கொசுவும் கேசவனும்

லோகத்திலே ஒரு விஷயம் பாக்கியில்லாமல் எல்லாவற்றையும் பற்றி இப்படி அநேக கவிதைகள் சமத்காரமாக இருக்கின்றன. பரமாத்மாவிலிருந்து ஆரம்பித்து ஒரு சின்னக் கொசுவரையில் எதைப்பற்றியும் அர்த்த சித்ரமாகவும் சப்த சித்ரமாகவும் கவிகள் விநோத விநோதமாகப் பண்ணியிருக்கிறார்கள்.

பரமாத்மா, கொசு இரண்டையும் குறிப்பிடுவதாகச் சிலேடை செய்துகூடக் கவி இருக்கிறது. ஒரு அர்த்தப்படி ஸாக்ஷாத் மஹாவிஷ்ணுவைக் குறிக்கும்; இன்னொரு அர்த்தப்படி கொசுவைக் குறிப்பிடும்:

சக்ர-ப்ரமண-கரத்வாத்
குத்ருஷ்டிபிர்-தூரவர்ஜ்யமாநத்வாத் |
ச்ருத்யந்த-கேலநத்வாத்
மசக த்வாமேவ மாதவம் மந்யே ||

சக்ர ப்ரமண கரத்வாத்‘ — சுற்றிக்கொண்டேயுள்ள சக்ரத்தைக் கொண்ட கரத்தை உடையவர் மஹாவிஷ்ணு. சக்கரவட்டமாகச் சுற்றும் காரியத்தை ஓயாமல் செய்வது கொசு. ‘கர’ என்பது விஷ்ணுவைக் குறிக்கும் போது ‘கை’ என்று பொருள்படும். கொசுவைக் குறிப்பிடும் ‘செய்வது’ என்று பொருள்படும்.

‘குத்ருஷ்டிபி: தூர வர்ஜ்யமாநத்வாத்’ — கெட்ட நோக்குடையவர்களால் நெருங்க முடியாமல் தூரத்தில் விலகியிருப்பவர் பகவான். ‘குத்ருஷ்டிபி: ‘என்றால் ‘கண் வலிக்காரர்களால்’ என்றும் இன்னொரு அர்த்தம். கொசு என்றாலே கண்நோவுள்ளவர்கள் தூர ஓடி விடுவார்கள்.

‘ச்ருத்யந்த கேலநத்வாத்’ — ‘ச்ருதி’ என்றால் வேதம். ‘ச்ருத்யந்தம்’ என்றால் வேதாந்தமாகிற உபநிஷத். உபநிஷத்திலே பகவான் ஆனந்தமாக விளையாடுகிறார். கொசுவைக் குறிப்பதாகக் கொள்ளும்போது, ‘ச்ருதி’ என்றால் காது. காதுநுனி ‘ச்ருத்யந்தம்’. கொசு நம்முடைய காதோரத்தில் வந்து ‘ஒய்ங்’ என்று சப்தம் பண்ணிக் கொண்டு விளையாடி ஹிம்ஸை பண்ணுகிறது!

‘மசக! த்வாம் ஏவ மாதவம் மந்யே’ — ‘ஏ கொசுவே! உன்னையே நான் மாதவனாக நினைக்கிறேன்’ என்று முடிக்கிறார்.

‘சக்ர ப்ரமணம் பண்ணுவது, குத்ருஷ்டிக்காரர்களை தூரப்போகப் பண்ணுவது, ச்ருத்யந்தத்தில் விளையாடுவது என்ற காரியங்களை நீ செய்கிறபடியால், ஏ கொசுவே! உன்னையே மஹாவிஷ்ணுவாக நினைக்கிறேன் – ‘மசக! த்வாமேவ மாதவம் மந்யே!’

இப்போது இங்கேயும் கொசு பாட ஆரம்பித்து விட்டது. எல்லாருக்கும் தூக்கமும் வந்துவிட்டது. இது வரையில் வேடிக்கை கேட்டதில் இரண்டும் தெரியவில்லை. இப்போது தூங்க வேண்டும் என்று படுத்துக் கொண்டால் கொசு ஹிம்ஸைதான் தெரிய ஆரம்பிக்கும். அனந்த சயனமாகப் படுத்துக்கொண்டு தூங்குகிற பகவான்தான் அந்த கொசு ரூபத்தில் வந்து காதிலே ரீங்காரம் பண்ணுகிறார் என்று நினைத்துக்கொண்டால் கொஞ்சம் ஹிம்ஸையை மறக்கலாம். கொசுத் தொல்லையில் தூக்கம் வராவிட்டால் இந்த கவித்வ விசித்ரங்களை நினைத்துக் கொண்டு கொஞ்சம் நிம்மதி பண்ணிக் கொள்ளலாம்.

தாளும் கோளும்

காமாக்ஷி ஸகல கஷ்டத்தையும் நிவ்ருத்தி பண்ணிப் பரமானந்தத்தை அளிக்கிறவள். நமக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு ஜ்யோதிஷ ரீதியில் நவக்ரஹங்களைத் தானே காரணமாகச் சொல்கிறார்கள்? இந்த நவக்ரஹ பாதிப்பு எதுவும் அவள் பாதத்தை ஸ்மரிக்கிறவருக்கு ஏற்படாது என்று பொருள் படுமாறு ‘மூக பஞ்சசதி’யில் வார்த்தை விளையாட்டுப் பண்ணி ஒரு ஸ்லோகம் இருக்கிறது.

“மூக பஞ்சசதி” என்பது ஞானம், பக்தி, சாக்த சாஸ்த்ர தத்வங்கள், காவ்ய ரஸம் எல்லாம் சேர்ந்ததாகக் காமாக்ஷியைப் பற்றி மூகர் என்பவர் அநுக்ரஹித்துள்ள ஐநூறு ஸ்லோகம் கொண்ட ஸ்தோத்ரம். இவற்றிலொன்று தான் நவக்ரஹங்களில் ஒவ்வொன்றின் தன்மையும் அம்பாளின் சரணாவிந்தத்தில் இருப்பதாகச் சொல்லும் ஸ்லோகம்.

ததாநோ பாஸ்வத்தாம் அம்ருதநிலயோ லோஹிதவபு:
விநம்ரமாணாம் ஸெளம்யோ குருரபி கவித்வம் ச கலயந் |
கதௌ மந்தோ கங்காதர-மஹிஷி காமாக்ஷி பஜதாம்
தம: கேதுர்-மாதஸ்தவ சரணபத்மோ விஜயதே ||

(பாதாரவிந்த சதகம்-59)

