‘வண்டு’ப் புதிர் அவிழ்கிறது!

‘மதீயே வதந ஸரோஜே’ – ‘என்னுடைய வாயான தாமரையில்’ என்று ஏன் சொன்னார்? ‘என் வாய்’ என்றாலே போதும். வதநம் என்றாலே போதும். வாய்த்தாமரை, வதந ஸரோஜம் என்று அதற்கு ஏன் ஒரு அடைமொழி கொடுத்தார்? பகவானைப் பற்றி நயன கமலம், முகத்தாமரை, பாதபத்மம் என்று சொன்னால் ஸரியாகப்படுகிறது. இந்த ஸ்தோத்ரத்திலே இப்படி பகவானுடைய பாத கமலத்தையும் (ஸ்ரீபதி பதாரவிந்தே) முக கமலத்தையும் (ஸுந்தரவதநாரவிந்தே) முன் ச்லோகங்களில் சொன்னது ஸரி. ஆனால் பக்தனான தன்னைச் சொல்லிக்கொள்ளும்போது ஏன் ‘வதந ஸரோஜே’ என்று தாமரையோடு வாயை ஒப்பிட்டுக்கொள்ளவேண்டும்?

பலச்ருதியைக்கூட விண்டு சொல்லாத அளவுக்கு விநய ஸம்பத் படைத்த ஆசார்யாள். ‘அவிநயத்தைப் போக்கு’ என்றே இந்த ஸ்துதியை ஆரம்பிக்கிற ஆசார்யாள், இங்கே இப்படித் தம்முடைய வாயை ‘வதந ஸரோஜே’ என்று அடைமொழி கொடுத்துச் சிறப்பித்துச் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு.

இந்த ஸ்தோத்ரத்தைச் சொல்ல ஆரம்பிக்கும்போது ‘ஷட்பதீ’ என்றால் ‘ஆறுகால் உடைய வண்டு’ என்று அர்த்தம் சொல்லி, இதில் ஆறு ச்லோகம் இருப்பதாலும், வண்டு ஸம்பந்தம் இருப்பதாலும்தான் ஆசார்யாள் ச்லேஷையாக ‘ஷட்பதீ ஸ்தோத்ரம்’ என்று பெயர் வைத்தார் என்று சொன்னேன் அல்லவா? வண்டு என்பது எப்படிப் பொருந்தும் என்கிற புதிர் இங்கேதான் அவிழ்கிறது.

‘ஆறு ச்லோகம் – அதோடு (ஏழாவது ச்லோகத்தின்) ஆறு வார்த்தைகள் – ஸதா என் வாக்கில் இருக்கட்டும்’ என்று ஆசார்யாள் சொல்லவந்தார். அப்படிச் சொல்கிற போது ‘ஷட்பதீ’ என்றால் வண்டுக்கும் பேர் அல்லவா என்று தோன்றி விட்டது. வண்டு என்கிற அர்த்தத்தில் ‘ஷட்பதீ’ என்கிற வார்தையை ஆசார்யாள் ‘ஸுப்ரஹ்மண்ய புஜங்க’த்திலும், ‘ஸெளந்தர்ய லஹரி’யிலும் உபயோகித்திருக்கிறார்

திருச்செந்தூர் முருகன் மீது ‘புஜங்கம்’ பாடி ப்ரார்த்திக்கும்போது, ‘ஹே ஸ்கந்தா! பத்மத்தில் வண்டு மொய்த்துக் களிக்கிறது போல் பவ வினையால் க்லேசமுற்றுக் கொதிக்கும் என் மன வண்டானது உன் பாதபத்மத்தில் ஸதா ரமித்துக் கொண்டிருக்கட்டும்’ என்று சொல்லியிருக்கிறார். அங்கே,

மந: ஷட்பதோ மே பவ க்லேச தப்த:
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே

என்கிறார்.

வண்டுக்கு ப்ருங்கம், ப்ரமரம், மதுபகம் என்றெல்லாமும் பெயர் இருக்க, அதை மனஸுக்கு ஒப்பிடும்போது ஷட்பதப் பெயரை ஏன் குறிப்பிட்டார் என்பது ‘ஸெளந்தர்ய லஹரி’யில் வெளியாகிறது. அதில் (ஸெளந்தர்ய லஹரியில்) ‘பஞ்ச இந்த்ரியங்கள் என்கிற ஐந்து கரணங்களோடும் மனஸ் என்ற ஆறாவது கரணத்தோடும் சேர்ந்தால் ஆறுகால் கொண்ட வண்டு போலிருக்கிற என் ஜீவனானது உன் பாதபத்மத்தில் புதைந்து கிடக்கட்டும்’ என்று அம்பாளிடம் ப்ரார்த்திக்கிறார்.

நிமஜ்ஜன் மஜ்ஜீவ: காரண சரண: ஷட்சரணதாம் |

பதம், சரணம் இரண்டும் காலைக் குறிக்கும். ‘ஷட்சரண’ என்றால் ஷட்பதமான வண்டு என்றுதான் அர்த்தம்.

மனஸை ஐந்து இந்த்ரியங்களோடு ஆறாவதாகச் சொன்னாலும் மற்ற ஐந்தையும்கூட ஆட்டிப் படைப்பது அதுதான், அதனால் மனஸையே அதுவும், அதன் ஐந்து அங்கங்களான பஞ்சேந்தரியங்களும் கொண்ட ஆறுகால் வஸ்துவாகச் சொல்வதுண்டு. அதனால்தான் ‘மன: ஷட்பதோ’ என்றார்.

ஆகையால் இங்கே, ‘ஆறு ச்லோக – ஆறு வார்த்தை – ஷட்பதீ என் வாயில் எப்போதும் இருக்கட்டும்’ என்று சொல்ல வந்தபோது அவருக்கு வண்டு நினைவு வந்து விட்டது. வண்டு ஸதா இருக்கிற இடமாகத் தம் வாய் இருக்கவேண்டுமென்றால் அந்த வாயானது தாமரைப் பூவாக இருந்தால்தானே முடியும்? வண்டு தாமரையைத்தானே ஸதா மொய்க்கும்? அதனால்தான் ‘வதந ஸரோஜே’ என்று போட்டுவிட்டார்!

ஸ்ரீபதியின் பதாரவிந்தத்தை, ஸுந்தர வதநாரவிந்தத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருக்கிற ஒரு பக்தனின் வாயும் அரவிந்தமாக ஆகிவிடுமாதலால், ‘என் வாய்த்தாமரை’ என்று போட்டதில் எந்த அநுசிதமும் இல்லை. அந்த வதன ஸரோஜத்தில் உள்ள வண்டு எது என்றால் அதுதான் ஷட்பதீ ஸ்தோத்ரம்.

‘வண்டு ஸ்தோத்ரம்’ என்ற நாமகரணம் இப்போது புரிந்துவிட்டதல்லவா? புதிர் அவிழ்ந்து விட்டதல்லவா?

வதந ஸரோஜத்தை – முக கமலத்தை – சொல்கிற போது ஆசார்யாளைப் பற்றி அவரது நேர் சிஷ்யரான பத்ம பாதாசார்யாளும், பிற்பாடு அப்பய்ய தீக்ஷிதரும் பண்ணின ச்லோகங்கள் மறுபடி நினைவு வருகின்றன. முன்பே சொன்னேன்*. ஆசார்யாளின் முகமாகிற மாநஸ ஸரஸிலே வாயாகிற தாமரையில் பாஷ்யம் என்கிற தேன் பொழிகிறது என்றும் அதை சிஷ்ய கணங்களான வண்டுக் கூட்டம் பருகுவதாகவும் சொன்னேன். அப்பய்ய தீக்ஷிதர் ச்லோகத்தில் விஷ்ணுவின் பாதகமலத்திலிருந்து கங்கை பெருகினது போல, ஆசார்யாளின் முக கமலத்திலிருந்து பாஷ்யம் பெருகிற்று என்கிறார். ‘பகவத்பாத ஸ்ரீமன் முகாம்புஜ’ என்கிறார். முகாம்புஜம் (முக அம்புஜம்) என்பதும் ‘ஷட்பதீ’ முடிவில் சொல்லும் ‘வதந ஸரோஜம்’ என்பதும் ஒன்றுதான். அந்த பகவத்பாதாளே இந்த ‘ஷட்பதி’யின் இரண்டாவது ச்லோகத்தில் ஸ்ரீபதியின் பாதாரவிந்தத்திலிருந்து தேவகங்கை பொழிகிறதைப்பற்றிச் சொல்லியிருப்பதைப் பார்த்தோம். ஜனன மரணமாகிய பவபய கேதங்களை பகவானின் பாதம் போக்குகிறது என்று இங்கே நம் பகவத் பாதாள் சொல்கிறாரென்றால், அப்பய்ய தீக்ஷிதரோ ஆசார்ய பாஷ்யத்தையே ‘ஜநந ஹரணி’ (பிறவியைப் போக்குவது) என்கிறார்!

