அம்மா

தாயன்பைப்போலக் கலப்படமே இல்லாத பூரணமான அன்பை இந்த லோகத்தில் வேறெங்குமே காண முடியவில்லை. பிள்ளை எப்படி இருந்தாலும், தன் அன்பை பிரதிபலிக்காவிட்டாலும்கூட, தாயாராகப்பட்டவள் அதைப் பொருட்படுத்தாமல் பூரணமான அன்பைச் செலுத்திக் கொண்டேயிருக்கிறாள். ‘பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு’ என்று இதைத்தான் சொல்லுகிறோம். ‘தேவி அபராத க்ஷமாபன ஸ்தோத்திரம்’ என்று அம்பாளிடமே நம் குறைகளைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிற துதி ஒன்று இருக்கிறது. அதில் ‘துஷ்டப்பிள்ளை இருப்பதுண்டு! ஆனால் துஷ்ட அம்மா என்று ஒருத்தி கிடையவே கிடையாது என்று வருகிறது. பரிபூரணமாக அன்பையும், தன்னலமே இல்லாத உழைப்பையும், அம்மா ஒருத்தியிடம்தான் பார்க்க முடிகிறது.

குழந்தையாகப் பிறக்கிறபோதே அம்மாவிடம்தான் ஒட்டிக் கொள்கிறோம். ஆகாரம் தருவதிலிருந்து சகலத்துக்கும் அவள்தான் குழந்தைக்குக் கதியாக இருக்கிறாள். வயது ஏறுகிற சமயத்தைவிட பால்யத்தில்தான் தாயார், குழந்தை இருவருக்கும் பரஸ்பர அன்பு மிக அதிகமாக இருக்கிறது. அதிலும் மனித இனத்தைவிடப் பசுக்குலத்திடம்தான் இந்த அன்பு நிரம்பித் ததும்புகிறது. கன்று “அம்மா!” என்று கத்துவதில் உள்ள ஆவல் மாதிரி வேறெங்கும் அன்பைப் பார்க்க முடியவில்லை. இதைப் பார்த்துதான் மநுஷ்ய ஜாதியே, “அம்மா” என்று கூப்பிட ஆரம்பித்ததோ என்று தோன்றுகிறது. தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, மஹாராஷ்டிரம், கன்னடம் முதலிய பாஷைகளிலும் “அம்மா” என்றே தாயாரைச் சொல்கிறார்கள். மலையாளத்தில் “அம்மை” என்பார்கள். ஸம்ஸ்கிருதத்தில் “மா” என்றும் “அம்பா” என்றும் சொல்லுவதும் இதேதான். ஹிந்தியில் “மா”, “மாயி” என்கிறார்கள். இங்கிலீஷ் “மம்மி”, “மம்மா” எல்லாமும் கன்று குட்டியின் ‘அம்மா’விலிருந்து வந்தவைதான் போலிருக்கிறது.

இந்த அம்மாவின் அன்பு ஒரு பக்கம் இருக்கட்டும். இவள் இந்த சரீரத்திற்கு மட்டும்தான் அம்மா. அவளுடைய அல்லது நம்முடைய சரீரம் போன பிற்பாடு இந்த அம்மாவுக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை. அப்புறம் வேறு கர்ப்பவாஸம். வேறே அம்மாள் வருவாள். இப்படிச் சரீரத்திற்கு மட்டும் அம்மாவாக இல்லாமல், உயிருக்கு அம்மாவாக இருக்கிற ஒருத்தி இருக்கிறாள். சரீரம் அழிகிற மாதிரி உயிர் அழிவதில்லை. இந்தச் சரீரம் போன பிற்பாடு அந்த உயிர் இன்னொரு சரீரத்திற்குப் போகிறது. இந்த உயிரின் அம்மாதான் நமக்கு சாசுவதமாக, நிரந்தரமாக, எந்நாளும் தாயாராக இருந்து கொண்டிருக்கிறாள். கன்றுக்குப் பசுவைப் போல எந்த ஜன்மத்திலும் எந்தக் காலத்திலும் எல்லாப் பிராணிகளுக்கும் தாயாராக இருக்கும் பரதேவதையின் பாதார விந்தத்தில் நிறைந்த அன்பு வைப்பதே ஜன்மா எடுத்ததன் பிரயோஜனம். ஜன்ம நிவிருத்திக்கும் அதுவே வழி. அதாவது, உயிர் சரீரத்தை விட்டபின் இன்னொரு சரீரத்தில் புகாமல் பேரானந்தத்தில் கரைவதற்கும் அந்த அம்மாதான் கதி.

நமக்கு இருக்கிற சக்தி எல்லாம் அவளுடையதுதான். ஒரே அகண்ட பராசக்திதான், கண்டம் கண்டமாக, துண்டு துண்டாக ஆகி இத்தனை ஜீவராசிகளிடமும் துளித்துளி சக்தியை வெளிப்படுத்துகிறது. நாம் ‘சொந்த’ முறையில் எதையும் சாதித்ததாகப் பெருமைப் பட்டுக் கொள்ளவும், அகம்பாவம் கொள்ளவும் நியாயமே இல்லை. நாம் எதைச் செய்திருந்தாலும் எல்லாம் அவள் கொடுத்த சக்தியால்தான் நடக்கிறது. இதை உணர்ந்து அகம்பாவம் சிறிதும் இல்லாமல் அவளிடம் சரணாகதி செய்தால் ஒரே அம்மாவான இவள் இகத்திலும் பரத்திலும் பரமாநுக்கிரஹம் செய்வாள். எப்படி எதுவும் கேட்கத் தெரியாத குழந்தைக்கு வேண்டியதைத் தாய் தானே கவனித்துக் கொள்கிறாளோ, அப்படியே ஜகன்மாதாவாகவும் கருணாமூர்த்தியாகவும் உள்ள அம்மா, உண்மையான பக்தி வைத்தவர்கள் தன்னை எதுவும் கேட்காவிட்டாலும்கூட, தானாகவே அவர்களுக்கு இகலோகத்தில் வித்தை, செல்வம், தேககாந்தி முதலிய தந்து, பின்பு ஞானத்தில் பழுத்துப் பரமானந்தத்தைபப் பெறும்படி அருள் புரிவாள். பரம ஞான அத்வைத ஆனந்தம் நமக்குக் கிடைத்து, நாம் அந்த ஆனந்தமாகவே ஆகிவிடுவது ஒரு பக்கம் இருக்கட்டும். அது அவள் நம் கர்மாவைத் தீர்த்து, என்றைக்கோ ஒருநாள் தரப்போகிற நிலை. அது கிடைக்கிறபோது கிடைக்கட்டும். அதுவே கிடைக்கவில்லையே என்ற குறை இப்போது நமக்கு வேண்டாம். இப்போது நமக்குப் பரம அன்பு அம்மாவான அம்பாள் இருக்கிறாள். அவளுடைய அன்பை நினைத்து அவளிடமும் நாமும் அன்பைச் செலுத்துவதற்கு இப்போதே நமக்குச் சாத்தியமாகிறது. இதிலுள்ள ஆனந்தத்துக்கு மேல் நமக்கு எதுவும் வேண்டாம். அம்பாள் தியானத்தைவிட நமக்கும் நம் மாதிரியே அவளை அம்மாவாக்கிக் கொண்ட சகல லோகத்துக்கும் நிறைவான இன்பம் வேறில்லை. சகல லோகமும் சமஸ்த ஜீவராசிகளும் க்ஷேமமாக இருக்க அன்பே உருவான சாக்ஷாத் அம்பிகையை எப்போதும் ஆனந்தமாக நினைத்துக் கொண்டிருப்போம்.

அன்னபூர்ணி

நம் தேசத்தில் மட்டும் என்றில்லை; லோகம் முழுக்க துர்ப்பிக்ஷம் அதிகமாகி வருகிறது. மெஷின்கள் நிறையச் செய்து விடலாம். ஃபாக்டரிகள் நிறைய வைத்து விடலாம். ஆனால் பயிர் பச்சைகள் வளர்வது நம் கையில் இல்லாமல் இருக்கிறது. தானிய ஸம்ருத்தி (செழிப்பு) இருந்தாலொழிய, வயிறு நிரம்பினால் அன்றி, பாக்கி என்ன சுபிக்ஷம் செய்து கொண்டாலும், மொத்தத்தில் துர்பிக்ஷமாகத்தான் இருக்கிறது. பயிர் பச்சை விளைச்சலுக்கு நம்முடைய அகட விகட சாமர்த்தியங்களால் பிரயோஜனமில்லை. என்ஜினீயர் அணை கட்டலாம். ஆனால், மழையை பெய்விக்க அவரால் முடியாது. ஜகன்மாதாவான அன்னபூர்ணேசுவரியை எல்லோரும் மனஸாரப் பிரார்த்தித்துக் கொண்டால்தான் விமோசனம் உண்டு. அவளே நாம் செய்கிற மகாபாபங்களை க்ஷமித்துத் தானிய ஸம்ருத்தியை அநுக்கிரஹிப்பாள். துர்பிக்ஷம் போக அவளே பிச்சை போடுவாள்.

நம்முடைய ஆசார்யாள் ஸ்ரீசங்கர பகவத் பாதாள் காசியில் இருந்தபோது, அன்னபூர்ணி மீது ஒரு ஸ்தோத்திரம் பாடியருளினார்.

அதில் சுலோகத்துக்குச் சுலோகம் முடிவிலே, “கருணையின் பற்றுக்கொம்பாக இருக்கிற அம்மாவே, அன்னபூர்ணேசுவரியே பிச்சை போடு” என்று உருக்கமாக வேண்டிக் கொள்கிறார்.

‘பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ
மாதா அன்னபூர்ணேச்வரீ’

‘தேஹி – போடு’ என்றால் அவருக்கில்லை. அவருக்குப் பிக்ஷை ஜாம் ஜாம் என்று நடந்துகொண்டிருந்திருக்கும்! தவிரவும் நம் ஆச்சார்யாளுக்குச் சரீராபிமானம், உதரபோஷணம், தான் என்கிற எண்ணம் லவலேசம்கூடக் கிடையாது. கிரகசன் என்ற காபாலிகன் அவரிடம், “ஒரு சக்கரவர்த்தி அல்லது சந்நியாசியின் தலையைப் பலிக் கொடுத்தால் தனக்குக் கபாலியின் தரிசனம் கிடைக்கும்” என்றான். உடனே ஆச்சார்யாள், “சக்கரவர்த்தியின் தலைக்கு ஆசைப்பட்டால் உன் தலையே போய்விடும். சந்நியாசியின் தலை வேண்டுமானால் இதோ இந்தத் தலையை எடுத்துக் கொள்” என்று தனது சிரசையே தொட்டுக் காட்டினார். அப்புறம் ஈஸ்வர சங்கல்பத்தால் கதை மாறிப்போயிற்று. அது வேறு விஷயம். இப்போது நான் அந்தத் கதையைச் சொல்ல வரவில்லை. ஆச்சாரியாளுக்குக் கொஞ்சம்கூட அஹங்கார மமகாரமே கிடையாது. தேகாபிமானமே கிடையாது என்பதற்காக இதைச் சொன்னேன். அப்படிப்பட்டவர் “பிக்ஷாம் தேஹி – பிச்சை போடு” என்றால் என்ன அர்த்தம்?

இந்த ஸ்தோத்திரத்தின் கடைசி சுலோகத்தைப் பார்த்தால் அர்த்தம் புரியும். அதில், ‘எனக்குப் பார்வதியே அம்மா; பரமேசுவரனே அப்பா! சிவபக்தர்கள் எல்லாம் பந்துக்கள்; மூவுலகமும் வீடு’ என்கிறார். எனவே தேஹி – பிச்சை போடு என்று இவர் கேட்கிறபோது, திரிலோகங்களுக்கும் பிச்சை போடு என்று பிரார்த்தித்ததாகவே அர்த்தமாகிறது.

அதோடு, தனக்கு என்றே வேண்டிக்கொள்கிற நம் மாதிரி இருக்கப்பட்டவர்கள், பாராயணம் செய்வதற்குப் பொருத்தமாக இப்படிப் பிரார்த்தனை செய்திருக்கிறார்.

அன்ன பிக்ஷை மட்டும் பிரயோஜனமில்லை. முடிவில் ஞானமில்லாமல் வெறுமே தின்று தின்று ஊனை வளர்த்துப் பிரயோஜனமில்லை. கையில் க்ஷீரான்ன (பால் சோற்று)ப் பாத்திரமும், கரண்டியும் வைத்துக்கொண்டு அன்புருவாக உணவுபோடும் அன்னபூரணி இந்த ஞானத்தையும் விசேஷமாக அநுக்கிரஹிக்கிறாள். ஞான வைராக்கியப் பிச்சையைத்தான் ஆதிசங்கரரும் முடிவாகக் கேட்கிறார்.

காஞ்சி காமாக்ஷியில் அன்னபூர்ணேசுவரியும் அடக்கம். காமாக்ஷி இருநாழி நெல் கொண்டு முப்பத்திரண்டு அறங்களை வளர்த்தாள். அதில் அன்னதானம் ஒன்று. காமக்கோட்டத்தில் அன்னபூரணி சந்நிதி இருக்கிறது. காஞ்சியில் ஓண காந்தன் தளியில் இருக்கும் ஸ்வாமியைப் பாடும் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள், ‘காமக்கோட்டத்தில் அன்னபூரணியே இருக்கும்போது நீர் ஏன் பிக்ஷாண்டியாக அலைகிறீர்?’ என்று கேட்கிறார்.

வாரிரும் குழல்வாள் நெடுங்கண்
மலைமகள் மதுவிம்மு கொன்றைத்
தாரிருந் தடமார்பு நீங்காத்
தையலாள் உலகுய்ய வைத்த
காரிரும் பொழில்கச்சி மூதூர்க்
காமகோட்டம் உண்டாக நீர்போய்
ஊரிடும் பிச்சைகொள் வதென்னே
ஒண்காந்தன் றளியுளீரே!

சரீரம், ஆத்மா இரண்டுக்கும் உணவூட்டி வளர்க்கிற அன்னபூரணேசுவரியைத் துதித்து சமஸ்த ஜீவர்களுக்கும் துர்பிக்ஷம் நீங்கப் பிரார்த்திப்போம்.

பாபம் செய்ததற்குத் தண்டனையாக துர்பிக்ஷத்தில் கஷ்டப்படுபவர்களுக்கு காமாக்ஷியேயான அன்னபூரணி கருணை பாலிக்கிறாள். பசி என்பது பாபிக்கும் வரக்கூடாது. கேரளத்தில் செருக்குன்னம் என்று அன்னபூர்ணா க்ஷேத்திரம் இருக்கிறது. அங்கே சேவார்த்திகளுக்கெல்லாம் சாப்பாடு போடுகிறார்கள். அதுமட்டுமில்லை; ராத்திரி வேளையில் கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு மரத்தில் ஒரு சோற்று மூட்டையைக்கட்டி வைக்கிறார்கள். இராக்காலத்தில் அந்தப் பக்கமாகப் பசியோடு போகிற திருடர்களும்கூடப் பசியாற வேண்டும் என்று இந்த ஏற்பாடு.

இத்தனை கருணையோடு ஓர் அம்மா இருக்கிறபோது, இன்றைக்கு லோகத்தில் இவ்வளவு துர்பிக்ஷை இருக்கிறது என்றால், அதிலிருந்து நாம் எத்தனை பாபம் செய்திருக்கிறோம் என்பதைத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். “சரக ஸம்ஹிதை”யில் ஆத்ரேயர் சொல்வதாக வருகிறது; ஒரு தேசத்திலோ, நகரத்திலோ, கிராமத்திலோ ஆட்சியில் இருக்கப்பட்டவர்கள் தர்மம் தவறி நடந்தால் அவர்களைச் சேர்ந்த ஜனங்களும் இதே போக்கை அநுசரிக்க வேண்டியதாகிறது. இப்படி அதர்மம் ரொம்பவும் பரவுகிறபோது தேவர்கள் இவர்களைக் கைவிட எண்ணுகிறார்கள். (தேவர்கள் என்றால் இயற்கைச் சக்திகளை நடத்துகிற ஈசுவரனின் அதிகாரிகள்). உடனே ருதுக்கள் மாறுகின்றன. மழை சரியாகப் பெய்வதில்லை. பெய்தாலும் காலம் தவறி, இடம் தவறி, அளவு தவறிப் பெய்யும். பருவக் காற்று முறைப்படி வீசுவதில்லை. வியாதிக் கிருமிகள் அதிகமாகின்றன. பயிர் பச்சைகளின் செழிப்புப் போகிறது. உணவுப் பதார்த்தங்களில் துர்பிக்ஷம், கிடைக்கிற கொஞ்சத்திலும் தோஷங்கள், கெட்ட காற்று, வியாதி இவற்றால் தேசம் பாழாகிறது.

இம்மாதிரி உலகத்துக்கு ஏற்படும் துர்பிக்ஷத்திலிருந்து நம்முடைய தப்பையே புரிந்துகொண்டு திருந்தப் பிரயாசை எடுத்தோமாயின், அன்னபூர்ணியே அன்னபிக்ஷை, ஞான பிக்ஷை எல்லாம் போடுவாள். அவள் சரீரமே ஞானமயமானது. ‘அ’விலிருந்து ‘க்ஷ’வரையிலான எல்லா அட்சரங்களுமே உருவான மந்திர மாத்ருகா ரூபிணி அவள் என்கிறார் ஆசாரியாள்.

‘ஆதி க்ஷாந்த ஸமஸ்த வர்ணனகரீ.’

இப்படிப்பட்ட சரீரம் படைத்தவளாதலால் நம் சரீரத்தை மட்டுமின்றி அறிவையும் வளர்க்கிற பிக்ஷையைப் போட்டு ஞானம் தருவாள்.

அது எப்படிப்பட்ட ஞானம் என்பதைத்தான் ஆச்சார்யாள், அன்னபூர்ணி ஸ்துதியின் கடைசியில் சொல்கிறார். அந்த நிலையில் பரமேசுவரனே தகப்பனாகவும், அம்பாளே தாயாராகவும் தெரிவார்கள். உடனே சகல ஜீவராசிகளுக்கும் சகோதரர்களாகி விடுவார்கள். மூவுலகமும் சொந்த வீடாகிவிடும். இது இப்போது நிறையப் பேசப்படுகிற தேச ஐக்கியப்பாட்டைவிட எத்தனையோ படி மேலே! சர்வதேச ஐக்கியப்பாட்டுக்கும் மேலே! மூன்றுலக ஐக்கியப்பாடு. பக்தி இருந்தால், பராசக்தி ஒருத்தி இருக்கிறாள் என்ற பயமும் பக்தியும் இருந்துவிட்டால், எல்லோரும் அவள் குழந்தைகள்தான் என்கிற சகோதர பாவம் தானாகவே வந்துவிடும். இதற்குப் பிரசங்கம் வேண்டாம், திட்டம் வேண்டாம், பிரசாரம் வேண்டாம்.

அநாதி காலமாக இப்படித்தான் பிரத்தியக்ஷத்தில் ஐக்கியம் இருந்திருக்கிறது. ஸ்வாமிக்காகத் தெற்கத்திக்காரன் காசிக்குப் போனான். ஸ்வாமிக்காக வடக்கத்திக்காரன் ராமேசுவரத்துக்கு வந்தான். ஐக்கியப்பாடு (Integration) என்கிற பேச்சு இல்லாமலே, ‘சகோதர சகோதரிகளே’ என்ற பிரசங்கம் இல்லாமலே, மத உணர்ச்சியால் ஐக்கியமாக, ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளாக இருந்து வந்தோம். இதோடுகூட அறிவாளிகளின் மட்டத்திலோ சகல சாஸ்திரங்களுக்கும் பொது பாஷையாக இருந்த ஸம்ஸ்கிருதம் தேசத்தின் நாலு கோடிகளையும் ஒன்றாகச் சேர்த்து வைத்திருந்தது. இப்போது ‘ஸெக்யுலர்’ நாகரிகத்தில் மதத்தை விட்டாயிற்று. ஸம்ஸ்கிருதத்தையும் ஒரு மாதிரி தீர்த்துக் கட்டிவிட சகல யத்தனங்களும் நடக்கின்றன – நான் இங்கேயுள்ள நம்மவர்களை மட்டும் சொல்லவில்லை. ஹிந்திக்காரர்களும் இந்த கைங்கரியத்தில் நன்றாகவே காரிய ரீதியில் செய்து வருகிறார்கள். இடைக்காலத்தில் ஒரு பொது இணைப்பாக (Link) வந்த இங்கிலீஷையும் விரட்டிவிடப் பார்க்கிறார்கள்.

பாஷை விஷயம்கூட இரண்டாம் பட்சம்தான். பக்தியை வளர்த்துவிட்டால் போதும். அப்புறம் என் மாகாணம், என் ஜாதி, என் பாஷை என்று நமக்குள்ளேயே சண்டைகள் ஒரு காலும் வராது. ஐக்கியப் பிரசங்கம் அதிகமான இப்போதுதான் நமக்குள்ளேயே ஒரு சீமைக்காரன் இன்னொரு சீமைக்காரனுக்கு தண்ணீர் தர மாட்டேன், தானியம் தரமாட்டேன் என்று பிரிந்து பிரிந்து நிற்கிறான். மாகாணத்துக்கு மாகாணம் எல்லைச் சண்டை வந்திருக்கிறது. பாஷையின் பேரால், ஜாதியின் பேரால் ஏற்கெனவே கொடுமை நடந்ததாக இப்போது கிளப்பி விட்டிருக்கிற பிற்பாடுதான் வாஸ்தவத்தில் பாஷைச்சண்டை, ஜாதிச்சண்டை எல்லாம் வந்திருக்கின்றன. இத்தனைக்கும் மூலக்காரணம், மத உணர்ச்சி, பக்தி போனதுதான். ஜனங்கள் எல்லோரையும் ஒன்றாகக் கட்டிப் போட்ட மதமும் பக்தியும் போனதும் சமூகத்திலேயே கட்டுவிட்டுப் போய்விட்டது. எனவே இப்போது சர்வரோக நிவாரணியும் பக்திதான். உண்மையான ஈசுவர பக்தியானது, அவன் குழந்தைகளான சகலரிடமும் அன்பாகத்தான் பரணமிக்கும். அப்புறம் பரஸ்பர சகாயத்தைத்தவிர வேறெதற்கும் இடமே இராது. அன்பே சிவம் என்கிறார் திருமூலர். அதுவே அறிவு. ‘அறிவான தெய்வமே’ என்றார் தாயுமானவர். இந்த அன்பையும் அறிவையும் – அன்பேயான அறிவை – அன்னபூரணி நமக்கெல்லாம் பிக்ஷை போடப் பிரார்த்திப்போம். ஆதி ஆசார்யாள் செய்த பிரார்த்தனையும் இதுதான்.

