களபம்

பிள்ளையாருடைய பெயரில் எதுவுமே ச்லோகத்தில் இல்லை. ‘களபம்’ என்றுதான் வருகிறது. “கலயது கலபோ” என்று அழகான மோனையாக வருகிறது. (கலபம், களபம் என்று இருவிதமாகவும் ஸம்ஸ்க்ருதத்தில் வரும். ல-ள வித்யாஸம் அந்த பாஷையில் பார்ப்பதில்லை.) ‘களபம்’ என்றால் யானைக்குட்டி. ‘குட்டி யானை’ என்று சொன்னால் அதைவிடச் செல்லமாகயிருக்கிறது. வேடிக்கையாகவே பெரிய காரியங்களையும் ஸாதித்தது தெரியாமல் ஸாதித்துக் கொடுத்துவிட்டு, நாம் செல்லம் கொடுத்துக் கொஞ்சும் ஒரு விளையாட்டு ஜீவனாக இருக்க ப்ரியப்படுபவரை ‘கணேசர்’, ‘விக்நேச்வரர்’ என்ற மாதிரிப் பெரிய பெயர்களால் தெய்வமாகக் காட்டாமல், குட்டியானை என்று சொன்னாலே ஸந்தோஷப் படுவாரென்றுதான் ‘களபம்’ என்று போட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

அவ்வையார் “அகவ”லை

சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு

என்று ஆரம்பிக்கிறாள். ஆனால் இங்கே ‘களபம்’ என்பது யானைக் குட்டியில்லை. யானைக்குட்டி ஸ்வாமியின் பாதத்தில் குங்குமப்பூ, பச்சைக் கர்ப்பூரம் முதலியவற்றோடு சேர்ந்து அரைத்த சந்தனம் பூசியிருக்கிறது. கலவை என்றும் கலவைச் சந்தனம் என்றும் சொல்கிற அந்த கந்தோபசாரத்தைத்தான் களபம் என்றும் சொல்வது. இங்கே (“அகவ”லில்) அதுதான் அர்த்தம். பெரிய யோக மூர்த்தியாக, அத்வைத ஞான மூர்த்தியாகப் பிள்ளையாரை ஸ்துதித்து அவ்வை பண்ணியது இந்த அகவல். அதனால் இதிலே ‘பால லீலாபிராமனாக’ விளையாட்டு பண்ணும் குட்டியானையாக அவரைச் சொல்ல முடியவில்லை. (“அகவல்” அறிந்தவர்களிடம் சிறிது உரையாடி விட்டு) “அற்புதம் நின்ற கற்பகக் களிறு“, “வித்தக விநாயக” என்று அவரை உயர்ந்த ஸ்தானம் கொடுத்துத்தான் அவ்வை கூப்பிடுகிறாள். யோக சாஸ்த்ர ரஹஸ்யங்களைச் சொல்ல வந்த நூலில் அவரை அப்படிக் காட்டுவதுதான் ஒளசித்யம் (உசிதமானது) . ஆனாலும் குட்டியானையாக அவர் விளையாடிக்கொண்டிருப்பதையும் கொஞ்சம் கோடியாவது காட்டாமல் விடக்கூடாது என்று அவளுக்கு இருந்திருக்கும் போலிருக்கிறது! என்ன யோக சாஸ்த்ரம் எழுதினாலும் அவள் குழந்தைகளுக்கேயான பாட்டிக் கவியல்லவா? குழந்தைகளுக்கு மிகவும் ப்ரியமான யானைக்குட்டியை மறைமுகமாகவாவது சொல்லாமல் விடக்கூடாது என்றே, “புரிஞ்சுக்கிறவா புரிஞ்சுக்கட்டும்” என்று, எடுத்தவுடனேயே “சீதக் களப” என்று போட்டுவிட்டாள் என்று தோன்றுகிறது.

“அந்த” ச்லோகத்திற்கு “இந்த” ச்லோகத்தின் அத்தாட்சி

அம்பாள் தம்மோடு சேரவேண்டும் என்று ஸ்வாமி விரும்பினார். அவளுக்கு நமஸ்காரம் பண்ணினார். நமஸ்காரம் அவளுக்கு; ஆனால் அவர் விருப்பத்தை நிறைவேற்றியதோ விக்நேச்வரர்! நான் “ந்யாயேந்து சேகர” ச்லோகம் சொல்லி, ‘இந்து சேகர’ ஸம்பந்தத்துக்காகவே “ஸீதா ராவண ஸம்வாத” ச்லோகம் சொல்லப் போக, இதிலேயும் அதில் பார்த்த விஷயத்துக்கு அத்தாட்சி வந்து விடுகிறது! இப்படித்தான் பல நல்ல, ரஸமான ஸமாசாரங்களை எடுத்துப்போட்டுக்கொண்டு கொஞ்சம் அலசினால் எதிர்பார்க்காத புதையல்கள் அகப்படுகின்றன! இப்போது அகப்படும் புதையல், அந்த ச்லோகத்தின் தீர்மானத்திற்கு இந்த ச்லோகத்தில் கிடைக்கும் அத்தாட்சி அல்லது கன்ஃபர்மேஷன். எந்த தேவதையை நாம் ஆராதித்தாலும், அந்த தேவதையும் தன்னுடைய அநுக்ரஹ கார்யத்துக்கு இடையூறு ஏற்படாமலிருப்பதற்காக விக்நேச்வரரிடம்தான் போய்ப் பிரார்த்தித்துக்கொண்டு நிற்குமாதலால், நாம் நேராக அவரொருவரையே எந்த அபீஷ்டம் நிறைவேறுவதற்கும் ஆராதித்துவிட்டால் போதும் என்று அந்த ச்லோகத்தில் பார்த்தோம். இப்போது இங்கே, இந்த ச்லோகத்தில், கவி அந்த உத்தேசத்தில் இதை இயற்றாத போதிலும், என்ன பார்க்கிறோமென்றால் – அம்பாளோடு ஒற்றுமையாய்ப் போகவேண்டுமென்று ஈச்வரன் அவளை ஆராதிக்கிறார். காலிலே விழுவதைவிட என்ன ஆராதனை வேண்டும்? இப்படி அவர் ஆராதனை பண்ணியும் அவள் ஒன்றும் பண்ணவில்லை. கோபமாகவே இருக்கிறாள். அவளுக்கும் உள்ளூர ஒற்றுமையாக வேண்டுமென்றுதான் ஆசை. ஆனாலும் பிகுவை விட்டுக் கொடுப்பதா என்று ஒன்றும் புரியாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். கடைசியில் விக்நேச்வரர் அவர்களை விளையாட்டாக ஒன்று சேர்த்து விடுகிறார். அதாவது இவருக்கு ஆராதனை பண்ணாமல் அம்பாளைத்தான் ஈச்வரன் ஆராதித்தபோதும்கூட அவள் அந்த ஆராதனா பலனைத் தராமல் இவர்தான் தந்திருக்கிறார்! அதே மாதிரி, ஈச்வரனை ஆராதனை பண்ணாமல் அதற்கு நேர்மாறாக அவள் கோபமாயிருந்தாலும் அவளுக்கு உள்ளூர ஆசை எப்படியாவது அவர் தன்னைச் சேர்த்துக்கொண்டு விடவேண்டுமென்பதுதான். ஈச்வரனிடம் சேரணும், ஈச்வரன் நம்மைச் சேர்த்துக் கொள்ளணும் என்று ஆசைப்படுவது ஆராதனையில்லாமல் வேறே என்ன? வெளியில் கோபம், அவமரியாதை என்று அவள் காட்டினாலும் உள்ளே ப்ரியம், ஆராதனைதான் நிறைந்திருக்கிறது. அப்போது ஈச்வரனும் தாமாக அவளுடைய ஆராதனா பலனைக் கொடுத்துச் சேர்த்துக் கொள்ளவில்லை. விக்நேச்வரர்தான் அவர்களைச் சேர்த்து வைத்து அவர்களுடைய மனோபீஷ்டம் நிறைவேறுமாறு செய்து ஆராதனா பலனைக் கொடுத்திருக்கிறார். இதனால் இவரே எந்தப் பலனும் தர வல்லவர், இவரொருத்தரை நாம் ஆராதித்தாலே போதும் என்று கன்ஃபர்ம் ஆகிவிடுகிறதல்லவா?

மநுஷ்யர்களான நாம் தேவர்களிடம் பெறக்கூடிய அபீஷ்ட பூர்த்திகளுக்காக விக்நேச்வரரைப் பிடித்துவிட்டால் போதும் என்று அந்த ச்லோகம் காட்டிட்டென்றால், இந்த ச்லோகமோ இன்னம் மேலேபோய், தேவர்களுக்குள் உச்சியில் இருக்கப்பட்ட பரமேச்வர தம்பதியுமே தங்களுக்குள்ளே ஒரு விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதுகூட இவருடைய ஸஹாயத்தால் முடிகிறது என்று காட்டுகிறது. குழந்தை விளையாட்டாக அவர் அந்தப் பெரிய கார்யத்தைப் பண்ணிவிடுகிறார்! ஸஹாயம் பண்ணவேண்டும் என்று தாம் உத்தேசித்ததாகக் கூடக் காட்டிக்கொள்ளாமல், ‘இவர் என்னமோ விளையாடினார்! அப்பா அம்மா ஒன்று சேர்ந்து விட்டார்கள்’ என்று நினைக்கும் விதத்தில் பண்ணிவிடுகிறார்!

இவர் நாம் மனஸில் நினைக்கும் எல்லா அபீஷ்டங்களையும் ஸகல புருஷார்த்தங்களையும் (“சிந்திதார்த்தம்” என்பது இவற்றைத்தான்) நிச்சயமாக நிறைவேற்றித் தரும். அநுக்ரஹ மூர்த்தியாகத்தானே இருப்பார்? இப்படி அவர் அருளட்டும் என்று கவி முடிக்கிறார்.

“ஸர்வார்த்தங்களையும் தருவதில் பிள்ளையார் சதுரர்” என்று “ந்யாயேந்து சேகர” ச்லோகம் சொன்னதற்குக் கன்ஃபர்மேஷனாகவே இந்த ச்லோகம் “நம்முடைய சிந்திதார்த்தங்களைப் பிள்ளையார் நிறைவேற்றி வைக்கட்டும்” என்கிறது!

ஐயப்பனின் தாயாரைப் பற்றிய பிரச்னை!