ப்ரகாசிப்பதாலே ‘பாஸ்வத்தாம்’ என்று அந்தப் பாதத்தைச் சொல்கிறார். நவக்ரஹங்களில் முதலில் வரும் ஸூர்யனின் தன்மை இதுதானே?’ பாஸ்கரன்’ என்றே அவனுக்கு ஒரு பேர். அம்பாள் சரணத்திலிருந்து அம்ருதம் கொட்டுகிறது. இதை ‘அம்ருத நிலய:’ — என்கிறார். யோகிகள் சிரஸின் உச்சியில் அவளுடைய பாத பத்மத்தின் அம்ருதம் பெருகுவதில் அப்படியே ‘உச்சி குளிர்ந்து’ இருப்பார்கள். ‘சரணாம்ருதம்’ என்றே சொல்வது வழக்கம். இதேபோல அம்ருதம் பெருக்குகிற தன்மை சந்த்ரனுக்கு உண்டு. அதனால்தான் ‘ஸுதாகரன்’ என்று பெயர். ‘லோஹிதவபு:’ என்று ஸ்லோகத்தில் இருப்பதற்கு ‘சிவந்த ரூபமுள்ளது’ என்று அர்த்தம். சிவப்பாயிருப்பதுதான் செவ்வாய். ‘விநம்ரமாணாம் ஸெளம்ய:’- அந்தப் பாதத்திலே போய் நமஸ்காரம் பண்ணுகிறவர்களுக்கு அது ஸெளம்யமாயிருக்கிறது. மனஸுக்குப் பரமஹிதமாக, ம்ருதுவாக, சாந்தமாக இருப்பதெல்லாம் ஸெளம்யம். உக்ர தேவதை என்பதற்கு ஆப்போஸிட்டாக ஸெளம்ய தேவதை என்கிறோம். நேர் அர்த்தம் என்ன? ‘ஸோம’ என்ற சந்திரனிலிருந்து உண்டானதே ‘ஸெளம்யம்’. நிலவு போலக் கோமளமாக, சாந்தமும் ஹிதமும் தருவதாக இருப்பதையெல்லாம் இதனால் ஸெளம்யம் என்கிறோம். ஸோமனுக்குப் புத்ரனாக உண்டானவன் புதன். அதனால் அவனுக்கு ஸெளம்யன் என்று பேர். அம்பாள் பாதம் ‘குருரபி’ — ‘குரு: அபி’ என்கிறார். ‘குருவானதும் கூட’ என்கிறார். குரு என்றால் குணவிசேஷத்தால் பெரியது என்று அர்த்தம். அதோடுகூட அந்தப் பாதம் க்ஷணகாலம் பட்டுவிட்டால் திருவடி தீக்ஷையினாலே ப்ரஹ்மஞானமே ஸித்தித்துவிடும். இப்படி ஞானம் தருவதாலும் அது குருவாயிருக்கிறது. குரு என்றால் வியாழன், குருவாரம் என்றே அந்தக் கிழமைக்குப் பேர். ‘கவித்வம் ச கலயந்’ — கவித்வத்தையும் அநுக்ரஹித்துவிடுகிறது அம்பாள் பாதம். அம்பாளுடைய பாத தீர்த்தம் மூகனையும் (ஊமையையும்) கூட மஹாகவியாக்கிவிடுகிறதென்று ஆசார்யாளே சொல்லியிருக்கிறார்*. இப்படி அவளருளால் அருட்கவியாகி, ஒரு காலத்தில் தாம் மூகனாயிருந்ததை லோகமெல்லாம் அறிய வேண்டுமென்பதால் ‘மூகர்’ என்றே பெயர் வைத்துக் கொண்டவர்தான் இந்த ஸ்லோகத்தைப் பண்ணியிருப்பவரே! நவக்ரஹங்களில் கவித்வகாரகன் வெள்ளிக்கிழமைக்குரிய சுக்ரன். குரு என்று வெறுமே சொன்னால் எப்படி அது தேவகுருவான ப்ருஹஸ்பதியைத்தான் குறிக்குமோ அப்படியே ‘கவி’ என்று வெறுமே சொன்னால் அது அஸுர குருவான சுக்ராசாரியாரைத்தான் குறிப்பிடும். கவித்வ சக்தி அருளுவதால் அம்பாளின் பாதம் சுக்ரனாக இருக்கிறது. ‘கதௌ மந்த:’ மிக மெதுவான நடை உள்ளது அம்பாள் பாதம். ‘மந்தன்’ என்று சனிக்கு பேர். அது ரொம்ப மெதுவாக ஸஞ்சாரம் செய்யும் க்ரஹம். ‘சனீச்வரன்’ என்று சொல்வது தப்பு. மற்ற க்ரஹம் எதற்கும் இல்லாத ‘ஈஸ்வர’ப் பட்டம் இதற்கு மட்டும் வருவதற்கு நியாயமில்லை. ‘சனைச்சரன்’ என்பதே சரியான வார்த்தை. ‘சனை:’ — மெதுவாக, ‘சர’- ஸஞ்சரிப்பவன். அதைச் சுருக்கி சனி என்கிறோம். ‘பஜதாம் தம: கேது:’ — அம்பாள் பாதம் தன்னை பஜிக்கிறவர்களின் தமஸுக்கு உலை வைக்கும் தூமகேதுவாக இருக்கிறது. தமஸ் என்றால் இருட்டு. துக்கம், அஞ்ஞானமெல்லாம்தான் பெரிய இருட்டு. தமஸ் என்று ராஹுவுக்கும் பெயர். கேது என்பது ஒன்பதாவது க்ரஹமென்று எல்லோருக்கும் தெரியும்.

ச்லோகத்தில் ராஹுவின் தன்மை மாத்திரம் நேரே அம்பாள் பாதத்துக்கிருப்பதாகச் சொல்லாமல், ஆனாலும் ‘தமஸ்’ என்ற வார்த்தையை வைத்து, மற்ற எட்டு க்ரஹங்களையும் நேரே அந்தச் சரண ஸம்பந்தப் படுத்திச் சொல்லியிருக்கிறது.


*“ஸெளந்தர்ய லஹரி”-ஸ்லோ 98

கஞ்சி குடிக்காத காமாக்ஷி!

காஞ்சீபுர மத்தியில் ராணியாக இருக்கிற அம்பாளையும் கஞ்சி ஸம்பந்தப்படுத்தி ஒரு இருசொல்லங்காரக் கவிதை இருக்கிறது.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அதற்கு அர்த்தம் என்னவென்றால்: காமாக்ஷியம்பிகை கஞ்சி குடிக்க மாட்டாள். ஏதோ கம்பைப் பொங்கிச் சோறாகப் போட்டாலும் சாப்பிடமாட்டாள். காய்கறி, அவியல், கூட்டு, ஊறுகாய் என்று ஏதாவது வியஞ்ஜனங்களையாவது இஷ்டப்பட்டு சாப்பிடுவாளா என்றால் அதுவும் மாட்டாள். அஞ்சு தலை பாம்புக்கு (பாம்புக்கு மரியாதை கொடுத்து ‘பாம்பார்’ என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் செய்யுளில் ‘அரவம்’ என்றில்லாமல் ‘அரவார்’ என்று வருகிறது. இப்படிப்பட்ட ஐந்துதலைப் பாம்புக்கு அம்பாள்) ஆறாவது தலையாக மானஸிகமாக ஆகிறாளாம்!

கஞ்சி குடியாளே கம்பஞ்சோ றுண்ணாளே
வெஞ்சினங்க ளொன்றும் விரும்பாளே – நெஞ்சுதனில்
அஞ்சுதலை யரவாருக் (கு) ஆறுதலை யாவாளே
கஞ்சமுகக் காமாட்சி காண்

கஞ்ச முகம் என்றால் தாமரைப் பூப்போலவுள்ள முகம். அம்பாள் முகம் அப்படி இருக்கிறது. கஞ்சி குடிக்காதவள், எதுவும் சாப்பிடாமல் கஞ்சத்தனமாயிருக்கிறாள் என்கிற மாதிரியும் த்வனிக்கிறது!

ஸரி, அம்பாளைப் பற்றி இப்படி ஏதோ அல்ப விஷயங்களைச் சொல்லி அப்புறம் ஆறுதலைப் பாம்பு என்று விஷமாக முடித்தால் என்ன அர்த்தம்?

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே புரிந்து விடும் – சிலதாவது.

‘கஞ்சி குடியாள்’ என்றால் காஞ்சீபுரத்தில் குடி கொண்டிருப்பவள் என்று அர்த்தம். ‘கம்பஞ்சோறு உண்ணாள்’ என்றால் ஏகம்பன் என்றும் கம்பன் என்றும் சொல்லப்படும் ஏகாம்ரநாதனுக்கு நைவேத்யமாகிற சோற்றை உண்ணாதவள் என்று அர்த்தம். சிவாலயங்களில் முதலில் ஈஸ்வரனுக்கு நைவேத்யம் பண்ணிவிட்டு அப்புறம் அதையேதான் அவன் பிரஸாதமாக அம்பாள் முதலான மற்ற எல்லா தெய்வங்களுக்கும் நைவேத்யம் செய்வார்கள். மதுரையிலே மட்டும் மீனாக்ஷிக்கு முதலில் செய்துவிட்டு அப்புறந்தான் ஸுந்தரேஸ்வரர் உள்பட மற்ற எல்லோருக்கும்! காஞ்சிபுரத்திலே நூற்றெட்டு சிவலாயங்கள் இருந்தபோதிலும் ஒன்றிலாவது அம்பாள் ஸந்நதியில்லாமல், அந்தப் பராசக்தி எல்லா மூர்த்திகளுக்கும் மேற்பட்ட பரப்ரஹ்ம ஸ்வரூபிணியாக காமாக்ஷி என்று தனிக்கோயிலில் வாஸம் செய்கிறாள்1. அங்கே அவளுக்கென்றே தயார் செய்கிற நைவேத்யம்தான் அவளுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. ஏகாம்ரேச்வரர் நைவேத்யம் அவளுக்கு வருவதில்லை. இதனாலே அவள் “கம்பஞ்சோறுண்ணாளே!”

