ஆலோசித்து அறிய வேண்டியவை

அதனாலே, கொஞ்சம் உங்களையே ஆலோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இப்போது வாழ்க்கையில் உங்களுக்கு நிம்மதியாயிருக்கிறதா? ஏதோ அப்பப்போ கொஞ்சம் ஸந்தோஷம், த்ருப்தி ஏற்பட்டாலும், ஒன்று மாற்றி ஒன்று ஏதோ இழுபறிச் சக்திகளிடம் மாட்டிக் கொண்டு சாந்தியில்லாமல் ச்ரமப்பட்டுக் கொண்டே இருக்கும்படிதானே இருக்கிறது? ‘ஆஹா’ என்று, ‘அக்கடா’ என்று, ‘நமக்குக் கவலையே இல்லை, பயமே வராது, துக்கமே வராது’ என்றெல்லாம் சொல்லும்படியான உறுதிப்படுத்திய சாந்தியாயிருக்கிறதா? இல்லையோல்லியோ?

இல்லை என்றுதான் பதில் சொல்வீர்கள்.

ஸரி, எதனால் இத்தனை சலனம், பறப்பு? இழுபறி, ச்ரமம் எதனால்?

இதை யோசித்தீர்களானால், யாராலும் க்ஷணம்கூடச் சும்மா இருக்காமல் ஏதாவது கார்யம் செய்துகொண்டே இருக்கத் தோன்றுவதாயும், இந்தக் கார்யங்களினால்தான் சாந்தியைக் குலைக்கிற எல்லாம் வந்து சேருவதாயும் தெரியம். கார்யமேயில்லாவிட்டால்தான் சாந்தி என்பது இரண்டும் இரண்டும் நாலு என்கிற மாதிரி எவருக்கும் தெரியும்.

‘எதற்காகக் கார்யம்? என்பது அடுத்த கேள்வி. இதை யோசித்துப் பாருங்கள். பார்த்தால் பலவிதமான ஆசைகளில் எதுவோ ஒன்றின் பூர்த்தியை முன்னிட்டுத்தான் ஒவ்வொரு கார்யமும் என்று புரியும்.

கோபத்தினாலோ மோஹத்தினாலே வேறெந்த உணர்ச்சியினாலோ செய்கிற ஸகல கார்யங்களுங்கூட, அந்த உணர்ச்சிகளுக்கெல்லாம் அடியிலே மூலமாகப் பதுங்கியிருக்கிற ஒரு ஆசையினாலேதான் என்று கொஞ்சம் தீர்க்கமாக ஆலோசித்துப் பார்த்தால் புரிந்துவிடும்.

ஸரி, கார்யத்தை நிறுத்திவிடலாமா என்று பார்த்தீர்களானால், அது லேசில் ஸாத்யமில்லை என்பது தெரியும். ப்ரக்ருதி (நேச்சர்) ஒருத்தனை ஏதாவது கார்யத்தில் ஏவிக்கொண்டேதானிருக்கிறது என்று தெரியும்.

அதனாலேதான், சாஸ்த்ரம் இந்த ஸ்டேஜில் என்ன சொல்கிறென்றால், ‘கார்யம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டுச் செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஸ்வந்த ஆசைக்காகச் செய்வது என்றில்லலாமம் உலக நலனுக்காக கார்யங்களைப் பண்ண ஆரம்பியுங்கள்’ என்கிறது. உலகத்தில் பலதரப்பட்ட கார்யங்கள் நடக்கவேண்டியிருப்பதால், அவற்றை அழகாக ‘ஸ்வதர்ம்ம’ என்று பிரித்து ஒவ்வொருவருக்கும் பாரம்பர்யமாக ஒன்றைக்கொடுத்திருக்கிறது.

அந்தப்படி பண்ண ஆரம்பியுங்கள்.

அப்புறம் தெரியம், ஸொந்த ஆசைக்கு இடம் கொடுக்காமல்தான் இருக்கத்தான் கர்மாநுஷ்டானம் ஸஹாயம் செய்கிறதே தவிர, அந்த ஆசை எழும்பாமல் அழிந்து போவதற்கு நேராகப் போராடி ஜயித்துத் தரவில்லை என்று. ஸ்வதர்ம கார்யங்களானவை ஸ்வய ஆசைகள் படருவதற்கு அவகாசம் தராமல் ‘டைவர்ட்’தான் செய்கின்றனவே தவிர, அவற்றை அப்படியே அழித்துவிடுவதற்குப் பயன்படுவதில்லை என்று தெரியும்.

இந்த விஷயத்திலே ஸஹாயம் செய்யத்தான் சாஸ்த்ரங்க்ள் பக்தியைச் சொல்லியிருப்பது. ஆசை உண்டாவதற்கு உற்பத்தி ஸ்தானம் மனஸ். அதை இந்தரியங்களிலிருந்து ஈச்வரன்கிட்டே திருப்பினால்தான் நேராக ஸ்வய ஆசைகளை நிறுத்தமுடியும். ஆனாலும் முதலில் ஸ்தூல தேஹத்தில்தான் ஜனங்களுக்குத் ‘தான்’ என்ற எண்ணம் அதிகமிருப்பதால், தேஹத்தைக் கொண்டு செய்யும் கார்யத்தைத் தூய்மைப்படுத்தித் தருவதற்கே முதலில் முக்யம் கொடுத்து, அப்புறம் தான் ஸூக்ஷ்மமான மனஸை deal பண்ணுவதற்குப் பிராதான்யம் கொடுத்திருக்கிறது. இப்படி ரெண்டாவது கட்டத்திலே மனஸிலிருந்து ஆசைகளை எல்லாம் நீக்கி ஈச்வர பக்தி பண்ணிவந்தாலே ஸம்ஸார இழுபறி பெருமளவுக்குக் குறைந்து, பரிசுத்தமான ஆனந்தமும் சாந்தியும் ஒரு கணிசமான அளவுக்கு உண்டாகிவிடும்.

ஆனாலும்கூட அதற்கும் மேலே ஆலோசனை பண்ணிப் பார்த்தீர்களானால் இப்போதும் கூடப் பூர்ண அமைதியில்லை. சாச்வதமான சாந்தியில்லை என்று தெரியும். பக்தி பண்ணும் போதும் அதிலேயே எத்தனையோ தாபங்கள் இருப்பது தெரியும். ஈச்வரன் என்று ஒருத்தனைப் பக்தி பண்ணுகிறோமே, அவனை உள்ளுக்குள்ளே ஊறி அநுபவிக்கவில்லை என்று தெரியும். அவனுடைய நிஜமான தன்மை என்ன என்று பக்தியிலே தெரியவில்லை, நாம் எதை அவன் தன்னை என்று நினைத்தாலும் அப்படி மட்டும் வந்துதான் அவன் தன்னைக் காட்டிக் கொள்கிறாறென்று தெரியும். அதோடுகூட, இந்த பதியில் அவனுடைய உள் தன்மை என்னவென்று தெரியாதது போலவே நம்முடைய உள்தன்மை – நிஜ ஸ்வபாவம் – என்னவென்பதும் தெரிந்துவிடவில்லை என்று தெரியும். பக்தி பண்ணும் மனஸோடு நாம் முடிந்து விடவில்லை என்பது தன்னை மறந்து பக்தி ஆவேசத்தில் கிடக்கிற ஸமயங்களில் தெரிந்தாலும், அப்போதும் மனஸுக்கு மேலான அந்த நாம் என்ன என்பது அநுபவ பூர்வமாகத் தெரியவில்லை என்றே இருக்கும்.

இதைப் பற்றி நன்றாக ஆலோசனை பண்ணும்போது, ஆசை போவது மட்டும் ஸம்ஸாரப் போராட்டம் தீர்வதற்குப் போதாது என்பது தெரியும். பக்தி பண்ணும் மனஸுக்கும் குறை, தாபம், கஷ்டம் இருப்பது தெரிவதால் மனஸும் போனால்தான் யுத்தம் நிற்கும்; சாச்வதமான சாந்தி உண்டாக்கும் எனறு தெரியும். ஞான நூல்களை ச்ரத்தையோடு அப்போது பயின்றால், ஏகமான ஆத்மாவைப் பற்றியும், அதுவே ஈச்வரனாகவும் ஜீவனாகவும் ஆகியிருபப்தைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். தற்போது மனஸின் மேல் மட்டத்தில் தெரிந்துகொள்வது போலில்லாமல், அப்போது பரிசுத்தி பெற்றுவிட்ட அந்த மனஸின் உள்ளேயே ஆழமாகப் பதியும்படியாக வேதாந்த ஞான உண்மைகளைத் தெரிந்துகொள்ளலாம்.

இப்படியெல்லாம் புரிந்துகொண்டால்,

வெய்யிலில், வெள்ளத்தில் மாட்டிக்கொண்டால் ஒதுக்கிடம் வேண்டிக் கதவைத் தட்டுவதுபோல, strong -ஆன will – ஓடு way -யைத் தேடி, ஓடி, மோக்ஷ வாசல் கதவைத் தட்டுவதில் தீவிரம் பிறக்கும்.

அது ஏற்படுவதற்காகத்தான் ஆத்ம த்யானம் சிறிது முதலிலிருந்தே செய்யச் சொல்வது.

ஆத்மாவை த்யானிக்கவும் முடியாததுதான். த்யானம் உள்பட எதற்குமே விஷயமாகாமல் தனித்து நிற்பது ஆத்மா. ஆனால், அதை நம் மனஸுக்குக் கொஞ்சம் புரிய வைப்பதுபோல்க் கொஞ்சம் நினைக்க முடிகிறதோல்லியோ? ‘ஒரு பாதிப்பும் இல்லாமல், அலையெழாத மஹா ஸமுத்ரம் போல அகண்டமாகக் கிடக்கும் பரம சாந்தநிலை’ என்கிற மாதிரி வர்ணித்துப் பார்க்கும்போதே, ஸம்ஸாரப் போராட்டத்தின் பாதிப்பு நம்மைத் தொடாமல், நாம் ஆத்ம ஆகாசமாய் ஆனந்தமாயிருப்பது போன்ற ஒர் எண்ணம் ஏற்படுகிறதோல்லியோ? வெறும் பாவனை, ப்ரமை என்று வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்! எதுவானாலும் நமக்கு ஆறுதலைத் தந்து நம்மைச் சற்று சும்மாயிருக்கச் செய்கிற எண்ணமாக இது இருக்கிறவரையில் உசத்திதான். இந்த்ரியத்தாலும் மனஸாலும் கெடுதல் பண்ணிக்கொண்டேயிருக்கும் நம்மைக் கெடுதல் மாத்திரமின்றி நல்லது கூடப் பணணாமல் உட்கார்த்தி வைக்க வசதி செய்துதரும். இப்படிப்பட்ட எண்ணத்தில் சிறிது நேரமாவது தோய்ந்திருப்பதுதான் ஆத்ம த்யானம் என்பது. இப்படி ஏதோ ஒரு பாவனையில் ஆரம்பித்தாலே, பாவனை வலுத்து முதிர்ந்து தீவிரமாகும்போது வாஸ்தவ நிலை தன்னைத்தானே தெரியப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கும்.

ஆக, ஜனங்கள் தாங்கள் ஒரு போராட்டத்திலே மாட்டிக்கொண்டிருக்கிறோம் என்று நன்றாக உணர்ந்து, போரிலே மாட்டிக்கொண்டவர்கள் அமைதி பிறக்காதா என்று எப்படி ஆர்வமாயிருப்பார்களோ அப்படி அமைதியை வேண்டினால், நிச்சயமாக ஆத்ம த்யானம் செய்ய்ம்பொழுது கிடைக்கும். அதிலே நன்றாக மனம் வைத்தபின் வழியும் பிறக்கும்.

