ஸாரம் இதுவே

அர்த்த சாஸ்திரத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்வதென்றால் அது மேலெழப் பார்க்கிறபோது ‘அர்த்தந்தான் எல்லாவற்றுக்கும் மேலே’ என்று சொல்வதாகத் தோன்றினாலும் ஆழப் போகும் போது தர்மத்தை மீறி அர்த்தத்துக்குப் போகப்படாது என்று சொல்வதாகவே தெரியும்.

எடுத்துக்கொண்ட விஷயத்துக்குக் கூடுதலாகவே சிறப்புத் தருவது என்ற வழக்கத்தில்தான் அர்த்தத்தை அர்த்த சாஸ்த்ரத்தில் விசேஷிப்பது. ராஜாவின் போஷணையில்லாவிட்டால், தர்மிஷ்டர்களையும் ஞானிகளையும் துஷ்டர்களிடமிருந்து அவன் ரக்ஷிக்காவிட்டால் ஒரு தேசத்தில் தர்மம் ஏது, ஞானம் ஏது? இதைக் காட்டியே, ‘பொதுவாக நாலு புருஷார்த்தங்களில் அர்த்தமானது காமத்துக்கு மட்டுமே அநுகூலம் என்று நினைக்கப்பட்டாலும், அதுதான் மற்ற இரண்டான தர்மம், மோக்ஷம் இவற்றுக்கும் ஆதாரம்’ என்று சாணக்யன் கூறுகிறார். மஹாபாரதத்தில் கூட க்ருஹஸ்தன் பிக்ஷை போட்டுத்தான் ப்ரம்மசாரியும், ஸந்நியாஸியும் வாழவேண்டியிருப்பதால் நாலு ஆச்ரமங்களில் க்ருஹஸ்தாச்ரமந்தான் பிரதானம் என்று இருக்கிறது. ஆனால் இப்படிச் சொன்னதாலேயே பிரம்மசர்யமும் ஸந்நியாஸமும் நிச்சயம் இருக்க வேண்டும் என்று அது அபிப்ராயப்படுவது போல், சாணக்யனும் தர்மம், மோக்ஷம் என்ற புருஷார்த்தங்களை வேண்டுபவரே என்று தெரிகிறது.

அர்த்த சாஸ்த்ரத்தைச் சார்ந்துதான் மற்ற மூன்று புருஷார்த்தங்களும் நிற்க முடிகிறது என்பதைப் போலவே இன்னொன்றும் சொல்லலாம். வேத ரக்ஷணத்திலிருந்து ஆரம்பித்து எல்லா வித்யைகளையும், அவற்றை அப்யஸிப்பவர்களையும் போதிக்கிறவர்களையும் ராஜாங்கம்தான் ரக்ஷித்து வளர்த்துத் தந்ததால் நம் ஸநாதன ஸமயத்தின் ஆதாரமான பதிநாலு தர்மப் பிராமணங்களுக்கும் அர்த்த சாஸ்திரம்தான் கவசம் என்றாகிறது.

பதினெட்டு வித்யா ஸ்தானங்கள் என்கிறபோது, நாலு உபவேதங்களில் இதைத் தவிர உள்ள ஆயுர்வேதம், தநுர்வேதம், காந்தர்வ வேதம் ஆகியவற்றுக்கும் ராஜாங்க ஆதரவு அவசியமென்பது மட்டுமின்றி ராஜாவோடேயே இந்த மூன்றுக்கும் நெருங்கின ஸம்பந்தமிருக்கிறது. யுத்தத்திலே அம்படி, விஷக் காயங்கள் முதலியன ஏற்படுமாதலால் இவற்றை குணப்படுத்துவதற்காக ராஜாவுக்கு ஆயுர்வேத ஞானம் இருக்க வேண்டும். மூலிகை வைத்யம், ஸர்ஜரி ஆகியன ராஜாவுக்குத் தெரிய வேண்டும். உள்ளே போய் உடைந்துபோன ஆயுத முனைகளை எடுப்பதற்கென்றே ‘சல்ய சாஸ்த்ரம்’ என்று ஆயுர்வேதத்தில் ஒரு பிரிவு இருக்கிறது. தநுர்வேதம் அவனுக்காகவேதான் முக்யமாய் ஏற்பட்டது. Parton of Arts -ஆக (கலைகளின் போஷனாக) இருக்க வேண்டியதும் ராஜாவின் கடமை. இதனால் காந்தர்வ வித்யையில் அவனுக்கு ஸம்பந்தம் வந்து விடுகிறது. போஜன், விக்ரமாதித்யன், மஹேந்திரவர்ம பல்லவன், கிருஷ்ணதேவராயர், ஸமீப காலத்துச் சின்ன ஸம்ஸ்தானாதிபதிகளான எட்டையபுரம் ராஜா போன்றவர்கள் உள்பட எல்லா ராஜாக்களும் கவிகளையும், சில்பிகளையும் ஸங்கீத-நாட்ய வித்வான்கள் விதுஷிகளையும் நிரம்ப ஆதரித்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். தாங்களும்கூட அவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார்கள்.

அர்ஜுனன் விராட தேசத்தில் ந்ருத்யாசாரியனாக இருந்திருக்கிறான். உதயனன் வீணை வாசித்து மதயானையை அடக்கியிருக்கிறான். இதிஹாஸ, புராண, காவ்யங்களில் இப்படி எத்தனையோ! ராமருடைய கல்யாண குணங்களை (அயோத்யா காண்ட ஆரம்பத்தில்) விவரித்துக்கொண்டே வரும்போது, ஸங்கீதம் முதலான காந்தர்வ வித்யைகளில் அவர் லோகத்திலேயே முதல்வராக நிற்கிறவர் என்று சொல்லியிருக்கிறது: காந்தர்வே ச புவி ச்ரேஷ்ட:

சரித்ர காலத்துக்கு வந்தாலும் மஹேந்திரவர்மா ‘சித்திரக்காரப் புலி’ என்றே ஒரு பட்டப் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறான். ‘மத்த விலாஸ ப்ரஹஸனம்’ என்று அவன் ஹாஸ்ய நாடகமும் எழுதியிருக்கிறான். குடுமியாமலையில் ஸங்கீதத்தைப் பற்றிய சாஸ்த்ரத்தைக் கல்வெட்டில் பொறித்திருக்கிறான். ராஜ ராஜ சோழன் ‘ராஜவித்யாதரன்’ என்று ஒரு பட்டம் சூட்டிக் கொண்டிருக்கிறான். (வித்யாதரர்களும் காந்தர்வ ஜாதி போலத்தான்.) தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆரியக் கூத்து, தமிழ்க் கூத்து முதலியன நடக்கச் செய்திருக்கிறான். ஸமீப நூற்றாண்டுகளில் காந்தர்வ வித்யை தஞ்சாவூர் சீமையில் பெரிய மறுமலர்ச்சி பெற்றதற்குக் காரணமே நாயக் ராஜாக்களும் சரபோஜி முதலான மஹாராஷ்டிர ராஜாக்களும் கொடுத்த ஆதரவுதான்.

ராஜாவானவன் ஸகல சாஸ்த்ர பாராங்கதனாக (பாராங்கதன் என்பதற்குக் ‘கரை கடந்தவன்’ என்று நேர் அர்த்தம்) இருக்கவேண்டுமென்பதில் அவன் காந்தர்வக் கலைகளை நன்றாக அப்யஸித்து, ஆதரித்து வளர்க்க வேண்டுமென்றும் ஏற்பட்டிருந்தது.

அம்பாளும் ஈச்வரனும் ஜீவனின் உள்ளே இருக்கும் ஆறு சக்ரங்களில் ஒன்றில் இரட்டை ஹம்ஸங்களாக உள்ளபோது அந்த ஹம்ஸங்கள் ஸம்பாஷிப்பதிலிருந்துதான் பதினெட்டு வித்யா ஸ்தானங்களும் உண்டாயின என்று ஆசார்யாள் “ஸெளந்தர்ய லஹரி”யில் சொல்கிறார்: யதாலாபாத் அஷ்டாதச குணித வித்யா பரிணதி:1 – இது அத்தனையிலும் வல்லவனாக அரசன் இருக்க வேண்டும்.

இப்படியாக அநேக சாஸ்திரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியவனாகவும் அத்தனை சாஸ்திரங்களையும் ரக்ஷித்துத் தர வேண்டியவனாகவும் இருக்கிற அரசனை முக்யமாக உருவாக்குவது அர்த்த சாஸ்திரம்தான் என்பது அதற்குப் பெருமை.

அஸுர குரு சுக்ரர் மட்டுமின்றி தேவகுரு ப்ருஹஸ்பதியும் ஆட்சிமுறை பற்றி சாஸ்த்ரம் செய்திருக்கிறார். நாலு புருஷார்த்தங்களையும் பற்றி பிரம்மாவின் பேரிலேயே உள்ள ரொம்பப் பெரிய நூலில் ராஜநீதியை மட்டும் விசாலாக்ஷர் “வைசாலாக்ஷம்” என்று சுருக்கி, அப்புறம் இதை ப்ருஹஸ்பதி மேலும் சின்னதாக்கினார் என்று தெரிகிறது. ஸ்ம்ருதிகளில் வரும் ராஜநீதியை மேதாதிதி (மநுஸ்ம்ருதிக்கு விளக்கம் எழுதியவர்) , விஜ்ஞானேச்வரர் (‘மிதாக்ஷரி’ எழுதியவர்) ஆகியவர்கள் மேலும் தெளிவு செய்து இன்றைக்கும் ‘லா’வில் மதிக்கப்படுவதாகச் செய்திருக்கிறார்கள்.

முதலில் சொன்னதை மறந்துவிடக் கூடாது. இந்த அர்த்த சாஸ்திரம் தர்ம சாஸ்திரத்துக்கு ஏற்கத்தக்கதாக உள்ளபோதுதான் அதற்குப் பிராமாண்யம் (அதாவது ‘அதாரிடி’) உண்டு. இதை சாணக்யன் வாயாலேயே கேட்கிறோம். “எங்கேயாவது தர்ம சாஸ்திரத்துக்கும் நடைமுறை வழக்குகளுக்கும் வியவஹாரங்களுக்கும் இடையிலே வேறுபாடு இருந்தால் அரசனானவன் தர்மத்தின் ஆதாரத்தைக் கொண்டே அதன்படி முடிவெடுக்க வேண்டும்” என்று அவர் சொல்கிறார். தர்மோ ரக்ஷதி ரக்ஷித: – தர்மத்தை ரக்ஷித்தால், அது அப்படி ரக்ஷிக்கிறவனை ரக்ஷிக்கும். ராஜா தர்மத்தைத் தான் பரிபாலித்து, தர்மத்தினால் தன்னைப் பரிபாலித்துக் கொள்ள வேண்டும் என்பதே முடிவாக அரசனுக்கு ஏற்பட்ட விதி.


1ச்லோகம் 38

அரசாங்கத்தின் அங்கங்கள்

‘ஷாட்குண்யம்’ என்று ‘ஃபாரின் பாலிஸி’யின் ஆறு அம்சங்களைச் சொல்கிறபோது இதெல்லாவற்றுக்கும் அடிப்படையான ராஜ்யம் என்பதற்கே உள்ள ‘ஸப்தாங்கம் (அல்லது ‘ஸ்ப்த ப்ரக்ருதி’) என்கிற ஏழு அம்சங்களைப் பற்றி நினைவு வருகிறது. ஸ்வாமி, அமாத்ய, ஸுஹ்ருத், கோச, ராஷ்ட்ர, துர்க, ல – என்பவையே இந்த ஏழு. ‘ஸ்வாமி’ என்றால் ராஜா. உடைமையாளன் என்பதுதான் ஸ்வாமி என்பதற்கு நேர் அர்த்தம். ராஜ்யத்தை தனதாக உடையவனாதலால் ராஜா ஸ்வாமி எனப்படுகிறான். ‘அமாத்யா’ என்றால் மந்திரி. ‘ஸுஹ்ருத்’ என்றால் நண்பர்; அதாவது நேச நாடுகள். ‘கோச’ என்பது கஜானா; பொன், மணி மட்டுமின்றி தேசத்தின் விளைச்சலையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். ‘ராஷ்ட்ரம்’ என்பதுதான் நாடு — அதாவது குடிகள். ‘துர்க’ என்றால் கோட்டை. ‘ல’ என்பது ராணுவம்.

திருவள்ளுவர் இதில் ஸ்வாமி எனப்படும் ராஜாவை மத்தியில் வைத்து, அவனுக்கு இருக்க வேண்டிய ஆறு அங்கங்களாகப் பாக்கி ஆறையும் ‘பொருட்பால்’ முதல் குறளிலேயே சொல்லியிருக்கிறார்.

படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

‘உடையான்’ என்பதுதான் உடைமையாளனான ஸ்வாமி. ஸரியாக இப்படிப் பதப் பிரயோகம் செய்திருக்கிறார். ‘படை’ என்பது பலம் என்கிற ஸைன்யம். ‘படை பலம்’ என்று சேர்த்தே சொல்கிறோம். ‘குடி’ என்பதே ‘ராஷ்ட்ரம்’ என்னும் மக்கள். ‘கூழ்’ என்பது விளை பொருள் அதாவது கோசம். ‘அமைச்சு’ தான் அமாத்யர். ‘நட்பு’ என்பது ஸுஹ்ருத். ‘அரண்’ தான் துர்கம். பாரத நாகரிகமாக தர்ம அர்த்த சாஸ்த்ரங்களில் சொல்லியிருப்பதைத்தான் தமிழ் மறை தந்தவரும் அக்ஷரத்துக்கு அக்ஷரம் எதிரொலித்துச் சொல்லியிருக்கிறார்.

