அன்பு

உலகத்தில் நாம் காண்கிற அன்பை மூன்று வகையாகப் பிரிக்கலாம். மகான்கள், யோக்கியர்கள், சத்தியசந்தர்கள், பரோபகாரிகள், ஞானிகள், அநுக்கிரக சக்திவாய்ந்த உத்தமர்கள் ஆகியோரிடம் அவர்களது குணத்துக்காக அன்பு ஏற்படுகிறது. பந்துக்களுடனும் சிநேகிதர்களுடனும் சேர்ந்து பழகுவதால் அவர்களிடம் ஒருவித அன்பு உண்டாகிறது. மூன்றாவது, ஒரு காரியத்துக்காக, லாபத்துக்காக சிலரிடம் அன்பு வைக்கிறோம். உதாரணமாக வியாபாரத்தில் சகாயம் செய்வார் என்பதற்காக ஒரு தனிகரிடம் அன்பு பாராட்டுகிறோம். சம்பளம் கொடுக்கிறார் என்பதால் யஜமானரிடம் அன்பாக இருக்கிறோம்.

இந்த மூவகை அன்பும் உண்மையானதல்ல; சாசுவதமானதல்ல. யஜமானர், “நீ போய்விடு” என்றால் உடனேயே நம் அன்பும் போய்விடும். பழகினவர்கள் தூர தேசம் போனாலோ, காலகதி அடைந்தாலோ, வேறு விதத்தில் அவர்களுடன் பழக்கம் போய்விட்டாலோ நாளடைவில் அன்பும் போய்விடுகிறது. முதலில் பிரிவின்போது அழுத அழுகை அப்புறம் எப்படியோ மறைந்து விடுகிறது. உண்மையான அன்பானால், அந்த அழுகை என்றைக்கும் அப்படியேதானே இருக்க வேண்டும்? உத்தம புருஷர்களான மகான்களிடம் வைக்கும் அன்புகூட நிரந்தரமில்லைதான். மகான்களிடம் உத்தம குணம் குறைந்தால் — அல்லது குறைந்ததாக நமக்குத் தோன்றினாலே போதும் — அவரிடம் வைத்த அன்பும் குறைந்து விடுகிறது.

மூவகை அன்பும் காரணத்தால் ஏற்பட்டது. எனவே தான் அவை நிரந்தரமாக இருக்கவில்லை. உத்தம புருஷர்களிடம் இன்ன குணம் இருக்கிறது என்பதால், அந்தக் குணத்தைக் காரணமாகக் கொண்டே அன்பு வைக்கிறோம். அதோடு அவர்கள் நம்மை உத்தாரணம் செய்வார்கள் (உய்விப்பார்கள்) என்ற சுய காரியமும் உள்ளூற இருக்கவே செய்யும்.

இப்படியெல்லாம் எக்காரணமும் வியாஜமும் இன்றி பிரியமாக இருப்பதுதான் உண்மை அன்பு. ஒருவர் நம்மிடம் நெருங்கிப் பழகாவிட்டாலும் சரி, அவருக்கு ஆத்ம குணங்களும் அநுக்கிரக சக்தியும் இல்லாவிட்டாலும் சரி – அப்போதும் நாம் அவரிடம் மாறாத அன்பு வைத்தால் அதுவே உண்மையான அன்பு.

அப்படிப்பட்ட அன்பு யாருக்காவது இருக்கிறதா? ஒரே ஒருவருக்கு இருக்கிறது. ஸ்வாமிதான் அந்த ஒரே ஒருவர்.

ஸ்வாமிக்கு நம்மிடம் இருக்கும் அன்புக்கு ஒரு காரணமும் இல்லை. காரணத்தை அவர் பாராட்டுவதாக இருந்தால் நமக்கு ஒருவேளை சோறுகூடப் போடமாட்டார்! நம் பிழைகளையெல்லாம் பொறுத்துக் கொண்டு, நம்மை இந்த மட்டும் காப்பாற்றுபவர் அன்பு மயமான பரமேசுவரனே. இந்தப் பரமசிவ அன்பின் திரிபே உலகில் காணும் மூன்றுவகை அன்புகளும்.

அந்தக் காரணமற்ற பரமசிவ அன்பை நாமும் அப்பியசிக்க வேண்டும். தப்புச் செய்பவன் என்று காரணம் பார்த்து நாம் ஏன் ஒருவனை வெறுக்க வேண்டும்? நாமே தப்புச் செய்கிறோமே, அப்போதும் நம்மை நாமே உதறித் தள்ளுகிறோமா? அப்படியே மற்றவர்களிடத்திலும் இருக்க வேண்டும். மகா பாபிகளிடத்தில் அன்பு இருக்கவேண்டும். இன்னும் சொல்லப்போனால் அவனிடமே அதிக அன்பு வைக்க வேண்டும். “நாம் தப்புச் செய்வது போலவே இவனும் செய்கிறான். இவன் மனம் இவனை இப்படித் தூண்டுகிறது. அந்த மனத்தை நல்லதாக்க முயற்சி பண்ணுவோம்” என்று நினைக்க வேண்டும். ஈசுவர கிருபையால் அநுக்கிரக சக்தி பெற்றிருப்பவர்கள், அதைக் கொண்டு பாபியிடம் உள்ள பாபங்களை நிவிருத்தி பண்ணுவதையே முக்கியமாகக் கொள்ள வேண்டும்.

ஆரம்பத்தில் ஒரே ஒரு மனிதனிடம் காரணமில்லாத தூய அன்பை வைக்கப் பழகிவிட்டால், பின்னால் அதுவே நம்மை அன்பு மயமாக்கி, அந்த அன்பை எல்லோரிடமும் பரப்ப உதவி புரியும். குருவிடம் இவ்விதம் பயன் எதிர்பாராமல் பூரண அன்பு வைக்கப் பழகவேண்டும் என்பது பெரியோர்கள் ஏற்படுத்தியுள்ள விதி. குருவிடம் காரணம் பார்க்காமல், வியாஜம் இல்லாமல் அன்பு செலுத்த ஆரம்பிக்க வேண்டும். பின்பு அந்த அன்பு தருகிற ஆனந்தத்தில் பழகிப் பழகி லோகம் முழுவதும் குருவாக நினைத்து, சமஸ்தப் பிராணிகளிடமும் காரணமில்லாத சமமான அன்பு செலுத்த வேண்டும். லோகம் முழுவதும் அன்பை நிரப்பினால் அதுவே ஆனந்த நிலை, அதுவே பரிபூர்ண நிலை; அதுவே பரம சாந்தி.

அன்பும் துன்பமும்

மனிதப் பிறவி எடுத்ததன் பயனே அன்பு செலுத்துவதுதான். அன்பு செலுத்துவதில் உள்ள ஆனந்தம் வேறு எதிலும் இல்லை. தனக்கென்று பொருள் சேர்ப்பதில், புகழ் சேர்ப்பதில், அலங்காரம் செய்து கொள்வதில், தாற்காலிகமாக இன்பம் கிட்டலாம். ஆனாலும் இவற்றில் உள்ளம் நிறைவு பெறுவதில்லை. உள்ளத்துக்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே உண்டாகிறது. அன்பு செலுத்தும் போது நமக்கு எத்தனை கஷ்டம் வந்தாலும், தேக சிரமம் வந்தாலும் பணச்செலவானாலும் இதெல்லாம் தெரிவதேயில்லை. அன்பின் ஆனந்தமும் நிறைவுமே இந்தத் துன்பத்துக்கெல்லாம் மேலாகத் தெரிகிறது. அன்பு செலுத்தாத வாழ்க்கை வியர்த்தமே.

அன்பு செலுத்தும்போது துன்பமே தெரிவதில்லை என்கிறேன். ஆனால் கடைசியில் ஒரு நாள் அன்பு செலுத்தப்பட்ட வஸ்துவே நமக்குப் பெரிய துன்பத்தைக் கொடுத்து விடுகிறது. நாம் ஒருவரிடம் அன்பு வைக்கிறோம். கடைசியில் ஒருநாள் அவர் நம்மைவிட்டுப் போயே போய் விடுகிறார். அல்லது நாமாவது அவரை விட்டு ஒருநாள் போகத்தான் போகிறோம். அப்போது, ‘ஐயோ, நம்மிடமிருந்து போய்விட்டாரே’ என்றோ, அல்லது ‘ஐயோ, நாம் இவரை விட்டுப் போகிறோமே’ என்றோ பெரிய துக்கம் உண்டாகிறது. இத்தனை காலமாக அன்பு தந்த ஆனந்தமும் நிறைவும் கடைசியில் பொய்யாகி, இந்தத் துன்பத்திலேயே முடிந்தது என்று மனசு கலங்குகிறோம். அன்பின் முடிவான பலன் துன்பம்தானா என்று பெரிய சலிப்பு உண்டாகி விடுகிறது. எத்தனைக்கெத்தனை அன்பு வைத்தோமோ, அத்தனைக்கத்தனை துன்பம் பிரிவின் போது உண்டாவதைப் பார்க்கிறோம். அன்பே செலுத்தாமல் சுய காரியவாதியாகவோ, அல்லது ஜடமாகவோ இருக்கிற ஜன்மாவே சிலாக்கியமானதோ என்று கூடத் தோன்றிவிடும். அப்படிப் பட்டவனுக்கு இந்தப் பிரிவுத் துன்பமே இல்லையல்லவா?

ஆனால் உண்மையில் சுய காரியவாதி பாபத்தைத்தான் மூட்டைக் கட்டுகிறான். மனிதப் பிறவி எடுத்துவிட்டு, ஆனந்தம், நிறைவு முதலியன இல்லாமல் மரம், மட்டை, கல் மாதிரி ஜடமாக இருப்பதும் பிரயோஜனம் இல்லை.

அன்பு செய்தாலும் முடிவில் துன்பம், அன்பு இல்லாமல் இருந்தாலோ வாழ்க்கையில் ருசியே இல்லை. இப்படியானால் என்ன செய்வது? மாறாத, மாளாத அன்பை உண்டாக்கிக் கொள்வதே வழி. நம்முடைய அன்புக்குரிய வஸ்து நம்மை விட்டு என்றும் பிரிந்து போகாததாக இருக்க வேண்டும். அப்படி ஒரு வஸ்து இருந்து, அதனிடம் அன்பை வைத்து விட்டால் நாமும் அதுவும் ஒருநாளும் பிரியப் போவதில்லை. எப்போதும் ஆனந்தமாக, நிறைவாக இருக்கலாம்.