ஸுப்ரஹ்மண்யர், அம்பாள் முதலியவர்களின் பாத கமலத்தில் தமது உள்ளம் வண்டாகப் படியவேண்டும் என்று ஆசார்யாள் சொல்கிறாரென்றால், பழங்காலத்துக் கம்போடியா தேசக் கல்வெட்டில், நம் ஆசார்யாளுடைய பாத கமலத்தில் ஸகல பண்டிதர்களுடைய தலைகளும் வண்டுக்கூட்டம் மாதிரி மொய்த்துக் கொண்டிருப்பதாக இருக்கிறதென்று முன்னே சொன்னேன். இப்படிப் பல தினுஸில் வண்டுப் பொருத்தமுள்ள ஆசார்யாள் ‘வண்டு ஸ்தோத்ரம்’ என்றே ஒன்று பண்ணியிருப்பது ந்யாயம் தானே? இன்னொரு பொருத்தம் சொல்கிறேன்:

நம் ஆசார்யாளுக்கு அவருடைய குருவான கோவிந்த பகவத்பாதர்களிடமிருந்த பக்தியைப்பற்றிச் சொன்னேல்லவா? இதற்கேற்றாற்போல், இங்கே மடத்திலே, ராஜாக்களுக்கு பராக் சொல்கிற மாதிரி நம் ஆசார்யாளுக்குச் சொல்லும்போது, ‘ஜயகோவிந்த பகவத்பாத பாதாப்ஜ ஷட்பத’ என்று ஆரம்பிக்கிறோம். கோவிந்த பகவத்பாதாளின் பாதாரவிந்தத்தில் நம் ஆசார்யாள் ஷட்பதமாக (வண்டாக) இருந்தார் என்று அர்த்தம். இப்படியாக, தாமரை – வண்டு இவற்றின் ஸம்பந்தம் ஆசார்யாளின் குருவான கோவிந்த பகவத்பாதாள், ஆசார்யாள், அவருடைய சிஷ்யரான பத்மபாதர் என்று தொடர்ந்து வருகிறது. பகவானின் முக கமலம், பாத கமலம் இவற்றோடு அந்த பகவானை ஸ்தோத்ரிக்கும் பகவத்பாதாளின் முக கமலம், பாதகமலம் இவற்றையும் ஸ்மரிக்கிற பாக்யம் நமக்கு ஏற்படுகிறது.

‘ஸதாஸர்வ காலமும் இந்த ஷட்பதீ என்றும் வாக்கில் இருக்கட்டும்’ என்று ஆசார்யாள் ப்ரார்த்தித்து, நம் எல்லோர் பொருட்டும் அவர் செய்த ப்ரார்த்தனையாகும். இந்த ‘வண்டு ஸ்தோத்ரம்’ மொய்க்கிற தாமரைகளாக நம் எல்லோருடைய வாயும் ஆகவேண்டும். அப்படியிருந்தால் பஞ்சேந்த்ரியமும் மனஸும் சேர்ந்து ஷட்பதமாக இருக்கிற நம்முடைய ஜீவனாகிற வண்டு எப்போதும் பகவானின் பாத கமலத்தில் படிந்துகிடக்கும். ஆரம்பத்தில், ‘தமய மந: சமய விஷய ம்ருக த்ருஷ்ணாம்……தாரய ஸம்ஸார ஸாகரத:’ என்கிறபோது ஆசார்யாள், மனஸும் இந்த்ரியங்களும் அடங்கி ஸம்ஸார ஸாகரத்திலிருந்து கடைத்தேற்றுவிக்கப்பட வேண்டும் என்றுதான் ப்ரார்த்தனை செய்தார். கடைசியில் பகவானின் பாதங்களில் மனஸ், இந்த்ரியங்கள் எல்லாவற்றையும் சரணாகதி பண்ணுவதைச் சொல்லி முடித்திருக்கிறார். அழகாலும், அருளாலும் நம்மை வசீகரித்து, தன்னிலே நம் உள்ளத்தை லயிக்கப் பண்ணி, ஸுலபமாக நம்மை பவஸாகரத்தலிருந்து கரைசேர்ப்பது பகவானின் பாத கமலம்தான். அதுதான் ‘பகவத்பாதர்’ என்றே சொல்லப்படுகிற நம் ஆசார்யாள். அவரே பகவானின் பாதகமலம் என்றால் அதிலும் அவரது முகம் ஒரு கமலமாக இருக்கிறது. அதிலே ஸதாவும் இருக்கிற வண்டு ஷட்பதீ ஸ்தோத்ரம். அது ஆசார்யாளுடைய வாக்குத் தேனையும், அதன் வழியாக பகவானின் அருள்தேனையும் நமக்குக் கொடுத்துக் கொண்டேயிருக்கட்டும்!

அவிநய – மபநய விஷ்ணோ தமய மந:சமய விஷய ம்ருக த்ருஷ்ணாம் |
பூத – தயாம் விஸ்தாராய தாரய ஸம்ஸார – ஸாகரத: || 1 ||

திவ்ய – துநீ மகரந்தே பரிமள பரிபோக ஸச்சிதாநந்தே |
ஸ்ரீபதி பதாரவிந்தே பவ – பய – கேத – ச்சிதே வந்தே || 2 ||

ஸத்யபி பேதாபகமே நாத தவாஹம் ந மாமகீநஸ் – த்வம் |
ஸாமுத்ரோ ஹி தரங்க: க்வசந ஸமுத்ரோ ந தாரங்க: || 3 ||

உத்த்ருத – நக நகபிதநுஜ தநுஜகுலாமித்ர மித்ர – சசி – த்ருஷ்டே |
த்ருஷ்டே பவதி ப்ரபவதி ந பவதி கிம் பவ – திரஸ்கார: || 4 ||

மத்ஸ்யாதிபி – ரவதாரை – ரவதாரவதா – வதா ஸதா வஸுதாம் |
பரமேச்வர பரிபால்யோ பவதா பவ – தாப – பீதோஹம் || 5 ||

தாமோதர குணமந்திர ஸுந்தர – வதநாரவிந்த கோவிந்த |
பவ – ஜலதி – மதந மந்தர பரமம் – தர – மபநய த்வம் மே || 6 ||

* * *

நாராயண கருணாமய சரணம் கரவாணி தாவகௌ சரணௌ
இதி ஷட்பதீ மதீயே வதந – ஸரோஜே ஸதா வஸது ||

ஸர்வத்ர கோவிந்த நாம ஸங்கீர்த்தநம்!
கோவிந்தா, கோவிந்தா!


* இவ்வுரையில் ‘சங்கரரும், சிஷ்யர்களும், விநயமும்‘ என்ற பிரிவு பார்க்க.

ஆறு ச்லோகமும் ஆறு வார்த்தையும்

‘இதி ஷட்பதீ மதீயே வதந ஸரோஜே ஸதா வஸது’ என்பதற்கு, ‘இந்த ஆறு ச்லோகங்கள் கொண்ட ஷட்பதீ ஸ்தோத்ரம் என் வாய் என்கிற தாமரையில் எப்போதும் இருக்கட்டும்’ என்று அர்த்தம் பண்ணிக்கொண்டால் ‘ஷட்பதீ’ என்பது ‘ஆறு ச்லோகம், என்ற பொருள் கொடுக்கும். ‘பதம்’ என்றால் ‘ச்லோகம்’ என்று பொருள் கொள்ளாமல் ‘வார்த்தை’ என்றே அர்த்தம் செய்து கொண்டாலும் பொருத்தமாக அமைகிறபடி இங்கே ஆசார்யாள் ஒரு வார்த்தை விளையாட்டுப் பண்ணியிருக்கிறார். ‘இந்த ஆறு வார்த்தைகள் என் வாய்த் தாமரையில் எப்போதும் இருக்கட்டும்” என்றும் ஒரு பொருள் கொள்ள இடமிருக்கிறது. அதுவும் பொருத்தமானதே! எப்படி? எந்த ஆறு வார்த்தைகள்?

ச்லோகத்தின் முதல் பாதியில் வருகிற ஆறு வார்த்தைகள்தான்! ‘நாராயண’, ‘கருணாமய’, ‘சரணம்’, ‘கரவாணி’, ‘தாவகௌ’, ‘சரணௌ’ என்ற ஆறு வார்த்தைகள்தானே முதல் பாதியில் இருக்கின்றன? ‘கருணாமயமான நாராயணா! உன் இணையடியில் சரண் புகுகிறேன்’ என்ற இந்த ஆறு வார்த்தைகள் ஸதா ஸர்வ காலமும் தம் வாய்த் தாமரையில் இருக்கவேண்டும் என்று சொல்வதாகவும் அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.

ஷட்பதீயின் முதல் ஆறு ச்லோகங்களையோ அல்லது ஏழாவது ச்லோகத்தின் முதல் பாதியான ஆறு வார்த்தைகளையோ எப்போது பார்த்தாலும் சொல்லிக்கொண்டேயிருந்தால் பகவத் அநுக்ரஹம் கிடைத்துவிடும். ‘விநயமின்மை போகவேண்டும்; மனஸின் ஓட்டம் நிற்கவேண்டும்; ஜீவதயை வ்ருத்தியாக வேண்டும்; ஸம்ஸார ஸாகரத்திலிருந்து கடத்தப்பட வேண்டும்; ஸம்ஸார ஸாகரத்தைக் கடைகிற மத்தாக பகவானே வந்து அம்ருதத்தை – அமரத்தன்மையை – அநுக்ரஹிக்க வேண்டும்’ என்றெல்லாம் இந்த ஸ்தோத்ரத்தில் ஆசார்யாள் பல ப்ரார்த்தனைகளைச் சொன்னாரல்லவா? அந்த ப்ரார்த்தனையெல்லாம் இந்த ஆறு ச்லோகங்களையும், அவற்றுக்குப் பிறகு வரும் ஆறு வார்த்தைகளையும், ஸதா சொல்லிக்கொண்டிருப்பதாலேயே நிறைவேறிவிடும் என்று சொல்லாமல் சொல்கிற பலச்ருதியாக ஏழாவது ச்லோகம் இருக்கிறது.