அந்நியக் கொள்கைகள் ஆறு

அந்நிய ராஜ்யங்களிடம் ஒரு ராஜா கடைப்பிடிக்க வேண்டிய ஆறு கொள்கைகளை ‘ஷாட்குண்யம்’ என்று அர்த்த சாஸ்திரங்கள் வகுத்துக் கொடுத்திருக்கின்றன. ஸந்தி, விக்ரஹம், யானம், ஸ்தானம் (அல்லது ஆஸனம்), ஸம்ச்ரயம், த்வைதீபாவம் என்பனவே இந்த ஷட்குணங்கள். ‘ஸந்தி’ என்பது ஸ்நேஹ உடன்படிக்கை, ஸமாதான உடன்படிக்கை செய்துகொண்டு ஒற்றுமையாயிருப்பது. ஸந்தி செய்துகொண்டுள்ள ராஜ்யங்களைத் தற்காலத்தில் allies (நேச நாடுகள்) என்கிறோம். ‘விக்ரஹம்’ என்பது விரோத நாடாகவே கருதி யுத்தம் செய்வது. ‘ஸ்தானம்’ அல்லது ‘ஆஸனம்’ என்பது இந்தக் காலத்தில் சொல்கிற neutrality (நடுநிலைமை) , non-alignment (கூட்டுச்சேராமை) என்று சொல்லலாம். ‘யானம்’ என்பது Cold-war மாதிரி – அதாவது, ஆக்சுவலாக யுத்தப் முஸ்தீபுகள் மட்டும் பண்ணிக் காண்பித்துக் கொண்டிருப்பது, ‘ஸம்ச்ரயம்’ என்பது நம்மைவிட பவிஷ்டனான இன்னொரு ராஜாவிடம் ஸ்நேஹ பாவத்துடன் போய், அவனை ரக்ஷையாகக் கொண்டு வேறொரு சத்ரு ராஜாவை எதிர்ப்பது. First World War-ல் இப்படித்தான் ஆஸ்ட்ரியா ஜெர்மனியையும், வேறேதோ ஒரு சின்ன தேசம்1 ரஷ்யாவையும் ஸம்ச்ரயமாக அடைய அந்த இரண்டு சிறிய ராஜ்யங்களின் சண்டை பெரிய உலக யுத்தமாகவே ரூபமெடுத்து விட்டது. ‘த்வைதீபாவம்’ என்பது ஒரு ராஜ்யத்தோடு யுத்தம் போடுவதற்காகவே, அதற்குப் பக்கத்திலுள்ள ராஜ்யம் அதோடு சேர்ந்துவிடாமல், முன்கூட்டி அதைத் தனக்கே ஸ்நேஹிதமாக ஆக்கிக் கொண்டு ஸமாதான உடன்படிக்கை செய்து கொள்வது. ஸ்நேஹத்துக்காக ஸ்நேஹமில்லாமல் காரிய்துக்காக ஸ்நேஹம். டிப்ளமஸி (ராஜதந்த்ரம்) என்பது டூப்ளிஸிடியாகவே (இரண்டு விதமான ஸ்டான்டர்டுகளில் ஏமாற்றுதலாகச் செய்வதாகவே) ஆகிவிடுவதற்குத்தான் ‘த்வைதீபாவம்’ என்று பெயர் கொடுத்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள். முன்னேயே சொன்னாற்போல டூப்ளிஸிடி என்பது தர்ம சாஸ்திரத்துக்கு ஸம்மதமில்லாமல் அர்த்த சாஸ்திரம் மட்டுமே சற்று அநுமதித்துள்ள விஷயந்தான். அதனால் இதற்கு நாம் மதிப்புக் கொடுக்க வேண்டியதில்லை.


1ஸெர்பியா

தோற்ற ராஜ்யத்திடம் உதாரம்

தண்டோபாயத்திலும் அநேக தர்மங்கள் உண்டு.1

ஜயித்த ராஜ்யம் ஜயிக்கப்பட்ட ராஜ்யத்தை நடத்தும் விதத்திலும் அர்த்த சாஸ்த்ரம் மிகவும் கௌரவமான பண்புகளை விதித்திருக்கிறது. ஒரு ராஜா வெளி ராஜ்யத்தை ஜயித்த பின் அதை முழுக்கவும் தன் ராஜ்யத்திலேயே ஜெரித்துக்கொண்டு விடக்கூடாது. அதன் ‘இன்டிவிஜுவாலிடி’ குன்றிவிடாதபடி அதைத் தனியாகவே விட்டிருக்க வேண்டும். ‘அந்த ராஜ்ய ஜனங்களின் அன்புக்கும், மரியாதைக்கும் பாத்திரமாயிருப்பவர்களிடமே அதன் நிர்வாஹத்தை விடவேண்டும். அவர்களுடைய ஸமயாசாரம் என்னவோ, கலாசாரம் என்னவோ, வாழ்க்கை முறையும் ஸம்பிரதாயங்களும் என்னவோ அவற்றுக்கெல்லாம் மாறுதலாக எதையும் திணிக்கவே கூடாது’ என்ற இப்பேர்ப்பட்ட உத்தமமான கொள்கைகளைத் தர்ம சாஸ்திரம் மட்டுமின்றி, ரொம்பவும் பொல்லதவராக வர்ணிக்கப்படுகிற சாணக்யருங்கூடத் தம்முடைய அர்த்த சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறார்.

ராஜ்ய விஸ்தரிப்பின் மூலம் பலாத்காரமாகவோ, அதைவிட நீசமான வசியங்களாலோ ஜயிக்கப்பட்ட ஜனங்களுக்குள் சாதுர்யமாக பேதங்களை உண்டு பண்ணுவதாலேயே அவர்களைத் தங்கள் மதத்துக்கு இழுப்பது மற்ற நாட்டவரின் வழக்கம். இப்படி ஒரு ஜயித்த ராஜா ஜயிக்கப்பட்டவர்களை மத மாற்றம் செய்வதை நம் சாஸ்த்ரம் கொஞ்சங்கூட ஆதரிக்கவில்லை. யாஜ்ஞ்யவல்க்ய ஸ்ம்ருதி

யஸ்மிந்தேசே ய ஆசாரோ வ்யவஹார குல ஸ்திதி: |
ததைவ பரிபால்யோ (அ)ஸெள யதாவசம் உபாகத: ||

என்கிறது. அதாவது ஜயித்த ராஜா வசப்படுத்திக் கொண்ட தேசத்தில் என்னென்ன ஆசார-வ்யவஹாரங்களும் குல வழக்குகளும் இருக்கின்றனவோ அவற்றை அப்படியேதான் ரக்ஷித்துக் கொடுக்க வேண்டும் என்று தீர்மானமாகச் சொல்லியிருக்கிறது.

அர்த்த சாஸ்த்ரத்திலும் அந்தந்த தேசாசாரமே தழைக்கும்படியாக அதை ஜயிக்கும் ராஜா செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. ஜயித்த ராஜா அந்த ராஜ்யத்தின் முடிவான நிர்வாஹத்தைத் தன் கையில் வைத்துக் கொண்ட போதிலும், ‘டொமினியன் ஸ்டேடஸ்’ போல அதற்கும் ஓரளவு ஸ்வதந்த்ரம் தந்து, அந்த நாட்டவரின் அன்பையும் மதிப்பையும் பெற்ற அத் தேசத்தவன் ஒருவனின் பொறுப்பிலேயே விட வேண்டுமென்று சொல்லியிருக்கிறது. மநு இன்னம் ஒரு படி மேலே போய் பழைய ராஜாவின் பந்துக்களிடமே இந்தப் பொறுப்பைத் தரவேண்டுமென்கிறார். அநேக ஸந்தர்ப்பங்களில், தோற்ற ராஜாவிடமேயோ அல்லது அவன் யுத்தத்தில் செத்துப் போயிருந்தால் அவனுடைய பிள்ளையிடமேயோ இந்தப் பரிபாலனப் பொறுப்பு கொடுக்கப்பட்டதுண்டு. ராமர் வாலியைக் கொன்றபின் ஸுக்ரீவனை ராஜாவாக்கினாலும், வாலியின் பிள்ளையான அங்கதனுக்கு யுவராஜ அந்தஸ்து தந்திருக்கிறார்; லங்கையை ஜயித்தவுடனோ அதைத் தான் ஆளாமல் விபீஷணனுக்குப் பட்டம் கட்டியிருக்கிறார்.

தோல்வியடைந்த ராஜ்யம் ஜயித்த ராஜாவுக்குக் கப்பம் என்று வருஷா வருஷம் ஒரு தொகை செலுத்த வேண்டும். தன் ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொள்வதற்காக அது யுத்தத்துக்குப் போகப்படாது. Defence, Foreign Affairs (பாதுகாப்பு, வெளி வியவஹாரம்) என்ற இரண்டிலும் அது ஜயித்த ராஜ்யத்துக்கு முற்றிலும் அடங்கியே நடக்க வேண்டும். மற்றபடி internal administration என்கிற உள்நாட்டு நிர்வாஹத்தில் அநேக விஷயங்களில் அது ஸ்வதந்திரமாக நடக்கலாம்; பெரிய, முக்யமான ஸமாசாரங்களில் மாத்திரம் ஜயித்த ராஜாவுக்குச் சொல்லி விட்டு அவனுடைய அங்கீகாரம் பெற்றே நடவடிக்கை எடுக்கணும். நம் தேசம் தவிர மற்ற தேசங்களில் ஜயித்தவர்கள் தோற்றவர்களிடம் இவ்வளவு ‘ஜெனர’ஸாக நடப்பதை எதிர்பார்க்க முடியாது.


1யுத்தம் செய்வதில் ஏற்பட்டுள்ள இந்த தார்மிக வரம்புகளைப் பற்றி “தநுர்வேதம்” என்ற உரையில் காண்க.

வெளிநாட்டு விஷயத்தில் தண்ட நீதி

வெளிநாட்டு ராஜாவால் ஜனங்களுக்கு ஹிம்ஸை உண்டாகாமல் ரக்ஷி்ப்பதும் ராஜநீதியில் முக்யமான அம்சம். லோகத்தில் எந்த தேசமானாலும் ஆதிகாலத்திலிருந்தே ராஜாக்கள் மற்ற நாடுகளைத் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வருவதற்காகப் படையெடுத்து யுத்தம் செய்வது என்று ஏற்பட்டிருக்கிறது. இதற்கு நான் ந்யாயாந்யாயங்கள் சொல்லப் போவதில்லை.

ஒரு வெள்ளைக்காரர்1 என்னிடம், அர்த்த சாஸ்த்ரத்தில் ஒரு காரணமும் இல்லாமல் ஒரு அரசன் பிற அரசர்கள் மேல் படையெடுத்து ராஜ்ய விஸ்தாரம் பண்ண வேண்டுமென்று சொல்லியிருப்பதை இப்போதுள்ளவர்கள் பின்பற்றலாமா என்று கேட்டார். அது ஏதோ அந்த நாள் நடைமுறை. அதுவும் இது தர்ம ஸம்பந்தமாயிருப்பதைவிட அர்த்த ஸம்பந்தமாகவே சொல்லப்பட்ட வழி. அதற்கு சாச்வத validity (செல்லுபடித்தன்மை) இருப்பதாகக் கொள்ளவேண்டியதில்லை என்று பதில் சொன்னேன்.

எப்படியோ, ராஜா என்றால் ஏக சக்ராதிபத்யத்துக்கு முயற்சி செய்ய வேண்டுமென்பது ஸ்திரப்பட்டுவிட்ட fact -ஆக எல்லா நாட்டிலும் பின்பற்றப்பட்டதை மட்டுமே கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். வேதாந்தத்தில் இது மண்ணாசை, பொன்னாசைகளின் கீழேதான் வருமானாலும், அந்த வேதாந்தம் ராஜாவைப் பொருத்த மட்டில் அவனுடைய முதுமையில் வானப்ரஸ்த ஆச்ரமம் போக வேண்டியபோதுதான் இந்த ஆசைகளை விட வேண்டும் என்று அவனுக்குச் சொல்கிறது. தர்ம சாஸ்திரம் ராஜாவை யுத்தத்துக்குப் போகாமல் கட்டுப்படுத்தி வைக்கவில்லையானாலும் அவனை யுத்தத்தில் தூண்டிவிடவுமில்லை. அர்த்த சாஸ்திரங்களோ, வெளி ராஜாவால் தன் நாட்டுக்கு ஹிம்ஸை ஏற்படும்போது மாத்திரம் டிஃபென்ஸில் (தற்காப்புக்காக) யுத்தம் செய்வது, அல்லது அந்நிய தேசங்களில் அதர்மம் அதிகம் இருக்கிறது என்பதற்காக அங்கே தர்மத்தை நிலைநாட்ட மாத்திரம் படையெடுத்துப் போய் யுத்தம் செய்து தர்ம ஆட்சியை ஏற்படுத்துவது என்றெல்லாமில்லாமல், பொதுவாகவே ராஜாவானவன் தன் ராஜ்யத்தை விஸ்தாரம் பண்ணிக் கொண்டு ஸார்வ பௌமனாக, சக்ரவர்த்தியாகப் பிரகாசிக்க வேண்டும் என்பதற்குத் தூண்டுதல் தருவதாக இருக்கின்றன.

ஆனாலும் ராஜ்ய விஸ்தரிப்பு என்பதற்காக எடுத்தவுடனேயே யுத்தத்துக்குப் போகும்படி அர்த்த – தர்ம சாஸ்திரங்கள் சொல்லவில்லை. உபாய சதுஷ்டயம் என்பதாக நாலு வழிகளைச் சொல்லி, நாலாவதாகவே யுத்தத்தை வைத்திருக்கிறது. மற்ற தேசங்களின் போக்கோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது நமக்குப் பெருமை தருகிற விஷயமாகும். கேள்விமுறை இல்லாமல் அரசர்கள் ரத்தக் களரி பண்ணுவது பிற தேசத்தவர்களின் வழக்கம்.

“உபாய சதுஷ்டயம்” என்பவை ஸாமம், தானம், பேதம், தண்டம், என்னும் நாலாகும்.

ஒரு ராஜா தானாக ராஜ்யத்தை விஸ்தாரம் பண்ணும்போதும், இன்னொரு ராஜா இவன்மேல் படையெடுக்க உத்தேசிக்கிறபோதும், இரண்டு ஸமயத்திலும் இந்த நாலு உபாயங்களை ஒன்றபின் ஒன்றாகத் கடைபிடிக்க வேண்டும்.

முதலில் அன்போடு பழகி அதனால் ஒரு ராஜாவை அடங்கி வரும்படிப் பண்ணமுடியுமாவென்று பார்க்க வேண்டும். வேண்டியவர்களைக் கொண்டு அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லச் செய்ய வேண்டும். மனஸில் சாந்தியோடு பிரயத்னம் செய்ய வேண்டும். இதுதான் ஸாமம்.

இரண்டாவது தானம். அதாவது நமக்குப் பிரியமான பொருளை அவனுக்குக் கொடுத்து, என் ராஜ்யத்தோடு சேர்ந்துவிடுகிறாயா என்று கேட்பது. அல்லது அவன் படை எடுத்து வந்தால் இப்படிக் கொடுத்து, திருப்தி பண்ணி அவனைத் திரும்பிப் போகப் பண்ணுவது. ராஜ்யத்தில் ஒரு சின்னப் பகுதியைச் சண்டையில்லாமலே கொடுப்பது, அல்லது தன தான்யங்களைக் கொடுப்பது, இல்லாவிட்டால் ராஜகுமாரியை எதிராளி ராஜாவுக்கோ, ராஜகுமாரனுக்கோ கன்யாதானம் செய்து கொடுத்து அவனோடு சண்டையில்லாமல் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்வது — இதெல்லாமல் தானோபாயத்தில் வரும். உள்ளன்பின் சக்தியால் மனஸை மாற்றுவதைவிட, பொருளைத் தந்து விரோதத்தைப் போக்கிக் கொள்வது கீழ்தான் என்பதால் ஸாமத்துக்கு அப்புறம் தானத்தைச் சொல்லியிருக்கிறது. நிஜமான பிரியம் இருக்குமானால், நம்முடையதெல்லாம் அவனுடையது அவனுடையதெல்லாம் நம்முடையது என்ற எண்ணம் வந்துவிடுமாதலால், என்னுடையதில் கொஞ்சம் உனக்குத் தருகிறேன் என்ற பேச்சு வராது. தானம் என்கிறபோது ஒற்றுமை போய் வேறுபாடு வந்துவிட்டதாகவே அர்த்தம்.

