ஸீதாராமருக்கும் பக்கபலம்!

பலமில்லாதவருக்கு பலம் ஸ்ரீராமசந்த்ரமூர்த்தி தான்: “நிர்பல் கே பல் ராம்”. ஆபத்து வந்து சாய்கிற ஸமயத்தில் யார் வந்து தாங்கிக்கொண்டு பலம் தர முடியும்? ராமன்தான்! “ஆபதாம் அபஹர்த்தாரம்”1 என்கிறோம். “அக்ரத ப்ருஷ்டதச்சைவ பார்ச்வதச்ச மஹாபலௌ”2 — அதாவது, நமக்கு முன்னேயும் பின்னேயும் இரண்டு பக்கங்களிலும் நம்மைச் சூழ்ந்து கொண்டு ஸதாவும் நம்மை ரக்ஷிக்கிற மஹாபலவான் யார்? அந்த ராமன்தான். நமக்குத் துளி ஆபத்து வருகிறதென்றாலும், அம்பை விடுவதற்கு ஸித்தமாகக் கோதண்டத்தின் நாண்கயிற்றைக் காதுவரை இழுத்தபடி நம்மைச் சூழ்ந்திருக்கிறான். அவனை விட்டு விலகாத லக்ஷ்மணனும் அவனோடேயே இருந்து கொண்டிருப்பான் — “ஆகர்ண பூர்ண தந்வாநௌ ரக்ஷேதாம் ராம லக்ஷ்மணௌ”3. ஆனால் இப்படிப்பட்ட புருஷ ச்ரேஷ்டர், வீரராகவன், விஜயராகவன் என்றே பேர் பெற்ற மஹா வீரர் ஆஞ்ஜநேயரைத் தமக்குப் பக்கபலமாகக் கொண்டதால் தான் அவதார கார்யத்தைப் பண்ண முடிந்ததாகக் காட்டியிருக்கிறார்!

மநுஷ வேஷம் ப்ரமாதமாய்ப் போட்டவர் அவர். ஸீதையை ராவணன் கொண்டு போய் எங்கே வைத்திருக்கிறான் என்று தெரியாத மாதிரியே நடித்தார். சொல்லி முடியாத துக்கப்பட்டார். அப்போது அவள் இருக்கிற இடத்தைக் கண்டுபிடித்துச் சொல்லி அவருக்கு உத்ஸாஹமும், தெம்பும், பலமும் தந்தது யார் என்றால் ஆஞ்ஜநேய ஸ்வாமிதான்.

ஸீதையைப் பிரிந்து இவர் பட்ட துக்கத்தைவிட இவரைப் பிரிந்து ஸீதை பட்ட துக்கம் கோடி மடங்கு. ப்ரிய பத்னி பக்கத்தில் இல்லையே, தன்னைப் பிரிந்து அவள் கஷ்டப்படுவாளே என்ற கஷ்டம் மட்டுந்தான் ராமருக்கு. ஆனால் அவளுக்கோ இதோடு ராக்ஷஸ ராஜ்யத்தில் மஹா காமுகனால் சிறை வைக்கப்பட்டிருப்பதான மஹா கஷ்டமும் சேர்ந்திருந்தது. ‘அபலா’ என்றே ஸ்திரீக்குப் பெயர். ஸாக்ஷாத் ஜகன்மாதாவான மஹாலக்ஷ்மி ஸீதையாக வந்து அபலையிலும் அபலையாக அசோகவனத்தில் படாத கஷ்டப்பட்டு, அந்தக் கஷ்டத்துக்கு முடிவு ப்ராணனை விடுவதுதான் என்று சுருக்குப் போட்டுக்கொள்ள இருந்தபோது அவளுக்கு உத்ஸாஹத்தை, தெம்பை, பலத்தைத் தந்தது — ஆஞ்ஜநேயர்தான்.

அவர் செய்த அரும் செயல்கள் ஒன்றில்லை, இரண்டில்லை. ஆனால் இதற்கெல்லாம் சிகரமாக எதைச் சொல்லலாமென்றால் இந்த லோகம் முழுவதற்கும் ஸ்ரீயைக் கொடுத்து, ஸெளபாக்யத்தைக் கொடுத்து அநுக்ரஹிக்கும் தாயார் மனம் குலைந்து மட்கிக் கிடந்தபோது ஆஞ்ஜநேய ஸ்வாமி காய்ந்த பயிருக்கு மழையாகப் போய் அவளுக்கு உயிரும் உத்ஸாஹமும் தந்தாரே அதுதான். “ஜானகீ சோக நாசநம்” என்று இதைத்தான் சிறப்பித்துச் சொல்கிறோம்.

அஞ்ஜாநாநந்தனம் வீரம் ஜானகீ சோக நாசநம்

அஞ்ஜனை என்று யாரோ ஒரு வாநர ஸ்த்ரீக்குப் புத்ரராய் அவதாரம் பண்ணி அவளுக்கு ஆனந்தம் கொடுத்தார். இது பெரிதில்லை. எந்தப் பிள்ளை, அவன் என்ன துஷ்டத்தனம் செய்பவனாயிருந்தாலும், அம்மாவுக்கு மாத்திரம் ஆனந்தம் தருகிறவனாகத்தான் தோன்றுவான். அதனால்தான் பிள்ளையை ‘நந்தனன்’ என்பது. தசரத நந்தனன், தேவகி நந்தனன் மாதிரி அஞ்ஜநா நந்தனன். இது பெரிசில்லை. அந்த அம்மாவுக்கு மாத்திரமில்லாமல் லோகஜனனிக்கு, லோகமுள்ளளவும் வரப்போகிற அத்தனை அம்மாகளுக்கும் ஐடியலாக இருக்கும் ஸீதம்மாவுக்கு மகத்தான சோகம் ஏற்பட்டபோது அதைப் போக்கினாரே, அதற்குத்தான் நாம் அவருக்கு நமஸ்காரம் பண்ணிக் கொண்டேயிருக்கணும்.

ஸீதைக்குள் சோகாக்னி ஜ்வாலை விட்டுக் கொண்டிருந்தது. அவளுடைய ஜீவனை வற்றப் பண்ணிக் கொண்டிருந்தது. ராவணன் ஹநுமார் வாலில் நெருப்பு வைத்ததாகச் சொல்கிறார்களே, உண்மையில் அந்த நெருப்பாலா அவர் லங்கா தஹனம் செய்தார்? இல்லவே இல்லை. அந்த நெருப்புக்குள்ளேயே இன்னொரு நெருப்பை அவர் சேர்த்துக்கொண்டு இதனால்தான் ஊரை எரித்தார். ஸீதையின் சோகாக்னிதான் அது.

ய: சோக வந்ஹிம் ஜநகாத்மஜாயா:
ஆதாய தேநைவ ததாஹ லங்காம்4

“ஜநாகாத்மஜா” என்றால் ஜானகி. “சோக வந்ஹி” என்றால் துயரமாகிற அக்னி. அவள் இருந்தது அசோக வனம்; அவளுக்குள் இருந்தது சோக வந்ஹி! “தேநைவ” – அதனாலேயே, இந்த சோகாக்னியாலேயே; “லங்காம் ததாஹ” – லங்கையை எரித்தார்.

‘ஆஞ்ஜநேயருக்கு வாலில் நெருப்பை வைத்தும் கொஞ்சங்கூட அவரை அது சுடவில்லை. ஸீதையின் அநுக்ரஹத்தால் அப்படியிருந்தது’ என்று மாத்திரம் நமக்குத் தெரியும். ஆனால் ஊரையெல்லாம் எரிக்கிற பெரிய சக்தி அதற்கு வந்ததே அவளுடைய சோகத்தைத் தான் ராவணன் நெருப்பு என்ற ரூபத்தில் வைத்ததால் தான்! ஆஞ்ஜநேயர் வாலில் நெருப்பு வைக்கணும் என்ற எண்ணம் அவனுக்கு ஏன் வந்தது? அவனுக்கு அந்த எண்ணம் வருகிற ஸமயத்தில் ஸீதை அதற்கு மேலும் சோகாக்னியில் வாடினால் ப்ரபஞ்சமே தாங்காது என்ற கட்டம் வந்தது. அது எப்படியாவது வெளியே வந்து செலவாகும்படிச் செய்ய வேண்டும். அதை யாராவது தாங்கிக் கொண்டு வெளியிலே விட்டுவிட வேண்டும். யாரால் தாங்கமுடியும்? ஆஞ்ஜநேய ஸ்வாமியைத் தவிர யாராலும் முடியாது. இதனால்தான் அவரைத் தண்டிக்கணும் என்று ராவணனுக்குத் தோன்றினபோது ஈச்வர ஸங்கல்பத்தால், ‘வாலில் நெருப்பு வைத்தாலென்ன?’ என்று தோன்றிற்று. இப்படி ஆஞ்ஜநேயர் ஜநகாத்மஜாவின் சோக வந்ஹியை வாங்கிக் கொண்டே லங்கையை அதனால் தஹனம் செய்தார். அது ஸாதுக்களை, ஸஜ்ஜனங்களைக் கஷ்டப்படுத்தாமல் துஷ்டர்களை மட்டும் தண்டிக்கும்படிச் செய்தார்.

அந்த அக்னி அவளுடைய சோகமாயிருந்ததால் தான் அவளுடைய பதிக்குப் பரம ப்ரியராக, பக்கபலமாக இருந்தவரைச் சுடாமல் அவருக்கு மாத்திரம் ஜில்லென்று இருந்தது.

ராமருக்கு ஆஞ்ஜநேயர் செய்த மஹா உபகாரம் ஸீதை இருக்குமிடத்தைக் கண்டு பிடித்துச் சொன்னது. ஸீதைக்கு அவர் செய்த மஹா உபகாரம் ராமர் எப்படியும் வந்து அவளை மீட்டுக்கொண்டு போவார் என்று அவள் உயிரைவிட இருந்த ஸமயத்தில் சொன்னது. இவ்வாறு இரண்டு பேரும் பலமே போனாற்போல இருந்தபோது பலம் தந்திருக்கிறார்.

ஆனால் இந்த இரண்டையும் அவர் எதைக்கொண்டு, எதன் பலத்தில் பண்ணினார்?

ராமநாம பலத்தினால்தான் பண்ணினார்!

அவர் ஸமுத்ரத்தைத் தாண்டிப் போனதால்தான் ஸீதையைக் கண்டுபிடிக்க முடிந்தது.

எப்படித் தாண்டினார்?

“ராம ராம” என்று சொல்லிக்கொண்டு அந்த நாமத்தின் சக்தியில்தான் தாண்டினார்.

ஸீதை ப்ராணனை விட இருந்த பொழுது அவளை எப்படிக் காப்பாற்றினார்? “அம்மா தாயே, உயிரை விடாதே!” என்று காலில் விழுந்தால்கூட அவளைத் தடுத்திருக்க முடியாதே! ‘இதுவும் ராக்ஷஸ மாயை; ராவணன் செய்கிற சூது’ என்றுதானே நினைத்திருப்பாள்? மாரீச மான் அநுபவத்துக்கு அப்புறம் அவளுக்கு எல்லாமே ராக்ஷஸ மாயையாய்த்தான் தெரிந்தது. அவளுக்கு அப்படித் தெரிந்தது என்பது ஆஞ்ஜநேயருக்கும் தெரிந்தது. (பரம சுத்த ப்ரம்மசர்யத்தால் ஸ்படிகம் மாதிரியாக ஆன அவருடைய மனஸில் யார் நினைப்பதும் பளிச்சென்று தெரிந்துவிடும்.) ஸீதை ப்ராண ஹானி செய்துகொள்ள இருந்த கட்டத்தில் என்ன செய்தார்? “ராம ராம” என்று நாமாவைத்தான் சொல்ல ஆரம்பித்தார். ராமாயணக் கதையை மெதுவாக ஆரம்பித்தார். “ராம” என்றால், அதுவும் ஆஞ்ஜநேய ஸ்வாமியின் வாயால் சொன்னால், எந்த மாயையும் ஓடி விடாதா? அவளுடைய சோக வந்ஹியை நாமாம்ருதத்தைத் தெளித்துக் கொஞ்சம் சமனம் செய்தார். இப்படி அம்ருதத்தைத் தந்தவருக்கு அக்னியே ஜில்லென்றிருக்க அவள் அநுக்ரஹித்தாள்!

ஆஞ்ஜநேயரால்தான் தாங்கள் காப்பாற்றப் பட்டது போல் ராமரும் சீதையும் சொல்லிக் கொண்டார்கள். ஸீதையின் ப்ராணனை ரக்ஷித்துக் கொடுத்தது, ஸீதைக்கும் மேல் தமக்கு ப்ரியமான லக்ஷ்மணன் மூர்ச்சையாய் விழுந்தபோது ஸஞ்ஜீவி கொண்டுவந்து அவனை எழுப்பினது முதலானவற்றுக்காகத் தாம் ஆஞ்ஜநேயருக்குத் தீர்க்கமுடியாத நன்றிக்கடன் பட்டிருப்பதாகவே ராமர் எப்போதும் சொல்வார். “ஆஞ்ஜநேயருக்கு எப்படி என்ன ப்ரத்யுபகாரம் பண்ணுவோம், பண்ணுவோம்?” என்றே ஸீதைக்கும் ஸதா இருந்தது.

இரண்டு பேருமாகச் சேர்ந்து என்ன பண்ணினார்களென்றால்:

அயோத்திலே கோலாஹலமாகப் பட்டாபிஷேகம் ஆனவுடன், ராமர் பல பேருக்குப் பல பரிசு தரும்போது ஒரு முக்தாஹாரத்தை ஸீதைக்குப் போட்டார். அவள் அதைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு, சுற்றியிருந்த அத்தனை பரிவாரங்களையும் பார்த்துவிட்டு ராமரையும் அர்த்த புஷ்டியோடு பார்த்தாள். இரண்டு பேரும் பரிபூர்ண ஐகமத்யம் [ஒரே சித்தம்] கொண்ட தம்பதி. அதனால் அவர்கள் மனஸுக்கு மாத்திரம் தெரிகிற மாதிரி ஆஞ்ஜநேயரை அந்தப் பெரிய ஸதஸிலே கொண்டாடுவதற்கு ஒரு ப்ளான் போட்டுக் கொண்டார்கள்.

ஸீதை ராமரைப் பார்த்த பார்வையாலேயே முக்தாஹாரத்தை அந்தப் பரிவாரத்திலே யாருக்குக் கொடுக்கலாம் என்பதற்கு அவருடைய அபிப்ராயத்தைக் கேட்டுவிட்டாள். உடனே ராமர், “பராக்ரமம், புத்தி, பணி எல்லாம் எவனுக்குப் பூர்ணமாக இருக்கிறதோ, அவனுக்கே கொடு” என்றார். பாராட்டிதழ் (‘ஸைடேஷன்’) படித்தவுடன் ‘அவார்ட்’ கொடுக்கிற மாதிரி, பேரைச் சொல்லாமலே ராமர் இப்படிச் சொன்னவுடன் ஸீதை மாலையை ஆஞ்ஜநேயருக்குக் கொடுத்துவிட்டாள்!

“ஹநுமானுக்குக் கொடு” என்று ராமர் நேராகச் சொல்லவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால் ‘அவருக்கு மட்டுமென்ன ஸ்பெஷல் அவார்ட்?’ என்று மற்றவர்களுக்குத் தோன்றலாம். ஆனால் இன்னார் என்று பெர்ஸனலாகப் போகாமல், ஆப்ஜெக்டிவ்-ஆகப் பல உசந்த யோக்யதாம்சங்களைச் சொல்லி அவற்றை உடையவனுக்கு அவார்ட் கொடுத்தால் யாரும் கேள்வி கேட்க முடியாது. அதனால்தான் உத்தமமான யோக்யதை எல்லாம் ஹநுமாரொருத்தரிடமே பூர்ணமாக ரொம்பியிருந்ததால் ராமர் இப்படி ஸாமர்த்யமாகச் சொன்னது.

பட்டாபிஷேக கட்டத்திலே இப்படி ஆஞ்ஜநேயருக்கு இரண்டு பேருமாகச் செய்ததற்கு ஈடு எதுவும் இல்லை.

ஒரு பெரிய மலைக்கு மேலே சந்திரிகையில் தாவள்யமாயிருக்கும் ஒரு மேகம் படிந்தால் எப்படியிருக்குமோ அப்படி அந்த முத்து மாலை ஆஞ்ஜநேய ஸ்வாமியின் பெரிய சரீரத்திலே புரண்டது.

முதல் முதலாக அவரை ரிச்யமுக பர்வதத்தில் பார்த்தவுடனேயே ராமசந்திரமூர்த்தி, இவரால்தான் இனி ராமாயணம் நடந்தாக வேண்டும் என்று தீர்மானம் பண்ணி விட்டார். அப்போது ஹநுமாரை ஸஹாயமாகப் பெற்றிருந்தும் ஸுக்ரீவன் பெண்டாட்டியை இழந்து வாலியிடம் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தான். ராமர் இன்னார் என்று வேவு பார்த்து, அவர் நல்லவர், சக்தி உள்ளவர் என்று தெரிந்ததால் அவரைத் துணையாகக் கொண்டு வாலியை ஜயிக்க வேண்டும் என்பதற்குத்தான் ஹநுமாரை அவரிடம் அனுப்பியிருந்தான். இப்படிப்பட்ட நிலையில் ஸந்தித்தபோதிலும் ராமருக்கோ தனக்கே பலமாக இருக்கப் போவது இந்த ஹநுமார்தான் என்று தெரிந்துவிட்டது. அவரே ஈச்வரனாகயிருந்து பூர்வத்தில் பண்ணின ஸங்கல்பம்தானே இப்படியிப்படி இந்த ராமாயண நாடகம் நடக்க வேண்டுமென்று?

அதனால் இவர்களை யார் என்ன என்று ஆஞ்ஜநேயர் விசாரித்த தினுஸிலேயே அவர் இவர் பெருமையை எடை போட்டு, “நவ வ்யாகரண பண்டிதன், சொல்லின் செல்வன்” என்றெல்லாம் லக்ஷ்மணனிடம் ஏகமாகப் புகழ்கிறார். “ஏதோ வாக்குவன்மை படைத்தவன் தான் என்று நினைத்துவிடாதே! இவன் ஸர்வ வல்லமையும் படைத்தவன். இந்த லோகம் ஒரு தேர் என்றால் அதற்கு அச்சாக இருக்கிற ஆணி இவன்தான். இப்போது தெரியாவிட்டாலும் உனக்கே இதன் உண்மை நாள் தெரியும் பார்” என்கிறார்.

“ஆணியிவ்வுலகுக் கெல்லாம்….. பின்னர்க்
காணுதி மெய்ம்மை”5

என்கிறார்.

அது ரிஷி சாபத்தால் ஹநுமார் தம் பலத்தை மறந்திருந்த ஸமயம். அதனால்தான் இவரைத் துணையாகக் கொண்டிருந்தும் ஸுக்ரீவன் ராஜ்யம், தாரம் எல்லாம் இழந்திருந்தது. ‘சீக்கிரமே ஜாம்பவான் இவர் பலத்தை இவருக்கு நினைவுப்படுத்தி ரிஷி சாபம் போகும்படி செய்யப் போகிறார். அப்புறம் ஹநுமார் ஸாகர தரணம், லங்கா தஹனம் முதலான பெரிய காரியங்களைச் செய்யப் போகிறார்’ என்பது ராமருக்குத் தெரியுமாதலால் “பின்னர் காணுதி மெய்ம்மை” — ‘இவனுடைய மஹா ப்ரபாவத்தால் லோகமாகிய தேரையே நடத்திக்கொண்டு போகக் கூடியவன் என்கிற உண்மையை நீயே பின்னால் பார்ப்பாய்’ என்று லக்ஷ்மணனுக்குச் சொல்கிறார்.

ராமாயணமே ஒரு லோகம் — ஸப்த காண்டமுடைய ஸப்த லோகமும்! இந்த ராமாயணத் தேர் ஓடாமல் நின்று போகிற ஸந்தர்பம் — ஸீதை காணாமல் போய், அவள் எங்கே இருக்கிறாள் என்றே ராமருக்குத் தெரியாமல் திரிந்து கொண்டிருக்கிற ஸந்தர்பம். அப்போது ஆஞ்ஜநேயரைப் பார்த்தவுடன் அவரை ராமர் தேருக்கு அச்சாணியாக முடுக்கிக் கொண்டுவிட்டார்! உடனே சர சர வென்று தேர் ஓட ஆரம்பிக்கிறது! பஹுகாலம் ஓய்ந்து கிடந்த ஸுக்ரீவன் வாலியிடம் சண்டைக்குக் கிளம்புவது, ராமர் வாலிவதம் செய்வது, வானரர்கள் சீதையைத் தேடுவது, கண்டு பிடிப்பது, ஸேதுபந்தனம், ராம ராவண யுத்தம், பட்டாபிஷேகம் என்று கிடுகிடுவென்று ஓட ஆரம்பித்துவிடுகிறது! இத்தனையிலும் பெரிய பங்கு ஹநுமாருக்குத்தான்!

அதுவரை, அதாவது ராமாயணத்தில் பேர் பாதி ஆகிறவரை, இவர் யாரென்றே தெரியாது. கிஷ்கிந்தா காண்டத்தில்தான் வருகிறார். உடனே இவர்தான் கதாநாயகருக்கும் மேலே என்பது போல் முக்யமாய் விடுகிறார்! அடுத்ததான ஸுந்தர காண்டம் முழுக்க இவர் பிரதாபமும், இவருடைய லீலையுமே! ராமாயணத்தில் ஸர்வ கார்ய ஸித்தி என்று ஸகலராலும் பாராயணம் செய்யப்படுவது எது என்றால் ராமருடைய பெருமைகள் தெரிகிற பாக்கி ஆறு காண்டமில்லை; ஆஞ்ஜநேய ப்ராபவமே விஷயமாயுள்ள ஸுந்தர காண்டம்தான்! அப்படி இவரைப் பார்த்தவுடனேயே “ராமாயணத் தேரை இனிமேல் நீயே கொண்டுபோ” என்று ராமர் கொடுத்து விட்டார். தம்முடைய நாமாவை அவர் மூலம் வெளியிட்டே ஸீதை உயிரை விடாமல் காப்பாற்றினார். தம்முடைய நாமாவினாலேயே அவர் பரம ஸுலபமாக ஸமுத்ரத்தைத் தாண்டச் செய்தார். தாமே லங்கைக்குப் போகிற போதோ கஷ்டப்பட்டு அணை கட்டிக்கொண்டு அதன்மேல் நடந்துதான் போனார்!

“தாம் செய்வதெல்லாம் ராமர் போட்ட பிச்சையே! ஸீதாதேவியின் அநுக்ரஹ லேசமே!” என்றுதான் ஆஞ்ஜநேயர் நினைத்தார். ‘ஸாகர தரணமும், லங்கா தஹனமும் தன் காரியமென்று லோகம் கொண்டாடுகிறதே! நிஜத்தில் அவருடைய நாமம் — தாரக நாமமல்லவா தரணம் பண்ணுவித்தது? அவளுடைய சோகமே அல்லவா தஹனம் பண்ணிற்று?” என்றே நினைத்தார். தங்கள் கார்யத்துக்கு நம்மையும் ப்ரயோஜனப்படுத்திக் கொண்டார்களே என்று ஸீதாராமர்களிடம் ஒரே நன்றி, தீர்க்க முடியாத நன்றிக்கடன் பட்டிருப்பதாகவே நினைத்தார்.

நமக்கானால், நன்றி வாங்கிக் கொள்வதில் போட்டி! ‘நாம் பல பேருக்கு உபகரித்தோம். யாரும் ஸரியாக நமக்குத் திருப்பவில்லை’ என்று அபிப்ராயம்! ஸீதா-ராமர்களுக்கும் ஆஞ்ஜநேயருக்குமோ பரஸ்பரம் மற்றவரால்தான் தங்களுக்கு பலம், அவருக்குத் தாங்கள் ப்ரத்யுபகாரமே பண்ணி முடியாது என்று அபிப்ராயம்.

