ராமபிரானும் விநாயகரும்

மாமாக்காரர் மஹாவிஷ்ணு மருமானுக்கு மரியாதை பண்ணி அவர் மஹிமை தெரியும்படியாகச் செய்ததைச் சொல்லவேண்டும்.

மஹாவிஷ்ணு என்ற மூலருபத்தில் அவர் இவரிடமிருந்து சக்ரத்தை வாங்க முடியாமல் தோப்பிக்கரணம் போட்டது மட்டுமில்லை; ராம க்ருஷ்ணாதி அவதாரங்களிலும் பிள்ளையாருக்கு சாஸ்த்ரோக்தமாகப் பூஜை பண்ணியிருக்கிறார்.

ராமாவதாரத்தில் ராவண ஸம்ஹாரம் ஆன பிற்பாடு அவர் ராமலிங்க ப்ரதிஷ்டை செய்து சிவாராதனம் பண்ணியது எல்லாருக்கும் தெரிந்திருக்கும். ராவண ஸம்ஹாரத்துக்கு முன்னாடி, கிஷ்கிந்தையிலிருந்து போகிற போதே ஸேது பந்தம் நிர்விக்னமாக நடக்க வேண்டுமென்பதற்காக அவர் ராமநாதபுரம் ஸமுத்ரக்கரையில் நவ பாஷாணம் என்ற இடத்தில் நவக்ரஹ ப்ரதிஷ்டை செய்து பூஜை பண்ணினாரென்பதும் சில பேருக்காவது தெரிந்திருக்கும். தேவி பட்டணம் என்பது அந்த நவபாஷாணந்தான். இப்போதும் ராமேச்வர யாத்திரை போகிறவர்கள், சுற்றுப்பட்ட க்ஷேத்ரங்கள் பலவற்றுக்குப் போகும்போது நவபாஷாணத்துக்கு நிச்சயமாகப் போகிறார்கள். மிகவும் க்ரமமாக இந்த யாத்திரை பண்ணினால் முதலில் போக வேண்டிய ஊர் ஒன்று இருக்கிறது. விஷயம் தெரிந்தவர்கள் ஸேது யாத்ரா என்றால் அங்கேயிருந்துதான் ஆரம்பிப்பார்கள்.

ஆரம்ப ஸ்வாமியான விக்நேச்வரரை ராமசந்த்ரமூர்த்தி பூஜை பண்ணிய ஊர்தான் அது. உப்பூர் என்று பெயர். ராமர் மாதிரி வடக்கேயிருந்து வந்தால் நவபாஷாணத்துக்கு முன்னால் அது வந்துவிடும். அதுதானே பொருத்தம்? நவக்ரஹங்களைப் பூஜிப்பதற்கும் முதலில் ‘சுக்லாம்பரதரம்’ குட்டிக்கொண்டுதானே ஆகவேண்டும்?

எல்லாம் மநுஷ்ய ரீதியில் சாஸ்த்ரோக்தமாக, ஸம்ப்ரதாய பூர்வமாகப் பண்ணி வழிகாட்டியவர் ராமர். அவர் ஸேதுபந்தத்துக்கு முன் நவக்ரஹங்களை ப்ரீதி செய்தாரென்றால், அதற்கும் முந்தி ஸர்வ விக்ன ஹர்த்தாவான பிள்ளையாரையும் பூஜை பண்ணித்தானிருப்பார். அப்படி அவரால் பூஜிக்கப்பட்டவர்தான் நவபாஷாணத்துக்குப் பக்கத்தில இருக்கும் உப்பூர்ப் பிள்ளையார். வரப்ரஸாதி என்று அந்த வட்டாரத்திலுள்ளவர்களெல்லாம் கொண்டாடும் மூர்த்தி. மற்றவர்களுக்கு வரம் கொடுப்பாரே தவிர தமக்கு ஒரு கூரைகூட இல்லாதவர். தமக்கு மேலே விமானம் கட்ட அவர் விடுவதேயில்லை. எதையாவது விக்னத்தை உண்டுபண்ணி அதை தடுத்துவிட்டு, எளியவர்களில் எளியவராக, வெய்யில் மழை எல்லாம் தம்மேலேயே விழும்படி உட்கார்ந்திருக்கிறார்! “வெயிலுகந்த விநாயகர்” என்றே அவருக்குப் பெயர்.