மாயா ஸ்வரூபிணியாக இருந்து, தானே இத்தனை நாமாகவும் ஆகிப் போராட்டத்துக்கு ஆளாகி, அதே ஸமயம் அந்தப் போராட்டத்திலிருந்து விலகியிருந்து அதைப் பார்த்து லீலா விநோதம் கொள்கிறவளாயுமுள்ள அம்பாள் தன்னுடைய ஞான ஸ்வரூபத்தைக்கொண்டு, அதற்குள்ளேயே நம் எல்லோரையும் அடக்கிக்கொண்டு, நமக்குப் போர் தீர்ந்த பெரிய அமைதியை அளிப்பதற்கு ப்ரார்த்திப்போம். இதற்கு அவள் ஸங்கல்பிக்க வேண்டும், பெரிய மனஸ் பண்ணவேண்டும். அவளுக்கு Will -ம் Way -ம் ஒன்றுதான். (ஸங்கல்பமும், அதன் நிறைவேற்றத்துக்கான வழியும் ஒன்றுதான்.) அப்படிச் சொன்னால்கூடப் போதாது. அவளுடைய will -ஏ way -யின் முடிவான Goal –ம்கூடத்தான்! (ஸங்கல்பமே மார்க்க முடிவான லக்ஷ்ய ஸித்தியுமாகும்.) ஆனாலும், அவள் தன் ஸங்கல்ப மாத்ரத்தாலேயே எல்லாம் பண்ணாமல், நம்மையும் கருவி மாத்ரமாக்கி, நாமும் ஏதோ ப்ரயாஸைகள், ப்ரயத்னங்கள் செய்வதுபோலக் காட்டிக் காட்டியே பலன் தருவதாக லீலை செய்பவள், ஆனதால், ஆத்மானந்தத்துக்கான ஸாதனை மார்க்கத்தில் நாம் ப்ரவேசிப்பதற்கும், அப்புறம் விடாமல் ப்ரயாணத்தைத் தொடர்வதற்கும் நமக்கெல்லாம் உத்ஸாஹத்தை அருளுமாறு அவளிடம் ப்ரார்த்திக்கிறேன். முடிவிலே, ஞான வாசலைத் திறந்துவிட்டு அவளுடைய ஸத்ய நிலையிலே நாம் இரண்டறக் கரைந்து, எல்லாப் போராட்டமும் தீர்ந்து சாந்தானந்தமாக ஆவதற்கு அவளையே எல்லாரும் ப்ரார்த்தனை செய்துகொள்வோம். அந்த அம்மா நமக்கு ஊட்ட வேண்டிய பால், போட வேண்டிய பிக்ஷை இதுதான்.

ஞான வைராக்ய ஸித்த்யர்த்தம்
பிக்ஷாம் தேஹி ச பார்வதி ||*


* ஆதிசங்கரரின் ‘அன்னபூர்ணா ஸ்தோத்ரம்’.

ஆத்ம சிந்தனை அனைவர்க்கும் அவசியம்

ஞான வாசல் கதவு திறந்து உண்மையைக் காண்பது மநுஷ்ய ப்ராணி ஒன்றுக்குத்தான் உரியது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ப்ராணி வர்க்கங்களில் மநுஷ்யன் ஒருத்தன்தான் தன்னையே பரப்ஹம்மாகத் தெரிந்துகொள்கிற ஞானத்துக்கு முயல முடியுமென்பதால்தான் ‘அரிது அரிது மானுடராய்ப் பிறத்தலரிது’ என்று சொன்னது. இதையேதான் ஆசார்யாளும் ‘விவேக சூடாமணி’யில் ‘ஜந்தூநாம் நரஜந்ம துர்லபம்’ என்றார்.

இதனால், மநுஷ்ய ஜன்மா எடுத்த எல்லாரும் சற்றேனும் ஆத்ம விசாரம் செய்து ஞானத்தை அடைவதற்கு ப்ரயத்னம் பண்ணவேண்டும்.

இதற்கு பொழுது கிடைக்கவில்லை என்று சொல்வது கொஞ்சங்கூட ஸரியில்லை. ‘ரொம்பவும் தாற்காலிகமான ஸந்தோஷங்களை உத்தேசித்தே செய்கின்ற ஸகல கார்யங்களையும் பண்ணப் பொழுது இருக்கிறது. எது சாச்வதமான ஆனந்தமோ, ஸெளக்யமோ அதற்கு ப்ரயத்னம் பண்ணப் பொழுது இல்லை’ என்று சொன்னால் நம்மைப்போல அசடு இல்லை என்றுதான் அர்த்தம்.

மாயை, இயற்கை, nature, மனஸ் என்று தினுஸு தினுஸாக இத்தனையை வைத்து பகவான் லீலை செய்கிறது எதற்காக? இவற்றைக் கொண்டு செய்கிற கார்யங்களைக் கொண்டே இவற்றுக்கு அப்பாற்பட்ட ஸதாநந்தத்துக்கு நாம் வழி தேடிக் கொள்கிறோமோ என்று பரீக்ஷை பார்க்கிறதற்காகத்தான். ஆகையால் கர்மா கழிகிற வரையிலே இந்த லோகத்திலே நாம் கடமைகளை, கர்மாக்களை அநுஷ்டானம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டியதுதான். இதிலே தாம்பத்யம், சாப்பிடுகிறது, பொழுதுபோக்குகளை ரஸிக்கிறது எல்லாங்கூட அடக்கந்தான். வரம்பு மீறாமலிருக்கிறவறை எதுவுமே அந்ததந்த வயஸுக்கட்டம், வாழ்க்கை நிலைகளில் தள்ளுபடியில்லை. எல்லாம் நாம் பக்வமாதவற்குப் படிப்படியாக உதவி செய்கிறவைதான்.

ஆனால் இதுகளோடேயே நின்று விட்டு ஆத்ம சிந்தனைக்குப் பொழுதே இல்லை என்றால் – நாம் எத்தனை பீ.ஏ., எம்.ஏ., படித்திருந்தாலும், டாக்டர் பட்டம் வாங்கியிருந்தாலும் – அசடு என்றுதான் அர்த்தம். ஸம்பாதிப்பது, படிப்பது, குடும்ப வாழ்க்கை நடத்துவது முதலான எல்லாவற்றுக்கும் ‘டயம்’ இருக்கிறது, நிறைந்த நிறைவைத் தரமுடியாத இதற்கெல்லாம் நிறைவைத் தருகிற ஞானத்துக்கு முயற்சி பண்ண ‘டயம்’ இல்லை என்பது, ‘குப்பை செத்தையை எல்லாம் சேர்த்து மூட்டி எரிப்பதற்கு ‘டயம்’ இருந்தது, ஆனால் குளிர் காய ‘டயம்’ இல்லை’ என்கிற மாதிரிதான்! ‘வேலை செய்யப் பொழுதிருந்தது, கூலி வாங்கப் பொழுதில்லை’ என்று சொல்வது போலத்தான் மற்ற ஸகல கார்யத்துக்கும் முடிவு, லக்ஷ்யம் ஆத்மாவில் கொண்டு சேர்ப்பதுதான். அப்படிப்பட்ட ஆத்மாவைப் பற்றி பாவனையாகவாவது த்யானம் செய்வது, அஞ்சு பத்து நிமிஷமாவது இப்படி த்யானம் செய்வது என்று வைத்துக் கொள்ளாவிட்டால் நாம் செய்யும் அத்தனை கார்யமும் தங்களையே முடிவாக்கிக்கொண்டு த்வைதத்தின் அசாந்திகளையே கொடுத்துக்கொண்டிருக்குமேயொழிய ஆத்மாவுக்கு ஏற்றிவிடாது. அந்த முக்கியமான கார்யத்தைக் கொஞ்சம் ‘ட்ரை’ பண்ணிப் பார்ப்பதற்கு ‘டயம்’ இல்லை. இல்லாவிட்டால் மனஸ் பக்வப்பட்டு வரவில்லை என்று சொல்வதெல்லாம் நொண்டி ஸால்ஜாப்புகள்தான். முயற்சி பண்ணி பண்ணித்தான் மனஸைப் பக்வப்படுத்த வேண்டுமே தவிர, பக்வமில்லை என்பதால் முயற்சி பண்ணுவதற்கில்லை என்பது தலைகீழ் வாதம்.

ஸங்கல்ப பலம் இல்லாததால் தான் இப்படி வாதிப்பது நம்மைப் பற்றியே நமக்குத் தன்னம்பிக்கையோ, ஈச்வராநுக்ரஹத்தில் நம்பிக்கையோ இல்லாததால்தான் சாக்குச் சொல்லத் தோன்றுகிறது.

Where there is a will there is a way: மனமிருந்தால் வழியுண்டு. பொய்யான மனஸைப் போக்கிக்கொண்டு மெய்யான ஆத்ம ஸ்வரூபமாவதற்கு முயற்சி பண்ண வேண்டுமென்று மனமிருந்தால் ஞான வாசல் திறக்க நிச்சயம் வழி உண்டு.

Will -ஸங்கல்ப உறுதி – ஏற்படாததற்கு என்ன காரணம்? வழி திறந்து ஞான பூமிக்குப் போகணும் என்பதன் அவச்யம் நமக்குத் தெரியாமலிருப்பதுதான். பெரிய மழையிலே, அல்லது கொளுத்துகிற வெயிலிலே நட்ட நடுத் தெருவிலே மாட்டிக் கொண்டோமானால் எந்த வீட்டிலாவது வாசல் கதவு திறந்திருக்காதா என்று எத்தனை தவிப்போடு தேடுவோம்? எங்கேயாவது உள்ளே போய் ஒதுங்கியாக வேண்டுமென்று அப்போது தீவ்ரமாக எண்ணம், அதாவது ஸங்கல்பம் இருப்பதால், மூடியுள்ள ஏதாவதொரு கதவை இடித்தாவது திறக்கப் பண்ணி வழி ஏற்படுத்திக் கொள்கிறோம். இம்மாதிரி ஆத்மாவுக்குள்ளே போய் ஸ்வஸ்தமாக ஸம்ஸார வெய்யில், அல்லது ஸம்ஸார ப்ரளயம் பாதிக்காமல் இடம் தேடிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணமில்லாததால்தான் விமாசனத்துக்கான ப்ரயாஸை பண்ணாமலே இருக்கிறோம்.

இப்படியிருப்பவர்களுக்கு ஸம்ஸாரத்திலிருக்கிற கஷ்டத்தை, பொய்யை எடுத்துக்காட்டி, விடுதலைக்கான ஆர்வத்தை ஸங்கல்பத்தை ஏற்படுத்தி, அப்புறம் மார்க்கத்தையும் சொல்லிக் கொடுப்பதற்குத்தான் மடாலயங்கள் இருக்கின்றன. உங்களை இவ் விஷயமாகச் சிந்தனையைத் திருப்பச் செய்வதுதான் எங்கள் மாதிரியானவர்களின் கடமை.

மனம் பட்டுப்போக அன்பு தேவை

யோக சாஸ்த்ரம் என்பது எல்லா மன ஓட்டத்தையும் நிறுத்தி விடுவதற்குத்தான். ப்ரஹ்மாநந்தம், ஆத்மாநந்தம் என்பவற்றை இதன் மூலம் அடைவது பற்றி யோக சாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கவில்லை – ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கவில்லை. ‘மனஸின் பிக்கல் பிடுங்கல் இல்லாமல் இருந்தால் போதும் – ஆனாலும் அது ஜடமான தமோ நிலையாக துக்கத்தைப்போல இல்லாமல் புருஷன் (என்ற ஆத்மா) மனஸின் தொடர்பில்லாமல் தனித்திருக்கும் கைவல்ய ஸமாதியாயிருக்கவேண்டும்’ என்று யோக மார்க்கக்காரர்கள் ஒரு தினுஸாக மோக்ஷத்தைச் சொல்கிறார்கள். புத்தருடைய சூன்யம் மாதிரி என்று சொல்வதற்கில்லையானாலும், இவர்களும் அத்வைதத்தின் ஸச்சிதாநந்தமான பூர்ண ஸ்திதியைச் சொல்லாமல், மனஸ் பட்டுப்போன பாழிலேயே இருப்பதான ஒரு உயிர்த் தத்வத்தைச் சொல்பவர்கள்தான்.

