அம்பாள் அருள்வாளாக!

நான் எத்தனை சொன்னாலும், அதில் கொஞ்சமாவது உங்கள் மனஸிலே பட அம்பாள்தான் அநுக்ரஹம் செய்யவேண்டும்.

ஸர்வஜ்ஞனான ஈச்வரனோடு கலந்திருக்கிற அம்பாள்தான் சோபைகளிலெல்லாம் பரம சோபையோடு ப்ரகாசிப்பதான வித்யையின் ஸ்வரூபம் என்று ஆசார்யாள் கேநோபநிஷத் பாஷ்யத்தில் சொல்கிறார். அவள்தான் நம் எல்லார் மனஸிலும் புகுந்து நம்முடைய புராதன வித்யைகளை ரக்ஷிப்பதில் நம்மைச் செலுத்தவேண்டும். வித்தம்தான் (பணம்தான்) குறி என்று நம்முடைய மனப்பான்மையை மாற்றி வித்யையே லக்ஷ்யம் என்ற ஈடுபாட்டை அவளுடைய அநுக்ரஹம்தான் உண்டாக்கித் தரவேண்டும். இதுவரை யுகாந்தரமாக வித்யா ப்ரகாசம் விளங்கி வந்த இந்த தேசத்தில் இருள் மூடுமாறு விடப்படாது. வித்யைதான் பெரிய ப்ரகாசம் என்று சொன்ன ஆசார்யாள், ‘உமா பரமேச்வரி மாத்ரம்தான் இப்படி வித்யையால் ஜ்வலித்துக்கொண்டு ஹைமவதி என்று பெயர் பெற்றாள் என்று இல்லை, எவன் வித்யையைப் பயின்று வித்வானாலும் அந்த வித்யையே அவனுக்கு ஒரு தேஜஸ் மெருகைக் கொடுத்துவிடும்’ என்று முடித்திருக்கிறார்.

“ஹைமவதி” என்று இந்த இடத்தில் உபநிஷத்திலே அம்பாளுக்குப் பெயர் சொல்லியிருப்பதற்கு இரண்டு விதமாக அர்த்தம் பண்ணலாம். ஒன்று, ‘ஹிமம்’ என்பது ‘பனி’ ஆதலால் பனி மலையான ‘ஹிமவா’னுக்குப் பிறந்த இவள் ‘ஹைமவதி’ என்பது. ‘ஹிம’த்தைக் குறித்தது ‘ஹைமம்’ – ‘சிவ‘த்தைக் குறித்தது ‘சைவம்’ என்கிறாற்போல. இங்கே ‘இ’காரம் ‘ஐ’காரமாகிறது. இதே மாதிரி ஸம்ஸ்க்ருத இலக்கணத்தில் ‘ஏ’காரமாக ஆரம்பிக்கும் வார்த்தையிலிருந்து உண்டாகிற derivative -களும் ‘ஐ’ஆகிவிடும். “ஏக”த்திலிருந்து “ஐக்யம்”, “கேகயன்” பெண் “கைகேயி”. இந்த ரூல்படி ‘ஹிமம்’ போலவே ‘ஹேமம்’ என்ற சொல்லின் அடியாகவும் ‘ஹைமவதி’ப் பெயர் ஏற்படும். ஹேமம் என்றால் தங்கம். தங்கமாக ஜ்வலிப்பவள் ஹைமவதி. ‘பஹுசோபை உள்ளவள்’ என்று உபநிஷத்தே இங்கு அம்பாளைக் குறிப்பதால் ஸ்வர்ண காந்தியாய் ஜ்வலிப்பவள் என்று பொருள் கொள்வதும் ரொம்பப் பொருத்தந்தான். ஆசார்யாள் இரண்டு அர்த்தங்களையும் ஒப்புக்கொண்டு, இந்த சோபைக்கு, ஜ்வலிப்புக்கு அவள் வித்யா ரூபிணியாயிருப்பதே காரணம் என்கிறார். அப்புறம் தம் வாக்ய பாஷ்யத்தை முடிக்கிற இடத்தில், “வித்யாவானாக (வித்வானாக) ஒருவன் இருந்தால், அவன் அங்கலக்ஷணப்படி குரூபியாயிருந்தாலும்கூட பஹுசோபையுடனே ப்ரகாசிக்கிறான் : விரூபோ (அ)பி வித்யாவாந் பஹு சோபதே” என்கிறார். ஸதாசாரத்தோடு படிப்பாளிகளாக இருக்கப்பட்டவர்களைப் பார்த்த மாத்திரத்தில், “முகத்திலேயே என்ன அறிவுக் களை, என்ன தேஜஸ்!” என்று சொல்ல முடிகிறது. அதேபோல், “மூஞ்சியைப் பார்த்தாலே சோதாக் களை” என்றும் சொல்கிறோம். முன்னே சொன்ன ஸைகிள் பெடல் உதாரணப்படி நம் பூர்விகர்களின் வித்யா ப்ரகாசத்தின் பலத்தில் இப்போதும் நம்மில் சிலர் முகத்திலாவது இந்தத் தேஜஸ் இருக்கிறது. ஸைகிள் நின்று போகாமல் அவள் க்ருபைதான் ஓட்டுவித்து, எல்லோர் முகத்திலும் சோபையை உண்டாக்கி, தேசம் முழுதிலும் அறிவொளி பரவச் செய்ய வேண்டும்.