தொந்தி கணபதிக்கு “டுண்டி” என்று ஸம்ஸ்க்ருதத்தில ஒரு பெயருண்டு. டுண்டிராஜ கணபதி காசியில் பிரக்யாதியோடு இருக்கிறார். அதன் ஸம்பந்தமாகத்தானிருக்க வேண்டும், தமிழ் தேசத்திலும் “தொண்டி” என்று விநாயக க்ஷேத்ரம் இருக்கிறது. இதுவும் ராமர் பூஜித்த க்ஷேத்ரமாகத்தான் சொல்லப்படுகிறது. வேதாரண்யத்திலிருந்து ஸமுத்ரக்கரை ஓரமாகவே தெற்காக வந்தால், ஏறக்குறைய வேதாரண்யத்துக்கும் உப்பூருக்கும் நடுபாதியில் தொண்டி இருக்கிறது. முதலில் ராமர் இங்கேயிருந்துதான் லங்கைக்கு அணைகட்ட நினைத்தாராம். இங்கே அதற்காக அவர் பிள்ளையார் பூஜை பண்ணப் பிள்ளையாரும் ப்ரஸன்னமானார். ராமருக்கு வெற்றி நிச்சயம் என்று வரம் கொடுத்துவிட்டு, ஆனால் ‘இங்கேயிருந்து அணைகட்டாமல் இன்னம் தெற்காகப் போய்க் கட்டினால் வேலை குறையும். தள்ளிப்போய்க் கட்டினால்தான் சுற்றி வளைக்காமல் லங்கைக் கோட்டையின் வாசல் பக்கத்துக்கே போய்விடலாம்’ என்று பிள்ளையார் யோசனை சொன்னாராம்.

இந்தத் தொண்டி விநாயகரும் தமக்கு மேலே விமானமில்லாமல்தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். மாமாக்காரர் மழையிலும் வெய்யிலிலும் அலைந்து கொண்டு லங்கைக்கு அணைகட்டிக்கொண்டு போகும்போது நாம் மட்டும் கோவில் கட்டிக்கொண்டு கொண்டாட்டம் அடிக்கக் கூடாதென்றுதான் இப்படி இரண்டு இடத்திலுமே இருக்கிறார் போலிருக்கிறது. ஆசார்யாள் “கணேச பஞ்சரத்ந” ஸ்தோத்ரம் செய்திருப்பது தொண்டி கணபதி மேல்தான்.

ஈச்வரஸுதனை ஸ்ரீராமர் ஆராதனை பண்ணி அநுக்ரஹம் பெற்ற பலன்தான், கடைசியில் அவர் ராவண ஸம்ஹாரம் பண்ணி விஜய ராகவனாக, அதோடுகூட இப்போது பறி கொடுத்திருந்த பத்னியைத் திரும்பவும் பெற்ற ஸீதா ராமனாகத் திரும்பிவந்து அந்த ஈச்வரனையே ராமலிங்கமாக ப்ரதிஷ்டை செய்தது.

ஆசார்யாள் பிம்பம் லாரியில் ராமேச்வரத்துக்குப் போயிற்று என்று சொன்னேனே, அப்போது அச்சரப்பாக்கத்தில் செய்த மாதிரியே உப்பூரிலும் நூற்றியெட்டுத் தேங்காய் உடைத்தது. ஈச்வரனக்குப் பிள்ளையார் இடைஞ்சலைப் போக்கினது முதல் ஊரில் என்றால், பின் ஊரில் அவரை ராமர் பூஜித்த விசேஷம்தானே, ஈச்வரனின் ஜ்யோதிர்லிங்க மஹாக்ஷேத்ரமான ராமேச்வரம் ஸாக்ஷாத் ஸ்ரீராம ப்ரஸாதமாக நமக்கு கிடைத்திருப்பது! ராமர், ஈச்வரன் இரண்டு பேருடனும் இப்படித் தம் ஸம்பந்தத்தை ராமேச்வரத்துக்கு போன ஆசார்யாள் காட்டிக்கொண்டு விட்டார்.

க்ருஷ்ணாவதாரத்தில் மஹாவிஷ்ணு மருமானைப் பூஜித்தது ஸ்வாரஸ்யமான பெரிய கதை*.


*இது அடுத்த உரையாக விரிகிறது.

முருகனுக்குதவிய முன்னவன்

தாயார், தகப்பனாரே இப்படித் தங்கள் வெற்றிக்கான ‘க்ரெடிட்’டைப் பிள்ளையாருக்குக் கொடுத்திருக்கிறார்கள். அப்படியிருக்கத் தம்பிக்கு மட்டும் இவர் ஸஹாயமில்லாமல் நடக்குமா? ஆனால் இது சத்ரு ஜயம் அல்ல. ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி தன்னுடைய ச்ருங்கார ஜயத்துக்காகவே அண்ணாவின் ஸஹாயத்தை நாட வேண்டியிருந்தது!