விக்னேச்வரரின் மாதாக்கள், முருகனின் மாதாக்கள் ஆகியவர்களைப் பற்றிச் சொல்லும்போது வேடிக்கையாக ஒன்று நினைவுக்கு வருகிறது. இந்த இரண்டு பேரைப் போலவே பரமேச்வரனுக்கு மூன்றாவது குமாரராக ஒருத்தர் உண்டு. இப்போது நாளுக்கு நாள் பிரஸித்தி பெற்றுவரும் ஐயப்ப ஸ்வாமிதான் அவர். ஈச்வரனைப் பிதாவாகவும், மோஹினி ரூபத்தில் வந்த மஹாவிஷ்ணுவை மாதாவாகவும் கொண்டு உத்பவித்தவர் அவர். அவருடைய தாயார் உறவு விஷயமாகத்தான் வேடிக்கை. வேடிக்கை, வேடிக்கை என்று நான் சொன்னாலும் அவருக்கு ரொம்ப விசாரமளித்து வந்த ஒரு பிரச்னையாக அது இருந்தது.

கதை என்னவென்றால் —

பதினாறாம் நூற்றாண்டில் அப்பைய தீக்ஷிதர் என்று மஹான் இருந்தார். மன்னார்குடிப் பெரியவாளின் குலகூடஸ்தராகச் சொன்ன அந்தப் பெரியவர்தான். அவர் அத்வைதியானபோதிலும் சிவ உபாஸனையை விசேஷமாக வளர்த்துக் கொடுத்தவர். அவர் காலத்தில் சிவாராதனத்தை மட்டம் தட்டியும் சிவாராதனம் செய்து வந்தவர்களை எதிர்த்தும் விஷ்ணு உபாஸனையானது “aggressive” என்று சொல்லக்கூடிய விதத்திலேயே பரப்பப்பட்டு வந்ததால்தான் அவர் எதிர் நடவடிக்கையாக சிவோத்கர்ஷத்தை (சிவபெருமானின் உயர்வை) ஸ்தாபித்து நிறையப் பிரசாரம் பண்ணும்படியாயிற்று. அவருக்கு ஸம காலத்தவராகிய தாதாசாரியார் என்பவர் விஜயநகர ராயவம்சத்தின் கடைசி ராஜாக்களிடம் நிரம்பச் செல்வாக்குப் பெற்றுத் தீவிரமாக வைஷ்ணவப் பிரசாரம், மத மாற்றம் பண்ணி வந்ததுதான் சைவத்தை விசேஷமாக நிலைநாட்டும்படி தீக்ஷிதரைத் தூண்டியது. மற்றபடி, எதிராளிகளுக்கு ஒரேயடியாக சிவத்வேஷம் இருந்த மாதிரி அவருக்கு விஷ்ணு த்வேஷம் என்பது லவலேசமும் இருக்கவில்லை. சற்றுமுன் ‘ரத்ன த்ரயம்’ என்று சொன்னபடி ஈச்வரன், அம்பாள் ஆகியவர்களோடு விஷ்ணுவையும் ஸாக்ஷாத் பரப்ரஹ்மதத்தின் ஸ்வரூபமாக — ஏனைய தேவதைகளுக்கெல்லாம் உச்சியிலுள்ள மும்மணிகளில் ஒருவராக – ச்ருதி, யுக்தி பிராமணங்கள் காட்டி தீக்ஷிதரே ஸ்தாபித்திருக்கிறார்.

ஒரு ஸமயம் தீக்ஷிதர், தாதாசாரியார் ஆகிய இரண்டு பேருடன் ராஜா ஒரு கோயிலுக்குப் போனார். அந்த ராஜா விஜயநகரத்து ராமராயராகவோ, வேலூர் சின்ன பொம்ம நாய்க்கராகவோ, தஞ்சாவூர் வீர நரஸிம்ஹ பூபாலராகவோ இருக்கலாம். ராஜா யார் என்பது கதைக்கு முக்யமில்லை. சைவம், வைஷ்ணவம் ஆகிய ஒவ்வொன்றிலும் தலைமை ஸ்தானத்தில் இருந்தவர்களான இந்த இரண்டு பேரை, இருவருமே நல்ல வித்வத் ச்ரேஷ்டர்களாக இருந்தவர்களை, ராஜா ஒரே சமயத்தில் தன்னோடு கோயிலுக்கு அழைத்துக்கொண்டு போனதுதான் முக்யம்.

கோயிலில் ஐயப்ப சாஸ்தாவின் பிம்பம் இருந்தது. அது ஒரு புது மாதிரியான பிம்பமாக இருந்தது. சாஸ்தா மூக்கின்மேல் விரலை வைத்துக்கொண்டு ரொம்பவும் விசாரத்துடன் என்னவோ யோசிக்கிற பாவனையில் விக்ரஹம் அமைந்திருந்தது.

“இது ஏன் இப்படிப் புது மாதிரியாக இருக்கிறது?” என்று ராஜா கேட்டார்.

கோயிலைச் சேர்ந்தவர்கள், “இது பஹு காலத்துக்கு முந்திச் செய்த விக்ரஹம். இந்த விக்ரஹம் அடித்த ஸ்தபதிக்கு ஐயப்ப சாஸ்தா ஏதோ ஒரு விஷயமாக இப்படி தீர்க்க சிந்தனையில் இருப்பதுபோல தர்சனம் கிடைத்ததாம். அது என்ன விஷயம் என்று அவர் (ஸ்தபதி) தெரிவிக்கவில்லை. ஆனால் தமக்கு தர்சனம் கிடைத்த பாவனையிலேயே இந்த மூர்த்தியைப் பண்ணி வைத்துவிட்டு, ‘பிற்காலத்தில் ஸர்வஜ்ஞதை (அனைத்தறிவு) வாய்ந்த ஒரு பெரியவர் இங்கே வருவார். அவர் சாஸ்தாவின் விசாரம் எதைப் பற்றி என்ற ரஹஸ்யத்தை வெளிப்படுத்திவிடுவார். உடனே விக்ரஹம் மூக்கின் மேலிருந்து விரலை எடுத்துவிட்டு, எல்லாக் கோயில்களிலும் இருக்கிற மாதிரி ஆகிவிடும்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாராம். அப்புறம் எத்தனையோ பெரியவர்கள் இங்கே வந்து (சாஸ்தாவின் தீவிர யோசனைக்கு) என்னென்னவோ காரணங்கள் சொல்லிவிட்டார்கள். ஆனால் எதுவும் நிஜமான காரணமாக இல்லாததால் சாஸ்தா விரலை எடுக்காமலே இருக்கிறார்” என்று சொன்னார்கள்.

ராஜா உடனே தாதாசாரியாரைப் பார்த்தார்.

அவர் அதன் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்டு தாமும் ஒரு காரணம் கற்பித்து ச்லோகமாகச் சொன்னார்.

விஷ்ணோ : ஸுதோஹம் விதிநா ஸமோஹம்
தந்யஸ் – ததோஹம் ஸுரஸேவிதோஹம் |
ததாபி பூதேச ஸுதோஹம் ஏதைர்
பூதைர் – வ்ருதச் சிந்தயதீஹ சாஸ்தா ||

‘சாஸ்தாவுக்கு என்ன விசாரம் என்றால் இதுதான்’ என்று தாதாசாரியார், சாஸ்தா சொல்கிற மாதிரியே ச்லோகத்தை ஆரம்பித்துப் பண்ணியிருக்கிறார். சாஸ்தா என்ன சொல்கிறாராம்? “நான் விஷ்ணுவுக்குப் பிள்ளை, ஆனபடியால் பிரம்மாவுக்கு ஸமதையானவன். இதனால் நான் தன்யனாக இருக்கிறேன். தேவர்கள் எல்லோராலும் வணங்கப்படுகிறேன். ஆனாலும் ……”

ததாபி‘ என்று ச்லோகத்தில் வருவதற்கு ‘ஆனாலும்’ என்று அர்த்தம். தன்னுடைய உயர்வுகளையெல்லாம் பற்றி சாஸ்தா சொல்லிவிட்டு ‘ஆனாலும்’ போடுகிறாரென்பதால் இனிமேல் அவருடைய விசாரத்தின் காரணம் வரப்போகிறது என்று புரிகிறதல்லவா? இதிலேயே தாதா சாரியாருக்கு சிவ ஸம்பந்தமான விஷயங்களில் அபிப்ராயமில்லை என்பதும் தெரியவரும்!

‘ஆனாலும்’ போட்ட சாஸ்தா மேலே என்ன சொல்கிறார்?

“ஆனாலும் நான் சிவனுக்கும் பிள்ளை” – “ததாபி பூதேச ஸுதோஹம்“. சிவனுக்கு எத்தனையோ பேர். நல்ல நல்ல பேராக சிவன், ஈஸ்வரன், சம்பு, பசுபதி, ஸாம்பன், நடராஜா, தக்ஷிணாமூர்த்தி என்று எத்தனையோ இருக்க, ‘பூதேசன்’ என்ற பேரே ச்லோகத்தில் கொடுத்திருக்கிறது! பூதக்கூட்டங்களின் தலைவன் என்று ஈசவரனைச் சொல்லி, ‘அப்படிப்பட்டவனின் பிள்ளையாகவும் நான் இருக்கிறேனே!’ என்று ஐயப்ப ஸ்வாமி அங்கலாய்த்துக் கொள்கிறமாதிரி ச்லோக வாக்யம் போகிறது.

பூதங்களையும் அடக்கி அவற்றுக்குத் தலைவராக ஒருவர் இருக்கிறாரென்றால் உண்மையில் அதுவும் அவருடைய உயர்ந்த ப்ரபுத்வ சக்தியை, அதிகார சக்தியைக் காட்டி அவருக்குப் பெருமை தருவதுதான். பரமேச்வரன் ஸத்துக்களை பூதங்கள் ஹிம்ஸை செய்யாமல் அவற்றை அடக்கி வைத்து லோக ரக்ஷணம் செய்கிறவர்தானேயன்றி அவற்றை இஷ்டப்படி செய்யுமாறு அவிழ்த்துவிடுகிறவரில்லை. நம்மைக் கெட்ட சக்திகள் தாக்காதபடி அவர் பிடித்து வைத்துக்கொண்டு அடக்கி அதிகாரம் செய்கிறாரென்பதைத்தான் அவர் பூதேசராக இருப்பது காட்டுகிறது.

