மத போதகரின் யோக்கியதாம்சங்கள்

இப்போது உலக நாடுகள் எல்லாவற்றிலும் உள்ள ஏராளமான தத்துவ ஆராய்ச்சிகாரர்களும் ஆத்ம சாதகர்களும் அத்வைதத்தையே பரம தத்துவமாக அங்கீகரிக்கிறார்கள். என்னை அத்வைத மதகுரு என்று சொல்கிறீர்கள். ஆனபடியால் அத்வைத சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வளவு பேர் இருப்பதற்குக் காரணம் அதன் சித்தாந்தத்தில் உள்ள சிறப்புதான் என்று நான் சொல்வேன் என்று எதிர்பார்ப்பீர்கள்.

ஆனால், எனக்கு நானே யோசித்துப் பார்க்கிறேன். அத்வைத சித்தாந்தம் ஒன்றை மட்டும் தான் சகல ஜனங்களும் பின்பற்றுகிறார்களா? உலகில் எத்தனையோ சித்தாந்தங்களை, எத்தனையோ மதங்களை மக்கள் அநுசரிக்கிறார்கள். ஒரு தேசத்து மக்களே ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்துக்கு மாறவும் செய்கிறார்கள். புத்தரின் காலத்தில் வைதிக மதஸ்தர்கள் பௌத்தத்தில் சேர்ந்தார்கள். பிற்காலத்திலும் எத்தனையோ ஹிந்துக்கள் கிறிஸ்துவ மதத்திலும் முகம்மதிய மதத்திலும் சேர்ந்திருக்கிறார்கள். ஜைனர்கள் வைஷ்ணவர்களாக மாறி “புஷ்டி மார்க்கிகள்” என்று பெயர் பெற்றிருக்கிறார்கள். ஸ்ரீராமாநுஜர் காலத்தில் பலர் விஷிஷ்டாத்வைதிகளானார்கள். ஸ்ரீ மத்வரின் காலத்தில் பலர் மத்வ சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஸ்ரீ ஆதி சங்கரரின் காலத்தில் அவைதிக மதங்களான பௌத்தம், ஜைனம் முதலியவற்றுக்கு நலிவு ஏற்பட்டது. வைதிக மதத்தில் ஒரு பாகமாகிய கர்ம மார்க்கத்தை மட்டும் அநுசரித்து வந்தவர்கள் அவரது காலத்தில் பூரண வைதிகமான அத்வைதத்துக்குத் திரும்பினார்கள். ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த மதங்கள் பிற்பாடு ஏன் தவிடு பொடியாக வேண்டும்? இப்படியாக ஒரு சமயத்தை, சித்தாந்தத்தை ஏற்கிற சகல ஜனங்களும் அதன் தத்துவங்களை ஆராய்ந்து பார்த்து அதனால்தான் அதில் சேருகிறார்களா? அறிவாளிகள் வேண்டுமானால் சித்தாந்தங்களை எடை போட்டு அதில் சேரலாம். ஆனால், ஒரு மதத்திலுள்ள ஏராளமான பொது ஜனங்களைப்பற்றி இப்படிச் சொல்லலாமா? நான் அப்படிச் சொல்ல மாட்டேன்.

பொது ஜனங்கள் தத்துவத்துக்காகவே ஒரு மதத்தை ஏற்கிறார்கள் என்றால், அவர்களிடம் ‘உங்கள் மத சித்தாந்தங்களைச் சொல்லுங்கள்’ என்று கேட்கும்போது அவர்களுக்குச் சொல்லத் தெரியவேண்டும். மற்ற சித்தாந்தங்களை விட இவை சிரேஷ்டமானவை என்பதற்கு அவர்களுக்குக் காரணம் சொல்லத் தெரிய வேண்டும். ஆனால், வாஸ்தவத்தில் எந்த மதத்திலும் இருக்கிற ஏராளமான பொது ஜனங்களுக்கு அந்தந்த மதத்தைப் பற்றிய கொள்கைகள் இப்படி விவாதிக்கிற அளவுக்கு நுணுக்கமாகத் தெரியாது. நம்முடைய ஹிந்து மதத்தில் உள்ளவர்களுக்கோ அடியோடு தெரியவே தெரியாது.

எனவே, எந்த மதமும் அதில் உள்ள தத்துவத்தினால் மட்டும் வளருவதில்லை என்பதுதான் என் அபிப்ராயம். சாமான்ய ஜனங்களுக்குத் தத்துவத்தைப் பற்றிக் கவலை இல்லை. நல்ல குணம், நல்ல பழக்கம் உள்ளவராக, கருணையும் சாந்தமும் உள்ளவராக ஒரு மகான் வந்தால் அவரைப் பார்த்த மாத்திரத்தில் ஜனங்களுக்கு நம்பிக்கை உண்டாகிறது. அவர் எந்த தத்துவத்தைச் சொன்னாலும் அது நல்லதாகத்தான் இருக்கும் என்ற திடமான நம்பிக்கையுடன் அவரது மதத்தில் ஜனங்கள் சேருகிறார்கள். மாறாக, ஒரு மதக்கோட்பாடுகள் எத்தனைத்தான் பரம தத்துவங்களை விளக்கினாலும், அந்த மதப் பிரதிநிதியாக இருக்கிறவர்களிடத்தில் ஒழுங்கு தப்பிவிட்டால் உடனே அந்த மதம் அழியத் தொடங்கி விடுகிறது. ஒன்றுக்கொன்று நேர் விரோதமான தத்துவங்களைக் கொண்ட மதங்களுக்கு ஏன் மக்கள் கூட்டம் கூட்டமாகப் போகிறார்கள் என்றால், இதற்கு நேராக (Direct) காரணம் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ‘இதுவே விசேஷமானது’ என்று ஜனங்கள் தலைக்கு மேலே தூக்கி வைத்துக் கூத்தாடிக் கொண்டிருந்த மதங்கள் எப்படி மங்கி அழிந்தன என்று பார்த்தால், அதற்குக் காரணம் தெரிகிறது. இதிலிருந்தே அவை எப்படி ஜனங்களை முதலில் கவர்ந்தன என்பதற்கும் பதில் கிடைக்கிறது. அதாவது, ஒரு மதம் எப்படி அழிகிறது என்று பார்த்தாலே அது எப்படி வாழ்கிறது, வளர்கிறது என்பதும் புரிகிறது.

எந்த தேசத்திலும் எந்த ஒரு மதமும் எப்படி அழிந்தது என்று பார்த்தால், அந்த மதத்தை வளர்க்கிற ஸ்தாபனங்களிலும், அதன் முக்கியஸ்தர்களிடமும் ஒழுங்கீனம் உண்டானபோதே இந்த அழிவு ஏற்பட்டிருக்கிறது.

புத்தர் வந்தார். அவரது சரித்திரத்தைக் கேட்கக் கேட்க பால் வடிகிற அவரது விக்கிரகங்களைப் பார்க்க பார்க்க நமக்கே சாந்தமும், கருணையும், ஆனந்தமும், அவரிடம் ஒரு மரியாதையும் உண்டாகின்றன. அந்த காலத்துத் ஜனங்களுக்கும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் பௌத்த விஹாரங்களில் எத்தனை ஒழுக்கக் கேடு ஏற்பட்டது என்பதை மகேந்திர பல்லவன் எழுதிய ‘மத்தவிலாஸப் பிரஹஸனம்’ என்கிற ஹாஸ்ய நாடகத்திலிருந்து தெரிந்து கொள்கிறோம். இதே காலத்தில்தான் புத்த மதம் மங்கிப் போகத் தொடங்கியது. அதாவது சமயப் பிரதிநிதிகள் தன்மையைப் பொறுத்தே சமய வளர்ச்சியும் நலிவும் ஏற்படுகின்றன.

புத்தருக்குப் பிறகு ஆதிசங்கரர் பரம உத்தமமான மனிதராக வந்தார் என்றால் ஜனங்கள் அவரிடம் திரும்புகிறார்கள். அப்புறம் ராமாநுஜர், மத்வர் என்று இப்படித் தங்கள் சொந்த வாழ்க்கையில் உயர்ந்தவர்களாக விளங்கியவர்கள் வந்தபோது, அந்தத் தனி மனிதரிடம் ஜனங்களுக்கு உண்டான பிடிப்புக் காரணமாக, அவரது சித்தாந்தம் பரவியது. சமீபத்தில் சாந்தத்தோடும் தன்னலமில்லாத தியாகத்தோடும் ஒரு காந்தி வந்தார். உடனே அவர் சொன்னதையே ‘காந்தீயம், காந்தீயம்’ என்று ஒரு மதமாக கோடாநு கோடி ஜனங்கள் ஏற்றுக் கொண்டார்கள். தத்துவச் சிறப்பால்தான் ஒரு சித்தாந்தம் வளருகிறது என்றால் இன்றைக்கும் அந்தக் காந்தீயம் உச்சத்தில் இருக்க வேண்டும். ஆனால், நடைமுறை எப்படி இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.

பலாத்காரத்தினாலோ, பணத்தைக் காட்டியோ பொது ஜனங்களை இழுக்கிற மதங்களைப் பற்றி இங்கே கேள்வியில்லை. பலவிதமான சமூக சேவைகளை, ஒத்தாசைகளை செய்துவிட்டு, உடனே ஞானஸ்நானம் பண்ணி வைக்கிறேன் என்று ஒரு மதம் இழுத்தால், பாமர ஜனங்கள் அதில் வசியப் பட்டுத்தான் போவார்கள். முக்கியமாகப் பஞ்ச காலத்தில் கிறித்துவ மதம் வளர்ந்தது என்று இதனால்தான் சொல்வதுண்டு. இப்படியே அடிபிடிக் கட்டாயமாக இஸ்லாமியத்தைப் பரப்பியபோது தன்னிச்சையில்லாமலும் கூட்டம் கூட்டமாகப் பலர் அதில் சேர்ந்ததாகச் சொல்வதுண்டு. இங்கேயும்கூட தத்துவத்திற்காகப் பொது மக்கள் ஒரு மதத்தில் சேர்ந்து விடவில்லை என்ற மட்டில் நிரூபணமாகிறது. இன்னொன்றைக் கவனிக்க வேண்டும். முக்கியமாகத் சேரி மக்களைத்தான் பாதிரிமார்கள் மதம் மாற்ற முற்பட்டார்கள். ‘உங்களை எல்லாம் உங்கள் மதத்தில் தாழ்த்தி வைத்திருக்கிறார்கள்; எங்களிடம் வந்தால் உயர்த்தி விடுகிறோம்; படிப்பு, வைத்தியம் எல்லாம் இலவசமாகத் தருகிறோம்’ என்று செல்வாக்கோடு ராஜாங்கத்தின் ஆதரவோடு பிரகடனம் செய்தார்கள். அப்படியும் சேரி ஜனங்கள் எல்லோரும் அதில் போய்ச் சேரக் காணோமே! ஏராளமான அந்த மக்கள் தங்கள் பிறந்த மதத்தில் எத்தனை தாழ்த்தி வைக்கப்பட்டதாகத் தோன்றினாலும் பரவாயில்லை என்று நினைத்து, தங்களுக்கு இன்னொரு மதத்தால் கிடைக்கிற வசதிகளையெல்லாம் துச்சமாக நினைத்து, அதற்குப் போகாமல்தானே இருந்திருக்கிறார்கள். இப்படி இருந்ததற்கு அவர்களுடைய நல்ல பண்பு ஒரு காரணம் என்பது இருக்கட்டும். இன்னொரு காரணம். நம் மதத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் பரம உத்தமமான மகான்கள் தோன்றிக்கொண்டு வந்திருப்பதுதான். ‘இந்த மகான் இருக்கிற மதத்திலேயே நாமும் இருப்போம்’ என்று அதிலேயே சேரி ஜனங்கள் உள்பட எல்லோரும் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மதமாற்றம் செய்கிறவர்களை நாம் கரிக்க வேண்டியதில்லை. துவேஷிக்க வேண்டியதில்லை. அவர்கள் கட்டாயப்படுத்தியாவது அல்லது ஆசை காட்டி வசியப்படுத்தியாவது மற்றவர்களைத் தங்கள் மதத்தில் சேர்க்க நினைப்பதற்குக் காரணம் அவர்களுக்குத் தங்கள் மதமே பரம சத்தியம் என்கிறதில் இருக்கிற நம்பிக்கைதானே? இதை ஏற்றால்தான் மற்றவர்களுக்கும் கதி மோக்ஷம் உண்டு; இப்படி அவர்களுக்கு ஒரு பெரிய க்ஷேமத்தை செய்வதற்கான பலவந்தம், வசியம் இவற்றைக் காட்டினால்கூடத் தப்பில்லை என்ற நல்லெண்ணத்திலேயே அவர்கள் மதமாற்றம் செய்கிறார்கள் என்றே வைத்துக் கொள்ளலாம்.