பேதம் என்பது இன்னம் கீழே. ஸாதாரணமாக நம் வாழ்க்கை விஷயங்களில் பேதோபாயத்தைப் பின்பற்றவே கூடாது. பேதமும் தண்டமும் ராஜாங்கத்துக்கு மட்டும் அநுமதிக்கப்பட்டிருக்கும் வழி; தனி மநுஷ்யர்களுக்கல்ல. எதிராளியைச் சேர்ந்திருப்பவர்களிடம் பிளவு உண்டாகும்படிப் பண்ணி, இதனால் அவனுக்கு ஆதரவு குறையுமாறு செய்து, சக்தி குன்றிப்போன ஸ்திதிக்கு அவனைக் கொண்டு வந்து, இப்போது எனக்கு அடங்குகிறாயா என்று கேட்டுக் கப்பம் கட்ட வைப்பது பேதோபாயம். Divide and rule (பிரித்து ஆளுவது) என்பதில் divide பண்ணுவது (பிரிப்பது) பேதம். இது கெடுதலான உபாயந்தானென்றாலுங்கூட, அர்த்த சாஸ்திரத்தில் இதிலும் ஒரு தார்மிகக் கட்டுப்பாடு வைத்திருப்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது எதிராளியின் சக்தியைப் பேதோபாயத்தால் குறைத்தவுடனேயே அவன் மேல் படையெடுத்து ஹதாஹதம் பண்ணி ஜயித்துவிட முடியும்தான் என்றாலும், அப்படிச் சண்டைக்குப் போகாமல், பலம் குறைந்த அந்த ஸ்திதியில் அவனாகப் பணிந்து வருகிறானா என்று பார்த்துவிட்டே, வராவிட்டால் யுத்தம் செய்ய வேண்டும் என்று வைத்திருக்கிறது.

யுத்தந்தான் நாலாவதான தண்டம். உள்நாட்டுக் குற்றவாளிகளுக்குப் பலவிதமான தண்டனைகள் மூலம் தண்டம். வெளி ராஜாவுக்கு யுத்தத்தின் மூலம் தண்டம். இரண்டுக்கும் இடையில் அநேக வித்யாஸங்களிருந்தாலும் ஹிம்ஸிப்பது, சிக்ஷிப்பது பொது அம்சம். ஃபிஸிகலாக பலத்தைக் காட்டுவது இரண்டுக்கும் பொது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உள்நாட்டு விஷயத்தில் கூட இந்த நாலு உபாயமும் இருப்பதாகத் தெரிகிறது. ஸத்துக்களைக் கொண்டு வாழ்க்கை உதாரணத்தாலும், உபதேசத்தாலும் தர்மங்களை ஸாத்விகமாகப் பரப்புவது ஸாமம். மான்யம், டைட்டில், சலுகைகள் தருவது தானம். ப்ராஸிக்யூஷன் (அதாவது ராஜாங்கம்) குற்றவாளியைச் சேர்ந்த ஒருவனையே அப்ரூவராக ஆக்கிக்கொண்டு குற்றத்தை நிரூபணம் செய்வது பேதம். தண்டனைதான் தண்டம்.


* ஜே. டபிள்யூ. எல்டர்

தர்ம அபிவிருத்தியே அஸ்திவாரம் வர்ண தர்ம பரிபாலனம்

ஜெனரலாக ஜனஸமூஹத்தைப் பார்க்கிறபோது ராஜதண்டனையே குற்றவாளிக்குப் பிராயச்சித்த கர்மாவாகி, அவனுடைய பாபத்தைப் போக்கும் உபகாரத்தைச் செய்கிறது. இதோடு இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். குற்றவாளி ஒருவன் தண்டனை பெறாமல் தப்புவதற்கு விட்டுவிட்டால் அது ராஜாவுக்கே பாபமாகும் என்றும் சொல்லியிருக்கிறது; ராஜா ராஷ்ட்ர க்ருதம் பாபம் : குடிகளின் பாவம் மன்னனைச் சேரும். யதா ராஜா ததா ப்ரஜா: ‘அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி’ என்று சொல்லி ஒரு பக்கம் அவனை தர்மிஷ்டனாக இருக்கப் பண்ணுவதோடு இன்னொரு பக்கம் குடிகள் தீய வழிபோனால் அந்தத் தீமை அரசனையே சேரும் என்று சொல்லி, இதனாலும் அவனைத் தேசத்தில் தர்மம் நிலைக்கப் பண்ணவேண்டும் என்பதில் விசாரத்துடன் ஈடுபடுமாறு பண்ணியிருக்கிறது.

ராஜ தண்டனையால் குற்றவாளிக்குப் பாபம் போகிறது என்பது போல இன்னொன்றைச் சொல்லி விடுகிறேன். யுத்த பூமியில் பிராணத் தியாகம் பண்ணுவதால் ராஜாவுக்கும், ஸேனா வீரர்களுக்கும் புண்ணியம் உண்டாகிறது என்று சொல்லியிருக்கிறது. போரில் உயிரிழந்தவர்கள் வீர ஸ்வர்க்கமடைவார்கள் என்று சொல்லியிருக்கிறது. ராஜாவுக்கு அநேக ஸெளக்ய போகங்களைக் கொடுத்திருப்பதற்குக் காரணமே அவன் இப்படித் தன் உயிரைப் பணயமாக வைத்து தேசத்தை ரக்ஷிக்கிறானென்பதுதான். இந்த விஷயம் இருக்கட்டும். தண்ட நீதியையும் தர்மத்தையும் பற்றிப் பார்ப்போம்.

குற்றம் செய்கிற எண்ணமே மநுஷ்யனை விட்டுத் தானாகப் போகும்படிச் செய்ய ஸமயாசாரம், பக்தி, ஞான மார்க்கம், கர்ம மார்க்கம், யோகம் முதலியவை இருக்கின்றன. அவற்றின் கட்டுப்பாடுகளில் ஜனங்கள் வராதபோது பயத்தின் மூலம்தான் குற்றம் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றாகிறது. ஸமயாசாரியர்கள், ஞானிகள், பக்திமான்கள், யோகஸித்தர்கள் முதலியவர்கள் முதலில் சொன்ன வழியில் ஸாத்விகமாக மக்களை நல்வழி நடக்கச் செய்கிறவர்கள். அந்த ஸாத்விகம் உறைக்காதவர்கள் குற்றம் பண்ணும்போது ராஜா ராஜஸிகமாகத் தண்டனை தர வேண்டியதாகிறது. தேசத்தில் நல்ல நிலைமை, தர்மம், புண்ணியமிருக்க வேண்டுமானால் குற்றம் போனால்தானே முடியும்? அதோடு ஸாது ஜனங்களுக்குச் சோரபயம், கொலைகாரர்களிடம் பயம் முதலியன இல்லாமல் நிம்மதியாக வாழும்படியான நிலையையும் ராஜாதானே அளிக்க வேண்டும்? அதனால்தான் அவனுக்கு தண்ட அதிகாரத்தைக் கொடுத்திருப்பது.

இதற்குள்ள முக்யத்வத்தால் அர்த்த சாஸ்த்ரத்துக்கே ‘தண்டநீதி’ என்று ஒரு பெயர் வழங்குகிறது. அர்த்த சாஸ்திரம் என்பதற்கு நீதி சாஸ்திரம், ராஜநீதி சாஸ்திரம், நயசாஸ்திரம் என்றெல்லாமும் பெயர்கள் உண்டு. ‘நயம்’ என்றால் ‘பாலிஸி’ என்று அர்த்தம். தண்டநீதி என்பதே ஜாஸ்தி வழங்குகிற பெயர்.

ஒரு பக்கம் தர்மஜ்ஞர்களை அரசனானவன் போஷித்து அவர்கள் மூலம் தர்மங்களை உபதேசமாகவும், புராணப் பிரவசனங்களாகவும், அவர்கள் நடத்திய சீலமான வாழ்க்கையுதாரணத்தாலும் ‘பெர்ஸுவேஷன் மெத’டில் பிரசாரம் பண்ணிக்கொண்டுதானிருந்தான். இந்த நாளில் இந்த அம்சங்களை அரசாங்கப் பொறுப்பிலிருந்து அடியோடு துண்டித்து விட்டிருப்பது போல அப்போது இல்லை. இப்படி சாந்தமாகச் சொல்லி தர்மம் பதியாத போது, அதர்ம காரியங்கள் நடந்தபோது தண்டோபாயத்தை ப்ரயோகித்தான். இப்போது தண்டோபாயத்தை லீனியன்டாகப் பண்ண வேண்டும் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் போலீஸும் கோர்ட்டும்தான் நாளுக்கு நாள் விருத்தியாகி வருகின்றன. முற்காலத்தில் தர்மக்ஞர்களைப் போஷித்து ராஜா விருத்திபண்ணினதால் போலீஸும் கோர்ட்டும் மினிமமாகவே இருந்தன; கோயில் கட்டுவதே ராஜாவின் முக்ய காரியமாய் இருந்தது. சாஸ்திர மார்க்கப்படி நடந்து சிஷ்டர்களாக, தர்மிஷ்டர்களாக இருக்கிறவர்கள் அந்த நல்ல வழியில் போய் ஞானம் அடைவதற்கு அநுகூலமாக அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் செய்து கொடுப்பதுதான் அர்த்த சாஸ்திரத்தில் அஸ்திவாரமாகச் சொல்லியிருப்பது. அஸ்திவாரம் பலமாய் இருந்து, மேலே போகும் கட்டிடத்தில் பழுது ஏற்பட்டால் ஸுலபமாய் அதை ஸரி செய்து விடலாம். இந்தக் காரியத்தைத்தான் அன்றைக்கு தண்டோபாயம் செய்து வந்தது. இதனால்தான் காவல் நிலையங்களும், நியாய ஸ்தலங்களும் அப்போது குறைவாக இருந்து கோவில்களும், அன்ன சத்திரங்களும், யஜ்ஞசாலைகளும் நிறைய எழும்பின. இப்போது அஸ்திவாரம் போடாமல் கட்டிடம் எழுப்புவதில், இத்தனை ஆயிரம் போலீஸ் ஸ்டேஷன்கள் இருந்தும் இவற்றுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு ஏராளமானவர்கள் நூதன நூதன ஸாமர்த்தியத் திருட்டுகள், மோசடிகள், கொலைகள், வியபசாரக் குற்றங்கள் முதலியன பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை ஆயிரம் கோர்ட்டுகள் இருந்தும், ஆயிரக் கணக்கில் ‘கேஸ்’கள் ‘பென்டிங்’காக இருக்கின்றன என்று ‘பெஞ்சு’க்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே போயும் பைஸலாகாத வழக்குகளின் எண்ணிக்கையும் ஏறிக்கொண்டே போகிறது. பொது ஜனங்களுக்கோ பயம் போகவில்லை; ‘ஸெக்யூரிடி’ இல்லை. தர்ம பரிபாலனம் என்ற அஸ்திவாரத்துக்கு எதுவும் பண்ணாமலே அதர்மத்துக்கு மட்டும் சிக்ஷை, அதுவும் ரொம்ப தாக்ஷிண்யத்தோடு சிக்ஷை என்றால் வேறே எப்படி இருக்கும்?

ஜாதி நாட்டாண்மை என்பதும் அக்காலங்களில் ராஜாவின் தண்ட ப்ரயோகத்தை ரொம்ப தூரம் குறைத்து உதவிற்று. ஒவ்வோரு ஜாதியாரும் பண்ணும் அநேக தப்புக்கள் அந்தந்த ஸமூஹ நாட்டாண்மைக்காரர்களாலேயே விசாரிக்கப்பட்டு வந்ததால், அந்த அளவுக்குக் கோர்ட்டின் வேலை குறைந்தது. போலீஸ் மாதிரி இல்லாமல் ஜாதி நாட்டண்மையிடம் அந்தந்த ஸமூஹத்தாரும் ‘நம்முடையது’ என்ற அந்நியோந்நிய பாவம் கொண்டிருந்தார்கள். அதனால் அதன் கட்டுப்பாடுகளுக்கு அவர்கள் இஷ்டபூர்வமாகவே அடங்கி நடந்ததில், தாங்களாகவே அநேகம் தப்பு தண்டாக்களைப் பண்ணாமல் ஒழுங்காயிருந்தார்கள்.

வர்ணாச்ரம தர்மங்களைப் பரிபாலிப்பது ராஜாவின் கடமையாக இருந்ததற்கு இதுவும் ஒரு துணைக் காரணம். ஒவ்வொரு தனி மநுஷ்யனுக்கும் தன் தொழிலைப் பற்றிய நிம்மதி, தன் வாழ்க்கை முறையைப் பற்றிய நிர்ணயமான அமைப்பு ஆகியன வர்ண விபாகத்திலே இருந்து, அதே ஸமயத்தில் அவன் தெய்வ பக்தியுள்ளவனாகவும் ஸாதுக்களிடம் விச்வாஸமுள்ளவனாகவும் இருந்தபடியால், தனக்குரிய மதாநுஷ்டானங்களைப் பண்ணிக்கொண்டு, ஸெளகிகத்தில் திருப்தியாயிருந்ததோடு (அப்படி இருந்ததாலேயே) ஆத்மாபிவிருத்தியும் அடைந்து வந்தான். இப்படி எல்லாத் தொழில்களும் சீராகப் பங்கீடு பண்ணப்பட்டிருந்ததால் மொத்த ஸமுதாயத்திலும், அதாவது தேசம் பூராவுக்குமாக நடக்க வேண்டிய அநேக கார்யங்களிலும் ஏறுமாறு இல்லாமல், போட்டி பொறாமை இல்லாமல், குழப்பமில்லாமல் எல்லாம் சீராக நடந்து நாடு முழுதும் பொருளாதாரத்தில் நல்ல நிலையிலும்;மனநிலையில் ஸர்வஜன ஸெளஜன்யத்துடனும், இந்த ஸெளஜன்யத்தில் உண்டான நிம்மதியில் கலைகள், பண்பாடு இவற்றில் மேன்மையுள்ளதாகவும், எல்லாவற்றுக்கும் மேலே ஆத்ம லக்ஷ்யத்தில் சிறந்த சிறந்த அபிவிருத்தி கொண்டதாகவும் இருந்து வந்திருக்கிறது. இப்படி எத்தனையோ ஆயிரம் வருஷங்களாக, மற்ற உலக நாடுகள் எதையும்விட நம் தேசமானது ஸமூஹ ஸெளஜன்யம், பொருளாதாரம், கலாசாரம், ஆத்மிகம் எல்லாவற்றிலும் ரொம்ப உன்னத ஸ்தானத்திலிருந்ததை அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள். மற்ற நாடுகளிலில்லாததாக இங்கே என்ன இருந்து இப்படிப்பட்ட உயர்வை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்று பார்த்தால், இங்கே நாகரிக ஸமுதாய வாழ்க்கையும் ராஜாங்கமும் ஏற்பட்ட நாளாக ஜனங்களாகவே ப்ரியப்பட்டும், ராஜாங்கத்தின் தலைமையான கடமையாகப் பரிபாலிக்கப்பட்டும் அநுஸரித்த வர்ணாச்ரம தர்மங்களைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை.

