ஸிக்கியரின் குருபக்தி

ஆசார்யன் கிடைத்துவிட்டால் போதும், ஸ்வாமிகூட வேண்டாம்; ஸ்வாமிகூட ஆசார்யனுக்கு ஸமதையில்லை என்று பக்தி பண்ணினவர்கள் எல்லா ஸம்பிரதாயத்திலும் உண்டு. குரு என்றால் கூடவே இருந்தாக வேண்டிய ‘சிஷ்யன்’-‘சிக்ஷை’ என்பதை வைத்துத்தான் ‘சிக்கிய’ மதம் என்பது ஏற்பட்டிருக்கிறது.

அதில் குரு கோவிந்த ஸிங் என்பவர் ‘கல்ஸா’ என்கிற அவர்களுடைய ஸ்தாபனத்தை ஏற்படுத்தும்போது, நரபலி வேண்டும் என்று கேட்டாராம். உடனேயே ஒருத்தர் எழுந்திருந்து தன் தலையையே கொடுப்பதற்காக அவரோடு போனாராம். அவரை அழைத்துக் கொண்டு போன கோவிந்த ஸிங் கொஞ்ச நாழிக்கு அப்புறம் ரத்தம் சொட்டும் கத்தியோடு திரும்பி வந்து இன்னொரு பலி வேண்டும் என்றாராம். உடனே இன்னொருத்தர் எழுந்திருந்து அவரோடு போனாராம். மறுபடியும் அவர் ரத்தம் சொட்டுகிற கத்தியோடு திரும்பி வந்தாராம். இப்படியே ஐந்து தடவை அவர் பலி கேட்க ஐந்து பேர் ஸந்தோஷமாக குரு வார்த்தைக்காகப் பிராணத் தியாகம் பண்ணுவதும் பெரிசில்லை. என்று அவர் பின்னோடு போனார்களாம். அப்புறம் அவர் அந்த ஐந்து பேரையுமே ஸபைக்கு அழைத்துக் கொண்டு வந்து, தம்மைச் சேர்ந்தவர்களின் பக்தி விஸ்வாஸத்தை சோதனை பண்ணுவதற்காகவே இப்படி விளையாட்டாக பலி கேட்டதாகவும் வாஸ்தவத்தில் எவரையும் கொல்லாமல் ஏதோ ஆட்டு ரத்தத்தைத்தான் காட்டியதாகவும் சொல்லி, உயிரைத் திருணமாக நினைத்து பலியாவதற்கு வந்த அந்த ஐந்து பேரையும் கல்ஸாவில் முக்கியஸ்தர்களாக நியமித்தாரம்.

இப்படி எல்லா மதங்களிலும் அவற்றில் தோன்றிய மஹான்களை தெய்வமாக விச்வாஸித்த சிஷ்யர்கள் இருந்திருக்கிறார்கள். இந்த குருபக்தியாலேயே அவர்களும் குருவைப் போன்ற யோக்யதை ஸம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்; இப்படி ஒரு spiritual status (ஆத்மிக அந்தஸ்து) வந்தவிட்டும் தங்களை மேலே கொண்டுவந்த மஹானையே உயர்த்திச் சொல்லிப் பணிந்து வந்திருக்கிறார்கள்.

ராமாநுஜ ஸம்ப்ரதாயத்தில்

ராமாநுஜாசார்யாரின் சிஷ்யர்களிலும் இப்படி ஆவேசம், வெறி என்று சொல்லக்கூடிய தீவ்ர குருபக்தி உள்ளவர்கள் உண்டு.

வைஷ்ணவர்களுக்குப் பொதுவாகவே நைச்ய பாவம் (தன்னை ரொம்பவும் தாழ்த்தியாக நினைப்பது) முக்கியம். அதனால் எல்லோரிடத்திலுமே அவர்கள் ரொம்பவும் மரியாதையாக நடப்பார்கள்;பேசுவார்கள். நாம் (வைஷ்ணவரல்லாதார்) ”நீங்கள்” என்று சொல்கிற இடத்தில் அவர்கள் ”தேவரீர்” என்பார்கள். தங்களை ”தாஸன்”, ”தாஸன்” என்றே எவரிடமும் சொல்லிக் கொள்வார்கள். ”ஸேவிக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டு விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணுவார்கள். ஸ்ரீவைஷ்ணவர்களைத் தவிர மற்ற ஸம்ப்ரதாயப் பெரியவர்களை ”ஸ்வாமி” என்று சொல்வார்கள்; தங்கள் ஸம்ப்ரதாயத்தில் தங்களைவிடப் பெரியவராயிருக்கிற எல்லாரையும் ”பெருமாள்” என்றே சொல்வார்கள். வார்த்தை மரியாதை அவர்களுக்கு ரொம்ப ஜாஸ்தி. வேடிக்கையாகச் சொல்வதுண்டு, குருவைத் தீர்த்துக் கட்டிவிட்டு, தானே பட்டத்துக்கு வரவேண்டுமென்று சிஷ்யன் அவருக்காகக் குழிவெட்டி வைத்திருந்தானாம். அப்போதுகூட, ”தேவரீரே ஏள்றீரா? தாஸன் ஏளப்பண்ணட்டுமா?” (தேவரீர் தாமாகவே குழிக்குள் எழுந்தருளுகிறீர்களா? இல்லாவிட்டால் அடியேன் அப்படி எழுந்தருளபண்ணட்டுமா?”) என்று மரியாதையாகத்தான் விக்ஞாபித்துக் கொண்டானாம்!

குரு பரம்பரைக் கதைகள் என்று வைஷ்ணவர்கள் போற்றிப் பாராயணம் பண்ணும் விருத்தாந்தங்களில் நம் நெஞ்சைத் தொடுகிற ஏராளமான குருபக்தி சரித்திரங்களைப் பார்க்கிறோம். பெருமாள் கோயில்களிலும் பாருங்கள், ஆழ்வார்கள் ஸந்நிதி, முக்யமாக ஆண்டாள் ஸந்நிதி, தென்கலைக் கோயிலானால் மணவாள மாமுனிகள், பிள்ளை லோகாசார்யார் முதலியவர்களின் ஸந்நிதி, வடகலைக் கோயிலானால் வேதாந்த தேசிகரின் ஸந்நிதி ஆகியவற்றில் எத்தனை பக்தியோடு, விமரிசையோடு ஆராதனை நடத்துகிறார்கள்? ராமாநுஜருடைய ஜன்ம ஸ்தலமான ஸ்ரீபெரும்பூதூரில் பெருமாளே இரண்டாம் பக்ஷம்தான்; ‘ உடையவர், உடையவர்’ என்று தங்களுடைய ஆசார்ய புருஷருக்கு ஏற்றம் தந்து, அவருக்குத்தான் நித்யப்படி பூஜை, பத்து நாள் உத்ஸவமெல்லாம் ரொம்பவும் பெரிய ஸ்கேலில் செய்கிறார்கள். உடையவர் ஸந்நிதிக்கு மேலே தங்கத்திலேயே விமானம் வேய்ந்திருக்கிறார்கள். ஸ்ரீவில்லிப்புத்தூரில் இப்படித்தான் ஆண்டாளுக்கே பிரதான்யம். ‘கோதை, கோதை நாயகி’ என்று கொண்டாடுவார்கள். மதுரையில் மீனாக்ஷிக்கே பிரதான்யம், ‘மீனாக்ஷி கோயில்’ என்று சொல்வது, ஸுந்தரேஸ்வரர் அவளுக்கு அப்புறம் தான் என்பதுபோல், இங்கே ரங்கமன்னாரை (கண்ணனை) இரண்டாவது இடத்துக்குத் தள்ளிவிட்டு ஆண்டாளைத்தான் முதலில் வைத்து ‘ஆண்டாள் கோயில்’ என்றே சொல்கிறார்கள். நம்மாழ்வார் அவதாரம் பண்ணின ஊருக்கு ஆதியில் ‘குருகூர்’ என்று பெயர். அப்புறம் அவருடைய ஜன்ம ஸ்தலமானதால் அதற்கு ‘ஆழ்வார் திருநகரி’ என்றே பெயரை மாற்றி விட்டார்கள். அங்கே அவருக்கு நடக்கிற உத்ஸவமும் ரொம்ப விசேஷமானது. இப்படியே ஒவ்வொரு ஆழ்வாருக்கும் செய்கிறார்கள்.

ராமாநுஜருக்கு முன்னும் பின்னும் வந்த ஸம்ப்ரதாய முக்யஸ்தர்களான நாதமுனிகள், ஆளவந்தார், மணக்கால் நம்பி, திருகச்சி நம்பி, கூரத்தாழ்வார், பட்டர், நஞ்சீயர் முதலான பலருக்கு விக்ரஹங்கள், பூஜையெல்லாம் அநேக ஆலயங்களில் பார்க்கிறோம்.

இந்த அளவுக்கு சிவாலயங்களில் நாயன்மார்கள், மாணிக்கவாசகர், சைவமதக் கோட்பாடுகளையும் புஸ்தகங்களையும் தந்த ஸ்ரீகண்டாசார்யார், மெய்கண்டசிவம், உமாபதி சிவாசார்யார் முதலியவர்களுக்குச் சிறப்புக் கொடுக்கவில்லைதான்!

