ஸீதாராமருக்கும் பக்கபலம்!

பலமில்லாதவருக்கு பலம் ஸ்ரீராமசந்த்ரமூர்த்தி தான்: “நிர்பல் கே பல் ராம்”. ஆபத்து வந்து சாய்கிற ஸமயத்தில் யார் வந்து தாங்கிக்கொண்டு பலம் தர முடியும்? ராமன்தான்! “ஆபதாம் அபஹர்த்தாரம்”1 என்கிறோம். “அக்ரத ப்ருஷ்டதச்சைவ பார்ச்வதச்ச மஹாபலௌ”2 — அதாவது, நமக்கு முன்னேயும் பின்னேயும் இரண்டு பக்கங்களிலும் நம்மைச் சூழ்ந்து கொண்டு ஸதாவும் நம்மை ரக்ஷிக்கிற மஹாபலவான் யார்? அந்த ராமன்தான். நமக்குத் துளி ஆபத்து வருகிறதென்றாலும், அம்பை விடுவதற்கு ஸித்தமாகக் கோதண்டத்தின் நாண்கயிற்றைக் காதுவரை இழுத்தபடி நம்மைச் சூழ்ந்திருக்கிறான். அவனை விட்டு விலகாத லக்ஷ்மணனும் அவனோடேயே இருந்து கொண்டிருப்பான் — “ஆகர்ண பூர்ண தந்வாநௌ ரக்ஷேதாம் ராம லக்ஷ்மணௌ”3. ஆனால் இப்படிப்பட்ட புருஷ ச்ரேஷ்டர், வீரராகவன், விஜயராகவன் என்றே பேர் பெற்ற மஹா வீரர் ஆஞ்ஜநேயரைத் தமக்குப் பக்கபலமாகக் கொண்டதால் தான் அவதார கார்யத்தைப் பண்ண முடிந்ததாகக் காட்டியிருக்கிறார்!

மநுஷ வேஷம் ப்ரமாதமாய்ப் போட்டவர் அவர். ஸீதையை ராவணன் கொண்டு போய் எங்கே வைத்திருக்கிறான் என்று தெரியாத மாதிரியே நடித்தார். சொல்லி முடியாத துக்கப்பட்டார். அப்போது அவள் இருக்கிற இடத்தைக் கண்டுபிடித்துச் சொல்லி அவருக்கு உத்ஸாஹமும், தெம்பும், பலமும் தந்தது யார் என்றால் ஆஞ்ஜநேய ஸ்வாமிதான்.

ஸீதையைப் பிரிந்து இவர் பட்ட துக்கத்தைவிட இவரைப் பிரிந்து ஸீதை பட்ட துக்கம் கோடி மடங்கு. ப்ரிய பத்னி பக்கத்தில் இல்லையே, தன்னைப் பிரிந்து அவள் கஷ்டப்படுவாளே என்ற கஷ்டம் மட்டுந்தான் ராமருக்கு. ஆனால் அவளுக்கோ இதோடு ராக்ஷஸ ராஜ்யத்தில் மஹா காமுகனால் சிறை வைக்கப்பட்டிருப்பதான மஹா கஷ்டமும் சேர்ந்திருந்தது. ‘அபலா’ என்றே ஸ்திரீக்குப் பெயர். ஸாக்ஷாத் ஜகன்மாதாவான மஹாலக்ஷ்மி ஸீதையாக வந்து அபலையிலும் அபலையாக அசோகவனத்தில் படாத கஷ்டப்பட்டு, அந்தக் கஷ்டத்துக்கு முடிவு ப்ராணனை விடுவதுதான் என்று சுருக்குப் போட்டுக்கொள்ள இருந்தபோது அவளுக்கு உத்ஸாஹத்தை, தெம்பை, பலத்தைத் தந்தது — ஆஞ்ஜநேயர்தான்.

அவர் செய்த அரும் செயல்கள் ஒன்றில்லை, இரண்டில்லை. ஆனால் இதற்கெல்லாம் சிகரமாக எதைச் சொல்லலாமென்றால் இந்த லோகம் முழுவதற்கும் ஸ்ரீயைக் கொடுத்து, ஸெளபாக்யத்தைக் கொடுத்து அநுக்ரஹிக்கும் தாயார் மனம் குலைந்து மட்கிக் கிடந்தபோது ஆஞ்ஜநேய ஸ்வாமி காய்ந்த பயிருக்கு மழையாகப் போய் அவளுக்கு உயிரும் உத்ஸாஹமும் தந்தாரே அதுதான். “ஜானகீ சோக நாசநம்” என்று இதைத்தான் சிறப்பித்துச் சொல்கிறோம்.

அஞ்ஜாநாநந்தனம் வீரம் ஜானகீ சோக நாசநம்

அஞ்ஜனை என்று யாரோ ஒரு வாநர ஸ்த்ரீக்குப் புத்ரராய் அவதாரம் பண்ணி அவளுக்கு ஆனந்தம் கொடுத்தார். இது பெரிதில்லை. எந்தப் பிள்ளை, அவன் என்ன துஷ்டத்தனம் செய்பவனாயிருந்தாலும், அம்மாவுக்கு மாத்திரம் ஆனந்தம் தருகிறவனாகத்தான் தோன்றுவான். அதனால்தான் பிள்ளையை ‘நந்தனன்’ என்பது. தசரத நந்தனன், தேவகி நந்தனன் மாதிரி அஞ்ஜநா நந்தனன். இது பெரிசில்லை. அந்த அம்மாவுக்கு மாத்திரமில்லாமல் லோகஜனனிக்கு, லோகமுள்ளளவும் வரப்போகிற அத்தனை அம்மாகளுக்கும் ஐடியலாக இருக்கும் ஸீதம்மாவுக்கு மகத்தான சோகம் ஏற்பட்டபோது அதைப் போக்கினாரே, அதற்குத்தான் நாம் அவருக்கு நமஸ்காரம் பண்ணிக் கொண்டேயிருக்கணும்.

ஸீதைக்குள் சோகாக்னி ஜ்வாலை விட்டுக் கொண்டிருந்தது. அவளுடைய ஜீவனை வற்றப் பண்ணிக் கொண்டிருந்தது. ராவணன் ஹநுமார் வாலில் நெருப்பு வைத்ததாகச் சொல்கிறார்களே, உண்மையில் அந்த நெருப்பாலா அவர் லங்கா தஹனம் செய்தார்? இல்லவே இல்லை. அந்த நெருப்புக்குள்ளேயே இன்னொரு நெருப்பை அவர் சேர்த்துக்கொண்டு இதனால்தான் ஊரை எரித்தார். ஸீதையின் சோகாக்னிதான் அது.

