அத்வைதக் கொள்கைகளில் சில

ஆதார ஸத்யம் எப்படி ஈச்வரன் மாதிரித் தோன்றுகிறது, எப்படி ஜீவன் மாதிரித் தோன்றுகிறது என்பதில் அத்வைதிகளுக்குள்ளேயே இரண்டு மூன்று ‘தியரி’கள் இருக்கின்றன. பிம்ப ப்ரதிபிம்ப வாதம், அவச்சேத வாதம், ஆபாஸ வாதம் என்று இவற்றுக்குப்பேர். அந்த வித்யாஸங்கள், கட்சி ப்ரதி கட்சிகளை அதிகம் சொல்லப்போனேனால் உங்களுக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருக்கும். இப்போது மாயை நம் கண்ணைக் கட்டி இந்த ஸம்ஸாரக் காட்டில் விட்டிருப்பதை ஏதோ கொஞ்சமாவது தளர்த்திவிடப் பார்க்கலாமென்று உபந்நியாஸம் செய்ய ஆரம்பித்துவிட்டு, நானே நேர்மாறாகப் பண்ணிவிடக்கூடாது. அதனால் ரொம்பவும் சிக்கலான ‘தியரி’களில் ஆழமாகப் போகாமல் மேலெழுந்தவாரியாகச் சொல்லிக்கொண்டு போகிறேன்.

தியரிகளுக்குப் போனால், ‘ஜீவ மனஸ்’, ‘காஸ்மிக்’ மனஸ் என்று இரண்டு இல்லை’ என்று கூட ஒரு கட்சி சொல்லும். ‘அப்படியானால் ‘காஸ்மாஸை’ (ஜகத்தை) ஜீவ மனஸா பண்ணிற்று?’ என்று கேட்டால், ‘ஆமாம், அப்படித்தான்! உன் பார்வையில்தான் ஜகத் இருக்கிறது. அதற்குத் தனியாக இருப்பு இல்லை’ என்பதாக த்ருஷ்டி – ஸ்ருஷ்டிவாதம் என்று ஒன்றை சொல்வார்கள். இதை ‘ஏக ஜீவவாதம்’ என்றும் சொல்வதுண்டு. ஒரு ஜீவனுடைய த்ருஷ்டி என்கிற பார்வையில்தான் (அதாவது ஒரு ஜீவனுடைய மனஸின் வெளிப்பாட்டில்தான்) ஜகத் ஸ்ருஷ்டியே இருக்கிறது என்பார்கள். ஜகத்தின் இன்னொரு பெயரைக் கொண்டே இந்த வாதத்திலும் நியாயமிருப்பதாகச் சொல்வார்கள். ஜகத்துக்கு ‘லோகம்’ என்று பெயர் இருக்கிறது. ‘லோக்’ என்னும் தாதுவுக்குப் ‘பார்ப்பது’ என்று அர்த்தம். Look என்பது இதிலிருந்து வந்ததுதான். ‘லோகனம்’ என்றால் பார்ப்பது. இப்படி நம்மால் பார்க்கப்படுவதால் மட்டுமே இருப்பு உள்ளதாக எது இருக்கிறதோ அதுதான் ‘லோகம்’. Locality, locus என்றெல்லாம் இடம் ஸம்பந்தமானவற்றைச் சொல்வதும் ‘லோக்’தாதுவை வைத்துத்தான். தமிழிலும் பார்க்கப்படுவதாலேயே இருப்பு உள்ளது என்பதைக் குறிப்பதாகப் ‘பார்’ என்றே உலகத்துக்குப் பேர் இருக்கிறது. பரத்தை மறைத்தது பார் முதற் பூதம் என்று பரம அத்வைதத்தைத் (திருமூலர்) சொல்கிறபோது ‘பார்’ என்றே ஜகத்தைச் சொல்லியிருக்கிறது.

‘நீ பார்ப்பதால் உனக்கு லோகம் தெரிகிறது. பார்க்காவிட்டால், அதாவது மனஸை வெளியிலிருந்து உள்ளே திருப்பிவிட்டால் உனக்கு லோகம் மறைந்து போகிறது. இதை வைத்தே லோகம், location, பார் முதலான பேர்கள் ஜகத்துக்கு வந்திருக்கலாம். இதற்குத் தப்பர்த்தம் பண்ணி ஜீவன் பார்ப்பதால்தான் ஜகத்துக்கே இருப்பு இருக்கிறது. ஜீவன் பார்க்காவிட்டால் அதுவும் இல்லை என்று சொல்வது என்ன நியாயம்? ‘பூனை கண்ணை மூடிண்டா உலகம் அஸ்தமிச்சுப் போயிடுமோ?’ என்று பழமொழியே இருக்கிறதே!’ என்று கேட்கலாம்.

த்ருஷ்டி – ஸ்ருஷ்டி வாதம் சொன்னவர்களும் மஹா பெரியவர்கள்தான். அவர்கள் இருந்த ஒரு உசந்த நிலையிலிருந்து கொண்டு அவர்கள் எப்படிப் பார்த்தார்களோ அதையே சொன்னார்களென்று வைத்துக்கொள்ளவேண்டுமே ஒழிய அதை நம் கோணத்திலிருந்து ‘க்ரிடிஸைஸ்’ பண்ணுவது ஸரியல்ல. ஜீவ மனஸை ஈச்வரன் என்கிற Cosmic Mind மாயைக்கு அந்தண்டை (அப்பால்) சேர்க்கும்போது ஒரு கட்டத்தில் அந்த Cosmic Mind-லேயே ஜீவமனஸ் அப்படியே கலந்து அதுவாகவே ஆனாற்போன்ற பாவம் வரும். அதாவது, எதுவும் செய்யாத நிர்குண ஆத்மாவுக்குப் போவதற்கு முந்தி, அதற்குப்போகும்படிப் பண்ணுகிறானே, எல்லாவற்றையும் செய்கிற ஸகுண ஈச்வரன், அவனோடு ஐக்யமாகிவிட்டது போன்ற ஒரு ஸ்திதி வரும். அப்போது அந்தப் பெரிய மனஸின் ஸ்ருஷ்டி, தன்னுடைய கல்பனை மாதிரியே தோன்றும். ஆனால் வாஸ்தவத்தில் ஜீவன் ஈச்வரன் ஆவதில்லைதான்.

‘ஈச்வராத்மா’வுக்குப் பதில் ஏன் ‘பரமாத்மா’?

ஸரி, ‘ஜீவாத்மா’ என்பதுபோல, ‘ஈச்வராத்மா’ என்று சொல்லாமல் ஏன் ‘பராமாத்மா’ என்று சொல்லவேண்டும்?

ஈச்வராத்மா என்று ஏன் சொல்லவில்லையென்றால் ஈச்வரன் ஆத்மாவை அறிந்துகொள்ளாத நிலை என்று ஒன்று கிடையாது. ஈச்வரனும் ஆத்மாவும் இரண்டாகப் பிரிந்து ஸம்பந்தப் படுபவர்களல்லாததால் ‘ஈச்வர plus ஆத்மா = ஈச்வராத்மா’ என்று plus போட்டு வார்த்தை கொடுக்க முடியவில்லை. அவன் எப்போதும் ஆத்ம ஞானமுள்ளவன். அவன் நிஷ்க்ரிய, நிர்குணனாக இல்லாமல் மாயையினால் கார்யம் செய்கின்ற, ஸகுண (குணங்களுள்ள) ஈச்வரனாயிருக்கிறொனன்று அத்வைத சாஸ்த்ரங்களில் சொல்லியிருப்பதைப் பார்த்து, அப்படியானால் மாயா ஸம்பந்தத்தால் தன் நிஜ ஸ்வரூபத்தை அவன் மறந்து போய் வேறே மாதிரிதான் இருக்கிறானாக்குமென்று அர்த்தம் பண்ணிக்கொண்டு விடக்கூடாது. ஜீவன் ஆத்ம ஸ்வரூபத்தை மறந்து போனாற்போல், ஈச்வரன் மறந்து போயிருப்பதாக அவை சொல்லவே சொல்லாது.

அதனால், ஈச்வராத்மா என்காமல், ஜீவாத்மாவுக்கு உயர்ந்தது என்று மட்டும் ‘பரம்’ போட்டுக் காட்டிப் ‘பரமாத்மா’ என்பது.*


*இவ்விஷயம் சில பக்கங்களுக்கு அப்பால் மீண்டும் விளக்கப்படுகிறது.