எல்லாத் துறையிலும் குருகுல வாஸம்

இதற்கு ரொம்பவும் தலைசிறந்த வழி குருகுலக் கல்வி. உண்மையான குருகுல முறையைக் கடைப்பிடித்து, குருவுடைய அறிவோடு அருளையும் சேர்த்து வாங்கிக் கொண்டு வித்யாப்யாஸம் பெற்றால் எல்லாக் குறைபாடுகளும் போய்விடும். ஸெக்யுலர் எஜுகேஷன் (லௌகிகக் கல்வி) கூட இம்மாதிரி ரிடயரான ஆசிரியர்களிடமிருந்தும், ப்ரொஃபஸர்களிடமிருந்தும் அவர்களோடேயே வஸித்து அவர்களுக்குத் தொண்டு செய்துகொண்டே கற்று, ப்ரைவேட்டாகப் பரீக்ஷை எழுத இடமிருந்தால் அப்படிச் செய்வது ரொம்பவும் ச்லாக்யம். ‘பிள்ளையாண்டான் ஒரு வருஷம் ‘கோட்’ அடித்துவிட்டதாக நினைத்துக் கொண்டு ஒரு வருஷமாவது உங்கள் குழந்தைகளை குருகுலவாஸம் செய்யவிட்டு, அதற்கான உதவியை குருவுக்குப் பண்ணுங்கள், அல்லது கோடை விடுமுறை இரண்டு மாஸத்திலாவது இதை நடத்திப் பார்க்க வழி தேடுங்கள், என்றெல்லாம் அடிக்கடி நானும் சங்கு ஊதிக்கொண்டே இருக்கிறேன். விடிகிற போது விடியட்டும்.

குருகுலக் கல்விக்கு அடுத்தபடியாக, next best என்கிறார்களே, அப்படி வருவது சாஸ்திரோக்தமான முறையில், குருமார்கள் கட்டுப்பாட்டின்கீழ் பல பசங்கள் ரெஸிடென்ஷியலாக (அங்கேயே வஸித்துக்கொண்டு) படிக்கிற வித்யாசாலைகள்.

இரண்டில் ஒன்று ஏற்பட்டு வ்ருத்தியாவதற்கு உங்களைத் தூண்டி விடுவதற்காகத்தான் இத்தனை நேரம் குருகுலம் பற்றியும், கடிகாஸ்தானம் பற்றியும் சொன்னேன்.

உயிரோடு ஒட்டிவைக்க வேண்டும்

இப்போதும் நம் பண்டைய சாஸ்திரங்களில் ரிஸர்ச் என்பது கொஞ்சம் நடக்கத்தான் நடக்கிறது. ஆனால் அது ‘அகாடெமிக்’காக, ஸமூஹ வாழ்க்கையோடு ஒட்டாமல் நடக்கிறது. ‘பேப்பர்’ படிப்பது, ‘தீஸிஸ்’ எழுதுவது, ‘ஸெமினார்’ ‘ஸிம்போஷியம்’ என்று நடத்துவது, ஸ்காலர்கள் என்று பொறுக்கி எடுத்த சிலபேர் மட்டும் ‘டிஸ்கஸ்’ பண்ணுவது. அப்புறம் நூறு இருநூறு என்று விலை வைத்துப் புஸ்தகமாகப் போட்டு லைப்ரரிகளில் வைத்து அந்தப் புஸ்தகங்களில் சிலந்தி கூடுகூட்டுவது, புஸ்தகம் ரிலீஸ் ஆகிறபோது விழா நடத்தி மந்த்ரிகளும் ஜட்ஜ்களும் நம்முடைய கல்ச்சரைப் பற்றி லெக்சர் செய்வது, பத்ரிகைகளில் பெரிசாக புஸ்தக விமர்சனம் செய்வது, அப்புறம் கொஞ்சம் காலத்தில் பேசியவர்களும் எழுதியவர்களுமே அடியோடு மறந்துபோய் விடுவது – என்பதாகத்தான் இப்போது நடந்துவருகிறது. இப்போதைய ‘ஸெட்-அப்’பில் நம்முடைய பண்டைய வித்யைகளுக்காகவும் ச்ரமம் எடுத்துக்கொண்டு இப்படி ஆராய்ச்சி, விவாத மஹாநாடு, நூல் வெளியீடு என்றெல்லாம் நடத்துகிறார்களே என்று அவர்களைப் பாராட்ட வேண்டுமென்றாலும் (அவர்கள்) செய்வது “நிறக்காமல்”, ஸமூஹத்தில் வேர் பிடிக்காமல் கொஞ்ச காலத்திலேயே எடுபட்டுப் போய்விடுவதைச் சொல்லாமலிருக்க முடியவில்லை. இப்படியில்லாமல் இவற்றை ஸமூஹத்தின் உயிரோடு ஒட்டி வைக்கவேண்டும். அதற்கு இவற்றிலேயே தங்களுடைய உயிரும் வாழ்க்கையும் கலந்து போய்விடும்படியாகப் பண்ணிக்கொள்ளும் குரு – சிஷ்ய பரம்பரை ஏற்பட்டால்தான் முடியும்.

நம்முடைய சாஸ்திரங்களை நிஜமாகவே காப்பாற்ற வேண்டுமென்றால் அவற்றிலுள்ள விஷயங்களை மாத்திரம் புஸ்தகம் போட்டு லைப்ரரியில் வைப்பதில் ப்ரயோஜனமில்லை. அப்படியே இந்தப் புஸ்தகங்களை யாராவது படித்துத் தெரிந்துகொண்டு, இப்போது நடக்கிற ரீதியிலேயே மேலும் ரிஸர்ச் பண்ணி, மேலும் புஸ்தகங்கள் போடுவதாக வைத்துக் கொண்டாலும் அதனால் நிலைத்து நிற்கிறதாகப் பயன் எதுவும் விளையாது. புஸ்தகப் படிப்பால் பெறுகிற வெறும் விஷயஞானமென்பது எத்தனையோ தப்புக்களுக்கும், விபரீதத்துக்குமேகூட இடம் தரலாம். அல்லது வீணாகப் போய்விடலாம். நம் தேசாசாரப்படி உருவான இவ்விஷயங்களை நம்முடைய தேசாரத்தின்படியே ஏற்பட்டுள்ள சாஸ்திரிய முறைப்படி, மாணவனுக்கு விநயம், புலனடக்கம், மற்ற ஒழுக்கங்கள், உயர்குணங்கள், ஈச்வரபக்தி முதலியவற்றோடு கலந்து கொடுத்தால்தான் அவனுக்கும் ச்ரேயஸ் ஏற்பட்டு, அவனால் உலகுக்கும் க்ஷேமம் உண்டாகும்.