ஆனாலும் முன்பு வர்ண தர்மத்தைப் போஷிப்பதிலேயே ராஜா பெருமைப்பட்டானென்றால், இப்போது அரசியலிலோ ஸமூஹ வாழ்விலோ ஆனா ஆவன்னாவே casteless society – “ஜாதியில்லாத ஸமூஹம்” என்பதாகத் தானிருக்கிறது! அந்தந்த ஜாதிக்குண்டான தொழிலை அவரவர் செய்யாமலும், அதற்குரிய ஆசார அநுஷ்டானங்களைக் கடைபிடிக்காமலும் ஜாதிகளை மட்டும் விடாமல் வைத்துக் கொண்டிருப்பது மஹா தப்புதான் — ப்ராணன் போனபின் பிணத்தைக் கட்டிக் காக்கப் பார்க்கிறது போலத்தான்! இதில் நாம் சீர்திருத்தக்காரரோடு நூறு பெர்ஸன்ட்டும் ஒத்துப்போவோம். ஆனால் இந்தத் தொழில் பாகுபாடே தப்பு, ஆசார அநுஷ்டானங்களையே இதற்காக வித்யாஸமாய் வைப்பது தப்பு என்று அவர்கள் வாதிப்பதை நாம் கொஞ்சங்கூட ஒப்புக் கொள்வதற்கில்லை. தொழில் பாகுபாடும், ஆசாரங்களை சாஸ்த்ரப்படி அவாளவாள் பின்பற்றுவதும் மாறி இப்போதுள்ள நிலைமை ஏற்படவிட்டதுதான் தப்பு என்று விவேகத்தோடு புரிந்துகொள்ள வேண்டும். ‘இப்போது எல்லாம் அடியோடு குன்றிப் போய்விட்ட ஸ்திதியில் பழையபடி பண்ணுவது ஸாத்யமா? ‘என்றால், எனக்குத் தெரியாது. ஸாத்யமில்லை என்று விடாமல் இப்போதாவது எங்கே எவ்வளவு முடிகிறது என்று பார்த்து அங்கே அந்த அளவுக்குப் பழைய வழிக்குத் திருப்பத்தான் பாடுபடணும்.

ஹிஸ்டரியைப் பார்த்தால் தெரியும் — 2500 வருஷத்துக்கு முன் புத்தர் வந்தபோதும், அப்புறம் 1300 வருஷத்துக்கு முன் சமணமே பல்லவ ராஜ்யம் பாண்டிய ராஜ்யம் எல்லாவற்றிலும் மஹேந்திரவர்மா, நெடுமாற பாண்டியன் ஆகிய ராஜாக்களின் போஷணையில் செல்வாக்குடன் இருந்தபோதும் உதயனாசார்யார், குமாரிலபட்டர், ஆசார்யாள், அப்பர், ஞானஸம்பந்தர் முதாலனவர்கள் தோன்றியதால் மறுபடி வர்ணாச்ரம வேத மதமே வந்துவிட்டது. நான் அடிக்கடி சொல்கிற மாதிரி, பொது ஜனங்கள் பெரிசாக மதக் கொள்கை என்று ஆராய்ந்து கொண்டிருக்காமல் தங்கள் பக்தியைப் பெறத்தக்க மஹான்கள் தோன்றும்போது, ‘இவர் சொல்கிற ஸித்தாந்தம்தான் ஸரியாயிருக்கும்’ என்று அவர் வழிக்குப் போயிருக்கிறார்கள் என்பதும் வாஸ்தவந்தான். ஆனாலும், ஏற்கெனவே தாங்கள் இருந்த வழியில் ஏதோ அதிருப்தி இருந்தாலொழிய, புதிதாகப் போவதில் அது நிவ்ருத்தி ஆகிறதாகத் தெரிந்தாலொழிய இப்படி மாறியிருக்கமாட்டார்கள் என்பதும் வாஸ்தவம். நுணுக்கமாக மதக் கொள்கைகள் தெரியாவிட்டாலும் அதன் விளைவாகப் பரவலாக ஏற்படுகிற பலனைத் தெரிந்து கொண்டே மாறியிருக்கிறார்கள். அதனால் புத்தரும் ஜினரும் (மஹாவீரரும்) ஜாதிகளை எடுத்துப் போட்டுவிட்டு எல்லாரையும் ஒன்றாகப் பண்ணினதில் பொது ஜனங்கள் ‘ஆஹா’ என்று அப்போதைக்கு திருப்திப்பட்டு அந்த வழிகளில் கொஞ்சம் போனாலும், நாளாவட்டத்தில் இந்த ஏற்பாட்டில் தங்களுக்கு ‘ஸ்டேட்டஸ்’ இருப்பதாகத் தெரிந்திருந்துங்கூட, அதிலே தனி வாழ்க்கை, ஸமூஹ வாழ்க்கை இரண்டுமே சீராக அபிவிருத்தியாவதற்கு இடமில்லையென்று கண்டு கொண்டுதான் மனப்பூர்வமாக, எந்த கம்பல்ஷனும் இல்லாமலே வைதிக வழிக்குத் திரும்பி வந்திருக்கிறார்கள். இப்படி இரண்டு மூன்று முறை ‘பட்டு’க் கொண்டதை நினைத்துப் பார்த்தாவது இப்போதுள்ள அறிவாளிகள் அந்தப் பூர்வ வழியை எப்படி மறுபடி அதன் உண்மை ஸ்பிரிட்டுடன் ஏற்படுத்தலாம் என்பதற்கு ஆலோசனை செய்ய வேண்டும். அதம பக்ஷமாக, எல்லா தர்மத்துக்கும் வாழ்க்கை ஐடியல்களுக்கும் பிராம்மண ஜாதியைப் பொறுப்பாக்கியிருப்பதால் அதொன்றையாவது சாஸ்த்ர ப்ரகாரம் இருக்கப் பண்ணப் பிரயத்தனம் ஆரம்பிக்க வேண்டும்1.

இந்த ஏற்பாடு பண்ணினாலும் பண்ணாவிட்டாலும் நாம் ‘இண்டியன் கல்ச்சர்’ என்று பெருமைப்படும் நாகரிகத்தைக் கொடுத்துள்ள ரிஷிகள், ஞானிகள், பக்தர்கள், மதத் தலைவர்கள், கவிகள், சில்பிகள், நம்முடைய விஞ்ஞான சாஸ்திரங்களைக் கொடுத்தவர்கள் ஆகிய எல்லாருமே வர்ணாச்ரமத்தைப் போற்றியவர்கள் தான் என்பதிலிருந்து அது தப்பான வழியாயிருக்க முடியாது என்று அறிவு பெறவேண்டும். இவர்களில் பிராம்மணர்கள் மாத்திரமில்லாமல் மற்றவர்களும் இருக்கிறார்கள். இவர்களும் வர்ணாச்ரம ஏற்பாட்டைக் கொண்டாடித்தானிருக்கிறார்கள். அப்பிராமணராயிருந்து, சோழ ராஜாவுக்கு மந்திரியுமாக இருந்த சேக்கிழார் ஒருத்தர் போதும் — அவர் சொல்ல வந்தது பக்தர்கள் கதையைத்தான். அதிலே எத்தனையோ பேர் அப்பிராம்மணர்கள். இவர்களைப் பிராம்மணர்களும் போற்றுகிறார்கள். ஆனாலும் சேக்கிழாரோ எப்படியாவது இடம் ஏற்படுத்திக் கொண்டு வைதிக மரபுகளைச் சொல்லிச் சொல்லி எந்த ராஜாவானாலும் அவன் வர்ணாச்ரம பரிபாலனம் செய்ததைச் சொல்லாமலிருப்பதில்லை.

ராஜாவுக்கு இதிலே நிரம்ப முக்யமுண்டு — நாடு முழுவதற்கும் பொறுப்பு அவன்தானே?

ராஜா வர்ணதர்ம பரிபாலனப் பொறுப்பை எடுத்துக் கொண்டான். அதே ஸமயத்தில் வர்ணதர்மம் தேசத்தில் குற்றங்களைப் பெருமளவுக்குக் குறைத்து, அதனால் அவனுடைய நீதி தண்டப் பொறுப்பையும் வேலையையும் ரொம்ப தூரம் குறைத்து உதவியது. நிச்சயமாகத் தனக்கு ஒரு தொழில் உண்டு, நிர்ணயமான ஒரு வாழ்க்கை முறை உண்டு என்று வர்ண விபாகத்தில் ஏற்பட்டிருந்தால் இப்போது உண்டாயிருக்கிற போட்டிகளுக்கு அப்போது இடமில்லை. போட்டி இருக்கிற போதுதான் பொறாமை உண்டாகிறது. பகை ஏற்படுகிறது. மோதல், அடிதடி, கிளர்ச்சி ஏமாற்றுவது, லஞ்சம், திருட்டு, கொலையே பண்ணுவது என்றெல்லாம் குற்றங்கள் பெருகவும் இடம் ஏற்படுகிறது. இதெல்லாமில்லாததால் பழைய நாள் ராஜாவுக்குக் காவல் செய்கிற போலீஸ் பொறுப்பும், நியாயம் வழங்கி தண்டனை விதிக்கிற ஜுடிஷியல் பொறுப்பும் நிரம்பக் குறைந்தன.

வர்ணாச்ரம பரிபாலனம் என்பது அவனுடைய முக்யமான பொறுப்பாயிருந்த போதிலும் அது அவனுக்குப் பெரிய ப்ரயாஸையோ வேலையோ தருகிற பொறுப்பாயில்லை. ஏனென்றால் ஜனங்கள் தாங்களாகவே இந்த நியதிக்குக் கட்டுப்பட்டுத்தானிருந்தார்கள். அபூர்வமாக எங்கேயாவது யாராவதுதான் மீறிப் பண்ணுவதாயிருந்தது. நேரே பொது ஜனங்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு, ரொம்பவும் வசீகரணமுள்ளவராயிருந்த புத்தர் மாதிரியான ஒருவர் வர்ணாச்ரம அதிகார பேதங்கள் கூடாது என்றபோதுகூட, இதற்காக popular uprsing (வெகுஜனக் கிளர்ச்சி) எதுவும் நடந்ததாக (நம் சரித்ரத்தை எவ்வளவோ திரித்து எழுதியிருக்கும்) வெள்ளைக்காரர்கள் கூடச் சொல்லக் காணோம்!நம்முடைய பொதுஜனங்கள் நல்ல புத்திசாலிகளாக இருந்தும் இத்தனை ஆயிரம் வருஷத்தில் இந்த ஏற்பாட்டை எதிர்த்ததாகவோ, அப்புறம் ராஜா அவர்களை அடக்கினதாகவோ ஒரு திருஷ்டாந்தங்கூட இல்லை. தங்களுக்கு எத்தனையோ ஸாதகமாயிருந்த புத்தமதத்தை மூட்டை கட்டி அனுப்பி விட்டு, இப்போது கொடுமையானவர்களாக வர்ணிக்கப்படுகிற ஸநாதனிகளின் மதத்துக்குத்தான் ஜனங்கள் திரும்பியிருக்கிறார்கள். வர்ண விபாகத்தில் தங்களுக்குப் பெர்ஸனலாக ஒரு நிம்மதியும், ஸமூஹ வாழ்வுக்கு ஒரு ஸ்டெபிலிடியும் இருப்பதாக அவர்கள் கண்டிருந்தாலன்றி இப்படிப் பண்ணியிருப்பார்களா?

வர்ணாச்சரம ஏற்பாட்டினால் அக்கால ராஜாக்களுக்கு, இப்போதுள்ள ராஜாக்களுக்கு முக்கியாமாயிருக்கிற போலீஸ், ஜுடீஷியரி வேலைகள் பெருமளவுக்கு இல்லாமலிருந்ததால், இப்போது இதற்காக ஆகிற செலவும் கால விரயமும் அவர்களுக்கு இல்லை. அதனால் ராஜாக்கள் தங்கள் பொழுதையும் பொருளையும் வேறே நல்ல இனங்களில் ஈடுபடுத்த முடிந்தது. கோர்ட்டுக்குப் பதில் கோவில் கட்டினார்கள்; கோரக்ஷணம் செய்தார்கள்; அன்ன சத்திரம் கட்டினார்கள்; தான தர்மம் செய்தார்கள்; கனபாடிகளுக்கு ச்ரோத்ரியம் கொடுத்து, வேதத்தில் அதிகாரமுள்ளவர்கள் இவர்களிடமிருந்து தர்மங்களைத் தெரிந்துகொள்ளப் பண்ணினார்கள்; உடுக்கு அடித்து பாரதம் சொல்கிற பூசாரிக்கு மானியம் விட்டு அதே தர்மத்தை இவனிடமிருந்து பாமர ஜனங்களும் தெரிந்து கொள்ளப் பண்ணினார்கள். ப்ரஜைகளின் வயிற்றுக் குறையைப் போக்குவதும், தர்ம அபிவ்ருத்தியுமே அரசனுடைய கார்யங்களாயிருந்தன.

ஜனங்கள் கோவிலுக்கும் தர்மோபதேசம் நடக்குமிடங்களுக்கும் போய்ப் போய் சாந்தர்களானார்கள். சட்டத்தை மீறாமல், ஸாத்விகர்களாக, எல்லோருடனும் ஸமாதானமாக வாழ்ந்தார்கள். இந்த ஸமாதானத்தை ஜாதி தர்மம் காப்பாற்றி வந்தது.

இக்காலத்தில் கோவிலுக்கும், தர்மம் தெரிந்து கொள்வதற்கும் போவது குறைந்து ஜனங்கள் கோர்ட்டுக்குப் போவது அதிகமாயிருக்கிறது. எங்கும் இடிந்த கோயில்களும் இடியாத கோர்ட்டுகளும் காணப்படுகின்றன.

இப்போது ‘வெல்ஃபேர் ஸ்டேட்’ வைக்கிற கோர்ட்களுக்கும் ஆஸ்பத்திரிகளுக்கும் போவதற்கு முதல்படியாக, தினந்தோறும் வளர்ந்து வருகிற ஸினிமாக் கொட்டாய் (கொட்டகை)க்குப் போய் அநேக தினுஸான தப்புகளைத் தெரிந்துகொண்டும், இந்திரிய சபலத்தால் உடல் கெட்டும் வருகிறார்கள். அக்ரமத்துக்கு ஏற்பட்ட ரேஸ் கோர்ஸ் மாதிரியானவற்றிலும் கூட்டம் வழிகிறது. அபக்ஷ்ய பக்ஷணம் செய்வதற்காக க்ளப்களும் (ஹோட்டல்களும்) ஜனங்களை இழுக்கின்றன. எல்லாம் போதாது என்று உரிமை, ஸமத்வம் என்று சொல்லிக்கொண்டு ஜனங்களை த்வேஷத்திலும், போட்டியிலும், சோம்பேறித் தனத்திலும் தூண்டிவிடுவதற்கு அரசியல் கூட்டங்களின் ஆகர்ஷணமும் சேர்ந்திருக்கிறது. மொத்தத்தில் உடம்பும், மனஸும் கெட்டு, சித்த சாந்தி போய். ஸமூஹ ஸமாதானம் போய் — இவற்றின் total effect ஆக — குற்றங்கள் பெருக எத்தனை வாய்ப்பு உண்டோ அத்தனையும் விருத்தியாகி வருகின்றன.