பூதேசனாகிய பரமேச்வரனுக்கே மஹாதேவன் என்றும் பெயர். தேவர்களிலெல்லாம் பெரியவர் அவர். தன்னுடைய மூன்று பிள்ளைகளில் ஒரு பிள்ளையை, ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியை, தேவ ஸேனைகளுக்கெல்லாம் அதிபதியாக நியமித்தார். பூதப்படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு கணத்தின் அதிபதியாக கணபதியை வைத்தார். “பூதகணாதி ஸேவிதம்” என்று அவரை ஸ்தோத்திரிக்கிறோம். பூத கணங்களிலேயே இன்னொரு பகுதிக்கு ஐயப்ப சாஸ்தாவை அதிபதியாக நியமித்தார். மலையாள தேசத்தில் ஐயப்பனை ‘பூதநாதன்’ என்றும் சொல்வார்கள்.

எளிதில் அடங்காத பூதப்படைகளை அடக்கி வைப்பது சாஸ்தாவுக்குப் பெருமை தருகிற விஷயந்தான். உக்ர குணமுடைய க்ஷூத்ர (சில்லுண்டி) தேவதைகள் ஊருக்குள் போய் உத்பாதம் விளைவிக்காதபடி அவற்றை அடக்கித் தம்மிடம் வைத்துக்கொண்டு க்ராம எல்லையில் காவல் தெய்வமாக உள்ள சாஸ்தா பெருமிதப்பட வேண்டிய லோகோபகாரம்தான் செய்கிறார். ஆனால் சிவ சம்பந்தமான விஷயங்களில் தாதாசாரியாருக்கு அபிப்ராயமில்லாததால் இதுதான் சாஸ்தா தீர்க்கசிந்தனையில் மூக்கில் விரலை வைத்திருப்பதற்குக் காரணம் என்று ச்லோகம் பண்ணி முடித்துவிட்டார்: “மிகவும் உயர்வுக்குக் காரணமாக, நான் விஷ்ணு புத்ரனாயிருந்து, பிரம்மாவுக்கு ஸமானனாயிருந்தாலும், தேவ ஸமூஹத்தினரால் போற்றப் படுபவனாயிருந்தும்கூட பூதத் தலைவனின் ஸுதனாகவும் இருக்க நேர்ந்துவிட்டதால் எப்போதும் பூதகணங்களால் சூழப்பட்டவனாக இருக்கிறேனே!” – ஏதைர் பூதைர் வ்ருத: என்று ச்லோகத்தில் வருவதற்கு ‘இந்த பூதங்களால் சூழப்பட்டிருக்கிறேன்’ என்று அர்த்தம். ‘இப்படி இருக்கும்படியாகி விட்டதே என்றுதான் சாஸ்தா மூக்கிலே விரலை வைத்துக்கொண்டு விசாரத்துடன் சிந்திக்கிறார்: சிந்தயதீஹ சாஸ்தா‘ என்று தாதாசாரியார் முடித்துவிட்டார்.

ஆனால் சாஸ்தா பிம்பம் அதைக்கேட்டு மூக்கின் மேல் வைத்திருந்த விரலை எடுத்துவிடவில்லை. ஏனென்றால், நாம் ஆலோசனை பண்ணிப் புரிந்துகொண்ட மாதிரி, பூதங்கள் சூழக் காவல் தெய்வமாக இருந்துகொண்டு ஒரு க்ராமத்தைக் காப்பாற்றிக் கொடுப்பது சாஸ்தாவின் பெருமைக்குத்தான் காரணமே தவிர விசார யோசனைக்குக் காரணமாகாது.

சாஸ்தா விக்ரஹம் தாதாசாரியார் சொன்ன காரணத்துக்கு விரலை எடுக்காமலிருந்தவுடன் ராஜா அப்பைய தீக்ஷிதரைப் பார்த்தார். அவருக்குக் காரணம் ஸ்புரித்தது. உடனே ச்லோக ரூபமாக அதைத் தெரிவித்தார். தாதாசாரியார் சொன்ன மாதிரியே இவரும் சாஸ்தாவின் வசனமாகவே ஆரம்பித்துச் சொன்னார்:

அம்பேதி கௌரீம் அஹம் ஆஹ்வயாமி
பத்ந்ய பிதுர் – மாதர ஏவ ஸர்வா: |
கதம் நு லக்ஷ்மீம் இதி சிந்தயந்தம்
சாஸ்தாரம் ஈடே ஸகலார்த்த ஸித்த்யை ||

சாஸ்தா விசாரப்பட்டுக் கொண்டு, ‘இதென்னடா, இதற்கு வழிகாண முடியாமலிருக்கிறதே!’ என்று மூக்கிலே விரலை வைத்து யோசித்துக் கொண்டு என்ன சொன்னதாக தீக்ஷிதர் சொல்கிறார்?

“கௌரியான சிவ பத்னியை நான் அம்மா என்று கூப்பிடுகிறேன், “அம்பேதி”: “அம்பா இதி”: அம்மா என்று. “ஆஹ்வயாமி”: அழைக்கிறேன். விஷ்ணு போட்டுக்கொண்ட மோஹினி ரூபம்தான் வாஸ்தவத்தில் என்னைப் பெற்றெடுத்த தாயாரானாலும், தகப்பனாருக்கு எத்தனை பத்னிகள் இருந்தாலும் அத்தனை பேரும் மாத்ரு ஸ்தானம் என்பதால் என் தகப்பனாரான ஈஸ்வரனுக்குப் பத்னியான பராசக்தியையும் நான் தாயாராகக் கொள்ளுகிறேன்.” விக்னேச்வரர் இப்படித்தானே கங்கையைத் தாயாராகக் கருதினார்?

“ஈச்வரனை அப்பாவாகவும், மஹாவிஷ்ணுவை அம்மாவாகவும் கொண்ட எனக்குப் பராசக்தி என்ன உறவுமுறை என்று யோசித்துக் குழம்பவேண்டிய அவசியமில்லை. பத்ந்ய பிதுர் மாதா ஏவ ஸர்வா: – பிதாவின் பத்னிகள் எல்லாருமே தாயார்கள்தான். அதனால் பராசக்தியிடம் அம்மா என்று உறவு பாராட்டுகிறேன் : அம்பேதி கௌரீம் அஹம் ஆஹ்வயாமி.

ஆனால் என்ன உறவுமுறை சொல்வது என்று புரியாமல் யோசித்துக் குழம்பும்படியாக இன்னொன்று இருக்கிறது. அது என்ன? யாருக்கு உறவுமுறை வகுத்துக் கூற முடியவில்லை?

லக்ஷ்மீம்

லக்ஷ்மிக்குத்தான்.

“லக்ஷ்மியை எப்படி அழைப்பேன்? கதம் நு லக்ஷ்மீம்?

இதுதான் சாஸ்தாவின் விசாரம். மூக்கில் விரலை வைத்துக் கொண்டு, ‘இதற்கு எப்படியடா ‘ஆன்ஸர்’ கண்டுபிடிப்பது?’ என்று அவர் யோசிப்பது எதற்கென்றால், தாம் லக்ஷ்மியை என்ன உறவுமுறை சொல்லிக் கூப்பிடுவது என்பது புரியாததால்தான்.

நமக்கும் புரியத்தானே இல்லை?

ஏன்?

லக்ஷ்மி யார்? மஹாவிஷ்ணுவின் பத்னி. மஹாவிஷ்ணு யார்? அவர் சாஸ்தாவுக்கு என்ன ஆகணும்? அம்மா ஆகணும். ஸாக்ஷாத் மஹாவிஷ்ணுதான் மோஹினியாகிப் பரமேச்வரனிடத்தில் இவரைப் பெற்றார். அதனால்தானே இவருக்கு ஹரிஹரபுத்ரன் என்று பேர்? ஸரி, அப்படியானால் லக்ஷ்மி இவருக்கு என்ன ஆகணும்?

அம்மாவின் பத்னி ஆகணும்.

வேடிக்கை என்றேனே அது இதுதான்! அப்பாவின் பத்னி, சித்தப்பாவின் பத்னி, மாமாவின் பத்னி, அண்ணாவின் பத்னி என்றெல்லாந்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். இவர்களை அம்மா, சித்தி, மாமி, மன்னி என்பது போல உறவு சொல்லிக் கூப்பிடுகிறோம். அம்மாவின் பத்னி என்று எங்கேயாவது யாருக்காவது ஒரு உறவு கேள்விப்பட்டதுண்டா? இந்த சாஸ்தா ஒருத்தருக்குத்தான் இப்படி உலகத்திலேயே இல்லாத விசித்தரமாக அம்மாவுக்குப் பத்னி என்று லக்ஷ்மி இருக்கிறாள்! அவளை இவர் என்ன உறவு சொல்லிக் கூப்பிடுவார்?

கதம் நு லக்ஷ்மீம்?” – லக்ஷ்மியை என்னவென்று கூப்பிடுவேன்? ‘நு’ போட்டால் ஸந்தேஹக் குறி.

இதி சிந்தயந்தம் சாஸ்தாரம்” – என்றிப்படி விசாரப்பட்டுக் கொண்டிருக்கிற ஐயப்ப சாஸ்தாவை “ஈடே” – போற்றி வழிபடுகிறேன்.

ஸகலார்த்த ஸித்த்யை சாஸ்தாரம் ஈடே‘ என்று முன்பின்னாகச் சேர்த்து அர்த்தம் செய்துகொள்ள வேண்டும். ‘எல்லாவிதமான புருஷார்த்தங்களும் ஸித்திப்பதற்காக சாஸ்தாவைப் போற்றி வழிபடுகிறேன்’ என்று தீக்ஷிதர் முடித்தார்.

பிள்ளையார் ஸமாசாரத்தில் ஏகமாக ஐயப்பனை இழுத்து விட்டுவிட்டோமே என்று பார்த்தால், ‘எல்லாம் அதற்கும் இதற்கும் ரொம்ப ஸம்பந்தந்தான்’ என்று ஸமாதானம் பண்ணுகிற மாதிரி, பிள்ளையார் ச்லோகத்தில் ‘ஸர்வார்த்த ப்ரதிபாதன சதுர’ ராக அவரைச் சொல்லியிருக்கிறதென்றால் இங்கே சாஸ்தாவை ‘ஸகலார்த்த ஸித்தி’ தருபவராகச் சொல்லி இரண்டையும் சேர்த்து முடிச்சுப் போட்டிருக்கிறது! சாஸ்தா ச்லோகத்தைப் பண்ணினவருடைய வம்சத்தில் வந்தவர்தான் பிள்ளையார் ச்லோகத்தைப் பண்ணினவர்!