வருங்காலத்துக்காக

வித்வான்கள் பணத்துக்காகப் பறக்கப்படாது, ப்ராபல்யத்துக்காகப் பறக்கப்படாது என்று நான் சொன்னதால் அவர்களைக் காயக் காயப் போடவேண்டும், எந்த ரெகக்னிஷனும் இல்லாமல் மூலையில் தள்ளி வைக்க வேண்டுமென்று மற்ற ஜனங்கள் அர்த்தம் பண்ணிக்கொண்டவிடக் கூடாது. பரம த்யாகிகளாக இருந்தாவது வித்யகைளைப் பேண வேண்டுமென்பது அவர்களுடைய லக்ஷ்யமாக இருக்கவேண்டுமென்பது போலவே, அவரவரும் ஏதோ கொஞ்சமாவது பணம், பொழுது முதலியவற்றை த்யாகம் செய்து நம்முடைய தேசத்தின் இந்த அறிவுப் பிதுரார்ஜிதம் நசித்துப்போகாமல் காப்பாற்ற வேண்டுமென்பது மற்றவர்களுடைய லக்ஷ்யமாயிருக்க வேண்டும். அதாவது, இப்போதுள்ள வித்வான்களையும் மற்ற பண்டைய கலைகளை அறிந்தவர்களையும் தேடிக் கண்டுபிடித்து பொருளாதார ரீதியிலும், ஸமூஹ கௌரவத்திலும் அவர்களுக்கு உயர்வு தந்து, அவர்களுக்கு சிஷ்ய பரம்பரை உண்டாகி இந்த வித்யைகள் வருங்காலத்துக்கும் போகும்படியாகப் பண்ணவேண்டும்.

நேரில் கண்ட ஆதர்ச வித்வான்கள்

இம்மாதிரி, பேர், புகழ், பணம், ஆதரவு எதையும் எதிர்பார்க்காமல் அநேக குடும்பங்களில் வித்யைகளுக்கே தங்களை அர்ப்பணித்துக்கொண்டு வருபவர்களையும் நான் ஒன்று, இரண்டு இடத்தில் பார்த்திருக்கிறேன். நான் எத்தனையோ ஊர் சுற்றி எவ்வளவோ பார்த்திருப்பதில் இப்படியும் பார்த்தது எனக்குச் சொல்லி முடியாத ஸந்தோஷமாயிருந்தது.

இவற்றில் ஒன்று எங்கே எப்போது என்றால் 1927-28 வருஷங்களில் மலையாள தேசத்தில் சுற்றிக் கொண்டிருந்தேன். அங்கே திருவஞ்சிக்களம் என்று ஒரு ஸ்தலம். (திரு அஞ்சைக்களம் என்பதே ஸரியான பெயர்.) பழைய காலத்தில் அதுதான் மலையாள தேசத்துக்குத் தலைநகரமாயிருந்தது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகரப் பெருமாள், அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமாள் (இரண்டு பேரிலும் ‘பெருமாள்’ இருக்கிறது.) ஆகிய ராஜ – பக்தர்கள் இருவரும் திருவஞ்சிக்களத்திலிருந்துதான் ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். தேவாரத்தால் போற்றப்பட்டுப் ‘பாடல் பெற்ற ஸ்தலம்’ என்று கூறப்படுகிற க்ஷேத்ரங்களில் “ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு” என்பதாக மலையாளத்திலிருக்கும் க்ஷேத்ரம் இதுதான். இதே மலையாள தேசத்தில் (ஆழ்வார்களின் பாசுரங்களைப் பெற்றவையான) நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் பதின்மூன்று இருக்கின்றன. திருவஞ்சிக்களத்துக்குப் பக்கத்தில் ப்ரஸித்தமான பகவதி க்ஷேத்ரம் ஒன்று இருக்கிறது. கொடுங்கலூர் என்று பெயர். வெள்ளைக்காரர்கள் அதைத்தான் ‘ரோங்கனூர்’ என்று ஆக்கியிருக்கிறார்கள் அந்த ஊரிலும் அதைச் சுற்றியுள்ள சில ஊர்களிலுந்தான் நான் சொன்னபடி அநேக வித்வான்கள் வெளியுலகத்தின் ஆதரவைப்பற்றி நினைக்காமல் அநேக சாஸ்திரங்களை அப்யஸித்துக் கொண்டிருப்பது.

கொடுங்கலூரிலும், இந்தச் சுற்றுப்புற ஊர்கள் ஒவ்வொன்றிலும் ராஜா என்று ஒருத்தர் இருக்கிறார்.

மலையாளத்திலேயே பொதுவாக ராஜாக்கள் அதிகம். அங்கே பெரும்பாலும் “மருமக்கத் தாயமுறை” என்ற முறைப்படியே ராஜ்யமோ, மற்ற ஸொத்தோ அடுத்த தலைமுறைக்குப் போய்க் கொண்டிருந்தது. அதாவது அப்பா – பிள்ளை என்று பிதுரார்ஜிதமாக மற்ற இடங்களிலெல்லாம் ஸொத்து, ராஜ்யம் ஆகியவை போகின்றனவென்றால், மலையாளத்தில் மட்டும் அம்மா வழியில் மாதுரார்ஜிதமாகப் போவதாகவும் இருந்தன. ஆனாலும் அம்மா என்றால் அவள் ஸ்த்ரீ. அவள் எப்படி ஸொத்துப் பரிபாலனம் செய்வாள்? அதனால் அவளுடைய அண்ணா – தம்பிக்கு ஸொத்துப் போகும். ஆனால் இந்த அண்ணாவோ தம்பியோ கண்ணை மூடுகிறபோது தங்கள் பிள்ளைக்கு (ஸொத்தை) எழுதிவைக்க முடியாது. அந்த ஸஹோதரியின் பெண்ணுக்குத்தான் ஸொத்துப் போகும். முன்னே சொன்ன மாதிரியே அதை இந்தப் பெண்ணுடைய ஸஹோதரன்தான் பரிபாலனம் செய்வான். இவன் இதற்கு முன் ஸொத்தை நிர்வஹித்தவனுக்கு மருமான் (மருமகன்) தானே? இப்படி மாமா – மருமகன் என்று ஸொத்து நிர்வாஹம் போவதாலேயே இதற்கு “மருமக்கத் தாயமுறை” என்று பெயர். “தாய” என்றால் தாயார் ஸம்பந்தப்பட்டது என்று அர்த்தமில்லை. Taaya இல்லை, Daaya ‘தாயம்’ என்பது ஸம்ஸ்க்ருத வார்த்தை. அதற்கு ‘ஸொத்தின் பாகம்’ என்று அர்த்தம். இப்படி பிதுரார்ஜிதத்தில் பங்கு உடையவர்களுக்குத்தான் “தாயாதி” என்று பேர்.