(சங்கர) ஆசார்யாளையும் அவருக்கு முன்னும் பின்னும் வந்த அத்வைத ஸம்பிரதாயப் பெரியவர்களையும் எடுத்துக் கொண்டாலோ ஆலய விக்ரஹம், வழிபாடு இவற்றில் ஸைஃபர் என்றே சொல்ல வேண்டும். ஆசார்யாளுக்கு மட்டும் அபூர்வமாகச் சில கோயில்களில் பிம்பமிருக்கிறது. காஞ்சீபுரத்திலும் சுற்றுபுறங்களிலும் மாத்திரம் இது கொஞ்சம் நிறையவே இருக்கிறது. மாங்காடு, திருவொற்றியூர் இப்படிச் சில ஸ்தலங்களிலும் ஆசார்ய பிம்பங்கள் இருக்கின்றன. ஆனாலும் மொத்தத்தில், நான் அடிக்கடி சொல்வது போல, கோயில் விக்ரஹங்களின் ‘ஸென்ஸஸ்’ பார்த்து ஒரு ஸித்தாந்தத்தின் ‘இன்ஃப்ளுயென்’ஸை கணிப்பது என்றால், இந்தியா தேசத்திலே அத்வைதம் என்று ஒரு வைதிக மதம் இல்லவேயில்லை என்றுதான் முடிவாகும்!

இதற்குக் காரணம் அத்வைதிகள் சைவம், வைஷ்ணவம் இரண்டையும் சேராத, ஆனால் இரண்டையும் ஒரு அளவுவரை ஒப்புக் கொள்கிற ஸ்மார்த்தர்களாக இருப்பதுதான்.1

நான் சொல்லவந்த விஷயம் ராமாநுஜ ஸம்ப்ரதாயத்தில் மதாசார்யர்களிடத்தில் விசேஷ பக்தி காட்டுகிறார்கள் என்பது.

ராமாநுஜருடைய நேர் சிஷ்யர்கள் அவரிடம் வைத்திருந்த பக்தி அஸாத்யமானது. உயிரையே கொடுப்பது என்கிறதற்கேற்க, கூரத்தாழ்வார் என்பவர் ராமாநுஜருக்காகப் பிராணத் தியாகமும் பண்ணத் தயாராயிருந்திருக்கிறார். இவர் காஞ்சீபுரத்துக்குப் பக்கத்திலுள்ள கூரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். மரியாதை வாசகத்துக்குப் பெயரெடுத்த வைஷ்ணவர்களே பக்தி முதிர்ச்சியில், தாங்கள் ரொம்பவும் பெரியவராக நினைக்கிற வேதாந்த தேசிகரை ”தேசிகன்” என்று ஒருமையில் அழைப்பதாகச் சொன்னேனல்லவா? அதுபோலவே கூரத்தாழ்வாரைக் ”கூரத்தாழ்வான்” என்றுதான் சொல்வார்கள். வெறுமனே ‘ஆழ்வான்’ என்று வைஷ்ணவர்கள் சொன்னாலே அது கூரத்தாழ்வார்தான். (‘ஆழ்வார்’ என்று ‘ர்’போட்டுச் சொன்னால் அது நம்மாழ்வார்தான்)

ராமாநுஜர் காலத்தில் ராஜாவாக இருந்த சோழன் தீவிர சிவபக்தன். ராமாநுஜரோ, ”விஷ்ணு ஒருத்தருக்குத் தான் ”ஏகாந்தி”களாகப் பூஜை பண்ண வேண்டும். சிவனுக்கு பண்ணக் கூடாது” என்கிற ஸித்தாந்தத்தைப் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அதனால் சோழராஜா, ”எந்த ஆதாரத்தைக் கொண்டு விஷ்ணு தவிர சிவன் முதலான தேவதாந்தரங்களை வழிபடக்கூடாது என்று நிர்த்தாரணம் பண்ணுகிறீர்?” என்று ராமாநுஜரைக் கேட்டு வாதம் நடத்துவதற்காக ஒரு வித்வத் ஸதஸைக் கூட்டினான். அப்போது கங்கைகொண்ட சோழபுரம் ராஜ்யத் தலைநகராயிருந்தது. அங்கே அந்த ஸதஸைக் கூட்ட நிச்சயித்து, ராமாநுஜாசார்யாரை அழைத்துக்கொண்டு வருவதற்காக ஆள் அனுப்பினான். அப்போது அவர் ஸ்ரீரங்கத்தில் இருந்தார்.

ராஜஸேவகரைப் பார்த்ததும் கூரத்தாழ்வாருக்கு விசாரம் உண்டாய்விட்டது. ‘ராஜாவோ சைவன்; அவனே நிறைய சிவாலயங்கள் கட்டியிருக்கிறான். நம்முடைய குருவானால் சிவாராதனை கூடாது என்கிறார். அதனால் அவருக்கு இவரிடம் த்வேஷம் இருக்கும். இப்போது வித்வத ஸதஸ் என்று சொல்லி அழைத்துக் கொண்டு போய் இவரை என்ன பண்ணுவானோ? ராஜாவானதால் என்னவும் பண்ணிவிடமுடியும். நம்முடைய அருமை ஆசார்யருக்கு அவன் ப்ராணஹானி விளைவித்துவிட்டால் என்ன செய்வது?’ என்று ரொம்பவும் பயமும் கவலையும்பட்டார்.

அப்போதுதான் அவர் குருவுக்காகத் தம் உயிரையும் தியாகம் செய்ய முன்வந்தது. அதாவது குருவின் காஷாயத்தைத் தாம் உடுத்திக் கொண்டு, தம்மையே ராமாநுஜாசார்யார் என்று சொல்லிக்கொண்டு ராஜஸபைக்குப் போய்விடுவது என்று தீர்மானித்து விட்டார். ”வருகிற ஆபத்து எனக்கே வரட்டும். தங்களுக்காக இந்த ஸேவை செய்கிற பாக்யத்தை எனக்கு மறுக்காமல் அருள வேண்டும்” என்று ராமாநுஜரிடம் பிரார்த்தித்து, அவரை ஸம்மதிக்கப் பண்ணினார். ராமாநுஜர் வெள்ளை வேஷ்டி கட்டிக் கொண்டு, சோழ ராஜ்யத்தையே விட்டு, கர்நாடகத்திலுள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்துக்குப் போய்விட்டார். அங்கே இப்போதும் ”வெள்ளை சாத்துப்படி” என்று அவருக்கு உத்ஸவம் நடத்துகிறார்கள்.

கூரத்தாழ்வார் காஷாயம் தரித்துக்கொண்டு ராமாநுஜராக கங்கை கொண்ட சோழபுரத்துக்குப் போனார். அங்கே வித்வஸ் ஸதஸ் நடந்தது. இவர் சிவபரத்வத்தை ஒப்புக்கொள்ள மறுத்தார்2. அதனால் இவர் நினைத்தப்படியே ராஜதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் ராஜா கொலைத்தண்டனை தரவில்லை. இவருடைய கண்ணைப் பிடுங்கும்படியாக உத்தரவு போட்டுவிட்டான்.

குருவுக்கு ஏற்பட இருந்த இந்த கொடுமை நமக்கு வாய்த்ததே என்று கூரத்தாழ்வார் தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். குருடராக ஆனார்.

அப்புறம் அந்த ராஜா காலமானபின் ராமாநுஜாசாரியார் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்தார். தமக்காக சிஷ்யர் கண்ணை இழந்துவிட்டாரே என்று துக்கப்பட்டார்.

ராமாநுஜர் பிற்காலத்தில் ஸ்ரீரங்கத்தில் வாஸம் செய்தபோதிலும், ஆரம்பத்தில் காஞ்சீபுரத்தில் வஸித்துக் கொண்டு வரதராஜ ஸ்வாமிக்குத்தான் தீர்த்த கைங்கர்யம் செய்துகொண்டு, அவரையே இஷ்ட தெய்வமாக உபாஸித்து வந்தார். ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தின் ஆராதனை க்ரமங்களை அமைத்துக்கொடுத்து அங்கே இவர் இருந்த காலத்திலும் கூட வரதராஜாவிடம் ஒரு தனியான பற்று வைத்திருந்தார். அதனால் இப்போது கூரத்தாழ்வாரிடம், ”எனக்காக உன் கண் போயிற்று. அதனால் உனக்காகப் பார்வை மீள வேண்டும் என்று இல்லாவிட்டாலும் என் மனஸ் ஆறுவதற்காக நீ வரதராஜாவை வேண்டிக்கணும்” என்றார். கூரத்தாழ்வாரும் அப்படியே காஞ்சீபுரம் பெருமாளிடம் ஸ்தோத்ரம் பண்ணி வேண்டிக் கொண்டார். அவருக்கு த்ருஷ்டி திரும்பணும் என்று நிஜமாகவே ஆசை இல்லை. ‘எல்லா இந்த்ரியங்களையும் அடக்கினால்தான் ஈஸ்வர தர்சனம் கிடைக்கும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. நமக்கோ ராஜசிக்ஷை ரூபத்தில் கண் போனதில் இந்த ஒரு இந்திரியமாவது கண்டதைப் பார்த்துக் கெட்டுப் போகாமலிருக்கும் அநுக்ரஹம் கிடைத்திருக்கிறது. இதைப் மாற்றப்பண்ணி மறுபடியும் லோகக் காட்சி பார்த்து என்ன ஆக வேண்டும்?’ என்றே நினைத்தார். ஆனாலும், ‘ஆசார்யன் ஆக்ஞைக்குக் கீழ்படிந்தாகவும் வேண்டுமே! அவர் பச்சாத்தாபம் படும்படியாக விடக்கூடாதே!’ என்று யோசித்தார். யோசித்து ஸ்வாமியிடம், ”எனக்குப் பார்வையை மறுபடி தா. ஆனால் எல்லா விஷயங்களையும் நான் பார்க்க வேண்டியதில்லை. என் ஆசார்யனுடைய திவ்யரூபத்தை தர்சனம் பண்ணுவதற்கும், உன் மங்கள விக்ரஹத்தை தர்சிப்பதற்கும் மட்டுமே கண்ணுக்குச் சக்தி தா” என்று கேட்டார். வரதராஜாவும் அப்படியே வரம் கொடுத்தாராம்.