தீக்ஷிதர் ச்லோகத்தில் தெய்வ பேதம், அது உசத்தி – இது தாழ்த்தி என்கிற அபிப்ராயங்கள் எதுவுமில்லை. அம்பாளையும் லக்ஷ்மியையும் ஒருபோலச் சொல்லிருக்கிறார். அதோடு தீக்ஷிதர் ச்லோகத்தில் புத்தியை மட்டும் காட்டாமல், பக்தியையும் காட்டி ‘ஸகலார்த்த ஸித்திக்காக சாஸ்தாவை வழிபடுகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். எதற்காக மூக்கில் விரலை வைத்துக்கொண்டிருக்கிறாரென்று ‘அர்த்தம்’ தெரியாதபோது, சகல ‘அர்த்தமும்’ ஸித்திப்பதற்காக அவரையே வேண்டிக்கொள்வதாகச் சொல்வது, அவர் க்ருபை இருந்தாலொழிய அவரைப் பற்றிய ரஹஸ்யத்தை நம் புத்தி சாதுர்யத்தால் மட்டும் கண்டுபிடித்துவிட முடியாது என்பதையும் பணிவோடு உணர்த்துகிறது.

இதெல்லாவற்றுக்கும் மேலாக, தீக்ஷிதர் காட்டியிருக்கிற காரணம்தானே நிஜமாகவே எந்த மேதாவியாலும் கண்டு பிடிக்க முடியாத புதிராக இருக்கிறது? அம்மாவுடைய பத்னி என்பது என்ன உறவு என்று எத்தனை யோசித்துப் பார்த்தாலும் பதில் கிடைக்குமா?

வாஸ்தவத்திலும், விடையில்லாத இந்தக் கேள்வி சாஸ்தாவுக்கு எழும்பித்தான் அவர் ஒரே விசாரமாக யோசித்துக்கொண்டு மூக்கிலே விரலுடன் ஸ்தபதிக்குக் காட்சி கொடுத்து ஸ்தபதி அப்படியே சிலை அடித்திருந்தார். ஆகையால் இப்போது தீக்ஷிதர் அந்த உண்மைக் காரணத்தைக் கண்டுபிடித்துச் சொன்னாரோ இல்லையோ, பிம்பம் மூக்கின் மேலிருந்த விரலை எடுத்துவிட்டு, எல்லா ஆலய சாஸ்தா மூர்த்திகளும் இருக்கிறமாதிரி கையை வைத்துக் கொண்டுவிட்டது!

ஒரு விக்ரஹம் ச்லோகம் கேட்டு மூக்கிலிருந்து விரலை எடுத்தது என்றால், கூடியிருந்தவர்களெல்லாம், ‘இப்படியும் ஒரு அதிசயமுண்டா?’ என்று மூக்கின்மேல் விரலை வைத்துக்கொண்டிருப்பார்கள்!

த்வைமாதுரர் என்று பிள்ளையாரைச் சொல்லப்போக அவருடைய ஒரு சஹோதரர் ஷாண்மாதுரராயிருப்பது நினைவு வந்து, அப்படியே இன்னொரு ஸஹோதரரான சாஸ்தாவுக்கு மாதாவின் பத்னி என்று ஒரு உறவு இருந்ததில் கொண்டு விட்டுவிட்டது!

பரமேச்வரனின் மூத்த புத்திரரை நினைக்கும்போது மூன்று பிள்ளைகளையும் ஸ்மரிக்க நேர்ந்தது விசேஷம்.

‘வெரைட்டி’ வழிபாடே மனித இயற்கை

இப்படி நான் சொன்னதற்காக — நானாகச் சொல்லவில்லை, அந்த மன்னார்குடிப் பெரியவர் சொன்னதை எடுத்துச் சொன்னதற்காக, — நீங்கள் பிள்ளையாரைத் தவிர எல்லா தெய்வங்களையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு அவரொருத்தரைத்தான் வழிபடவேண்டுமென்று அர்த்தமில்லை. சற்று முன்னே சொன்னாற்போல பகவானுக்கு தினுஸு தினுஸாக லீலை பண்ணியே இந்த த்வைத ப்ரபஞ்சக் கூத்தை நடத்த வேண்டுமென்று இருப்பதாலும், அவன் இந்தக் கூத்திலே பிசைந்து போட்டிருக்கிற மநுஷ்ய ஜீவனுக்கும் ஜெனரலாக எந்த ஒரு அநுபோகமானாலும் அதிலே தினுஸு தினுஸான வைசித்ரிய ருசி வேண்டியிருப்பதாலும்தான் இத்தனை தெய்வ ரூபங்களை அவன் தரித்துக் கொண்டிருப்பது. ஆகையால் அவாளவாளுடைய மனப்பான்மைப்படி ஒவ்வொருத்தரை ஒவ்வொரு ரூபம்தான் ‘இஷ்ட தெய்வம்’ என்னும்படியாக ஆகர்ஷிக்கும். அதே மாதிரி சாஸ்த்ராதிகளிலும் ஸம்ப்ரதாயப்படியும் ஸம்பத்துக்கு லக்ஷ்மி, வித்யைக்கு ஸரஸ்வதி, ஆரோக்யத்துக்கு சூர்யன், இன்னும் இந்த இந்த க்ரஹ பீடை போக ராஹு-கேது, இன்ன நாளில் இன்னாருக்கு உத்ஸவம் என்று எப்படியெப்படி பூஜிக்கச் சொல்லியிருக்கிறதோ அப்படி அந்தந்த தெய்வத்துக்கு வழிபாடு நடத்தினால்தான் பலன் என்றே பொதுவாக ஜனங்களுக்கு நம்பிக்கையும், பிடிப்பும் இருக்கும். சனிப் பெயர்ச்சி என்றால் லக்ஷம் ஜனங்கள் திருநள்ளாற்றில் கூடுகிறார்கள், மகரவிளக்கு என்று சபரிமலையில் பத்துலக்ஷம் ஜனங்கள் கூடுகிறார்கள் என்றால் இதுதான் காரணம். அத்வைத ஸாதனையில் நன்றாக முன்னேறிப்போகிற அபூர்வமான சிலரைத் தவிர இந்த த்வைத ப்ரபஞ்சத்திலேயே பக்தி, ஏதோ கொஞ்சம் ஞானம் என்று போகிற எல்லாருக்கும் ஒண்ணே ஒண்ணு என்று பிடித்துக்கொள்வது கஷ்டம்தான். ‘வெரைட்டி’ தான் லோக வாழ்க்கைக்கே ஸாரமாயிருப்பது! இஷ்டதேவதை என்று ஏதோ ஒன்றை ஓரளவு கெட்டியாகப் பிடித்துக் கொண்டாலுங்கூட அப்போதும் அதற்கே தினுஸு தினுஸாக வேஷம் போட்டு அலங்காரம் பண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது! இன்றைக்கு உத்ஸவத்தில் கைலாஸ வாஹனம் என்று ராஜாதி ராஜனாக அலங்காரம் பண்ணிப் பார்க்கிறவனையே நாளைக்கு பிக்ஷாண்டி என்று எல்லாவற்றையும் வழித்துவிட்டு நிறுத்திப் பார்த்து ஸந்தோஷிக்கத் தோன்றுகிறது!

மனஸ் கவடு விட்டுக்கொண்டு நானாவித ருசி பேதங்களில் போனாலும், அதன் இயற்கையிலேயே அதை விட்டுப் பிடித்துக் கொஞ்சம் கொஞ்சமாக வழிக்குக் கொண்டுவந்து ஒன்றிலேயே நிற்பதற்குப் பக்குவப்படுத்தத்தான் மதம் ஏற்பட்டிருக்கிறதேயொழிய, எடுத்த எடுப்பிலேயே மனஸை ஒன்றிலேயே அமுக்கிப் போடுவதற்கில்லை. இப்படி வற்புறுத்திப் பண்ணினால் மனஸின் இயற்கைப்படி அது ஈடு கொடுக்க முடியாமல் திணறி, திமிறிக் கஷ்டப்பட்டுக் கொண்டு முடிவிலே ஜடம் மாதிரியோ, இல்லாவிட்டால் எதிர்த்திசையில் வெறித்தனமாகவோதான் போகும். அதனால், நமது மதம் செய்கிற முதல் காரியம் நானாவிதமான லௌகிக ருசிகளிலேயே ஸந்தோஷிக்கிற மனஸை நானாவிதமான தெய்விக ருசிகளைக் காட்டி ஸந்தோஷப்படுத்தி, அந்த மனஸின் அழுக்கை எடுத்துத் தெளிவு பண்ணுவது தான். இப்படி நன்றாக அழுக்குப் போய் தெளிந்த தெளிவாக ஆகிப் பக்குவப்பட்ட அப்புறம், முடிவில்தான், நானா தினுஸு என்கிற த்வைத அநுபவங்களை விட்டு ஒன்றேயான அத்வைதம் என்று கொண்டு போவது.

அதனால் பிள்ளையார், ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி, அம்பாள், சிவன், விஷ்ணு, ராமன், க்ருஷ்ணன், நவக்ரஹம், ஐயனார் என்று எல்லாவற்றையும் வைத்துக்கொண்டே விதவிதமாக அலங்காரம் பண்ணி, உபசாரம் பண்ணி, நைவேத்தியம் பண்ணி, ஒவ்வொன்றுக்கும் அததற்கான நியமங்களை அநுஷ்டானம் பண்ணி ருசி பேதத்திலேயே நிறைவு காண்கிற மனஸுக்கு ஸந்தோஷம் கொடுத்துக் கொடுத்து, தத் – த்வாராவே (இதன் மூலமே) அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே உசத்திக்கொண்டு போவோம். லௌகிகத்திலேயே அழுந்திக் கிடக்கிற மனஸை எப்படியோ ஒரு அப்படி தெய்வ விஷயமாகக் கொஞ்சம் தொட்டுகொண்டு அதிலே ஒரு ஸந்தோஷம் அடையும்படிப் பண்ண இது (பல தெய்வ வழிபாடு) ஒத்தாசை பண்ணுகிறதா இல்லையா?