கொடுங்கலூர்ப் பகுதியில் இருந்த அநேக ராஜாக்கள் இவ்வாறு மருமக்கத் தாயமுறையில் ராஜாவாக இருந்தவர்கள். பேர்தான் ராஜா. நாம் ‘மிடில் – க்ளாஸ்’ (மத்யதர வகுப்பினர்) என்று சொல்பவர்களைவிடவும் அந்த ராஜாக்களின் வருமானம் ஸ்வல்பமாகவே இருக்கும். நம் ஊரில் பரம ஏழைக்குத்தான் கஞ்சி ஆஹாரமென்றால், அங்கே இந்த ராஜாக்களின் முக்ய ஆஹாரமே கஞ்சிதான்! நம் ஊரில் கஞ்சி சாப்பிடுகிற கலயம், கப்பரை என்று ஏழை மண்ணிலோ, சுரைக் குடக்கையிலோ ஒன்று வைத்துக் கொண்டிருக்கிறானென்றால், அந்த ராஜாக்களோ இந்தக் கலயம் – கப்பரைகூட வைத்துக்கொள்வதில்லை. அந்த ப்ரதேசங்களில் பலாமரம் செழிப்பாக வளரும். அந்தப் பலா இலைகள்தான் இந்த ராஜாக்களுக்குப் பாத்திரம் பொருளாதார சூழ்நிலை இப்படியிருந்தாலும் வித்வத்திலே அவர்கள் அத்தனை பேரும், அவர்களைச் சேர்ந்தவர்களுங் கூட, ஆச்சர்யப்படும்படியான தேர்ச்சி பெற்றிருந்தார்கள். புருஷாள் மட்டுமின்றி ஸ்த்ரீகளும் இப்படியே ஏதாவதொரு சாஸ்திரத்தில் நல்ல யோக்யதை ஸம்பாதித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். இவர்களாக வெளியிலே ப்ராபல்யத்துக்கு ப்ரயாஸைப் படாவிட்டாலும், தானாகவே இவர்களில் ரொம்பவும் தேர்ச்சி பெற்றவர்களில் சிலர் பெயர் வெளியில் பரவியிருக்கிறது. இப்படி ஒரு ராஜா மஹாமஹோ பாத்யாயா பட்டம்கூட வெள்ளைக்கார ராஜாங்கத்திடமிருந்து பெற்றிருக்கிறார். பெயரளவில் ராஜாக்களாக இருந்துகொண்டு கஞ்சியைக் குடித்துக் காலங்கழிப்பவர்களாக நம்முடைய வேத சாஸ்திரங்களையும் மற்ற பூர்விகக் கலைகளையும் வ்ருத்தி பண்ணிக்கொண்டு வந்த இவர்களை வித்வத் ஸமூஹம் முழுதும் ‘ஐடியலாக’க் கொள்ளவேண்டும்.

மலையாளத்தில் நான் வித்வத் – ஊரைப் பார்த்தது (ஆயிரத்துத் தொள்ளாயிரத்து) முப்பதுக்கு முந்தி. இதே மாதிரி இன்னொன்று நான் பார்த்து அப்படியும் ஏறக்குறைய நாற்பது வருஷத்துக்கு அப்புறம். அது மலையாளத்தில் இது தெலுங்கு தேசத்தில் அப்போது பார்த்தது வித்வத் – ஊர். இப்போது பார்த்தது அப்படியே ஒரு ஊர் முழுக்க இல்லை, இது வித்வத் – குடும்பம்தான். ஆனாலும் அந்தக் குடும்பமே ரொம்பப் பெரிசாக இருந்ததால், “சாஸ்திரங்களிலேயே அத்தனை பேரும் ஈடுபட்டிருப்பதாக இப்படியும் ஒரு குடும்பமா?” என்று ஆச்சர்யப்படும்படியாகவும், ஸந்தோஷப்படும்படியாகவும் இருந்தது.

“ஹரி ஸோதருலு” என்று அவர்களைச் சொல்லுகிறார்கள். தெனாலி கிட்டேயுள்ள ஈப்பூரைச் சேர்ந்த அண்ணா தம்பிகள் ஐந்து பேர். நான் அவர்களைப் பார்த்தது பெஜவாடா (விஜயவாடா) வில் அவர்களுக்கு உள்ள வீட்டில். பெரியவர் பெயர் ஹரி வேங்கடஸூப்பையா. அவருக்கு நாலு தம்பிகள். அஞ்சு பேரும் ப்ராசீனமான முறையில் ஒவ்வொரு சாஸ்திரம் படித்து நல்ல வித்வத்தோடு இருக்கிறார்கள். வேதம், வேதபாஷ்யம், ஸ்ம்ருதிகள், புராணம் என்று ஒவ்வொன்றில் ஒருத்தர் ஸ்பெஷலைஸ் பண்ணியிருக்கிறார். இதெல்லாவற்றையும் ஒன்றுக்கொன்று சேர்த்துத் தொகுத்துப் புஸ்தகம் போட்டிருக்கிறார்கள். அதுகூடப் பெரிசில்லை. தங்களுக்கு அடுத்த தலைமுறையிலும் இந்த வித்யா ஸம்பத் வீணாகிவிடாமல் தங்களுடைய பசங்களுக்கும் நன்றாக சாஸ்திராப்யாஸம் கொடுத்திருக்கிறார்கள். அதைத்தான் நான் பெரிசாக நினைக்கிறேன். தங்களகத்துக் குழந்தைகளுக்கு அஞ்சு வயஸு ஆச்சோ இல்லியோ ஸம்ஸ்க்ருத பாடம் ஆரம்பித்துவிடுகிறார்கள். பாடம் என்று புஸ்தகத்தோடு கட்டிப்போடாமல் ஸரளமாக ஸம்ஸ்க்ருதத்திலேயே பேசுவதற்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஏழெட்டு வயஸு வாண்டுகள் பளிச்சுப் பளிச்சென்று ஸம்ஸ்க்ருதத்தில் பதில் சொல்வதைக் கேட்க ஆனந்தமாயிருந்தது.