ராமாநுஜருக்கு முந்தி இருந்த பெரியவரான ஆளவந்தார் திருநாட்டை அலங்கரிக்க முடியாமல் (சரீரயாத்ரை முடிந்து பரமபதம் சேர்வதைத் ”திருநாட்டை அலங்கரிப்பது” என்றே வைஷ்ணவர்கள் சொல்வார்கள்) அவருடைய ப்ராரப்தம் ‘டிலே’ பண்ணினபோது, பெரிய த்யாகமாக சிஷ்யர் ஒருத்தரே3 அந்தக் கர்மசேஷத்தை ராஜபிளவை என்ற பயங்கரக் கட்டி ரூபத்தில் ஏற்று அநுபவித்துத் தீர்த்தார் என்றும் ஒரு கதை இருக்கிறது.

ரஸத்தோடு, ஹாஸ்ய ரஸனையோடு கூடியதாக இன்னொரு குரு பரம்பரைக் கதை உண்டு. ராமாநுஜரின் சிஷ்யர்களில் ஒருத்தர். அவர் ஒருநாள் உள்ளே ஆசார்யருக்காகப் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். வாசலில் ஸ்ரீரங்கநாதர் ஊர்வலம் வந்தது. ”தர்சனம் பண்ண வா, வா!” என்று ராமாநுஜாசார்யார் வாசலிலிருந்து சிஷ்யரைக் கூப்பிட்டுக் கொண்டேயிருந்தார். ஆனால் சிஷ்யர் போகாமல் பாலையே கவனித்துக் கொண்டிருந்தார். ஸ்வாமி அந்த இடத்தைத் தாண்டிப் போய்விட்டது. ராமாநுஜர் உள்ளே வந்து, ”வாசலிலியே பெருமாள் ஸேவை ஸாதிக்கிறபோது ஸேவிக்காமல் நீ இப்படிப் பண்ணலாமா?” என்று கோபித்துக் கொண்டார். அதற்கு அந்த சிஷ்யர், ”உங்கள் பெருமாளை நீங்கள் ஸேவித்தது ஸரிதான்! அது நீங்கள் பண்ண வேண்டியதுதான். ஆனால் அதற்காக நான் என் பெருமாளுக்குப் பண்ணும் பால் ஸேவையை ஏன் பாதியில் விட்டுவிட்டு வரணும்?” என்று கேட்டாராம்!

குருவுக்காக எந்தக் கஷ்டத்தையும் ஸந்தோஷத்தோடு பொறுத்துக் கொள்கிற அளவுக்கு பக்தியானது சக்தி தந்திருக்கிறது. க்ஷத்ரியர்களை த்வேஷித்த பரசுராமரிடம் பிராம்மண வேஷம் போட்டுக் கொண்டு வந்து வில்வித்தை கற்றுக்கொண்ட கர்ணனை, ஒருநாள் இவன் மடியில் அவர் தலை வைத்துப் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு வண்டு கொட்டித் தீர்த்து விட்டது! அசைந்து கொடுத்த அதை விரட்டினால் குருவின் நித்ரைக்கு பங்கம் வந்துவிடுமே என்று கர்ணன் ஆடாமல் அசையாமல் அத்தனை கொட்டையும் ஸஹித்துக் கொண்டான் என்ற கதை கேட்டிருப்பீர்கள். அப்புறம் அந்தக் கதை வேறு விதமாய்ப் போய்விடுகிறது.

குருவை எந்த வித்யைக்காக ஆச்ரயித்தானோ, அந்த வித்யையையே சிஷ்யன் அப்யஸிக்க முடியாதபடி ரொம்பக் கடுமையாக, கொடுமையாக குருவானவர் தக்ஷிணை கேட்டபோது தயங்காமல் கொடுத்த ஏகலைவன் கதையையும் இன்றுவரைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

ஆழ்வார்களில் மதுரகவி என்று ஒருத்தர். அவர் பாடினது (பதினோறு அடிகள் கொண்ட) ஒரே ஒரு பாசுரந்தான். அதுவும் மஹாவிஷ்ணுவைப் பற்றியதில்லை. ஆனாலும் அதை நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலே சேர்த்து, மதுரகவியையும் ஒரு ஆழ்வாராக உயர்த்தி வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் அவருடைய குருபக்தி விசேஷத்துக்காகத்தான். அவர் பாடினது நம்மாழ்வாரைப் பற்றி. ராமாநுஜ ஸித்தாந்தத்தில் ஆழ்வார்களுக்கெல்லாம் ஆசார்ய ஸ்தானம் மாதிரியான சிறப்பு உண்டு. அந்த ஆழ்வார்களுக்குள்ளேயும் நம்மாழ்வாருக்கு ”ப்ரபன்ன ஜன கூடஸ்தர்” என்பதாக விசேஷ ஸ்தானம் தந்திருக்கிறது.

நம்மாழ்வார் அப்பிராம்மணர். மதுரகவியோ நல்ல பிராம்மணர். அவர் வடதேசங்களில் ஸஞ்சாரம் பண்ணிக்கொண்டிருந்தபோது தெற்கேயிருந்து ஒரு ஜ்யோதி ரச்மி (ஒளிக்கதிர்) அவருக்குத் தெரிந்தது. அந்த ரச்மியையே பின்தொடர்ந்து ஆயிரம் மைலுக்கு மேலே வந்து திருநெல்வேலி ஜில்லாவிலிருக்கிற திருக்குருகூரை (இப்போது ‘ஆழ்வார் திருநகரி’ என்கிறோம்) அடைந்தார். அங்கே ஒரு புளியமரப் பொந்துக்குள் ரச்மி ஐக்கியமாகிவிட்டது. அதற்குள்ளேதான் நம்மாழ்வார் எத்தனையோ காலமாக அப்படியே நிஷ்டையிலிருந்து கொண்டிருந்தார். அவரை மதுரகவி நிஷ்டையிலிருந்து எழுப்பி ஆத்ம ஸம்பந்தமாக ஸங்கேத பாஷையில் கேள்வி கேட்டாரென்றும், நம்மாழ்வாரும் அதே போல ஸங்கேத பாஷையில் பதில் சொன்னாரென்றும் கதை. (அந்தக் கேள்வியையும் பதிலையும் நான் சொன்னால் அப்புறம் ‘எக்ஸ்ப்ளெயின்’ பண்ணாமலிருக்க முடியாது. ரொம்ப நாழி ஆகும். அப்படியும் புரியுமோ புரியாதோ, ஸந்தேஹம். அதனாலே இத்தனை தத்வார்த்தத்துக்கும் மேலே எதுவோ அந்த குருபக்திதானே நம் ஸப்ஜெக்ட்? அதற்கே போகிறேன்.) அந்தப் பதில் மதுரகவிக்கு மந்த்ரோபதேசம் மாதிரி ஞானத்தைக் கொடுத்துவிட்டது. அவர் ‘ப்ரபன்ன ஜன கூடஸ்த’ரான நம்மாழ்வாரிடமே ப்ரபத்தி (பூர்ண சரணாகதி) பண்ணி அவரை ஸ்தோத்திரம் செய்து பாசுரம் பாட ஆரம்பித்துவிட்டார். அதிலே நம்மாழ்வாரைத் தவிர தனக்கு வேறே ஸ்வாமியே கிடையாது –”தேவு மற்றறியேன்’ – என்று பிரமாணம் மாதிரிப் பண்ணுகிறார். ”நம்மாழ்வார் மஹாவிஷ்ணுவை ஸ்வாமி என்று வழிபட்டால் வழிபட்டுவிட்டுப் போகட்டும்; எனக்கு நம்மாழ்வாரேதான் ஸ்வாமி. அவரைப்பற்றித் தான் பாடுவேன். பெருமாளைக்கூட பாடமாட்டேன்” என்று குருவிடம் பரம பக்தியில் பாடிவிட்டார்.

‘நம்முடைய ஸித்தாந்தத்தில் ஆசார்ய புருஷர்களுக்கு மேலேயும், பெருமாளுக்கு அடுத்ததாகவும் இருக்கிற ஆழ்வார்களில் பிரதானமாயுள்ள நம்மாழ்வாரிடம் ஏகாந்த பக்தி வைத்து மதுரகவி பாடியிருப்பதும் பெருமாள் மேலேயே ‘அருளிச் செயல்’ என்னும் பிரபந்தம் பாடினமாதிரிதான்’என்றே அந்த ஸம்பிரதாயத்துப் பெரியவர்கள் இதை நாலாயிரத்திலே சேர்த்து, அவருக்கும் ஆழ்வார் என்று ஏற்றம் கொடுத்திருக்கிறார்கள்.

”தேவு மற்றறியேன்” என்று இவர் சொன்ன மாதிரியே தான் வேதாந்த தேசிகரும் ”ஆசார்யாத் இஹ தேவதாம் ஸமதிகாம் அந்யாம் ந மந்யாமஹே” என்று சொல்லியிருக்கிறார்.