அவள் பரம ப்ரேமையே ஒரு ரூபமாக ஆனவள். நாம் பண்ணுகின்ற தப்புகளுக்கு, அபசாரங்களுக்கு நம் மேல் அவளுக்கு எத்தனையோ கோபம் கோபமாக வர வேண்டும். ஆனால் அவளுக்குக் கோபித்துக் கொள்வது என்றால் கொஞ்சங்கூடப் பிடிப்பதில்லை. ‘வெஞ்சினங்கள் ஒன்றும் விரும்பாளே’ என்றது இப்படி வெம்மையாக, அதாவது ரொம்ப உஷ்ணமாக, சினம் கொள்வதில் அவளுக்கு இஷ்டமே இல்லை என்று, அவளுடைய தயையை, க்ஷமையை (மன்னித்தருளும் மனப்பான்மையை) தெரிவிக்கிற வாசகமாக ஆகிறது. ‘வ்யஞ்ஜனம்’ என்பதை தமிழ்ப் பாட்டில் ‘வெஞ்சினம்’ என்று சொல்லலாம்.

அப்படிச் சொல்லும்போது, கஞ்சி காமாக்ஷிக்கு வியஞ்ஜனமில்லாமல் சுத்தான்னம் மட்டும் நிவேதிக்க வேண்டுமென்று இருக்கிற அபிப்பிராயத்தை இந்தப் பாட்டு சொல்லுவதாகவும் ஆகும். அரவார் என்றால் ஹரனான சிவனைச் சேர்ந்த அடியார் என்று அர்த்தம். சிவபெருமானுக்குத் ஐந்து முகங்கள் உண்டு. அதனால் அவர் ‘அஞ்சுதலை அரன்’ ஆகிறார். அவரை மனஸிலே வைத்து உபாஸிக்கிறவர்கள் ‘நெஞ்சுதனில் அஞ்சுதலை யரவார்’. ‘ஆறுதலையாவாள்’ என்றால் ‘ஆறுதலை அளிக்கிறவள்’, “ஆறுதலாக இருப்பவள்” என்று அர்த்தம். நெஞ்சத்தில் ஈஸ்வரனை உபாஸிக்கிறவர்களுக்கு ஸம்ஸாரக் கஷ்டம் தெரியாமல் ஆறுதலாக இருப்பவள் அம்பாள்.

‘நெஞ்சுதனில் அஞ்சுதலை அறிவார்க்கு’ என்கிற பாடத்தை வைத்துக்கொண்டால் ‘மனஸிலே பயத்தை உடையவருக்கு ‘அம்பாள் அதைப் போக்கி ஆறுதல் தருகிறாள் என்று ஆகும். “அஞ்சுதலை”- அஞ்சுதல், அச்சப்படுதல் என்பதை.


1இதற்கான விருத்தாந்தத்தை “தெய்வத்தின் குரல்” முதற்பகுதியிலுள்ள “காமாக்ஷியின் சரிதை” என்ற உரையில் காண்க.

கஞ்சி வரதர்

காஞ்சீபுரத்தில் வரதராஜா ‘பேரருளாளப் பெருமாள்’ என்று விசேஷமாக, விளங்கிக்கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி ப்ரஸித்தமாக இருசொல்லலங்கார ஹாஸ்யத் துணுக்கு இருக்கிறது.

“கஞ்சி வரதப்பா!” என்று காஞ்சீபுர வரதராஜாவை நினைத்து, வியாதியில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஒருத்தர் வாய்விட்டு அரற்றினாராம்.

பக்கத்திலே ஒரு சாப்பாட்டு ராமன் இருந்தான். அவனுக்குக் கொஞ்ச நாளாக ஜ்வரம். டாக்டர், ‘சாதம் சாப்பிடக்கூடாது. கஞ்சி வேண்டுமானால் கொஞ்சம் குடிக்கலாம்’ என்று கண்டிப்புப் பண்ணியிருந்தார். “கஞ்சி எப்போ வரும்? எப்போ வரும்?” என்று அவன் தவித்துக் கொண்டிருந்தான்.

அதனாலே, பக்கத்திலே இருந்தவர், “கஞ்சி வரதப்பா” என்று சொன்னதை, “கஞ்சி வருகிறது அப்பா” என்று அவர் சொல்லுகிறாரென்று நினைத்து விட்டான். ஆள் யாரும் வரக்காணோமே என்பதால், “எங்கே வரதப்பா?” என்றானாம்!

ஏகாம்ரர் – எண்களில்

ரொம்ப விசித்ரமாய் கவி பாடுவதில் காளமேகப் புலவரைத் தமிழில் தலைமை ஸ்தானத்தில் வைத்திருக்கிறார்கள். “இம் என்பதற்கு முன்னே எழுநூறு எண்ணூறு என்று கவிதைகளைக் கொட்டிவிடுவேனாக்கும். நிறைய ஜலம் முட்டிக்கொண்டு கறுப்பாயிருக்கிற ஒரு காளமேகம் மழையைக் கொட்டுவதுபோலக் கவிதைகளை கொட்டுகிற காளமேகமாக்கும் நான்” என்று அவரே சொல்லிக் கொண்டிருக்கிறார்.

நினைத்தே பார்க்கமுடியாதபடி நூதன நூதனமாக எதையாவது சொல்லி அந்தக் கருத்துக்கு இசைய இவர் கவிபாட வேண்டும் என்று மற்ற கவிகள் பந்தயம் வைத்திருக்கிறார்கள். கொஞ்சங்கூடச் சளைக்காமல் அத்தனை பந்தயத்திலும் அவர் ஜயித்திருக்கிறார்.

நமக்கு இந்தக் காஞ்சீபுரம், இதிலே ‘ஒரு மா’ என்பதாக ஒரே ஒரு மாம்பழத்தைப் பழுக்கவிட்டுக் கொண்டிருக்கும் ஏகாம்ரம் (ஏக – ஒரு; ஆம்ரம் – மா) என்றால் கிட்டின உறவு மாதிரி. அதனால் அது ஸம்பந்தமாக ஒரு காளமேகக் கவிதை பார்க்கலாம்.

‘ஒரே ஒரு மா’ என்கிற போது அதைவிடக் குறைச்சலில்லை என்று ரொம்பச் சின்னதாக ஒரு நம்பரைச் சொன்னாற்போலிருக்கிறது. நான் சொல்லப் போகிற கவிதையிலோ எல்லாமே ஒன்றுக்கும் சின்ன நம்பர்களாக வரும்.

“ஒன்றைவிடச் சின்ன பின்னங்களாக முக்கால், அரை, கால், அரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா, கீழரை என்று இருக்கிற எண்ணிக்கைகளையெல்லாம் குறிப்பிட்டு ஏகாம்ரநாதர் ஸம்பந்தமாக ஒரு வெண்பா பண்ணிக் காட்டும்” என்று மற்ற கவிகள் சாலஞ்ஜ் செய்தார்கள்.

‘ஆசு கவித்வம்’ என்பதாக உடனுக்குடன், கவி பாடும் வல்லமையை அகிலாண்டேச்வரியின் அநுக்ரஹத்தால் பெற்றிருந்த காளமேகம் கொஞ்சங்கூட யோசிக்காமல் பாடிவிட்டார்

முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்கால ரைக்கால்கண்(டு) அஞ்சாமுன் — விக்கி
இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரை இன் றோது.

இதிலே முக்காலிருந்து, கீழரை வரை உள்ள எல்லா எண்களும் வந்துவிடுகின்றன. ஆனால் எல்லாம் வேறே அர்த்தத்தில்!

வ்ருத்தாபயமும், யமபயமும், வியாதியும், சாவும் வருவதற்கு முன்பு, கச்சி ஏகம்பனை இப்போதிலிருந்தே ஸ்தோத்ரம் பண்ணு; ‘இன்று ஓது’ என்பது வெண்பாவின் தாத்பர்யம்.