பலாத்காரம் அல்லது பணபலம் இவற்றைக் கைக்கொள்ளாத எல்லா மதங்களும் அவற்றின் குருமார்கள், போதகர்கள், பிரசாரகர்கள் ஆகியோரது குணத்தைக் கொண்டுதான் வளர்ந்திருக்கின்றன. ஒரு மதத்தின் பிரதிநிதியிடத்தில் வெளி வேஷம் மட்டும் இருந்தால் போதாது; எந்தத் தத்துவத்தைச் சேர்ந்தவராயினும் அவருக்குத் தன்னல எண்ணமே இருக்கக் கூடாது; துவேஷம் கூடாது; நல்லொழுக்கம் இருக்க வேண்டும்; நல்ல தபஸ் இருக்க வேண்டும்; சாந்தமும் கருணையும் நிரம்பியிருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களுடைய குண விசேஷத்தாலேயே அவர்களைத் தேடி வருகிறவர்களின் தோஷங்களும் போய்விட வேண்டும்.

இப்படிப் பட்டவர்களை உண்டு பண்ணுவதே இப்போதும் நம் மதம் தழைக்க வழி. எதிர்பிரச்சாரம் எதுவுமே வேண்டாம். மதநெறிகளை உயிரோடு வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிற பிரதிநிதிகள்தான் வேண்டும். இவர்களால்தான் இதுவரை யுகயுகாந்தரமாக நம் மதம் உயிரோடிருந்து வந்திருக்கிறது. இனிமேலும் இப்படிப்பட்டவர்களால்தான் அது உயிர் வாழ முடியும்.

ஒருவன் சண்டை போட்டு மதம் மாறுகிறேன் என்றால் எதிர்த்துப் படை திரட்டிச் சண்டைபோட என்னால் ஆகாது. அல்லது கோடி கோடியாய் செலவழித்து ஆஸ்பத்திரி, ஸ்கூல் வைத்து ஒருவன் மதமாற்றம் செய்கிறான் என்றால், அதைப் போலப் கோடிக் கணக்கில் செலவழிக்க எனக்கு ஐவேஜியில்லை. இது இரண்டும் இருப்பதாகவே வைத்துக் கொண்டாலுங்கூட, இதனால் செய்யும் மாறுதல் உண்மையானதும் (genuine) இல்லை; அது நிலைத்தும் நிற்காது. ஏனென்றால், நம்மை விடவும் பலிஷ்டர்களாகவோ, நம்மைவிடவும் ரொம்பப் பணவசதி உள்ளவர்களாகவோ இன்னொரு கூட்டம் வந்தால், அது நம் பலத்தாலும் பணத்தாலும் செய்ததை எல்லாம் அழித்துவிட்டு, தானே ஜயித்துவிடும்! ஆனபடியால் இந்த வெளிச் சக்திகளை நம்பிக் கொண்டிராமல், நம் ஆத்ம சக்தியை நம்பி உள்ளுக்குள்ளே நம்மை உயர்த்திக் கொள்வதே நாம் செய்ய வேண்டியது. அப்போது எந்தப் பிரசாரமும், சண்டையும், வசியமும் இல்லாமலே நம் மதம் தழைத்து வாழும். இப்போது இதர தேசங்களில் புத்திமான்கள் ஏராளமாக, ‘அத்வைதம், அத்வைதம்’ என்று அதைத் தலைக்குமேல் வைத்துக் கொண்டிருப்பதற்கு அதன் சித்தாந்தச் சிறப்பு காரணமாக இருக்கலாம். அவர்கள் ஆராய்ச்சி பண்ணி, ஆத்ம விசாரம் பண்ணி நம் வேதாந்தத்துக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், இது பொது ஜனங்கள் எல்லாருக்கும் பொருந்தாத விஷயம். அவர்கள் பிடித்துக் கொள்ள ஓர் உத்தம ஜீவன்தான் வேண்டும்.

இப்படி ஒருத்தன் சாந்தமும், கருணையும், ஞானமும், தியாகமும் நிரம்பியவனாக நம்மிடையில் வரவேண்டும் என்பதற்காகவே இத்தனை உபன்யாசங்களும் பண்ணுகிறேன். உங்களிலேயே ஒருவர் அப்படித் தோன்றிவிட்டால் அதைவிடப் பெரிய பயன் எதுவும் இல்லை.

மதங்களின் ஒற்றுமை

எல்லா சமயங்களும் கடவுளை வழிபட ஏற்பட்டனவே ஆகும். எல்லா சமயங்களும் கடவுள் ஒருவர் என்றே சொல்கின்றன. ஒருவரேயான அந்தக் கடவுள் எந்த சமயத்தின் மூலம் வழிபட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார். எனவே, எவருமே தாங்கள் பிறந்த மதத்தைவிட்டு இன்னோரு மதத்தைத் தழுவ வேண்டியதில்லை.

கோயில், சர்ச், மசூதி, விஹாரம் முதலிய கட்டடங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படலாம். உள்ளே இருக்கிற மூர்த்தி அல்லது சின்னம் மாறுபடலாம். ஒவ்வொன்றிலும் சடங்குகளும் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் அநுக்ரஹம் செய்கிற பரமாத்மா மாறவில்லை. ஒவ்வொரு தேச ஆசாரத்தையும், ஒவ்வொரு ஜனக்கூட்டத்தின் மனப்பான்மையும் பொறுத்துப் பல்வேறு சமயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் ஒரே பரமாத்மாவை அவரவர் மனோபாவப்படி பக்தி செய்து, அவரோடு சேருவதற்கு வழி செய்பவையே. எனவே எவரும், தங்கள் மதத்தை விட்டுவிட்டு இன்னொன்றுக்கு மாறவேண்டியதில்லை. இப்படி மதம் மாறுகிறவர்கள் தாங்கள் பிறந்த மதத்தைக் குறைவு படுத்துவது மட்டுமின்றி, தாங்கள் சேருகிற மதத்தையும் குறைவு படுத்துகிறார்கள்; கடவுளையும் குறைவு படுத்துகிறார்கள்.

‘தங்களது பிறந்த மதத்தில் குறை தோன்றியதால்தான் ஒருவர் அதை விடுகிறார். ஆனால் புதிதாக சேருகிற மதத்தையும் அவர் குறைவுபடுத்துகிறார் என்று ஏன் ஸ்வாமிகள் சொல்கிறார்?’ என்று உங்களுக்குத் தோன்றலாம். சொல்கிறேன்; கடவுள் எல்லா மதங்களுக்கும் பொதுவானவர் என்ற எண்ணம் இல்லாமல் அவரைக் குறுக்குவதால்தானே ஒரு மதத்தைவிட்டு இன்னொன்றில் சேருகிறார்கள்? தங்கள் மதத்துக் கடவுள் பிரயோஜனமில்லாதவர் என்று நினைத்து இன்னோரு மதத்துக்குத் தாவுகிறார்கள். மாறுகிற புதுமதக் கடவுளாவது எல்லோரையும் தழுவுவதாக நினைக்கிறார்களா? இல்லை. அப்படி நினைத்தால் மாறவே வேண்டாம். இவர்கள் தாங்கள் பிறந்த மதத்திலேயே இருந்து வழிபட்டாலும், இப்போது இவர்கள் மாறுகிற மதத்தின் கடவுள் இவர்களுக்கு அநுக்கிரகம் செய்வார் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இல்லாததால்தானே மதமாற்றத்துக்கே அவசியம் ஏற்பட்டது. அதாவது தாங்கள் மாறுகிற புது மதத்துக்கும், அதன் கடவுளுக்கும்கூட இவர்கள் குறுகலான எல்லை கட்டி விடுகின்றனர். ஒரு மதத்திடம் கௌரவ புத்தி இருப்பதாக நினைத்து அதற்கு மாறுகிறபோதே அதை வாஸ்தவத்தில் அகௌரவப்படுத்தி விடுகிறார்கள்.

மற்ற மதங்களும் ஹிந்து மதத்துக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம், நம்முடைய ஹிந்து மதம் ஒன்று தான். “இது ஒன்றே மோட்ச மார்க்கம்” என்று சொல்லாமலிருக்கிறது. நம்முடைய வைதீக மதம்தான் பிறரைத் தன் மதத்துக்கு மாற்றுவது என்பதே கிடையாது. ஏனென்றால் ஒரே பரமாத்மாவை அடைவதற்கான பல மார்க்கங்களே பல மதங்களும் என்று நம் முன்னோர்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். ஹிந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும் இந்த விசால மனப்பான்மையைக் குறித்து பெருமைப்பட வேண்டும். வேதம் ‘ஒரே ஸத்தியத்தைத்தான் ஞானிகள் பல பெயர்களில் சொல்கிறார்கள்’ என்கிறது. கீதையில் பகவான், ‘எவன் எந்த விதத்தில், எந்த ரூபத்தில் வழிபட்டாலும் அவனுடைய சிரத்தையை நானே விருத்தியாக்கி அவனை அதே வழிபாட்டில் நிலைப்படுத்துகிறேன்’ என்கிறார். ஆழ்வார் ‘அவரவர் தமதம தறிவறி வகைவகை அவரவர் இறையவர்’ என்கிறார். இதனால்தான் மற்ற மதங்களில் செய்வதுபோல் மதமாற்றம் செய்வது (proselytisation) , அதற்காகத் தண்டிப்பது (Persecution, Crusade, Jehad) முதலான போர்களில் படையெடுத்துச் சென்று நிர்பந்தமாகத் தங்கள் மதத்துக்கு மற்றவரைத் திருப்புவது முதலான காரியங்களில் ஹிந்துக்கள் என்றுமே இறங்கியதில்லை. நம்முடைய நீண்ட கால சரித்திரமே இதற்குச் சான்று. சகல சரித்திர ஆராய்ச்சிகாரர்களும் ஒப்புக் கொள்கிற விஷயம் இது. தூரக்கிழக்கு (Far East) முதலான தேசங்களில் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம் முதலிய ஹிந்து ராஜ்யங்கள் ஏற்பட்ட போதுகூட நிர்பந்த மத மாற்றமே இல்லை (Forced Conversion) என்றும் நம் கலாச்சாரத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டு அந்நியர்களே நம் மதத்தைத் தாங்களாக எடுத்துக் கொண்டார்கள் என்றும் சரித்திரக்காரர்கள் சொல்கிறார்கள். அநேக சமயங்களில் வியாபாரம் முலமே நம் மத அம்சங்கள் பிற தேசங்களில் புகுந்தது என்றும், வாள் மூலம் அல்ல என்றும் சொல்கிறார்கள்.