இது ராமாயணத்திலே நமக்கு ஒரு பெரிய பாடம்.

மஹாபலம் பொருந்தின ஆஞ்ஜநேயர் அந்த பலத்துக்கெல்லாம் மூலம் ராமசந்திரமூர்த்தியே என்று, தமக்கு எத்தனை பலமோ அதைவிட அதிகம் பணிவுடன், விநயத்துடன் இருந்தார். பலமும் பணிவும் ஸாதாரணமாக நேரெதிராக இருப்பவை. இவரிடமோ இரண்டும் மாக்ஸிமமாக இருந்தன. நமக்கு பலமும் இல்லை; பணிவும் இல்லை. அவரைப் போல நல்ல கார்யங்களை ஸாதிப்பதற்கான பலத்தை நமக்குத் தந்து, ஆனால் அந்த பலத்தினால் அஹங்காரப்படாமல் அது ராமனின் பிரஸாதமே என்று உணர்ந்து அதை ராமார்ப்பணமே செய்யும் புத்தியை நமக்கெல்லாம் அவர் அநுக்ரஹிக்க வேண்டும்.

மங்களம்


1, 2, 3 ‘த்வாதச நாம பஞ்ஜரம்’ உத்தர பாகம்.

4 “உல்லங்க்ய ஸிந்தோ : ஸலிலம்” எனும் ஹநுமார் குறித்த ஸ்லோகம்.

5 கம்ப ராமாயணம், கிட்கிந்தா காண்டம், ‘அநுமப் படல’த்தில் ‘மாணி ஆம் படிவம்’ எனும் பாடல்.

மீநாக்ஷி

அம்பாள் ஸ்தோத்திரங்கள் என்று சொன்னால் உடனே இரண்டு நினைவுக்கு வருகின்றன. ஒன்று ‘லலிதா ஸஹஸ்ரநாமம்’, மற்றது ‘ஸெளந்தர்ய லஹரி’.

அம்பாள் ரூபங்களில் பிரஸித்தமாகக் காஞ்சி காமாக்ஷி, மதுரை மீநாக்ஷி, காசி விசாலாக்ஷி என்ற மூன்றைச் சொல்கிறோம்.

காமாக்ஷி, காம தாயினீ‘ என்று ஸஹஸ்ர நாமத்தில் வருகிறது. ஸெளந்தர்ய லஹரியில் காமாக்ஷியின் பெயர் வராவிட்டாலும், அதில் த்யான ஸ்லோகம் மாதிரி அம்பாளை வர்ணிக்கிற ‘க்வணத் காஞ்சீ தாமா’ என்ற ஸ்லோகத்தில் காமாக்ஷியின் ஸ்வரூபத்தைத்தான் – தநுர், பாண, பாச, அங்குசங்களுடன் சதுர் புஜையாகக் காமாக்ஷி எப்படியிருக்கிறாளோ அப்படிப்பட்ட ஸ்வரூபத்தைத்தான் – சொல்லியிருக்கிறது. பேர் சொல்லாவிட்டாலும் சிலேடையாக ஊரைச் சொன்ன மாதிரி, ‘காஞ்சீ தாமா’ என்று வருகிறது. ‘காஞ்சீ தாமா’ என்றால் ஒட்டியாணப் பட்டை என்று அர்த்தமானாலும் காஞ்சீபுரத்தின் நினைவும் வருகிறது.

மீநாக்ஷியின் பெயர் ஸஹஸ்ர நாமத்தில் வருகிறதா என்று பார்த்தால் வரவில்லை. ‘ஸெளந்தர்ய லஹரி’யில் நம் ஆசார்யாள் அவளை வர்ணனை பண்ணியிருக்கிறாரா என்று பார்த்தால், இங்கேயும் காணோம்!

ஏன் இப்படி இருக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது.

லோகத்துக்கெல்லாம் பிரஸித்தமாக, வர ப்ரஸாதினியாக இருக்கப்பட்டவள் மீநாம்பிகை. காருண்யத்தோடு ஆதிபத்ய சக்தியும் சேர்ந்திருக்கிறவள் மீநாக்ஷி. ஆறு மாஸம் தன்னிடம் செங்கோல், ஆறு மாஸம் ஸுந்தரேச்வரரிடம் செங்கோல் என்றிப்படி லோக முழுவதற்கும் ராஜ்யபாரம் பண்ணுகிறவள். நித்தியப்படி பூஜை, நைவேத்யம் முதலியவற்றைப் பார்த்தாலோ, ஈஸ்வரனுக்கு அவள் ஸரி ஸமானம் மட்டுமில்லை, அவனைவிட ஒருபடி மேலே என்று தோன்றுகிறது. பூஜை, நைவேத்யம் எல்லாம் முதலில் அவளுக்குப் பண்ணிவிட்டு அப்புறம்தான் ஈச்வரனுக்குப் பண்ணுவது என்று மதுரையில் மட்டும் மாறுதலாக வழக்கம் இருக்கிறது.

த்வாதசாந்தம் என்று சாக்த தந்த்ரம் சிறப்பிக்கும் தத்வ ஸ்வரூபமாயிருப்பது மதுரை….. இங்கே ஒன்று நினைவு வருகிறது.

நான் ராமேச்வரத்திலிருந்தபோது, “த்வாதசாந்தம்” என்று ஒருவர் வந்திருந்தார். அவருடைய தகப்பனார் பிள்ளை பிறக்கணுமென்று மதுரையில் ப்ரார்த்தனை பண்ணி அவர் பிறந்திருந்தாராம். அதனால் அவருக்கு ஊர்ப் பேரே வைத்துவிட்டார்கள் – சிதம்பரம், பழநி, திருமலை என்றெல்லாம் வைக்கிற மாதிரி. நான் பக்கத்திலிருந்த பண்டிதரிடம் ‘த்வாதசாந்தம்’ என்றால் என்ன என்று கேட்டேன். ராமேச்வர சங்கர மண்டபத்தில் ஆசார்யாள் ஸ்தோத்திரித்துள்ள த்வாதச (பன்னிரண்டு) ஜ்யோதிர் லிங்கங்களைச் செதுக்கியிருக்கிறது. பண்டிதர் அதை நினைத்துக்கொண்டோ என்னவோ, “த்வாசத லிங்கங்களில் தெற்குக் கோடியில் இருக்கும் ராமேச்வர ராமநாதர்தான் த்வாதசாந்தம்” என்றார். அது ஸரியில்லை. மூலாதாரத்திலிருந்து பிரம்மரந்திரம் வரை ஷட்-சக்ரம் (ஆறு சக்ரம்) என்று பொதுவில் சொல்கிறோம். இன்னும் ஸூக்ஷ்மமாக அலசிக்கொண்டு போகிறபோது, கடைசியில் வரும் ஆஜ்ஞா சக்ரத்திற்கும் ஸஹஸ்ரார சக்ரத்திற்கும் நடுவிலேயே பன்னிரண்டு ஸ்தானங்கள் சொல்லியிருக்கிறது. அவற்றில் உச்சியில் ஜீவ-ப்ரம்ம ஐக்கிய ஸ்தானமாக இருப்பதுதான் த்வாதசாந்தம்.

‘த்வாதசாந்தம்’ என்று தந்திர சாஸ்திரங்களில், யோக சாஸ்திரங்களில் உச்சி நிலையாகச் சொல்லியிருப்பது மதுரைதான் என்று சொல்லி, மதுரை “த்வாதசாந்தக்ஷேத்ரம்” என்பார்கள். இங்கே லோகத்தின் ப்ரம்மரந்திரத்தில் ப்ரம்மானந்த ஸ்வரூபிணியாக மீநாக்ஷி இருக்கிறாள்.

பெரிய பெரிய கோபுரங்கள், பிராகாரங்களுடன் வெள்ளைக்காரர்களும் பார்த்துப் பிரமித்துக் கொண்டாடும்படியான ஆலயம் மீநாக்ஷிக்கே ஏற்பட்டிருக்கிறது. அங்கே இருக்கிற சிற்பச் செல்வங்களுக்குக் கணக்கு வழக்கில்லை. மற்ற க்ஷேத்ரங்களில் ஈஸ்வரன் பேரிலேயே கோவிலைச் சொல்லி அதில் இன்ன அம்பாள் ஸந்நிதி இருக்கிறது என்பார்கள். ரொம்பவும் சக்தியோடு, ஜீவகளையோடு பாலாம்பாள், கல்பகாம்பாள், மங்களாம்பாள் முதலிய தேவீ மூர்த்தங்கள் இருக்கிற கோயில்களைக்கூட வைத்யநாத ஸ்வாமி கோவில் (அல்லது முத்துக் குமார ஸ்வாமி கோவில்), கபாலீச்வரர் கோவில், கும்பேச்வர ஸ்வாமி கோவில் என்றுதான் சொல்கிறோம். ஆனால் மதுரையில் மட்டும் ஸுந்தரேச்வரர் கோவில் என்று சொல்வதில்லை. மீநாக்ஷியம்மன் கோவில் என்றுதான் சொல்கிறோம். அங்கேதான் ஸுந்தரேச்வரர் அறுபத்துநான்கு திருவிளையாடல்கள் பண்ணியிருக்கிறார். ஸுந்தரேச்வரரை ஸ்தோத்திரம் பண்ணி, விபூதி மஹிமையாலேயே ஞான ஸம்பந்தர் பாண்டிய ராஜாவின் வெப்பு நோயைத் தீர்த்து, அதுவரை ஜைனனாக இருந்த அவனை சைவனாக்கினார். இப்படி நம் தேசத்தில் மறுபடி வைதிக மதம் நன்றாக ஸ்தாபிதமாவதற்கே ஸுந்தரேச்வரர் தான் காரணமாயிருந்திருக்கிறார். ஆனாலும் அவர் பெருமையை எல்லாம் ஒன்றுமில்லை என்று பண்ணிக்கொண்டு அம்பாள் மீநாக்ஷியே அங்கே முக்யமாயிருக்கிறாள். மீநாக்ஷியம்மன் கோயில் என்றே சொல்கிறோம்.

காஞ்சீ மண்டலத்தில் ஈஸ்வரன் கோவில்கள் எதிலும் அம்பாள் ஸந்நதியே இல்லாமல் இருக்கிறது. அதற்கு எதிர்வெட்டாக அம்பாள் மட்டும் ஈஸ்வரன் இல்லாமல் காமாக்ஷி கோவிலில் இருக்கிறாள்! அதனால் அதைக் காமாக்ஷியம்மன் கோவில் என்பதில் ஆச்சரியமில்லை. சைவாகமங்களின்படி ஈஸ்வரனின் ஆலயமாகவே உள்ள மதுரையில் ‘மீநாக்ஷியம்மன் கோவில்’ என்று பெயர் ஏற்பட்டிருப்பதுதான் விசேஷம்! ஜம்புகேச்வரத்தில் அகிலேண்டச்வரி ஆலயம் என்று சொல்கிற வழக்கம் இருந்தாலும், ஊருக்கே ‘ஜம்புகேச்வரம்’ என்பதாக ஸ்வாமி பெயர்தான் ஏற்பட்டிருக்கிறது!

மீநாக்ஷியை ஆதி காலத்திலிருந்து அநேக மஹான்களும் கவிகளும் ஸ்தோத்திரம் செய்திருக்கிறார்கள்.

‘ச்யாமளா தண்டகம்’என்று காளிதாஸன் செய்திருக்கிற பிரஸித்த ஸ்துதியில் சொன்ன ச்யாமளாதான் மீநாக்ஷி. ச்யாமளா, மாதங்கி, மந்த்ரிணி என்றெல்லாமே மந்திர தந்திர சாஸ்த்ரங்களில் மீநாக்ஷிக்குப் பேர். ஸங்கீதத்துக்கு அதிதேவதையாக எப்போதும் மாணிக்க வீணையை மீட்டிக் கொண்டிருக்கிறவள் அவள். கானாம்ருதத்தாலேயே மோக்ஷாம்ருதத்தை ஸாதித்துத் தருகிறவள்.

குறிப்பாக “ச்யாமளா தண்டக”த்தில்

மாதா மரகத ச்யாமா மாதங்கீ மதசாலிநி |
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்பவநவாஸிநீ ||

என்று வருவது, மரகதப் பச்சையாக ஜ்வலிக்கிற மீநாக்ஷியைச் சொல்வதாகவே இருக்கிறது. ‘கதம்ப வனம்’ என்பதுதான் மதுரை. ‘கடப்ப வனம்’ என்று தமிழில் சொல்வார்கள்.

ஓங்கார பஞ்ஜர சுகீம்” என்று ஆரம்பிக்கிற ‘நவரத்ன மாலிகை’யிலும் அம்பிகையை ஸங்கீத தேவதையாகத்தான் காளிதாஸன் வர்ணித்திருக்கிறான். “ஓங்காரம் என்ற கூட்டிலிருக்கும் கிளி” என்று அம்பிகையை வர்ணிக்க ஆரம்பிக்கிறான். மதுராபுரியில் மீநாக்ஷி வீணாதாரிணியாக இல்லாமல், கிளியைத்தான் கையில் வைத்துக்கொண்டிருக்கிறாள்!

‘மீநாக்ஷி பஞ்சரத்னம்’ என்று ஆசார்யாளும் பண்ணியிருக்கிறார்.

பாதி மாதுட னாய பரமனே
ஞால நின்புக ழேமிக வேண்டும் – தென்
ஆல வாயில் உறையும் எம் ஆதியே

என்று ஞானஸம்பந்தர் ஈஸ்வரனைப் பாடுகிறபோதுகூட ‘பாதிமாது’ என்று முதலில் ஈஸ்ரவனுடைய அர்த்தாங்கனாவாக இருக்கிற அவளைத்தான் சொல்லியிருக்கிறார்.

இப்படிப் பல கவிவாணர்கள் அம்பாளைப் பாடியிருக்கிறார்கள். குமரகுருபரர் ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ என்று, ஸாக்ஷாத் ஜகன்மாதாவைக் குழந்தையாக வைத்து ஸ்தோத்திரித்திருக்கிறார். அதைக் கோவிலிலேயே அரங்கேற்றம் பண்ணினார்கள். அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த திருமலை நாயகரின் அக்ராஸனத்தில் அரங்கேற்றம் நடந்தது. குமரகுருபரர் பாட்டுகளைச் சொல்லிக் கொண்டு வரும்போதே திடீரென்று அங்கே அர்ச்சகருடைய பெண் குழந்தை வந்து, திருமலை நாயகரின் கழுத்தில் போட்டுக்கொண்டிருந்த முத்துமாலையைக் கழற்றிக் குமரகுருபரரின் கழுத்திலே போட்டுவிட்டதாம். ‘இதென்னடா, இந்தப் பெண் இப்படிப் பண்ணுகிறது?’ என்று எல்லோரும் பிரமித்துப் போயிருக்கும்போது அந்தப் பெண் அப்படியே கர்ப்பக்ருஹத்துக்குள் போய் அந்தர்தானமாகி விட்டதாம்! அப்போதுதான் எல்லோருக்கும் மீநாக்ஷியே இந்த ரூபத்தில் வந்து குமரகுருபரருக்கு பஹுமானம் பண்ணிவிட்டுப் போயிருக்கிறாள் என்று தெரிந்தது.

தமிழில் ‘அங்கயற் கண்ணி’ என்று அம்பாளைச் சொல்வார்கள். ‘அம்’ என்றால் அழகிய, ‘கயல்’ என்றால் மீன். மீன் போன்ற அழகிய கண்ணுள்ளவள், மீநாக்ஷி என்று அர்த்த்ம். ‘அங்கச்சி, அங்கச்சி’ என்றே மதுரையில் எந்தப் பெண்ணையும் கூப்பிடுவது இதனால்தான்.

இதே திருமலை நாயகரிடத்தில் பிரதம மந்திரியாக இருந்த நீலகண்ட தீக்ஷிதர் என்ற பெரியவரும் அம்பாளைப் பற்றி ‘ஆனந்த ஸாகர ஸ்தவம்’ என்று செய்திருக்கிறார். பரமசிவ அம்ச பூதரான அப்பைய தீக்ஷிதரின் தம்பி பேரர் இந்த நீலகண்ட தீக்ஷிதர். பக்தி, பாண்டித்யம், குணம், சீலம் எல்லாவற்றிலும் பெரியவர். அவர் இந்த ஸ்தோத்திரம் பண்ணினதைப் பற்றி ஒரு விருத்தாந்தம் உண்டு.

பாண்டிய ராஜாக்களின் காலத்திலிருந்து மீநாக்ஷி கோவிலுக்குத் திருப்பணிகளும், ஏராளமான திருவாபரண ஸமர்ப்பணங்களும் நடந்து வந்திருப்பதைப் போலவே திருமலை நாயகரும் நிறையச் செய்தார். நீலகண்ட தீக்ஷிதரின் மேற்பார்வையில் அப்போது ‘புதுமண்டப’ நிர்மாணம் நடந்து வந்தது. அதில் வைப்பதற்காக ஸுமந்திரமூர்த்தி ஆசாரி என்ற சில்பி, பத்னிகள் ஸமேதமாக நாயகருடைய சிலையையும் பண்ணினார். பட்டத்து ராணியின் சிற்பத்தைப் பண்ணும்போது வலது முழங்காலுக்கு மேலே ஒரு சில்லு தெறித்துப்போய்விட்டது. என்ன பண்ணினாலும் அந்த மூளி தெரியாமல் மறைக்க முடியாத தினுஸில் இது நடந்துவிட்டது. ரொம்பவும் அழகாக உருவான சிற்பத்தில் இப்படி ஏற்பட்டுவிட்டதே என்று துக்கப்பட்டுக்கொண்டு ஆசாரி (நீலகண்ட) தீக்ஷிதரிடம் போய் அழுதார்.

தீக்ஷிதர் ஏதோ கொஞ்சம் தீர்க்கமாக யோசனை பண்ணினார். அப்புறம் “அப்பா அழாதே! நீ பண்ணின சிலை தத்ரூபமாக இருக்க வேண்டுமென்றுதான் இம்மாதிரி சில்லு தெறித்துப் போகும்படி அம்பாள் பண்ணியிருக்கிறாள். அதனால் அது இருக்கிறபடியே இருக்கட்டும். அப்படியே மண்டபத்தில் வைத்துவிடலாம்” என்று சொல்லிவிட்டார்.

ராணிக்கு அந்த இடத்தில் மச்சம் இருந்திருக்கிறது. தீக்ஷிதருக்கு இது ஸ்புரித்ததால்தான், flash ஆனதால்தான் அப்படிச் சொன்னார். ஸாமுத்ரிகா லக்ஷணப்படி உத்தம ஸ்திரீகளுக்கு இம்மாதிரி மச்சம் இருக்கவேண்டும் என்பதன் படியே ராணிக்கும் இருப்பதைத் தெரிந்து கொண்டார்.

ஆசாரியும் அதேபோலச் சிலையை மண்டபத்தில் வைத்துவிட்டார். இப்போதும் ஏழு பத்தினிகளோடு இருக்கிற திருமலை நாயகர் சிலையில் பட்டமஹிஷியின் சிற்பத்தில் இந்த பின்னம் இருக்கிறது.

வேலைகளை மேற்பார்வையிட நாயகர் வந்தார். ராணியின் சிலையைப் பார்த்துவிட்டு ஆசாரியிடம், “ஏன் இந்த மூளியைச் சரி பண்ணாமலே வைத்திருக்கிறீர்?” என்று கேட்டார்.

“அந்த இடத்தில் அம்மாதிரி இருப்பதுதான் சரியென்று ஐயா தீக்ஷிதர் சொன்னதால்தான் அப்படியே விட்டுவிட்டேன்” என்று ஆசாரி சொன்னார்.

நீலகண்ட தீக்ஷிதரை ‘ஐயா தீக்ஷிதர்’ என்றே ஸகலரும் சொல்வார்கள். தஞ்சாவூரில் நாயக் ராஜாக்களுக்குப் பிரதம மந்திரியாயிருந்த கோவிந்த தீக்ஷிதருக்கு ‘ஐயன்’ என்கிற பெயர் வழங்கினதுபோல், மதுரையில் மந்திரியாக இருந்த நீலகண்ட தீக்ஷிதருக்கு ‘ஐயா’ என்ற பெயர் இருந்தது.

ராணிக்கு இப்படி மச்சம் இருப்பது தீக்ஷிதருக்கு எப்படித் தெரிந்தது என்று நாயகருக்கு ஸந்தேஹம் வந்துவிட்டது. மஹா கோபமும் வந்துவிட்டது. உடனே அவரைக் கைது பண்ணி அழைத்துக்கொண்டு வரும்படி அவருடைய கிருஹத்துக்கு ஸேவகர்களை அனுப்பினார்.

அப்போது தீக்ஷிதர் கிருஹத்தில் மீநாக்ஷியைத் தான் பூஜை பண்ணிக்கொண்டிருந்தார். வேளை கெட்ட வேளையில் ஸேவகர்கள் வந்திருக்கிறார்கள் என்ற உடனேயே அவருக்கு அம்பாள் கிருபையால் என்ன காரணம் என்று புரிந்துவிட்டது.

தீபாராதனைக் கர்ப்பூரத்தை, அப்படியே ஐஸை வைத்துக்கொள்கிற மாதிரித் தம் கண்களில் அழுத்திக் கொண்டுவிட்டார்.

ஈஸ்வராநுக்ரஹத்தில் அப்பர் ஸ்வாமிகளுக்குச் சுண்ணாம்புக் காளவாயே ‘மாசில் வீணையும் மாலை மதியமு’மாக இருந்தாற்போல, மீநாக்ஷியின் கருணா கடாக்ஷத்தால் தீக்ஷிதருக்குக் கண்ணைச் சுட்டெரித்துக் கொண்டதும் ஜில்லென்றுதான் இருந்தது!

அப்படியே வாசலுக்கு வந்து, “ராஜா எனக்கு என்ன தண்டனை தர வேண்டுமென்று நினைத்தாரோ அதை அவருக்குச் சிரமம் இல்லாமல் நானே பண்ணிக் கொண்டு விட்டேன் என்று சொல்லுங்கள்” என்று ஸேவகர்களிடம் சொன்னார்.

அவர்கள் அப்படியே போய்ச் சொன்னவுடன் நாயகர், “இத்தனை பெரிய மஹானைத் தப்பாக நினைத்து அபசாரம் பண்ணி விட்டோமே!” என்று ரொம்பவும் பச்சாத்தாபம் கொண்டார். மாணிக்கவாசகரைத் தண்டித்ததற்காக இதே மதுரையில் அரிமர்த்தன பாண்டிய ராஜா எத்தனை துக்கப்பட்டாரோ அத்தனை துக்கப்பட்டார் திருமலை நாயகர்.

உடனே தீக்ஷிதரின் வீட்டுக்கு ஓடோடி வந்தார். தாம் பண்ணின அபசாரத்துக்கு மன்னிப்பு வேண்டினார்.

உத்தம குணமுள்ள தீக்ஷிதர், “நீ ஸந்தேஹப்பட்டது நியாயம்தானே? எவருக்கும் ஏற்படக் கூடிய ஸம்சயம் தானே இது?” என்று பெரும்போக்காகச் சொல்லி மன்னித்து விட்டார்.

“என்னை நீங்கள் மன்னித்தது பெரிதில்லை. ஆனால் நீங்கள் இப்படிக் குருடராக இருக்குமளவும் என் மனஸ் எப்படி ஸமாதானப்படும்? அது என்னை உறுத்திக் கொண்டேதான் இருக்கும். எப்படியாவது நீங்கள் மறுபடியும் கண்பார்வை பெற்றால்தான் எனக்கு நிம்மதியாகும்” என்று நாயகர் ரொம்ப மன்றாடினார்.