குழந்தையாயிருந்தபோது அவர் ஸந்நியாஸியானதற்கு, தண்டாயுதபாணி என்று ஆண்டிப்பண்டாரமாகப் போனதற்கும் இதே அண்ணாதான் காரணம். பழத்துக்காக உலகத்தை ப்ரதக்ஷிணம் பண்ணவேண்டும் என்று அண்ணா – தம்பி ஓட்டப் பந்தயம் போனது தெரிந்த கதைதானே? அப்போது ஆண்டியாகப்போன ஸுப்ரஹ்மண்யரை அப்புறம் ஈச்வரனும் அம்பாளும் நல்லவார்த்தை சொல்லி அழைத்துக் கொண்டு வந்தார்கள். எதற்காக அவருடைய அவதாரம் ஏற்பட்டதோ அந்த சூர ஸம்ஹாரமும் அப்புறம் பண்ணினார். அதற்கப்புறம் இவருக்காகவே உருகிக்கொண்டிருந்த வள்ளியிடம் மாறு வேஷத்தில் வேடனாக, விருத்தனாகப் போய் விளையாட்டுப் பண்ணினார். அவள் இவர் யார் என்று புரிந்து கொள்ளாமல் உதாஸீனம் செய்தாள். அப்போது அவர் ஸுப்ரஹ்மண்யராகக் காட்சி கொடுத்திருந்தாலே போதும், அவள் உடனே அவரிடம் ப்ரேமை கொண்டிருப்பாள். ஆனால் அவர் அப்படிப் பண்ணாமல் தமையனின் பெருமையை உலகத்துக்குத் தெரிவிக்கப் பண்ண இது ஒரு நல்ல ஸந்தர்ப்பம் என்று நினைத்தார். எடுத்த காரியத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டால் பிள்ளையாரைப் பூஜித்தே அதை நிவ்ருத்தி செய்துகொள்ளவேண்டும் என்று ஜனங்கள் உணரும்படிப் பண்ணவேண்டுமென்று நினைத்தார். அதனால் உடனே மஹா கணபதியை த்யானம் பண்ணினார்.

தம்பி கூப்பிட்டவுடனே தமையனார் பெரிய மதயானை ரூபத்தில் ஓடி வந்து வள்ளியைத் துரத்து துரத்து என்று துரத்தினார். திக்குத் திசை புரியாமல் “முருகா முருகா” என்று ஓடின வள்ளி விருத்த ரூபத்தில் எதிர்ப்பட்ட அந்த முருகனையே — முருகன் என்று தெரிந்துகொள்ளாவிட்டாலும் — பயத்தினால் ஒரு குழந்தை அதன் தாத்தாவைக் கட்டிக் கொள்கிறமாதிரி, அப்படியே இறுகப்பிடித்துக் கொண்டு விட்டாள். ‘இதற்கு மேலும் விளையாடப்படாது, விநாயக ப்ரபாவத்தை வெளிப்படுத்தியாச்சு’ என்று ஸுப்ரஹ்மண்யரும் அப்போது தம்முடைய ஸ்வய ரூபத்தை எடுத்துக் கொண்டு வள்ளியை ஸந்தோஷத்தில் ஆழ்த்தினார்.

அப்புறம் வள்ளி கல்யாணம் நடந்தது. கட்டைப் பிரம்மசாரியான கணேச மூர்த்தியே தம்பியின் காதல் கல்யாணத்துக்கு உதவி பண்ணியிருக்கிறார்!

அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியிருக்கிற விக்நேச்வர ஸ்துதியில் ஈச்வரனின் த்ரிபுர ஸம்ஹாரம், ஸுப்ரஹ்மண்யரின் வள்ளித் திருமணம் இரண்டிலும் மஹாகணபதிக்கு உள்ள பங்கைச் சொல்லியிருக்கிறார்*.

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை யிபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே!


* ‘கைத்தல நிறைகனி’ எனத் தொடங்கும் பாடல்

அன்னைக்கு உதவிய ஐங்கரன்

அம்பாளும் விக்நேச்வரரை உத்பவிக்கப்பண்ணி அவர் ஸஹாயத்தினாலேயே ஜயம் பெற்றாளென்று லலிதோபாக்யானத்தில் வருகிறது.

லலிதாம்பிகை பண்டாஸுரனோடு யுத்தம் செய்தபோது சக்திஸேனை என்பதாக முழுக்கவும் தேவஸ்த்ரீகளையே கொண்ட படையோடு போனாள். போய்ப் படைவீடாக ஒரு அக்னிக்கோட்டை கட்டப்பண்ணி அதற்குள் ஸேனா ஸழூஹத்தோடுகூட முகாம் போட்டிருந்தாள். பண்டாஸுரனுக்கு மந்த்ரபலம் நிறைய உள்ள விசுக்ரன் என்ற ஒரு அஸிஸ்டன்ட் இருந்தான். அவன் என்ன பண்ணினானென்றால் விக்ன யந்த்ரம் என்ற ஒன்றைப் பண்ணி அதை அக்னிக் கோட்டைக்குள்ளே போய் அம்பாளின் கூடாரத்தில் விழும்படியாக விசிறி எறிந்தான். அந்த யந்திரத்தின் தன்மை என்னவென்றால், இந்த நாளில் Psychological Warfare என்கிறார்களே, அப்படி அது எதிராளியை பௌதிகமாகத் தாக்காமல் அவர்களுடைய மனஸையே சத்ருபக்ஷமாக மாற்றிவிடும், இப்போது Propagandaவினால் (பிரசாரத்தினால்) கொஞ்சம் கொஞ்சமாக மனஸை மாற்றுகிற மாதிரியில்லாமல், மந்திரசக்தி வாய்ந்த யந்த்ரமாதலால் அது உடனேயே மனமாறுதலை உண்டாக்கிவிடும்.