என் அபிப்பிராயப்படி ரொம்பவும் ஆதி காலத்தில் லோகம் முழுவதிலும் வேத மதம்தான் இருந்தது. பிற்பாடு ஆங்காங்கே வெவ்வேறு மதங்கள் உண்டானாலும் நம் மதத்தின் அம்சம் குறைந்தபட்சம் இடிபாடுகளாக (Ruins) பழைய ஞாபகச் சின்னங்களாக (Relics) வாவது அங்கெல்லாம் இன்னும் காணப்படுகின்றன. இப்படி நான் சொல்வதை ஒப்புக் கொள்ளாத ஆராய்ச்சிகாரர்களும் நம் பரத நாகரிகத்தை மற்ற நாடுகளில் தாங்களாகவே விரும்பி ஏற்றும் கொண்டார்களேயன்றி பலவந்தத்தின் மீதல்ல என்று ஒப்புக் கொள்கிறார்கள்.

ஒருத்தனைப் புது மதத்துக்கு மாற்றுவது என்றால் அதற்கென ஒரு சடங்கு (Ritual) இருக்க வேண்டும். இப்போது ‘கன்வெர்ட்’ செய்கிற மதங்களில் எல்லாம் அப்படி ஒன்று—ஞானஸ்நானம் (Baptism) என்கிற மாதிரி ஏதாவது ஒன்று—இருக்கிறது. மற்ற எந்த மதத்தையும்விட மிக அதிகமான சடங்குகளை சொல்கிற ஹிந்து சாஸ்திரங்களைப் பார்த்தால், இப்படி நம் மதத்துக்கு மற்ற மதஸ்தன் ஒருத்தனை மாற்ற ஒரு சடங்கும் இருக்கக் காணோம். இதுவே நாம் மதமாற்றத்தை விரும்புகிறவர்கள் அல்ல என்பதற்கு அத்தாட்சி.

ரயிலடியில் பிரயாணிகள் வந்திறங்கியதும் ஜட்காக்காரன், ரிக்ஷாக்காரன், டாக்ஸிக்காரன் என்று பல பேர் வந்து சூழ்ந்து கொள்கிறார்கள். எவனுடைய வண்டியில் ஏறிக் கொண்டாலும் போகவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரலாம். வண்டிக்காரர்கள் கிராக்கி பிடிப்பதற்காகப் போட்டி போடுவதைப் தவறு என்று சொல்வதற்கில்லை. அது அவர்கள் பிழைப்பு. ஆனால் கடவுள் என்கிற ஒரே லக்ஷியத்துக்கு அழைத்துச் செல்வதற்காக வெவ்வேறு மதஸ்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு மதமாற்றத்தில் முனைவது அர்த்தமற்ற காரியம்.

நதியின் மேல் பாலம் போட்டிருக்கிறது. அதில் பல வளைவுகள் இருக்கின்றன. எல்லா வளைவுகளும் ஒரே அளவாகக் கட்டப்பட்டவைதாம். ஆனால் ஒவ்வொரு வளைவுக்கும் கிட்டத்தில் இருப்பவனுக்கு அந்தந்த வளைவே பெரிதாகவும், மற்றவை சின்னதாகவும் இருக்கும். இப்படியே அந்தந்த மதஸ்தர்களுக்கும் தங்கள் மதமே பெரிதாகத் தெரிவதால், பிறரை அதற்கு அழைக்கிறார்கள். ஆனால் எல்லா வளைவுகளும் ஒரே அளவுதான். யாரும் தாங்கள் பிறந்த மதத்தைவிட்டு விலகவேண்டியதில்லை.

மதங்களுக்கிடையே கோட்பாடுகளிலும், அநுஷ்டானங்களிலும் சில வித்தியாசங்கள் இருப்பதில் தவறில்லை. எல்லா மதங்களையும் ஒரே போல் ஆக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே மாதிரி ஆக்காமலே, எல்லா மதஸ்தர்களும் மனத்தில் ஒற்றுமையோடு இருப்பதுதான் அவசியம்; ‘யூனிஃபார்மிடி’ அவசியமில்லை. ‘யூனிடி’ இருப்பதே அவசியம்.

சகல மதங்களுக்கும் பொதுவான பக்தி

மனிதனை விசாரங்களிலிருந்து விடுவித்து உயர்த்துவதற்குத்தான் எல்லா மத சம்பிரதாயங்களும் தோன்றியிருக்கின்றன. மற்றப் பிராணிகளுக்கு இல்லாத விசாரம் இவனுக்கு இருப்பது மட்டுமில்லை; இவன் முயற்சி செய்தால் விசாரத்திலிருந்து விடுபடுவதோடு இல்லாமல், மற்ற பிராணி வர்க்கம் எதுவும் பெற முடியாத ஞானத்தைப் பெற முடியும் என்று மத சித்தாந்தங்கள் யாவும் கூறுகின்றன. உலக விவகாரங்களை எல்லாம் இயக்கி வைக்கிற ஒரு மஹா சக்தியைப் தஞ்சம் புகுந்தாலே விசாரங்களிலிருந்து விடுபடலாம் என்று பொதுவாக இந்த எல்லா சித்தாந்தங்களும் ஒரே குரலில், ஏகமனஸாகச் சொல்கின்றன. அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம், சைவ சித்தாந்தம், இன்னும் கிருஸ்துவம், இஸ்லாம் முதலிய எந்த சம்பிரதாயமானாலும் சரி, பக்தி எல்லாவற்றுக்கும் பொது.

புத்தர் பக்தியைச் சொல்லாவிட்டாலும், பௌத்தர்களால் பக்தியில்லாமல் முடியவில்லை. அதனால்தான் புத்தரையே ஸ்வாமியாக்கி, வேறு எந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்குப் பெரிய பெரிய மூர்த்திகளை அவருக்கு வைத்துப் பூஜை செய்கிறார்கள். ரொம்ப சமீப காலத்திலும் கூடப் பல ஞானிகள் ஆத்மவிசாரம் ஒன்றை மட்டுமே வலியுறுத்துகிறார்கள். ஆனால் இவர்களுடைய உபதேசங்களை ஏற்றுக்கொண்டவர்கள் இந்த மஹான்களையே தெய்வமாக வழிபடத்தான் செய்கிறார்கள். பக்தி என்பது அப்படி இயல்பாக உடம்போடு பிறந்த ஒன்று.

அத்வைதத்தின்படி பக்தி செலுத்துகிறபோது, ஈசுவரன் வேறு, நாம் வேறு என்கிற எண்ணம் இல்லாமல், அதுவே நாம் என்கிற அபேத பாவத்தைக் கைக் கொள்ள வேண்டும். ‘பகவான்’ என்று மகாசக்தியாக, சர்வக்ஞனாக (எல்லாம் அறிந்தவன்) ஒன்றை வைத்துப் பக்தன் என்ற அல்ப சக்தன், கிஞ்சித்ஞன் (சிறிதே அறிந்தவன்) பக்தி பண்ணுகிறான். ‘இரண்டும் எப்படி ஒன்றாகும்?’ என்று கேட்கலாம். அப்படியானால் பகவானுக்கு நாம் வேறா? பகவானுக்கு வேறாக மற்ற வஸ்துக்கள் இருக்கின்றனவெனில் அதெல்லாம் எங்கிருந்து வந்தன? வேறாக எங்கிருந்தோ வந்த வஸ்துக்களை அவன் எப்படி ஆட்டிப் படைக்க முடியும்? இப்படி யோசித்துப் பார்த்தால் ஒரே பரமாத்மாதான் ஈசுவரன் என்கிற சமுத்திரமாகவும், பலவிதமான ஜீவராசிகளான குளம், குட்டை, கிணறுகளாகவும் ஆகிக் கடைசியில் உத்தரணி ஜலத்தில் வந்து நிற்கிறது என்று தெரியும். சக்தியில் ஏற்றத் தாழ்வு இருக்கலாம். ஆனால் அடிப்படையில் எல்லாம் ஒரே வஸ்துதான். அந்த அடிப்படைக்குப் போனால் நாம் அதுவாகவே ஆகிவிடுவோம். இதுதான் அத்வைத முக்தி.

வெறும் புத்திபூர்வமாக (intellectual) இப்படி சொல்லிக் கொண்டிருந்தால் பிரயோஜனம் இல்லை. இது அநுபவ ஸித்தியாக வேண்டும். இதற்கு ஈசுவரக் கிருபை இருந்தால்தான் முடியும். நம்மை எல்லாம் ஆட்டிப்படைக்கிற சக்தியின் அநுக்கிரகம் இருந்தால்தான், இந்த ஆட்டம் ஒய்ந்து அடிப்படைக்குப் போக வேண்டும் என்ற அத்வைத நாட்டமே நமக்கு வரும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்; ஈச்வராநுக்ரஹாத் ஏவ பும்ஸாம் அத்வைத வாஸனா.

பகவான், பக்தன் என்று பிரிந்தே தோன்றுகிற ஆரம்ப ஸ்திதியிலுங்கூட, ‘பகவானாக எந்தப் பரமாத்மா வந்திருக்கிறதோ அதுவேதான் பக்தனாகிய நாமாகவும் ஆகியிருக்கிறது’ என்ற நினைவைக் கொஞ்சம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் பகவானிடம் நம் அன்பும் அதிகமாகும். ஏனென்றால் நம்மைவிட நமக்குப் பிடித்தமான, அன்பான வஸ்து இல்லை அல்லவா?

நம் காரியங்கள் அனைத்திற்கும் பலன் தருகிற ஈசுவரன், நாம் பக்தி பண்ணப் பண்ண அதற்குப் பலனாக மேலும் மேலும் அவனை நெருங்க அநுக்கிரகம் செய்வான். தான்யார், எப்படிப்பட்டவன் என்பதையெல்லாம் அவனே தெரியப்படுத்துவான். நாம் அவனை ஆராய்ந்து பார்க்க வேண்டாம். அவனே நம் பக்திக்கு இறங்கித் தன் இயல்பைத் தெரியப்படுத்துவான். கீதையில் பகவான் இப்படியே சொல்லியிருக்கிறார்: “பக்த்யா மாம் ஆபிஜானாதி யாவான்யச்சாஸ்மி”.

இவ்வாறு ஈசுவரனின் அனந்த கல்யாண குணங்களை அறிந்தபின் அதையே பக்தர்கள் ரசிக்கிறார்கள். ஞானியோ இந்தக் குணங்களுக்கு ஆதாரமான நிர்குண சத்திய நிலையை பகவதநுக்கிரஹத்துடன் அடைந்து அதில் இரண்டறக் கலந்து விடுகிறான். இதற்கும் ஸகுண உபாசனைதான் ஆரம்பமாயிருக்கிறது.

