வீணாகும் நேரம் வித்யைக்கு ஆகட்டும்

“எத்தனையோ வாழ்க்கை ப்ரச்னை எங்களுக்கு. ஆபிஸ் கார்யம், வீட்டுக் கார்யம் என்று அலைகிறோம், அவதிப்படுகிறோம். அது தெரியாமல், எங்கேயோ மடத்தில் உட்கார்ந்து கொண்டு, ‘அதைக் கத்துக்கோ, இதைக் கத்துக்கோ’ என்று நீங்கள் உபதேசம் பண்ணினால் எப்படி?” என்று கேட்கலாம். மனஸிருந்தால் எதையும் செய்துவிடலாம். இத்தனை வாழ்க்கை ப்ரச்னை இருந்தாலும் எத்தனை பொழுது அரட்டை, ந்யூஸ் பேப்பர், ஸினிமா, சீட்டுக்கட்டு இத்யாதியிலே போகிறது? இப்படி வீணாகப்போகிற காலத்தில் பாதி பொதுநலப் பணிகளுக்கு என்றும், பாதி ஏதாவது வித்யாப்ஸாஸத்துக்கு என்றும் வைத்துவிட்டால் போதும் — ஸமூஹப்பணிகளும் நடந்துவிடும், நம்முடைய வித்யைகளும் ப்ரகாசம் பெற்றுவிடும், நாமும் ப்ரகாசம் பெற்றுவிடுவோம்.

வேலை – வெட்டி, குடும்பத்தொல்லை என்று மன்றாடுபவர்களுக்கு ‘டைவர்ஷன்’ வேண்டாமா என்று கேட்கலாம். ஆசையோடு மனஸ் ஈடுபட்டு ஏதாவது ஒரு வித்யை அப்யஸிக்க ஆரம்பித்தீர்களானால் உங்களுக்கே தெரியும், இந்த அப்யாஸத்தைவிடப் பெரிய ‘டைவர்ஷன்’ எதுவும் இல்லையென்று. களைத்துப்போன மனஸுக்கு வேண்டிய உத்ஸாஹத்தை இவையே (வித்யைகளே) ஊட்டிவிடும். அப்படியும் ஒரேயடியாக நீங்கள் ‘டைவர்ஷன்’ என்பதை விட்டுவிடும்படிச் சொல்லவில்லை. அதுவும் கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நீங்களே ஆலோசித்துப் பார்த்து, “இப்படிப் பொழுதை வேஸ்ட் பண்ணுகிறோமே” என்று நினைக்கக் கூடியவைகளை விட்டுவிட்டு – இப்படி நிறைய அகப்படும் — அந்தப் பொழுதை இப்படியொரு pursuit-ல் (தேட்டத்தில்) செலவிட்டால் போதும், ஏதாவதொரு ஸ்வதேச வித்யையில் ஈடுபட்டுத் தேர்ச்சி பெற்றுவிடலாம். நம் முன்னோர்கள் போன வழி அதுதான்.

மநுஷ்யப் பிறவி கிடைத்தும் அதன் அறிவாலே பெறக் கூடியவற்றைப் பெற்று அதன் மூலம் மநுஷ்யத்வத்துக்கு மேலே போக முயற்சி பண்ணாமல் நாம் செத்துப்போனால் அது ஆடு மாடு ஜன்மாவுக்கு ஸமானந்தான். ஒரு ஆடு ஆடாகவோ, மாடு மாடாகவோ இருந்து மடிவதில் அவற்றுக்குக் குறைவு இல்லை. ப்ரக்ருதியில் ஈச்வரன் அவற்றுக்கு ஏற்படுத்திய தர்மப்படி இருந்ததாகவே ஆகும். ஆனால் மனிதப் பிறவி எடுத்தவர்கள் இதற்கு அவன் அநுக்ரஹித்துள்ள உபரி அறிவின் தர்மப்படி அதை ஒரு வித்யையால் சோபித்துக் கொள்ளச் செய்யாமல் விட்டுவிட்டால் அது ரொம்பவும் துர்பாக்யம். அறிவுக்கு மேலே உள்ள ஆண்டவனுக்காக, ஆத்மாவுக்காகத்தான் அறிவை விட்டுவிட்டு, ‘இதெல்லாம் எதற்கு?’ என்று ஸகல சாஸ்த்ரங்களையும் வித்யைகளையும் தள்ளலாமே தவிர, நம் நிலையில் அப்படிக் கேட்டு விட்டுவிடுவது தகாது. இது ஒன்றுக்கும் உதவாத சோம்பேறியின் வாய் வேதாந்தந்தான்.

அஹம் குறைய “அவனை”த் தொடர்புறுத்துக!