தொடர்புகொண்ட இரண்டு வஸ்துக்கள்

ஜீவனும் ஆத்மாவும் ஒன்று என்றால், ஜீவ பாவத்தில் இருப்பதும் ஆத்மாவாக இருந்துகொண்டிருக்கும் நிலையும் ஒன்று என்றால், அப்போது ஜீவன் என்றோ ஆத்மா என்றோ ஒன்றை மட்டும் சொன்னால் போதும். இரண்டையும் சேர்த்து ஜீவாத்மா என்று சொல்லவேண்டியதில்லை. வேடிக்கையாகத் தோன்றலாம், சேர்த்துச் சொன்னதாலேயே இரண்டையும் பிரித்துக் காட்டினதாக ஆகிறது! ‘பால் பாயஸம்’ என்று சொல்கிறோம். பாலே பாயஸமில்லை. அதிலே பாலுக்கு வேறாக என்னமோ, சர்க்கரை கிக்கரை சேர்த்து, அதன் இயற்கையான தன்மையை (நிஜ ஸ்வரூபத்தை) வேறே மாதிரிமாற்றி, அதன் இயற்கை ருசியைக் கூட்டிப் பாயஸம் என்று இன்னொன்றைப் பண்ணியிருக்கிறது. அதனால் ‘பால் பாயஸம்’ என்று சொல்கிறோம்.

பாலும், சர்க்கரையும் போல வேறாக இன்றி, பாலும் milk-ம் ஒன்றேதான். பாலுக்கே ‘க்ஷீரம்’ என்றும் பெயர் இருக்கிறது. இப்படி ஒரே வஸ்துவை இரண்டு வார்த்தைகள் குறிக்கும்போது இரண்டையும் சேர்த்துப் பால் – மில்க், பால் – க்ஷீரம் என்று சொல்வதுண்டா?

‘ஜீவாத்மா’ (என்ற வார்த்தை) ஸமாசாரமும் இதிலிருந்து புரிகிறது. ஜீவனும் ஆத்மாவும் ஒரேயடியாக ஸம்பந்தமே இல்லாதவையாயிருந்தாலும், ‘ஜீவாத்மா’ என்று சேர்த்துச் சொல்ல முடியாது. பாலோடு ஸம்பந்தப்படுகிறவற்றைத்தான் பால் பாயஸம், பால் போளி, பால் சாதம் என்று சொல்ல முடிகிறதே தவிர அதோடு ஸம்பந்தப்பட முடியாத ரஸம், மோர் முதலியவற்றோடு சேர்த்துப் பால் ரஸம், பால் மோர் என்று சொல்ல இடமிருக்கிறதா? ஒன்றாகவேயும் ஆகிவிடாமல், ஒரேயடியாக ஸம்பந்தமே இல்லாமல் வேறு வேறாயும் இருந்துவிடாமல், ஒன்றோடொன்று ஸம்பந்தப்பட்டுக்கொண்டு மட்டுமிருக்கும்போது தான் இரண்டின் பேரையும் சேர்த்து ஒரு வார்த்தை உண்டாவது.

ஜீவனுக்கு தப்பான ஜீவத்வத்தோடு இருக்கும் ஸ்திதி, நிஜ ஸ்வரூபத்தை அறிந்து ஆத்மாவாயிருக்கும் ஸ்திதி என்று இரண்டு இருப்பதாலும், ஆனாலும் அந்த இரண்டில் ஸரியானது எதுவோ அதுவேதான் தப்பாகவும் ஆகி இருக்கிறது என்ற ஸம்பந்தமும் அதே ஸமயத்தில் இருப்பதாலும் ‘ஜீவாத்மா’ என்ற இரண்டையும் சேர்த்துச் சொல்கிறோம்.

த்வைத – விசிஷ்டாத்வைதங்களில் ஜீவாத்ம – பரமாத்மாக்கள்

த்வைதமாகவே நினைக்கப் பழக்கப்பட்டுவிட்ட நம்மில் எவருக்கும் தோன்றக் கூடியது ஸர்வசக்தனும், ஸர்வஜ்ஞனுமான பரமாத்மா வேறேதான்; அல்ப சக்தனும், கிஞ்சித்ஜ்ஞனுமான (சிற்றறிவினனுமான) ஜீவாத்மா அவனுக்கு வேறேதான் என்ற எண்ணமே. இவர்களை முறையே பேருயிர், சிற்றுயிர் என்றும் சொல்வதுண்டு. இப்படி ஒருவருக்கொருவர் மலைக்கும் மடுவுக்குமாக வித்யாஸமாயுள்ள இரண்டு பேர் நிச்சயமாக இரு வேறு ஆஸாமிகளாகத் தானிருக்க வேண்டுமென்று தோன்றும். இதுதான் மத்வாசார்யார் ப்ரசாரம் செய்த த்வைதம். பரமாத்மாவும் ஜீவாத்மாவும் இரு வேறு வ்யக்திகள் என்ற அபிப்ராயத்தைக் கொண்டதால் ‘த்வைதம்’ எனப்படுகிறது.

ஒரு குயவன் தனக்கு முற்றிலும் வேறாகப் பானை என்று ஒன்றைப் பண்ணிப் போடுகிற மாதிரி பரமாத்மா ஜீவாத்மாவை அடியோடு வேறு வஸ்துவாகப் பண்ணிவிடவில்லை என்றும், உடம்பை உயிர் இயக்குகிற மாதிரி ஜீவனின் உயிரை அதற்கும் உயிராக (‘உயிர்க்குயிராக’ என்கிறோமே, அப்படி) இயக்கும் அந்தர்யாமியாக அவன் இருக்கிறானென்றும் ராமாநுஜர் ஸித்தாந்தம் செய்தார். இதைத்தான் விசிஷ்டாத்வைதம் என்பது. அவரும் இந்த ஜீவாத்மாவானது பரமாத்மாவை த்வைதமாகப் பிரிந்திருந்து பக்திதான் பண்ணிக்கொண்டிருக்க முடியுமே தவிர, அந்தப் பரமாத்ம தத்வத்திலேயே ஜீவன் பிறிதற அத்வைதமாக ஒன்றிவிட முடியாது என்றுதான் மோக்ஷ நிலையை த்வைதமாக define செய்திருக்கிறார்.

ஸரி, இங்கேயெல்லாம் ஜீவாத்மா என்று சொல்வதிலே ஆத்மா என்பது என்ன? ஜீவனின் நிஜமான உள் உண்மைத் தத்வம் எதுவோ அதுதான். இது மனஸ் இல்லை, அந்தஃகரணம் இல்லை என்பதை த்வைதிகள் உள்பட எல்லா ஸித்தாந்திகளும் ஒப்புக்கொள்கிறார்கள். எதிலும் பட்டுக்கொள்ளாத ‘ஸாக்ஷி’ என்று ஒன்றைச் சொல்கிறார்கள். ஆனாலும் பட்டுக்கொள்ளாத ஸாக்ஷியின் ஸ்வாநுபவத்தைப் பற்றி ஒன்றும் சொல்லாமல், த்வைதமான ஈச்வராநுபவத்தைத்தான் மோக்ஷமென்பதான ஜீவாத்மாவின் ஸ்வதந்த்ர ஸ்வபாவ அநுபவ நிலையாகச் சொல்லி முடித்துவிடுகிறார்கள்.

ஜீவனின் நிஜ ஸ்வரூபமும் ஈச்வர ஸ்வரூபமும் சாச்வதமாக வேறேதான் என்கிற த்வைதிகள் விஷயத்தில் ஜீவாத்மா பரமாத்மா என்ற இரண்டு தினுஸு ஆத்மாக்களை சொல்வதற்கு அதிக விளக்கம் அவச்யமில்லை. மோக்ஷத்தில் ஆத்மாவின் நிஜ ஸ்வரூபத்திலிருக்கும்போதும் அவர்களுடைய ஜீவன் அல்ப சக்தன் என்றே முடிந்துபோகிறான். இல்லாவிட்டால் இவன் எதற்காக மோக்ஷத்தில் ஈச்வரனுக்கு ஸேவை செய்துகொண்டிருக்க வேண்டும்? ஈச்வரனும் மஹாசக்தன் என்பதோடு முடிந்துபோகிறான். அந்த சக்திக்கு ஆதாரமாகவும், ஆனாலும் சக்தியைக் காட்டுவது என்று த்வைத கார்யமில்லாததால் செயலற்ற ஒரே சாந்தமாகவும் உள்ள ஸத்யம்தான் அவனுடைய நிஜ ஸ்வரூபம் என்கிறவரைக்கும் அவர்கள் போவதில்லை. இப்படி அநேக அல்ப சக்தர்கள் அவர்களை ஆள்பவனான ஒரே ஒரு மஹாசக்தன் என்று இரண்டு இருக்கும்போது இவர்களை ஜீவாத்மாக்கள் என்றும், இவர்களைவிட மிக உயர்வான ஈச்வரனைப் பரமாத்மா என்றும் சொல்வது பொருத்தந்தானே? ஸகல ஆதார, ஸகல காரண, நித்ய, சுத்த, முக்த, ஸச்சிதானந்த ப்ரஹ்மம் என்பதே அவர்களுக்கு ஈச்வரன்தான். அவனும் ஜீவர்களும் என்றைக்கும் வேறு வேறாக இருக்கவேண்டியவர்களே என்பது அவர்களுக்கு ஸித்தாந்தமாயுள்ளபோது, ஜீவனை ஜீவாத்மா என்றால், ‘பரமபதம்’ என்றும் ‘பரம் தாமம்’ என்றும் சொல்லும் அவர்களுடைய மோக்ஷ லோகத்தில் இருக்கிற ஈச்வரனைப் பரமாத்மா என்றுதானே சொல்லவேண்டும்?