பூர்வகாலத்தில் ‘அசேஷ வித்வத்ஜனங்கள்’ என்னும்படியாக ஊர் பூராவும், பெண்டுகள்கூட பாண்டித்யத்தோடு இருந்தார்கள். சாணி தெளிக்கிறவள் ஸம்ஸ்க்ருதத்தில் போடு போடு என்று போடுவதைக் கேட்டே, வாதத்திற்கு வந்த வெளியூர் வித்வான் கம்பி நீட்டிவிட்டார், கிளிப்பிள்ளைகள் கூட தங்களுக்குள் பெரிய தர்க்க சாஸ்திரவாதங்கள் பண்ணிக்கொண்டிருந்தன – என்றெல்லாம் கதைகளில் பார்க்கிறோம், கேள்விப்படுகிறோம். அதற்கு நம் காலத்திலும் ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் துளியாவது ‘ஸாம்பிள்’ மாதிரிப் பார்க்க முடிந்தது.

வித்வான்கள் வித்யையை ஈச்வரோபாஸனையாக, அதாவது வேறு ப்ரதிப்ரயோஜனம் எதிர்பாராமல், பேணி வளர்த்துக்கொள்ள ப்ரயத்னம் பட்டால் எப்படியாவது அவை உயிரைப் பிடித்துக்கொண்டு வ்ருத்தியாகிவிடும். அவர்களும் உயிரைப் பிடித்துக்கொண்டு காலம் தள்ள ஈச்வரன் கைகாட்டாமல் போகமாட்டான்.

இப்படி பலர் இருந்துமிருக்கிறார்கள். பரமபக்தரான த்யாகையர்வாள் போன்றவர்கள்தான் ராஜ ஸம்பாவனை, பேர், புகழ் முதலியன வேண்டாம் என்று ஒதுக்கி, ஒதுங்கி அவர்கள் பாட்டுக்கு இருந்தார்களென்றில்லை. மஹாவித்வான்களிலுங்கூடப் பணவசதி, பாராட்டு, ப்ராபல்யம் வேண்டாம் என்றே இருந்தவர்களுண்டு.

வித்வானாக இருக்கிறவர் பணத்தைத் தள்ளுவதைவிடப் பாராட்டைத் தள்ளுவது ச்ரமம். தனக்கு நல்லபுத்தி இருக்கிறது, நிறையத் தெரிந்து கொண்டிருக்கிறோம், ஆராய்ச்சி செய்து பெரிசாக எழுதியிருக்கிறோமென்றால் உடனே இதை லோகம் ரெகக்னைஸ்’ செய்யவேண்டும், தன்னைப் புகழவேண்டும், மரியாதை பண்ண வேண்டும் என்ற எண்ணங்களும் ஏற்பட்டுவிடுகின்றன. ஒரேயடியாக வித்யா கர்வம் ஏறி, ‘இந்த உலகத்துக்கு நம்மைப் புரிந்து கொள்ள சக்தி உண்டா? நம்மைப் பாராட்ட அதற்கு யோக்யதை உண்டா?’ என்று நினைக்கிற அளவுக்கும் சில வித்வான்கள் போய்விடுகிறார்கள். ஆதலால் அவர்கள் வித்வத்துக்காகப் பாடுபடுகிறது போலவே, அல்லது அதை விடவும் விநய ஸம்பன்னர்களாவதற்கும் பாடுபட வேண்டும்.

வித்வான்களுக்குக் கோரிக்கை

அதே ஸமயத்தில் வித்வத் ஸமூஹத்திடமும் ஒன்று கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். “நீங்கள் பரம த்யாகிகளாக, ஆதரவு அநாதரவு இவற்றைப் பொருட்படுத்தாமல் எப்படியாவது எத்தனை கஷ்டத்திலும் சிஷ்யவர்க்கத்தை உண்டாக்கி அதனிடம் உங்களுக்குத் தெரிந்தவற்றை ஒப்புக் கொடுக்கவேண்டும்” என்று கேட்டுக்கொள்கிறேன்.

அரைகுறை ஞானத்துக்கே ஆதரவு

வாஸ்தவ நிலை எப்படி இருக்கிறதென்று பார்த்தால் வ்யஸனம்தான் மிஞ்சுகிறது. வர வர வர வித்யையின் தரம் குறைந்துகொண்டே வருகிறது. ஒவ்வொரு சாஸ்திரமாக மறைந்துகொண்டே வருகிறது. எத்தனையோ கலைகள் இருந்த இடம் தெரியாமல் போய்க்கொண்டிருக்கின்றன. ஒரே இருட்டிலே சின்ன மின்மினிப் பூச்சி வெளிச்சம்கூடப் பெரிசாகத் தெரிகிறாற்போல, குருபீடங்களிலே ஸ்வல்பவித்வத்தோடு ஒருத்தர் இருந்துவிட்டால்கூட அவரை சிஷ்யலோகம் “ஸர்வஜ்ஞர்” என்று புகழ்ந்து அவரும் தாம் அதற்குமேல் தெரிந்துகொள்ள வேண்டாமென்று நினைக்கிற அளவுக்குக் கொண்டு விட்டுவிடுகிறது.