ஆனதால் எல்லா உணர்ச்சியையும் ஒரேடியாக அடக்குவதற்கே முதலிலிருந்து ப்ரயாஸைப்பட்டு, அதன் முடிவில் மனஸ் வெறிச்சென்ற முடிவதோடு நின்றால், அப்படிப்பட்ட நிலைகூட இவர்களுக்கு (யோக மார்க்கத்துகாரர்களுக்கு) ஸம்மதமில்லாமலிருக்க முடியாது. ஆனாலும் யோக ஸூத்ரகாரரான) பதஞ்ஜலி இதுபோக நேராக எல்லா உணர்ச்சியையும் அடக்குவது ஸாத்யமே இல்லை என்று நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறார். அதனால்தான் “ப்ரதிபக்ஷ பாவநா” என்று ஒன்றைச் சொல்லி அன்பு என்கிற உணர்ச்சியை வளர்த்துக்கொள்ளச் சொல்கிறார்.

’இப்படியிப்படிப் பண்ணாதே’ என்பதாக மனஸின் ஓட்டத்தை அடக்குவதற்காகப் பல யம – நியமங்களை யோக சாஸ்த்ரத்தில் அவர் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னாலும் அப்படி முயற்சி பண்ணினாலும் அதற்கு நேர்மாறாகக் கெட்ட சக்திகள், கெட்ட உணர்ச்சிகள் அவர்களை இழுத்துக் கொண்டேயிருப்பதையும் அவர் தெரிந்து கொண்டிருந்தார்.

அதனால்தான் முதலில் கெட்ட உணர்ச்சியைப் போக்கிக் கொள்வதற்காக நல்ல உணர்ச்சிகளை வளர்த்துக்கொண்டு, அப்புறமே உணர்ச்சியல்லாத மனோ நாசத்தை அடைய வேண்டுமென்றே அவரும் வைக்கவேண்டியதாயிற்று. உணர்ச்சிகளிலேயே இருண்டு விதமானவை இருக்கின்றனவென்றும், ஒருவிதமானது மேலும் மேலும் இந்த்ரிய ஸுகத்தில் இழுத்துவிடுவதாயும், இன்னொன்று பாரமார்த்திகத்துக்குத் தூக்கி விடுவதாயும் உள்ளது என்றும் அவர் சொல்கிறார். இந்தக் கீழான உணர்ச்சிகளை க்லிஷ்ட வ்ருத்தி என்றும் சொல்கிறார். க்லிஷ்டம் என்றால் க்லேசத்தை உண்டாக்குவது. அக்லிஷ்டம் க்லேசமளிக்காமல் நல்லதைச் செய்வது. க்லிஷ்டமானவையாக எழும்பும் காமம், க்ரோதம் முதலான வ்ருத்திகளை அப்படியே அடக்கி நசிப்பிக்க முடியாது என்றும், அக்லிஷ்டமான அன்பு, ஈகை, தூய்மை முதலான வ்ருத்திகளாலேயே அவற்றைப் போகப் பண்ண முடியுமென்றும் சொல்கிறார். அப்புறம்தான் இந்த வ்ருத்திகளையும்நிறுத்தி ஸமாதி நிலை அடைவது.

அக்லிஷ்ட வ்ருத்திகள் க்லிஷ்டமானவற்றைப் போல ஜீவனை ஒரே பிடியாகப் பிடித்துக் கொள்வதில்லை என்றும், இவை நன்றாக முதிர்ச்சி பெற்றபின் கைவல்ய ஸமாதி நிலைக்கு இடம் கொடுத்துவிட்டுத் தாங்களும் போய்விடும் என்றும் சொல்கிறார். இன்னின்ன கெட்ட (க்லிஷ்ட) வ்ருத்தி ஏற்பட்டால் அதை அதற்கு ப்ரதிபக்ஷமான – அதாவது எதிர்வெட்டான – இன்னின்ன நல்ல (அக்லிஷட) வ்ருத்தியால் ‘பாலன்ஸ்’ பண்ணி, சமனம் பண்ணி அடக்க வேண்டுமென்று சொல்கிறார்.

இதில் அன்பையே முக்யமாக வைத்து அதில் நாலு பிரிவுகளைச் சொல்கிறார்: மைத்ரீ, கருணா, முதிதா, உபேக்ஷா என்கிற நான்கு. ஸந்தோஷமாக இருந்து கொண்டிருப்பவர்களிடம் காட்டும் ஸ்நேஹித பாவம் – மைத்ரீ. துன்பப்படுபவர்களிடம் காட்டுவது கருணா (கருணை). உத்தம குணமுள்ளவர்களிடம் மகிழ்ச்சி பொங்கிச் செய்யும் அன்பு – முதிதா. அதம குணமுள்ளவர்களிடம், விசேஷமாக அன்பு வைக்க முடியாவிட்டாலும் கொஞ்சம்கூட த்வேஷமேயில்லாமல், அவர்களிடம் பட்டுக்கொள்ளாமல் ஒதுங்கியிருப்பது உபேக்ஷா (உபேக்ஷை).

தர்மமும் அன்பும்

தர்மாதர்மம் கடந்தவர்களானாலும் ஞானிகள் தர்மமாகவேதான் நடித்திருக்கிறார்களே தவிர அதர்மத்தில் போனதாக நாம் பார்ப்பதில்லை. அப்படியே நல்லது. கெட்டது இரண்டையும் அவர்கள் தங்களளவில் தாண்டியிருந்தலும் லோகத்தின் த்ருஷ்டியில், ‘இவர்களைவிட நல்லவர்களில்லை’ என்னும்படியாகத்தான் பரம கருணையோடு, அநுதாபத்தோடு, தாக்ஷிண்யத்தோடு இருக்கிறார்கள். “ஸர்வ பூத ஹிதே ரதா:” – எல்லா ஜீவ ஜந்துக்களின் நலனிலும் களிப்பவர்கள் என்றும், “ஸுஹ்ருதம் ஸர்வபூதாநாம் ஜ்ஞாத்வா மாம்” – ஜீவ குலம் முழுதிடமும் நட்பு கொண்ட தன்னை அறிந்தவர்கள் என்றம் பகவான் அவர்களைச் சொல்கிறார்1.

நல்லதிலெல்லலாம் பெரிய நல்லதான அன்பிலே ஞானிகளை மிஞ்சி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. “அன்பு த்வைதந்தான் — இன்னொன்றை வைத்துச் செய்வதுதான். இந்த லோகமோ மாயை. இதில் தர்மமிருந்தாலென்ன, அதர்மமிருந்தாலென்ன? இதிலிருக்கிற ஜனங்கள் தர்மம் பண்ணினாலென்ன? பண்ணாமல் கெட்டுப்போனாலென்ன? அவர்களிடம் நமக்கென்ன அன்பு, பரிதாபம் வேண்டிக்கிடக்கிறது? அவர்களுக்காக நாம் என்ன உபகாரம் செய்ய இருக்கிறது? உபகாரமும் மாயைதான்” என்று நினைத்து ஆசார்யாள் மாதிரியானவர்கள் உலக உதாரணத்துக்காக எதுவும் பண்ணாமல் ஒதுங்கியிருந்து தாங்கள் பாட்டில் ஆத்மாராமர்களாக வாழ்க்கையைக் கழித்துவிட்டுப் போயிருக்கலாமோல்லியோ? அப்படியானால் அவர்கள் ஜனங்களுக்காக உடம்பைச் சக்கையாகப் பிழிந்து எத்தனை அலைச்சல் அலைந்து, எத்தனை உபதேசங்கள் வாயால் செய்தும் கையால் எழுதிவைத்தும் தொண்டு செய்திருக்கிறார்கள்?

இதிலேயே இன்னொரு புரளி அடிபட்டுப்போகிறது. அத்வைதத்தால் லோகத்தில் தர்மத்திடம் பிடிப்பு போய்விடும், பாபபயம் போய்விடும் என்பதுபோல, அத்வைதத்தின் மாயா – டாக்ட்ரினால் (கொள்கையால்) தான் இந்தியர்கள் கார்ய சக்தியில்லாத சோப்ளாங்கிகளாகி விட்டார்களென்று ஒரு புரளி உண்டு. கார்ய லோகத்தில் ஆசார்யாளைப் போன்றவர்களின் ஸாதனை இது எத்தனை தப்பான வாதமென்று நிதர்சனமாக்குகிறது.2

தர்மத்திலும் அன்பிலும் நன்றாக ஊறியே தர்மாதர்மங்களுக்கு அதீதமான, ப்ரேம – த்வேஷங்களுக்கு அதீதமான ஆத்ம ஸ்தானத்துக்குப் போக முடியும்; அப்படியே போக வேண்டுமென்பதுதான் ஸாராம்சம்.

ஒரு சக்கரத்துக்கு இரும்பு பட்டை அடிப்பதென்றால் மாற்றி மாற்றிக் காய்ச்சியும் குளிர்ந்த ஜலத்தைக் கொட்டியும், மாற்றி மாற்றி விரிவடையவும் சுருங்கவும் பண்ணுவது வழக்கம். அப்போதுதான் அது சக்கரத்தை நன்றாகக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும். இல்லாவிட்டால் ‘லொடலொட’ என்று விட்டுப் போய்விடும். காய்ச்சி விரிவாக்கணும், ஜலத்தைக்கொட்டி சுருங்கவும் பண்ணணும். இந்த மாதிரிதான் ஒரு ஜீவன் ஆத்ம ஸ்தானத்தைப் போய்க் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டுமென்றால் தர்மத்தின் பல கட்டப்பாடுகளால் அதன் கீழான குணம் குறுகும்படியாகவும் பண்ணணும்; அன்பின் விசாலத்திலே அதன் மேலான குணம் விரியும்படியும் பண்ணவேண்டும்.

கார்யமே இல்லாமல் ஆகிறதற்காகவே எத்தனையோ வகை வகையான கர்மாக்களை, சடங்குகளை, பொதுத் தொண்டுகளை நிறையப் பண்ணவேண்டும். தூக்கம் வரவில்லை என்று சொல்கிறவர்களிடம் என்ன சொல்கிறோம்? “நன்றாக ஓடியாடி, உழைத்து வேலை பண்ணு. தானே அடிச்சுப் போட்ட மாதிரி தூக்கம் வரும்” என்கிறோமல்லவா? இது சரிர ‘ரெஸ்ட்’டுக்கு மட்டும் சொன்னது. ஆத்மாவில் ‘ரெஸ்ட்’ ஆவதற்கும் கர்மா இப்படியே உபயோகமாகிறது.

இதே விதத்தில்தான் வெளி உணர்ச்சிகள் ஒன்றுமே இல்லாமல் ஆவதற்காகவே ப்ரேமையை, அதன் முற்றிய ஸ்தானமாக பக்தி என்ற உணர்ச்சியை நன்றாக வளர்த்துக் கொண்ட அதில் ஆசேவம், பரவசம் என்கிற ஸ்திதிக்குப் போகவேண்டும். இப்படிப் பண்ணினால்தான் ‘ஏகப் பேருணர்வு என்கிறார்களே, அதில் கொண்டுவிடும். இப்படியில்லாமல் முதலிலேயே எல்லா உணர்ச்சியையும் போக்கிக் கொள்வது என்றால் முடியாது. அப்படி முடிந்தாலும் அது மரத்துப்போன மாதிரி உயிரில்லாத ஒரு வறட்டு நிலையில் தான் சேர்க்குமே தவிர ஏகப் பேருணர்விலே அல்ல. பலவிதமான உணர்ச்சிகள் எழும்பிக் கொண்டேயிருக்கும்போது எல்லாவற்றையும் அடியோடு இல்லாமல் பண்ணிக் கொள்வது ஸாத்யமா? இல்லாவிட்டால் அவற்றிலேயே ரொம்பவும் உத்தமமாக இருக்கப்பட்ட ப்ரேமை என்ற ஒன்றை மட்டும் பெரிசாக வளர்த்துக்கொண்டு, அதிலே மற்ற உணர்ச்சிகள் அமுங்கிப் போகும்படி செய்வது ஸாத்யமா?