‘முக்காலுக்கு ஏகா முன்’ என்றால் இரண்டு காலோடு மூன்றாவது காலாகக் கழியைப் பிடித்துக் கொள்ளும் காலம் வருவதற்கு முந்தி என்று அர்த்தம். ‘முன்னரையில் வீழா முன்’ என்றால் ‘முன்னுச்சி மயிரில் நரை ஏற்புவதற்கு முந்தி’. ‘முன்னுரை’ என்பதில் ‘நரை’, ‘அரை’ இரண்டும் வந்து விடுகின்றன. ‘அக்காலரைக்கால் கண்டு’ என்பதில் கால், அரைக்கால் இரண்டும் வருகின்றன. ‘அந்தப் பொல்லாத காலனின் அடிச் சுவடியைக் கண்டு’ என்பது இதற்கு அர்த்தம். ‘யமன் வருகிற தடயத்தைப் பார்த்து பயப்படுவதற்கு முன்’ என்று தொடர்ந்து போகிறது. வயோதிகத்தில் கபம், ச்லேஷ்மம் என்று விக்கலும் இருமலும் ஏற்படும். ‘அதற்கு முன்’ என்கிறார் — ‘விக்கி இருமாமுன்’. இங்கே ‘இருமா’ என்ற எண்ணிக்கை வந்து விடுகிறது. மாகாணி என்பதும் ஒரு எண். காணிப் பரப்புக்கும் பெரிசாக ஊருக்கு வெளியிலே ருத்ரபூமி (மயானம்) என்று விட்டிருப்பார்கள். அதைத்தான் ‘மாகாணி’ என்று கவி சொல்கிறார். ‘மாகாணிக்கேகா முன்’ ருத்ர பூமிக்குப் போய்ச் சேருவதற்கு முன்னாலே. ‘ஒருமா’ என்ற இலக்கத்தையே ஏக ஆம்ரமான ஒருமா ஆக்கிக் கொண்டு விடுகிறார். காஞ்சீபுரத்தில் இந்த ஒரு மாவின் கீழே வஸிக்கிறவரைத்தான் ‘கச்சி ஒரு மாவின் கீழரை’ என்கிறார். அவரை, இப்பவே பிடித்து ஸ்தோத்ரம் செய்: “இன்றோது”.

ஏகத்துக்குக் கீழ்ப்பட்ட நம்பர்களால் ஏகாம்ரரைப் பற்றிய நினைப்பில் கொண்டு சேர்த்து விடுகிறார்!

வேற்று பாஷைகளில் ஒரே சொற்றொடர்

ஒரு பாஷையில் இரண்டர்த்தம் த்வனிக்க ஒரு வார்த்தையைச் சொல்வதே ‘இருசொல்லலங்காரம்’ என்கிறோம். மந்த்ர, தந்த்ர சாஸ்திரங்களில் மிகுந்த வ்யுத்பத்தியுடன் விளங்கியவரும், அம்பாளை நினைத்த மாத்திரத்தில் தர்சிக்கும் சக்தி பெற்றவரும், ‘லலிதா ஸஹஸ்ர நாம’த்துக்கு அந்த ஸஹஸ்ர நாமம் உள்ளளவும் ப்ரகாசிக்கக் கூடிய பாஷ்யத்தை எழுதியவருமான பாஸ்கரராயர் இரண்டு வேறு பாஷைகளில் ஒரே சொற்றொடர் வெவ்வேறு பொருள் கொடுப்பதை வைத்து ஹாஸ்யமாக ஒரு கவிதை செய்திருக்கிறார். புதிர் போடுகிற மாதிரி நம்மையே விடை கேட்டிருக்கிறார்.

ந ஸ்யாத் சேத் இதி வாக்யஸ்ய
கோ (அ)ர்த்த: கஸ்மிந் பிக: ப்ரம: |
ஆந்த்ரீ கீர்வாண பாஷாப்யாம்
ஏகமேவோத்தரம் வத ||

“தெலுங்கு பாஷையில் ‘இல்லையானால்’ என்று அர்த்தம் கொடுக்கவேண்டும்; ஸம்ஸ்கிருதத்தில், ‘எதனிடத்தில் குயில் என்ற பிரமை உண்டாகுமோ அது’ என்று அர்த்தம் கொடுக்க வேண்டும்; இவ்வாறு இரண்டு பாஷைகளில் இரண்டு அர்த்தம் கொடுக்கக்கூடியதாகவுள்ள ஒரே வார்த்தையைச் சொல்லு” என்று ஸ்லோக ரூபமாகக் கேள்வி கேட்கிறார்.

நீங்களே யோசித்து பதில் சொல்லுங்கள் என்று நான் quiz நடத்தப் போவதில்லை! அதனால் நானே அவர் சொன்ன பதிலையும் சொல்லி விடுகிறேன்.

காகபோதே” என்பதே பதில்.

‘இல்லாவிட்டால்’, ‘இல்லையானால்’ என்பதற்குத் தெலுங்கிலே ‘லேகபோதே’, ‘காகபோதே’ என்று சொல்வார்கள்.

குயில் காக்காய்க் கூட்டிலே கொண்டு போய்த் தன் முட்டையை வைத்துவிடும்; காக்காய் அதைத் தன் முட்டை என்றே நினைத்துக் குஞ்சு பொரித்துவிடும். அந்தக் குஞ்சும் காக்காய்க் குஞ்சு போலத்தான் இருக்கும். அது சத்தம் போட ஆரம்பிக்கிறபோதுதான் வித்யாஸம் தெரியும். முட்டையை வைத்துவிட்டு வந்த குயில் அது பொரிந்ததா என்று பார்ப்பதற்காக அப்புறம் போய்ப் பார்க்கும். கூட்டிலே காக்காய் முட்டை, குயில் முட்டை இரண்டுந் தான் கலந்து பொரிந்து குஞ்சுகள் வெளிவந்திருக்கும். அதிலே எது காக்காய், எது குயில் என்று வித்யாஸமே தெரியாது. அதனால் குயில் காக்காய் குஞ்சையே தன்னுடையது என்று தப்பாக நினைத்துவிடும். இப்படித் தப்பாக நினைப்பதுதான் ப்ரமை என்பது.

‘காக போதே’ என்று ஸம்ஸ்க்ருதத்தில் சொன்னால் ‘காக்காயின் குஞ்சிடத்தில்’ என்று அர்த்தம். ‘காகம்’ என்றால் காகம், ‘போதம்’ என்றால் குஞ்சு.

“குயில் என்ற ப்ரமை எதனிடத்தில் உண்டாகும்?”என்று கேட்டால் இதற்குப் பதில் என்ன? “காக்காய்க் குஞ்சிடத்தில்” என்பதுதான். அதை ஸம்ஸ்க்ருதத்தில் சொன்னால் ‘காகபோதே’. அந்த ‘காகபோதே’என்ற வார்த்தைக்கே ஆந்த்ர பாஷையில் ‘இல்லாவிட்டால்’ என்று அர்த்தம்.

த்ரிபுர ஸம்ஹார ஸ்லோகம்

நாலீகாஸநம் ஈச்வர: சிகரிணாம் தத்-கந்தரோத்தாயிநோ
கந்தர்வா: புநர்-ஏதத்-அத்வ-பதிகௌ சக்ரே ச தத்-தாரக: |
பத்ரீ-தத்-ப்ரபு-வைரிணாம் பரிப்ரூடோ ஜீவா ச யஸ்யாபவத்
ஜீவாந்தேவஸதாம் ரிபு-க்ஷய-விதௌ தேவாய தஸ்மை நம: ||

இப்படியாகப் பரமேச்வராம்சமான அப்பைய தீக்ஷிதர் பரமேச்வரனின் த்ரிபுர ஸம்ஹாரத்தைப் பற்றி ஸ்லோகம் செய்திருக்கிறார்.

என்ன அர்த்தமென்றால்: “ஜீவாவின் சிஷ்யர்களுடைய விரோதிகளின் ஸம்ஹாரத்தின்போது எந்த தேவனுக்கு சிகரங்களின் ஈச்வரன் நாலீகாஸனமாகவும், அதன் (நாலீகாஸனத்தின்) கண்டத்திலிருந்து வெளிவந்தவை கந்தர்வர்களாகவும், அவர்களுடைய (கந்தர்வர்களுடைய) மார்க்கத்தில் செல்லும் இரண்டு யாத்ரிகர்கள் சக்ரமாகவும், அதை (சக்ரத்தை) தரிக்கிறவர் பத்ரீயாகவும், அந்த பத்ரீக்கு ப்ரபுவின் சத்ருக்களுடைய தலைவன் ஜீவாவாகவும் பயனாயிற்றோ அந்த தேவனுக்கு நமஸ்காரம்”இப்படி அர்த்தம்.

அர்த்தமாவது? ஒரு அர்த்தமும் ஆகவில்லையே? ஜீவாவாவது, நாலீகாஸனமாவது, பத்ரீயாவது! ஒன்றுக்கொன்று என்ன ஸம்பந்தம்? ஜீவா சிஷ்யர் ஸம்ஹாரத்தில் பத்ரீ சத்ருத் தலைவன் ஜீவாவாக ஆவதாவது? மஹாபெரியவராகச் சொல்லப்படும் அப்பைய தீக்ஷிதரா இப்படித் தலைகால் புரியாமல் பண்ணியிருக்கிறார்?