இங்கே அந்த உளி எப்படி ஈச்வர ஸம்பந்தம் பெற்றதோ, சில்பி எப்படி தன் கலைத்திறமையை ஈச்வரார்ப்பணம் பண்ணினானோ அப்படியேதான் எந்தக் கலையானாலும் சாஸ்திரமானாலும் ஸயன்ஸானாலும் அதை ஈச்வரார்ப்பணம் பண்ணவேண்டும். இல்லாவிட்டால் ‘இதிலே நாம் கெட்டிக்காரன்’ என்ற அஹங்காரம்தான் உண்டாகும். ஆச்ரயிப்பவர்களின் அஹங்காரத்தைக் குறைக்கத்தான் மதபீடங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றில் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். நம்முடைய பெரிய பண்பாட்டுப் பாரம்பர்யம் வீணாகப் போகப்படாது என்பதில் எனக்கு இருக்கிற ஆசையினால் அனைவரும் நம்முடைய வித்யைகளில் ஒன்றையேனும் நன்கு கற்ற அறிவாளிகளாக ஆகவேண்டும், அல்லது கலைஞர்களாகவேண்டுமென்று சொல்லி உங்களைத் தூண்டிக்கொண்டிருப்பதில், பீடத்தின் முக்ய உத்தேசமான அஹங்காரக் குறைப்புக்கு நேர் எதிராகப் பண்ணிவிடக் கூடாதல்லவா? அதனாலே சொல்கிறேன் — அனைவரும் அறிவாளிகளாக வேண்டியதுதான். ஏதாவது ஒரு கலையில் தேர்ச்சிபெற வேண்டியதுதான். ஆனால் அதே ஸமயத்தில் அனைவருக்கும் நல்ல பக்தியும் இருக்கவேண்டும். ‘கற்பதெல்லாம் அவன் அருளால், கலைகளெல்லாம் அவன் ப்ரஸாதம்’ என்ற எண்ணத்தோடு கற்கவேண்டும். அப்புறம் அதை ப்ரயோஜனப்படுத்துவதும் முடிவாக அவனை நினைவுப்படுத்துகிற விதத்திலேயே இருக்கவேண்டும்.

பாஷா சாஸ்தி்ரத்தில் போனாலும் சப்த ப்ரஹ்மத்தைக் காட்டிக் கொடுக்கவேண்டும். ஸங்கீதத்தில் போனால் நாத ப்ரஹ்மத்தில் முடிக்கவேண்டும். வாதம், அறிவாராய்ச்சி என்று போனாலும் இவற்றால் எந்த அளவுக்குப் பரமாத்ம தத்வத்தைக் காட்டிக் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு அதைச் செய்யவேண்டும். கணிதமும் ஸங்க்யை (எண்ணிக்கை) யில் அளவிடமுடியாத ஆத்ம தத்வத்தை நினைப்பூட்ட முடியும் — பாஸ்கர ராயர், ஆர்யபடர் முதலியவர்களுடைய கணித நூல்களின் மங்கள ச்லோகங்களைப் பார்த்தால் தெரியும், அவர்கள் எப்படி இதையும் ஈச்வர ஸம்பந்தமாக்கினார்களென்று. தாவர சாஸ்திரமா, biology-யா (உயிரியல் சாஸ்திரமா), எதுவானாலும் ஸ்ருஷ்டிகர்த்தாவின் விசித்ர விசித்ரமான கல்பனா சக்தியை ரஸிக்கவைப்பதில் முடியமுடியும். ஜாகரஃபி அவன் எப்படி ஜகத்ஸ்வரூபமாக மலைகள், பீடபூமிகள், நதிகள், பாலைவனங்கள், க்ளைமேட்டுகளாக விதவித வேடிக்கை பண்ணுகிறான் என்பதைக் காட்டும்படிச் செய்யமுடியும். ‘அஸ்ட்ரானமி’ அவன் அந்தரத்தில் கோடாநு கோடி லோகங்களை அதிசய கதிகளில் ஆட்டி வைப்பதைத் தெரிந்துகொள்ள உதவி புரிய முடியும். ஃபிஸிக்ஸினாலே அவன் ப்ருக்ருதி (இயற்கை) ரூபத்தில் போட்டிருக்கிற சட்டதிட்ட ஒழுங்குகளைப் பார்த்து நம்மையும் மநுஷ்யதர்ம ஒழுங்கிலே கொண்டுவந்து கொள்ளுமாறு அறிவுபெறமுடியும். இப்படி எந்த ஒரு வித்யையைத் தெரிந்துகொண்டாலும் அதன் மூலம் தானும் பரமாத்ம தத்வத்திலே ஒரு அம்சத்தைப் புரிந்துகொண்டு, மற்றவர்களுக்கும் புரியப் பண்ணவேண்டும். இது ரொம்ப முக்யம். இல்லாவிட்டால் எல்லா அஹங்காரங்களையும்விட மோசமான “வித்யா கர்வ”த்தில் நீங்கள் அழுந்திப்போவதற்கு நான் வழி சொன்னதாக ஆகிவிடும்.