பலபேர் சேர்ந்து சளசளவென்று பேசிக்கொண்டிருக்கும்போது எல்லாரையும் சைலன்டாக இருக்கச் சொன்னால் அவர்களால் இருக்கமுடிகிறதா? முடிவதில்லை. ஒரு நிமிஷம், இரண்டு நிமிஷத்துக்கப்புறம் ஒருத்தர் இருண்டு பேர் ரஹஸ்யம் பேசிக்கொள்ள ஆரம்பித்து, அப்புறம் எல்லோருமே அப்படிப் பண்ணி, ஒரு பத்து நிமிஷம் போனால், ரஹஸ்யம் என்பதும் நல்ல சத்தமாகவே ஆகிவிடுகிறது. மனஸின் எல்லா உணர்ச்சிகளையும் ஒரே வீச்சில் அடக்கப் பார்ப்பதும் இப்படித்தான் முடியும். அதுவே, “ஸைலன்ஸ் ப்ளீஸ்” என்று திரும்பத் திரும்பச் சத்தம் போட்டுக்கொண்டிருக்காமல் — (சிரித்தவாறு) “ஸைலன்ஸ் ஸைலன்ஸ்” என்றே சத்தம் போட்டுக் கொண்டிருக்காமல் — “ராம ராமா”, “சிவ சிவா” என்று ஏதோ ஒரு நாமாவை யாராவது ஒருத்தர் சொல்ல ஆரம்பித்தால், அதிலேயும் ராகம் தாளம் எல்லாம் சேர்த்து ரஸம் அதிகமாகும்படி பஜனையாக ஆரம்பித்தால் எல்லாரும் அதையே திருப்பிச் சொல்லி அத்தனை சத்தமும் இந்த நாம சப்தத்திலேயே அடங்கிப் போய்விடுகிறது. அரைமணி, ஒரு மணி கூட, ராத்ரியெல்லாம்கூடப் பல தினுஸாகப் பலுக்கிப் பலுக்கி, ராக தாளங்களை மாற்றி, நாமங்களையும் மாற்றி பஜனை செய்தால் எல்லாரும் மற்றப் பேச்சுப் பேசாமல் அதில் கலந்துகொள்ள முடிகிறது. இது மௌனம் இல்லைதான். ஆனால் அதற்கு ‘நெக்ஸ்ட் பெஸ்ட் (அதற்கடுத்தபடியான உத்தம நிலை) என்று சொல்லலாம். இப்படி நாமாவிலே தோய்ந்து சொக்கிப் போனால், தானே மௌனத்தில் கொண்டு விட்டுவிடும். வெறும் பேச்சு அப்படிப் பண்ணுமா?

அப்படித்தான், அநேக உணர்ச்சிகளில் அன்பு என்பது பக்தியின் பல ரஸ பேதங்களோடு வெளிப்படுகிறபோது, பல விதத்தில் வெளிப்படும்போது அதில்தான் மற்ற உணர்ச்சிகள் அமுங்கி, அப்புறம் இந்த த்வைத அன்பும் அந்த பல பாவங்களில் ஏதோ ஒன்றிலேயே நின்று, பிறகு அத்தைவ அமைதியிலே சேர்க்க முடியுமே தவிர, அப்படியே நேரே மனஸின் எல்லா உணர்ச்சியையும் அடைத்து விடுவதென்றால் முடியாது.


1 கீதை 5.25 : 5.29

2 இவ்விஷயமாக இப்பகுதியில் “குருகுலம்; கடிகாஸ்தானம்” என்ற உரையில் “அத்வைதமும் அரசாங்கமும்” எனும் பிரிவு பார்க்க.

ஞானியும் வினைப் பயனும்

ஞானி அதர்மம் – தர்மம் இரண்டுக்கும் மேலே போனவன். பாபம், கெட்டது எல்லாமே அதர்மம்தான். தர்மம் என்பதில் புண்யம், நல்லது என்கிற எல்லாமுமே அடங்கிவிடும். இவை எல்லாவற்றுக்கும் மேலே போனவன் ஞானி. ஆத்மாவாகவே இருந்து கொண்டிருக்கும் நிலைக்குக் கீழ்ப்பட்ட த்வைதத்திலேதான் இருட்டு – வெளிச்சம், இன்பம் – துன்பம் என்று த்வந்த்வங்கள் இருக்கிறாற்போலவே நல்லது – கெட்டது, புண்யம் – பாபம், தர்மம் – அதர்மம் என்ற இரட்டைகளும் இருக்கின்றன. மாயா ஸ்ருஷ்டியில் வருகிறவையேயான இவை எதுவுமே ஆத்மாவை பாதிக்காது; அதாவது ஆத்மாவை அறிந்த ஞானியை பாதிக்காது.

இப்படிச் சொன்னதால் அவன் புத்தி பூர்வமாக உத்தேசித்து அதர்மமான பாபம் பண்ணி ஒருத்தருக்கு ஒரு கெடுதலை விளைவிக்கலாமென்றோ, அப்படி அவன் விளைவிப்பானென்றோ அர்த்தம் இல்லை. ஞானிக்கு புத்தி, பூர்வம் உத்தேசம் என்பதெல்லாம் ஏது? “புத்தே:பரதஸ்து ஸ:” என்று புத்திக்கும் மேலாக உள்ள ஆத்மாவில் தன்னை ஸ்தம்பம் மாதிரி நிலைநாட்டிக் கொண்டவன் அவனென்று பகவான் சொல்லியிருக்கிறாரே! ஆகையால் அவன் நம்மைப் போல் புத்தி பூர்வமாக ஏதொன்றும் உத்தேசித்துச் செய்யவே மாட்டான். ஸங்கல்பம் இருக்கும்போதுதான் உத்தேசம் எழும்பும். மனஸ் அற்றுப்போன ஞானி ஸங்கல்ப – விகல்ப ரஹிதனல்லவா? ‘நிர்விகல்பம்’ என்பதே அவன் இருக்கும் நிலை.

பழைய கர்மாவில் இந்த ஜன்ம அநுபோகத்துக்கு என்று ஒதுக்கப்பட்டதாக ப்ராரப்தம் என்று இருப்பதில் இன்னம் அநுபவிக்க வேண்டியுள்ள பாக்கியைத் தீர்க்கவே அவனுக்கு சரீரம் இருக்கிறது. ‘ஸஞ்சிதம்’ என்பதாக மூட்டை கட்டிய ஜன்மாந்தர கர்மாக்களிலே இனிமேலே ஜன்மங்களைக் கொடுக்கக் கூடியதாயுள்ள எதையும்விட்டு வைக்காமல் அதை ஞானாக்னியால் எரித்துவிட்டவன் அவன். இந்த ஜன்மத்திலே பண்ணின கர்மா ‘ஆகாமி’ என்ற பெயரில் ஒன்றுசேர்ந்து மறுபடி ஜன்மம் தராதபடியும் அவன் ஞானத் தீயிலே பஸ்மம் பண்ணிவிட்டவன். ஆனாலும் இந்த ஜன்மாவுக்கென்று ஏற்பட்டு, பலன் கொடுக்கத் தொடங்கிவிட்ட ப்ராரப்தத்தை மட்டும் அவனால் எரிக்க முடியாது. வில்லிலிருந்து விடப்பட்டுவிட்ட அம்பு மாதிரி அது. அதை நிறுத்த முடியாது. வில்லில் பூட்டி எய்யாமல் ஏற்கனெவே அம்பறாத்தூணியில் இருந்துகொண்டிருக்கிற அம்புகளை அப்படியே தோளிலிருந்த எடுத்துப்போட்டு விடலாம். புதிசாக ‘ஆர்டர்’ கொடுத்த அம்புகளை வாங்கிக்கொள்ளாமல் இருக்கலாம். இப்படிதான் ஸஞ்சித, ஆகாமிகளை ஞானி போக்கிக்கொள்வது. ஆனால், நாணை இழுத்துப் ப்ரேயாகம் பண்ணிவிட்ட அம்பை எப்படி நிறுத்துவது? அப்படித்தான், பலன் தர ஆரம்பித்துவிட்ட ப்ராரப்தத்தை நிறுத்த முடியாதாதலால் அதை அநுபவிப்பதற்காகவே இன்னமும் அவனுக்கு சரீரம் இருக்கிறது. ஏற்கெனவே புத்தி பூர்வமாக ஸங்கல்பித்துச் செய்ததன் விளைவுகள் மட்டும் இபபோது நேருமே தவிர, புதிதாக அவன் எதையும் நினைத்து, உத்தேசித்துப் பண்ணுவதில்லை.

ப்ராரப்த விளைவுகளும்கூட நம் பார்வையில் ஏற்படுவதாகத் தெரியுமே தவிர அவன் அதனால் பாதிக்கப்படமாட்டான். உதாரணமாக, பூர்வ ஜன்ம கர்மாவுக்காக அவனுக்கும் ஏதாவது கொடூரமான ரோகம் உண்டாகக் கூடும். அல்லது அவன் வெறும் ‘ஹம்பக்’ என்று ஊரில் கதை கட்டிவிட்டு அவதூறு ஏற்படலாம். ஆனாலும் இந்த ரோகத்தையோ, அவதூற்றையோ அவன் கொஞ்சங்கூடப்பொருட்படுத்தமாட்டான். ‘படுத்தமாட்டான்’ என்று ‘டெலிபிரேட்’டாக அவன் செய்வதுபோலச் சொல்வது கூட ஸரியில்லை. வ்யாதி, அபவாதம் முதலானவை ஒரு பொருளாக அவனுக்கு முதலுக்கே தெரியாது.

வ்யாதி, அபவாதம் ஆகியவற்றுக்குப் பதில் பூர்வ ஸுக்ருதம் காரணமாக ஒரு ஞானிக்கு ஸான்டோ மாதிரியான ஆரோக்யம், ஒரே கீர்த்தி, சக்ரவர்த்திக்குச் செய்கிறது போல சிஷ்யர்கள் ஸிம்ஹாஸனம் போட்டு பீதாம்பரம் போர்த்தி உட்கார்த்தி வைப்பது என்றும், ஆனால் இவையும் அவனைப் பொறுத்தமட்டில் பொருளாகத் தெரியாது.

ஞானி எதுவுமே ஸங்கல்பித்து ‘டெலிபிரேட்’டாகச் செய்வதில்லை என்று சொல்லவந்தேன். ப்ராரப்த வசாத் என்ன நடக்கணுமோ அது நடந்துவிட்டுப் போகட்டும் என்று உடம்பை ஒப்புவித்துவிட்டு, உள்ளே ஆத்மாவிலேயே ரமித்துக் கொண்டிருப்பவன் அவன்.

ஞானியின் ப்ராரப்தம் பற்றி வித்யாஸமான இன்னொரு அபிப்ராயமும் உண்டு.

‘ஞாநாக்நி: ஸர்வ கர்மாணி பஸ்மஸாத் குருதே’ என்று பகவான்1 சொல்கிறபடி ஞானத் தீ ஸர்வ கர்மங்களையும் பஸ்மமாக்கிவிடும் என்பதில் ப்ராரப்த கர்மமும்தான் அடக்கம்; ஞானோதயத்தில் பரிபூர்ண மநோ நாச, கர்ம நாசம்தானேயொழிய, ப்ராரப்தம் என்று ஒன்றை மட்டும் விட்டு வைத்திருப்பதற்கில்லை என்று அபிப்ராயப்படுகிறவர்கள் உண்டு. ‘தீபத்தை ஏற்றி வைத்தால் இருட்டு ஓடிப் போய்விடுகிறாற்போல ஞானோதயத்தின் ப்ரகாசத்தில் மாயையின் இருட்டு ஓடியே போய்விடுகிறது என்பதில் ஸந்தேஹமில்லை. அந்த மாயையின் ஒரு அங்கம், அல்லது ஸ்ருஷ்டிதானே கர்மாவும் கர்ம பலனும்? இப்படியிருக்கும்போது, ‘மாயையே போகிறது, ஆனால், கர்மாவிலே மட்டும் ப்ராரப்தம், ஸஞ்சிதம், ஆகாமி என்று இருக்கிற மூன்று தினுஸகளில் இரண்டு மாத்திரம்போய், இன்னொன்று இருக்கிறது’ என்றால் அர்த்தமாகவில்லையே!’ என்று இவர்கள் கேட்கிறார்கள்.

‘போட்ட பாணத்தைக்கூட அது லக்ஷ்யத்தை அடிக்காமல் மந்த்ரசக்தியால் திரும்ப வாங்கிக்கொள்ள முடிகிறதே! மந்த்ர சக்திக்கெல்லாம் மேற்பட்ட ஆத்ம ஞானத்தால் ப்ராரப்த பாணத்தைத் திரும்ப வாங்கிக் கொள்ள முடியாதா?’ என்று கேட்கலாம்.