ஒரே ஆத்மா என்று பரமார்த்த ஸத்ய நிலையில் சொல்லும் அத்வைதிகள், வ்யவஹாரத்தின் பார்வையில் அது ஒரு பக்கம் ஜீவனாக அந்தஃகரணத்தால் கட்டுப்பட்டிருப்பதையும், இன்னொரு பக்கம் இந்த ஜீவனுக்கு மிகமிக உயர்ந்த, பரமான, அகண்ட சக்தியோடு மாயையால் ஈச்வரனாக இருப்பதையும் கருத்தில் கொண்டு ஜீவாத்மா, பரமாத்மா என்று பேதம் கல்பித்தாற்போலப் பேசுகிறார்கள். த்வைதிகளோ இது வ்யவஹாரத்தை வைத்து வெறுமே கல்பித்த பேதம்தான் என்று நினைக்காமல், ‘இதுவேதான் ஸத்யம். கீழ்ப்பட்ட ஜீவாத்மாவாக ஒன்றும், மேம்பட்ட பரமாத்மாவாக இன்னொன்றும் சாச்வதமான பேதத்துடனேயே உள்ளன’ என்று சொல்கிறார்கள்.

ஜீவாத்மா, பரமாத்மா, என்ற வார்த்தைகளைப் பற்றி இன்னம் கொஞ்சம் ஆலோசனை (ஆலாபனை!) பண்ணிப் பார்க்கலாம் :

த்வைதிகள் (விசிஷ்டாத்வைதிகளையும் த்வைதிகளில் சேர்த்தே சொல்கிறேன்) ஜீவனின் ஆத்மாவை அத்வைதிகள் சொல்லும் நிஷ்க்ரிய, நிர்குண வஸ்துவாகச் சொல்வதில்லை – அதாவது கார்யமும் குணமும் இல்லாத பொருளாகச் சொல்வதில்லை. ஆனாலும் அவர்களும்கூட இந்த்ரிய வ்யாபாரங்களில் போய் லோக விஷயாநுபோகங்களில் ஈடுபடுவதாகவே ஜீவனுக்குத் தற்போதுள்ள தன்மை அவனது நிஜமான தன்மை அல்ல என்றும், ப்ரக்ருதி சேஷ்டிதங்களிலிருந்து (இயற்கையின் சேஷ்டைகளிலிருந்து) விடுபட்டு ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்ட ஈச்வரனை அன்போடு நினைத்து அவனுக்கு ஆராதனை பண்ணிக் கொண்டிருப்பதுதான் ஜீவனின் நிஜ ஸ்வரூபமான ஆத்மாவின் ஸ்வபாவம் என்றும் சொல்கிறார்கள். அந்த நிலை இப்போது ஜீவனுக்குத் தெரியத்தானே இல்லை? அதனால் தற்போது தப்பாக உள்ள ஜீவனுக்கு இவன் ஸரியான நிலையில் இருக்கவேண்டிய ஆத்மாவைத் தெரிவிப்பதற்காக இரண்டையும் வேறுபடுத்தி, ஜீவன் வேறு ஆத்மா வேறு என்கிற மாதிரியாக ‘ஜீவாத்மா’ என்று பெயர் கொடுத்தார்கள்.

அத்வைதிகள் (பரமார்த்த நிலையில் ஜீவாத்ம பரமாத்ம பேதங்களை ஒப்புக்கொள்ளாமல் ஒரே ஆத்மாவைத்தான் சொல்பவர்களாயினும்) வ்யவஹார உலகத்தை ஒப்புக் கொள்ளும் கீழ் நிலையில் ‘ஜீவாத்மா’ என்ற ‘கான்ஸெப்டை’ ஏற்றுக்கொள்கிறார்கள். ஆத்மா என்ற நிஜத் ‘தானாக’ ஜீவன் தன்னைத் தெரிந்துகொள்ளாத வ்யவஹாரத்திலும் அவன் எதையோ ஒன்றைத் ‘தானாக’ நினைத்துக்கொண்டுதானே இருக்கிறான்? அதை ஜீவாத்மா என்று சொல்லிவிட்டுப் போவோமென்று ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

ஜீவ ஆத்மா, ஈச்வர ஆத்மா

ஜீவனுக்கு ஆதாரம் என்ன என்று பார்த்தால் அவனுடைய மனஸ், அப்புறம் ஆத்மா என்று போகிற மாதிரி, ஜகத்துக்கு ஆதாரம் என்னவென்று பார்த்தால் இதையெல்லாம் பண்ணி, ஒன்றோடொன்று பின்னி வைத்து ஆட்டிக்கொண்டிருக்கிற ஈச்வரன் என்று தெரிகிறது. அப்புறம் ஆலோசித்தால் அவனுக்கும் ஆதார அடிப்படையாக ஒன்றும் பண்ணாமல் தானாக இருந்துகொண்டிருக்கிற ஒரு ஆதார ஸத்யம் இருப்பதாகத் தெரியவரும். ஜகத்தைப் பண்ணுகிறவன் ஈச்வரன் என்னும்போதே, அவன் அதைப் பண்ணாமல் தானாக இருக்கிற நிலை என்ன என்பதாக அவனுடைய நிஜ ஸ்வரூபத்துக்கு ஒரு basis-ஐத் தேடவேண்டியதாகத்தானே இருக்கிறது? ஜீவ மனஸுக்கு இதே மாதிரி ஆதாரத்தைத் தேடிக்கொண்டே போனபோதுதான், “ஸதாவும் எதையாவது பண்ணிக் கொண்டேயுள்ள இந்த மனஸுக்கு ஆதாரமாக எதையும் பண்ணாமல் வெறுமே இருந்துகொண்டு மட்டும் உள்ள ஆத்மா இருக்கிறது. அதன் இருப்பு தூக்கம், மூர்ச்சை முதலியவற்றால் ‘நெகடிவ்’ ஆகவும், ஸமாதியநுபவத்தால் ‘பாஸிடிவ்’ ஆகவும் தெரிகிறது” என்று தெரிந்து கொண்டோம். அந்த ஆதாரத்தினால்தான் மனஸ் வேலை பண்ணுவதே, அது இல்லாமற் போனால் மனஸே இல்லை என்று தெரிந்துகொண்டோம். இந்தத் தனி ஜீவ மனஸுக்குச் சொன்னது ஈச்ரவன் என்ற Cosmic Mind-க்கும் பொருந்தத்தான் வேண்டும். ஈச்வரனுக்கும் ஆதார ஸத்யமாக எதுவும் பண்ணாமல் இருந்து கொண்டு மட்டும் இருப்பதான ஒன்று இருந்துதான் ஆக வேண்டும். ஜீவனுக்கு ஒரு ஆத்மா உள்ள மாதிரி, ஈச்வரனுக்கும் ஒரு ஆத்மா இருக்கவேண்டும். அதுதான் பரமாத்மா எனப்படுவது.