ஒவ்வொருவரும் வித்வானாக வேண்டும்

ஒரு வாத்யார் எவரோ ஒரு சிஷ்யருக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு பண்ணித் தருவது மட்டுமில்லாமல் — இது ரொம்பவும் அத்யாவச்யமான கார்யம்தான், இதற்கு நீங்கள் கைகொடுக்கத்தான் வேண்டும், தோள் கொடுக்கத்தான் வேண்டும், ஆனால் இப்படி இன்னொருத்தன் படிப்பதற்கு வசதி பண்ணித்தருவதோடு மாத்திரம் நின்று விடாமல் — உங்களில் ஒவ்வொருவருமே நம்முடைய இத்தனை சாஸ்திரங்களில், வித்யைகைளில், கலைகளில் ஏதாவது ஒன்றிலாவது தேர்ச்சிபெற வேண்டும். ‘ஆபீஸுக்குப் போனேன், ஸம்பாதிச்சேன், குடும்பம் நடத்தினேன்’ என்பதோடு நின்றுவிடாமல், நூற்றுக்கணக்காக இருக்கப்பட்ட நம்முடைய வித்யைகளில் ஏதாவது ஒன்றிலாவது ஒவ்வொருத்தரும் நல்ல ஞானம் ஸம்பாதித்துக் கொள்ள வேண்டும். நம் வித்யைகள் வளர ஆசார்யர்களும் சிஷ்யர்களும் உண்டாக்கித் தருவதோடு நிற்காமல் நீங்கள் ஒவ்வொருவரும் சிஷ்யராகி ஏதாவது ஒரு வித்யையை அப்யஸித்து அதில் நீங்களே ஆசார்யராகி இன்னொருத்தருக்குச் சொல்லிக்கொடுக்கக்கூடிய அளவுக்குத் திறமை பெற வேண்டும்.

பாஷா சாஸ்திரத்தில் இன்டரெஸ்ட் இருந்தால் வ்யாகரணம், நிருக்தம் இப்படி ஏதாவது நன்றாகக் கற்கலாம். அறிவு வாதத்தில் இன்டரெஸ்ட் இருந்தால் தர்க்கம் படிக்கலாம். ஸங்கீதத்தில் இன்டரெஸ்ட் இருக்கிறதா? வீணை, ம்ருதங்கம், ஜலதரங்கம், வாய்ப்பாட்டு ஏதாவது கற்றுக் கொள்ளலாம். இல்லாவிட்டால் ஒரு உளியை வைத்துக் கொண்டு ஒரு சில்பம் பண்ணக் கற்றுக்கொள்ளலாம். இப்படிப் பலபேர் பல உளிகளை வைத்துக்கொண்டு தட்டியதுதான் இன்றைக்கும், ‘இந்திய நாகரிகம் என்று ஒன்று வானளாவ இருக்கிறது’ என்று உலகத்துக்கெல்லாம் காட்டும் வானளாவும் கோபுரங்களாக உயர்ந்து நிற்கிறது.

திரவிய உதவியும் ஸமூஹ கௌரவமும்

எனவே தற்போது வித்வானாக இருந்துகொண்டும் சிஷ்யர்கள் கிடைக்காமலிருப்பவர்களை முதலில் பிடித்து அவர்களிடம் சில பேராவது சேர்ந்து படிக்கும்படி வசதி செய்துதர வேண்டும்.

Chair என்று யூனிவர்ஸிடிகளில் வைப்பதுபோல் இந்த வித்வான்களை வைத்து அதே போன்று ஸன்மானம் கிடைக்கச் செய்யவேண்டும். ஸன்மானம் என்பது தாம்பாளத்தில் வைத்து நீட்டுவது மட்டுமல்ல, ஸமூஹத்தில் கௌரவத்தை உண்டாக்குவதும்தான். ராஜாவைவிடப் பண்டிதன் மேல் — இவனக்குத்தான் “சென்றவிடமெல்லாம் சிறப்பு” என்று போற்றிய நம் தேசப்பண்பு மறைய விடக்கூடாது.

அபூர்வமான பழைய சாஸ்திரங்களில் பண்டிதர்களாகக் கிடைக்கக் கூடியவர்களையெல்லாம் நம் மடத்திலேயே சேர்த்து நிரந்தரமாகப் பராமரிக்க வேண்டும் என்றும், அவர்களைக் கொண்டு சிஷ்ய பரம்பரைகள் உற்பத்தி பண்ணவேண்டுமென்றும் எனக்குப் பேராசை. அம்பாள் ஸங்கல்பம் எப்படியோ?

எவனாவது ஒரு மாணவன் பழைய சாஸ்தி்ரங்களில் ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டு, நிஜமான ஆர்வத்துடன் அதைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைத்தால், ‘உனக்கு வாத்யாரில்லை, நீயே ஏதாவது புஸ்தகம், சுவடியைத் தேடி முட்டிக்கொள்’ என்று சொல்லாமல், ‘வாப்பா, உனக்காகத்தான் இதோ வாத்யார் தேடிப் பிடித்து வைத்திருக்கிறோம்; நீ வருவாயா வருவாயா என்றுதான் அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நாம் சொல்லும்படியாக ஏற்பாடுகள் செய்து நமக்குப் பெருமை தேடிக்கொள்ள வேண்டும்.