ப்ரஹ்ம பாவனையும் சரணாகதியும் ஒன்றே

பிற்காலத்தில் ராமாநுஜர் இந்த சரணாகதியைத்தான் முக்யமான உபாயமாக வைத்து விசிஷ்டாத்வைத மதத்தை உருவாக்கினார். ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு முக்யமானவை அஷ்டாக்ஷரம், த்வயம் என்ற இரு மந்த்ரங்களும், கீதையின் சரம ச்லோகமான ‘ஸர்வதர்மாந் பரித்யஜ்ய’ ச்லோகமும், வீபீஷண சரணாகதியின்போது ஸ்ரீ ராமசந்த்ர மூர்த்தி தம்முடைய சரணாகத ரக்ஷக வ்ரதத்தைச் சொல்கிற ராமாயண ச்லோகமும் ஆகும்.

ராமாநுஜருக்குப் பிற்பாடு வடகலை, தென்கலை என்று இரண்டாகப் பிரிந்ததும் இந்த சரணகாதிக்குள்ளேயே இருக்கிற மாறுபாடுகளை வைத்துத்தான். பூனைக் குட்டி தனக்கென்று ஒரு ப்ரயத்னமும் இல்லாமல் கிடக்கிறதல்லவா? அதைத் தாய்ப்பூனை தானாகத் தானே வாயில் கௌவிக் கொண்டுபோகிறது? இதுமாதிரி நாம் பெருமாள் விட்ட வழி என்று கிடப்பதுதான் நிஜ சரணாகதி என்பது தென்கலைக்காரர்களின் அபிப்ராயம். இதற்கு ‘மார்ஜார கிசோர ந்யாயம்’ என்று பேர். மார்ஜாராம் என்றால் பூனை; கிசோரம் என்றால் குட்டி. ‘பூனைக்குட்டி முறை’ தான் தென்கலை. வடகலைக்காரர்களின் அபிப்ரயாம் என்னவென்றால்; ‘குரங்குக்குட்டி என்ன பண்ணுகிறது? அதுதானே தாய்க் குரங்கை இறுகக் கட்டிக்கொண்டிருக்கிறது? இந்த மாதிரி நாமேதான் ப்ரயத்னம் பண்ணி பகவானைப் பிடித்துக்கொள்ளவேண்டும். இந்த ஒரு யத்னம் தவிர பாக்கி விஷயங்களில்தான் அவன் விட்ட வழி என்று இருக்க வேண்டும்’ என்று ‘மர்க்கட கிசோர ந்யாய’மாக இவர்கள் சரணாகதியைச் சொல்கிறார்கள். ‘மர்க்கடம்’ – குரங்கு. ‘மர்க்கட கிசோர ந்யாயம்’ – குரங்குக் குட்டி முறை.

இரண்டிற்கும் basic -ஆக (அடிப்படையாக) இருப்பது சரணாகதி.

‘தானே ப்ரஹ்மம்’ என்கிற ப்ரஹ்மபாவனை ஞான மார்க்த்துக்கு மையமாக இருக்கிற மாதிரி, ‘தான் ஒன்றுமே இல்லை’ என்று பகவானிடம் சரணாகதி செய்து கிடப்பது பக்தி மார்க்கத்துக்கு மையமாக இருக்கிறது. இந்த இரண்டும் ஒன்றேதான்.

‘அதெப்படி? ஒன்றுக்கொன்று மலைக்கும் மடுவுக்குமாக அல்லவா இருக்கிறது?’ என்று மேலெழுந்தவாரியாகப் பார்க்கிறபோது தோன்றும். ஆழ்ந்து பார்த்தால் இரண்டும் ஒன்றுதான். ‘தானே ப்ரஹ்மம்’ என்கிறபோது சொல்கிற ‘தான்’ வேறு, ‘தான் ஒன்றுமே இல்லை’ என்று சொல்கிற ‘தான்’ வேறு! தானே ப்ரஹ்மம் என்று அத்வைதி சொல்கிறபோது தன்னுடைய சரீரம், இந்த்ரியம், புத்தி, மனஸ் இந்த எதுவும் நிஜமான தான் இல்லை என்று தள்ளிவிட்டு, மிஞ்சி நிற்கிற ஆத்மாவைத்தான் ப்ரஹ்மம் என்கிறான். ‘ஸாதாரணமாக எந்த ஜீவாத்மாவும் அஞ்ஞானத்தினால் ‘தானாக’ நினைக்கும் இந்த சரீரம், இந்த்ரியம், புத்தி, மனஸ் இதுகளிலிருந்தெல்லாம் நாம் விடுபடவேண்டும். இவை இழுத்துக்கொண்டு போகிறபடி ஓடாமல் இவற்றை இறைவனின் பொற்பாத கமலங்களில் ஒன்றுமேயில்லை என்கிற மாதிரி கிடத்திவிட வேண்டும்’, என்கிற அர்த்தத்தில்தான் ‘தான் ஒன்றுமேயில்லை’ என்று பக்தி மார்க்கக்காரன் சரணாகதி பண்ணுகிறான். அத்வைதி ‘தானாக’ச் சொல்லும் ஆத்மாவுக்கு அந்யமாக அவன் தள்ளுவதையேதான் த்வைத, விசிஷ்டாத்வைதிகள் ‘தான்’ என்று வைத்து பகவானின் பாதத்தில் தள்ளுகிறார்கள்! ஆகையால் இரண்டும் ஒன்றுதான். அஹங்காரம் ( ego) போகவேண்டும் என்பதுதான் இரண்டு மார்க்கத்துக்கும் பொதுவான லக்ஷ்யம்.

அத்வைத பாஷ்யங்களிலும் ப்ரகரண க்ரந்தங்களிலும் ஞான மார்க்கத்தைச் சொன்ன ஆசார்யாள் இங்கே பக்தராக இருந்து, அதே லக்ஷ்யத்துக்கு சரணாகதியை வழியாகச் சொல்லியிருக்கிறார். ‘சரணம் கரவாணி தாவகௌ சரணௌ – உன் இணையடிகளில் சரணாகதி செய்கிறேன்’ என்கிறார்.

‘கருணமாய’ என்றதால் கருணைக் கடலான பகவான் சரணாகதனை நிச்சயம் ரக்ஷிப்பான் என்று உணர்த்துகிறார்.

நாராயண கருணாமய

முதல் ச்லோகத்தில் ‘விஷ்ணோ’ என்று ஆரம்பித்து விட்டு, ஆறாவது ச்லோகத்தில் ‘தாமோதர’ என்று க்ருஷ்ணாவதாரத்தைச் சொல்லி அழைத்தவர், இங்கு ‘நாராயண’ என்கிறார். மதத்தின் பெயரைப் பார்க்கும்போது ‘விஷ்ணு’வின் பெயரை வைத்து அது ‘வைணவம்’ எனப்பட்டாலும், அதற்கு முக்யமான அஷ்டாக்ஷரீ மந்த்ரத்தில் ‘நாராயண’ நாமம்தான் வருகிறது. ‘கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்’ என்று ஆழ்வாரும் பாடியிருக்கிறார். ஆசார்யாளே தமது அத்வைத பாஷ்யங்களில் ஸகுண ப்ரஹ்மத்தைச் சொல்லும்போது நாராயணன் என்றே குறிப்பிட்டிருக்கிறார். ஸந்யாஸிகளுக்கு யார் நமஸ்காரம் பண்ணினாலும் அவர்கள் ‘நாராயண நாராயண’ என்றே ஆசிர்வதிக்கணுமென்று அவர் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்.

இங்கே ஆசார்யாள், ‘நாராயணனின் சரணத்தை நான் சரண் அடைகிறேன்’ என்கிறார் அல்லவா? இதே அர்த்தத்தில் தான், ஏறக்குறைய இதே வார்த்தைகளிலேயே வைஷ்ணவர்கள் த்வய மந்த்ரம் இருக்கிறது.

இந்த மாதிரி அத்வைத, விசிஷ்டாத்வைத ஒற்றுமைகளைப் பார்க்கிறபோது ரொம்பவும் ஸந்தோஷமாயிருக்கிறது.

பலச்ருதி போன்ற சரணாகதி விண்ணப்பம்

இதற்கு அடுத்ததாக வரும் ஏழாவது ச்லோகம் இந்த ஸ்தோத்ரத்தின் சிறப்பை, பலனைச் சொல்கிற பலச்ருதி மாதிரியானது.

‘ஷட்பதீ’ என்றால் ஆறு செய்யுள்கள் என்று அர்த்தம் பண்ணினால், அது

தாமோதர குணமந்திர
ஸுந்தர வதநாரவிந்த கோவிந்த |
பவஜலதி மதந மந்தர
பரமம் தரம் அபநய த்வம் மே ||

என்கிற ச்லோகத்தோடு முடிந்துவிடுகிறது.