ய: சோக வந்ஹிம் ஜநகாத்மஜாயா:
ஆதாய தேநைவ ததாஹ லங்காம்4

“ஜநாகாத்மஜா” என்றால் ஜானகி. “சோக வந்ஹி” என்றால் துயரமாகிற அக்னி. அவள் இருந்தது அசோக வனம்; அவளுக்குள் இருந்தது சோக வந்ஹி! “தேநைவ” – அதனாலேயே, இந்த சோகாக்னியாலேயே; “லங்காம் ததாஹ” – லங்கையை எரித்தார்.

‘ஆஞ்ஜநேயருக்கு வாலில் நெருப்பை வைத்தும் கொஞ்சங்கூட அவரை அது சுடவில்லை. ஸீதையின் அநுக்ரஹத்தால் அப்படியிருந்தது’ என்று மாத்திரம் நமக்குத் தெரியும். ஆனால் ஊரையெல்லாம் எரிக்கிற பெரிய சக்தி அதற்கு வந்ததே அவளுடைய சோகத்தைத் தான் ராவணன் நெருப்பு என்ற ரூபத்தில் வைத்ததால் தான்! ஆஞ்ஜநேயர் வாலில் நெருப்பு வைக்கணும் என்ற எண்ணம் அவனுக்கு ஏன் வந்தது? அவனுக்கு அந்த எண்ணம் வருகிற ஸமயத்தில் ஸீதை அதற்கு மேலும் சோகாக்னியில் வாடினால் ப்ரபஞ்சமே தாங்காது என்ற கட்டம் வந்தது. அது எப்படியாவது வெளியே வந்து செலவாகும்படிச் செய்ய வேண்டும். அதை யாராவது தாங்கிக் கொண்டு வெளியிலே விட்டுவிட வேண்டும். யாரால் தாங்கமுடியும்? ஆஞ்ஜநேய ஸ்வாமியைத் தவிர யாராலும் முடியாது. இதனால்தான் அவரைத் தண்டிக்கணும் என்று ராவணனுக்குத் தோன்றினபோது ஈச்வர ஸங்கல்பத்தால், ‘வாலில் நெருப்பு வைத்தாலென்ன?’ என்று தோன்றிற்று. இப்படி ஆஞ்ஜநேயர் ஜநகாத்மஜாவின் சோக வந்ஹியை வாங்கிக் கொண்டே லங்கையை அதனால் தஹனம் செய்தார். அது ஸாதுக்களை, ஸஜ்ஜனங்களைக் கஷ்டப்படுத்தாமல் துஷ்டர்களை மட்டும் தண்டிக்கும்படிச் செய்தார்.

அந்த அக்னி அவளுடைய சோகமாயிருந்ததால் தான் அவளுடைய பதிக்குப் பரம ப்ரியராக, பக்கபலமாக இருந்தவரைச் சுடாமல் அவருக்கு மாத்திரம் ஜில்லென்று இருந்தது.

ராமருக்கு ஆஞ்ஜநேயர் செய்த மஹா உபகாரம் ஸீதை இருக்குமிடத்தைக் கண்டு பிடித்துச் சொன்னது. ஸீதைக்கு அவர் செய்த மஹா உபகாரம் ராமர் எப்படியும் வந்து அவளை மீட்டுக்கொண்டு போவார் என்று அவள் உயிரைவிட இருந்த ஸமயத்தில் சொன்னது. இவ்வாறு இரண்டு பேரும் பலமே போனாற்போல இருந்தபோது பலம் தந்திருக்கிறார்.

ஆனால் இந்த இரண்டையும் அவர் எதைக்கொண்டு, எதன் பலத்தில் பண்ணினார்?

ராமநாம பலத்தினால்தான் பண்ணினார்!

அவர் ஸமுத்ரத்தைத் தாண்டிப் போனதால்தான் ஸீதையைக் கண்டுபிடிக்க முடிந்தது.

எப்படித் தாண்டினார்?

“ராம ராம” என்று சொல்லிக்கொண்டு அந்த நாமத்தின் சக்தியில்தான் தாண்டினார்.

ஸீதை ப்ராணனை விட இருந்த பொழுது அவளை எப்படிக் காப்பாற்றினார்? “அம்மா தாயே, உயிரை விடாதே!” என்று காலில் விழுந்தால்கூட அவளைத் தடுத்திருக்க முடியாதே! ‘இதுவும் ராக்ஷஸ மாயை; ராவணன் செய்கிற சூது’ என்றுதானே நினைத்திருப்பாள்? மாரீச மான் அநுபவத்துக்கு அப்புறம் அவளுக்கு எல்லாமே ராக்ஷஸ மாயையாய்த்தான் தெரிந்தது. அவளுக்கு அப்படித் தெரிந்தது என்பது ஆஞ்ஜநேயருக்கும் தெரிந்தது. (பரம சுத்த ப்ரம்மசர்யத்தால் ஸ்படிகம் மாதிரியாக ஆன அவருடைய மனஸில் யார் நினைப்பதும் பளிச்சென்று தெரிந்துவிடும்.) ஸீதை ப்ராண ஹானி செய்துகொள்ள இருந்த கட்டத்தில் என்ன செய்தார்? “ராம ராம” என்று நாமாவைத்தான் சொல்ல ஆரம்பித்தார். ராமாயணக் கதையை மெதுவாக ஆரம்பித்தார். “ராம” என்றால், அதுவும் ஆஞ்ஜநேய ஸ்வாமியின் வாயால் சொன்னால், எந்த மாயையும் ஓடி விடாதா? அவளுடைய சோக வந்ஹியை நாமாம்ருதத்தைத் தெளித்துக் கொஞ்சம் சமனம் செய்தார். இப்படி அம்ருதத்தைத் தந்தவருக்கு அக்னியே ஜில்லென்றிருக்க அவள் அநுக்ரஹித்தாள்!

ஆஞ்ஜநேயரால்தான் தாங்கள் காப்பாற்றப் பட்டது போல் ராமரும் சீதையும் சொல்லிக் கொண்டார்கள். ஸீதையின் ப்ராணனை ரக்ஷித்துக் கொடுத்தது, ஸீதைக்கும் மேல் தமக்கு ப்ரியமான லக்ஷ்மணன் மூர்ச்சையாய் விழுந்தபோது ஸஞ்ஜீவி கொண்டுவந்து அவனை எழுப்பினது முதலானவற்றுக்காகத் தாம் ஆஞ்ஜநேயருக்குத் தீர்க்கமுடியாத நன்றிக்கடன் பட்டிருப்பதாகவே ராமர் எப்போதும் சொல்வார். “ஆஞ்ஜநேயருக்கு எப்படி என்ன ப்ரத்யுபகாரம் பண்ணுவோம், பண்ணுவோம்?” என்றே ஸீதைக்கும் ஸதா இருந்தது.