அப்போதுதான் தீக்ஷிதர் இந்த ‘ஆனந்த ஸாகர ஸ்தவ’த்தைப் பாட ஆரம்பித்தார். பரம துக்கமான ஒரு ஸந்தர்ப்பத்தில் லோக ஜனங்களின் ப்ரதிநிதியாக துக்கத்தோடு ப்ரலாபிக்கும்போதே உள்ளூர அம்பாளுடைய அருள் என்கிற ஆனந்த ஸாகரத்தில் மிதந்துகொண்டு பாடினார். கர்மம், பக்தி, ஞானம் முதலான எல்லாவற்றுக்கும் மேலாக ‘அவள் விட்ட வழி’ என்று பிரபத்தி (சரணாகதி) பண்ணுவதையே அதிலே விசேஷமாகச் சொல்லியிருக்கும். அம்பாளை எதிரே வைத்துக்கொண்டு பேசுகிற மாதிரி இருக்கும். திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கலாம் போல ஒரு இடத்தில், “சரணம் ப்ரபத்யே மீநாக்ஷி விச்வ ஜநநீம்; ஜநநீம் மமைவ” என்று வரும் (ஸ்லோ 32) ‘ஸகல லோக மாதா எனக்குங்கூட மாதா’ என்று விநயமாகச் சொல்கிறார். ‘அவளே கதி என்று சரண் அடைகிறேன்’ என்கிறார்.

நூறுக்கு மேல் ஸ்லோகமுள்ள இந்த ஸ்துதியில் முதல் பாதியில் இப்படி பிரபத்தி தர்மத்தை விளக்கவிட்டு, ‘ஸெளந்தர்ய லஹரி’யில் முதல் பாதியில் சாக்த தத்வங்களைச் சொல்லிவிட்டு இரண்டாம் பாதியில் தேவியைக் கேசாதிபாதம் வர்ணிக்கிறமாதிரி, தீக்ஷிதரும் இரண்டாம் பாதியில் அம்பாளைப் பாதாதி கேசம் வர்ணிக்கிறார். இந்த வர்ணனை ஆரம்பத்தில்தான், ‘ஸெளந்தர்ய லஹரி’யில் அதன் தலைப்பு வருகிறது போலவே ‘ஆனந்த ஸாகர’ என்ற இந்தத் தலைப்பும் வருகிறது.

இதிலே ஒரு இடத்தில், “த்ரஷ்டாஸ்மி கேந ததஹம் து விலோசநேந?” — “(உன் சரணங்களை எனக்குக் காட்டினாலும் கூட) அதை நான் எந்தக் கண் கொண்டு பார்ப்பேன்?” என்று வருகிறது (ஸ்லோ 61) மேலே சொன்ன விருத்தாந்தம் நிஜம் என்பதற்கு இது internal evidence (உட்சான்று).

இப்படி பாடி முடித்ததும் அம்பாள் அவருக்குப் பார்வை கொடுத்துவிட்டாள். திருஷ்டி விசேஷத்தினாலேயே ‘மீநாக்ஷி’ என்று பெயர் பெற்றிருப்பவள் தீக்ஷிதருக்கு மீளவும் திருஷ்டியை அநுக்ரஹம் பண்ணிவிட்டாள்.

ஆனாலும் அதோடு ராஜ ஸேவகம் போதுமென்று அவர் ராஜிநாமா பண்ணிவிட்டுத் தாம்ரபரணி தீரத்தில் பாலாமடைக்குப் போய்ச் சிறிது காலம் வாஸம் செய்து விட்டு ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு ஸித்தியாகி விட்டார். அதனால் அவ்வூருக்கு ‘நீலகண்ட ஸமுத்ரம்’ என்று பெயர் ஏற்பட்டிருக்கிறது. அந்த நீலகண்டரே அநுபவித்த ஸமுத்ரம், ஸாகரம், ஆனந்த ஸாகரம் எதுவென்றால் மீநாக்ஷியின் அநுக்ரஹம்தான்.

இப்படி இருக்கிறது மீநாக்ஷியின் பெருமை. மிகவும் உயர்ந்தவர்களாக இருக்கிற குமர குருபரர், நீலகண்ட தீக்ஷிதர் ஆகியவர்களுக்கு மட்டுமில்லாமல், ‘இந்த அம்பாளுக்கு என்ன சக்தி இருக்கிறது?’ என்று கேலி பண்ணின ஒரு வெள்ளைக்கார கலெக்டருக்கு*1 கூடப் பரம கருணையோடு அநுக்ரஹம் பண்ணியிருக்கிறாள். அந்த துரை படுத்துக் கொண்டிருந்த பங்களாவின் மீது இடி விழ இருந்த போது தூக்கத்திலிருந்தவனை எழுப்பி வெளியேறும்படி எச்சரிக்கைப் பண்ணிக் காப்பாற்றியிருக்கிறாள். அப்புறம் அவன் பரம பக்தனாகி அம்பாளுக்குத் திருவாபரணம் — stirrup என்பதான குதிரை மீது ஏற உதவும் அங்கவடி — பண்ணி அர்ப்பணம் செய்திருக்கிறான்.

இப்படி ஆதியிலிருந்து இன்று வரை மஹிமையோடு இருந்து கொண்டிருக்கிற மீநாக்ஷியை, கண்ணழகை வைத்தே பெயர் பெற்றிருப்பவளை, தேவி ஸ்தோத்திரங்களுக்குள் இரண்டு கண்கள் மாதிரி இருக்கும் ஸஹஸ்ரநாமத்திலும் ஸெளந்தர்ய லஹரியிலும் சொல்லவில்லை என்றால், குறையாக, ஏமாற்றமாக இருக்கிறது.

ஆனால் நன்றாக கவனித்துப் பார்த்தால் குறை நிறையாகிறது. இரண்டிலுமே மீநாக்ஷியை நேராகச் சொல்லாவிட்டாலும் ஸூசனையாகச் சொல்லித்தான் இருக்கிறது. உடைத்துச் சொல்லாமல் ஸூசனையாகச் சொன்னதாலேயே அவளுக்கு ஜாஸ்தி விசேஷம் என்று தோன்றுகிறது

அது எப்படி?

எப்போதுமே ஸ்தூலத்தைவிட ஸூக்ஷ்மத்துக்குத் தானே மதிப்பு ஜாஸ்தி? அதனால் வெளிப்படையாகச் சொல்வதைவிட மறைத்துச் சொல்லுவதில்தான் மஹிமை ஜாஸ்தி.

விலை உயர்ந்த ரத்தினம் இருந்தால் அதை எல்லார் கண்ணும் படும்படியாகப் போட்டு வைப்பார்களா? பெட்டிக்குள் வைத்து, அதை இன்னொரு பெட்டியில் போட்டு, வீட்டின் உள்ளறையில்தானே பத்திரப்படுத்தி வைப்பார்கள்? அப்படித்தான் மீநாக்ஷியை ஸஹஸ்ர நாமத்திலும் ஸெளந்தர்யலஹரியிலும் ரஹஸ்யமாகச் சொல்லியிருப்பதாலேயே அவளுக்கு விசேஷ மதிப்புக் கொடுத்ததாகிறது.

ரொம்பவும் ப்ரியமானவர்கள், ரொம்பவும் மரியாதைப்பட்டவர்கள் ஆகியோரின் பெயரைச் சொல்வதில்லையல்லவா? இப்படித்தான் பாகவதத்தில் கூட ராதையின் பெயரைச் சொல்லாமலே ஒரு இடத்தில் மட்டும் ஸூசனையாகக் கோடி காட்டியிருக்கிறது என்று சொல்வதுண்டு. ராதாகிருஷ்ண பக்திக்காரர்கள் கிருஷ்ணனைவிட ராதை ஒரு படி உசத்தி என்பார்கள். கிருஷ்ணனே அவள் காலில் விழுந்து பிரணய கலஹத்தை (ஊடலை)த் தீர்த்திருப்பதை எடுத்துக் காட்டுவார்கள். அத்தனை உசந்தவள் பேரை மண்டையிலடித்த மாதிரி சொல்லக்கூடாதென்றுதான் பாகவதத்தில் ஒரு இடத்தில் மட்டும் மறைமுகமாகச் சொல்லி அதோடு விட்டிருக்கிறது என்கிறார்கள்*2.

இம்மாதிரி மீநாக்ஷியை ஸஹஸ்ரநாமம், ஸெளந்தர்யலஹரி இரண்டிலும் நேராகச் சொல்லாமல் மறைமுகமாகச் சொல்லியிருப்பதாலேயே அவளுக்கு ஏற்றம் கொடுப்பதாகத்தான் ஏற்படுகிறது.

சரி, ‘லலிதா ஸஹஸ்ரநாமம்’ மீநாக்ஷியை எங்கே சொல்கிறது? என்ன சொல்கிறது?

ஆரம்பத்தில் அம்பாளை வர்ணித்துக் கொண்டு வரும்போது வக்த்ர லக்ஷ்மீ பரீவாஹ சலன் மீநாபலோசநா என்று ஒரு நாமாவைச் சொல்கிறது. “வக்த்ர லக்ஷ்மீ” என்றால் (அம்பாளுடைய) முககாந்தி. அது ஒரு பெரிய பிரவாஹமாக இருக்கிறது, ‘பரீவாஹம்’ என்றால் பிரவாஹம். இப்படி முக தேஜஸ் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றால் நீர்பெருக்கில் மீன் இருக்க வேண்டுமே! இந்த காந்தி ஸமுத்திரத்தில் எங்கே மீன்?

நீண்டு நீண்டு விளங்கும் அம்பாளுடைய நேத்திரம் இருக்கிறதே அதுதான் மீன். லோசனம் என்றால் கண். (லோகனம் என்றால் பார்ப்பது. பார்க்கப்படுவதால் தான் ‘லோகம்’ என்றே பேர். தமிழிலும் ‘பார்’ என்றால் நோக்குவது, உலகம் என்ற இரண்டு அர்த்தமும் ஏற்படுகிறது. இங்கிலீஷ் look என்பதும் ‘லோக’ ஸம்பந்தமுள்ளதுதான்.) மீன் மாதிரி வடிவத்தில் இருக்கிற லோசனம் — மீநாப லோசநம். ரூபத்தில் மீன் மாதிரி இருப்பது மட்டுமின்றி, பிரவாஹத்தில் மீன் இருக்க வேண்டும் என்ற நியாயத்தின்படியும் ஸெளந்தர்ய ப்ரவாஹமான அம்பாள் இப்படிப்பட்ட கண்ணை உடையவளாயிருக்கிறாள். ‘மீநாக்ஷி’ என்று அப்பட்டமாகச் சொல்லாமல் ‘மீநாப லோசநா’ என்று சொல்லியிருக்கிறது.

ஆகக்கூடி ஒரு குறை தீர்ந்தது.

‘ஸெளந்தர்யலஹரி’யில் என்ன வருகிறது? அதில் அம்பாளின் கண்களை வர்ணிக்கும் அநேக ஸ்லோகங்களில் ஒன்றில் [56] முதலிரண்டு வரிகள்:

தவாபர்ணே கர்ணே ஜபநயன பைசுன்ய சகிதா:
நிலீயந்தே தோயே நியதம் அநிமேஷா: சபரிகா:

அபர்ணே — அபர்ணா என்ற பெயருடைய அம்பிகையே! தவ — உன்; கர்ணே – காதில் (காதிடம்); ஜபநயன — பேசுவது போன்ற கண்கள்; பைசுன்ய சகிதா: – (தங்களைப் பற்றிக்) கோள் சொல்கின்றன என்று பயமடைந்தவையான; சபரிகா: — பெண் மீன்கள்; அநிமேஷா: — கண் மூடாதவையாக; தோயே – ஆற்றுக்குள்; நிலீயந்தே — முழுகி விடுகின்றன (என்பது), நியதம் — நிச்சயம்.

மீன் ஏன் எப்போதும் ஆற்றின் மேல் மட்டத்தில் நீந்தாமல் உள்ளுக்குள்ளேயே நீந்திக்கொண்டிருக்கிறது? இதற்கு இங்கே ஆசார்யாள் ஒரு காரணம் கல்பிக்கிறார். காதளவோடும் அம்பாளின் கண்களை மீன்கள் பார்த்தன. லோகத்தில் ஒரு புல் பூண்டு புழு பூச்சிகூட விட்டுப் போகாமல் ஜகன்மாதா விழிகளை ஸகல திக்குகளிலும் திருப்பிக்கொண்டிருக்கிறாள். அப்போது ஒவ்வொரு சமயம் அவை கண்கோடிக்கு வரும்போது காதைத் தொட்டுவிடும் போலிருக்கிறது. அப்போது அவை காதிடம் ரஹஸ்யம் பேசுகிற மாதிரி மீன்களுக்குத் தோன்றுகிறது என்ன ரஹஸ்யம்? உருவத்தில் இந்த மீன்கள் அம்பாளுடைய அந்தக் கண் மாதிரித்தான் இருக்கின்றன. ஸமஸ்த லோகாநுக்ரஹத்துக்காக எந்த ஜீவனும் விட்டுப் போய் விடக் கூடாது என்று, அந்தக் கண்கள் ஓயாமல் சஞ்சரிப்பதைப் பார்த்துக் ‘காப்பி’ அடிக்கிறது போலத்தான் இந்த மீன்களும் ஓயாமல் ஒழியாமல் சஞ்சரித்துக் கொண்டேயிருக்கின்றன. இதனால்தான் மீன்களுக்கு பயம் வந்து விடுகிறது. அம்பாளுடைய கண்கள் அவளுடைய காதிடம், “மீன்கள் என்னோடு போட்டி போடுகின்றன” என்று ரஹஸ்யமாகக் கோள் சொல்கின்றனவோ என்று பயம்! கண்களுடைய பெடிஷனைக் கேட்டு மஹா பராசக்தியானவள் இந்த அல்ப ஜந்துவான மீன்கள் மேல் ஆக்ஷன் எடுக்க வந்து விட்டால்? இந்த பயத்தில்தான் நீர் மட்டத்தின் மேல் பரப்பில் நீந்தாமல் அவை உள்ளுக்குள் மறைவாக முழுகிவிடுகின்றன!

தோற்றுப்போன துரியோதனன் மடுவுக்குள் போய் ஒளிந்து கொண்ட மாதிரி, அம்பாளின் கண்ணழகுக்குத் தோற்றுப் போன மீன்கள் ஜலத்தின் உள்மட்டத்துக்குப் போய்விடுகின்றன!

‘சபரிகா:’ என்றால் பெண் மீன்கள் என்று அர்த்தம். ‘பைசுன்ய’ என்றால் கோள் சொல்லுவது;’ கோழி மூட்டுவது’ என்கிறோமே அது! ‘சகிதா:’ என்றால் பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கிறவை என்று அர்த்தம். ‘பைசுன்ய’ என்பதற்கு அஸுயை என்று பொருள்கொண்டால், காதளவோடும் கண்களைப் பார்த்து மீன்களே அஸுயை, பயம் இரண்டும் அடைந்தன என்றாகும். அம்பாளின் கண்ணோடு யுத்தம் செய்தால் வடிவழகு, சஞ்சரிக்கும் ஸாமர்த்தியம் இரண்டிலுமே தோற்றுப் போய் விடுவோம் என்றே மத்ஸ்யங்கள் ஜலத்துக்குள் அஜ்ஞாத வாஸம் ஆகி விடுகின்றன. மதுரையில் மீநாக்ஷி ஆலயப் பொற்றாமரைக் குளத்தில் மீனே இருப்பதில்லை. காரணம் ‘அவளுடைய கண்ணழகில் வெட்கி அது அங்கே தலைகாட்டுவதே இல்லை’ என்று வழக்கு ஏற்பட்டிருக்கிறது.

அம்பிகையின் நேத்ரங்களுக்கு மத்ஸ்யத்தை ஒப்புவமை சொல்லி, அது ஒளிந்து கொண்டதாகவும் கூறுகிற ‘ஸெளந்தர்ய லஹரி’ ச்லோகத்தில் ஆசார்யாள் மீநாக்ஷியைத்தான் ஒளித்து ஸூசனையாகக் குறிப்பிடுகிறார்!

இரண்டாவது குறையும் தீர்ந்தது. மீநாக்ஷி என்ற அவஸரத்தை பரமோத்தமான இரண்டு தேவீ ஸ்தோத்ரங்களும் அறிவிக்கின்றன என்று ஆகிவிட்டது.

ரூபம், சாஞ்சல்யம் (சஞ்சல ஸ்வபாவம்) இவற்றில் கண்ணுக்கும் மீனுக்கும் ஒற்றுமை இருப்பது மட்டுமின்றி அம்பாளின் கண்ணை மீனாகச் சொல்வதில் ஒரு தத்வ விசேஷமும் இருக்கிறது.

ஆடு, மாடு, மனிதர்கள் முதலிய இனங்கள் குட்டிகளை, குழந்தைகளைப் பாலூட்டி வளர்க்கின்றன. Mammal என்ற இவற்றைச் சொல்கிறார்கள். பக்ஷிகள் குஞ்சுக்குப் பால் கொடுப்பதில்லை. ‘மம்மல்’ மாதிரியில்லாமல் இவை முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு பொரிக்கின்றன. அப்புறம் பால் கொடுக்காமல் புழு பூச்சிகளைக் கொண்டு வந்து ஊட்டி வளர்க்கின்றன. மீன் என்ன பண்ணுகிறது? முட்டைதான் போடுகிறது. ஆனால் அடைகாக்கிறதில்லை. அப்புறம் குஞ்சுக்குப் பால் கொடுப்பதில்லை; வேறு ஆஹாராதிகளைக் கொண்டு வந்து ஊட்டுகிறதுமில்லை. பின்னே என்ன பண்ணுகிறது என்றால்: இதைப்பற்றி Zoology (பிராணி இயல்) , Biology (உயிரியல்)-காரர்கள் என்ன சொல்லுவார்களோ சொல்லிவிட்டுப் போகட்டும் — நீண்ட கால பொது நம்பிக்கைப்படி, கவி மரபுப்படி (poetic tradition படி) — தாய் மீன் தன் கண்ணால் முட்டையைப் பார்த்துப் பார்த்தே குஞ்சு பொரித்துவிடும். அப்புறமும் தன் கண் பார்வையாலேயே அதற்குப் பசியாற்றிப் போஷித்துவிடும். தாய் மீனானது இப்படித் திருஷ்டியாலேயே சிசு ரக்ஷணை பண்ணிவிடுகிறது என்பது ஐதிஹ்யம் (ஐதீகம்) .

ரூபத்தில் மட்டுமில்லாமல், திருஷ்டி மாத்திரத்தால் குழந்தைகளை ரக்ஷிக்கிற குணத்தாலும் அம்பாளின் நேத்திரம் மீனாக இருக்கிறது. அம்பாளின் குழந்தைகள் யார்? எல்லாருந்தான்; எல்லாமுந்தான். ஈஸ்வரனையேகூட அவள் குழந்தைதான என்று ஒரு பாவத்தில், தத்வார்த்தமாகச் சொல்லியிருக்கிறது. புல் பூண்டிலிருந்து ஆரம்பித்து பிரம்மாதிகள் வரை எல்லாரையும் தன் கடாக்ஷஅம்ருதத்தால் நனைத்து நனைத்தே உய்விக்கிற பரம கருணையுள்ள லோக ஜனனிதான் மீநாக்ஷி. மீன் போல் ரூபமுள்ள அவளுடைய கண்ணின் திருஷ்டி பட்ட மாத்திரத்தில், மீன் குஞ்சுக்குத் தாயாரின் திருஷ்டியாலேயே வயிறு நிறைந்துவிடுகிற மாதிரி நம் மனஸ் நிறைந்து விடுகிறது. அவளுடைய கடாக்ஷமே ஞானப் பாலாக உயிரை, அறிவை வளர்த்து உய்வித்துவிடுகிறது.

அநிமேஷா:“– ‘கண்ணைக் கொட்டாமல்’ என்று ‘ஸெளந்தர்ய லஹரி’ ச்லோகத்தில் மீனைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. (கண் கொட்டுகிற நாழி தான் ‘நிமிஷம்’ என்பது. அதுதான் மதுரை மருதையாகிறது போல் ‘மினிட்’ ஆயிற்று.) மீன் தூங்குவதில்லை என்று traditional belief (மரபு வழி நம்பிக்கை) அதற்கே ஆசார்யாள், கண்களின் கோழிப் பெடிஷனைக் கேட்டு அம்பாள் எங்கே தன்னோடு சண்டை போட ஜலத்தின் அடி மட்டத்திற்கும் வந்து விடுவாளோ என்றுதான் அங்கேயும் மீன் கண் கொட்டாமலே alert-ஆக (உஷாராக) இருந்து கொண்டிருக்கிறதென்று காரணம் கல்பிக்கிறார்! மீநாக்ஷியும் கண்ணைக் கொட்டுவதில்லை. கொட்டினால் அந்த fraction of a second-ல் (விநாடித் துகளில்) தன் கடாக்ஷாம்ருதம் குழந்தைகளுக்கு இல்லாமல் போய்விடுமோ என்பதால் எப்போதும் விழிப்போடு லோகத்தை ரக்ஷித்துக் கொண்டிருக்கிறாள்.

மீநாக்ஷிக்கும் மீனுக்கும் இன்னொரு ஸம்பந்தம். வைகைக்குப் பூர்வத்தில் க்ருதமாலா என்று ஸம்ஸ்க்ருதப் பேர் இருந்திருக்கிறது. இங்கே இருந்த வைவஸ்வத மநுவுக்காகத்தான் பகவான் மத்ஸ்யாவதாரம் பண்ணினார். இதைச் சொல்லி நீலகண்ட தீக்ஷிதர் ‘சிவலீலார்ணவ’த்தில் வேடிக்கை பண்ணியிருக்கிறார். “பிரளயத்தில் மாட்டிக் கொண்ட வேதத்தை மீட்பதற்காக மஹா விஷ்ணு மீனாய் அவதரித்துத் தேடித் தேடிப் பாடுபட்டார். மீநாக்ஷியான உன் சரணாரவிந்தத்தையோ அந்த வேதமே தேடிக் கொண்டிருக்கிறது” என்கிறார்!

ஆவிஷ்ய கிந்நம் நிகமாந் அசேஷாந்
அமீ ந மீநம் ப்ரதமம் ஸ்மராம: |
ஆவிஷ்யமானம் நிகமை-ரசேஷை:
அம்ப ஸ்நுமஸ்தே வயமாக்ஷி மீநம் ||

மதுரையிலே வேதம் நிரம்பியிருக்கிறது. “சேரர் தலைநகரான வஞ்சியில் உள்ளவர்களும், சோழர் தலைநகரான உறையூரில் உள்ளவர்களும் கோழி கூவி எழுந்திருப்பார்களென்றால், பாண்டியர் தலைநகரான மதுரையிலுள்ள நாங்கள் வேத ஒலி கேட்டே எழுந்திருப்போம்” என்று ‘பரிபாடலி’ல் இருக்கிறது.

நான் மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப
ஏம வின்றுயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாதெம் பேரூர் துயிலே.

அம்பாள் இங்கே பெரிய கோபுரம் கட்டிக் கொண்டிருக்கிறாள். கோபுரம் என்பதென்ன? ஸநாதன தர்ம விருக்ஷத்தின் பழம். அதற்கு வேர் எது? வேதம்தான். இத்தனை உயர கோபுரப் பழமென்றால் அதற்கேற்க அத்தனை ஆழமாக வேத வேரும் போயிருக்கிறது மதுரையில்! அம்பாள் அங்கே வேத ஸ்வரூபிணியாக ஜ்வலிக்கிறாள், நாத ஸ்வரூபிணியாக, ஸங்கீத ஸ்வருபிணியாக இருப்பதோடு.