இரண்டு அர்த்தமுள்ளதாகப் பல வார்த்தைகள் இருக்கின்றன அல்லவா? இவற்றை உபயோகித்து வார்த்தை விளையாட்டுப் பண்ணுவதில் அப்பைய தீக்ஷிதர் ரொம்ப நெருடலாகச் செய்த ஸ்லோகமே இது. வேதாந்தத்துக்கு மூலப்ரமாணமாக இருக்கப்பட்ட ‘ப்ரஹ்ம ஸூத்ர’த்தின் ஆரம்ப பாகத்துக்கு அவர் ‘ந்யாய ரக்ஷாமணி’என்று வ்யாக்யானம் செய்திருக்கிறார். அதிலே ‘தத்-ஹேது வ்யபதேசாச்ச’ (1.1.14) என்று வரும் ஸூத்ர விரிவுரையிலே இந்த ஸ்லோகம் வருகிறது. எதற்காக என்பதைப் புரியவைப்பது இப்போது அவசியமில்லை. ‘ஏதோ ஒரு intellectual exercise இதிலும் குஷி இருக்கிறது’ என்றுதானே சமத்கார ஸ்லோகங்களைப் பார்க்கிறோம்? அப்படிப்பட்டதான ஸ்லோகத்தைப் பற்றி மாத்திரம் சொல்கிறேன்.

இதில் ஒரு வார்த்தையை முதலில் பெயர்ச் சொல்லாகச் சொல்லியிருக்கும். உடனே ‘அதன்’, ‘அதற்கு’, என்கிறாற்போல relative pronoun, adjectival pronoun என்பதாகவெல்லாம் அதே வார்த்தையைப் பற்றி ‘தத்’, ‘ஏதத்’ என்று மறுபடி வரும். இப்படி மறுபடி அந்த வார்த்தை வரும்போது, வார்த்தை அதுவேதான் என்றாலும் அர்த்தம் வேறாக இருக்கும்.

இப்படி ஐந்து வார்த்தைகளை இரண்டு அர்த்தத்தில் இந்த ஸ்லோகத்தில் சொல்லியிருக்கிறது. ‘நாலீகாஸநம்’ என்பது ஒன்று. நாலீகம் என்றால் பாணம், தாமரை என்று இரண்டு அர்த்தம். அதனால் பாணத்தை வைத்து இழுக்கிற ஆஸனமாயுள்ள தநுஸுக்கு நாலீகாஸநம் என்று பேர். தாமரையில் உட்கார்ந்திருக்கும் பிரம்மாவுக்கும் நாலீகாஸநர் என்று பேர். ‘கந்தர்வ’ என்பது இரண்டாவது வார்த்தை. அதற்கு தேவ ஜாதியான கந்தர்வர் என்பதோடு, குதிரை என்றும் ஒரு அர்த்தம். ‘சக்கரம்’ என்பது மூன்றாவது வார்த்தை. அது தேர்ச் சக்கரத்தையும், இன்னொரு அர்த்தத்தில் விஷ்ணுவின் கையிலுள்ள சக்ராயுதத்தையும் குறிக்கும். நாலாவது வார்த்தை ‘பத்ரீ’ என்பது. இதற்கு பாணம் என்றும் பக்ஷி என்றும் இரண்டு அர்த்தம். இரண்டு அர்த்தமுள்ள ஐந்தாவது வார்த்தை ‘ஜீவா’ என்பது — நாண்கயிற்றுக்கு ஜீவா என்று பெயர்; தேவகுருவான ப்ருஹஸ்பதிக்கும் ‘ஜீவ’ என்று ஒரு பெயர்.

இரட்டை அர்த்த வார்த்தைகளைத் தவிர ஒற்றை அர்த்தமுள்ளதிலேயே புரியாததாயிருக்கிறவற்றைப் பார்ப்போம். சிகரங்களின் ஈச்வரன் என்பது மேரு பர்வதம். நர்லீகாஸனத்தின் கண்டத்திலிருந்து வெளிவந்தவை என்பது பிரம்மாவின் வாக்கிலிருந்து வந்த வேதங்கள். கந்தர்வர்களுடைய மார்க்கம் என்பது ஆகாச வீதி. அதிலே யாத்ரை பண்ணும் இருவர் ஸூர்ய சந்திரர்கள். சக்ரத்தை தரிப்பவர் மஹா விஷ்ணு. பத்ரீக்கு ப்ரபு பக்ஷிகளின் ராஜனான கருடன். அந்த ப்ரபுவின் சத்ருக்கள் ஸர்ப்பங்கள். ஆகையால் சத்ருக்களின் தலைவன் என்பது ஆதிசேஷனை, தமிழில் அர்த்தம் சொல்லும்போது முதலில் ‘ஜீவாவின் சிஷ்யர்கள்’ என்று சொன்னது ஸ்லோகத்தில் கடைசியில் வருகிறது. இது ப்ருஹஸ்பதியின் சீடர்களான தேவகணத்தைக் குறிக்கும். இவர்களுடைய விரோதிகளின் ஸம்ஹாரம் என்பது த்ரிபுரா ஸுரர்களின் ஸம்ஹாரத்தைத் தான்.

இந்த அர்த்தங்களை ஞாபகமாக மனஸில் வைத்துக்கொண்டு, இரண்டு அர்த்தமுள்ள ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றும் இரண்டு இடங்களில் வரும்போது முதலில் ஒரு அர்த்தத்தையும், மறுபடி வருகையில் இன்னொரு அர்த்தத்தையும் எடுத்துக் கொண்டால், இந்த puzzle பண்ணுகிற ஸ்லோகத்துக்கு ‘மீனிங்’ வரும். “ஜீவா என்கிற பிருஹஸ்பதியின் சீடர்களான தேவர்களின் சத்ருக்களான த்ரிபுரரின் ஸம்ஹாரத்திலே எந்த தேவனுக்கு (மஹாதேவன் என்கப்பட்ட பரமேச்வரனுக்கு) மேரு பர்வதம் நாலீகாஸனம் என்னும் வில்லாகவும், நாலீகாஸனர் என்ற பெயரையே கொண்ட பத்மாஸனரான பிரம்மாவின் கண்டத்திலிருந்து வந்த வேதங்கள் ‘கந்தர்வ’ என்று பொருள்படும் குதிரைகளாகவும், கந்தர்வ ஜாதியின் மார்க்கமான ஆகாசத்தில் செல்லும் இரு யாத்ரிகர்களான சந்த்ர-ஸூர்யர்கள் தேர்ச் சக்ரமாகவும் சக்ராயுதபாணியான மஹாவிஷ்ணு பத்ரீ என்னும் பாணமாகவும், பத்ரீ என்றே பெயர் கொண்ட பக்ஷிகளின் ராஜாவான கருடனின் சத்ருக்களுக்குத் தலைவனான ஆதிசேஷன் ஜீவா என்னும் நாண்கயிறாகவும் பயனாயினவோ அந்த மஹாதேவனுக்கு நமஸ்காரம்.”

அர்த்தமாகிவிட்டதல்லவா? த்ரிபுர ஸம்ஹாரத்திலே ஈச்வரனுடைய ரத சக்கரங்கள் ஸூர்யனும் சந்தரனுமே! அந்த ரதத்தில் வேதங்களையே அச்வ ரூபத்தில் பூட்டியிருந்தது. ஈச்வரன் அப்போது மேரு பர்வதத்தை தநுஸாக்கி அதற்கு நாண்காயிறாக ஆதிசேஷனைப் பிடித்துக் கட்டி, ஸாக்ஷாத் மஹாவிஷ்ணுவையே அம்பாகத் தொடுத்திருந்தார்.

இந்தப் புராண விஷயங்களை வேதாந்த வ்யாக்யான புஸ்தகத்தில் தர்க்க வ்யாகரண ரீதியாக தத்வத்தையும் வார்த்தையையும் விளக்கும் பொருட்டுச் சமத்கார கவிதையாக தீக்ஷிதர் கொடுத்திருக்கிறார். கவிதை என்பது இத்தனை சாஸ்திரங்களையும் இணைத்து, அவற்றுக்குக் கைகொடுக்கிறது!