இந்த ஸகுண உபாஸனை – அல்லது மூர்த்தி வழிபாட்டுக்காகத்தான் “இஷ்டதேவதை” என்ற கருத்து நம் மதத்தில் இருக்கிறது.

மற்ற மதங்கள் கடவுள் என்கிற ஒன்றைச் சொல்வதோடு நின்றுவிடுகின்றன. ஹிந்து மதம் என்று சொல்லப்படுகிற நம்முடைய ஸநாதன தர்மம் அந்த ஒரே கடவுளை அவரவர் மனோபாவப்படி அன்போடு நெருங்கி வழிபடுவதற்காகப் பல ரூபங்களில், பல தெய்வ வடிவங்களில் நமக்குக் காட்டுகிறது. இந்த ரூபங்கள் வெறும் கற்பனையில் உண்டாக்கப்பட்டவை அல்ல. ஒன்றாக இருக்கிற பரமாத்மாவேதான் இப்படிப் பல மகான்களுக்குத் தரிசனம் தந்திருக்கிறார். அவரவர்கள் அந்தந்த மூர்த்தியிடம் பிரத்தியட்சமாகப் பழகி உறவாடி பக்தி செய்திருக்கிறார்கள். அதே மாதிரி நாமும் தரிசிப்பதற்காக இன்ன மந்திரம், இன்ன விதமான உபாஸனையைப் பின்பற்றினால் இன்ன தேவதா ரூபத்தின் தரிசனத்தைப் பெறலாம் என்று வழிகளை வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

வழிபாட்டுமுறை எதுவானாலும் பக்தி என்கிற பாவம் பொதுவானது. நம் மதத்திலுள்ள பல தெய்வங்களின் உபாஸனைக்கு மட்டுமின்றி, எந்த மதமானாலும் பக்தி என்பது மத்திய ஸ்தானத்தில் இருக்கிறது.

மனிதனும் மிருகமும்

மிருகங்கள் குறுக்குவாட்டில் (horizontal) வளர்கின்றன. இதனாலேயே அவற்றுக்குத் ‘திர்யக்’ என்று பெயர். இதற்கு மாறாக உயர்ந்து மேல்நோக்கி (vertical) வளருகின்ற மனிதன் மற்றப் பிராணிகளைக் காட்டிலும் மேலான நோக்கத்தைப் பெறவேண்டும். இப்படிச் செய்தால் இவன்தான் சகல ஜீவ இனங்களையும்விட அதிகமான சுகத்தை அநுபவிக்கலாம். ஆனால் நடைமுறையிலோ அவற்றைவிட அதிகமான துக்கத்தைத்தான் நாம் அநுபவிக்கிறோம். மிருகங்களுக்கு நம்மைப் போல் இத்தனை காமம், இத்தனைக் கவலை, இத்தனை துக்கம், இத்தனை அவமானம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவற்றுக்குப் பாபமே இல்லை. பாவங்களைச் செய்து துக்கங்களை நாம்தான் அநுபவிக்கிறோம்.

ஒரு வழியில் பார்த்தால் மிருகங்களுக்குக் கொடுத்திருக்கும் சௌகரியங்களை ஸ்வாமி நமக்குக் கொடுக்கவில்லை என்று தோன்றும். நம்மை யாராவது அடித்தால் திருப்பி அடிக்க ஓர் ஆயுதமும் நமக்கு இல்லை. மாட்டை அடித்தால் அதற்குக் கொம்பு கொடுத்திருக்கிறார். அதனால் திருப்பி முட்ட வருகிறது. புலிக்கு நகம் கொடுத்திருக்கிறார். நமக்குக் கொம்பு இல்லை. நகம் இல்லை. குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள ஆட்டுக்கு உடம்பில் போர்வை வைத்திருக்கிறார். வேறு மிருகங்களுக்கும் போர்வை வைத்திருக்கிறார். மனிதன் ஒருவனைத்தான் வழித்து விட்டு இருக்கிறார். யாராவது அடிக்க வந்தால் எதிர்க்க முடியவில்லை. குதிரைக்குக் கொம்பு இல்லா விட்டாலும் ஓடுவதற்கு வேகம் கொடுத்திருக்கிறார். அதுவும் நமக்கில்லை.

இருந்தாலும் ஸ்வாமி மனிதனுக்குத்தான் புத்தியை அதிகமாக வைத்திருக்கிறார்.

குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், மற்றப் பிராணிகளின் போர்வையை இவன் பறித்துக் கொண்டுவிடுகிறான்; கம்பளியாக நெய்து கொள்கிறான். வேகமாகப் போக வேண்டுமா? வண்டியிலே குதிரையைக் கட்டி, அதன் வேகத்தை உபயோகப் படுத்திக் கொள்கிற சாமர்த்தியத்தை இவனிடத்தில் ஸ்வாமி வைத்திருக்கிறார். தன் சரீரத்திலேயே தற்காப்பு இல்லாவிட்டாலும், வெளியிலிருந்து தினுசு தினுசான ஆயுதங்களைப் படைத்துக் கொள்கிறான். இவ்வாறாக புத்தி பலம் ஒன்றை மட்டும் கொண்டு, மற்ற ஜீவராசிகள், ஜடப்பிரபஞ்சம் எல்லாவற்றையும் மனிதனே ஆளுகிறான்.

மிருகம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிராந்தியத்தில்தான் இருக்கும். குளிர்ப் பிரதேசத்துக் கரடி நம் ஊரில் வாழாது. இங்குள்ள யானை அங்கே வாழாது. ஆனால் மனிதன் உலகம் முழுவதும் வாழ்கிறான். அங்கங்கே அவன் தன் புத்தியை உபயோகப்படுத்தித் தனக்குச் சாதகமாகச் சூழ்நிலையைச் செய்து கொள்வான் என்று இப்படி விட்டிருக்கிறார்.

இந்த உயர்ந்த புத்தியை வைத்துக் கொண்டு மனிதன் கஷ்டப்படுகிறான்; துக்கப்படுகிறான்; பிறந்து விட்டதனாலே இவ்வளவு கஷ்டம்; இனி பிறக்காமலிருக்க வேண்டுமானால் என்ன பண்ணுவது? பிறப்புக்குக் காரணம் என்ன? நாம் ஏதோ தப்புப் பண்ணியிருக்கிறோம். அதற்குத் தண்டனையாக இத்தனை கசையடி வாங்க வேண்டும் என்று விதித்திருப்பதால் இந்த உடம்பை எடுத்து அவற்றை வாங்குகிறோம். பத்து அடி ஆன பிறகு இந்த உடம்பு போய்விட்டால், இன்னோர் உடம்பு வருகிறது. பாக்கி அடியை அந்த உடம்பு வாங்குகிறது. காமத்தினால், பாபத்தைச் செய்வதனாலே ஜனனம் வருகிறது. காரியம் எதுவும் பண்ணாமல் இருந்துவிட்டால் ஜனனம் இல்லை. கோபத்தினாலேயே பல பாபங்களைச் செய்கிறோம். கோபத்துக்குக் காரணம் ஆசை, காமம். முதலில் காமத்தை, ஆசையை ஒழிக்க வேண்டும். பற்றை நிறைய வளர்த்துக் கொண்டு காரியம் செய்யாமல் இருப்பது என்றால் முடியாது. பற்றை ஒழித்து விட்டால் பாபம் செய்யாமல் இருக்கலாம்.

ஆசைக்குக் காரணம் என்ன? நம்மைத் தவிர இன்னொன்று இருப்பதாக எண்ணுவதால் அதனிடம் ஆசை வருகிறது.

உண்மையில் சாந்தமாகிய ஒரே சிவமே எல்லாமாக இருக்கிறது.

ஒரு மாடு கண்ணாடியில் தன்னைப் பார்த்துவிட்டு, இன்னொரு மாடு இருப்பதாக நினைத்து அதை முட்டப்போகிறது. ஒரு மனிதன் தன் பிரதி பிம்பத்தைப் பார்க்கிறான். இன்னொரு மனிதன் இருக்கிறான் என்று அவன் நினைக்கிறானா? இரண்டும் ஒரே பொருள் என்பது அவனுக்குத் தெரிந்து சாந்தமாக இருக்கிறான். இப்படியாக நாம் பார்க்கிற அனைத்துமே ஒன்றுதான். இரண்டாவது என்று எண்ணினால் ஆசை வரும். ஆசை வருவதனால் கோபம் வருகிறது. கோபம் வருவதனால் பாபங்களைச் செய்கிறோம். அதனால் ஜன்மம் உண்டாகிறது. எல்லாம் ஒன்று என்ற ஞானம் நமக்கு வந்துவிட்டால், வேறு பொருள் இல்லாததனாலே ஆசை இல்லை; கோபம் இல்லை; பாபம் இல்லை; காரியம் இல்லை; ஜனனம் இல்லை; துன்பமும் இல்லை.

இந்த ஞானத்தை எப்படிப் பெறுவது? நம்மைப் பெற்ற அம்மா உடம்புக்குப் பால்கொடுப்பாள். அறிவுக்கு ஞானப்பால் கொடுப்பவள் அம்பாள்தான். ஞான ஸ்வரூபமே அவள்தான். அவளுடைய சரணாரவிந்தங்களைப் பற்றிக் கொண்டு அவளுடைய ஸ்வரூபத்தோடு நம்மை நாம் கரைத்தாலே ஞானம் வரும்; மனிதன் அப்போது தெய்வமாவான்.

முதலில் மனிதனை மிருகமாக இல்லாமல் மனிதனாக ஆக்க வேண்டும். அப்புறம் அவனைத் தெய்வமாகவே உயர்த்திவிட வேண்டும். இந்தக் குறிக்கோளுடன்தான் சகல மதங்களும் உண்டாகியிருக்கின்றன. சித்தாந்தம், தத்துவங்களில் அவற்றுக்குள் எத்தனை பேதமிருந்தாலும், இப்போதிருக்கிற மாதிரி மனுஷ்யனை ஒரே காமக் குரோதாதிகளுடன் இருக்க விடக்கூடாது; இவனை நல்லவனாக ஆக்கி அன்பு, அடக்கம், சாந்தம், தியாகம் முதலிய குணங்கள் உள்ளவனாகப் பண்ண வேண்டும் என்பதில் எல்லா மதங்களும் ஒரே குரலில்தான் பேசுகின்றன.

மதத்தின் பயன்

தர்ம-அர்த்த-காம-மோக்ஷங்களுக்கு ஸாதனமாக இருப்பது மதம். இந்த நான்கையும் புருஷார்த்தங்கள் என்பார்கள்.