விக்ன யந்த்ரம் வந்து விழுந்தவுடன் அதன் மயக்கும் சக்தியால் சக்திஸேனைகளின் புத்தியே மாறிவிட்டது. “எதற்காக அஸுரர்களை நாம் கொல்லணும்? இது ஜீவ ஹிம்ஸைதானே? அம்பாளுக்கு அவர்களிடம் விரோதமென்றால் நமக்கென்ன வந்தது? இன்னம் அடி அஸ்திவாரத்துக்கே போனால் எதற்காக இந்த அம்பாளுக்கு அடங்கி நாம் வேலைக்காரப் பிழைப்புப் பிழைக்கணும்? நம்மால்தான் அவளுக்கு பலம் என்பதால்தானே நம்மைச் சேர்த்துத் திரட்டிக் கொண்டு வந்திருக்கிறாள்? இத்தனை நாளாக நாம் என்னவோ புத்தியில்லாமல் அவள்தான் நமக்கெல்லாம் மேலே, அவளுக்கே நம்மை அடக்கி ஆள்கிற பலம் இருக்கிறது என்றெல்லாம் நினைத்துக்கொண்டு ஏவல் செய்து விட்டோம். இப்போதுதான் மயக்கம் தெளிந்திருக்கிறது. இனிமேலும் இப்படித் தப்புப் பண்ணக்கூடாது. இப்போது நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் ஆயுதங்களைப் போட்டு விட்டு அப்படியே ஸ்ட்ரைக் பண்ணிவிட வேண்டும். யஜமானி-பணியாளி என்கிற கதை இனிமேலே பலிக்காது. எல்லாரும் ஸமம்தான்” என்றெல்லாம் அந்த ஸேனைகள் ட்ரேட் யூனியனிஸம், கம்யூனிஸம் எல்லாம் பேச ஆரம்பித்து விட்டன!

“வேர்க்க விறுவிறுத்துக்கொண்டு, அடியும் குத்தும் பட்டுக் கொண்டு இனிமேலே இவளுக்காக யுத்தம் செய்ய வேண்டியதில்லை. நாம் பாட்டுக்கு நிர்விசாரமாகத் தூங்கலாம். அக்னிக் கோட்டைதான் இருக்கவே இருக்கிறது. அதைத் தாண்டி யாரும் வந்து நம் தூக்கத்தைக் கெடுக்க முடியாது” என்று சொல்லிக்கொண்டு ஸேனா ஸமூஹம் முழுக்கப்படுத்துக்கொண்டு ‘கொர் கொர்’ என்று குறட்டை விட ஆரம்பித்துவிட்டன.

புத்தியை முதலில் மாறாட்டமாகக் கலக்கிவிட்டு, அப்புறம் அது ஸ்தம்பித்துச் செயலிழந்து தூங்கும்படிச் செய்யும் சக்தி விக்ன யந்த்ரத்துக்கு இருந்ததால் இப்படி நடந்தது.

ஜ்ரும்பணாஸ்த்ரம் என்று ஒன்று உண்டு. அதை போட்டுவிட்டால் அதற்கு ஆளாகிறவர்கள் கொட்டாவி கொட்டாவியாக விட்டுக்கொண்டு அசந்து விழுந்து விடுவார்கள். ‘ஜ்ரும்பணம்’ என்றால் ‘கொட்டாவி விடுவது.’

நவீன கால ஆயுதங்களைவிட பயங்கரமான, விசித்ரமான ஆயுதங்தளை மந்த்ர சக்தியாலேயே ஆதிகாலத்தில் செய்திருக்கிறார்களென்று புராணத்திலுள்ள விவரங்களைப் பார்த்தால் தெரியும். ப்ரஹ்மாஸ்த்ரம், நாரயணாஸ்த்ரம், பாசுபதாஸ்த்ரம் முதலியவற்றின் சக்தியைப் பற்றிப் படிக்கும்போது ஆடம் பாம்(ப்), ஹைட்ரஜன் பாம்(ப்) எல்லாம் ஒன்றுமேயில்லை என்று தோன்றும். இப்போது இந்த பாம்(ப்)களின் ரேடியேஷனால் கர்ப்பசேசேத மேற்படுகிறது என்கிறார்களென்றால், அந்தக் காலத்தில் அச்வத்தாமா போட்ட அபாண்டவாஸ்த்ரம் உத்தரையின் கர்ப்பத்திலிருந்த சிசுவைப் பாதித்திருக்கிறது! கிருஷ்ண பரமாத்மாதான் அதை ரக்ஷித்துக் கொடுத்தார்.