1இவ்விஷயம் குறித்த விஸ்தாரமான விளக்கம் “தெய்வத்தின் குரல்” இரண்டாம் பகுதியிலுள்ள “சங்கர சம்பிரதாயம்” என்ற உரையில் பார்க்க

2இது விஷயமான மேல் விபரங்கள் “சிவநாம மஹிமை” என்ற உரையில் காணலாம்.

3மாறனேர் நம்பி என்ற தீண்டாதார். அடுத்ததாகக் கூறப்படும் ‘ரஸ’ மான வரலாற்றில் குறிப்பிடப்படும் சீடர் வடுகநம்பி.

சங்கரரின் சீடர்கள்

இதேபோல (சங்கர) ஆசார்யாள், ராமாநுஜர் ஆகியவர்களுடைய நேர் சிஷ்யர்களும் தாங்களே மஹா பெரியவர்களாயிருந்தபோதிலும் தங்கள் தங்கள் ஆசாரியரிடத்தில் அஸாத்யமான பக்தி வைத்திருக்கிறார்கள். ஆசார்யாளின் சிஷ்யர்களில் ஒருவரான தோடகாசார்யார் அவரை ”நீங்களேதான் பரமேச்வரன்” (பவ ஏவ பவான்) , ”விருஷப த்வஜர் நீங்களே” (புங்கவ கேதன) என்று ஈச்வர ஸ்வரூபமாகவே தெரிந்து கொண்டு ஸ்துதித்திருக்கிறார். இன்னொரு சிஷ்யரான பத்மபாதரும், ஆசார்யாளிடம் வ்யாஸர் வ்ருத்த ப்ராம்மண வேஷத்தில் வந்து வாதம் நடத்தினபோது, ”இதென்ன இப்படி இவர்கள் முடிவே இல்லாமல் வாதம் நடத்துகிறார்களே!” என்று ஆச்சர்யப்பட்டு, இப்பேர்ப்பட்ட பண்டித ஸிம்ஹங்கள் யாராயிருக்க முடியும் என்று பக்தியோடு த்யானித்துப் பார்த்து, சங்கர: சங்கரஸ் ஸாக்ஷாத் வ்யாஸோ நாராயண ஸ்வயம் – ”சங்கரர் ஸாக்ஷாத் சிவ பெருமானான சங்கரனே, வ்யாஸரோ மஹாவிஷ்ணு அவதாரம்”என்று சொல்லியிருக்கிறார். வ்யாஸர் செய்த பிரம்ம ஸூத்ரத்துக்கு ஆசார்யாள் செய்த பாஷ்யத்தைப் பற்றித்தான் இப்படி வ்யாஸரே மாறு வேஷத்தில் வந்து வாதம் நடத்தினார். கடைசியில் பத்மபாதர் இப்படி, ‘அவர்தான் விஷ்ணு; ஆசார்யர்களோ பரமசிவன்’என்றவுடன் அவர் தம்முடைய வ்யாஸ ரூபத்தைக் காட்டி, ஆசார்ய பாஷ்யம் தம்முடைய அபிப்ராயத்தையே பூர்ணமாக அநுஸரிக்கிறது என்று மெச்சினார். பிற்காலத்தில் இந்த பத்மபாதரே வ்யாஸ ஸூத்ரத்துக்கு ஆசார்யாள் செய்த பாஷ்யத்தை மேலும் விஸ்தாரப்படுத்தி உரை எழுதினார். அதில் முதல் ஐந்து பாதங்கள் மட்டுமே நமக்குக் கிடைத்திருப்பதால், ”பஞ்சபாதிகா’ ‘என்கிறோம். அதிலும் பத்மபாதர் குரு வந்தனம் சொல்லும் போது ஆசார்யாளைப் பரமேஸ்வரனாகவே ”அபூர்வ சங்கரம்” என்று சொல்லியிருக்கிறார்.

அவருடைய குரு பக்தி மஹிமையால்தான் அவருக்குப் ”பத்மபாதர்” என்ற பெயரே வந்தது. அதற்கு முந்தி அவருக்கு ஸநந்தனர் என்று பெயர். அவர் தமிழ் தேசத்துப் பிராம்மணர்; சோணாட்டவர் (சோழ நாட்டுக்காரர்) . ஆசார்யாள் தம்முடைய ‘மிஷனை’ (ஜீவதப் பணியை)க் காசியில் ஆரம்பித்த காலத்திலேயே, அதாவது அவருக்குப் பதினாறு வயஸ் பூர்த்தியாகுமுன்பே ஸநந்தனர் அவரிடம் வந்து சிஷ்யராகச் சேர்ந்து விட்டார். ஆசார்யாள் தம்முடைய பதினாறாவது வயஸிலேயே பாஷ்யமெல்லாம் பண்ணி முடித்துவிட்டு, அதோடு சரீரயாத்ரையையும் முடித்துவிட நினைத்தார். அப்போதுதான் வ்யாஸர் வந்து வாதம் பண்ணி அவரை வாழ்த்தி, அவர் பாஷ்யம் பண்ணினது மட்டும் போதாது, அவரேதான் அதை தேசம் பூராவும் வித்வான்களுடன் வாதம் பண்ணிப் பிரசாரம் செய்து நிலைநாட்டவும் வேண்டும் என்று சொல்லி, அவருக்கு இன்னொரு பதினாறு வருஷம் ஆயுள் கொடுத்தார். அந்த விஷயம் இருக்கட்டும்.

ஆசார்யாள் காசியில் வாஸம் செய்த அப்போது ஒருநாள் அவர் கங்கைக்கு இக்கரையிலும், ஸநந்தனர் அக்கரையிலுமாக இருந்தார்கள். ஆசார்யாளின் வஸ்திரங்களைக் காயப்போட்டு ஸநந்தனர் வைத்துக் கொண்டிருந்தார். ஆசார்யாள் அப்போது சிஷ்யருடைய குரு பக்தியை லோகத்துக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று நினைத்தார். அதனால் தாம் இருந்த கரையைச் சேரவே ஸ்நானம் பண்ணிவிட்டு, ஈர வஸ்திரத்துடன் நின்றுகொண்டு, அக்கரையிலிருந்த சிஷ்யரிடம் ”காய்ந்த வஸ்திரம் கொண்டு வா” என்றார்.

ஆசார்யன் ஒன்று சொல்லிவிட்டால் அதை உடனே பண்ணியாக வேண்டும் என்ற பக்தி வேகம் ஸநந்தனருக்கு வந்து விட்டது. ஆசார்யாள் சொட்டச் சொட்ட ஈரக் காஷாயத்தோடு நிற்கிறாரே என்று அவருக்கு மனஸ் பறந்தது. ஆவேசமாக அன்பு, பக்தி வந்துவிட்டால் அங்கே rational thinking (அறிவுப் பூர்வமான சிந்தனை) எல்லாம் நிற்காது. அதனால் படகு பிடித்துக்கொண்டு போக வேண்டும் என்று ஸநந்தனரால் காத்துக் கொண்டிருக்க முடியவில்லை. எதிரே, அத்தனை பெரிசாக, ஆழமாக அலை வீசிக்கொண்டு கங்கா நதி என்று ஒன்று இருப்பதே அவருக்குத் தெரியவில்லையே! அப்புறம் படகைப் பற்றி எப்படி நினைப்பார்? கொஞ்சம் தூரத்தில் ஆசார்யமூர்த்தி ஈரத்துணியுடன் நிற்கிறார், காய்ந்த வஸ்திரம் கேட்டு அவர் ஆக்ஞை பண்ணிவிட்டார் என்பது மாத்திரம்தான் அவர் புத்தியில் ‘டோட்ட’லாக வியாபித்திருந்தது. அதனால் எதிரே ஏதோ ஸம பூமி, கட்டாந்தரை இருக்கிறது போல, அவர் பாட்டுக்கு கங்கைப் பிரவாஹத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டார். கங்கையின் ஆழத்தில் முழுகிப் போவோமே, முழுகாமல் நீந்தினால் கூட வஸ்திரம் நனைந்து போய் குருநாதன் போட்ட ஆக்ஞையின் ‘பர்பஸே’ கெட்டுப்போய் விடுமே என்பதெதுவும் அப்போது அவருக்குத் தெரியவில்லை.

இப்படி ஒரு பக்தி பரவசம் ஏற்பட்டபோது, ஈச்வரன் (அந்த ஈச்வரன்தான் ஆசார்ய ரூபத்தில் வந்து நின்று கொண்டிருப்பதும்) அதற்கான பெருமையைத் தராமல் போவானா? அதனால் அப்போது ஒரு அதிசயம் நடந்தது. பத்மபாதர் பாட்டுக்குப் பிரவாஹத்தின் மீது நடக்க அவர் அடுத்த அடி வைக்க வேண்டிய இடத்தில் கங்காதேவி நீரோட்டத்துக்கு மேலாக ஒவ்வொரு பெரிய தாமரைப் பூவாகப் புஷ்பித்துக் கொண்டே போனாள். இந்த பத்மங்களில் காலை வைத்துக் கொண்டே ஸநந்தனரும் கங்கையின் மேலே நடந்து போனார். ஆனால் அவருக்கு இப்படித் தாமரைகள் முளைத்துத் தம் அடிவைப்பைத் தாங்குவதும் தெரியாது. தீமிதியில் நெருப்புத் தெரியாது என்றால் இவருக்கு ஜில்லென்று, மெத்தென்று புஷ்பம் இருப்பது தெரியவில்லை.