குழந்தைகளுக்கு ஒரே வர்ணத்திலுள்ள ஒரு பொருளைக் காட்டிலும் கலர் கலராகக் காட்டினால் ஒரே உத்ஸாஹம், குஷி பிறந்து சிரித்துக் கூத்தாடும். அத்யாத்ம ரீதியில் நாமும் அந்தக் குழந்தை மாதிரிதான். அதனால் அத்தனை ‘ஹிண்டு பாந்திய’னையும் வெட்கப்படாமல் வைத்துக் கொண்டு, ஒரே மூர்த்திதான் என்னும்போது ஏற்படக்கூடிய சலிப்பு இல்லாமல் [சிரித்துக்கொண்டு] ‘போர்’ அடிக்காமல், ஏதோ தெரிந்த மட்டும் வழிபாடு பண்ணி, ஏதோ நமக்குக் கிடைக்கிற மட்டும் கொஞ்சம் பக்தி ருசியை அநுபவிப்போம். ஏக ரஸம் எல்லாம் அப்புறம்தான், இப்போது அவியல்தான்!

எடுத்துக் கொண்ட விஷயத்தின் உயர்வை விசேஷப்படுத்திக் காட்டுவதற்காகத்தான் தத்ஹேது ந்யாயப்படி விக்நேச்வர உபாஸனை ஒன்று மாத்திரமே போதும் என்று காட்டியிருக்கிறதே தவிர, இதனால் நடைமுறையில் அப்படியே எல்லாரும் பண்ணி விடவேண்டும், மற்ற ஸ்வாமியையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட வேண்டுமென்று அர்த்தமில்லை. இந்த ச்லோகத்தைப் பண்ணினவரே எல்லா ஸ்வாமியையும் ஸ்தோத்ரம் பண்ணினவர்தான். விக்நேச்வர பூஜையே போதுமென்றில்லாமல் விசேஷமாக சிவாராதனம் பண்ணினவர்தான்.

ந்யாய ரீதியாக புத்தி மட்டத்தில் ஒன்றை நிலைநாட்டி விட்டால் போதுமா? மனஸ், மனஸ் என்று ஒன்று, அதுதானே புத்திக்கு மேலே நம்மைப் பிடித்துக்கொண்டு ஆட்டி வைக்கிறது? பக்தி என்று வந்துவிட்டால் அங்கே புத்தியையே கொண்டுவரக் கூடாது என்று கூடச் சொல்கிறார்களே!

ஆனபடியால் புத்தி லெவலில் ந்யாயம் சொல்வது அப்படியே இருக்கட்டும், நம்முடைய ஸ்டேஜில் நமக்கு அது நிறைவு தரவில்லை என்றால், ஸகல தேவதாராதனம், இஷ்ட தெய்வ ஆராதனம் என்று எதில் ஸந்துஷ்டியோ அதன்படி செய்வோம். இப்படியும் அப்படியுமாகக் கலந்து கலந்து வேண்டுமானாலும் செய்வோம்.

அதே ஸமயத்தில், புத்தி ரீதியில் ஆராய்ந்து பார்த்தால் இப்படி ஸர்வ தேவதோபாஸனா பலன்களையும் விக்நேச்வரர் ஒருத்தரின் மூலமே, அவரொருவரை மட்டும் வழிபடுவதனாலேயே, அடையமுடியும் என்பதான ஒரு பெரிய சிறப்பு அவருக்கு நிச்சயமாக இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்வோம். நாம் பல பேரை வழிபடுகிறபோது, முதலில் அவரிடம் வந்து குட்டிக் கொள்ளும்போது, புத்தி ரீதியில் நாம் தெரிந்துகொண்ட இந்த ந்யாயமே நம்முடைய ஹ்ருதயத்திலும் பளிச்சென்று நினைவுக்கு வந்து அவரிடம் நாம் செய்கிற பக்திக்கு ஒரு ஜீவனை ஊட்டிவிடும்.

பிள்ளையாரும் தர்க்க சாஸ்திரமும்

ஸரி, தர்க்க சாஸ்த்ரத்துக்கும் பிள்ளையாருக்கும் என்ன ஸம்பந்தம்?

தர்க்க சாஸ்த்ரத்தில் ‘இதனால் இது இப்படி’ என்று காரண – காரியங்களை அறிவு ரீதியில் இசைத்துக் காட்டி வகுத்துள்ள விதிகளுக்கு ‘ந்யாயம்’ என்று பெயர். அதனால் தான் அந்த சாஸ்த்ரத்துக்கே ‘ந்யாயம்’ என்று விசேஷப் பெயர் ஏற்பட்டிருக்கிறது. உவமைகளைக் கொண்டும் நமக்குப் புரியுமாறு பல ‘ந்யாய’ங்களை வகுத்துத் தந்திருக்கிறது. ந்யாய சாஸ்த்ர நூல்களில் சொல்லியிருப்பவற்றோடு ஆன்றோர் வசனத்திலும் பொது வழக்கிலும் பிறந்த இப்படிப்பட்ட அநேக ந்யாயங்களும் உள்ளன. உதாஹரணமாக: உத்தேசமில்லாமல் தற்செயலாக ஒன்றை அடுத்து இன்றொன்று நடக்கும்போது ‘காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது’ என்கிறோமல்லவா? இதற்குக் ‘காக – தாளீய ந்யாயம்’ என்று பெயர். ‘தாளி’ என்றால் பனை. ‘தாலி’ கூட அதிலிருந்து வந்ததுதான். ஸம்ஸ்க்ருதத்தில் ‘ல’வுக்கும் ‘ள’வுக்கும் பேதம் கிடையாது.

ஸ்திரீகளின் ஸெளமங்கல்யத்துக்கு முக்கியமான சின்னங்கள் காதுத் தோடும், கழுத்திலுள்ள மங்கள ஸூத்ரப் பதக்கமும்தான். ஆதியில் ரொம்பவும் எளிமையாக நம் பெரியோர்கள் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருந்தபோது இந்தக் காதணி, கழுத்தணி இரண்டுமே பனையோலையால் ஆனதாகத்தான் இருந்தன. அதனால் தான் வைரத் தோடானால்கூட அதைப் பிற்காலத்திலும் வைர ஓலை என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. ‘ச்யாமளா நவரத்னமாலை’ யில் அம்பாளையே ‘தாளீ பலாச தாடங்காம்’ என்று சொல்லியிருக்கிறது. அம்பிகையே பனை ஓலையைத்தான் தாடங்கமாகச் சுருட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறாளாம். கழுத்தின் மங்கள ஸூத்ரப் பதக்கமாகவும் அந்த ஓலை நறுக்கே இருந்திருப்பதால்தான் அதற்குத் தாலி என்று பேர் ஏற்பட்டிருக்கிறது.

பிள்ளையாரை விட்டு விஷயம் எங்கேயோ போய்விட்டது!

அத்வைத வேதாந்தம், ந்யாய ஸித்தாந்தம் ஆகியவற்றைப் பற்றிய ‘ந்யாயேந்து சேகர’ த்தில் பிள்ளையாரைப் பற்றி இருப்பதைச் சொல்லவந்தேன்.

‘இன்ன அடிப்படையினால் இது இப்படி நிரூபிக்கப்படுகிறது’ என்று காட்டுவனவாக ந்யாயங்கள் என்று பல உண்டு என்று சொன்னேனல்லவா? ஒரு புஸ்தகம் என்றிருந்தால் அதில் முதலில் ‘மங்கள ச்லோகம்’ என்று இருக்கும். ‘பாயிரம்’, ‘கடவுள் வணக்கம்’ என்றெல்லாம் சொல்வது இதைத்தான். சற்றுமுன் சொன்னாற்போல், இப்படிப்பட்ட மங்கள ச்லோகங்களில் எடுத்த எடுப்பில் உள்ளது பிள்ளையாரைப் பற்றியதாகத்தானிருக்கும். ‘ந்யாய ஸம்பந்தமாக நாம் எழுதுகிற இந்தப் புஸ்தகத்தில் ஆரம்ப ச்லோகமாயிருக்க வேண்டிய பிள்ளையார் ஸ்துதியிலேயே ஏதாவதொரு ந்யாயத்துக்கு எடுத்துக்காட்டு கொடுத்துவிட்டால் எவ்வளவு பொருத்தமாக இருக்கும்?’ என்று ராஜு சாஸ்திரிகள் (மன்னார்குடி பெரியவர்கள்) நினைத்தார். மஹா பண்டிதரானதால் நினைத்தபடியே ச்லோகம் பண்ணி விட்டார். பிள்ளையாரை அதுதான் தர்க்க சாஸ்த்ரத்தோடு ஸம்பந்தப்படுத்திவிடுகிறது.

தேவதையரின் இடையூறும் தீர்ப்பவர்

இதிஹாஸகாவ்யம் ஒன்று என்றால் அதன் ஆரம்பத்தில் வாக்தேவியாயும் வித்யாதி தேவதையாகவும் இருக்கப்பட்டவளை ஸ்தோத்ரிப்பதே பொருத்தம். அதுவே போதும் என்று தோன்றலாம். ஆனால் அவளுக்கும் முந்திப் பிள்ளையாரை ஸ்தோத்ரிக்க வேண்டியிருக்கிறது. ஏன் இப்படி?

அவளை நாம் ஸ்தோத்ரிப்பதற்கே ஏதாவது விக்னம் ஏற்பட்டுவிட்டால் என்ன பண்ணுவது? அதனால் முதலில் விக்னங்களைப் போக்கடிக்கும் விக்நேச்வரரை ஸ்தோத்ரிக்க வேண்டியதாகிறது.