‘இத்தனை நாம ரூபங்களும் குணங்களும் கார்யங்களும் கொண்ட ஜகத்துக்கு ஆதாரமான ஈச்வரன் தன்னில் தானாக ஆதார ஸத்ய நிலையில் இருக்கும்போது அவனுடைய நிஜ ஸ்வரூபமாக, அதாவது ஆத்மாவாக இருப்பது எப்படியிருக்கும்?’ என்று ஆலோசித்தோமானால், அது எந்த நாமமும், ரூபமும் குணமும், கார்யமும் இல்லாததாகத் தானிருக்குமென்று தெரியும்*. “அதெப்படி?” என்றால், அதற்கென்று தனியாக ஒரு குணம், ரூபம், கர்மம், நாமம் இருந்துவிட்டால் அது இதற்கு வித்யாஸமான மற்ற குண கர்மங்கள் நாம ரூபங்கள் ஆகியவற்றை எப்படி உண்டாக்க முடியும்? பல கலர்கள் பிறக்கிற மூலம் எது என்று த்ருஷ்டாந்தத்தை வைத்து இதைப் புரிந்துகொள்ளலாம். ஊதாவில் ஆரம்பித்து சிவப்பு வரையில் V-I-B-G-Y-O-R என்று ஏழு கலர்கள் சொல்கிறார்கள். இந்த ஏழும் எதிலிருந்து உண்டாயின என்றால், எந்த வர்ணமுமேயில்லாத வெளிச்சத்திலிருந்து – colourless light-லிருந்து வந்தது என்கிறார்கள். இதை விஞ்ஞான பூர்வமாகவே colour spectrum என்று நமக்கு நிரூபித்துக் காட்டுகிறார்கள். கலரேயில்லாத ஸூர்ய வெளிச்சத்திலிருந்தே மேக மண்டலத்தில் ஒளிச் சிதறல் (refraction) ஏற்பட்டு ஏழு கலரும் உள்ள அழகான வானவில் தோன்றுவதைப் பார்க்கிறோம். கலரில்லாத வைரத்தின் பட்டைகளில் வெறும் வெளிச்சம் பட்டு ஏழு வர்ணங்களையும் வாரிக் கொட்டும் விநோதத்தைப் பார்க்கிறோம். இதிலிருந்து, பல வர்ணங்களையும் உற்பத்தி செய்யக்கூடியது ஏழு வர்ணமுமே இல்லாததாக இருக்க வேண்டுமென்று தெரிகிறது- இப்படித்தான் நாநா பேதங்கள் கொண்ட குண கர்ம நாம ரூபங்களைக் கொண்ட ப்ரபஞ்சத்துக்கு ஆதாரனாக உள்ளவனின் அடிப்படையான நிஜ ஸ்வரூபம் எந்த குணமும் இல்லாததாக, எந்த கர்மாவும் செய்யாததாக, எந்த நாமமும் தரிக்காததாக, எந்த ரூபமும் கொள்ளாததாக இருக்கவேண்டும். அதுதான் அத்வைதிகள் சொல்லும் நிர்குண, நிஷ்க்ரிய, நாம ரூபரஹித ப்ரஹ்மம்.

ஜீவனின் நிஜ ஸ்வரூபமான ஆத்மா இப்படிப்பட்டதே என்று பார்த்தோம். இதிலிருந்து இன்னம் ஆலோசித்துக் கொண்டு போனால், ஈச்வரனின் நிஜஸ்வரூபமான ஆத்மா ஜீவனின் ஆத்மா மாதிரியான இன்னொன்றாக இருக்க முடியாததென்றும், இதுவும் அதுவும் ஒன்றாகவேதான் இருக்க வேண்டும் என்றும் தெரியும்.

எப்படி?

ஜீவனின் ஆத்மா என்று வைத்துக்கொண்டாலும் ஸரி, அல்லது ஈச்வரனின் ஆத்மா என்று வைத்துக்கொண்டாலும் ஸரி. எதுவானாலும் அது குணம், கார்யம், ஊர், பேர், உருவம், உடைமை எதுவுமே இல்லாதது என்று பார்த்தோம். அது இப்படி இப்படி இல்லாதது (“நேதி” என்று இதை வேதாந்தத்தில் சொல்வார்கள்), எதுவாகவுமே இல்லாதது என்று முடிவுக்கு வரும்போது அதை ஒரு ஸைஃபர் என்றுதான் கருதவேண்டியிருந்தது. ஸைஃபர் என்பது இல்லாத வஸ்து. எனவே அதிலே இரண்டு ஸைஃபர், மூன்று ஸைஃபர் என்று இருக்க முடியாது. ‘நம்பர்களாக இருக்கிறவற்றில்தான் ஒன்று, இரண்டு, மூன்று என்று வித்யாஸமாகப் பல இருக்கமுடியும். இல்லாத ஸைபராகப் பல இருக்க முடியாது. ஆகையினாலே, ஜீவனுக்கு ஆத்மாவாயிருக்கிற ஒரு ஸைஃபர், ஈச்வரனுக்கு ஆத்மாவாக உள்ள இன்னொரு ஸைஃபர் என்று இருக்க முடியாது. இரண்டும் ஒன்றுதான் என்று ஆகிவிடுகிறது.

ஜீவ – ஜகத்தின் கோணத்திலிருந்து பார்க்கும்போது இவற்றைக் குறித்த எதுவாகவும் அது இல்லை என்பதால் இப்படி ஸைஃபராக்கினது, ஆனால் அது வாஸ்தத்வதில் எப்படி ஸைஃபராக இருக்கமுடியும்? ஸர்வமும் அதிலிருந்து தான், அது இல்லாமல் எதுவுமே இல்லை, அதுதான் ஆதாரம், நிஜஸ்வரூபம் என்று சொல்லிவிட்டு அது ஸைஃபர் என்றால் எப்படி? ஆகையினால் நம்மை ஸென்டராக வைக்காமல், அதையே ஸென்டராக வைத்துக் பார்த்தால் அது ஸைஃபர் இல்லை; அதுவே பூர்ணம் என்று தெரியும். ஏழு கலரில் எதுவாகவும் இல்லை என்பதால் அவற்றுக்கு ஆதாரமாக ‘லைட்’ என்றே ஒன்று இல்லை என்றால் அது கொஞ்சங் கூட ஸரியில்லையே! கலர்களாக அது இல்லையே தவிர ஒளி என்ற ஒன்றாக இருக்கத்தானே செய்கிறது? அப்படியே ஜீவனின் ஆத்மா என்பது அவனுடைய இந்த்ரியாதிகள், மனஸ், கார்யங்கள், குணங்கள் முதலியன இல்லாததாயிருந்தாலும் அதுதான் ஸத்யம் என்ற இருப்பாகவே இருப்பது. ‘அது இல்லாமல் இது எதுவும் இல்லை. அதெல்லாம் அதன் துளிச்சாயைதான். மேகத்திலோ, ‘ப்ரிஸ’த்திலோ ஒளி சிதறி வர்ணமுண்டாகிற மாதிரி மாயையிலே ஆத்ம ஒளி சிதறித்தான் ஜீவனுடையதான அந்தஃகரணம் உண்டாகி, இந்த்ரியாதிகள் வரை விரிவடைந்திருக்கிறது’ என்பதால் அது பூர்ண வஸ்துவாகவே இருக்கவேண்டுமென்று ஏற்படுகிறது. அது பூர்ணம்தான் என்பதற்கு proof மஹான்களின் ப்ரத்யக்ஷ அநுபவத்தில் இருக்கிறது! ஆத்மாவிலே நிலைத்த அவர்கள்தான் கொஞ்சங்கூட எந்தவிதமான குறைவும், குறையும் இல்லாமல், நிறைந்த நிறைவோடு இருக்கிறார்கள். அந்த நிறைவுக்கு அதிகமாக எதையும் கூட்டமுடியாது. இப்படிக் கூட்டுவதற்கில்லாமல் நிறைவாக இருப்பதுதானே பூர்ணத்வம்? இப்படியே, இதைவிட, ஸ்பஷ்டமாக, தெரிவது – ஸகல ஜகத்தையும் உண்டாக்கி, ஸகல ஜீவர்களையும் ஆட்டிப் படைக்கும் ஈச்வரனுக்கும் ஆதார ஸத்யமாயுள்ள அவனுடைய ஆத்மா நிச்சயமாக பூர்ணமாகத்தானிருக்க வேண்டுமென்பது. ஜீவன் என்று தனியாக உள்ளவரையில் அந்தஃகரணம்தான் ஜீவனை இப்படித் தனியாக ஆக்கியிருக்கிற மாதிரியே, ஈச்வரன் என்று ஒருவனை ஆக்கியிருப்பதும் மாயையே. மாயையோடு சேர்ந்த பிரம்மமே ஈச்வரன். அப்புறம் அவனிடமிருந்து ஜீவ – ஜகத்துக்கள். அப்படியானால் ஈச்வரனின் ஆத்மா எப்படியிருக்கவேண்டும்? எல்லா ஜீவர்களின் தனித்தன்மை கொண்ட அந்தஃகரணங்களுக்கும் காரணமாய் இருக்கின்ற மாயையிலேயே நேராக எதன் ஒளி சிதறி ஜீவ ஸமூஹம் முழுதையும் பண்ணியிருக்கிறதோ, அதோடு ஜடமான ப்ரபஞ்சத்தையும் பண்ணியிருக்கிறதோ அது பூர்ண வஸ்துவாகத்தானிருக்க வேண்டும். “ஸர்வ பரிபூர்ண அகண்ட தத்வம்” என்று தாயுமானவர் சொல்கிறதாகத் தான் அது இருக்கவேண்டும் என்பதில் கொஞ்சங்கூட ஸந்தேஹமில்லை.