தர்ம அஸ்திவாரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ‘வெல்ஃபேர்’ மாளிகை எழுப்பினால் இப்படித்தான் ஆகும்! தர்மசாரமில்லாதபோது எங்கே பார்த்தாலும் கிளப் என்றால் நியமமில்லாமல் சாப்பிட்டு தேஹம், புத்தி இரண்டையும் கெடுத்துக் கொள்வார்களே தவிர, நிஜமான வெல்ஃபேரை அடையமாட்டார்கள். தார்மிகக் கட்டுப்பாடு இல்லாதபோது எழுத்து ஸ்வதந்திரம், கருத்து ஸ்வதந்திரம் என்கிறவற்றால் பத்திரிகைகளும், ஸினிமாக்களும் கெட்டதில்தான் சேர்க்கும். ஆஸ்பத்திரிகள் தினந்தினம் வைத்து, புதுப்புது ட்ரீட்மென்ட் தருகிறார்களென்றால், துன்மார்க்கத்தில் போனாலும் கெட்ட வியாதி வராமல் தடுத்துக்கொண்டு விடலாம் என்றுதான், தர்மத்துக்குப் பயப்படுவதற்குப் பழக்கப்படாத ஸமூஹம் நினைக்கும். ‘கிராமம் விடாமல் பாங்கு வைத்து கடன் தருகிறோம்’ என்றால் எத்தனை லஞ்சமும், பித்தலாட்டமும் உண்டோ அத்தனையும் செய்து கடன் வாங்கி, இப்போது தர்ம விரோதமாக வந்திருக்கிற பலவற்றுக்காகச் செலவு செய்வதற்கு ஊக்கம் தந்ததாகவே ஆகும். பெரிய வெல்ஃபேர் எதுவென்றால் தர்மந்தான். அந்த தர்மம் தெய்வ பக்தியாலும், மதப் பற்றாலுந்தான் ஜனங்களிடையே நன்றாய் வேர் பிடித்து வளரும். இந்த ஆதாரக் கொள்கையின் மேலே வகுத்த அர்த்த, தர்ம சாஸ்திரங்கள் நம் நாட்டுக்குச் செய்து வந்த நிஜமான நன்மையை அந்த ஆதாரத்தை வெட்டிவிட்ட எந்தப் புது அரசியல் முறையும் ஐடியாலஜியும் உண்டாக்கித் தர முடியாது. ஆனாலும் இப்போது தினந்தினம் லோகத்தில் ஏற்பட்டு வருகிற சீரழிவையும் ஒழுக்கக் குறைவையும் பிரத்யக்ஷமாகப் பார்த்துக் கொண்டிருந்தும், ‘பழைய ஏற்பாட்டில் தாக்ஷிண்யமில்லை, மநுஷ்யாபிமானமில்லை’ என்று குறை சொல்கிறார்கள்!

திருக்குறள், திருவள்ளுவர் என்று ஓயாமல் சொல்வதாயிருக்கிறது. திருவள்ளுவர் பொருட்பாலில் ராஜ தர்மத்தைச் சொல்கிற இடத்தில் ‘பெரியாரைப் பிழையாமை’என்றே ஒரு அதிகாரம் பண்ணியிருக்கிறார். ராஜாக்கள் மஹான்களை ஆச்ரயித்து அவர்களுடைய மனம் குளிரும்படியாகப் பண்ண வேண்டும். இல்லாவிட்டால் அகஸ்தியரிடம் அபசாரப்பட்டுக் கொண்ட இந்த்ரனே பதவி போய்த் திண்டாடியது போல ஆகிவிடும் என்று எச்சரித்திருக்கிறார்:

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.

தர்ம சாஸ்திரங்களைக் கேட்காவிட்டால் ராஜா கேடுதான் அடைவான் என்பதை நேராக அப்படிச் சொல்லாமல் ஸ்வாரஸ்யமாக மாற்றி, அரசனைப் பார்த்து, “கேடுதான் அடையவேண்டுமென்று ஆசையாயிருந்தால் சாஸ்திரப்படி கேட்காமல் பண்ணு’ என்கிறார்.

கெடல் வேண்டின் கேளாது செய்க

ஆக, தர்ம அஸ்திவாரத்தின் மேலே மஹான்கள் காட்டுகிற வழியிலேயே அரசாட்சியை நடத்த வேண்டுமென்பதுதான் திருவள்ளுவர் காட்டும் நெறி.

எது நிஜமான தாக்ஷிண்யம், எது நிஜமான மநுஷ்யாபிமானம் என்று யோசித்துப் பார்ப்போமானால், எது தேசத்தில் தர்மத்தை நிலைக்கப் பண்ணி, நல்ல ஜனங்களுக்கு துஷ்டர்களிடம் பயமில்லாமல் ஸெக்யூரிடியைக் கொடுக்கிறதோ, அதோடு எதுதான் குற்றம் பண்ணினவனையும் இனிமேல் அப்படிப் பண்ணாமல் கட்டுப்படுத்துகிறதோ அதுதான் நிஜமான தாக்ஷிண்யமும் மனிதாபிமானமுமாகும்.

ஒருத்தன் ஏதோ ஹிம்ஸை பண்ணினானென்றால் ஜனங்களிலேயே இன்னொருத்தன் அப்போது அவனை பதிலுக்கு ஹிம்ஸை பண்ணி ஹிம்ஸையை இரண்டாக்குகிறானென்றால் அதுதான் தப்பு. இங்கே பெர்ஸனலாக த்வேஷம், கோபதாபம் உண்டாகின்றன. ஆனால் ராஜாங்கம் என்ற ஸ்தாபனம் ஹிம்ஸை செய்த ஒருவனை பெர்ஸனல் காரணமில்லாமல், தர்மத்தின் பொருட்டு சிக்ஷித்து அவனுக்கு ஹிம்ஸை தருவது இப்படியல்ல. அவனால் இனிமேல் ஜனங்களுக்கு ஏற்படக்கூடிய ஹிம்ஸையைப் போக்கவே இந்த சிக்ஷை. சிக்ஷை என்பது முன்பு அவன் குற்றம் பண்ணினான் என்பற்காக மாத்திரமின்றி, இனிமேல் அவனைக் குற்றம் பண்ணாமலிருக்கச் செய்வதற்குமாகும். ஒரு பைத்தியம் கல்லை எறிந்தால், அது நம் குழந்தையாகவே இருந்தாலும் ரூமில் தள்ளிப் பூட்டவில்லையா? அப்படியே திருட வேண்டும் என்ற பைத்தியம் பிடித்திருப்பவனை, ஃபோர்ஜரி பண்ணுகிற பைத்தியமுள்ளவனை, இப்படி அநேகப் பைத்தியம் உள்ளவர்களை ராஜாங்கம் ஜெயிலில் போட வேண்டியதாகிறது. ஹிம்ஸையைக் குறைக்கவே ஹிம்ஸிக்க வேண்டியதாகிறது.


1இவ்விஷயமாக “தெய்வத்தின் குரல்” முதற்பகுதியில் “வர்ண தர்மம்” என்ற உரையும் தொடர்ந்து வரும் சில உரைகளும், இரண்டாம் பகுதியில் “ஜாதி முறை” என்ற உரையும், குறிப்பாக அதில் “நான் சொல்வதன் நோக்கம்” என்ற உட்பிரிவும் பார்க்க.

பிராம்மணனுக்குப் பக்ஷபாதமா?

இங்கே ஒரு விஷயம் சொல்ல வேண்டும். ராஜாவுக்கு பிராம்மணனைத் தண்டிக்க மட்டும் அதிக ‘ஜூரிஸ்டிக்ஷன்’ (ஆணையெல்லை) கொடுக்கப்படவில்லை. பிராம்மணனுக்குத் தரும் தண்டனை கடுமைக் குறைவாகவே இருக்கும். இதைப் பார்க்கிறபோது, ‘equality before law’ – சட்டத்துக்கு முன் ஸமத்வம் – இல்லாமல், சலுகையே தரக்கூடாத ஒரு விஷயத்தில் சலுகை தந்து அநியாயம் செய்திருப்பதாகத் தோன்றலாம். அப்படித் தோன்றினால் அது நியாயந்தான். ஆனாலும் இதன் காரணத்தைப் புரிந்து கொண்டால் இதிலே அநியாயப் பக்ஷபாதமில்லை என்று தெரியும். இப்போது ‘பிராயச்சித்தம்’ என்று சொன்னேனே, அதுதான் காரணம்.

குற்றவாளிக்கு ராஜ தண்டனையே பிராயச்சித்த கர்மா ஆகிறது என்றேன். பிராம்மணன் வேத மந்த்ர ரக்ஷணையையே வாழ்க்கையாகக் கொண்டவன் ஒருநாள்கூட அவனை விட்டு இந்த வாழ்க்கை ஆசாரம் போகப்படாது. அப்படிப் போனால் அது தேச க்ஷேமத்துக்கே கெடுதல். ஜெயிலில் போட்டால் அவன் எப்படித் தன் ஆசாரங்களுக்குப் பங்கமில்லாமல் மந்திர ரக்ஷணை பண்ண முடியும்? அல்லது கண்ணை வாங்கி, காலை வாங்கி அவனைத் தண்டித்தால் அப்போதும் அவனால் ஆகிற வேத ரக்ஷணம் அல்லவா கெட்டுப் போகும்? வேத தர்மம் இருக்க வேண்டும் என்பதற்குத் தான் ராஜாங்கம் இருப்பதே. அதுவே தன் லக்ஷ்யத்துக்கு ஹானி செய்யலாமா? அதனால்தான் ராஜசிக்ஷையை பிராம்மணனுக்கு ரொம்பவும் குறைத்துச் சொல்லியிருப்பது. ஆனால் அதற்காக அவனை வெறுமே விட்டு வைத்துவிடவில்லை. மந்த்ர ரக்ஷணைக்காக ஏற்பட்ட அவனுக்கு ஒவ்வொரு குற்றத்துக்கும் தண்டனையாக மந்திர பூர்வமாக ரொம்பவும் கடுமையான பிராயச்சித்த கர்மாக்களை சாஸ்த்ரமே கொடுத்திருக்கிறது. ராஜ தண்டனை இல்லாவிட்டாலும் அவனுடைய ஸமூஹத்துக்கான ஸபை அவனை விசாரித்து இப்படிப்பட்ட பிராயச்சித்தங்களை ரொம்பவும் ஸ்ட்ரிக்ட்டாக விதித்து, பலவிதக் குற்றங்களுக்கு ஜாதி ப்ரஷ்டமே பண்ணிவிடுவதென்று வைத்து அவனை அப்படிப்பட்ட குற்றங்களை மனஸாலும் நினைத்துப் பார்க்க முடியாமல் தடுத்தது. ராஜதண்டனையிலிருந்து பெருமளவுக்கு பிராம்மணர்கள் விலக்குப் பெற்றிருந்ததால் அவர்கள் ஒழுங்கு தப்பிக் குடிகாரர்களாகவும், காமுகர்களாகவும், கொள்ளை லாபக் கூட்டமாகவும் போய்விடாமல் ஸமீப காலம்வரை மற்ற எல்லா ஸமூஹங்களாலும் ரொம்பவும் மரியாதைக்குரியவர்களாகவும், உதாரணமாகப் பிறருக்கு வழிகாட்டுபவர்களாகவுந்தானே கருதப்பட்டிருந்திருக்கிறார்கள்? இதிலிருந்தே அவர்களை அர்த்த சாஸ்திரம் நடத்திய விதம் ஜஸ்டிஃபை ஆகிவிடுகிறதல்லவா? இந்த விஷயம் இருக்கட்டும்.

உள்நாட்டு தண்டநீதி

ஆனாலும் சிக்ஷிப்பதை, அதாவது தண்டிப்பதை எடுத்த எடுப்பில் சொல்லியிருக்கவில்லை.

உள்நாட்டுப் பிரஜைகளை பொறுத்தமட்டில் ராஜா அவர்களை ஸன்மார்க்கத்தில் செலுத்துவதற்காக எதுவுமே பண்ணாமல் அவர்கள் தப்புப் பண்ணினால் மாத்திரம் தண்டிப்பது என்று வைத்துக்கொள்ளவில்லை. இந்த நாளில் அரசாட்சி முறைக்கும் பிரஜைகளின் நன்னெறிகளை அபிவிருத்தி செய்வதற்கும் நேர் ஸம்பந்தமில்லாதது போல அக்காலத்தில் இல்லை. ஜனங்கள் அவரவர் தர்மத்தை அநுஸரிப்பதற்கு ராஜா எல்லா விதத்திலும் ஊக்க, உத்ஸாஹங்களைக் கொடுத்து வந்தான். ஸத்துக்களைக் கொண்டு நிறைய தர்மப் பிரசாரம் செய்தான். அந்தந்த ஜாதி நாட்டாண்மை அதிலுள்ளவர்களை ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டிருக்கும்படியாகப் பண்ணினான். ஆலயத்தை ஸமூஹத்துக்கு மத்ய ஸ்தானமாக ஆக்கி, ஜனங்கள் ஈச்வர பக்தியால் தர்மிஷ்டர்களாக இருக்கும்படிப் பண்ணினான். இப்படி நேராக தர்ம ரக்ஷணை பண்ணினதாலேயே, அப்படியும் அவர்கள் கெட்டுப் போகிறபோது அவர்களை இந்த நாள் ‘ஸ்டான்டர்ட்’படிக் கடுமையாகவே சிக்ஷித்தான்.