அதாவது, என்றும் மாறாமல் இருக்கிற ஒரே வஸ்துவான பரமாத்மாவிடம் அன்பைப் பூரணமாக வைத்துவிட வேண்டும். பரமாத்மா நம்மைவிட்டு ஒருபோதும் நீங்குவதில்லை. நம் சரீரத்திலிருந்து உயிர் பிரிந்தாலும், பிரிகிற உயிர் பரமாத்மாவிடமிருந்து பிரியாமல் அவரிடமே கலந்து விடும். அவரிடம் வைக்கிற அன்பே சாசுவதமாக இருக்க முடியும்.

அழியாத பரமாத்மாவிடம் அன்பாக இருக்க வேண்டும் என்றால் வேறு யாரிடமும் அன்பாக இருக்கக்கூடாதா, மற்ற எல்லோரும் என்றோ ஒருநாள் நசிப்பவர்கள்தானே என்ற கேள்வி எழலாம். பரமாத்மாவிடம் அன்பை நாம் மேலும் மேலும் வளர்த்துக்கொண்டால் அவருக்கு வேறாக யாருமே இல்லை என்று தெரியும். மரணமடைகிற மனிதர்களாக எண்ணி, அதுவரை யாரிடமெல்லாம் துக்க ஹேதுவான அன்பை வைத்திருந்தோமோ அவர்களும்கூட இப்போது அழியாத பரமாத்ம ஸ்வரூபமாகவே தெரிவார்கள். இப்படி உலகம் முழுவதையும் பரமத்மாவாகவே பார்த்து அன்பு செலுத்த வேண்டும். அப்போது நம் அன்பு ஒரு நாளும் துக்கத்துக்கு மூலமாக ஆகாமலே இருக்கும்.

எல்லோரையும் பரமாத்ம ஸ்வரூபமாகப் பார்த்து அன்பு செலுத்த முடியாவிட்டாலும், ஆத்ம குணம் நிறைந்த பெரியவர்கள், நல்ல ஞானமும் அருளும் நிறைந்த ஸத்குரு ஆகியோரைப் பரமாத்மாவாகக் கருதி, அன்பு செலுத்துவது சுலபமாக முடிகிறது. அப்படிப்பட்டவர்களிடம் அன்பு வைத்து ஆத்மார்ப்பணம் செய்துவிட்டால் போதும். அவர்கள் மூலமாக பரமாத்மா நமக்கு அநுக்கிரகம் பண்ணி விடுவார். நம் அன்புக்குப் பாத்திரமானவர் மரணமடைந்தாலும்கூட, ‘பரமாத்மா வேஷமாகப் போட்டுக் கொண்ட ஒரு சரீரத்துக்குத் தான் அழிவு உண்டாயிற்று. இப்போது சரீரி பரமாத்மாவோடு ஒன்றாகிவிட்டார்’ என்ற ஞானத்தோடு பிரிவுத் துன்பத்துக்கு ஆளாகாமல் இருப்போம். நம் அன்பு கொஞ்சம்கூடக் குறையாமல் அப்படியே எந்நாளும் நிற்கும். ஈச்வரனிடம், ஸாதுக்களிடம் இந்த அன்பை அப்யசிக்க ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக சமஸ்த ஜீவராசிகளுக்கும் விஸ்தரிக்க வேண்டும். அதுவே ஜன்மா எடுத்தன் பயன்.

கோபம் கொள்ளத் தகுதி ஏது?

நமக்கு அநேக சந்தர்ப்பங்களில் கோபம் வருகிறது. முக்கியமாக இரண்டு விதங்களில் கோபம் வருகிறது. ஒருவன் ஒரு தப்புக் காரியம் செய்தால், அவனிடம் கோபம் ஏற்படுகிறது. அல்லது ஒருவன் நம்மைத் தூஷித்தால் அவனிடம் கோபம் வருகிறது. யோசித்துப் பார்த்தால் எவரிடமும் இந்த இரண்டு விதங்களிலும் கோபப்படுவதற்கு நமக்கு யோக்கியதை இல்லை என்று தெரியும்.

ஒருவன் தப்புப் பண்ணுகிறான் என்றால் கோபம் கொள்கிறோமே, அப்படியானால் நாம் தப்புப் பண்ணாதவர்களா? ஒருவனை பாபி என்று துவேஷிக்கும்போது, நாம் அந்தப் பாபத்தைப் பண்ணாதவன்தானா என்று நினைத்துப் பார்க்க வேண்டும். காரியத்தில் பண்ணாவிட்டாலும் மனஸால் பண்ணியிருப்போம். நாம் அநேக தப்புகளை, பாபங்களைப் பண்ணிக் கொண்டேதான் இருக்கிறோம். நம்மைவிடப் தப்பும் பாபமும் பண்ணுகிறவர்களும் இருக்கலாம். நம் மனசு ஏதோ ஓர் அளவுக்குப் பக்குவம் அடைந்திருப்பதால் நாம் இந்த அளவு பாபத்தோடு நிற்கிறோம். அவனுடைய மனசுக்கு இந்தப் பக்குவம்கூட வராததால் இன்னும் பெரிய பாபம் பண்ணுகிறான். நாம் செய்கிற தவறுகளை திருத்திக் கொள்வதற்கு எத்தனை பாடுபட வேண்டியிருக்கிறது? நம்மையும்விட மோசமான நிலைக்கு இறங்கிப் பாபங்களைச் செய்யப் பழகிவிட்ட இன்னொருத்தனின் மனசுக்கும் அதிலிருந்து மீளுவது சிரமமான காரியம்தான். அப்படிப்பட்டவனோடு நாம் சேர்ந்திருக்க வேண்டும் என்பதில்லை. அஸத் ஸங்கத்தைவிட்டு ஸத் ஸங்கத்தில் சேர்வதுதான் ஆத்மாபிவிருத்திக்கு முதல் படி என்று சகல சாஸ்திரங்களும் சொல்கின்றன. ஆனால் பாபிகளை நாம் வெறுப்பதிலும் அவர்களைக் கோபிப்பதிலும் பயனில்லை. அவர்களுடைய மனசும் நல்ல வழியில் திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்பதொன்றே நாம் செய்ய வேண்டியது. ஈசுவராநுக்கிரகத்தில் நம்மில் யாருக்காவது அநுக்கிரக சக்தி கிடைத்திருந்தால், அதை இந்தப் பாவிகள் கடைத்தேறுவதற்கே உபயோகிக்க வேண்டும்.

நம் கோபம் எதிராளியை மாற்றாது. அவனுக்கும் நம்மிடம் கோபத்தை வளர்ப்பதுதான் அதன் பலன். இரண்டு பக்கங்களிலும் துவேஷம் வளர்ந்துகொண்டே போகும். ஒருத்தன் தன் தப்பைத் தானே உணர்ந்து திருந்தச் செய்யாமல், நம் கோபத்துக்குப் பயந்து சரியாக செய்வதில் நமக்குப் பெருமையில்லை. இது நிலைத்தும் நிற்காது. அன்பினாலேயே பிறரை மாற்றுவதுதான் நமக்குப் பெருமை. அதுதான் நிலைத்து நிற்கும்.

ஒருத்தன் பாபம் செய்ய அவனுடைய மனசு, சந்தர்ப்பம் இரண்டும் காரணமாகின்றன. நாம் பல பாபங்களைச் செய்ய முடியாமல் சந்தர்ப்பமே நம்மைக் கட்டிப் போட்டிருக்கலாம். எனவே, ஒரு பாபியைப் பார்க்கும்போது, ‘அம்பிகே! இந்தப் பாபத்தை நானும்கூடச் செய்திருக்கலாம். ஆனால் அதற்குச் சந்தர்ப்பம் தராமல் நீ கிருபை செய்தாய். அந்தக் கிருபையை இவனுக்குச் செய்யம்மா’ என்று பிரார்த்திக்க வேண்டும்.

இரண்டாவதாக, நம்மை ஒருத்தர் துவேஷிக்கிறார் என்று கோபம் கொள்ள வேண்டியதில்லை. நாம் எத்தனை தூஷணைக்குத்தக்கவர் என்பது நம் உள்மனசுக்குத் தெரியும். ஒருகால் நம்மை தூஷிக்கிறவர் நாம் செய்யாத தவற்றுக்காக நம்மைத் திட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் செய்த தவறுகள் அதைவிடப் பெரியவை என்றும் நம் அந்தரங்கத்துக்குத் தெரியும். நம் தவறுகளைக் கழுவிக்கொள்வதற்காக ஒவ்வொரு நாளும் அம்பாளிடம் பச்சாதாபத்துடன் அழ வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். இந்த நிலையில் உள்ள நாம், பிறரைத் தப்புத் கண்டுபிடித்து கோபிக்க நியாயம் ஏது?

‘நாம் தப்பே செய்யவில்லை என்றால், அப்போது பிறரைக் கோபிக்கலாமா?’ என்றால் இப்படித் தப்பே பண்ணாத நிலையில் நாம் அன்பு மயமாகிவிடுவோம். அப்போது நமக்குப் பாவியிடமும் கருணை தவிர, எந்தப் பாவனையும் இராது. கோபமே உண்டாகாது. நாம் தப்புச் செய்தவர்கள் என்றாலோ, நமக்குப் பிறரைக் கோபிக்க யோக்கியதை இல்லை. தப்பே பண்ணாத நிலையிலே எல்லாம் அம்பாளின் லீலைதான் என்று தெரிகிறது. லீலையில் யாரை பூஷிப்பது, யாரைத் தூஷிப்பது? எப்படிப் பார்த்தாலும் கோபம் கூடாதுதான்.

மநுஷ்யனைப் பாபத்தில் அழுத்துகிற இரண்டு பெரும் சக்திகள் காமமும் குரோதமும் என்றார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. அதாவது நம் கோபத்தினால் நமக்கேதான் தீங்கு செய்து கொள்கிறோம். பெரும்பாலும் நம்முடைய கோபத்தை எதிராளி பொருட்படுத்துவதே கிடையாது. ஆத்திரப்படுவதால் நாமே நம் சரீரம், மனசு இரண்டையும் கெடுத்துக் கொள்வதோடு சரி. அன்பாக இருப்பதுதான் மனிதன் ஸ்வபாவமான தர்மம். அதுதான் ஆனந்தமும். அன்பு நமக்கும் ஆனந்தம், எதிராளிக்கும் ஆனந்தம். அன்பே சிவம் என்பார்கள். நாம் எல்லோரும் அன்பே சிவமாக அமர்ந்திருக்கப் பிரயாசைப்பட வேண்டும்.