அன்னபூர்ணே ஸதாபூர்ணே, சங்கர ப்ராண வல்லபே |
ஞானவைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி ||

சிவத்தின் சக்தி; நாராயண ஸஹோதரி

பரப்பிரம்மத்தின் சக்திதான் அம்பாள். ஒரு வஸ்துவின் சக்தி அந்த வஸ்துவோடு இரண்டறக் கலந்த விஷயம். வஸ்து இல்லாமல் அந்த சக்தி இல்லை. சக்தி இல்லா விட்டால் அந்த வஸ்துவும் இல்லை. ஆனபடியால் பிரம்மமேதான் சக்தி. பிரம்மத்தை ஈசுவரன் என்றால் அந்த ஈசுவரனோடு இரண்டறக் கலந்திருக்கிறவள் அம்பாள். பூவும் வாசனையும் தனித்தனியாய் இருக்க முடியுமா? பால் வேறு, அதன் வெளுப்பு வேறு என்று இருக்க முடியுமா? தேன் வேறு, அதன் தித்திப்பு வேறு என்று பிரிக்க முடியுமா? இப்படியே ஈசுவரனில் பிரிவறத் தோய்ந்திருக்கிறாள் அம்பாள். பரமேசுவரனும் பராசக்தியும் பிரிக்க முடியாமல் ஒன்றாயிருக்கிற ஆதி தம்பதி; சகல சிருஷ்டிக்கும் தந்தையும் தாயும் அவர்கள் தாம்.

தாய் வேறு, தந்தை வேறு என்று ஒரேடியாகப் பிரித்துச் சொல்ல முடியாமல், அம்மையப்பனாக, தாயுமானவராக இருக்கிற ஸ்வரூபம் அது. இரண்டும் இரு ரூபமாக இல்லாமல் ஒன்றாகக் கலந்த சிவ – சக்திகளே அர்த்தநாரீசுவரத் திருக்கோலம். நமக்கு அம்மா, அப்பா என்று இரண்டு ரூபங்கள் அநுக்கிரஹத்துக்கு வேண்டியிருக்கின்றன. நம்மைக் கண்டித்து உபதேசித்து ஞானத்தைக் கொடுக்கிற தகப்பனார் வேண்டும். நம்மிடம் எப்போதும் அன்பு கொண்டு ரக்ஷிக்கிற தாயாரும் வேண்டும். ஆனால் அவர்கள் வேறுவேறாகப் பிரிந்திருந்தாலோ தத்வ ரீதியில் சரியாக இல்லை. இதனால்தான் ஈசுவரனும் அம்பாளும் ஒரே ரூபத்தில் ஒரே சரீரத்தில் ஒரு பாதி அவர் மறுபாதி இவள் என்று அர்த்தநாரீசுவரராக ஆவிர்பவித்திருக்கிறார்கள்.

‘சம்பு என்கிற சத்தியம் அருவமானது; அதன் உருவமே நீதான்’ (சரீரம் த்வம் சம்போ:) என்று நம் ஆசார்யாள் அம்பாளைப் பார்த்துச் சொல்கிறார். அரூபம் ரூபமானதே அவளது சக்தியால்தான். ஆனாலும் சுத்த ஞான மயமாக இருக்கப்பட்ட அம்பாளின் பிரம்மம், அதன் அநுக்கிரஹ ரூபமான அம்பாள் இரண்டையும், தந்தையாகவும், தாயாகவும் பார்க்க வேண்டும்போல் நமக்கு ஆசையாக இருக்கிறது. இதற்காகத்தான் பரமேசுவரனுக்கும் ஒரு சகல ரூபம் இருக்கிறது. அப்புறம் தாயார், தகப்பனார் என்று முழுவதும் பிரிந்து விடாமல் ஒரு பொது ரூபமும் நமக்கு வேண்டியிருக்கிறது. இதற்காகவே இவரும் சேர்ந்து வலப்பாதி பரமேசுவரனாகவும் இடப்பாதி அம்பாளாகவும் அர்த்தநாரீசுவர ரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பாஸிடிவ், நெகடிவ் என்கிற இரண்டாக ஒரே எலெக்ட்ரிஸிடி இருப்பதுபோல் ஒரே பரம சத்தியம் அர்த்தநாரீசுவர ரூபம் கொண்டிருக்கிறது.

அர்த்தநாரீசுவரக் கோலத்தைப் பார்க்கிறபோது, பிறப்புக்குக் காரணமான காமனைத் தகனம் செய்த நெற்றிக் கண்ணில் பாதி சம்பந்தம் அம்பாளுக்கு இருக்கிறது. இறப்புக்குக் காரணமான காலனை உதைத்து ஸம்ஹாரம் பண்ணின இடது காலோ முழுக்கவும் அவளுடையதாக இருக்கிறது. இதிலிருந்து, ஜனன மரணச் சூழலிலிருந்து ஜீவனை விடுவிக்கிறவள் அவள்தான் என்று தெரிகிறது.

சிவனும் சக்தியும் பிரிக்க முடியாதவை என்பதையறிந்து, ஸ்வாமி அம்பாள் இருவரிடத்திலும் ஒரே போன்ற பக்தி வைக்க வேண்டும். ஒருத்தரை ஒதுக்கி மற்றவரிடம் மட்டும் பக்தி வைத்தால் போதாது என்பார்கள். இரண்டு பேரிடமும் சேர்ந்து அன்பு வைக்கிற போதுதான், அவர் அவளுக்கு ஆதாரமாக இருக்கப்பட்ட அவளுடைய பதி, அவள் அவரை விட்டு நீங்க முடியாத அவளுடைய சக்தி என்கிற ஞானம் நீங்காமல் இருக்கும். இருவரில் ஒருவரை ஒதுக்கிவிட்டால் இந்த ஸதி – பதி உறவு மறந்துபோய், பக்தி விபரீதமாகிறது. சூர்ப்பனகை சீதையைத் துவேஷித்து ராமரிடம் மட்டும் வைத்த அன்பும், ராவணன் ராமரைத் துவேஷித்து ஸீதா தேவியிடம் மட்டும் வைத்த அன்பும் விபரீதமாகி காமமாக ஆயின என்று உங்களுக்குத் தெரியும். பலனும் விபரீதமாகவே ஆயிற்று. இப்படி விபரீத பலன்கள் இல்லாமல், பூரண அநுக்கிரஹம் வேண்டுமானால், அம்பாளும் ஈஸ்வரனும் அர்த்தநாரீசுவரராக இருப்பதை எந்நாளும் மறக்காமல் பக்தி செலுத்த வேண்டும். அவர் ‘மாதொரு பாகன்’, அவள் ‘பாகம் பிரியாள்’ என்பதை நினைவு கொண்டு இருவரிடமும் அன்பு வைக்க வேண்டும்.

அர்த்த நாரீசுவர ரூபத்தில் எந்த இடது பக்கம் அம்பாளுடையதாக இருக்கிறதோ, அதுவே சங்கர நாராயண மூர்த்தத்தில் மஹாவிஷ்ணுவுடையதாக இருக்கிறது. இதிலிருந்து அம்பாளேதான் மஹாவிஷ்ணு என்றாகிறது. திருவையாற்றில் உள்ள ஈஸ்வரனைப் பற்றித் துதிக்கிறபோது, அவருக்கு ஹரியைத்தவிர வேறு பத்தினி இல்லையென்று அப்பர் ஸ்வாமிகள் சொல்கிறார்.

‘அரியலால் தேவியில்லை
ஐயன் ஐயாறனார்க்கே’

அம்பாளும் மஹாவிஷ்ணுவும் ஒன்றேதான் என்கிற தத்துவத்தையே புராண ரீதியில் சொல்கிறபோது அவளை நாராயண ஸஹோதரி என்கிறோம்.

அர்த்தநாரீசுவரர் ஆகட்டும், சங்கர நாராயணர் ஆகட்டும், இரண்டிலும் வலது பக்கம் பரப்பிரம்ம ஸ்வரூபமான பரமேசுவரனே இருக்கிறார். வலது என்பதை எலெக்ரிஸிடியில் பாஸிடிவ் என்று வைத்துக்கொண்டால் இடப்பக்கம் நெகடிவ் ஆகிறது. பாஸிடீவ் சக்தி ஒரு மையக்கருவாக (Nucleus) இருக்க, நெகடிவ் சக்தி அதைச் சுற்றி அதிவேகமாகச் சுழன்றுகொண்டிருப்பதாக அணு விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். உலகம் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக, ஆனால் காரியமேயில்லாமல் இருக்கிற நிர்குணமான பிரம்மத்தை மையமாக, ஆதாரமாகக் கொண்டு உலகத்தை எல்லாம் சிருஷ்டித்து நடத்திக் காரியத்தைச் செய்து வருகிற சகுணமான சக்தி இயங்குவது பாஸிடிவைச் சுற்றி நெகடிவ் சுழலுகிறதுதான். இதுவே ஆராதனைக்காக ஒரு மூர்த்தியாக வருகிறபோது, மத்திய நியூக்ளியஸ் – சுற்றி வருகிற சக்தி என்றில்லாமல் வலது பக்கம், இடது பக்கம் என்று இரண்டு கூறுகளாக திவ்ய ஆகாரம் (வடிவம்) எடுத்துக் கொள்கிறது. இதில் வலது பாஸிடிவ், செயலில்லாத ஆதார பிரம்மம்; இடது நெகடிவ், சகல காரியங்களுக்கும் மூலமான பிரம்மத்தின் சக்தி. இடது கூறு அர்த்தநாரீசுவர ஸ்வரூபத்தில், ஸ்திரீ ரூபமாகி அம்பாளாயிருக்கிறது; சங்கர நாராயண வடிவத்தில் புருஷ ஆகாரம் கொண்டு ஸ்ரீமகா விஷ்ணுவாக இருக்கிறது.

திருமங்கையாழ்வார் பெருமாளைப் பற்றிப் பாடுகிற போது,

‘பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து’

என்கிறார். பெருமாள் தமக்கு வலப் பாதியில் ஈசுவரனை வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால், ஈசுவரனின் இடப்பாகத்தில் பெருமாள் இருக்கிறார் என்றுதான் அர்த்தம்.

கார்யமில்லாமல், கேவல ஞான மயமாக இருக்கிற பிரம்மத்தைப் பரமேசுவரன் என்றால், சகல ஜகத் காரணமாகிற மாயா தத்வத்தையும், இதிலிருந்து விடுவிக்கிற காருண்யத்தையும் அம்பாள் என்றோ மகாவிஷ்ணு என்றோ சொல்கிறோம். பரமேசுவரனுடைய சக்தி அவள்; ஸாக்ஷாத் நாராயணனே அவள்.

இதைப் பௌராணிகமாகச் சொல்கிறபோது, அவளை ஈஸ்வரனுக்குப் பத்தினி என்றும், மஹாவிஷ்ணுவுக்குத் தங்கை என்றும் பார்க்கிறோம்; அம்பாளை ‘சிவ சக்தி ஐக்ய ரூபிணி’ என்று சொல்லி முடிக்கிற லலிதா ஸஹஸ்ரநாமத்தில் இன்னோர் இடத்தில் ‘பத்மநாப ஸகோதரி’ என்று கூறியிருக்கிறது. அம்பாளைத் தவிர வேறெந்த தேவதா பேதத்தையும் பாடாத ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள், தம் கீர்த்தனங்களிலெல்லாம் அவளை ‘சியாம கிருஷ்ண சஹோதரி’ என்றே அழைத்து, இதையே தம் முத்திரையாக வைத்திருக்கிறார்.

கிருஷ்ணாஷ்டமியின் போதே யசோதைக்குப் பெண்ணாகப் பிறந்த விஷ்ணு மாயை அவள்தான். ஸ்ரீராம நவமியின் போதோ அவள் ஞானாம்பிகையாக அவதரித்த வஸந்த நவராத்திரி நிகழ்கிறது. விஷ்ணு அவதரித்த போதே இவளும் அவதரித்தாள் என்றால் இரண்டும் ஒன்று அல்லது உடன்பிறப்புகள் தானே!

ஆண்டாள் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைக் கல்யாணம் செய்து கொள்வதாக சொப்பனம் கண்டு, அதைப் பாசுரமாகப் பாடியிருக்கிறாள். அதிலே வைதிகப் பிராம்மண சம்பிரதாயப்படி, தனக்கு நாத்தனார் கூரைப் புடவை கட்டி மாலை போட்டு முகூர்த்தப் பந்தலுக்கு அழைத்து வந்ததாகச் சொல்கிறபோது, கிருஷ்ணனின் சகோதரியான அம்பாளே இப்படி நாத்தனார் ஸ்தானம் வகித்ததாக ஆண்டாள் பாடியிருக்கிறாள்.

‘மந்திரக் கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழிநான்!’

(அந்தரி என்றால் அம்பாள்)

இப்படி அம்பாளை ஒரு பக்கம் ஈசுவரனோடு அபேதமாகவும், இன்னொரு பக்கம் ஸ்ரீ மஹாவிஷ்ணுவோடு அபேதமாகவும், ஒருத்தருக்குப் பத்தினி, இன்னொருத்தருக்கு சகோதரி என்று பாவித்துப் பழகிவிட்டால், அப்புறம் ஈஸ்வரனுக்கும் பெருமாளுக்குமிடையே உசத்தி – தாழ்த்தி செலுத்தவே மாட்டோம். சைவ, வைஷ்ணவம் பிணக்கு அறுந்தே போகும்.

காரியமில்லாத நிலையில் இருக்கிற ஒரே வஸ்து காரியமாகிறபோது பல ரூபங்களாகிறது; இந்த ரூபங்களிடையே ஒன்றுக்கொன்று உசத்தி -– தாழ்த்தி இல்லை; அதே மாதிரி இந்த ரூபங்களுக்கும் இவை எல்லாவற்றுக்கும் மூலமாக இருக்கப்பட்ட ஒரே ஸத்யத்துக்கும் இடையிலும் வேறுபாடே இல்லை. இந்த ஞானம் நமக்கு வந்துவிட்டால், நம் மதத்தில் சண்டை, சச்சரவு, அபிப்பிராய பேதம், பிணக்கேயில்லாமல் ஆகும். ஈசுவர பத்தினியாகவும், பத்மநாப ஸஹோதரியாகவும் இருக்கிற அம்பாள்தான் இந்த சமரஸ பாவனையை நமக்கு அநுக்கிரஹிக்க வேண்டும்.

அம்பிகையின் ரூபங்கள் பல தினுசாக கோயில்களில் இருக்கின்றன. அதிலே ஒன்று சிவாலயங்களில் கோஷ்ட தேவதையாக இருக்கிற துர்க்கை. சிவன் கோயில்களில் கர்ப்பக்கிருஹத்தைச் சுற்றி விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு (அல்லது லிங்கோத்பவர்), பிரம்மா, துர்க்கை ஆகிய மூர்த்திகள் இருக்கின்றன. இவர்களில் தக்ஷிணாமூர்த்திக்குப் பத்தினி கிடையாது. இது அம்பாளின் சம்பந்தமில்லாமல் ஸ்வச்சமாகத் தான் மட்டுமே ஸ்வாமி இருக்கிற கோலம். இப்படியே துர்க்கைக்கும் பதி ஸ்தானத்தில் எவரையும் சொல்லத் தெரியவில்லை. தனி அம்பாளாக அவள் இருக்கிறாள். தக்ஷிணாமூர்த்தியின் கைகளில் ஜபமாலையும், சுவடியும் இருக்கும். இவர் வெள்ளை வெளேர் என்று இருப்பார். இதே மாதிரி ஒரே வெளுப்பாக ஜபமாலையும், சுவடியும் வைத்துக் கொண்டிருக்கும் ஸ்திரீ தேவதை ஸரஸ்வதி. சகோதரர்கள் ஒரேமாதிரி இருக்கிறார்கள். அதனால் ஸரஸ்வதி சிவனின் சகோதரி. இருவரும் ஞான மூர்த்திகள். பிரம்மா தாமரைப் பூவில் அமர்ந்திருக்கிறார். அவரது வர்ணம் உருக்கிவிட்ட தங்கத்தின் நிறம். இதேமாதிரி ஸ்வர்ண வர்ணத்தோடு தாமரைப் பூவில் அமர்ந்திருக்கிறாள் மஹாலக்ஷ்மி. பிரம்மா பிரஜைகளை சிருஷ்டித்துக் கொண்டேயிருக்கிறார் என்றால், லக்ஷ்மியோ ஐசுவரியத்தைப் பெருக்கிக்கொண்டேயிருக்கிறாள். இவர்கள் இருவரும் உடன் பிறந்தவர்கள்.

இப்போது புருஷ சம்பந்தமில்லாமல் தனியாக இருக்கிற அம்பாளான துர்க்கையம்மன் எப்படியிருக்கிறாள்? நீலமேக சியாமளமாக இருக்கிறாள். கையிலே சங்கும் சக்கரமும் வைத்திருக்கிறாள். மகிஷாசுரன் போன்ற பல ராக்ஷதர்களை சம்ஹரித்திருப்பவள் இவள்தான். இதையெல்லாம் பார்த்தால் ஸ்ரீமஹாவிஷ்ணுவே இவளுடைய சகோதரர் என்று சொல்லாமலே புரியும். இதே வர்ணம், இதேமாதிரி சங்கு சக்கரம், அசுரர்களை சம்ஹரிப்பதற்காக என்றே திரும்பத் திரும்ப அவதாரங்கள் எல்லாம் மகாவிஷ்ணுவிடமே காணப்படுகின்றன. பரம கருணையினால் இருவரும் இப்படி துஷ்ட நிக்ரகம் செய்கிறார்கள். இந்த மாயப் பிரபஞ்சத்தை லீலா விநோதமாக நடத்துவது இந்த இருவரும்தான். மாயோன், மாயோன் என்றே அவரைச் சொல்வார்கள். இது சங்க காலத்திலிருந்து தமிழ்நாட்டில் உள்ள பெயர். மாயாவி, மாயா நாடக சூத்திரதாரி என்று புராணங்கள் சொல்லும். அவளையோ மஹாமாயை என்றே சொல்கிறோம். மற்ற சகோதர ஜோடிகளைவிட இந்த இரண்டு பேரும் ரொம்பவும் நெருக்கமாக இருக்கிறார்கள் – ஒன்று என்றே சொல்லிவிடலாம்போல்! மேலே நான் சொன்ன துர்க்கைக்கு ‘விஷ்ணு துர்க்கை’ என்றே பேர் இருக்கிறது. லோகத்திலும் அம்பாள் விஷ்ணுவின் சகோதரி என்பது சகலருக்கும் தெரிந்திருக்கிற அளவுக்கு ஸரஸ்வதி சிவசகோதரி என்பதோ, லக்ஷ்மி பிரம்மாவின் சகோதரி என்பதோ பிரசாரமாயிருக்கவில்லை.

மாயம் செய்வதை முக்கியமாக பெண்பாலாகவே கருதுவது மரபு. மஹாவிஷ்ணுவிடத்தில் இந்த அம்சம் தூக்கலாக இருக்கிறது. அதனால்தான் அவர் அமிருதத்தைப் பங்கீடு பண்ணினபோது மோஹினியாக அவதாரம் பண்ணினார். இவர் அம்பாளின் இன்னொரு ரூபம் என்பதற்கு ரொம்பவும் பொருத்தமாக மோஹினியைப் பரமேசுவரனே கல்யாணம் செய்துகொண்டிருக்கிறார். விஷ்ணு க்ஷேத்திரங்களில் ஜகத் பிரசித்தமாக இருக்கிறது திருப்பதி. வேங்கடரமண ஸ்வாமியைப் பார்த்தாலும் ரொம்ப அம்பாள் சம்பந்தமாக இருக்கும். அங்கே பெருமாளுக்குப் புடவைதான் உடுத்துகிறார்கள். சுக்ரவாரத்தில் அபிஷேகம் பண்ணுகிறார்கள். மற்றப் பெருமாள் கோயில்களில் கருடன் இருக்கிறது பல இடங்களில். இங்கு மட்டும் சிம்மங்கள் இருக்கின்றன. சிம்மம் அம்பிகையின் வாகனம்.

அம்பாளும், மகாவிஷ்ணுவும், பரமேசுவரனும் மூன்று ரத்தினங்கள். “ரத்ன த்ரய பரீக்ஷா” என்றே ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் ஒரு கிரந்தம் செய்திருக்கிறார். இந்த மூன்றும் ஒரே பரம சக்தியத்தின் மூன்று ரூப பேதங்கள்தான். அம்பாள் மற்ற இரண்டு பேரோடும் பிரிக்க முடியாமல் சம்பந்தப்பட்டிருக்கிறாள். ஒருத்தருக்குப் பத்தினியாகவும் இன்னொருத்தனுக்கு ஸகோதரியாகவும் இருக்கிறாள். இந்த மூன்று மூர்த்திகளிடமும் உயர்வு தாழ்வு கற்பிக்காத பக்தி வேண்டும். எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருக்கிற சத்தியம் (Truth) சிவம் என்றும், அதுவே பலவாகத் தெரிகிறதற்குக் காரணமான சக்தி (Energy) அம்பாள் அல்லது விஷ்ணு என்றும் புரிந்து கொண்டு பக்தி செலுத்த வேண்டும்.

அம்பாளுக்கும் மஹாவிஷ்ணுவுக்கும் பேதமில்லை என்பதைத் தத்துவ ரீதியில் சொன்னேன். இப்போது உங்களுக்குத் தெரியாத ஒரு கதை சொல்கிறேன். ராமாயணம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் அந்தத் தெரிந்த கதையையே உங்களுக்குத் தெரியாத மாதிரி சொல்கிறேன். வால்மீகி, கம்பர், துளசீதாஸர் எழுதியவை தவிர, ஆனந்த ராமாயணம், அற்புத ராமாயணம், துர்வாஸ ராமாயணம் என்றெல்லாம் பல இருக்கின்றன. அதில் ஏதோ ஒன்றில் இந்த விஷயம் இருக்கிறது.