‘தர்மம்’ என்பதைப் தமிழில் ‘அறம்’ என்பார்கள். ‘அர்த்தம்’ என்பதைப் ‘பொருள்’ என்று சொல்லுவார்கள். ‘காமம்’, ‘மோக்ஷம்’ என்பவைகளை முறையே ‘இன்பம்’, ‘வீடு’ என்பார்கள். “புருஷார்த்தம்” என்பதில் ‘அர்த்தம்’ என்னும் வார்த்தை இருக்கிறது. முன்பு சொன்ன நான்கிலும் தர்மத்துக்கு அடுத்ததாக ஓர் ‘அர்த்தம்’ இருக்கிறது. ‘அர்த்தத்தில்’ என்றால், ‘வேண்டுமென்று நினைத்தல்’. புருஷன், அதாவது மனிதர்களாகப் பிறந்தவர்கள், தமக்கு வேண்டுமென்று எவைகளை நினைக்கிறார்களோ அவைகள்தாம் புருஷார்த்தங்கள். எதை மனிதன் வேண்டுமென்று நினைக்கிறான்? பொதுவாக, நாம் உள்ள பக்குவக் குறைவான நிலையில் பணமும் பொருளும்தான் வேண்டுமென்று நினைப்பதால், இதற்கே ‘அர்த்தம்’ என்ற பெயர் வந்துவிட்டது. பொருளாதார நூலை ‘அர்த்தசாஸ்திரம்’ என்கிறோம். ஆனால் நம் ஆச்சார்யாளோ இந்த அர்த்தம்தான் பெரிய அனர்த்தம் என்று “பஜகோவிந்த”த்தில் சொல்லிவிட்டார் ஏனென்றால், ரொம்பவும் தற்காலிகமான நிறைவை அல்பாயுஸான ஸந்தோஷத்தை மட்டுமே இந்தப் பொருளானது நமக்குக் கொடுத்து, சாசுவத நிறைவான மோக்ஷத்தைப் பறித்து விடுகிறது என்பதால் அப்படிச் சொன்னார்.

உண்மையில், எப்போதும் குறைவில்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றுதான் மனிதன் நினைக்கிறான். சந்தோஷம் என்பது இரண்டுவிதம். கொஞ்ச நாழிகை இருப்பது ஒரு விதம்; எப்பொழுதும் குறையாமல் இருப்பது மற்றொரு வகை. கொஞ்ச நாழிகை சந்தோஷம் உண்டாக்குவதுதான் இன்பம் அல்லது காமம். காமம் என்பது எல்லா வித உலக ஆசைகளையும் குறிக்கும். இப்படிக் கொஞ்ச காலம் இருந்துவிட்டுப் போய்விடாமல், ஒருமுறை வந்துவிட்டால், எந்தக் காலத்திலும் போகாமல் நிலைத்திருக்கிற பேரின்பமே மோக்ஷம்—வீடு. அந்தப் பேரின்பத்தின் பெருமை தெரியாததால்தான் காமம் என்ற சிற்றின்பம் வேண்டுமென்று மனிதர்கள் நினைக்கிறார்கள்.

ஆகவே, நாம் உண்மையில் வேண்டுமென்று நினைக்க வேண்டியது நான்காவதாகிய வீடு. இப்பொழுது நடைமுறையில் வேண்டுமென்பதோ மூன்றாவதாகிய இன்பம். நாம் விருந்து சாப்பிடுவதனால் ஆனந்தம் உண்டாகிறது. அது ஓர் இன்பம். ஹைகோர்ட் ஜட்ஜ் ஆக இருந்தால் அதுவும் ஒரு வகை இன்பம். நமக்கு நல்வரவு பத்திரம் (Welcome address) வாசித்துக் கொடுத்தால் ஓர் ஆனந்தம்; அதுவும் இன்பந்தான். இந்த இன்பங்கள் சாசுவதமல்ல. இந்தச் சில்லறை இன்பத்தை எதனால் சம்பாதிக்கிறோமோ அது பொருள். அது தானியமாக இருக்கலாம், பணமாக இருக்கலாம், வீடாக இருக்கலாம், மனிதர்களாக இருக்கலாம். பொருளே இன்பத்துக்குச் சாதனம். இந்த இன்பத்தைச் சிறிது பொழுதில் அநுபவித்துத் தீர்த்து விடுகிறோம். மறுபடி இன்பம் வேண்டும் என்ற தவிப்புத் தொடங்குகிறது.

இதற்கு மேல் ஒன்று வேண்டும் என்று தோன்றச் செய்யாத நிலைத்த பேரின்பமே மோக்ஷம். அதுதான் வீடு. நாம் ஊரெல்லாம் சுற்றுகிறோம். அலைந்து கஷ்டப்படுகிறோம். நாம் வந்து அடைய வேண்டியது சொந்தவீடு. ஜெயிலில் ஒருவன் இருக்கிறான். அதிலிருந்து அவன் வெளியே வந்தால் வீட்டுக்குப் போகிறான். ‘வீடு’ என்பதற்கே விடுதலை என்று அர்த்தம். இப்பொழுது மாம்ஸமாகிய ஜெயிலுக்குள் இருக்கிறோம். இந்த உடம்பேதான் நாம் என்று எண்ணி இருக்கிறோம். அது சரியில்லை. உடம்பு நமக்கு ஜெயில். நம் நிஜமான வீடு ஆனந்தமான மோக்ஷம்தான். நாம் ஜெயிலை விட்டுச் சொந்த இடத்தில் இருக்க வேண்டும். பாபகர்மா என்ற குற்றத்துக்கு தண்டனையாக நம்மை உடம்பு ஜெயிலில் போட்டுவிட்டார் ஸ்வாமி. புண்ணியகர்மா செய்தால் அவர் சிக்ஷைக் காலத்தைக் குறைத்து (Condone பண்ணி) வெளியே அனுப்பிவிடுவார். ஜெயிலிலிருந்து கொண்டு புது பாபத்தைப் பண்ணித் தண்டனைக் காலத்தை நாம் ஜாஸ்தியாக்கிக் கொள்ளக்கூடாது; விடுதலையாகி ஸ்வாமிக்குள் போய் இருக்கிற நம் நிஜ வீட்டை அடைய முயல வேண்டும். அந்த வீடுதான் எல்லையற்ற இன்பம். உலகிலே காலம், தேசம், வஸ்து—இந்த மூன்றிலும் குறையாமல் நிறைந்து இருக்கும் பேரின்பம்.

புருஷார்த்தங்களில் முதலாவதாக ‘தர்மம்’ என்பதைப் பற்றிக் கடைசியில் சொல்கிறேன். எந்தக் காரியம் செய்தால் நல்லதோ அது தர்மம். தமிழில் ‘அறம் செய விரும்பு’ என்று முதலில் சொன்னார்கள். நல்லதாகச் செய்வதெல்லாமே தர்மம் என்றாலும், பொதுவிலே தர்மம் என்பது ஈகைக்கே வார்த்தையாக இருக்கிறது. ‘தர்மம் போடப்பா, தர்மத்தாயே’ என்றுதான் பிச்சைக்காரர்கள் யாசிக்கிறார்கள். தான-தர்மம் என்று சேர்த்தே சொல்கிறோம். தமிழிலும் தான சாஸனங்களை அறக்கட்டளை என்றே சொல்லுகிறார்கள். இப்படிப் பார்த்தால் நம் ‘பொருளை’, ‘அர்த்தத்தை’ இன்னொருத்தருக்குக் கொடுப்பது தர்மம். ஆனால் இப்படிக் கொடுப்பதற்கு வேண்டிய பொருள் நமக்கு எப்படிக் கிடைக்கும்? முன் ஜென்மத்தில் நாம் அர்த்தத்தை (பொருளை) மற்றவருக்குக் கொடுத்து தர்மம் செய்திருந்தால்தான் அது மறு ஜென்மத்தில் குட்டி போட்டுக் கொண்டு நமக்குக் கிடைக்கும். தர்மத்தினுடைய பிரயோஜனமே பொருள். இன்பத்துக்குப் பொருள் ஸாதனமாக இருப்பதுபோல் பொருளுக்குத் தர்மம் ஸாதனமாக இருக்கிறது. ஈகை மட்டுமல்ல! எவ்விதமான தர்மம் செய்தாலும், அதாவது பிறருக்கு என்ன நல்லது செய்தாலும் பலனாகப் பொருள் கிடைக்கும்.

நாம் செய்யும் தர்மத்தை ‘இதனால் எனக்குப் பொருள் வேண்டாம்; ஈசுவரன் நினைத்ததைக் கொடுக்கட்டும்’ என்று பலனை எதிர்பாராமல் அர்ப்பணம் பண்ணிவிட்டால், அப்போது நம்மிடத்தில் உள்ள அழுக்கு போய் பேரின்பம் கிடைக்கும். பொருளைத் தரும் தர்மமே அப்பொழுது பரம்பொருளைத் தரும் வீட்டுக்கு ஸாதனமாகிவிடும். இப்படி தர்மமானது பொருளுக்கு ஸாதனமாகவும், அதன் மூலம் இன்பத்துக்கு ஸாதனமாகவும், பற்றின்றி நிஷ்காம்யமாகச் செய்யப்பட்டால் வீட்டுக்கு ஸாதனமாகவும் ஆகிறது. தர்மம் செய்தால் பிரதியாகப் பொருள் கிடைக்கிறது. அந்தப் பொருளைக் கொண்டே மறுபடியும் தருமம் செய்யலாம். இப்போது அர்த்தமே தர்மம் செய்ய ஸாதனமாக இருக்கிறது. இன்பம் ஒன்று தான் தன்னாலும் நிறைவுபடுவதில்லை; பிறவற்றுக்கும் ஸாதனமாக இருப்பதில்லை. கொதிக்கிற மணலில் விட்ட ஜலம் உடனே சுவறிப்போவதுபோல் ‘இன்பம்’ என்பது, தன்னாலும் நிறைவின்றி, வேறெதற்கும் ஸாதனமாகவும் இன்றி, தர்ம சிந்தனை, பொருள், மோக்ஷம் எல்லாவற்றையும் நாசம் பண்ணிவிட்டுத் தானும் நசித்துப் போகிறது. ஆனாலும், இந்த இன்பத்தை இப்போதே விட்டு விடுவோம் என்றால் முடிய மாட்டேன் என்கிறது. அதை அடியோடு விடாமல் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்படுத்தித் தரவும், பிறகு படிப்படியாக இந்தச் சிற்றின்பத்திலிருந்து பேரின்பத்துக்கு அழைத்துச் செல்லவுமே மதம் என்பது ஏற்பட்டிருக்கிறது. முதலில் இதுதான் அறம் என்று சொல்லி, அதைத் செய்வதற்காகவே எப்படிப் பொருள் ஈட்ட வேண்டுமோ அந்த நியாயமான முறையைச் சொல்லி, அதனால் இன்னின்ன இன்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று பக்குவம் வருகிற வரையில் கிரமப்படுத்திக் கொடுத்து, அப்புறம் இந்தச் சின்ன இன்பங்களை எல்லாம் தொலைத்து, நிரந்தர இன்பமான வீடு என்கிற மோக்ஷத்தைக் காட்டுவதே மதம்.

பந்தத்திலிருந்து விடுதலை பெற்று, ஆத்மா பூரண சுதந்திரத்துடன் எந்நாளும் ஆனந்தமாக இருக்கிற நிலையே மோக்ஷம். இதை நமக்குக் கிட்டச் செய்வதற்கே மதம் என்பது ஏற்பட்டிருக்கிறது.