கற்றுக்கொடுக்கத் தெரியாத, அல்லது இஷ்டப்படாத பண்டிதர்களையும் பிரார்த்தித்துக் கொண்டு,”மசித்து”, அந்த சாஸ்திரம் அவரோடு போகாமல் நாலு சிஷ்யர்களிடம் சேருமாறு செய்யவேண்டும். அவர் இந்த வழிக்கு வரமுடியாதவர் என்றே ஏற்பட்டாலும், அல்லது அவரிடம் படிக்க எவனுமே வரவில்லை என்று ஏற்பட்டாலும்கூட, அவருக்குப் பராமரிப்பு தரத்தான் வேண்டும். என்றைக்கோ உப்புக் காய்ச்சிப் பத்துநாள் ஜெயிலுக்குப் போனவர்களை த்யாகி என்று கௌரவப்படுத்தி ஆயுஸ் பூரா பென்ஷன், அவர்கள் “போயிருந்தால்கூட” அவர்களுடைய குடும்பத்துக்குப் பென்ஷன் என்று கொடுக்கவில்லையா? அம்மாதிரி அறிவுக்கே தங்களைத் தந்துகொண்டு எந்த சாஸ்திரமானாலும் ஸரி, கலையானாலும் ஸரி, அதை ஸாங்கோபாங்கமாகத் தெரிந்துகொண்டிருக்கிறவர்களுக்கும் நாம் வாழ்க்கை வசதிகள் கொடுத்து, மரியாதை பண்ணி வைத்துக் கொள்ளத்தான் வேண்டும். அவர்கள் சிஷ்யர் என்று வைத்துக்கொண்டு பாடம் சொல்லித் தராவிட்டால்கூட அவர்களை அபிமானித்து, உத்ஸாஹப்படுத்தி வைத்துக் கொண்டால் எப்படியோ ஒரு விதத்தில் அவர்களுடைய சரக்கு வெளியிலே வராமல் போகாது. ஸதஸ்களில் அவர்களைப் பேசப் பண்ணி நோட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். அறிஞர்களாக உள்ளவர்கள் அவர்களிடம் கேள்விகள் கேட்டு (“பரிப்ரச்னம்” பண்ணி) விஷயங்களைக் கறந்து கொள்ளலாம். அவருடைய சாஸ்திரத்தில் குறிப்பாக topic-களைச் சொல்லி வ்யாஸம் (thesis) மாதிரி எழுதப் பண்ணலாம், அல்லது அவருடைய ஸஹாயத்துடன்அறிவாளிகளே எழுதலாம். ஆக, நம் சாஸ்திரங்களைக் காக்க நம்மால் என்ன பண்ண முடியுமோ அவ்வளவும் செய்யவேண்டும்.

பிரசாரப் புரளி

ப்ரசாரணை என்பது இந்த நாளில் எடுத்ததற்கெல்லாம் ஆர்ப்பாட்டமாக ப்ரசாரம், propaganda என்று செய்கிற மாதிரியானதல்ல. இப்போது ஏதோ ‘ஸ்டாடிஸ்டிக்ஸ்’களை (புள்ளி விவரங்களை)க் காட்டி ஒரு விஷயத்தை ‘ஓஹோ’ என்று நினைக்கும்படியாகவே ‘ப்ராபகாண்டா’ இருக்கிறது. இத்தனை பம்ப்ஸெட் போட்டோம், இத்தனை ஊரில் எலெக்ட்ரிக் லைட் போட்டோம், திட்டத்தில் இததற்கு இத்தனை கோடி செலவழித்தோம் என்கிறாற்போல ‘ப்ராபகாண்டா’ என்பது நடக்கிறது. வாஸ்தவத்தில் (இவற்றால் ஜனங்களுக்கு) ஏற்பட்ட ப்ரயோஜனம் குறிப்பிடும்படியாக இருந்ததா என்று கேள்வி எழுந்தாலுங்கூட ஸ்டாடிஸ்டிக்ஸைப் பார்த்து ப்ரமித்துப் பாராட்டிவிடத் தோன்றிவிடுகிறது.

மதத்தில் கன்வர்ஷன் (மதமாற்றம்) செய்கிறவர்கள்தான் இப்படி ப்ராபகாண்டா செய்வதில் மஹா கெட்டிக்காரர்களாயிருக்கிறார்கள். பணத்தை, காசைக் கொடுத்து, இல்லாவிட்டால் வேறே ஏதோ ஸாமர்த்யம் செய்து வளைத்து, ஒன்றுமறியாத பாமர ஜனங்களை அப்படியே சேரி சேரியாகத் தங்கள் மதத்துக்குத் தள்ளிக்கொண்டு விடுவார்கள். அப்புறம் அவர்களைக் கணக்கெடுத்து (அதோடு கொஞ்சம் சேர்த்துக்கொண்டாலும் சேர்த்துக்கொண்டு!) “பார்த்தீர்களா, இத்தனை பேர் ஹிந்து மதம் உபயோகமில்லை என்று எங்கள் மதத்தில் விச்வாஸம் வைத்துச் சேர்ந்துவிட்டார்கள்” என்று ஸ்டாடிஸ்டிக்ஸ் காட்டி ப்ரசாரம் செய்வார்கள்.

அங்கே அப்புறம் நம்மவர்கள் போய் கன்வர்ட் ஆனவர்களை எப்படியாவது பிடித்து, “நம்ப மதத்திலே உங்களுக்கு என்ன பிடிக்கவில்லை? அந்த மதத்திலே என்ன பிடித்து அதிலே சேர்ந்தீர்கள்?” என்று கேட்டால் அவர்கள் முழிமுழி என்று முழிப்பார்கள். ரொம்பவும் கேட்டால், “எங்களுக்கு ஹிந்து மதத்தில் எதுவும் பிடிக்காமலில்லை. அப்படியே இதில் பிடிக்காததாக ஏதாவது இருந்தாலுங்கூட, அந்த மதத்தில் இதைவிடப் பிடித்ததாக எதுவுமில்லை. நிஜத்தைச் சொல்லப்போனால் எங்களுக்கு இந்த மதத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. இதிலே எங்களுக்கு அபிமானமோ, பொதுவாக மதவிஷயம் என்பதிலேயே எங்களுக்கு அக்கறையோ இல்லை. அவர்கள் எங்களுக்கு இது இதுகளைக் கொடுத்தார்கள். இன்னம் என்னென்னவோ செய்வதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள், எங்களுக்கு ஏதேதோ ‘ரைட்’கள் வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதற்காகவெல்லாந்தான் அவர்களுடைய மதத்துக்குப் போனோமே தவிர, அந்த மதக் கொள்கை புரிந்தோ, பிடித்தோ போகவில்லை” என்று உண்மையைப் போட்டு உடைத்துவிடுவார்கள்.