அம்பாள்தான் ஸ்ரீராமனாக அவதரித்தாள் என்பது கதை. ஈசுவரனே ஸீதையாக உடன் வந்தார். ஸ்ரீராமன் நல்ல பச்சை நிறம். ‘மரகதமணி வர்ணன்’ என்பார்கள். அம்பிகையை ‘மாதா மரகத சியாமா’ என்கிறார் காளிதாஸர். முத்துஸ்வாமி தீக்ஷிதரும் ‘மரகதச்சாயே’ என்று மீனாக்ஷியைப் பற்றிப் பாடுகிறார். சிருஷ்டி, ஸ்திதி சம்ஹாரத்தைத் தாண்டி மூல காரணமாக இருக்கிறபோது பராசக்தி செக்கச் செவேல் என்று இருந்த போதிலும், மும்மூர்த்திகளில் ஒருத்தருக்குப் பத்தினியாகிப் பார்வதியாக இருக்கிறபோது பச்சையாகத்தான் இருக்கிறாள். இவள்தான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாக வந்தாள். பரமேசுவரன் ஸீதா தேவியானார்.

பழைய காலத்தில் சின்ன வயசிலேயே குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்வார்கள். அப்போது ஹோமம் முதலிய கர்மங்களால் குழந்தைகளுக்கு அலுப்புத் தட்டிவிடப் போகிறதே என்று குஷிப்படுத்துவதற்காக விளையாடல், ஊஞ்சல், நலங்கு, ஊர்வலம் என்றெல்லாம் வைத்திருந்தார்கள். ஊர்வலத்தின் போது கல்யாணப் பெண்ணுக்கு பிள்ளை வேஷமும், மாப்பிள்ளைக்குப் பெண் வேஷமும் போடுவார்கள். இந்த மாதிரி, லோகத்தில் ராக்ஷஸ பயத்தைப் போக்கி விளையாட்டாக ஊர்வலம் வருவதற்கு அம்பாள் ராமனாகவும், ஈசுவரன் ஸீதையாகவும் வேஷம் போட்டுக் கொண்டார்கள். இது ஒருத்தருக்கும் தெரியாது. ஸ்ரீராமனும் ஸீதையும்கூட இதை மறந்தே போனதுபோல் இருந்தார்கள். ஆனால் ரொம்பவும் உணர்ச்சி வேகம் ஏற்பட்டால் மனஸின் அடியிலே எங்கோ மறைந்திருப்பதுகூட வெளியிலே வெடித்துவிடுகிறது அல்லவா? இப்படி ஒரு கட்டம் ராமாயணத்தில் வருகிறது.

ஸ்ரீராமன் ஸீதையை விட்டுவிட்டுக் காட்டுக்குப் போவது என்று தீர்மானம் பண்ணிவிடுகிறார். அப்போது தேவிக்கு உணர்ச்சி பீறிக்கொண்டு வந்துவிடுகிறது. “காட்டிலே துஷ்டர் பயம், மிருக பயம் இருக்கிறது என்பதால் பெண்டாட்டியை அழைத்துப் போக மறுக்கிறாரே, இவரும் ஒர் ஆண் பிள்ளையா” என்று ஸ்வாதினத்தில் அவளுக்கு மகா கோபம் வர, அந்த வேகத்தில் ஓர் உண்மையைச் சொல்லி விடுகிறாள்.

“உம்மை மாப்பிளையாக வரித்த என் பிதா ஜனகர் நீர் புருஷ வேஷத்தில் வந்திருக்கிற ஒரு ஸ்திரீ (ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம்) என்பதைத் தெரிந்து கொள்ளாமல் போனாரே!” என்று ராமனைப் பார்த்து சண்டை போடுகிறாள் ஸீதா தேவி. இது சாக்ஷாத் வால்மிகி ராமாயண வசனம்.

ஸ்ரீராமனுக்கு அவர் அம்பாள்தான் என்பதை இப்படி சூக்ஷ்மமாக ஞாபகப்படுத்திவிட்டாள் ஸீதை. உடனே அவருக்கு அவதாரக் காரியம் நினைவிற்கு வந்தது. ராக்ஷஸ சம்ஹாரம் செய்ய வேண்டும் என்ற நினைப்பு வந்ததும், அதற்கு அநுகூலமாகவே விளையாட்டு நடப்பதற்காக ஸீதையை அழைத்துக் கொண்டு காட்டுக்குப் போனார்.

இவரால் சம்ஹரிக்கப்பட வேண்டிய ராவணனோ பெரிய சிவபக்தன். ஆதியில் அவனுக்கு சிவனையே கைலாஸத்திலிருந்து இலங்கைக்கு இழுத்துக் கொண்டு வந்து அசோக வனத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று ஆசை. அதற்காகத்தான் கைலாஸத்தைப் பெயர்த்துப் பார்த்தான். அப்போது அம்பிகை பயந்து ஈசுவரனைக் கட்டிக் கொள்ள அவர் விரல் நுனியால் மலையை அழுத்தி விட்டார். தப்பினோம் பிழைத்தோம் என்று இராவணன் இலங்கைக்கு ஒடி வந்தான். மகா சிவ பக்தனாதலால் அவனுக்குக் தன்னுடைய ஈசுவரன்தான் ஸீதையாக வந்திருக்கிறார் என்று தெரிந்து விட்டதாம். முன்பு அம்பாளால்தான் தன் காரியம் கெட்டுப்போச்சு என்கிற கோபத்தில், இப்போது அவள் தலையீடு இருக்கக்கூடாது என்றே ராமரை அப்புறப்படுத்திவிட்டு ஸீதையை தூக்கி வந்து அசோக வனத்தில் வைத்தானாம். ஆனாலும் ராக்ஷஸ அறிவானதாலும் அம்மையப்பனான ஜோடியில் ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டதாலும் ராவணனுடைய அன்பு விகாரப்பட்டுக் காமமாயிற்று. இருந்தாலும் சிவபக்தியினால் இவனுக்கு அவதார ரகசியம் அவ்வப்போது துளி தெரிந்தது. ஆஞ்சநேயரைப் பார்த்தவுடனே ராவணன், ‘இவர்  யார்? நந்தியம் பெருமானா?’ என்று நினைக்கிறான். ‘கிமேஷ பகவான் நந்தீ?’ என்பது வால்மீகி ராமாயண வசனம். ஸீதா ராமர்களின் பரமதாஸனாக இருக்கப்பட்ட ஹநுமாரைப் பார்த்ததும் கைலாஸத்தில் ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் தாஸனாக இருக்கிற நந்திதான் அவர் என்பது புரிந்ததுபோல ராவணன் பேசுகிறான்.

அம்பாளே நாராயணன் என்பதற்காக இந்தக் கதை எல்லாம் சொல்கிறேன். இரண்டும் ஒன்றாக இருக்கட்டும்! ஆனால் நாராயணன் என்கிற புருஷ ரூபம் அம்பாளின் ஸ்திரீ ரூபம் இரண்டும் நன்றாக இருக்கின்றனவே; இரண்டையும் வைத்துக் கொள்ளலாமே என்று தோன்றுகிறது. அப்போது அவர்களை சகோதரர்களாக வைத்துக் கொள்ளலாம். அம்பாளை நாராயண சகோதரி என்று சொல்வதற்குப் புராணக் கதைகள் எல்லாம் பக்கபலமாக இருக்கின்றன.

ஆசைகள் அத்தனை அனர்த்தத்துக்குக் காரணம். ஆசைதான் காமம் என்பது. ஆசைப்பட்டது கிடைக்காவிட்டால் குரோதம், சோகம் எல்லாம் உண்டாகின்றன. காமத்தில் பிறப்பு உண்டாகிறது. குரோதத்தால் நம்மை நாமே கொன்று கொள்கிறோம். எனவே ஜனன மரணத்திலிருந்து விடுபட வேண்டுமானால் நம்மைக் காமமும் குரோதமும் அண்ட விடக்கூடாது. மழை ஜலம் உள்ளே புகவொட்டாமல் நல்ல டஃபேடோ குடைத்துணி காப்பாற்றுகிறது. அதை ‘வாட்டர் ப்ரூஃப்’ என்கிறோம். இதே மாதிரி நமக்குக் காம ப்ரூஃபாக, க்ரோத ப்ரூஃபாக, சோக ப்ரூஃபாக ஒரு கவசம் இருக்கிறதா என்றால், இருக்கிறது.

அம்பாளின் கிருபைதான் அந்தக் கவசம். நமக்கு ரொம்பப் பணம் இருக்கலாம். செல்வாக்கு இருக்கலாம். ‘பவிஷு’ கியாதி இருக்கலாம். அழகு ஆரோக்கியங்கள் இருக்கலாம். இவையெல்லாம் அம்பாள் அநுக்கிரஹத்தால் கிடைத்ததாக நாம் சொல்லிக் கொள்ளலாம். ஓரளவுக்கு அப்படி சொல்வது வாஸ்தவம்தான். ஆனாலும் ஆசையும், வெறுப்பும், பயமும், துக்கமும் மனஸிலிருக்கிற வரையில் இதுகள் எல்லாம் கிடைத்துத்தான் என்ன? ஆனபடியால் உண்மையில் அம்பாள் அநுக்கிரஹம் இருப்பதற்கு அடையாளம் நம்மை, ஆசையும், துவேஷமும், பயமும் அழுகையும் தொடாமல் இருப்பதுதான்.

துவேஷம், பயம், அழுகை அவைகளுக்கும் மூலக்காரணம் ‘நான், நான்’ என்று ஒன்றிடம் ஆசைதான்; காமம்தான். எனவே காமம் ஒன்று தொலைந்தால் போதும். அத்தனை அனர்த்த பட்டாளமும் தொலைந்து போனதாக ஆகிறது. அதன்பின், இந்த உலகத்தில், இந்தச் சரீரத்தில் நாம் இருக்கிற போதே மோக்ஷ ஆனந்தம்தான்.

காமேசுவரி என்றும் காமாக்ஷி என்றும் பெயர் படைத்த பராசக்தியை மனமுருகிப் பிரார்த்தித்தால் அவள் நம் காமத்தை அடியோடு துவம்ஸம் செய்துவிடுகிறாள். காமேசுவரி தான் பஸ்பமாகிவிட்ட காமனை மறுபடி உண்டாக்கியவள். அதன்பின் காமதகனம் செய்த பரமேசுவரனுக்குக் காமம் பொங்குகிற மாதிரி தன் கண்களில் பிரேமை பொங்கப் பார்த்தவள்தான் காமாக்ஷி. இவளுடைய அநுக்கிரஹத்தால் நமக்குக் காம ஜயம் ஏற்படுமென்றால் ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றுகிறது. ஆனால் முரண் இல்லை. பரப்பிரம்ம லோகப் பிரக்ஞையே இல்லாமல் இருந்துவிட்டால், மாயா லோகத்தில் மாட்டிக்கொண்டிருக்கிற நாம் எப்படி விடுபடுவது? நம்மை விடுவிக்கவே அதற்குக் காருண்யம் உண்டாகிறது. இந்தக் கருணையைத்தான் பரமேசுவரனுக்கு உண்டான காமம் என்று சொல்கிறோம். இந்தக் கருணை உணர்வு அவருக்குப் பிறப்பதற்குக் காரணமாக இருந்த சக்தியை காமாக்ஷி என்கிறோம். ஸமஸ்த ஜீவராசிகளும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற காமம் தவிர, வேறு ஒரு ஆசையும் இல்லாத பரம அன்பு லீலை அது.

காமனை எரித்த பரமேசுவரனின் பாதியாக அவள் இருப்பதால் -– நெற்றிக் கண்ணில் பேர்பாதி அவளுடையது -– அவள் ஜீவப்பிரபஞ்சத்தின் காமத்தை பஸ்பமாக்குகிறாள். “சிவனுக்குக் காமமூட்டிய நீயே பக்தர்களின் காமத்தை நாசம் செய்கிறாய்” என்று மூகர் அடிக்கடி சொல்வார்.

காம தகனம் செய்த சிவத்தின் சக்தி என்பதால் காமத்தை அவள் எரிக்கிறாள். நாராயண சகோதரியாகவும் இருக்கிறவள் அவள். நாராயணனோ சாக்ஷாத் மன்மதனின் பிதாவாக இருக்கிறார். பலபேருக்குப் பிரம்மா மகாவிஷ்ணுவின் பிள்ளை என்பது மட்டுமே தெரியும். ஆனால் மன்மதனுக்கும் அவர் பிள்ளைதான். மோஹினியாக வந்தபோது அவர் பரமேசுவரனிடமே ஐயப்ப சாஸ்தாவை ஒரு புத்திரனாகப் பெற்றார். சிவ – சக்தி சேர்ந்து பிறந்த சுப்ரமண்யர் போன்றவர் சிவ – விஷ்ணு சேர்ந்து ஜனித்த ஐயப்பன். எனவே பரம ஞானமூர்த்தியாக இருக்கிறார். ஆனால் பிரம்மாவோ ஜன்மாவுக்குக் காரணமாக இருக்கிறார். ஒரு ஜந்து ஜனிக்கக் காரணமாக இருக்கிற காமத்தைத் தூண்டுகிறவனே மஹாவிஷ்ணுவின் இன்னொரு பிள்ளையான மன்மதன். சகல ஜீவராசிகளையும் காமத்தில் தள்ளி ஆட்டிப்படைக்கிற வல்லமை அவனுக்கு இருக்கிறது!

எரித்த காமனை மறுபடியும் உயிர்ப்பித்த காமாக்ஷி காமத்தைப் போக்குகிறாள் என்றேன். இதே மாதிரி காமனைப் படைத்தவர் மஹாவிஷ்ணு என்றால், நம் காமங்கள் போக அவர் அநுக்கிரஹிப்பாரா? நிச்சயம் அநுகிரஹிப்பார். ஸ்ரீராமன் யார்? மஹாவிஷ்ணுவின் அவதாரம். ‘ராமன்’ என்று சொன்னால் அங்கே காமன் வரமாட்டான், என்கிறோம். ராம ராம ராம என்று சொல்லிச் சொல்லியே காமாதி அறுபகைகளை ஒழித்த மகான்கள் பலர் உண்டு. அவரும் காமனும் அப்பா – பிள்ளையாயிற்றே, ஏன் இப்படி என்று கேட்கலாம். அப்பாவிடம் பிள்ளைக்கு உள்ள அபரிமித மரியாதையாலேயே, அவர் இருக்கிற இடத்துக்கு வரமாட்டான். அங்கே தன் வாலைச் சுருட்டிக் கொண்டுவிடுவான். துளஸீதாஸர் இப்படித்தான் வேடிக்கையாகப் பெரிய தவத்தைச் சொல்கிறார். சிவபெருமானிடம் பயத்தினால் அவரது அடியார்களைக் காமன் நெருங்க மாட்டான். மஹாவிஷ்ணுவிடம் மரியாதையினாலேயே அவரது பக்தர்களிடம் தன் கைவரிசையைக் காட்ட மாட்டான்.

நர நாராயணர்கள் என்பதாக மஹாவிஷ்ணு இரட்டை அவதாரம் செய்தார். இவர்கள் பத்ரிகாச்ரமத்தில் தபஸ் செய்தபோது, தபசைக் கலைக்க தேவலோக அப்ஸரஸ்கள் வந்தார்கள். அப்போது நரனுக்கு மகா கோபம் வந்தது. பகவானின் அம்சமாயினும் ‘நரன்’ என்ற பேருக்கு ஏற்றபடி, இவருக்கு மநுஷ்ய சுபாவத்தினால் கோபம் வந்துவிட்டது. “ஹும்” என்று ஓர் உறுமல் போட்டார். அந்த ஹுங்தாரத்தினால் எங்கே பஸ்பமாகிவிடுவோமா என்று பயந்து, அப்ஸரஸ்கள் அவரைவிட்டு, நாராயணர் தபஸ் செய்கிற இடத்துக்கு ஒடி வந்தார்கள். இங்கே வந்து தங்கள் சாமர்த்தியத்தைக் காட்ட ஆரம்பித்தார்கள். நாராயணருக்கோ கொஞ்சம்கூடக் காமமே கிடையாது. அது மட்டுமில்லை. நரர் மாதிரி இவருக்குக் கோபமும் கிடையாது. எனவே சிரித்துக் கொண்டு விளையாட்டாகத் தமது தொடையைத் தட்டினார். நாராயணின் தொடையிலிருந்தே ஊர்வசி (ஊரு-தொடை) தோன்றினாள். அவளுடைய ஒப்பில்லாத ரூப லாவண்யத்தைக் கண்டு, தேவலோக நாட்டிய ஸ்திரீகள் வெட்கி, ‘இவரிடம் நம் சக்தி பலிக்கவே பலிக்காது’ என்று உணர்ந்தார்கள். அப்ஸரர்களும் வெட்கும்படியான அத்தனை பெண்ணழகைக் தமக்குள் வைத்துக்கொண்டே அவர் பரம பரிசுத்தமான தபஸ்வியாக இருந்திருக்கிறார்! அவரையே ஆதாரமாகக் கொண்டு, இவரிடமிருந்தே பிறக்கிற அழகு தன் கைவரிசையை அவரிடமே காட்ட முடியுமா? இதுதான் தாத்பரியம்.

அதே மாதிரி, பிரம்மாவும், மன்மதனும் விஷ்ணுவிடமிருந்து வந்ததாலேயே அவர் ஜன்மத்தை, காமத்தைப் போக்குகிற சக்தி படைத்தவராக இருக்கிறார்.

நாராயண சகோதரியான அம்பாள் சிவனின் சக்தியாகக் காமனைப் பொசுக்கினாள். அவளே எரிந்துபோன காமனுக்குப் புனர்ஜன்மா கொடுத்து அவனைப் படைத்தாள். அவனை ஆக்க, அழிக்க இரண்டுக்கும் அவள் சக்தி பெற்றவள் என்பதிலிருந்து அவன் அவள் ஆக்கத்திலிருக்கிறவன்தான் என்றாயிற்று. எனவே, அவனுடைய அடியார்களை அண்டமாட்டான். இதனால்தான் காமாக்ஷியை உபாஸிப்பவர்கள் காம ஜயம் செய்கிறார்கள்.

நாம் ஏதாவது கெடுதல் வந்தால் ‘சிவா சிவா’ என்கிறோம். கேட்கக்கூடாததைக் கேட்டால் ‘சிவா சிவா’ என்று காதைப் பொத்திக் கொள்கிறோம். மூகரோ ரொம்பவும் நல்லதாக இருக்கிற ஓர் அதிசயத்தைப் பார்த்து, ‘ஆஹா ஆஹா’ என்று சொல்வதற்குப் பதில் ‘சிவ சிவ’ என்கிறார்.

சிவசிவ பசயந்தி ஸமம்
ஸ்ரீகாமாக்ஷி கடாக்ஷிதா: புருஷா:

ஸ்ரீகாமாக்ஷியம்மாளின் கடாக்ஷத்தைப் பெற்றவர்கள் விஷயத்தில் எத்தனை அதிசயங்கள் நடந்துவிடுகின்றன. “சிவ சிவ” என்கிறார். என்ன அதிசயம் என்றால், ‘நமக்கு எல்லாம் வேறு வேறாகத் தெரிகிறபோது அவர்களுக்கு எல்லாம் சமமாகத் தெரிகிறதே!’ என்று வியக்கிறார்.

சமத்துவம் சமத்துவம் என்று இந்தக் காலத்தில் வாய்ப்பேச்சில் நிறையச் சொல்கிறோம். ஆனால் ஞானமில்லாமல், வெறும் பாலிடிக்ஸாகச் சொல்கிறோம். காரியத்தில் இது முக்கால்வாசி பொய்யாகவே இருக்கிறது.

காமாக்ஷியின் கடாக்ஷம் பெற்றவனுக்கோ அத்வைத ஞானமே சித்தித்து விடுகிறது. அவனுக்குப் பார்ப்பதெல்லாம் ஒரே பரம்பொருள்தான். சத்தியமான சம தரிசனம் அவனுக்குத்தான் இருக்கிறது.

அவனுக்குக் காடும் வீடும் ஒன்றாகிவிட்டது என்கிறார் மூகர். அவனுக்குக் குரோதம் என்பது கொஞ்சம்கூட இல்லை. எனவே மித்திரனும் சத்துருவும் சமமாகி விட்டார்களாம்!

காமமும் அவனை விட்டு அடியோடு அகன்றுவிட்டது. யுவதியின் சிவந்த உதடும், மண்ணாங்கட்டியும் அவனுக்கு சமமாகிவிட்டன என்கிறார் மூகர்.

லோஷ்டம் ச யுவதி பிம்போஷ்டம்

என்று பிராஸம் போட்டு அழகோடு சொல்கிறார்.

லோஷ்டம் – மண்ணாங்கட்டி; ஓஷ்டம் – உதடு (உதடு பெரிதாகித் தொங்கிக்கொண்டிருக்கிற பிராணிதான் ஓஷ்ட்ரம்; இதுவே தமிழில் ஒட்டை, ஒட்டகம்); ‘பிம்பம்’ என்றால் கோவைப் பழம்; ‘பிம்போஷ்டம்’ – கோவைப்பழம் மாதிரிச் சிவந்த உதடு.

கீதையில் பகவான் “யோகீ ஸம லோஷ்டாச்ம காஞ்சன” என்று சொன்னதை நினைப்பூட்டுகிற மாதிரியே, மூகரும் சொல்கிறார். பொன்னாசையை வைத்து, ‘பொன்னும் மண்ணும் யோகிக்குச் சமம்’ என்றான் பகவான். மூகர் பெண்ணாசையை வைத்துப் பேசுகிறார்.

எத்தனை காமம், குரோதம், சோகம், பயம் இவற்றை உண்டு பண்ணுகிற வஸ்துவும் அம்பாளை உபாஸிக்கிறவனைக் கொஞ்சம்கூட அசைக்காது.

காமக்குரோதாதிகள் இல்லாமல் எப்போது பார்த்தாலும் அவளையே தியானித்துக் கொண்டிருந்தால் அதுவேதான் மோக்ஷம். ‘அவள் வேறு. நாம் வேறு’ என்கிற பாவனையும் போய், அவளே நாமாக முடிகிற அந்த நிலையே மோக்ஷம்.

ஆரம்ப நிலையில் அவள் வேறு என்றே பாவிக்கலாம். அப்போது அவளுடைய சரணாரவிந்தங்களையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அவளைப் பிரார்த்தித்தபடி இருக்க வேண்டும்; கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அவளிலேயே கரைக்க வேண்டும்.

நாம் கொஞ்சம் பிரயாசைப்பட்டாலும் போதும். அவளே நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி ரக்ஷிப்பாள். நமக்கும் அவளுக்கும் இருக்கிற வேறுபாட்டையும் தகர்த்துக் தானாகவே ஆக்கிக் கொள்வாள்.

இன்னல் தருவதும் அவள் இன்னருளே !