இரண்டு பேருமாகச் சேர்ந்து என்ன பண்ணினார்களென்றால்:

அயோத்திலே கோலாஹலமாகப் பட்டாபிஷேகம் ஆனவுடன், ராமர் பல பேருக்குப் பல பரிசு தரும்போது ஒரு முக்தாஹாரத்தை ஸீதைக்குப் போட்டார். அவள் அதைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு, சுற்றியிருந்த அத்தனை பரிவாரங்களையும் பார்த்துவிட்டு ராமரையும் அர்த்த புஷ்டியோடு பார்த்தாள். இரண்டு பேரும் பரிபூர்ண ஐகமத்யம் [ஒரே சித்தம்] கொண்ட தம்பதி. அதனால் அவர்கள் மனஸுக்கு மாத்திரம் தெரிகிற மாதிரி ஆஞ்ஜநேயரை அந்தப் பெரிய ஸதஸிலே கொண்டாடுவதற்கு ஒரு ப்ளான் போட்டுக் கொண்டார்கள்.

ஸீதை ராமரைப் பார்த்த பார்வையாலேயே முக்தாஹாரத்தை அந்தப் பரிவாரத்திலே யாருக்குக் கொடுக்கலாம் என்பதற்கு அவருடைய அபிப்ராயத்தைக் கேட்டுவிட்டாள். உடனே ராமர், “பராக்ரமம், புத்தி, பணி எல்லாம் எவனுக்குப் பூர்ணமாக இருக்கிறதோ, அவனுக்கே கொடு” என்றார். பாராட்டிதழ் (‘ஸைடேஷன்’) படித்தவுடன் ‘அவார்ட்’ கொடுக்கிற மாதிரி, பேரைச் சொல்லாமலே ராமர் இப்படிச் சொன்னவுடன் ஸீதை மாலையை ஆஞ்ஜநேயருக்குக் கொடுத்துவிட்டாள்!

“ஹநுமானுக்குக் கொடு” என்று ராமர் நேராகச் சொல்லவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால் ‘அவருக்கு மட்டுமென்ன ஸ்பெஷல் அவார்ட்?’ என்று மற்றவர்களுக்குத் தோன்றலாம். ஆனால் இன்னார் என்று பெர்ஸனலாகப் போகாமல், ஆப்ஜெக்டிவ்-ஆகப் பல உசந்த யோக்யதாம்சங்களைச் சொல்லி அவற்றை உடையவனுக்கு அவார்ட் கொடுத்தால் யாரும் கேள்வி கேட்க முடியாது. அதனால்தான் உத்தமமான யோக்யதை எல்லாம் ஹநுமாரொருத்தரிடமே பூர்ணமாக ரொம்பியிருந்ததால் ராமர் இப்படி ஸாமர்த்யமாகச் சொன்னது.

பட்டாபிஷேக கட்டத்திலே இப்படி ஆஞ்ஜநேயருக்கு இரண்டு பேருமாகச் செய்ததற்கு ஈடு எதுவும் இல்லை.

ஒரு பெரிய மலைக்கு மேலே சந்திரிகையில் தாவள்யமாயிருக்கும் ஒரு மேகம் படிந்தால் எப்படியிருக்குமோ அப்படி அந்த முத்து மாலை ஆஞ்ஜநேய ஸ்வாமியின் பெரிய சரீரத்திலே புரண்டது.

முதல் முதலாக அவரை ரிச்யமுக பர்வதத்தில் பார்த்தவுடனேயே ராமசந்திரமூர்த்தி, இவரால்தான் இனி ராமாயணம் நடந்தாக வேண்டும் என்று தீர்மானம் பண்ணி விட்டார். அப்போது ஹநுமாரை ஸஹாயமாகப் பெற்றிருந்தும் ஸுக்ரீவன் பெண்டாட்டியை இழந்து வாலியிடம் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தான். ராமர் இன்னார் என்று வேவு பார்த்து, அவர் நல்லவர், சக்தி உள்ளவர் என்று தெரிந்ததால் அவரைத் துணையாகக் கொண்டு வாலியை ஜயிக்க வேண்டும் என்பதற்குத்தான் ஹநுமாரை அவரிடம் அனுப்பியிருந்தான். இப்படிப்பட்ட நிலையில் ஸந்தித்தபோதிலும் ராமருக்கோ தனக்கே பலமாக இருக்கப் போவது இந்த ஹநுமார்தான் என்று தெரிந்துவிட்டது. அவரே ஈச்வரனாகயிருந்து பூர்வத்தில் பண்ணின ஸங்கல்பம்தானே இப்படியிப்படி இந்த ராமாயண நாடகம் நடக்க வேண்டுமென்று?

அதனால் இவர்களை யார் என்ன என்று ஆஞ்ஜநேயர் விசாரித்த தினுஸிலேயே அவர் இவர் பெருமையை எடை போட்டு, “நவ வ்யாகரண பண்டிதன், சொல்லின் செல்வன்” என்றெல்லாம் லக்ஷ்மணனிடம் ஏகமாகப் புகழ்கிறார். “ஏதோ வாக்குவன்மை படைத்தவன் தான் என்று நினைத்துவிடாதே! இவன் ஸர்வ வல்லமையும் படைத்தவன். இந்த லோகம் ஒரு தேர் என்றால் அதற்கு அச்சாக இருக்கிற ஆணி இவன்தான். இப்போது தெரியாவிட்டாலும் உனக்கே இதன் உண்மை நாள் தெரியும் பார்” என்கிறார்.

“ஆணியிவ்வுலகுக் கெல்லாம்….. பின்னர்க்
காணுதி மெய்ம்மை”5

என்கிறார்.

அது ரிஷி சாபத்தால் ஹநுமார் தம் பலத்தை மறந்திருந்த ஸமயம். அதனால்தான் இவரைத் துணையாகக் கொண்டிருந்தும் ஸுக்ரீவன் ராஜ்யம், தாரம் எல்லாம் இழந்திருந்தது. ‘சீக்கிரமே ஜாம்பவான் இவர் பலத்தை இவருக்கு நினைவுப்படுத்தி ரிஷி சாபம் போகும்படி செய்யப் போகிறார். அப்புறம் ஹநுமார் ஸாகர தரணம், லங்கா தஹனம் முதலான பெரிய காரியங்களைச் செய்யப் போகிறார்’ என்பது ராமருக்குத் தெரியுமாதலால் “பின்னர் காணுதி மெய்ம்மை” — ‘இவனுடைய மஹா ப்ரபாவத்தால் லோகமாகிய தேரையே நடத்திக்கொண்டு போகக் கூடியவன் என்கிற உண்மையை நீயே பின்னால் பார்ப்பாய்’ என்று லக்ஷ்மணனுக்குச் சொல்கிறார்.