கோபம்

‘காமம் குரோதம்’ என்று சேர்த்துச் சொல்வது வழக்கம். காமம் என்பது ஆசை. குரோதம் என்பதுதான் கோபம், ஆத்திரம், துவேஷம் இவை எல்லாமாகும். மனிதனை பாபத்தில் தள்ளுபவை காமமும், குரோதமுமே என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லியிருக்கிறார்.

ஒரு வஸ்துவிடம் ஆசை உண்டாகிவிட்டால், அதைத் தவறான வழியிலாவது அடைய முயல்கிறோம். இப்படியாகக் காமம் என்பது நம்மைப்பாவத்தில் தள்ளுகிறது. அது நமக்குப் பெரிய சத்ரு. அதே போன்ற இன்னொரு சத்ருவே கோபம். நாம் ஆசைப்படுகிற வஸ்து கிடைக்காதபொழுது இதற்குத் தடையாக இருந்தவர்கள்மீது, அல்லது தடை என்று நாம் நினைத்தவர்கள்மீது கோபம் வருகிறது. அதாவது நிறைவேறாத காமமே கோபம் என்று பெயர் கொள்கிறது.

ரப்பர் பந்தைச் சுவரில் எறிகிறோம். அது எதிர்த்துக் கொண்டு நம்மிடமே திரும்பி வருகிறது. எறியப்படும் பந்து காமம். அதே பந்து திரும்பி வருகிறபோது கோபமாகிறது. திரும்பி வருகிற பந்து நம்மையே தாக்குகிறது. அப்படியேதான், நம்முடைய கோபத்தால் பிறரைத் தாக்குவதாக நினைத்தாலும், அது நம்மையேதான் அதிகம் தாக்குகிறது. கோபத்தில் நம் உடம்பெல்லாம் ஆடிப்போகிறது. நம் தேகம், மனசு இரண்டுக்கும் கோபத்தினால் பெரிய கிலேசம் உண்டாக்கிக் கொள்கிறோம். நாம் ரௌத்ராகாரமாகச் சத்தம் போடும்போது நம்மை யாரேனும் போட்டோ பிடித்து, அப்புறம் நம்மிடம் காட்டினால் போதும். கோபாவேசத்தில் நம்மை நாமே எத்தனை கோரமாக்கிக் கொள்கிறோம் என்று புரிந்து கொண்டு வெட்கப்படுகிறோம்.

சாதாரணமாக மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் வயிற்றுக்கு ஆகாரம் கொடுத்தால் அப்போதைக்கு பசி அடங்குகிறது. அடுத்த வேளை மறுபடியும் பசி ஏற்படுகிறது. நெருப்புக்கு மட்டும் நாம் ஓர் ஆகாரத்தைப் போட்டால் அது அடங்குவதேயில்லை. இன்னும் அதிகமாகக் கொழுந்து விட்டு எரிகிறது. மேலும் பல பொருட்களைத் தகித்து கபளீகரம் செய்கிறது. நெருப்பு பிரகாச மயமாக இருந்தாலும், தான் ஸ்பரிசித்துவிட்டுச் செல்கிற பண்டங்களை எல்லாம் கன்னங்கரேல் என்று கருப்பாக்கிக் கொண்டு போகிறது. இதனால் நெருப்புக்கு ‘கிருஷ்ண வர்த்மா’ என்று ஒரு பெயர் ஏற்பட்டிருக்கிறது. காமமும் இப்படிப்பட்ட ‘கிருஷ்ண வர்த்மா’ தான். அது தீயாக எரிகிறது; அதற்குப் பிரியமான வஸ்துவைக் கொடுப்பதால் பசி அடங்காமல் அதிகரித்துக் கொண்டே போகிறது; அது நம் மனசையே கறுப்பாக்கிக் விடுகிறது. ஓர் இச்சை பூர்த்தியாகிற போது தற்காலிகமாக ஒரு மகிழ்ச்சி உண்டானாலும், பிற்பாடு அதையே மீண்டும் தேடி அலைந்து அமைதியையும் சந்தோஷத்தையும் குலைத்துக் கொண்டு அழுகையையும் கோபத்தையும் உண்டாக்கிக் கொள்கிறோம். அழுகை துக்கத்தில் உண்டாவது.

நிறைவேறாத ஆசையின் இரண்டு உருவங்கள் தாம் துக்கமும் கோபமும். நம் ஆசையின் நிறைவேற்றத்துக்குத் தடையாக இருந்தவர்கள் நம்மைவிடக் கீழ்ப்பட்டவர்களாக இருந்தால் அவர்களிடம் கோபத்தைக் காட்டுகிறோம். அவர்கள் நமக்கு மேலே இருந்து விட்டால் கோபித்துக் கொள்ள முடியாமல் நமக்குள்ளேயே துக்கப்பட்டுக்கொண்டு அழுகிறோம். கோபத்தின் கெட்ட சக்தி காமத்தின் சக்தியைவிடப் பெரியது. இதை நள சரித்திரமான ‘நைஷதம்’ வெகு அழகாகச் சொல்கிறது. கலி அரசன் வருகிறான். அவனது சேனாதிபதிகளாகக் காமனும் குரோதனும் வருகிறார்கள். கட்டியக்காரன் இவர்களுடைய பெருமைகளைப் பாடுகிறான். குரோதனைப் பற்றி அவன் என்ன பாடுகிறான்? ‘காமன் புகாத இடமில்லை என்பார்கள். ஆனால் காமனும் புகாத ஒரு கோட்டை உண்டு. அந்தக் கோட்டைக்குள்ளும் இந்தக் குரோதன் குடி கொண்டிருக்கிறானாக்கும். அது எந்தக் கோட்டைத் தெரியுமா? துர்வாஸருடைய இதயம்தான்’ என்று குரோதனின் புகழைப் பாடுகிறான். காமமே அறியாத துர்வாஸ மகரிஷியும் கோபத்துக்கு ஆளானவர் என்று தாத்பரியம்.

நாம் இந்த மகாபாவியான குரோதனிடம் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலும் நமக்கே தெரியும்; யாரையும் கோபித்துக் கொண்டு சத்தம் போட நமக்கு சிறிதும் யோக்கியதை இல்லை என்றும், யாரை நாம் கோபித்துக் கொள்கிறோமோ அவர்கள் செய்கிற தவறுகளை, அதைவிடப் பெரிய தவறுகளைக்கூட செய்தவர் நாம் என்பதும் நம் அந்தராத்மாவுக்குத் தெரியும். அப்படியே நாம் தவறு செய்யாவிட்டாலும்கூட, அந்த மனிதன் அந்தச் சூழ்நிலையில் செய்த தவற்றை நாமும் கூட அந்தச் சூழ்நிலையில் இருந்தால் செய்திருக்கக்கூடும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

குரோதன் நம்முடைய பெரிய சத்ரு. அவனை அண்டவிடாமல் எப்போதும் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

குற்றமும் குணமும்

மனிதர்களாகப் பிறந்தவர்கள் தர்மப்படி வாழ்வு நடந்த வேண்டுமானால், சகல காரியங்களிலும் விதிப்படி நடக்க வேண்டியிருக்கிறது. இந்த விதிமுறைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது ரொம்பவும் அவசியம். ஆனால் அவற்றை அவர்களாக ஏற்று, சுயேச்சையாகப் பின்பற்றுவதே அழகு. ஒருவரை நிர்பந்தப்படுத்தி விதிகளை அநுசரிக்கச் செய்வதில் பெருமை இல்லை. ‘சம்பிரதாயம்’ என்பது தானாக வழிவழியாக வந்திருக்கிறது. மக்கள் அதைத் தாமாக ஏற்றுப் பின்பற்றி வந்திருக்கிறார்கள். சம்பிரதாயத்தில் வந்துள்ள அத்தனை விதிமுறைகளையும் சாஸ்திரத்தில் சட்டம் போல் எழுதி வைக்கவில்லை. சட்டம் என்று எழுதி விட்டால் அது நிர்பந்தமாகிவிடுகிறது என்பதே காரணம். ‘ஸஹஸ்ரம் வத; ஏகம் மா லிக’ (ஆயிரம் விஷயங்களை வாயால் எடுத்துச் சொல்லு; ஆனால் ஒன்றைக்கூட எழுத்திலே எழுதி வைத்துக் கட்டாயப்படுத்தாதே) என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால் இப்போது ‘இதைச் செய், அதைச் செய்’ என்று எதற்கெடுத்தாலும், எங்கே பார்த்தாலும் நோட்டீஸ் போடுவதும், எழுதி வைப்பதுமாக இருக்கிறது. நான் பூஜை செய்கிற இடத்திலேயே ‘பேசாதே, சட்டை போட்டுக் கொள்ளாதே’ என்றெல்லாம் எழுதி வைக்கிறீர்கள். இனிமேலே இப்படிச் செய்ய வேண்டாம்.

நான் இப்படி விதி மாதிரி உங்களைக் கண்டித்து, நிர்பந்தப்படுத்திச் சொல்லும்போது, நானே இதுவரை சொன்ன நல்ல விதியை மீறுகிறேன்.

‘செய்ய வேண்டாம்’ என்கிற போதே நிர்ப்பந்தமாகச் சட்டமாக்கி விடுகிறேன். அது தப்புதான். ‘இப்படியெல்லாம் எழுதலாமா என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்’ என்று நான் சொல்லியிருந்தால் அதுதான் முறை.

‘ஒருவரிடம் எத்தனை தோஷம் இருந்தாலும் அதைப் பெரிது படுத்தாதே. சிறிது குண விசேஷம் இருந்தாலும் அதையே கொண்டாட வேண்டும்’ என்பது பெரியோர் உபதேசம். நானே உங்கள் தவற்றை இப்போது அம்பலப்படுத்துகிறேன். பிறரது குறைகளை வெளிப்படுத்தக் கூடாது; அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே வெளிப்படுத்த வேண்டும். தேய்ந்துபோன சந்திர கலைக்கும்கூடக் குளுமையும் பிரகாசமும் இருப்பதால் அதைப் பரமசிவன் தம் தலையில் தரித்து உலகமெல்லாம் பார்த்துப் புகழும்படி செய்கிறார். அதே ஈசுவரன் மகா கொடிய ஆலகால விஷத்தை யார் கண்ணிலும் தெரியாமல் தம் கண்டத்தில் ஒளித்து வைத்திருக்கிறார். இவ்வாறு தண்டி என்ற கவி கூறுகிறார்.