அம்பாள் கருணாமயமானவள், அருளே உருவானவள் என்கிறோம். லலிதா ஸஹஸ்ரநாமத்தின் முடிவில் அவளை ‘ஒரு காரணமும் இல்லாமல் கருணை செய்கிறவள்’ (அவ்யாஜ கருணாமூர்த்தி) என்று சொல்லியிருக்கிறது.

ஆனால் லோகத்தில் கணக்கு வழக்கே இல்லாமல் கஷ்டங்களும் இருக்கின்றன. எனக்குத்தான் தெரியும். ஜனங்களுக்கு எத்தனை தினுசான கஷ்டங்கள் இருக்கின்றன என்று. என்னிடம் வருகிறவர்களெல்லாம் ஏதாவது கஷ்டத்தைச் சொல்கிறார்கள். பூஜை, புனஸ்காரம், க்ஷேத்திராடனம், தீர்த்தாடனம் செய்கிறவர்களுக்கும் சொல்லி முடியாத கஷ்டங்கள் வருகின்றன. இந்தச் சமயத்தில் சில பேர் ரொம்பவும் மனசு வெதும்பி ‘ஐயோ! நான் இத்தனை பூஜை பண்ணினேனே, பக்தி வைத்தேனே, அம்பாள் எனக்குக் கஷ்டத்தையேதானே கொடுத்துக் கொண்டிருக்கிறாள்! கருணாமூர்த்தி, கருணாமூர்த்தி என்று அவளைச் சொல்கிறீர்களே, என் விஷயத்தில் அவளுக்குக் கண் இல்லையே’ என்று துக்கப்படுகிறார்கள். அம்பாளிடம் கோபம்கூட அடைந்து விடுகிறார்கள். ஆனால் என்னைக் கேட்டால் கஷ்டம் தருவதே அம்பாளின் கருணைதான்; பார்க்கப்போனால் இதுதான் பெரிய கருணை என்று தோன்றுகிறது.

நாம் இப்போது செய்கிற நல்லதை மட்டும் நினைத்துப் பார்த்து நமக்குக் கஷ்டம் வருவது நியாயமா என்று பிரலாபிக்கிறோம். தெய்வத்தை நொந்து கொள்கிறோம். ஆனால் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நாம் ஒவ்வொருத்தரும் நல்லது மட்டும்தானா செய்திருக்கிறோம்? நம்மை நாமே அலசிப் பார்த்துக் கொண்டால் நாம் எத்தனை தப்புகள் பண்ணியிருக்கிறோம். காரியத்தில் செய்யாவிட்டால்கூட மனஸினால் எத்தனை மகாபாவங்களைப் பண்ணியிருக்கிறோம் என்பது தெரியும். இதெல்லாம் இப்போதைய – அதாவது இந்த ஜன்மத்து – விஷயம். இதற்கு முன் ஜன்மங்களில் நாம் என்ன செய்தோம் என்று நமக்கு தெரியாது. இந்த விதையைப் போட்டால் இந்தப் பயிர் வரும் என்கிறது அம்பாள் போட்ட சட்டம். பூர்வ ஜன்மங்களில் வினையை விதைக்கிறோம்; அதற்கு அவள் தருகிற பலனை, கஷ்டத்தை இப்போது அறுவடை செய்கிறோம். வாஸ்தவத்தில் நம் தோஷங்கள், பாவம் நமக்குப் பூரணமாகத் தெரிந்துவிட்டால் அம்பாள் நமக்குத் தருகிற இத்தனை கஷ்டமும்கூடப் போதாது என்றுதான் ஆகும். அப்போது நாமே பச்சாதாபப் படுவோம். ‘இத்தனை கஷ்டத்துக்கிடையில் அவளை நினைத்துக் கதிமோக்ஷம் தேடிக் கொள்கிற வழி கொடுத்திருக்கிறாளே! இது அதிகப்படி (Extra) கருணை அல்லவா! நமக்கு லாயக்கு இல்லாவிட்டாலும் அவளாகப் பொழியும் கருணையல்லவா! இதைப் புரிந்து கொண்டு சந்தோஷப்படாமல், அவளையே குறை சொல்வது எத்தனை அநியாயம்? ஏற்கனவே பண்ணின தப்பெல்லாம் போதாது என்று, அவளையே குறை சொல்கிற இந்தப் பெரிய தப்பையும் பண்ணுகிறோம்!’ என்று உணருவோம்.

குழந்தை மண்ணைத் தின்கிறது. அம்மாக்காரி அதன் கைகளைத் துணி போட்டுக் கட்டுகிறாள். அதற்கு மகா கோபம் வருகிறது. ‘அம்மாவாம், அம்மா! கொஞ்சம்கூட இரக்கம் இல்லாதவள். இவள்தான் நமக்குப் பரம துரோகி’ என்று நினைக்கிறது. காரணம் இல்லாமலா அம்மா கட்டிப் போட்டாள்? குழந்தையைப்பற்றி அவளுக்கு இல்லாத அக்கறையா? குழந்தை தனக்குத் தானே சத்ருவாக இருந்துகொண்டு, அம்மாவை சத்துரு என்று நினைக்கிறது.

நாம் எத்தனை பெரியவர்களாக இருந்தாலும் என்னென்ன புரட்டுக்கள் புரட்டினாலும், வாஸ்தவத்தில் இந்தக் குழந்தை மாதிரிதான் இருக்கிறோம். நம்முடைய பழைய தப்புக்கு அவள் தண்டனை தருவது நமக்குக் கஷ்டமாக இருக்கிறது. அதிலிருந்து விடுபட முடியவில்லை. நமக்கு அந்த சக்தி இல்லை. கட்டிப் போட்டுவிட்டாள் என்று குற்றம் சாற்றுகிறோம். குழந்தை மண்ணைத் தின்னப் போகிற மாதிரி நம் அதே பழைய தப்புகளைப் பண்ணாமலிருப்பதற்காகத்தான் கஷ்டம் என்கிற கட்டை ஜகன்மாதா போட்டிருக்கிறாள். கஷ்டம் வந்தால், ‘நாம் பூர்வத்தில் பண்ணின பாவத்தாலேயே இது வந்தது; ஆனபடியால் இந்த ஜன்மத்தில் தப்பு பண்ணினாலும் இதுமாதிரியே கஷ்டங்கள் இனியும் வந்து கொண்டேயிருக்கும்; அப்படித் தப்புப் பண்ணாமலிருக்க புத்தி தர வேண்டும் என்று அம்பாளைப் பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பதுதான் நமக்கு விமோசனம் என்று தெளிய வேண்டும்.

நாம் நல்லது என்று நினைக்கிற சௌக்கியங்களை அம்பாள் தருகிறபோது மட்டும் கருணை என்று நினைக்கிறோம். அவற்றைப் பெற நமக்கு யோக்கியதை இல்லாதபோதுகூட அவள் அநுக்கிரஹிப்பதால் இதை காரணமில்லாத கருணை என்கிறார்கள். கஷ்டமோ ஒரு காரணத்துக்காக உண்டான கருணை. நாம் பூர்வத்தில் செய்த தப்பு அதற்குக் காரணம். இந்த மாதிரி இனிமேல் நாம் செய்யக்கூடாது என்று உணர்த்துவதற்காக, நம்மை நாமே நல்லவர்களாக்கிக் கொள்வதற்காக கஷ்டத்தைத் தருகிறாள். நல்லது என்று நாம் நினைக்கிற சௌக்கியங்களால் பலவிதமான அனர்த்தங்களும் நமக்கே உண்டாகலாம். எனவே, நமக்கு சௌக்கியம் தந்து நல்லதைச் செய்கிற கருணையைவிட, நம்மையே நல்லவர்களாக்கிக் கொள்ளச் செய்வதைக் காரணமாகக் கொண்டு கஷ்டத்தைத் தரும் கருணைதான் விசேஷமானது என்று எனக்குத் தோன்றுகிறது. காரணமில்லாமல் நல்லதைக் கொடுப்பது அவளுடைய ஸ்வபாவமான கருணை என்றால், நம்மைச் சோதித்துத் திருத்த வேண்டும் என்ற காரணத்தோடு அவள் கஷ்டத்தைக் கொடுக்கிறாளே, இந்தக் காரணக் கருணை அதைவிட உயர்ந்தது என்று தோன்றுகிறது. நாம் கொஞ்சம் கொஞ்சம்தான் பார்க்கிறோம். இதற்கு முந்தியோ பிந்தியோ நமக்குத் தெரியவில்லை. அதனால் இந்தச் சின்ன இடைவெளிக்குள் ஏற்படுகிற கஷ்டத்தைப் பார்த்து நமக்குக் கெடுதல் என்று நினைத்து விடுகிறோம். முக்காலமும் தெரிந்து பார்த்தோமானால், அவள் நமக்குக் கொஞ்சம்கூடக் கெடுதலே செய்வதில்லை என்று புரியும்.

கழுதை மேலே உப்புப் பொதி போட்டுக்கொண்டு ஒருத்தன் வேற்று ஊர் சந்தைக்குப் போனான். அந்தக் காலத்தில் உப்பு மூட்டையை மாட்டு மேலே, கழுதை மேலேதான் போட்டுக்கொண்டு போவார்கள். அப்படி போனான் இந்த வியாபாரி. போகிறபோது வழியில் திடீரென்று மழை பிடித்துக்கொண்டு வெளுத்துக் கட்டி விட்டது. உப்புப் பொதி என்ன ஆகிறது? எல்லாம் கரைந்து போயிற்று. வியாபாரிக்கு ஸ்வாமி மேலே மகா கோபம் வந்துவிட்டது. ‘ஏழை என் வயிற்றில் இந்தத் தெய்வம் அடித்துவிட்டதே. கருணையில்லாத சாமியை இனிமேல் கும்பிடுவதில்லை’ என்று முடிவு பண்ணிவிட்டான். வீட்டுக்குத் திரும்ப நடையைக் கட்டினான், வருகிற வழி காட்டு வழி. இருந்தாலும் இவன் மாதிரி பல வியாபாரிகள் கூட வந்த தைரியத்தில் காட்டு வழியாக வந்தான். காட்டிலே திருடர்கள் இவர்களை எதிர்ப்பார்த்துக் கொண்டு மறைந்திருந்தார்கள்.

சந்தையிலே விற்பனை நடத்தி வியாபாரிகள் நிறையப் பணம் கொண்டு வருவார்கள்; துப்பாக்கியால் சுட்டு அவர்களிடம் இருக்கிற பணத்தை எல்லாம் பிடுங்கிக்கொள்ளலாம்’ என்று திருடர்கள் ஆசையாகக் காத்துக் கொண்டிருந்தார்கள். துப்பாக்கி வைத்துக் கொண்டிருக்கிறவர்களிடம் வியாபாரிகள் எத்தனை பேர் இருந்தாலும் என்ன செய்ய முடியும்? எல்லாரும் நடுநடுங்கிப் போனார்கள். அந்தக் காலத்திலே தோட்டா துப்பாக்கி கிடையாது. வெடிமருந்து கெட்டித்துத்தான் அதை வைத்து சுடுவார்கள். துப்பாக்கி சூட்டுக்கு ஆளே அகப்பட்டாலும் சரி; இல்லாவிட்டாலும் அவரவரும் உடைமைகளைப் போட்டுவிட்டுத் திக்குக்கு ஒருத்தராக ஓடி விடுவார்கள். எப்படியானாலும் திருடர்களுக்கு வேட்டைதான்! இன்றைக்கும் இப்படி மருந்து போட்டுச் சுட்டார்கள். ஆனால் மருந்து வெடிக்கவேயில்லை. பெரிதாக மழை பெய்திருந்தது அல்லவா? தோட்டாவாக இருந்தால் எந்த மழைக்கும் ஈரம் தாக்காது. மருந்து அப்படியில்லை. ஈரம் ஜாஸ்தியானால் வெடிக்காது. துப்பாக்கியால் சுட்டதெல்லாம் வெறும் புஸ்வாணமாயிற்று. இப்போது ஆயுத பலம் இல்லாத திருடர்களுக்குப் பயம் எடுத்தது. வியாபாரிகள் பணத்தை போட்டுவிட்டு ஓடுவதற்குப் பதில், திருடர்களே துப்பாக்கிகளைப் போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார்கள். முதலில் சொன்னேனே, அந்த வியாபாரிக்கு இப்போதுதான் தெய்வத்தை நிந்தித்தது எவ்வளவு தப்பு என்று புரிந்தது. ‘மழை வந்ததால் உப்புதான் போச்சு; மழை வராவிட்டால் உயிரே போயிருக்கும். இந்த மழையினால் சின்னக் கஷ்டத்தைத் தந்து, அதே காரணத்தினால் பெரிய கஷ்டத்திலிருந்து தப்புவித்தாய். உன் கருணையை என்னவென்று சொல்வது?’ என்று ரொம்பவும் மனசு உருகி வேண்டிக் கொண்டான். இப்படிக் கதை.

முந்தி என்ன, பிந்தி என்ன என்று தெரியாமல் கஷ்டம் வருகிற சமயத்தை மட்டும் பார்க்கிறோம். அம்பாளுக்குக் கருணை இருந்தால் ஏன் கஷ்டம் வருகிறது என்று கேள்வி போடுகிறோம். முந்தி நாம் செய்த கர்மம், பிந்தி நமக்கு இந்த கஷ்டத்தாலேயே வரப்போகிற நன்மை இவை மட்டும் தெரிந்துவிட்டால் நாம் இப்படிச் செய்யமாட்டோம். அது தெரியாதபடி மனிதனை வைத்திருக்கிறாள். அதுவும் அவள் விளையாட்டுத்தான்.

இதெல்லாம் தெரியாதபோதே மநுஷ்யனுக்கு இத்தனை, ஆணவம், அகங்காரம் இருக்கிறதென்றால் திரிகாலமும் தெரிந்தால் இவனுடைய அதிக்ரமத்துக்கு எல்லையே இல்லாமல் போய்விடும். இவன் அடங்கிக் கிடக்கவேண்டும் என்றே இப்படி வைத்திருக்கிறாள். ஆனால் இந்த ஸ்திதியிலும் கூட ‘நமக்கு முந்தியும் தெரியவில்லை. பிந்தியும் தெரியவில்லை’ என்பதையாவது நாமே தெரிந்து கொள்ளலாம். முக்காலமும் தெரிந்த மகான்கள் சொல்வதை நம்பலாம். சகல ஜகத் வியாபாரமும் காரண காரிய ரீதியில் சட்டம் போட்ட மாதிரி நடக்கிறதைப் பார்த்தே, ‘நம் மநுஷ்ய வாழ்க்கையும் இப்படித்தான் இருக்க வேண்டும்; நாம் கஷ்டப்படுகிறோம் என்றால் அதற்குக் காரணம் இருக்க வேண்டும்; இனிமேல் இந்தக் கஷ்டம் வரக்கூடாது என்றால் அவள்தான் கதி’ என்று புத்தி பெறலாம்!

அம்பாள் நம்மைக் கஷ்டப்படுத்தி ஸந்தோஷப்படுபவள் அல்ல. இப்படி நாம் நினைக்கவே கூடாது. எல்லாக் காலத்திலும் நமக்குப் பந்துவாக, சகாயமாக இருப்பது தாயும் தந்தையுமாய், அம்மையப்பனாக இருக்கிற அவள்தான்.

ஆசார்யாள் காட்டும் அம்பாள்

நம்முடைய ஆசாரியர்களான ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் அம்பிகையை ஸ்தோத்திரம் செய்யும் அநேக கிரந்தங்களை அநுக்கிரஹம் பண்ணியிருக்கிறார்கள். ஸெளந்தர்ய லஹரியைத் தவிர, ‘ஆனந்த லஹரி’, ‘தேவி புஜங்கம்’, ‘த்ரிபுர ஸுந்தரி மானஸ பூஜா ஸ்தோத்திரம்’, ‘த்ரிபுர ஸுந்தரி வேத பாத ஸ்தவம்’ – இந்த மாதிரி பெரிய ஸ்தோத்திரங்களும் ‘அன்ன பூர்ணாஷ்டகம்’, ‘அம்பாஷ்டகம்’ மாதிரி சின்னச் சின்ன ஸ்தோத்திரங்களும் தேவீபரமாகச் செய்திருக்கிறார். இவைகளை நாம் பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தாலே போதும். அம்பாளின் அநுக்கிரஹ வெள்ளத்தில் ஆனந்தமாக மிதந்து கொண்டிருக்கலாம். பரம அற்புதமான வாக்கிலே இவை அமைந்திருக்கின்றன. ஆனாலும், இவற்றைச் செய்த ஆசார்யாளோ துளிக்கூடக் கர்வப்படாமல், எல்லா சக்திகளுக்கும் ஆதாரமாக, சக்தி சமுத்திரமாக இருக்கப்பட்ட அம்பாளை நிரம்பவும் விநயத்தோடு துதிக்கிறார்கள். தமக்கு அவளுடைய அநுக்கிரஹத்தை கோருகிற யோக்கியதை கொஞ்சம்கூட இல்லை என்கிற நைச்சியமான எண்ணம் தொனிக்க அநேக இடங்களில் பேசுகிறார். ‘ஸெளந்தர்ய லஹரி’யில் குறிப்பாக இரண்டு இடங்களில் இந்த அதிவிநயமான மனோபாவம் நம் மனஸைத் தொடுகிற மாதிரி வெளியாகியிருக்கிறது. இவற்றில் ஓரிடத்தில் (த்ருசா த்ராகீ யஸ்யா) அம்பாளின் கடாக்ஷத்தைப் பிரார்த்திக்கிறார்: மற்றதில் (த்ருதீனாம் மூர்த்தானோ) அவளுடைய சரணாரவிந்த ஸ்பரிசத்தை வேண்டுகிறார். அம்பாளுடைய கடைக்கண் வீச்சைத் தம்மீது திருப்புமாறு கேட்கிறபோது, ‘என்னையும்கூட (மாமபி) கடாக்ஷித்து அருள்வாயம்மா’ என்று கேட்டுக்கொண்ட மாதிரியே, மற்றைய இடத்திலும் “என் சிரஸிலும்கூட (மமாபி சிரஸி) உன் திருவடிகளை வைத்து அநுக்கிரஹம் பண்ணு தாயே” என்கிறார். இரண்டு இடங்களிலும் இந்த ‘அபி’ என்ற சொல்லையே பிரயோகம் செய்திருக்கிறார். தமக்கும்கூட அவளது அநுக்கிரஹம் வேணும் என்று சொல்வதிலிருந்தே, நியாயப்படி பார்த்தால் நமக்கு அதைப் பெற தகுதி இல்லை என்று நினைப்பது ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. ‘எந்த யோக்கியதையும் இல்லாமலே உன் அருளைக் கேட்கிறேனம்மா’ என்று சொல்லாமல் சொல்கிறார்.

ஞானத்திலாகட்டும், பக்தியிலாகட்டும், புத்தியிலாகட்டும், வாக்கு வன்மையிலாகட்டும், காரிய சக்தியிலாகட்டும், கருணையிலாகட்டும், நம் ஆச்சாரியாளைப்போல பூரண யோக்கியதை உள்ளவர்கள் அவருக்கு முந்தியும் இல்லை, பிந்தியும் இல்லை. அப்படியிருந்தாலும் நமக்கெல்லாம் வழிகாட்டியாக, நாம் அடக்கத்துடன் எப்படி அம்பாளைப் பிரார்த்திக்க வேண்டும் என்று, நமக்குச் சொல்லிக் கொடுக்கிறமாதிரி மாமபி, மமாபி (என்னையும்கூட கடாக்ஷி! எனக்கும்கூட திருவடியைத் தா) என்கிறார்.

யோக்கியதை இல்லாமல் கேட்கலாமா என்றால் நியாயப்படி அது சரியில்லைதான். ஆனால், நியாய அநியாயங்களைப் பார்க்காமல், நல்லதையே செய்துகொண்டிருக்கிற அன்பு மயமான வஸ்துக்களும் இருக்கின்றனவே என்று எடுத்துக் காட்டுகிறார். “நல்ல பூர்ணிமை நிலை ராஜாவின் நிலை முற்றத்தில் மட்டுமா விழுகிறது? காட்டிலே இருக்கிற கள்ளிப் புதர்மேலேகூடத்தானே அமிருதமாகப் பொழிகிறது! சந்திரிகை எப்படி யோக்கியதை பார்க்காமல், சகல இடங்களிலும் சமமாக விழுந்து குளிர்ச்சியும் பிரகாசமும் தருகிறதோ, அப்படியே உன் கடாக்ஷ வெள்ளமானது தகுதி வாய்ந்த உத்தம அதிகாரிகளின் மேல் மட்டுமில்லாமல் என் மேலும்கூட விழுந்து என்னையும் ஸ்நானம் பண்ணி வைக்கலாகாதா? ஞானத்தின் பிரகாசத்திலும் காருண்யத்தின் குளிர்ச்சியிலும் என்னை முழுக்கக்கூடாதா?” என்கிறார். ‘த்ருசா த்ராகீயஸ்யா’ என்ற சுலோகத்தில்.

இப்படியே அம்பாளுடைய சரண கமலங்களைத் துதிக்கிறபோது “வேதங்கள் தங்கள் சிரசுக்கு ஆபரணமாக எந்த உன் பாதங்களைத் தாங்குகின்றனவோ, அந்தப் பாதங்களை என் சிரஸிலும்கூட வைப்பாய் அம்மா” என்கிறார்.

இப்படிக் கேட்பது நியாயமில்லையே என்றால், ‘நியாயம் – அநியாயம் என்பவை காரிய – அகாரியங்களை எடை போடுகிறபோதுதான். தயை என்பதோ இப்படி குணாகுணங்களை எடைபோட்டுப் பார்ப்பதில்லை. நீயோ தயையே வடிவமானவள். எனவே, அந்த தயையால் என் தலைமீதும்கூட உன் திருவடிகளை வைப்பாய்” என்கிறார் (தயயா தேஹி சரணௌ)

வேதத்தின் சிரஸில் அம்பாளின் பாதம் இருக்கிறது என்பதில் ஒர் உள்ளர்த்தம் உண்டு. உபநிஷத்துக்களுக்கே சுருதி சிரஸ், வேதங்களின் முடி என்கிற பெயர் இருக்கிறது. முன்பே நான் ஞானாம்பிகையையைப் பற்றிச் சொல்கிறபோது கேநோபநிஷத்தில் அவளுடைய ஆவிர்பாவத்தைப் பற்றி வருகிறது என்று சொல்லியிருக்கிறேன். தேவர்கள் அகம்பாவம் அடைந்தபோது, அதைப் போக்கி அவர்களுக்கு ஞானம் தருவதாக அம்பிகை தோன்றியதைக் கேநோபநிஷத் சொல்கிறது. இங்கே ஆசார்யாள் அதை மனஸில் கொண்டே சொல்வதாகத் தெரிகிறது. அகம்பாவ நிவிருத்தி தானே ஞானத்துக்கு வழி என்று அந்த உபநிஷத்திலிருந்து தெரிகிறது. அதற்கு ஏற்றாற்போல் இங்கேயும் அகம்பாவமே இல்லாமல் ரொம்பவும் அடங்கி ‘மமாபி’ “எனக்கும்கூட திருவடி ஸ்பரிசத்தை அநுக்கிரகிப்பாயம்மா” என்கிறார்.