எல்லாரும் பார்த்து அவருடைய குருபக்தி விசேஷத்தைச் வியந்து கொண்டிருக்கும்போதே, இப்படி அந்தப் பெரிய நதியைத் தாண்டி இக்கரைக்கு வந்து குருமூர்த்திக்கு வஸ்திரத்தை ஸமர்ப்பித்தார்.

”எப்படியப்பா நீ கங்கையைத் தாண்டி வந்தே?” என்று ஆசாரியாள் வேடிக்கையாகக் கேட்டார்.

அப்போதுகூட ஸநந்தனர் ஆற்றைத் திரும்பிப் பார்த்து பத்மங்கள் முளைத்ததைத் தெரிந்து கொள்ள நினைக்கவில்லை. ‘ஆக்ஞை பண்ணினது ஆசார்யன். அவர் ஆக்ஞை பண்ணி விட்டு அது எப்படி நிறைவேறாமல் போகும்? அவர் அநுக்ரஹமே நம்மை அங்கேயிருந்து இங்கே உருட்டிக் கொண்டு வந்துவிட்டது’ என்று அவருக்கு நிச்சயம்.

அதனால், தங்களை ஸ்மரித்தால் கடக்க முடியாத ஸம்ஸார ஸாகரமே ‘முழங்கால் மட்டும்’ ஜலமாகிவிடும்போது, தாங்களே வாயைத் திறந்து ஆக்ஞை பண்ணியிருக்கையில் நான் கங்கையைத் தாண்டினது என்ன பிரமாதம்?” என்றார்.

அப்புறம்தான் ஆசார்யாளே அவருக்குப் பத்மங்கள் புஷ்பித்ததைக் காட்டி, அவை இவருடைய பாதத்தை தரித்ததால் ”பத்மபாதர்” என்ற பெயரை இவருக்கு வைத்தார்.

ஈச்வரனாகவே ஒரு நிலையில் இருந்தாலும், இன்னொரு நிலையில் அவனுடைய பாதபத்மமாக நினைக்கப்படும் பகவத்பாதருக்குப் பொருத்தமாக இப்படி சிஷ்யரும் பத்மபாதராக அமைந்தார்.

ராமாநுஜரின் குருபக்தி

ராமாநுஜாசாரியார் திருக்கோட்டியூர் நம்பி என்கிற தம்முடைய ஒரு குருவின் வார்த்தையை உல்லங்கனம் பண்ணி (மீறி) எல்லா ஜனங்களுக்கும் உபதேசம் செய்தார் என்று பலர் கேட்டிருப்பீர்கள். ஆனால் அவரே இதே நம்பியிடம் எத்தனை அடக்கத்தோடு நடந்து காட்டியிருக்கிறாரென்றும் வைஷ்ணவ குரு பரம்பரா கதைகள் சொல்கின்றன. உபதேசம் தருவதற்கு முந்தித் திருகோட்டியூர் நம்பி ராமாநுஜாசாரியாரைப் பதினெட்டு தடவை ஸ்ரீரங்கத்திலிருந்து திருகோட்டியூருக்கு நடக்கப் பண்ணிவிட்டே கடைசியில் உபதேசம் கொடுத்தாராம். ராமாநுஜர் கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் இப்படி நடையாக நடந்தாராம்.

ஸ்மார்த்தர்கள் ஆசார்யனுக்கு நாலு தரம் நமஸ்காரம் பண்ணுவது வழக்கம். வைஷ்ணவர்கள் ஆசார்யன் போதும் போதும் என்கிற வரையில் பண்ணிக் கொண்டேயிருப்பார்கள். ஒரு தரம் ஸ்ரீரங்கத்துக்கு வந்த திருகோட்டியூர் நம்பி ஜில்லென்று காவேரி ஜலத்திலே (அல்லது படித்துறை மண்டபமாயிருக்கலாம்) நின்று கொண்டிருந்தாராம். வெளியிலே ஆற்றங்கரை மணலோ நல்ல வெயிலில் நெருப்பாகக் கொதித்துக் கொண்டிருந்ததாம். அப்படிப்பட்ட மண்ணில் ராமாநுஜர் உடம்பு கன்றிப் போவதையும் பொருட்படுத்தாமல் நமஸ்காரம் பண்ணிக் கொண்டேயிருந்தாராம். அவருடைய குரு பக்தியை சோதனை பண்ணவேண்டும் என்று இப்படிச் செய்த நம்பி அப்புறம் மனஸ் தாங்காமல் அவரை நிறுத்தினாராம்.

ஆதிசங்கரரின் ஆசார்ய பக்தி

”ஆசார்யாள்” என்ற மாத்திரத்தில் லோகமெல்லாம் நினைத்துப் போற்றும் நம் பகவத்பாதாளுக்கு இருந்த குருபக்தி சொல்லி முடியாது. பத்ரிநாத்தில் அவர் தம்முடைய குருவான கோவிந்த பகவத்பாதரையும், பரமகுரு (குருவுக்கு குரு) வான கௌடபாதரையும் ஸாக்ஷாத் தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபமாகவே பார்த்து, அப்போதுதான் தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் சொல்லி, அடிக்கு அடி அவர்களை நமஸ்காரம் பண்ணினார், என்று சொல்கிறதுண்டு. இவரே அந்த தக்ஷிணாமூர்த்தியின் அவதாரந்தான். குருவின் மஹிமையை ஆசார்யாள் ஒரு இடத்தில் ச்லாகித்துச் சொல்லும்போது, ”பித்தளையைக் கூடப் பொன்னாக்குகிற ஸ்பர்சவேதி மாதிரி குருவானவர் பித்தளை மனஸுக்கரார்களையும் மாற்றித் தங்கமாக ஜ்வலிக்கச் செய்பவர் என்று சொன்னால்கூட குரு மஹிமையை உள்ளபடி சொன்னதாகாது. ஏனென்றால் ஸ்பர்சவேதியில் இருந்த பித்தளை தான் மட்டுமே ஸ்வர்ணமாக ஆகுமே தவிர, மற்ற பித்தளை வஸ்துக்களை ஸ்வர்ணமாக்குகிற ஸ்பர்சவேதியாக மாறாது. ஆனால் குருவை ஆச்ரயித்த சிஷ்யனோ, தான் பூர்ணத்வம் பெறுவதோடு மட்டுமின்றி, தானும் குருவாகி மற்றவர்களுக்குப் பூர்ணத்வம் தருபவனாகி விடுகிறான். அதனால் குரு ஸ்பரிசவேதிக்கும் மேலே” என்கிறார்1. காசியில் பரமேச்வரனே சண்டாள வேஷத்தில் வந்துபோது, ”ஆத்ம ஞானியான ஒருத்தன் பிராம்மணனாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை;அவன் சண்டாளனாகப் பிறந்தவனாயிருந்தாலும் ஸரி, அவனே எனக்கு குரு” என்று பரம விநயமாகச் சொன்னார் – ஜகதாசார்யர் என்று பிருதம் பெற்றவர் இப்படி நடுவீதியில் சொன்னார்2.


1‘சதச்லோகீ’ முதல் ஸ்லோகம்

2 ஸ்ரீ ஆதிசங்கரரின் குரு பக்தி குறித்து மேலும் சில விவரங்கள் ”தெய்வத்தின் குரல்” : இரண்டாம் பகுதியில் ‘‘குரு பக்தி” என்ற உரையில் காண்க.

தெய்வங்களும் சீடர்களாக

நமக்கெல்லாம் குருபக்தி போதமாட்டேனென்கிறது. ஆனால் நம் ஸம்பிரதாயங்களுக்கு மூலமான குருமார்களாகவும் முக்யமான குருமார்களாகவும் இருந்த மஹா பெரியவர்களோ தாங்களே தங்கள் குருமார்களிடம் அபாரமான பக்தி செலுத்தியிருக்கிறார்கள்.

ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி. அவருக்கும்கூட ஒரு குருவிடம் தாம் பணிவாக இருந்து, சிஷ்யனாகி, உபதேசம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று இருந்திருக்கிறது. பரமேஸ்வரனான அவரே தம் சொந்தக் குழந்தையிடம், கைகட்டி, வாய் பொத்திப் பிரணவோபதேசம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

ஞானமே வடிவானவள் அம்பாள். அவளும் பதியான ஈஸ்வரனிடம் சிஷ்யையாகி உபதேசங்கள் வாங்கிக் கொண்டிருக்கிறாள். அநேக ஆகம, தந்த்ரங்கள் ஈஸ்வரன் அம்பாளுக்கு உபதேசம் பண்ணினவைதான்.

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே |
ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வராநநே ||

என்பதாக (மும்முறை ராமநாமா சொன்னால் அது ஸஹஸ்ர நாமம் சொன்னதற்கு ஸமானம் என்று) ராம நாம மஹிமையைச் சொல்லும் ஸ்லோகம் அம்பாளுக்கு ஈச்வரன் உபதேசித்ததுதான் என்று ‘விஷ்ணு ஸஹஸ்ர நாமம்’ அறிந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஜம்புகேஸ்வரம் (திருவானைக்கா) போன்ற பல க்ஷேத்ரங்களில் அம்பாள் ஈஸ்வரனிடம் உபதேசம் வாங்கிக் கொள்வதாக ஸ்தல புராணங்களில் இருக்கிறது.