“ப்ரசாரணை” என்ற வார்த்தையைப் பார்த்துத் தற்கால ப்ரசாரம் மாதிரியாக்கும் அது என்று நீங்கள் நினைத்துவிடப் படாதே என்பதற்காகச் சொல்கிறேன். ப்ரசாரம் என்றாலே புரளி ப்ரசாரம்தான் என்று எடுத்துக் கொண்டுவிடக்கூடாது என்பதற்காகச் சொல்கிறேன்.

நம்பரைக் காட்டி ப்ரமிக்க வைத்து ப்ரசாரம் செய்வது நம்முடைய தேசாசாரத்தில் கிடையவே கிடையாது. இத்தனை பேர் படிக்கிறார்கள் என்று ஸ்டாடிஸ்டிக்ஸ் காட்டுவதற்காக வித்யா ப்ரசாரம் பண்ணும்படியாக நம் சாஸ்திரங்கள் சொல்லவேயில்லை. பாத்ரம் பார்த்து, நிஜமாகவே க்ரஹிக்க கூடியவர்களுக்குத்தான் வித்யையை ப்ரசாரம் செய்யவேண்டுமென்று விதித்திருப்பதை முதலிலேயே சொன்னேன்.

இப்படித்தான் ப்ராபகாண்டா பண்ணாமலே ஒவ்வொரு வித்யார்த்தியும் முதலில் தான் வித்வானாகி, அப்புறம் குருவாக ஆகித் தானும் சில வித்யார்த்திகளுக்கு நிஜமாகவே போதித்து அவர்களை நிஜமான வித்வானாக்க வேண்டும் என்று வைத்திருந்தார்கள். சிஷ்யன் குருவாகி வாழையடி வாழையாக மேலும் சிஷ்யர்களை பயிலுவிக்க வேண்டுமென்பது நம்முடைய மரபு.

ஒருத்தன் தான் ஸம்பாதித்த ஸொத்தை யாருக்கும் ப்ரயோஜனப்படாமல் புதைத்து வைத்துவிட்டுச் செத்துப் போனால் எத்தனை தோஷமோ, அதைவிட தோஷம், தான் கற்ற வித்யையை நாலு பேருக்குக் கொடுக்காமல் செத்துப் போவது என்பது நம் முன்னோர்களின் கருத்தாக இருந்திருக்கிறது.

கற்றவன் கற்பிப்பவனாக வேண்டும்

நன்றாகப் படித்தறிந்த ஒருத்தர் நாலு பேருக்காவது அதைப் படிப்பிக்காமல் போனார் என்று ஏற்படவே கூடாது. நன்றாகக் கற்று வித்வானாகிற எவனும் அப்புறம் தான் கற்றதை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்து ப்ரசாரம் செய்தேயாக வேண்டுமென்பது ஆன்றோர் விதித்த விதி. தன்மட்டில் கற்றவனாயிருந்து பயனில்லை. கற்பிப்பவனாயிருந்து கல்வியின் பயன் வருங்கால ஸமுதாயத்துக்கும் போகும்படி செய்யவேண்டும்.

மநுஷ்யனுடைய வாழ்க்கையில் ப்ரஹ்மசர்யம், கார்ஹஸ்த்யம், வானப்ரஸ்தம், ஸந்ந்யாஸம் என்று நாலு ஆச்ரமம் உள்ளது என்றால், கல்வி கற்பிப்பதிலும், நாலு ஸ்டேஜ்கள் உண்டு. அதீதி, போதம், ஆசரணை, ப்ரசாரணை என்று இந்த நாலுக்குப் பேர். அதீதி என்றால் படிப்பது. முதலில் நன்றாகப் படிக்கவேண்டும். அப்புறம் போதம், அதாவது படித்ததை நன்றாகப் புரிந்துகொண்டு அதிலே மேலும் புது அறிவு பெறுவது. மூன்றாவதாக ஆசரணை. முதலிரண்டும் இப்போதுங்கூடப் பல ஸப்ஜெக்ட்களில் நடந்துவிடுகின்றன. ஆனால் இந்த மூன்றாவது விஷயத்தில் தான் கோளாறாக இருக்கிறது. அது என்ன? ஆசரணை என்றால் அறிவிலே இறக்கிக் கொண்டதை நம்முடைய வாழ்க்கையிலே இழைத்து, நடைமுறையில் நடத்திக் காட்டுவது என்று அர்த்தம். கற்றபின் அதற்குத் தக நிற்பது ஆசரணை.