ஒவ்வொரு காரியத்துக்கும் நேராக, முக்கியமான ஒரு பலன் இருப்பதோடு, வேறு சில பலன்களும் ஏற்படுகின்றன. இந்தப் பலன்களை உத்தேசிக்காவிட்டாலும்கூட, அவை பாட்டுக்கு உண்டாகி விடுகின்றன. கேநோபநிஷத்தில் அம்பாளைப் பற்றிச் சொல்லியிருப்பதில் இப்படியே ஞானோபதேசம் என்கிற நேர் உத்தேசத்தோடு, வேறு ஒரு பிரயோஜனமும் நமக்குக் கிடைக்கிறது. இது ஆத்ம ஞானத்துக்கோ அம்பாள் தத்துவத்துக்கோ சம்பந்தமில்லாதது என்றாலும்கூட, இதிலும் ஒரு முக்கியத்துவம் நவீன காலத்தவர்களுக்கு இருப்பதால் இவ்விஷயத்தைச் சொல்கிறேன்.

இக்கால ஆராய்ச்சியாளர்களில் ரொம்பப் பேர், ‘புராண காலத்தில்தான் பரமேசுவரன், பார்வதி, விஷ்ணு, பிள்ளையார் முதலிய தேவதா ரூபங்கள் ஏற்பட்டன. புராணங்களுக்கு முற்பட்ட உபநிஷத்துகளில் இவர்களைப் பற்றிப் பேச்சே இல்லை. அரூபமான ஞான தத்துவத்தை மட்டும்தான் உபநிஷத்துக்கள் சொல்கின்றன, என்கிறார்கள். ஆனால் இங்கே கேநோபநிஷத்திலோ, ‘ஹைமவதியான உமா என்கிற ஸ்திரீ வந்து தோன்றினாள்’ என்று பரம ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது. ‘ஸ்திரீ’, ‘ஹைமவதி’, ‘உமா’ என்பதெல்லாம் உபநிஷத்து மூலத்திலேயே வருகிற வார்த்தைகள். பிரம்மம் யக்ஷமாக நின்ற அதே ஆகாசத்தில், மகா சோபையோடு இவள் நின்றாள் என்கிறது. இரண்டுமே ஒன்றே என்பது உட்பொருள். ‘ஸ்திரீ’ என்று சொன்னதால் ஆண், பெண் கடந்த அரூப தத்துவத்தை மட்டுமே உபநிஷத்துக்குள் தெய்வமாகக் கொண்டிருந்தன என்று சொல்வதை நிராகரித்ததாக ஆகிறது. அவளை ‘உமா’ என்று சொன்னதோடு நில்லாமல் ‘ஹைமவதி’ என்றும் சொன்னதால் ஹிமவானின் புத்திரியாக அவள் அவதரித்த விருத்தாந்தமும் உபநிஷத் காலத்திலேயே வழக்கிலிருந்ததாக ஏற்படுகிறது. (ஹிமவானின் புத்திரி ஹைமவதி; பர்வத ராஜனின் புத்திரி பார்வதி). இன்றைய இந்து மதத்தின் மூர்த்தி வழிபாடு புராண காலத்திற்கு முற்பட்டது. அது உபநிஷத் காலத்திலேயே இருந்திருக்கிறது என்பதற்கு அழுத்தமான உட்சான்று (internal evidence ) கேநோபநிஷத்தில் கிடைக்கிறது.

உபநிஷத்தில் ஞானம் தந்தவளாகச் சொல்லப்பட்ட அம்பாளின் பாதத்தைத் தம் தலையில் வைக்குமாறு, ஆசாரியாள் பிரார்த்திக்கிறார். இங்கே அம்பாளே குரு ஸ்வரூபிணி என்பது உறுதியாகிறது. குரு பாதுகை எப்போதும் சிரஸில் இருந்து கொண்டிருப்பதாக மந்திர சாஸ்திரங்கள் சொல்கின்றன. இவ்விடத்தில் எப்போதும் குருவின் திருவடி தீஷை கிடைத்துக் கொண்டேயிருக்கிறது.

ஞான குருவாக கேநோபநிஷத்தில் தோன்றி, வேத முடிக்கு அணிகலனாகத் தன் பாதங்களை வைத்திருக்கிறாள் அம்பிகை. அந்தப் பாதங்களுக்கு உள்ள மற்ற மகிமைகளையும் இந்த சுலோகத்தில் ஆசார்யாள் கூறுகிறார். பெரியவர்கள், மகான்கள், ஆசாரியார்கள் ஆகியோரின் பாதங்களுக்கு ஜலம் வார்த்து உபசாரம் செய்ய வேண்டும். ஷோடசோபசாரம் என்கிற பதினாறு உபசாரங்களில், பாதங்களில் ஜலம் விடுவதைப் ‘பாத்யம்’ என்பார்கள். அம்பாளுக்குப் ‘பாத்யமாகப்’ பசுபதியின் ஜடையிலிருந்து கங்கா தீர்த்தம் எப்போதும் பெருகிக்கொண்டேயிருக்கிறதாம். சாக்ஷாத் பரப்பிரம்ம சக்தியாக இருக்கப்பட்ட அவளுடைய சரண கமலங்களில், பூத லோகங்களுக்கெல்லாம் பிரபுவானதால் பசுபதி என்று பேர் படைத்த ஈசுவரனும் நமஸ்கரிக்கிறான் என்பது தாத்பரியம். ஈசுவரன் அப்படி இவள் பாதத்தில் தலையை வைத்து நமஸ்கரிக்கும்போது அவனுடைய ஜடையிலிருந்து கங்கா ஜலம் பாதத்தில் விழுமல்லவா? இதைத்தான் ‘பாத்யம்’ தருவதாகச் சொல்கிறார். ஈசுவரனுக்கு அந்த பிரபுத்வ சக்தியும் மூலமான பிரம்ம சக்தியிடமிருந்துதானே உண்டாயிற்று? அதனால் அவருங்கூட அகம்பாவமில்லாமல் இங்கே வந்து நமஸ்கரிக்கிறார்.

‘உத்தம ஸ்திரீகள் பாதங்களில் லாக்ஷாரஸம்’ என்கிற செவ்வரக்குக் குழம்பைப் பூசியிருப்பார்கள். அம்பாள் பாதத்தை அலங்கரிக்கவோ வேறு சிவப்பு ஜோதி ஒன்று இருக்கிறது என்கிறார். ‘ஹரி’ எனப்படும் சாக்ஷாத் நாராயணனின் சிரஸில் குடியிருக்கிற சூடாமணியின் பிரகாசமே, அம்பாளின் பாதத்துக்கு லாக்ஷாரஸமாக இருக்கிறது’ என்கிறார் ஆசார்யாள். ஜகத் பரிபாலன கர்த்தாவான மகாவிஷ்ணு அவரது பரிபாலன சக்தியும் பராசக்தியிடமிருந்தே வந்தது என்பதால் அடக்கத்தோடு அவளுடைய சரண கமலங்களில் நமஸ்கரிக்கிறார். அப்போது அவருடைய சிரோ பூஷணம் அம்பாளுக்குப் பாத பூஷணமாகிறது. மஹாவிஷ்ணுவின் கிரீடத்திலே டால் அடிக்கிற சிவப்பு மணி அம்பாளின் பாதத்தில் செங்குழம்பு பூசின மாதிரி இருக்கிறது.

தேவர்கள், ஸ்ரீ மகாவிஷ்ணு, பரமேசுவரன் எல்லோரும் அகம்பாவமே இல்லாமல் ஆராதனை செய்த அம்பாள், நம் அகம்பாவத்தைப் போக்கி ஞான அநுக்கிரஹம் செய்ய வேண்டும். அதற்கு வழியாக, அவளுடைய சரணார விந்தங்களை நம் ஆச்சார்யாள் போல நாமும் தியானம் செய்ய வேண்டும்.

அம்பாளுடைய பதிவ்ரத்தியப் பணிவைப் பல இடங்களில் சொன்ன ஆசார்யாள், இங்கே அவளை ஈஸ்வரனே நமஸ்கரித்ததாகச் சொல்கிறாரே என்றால், இது எல்லாமே லீலைதான். இருவரும் ஒன்றேதான். ஒரு பாவத்தில் இவள் நமஸ்கரிக்கிறாள். இன்னொன்றில் அவர் நமஸ்கரிக்கிறார். இரண்டும் ஒன்றுதான் என்றாலும், அவரே சாந்தமான ஸத்வஸ்துவாகவும், இவளை சக்திமயமான சித்தாகவும் விசேஷிப்பது வழக்கம்.

‘ஸெளந்தர்ய லஹரி’யின் முதல் சுலோகத்திலேயே அம்பாளுடைய இந்த அபாரமான சக்தியை ஆசார்யாள் சொல்கிறார். (சிவ: சக்த்யா யுக்தோ) “சக்தியாகிற அம்மா! பரமேசுவரனான சிவனும் உன்னுடன் சேர்ந்திருந்தால்தான் காரியம் செய்வதற்குத் திறமை உள்ளவராவார். உன்னோடு சேர்ந்திராவிட்டால் அவரால் துளி அசைவதற்குக்கூட முடியாது. அதற்கான சாமர்த்தியம், சக்தி அவருக்குக் கிடையாது” என்கிறார். தன்னைத் தவிர வேறு ஏதுமே இல்லாததால், எதையும் அறிந்து கொள்ள முடியாமல் இருப்பது பிரம்மம். இருந்தாலும் லோகத்தில் இத்தனை தினுசான அறிவுகள் வந்துவிட்டன. பிரம்மம் எங்குமாக எல்லாமாக இருப்பதால் அது அசைவதற்கு இடம் ஏது? ஆனாலும், பிரம்மாண்டம் முழுக்க சூரியன், நக்ஷத்திரங்களிலிருந்து தொடங்கி அணுவுக்குள் இருக்கிற எலெக்ட்ரான் வரையில் எல்லாம், எப்போது பார்த்தாலும் அசைந்து கொண்டே இருக்கின்றன. நம் மனஸோ கேட்கவே வேண்டாம். எப்போது பார்த்தாலும் அசைவுதான். இத்தனை அறிவுகளும் அசைவுகளும் எப்படியோ பிரம்மத்தில் வந்துவிட்ட மாதிரி இருக்கின்றன! அதுதான் மாயா காரியம்; அல்லது பிரம்ம சக்தியின் பிரபாவம்! பிரம்மத்தை சிவன் என்றும் அதன் சக்தியை அம்பாள் என்றும் சொல்கிறபோது, இதையே ஆச்சார்யாள், “அம்மா! நீதான் சிவனையும் ஆட்டி வைக்கிறாய், அசைய வைக்கிறாய்” என்கிறார். இறுதியில் இல்லாமல் போகிற லோகம் அவளால்தான் வந்தது. மாயா – எது இல்லையோ அதுவே – மாயா. நமக்கு மாயையைப் போக்குகிறவளும் அவள்தான்.

நாம் பார்க்கிற ரூபமெல்லாம் அவள் செய்ததுதான்; அவளேதான். இருந்தாலும் விசேஷமாகச் சில ரூபங்களில் தியானித்தால் நம் மனசு லயிக்கிறது. எல்லா ரூபத்துக்கும் இடம் தருகிற அகண்ட அரூப ஆகாசமாக இருக்கிறவளே பிராண சக்தியாக, மூச்சுக்காற்றாக இருக்கிறாள். அக்னி, ஜலம், பூமி எல்லாம் அவள் வடிவம்தான். ‘மனஸ்தவம்’ என்கிற சுலோகத்தில் ஆசார்யாள் இதையெல்லாம் சொல்கிறார்.

இதற்கு முன் சுலோகத்தில் (சரீரம் த்வம்) இரவும் பகலும் அம்பாளின் ரூபங்கள்தான் என்பதை ஆசாரியாள் சொல்கிறார். தாயார் குழந்தைக்குப் பால் கொடுக்கிற மாதிரி சூரியன் சந்திரன் என்கிற இரண்டால் லோகத்துக்கு உணவு அளிக்கிறாள் என்கிறார். சூரியனிடமிருந்துதான் தாவரப் பிரபஞ்சம் க்ளோரோஃபில் உண்டாக்குகிறது. தாவரத்தைச் சாப்பிட்டோ, அல்லது தாவரத்தைச் சாப்பிடுகிற பிராணிகளைச் சாப்பிட்டோதான் எல்லோரும் உயிர் வாழ்கிறோம். (அசைவ உணவு உண்கிறவர்களும் தாவரத்தைச் சாப்பிடும் ஆடு, மாடு, பன்றி போன்றவைகளின் ஊனைத்தான் உண்பார்கள். மாம்ஸ பக்ஷிணிகளான நாய், பூனை, புலி, சிங்கம் இவற்றின் ஊனை உண்பதில்லை). சூரியன் தாவரங்களை வளர்க்கிற மாதிரி, சந்திரன்தான் மூலிகைகளை விசேஷமாக வளர்க்கின்றான். அம்பாள் சூரிய வெப்பத்தாலும், சந்திரனின் நிலவாலும் உலகம் முழுவதற்கும் தன் பாலைப் பொழிகிறாள் என்று இதையே ஆசார்யாள் சொல்கிறார். இதெல்லாம் அவளுடைய ரூபங்கள்.

நம் முதுகெலும்புக்குக் கீழிருந்து சிரசு உச்சிக்கு யோக சாஸ்திரப்படி குண்டலினி சக்தியை எழுப்பிக் கொண்டு போகிற போது அம்பாள் தாமரைத் தண்டை உடைத்தால் வருகிற நூலிழை மாதிரி அத்தனை மெல்லியதாக மேலெழும்பிப் போகிறாள் என்று மந்திர சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. “பிஸதந்து தநீயஸீ” என்று இதையே ஸஹஸ்ர நாமமும் சொல்கிறது. இத்தனை சூக்ஷ்மமாக இருந்தாலும் அதுவே கோடி சூரியப் பிரகாசமாக இருக்கும்; அதே சமயத்தில் உஷ்ணம் துளிக்கூட இல்லாமல் கோடி சந்திரன் மாதிரி குளிர்ச்சியாக இருக்கும்.

இந்த ரூபங்களைத் தவிர சகல சப்தமாகவும், வாக்காகவும் இருக்கிறாள். விசேஷமாக மந்திர சப்தங்களாக இருக்கிறாள். இதெல்லாமுமே சூக்ஷ்ம ரூபங்கள்.

நம் போன்ற சாதாரண ஜனங்களுக்காக ஸ்தூலமாகவே லலிதா, துர்க்கா, புவனேசுவரி என்று பல ரூபங்களில் இருக்கிறாள். இந்த ரூபங்கள் நம் கண்ணுக்குத் தெரிகிற மாதிரி புண்ணிய க்ஷேத்திரங்களில் பரமாநுக்கிரஹம் பண்ணி வரும் விக்கிரஹங்களாக உள்ளன.

வடக்கே ஹிமாசலத்தில் பர்வத ராஜகுமாரியாகப் பிறந்தவள் தென்கோடியில் கன்யாகுமரியாக நிற்கிறாள். மலையாளத்தில் பகவதியாகவும், கர்நாடகத்தில் சாமுண்டேசுவரியாகவும், தமிழ்நாட்டில் தொண்டை மண்டலத்தில் காமாக்ஷியாகவும், சோழ தேசத்தில் அகிலாண்டேசுவரியாகவும், பாண்டிய நாட்டில் மீனாக்ஷியாகவும், ஆந்திர தேசத்தில் ஞானாம்பாளாகவும், மகாராஷ்டிரத்தில் துளஜாபவானியாகவும், குஜராத்தில் அம்பாஜியாகவும், பஞ்சாபில் ஜ்வாலாமுகியாகவும் காஷ்மீரத்தில் க்ஷீர பவானியாகவும், உத்திரப்பிரதேசத்தில் விந்த்ய வாஸினியாகவும், வங்காளத்தில் காளியாகவும், அஸ்ஸாமில் காமாக்யாவாகவும் – இப்படி தேசம் முழுவதிலும் பல ரூபங்களில் கோயில் கொண்டு, எப்போதும் அநுக்கிரஹம் பண்ணி வருபவள் அவளே!

அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன்?

‘நாம் இதைச் சாதித்தோம், அதைச் சாதித்தோம்’ என்று அகம்பாவப்பட கொஞ்சம்கூட நியாயம் இல்லை. நாம் எதையும் சாதிப்பதற்கான புத்தியோ, தேக பலமோ எங்கிருந்து வந்தது? இந்தப் பிரபஞ்ச காரியங்கள் அனைத்தையும் செய்கிற ஒரு மஹா சக்தியிடமிருந்தே நம்முடைய, சக்தி எல்லாம் வந்திருக்கிறது. அது இல்லாவிட்டால் நம்மால் ஒரு சுவாசம்கூட விடமுடியுமா? ஒருநாள், இத்தனை சாதித்ததாக எண்ணிக் கர்வப்படுகிற நம்மைவிட்டுச் சுவாசம் போய் விடுகிறது. அதைப் பிடித்து வைத்துக் கொள்கிற சாமர்த்தியம் நமக்குக் கொஞ்சம்கூட இல்லை. அப்போது நம் சக்தி எல்லாமும் சொப்பனம் மாதிரிப் போய்விடுகிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்கூட, சக்தி சமுத்திரமாக இருக்கப்பட்ட அம்பாளின் ஒரு சிறு துளி அநுக்கிரகத்திலேயே நடக்கிற காரியங்களை, நம்முடையதாக நினைத்து அகம்பாவப்படுவது அசட்டுத்தனம்தான் என்று தெரியும். எத்தனைக்கெத்தனை இதை அநுபவத்தில் தெரிந்துகொண்டு அம்பாளுக்கு முன் ஒரு துரும்பு மாதிரி அடங்கிக் கிடக்கிறோமோ அத்தனைக்கத்தனை அவள் அநுக்கிரஹமும் அதிகம் கிடைக்கும்.

அவதார புருஷர்களாக வந்தவர்களும் இந்த அடக்கத்தை நமக்கெல்லாம் போதிப்பதற்காக ரொம்பவும் விநய சம்பத்தோடு வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். ராமசந்திரமூர்த்தி இப்படித்தான் தர்மத்துக்கும், சத்தியத்துக்கும், சாஸ்திரத்துக்கும் அடங்கி மநுஷ்யன் மாதிரியே நடந்து காட்டினார். அவருடைய விநயத்தை நினைக்கிறபோது எனக்குத் தோன்றுகிற ஓர் எண்ணத்தைச் சொன்னால் உங்களுக்கு விசித்திரமாக இருக்கும். எல்லோரும் ராமர் பிறந்த காலத்தில் நாம் பிறக்கவில்லையே என்று வருத்தப்படுவார்கள் அல்லவா? எனக்கோ நான் அப்படிப் பிறக்காமல் போனதே நல்லதுதான் என்று தோன்றுகிறது. ஏன் தெரியுமா? ராமர் தாம் ஒரு க்ஷத்திரியர் என்பதால் அடக்கத்தோடு வேத வித்துக்களையும், ரிஷிகளையும் ஆசாரியர்களையும் விழுந்து விழுந்து நமஸ்கரித்தார். அவர் காலத்தில் ஒரு மடாதிபதியாக இருந்தால், அவர் வந்து நமஸ்கரிக்கும் படியாக ஆகிவிடும். அது எத்தனை தர்மசங்கடமாயிருக்கும்! இப்போதோ அவரை நான் நமஸ்காரம் செய்து சந்தோஷப்பட முடிகிறது.

எதற்குச் சொல்கிறேன் என்றால், சாக்ஷாத் நாராயணனான ராமசந்திரமூர்த்தி விநயமே வடிவமாக இருந்தார். அவதாரம் என்பதால் ஜனங்களுக்கு எட்டாத கொம்பிலே இருக்கவேண்டும் என்றில்லாமல் மநுஷ்யராகவே நடித்தார். பொது ஜனங்களுக்கு இருக்கிற துக்கம் கஷ்டம் எல்லாம் கூடத் தமக்கு இருக்கிற மாதிரி நடித்தார். சீதையைப் பிரிந்ததற்காக அழுதார்; லக்ஷ்மணன் மூர்ச்சித்த போது புலம்பினார். சமுத்திர ராஜனிடம் ரௌத்ராகாரமாகக் கோபம் கொண்டார். ஜனங்களுக்கு, ‘இவரும் தங்கள் மாதிரி ஒருத்தர்’ என்று பிடிமானம் உண்டாவதற்கே அவதார புருஷர்களுக்கு கோபம், பயம், துக்கம் எல்லாம் வந்த மாதிரி ஓரொரு சந்தர்ப்பங்களில் காட்டிக் கொள்வார்கள். கைகால் ஆடுகிற மாதிரி, மனசும் அதனுடைய சாதாரண சுபாவப்படி கொஞ்சம் ஆடிவிட்டுப் போகட்டுமே என்று விட்டுவிடுவார்கள். ஆனால் உள்ளூற இவர்கள் இந்த உணர்ச்சி பேதங்களால் பாதிக்கப்படாமல் சாந்தமாகவே இருப்பார்கள். உள்ளூறத் தங்கள் ஈசுவரத்தை உணர்ந்தபோதிலும் வெளியே மநுஷ்யர் போல இருப்பார்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டுவதற்காக அடக்கமாக இருப்பார்கள். ராமரே அடக்கமானவர் என்றால், புத்தி, தேகபலம் எல்லாவற்றிலுமாக சக்திமானாக இருந்த ஆஞ்சநேயரே அடங்கி அடங்கி இந்த ராமனுக்கும் தாஸனாக இருந்து கொண்டே அசாத்தியத்தை எல்லாம் லகுவாக சாதித்தார்.