அம்பாள் தன்னுடைய படைகள் ஸ்ட்ரைக் பண்ணிவிட்டு ஆனாலும் நல்லவேளையாக sabotage (நாசவேலை) செய்யாமல், அமர்க்களமாய் டெமான்ஸ்ட்ரேஷன்கூடச் செய்யாமல், அததுகளும் நன்றாகத் தூங்கிக்கொண்டு கிடப்பதைப் பார்த்தாள். ஞானஸ்வரூபிணியாக இருக்கப்பட்ட அவளுக்குத் தெரியாததா? இதெல்லாமும் அவள் லீலைதான்!

விக்நேச்வரரின் ப்ரபாவம் வெளிப்படவேண்டுமென்றுதான் அவளே இப்படி ஒரு விக்னத்தை விசுக்ரன் என்ற வ்யாஜத்தில் உண்டாக்கிக் கொண்டிருந்தாள்.

சிவ – சக்திகளாக எப்போதும் இருப்பவர்களில் சக்தியே பண்டாஸுரனை வதைப்பதற்காக இப்போது லலிதாம்பிகையாக ஞானாக்னி குண்டத்திலிருந்து தோன்றியிருந்தாள். கல்யாணமாகாத கன்னியாக இவள் யுத்தத்துக்குப் போகக் கூடாது என்பதனால் இவளை விவாஹம் செய்துகொள்வதற்காக சிவனும் காமேச்வரர் என்ற ரூபத்தில் வந்தார். கல்யாணம் ஆயிற்று. காமச்வர – காமேச்வரி என்று அந்த தம்பதியைச் சொல்வது வழக்கம். அந்த காமேச்வரிதான் நம்முடைய காமாக்ஷியாக இருப்பது. அவளுடைய ஸ்தானம்தான் காமகோடி பீடம்.

கல்யாணமானவுடன் பண்டாஸுர வதத்துக்காகப் புறப்பட்ட அம்பாள் ஈச்வரனைக் காமேச்வரனாக வரவழைத்தது மட்டும் போதாது, தன்னுடைய அருமைக் குழந்தை கணபதியையும் இந்த லலிதாம்பிகை ஆவிர்பாவத்தில் வரவழைத்து அவன் பெருமையை ப்ரகடனப்படுத்த வேண்டுமென்று நினைத்தாள். அதற்கு வாய்ப்பாகவே இப்போது சக்தி ஸேனை விக்ன யந்த்ரத்தால் தூங்கிக்கொண்டு கிடந்தது.

உடனே காமேச்வரன் மேல் தன் ப்ரேம கடாக்ஷத்தைச் செலுத்தி மந்தஸ்மிதம் (புன்னகை) செய்தாள் அம்பாள். அவர் முகத்திலும் மந்தஹாஸம் படர்ந்தது. இப்படி ஆதி தம்பதியின் பரஸ்பர அன்பில் உண்டான சிரிப்பின் காந்திஸமூஹம் ஒன்று சேர்ந்ததோ இல்லையோ, அதிலிருந்தே மஹா கணபதி உத்பவித்துவிட்டார்! ஆனந்த ஸ்வருபமாக, எப்போழுதும் ப்ரஸன்ன முகமாக, ஸுமுகராக இருக்கிற அவர் ரொம்பவும் பொருத்தமாக, ஸாக்ஷாத் அம்பாள் – ஈச்வரன் ஆகியவர்களின் முகத்திலிருந்து பெருகுகிற சிரிப்பு ஒன்று சேர்ந்ததிலிருநது உத்பவித்துவிட்டார்.

பிள்ளையாரின் பல ஆவிர்பாவங்களில் இது லலிதோபாக்யானத்தில் வருவது. லலிதோபாக்யானம் என்பது பதினெட்டுப் புராணங்களில் ஒன்றான ப்ரஹ்மாண்ட புராணத்தில் வருகிறது.

ஈச்வரனின் முகத்தைப் பார்த்துச் சிரித்தே அம்பாள் பிள்ளையாரை அவதரிக்கச் செய்ததை லலிதா ஸஹஸ்ர நாமத்தில் “காமேச்வர முகாலோக கல்பித ஸ்ரீ கணேச்வரா” என்று சொல்லியிருக்கிறது.

எந்த தேவதையானாலும் அதன் சக்தியெல்லாம் எவளொருத்தியின் அம்சலேசம்தானோ அப்பேர்ப்பட்ட பராசக்தி, தானே விக்ன யந்த்ரத்தைச் சக்தியற்றதாகச் செய்திருக்கலாமாயினும், விக்ன நிவாரணத்துக்காகவே ஒரு விக்நேச்வரனை ஏற்படுத்தியிருக்கும்போது அவர் ஸஹாயத்தினால்தான் இதைச் செய்ததாக இருக்கவேண்டுமென்பதற்காக இப்படி லீலை செய்தாள்.