மீநாக்ஷியின் அம்ருத கடாக்ஷம் படுகிற இடமெல்லாம் மதுரமாகிறது. மதுரத்துக்கு, இனிமைச் சுவைக்கு பெயர் போனது அம்ருதம்தானே? ஜீவஜந்துகள் மதுரம் ஆவது என்றால் என்ன? அன்பு மயமாவது என்றுதான் அர்த்தம். பரிபூர்ணத்வம் அடைவதே ஜீவனுக்கு மதுரம். கட்டைக் கசங்காய் கடைசியில் பக்குவமாகிற போது கனிந்து மதுரமாவதுபோல், அநேக துர்குணங்கள் கொண்ட நாம் கனிந்து மாறிக்கொண்டேபோய்ப் பக்குவமாகிப் பெறுகிற பூர்ண நிலைதான் நமக்கு மதுரம். அப்படிப்பட்ட பூர்ணத்வ மதுரத்தை நமக்குத் தருவது மீநாம்பிகையின் கடைக்கண். லோகத்தில் இருக்கிறபோதே நிறைவைத் தந்து, அப்புறம் இந்த லோகம், ஸம்ஸார பாசம் இல்லாமல் மோக்ஷானந்தம் தருகிறது.

முத்துஸ்வாமி தீக்ஷிதருக்கு அப்பேர்ப்பட்ட அநுக்ரஹத்தை மீநாம்பிகை செய்தாள். தீபாவளி அமாவாஸ்யை அன்று அம்பாளுக்குப் பூஜை பண்ணிவிட்டு ‘மீநாக்ஷி‘ என்று அவர் மனமுருகிப் பாடிக் கொண்டே போனார். பச்சைப் பசேல் என்று பரம குளிர்ச்சியாகப் பிரகாசிக்கிற அம்பாளின் ஸ்வரூபத்தை ‘மரகதச் சாயே’ என்று சொல்லி, ‘மீனலோசனீ, பாசமோசனீ‘ என்ற வார்த்தைகளை அவர் கானம் பண்ணிக் கொண்டிருக்கிறபோதே அவருடைய ஸம்ஸார பாசத்தை அம்பாள் நீக்கித் தன் பாதாரவிந்தத்தில் சாச்வதமாகச் சேர்த்துக் கொண்டு விட்டாள். ஸங்கீதத்துக்கே அதிதேவதையாக இருக்கப்பட்ட மீநாக்ஷி தீக்ஷிதரின் நாதோபாஸனைக்குப் பலன் தந்துவிட்டாள்.

இப்படிப் ஜீவனுக்குப் பூர்ணத்வம் என்ற மதுரத்தைத் தரும் மீநாக்ஷியின் மதுரகடாக்ஷம் விசேஷமாகப் பரவியிருப்பதால்தான் அவளுடைய க்ஷேத்ரத்துக்கே மதுரை என்று பெயர் இருக்கிறது. அம்பாளின் கடைக்கண் அமுது அலை அலையாகப் பரவியிருப்பதால் அது மதுரையாகிறது. அலையடித்துப் பரவுகிறதென்றால் அப்போது அவளுடைய காடக்ஷத்தை அநுக்ரஹ ஸமுத்ரம் என்று சொல்லவேண்டும். முதலில், ஸமுத்ரத்தில் மீன் இருக்கிற மாதிரி அம்பிகையின் முக காந்திக் கடலில் கண் மீன்கள் துள்ளுகின்றன என்று பார்த்தோம். இப்போது பார்த்தால் முகலாவண்ய ஸமுத்ரத்துக்குள் இருக்கிற இந்த நேத்திர மீனுக்குள்ளும் ஒரு ஸமுத்ரம் — அருட்கடல் — இருக்கிறதென்று தெரிகிறது!

அவள் எங்கேயோ இருக்கிறாள், கடாக்ஷம் மட்டும் நம் மேலே படுகிறது என்று இல்லை. தாய் தன் மடியில் குழந்தையை அன்பாகப் போட்டுக் தாலாட்டிக் கொண்டிருப்பதுபோல அவளுடைய கடாக்ஷத்திலேயே அவளுடைய மடியில் கிடப்பதான ஆறுதலும் அவளுடைய வாத்ஸல்யம் நிறைந்த வாக் அமுதத்தை கேட்பதான தாபசாந்தியும் குழந்தைகளான நம் இத்தனை பேருக்கும் கிடைக்கிறது. மீனின் கடாக்ஷமே மீன் முட்டைக்குத் தன்னை அடைகாக்கிற அணைப்பு ஸ்பரிசமாகவும், தாயார் ஊட்டும் க்ஷீரமாகவும் இருக்கிறமாதிரி மீநாக்ஷியின் கடாக்ஷமே நம்மை அணைத்து ரக்ஷித்து ஞானப்பால் ஊட்டிவிடுகிறது. அவள் ஒரு மூர்த்தியாக நின்று, அவளுக்குக் கிட்டே ஸ்தூலமாக இருக்கும் மதுரை வாஸிகள் பாக்யசாலிகள்.

என்னை ‘தர்சனம்’ என்று எதுவோ ஒன்று பண்ணுவதற்காக மீநாக்ஷி நகரவாஸிகளான நீங்கள் இவ்வளவு பேர் வந்து ஸந்தோஷப்படுகிறீர்களென்றால், அவளுக்குக் கிட்டவே வாழ்கிற உங்கள் இத்தனை பேரையும் தர்சனம் பண்ணுவது எனக்கும் ஆனந்தமாக இருக்கிறது*3. இப்படி நாம் பரஸ்பரம் மனம் கனிந்து பிரீதியோடு இருப்பது ஸாக்ஷாத் மீநாம்பிகை வர்ஷிக்கும் பேரானந்தத்தில் ஒரு துளிதான். இது லோகம் முழுக்க, எல்லையில்லாத அவளுடைய மாத்ருத்வத்தில் அடங்கியுள்ள அத்தனை உயிர்களுக்கும் பரவி, லோகம் முழுவதும் அவளுடைய கடாக்ஷாம்ருதம் பூர்ணமாகப் பொழிந்து, அதனால் எங்கேயும் பேரானந்தம் நிரம்பியிருக்கும்படியாக அவளுடைய சரணாவிந்தங்களிலேயே பிரார்த்தனை செய்வோம்.

மதுராபுரி நாயிகே நமஸ்தே
மதுராலாப சுகாபிராம ஹஸ்தே |
மலயத்வஜ பாண்ட்ய-ராஜகந்யே
மயி மீநாக்ஷி க்ருபாம் விதேஹி தந்யே ||

(மதுராபுரிக்கு நாயகியே! மதுரமாகக் கூவும் கிளியை ஏந்தி எழிலுற்ற கரத்தை உடையவளே! மலயத்வஜ பாண்டிய மன்னன் மகளே! ஸகல ஐச்வர்யமும் நிறைந்தவளே! உனக்கு நமஸ்காரம். எனக்கு உன் க்ருபையை அருளுவாய்!)

மீநாக்ஷியின் புகழை இப்படிப் பாடிப் பாடியே, லோகம் முழுவதும் அவள் குழந்தைகள் என்பதில் ஒரு பேதம், ஒரு த்வேஷம் இல்லாமல், அத்தனை பேரும் சிந்தனையிலும் செயலிலும் ஒற்றுமையுடன் வாழ்க்கையை ஆனந்தமாய் நடத்துவோம்.


*1ரோஸ் பீட்டர்

*2கோபியரோடு ஆடிக்களித்த கண்ணன் திடீரென மறைந்த போது கோபிகள் அவனை தேடிச் செல்கையில் அவன் ஒரே கோபிகையை மட்டும் உடன் அழைத்துச் சென்றதற்கான தடயத்தைக் காண்கிறார்கள். இவளே ராதை. ஆயினும் நேராகப் பெயர் சொல்லாமல் அவர்கள் “இவளால் கண்ணன் விசேஷமாக ஆராதிக்கப்படுகிறான்” (“அநயா (ஆ)ராதிதோ நூநம்”) என்னும்போதே ராதா நாமத்தைக் குறிப்பாலுணர்த்தி விடுகிறார்கள் (10.3.28).

*3 1961 ஏப்ரலில் மதுரை விஜயத்தின்போது அந்த நகர வாஸிகளைப் பற்றி அருளிய வாசகம்

வைஷ்ணவர் கூறும் பெருமை

ஸ்ரீமத் விஷ்ணு பாகவதத்தில் சிவ நாமாவின் பெருமை வந்திருப்பது போலவே ஸ்ரீவைஷ்ணவர்கள் ரொம்பவும் போற்றி மரியாதை செய்கிற ஒருவரும் அந்த நாமாவுக்கு உரியவரான பரமேச்வரனின் உயர்வைச் சொல்லியிருப்பதாக எனக்கு ஒரு அபிப்ராயம். அவர் என்னமோ சிவனை மட்டந் தட்டினதாகத்தான் கதை சொல்கிறவர்கள் சொன்னாலும் எனக்கு அப்படித் தோன்றவில்லை.

அவர் ராமாநுஜாசார்யாருக்கு மிகவும் முக்யமாக இருக்கப்பட்ட சிஷ்யர்களில் ஒருவர். கூரத்தாழ்வார் என்று பேர். பேர் என்றால் அப்பா அம்மா வைத்தது இல்லை. ஸ்ரீவத்ஸாங்கர் என்பதே அவர் பேர். தமிழில் திருமறுமார்பன் என்பார்கள். காஞ்சீபுரத்துக்குப் பக்கத்திலுள்ள கூரத்தைச் சேர்ந்தவராதலால் கூரத்தாழ்வார் என்று பெயர் வந்தது.

ராமாநுஜர் காலம் வரையில் அநேகர் சிவன், விஷ்ணு இருவரையும் உபாஸிப்பவர்களாக இருந்தார்கள். ஒரு ஊர் என்றாலே அதில் ‘ஈசான்யம்’ என்கிற வடகிழக்கில் ஈஸ்வரன் கோவிலும் மேற்கில் பெருமாள் கோவிலும் இருக்க வேண்டுமென்று விதி. அப்படியிருப்பதில் அநேகமாக எல்லாரும் கார்த்தாலே பெருமாள் கோவில், ஸாயரக்ஷை சிவன் கோவில் என்று போவார்கள். கொஞ்சம் கொஞ்சம் தீவ்ரமாக சிவனையே சொல்கிறவர்கள், விஷ்ணுவையே சொல்கிறவர்கள் என்று இருந்தாலுங்கூட ஒன்றை இழிவு பண்ணி ஒதுக்கி இன்னொன்றை மாத்திரம் உயர்த்தி வைக்க வேண்டும் என்கிற அபிப்ராயம் இல்லாமல் இருந்தது. இப்படி இருக்கிறபோது ராமாநுஜர், ‘விஷ்ணுவைத் தவிரக் கடவுள் இல்லை; தேவதாந்தரமே கூடாது’ என்பதை ஒரு மதமாகவே பண்ணி, சிவன் கோவிலுக்குப் போகப்படாது என்று பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்.

அப்போது ஆட்சி பண்ணிய சோழராஜாவும் வித்வான்களும் இதைப்பற்றி ஆலோசித்தார்கள். ராமாநுஜர் சொல்வதற்கு என்ன சாஸ்த்ர ஆதாரம் என்று அவரையே கூப்பிட்டுக் கேட்போம் என்று முடிவு பண்ணினார்கள். இதற்காக வித்வத் ஸதஸ் கூட்ட ஏற்பாடாயிற்று. அப்போது தலைநகராயிருந்தது கங்கைகொண்ட சோழபுரம். கும்பகோணத்துக்கு வடக்கே பத்து மைலில் இருப்பது. ராமாநுஜாசாரியார் ஸ்ரீரங்கத்தில் இருந்தார். இங்கிருந்து அங்கே ராஜா ஆள் அனுப்பினான்.

ஆள் போய் விஷயத்தைச் சொன்னான். அப்போது ராமாநுஜரோடு கூட இருந்த கூரத்தாழ்வார், “ஸ்வாமி! ராஜாவோ சைவன்; சிவாலயங்கள் கட்டியிருப்பவன். தாங்களானால் சிவன் கோவிலுக்குப் போகப்படாது என்கிறீர்கள். அதனால் உங்களை அழைத்து தண்டனை கொடுப்பதற்கே ‘வித்வத் ஸதஸ்’ என்று சொல்லி ஆள் அனுப்பியிருக்கிறான். வருகிற ஆபத்து எனக்கு வரட்டும்; தங்களுக்கு வேண்டாம். தாங்கள் என்னுடைய வெள்ளை வேஷ்யைக் கட்டிக்கொண்டு சோழராஜ்யத்தை விட்டே போய்விடுங்கள். தங்களுக்காக நான் தங்களுடைய காஷாயத்தைப் போட்டுக்கொண்டு, நான்தான் தாங்கள் என்று சொல்லிக்கொண்டு ராஜாவிடம் போகிறேன்” என்றார்.

அப்படியே செய்தார்கள். ராமாநுஜர் ராத்திரியோடு ராத்ரியாக முதலில் ஸ்ரீரங்கத்துக்கு இருபத்தெட்டு மைலிலுள்ள திருநாராயணபுரத்துக்கும், அப்புறம் அங்கிருந்து ரொம்ப தூரத்துக்கு அப்பாலுள்ள மைஸூர் திருநாராயணபுரத்துக்கும் போனார். கூரத்தாழ்வார் கங்கைகொண்ட சோழபுர ஸதஸ்ஸுக்கு வந்து சேர்ந்தார்.

அங்கே கூடியிருந்த வித்வான்கள், ‘சிவன் மாதிரி, சிவனுக்கு ஸமமாக விஷ்ணுவோ, இன்னொரு தெய்வமோ இருக்கிறது’ என்று வேண்டுமானால் மற்ற தெய்வங்களை இஷ்ட தெய்வமாகக் கொண்டவர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும்; ஆனால் தெய்வங்களுக்குள் உசத்தி-தாழ்த்தி சொல்வதாவது? சிவனைவிட விஷ்ணு உசத்தி என்றால் எப்படி? அப்படித்தான் என்றால் சாஸ்த்ரங்களைக் காட்டி நிரூபிக்கட்டும் என்று தீர்மானித்தார்கள். அதனால் “சிவாத் பரதரம் நாஸ்தி“, அதாவது ‘சிவனுக்கு மேலே உயர்ந்த பொருள் இல்லை’ என்று ஓலையில் எழுதினார்கள். வித்வான்களுக்கு ஓலையை அனுப்புவது; இந்த அபிப்ராயத்தை ஒப்புக்கொண்டால் அவர்கள் கையெழுத்துப் போடட்டும்; ஆக்ஷேபித்தால் சாஸ்த்ரம் காட்டி விளக்கட்டும் என்று முடிவு செய்தார்கள்.

கூரத்தாழ்வாரிடம் ஓலை காட்டப்பட்டது.

அவர் அதிலே என்னவோ எழுதித் திருப்பிக் கொடுத்தார். என்ன எழுதினார் என்றால், கையெழுத்துப் போடவில்லை “அஸ்தி த்ரோணம் அத: பரம்” என்று எழுதியிருந்தார்.

“சிவனுக்கு மேல் உசத்தியான ஒன்று இல்லை” என்றுதானே ஓலையில் முதலில் எழுதப்பட்டிருந்தது? அதற்கு மேல் த்ரோணம் இருக்கிறது” என்று இவர் இப்போது எழுதினதிற்கு அர்த்தம். “அஸ்தி த்ரோணம் அத: பரம்” என்றால் “அதற்கு (சிவனுக்கு) மேலானதாக த்ரோணம் இருக்கிறது” என்று அர்த்தம்.

‘சிவ’ என்றால் ஈஸ்வர நாமா என்பது மட்டுமில்லை. அதற்கு இன்னொரு அர்த்தம், ‘மரக்கால்’ என்பது. மரக்கால் — படி — ஆழாக்கு என்பதில் மரக்காலுக்கு ஸம்ஸ்க்ருதத்தில் ‘சிவம்’ என்று பெயர். மரக்காலைவிடப் பெரிய அளவு ஒன்று உண்டு. தமிழில் அதற்குப் பதக்கு என்று பேர். ஸம்ஸ்க்ருதத்தில் இது ‘த்ரோணம்’ எனப்படும்.

‘சிவ’ என்பதற்குப் இரண்டு அர்த்தமிருப்பதில் இவர் சிலேடையாக ‘சிவபெருமான்’ என்பதைத் தள்ளிவிட்டு, ‘மரக்கால்’ என்பதாக எடுத்துக்கொண்டு, ‘ஏன் மரக்காலும் மேலே எதுவும் இல்லாமல்? பதக்கு இருக்கே!’ என்று எடுத்துக்காட்டி எழுதிவிட்டார்.

“ராஜ ஸமூஹம்; அநேக வித்வான்கள் கூடியிருக்கிற கௌரவமான ஸதஸ்; அதிலே ஸீரியஸாக சாஸ்த்ரார்த்தங்களைக் காட்டாமல் குறும்பாக, ‘மரக்காலை விடப் பதக்கு பெரிசு’ என்று இவர் எழுதியிருக்கிறாரே!” என்று எல்லாருக்குமே இருந்தது. ராஜாவுக்குக் கோபம் வந்து, கடுமையாக சிக்ஷை பண்ணினான் என்று கதை போகிறது.

எனக்கென்ன தோன்றுகின்றதென்றால் கூரத்தாழ்வார் குறும்பு பண்ணவில்லை; சிவனே கதி என்று உபாஸிக்க கூடியவர்களும், வேதத்திலுள்ள ருத்ர ஸூக்தமுமே ஒப்புக்கொள்ளும்படியான ஒரு உண்மையைத் தான் “அஸ்தி த்ரோணம் அத: பரம்” என்பதில் உள்ளார்த்தமாக வைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

‘சிவ’ என்பதற்கு அவர் இரண்டர்த்தம் பண்ணிக் கொண்டதாகத்தான் இதுவரை நினைக்கப்பட்டிருக்கிறது. மரக்கால் என்று அர்த்தம் பண்ணினார் என்று நினைத்தே ராஜா சிக்ஷித்தான். எனக்கோ, ‘அஸ்தி த்ரோணம் அத: பரம்’ என்பதில் ‘சிவ’ என்பதற்குப் பரமசிவனுக்கு வேறாக இன்னொன்றை (மரக்காலை) அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டாம்; ‘த்ரோணம்’ என்பதற்குத்தான் பதக்கு என்றில்லாமல் வேறே அர்த்தம் செய்து கொள்ளணும் என்று தோன்றுகிறது.

என்ன அர்த்தம்?

த்ரோணம் என்றால் தும்பை என்றும் அர்த்தம். பரமேச்வரனுக்கு மிகவும் ப்ரீதியான பூ அது. பத்ரங்களில் பில்வம் மாதிரி, புஷ்பங்களில் எந்தக் கடையிலும் விலைக்கு விற்காததான ஊமத்தை, எருக்கு, தும்பை இதுகள்தான் சிவபெருமானுக்கு ரொம்பவும் உகந்தவை. அப்பைய தீக்ஷிதரைவிட ஒரு சிவபக்தர் கிடையாது. அவர் ‘ஆத்மார்ப்பண ஸ்துதி’ என்று செய்திருக்கிறார். இதற்கு ‘உன்மத்த பஞ்சாசத்’ என்றும் காரணப்பெயர் உண்டு*.

அர்க்க-த்ரோண-ப்ரப்ருதி குஸுமை: அர்ச்சநம் தே விதேயம்
ப்ராப்யம் தேந ஸ்மரஹர பலம் மோட்ச ஸாம்ராஜ்ய லக்ஷ்மி: |

என்கிறார். “பரமேச்வரா! உன்மேலே எருக்கையும் த்ரோணத்தையும் (தும்பையையும்) அர்ச்சனை பண்ணி விட்டால் போதும், அது ஒருத்தனுக்கு மோட்ச ஸாம்ராஜ்யம் என்ற பரம ச்ரேயஸைப் பலனாகக் கொடுத்து விடுகிறது” என்கிறார்.

சிவனுக்கு மேலே தும்பைப் பூ அர்ச்சனை செய்த பூ விழுகிறது. அவனுக்கு மேலே போய் அது உட்கார்ந்திருக்கிறது. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு தும்பைப்பூவை வைத்து விட்டால், அப்போது அது அவனுக்கு மேலே, அவனைவிட உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிறது! ஆகையால் “சிவனுக்கு மேலே உயர்வாக எதுவுமில்லை; சிவாத் பரதரம் நாஸ்தி” என்றால் எப்படி ஸரியாகும்? அதுதான் மேலே த்ரோண புஷ்பம், இத்தனூண்டு பூ வெள்ளை வெளேரென்று பரம நிர்மலமாக, அத்தனை பெரியவனுக்கும் மேலே இருக்கிறதே!” இருக்கிறது” என்பதை அடித்துச் சொல்லவே “அஸ்தி” என்று ஆரம்பித்து, “அஸ்தி த்ரோணம் அத: பரம்” என்றதாகத் தோன்றுகிறது.

‘தரம்’ என்றால் ஒன்றைவிட இன்னொன்று comparative degree-ல் உயர்ந்தது என்று அர்த்தம். ‘சிவாத் பரதரம் நாஸ்தி’ என்றால் சிவனைவிடப் பரமாக (உயர்ந்ததாக) கம்பேரடிவ் டிக்ரியில் சொல்ல எதுவும் கிடையாது என்று அர்த்தம்.

சிவனுக்கு ‘மேலே’ தும்பை இருக்கிறது என்று வேண்டுமானால் அது இருக்கும் பொஸிஷனைக் கொண்டு சொல்லலாமே தவிர, சிவனோடு கம்பேர் பண்ணி அதாவது அவருடைய குணத்தோடும் மஹிமையோடும் ஒப்பிட்டுப் பார்த்துத் தும்பை அவரைவிட உசத்தி என்று எப்படிச் சொல்லமுடியும்?

அதுவும் முடியும். வேதமந்த்ரமான ஸ்ரீருத்ர வாக்யமே இதற்கு ஆதரவாயிருக்கிறது. அதிலே முடிகிற இடத்திலே இப்படி வருகிறது: “இதோ என்னுடைய இந்தக் கை இருக்கிறதே, இதுவுமே பகவான்தான், பரமசிவன்தான். இல்லை, பகவானுக்கும் மேலே — ‘பகவத்தர:‘ என்று கம்பரேடிவ் ‘தர’த்தையே சொல்லியிருக்கிறது!

எப்படி இந்தக் கை பகவானைவிட உசத்தி?

எப்படியா? “இது அவனை அபிமர்சனம் பண்ணுகிறதோ இல்லையோ, அதனால்தான்” என்று ச்ருதியே சொல்கிறது.

‘அபிமர்சனம்’ என்றால் நன்றாகத் தொடுவது. பூஜையின் போது அவனை நன்றாகத் தொட்டுத் துடைத்து, சந்தனமிட்டு, அர்ச்சனை பண்ணுவது இந்தக் கைதானே? இப்படி அவனைத் தொட்டுவிட்டால் போதும், அவன்மேலே போய் விழுந்துவிட்டால்போதும், அவன் காலிலே சித்தே (சிறிதே) கிடந்தால் போதும் – அவனுடைய ஸ்பரிசம் படுகிறதே, அப்போது அவன் தன்னுடைய குணம், மஹிமை எல்லாவற்றையும் தானாக இருந்துகொண்டு எவ்வளவு காட்டுகிறானோ அதைவிட ஜாஸ்தியாகவே தன்னை ஸ்பரிசித்துக் கொண்டிருப்பவனுக்குக் கொடுத்துவிடுவான்; தான் பகவான் என்றால் தன்னை ஸ்பர்சிப்பது ‘பகவத்தரம்’ என்று ஆக்கிவிடுவான்!