இரு பொருளில் ஒரே சொல்

ஒரே வார்த்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தமிருப்பதை வைத்துப் பலவிதமான ச்லேஷை (சிலேடை) கவிதைகள் பண்ணப்பட்டிருக்கின்றன.

நம்முடைய ஆசார்யாளே இப்படி ஒன்று செய்திருக்கிறார். பவானி என்ற வார்த்தை பெயர்ச் சொல்லாயிருக்கிறபோது அம்பாளின் பேர். அதே ‘பவானி’ என்பது வினைச்சொல்லாயும் இருக்கிறது. இங்கே ‘பவானி’ என்பதற்கு ‘ஆகிறேன்’ என்று அர்த்தம். இந்த இரண்டு அர்த்தங்களையும் வைத்து விளையாடி ஆசார்யாள் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் “பவானி த்வம் தாஸே”என்று ஸ்லோகம் சொல்லியிருக்கிறார்1.

ஆசார்யாளையே அவருடை சிஷ்யரான தோடகர் “பவ ஏவ பவான்” என்று ஸ்துதிக்கிறார். இங்கே “பவான்” என்றால் “தாங்கள்”, “பவ” என்றால் சிவபெருமான். “தாங்கள் சிவபெருமானே” என்று அர்த்தம்.

புதுக்கோட்டையில் பவாநி நாய்க் என்று ஒரு திவான் இருந்தார். மஹாராஷ்டிர ப்ராம்மணர். மிகவும் தர்ம சீலர். முக்யமாக வித்வான்களை விசேஷேமாக ஆதரித்தவர். அவர் நடத்தின வித்வத் ஸதஸில் ‘மன்னார்குடிப் பெரியவாள்’ என்றே மரியாதையாகச் சொல்லப்பட்ட ராஜு சாஸ்த்ரிகள்கூடக் கலந்து கொண்டிருக்கிறார். ‘சாடு’ என்பதாகத் தனி மநுஷ்யர்களின் குணங்களைச் சிறப்பித்து ஸ்லோகங்கள் சொல்வதுண்டு. இம்மாதிரி பவாநி நாய்க்கை ஸ்தோத்ரிக்கும் ஒரு ஸ்லோகத்திலும் ‘பவாநி’ என்பதை noun-ஆகவும் verb -ஆகவும் இரண்டு அர்த்தத்தில் சொல்லியிருக்கிறது. “பவாநி உத்தம புருஷன் என்பதற்குப் பெரிதாக வ்யாகரண விதி செய்து ஸ்தாபிக்க வேண்டியதில்லை. இந்த பவாநியைப் பார்த்தாலே போதும்” என்று பொருள் தரும்படி அந்த ச்லோகம் இருக்கிறது.

தன்மை, first person என்று ஒருத்தன் தன்னையே ‘நான்’ என்று சொல்வதை ஸம்ஸ்க்ருதத்தில் ‘உத்தமபுருஷன்’ என்பார்கள். ‘நீ’ என்கிற முன்னிலை, second person என்பதை ‘மத்யம புருஷன்’ என்பார்கள். ‘அவன்’ என்கிற படர்க்கை, third person-ஐ ‘ப்ரதம புருஷன்’ என்பது. உத்தம புருஷன் என்றால் உசந்த குணங்களுள்ளவனென்றும், மத்யம புருஷன் என்றால் ஸாமான்ய ஆஸாமியென்றும் இன்னொரு அர்த்தம் இருக்கிறதல்லவா? இதை வைத்து word play பண்ணியிருக்கிறது! “பவாநி” [ஆகிறேன்] என்பது ‘உத்தம புருஷ’னான first person தானே?

இதேபோல இன்னொரு ஸ்லோகம்: வேங்கடராம சாஸ்த்ரி என்று நூற்றைம்பது வருஷத்துக்கு முந்தி வித்வான் இருந்தார். ஸாதாரணமாக (நான் சொல்வதைத் தப்பாக நினைக்கக் கூடாது) வித்வான்களென்றால் வாங்கிக் கொள்பவர்களாகத்தான் இருப்பார்களே தவிர கொடுப்பவர்களாக இருப்பதில்லை! பல பேரைப் பற்றிக் கேள்வியும் படுகிறோம்: “என்னவோ தான தர்மம் என்று ப்ரமாதமாக உபந்நியாஸம் செய்கிறார்! இப்படிப் பண்ணியே எவ்வளவோ பங்களா, டெபாஸிட் எல்லாம் சேர்த்துக் கொண்ட பிறகும், பிறத்தியாருக்குத்தான் உபதேசம் செய்கிறாரே தவிர, தான் ஒரு காசுகூட ஒரு தர்மத்துக்கும் கொடுக்கமாட்டேன் என்கிறாரே” என்று சொல்லுகிறார்கள். நம் காலத்தில் இதற்கு விதி விலக்காக இருந்த ஒரு சில பேர்களில் தேதியூர் [ஸுப்ரஹ்மண்ய] சாஸ்திரிகளை முதலில் சொல்ல வேண்டும். இவர் மாதிரியே ஒரு எக்ஸெப்ஷனாக அந்த நாளில் வேங்கடராம சாஸ்திரிகள் இருந்திருக்கிறார்.

அவர் இருந்தது இருக்கட்டும். இப்போது கொஞ்சம் grammar சொல்லித் தருகிறேன். ‘தேஹி‘ என்ற வார்த்தை அநேகமாக எல்லாருக்கும் தெரிந்திருக்கும். ‘கொடு’ என்று யாசிக்கிற வார்த்தை. ஸெகன்ட் பெர்ஸனாக உள்ள ஒருத்தரைப் பார்த்துக் கேட்பது ‘தேஹி’. அதாவது இது மத்யம புருஷன். ‘தத்’, ‘தா’ என்பது இதற்கு ‘ரூட்’. ‘To give’ என்று அர்த்தம். ‘நீ கொடு’ என்பதற்கு ‘தேஹி’. ‘நான் கொடுக்கிறேன்’ என்பதற்கு இதே ரூட்டிலிருந்து ‘தத்யாம்’ என்று சொல்ல வேண்டும். இது ஃபர்ஸ்ட் பெர்ஸன் என்கிற உத்தம புருஷன்.

வேங்கடராம சாஸ்திரிகள் மற்ற வித்வான்களுக்கும் பண்டிதர்களுக்கும் நிறைய ஸம்மானம் செய்து ஆதரித்தவர். அதனால் அவர்களில் ஒருவர் அவரைப் பற்றிப் புகழ்ந்து ஒரு ஸ்லோகம் செய்தார். அதிலே நான் மேலே சொன்ன ‘க்ராமர்’ ஸமாசாரங்களை ரஸமாகச் சேர்த்திருக்கிறார். என்ன சொல்கிறாரென்றால்: ஸரஸ்வதி இதுவரை ரொம்பவும் வ்யாகுலப்பட்டுக் கொண்டிருந்தாள். எதற்காக?’ தான் வெறும் ஸாதாரண மநுஷ்யர்களான மத்யம புருஷர்களையே ஆச்சரயிக்க வேண்டியிருக்கிறதே!’ என்றுதான் வியாகுலப்பட்டுக் கொண்டிருந்தாளாம். வித்வான்களை ஸரஸ்வதி ஆச்ரயிப்பதாகவும், தனிகர்களை லக்ஷ்மி ஆச்ரயிப்பதாகவும் சொல்வது வழக்கம். ” ‘நடுத்தரப் பேர்வழிகளையே நாம் அடைய வேண்டியதாயிருக்கிறதே’ என்று இதுமட்டும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த ஸரஸ்வதி இப்போதுதான் கவலை போய் ஸந்தோஷம் அடைந்திருக்கிறாள். ஏனென்றால் இப்போது அவள் ஆச்சரயிருப்பவர்களில் வேங்கடராம சாஸ்த்ரிகள் என்ற உத்தம புருஷர் ஒருத்தர் இருக்கிறாரல்லவா?” என்று சொல்கிறார்.

‘தேஹி, தேஹி, தேஹி’ என்றே போய்க் கொண்டிருந்தவர்கள் மத்யம புருஷ வாக்யத்தைச் சொன்னவர்கள்; அப்படிப் போய்க்கொண்டிருந்த பண்டித ஸமூஹத்திலே வாரிக்கொடுப்பவராக, “நான் கொடுக்கிறேன்; வாங்கிக்கொள்ள வாருங்கள்” என்று ‘தத்யாம்’ சொன்னவர் வேங்கடராம சாஸ்த்ரி. உத்தம புருஷ வாக்யத்தைச் சொன்னவர் இவர்தான்!