ராமாயணமே ஒரு லோகம் — ஸப்த காண்டமுடைய ஸப்த லோகமும்! இந்த ராமாயணத் தேர் ஓடாமல் நின்று போகிற ஸந்தர்பம் — ஸீதை காணாமல் போய், அவள் எங்கே இருக்கிறாள் என்றே ராமருக்குத் தெரியாமல் திரிந்து கொண்டிருக்கிற ஸந்தர்பம். அப்போது ஆஞ்ஜநேயரைப் பார்த்தவுடன் அவரை ராமர் தேருக்கு அச்சாணியாக முடுக்கிக் கொண்டுவிட்டார்! உடனே சர சர வென்று தேர் ஓட ஆரம்பிக்கிறது! பஹுகாலம் ஓய்ந்து கிடந்த ஸுக்ரீவன் வாலியிடம் சண்டைக்குக் கிளம்புவது, ராமர் வாலிவதம் செய்வது, வானரர்கள் சீதையைத் தேடுவது, கண்டு பிடிப்பது, ஸேதுபந்தனம், ராம ராவண யுத்தம், பட்டாபிஷேகம் என்று கிடுகிடுவென்று ஓட ஆரம்பித்துவிடுகிறது! இத்தனையிலும் பெரிய பங்கு ஹநுமாருக்குத்தான்!

அதுவரை, அதாவது ராமாயணத்தில் பேர் பாதி ஆகிறவரை, இவர் யாரென்றே தெரியாது. கிஷ்கிந்தா காண்டத்தில்தான் வருகிறார். உடனே இவர்தான் கதாநாயகருக்கும் மேலே என்பது போல் முக்யமாய் விடுகிறார்! அடுத்ததான ஸுந்தர காண்டம் முழுக்க இவர் பிரதாபமும், இவருடைய லீலையுமே! ராமாயணத்தில் ஸர்வ கார்ய ஸித்தி என்று ஸகலராலும் பாராயணம் செய்யப்படுவது எது என்றால் ராமருடைய பெருமைகள் தெரிகிற பாக்கி ஆறு காண்டமில்லை; ஆஞ்ஜநேய ப்ராபவமே விஷயமாயுள்ள ஸுந்தர காண்டம்தான்! அப்படி இவரைப் பார்த்தவுடனேயே “ராமாயணத் தேரை இனிமேல் நீயே கொண்டுபோ” என்று ராமர் கொடுத்து விட்டார். தம்முடைய நாமாவை அவர் மூலம் வெளியிட்டே ஸீதை உயிரை விடாமல் காப்பாற்றினார். தம்முடைய நாமாவினாலேயே அவர் பரம ஸுலபமாக ஸமுத்ரத்தைத் தாண்டச் செய்தார். தாமே லங்கைக்குப் போகிற போதோ கஷ்டப்பட்டு அணை கட்டிக்கொண்டு அதன்மேல் நடந்துதான் போனார்!

“தாம் செய்வதெல்லாம் ராமர் போட்ட பிச்சையே! ஸீதாதேவியின் அநுக்ரஹ லேசமே!” என்றுதான் ஆஞ்ஜநேயர் நினைத்தார். ‘ஸாகர தரணமும், லங்கா தஹனமும் தன் காரியமென்று லோகம் கொண்டாடுகிறதே! நிஜத்தில் அவருடைய நாமம் — தாரக நாமமல்லவா தரணம் பண்ணுவித்தது? அவளுடைய சோகமே அல்லவா தஹனம் பண்ணிற்று?” என்றே நினைத்தார். தங்கள் கார்யத்துக்கு நம்மையும் ப்ரயோஜனப்படுத்திக் கொண்டார்களே என்று ஸீதாராமர்களிடம் ஒரே நன்றி, தீர்க்க முடியாத நன்றிக்கடன் பட்டிருப்பதாகவே நினைத்தார்.

நமக்கானால், நன்றி வாங்கிக் கொள்வதில் போட்டி! ‘நாம் பல பேருக்கு உபகரித்தோம். யாரும் ஸரியாக நமக்குத் திருப்பவில்லை’ என்று அபிப்ராயம்! ஸீதா-ராமர்களுக்கும் ஆஞ்ஜநேயருக்குமோ பரஸ்பரம் மற்றவரால்தான் தங்களுக்கு பலம், அவருக்குத் தாங்கள் ப்ரத்யுபகாரமே பண்ணி முடியாது என்று அபிப்ராயம்.

இது ராமாயணத்திலே நமக்கு ஒரு பெரிய பாடம்.

மஹாபலம் பொருந்தின ஆஞ்ஜநேயர் அந்த பலத்துக்கெல்லாம் மூலம் ராமசந்திரமூர்த்தியே என்று, தமக்கு எத்தனை பலமோ அதைவிட அதிகம் பணிவுடன், விநயத்துடன் இருந்தார். பலமும் பணிவும் ஸாதாரணமாக நேரெதிராக இருப்பவை. இவரிடமோ இரண்டும் மாக்ஸிமமாக இருந்தன. நமக்கு பலமும் இல்லை; பணிவும் இல்லை. அவரைப் போல நல்ல கார்யங்களை ஸாதிப்பதற்கான பலத்தை நமக்குத் தந்து, ஆனால் அந்த பலத்தினால் அஹங்காரப்படாமல் அது ராமனின் பிரஸாதமே என்று உணர்ந்து அதை ராமார்ப்பணமே செய்யும் புத்தியை நமக்கெல்லாம் அவர் அநுக்ரஹிக்க வேண்டும்.

மங்களம்


1, 2, 3 ‘த்வாதச நாம பஞ்ஜரம்’ உத்தர பாகம்.

4 “உல்லங்க்ய ஸிந்தோ : ஸலிலம்” எனும் ஹநுமார் குறித்த ஸ்லோகம்.

5 கம்ப ராமாயணம், கிட்கிந்தா காண்டம், ‘அநுமப் படல’த்தில் ‘மாணி ஆம் படிவம்’ எனும் பாடல்.