மஹாவிஷ்ணு ராம, க்ருஷ்ண அவதாரங்களில் வஸிஷ்டர், ஸாந்தீபினி ஆகியவர்களிடம் பரம விநயத்தோடு குருகுலவாஸம் செய்திருக்கிறார். க்ருஷ்ண பரமாத்மா ஸுதாமா (குசேலர்) என்கிற ஸப்ரஹ்மசாரியுடன் (கூடப் படித்த மாணவருடன்) காட்டுக்குப் போய் இடி மழையில் ஸாந்தீபனி குருவுக்காக ஸமித்து (சுள்ளி) பொறுக்கிக் கொண்டு வந்திருக்கிறார். ராமர் வஸிஷ்டர் சொன்ன ப்ரகாரமேதான் ராஜ்யபாரம் பண்ணினார். ”ராஜ்யபாரம் பண்ண வரமாட்டேன்” என்று சித்ரகூட பர்வதத்தில் அவர் பரதனோடு வந்த வஸிஷ்டரிடம் மறுத்தபோதுகூட, அவரிடம் எத்தனை பணிவுடன் தெரிவிக்கலாமோ அப்படியே செய்து அவருடைய ஸம்மதத்தைப் பெற்றபின் தான் அந்த முடிவை நடத்திக் காட்டினார்.

குரு பரம்பரையில் தத்தாத்ரேயருக்கு ரொம்பவும் உன்னதமான ஸ்தானம் உண்டு. அப்படிப்பட்டவரோ மண்ணு, தண்ணி, மலைப்பாம்பு, குளவி, ஒரு தாஸி, ஒரு வேடன், ஒரு சின்னக் குழந்தை இவை உள்பட இருபத்து நாலு பேரைத் தம்முடைய குரு என்று சொல்லிக் கொண்டு அவர்களிடமிருந்து தாம் இன்னின்ன பாடம் கற்றேன் என்று (பாகவதத்தில்) சொல்கிறார்.

குலவழக்கையே கொள்க!

நம்முடைய பிறப்பு பூர்வ கர்மாவை அநுஸரித்து ஈச்வரனாலேயே நிர்ணயிக்கப்படுகிறது என்பதே சாஸ்திரம். அதனால் நாம் ஏதோ ஒரு மதத்தில், ஸம்ப்ரதாயத்தில் பிறந்திருக்கிறோமென்றால், அதுவே கர்மவசாத் ஈச்வரனால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்று அதை வரவேற்று, இதைக் கொண்டே நாம் கர்மாவைப் போக்கிக் கொண்டு நம்மை மேம்படுத்திக் கொள்ள முயல வேண்டும். அவரவர்கள் தாங்கள் பிறந்த ஸம்ப்ரதாயத்தையும் குலாசாரத்தையும் ரக்ஷிக்கிற ஆசார்யார்களின் உபதேசப்படி நடந்தாலே போதும். அதன் தத்வங்கள் அபூர்ணமாக இருந்தால்கூடப் பரவாயில்லை. கர்ம சேஷத்தினால் அபூர்ணமாக இருக்கிற இந்த ஜீவனுக்கு அந்த சேஷம் தீர இந்த அபூர்ண ஸமயாசாரமே உதவி பண்ணிவிடும். ஈச்வரன் என்று ஒருத்தனிடம் அசையாத நம்பிக்கையும், பக்திவிச்வாஸமும் வைத்து, ”நீ இப்படி ஜன்மா தந்ததால் இந்த ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த ஆசார்யரை ஆச்ரயிக்கிறேன்” என்று அவனிடம் விட்டுவிட்டுத் தன் குலாசாரத்தை அநுஷ்டித்தால் அவன் ஒரு நாளும் கைவிடமாட்டான். எப்படி, எப்போது, எந்த தினஸில் பூர்ண தத்வத்தை இவனுக்குக் கொடுக்க வேண்டுமோ அப்படித் தானே பண்ணி விடுவான். ஆசார்யன் ஈச்வர ஸ்வரூபமே என்ற நம்பிக்கை மட்டும் நமக்கு இருந்து விட்டால் போதும். எந்த குருவிடம் நாம் பிரபத்தி செய்தாலும் (சரணாகதி அடைந்தாலும்) ஈச்வரனிடம் பிரபத்தி செய்ததாக ஏற்பட்டு, பலன் ஸித்தித்துவிடும். உபநிஷத் சாந்தி பாட க்ரமத்தில் இதுதான் சொல்லிக் கொடுத்திருக்கிறது.

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
    யோ வை வேதாச்ச ப்ரஹிணோதி தஸ்மை |
தம் ஹ தேவம் ஆத்ம புத்தி ப்ரகாசம்
    முமுக்ஷுர்வை சரணமஹம் ப்ரபத்யே ||1

ஒரு ‘ஸிஸ்ட’த்துக்குக் கட்டுப்படாவிட்டால் ஒரு மேதாவியின் ஸாமர்த்தியத்தாலே அனர்த்தம்தான் ஏற்படும். இப்படிப்பட்ட மேதாவியால்தான் முட்டாளை விட ஜாஸ்திக் கெடுதல் உண்டாகும். இதை நம் ஆசார்யாள் ”உபதேச ஸாஹஸ்ரீ”யிலே சொல்லி, ஒரு ஸம்பிரதாயத்தில் வராத எவனும் மூர்க்கனுக்கு ஸமம்தான் என்கிறார். அதாவது ஞானத்துக்குப் புஸ்தகப் படிப்பைவிட குருபக்தி தான் முக்கியம்.


1கருத்து: எவன் ஆதியில் பிரம்மாவைப் படைத்து அவருக்கு வேதங்களைக் கொடுத்தானோ அந்த தேவ தேவனே நம் புத்தியைப் பிரகாசிக்கச் செய்பவன். முக்தி நெறியில் விழைவு கொண்ட நான் அவனையே சரண் புகுகிறேன்.

ஆசானை ஈசனாக

ஆகையால், நம்மைப்போல பந்த நிலையிலில்லாமல் விடுபட்டு ஸ்வதந்திர புருஷராக இருக்கிற குருவேதான் நம்மை ஒரு ஒழுங்கிலே கட்டுப்படுத்துவதற்காகத் தாமும் அந்த ஒழுக்கத்தில் கட்டுப்பட்டு வாழ்ந்து காட்டி நமக்கு போதனை செய்கிற ஆசார்யராக இருக்கிறார் என்று புரிந்து கொண்டு நம்முடைய ஆசார்ய புருஷர்களிடம் பக்தி செலுத்த வேண்டும். ஈச்வரனேதான் இப்படி குரு, ஆசார்யர் என்ற ரூபத்தில் வந்து ஞானாநுக்ரஹம் செய்கிறான் என்று நினைத்து பக்தி பண்ணினால் பலன் சீக்கிரத்தில் கிடைக்கும். ஈச்வரன்தானே எல்லாமுமாகி இருப்பது? கல்லு, மண்ணு எல்லாங்கூட அவன்தான். அதனால் ஆசார்ய ஸ்வரூபமாக, குரு வடிவாக இருப்பவன் அவன்தான் என்பதில் என்ன ஆக்ஷேபணை?

இப்படிப் பார்த்தால், நாம் மட்டும் அவனில்லாமல் யார் என்று கேள்வி வருகிறது. நாமே ஈச்வரன் என்கிறபோது ஆசார்யன் என்று இன்னொருத்தனை எதற்காக ஈஸ்வரனாக உபாஸிக்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி.

எல்லாம் அவன்தான் என்றாலும் ஒன்றுக்கும் தன்னுடைய ஈச்வரத்வம் தெரியவில்லையே! நமக்கு நம் ஈச்வரத்வம் கொஞ்சமாவது தெரிகிறதா? தெரிந்தால் இத்தனை ஆசை, கோபம், பயம், அழுகை, பொய், பாபம் இருக்குமா? அதனால் எல்லாம் அவன் என்றாலும், பூர்ணமான அவனாகத் தன்னைத் தெரிந்துகொள்ளாமல் அவனே போட்டுக் கொண்ட வேஷங்களாகத்தான் இருக்கின்றன. நாமெல்லாம் நன்றாக அஞ்ஞான வேஷம் போட்டுக்கொண்டு, மூல ஆஸாமியை அடையாளமே கண்டுகொள்ள முடியாதபடி ஆனவர்களாக இருக்கிறோம். ஆசார்யர் என்பவர் இத்தனை கோணா-மாணா வேஷமாக இல்லை. அவரிடம் ஆஸாமியை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. அதனால் அவரிடம் ஈச்வரத்வத்தை நாம் பக்தி பண்ணினால் கண்டு அநுபவிக்கலாம். நம்மிடமே தெரிந்து கொள்ள முடியாத தெய்வத்தன்மையை அவரிடம் ஸுலபமாகத் தெரிந்து கொள்ளலாம். பல தினுஸாக வேஷம் போடுகிற ஒரே ஈச்வரன்தான், ரொம்பவும் அசட்டு வேஷமான நம்மை சமர்த்தாக்குவதற்கே, ஸ்பெஷலாக ஆசார்ய வேஷத்தில் வந்திருக்கிறான். இப்படி உணர்ந்து அவரிடம் பக்தி பண்ணினால் அப்புறம் அங்கே வேஷத்தை முழுசாகவே கலைத்துவிட்டுத் தன்னையே தெரியப்படுத்திக் கொண்டு விடுவான். அப்புறம், அப்புறந்தான் – நம் வேஷத்தின் அசட்டுதனங்களையும் போக்கி, அப்புறம் இந்த வேஷத்தையும் கலைத்து, நாமும் அவனேதான் என்று அறிந்து அநுபவிக்குமாறு அருள் செய்வான்.

