விகாரமும் ஏற்றம் பெறுகிறது!

புஷ்ப தந்தர் “சிவ மஹிம்ந ஸ்தோத்ர”த்திலே ஒரு இடத்தில்*, “விகாரோ அபி ச்லாக்ய:” – “விகாரமானதுங்கூட ச்லாகிக்கக் கூடியதாகிறது” என்று சொல்கிறார். விஷத்தைப் பரமேச்வரன் பானம் பண்ணி, அது அவருடைய வெள்ளைவெளேரென்ற சங்குக் கழுத்தில் நீலமணி மாதிரி ப்ரகாசிப்பதைப் பார்த்து, “விகாரமானதுகூட ச்லாகிக்கக் கூடியதாகிறது” என்கிறார். அப்படித்தான் இந்தப் பெரியவர்களுக்கு உண்டான அஹங்காரங்கூட முடிவில் அவர்களுடைய உட்சிறப்பை வெளிப்படுத்தி, மெச்சுதலுக்கு உரியதாகிறது. “விகாரோபி ச்லாக்ய:”


* ச்லோகம் 14

நீலகண்டரும் மஹாதேவரும்*

நீலகண்ட தீக்ஷிதர் பல விதத்தில் பெரியவர். குடிப்பெருமையை எடுத்துக்கொண்டால் பரமேச்ரவனின் அம்ச பூதரான அப்பைய தீக்ஷிதரின் தம்பிக்குப் பேரர். படிப்பு, அநுஷ்டானம் எல்லவாற்றிலும் சிறந்தவர். மஹாவித்வான். நல்ல பக்தர். பதவியிலும் பெரியவர். மஹால், மஹால் என்று மதுரையிலே சொல்கிற மஹாலையும், மீநாக்ஷி கோயில் புது மண்டபத்தையும் கட்டிய திருமலை நாயகருக்கு மந்த்ரியாக, அவருக்கு வலது கை மாதிரி விளங்கியவர். குணஸம்பத்தும் நிரம்பப் பெற்றவர். இப்படிப்பட்டவரும் ஒரு ஸமயம் தன் ஸ்தானம், யோக்யதை, குலம் முதலியவற்றினாலே உயர்வு மனப்பான்மை அடைந்து விட்டதாக இருக்கிறது.

தீக்ஷிதரின் காலத்தில் — அதாவது 16-ம் நூற்றாண்டின் பின்பாதி, 17-ம் நூற்றாண்டின் முன் பாதியில் — தஞ்சாவூர் ஜில்லா பழமார்நேரி க்ராமத்தில் மஹாதேவ சாஸ்த்ரி என்ற மஹா பண்டிதர் இருந்தார். பாண்டித்யம் குறைவில்லாமலிருந்தும் தீக்ஷிதரைப் போல இவருக்கு எல்லா ஜனங்களிடையேயும் ப்ரக்யாதி இல்லை. பண்டிதருலகுக்கு இவருடைய பெருமை தெரியும்.

பழமார்நேரிக்குப் பக்கத்தில் ஐராவதேச்வரர் கோயில் இருக்கிறது. அங்கே அலங்காரேச்வரி என்று அம்பாள் இருக்கிறாள். அந்த அம்பாளைத்தான் மஹாதேவ சாஸ்த்ரி நல்ல பக்தியோடு வழிபட்டுக் கொண்டிருந்தார். ப்ரார்த்தனை அப்யாஸத்தில் அவர் நன்றாக ஊறிப் போய் நாளாவட்டத்தில் அவருக்கு அலங்காரேச்வரியின் உத்தரவுகள் கிடைக்க ஆரம்பித்தன.

புத்ர ஸந்ததி இல்லை என்ற குறை அவருக்கு இருந்தது. இதற்காக ப்ரார்த்தித்த போது மதுரைக்குப் போய் அங்கே பராசக்தியின் பரிபூர்ண சைதன்ய விலாஸத்தோடு விளங்கும் மீநாக்ஷியம்மனை ஆராதனை செய்யும்படி அவருக்கு உத்தரவாயிற்று.

அப்படியே மதுரைக்குப் போனார். மீநாம்பிகையைப் பார்த்ததும் அவளிடம் ஆழ ஈடுபட்டு ஆராதித்துவர ஆரம்பித்துவிட்டார்.

தீக்ஷிதர் ஏற்கெனவே அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். இப்போது அவர் மதுரை வந்திருப்பது தெரிந்தது. அவரை ஸந்திப்பதற்கு ஆசைப்பட்டார். ஆனாலும்…

மஹாபெரியவர்களானாலும் பதவி, ஸ்தானம் என்பவை எவரையும் எப்போதேனுமாவது கொஞ்சம் “அசக்கி” விடும். ஆனதால் தீக்ஷிதருக்கு, மந்த்ரி பதவியிலிருந்த தாம் தம்முடைய அந்தஸ்துக்குக் குறைவில்லாமலே சாஸ்த்ரிகளைப் பார்க்கணுமென்ற எண்ணம் ஏற்பட்டது. மஹாதேவ சாஸ்த்ரிகளே பேட்டிக்குக் கேட்டு அனுப்புவாரா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் சாஸ்திரிகளுக்கா, மீநாக்ஷியை தர்சனம் பண்ணினதிலிருந்து அவளுடைய ஆராதனையைத் தவிர எந்தச் சிந்தனையுமில்லை. ‘அவாளைப் பார்ப்போமா, இவளைப் பார்ப்போமா?’ என்ற ஆசை கொஞ்சமுமில்லை.

எல்லாம் அறிந்த அம்பாளே — அவள் ஸகல வித்யா ஸ்வரூபிணியானதால் — இந்த இரண்டு மஹாவித்வத்-குழந்தைகளும் ஸந்திப்பதற்கு ஸங்கல்பம் பண்ணினாள். இதனால், வித்வத்தோடு விநயமும் இருந்தாலே ஒருவருக்கு அழகு என்று தீக்ஷிதரும், அவர் மூலமாக லோகமும் தெரிந்துகொள்ளப் பண்ணணுமென்று நினைத்து, ஸம்பவங்களை உருவாக்கினாள்.

ஒருநாள் வீதியிலே தீக்ஷிதர் மந்த்ரி ஜபர்தஸ்துக்குரிய மரியாதைகளோடு பல்லக்கில் போய்க்கொண்டிருந்தார்.

மஹாதேவ சாஸ்த்ரிகள் பாட்டுக்கு அதே ஸமயத்தில் அம்பாளை தர்சனம் பண்ணிவிட்டு, அவளுடைய சரணார விந்தத்தை த்யானம் செய்தபடி அந்த வழியாகத் தம்முடைய ஜாகைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். பல்லக்கை அவர் கவனிக்கவில்லை.

வீதியிலே அத்தனைபேரும் மந்த்ரியை மரியாதை பண்ணிக்கொண்டிருக்கும்போது, அசட்டுப் பிச்சு மாதிரி இப்படி ஒரு ப்ராமணன் அலட்சியமாக குறுக்கே போவதைப் பார்த்தார் தீக்ஷிதர். ‘அசட்டுப் பிச்சு மாதிரி இருந்துகொண்டு இத்தனை அஹங்காரம் வேறேயா?’ என்று தப்பாக நினைத்துவிட்டார்.

அதனால் அதட்டலாக, தம்முடைய பரிவார ஜனங்களைப் பார்த்து, “தொங்கல் காதோடு குறுக்கே வரும் இந்தப் பேர்வழி யார்? இவருக்கு ‘அர்த்த சந்த்ர’ உபசாரம் பண்ணி அனுப்பி வையுங்கள்” என்றார்.

மஹா பாண்டித்யமும், ரஸஞானமுமுள்ளவரானதால் கோபத்தில் உத்தரவு போடும் போதுகூடச் சமத்கார பாஷையில் “அர்த்த சந்த்ர உபசாரம்” என்று சொன்னார். “கல்தா” கொடுப்பதுதான் அர்த்த சந்த்ர உபசாரம் என்பது! கல்தா கொடுக்கிறபோது கையை அர்த்த சந்த்ரனைப் போல அரைவட்டமாக வைத்துக் கொண்டுதானே ஒருத்தர் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவது? அதனால் இப்படிப் பெயர்!

ஆயாந்த-மத்வந்-யதி-தீர்க-கர்ணம் புதம் மஹாதேவ ஸுநாமதேயம் |
விலோக்ய மந்த்ரீ மகி ஸார்வ பௌம: ஸ்ரீநீலகண்ட: சிபிகாதிரூட: ||
நிஷ்காஸயைநம் த்வதி-தீர்க-கர்ணம் க்ருத்வார்த-சந்த்ரம் த்ருதமித்யுவாச |
சாஸ்த்ரீ ததாகர்ண்ய ஜரித்-யுவாச தம் தீக்ஷிதம் ஞாந லாவட்ய மூடம் ||

அத்வநி – வழியில்; அதி தீர்க கர்ணம் – தீர்க்கமான தொங்கல் காதுடன்; ஆயாந்தம் – வருகிற; புதம் – அறிவாளியான; மஹாதேவ ஸுநாமதேயம் – மஹாதேவ சாஸ்திரி என்ற நல்ல பெயருள்ளவரை; மகி ஸார்வபௌம: – தீக்ஷிதேந்த்ரரும்; மந்த்ரீ – மந்த்ரியும்; சிபிகாதிரூட – சிவிகையில் வீற்றிருந்தவருமான; ஸ்ரீநீலகண்ட, ஸ்ரீநீலகண்ட தீக்ஷிதர், விலோக்ய – பார்த்து; அதி தீர்க கர்ணம் – தொங்கல் காதுக்காரரான; ஏதம் – இவரை; த்ருதம் – உடனே; க்ருத்வா அர்த சந்த்ரம் – ‘அர்த்த சந்த்ர மரியாதை’ செய்து; நிஷ்காஸய – விரட்டுங்கள்; இத்யுவாச – என்று சொன்னார்.