அதனால் ஒரு தும்பைப்பூ அவனுடைய தலை மேல் ஏறி உட்காரணும் என்று கூட இல்லை, அவனுடைய காலிலே அர்ச்சிக்கப்பட்டுக் கிடந்தாலுங்கூட சிவத்தன்மையிலே அது சிவனைவிட ‘மேல்’ : ‘சிவாத் பரதரம்‘ தான்.

இந்த அபிப்ராயங்களை மனஸில் வைத்துக் கொண்டே, ஆனாலும் தன்னுடைய ஆசார்யனுடைய அபிப்ராயத்துக்கு வேறேயாக வெளிப்படச் சொல்லக் கூடாது; சொல்லாமல் அவருக்காக என்ன தண்டனையானாலும் வாங்கிக் கொள்வது என்றே கூரத்தாழ்வார் இரண்டு அர்த்தத்தில் “அஸ்தி த்ரோணம் அத: பரம்” என்று சொன்னதாக வைத்துக் கொள்ளலாம்.

ஒரு சின்னஞ்சிறிய பூவாக இருந்தால்கூட ஸரி, தன்னிடம் அது வந்துவிட்டது என்றால் அதைத் தன்னிலும் உசத்தியான மஹிமையுள்ளதாகப் பண்ணிவிடுகிற ஒளதார்யம் (உதார குணம்) உடையவர் பரமசிவன் என்பது அந்த வைஷ்ணவர் வார்த்தையால் தெரிவதாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் இப்படி அவனை எப்போ பார்த்தாலும் தொட்டுப் பூஜை பண்ணிக்கொண்டிருக்க முடியுமா? எல்லோருக்கும் அந்த ஸெளகர்யம் கிடைக்குமா? இந்த ஸாதாரணத் தும்பை கூட எல்லா மாஸத்திலும் கிடைக்காதே? அதனாலே அவனை ஸ்பரிசித்து, ஒட்டிக் கொண்டு, கட்டிக்கொண்டு இருப்பதெல்லாம் வாக்கால்தான் பண்ணியாகணும். இந்த நாக்கிலேதான் அவன் நாமாவை வைத்துக் கட்டிக்கொண்டு அதன் மூலம் அவனை ஹ்ருதயத்தில் இறக்கிக்கொண்டு அங்கே அவனோடு ஒட்டிக்கொண்டு இருக்கவேண்டும். நாமா சொல்ல எந்த ஸெளகர்யமும் வேண்டாம், உபகரணமும் வேண்டாம், நியமமும் வேண்டாம்.

அதனால் இத்தனை பாபம் பண்ணிவிட்டோமே என்று அழவே வேண்டாம். பாபத்தை ஒரே க்ஷணத்தில் த்வம்ஸம் பண்ணும் வஸ்து இருக்கிறது. அதை எங்கேயோ போய்த் தேடிப் பெற வேண்டியதில்லை. நாமே உண்டு பண்ணிக்கொண்டு விடலாம். கஷ்டமே இல்லை. இரண்டே எழுத்து. தேஹத்தில் உயிர் போலவும், கோயிலில் மஹா லிங்கம் போலவும், வேதங்களின் மத்தியில் ஜீவரத்னமாயிருக்கும் அதை நாம் என்ன பண்ணவேண்டும்? பெரிசாக த்ரவ்யம் சேர்த்து அபிஷேகம் பண்ணணுமா? தினுஸு தினுஸயாய் நைவேத்யம் செய்யணுமா? மாலைகள், நகைகள் சாத்தணுமா? ஒன்றும் வேண்டாம். ஓயாமல் வேண்டாத விஷயங்களில் புரண்டு கொண்டிருக்கிற நாக்கைக் கொஞ்சம் அதற்காகப் புரட்டினால் போதும்!

மநுஷ்யனுக்கு மட்டும் இது birth right (பிறப்புரிமை)! வேறு எது எதற்கோ பர்த்-ரைட் சொல்கிறோம்! இதுதான் எல்லாவற்றுக்கும் மேலே! வாக்கு என்று ஒன்றை மநுஷ்யனுக்கு மாத்திரம் தந்திருப்பது இதற்காகத்தான்! இதைச் செய்யாவிட்டால், ‘வாக்கால் செய்யக் கூடியதை இவன் செய்யவில்லை; இவனுக்குப் இதைக் கொடுத்துப் பிரயோஜனமில்லை’ என்று பரமேச்வரன் அதைத் திரும்ப வாங்கிக் கொண்டு அடுத்த ஜன்மாவில் வேறே மாதிரி உருட்டி விடுவார்! இதைச் சொல்லிவிட்டாலோ ஜன்மாவே இல்லை. பாவம் எல்லாம் பறந்து போய்விடும். மோக்ஷ ஸாம்ராஜ்ய லக்ஷ்மியை இந்த நாமா கொடுத்துவிடும்.

பரமேச்வர ஸ்வரூபத்தை நாம் பார்க்க முடியுமா? விக்ரஹமாக வைத்தால்கூட எப்போதும் பார்க்க முடியுமா? இந்த நாமா இருக்கிறதே, இதுவும் ஸாக்ஷாத் அவனேதான். இதை நினைத்த மாத்திரத்தில் நம்மிடம் வரும்படிப் பண்ணிக் கொண்டுவிடலாம்.

அதனால் எப்பொழுதெப்பொழுது முடிந்தாலும் ‘சிவ’ என்று இரண்டு அக்ஷரங்களைச் சொல்லி லோகமெல்லாம் சிவம், மங்களம், கல்யாணம் தழைக்கச் செய்ய வேண்டும்.


*காரணம் என்ன என்ற சுவையான விளக்கம் பிற்பகுதிகளிலொன்றில் வெளியாகலாம்.

அனைவருக்குமான நாமம்

அவ்வைப் பாட்டி செய்திருக்கிற நூல்களில் ‘நல்வழி’ என்பது ஒன்று. என்ன ஜாதி, என்ன மதம் என்றெல்லாம் கேட்காமல் மநுஷ்யராகப் பிறந்த எல்லாருக்குமான நீதிகளை அதில் சொல்லியிருக்கிறது. இப்படி நூலில், “சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்(கு) அவாயம் (அபாயம்) ஒரு நாளுமில்லை” என்று வருகிறது. அதனால் சிவநாமம் ஸகல ஜனங்களுக்கும் ஏற்பட்டது என்று தெரிகிறது. ஜாதி ப்ரஷ்டம் பண்ணி வைக்கப்பட்ட சண்டாளன்கூட சிவநாமம் சொல்ல வேண்டுமென்றிருக்கிறது. ஸ்ரீருத்ரத்தில் பரமேஸ்வரனை நாய், நாய் தின்னுகிறவன் உள்பட எல்லாமாகச் சொல்லியிருப்பதாலேயே அவனுடைய நாமா எல்லோருக்கும் ஸொத்து என்று தெரிகிறது.

வேதத்தில் சிவநாமத்தின் ஸ்தானம்

விலையுயர்ந்த ரத்னமொன்று நம்மிடமிருந்தால் வீட்டிலே எங்கே வைப்போம்? வாசல் புற ரூமில் வைப்போமா? தோட்டத்தைச் சேர உள்ள ரூமில் வைப்போமா? ரொம்பவும் காபந்தாக மத்தியில் இருக்கிற ரூமில் இரும்புப் பெட்டியில்தான் வைப்போம். அப்படியே வேதத்தில் ஜீவரத்னமான சிவநாமத்தை ரொம்பவும் ஜாக்ரதைப்படுத்தி வைத்திருக்கிறது. நாலில் மத்தி இரண்டாவது. நாலு வேதங்களில் இரண்டாவது யஜுஸ். அதர்வவேதத்தைச் சேர்க்காமல் ரிக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்றை மட்டும் ‘த்ரயீ’ என்பதுண்டு. அப்போதும் ரிக்குக்கும் ஸாமத்துக்கும் நடுவில் வருவது யஜுஸே. யஜுஸிலேயே சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், என்று இரண்டு இருப்பதால் நாலு வேதத்தை நாலு வேதத்தை ஐந்து என்று ஆக்கினாலும் ரிக், சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், ஸாமம், அதர்வம் என்ற ஐந்தில் நட்ட நடுவாக வருவது மூன்றாவதான க்ருஷ்ண யஜுஸ்தான் இந்த க்ருஷ்ண யஜுர் வேதத்தில் மத்ய பாகம் அதன் நாலாவது காண்டம். அந்தக் காண்டத்தின் மத்யம் ஐந்தாவது ப்ரச்னம். இதிலேதான் நடுவில் ஸ்ரீ ருத்ர ஸூக்தம் எனப்படுவதில் நடுநாயகமாக பஞ்சாக்ஷரம் வருகிறது. அந்த பஞ்சாக்ஷரத்துக்கும் மையமாக ‘சிவ’ என்ற த்வயக்ஷரம் இருக்கிறது.

உடம்பை மெய் என்கிறோம். அதிலே இருக்கிற பரமாத்மாவை மெய்ப்பொருள் என்பார்கள். ஸத்வஸ்து என்று வேதாந்தத்தில் சொல்வதைத் திருவள்ளுவர் அப்படியே தமிழில் ‘மெய்ப்பொருள்’ என்கிறார். வேதங்களையெல்லாம் ஒரு சரீரமாக – மெய்யாக – வைத்துக் கொண்டால் அதில் உயிராக, மெய்ப்பொருளாக இருப்பது சிவநாமா. உயிர் என்னும் பரமாத்மா இருக்கும் ஸ்தானம் ஹ்ருதயம் என்றால், அந்த ஹ்ருதயம் சரீர மத்தியில்தான் இருக்கிறது. இதைத்தான் ஞானஸம்பந்தரும் சொல்கிறார்.

வேத நான்கினும் மெய்ப்பொருளாவது
நாத(ன்) நாமம் நமச்சிவாயவே

வீட்டுக்கு நடுவே காபந்தாக இருக்கும் ரத்னம் போல வேத சரீரத்தின் நடுவே அதன் ஜீவரத்னமாக உயிர் கொடுத்துக்கொண்டு சிவ நாமாவாகவே பரமாத்மா இருக்கிறார். இந்த அபிப்ராயத்தையே அப்பைய தீக்ஷிதர் ப்ரஹ்ம தர்க்க ஸத்வத்தில் (ஸ்லோ. 27) “யஜ்-ஜீவ ரத்நம் அகிலாகம லாலநீயம்” என்கிறார்.

சிவ நாம மஹிமை! சிவன் தரும் மஹிமை

சிவ நாமாவைச் சிறப்பித்து சைவமான புராண ஆகமங்களிலோ, தேவார திருவாசகங்களிலோ சொல்லியிருந்தால் அதில் பெரிய விசேஷமில்லை. வைஷ்ணவ நூலில் சொல்லியிருந்தாலே விசேஷம். சிவ மஹிமையைத் தீவ்ர வைஷ்ணவர் சொல்லியிருந்தால்தான் விசேஷம்.

இந்த இரண்டு விசேஷங்களும் சிவனுக்கும் சிவ நாமத்துக்கும் இருக்கின்றன.

விஷ்ணுவின் மஹிமைகளை, சரித்ரங்களை எல்லாவற்றுக்கும் மேலானவை என்று ஸ்தாபிக்க ஏற்பட்டது பாகவதம். அதில் நடுவிலே தாக்ஷாயணியின் கதை வருகிறது. அந்தக் கதைக்கு நடுவிலேதான் தாக்ஷாயணியின் வாக்கிலேயே சிவ நாமாவின் மஹிமையைச் சொல்லியிருக்கிறார், பாகவதத்தை அநுக்ரஹித்துள்ள சுகாசார்யாள். அவர் ப்ரஹ்ம ஸ்வரூபம். சுகப்ரஹ்மம் எனப்படுபவர். அவர் சொல்வதற்கு தனி மதிப்பு உண்டு. அவர் இப்படி எடுத்துச் சொல்வதற்கு மூலமாக இந்த மஹிமையைச் சொன்னவளோ தாக்ஷாயணியாக வந்த ஸாக்ஷாத் பராசக்தி! அதுவும் எப்படிப்பட்ட ஸந்தர்பத்தில் சொன்னாள்?

தகப்பனார் தக்ஷன் யஜ்ஞம் செய்கிறான் என்ற அபிமானத்தால் அவன் அழைக்காமலே அதற்கு வந்தாள், அவனுடைய புத்ரியானதால் தாக்ஷாயணி என்று அழைக்கப்பட்ட தேவி. ஸதி என்பதுதான் அவளுடைய (இயற்) பெயர். ஹிமவானின் புத்ரியான பார்வதியாக வருவதற்கு முன்னால் அம்பாள் எடுத்த அவதாரம் இது. பரமேச்வரன், “அழையா விருந்தாளியாகப் போக வேண்டாம்” என்று நல்ல வார்த்தை சொல்லியும் கேட்காமல் தாக்ஷாயணி தகப்பனாரின் யாகத்துக்கு வந்தாள்.

பரமேச்வரன் யாரையும் மதிப்பதுமில்லை, அவமதிப்பதுமில்லை என்று தன்பாட்டில் ஞானியாக விலகியிருந்தவர். ‘ப்ரஜாபதி’ என்று ஜனங்களுக்கு நாயகர்களாக ப்ரம்மா ஸ்ருஷ்டித்த ப்ரம்ம புத்ரர்களில் தக்ஷன் ஒருவன். அவனுக்கு எப்போதும் தன் ஆஃபீஸ், அதாரிடிகளைப் பற்றிய கர்வமுண்டு. எல்லோரும் தனக்கு நமஸ்காரம் பண்ணவேண்டும் என்று எதிர்பார்ப்பான். மற்றவர்கள் பண்ணவும் பண்ணினார்கள். ஈச்வரன் பண்ணவில்லை. அதனால் அவரை இவனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் ப்ரம்மாவின் வாக்குக்குக் கட்டுப்பட்டு ஸதியை அவருக்குக் கல்யாணம் செய்து கொடுத்து அவளைக் கைலாஸத்துக்கு அனுப்பி வைத்தான். அதோடு பெண்-மாப்பிள்ளை உறவைக் கத்தரித்து விட்டான். பெரிய யாகம் செய்தபோதுகூட ஒரு தேவர் பாக்கியில்லாமல் முப்பத்து முக்கோடி பேரையும் கூப்பிட்டவன் பெண்ணையும் மாப்பிள்ளையையும் இன்வைட் பண்ணவில்லை.

யஜ்ஞவாடத்தில் ஈச்வரனைத் தவிர அத்தனை பேரையும் கூப்பிட்டு உட்கார்த்தி வைத்திருப்பதைப் பார்த்தவுடனேயே மஹா பதிவ்ரதையான தாக்ஷாயணிக்கு “ஏண்டா வந்தோம்?” என்று பொங்கிப் பொங்கிக் கொண்டு வந்தது. அதற்கப்புறம் தக்ஷன் அவளை ப்ரியமாய் வரவேற்காததோடு, சிவ த்வேஷமாகவே நிந்தை பண்ணிப் பேச ஆரம்பித்தவுடன் அவளால் துக்கத்தையும் கோபத்தையும் தாங்கவே முடியவில்லை.

இங்கேயிருந்து போய்விடலாமா? போவது என்றால் எங்கே? பதியின் க்ருஹத்தைத் தவிர பத்னிக்கு வேறே இடம் ஏது? அங்கே போகலாமா? ஏன், என்ன யோசனை? போகவேண்டியதுதானே? போனால், ‘நான் சொல்லச் சொல்லப் போய் உனக்கும் அவமானத்தை தேடிக் கொண்டு எனக்கும் அவமானம் வாங்கி வைத்து விட்டு இங்கே ஏன் திரும்பி வந்தாய்?’ என்று பரமேச்வரர் கோபிப்பாரோ என்பதால் யோசனையா? இல்லை. அவர் அன்பே ஒரு ஸ்வரூபமாக வந்திருப்பவர். என்னிடம் பரிவு தவிர எந்த உணர்ச்சியும் காட்டத் தெரியாதவர். அவர் இப்படிக் கேட்கமாட்டார். ஆனால் என் மனஸே கேட்கும்; குத்திக் குத்திக் கேட்கும். இன்னொன்று: அவர் எதுவும் நடக்காதது போல ஹாஸ்யமாக, பரிஹாஸமாக, என்னிடம் ஸல்லாபம் செய்யும் போதே நடுவில் ‘தாக்ஷாயணி’ என்று என்னைக் கூப்பிட்டுவிட்டால்? அதைவிட ஒரு தண்டனை வேண்டுமா? சிவநிந்தை செய்யும் பாபியின் பெண்ணாயிருப்பதால் ஏற்பட்ட பேரல்லவா அது? அவருடைய நாமம் எத்தனை உத்க்ருஷ்டமானதோ அத்தனை நிக்ருஷடமான இவனுடைய பேரைச் சொல்லி, இவனுக்குப் பெண்ணாய் நான் பிறந்தேனென்பதை ஞாபகப்படுத்தும் இந்தப் பேரை நான் வைத்துக் கொள்ள வேண்டியிருப்பதை விடப் பெரிய தண்டனை இல்லை. அதைவிட, இவனால் ஏற்பட்ட இந்த சரீரமே போய்விடட்டும்! எங்கே போவது என்று யோசித்தோமே! இந்த சரீரத்தையே விட்டுவிட்டுப் போய் ஆத்மாவாகிய அவரிடம் கலந்து விடுவோம்!’ என்று தியாக ஸங்கல்பம் பண்ணிக் கொண்டு விட்டாள்.

யஜ்ஞ குண்டத்துக்குப் பக்கத்திலேயே அம்பாள் ஈச்வர த்யானம் பண்ணிக்கொண்டு யோகாக்னியில் சரீரத்தை அர்ப்பணம் செய்து முடிந்து போய்விட்டாள் என்பது பாகவதக் கதை. சைவ புராணங்களில் யஜ்ஞ குண்டத்திலே விழுந்து பஸ்மீகரமாக்கிக்கொண்டு விட்டாளென்று இருக்கிறது.

இப்படி பாதிவ்ரத்யத்துக்காக, அம்பாள் ப்ராணத் தியாகம் செய்கிறதற்கு முந்தி கோபாக்னி கொழுந்து விட்டெரிய தக்ஷனைப் பார்த்துக் கொஞ்சம் பேசினதாக பாகவதத்தில் வருகிறது. அதன் நடுவில்தான், ‘சிவன் என்றாலே இவன் கரிக்கிறானே!’ என்று நினைத்து அவனிடம் அந்த நாம மஹிமையை அம்பாள் சொல்வது வருகிறது.

அம்பாள் வாக்கு என்பதாலேயே அதற்கு மிகுந்த ஏற்றம் உண்டு. அதுவும் இந்த ஸந்தர்ப்பத்திலே சொன்னது என்பதால் இன்னமும் மேலே, இதற்குமேல் ஒன்றில்லை என்ற உச்சிக்கு அந்த வாக்கு போய்விடுகிறது.

முன்காலத்தில் யாராவது உடன்கட்டை ஏறினால் அவளுடைய வஸ்த்ரம் எரியாமலே இருக்கும். ப்ரத்யக்ஷத்தில் பார்த்துப் பலபேர் சொல்லியிருக்கிறார்கள். அந்த வஸ்த்ரத்தை வைத்து ஆராதனை செய்வார்கள். இப்படிப் பல வீடுகளில் தலைமுறைகளாக அந்த வஸ்த்ரம் வந்திருக்கிறது. தன்னையே த்யாகம் பண்ணிக் கொள்வதால் அந்த ஸ்திரீகள் ஆத்ம ஞானியின் நிலையிலிருப்பவர்கள், அம்பாளின் அம்சம் பெற்றவர்கள் என்று பூஜிக்கப்படுகிறார்கள். அப்படியானால் அந்த அம்சங்களுக்கெல்லாம் மூலமான அம்பிகையே பதியை நிந்தை செய்தவனுடைய புத்ரியாக ஏற்பட்ட பெயரும் தேஹமும் இருக்கப்படாது என்ற தீவ்ரமான பதிவ்ரதா பாவத்தில் தன் தேஹத்தை பரித்யாகம் பண்ணிக் கொள்கிற நிலையில் சொன்ன வாக்கு ஸஹகமனம் செய்கிறவர்களின் வஸ்திரத்தைவிட எத்தனை மேலானது?

அம்பாள் இங்கே ஸஹகமனம் செய்யாவிட்டாலும் அப்படிச் செய்வதற்கே ‘ஸதி’ — இங்கிலீஷிலே suttee — என்றுதான் அவள் பேரை வைத்திருக்கிறது. ‘பாதிவ்ரத்யத்துக்காக சரீரத்தைப் பொசுக்கிக் கொண்டு விடுவது’ என்ற கொள்கை இரண்டுக்கும் பொதுவாயிருப்பதால் இவ்வாறு பேர் ஏற்பட்டிருக்கிறது.

ஸதி-பதி என்பதாகவே தம்பதியைச் சொல்வதும் ‘ஸதி’என்றாலே ஐடியல் பத்னி என்ற அபிப்ராயத்தில் தான். ஆசார்யாள் “ஸதி ஸதீநாம் அசரமே” என்கிறார்*1. “பதிவ்ரதைகளுக்குள் முதன்மை ஸ்தானம் கொண்ட ஸதியே!” என்று அர்த்தம்.

அப்படிப்பட்டவள் ப்ரணாத்யாகம் பண்ணுகிற ஸந்தர்ப்பத்தில் சொன்னதைவிடப் பெரிய ஸத்யமில்லை. அந்த ஸத்யத்துக்கு விலையே இல்லை என்ன சொன்னாள்?

யத்-த்வயக்ஷரம் நாம கிரேரிதம் ந்ருணாம்
ஸக்ருத் ப்ரஸங்காத் அகம் ஆசு ஹந்தி தத் |
பவித்ர கீர்த்திம் தம் அலங்க்ய-சாஸநம்
பாவந்-அஹோ த்வேஷ்டி சிவம் சிவேதர: || *2

கடைசி வார்த்தை ‘சிவேதர:‘ — ‘சிவனுக்கு இதரமானவர்’. அதாவது சிவனாக இல்லாமல் அதற்கு மாறுபட்டவராக இருக்கிறவர். இப்படி ‘சிவேதரன்’ என்று அம்பாள் சொல்வது தக்ஷனைத்தான். ‘பவாந் – ‘தாங்கள்’ என்று ரொம்ப மரியாதை த்வனிக்கிறாற்போலவே அவனைக் கூப்பிடுகிறாள். ஈச்வரனே தனக்கு மரியாதை பண்ணவேண்டுமென்று எதிர்பார்ப்பவனாதலால் பரிஹாஸமாக ‘பவாந்’ என்று சொல்லி அவனை ‘சிவேதரன்’என்கிறாள். இதில் நிரம்ப அர்த்த புஷ்டியிருக்கிறது.

சிவ என்பதற்கு மங்களமாக, சுபமாக இருக்கிற அத்தனையையும் அர்த்தமாக, synonym-ளாக (ஸம்ஸ்க்ருத நிகண்டுவான) அமர (கோச)த்தில் சொல்லியிருக்கிறது “ச்வ: ச்ரேயஸம், சிவம், பத்ரம், கல்யாணம், மங்களம், சுபம்“. அந்த சிவத்துக்கு இதரனாக ஒருத்தன் இருக்கிறானென்றால் அவன் ஒரு ச்ரேயஸுமில்லாதவன், அமங்கள, அசுப ஸ்வரூபம் என்றுதானே அர்த்தம்?

அப்பைய தீக்ஷிதர் எழுதியுள்ள அத்வைத க்ரந்தமொன்றுக்குப் ‘பரிமளம்’ என்று பேர். அத்வைதத்தை ஆக்ஷேபிக்கிற ஒருவர் இதற்குக் கண்டனம் பண்ணி எழுதினார். இந்த விஷயத்தை அப்பைய தீக்ஷிதர் கேட்டவுடன் மூக்கைப் பிடித்துக் கொண்டாராம். பரிமளம் என்றால் நல்ல வாசனை. அதற்கு மாறாக ஒரு புஸ்தகம் என்றால் அதற்கு மூக்கைப் பிடித்துக் கொள்ளத்தானே வேண்டும்?