ஆசார்யாள் கீதா பாஷ்யத்திலேயே “ஸர்வ கர்மங்கள்” என்று சொல்லியிருப்பது பலன் கொடுக்க ஆரம்பித்துவிட்டதான ப்ராரப்தம் தவிர ஏனைய ஸர்வ கர்மங்களையும் குறிப்பதே என்று பாஷ்யம் செய்திருக்கிறார். ஆனால் அவரே ‘விவேக சூடாமணி’யில் பத்துப் பதினைந்து ச்லோகங்களில்2 இந்த விஷயத்தை விசாரித்து விமர்சிக்கும்போது வேறு விதமாக முடிவு சொல்கிறார். அங்கே, கொஞ்சமாவது தேஹத்திலே ஆத்ம புத்தி ஒட்டிக்கொண்டிருக்கிற வரையில் தான்’ ப்ராரப்தம் உண்டு என்றும், அடியோடு தேஹாத்ம புத்தி நசித்துப்போனால் அப்புறம் ப்ராரப்தமும் இல்லை என்றும் தீர்ப்புக் கொடுத்திருக்கிறார். ‘அப்படிப்பட்ட ஞானிக்கு ஜன்மா, கர்மா எல்லாமே ஸ்வப்னமாகிவிடுகிறது. அவன் ஞானத்திலே விழிப்புப் பெற்றவன். இப்படிப்பட்டவனுக்கு ப்ராரப்தம் உண்டு என்பது, ஸ்வப்னத்தில் ஒருத்தன் ஸம்பாதித்ததில் ஒரு பங்கு மாத்திரம் அவன் முழித்துக் கொண்ட பிற்பாடு அவனுக்குச் சேர்கிறது என்கிற மாதிரிதான் என்று பரிஹாஸமாகக் காட்டியிருக்கிறார். ‘ஞானி எப்படி த்வைத ப்ரபஞ்சத்தில் இருக்கமுடியும் என்று புரியாத அஞ்ஞானிகளுக்கு ஏதாவது ஸமாதானம் காட்டவேண்டுமென்றே அவனுக்கும் ப்ராரப்தமுண்டு என்று சொல்வது’ என்று சொல்லி முடிக்கிறார்.

எல்லா மார்க்கக்காரர்களும் படிக்கும் கீதையில் ஸராசரி மநுஷ்யனின் லெவலில் த்ருப்தியாக ஏதேனும் ஸமாதானம் சொல்ல வேண்டுமென்பதால் ஞானி விஷயத்தில் ப்ராரப்தத்தை ஒப்புக்கொண்டாரென்றும் ஞானத்திலே விசேஷப் பற்றுள்ளவர்களுக்கேயான ‘விவேக சூடாமணி’யில் உள்ளதை உள்ளபடிச் சொன்னாரென்றும் வைத்துக்கொள்ளலாம். அப்படி பற்றுள்ளவர்கள் அவர்களாகவே ஞான விசாரத்தால், ‘ஞானிக்கு ஏன் சரீர யாத்ரை இருக்கவேண்டும்? அது ப்ராரப்தமில்லை என்றால் வேறு என்ன காரணத்துக்காக?’ என்று தெரிந்து கொள்ளட்டுமென்று விட்டுவிட்டாரென்று சொல்லலாம்.

ஆனால், நான் இப்போது எல்லா ஜனங்களுக்கும் இதைச் சொல்லிவிட்டேனே உங்களையெல்லாம் ‘நீங்களே ஞானியாகித் தெரிந்து கொள்ளுங்கள்’ என்று சொன்னால் தப்பாகிவிடுமே! ‘நிறையக் கர்மா, பக்தி பண்ணின அப்புறமே ஞான விசாரத்துக்குப் போங்கள்’ என்றல்லவா பல்லவி பாடிக்கொண்டிருக்கிறேன்?

ஸரி, உங்களுக்கு இன்னொரு விதத்தில் ஸமாதானம் சொல்கிறேன் — ஞானிக்கும் ஞானம் வந்தபின் (அதாவது அத்வைத ஸித்தி ஏற்பட்டுவிட்டபின்) ஏன் சரீரம் இருந்து கொண்டு இந்த லோகத்தில் — நம் பார்வையிலாவது — வாழ்க்கை என்று ஒன்று நடக்க வேண்டுமன்பதற்கு ஒரு விதமான ஸமாதானம் சொல்லிப் பார்ககிறேன்.

ஞானம் வந்துவிட்டால் அப்புறம் லோகத்தில் என்ன கஷ்ட – ஸுகம், லாப – நஷ்டம் வந்தாலும் அதொன்றுமே கொஞ்சங்கூட ஒட்டாமல் ஆத்மானந்தத்தில் இருக்கலாமென்பதுதானே சாஸ்த்ரம்? இது நிஜந்தானா என்று தெரியவேண்டுமானால் அப்போது ஞானமடைந்தவன் இந்த லோகத்தில் இருந்துகொண்டு இப்படிக் காட்டினால்தானே நிரூபணமாகும்? அதற்காகத்தான் ஞானியையும் ஈச்வரன் லோகத்தில் இருக்க வைத்திருக்கிறான் என்கலாம். நம்மைத் தலைதெறிக்கப்பண்ணும் எத்தனை புகழ் வந்தாலும், நம்மைத் தலை தூக்க வொட்டாமல் பண்ணும் எத்தனை இகழ் வந்தாலும், நாம் தோளைத் தட்டிக் காட்டும்படியான எத்தனை ஆரோக்யமிருந்தாலும், அல்லது நாம் பயந்து இடிந்துபோய் விழும்படியான எத்தனையோ கோரமான வ்யாதி வந்தாலும் இன்னும் பல தினுஸான இன்ப- துன்பங்களில் எது நேர்ந்தாலும் எல்லாவற்றையும் ஸமமாக, சாந்தியுடன் நிச்சலனமாக ஏற்றுக்கொள்வதே ஆத்ம நிலை என்பது ‘ப்ரூவ்’ ஆக வேண்டுமானால் அதற்கு ‘ப்ரூஃப்’ ஆக ஞானிகள் லோகத்தில் இருந்து காட்டினால்தானே முடியும்?

‘அத்வைத மோக்ஷம் இஹத்திலேயே பெறக்கூடியது; அதற்கு இஹ பர வித்யாஸமில்லை’ என்றபின், அதை நம் பார்வையில் இஹமென்று தெரிகிற லோகத்திலேயே இருந்துகொண்டு ஒரு ஞானி அநுபவித்துக் காட்டினால்தானே ஸரியாயிருக்கும்? ஞானம் வந்தவுடன் ஒருவனுடைய சரீரம் அற்றுப்போய் விட்டதென்றால், இஹத்திலே ஞானத்தோடு இருக்கமுடியாது – அதாவது ஞானத்துக்கு இஹம் என்கிற ஒரு வித்யாஸம் தெரிகிறது – என்றல்லவா ஆகிவிடும்?

இன்னொரு காரணமும் சொல்லலாம். ஜனங்களுக்கெல்லாம் நல்லது செய்வதற்காகவே, அவர்களுக்கு உத்தமமான வாழ்க்கைப் பண்புகளை உதாரண புருஷர்களாக வாழ்ந்து காட்டுவதற்காகவே ஈச்வரன்தான் ஞானிகளை லோகத்திலே கருவி மாத்ரமாக வைத்து, அவர்கள் மூலம் தன்னுடைய இந்த ஸங்கல்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறானென்று சொல்லலாம்.

‘வஸந்தகாலம் எப்படி ஒரு ஸொந்த உத்தேசமுமில்லாமல் லோகத்தில் பசுமையையும் செழிப்பையும் ஏற்படுத்திக் கொண்டு போகிறதோ அப்படி ஞானியும் லோகத்தில் ஹிதத்தைத் தன் உத்தேசமில்லாமலே ஏற்படுத்திக்கொண்டு போகிறான், தான் ஸம்ஸாரத்தை தாண்டினதோடு, பிறத்தியாரையும் ஒரு ஸ்வயநல காரணமும் இல்லாமல் தாண்டுவிக்கிறான்’ என்று ஆசார்யர் சொல்லியிருக்கிறார்3. இப்படிப் பிறரை உயர்த்துவதற்காக ஒரு ஞானி இருப்பது அவனுடைய உத்தேசத்தினால் இல்லை. ஏனென்றால், அவனுக்கு எந்தவிதமான உத்தேசமும் இல்லை. பின்னே இதுமாதிரி எப்படி நடக்கிறதென்றால், அவன் அப்படியிருக்க வேண்டுமென்று ஈச்வரன் உத்தேசம் பண்ணுவதால்தான்!

ஸம்ஸாரத்தைக் தாண்டுவதில் முதல் அங்கமான தர்ம வாழ்க்கைக்கு ஐடியலாகக்கூட ஒரு ஞானியை ஈச்ரவன் இருக்கப் பண்ணுவதுண்டு. ஜனகர் அப்படித்தானிருந்தார். ஜனங்களுக்குப் புரிபடுவதான தர்மங்களையே ஞானியும் செய்து காட்டுகிறானென்று பகவானும் சொல்லியிருப்பதைப் பார்த்தோம்.

ஆகக்கூடி, ஞானிக்கு ஸ்வய உத்தேசம், உத்தேசிக்கும் மனஸ் எதுவும் இல்லாதபோது, அவனாக தர்மம் அதர்மம் என்று நினைத்து எதையும் பண்ணுவதுமில்லை; விடுவதுமில்லை. அவனை ஈச்வரனே கருவி மாத்ரமாகக் கார்யம் பண்ணவைக்கும்போது லோக ஹிதத்துக்காக, லோகத்தின் ஞான உயர்வுக்காக, அல்லது (லெளகிக) தர்மத்துக்கும்கூட ஒரு ஐடியலாகத்தான் இருக்கச் செய்கிறான். ஆகையால் எப்படிப் பார்த்தாலும் ஒரு ஞானி அதர்மத்தை, கெட்டதை பாபத்தைப் பண்ண இடமில்லை.

ஆனபடியால் தர்மாதர்மம், புண்ய பாபம், நல்லது கெட்டது ஞானிக்கு இல்லை என்பது ஒரு தத்வமாக இருப்பதுதானே ஒழிய, இதனால் நடைமுறையில் ஒரு ஞானி அதர்மமும், பாபமும், கெட்டதும் பண்ண இடம் கொடுத்துப் போவது என்பதே இல்லை. அவனுக்குள்ளே இந்த எதுவும் ஒட்டாது என்பதால் அவன் இவற்றில் தப்பாக இருக்கிறவற்றின்படி வெளியிலே நடக்கிறானென்று அர்த்தம் ஆகவே ஆகாது.

எனவே, ‘அத்வைத ஸித்தாந்தமானது அதர்மம் முதலானவற்றுக்கு handle கொடுத்துவிடும். அதர்மத்தை easy-யாக எடுத்துக்கொள்ளப் பண்ணிவிடும்’ என்று குற்றம் சொல்வது, நிஜமான ஸாதகர்களுக்கான புஸ்தகங்ளை அப்படியில்லாதவர்கள் படித்துத் தப்பர்த்தம் செய்து கொள்வதன் விளைவுதான்.

தர்ம ஸங்கடமான சில ஸந்தர்ப்பங்கள் ஏற்படுவதுண்டு. அப்போது பொதுவிலே ஒரு தர்மத்தை, நல்லதை நிலைக்கப் பண்ணுவதற்காகவே ஒருத்தர் அதர்மமாக ஒன்று செய்ய நேரிடும். அம்மாதிரி ஸந்தர்ப்பங்களில்தான் அப்படிப்பட்ட அதர்மங்கள் ஒரு ஞானியைத் தாக்காது என்பதால் அவனைக் கொண்டு அதைச் செய்து பொது க்ஷேமத்தை உண்டாக்குவதுமுண்டு. மஹாபாரத யுத்தத்தில் மஹா ஞானியான க்ருஷ்ண பரமாத்மா இப்படித்தான் பல செய்து, ஜெரித்துக் கொண்டார். எப்போதாவது இம்மாதிரி நடப்பதை வைத்து, இது ஞானிகளுக்கு மட்டுமில்லாமல் அத்வைதத்தில் கொஞ்சம் விசுவாஸமுள்ளவர்களுக்கும் ஜெனரல் ரூலாகிவிடும் என்று குறை சொல்வது ந்யாயமே இல்லை.