இதைவிடவும் முக்யமாக இன்னொரு காரணமும் உண்டு. நாம் ஸ்தோத்ரிக்க முடியாமல் நமக்குத்தான் விக்னம் ஏற்படுமென்றில்லை. நாம் ஸ்தோத்ரிக்கும் தேவதை நமக்கு அநுக்ரஹம் பண்ணமுடியாமல் அந்த தேவதைக்கும் ஏதாவது விக்னம் ஏற்படலாம். புராணங்களைப் பார்த்தால் தெரியும், ஸாக்ஷாத் பார்வதி பரமேச்வரர்கள், மஹாவிஷ்ணு, அவருடைய அவதாரங்கள், ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி முதலானவர்களுக்குக் கூடச் சில ஸந்தர்பங்களில் எடுத்த கார்யத்தை முடிக்கமுடியாமல் விக்னங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அப்போது அந்த தெய்வங்களும் விக்நேச்வரருடைய ஸஹாயத்தைக் கோரிப் பெற்று, அவருடைய அருளாலேயே விக்னத்திலிருந்து நிவாரணம் பெற்றிருக்கிறார்கள்*. ப்ரம்மாதி தேவர்களும் இவரை நமஸ்கரித்தே க்ருத க்ருத்யர்களாவார்களென்று தானே (ஆரம்பத்தில் சொன்ன) ச்லோகத்திலும் பார்த்தோம்? அதனாலேயே இவருடைய துணை அவர்களுக்கு இல்லாவிட்டால் அவர்களுடைய கார்யங்களும் நிறைவேறாமல் விக்னம் ஏற்படுமென்று தெரிகிறதல்லவா? ஆகையினால்தான் ஒரு காவ்ய ஸ்ருஷ்டியாயிருந்து அதன் ஆரம்பத்தில் ஸரஸ்வதியை ஸ்துதிப்பதானாலும், இதே மாதிரி, தனலாபத்துக்காக லக்ஷ்மியை ஸ்துதிப்பதானாலும், நோய் நொடி தீருவதற்காக ஸூர்ய நாராயணனை ஸ்துதிப்பதானாலும், இப்படியே எந்த லக்ஷ்யத்தை முன்னிட்டு எந்த ஸ்வாமியை ஸ்துதிப்பதானாலும், அந்த ஸ்வாமியின் கார்யத்துக்கும் விக்னம் ஏற்படாமல் ரக்ஷிக்கும் பிள்ளையாரைத்தான் முதலில் ஸ்துதிக்க வேண்டுமென்று ஏற்பட்டிருக்கிறது.

ருத்ராபிஷேகமாக இருக்கட்டும், சண்டி ஹோமமாக இருக்கட்டும், வேங்கடரமண ஸ்வாமி ஸமாராதனையாக இருக்கட்டும், எந்தச் சடங்காகத்தான் இருக்கட்டும், பிள்ளையாருக்கு ‘சுக்லாம்பரதரம்’ குட்டிக்கொள்ளாமல் எதுவும் தொடங்குவதில்லை! பிரம்மாதி தேவதைகளில் யாரானாலும் தங்கள் காரிய நிறைவேற்றத்துக்காக அவர்களும் இவரை நமஸ்கரித்தாக வேண்டியிருக்கிறது என்பதாலேயே அவர்களிடம் நாம் ஒரு கார்யத்தை எதிர்பார்த்துப் போய் வழிபாடு நடத்தும் போது, அவர்களுக்கும் முந்தி இவரை வழிபடவேண்டுமென்று விதி ஏற்பட்டுவிடுகிறது.


* “தெய்வத்தின் குரல்” நான்காம் பகுதியில் ‘பிற தெய்வங்களும் போற்றும் பிள்ளையார்‘ என்ற உரை பார்க்க.

“பால சந்த்ரன்”

‘பனிஷ்மென்டை’ இவ்வளவு ‘கன்டோன்’ பண்ணினது (குறைத்தது) போதாதென்று, மிகவும் அருள் நெஞ்சோடு சந்த்ரனுக்குச் சில ‘ப்ரிவிலேஜ்’களும் கொடுத்தார். பெரிய ‘ப்ரிவிலேஜ்’ என்னவென்றால் பிறைச் சந்திரனைத் தூக்கிப் பிள்ளையார் தம் கிரீடத்திலேயே சூட்டிக்கொண்டதுதான்!

பரமேச்வரனைப் போலவே, அம்பாள் விக்நேச்வரர் ஆகிய இரண்டு பேருக்கும் தலையில் சந்த்ரகலை உண்டு.

இதனால் பிள்ளையாருக்கு “பாலசந்த்ரன்” என்றே ஒரு பெயரிருக்கிறது. அவருடைய ஷோடச நாமாக்களிலேயே* இது ஒரு பெயர். Baala-Chandran, அதாவது ‘குழந்தை சந்த்ரன்’ என்று ரொம்பப் பேர் இதைத் தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். Baa இல்லை. அது தப்பு Bhaa என்பதே ஸரி. pa, pha, ba, bha என்று ஸம்ஸ்க்ருதத்தில் நாலு இருப்பதில் நாலாவதான bha – காரம் போட்டு Bhaala – Chandran என்று சொல்ல வேண்டும். Bhaalam என்றால் நெற்றி அல்லது முன்தலை. முன்னந்தலையில் எவர் சந்த்ரனை தரித்துக் கொண்டிருக்கிறாரோ அவர் Bhaalachandran. அல்லது இரண்டாவது ‘ப’-வாக Phaala என்று சொல்லாம். அப்படிச் சொன்னால் கேசத்தில் இரண்டு பக்கங்களில் ஒன்று. ஈச்வரன் ஜடாபாரத்தில் நேராகச் சந்த்ரனை வைத்துக் கொள்ளாமல் இடது பக்கமாகச் சாய்த்து வைத்துக் கொண்டிருப்பதாக அநேக சில்ப சித்ரங்களில் பார்க்கிறோமல்லவா? அங்கே பரமசிவன் Phaala Chandran-னாகவே இருக்கிறார். ஆனால் பாலசந்த்ரன் என்ற பேர் முக்யமாகப் பிள்ளையாருடையதுதான்.

ஏனென்றால் பரமேச்வரன் சந்த்ரன் பண்ணின தப்பை க்ஷமித்தது பெரிசில்லை. சந்த்ரன் ஈச்வரனிடமே நேராகத் தப்புப் பண்ணவில்லை. பத்னிகளுக்குத்தான் தப்புப் பண்ணினான். அவர் தண்டித்தார். அவன் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். அவரும் மன்னித்துவிட்டார்.

பிள்ளையாரிடமோ சந்த்ரன் நேராகவே அபசாரப்பட்டு விட்டான். அவரையே தான் அவன் பரிஹாஸம் பண்ணினது. அப்படிப் பண்ணினவனை அவர் க்ஷமித்ததுதான் பெரிசு.

ஒருத்தரை ரொம்பவும் ஸ்தோத்திரித்தால், “என்ன தலைக்கு மேலே தூக்கி வெச்சுண்டு கூத்தாடறே?” என்று கேட்கிற வழக்கமிருக்கிறது. தன்னைப் பரிஹாசம் செய்த சந்த்ரனிடம் பரிவு கொண்ட கணபதி அவனை நிஜமாகவே தூக்கித் தலை மேல் வைத்துக்கொண்டு ஆனந்தமாகக் கூத்தாடினார். ‘ந்ருத்த கணபதி’, ‘கூத்தாடும் பிள்ளையார்’ என்று அவருக்குப் பெயர்.

‘எத்தனை பார்த்தாலும் தெவிட்டாதது’ என்ற பெருமை யானை, சந்த்ரன் இரண்டுக்கும் உண்டு. இப்போது இவற்றில் ஒன்று மற்றொன்றின் தலையில் போய் உட்கார்ந்துவிட்டது, பரஸ்பரம் அழகுக்கு அழகு செய்துகொள்கிற மாதிரி!


* முதல் உரையான “பெரிய இடத்துப் பிள்ளை”யில் கடைசிப் பகுதியான “முருகனும் மூத்தோனும்” பார்க்க.

கேள்வி பதில்; கதைக்குள் கதை

புராணங்களில் இப்படித்தான் ஒருத்தர் கேள்வி கேட்டு இன்னொருத்தர் பதில் சொல்வதாகவே வ்ருத்தாந்தங்கள் வரும். எல்லாப் புராணங்களுமே ஜெனரலாக நைமீசாரண்ய முனிவர்களின் கேள்விகளுக்கு ஸூதர் பதிலாகச் சொன்னவைதான். அது தவிர ஒவ்வொரு புராணமும் ‘பர்ட்டிகுலராக’ ஒருத்தர் கேள்விக்கு பதிலாக இன்னொருத்தர் சொன்னதாகும். த்ருஷ்டாந்தமாக, பாகவதமும் ஸூதர் நைமிச ரிஷிகளுக்கு உபதேசித்ததுதானென்றாலும், அதைக் குறிப்பாக பரீக்ஷித்துக்கு உபதேசித்த சுகாசார்யாளின் வாக்கிலேயே நாம் பெற்றிருக்கிறோம். இதிஹாஸங்களான1 ராமாயண, மஹாபாரதங்களைப் பார்த்தால் — வால்மீகி மஹர்ஷி, ‘ஸகல உத்தம குணங்களும் நிறைந்து இருக்கிறவன் யார்?’ என்று கேட்க, அதற்குப் பதிலாக நாரதர் ராமசரித்ரத்தைச் சொன்னதாகவும், அப்புறம் அதை வால்மீகி ஸ்ரீமத் ராமாயண காவ்யமாக்கி லவ குசர்களுக்குக் கற்றக்கொடுத்தபடி அந்த இரண்டு குழந்தைகளும் ராமருக்கு முன்னேயே அச்வமேத மஹா மண்டபத்தில் பாடினதாகவும் இருக்கிறது. பாரதமும் நைமிச ரிஷிகளுக்கு ஸூதர் சொன்னதுதான். ஆதி காவ்யம் என்கப்பட்ட ராமாயணத்துக்கு மட்டும் ஸூதர் — நைமீசாரண்ய ரிஷிகள் ஸம்பந்தமில்லை. பர்ட்டிகுலராக பாரதக் கதையைப் பாண்டவர்களுடைய கொள்ளு பேரனான ஜனமேஜயனுக்கு வைசம்பாயனர் சொன்னதாகவும், இதையே வ்யாஸர் காவ்யமாக்கிச் சொல்ல விக்நேச்வரர் எழுதி வைத்ததாகவும் கதை. இப்படி ஒருத்தர் இன்னொருத்தருக்குச் சொல்லும் ஒவ்வொரு புராண — இதிஹாஸத்தின் நடுநடுவிலேயும் கதாபாத்ரங்கள் கேள்வி கேட்க, நாரதர், அகஸ்த்யர், மார்க்கண்டேயர் முதலான ரிஷிகள் பதிலுக்கு உபாக்யானங்கள் சொன்னதாக வரும். ராமாயணத்தின் உத்தரகாண்டத்தில் ராவணாதியர் சரித்ரமெல்லாம் அகஸ்த்யர் ராமருக்குச் சொன்னதாகவே வருகிறது. இந்த அகஸ்த்யரே கேள்வி கேட்க அவருக்கு ஹயக்ரீவர் சொன்னதுதான் ப்ரஹ்மாண்ட புராணத்தில் வரும் லலிதோபாக்யானம். மஹாபாரதத்தில் இப்படி அநேக ரிஷிகள் அநேக உபாக்யானங்களைப் பாண்டவர்களுக்குச் சொன்னதாக — குறிப்பாக அவர்களுடைய வனவாஸ காலத்தில் சொன்னதாக — வருகிறது. அப்படித்தான் இங்கே ஸ்காந்தத்தில் க்ருஷ்ண பரமாத்மா ‘வளர்பிறையில் சதுர்த்திச் சந்த்ரனை ஏன் பார்க்கக்கூடாது?’ என்று கேள்வி கேட்டதற்கு நாரதர் பதிலாகச் சொன்ன கதை வருகிறது. அப்புறம் இப்படி க்ருஷ்ணர் நாரதரைக் கேட்ட விவரத்தையும் சேர்த்து இந்தக் கதையை நந்திகேச்வரர் ஸநத் குமாரருக்குச் சொன்ன final shape-ல் கொடுத்திருக்கிறது.