சிவம் – அதாவது பரம மங்களம் – பிடிக்காது என்று தக்ஷன் பெருமைப்பட்டுக் கொண்டால் அவன் ஒரே அமங்களன், அகல்யாணன், அசுபமானவன் என்றுதானே அர்த்தம்? தாக்ஷாயணி என்ற பேரே தண்டனை என்று நினைத்தவள் தக்ஷனுக்கு ‘சிவேதரன்’ என்று பேர் வைத்தே தண்டிக்கிறாள்!

“ஐயையோ (‘அஹோ’)! இப்படி சிவனை த்வேஷிக்கிற சிவேதரனாயிருக்கிறாயே! ஒரு தப்புக் கண்டுபிடிக்க முடியாமல் பரம பவித்ரமாயுள்ள கீர்த்தி பொருந்தியவரல்லவா அவர் (பவித்ர கீர்த்திம்)? அவருடைய கட்டளையாலல்லவா ஸகல தேவதைகளும் தங்கள் தங்கள் காரியத்தைச் செய்கிறார்கள்? யாரும் அவர் கட்டளையை மீறினதில்லையே (அலங்க்ய சாஸனம்)! நீதான் அதிசயமாக அவரை மீறிப் போகப் பார்க்கிறவன்” இப்படியெல்லாம் அம்பாள் சொல்கிறாள். இது ஸ்லோகத்தின் பின்பாதி. முன்பாதியில்தான் சிவ நாமாவின் பெரிய பெருமையைச் சொல்கிறாள்,

யத்-த்வயக்ஷரம் நாம கிரேரிதம் ந்ருணாம்
ஸக்ருத் ப்ரஸங்காத் அகம் ஆசு ஹந்தி …

த்வயக்ஷரம் நாம‘ – ‘இரண்டே இரண்டு அக்ஷரம் உள்ள சிவ நாமா’. பஞ்சாக்ஷரமாக அதற்கு முன்னாடிப் ப்ரணவம், பின்னாடி ‘நம:’ சொல்லணுமென்றுகூட இல்லை. அவ்வளவு ச்ரமம் வேண்டாம். இரண்டெழுத்தைச் சொன்னாலே போதும். ‘சிவ சிவ என்கிலர் தீவினையாளர்‘ என்றுதான் ‘திருமந்திர’த்தில் கூட இருக்கிறது; பஞ்சாக்ஷரமாகச் சொல்லவில்லை. “த்வயக்ஷரம் நாம கிரா” என்றால் ‘இரண்டே அக்ஷரமுள்ள நாமமான வார்த்தை’. இந்த வார்த்தையானது மனிதர்களால் சொல்லப்பட்டால் (‘ந்ருணாம் ஈரிதம்’ – மநுஷ்யர்களால் சொல்லப்பட்டால்) .

எப்படிச் சொல்ல வேண்டும்? ஸ்நானம் பண்ணி, மடி பண்ணிக் கொண்டு, மூச்சை கீச்சை அடக்கி ரொம்பவும் நியமமாகச் சொல்ல வேண்டுமா?

ஊஹும், அதெல்லாம் வேண்டியதில்லை. ‘ஸக்ருத் ப்ரஸங்காத்‘ – ஏதோ ஒரு தடவை பேச்சுக்கு நடுப்பற, எத்தனையோ அரட்டை அடிக்கிறபோது …….

சிவனை நினைத்து, மனஸைச் செலுத்தி புத்தி பூர்வமாக, ‘அவன் பேர்’ என்று சொல்ல வேண்டியதுகூட இல்லை. அகஸ்மாத்தாக ஏதோ பேச்சுக்கு நடுப்பற அந்த இரண்டெழுத்து வந்துவிட்டால்கூடப் போதும்! “சிவப்பு” அரிசி வடாம்’ என்கிற மாதிரி எதையோ சொல்லிக் கொண்டு போகும்போது இந்த இரண்டெழுத்து வந்து விட்டால் கூடப் போதும் …

இவ்வாறு அது அகஸ்மாத்தாக ஒருதரம் சொல்லப்பட்டால்கூட என்ன பண்ணிவிடுகிறது?

அகம் ஆசு ஹந்தி

அகம்‘ – பாபத்தை;’ ஆசு‘ – உடனே, தத்க்ஷணமே; ‘ஹந்தி‘ – அழித்துவிடுகிறது.

பேச்சுக்கிடையே ஏதோ ஒரு தரம் ‘சிவ’ என்ற இரண்டு அக்ஷரத்தை அகஸ்மாத்தாகச் சொல்லிவிட்டாலும் அதுவே ஸமஸ்த பாபத்தையும் போக்கிவிடும்.

ஸத்தியங்களுக்கெல்லாம் மேலான ஸத்யமாக, ப்ராண த்யாக ஸமயத்திலே ஸாக்ஷாத் பரதேவதை சொன்னதாக சுகாசார்யாள் வாயினால் வந்திருக்கிற வாக்யம் இது.

‘சிவசிவ என்று சொல்லாதவன் தீவினையாளன்’ என்றால் துஷ்கர்மா பண்ணினவன், அதாவது பாபி என்று அர்த்தம். அப்படியானால், சிவ நாமா சொல்லிவிட்டால் பாபம் போய்விடும் என்றுதானே அர்த்தம்?

தெரிந்தும் தெரியாமலும் எவ்வளவோ பாபம் பண்ணி விட்டோம். அதுதான் மேலே போக முடியாதபடி பெரிசாகத் தடை செய்கிறது. சிவநாமா சொல்லி விட்டால் அந்தத் தடை போய்விடும். அப்புறம் மோக்ஷ பர்யந்தம் எல்லாம் ஸித்தியாகிவிடும்.

மற்ற மதஸ்தர்களில் சிலர், “உங்கள் மதத்தில் பாபத்தைப் பரிஹரிக்க வழி இல்லை. எங்களிடம் இருக்கிறது. கொஞ்சம் தீர்த்தம் தெளிக்கிறோம். பாபமெல்லாம் போய்விடும். ஆகையால் எங்களிடம் வாருங்கள்” என்கிறார்கள்.

நம் மதத்தில் பாப பரிஹாரத்துக்கு வழி சொல்லாதது மாதிரி இவர்கள் கூப்பிடுகிறார்கள். நமக்கும் ஒன்றும் மத விஷயம் தெரியாததால் இங்கேயிருந்து அங்கே போகிறவர்களும் இருக்கிறார்கள். வாஸ்தவத்திலோ, நம்முடைய மதத்தில் இத்தனை கர்மாநுஷ்டானம் விதித்திருப்பது பாபம் போகத்தான். “மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா” என்றுதான் எந்தக் கர்மாவுக்கும் முதலில் ஸங்கல்பம் பண்ணுகிறோம். ‘துரிதம்’ என்றால் பாபம்தான். பக்தி மார்க்கம் பாபத்தைப் போக்கத்தான். பக்தி முதிர்ந்து ப்ரபத்தி (சரணாகதி) ஆகும். பகவான் கீதையைப் பூர்த்தி பண்ணும்போது, “சரணாகதி பண்ணு. உன்னை ஸகல பாபங்களிலிருந்து விடுவித்து விடுகிறேன். ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்று ஸத்யம் பண்ணித் தந்திருக்கிறார். அவரை நம்பாமல் நாம் இன்னொருத்தரிடம் போக வேண்டியதில்லை.

தர்மம், ஞானம் எதுவானாலும் பாபத்தைப் போக்குவதே. தர்மேண பாபம் அபநுததி என்று (மஹா நாராயண) உபநிஷத்தே சொல்கிறது (79.7). அந்த உபநிஷத்திலுள்ள ஸூக்தங்களில் அநேகம் பாப நிவிருத்தியைத்தான் திரும்பத் திரும்ப ப்ரார்த்திக்கின்றன. “பாபிகளில் நீ மஹா பாபியானாலும் ஞான ஓடத்தினால் அந்தப் பாபத்தைக் கடந்து விடுவாய்” என்று கீதையில் (4.36) பகவான் சொல்கிறார்.

கர்மாநுஷ்டானம், தர்மாநுஷ்டானம், ப்ரபத்தி, ஞான ஸாதனை எல்லாவற்றையும்விடப் பரம ஸுலபமாக, நாம் தெரிந்தும் தெரியாமலும் ஜன்மாந்தரங்களாகப் பண்ணியுள்ள பாபத்தைப் போக்கிக் கொள்ள இங்கே பாகவதம் வழி சொல்லிவிட்டது. சிவ நாமோச்சாரணம்தான் அது.

அதனால் இனிமேல் “உங்கள் பாபத்தைக் கழுவி விடுகிறோம்” என்று நம்மைக் கூப்பிடுபவர்களிடம் “எங்களிடம் பாப பரிஹாரத்துக்கு இருக்கிறது போன்ற ஸுலபமான உபாயம் யாரிடமுமே இல்லை. அதனால் முதலில் நீங்கள் எங்களைக் கூப்பிடும் பாபத்தைப் பரிஹாரம் பண்ணிக்கொண்டுவிட்டு அப்புறம் வாருங்கள்” என்று சொல்லுவோம்!


*1‘ஸெளந்தர்ய லஹரி’ ஸ்லோ 96

*2பாகவதம் 4.4.14

நவநீத க்ருஷ்ணன்; வடபத்ரசாயி

‘நவநீதம்’ என்றால் புதுசாக எடுத்தது என்று அர்த்தம். ‘நவ’-புதுசாக; ‘நீதம்’- எடுக்கப்பட்டது. புத்தம் புதுசாகக் கார்த்தால வேளையில் பசும் பாலில் உறை குத்தி ஸாயங்காலமே அந்தத் தயிரைச் சிலுப்பி எடுக்கிற வெண்ணெய்தான் நவநீதம். முதல் நாள் ராத்ரி உறைகுத்தி மறுநாள் வெண்ணெய் எடுக்கிறது ‘பழம் பற்று’ என்கிற மாதிரிதான். ரா வேளையில் ஸூர்யனுடைய பரிசுத்தி செய்கிற வெளிச்சம் இல்லாததாலேயே ராத் தங்கின பண்டம் அவ்வளவு ச்லாக்யமில்லை என்பது.

நாமெல்லாம் பசுக்கள். நம் மனஸு வெள்ளை வெளேரென்று பாலாக இருக்கணும். அப்போதுதான் கன்னங்கரேலென்று இருக்கிறதால் கிருஷ்ணன் என்றே பேர் வைத்துக்கொண்டவன் நம்மிடம் வருவான். அது வெறுப்பைத் தருகிற கறுப்பு அல்ல; மோஹத்தை உண்டாக்குகிற மேகத்தின் கறுப்பு. கனச்யாம், கனச்யாம் என்கிற போது ‘கன’ என்றால் ‘மேகம்’ என்றே அர்த்தம். ‘கார்வண்ணன்’ என்று சொல்வார்கள். மேகம் எத்தனைக்கெத்தனை கறுப்போ அத்தனைக்கத்தனை அதிக ஜலத்தைக் கொட்டும். அந்த ஜலம் கறுப்பாகவா இருக்கிறது? இப்படிப் பரம ப்ரேம தாரையைப் பிரவாஹமாகக் கொட்டுகிறவனே கிருஷ்ணன். அடர்ந்த மேகத்திலிருந்தே மஹா ஜ்யோதிஸ்ஸான மின்னல்கள் தோன்றுகிற மாதிரி, ஞானப் பிரகாசம் பளிச்சுப் பளிச்சென்று வெட்ட கீதாசாரியனாக இருக்கிறான் அந்தக் கொண்டல் வண்ணன். இப்படியே அவன் வெளியிலே கபடும் சூதும் மாயமுமாகத் தெரிந்தாலும் நாம் மனஸைப் பால் வெளுப்பாக்கிக் கொண்டால் பரம சுத்தமான ப்ரேமையோடு நம்மைப் பாலிக்க, கோபாலனாக வருவான்.

அப்படியே அந்தப் பாலை எடுத்துக் குடிப்பதில்லை அவன். அது தயிராகி அதிலிருந்து புத்தம் புது வெண்ணெய் எடுத்தாகணும். அந்த நவநீதத்தை உண்ணத்தான் வருவான்; அதுவும் திருட்டுத்தனமாக!

பக்தி தாபத்திலே வெள்ளை மனஸைக் காய்ச்சினால் அது பொங்கும். அப்புறம் இந்த உணர்ச்சி வேகம் அடங்க அதைக் கொஞ்சம் ஆற்றி சாந்தத்தை உறை குத்தணும். பால் ஓடுகிறதுபோல, ஆடுகிறதுபோலத் தயிர் ஓடுவதில்லை, ஆடுவதில்லை. அப்படியே கெட்டியாக, சாந்தமாக இருந்து விடுகிறது. அவனுக்கு சாந்தமும் வேணும்; லீலையின் சலனமும் வேண்டும். அப்போதுதான் முடிவிலே சாந்தத்திலேயே எல்லா சலனமும் அடங்கியிருப்பதும், அத்தனை சலனத்துக்கும் அடிப்படையாக சாந்தமே இருந்து கொண்டிருப்பதும் தெரியும். உபநிஷத்தே “ச்யாமாத் சபளம் சபளாத் ச்யாமம்” என்று இரண்டையும் சேர்த்துச் சொல்கிறது*1.

அதனால் ஓடாமல் ஆடாமல் சாந்தமாக இருக்கிற தயிரைப் போட்டுக் கடை கடை என்று கடைய வேண்டியிருக்கிறது. ஹ்ருதயப் பானைக்குள் இருக்கிற தயிரில் ஸத்யத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை (இதை ஞான விசாரம், ஆத்ம விசாரம் என்பார்கள்) மத்தாகப் போட்டு, ஒருமுக சிந்தனை என்ற கயிற்றால் கடைந்தால் பூர்ணத்வம் என்ற வெண்ணெய் வரும். அதைத் துளிக்கூடப் பழசாகவிடாமல், அது நவநீதமாக இருக்கிறபோதே வந்து எடுத்துக்கொண்டு விடுவான். பூர்ணத்வம் இந்த நம்முடைய சரீரப் பானைக்குள் எப்படி இருக்க முடியும்? அதனால் பூர்ணனான அவனிடமே போய்விடும். தனியாக நாம் என்று இல்லாமல் அவனுக்குள் அவனாகவே போய்விடுவோம் என்று அர்த்தம்.

திருட்டுத்தனமாக எடுத்துக் கொள்கிறான் என்று ஏன் சொல்ல வேண்டும்? பகவான் ஸாதாரண அதிதி மாதிரி வந்தால் அவனை வேறாயாக வைத்து ராஜோபசாரம் பண்ணி conscious -ஆகத்தானே (புத்தி பூர்வமாகத்தானே) வெண்ணெயைத் தருவோம்? அப்படி புத்தி பூர்வமாக நம்மை அவனிடம் சரணாகதி பண்ணிக் கொள்ள நமக்கு அப்போது புத்தி வருமோ, வராதோ? ‘சரணாகதி பண்ணுகிறேன்’ என்கிறபோதே அப்படிச் சொல்கிற ஒரு ‘நான்’ தனியாக வந்துவிடுகிறதே! இதனால்தான் நமக்குத் தெரியாமல் நாம் unconscious -ஆக இருக்கிற போதே நம்மை எடுத்துக் கொண்டால்தான் உண்டு என்று திருடனாக வருகிறான்.

வெண்ணெய் பரப்பிரம்மம் மாதிரி. சுத்த ஸத்வ வெளுப்பாக இருப்பது. துளி உருக்கினால், அந்த வெளுப்பும் போய் ஸ்படிகம் மாதிரி colourless ஆகிவிடுகிறது. ‘வெண்ணெய்’ என்பதில் ‘வெண்’ என்கிற அடையாளமும் போய் ‘நெய்’ மாத்திரம் நிற்கிற நிலை. எந்தக் கலரிலும் அது சேராது. அதன் ருசியும் இப்படித் தான். மதுரம், மதுரம் என்று சொன்னாலும் வெண்ணெய் வாஸ்தவத்தில் தித்திப்பு இல்லை – சர்க்கரை, தேன் மாதிரி இல்லை. ஷட்-ரஸம் என்கிற ஆறு சுவைகளில் அது எதுவும் இல்லை. அதன் கலர், ருசி எல்லாம் சாந்தம் என்றுதான் சொல்ல வேண்டும். ஸம்ஸார ஆட்டம் போக, எதிர்த் திசையில் பலவிதமான ஸாதனைகளில் அழுகை, மயிர்க்கூச்சு, பாட்டு, நர்த்தனம் என்று ஒரே ஆட்டமாக ஆட்டிச் சிலுப்பிய பின் உண்டாகிற இந்தப் பரம சாந்தத்தை நாம் அடைகிறபோது நம்மை நாமறியாமலே தனக்குள்ளேயே கொண்டுபோய் வைத்துக்கொள்கிற பரமாத்மாதான் கிருஷ்ணன்.

வெண்ணெய் ஜலத்திலிருந்து கொண்டே அதில் ஒட்டாமலிருக்கிற மாதிரி — பால் ஜலத்தோடு அப்படியே கலந்துவிடும்; அப்படியில்லாமல் வெண்ணெய் தனியாக மிதக்கிறதே, அந்த மாதிரி — நாம் லோகத்திலிருந்து கொண்டே அதில் ஒட்டாமலிருந்தால் நம்மை அவன் எடுத்து அப்படியே முழுங்கித் தனக்குள் வைத்துக் கொண்டு விடுவான். ஆக நம் உள்ளம்தான் அவனுக்கு வேண்டிய வெண்ணெய். ‘நவநீத சோர்’, ‘சித்த சோர்’ என்று இரண்டு விதமாயும் அவனையே சொல்வதால் என்ன ஏற்படுகிறது? நம் சித்தம்தான் அவன் அபஹரிக்கக்கூடிய நவநீதமாக மாறவேண்டும் என்றே ஏற்படுகிறது.

இப்படி ஒரே திருட்டு விளையாட்டு, பரக்கப் பரக்க ஒவ்வொரு இடைச்சி வீட்டுக்குள்ளும் ஓடி, உறியிலே ஏறி தாழி உடைத்து நிர்தூளி பண்ணுகிற விளையாட்டு செய்கிறவனே ஸா … ஆ … ஆ … துக் குழந்தையாக ஆலிலை மேலே படுத்துக் கொண்டிருக்கிறது! கோகுலத்திலா இப்படி ஆலிலைப் படுக்கைப் போட்டு வைத்திருந்தது? இல்லை. க்ருஷ்ணனாக மதுராவிலே அவதாரம் பண்ணி நடத்தின கதையில் அவன் ஆலிலைப் படுக்கையில் படுத்துக் கொள்ளவில்லை. வேறே எப்போதோ மார்க்கண்டேயருக்குத் தன் மாயா விலாஸத்தைக் காட்டுவதற்காக ப்ரளயத்தைக் காட்டினான். அந்த ப்ரளய வெள்ளத்திலே தான் ஒரு ஆலிலை மேலே படுத்துக்கொண்டு குழந்தையாக தர்சனம் தந்தான்.

ஆல மரத்தின் கீழே உட்கார்ந்து கொண்டு ஞானோபதேசம் பண்ணுகிறவர் பரமேச்வரன்; வட வ்ருக்ஷ மூல நிவாஸி. மஹாவிஷ்ணு ஆலிலை மேலே படுத்துக் கொண்டு ஞான உபதேசத்துக்கு நேர் ஆப்போஸிட்டாகத் தோன்றும் மாயா விலாஸத்தைக் காட்டுகிற வட பத்ரசாயி. மாயா விலாஸத்தைக் காட்டியே ஞானம் கொடுத்து விடுகிறார்! ப்ர-லயம் என்பதாக அத்தனை மாயா லோகமும் ஸ்ருஷ்டியும் தன்னிலே லயித்துப் போய் விடுவதைத் தானே காட்டுகிறார். மாயையிலிருந்து நம்மை விடுவித்து முக்தி தரவே இப்படி தர்சனம் தருகிறார். அதனால்தான் இந்த அவஸரத்திலே (ரூப பேதத்திலே) அவரை ‘முகுந்தன்’ என்பது ‘முகுந்தன்’ என்றால் ‘முக்தி தருகிறவன்’ என்று அர்த்தம்.

கராரவிந்தேந பதாரவிந்தம் முகாரவிந்தே விநிவேசயந்தம் | 
வடஸ்ய பத்ரஸ்ய புடே சயாநம் பாலம் முகுந்தம் மநஸா ஸ்மராமி ||

‘தாமரைப் பூ மாதிரி இருக்கிற கால் கட்டை விரலைத் தாமரைப் பூ மாதிரியே இருக்கிற கையினால் பிடித்திழுத்து தாமரைப் பூ மாதிரி இருக்கிற வாய்க்குள்ளே போட்டுக் கொண்டு ஆலிலை மேல் சயனித்திருக்கும் குழந்தை முகுந்தனை முழு மனஸோடு ஸ்மரிக்கிறேன்’ என்று அர்த்தம்.

கால் கட்டை விரலை எதற்காக வாயில் போட்டு கொண்டு சப்ப வேண்டும்?

மாந்தாதா என்று ஸூர்ய வம்சத்தில் ராமருக்கு ரொம்பவும் முந்தி ஒரு ராஜா இருந்தார். அவர் நேராக அவருடைய தகப்பனாரிடமிருந்து பிறந்து விட்டார். அதனால் அவருக்கு பால் கொடுப்பதற்கு அம்மா இல்லை. அந்த ஸமயத்தில் இந்த்ரனே, “நான் கொடுக்கிறேன் – மாம் தாதா” என்று சொல்லிக் குழந்தையின் கைக் கட்டை விரலை எடுத்து அதன் வாய்க்குள் வைத்தான். மநுஷ்ய சரீரத்தில் ஒவ்வொரு அங்கத்திலும் ஒரு தேவதை வஸிப்பதில், கைக்கு உரிய தேவதை இந்த்ரன்தான். தான் சாப்பிட்டிருக்கிற அம்ருதம் இந்தக் கையின் கட்டை விரலால் குழந்தையின் வாய்க்குப் போகும்படி இந்த்ரன் அநுக்ரகித்தான். அநேகக் குழந்தைகள் வாயில் விரல் போட்டுக் கொள்வது அதனால்தான்.

ஆனால் இங்கே பகவான் வாயில் போட்டுக் கொண்டிருப்பது கைக் கட்டை விரல் அல்ல; கால் கட்டை விரல். அவர் சரீரத்தில் இன்ன இடமென்றில்லாமல் தலையோடு கால் அம்ருத மயமானவர். ‘அம்ருதவபு:‘ என்றே (விஷ்ணு) ஸஹஸ்ரநாமத்தில் பெயரிருக்கிறது. அதனால் இந்திராதி தேவர்கள் கையால் செய்வதைத் தாம் காலால் செய்ய முடியும் என்று காட்டுகிறாற்போலக் கால் விரலைச் சப்பிக் கொண்டிருக்கிறார். “சாப்பிடுவது ப்ரம்மம், சாப்பிடப்படுவது ப்ரம்மம், சாப்பாடு போடுவதும் ப்ரம்மம்” என்பது மந்த்ரம். அந்த உண்மையையும் நிரூபித்துக் காட்டுகிறார். தன் விரலைத் தானே வாயில் எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட்டும் கொள்கிறார். அப்படியே சாப்பிடவில்லை; சப்புகிறார்; சப்பிடுகிறார்!

இடது கால் கட்டை விரல்தான் அவர் சப்புவது. நடராஜாவின் தூக்கிய திருவடியும் இடதுதான்.