முதலிலே அதர்மத்தைப் போக்கிக்கொண்டு, அப்புறம் ரொம்ம்ம்….பவும் அப்புறந்தான் தர்மத்தையும் விடும்படி அத்வைத சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது.

‘ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய…’ – ‘எல்லா தர்மங்களையும் விட்டு என்னை சரண் அடை’ என்று பகவான் எப்போது சொன்னார்? கீதையின் கடைசீக் கடைசியிலேதான். ஆரம்பத்திலெல்லாம் என்ன சொன்னார்? இன்னொரு கோடியில் ஆரம்பித்துத்தான் சொன்னார். “எல்லாவற்றையும் விட்டு விட்டு ஸந்நியாஸியாகப் போகிறேன்” என்ற அர்ஜுனனை “பேடிப் பயல் மாதிரி” என்று நன்றாகத் திட்டி, “தர்மத்தைப் பண்ணு, ஸ்வதர்மத்தைப் பண்ணு” என்றுதான் மறுபடி மறுபடி வற்புறுத்திச் சொன்னார். அப்புறம் தான் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு விஷயம் பாக்கியில்லாமல் கர்மா – பக்தி – ஞானங்களில் எல்லா உபதேசமும் கொடுத்து, தன்னுடைய விச்வரூப தர்சனத்தையும் கொடுத்து அவனுடைய மனஸை ரொம்ப உயர்த்தி ‘எலிவேட்’ பண்ணி, அந்த நிலையிலே ‘தர்மத்தையெல்லாம் விடு, என்னிடமே சரணாகதி என்று விழு’ என்றார்.

இப்படித்தான் அத்வைத சாஸ்த்ரங்களில் உத்தம அதிகாரியாக ஒருத்தனை ஆக்கிய பின்தான் தர்மத்தை விடச் சொல்வது.

அதுவுங்கூட, ஸரியாகப் புரிந்துகொண்டால் கார்யத்தில் தர்மத்தை விடும்படிச் சொல்வதில்லை; தர்மாதர்மங்களின் பலாபலனை நினைத்துக்கொண்டு அவற்றைச் செய்கிற மனோபாவத்தைதான் விடச்சொல்வது. உத்தமாதிகாரியாவதற்கு முற்பட்ட நிலைகளிலுள்ள மனிதர்களுக்கு மநு முதலான தர்ம சாஸ்த்ர டாக்டர்களோடுகூட, ஆசார்யாள் முதலான ஆத்ம சாஸ்த்ர டாக்டர்களும் தர்ம மருந்துதான் ‘ப்ரிஸ்க்ரைப்’ செய்திருக்கிறார்கள்.

‘ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய’வுக்கு பாஷ்யம் செய்யும் போது ஆசார்யாள் இதை மந்த, மத்யம அதிகாரிகள் தப்பாக நினைத்துவிடக்கூடாதே என்ற கவலையுடன், கருணையுடன் நன்றாகத் தெளிவுபடுத்தி அர்த்தம் பண்ணியிருக்கிறார். ‘எல்லாக் கார்யத்தையும் விட்டு விடும்படிச் சொல்வதுதான் பகவான் இங்கே உபதேசிக்க உத்தேசித்தது. ஆகையால் அவர் ‘தர்மம்’ என்று சொல்லியிருப்பதில் அதர்மமும் அடங்கியிருக்கிறதென்று புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

இப்படிச் சொல்லிவிட்டு ஆரம்ப நிலைகளிலிருக்கும் பெருவாரியானவர்கள் அதர்மத்தை விடுவதே முக்யம் என்பதை ச்ருதி ப்ரமாணத்தால் நிலைநாட்டுகிறார். ஆசார்யாள் சொன்னால் போதுமென்றாலும் வேதத்தின் ‘அதாரிடி’யையே காட்டுவது அவச்யம் என்று நினைத்து கடோபநிஷத்தை மேற்கோள் காட்டுகிறார். ‘துர்நடத்தையை விடாதவன் ப்ரஜ்ஞானம் என்ற உத்தமமான அறிவினால் ஆத்மாவை அடைவதென்பதில்லை’ என்று அதில் சொல்லியிருப்பதைக்4 காட்டி, அதர்மத்தை விடும்படியாக முதலில் உபதேசிக்கிறார். இது பொதுவாக எல்லாருக்கும்.

அப்புறமே உத்தமாதிகாரி அதர்மத்தோடு தர்மத்தையுங்கூட விட்டுவிட வேண்டும் (அதாவது தர்ம – அதர்ம வித்யாஸ சிந்தையை விட்டுவிட வேண்டும்) என்பதற்கு மஹாபாரத சாந்தி பர்வத்தில் ‘த்யஜ தர்மம் அதர்மம் ச’ என்று சொல்லியிருப்பதை ப்ரமாணமாகக் காட்டுகிறார். (மஹாபாரதம் ‘ஐந்தாவது வேதம்’ என்று உயர்த்திச் சொல்லப்பட்டாலும் அது ச்ருதி ப்ரமாணத்துக்கு அப்புறம்தான்.)

‘ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய’ன்னு பகவான் சொல்லிட்டாரே, தேவலையே! நல்ல உபதேசமாயிருக்கே! நாம் பாட்டுக்கு தர்மங்களை விட்டுடலாம்’ என்று யாரும் அர்த்தம் பண்ணிக்கொண்டு விடப்படாது. (ஸ்ரீ சரணர்கள் சிரிக்க, ஸபையும் சிரிக்க, சிறிது நேரம் சிரிப்பிலேயே செல்கிறது.) முதலிலே அதர்மத்தை விட்டு விட்டு அப்புறம்தான் தர்மத்தை விடுகிற ஸமாசாரத்துக்குப் போகவேண்டும்.

முதலில் அதர்மத்தை விடுவது, அதோடு கர்ம மீமாம்ஸையில் ‘அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா’ என்று சொன்னபடி தர்மங்களை அறிந்து அநுஷ்டிப்பது, அப்புறம் தர்மாதர்மங்களின் பலாபலனை நினைக்காமலிருப்பது, அதற்கும் அப்புறம் உத்தர மீமாம்ஸையில் சொன்னபடி ப்ரஹ்மத்தை அறிவதில் நாட்டம் வைத்து ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸையில் ஸாதனை செய்வது, கான்ஷஸாக (புத்தி பூர்வமாக) ‘தர்மம் பண்ணுகிறேனாக்கும்’ என்று பண்ணாமல் அவன் பாதத்தில் தன் கான்ஷன்ஸையே போட்டுவிட்டு, அதன் அங்கமாக தர்மம் பற்றிய நினைப்பையும் போட்டுவிடுவது, ‘இதுதான்’ எல்லா தர்மத்தையும் விட்டுவிட்டு, என்னை சரணடை’ என்று பகவான் சொன்னதன் தாத்பர்யம் என்கலாம்), முடிவாக தர்மாதர்ம வித்யாஸமே தெரியாத அத்விதீயமான ஸம த்ருஷ்டியைப் பெறுவது என்று படிப்படியாக போகிறவிஷயம் இது. (இதைப்) புரிந்துகொள்ளாத குறைதான், அத்வைதத்தால் தர்மத்துக்கு ஹானி வரும் என்று குறை சொல்வது.

முதலில் அதர்மத்திலிருந்து தர்மத்துக்கு; அப்புறந்தான் தர்மத்திலிருந்து ப்ரஹ்மத்துக்கு. இதைப்பற்றி ஸந்தேஹமே இல்லை.

ஞானிகளைப் பார்த்து, அல்லது, ‘விட்டகுறையில்’ எடுத்தவுடனேயே ஞானமார்க்த்தில் பிடிப்புள்ளவர்களைப் பார்த்து, அப்படிப் பிடிப்பில்லாத மற்றவர்கள், அல்லது ஏதோ சில ஸந்தர்ப்பங்களில் மட்டும் பிடிப்பு ஏற்பட்டு அப்புறம் நழுவி எங்கேயோ போய்விடுவதாக உள்ளவர்கள், முதலிலேயே தர்மாதர்மமமில்லாத ஆத்ம விசாரம் என்று உட்கார்வது நிஷ்பலனாக ஆகும்; அல்லது விபரீத பலனாகக் கூட ஆகலாம். பிறக்கிறபோதே பறக்கிற பக்ஷிகள் இருப்பதைப் பார்த்துவிட்டு ஒரு புழுவும் அந்த மாதிரிப் பண்ண நினைத்தால் எப்படியிருக்கும்? அது புழுவாக இருந்து, அப்புறம் கூட்டுப் புழுவாக ஆகி, அதற்கும் அப்புறம்தானே கொசு, குளவி, வண்ணாத்திப் பூச்சி மாதிரியான ஒன்றாகிப் பறக்க முடியும்? ஸுலபத்தில் மனஸை நிறுத்த ஸ்வாபாவிகமாக, அல்லது ஜன்மாந்த்ர ஸமஸ்காரத்தினால் யோக்யதை பெற்றிருப்பவர்களைப் பார்த்து அவர்களுடைய ஸாதனா மார்க்கத்தை நாம் அனைவரும் எடுத்துக் கொள்வதற்கில்லை.

இப்போது ரொம்பவும் வேதாந்தப் பேச்சு ஜாஸ்தியாகி, கர்மா — ‘ரிசுவல்’ எல்லாம் ரொம்பவும் ‘அன்னெஸஸரி’ என்ற ப்ரசாரம் பண்ணுவதாக இருப்பதால் இந்த விஷயத்தை நான் கொஞ்சம் ‘ஓவ’ராகவே ‘ஸ்ட்ரெஸ்’ பண்ணிச் சொல்ல வேண்டியதாகிறது. இப்படிப் பேசுபவர்களில் வேதாந்ததைப் பற்றிய ப்ரஸங்கிகள், ப்ரொஃபஸர்கள், டாக்டர் பட்டம் வாங்கினவர்கள், சீமை ப்ரெஸ்ஸிலே புஸ்தகம் போட்டவர்கள் நிறைய ஏற்பட்டிருந்தாலும், ஞானி என்று சொல்லும்படியாக யாராவது இருக்கிறார்களா என்ற தேடினால்…., தேடிக் கொண்டேயிருக்கும்படியதானிருக்கிறது. இவர்கள் பிறத்தியாருக்கும் உபதேசம் பண்ணி, ஏற்கெனவே ஒழுங்கு கெட்ட இன்றைய உலகத்திலே ஏதோ கொஞ்சம் சாஸ்த்ரம், ஸம்ப்ரதாயம், ஆசார அநுஷ்டானத்துக்கு வரக்கூடியவர்களையும் ‘வேதாந்தா’வுக்கு நேரே இழுக்கிறார்களே என்ற கவலையினால்தான் சொல்கிறேன். இப்போது தார்மிகத்துக்கும் ஆத்மிகத்துக்கும் நாஸ்திகத்தினால் வந்திருக்கிற ஆபத்து போதாது என்று ‘வேதாந்தா’க்காரர்களிடமிருந்து வேறு ஆபத்து வந்திருக்கிறதே என்று விசாரமாயிருக்கிறது. குற்றம் சொல்வதற்காக (இதையெல்லாம்) சொல்லவில்லை. குற்றம் ஏற்படாமல் தடுக்கமுடியுமா என்று பார்ப்பதற்காகத்தான் சொல்கிறேன்.5

தர்மம், அதோடு சேர்ந்த கர்மம், பக்தியுபாஸனை எல்லாம் சேர்ந்துதான் நம்மை த்யான நிலைக்கும், அப்புறம் ஞான நிலைக்கும் கொண்டு சேர்க்கவேண்டும்.


1 கீதை 4-37
2 445லிருந்து 463 முடிய உள்ள ஸ்லோகங்கள்
3 விவேக சூடாமணி-ச்லோகம் 37. சொல்லழகும் மிக்கது:-
சாந்தா மஹாந்தோ நிவாஸந்தி ஸந்தோ வஸந்தவல்-லோகஹிதம் சரந்த: |
தீர்ணா: ஸ்வயம் பீம-பவார்ணவம் ஜநாந் அஹோதுநாந்யாநபி தாரயந்த: ||
4 கடோபநிஷாத் 1-2-24
5 இவ்விஷயமாக மூன்றாம் பகுதியில் ‘ஆசாரம்’ என்ற உரையில் ‘நவீன வேதாந்திகள்’ என்ற உட்பிரிவும் அதை அடுத்த இரு உட்பிரிவுகளும் பார்க்க.