இவர்களைப் போலவேதான் நம் ஆதிசங்கர பகவத் பாதாளும். அவர்களைக் காட்டிலும் ஒரு பெரிய அவதாரம் இதுவரைக்கும் ஆவிர்பவித்தது உண்டா என்று தோன்றுகிறது. பரமேசுவராவதாரமான ஆசார்யாள், சொற்ப காலமே இந்த பூமியில் வாழ்ந்த போதிலும், லோகம் முழுக்கச் சேர்ந்தாலும், செய்ய முடியாத காரியங்களைச் சாதித்துவிட்டார். ஆசேது ஹிமாசலம் சஞ்சாரம் பண்ணித் தனியொரு மநுஷ்யராக இருந்துகொண்டு வைதிக மதத்தைப் புனர் உத்தாரணம் பண்ணினார். அத்வைத ஸ்தாபனம், ஷண்மத ஸ்தாபனம் எல்லாம் பண்ணினார். ஞானியாக, பக்தராக, கவியாக, மகாபுத்திமானாக, ஏகப்பட்ட காரியம் சாதிக்கிற சக்திமானாக, பரம கருணாமூர்த்தியாக – இப்படி எல்லாமாகவும் இருந்திருக்கிறார். அவருடைய பாதபங்கஜத்தில் சகல ஞானிகளின் சிரசுகளும் வண்டுகள் மாதிரி மொய்த்துக்கொண்டு கிடந்தன என்று கம்போடியா தேசத்தில் உள்ள எண்ணூறு வருஷங்களுக்கு முற்பட்ட ஒரு கல்வெட்டு அழகான ஸம்ஸ்கிருதத்தில் சொல்கிறது.

நிச்சேஷ மூர்த்தாலி மாலா லீடாங்க்ரி பங்கஜாத்

“பகவான்” என்றே அவரை அக்கல்வெட்டு சொல்கிறது. அப்படிப்பட்டவர் அம்பாளிடம் எத்தனை அடக்கத்துடன் பக்தி செலுத்தினார் என்பது ஸெளந்தர்ய லஹரியின் கடைசி ஸ்லோகத்திலிருந்து தெரிகிறது.

‘ஸெளந்தர்ய லஹரி’ போல் ஒரு கிரந்தத்தைச் செய்கிறவருக்கு எத்தனை அஹம்பாவம் வேண்டுமானாலும் ஏற்படுவதற்கு நியாயமுண்டு. பூலோகம் ஏற்பட்ட நாளாக இதற்கு முந்தியோ, பிந்தியோ இவ்வளவு பூரணமான ஸெளந்தர்யம் உள்ள வாக்கு தோன்றியதும் இல்லை. இனி தோன்றப்போவதுமில்லை என்று சொல்லும்படி, எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத அழகு வாய்ந்ததாக இருப்பது ‘ஸெளந்தர்ய லஹரி’. இப்படிப்பட்ட கிரந்தத்தைச் செய்த நம் ஆசாரியாளுக்கோ தாம் அதை பண்ணினோம் என்ற அகங்காரம் எள்ளளவும் இல்லை. ஸ்தோத்திரத்தைப் பூர்த்தி செய்து அம்பாளின் சரண கமலத்தில் அர்ப்பணம் பண்ணுகிற நூறாவது சுலோகத்தில் மிகவும் விநயமாகச் சொல்கிறார். (ப்ரதீப ஜ்வாலாபி: என்று தொடங்கும் ஸ்லோகம்)

அம்மா, வாக்கு ஸ்வரூபிணியான உன்னை வாக்கினால் துதிக்கிறேனே, இது எப்படி இருக்கிறது? சூரியனுக்கு கர்ப்பூர ஹாரத்தி காட்டுகிற மாதிரித்தான் இருக்கிறது” என்று ஆரம்பிக்கிறார். சூரிய தேஜஸ் எங்கே? கர்ப்பூரத்தின் அற்ப ஒளி எங்கே! சூரியனால்தான் கர்ப்பூரத்துக்கு எரிகிற சக்தியே உண்டாகிறது. நாலு நாள் வெயில் அடிக்காவிட்டால் கர்ப்பூரம் லேசில் பிடித்துக் கொள்வதில்லை. ஸங்க்ராந்தியன்று சூரிய பூஜை செய்து, அந்த தேஜோமயத்துக்குக் கர்ப்பூரம் காட்டுகிறோமே. அதனால் சூரியனையா விளக்கிக் காட்டுகிறோம்? சூரிய ஒளியில் கர்ப்பூரத்தின் ஸ்வாபமான பிரகாசம்கூடத் தெரியாமல் அது மங்கிப்போவதைத்தான் பார்க்கிறோம். அம்பாளைத் தாம் வாக்கால் வர்ணிக்கப் பார்த்தது அப்படிப்பட்ட காரியம்தான் என்கிறார் ஸ்ரீ ஆசார்யாள்.

இன்னோர் உதாரணம் சொல்கிறார்: “சந்திர காந்தக்கல்லானது சந்திரனுக்கு அர்க்கிய ஜலம் விடுகிற மாதிரி உன்னை இந்த வாக்கால் துதிக்கிறேன்” என்கிறார். சந்திர காந்தக்கல் என்பது பூர்ணிமை சந்திரன் உதிக்கிற சமயத்தில் அந்த நிலவை உள்ளே வாங்கிக்கொண்டு ஜலமாகக் கக்கும் என்பார்கள். வாஸ்தவத்தில் இப்படி ஒன்று உண்டோ இல்லையோ கவிகள் சம்பிரதாயமாக (poetic tradition) இதைப் பற்றிச் சொல்லி வருகிறார்கள். இப்படிப்பட்ட சந்திரகாந்தக் கல் சந்திரனைப் பூஜை செய்கிறேன் என்று ஆரம்பித்து, பதினாறு உபசாரங்களில் ஒன்றாக ‘அர்க்கியம் சமர்ப்பயாமி’ என்று நீர் வார்க்கிறபோது, நிலவின் சக்தியிலேயே பிறந்த ஜலத்தை அர்க்கியமாக வடித்தால் எப்படி இருக்கும்? அம்பாளின் அநுக்கிரகமே தமக்குள் பிரவேசித்து இந்த வாக்கை வடித்திருக்கிறது என்று ஆசார்யாள் இங்கே சொல்லாமல் சொல்கிறார்.

முன்றாவதாக இன்னொரு திருஷ்டாந்தம்.

“சமுத்திரத்துக்கு அதன் தீர்த்தத்தையே எடுத்து ஸ்நானம் செய்விக்கிற மாதிரி, உன்னை இந்த ஸ்துதியால் புகழ்கிறேன்” என்கிறார். ராமேசுவரத்திற்குப் போனால் சேதுவில் சமுத்திர பூஜை செய்வார்கள். அப்போது பூஜா அங்கமாக சமுத்திரத்திற்கு அபிஷேகம் பண்ணுவார்கள் – அந்தப் பெரிய சமுத்திரத்திலிருந்தே துளிபோல எடுத்து, அதற்கே ஸ்நானம் செய்வார்கள். வாக் சமுத்திரமாக இருக்கிற அம்பிகைக்கு அதிலிருந்தே கொஞ்சத்தை எடுத்து, துதி செய்வதாக ஆசார்யாள் சொல்கிறார். அந்த ஜலம் பூஜை செய்கிறவருக்கா சொந்தம்? சமுத்திரத்துக்கே சொந்தமானதை எடுத்து அதற்கே மீண்டும் தருகிறாராம்!

அவள் கொடுத்த வாக்காலேயே அவளைத் துதிக்கிறோமே ஒழிய, இதில் தாமாகச் செய்தது எதுவுமே இல்லை என்று அடக்கத்துடன் சாக்ஷாத் ஈசுவராவதாரமான ஆசார்யாள் சொல்கிறார்.

‘சந்திரன் இல்லாவிடில் எப்படி சந்திர காந்தக் கல் ஜலம் வடிக்காதோ அப்படி அவளருளின்றி இந்த வாக்கில்லை. பெரிய சமுத்திரத்திலிருந்து கையளவு ஜலம் எடுக்கிற மாதிரி வாக்கு சாகரத்திலிருந்தே இந்த வாக்கை எடுத்திருக்கிறோம். இதனால் அவள் மகிமையை விளக்கியதாக நினைப்பது, கர்ப்பூரத்தால் சூரியனைக் காட்டிக் கொடுப்பதாக எண்ணுகிற பரிஹாஸத்துக்குரிய செயல்தான்’ என்பதெல்லாம் சுலோகத்தின் தாத்பரியம்.

அவதார புருஷர்களும் அம்பாளிடம் இப்படி அடங்கிப் பேசுகிறார்கள். அப்படி இருக்க நமக்கு எதைப் பற்றியும் அகங்காரம் கொள்ள ஏது நியாயம்? நாம் நன்றாக எழுதுகிறோம், பேசுகிறோம், பாடுகிறோம், வேறு ஏதோ காரியம் செய்கிறோம் என்று உலகம் புகழ் மாலை போடுகிறது. அதே சமயத்தில் நமக்குத் தலைகனம் ஏறத்தான் தொடங்கும். அப்போது நமக்குச் சக்தி உண்டா என்று யோசிக்க வேண்டும். எந்த இடத்திலிருந்து நம் சக்தி வந்ததோ, அந்த அம்பாள் இருக்க, புகழுக்குப் பாத்திரராகி அகம்பாவப்பட நமக்குக் கொஞ்சம்கூட உரிமையில்லை என்று உணர வேண்டும். வருகிற பெருமையை எல்லாம் அவற்றுக்குறிய பராசக்தியின் பாதாரவிந்தங்களிலேயே அர்ப்பணம் செய்துவிட வேண்டும். பெருமைப் பூரிப்பில் இருப்பதைவிட, இப்படி அர்ப்பணம் பண்ணிப் பாரம் இல்லாமல் லேசாக ஆவதுதான் நமக்கே பரம சௌக்கியமாக இருக்கும். நமக்கு அகம்பாவமே இல்லை என்கிற எண்ணம் வந்து அதில் ஒரு பூரிப்பு உண்டாகிவிட்டால், அதுவும்கூட அகம்பாவம்தான். எனவே அகம்பாவம் தலை தூக்க இடமே தராமல் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எத்தனை கண்குத்திப் பாம்பாக இருந்தாலும், துளி இடுக்குக் கிடைத்தால்கூட ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கே தெரியாமல் அஹம்பாவம் உள்ளே புகுந்து விடும். இது போகவும் அவள் அருள்தான் வழி. அவளையே வேண்டி இப்படியாக நம் புகழையெல்லாம் அவளுக்கு அர்ப்பணம் பண்ணிவிட்டால், நமக்கு ஒரு குறைவுமில்லாமல் மேலும் மேலும் அவள் அநுக்கிரஹம் கிடைக்கும்.

பதிபக்தியும் குருபக்தியும் வழங்கும் தேவி

அம்பாளை உபாஸிப்பதால் பதிபக்தி உண்டாவது ரொம்பவும் நியாயம்தான். ஏனென்றால் அவளே மகா பதிவிரதையாக இருக்கிறவள். பிரியம் வைக்க முடியாதவரிடம் மகாப் பிரியமும், விசுவாசமுமாக இருப்பதுதான் விசேஷம். சகல ஐசுவரியமும் உள்ள வைகுண்டத்தில் அலங்காரப் பிரியராக ரூபலாவண்யத்தோடு இருக்கிற மகா விஷ்ணுவிடத்தில் மஹாலக்ஷ்மி பிரியமாக இருப்பதில் சுவாரஸ்யம் இல்லை. மயானவாசியாக, புலித்தோலை கட்டிக்கொண்டு கபால மாலை போட்டுக் கொண்டு, ஊரெல்லாம் பிச்சை எடுக்கிற பரமேசுவரனிடத்தில் அம்பாள் மாறாத அன்போடு இருப்பதே விசேஷம். தாக்ஷாயணியாக அம்பாள் பிறந்தபோது அவளது பிதாவான தக்ஷன் ஈசுவரனை மதிக்கவில்லை. இதைக் கண்டு பொறுக்க முடியாத தாக்ஷாயணி தகப்பனுடைய யாகசாலையில், “என் பர்த்தாவை மதிக்காத தக்ஷனுக்குப் பெண்ணாக பிறந்து, தாக்ஷாயணி என்று வைத்துக் கொண்டிருக்கிற இந்தச் சரீரமே எனக்கு வேண்டாம்” என்று பிராணனை விட்டாள். யாக குண்டலத்திலேயே உயிரைத் தியாகம் செய்தாள் என்பது கதை. தாக்ஷாயணிக்கு ‘ஸதி’ என்றே இயற்பெயர். ‘தக்ஷனின் புத்ரி’ என்கிற அர்த்தத்தில் ‘தாக்ஷாயணி’ என்ற காரணப் பெயரும் ஏற்பட்டது. இதனால்தான் வெள்ளைக்காரர்கள் பதிவிரதத்தின் உச்சியாக உடன்கட்டை ஏறுகிறதை Suttee (ஸதி) – என்றே சொன்னார்கள். ‘ஸதி’ என்றாலே கற்புக்கரசி என்று அர்த்தமாகிவிட்டது. அதற்கப்புறம் தாக்ஷாயணியே பர்வத ராஜபுத்திரியாக ஜனித்து பார்வதி என்று பேர் பெற்றாள். சம்ஹார மூர்த்தியும், கோர மசானவாசியுமான பரமேசுவரனிடம் இப்போதும் அவளுடைய அன்பு மாறவே இல்லை. அவரையே மறுபடியும் பதியாக அடைய வேண்டும் என்று சின்னஞ்சிறு வயதிலேயே உக்கிர தபஸ் செய்தாள் பார்வதி. கடைசியில் ஈசுவரனைக் கல்யாணம் செய்து கொண்டாள். இவளைக் கல்யாணம் பண்ணிக் கொண்ட விசேஷத்தால், ‘கோர கோர தரேப்ய:’ என்று வேதம் சொல்கிற கோரருத்திரனும், பரம மங்கள ஸ்வரூபியாக, சிவமாக ஆனார். அவளுக்கு ‘சிவா’ என்ற பேர் உண்டாயிற்று.

அம்பாளைவிட மங்கள வஸ்து இல்லை. ‘ஸர்வ மங்கள மாங்கல்யே’ என்பார்கள். அவளுடன் சேர்ந்திருப்பதாலே பரமேசுவரனும் மங்கள ஸ்வரூபியாகிறார். மங்களமே வடிவான அம்பிகை மகா சுமங்கலி. அவளுடைய சௌமங்கலியத்துக்கு எப்படி பங்கம் உண்டாக முடியும்? இதனால்தான் ஆலஹால விஷம் சாப்பிட்டுக்கூடப் பரமேசுவரன் சௌக்கியமாகவே இருக்கிறார் என்று ஆசாரியாள் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் கூறுகிறார். காதில் தோடு, நெற்றியில் குங்குமம், கழுத்தில் கருகுமணி இத்யாதி மங்கள சின்னங்களெல்லாம் சுமங்கலி லக்ஷணம். அம்பாளும் காதில் தாடங்கம் அணிந்திருக்கிறாள். சாதாரண பனை ஒலையைத்தான் தாடங்கமாகப் போட்டுக் கொண்டிருக்கிறாள். ‘தாலீபலாச தாடங்கம்’ என்று இதை ஸ்தோத்திரங்கள் சொல்கின்றன. பழைய காலத்தில் எல்லோருமே படாடோபம் இல்லாமல் எளிமையிலேயே சுபிட்சமாக இருந்தார்கள் என்பதற்கு இது ஒரு திருஷ்டாந்தமாகத் தோன்றுகிறது. அம்பாளைப் போலவே எல்லா ஸ்திரீகளும் பனை ஒலைதான் போட்டுக் கொண்டிருக்கவேண்டும். இதனால்தான் பிற்காலத்தில் வைரத்தோடு போட்டுக் கொள்கிற டாம்பீகம் வந்தபின்கூட, அதை ‘வைர ஓலை’ என்றே சொல்கிற வழக்கம் உண்டாகியிருக்கிறது.

அம்பாளுடைய தாடங்கத்துக்கு வருவோம். மங்களச் சின்னமான தாடங்கம் அவள் காதிலிருந்து இறங்கக்கூடாது. அப்படியானால் பரமேசுவரன் எக்காலத்திலும் ஜீவிக்கத்தான் வேண்டும். இதனால்தான் அவர் ஆலஹால விஷம் உண்டும்கூட அது அவரைப் பாதிக்கவில்லை. ‘இது உன் தாடங்க மகிமையம்மா!’ என்கிறார் ஆசாரியாள். திருவானைக்காவில் அகிலாண்டேசுவரியின் தாடங்கத்திலேயே ஸ்ரீ சக்ர, சிவ சக்ரப் பிரதிஷ்டை செய்து, அவளை ஸெளம்ய மூர்த்தியாக்கின ஆசாரியாள், இப்படி இங்கே ‘தவ ஜனனி தாடங்க மஹிமா’ என்கிறார்.

விஷத்தைச் சாப்பிட்டும் பரமேசுவரன் சொஸ்தமாக இருப்பதற்குக் காரணம், எந்த விஷத்தையும் முறிக்கிற மருந்தாக, அமிருதமாக, அம்பிகை அவரோடு சேர்ந்து இருப்பதுதான். வேத வாக்கியமான ‘ஸ்ரீ ருத்ர’த்தில் இப்படித்தான் சொல்லியிருக்கிறது. “ருத்திரனாக கோரமாக இருக்கிற உனக்கு ‘சிவா’ என்று ஒரு மங்கள சரீரம் இருக்கிறது. இந்த சிவாதான் லோகம் முழுவதற்கும் மருந்து. (சிவா விச்வா ஹபேஷஜீ) லோகத்துக்கு மட்டும்தான் அது மருந்தா? இல்லை. ருத்திரனாக உனக்கும்கூட ‘சிவா’ தான் மருந்து. (சிவா ருத்ரஸ்ய பேஷஜீ) என்று வேதம் சொல்கிறது. கோர ஸ்வரூபியையும் தன் பதிவிரத்யத்தால் மங்களமாக்கி, அவரை என்றென்றும் ஜீவிக்கும்படி செய்கிறவளை ஸ்திரீகள் ஆராதித்தால் பதிபக்தியும், தீர்க்க ஸெளமங்கல்யமும் ஸித்திக்கும்.

பெண்களுக்குப் பதியேதான் குரு. பழைய காலத்தில் காமம் உள்ளே புகுமுன் காயத்ரீ புகுந்துவிடவேண்டும் என்று கருதி எட்டு வயசுக்குள் புருஷப் பிள்ளைகளுக்கு உபநயனம் செய்து குருவிடம் சேர்த்தார்கள். அதே வயசில் பெண்களுக்குக் கல்யாணம் செய்து புருஷனிடம் சேர்த்தார்கள். அவனேயே குருவாகவும் தெய்வமாகவும் இவளுக்கு வைத்தார்கள். பிற்பாடுதான் காமம் ஏற்பட்டு, அவனை அவள் பதியாகப் பார்ப்பதே. எனவே குருபக்தியும், பதிபக்தியும் பெண்களுக்கு ஒன்றேதான். பதிவிரதா சிரோமணியான அம்பாளை ஆராதிக்கிற பெண்களுக்கு அவள் தீர்க்க ஸெளமாங்கலியத்தைத் தருகிறாள். ஸ்ரீமத் பாகவதத்தில் கோபிகா ஸ்திரீகள் மார்கழி மாதம் முழுதும் தினம் அதிகாலையில் ஆற்றங்கரையில் அம்பாளை பூஜித்து, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை அடைந்தார்கள் என்று சொல்லியிருக்கிறது. பிற்பாடு ருக்மணியும் அம்பாளை ஆராதனை செய்தே பகவானை பர்த்தாவாக அடைந்தாள் என்று வருகிறது. தமிழ்நாட்டிலும் சங்க காலத்திலேயே ‘அம்பாவாடல்’ என்கிற பேரில் கன்னிப் பெண்கள் கல்யாணமாவதற்கு அம்பாளை வழிபட்டார்கள் என்று தெரிகிறது. இதற்குப் ‘பாவை நோன்பு’ என்ற பேர் இருக்கிறது. இன்னமும் கன்னிப் பெண்கள் கல்யாணமாவதற்காக கௌரீ பூஜை பண்ணுகிறார்கள். ஆந்திர தேசத்தில் அவ்வழக்கம் அதிகம் இருக்கிறது.

எப்பேர்ப்பட்ட பர்த்தா வந்தாலும், அவனையே தெய்வமாகப் பாவித்துத் தன்னை சரணாகதி செய்துவிட வேண்டும் என்பதுதான் உத்தம பதிவிரதா லக்ஷணம். ஏதோ ஓரிடத்தில் மனஸை பரிபூரணமாக அர்ப்பணம் பண்ணிவிட வேண்டும். பிறகு அதை மாற்றக்கூடாது என்பதுதான் முக்கியம். அந்த ஓரிடம் முக்கிய வஸ்துவாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அது எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்; அதனிடத்தில் மனஸைப் பூரணமாகச் சமர்ப்பித்துவிட்டால், அப்புறம் நமக்கென்று தனியாக எதுவுமே செய்து கொள்ள வேண்டும் என்பதில்லாமல் போய்விடுகிறது. இது தன்னலனை அடியோடு இழந்து கொள்கிற நிலை. இப்படி அகங்காரம் அடியோடு போய்விட்டதனால் மோக்ஷமார்க்கத்துக்கு வாசலைத் திறந்து விட்டாற் போலிருக்கிறது. நாம் சரணாகதி பண்ணுவதுதான் இதில் முக்கியம். அது எந்தப் பாத்திரத்தைக் குறித்து என்பது அவ்வளவு முக்கியமல்ல. ஒரு ஸ்திரீ எப்படிப்பட்ட புருஷன் கிடைத்தாலும் அவனிடம் சரணாகதி செய்து, பதிவிரதையாக இருந்து, அவனையே பரமேசுவரனாக நினைத்து விட்டாளானால், நிச்சயமாக அந்தப் பரமேசுவரன் இந்தப் புருஷன் மூலமாகவே அவளுக்கு அநுக்கிரஹம் பண்ணிவிடுவார். மகாகுரூபமும், விபரீத குணமும் படைத்த பதியிடம் அதி விசுவாசத்தோடு இருந்த நளாயினிக்கு சூரியனையே உதிக்காமல் நிறுத்தி வைக்கிற சக்தி உண்டாயிற்று. பதிவிரதை பூஜிக்கிற அந்தப் பதிக்கு ஒரு சக்தியும் இராது! நளாயினியின் பதியால் சூரியனை உதிக்காமல் நிறுத்தி வைக்க முடியுமா? முடியாது. பரமேசுவராம்சம் லவலேசம்கூடத் தனக்கு இருப்பதாக ஒரு பதிக்குத் தெரியாதபோதுகூட அவனை ஈஸ்வரனாக மதிக்கிற இவளுக்கு சகல சக்தியும் வந்து விடுகிறது. குரூபியிடமும், குணஹீனனிடமும்கூடப் பதிபக்தி பாராட்டுவதுதான் விசேஷம். “அவர் இயற்கையாகவே நல்லவராக இருந்தால் நம் தியாகத்தைக் காட்ட வழி ஏதுமில்லை. அதற்காகவே பகவான் இப்படிக் குணஹீனனான புருஷனாக நமக்குக் கொடுத்திருக்கிறார்” என்று நினைக்க வேண்டும். இப்படிப்பட்ட பதியை அநுசரிப்பதால் ஏற்படுகிற அவமானமும் கொஞ்ச காலம்தான் இருக்கும். ‘தனியாக நமக்கென்று மான அவமானம் என்ன இருக்கிறது?’ என்று இவள் இருக்க வேண்டும். மொத்தத்தில் விஷயம், ‘தனக்காக ஒன்றைப் பண்ணிக் கொள்வது’ என்பது அடிபட்டுப்போனால், அப்புறம் மோக்ஷம் சமீபம்தான்.