ஜீவனின் ஆத்மா பரிபூர்ணமானது; ஈச்வரனின் ஆத்மாவும் பரிபூர்ணமானது என்றால் அது ஒரு பூர்ணம், இது இன்னொரு பூர்ணம் என்று இருக்க முடியாது. எப்படி இரண்டு ஸைஃபர் இருக்க முடியாதோ, அப்படியே இரண்டு பூர்ணமும் இருக்கமுடியாது. ஸைஃபர் ஒன்றுதான். Infinity என்கிற அனந்தமும் ஒன்றுதான். “இரண்டும் ஒன்று” என்று சொல்லும்போதுகூட நம்பர் கொடுத்துவிடுகிறோம். ஆகவே ஒன்று என்பதுகூடத் தப்பு. இதனால்தான் ஆசார்யாள் இரண்டு இல்லை என்று பொருள்படும்படியாக “அத்வைதம்” என்று பேர் வைத்தாரே தவிர, ஒன்று என்று அர்த்தம் கொடுக்கும்படி “ஏகம்” என்று வைக்கவில்லை. ஆகக்கூடி, இரண்டு பூர்ணம் நிச்சயமாய் இருக்க முடியாது. பூர்ணம் என்றாலே அதற்குள் அடங்காததாக எதுவுமில்லை, அதைத்தவிர எதுவுமில்லை என்றுதான் அர்த்தம். அப்படியிருக்க ஒரு பூர்ணத்துக்கு அதிகமாக இன்னொன்று எப்படியிருக்க முடியும்? ஒரு பூர்ணத்துக்குள் இன்னொன்றை அடக்கினால் அதன் அங்கமாகிவிட்ட இது எப்படிப் பூர்ணம் என்ற பெயருக்கு உரியதாக முடியும்?

ஆக, ஜீவனின் ஆத்மாவும் ஈச்வரனின் ஆத்மாவும் நம்முடைய மாயா லோக பார்வையில் தெரிகிறபடி ஸைஃபராயிருந்தாலும் ஸரி, அல்லது வாஸ்தவமாய் அவை உள்ளபடி பூர்ணமாயிருந்தாலும் ஸரி, எப்படியானாலும் அவை இரண்டும் ஒன்றேதான்; வேறு வேறு இல்லை என்று தீர்மானமாகிறது. “இவை”, “இரண்டும்” என்று பிரித்துப் பன்மையில் சொல்வதே தப்பு. ஒரே ஆத்மா, அல்லது ஸத்யம், அல்லது ப்ரஹ்மம்தான் ஈச்ரவனாகவும் ஆகியிருக்கிறது, ஜீவனாகவும் ஆகிவிடுகிறது. இருந்தாலும் வ்யவஹாரத்தில் ஈச்ரவன், ஜீவன் என்கிறவை ஆத்மாவுக்கு வேறுமாதிரி தெரிகிறது. இதனால்தான் ‘ஜீவாத்மா’, ‘பரமாத்மா’ என்ற வார்த்தைகள் ஏற்பட்டது.


* இவ்விஷயமாக இதே பகுதியிலுள்ள “வண்டு ஸ்தோத்ர”த்தின் உட்பிரிவுகளான “நிற்குணமும் குனநிலயமும்“, “க்ருஷ்ண பக்தர்களான அத்வைதிகள்” என்பவற்றிலும் பார்க்க.

ஸத்ய ஆராய்ச்சி – ஜீவ கோணத்திலும், ஜகத் கோணத்திலும்

ஆனால் இதை விட்டுவிட்டாற்போல, இந்த்ரியம் – அதற்கு ஆதாரமான மனஸ் (ஜீவனை ஒரு தனி ஆஸாமி போலக் குறுக்கி காட்டுவதே இதுதான்) – அந்த மனஸுக்கு ஆதாரமான ஆத்மா என்று சொல்லிக்கொண்டு போவதற்குக் காரணம், ஜீவனுடைய நிலையிலிருந்து அவனுடைய உள் ஆதாரத்தைப் பார்த்துக்கொண்டு போவதுதான். சரீரம்தான் முதலில் தெரிகிறது. இது ஜீவனுடைய தனிப்பட்ட சரீரம்தான். அப்புறம் அதற்குள்ளே அதை ஆட்டிவைக்கும் இந்த்ரிய ருசிகள் தெரிகின்றன. இந்த இந்தரிய ருசிகளும் ஒரு தனி ஜீவனுக்கு உரியவைதான். அப்புறம் இதற்கும் உள்ளேயிருந்து இந்த ருசிகளை உண்டாக்கி ஆட்டிவைப்பதான மனஸ் என்பது தெரிகிறது. இதுவும் தனிப்பட்ட ஜீவனைச் சேர்ந்ததுதான், Individual mind -தான். கடைசியிலே அடையப்போகிற ஆத்மாதான் ஜீவனுடைய ஸார பூதமான ஆதார ஸத்யம். அதனாலே, அதை, ந்யாயமாகப் பார்த்தால், தனி ஜீவனுடையது என்று சொல்லவேகூடாது என்றாலும் – தனி ஜீவத்வம் அடிபட்டுப்போனால்தான் அந்த ஆத்மாவின் அநுபவமே உண்டாகும் என்னும்போது அதை இவனுடையது என்று சொல்வது ந்யாயமில்லை என்றாலும்-அதுதான் தன்னுடைய உண்மை நிலை என்று ஒரு ‘உடைய’ போட்டு ஜீவன் நினைப்பதால், எதற்குமே அது உடைமையாயிருக்க முடியாதாயினும் அதையும் நம்முடைய பாவனையைக் கொண்டு தனி ஜீவனைச் சேர்ந்த விஷயமாகவே வைக்க இடமேற்படுகிறது. இப்படியாக ஒரு ‘இன்டிவிஜுவல்’ (தனிப்பட்ட) ஜீவனின் ஸொந்தமான உள்தத்வம் என்று அவனை மையப்படுத்தி உள்ளே உள்ளே போய்ப் பார்க்கிறபோது இந்த்ரியங்களைக் கொண்ட சரீரம் – இந்த்ரியங்களை ஆளும் மனஸ் (மனஸை அங்கமாகக் கொண்ட அந்தஃகரணம்) – அதற்கும் ஆதாரமான ஆத்மா என்றே போய் முடிந்துவிடுகிறது. இவனொருத்தனையே ஆராய்ந்துகொண்டு போனதால், இவனை மட்டுமில்லாமல் மற்ற ஜீவ ப்ரபஞ்த்தையும், ஜட ப்ரபஞ்சத்தையும் கல்பித்த ஈச்வரனை இங்கே மனஸுக்கும் ஆத்மாவுக்கும் நடுவே கொண்டுவராமலே சொல்லிக்கொண்டு போகும் படியாக ஆகிறது.

ஆனால் ஸத்ய தத்வத்தை ஜீவனுடைய நிலையிலிருந்து, ஜீவனுடைய Point of view -விலிருந்து பார்க்காமல், ஜீவ ஜட ப்ரபஞ்சமான ஜகத்தின் கோணத்திலிருந்து ஆராய்ந்து கொண்டு போனால் அப்போது ஈச்வர தத்வம் வந்துவிடும்.