தவறான குற்றச்சாட்டு

அதர்மம் மாதிரியே தர்மமும் மாயை என்கின்ற அத்வைதத்தால் இந்த லோக வாழ்க்கையில் இருப்பவர்கள் அதர்மமாகப் போவதற்கு இடம் கொடுத்துவிடுகிறது என்று யாராவது சொன்னால் அது அத்வைத சாஸ்த்ரங்களைக் கொஞ்சங்கூடப் புரிந்துகொள்ளாமல் பேத்துவதுதான்.

அப்படியேதான், ‘ஜீவாத்ம – பரமாத்ம பேதமில்லை என்று சொல்லிக்கொண்டு அத்வைதிகள் ஈச்வரோபாஸனையை விடச்சொல்வதால் பக்திக்கு ஹானி ஏற்பட்டுப் பெருவாரியான ஜனங்களுக்குப் பிடிப்பு இல்லாமல் கஷ்டப்படும்படி ஆகிறது’ என்று க்ரிடிஸைஸ் பண்ணுவதும் விஷயம் தெரியாமல் செய்கிற குற்றச்சாட்டுதான்.

ஞான மார்க்கத்துக்கு அதிகாரிகளாகப் பக்வப்பட்டவர்களுக்கென்று பரம அத்வைதமாக எழுதப்பட்டுள்ள சாஸ்த்ர நூல்களில் இப்படிப்பட்டவர்களை முன்னிட்டு, அவர்கள் கொஞ்சங்கூட சித்தம் சிதறாமல் அத்வைதத்திலேயே ஒரு முகப்பட வேண்டுமென்பதற்காக கர்மா – பக்திகளின் த்வைதம் அடியோடு எடுபட்டுப் போகும் அடிப்படையிலேயே வழிபோட்டுக் கொடுத்திருப்பது வாஸ்தவம். ஆனால் பரம அத்வைதிகளும் ஸகல ஜனங்களையும் முன்னிட்டுப் புஸ்தகம் எழுதும்போதோ, கார்யம் செய்யும்போதோ அவர்கள் புஷ்கலமாக ஸ்வதர்ம கர்மாநுஷ்டானமும், ஸகுண உபாஸனையும் பண்ணுவதில்தான் ஆரம்பிக்கவேண்டுமென்று தீர்மானமாகக் காட்டியிருக்கிறார்கள்.

ஆசார்ய பாஷ்யங்களில் திரும்பத் திரும்ப உத்தமாதிகாரிகளுக்கே ஸ்வச்சமான ஞான மார்க்கம் மட்டுமென்றும், மத்யம- அதம அதிகாரிகள் ஒருகாலும் கர்மாநுஷ்டானத்தையும், ஈச்வேராபாஸனையையும் விடாமல் பின்பற்றத்தான் வேண்டுமென்றுமே சொல்லியிருக்கிறது.

அத்வைதிகளான மதுஸூதன ஸரஸ்வதிகள், அப்பைய தீக்ஷிதர் முதலானவர்கள் ஏராளமான பக்தி நூல்களை உபகரித்திருக்கிறார்களென்றால், கோவிந்த தீக்ஷிதைரைப்போன்றவர்கள் நிறைய யஜ்ஞ கர்மாநுஷ்டானங்களும், ஸமூஹ நலனுக்காக அநேகப் பரோபகாரப் பணிகளும் செய்திருக்கிறார்களென்றால் எதனால்? கர்மா, பக்திகளை ஸாதாரண தசையிலுள்ள ஜனங்களெல்லாம் அநுஷ்டானம் செய்ய வேண்டுமென்று வழிகாட்டிக் கொடுப்பதற்குத்தான்!

அத்வைதம் என்றாலே கரித்துக் கொட்டிக் கண்டிக்கிற த்வைதிகளின் பலவிதமான ஸித்தாந்தங்களுக்குங்கூட ஒவ்வொரு நிலையில் நியாயமுண்டு என்று மனஸார நினைத்து, அந்த நிலைக்கே பக்வப்பட்ட ஜனங்களை அவற்றிலேயே நிலை நிறுத்த வேண்டுமென்ற உயர்ந்த ‘ஸிம்பதி’யோடு (அநுதாபத்தோடு) அந்த ஸித்தாந்தங்களை எடுத்துச் சொல்லும் புஸ்தகங்களையும் எழுதிய அத்வைதப் பெரியார்கள் உண்டு.

ஸாங்க்யம், பூர்வ மீமாம்ஸை, ந்யாய (தர்க்க) சாஸ்த்ரம் முதலானவை அத்வைதத்துக்கு வித்யாஸமானவை. யோக சாஸ்த்ரம்கூட அத்வைதத்துக்கு அப்படியே ஒத்துப்போகாதுதான். ஆனலும் அத்வைத சாஸ்த்ர கர்த்தர்களில் முக்ய ஸ்தானம் வஹிக்கும் ஒருவரான வாசஸ்பதி மிச்ரா மற்ற இந்த எல்லா சாஸ்த்ரங்களை விளக்கியும் புஸ்தகங்கள் எழுதியிருக்கிறார்.

வித்யாரண்யாள் (அத்வைத) ஆசார்ய பீடத்திலேயே இருந்தவர். அவர் ‘ஸர்வ தர்சன ஸங்க்ரஹம்’ என்று ஒரு நூல் எழுதியருக்கிறார். அதிலே லோகாயதம் என்கிற நாஸ்திகம் உள்பட, எல்லா ஸித்தாந்தங்களின் கருத்துக்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதை எல்லா விதமான ஸ்மப்ரதாயங்களுக்கும் digest என்று சொல்லலாம்.

இதையெல்லாம் விட வேடிக்கை – விசேஷம் என்றும் சொல்லலாம் – இப்போது மத்வரின் த்வைத ஸித்தாந்தம், ராமாநுஜரின் விசிஷ்டாத்வைதம், ஸ்ரீ கண்டாசார்யாரின் சைவ ஸித்தாந்தம் முதலியவற்றை அறிய விரும்பும் ஸம்ஸ்க்ருத ஞானமுள்ளவர்கள் அவற்றுக்காகக் படிக்கும் திட்டவட்டமான நூல்கள் எவை என்றால் அத்வைதியான அப்பைய தீக்ஷிதர் அவை ஒவ்வொன்றையும் அநுஸரித்து ப்ரஹ்ம ஸூத்ரத்துக்கு எழுதியுள்ள பாஷ்ய நூல்கள்தான்!

த்வைதத்துக்கு இவ்வளவு இடம் தந்து “அகாமடேட்” பண்ணும் அத்வைதிகள் ஒருபோதும் கர்மாநுஷ்டானம், பக்தி ஆகியவை கலகலத்துப் போகும்படிப் பண்ணி லோகப்ராயாமான பெருவாரி ஜனங்கள் தர்மத்தில் பிடிப்புவிடும்படியாகவோ, அன்பு முதலான குணாபிவ்ருத்தியில் அக்கறை காட்டாதபடியோ செய்யவே இல்லை.

ஆசார்யாள் செய்துள்ள பக்தி ஸாஸ்தரங்கள் எத்தனை? அவர் க்ஷேத்ராடனம் செய்து பண்ணியுள்ள ஆலய புனருத்தாரணம், யந்த்ர ப்ரதிஷ்டை முதலானவற்றுக்கு கணக்கு உண்டா? இன்றைக்கும் அவர் பேரில் நடக்கிற மடங்களில் வைதிக கர்மாநுஷ்டான, வேத அத்யயனாதிகளுக்கும், ஸகல ஜனங்களும் சாஸ்த்ர வழிப்படி தர்மாசரணை பண்ணவும், பூஜை, ஆலய கும்பாபிஷேகம் முதலியன நடக்கவுந்தானே விசேஷமாக ஊக்கம் கொடுத்தும், உபதேசம் செய்தும் வருகிறோம்?

லக்ஷ்யம் மறக்கப்படாது என்ற இப்போது ஏதோ அத்வைத உபந்நியாஸம் பண்ணுகிறேனே தவிர, நீங்கள் தனியாக என்னிடம் வந்தால், வந்து மாட்டிக்கொண்டால், ‘ஸந்த்யாவந்தனம் பண்ணுங்கள், ஒளபாஸனம் பண்ணுங்கள், அம்பாள் ஸந்நிதியில் நெய் தீபம் போடுங்கள், ப்ரகாரத்தில் முள்ளை பிடுங்குங்கள், குளம் வெட்டுங்கள், ஆஸ்பத்திரிகளில் ப்ரஸாதம் விநியோகியுங்கள், பிடி அரிசித் திட்டத்தை ஏற்று நடத்துங்கள்’ என்றெல்லாம் சொல்லித் தானே கஷ்டப்படுத்துகிறேன்? இப்படியெல்லாம் த்வைதமாகக் கஷ்டப்படுத்தியே, ஏற்னெவே ஸம்பாதித்துக் கொண்டுள்ள த்வைதக் கஷ்டத்தைப் போக்குவதற்கு ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசார்யாள் உத்தரவு போட்டு விட்டுப் போயிருப்பதால்தான் இந்த மாதிரி (செய்கிறேன்) .

தர்ம மருந்து

நாம் முதலில் செய்யவேண்டியது கர்ம வ்யாதியைப் போக்கிக் கொள்வது. வ்யாதி எப்படிப் போகும்? வைத்யரிடம் போய், மருந்து வாங்கிச் சாப்பிட்டால் போகும். ஏற்கெனவே வந்துவிட்ட கர்ம வ்யாதி தீரவும், மறுபடி அது வராமலிருக்கவும் மருந்து சொல்லும் வைத்யர் யார்? மநுதான் அந்த வைத்யர். மநு என்றால் மநு முதான யார் யார் தர்ம சாஸ்த்ரங்களைக் கொடுத்திருக்கிறார்களோ அவர்கள் எல்லோரும்*. இதிலிருந்தே அவர்கள் கொடுக்கிற மருந்து என்ன என்று ஊகித்துவிடலாம். நம்முடைய கர்மாக்களை நிர்ணயம் செய்து கொடுக்கும் தர்ம சாஸ்த்ரங்களே தான் மருந்து. இது நான் ஏதோ அழகாக உபமானம் கட்டிச் சொல்வதில்லை. வேதத்திலேயே, ‘மநு என்ன சொன்னாரோ அதுதான் பேஷஜம்’. என்று ‘தைத்திரீய ஸம்ஹிதை’யில் சொல்லியிருக்கிறது, ‘பேஷஜம்’ என்றால் ‘மருந்து’, (‘ஸ்ரீருத்ரம்’, ‘விஷ்ணு ஸஹஸ்ரநாமம்’ தெரிநத்வர்களானால், அர்த்தம் தெரியாவிட்டாலும் ‘பேஷஜம்’ என்ற வார்த்தையாவது தெரிந்திருக்கும்.)

மருந்து கொடுத்தால் பத்யமும் வைப்பார்கள். இதிதைச் சாப்பிடப் படாது, சாப்பிட்டாலும் இவ்வளவுதான் சாப்பிடலாம் என்று கட்டுப்பாடு செய்வார்கள். அதே போல தர்ம சாஸ்த்ரங்களில் இன்னின்ன பண்ணக்கூடாது, இன்னின்ன அநுபோகங்கள் இவ்வளவுதான் வைத்துக்கொள்ளலாம் என்றெல்லாம் விதிகள், நிஷேதங்கள் இருக்கின்றன.