இந்த மூன்றோடு மட்டும் வித்வானின் லக்ஷணத்தை முடிக்காமல், முடிவாக ‘ப்ரசாரணை’ என்றும் ஒரு நாலாவது லக்ஷணம் சொல்லியிருக்கிறது. இதுதான் தான் கற்ற கல்வி தன்னோடு போகாமல் அதை நாலுபேருக்குக் கற்றுக் கொடுப்பது. ப்ரசாரம் செய்வது ப்ரசாரணை.

ஸ்ரீ ஹர்ஷர் இந்த விஷயத்தைக் கவி சாதுர்யத்தோடு சொல்லியிருக்கிறார். நளனுடைய கதையை “நைஷதம்” என்ற பெயரில் எழுதியிருப்பவர் அவர். நளன் நிஷத தேசத்து ராஜாவானதால் புஸ்தகத்துக்கு “நைஷதம்” என்று பெயர் வைத்தார். வித்வான்கள் விரும்பும்படியான காவ்யம் அது. “நைஷதம் வித்வத் ஒளஷதம்” — நைஷத காவ்யமானது வித்வான்களுக்கு லேஹ்யம் மாதிரி — என்று சொல்வார்கள். அதிலே அவர் நளன் சதுர்தச வித்யைகளைக் கற்றுத் தேர்ந்தான் என்று சொல்லும்போது இந்த ஸமாசாரம் சொல்லியிருக்கிறார். ‘சதுர்தச’ என்ற வார்த்தையில் சிலேடை செய்து சொல்லியிருக்கிறார்.

‘சதுர்தச’ என்ற வார்த்தை இரண்டுவிதமாக அர்த்தம் கொடுக்கும். பதிநாலு என்பது ஒரு அர்த்தம். தசம் – பத்து, சதுர்தசம் – நாலு ப்ளஸ் பத்து, அதாவது பதிநாலு நாலு வேதம், அதன் ஆறு அங்கம், நாலு உபாங்கம் என்பவை சேர்ந்து பதிநாலு வித்யைகள்.

‘சதுர்தச’ என்பதற்கு இன்னொரு அர்த்தம் நாலு தசை, நாலு விதமான ஸ்டேஜ்கள் என்பது.

சதுர்தச வித்யைகளைக் கற்று, அவற்றுக்கு அதீதம், போதம், ஆசரணை, ப்ரசாரணை என்று சதுர்தசைகளை நளன் கொடுத்தான் என்று (கவி ஸ்ரீஹர்ஷர்) வார்த்தை விளையாட்டுப் பண்ணியிருக்கிறார்.

அதீதபோத ஆசரண ப்ரசாரணை:
தசாச் – சதஸ்ர: ப்ரணயந் நுபாதிபி: |
சதுர்தசஸ்த்வம் க்ருதவாந் குதஸ்வயம்
நவேத்மி வித்யாஸு சதுர்தசஸ்வயம் ||

செய்யவேண்டிய பணிகள்

இந்தப் பெரிய பணியில் முதல் ஸ்டெப்பாகச் செய்யவேண்டியது தற்போது மிஞ்சியுள்ள சாஸ்திரக்ஞர்களையெல்லாம் குருகுலமோ, பாடசாலையோ எதுவா ஒன்றில் பிடித்துப்போட்டு போதிப்பதற்கு ஊக்கம் தரவேண்டும். அங்கே பழைய சாஸ்திரங்களின் ஸம்பந்தமான நூல்களை, சுவடிகளையெல்லாம் முடிந்தமட்டும் சேகரித்து வைக்கவேண்டும். இவற்றில் ரிஸர்ச்சுக்கும் தூண்டுதல் அளிக்க வேண்டும். முக்யமான நூல்களையாவது அச்சுப் போடுவதற்கு ஸஹாயம் செய்யவேண்டும்.

வேதாந்த விஷயத்திலும் இப்படியே

யோக சாஸ்திரம் பற்றி நான் சொன்ன ஒரு அம்சம் வேதாந்தத்துக்கும் பொருந்துவதுதான். எப்படி ஒரு யோகியை நாம் குருவாக உட்கார்த்திவைத்து, சிஷ்யன் பிடித்துக்கொடுக்க முடியாதோ அப்படியேதான் வேதாந்தத்தை அப்யஸித்து ஸித்தி பெற்ற ஞானி விஷயமும். பக்திச்சார்புள்ள வேதாந்த ஸம்ப்ரதாயமானால் அதிலே ஸித்திபெற்ற பரம பக்தரையும் இப்படி நாம் குருகுலத்தில் கொண்டுவர முடியாது. இங்கேயும் அறிவு ரீதியில் வேதாந்த சாஸ்திர ஞானம் தரத்தான் நாம் குருகுலம் வைக்கவேண்டியதே தவிர, அதை அங்கேயே அநுபவமாகப் பண்ணித் தருவதற்கு அல்ல. பூர்வகால வித்யாப்யாஸத்திலும் இப்படித்தான் வேதாந்த சிக்ஷை நடந்ததென்று சொன்னேனல்லவா? தற்போது வித்யாசாலையில் கற்றதைக் கொண்டு வித்யார்த்தி பிற்பாடு ஒரு உத்தமமான ஞானகுருவை, அல்லது பக்த ச்ரேஷ்டரை, அல்லது யோகீச்வரரை அடைந்து ஸாதனைக்குப் போய்க்கொள்வான். ஆனால் அறிவு ரீதியில் சாஸ்திரங்களைக் கற்றுக் கொள்ளும்போதுகூட அதை குணத்தோடும் ஆசாரத்தோடும் ஸம்பந்தப்படுத்தாமல் இப்போது விட்டிருப்பதுபோல் இருக்கக்கூடாது. நல்ல ஒழுக்கக் கட்டுப்பாட்டுடனும், பக்தி விச்வாஸம் முதலான பண்புகளுடன் கற்றுக்கொண்டால்தான் மாணவன் நன்றாக உருவாவான், கல்வியும் பிற்காலத்தில் கொஞ்சங்கூட தப்பு வழியில் ப்ரயோஜனமாகாமல் நல்லதற்கே ஆகும் என்பதைத் தான் திரும்பத் திரும்பச் சொல்லி வந்திருக்கிறேன்.