ஆனால் தோஷம் பார்க்கிறதும், அதைப் பெரிதுபடுத்திப் பேசுவதும் எழுதுவதுமே பொதுவில் தற்காலத்தில் மிக அதிகமாகியிருக்கிறது. அதிலும் நிறையப் படித்தவர்கள் நிறையக் குற்றம் காண்பார்கள். “குற்றம் கண்டுபிடிப்பதுதான் அறிவாளியின் காரியம். ‘வித்வான்’ என்றாலே ‘தோஷக்ஞன்’ என்று லட்சணம் சொல்லியிருக்கிறது” என்று இவர்கள் வாதம் செய்யலாம். ‘தோஷக்ஞன்’ என்றால் குற்றம் அறிந்தவன் என்றே அர்த்தம். குற்றத்தைப் பெரிதுபடுத்திப் பிரசாரம் செய்பவன் என்றல்ல. குற்றம் குறைகளை உணர வேண்டும். உணர்ந்து அவற்றை நாம் தவிர்க்க வேண்டும். குற்றம் உள்ளவர்களுக்கும் இதை இதமாக எடுத்துச் சொல்லலாம். ஆனால் ஓயாமல் தோஷம் பாராட்டிக் கொண்டும் அதைப் பிரசாரம் பண்ணிக் கொண்டும் இருக்கக்கூடாது.

தோஷமுள்ளவரிடம் அதை எடுத்துக் காட்ட வேண்டுமானால் நமக்குப் பூரண யோக்கியதை இருக்கவேண்டும். நம்மிடமே ஏராளமான தோஷங்களை வைத்துக் கொண்டு இன்னொருத்தருக்கு உபதேசம் செய்தால், அது பிரயோஜனப்படாது. சில சமயங்களில் நாம் சொல்வதாலேயே அவர்கள் முன்னைவிட வீம்பாகத் தங்கள் தவற்றை வெளிப்படச் செய்யவும் தொடங்கலாம். ‘நமக்கு யோக்கியதை இருக்கிறது. ஸ்தானம் இருக்கிறது. நம் வார்த்தை எடுபடும்’ என்று நிச்சயமானாலே பிறருக்கு உபதேசிக்கலாம்.

ஒருவரது நல்ல அம்சத்தைக் கொண்டாடுவதால் அவருக்கு மேலும் உற்சாகம் உண்டாகிறது. இந்தக் குணங்களை விருத்தி செய்து கொள்கிறார். ஆனாலும் ஒருவரைப் புகழுவதிலும் நமக்குக் கட்டுப்பாடு இருக்க வேண்டும். ஒரேயடியாக ஸ்தோத்திரம் செய்து, ஒருவரை அகங்காரத்திற்கு ஆளாக்கி விடக்கூடாது. புகழ்ச்சி ஒரு நுட்பமான விஷயம். இதனால்தான் பெரியோர்கள், “ஈசுவரனையும் குருவையும் மட்டுமே நேரில் துதிக்கலாம்; பந்து மித்திரர்களை நேரில் புகழாமல் மற்றவர்களிடமே போற்றிப் பேச வேண்டும்; (சவாரி முடிந்த பின் குதிரையைத் தட்டிக் கொடுப்பது போல்) வேலையை முடிந்த பின்னரே ஊழியரைப் பாராட்டலாம்; பிள்ளையை ஒரு போதும் புகழக்கூடாது” என்றார்கள்.

ப்ரத்யக்ஷே குரவ: ஸ்துத்யா:
பரோக்ஷே மித்ர பாந்தவா: |

கார்யாந்தே தாஸ ப்ருத்யாச்ச
ந ஸ்வபுத்ரா: கதாசன ||

இப்போது, நான் உங்கள் மேல் குற்றப் பத்திரிகை படித்ததற்கும் சமாதானம் சொன்ன மாதிரி ஆகிவிட்டது. தன் சொந்தக் குழந்தைகளை ஒரு போதும் ஸ்தோத்திரம் பண்ணக்கூடாது. அவர்களை இடித்தும் காட்டலாம் என்று சாஸ்திரமே சொன்னதால், நான் உங்களைத் தோஷம் சொன்னதிலும் தோஷமில்லைதான்.

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள்

சித்த சுத்திக்குப் பயன்படுகிற சின்னச் சின்ன விஷயங்கள் பல உண்டு. இந்தச் சின்னச் சின்ன தர்மங்களை நம்முடைய பெரியவர்கள் தலைமுறை தத்துவமாக அநுசரித்து வந்தார்கள். அவர்கள் வாழ்க்கையில் திருப்தியும் சந்தோஷமும் நிறைந்திருந்தன. அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்று பார்த்து, அதை நாம் பின்பற்றினாலே போதும். புதிதாக ஒரு கொள்கையும் வேண்டாம். நாமும், சந்தோஷமாக, திருப்தியாக இருக்கலாம்.

பெரிய அத்யாத்ம விஷயங்களில் மட்டுமில்லாமல், ஒரு சமுதாயத்தில், ஒரு குடும்பத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறைகளில்கூட நமக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் அற்புதமாக வழிகாட்டியிருக்கிறார்கள். உதாரணமாக உறவு, சிநேகிதம் எல்லாம் அந்த நாளில் வெகு உயர்ந்த முறையில் காப்பாற்றப்பட்டன. ஒரு கலியாணம், அல்லது அபரகாரியம் (இறுதிச் சடங்கு) என்றால் பலர் ஒன்று சேர்ந்து செலவு செய்து நடத்திக் கொடுப்பது என்று வைத்துக் கொண்டிருந்தார்களே, அது எவ்வளவு உயர்ந்த பண்பு?

இந்தக் காலத்தில் நடப்பதுபோல் ‘டெமான்ஸ்ட்ரேஷனும்’, வெளிவேஷமும் அப்போது இல்லை. ஆனால் அந்த நாளில்தான் ஏழைகளுக்கு உண்மையாக உதவிசெய்கிற மனப்பான்மை சுபாவமாகக் காரியத்தில் அநுசரிக்கப்பட்டது. ஒரு கலியாணத்துக்குப் போகிறவர்கள் தங்களால் முடிந்ததை, ஐந்தோ, பத்தோ உதவி செய்வது என்பதால் கலியாணம் செய்பவர்களுக்கு எத்தனையோ பாரம் குறைந்தது.

ஒரு கூட்டத்திலே பலர் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்தாலும் போதும். கொடுக்கிறவர்களுக்குப் பெரிய சிரமம் ஏதும் இல்லை. ஆனால் வாங்குகிறவனுக்கு மொத்ததில் கணிசமாகக் கிடைக்கும். இப்படித்தான் ஓர் ஏழைக்குக் கஷ்டம், அவன் ஒரு கலியாணம் செய்யவேண்டும் அல்லது அபரகாரியம் செய்ய வேண்டும் என்றால் மற்றவர்கள் எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் உதவி செய்து அந்தக் காரியத்தை நடத்திக் கொடுத்து வந்தார்கள். முன்னாட்களில் பந்துகளுக்குள் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் அதிகம் இல்லை. பணக்காரனாக இருப்பவன் ஏழையான பந்துவுக்கே அதிக உதவி செய்வான். இதெல்லாம் தர்மத்தைச் சேர்ந்தது. சிரமத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்வது, உதவியைப் பெறுகிறவனைவிட உதவி செய்கிறவனின் சித்த சுத்திக்கே அதிகம் உதவும்.

ஆனால் இன்று எல்லாம் மாறிவிட்டது. பழைய கால பந்துத்துவம் பணக்காரர்களுக்கு இல்லை. ஏழையான உறவினர்களுக்கு உதவுகிற மனப்பான்மை குறைந்து விட்டது. பழைய காலத்தில் நடந்தது உண்மையான அன்னதானம். இப்போது மனிதர்கள் தங்களைப் போன்ற பணக்காரர்களுக்காகவே பார்ட்டி – ஃபீஸ்ட் வைக்கிறார்கள். தேசத்தில் ஏராளமாக இப்படிப் பணமும் பண்டமும் செலவாகின்றன. இதில் தர்மத்துக்கோ, சித்த சுத்திக்கோ எதுவும் இல்லை. இவன் காரியார்த்தமாகத்தான் ஒருத்தனைக் கூப்பிட்டு பார்ட்டியும் ஃபீஸ்டும் வைக்கிறான். பார்ட்டி கொடுத்து, அதில் சாப்பிட்டவர்களை ஏமாற்றி விட்டதாக நினைக்கிறான். பார்ட்டி சாப்பிட்டவனுக்குத் தெரியும். ‘இவன் பிரியத்தின் பேரில் தனக்கு சாப்பாடுபோடவில்லை. காரியத்துக்காகத்தான் சாப்பாடு போட்டான்’ என்று. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சந்தோஷமாகச் சாப்பிட்டுவிட்டுப் போகிறான். ஆகையால், இவன் அவனை ஏமாற்றுகிறான் என்றால் அவனோ, இவன் போட்டதைச் சாப்பிட்டு விட்டு இவனையே ஏமாற்றிப் போகிறான். ஆக ஃபீஸ்டும் டோஸ்டும் ஏமாற்று வித்தையாகவே ஆகின்றனவேயன்றி சித்த சுத்திக்கு பயன்படவில்லை.

ஏழைக்கு அன்னதானமோ பொருள் உதவியோ செய்யும் போது இரண்டு பக்கத்திலும் உண்மையான சந்தோஷமும் பிரியமுமே நிரம்பியிருந்தன. இப்போது பார்ட்டி நடத்தும்போது அங்கே உண்மையான பிரியம் இல்லாததோடு, துவேஷம் வேறு உண்டாகிறது. வசதியிருப்பவர்கள் பார்ட்டி நடத்துவதைப் பார்த்து, வசதியில்லாதவர்களுக்கு வெறுப்பும் துவேஷமும் உண்டாகின்றன. உறவு முறைகளில் ஏழை பணக்காரர் என்று வித்தியாசம் பாராட்டக்கூடாது என்பதற்காக இவ்வளவு சொன்னேன்.

‘வசதியுள்ளவர்கள்தான் பண உதவி செய்து புண்ணியம் சம்பாதிக்க முடியும்; நாம் என்ன செய்யலாம்?’ என்று மற்றவர்கள் எண்ணக்கூடாது. சரீரத்தால் மற்றவர்களுக்குக் கைங்கரியம் செய்வது பெரிய புண்ணியம். அது சித்த சுத்திக்கு ரொம்ப ரொம்ப உதவும்; வசதியே இல்லாதவர்களும் இவ்விதத்தில் பிறருக்கு சரீர சகாயம் செய்ய முடியும்.