எப்படியும் என்றைக்கோ ஒரு நாள் அழிந்தபோகப் போகிற சரீர அபிவ்ருத்தியை முன்னிட்டே வைத்யர் தரும் கசப்பு மருந்து, உறைப்புக் கஷாயம் எல்லாம் சாப்பிட்டு, அவர் சொல்கிற பத்யங்களை ஏற்று நடத்தும் நாம் ஆத்மாபிவ்ருத்திக்காக மருந்து சொல்லும் மஹா பெரியவர்களான தர்ம சாஸ்த்ரகாரர்களின் மருந்து, பத்யங்களை அதைவிட நம்பிக்கையுடனும் பக்தியுடனும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

முன்னேயே சொன்னேன்: போகப் போக தர்ம கர்மாநுஷ்டானமென்பதே மனஸுக்குப் பிடித்த கூஷ்மாண்ட லேஹ்யம் மாதிரி, யுனானி மருந்து மாதிரித் தித்திக்க ஆரம்பித்துவிடுமென்று.


* இரண்டாம் பகுதியில் ‘தர்ம சாஸ்திரம்‘ என்ற உரையின் முதல் இரு உட்பிரிவுகள் பார்க்க.

தன்னியல்பான ஸாதனை முதிர்வு

‘எப்போது கர்மாவிலிருந்து பக்திக்கு முக்யத்வத்தை மாற்றவேண்டும்? எப்போது பக்தியிலிருந்து ஞான விசாரத்துக்குப் போகவேண்டும்? எதுவரை மணி அடித்துப் பூஜை? எப்போது த்யானம்? எதற்கப்புறம் த்யானத்தையும் விடுவது?’ என்றெல்லாம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கவேண்டியதில்லை. நிறையக் கர்மா, அதோடு அதற்கடுத்தபடியாக பக்தியுபாஸனை, கொஞ்சம் ஆத்மார்த்தமான சிந்தனை என்று பிள்ளையார்சுழி போட்டு இப்போது ஆரம்பித்து விட்டால் போதும். இப்படிப் பண்ணிக் கொண்டு போகிற போதே கர்மவாஸனை தேயத் தேய, மனஸின் பரிசுத்தி அதிகமாக ஆக, எந்தவிதமான ஸாதனைகளையும் அப்யாஸங்களையும் விடவேண்டுமோ அவற்றில் பிடிப்பு தானாகவே கொஞ்சங் கொஞ்சமாக விட்டுப்போய், எந்த விதமான ஸாதனாப்யாஸங்கள் கூடவேண்டுமோ அவற்றிலே தன்னால் ஒரு அபிருசி ஏற்பட்டு அவற்றிலே இயற்கையாக நாம் ஈடுபட்டுப் பின்பற்ற ஆரம்பித்துவிடுவோம்.

முடிந்த முடிவான அநுபவத்துக்கு முற்பட்ட நிலையில், அதாவது, ஞான மார்க்கத்தில் ப்ரேவசித்த பிறகு, ஜீவ – ப்ரஹ்ம அபேதம் பற்றி ச்ருதி வாக்யங்களை ச்ரவணம் செய்வது, அதையே மனஸிலே உருட்டிக்கொண்டு மனனமும், த்யானமும் செய்வது என்பவற்றை எப்போது நிறுத்தி ஆத்ம தர்சனம் பெறுவது என்கிற கேள்விக்கு ஆசார்யாள் சொல்கிற பதில்* அடிநிலையில் கர்மாநுஷ்டானம் ஆரம்பிப்பதிலிருந்தே பொருந்தும். என்ன சொல்கிறாரென்றால், ‘நெல்லு குத்துவதை எப்போது நிறுத்த வேண்டுமென்றால் என்ன பதில் சொல்வது? எப்போது உமி நன்றாக உதிர்ந்து நெல்லிலிருந்து அரிசி வெளிவருகிறதோ அதுவரை குத்தத்தான் வேண்டும். அந்த மாதிரி, ஆத்ம ஸாக்ஷாத்காரம் ஏற்படும்வரை ச்வரணாதிகளைப் பண்ணிக்கொண்டேதான் இருக்கவேண்டும்’ என்கிறார். எந்த அநுஷ்டானத்தையுமே ‘எப்போது நிறுத்துவது’ என்று கேட்காமல் அதற்கு மேலான நிலை வரும்வரை தொடரவேண்டும்.


* ப்ரஹ்ம சூத்ரம் 4-1-1 பாஷ்யக் கருத்தைத் தழுவி ஸ்ரீசரணர் பேசுகிறார்.

பிற மார்க்கத் தொடர்பு; எதையும் கண்டிக்கலாகாது

ஆனாலும் ஆரம்பத்தில் கர்மம் முக்யம் என்றாலும் மற்றவையும் ‘ஸப்ஸிடயரி’யாக (துணையம்சமாக) இருக்க வேண்டும். இவற்றிலே பக்திக்கு அதிகமாக இடம் கொடுக்க வேண்டும். ஆத்மாவைப் பற்றிய ஸ்மரணை, அத்வைதத்தைக் குறித்த சிந்தனை, ஞான நூல்கள் படிப்பது ஆகியனவும் கொஞ்சம் இருக்கவேண்டும்.

அப்புறம் பக்தி அதிகமாக இருக்கும்போது கர்மாவைப் பற்றி விசேஷமாக கவனம் செலுத்தி, இழுத்துப்போட்டுக் கொண்டு செய்யவேண்டியதில்லை. கர்மா முக்யமாயிருந்த முதல் ஸ்டேஜில் நாமாக மனஸறிந்து, வலிந்துங்கூட, பக்தி வழிபாடும் பண்ணவேண்டுமென்பதுபோல இப்போது பக்தி முக்யமாய்விட்டபோது கர்மா பண்ணத்தான் வேண்டுமென்றில்லை. சாஸ்த்ரீயமான முக்ய கர்மாவைப் பண்ணினால் போதும். சரீர ப்ரஜ்ஞையிலிருந்து அதைவிட ஸூக்ஷ்மமான நம்முடைய மனஸைக் குறித்தே நேராக ப்ரஜ்ஞை ஏற்பட்ட கட்டத்தில், இதைவிட ஸ்தூலமான கர்மாநுஷ்டானத்தில் புத்திபூர்வமாக வலிந்து ஈடுபட வேண்டியதில்லை. அதுவாக வாய்த்த கர்மங்களை, தவிர்க்க முடியாத கர்மங்களை மட்டும் நன்றாகப் பண்ணினால் போதும்.

ஆனாலும் இப்போதுங்கூட ‘கர்மாவை விட்டு விட்டேனாக்கும்’ என்று ப்ரகடனப்படுத்திக் காட்டக்கூடாது. அப்படிக் காட்டி, கர்மா அவச்யமாயிருக்கிற முதல் ஸ்டேஜ்-மநுஷ்யர்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும்படிப் பண்ணிவிடக்கூடாது. கர்மா, பக்தி எல்லாம் போன ஞானியுங்கூட இப்படிப் பண்ணிவிடப்படாது என்று பகவான் (கீதை மூன்றாம் அத்யாயத்தில்) தீர்மானமாகக் கூறியிருப்பதை மறக்கவே கூடாது.

பக்திக்கும் அப்புறம் ஞானத்திலே போனபிறகு கர்மா, பக்தி இரண்டுமே அவச்யமில்லை. ஆனாலும் இவை யாருக்கும் அவச்யமில்லை என்கிற மாதிரியாக இவற்றை ஞான மார்க்கத்தில் போகிறவனுங்கூடப் பொதுப்படையாகக் கண்டித்துத் தள்ளக்கூடாது. அவனுக்கு பகவானின் உபதேசம், ‘நீ இவற்றை விட்டுக்கோ; ஆனால் உன் மாதிரி பக்வப்படாதவாளும் விட்டுவிட்டு இரண்டுங்கெட்டானாகத் திண்டாடும்படியாகப் பண்ணிவிடாதே! உன்னால் ‘ரன்னிங் ரேஸ்’ ஓட முடிகிறது என்பதால் குழந்தைகளுக்கும் நடைவண்டி வேண்டாம், கால் ஊனமானவனுக்கும் கக்க தண்டம் வேண்டாம் என்று நினைக்கும்படிப் பண்ணிவிடாதே!’ என்பதே.

(ஞான) ஸாதனையில் மேலே போகப் போக, ஜீவனுடைய இஷ்ட – அநிஷ்டங்கள் (விருப்பு- வெறுப்புக்கள்) போய், ஈச்வர சக்தியே அவனை நடத்திக்கொண்டுபோகிறபோது, கர்மாவையும், பூஜை முதலான உபாஸனைகளையும் விட்டுவிட்டே ஒருத்தன் ஸந்நியாஸி ஆனாலும் ஆகலாம். அல்லது ராஜ்யபாரம் பண்ணிக்கொண்டே ஞானியாய் இருந்த ஜனகரைப் போல, கர்மா எல்லாம் பண்ணிக் கொண்டும் இருக்கலாம். அல்லது அத்வைதிகளாயிருந்த அநேகம் பெரியவர்களைப்போல் நிரம்ப ஈச்வர பக்தி பண்ணிக்கொண்டும் இருக்கலாம்.

நமக்கான வழி

நம் மாதிரியான பெருவாரி ஸாதாரண ஜனங்களுக்கு நிஷ்காம்ய கர்மாவும், பக்தியும்தான் ஞான மார்க்கத்துக்கான யோக்யதையை ஸம்பாதித்துத் தருபவை. ஆனால் இப்படி ஸத்கர்மா செய்யும்போதும், பக்தி உபாஸனை செய்யும்போதுங்கூட இவற்றிலே கிடைக்கும் த்ருப்திக்காக மாத்திரம் இவற்றைச் செய்வதென்றில்லாமல், நித்ய ஸெளக்யமான, சாச்வத சாந்த பதமான, ஸத்யங்களுக்கெல்லாம் மேலான ஒரே ஸத்யமாக உள்ள அத்வைத லக்ஷ்யத்துக்குப் போகவே இவை படிகள் என்ற நினைப்பை விடாமல் செய்யவேண்டும்.

லோக வாஸனைகளில் நன்றாகத் தடிப்பேற்றிக்கொண்டு ஒழுங்கு கெட்டுப்போன நாம முதலில் லோக கார்யங்களை ஒழுங்காகச் செய்து அந்தத் தடிப்பைத் தேய்த்துத் தேய்த்துக் கரைத்துவிட்டு அப்புறந்தான் லோகத்தைவிட்ட ஆத்மாவுக்குப் போகவேண்டும். அதாவது, முதலில் தர்ம மார்க்கத்தில் போய், அப்புறம்தான் ப்ரஹ்மத்துக்கு முயலவேண்டும். தர்மம் என்பது ஸத்கர்மம் வழியாகவே ஆற்றப்படுவது. அதனால்தான் இன்னாருக்கு இன்ன கர்மம் என்று பக்வம் பார்த்து, அதிகார பேதம் பார்த்துப் பிரித்துக் கொடுத்திருக்கும்போது அப்படிப்பட்ட கர்மத்தையே அவரவருக்கும் ஸ்வகர்மம் என்று சொல்லாமல் ஸ்வதர்மம் என்று சொல்லியிருப்பது.

வ்யாதி போன பிற்பாடுதான் விருந்து சாப்பிடமுடியும். ஆத்மானந்தமாகிய அம்ருத போஜனம் பண்ணணுமென்றால் முதலில் கர்ம வ்யாதிகளையும் மனோ வ்யாதியையும் போக்கிக் கொள்ளளவேண்டும். (மனோ வ்யாதி என்றால் மனஸுக்கு ஏற்படும் க்லேசம், ப்ரேமை போன்ற வ்யாதியைச் சொல்லவில்லை. மனஸே ஒரு வ்யாதியாக ஆத்மாவிலே தோன்றியிருப்பதைத்தான் சொல்கிறேன்.)

மனஸின் உயர்ந்த பண்புகளோடு கலந்து சரீரத்தின் வேலைகளை அதிகமாகக் கொண்டிருக்கும் தர்ம கர்மாக்கள் மூலமும், சரீரத்தின் வேலைகள் குறைவாகவும் மனஸின் உத்தம குணங்களே அதிகமாக இருக்கும் பக்தி உபாஸனையினாலும் கர்ம வ்யாதி, மனோ வ்யாதிகளைப் போக்கிக் கொள்ளவேண்டும். ஆரம்பத்தில் சரீர ப்ரஜ்ஞை மிகவும் அதிகமாதலால் கர்மாவுக்கு முக்யத்வம். அப்புறம் பக்திக்கு முக்யத்வம். அப்புறம்தான் ஆத்ம விசாரமே முக்யமாகிற நிலைக்குப்போவது.