அவள் இப்படி ஒரு சட்டத்துக்கு அடங்கியிருந்ததற்கேற்ப, அவளுடைய கடாக்ஷத்திலிருந்து உண்டான விக்நேச்வரரும், ‘என் ஸஹாயத்தைத்தானே ஆனானப்பட்ட பராசக்தியும் நாடவேண்டியிருக்கிறது?’ என்று கர்வப்படாமல் அவளை நமஸ்காரம் பண்ணினார். பணிவோடு அவளுடைய ஆசீர்வாதத்தை வாங்கிக்கொண்டே விக்ன யந்த்ரத்தை அழிப்பதற்காகப் புறப்பட்டார்.

அக்னிக் கோட்டையின் ஒரு மூலையில் யந்த்ரம் புதைந்து கிடந்தது. பிள்ளையார் அதைக் கண்டுபிடித்து தந்தத்தால், குத்தித் தவிடு பொடியாக்கினார்.

உடனே தேவி கணங்கள் தூக்கம் கலைந்து எழுந்தன. அவற்றுக்கு ஏற்பட்டிருந்த மனோ பேதமும் மாறி, அம்பிகையிடம் பழையபடி பக்தி விச்வாஸம் கொண்டன. முன்னைவிட உத்ஸாஹமாக யுத்தம் செய்தன. முடிவில் பண்டாஸுரன் தோற்றுப் போனான்.


ஸமீபகால ஸம்பவத்தில் புராண நிரூபணம்

அப்படிச் சொல்வது நிஜந்தானென்று நிரூப்பிக்கிறதாக ஸமீபத்தில் ஒன்று நடந்தது. ராமேச்வரத்தில் சங்கர மண்டபம் கட்டிக்கொண்டிருந்தோம்*. அதில் ப்ரதிஷ்டை செய்யவேண்டிய ஆசார்யாள் பிம்பத்தை லாரியில் எடுத்துக் கொண்டு போயிற்று. ஜெய்ப்பூரிலிருந்து ஸலவைக்கல் தருவித்து காஞ்சிபுரத்தில் ஆசார்யாளுக்கும், அவருடைய நாலு சிஷ்யர்களுக்கும் பெரிசு பெரிசாக பிம்பம் பண்ணி அங்கேயிருந்து ராமேச்வரத்துக்கு லாரியில் எடுத்துக் கொண்டு போயிற்று. அப்போது வழியில் ஸரியாக இந்த அச்சிறுப்பாக்கத்திலேயே லாரி Break down ஆகி நின்று விட்டது! அப்புறம் பிள்ளையாருக்கு நூற்றியெட்டுத் தேங்காய் உடைத்து விட்டே, லாரியைப் பழுதுபார்த்துக் கிளப்பிற்று. அதற்குப் பிற்பாடு எந்த விக்னமுமில்லாமல் கும்பாபிஷேகம், ப்ரதிஷ்டை எல்லாம் ஜாம்ஜாமென்று நடந்தது. இந்த விக்னமும்கூட அநுக்ரஹம் என்று தான் தோன்றிற்று. தாம் கைலாஸ சங்கரனேதான் என்று நமக்கு உறுதிப்படுத்துவதற்காகவே நம்முடைய சங்கர பகவத் பாதாள் இங்கே தம்முடைய நவீனகால ரத அச்சான லாரி ஆக்ஸீலை முறித்துக்கொண்டிருக்கிறாரென்று தோன்றிற்று.


* ஸ்ரீ மடத்தால் ராமேச்வரம் அக்னி தீர்த்தக்கரையில் நிர்மாணிக்கப்பட்டு, 1963 சங்கர ஜயந்தியன்று கும்பாபிஷேகம் கொண்ட மண்டபம்.

தந்தை பூஜித்த தனயர்

தகப்பனாரான ஈச்வரனையே எடுத்துக்கொள்ளலாம். அவர் த்ரிபுர ஸம்ஹாரத்துக்காகப் புறப்படுகிறபோது பிள்ளையை – அவர் மரியாதை கொடுக்கப்பட்ட வேண்டிய பிள்ளையார் என்பதை மறந்து – ஸ்மரிக்காமலே கிளம்பினார்.

பிள்ளையார் தமக்கு வேண்டிய due-வைப் பெறாமல் விடமாட்டார்! ‘பிள்ளையாருக்கு முதல் பூஜை’ என்பது தேவதைகள் எல்லோருமாகத் தீர்மானித்தது. அப்படியிருக்க, ஒரு ரெஸொல்யூஷன் ஏகமனதாகப் பாஸ் ஆகிச் சட்டமாய் விட்டதென்றால் அதைத் தகப்பனாராகத்தான் இருக்கட்டும், அந்தத் தகப்பனார் ஸர்வ ஜகத்துக்கும் ஈச்வரராகத்தான் இருக்கட்டும், மீறினால் குற்றம் தானே? தப்புச் செய்தவரைப் பிள்ளையார் சும்மா விடமாட்டார்.

ஆகையால் த்ரிபுராஸுரர்களை நோக்கி ஈச்வரனின் ரதம் போய்க்கொண்டிருக்கும் வழியில் அதன் அச்சு முறிந்து போகும்படியாகப் பிள்ளையார் பண்ணிவிட்டார். ரதம் நின்றுபோய்விட்டது.

