள்கிறேன்’ என்று சும்மா இருக்கப் பார்த்தால், சும்மா எங்கே இருக்க முடிகிறது? சரீரம் கெட்ட கெட்ட அநுபோகங்களைக் கேட்கிறது. ஆக கர்மா, பக்தி பண்ணாவிட்டால் முடிச்சுக்கள் முன்னிலும் பலமாகிக்கொண்டே போகின்றன. அதனாலே, கர்மாவிலும், பக்தியிலும் எத்தனை கஷ்டம், இடைஞ்சல்கள் இருந்தாலும் பட்டுத்தான் ஆகவேண்டுமென்று நினைத்து நிறையக் கர்மாநுஷ்டானம் செய்யவும், ஈச்ரவ பக்தி செய்யவும்தான் வேண்டும்.

இவற்றுக்காகக் கஷ்டப்பட்டாலும் இவை முடிவிலே கஷ்டத்தை தீர்க்கும் கஷ்டங்களாக இருக்கின்றன. இவை கர்மாக் கட்டை அவிழ்ப்பதற்காகப் படவேண்டியவை வ்யாதிக் கஷ்டத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகவே ஊசி போட்டுக் கொள்வது, ஆபரேஷன் செய்துகொள்வது முதலான கஷ்டங்களைப் படவேண்டியிருக்கிற மாதிரிதான் இது. ‘இதைப் படமாட்டேன்’ என்றால் அப்போது சும்மா அத்வைதமாகவும் இருக்கமுடியாமல், இதற்கும் வராமலிருப்பதால் வேறே காரியம், ஈச்வர பக்திக்குப் பதில் வேறே வஸ்துக்களிடம் பற்று வைப்பது என்றுதான் போய் அதில் இதைவிட ஜாஸ்திக் கஷ்டங்களை வரவழைத்துக்கொண்டு, கர்மா மூட்டையை மேலும் பெரிசாக்கிக் கொள்வதாகவே ஆகும்.

ஆகவே, அத்வைதமாயிருப்பதைத் தவிர நமக்கு வேறென்ன ‘கடமை வெச்சிருக்கு?’ என்ற எண்ணத்தை அடியிலே ஒரே ஸ்வரமாக ச்ருதி சேர்த்து வைத்துக்கொண்டாலும், மேலே பல ஸ்வரங்களில் பாடுகிறாறப்போல, அபஸ்வரம் தட்டாமல் கவனமாகப் பாடுகிறாற்போல், பல விதமான கடமைகளையும் கவனமாக, ஸின்ஸியராக, பெர்ஃபெக்ட் – ஆகப் பண்ணிக்கொண்டேதான் போக வேண்டும். இல்லாவிட்டால் ச்ருதியோடேயே சேராத அபஸ்வரக் களஞ்சியமாக வேறே எதுவோ செய்வதாகத் தான் இருக்குமே தவிர, சாந்தமாக மெளனமாக ஆகிவிடாது. சப்த ப்ரஹ்மம், நாத ப்ரஹ்மம் என்று அநுஸந்தானம் பண்ணிக்கொண்டு போனால் அதுவே மெளனத்தில் இழைத்து விடுகிறாற்போல, சாஸ்த்ரீய கார்யங்கள் கார்யமில்லாத நிலையிலே முடிவில் இழைத்து விடும்; ஸகுணோபாஸனை நிர்குணத்தில் இழைத்துவிடும்.

என்ன கார்யம், கடமை பண்ணினாலும் பாரத்தை அவன் தலையில் போட்டுவிட வேண்டும். பட்டுக்கொளள்ளாமல், ஆனாலும், பெர்ஃபெக்டாகப் பண்ணவேண்டும். இது தான் நிஷ்காம்ய கர்மா. அவன் தலையில் போடுவது என்பதுதான் பக்தி. அப்புறம் அவனுடைய தலையிலே போட எந்த பாரமும் இல்லாமல் ஜீவனுடைய கர்மச் சுமை முழுதும் தீர்ந்து போய்விடும். ‘தான் எதுவும் பண்ணாதவன், தன்னை எதுவும் என்னவும் பண்ணமுடியாது’ என்ற நிலைக்கு ஜீவன் வாஸ்தவமாகவே போய்விடுவான்.