முடிந்த முடிவான அந்த நிலைக்குப் போக இப்போது நாம் செய்ய வேண்டியது ஆசார்யரை ஈச்வரனாக நினைத்து அவர் உபதேசிக்கிறபடி நடப்பதுதான்.

குரு-ஆசார்ய அபேதம்

ஆக, மொத்தத்தில் நான் சொன்னது; நமக்கு ஞானம் தருவதற்காக ஏற்பட்டவர்களையே குரு, ஆசார்யர் என்று இரண்டு பெயரில் சொல்வது. உள் பெருமையை வைத்து ஒருத்தரை குரு என்கிறோம். வெளிநடத்தை, படிப்பு, வெளி மநுஷ்யர்களை train பண்ணுவது ஆகியவற்றில் இருக்கிற பெருமையை வைத்து இன்னொருத்தரை ஆசார்யர் என்கிறோம். ஒருத்தர் ஸிஸ்டத்துக்கு அதீதமானவர். இன்னொருத்தர் ஸிஸ்டத்திலேயே வருகிறவர். ஒருத்தர் அநுக்ரஹத்தாலேயே முக்யமாக ஞானம் தருகிறவர். மற்றவர் சாஸ்த்ர, ஸம்ப்ரதாய, ஆசார அநுஷ்டானம், வித்வத் இவற்றின் மூலம் ஞானம் பெற உதவி பண்ணுகிறவர்.

இப்படி இரண்டு பேராகச் சொன்னாலும், ஆசார்யர் என்பவர் பூர்ண யோக்யதை உள்ளவராக இருந்தாரானால் தாமே குருவாகவும் இருப்பார். அதாவது, தம்மைப் பொருத்தமட்டில் உள்ளுக்குள்ளே ஸிஸ்டம்கள் கடந்தவராக, ப்ரத்யக்ஷமாக ஈச்வராநுபவமும் ஆத்மாநுபவமும் பெற்ற பெருமை வாய்ந்தவராக, அநுக்ரஹ சக்தி கூடியவராக இருந்துகொண்டே, வெளிநடத்தை படிப்பு இவற்றிலும் சிறந்தவராக இருந்துகொண்டு, ஒரு ஸிஸ்டத்துக்குக் கட்டுப்பட்டாற்போல் வாழ்ந்து காட்டிக் கொண்டு மற்றவர்களுக்கு வித்யை, ஆசரணை இவற்றை போதனை பண்ணி அவர்கள் அவற்றைப் பின்பற்றுமாறு செய்வார். நம்முடைய ஆசார்ய புருஷர்கள் யாவரும் இப்படி இருந்தவர்கள்தான். குருவின் க்ஷணகால அநுக்ரஹத்தாலேயே சுத்தியும் ஞானமும் பெறுகிற யோக்யதை உள்ளவர்கள் ரொம்பவும் ஸ்வல்பமே இருப்பார்களாதலால் இப்படி ஆசார்யனாக நீண்ட கால போதனை ஸிஸ்டமாடிக்காகச் செய்பவராகவே பொது ஸமூஹத்திற்காக ஒரு குரு இருப்பது வழக்கம்.

ஸரியாகப் புரிந்து கொண்டோமானால் ஒரு நிஜமான ஆசார்யன் குருவாக இல்லாமலிருக்க முடியாது. உள்ளுக்குள்ளே பெருமை இல்லாத ஒருத்தன் எப்படி வெளியிலே பெரியவனாக இருக்க முடியும்?

கட்டுப்பாடு என்ற feeling-ஓடு, அதாவது கட்டுப்பட்டிருக்கிறோம் என்ற feeling-ஓடு ஒரு ஆசார்யான் ஒரு ஸம்ப்ரதாயத்துக்கு — அதாவது தார்மிகமான ஸிஸ்டத்துக்கு — அடங்கி, அதில், சொல்லியிருக்கிறபடி ஸதாசாரத்துடன், நன்னடத்தையுடன் வாழ்கிறானென்றால் அப்போது அவன் ஆசார்யனில்லை, மாணாக்கன்தான். எப்போது ஒழுக்கமான நடத்தை என்பது ஒரு சட்டமாக வெளியிலிருந்து வந்து கட்டுப்படுத்தாமல், தன்னியல்பாகப் பின்பற்றபடுகிறதோ அப்போதுதான் அது சுத்தமான பூர்ண ரூபத்தில் பிரகாசிக்கும். கம்பல்ஸரியாக இல்லாமல் நாச்சுரலாக ஒழுக்க வாழ்வு வாழ்கிற போதுதான் அதில் ஸ்வதந்த்ரத்துக்கே உரிய ஸெளக்யமும் நிறைவும் இருக்கும். மனம்போனபடி திரிகிற நாம் முதலில் ஒரு கம்பல்ஷனின் கீழ்தான் ஒழுக்க நெறிக்கு உட்பட்டு நடக்க ஆரம்பிக்க வேண்டும். ஆனால் இப்படி கம்பல்ஷன் இருக்கிற வரையில் நாம் மாணவனாக, சிஷ்யனாக இருப்பவர்கள்தான். போகப் போக, எதை நிர்ப்பந்தமாக ஏற்றுச் செய்ய ஆரம்பித்தோமோ அதையே ஸ்வதந்த்ரமாக, நம் ஸ்வபாவமாக ஆக்கிக் கொண்டு செய்யத் தொடங்கி விடுவோம். இப்படி ஒழுக்கத்தை ஸ்வாபாவிகமாக்கிக் கொண்டு ஸ்வதந்த்ர ஸெளக்யத்துடனேயே ஒருத்தன் பின்பற்றுகிற போதுதான் அவனுடைய வாழ்க்கைக்கு மற்றவர்களையும் follow பண்ண வைக்கிற சக்தி உண்டாகும். இப்படிப்பட்ட நிலையிலிருந்துகொண்டு ஒருத்தன் போதனை பண்ணினால்தான் அது பிறரிடம் ஆழமாகப் பதிந்து அவர்களையும் அப்படியிருக்கத் தூண்டும்.

இப்போது ஆசார்யர்களின் இடத்திலிருக்கிற ஆசிரியர்களுக்கு அறிவு மட்டும் இருந்தால் போதும், அவர்களுடைய அநுஷ்டானத்தைப் பற்றிக் கவலையில்லை என்பதாயிருக்கிறது. பழைய நாளில் அநுஷ்டானமும் சேர்ந்தே ஒருத்தனை ‘ஆசார்யன்’ என்ற ஸ்தானத்துக்குத் தக்கவனாக ஆக்கிற்று. இந்த அநுஷ்டானம் என்பதும் முடிந்த முடிவு இல்லை; இது வெளிநடத்தைதான். அநுஷ்டானமும் பூர்த்தியாகிற இன்னொரு இடம் உண்டு. அந்த இடம்தான் அநுபவம், ஸ்வாநுபூதி. அந்த அநுபவம் ஏற்பட்டால்தான் நன்னடத்தை என்பது ஸ்வபாவமாக அமையும். அதாவது வெறும் அறிவு எப்படி அநுஷ்டானத்தின் ஆதாரத்தில்தான் முழுமை பெறுகிறதோ, அப்படியே அநுஷ்டானமும் அநுபவத்தின் அஸ்திவாரத்தில்தான் பலமும் பூர்ண ரூபமும் பெறுகிறது. ஆகையால் அநுபவியாக இருக்கிறவன் குரு, அநுஷ்டாதாவாக இருப்பவன் ஆசார்யன் என்று ‘டிஸ்டிங்க்ஷன்’ சொல்வது ஸரியான விஷய ஞானத்தோடு செய்கிற பாகுபாடே இல்லை. ஆசார்யன் அரைகுறை அநுஷ்டாதாவாக இருக்க முடியாது. அநுபவம் வருகிறவரையில் அவன் அரைகுறைதான் — ஒரு நிர்ப்பந்தத்தின் மேலேயே அநுஷ்டானம் பண்ணுபவனாகத் தானே இப்போது இருக்கிறான்? இதில் நிறை ஏது? குறைதான் இருக்கும்! எனவே அநுபவியாகவும் இருந்து கொண்டே அநுஷ்டாதாவாகவும் வாழ்ந்து காட்டுகிறவன்தான் நிஜமான ஆசார்யன் என்று ஏற்படுகிறது. எவன் உள்ளே வெளியிலே அநுஷ்டாதாவான ஆசார்யனாகவும் இருப்பது. எவன் உள்ளே ஸிஸ்டத்துக்கு அதீதமாயிருக்கிறானோ, அவனேதான் இஷ்டப்படி திரிகிறவர்களை ஒரு கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, அதற்குத் தானே மாடலாக வெளியிலே ஸிஸ்டப்படி இருக்கிறான். உள்ளே மௌனமாயிருந்து கொண்டே வெளியில் நிறைய உபதேசம், உபந்நியாஸம் செய்கிறான்.

குருவும் ஆசார்யனும் ஒரே ஆஸாமிதான். நிஜமான ஆசார்யன் என்றால் அவன் குருவாக இல்லாமலிருக்க முடியாது. விஷயமே தெரியாத நிலையில் நாம் குரு, ஆசார்யன் இரண்டையும் ஒன்றாக நினைத்துதான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ”அப்படியில்லை; விஷயம் தெரிந்தவர்கள் இந்த இரண்டுக்கும் கொஞ்சம் வித்யாஸம் சொல்கிறார்கள்” என்று ஆரம்பித்தேன். அந்த வித்யாஸங்களையும் சொன்னேன். அப்புறம் விஷயம் தெரிந்தவர்களாக மட்டுமில்லாமல், அதன் ஆழத்துக்குப் போய்ப் புரிந்து கொள்ளப் பார்த்தால், மறுபடியும், ”வித்யாஸமே இல்லை. இரண்டும் ஒன்றுதான்” என்று தெளிவாவதை இப்போது பார்க்கிறோம்!