குற்றவாளிகளிடம் கூடுதலாக தயா தாக்ஷிண்யம் காட்டுவது குற்றங்களுக்கு ஊக்கம் தருவதே ஆகும் என்பதுதான் சாஸ்திர அபிப்ராயம். இப்போதுதான் ‘பெர்ஸுவேஷன்’ என்பதால் நயமான முறையிலே அவர்களாக மனம் மாறித் திருந்தப் பண்ணணுமென்று நிறைப் பேசுகிறார்கள். ஸாதாரண மநுஷ்ய நேச்சர் இருக்கிற லக்ஷணத்தில் இப்படி எவராவது திருந்தினதாக இவர்களால் காட்ட முடியுமா என்பதே கேள்வி! ஜெயிலில் ஸெளகர்யமெல்லாம் பண்ணிக் கொடுப்பது என்றால், வெளியிலே வேலை வெட்டி இல்லாமல் திண்டாடுகிறவர்களுக்கு, ‘அங்கே (ஜெயிலுக்கு) போய் நாம் பாட்டுக்குத் தின்று கொண்டு, தூங்கிக்கொண்டு இருக்கலாமே!’ என்று தான் தோன்றும். தர்ம ரக்ஷணைக்கென்று டைரக்டாக ஸர்க்கார் எதுவும் செய்யாமல், அதே ஸமயத்தில் அரசியல்வாதிகள் தங்களுக்கும் தங்களுடைய கொள்கைகளுக்கும் ஸமூஹத்தில் முக்யத்வத்தை உண்டாக்கிக் கொண்டுவிட்டதால் தர்ம பீடங்களின் செல்வாக்கும் தர்ம சாஸ்திரங்களின் அதாரிடியும் மங்கிப்போய் ஜனங்கள் தர்மத்துக்குப் பயப்பட வேண்டும் என்ற உணர்ச்சியை இப்போது ரொம்பவும் இழந்துவிட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்கள் குற்றம் செய்வது நாச்சுரல்தான் என்று வேண்டுமானால் இந்தக் காலக் குற்றவாளிகளை ரொம்பவும் தண்டிக்காமல் விடுவதற்கு நியாயம் சொல்லலாம்! ஆனால் முற்காலத்தில் பிரஜைகள் தர்மத்தை அநுஸரிப்பதற்கு ராஜாங்கம் ரொம்பவும் ஆதரவாயிருந்து, அதற்கானவற்றைப் பண்ணிக் கொடுத்த போதும் அவர்களில் சிலர் தப்பான வழியில் போனால் அங்கே தாக்ஷிண்யம் காட்ட இடமில்லைதானே? அதனால்தான் கடுமையான தண்டனைகளைச் சொல்லியிருக்கிறது. இப்படியிருந்ததால்தான் அப்போது மொத்த ஸமுதாயம் நல்லபடி இருந்தது; நல்ல ஜனங்கள் துஷ்டர்களினால் கஷ்டத்துக்கு ஆளாகாமல் நிம்மதியாக வாழ்க்கை நடத்தினார்கள்; மொத்தத்தில் நம் தேசம் லோகத்திலேயே நன்னெறிக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது என்பதைக் கவனித்தோமானால் ராஜதண்டம் சாஸ்திரப்படிதான் செயல்பட வேண்டும் என்பதை ஒப்புக் கொள்வோம். மெகஸ்தனிஸிலிருந்து ஆரம்பித்து நம் தேச நிலைமையைப் பற்றி அவ்வப்போது இங்கே வந்து எழுதி வைத்திருக்கிற அயல் நாட்டவர்கள் எல்லோரும் ஒருமுகமாக இங்கே ஜன ஸமூஹத்தில் காணப்பட்ட ஒழுக்கத்தையும் நல்ல குணத்தையும் ஸ்தோத்திரிக்கிறார்களென்றால் அதற்கு ராஜசிக்ஷை முறையும் ஒரு காரணமாகும். இப்போது நம் ஜன ஸமுதாயம் எப்படி இருக்கிறது என்றும் நமக்குத் தெரியும். ஆனாலும் தண்டநீதி சாஸ்த்ரத்தைக் குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம்!

பெர்ஸுவேஷன் ஸாத்விகமாகத் திருத்துவது என்றெல்லாம் இக்காலத்தில் பேசினாலும், யுத்தம் வந்தால், அல்லது பொருளாதாரத்திலோ பொலிடிகலாகவோ நெருக்கடி வந்தால் அப்போது ‘எமர்ஜென்ஸி’ என்று பிரகடனம் செய்கிறபோது முதல் கார்யமாகத் தண்டனை விதிப்பதைத்தானே கடுமையாக்குகிறார்கள்? ஆக எடுத்துச் சொல்லித் திருத்துவதைவிட தண்டிப்பதுதான் தேசத்தில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஏற்பட உதவும் என்று ஒப்புக் கொண்டதாகத்தானே ஆகிறது?

அநேக உயர்ந்த நோக்கங்களுக்காகவே தர்ம, அர்த்த சாஸ்திரக்காரர்கள் தண்டனையைக் கடுமையாக வைத்திருந்தார்கள். ஒன்று குற்றம் என்பது ஒருவனால் இன்னொருவனுக்கு அல்லது ஸமூஹத்துக்கே ஏதோ ஒரு விதத்தில் ஏற்படும் கஷ்டந்தானே? இப்படித் தான் கஷ்டத்தைக் கொடுத்தால் அப்போது ராஜா அதைவிடப் பெரிய கஷ்டத்தைத் தனக்குத் தண்டனையாகக் கொடுப்பானென்ற பயமிருந்தால்தான் ஒரு பிரஜை ஒழுங்காயிருப்பான். பத்து ரூபாய் திருடுவதால் ஒருத்தனுக்குத் தான் கொடுத்த கஷ்டத்துக்குப் பதிலாக நாலு மாஸம் ஜெயிலில் கஷ்டப்படணும் என்றால்தான் திருடமாட்டான். இரண்டாவது நோக்கம், கடுமையான தண்டனையானது குற்றம் பண்ணுகிற ஒருவன் இனிமேல் அப்படிப் பண்ணாமலிருக்கும்படி செய்வதோடு மற்றவர்களும் இவனைப் பார்த்து அந்த மாதிரிப் பண்ணாமலிருக்கச் செய்து ஒரு ஸமூஹ ரக்ஷையாகிறது. மூன்றாவது நோக்கம் ஆத்ம ஸம்பந்தமானது. அதாவது பாபம், பாப பரிஹாரம் என்ற விஷயங்கள் வந்து விடுகின்றன. குற்றம் பண்ணுவது பாபம், அது குற்றவாளியை நரகத்துக்குத் தள்ளும். என்னென்ன குற்றத்துக்கு நரகத்தில் என்னென்ன மஹா பயங்கரமான தண்டனைகள் என்று சாஸ்திர, புராணங்களில் விவரமாகச் சொல்லியிருக்கிறது. ராஜ தண்டனை பெறுவதனால் ஒரு குற்றவாளி இந்தப் பாபத்திலிருந்தும், நரகாவஸ்தையிலிருந்தும் விடுபடுகிறான். அந்த (நரக லோக) சித்ரவதையுடன் ‘கம்பேர்’ பண்ணினால் ராஜா தரும் தண்டனை ரொம்ப லேசானதுதான். இப்படி அரசன் தரும் சிக்ஷையே குற்றவாளிக்கு ஆத்ம க்ஷேமத்தைக் கொடுக்கும் பாபப் பிராயச்சித்தமாகிறது.

முக்யமான இரு அரசக் கடமைகள்

இப்படி ராஜாவுக்கு, ராஜாங்கத்துக்குப் பல கார்யங்களையும் கௌரவமான பண்புகளையும் கொடுத்திருந்தாலும் அர்த்த சாஸ்த்ரமானது இவற்றில் இரண்டை மிகவும் முக்யமானவையாகச் சொல்லியிருக்கின்றன. இதுவரை சொன்னவையெல்லாம் அநேகமாக ரக்ஷணையில் வருகிறவை. இப்போது சொல்லப்போகிற இரண்டும் சிக்ஷணையில் வருபவை. ரக்ஷிப்பதற்கு அங்கமேதான் தார்மிகமாக சிக்ஷிப்பது. பயிரை வளர்க்க வேண்டுமானால் களையைப் பிடுங்கி எறியத்தான் வேண்டும். உள்நாட்டில் குற்றம் பண்ணுகிறவர்களுக்குத் தண்டனை கொடுத்து சிக்ஷிப்பது, வெளிநாட்டு எதிரி ராஜாவையும் ஸைன்யத்தையும் யுத்தத்திலே சிக்ஷிப்பது என்ற இரண்டும் ராஜாவின் கார்யங்களில் தலையான இடம் பெறுகின்றன.

அரசனுக்கிருந்த கட்டுப்பாடுகள்

விஷயம் தெரியாமலே குற்றம் சாட்டுகிறார்கள். அப்பனுக்குப் பின் பிள்ளைக்குப் பட்டம், அதிலும் தலைப் பிள்ளைக்குப் பட்டம் என்று law of primogeniture -படி ராஜ்யாதிகாரம் போனதால் தகுதிக்கோ, பிரஜைகளின் ஸம்மதத்துக்கோ இடமில்லாமலே அக்கால முடியரசு நடந்தது என்று இப்போதைய குடியரசுவாதிகள் சொல்வதும் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுதான். இப்போது தான் வயஸு ஒன்றைத் தவிர ஜனநாயகப் பிரதிநிதிளுக்கு எந்தத் தகுதியும் வைக்காமல் விட்டிருக்கிறது. நம்முடைய கான்ஸ்டிட்யூஷனை (அரசியல் நிர்ணயச் சட்டத்தை) நிறைவேற்றிய ஸபைக்கு அக்ராஸனராயிருந்த ராஜேந்திரப்பிரஸாதே இதை ஆக்ஷேபித்துப் பார்த்தார். “சட்டத்தைப் பற்றி விவாதிக்க வேண்டிய வக்கீல்களுக்கும் தீர்ப்புக் கொடுக்க வேண்டிய ஜட்ஜ்களுக்கும் அநேக க்வாலிஃபிகேஷன்கள் வைத்திருக்கிறோம். ஆனால் அந்தச் சட்டங்களைப் போட்டு நிறைவேற்றுகிற எம்.எல்.ஏக்களுக்கும் எம்.பிகளுக்கும் ஒன்றும் வேண்டாமென்றால் கொஞ்சங்கூட ஸரியாயில்லையே” என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆனாலும் அவர் சொன்னதற்கு கான்ஸ்டிட்யூவென்ட் அஸெம்ப்ளி ஒத்துக்கொள்ளவில்லை.

பழைய நாளில் ராஜாக்களுக்கு நிரம்ப யோக்யதைகளை ஸம்பாதித்துக் கொள்ள வேண்டியது அவசியமாயிருந்தது. குருகுலவாஸம் பண்ணி ஸகல சாஸ்திரங்களையும் தெரிந்து கொள்வார்கள்; தநுர்வேத அப்யாஸம் பண்ணுவார்கள்.

தர்மத்திலும், பண்பிலும் உயர்ந்தவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும். ராஜாவாகி வெளி சத்ருக்களை ஜயிப்பதற்கு முந்தி அவன் காமம், க்ரோதம் முதலான ஆறு உள் சத்ருக்களையும் ஜயிருத்திருக்க வேண்டுமென்பது சாஸ்திரம்.

தகுதி எதுவும் போதாமல் துன்மார்க்கத்தில் போன அஸமஞ்ஜன் மாதிரியான ராஜகுமாரர்களையும், ராஜாவான பிறகும் யதேச்சாதிகாரமாகத் தன் மனஸுப்படி பண்ணின வேனன் போன்றவர்களையும் ஜனப் பிரதிநிதி ஸபையினர் ஒழித்தே கட்டியிருக்கிறார்கள்.

Primogeniture (தலைப் பிள்ளைக்குப் பட்டம்) என்பதால் அவனுக்கு யோக்யதாம்சமில்லாவிட்டாலும் அப்படிக் கட்டலாமென்று அர்த்தமில்லை. எவனைவிட யோக்யதையுள்ளவர் இருக்க முடியாதோ அப்படிப்பட்ட ராமசந்திர மூர்த்திக்கே பட்டம் கட்டுவதற்கு முன்னால் தசரதன் ஸபையைக் கூட்டி அப்படிப் பண்ணலாமா என்று அபிப்ராயம் கேட்டிருக்கிறான்!

சூரபத்மன், மஹிஷாஸுரன், ராவணன், துர்யோதனன் மாதிரியானவர்கள் கூடப் பேருக்காவது மந்த்ராலோசனை என்று ஒன்று நடத்தித் தானிருக்கிறார்களென்று புராணங்களிலிருந்து தெரிகிறது. ஸாக்ஷாத் ராமர் வானரங்களைக் கலந்தாலோசித்து விட்டுத்தான், சரணாகதி என்று வந்த விபீஷணனை அங்கீகாரம் பண்ணியிருக்கிறார்.

ரகுவம்சம் ஒன்றைப் பார்த்து விட்டால் போதும். வரிசையாக ஸூர்ய வம்ச ராஜாக்களைப் பற்றிச் சொல்கிற அந்தக் காவியம் தர்ம சாஸ்திரம் மட்டுமின்றி அர்த்த சாஸ்திரக் கொள்கைகளும் பெருமளவுக்கு அமலுக்கு வந்துவிட்ட காலத்தில் எழுதப்பட்டதுதான். அதனால் அதில் சொல்லியிருப்பவை பிற்கால ராஜ தர்மக் கருத்துக்களே எனலாம். சிலது இப்போது நினைவுக்கு வருவது சொல்கிறேன்.

வண்டானது எப்படிப் புஷ்பத்துக்கு வலி தெரியாமல் தேனை எடுத்துக் கொள்கிறதோ, அப்படித்தான் ராஜா பிரஜைகளுக்குக் கொஞ்சங்கூட சிரமம் தெரியாமல், அவர்களுடைய மலர்ச்சி குன்றாமலே வரி வசூலித்து எடுத்துக் கொள்ள வேண்டுமென்பது சாஸ்திரம். இதை இன்னொரு உவமையால் இன்னும் அழகுபடுத்திச் சொல்லியிருக்கிறான் உவமைக்கே பெயர் பெற்ற காளிதாஸன். ‘ஸூர்யன் எப்படி முதலில் பூமியிலிருந்து ஜலத்தை உறிஞ்சிக்கொண்டு அப்புறம் அதை பூமிக்கே மழையாகப் பொழிகிறானோ அப்படி திலீபன் பிரஜைகளிடமிருந்து வசூலித்ததைப் பிறகு அவர்களுடைய நலனுக்கேயான காரியங்களில் செலவிட்டான்’ என்கிறான் (1.18). லோகத்துக்கு ஒரு ப்ரயோஜனமுமில்லாமல் எங்கேயோ ஸமுத்திரத்தில் இருக்கிற உப்பு ஜலத்தை ஸூர்யன் இழுத்து, அப்புறம் உலகுக்கு பயனாகிற சுத்த ஜலமாக அதை வர்ஷிக்கிறானல்லவா? இப்படித்தான் ஸமுதாய க்ஷேமத்துக்கு வராத செல்வத்தை ராஜா வரியாய் வசூல் செய்து பிறகு அதன் க்ஷேமத்துக்கே செலவிட்டான் என்று அர்த்தம்.

தங்களுக்கெல்லாம் ரக்ஷகனாக இருக்கப்பட்ட ராஜாவிடம் எல்லா ஜனங்களுக்கும் ஒரு மரியாதை இருந்தால்தான் அவனுடைய சட்டத்துக்குக் கட்டுப்படுவார்களென்றே அவனுக்குப் பொதுக் கண்ணோட்டத்தில் அந்தஸ்தை ஏற்படுத்தித் தருவதற்காக அரண்மனையும், ‘ராஜபோகம்’ என்கிற ஸெளகர்யங்களும், ஆனை குதிரைகளும், ஆபரணங்களும் கொடுத்திருப்பது. ஆனால் இப்படிச் சொந்தச் சொத்தை விருத்தி செய்து கொள்வதற்காகவே அவன் வரி போட்டான் என்று நினைத்தால் அது தப்பு. ‘Welfare State-கருத்து’ அப்போதும் உண்டு என்று மேலே சொன்னதலிருந்து தெளிவாகிறது.