ஜயதேவர் பாடிய ‘கீத கோவிந்த’த்திலுள்ள பாட்டுக்களை ‘அஷ்டபதி’ என்பது எதனால்? அந்தப் பாட்டு ஒவ்வொன்றிலும் எட்டு அடிகள் இருப்பதனால்தானே? இவ்வாறு பதம் என்பது வார்த்தையை மட்டுமின்றி ஒரு முழுச் செய்யுளை, ச்லோகத்தைக் குறிப்பிடுவதாகும் என்று முன்னேயே சொன்னேன். ‘அஷ்டபதி’ என்பது எட்டு ச்லோகமென்பதுபோல், ‘ஷட்பதீ’யும் ஆறாம் ச்லோகத்தோடு பூர்த்தியாகிவிட்டது என்று அர்த்தம்.

நூற்சிறப்பு அல்லது பயனை ‘பலச்ருதி’ என்று சொல்கிற மரபுப்படியே, ஏழாவதாக ஒரு ச்லோகம் வருகிறது.

கீதையில் பகவான் சொன்ன மாதிரியே ஆசார்யாளும் ஆதிவார்த்தையை அந்தத்தில் வைத்திருக்கிறார் என்று சொன்னேனல்லவா? ஆசார்யாள் கீதையின் ‘மாடலை’ புத்தி பூர்வமாக நினைத்தே (கீதையை இந்த ஸ்தோத்ர அமைப்புக்கு முன்னோடி என்ற புத்திபூர்வமாக எண்ணியே) இப்படிப் பதப்ரயோகம் பண்ணியிருப்பார் போலிருக்கிறது என்று ஏழாம் ச்லோகத்தைப் பார்த்தால் தோன்றுகிறது. ஏனென்றால் இதிலே கீதையின் கடைசி ச்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கும் சரணாகதியைத்தான் ஆசார்யாளும் சொல்கிறார்.

நாராயண, கருணாமய,
சரணம் கரவாணி தாவகௌ சரணௌ |
இதி ஷட்பதீ மதீயே
வதந ஸரோஜே ஸதா வஸது ||

என்பது ஷட்பதீக்கு பலச்ருதி மாதிரி உள்ள ஏழாவது ச்லோகம்.

‘பலச்ருதி மாதிரி’ என்று ஏன் சொல்கிறேன் என்றால், இதிலே ஆசார்யாள் அசல் பலச்ருதியாக, ‘இந்த ஸ்துதிக்கு இன்னின்ன பலன்’ என்று உடைத்துச் சொல்லாமல், மறைமுகமாக நாம் ஊஹித்துப் புரிந்து கொள்ளும் விதத்திலேயே பலனைச் சொல்லியிருப்பதால்தான்! ரொம்பவும் விநய சீலரான நம் ஆசார்யாள் ‘சிவாநந்த லஹரி’, ‘ஸௌந்தர்ய லஹரி’ முதலியவற்றின் முடிவில்கூட, ‘இந்த ஸ்தோத்ரத்தைச் சொன்னால் இப்படியாகப்பட்ட பலன்கள் வரும்’ என்று பலச்ருதி சொல்லவில்லை. ஸூசனையாகவே தெரிவித்திருக்கிறார்.

‘நாராயண – நாராயணனே! கருணாமய – கருணை மயமானவேன! தாவகௌ சரணௌ – உன்னுடைய இரண்டு பாதங்களை; சரணம் கரவாணி – சரணமாக, அடைக்கலமாகக் கொள்கிறேன். இதி – இப்படிப்பட்ட; ஷட்பதீ – ஷட்பதீயானது; மதீயே – என்னுடைய; வதந ஸரோஜே – வாய் என்கிற தாமரையில்; ஸதா- எப்பொழுதும்; வஸது – வஸிக்கட்டும்.’

ஷட்பதீ ஸ்தோத்ரம் தம்முடைய வாக்கில் ஸதா இருக்கட்டும் என்று ஆசார்யாள் சொல்வதற்கு அர்த்தம், சற்று முன்னால் நான் சொன்னறாப்போல அதை நாம் திரும்பத் திரும்ப ஜபித்துக்கொண்டிருக்க வேண்டுமென்பதே.

‘தாவகௌ சரணௌ’ என்கிறபோது Charanau என்று சொல்லவேண்டும். ‘சரணம் கரவாணி’ என்னும்போது சங்கரன், சங்கு, சட்டை என்பதில் சொல்கிற ‘ச’வாக saranam என்று சொல்லவேண்டும். Charanam என்றால் கால், Saranam என்றால் அடைக்கலம், புகலிடம்.

த்வைத, விசிஷ்டாத்வைத, அத்வைத வித்யாஸங்களை நினைக்காமல் பக்தி பரவசத்தில் எப்படியெப்படி பாவம் வருகிறதோ அப்படியெல்லாம் ஆசார்யாள் இந்த ஸ்தோத்ரத்தைப் பண்ணிக்கொண்டு போயிருக்கிறார் என்று நடுநடுவே தெரிந்தது அல்லவா? ஸ்வச்சமான அத்வைதம் என்று பார்த்தால் அதிலே சேராத ஸகுண ப்ரஹ்ம வர்ணனை, ஸமுத்ரத்துக்கு அலை அடக்கமானதே என்பது போல ஈச்வரனுக்கு ஜீவன் அடங்கினவன் என்கிற தத்வம் ஆகியவற்றை இந்த ஸ்தோத்திரத்தில் ஆசார்யாள் சொல்லியிருப்பதைப் பார்த்தோம். முடிக்கிறபோதும் அத்வைதத்துக்கு முக்யமான ஞான மார்க்கத்தைச் சொல்லாமல், பக்திக்கு ப்ரதானமாக இருக்கிற சரணாகதியைத்தான் சொல்லியிருக்கிறார்.

சரணம் கரவாணி தாவகௌ சரணௌ

ஆதி வார்த்தை அந்தத்திலும்

‘ஷட்பதீ’ ஆரம்ப ச்லோகத்தில் ‘அவிநயம் அபநய‘ என்று தொடங்கினார். ஆறாவது ச்லோகத்தை முடிக்கிறபோதும் ‘தரம் அபநய த்வம் மே’ என்பதாக அதே ‘அபநய’ என்ற வார்த்தையைப் போட்டிருக்கிறார். ஆதி வார்த்தையே அந்தத்தில் வருவதால் Circle complete ஆகிவிடுகிறது (வட்டம் பூர்த்தியாகிவிடுகிறது) . இது ஸ்தோத்திரத்தின் பூர்ணத்வத்துக்கு அடையாளம்.

‘அபநய’ என்பதற்கு அப்புறம் ‘த்வம்’, ‘மே’ என்ற இரண்டு வார்த்தைகள் வந்தாலும், மேலே காட்டினமாதிரி ‘எனக்கு மஹாபயத்தை நீ போக்குவாயாக’ என்பதற்கு நேர்வாக்யம், ‘மே பரமம் தரம் த்வம் அபநய’ என்று ‘அபநய’வைக் கடைசி வார்த்தையாக வைத்து முடிப்பதாகத்தானிருக்கும். வசன நடையில் அப்படித்தான் இருக்கும். கவிதையானதால் அதன் லக்ஷணங்கள் பொருந்துவதற்காக இப்படி ‘அபநய’வை கொஞ்சம் முன்பே கொண்டு வந்து ‘மே’ என்று முடிக்கும்படி ஆயிற்று.

பகவத் கீதையில் இப்படியேதான் இருக்கிறது. அதிலே பகவானின் உபதேசம் இரண்டாம் அத்யாயத்தில் ‘அசோச்யாந் அந்வசோசஸ்த்வம்’ என்கிற (11-வது) ச்லோகத்தில் ஆரம்பிக்கிறது. கடைசியில் பதினெட்டாவது அத்யாயத்தில் 66-வது ச்லோகத்தில்,

ஸர்வ தர்மாந் பரித்யஜய மாம் ஏகம் சரணம் வ்ரஜ |
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச : ||

என்று உபதேத்தை முடிக்கிறார்.

இந்த இரண்டிற்கும் முந்தியும் பிந்தியும் இருக்கிற ச்லோகங்கள் preface (முன்னுரை), Epilogue (பின்னுரை) தான்.

‘சுச’ – ‘சோச்ய’ என்கிற வார்த்தைகள் ‘வருத்தப்படுவதை’க் குறிக்கும். முதலில், ‘அசோச்யாந் அந்வ சோசஸ்த்வம்’ என்றதற்கு ‘வருத்தப்பட வேண்டாதவர் விஷயத்தில் நீ வீணுக்கு வருத்தப்படுகிறாய்’ என்று அர்த்தம். ‘ஐயோ, இந்தக் கௌரவ ஸேனையை எப்படிக் கொல்வேன்?’ என்று வருத்தப்பட்ட அர்ஜுனனிடம், ‘தர்மத்தை உத்தேசித்து இந்த யுத்தம் நடந்தாக வேண்டியிருக்கிறது. பூபாரம் தீருவதற்காக, இவர்கள் எல்லாரும் ஸம்ஹாரம் ஆக வேண்டும் என்று ஏற்கெனவே ஈச்வர ஸங்கல்பமாகிவிட்டது. ஆகையால் நீ வருத்தப்பட வேண்டாதவர்களுக்காக அநாவச்யமாக வருத்தப்படுகிறாய்!’ என்று சொல்ல வந்த பகவான், ‘அசோச்யாந் அந்வசோசஸ்த்வம்’ என்று ஆரம்பிக்கிறார். கடைசியில் முடிக்கிறபோது, ‘எல்லாத் தர்மங்களையும் விட்டுவிட்டு (அதாவது, எல்லா தர்மங்களுக்கும் மேலாக) என்னிடம் சரணாகதி பண்ணி, நான் விட்டவழி என்று இருந்துவிடு. நான் உன்னை ஸகல பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன். இது நிச்சயம். ஆதலால் கொஞ்சங்கூட வருத்தப்படாதே’ என்று அர்ஜுனனுக்குத் தன் வாக்குறுதியைக் கொடுக்கிறபோது ‘மா சுச:’ என்கிறார். ‘மா சுச:’ என்றால் ‘வருத்தப்படாதே’ என்று அர்த்தம். ஆரம்பத்தில் வந்த ‘அசோச’, முடிந்த முடிவில் வரும் ‘மா சுச’ இரண்டும் ஒன்றேதான். ‘சுச்’ என்கிற root (தாது) இரண்டிற்கும் பொது.