முதலுக்கு முதல்; முடிவுக்கு முடிவு

இந்த ராமேச்வரம் ஸ்ரீ சங்கர மண்டபத்தில்1 மத்யமான ஸ்தம்பத்தின் உச்சியில் நடுநாயகமாக ஸ்ரீ சங்கர பகவத்பாதாள் எழுந்தருளியிருக்கிறார். பின்னால் இருக்கிற நூல் நிலையம் வெறும் ஹாலாக இல்லாமல் ஸரஸ்வதிதேவியைப் பிரதிஷ்டை செய்ததால் ஸரஸ்வதி மஹாலாக, மஹா (ஆ)லயமாக இருக்கிறது.

ஆசார்யாளின் முதுகுக்குப் பின்னால் ஸரஸ்வதி இருக்கலாமா என்றால் இப்படி இருப்பதிலேயே ஒரு ரஸம் இருக்கிறது. பிரம்மாவின் அவதாரமான மண்டன மிச்ரரை ஆசார்யாள் வாதத்தில் ஜயித்தபின், அவருடைய பத்னியும் ஸரஸ்வதி அவதாரமுமான ஸரஸவாணியையும் ஜயித்தார். மண்டனமிச்ரர் உடனே ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு ஆசார்யாளின் பிரதான சிஷ்யர்களில் ஒருவரான ஸுரேச்வராசாரியரானார். ஸரஸவாணியோ வாதத்தில் தோற்றுப்போனவுடன் ஸரஸ்வதி ரூபத்தை அடைந்து, பிரம்ம லோகத்துக்கே கிளம்பிவிட்டாள். ஆனாலும் ஆசார்யாள் பூலோகத்தில் ஒரு நல்ல இடத்தில் அவளை இருக்கும்படியாகப் பண்ணி அவளுடைய ஸாந்நித்யத்தால் ஜனங்களுக்கு வித்யாப் பிரகாசத்தை உண்டாக்க வேண்டுமென்று நினைத்தார். அதனால் ஆகாசத்தில் கிளம்பியவளை வனதுர்க்கா மந்திரத்தில் கட்டி மேலே போக முடியாதபடி பண்ணினார்.

“அம்மா! நான் தேச ஸஞ்சாரம் புறப்படுகிறேன். நீயும் என்னோடு வரவேண்டும். எது உத்தமமான இடம் என்று தோன்றுகிறதோ அங்கே உன்னை சாரதா பீடத்தில் ஸ்தாபனம் பண்ண ஆசைப்படுகிறேன். அங்கேயிருந்து கொண்டு நீ லோகத்துக்கெல்லாம் அநுக்ரஹம் செய்து கொண்டிருக்க வேண்டும்” என்று ஆசார்யாள் ஸரஸ்வதியைப் பிராத்தித்துக் கொண்டார்.

“அப்படியே செய்கிறேன். ஆனால் ஒன்று. நான் உன் பின்னாலேயேதான் வருவேன். நீ என்னை திரும்பிப் பார்க்கக்கூடாது. பார்த்தால் அந்த இடத்திலேயே ஸ்திரமாகக் குடிகொண்டு விடுவேன்” என்று ஸரஸ்வதி இவருக்கு ஸம்மதமாகச் சொல்லும்போதே ஒரு ‘கண்டிஷ’னும் போட்டு விட்டாள். அதற்கு ஆசார்யாளும் ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று.

ஆசார்யாள் புறப்பட்டார். பின்னால் ஸரஸ்வதி தேவியும் தொடர்ந்து சென்றாள். அவளுடைய பாதச் சிலம்பு “ஜல், ஜல்” என்று சப்தமிடுமாதலால் அவள் பின்தொடர்கிறாள் என்று ஆசார்யாளுக்குத் தெரியும். அவர் திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமேயில்லாதிருந்தது.

ஞானக்கண் படைத்த ஆசார்யாளுக்கு எதுவும் தன்னால் தெரியாமல் போகாது. ஆனால் மநுஷ்யர் மாதிரி அவதாரம் செய்தால் இப்படியெல்லாம் கொஞ்சம் செய்வதுண்டு.

இப்படியே ஆசார்யாள் ஸஞ்சாரம் பண்ணிக் கொண்டு வரும்போது துங்கபத்ரைக் கரையில் சிருங்ககிரி (சிருங்கேரி) என்ற இடத்தில் பூர்ணகர்ப்பிணியாக இருந்த ஒரு தவளைக்கு மேலே வெயில் படாமல் ஒரு பாம்பு குடை பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். பாம்புக்குத் தவளை நமக்கு சர்க்கரைப் பொங்கல் மாதிரி; பார்த்த மாத்திரத்தில் பாய்ந்து பிடித்துத் தின்றுவிடும். இங்கேயோ ஒரு பாம்பே தவளைக்கு குடை பிடித்தது! பகையே இல்லாமல் இத்தனை அன்பு நிறைந்திருக்கிற உத்தமமான இடத்திலேயே ஸரஸ்வதியைப் பிரதிஷ்டை பண்ணிவிடலாமா என்று நினைத்தபடி ஆசார்யாள் நடந்து கொண்டிருந்தார்.

அப்போது சட்டென்று “ஜல், ஜல்” சப்தமும் நின்றுவிட்டது. ‘ஸரஸ்வதி ஏன் வரவில்லை? என்ன ஆனாள்?’ என்று மநுஷ்ய ரீதியில் நினைத்து ஆசார்யாள் திரும்பிப் பார்த்தார்.

அந்த இடத்திலேயே ஸரஸ்வதி நிலைகுத்திட்ட மாதிரிப் பிரதிஷ்டையாகி விட்டாள்.

ஓசை கேட்காததற்குக் காரணம் என்னவென்றால், அது துங்கபத்ரையின் மணல் கரை. மணலிலே பாதம் புதைந்த நிலையில் அவள் நடந்து போக வேண்டியிருந்ததால் சிலம்போசை கேட்கவில்லை.

“இதுவும் நல்லதுதான். நாம் நினைத்ததும் ஸரஸ்வதியின் நிபந்தனையும் ஒன்றாக ஆகிவிட்டன” என்று ஆசார்யாள் ஸந்தோஷப்பட்டுக் கொண்டு அங்கே சாரதா பீடத்தை அமைத்தார்.

“உன் முதுகுக்குப் பின்னால் உன்னைத் தொடர்ந்து வருவேன்” என்று ஸரஸ்வதி சொன்னதற்கு பொருத்தமாகவேதான் இங்கே [ராமேச்வர சங்கர மண்டபத்தில்] ஆசார்யாளுக்குப் பின்னால் ஸரஸ்வதியின் சிலை பிரதிஷ்டையாயிருக்கிறது.