இப்படி நம் தேசத்துடையதாக வந்துள்ள ஸகல கலைகளுக்கும் சாஸ்திரங்களுக்கும் நம் தேச முறைப்படியே தொடர்ந்து வித்யாப்யாஸம் நடக்க நாமெல்லாரும் முனைந்து ஏற்பாடுகள் செய்யவேண்டும். முடிந்தமட்டும் குருகுல அம்சங்கள் இருக்கும்படியாக இந்த வித்யாப்யாஸத்தை அமைக்கவேண்டும். அப்போதுதான் ஆசாரமும் குணமும் வித்யையோடு கைகோத்துக் கொண்டு போகும். ஆசாரம், குணம் இல்லாவிட்டால் வேதமே வேதமில்லை என்று வசனம் ஓதுவதைவிட (அதாவது கற்பதைவிட) ஒழுக்கம்தான் ப்ராமணனுக்கு முக்யம் என்று வள்ளுவரே தீர்ப்புச் சொல்லியிருக்கிறாரே!*


* மூன்றாம் பகுதியில் “ஆசார விஷயங்கள்” என்ற உரையில், “ஆசாரங்களின் பாகுபாடு; குறள் தீர்ப்பு” என்ற உட்பிரிவு பார்க்க.

‘தியரி’ மட்டும், ப்ராக்டிஸ்’ இல்லை

நான் ரஸவாத சாஸ்திரம் பற்றிச் சொன்னதைக்கூட இப்படித்தான் எடுத்துக்கொண்டு நடத்தவேண்டும். இல்லாவிட்டால் அதைப் படிக்கிற பலர் பித்தளையை தங்கமாக்குகிறேன் என்று புறப்பட்டு அநேக பித்தலாட்டங்களுக்கு இடம் கொடுத்துப்போகும். (‘பித்தலாட்டம்’ என்ற வார்த்தையே ரஸவாத ஏமாற்றில் உண்டானதுதான். ‘பித்தல’வும் ‘ஹாடக’மும் சேர்ந்து ‘பித்தலாட்டம்’. பித்தலம் தான் பித்தளை. ஹாடகம் என்றால் தங்கம்.) “இதுவும் ஸாத்யம், இதற்கு பாஸிபிலிடி இருக்கிறது” என்று அறிவு மட்டத்தில் இம்மாதிரி சாஸ்திரங்களைப் போதித்து, ஈச்வரனின் பெரிய வரப்ரஸாதமான மநுஷ்ய அறிவின் ஆற்றல்களைத் தெரிந்துகொள்ளப் பண்ணுவதோடு நிறுத்த வேண்டுமே தவிர, இந்த வித்யாசாலைகளில் ப்ராக்டிகல் க்ளாஸ் என்று வைக்கக்கூடாது. சாஸ்திரம் நிஜம்தான் என்று காட்டுவதற்காகக் கொஞ்சம் டெமான்ஸ்ட்ரேஷன் வேண்டுமானால் குரு செய்து காட்டலாம். ஆகக்கூடி ஜாக்ரதையுடன் கையாளவேண்டிய விஷயம். அதற்காக, ‘அழிந்துபோகட்டும்’ என்று விடக்கூடாத வித்யை.

யோக சாஸ்திரம்

யோக சாஸ்திரத்தை விட்டுவிட்டேனே! “யோக சாஸ்திரம்” என்று மாத்ரம் சொன்னால் பதஞ்ஜலி செய்துள்ள அஷ்டாங்க யோகம் என்றுதான் பொதுவில் அர்த்தமாகும். அதன் கிளைகளாகவும், டெவலப்மெண்ட்களாகவும் அதில் வராததாகவும் இன்னும் அநேக யோகங்களும் இருக்கின்றன. குண்டலிநீ யோகம், ஹட யோகம், க்ரியா யோகம் என்று எத்தனையோ இருக்கின்றன.