ச்லோகத்தில் முதல் மூன்று வரியில் வரும் இந்தக் கதையைத்தான் இதுவரை சொன்னேன்.

நாலாம் வரியில் என்ன சொல்லியிருக்கிறதென்றால், இப்படி தீக்ஷிதர் சொன்னதைக் கேட்டதும் சாஸ்த்ரிகளும் உடனே பளிச்சென்று பதில் கொடுத்தார். “மகி ஸார்வ பௌமர்”, “மந்த்ரி” என்று பெயர் பெற்றிருந்த தீக்ஷிதர் லவலேச ஞானத்தினாலே ஊதிப்போயிருந்த கற்றறி மூடர்தான் என்று மஹாதேவ சாஸ்த்ரி சுடச்சுட பதில் சொன்னதாக அந்த வரியில் இருக்கிறது.

தத் – அதை (தீக்ஷிதர் சொன்னதை) , ஆகர்ணய் – கேட்டு, சாஸ்த்ரீ – மஹாதேவ சாஸ்த்ரிகள், ஜ்ஞாநலவாட்ய மூடம் – லவலேச ஞானத்தாலே வீங்கிப் போன அறியாதாராகிய, தம் தீக்ஷிதம் – அந்த தீக்ஷிதரிடம், ஜரித்யுவாச – ஜடிதியில் பதில் சொன்னார்.

என்ன பதில்?

‘தெருவோடு, தான்பாட்டுக்கு தேவி சிந்தனையோடு போகிற ஒரு அப்பாவியைக் கழுத்தைப் பிடித்துத்தள்ளு என்கிறவர் எப்படிப்பட்டவராயிருப்பார்? படாடோபத்தைப் பார்த்தால் பெரிய பதவிக்காரரென்று தெரிகிறது. ‘அர்த்தசந்த்ர உபசாரம்’ என்கிறதிலிருந்து படிப்பும் இருப்பது தெரிகிறது. ஆனால் அது வெறும் படிப்பாயில்லாமல் நிஜமான கல்வியாயிருந்தால் இத்தனை டம்பமும் இறுமாப்பும் இருக்குமா? இந்தப் பாண்டிய தேசத்தில் தற்போது நிஜமான ஸத்வித்வான்கள் இல்லாத குறையினாலேதான் இந்த அரைகுறை ஆஸாமி பெரிசாக சோபித்துக்கொண்டு ‘தாட்பூட்’ பண்ணமுடிகிறது’ என்று மஹாதேவ சாஸ்த்ரி நினைத்தார். தம்முடைய இந்தக் கருத்தைக் கவிநயத்தோடு சொல்லாமல் சொல்லி, தீக்ஷிதரைத் தலை குனியவைத்துப் பாடம் பெறும்படிச் செய்யவேண்டும் என்று நினைத்தார். பளீரென்று ச்லோக ரூபத்திலே பதில் கொடுத்தார்.

“ஸூர்யன் அஸ்தமித்தாச்சு. இன்னும் சந்த்ரனும் உதிக்கவில்லை. நக்ஷத்திரங்கள் சிலதுதான் ஏதோ கொஞ்சம் முணுக் முணுக்கென்று தெரிகிற ஸமயம். இப்படி ஒரே இருட்டாக இருக்கிறபோது மின்மினிப் பூச்சி படாடோபமாக ஜ்வலித்துக் காட்டுவதில் ஒன்றும் ஆச்சர்யமில்லையே!” – இவ்வளவுதான் சாஸ்த்ரிகள் சொன்னார்.

ஸூர்யே ப்ரநஷ்டே சசிநிஹ்யத்ருஷ்டே தாராஸு மந்த-த்யுதிஷு ப்ரகாசம் |
மஹாந்தகாரே (அ)திவிராஜிதே ஹி கத்யோதகோப்-யல்ப-ருசிர்-ந சித்ரம் ||

ஸூர்யே ப்ரநஷ்டே – ஸூர்யன் மறைந்து, சசிநி ஹி அத்ருஷ்டே – சந்த்ரன் பார்வைக்கு வராமல், தாராஸு – நக்ஷத்திரங்கள், மந்த த்யுதிஷு ப்ரகாசம் – ஒளிமங்கி இருக்கிற, மஹாந்தகாரே – நல்ல கும்மிருட்டின்போது, கத்யோதக; அபி – மின்மினிப் பூச்சிகூட (‘க’ என்றால் ஆகாசம், ‘த்யோதகம்’ என்றால் ஒளியுள்ளது. வானத்தில் ஒளியைப் பரப்பிக் கொண்டு போவதால் மின்மினிப் பூச்சிக்கு இப்படிப் பெயர்) , அல்ப ருசி – தன்னுடைய ஸ்வல்ப ப்ரகாசத்தாலேயே, விராஜதே – பெரிசாக ஜொலிப்புக் காட்டுகிறது, (இதிலே) ந சித்ரம் – ஆச்சர்யமில்லை.

இப்படி அவர் ஜாடையாகச் சொன்னதே தீக்ஷிதருக்குப் போதுமானதாக இருந்தது. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்களல்லவா? அநேக விதத்திலே மேன்மை பெற்றிருந்த தீக்ஷிதர் உடனே அம்பாளை த்யானித்துப் பார்த்ததில் அவருக்கு எல்லாம் தெரிந்துவிட்டது. தாம் எந்த மஹா பண்டிதரைப் பார்க்க ஆசைப்பட்டோமோ, அவரையேதான் ‘தொங்கல் காதர்’ என்று எடுத்தெறிந்து பேசி விட்டோம், அவர் உபாஸிக்கிற அலங்காரேச்வரிதான் அவரை இங்கே தம்முடைய இஷ்டமூர்த்தியாக உள்ள மீநாக்ஷியிடம் அனுப்பியருக்கிறாள் — என்று தெரிந்து விட்டது.

பெரியவர்களாகப்பட்டவர்கள் தாங்கள் செய்த தப்பை மனஸ் விட்டு ஒப்புக்கொள்வதிலும் பெரியவர்களாக இருப்பார்கள். உடனே தீக்ஷிதர் பல்லக்கிலிருந்து குதித்து நேரே மஹாதேவ சாஸ்த்ரியிடம் போய், அவருக்கு சாஸ்த்ரோக்தமாக ரொம்பவும் மரியாதைகள் பண்ணி “அலங்காரி அனுப்பிவைத்துத்தானே மீநாக்ஷியை தர்சிக்க வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

இவர் இப்படிக் கேட்டதிலேயே சாஸ்த்ரிகளுக்கும் இவருடைய பெருமை தெரிந்தது.

அம்பாளுடைய வித்வத்-குழந்தைகள் இரண்டும் அவள் ஆசைப்படியே ஒற்றுமையாய்ச் சேர்ந்துவிட்டன!

நிசம்ய தத்-துஷ்ட-மநா மகி ச தஸ்மை ஸபர்யாம் விதிவத் சகார |
பவாந் அலங்கார்யபி – சோதித ஸந் மீநாம்பிகாம் ஸேவிதும் ஆஜகாம ||

மகீச – தீக்ஷிதரும்; தத் – அதை (சாஸ்த்ரி சுடச்சுடச் சொன்ன பதிலை); நிசம்ய -கேட்டு, து(tu)ஷ்ட மநா:- ஸந்தோஷமுற்ற மனத்தவராக…

நமக்காயிருந்தால், ‘மந்த்ரியாயும் வித்வானாயுமுள்ள நம்மை நடுவீதியிலே எவனோ ஒருத்தன் வெறும் மின்மினிப் பகட்டுக்காரன் என்று சொல்வதா?’ என்று பற்றிக்கொண்டு வரும். உத்தம குணமுள்ள தீக்ஷிதரின் மனஸோ, இப்படி அவர் தமக்குப் பாடம் புகட்டியதில் ஸந்தோஷமே அடைந்தது. பவபூதியின் ஓலையில் அம்பாள் தேனைச் சுண்டிவிட்டு தன்னைத் தோற்கப் பண்ணினதையே காளிதாஸன் “மே ஸெளபாக்யம்” என்ற பாடினாற்போலத்தான்!

(தீக்ஷிதர் சாஸ்த்ரிகளின் சூடான பதிலைக் கேட்டு ஸந்தோஷம் அடைந்தவராக) தஸ்மை – அவருக்கு, ஸபர்யாம் – மரியாதைகளை, விதிவத் – விதிப்படி, சகார – செய்தார். பவாந் – தாங்கள், அலங்காரி அபிசோதித: ஸந் – அலங்காரியால் தூண்டப்பட்டவராகி, மீநாம்பிகாம் – மீநாம்பிகையை, ஸேவிதும் – ஸேவிப்பதற்கு, ஆஜகாம – வந்திருக்கிறீர்கள். இல்லையா? (என்று கேட்டார்) .