ஆரம்பத்திலிருந்தே அத்வைத நினைப்பு

முடிவான லக்ஷ்யத்திலிருந்து ‘டிஸ்ட்ராக்ட்’ ஆகும் (சித்தம் விலகும்) கெடுதலுக்கு, கஷ்டத்துக்கு ஆளாகாமல் எப்படித் தப்புவது என்று கேட்டால், இதற்காகத்தான் ஆரம்பத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சம் நாழியாவது தினமும் அத்வைதத்தைப் பற்றிய நினைப்பை உண்டாக்கிக் கொள்ளவேண்டுமென்பது. அந்தக் கொஞ்சம் நாழி, பத்து நிமிஷமோ, அஞ்சு நிமிஷமோ, அநுபவ பூர்வமாக வராவிட்டாலுங்கூட, வலுக்கட்டாயமாக இப்படி நினைக்கணும்: ‘எத்தனை நல்ல கார்யமானாலும், உத்தமமான ஸமூஹ ஸேவையானாலும், பகவானே ப்ரத்யக்ஷமாகிக் கருணையைக் கொட்டுகிறானென்றூலுங்கூட, இதெல்லாமும் ஆத்மா இல்லை; ஆத்மாநுபவம் இல்லை சாச்வதமான ஸத்யமில்லை, நிரந்தரமான ஸெளக்யம் இல்லை. இதெல்லாமும் மாயைதான். இவற்றில் எதிலே நாம் ஊறிப்போய்விட்டாலும் ஸத்யத்தை சாச்வதமாக அநுபவித்துக்கொண்டு ஆனந்தமாயிருப்பதென்பதில்லை. இது எதுவுமே தொடாத அகண்ட சாந்தமாக ஆகாசம் மாதிரி உள்ள ஆத்மாதான் நாம்’ என்று நினைக்கவேண்டும். அஞ்சு நிமிஷமோ, பத்து நிமிஷமோ – அவ்வளவு முடியாவிட்டால்கூட ஒரு நிமிஷம், அரை நிமிஷமாவது, ‘நாம் எதுவும் என்னவும் பண்ணாத வஸ்து, நம்மை எதுவும் எண்ணவும் பண்ணமுடியாது’ என்று ராஜாவாக உட்கார்ந்திருக்க வேண்டும்.

‘நாம் எதுவும் பண்ணாத வஸ்து’ என்று நினைக்கிறபோதே மனஸிலே ஒரு மூலை எதையாவது நினைக்கப்பண்ணிக்கொண்டுதான் இருக்கும். ‘நம்மை எதுவும் என்னவும் பண்ணமுடியாது’ என்கிறபோதே ஒரு கொசு கடித்தால்கூட அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல்தான் இருக்கும். ஆனால் இபப்டி நாம் எதையாவது பண்ணிக்கொண்டு, நம்மை வெளி வஸ்துக்களும் எதுவாவது பண்ணி பாதித்துக் கொண்டும் இருந்தால்கூட, ‘பண்ணுகிற, (பாதிப்புப்) பண்ணப்படுகிற நாம்’ என்பது ‘நிஜ நாம்’ இல்லவேயில்லை, இது மாயைதான் என்று திரும்பத் திரும்ப சில நிமிஷங்கள் மனஸிலே நன்றாக ஏற்றிக்கொள்ளவேண்டும். ‘மனஸினாலே ஆத்மாவைப் பற்றி நினைப்பது’ என்கிற இந்த நிலையிலே மனஸ் இருக்கத்தான் செய்கிறது, நினைக்கத்தான் செய்கிறது; ஆத்மாவாக இல்லாமல் ‘ஆத்மாவைப் பற்றி’ என்பதாக த்வைதமாகத்தான் வேலை செய்கிறது. ஆனால் கூட இப்படி ஒரு ஆரம்பம் பண்ணினால்தான் இஞ்ச் இஞ்ச் – ஆகவாவது அத்வைதத்துக்குப் போக முடியும். ரொம்பவும் த்வைதத்தில் ஆழ்த்துகிறவை, அத்வைதத்துக்கு அழைத்துக் கொண்டு போகிறவை என்று த்வைதத்திலேயே இரண்டு வகையானவை இருப்பதில் ஆத்ம சிந்தனை என்பது இரண்டாவது வகையாகும். சிந்தனை இல்லாமல் போனால்தான் ஆத்மா ஆகையால் ஆத்மசிந்தனை என்பதும் த்வைதம்தான், மனஸினாலே கட்டினதுதான் என்பதிலே ஸந்தேஹமிலலை. ஆனாலும் இது ஆத்மாவுக்குக் கொண்டு போய்ச் சேர்க்க உதவுமென்பதைப் பற்றிக் கொஞ்சமும் ஸந்தேஹமில்லை.