ஒவ்வொருத்தரும் — பிறருக்குக்கூடத் தெரிய வேண்டாம் — ஏதோ ஓர் ஒற்றையடிப் பாதைக்குப் போய் அங்கே உள்ள முள்ளை, கண்ணாடியை அப்புறப்படுத்தி வந்தால் போதும். அது சித்த சுத்திக்கு பெரிய உதவி. இது மாதிரி சின்ன தர்மங்களை எவரும் செய்யலாம். பணக்காரர், ஏழை என்ற வித்தியாசமில்லாமல் ஒரு பேட்டையில் உள்ள அனைவரும் சேர்ந்து குளம் வெட்டலாம்.

‘ஈசுவர அநுக்கிரகம் வேண்டும், வேண்டும்’ என்றால் அது எப்படி வரும்? பரோபகாரமான, ஜீவகாருண்யமுள்ள நல்ல காரியங்களைச் செய்து செய்து மனசு பக்குவப்பட்டால்தான், சித்த சுத்தி உண்டாகி, அந்த சுத்தமான சித்தத்தில் ஈசுவரனின் உருவத்தைப் பார்க்க முடியும். கலக்கின ஜலத்தில் பிம்பம் தெரியாததுபோல், நாம் மனசைக் கலக்கிக் கொண்டு ஈஸ்வரஸ்வரூபம் தெரியாதபடி செய்துகொண்டிருக்கிறோம். பகவத் பக்தியோடு பரோபகாரமும் செய்து, மனசு தெளிவாகும்போது ஈஸ்வர ஸ்வரூபத்தை நாம் கிரகித்துக் கொண்டு, அவனுடைய அநுக்கிரஹத்தைப் பெறமுடியும்.

எல்லா உயிர்களின் திருப்திக்காக

தேவதைகளை உத்தேசித்த யாகங்கள், பிதிருக்களை உத்தேசித்த தர்ப்பணம், சிராத்தம் இவற்றை விடாமல் செய்ய வேண்டும். இவற்றோடு தெய்வத்தை உத்தேசித்த பூஜை, அதிதிகளை உத்தேசித்து அன்னமிடுதல், சகல ஜீவராசிகளையும் உத்தேசித்து வைச்வதேவம் இவற்றையும் நம் முன்னோர்கள் செய்து வந்தனர். நீங்கள் இவற்றைச் செய்கிறீர்களோ இல்லையோ காதினாலாவது இவற்றைப் பற்றிக் கேட்டால் நல்லது. எத்தனையோ படித்திருக்கிறீர்கள்; படிக்கிறீர்கள். எந்தெந்த தேசத்து சரித்திரங்களையோ தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். நம் தேசத்தில் யுகாந்தரமாக இருந்து வந்த தர்மங்களையும், அவற்றின் பெயர்களையுமாவது, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே இதைச் சொல்கிறேன். ‘வைச்வதேவம்’ என்பது இவற்றில் ஒன்று. அது என்ன என்று சொல்கிறேன்.

நமக்கு இந்த உடம்பு இருப்பதால் எத்தனை ஜீவராசிகளுக்கு எத்தனை உபத்திரவம் விளைவிக்கிறோம்? நம் வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதாக பெருமையுடன் எண்ணுகிறோம். ஆனால் யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு வீடும் ஒரு கசாப்புக் கடையாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது. ‘ஒரு கசாப்புக் கடை அல்ல. ஐந்து கசாப்புக் கடைகள்’ என்கிறது தர்ம சாஸ்திரம்.

அந்த ஐந்து என்ன?

பஞ்சஸூனா க்ருஹஸ்தஸ்ய வர்தந்தே (அஹரஹ: ஸதா-
கண்டினீ பேஷணீ சுல்லீ ஜலகும்ப உபஸ்கர: )

அரிவாள்மனை (கண்டினீ) ஒரு கசாப்புக் கடை. அதில்தானே காய்கறிகளை நறுக்குகிறோம்? காய்கறிகளும் உயிருள்ளனவைதாம். அவற்றை வதைக்குமிடம் ஒரு கசாப்புக் கடை. இரண்டாவது அம்மி, எந்திரம், உரல், நெல் மெஷின் – இத்யாதி (பேஷணீ). இவற்றில்தான் கருணையே இல்லாமல் தானியங்களை அரைக்கிறோம்.

இங்கே மாமிச போஜனக்காரர்கள் எழுப்புகிற ஒரு ஆட்சேபணைக்குப் பதில் சொல்ல வேண்டும். “நாங்கள் சாப்பிடுகிற ஆடு, மாடு, கோழிகள் மாதிரி நீங்கள் சாப்பிடுகிற காய்கறி, தான்யாதிகளுக்கும் உயிர் இருக்கத்தானே செய்கிறது” என்று இவர்கள் சைவ போஜனக்காரர்களைக் கேட்கிறார்கள். வாஸ்தவம். ஆனால் இந்த இரு உணவு முறைகளிடையே அடியோடு வித்தியாசமில்லாவிட்டாலும் (difference of kind) ஹிம்ஸை அம்சத்தில் வித்தியாசம் (difference in degree) இருக்கத்தான் செய்கிறது. தாவரங்களுக்கு உயிரும் உணர்ச்சியும் இருப்பது வாஸ்தவம்தான் என்றாலும், மனுஷ்யர்களுக்கும் மிருக பட்சிகளுக்கும் உள்ள அளவுக்கு (degree) அவற்றுக்கு “வலி” (pain) என்ற உணர்ச்சி கிடையாது. இதை ஸயன்ஸ்படி அளவு எடுத்துக் கண்டு பிடித்திருக்கிறார்கள். அதுவும் தவிர, அநேகமாக, கீரை மாதிரி சிலவற்றைத்தான் வேரோடு எடுத்துச் சாப்பிடுகிறோமே தவிர, மற்றச் செடிகளின் உயிரை வதைக்காமல்தான் அதிலிருந்து காய்கறிகளை மட்டும் பறித்துக் கொள்கிறோம். இப்படிப் பறிப்பது நமக்கு தலைமயிரை அல்லது நகத்தை கத்தரிக்கிற மாதிரி. அந்தச் செடிகளுக்கு ரொம்பக் குறைச்சலாகத்தான் வலியுண்டாகும். இற்றுப் போயிருக்கிற பழத்தை மட்டும் புசிப்பதாலோ, இந்த அளவுக்குக்கூட தாவர வர்க்கத்துக்கு துன்பம் இல்லை. பயிர்கள் நன்றாக முற்றிச் சாய்ந்த பிற்பாடுதான் அவற்றை அடித்துத் தான்யங்களை எடுத்துக் கொள்கிறோம். நாம் அறுவடை செய்யாவிட்டால்கூட, அந்தப் பயிர்களே கொஞ்ச நாளில் தாங்களே தலை சாய்த்துவிடப் போகிறவைதான்.

தாவர உணவு மாமிஸ போஜனத்தைவிட உயர்ந்தது என்று இன்னோர் விதத்திலும் மாம்ஸ போஜனக்கார்களுக்குப் புரியவைக்கலாம். இப்போது சில தினுஸான மாம்ஸாதிகளைத்தான் இவர்கள் சாப்பிடுகிறார்கள். மாட்டு மாம்ஸம் சாப்பிடலாமே தவிர, குதிரை மாம்ஸம் சாப்பிட்டால் நிஷித்தம் (இழுக்கு) என்கிறார்கள். உலக யுத்தத்தின்போது ஒரு சந்தர்ப்பத்தில் சேனா வீரர்களுக்கு குதிரை மாமிஸம் தரலாமா என்ற கேள்வி வந்தபோது, அதை நான்வெஜிடேரியன்காரர்களே ரொம்பக் கேவலம் என்று எதிர்த்தார்கள். இதே மாதிரி இவர்கள் மிருக, பட்சிகள், மத்ஸ்யம் முதலானதுகளை சாப்பிடுவது நாகரிகம்தான் என்று சொல்கிறபோதே ஆப்பிரிக்காவில் ஏதோ காட்டு ஜனங்கள் நர மாமிஸம் சாப்பிடுகிறார்கள் என்றால், இவர்கள் அதை அநாகரிகம், காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லி நரமாம்ஸ பக்ஷிணிகள் (cannibals) என்று திட்டுகிறார்கள். ‘நாங்கள் சாப்பிடும் வஸ்துக்களைப் போல நீங்கள் சாப்பிடும் தான்யங்களுக்கு உயிர் இருக்கத்தானே செய்கிறது?’ என்று இவர்கள் நம்மிடம் (சைவ போஜனக்காரர்களிடம்) கேட்கிறபோது, நாம் பதிலுக்கு, “ஆமாம்! ஆனால் அதே மாதிரி ஜீவஹிம்ஸை என்று வருகிறபோது எல்லா உயிர்களும் ஒன்றுதானே; நீங்கள் ஏன் மநுஷ்யர்களைப் பிடித்துத் தின்னாமல், மனித வர்கத்துக்கும் மிருக வர்கத்துக்கும் வித்தியாசம் பாராட்டுகிறீர்கள்? அதே மாதிரி தான்; நாங்கள் மிருக வர்கத்துக்கும் தாவரங்களுக்கும் வித்தியாசம் பாராட்டுகிறோம். மாம்ஸாதிகளைச் சாப்பிடாமல், சாக போஜனமே பண்ணுவது ஸத்வ குண அபிவிருத்திக்கும் அநுகூலமாக இருக்கிறது” என்று சொல்ல வேண்டும். தவிர்க்க முடியாமல் நாம் உயிர் வாழ்வதற்காக இப்படி கண்டிணீ பேஷணீ என்ற கசாப்பு யந்திரங்களை வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மூன்றாவது கசாப்புக்கடை அடுப்பு (சுல்லி). நெருப்பிலே பல பூச்சிகள் விழுந்து சாகின்றன. ஓர் இடத்தில் நெருப்பைப் போடுகிறோம். அங்கே ஓர் எறும்பு ஊர்ந்து கொண்டிருக்கும். நெருப்புப் பட்டவுடன் அது பொசுங்கிப் போகிறது. இப்படியே குடத்தை ஓரிடத்தில் வைக்கிறோம். கீழே எறும்போ வேறு ஏதாவது பூச்சியோ இருந்தால் நசுங்கிப் போகிறது. குடம் முதலிய பாத்திரங்களில் ஈரம் இருப்பதால் வெயில் காலத்தில் எறும்பு முதலிய அதை மொய்த்துக் கொள்கின்றன. அவற்றை நாம் கொல்ல நேருகிறது. இதனால் ‘ஜலகும்ப’த்தையும் ஒரு கசாப்புக் கடையாக வைத்தார்கள். கடைசியில் ‘உபஸ்கரம்’ என்பது ஒரு கசாப்புக் கடை. ‘உபஸ்கரம்’ என்றால் துடைப்பக்கட்டை. பெருக்கும்போது எத்தனை ஜீவராசிகளை வதைக்கிறோம்? இப்படி ஐந்து கசாப்பு மெஷின்கள் நம் வீடுகளில் இருக்கின்றன.