பகவானைப் போல சரீரம் பூரா அம்ருதமயமாக நாம் இல்லாவிட்டாலும் நமக்கும் இடது பக்கத்தில் சந்த்ரநாடி என்று ஒன்றை அவர் அநுக்ரஹித்திருக்கிறார். சந்த்ரன் அமிருதம் பெருக்குகிறவன். அநுஷ்டானம், யோகஸாதனை செய்தால் சந்த்ர நாடியிலே அம்ருதம் ஓடுவது தெரியும். அதைக் காட்டவுந்தான் இடக்கால் கட்டை விரலை ருசி பார்க்கிறார்.

கால் மட்டமானது, இடது பக்கம் மட்டமானது என்றெல்லாமில்லாமல் எல்லாம் உசத்தி, எல்லாம் அம்ருதம் என்று காட்டுகிறார்.

இப்படி அவருக்குள்ளேயே அம்ருதம், அவரே அம்ருதமாயிருந்தும் வெளியேயிருந்து வெண்ணெயைத் திருடிச் சாப்பிட்டுவிட்டு அடி வாங்கிக்கொண்டு அதற்காகப் பொய் சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறாரென்றால், இது மட்டத்திலும் மட்டமான நம்முடன் விளையாடி லீலாம்ருதமும் ப்ரேமாம்ருதமும் கொடுக்க வேண்டும் என்ற க்ருபாம்ருத ஸாகரமாக அவர் இருப்பதால்தான்!

எப்போதோ ப்ரளயத்தில் வடபத்ரசாயியாக வந்தவனை நவநீத க்ருஷ்ணனாக எப்படிச் சொல்லலாம்? யோசித்தால் இதற்குக் காரணம் தெரிகிறது. மஹா விஷ்ணுவுக்கும் க்ருஷ்ண பரமாத்மாவுக்கும் துளிக்கூட வித்யாஸமே சொல்லப்படாது. ‘அவதாரம்’ என்று சும்மாவுக்காகத்தான் சொல்லுகிறது; அவர் அசல் மஹாவிஷ்ணுவேதான்: “க்ருஷ்ணஸ்து பகவான் ஸ்வயம்*2. இன்னம் சொல்லப் போனால், மஹாவிஷ்ணு என்று சொல்வதுங்கூட அவரைக் குறுக்குவதுதான்! அவரே தம்மை*3ஆதித்யானாம் அஹம் விஷ்ணு:” -‘ஆதித்யர்களுக்குள் நான் விஷ்ணு’ என்கிற மாதிரி “ருத்ராணாம் சங்கரச்சாஸ்மி“- ‘ருத்ரர்களில் நான் சங்கரன்’ என்று சிவ ரூபமாகவுந்தான் சொல்லிக் கொள்கிறார். “ராமன், ஸ்கந்தன் எல்லாமே நான்தாண்டா” என்கிறார். ‘நான் நான்’ என்று எல்லோர் ஹ்ருதயத்தில் இருப்பதும் தான் தான் என்றே ஆரம்பிக்கிறார். “என்னையன்றி சராசரம் எதுவும் கிடையாது” என்று ஸாக்ஷாத் பரப்ரஹ்ம ஸ்வரூபமாகவேதான் தம்மை தெரிவித்துக் கொள்கிறார். அதனால்தான் கிருஷ்ண பரமாத்மா என்றே அவரைச் சொல்வதும், “பூர்ணம் ப்ரஹ்ம ஸநாதநம்” என்பதும்.

ஆகையால் பால ரூபத்திலே வந்து மனஸைக் கொள்ளை கொள்வது முக்கியமாக க்ருஷ்ணருடைய கார்யமாயிருப்பதால், இப்படிப் பச்சைக் குழந்தையாய் அவர் பச்சையிலை மேலே மனமோஹனமாக மிதக்கிறபோது அவரை க்ருஷ்ணனாகவே நினைக்கிறோம்.

அம்ருதத்தை உண்டு காட்டுவதாலேயே நமக்குள்ளே அவர் அம்ருதத்தை ஊட்டி விடுவதால் நாம் சாவிலிருந்து விடுபட்டு அமரத்தன்மை பெறுகிறோம். அதனாலேயே அவரை இந்த ரூபத்திலே அமரமான முக்தி நிலையைத் தரும் முகுந்தனாகச் சொல்லுவது. இந்த முகுந்த நாமாவும் முக்யமாக க்ருஷ்ணனுக்குத்தானுண்டு.

பீஷ்ம முக்தி ப்ரதாயகாய நம:” என்று அவருக்கு அஷ்டோத்தர (சத)த்தில் அர்ச்சனை பண்ணுகிறோம். ராமர் கூடத்தான் ஜடாயுவுக்கு மோக்ஷம் தந்தார். ஆனாலும் முகுந்தன் என்றாலே க்ருஷ்ணன் என்று ஏன் ஆக வேண்டும்? ஏன் அப்படி என்றால், க்ருஷ்ண பரமாத்மாதான் அதி பால்யத்திலே அவரை மனஸறிந்து கொல்லணும் என்று வந்த பூதனை; அப்புறம் கடைசியிலே, அவருடைய அவதார காரியம் பூர்த்தியான முடிவு கட்டத்திலே, அவர் மேலே அறியாத்தனத்தால் அம்பு போட்டு அவர் சரீர யாத்ரையை முடிக்கும்படிப் பண்ணின ஜரா என்கிற வேடன்; இரண்டுக்கும் நடுவிலே அவரை பொது ஸபையில் வாயில் வந்தபடியெல்லாம் தூஷித்த சிசுபாலன் ஆகியவர்களுக்குக்கூட முக்தி அளித்த பரம க்ருபாமூர்த்தி.

ஒரு அவஸரத்திலே வெண்ணெய் தின்கிறார் — ம்ருக வர்க்கத்திலே மிக உயர்ந்த பசு தருகிற பால் காய்ந்து (அதாவது முதிர்ந்து) தயிராகி அப்புறமும் கனிந்து முதிர்ந்து கடைசியில் நவநீதமாகிறது. இதை ஆஹாரம் பண்ணுகிறார். ஆஹாரம் மாதிரியே சயனமும் ஒரு ஆதாரத் தேவை. இவற்றை அசனம், சயனம் என்பார்கள். அசனம் நவநீதம். சயனம் ஆலிலை. (இப்போதும் அசனத்தை விடாமல் கால் கட்டை விரலால் ருசி பார்க்கிறான்!)

ம்ருக வர்க்கத்தில் பசுபோல தாவர வர்க்கத்தில் ஆல் உயர்ந்தது. ‘ந்ய்க்ரோதம்’ என்பதும் ‘வட வ்ருக்ஷம்’ என்பது போல அதற்குப் பெயர். ஸஹஸ்ரநாமத்தில் ‘ந்யக்ரோதன்’ என்பது மஹாவிஷ்ணுவின் பெயராக வருகிறது. கயா ச்ராத்தம் என்று முக்யமாகச் சொல்லி ‘அக்ஷய வடம்’ என்று ஆலமரத்துக்குக் கீழே பிண்டம் போடுவதையே விசேஷித்திருக்கிறது. இது கர்ம காண்டம். மௌனத்தினால் ஆத்மாவை அநுபவிக்கும்படி அநுக்ரஹிக்கின்ற தக்ஷிணாமூர்த்தியும் அந்த மரத்தின் கீழேதான் இருக்கிறார். இது ஞான காண்டம். இப்படி ஆல் இரண்டிலும் முக்யமுள்ளதாயிருக்கிறது. கர்மா எத்தனை உசத்தியானாலும் மாயா ஸம்பந்தமானது. அதனால்தான் மார்க்கண்டேயருக்கு மாயா தர்சனமும் பண்ணுவித்து, பரம ஞானத்தையும் கொடுக்கிற போது பகவான் இரண்டுக்கும் பொதுவான வட வ்ருக்ஷத்தின் பத்ரத்திலே வந்து படுத்துக் கொண்டார். ஆதிசேஷனின் மேலே லக்ஷ்மிநாயகனாக, பிரம்மாவின் பிதாவாக சயனிப்பவர் ஆலிலை மேல் பாலனைப் போல வந்தார்.

பசுவின் முதிர்ந்த ஸாரத்தை இவனுடைய ஆஹாரமான வெண்ணெய் காட்டுகிறதென்றால், ஆல விருக்ஷத்தின் ஆரம்ப ஸ்தானத்தை இலை காட்டுகிறது. முதலில் இலை. அப்புறம்தான் பூப்பது காய்ப்பது பழுப்பது எல்லாம்.

ஸாரஸாரமாக முதிர்ந்த நவநீதத்திலிருந்து இளசான வடபத்ரம் வரை எல்லாம் அவருடைய ரேஞ்ஜில் இருப்பவைதான் – தான் நிறைந்திராத லெவலே இல்லை – என்று காட்டுகிறார்.

ஆலிலைக்கு ஒரு விசேஷமுண்டு. அதிலே ஜீவஸாரம் ரொம்ப அதிகம். அதனால்தான் அது எத்தனை வாடினாலும் மற்ற இலைகள் மாதிரி வற்றிப்போய் நெறுங்குவதில்லை. சரகாகிறபோதுகூட மெத்தென்றே இருக்கும். அதனாலேயே பகவான் குழந்தையாக வருகிறபோது அதி ஸொகஸாக உள்ள தனக்கு மெத்தையாக அதை ‘சூஸ்’ பண்ணிக் கொண்டிருக்கிறான். மரத்திலிருந்து வாடி உதிர்ந்த ஒரு ஆலிலையின் மேல் கொஞ்சம் ஜலத்தைத் தெளித்தால் போதும், மறுபடி அது பசுமை பெற்றுவிடுவதைப் பார்க்கலாம். அவன் எப்போதும் வாடாத வதங்காத ஆத்மா. ‘ப்ரணவம்’ என்றாலும் எப்பவும் ‘நவம்’; சாப்பிடுவது ‘நவநீதம்’! பகவான் ஜரா மரணம் கடக்கப்பண்ணி எப்பவும் யௌவனமாக வைத்திருக்கும் அம்ருத நிலையைக் கட்டைவிரலைச் சப்பிக் காட்டுவதால் மாத்திரமின்றி, ஸூக்ஷ்மமாய் இந்த வட பத்ர சயனத்தாலேயே சூசிப்பித்து விடுகிறான். வட வ்ருக்ஷ மூலத்தில் உட்கார்ந்திருக்கும் தக்ஷிணாமூர்த்தியின் மாறாத யௌவனமும் அஜர, அமரத் தன்மையைக் காட்டுவதுதான். அதைவிட இளைய குழந்தையாகவே, ஆலங் கொழுந்தைப் போலவே தானும் கொழுந்துப் பிராயமாக, ‘ஆயர்தம் கொழுந்தே!‘ என்று (தொண்டரடிப் பொடி ஆழ்வாரால்) பாடப்பட்டவன் இருக்கிறான். வேர் ஆடாமல் அசையாமலிருப்பதுபோல, ‘வ்ருக்ஷ இவ ஸ்தப்த:‘ என்று ச்ருதி சொன்னபடி*4 ஞான காம்பீர்யத்தோடு தக்ஷிணாமூர்த்தி இருக்கிறார். இவனோ ஒரு இலை கொஞ்சம் காற்றானால்கூட சலசல என்று ஆடுகிறதுபோல ஒரே விளையாட்டாய் விளையாடிக் கொண்டு ப்ரேம ஸெளகுமார்யத்தோடு இருக்கிறான்.

ஆல விருக்ஷத்துக்கு எத்தனையோ உபயோகங்கள். ஒரு பெரிய ஸைன்யமே அதன் கீழே தண்டு இறங்கலாம். பரோபகாரத்துக்கு அது ஒரு ரூபகம். அத்தனாம் பெரிய மரத்துக்கு இத்தனூண்டு விதை. இந்த அணு மாத்ர விதையில் அந்தப் பெரிய மரமே இருப்பது, அணுவில் அணுவாயுள்ள பரமாத்மாவே அகண்ட ப்ரம்மாண்டமாயும் இருக்கிறார் என்பதை நினைப்பூட்டுகிறது. எல்லா மரத்துக்குந்தானே இப்படி என்றாலும் மற்ற மரங்களைவிடவும் விஸ்தாரமாக வளர்கிற ஆலுக்குத்தான் அவற்றின் விதைகளைவிடவும் சின்ன விதையாயிருக்கிறது. மற்ற மரம் போல ஆலுக்கு எவரும் விதை ஊன்றுவதில்லை. அதுவாகவே எப்படியோ முளைத்துக் கொள்கிறது. இது ஈச்வரன் ஸ்வயம்பு, தான்தோன்றி என்ற தத்வ விளக்கமாய் இருக்கிறது. தானே விழுதுவிட்டுத் தன்னைத் தாங்கிக் கொண்டு, அந்த பலத்தில் மேலும் மேலும் விஸ்தாரமாகிக் கொண்டே போகிறது. அடையாற்றில் ஆல மரத்தைப் பார்க்கவே கூட்டம் கூட்டமாகப் போகிறது. ஈச்வரன் பிறர் தாங்குதல் வேண்டாத நிராலம்பன் என்பதற்கு இது எடுத்துக்காட்டுப் போல இருக்கிறது. ஒரு பாகம் பட்டுப் போனாலும் மற்ற விழுதுகள், விழுதிலிருந்து தோன்றும் விழுதுகள் என்ற பிற பாகங்கள் பசுமையாக இருந்து கொண்டே இருப்பதால் ஈச்வரனின் நித்யத்வத்தையும் காட்டியதாகிறது. ஒரே தாயும் தந்தையுமான அவனிடமிருந்தே ஸகல ஜீவ ஜகத்துக்களும் விஸ்தாரமாயிருப்பதற்கு த்ருஷ்டாந்தம் போல வடவ்ருக்ஷமானது ஒரே தாய் மரத்திலிருந்து விஸ்தாரமாகிக் கொண்டே போகிறது.

இப்படியாக, ஸம்ஸார ஸாகரத்தில் அலை பாய்கிற நமக்கு ஆலிலையைக் காட்டி நிலையான நித்யத்வத்தை, நிராலம்ப தத்வத்தை உணர்த்துகிறான் வடபத்ரசாயி.

மரத்தைவிட எத்தனையோ அகன்ற அகண்ட தத்வம் அவன். அந்த மரம் எத்தனை பெரிசாயிருந்தாலும், எத்தனை காலமிருந்தாலும் அதன் பரப்புக்கு எல்லை உண்டு. அதன் காலத்துக்கும் முடிவு உண்டு. அவனோ முடிவேயில்லாத அகண்டன், அனந்தன். ஆனாலும் இந்த மஹா ப்ரபாவத்தை மறைத்துக்கொண்டு, நாம் அவனை எடுத்து வைத்துக்கொண்டு கொஞ்சுகிற விதத்தில் ஸரள ஸ்வபாவத்துடன் கூடிய குழந்தையாக இருக்கிறான். “ஒண்ணும் கவலைப்படாதேயப்பா! என் மாதிரி குழந்தை உள்ளத்தோடு இரு. ஸம்ஸார வெள்ளத்திலேயே அப்போது நீ அலையில் அடி படாமல் உன் பாட்டுக்கு ஆனந்தமாக, அதை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு மிதந்து கொண்டிருக்கலாம்” என்று சொல்லாமல் சொல்கிறான். சிலுப்புவதாலே கொந்தளிக்கிற மோரிலே வெண்ணெய் பட்டுக் கொள்ளாமல் மிதப்பதுபோல ஸம்ஸார ஸாகரத்தில் அவனே வெண்ணெய்க் கட்டியாக மிதப்பது, நாமும் அப்படி ஆக வேண்டும் என்று நம்மை நினைக்கச் செய்வதற்குத்தான்.

நாம் ஏதோ இருக்கிற அசட்டு ஸ்திதியில் நமக்குத் தெரிந்த அளவில், ஆனால் பக்தி ச்ரத்தா விச்வாஸங்களோடு, அந்தக் குழந்தையை சவுடால் பண்ணும் திருட்டுக் குழந்தையாகவும், சாந்தமாகச் சயனித்துக் கொண்டிருக்கிற ஆலிலைக் குழந்தையாகவும் ஸ்மரிக்க ஆரம்பித்துவிட்டால், ஸ்மரிக்க ஸ்மரிக்க நம் மனஸின் சொர சொரப்பு, வாடல், வதங்கல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் போய் வட பத்ரம் மாதிரி எப்போதும் பசுமையாய், எப்போதும் மிருதுவாய் ஆகும். அப்போது அவனே வந்து இந்த மனஸிலும் சயனித்துக் கொண்டு விடுவான். ‘வட பத்ர சாயி, க்ஷீராப்தி சாயி, ஸ்ரீரங்கசாயி‘ என்றெல்லாம் கூப்பிட்டு, “ரமதாம் மநோ மே” என்று பிரார்த்தனை செய்கிறபோது அவனை நம் மனஸிலே வந்து சயனித்துக் களிக்கும் படியாகத்தான் வேண்டுகிறோம். அதனால்தான் (அந்த ப்ராத்தனை ஸ்லோகம்) ஸத்-சித்த சாயி — ‘ஸாது ஜனங்களில் சித்தத்தில் சயனிப்பவன்’ — என்று ஆரம்பித்திருக்கிறது*5 அந்தக் குழந்தையின் மெத்து உடம்பு, மாறாத பால்ய சரீரம் நம் மனஸிலே பட்டால் இதுவும் அப்படி ஆகிவிடும். இதன் அழுக்கும், கெட்ட ருசி எல்லாமும் போய் வெள்ளை வெளேரென்று சாந்த மதுரமான வெண்ணெயாகிவிடும். இப்படி நம்மைத் தன்னுடைய ஸ்மரணையால் குழைத்துக் குழைத்து (“குழைத்த பத்து” என்றே மாணிக்கவாசகர் பண்ணியிருக்கிறார்) தொண்டைக்குக் கொஞ்சங்கூட ச்ரமம் தராமல் விழுங்கக்கூடிய வெண்ணெயாக ஆக்கினபின் அவன் அப்படியே உட்கொண்டு விடுவான். அவனுக்குள்ளேயே போய் ஸ்வஸ்தமாய் இருந்துவிடலாம்.

முதலிலே பண்ண வேண்டியது அவன் ஸ்மரணை. அதனால் நம்முடைய உள்ளத்தை வெளுப்பான பாலாக்கிக் கொண்டால், பால் ஸமுத்ரத்தில் படுத்துக் கொண்டிருப்பவனே நம்முடைய பிரேமை அலை மோதும் உள்ளத்தில் தானே வெண்ணெய்க் கட்டியாக வந்து மிதப்பான். அப்புறம் நம்மையும் வெண்ணெயாக்கித் தனக்குள் வைத்துக் கொண்டு விடுவான்.


*1 சாந்தோக்யம் 8.13.1.

*2 பாகவதம் 1.3.28

*3 அடுத்து வரும் கண்ணனின் கூற்றுகள் கீதையில் “விபூதியோகம்” எனும் பத்தாம் அத்யாயத்தில் வருவன.

*4 மஹாநாராயணோபநிஷத் 12.3.3

*5 ஸச்சித்த சாயீ புஜகேந்த்ர சாயீ நந்தாங்க சாயீ கமலாங்க சாயீ |
க்ஷீராப்தி சாயீ வடபத்ர சாயீ ஸ்ரீரங்க சாயீ ரமதாம் மநோ மே ||
(ஆசார்யாள் அருளியதாகக் கருதப்படும் ஸ்ரீரங்கநாதாஷ்டகம் கடைசி ஸ்லோகம்)

ஈசனின்றி இயற்கை இயங்குமா?

இதோ நான் உட்கார்ந்து கொண்டிருக்கிற மணையைப் பார்த்தவுடன் இதைப் பண்ணின ஒருத்தன் இருக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறீர்கள். அதோ அங்கே, இதோ மரத்தால் ஆனதுதான் – ‘ஆனது’ என்ன? மரத்திலிருந்தே விழுந்ததுதான் – ஒரு கிளை கிடக்கிறது. அதைப் பார்த்தவுடன் ஒரு தச்சன் பண்ணியிருப்பதாக யாரும் நினைப்பதில்லை. ஏன்? இந்த மணையை ஒரு சீராக, ரெக்டாங்கிளாக (நீள் சதுரமாக) இழைத்திருக்கிறது. பூமியின் தூசு தும்பு படாதபடி, பூச்சி பொட்டு ஏறாதபடி இதிலே கீழே கட்டைகள் அடித்திருக்கிறது. இம்மாதிரி இதிலே ஒரு ஒழுங்கு ஏற்பட்டிருப்பதாலும், உட்கார உபயோகமாகணும் என்ற பர்பஸில் (நோக்கத்தில்) இந்த மணையில் இந்த ஒழுங்கை உண்டாக்கியிருப்பதாலும் இதற்கு ஒரு கர்த்தா இருக்கணும் என்று முடிவு செய்கிறோம். ஜடமான ஒரு மரப் பீஸ் தானாகத் தன்னை ரெக்டாங்கிளாக இழைத்துக் கொண்டு, கட்டை அடித்துக் கொண்டு மநுஷ்யாள் உட்காரணும் என்ற பர்பஸை ஃபுல்ஃபில் பண்ணும்படியாக (நோக்கத்தை நிறைவேற்றுவதாக) ரூபம் கொள்ள முடியாது என்பதால் புத்தியுள்ள ஒரு ஜீவன்தான் இதைச் செய்திருக்கணும் என்று தீர்மானிக்கிறோம்.

அங்கே கிடக்கிற கிளையோ முண்டும் முடிச்சுமாக இருக்கிறது. இந்த மணையில் இருக்கிற ‘ஆர்டர்’ அதில் இல்லை; அது எந்த பர்பஸையும் ஃபுல்ஃபில் பண்ணவுமில்லை. ஆகையால் அதிலே ஒரு ஜீவனின் புத்தி விலாஸத்தை நாம் நினைப்பதில்லை.

அந்த மரத்துக்கு அடியிலே மாவடு அது பாட்டுக்கு ஆர்டருமில்லாமல், பர்பஸுமில்லாமல் உதிர்ந்து கிடந்தால், யாரோ அதைக் கொட்டினதாக நாம் நினைப்பதில்லை. தானே விழுந்திருக்கிறது என்றே புரிந்து கொள்கிறோம். அதுவே, அந்த மாவடுவையெல்லாம் அங்கே குவித்து வைத்திருந்தால், குவிப்பு என்ற ஆர்டரில் மாவடுக்களை அமைத்த ஒருவன் இருந்தாகணும்; அவன் அதை வீட்டுக்குக் கொண்டு போவது, அல்லது விலைக்கு விற்பது, அல்லது ஃப்ரீயாக விநியோகிப்பது என்ற ஏதோ ஒரு பர்பஸுக்காக குவித்திருக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறோம்.

ஆர்டர் இல்லாமலேகூட பர்பஸ் இருப்பதுண்டு. ஒரு வீட்டில் துணிமணி, பாத்திரம், பண்டம், புஸ்தகம், கிஸ்தகம் எல்லாவற்றையும் வாரி இறைத்து ஒரே டிஸ்-ஆர்டராக இருந்தாலும் திருடி விட்டு ஓட்டம் பிடிக்க வேண்டும் என்ற பர்பஸுக்காகத் திருடர்கள் இப்படிப் பண்ணியிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்கிறோம்.

மொத்தத்தில் ஆர்டரோ, பர்பஸோ, இரண்டுமோ இருந்துவிட்டால் அது புத்தியுள்ள ஒரு ஜீவ சக்தி பண்ணின காரியம்; ஜடமே பண்ணிக் கொண்டதில்லை என்று ‘இன்ஃபர்’ (அநுமானம்) செய்கிறோம்.