கீதையில் போலவே ஷட்பதீயிலும் முதல் ச்லோக ஆரம்பத்தில் வந்த ‘அபநய’ ஆறாம் ச்லோக முடிவிலும் வருகிறது. ‘விநயமின்மையைப் போக்கு’ என்று ஆரம்பித்தவர் ‘பயத்தைப் போக்கு’ என்று முடிக்கிறார். போக வேண்டியதைப் போக்கிக் கொள்ளவேண்டியது, வரவேண்டியதை வரவழைத்துக் கொள்வைதவிட முக்யம். முதலில் இதைச் செய்துகொண்டால்தான் அப்புறம் அதைச் செய்து கொள்ளமுடியும். செய்துகொள்வது, போக்கிக்கொள்வது என்றாலும் அது நம்மாலாகிற கார்யமா? இல்லை. அவனுடைய அருள்தான் அப்படிப் போக்க வைக்கவேண்டும். அதனால்தான் ஆரம்பம் முடிவு இரண்டிலும், போகவேண்டிய இரண்டை – திமிரையும் பயத்தையும் – போக்கு, ‘அபநய’, என்று வேண்டிக் கொள்கிறார். பயம் என்பது திமிருக்கு நேரெதிர். பூஞ்சை மனஸைக் காட்டுவது. உத்தமமானவருக்குத் திமிரும் இருக்காது, பூஞ்சையான பயங்காளித்தனமும் இருக்காது. நமக்கு இரண்டும் இருக்கிறது. சிலவற்றைக் குறித்துத் திமிர், சிலவற்றைக் குறித்து பயம் என்று இருக்கிறது. இது இரண்டையும் போக்கிக்கொள்ள பகவானை ப்ரார்த்திக்கச் சொல்லிக் கொடுக்கிறார் ஆசார்யாள்.

ஒரு ச்லோகத்தின் முடிவு வார்த்தை அடுத்ததன் ஆரம்பமாக இருப்பதைத்தான் அந்தாதி என்பது. ‘உத்த்ருத நக’வில் ஒரே ச்லோகத்துக்குள்ளேயே ஆசார்யாள் அந்தாதி விளையாட்டுப் பண்ணியதைப் பார்த்தோம். இப்போது ஆறு ச்லோகம் கொண்ட முழுச் ஸ்தோத்ரத்துக்குமாகச் சேர்த்து முதல் வார்த்தையான ‘அபநய’ என்பதையே கடைசியிலும் போட்டு ஒரு விநோதமான அந்தாதி பண்ணியிருப்பதைப் பார்க்கிறோம். முதல் வார்த்தை, கடைசி வார்த்தை என்பதற்குப் பதில் முதல் வினைச்சொல், கடைசி வினைச்சொல் என்று வைத்துக்கொள்வதுதான் இன்னும் ஸரியாயிருக்கும். முதல் வார்த்தை ‘அவிநய’ என்பதே. அதையடுத்து முதல் வினைச்சொல்லாக ‘அபநய’ வருகிறது கடைசி வார்த்தைகள் ‘அபநய த்வம் மே’. ‘அபநய’வுக்கு அப்புறம் ‘த்வம் மே’ இருக்கிறது. ஆனால் வினைச்சொல்லில் எது கடைசி என்று பார்த்தால் ‘அபநய’தான்!

Verb என்பதைத் தமிழில் வினைச்சொல் என்றும், ஸம்ஸ்க்ருதத்தில் க்ரியா பதம் என்றும் சொல்கிறோம். இதிலிருந்து, அது ஒரு வேலையைக் கொடுப்பது என்று தெரிகிறது. இப்படி, நம்மை விடாமல் ஒரு வேலை வாங்குவதற்கே ஸூக்ஷ்மமாக இப்படி ஷட்பதீ ஸ்தோத்ரம் முழுதையும் வினைச் சொல்லால் ஒரு அந்தாதியாக ஆசார்யாள் பண்ணியிருக்கிறார் போலிருக்கிறது! ஆரம்ப verb-ஐ முடிவிலே போட்டதால், “மறுபடியும் ‘அவிநயம் அபநய’ என்று அந்தாதிக்ரமத்திலே ஆரம்பி. அதாவது, திரும்பத் திரும்ப இந்த ஸ்தோத்ரத்தை ஜபம் பண்ணு” என்று வேலை கொடுக்கிற மாதிரி இருக்கிறது!

துதியின் ஸாரம் : ஸம்ஸாரத் துன்ப நீக்கம்

முதல் ச்லோகத்தில் ‘தாரய ஸம்ஸார ஸாகரத:’ – ‘ஸம்ஸார ஸாகரத்திலிருந்து அக்கரை சேரு!’ என்று ப்ரார்த்தித்தார். அடுத்த ச்லோகத்தில் ‘ஸம்ஸார பயத்தையும் வேதனையையும் சிதைக்க வல்லதான பாதாரவிந்தத்தை நமஸ்கரிக்கிறேன்’; ‘பவபய கேத-ச்சிதே வந்தே’ என்றார். மூன்றாவதில் ஸம்ஸாரத்தைப் பற்றி ‘ரெஃபரன்ஸ்’ இல்லை. பரமாத்ம – ஜீவாத்மாக்கள் ஒன்றேயானாலும் வ்யவஹாரத்தில் ஸமுத்ரமும் அலையும் மாதிரி இருப்பவர்கள் என்று அதில் சொல்கிறார். யோசித்துப் பார்த்தால் இதிலும் ஸம்ஸார ஸமாசாரம் உட்கிடையாக இருக்கிறது. வ்யவஹார நிலை என்பது தான் ஸம்ஸாரம். அதையேதான் பொதுவாக ஸமுத்ரம் என்பது. (முதல் ச்லோகத்தில் வரும் ‘ஸாகரம்’, ஆறாவதிலே வரும் ‘ஜலதி’ என்பனவற்றுக்கு ஸமுத்ரம் என்றே அர்த்தம்.) இந்த ஸம்ஸார ஸமுத்ரத்திலே அடிபட்டு, முழுகிப்போகாமலிருக்க வழி, இப்படி இதிலே த்வைதமாக உள்ளபோதுகூட, ‘நாம் இந்த ஸமுத்ரத்தின் அங்கமல்ல. பரமாத்ம ஸமுத்ரத்தின் அங்கம்தான், அதன் அலைதான். அலை ஸமுத்ரத்தில் ஒடுங்கி ஒன்றாய்விடுகிறது போல நாம் பரமாத்மாவிலேயே ஐக்யமாகி விட வேண்டியவர்கள்தான்’ என்ற நினைவுடன் இருப்பதேயாகும். ‘ஸமுத்ரம் தானே அலையாக ஆகியிருப்பது? அப்படி பரமாத்மா அல்லவா நாமாக ஆகியிருப்பது? அவன் நினைவோடு அவனுடைய அலை நாம் என்ற உறுதியோடு இருந்தால் இந்த ஸம்ஸார ஸமுத்ரம் நம்மை என்ன பண்ணமுடியும்?’ என்று மூன்றாம் ச்லோகம் எண்ண வைக்கிறது. அத்வைதப் பார்வையில் பார்த்தபோது அதில் த்வைதத்தின் நைச்யம் (எளிமை, தாழ்மை) இருப்பதாகச் சொன்னேன். த்வைதமான ஸம்ஸாரத்தின் கோணத்தில் பார்க்கும்போது ‘ஸமுத்ரத்துக்கு வேறாக இல்லாத அலை மாதிரி பரமாத்மாவுக்கு ‘நாம்’ என்கிற கருத்தே அத்வைதத்தின் கம்பீரத்தை நமக்கு அழுமூஞ்சி ஸம்ஸாரத்திலும் ஊட்டுவதாகத் தெரிகிறது. நாலாம் ச்லோகத்திலும் ஸம்ஸாரத்தைப்பற்றி வருகிறது. ‘பகவத் தர்சனம் கிட்டிவிட்ட பின் ஸம்ஸாரத்தின் அழிவு எப்படி ஏற்படாமலிருக்கும்? – ந பவதி கிம் பவதிரஸ்கார:’ என்று அது கேட்கிறது. அடுத்த ச்லோகத்தில், ஸம்ஸார தாபத்தில் பீதியுற்ற தம்மை பகவான் பரிபாலிக்க வேண்டிக்கொண்டார். ‘பவதாப பீதோஹம்’ என்று அதில் வருகிறது, கடைசியான ஆறாவதில் ஸம்ஸார ஸமுத்ரத்திலிருந்து அம்ருதமான ஆத்ம தத்வத்தைக் கடைந்து கொடுக்கும் மத்தாக பகவானை வர்ணிக்கிறார். ஆக ஸமய அநுஷ்டானங்கள், ஆத்மிகமான ஸாதனைகள் ஆகிய எல்லாவற்றுக்கும் ஒரே லக்ஷ்யமான ஸம்ஸார கஷ்ட நிவ்ருத்தியை பக்தியில் ஆரம்பித்துப் பெற முயல்வதே ‘ஷட்பதீ’யின் ஸாரதத்வம் என்று தெரிகிறது.