1 புராணத்துக்கும் இதிஹாஸத்துக்குமுள்ள மாறுபாடு குறித்து “தெய்வத்தின் குரல்” இரண்டாம் பகுதியில் ‘புராணம்’ என்ற உரையில் ‘இதிஹாஸம் – புராணம்; பெயர் விவரம்‘ என்ற உட்பிரிவு பார்க்க.

பாத்ரபதம்; பஞ்சாங்க வித்யாஸம்

பாத்ரபதம் என்பது ஒரு இரட்டை நஷத்ரம். பூர்வ பாத்ரபதம், உத்தர பாத்ரபதம் என்று அந்த இரண்டு நஷத்ரங்களுக்கும் பேர். ப்ரோஷ்ட பதம் என்றும் சொல்வார்கள். பொதுவாக, மாஸத்தைக் குறிக்கும் போது – அதாவது இந்த நட்சத்திரங்களில் ஒன்றில் பௌர்ணமி வருகிற மாஸத்தைக் குறிப்பிடும்போது –  பாத்ரபதமென்றும், நக்ஷத்ரத்தையே குறிப்பிடும்போது ப்ரோஷ்டபதம் என்றும் சொல்வது வழக்கம். பூர்வ ப்ரோஷ்டபதீ. உத்தர ப்ரோஷ்டபதீ என்று இருப்பதைத்தான் திரித்துப் பூரட்டாதி, உத்திரட்டாதி என்கிறோம். பௌர்ணமியன்று ப்ரோஷ்டபதி நட்சத்திரத்தைக் கொண்ட மாஸமாகிய ப்ரோஷ்டபதியைத் தான் இன்னொரு விதத்தில் திரித்துப் புரட்டாசி என்கிறோம்.

ஆனால் நம்முடைய புரட்டாசியும் ஸரி, இதே மாதிரி நக்ஷத்ரங்களின் பேர்களையுடைய மற்றப் பதினோரு மாஸங்களும் ஸரி, கரெக்டாக அந்தப் பௌர்ணமியில் அந்த நக்ஷத்ரம் வருவதாகத்தானிருக்க வேண்டுமென்றில்லாமல் ஒரு மாஸம் முன் பின் தள்ளியும் போய்விடுவதுண்டு, காரணம், நாம் மாஸப் பேரை பௌர்ணமி நக்ஷத்ரத்தைக் கொண்டு சித்ரா, விசாகம், கார்த்திகம் என்கிறதுபோல நக்ஷத்ரத்தின் பேரில் வைத்துக்கொண்டாலும், வாஸ்தவத்தில் இதற்கு ஸம்பந்தமில்லாமல் மாஸப் பிறப்பை ஸூர்யன் பன்னிரண்டு ராசிகளில் ஒவ்வொன்றாகப் பிரவேசிக்கும் தினமாகத்தான் வைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்தேசத்திலுள்ள நாம் பின்பற்றும் இந்த விதமான மாஸத்துக்கு ‘ஸெளரமானம்’ என்று பேர்.

தெலுங்கர், கன்னடஸ்தர் முதலானவர்களும், வடக்கத்தியர்களில் பெரும்பாலாரும் அநுஸரிக்கும் ‘சாந்த்ரமானம்’ என்ற பஞ்சாங்கத்தின்படி அமாவாஸ்யையை அடுத்து வரும் வளர்பிறைப் பிரதமையில் ஒவ்வொரு மாஸமும் பிறக்கும். அந்த விதமான மாஸத்தில்தான் அந்த மாஸத்தின் பெயர் எந்த நக்ஷத்திரத்தை வைத்து இருக்கிறதோ அதுவும், வாஸ்தவமாகவே அந்தப் பௌர்ணமியில் அல்லது பௌர்ணமிக்கு நெருக்கமான திதியில் வருகிற நக்ஷத்ரம் எதுவோ அதுவும் முன்னே பின்னே தள்ளிப்போகாமல் கரெக்டாக ஒத்துப் போகும்.

பண்டிகைகளெல்லாம் இந்த சாந்த்ரமான மாஸப்படியே நிர்ணயமானவை. ஆகையால் பிள்ளையார் சதுர்த்தி பாத்ரபத மாஸத்தில் சுக்ல பக்ஷச் சதுர்த்தியன்று என்றால், அது எப்போதும் தெலுங்கர், கன்னடஸ்தர் ஆகியவர்களுக்கு அவர்களுடைய பாத்ரபத மாஸத்திலேயேதான் வரும். நமக்கு (ஸெளரமானத்தைப் பின்பற்றும் தமிழ் தேசத்தவர்களுக்கு) இப்படியில்லாமல், பிள்ளையார் சதுர்த்தி புரட்டாசியாகவுமிருக்கலாம், அல்லது ஆவணியிலேயே வந்தாலும் வந்துவிடலாம். காரணம் என்னவென்றால் நம்முடைய பங்குனி அமாவாஸ்யை ஆன மறுதினமே அவர்களுடைய சித்திரை பிறந்து, இதேபோல ஒவ்வொரு மாஸத்திலும் நடந்து, நம்முடைய ஆவணி அமாவாஸ்யையான மறுதினமே அவர்களுடைய புரட்டாசி (அதாவது பாத்ரபத மாஸம்) பிறந்துவிடும். அதிலே நாலு நாளுக்கப்புறம் சதுர்த்தி வருகிற போது ஸூர்யன் ஸிம்ஹ ராசியைவிட்டுக் கன்யா ராசிக்குப் போகாமலே இருக்கலாம். (அநேகமாக இப்படித்தானிருக்கிறது). ஸூர்யனின் கன்யா ப்ரவேசத்தன்றுதான் நம் புரட்டாசி பிறப்பதால், இம்மாதிரி வருஷங்களில் நமக்கு ஆவணியிலேயே பிள்ளையார் சதுர்த்தி வந்துவிடுகிறது.

இதே மாதிரிதான் ஸ்ரீராம நவமி என்றால், அது எப்போதும் சாந்த்ரமானக்காரர்களுக்கு சித்திரை மாஸ நவமியாகவே இருக்க, நமக்கோ சில ஸமயம் பங்குனி, சில ஸமயம் சித்திரை என்று இருக்கிறது. இப்படியே கோகுலாஷ்டமி, நவராத்திரி முதலான எல்லாப் பண்டிகையுமே நமக்கு (முறையே) ஆடியாகவோ ஆவணியாகவோ இருக்கலாம், புரட்டாசியாகவோ ஐப்பசியாகவோ இருக்கலாமென்றிருக்க, அவர்களுக்கு கோகுலாஷ்டமி என்றால் ச்ராவண (அவர்களுடைய ஆவணி) க்ருஷ்ண பக்ஷ அஷ்டமிதான், நவராத்திரி என்றால் ஆச்வின (ஐப்பசி) சுக்லபக்ஷத்தின் முதல் ஒன்பது தினங்கள்தான் என்று தீர்மானமாக இருக்கிறது1.

சாந்த்ரமான பாத்ரபத மாஸத்தில் அதாவது நம்முடைய ஆவணி அல்லது புரட்டாசி மாஸத்தில் வரும் வளர் பிறைச் சதுர்த்திதான் நாரத பகவான் குறிப்பிட்ட ‘பாத்ரபத சுக்ல சதுர்த்தி’ என்று சொல்ல வந்தேன்.

அதுதான் பிள்ளையார் சதுர்த்தி தினம்.

அப்படிப்பட்ட ஒரு தினத்தில் க்ருஷ்ணர் ஆகாசத்தில் தெரியும் சந்த்ரனைப் பார்த்துவிட்டார். அது எந்த தினம் என்று உங்களுக்கு நினைவிருக்கலாம். ப்ரஸேனனோடு வேட்டைக்குப் போய், அங்கே அவன் பிரிந்துபோய், பகவான் ரொம்பநாழி காத்திருந்து, அப்புறம் ஆகாசத்தைப் பார்த்து, ‘அடேடே, நாலாம் பிறைகூட உதித்து விட்டது!’ என்று ஊருக்குத் திரும்பினாரே, அந்த தினம்தான்!

இப்படிச் சதுர்த்திச் சந்தரனை அவர் பார்த்ததால்தான் அவர்மீது விக்நேச்வரரின் சாபம் பலித்துத் தப்பான அபவாதம் ஏற்பட்டுவிட்டது என்று நாரதர் தெரிவித்தார்.

அவர் இப்படி சொன்னவுடன் பகவான், “சுக்லபக்ஷ சதுர்த்தியில் சந்த்ரனைப் பார்ப்பதால் இப்படி தோஷம் ஸம்பவிக்கவேண்டுமென்று விக்நேச்வரர் ஏன் சபித்தார்?” என்று கேட்டார்.

நாரதர் அவருக்கு ஸவிஸ்தாரமாகக் கதை சொல்ல ஆரம்பித்தார்.


1 சாந்த்ரமான, ஸௌரமான மாதங்கள் விஷயமாக “தெய்வத்தின் குரல்” – மூன்றாம் பகுதியில் ‘ஆசாரமும் ஆஹாரமும்’ என்ற உரையில் ‘சாதுர்மாஸ்யமும் அதில் போஜன விதியும்‘ என்ற உட்பிரிவிலும் கூறப்பட்டுள்ளது.