மின்மினிப் பூச்சியைச் சொல்லும்போது ஒரு கதை நினைவு வருகிறது. கதை என்றால் நிஜமாகவே நடந்த கதை. நீலகண்ட தீக்ஷிதரும், பழமார்நேரி மஹாதேவ சாஸ்த்ரிகள் என்பவரும் ஸம்பந்தப்பட்ட கதை. நீலகண்ட தீக்ஷிதர் மதுரையில் புகழ்வாய்ந்ததாக உள்ள திருமலை நாயகர் மஹாலையும் புது மண்டபத்தையும் கட்டிய நாயக மன்னருக்கு மந்த்ரியாக இருந்தவர். மஹாபக்தர். இவற்றோடு மஹாவித்வானுமாவார். பழமார்நேரி சாஸ்த்ரிகள் இவர் மாதிரி ப்ரஸித்தி பெறாதவர். ஆனாலும் தீக்ஷிதரும் அவரிடம் எப்படித் தோற்றுப் போனமாதிரி ஆனார் என்று அந்தக் கதை தெரிவிக்கிறது. ஞானசூன்ய உலகத்திலே எப்படி மின்மினிப் பூச்சி மாதிரி துளிப்போல ஞானத்தைப் பகட்டாகக் காட்டிக்கொள்பவர்கள் தங்களை ப்ரமாதப் படுத்திக்கொள்ள முடிகிறது என்று மஹாதேவ சாஸ்திரி இடித்துக் காட்டி ச்லோகம் இயற்றிச் சொன்னதில்தான் தீக்ஷிதருக்கு அவரிடம் ரொம்பவும் மரியாதை ஏற்பட்டது என்று கதை*.

வெறும் அரட்டை ஆஸாமிகளும் மின்மினி அறிவினாலேயே ப்ரகாசிக்கிற இருட்டுச் சூழ்நிலையில்தான் இப்போது இருக்கிறோம். இந்த மின்மினி ஒளியை மங்கச்செய்யும் நக்ஷத்ரக் கூட்டங்களின் ப்ரகாசம், நக்ஷத்ரங்களின் ஒளியையும் மழுங்கப் பண்ணும் சந்த்ரோதயம், அந்த சந்த்ரனும் இருக்கிற இடம் தெரியாமல் அமுங்கிப்போகும் ஸூர்யோதயம் என்னும்படியாக மேலும் மேலும் நாட்டில் வித்யா ப்ரகாசம் ஓங்கும்படியாகச் செய்யவேண்டும். இப்போது பூர்ண யோக்யதை உள்ள வித்வான்கள், சாஸ்திரஜ்ஞர்கள், பழைய கலைகள் தெரிந்தவர்கள். ஆயுர்வேத வைத்யர்கள், சில்பிகள், ரதகாரர்கள், பரத சாஸ்திர நிபுணர்கள் என்று ஏதோ கொஞ்சமாவது இல்லாமல் போகவில்லை. ஆனாலும் அரட்டைக்குத்தான் மதிப்புத் தருவது. தடபுடாவுக்குத் தான் மரியாதை செய்வது என்று லோகம் இருப்பதில், – கட்சியபிமானம் ஜாதியபிமானம் முதலியன இதிலும் தலைதூக்கியிருப்பதில் – ஸாதுக்களாக அடங்கியிருந்து கொண்டிருக்கிற, நிஜமான யோக்யதையுள்ள இந்தச் சில வித்வான்களுக்கு ஆதரவு கிடைப்பது ச்ரமமாயிருக்கிறது. சவடால்காரர்கள் ஆர்ப்பாட்டமாகத் தங்களுடைய அரைகுறை ஞானத்தில் வேதாந்த சாஸ்திரம் வரையில் நம்முடைய வித்யைகளைப் பற்றி எழுதுவது இன்று ஜகத் ப்ரஸித்தி பெறுகிறது. நல்ல ஞானமுள்ள விஷயஜ்ர்கள் ரொம்பவும் பரிச்ரமப்பட்டு ஆராய்ச்சி செய்து எடுத்துச் சொல்கிற விஷயங்களை ப்ரசாரம் செய்வதற்கு, ப்ரசுரம் செய்வதற்கு எவரும் முன்வருவதில்லை. இன்றைய நிலையில் தடபுடல்தான் வேண்டும், பூர்ண யோக்யதை அவச்யமில்லாத விஷயம் என்கிறதுபோல ஆகிக்கொண்டு வருகிறது. இதற்குக் காரணம், பொதுவாக வித்யா ஞானத்தின், சாஸ்திர அறிவின் லெவல் ரொம்பவும் இறங்கியிருப்பதுதான். மேற்கத்தியப் படிப்பிலே தேர்ந்தவர்கள் தற்போது நிறைய இருந்தாலும் ஸ்வதேச வித்யைகளில் பரிச்சயம் ஜனங்களுக்கு இல்லாததால்தான், இதிலே வாஸ்தவமான ஞானத்தை எடைபோட முடியாமல், படாடோபமான அரைகுறை ஞானத்தை ஆதரிப்பதாக இருக்கிறது. இது ஸரியே இல்லை.

ஆதரிப்பவர்கள் இல்லாவிட்டால் நல்ல வித்வத் உள்ளவர்களுக்கு மனஸு தளர்ந்து போய் அவர்கள் தங்கள் வித்வத்தைத் தங்களுடைய ஸந்ததிக்கோ, சிஷ்யர்களுக்கோ கற்றுக்கொடுக்காமலே போய்விடுவார்கள். நமக்கு வித்யைகள் நஷ்டமாகிப்போகும். இப்படித்தான் தற்போதே நேர்ந்திருக்கிறது. இது மேலும் இப்படியே போய்க்கொண்டிருப்பதற்கு விடப்படாது என்பதற்காகத்தான் இவ்வளவு சொல்வதும்.


* ஸ்ரீசரணர்கள் சுவைப்படக் கூறிய இக்கதையின் விரிவை இதே பகுதியில் “கவிஞர், அறிஞரின் தற்பெருமை” என்ற உரையின் “நீலகண்டரும் மஹாதேவரும்” என்ற பிரிவில் காண்க.