தாம் ராஜாவின் வலது கையாக, அல்லது ராஜாவும்கூட தம்முடைய வார்த்தைப்படி நடக்கிறவனாக, எந்தப் பட்டணத்தில் பெரிய கௌரவம் பெற்றிருந்தாரோ, அங்கேயே நட்ட நடுவீதியில் சற்றுமுன்தான் தம்மால் வெகு அலக்ஷியமாகப் பரிஹாஸம் செய்யப்பட்ட ஒரு ஊர்பேர் தெரியாதவரிடம், அவர் தம்மை பதிலுக்கு ஒரே போடு போட்டபோது, அடக்கத்தோடு போய் ஸத்காரம் செய்து தீக்ஷிதர் குசலம் விசாரித்திருக்கிறார்!

இப்படியாக, பெரிய அறிஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் அஹங்காரம் ஏறுவதுகூட முடிவிலே அவர்களை மேலும் உசத்தி, நமக்கும் பாடம் புகட்டுவதாகவே அமைகிறது.


* இப்பகுதியில் “குருகுலம்; கடிகாஸ்தானம்” என்ற உரையில் “அரைகுறை ஞானத்துக்கே ஆதரவு” என்ற பிரிவில் குறிப்பிடப்பட்டதன் விரிவு.

காளிதாஸனும் அம்பிகையும்

காளிதாஸன், பவபூதி, தண்டி இந்த மூன்று பேரில் யார் உசத்தி, அவர்களை எப்படி rank பண்ணுவது என்று வாதப் பரீக்ஷைகள் மூலம் முடிவுகட்ட முடியவில்லை. அதனால் போஜன் எல்லாரையும் அம்பாள் ஸந்நிதானத்துக்கு அழைத்துக்கொண்டு போனான்.

அம்பாள் அசரீரியாக முடிவு சொன்னாள்.

“கவிர் – தண்டி கவிர் – தண்டி
பவபூதிஸ்து பண்டித: |”

“தண்டியைக் கவி என்று சொல்லவேண்டும். ஒரு தரத்துக்கு இரண்டு தரமாக நிச்சயப்படுத்தி அப்படிச் சொல்லலாம். பவபூதியோ என்றால் பண்டிதர் என்க வேண்டும்” – என்று அர்த்தம் கொடுக்கும்படியாகச் சொன்னாள்.

பாண்டித்யம் அதிகமென்றால் அநேக விஷயங்களைப் பற்றிய அறிவு, பாஷையின் இலக்கணத்தில் நல்ல ஞானம் இருப்பது என்று அர்த்தம். ஆனால் இலக்கணம் வேறே, இலக்கியம் வேறே! கவிக்கு ரொம்பவும் விஷயம் தெரிந்து , பாஷா சாஸ்த்ர ஞானம் நிறைய இருக்கணுமென்ற அவச்யமில்லை. ஹ்ருதயத்தாலே எதிலோ, ஒன்றிலே, சின்ன விஷயமானாலும் அதிலே, அப்படியே ஊறி ரஸத்தை அநுபவித்து, அதைப் பெரிய grammar இல்லாவிட்டாலும் மதுரமான லலிதமான வாக்கிலே மற்றவர் ஹ்ருதயத்திலும் புகும் விதத்தில் நயமாக நகாஸ் செய்து சொல்கிறவன்தான் கவி. பாண்டித்யம், கவித்வம் இரண்டும் ஸமமாகச் சேர்ந்திருந்தால் விசேஷம். ஆனாலும் அவை பொதுவாகக் ‘கவி’ என்கப்பட்வர்களில் வெவ்வேறு ‘ப்ரபோர்ஷனி’ல் (விகிதத்தில்) தான் சேர்ந்திருப்பதைப் பார்க்கிறோம். சிலதைத்தான் poetic என்னும்படியாகவும், சிலதை Scholarly என்னும்படியாகவும் இருக்கிறது.

இதிலேதான் தண்டியிடம் பாண்டியத்தைவிடக் கவிதாரஸம் அதிகம் என்றும், பவபூதியிடம் கவிதா ரஸத்தை விட அறிவின் கனம் அதிகம் என்றும் பொருள் ஏற்படும்படியாக அம்பாள் ரத்னச் சுருக்கமாகத் தீர்ப்புக் கொடுத்தாள். காளிதாஸனைப் பற்றி இதில் எதுவும் இல்லை.

‘அப்படியானால், தன்னை அவள் கவிஞன் என்றும் வைக்காமல், அறிஞன் என்றும் வைக்காமல் அடியோடு கழித்துக் கட்டிவிட்டாளா?’ என்று அவனுக்குப் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.

அப்போதுதான், கவித்வ சக்தியான சிந்தனைக்கும் வாக்குக்குமே எவள்தான் மூலமோ, எவளால்தான் காளிதாஸன் ஆளானதோ அவளையே தூக்கி எறிந்து ஒரு வார்த்தை சொல்லிவிட்டான். நம்மைத் தூக்கிவாரிப் போடுகிறமாதிரி வார்த்தை சொல்லிவிட்டான்.

“அப்படின்னா நான் யார்டீ….?” என்று திட்டி ஒரு வார்த்தை போட்டுவிட்டான். “கோ (அ) ஹம்….” என்று ஸம்ஸ்க்ருதத்திலே கோபமாகக் கேட்டுவிட்டான்.

அவன் அவஸரப்பட்டுவிட்டான்! தண்டியையும், பவபூதியையும் பற்றிச் சொன்னதோடு அம்பாளுடைய ‘ஜட்ஜ்மெண்ட்’ முடிந்துவிடவில்லை. அதைத் தொடர்ந்து காளிதாஸனைப் பற்றியும் அவள் சொல்வதற்குத்தான் இருந்தாள். ஆனால் ஒருத்தர் கவிஞர், இன்னொருத்தர் அறிஞர் என்று அவள் சொன்னவிட்டு, இனிமேலே சொல்ல எதுவுமில்லை என்று காளிதாஸன் அவஸரப்பட்டுவிட்டான். பரதேவதையை துச்சமாக வார்த்தை சொல்லிவிட்டான்.

அதற்காக அவள் கோபம் கொள்ளவேயில்லை.

நம் குழந்தையை நாம் ஏதோ அலக்ஷ்யப்படுத்திவிடுகிறோம், ரொம்பவும் கார்யமாயிருந்ததில், அது சொல்ல வந்ததைக் காதில் போட்டுக் கொள்ளாமலிருந்து விடுகிறோம். அதனாலே அது கோபித்துக்கொண்டுபோய் உம்மென்று உட்கார்ந்து விடுகிறது. அந்தக் குழந்தைக்காக அடுப்பிலே பக்ஷணம் பண்ணிக்கொண்டிருந்ததால்தான் நாம் அது சொல்ல வந்ததை கவனிக்காதது. பக்ஷணம் பண்ணியானதும் எடுத்துக்கொண்டுபோய், “உர்உர்” என்று உட்கார்ந்திருக்கிற குழந்தைக்கு கொடுக்கிறோம். “வேண்டாம், போ!” என்று வாரி நாம் மூஞ்சியிலேயே அடிக்கிறது. அதனிடம் நமக்குக் கோபமா வருகிறது?” ராஜாப் பயலே! உனக்கு இத்தனை ரோஷமா? உன்னைக் கவனிக்காத இந்த அசட்டு அம்மாவை நன்னா அடி!” என்று குனிந்துகாட்டத்தானே தோன்றுகிறது?

அம்பாளுக்கும் அவளுடைய குழந்தையான காளிதாஸன் சீறியதில் கோபமே வரவில்லை; பெருமைதான் பட்டாள்!

“நான் யாருடீ?…..” என்று அவன் கேட்டதற்கு பதிலாக,

த்வமேவாஹம், த்வமேவாஹம்,
த்வமேவாஹம் ந ஸம்சய:

என்றாள்.

“நீ நானேதான், நீ நானேதான், நீ நானேதான். இதில் ஸந்தேஹமில்லை” என்று ஒரு தரத்துக்கு மூன்று தரமாக ஸந்தேஹத்துக்கிடமில்லாமல் சொல்லிவிட்டாள்.

“நீ நானேதான்”, அல்லது, “நீயேதான் நான்” என்று சொல்லவேண்டும். (த்வம் ஏவ – நீயேதான், அஹம் – நான்)

குறுக்கே சீறிக்கொண்டு இவன் கேட்டிருக்காவிட்டால் அவளாக என்ன சொல்லியிருப்பாளோ? ‘ஒரு கவி நிஜமான கவி, இன்னொரு கவி அறிஞர்’ என்று சொன்ன அப்புறம், இவன் (காளிதாஸன்) இரண்டும் பூர்ணமாகச் சேர்ந்த பண்டித கவி’ என்கிற மாதிரி ஏதாவது ‘ட்ரிப்யூட்’ (பாராட்டு) கொடுப்பதோடு நிறுத்திக் கொண்டிருப்பாளோ என்னவோ? அவன் கோபத்தில் இடைமறித்ததாலேயே அவனைத் “தானே” என்று உச்சிக் கோடிக்கு உசத்திச் சொல்லிவிட்டாள்!

பண்டிதர்களுடைய அறிவெல்லாம் அடங்கிய ஞானம் அவள்தான். ஜ்ஞாநதா, ஜ்ஞாநவிக்ரஹா (ஞானமளிப்பவள், ஞானவடிவினள்) என்று ஸஹஸ்ர நாமத்தில் சொல்லியிருக்கிறது. கவிதா ரஸத்துக்கும் அவள்தான் மூலம். தைத்திரீயத்தில் பரமாத்ம தத்வமாகச் சொன்ன ரஸம் அவள்தான். ரஸஜ்ஞா, ரஸசேவதி : அதாவது, ரஸமறிந்த ரஸிகை, ரஸம் நிரம்பிய களஞ்சியம் – என்று ஸஹஸ்ரநாமம் சொல்கிறது. இப்படி இரண்டும் சேர்ந்திருப்பதில் தனக்கு ஸமம், தானே கூட, யாரென்றால் காளிதாஸன்தான் என்றாளாம்!