‘ரகு’ வம்சம் என்றே பெயர் ஏற்படச் செய்த ரகுவைப் பற்றிக் காளிதாஸன் (4, 5 ஸர்கங்களில்) சொல்கிறான்: உள்நாடு, வெளி நாடுகளையெல்லாம் ஜயித்து ஏராளமான செல்வக் குவியலோடு திரும்பிய ரகு ‘விச்வஜித்’ என்ற யாகம் செய்து அத்தனை செல்வத்தையும் தக்ஷிணையாகவும் தானமாகவும் கொடுத்து விடுகிறான். ஏராளமாக ஈட்டிய நிதிகளால் தன் சொந்தச் சொத்தை அவன் ஜாஸ்தி பண்ணிக் கொள்ளாதது மட்டுமில்லை; ஏற்கனவேயிருந்த சொத்துக்களைக்கூட தானம் பண்ணி விடுகிறான்! கௌத்ஸர் என்ற பிராம்மணர் வருகிறபோது அவனிடம் அதிதிக்கு அர்க்யம் கொடுக்கக்கூடத் தங்கத்திலோ வெள்ளியிலோ கிண்ணம், உத்தரிணி முதலானவைகள் இல்லாமல் மண்ணாலான பாத்திரங்களை எடுத்துக்கொண்டு போனானாம்! இப்போதானால் தினமும் ஏதாவது மந்திரி, எம்.எல்.ஏக்கு எப்படிப் புதிசு புதிசாக பங்களாக்கள் முளைக்கின்றன என்று யாராவது கேள்வி எழுப்புவதாகப் பார்க்கிறோம்!

‘ராஜா’ என்ற வார்த்தைக்குக் காளிதாஸன் (4.12-ல்) கொடுக்கிற டெஃபனிஷனே அவன் ஜனங்கள் மீது யதேச்சாதிகாரம் பண்ணாமல் ஸர்வ ஜனங்களுக்கும் பரமப் பிரியனாக இருந்தானென்பதுதான். ‘ராஜா ப்ரக்ருதி ரஞ்ஜநாத்‘ என்பதுதான் அந்த டெஃபனிஷன். ‘ப்ரக்ருதி’ என்றால் ‘பொது ஜனங்கள்’. ‘ரஜ்ஞநாத்’ என்றால் ‘மகிழப் பண்ணுவதால்’. பொது மக்களை மகிழப் பண்ணுவதாலேயே, ‘ரஞ்ஜ்’ என்ற ‘ரூட்’டியிலிருந்து ‘ராஜ்’ என்ற வார்த்தை உண்டானதாகக் காட்டியிருக்கிறான்.

பவபூதி என்று இன்னொரு மஹாகவி. அவர் எழுதின ‘உத்தர ராம சரித’ நாடகத்தில் ராமர், “நான் பொது ஜனங்களைப் ப்ரீதி பண்ணுவதற்காக எதையும் தியாகம் பண்ணத் தயார். என்னுடைய ஸ்நேஹம், தயை ஸெளக்யம் எதையும், ஏன் ஸாக்ஷாத் ஸீதையையுங்கூட ஜனங்களுக்காக நான் பரித்யாகம் பண்ணும்போது அதனால் எனக்கு வ்யஸனம் உண்டாகாது” என்று சொல்வதாக வருகிறது1. இதிலே கவிநயம் என்னவென்றால், இதைத் தொடர்ந்தே, ஜனங்கள் ஸீதையைப் பற்றி ஸந்தேஹப்பட்டார்கள் என்பதற்காக அவளுடைய பரிசுத்தத்தைப் பற்றி த்ருடமாகத் தெரிந்திருந்தும் ராமர் அவளைப் பரித்யாகம் செய்கிறார்.

இதற்கு முன்னாடியும் லங்கையில் ராவண வதமானவுடன் ஸீதை எத்தனையோ ஆர்வத்தோடு அவரைச் சேர வந்தபோது, அவருக்கும் அவளிடம் எத்தனையோ ப்ரியமும் நம்பிக்கையும் இருந்தபோதிலும், ராஜா என்றால் யார் அபிப்ராயத்தையும் பொருட்படுத்தாமல் மனஸு போனபடி இருக்கலாம் என்றில்லாமல் அவன்தான் லோகத்தின் அபிப்ராயத்துக்கு ரொம்பவும் மதிப்புக் கொடுக்க வேண்டுமென்று காட்டுவதற்காக, வானரங்களுக்கும் ராக்ஷஸர்களுக்கும் எதிரே அவளைத் திரஸ்காரம் பண்ணினார். அப்புறம் அவள் அக்னிப் பிரவேசம் பண்ணி, அக்னியே அவளது பாதிவ்ரத்யத்தைப் பற்றி அத்தனை ஸேனைகளும் அறியச் சொன்ன பின்தான் ஏற்றுக் கொண்டார். அதற்கப்புறமும் அயோத்திக்கு வந்தபின் அங்கே ஏதோ கசமுச என்ற பேச்சு எழுந்தது என்பதற்காக ஸாக்ஷாத் மஹாலக்ஷ்மியான ஸீதையை அவர் வனத்துக்கு அனுப்பினாரென்றால், ‘மானார்க்கி’ என்பது யதேச்சாதிகாரமோ ஸர்வாதிகாரமோ இல்லவே இல்லை என்றுதானே தெரிகிறது?

ராமசந்திரமூர்த்தி ஸீதா தேவியிடம் வைத்திருந்த ப்ரியத்துக்கு அளவேயில்லை. அவர் ஏகப் பத்னி வ்ரதர். ஆனால் ராஜாக்கள் ஏக பத்னி வ்ரதர்களாகத்தானிருக்க வேண்டுமென்று கட்டுப்பாடில்லை. யுத்தம், வேட்டை, தீர்ப்பு சொல்வது, மந்திராலோசனை, கோவில் திருப்பணி என்று அவனுக்கு ரொம்ப வேலை இருந்ததால் அவனைக் கொஞ்சம் ஸுகபுருஷனாக விட்டு வேலை நெரிசல் மனஸில் இல்லாமல் பண்ண ஸம்பிரதாயம் அநுமதித்திருக்கிறது. அதனால்தான் நாட்டியம், அந்தஃபுரம், கேளிக்ருஹம் என்றெல்லாம் அவனுக்கு உல்லாஸ விஷயங்களை அநுமதித்திருப்பது. மற்ற ராஜ்யங்களிடம் நல்லுறவை உண்டாக்கிக் கொள்வதற்கு ஒரு வழியாயும் ஒரு ராஜா அந்த ராஜ்யங்களின் ராஜகுமாரிகளைக் கல்யாணம் பண்ணிக் கொள்வதுண்டு. இப்படியெல்லாமிருந்தாலும் இந்தச் சின்ன இன்பங்களிலேயே அவர்கள் முழுகிவிடவில்லை; இதற்காக தேசக் கடமையையோ, தங்களுடைய ஆத்மாபிவிருத்தியையோ விட்டுவிடவில்லை. அர்த்த சாஸ்த்ரத்தில் சாணக்யன் ஒரு ராஜாவின் daily routine -ஐ (அன்றாட அலுவலை) வகுத்துக் கொடுத்திருக்கிறான். அதிலே ஒரு நாளைப் பதினாறாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு ட்யூட்டியைச் சொல்லியிருக்கிறான். இந்தப் பதினாறிலே ஏதோ மூணு நாலுதான் நித்ரை, கேளிக்கை முதலானவற்றுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாக்கியெல்லாம் ராஜ்யபாரக் கடமைகள்தான். ராத்ரியும் பகலும் இந்த டயம்-டேபிள்படியேதான் ராஜாக்கள் தங்கள் தர்மத்தைச் செய்ததாக ‘ரகுவம்சத்’திலும் அங்கங்கே வருகிறது. ராத்ரியிலும் கூடத் தூங்காமல் ராஜாக்கள் மாறுவேஷத்தில் ரோந்து போனதாக எவ்வளவு கதைகளில் கேட்கிறோம்? நடைமுறையில் இல்லாத ஒன்று இப்படி அநேகக் கதைகளில் அரசனின் ஒரு அவசியமான அலுவலாக வரமுடியுமா?

கேளிக்கைகள் அநுமதிக்கப்பட்டிருந்தாலும் ஜெனரலாக ராஜாக்களுக்குச் சிறு வயஸிலிருந்து ஏற்பட்டிருந்த சாஸ்திர அப்யாஸத்தால் அவர்கள் அதற்குக் கொடுத்திருந்த அளவுக்கு மேலே போகாமல் சிறந்த ஒழுக்கக் கட்டுப்பாட்டுடனேயே இருந்திருக்கிறார்கள். ராமர் அயோத்யாவாஸிகள் அவ்வளவு பேரையும் தம்மோடு வைகுண்டத்துக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டாரல்லவா? இதற்கு முந்தி அவர் தம் பிள்ளைகளில் குசனைக் குசாவதி என்ற நகரத்தைத் தலைநகராகக் கொண்ட ராஜ்யப் பகுதிக்கும், லவனை சராவதி என்ற ஊரைத் தலைநகராகக் கொண்ட பகுதிக்கும் ராஜாக்களாக நியமித்திருந்தார். அவரோடு அயோத்யாபுரியே சூன்யமாய் விட்டதல்லவா? அதனால் அதன் அதிதேவதை குசனால் அயோத்திக்கு புதுக் களை ஊட்டச் செய்யவேண்டுமென்று நினைக்கிறாள். அவனிடம் வேண்டுகோள் விடுப்பதற்காக ஒரு நடு ராத்ரியில் குசாவதியிலிருந்த அவனுடய சயன க்ருஹத்துக்குள்ளேயே ஆவிர்பவிக்கிறாள். தீடீரென்று தன் அறைக்குள்ளே யாரோ முன்பின் தெரியாத ஸ்த்ரீ வந்திருப்பதைப் பார்த்தவுடன் குசன், “நீ யார்? எவருடைய பத்னி? இப்படிப் பாதி ராத்ரியில் இங்கே வந்திருப்பது என்ன உத்தேசத்தில்? ரகுவம்சம்சத்தவர்களான நாங்கள் இந்திரியக் கட்டுப்பாடு பண்ணிய ‘வசி’க்கள்; பரஸ்திரீகளிடம் எங்கள் நோக்கம் போகவே போகாது என்று தெரிந்துகொள்” என்கிறான் (16.8) குசன் வாய்மொழியாக ராஜா எப்படியிருக்க வேண்டுமென்ற ஐடியலையே இங்கே கவி சொல்லியிருக்கிறாரென்பது தெளிவு.

சாணக்யரும் அர்த்தசாஸ்திரத்தில் ஸ்தரீ மோஹம், தன மோஹம், அதிகக் கோபம் முதலிய குணங்களைக் கொண்டிருந்த அரசர்கள் அதோகதியே அடைந்திருக்கிறார்களென்பதற்கு உதாரணங்களைக் காட்டி, ராஜாக்களுக்கு நல்ல சாஸ்த்ராப்யாஸமும், தங்களுடைய கடுமையான ட்யூட்டிகளைத் தளராமல் ஆற்றுவதற்கான ஒழுக்கக் கட்டுப்பாடும் இருக்கவேண்டுமென்று சொல்லியிருக்கிறார்.

ராஜா தன் ஸெளகர்யத்தை மட்டும் கவனித்துக் கொண்டானே தவிர ஜனங்களுக்கு ஸெளகர்யங்களைப் பண்ணித் தரும் Welfare State -கொள்கை அக்காலத்தில் இல்லை என்று நினைப்பது ஸரியே இல்லை. சாலை போடுவது, அணை கட்டுவது (கல்லணை ஆயிரம் வருஷத்துக்கு மேலாக இன்றும் ஒரு என்ஜினீயரிங் அதிசயமாக இருக்கிறது!) Public Works என்ற மற்றப் பொது மராமத்துக்கள், ஆதுரசாலை என்று ஆஸ்பத்திரி வைப்பது இப்படியாக ஸமூஹ நலக் காரியங்களுக்கு ஆதிகாலத்திலிருந்தே தனித்தனி டிபார்ட்மென்ட்களும் அதிகாரிகளும் இருந்திருக்கிறார்கள். வாஸ்தவத்தில் அப்போதுதான் பிரஜைகளின் நிஜமான க்ஷேமத்துக்கானதை ராஜாங்கம் செய்தது. ஏனென்றால் தற்கால ராஜாங்கங்கள் மாதிரி மேலே சொன்னவற்றோடு முற்கால ராஜா நின்றுவிடாமல் பிரஜைகளை தர்மத்தில் கொண்டு போவதற்கும் பொறுப்பெடுத்துக்கொண்டு அதற்கானவற்றைச் செய்தான். ஜனங்களின் சாச்வத க்ஷேமத்துக்காக யாகாதிகள் பண்ணினான், கோயில்கள் கட்டினான், உத்ஸவாதிகள் நடத்தினான், மஹாபாரதம் முதலிய கதைகளை எல்லா ஜனங்களுக்கும் பிரகடனம் பண்ணினான். ஸத்துக்களான சிஷ்டர்களுக்கு கௌரவம் கொடுத்து அவர்களுடைய ஜீவ்ய உதாரணம் எல்லா மக்களிடமும் பிரகாசித்து அவர்களுக்கும் அந்த வழியில் தூண்டுதலாக இருக்கும்படிப் பண்ணினான்.