அரசாங்கமல்ல; மக்களும் சீடர்களுமே பொறுப்பு

முற்காலத்தில் அரசர்களும் மஹாவித்வான்களாக இருப்பார்கள். ராஜ ஸதஸ்கள் அறிவாளிகள் நிறைந்ததாக இருக்கும். நன்றாக வித்வத் ஸம்பாவனைகள் செய்தும் ராஜமான்யங்கள் விட்டும் வித்வான்களையும், அதன் வழியாக வித்யைகளையும் வ்ருத்தி செய்தார்கள். இப்போது… நான் சொல்லவேண்டாம் — எஜூகேஷன் மினிஸ்ட்ரி, கல்ச்சுரல் அஃபேர்ஸ் மினிஸ்ட்ரி என்று இருந்தாலும், கொஞ்சத்தில் கொஞ்சமாவது கலாசார அபிவ்ருத்திக்கு அவர்கள் செய்வதை நாம் பாராட்டத்தான் வேண்டுமென்றாலும், ஏதோ குடியரசு நாளில் இத்தனாம் கோடி ஜனங்கள் உள்ள தேசத்தில் ஒரு பத்துப் பண்டிதருக்கு கௌரவம் பண்ணுவது ; ‘ஸான்ஸ்க்ரிட் ப்ரமோஷன்’ என்று ஏதாவது இரண்டு பழைய ஓரியண்டல் ஸ்கூல்களுக்கு ‘க்ரான்ட்’ கொடுப்பது; இரண்டு யூனிவர்ஸிடியில் ‘சேர்’ வைப்பது; ஒரு சில பேருக்கு ஸ்காலர்ஷிப் தருவது; க்ராமக் கலை உத்ஸவம் என்று ஏதாவது நாலைந்து நாள் பண்ணுவது — என்பதாகச் செய்வதெல்லாவற்றையும் கூட்டிக் கணக்கெடுத்தாலும் பொருளாதாரம், ராணுவம், நீர்ப்பாசனம் முதலியவற்றுக்குச் செலவழிப்பதில் நூறில் ஒரு பங்காவது வித்யாபிவ்ருத்திக்குப் போகும் என்று தோன்றவில்லை. அவற்றிலே காட்டுகிற இன்ட்ரெஸ்ட் இதில் யாருக்கும் இல்லை — எந்தக் கட்சிக்குமே இல்லை. ஆனாலும் வெளிதேசங்களும் நம் இமேஜை ப்ரொஜெக்ட், பண்ணிக் காட்டுவதற்காக மட்டும், நம்முடைய வித்யகைளையும் கலைகளையும் பற்றி நிறையப் பேசுவதாக ஏற்பட்டிருக்கிறது. இவற்றுக்காகச் செய்கிற ஏதோ கொஞ்சமும் ஈச்வர ஸம்பந்தமில்லாமலும் சாஸ்திரிய வழியில் இல்லாமலும் செய்யப்படுவதால் அவையும் உரியபடி ப்ரயோஜனப்படாமல் போகின்றன. இன்றைய ராஜாங்க ரீதியில் இதற்கு மேல் ஒன்றும் எதிர்ப்பார்ப்பதற்கில்லை. அவர்களைக் குறைகூடச் சொல்லவேண்டாம்.

ஆகவே பொதுவாக வித்யைகள் என்று எடுத்துக்கொண்டால் பொதுஜனங்களும், சாஸ்திரங்களை வளர்க்க வேண்டிய குருபீடங்கள் என்று எடுத்துக்கொண்டால் சிஷ்ய வர்க்கமும்தான் இப்போது விழிப்புணர்ச்சி பெற்றுப் பொறுப்பு எடுத்துக்கொண்டு செய்ய வேண்டியதைச் செய்யணும். ஒரு விதத்தில் ராஜாங்க ரீதியில் நடக்காதது கூட நல்லதற்குத்தான் என்பேன். ஏனென்றால், அப்படி நடந்தால் ஜனங்கள் இவ்விஷயத்தில் அசட்டையாக இருந்துவிட முடியும். அப்படி இல்லாத போதுதான் ஸகல ஜனங்களும், “இவை நம்முடைய மஹத்தான பாரம்பர்ய ஸொத்து. இவற்றை நாம் ரக்ஷிக்க வேண்டும்” என்று ஸொந்த அக்கறையும் விசாரமும் காட்டி ஹ்ருதய பூர்வமாக ஈடுபட அதிக இடம் உண்டாகிறது.

வாழ்க்கை முறையும் வயதும் தடையாகா

“இத்தனை நாள் ஏதாவதொரு தினுஸிலேயே வாழ்க்கை நடத்திவிட்டோம். இப்போது திடீரென்று ஏதாவது சாஸ்திராப்யாஸம் செய்வது, கலையைக் கற்பது என்றால் எப்படி முடியும்? அதற்கு ஒரு வயஸ் இல்லையா? ஐந்தில் வளையாதது (ஐம்பதில் வளையாது) என்று பழமொழி இல்லையா?” என்று கேட்கலாம். அததற்கான வயஸில்தான் அததுவும் ஸுலபமாக வரும் என்பதும், வித்யாப்யாஸத்துக்கு ஏற்ற ஒரு பருவம் உண்டு என்பதும் வாஸ்தவந்தான். ஆனாலும், ‘இந்த தேசத்திலே பிறந்துவிட்டு இதன் ஏராளமான சாஸ்திரங்களில் ஒன்றுகூடத் தெரியாமலிருக்கிறோமே!’ என்ற feeling இருந்தால் எந்த வயஸிலும் வித்யை வரும். ஆர்வமே இளவயஸின் துடிப்பையும், க்ராஹ்ய சக்தியையும் (கல்வியைக் க்ரஹித்துக் கொள்ளும் சக்தியையும்) உண்டாக்கிவிடும்.

இதுவரை ஏதாவதொரு வாழ்க்கை முறையில் போய் விட்டோமென்றால் அது ந்யாயமாக நாம் போயிருக்கப்படாத “ஏதாவதொரு” முறைதான். ஆகையால், “எந்த ஒரு முறை”யில்தான் நாம் போயிருக்க வேண்டுமோ அதிலே இனியாவது போவது என்ற உறுதியும் ஆர்வமும் இருந்தால் ஈஸியாக அப்படி மாற்றிக்கொள்ளலாம்.