நமக்குத் தீங்கு செய்கிற பிராணிகளுக்குக்கூட நாம் பதிலுக்கு தீங்கு செய்யக்கூடாது. இங்கேயோ தீங்கு செய்பவற்றோடு ஒரு தீங்கும் இழைக்காத பிராணிகளையும் நாம் இத்தனை ஹிம்ஸைக்கு ஆளாக்க நேருகிறது. யோசித்துப் பார்த்தால் இத்தனை ஜீவராசிகளுக்கு இத்தனை உபத்திரவத்தை உண்டாக்கிக் கொண்டு வயிற்றை வளர்க்கிறோமே என்று துக்கம் உண்டாகிறது. ஆனால் இதெல்லாம் நம்மால் தவிர்க்க முடியாத விஷயங்கள். நாம் வேண்டுமென்று இவற்றைக் கொல்லவில்லை. எனவே நம்மை மீறிச் செய்கிற இந்தத் தோஷங்களுக்குப் பிராயச்சித்தம் உண்டு. அப்படிச் செய்கிற பிராயச்சித்தமே ‘வைசுவதேவம்’ என்பது.

‘நம்மால் ஹிம்சைக்கு ஆளான ஜீவராசிகளுக்கெல்லாம் நல்ல கதி கிடைக்க வேண்டும்; நம்மை பகவான் மன்னிக்க வேண்டும்’ என்ற எண்ணத்துடன் எல்லா உயிர்களின் திருப்திக்காகவும் பலி கொடுக்கப்படுகிறது. இந்த விசுவத்தில் எவ்வளவு பிராணிகள் உண்டோ, நாய், காக்கை, சமூகப்பிரஷ்டன் உள்பட எல்லார்க்கும் எல்லாவற்றுக்கும் வைசுவதேவத்தில் பலி உண்டு. வைசுவதேவம் செய்தால் நாம் செய்கிற பல தோஷங்கள் விலகும். பல உயிர்களுக்கு ஆகாரம் கிடைக்கும்.

பூதயக்ஞமான இந்த வைசுவதேவம், பூஜை, ஹோமம் முதலிய தேவயக்ஞம், மனுஷ்ய யக்ஞம் (விருந்தோம்பல்) பிதுரு யக்ஞம் (தர்ப்பணம்) முதலியவற்றோடு, தான் கற்றுப் பயன் பெற்ற வேதத்தை நிச்சயமாக இன்னொருத்தருக்குக் கற்பிக்கிறதாகிய பிரம்ம யக்ஞம் என்கிற ஞான வேள்வியும் செய்யவேண்டும் என்று விதி. இந்தப் பஞ்ச மகாயக்ஞங்கள் அனைத்தையும் பிரம்ம புத்திரர்களான ரிஷிகள் முதற்கொண்டு யாவரும் யுகம் யுகமாகப் பண்ணிக்கொண்டு வந்தார்கள். ஆதி காலத்திலிருந்து நம் தாத்தா காலம் வரையில் சாஸ்திரப் பிரகாரம் எல்லோரும் இவற்றை ஒழுங்காகச் செய்து வந்தார்கள். பிரளய காலம் வரையில் இவை அவிச் சின்னமாக (முறிவுபடாமல்) நடந்து வர வேண்டும். ஆனால் நம் நாளில் இந்த இழையைக் கத்தரித்து விட்ட பாக்கியத்தை அடைந்திருக்கிறோம். அநாதி காலமாக வந்துள்ள அநுஷ்டானங்களை கபளீகரம் செய்துவிட்டு நம்மோடு மட்டுமல்லாமல், நம்முடைய பின் சந்ததியாருக்கும் இவற்றைப் பின்பற்றுவதால் உண்டாகும் நன்மை விளையாமல் தடுத்து விட்டிருக்கிறோம்!

நான் எத்தனையோ அநுஷ்டானங்களைச் சொல்கிறேனே, அவற்றில் எவ்வளவு நாம் பண்ணுகிறோம். எவ்வளவு பண்ணவில்லை; எவ்வளவு பண்ண முடியும் என்று யோசித்துப் பாருங்கள். எல்லாவற்றையும் பண்ண முடியாவிட்டாலும் ஜீவனோபாயத்தை அநுசரித்து முடிந்தவைகளையாவது தவறாமல் பண்ண வேண்டும்! மற்றவற்றைப் பண்ணவில்லையே என்று பச்சாதாபமாவது படவேண்டும்.

சேவையே மேலான பாக்கியம்

மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே.

‘சேவை’ என்று தெரியாமலே அவரவரும் தமது குடும்பத்துக்காகச் சேவை செய்கிறோம். அதோடு நமக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, சர்வ தேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவை செய்யவேண்டும் என்கிறேன். நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்தியோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை – இத்யாதி இருக்கின்றன. நாம் சொந்தக் கஷ்டத்துக்கு நடுவில், சமூக சேவை வேறா என்று எண்ணக்கூடாது. உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும். அதோடுகூட ‘அசலார் குழந்தைக்குப் பாலூட்டினால், தன் குழந்தை தானே வளரும்’ என்றபடி, நம்முடைய பரோபகாரத்தின் பலனாக பகவான் நிச்சயமாக நம்மை சொந்தக் கஷ்டத்திலிருந்து கைதூக்கி விடுவான். ஆனால் இப்படி ஒரு லாப நஷ்ட வியாபாரமாக நினைக்காமல், பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மாலானதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்து விட்டால் போதும். அதனால் பிறத்தியான் பெறுகிற பலன் ஒரு பக்கம் இருக்கட்டும்! நமக்கே ஒரு சித்த சுத்தியும், ஆத்ம திருப்தியும், சந்தோஷமும் ஏற்பட்டு அந்த வழியில் மேலும் மேலும் செல்வோம்.

மனிதர்களுக்கு மட்டுமின்றி, மாடு போன்ற ஜீவன்களுக்கும் சேவை செய்ய வேண்டும். பழைய நாளில் கால்நடைகளுக்காக என்றே குளம் வெட்டுவது, அவை தினவு தீர்த்துக் கொள்வதற்காக உராய்ந்து கொள்வதற்கு அங்கங்கே கல் போடுவது என்று வைத்துக் கொண்டிருந்தார்கள். தினமும் ஒவ்வொருவரும் ஒரு மாட்டுக்கேனும் ஒரு பிடி புல்லோ, அகத்திக் கீரையோ கொடுக்க வேண்டும். மாட்டுக் ஒரு பிடி புல் கொடுப்பதை “கோ க்ராஸம்” என்று பெரிய தர்மமாக சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. ‘க்ராஸம்’ என்றால் ஒரு வாயளவு (Mouthful); இங்கிலீஷில் புல்லை grass என்பதுகூட இதிலிருந்தே வந்திருக்கலாம்.

யாகம், யக்ஞம், தர்ப்பணம், திவஸம் முதலிய இந்த உலகத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி, மற்ற உலகங்களிலிருப்பவர்களுக்கும் நம் சேவையை விஸ்தரிக்கின்றன என்ற உணர்வோடு அவற்றைச் செய்ய வேண்டும். இவையெல்லாம் மந்திரத்தோடு சேர்த்துச் செய்யப்படும் சேவை.

நம்மைப் போலவே செய்ய விருப்பம் உள்ளவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு எல்லோரும் ஒரே சங்கமாக ஒரே அபிப்ராயமாக இருந்து கொண்டு சேவை செய்வது சிலாக்கியம். அப்படிப் பலர் கூடிச் செய்யும்போது நிறையப் பணி செய்ய முடியும். சத்தியத்தாலும் நியமத்தாலும் இப்படிப்பட்ட சங்கங்கள் உடையாமல் காக்க வேண்டும். பரோபகாரம் செய்பவர்களுக்கு ஊக்கமும், தைரியமும் அத்தியாவசியம். மான அவமானத்தைப் பொருட்படுத்தாத குணம் வேண்டும்.

பொழுதுபோக்கு என்று ருசியாகத் தின்கிற இடத்திலும், கண்களைக் கவர்கிற காட்சிசாலைகளிலும் பொழுதை வீணாக்குவது தவறு. இந்தப் பொழுதை பிறருக்குச் சேவை செய்வதில் செலவழிக்க வேண்டும்.

வாழ்க்கைத் தொல்லைகளிடையே கொஞ்சம் உல்லாசமாகப் பொழுது போக்குவது ஒரு தப்பா என்று கேட்பீர்கள். உங்களுக்குச் சொல்கிறேன். பரோபகாரமாகச் சேவை செய்தால் அதுவே பெரிய உல்லாசம் என்று தெரியும். அதுவே விளையாட்டு, அதுவே இன்பம்.

கிருஷ்ண பரமாத்மா இப்படித்தான் வெளியிலே விளையாடுவதாகத் தெரிந்தாலும், உள்ளே அத்தனையும் பரோபகார சேவைதான் செய்தான். எத்தனை பேருடைய, எத்தனை எத்தனை கஷ்டங்களை விளையாட்டாகவே போக்கடித்தான்? குன்றைத் தூக்கிப் பிடித்தது விளையாட்டு மாதிரி இருக்கும். ஆனால் கோபர்களைக் காப்பதற்கே அவ்வளவு பெரிய மலையை பாலகிருஷ்ணன் தூக்கினான். சின்னக் குழந்தை விஷம் கக்கும் காளிங்கனின் படத்திலே நர்த்தனம் செய்தது வெளியிலே பார்த்தால் விளையாட்டு; உண்மையில் அதுவும் ஜனங்களைக் காத்து அவர்களுக்கு நீர் நிலையை மீட்டுத் தருவதற்காக செய்த சேவைதான். இப்படித்தான் எத்தனையோ விளையாட்டுக்கள் செய்தான். அத்தனையும் சேவை. எவனைப்போல் விளையாடினவன் இல்லையோ அவனைப்போல் சேவை செய்தவனும் இல்லை என்று கிருஷ்ண பரமாத்மாவின் உதாரணத்தில் பார்க்கிறோம். லௌகிக சேவை மட்டுமில்லை. ஞான சேவையும் நிறையச் செய்தான். அர்ஜுனன், உத்தவர் போன்றவர்களுக்கு மகா உபதேசங்கள் செய்தான். சேவை, ஞானம், விளையாட்டு எல்லாம் அவனிடம் ஒன்றாக இருந்தன. துளிக்கூடப் பற்றுதல் இன்றியே இத்தனையும் செய்தான். சிரித்துக்கொண்டே சாந்தமாக இவ்வளவையும் செய்தான். அதனாலேயே அநாயாசமாகச் செய்ய முடிந்தது. நம்மிலும் சேவை செய்கிறவர்களுகெல்லாம் இந்தச் சிரிப்பும் சாந்தமும் எப்போதும் இருக்க வேண்டும் – தைரியம், ஊக்கம் இவற்றோடு.