‘தான் இப்படிப் பாராட்டிச் சொன்னதில், ஏதோ ஒரு ஸமயம் தற்பெருமை என்றில்லாமல் எப்போது பார்த்தாலும் மண்டைக்கனம் பிடித்தவனாகச் காளிதாஸன் ஆகிவிட்டால் என்ன ப்ணணுவது? அப்படி ஆகிவிடக் கூடாது ‘ என்பதால் இன்னொரு ஸந்தர்ப்பதிலே அம்பாள் அவனை ஒரு இறக்கு இறக்கவும் செய்தாள்.

இப்போது பவபூதிக்கும் காளிதாஸனுக்கும் மட்டும்தான் போட்டி. இந்த ஸமயம் தராசிலே இரண்டு பேர் கவிதையையும் எதிரெதிர்த் தட்டுக்களில் வைத்து அம்பாள் ஆலயத்தில் எடைபோட்டுப் பார்க்கத் தீர்மானமாயிற்று. ஏதோ ஒரு விஷயமாக போஜன் இரண்டு பேரையும் கவி பண்ணச் சொன்னதில்தான் எது உசத்தி என்று அவனாலும் ஸதஸாலும் சீர்தூக்கிச் சொல்லத் தெரியாமல் அம்பாள் சித்தத்துக்கு விட்டது. போஜனே ஒரே அளவான ஓலை நறுக்குகளில் இரண்டு பேர் கவிதையும் எழுதி எதிரெதிர்த் தட்டுகக்ளில் வைத்தான்.

அம்பாள் தர்ம ந்யாயமாகக் கவிதைகளின் தரத்தில் சித்தத்தைச் செலுத்தியதில் பவபூதியின் தட்டு மேலாகவும், காளிதாஸனுடைய தட்டு கீழாகவும் போக ஆரம்பித்தது. அதாவது காளிதாஸனுக்கே வெறறி சேர இருந்தது.

உடனே அம்பாள், கவிதைகளை மட்டும் ந்யாயமாகச் சீர்தூக்கிக் காட்டிவிட்டால், கவிகளை அந்யாயமாகச் சீர் கெட்டுப்போகப் பண்ணுவதாகிவிடுமென்று நினைத்தாள். ‘இப்போதும் காளிதாஸனே ஜயித்தால் அப்புறம் ரொம்பவும் மண்டைக்கனம் ஏறி வீணாய்விடுவான். அதேபோல, ரொம்பவும் ‘சரக்கு’ உள்ள பவபூதியும் ஏற்கெனவே கொஞ்சம் மறைமுக இறக்கலாக ‘பண்டித’ப் பேர் வாங்கினது போதொதென்று, இப்போது நேராகக் காளிதாஸனுக்குத் தோற்றுப் போனால் மனஸ் உடைந்து சீர்குலையும்படி ஆகும். இரண்டு குழந்தைகளையுமே இப்படி ஆக விடப்படாது’ என்று நினைத்தாள். க்ஷணகாலம்தான். அல்லது அதைவிடவுங் குறைவு. அம்பாளானதால் அதற்குள் இப்படி நினைத்து, தராசுத் தட்டுகள் ஏறி இறங்குவதை மாற்றுவதற்கும் அந்த க்ஷணத்துக்குள்ளேயே ஒரு வழியை நிச்சயம் செய்துகொண்டாள்.

அழகுக்கு அழகு செய்பவளான பரதேவதை ஸர்வாலங்கார பூஷிதையாக இருப்பவள். அவள் தலையில் கேசத்தில் பின்னலின் உச்சியில் புஷ்பம் வைத்துக் கொண்டிருப்பது மட்டுமில்லை, காதின் மேலேயும் ஒரு புஷ்பத்தைச் செருகிக் கொண்டிருப்பாள். (லலிதா) ஸஹஸ்ரநாம வர்ணனையில் இப்படி இருக்கிறது. கேசத்தில் சம்பகம், அசோகம், புன்னாகம், ஸெளகந்திகம் ஆகிய புஷ்பங்களைச் சூட்டிக் கொண்டிருப்பவள் என்று முதலில் வருகிறது. சம்பகாசோக – புந்நாக – ஸெளகந்திக – லஸத் – கசா. அப்புறம் ரொம்பவும் மனஸைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் செவிப்பூவாகக் கதம்ப புஷ்பக் கொத்தை வைத்துக் கொண்டிருக்கிறவள் என்று வருகிறது: கதம்ப – மஞ்ஜரீ – க்லுப்த – கர்ணபூர – மநோஹரா.

நம் கதை நடந்தபோது இம் மாதிரி கல்ஹாரம் என்ற குவளை மலரை அம்பாள் காதின்மேல் அணிந்துகொண்டிருந்தாள்.

பவபூதியின் தட்டு மேலே கிளம்பியபோது, அந்தக் காதுப் பூவை ஸரிசெய்து கொள்கிறதுபோல் விரலாலே மெதுவாக அழுத்திக்கொண்டாள். அப்படிப் பண்ணுவதிலேயே ஸாமர்த்யமாக அந்தப் புஷ்பத்திலிருந்த தேன் சொட்டைச் சுண்டிவிட்டு அது போய் நேரே பவபூதியுடைய ஏட்டின் மேலே விழும்படிச் செய்துவிட்டாள்!

கவிதா “ரஸம்” என்று தேனை நினைத்துத்தான் சொல்கிறோம். மதுர ஸ்வரூபிணியான அம்பாளுடைய செவிப்பூவின் தேன்சொட்டு விழுந்த கனத்தில், பவபூதியுடைய கவிதையில் குறைந்த ரஸம் ‘மேக் – அப்’ ஆகிவிட்டது. சட்டென்று அவனுடைய கவிதை (தட்டு) கீழே இறங்கி, காளிதாஸன் கவிதை உயரே போயிற்று. கவிஞர்களை எடுத்துக்கொண்டாலோ இதற்கு நேர்மாறாக பவபூதிக்கு உயர்வு கிடைத்தது, காளிதாஸனை ஒரு இறக்கு இறக்கினதாக ஆயிற்று!

ஆனால் உடனேயே காளிதாஸனுக்கு அம்பாள் செய்த ‘ட்ரிக்’ புரிந்துவிட்டது. எப்படிப் புரிந்தது என்றால் அவளே, “நானேதான் நீ!” என்று சொல்லியிருந்தாளோ, இல்லையோ? அவள் வாக்கு பொய்க்குமா? அவளாகவே இருந்து அவளுடைய கார்யத்தைப் புரிந்துகொண்டுவிட்டாள்!

உடனே இதை ஆசுகவிதையாகப் பாடியும் விட்டான்.

ஆனால் முன்னே அவஸரப்பட்டுத் திட்டினானே, அப்படி திட்டியா பாடினான்? இல்லை. உண்மையில் ஸுபீரியராக இருந்த அவனுடைய கவிதையை அவள் மட்டப்படுத்தினதற்காக அவன் திட்டியிருந்தால்கூடத் தப்பு என்று சொல்ல முடியாது. ஆனால் இப்போது திட்டாமல், கொஞ்சங்கூடக் கோபப்படாமல், “அஹோ மே ஸெளபாக்யம்“, “ஆஹா என்னுடைய பரம பாக்யத்தை என்ன சொல்ல!” என்றே ஆரம்பித்து, அம்பாளுடைய காதணியான கல்ஹாரத்தின் தேனால் அவள் பவபூதியின் கவிதைக்கு கனம் கொடுத்ததைப் பாடினான்!1

நல்லறிவு உதித்ததாலேயே (அதுவும் அவள் க்ருபைதான்) மனஸ் மாறி இப்படிப் பாடினான். “நீயும் நானும் ஒன்று” என்றவள் இப்போது பக்ஷபாதமாகப் பண்ணினாளென்றால் ஏன்? அவளைத் தவிரத் தான் வேறில்லை என்று இல்லாமல் தனக்கு அஹங்காரம் தலை தூக்குகிறதே, அந்த கனத்தை இறக்கத்தான் பவபூதியின் பாடலுக்கு கனம் தந்தாள் என்று புரிந்துகொண்டான். அதனாலேயே இதைத் தன் பாக்யமாய் நினைத்துப் பாடினான்.

“அப்படியா விஷயம்?” என்று உடனே பவபூதி காளிதாஸனுக்கு நமஸ்காரம் செய்ய, காளிதாஸன் போஜனிடம் சொல்லி பவபூதிக்கு நூறு மத்தகஜங்களை ஸம்பாவனை செய்யச் செய்தானாம்!

போட்டியும் பொறாமையுமாய் இருந்த இரண்டு மஹா கவிகள் இப்படி ஒற்றுமையானதைத் தெரிந்து கொள்ள நம் மனஸுக்கு மிகவும் ஸந்தோஷமாயிருக்கிறது.