ஒரு புஸ்தகம் எழுதினால் அதில் முதலில் குரு வந்தனம், அப்புறம்தான் பிள்ளையார் ஸ்துதிகூட, மூன்றாவதாகவே ஸரஸ்வதி ஸ்துதி என்று க்ரமம் இருப்பதைப் பார்த்தாலும் ஸரஸ்வதிக்கு முன்னால் ஆசார்யாள் இருப்பது பொருத்தமே.

“அது ஸரி, அப்படியானால் எல்லாவற்றுக்கும் கடைசியில் மங்களம் என்று முடிக்கிற ஸமயத்தில் ஸ்தோத்திரம் செய்யப்பட வேண்டிய ஆஞ்ஜநேய ஸ்வாமி இங்கே வாசலிலேயே ஆசார்யாளுக்கும் முந்தி எடுத்த எடுப்பிலே இருக்கிறாரே! இது எப்படி பொருந்தும்?” என்று தோன்றலாம்.2

அந்த ஆஞ்ஜநேய ஸ்வாமி தாமாகவே முதலில் வந்து விட்டவர். புதிதாக இங்குள்ள மற்ற மூர்த்திகளைச் செய்தது போல அவரைச் செய்யவில்லை. இந்த இடத்தில் அவர் ஆதியிலிருந்தே இருக்கிறவர். அவர் இருந்த இடத்திற்குத்தான் இப்போது ஆசார்யாளும் வந்து சேர்ந்திருக்கிறார்.

ஆஞ்சநேயரிடம் ஆசார்யாள் வந்து சேர்ந்ததில் ஒரு பொருத்தம் தெரிகிறது.

ஸ்ரீ ருத்ரத்தை கனம் என்ற கிரமத்தில் சொல்கிறபோது நம் ஆசார்யாளின் நாமமான “சங்கர” என்பது பதின்மூன்று முறை வருகிறது. பதின்மூன்று unlucky [துரதிருஷ்ட] நம்பர் என்பது நம் சாஸ்திரப்படி தப்பு. நல்லதையெல்லாம் செய்கிறவர் என்று பொருள்படுகிற ‘சங்கர’ நாமம் பதின் மூன்று முறை வருவதும் இதற்கு ஒரு சான்று.

ருத்ராம்சம் தான் ஆஞ்சநேயர். அவர் எப்போது பார்த்தாலும் பதின்மூன்று அக்ஷரம் கொண்ட “ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம்” என்ற மந்திரத்தையே ஜபித்துக் கொண்டிருப்பவர். பதின்மூன்று நல்லது என்பதால் ‘தேரா அக்ஷர்’ என்று வடநாட்டில் இதை விசேஷித்துச் சொல்கிறார்கள். இந்த திரியோதசாக்ஷரியையேதான் ஹநுமார் ஸமர்த்த ராமதாஸராக அவதரித்த போதும் ஸதா ஸர்வ காலமும் ஜபம் பண்ணிக் கொண்டு, அதன் சக்தியாலேயே சிவாஜியைக் கொண்டு ஹிந்து ஸாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்கச் செய்தார்.

ருத்ர கன பாடத்தில் பதின்மூன்று தரம் சொல்லப்படும் (பரமேச்வராதாரமான) சங்கரர், ருத்ராம்சமாக வந்து பதின்மூன்று அக்ஷரத்தையே சொல்லிக் கொண்டிருக்கிற ஆஞ்ஜநேயரிடம் வந்து சேர்ந்திருப்பது பொருத்தம்தானே?

அந்த ஆஞ்சநேயரை இங்கே பின்னுக்குத் தள்ளிவிடக் கூடாது என்றுதான் முன்னாடியே வைத்திருக்கிறது.

அவர் எப்படியிருக்கிறார்? ஒரு கையை மேலே தூக்கி விரித்து கொண்டிருக்கிறார். இது அபயஹஸ்தமாக இருப்பதோடு மட்டுமில்லை. ‘நில்’ என்று கையை உயர்த்தி ஆக்ஞையிடுகிற மாதிரியும் இருக்கிறது. எதிரே பெரிய ஸமுத்ரம் இருக்கிறதல்லவா? அது இந்த ராமேச்வர க்ஷேத்ரத்தில் அலையைக் குறைத்துக் கொண்டு குளம் மாதிரி அடங்கியிருப்பதற்கு என்ன காரணம்? அந்த ஸமுத்ரத்துக்குத்தான் ‘மேலே வராதே, நில்!’ என்று கையை தூக்கி ஆஞ்சநேய ஸ்வாமி உத்தரவு போடுகிறார். அதற்கு ஸமுத்ர ராஜாவும் ஆயிரம் பதினாயிரம் வருஷமாக அடங்கி வந்திருக்கிறான்.

அதனால் அவர் நேரே ஸமுத்ரத்தைப் பார்த்துக் கொண்டு — அவருக்கும் ஸமுத்ரத்துக்கும் குறுக்கே வேறு எந்த மூர்த்தியும் வராமல், இப்படி வாசலிலேயே இருப்பது தான் நமக்கு க்ஷேமம்.

எல்லாவற்றுக்கும் முடிவிலே வருகிறவர் எல்லாவற்றுக்கும் முன் வரவேண்டிய ஆசார்யாளுக்கும் முன்னே வரலாமா என்பதற்கு நியாயம் சொல்கிறேன்.

ஸரஸ்வதி, “உனக்குப் பின்னால் நான் இருப்பேன்” என்று சொன்னதால் அவள் வாக்கை மதிப்பதுதான் அவளுக்குப் ப்ரீதி என்று இங்கே அவளை ஆசார்யாளுக்கு பின்னால் வைத்திருக்கிறதோ இல்லையோ?

இதே மாதிரி ஆசார்யாள், “எனக்கு முன்னால் நீ எப்போதும் பிரகாசித்துக் கொண்டிரு, அப்பா” என்று ஆஞ்சநேய ஸ்வாமியை வேண்டிக்கொண்டிருக்கிறார்.