மநுஷ்யர்கள் இப்போது சாசுவதமான சுகத்தைப் பெறவில்லை என்று நிச்சயமாகத் தெரிகிறது. இவர்களை அப்படிப்பட்ட சுகத்தில் சேர்க்கவே எல்லா மதங்களும் தோன்றியிருக்கின்றன. இந்த சாசுவத சௌக்கிய நிலைக்குத் தான் மோக்ஷம் என்று பெயர். இந்திரியங்களால் பெறும் அர்த்தசௌக்கியத்தைத் தேடிப்போகிறதைத் தொலைத்தால்தான் சாசுவத சௌக்கியம் கிடைக்கும். இம்மாதிரி இந்திரிய சுகத்தைத் தொலைக்கவும், சாசுவத சௌக்கியம் கிடைக்கிற வரைக்கும் அதற்கு அநுகூலமாக சமூக வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்குமே தர்ம நியதிகள் எல்லாம் வேண்டியிருக்கின்றன. மோக்ஷத்தை லட்சியமாகக் கொண்ட மதமே இந்த தர்மங்களையும் ஏற்படுத்தித் தர வேண்டியதாகிறது. இதனால்தான் தர்மம் என்றாலே அதற்கு மதம் என்றுதான் பெரியோர்கள் பொருள் கொண்டார்கள்.

ஏதோ ஒரு மாயா சக்தியால் இப்படி மநுஷ்யர்களாகியிருக்கிற நாம் பொருளையும், சிற்றன்பங்களையுமே வேண்டுமென்று நினைக்கிறோம். எதை வேண்டுமென்று நினைக்கிறோமோ அதுதான் அர்த்தம். வாஸ்தவத்தில் நம் நிறைவான நல்லதற்குப் பொருளும் காமமும் வேண்டாதவை என்றாலும் மநுஷ்ய ஸ்வபாவத்துக்கு (Human nature- க்கு) விட்டுக் கொடுத்து இவற்றையும் நம் பெரியவர்கள் புருஷார்த்தங்களில் சேர்த்தார்கள். ஆரம்பத்திலேயே, எல்லாக் காரியங்களுக்கும் அடிப்படையாக தர்ம உணர்ச்சியை உண்டாக்கிக் கொண்டு விட்டால், அப்புறம் பொருளும் காமமும்கூட நம்மை ஒரேயடியாகப் கெடுத்துவிடாதபடி, இவற்றைக் கட்டுப்பாட்டில் அளவறிந்து வைத்திருக்கும் என்பதால் தர்மத்தை முதல் புருஷார்த்தமாகச் சொன்னார்கள். பொருளையும் காமத்தையும் நாம் அர்த்திப்பது (வேண்டுமென்று நினைப்பது) போலவே தர்மத்தையும் அர்த்திக்க வேண்டும். அப்போது அது பொருள், இன்பம் இவற்றின் விஷப் பல்லைப் பிடுங்கி விடும்; முடிந்த முடிவாக நாம் அர்த்திக்க வேண்டிய வீட்டில் நம்மைச் சேர்த்துவிடும்.

பாப புண்ணியங்கள்

இந்த உலகில் நாம் எவருமே பாபியாக இருக்க விரும்பவில்லை. ஆனால் பாப காரியமே அதிகம் செய்கிறோம். நாம் எல்லோருமே புண்ணிய பயன் பெறத்தான் விரும்புகிறோம்; ஆனால் புண்ணிய காரியங்களைச் செய்வதில்லை.

“பாபம் செய்ய யாருமே விரும்பவில்லை. ஆனாலும், கிருஷ்ணா! அவனை எதுவோ பாபத்திலேயே பலாத்காரமாகத் தூண்டிக் கொண்டிருக்கிறதே, அது என்ன?” என்று அர்ஜுனன் பகவானைக் கேட்கிறான்.

“அதுதாண்டா அப்பா, ஆசை ஆசை என்பது” என்று பகவான் பதில் சொன்னார்.

ஆசையினால் ஒன்றை அடைய முயல்கிறோம். எப்படியாவது அதை அடைந்துவிட வேண்டும் என்பதால்—தர்ம அதர்மங்களைப் புறக்கணித்து விடுகிறோம். அந்த ஆசை நிறைவேறிவிட்டால் அதோடு திருப்தி உண்டாகிறதா? இல்லை. அக்னியில் நெய்யை விட்டால் அது அணைந்தாபோகிறது? மேலும் பெரிதாக வளர்கிறது. அப்படியே ஓர் ஆசை பூர்த்தியான மனஸில் இன்னோர் ஆசை பெரிதாக மூளுகிறது.

சரி, அப்படியானால் ஆசை நிறைவேறாவிட்டாலே நல்லது என்று சொல்லவா? அப்படியும் இல்லை. ஆசை நிறைவேறாவிட்டால் நமக்கு ஆத்திரம் உண்டாகிறது. சுவரில் எறிந்த ரப்பர் பந்து திரும்புவதுபோல் நிறைவேறாத ஆசையானது கோபமாகத் திரும்பி வந்து நம்மைப் பாபத்தில் மேலும் தள்ளுகிறது. ஆசைக்கு அடுத்தபடி இந்தக் குரோதத்தைத்தான் பகவான் கீதையில் சொன்னார். இதுவும் ஆசையின் விளைவுதான்.

அப்படியானால் பாபம் செய்யாதிருப்பதற்கு ஒரே வழி ஆசைகளை அழிப்பதுதான். இதை எப்படிச் செய்வது? நாம் காரியம் செய்யாமல் இருக்கமுடியாது. உடம்பு காரியம் பண்ணாதபோதுகூட நம் மனசு காரியம் பண்ணிக்கொண்டேதான் இருக்கிறது. எதையாவது எண்ணிக் கொண்டேயிருப்பதுதான் மனஸின் காரியம். உடம்பு, மனசு ஆகியவற்றால் இந்த இரு வகையிலும் நாம் செய்கிற அத்தனை காரியங்களும் இப்போது நம்முடைய சொந்த ஆசை அபிலாஷைகளையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இதனாலேயே அவை நம்மை மேலும் மேலும் பாபத்திலே கொண்டு போய்த் தள்ளிக் கொண்டிருக்கின்றன. அப்படியானால் இனி காரியமே இல்லாமல் சும்மாயிருந்து விடலாமா என்று பார்த்தால், மநுஷ்ய ஸ்வபாவம் நம்மை அப்படியிருக்க விடமாட்டேன் என்கிறது.

‘சிந்தையை அடக்கியே சும்மாயிருக்கின்ற திறம் அரிது’ என்று தாயுமான ஸ்வாமிகள் சொன்னார். உடம்பின் காரியத்தைக் கொஞ்சம் நிறுத்தினால் கூட சித்தத்தின் காரியம் நிற்கமாட்டேன் என்கிறது. அது தான் காரியம் செய்வதோடு உடம்பையும் காரியத்தில் ஏவிவிடுகிறது.

ஆசையை நேராக நிறுத்த முடியவில்லை. காரியத்தையும் நிறுத்த முடியவில்லை என்றால் நமக்கு கதிமோக்ஷமே இல்லையா? இந்தப் பிரச்சனைக்கு (Problem) தீர்வே (Solution) இல்லையா? இருக்கிறது. அதாவது இப்போது நாம் இருக்கிற நிலைமையில் காரியத்தை அடியோடு நிறுத்திவிட வேண்டுமென்பதில்லை. ஆனால் நாம் சொந்த ஆசைகளுக்காகவே காரியம் செய்து கொள்கிறோம் என்ற நிலைமையை மாற்றி, நமக்கு லௌகிகமாக லாபம் தராத காரியங்களில் ஈடுபட வேண்டும். லோகோபகாரமாகவும், நமக்கே ஆத்மார்த்தமாகப் பலன் தருவதாகவும் இருக்கப்பட்ட காரியங்களில் இறங்க வேண்டும். இப்படிப்பட்ட காரியங்களில் ருசியை உண்டாக்கிக் கொண்டு மேலும் மேலும் ஈடுபடுகிறபோது, ஆசைகளும் குறைந்து கொண்டே வருகின்றன; பாபம் குறைகிறது; புண்ணியம் ஏறுகிறது. அதாவது இப்போது நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் ஆசையில்லாமல் காரியம் செய்யப் பழக வேண்டும். ஆசையில்லாமல் செய்வதுதான் புண்ணிய காரியம்.

நாம் இப்போது நான்கு விதங்களில் பாபம் செய்கிறோம். உடம்பால் பல கெட்ட காரியம்; வாயால் புரளிப்பேச்சும் அசத்தியமும்; மனத்தினால் கெட்ட நினைவுகள்; பணத்தினால் செய்கிற பாபத்தைப் சொல்லவே வேண்டாம்.

எந்த நான்கால் பாவம் செய்தோமோ, அந்த நான்காலுமே புண்ணியம் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.

உடம்பைப் பரோபகாரம், பகவானைப் பிரதக்ஷிணம் செய்து நமஸ்கரிப்பது இவற்றில் ஈடுபடுத்திப் புண்ணியம் செய்ய வேண்டும்.

வாயால் பகவந் நாமாவைத் சொல்லிப் புண்ணியம் செய்ய வேண்டும். ‘சம்பாதிப்பதிலேயே பொழுதெல்லாம் போய்விடுகிறது; இதற்கு அவகாசம் இல்லையே’ என்பீர்கள். சம்பாதிப்பது கிருஹஸ்தர்களுக்கு அவசியம்தான். ஆனால் யோசித்துப் பார்த்தால் அதற்கே பொழுது முழுதும் போய் விடவில்லை என்று தெரியும். வீண் பேச்சு, பரிகாசம், வேடிக்கைப் பார்ப்பது, நியூஸ் பேப்பர் விமர்சனம் இவற்றில் எவ்வளவு பொழுது வீணாகிறது? அதையெல்லாம் பகவந்நாமஸ்மரணையில் செலவிடலாமே! இதற்கென்று தனியே பொழுது ஏற்படுத்திக் கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை. காரியாலயத்துக்கு பஸ்ஸிலோ, ரயிலிலோ போகும்போது பகவந் நாமாவை ஜபித்துக் கொண்டே போகலாமே! ஓடி ஓடி சம்பாதிப்பதில் ஒரு பைசாகூட பிற்பாடு உடன்வராதே! மறு உலகத்தில் செலாவணி பகவந் நாமா ஒன்றுதானே?

மனசு பகவானின் இடம். அதைக் குப்பைத் தொட்டியாக்கி இருக்கிறோம். அதைச் சுத்தப்படுத்தி மெழுகி, பகவானை அமரவைத்து, நாமும் அமைதியாக அமர்ந்துவிட வேண்டும். தினமும் ஜந்து நிமிஷங்களாவது இப்படி தியானம் செய்ய வேண்டும். லோகமே மூழ்கிப்போனாலும் நிற்காமல் நடக்க வேண்டிய காரியம் இது. ஏனெனில் லோகம் மூழ்கும்போது நமக்குக் கைக்கொடுப்பது இதுதான்.

பணத்தைக் கொண்டு பகவானுக்காகவும் ஏழைகளுக்காகவும் பலவிதங்களில் தர்மம் செய்து புண்ணியம் சேர்க்க வேண்டும்.

பாபத்துக்கு இரண்டு சக்திகள். ஒன்று, இன்று இப்போது நம்மைத் தவறில் ஈடுபடுத்துவது. இரண்டாவது, நாளைக்கும் இதே தவற்றை நாம் செய்யுமாறு தூண்டுவது. உதாரணமாக, பொடி போடுவது அன்றைக்குக் கெடுதல் செய்கிறது; அதோடு நில்லாமல் நாளைக்கு பொடி போடுவும் தூண்டுகிறது. இதுதான் பழக்க வாசனை என்பது. இந்த வாசனையை மங்கவைத்து, புண்ணியங்களைச் செய்து செய்து புண்ணியவாசனையை ஏற்ற வேண்டும்.