அப்புறம் காளிதாஸனுக்கு நல்ல அடக்கமுண்டாயிற்று. அவையடக்கமாக அவன் செய்துள்ள ச்லோகங்களைப் பார்த்தால் தெரியும். உதாரணமாக, “ரகுவம்ச”த்தின் ஆரம்பத்தில் இப்படி ஒரு காவ்ய முயற்சியில் தான் இறங்கியிருப்பது ஏதோ ஒரு சின்னப் படகைக் கொண்டு கடக்க முடியாத ஸமுத்ரத்தைக் கடக்கப் புறப்படுவது போலத்தான். ரகுவம்ச திலகனின் கதையை எழுதிய வால்மீகி போன்ற உயர்ந்த கவிகளே ஸாதிக்கக்கூடிய இந்தக் கார்யத்தில் தான் முயற்சி பண்ணுவது நல்ல நெட்டையானவனே பறிக்கக்கூடிய பழத்துக்கு ஒரு குள்ளன் கை நீட்டிப் பார்ப்பது போலத்தான் என்று விநயமாகச் சொல்கிறான்.2


1 அஹோ மே ஸெளபாக்கியம் மல ச பவபூதேச்ச பணிதம்
தடாயாம் ஆரோப்ய ப்ரதிபலதி தஸ்யாம் லகிமநி |
கிராம் தேவீ ஸத்ய: ச்ருதி-கலித-கல்ஹார-கலிகா
மாதூலீ-மாதுர்யம் க்ஷிபதி பரிபூர்த்யை பகவதீ ||

2 முதல் ஸர்கம் – ச்லோகம் 2, 3

தெய்வத் தீர்ப்புக் கோருவது

கவிகளுக்குள்ளே ரொம்ப போட்டி முற்றி, வாதத்தினாலே அவர்களில் எவருடைய ஸுபீரியாரிடியையும் நிச்சயிக்க முடியாமல் போனால், அப்போது ராஜா தெய்வத்தின் தீர்ப்புக்குத்தான் விஷயத்தை விட்டு விடுவான். எல்லாக் கவிகளையும் வித்வான்களையும் கோவிலுக்கு அழைத்துக்கொண்டு போவான். அங்கே பூ கட்டி வைத்து எடுத்துப் பார்ப்பார்கள். அல்லது போட்டிக் கவிகளின் கவிதைகளைக் கொண்ட சுவடிகளைத் தராசிலே நிறுத்திப் பார்ப்பார்கள். ஸாதாரணமாகப் பார்த்தால் அந்தச் சுவடிக் கட்டுகளில் எதில் ஜாஸ்தி கவிதைகள், அதாவது ஓலைகள் இருக்கிறதோ அதுதான் அதிக எடையாக இருக்கும். ஆனாலும் இப்படி தெய்வ ஸந்நிதானத்தில், தெய்வமே கதி என்று அவர்கள் அத்தனைப் பேரும் நம்பி, நாஸ்திக வாதமும் பரிஹாஸமுமில்லாமல் பூர்ணமாக நம்பி, நிறுத்துப் பார்த்தபோது, ஓலை ‘வெய்ட்டி’யில் ரொம்ப லேசாயிருந்தால்கூட, எது கவிதையிலே உசந்த தரமானதோ அதை வைத்த தட்டுதான் கீழே இறங்கும். துளியூண்டு திருக்குறளை சங்கப் பலகையில் வைத்ததும் பாக்கி அத்தனை சங்கப் புலவர்களும் பொற்றாமரைக் குளத்தில் விழுந்துவிட்டார்களல்லவா? அந்த மாதிரி! ஞானஸம்பந்தர் கதையிலே வருவதுபோல அனல்வாதம், புனல் வாதம் என்று நடத்தியும் திவ்ய சக்திகளின் முடிவுக்குப் போட்டியை விடுவதுண்டு*. அல்லது எல்லாருமாக ஸந்நிதிக்குப் போய் அப்படியே மௌனமாக ப்ரார்த்தித்து த்யானம் பண்ணுவார்கள். அர்ச்சகரின் மேல் ஆவசேம் ஏற்பட்டு ஈச்வர சித்தம் தெரியும். அல்லது அசரீரி கேட்கும்.


* முதற் பகுதியில் ‘முருகனின் தமிழ்நாட்டு அவதாரம்’ எனும் உரை பார்க்க.

ஸ்நேஹத்திலும் சிறந்த சாஸ்த்ரியார்

குட்டி சாஸ்த்ரிகள் அங்கே எத்தனையோ இடையூறுகளுக்கு ஈடு கொடுத்து, அப்புறம் பாஜிராவ் ஸ்ரீமந்தன் என்ற பேஷ்வாவின் ராஜாங்க ஸதஸில் வித்வானானார்.

மஹாராஷ்ட்ராவில் முக்ய மந்த்ரிகாளக இருந்த பேஷ்வா என்பவர்களே ராஜாவைப் போன்ற ஆட்சியதிகாரம் பெற்றிருந்தார்கள். “ஸ்ரீமந்த” என்பது அவர்களுடைய “டைட்டில்.”

பண்டிதர்களான கவிஞர்கள் முறை தவறி நடக்கிற அரசனை விட்டுவிடுவது போலவே, வித்வானாகவும் ரஸிகனாகவும் உள்ள அரசனோடு ஒட்டிக்கொண்டு உறவு வைத்துக்கொள்வார்கள். குட்டிக் கவி ஷாஹஜியைப் போற்றி ஆசுகவி செய்ததாகப் பார்த்தோமல்லவா?

இம்மாதிரி குட்டி சாஸ்த்ரியாரும் நல்ல விஷய ஞானமுள்ளவரான ஸ்ரீமந்தனைப் போற்றி, அவரிடம் நெருக்கமான அன்பு பாராட்டினார்.

அவர் காட்டிய தீரத்தைப் போலவே இந்த அன்பு விச்வாஸத்தையும் ச்லாகித்துக் சொல்லும்படியாக ஒன்று செய்தார்.

வெள்ளைக்காரர்கள் இங்கே சண்டை செய்தும், வேறே க்ருத்ரிமங்கள் செய்தும் நாடு பிடித்துக்கொண்டிருந்த காலம் அது. மஹாராஷ்டிரத்தின் சின்னச் சின்ன ராஜாக்களையும் ஸ்ரீமந்தன் ஒன்று திரட்டித் துணை சேர்த்துக்கொண்டு வெள்ளைக்காரப் படையெடுப்பை இரண்டுமுறை எதிர்த்தார். கடைசியில் 1818-ல் அவர் தோற்றுப்போகும்படி ஆயிற்று. அதோடு பேஷ்வா வம்சமே முடிந்து வெள்ளைக் காரர் ஆதிக்கம் ஏற்பட்டுவிட்டது.

தோற்றுப்போய் பேஷ்வா பதவியும் போனவுடன் ஜயித்தவர்கள் “ஸ்ரீமந்த” டைட்டிலையும் பிடுங்கிக்கொண்டு, தோற்றுப் போன எல்லா ஸ்வதேச ராஜாக்களுக்கும் “உப்புக்குச் சப்பாணி” என்று கொடுத்திருந்த “மஹாராஜ்” என்ற பெயரை பாஜிராவுக்கும் கொடுத்தார்கள். ரொம்பவும் பெரிய மனஸு பண்ணியது போல அவருக்கு ஒரு பென்ஷனைக் கொடுத்து, வடக்கே பஹுதூரத்துக்கு அந்தண்டை, கான்பூர் பக்கத்தில் உள்ள பிதுர் (Bithur) என்ற ஊருக்கு அனுப்பினார்கள, ஜெயிலில் வைப்பதையே திரிசமனாக பெரிய பங்களாவில் வைக்கிறது போலக் காட்டிவிட முடிவு பண்ணினார்கள். ஜனஸமூஹத்தை விரோதித்துக்கொண்டால் கஷ்டம் என்பதற்காகவேதான் இப்படி, தோற்றுப் போனவர்களைக் கொல்லாமல், பென்ஷன் தருவது, ஊரை மட்டும் விட்டுக் கொண்டுபோய் பங்களாவில் வைப்பது என்றெல்லாம் கண்துடைப்பதை வெள்ளைக்காரர்கள் நிறையப் பண்ணியிருக்கிறார்கள்.

வெள்ளைக்காரர்கள் அவரைச் சிறைப் பிடித்துவிட்டார்கள், கான்பூர் பக்கத்தில் எங்கேயோ ஜெயில் மாதிரி கொண்டு போய் அடைத்து வைக்கப்போகிறார்கள் என்ற செய்தி குட்டி சாஸ்த்ரிகளுக்குத் தெரிந்தது.

உடனே ஓடினார். கைதியாயிருந்த பாஜிராவோடு வெள்ளைக்கார அதிகாரிகள் புறப்படும் ஸமயம். “நீ நன்றாயிருந்த காலத்தில் உன்னோடு வாழ்ந்தேன். இப்போ உன் கஷ்டகாலத்தில் உன்னைவிட்டுப் பிரியமாட்டேன், நானும் கான்பூர் வருவேன்” என்றார்.

பாஜிராவ் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் அவர் கேட்கவில்லை.

குட்டிசாஸ்த்ரியாரும் அவர்களோடேயே போனார். வழியெல்லாம் பிச்சை எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டே அத்தனாம் தூரம் போனார்.

கங்கைக்கரையில் பாஜிராவைக் காவல் வைத்திருந்த இடத்திலேயே தாமும் தங்கிவிட்டார். அத்தனை அன்பு, விச்வாஸம், நன்றி!

அப்புறம் ஒரு வருஷத்துக்குப்பிறகு காசிக்கு வந்தார்.