பகவான் எடுத்த பல அவதாரங்களில் கிருஷ்ணாவதாரத்தில்தான் சேவை அதிகம். ராமாவதாரத்தில் சேவைக்கென்றே ஆஞ்சநேய ஸ்வாமி வந்தார். இவர்கள் இருவரையும் ஸ்மரித்து நாமும் சுத்தமான உள்ளத்துடன், எந்த சுய நலமும் கருதாமல் எவ்வித விளம்பரத்துக்கும் ஆசைப்படாமல் சேவை செய்ய வேண்டும்.

நமக்குத் ‘தீட்டு’ ஏற்பட்டால் அச்சமயத்தில் உலகோடு சேர முடியாமல் ஒதுங்கியிருக்கிறோமல்லவா? அவ்விதமே உலகுக்கு உபயோகமாக சேவை செய்யாத ஒவ்வொரு நாளும் நமக்கு தீட்டுநாள் என்று கருதி, அவரவரும் தம்மாலான சேவையில் ஈடுபடவேண்டும்.

ஜீவராசிகளுக்கு செய்கிற உபகாரத்தால் சகல பிராணிகளுக்கும் மாதா பிதாவாக இருக்கப்பட்ட பரமேசுவரனுக்கே பூஜை பண்ணியதாக ஆகிறது. இதைத்தான் திருமூலர் திருமந்திரத்திலும் சொல்லியிருக்கிறது.

நடமாடக் கோயில் நம்பர்க் கொன் றீயின்
படமாடக் கோயில்பகவற்கீ தாமே.

இதற்கு அர்த்தம், “மக்களுக்குச் செய்கிற உதவி சாட்சாத் ஈசுவர ப்ரீதியாகச் செய்கிற பூஜையே ஆகும்” என்பது.

பரோபகாரம்

பிதிர்கடன், பரமேசுவர பூஜையான வேத யக்ஞம் எல்லா ஜீவராசிகளுக்கும் உணவு படைப்பது ஆகியவற்றை வைதிக மதம் விதிக்கிறது. திருவள்ளுவரும் இதே தர்மத்தைத்தான் விதித்திருக்கிறார்;

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

வள்ளுவர் வேதப் பிரமாணத்தை மதித்தே குறள் எழுதினார் என்பதற்கு மிகவும் ஆதரவாக இருக்கப்பட்ட குறள்களில் இதுவும் ஒன்று. ‘திருவள்ளுவர் வைதிக மதஸ்தரே அல்ல; அவர் ஜைனர் அல்லது பௌத்தர் அல்லது எல்லா மதங்களையும் கடந்தவர். வேதம் கூறும் தர்மங்களுள் ஹிம்ஸையுள்ள யாகத்தைத் திருவள்ளுவர் வெளிப்படையாகவே கண்டிக்கிறார்’ என்று சிலருக்கு அபிப்பிராயம். கீழ்க்கண்ட குறளை மேற்கோள் காட்டுகிறார்கள்;

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று

‘ஹவிஸை’ அக்னியில் ஆஹுதி செய்து ஆயிரம் யாகம் செய்வதைவிட, ஒரு பிராணியையும் வதைத்து உண்ணாமலிருப்பது சிரேஷ்டம்’ என்று இதன் அர்த்தம். இதைப் படித்த பின்னும்கூட என் அபிப்பிராயமோ திருவள்ளுவர் வைதிக அநுஷ்டானங்கள் அனைத்திலும் பூரண நம்பிக்கை கொண்டவர் என்பதே. காவிரியின் பெருமையைச் சொல்ல வந்த ஒருவர். ‘ஆயிரம் கங்கையைவிட ஒரு காவிரி உயர்ந்தது’ என்று சொன்னால், ‘கங்கையும் உயர்ந்தது’ என்றே அர்த்தமாகும். காவிரியைச் சிலாகித்துப் பேச விரும்புகிற ஒருவர், ஆயிரம் சாக்கடையைவிட ஒரு காவிரி உயர்ந்தது என்று சொல்வாரா? அப்படியே திருவள்ளுவர் அஹிம்ஸையைச் சிலாகித்துப் பேசும்போது, ‘ஆயிரம் யாகத்தைவிட அஹிம்ஸை உயர்ந்தது’ என்றால், யாகமும் உயர்ந்தது என்றே அர்த்தமாகும். ரொம்ப உயர்ந்த ஒன்றைச் சொல்லி அதைவிட இது ரொம்ப ரொம்ப உசத்தி என்றுதானே சொல்வது வழக்கம்!

இந்தக் குறள் இல்லற இயலில் சொல்லப்படவில்லை; துறவற இயலிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. துறவிக்கு யாகத்தில் அதிகாரம் இல்லை; அவனுக்கு மட்டுமே வைதிக மதம் பூரண அஹிம்ஸையை விதிக்கிறது. அதையே வள்ளுவரும் வலியுறுத்துகிறார்.

உலகத்துக்கெல்லாம் உபயோகமான ஒரு கிரந்தத்தைத் தந்திருக்கும் திருவள்ளுவர் வைதிகத்தை ஆட்சேபிக்கும் நாஸ்திகர் அல்லர். திருவள்ளுவர் ‘விருந்து’ என்று சொல்கிற ‘விருந்தோம்பல்’ வைதிக மதத்தில் ‘மனுஷ்ய யக்ஞம்’ எனப்படும் விருந்தோம்பல் என்பதே. இன்னும் கொஞ்சம் விரித்தால் அன்னதானம் எனக் கொள்ளலாம்.

ஒவ்வொரு குடும்பத்திலும் சமைப்பதற்காகப் பானையில் அரிசி போடும்போது பகவானை நினைத்துக் கொண்டு, ஏழைகளுக்கு என்று ஒரு பிடி அரிசியை ஒரு கலயத்தில் போட்டுவிட வேண்டும். இப்படிப் பல குடும்பங்களில் தினமும் போட்டு வைப்பதைப் பேட்டைக்குப் பேட்டை சேகரித்து, சமைத்து ஆங்காங்குள்ள ஆலயத்தில் நிவேதனம் செய்து, ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். ஒருபிடி அரிசியோடு ஒரு பைசாவும் தினந்தோறும் போட வேண்டும். சேகரித்த அரிசியைச் சமைப்பதற்காக விறகுக்கு, சாதத்தில் சேர்த்துக் கொள்ள மிளகுப் பொடியோ அல்லது வேறு ஏதாகிலும் வியஞ்சனமோ தயாரிப்பதற்கு, சமையல் பாத்திர வாடகைக்கு – இப்படிப்பட்ட மேல் செலவுகளுக்குத்தான் அந்த ஒரு பைசா. இந்த திட்டத்தை நடத்திக் காட்டுவது பெரிய பரோபகாரம். பசித்து வந்த ஏழைகளுக்கு ஈஸ்வரனின் கோயிலில் இப்படி பிரசாதம் கிடைக்கிறது என்றால் வயிறும் மனசும் குளிரும். இதனாலாவது கோயிலுக்கு வருகிற வழக்கம் ஏற்பட்டு பக்தியும் வளரும். வெறுமே ‘சாப்பாடு’ என்றில்லாமல், ஈசுவரனுக்கு நிவேதனமாக பிரசாதம் என்று இருப்பால் அந்த அன்னம் சித்தசுத்தியும் அளிக்கும்.

அன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம், சமூகசேவை, ஸோஷல் சர்வீஸ் என்று இந்த நாட்களில் ஆர்ப்பாட்டமாகப் பிரகடனம் பண்ணுவதை, முற்காலங்களில் எந்தப் பகட்டுமில்லாமல் சுபாவமாகவே மக்கள் செய்து வந்தனர். இதற்குப் ‘பூர்த்த தர்மம்’ என்று ஒரு பெயர். ஜனங்களுக்காகக் கிணறு, குளம் வெட்டுவது, அன்ன தானம், அவர்களின் ஆத்ம க்ஷேமத்துக்காகக் கோவில் கட்டுவது, அதன் அங்கமாக நந்தவனம் அமைப்பது எல்லாம் ‘பூர்த்த தர்ம’த்தில் சேர்ந்தவை. இதில் கிணறு, குளம் வெட்டுவது முதலில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் பேச்சு வழக்கில்கூட, ‘அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? வெட்டிக் கொண்டு இருக்கிறானா?’ என்கிறோம். ‘வெட்டுவது’ அவ்வளவு பெரிய தர்மம். தாகமெடுத்த பசுக்களும் மற்ற பிராணிகளும் நீர் அருந்துவதற்காகத் கிராமத்துக்கு வெளியே மேய்ச்சல் பூமியில் ஒரு குளம் வெட்டினால் எவ்வளவோ புண்ணியம். ஒரு கிராமத்தில் அல்லது பேட்டையில் இருக்கிற சகலரும் – பணக்காரர், ஏழை என்கிற வித்தியாசமில்லாமல், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்கிற வித்தியாசமில்லாமல் –- ஒன்று சேர்ந்து மண்வெட்டியை கையில் எடுத்துக் கொண்டு இப்படிப்பட்ட சரீரப் பிரயாசையுள்ள பரோபகார சேவையில் ஈடுபட வேண்டும். இதனால் சமூக ஒற்றுமையும் அதிகமாகும். புத்தியை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக கல்வி, மனசு சுத்தமாக தியானம், வாக்கு சுத்தமாக சுலோகம் –- இப்படியெல்லாம் இருக்கின்றன அல்லவோ? சரீரம் சுத்தமாவதற்கு அந்த சரீரத்தால் சேவை செய்ய வேண்டும். உழைக்க உழைக்கச் சித்த சுத்தியும் வரும். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றில்லாமல் எல்லோருடனும் சேர்ந்து மண்ணை வெட்டும்போது அகங்காரத்தையும் வெட்டி எடுத்ததாகும். குளத்தில் தண்ணீர் ஊறுவதைவிட நம் இருதயத்தில் ஊறுகிற அன்பே முக்கியம். வெளிவேஷம், டெமான்ஸ்ட்ரேஷனே வேண்டாம். அவரவரும் பிறருக்குத் தெரியாமல் ஏதாவது ஒற்றையடிப் பாதைக்குப் போய் அங்கேயிருக்கிற கண்ணாடித் துண்டுகளை அப்புறப்படுத்தினால்கூடப் போதும் -– அதுவே பரோபகாரம்; சித்த சுத்தி என்கிற ஆத்ம லாபமும் ஆகும்.