இப்போது யாரும் பண்ணினதாகத் தோன்றாத அந்தக் கிளை, அதற்கு மூலமான தாவர வர்க்கம் பற்றிக் கொஞ்சம் ஆலோசிக்கலாம். முண்டும் முடிச்சுமாயிருக்கிற அந்தக் கிளைக்குள், நமக்குள் ரத்தக் குழாய் ஓடுகிற மாதிரி பூமிக்குள்ளிருந்து ஜலத்தை உறிந்து எடுத்துக்கொண்டு போகிற அதி நுட்பமான குழாய்கள் ஆச்சரியமான ஒழுங்கோடு, அதாவது ஆர்டரோடு, நேற்றைக்கு அது மரத்தில் அங்கமாயிருந்த வரையில் வேலை பண்ணிக் கொண்டிருந்தன – மரம் வளர வேண்டும் என்ற பர்பஸுக்காக! இந்த இரண்டு முடிச்சிலே ஸில்க் மாதிரி துளர் உண்டாகிறது. இலையில் ஓடுகிற நரம்புகளில் எத்தனையோ ஆர்டர்; அது ‘க்ளோரோஃபில்’ என்கிற பச்சையான ஜீவஸத்தை உண்டுபண்ணும் பர்பஸையும் ஸெர்வ் பண்ணுகிறது. முண்டு முடிச்சிலேதான் பரம மிருதுவான புஷ்பம் உண்டாகிறது.

தாவர வர்க்கத்தில் பூச்செடி, பழமரம் என்று இரண்டு சொல்கிறோம். பூச்செடி பழம் கொடுக்கமலிருக்கலாம். ஆனால் பழ மரத்துக்குப் பூ இல்லாமலில்லை — அத்தி, பலா மாதிரி அபூர்வமான வனஸ்பதி ஜாதி தவிர.

இந்த பூச்செடி, பழமரம் என்ற இரண்டும் எத்தனை ஸாமர்த்தியமாக தங்கள் தங்கள் இனத்தை விருத்தி பண்ணிக் கொள்கின்றன என்று பார்த்தால் ஆச்சர்யமாயிருக்கிறது. பூச்செடியில் அழகாகப் புஷ்பம் உண்டாகிறது. அதன் டிஸைன்களில் அலாதி ஆர்டர். அதுமட்டுமில்லை. பர்பஸும் இருக்கிறது. மநுஷ்யனின் ரஸிக உணர்ச்சியைப் பூர்த்தி செய்வதோடு செடிக்கே பயன் தருகிற பெரிய பர்பஸ்! இந்த அழகிலேதான் தேனீ வசீகரமாகி வந்து தேன் குடிக்கிறது. அதற்கு ஆஹாரம் கொடுக்கிற பர்பஸுக்குள்ளேயே ரஹஸ்யமாக, அதைவிடப் பெரியதான சொந்த பர்பஸும் ஃபுல்ஃபில் ஆகிறது. தேனீ செய்கிற மகரந்த பரிவர்த்தனையினால்தான் இந்தச் செடி இனவிருத்தி பெறுகிறது. இப்படி இதிலே ஜட வஸ்து பண்ணவே முடியாததான, ரொம்பவும் புத்திபூர்வமான ‘ட்ரிக்’ இருக்கிறது!

இன்னொரு வேடிக்கை கூட: ரொம்புவும் வர்ண விசித்திரமில்லாத பூவாகச் சிலது உண்டாகின்றன; அவை தேனீயை ஆகர்ஷணம் பண்ணுவதற்காக ஏகப்பட்ட வாஸனையை வைத்துக் கொண்டிருக்கின்றன. ஸுகந்தம் நிறைய இருக்கிற மல்லிகை, மகிழ், சம்பங்கி, மனோரஞ்சிதம் மாதிரிப் புஷ்பங்களில் கலர் விசித்திரம் இல்லை. கலர் விசித்திரம் நிறைய இருக்கும் கனகாம்பரம், துலுக்க சாமந்தி, காகிதப்பூ வகைகள் முதலியவற்றில் வாஸனை இல்லை. தேனீயை இழுக்க ஏதோ ஒரு ட்ரிக் போதும், இரண்டும் வேண்டாம் என்று இதிலே ஒரு எகானமி (சிக்கனம்) வேறே! (ரோஜா மட்டும் விதி விலக்கு.) ஜடவஸ்து இப்படியெல்லாம் கெட்டிக்கார ப்ளான் போட்டு அதன் பிரகாரம் பண்ண முடியுமோ?

இன்னொரு வேடிக்கை கூட! நேச்சர், இயற்கை என்று சொல்வதில் நிறைய ‘வெரைய்டி’, தினுசு தினுசாகப் பார்க்க வேணடும் என்கிற காவிய புத்தி யதேஷ்டமாகத் தெரிகிறது. வாஸனைப் பூ கலர்ப்பூ வித்யாஸம் போலவே கார்த்தாலே பூக்கிறது, ராத்திரி பூ என்று ஒரு வித்யாஸம். இதிலே ராத்திரி பூக்கிறதுதான் அந்த வேளையில் கண்ணுக்குத் தெரியவேண்டுமே என்பதால் வெள்ளை வெளேரென்று மல்லிகை ஜாதிகள், பன்னீர்ப் பூ ராமபாணம் என்கிற நில சம்பங்கி இப்படி இருக்கின்றன!

ஒரு அணுவுக்குள் மத்ய ந்யூக்ளியஸைச் சுற்றிப் பரமாணுக்கள் பஹு வேகத்தில் ஓடிக் கொண்டிருப்பதிலிருந்து ஸூர்யனைச் சுற்றி க்ரஹங்கள் ஓடுகிறவரை ஒவ்வொன்றும் மாறுதலில்லாமல் விதி ப்ரகாரம் நடப்பதைப் பார்க்கும்போது வெறும் ஜட சக்தியான ஒரு இயற்கையால்தான் இதெல்லாம் ஆகிறதென்று தோன்றிவிடுகிறது. ஆனால் இப்படி அணுவிலிருந்து அண்ட கோளங்கள் வரை ஒவ்வொன்றுக்கும் தனித் தனியாக, வெவ்வேறாகத்தானே விதிகள் ஏற்பட்டிருக்கின்றன? இப்படி எத்தனை வெரையட்டியான விதிகள்? அது மாத்திரமில்லை. ஒவ்வொரு வர்க்கத்திற்கும் ஒரே விதி என்று இருக்கும்போது கூட, அதற்குள்ளேயே விதி விலக்கு என்று ஒவ்வொன்று மாறுதலாகவும் இருந்து விடுகிறதே! த்ருஷ்டாந்தமாக இப்போது சொன்ன வ்ருக்ஷவர்க்கத்திலேயே ஒரு மாறுதலாகப் பூ இல்லாமல் காய்க்கிற வனஸ்பதி வகையும் இருக்கிறதே! இதையெல்லாம் ஆலோசிக்கும்போது இயற்கை என்பது ஏதோ ஜட சக்தி இல்லையென்றும், ரஸ வைசித்ரியத்தில் குதூஹலிக்கிற ஜீவனுள்ள ஒரு மஹா பெரிய புத்தி சக்திதான் என்றும் தெரிகிறதோல்லியோ?………

பழமரம், பூச்செடி என்று இரண்டு சொல்லி, பூச்செடி எத்தனை ஸாமர்த்தியமாக ஸந்ததியை விருத்தி பண்ணிக் கொள்கிறதென்று சொன்னேன். பழமரத்தில் மநுஷ்யனுக்கு ருசியான பழம் கிடைக்கிறது. இது ஒரு பர்பஸ். இதற்குள் திரிசமனாக இன்னொரு பர்பஸ். இதே மாதிரிப் பழம் பின் ஸந்ததிக்கும் கிடைக்க வேண்டும் என்ற நம்முடைய ஸ்வய ஸம்பந்த லாபத்துக்காகப் பழத்துக்குள் இருக்கிற கொட்டையை நடுகிறோம்; இதிலேயே அந்த மரம் தன் ஸந்ததியை விருத்தி பண்ணிக் கொள்கிற அதன் ஸ்வய லாபமான பெரிய பர்பஸும் ஃபுல்ஃபில் ஆகிறது.

இப்படி ஆலோசித்துப் பார்த்ததில் என்ன தெரிகிறது? “ஜடவஸ்து தானாக order -ஐ (ஒழுங்கை) purpose-ஐ (நோக்கத்தை) ஏற்படுத்திக்கொள்ள முடியாது; அதனால் மரத்தை மணையாகப் பண்ண ஒரு தச்சன் இருக்க வேண்டும்” என்ற நம்முடைய premises-ன் (அடிப்படைக் கொள்கையின்) படியே, அந்த மரத்தைப் பண்ணவும் ஒரு மஹா பெரிய தச்சன் இருந்தாக வேண்டும் என்று தெரிகிறது! நாம் பண்ணுவதைவிட இன்னும் பெரிய ஆர்டரோடு, இன்னம் பெரிய பர்பஸ்களுக்காக இந்த மரம் இருக்கிறதால், நம்மைவிட மஹா கெட்டிக்காரனான தச்சன் அவன் என்றும் தெரிகிறது! நாம் செய்கிறதையெல்லாம் அப்பட்டமாகக் காட்டி, டெமான்ஸ்ட்ரேட் பண்ணுகிறோமென்றால் நம்மைவிடப் பரமாத்புதங்களைப் பண்ணும் அவனோ இத்தனையையும் பரம ரஹஸ்யமாகப் பண்ணித் தன்னுடைய ஸூக்ஷ்மமான ரஸாநுபவத்தைக் காட்டுவதோடு, பண்ணுகிற தன்னையே ஒளித்துக் கொண்டு நம்முடைய கெட்டிக்காரத்தனத்தையெல்லாம் அசட்டுத்தனமாக்கி விடுகிறான்!

மநுஷ்யன் தின்னாத வேப்பம் பழம் என்றால் அதைத் தின்ன ஒரு காக்கா ஜாதியை அதோடு பிணைக்கிறான். அந்த காக்கா மநுஷ்யனைப் போலக் கொட்டையை நட்டு அந்த விருக்ஷத்தின் இன விருத்தியை செய்யாது என்பதால் அது எச்சமிட்டே கொட்டை வேறே இடத்தில் (இந்த மரத்தின் நிழலில் வாடாமலிருப்பதற்காக வேறே இடத்தில்) முளைக்கும்படிப் பண்ணுகிறான்.

நாம் வெளியே விடுகிற கார்பன்-டை-ஆக்ஸைடை மரம் உள்ளே இழுத்துக் கொள்வது; அது பதிலுக்குத் தருகிற தித்திப்புப் பழத்தை நாம் சாப்பிடுவது; அதையே நாம் எருவாக மாற்றி மறுபடி அதற்குத் தருவது என்றிப்படி பல இனங்களை, ஜீவ-சடங்களை, ஒன்றுக் கொன்று உபயோகமாகக் கோத்துக் கோத்து வைத்திருக்கிறான்.

இப்படியே எண்ணி முடியாத மர வர்க்கங்கள், மலைகள், ஸமுத்ரங்கள், லோகங்கள், நக்ஷத்ரங்கள், க்ரஹங்கள் எல்லாமும் அத்யாச்சரியமான ஒழுங்கோடு ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்து ஏராளமான உத்தேசங்களைப் பூர்த்தி பண்ணிக் கொண்டிருப்பதை நினைத்துப் பார்த்தால், இயற்கை, இயற்கை என்று ஜடமாகச் சொல்லப்படுவது ஜீவ சைதன்யமான ஈச்வர லீலைதான் என்று எப்படித் தெரியமால் போகும்?

கொசுவும் கேசவனும்

லோகத்திலே ஒரு விஷயம் பாக்கியில்லாமல் எல்லாவற்றையும் பற்றி இப்படி அநேக கவிதைகள் சமத்காரமாக இருக்கின்றன. பரமாத்மாவிலிருந்து ஆரம்பித்து ஒரு சின்னக் கொசுவரையில் எதைப்பற்றியும் அர்த்த சித்ரமாகவும் சப்த சித்ரமாகவும் கவிகள் விநோத விநோதமாகப் பண்ணியிருக்கிறார்கள்.

பரமாத்மா, கொசு இரண்டையும் குறிப்பிடுவதாகச் சிலேடை செய்துகூடக் கவி இருக்கிறது. ஒரு அர்த்தப்படி ஸாக்ஷாத் மஹாவிஷ்ணுவைக் குறிக்கும்; இன்னொரு அர்த்தப்படி கொசுவைக் குறிப்பிடும்:

சக்ர-ப்ரமண-கரத்வாத்
குத்ருஷ்டிபிர்-தூரவர்ஜ்யமாநத்வாத் |
ச்ருத்யந்த-கேலநத்வாத்
மசக த்வாமேவ மாதவம் மந்யே ||

சக்ர ப்ரமண கரத்வாத்‘ — சுற்றிக்கொண்டேயுள்ள சக்ரத்தைக் கொண்ட கரத்தை உடையவர் மஹாவிஷ்ணு. சக்கரவட்டமாகச் சுற்றும் காரியத்தை ஓயாமல் செய்வது கொசு. ‘கர’ என்பது விஷ்ணுவைக் குறிக்கும் போது ‘கை’ என்று பொருள்படும். கொசுவைக் குறிப்பிடும் ‘செய்வது’ என்று பொருள்படும்.

‘குத்ருஷ்டிபி: தூர வர்ஜ்யமாநத்வாத்’ — கெட்ட நோக்குடையவர்களால் நெருங்க முடியாமல் தூரத்தில் விலகியிருப்பவர் பகவான். ‘குத்ருஷ்டிபி: ‘என்றால் ‘கண் வலிக்காரர்களால்’ என்றும் இன்னொரு அர்த்தம். கொசு என்றாலே கண்நோவுள்ளவர்கள் தூர ஓடி விடுவார்கள்.

‘ச்ருத்யந்த கேலநத்வாத்’ — ‘ச்ருதி’ என்றால் வேதம். ‘ச்ருத்யந்தம்’ என்றால் வேதாந்தமாகிற உபநிஷத். உபநிஷத்திலே பகவான் ஆனந்தமாக விளையாடுகிறார். கொசுவைக் குறிப்பதாகக் கொள்ளும்போது, ‘ச்ருதி’ என்றால் காது. காதுநுனி ‘ச்ருத்யந்தம்’. கொசு நம்முடைய காதோரத்தில் வந்து ‘ஒய்ங்’ என்று சப்தம் பண்ணிக் கொண்டு விளையாடி ஹிம்ஸை பண்ணுகிறது!

‘மசக! த்வாம் ஏவ மாதவம் மந்யே’ — ‘ஏ கொசுவே! உன்னையே நான் மாதவனாக நினைக்கிறேன்’ என்று முடிக்கிறார்.

‘சக்ர ப்ரமணம் பண்ணுவது, குத்ருஷ்டிக்காரர்களை தூரப்போகப் பண்ணுவது, ச்ருத்யந்தத்தில் விளையாடுவது என்ற காரியங்களை நீ செய்கிறபடியால், ஏ கொசுவே! உன்னையே மஹாவிஷ்ணுவாக நினைக்கிறேன் – ‘மசக! த்வாமேவ மாதவம் மந்யே!’

இப்போது இங்கேயும் கொசு பாட ஆரம்பித்து விட்டது. எல்லாருக்கும் தூக்கமும் வந்துவிட்டது. இது வரையில் வேடிக்கை கேட்டதில் இரண்டும் தெரியவில்லை. இப்போது தூங்க வேண்டும் என்று படுத்துக் கொண்டால் கொசு ஹிம்ஸைதான் தெரிய ஆரம்பிக்கும். அனந்த சயனமாகப் படுத்துக்கொண்டு தூங்குகிற பகவான்தான் அந்த கொசு ரூபத்தில் வந்து காதிலே ரீங்காரம் பண்ணுகிறார் என்று நினைத்துக்கொண்டால் கொஞ்சம் ஹிம்ஸையை மறக்கலாம். கொசுத் தொல்லையில் தூக்கம் வராவிட்டால் இந்த கவித்வ விசித்ரங்களை நினைத்துக் கொண்டு கொஞ்சம் நிம்மதி பண்ணிக் கொள்ளலாம்.

தாளும் கோளும்

காமாக்ஷி ஸகல கஷ்டத்தையும் நிவ்ருத்தி பண்ணிப் பரமானந்தத்தை அளிக்கிறவள். நமக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு ஜ்யோதிஷ ரீதியில் நவக்ரஹங்களைத் தானே காரணமாகச் சொல்கிறார்கள்? இந்த நவக்ரஹ பாதிப்பு எதுவும் அவள் பாதத்தை ஸ்மரிக்கிறவருக்கு ஏற்படாது என்று பொருள் படுமாறு ‘மூக பஞ்சசதி’யில் வார்த்தை விளையாட்டுப் பண்ணி ஒரு ஸ்லோகம் இருக்கிறது.

“மூக பஞ்சசதி” என்பது ஞானம், பக்தி, சாக்த சாஸ்த்ர தத்வங்கள், காவ்ய ரஸம் எல்லாம் சேர்ந்ததாகக் காமாக்ஷியைப் பற்றி மூகர் என்பவர் அநுக்ரஹித்துள்ள ஐநூறு ஸ்லோகம் கொண்ட ஸ்தோத்ரம். இவற்றிலொன்று தான் நவக்ரஹங்களில் ஒவ்வொன்றின் தன்மையும் அம்பாளின் சரணாவிந்தத்தில் இருப்பதாகச் சொல்லும் ஸ்லோகம்.

ததாநோ பாஸ்வத்தாம் அம்ருதநிலயோ லோஹிதவபு:
விநம்ரமாணாம் ஸெளம்யோ குருரபி கவித்வம் ச கலயந் |
கதௌ மந்தோ கங்காதர-மஹிஷி காமாக்ஷி பஜதாம்
தம: கேதுர்-மாதஸ்தவ சரணபத்மோ விஜயதே ||

(பாதாரவிந்த சதகம்-59)

ப்ரகாசிப்பதாலே ‘பாஸ்வத்தாம்’ என்று அந்தப் பாதத்தைச் சொல்கிறார். நவக்ரஹங்களில் முதலில் வரும் ஸூர்யனின் தன்மை இதுதானே?’ பாஸ்கரன்’ என்றே அவனுக்கு ஒரு பேர். அம்பாள் சரணத்திலிருந்து அம்ருதம் கொட்டுகிறது. இதை ‘அம்ருத நிலய:’ — என்கிறார். யோகிகள் சிரஸின் உச்சியில் அவளுடைய பாத பத்மத்தின் அம்ருதம் பெருகுவதில் அப்படியே ‘உச்சி குளிர்ந்து’ இருப்பார்கள். ‘சரணாம்ருதம்’ என்றே சொல்வது வழக்கம். இதேபோல அம்ருதம் பெருக்குகிற தன்மை சந்த்ரனுக்கு உண்டு. அதனால்தான் ‘ஸுதாகரன்’ என்று பெயர். ‘லோஹிதவபு:’ என்று ஸ்லோகத்தில் இருப்பதற்கு ‘சிவந்த ரூபமுள்ளது’ என்று அர்த்தம். சிவப்பாயிருப்பதுதான் செவ்வாய். ‘விநம்ரமாணாம் ஸெளம்ய:’- அந்தப் பாதத்திலே போய் நமஸ்காரம் பண்ணுகிறவர்களுக்கு அது ஸெளம்யமாயிருக்கிறது. மனஸுக்குப் பரமஹிதமாக, ம்ருதுவாக, சாந்தமாக இருப்பதெல்லாம் ஸெளம்யம். உக்ர தேவதை என்பதற்கு ஆப்போஸிட்டாக ஸெளம்ய தேவதை என்கிறோம். நேர் அர்த்தம் என்ன? ‘ஸோம’ என்ற சந்திரனிலிருந்து உண்டானதே ‘ஸெளம்யம்’. நிலவு போலக் கோமளமாக, சாந்தமும் ஹிதமும் தருவதாக இருப்பதையெல்லாம் இதனால் ஸெளம்யம் என்கிறோம். ஸோமனுக்குப் புத்ரனாக உண்டானவன் புதன். அதனால் அவனுக்கு ஸெளம்யன் என்று பேர். அம்பாள் பாதம் ‘குருரபி’ — ‘குரு: அபி’ என்கிறார். ‘குருவானதும் கூட’ என்கிறார். குரு என்றால் குணவிசேஷத்தால் பெரியது என்று அர்த்தம். அதோடுகூட அந்தப் பாதம் க்ஷணகாலம் பட்டுவிட்டால் திருவடி தீக்ஷையினாலே ப்ரஹ்மஞானமே ஸித்தித்துவிடும். இப்படி ஞானம் தருவதாலும் அது குருவாயிருக்கிறது. குரு என்றால் வியாழன், குருவாரம் என்றே அந்தக் கிழமைக்குப் பேர். ‘கவித்வம் ச கலயந்’ — கவித்வத்தையும் அநுக்ரஹித்துவிடுகிறது அம்பாள் பாதம். அம்பாளுடைய பாத தீர்த்தம் மூகனையும் (ஊமையையும்) கூட மஹாகவியாக்கிவிடுகிறதென்று ஆசார்யாளே சொல்லியிருக்கிறார்*. இப்படி அவளருளால் அருட்கவியாகி, ஒரு காலத்தில் தாம் மூகனாயிருந்ததை லோகமெல்லாம் அறிய வேண்டுமென்பதால் ‘மூகர்’ என்றே பெயர் வைத்துக் கொண்டவர்தான் இந்த ஸ்லோகத்தைப் பண்ணியிருப்பவரே! நவக்ரஹங்களில் கவித்வகாரகன் வெள்ளிக்கிழமைக்குரிய சுக்ரன். குரு என்று வெறுமே சொன்னால் எப்படி அது தேவகுருவான ப்ருஹஸ்பதியைத்தான் குறிக்குமோ அப்படியே ‘கவி’ என்று வெறுமே சொன்னால் அது அஸுர குருவான சுக்ராசாரியாரைத்தான் குறிப்பிடும். கவித்வ சக்தி அருளுவதால் அம்பாளின் பாதம் சுக்ரனாக இருக்கிறது. ‘கதௌ மந்த:’ மிக மெதுவான நடை உள்ளது அம்பாள் பாதம். ‘மந்தன்’ என்று சனிக்கு பேர். அது ரொம்ப மெதுவாக ஸஞ்சாரம் செய்யும் க்ரஹம். ‘சனீச்வரன்’ என்று சொல்வது தப்பு. மற்ற க்ரஹம் எதற்கும் இல்லாத ‘ஈஸ்வர’ப் பட்டம் இதற்கு மட்டும் வருவதற்கு நியாயமில்லை. ‘சனைச்சரன்’ என்பதே சரியான வார்த்தை. ‘சனை:’ — மெதுவாக, ‘சர’- ஸஞ்சரிப்பவன். அதைச் சுருக்கி சனி என்கிறோம். ‘பஜதாம் தம: கேது:’ — அம்பாள் பாதம் தன்னை பஜிக்கிறவர்களின் தமஸுக்கு உலை வைக்கும் தூமகேதுவாக இருக்கிறது. தமஸ் என்றால் இருட்டு. துக்கம், அஞ்ஞானமெல்லாம்தான் பெரிய இருட்டு. தமஸ் என்று ராஹுவுக்கும் பெயர். கேது என்பது ஒன்பதாவது க்ரஹமென்று எல்லோருக்கும் தெரியும்.

ச்லோகத்தில் ராஹுவின் தன்மை மாத்திரம் நேரே அம்பாள் பாதத்துக்கிருப்பதாகச் சொல்லாமல், ஆனாலும் ‘தமஸ்’ என்ற வார்த்தையை வைத்து, மற்ற எட்டு க்ரஹங்களையும் நேரே அந்தச் சரண ஸம்பந்தப் படுத்திச் சொல்லியிருக்கிறது.


*“ஸெளந்தர்ய லஹரி”-ஸ்லோ 98