அந்த ஸமயம் சரபோஜியும் ஸரஸ்வதி மஹாலுக்காக நிறைய அபூர்வச் சுவடிகள் சேகரிப்பதற்காக காசிக்கு வந்திருந்தார். குட்டி சாஸ்திரியாரைப் பார்த்ததும், ஏதோ வேளைக் கோளாற்றினால் ஆதியிலே தாம் அவரிடம் சொன்னதற்கு ரொம்ப வருத்தம் தெரிவித்து அவரை தஞ்சாவூருக்குத் திரும்பி வருமாறு கேட்டுக் கொண்டார். பாஜிராவும் தம்மோடு பிணைத்துக்கொண்டு சாஸ்த்ரிகள் கஷ்டப்படுவதைப் பொறுக்காமல் அவரை ஊருக்குத் திரும்பும்படி வற்புறுத்தினார். முடிவில் சாஸ்த்ரியார் ஒப்புக்கொண்டார். ஊருக்குத் திரும்புவதற்கு முந்தி அப்போது காசியிலே வாஸம் செய்துகொண்டிருந்த அஹோபில பண்டிதர் என்ற மஹா பண்டிதரிடம் வேதாந்த சாஸ்த்ர அப்யாஸம் பண்ணினார்.

பிறகு, ஸொந்த ஊருக்கே புறப்பட்டார். பழைய ஸ்நேஹிதர்களைப் பார்க்க எண்ணி மஹாராஷ்ட்ரா வழியாக வந்தார். அப்புறம் தமிழ் நாட்டுக்கு வருவதற்காக கர்நாடகத்தை ‘டச்’ பண்ணினபோது, அப்போது மைஸூர் மஹாராஜாவாயிருந்த ஒரு க்ருஷ்ண ராஜ உடையார் தம்முடைய ஆஸ்தானத்தை சாஸ்த்ரிகள் அலங்கரிக்க வேண்டுமென்று ரொம்பவும் கேட்டுக் கொண்டார். ப்ரியத்தினாலேயே நிர்பந்தப்படுத்தி அவரை அங்கேயே நிறுத்திக்கொண்டுவிட்டார்.

அதிலிருந்து சாஸ்த்ரிகளுக்கு மைஸூர் ராஜா யதேஷ்டமாக ஸம்பாவனைகள் செய்துவந்தார்.

அப்படியிருந்தும் அவரிடமும்கூட சாஸ்த்ரிகள் தம்முடைய ‘இன்டிபென்டென்ட்’ மனப்பான்மையை ஒரு ஸமயம் நிலைநாட்டிக் காட்டினார்.

சரபோஜிக்கு பணியாத சாஸ்த்ரியார்

ராஜாவிடம் அவர் மானம் மரியாதைகளைத் துணிந்து காப்பாற்றிக் கொண்ட கதைக்கு வருகிறேன்.

அவருக்கு வயஸானபோது சரபோஜி மஹாராஜா தஞ்சாவூரிலிருந்து கொண்டு ஆட்சி நடத்திவந்தார். அவர் தினமும் பக்கத்திலே ஒரத்தநாட்டுக்குக் குதிரையின் மேல் ஆளனுப்பி, அங்கே தாம் குடியேற்றியிருந்த ஸத் பிராம்மணர்கள் அன்றன்றும் வைதிக கர்மாக்களும் பூஜையும் முடித்து விட்டுத் தருகிற மந்த்ராக்ஷதையைக் ‘கலெக்ட்’ பண்ணிக்கொண்டு வரச் செய்து, அதைத் தம் சிரஸில் போட்டுக் கொண்ட பிறகே போஜனம் செய்வார். இந்த ப்ராமணோத்தமர்களில் குட்டி சாஸ்த்ரிகளும் ஒருவர்.

அவர் கொஞ்சங்கூட லோபமில்லாமல் தீர்க்கமாக அநுஷ்டானங்கள் பண்ணுகிறவர். ராஜாவின் குதிரைக்காரன் வந்துவிட்டானே என்பதற்காக “ஓட்ட” மாட்டார். (குதிரையைச் சொல்லவில்லை! அநுஷ்டானத்தை!) கவனமாக, நிறுத்தி நிதானமாக அநுஷ்டானங்களை முடித்தே அக்ஷதை தருவார். இதனால் மஹாராஜாவின் போஜனம் பல நாட்களில் ‘டிலே’ ஆயிற்று.

ஒரு ஸமயம் சரபோஜி அவரைப் பார்த்தபோது, “சாஸ்த்ரிகளே! அநுஷ்டானம் ரொம்ப நிதானமா நடக்கிறாப்பலே இருக்கே” என்று கேட்டுவிட்டார்.

சரபோஜி மதிப்புக்குரியவர். கலைகளுக்கு அளவில்லாத பணி செய்திருக்கிறவர். ஸரஸ்வதி மஹால் கலெக்ஷன் ஒன்று போதும் அவருடைய உயர்ந்த பணிக்கு! ஆனாலும் ராஜா என்பது எங்கேயாவது, எப்போதாவது துருத்திக் கொண்டு வருமாதலால் இப்படிச் சொன்னார்.

அவ்வளவுதான்! சாஸ்த்ரியாருக்குத் தாளவில்லை. ‘ஒரு ராஜாவுக்காக ப்ராம்மணனானவன் வேத கார்யத்தையும், தேவ கார்யத்தையும் அவற்றுக்கான விதிமுறைகளை ‘ரிலாக்ஸ்’ செய்து பண்ணுவதா? ராஜாவுக்கே ஆசீர்வாதமாக அக்ஷதை அனுப்பி வைக்கிறவனாக வெளிப் பார்வைக்கு வைத்தாலும் அவனுக்கு ஊழியம் செய்கிற ஸேவகன் என்ற நிலையில்தானே நம்மை உள்ளுக்குள்ளே நினைப்பதாகத் தெரிகிறது?’ என்று குன்றி, மனம் வெதும்பினார்.

அன்றைக்கே ராவோடு ராவாக ஊரைக் காலி பண்ணிக் கொண்டு பெண்டாட்டியுடன் கூடக் கிளம்பிவிட்டார். நேரே அர்த்த ஜாமத்துக்குத் திருவையாறு வந்து சேர்ந்தார். அம்பாள் தர்மஸம்வர்த்தனியிடம் ஓடிப்போய் அப்படியே அவள் சரணத்தில் விழுந்து இப்படித் தம்முடைய ஸ்வதர்மத்துக்கு பங்கம் வரும் ஹேது நேர்ந்துவிட்டதற்காகக் கதறி முறையிட்டார். ஸதிபதிகள் அதோடு அப்படியே கிளம்பி, நின்ற இடத்தில் நிற்காமல் மஹாராஷ்ட்ராவுக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

வங்க வித்வானை வென்ற வாலிபர்

குட்டிக்கவியின் கொள்ளுப் பேரரும் அவருடைய இயற் பெயரையே கொண்ட இன்னொரு வாஞ்ச்யேச்வரர்தான்*. (தாத்தாவேதான் பேரனாகப் பிறக்கிறார் என்ற கருத்தில் அவர் பேரையே இவனுக்கு வைப்பதால்தான் ‘பேரன்’ என்று சொல்வது!) கொள்ளுப் பேரரை வாஞ்ச்யேச்வர யஜ்வா என்பார்கள். ஸோம யாகம் செய்தவரானதால் ‘யஜ்வா’. கொள்ளுத் தாத்தாவைப் போலவே இவரும் பாண்டித்யம், ஸாஹித்ய ஆற்றல் எல்லாம் உள்ளவர். அவரைப் போலவே மஹா தீரர் என்பதுதான் நாம் எடுத்துக் கொண்டுள்ள விஷயத்துக்கு முக்யமானது. ப்ரபிதாமஹரின் அச்சாக இவர் இருந்ததால் இவரைக் “குட்டிச் சாஸ்த்ரியார்” என்றே பொதுவில் சொல்ல ஆரம்பித்தார்கள்.

இவர் தம்முடைய தைர்யத்தை முதலில் காட்டியது ராஜாவிடமல்ல; வேறொரு மஹா பண்டிதரிடமேயாகும். அப்போது அவருக்கு வயஸு பதினெட்டுதான்.

பெங்காலில் ‘நாடியா’ என்கிற நவத்வீபத்தில் விசேஷமாக உருவாக்கப்பட்ட நவீன தர்க்க சாஸ்த்ரத்தில் கரை கண்ட அந்த ஊர் வித்வான் ஒருவர் திருவிடைமருதூருக்கு வந்து அமரஸிம்ஹ மஹாராஜாவின் முன்னால் வாதம் நடத்தினார். அவருக்கு ஈடு கொடுக்கத் தஞ்சைச் சீமையில் யாருமே இல்லாமல் ஸதஸ் விக்கித்து அவமானப்பட்டு நின்ற போது யுவாவான குட்டி சாஸ்த்ரி பதில் கொடுத்து என்னவோ முனகினார். சிறுபிள்ளை என்று அலக்ஷ்யமாக பெங்கால் பண்டிதர் கையமர்த்த, இவருக்கு மானம் பொங்கிக்கொண்டு வந்தது. முனகலாக ஆரம்பித்தவர் கர்ஜனையாகவே முழங்க ஆரம்பித்தார். “காதாதரி” என்ற தலை சிறந்த நவீன தர்க்க புஸ்தகத்தில் சொல்லியுள்ள அறுபத்து நாலு வாதங்களையும் அலசினார். பெங்கால் பண்டிதரை முனகக்கூட முடியாமல் வாயடைத்து உட்காரச் செய்துவிட்டார்! இப்படித் தமிழ்நாட்டின் வித்வத் ஸமூஹத்துடைய மானத்தையே அவர் காப்பாறியதில்தான் அவருடைய தைர்யம் அங்குரார்ப்பணமாயிற்று.