ஆதியிலிருந்தே, இப்படி குருவுக்கும் ஆசார்யனுக்கும் பேதம் கற்பிக்காததால்தான் இரண்டு வார்த்தைகளையும் synonymous-ஆக (ஒரே பொருள் உள்ளதாக)க் கருதி உபயோகித்திருக்கிறார்கள். வேதத்தின் சிரஸான உபநிஷத்தில், ”ஆசார்ய தேவோ பவ” என்றும், வித்யாப்யாஸ முடிவில் ‘ஆசார்ய’னுக்குப் பிரியமான தக்ஷிணையைத் தர வேண்டுமென்றும், எவன் ஆசார்யானை உடைய ‘ஆசார்யவானா’க இருக்கிறானோ அவனுக்கே ஞானமுண்டாகிறதென்றும் – எல்லா இடத்திலும் ‘ஆசார்ய’ சப்தமே சொல்லப்பட்டிருக்கிறது;’ குரு’என்று இல்லை. ஆனாலும் சிஷ்யர்கள் ஆசார்யனிடத்தில் போய் வஸித்து வித்யாப்யாஸம் பண்ணுவதற்கு ‘குருகுலவாஸம்’ என்றே பெயர் இருந்திருக்கிறது. ‘ஆசார்ய குலவாஸம்’ என்று கேள்விப்பட்டதில்லை. ஆசார்யர்களுக்கு நன்றி தெரிவித்து ஆராதிக்கிற தினத்தை ‘குரு பூர்ணிமை’ என்று தான் சொல்கிறோம். வ்யாஸாசார்யாள், சுகாசார்யாள், கௌடபாதாசார்யாள், கோவிந்தபாதாசார்யாள், (சங்கர) ஆசார்யாள், ஸுரேச்வராசார்யாள், தோடகாசார்யாள், என்றெல்லாம் இருக்கும் ஆசார்யார்களைச் சேர்த்துச் சொல்கிற போது ‘குரு பரம்பரா’ என்று சொல்கிறோம். இப்படியே ராமாநுஜாசார்யார், வல்லபாசார்யார், மத்வாசார்யாரை சேர்ந்தவர்களும் சொல்கிறார்கள். ஆசார்ய புருஷர்களுக்கு நமஸ்காரம் பண்ணுவதை ‘குரு வந்தனம்’ என்றே சொல்கிறோம்.

பண்டைத் தமிழ் வழக்கு பூர்ணமாக வைதிகத்தை அநுஸரித்துதான் இருக்கும். ஆனதால் ”மாத்ரு, பித்ரு, ஆசார்ய தேவோ பவ” என்ற வேத வாக்யத்தையொட்டித் தமிழில் ”மாதா, பிதா, குரு, தெய்வம்’ ‘என்று சொல்கிற வழக்கம் ஏற்பட்டிருக்கிறதென்றால், ஆசார்யன் என்பவனே குருவாக இருந்திருக்கிறான் என்று தீர்மானமாகிறது. (ஆசார்யன் என்பதை ‘ஆசான்’ என்று தமிழில் சொல்லியிருக்கும்.) ஸித்தாந்த சைவத்தில் மெய்கண்டாச்சாரியார், ஸமயாசாரியார், ஸந்தானாசாரியார், சிவாசாரியார் என்றெல்லாம் ‘ஆசார்யப்’ பெயரே கொடுத்துச் சொல்லுகிறார்களென்றாலும், இவர்களுடைய ஆராதனையை (நினைவு நாள் வழிபாட்டை) ‘குரு’ பூஜை என்று குறிப்பிடுகிறார்கள்.

ஒரே நிறைவுக்குப் பல மார்க்கங்கள்

இப்படி தீக்ஷையில் பல விதம். தீக்ஷையினால் சிஷ்யனைச் செலுத்துகிற மார்க்கங்களும் பல விதம். கடைசியில் போய் சேருகிற இடம் ஒன்றேயானாலும், ஆரம்பத்தில் தீக்ஷையால் தூண்டிவிடுகிற போது — ‘இனிஷியேட்’ பண்ணுகிறபோது — பல மார்க்கங்களில் பல குருமார்கள் செலுத்துகிறார்கள். ஒரே குருவேகூட வெவ்வேறு சிஷ்யர்களை வெவ்வேறு மார்க்கங்களில் இனிஷியேட் பண்ணுவதுமுண்டு. ஆனால் ஆசார்யர் என்றால் அவர் ஒரு ஸிஸ்டத்தில்தான் பண்ணுவார். ஒரு குரு ஒரே [சிஷ்யனுக்குக்கூட அவனுடைய மனோவ்ருத்தியை [மனப்போக்கை]ப் பொருத்தும், ஸாதனையில் அவனுடைய அபிவ்ருத்தியைப் பொருத்தும் வேறு வேறு காலங்களில் வெவ்வேறு மார்க்கங்களில் தீக்ஷை கொடுத்துக் கொண்டே போகலாம்.

இப்படி மந்த்ர சாஸ்திரம், தந்த்ர சாஸ்திரம், யோக சாஸ்திரம், த்வைத-அத்வைத சாஸ்திரங்கள் என்று பலவற்றில் தீக்ஷை தருகிற குருமார்கள் இருக்கிறார்கள். தாயுமானவர் இப்படி எல்லா குருவாகவும் இருந்ததாக தம்முடைய ஒரே குருவைச் சொல்லி முடிவாக, “மூலன்மரபில் வரு மௌனகுருவே!” என்று முடிக்கிறார். ‘திருமந்திரம்’ செய்த திருமூலர் அந்த நூலில் எல்லா மார்க்கத்தையுந்தான் சொல்லி யோக–ஞானங்களில் முடிக்கிறார். அவரிலிருந்து ஆரம்பித்தது ஒரு குரு பரம்பரை. அவர்களில் திருச்சிராப்பள்ளியில் மடம் ஏற்படுத்திக் கொண்ட ஸாரமா முனிவர் ஒருவர். இந்த மடத்தில் பட்டத்துக்கு வந்தவர்களில் ஒருவரான மௌன குரு ஸ்வாமிகள் என்பவர்தான் தாயுமானவருக்கு குரு. தாயுமானவர் காலம் பதினேழாம் நூற்றாண்டு. (மௌன குரு ஸ்வாமிகளுக்குப் பிறகு அந்த மடம் தர்மபுர ஆதீனத்தின் பராமரிப்பில் வந்துவிட்டது.)

தாயுமானவர் இங்கே தம்முடைய நேர் குருவான மௌன குருவைச் சொன்னாலும், அவர் சொல்வது மற்ற எல்லா மார்க்கமும் மௌனத்தில்தான் கொண்டுவிடுகிறது என்று சொல்லி, இப்படி மௌன உபதேசத்தாலேயே பரம அத்வைதத்தை அநுக்ரஹிக்கும் தக்ஷிணாமூர்த்தியை ஸ்தோத்திரிக்கிறாற்போலவும் த்வனிக்கிறது. இவரே “சிரகிரி விளங்கவரு தக்ஷிணாமூர்த்தியே, சின்மயானந்த குருவே” என்றும் நிறையப் பாடி வைத்திருக்கிறார்.

அந்த மௌனந்தான் நம்முடைய நிஜமான இயல்பு. ஆனால் அதைத்தான், நம்முடைய நிஜமான நம்மையேதான், நாம் இழந்து, மறந்துவிட்டு, இல்லாத அவஸ்தைகளிலெல்லாம் மாட்டிக் கொண்டிருக்கிறோம். இதை மாயை என்கிறார்கள். மாயைதான் அம்பாள் என்கிறார்கள். அந்த அம்பாளே மாயையைப் போக்கடிக்க ஞானாம்பிகையாகவும் வருகிறாள். குருவாக வந்து ஞானத்தைப் புகட்டுகிறாள். தாயாரே குருவாகி ஞானப்பாலை ஊட்டுகிறாள். அவள் எல்லாவற்றிலும் தினுஸு தினுஸாகப் பண்ணிப் பார்த்து ஸந்தோஷிக்கிறாள். பக்ஷி என்றால் பல தினுஸு. மிருகங்களில் பல தினுஸு. புஷ்பம் என்று எடுத்துக் கொண்டால் அதில் முடிவே இல்லாமல் எத்தனை கலர் வகை, வாஸனை வகை, எத்தனைவிதமான ‘ஷேப்’? இப்படியே மநுஷ்ய மனஸிலும் விசித்ர விசித்ரமாக எத்தனையோ ரகம். அது ஒவ்வொன்றுக்கும் ‘ஸூட்’ ஆகிறதற்காகத்தான் ஞானகுரு ஆசாரியர்களிலும் பலவிதமானவர்களை, பலவித ஸம்பிரதாயங்களைக் காட்டுபவர்களாக வைத்திருக்கிறாள். எத்தனை பேச்சு, வாதம், எழுத்து, க்ரியைகள் உண்டோ அத்தனையும் உள்ள குருவிலிருந்து மௌனகுரு வரையில் பல வகையாகக் காட்டுகிறாள். ஆனால் உள்ளே இத்தனை பேரும் ஒரே குருத்வத்தைதான் உடையவர்களாக இருப்பார்கள். ஸத்யம் ஒன்றாகத்தானே இருக்க முடியும்?