உடனே ஈச்வரனுக்குப் புரிந்துவிட்டது. ‘ரொம்பவும் பெரியவனாகையால் நமக்குச் சட்டம் இல்லை என்று இருப்பது தப்பு. ரொம்பப் பெரியவனாயிருப்பதாலேயே நாம் தான் லோகத்துக்கெல்லாம் உதாரணமாக நடந்து காட்ட வேண்டும். அதன்படி சட்டத்துக்கு ரொம்பவும் அடங்கிப்போக வேண்டும். சட்டம் என்று வருகிறபோது அப்பா-பிள்ளை முதலான உறவுகளுக்கு இடமில்லை’, என்று பரமேச்வரன் நினைத்தார்.

உடனே, கொஞ்சங்கூட ஸ்தானம் பார்க்காமல் பிள்ளையாருக்குப் பூஜை பண்ணினார். (இன்னொரு ஸந்தர்ப்பத்தில் இளைய பிள்ளையிடமும் கீழ்ப்படிந்து ப்ரணவோபதேசம் வாங்கிக் கொண்டிருக்கிறார்!)

பிள்ளையாரும் அப்பா கொஞ்சம் நினைத்தவுடனேயே ஓடிவந்து விக்னத்தை அகற்றிவிட்டார்.

அதற்கப்புறம் ரதம் ஓடி, முடிவில் ‘த்ரிபுராந்தகர்’ என்று பெரிய பெயர் வாங்கும்படியாக ஈச்வரன் அந்த அஸுரர்களை ஜயித்தார்.

செங்கல்பட்டுக்கும் திண்டிவனத்துக்கும் நடுவில் “அச்சரப்பாக்கம்” என்று இருக்கிறதே, அந்த ஊர்தான் ஈச்வரனுடைய ரதத்தின் அச்சு இற்றுப்போன “அச்சிறுப்பாக்கம்” என்று சொல்வார்கள்.

முழுமுதற் கடவுளாக

பிள்ளையார் ப்ரீதியை நாம் பெற்றுவிட்டால் அவரிடம் மிகவும் அன்புகொண்ட பார்வதி பரமேச்வரர்களின் அநுக்ரஹத்தைப் பெற்று விடலாமென்றேன். நாம் பொதுவாக ஈச்வரனையும் அம்பாளையும் முக்யமாகக் கொண்டு வழிபடுபவர்களாதலால், அவர்களுடைய செல்லப் பிள்ளையை நாம் ஸந்தோஷப்படுத்துவதாலேயே அவர்களிடமிருந்து எல்லா அநுக்ரஹமும் பெற்றுவிடலாமென்பதற்காகச் சொன்னேன். இதனால் அநுக்ரஹ சக்தி அவர்களுக்குத்தான் உண்டு, பிள்ளையாருக்குக் கிடையாது என்றதாக ஆகாது. அப்பாவும் அம்மாவுந்தான் அருள் செய்யவேண்டும் என்றில்லாமல் அவரே எதையும் அருள வல்லவர்தான்.

ஈச்வரனுக்கும் அம்பாளுக்கும் புத்ரர் என்பதற்காக இல்லாமல், அவரே முழுமுதற் கடவுள் என்று உபாஸிக்கிறவர்கள் இம்மை மறுமை நலன்கள் எல்லாவற்றையும் அவரே அநுக்ரஹிப்பாரென்று கொண்டிருக்கிறார்கள். கணபதியே பரதெய்வம் என்று உபாஸிக்கிற இவர்களுக்கு ‘காணபதர்கள்’ அல்லது “காணபத்யர்கள்” என்று பெயர். தங்களுடைய உபாஸனா மூர்த்தியின் உத்கர்ஷம் (உயர்வு) பற்றி அவர்கள் பிற உபாஸகர்களிடம் சொல்லும் ஒன்றை எவரும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். “சிவனையோ, அம்பாளையோ, முருகனையோ, விஷ்ணுவையோ பரதெய்வமாகப் பூஜிக்கிற நீங்களும் உங்கள் ஸ்வாமியைப் பூஜை பண்ண ஆரம்பிக்கும்போது முதலில் ‘சுக்லாம்பரதரம்’ குட்டிக் கொண்டு, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து எங்கள் ஸ்வாமியை வேண்டிக் கொள்ளத்தானே வேண்டியிருக்கிறது? பிள்ளையாரையே பரமாத்மாவாகப் பூஜை பண்ணும் நாங்கள் உங்கள் ஸ்வாமிகளில் எவரையும் இப்படி வேண்டிக் கொள்வதில்லையே!” என்று அவர்கள் சொல்வார்கள்.

விஷ்வக்ஸேனர், தும்பிக்கையாழ்வார் என்ற பெயர்களில் வைஷ்ணவர்கள் முதல் பூஜை செய்வதும் விக்நேச்வரரின் ஒரு அவசரத்துக்குத்தான் (கோலத்துக்குத்தான்) என்று சொல்லலாம்.