கண்ணனின் வைராக்யம்

வெளியிலே எத்தனை கூத்தடித்தாலும், ஜார சோர சிகாமணி என்னும்படியாக வெண்ணெயைத் திருடுவது, கோபஸ்த்ரீகளோடு ராஸலீலை பண்ணுவது, பதினாறாயிரம் பத்னிகளோடு குடும்பம் நடத்துவது என்றெல்லாம் பண்ணினாலும், உள்ளுற ஒன்றிலும் ஒட்டாமல், ஆசாபாசமேயில்லாமலிருந்த பரமஞானி, பரப்ரஹ்ம வஸ்து கிருஷ்ண பரமாத்மா, கம்ஸனை வதம் பண்ணினவுடன் அவர் தமக்கே ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து கொண்டிருக்க எல்லா நியாயமும் உண்டு. அவரிடம் அப்படியே மோஹித்துப் போயிருந்த மதுரா ஜனங்களும் அவர் தங்களுக்கு ராஜாவாகிறாரென்றால் ரொம்ப ஆனந்தப்பட்டுத்தானிருப்பார்கள். ஆனாலும் ராஜ்யாதிகாரத்தில் ஆசையில்லாத அவர் கம்ஸனின் தகப்பனாரான உக்ரஸேனனைத்தான் ராஜாவாக்கினார். உக்ரஸேனன் இவருக்கும் தாய்வழிப் பாட்டனார். சொந்தப் பாட்டனார் இல்லை. அம்மா தேவகிக்குச் சிற்றப்பா. கம்ஸவதம் ஆன அப்புறம் பகவான் மதுராவை விட்டுவந்து சின்ன ராஜ்யமாக த்வாரகா நிர்மாணம் பண்ணிக்கொண்டு ‘த்வாரகாதீசன்’ என்னும் படியாக வாழ்ந்தபோதுங்கூட, தம்மை அதற்கு ‘ஸாவரின்’ என்னும் தனி ராஜாவாக ப்ரகடனம் பண்ணிக்கொள்ளவில்லை. அண்ணா பலராமருக்கு த்வாரகையில் உயர்ந்த ஸ்தானம் கொடுத்துத் தாம் இரண்டாவதாகவே இடம் எடுத்துக் கொண்டார். பூர்ணாவதாரமாயிருந்தும் இப்படி அடக்கமாகவும், பொருளாசையற்ற வைராக்யத்துடனும் க்ருஷ்ணர் வாழ்ந்து காட்டினார்.

அம்ருதம் கடைந்து மஹாலக்ஷ்மி உத்பவித்து மஹாவிஷ்ணுவைப் பதியாக வரித்த இடத்திலேயே இப்படித்தான் (பாகவதத்தில்) மஹாவிஷ்ணுவைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. அவர் மண்ணாசை பொன்னாசை மாதிரியே பெண்ணாசையும் கொஞ்சங்கூட இல்லாதவர். பாக்கி எல்லா தேவர்களும் லக்ஷ்மி தனக்கு மாலைபோட மாட்டாளா, தனக்கு மாலை போடமாட்டாளா என்று தவித்துக் கொண்டிருந்தபோது மஹாவிஷ்ணு மட்டும் பரம வைராக்யமாக அவர் பாட்டுக்கு ஒதுங்கி உட்கார்ந்து கொண்டிருந்தாராம். அதனாலேயே ‘இத்தனை த்ருடமனஸ் உள்ளவரைப் பதியாய் அடைந்து அவருடைய ப்ரேமையையும் பெறும்படியாக நாம் வாழ்ந்து காட்டினால்தானே நமக்குப் பெருமை?’ என்று லக்ஷ்மி நினைத்து அவருக்கே மாலை போட்டாளாம். அவருக்கு எத்தனைக்கெத்தனை வைராக்யமுண்டோ அத்தனைக்கத்தனை கருணையும் உண்டாதலால் உடனே அவளைத் தூக்கி மார்பிலேயே வைத்துக் கொண்டுவிட்டார்!

க்ருஷ்ணர் ஆசையேயில்லாதவரென்று சொல்லவந்தேன். தானாகவே அவரைத் தேடிக்கொண்டு எல்லா ஐச்வர்யங்களும் வந்தன. மஹாவிஷ்ணுவின் சங்கு சக்ரம் கருடன் எல்லாம்கூட அவரிடம் அவ்வப்போது வந்ததாகப் பார்க்கிறோம். ராமர்கிட்டே இப்படி எதுவாவது வந்ததோ? இதேபோல மஹாவிஷ்ணு தரித்துக் கொண்டிருக்கும் கௌஸ்துப மணியும் க்ருஷ்ணர்கிட்டேதான் வந்தது. ‘கஸ்தூரி திலகம் லலாட பலகே வக்ஷஸ்தலே கௌஸ்துபம்‘ என்று பாடுகிறோம். அப்பேர்ப்பட்ட திவ்ய கௌஸ்துபத்தைப் போட்டுக் கொண்டிருப்பவருக்கு ஸ்யமந்தகத்திடம் எதற்கு ஆசை வரப்போகிறது?

ஸ்யமந்தகத்தை ஸத்ராஜித் தந்தால் தரட்டுமே என்று த்வனிக்கும்படியாக அவர் கொஞ்சம் பேசியிருந்தால் கூட, உக்ரஸேன மஹாராஜாவுக்கு அதை அவன் தரலாமே என்ற அபிப்ராயத்தில்தான் சொன்னாரே தவிர, தமக்காகச் சொல்லிக் கொள்ளவில்லை. அதுவுங்கூட தேசம் முழுவதன் க்ஷேமத்தை உத்தேசித்துத்தான் இப்படி Hint பண்ணினாரே தவிர, பாட்டனாரிடமிருந்த ப்ரியத்துக்காக அல்ல. ஸத்ராஜித் ஒரு தனி ப்ரஜை. ஆனபடியால், ஸ்யமந்தகம் அவனிடமிருந்தால் அது அளிக்கக்கூடிய மங்களங்கள் — ஆரோக்யம், எட்டு பாரம் தங்கம் முதலானதுகள் — அவன் குடும்பத்துக்கு மட்டுந்தான் போகும். அதுவே ராஜாவிடமிருந்தால் இந்த நன்மைகள் தேசம் பூராவுக்கும் சேருமே என்பதால்தான் சொன்னார்.

அர்த்த சாஸ்த்ரபடி, ஒரு தனி ஆஸாமியிடம் ராஜாவுக்கு இல்லாத ஒரு பெரிய ஸொத்து இருந்தால் அவன் ராஜாவுக்கு மேற்பட்டவன் என்கிற எண்ணத்தை ஜனங்களுக்குக் கொடுத்து அவர்களை அராஜகத்தில் தூண்டக்கூடுமென்பதால் இதை அநுமதிக்கவில்லை. விலைமதிப்பிட முடியாத ரத்னங்கள் ராஜாவை சேர்ந்தவைதான் என்பது அர்த்தசாஸ்த்ரத்தின் முடிவு. “ராஜா ரத்நஹாரி” என்று வசனம்.

இந்த அபிப்ராயத்தில் பகவான் ஏதோ ஸூசனையாகச் சொல்லப் போகத்தான் ஸத்ராஜித், ‘ராஜாவுமாச்சு, மந்த்ரியுமாச்சு? இவன் பார்த்து வைத்த ராஜாதானே? தாத்தா வேறே! அவன் பேரைச் சொல்லி இவனே தட்டிக் கொண்டுபோகப் பார்க்கிறான்’ என்று நினைத்துவிட்டான்.

பொருளாசை எப்படியெல்லாம் புத்தியை பேதகமாக நினைக்க வைக்கும் என்பதுதான் இந்த உபாக்யானத்தின் ‘மாரல்’ (நீதி).

க்ருஷ்ணரைத் தப்பாக நினைத்ததோடு மட்டுமில்லாமல் அவரிடம் ஸத்ராஜித் பயப்படவும் செய்தான். ‘மஹாமல்லர்களான சாணூரன், முஷ்டிகன் முதலானவர்களை பால்யத்திலேயே கொன்றவன்; கம்ஸனை த்வம்ஸம் பண்ணினவன்; மஹாபராக்ரமசாலியான ஜராசந்தனை பதினேழு தடவை அடித்துத் துரத்தியவன். அதோடு எல்லாக் கபடமும் செய்யக்கூடிய மாயாவி. இப்படிப்பட்டவனின் விரோதத்தை ஸம்பாதித்துக்கொண்டால் எப்படி ஈடுகொடுக்க முடியும்?’ என்று பயப்பட்டான்.

ஸ்யமந்தகத்தை விடவும் மனஸில்லாமல், வைத்துக் கொள்ளவும் தைர்யமில்லாமல் அவஸ்தைப்பட்டான்.

பொருள் என்ன பாடுபடுத்தும் என்று நமக்கெல்லாம் காட்டும் கதை.

அப்போதைக்கு மணியைத் தம்பி ப்ரஸேனனிடம் கொடுத்து வைத்துக் கொஞ்சம் நிம்மதிப்படுத்திக் கொண்டான். அவன் இவனைவிட புத்திசாலி; பலிஷ்டனுங்கூட, அதனால் உபத்ரவத்தை அவனிடந்தான் கொஞ்சம் தள்ளி விடுவோமே என்று தள்ளிவிட்டான்.

தம்பி ப்ரஸேனன் ஸந்தோஷமாக அந்த ஸ்யமந்தகத்தைப் போட்டு கொண்டு வேட்டைக்குப் புறப்பட்டான். (கிருஷ்ணனோடேயேதான் அவன் வேட்டைக்குப் போனானென்று ஸ்காந்தக் கதை. இங்கே சொல்வது பாகவதத்தையும், விஷ்ணு புராணத்தையும் அநுஸரித்தது.)

ஸ்யமந்தகத்தைப் போட்டுக் கொண்டிருப்பவன் உள்ளும் புறமும் சுத்தமாயிருக்கவேண்டுமென்று நிபந்தனை அல்லவா? ஆனால் இவன் காட்டுக்குப் போன இடத்தில் ஒரு அசுசி ஏற்பட்டது. அப்புறம், பக்கத்தில் எங்கேயும் ஜலாசயம் இல்லாததால், இவன் கை, கால் அலம்பிக்கொள்ள முடியவில்லை. இப்படி சரீர பரிசுத்தி கெட்டுப்போயிருந்த ஸமயம் பார்த்து ஒரு சிங்கம் வந்து அவனை அடித்துப் போட்டுத் தின்று விட்டது. குட்டி ஸூர்யனைப்போல இருந்த ஸ்யமந்தகம் சிங்கத்தையும் வசீகரப்படுத்தியது.

இருட்டு மூடின காட்டைப் பட்டப் பகலாக்குகிற அந்த ரத்னத்தை கவ்விக்கொண்டு சிங்கம் போய்க் கொண்டிருந்தது.