“ஹநுமத் பஞ்சரத்னம்” என்று ஆசார்யாள் ஆஞ்சநேயர் மேல் ஜந்து ச்லோகங்கள் கொண்ட ஒரு அத்புதமான ஸ்துதி செய்திருக்கிறார். ஸ்தோத்திரிக்கப்பட்டவர் ருத்ராம்சம்! ஸ்தோத்திரிப்பவர் சிவ அவதாரம். ஒரே வஸ்துதான்! இப்படியிருந்தும் இரண்டு பேரும் விநயத்துக்கு வடிவமாக இருந்தவர்கள். மஹாசக்திமான்களாக இருந்தும், மஹாபுத்திமான்களாக இருந்தும் எப்போதும் அடக்கமாக இருந்த இருவர் இவர்கள். இவர்களில் ஆஞ்சநேயரை ஆசார்யாள் விநயத்தோடு வேண்டிக்கொண்டு ஸ்தோத்திரம் செய்கிறார். அதில் ஒரு ச்லோகத்தில் “புரதோ மம பாது ஹநுமதோ மூர்த்தி:” என்று வருகிறது.

மம — எனக்கு; புரதோ — முன்னால்; ஹநுமதோ மூர்த்தி: — ஆஞ்சநேய ஸ்வாமியின் உருவம்; பாது — பிரகாசிக்கட்டும்!

தனக்கு முன் ஆஞ்சநேயர் ஜொலித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆசார்யாளே வேண்டிக் கொண்டிருப்பதால், அவருக்கு முன் ஸ்தானத்தில் இங்கே ஆஞ்சநேயர் இருப்பதுதான் பொருத்தம். அதுதான் அவருக்குப் ப்ரீதி.

ஆரம்பமும் முடிவும் ஒன்றுதான்; ஆதியும் அந்தமும் ஒன்றுதான்; நாம் தேடிக்கொண்டே போகிற பரம்பொருள் கடைசியில் எல்லாத் தேட்டத்துக்கும் முதல் நினைப்பாக இருக்கிற ‘நான்’ என்பதாகத்தான் முடிகிறது. இதுதான் அத்வைதம். ஆகையால் கடைசியில் வரவேண்டிய ஆஞ்சநேய ஸ்வாமி இங்கே முதலில் வரும் குருவுக்கும் முன்னால் வருவதே அத்வைதத்துக்கு விளக்கமாகத்தான் இருக்கிறது. ‘தாஸோஹம்’ (அடிமையாக இருக்கிறேன்) என்று ஸ்ரீராமசந்திரமூர்த்தியிடம் தாஸனாக இருந்தே, ‘ஸோஹம்’ என்கிற (பரமாத்மாவே நான் என்று உணருகிற) அத்வைத பாவத்தை அடைந்தவர் ஆஞ்சநேயர் என்று சொல்வதுண்டு. இதனால் அவரே முதலுக்கு முதலாகவும் முடிவுக்கு முடிவாகவும் இருப்பவர்தான்.

ஆஞ்சநேய ஸ்வாமியின் தூக்கிய கைக்குக் கட்டுப்பட்டு ஸமுத்ரம் அடங்கி நிற்கிறது. நாம் ஸம்ஸார ஸமுத்ரத்தில் தவிக்கிறவர்கள். நம் மனஸ் அலையடங்காமல் ஓயாமல் அடித்துக் கொண்டேயிருக்கிறது. ஆஞ்சநேய ஸ்வாமிதான் மனோஜயம் பண்ணினவர்; இந்திரியங்களை ஜயித்தவர். “ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்” என்று சொல்லியிருக்கிறது. தூக்கிய கையோடு அவர் நிற்பதை தரிசனமும், தியானமும் பண்ணினோமானால் அவர் நமக்கு அபயம் தருவதோடு இந்த ஸம்ஸார ஸமுத்ரத்தை, மனஸின் அலை கொந்தளிப்பை அடக்கி ஸெளக்யமும் சாந்தியும் தருவார்.

சுபம்


1ராமேச்வரம் அக்னி தீர்த்தக் கரையில் ‍ஸ்ரீ மஹாபெரியவர்கள் 1963-ல் நிர்மாணித்த ஸ்ரீ சங்கர மண்டபம்.

2ஸ்ரீ ராமேச்வர சங்கர மண்டபத்தில் நுழைவாயிலிலேயே ஆஞ்சநேய மூர்த்தி விளங்குகிறார்.

அநுமார் அநுக்கிரஹிப்பார்

ஆஞ்சநேய ஸ்வாமியின் விசேஷமே அலாதியானது. அவர் பக்தர்களுக்கு என்னென்ன அநுக்கிரஹம் செய்கிறார் என்பதைப் பார்த்தால், அவருக்கு என்ன விசேஷம் என்று தெரியும்.

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹநுமாத் ஸ்மரணாபவேத் ||

ஆஞ்சநேயரை ஸ்மரிப்பவர்களுக்கு அவர் என்னென்ன அநுக்கிரஹிக்கிறார் என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது. புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம் விழிப்பு, வாக்குவன்மை இத்தனையும் தருகிறார் அவர்.

சாதாரணமாக இவையெல்லாம் ஒரே இடத்தில் அமையவே அமையாது. நல்ல புத்திமான் ஆரோக்கியம் இல்லாமல் சோனியாக இருப்பான். பெரிய பலசாலி மண்டுவாக இருப்பான். இரண்டும் இருந்தாலும் கோழையாக, பயந்தாங்கொள்ளியாக இருப்பான். எத்தனை திறமை இருந்தாலும், அவற்றைப் பிரயோகிக்கிற சுறுசுறுப்பு, விழிப்பு இல்லாமல் சோம்பேறியாக இருப்பான். பெரிய அறிவாளியாக இருந்தாலும் தனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொல்கிற வாக்கு வன்மையில்லாமல் இருப்பான். இந்த மாதிரி ஏறுமாறான குணங்கள் இல்லாமல் எல்லா சிரேயஸ்களையும் ஒரே இடத்தில் பொழிகிறார், ஆஞ்சநேயர்.