பகவத் ஸ்வரூபமாக எல்லோரையும் நினைத்து, நமக்குக் கர சரணாகதிகள் தந்துள்ள பகவானுக்குப் பிரீதியாக அந்தக் கரசரணங்களைக் கொண்டு பரோபகாரம் செய்வோம்.

பூஜை

‘தென்புலத்தார், தெய்வம்’ என்று குறள் சொல்வதில் இரண்டாவதான தேவ காரியத்துக்கு வருகிறேன்.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஈசுவர பூஜை நடக்க வேண்டும்.

சௌகரியப்பட்டவர்கள் விஸ்தாரமான பூஜைகளை எடுத்துக் கொண்டு செய்யலாம். சௌகரியமில்லாவிடில் சுருக்கமாகச் செய்தாலும் போதும். பத்தே நிமிஷம் போதும். ஆபீசுக்குப் போகிறவர்களும் இப்படிச் சுருக்கமாகவாவது பூஜை என்று ஒன்றைச் செய்ய வேண்டும். எல்லாக் குடும்பத்திலும் ஒரு மணிச் சத்தம் கேட்க வேண்டும்.

ஈசுவரன், அம்பாள், விஷ்ணு, விநாயகர், சூரியன் இந்த ஐந்து பேருக்கும் மூர்த்தி வைத்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குப் பஞ்சாயதன பூஜை என்று பெயர். அங்கங்களோடு விக்கிரகங்களாக இல்லாமல் இந்த ஐந்தையும் இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து வஸ்துக்களில் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது ஒரு சம்பிரதாயம்.

இவற்றில் ஈசுவரனுக்குரிய பாண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது. அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்வர்ணமுகி சிலா என்ற கல் ஆந்திராவில் ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது. அது தங்க ரேக் ஓடிய கல். விஷ்ணுவின் வடிவமான ஸாலக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் அகப்படுகிறது. சூரியனுக்குரிய ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது. விநாயகருக்கு உருவான சோணபத்ரக் கல், கங்கையிலே கலக்கிற சோணா (ஸோன் என்பார்கள்) நதியில் அகப்படுகிறது. ஆக, இந்த ஐந்தையும் ஓரிடத்தில் வைத்தால் இந்தத் தேசம் முழுவதையுமே ஒன்று சேர்த்து வைத்தது போல் ஆகும்.

இந்த ஐந்தில் ஒன்றுக்காவது கண், மூக்கு, காது இல்லை. எனவே, இடுக்குகளில் அழுக்கேறுவது கிடையாது. அபிஷேகம் செய்து துடைக்க நாழியே ஆகாது. எல்லாம் சின்னச் சின்ன கற்கள்.எல்லாமாகச் சேர்ந்தாலும் கொஞ்சம் இடத்தைத்தான் அடைத்துக் கொள்ளும். பெரிய பூஜா மண்டபம் கூடத் தேவையில்லை. ஒரு சின்ன சம்புடத்தில் போட்டு வைத்து விடலாம். ஆவாஹனம் பண்ணி, நாலு உத்தரணி தீர்த்தத்தில் அபிஷேகம் பண்ணி, சந்தனம், குங்குமம் அக்ஷதை வைத்து, அர்ச்சனை செய்து நைவேத்தியம் காட்டலாம்.

வெளியூருக்குப் போகும்போதுகூடப் பத்து நிமிஷம் இப்படிப் பூஜை செய்வதில் சிரமமில்லை. வெளியூரில் அர்ச்சனைக்குப் பூ கிடைக்குமா என்று கவலைப்பட வேண்டாம். வில்வத்தையும் துளசியையும் உலர்த்தி வைத்துக் கையில் எடுத்துப் போனால் ஈசுவரனையும் விஷ்ணுவையும் அதனாலேயே அர்ச்சிக்கலாம்; மற்றவர்களுக்கு அக்ஷதையால் அர்ச்சனை செய்யலாம். நைவேத்தியத்துக்கு சுத்தமான அன்னம் வெளியூர்களில் கிடைக்குமா என அலட்டிக்கொள்ள வேண்டாம். காய்ந்த திராக்ஷைப் பழத்தைக் கையோடு வைத்திருந்து நிவேதித்து விடலாம்.

ஐந்து மூர்த்திகள், துளஸி–வில்வ பத்திரங்கள், திராக்ஷை, அக்ஷதை இந்த எல்லாவற்றையுமே கையடக்கமாக ஒரே சம்புடத்தில் போட்டு வைத்துக் கொண்டு விடலாம்.

இந்த ஐந்து மூர்த்திகளுக்குச் செய்வது ‘பஞ்சாயதன பூஜை’ எனப்படும். பிராசீனமாக நம் தேசத்தில் இருந்து வந்த இந்தப் பத்ததியை சங்கர பகவத்பாதாள் புது ஜீவனோடு பிரகாசிக்கும்படியாகச் செய்தார். ‘ஷண்மத ஸ்தாபனம்’ என்று வருகிறபோது இவற்றோடு சுப்ரம்மணிய உபாஸனையையும் நிலை நாட்டினார். எனவே, மேலே சொன்ன ஐந்தோடு நாமும் ஒரு வேலை வைத்து வேலாயுதனான குமார ஸ்வாமியையும் பூஜிக்கலாம்.

பூஜை என்பதற்காகப் பெரிய சிரமம் எதுவும் தேவையில்லை. மனசு இருந்தால் வெகு சுலபத்தில் எல்லோரும் எங்கேயிருந்தாலும் பூஜை செய்யலாம் என்பதற்காக இவ்வளவு சொன்னேன்.

வீட்டிலே இருந்தால் ‘மகா நைவேத்தியம்’ எனப்படும் அன்னத்தை ஸ்வாமிக்குக் காட்ட வேண்டியது அவசியம்.

நாம் அநுபவிப்பதற்காகப் பிரபஞ்சம் முழுவதையும் ஈசுவரன் நமக்கென விட்டிருக்கிறார். பலவிதமான போக்கிய வஸ்துக்களை வெளியிலே உண்டாக்கி, அவற்றை அநுபவிக்கிற இந்திரியங்களை நம்மிடம் வைத்திருக்கிறார். எனவே, நாம் அநுபவிப்பதையெல்லாம் அவருக்குச் சமர்ப்பித்துவிட்டே உபயோகித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் அவருக்கே என்றா அன்னத்தைக் கொடுத்து விடுகின்றோம்? வெறுமே அவரிடம் காட்டுகிறோம்; பிறகு நாம்தான் புசிக்கிறோம்.

நைவேத்தியம் செய்தால் ஸ்வாமி எங்கே சாப்பிடுகிறார் என்று சிலர் கேலியாகக் கேட்கிறார்கள். நிவேதனம் என்றால் ஸ்வாமியைச் சாப்பிடச்செய்வது என்று அர்த்தமேயில்லை. அவருக்கு சாப்பிட்டு ஒன்றும் ஆக வேண்டாம். நம் நினைவைச் சுத்தமாக்கிக் கொள்ளத்தான் பூஜை முழுவதுமே தவிர, அவருக்கு இதனால் ஆவது எதுவுமில்லை. ‘நிவேதயாமி’ என்றால், ‘அறிவிக்கிறேன்’ என்றுதான் அர்த்தமே தவிர, ‘உண்பிக்கிறேன்’ என்று அர்த்தமல்லை. ‘அப்பனே, இந்த வேளைக்கு உன் கருணையில் நீ இந்த அன்னத்தைக் கொடுத்திருக்கிறாய்’ என்று அவனுக்குத் தெரிவித்துவிட்டு அவனுடைய நினைவோடு உண்ண வேண்டும். அவன் அருள் இல்லாவிட்டால் இந்த அரிசி எப்படி விளையும்? ஸயன்ஸ் நிபுணர் அரிசி வகைகளை ஆராய்ந்து பெரிய பெரிய புஸ்தகங்கள் எழுதலாம்; ஆனால் அவரால் ஒரு மணி அரிசியைச் செய்யமுடியுமா? செயற்கை அரிசி (synthetic rice) என்று ஒன்றைச் செய்ய முடிந்தால்கூட இதற்கு மூலமான கெமிகல்ஸ் ஏற்கனவே பகவத் சிருஷ்டியில் இருந்துதானே வந்தாக வேண்டும்? எனவே மனிதன் செய்ததாகத் தோன்றும் எல்லாமும்கூட முடிவிலே ஈஸ்வரன் சிருஷ்டித்ததுதான். பரமேசுவரனால் கொடுக்கப்பட்டதை அவனுக்குக் காட்டாமலே நாம் அநுபவித்தால் திருடர்களாகின்றோம்.

எங்கும் இருக்கும் அவன், நாம் இருக்கச் சொல்லும் இடத்தில், நாம் கிரகிக்கும்படி நிற்பான். கல், மண், செம்பு முதலிய எந்த பிம்பத்தில் வைத்துக் கூப்பிட்டாலும் வருவான். அப்படிப்பட்ட யோக்கியதையும், கருணையும் அவனுக்கு நிச்சயமாக இருக்கிறது. இல்லை என்றால் அப்படிப்பட்ட ஸ்வாமி நமக்கு வேண்டவே வேண்டாம்.

அவனைப் பூஜை என்று வைத்து ஒவ்வொரு குடும்பத்திலும் கூப்பிட்டு, அவனால் கொடுக்கப்பட்டதை உபயோகிக்கிறோம் என்று அன்றாடம் அறிவிக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால் ஈஸ்வரனுக்கு நிவேதனமாக அர்ப்பிக்கத்தக்கதைத்தவிர வேறெதையுமே நாம் உபயோகிக்கக்கூடாது என்ற பக்குவம் நாளடைவில் உண்டாகும். நல்லவர்களாவோம்!