ஜகத்துக்கு ஆதார ஸத்யம் என்பதாக எந்த மூலவஸ்து ஆராயப்படுகிறதோ அதற்குத்தான் ‘ப்ரஹ்மம்’ என்று பெயர். ‘ப்ருஹ்’ என்றால் ‘பெரியதானது’. பெரியதிலெல்லாம் இதுவே பெரியது என்பதால் ‘ப்ரஹ்மம்’ என்று பெயர். ஸகல ஜீவ – ஜட லோகங்களுக்கும், அதாவது சேதனமான கோடானு கோடிவித ஜீவ ஜந்துக்களுக்கும், எத்தனை விஸ்தாரம் என்று கணக்குப் பண்ணுவதற்கே தலை சுற்றுகிற மாதிரி கோடி கோடி கோடி மைல்கள் பரவியிருக்கிற கோடாநுகோடி நக்ஷத்ராதிகளுக்கும் எது காரணமோ அதுதானே பெரிசில் எல்லாம் பெரிசு? அதனால் ‘ப்ரஹ்மம்’ என்று பெயர். இப்படி அதுவே ஸர்வகாரணம், ஸர்வாதாரம், ஸகலத்துக்கும் மூலம் என்றால் அப்போது ஜீவனுக்கும் அதுவேதானே ஆதாரமான மூலவஸ்துவாக இருக்கவேண்டும்? இப்படி ஜீவனுக்கு ஆதாரமாயிருப்பதைதானே அவனுடைய நிஜ ஸ்வரூபமான ஆத்மா என்பதாகச் சொன்னோம்? அதனாலே ஆத்மாவேதான் ப்ரஹ்மம் என்று ஆகிவிடுகிறது. ஜீவனுடைய ‘பாயிண்ட்’டிலிருந்து அவனுக்கு அடிப்படையான ஸத்யம் எது என்று பார்த்துக்கொண்டே போய் நாம் முடிவாக அடைந்த ஆத்மா எதுவோ அதையே தான் ஜகத்தின் ‘பாயிண்ட்டி’லிருந்து அதற்கு எது அடிப்படை என்று பார்த்துக்கொண்டு போகும்போது ‘ப்ரஹ்மம்’ என்கிறோம் என்று தெரிகிறது.

ஆத்மாவே ப்ரஹ்மம் என்று சொல்வதைவிட ப்ரஹ்மமே ஆத்மா என்பதுதான் பொருத்தமானது. ஆத்மாவும் ப்ரஹ்மமும் ஒன்றேதான் என்றாலும்கூட, ஒரு ஜீவனைக் குறித்ததாகவே நினைக்கப்படும் ஆத்மாவை ஸர்வ ஜீவ – ஜட காரண வஸ்துவான ப்ரஹ்மம் என்பதைவிட, ‘ப்ரஹ்மமேதான் ஆத்மா; அதாவது, ஸகல ப்ரபஞ்சங்களாகவும் எது தோன்றுகிறதோ, அதுவேதானப்பா நீயாகவும், நானாகவும், அவனாகவும் இப்படி நாநா ஜீவர்களாகத் தோன்றுவது’ என்று சொல்வதுதான் பொருத்தம். அதுதான் அழகு. ஜீவனாகத் தன்னை நினைத்துக் கொண்டிருப்பவன் ப்ரஹ்மமேதான். இவனுடைய ஆத்மாதான் ஸர்வாத்மா. ஸர்வ ஆத்மா என்றால் பல ஆத்மா இல்லை. ஆத்மா ஒன்றுதான். ஸர்வத்துக்கும் அந்த ஒன்றே ஆத்மா. ஸர்வ ஜீவ ஜகத்துக்களாகவும் அந்த ஒன்றே மாயா சக்தியாலே வேஷம் போட்டுக்கொண்டு தோன்றுகிறது. இப்படிச் சொல்கிறபோதுதான், அதாவது ஜீவனின் ‘பாயிண்ட்’டில் ஆதாரமென்ன என்று பார்க்காமல், ஜகத்தின் ‘பாயிண்ட்’ டிலிருந்து ஆதாரத்தை ஆராய்ச்சி பண்ணும்போதுதான், ஆத்மாவுக்கு அடுத்தாற்போல், அது மாயையாலே போட்டுக்கொண்டுள்ள ஈச்வர ரூபமான Cosmic Mind வந்துவிடும். அப்புறம்தான் அது சின்ன மனஸ்களான நம் மனஸ்களை உண்டு பண்ணி, நமக்குத் தனி அஹங்காரத்தைக் கொடுத்து ஜீவர்களாக ஆக்குவது. இந்த ஈச்வரனேதான் இந்த்ரிய மூலமாக ஜீவ மனஸ் பலவித அநுபோகங்களை எதிலிருந்து பெறுகிறேதா அந்த ஜகத்தையும் தோற்றுவிப்பது.

இன்னொரு தினுஸாகச் சொல்கிறேன்.

ஈச்வர உபாஸனை

ஆகவே ஜீவனின் இந்த்ரியம், மனஸ் ஆகியவற்றுக்கு அப்பால் ஆத்மா என்றே அத்வைத நூல்களில் பெரும்பாலும் சொல்லிக்கொண்டு போனாலும், ஜீவ மனஸுக்கு மேலேயும், (ஜகத் என்பது அடிபட்டுப்போய் எந்தக் கார்யமும் நினைப்பும் இல்லாமலிருக்கிற) ஆத்மாவுக்கு கீழேயும் ஜகத் காரணமான, ஜகத் வ்யாபாரத்தை நடத்துவதான ஒரு பரமாத்ம சக்தி இருக்கிறது. ஜீவனுக்குக் கர்மாப்படி ஜன்மாக்களைத் தந்து ஆட்டி வைத்துக்கொண்டிருப்பது அந்தப் பரமாத்ம சக்தியே. மனஸானது அந்தப் பரமாத்மாவான மஹா மனஸை உபாஸனை பண்ணின பின் தான் ஐகாக்ரியம் அடைந்து (ஒருமுகப்பட்டு), அப்புறம் அதற்கு ஆதராமாயிருக்கும் ஆத்மாவிலே போயக் கரையமுடியும். இப்படிதான் ஆசார்யாள் பாதை போட்டுக் கொடுத்திருக்கிறார்.

மனஸ் சுத்தமாவதற்காக சாஸ்த்ரப்படியான கர்மாவைப் பண்ணவேண்டும்; பலவற்றிலே சிதறிக்கொண்டிருக்கிற மனஸ் ஒருமுகப்படுவதற்காகத் தன்னைப் பண்ணின மனஸான ஈச்ரவனை உபாஸிக்கவேண்டும்; இப்படிச் சுத்தப்படுத்தி ஒருமுகப்படுத்திய பிறகுதான் அது தன் ஸ்வரூபத்தையே ஆத்மாவில் இழப்பதற்குரிய பக்வத்தை அடையும்; அப்போதுதான் ஞான மார்க்கத்தில் ஆத்ம விசாரம் செய்யவேண்டும் என்று ஆசார்யாள் வைத்திருக்கிறார்.

சின்ன மனஸ் அந்தப் பெரிய மனஸை நினைத்து, அதனிடம் பணிவோடு பக்தி பண்ணிக்கொண்டு நின்றால் அந்தப் பெரிய மனஸ் இதற்கு அநுக்ரஹம் செய்ய நினைக்கிறது. ‘இதை மாயையிலிருந்து விடுவிக்கலாம்’ என்று அருளோடு நினைத்து, சின்ன மனஸினனான ஜீவனுக்கு அத்வைதத்திலே ஆசையை, பிடிப்பை ஏற்படுத்தி இவனை ஆத்ம மார்க்கத்தில் போகப் பண்ணுகிறது. ஈச்வரன் என்கிற அந்த Cosmic Mind -ன் அநுக்ரஹத்தால்தான் ஒரு ஜீவனுக்கு அத்வைதத்தில் ருசியே ஏற்படுகிறது என்று அத்வைத சாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிறது.

ஈச்வராநுக்ரஹாதேவ பும்ஸாம் அத்வைத வாஸநா*

ஆனபடியால் ஜீவாத்மாவின் ஸார பூதமான அடிப்படை உண்மை நிலை என்ன என்று பார்த்துக்கொண்டே போகிறபோது சரீர இந்த்ரியங்கள், அப்புறம் மனஸ், அப்புறம் அடி ஆதாரமாக ஆத்மா என்று சொல்லிவிட்டாலும், ஜீவமனஸுக்கு அப்புறம் அனேக ஜீவர்களையும் ஜகத்துக்களையும் கல்பிப்பதான ஈச்வரன் என்ற இன்னொரு பெரிய மனஸ் வருகிறது.


* தத்தாத்ரேயரின் ‘அவதூத கீதை’ முதல் ச்லோகம்.