அவரவர் சொன்ன வார்த்தைக்கு ‘க்ராமர்’படி இருக்கிற பேரே அவரவருடைய குணத்தையும் காட்டுவதாக இருக்கிறதென்பதை வைத்து இந்த ஸ்லோகம் சமத்காரமாகத் செய்யப்பட்டிருக்கிறது.

ஏதாவந்தமநேஹஸம் பகவதீ பாரத்யநைஷீதஹோ
யா தேஹீதி ஹி மத்யமேந புருஷேணாத்யந்தகிந்நா ஸதீ |
ஸ்ரீமத் வேங்கடராம நாமக ஸுதீ தௌரேய-மாஸாத்யஸா
தத்யாமித்யதுநோத்தமேந புருஷேணாநந்தமாவிந்ததி ||

(ஏதாவந்தம் அநேஹஸம் பகவதீ பாரதி அநைஷீத் அஹோ
யா தேஹி இதி ஹி மத்யமேந புருஷேண அத்யந்த கிந்நா ஸதீ |
ஸ்ரீமத் வேங்கட்ராம நாமக ஸுதீ தௌரேயம் ஆஸாத்யஸா
தத்யாம் இதி அதுநா உத்தமேந புருஷேண ஆநந்தம் ஆவிந்ததி ||)

அஹோ – அய்யோ பாவம்! ஏதாவந்தம் அநேஹஸம் – இந்தக் காலம் வரையில்; தேஹி இதி – ‘தேஹி’ என்கிற; மத்யமேந புருஷேண – மத்யம புருஷர்களால்; அத்யந்த கிந்நா ஸதீ – ரொம்பவும் மனக்லேசம் கொண்டவளாகி; பகவதீ பாரதி – ஸரஸ்வதி தேவி; அநைஷீத் – தளர்ந்து depressed ஆகியிருந்தாள். (ஹி – என்பது ஒரு அபிப்ராயத்திற்கு அழுத்தம் கொடுக்கிற ஒற்றையெழுத்து வார்த்தை.) அதுநா – இப்போது; ஸ்ரீமத் வேங்கடராம – மரியாதைக்குகந்த வேங்கடராமர் என்னும்; நாமக – பெயர் கொண்ட; ஸுதீ – ஸத்வித்வானை; தௌரேயம் – (ஸரஸ்வதியானவள்) தன்னைத் தாங்கும் ஆச்ரயமாக; ஆஸாத்யஸா – அடைந்து; தத்யாம் இதி – ‘தத்யாம்’ என்கின்ற; உத்தமேந புருஷேண – உத்தம புருஷனால், ஆநந்தம் – ஆனந்தத்தை; ஆவிந்ததி – அநுபவிக்கிறாள்.


1விவரம் “தெய்வத்தின் குரல்” முதற்பகுதியில் “பவானித்வம்” என்ற உரையில் காண்க

கூட்டுவதும் குறைப்பதும்

பசுவின் வால் குச்சத்தில் நடுவிலிருந்து ஒவ்வொரு ரோமமாக எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிறுத்துக் கொண்டு வருகிறதோ அப்படி ஒரு வார்த்தை ஒவ்வொரு எழுத்தாகக் குறைந்துகொண்டே வருமாறு சித்ர கவிதை எழுதுவதுண்டு. பசு வாலை வைத்து இதற்கு ‘கோபுச்ச யதி’ என்று பெயர்.

முத்துஸ்வாமி தீக்ஷிதரும் கவிகளைப் போல இரண்டு மூன்று கீர்த்தனங்களில் இந்த முறையைக் கையாண்டிருக்கிறார். ‘மாயே’ என்ற தரங்கிணி ராக க்ருதியில் ‘ஸரஸகாயே, ரஸகாயே, ஸகாயே, அயே’ என்று பிரயோகம் பண்ணியிருக்கிறார். ‘ஸரஸகாயே’ என்றால் ‘அன்பும் அழகும் கொண்ட மேனியாளே’. ‘ரஸகாயே’ என்றால் (உபநிஷத் வாக்யப்படி) ரஸ ஸவ்ரூபமாயிருப்பவுள். ‘ஸகாயே’ என்றால் அரூபமாய் மட்டுமில்லாமல் ரூபமும் கொண்டிருப்பவள். ‘அயே’ என்றால் குழந்தை அம்மாவைக் கூப்பிடுகிற மாதிரி பராசக்தியைச் செல்லமாகக் கூப்பிடுவது.

இதேபோல ஆனந்த பைரவியில் ‘த்யாகராஜ யோக வைபவம்’ என்று ஆரம்பித்து, அடுத்ததாக இதிலே ‘த்ய’வை த்யாகம் பண்ணி, ‘அகராஜ யோக வைபவம்’ (அகராஜன் என்றால் மலையரசனான ஹிமோத்கிரி) , அதற்கப்புறம் ‘ராஜயோக வைபவம்’, ‘யோக வைபவம்’, ‘வைபவம்’, ‘பவம்’ (பவஸகாரத்திலிருந்து கடத்துவிக்கிறவனுக்கே ‘பவன்’ என்றும் ஒரு முக்யமான நாமா உண்டு) , ‘வம்’ என்று முடிக்கிறார். ‘வம்’ என்றால் அம்ருத மயமாயிருப்பவன்.

இந்தப் பாட்டிலேயே அநுபல்லவியில் இதற்கு எதிர்வெட்டாக, ஒரு சின்ன வார்த்தையில் ஆரம்பித்து ஒவ்வொரு எழுத்தாகச் சேர்த்துக்கொண்டே போகிறார். இதற்கு ‘ஸ்ரோதோவாஹம்’ என்று பேர். சின்னதாக ஒரு ஓடை ஆரம்பித்து அதிலே ஒவ்வொன்றாகப் பல சின்னச் சின்ன நதிகள் சேர்ந்து அது பெரிசாகப் போவதுதான் ‘ஸ்ரோதோவாஹம்’. தீக்ஷிதர் இப்படிச் செய்திருக்கிறார். ‘சம்’ (மங்களம் என்று அர்த்தம்) என்பதில் ஆரம்பித்து, ‘ப்ரகாசம்’, ‘ஸ்வரூப ப்ரகாசம்’ என்றிப்படியே ‘சிவ சக்த்யாதி ஸகலதத்வ ஸ்வரூப ப்ரகாசம்’ என்கிற வரைக்கும் போயிருக்கிறார்1.

பாமரன் ஒருவன்கூட “கவயாமி, வயாமி, யாமி” என்று கோபுச்ச யதியில் கவி பண்ணினதாகக் கதை இருக்கிறது.

போஜராஜா மஹாரஸிகனாக, கவிதை ஆர்வமுள்ளவனாக இருந்தான். அதனால் தன் ராஜதானியான தாரா (இப்போதைய தார்) நகரத்தில் கவி பண்ணத் தெரியாத ஒருத்தரும் இருக்கப்படாது, அவர்கள் கிராமத்துக்குப் போய்விட வேண்டும் என்று உத்தரவு போட்டான். ஸேவகர்களை விட்டு, தலைநகரிலே கவி பாடத் தெரியாமல் யார் இருந்தாலும் ராஜ ஸபைக்கு இழுத்துக்கொண்டு வரும்படி சொன்னான். அவர்கள் ஊர் பூரா தேடினதில் அத்தனை பேரும் கவி பாடிக் கொண்டிருந்தார்களாம். போஜனுக்கிருந்த ஸரஸ்வதி ப்ரஸாதத்தால் அவனுடைய ராஜதானியில் இப்படி அவளுடைய விலாஸம் ப்ரகாசித்துக்கொண்டிருந்தது. எனவே கொடுமையாகத் தோன்றுவதான அப்படிப்பட்ட உத்தரவைப் போடவும் அவனுக்கு ‘ரைட்’ இருந்தது, ந்யாயம் இருந்தது என்று தெரிகிறது.

கடைசியில் தேடிப் பிடித்து, கவி பாடத் தெரியாமலிருந்த ஒருத்தனே ஒருத்தனான ஒரு சேணியனை – துணி நெய்கிறவனை – ஸபைக்கு இழுத்துக்கொண்டு போனார்கள்.

“உனக்குக் கவி பாட வராதா?” என்று போஜராஜன் அவனைக் கேட்டான்.