பரமம் தரம் அபநய த்வம் மே என்று இந்த ச்லோகம் முடிகிறது.

‘தரம்’ என்றால் பயம் என்று அர்த்தம். மே – எனக்கு (அதாவது என்னுடைய;) பரமம் – மிகுந்த; தரம் – பயத்தை; த்வம் – நீ; அபநய – போக்குவாயாக!

உருப்படுவோமோ மாட்டோமோ, கதிமோக்ஷம் கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற பயம், மரண பயம், மறுபடியும் ஜன்மா வந்துவிடுமோ என்கிற பயம், நம் பாபங்களை நினைத்து நரக பயம் – இப்படிப் பல தினுஸாகப் படுகிற பெரிய ஸம்ஸார பயத்தைப் போக்க பகவானிடம் ப்ரார்த்தனை செய்கிறார்.

சில உதாரணர புருஷர் போதும்

தனியாக ஒரு பழத்தை எடுத்தால் இப்படி. பூவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பழுக்க வேண்டும் என்பது தனி மநுஷ்யன் விஷயம். ஸமூஹம் என்று எடுத்துக்கொண்டால் அதிலே எங்கேயோ அபூர்வமாக ஒருசில மநுஷ்யர்கள் தான் இப்படிப் பழுக்கிறார்கள். இதற்காகவும் குறைப்படவேண்டாம், ஸமூஹத்தை ஒரு மரம் என்று வைத்துக் கொண்டால் ஒரு மரத்தில் எத்தனை இலைகள் இருக்கின்றன? ஸீஸனுக்கு ஸீஸன் எத்தனை ஆயிரம் இலையும் பூவும் உதிர்ந்து கொண்டிருக்கின்றன? விழுகிற பூக்களோடு ஒப்பிட்டுப்பார்த்தால் பூ விழுந்த பின் உண்டாகிற பிஞ்சுகள் கொஞ்சந்தான். அந்தப் பிஞ்சுகளிலும் வெம்பி விடாமல் கடைசி ஸ்டேஜ்வரை பக்வமாகிக்கொண்டே போய்ப் பழுத்த பழமாகிறவை ரொம்பவும் ஸ்வல்பம்தான். இயற்கையில் இப்படித்தான் இருக்கிறது. ஜீவ ஸ்ருஷ்டியிலும் ஏராளமானவர் இலையாயும் பூவாயும், சருகாய், வாடலாய்க் கருகி விழுந்து, காயிலும் ஏராளமானவை வெம்பி விழுந்தும், பக்ஷிகளும் குரங்குகளும் கடித்து விழுந்தும், முடிவாக மிஞ்சும் கொஞ்சமே பழமானாலும் போதும்; அதுவே ஸ்ருஷ்டிக்கு ப்ரயோஜனம் என்றுதான் பகவான் லீலை பண்ணிக் கொண்டிருக்கின்றான்.

ஜன ஸமுதாயத்தில் அடங்கிய எல்லாரும் நிறைந்த நிறைவாக ஆகி பூர்ணத்வம் அடையாவிட்டால் பரவாயில்லை; மரத்துக்குப் பழம் மாதிரி, ஜனத்தொகையில் எவரோ ஒருத்தர், ஆயிரத்தில் லக்ஷத்தில் ஒருத்தர் பூர்ணமாகி விட்டால்கூட போதும்; அப்படி ஒரு ஆத்மா நிறைகிறதற்குத்தான் இத்தனை பேர் ஸ்ருஷ்டியாகி, இத்தனை காம க்ரோதாதிகளில் மாட்டிக்கொண்டு தவிக்கிறதெல்லாம். அத்தனாம் பெரிய ஸமுத்ரத்தைக் கடைந்து ஒரு சின்னக் கலசம் அம்ருதம் எடுத்ததுபோல் இவ்வளவு ஜீவ கோடிகளுள்ள ஸம்ஸாரத்தைக் கடைவதிலிருந்து அம்ருத தத்வமாக ஆன உதாரண புருஷர்கள் ஸ்வல்பம் உண்டானாலும் போதும். பவக்கடலைக் கடைந்து அதன் ஸாரமாக ஸ்வல்ப அளவு அம்ருதத்தை எடுக்க உதவுகிற மத்தாகத்தான் ஆசார்யாள் இங்கே பகவானை நினைத்து ‘பவஜலதி மதன மந்தர’ என்கிறார். அப்படிச் சொல்வதால், இந்த ஸம்ஸாரத்துக்குள்ளேயே விஷம் மட்டுமில்லாமல் அம்ருதமும் இருக்கிறது என்று நமக்கு ஆறுதல் உண்டாக்குகிறாற் போலிருக்கிறது. மத்தைப் போட்டுக் கடைந்த உடனே வெண்ணெய் வந்து விடுமா? எத்தனையோ நாழி சிலுப்பினால்தான் வரும். அதுவரை அவசரப்படக்கூடாது, ஆத்திரப்படக்கூடாது. நம்பிக்கை இழக்கக்கூடாது.

நிதானமாக, படிப்படியாக அபிவ்ருத்தி எவருக்கும் உண்டு. ஆகவே நாம் செய்ய வேண்டியதெல்லாம், அந்த மத்து கயிற்றிலிருந்து நழுவி விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டியதுதான். என்ன கயிறு? பக்தி என்கிற கயிறுதான்! ‘சிவாநந்த லஹரி’யில் ஆசார்யாள் பரமேச்வரனிடம், ‘பக்திக் கயிற்றால் என் மனக்குரங்கை நன்றாகக் கட்டிப்போடு’ (த்ருடம் பக்த்யா பத்த்வா) என்று சொல்லியிருக்கிறார். நாம் பக்திக் கயிற்றால் பகவான் என்ற மத்தைச் சுற்றி, பிடிப்பை நழுவ விடாமலிருந்தால் அவர் இந்த ஸம்ஸார ஸாகரத்தைக் கடைந்து முதலில் விஷங்களைத் திரட்டி அப்புறப்படுத்திவிட்டுப் பிறகு நமக்கு அம்ருதம் எடுத்துக் கொடுத்துவிடுவார். அதாவது, அமர நிலையான மோக்ஷத்தைக் கொடுத்துவிடுவார்.

பிறப்பு – இறப்பு, ஜனன – மரணம்தான் ஸம்ஸாரம். அம்ருதம் என்றால் இறப்பில்லாதது. இறப்பேயில்லை என்றால் அப்புறம் மறு பிறப்பு இல்லை. அப்படிப்பட்ட சாச்வதமான மோக்ஷானந்தமான அம்ருதத்தை இந்த ஸம்ஸார ஸாகரத்திலிருந்தே பக்தியின் துணை கொண்டு பகவாநுக்ரஹத்தால் பெறவேண்டும் என்பது தாத்பர்யம்.

ஸம்ஸார ஸாகரத்தை விட்டுக் கடத்துவிப்பது என்றால் லோகத்தை அப்படியே துறந்துவிடச் செய்வது. ஸம்ஸாரத்தைக் கடைந்து அம்ருதம் பெறுவது என்றால், அதை விட்டுப் போகாமல், எல்லாவற்றிலும் உள்ள எல்லாமுமான ப்ரஹ்மம் லோகத்திலும் இருக்கிறது என்று தெரிந்து கொண்டு இஹத்திலேயே பரத்தைப் பெறுவது – என்றிப்படி அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம். ஞானமாகவே போனால், வைராக்யத்தில் ஸம்ஸாரத்தைத் துறந்து அதைக் கடப்பது; பக்தியாகப் போனால், அவன் க்ருபையிலுள்ள நம்பிக்கையால் ஸம்ஸாரத்தை விட்டுப் போகாமலே இதிலேயே அவனுடைய அம்ருத தத்வத்தைக் கடைந்து பெறுவது என்று வேண்டுமானாலும் அர்த்தம் செய்து கொள்ளலாம்.

‘ஷட்பதீ’யை ஸம்ஸாரத்திலிருந்து கடப்பதில் ஆரம்பித்து, – “தாரய ஸம்ஸார ஸாகரத:” என்று முதல் ச்லோகத்தில் ஆரம்பித்து கடைவதில் முடிக்கிறதால் எதையுமே விடாமல், ஒதுக்காமல், எதிலும் ஆத்ம தத்வத்தை அறிகிற பெரிய விசாலமான நிறைவில் முடிப்பதாக ஆகிறது.

பவக்கடல் கடையும் பகவத் மத்து!

இப்படி அநேகச் சிறப்புகள் பொருந்திய கோவிந்த நாமாவைச் சொல்லி பகவானை அழைத்து, ‘பவ ஜலதி மதன மந்தர’ என்கிறார் ஆசார்யாள்.