இங்கே நான் ஸத்துக்கள், சிஷ்டர்கள் என்று யாரைச் சொல்கிறேனோ அவர்கள்தான் ராஜாக்களைக் கையில் போட்டுக்கொண்டு, தாங்கள் ஸெளகர்ய வாழ்க்கை நடத்துவதற்காகவே அவனை ஆட்டி வைத்தார்கள் என்றும் ஒரு குற்றச்சாட்டு கொஞ்ச காலமாக அடிபடுகிறது. அதாவது பிரம்ம தேஜஸ் என்பதைச் சொல்லிக்கொண்டு க்ஷத்ரிய ராஜாவுக்கு மேலே பிராம்மணன்தான் உட்கார்ந்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தான் என்று வாதம். உண்மையில் அந்தக் கால பிராம்மணன் எத்தனை எளிமையாக, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருந்தான் என்று தெரியாததால் இப்படிச் சொல்கிறார்கள். ‘மஹா தந்த்ர சாலி எதையும் செய்யத் துணிந்தவன்’ என்று நினைக்கப் படுகிற சாணக்யனே, சந்திரகுப்த மௌரியனைச் சக்கரவர்த்தி ஸ்தானத்துக்குக் கொண்டுவந்து அவனுடைய பூர்ண விச்வாஸத்தையும் பெற்றிருந்த போதிலும், பாடலிபுரத்தில் அரண்மனைக்குப் பக்கத்திலே தனக்கு மாளிகை கட்டிக்கொண்டு போக்யத்தில் மிதக்கவில்லை. ஊருக்கு வெளியிலே ஒரு குடிசை போட்டுக்கொண்டு, கந்தையைக் கட்டிக்கொண்டு, கஞ்சி காய்ச்சிக் குடித்துக் கொண்டுதான் கிடந்தான். இப்படியே புரோஹிதர்களான வஸிஷ்டர் போன்றவர்களும் நகரத்துக்கு வெளியிலே பர்ணசாலையில் வெகு எளிமையான வாழ்க்கைதான் நடத்தி வந்தார்கள். அவர்களாக ராஜீய விஷயங்களில் தலையிட்டு அபிப்ராயம் சொல்லி ‘ஆட்டி வைத்ததாக’ ஸாக்ஷியே இல்லை. ராஜாக்கள்தான் ஏதாவது ‘ப்ராப்ளம்’ என்றால் அரண்மனையை விட்டு அவர்களிடம் போய் அவர்களுடைய புத்திமதியையும் அநுக்ரஹத்தையும் கோரியிருக்கிறார்கள். ராஜாவுக்கு எத்தனை பொறுப்போ அதைவிடக் கடுமையாகத்தான் பிராம்மணன் தனக்கும் அன்றாடக் காரியங்களை வைத்துக்கொண்டு லோக க்ஷேமார்த்தம் தன்னைச் சக்கையாகப் பிழிந்து கொண்டானே ஒழிய, தனி சலுகை, வசதி எதுவும் பெறவில்லை2.

ராஜாவுக்கும் சட்டத்துக்கு முன்னாடி எந்தச் சலுகையும் இல்லை. கன்றின் மேலே தெரியாமல் தேரை ஏற்றி அதை ராஜகுமாரன் கொன்று விட்டானென்பதற்காக அவனுடைய தகப்பனாரான மநுநீதிச் சோழன் அவனையே பதிலுக்குத் தேர்க்காலில் பலி கொடுக்கப் போயிருக்கிறான்!

ராஜாவுக்கு அப்போது இருந்த பொறுப்பும் அதைப்பற்றி அவன் கொண்டிருந்த விசாரமும் இப்போது ராஜாங்கம் நடத்துகிறவர்களுக்கு இன்னதென்றே தெரியாது. ஏனென்றால் பழைய நாள் ராஜா பிரஜைகளின் தர்ம வாழ்க்கைக்கும் பதில் சொல்லவேண்டியவனாயிருந்தான். ‘அவர்களுடைய பாபம் அவர்களை நல்வழிப் படுத்தத் தவறிய தன்னையே வந்து சேரும்’என்று அவனுக்கு போதிக்கப்பட்டிருந்தது — “ராஜா ராஷ்ட்ரக்ருதம் பாபம்” என்பது சாஸ்திரம். அதாவது ஒரு தேசத்திலிருக்கப்பட்ட பிரஜைகள் பண்ணும் பாவமெல்லாம் அவர்களை ஆளும் ராஜாவைத்தான் சேரும் என்று அர்த்தம். இதற்கு Converse-ஆக ஒரு ராஜா தப்புப் பண்ணினால் அது தேசம் முழுவதையும் தாக்கும், இயற்கையையே சீற வைத்துப் பெரிய உத்பாதங்களை உண்டாக்கிவிடும் என்றும் சொல்லி அவனை தர்மத்துக்கு பயந்து நடக்கும்படியாகப் பண்ணினார்கள்.

திருக்குறளில் இதையெல்லாம் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறது. கொடுங்கோல் ஆட்சியில் ஜனங்கள் விடுகிற கண்ணீரே ராஜாவின் செல்வத்தையெல்லாம் அழித்துவிடும் ஸைன்யம் மாதிரி; ஆட்சிமுறை தப்பினால் பருவ மழை தப்பிப் பஞ்சம் வந்துவிடும்; பால் வளம் போய்விடும்;பிராம்மணர்களுக்கு வேதம் மறந்துபோய், வேத வேள்விகளால் நடக்கும் அத்தனை லோக க்ஷேமமும் போய்விடும் என்றெல்லாம் திருவள்ளுவர் எச்சரித்திருக்கிறார்3.

ராஜா ஒரு தேசத்தில் எப்படி சீலத்தைக் கட்டி ஆளவேண்டும் என்பதற்கு ஐடியலைக் காளிதாஸன் திலீபனுடைய ராஜ்யத்தில் காட்டுகிறான். திலீபனுடைய ராஜதானியில் உத்யானவனத்துக்குப் போகிற வழியிலேயே பெண்கள் ராத்திரி வேளையில் அவர்கள் பாட்டுக்கு மயங்கித் தூங்கிக் கொண்டிருப்பார்களாம். “அந்தப் பெண்களுடைய வஸ்திரங்களை த்லீபனுடைய ஆட்சியிலே வீசிய காற்றுகூட அசைத்ததில்லை. அப்படியிருக்க மநுஷ்யனாகப் பிறந்த எவனாவது அவர்கள் பக்கம் கை நீட்டி இருக்க முடியுமா?” என்று கவி கேட்கிறான் (6.75) .

மக்கள் மட்டுமின்றி மாக்கள் என்கிற விலங்குகள், செடி கொடிகள், பயிர் பச்சை எல்லாவற்றிடமும் ராஜாக்களுக்கு மிகுந்த பரிவு இருக்க வேண்டுமென்பது சாஸ்திரம். வேட்டையாடுவதில்கூட வரம்பு உண்டு. க்ரூரமான பிராணிகளைத்தான் வேட்டையாடலாம் என்று அநேக ராஜாக்கள் வைத்துக் கொண்டிருந்தார்கள். யாகம் என்று சொல்லிக்கொண்டுகூட அதில் ஏராளமாகப் பிராணி வதை பண்ணினால் பாபம்தான் என்று பாகவத்தில் பிராசீனபர்ஹிஸின் கதையில் சொல்லியிருக்கிறது. புறாவுக்காக சிபி தன்னுடைய உடம்பையே அறுத்துக் கொடுத்தான், பாரி வள்ளல் முல்லைக்கொடி படருவதற்காகத் தன்னுடைய தேரைத் தொடுத்தான் என்று படிக்கிறோம்.

‘சாகுந்தல’த்தில் ஒரு அரசன் ஸகல உயிரிகளிடமும் எவ்வளவு பிரியத்துடனும், ‘ஸிம்பதி’யுடனும் இருக்க வேண்டுமென்பது தெரிகிறது.

கண்வருடைய ஆச்ரமத்தைச் சேர்ந்தவர்கள் துஷ்யந்தனைப் பார்க்க வந்திருப்பதாக அவனுக்குத் தெரிவிக்கப்பட்டவுடன் அவன், ஏதாவது பெரிய தப்பு நடந்திருந்தாலோ, அல்லது கஷ்டம் ஏற்பட்டிருந்தாலோ அன்றி ஆச்ரமவாஸிகள் ராஜ ஸமூஹத்துக்கு வரமாட்டார்களே என்று நினைக்கிறான். அப்போது அவன் தனக்கு தானே, ‘ரிஷிகளின் தபஸுக்குக் குந்தகமாக ஏதாவது அஸம்பாவிதம் நடந்திருக்குமா? அவர்களுடைய வனத்திலே ஸ்வயேச்சையாய் ஸஞ்சரித்துக் கொண்டிருக்கிற ஸாது மிருகங்களை யாராவது ஹிம்ஸை பண்ணியிருப்பார்களா? அல்லது என்னுடைய தவறு எதனாலாவது செடி, கொடிகள் புஷ்பிக்காமலும், பழுக்காமலும் போயிருக்குமா?’ என்று சொல்லிக் கொள்வதாக வருகிறது (5-வது அங்கம்) .

ராமர் தன்னுடைய ராஜ்யத்தில் ஒருவனுக்குப் புத்ர சோகம் ஏற்பட்டுபோது, அது வர்ணாச்ரம தர்மங்களைத் தான் ஸரியாகப் பரிபாலனம் பண்ணாததன் விளைவே என்று காரணத்தைக் கண்டுபிடித்து அப்படி தர்மம் மீறினவனை சிக்ஷித்திருக்கிறார்.

சாகுந்தலத்தின் ஆரம்பத்திலும் ராஜாக்களுக்கு வர்ணாச்ரம அநுஷ்டானத்திலிருந்த நம்பிக்கையைக் காட்டுவதாக ஒரு கட்டம் வருகிறது. சகுந்தலையைப் பார்த்தவுடன் துஷ்யந்தன் மனஸில் பிரேமை உண்டாகி விடுகிறது. அவளுடைய ஸகிகள் அவளைப் பரிஹாஸம் செய்ததிலிருந்து அவள் கல்யாணமாகாதவள்தான் என்று அவனுக்குத் தெரிகிறது. அதனால் தனக்குப் பிரேமை உண்டானதில் தப்பு இல்லை என்று நினைக்கிறான். ஆனால் உடனேயே, ‘இவள் கண்வ மஹரிஷியின் புத்ரி என்றல்லவா தெரிகிறது? அப்படியானால் பிராம்மணப் பெண்ணாக அல்லவா இருக்க வேண்டும்? அவளிடம் க்ஷத்ரியனான என் மனஸ் போகப்படாதே? ஆனாலும் என் மனஸ் அவளிடம் போகிறதே! ஸத்துக்களின் (அந்தஃகரணம்) தப்பு செய்யவே செய்யாது. அதனால் இவள் பிராம்மணப் பெண்ணாக இருக்க முடியாது’ என்று முடிவு பண்ணுகிறான். அவன் சகுந்தலையின் பிறப்பைப் பற்றி ஒரு விதமாக அநுமானம் பண்ணி, தான் அவளைப் பிரியப்படுவது வர்ண தர்மத்துக்கு விரோதமாக இராது என்று தீர்மானிக்கிறான். அவன் பண்ணின அந்த அநுமானம் தப்பாகப் போனாலும், வாஸ்தவத்தில் சகுந்தலை கண்வரின் வளர்ப்புப் பெண்தானே? க்ஷத்ரியராய்ப் பிறந்த விச்வாமித்ரருக்கும் அப்ஸர ஸ்த்ரீயான மேனகைக்கும் பிறந்தவள்தானே சகுந்தலை? இங்கே ஸத்துக்கள் எனத் தக்கவர்களாகவே ராஜாக்கள் இருக்க வேண்டுமென்றும், அவர்களின் அந்தஃகரணம் தன்னையறியாமல்கூட வைதிகமான வர்ண விபாகங்களுக்கு வித்யாஸமாகப் போகாது என்றும் கவி உணர்த்துகிறார்.

ராஜாக்களுக்கு இவ்வளவு பொறுப்பும், பொறுப்புத் தவறுவதால் பாபத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என்ற பயமும் கவலையும், இதனாலேயே தர்மராஜ்ய பரிபாலனத்தில் ஆழ்ந்த கவனமும் ஈடுபாடும் இருக்கும் படியாகத்தான் தர்ம சாஸ்திரம் மட்டுமின்றி அர்த்த சாஸ்திரமும் ராஜநீதிகளை வகுத்துக் கொடுத்திருக்கிறது.

கஜானவை எப்படியாவது ரொப்பிக் கொண்டு விடுவதில் அக்கால ராஜக்கள் குறியாக இருக்கவேயில்லை. இதற்கு நிரூபணமாகக் காளிதாஸன் சாகுந்தலத்தில் ஒரு ஸீன் எழுதியிருக்கிறான் (6-வது அங்கம்).

கடல் வாணிபம் செய்கிற ஒருவன் கப்பல் உடைந்து முழுகிப் போய்விட்டதாயும், அவனுக்கு ஸந்ததியில்லாததால் அவனுடைய சொத்து பூராவும் கஜானவைச் சேர்ந்து விடுவதாயும் துஷ்யந்தனுக்கு நிதி மந்திரி ஒரு ‘நோட்’ அனுப்புகிறார். உடனே துஷ்யந்தன் அத்தனை செல்வத்தையும் ஆர்ஜிதம் செய்துகொண்டு விடலாமென்று பறக்காமல், ‘பெரிய வியாபாரி என்றால் பல கல்யாணங்கள் பண்ணிக் கொண்டிருப்பானே! அப்படியிருந்தால் அவனுடைய பெண்டாட்டிகளில் எவளாவது கர்ப்பமாயிருக்கிறாளா என்று விசாரிக்க வேண்டும்’ என்கிறான். அவன் நினைத்ததுபோலவே செத்துப்போன வியாபாரியின் ஒரு ஸம்ஸாரம் கர்ப்பவதியாயிருக்கிறாளென்று தெரிகிறது. “அப்படியானால் சொத்து கஜானாவைச் சேராது; கர்ப்பத்திலிருக்கிற குழந்தையைத்தான் சேரும்” என்று துஷ்யந்தன் தீர்ப்புப் பண்ணுகிறான்.

பொருளாசையில்லாத தர்ம நியாயத்தோடு ராஜாக்களின் ஆழ்ந்த மநுஷ்யாபிமானத்தைக் காட்டுவதாகவும், அதோடுகூட தர்மத்தை மீறாமலிருக்கிற பண்பைப் பிரதிபலிப்பதாகவும் அப்போது துஷ்யந்தன் ஒரு கார்யம் பண்ணுகிறான். பதியை இழந்தவர்கள், புத்ரனில்லாதவர்கள் யாவருக்கும் ராஜாவே ஆதரவாயிருக்கவேண்டுமென்று நினைத்து ஒரு பிரகடனம் பண்ணுகிறான். அதிலே ‘எந்த பந்து காலமானவருக்கும் அந்த பந்துவாக நானேயிருப்பேன்’ என்கிறான். பதியை இழந்தவர்களிடம் இப்படிச் சொல்வது அஸம்பாவிதம் என்பதால் உடனேயே, ‘தர்மத்துக்கு மாறாக இல்லாத உறவு முறைகளில் மாத்திரமே”என்று ஒரு கண்டிஷன் சேர்க்கிறான். சாணக்யனும் இக்கால Welfare State -ன் லக்ஷணங்களாகச் சொல்லப்படும் அநாதைகளின் ரக்ஷணையை ராஜாவின் கடமையாகச் சொல்லியிருக்கிறார். ஏழைகள், கர்ப்பிணிகள், அநாதைகள், வயஸானவர்கள், வியாதியஸ்தர்கள் ஆகியவர்களை ராஜாங்கம் ரக்ஷித்தாக வேண்டுமென்கிறார்.


1உத்தர ராம சரிதம்: 2.12

2இவ்விஷயமாக “தெய்வத்தின் குரல்” இரண்டாம் பகுதியில் “கிருஹஸ்தாச்ரமம்” என்ற உரையில் “அந்தணனின் அன்றாடம்” என்ற பிரிவும், “ஜாதிமுறை” என்ற உரையில் “ஒரு பெரிய தப்பபிப்ராயம்” என்ற பிரிவும் பார்க்க.

3திருக்குறள் பொருட்பாலில் ‘கொடுங்கோன்மை’ என்ற அதிகாரம்.