ராஜாவைப் பார்த்தான் சேணியன். ஸரஸ்வதி கடாக்ஷம் நர்த்தனம் பண்ணுகிற அந்த முகத்தைப் பார்த்தவுடனேயே சேணியனுக்குள்ளே கவித்வ சக்தி பாய்கிற மாதிரி இருந்தது. உடனே தன்னையறிமால்,

காவ்யம் கரோமி நஹி சாருதரம் கரோமி
யத்நாத் கரோமி யதி சாருதரம் கரோமி

என்று கவிதையாகவே பதில் சொல்ல ஆரம்பித்தான். அதாவது, “ஓ, கவி கட்டுகிறேனே! ஆனாலும் ரொம்ப நன்றாகக் கட்டுவேன் என்று சொல்ல முடியாது. ப்ரயத்தனம் பண்ணிப் பார்த்தேனேயானால் ரொம்ப அழகாகவே கூடக் கட்டினாலும் கட்டிவிடுவேன்” என்று சொன்னான்.

கவித்வ தாரை உள்ளே சுரக்க ஆரம்பித்துவிட்டதென்றாலுங்கூட, முதல் முதலாகக் கவி பண்ணும்போது மிக உயர்வாகப் பண்ண முடியும் என்று சொல்லிக் கொண்டுவிடக்கூடாது. அதே ஸமயத்தில் எப்போதுமே ஏதோ ஸுமாராகத்தான் பண்ண முடியும் என்றும் விட்டுக் கொடுத்துவிடாமல் கான்ஃபிடன்ஸோடு, ராஜாவுக்கும் உத்ஸாஹம் தரும்படிச் சொல்ல வேண்டும் என்று இப்படி இரண்டு அடி சொன்னான். இதை நாலடி ஸ்லோகமாக முடிக்கவேண்டுமென்று அடுத்த இரண்டடியை ஆரம்பித்தவுடனேயே ப்ரதிபா சக்தி பொங்கிக் கொண்டு வந்தது. ‘ஹை க்ளாஸ் பொயட்ரி’ என்னும்படியாகவே அந்தப் பின்பாதி அமைந்துவிட்டது.

பூபால-மௌலி மணிரஞ்ஜித-பாதபீட
ஹே ஸாஹஸாங்க கவயாமி வயாமி யாமி ||

என்று ப்ராஸம், கீஸம் போட்டுத் தடதடவென்று முடித்து விட்டான். “அநேக ராஜாக்களின் கிரீடங்களிலுள்ள ரத்னங்களின் ஒளியால் சிவப்பாகச் செய்யப்பட்ட பாத பீடத்தை உடையவனே! (அதாவது இதர ராஜாக்கள் போஜனின் அடியில் தங்கள் முடி படக் கிடக்கிறார்களாம்! அந்த முடிகளிலுள்ள கிரீட ரத்னங்களால் அவனுடைய பாதபீடம் சிவப்பாகிவிட்டதாம்!) “ஸாஹஸச் செயல்களே ஸஹஜமாகிவிட்டவனே! நான் ‘கவயாமி’ : ‘கவி பாடுகிறேன்’ ‘வயாமி’ : நெசவு பண்ணுகிறேன். (‘வயனம்’ என்றால் நெய்வது; weaving என்பது இதே தாதுவில் உண்டானது தான்.) ‘யாமி’ : போய்விட்டு வருகிறேன்”, என்று கிளம்பி விட்டான்.

‘கவி பாடாவிட்டால் ராஜ தண்டனை கிடைத்திருக்கும். நல்லவேளை, ஏதோ அத்ருஷ்ட வசத்தால் பாடியாய்விட்டது. தண்டனைக்குத் தப்பினோம். இன்னம் பாடச் சொன்னால் வருமோ வராதோ? அதனால் ஸம்மானத்துக்குக் காத்துக்கொண்டிருக்காமல் முதலில் திரும்பிப் போய்ச் சேருவோம்’ என்றுதான் “யாமி – போறேம்பா”2 என்று கிளம்பிவிட்டான்.

இங்கே ‘கவயாமி வயாமி யாமி’ என்பது கோபுச்சம்.


1‘ஸ்ரீவரலக்ஷ்மி’ என்னும் ஸ்ரீராக க்ருதியிலும் ‘ஸ்ரீ ஸாரஸபதே, ரஸபதே, ஸபதே, பதே’ என்று கோபுச்ச யதியைக் கையாண்டிருக்கிறார்.

2அள்ளித்தரும் போஜனின் ஸம்மானமின்றியே செல்ல வேண்டியிருப்பதில் அந்தச் சேணியனுக்கு இருந்திருக்கக்கூடிய தாபம் அவ்வளவும் த்வனிக்க ஸ்ரீ பெரியவர்கள் இந்த “போறேம்பா” சொன்னதை இங்கே தெரிவிக்க முடியாவிட்டாலும் வார்த்தையிலாவது “போகிறேனப்பா”வைப் “போறேம்பா”வாகத் தருகிறோம்.

ஒரே எழுத்தாலான ஸ்லோகம்

இங்கே யா, மா, நீ, ழீ, கா, ணா என்ற ஆறே எழுத்துக்களைத் திருப்பித் திருப்பிச் சொல்லிச் செய்யுள் செய்திருக்கிறது.

‘சப்த சித்ர காவ்யம்’ என்பதாக இப்படி சில அக்ஷரங்களை வைத்துக்கொண்டே சப்த ஜாலம் பண்ணுவதில் ஒன்று ஸம்ஸ்கிருதத்தில் சொல்கிறேன்.

மித்ராத்ரிபுத்ர நேத்ராய த்ரயீசாத்ரவ சத்ரவே |
கோத்ராரி காத்ர-ஜத்ராய கோத்ராத்ரே தே நமோ நம: ||

இது ஈச்வரன், விஷ்ணு இருவருக்கும் பொருந்துமாறு செய்த ஸ்லோகம்.

‘மித்ர அத்ரி புத்ர நேத்ர’ என்றால் மித்ரன் என்ற ஸூர்யனையும், அத்ரி புத்ரனான சந்திரனையும் இரு கண்களாகக் கொண்டவன். சிவன், விஷ்ணு இரண்டு பேரையுமே இவ்விதம் ஸூர்ய-சந்திரர்களை நேத்ரமாகக் கொண்டவர்களென்று சொல்வதுண்டு. ‘த்ரயீ சாத்ரவ சத்ரு’ என்றால் வேத சத்ருக்களான அஸுரர்களின் சத்ரு. இதுவும் இருவருக்கும் பொருந்துவதே. ‘கோத்ராரி கோத்ரஜ த்ர’ என்றால் மலைகளுக்கு சத்ருவான இந்திரனுடைய குலத்தில் பிறந்த தேவர்களை ரக்ஷிப்பவர். சிவன் விஷ்ணு இருவரும் இந்த டெஃபனிஷனுக்கும் ஆன்ஸர் பண்ணுகிறார்கள். “கோத்ராத்ரே தே நமோ நம:” என்றால் “பசுவைப் பாலிக்கிற உனக்கு மறுபடி மறுபடி நமஸ்காரம்” என்று அர்த்தம். பசுபதியான பரமேச்வரன், கோபாலனான மஹாவிஷ்ணு இருவருந்தான் இவ்வாறு நமஸ்காரத்துக்குப் பாத்திரமாகிறார்கள்!

இதையெல்லாம் விட அர்த்தம் சொல்ல ரொம்பக் கடினமாக, ஒரே ஒரு எழுத்தை வைத்தே ஒரு ஸ்லோகம் ‘சிசுபால வத’த்தில் மாகன் பண்ணியிருக்கிறான். ஸீதை ‘த’ (ta) வை எடுக்கச் சொன்னாளென்றால், இவன் ‘த’ (da) ஒன்றை வைத்தே முழு ஸ்லோகம் செய்திருக்கிறான். சொல்வதற்கே சிரிப்பாக இருக்கிறது!

தாததோ துத்ததுத்தாதீ தாதாதோ துததீததோ: |
துத்தாதம் தததே துத்தே ததாத தததோதத: ||

கொடுக்கிறவர்களுக்குக் கிருஷ்ண பரமாத்மா தானும் அருளைக் கொடுக்கிறார்; கொடுக்காமல் கெடுக்கிறவர்களுக்குத் தானும் கொடுக்காமல் கெடுதலே செய்கிறார் என்பது தாத்பர்யம்.