இதற்குக் காரணம், சாதாரணமாக நாம் ஒரே இடத்தில் சேர்ந்து பார்க்காத குணங்கள், சக்திகள் அத்தனையும் அவரிடமே பூரணமாக ஒன்று சேர்ந்திருக்கின்றன. நாம் எதிரெதிர் குணங்கள் என்று நினைப்பவைகூட, அவரிடம் ஸ்வபாவமாகச் சேர்ந்திருக்கின்றன. உதாரணமாகப் பெரிய பலசாலிக்கு விநயம் இருக்காது. பெரிய புத்திசாலிக்கு அகங்காரமில்லாத பக்தி இராது. ஆஞ்ஜநேயரோ தேக பலம், புத்தி பலம் இவற்றைப் போலவே விநயம், பக்தி இவற்றிலும் முதலாக நிற்கிறார். மகா சக்திமானாக இருந்தும், அத்தனை சக்தியும் ராமன் போட்ட பிச்சை என்ற அடக்கத்தோடு தனக்கு ஒரு பதவியும் கேளாமல் ராமதாஸனாகவே இருந்தார். அப்படி அடிமையாக இருந்ததாலேயே நிறைந்து இருந்தார். பக்தி இருக்கிறவர்களுக்கேகூட அதில் ஞானத்தில் தெளிவு இல்லாமல் மூடபக்தியாகவோ, முரட்டுபக்தியாகவோ இருப்பதுண்டு. ஞானமும் பக்தியும் வேறு வேறு என்றே அவர்கள் சண்டைகூடப் போட்டுக் கொள்வார்கள். ஆஞ்சநேயரோ ராமச்சந்திர மூர்த்தியின் பரமபக்தராக இருக்கும்போதே, பரமஞானியாகவும் இருந்தார். எப்படி தக்ஷிணாமூர்த்தி ஸநகாதி முனிவர்களை முன்னிட்டு உபதேசம் செய்கிறாரோ, அப்படியே ஸ்ரீ ராமன் ஆஞ்சநேய ஸ்வாமியை முன்னால் வைத்துக் கொண்டு ஞானோபதேசம் செய்கிறார் என்று ‘வைதேஹீ ஸஹிதம்’ சுலோகம் சொல்கிறது. அர்ஜுனனின் தேர்க்கொடியில் இருந்துகொண்டு கீதோபதேசத்தை நேரிலேயே கேட்டவர் அவர். பைசாச பாஷையில் கீதைக்குத் தத்துவமயமான ஒரு பாஷ்யம் இருப்பதாகவும், அது ஆஞ்சநேயர் செய்தது என்றும் சொல்வார்கள். ஒன்பது வியாகரணமும் தெரிந்த ‘நவ வ்யாகரண வேத்தா’ என்று ராமரே அவரைப் புகழ்கிற அளவுக்குப் பெரிய கல்விமான். ஆனாலும் புத்திப் பிரகாசம், சக்திப் பிரபாவம் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு பக்தியிலேயே பரமானந்தம் அநுபவிக்கிறார்.

பக்தி என்பதால் லோக காரியத்தைக் கவனிக்காதவர் அல்ல. மகாபௌருஷத்தோடு போராடி அபலைகளை ரக்ஷித்தவர்களில் அவருக்கு இணை இல்லை. லோக சேவைக்கு அவரே உதாரணம் (ideal).

ஞானத்தில் உச்சநிலை, பலத்தில் உச்சநிலை, பக்தியில் உச்சநிலை, வீரத்தில் உச்சநிலை, கீர்த்தியில் உச்சநிலை, சேவையில் உச்சநிலை, விநயத்தில் உச்ச நிலை இப்படியெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிற ஸ்வரூபம் ஒன்று உண்டு என்றால் அது ஆஞ்சநேய ஸ்வாமிதான்.

இதெல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய பிரம்மச்சரியத்தைச் சொல்ல வேண்டும். ஒரு க்ஷணம்கூடக் காமம் என்கிற நினைப்பே வராத மகா பரிசுத்த மூர்த்தி அவர். தனக்கென்று எதுவுமே நினைக்காதவர். ஒரு காமனையும் இல்லாமல் ராமனுக்கு சேவை செய்தே நிறைந்துவிட்டார்.

அவரை நம் சீமையில் பொதுவாக ‘ஹநுமார்’ என்போம். கன்னடச் சீமையில் அவரே ‘ஹநுமந்தையா’. சித்தூருக்கு வடக்கே போய்விட்டால் ஆந்திரா முழுவதும் ‘ஆஞ்சநேயலு’ என்பார்கள். மகாராஷ்டிரம் முழுக்க ‘மாருதி, மாருதி’ என்று கொண்டாடுவார்கள். அதற்கும் வடக்கில் ‘மஹாவீர்’ என்றே சொல்வார்கள்.

ஆஞ்சநேயருக்கு ஈடு கிடையாது. அவரை ஸ்மரித்த மாத்திரத்தில் தைரியம் வரும். ஞானம் வரும். காமம் நசிந்துவிடும். பரம விநயத்தோடு பகவத் கைங்கரியம் செய்துகொண்டு எல்லோருக்கும் நல்லது செய்வோம்.

‘ராம், ராம்’ என்று எங்கெங்கே சொல்லிக் கொண்டிருந்தாலும், ரகுநாத கீர்த்தனம் எங்கே நடந்தாலும், அங்கெல்லாம் நம் கண்ணுக்குத் தெரியாமல் ஆஞ்சநேயர் தாரை தாரையாக ஆனந்த பாஷ்பம் கொட்டிக்கொண்டு நின்று கேட்கிறார்.

இந்தக் காலத்தில் நமக்கு மற்ற எல்லா அநுக்கிரஹங்களோடு, முக்கியமாக அடக்கமாக இருக்கற பண்பு ரொம்பவும் அவசியப்படுகிறது. எத்தனை வந்தாலும் போதாமல் இப்போது, நாம் உயர உயரத் துள்ளிக்கொண்டேயிருக்கிறோம். இதனால் புதுப்புது அதிருப்திகளை, குறைகளைத்தான் உண்டாக்கிக் கொள்கிறோம். துள்ளாமல் அடங்கிக் கிடந்தால்தான் ஈசுவரப் பிரஸாதம் கிடைக்கும். அதுதான் நிறைந்த நிறைவு. நமக்கு ஆஞ்சநேயர் அநுக்கிரகம் பண்ண வேணும்.

அவரைப் பிரார்த்திப்பவர்களுக்கு ஒரு குறையும் இல்லை. லோகம் முழுவதும் தர்மம் பரவியிருக்க அவரையே பிரார்த்தனை பண்ணுவோம். அவருடைய சகாயத்திலேயே ராவணாதிகள் தோற்று ராமராஜ்யம் ஏற்பட்டது. அர்ஜுனனின் தேர்க்கொடியில் அவர் இருந்த விசேஷத்தால் பிறகு தர்மராஜ்யம் ஏற்பட்டது. பிற்காலத்தில் நம் தர்மம், பக்தி எல்லாம் நசிந்தபோது ஆஞ்சநேய அவதாரமாக ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமி தோன்றித்தான் சிவாஜி மூலம் மறுபடி தர்ம ஸம்ஸ்தாபனம் செய்தார். இன்னும் சகல தேசங்களிலும் தர்மமும் பக்தியும் ஏற்பட அவர் அநுக்கிரஹம் வேணும். நாம் மனமுருகிப் பிரார்த்தித்தால் இந்த அநுக்கிரஹத்தைச் செய்வார்.

ஆஞ்ஜநேய ஸ்வாமின: ஜெய் ||