இவை ரொம்பவும் ஜாக்ரதையாக, மிகவும் பக்வப்பட்டவர்களே அப்யஸிக்க வேண்டிய வித்யைகள். ஸாதாரணமாக, மனஸு கொஞ்சம் தெளிந்து சிறிது தெய்வ சிந்தனை செய்வதற்கும் த்யானிப்பதற்குங்கூட சில நிமிஷம் ப்ராணாயாமம் (மூச்சுடக்கல்) செய்யும்படி சாஸ்திரம் சொல்கிறது. இது யோகத்தின் அங்கம்தான். ஆனால் இதற்கும் மேலே இதில் தீவ்ரமாக ஈடுபடும்போது ஜாக்ரதை தேவை. முறைப்படிப் பண்ணாவிட்டால், அல்லது ஸாதகன் இருக்கிற ஸ்திதிக்கு ‘ஓவராகப் போய்விட்டால் மூளைக்கொதிப்பு, ஏன், மூளைக் கலக்கங்கூட உண்டாய்விடும், தேஹத்தையும் மனஸையும் ஆரோக்யமாகவும், சுத்தமாகவும் ஆக்கிக் கொள்ளவே ஏற்பட்ட அப்யாஸத்தால் இரண்டுக்கும் ஹானியே உண்டாய்விடும். ஸித்தி, கித்தி என்று போய் அதீத சக்திகளை ஸம்பாதித்துக் கொள்வது, அதைக் கொண்டு பெயர் – புகழ் எடுக்கப் பார்ப்பது, ஒருத்தரை வசியம் பண்ணுவது, வசியத்துக்கு மசியாவிட்டால் யோக சக்தியால் ஹிம்ஸிப்பது என்று ஒரு அனர்த்த பரம்பரைக்கே இடமளிப்பதாகவும் ஆகிவிடும் – யோக சாஸ்திர சிக்ஷை பக்வமான பாத்ரத்துக்குப் போய் சேராதபோது.

தேஹாரோக்யத்துக்கேயான அநேக யோகாஸனங்கள் இருக்கின்றன. இவற்றிலும் கொஞ்சம் ஜாக்ரதை தேவைதானென்றாலும் மற்ற யோக ஸாதனகைளைப் போல இதில் கஷ்டமோ, ஆபத்துக்கான ஹேதுவோ அவ்வளவு அதிகமாக இல்லை. சிலகாலமாக ஸ்கூல்களிலேயே இவற்றைச் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது. கையை காலை உடம்பை நுட்பமாக வளைத்துப் பண்ணவேண்டிய அப்யாஸத்தை அத்தனை குழந்தைகளுக்கும் கவனமாகச் சொல்லிக் கொடுப்பதற்குப் போதிய ஆசிரியர்கள் இருக்கவேண்டும். அதுவுமில்லாமல் யோகாஸனம் போடுவதற்கென்று ஒரு காலம் உண்டு. அப்போது வயிற்றிலே ஆஹாரம் இருக்கப்படாது என்று விதி. இவற்றை மீறினால் ஆரோக்யத்துக்குப் பதில் அநாரோக்யந்தான் வரும். ஆகையால் அதற்கான கட்டுதிட்டம் குலையாமல் கற்றுக் கொடுக்க முடியுமா என்று நிச்சயப்படுத்திக் கொண்டு ‘மாஸ் – ஸ்கேலி’ல் ஸ்கூல்களில் சொல்லிக் கொடுக்கலாம். நம்முடைய குழந்தைகள் நல்ல தேஹதிடத்துடனிருப்பதற்காக எப்படியும் யோகாஸனத்தை வ்ருத்தி செய்யத்தான் வேண்டும்.

இதைவிட மற்ற யோகஸாதனைகளின் விஷயத்தில் பலமடங்கு ஜாக்ரதை தேவை.

அவை உத்தமமான யோகிகளே ஸத்பாத்ரமான சிஷ்யர்களுக்குக் கற்பித்துப் பயிற்சி தரவேண்டியவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட யோகச்ரேஷ்டர்களை நானோ நீங்களோ போய், “இங்கே எங்கள் குருகுலத்தில் குருவாக வாருங்களேன்” என்று கூப்பிட்டு உட்கார்த்தி வைக்கமுடியுமா என்பது ஸந்தேஹந்தான். அவர்களுக்கு சிஷ்யர்களும் நாம் பிடித்துக் கொடுப்பது அவ்வளவாக ஸாத்யமில்லை. எங்கே, எப்படி, எவருக்கு சிக்ஷை தருவது என்று அவர்களே முடிவுபண்ணுவார்கள், அவர்களுடைய ஆத்மசக்தியாலே நடத்திக் கொள்ளவும் செய்வார்கள். இப்போதுங்கூட இப்படி அநேக யோகாச்ரமங்கள் இருக்கின்றன. கொஞ்சம் ஜாஸ்தியாகவே இருப்பதுதான் கவலையாயிருக்கிறது! “Yoga Yoga” என்ற பேச்சு கூடுதலாகவே இருக்கிறது. அதனால் எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், நான் சொன்ன ரீதியில் யோக அப்யாஸத்துக்காக (அதாவது அதை ப்ராக்டிஸ் செய்வதற்காக) இல்லாமல், அதன் ‘தியரி’யை மட்டும் அறிவதற்காக குருகுலம் வைக்கலாம் அப்போது, நிஜமாக ‘இதுதான் யோக சாஸ்திரக் கருத்து, அது சொல்லும் முறை’ என்று தெரிந்தவர்கள் உருவாவார்கள். இப்படி இவர்கள் உண்டாவதாலேயே, யோகம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் சொல்லி ஜனங்களைக் கவருகிறவர்களுக்கு ஒரு பயம் உண்டாக இடமேற்படும். உண்மையான யோகாச்ரமங்கள் மட்டுமே உண்டாகும்.