வேதாந்த ‘ஈச்வரன்’ சிவனல்ல

ஈச்ரவன் என்றவுடன் சிவன் என்று அர்த்தம் பண்ணிக்கொண்டுவிடக்கூடாது. பொதுவிலே ஈச்ரவ சப்தம் சிவனுக்குத்தான் உரியதாக இருக்கிறது. ஈச்வரன் கோவில், பெருமாள் கோவில் என்றே சிவ விஷ்ணு ஆலயங்களை வித்யாஸப்படுத்திச் சொல்வதாயிருக்கிறது. வைஷ்ணவர்கள் மஹாவிஷ்ணுவை ‘ஈச்வரன்’ என்று சொல்லாமல் ‘பகவான்’, ‘பெருமாள்’ என்று சொல்கிறார்கள். (‘பகவான்’ என்பதன் அடியாகப் பிறந்த) பாகவதன் என்றால் விஷ்ணு பக்தன் என்றே அர்த்தம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், பழைய வேதாந்த சாஸ்த்ரத்தில் – ராமாநுஜரின் விசிஷ்டாத்வைத வேதாந்தம் உள்படத்தான் சொல்கிறேன் – இப்படி இல்லை. ராமாநுஜ மதம் உள்பட எந்த வேதாந்த சாஸ்த்ரமானாலும் அதில் ஜீவ ஜட ஸமூஹப் ப்ரபஞ்சத்தை எல்லாம் ஆக்கி அளித்து அழிக்கிற பரமாத்ம சக்தி எதுவோ அதை Cosmic Mind என்றேனே, அதை, ‘ஈச்வரன்’ என்ற பெயரால்தான் குறிப்பிடுவார்கள். மஹா விஷ்ணுதான் இந்த மஹாசக்தி என்று ஸித்தாந்தம் பண்ணினவர்களும் அவனை “ஈச்வரன்” என்றே குறிப்பிட்டார்கள்.

பிற்பாடு வைஷ்ணவர்கள் ‘ஈச்வரன்’ என்று பெயர் வைத்துக்கொள்வதை நிறுத்திவிட்டாலும், ஸ்ரீ வைஷ்ணவ தர்சனத்தின் (ஸித்தாந்தத்தின்) முதல் ப்ரவர்த்தகர் (ஆசார்யர்) என்று கருதப்படும் நாதமுனிகள் என்பவரின் தகப்பனார் பெயரே ஈச்ரவ பட்டர் என்பதுதான். ராமாநுஜருக்கும் முந்தி அந்த ஸித்தாந்தத்தில் இரண்டு பூர்வாசார்யர்களைச் சொல்வார்கள். ஆளவந்தார் என்பவர் ஒருவர். அவருக்கும் முந்தி இருந்தவர் நாதமுனிகள். நாதமுனிகளின் பேரர்தான் ஆளவந்தார். நாதமுனிகளின் தகப்பனாருடைய பெயர் ஈச்வர பட்டர் என்பது. எந்த ஒரு தெய்வத்தையும் குறிப்பிடாமல் பொதுவில், ‘கடவுள்’, ‘ஆண்டவன்’ என்கிறாற்போல, ஜீவலோகத்தை ஆட்டிவைத்துக்கொண்டிருக்கும் சக்தியையே ‘ஈச்வரன்’ என்பது.

ஈச்வரன் அல்லது ஸகுண ப்ரஹ்மம்

அந்தக் காரண வஸ்து என்ன? அதுதான் மாயாசக்தி. ப்ரஹ்மத்தை இப்படிப் பலவான ஜீவர்களாகவும் ஜகத்தாகவும் காட்டிக்கொண்டிருக்கும் சக்தி.

தனக்கு அந்யமாக ஏதுவுமே இல்லாத, இருக்கமுடியாத வஸ்துவே ப்ரஹ்மமாதலால், இந்த மாயா சக்தியும் அதற்கு வேறாக இருக்க முடியாதுதான். அப்படியிருந்துவிட்டால் ப்ரஹ்மமே எல்லாவற்றுக்கும் மூலாதாரம் என்பது பொய்யாகிவிடும்! இதிலிருந்து தெரிவது என்னவென்றால், ப்ரஹ்மமே தான் மட்டுமாக எந்தத் தொடர்பும் இல்லாமிலிருப்பதோடுகூட, தன்னுடைய மாயாசக்தி என்பதான ஒன்றிடம் தொடர்பு கொண்டாற்போலவும் ஒருநிலை இருக்கிறது. தான் மட்டுமாகத் தனித்திருப்பதே நிர்குண ப்ரஹ்மம் என்பது. மாயையோடு கூடியிருக்கும்போது அதுவே ஸகுண ப்ரஹ்மம் எனப்படுகிறது. குணம் என்றால் ப்ரத்யேக லக்ஷணம். தனித்தன்மை என்பது, எந்த குணமும் இல்லாதது நிர்குணம். குணங்களுள்ளது ஸகுணம். ஈசவ்ரன் என்பது ஜகத் வ்யாபாரம் செய்கிற ஸகுண ப்ரஹ்மத்தைத் தான்.

ஒரே ஆத்மாவையே, ஜகத்தில் படைக்கப்பட்டு ஆட்டி வைக்கப்படுபவனாக இருக்கும்போது ஜீவாத்மா என்றும், அப்படிப் படைத்து ஆட்டிவைக்கிற ஸகுண ப்ரஹ்மமான ஈச்ரவனாக இருக்கும்போது பரமாத்மா என்று சொல்கிறோம்.

ஈச்வரனாக மாயா சக்தியுடன் கூடியுள்ளபோது (நிர்குண) ப்ரஹ்மம் ஜகத்தைக் கல்பிக்கிறது என்றால் அப்போது இந்த ஈச்வரனை மஹாமனஸ் என்று சொல்லலாம். அல்பமான ஜீவ மனஸ் இருக்கிறாற்போல, கார்யங்களை நடத்தி வைக்கிறாற்போல, ஈசர்வரனான பரமாத்மாவின் சிந்தனையிலேயே ஜகத் உண்டாகிறது. ஜக்த வ்யாபாரத்தை அவனே நடத்துகிறானென்றால் ‘மஹாமனஸ்’ என்று சொல்லலாம்தானே? எல்லா ஜீவ மனஸ்களுக்கும் மூலமான மஹாமனஸ் பரமாத்மா என்று சொல்லலாம். Cosmic Mind என்கிறார்களே, அது!

இந்த மனஸுக்கும் நம்முடைய ஜீவ மனஸுக்கும் உள்ள பெரிய வித்யாஸம் நம்முடைய மனஸுக்கு ஆத்மாவைத் தெரிய முடியாது. மனஸ் அழிந்தால்தான் ஆத்மா விளங்கும். ஆனால் ஈச்வரனோ மஹாமனஸாயிருந்து கொண்டே ஆத்மஞான ரூபியாகவும் இருப்பவன். முன்னேயே பார்த்த ஸமாசாரம்.

பரமாத்மா : ஜகத் காரணன், அந்தர்யாமி

ஆனாலும் நெடுங்காலமாக நடைமுறையில் பரமாத்மா, ஜீவாத்மா என்று இரண்டு வழங்கி வருகிறது. நடைமுறை லோக நாடகத்தை வைத்து இப்படிப்பட்ட பாகுபாடு ஏற்பட்டிருக்கிறது.

லோகத்திலே என்ன பார்க்கிறோம்? ஜட லோகங்களும் ப்ரக்ருதியும் பலவிதமாகத் தொழில்படுகிறது. ஸூர்யனைச் சுற்றி க்ரஹங்கள் வருகின்றன. உலகத்தைச் சுற்றிச் சந்த்ரன் வருகிறது. இதனால் பகல் இரவு, அயனங்கள், பருவக் காற்றுகள் முதலியன உண்டாகின்றன. ஸூர்ய சக்தியில் பயிர் பச்சை வளர்கின்றன. இப்படிப் பல சேர்ந்து மநுஷ்ய ஜீவர்களின் வாழ்க்கைக்கு ஏற்றதாக உலகத்தை ஆக்கித் தருகின்றன. மநுஷ்யர்களிலும் மற்ற ஜீவ ஜந்துக்களிலும் ஸ்த்ரீ-புருஷர்கள் சேர்ந்து இன வ்ருத்தி செய்துகொள்கிறார்கள். இன்னம் புத்தி, பலம் முதலியவற்றால் என்னென்னவோ செய்கிறார்கள். ஒவ்வொருத்தர் ஒவ்வொருவிதமான புத்தி, பலங்களைப் பெற்றிருக்கிறார்கள். பூர்வகர்மா என்று அவரவர் பண்ணியது அவர்களை ஜன்ம ஜன்மாவாகப் பிடித்துக் கொண்டு பலனை அநுபவிக்கும்படிப் பண்ணுகிறது. இப்படி எத்தனையோ ஸமாசாரங்கள் ஒரு ஆர்டரில் ஒன்றுசேர்ந்திருப்பதில்தான் நடைமுறை லோக வாழ்க்கை என்பது ஏற்பட்டிருப்பது தெரிகிறது. அதனால் இதை எல்லாம் படைத்து, இன்னின்ன மாதிரி நடத்தி வைத்துக்கொண்டிருக்கிற ஒருத்தன் இருக்கவேண்டும் என்று தெரிகிறது. அவனைத்தான் பரமாத்மா என்பது. ‘பரம்’ என்றால் உயர்ந்த, ச்ரேஷ்டமான என்று அர்த்தம். ஸகல ஜகத் காரணனாகவும், அதன் கார்யங்களுக்கு அந்தர்யாமியான கர்த்தனாகவும் உள்ளே பேருயிராக அவன் இருப்பதால் ‘பரமாத்மா’ என்று சொல்கிறார்கள்.