‘பவம்’ என்றால் ஸம்ஸாரம்; ‘ஜலதி’ என்றால் ஸமுத்ரம். ‘பவ ஜலதி’ என்றால் ஸம்ஸார ஸாகரம். ‘மதன’ என்றால் கடைவது. Mathana என்று சொல்லவேண்டும். Madana என்றால் மன்மதனுக்குப் பேராகிவிடும். Madana என்றால் போதை உண்டாக்குவது என்று அர்த்தம். அப்படிப் பண்ணும் மதனவேள் ஜனங்களின் மனஸை மதனம் (Mathanam) பண்ணுகிறார் போல் காமத்தினால் கடைந்து கொந்தளிக்கச் செய்வதால்தான் மன்மதன் (Manmathan) என்றும் பெயர் பெற்றிருக்கிறான். தயிரை மத(tha)னம் பண்ணுகிறபடியால்தான், தயிர் சிலுப்பும் குச்சியை ‘மத்து’ என்கிறோம். ‘மந்தர’ என்பது மந்தர மலை என்று பொருள்படும். ‘பவ ஜலதி மதன மந்தர’ என்றால் ‘ஸம்ஸார ஸாகரத்தைக் கடைகிற மந்தரமலையாக இருக்கிறவனே!’ என்று அர்த்தம்.

அம்ருத மதனத்துக்காகப் பாற்கடலை தேவாஸுரர்கள் கடைந்தபோது மந்தரமலையைத்தானே மத்தாகப்போட்டு, அதிலே வாஸுகிப் பாம்பைக் கயிறாகச் சுற்றிக் கடைந்தார்கள்? அந்த மாதிரி இப்போது நாம் மாட்டிக்கொண்டிருக்கிற இந்த சாவுக்களமான ஸம்ஸார ஸாகரத்திலிருந்தும் நித்யத்வமுள்ள மோக்ஷமான அம்ருதத்தைப் பெறுவதற்காக பகவானே மந்தர மலையாக வரவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார். பாற்கடலைக் கடைந்தபோது மந்தரமலை அலைகளில் நிலை தடுமாறாதபடி மஹாவிஷ்ணுதான் ஆமை ரூபத்தை எடுத்துக்கொண்டு அதைத் தூக்கிக் தாங்கிக்கொண்டார். அதுதான் கூர்மாவதாரம். இந்த ஷட்பதீ ஸ்தோத்திரத்திலேயே நாலாம் ச்லோகத்தில் ‘உத்த்ருத நக’ என்றபோது இப்படி பகவான் மலையைத் தாங்கியதைச் சொல்லியிருக்கிறது. (கூர்மாவதாரத்தில் மந்தர மலையைத் தாங்கினது, க்ருஷ்ணாவதாரத்தில் கோவர்த்தனகிரியைத் தூக்கினது என்ற இரண்டு ஸந்தர்ப்பங்களில் பகவான் ‘உத்த்ருத நக’னாக இருந்திருக்கிறான்.)

பாற்கடலில் மந்தர மலையைத் தாங்கினவனையே இங்கே, ‘பவஜலதி மதன மந்தர’ என்னும்போது ஸம்ஸார ஸாகரத்தைக் கடைய உதவுகிற ஒரு மந்தர மலையாக உருவகப்படுத்துகிறார், இங்கே மலையைத் தாங்குகிறவனாக அன்றி மலையாகவே வர்ணிக்கிறார். இதற்கு அர்த்தம் என்ன? ஸம்ஸார ஸாகரத்திலிருந்து கடத்துவிக்கிறான் என்று வழக்கமாய்ச் சொல்வதுபோல் சொல்லாமல், ஸம்ஸார ஸாகரத்தைக் கடைகிற மத்தாக இருக்கிறான் என்று ஏன் சொல்லவேண்டும்?

பாற்கடலைக் கடைந்தபோது முதலில் விஷம் வந்தது; அப்புறம்தான் அம்ருதம் வந்தது. கடைந்து கடைந்து முதலில் அதிலிருக்கிற கெட்டதை எல்லாம் விஷ ரூபத்தில் திரட்டி வெளிப்படுத்திய அப்புறந்தான், நல்லதான அம்ருதம் வந்தது. நம்முடைய வாழ்க்கையும், ஸம்ஸாரத்தையும் இப்படிக் கடையவேண்டும். தன்னாலே அது அலை அடித்துக் கொண்டிருப்பதுதான். காம, க்ரோதாதிகளான பல சலனங்களலால் அது அலைவீசிக்கொண்டிருக்கிறது. ஆனால், அதற்குள்ளேயே ஈச்வர தத்வமும் அம்ருதம் போல் இருக்கத்தான் செய்கிறது. இந்த ஸம்ஸாரக் கடலை நன்றாக கடைந்து காம, க்ரோதாதிகள் விஷமாகத் திரண்டு வெளியே போகும்படி செய்து விட்டால் அப்புறம் திவ்ய அநுபவம், ஈச்வர ஸாக்ஷாத்காரம் என்கிற அம்ருதம் வந்துவிடும். முதலில் கெட்டதை எல்லாம் திரட்டவேண்டும். எதற்காக என்றால், வைத்துக்கொண்டு அநுபவிப்பதற்காக அல்ல. வெளியிலே துரத்துவதற்காகத்தான்! குப்பையை எல்லாம் ஒரு இடமாக பெருக்கித் திரட்டி வெளியிலே கொட்டுவதுபோல! அப்படி வெளியிலே துரத்துகிறவரை கெட்டதுகள் இருக்கத்தான் செய்யும். அவற்றை பகவானே மத்தாக வந்து ஒன்றாகச் சேர்த்து ஒரு இடத்தில் concentrate செய்து (திரட்டிக்) கொடுக்கிறான். பூஜை, க்ஷேத்ராடனம், ஸ்தோத்ரம் படிப்பது, ஜபம், த்யானம் என்கிற ஸாதனையெல்லாம் பகவானின் அநுக்ரஹ ஸ்வரூபம்தான். இப்படிப்பட்ட ஸாதனைகளால் வாழ்க்கைக் கடலை கடந்து முதலில் விஷத்தைத் திரட்ட வேண்டும். பிறகு, அதை வெளியே அனுப்பிவிடவேண்டும். அப்புறம் அம்ருதத்தை அடையவேண்டும்.

ஆகக் கூடி, எடுத்தவுடன் அம்ருதம் வேண்டும் என்றால் முடியாது. விஷத்தை அநுபவித்து தீர்த்தபின்தான் அம்ருதம் வரும். வாழ்க்கையில் கெட்டது, கஷ்டம், காம, க்ரோதம் எல்லாம் இருந்துதான் ஆகவேண்டும். போகப் போக இதையெல்லாம் விலக்கிவிட்டு ஒரே நல்லதாக, பேரின்பமாக ஆகவேண்டும்.

கெட்டதுகள் இருக்கின்றனவே என்று நாம் ஓயாமல் அழுதுகொண்டும், பயந்துகொண்டும், நம்பிக்கை இழந்து கொண்டும் இருக்கவேண்டாம் என்று ஆறுதலாகத் தெம்பு ஊட்டுகிற விதத்தில் ‘பவஜலதி மதன மந்தர’ என்று ஆசார்யாள் சொல்கிறார். மத்து போட்டுக் கடைகிறபோது எத்தனை கொந்தளிப்பு, எத்தனை பாடுபடவேண்டியிருக்கிறது? அம்மாதிரி நம் பூர்வ கர்மா, பழைய வாஸனைகள் தீருவதற்கும் வாழ்க்கையைக் கடைகிற கடையில் மொத்துப்படவேண்டும். இப்படிப் பல சோதனைகளில், பரீக்ஷைகளில் தேறின பிறகுதான் விமோசனம் கிடைக்கும். அப்புறம் விமோசனம் கிடைப்பதற்காகவே, இப்போது ஸாக்ஷாத் பகவான்தான் இத்தனை கொந்தளிப்பை உண்டாக்குகிறான் என்று தெரிந்துவிட்டதானால் நம்முடைய பயம், அழுகை, நம்பிக்கைத் தளர்ச்சியெல்லாம் போய்விடும்.

மத்வாசார்யார் உடுப்பியிலே ப்ரதிஷ்டை பண்ணிய க்ருஷ்ணன் கையில் மத்து இருக்கிறது. பகவானே மந்தர மலை என்ற மத்தாக வந்து ஸம்ஸார ஸாகரத்தைக் கடைகிறான் என்று சங்கராசார்யார் சொல்கிறார்!

மத்தைக் கயிற்றால் சுற்றுகிற மாதிரி பகவானையே சுற்றிக் கட்டிப்போட்டிருந்தபோதுதான் அவன் தாமோதரனானது. மத்தைப்போட்டு யசோதை தயிர் கடைந்துகொண்டிருந்தபோது அவளிடம் பாலக்ருஷ்ணன் பால் குடித்துக் கொண்டிருந்தான். அடுப்பிலே பால் பொங்கி வந்தது. அதனால் குழந்தைக்குப் பால் கொடுப்பதை விட்டுவிட்டு அவள் எழுந்திருந்தாள். அதிலே ஏற்பட்ட ஆத்திரத்தால்தான் ஸ்வாமி தயிர்ச்சட்டியை உடைத்து, உறி வெண்ணெயை எடுத்துக் குரங்குகளுக்கு உபசாரம் பண்ணி, முடிவிலே யசோதை கட்டிப்போட, தாமோதரனாக ஆனது. ‘தாமோதர’ என்று ச்லோகத்தை ஆரம்பித்து, அப்புறம் அவனையே மத்தாகச் சொல்வதில், இந்த ஸ்தோத்ரம் பூராவும் ஒன்றிலிருந்து ஒன்றாக அபிப்ரயாங்கள் கிளைவிட்டுக்கொண்டு போகிற அழகில் இன்னொன்றைப் பார்க்கிறோம்!