* இவரைக் குறித்த விரிவான உரை இனிவரும் பகுதிகளில் ஒன்றில் வெளிவரலாம்.

எருமைத்துதி

அந்த நூல் இப்போது இருக்கிறது. நூறு ச்லோகம் கொண்ட அதற்கு “மஹிஷ சதகம்” என்று பெயர் எருமையை ஸ்தோத்ரம் பண்ணும் நூறு பாட்டு என்று புரிகிறதோல்லியோ? தலைப்பிலேயே பரிஹாஸமாக இடித்துச் சொல்லுதல்!

“மஹிஷி” என்று ராணிக்குப் பெயர் இருக்கிறது. ‘பட்ட மஹிஷி’ என்கிறோம். ஆனால் ராஜாவுக்கு ‘மஹிஷன்’ என்று பேரில்லை. ‘மஹி’ என்றால் பூமி என்பதை வைத்து ‘மஹீசன்’, ‘மஹிபதி’ என்றுதான் பெயர்கள் இருக்கின்றன.

குட்டிக் கவி மஹிஷ சதகம் பண்ண ஆரம்பித்துவிட்டார். அவர் ‘சதகம்’ பண்ணத்தான் நினைத்தாரோ அல்லது ‘ஸாஹஸ் ரீ’யாக ஆயிரம் ச்லோகம் பண்ண நினைத்தாரோ? கொஞ்சம் கொஞ்சமாக ச்லோகம் பண்ணிப் பண்ணி, அவற்றை ராஜாவுக்கே அனுப்பி வந்தார்.

அதன் ஸப்ஜெக்டைச் சுருக்கமாகச் சொன்னால், அஸத்தானவர்களைத் தன் ஸபையில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு ‘ஆமாம் பூசாரி’ போடுகிற ஒரு ராஜாவுக்கு ஸேவகம் செய்து பிழைப்பதைவிட ஒரு எருமைக்கடாவை வைத்துக்கொண்டு அதனால் “உழுதுண்டு வாழ்வதே மேல்” என்பதுதான்! ‘உழுதுண்டு வாழ்வதற்காக எதை ஏரிலே பூட்டிப் பின் செல்கி’றோமோ அந்த எருமையையே “தொழுது” ஸ்துதிப்பதாகத்தான் ச்லோகங்கள் செய்தார்!

அதிலே இரண்டே இரண்டின் தாத்பர்யத்தை மட்டும் சொல்கிறேன்.

மஹாபண்டிதரான ஸ்ரீதரர் தம் வித்தையைக் காசுக்கு விற்கிறார். ஷட் – தர்சனம் கற்ற அம்பு தீக்ஷிதர் சோற்றுக்குத் தாளம் போடுகிறார். ஷட் – தர்சனமாவது, சை! க்யாதி வாய்ந்த குட்டிக் கவியுங்கூட துஷ்ட தனிகரின் வாசலில் காத்துக் காத்து ஓய்ந்து போய்த் தூங்கி விழுந்து விட்டார். இத்தனையும் எதனால்? மஹிஷேச்வரனான – எருமைக் கடவுளான – உன்னை அநுஸரித்து ஆச்ரயிக்காத துர்பாக்கியத்தின் பலன்தான்!” என்று ஒரு ச்லோகம்1.

இன்னொன்றில், “எருமையே! ராப் பகலாக நிலத்தை உழுது உழுது ஏன் கஷ்டப்படுகிறாய்? இப்போது ராஜஸபையில் இருப்பவர்களோடு நீயும் சேர்ந்து ஸுகஜீவனம் பெறலாமே! ‘எனக்கு அறிவில்லையே, ஸாமர்த்திய மில்லையே’ என்றெல்லாம் வீணுக்கு அலட்டிக் கொள்ளாதே! தற்போதைய ஸபாக்காரர்களோடு பார்த்தால் உன்னை ப்ருஹஸ்பதீ என்றே சொல்லணுமாக்கும்” என்றார்2.

இவர் அனுப்ப அனுப்ப ச்லோகங்களைப் பார்த்துக் கொண்டே போன ராஜாவுக்கு- அவனும் உள்ளூற நல்ல ஸ்வபாவமுள்ளவன் என்றேனே, அதனால்-மனஸிலே நன்றாகத் தைத்து, தான் பண்ணுகிறது தப்பு என்று உணர்ந்தான்.


1 “வித்யாபண்யவிசேஷ”

2 “கர்ஷகர்ஷமஹர்நிசம்”

அரசனைப் போற்றும் கவிதை

‘ராஜாக்கள் நல்ல ரஸிகர்களாகவும் வள்ளல்களாகவும் இருக்கும்போது அவர்களை உத்ஸாஹப்படுத்தி, அதன் மூலம் அவர்கள் கவிகளை மேலும் ஆதரிக்கப்பண்ணி, இதனால் கவிகள் பெறுகிற உத்ஸாஹத்தில் மேலும் நல்ல நல்ல காவ்யங்கள் உண்டாக உதவவேண்டும்’ — என்ற எண்ணத்தில் இப்படிப்பட்ட ராஜாக்களின் மேல் கவிகள் ஸ்தோத்ரமாகக் கவிதைகள் பாடுவதுண்டு. Exaggeration ஆகத்தானிருக்கும். இலக்கியச் சுவைக்காக அதையும் “அதிசயோக்தி”, “மிகைபடக்கூறல்”, “உயர்வு நவிற்சி” என்று சொல்லி அங்கீகரித்திருக்கிறது. “சாடு” (Chaatu) கவிதை என்று இவற்றுக்குப் பேர்.

ராஜாவை உத்ஸாஹப்படுத்த ரொம்பவும் சிறந்த வழி அவனைப் புகழ்வதைவிட அவனுடைய பத்தினியைப் போற்றுவதுதான் என்பதால் ராணிகளையும் உசத்தி வைத்துப் பாடுவதும் உண்டு.

ஒன்று நினைவுக்கு வருகிறது.

அப்பய்ய தீக்ஷதிரின் தாத்தாவுக்கு ஆச்சான் தீக்ஷிதர் என்று பெயர். ஆசார்ய தீக்ஷிதர் என்ற பெயர்தான் அப்படி மாறி இருந்தது. அவருக்கே ‘வக்ஷஸ்தலாசார்யார்’ என்றும் பெயர் சொல்வார்கள். இப்படிப் பேர் வந்ததற்குக் காரணமே அவர் க்ருஷ்ணதேவராயரின் ராணியைப் புகழ்ந்து கவிபண்ணியதுதான்.

க்ருஷ்ண தேவராயர் காஞ்சீபுரத்திலே வரதராஜப் பெருமாளை தர்சிப்பதற்காக வந்திருந்தார். அவருடைய ஸதஸைச் சேர்ந்த பண்டிதோத்தமரான ஆச்சான் தீக்ஷிதரும் கூட வந்தார்.

பட்டர் வரதராஜாவுக்கு கர்ப்பூராரத்தி நன்றாகத் தூக்கிக் காட்டி கீழே இறக்கிக் கொண்டே வரும்போது முக மண்டலத்தில் பல தினுஸாக நிழலாடியதிலோ என்னவோ, ராயருக்குப் பெருமாள் கண்ணைப் கொஞ்சம் தாழ்த்திக் குனிந்து பார்த்துக் கொள்கிற மாதிரி தோன்றிற்று. அதை ஆச்சான் தீக்ஷிதரிடம் சொல்லி “தீக்ஷிதர்வாள்! இதற்கு ஏதாவது காரணம் — ஐதிஹ்யம் (ஐதீகம்) — தங்களுக்குத் தெரிகிறதா?” என்று கேட்டார்.

ராயர் கேட்டவுடனேயே தீக்ஷிதர் பளிச்சென்று ஒரு ச்லோகமாக பதில் சொல்லிவிட்டார். “அதுவா? ஸ்வர்ண காந்தியாக ஜ்வலித்துக்கொண்டு உன் பக்கத்திலே நிற்கிற ராணியைப் பார்த்ததும் பெருமாளுக்கு ஸாக்ஷாத் மஹாலக்ஷ்மி என்று தோன்றிவிட்டது. ‘அப்படியானால் தன்னுடைய வக்ஷஸ்தலத்திலே (திருமார்பிலே) அவள் இல்லாமல் இறங்கிப் போய்விட்டாளா என்ன?’ என்று ஸம்சயம் ஏற்பட்டுத்தான் கண்ணைத் தாழ்த்தி மார்பைப் பார்த்துக்கொள்கிறார்” என்று அர்த்தம் கொடுக்கும் ச்லோகமாக பதில் சொல்லிவிட்டார்!

காஞ்சித் காஞ்சந கௌராங்கீம் வீக்ஷ்ய ஸாக்ஷாதிவ ச்ரியம் |
வரத: ஸம்சயாபந்நோ வக்ஷஸ்தலம் அவேக்ஷதே ||

“வக்ஷஸ்தலத்தைப் பார்த்துக் கொள்கிறார்” என்று முடித்ததாலேயே ராயர் அவருக்கு “வக்ஷஸ்தல” என்ற பட்டம் தந்தார். “ஆசார்ய” என்ற அவருடைய பேரோடு சேர்ந்து, அதுமுதல் அவர் “வக்ஷஸ்தலாசார்யா”ராகி விட்டார்.