தாமே அக்ர (முதல்) பூஜை பெறுகிற உயர்வோடு விளங்குபவர் பிள்ளையார்.

“இவரைப் பற்றிய ச்லோகங்களில் ஈச்வரன், அம்பாள், விஷ்ணு, முருகன் முதலியவர்களைப் பற்றி வருவதால், அந்த ஸ்வாமிகளாலேயே இவருக்குப் பெருமை என்று நினைத்தால் அது ஸரியே இல்லை. அந்த ஸ்வாமிகள் எல்லாருங்கூட ஏதாவது ஒரு ஸந்தர்ப்பத்தில் இவர் தயவை நாடித்தான் கார்ய ஸித்தி அடைந்திருக்கிறார்கள்” என்று கணபதி உபாஸகர்கள் புராணங்களைக் காட்டுவார்கள்.

தெய்வங்களில் உசத்தி தாழ்த்தி இல்லை; இல்லவே இல்லைதான். ஆனாலும் ஒரே பரமாத்மா லீலானந்தத்துக்காகவும், ஜனங்களின் விதவிதமான மனப்போக்குகளில் ஒவ்வொன்றுக்கும் பிடித்த மாதிரியும், பல ரூபங்களில் வருகிறபோது, அவரவருக்கும் தங்கள் மூர்த்தியிடம் பக்தி ஒருமுகப்படுவதற்காக ஒவ்வொரு மூர்த்தியும் மற்றவற்றைச் சில ஸந்தர்ப்பங்களில் ஜயித்ததாகப் புராணங்களில் பார்க்கிறோம். ஒவ்வொரு மூர்த்தியும் இப்படி மற்றவற்றை ஜயித்தது என்பதாலேயே ஒவ்வொன்றும் மற்றவற்றிடம் தோற்றும்தான் இருக்க வேண்டுமென்றாகிறதல்லவா? இப்படி ஒவ்வொரு தெய்வமும் சில ஸந்தர்ப்பத்தில் ஜயித்து, சில ஸந்தர்ப்பத்தில் தோற்றுப் போவதில் ஜயித்தவைகளை மட்டுமே அந்தந்த தெய்வத்தின் பக்தர்களும் எடுத்துக் கொண்டு அதனிடம் தங்கள் பக்தியை வலுவாக்கிக் கொள்கிறார்கள். இதில் பிள்ளையார் தோற்றுப் போனதாக மட்டும் ஒரு கதையும் ப்ரஸித்தமாயிருக்கவில்லை.

ஆனால் மற்ற ஸ்வாமிகள் இவரைப் பூஜித்ததற்கு நிறையக் கதைகள் இருக்கின்றன.

மரியாதைக்குரிய குழந்தை

பெரிய இடத்துப் பிள்ளை என்பதாலேயே, ‘நாம் நமக்கென்று ஒரு யோக்யதையும் ஸம்பாதித்துக்கொள்ள வேண்டியதில்லை. நம்முடைய பெரிய ஸம்பந்தத்தைக் காட்டியே ஊரை ஆட்டி வைத்துக்கொண்டிருக்கலாம்’ என்று இருப்பவர்கள் உண்டு. அநேகம் பெரிய மநுஷ்யரகத்துப் பசங்கள் தறுதலைகளாகவோ, அசட்டுப் பிசட்டென்றோ இருப்பதைப் பார்க்கலாம்.

ஆனால் இந்தப் பெரிய இடங்களுக்கெல்லாம் உச்சியிலுள்ள மஹா பெரிய இடத்துப் பிள்ளை, ‘உச்சிப்பிள்ளையார்’ என்கிறோமே, அவர் எப்படியிருக்கிறார்? தேஹபலமா, புத்திக் கூர்மையா, கார்ய சக்தியா, அன்புள்ளமா எல்லாவற்றிலும் தமக்கு மேல் யாருமில்லை என்று இருக்கிறார். பெரிய இடத்துப் பிள்ளை என்பதால் மாத்திரம் அவருக்குப் பெருமையில்லை. அவருக்காகவே அவருக்குப் பெருமை என்பது “பிள்ளை” க்கு “யார்” போட்டு அவரைப் “பிள்ளையார்” என்று மிகவும் மரியாதையாகச் சொல்வதிலிருந்தே தெரியும்.

பொதுவாகத் தாய், தகப்பன், பாட்டன், பாட்டி, தமையன், தமக்கை ஆகிய பெரியவர்களைத்தான் மரியாதையாகத் தாயார், தகப்பனார், பாட்டனார், பாட்டியார், தமையனார், தமக்கையார் என்றெல்லாம் சொல்வது வழக்கம். பிள்ளைக்கு அப்படி மரியாதை விகுதி சேர்த்துச் சொல்கிற வழக்கம் எங்கேயும் கிடையாது. இதற்கு மாறுதலாக இவர் ஒருவர் விஷயத்தில் மட்டும் “பிள்ளை” என்காமல் “பிள்ளையார்” என்றே சொல்கிறோம்.