அத்தைவ சாஸ்த்ரங்களை அநுஸரித்துப் பேசிக்கொண்டு போகிறபோது, ஜீவனின் சரீரம், இந்த்ரியம், அப்புறம் மனஸ் சித்தம் முதலிய அடங்கிய அந்தஃகரணம், அதற்கும் அப்புறம் மநோ இந்த்ரிய சேஷ்டையில்லாத வெற்றுவெளியான ஆத்மா என்று சொல்லிக்கொண்டு போய்விடும்படி ஆகிறது. பல ஜீவர்களும் ஒரே மாதிரியான அநுபவங்களைப் பெறும்படியான ஜகத் ஒன்று இருக்கிறதே! அதன் தோற்றம் எப்படி என்பதைச் சொல்ல இங்கே இடமேற்படவில்லை. இதில் அத்வைதிகளுக்கிடையிலேயே தத்வங்களை ரொம்பவும் வித்யாஸப்படுத்திக்கொண்டு போகும்போது வித்யாஸமான அபிப்ராயங்கள் இருக்கின்றன. (எனவே அத்வைதிகளின்) பொதுக்கருத்தை ‘ஸிம்பப்ளிஃபை’ பண்ணிச் சொல்கிறேன் :

மனஸ் இருப்பதால்தான் ஜீவனுக்கு ஜகத்தின் அநுபவம் ஏற்படுகிறது. ஜன்மாக்கள், உபத்ரவங்கள் எல்லாம் இதிலிருந்தே ஏற்படுகின்றனவாதலால் மனஸை இல்லாமல் பண்ணிக்கொண்டு ஆத்மாவாய் இருந்துடணும் என்று சொன்னேன். ஒரு தனி ஜீவனுக்கு ஜகத்தின் அநுபவம் மனஸினால் ஏற்படுகிறது. அதனால் மனஸை அடக்கி அந்த அநுபவத்தைப் போக்கிக்கொண்டு ஆத்மாநுபவம் அடையவேண்டும் என்பது ஸரி. ஆனால், இவன் தனி மனஸை அடக்கினவுடன் ஜகதநுபவம் இவனுக்குப் போகிறதே ஒழிய, அந்த ஜகத்தே இல்லாமல் போய்விடுகிறதா என்ன? மற்ற ஜீவர்கள் அவர்களுடைய மனஸ்களால் அதை அநுபவிக்கத்தானே செய்கிறார்கள்? ஜகத்தின் அழிவு இவன் மனஸினால் ஏற்படவில்லை என்பது போலவே, ஜகத்தின் தோற்றமும் இவனுடைய தனி மனஸின் கல்பனையில்லை என்பது ஸ்பஷ்டமாகிறது. இவனுடைய மனோ கல்பனையே ஜகத் என்றால், மற்ற ஜீவர்களுக்கும், ஸகல ஜீவர்களுக்கும் ஜகத் என்பது ஒரே மாதிரியாக, objective reality என்ற பொதுவான வெளி உண்மை மாதிரியான ஒன்றாக இருக்காது. க்ரஹ நக்ஷத்ராதிகளின் ஸஞ்சாரத்திலிருந்து அணுக்குள்ளே எலெக்ட்ரான் – ப்ரோடான் ஸஞ்சாரம் வரையிலாக நடக்கிற எத்தனையோ விசித்ரங்களையெல்லாம் விசித்ரம் என்றாலும், ஒவ்வொன்றும் இஷ்டப்படி நடக்காமல் அநேக விதிகிளின்படியே இவை நடப்பதைக் கவனித்தோமானால் இவ்வளவையும் ஏதோ ஒரு தனி ஜீவ மனஸ் பண்ணினதாகச் சொல்வதற்கில்லை.

இந்த மனஸினால்தான் ஒரு ஜீவன் கர்மாக் கட்டில் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படுகிறான் என்பதை கவனித்தோமானால் போதும்! எல்லாம் மனோ கல்பனை என்றால் எங்கேயாவது ஒரு ஜீவன் தானே தனக்கு இப்படி அவஸ்தையைக் கல்பித்துக்கொள்வானா? எல்லாம் மனோ கல்பிதமாயிருந்து, (இப்போது நமக்கு நன்றாகத் தெரிகிறபடி) பாபங்களைப் பண்ணுவதிலேயே மனஸுக்கு அதிகமான ப்ரவ்ருத்தியும் இருக்கிறதென்றால், அப்போது அந்த மனஸே இந்த பாபங்களுக்காக அநேக தண்டனைகளை அநுபவிக்க வேண்டுமென்று தன்னையே கஷ்டப்படுத்திக் கொள்ளுமா என்ன?

இதெல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு ஜீவனுக்கு அந்யமாக அநேக ஜீவர்கள் அவனுக்குத் தெரிகிறார்களே, அவர்களையெல்லாம் இவன் மனஸா படைத்தது? அப்படிப் படைத்திருந்தால் அதில் யார் எப்படிப்பட்டவர் என்று இவனுக்குத் தெரியவேண்டுமே! ஆனால் நடைமுறையில் கொஞ்சங்கூட அப்படிக் காணோமே! எத்தனை பழகினாலும் ஒருத்தர் எப்படிப்பட்டவர் என்று தீர்மானம் செய்து கொள்ள முடியாமலிருக்கிறதே! யோக்யர் என்று நினைத்து பலரிடம் ஏமாந்து போகிறோம். தப்பானவர் என்று நாம் நினைத்த ஒருவர் யோக்யர் என்று அப்புறம் தெரிந்து கொள்கிறோம்.

இன்னொன்று: உங்கள் மனஸின் கல்பனைதான் மற்றவர் என்று நீங்கள் நினைத்தால், அவர்களில் ஒவ்வொருவரும் அவனுடைய மனோ ஸ்ருஷ்டிதான் நீங்கள் என்று நினைக்கலாம்! எல்லா ஜீவர்களும் ஏதோ ஒரு ஜீவனின் மனோ கல்பனை என்றால், இந்த ஒரு ஜீவன் தன்னுடைய மனஸை அழித்து ஆத்மாவாகி முக்தி அடைந்தவுடன், மற்ற அத்தனை பேருமே இல்லாமல் அல்லவா போய் விடவேண்டும்? ஆனால் நடைமுறையிலோ எத்தனையோ மஹான்கள் மநோநாசம் செய்து அத்வைத முக்தி அடைந்திருக்கிறார்களென்றாலும், ஜீவ ப்ரபஞ்சமும் ஜட ப்ரபஞ்சமும் இருந்துகொண்டுதானே இருக்கின்றன?* இப்படி ஆலோசித்துக்கொண்டு போனால் மற்ற ஜீவ ஜகத்துக்களால் ஒருவன் பெறுகிற அநுபவத்துக்குத்தான் அவனுடைய மனஸ் காரணமே தவிர, அந்த ஜீவ – ஜகத்துக்களுக்கே அது காரணமில்லை என்று தெரியும். ஆனாலும் இவற்றுக்கெல்லாம் ஒரு காரண வஸ்து இருந்தாலொழிய இவை தோன்றியிருக்க முடியாது. இத்தனை சன்ன பின்னலிலும் அநேக விதிகளைத் துளிக்கூட வழுவாமல் அநுஸரிப்பதாகவும் ஜகத் வ்யாபாரம் இருக்க முடியாது.


* இவ்விஷயம் இவ்வுரையில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும்.