வாசனைதான் மீண்டும் மீண்டும் பாவத்தில் நம்மை இழுக்கிறது. அதற்காகப் பயம் வேண்டாம். நம்மைப் போல் இருந்தவர்கள்—நம்மை விட மகா பாபிகளானவர்கள்கூட—பக்தர்களாகவும், ஞானிகளாகவும் ஆகியிருக்கி்றார்கள். பாபிகளை ரட்சிக்காவிட்டால் ஈஸ்வரனுக்குத் தான் என்ன பெருமை? நாம் பாவியாக இருப்பதாலேதான் அவனுக்குப் பதிதபாவனன் என்ற விருது கிடைக்கிறது. அவனுக்கு அந்த பெருமையை நாம்தான் கொடுக்கிறோம்!

“என்னை மட்டும் சரணடைந்துவிடு! நான் உன்னை எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்—ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச: —பயப்படாதே” என்று தீர்மானமாக அபய வாக்குத் தருகிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.

அதனால் நாம் தைரியமாக இருப்போம். எத்தனை சுற்றுச் சுற்றினாலும் அத்தனையையும் திருப்பிச் சுற்றினால் தான் கட்டு கழலும். பாப வாசனை அவ்வளவும் தீர அத்தனை புண்ணிய வாசனை உண்டாக வேண்டும். நடுவே அவசரமும் ஆத்திரமும் வேண்டாம். அப்படிச் செய்தால் சுற்று சிக்கலாகி முடிச்சு விழுந்துவிடும். பொறுமையாக பகவானை நம்பி நம் தர்மத்தைச் செய்தால் நிச்சயம் கைகொடுப்பான்.

மனோ வாக்குக் காயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இந்திரிய வியாபாரத்திலிருந்து திருப்பி, பகவானிடம் வைத்துப் பழகுவதற்காகத்தான் இத்தனை மதங்களும் தோன்றியிருக்கின்றன. ஜீவனாகப்பட்டவன் இந்திரிய சுகங்களுக்காகச் செய்கிற பாபங்களிலிருந்து அவனை மீட்பதற்காகத்தான் ஒவ்வொரு பெரியவரும் தோன்றி ஒரு மதத்தைக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார். பாபத்தினால், இந்திரிய சுகத்தினால் கிடைக்கிற ஆனந்தம் ரொம்பவும் தற்காலிகமானதுதான். ‘பரமாத்மாவைச் சேர்த்திருப்பதுதானப்பா நிரந்தரமான ஆனந்தம்’ என்று சொல்லி, சம்ஸாரத்திலிருந்து அதனை விடுவித்து பகவானிடத்தில் சேர்ப்பதுதான் ஒவ்வொரு மதத்துக்கும் லட்சியமாகும்.

தர்மமே தலைக்காக்கும்

புத்தாண்டு பிறக்கப் போவதற்கு அறிகுறியாக இயற்கை அன்னை தனது மர வர்க்கங்களின் அரசிளங் குழந்தைகளான அரசையும் வேம்பையும் முதலில் அடியோடு இலையுதிரச் செய்கிறாள். பிறகு பச்சைத் துளிர்களைத் தழைக்க வைக்கிறாள்.

அரசுக்கும் வேம்புக்கும் கல்யாணம் செய்து அதனடியே விநாயகரையும், நாகராஜனையும் பிரதிஷ்டை செய்வது தொன்று தொட்ட வழக்கு. பனிக் காலத்துக்குப்பின் இலை உதிரும்போது இந்த மரங்களைப் பார்த்தால் இலையே இருக்காது. பிள்ளையாரும் நாகராஜனும் மரத்தின் நிழற்குடையில்லாமல் வெளிச்சம் தங்கள்மேல் படுகிற மாதிரி இருப்பார்கள். இது, இம்மாதிரி ஆகாசம் பார்க்க சுக உஷ்ணமான சூர்ய வெளிச்சத்தை ஆனந்தமாக அனுபவிக்கிற பருவ காலமாகவே இருக்கிறது. மழையிலே குடை வேண்டும். கொளுத்துகிற வெயிலில் குடை வேண்டும். கடும்பனிக் காலத்திலும் இராவேளையில் சூரியன் இல்லாதபோது ஆகாசம் பார்க்க உட்கார்ந்திருக்க முடியாது. ஆனால் அத்தனை பனியில்லாத இந்த இலையுதிர் காலத்தில்—சிவராத்திரியோடு குளிர் ‘சிவ சிவா’ எனறு போய்விடும் என்பார்கள். அப்படிப்பட்ட காலத்தில் ஸுக உஷ்ணமாகச் சூரியன் இருக்கிற காலத்தில், பகல் இராப்பொழுது இரண்டிலும் ஆகாசம் பார்க்க உட்கார்ந்திருக்கலாம். இதை உணர்த்துகிறது போலவே இயற்கையன்னை இந்தப் பருவத்தில் விக்நேசுவரருக்கும் நாகராஜனுக்கும் சூரிய பூஜை செய்கிற மாதிரி மேலே இருக்கிற அரசு, வேம்பு மரங்களின் இலைகளை உதிர்த்து விடுகிறாள். நாகராஜனை ஸுப்ரமண்ய ஸ்வாமி என்றே சொல்லலாம். தெலுங்கர்கள் ஸுப்ரமண்யர், பாம்பு இரண்டையும் ‘சுப்பராயடு’ என்றே சொல்லுகிறார்கள். ஷஷ்டியில் நாகராஜ பூஜை செய்கிற வழக்கம் நம் தமிழ் தேசத்திலும் பிராசீனமாக இருந்து வந்திருக்கிறது. ஆதி தம்பதிகளின் முதல் குழந்தைகளான பிள்ளையார், குமாரஸ்வாமி இரண்டு பேருக்கும் இயற்கையன்னை காட்டுகிற பரிவு, பார்வதீ பரமேசுவரர்களின் குழந்தைகளான நம் அத்தனை பேரிடமும் காட்டுகிற அன்புக்கு அடையாளமாக இருக்கிறது.

அது நிறைந்த பரிவாக இருக்கிறது. இப்போது சுகோஷ்ணமாக மித வெப்பமாக இருப்பதால் இவர்களை இப்படிச் சூரிய ஒளியில் உட்கார்த்தி வைத்திருந்தாலும், வஸந்த காலம் வந்தவுடன், சூரியன் கொஞ்சம் உக்ரமானவுடன், அது அவர்களை உபத்திரவப் படுத்தக்கூடாது என்கிற கரிசனம் இயற்கையன்னைக்கு வந்து விடுகிறது. சூரியன் கடுமையாகும் காலத்தில் துளிர்கள் தழைத்துப் பசுங்குடை பிடிக்கிறாள். இலையுதிர்ப்பது, துளிர்ப்பது எல்லாம் இயற்கை; லோக நியதி; அவை யுகாந்தரங்களாக மாறாமல் நடப்பவை.

பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றுக்கும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நியதி இருக்கிறது. அப்படி அவை நியதிப்படி நடப்பதால்தான் உலக வாழ்க்கை நடக்க முடிகிறது. இல்லாவிட்டால் எல்லாம் நெறிகெட்டுப் போய்விடும். அதாவது லோகத்திலுள்ள சமஸ்த ஜீவராசிகளும் சௌக்கியமாக வாழவேண்டும் என்கிற அன்பான எண்ணத்திலேயே அவை ஒன்றோடொன்று ஒத்துப் போவதற்காக இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு தர்மம், நியதி (law) ஈச்வரனால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தன் குழந்தைகளை வெயில் படாமல் மழை படாமல் காப்பாற்ற வேண்டும்; அவர்களுக்கு இள வெயிலின் வெப்பம் தேவையாக இருக்கிற போது அதைத் தந்து அரவணைக்க வேண்டும் என்கிற அன்பு ஈசுவரனுக்கு இருப்பதால் அதற்கு, அநுசரணையாக இயற்கையை நடத்தி வைத்து மரங்களுக்கு ஒரு நியதியை, தர்மத்தைத் தந்திருக்கிறார்.

இந்த அன்பைப் பெற நமக்கு யோக்யதாம்ஸம் வேண்டாமா? வேண்டும். மரத்துக்கும் மட்டைக்கும் இருக்கிற நியதி நமக்கும் உண்டு. லோக க்ஷேமத்துக்காக அதை நாம் நடத்திக் காட்டுகிற போதுதான் ஈசுவரனின் அன்பைப் பெற பாத்தியதை கேட்கலாம். மனிதனுக்காக உள்ள இந்த நியதிக்கே தர்மம் என்று பெயர். இந்த நியதியை மீறவும் மனிதனுக்கு மூளையைத் தந்து ஸ்வாமி விளையாட்டுப் பார்க்கிறார். அந்த மூளையை வைத்துக் கொண்டு இவனும் எதை எதையோ சௌக்கியமாக நினைத்துக் கொண்டு, அவற்றுக்காக அலைகிறான். இதில் தனக்கான தர்மத்தையும் மீறுகிறான். ஆனால் இறுதியில் சௌக்கியத்தைத் தருவது தர்மமே.

ஏதோ ஒன்று உலக மக்கள் எல்லோரையும் ஏதோ ஒரு விதத்தில் இந்த தர்மத்தின் திசையில் திருப்பிக் கொண்டுதான் வந்திருக்கிறது. இதனால்தான் சகல தேசங்களிலும் மனிதன் தன்னுடைய பௌதிகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டும் நிற்காமல் வேறு சில ‘விசித்திரமான’ காரியங்களைச் செய்து வருகிறான். ஒருவன் சிலுவை என்று ஒன்றை வைத்துக் கொண்டு பைபிள் படிக்கிறான். இன்னொருவன் ‘நமாஸ்’ செய்கிறான். வேறொருவன் விபூதியைக் குழைத்துப் பூசிக்கொள்கிறான். இன்னொருவன் நாமக்கட்டியைக் குழைத்துப் போட்டுக்கொள்கிறான். இவற்றால் நேருக்கு நேர் எந்த பௌதிகப் பலன் தெரியாவிட்டாலும் தலைமுறை தத்துவமாக இவற்றை மனித சமுதாயம் பின்பற்றி வந்திருக்கிறது. ஏன் இப்படி செய்திருக்கிறது?

உலக வாழ்வுக்கு மனிதன் பணமும் பொருளும் சேர்த்தான். அன்றைய தேவையோடு போதாது என்று எதிர் காலத்துக்காகவும் பொருளீட்டினான். ‘எதிர்காலம்’ என்கிறபோது அது எத்தனை வருஷம் என்ற கேள்வி வந்தது. எப்படியிருந்தாலும் ஒருவன் ஆயிரம் பதினாயிரம் வருஷம் இருக்கப் போவதில்லை என்று தெரிந்தது. ஒரு மநுஷ்யனின் ஆயுள் உள்ளவரைக்கும், அந்த மநுஷ்யனின் சந்ததிக்கும் தேவைப்படுகிற சொத்தைத் தேடினான்.