திருமூலர், திருவள்ளுவர் அறிவுரை

மொத்தத்தில் விஷயம் என்னவென்றால், அத்வைதந்தான் குறி என்றோ, அல்லது அத்வைதம் வேண்டவே வேண்டாம் என்பதாக த்வைதமே குறியாகவோ ஒரு ஜீவன் எப்படி நினைக்கிறானோ அதற்கேற்பத்தான் அவர்களுக்கு அத்வைத அல்லது த்வைத ஸித்தியை ஈச்வரன் அருளுகிறான்

‘ஆசை அறுமின்கள்! ஆசை அறுமின்கள்!
ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்!’

என்று திருமூலர் சொன்னதும்,

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

என்று திருவள்ளுவர் சொன்னதும் ஒன்றுக்கொன்று வித்யாஸமாயிருப்பதாகத் தோன்றினாலும், இப்போது நாம் பார்த்துக்கொண்டு வந்த இரண்டு விதமானவர்களில் ஒவ்வொருத்தரை உத்தேசித்துச் சொன்னதுதான். இப்படிப் புரிந்துகொண்டால் இரண்டு உபதேசமுமே ஸரியானதுதான் என்று தெரியும்.

‘ஸத்ய தத்வம் வாஸ்தவத்தில் எப்படியிருக்குமோ அப்படியே நமக்குத் தெரியட்டும். நாம் அதை ஸகுணமாக நினைத்து த்வைதமாக பக்தி பண்ணினாலும் அது நிர்குணமாக இருந்து அத்வைதமான ஞானத்தினால்தான் அடையத்தக்கதாக இருந்தால் நாம் அதை அப்படி அடையும்படியாகவே அது பண்ணுமானால் பண்ணட்டும்’ என்று நினைப்பவர்களுக்கு அல்ல திருமூலரின் உபதேசம். ஸகுணமான ஈச்வரனிடம்தான் பற்று வைப்பது என்பதாக (பக்தி எனும்) தங்களுடைய ஸாதனா மார்க்கத்திலேயே பிடிவாதமான பிடிமானம் உள்ளவர்களைப் பார்த்தே திருமூலர் உபதேசம் செய்திருக்கிறார். ‘இப்படிப் பண்ணாதீர்கள்! ஈச்வரனிடமே யானாலும்கூட ஸகுணமாகத்தான் அவன் நமக்கு வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொண்டு விடாதீர்கள். ‘அந்த ஈச்வரனுக்கும் இன்னொரு ஸ்வரூபம், இந்த ஈச்வர ஸ்வரூபத்தைவிடவும் ஸத்யமான ஒரு ஸ்வரூபமிருக்குமானால் அதன் அநுபவம் நமக்குக் கிடைக்கட்டும்’ என்று திறந்த மனஸோடு இருங்கள்’ என்பதைத்தான் ‘ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்’ என்று அவர் சொல்லியிருக்கிறார். ஆசைப்பட்ட லக்ஷ்யத்தைத்தான் ஈச்வரன் கொடுப்பான், அதற்கு மேலே கொடுக்க மாட்டானாதலால், அவனாகிய ஸகுண ஸ்வரூபத்திலே ஆசை வைத்தால் அதற்குமேல் பெற முடியாது என்ற அபிப்ராயத்தில் சொல்கிறமாதிரி இருக்கிறது.