குரு விஷயமும் இப்படித்தான். நல்லவர் என்று நினைத்துதான் ஒருவரை குருவாக வரிக்கிறோம். பிற்பாடு அப்படியில்லை என்று தெரிந்தாலும்கூட, விடாமல் சிசுரூஷை செய்தால் நம் மனசு சுத்தமாகிவிடும் என்று எனக்குத் தோன்றுகிறது. எல்லாமாக ஆகியுள்ள பரமேசுவரன்தான் இங்கே இப்படி ஆகியிருக்கிறார் என்கிற பாவத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். தகாத இடம் என்று தோன்றுகிறபோதும் சிசுரூஷையை குறைக்காமலிருந்தால் ஜாஸ்தி பலன் என்றுகூடத் தோன்றுகிறது. நன்றாக இருக்கிற ஒன்றிடம் பிரியம் வைப்பதில் விசேஷம் என்ன இருக்கிறது? கெட்டதிடமும் அதே பிரியத்தை வைத்துவிட்டால், நம் பிரியத்தாலேயே கெட்டதும் நல்லதாகலாம் – கோரமான ருத்திரன்கூட அம்பாளால் மங்கள ஸ்வரூபியான மாதிரி.

குரு ஸ்வரூபமாக வருகிறவளும் அவள்தான். இந்த மாயா லோகம் அவளால்தான் நடக்கிறது. அதிலிருந்து கைதூக்கி விடுவதற்காக அவளே குருவாக வருகிறாள். குண்டலினி யோக சாதகர்கள் தங்கள் சிரஸின் உச்சியில் பிராண சக்தியைக் கொண்டுவந்து அங்கே பூரண சந்திரனில் அம்பாள் பாதத்தைத் தரிசிக்கிறார்கள்; இதையே குருபாதுகை எனறும் சொல்கிறார்கள். காளிதாஸரும், “தேசிக ரூபணே தர்சிதாப்யுதயாம்” – ஆசாரிய வடிவில் தன் மகிமையைக் காட்டுகிறவள்” என்று அம்பாளை ஸ்துதிக்கிறார்.

‘ஈசுவரன் மயானத்தில் வசிக்கிறாரா, வசிக்கட்டும்; பேய் பிசாசுகளோடு கூத்தடிக்கிறாரா, அடிக்கட்டும்; சம்ஹார தாண்டவம் பண்ணுகிறாரா, பண்ணட்டும்; ஊர் ஊராகப் பிச்சை எடுக்கிறாரா, எடுக்கட்டும் – அவர் எப்படியிருந்தாலும் அவருக்கே இருதயத்தை அர்ப்பணம் செய்வேன்’ என்று அவரிடமே தீவிரமாக அன்பு வைத்து, தக்ஷ யக்ஞத்தின் தன் பிராணனையே தியாகம் செய்த அம்பாள்தான், இப்படிப்பட்ட பதிபக்தியை, குருபக்தியை அநுக்கிரஹம் செய்கிறாள்.

வாக்குவன்மை வருஷிப்பாள்

ஜகன்மாதாவாக இருக்கிற அம்பாளைப்பற்றி அநேக மகான்கள், கவிகள், ஸ்தோத்திரங்கள் செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஸ்தோத்திர கிரந்தங்களுக்குள் மூன்று மிகவும் சிரோஷ்டமானவை. முதலாவது ‘ஸெளந்தரிய லஹரி’. ஸ்ரீ சங்கரர் பகவத் பாதர்கள் கைலாசத்துக்கு போன போது சாக்ஷாத் பரமேசுவரன் தாமே, அம்பிகையைப் பற்றி செய்திருந்த ஸௌந்தர்ய லஹரி சுவடிக்கட்டை நம் ஆசாரியாளுக்குக் கொடுத்து அநுக்கிரஹித்தார். அதில் மொத்தம் நூறு சுலோகங்கள் இருந்தன. ஆசாரியாள் கைலாஸத்திலிருந்து திரும்பி வரும்போது, வாசலில் காவலிருந்த நந்திகேசுவரர், மகா பெரிய சொத்து கைலாஸத்திலிருந்து போகிறதே என்று நினைத்து, ஆசாரியாள் கொண்டு வந்த சுவடியிலிருந்து தம் கைக்குக் கிடைத்ததை அப்படியே உருவிக் கொண்டுவிட்டார். முதல் 41 ஸ்லோகங்கள் மட்டுமே ஆசாரியாள் கையில் நின்றன. பாக்கி 59 சுலோகங்கள் நந்திகேசுவரர் கைக்குப் போய்விட்டன. அப்புறம் ஆசாரியாள் தாமே அந்த 59 சுலோகங்களையும் கடல் மடை திறந்த மாதிரிப் பாடிப் பூர்த்தி செய்துவிட்டார். இவ்விதத்தில்தான் இப்போது நூறு சுலோகங்களோடு உள்ள ‘ஸெளந்தரிய லஹரி’ உருவாயிற்று.

அதில் முதல் நாற்பத்தியோரு சுலோகங்கள் மந்திர சாஸ்திர சூக்ஷ்மங்கள், குண்டலினி யோக தத்வங்கள், ஸ்ரீ வித்யா ரகசியங்கள் முதலியவற்றைச் சொல்கின்றன. அதில் உபாஸகர்களுக்கு ரொம்பவும் உபயோகமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனாலும் பின்னாலுள்ள, ஆசாரியாள் வாக்கிலிருந்து வந்த 59 சுலோகங்கள் அழகே அழகு! இந்த சுலோகங்களில் அம்பாளின் சிரஸிலிருந்து பாதம் வரையில் அங்கம் அங்கமாக வர்ணித்திருக்கிறார். கம்பீரத்துக்கும் சரி, மாதுர்யத்துக்கும் சரி, இந்த வாக்குதான் சிகரம் என்று சொல்கிறமாதிரி அப்படிப்பட்ட அற்புதமான சுலோகங்கள் இவை. பழங்காலத்தில் செய்த அதி சுந்தரமான விக்கிரங்களிலும் சிற்பங்களிலும் நகத்தளவு பங்கமானாலும்கூட, பிற்காலத்தவர்களால் அதே மாதிரி வேலைப்பாட்டோடு செய்து ஒட்டுப் போட முடியவில்லை. இந்த மாதிரிதான், ஆசாரியாளின் ஸெளந்தரிய லஹரி சுலோகத்தில் ஒரு வார்த்தையை எடுத்துவிட்டு அதற்குப் பதில் இன்னொரு வார்த்தையை யாரும் போடமுடியாது. ஆதி ஸெளந்தரிய லஹரியில் 59 சுலோகம் நஷ்டமானதே நம் பாக்கியம்தான்! நந்திகேசுவரர் அதை உறுவிக் கொண்டிரா விட்டால் ஆச்சாரியாளின் இந்த அற்புத வாக்கு லோகத்துக்குக் கிடைத்திருக்காதல்லவா, என்று தோன்றுகிறது. இப்படிப்பட்ட கவித்துவ பொக்கிஷமாக ஒரு கிரந்தத்தைச் செய்து முடிக்கிறபோது, ஆசாரியாள் “இதில் நான் செய்தது என்ன அம்மா இருக்கிறது? எல்லாம் நீ கொடுத்த வாக்கு. நீ தந்த வாக்கால் உன்னையே துதித்தேன்” என்று விநய சம்பத்துடன் சொல்கிறார். அவளைத் துதிக்கிற கவித்வமும் அவளது உபாஸனையாலேயே அவளருளால் ஸித்திக்கிறது என்று தெரிவிக்கிறார்.

அம்பாளைப் பற்றிய முக்கியமான மூன்று கிரந்தங்களில் இன்னொன்று ‘மூக பஞ்ச சதீ’. காமாக்ஷி அம்பாளின் பொதுவான மகிமை பற்றி ‘ஆர்யா’ என்ற விருத்தத்தில் நூறு சுலோகங்கள். அவளுடைய பாதார விந்தங்களின் அழகைப் பற்றி மட்டும் நூறு சுலோகங்கள், ஸ்துதிக்கு உகந்த அவளது குணங்களைப் பற்றி நூறு சுலோகங்கள், அம்பாளின் கடாக்ஷ வீக்ஷண்யத்தைப் பற்றி மாத்திரம் நூறு சுலோகங்கள், அவளுடைய புன்சிரிப்பின் ஸெளந்தர்யத்தைப் பற்றியே நூறு சுலோகங்கள் என்றிப்படி மொத்தம் ஐந்நூறு சுலோகங்களைப் பொழிந்து விட்டார் மூகர். நூறு சுலோகங்கள் கொண்ட தொகுப்புக்கு ‘சதகம்’ என்று பெயர். தமிழில்கூட, ‘தொண்டை மண்டல சதகம்’, ‘அறப்பளீசுவர சதகம்’ என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். நான் மேலே சொன்ன ஐநூறு சுலோகங்களுக்கு முறையே ஆர்யா சதகம், பாதாரவிந்த சதகம், ஸ்துதி சதகம், கடாக்ஷ சதகம், மந்த ஸ்மித சதகம் என்று பெயர். ஐந்து நூறும் சேர்ந்த நூலுக்கு ‘மூக பஞ்ச சதீ’ என்று பெயர். ஆர்யா சதக முடிவில் அம்பாளை ஆராதிக்கிறவனுக்கு அமிருதம் போன்ற வாக்கு சித்திக்கிறது என்று சொல்லியிருக்கிறது.

அம்பாளைப் பற்றிய முக்கியமான ஸ்தோத்திரங்களில் மூன்றாவது ‘ஆர்யா த்விசதி’ என்பது. த்வி – இரண்டு, சதம் – நூறு. ‘ஆர்யா த்விசதி’ என்ற இந்த ஸ்துதி ஆர்யா என்ற விருத்தத்தில் இருநூறு சுலோகங்கள் கொண்டது. ‘லலிதா ஸ்தவ ரத்னம்’ என்றும் அதற்கு இன்னொரு பெயர் உண்டு. அம்பாளுடைய பிரஸாதத்தைப் பரிபூரணமாகப் பெற்ற துர்வாஸ மஹரிஷி செய்த நூல் இது. இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் பண்ணினாலே நல்ல வாக்கு உண்டாகும் என்பது கண்கூடு. ஸ்ரீ காமாக்ஷி ஆராதனை கிரமத்தைச் செய்தவரே துர்வாஸர்தான். ‘பட்டாரிகை’ எனப்படும் பராசக்தியின் மூன்று முக்கிய உபாஸகர்களுக்கு மட்டுமே ‘பட்டாரகர்’ என்ற பட்டம் உண்டு. இந்தப் பட்டம் பெற்றவர்களில் ஒருத்தர் சாக்ஷாத் ஈசுவரன்; இன்னொருத்தர் காளிதாஸர்; மூன்றாமவர் துர்வாஸர்தான். காமாக்ஷி ஆலயத்தில் இவருக்கு பிம்பம் இருக்கிறது.

அம்பாளைப் பற்றிய இந்த மூன்று பிரதானமான ஸ்தோத்திரங்களும் அவள் அருளால் நல்ல வாக்கு சித்திக்கிறது என்கின்றன.

ஆனால் முடிந்த முடிவாக இந்தத் துதிகள் எல்லாம் அம்பாள் உபாஸனையின் முக்கிய பலனாக ஞானம் ஸித்திக்கிறது என்பதையே சொல்கின்றன. அஞ்ஞானம் நீங்கி, ஞானம் வருவதுதான் மோக்ஷம். இதை அம்பாள் அநுக்கிரஹிக்கிறாள்.

அம்பாளின் பாதத்தில் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய திரி மூர்த்திகளும் நமஸ்காரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இவள் பாதத்தில் நாம் பண்ணுகிற அர்ச்சனை அவர்களுடைய சிரஸுக்கும் பண்ணிய அர்ச்சனையாகிறது என்று ஆச்சாரியாள் சொல்கிறார். ‘பவானி உன் தாஸன் நான்’ என்று துதிக்க ஆரம்பிக்கிறவனுக்கு அம்பாளாகவே ஆகிவிடுகிற அத்வைத மோக்ஷத்தை அவள் அநுக்கிரஹித்து விடுகிறாள் என்று சொல்கிற போதும், அவளுடைய பாதத்தில் விஷ்ணு, பிரம்மா, இந்திரன் முதலானவர்களின் கிரீடத்தில் உள்ள ரத்தின மணிகளிலிருந்து எழுகிற ஒளி கற்பூர ஹாரத்தி செய்வதுபோல் பிரகாசிக்கிறது என்கிறார். இப்படி எல்லா தேவர்களும் அவள் பாதத்தில் கிடப்பதாகச் சொல்வதற்கு தாத்பரியம் ஒரு தேவதை உசத்தி, இன்னொன்று தாழ்த்தி என்பதல்ல. எல்லா சக்திகளும் – மநுஷ்யர்களின் சக்தி, மிருகங்களின் சக்தி, தேவர்களின் சக்தி, இயற்கையில் காண்கின்ற பல சக்தி, இவை எல்லாமும் மூலமான ஒரு சக்தியின் திவலைகளே என்பதுதான் அதன் தாத்பரியம். இதைத்தான் ஸயன்ஸிலும் ஒரே எனர்ஜி (Energy) பலவிதமான அணுக்களாக (Particle) அலைகளாக (Wave) ஆகியிருக்கிறது என்கிறார்கள். அந்த மூல சக்தியை அன்போடு ஆராதித்தால் அதுவும் அன்போடு அநுக்கிரஹம் செய்கிறது. மற்ற தனித் தனித் தேவதைகளுக்கு இருக்கிற சக்தி எல்லாமும் இதனிடமிருந்து வந்ததுதான். எனவே அந்த சக்தியை அம்பாளாக ஆராத்திக்கிறபோது எல்லா தேவதைகளின் அநுக்கிரஹத்தையும் பெற்றுவிடலாம். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் எல்லாம் அந்த ஒரே சக்தியிடமிருந்து உண்டானவைதாம். அதனால், அவர்களைப் பூஜிப்பதால் பிரம்ம, விஷ்ணு, ருத்திரர்களையும் பூஜித்ததாகிறது. இவள் ஆராதனையே ஸரஸ்வதி, லக்ஷ்மி ஆகியவர்களுக்கும் வழிபாடாகிறது; வித்யை, செல்வம் எல்லாம் பக்தனுக்குச் சித்திக்கின்றன. அம்பாளை உபாஸித்தால் கிடைக்காததில்லை. சாஸ்திரங்கள் இதிலே பல பலன்களைக் குறிப்பிட்டுச் சொல்கின்றன. அம்பாளை உபாஸிப்பதால் மிகவும் உத்தமமான வாக்கு சித்திக்கிறது. கவித்வத்தை விசேஷமாக அநுக்ரஹிக்கிறாள். காளிதாஸர் பூர்வத்தில் மிகவும் மந்தமாக இருந்தார் என்றும், உஜ்ஜயினியில் காளி அநுக்கிரஹம் கிடைத்தே அவர் கவி சிரேஷ்டரானார் என்றும் கதை கேட்டிருப்பீர்கள். ஊமையாக இருந்த மூகரும் அவளருளாலேயே க்ஷணத்தில் மகா கவியானார்.

தான் பெற்ற இன்பத்தை உலகமும் பெறும்படி செய்வது வாக்கு வழியாகத்தானே? இதனால்தான் மகா பெரியவர்களுக்கு அம்பாள் அருள் செய்தது மட்டுமின்றி, அந்தப் பேரருள் அசடுகளான நமக்கும் பாயவேண்டும் என்ற கருணையிலேயே அந்த மகான்கள் தம் அநுபவத்தைப் பாடுவதற்கான வாக்குவன்மையையும் வருஷித்தாள்.

கவித்வம், சங்கீதம் முதலிய கலைகள் எல்லாம் அம்பிகையின் அநுக்கிரஹத்தால் உண்டாகின்றன. பொதுவாக இதற்கெல்லாம் ஸரஸ்வதியை அதி தேவதையாகச் சொல்கிறோம். இப்படிப்பட்ட ஸரஸ்வதி, அம்பாளின் சந்நிதானத்தில் எப்போதும் வீணையோடு கானம் பண்ணிக்கொண்டிருக்கிறாளாம். என்ன பாட்டுக்கள் பாடுகிறாள்? அம்பாளின் பெருமையைப் பற்றியா? இல்லை. மகாபதிவிரதையான அம்பாளுக்கு ஈச்வரனைப் பாடினாலே சந்தோஷம். அதன்படி வாணி ஈசுவரப் பிரபாவத்தைப் பாடிக்கொண்டேயிருக்கிறாள். அம்பாள் அதை ரொம்பவும் ரஸித்து ஆனந்தப்படுகிறாள். கேட்கிறவர்கள் ஆனந்திப்பதே பாடுகிறவனுக்கும் ஆனந்தத்தைத் தந்து மேலும் உற்சாகப்படுத்தும். அப்போதுதான் வித்வானுக்கு மேலே மேலே கற்பனை விருத்தியாகும். கேட்கிறவன் தப்புக் கண்டுபிடிக்கிற மாதிரியே உட்கார்ந்திருந்தால், வித்வானுக்கு சுபாவத்தில் இருக்கிற பிரதிபா சக்தியும் போய்விடும். அம்பிகை ஆனந்தத்தோடு உத்ஸாகப் படுத்தப் படுத்த ஸரஸ்வதி பரமாற்புதமாக கானம் பண்ணிக்கொண்டே போகிறாள். அம்பாள் ரொம்பவும் சந்தோஷப்பட்டுத் தலையை ஆட்டிக்கொண்டு “பேஷ் பேஷ்” என்று வாய் விட்டுச் சொல்லி விடுகிறாள். அவ்வளவுதான்! அம்பாளுடைய அந்த வாக்கின் மாதூர்யத்தில் ஸரஸ்வதியின் வீணா நாதம் அத்தனையும் ஒன்றுமில்லை என்றாகிவிடுகிறதாம். ‘இப்படிப்பட்ட மதுரவாக்குக் கொண்டவளுக்கு முன்பா என் வித்தையைக் காட்டினேன்?’ என்று வெட்கப்பட்டுக்கொண்டு ஸரஸ்வதி தன் வீணையை உறையில் போட்டு மூடி வைத்து விடுகிறாளாம். “விபஞ்ச்யயா காயந்தீ” எனறு ஆரம்பிக்கிற ஸெளந்தரிய லஹரி ஸ்லோகம் இந்த சம்பவத்தை நாடகம் போட்டுக் காண்பிக்கிற மாதிரி வர்ணிக்கிறது. அம்பாளை உபாஸிப்பதால் நம் ஆனந்தத்தைப் பிறர்க்கும் தர வைக்கிற ஸங்கீதம் முதலான சகல கலைகளிலும் எளிதில் ஸித்தி பெறலாம் என்பது அர்த்தம்.

அம்பாளை வழிபடுவதால் குருபக்தி, பதிபக்தி இவையும் விசேஷமாக விருத்தியாகும்.

பவானித்வம்

அம்பாளிடம் நாம் இன்னின்ன வேண்டும் என்று சொல்லிப் பிரார்த்திக்க வேண்டிய அவசியமே இல்லை. “உனக்கு நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? ஆனாலும் மலயத்வஜ பாண்டியனின் புத்திரியான ஹே மீனாக்ஷி! மனஸில் உள்ள குறையை வாய்விட்டுச் சொல்லாவிட்டால், அது உள்ளுக்குள்ளே உறுத்திக் கொண்டேயிருக்கிறது. அதனால்தான் இப்படிப் பிரார்த்தனைப் பண்ணுகிறேன். உனக்குத் தெரியாததைத் தெரியப்படுத்துவதற்காக அல்ல; எனக்கு உள்ளே கருணைக்கிழங்கு மாதிரி அரிப்பதைக் கொஞ்சம், சமனப்படுத்திக் கொள்ளவே பிரார்த்தனை பண்ணுகிறேன்” என்று நீலகண்ட தீக்ஷிதர் ‘ஆனந்த ஸாகர ஸ்தவம்’ என்கிற ஸ்தோத்திரத்தில் சொல்கிறார்.

நாம் கேட்காவிட்டாலும், அம்பாளை உபாஸித்து விட்டால் அவளே அநேக அநுக்கிரஹங்களைப் பண்ணுகிறாள். முதலாவதாக நல்ல புத்தி உண்டாகிறது. மனஸில் நல்ல எண்ணங்களே உண்டாகின்றன. நல்லதைச் செய்வதற்கான வழி புத்தியிலே பளீரென்று பிரகாசிக்கிறது. லோக க்ஷேமத்தைச் செய்வதற்கான திரவிய பலமும் தானே கிடைக்கிறது. எல்லோரிடத்திலும் சமமான அன்பு உண்டாகிறது. மனஸில் இந்த அன்பு ஊறாமலே வாய்ப்பேச்சில் இன்று ‘சகோதர சகோதரிகளே’ என்று பிரசங்கம் பண்ணி சமத்துவத்தைப் பற்றி நிறையப் பேசுகிறோம். அம்பாளிடம் பக்தி பண்ணாத வரையில் இது அநுபவத்தில் வராத வாய்ச் சவடால்தான்; புரளிதான். சாக்ஷாத் ஜகன்மாதாவைத் தெரிந்துகொண்டாலே, ‘உண்மையாக அவள் ஒருத்திதான் இத்தனை பேருக்கும் அம்மா; லோகத்தில் உள்ள பசு, பட்சி உட்பட நாம் இத்தனை பேரும் அவள் குழந்தைகள்தான்; அதனால் நாம் எல்லோரும் வாஸ்தவமாகவே சகோதர சகோதரிகள்” என்ற உண்மையான அன்பு உணர்ச்சி உண்டாகிறது. அவளைத் தெரிந்துகொண்டால் அதன்பின் நமக்குள் வெறுப்பு, துவேஷம் வரவே வராது. தப்புக் கண்டுபிடிக்க வராது. தப்பு நடக்கிறபோதுகூட அதைப் பரிவோடு திருத்துகிற மனப்பான்மை வருமே தவிர, தப்பைத் பிரகடனம் பண்ணிச் சண்டையில் இயங்கத் தோன்றாது. அம்பாளை உபாஸிப்பதால் லோகம் முழுக்க ஒரே குடும்பம் என்ற அன்பு உணர்ச்சி உண்டாகிறது. சத்துரு, சிநேகிதன் என்கிற வித்தியாசமே காமாக்ஷியின் கடாக்ஷம் பெற்றவர்களுக்கு இராது என்கிறார் மூகர்.