ஸம்ஸார ஸாகரத்தைக் கடையும்போது முதலில் ஏன் விஷம் வரவேண்டும், லோக வாழ்க்கையில் ஏன் கஷ்டம் இருக்க வேண்டும், கெட்டது இருக்கவேண்டும் என்றால் அதுதான் பகவானுடைய விளையாட்டு. இயற்கை நியதியிலேயே இப்படித்தான் வைத்திருக்கிறார். காய் கசக்கத்தான் வேண்டும். அப்புறம் கசப்புக் காயே துவர்ப்பாக வேண்டும், அதற்கப்புறம் துவர்ப்பு, புளிப்பாக வேண்டும், கடைசியில் தான் புளிப்பு தித்திப்பாகவேண்டும் என்று வைத்திருக்கிறார். அப்படியே நம்முடைய காமம், க்ரோதம் முதலிய கசப்பு எல்லாம் படிப்படியாகத்தான் துவர்த்து, புளித்து அப்புறம் ப்ரசாந்த மதுரமாக வேண்டும். ஆதலால் நமக்கு இந்த தோஷங்கள் இருக்கிறதே என்று அழவேண்டாம். பகவானை நினைத்துக்கொண்டு, பக்தியோடு இருந்துகொண்டு, கர்மாநுஷ்டானங்களைப் பண்ணிக்கொண்டு, ஜனங்களுக்கு நம்மாலான தொண்டைச் செய்துகொண்டு இருந்தால் தன்னால் காலக்ரமத்தில் இந்த தோஷம் எல்லாம் போய்ப் பழுத்த பழமாக, அன்பு என்கிற ஒரே மதுரமயமாக ஆகிவிடுவோம். இம்மாதிரி பக்தி, கர்மாநுஷ்டானம், ஸேவை, த்யானம் முதலியவை இல்லாவிட்டால் கசப்பு மாறவே மாறாது.

இப்போது இத்தனை தோஷங்களோடு இருக்கிற மாதிரியே மனம் போனபடி இருந்துகொண்டு எப்போதும் கசப்பாக இருப்பதும் ஸரியில்லை. தோஷம் இருக்கிறதே என்று ஓயாமல் அழுதுகொண்டிருப்பதும் ஸரியில்லை. செய்ய வேண்டிய கர்மாக்களைப் பண்ணிக்கொண்டே போனோமானால் கசப்பு எல்லாம் மாறவேண்டியபோது மாறும்; மதுரமயமாய்விடும்.

மூன்றில் ஒன்று

கோவிந்த நாமத்துக்கு இன்னொரு விசேஷமும் இருக்கிறது. முன்பு மஹாவிஷ்ணுவுக்கு ப்ரீதியான நாமாக்கள் என்று பன்னிரண்டைச் சொன்னேன் அல்லவா! அவற்றில் ‘கோவிந்த’ என்பது ஒன்றாக வருகிறது. இது தவிர மூன்றே மூன்று நாமாக்கள் மஹாவிஷ்ணுவுக்கு ரொம்பவும் விசேஷமானவை என்று எடுத்திருக்கிறார்கள். இந்த மூன்று நாமாக்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆசமனம் பண்ணிவிட்டு, அப்புறம் அந்தப் பன்னிரண்டு நாமாக்களைச் சொல்லிக் கன்னம், கண், மூக்கு, காது, புஜம், ஹ்ருதயம், சிரஸ் முதலியவைகளைத் தொட்டால் தேஹசுத்தி உண்டாகிறது. எந்தக் கர்மாவானாலும் முதலில இப்படிச் செய்து சரீரத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும். மூன்று முறை ஆசமனம் செய்கிறபோது சொல்கிற நாமாக்கள், “அச்யுத. அனந்த. கோவிந்த” என்கிறவையே.

இப்படியாக, விசேஷமான பன்னிரண்டு நாமாக்கள், அதனிலும் விசேஷமான மூன்று நாமாக்கள் இரண்டிலும் வருகிற ஒரே ஒரு நாமம் ‘கோவிந்த’ என்பதுதான்.

கேசவ – நாராயண – மாதவ – கோவிந்த – விஷ்ணு – மதுஸூதன – த்ரிவிக்ரம – வாமன – ஸ்ரீதர – ஹ்ருஷீகேச – பத்மநாப – தாமோதர.

அச்யுத – அனந்த – கோவிந்த.

மூன்றிலே ஒரு நாமாவாக இருக்கப்பட்ட ‘கோவிந்த’ என்பதை ‘பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம்’ என்று மூன்று தரம் ஆசார்யாள் சொல்லிச் சொல்லி ஸந்தோஷப்பட்டிருக்கிறார். ஒன்றை ஸத்யப்ரமாணமாகச் சொல்ல வேண்டுமானால் மூன்று தரம் திருப்பிச் சொல்வார்கள்.

இப்படி ஆசார்யாள் சொன்னது மட்டுமில்லாமல், ஆண்டாளும் மூன்று இடங்களில் கோவிந்த நாமாவை ப்ராயோகித்திருக்கிறாள், அவளுடைய ‘திருப்பாவை’யிலே. ‘திருப்பாவை’யின் கடைசியான முப்பதாவது பாட்டு அதற்கு பலச்ருதி. அதை விட்டுவிட்டால் அதற்கு முந்திய மூன்று பாட்டுக்களிலும் ‘கோவிந்தா!’ என்றே பகவானைக் கூப்பிட்டிருக்கிறாள். இருபத்தேழாவது பாட்டில் ‘கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!’ என்கிறார். இருபத்தெட்டாவதில்தான் ‘குறைவொன்றுமில்லாத கோவிந்தா’ என்பது. இருபத்தொன்பதாவது பாட்டில் ‘இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!’ என்கிறாள்.

குரு – தெய்வ ‘கோவிந்த’

கோவிந்த நாமாவுக்கு இருக்கப்பட்ட அநேகச் சிறப்புக்களில் இன்னொன்று நம் ஆசார்யாளுக்கு அதுதான் ரொம்பவும் பிடித்தது -favourite- என்பது! ‘பஜ கோவிந்த’த்திலிருந்து இது தெரிகிறது. ‘பஜகோவிந்தம்’ என்பது அவருடைய ‘சிவானந்தலஹரி’, ‘ஸெளந்தர்ய லஹரி’, அல்லது இந்த ‘ஷட்பதீ’ ஸ்தோத்ரம் போல ஒரு ஸ்வாமியை ஸ்தோத்திரிக்கும் ப்ரார்த்தனை இல்லை. அதிலே ஜெனரலாக ஒரு மநுஷ்யன் இருக்கவேண்டிய வாழ்முறையையும், தத்வ உபதேசங்களையும், விவேக வைராக்யங்களையும்தான் சொல்லியிருக்கிறார். அது வைஷ்ணவர், சைவர் என்ற பேதமில்லாமல் ஸகல ஜனங்களுக்குமானது. இப்படிப்பட்ட க்ரந்தத்தில் ஆசார்யாள் ‘பராமாத்மாவை பஜியுங்கள்’ என்று பொதுப்பெயரைச் சொல்லாமல் ‘கோவிந்தனை பஜியுங்கள்’ என்று சொல்கிறாரென்றால், அந்தப் பெயரில் அவருக்கு ரொம்பவும் பிடித்தம் என்று தானே அர்த்தம் தெரிகிறது?

லோகத்தில் உள்ள உபதேச க்ரந்தங்களுக்கெல்லாம் உச்சியில் உள்ள கீதையை அர்ஜுனனுக்குச் சொன்னதால் க்ருஷ்ணருக்கு ‘ஜகத்குரு’ என்ற பட்டம் உண்டு. ‘க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’ என்று ச்லோகம் சொல்கிறோம். அதற்கு அப்புறம் நம் பகவத்பாதாளுக்குத்தான் ஜகத்குரு பட்டம் ஏற்பட்டது. ஜகத்குருவாயினும் ஆசார்யாளுக்கு, சிஷ்யபாவத்தில் இருந்துகொண்டு தம்முடைய குருவை ஸ்துதிப்பதிலேயே ஸந்தோஷம். அவருடைய குருவின் பேர் என்ன என்றால் கோவிந்த பகவத் பாதர் என்பதே. அதனால் குரு – தெய்வம் இரண்டின் பெயராகவும் உள்ள ‘கோவிந்த’ என்னும்போது க்ருஷ்ண பரமாத்மாவை மட்டுமின்றி தம் குருவையும் ஆசார்யாள் நினைத்துக்கொண்டார் என்பதற்கு internal evidence (உட்சான்று) -ஆக ‘விவேக சூடாமணி’யின் ஆரம்ப ச்லோகத்தில்,

கோவிந்தம் பரமாநந்தம் ஸத்குரும் ப்ரணதோஸ்ம்யஹம் என்று சொல்லியிருக்கிறார்.