இந்த மநுஷ்ய ஆயுள் முடிந்தபின் அவன் என்ன ஆகிறான் என்ற கேள்வி வந்தது. இந்த உடம்பு போனதோடு மநுஷ்யனும் போய்விடுவதில்லை என்று அந்தந்த தேசத்திலும் தோன்றிய மஹான்கள் கண்டார்கள். ஆனால் இந்த உடம்புக்காகத் தேடிய பணமும் பொருளும் உடம்பு போனபின் அந்த மநுஷ்யனுக்கு சிறிதும் பிரயோஜனமில்லை என்று கண்டார்கள். உடம்பு போனபின் உயிர் நல்ல கதி அடைவதற்குச் செய்ய வேண்டியது எதுவோ அதை அந்த மஹான்கள் கண்டார்கள். பல தேசங்களில் பலவிதத்தில் வழி கண்டார்கள். சிலுவை, நமாஸ், விபூதி, திருமண் எல்லாம் இப்படி வந்தவையே.

‘லோகம் முழுவதையும் பகவானுடையதாகப் பார்த்து, அதற்கேற்ப எப்படி நடக்கவேண்டுமோ அப்படி நடப்பதே மநுஷ்யர்களின் தர்மம். தனக்கென்று மட்டும் இவன் செய்து கொள்கிற காரியங்கள் இவனை அதர்மத்தில்தான் தள்ளும். எனவே, இப்போது இவனுக்கு இருக்கிற சுயநலத்தைக் குறைக்க வேண்டும். இவனுக்கு ஈசுவரனின் நினைப்பை உண்டாக்கி, அவனுடைய உடைமையே உலகமெல்லாம் என்ற அறிவை ஏற்படுத்த வேண்டும்’ என்ற அடிப்படையில்தான் சகல மதங்களும் உண்டாகியிருக்கின்றன. ‘உன் ஆசைப்படி நடந்து கொண்டு உனக்கேற்ற சொத்து சேர்த்துக் கொள்’ என்று சொல்கிற மதம் எதுவுமே இல்லை. தன்னை முக்கியமாக நினைத்துக் கொள்கிற வரையில் இவன் சுயநலத்துக்குத்தான் காரியம் செய்து கொள்வான் என்பதால் அத்தனை மதங்களும் கடவுள் என்கிற ஒன்றை இவனுக்குச் சொல்லி, ‘அப்பா பிரபஞ்சம் முழுவதையும் செய்த அந்த மஹா சக்தியின் முன் நீ ஒன்றுமேயில்லை’ என்று காட்டி இவனுடைய அகங்காரத்தைக் குறைக்கின்றன! அந்த மஹாசக்திமானைப் பிடித்துவிட்டால் நம் மூளையைச் செய்த அவனே அதை எப்படித் திருத்தவேண்டுமோ அப்படித் திருத்தி நம்மை நம் தர்மத்தில் ஈடுபடுத்தி விடுவான் என்பதால் பக்தியையே பெரும்பாலான மதங்கள் முக்கியமாக வைத்திருக்கின்றன.

ஆனாலும் கடவுள் என்று ஒரு தத்துவம், அதனிடம் பக்தியில் மனசைத் தோய்க்க வேண்டும் என்று மட்டும் சொல்லிவிட்டால் சாமான்ய ரீதியில் அதைப் பிடித்துக் கொண்டு ஸ்திரமாக நிற்கமுடியவில்லை. பக்தியையும் காரிய ரூபத்தில் காட்டுவது என்றாலே சாதாரண ஜனங்களால் முடிகிறது. இதற்காகத்தான் ஒவ்வொரு மதத்திலும் சடங்குகள்—சந்தியாவந்தனம், ப்ரேயர், நமாஸ்—எல்லாம் வந்திருக்கின்றன. லோக வாழ்க்கையில் இருந்துகொண்டே இப்படி பக்தி செய்கிறபோது உலகில் எப்படி நடப்பது இவனுக்கும் தர்மம் என்பதை மதங்கள் சொல்கின்றன. ‘எல்லோரிடமும் அன்பாக இரு; தியாகம் பண்ணு; சேவை பண்ணு’ என்று இப்படியெல்லாம் அத்தனை மதங்களும் சொல்கின்றன. இப்படி இவன் வாழ்க்கை நடத்தி விட்டால் அப்புறம் உடம்பு போனபின் உயிரானது அந்தக் கடவுளிடமே போய்ச் சேர்ந்து விடும். இதை ஒரு ஸித்தாந்தம், அத்வைதமாகக் கடவுளுக்கு வேறில்லை என்று அதுவாகவே ஆகிவிடுவது என்று சொல்லும்; இன்னொன்று அவரிடம் போய் ஸேவை செய்து கொண்டே அவரது கிருபையைப் பெற்று ஆனந்தமாக இருப்பது என்று சொல்லும். முடிவான அந்த நிலையைப் பற்றி இப்போது நாம் சண்டைபோட்டு மண்டை உடைத்துக் கொள்ள வேண்டாம். ‘ஏதோ ஒரு வழியில் கடவுளை அடைந்து விடுகிறோம். அதற்கப்புறம் இந்த லோக வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய துக்கங்கள், கஷ்டங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள் எதுவும் அடியோடு இல்லை; நீங்காத, நிறைவான ஆனந்தம் மட்டுமே இருக்கும்’ என்று தெரிந்து கொண்டால் இப்போதைக்குப் போதும்.

அப்படிப் பரமாத்மா நம்மைத் தம்மிடம் அழைத்துக் கொள்ள வேண்டுமானால் நாம் லோகத்துக்கும், அவருக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை வழுவில்லாமல் செய்யவேண்டும். இந்தக் கடமைகள்தாம் நமக்கான தர்மம். அதாவது உடம்பு உள்ளபோதும், உடம்பு போன பிற்பாடும் நன்மைப் பயப்பதே தர்மம். உடம்பு போனபின் கைகால் முதலிய அவயவங்கள் இல்லை. எனவே, உடம்பு இருக்கும்போதே அது போன பிற்பாடு நற்கதி பெற வேண்டியதற்கான தர்ம காரியங்களைச் செய்ய வேண்டும். நாம் போனபின் பிறர் நலனுக்காக ஆயுள் இன்ஷுரன்ஸ் செய்து கொள்வதைவிட இது முக்கியம். ஆயுள் போன பிற்பாடு நமது நலனுக்கே நிரந்தர இன்ஷுரன்ஸாக இருப்பது தர்மமே. இப்போது ஆயுள் இன்ஷுரன்ஸ் (life insurance) என்று ஒன்றைச் சொல்கிறார்கள்; தர்மமே ஆயுள் போனபிற்பாடும் நன்மை பயக்கிற after life insurance. ஆயுள் உள்ளபோதும் அதே தர்மம் சாந்தியும் சௌக்கியமும் தருகிறது.

எந்த தர்மத்தை நாம் அநுஷ்டிப்பது என்ற குழப்பமே வேண்டாம். பல காலமாகப் பெரியவர்கள் பரம்பரையாக அநுஷ்டித்து வந்த தர்மத்தில் நாம் ஊறியிருக்கிறோம். அநுபவத்தில் அவர்கள் நித்திய ஸெளக்கியத்தை அடைந்திருக்கிறார்கள். இந்தத் தலைமுறையில் நாம் ஓயாத அதிருப்தியோடு கிளர்ச்சி, (Demonstration) என்று செய்கிற மாதிரி இல்லாமல், அவர்கள் நிம்மதியாக நிச்சிந்தையாக இருந்தார்கள் என்று நிச்சயமாகத் தெரிகிறது. எனவே, அந்த தர்மத்தை நாம் கடைப்பிடித்தால் போதும். நாமாக ஒன்றைப் புதிதாகப் பண்ணிக் பிடித்துக்கொண்டால் வீண் சிரமம்தான். அது நல்லதாயிருக்குமா கெடுதலாயிருக்குமா என்று நமக்கே ஓயாத சந்தேகமாக இருக்கும். ஆதலினால் முன்பே பெரியவர்கள் அனுஷ்டித்து, நமக்கென்று ஏற்பட்டுள்ள தர்மத்தைக் கைக்கொள்வதே நல்லது.

மநுஷ்யராகப் பிறந்து விட்டால் கஷ்டம், ஆபத்து எல்லாம் வரத்தான் செய்யும். அதை உணர்த்தத்தான் புத்தாண்டில், முதலில் பூக்கும் வேப்பம் பூவை உண்கின்றோம். வருஷத் தொடக்கத்திலேயே கசப்பை ஏற்கிறோம். ஏறக்குறைய வருஷ முடிவில் வரும் பொங்கல் பண்டிகையில் கரும்பை ருசிக்கிறோம். ஆரம்பத்திலேயே இனித்து விட்டால் முடிவில் கசந்து போகும். கசப்பென்று வெறுப்படைய வேண்டாம். கசப்பையே இயற்கை அன்னையின்—அல்லது தர்மநியதியின்—மருந்தாக எதிர்கொண்டு வரவேற்போம். அதனால் போகப்போக முடிவில் எந்த அநுபவத்தையுமே தித்திப்பாக எண்ணுகிற மனப்பான்மை உண்டாகும்.

ஸ்ரீ ராமனுக்கு வனவாசத்தில் ஏற்பட்ட கஷ்டம், ஆபத்து எல்லாம் பெரியவை. ஊருக்குப் போகும் குழந்தைக்குத் தாயார் கட்டுச்சாதம் கொடுப்பதுபோல், ராமன் வனவாஸம் செல்லும்போது கௌஸல்யையும் செய்தாள். ‘பதினான்கு வருஷம் கெடாமலிருக்கும் பக்ஷணம் எது? குழந்தைக்கு எதைத் தரலாம்?’ என்று நிரம்ப ஆலோசித்தாள் கௌஸல்யை. பிறகு நிரந்தர பக்ஷணமான தர்மத்தைத்தான் கட்டிக் கொடுத்தாள்.

“ராகவா! தைரியத்துடனும் நியமத்துடனும் நீ பாதுகாக்கும் தர்மமே உன்னைப் பாதுகாக்கும்” என்று சொல்லித் தர்மத்தை ராகவனுக்குத் துணை அனுப்பினாள்.

யம் பாலயஸி தர்ம த்வம் த்ருத்யா ச நியமேன ச |
ஸ வை ராகவ சார்தூல தர்மஸ்த்வாம் அபிரக்ஷது ||

தர்மமே இறுதியில் ராமனுக்கு ஜயத்தைப் பெற்றுத் தந்தது. தர்ம மார்க்கத்தில் ஒருவன் இருந்தால் பிராணிகள் கூட, அவனை ஆதரிக்கும்; அதர்மத்தில் விழுந்தால் உடன் பிறந்தவனும் எதிரியாகிவிடுவான் என்பதை ராமாயணம் நிரூபிக்கிறது. ஸ்ரீ ராமனை வானரங்களும் ஆதரித்தன. ராவணனையோ சகோதரன் விபீஷணனும் விட்டு விலகினான்.

தர்மமே தலை காக்கும். பத்துத் தலை ராவணன் விழுந்து நாசமாக, ஸ்ரீ ராமசந்திரமூர்த்தி விஜயராகவனாகத் தலை நிமிர்ந்து நின்றதற்குக் காரணம் தர்மம் தலைகாத்ததுதான். அவரவருக்கும் முன்னோர்களால் அனுஷ்டிக்கப்பட்ட தர்மமே ஒவ்வொரு மதமாயிருக்கிறது. இந்த தர்மத்தை அவரவரும் தைரியமாக—நியாயமாக பின்பற்றிச் சாசுவத சௌக்கியத்தைப் பெறுவீர்களாக!