இப்படி, போஜனைக் காளிதாசன் அதீத கல்பனையாகப் புகழ்ந்திருப்பதில் வேடிக்கையாக ஒன்று:

பூலோகத்தில் கோகுலத்திலே குழந்தையாய் வளர்ந்த க்ருஷ்ண பராமாத்மா அவதாரத்தை முடித்த பிறகு ஆகாசத்திலே கோலோகம் என்பதில் வாஸம் பண்ணிக் கொண்டிருக்கிறாரென்று சொல்வார்கள்.

ஒருநாள் அவர் அந்த திவ்யலோகத்தைவிட்டு மறுபடியும் பூலோகத்துப் போய்க்கொண்டிருப்பதை நாரதர் பார்த்தாராம்.

“கோபாலா! உன்னுடைய லோகத்தை விட்டு எங்கே, எதற்காகப் போகிறாய்?” என்று கேட்டாராம்.

“தேவர்ஷே! (தேவரிஷியே) வேறே ஒன்றுமில்லை. இங்கே முக்யமான பசுவாயுள்ள ஸாக்ஷாத் காமதேனுவே கன்றுக்கு ஊட்டக்கூடப் பாலில்லாமல் மரத்துப் போய்விட்டது. யார் எது கேட்டாலும் கொடுக்கும் காமதேனுவுக்கு ஏன் இப்படி ஆச்சு என்றால், பூலோகத்திலே கவிவாணர்கள் கேட்காமலே வாரிவாரிக் கொடுக்கும் போஜனைப் பற்றி அதற்குத் தெரிந்தது. ‘நம்மையும் மிஞ்சி ஒருத்தனா?’ என்று ஏங்கி ஏங்கி இளைத்தே பால் மரத்துவிட்டது. அதனாலே அதன் கன்றுக்குப் புல் பிடுங்கிக்கொண்டு வரத்தான் அவனுடைய உலகத்துக்குப் போகிறேன்” என்று பகவான் பதில் சொன்னாராம்.

அதற்கு நாரதர், “அடாடா! நீ போகிற கார்யம் நடக்கிறதற்கு இல்லையே! ஏனென்றால், எங்கே பார்த்தாலும் போஜனிடம் வீரத்திலோ, ஈகையிலோ, அழகிலோ, படிப்பிலோ, எதிலேனும் தோற்றுப்போன ஏராளமான எதிரிகள் மண்ணைக் கவ்விக் கவ்வி அங்கே இப்போது புல் என்பதே முளைத்திருக்கவில்லையே” என்றாராம்1!

‘போற்றினும் போற்றுவர், தூற்றினும் தூற்றுவர்’ என்கிறபடி, ஸ்துதிக்க வேண்டிய ஸமயத்தில் இப்படிப் புகழ்ந்த அதே போஜனையேதான், அவன் வலுக்கட்டாயமாக கவி கேட்டபோது காளிதாஸன் விட்டுவிட்டுப் போயே போய்விட்டான்.

“மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ?” என்று கேட்ட அதே கம்பர், குலோத்துங்கனைப் பாராட்ட வேண்டிய ஸந்தர்ப்பத்தில்,

தண்ணீரும் காவிரியே; தார்வேந்தன் சோழனே;
மண்ணாவ தும்சோழ மண்டல மே!

என்று கொண்டியாடியுந்தான் பாடியிருக்கிறார்.

கார்யத்தைப் பார்த்துத்தான் தூற்றுவதோ, போற்றுவதோ செய்திருக்கிறார்களேயொழிய, அல்பத்தனமாக இச்சகம் பாடியோ த்வேஷாரோபம் செய்தோ அல்ல.

போற்றுகிறபோது, தங்களை ஆதரித்தவர்கள் த்ரவ்யத்தில் எவ்வளவு ஒளதார்யம் (உதாரத்தன்மை) காட்டினார்களோ அதைவிடவும் ஒளதார்யமாக அவர்கள் மேல் புகழ்மொழியைப் பொழிந்திருக்கிறார்கள்.

ராம பட்டாபிஷேகத்தைச் சொல்லும்போது கம்பர், தம்மை ஆதரித்த திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் முன்னோர் ஒருவருடைய கையிலிருந்துதான் வஸிஷ்டர் கிரீடத்தை வாங்கி ராமருக்குச் சூட்டினாரென்றே பாடியிருக்கிறார்!2


1 ஸ்வர்காத் கோபால குத்ர வ்ரஜலி ஸுரமுதே பூதலே காமதேநோ:
வத்ஸஸ்யாநேது: காமஸ்-த்ருணசயம்-அதுநா முக்த-துக்தம் ந தஸ்யா: |
ச்ருத்வா ஸ்ரீ போஜராஜ-ப்ரசுர-விதரணம் வ்ரீட-சுஷ்க-ஸ்தநீ ஸா
வ்யர்தோ ஹி ஸ்யாத்-ப்ரயாஸஸ்-ததபி தத்-அரிபிச்-சர்விதம் ஸர்வமுர்வ்யாம் ||

2 “………வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி”

கம்பரின் உயர் பண்பு

அதற்குக் கம்பர் “அப்பா குலோத்துங்கா! சேரன் என்னுடைய அழைப்புக்காகத்தான் இங்கே வந்தானேயொழிய, உன்னுடைய அழைப்பு அவனுக்கு இல்லை. என்னுடைய மானத்தைக் காப்பாற்றுவதற்காக அவன் அழையா வீட்டுக்கு வந்தபோது, அவனுடைய மானத்தை நான் காப்பாற்ற வேண்டுமல்லவா? அவன் சேரன் என்று தெரிந்தால் நீ அவனை எந்த தினுஸில் வரவேற்றிருப்பாயோ? எனக்காக வந்தவன் என் காரியத்தை முடித்துத் தந்துவிட்டுப் போக விடவேண்டுமென்றுதான், உனக்கு அவனை அறிமுகம் பண்ணாமலே விட்டேன்” என்றார்.

மறுபடியும் கம்பரின் பண்பு தெரிகிறதல்லவா?

“அப்படியா? அது ஸரி. ஆனால் அவன் கொடுத்த வெற்றிலைச் சுருள்களை ஏன் வாயில் போட்டுக்கொள்ளாமல் விரலிலேயே இடுக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று குலோத்துங்கன் கேட்டான்.

அதற்குக் கம்பர் சொன்ன பதிலில்தான் அவருடைய உயர்ந்த குணத்தின் உச்சியைப் பார்க்கிறோம்.

“ஒரு ராஜாவாக இருக்கப்பட்டவன் இன்னொருத்தனுக்கு ‘அடைப்பை தூக்குகிறேன்’ என்றால் அது அவனுடைய விநயத்தைக் காட்டுகிறது. அப்போது, அவனுடைய பணியைப் பெறுகிறவன் மட்டும் ஒரேயடியாக விரைத்துக் கொள்வதா? இவனும் விநயத்தைத்தானே காட்ட வேண்டும்? என்னவோ வேளை பொல்லாப்பு, ஆதியில் நீ ஒன்று சொல்ல, நான் ஒன்று சொல்ல இப்படிச் சபதம் பண்ணி, அப்புறம் என் ஸ்வய மரியாதைக்காக அதை நிறைவேற்றும்படி ஆயிற்று. அதற்காக, மூவேந்தர்களில் ஒருத்தனாக இருக்கப்பட்டவனை அடைப்பைக்காரனாக வரவழைக்க வேண்டியதாயிற்றறு. நீ அவனை அடையாளம் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காகவும், நான் நிஜமாகவே அவனுக்கு யஜமானனைப் போல நடக்கவேண்டும் என்பதற்காகவும் அலக்ஷ்யமாகவே அவனிடமிருந்து தாம்பூலம் வாங்கிக்கொள்ள வேண்டியதாகவும் ஆயிற்று. இதெல்லாம் போதாது என்று அதை நான் வாயிலேயே போட்டுக்கொண்டு சாப்பிட்டிருந்தேனானால் அவனிடம் நன்றாகவே ஊழிய லாபம் பெற்று, நிஜ யஜமானனாகவே என்னை நிலைநாட்டிக் கொண்டதாக ஆகியிருக்கும்.

“நான் பண்ணின சபதம் என்ன? சேர ராஜாவை அடைப்பைக்காரனாக்கிக் கொண்டு வருகிறேன் என்பதுதான். அடைப்பை தாங்குவதும், தாம்பூலம் எடுத்துக் கொடுப்பதுந்தான் அவன் கார்யம். அதற்கு மேலே, அந்தத் தாம்பூலத்தை வாங்கிக் கொண்டவன் அதைச் சாப்பிடும்படிப் பண்ணுவது அவன் கார்யமல்ல. அதனால் சேர ராஜாவை அடைப்பைக்கார வேலை முழுசாகப் பண்ண வைத்து என் சபதத்தை நிறைவேற்றிக் கொண்டாலும் அதை நான் தின்று எனக்கு யஜமானத்வத்தை உண்டாக்கிக் கொள்ளவில்லை” என்றார்.

தன்மானம் ஸ்வய மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டது மட்டுமில்லாமல் இப்படி சேரனுடைய மான, மரியாதைகளையும் கம்பர் காப்பாற்றிக் கொடுத்தார்.

ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர் முதலானவர்கள் அரசவைக் கவிஞர்களாக இருந்திருக்க, கம்பர் மட்டும் சடையப்ப வள்ளல் என்ற ஒரு ப்ரபுவையே தம் ஆதரவாளராகக் கொண்டிருந்ததிலிருந்து அவர் ரொம்பவும் ஸ்வதந்த்ர உணர்ச்சியுள்ளவராகயிருந்திருப்பாரென்று ஊஹிக்கலாம்.