எல்லாம் சமமாகத் தெரிகிற ஞானநிலையின் உச்சிக்கே அம்பாளின் அநுக்கிரஹம் நம்மைக் கொண்டு சேர்க்கிறது. ‘அவள் அம்மா; அவளுடைய குழந்தைகளே நாம் எல்லோரும்’ என்பதற்கு மேலே ஒரு படி போய் – அம்மா, குழந்தை என்கிற வித்தியாசம்கூடப் போய் – எல்லாமே அவள்தான் என்று தெரிகிறது. ‘ஒரு சக்திதான் இத்தனை ஆகியிருக்கிறது; ரூபங்களில்தான் பேதம், உள்ளே இருக்கிறது ஒன்றுதான்’ என்கிற பரம அத்வைத ஞானம் சித்திக்கிறது. இதைத்தான் மூகர் சொல்கிறார் – “சிவ சிவ பச்யந்து ஸமம்” என்கிற சுலோகத்தில், காமாக்ஷியின் கருணா கடாக்ஷ வீக்ஷண்யம் பெற்றவனுக்குக் காடும் வீடும் சமமாகத் தெரிகின்றன; சத்துருவும் மித்ரரும் சமமாகத் தெரிகின்றனர் என்கிறார்.

அம்பாளைத் தாயாராகவும் நம்மைக் குழந்தையாகவும் வைத்துக்கொண்டு உபாஸிக்க ஆரம்பித்தாலும் அவளே காலக்கிரமத்தில் இந்த இரண்டும்கூட ஒன்றேதான் என்கிற பரம ஞானத்தை அநுக்கிரஹம் செய்கிறாள். இதை ஆசாரியாள் ஒரு ச்லேஷை (சிலேடை) மூலம் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் சொல்கிறார்.

“பவானி, உன்னுடைய அடிமை நான்” என்று பக்தன் துதிக்க ஆரம்பிக்கிறானாம். ‘பவானித்வம் –’, “பவானி உன்னுடைய”, (‘த்வம்’ என்றால் ‘உன்’) என்று இவன் சொல்லுகிறபோதே, அம்பாள் இவனுக்கு ‘பாவானித்வம்’ என்கிற நிலையை அநுக்கிரஹித்து விடுகிறாள் என்று சிலேடை பண்ணுகிறார். முதலில் இவன் பிரார்த்திக்கிறபோது ‘பவானி’ என்றால் அம்பாள். பரமசிவனுக்கு முக்கியமான எட்டுப் பெயர்களில் ஒன்று பவன் என்பது. பவனின் பத்தினி பவானி. மறுபடி, பவானித்வம் என்ற இந்த இரண்டு வார்த்தைகளை இவன் சொன்ன மாத்திரத்தில், அம்பாள் ‘பவானித்வம்’ என்ற நிலையை அநுக்கிரஹம் செய்வாள் என்னும்போது, ‘பவானி என்றால் ஆகிவிடுகிறேன்’ என்று அர்த்தம். ‘தீர்க்க ஸுமங்கலி பவ’ என்கிறோமே, இங்கே ‘பவ’ என்றால் ‘ஆவாய்’ என்று அர்த்தம். ‘பவானி’ என்றால் ‘ஆகிறேன்’. ‘பவானித்வம்’ என்றால் ‘நீயாவே நான் ஆகிவிடுகிறேன்’; எல்லாம் பிரம்மம் என்ற அத்வைத ஞானம் உண்டாகி இப்படிச் சொல்கிறான் பக்தன். தாஸனாக இருக்கப் பிராத்தித்தவனைத் தானாகவே ஆக்கிக்கொண்டு விடுகிறாள் அம்பிகை. “பவானி, உன் தாஸனாக என்னைத் துளி கடாக்ஷியம்மா” என்று பிரார்த்திக்க ஆரம்பித்த பக்தன் மூன்றாவது வார்த்தையைச் சொல்லக்கூட அவகாசம் தராமல், “பவானி உன்” (பவானித்வம்) என்று அவன் சொல்லும்போதே அம்பாள் இடைமறித்து, “ஆமாமப்பா பவானித்வம்தான்; அதாவது நானும் நீயும் ஒன்றேதானப்பா” என்கிற பரம ஞானத்தை வழங்கி விடுகிறாள். ‘பவானித்வம்’ என்றால் ‘பவானியின் தன்மை’ என்றும் அர்த்தம். பக்தனே பவானித்வம் பெற்று பராசக்தியோடு தன்மயமாகி விடுகிறான்.

அம்பாளை உபாஸிப்பதன் பலன்

அம்பாளை உபாஸிப்பதே ஜன்மா எடுத்ததன் பெரிய பலன். அன்பு மயமான அம்பிகையைத் தியானிப்பதைவிடப் பேரானந்தம் எதுவும் இல்லை. பெரிய சித்தாந்தங்கள் மதங்கள் எல்லாம் எத்தனையோ இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் முடிவாகக் கிடைக்கிற பெரிய பலன் அம்பாளைத் தியானிப்பதால் லகுவாகக் கிட்டிவிடுகிறது. “அம்மா! நான் எத்தனையோ தோஷம் உள்ளவன். என்றாலும் உன்னை நம்பி விட்டேன். நீ கடாக்ஷித்துவிட்டால் எத்தனை தோஷமானாலும் தூர ஓடிவிடும். நான் எப்படி இருக்க வேண்டுமோ அந்த மாதிரியாக இருக்கும்படியாக நீயே பண்ணம்மா” என்று அவளிடம் நம்மை ஓயாமல் ஒப்புக்கொடுத்துக் கொண்டிருந்தாலே போதும் – அதைவிடப் பெரிய மதமோ, சித்தாந்தமோ, அநுஷ்டானமோ இல்லை. எல்லாம் அவள் சித்தப்படி ஆகட்டும் என்று விட்டு விட்டு, நாம் பஞ்சு மாதிரி மனசில் எந்த கனமும் இல்லாமல் லேசாகிவிட்டால் அதைவிட பேரானந்தம் இல்லை.

அம்பாளை உபாஸிப்பதற்கு வேறு பலன் எதுவும் வேண்டாம். அதுவே அதற்குப் பலன். ஆனாலும், இந்த லோகத்தின் மாயையில் நாம் எல்லோரும் ஒன்றாகச் சிக்கிக் கொண்டிருப்பதால், ‘நான்’ என்பதைவிட்டு, அவளை அவளுக்காகவே உபாஸிக்கிற ஆனந்தம் நமக்கு ஆரம்பதசையில் புரியமாட்டேன் என்கிறது. நமக்கு என்று எதெதையோ எதிர்பார்த்து, அதை எல்லாம் அவள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக அவளை உபாஸிக்கத் தொடங்குகிறோம். இந்த நிலையில் அவளும்கூட நம்மை விட்டுப்பிடிக்கிற மாதிரி, நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வைக்கிறாள். தர்மத்துக்கு விரோதமாக இல்லாத வரையில் நாம் செய்கிற பிரார்த்தனைக்குச் செவிசாய்க்கிறாள்.

மநுஷ்ய ஸ்வபாவம் ஆசார்யாளுக்கு நன்றாகத் தெரியும். அம்பாள் உபாஸனையால் ஜனன நிவிருத்தி கிடைக்கும், மோக்ஷம் கிடைக்கும் என்று சொன்னால் எடுத்த எடுப்பில் யாரும் அதில் ஈடுபடமாட்டார்கள் என்பது ஆசார்யாளுக்குத் தெரியும். அதனால் அம்பாளை உபாஸிப்பதன் பலன் இன்னின்ன என்று ‘ஸெளந்தரிய லஹரி’யில் சொல்கிறபோது, முதலில் படிப்பு, செல்வம், அழகு முதலியன கிடைக்கும் என்கிறார்.

ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா’ என்று ஆரம்பிக்கிற சுலோகத்தில் அம்பிகையை ஆராதிப்பதால் கிடைக்கிற பலன்களை வரிசையாகச் சொல்கிறார்.

இதில் விசேஷம் என்னவென்றால், சாதாரணமாக ஒவ்வொரு ஸ்துதியின் முடிவிலும் கவி, ‘இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்வதால் இப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்று சொல்வது ஒரு மரபு – இதை ‘பலச்ருதி’ என்பார்கள். அதாவது அந்த ஸ்தோத்திரத்தின் சக்தியாலேயே அந்தப் பலன்கள் கிடைக்கும் என்று தொனிக்கிற மாதிரி இருக்கும். ‘இதைப் பாராயணம் செய்வதால்’ ‘இதையே படிப்பதால்’ என்று திரும்பத் திரும்ப ஸ்தோத்திர கர்த்தா நூலைச் சிலாகித்துச் சொல்வர். ஆனால் துளிக்கூட அகம்பாவமேமில்லாத ஆசார்யாளோ, ‘ஸெளந்தர்ய லஹரி பாராயணத்துக்கு இது பலன்’ என்று சொல்லாமல், “அம்மா உன்னைப் பூஜிப்பவனுக்கு நீ இப்படியாகப்பட்ட அநுக்கிரஹங்களைச் செய்கிறாய்” என்றே சொல்கிறார்.

முதல் பலனாக ஸரஸ்வதீ கடாக்ஷம் கிடைக்கும் என்கிறார். அதாவது நல்ல கல்வி, உண்மையான கல்வியின் பயனாக நல்ல குணம் கிடைக்கும் என்கிறார். பிறகு லக்ஷ்மீ கடாக்ஷம் கிடைக்கும் என்கிறார். அதாவது நிறைய சம்பத்து கிடைக்கும் என்கிறார்.

பொதுவாக யாரும் பணத்தை விரும்புகிற மாதிரி குணத்தை விரும்பி ப்ரார்த்திப்பதில்லை! ஆனால் குணம் இல்லாத இடத்தில் பணம் இருந்து என்ன பிரயோஜனம்? நாம் பணத்தை விரும்பியே உபாஸித்தாலும்கூட, அம்பாளே, ‘இந்தப் பிள்ளை அசட்டுத்தனமாக பிரார்த்தனை பண்ணுகிறது; விவேகம் ஏற்படுவதற்கு முன்பு அர்த்தத்தைக் (பொருளை, பணத்தைக்) கொடுத்தால் அது அனர்த்தமே ஆகும். எவ்வளவுக்கெவ்வளவு பணம் தருகிறோமோ அத்தனைக்கத்தனை பாபத்தையே விலைகொடுத்து வாங்கிக் கொள்வான். எனவே பணத்தை எப்படி தர்ம மார்க்கத்தில் பிரயோஜனப்படுத்துவது என்கிற விவேகத்தை முதலில் தந்து, பிறகு தனத்தைத் தரலாம்’ என்று எண்ணுகிறாள். குழந்தை பக்ஷணம் கேட்டால் அதைச் செய்து கொடுக்கிற தாயார் பிற்பாடு அதனால் கெடுதல் ஏற்படாமல் விளக்கெண்ணெய் தருகிறாள். ஸரஸ்வதீ கடாக்ஷத்தைத் தந்து பிறகு லக்ஷ்மீ கடாக்ஷத்தைத் தருகிறாள். தைத்திரீயோபநிஷத்திலும் இப்படியேதான், முதலில், “மேதை (நல்ல புத்தி) யைக் கொடு” என்று சொல்லி, அப்புறம் “ஸ்ரீயை (செல்வதை)க் கொடு” என்று சொல்லியிருக்கிறது. இதற்கு ஸ்ரீ ஆசார்யாள் பாஷ்யம் செய்யும்போது, “மேதையில்லாதவனுக்கு ஸ்ரீயைத் தந்தால் அனர்த்தம்தான் உண்டாகும்” என்கிறார். ‘பஜகோவிந்த’த்திலும் ‘அர்த்தம் அனர்த்தம்’ என்கிறார்.

அம்பாளை உபாஸிப்பவர்கள் தனியாக லக்ஷ்மி, ஸரஸ்வதி இருவரையும் உபாஸிக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் இரண்டு பேரும் இவளுக்கு இரண்டு பக்கத்திலும் சாமரம் வீசிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியே லலிதா ஸஹஸ்ரநாமத்தில் சொல்லியிருக்கிறது. (ஸ சாமர ரமாவாணீ ஸவ்ய தக்ஷிண ஸேவிதா). சகல சக்திக்கும் ஆதாரமான பராசக்தியை உபாஸித்தால் இவளே ஸரஸ்வதியையும், லக்ஷ்மியையும் கடாக்ஷிக்கச் செய்கிறாள். காமாக்ஷிக்கு ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் இரண்டு கண்கள். ‘க’ என்று பிரம்மாவுக்குப் பெயர் – ‘சிவ’ பத்தினி சிவா என்பதுபோல் ‘க’வின் பத்தினியான ஸரஸ்வதிதான் ‘கா’. ‘மா’ என்றால் மஹாலக்ஷ்மி. ‘மா’- தவன் என்றால் லக்ஷ்மிபதி. ‘கா’வையும் ‘மா’வையும் தன் அக்ஷங்களாக (கண்களாகக்) கொண்டவள் எவளோ அவளே “காமாக்ஷி”.

ஸரஸ்வதி கடாக்ஷம், லக்ஷ்மி கடாக்ஷம் இரண்டும் அம்பாள் அநுக்கிரஹத்தால் கிடைக்கும் என்றேன். இந்த இரண்டையும் பற்றி மநுஷ்ய சுபாவம் ரொம்பவும் விசித்திரமாக இருக்கிறது. எல்லோருக்கும் தங்களுக்கு ரொம்பவும் ஸரஸ்வதி கடாக்ஷம், அதாவது புத்திசாலித்தனம் இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் – தங்களை மஹா புத்திசாலிகளாகவே வெளியில் காட்டிக் கொள்ளப் பிரியப்படுகிறார்கள். ஆனால் நல்ல புத்தி வேண்டும் என்று அதற்காகத் தாபத்தோடு யாரும் பிரார்த்திப்பதாகத் தெரியவில்லை. பொதுவாகப் புத்திசாலித்தனம் என்பது சாமர்த்தியம் என்றுதான் நினைக்கப்படுகிறது. ஞானமும் விவேகமும்தான் உண்மையான புத்திமானின் லக்ஷணங்கள். இவற்றுக்கு யாரும் ஆசைப்படுவதில்லை. நமக்கு நிறைய சாமர்த்தியமும் சாதுர்யமும் இருக்கின்றன. அதாவது ‘யாரையும் ஏமாற்றிவிடலாம்’ என்று அவரவரும் சந்தோஷப்பட்டுக்கொண்டு, இந்த ‘புத்திசாலித்தன’த்தோடு நின்றுவிடுகிறோம். ஆனால் லக்ஷ்மி கடாக்ஷம் மட்டும் எவ்வளவு இருந்தாலும் நமக்குப் போதமாட்டேன் என்கிறது. மண்டுவாக இருந்தாலும்கூட தன்னைப் புத்திசாலியாகக் காட்டிக்கொள்வதற்கு நேர் மாறாக, நமக்கு எத்தனை சம்பத்து இருந்தாலும் அது வெளியில் தெரியக்கூடாது என்று ஏழை வேஷம்தான் போடுகிறோம். ஒருத்தனைப்பற்றி யாராவது ‘எத்தனை புத்திசாலி’ என்று பேசினால் சந்தோஷப்படுகிறான். ஆனால் ஒருத்தன் பாங்கில் லட்ச லட்சமாகப் பணம் போட்டிருக்கிறான் என்று யாராவது சொன்னால், அவனுக்குக் கோபம்தான் வருகிறது. தங்களுக்கு இருக்கிற செல்வம் போதாது என்று நினைப்பதால்தான் இவர்களுக்கு அதைப்பற்றிச் சொன்னாலே கோபம் வருகிறது. அதிருப்திதான் தரித்திரம். திருப்திதான் சம்பத்து. ஆகையால், நாம் நிஜமான புத்திசாலிகளானால் தரித்திரர்களாக இருந்தாலும்கூட, அப்படிச் சொல்லிக் கொள்ளாமல், மனஸால் நிறைந்து, திருப்தியால் பணக்காரர்களாக இருந்துகொண்டிருக்கலாம். தரித்திரம் என்று சொல்லிக் கொண்டால்தான் நமக்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? சொல்லிக்கொள்ளாமலேதான் பணக்காரரை விடத் திருப்தியாக இருப்போமே!

புத்தி, செல்வம் – இவற்றோடு ஒவ்வொருத்தருக்கும் அழகாக இருக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. தான் புத்திசாலி என்பதைப்போல, எல்லோரையும்விடத் தானே அழகு என்கிற எண்ணம் நம் ஒவ்வொருத்தருக்கும் இருக்கிறது. இதற்குத்தான் அலங்காரம் எல்லாம் பிரமாதமாகச் செய்துகொள்கிறோம். தினத்துக்குத் தினம் ஃபாஷன்கள் மாறிக்கொண்டே இருப்பதெல்லாம் நம் அழகைப் பிரகடனம் பண்ணிக் கொள்ளத்தான். பரம கருணாமூர்த்தியான அம்பாள், கேவலம் ரக்த – மாம்ஸ சம்பந்தமான இந்தச் சரீர அழகை விரும்புகிறவர்களுக்கு அதைக்கூடப் பூரணமாகத் கொடுத்து அநுக்கிரஹிக்கிறாள். “ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா” என்கிற சௌந்தரிய லஹரி சுலோகத்தில் ஆசார்யாள் இதையும் சொல்கிறார். “அம்பாளை உபாஸிக்கிறவனுக்கு பிரம்மாவவே அசூயைப்படுகிற அளவுக்கு ஸரஸ்வதியின் அநுக்கிரஹம் உண்டாகிவிடும். மகாவிஷ்ணு பொறாமைப் படுகிற அளவுக்கு மஹாலக்ஷ்மியின் அனுக்ரஹம் கிடைத்து விடும். இவனைப் பார்த்து “மன்மதன்தானோ?” என்று ரதியே சந்தேகப்படுகிற மாதிரி லாவண்யம் உண்டாகிவிடும்” என்கிறார்.

இத்தனையும் இருந்து தீர்காயுசு இல்லை என்றால் என்ன பிரயோஜனம்? அம்பாள் சிரஞ்ஜீவித்துவமும் தருவாள் என்கிறார்.

‘இதற்குமேல் வேறென்ன வேண்டும்?’ என்று தோன்றலாம். ஆனால், இதற்குமேல்தான் அம்பாளின் பரமாநுக்கிரஹத்தை தேடச் செய்யும் கேள்வியே பிறக்கும். ‘இத்தனை பணம், அழகு, புத்தி எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு இத்தனை காலம் ஓட்டியாச்சு; இதிலெல்லாம் வாஸ்தவத்தில் என்ன மனநிறைவைக் கண்டோம்? இதையெல்லாம் வைத்துக்கொண்டு எப்போது பார்த்தாலும் சஞ்சலப்பட்டுக்கொண்டே, ஒன்றை விட்டால் இன்னொன்று என்று தாவிக்கொண்டே இருந்துவிட்டோம். நிரந்தர சௌக்கியத்தை, சாந்தத்தை இவை எதனாலும் பெற்றதாகத் தெரியவில்லையே! இதை எப்படிப் பெற்றுக்கொள்வது?’ என்கிற கேள்வி பிறக்கும். நடுநடுவே நமக்கு இந்தக் கேள்வி தோன்றினாலும், அடுத்த க்ஷணமே மாயை நம்மை இழுத்துக் கொண்டு போகிறது. ஆனால் நாமாக இப்படி நினைக்காமல் அம்பாளை உபாஸிப்பதன் பலனாக, அவள் நம்மை இப்படி நினைக்கப் பண்ணுகிறபோது, அந்த நினைப்பு நாளுக்குநாள் மேலும் மேலும் தீவிரமாக ஆகும். ‘பணம் வேணும், படிப்பு வேணும், அழகு வேணும், ஆயுசு வேணும்’ என்பதெல்லாம் மேலும் மேலும் நம்மைப் பாசத்தில் கட்டிப் பிரமையில்தான் தள்ளிக் கொண்டிருந்தது என்கிற அறிவு உண்டாகும். பாசம் என்றால் கயிறு, பாசத்தில் கட்டப்படுவது பசு. கயிற்றைப் போட்டுத் தறியில் கட்டின பசு மாதிரி, ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் போக முடியாமல், அதற்குள் கிடைக்கிற தாற்காலிக இன்பங்களையே மேய்ந்துக்கொண்டு, அசட்டுத்தனமாக ‘இதுவே எல்லாம்’ என்று திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டை அறுத்துக் கொள்ள வேண்டும். அப்புறம் பரம சுதந்திரம். இந்த இந்திரியங்களின் சின்ன சௌக்கியங்களுக்கு அப்புறம் அகண்டமான, சாசுவதமான ஆத்ம ஆனந்தம்! பாசம் போய், நாம் பசுவாகக் கட்டுப்பட்டுக் கிடந்த நிலையும் போய்விட்டால், அப்புறம் நாம் பரப்பிரம்மம்தான். பணம், புத்தி, ஆயுள், அழகு ஆகிய சிற்றின்பங்களுக்குத் தவித்த மனஸில் இவற்றின் கட்டுக்களே வேண்டாம் என்கிற வைராக்கியம் உண்டானால், அப்புறம் பேரின்ப மயமாவதற்கான ஸாதனைகளில் இறங்கி, முடிவில் அம்பாள் அருளால் பேரின்பமாகவே ஆகலாம். அதைவிடப் பெரிய பலன் வேறில்லை. முடிந்த முடிவாக அம்பாள், பக்தனை இந்தப் பரமானந்த ரஸத்தில் திளைத்துக் கொண்டிருக்குமாறு அநுக்கிரஹம் செய்கிறாள் என்று ஆசார்யாள் முடிக்கிறார்.