ஐம்பதில் வளையுமா என்று கேட்பதையே ‘சாலஞ்ஜா’க எடுத்துக்கொண்டு, ‘ஓ வளையும்’ என்று காட்ட முயல வேண்டும். உரிய வயஸிலே ஒன்றைக் கோட்டை விட்டவர்கள் இப்படி ‘சாலன்ஜ்’ பண்ணி ஜயித்துக் காட்டவேதான் அந்தப் பழமொழி ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்க வேண்டும். ப்ரத்யக்ஷத்திலேயே இப்படிப் பலர் இருந்திருக்கிறார்கள்.

த்ருஷ்டாந்தமாக ஸமீப காலத்தில் ப்ரொஃபஸர் ஸுந்தரராமையர் என்பவர் இருந்தார். (அவர்) ஐம்பது வயஸுக்கு மேல்தான் சாஸ்திரம் படித்தார். அப்புறம் (கும்பகோணத்தில் ஸ்ரீமட ஸம்பந்தமுள்ளதாக உள்ள) அத்வைத ஸபை மாதிரியான பெரிய வித்வத் ஸதஸ்களில் கூட, இவற்றிலேயே பழம் தின்று கொட்டை போட்ட பெரிய பண்டிதர்களுக்கும் புரிபடாத தத்வ நுட்பங்களை அவர்களே ஆச்சர்யப்படும்படியாக எடுத்து விளக்கியிருக்கிறார். ஆகவே புதிய இளைஞர் தலைமுறையில் சிஷ்ய பரம்பரை உருவாக்குவதோடு, வயதானவர்களும் இது முதல் நம் சாஸ்திரங்களிலோ கலைகளிலோ, ஏதாவது ஒன்று அப்யாஸம் செய்து அதன் வழியாய் ப்ரஹ்ம வித்யைக்குப் போகும் பாக்யத்தைப் பெற முயலவேண்டும்.

அனைவரும் வித்வானாயிருந்த காலம்

பழைய காலத்தைச் சேர்ந்த க்ராம மஹாஸபைகளின் சாஸனங்கள் இருக்கின்றன அல்லவா? அவற்றிலே ஒரு க்ராமத்தைச் சொல்லும்போது “அசேஷ வித்வத் ஜனங்கள்” அல்லது “அசேஷ வித்வத் மஹாஜனங்கள்” என்று குறிப்பிட்டிருக்கும். நம்முடைய மடத்து ஸ்ரீமுகங்களிலும் இந்த சொற்றொடர் இருக்கிறது. “சேஷம்” என்றால் “மீதி” என்று தெரிந்திருக்கும். “அசேஷ” என்றால் “மீதியில்லாமல்” என்று அர்த்தம். ஒரு க்ராமத்திலே உள்ள பொதுமக்களில் மிச்சம் மீதி இல்லாமல் அனைவரும் வித்வான்களாக இருந்தார்களென்பதையே “அசேஷ வித்வத் ஜனங்கள்” என்பது தெரிவிக்கிறது. அக்காலத்தில் ஸகலருக்கும் வித்வத் — அதாவது ஏதாவதொரு வித்யையில் பாண்டித்யம் — இருந்தது என்பதை இது தெரிவிக்கிறது. இதை அப்படியொன்றும் மிகைப்படுத்திச் சொன்னதாகக் கொள்வதற்கில்லை. ஏனென்றால் ப்ராமண இதரர்கள் பள்ளிக்கூடம் போகாவிட்டாலும் தங்கள் தங்கள் தொழிலில், அதற்கான வித்யையில், வித்வான்களாகவே இருந்தார்கள். ப்ராமணர்களை எடுத்துக்கொண்டால் இரண்டு வேதம், இரண்டு சாஸ்திரத்துக்குக் குறையாமல் வ்யுத்பத்தி (சிறப்பான தேர்ச்சி) உள்ளவர்களாக ஒவ்வொரு க்ராமத்திலும் பலபேர் இருந்திருப்பதாகத் தெரிகிறது. அதற்கேற்றாற்போல் அக் காலத்தில் குரு பீடங்களிலும் நம்முடைய ஆசார்யாள், வித்யாரண்யாள் போன்ற பண்டித ஸிம்ஹங்கள் இருந்திருக்கிறார்கள். இந்தக் காலத்தில் பண்டிதர் என்று இருப்பவரையே, “வேதத்தில் ஒரு பதம் புரியவில்லை, அர்த்தம் சொல்லுங்கள்” என்று கேட்டால், “பாஷ்யத்தைப் பார்த்துக்கொண்டு வந்து பதில் சொல்கிறேன்” என்கிறார்! காலத்துக்கேற்ப குரு பீடத்தில் நான் இருக்கிறேன்.

அதனால் — ஒரு விதத்தில் self-interest (ஸ்வயநல அக்கறை) என்று வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள் — குரு பீடங்கள் நல்ல நிலைமையில் ஸகல சாஸ்த்ரங்களிலும் நல்ல ஞானத்துடன் விளங்கவேண்டுமென்பதற்காகவாவது ஸகல ஜனங்களும் நல்ல வித்வத் உள்ளவர்களாக ஆகவேண்டுமென்கிறேன். முன்னேயே சொன்னாற்போல, சிஷ்யர்களின் தரத்தைப் பொறுத்துத்தான் குரு உருவாகிறார். சிறந்த அறிவாளிகளாக சிஷ்யர் கூட்டம் இருந்துவிட்டால் அதற்குத் தகுந்தாற்போல் குருவும் தம் நிலையை உயர்த்திக் கொள்ளவேண்டுமென்று நிர்பந்தமாகவாவது ஏற்பட்டுவிடுகிறது. அவர்கள் ஒன்றைக் கேட்டு இவர் முழிக்கப்படாதல்லவா? அதனால்! ஆனபடியால் குரு பீடங்களிலுள்ள குருமார்கள் நன்றாக சாஸ்திரார்த்தம் அறிந்தவர்களாய் இருக்கவேண்டுமென்றால் பொறுப்பு சிஷ்யர்களதுதான்.