எல்லாவிதமான ஆசையும் போகவேண்டும்; (ஆசை யெல்லாம் போவதென்றால் மனஸ் போனால்தானே முடியும்?) – இப்படி மனஸ் அடிபட்டுப் போய் ஞானஸித்தி பெற வேண்டுமென்று லக்ஷ்யம் வைத்துக்கொண்டிருப்ப -வர்களைப் பார்த்து ஆசார்யாள் ஞானத்துக்கு ஸகுணோபாஸனையை உபாயமாக வைத்தார். அவர்களை உத்தேசித்தேதான், ஆசார்யாளைப்போலத் திருவள்ளுவரும் ஈச்வரனிடம் பற்று வைக்கச் சொல்கிறார். இவர் ‘அட்வைஸ்’ பண்ணுகிறவர்களுக்கு ஈச்வரனிடம் பற்று இருந்தாலும் அதுவே லக்ஷ்யம் என்று வைத்துக்கொண்டு விடவில்லை. எல்லாப் பற்றும் அற்றுப்போன ஸ்திதிதான் அவர்களுடைய லக்ஷ்யம். அதே மாதிரி அப்போது அந்த ஈச்வரனும் இவர்களை த்வைதப் பற்றுடன் நிறுத்திவிடுவதில்லை. த்வைதப் பற்றோடு நின்று போககிறவர்களிடம் அவனும் அப்படி த்வைதமான பற்றுள்ளவனாகத்தான் தன்னையும் நிறத்திக்கொள்கிறான். எப்போதும் அவர்களுடைய பக்தியை ஏற்பது, தாஸ்யத்தை ஏற்பது, கருணை செய்வது என்றால் அவனும் த்வைதப்பற்றுறவுதானே அவர்களிடம் வைத்திருப்பதாக அர்த்தம்? ஆனால், அங்கே திருவள்ளுவரோ அவனைப் பற்றற்றான்’ என்றே சொல்கிறார். கடவுள் என்றோ, பகவான் என்றோ, ஆண்டவன் என்றோ எந்த வார்த்தையாலும் ஈச்வரனைச் சொல்லாமல் ‘பற்றற்றான்’ என்றே இங்கே அத்விதீய வஸ்துவாகப் பெயர் கொடுத்திருக்கிறார். ‘நீ ஈச்ரவன் என்று பற்றிக்கொள்வதன் வாஸ்தவத்தில் பற்றற்ற அத்வைத ஸ்வரூபம். அதனால் நீ லக்ஷ்யமாகக் கொண்டிருக்கிற பற்றற்ற அத்வைத ஸ்திதியில் உன்னை அவன் சேர்த்துவிடுவான். பற்று அறுக்க விரிம்பியும் முடயாதவர்கள் ஞானத்துக்கே நேரே ப்ரயாஸை பண்ண வேண்டியதில்லை. அவர்களுடைய லக்ஷ்யமான பற்றற்ற பொருள்தான் பற்றும் படியாக ஈச்வரனாக ஆகியிருப்பது. இப்படி ‘ஆகியிருப்பதாக’ இல்லாமல் உள்ளபடி இருப்பதான நிலையில் அந்த ஈச்வரனே ‘பற்றற்றான்’ என்பதை மறந்து போகாமல் அவனை பக்தியில் பற்றிக்கொண்டால் அவனே பற்றுவிட்ட ஞானத்துக்குத் தூக்கி விடுவான்’ என்று இத்தனை அபிப்ராயத்தையும் உள்ளே அடக்கித்தான் ரத்னச் சுருக்கமாக இருண்டு வரி பண்ணிவிட்டார்.

ஆசையிலேதான் ஆரம்பித்தோம். அனர்த்த பரம்பரை அதிலிருந்துதான் என்று ஆரம்பித்து எத்தனையெத்தனையோ தினுஸாக ஆசைகளைப் பற்றிப் பார்த்தோம். ஆசையின் அந்த அஸுர பரம்பரைகளை தேவ சக்திகள் என்று சொல்லக் கூடிய உயர்ந்த நல்ல குணங்களால் ஜயித்து அடக்க வேண்டுமென்று பார்த்தோம். கடைசியில் பார்த்தால் அந்த நல்ல குணங்களான தேவ கணங்களும்கூடக் கெடுதல் பண்ணிவிடமுடியும். எல்லாவற்றுக்கும் மேலே இருக்கிற ஈச்வரனிடம்கூட ஆசை என்று வைத்துவிட்டால் ஸத்ய ஸாக்ஷாத்காரம் கஷ்டம்தான் என்கிற அளவுக்குத் தெரிகிறது. நம்முடைய குறி ஆதார ஸத்யந்தான் என்று திர்மானமாக வைத்துக் கொள்ளாவிட்டால் நம்முடைய மற்ற குறிகளை நாம் அடையப் பண்ணியே ஈச்வரன் மாயம் செய்துவிடுகிறான் என்று நினைக்கும்படியாக இருக்கிறது. இப்படிப் பலகாலம் பண்ணினாலும், அப்புறம் ‘ஐயோ, பாவம்’ என்று அவனே உண்மையான, குறிதப்பாத ஞானதாஹத்தைக் கொடுத்து, அப்புறம் அதைப் பூர்த்தி செய்வானென்று வைத்துக்கொள்ளலாம்.

என்றாலும் அவன் என்றைக்கோ அப்படிச் செய்கிறபடிச் செய்யட்டுமென்று இருந்துவிடாமல் நாமும் இடைநிலை ஸாதனைகளில் அல்லது ஸாதனைகளின் இடைநிலையில் பெற்ற அநுபவங்கள் சக்திகள் முதலியவற்றிலேயே ஆசை மோஹம் கொள்ளாமல், ஆசைக்கே இடம் தராததான அத்வைத லக்ஷ்யத்தை அப்போதப்போதும் நினைத்து உறுதிப்படுத்திக் கொள்வதுதான் ச்லாக்யம். அதுதான் விவேகம்.